Jeyamohan's Blog, page 993
May 3, 2021
சம்ஸ்காரா- ஒரு கட்டுரை
சம்ஸ்காரா என்கிற சொல்லோடு ”வாசனா ” என்கிற சொல்லாட்சிக்கும் ஒரு இணைப்பு உண்டு. மரபணு தொடர்ச்சி , மரபு தொடர்ச்சி என்கிற இரு கூறுகளாலும், நற்பண்புகளை வளர்த்தெடுத்தலை , அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதலை ”சம்ஸ்காரா” என்றும் , அதே போல தொடர்ந்துவரும் இயற்கையான , காம , குரோத , மோக , மத , மாச்சர்யங்களை , ”வாசனா ” என்றும் வகை பிரிகிறது இந்திய அறிதல்முறை .
சம்ஸ்காரா – யு .ஆர் .அனந்தமூர்த்திகதைகளின் மீட்டல்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் முதல் ஆறு சிறுகதைப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்தவொரு மகத்தான எழுத்தாளனின் படைப்புகளும் ஒட்டுமொத்த மானுடம் நோக்கி எழும் அதே தருணத்தில் அதன் ஒரு பகுதி அவன் சார்ந்த பண்பாட்டிலிருந்து ஒரு பொழுதும் பிரிக்கமுடியாததாகவும் இருக்கும் என்று நீங்கள் கூறுவதுண்டு. இந்தக் கதையில் நான் ரசித்தது இதில் இருக்கும் குமரிமாவட்ட வாழ்வின் ஒரு துளிதான்.
நான் ஆண்டுக்கணக்காக எங்கள் ஊரிலிருந்து நாகர்கோயிலுக்கு ஒரே வழியில் பேருந்தில் பயணம் செய்தவன்.நாகர்கோயிலிலிருந்து இராஜாக்கமங்கலம் வழியாகக் குளச்சல் செல்லும் தெற்கு வழிச் சாலையில் முன்பு கீழக்கோணம் அருகே வயல்வெளிகள் இருந்தன. பேருந்தில் எத்தனைக் கூட்டமிருந்தாலும் அந்தப் பகுதியைக் கடக்கும் பொழுது மக்கள் அனைவரும் இறுக்கம் கலைந்து வெளியே பரபரக்கும் கண்களோடு பார்த்து ரசிப்பார்கள். மேற்கிலிருந்து வரும் பொழுது கோணத்திற்கு முன்பும் நிலம் பச்சையாகவே இருக்கும். ஆனால் ஏன் கோணத்திற்கு வந்ததும் ஒரு இறுக்கம் கலைகிறது. பச்சையிலும் ஒரு சிறு மாற்றம் அவ்வளவுதான்.
அதன் முன்பு இருப்பது கட்டிப்பச்சை. கோணத்தில் இருந்தது இளம்பச்சை. அது மட்டுமே வேறுபாடு.அப்பாவை நான் முப்பது ஆண்டுகளாக கவனித்துவருகிறேன். ஒரே நிலத்தில் பெரும்பாலும் ஒரே வழியில் பயணம் என்ற வாழ்வு. ஆனால் எப்பொழுதும் பரபரக்கும்கண்களோடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார். இப்பொழுது கோணத்தின் வயல்வெளிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் இந்த சிறு நிறவேறுபாடு காரணமாகஉருவாகும் அனுபவம் இந்தச் சாலையில் இல்லை. ஆனால் அவ்வப்பொழுது சிறு வேலைகளுக்காக சாலை மூடப்படும் பொழுது முற்றிலும் புதிய நிலம் வழியாக பேருந்துபயணிக்கிறது.
குமரிமாவட்டச் சாலைகளின் ஒடுங்கியத் தன்மைக் காரணமாகச் சாலையை முறித்து ஒரு சிறு வேலைப்பார்க்க வேண்டுமென்றாலும் போக்குவரத்து மிகவும் சுற்றிக்கொண்டு செல்லுமாறு ஆகிவிடுகிறது. அப்படி சுற்றிச்செல்லும் சாலைகள் இன்னும் ஒடுங்கியவைகளாக இருப்பதால் போகும்பொழுது ஒரு வழியும் வரும் பொழுது ஒரு வழியும் பயன்படுத்தப்படும். கோணத்தில் பாலம் வேலை நடந்தால் குளச்சல் செல்லும் பேருந்து ஈத்தாமொழி வழியாகச் செல்கிறது. அதே பேருந்து நாகர்கோயில் செல்லும் பொழுது ஆசாரிப்பள்ளம் வழியாகச் செல்லும். இரண்டும் வேறு வேறு நிலப்பரப்பு. ஒன்று கடற்கரை. இன்னொன்று மலைங்கரை.
இத்தகைய மாற்று வழிப் பயணத்தில் ஓட்டுநர் முதல் நடத்துனர் வரை உற்சாகமடைகிறார்கள். அன்றாட சலிப்பிலிருந்து ஒரு விலக்கம். அவ்வளவுதான். நாம் ஆண்டுக்கணக்காக அவர்களை அறிவோம் ஆனால் பேசிக்கொள்வதில்லை. ஆனால் இந்தப் புதிய வழித்தடத்தில் தானாக ஒரு உரையாடல். பெரும்பாலும் “நல்லா சுத்து” என்றோ அல்லது “ரோடே இல்லியே” என்றோ.
இந்த நிலம் வேறு எங்கோ இருந்ததா, இல்லை மிக மிக அருகில். ஒரு வேளை நாம் ஆண்டுக்கணக்காக பேருந்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வீட்டின் பின்பகுதியில் இருக்கும். தேரைகால்புதூரிலிருக்கும் மிகப்பெரிய குளத்தை சாலையிலிருந்து பார்ப்பதை மூன்று தென்னையோலைப் புரை வீடுகள் மறைத்துக் கொண்டிருக்கும். அந்த வீடுகளின் பின் வாசலில் நீர் தளும்பிக்கொண்டிருக்கும். நான் இந்தப் பகுதியைக் கடக்கும்பொழுதெல்லாம் இந்த வீடுகளில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்வேன்.அந்த இயற்கை தானாக ஒரு தருணத்தில் நம் கண்முன்னே வருகிறது. நம் உள்ளம் உவகை கொள்கிறது. பின் பழைய நிலைதான்.
அவன் மீண்டும் சென்று அவளிடம் பேசியிருப்பானா. இல்லை, அந்தக் கலவரம் அடங்கிய பின் பேருந்து பழைய வழியிலேயே செல்லும். அந்த புதிய பச்சையின் அனுபவம் ஒரு ஓரத்தில் எஞ்சும்.கதையில் நான் மேலும் ரசித்தது அந்த பவுடர் வைத்து மடிக்கப்பட்ட கர்சீப். நாம் நம் அகத்தை நம்மை ஏதோ ஒரு புறப்பொருளின் வழியாக புறத்தே எடுத்து வைக்கிறோம்.
இப்பொழுது இது வாட்ஸப் ஸ்டேடஸாக மாறியிருக்கிறது. முன்பு அந்தப் புறப்பொருள் நம் அகத்தை காட்டிக்கொடுத்துவிடும் என்ற பிரக்ஞை இல்லை. இப்பொழுது இருக்கிறது.புறப்பொருள் என்பது நீர், அகம் ஈரம்.
நன்றி,
ஜெயன் கோ
அன்புள்ள ஜெ,
கடலூர் சீனு ’போழ்வு’ கடிதத்தை எங்கு முடித்திருந்தாரோ அங்குதான் ’போழ்வு’ பற்றி அனுப்பாத எனது கடிதத்தை தொடங்கியிருந்தேன். மிக சம்பிரதாயமான ஒரு கடிதமாக இருக்குமோ என தோன்றியதால் அப்போதே அனுப்பவில்லை. சீனுவே சொன்னபிறகு ஐயமில்லை. அனுப்பிவிடவேண்டியதுதான்.:-)
***
’போழ்வு’ மனச்சோர்வை அளித்த கதை. உண்மையில் கலோனியல் காலகட்டம் என்பதே மனிதர்களின் இருண்ட கனவுகள் வெளிப்பட்ட காலம்தானா? நாடு முழுவதும் எத்தனை சூழ்ச்சிகள்! முதுகுகுத்தல்கள்! தன் தலையில் தானே தீயை வைத்துக்கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை நாட்டம்! சரித்திர புருஷர்களாக இருந்தாலும் கூட!
தளவாய் வேலுத்தம்பி – கர்னல் மெக்காலே மற்றும் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை-டாக்டர் பெய்ன்ஸ் இணைகள். முன்னது அரக்க முகங்கள் என்று கதை சொல்கிறது. அப்போது பின்னது மனசாட்சியின் முகங்கள். டாக்டரின் குரல் எதிர் முகாமிலிருந்து எழும் மனசாட்சியின் குரல். மனசாட்சியின் குரலுக்கு எதிர்முகாம் சொந்தமுகாம் என்ற பிரிவினை தெரியாதுதானே!
ஆனால் யானை மனசாட்சியின் குரலுக்கு என்றுமே நின்றதில்லை!.
பெரும் சோர்வுதான் ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் ரோபர் நகரில் சட்லஜ் ஆற்றங்கரையில் 1831 ல் மஹாராஜா ரஞ்சித் சிங்கிற்கும் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிக் பிரபுவுக்கும் இடையில் ஒர் ஒப்பந்தம் நிகழ்ந்தது. சட்லஜ் ஆற்றை ஆங்கிலேயர் கடக்க மாட்டார்கள். மஹாராஜாவும் சட்லஜ்ஜின் கிழக்குக்கரை தாண்டமாட்டார். ரஞ்சித் சிங் 1839 ல் இறந்தார். அவர் இறந்து 10 ஆண்டுகளில் பஞ்சாப் இணைக்கப்பட்டது. யுத்தங்கள். சூழ்ச்சிகள். அரசியல் கொலைகள். முதுகுகுத்தல்கள். உண்மையில் பெயர்களையும் இடங்களையும் மாற்றிக்கொண்டே திருவிதாங்கூரிலிருந்து ஜம்மு வரைக்கும் சென்றுவிடலாம். நிகழ்வுகளில் பெரிய வித்தியாசம் இருக்காது என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
ராஜா
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஒன்பதாவது நாவல் ‘வெய்யோன்’. சூரியன் தன்னுள்ளும் புறமும் எரியும். சூரியனின் மைந்தனான கர்ணன் கடலுக்குள் குமுறும் எரிமலையைப் போல தன்னுள் மட்டுமே எரிபவன். அதன் ஒளி, புகை, துளியனல்கூட வெளியே வராது, தெரியாது.
என்னைப் பொறுத்தவரை ‘வெய்யோன்’ என்பது, ழுழுக் கர்ணனையும் அவனின் முழு ஆளுமையையும் குறிக்கவில்லை என்றே படுகிறது. ‘வெய்யோன்’ என்பது, கர்ணனின் அகத்தை மட்டுமே குறிக்கிறது என்றே கூறுவேன். புறத்தில் தெரியும் கர்ணன் கொடைஞன்; கருணையால் குளிர்ந்தவன். அவனுள் ஏறிய கழிவிரக்கமே அவனைத் தன்னுள்ளே தனித்தெரியச் செய்கிறது.
“குலமென்றும் குடியென்றும் முறையென்றும் நிறையென்றும் நீங்கள் அறிந்த சிற்றுண்மைகளைக் கொண்டு தொட்டறியும் சிறு பாறையல்ல அவன். சிறகசைத்து விண்ணாளும் வடபுலத்து வெண்நாரைகள் அறியும் இமயம்” என்ற வரிகள் கர்ணனுக்கு மிகப்பொருத்தமாகவே உள்ளன.
உள்ளே அனல் வெளியே புனல் என அலையாடும் கடல் போன்றவன் கர்ணன். அனலனைத்தையும் தன்னுள்ளேயே எரியச் செய்துகொண்டு, அன்பை மட்டுமே கதிரொளியாய்ப் புறத்தே தரும் அற்புதக் கதிரவன் கர்ணன்.
பிறந்தது முதலேயே அவன் உள்ளத்தில் புறக்கணிப்பின் சுடர் ஏற்றப்பட்டுவிட்டது. தந்தை-தாய் யாரென அறியாத பிறப்பு, சாபத்தோடு கூடிய வில்வித்தைக் கல்வி, கொடையாகப் பெற்ற அங்கநாட்டு அரசுரிமை, அவனை மிகுதியாக விரும்புவதாலும் அவனைச் சூரியனின் மகன் என நம்புவதாலுமே அவனிடமிருந்து விலகியிருக்கும் முதல் மனைவி (சூதர்குலப் பெண்), அவனை மிகுதியாக வெறுப்பதாலும் அவனைச் சூதன் மகன் என நினைப்பதாலுமே அவனிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் இரண்டாம் மனைவி (கலிங்கநாடு இளவரசி) என அவன் அடைந்த ஒவ்வொன்றும் அவனுக்குக் கசப்பையே தருகின்றது.
கர்ணனின் உள்ளம் அடைந்ததெல்லாமே கசப்புகள் மட்டுமே. இவ்வாறு அவனுக்கு நேரும் சூழல்களாலேயே அவனுள் சுடர்ந்த அந்தச் சுடர் பெருநெருப்பாக மாறிவிட்டது. அவனுடைய வளர்ப்புத் தாய், தந்தை ஆகியோரின் கண்ணீரும் அவனைச் சூழந்திருப்பவர்களின், அவன் கண்ணுக்குப்படும் தொலைவில் இருக்கும் எளியவர்களின் கண்ணீரும் அவனுள் எரியும் அந்தச் சுடருக்கு எண்ணெய்யாக அமைந்துவிடுகிறது.
பிறரின் கண்ணீரைக் காணச் சகிக்காதவன் கர்ணன். அதற்காகவே அவன் அவர்களிடம் அடிபணிந்துவிடுகிறான். பிறரின் கண்ணீரால் அவன் உள்ளத்தில் கருணை மிகுதியாகவே கசியத் தொடங்கிவிடுகிறது. இந்திரப்பிரஸ்தம் செல்லும் வழியில் நாகர்களின் மூதன்னை திரியையின் கண்ணீரே அவனுள் எரிந்துகொண்டிருந்த பெருந்தீக்குத் தீராத எண்ணெய்யாக வார்க்கப்பட்டுவிட்டது. ஒளிக்கு இருள் விடுத்த பேரழைப்பு அது. அதற்குச் செவிமடுத்தான் கர்ணன். அடுத்த கணமே ஒட்டுமொத்த வாழ்வும் பிறிதொன்றாக மாறிவிட்டது அவனுக்கு.
இதனை நான் நாகபாசனின் சொல்லைக்கொண்டே நான் கூற விரும்புகிறேன். நாகபாசனன் கர்ணனிடம் தன் குலத்தை முற்றழித்த பாண்டவர்களை முற்றழிக்க வேண்டும் என்று கோருகிறான். அதற்கு நாகபாசனன் கூறும் காரணம், “மண்ணில் எக்கண்ணீரும் மறுநிகர் வைக்கப்படாது போகலாகாது. அதன்பின் அறமென்பதில்லை” என்பதுதான்.
அதற்காகவே, அந்த அறத்தை நிலைநாட்டுவதற்காகவே, அந்தக் கண்ணீருக்கு மறுநிகர் வைக்கப்பட்டதே, கர்ணனின் வஞ்சம். கர்ணன், நாகர்களின் இறுதிக் குழந்தையான அஸ்வசேனனைக் கையிலெடுத்து, “இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக! இச்சிரிப்புக்குப் பழிநிகராக நான் பாண்டவர்களை அழிப்பேன்” என்று வஞ்சினம் உரைக்கிறான். கர்ணனின் அகம் சூரியனைப் போல தகிக்கத் தொடங்கிவிட்டது. இனி, அது அவன் உயிர் பிரியும்வரை தணியாது. வெய்யோனால் இனிக் குளிரவே முடியாது.
‘வெய்யோன்’ நாவலில், துரியோதனனின் உளவிரிவுதான் முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளது. பீமன் அஸ்தினபுரியின் அரசவைக்கு வந்து, இந்திரப்பிரஸ்தம் ஒளிகோள்விழாவுக்கு அழைப்பு விடுக்கும் போது, சகுனியும் கனிகரும் எழுப்பிய வினாக்களுக்கு இறுதி விடையாகத் துரியோதனன், “அத்தனை ஐயங்களுக்கும் முடிவாக என் சொல் இதுவே. இன்று இவ்வாறு என் இளையவனே இங்கு வந்து என்னை அழைக்காவிட்டாலும்கூட, ஓர் எளிய அமைச்சர் வந்து என்னை அழைத்திருந்தாலும்கூட என் குருதியர் எழுப்பிய அப்பெருநகரம் எனக்குப் பெருமிதம் அளிப்பதே. அங்குச் சென்று அவர்களின் வெற்றியைப் பார்ப்பது எனக்கு விம்மிதமளிக்கும் தருணமே. பாரதவர்ஷத்தின் முகப்பிலேற்றிய சுடரென அந்நகர் என்றும் இருக்க வேண்டும். அதற்கென வாளேந்தி உறுதி கொள்வதில் எனக்கு எவ்வித தாழ்வுமில்லை” என்கிறான். அவன் ஒவ்வொரு சொல்லும் நம் மனத்தில் அவனை திருதராஷ்டிரருக்கு இணையாகவே வைத்துவிடுகிறது. திருதராஷ்டிரரின் விரிந்தமனம் போலவே துரியோதனனின் மனமும் மலர்ந்தே இருக்கிறது. இத்தனை உளவிரிவு உடையவன் துரியோதனன் எனக் காட்டிவிடுகிறார் எழுத்தாளர்.
தன்னுடைய எல்லாப் பிழைகளுக்கும் ஒட்டுமொத்தமாக மனம்திறந்து பாண்டவர்களிடம் மன்னிப்புக் கோரும் மனநிலைக்குத் தள்ளப்பட்ட துரியோதனன், கர்ணனிடம் “இன்று காலை என்னருகே யயாதியும் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சந்தனுவும் விசித்ரவீரியரும் நின்றிருப்பதை உணர்ந்தேன். ஐயமே இல்லை. இன்று நான் அவர்களின் மானுட வடிவமே” என்று கூறுகிறான்.
இவ்வாறு, மனத்தளவில் முற்றிலும் மாறிவிட்ட துரியோதனன், தன் ஆசான் பலராமரின் முன்னிலையில் பாண்டவர்களிடம் மன்னிப்புக்கோர தருணம் நோக்குகிறான். ஆனால், ஊழ் அவனை அத்தகைய சூழலிலிருந்து விலக்கிவிடுகிறது. வழக்கம்போல தன்னுடைய உணர்ச்சிமேலீட்டால் கர்ணனின் அறிவுரைகளை, சொற்களைப் புறக்கணித்து வெண்பளிங்குத் தரையில் உருவாக்கப்பட்டிருந்த உண்மைத் தடாகத்தை ‘மாயத் தடாகம்’ எனத் தவறுதலாக நினைத்து, கால்வைத்து சறுக்குகிறான். அடுத்தகணமே தூய்மை அடைந்திருந்த அவன் மனம் முழுமையாகவே அழுக்காகிறது. அவன் நிலையழிகிறான். அந்தச் சறுக்கல்தான் அவனுக்கு ஊழ் அளித்த சாபம். அதிலிருந்து அவன் விடுபடவேயில்லை.
திரௌபதி துர்வாச மாமுனிவரின் சொல்லை ஏற்று, இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்குவதற்காகப் பாண்டவர்களைக்கொண்டு குளிர்மழைக் காண்டவத்தை அழித்தமை, நாகர்களின் இடப்பெயர்வு, இந்திரப்பிரஸ்தத்தில் கலிங்கச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட ஜலவிஹாரத்தில் (நீர்மாளிகை) நிகழ்த்தப்பட்ட ஆடிப்பாவை நிகழ்ச்சி (அக்காலத்திய லேசர் சோ – Laser show) ஆகியன பற்றிய காட்சிச்சித்தரிப்புகள் அனைத்தும் எழுத்தாளரின் சொல்நுட்பத்திற்கு ஆகச்சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.
பானுமதியின் ஆலோசனையை ஏற்று, துரியோதனனும் கர்ணனும் சிவதரும் இணைந்து கலிங்க மன்னர் சித்ராங்கதனின் மகள்களைச் சிறையெடுக்கச் செல்லும் காட்சி மிகச் சிறப்பாக உருவாகி வந்துள்ளது. இதற்கு முன்பு ‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் எத்தனையோ சிறையெடுப்புக் காட்சிகளை எழுதியுள்ள எழுத்தாளர் இந்த நாவலில் இடம்பெறும் இந்தச் சிறையெடுப்புக் காட்சியில் மட்டுமே உடன்சென்றவருள் ஒருவர் (சிவதர்) அகப்பட்டுக்கொள்வதாகக் காட்டியிருக்கிறார். சிவதர் சிறைப்பட்டு, வாளால் வெட்டுண்டு, மூன்றுமாதங்களுக்குப் பின்னர் ஈட்டுச்செல்வம் செலுத்தப்பட்டு, மீட்கப்படுகிறார். இந்தச் சிறையெடுப்பு நிகழ்வில் துரியோதனனின் தங்கை துச்சளையின் கணவரும் சிந்து நாட்டு அரசருமான ஜயத்ரதருக்குக் கர்ணன் மிகச் சரியாகப் ‘பாடம்புகட்டும்’ கட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்திரப்பிரஸ்தம் செல்லும் போது அஸ்தினபுரியின் படகில் துரியோதனனுக்கும் மகத மன்னருக்கும் நடைபெறும் மல்யுத்தம், கர்ணனின் இரண்டாம் மனைவியின் ஆணையைக் கர்ணனிடம் இறுமாப்புடன் கூறிய கலிங்கச் சேடியைப் பார்த்து கௌரவர் சுஜாதன் வஞ்சினம் உரைப்பது, துச்சளையும் ஜயத்ரதரும் அஸ்தினபுரிக்குள் நுழையும்போது அவர்களை வரவேற்பதற்காகக் கௌரவர்களின் பிள்ளைகள் ஏறத்தாழ 800பேர் கோட்டைவாயிலுக்குச் செல்வது, மண்ணுக்குள் இருக்கும் நாகர்களின் உலகம், கர்ணன் மகத மன்னருடன் நட்புக்கொள்ளுதல், எளிய மக்களுள் சிலர் அவ்வப்போது கர்ணனின் மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் காணுதல், துச்சளை-கர்ணன் இடையிலான அண்ணன் – தங்கை உறவுமுறை, அணுக்கர் சிவதரின் பேச்சை மீறிய கர்ணன் அழையா விருந்தினராக இந்திரப்பிரஸ்தத்துக்குச் சென்று சில நிகழ்வுகளால் அவமானப்படுதல், கர்ணன் பேரரசி குந்தி தேவியின் அழைப்பினைப் புறக்கணித்தல், கௌரவர்களின் பிள்ளைகளோடு இணைந்து பீமன் ஏரியில் நீர்விளையாட்டை மேற்கொள்ளுதல், ‘அனுமன் ஆலயத்தில் இருக்கும் யாராலும் தூக்க முடியாத, வழக்கமான கதாயுதத்தைவிடப் பதினெட்டு மடங்கு பெரியதான கதாயுதத்தை ஏந்துபவனால் இந்த அஸ்தினபுரி முற்றழியும்’ என்று கூறும் கௌரவர் குண்டாசியின் ‘தீர்க்கதரிசனம்’, நாகர்களின் இறுதி மகவான அஸ்வசேனனைக் கொல்லுமாறு இளைய யாதவர் கூறியும் அர்சுணன் கொல்லாமல் விட்டுவிடுதல் என எண்ணற்ற காட்சிகள் இந்த நாவலில் மிகச் சிறப்பாக எழுதப் பெற்றுள்ளன.
இந்த நாவலில் ஓர் அங்கத நாடகம் இடம்பெற்றுள்ளது. திரௌபதியையும் பாண்டவர்களையும் இளைய யாதவரையும் எள்ளிநகையாடும் நோக்கில் தொடங்கும் இந்த நாடகம், உள்ளீடாக இந்திரப்பிரஸ்தத்தின் பெருமையைப் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய மன்னர்களுக்கும் அறிவிக்கும் வகையில் மலர்கிறது. இதுவும் திரௌபதியின் திட்டமிட்ட செயல்தான். இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள்விழா கலைநிகழ்வுகளுள் ஒன்றாக இந்த நாடகத்தைத் திரெளபதி அரங்கேற்றிவிடுவது அவளுடைய மிகச் சிறந்த அரசுசூழ்தலாகவே அமைகிறது.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் அங்கத நாடகங்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர். அவர் தன்னுடைய ‘பின்தொடரும் நிழலின் குரல்’ என்ற நாவலில் குடியாட்சியை விமர்சித்து ஓர் அங்கத நாடகத்தை எழுதியிருக்கிறார். ‘வெய்யோன்’ நாவலில் முடியாட்சியை விமர்சித்து இந்த அங்கத நாடகத்தை எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது.
‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வகையில் அங்கத நாடகத்தை எழுதி விடுகிறார் எழுத்தாளர். மிகச் சிறந்த சான்று, ‘வண்ணக்கடல்’ நாவலின் பதினொன்றாவது அத்யாயம் – பகுதி மூன்று – ‘கலைதிகழ்காஞ்சி’ என்ற பகுதியில் இடம்பெறும் ‘வாலிவதைப்படலம்’ நாடகம். எழுத்தாளர் உயர்திரு.
ஜெயமோகனின் ‘அரங்கியல்’ சார்ந்த எழுத்துகள் பெரும்பாலும் வாசகரை முழுமையாகச் சென்றடையவில்லை என்றே கருதுகிறேன். அவரின் ‘வடக்குமுகம்’ நாடகம் அவரின் அரங்கியல் எழுத்தின் உச்சம் என்பேன். அவரின் குறுநாவல்கள் அனைத்தும் அவரின் அரங்கியல் சார்ந்த (நாடக இலக்கியம்) எழுத்துகளை மறைத்துவிட்டன. அவரின் சிறுகதைகளை அவரின் மாபெரும் நாவல்கள் மூடி மறைத்துவிடுகின்றன. அவரின் கவிதைகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் அவரின் பிறவகையாக அனைத்துப் புனைவெழுத்துகளும் சேர்ந்து அழுத்தி, மூடிக்கொண்டிருக்கின்றன.
கடலுக்குள் அடுக்கடுக்காக இருக்கும் எண்ணற்ற உயிர்களின் புலங்குதளங்கள்போலவே அவரின் எழுத்துகள் ஒன்றின் அடியில் ஒன்றாக, ஒன்றால் பிறிதொன்று அழுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகனின் புனைவு, புனைவல்லாத எழுத்துலகம்’ என்பது, கீழ்நோக்கிப் பல அடுக்குகளைக் கொண்ட பெருங்கடல்.
அவரின் புனைவெழுத்துகளையும் புனைவல்லாத எழுத்துகளையும் முழுதும் படித்தறிய விரும்பும் வாசகர் அனைவரும் ‘மூங்குநீச்சல்’ பயின்றாக வேண்டும். பெருங்கடலை அறிதல் எளிதல்ல. “நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளைப் போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்” (மத்:18-31) என்பது போல, நீங்கள் நீராக மாறவில்லை எனில், அவரின் எழுத்துப் பெருங்கடலை அறிதல் அரிது என்பேன்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை ‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன் வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு
அன்புள்ள நண்பர்களுக்கு,
வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் மே 8-ம் தேதி ராலே நகரில் திரையிடப்பட உள்ளது.
ராலேவில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன. இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.
எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், கமல் ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களும், வாசகர்களும் ஒன்றுகூடி, இது தமிழ் இலக்கியத்தில் ஏன் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் என்றும், உலக இலக்கியத்தில் வெண்முரசின் இடம் என்ன என்றும், வெண்முரசில் இருந்து அவர்கள் பெற்றதென்ன என்றும் பேசியிருக்கிறார்கள்.
கமல் ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் நீலம் நாவலில் இருந்து எடுத்த சில அற்புதமான வரிகளை ராஜன் சோமசுந்தரம் இசையில் அபாரமாக பாடியிருக்கிறார்கள். சித்தார் ரிஷப் ஷர்மா, சாரங்கி மாயங்க் ரத்தோர், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
மேலும், வெண்முரசு மகாபாரதத்தின் விரிவை உணர்த்தும் படி, ஜெர்மன் பிராஸ் இசைக்குழுவும், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களும் சேர்ந்து வாசித்திருக்கும் ஒரு பிரம்மாண்ட இசைத்தொகுப்பும் (Epic Theme) உண்டு.
சார்லட்டில் இருக்கும் நண்பர்களும் ராலே வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ராலேவில் இருக்கும் தொலைக்காட்சி நிலையங்கள் WRAL மற்றும் CBS TV இந்த ஆவணப்படத்தை பற்றி மேலதிக தகவல்களை கேட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக, இந்தியாவிலும் மற்ற பகுதிகளிலும் இருக்கும் நண்பர்கள் ஆவணப்படத்தைக் காண, சூழல் எப்படி இருக்கிறது என்பதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.
ஆஸ்டின் சௌந்தர்
ராஜன் சோமசுந்தரம்
May 2, 2021
இளமை- கனவும் பயிற்சியும்
அன்புள்ள ஜெ,
ஐயா என் வயது 23 பெயர் எம். இலங்கை கொழும்பு என் வதிவிடம். நான் என் உயர்தரம் கணித பாட பிரிவை விரும்பி தேர்ந்தெடுத்து படித்தேன். காரணம் Quantity Surveyor ஆகவேண்டும் என்ற என் கனவு ஆனால் இங்குள்ள கல்வி திட்டதின் படி தேர்வில் போதிய மதிப்பெண் பெறாமல் தோற்றேன்.முடிவு வாழ்வே சூன்யமானது என்ன செய்வது என்றே தெரியவில்லை.
கூடவே என் நண்பணும் இதே போலவே தேர்வில் தோற்றான். நாங்கள் இருவருமே சினிமாவில் அறிவியலில் இலக்கியத்தில் ஆர்வம் மிகுந்தவர்கள் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவும் உண்டு ஆதலால் தீவிர உலக சினிமா விசிறிகள் ஆனோம். காணும்போதெல்லாம் உலக சினிமா பற்றி விவாதிப்போம். குரசோவா தர்க்கோவ்ஸ்கி முதற்கொண்டு விவாதம் தொடரும்.
இலக்கிய அறிமுகம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் சுஜாதா விசிறிகள் ஆனால் எஸ் ரா திஜா சுந்தரராமாசாமி ஐயா ஜெயமோகன் பவா செல்லதுரை ஆகியோரை பிடிக்கும்.ஆனால் எங்கள் விடுமுறை காலத்தில் ஒருநாள் Existensialism அறிமுகமானது.அதன் பின் டால்ஸ்டாய் தஸ்தோவ்ஸ்கியை தீவிரமாய் படித்து விவாதித்தோம்.அதற்கு திரு.மிஷ்கின் உம் ஒரு காரணம்.
பின் நான் தங்களின் இணைய கட்டுரைளை தொடர்ந்து வாசித்தேன்.தாம் என் ஆசான் ஆகிப்போனிர்கள்.எல்லாமே எனக்கு பிரமிப்பு ஊட்டின குறிப்பாக டால்ஸ்டாய் மீதும் காந்தியார் மீதும் இருந்த என் பார்வை மாறின.தங்களின் அனல் காற்று ஏழாம் உலகம் இரவு ஆகிய படைப்புகளை படித்து பிரமித்து போனேன்.நானும் காம இச்சை மிகுந்தவன் தான் ஆனால் பெண்ணியம் படித்து ஆணாதிக்கம் துளியும் இல்லாதவனாய் ஒரு maturity உள்ளவனாய் வாழ்பவன்.ஆனால் அனல்காற்று என்னை சுழற்றி அடித்தது.
வாழ்வில் என்ன செய்தாலும் ஒரு வெற்றிடமாய் உள்ளது எதிர்காலம் குறித்து பயமாய் உள்ளது படிக்க ஆசையாய் இருக்கிறது ஆனால் என்ன படிக்கிறது என தெரியவில்லை கணிதத்தில் தோல்வியாயிற்று ஆகவே மேற்கொண்டு பொறியியல் துறையில் போலாமா அல்லது சினிமா இலக்கிய துறையில் படிக்கலாமா படித்தால் தன்னிறைவுடன் வாழலாமா?
பெற்றோர் என் நிலையில் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.என்ன செய்வதென்று தெரியவில்லை தங்களை ஒரு ஆசானாகப் பாவித்து கேட்கிறேன்.வழி காட்டுங்கள்.நான் என்ன செய்ய என் வாழ்வின் அர்த்தம் என்ன?
நன்றி.
எம்
***
அன்புள்ள எம்,
உங்கள் கடித்த்திலுள்ள குழப்பங்கள் புன்னகையை வரவழைத்தன. ஆகவேதான் இந்தக்கடிதம். இந்த வயதில் இதேபோன்ற பலவகை குழப்பங்களுடன் நானும் இருந்தேன். இப்போது இக்கடிதம் வந்து நீண்டகாலமாகிவிட்டது, ஆகவே நீங்களே ஒருவகை தெளிவை இப்போது அடைந்திருப்பீர்கள் என ஊகிக்கிறேன். இருந்தாலும் உங்களைப் போன்றவர்களுக்காக இக்கடிதம்
பொதுவாக இரண்டுவகை இளைஞர்கள் உண்டு. நூல்பிடித்ததுபோல படிப்பு வேலை என்று சென்று அமர்பவர்கள் ஒருவகை. அவர்கள் பெரும்பாலும் இலக்கியத்திற்குள் வருவதில்லை. வேலையில் அமர்ந்தபின் ‘ரிலாக்ஸ்’ ஆகி கொஞ்சம் அரசியலும் சினிமாவும், மிக அரிதாக ஓரளவு இலக்கியமும் பேச ஆரம்பிப்பார்கள். இன்னொருவகை இளைஞர்கள் படிப்புக்காலகட்டத்திலேயே கவனச்சிதறல் கொள்கிறார்கள். தங்கள் அடையாளம் எதிர்காலம் பற்றிய குழப்பங்களை அடைகிறார்கள். அவர்களே தீவிரமாக இலக்கியத்துக்குள் வருபவர்கள். அவர்களுக்காகவே இதை எழுதுகிறேன்.
இந்த கவனச்சிதறல் இயல்பானது. இது அகத்தே விளையும் தேடலின் விளைவு.ஆனால் இதை ஒரு தோல்வியாக எடுத்துக்கொண்டு இப்படியே வாழ்க்கையை விட்டுவிட்டால் இழப்பது மிகுதி. இந்தக் கவனச்சிதறலை ஒருவகையான திசைதிரும்பல் என்றும் புதியவை தேடும் பயணம் என்றும் விளக்கிக்கொள்வது இன்னமும் ஆபத்தானது. அது பயனற்ற சிறு அலைச்சல்களையே உருவாக்கும். இதை புறவயமாக, தர்க்கபூர்வமாகப் புரிந்துகொள்ள முயல்வதே இன்றைய தேவை
இந்த சிதறல் ஏன் உருவாகிறது என்றால் நீங்கள் உங்களுக்கு சூழலும் பெற்றோரும் அளிக்கும் அடையாளத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதால்தான். நீங்களே உங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள். அதற்காகத் தேடுகிறீர்கள். நம் சூழல் பொதுவாக வேலைக்குச் செல்வதற்கான ஒருவராகவே குழந்தைகளை வடிவமைக்க முயல்கிறது. ஆகவே கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர்களே முதல் மீறலைச் செய்கிறார்கள். அடுத்தபடியாக வணிகம் செய்ய விரும்புபவர்களும் மீறமுயல்கிறார்கள்.
நம் சூழலில் கலையிலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் தொழிலாக, வாழ்வாக கருதப்படுவதில்லை. ஆகவே அவற்றுக்கு பெற்றோர் ஊக்கமளிப்பதில்லை. கல்விமுறையிலும் அதற்கான இடமில்லை. ஆகவே நீங்கள் இதைப்போல உதிரிமுயற்சிகள், உதிரிக்கனவுகளைச் சென்றடைய வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த கனவுகள் இன்று ஒருவகை முதிராநிலை கொண்டவை என்று உணர்ந்தீர்கள் என்றால் நீங்கள் உங்களை நிலைப்படுத்திக்கொள்ளமுடியும்
நீங்கள் உங்களை நிதானமாக மதிப்பிட்டுக்கொள்வதற்கான தருணம் இது என நினைக்கிறேன்.வாழ்க்கையில் நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் வெற்றி என்பது என்ன? எதைச்செய்தால் அந்த ‘வெற்றிட’த்தை உங்களால் நிரப்பமுடியும்?
பணம், புகழ், சமூகநிலை ஆகியவையா?உடனே அவசரப்பட்டு ‘அதெல்லாம் இல்லை’ என மறுக்கவேண்டாம். அவை தீய விஷயங்கள் அல்ல. தேவையானவை. அந்த மூன்றையுமே நான் எனக்குத்தேவையான அளவுக்கு தேடிக்கொண்டிருக்கிறேன். புகழ்தேடுபவர்களே சிறந்த உலகியல்சாதனைகளைச் செய்கிறார்கள். வணிகத்தை நாடுபவர்களுக்கு பணவிருப்பம் அவசியம். சமூகநிலையை விரும்பாதவர்கள் இருக்கமுடியாது
அதுதான் என்றால் முழுமூச்சாக உங்களுக்கு உகந்த படிப்பில் ஈடுபட்டு வென்று முன்செல்லவும். ஒரு படிப்பில் முழுமூச்சாக ஈடுபட முடியவில்லை என்றால் உங்கள் இயல்புக்கு ஏற்ப இன்னொரு படிப்புக்குச் செல்லலாம். பட்டப்படிப்பின்போதுதான் நம் இயல்புக்கும் படிப்புக்குமான முரண்பாடுகள் தெளிவடைகின்றன.பலர் படிப்பை விட்டுவிட அதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட படிப்பு பொருந்தவில்லை என்பதற்கு படிப்பே பொருந்தவில்லை என்று பொருள் இல்லை.உங்களுக்குரிய படிப்பை தேர்வுசெய்யலாம்.
தர்க்கமனம் அமையாதவர்கள் கணிதம் அறிவியல் போன்றவற்றை வெற்றிகரமாக கற்க முடிவதில்லை. அவர்கள் தர்க்கத்தன்மை குறைவான, ஆனால் விளக்கத்தன்மை கூடிய சமூகவியல் வரலாறு இலக்கியம் போன்ற துறைகளுக்கு மாறலாம். அத்தகைய படிப்புகளில் எவை உங்களுக்கு பொருந்துவன என்பதை நீங்களே உங்களை கூர்ந்து கவனித்து தெரிவுசெய்துகொள்ளலாம். அதில் முழுத்திறனையும் செலுத்தி வெல்லலாம்.
உங்கள் அகவை பயிற்சிக்குரியது. கடுமையான பயிற்சிகள் வழியாக உள்ளத்தை, அறிவை தீட்டிக்கொள்வதற்குரியது. பயிற்சிக்கு இரண்டு இயல்புகள் தேவை. பயிற்சி ஒன்றில்தான் நிகழமுடியும். அதில் குவியவேண்டும். இரண்டு, பயிற்சி என்பது நம்முடைய இயல்பிலுள்ள சில எதிர்மறைப் பண்புகளை கடப்பதுதான். ஆகவே தடைகளே பயிற்சியை அளிக்கின்றன. அவற்றை வெல்வதனூடாகவே கற்கிறோம். அதற்கு பயின்றேயாகவேண்டும் என்னும் தளராத பிடிவாதம் தேவை
நம்முடைய முறைசார்ந்த கல்வியும் பயிற்சிதான். உலகியல் வாழ்க்கைக்கான பயிற்சி. அதை செய்தேயாகவேண்டும். அதைச் செய்யாதவர்கள் மாற்றுவாழ்க்கையை தேர்வுசெய்யவேண்டும். கலைகளில், இலக்கியத்தில். என்ன சிக்கலென்றால் முதல்வகைப் பயிற்சியை விட பலமடங்கு வலிமிக்க, தீவிரமான பயிற்சி இதற்குத்தேவை. ஒரு நல்ல வயலினிஸ்ட் ஆவதை விட ஒரு ஆடிட்டர் ஆவதற்கு குறைவான பயிற்சி போதும். இது பலருக்குத் தெரிவதில்லை.
இந்த வயதில் தேவையான பயிற்சியை தவிர்க்கும்பொருட்டு உங்கள் உள்ளம் அலைபாய்கிறது, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுகிறது என்றால் நீங்கள் உங்களுக்கான எதிர்காலத்தை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்றுபொருள். ஆகவே இப்போது உங்கள்முன் இருக்கும் உலகியல் கல்வியை வெற்றிகரமாக முடியுங்கள். அது எளிதுதான். அதற்காக திட்டமிட்டு உள்ளத்தை அளிக்கவேண்டும், நேரம் ஒதுக்கி அமரவேண்டும், வென்றேயாகவேண்டுமென முடிவெடுத்துச் செயல்படவேண்டும்.
சரி, உங்கள் தளம் கலை- இலக்கியம் என்றால்? அதுவும் கடுமையான பயிற்சிக்குப்பின் சென்றடையவேண்டியதுதான். முந்தையதை விட கடுமையான பயிற்சி தேவை. அது எளிதானதோ வேடிக்கையானதோ அல்ல. அது அரட்டையடிப்பதோ மேலோட்டமாகத் தெரிந்துகொள்வதோ அல்ல. கலையிலக்கியக் கனவுகளுடன் வரும் பல இளைஞர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எந்த தயாரிப்பும் இல்லாதவர்களாக, எந்த பயிற்சிக்கும் மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
கலையிலக்கிய தளத்திலுள்ள பயிற்சிக்கு இரு நிலைகள் உண்டு. ஒன்று, இவற்றில் வெற்றி என ஒன்றைச் சென்றடைய நீண்டநாட்களாகும். அதுவரை பொருளியல் வாழ்க்கையை நடத்த இன்னொரு தொழிலைச் செய்தாகவேண்டும். அந்த தொழிலுக்குரிய பயிற்சியை அடைந்தாகவேண்டும். உண்மையில் அதுவும் கலையிலக்கியப் பயிற்சியின் ஒரு பகுதிதான். கலையிலக்கியம் நோக்கிச் செல்லும் மனதின் ஒரு பகுதியை பிரித்து அந்த தொழில்சார் பயிற்சிக்கும் கல்விக்கும் அளிக்கவேண்டும். பின்பு தொழிலுக்கு அளிக்கவேண்டும்.
தொழில்சார்ந்த அடித்தளம் கலையிலக்கியக் கல்விக்கு இந்தியாவில் தேவையாகிறது. இன்றைய அமெரிக்காவும் அப்படி ஆகிவிட்டது.அவ்வண்ணம் ஒரு தொழில் இல்லையென்றால், வருமானப்பிரச்சினை உள்ளத்தை அலைக்கழிக்கும். தனிமையையும் கழிவிரக்கத்தையும் அளிக்கும். அந்த உணர்வுகளால் உண்மையில் கலையிலக்கியத்தை கற்றுக்கொள்வது குறையும்.
இங்கே வரும் பலரை கவனிக்கிறேன், பொருளியல் சிக்கல்களால் சில ஆண்டுகளிலேயே நம்பிக்கையிழந்து கசப்படைகிறார்கள்.அக்கசப்பு ஒரு பெரிய சுவர்போல ஆகி அவர்களை சூழ்ந்து மேற்கொண்டு எதையுமே கற்கமுடியாதவர்களாக ஆக்கிவிடுகிறது. அதேபோல உளம்கசந்தவர்களின் கூட்டத்தை நாடச்செய்கிறது. எல்லாவற்றையும் ஏளனமும் நிராகரிப்புமாகப் பார்க்கச் செய்கிறது.
அது ஒரு பெரிய வீழ்ச்சி. அது செயலின்மையை உருவாக்கும். வாய்ப்புகளைக்கூட மறுக்கும் இடத்துக்கு கொண்டுசென்று சேர்க்கும். தங்கள் தோல்விகளையே கொண்டாட ஆரம்பிப்பார்கள். தங்கள் தோல்விகளுக்கு பிறர் காரணம் என புனைந்துகொள்வார்கள். தன்னிரக்கம் என்பது தன்ரத்தச்சுவை. அதையே சுவைத்து தனிமையில் வாழ்வார்கள்.
ஆகவே காலூனிறி நின்றிருக்கும் உலகியல் தளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதற்கும் இதே கல்வியும் பயிற்சியும் அவசியம். இதே போல தேர்வுகளை வெல்லவேண்டும். வெல்லுவதற்குரிய தேர்வுகளை கண்டடையவேண்டும். அதுவே அடித்தளம். அதன்மேல் நின்றுகொண்டு கலையை இலக்கியத்தை பயிலுங்கள். அது நீண்டகாலக் கல்வி என நினைவில்கொள்ளுங்கள். பொறுமையும் தீவிரமுமாக சிலகாலம் முயன்று, உங்களை நிறுவிக்கொள்ளுங்கள். அதன்பின்னரே வெற்றி என ஒன்றை உங்கள் கண்முன் காணமுடியும்
இயக்குநர் ஆவது பற்றிச் சொன்னீர்கள். இங்கே கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே அக்கனவை சென்றடைகிறார்கள். ஏனென்றால் புகழும் வெற்றியும் கண்ணுக்குத்தெரியும் துறை அது. ஆனால் அத்தகைய கனவுடன் இருக்கும் பல்லாயிரவரில் மிகச்சிலரே வாய்ப்பை பெற்றார்கள். வாய்ப்பைப் பெற்றவர்களில் இருபதுக்கும் குறைவானவர்களே பெயருடன் வெற்றியுடன் இருக்கிறார்கள். எண்ணிப்பாருங்கள் ஒரு கோடியில் இருபதுபேர்
அந்த இருபதுபேரில் ஒருவராக இருக்கும் தகுதி உங்களுக்கு உண்டா என நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அதற்கு என்ன தேவை என சொல்லிவிடுகிறேன். சினிமா என்னும் ஊடகம் மீது வெறிகொண்ட பற்று. அதிலேயே பல ஆண்டுகளை கழிக்கும் அளவுக்கு அர்ப்பணிப்பு. அதன்பொருட்டு துயர்களை சந்திக்கும் துணிவு. கூடவே இணைந்திருக்கும் நிர்வாகத்திறன். உலகியலை உடன் சமாளிக்கும் தன்மை. இவை உண்டு என்றால் மட்டுமே சினிமாவை தெரிவுசெய்யலாம்
இன்று சினிமாவுக்குள் நுழைய, வெல்ல பத்தாண்டுகள் பின்னணி உழைப்பு தேவை. அப்பத்தாண்டுகளை செலவிடமுடியுமா என பாருங்கள். அதன்பின் வெற்றியை உறுதியாக அடையமுடியுமா என்றுபாருங்கள். சற்றேனும் ஐயமிருந்தால் இது ஒருவகை பகற்கனவு என விலக்கிவிட்டு உங்களால் செய்யத்தக்கது என்ன என்று கவனியுங்கள். கலையிலக்கிய ஆர்வம்கொண்ட எல்லாருமே இயக்குநர்களாக வேண்டியதில்லை. நீங்கள் நாவலாசிரியராக இருக்கலாம். வரலாற்று ஆய்வாளராகக்கூட இருக்கலாம்.
வாழ்த்துக்கள்
ஜெ
வடக்குநாதனின் வாசலில்
படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் வணிகசினிமாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கலைவிமர்சகர்களின் முழுப்புறக்கணிப்புக்கு ஆளானவர் பி.பத்மராஜன். அவருடைய திரைக்கதைகளில் இருந்த வன்முறையும் காமமும் அவர்களை அப்படி மதிப்பிடச்செய்தது. பின்னர் அவருடைய பல படங்கள் ஒருவகையான ‘கல்ட் கிளாஸிக்’ அந்தஸ்தை அடைந்தன.
அவற்றில் ஒரு படம் ‘தூவானத்தும்பிகள்’. வெளிவந்தபோது பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் மலையாளத்தின் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் பலர் தூவானத்தும்பிகளை அவர்களின் இலட்சிய மலையாள சினிமாவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதிலிருந்து தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தூவானத்தும்பிகளில் இந்த பாடல் பலவகையிலும் கடந்தகால ஏக்கம் ஊட்டுவது. முதல் விஷயம் இதிலுள்ள தெளிவான இட அடையாளம். திரிச்சூர். படத்தின் மொழியும் திரிச்சூர் உச்சரிப்புதான் – திருவனந்தபுரத்துக்காரரான மோகன்லால் திரிச்சூர் உச்சரிப்பை அற்புதமாக அளித்திருப்பார். ‘ம்மக்கு ஒரு நாரங்ஙா வெள்ளம் காச்சியாலோ’ என்கிற அந்த கேள்வி இன்று ஒரு சொலவடை போல.
இந்தப்பாடல் அதிகம் அறியப்படாதவரான பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் இசையமைத்தது. அறியப்படாத நல்ல பாடகரான ஜி.வேணுகோபால் பாடியது. இதன் கேரளத்தன்மை இதிலுள்ள இடைக்கா வாத்திய தாளத்திலும் மெட்டிலும் உள்ளது. ஒரு சோபான சங்கீதப்பாடல் போலுள்ளது இது. நடுவே வரும் அந்த ஆலாபனைகூட சோபானம்தான்.
அனைத்துக்கும் மேலாக பாடலில் வரும் திரிச்சூர் வடக்குந்நாதன் ஆலயத்தின் காட்சிகள். அவை அந்தப்பாடலை ஒரு காலத்தில், ஒரு பண்பாட்டில் அழுத்தமாக நிலைநிறுத்துகின்றன.
ஒந்நாம் ராகம் பாடி ஒந்நினே மாத்ரம் தேடி
வந்நுவல்லோ இந்தலே நீ வடக்கும்நாதன்றே மும்பில்
பாடுவதும் ராகம் நீ தேடுவதும் ராகமாய்
தேவனும் அனுராகியாம் அம்பலப்பிறாவே
ஈ பிரதக்ஷிண வீதிகள் இடறிவிண்ட பாதகள்
எந்நும் ஹ்ருதய சங்கமத்தின் சீவேலிகள் தொழுது
கண்ணுகளால் அர்ச்சன மௌனங்ஙளால் கீர்த்தனம்
எல்லாம் எல்லாம் அறியுந்நு ஈ கோபுரவாதில்
நின்ற நீல ரஜனிகள் நித்ரயோடும் இடயவே
உள்ளிலுள்ள கோயிலிலே நடதுறந்நு கிடந்நுவோ
அந்நு கண்ட நீயாரோ இந்ந்து கண்ட நீயாரோ
எல்லாம் எல்லாம் காலத்தின் இந்த்ரஜாலங்ஙள்
பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்[தமிழில்]
ஒன்றாம் ராகம் பாடி ஒன்றை மட்டும் தேடி
வந்தாய் நேற்று நீ இந்த வடக்குநாதனின் முன்னால்
பாடுவதும் ராகம் நீ தேடுவதும் ராகம்
தேவனுக்கும் காதலியான கோயில்புறாவே
இந்த சுற்று வீதிகள் இடறிப்பிளந்த பாதைகள்
என்றும் இதய சங்கமத்தின் ஸ்ரீபலிகளை தொழுதன
கண்களால் அர்ச்சனை மௌனங்களால் கீர்த்தனை
எல்லாம் எல்லாம் அறிகின்றது இந்த கோபுரவாசல்
உன் நீல இரவுகள் நித்ரையுடன் போரிடுகையில்
உள்ளே உள்ள கோயிலில் வாசல் திறந்து கிடந்ததா?
அன்று கண்ட நீ யாரோ இன்று கண்ட நீ யாரோ
எல்லாம் எல்லாம் காலத்தின் இந்திர ஜாலங்கள்
தாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்
அன்புள்ள அண்ணா,
சென்ற வாரத்தில் தாண்டிக்குடியின் கல்பதுக்கைகள், கல் வட்டங்கள், குகை ஓவியங்களை பார்க்கலாம் என திட்டமிட்டு சென்றோம். கொடைக்கானல் மலைக்கு பின்புறம் இருக்கும் தாண்டிக்குடி பகுதியில் பரந்து விரிந்திருக்கும் கல் திட்டைகள், கல் பதுக்கைகள், ஈமச்சின்னஙகள், ஈமப்பொருட்கள், கல் மணிகள், ஆகியவைகள் பெரும்பாலும் அருகிலுள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். அதையும் தாண்டி இருப்பவை தங்கள் வடிவ நேர்த்தியை மட்டும் இருத்திக்கொண்டு அசைந்தமர்ந்த சிற்பங்களாக இருப்பவை. இங்கு பயிரிடப்படும் காபி, மிளகுகளுக்காக அசைக்கப்பட்டவை, அல்லது இவை இருக்கிறது என்று சொன்னால் அரசு நிலத்தை கையகப்படுத்தும் என்பதற்காக சிதைக்கப்பட்டவை.
இங்குள்ள கல்வட்டங்களில் இருக்கும் பதுக்கைகள் இரண்டு, மூன்று , நான்கு , மற்றும் எட்டு அறைகள் கொண்ட பதுக்கைகள். இது மிகவும் தனித்துவமானது . இரும்பு காலத்திய பதுக்கைகள், கல்லறைகளோடு, செம்பு காலத்திய , பெருங்கற்கால கல் திட்டைகளும் இருக்கின்றன. பொது ஆண்டிற்கு முந்தைய 13 ஆம் நூற்றாண்டு முதல் 5 ஆம் நூற்றாண்டு அதாவது கருமான்களின் முதற்பொற்காலம் வரை இங்கு செழித்திருந்த நாகரீகத்தின் முக்கிய ஈமச்சான்றுகள் இவை.
முதலில் வத்தலக்குண்டு வழியாக ஏறி தாண்டிக்குடிக்கு அருகில் இருக்கும் காமனூர், குமரிக்குன்று, சங்கரன் பேத்து, பெருங்கானல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஈமச்சின்னங்களை பார்த்து விட்டு , மலை அருவியையும் தரிசித்து விடலாம் என்று கிளம்பி வந்தோம். காமனூர் தாண்டி குமரிக்குன்று பகுதியை அடைந்தோம். மலையின் வளைவில் இருக்கும் சிறிய புறம்பின் மீது ஏறி சென்றோம். அங்கு அதன் உச்சியில் கல் அடுக்குகள், கல் வட்டங்களை கண்டோம். முதலில் ஒரு சிதைந்த கல் வட்டம், பின்னர் அதன் நடுவில் கல் பதுக்கை மேலே கலைந்த நிலையில் cap stone எனும் மூடிக்கற்கள், இவை வெறும் மூடிகள் மட்டுமல்ல அடுத்த கல் வட்டத்தை எப்படி அணுகுவது என்பதை சொல்லும் திசைகாட்டியும் கூட. அதற்கு சமானமான தொலைவில் இன்னும் கொஞ்சம் பெரிய கல் வளையம் முற்றிலும் கலைந்திருக்கிறது. அதில் இரண்டு அடுக்குகளில் நான்கு அறை கொண்ட பதுக்கைகள் இருக்கிறது.
கல் வட்டங்களின் நடுவே இருக்கும் பதுக்கைகள், திட்டைகளில் தாழியில் முழு உடலோ, எரிமிச்சமோ வைத்து கண்வட்டத்தோடு மூடப்படும். இரண்டு விதமான முறைகளில் ஈமச்சின்ன கட்டுமானங்களில் இடு பொருட்கள் போடப்படுகின்றன. இடுகாட்டு ஈமச்சின்னங்கள் , எரிகாட்டு ஈமச்சின்னங்கள்ன்னு இரண்டு வகை சின்னங்களை பார்க்கலாம். இடுகாட்டு ஈமத்தாழிகளில் உடல் உள்ளே வைக்கப்பட்டு, அவர்கள் உபயோகித்த பொருட்கள் மண்ணிலும், பொன்னிலும் பிரதி எடுக்கப்பட்டு வைக்கப்படும். அவர்களின் ஆயுதம், பிடித்தமான பண்டத்தோடு வைத்து பதுக்கையை மூடி விடுவார்கள். எரிகாட்டு ஈமச்சின்னங்களில் எரித்த பிறகு மிஞ்சும் எலும்புகள் கருப்பு சட்டியிலும் , சாம்பலும், மண் பொருட்களும், பொன் பொருட்களும் சிவப்பு சட்டியிலும் இட்டு பால் சமனம் செய்து உள்ளே வைப்பார்கள். அவர்களின் குல வழக்கப்படி மூதாதையர்கள் மண்ணிறங்கும் நாள்களில் படையலோடு வழிபாடு செய்து திரும்புவார்கள். முழு நிலவு நாள் வழிபாடும், கரு நிலவு நாள் வழிபாடும் இருக்கும்.பலி பூசனைகளும் இருக்கும்.
அங்கிருந்து கொஞ்சம் தெற்கே தள்ளி உயரமான இடத்தில் இன்னொரு தனித்த கல் பதுக்கை இருந்தது. இது தான் மையமாக இருக்கும் என நினைக்கிறேன். இதிலிருந்து ஒவ்வொரு கல் பதுக்கை, திட்டைகளை பறவைப்பார்வையில் குறித்து அதிலிருந்து இந்த கல் வட்டம் சொல்லும் காலத்தை அறியலாம். இந்த கல்வட்டங்கள் பெருங்கற்கால பண்பாட்டு துவக்கத்திலிருந்து இரும்பு பண்பாட்டு காலம் வரையிலான வெவ்வேறு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கிறது. தாண்டிக்குடியின் கல் வட்டங்கள் பற்றி 1852 முதல் தொடர் ஆய்வு சமீப காலம் வரை நடந்து வந்திருக்கிறது. முதலில் ஜியாலஜிகல் சொசைட்டியினர், பின்னர் ஜெசூட்ஸ் எனும் யேசுசபை பாதிரியார்கள்.இந்தியவியலாளர்கள், தாவரவியலாளர்கள், பின்னர் தொல் பொருள் ஆய்வாளர்கள் என்று தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிறார்கள். ரெவரண்ட் காஸ்டன், ஜெசூட்ஸ் ரோஸ்னர், ராபர்ட் பெல் துவங்கி வீலர் வழியாக பேராசிரியர் ராஜன் வரை ஆய்வு செய்திருக்கிறார்கள். நன்கு செதுக்கப்பட்ட கற்கள் நான்குபுறமும் வைக்கப்பட்டு அதன் மேல் கல்லாலான மூடி போட்டு வைக்கப்பட்டது போன்ற அமைப்பு. அதை சுற்றி கல்வட்டம்.
உள்ளேயே இரண்டு அடுக்குகள், மூன்று அடுக்குகள் கூட இருக்கும் என்று கல்லறை திருடர்கள் தங்களின் சாகசக்கதைகளில் சொல்லி இருக்கிறார்கள். வட்டத்திற்குள் இருக்கும் சதுரத்தில் இரண்டாகவோ, நான்காகவோ தடுக்கப்பட்ட , பதிக்கப்பட்ட கற்தொகுப்பை ஒன்றாக மறைத்து மூடியிருக்கும் ஒற்றை தொப்பிக்கல். அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று கல்லறைகள் தொகுந்து அமைந்துள்ள கல்லறைகள் என்று தாண்டிக்குடி பதுக்கைகள் குறிப்பிடத்தகுந்த வரலாற்று இடத்தை முன்பதிவு செய்து இருப்பவை. கல் வட்டங்கள் முற்றிலும் சிதைந்து விட்டது.ய்ர்ன் சர்க்கிள்கள் என்று சொல்லப்படும் இந்த கல் வட்டங்களில் காஸ்மிக் க்ளாகை பொருத்தியிருப்பார்கள் நம் முது மூதாதையர்கள். கல் வட்டத்தின் முதன்மைக்கல்லை கண்டறிந்து அதிலிருந்து புதைக்கப்பட்டவரின் இறந்த திதி , நாள், கோளை கண்டுபிடிக்கும் அறிஞர்கள் இருக்கிறார்கள். இதில் சூரிய வட்டம், நட்சத்திர கூட்ட வட்டம் என்று இரண்டு இருப்பதாக தொல் பண்பாட்டு வானியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதை மையப்படுத்தி ( sundial, stellar dial ) நவீன நாவல்கள், அறிவியல் புனைகதைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
கல்வட்டங்களில் இருக்கும் கல் அமைவிடங்களை நவீன வானியல் தொழில் நுட்ப மென்பொருள் உதவியோடு வானியலில் கோள்களின் இருப்பிடத்தை கண்டறிந்து சற்று ஏறக்குறைய துல்லியமான ஆண்டை நிருபண ரீதியாக சொல்லி விடுகிறார்கள். வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்பதை எப்படி காலக்கணிதம் கொண்டு தேதியை வரையறை செய்கிறார்களோ அப்படி துல்லியமாக கல்வட்டங்களின் கிங் ஸ்டோன்( முதன்மைக்கல் அல்லது துவக்கப்புள்ளி, அல்லது மையப்புள்ளி) கொண்டு மற்ற கற்களின் இருப்பு, கோணம், அமைவிடம் ஆகியவற்றை வைத்து முதலில் வானியலின் நட்சத்திர கூட்டத்திற்கு அருகில் இருப்பது என்பதை ஊகித்து பின்பு அதிலிருந்து விலக்கியும் சேர்த்தும் பரிசிலீத்து கோள்தொகுதியின் அமைவிடத்தை வைத்து நாளையும் சில நேரங்களில் அந்த தலைவனின் பெயரையும் ஊகிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு இந்து தொன்மத்தின் முப்புரம் எரித்த சிவனின் கதையை எடுத்து கொண்டால், அதில் வரும் முப்புரமும் ஒரே நேர்கோட்டில் வரும் போது மட்டுமே அழிக்க முடியும் என்ற தொன்மத்தை நினைவில் கொள்ளுங்கள். தாராக்ஷரும் , வித்யூமாலியும், கமலாக்ஷரும் இணைந்து முப்புரத்தையும் ஆண்டதையும், அவை ஒரே நேர் கோட்டில் வந்ததை சிரியஸ் எனும் நாய் நட்சத்திர தொகுப்பு அல்லது மான் நட்சத்திர தொகுப்பின் ஒற்றை அணியை குறிக்கும் குறியீடு என்று சொல்கிறார் இந்தியவியலாளரான ஸ்டெல்லா க்ராம்ஸ்ரிஸ்ச் ( Stella kramrisch). அவருடைய presence of shiva நூலில் மூன்று கோள்கள் ம்ருகவ்யதா எனும் அழல் மீனுக்கு நேராக வந்த வானியல் நிகழ்வின் குறியீடு என்கிறார். இது தொடர்பாக இந்திய அறிதல் முறையில் பண்பாட்டு மானுடவியல் மற்றும் இந்தியவியல் அறிஞரான அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் இந்திய அறிதல் முறைகளில் விளக்கமாக சொல்லி இருப்பார். தொன்மங்களில் இருந்து கவித்துவமாகவும், தத்துவார்த்தமாகவும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் இந்த கல்வட்டங்கள் தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு அடையாளங்கள். அதோடு இவை நம் சமூக பொதுமனத்திற்கு தெரிந்த நெருக்கமான ஒரு படிமம் .
இந்த கல்வட்டங்களில் இருக்கும் கற்கள் ஏச கோசலாக இருப்பதாகவும், ஒரே மாதிரி இருப்பதாகவும் பார்ப்பவர்களுக்கு தோன்றும். ஆனால் அது ஒரு புதிர், காண்பவர்களின் அறிதலுக்கேற்ப அகம் திறக்கும் அதிசயம். இந்த தேசம் முழுக்க ஆயிரக்கணக்கான ஆடல்வல்லானின் சிற்பங்கள், செப்பு திருமேனிகள் இருக்கின்றன. அவை வழிபடவும் படுகின்றன. ஆனால் ஒவ்வொன்றும் அதனளவிலேயே தனித்துவமானதும், கவித்துவமானதும், புதுப்புது தத்துவார்த்த மெய்மைகளை சொல்லக்கூடியதுமாகும் . ஒவ்வொரு நடராசர் திருமேனியும் ஒவ்வொருவரின் கைரேகை அளவிற்கே தனித்துவமானது. எதுவும் ஒன்றல்ல. இந்த சிற்பங்களில் ஆயிரம் ஒற்றுமையும், ஒரு சிற்ப, தத்துவ, மெய்யியல் வேற்றுமையும், கல்வியும் இருக்கும். அதை நுணுகி அறிபவன் அறிகிறான். மற்றவர்களுக்கு அது வெறும் காட்சியின்பம், அல்லது பக்தியின் வெளிப்பாடு. அது போலவே இந்த கல்வட்டங்களும் தனித்துவமானது. குறியீட்டு ரீதியில் பல செய்திகளை அணுகி செவி மடுப்பவர்களுக்கு சொல் எண்ணி மெய்மை சொல்வது.
கல்வட்டங்கள் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு நட்சத்திர கூட்டங்களை குறிக்கும் ( constellation). அதோடு 8 ராசி அல்லது நட்சத்திர குறியீடுகள். மீனம், மேஷம், இரட்டை தலை கழுகு, ஆறு தலை நட்சத்திரம் , ஆகியவைகளை நாமே பாறை செதுக்குகளில் ரத்னகிரி அருகில் பார்த்தோம். அதோடு ஜெமினி எனும் இரட்டைக்குழந்தை, கும்ப வடிவம் , நண்டு ஆகியவை மிக அதிகமாக உலகளவில் காணக்கிடைப்பவை. ஓரியன், அக்வா, பிஸ்கஸ் , சிரியஸ் எல்லாம் அனைவரும் அறிய முடிந்த ஒன்று சப்த ரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், வெள்ளி இவைகளில் இருந்தும் தரையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருக்கும் கல் பதுக்கைகளின் மேல்தட்டு எனும் கேப் ஸ்டோன் காட்டும் திசையையும் மனதில் கொண்டு பறவைப்பார்வையில் கல் பதுக்கைகளை கீழிருந்து மேலாகவும், அல்லது மைய மேல் பகுதியில் இருந்து கீழாகவும் இணைத்து இது எந்த வியாழ வட்டத்தை சார்ந்த, எந்த நட்சத்திர கூட்டத்தின் நாளை சொல்கிறார்கள்ன்னு புரிய முயற்சி செய்யலாம் . ம்ருகவயதா எங்கு குறிக்கப்பட்டிருக்கிறதோ அது 50 ஆண்டு என்பதை குறிக்க கூடியது. மற்ற நட்சத்திர குறியீட்டை கொண்டு எத்தனையாவது ஆண்டில் நிகழ்ந்த மரணம் என்பதை சரியாக அறியலாம்.
இது பற்றிய ஆய்வில் பண்டைய ஜெர்மானிய இந்தியவியலாளர்கள் பெரும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறார்கள். 1948ல் மார்ட்டிமர் வீலர் வரை இந்த புதிரை விளக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் பிரம்மகிரியில் கண்டறிந்த கல்வட்டங்கள் , குத்துக்கல்களை கொண்டு காலத்தை கணித்து வெளியிட்டிருக்கிறது இந்திய வானியல் துறை . ( astronomical orientation of the megalithic stone circles in brahmagiri – by n kameswara rao. —- astronomical society of India வெளியிடு) . தமிழகத்தின் கல் வட்டங்கள் பற்றி மேலதிகமாக ஆய்வு செய்து புதிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பு இன்னும் மிச்சமிருக்கிறது. உலகளவில் எகிப்தியலாளர்கள், மயன் நாகரீகவியலாளர்கள், ஜெர்மானியர்கள் கல் வட்டங்களின் புதிர்களை அணுகி அறிந்திருக்கிறார்கள். பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கின்றன. பண்பாட்டு ஆய்வாளர்கள், மானுடவியலாளர்கள், வானியல் நிபுணர்களையும் தாண்டி இது புனைவெழுத்தாளர்கள் , கவிஞர்கள் இவர்களையும் தாண்டி இணைய விளையாட்டுகளுக்கு புனைவு எழுதும் குறு நாவலர்கள் வரை இந்த விஷயங்கள் எட்டியிருக்கிறது.
இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களுக்கும், வானியல் அறிஞர்களுக்கும், இந்தியவியலாளர்கள், அல்லது எகிப்தியலாளர்கள், மய நாகரீக ஆய்வாளர்களுக்கும் இடையே ஒருஙகிணைந்த உரையாடல் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் திசையில் மெய்மையை தேடி தனித்தனியாக பயணிக்கிறார்கள். இங்கே இதை முன் வைத்து தத்துவார்த்த தளத்திலும், பண்பாட்டு தளத்திலும் மாபெரும் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இது தொடர்பாக பல புனைவுகள், அபுனைவுகள், தொன்மத்தை அணுகும் புதுக்கிளைகள் என்று இந்த ஆய்வுகள் பரந்து விரிய வேண்டும். அது நம் மொழிக்கு பண்பாட்டிற்கு இன்னும் புதிய பாய்ச்சலை கொடுக்கும்.
வீர ராஜமாணிக்கம்
மேலும் :
இந்திய அறிதல் முறைகள்.( https://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/may/03/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-1108399.html)https://www.researchgate.net/publication/234242642_Astronomical_orientations_of_the_megalithic_stone_circles_of_Brahmagiri
ஆகி சிவசுப்ரமணியம் : தாண்டிக்குடி ஆய்வு, பழனியில் தொல்லியல் ஆய்வு.
விமர்சனம், ரசனை – கடிதம்
அன்புள்ள ஜெ
விமர்சனமும் ரசனையும் பதிவை வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் முதலில் தோன்றியது நீங்கள் கனிந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்ற எண்ணம் தான். சில நாட்களுக்கு முன் ஜெயகாந்தனை போல ஒருநாள் எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்றால் நல்லது தான் என்ற உங்கள் வரி நினைவுக்கு வந்தது. உங்களுக்கு அது எவ்வண்ணம் நிகழும் என்று யோசிக்கையில் சில எண்ணங்கள் உருவாகி வந்தன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. இவை பிழையாக கூட இருக்கலாம். தெரியவில்லை.
வில்லை அறிவது புல்லை அறிவது. புல்லை அறிவது புவியாளும் இறையை அறிவது. இது வண்ணக்கடலின் துரோணரின் சொற்களில் இருந்து நான் பெற்ற சிறு வரிகள். அர்ஜூனன் வில்லை யோகமென்று பயில்பவன். நீங்கள் அவ்வண்ணம் மொழியை பயில்பவர். மொழி என்னும் சொல்லே மகத்தானது தான். மொழிதல், என் சொல்லுக்கு மறுமொழி என்பதில் வெளிப்படுதல் என்ற பொருள் பயின்று வருகிறது. இருப்பும் வெளிப்பாடென்றால் அதுவும் ஒரு மொழி தான். காட்சிகளால், ஒலிகளால், ஒளிகளால், வண்ணங்களால், குறியீடுகளால் என நாமறியும் மொழி பற்பல வடிவம் கொண்டது. அதில் ஒன்றை கொண்டவன், ஒன்றிலிருந்து ஒன்றென உலகாளும் ஒன்றை சென்று தொடலாம். அதுவே உங்கள் யோகம்.
எல்லா கதைகளும் ரசிக்க தக்கவை தானே என்ற உங்கள் வரியை படிக்கையில் நேற்று அம்மாவிடம் புலம்பியதை நினைத்து கொண்டேன். தினமலர் வார இதழில் வந்த ஒரு கதையை காட்டி இதற்கெல்லாம் மூவாயிரமா என அலுத்து கொண்டேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இருந்த அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அதன் மறுமுனையில் நீங்கள் ஞானம் நோக்கி பயணம் செய்கிறீர்கள்.
அந்த சிறுமியர் இருவரோடு இருக்கும் படம் அருமையானது. ஒவ்வொருமுறையும் குழந்தையரை காண்கையில் வருவது பரவசமே. அத்தனையையும் அள்ளி கொள்ள துடிக்கும் மனமல்லவா அவர்கள். இன்று கனிவில் முதிர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். இது மகிழ வேண்டிய தருணம், கொண்டாட படவேண்டியது. எத்தனை இருந்தாலும் மனதின் இன்னொரு மூலையில் மெல்லிய துயரம் உள்ளது. துயரம் என்று சொல்வதும் தவறு தான். முழுமையான நிறைவு தரும் ஓரு மௌனம் என்பதே பொருத்தமானது,
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள ஜெ
இப்போது ஒவ்வொன்றையும் வகுத்து உரைக்கும் பாணிக்குச் சென்றுவிட்டீர்கள். எதையும் வகுத்துச் சொன்னால் அது அறிவதிகாரமாக ஆகிவிடும், ஆகவே சொல்லவே முடியாது என்று சொல்வதே புத்திசாலித்தனம் என்பதுதான் பொதுவாக தமிழ்ச்சூழலில் உள்ள நம்பிக்கை. உங்கள் திட்டவட்டமான குரல் சிந்திக்கவைக்கிறது. ஓர் அறைகூவல் அது. உங்கள் வரையறைகளை மீறிச்சென்றால்கூட அது அவ்வரையறைகள் எழுப்பிய அறைகூவலால்தான்
நன்றி
மகாதேவன்
கன்னிநிலம் பற்றி
காஷ்மீரத்தின் லடாக் பகுதிக்கு, எக்கனாமிக்ஸ் ஆஃப் ஹாப்பினஸ் நிகழ்வுக்கூடுகைக்காக சில மாதங்கள் முன்பு நண்பர்களுடன் சென்றிருந்தேன். செயல்படுவோர்களின் பெருங்கூட்டத்துக்குள் வைத்து சதீஸ்குமார் அவர்களைச் சந்தித்தேன். காந்தியால் தாக்கம்பெற்று தத்துவமடைந்தவர் சதீஷ் குமார். இராஜஸ்தானில் 1936ல் பிறந்து தனது ஒன்பது வயதில் சமணத்துறவியாக வீட்டைவிட்டு வெளியேறியவர்.
1962ல் அணு ஆயுதங்களுக்கு எதிரான ஒத்துழையாமையை வலியுறுத்தி, அப்போதைய அணுஆயுத நாடுகளின் 8000 மைல்களுக்கும் அதிகமான தொலைவு வரை நடந்தே செல்லும் ‘அமைதிக்கான புனித நடைப்பயணத்தை’ வினோபாவின் ஆசியுடன் நிறைவேற்றியவர். அணுஆயுத எதிர்ப்பாளராகவும், இந்தியக் களச்செயல்பாட்டளராகவும், சுற்றுச்சூழல் இதழான ரீசர்ஜன்ஸ்&எகாலஜிஸ்ட்-ன் ஆசிரியராகவும், கல்வித்துறவியாகவும் இன்று உலகறியப்படுகிறார். உயிர்ச்சூழல்களுக்கான உலகளாவிய ஆய்வுக்கல்வியை வழங்கும் சூமேக்கர் கல்லூரியின் காரணகர்த்தா மற்றும் நிறுவனர் இவர்.
சதீஷ்குமார் தனது குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பமின்மையால், தி ஸ்மால் ஸ்கூல் எனும் சிறுபள்ளியை 1982ல் இங்கிலாந்தில் துவங்கினார். மாணவர்கள் செடிவளர்ப்பது, சமைப்பது, பரிமாறுவது, உரையாடுவது, வாசிப்பது, வாழ்வது இவைகள்தான் அங்கு கல்வி. மதியவுணவு முடிந்த பிறகு புகைப்படவியல், யோகா, குயவுத்தொழில், தச்சுவேலை இவைகளில் ஏதாவதொன்றை விருப்பமாகத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் அன்றாடம் பயிற்சி செய்வார்கள்.
லடாக்கில் நிகழ்ந்த அந்நிகழ்வில் சதீஸ்குமார் பேசிய உரையின் செறிவு, ஒட்டுமொத்த உலகமனங்களுக்கும் கல்விகுறித்தான உண்மையாழத்தை எடுத்துரைப்பதாக எளிமைப்பட்டு இருந்தது. அவர் மீண்டும் மீண்டும் அழுத்திச்சொல்கிற கருத்தென்பது, “இந்தக் கல்விமுறை நம் குழந்தைகளை கற்பனைகளை நம்பவிடாமல் செய்துவிடுகிறது. தனக்காக ஒரு மேஜிக் நிகழும் என்று நம்புகிற ஒரு குழந்தை மனதை, அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்றுசொல்லி தர்க்கப்படுத்துகிறது இக்காலக் கல்விமுறை.
ஆனால் என்னைப்பொறுத்தவரை, கற்பனைகளையும் சகமனிதனையும் நம்பச்சொல்லும் கல்விமுறைதான் நமக்கு அவசியத்திலும் அவசியம். கற்பனை என்பதை வெற்றுநம்பிக்கை அல்ல, அதுதான் வேர்நம்பிக்கை. இயற்கைப் பேருலகம் மனிதனுக்கு வழங்குகிற கற்பனையைத் தடுக்கும் இடர்களைக் கடப்பதே கல்வியின் இலக்காக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் முழுச்சுதந்திரமாக கற்பனைக்க வேண்டும். சடங்குமுறைக் கல்விகள் உடைக்கப்பட்டு மானுடக்கல்வி உருவாகிவர வேண்டும்.
ராக்கெட் வேகத்தைக் கணக்கிடுவது மட்டும் கல்வியல்ல. ஒரு மண்புழு ஊர்வதை கவனமாகப் பார்ப்பதுகூட ஒரு குழந்தைக்கான கல்விதான். இயற்கையின் இறைத்தன்மை கல்விக்குள் தானாக மேலெழுந்து வரவேண்டும். எல்லாவற்றையும் வெறுமனே துறையாகப் பார்க்காமல், சிலவற்றை நாம் இறையாகவும் பார்க்கிற கற்பனை நம் குழந்தைகளுக்கு நிகழவேண்டும்…”
வெறும் தர்க்கமாகவும், வணிகமாகவும் இக்காலக் கல்விமுறை தன்மைபிறழ்ந்து வாழ்வுக்கு அச்சம் தருகிற இச்சூழலில், ஒரு குழந்தையின் பூமனதுக்குள் நிறமழியாத ஒரு நற்கனவினை ஆழவிதைப்பது ஒன்றுதான் அதற்கான நிகர்மாற்று என்பதை சதீஸ்குமாரின் சொற்கள் அன்று எனக்குள் நெஞ்சுபுகுத்தின.
இச்சமகாலத்தில், அன்றாடம் உருவாக்கிற நெருக்கடியும், சகவுறவுகள் சார்ந்த சலனங்களும் பெரியளவில் மனவீழ்ச்சிக்குள் என்னைக் கொண்டுசென்றன. கடந்த இரண்டு மாதங்களாக மனம் முழுக்க உச்ச சலனத்தில் உறைந்துகிடந்தது. அப்படியானதொரு நாளின் நீட்சியில் நேற்றைய முன்தினம் என் கையில் உங்களுடைய ‘கன்னிநிலம்’ நாவல் வந்துசேர்ந்தது.
லடாக் நிகழ்வில் சதீஸ்குமார் அவர்கள் பேசிய உரையின் ஒட்டுமொத்த சாரமென்பது, ‘ஒவ்வொரு இளையமனதும் ஒருவித சாகச மனநிலையைத் தனக்குள் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்’ என்பதாகவே இருந்தது. இந்நாவலின் தொடக்கமே அந்த சாகச மனநிலையில் வேர்விட்டு எழுந்ததாகவே எனக்குள் தோன்றியது.
***
“சற்றே சலிப்பு உருவான நாளில் எனக்கு நானே உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக…”
“நான் எழுதுவதன் முதல்நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான் , சில சமயம் ஆழமான மனஎழுச்சி சில சமயம் ஆழமான தேடல், சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல்கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும்…”
இப்படியாகத் துவங்குகிற உங்களுடைய முன்னுரை என்னளவில் ஒரு ஆற்றுப்படுத்துதலை நிகழ்த்தத்துவங்கி நாவலுக்குள் மெல்லமெல்ல மலையேற வைத்தது.
“நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். அச்சம்தான் சித்ரவதையின் முக்கியமான கருவி. அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். ஆனால் அச்சம் நம்மை மீறுகிறது. அதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. உதாசீனம் செய்யச் சிறந்தவழி பிறிதொன்றைக் கவனிப்பது…”
“பேசக்கூடாது. பேசுவதென்பது அவன் சொல்வதைக் கவனிப்பது. கவனித்தால் அதற்கு மனம் எதிர்வினைச் செய்யும். அஞ்சும். அது எனக்கான சொல்லே இல்லை. எனக்குப் புரியும் மொழியே இல்லை. அது வெறும் ஒலி. அது என் முன் ஒலிக்கவேயில்லை…”
என்னுடைய ஒட்டுமொத்தமான மனச்சிடுக்குகளில் இருந்து மீட்கிற ஒரு மேலான விடுதலையை இந்த வார்த்தைகள் வெகு அனிச்சையாக நிகழ்த்தியது. என்னை வாட்டுகிற சுயவலியிலிருந்து என்னுடைய கவனந்திருப்புவதற்கான பெருஞ்சந்தர்ப்பத்தை இவ்வரிகளின் வாயிலாக நான் உள்ளூர அடைந்திருப்பதை உணரமுடிந்தது.
பெருங்காட்டுக்குள் ஒரு எளிய இனக்குழுவுக்கும், அதிகாரம் மிகுந்த இராணுவத்துக்கும் இடையில் நிகழும் போரை விவரிக்கிற காட்சிகள் ஒவ்வொரு அத்தியாயமாக விரிந்துசெல்கிறது. எல்லா காடுகளும் மண்ணடியில் வேர்களால் ஒன்றிணைவதைப் போல, எல்லா மனிதர்களும் அவர்களின் உள்ளாழத்தில் அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற மையஇழை ஒருகணம்கூட இக்கதையில் என்னைவிட்டுத் தவறவில்லை.
“இவனைப் பாருங்கள்… நாயர். இவன்தான் உங்களைப் பிடிச்சவன். உங்களை துரோகின்னு தண்டிச்சா அதை கண்டுபிடிச்சதுக்காக இவனுக்கு இன்னும் ஒரு பிரமோஷன் கிடைக்கும். காப்டன் ஆயிருவான். ஆனா சேம்பருக்குவந்து என் காலில விழுந்து அழுதான். உங்களுக்குப் பரிஞ்சு பேசினா இவன் மேலேயும் சந்தேகம் வரும். ஆனா அதைத் தெரிஞ்சுகிட்டே உங்களுக்காக உயிர்ப்பிச்சை கேட்டு அழுதான்… உங்களை மாத்திக்காட்டுறேன்னு உங்ககிட்ட வந்தான். இவனோட அன்புகூட உங்களுக்கு முக்கியமில்லையா ? நாடு, குடும்பம், நட்பு எல்லாத்தையும்விட பெரிசா நீங்க சொல்ற அந்த பிளாட்டானிக் லவ்?”
“என் தொண்டை அடைத்தது. சட்டென்று திரும்பி நான் நாயரின் கைகளைப் பற்றினேன். “தெரியும் சார். ஐ நோ ஹிம்…” அதற்குமேல் என்னால் பேசமுடியவில்லை”
இவ்வரிகளை வாசிக்கையில், சட்டென சூழல்மறந்து நான் உடைந்து அழுதிருப்பதை உணர்ந்தேன். மனிதர்களை மீளமீள நேசிப்பதற்கான எத்தனை வாய்ப்புகளை ஒரு படைப்பு தன்னுள் பொதிந்துவைத்திருக்கிறது.
“வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது. இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று”
மற்ற எல்லாவற்றையும்விட என்னை நிலைகுலைத்த சொற்கள் இவை. ஒவ்வொரு மனிதனின் சுயஅச்சங்கள் சென்றடையும் உணர்வாழத்தை இவ்வரிகள் துல்லியப்படுத்தி நெஞ்சசைக்கிறது. வலியைப்பற்றிய நம் மதிப்பீடுகள் தான் என்ன? நிஜத்தில் நாம் யாருமே வலியைப் புரிய முற்படுவேயில்லை. வலியைப்பற்றி நாம் அறிந்துவைத்துள்ள ஒரு பிழைமுள்ளை நம் நெஞ்சைக்கீறி இரத்தச்சூட்டோடு எடுத்துப்போடுகிறது இவ்வார்த்தைகள்.
கன்னிநிலம் – ஒரு கனவு என்பது எப்போதும் மிகையுணர்ச்சிகளால் தான் மனதுள் நிலைபெறுகிறது. கனவென்பதே ஒருவகையில் மிகையுணர்வுதான். வாழ்வினை ஒரு சாகச மனதோடு எதிர்கொள்வதற்கானத் துணிவினை இந்த மிகையுணர்வுதான் வழங்குகிறது. அவ்வாறான மிகையுணர்வுகளின் சாகசத்தால் நிரம்பிவழிகிற இந்நாவல்… எனக்கு இன்னொரு ‘தன்மீட்சி’ புத்தகமாகவே மனம் பதிந்திருக்கிறது.
“உண்மையில் நான் அங்கே இருப்பதாகவேப்பட்டது. அந்தச் சிறையும் வதையும் வெறும் கனவென மனம் பிரமை காட்டியது. எது உண்மை எது பிரமை? அது மனம்கொள்ளும் தெரிவுதானா? உடலை வெல்ல மனம் செய்யும் மாயமா இது? உடைந்து போகாமலிருக்க மனம் செய்யும் முயற்சியா?”
இவ்வாறான மீட்பின் சொற்களைத் தருகிற உங்களுடைய படைப்புமனதுக்கான பிரார்த்தனையை, அஹிம்சைக்காக நாடு நாடாக நடந்தே அலைந்த காந்தியவாதி சதீஸ்குமாரின் பாதங்களில் வைத்து மனம் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றியுடன்,
சிவராஜ்
May 1, 2021
கலையும் பகுத்தறிவும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கலையை ரசிக்க பகுத்தறிவு எப்போதும் தடையாகவே அமையும் என்றீர்கள்.
என்னுடைய கேள்வி யாதெனில், பகுத்தறிவின் வெளிப்பாடு கலை நுகர்வின் முனையிலிருந்து பார்த்தல் தடையாகவே இருக்கும்பொழுது, அதே கலையின் உருவாக்கத்தில் பகுத்தறிவின் தாக்கம் யாது என்பதே. கலைஞனும் படைப்பாக்கத்தின்ப்பொழுது முழுக்க முழுக்க ஒருவகையான மயக்கநிலையில்தான் அக்கலைபடைப்பபை உருவாக்குகிறானா?
யாதொரு கலையை கற்கும் பொருட்டு ஒருவனுக்கு அதேப் பகுத்தறிவு தேவைப்படும் அல்லவா?. குறிப்பாக அக்கலையில் உள்ள டெக்னிக்ஸை கற்கும் பொழுதும் அதை தன் கலைப்படைப்பில் உபயோகிக்கும் பொழுதும் ஒருவகை தர்க்கத்தினூடகத்தானே சிறு சிறு முடிவுகளை நிச்சயம்ப் பன்னிக்கொண்டு முன் செல்கிறான்.
எனது கேள்வியை தெளிவாக கேட்டுள்ளேன் என்று நினைக்கிறேன்.கேள்வியில் ஏதேனும் குழப்பங்கள் இருப்பின் தயவுக் கூர்ந்து தெரியப்படுத்தவும்.
குறிப்பு: நான், படைப்பூக்கம் தான் என்னக்கு நிறைவை தரும் என்று முடிவு செய்து, புகைப்பட கலையை சுயமாக கற்றுக் கொண்டு வருகிறேன், தங்களின் பதில் கலைப்புகைப்படங்களை எவ்வாறு நான் அணுக வேண்டும், காண வேண்டும், ரசிக்க வேண்டும் முதலிய அடிப்படைகளை நோக்கி ஒரு துளியேனும் நகர்த்தும் என்று நம்புகிறேன்.
நன்றி,
ம.பிரசாந்த்
[image error]
அன்புள்ள பிரசாந்த்,
பலரும் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இந்த ஐயம் எங்கிருந்து எழுகிறது என்றால் பகுத்தறிவு என்ற சொல்லை அதன் தத்துவப் பின்புலம் இல்லாமல் பொதுவாக அறிவு என்ற பொருளிலேயே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்துதான். ஆகவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
ஆங்கிலத்தில் சில கலைச்சொற்கள் அவற்றுக்குரிய தத்துவவிவாதப் பின்னணியில் உருவாகி வந்தவை. அவற்றிலொன்று Rationality. அதுதான் இங்கே பகுத்தறிவு என மொழியாக்கம் செய்யப்பட்டது. அந்தப் பின்னணியை புரிந்துகொள்ளாமல் சொல்லை மட்டுமே கொண்டு அதன் பொருளை ஊகிக்கக்கூடாது.
பகுத்தறிவுவாதம் [Rationalism] என்பதை இவ்வாறு வரையறை செய்யலாம். ‘புறவயமான அறிதல்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்வதும், தர்க்கபூர்வமாக அவற்றை வகுத்துக்கொள்வதும், புறவயமாக நிரூபிக்கத்தக்கவற்றை மட்டுமே உண்மை எனக் கொள்ளுதலும்”அதாவது ஐம்புலன்கள் வழியாகவும், அவற்றை தொகுக்கும் தர்க்கம் வழியாகவும் உலகைப் பார்த்தல்.
பகுத்தறிவுவாதம் என்பது ஒரு கறாரான தத்துவக்கொள்கை அல்ல. அது பொதுப்பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தைதான். தத்துவ விவாதங்களில் இருந்து முளைத்தது.பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பலவகையான தர்க்கவாதங்கள் மேலெழுந்தன. அவை பொதுத்தளத்தில் இப்படி ஒரு நிலைபாடாக தங்களை தொகுத்துக்கொண்டன.
ஐரோப்பாவில் பத்து நூற்றாண்டுக்கும் மேலாக கிறிஸ்தவ மதம் நம்பிக்கை சார்ந்த ஒரு உலகப்பார்வையை உருவாக்கியிருந்தது. அந்தப்பார்வையின் மையம் என்பது இறைவாதம்தான்.அதன் அடிப்படையில் பழைய நிலப்பிரபுத்துவம் கட்டப்பட்டிருந்தது. திருச்சபையின் அடித்தளமும் அதன்மேல் அமைந்திருந்தது. உலகத்தை இறைச்சக்தியே நடத்துகிறது, அதை உணர்ந்து தொகுத்துக்கொண்டதே மதம், ஆகவே மனிதவாழ்க்கையை இறையாணைகளின் பெயரால் மதம் வழிநடத்தவேண்டும் என்பதே அதன் கொள்கை.
அந்த இறைவாதம், நம்பிக்கை வாதம் ஆகியவற்றை எதிர்த்து மனிதஉரிமை, சிந்தனையுரிமை ஆகியவற்றுக்கான குரல் அங்கே எழுந்தது.உலகவாழ்க்கையை, மனித அகத்தை தர்க்கபூர்வமாக அணுகும் கொள்கைகள் உருவாயின. ஒட்டுமொத்தமாக அவற்றை தர்க்கபூர்வ உலகநோக்குகள் எனலாம். அவற்றை அவை உருவாகிவந்த காலம் அறிவொளிக்காலம் [Age of enlightenment] எனப்படுகிறது
அந்த காலகட்டத்தில் உருவாகிவந்த தர்க்கநோக்குகளை பலவகையிலும் நாம் சிந்தனையில் எதிர்கொள்வோம். அவற்றை ஒட்டுமொத்தமாக புறவயத்தர்க்கமுறையை முன்வைப்பவை, அகவயமான தர்க்கமுறையை முன்வைப்பவை என்று பிரிக்கலாம். புறவயத் தர்க்கத்தை முன்வைப்பவர்கள் உண்மை என்பது பொதுவாக விவாதிக்கப்பட்டு நிறுவத்தக்கது என்று நம்புபவர்கள். ஒருவர் மட்டுமே அறிந்து பிறர் அறியமுடியாதவை, புறவயமாக நிறுவப்படமுடியாதவை உண்மையல்ல என்று சொல்பவர்கள்.
இத்தரப்பில் இம்மானுவேல் காண்டின் மெய்யறிவுவாதம் [Pure Reason] அதிலொன்று. அது புறவுலகை அகத்தையும் புறத்தையும் இணைக்கும் விரிவான தர்க்கமுறையால் வகுத்துக்கொள்வதைப் பற்றிப் பேசுகிறது. ஐந்து புலன்களால் அறியும்படி நிரூபிக்கப்படுவன மட்டுமே உண்மை என நம்பும் கொள்கை நிரூபணவாதம் [ Empiricism]. அறிவார்ந்த தர்க்கத்துடன் பொதுவாக ஆராய்ந்து நிறுவப்படத்தக்கது மட்டுமே உண்மை என நம்புவது நிலைவாதம் [ Positivism] பயன்தரத்தக்க முறையில் தர்க்கபூர்வமாக நிறுவப்படுவது மட்டுமே உண்மை என்று கருதும் நடைமுறைவாதம் [Pragmatism] என பலகொள்கைகள் இத்தரப்பில் உண்டு.
இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாம் பகுத்தறிவுவாதம் [Rationalism] என்கிறோம்.அதாவது எதையும் நம்பிக்கை சார்ந்து ஏற்காமல் தர்க்கபூர்வமான ஆராய்ச்சியை நம்புவது. உண்மை என்பது அனைவருக்கும் பொதுவாக நிரூபிக்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பது. எதையும் ஆராய்ந்து பார்க்கவும் நிரூபிக்கவும் முடியும் என்று கூறுவது. நிரூபணத்துக்கு முன்வராமல் முன்வைக்கப்படுவன அகவய கருத்துக்களே, அவற்றுக்கு உண்மைமதிப்பு இல்லை என நினைப்பது.
இந்த பகுத்தறிவுநோக்கு கடவுள்நம்பிக்கையை மறுப்பதாக ஆகும்போது அது இறைமறுப்புவாதம் எனப்படுகிறது [Atheism]. கடவுள் நம்பிக்கையை ஏற்கவோ மறுக்கவோ தர்க்கத்தால் முடியாது, ஆகவே அது பேசுபொருளே அல்ல என்று சொல்பவர்கள் அறியமுடியாமைவாதிகள் [Agnostics] எனப்படுகிறார்கள். தமிழகத்தில் பகுத்தறிவுவாதம் இறைமறுப்புவாதமாக மட்டுமே அறிமுகமாகி இரண்டுக்கும் ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
இந்த புறவயமான தர்க்கநோக்குகள்தான் நவீன அறிவியலை கட்டி எழுப்பின. நாம் இன்று பயிலும் சமூகவியல் ஆய்வுகள், பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று ஆய்வுகள் முதலிய அனைத்தையும் உருவாக்கின. நவீன ஜனநாயகக்கொள்கைகள் எல்லாமே அந்த நோக்கால் உருவாக்கப்பட்டவைதான்.இவற்றை சிந்திக்கும் மானுடர் எவரும் மறுக்கவியலாது. இவை தேவையில்லை என்று நான் சொல்லவுமில்லை.
நான் சொல்வது கலை என்பது அகவயமான செயல்பாடு என்பதனால் அங்கே இந்த பகுத்தறிவுவாதம் தடையாக ஆகக்கூடும் என்பதை மட்டும்தான்.பகுத்தறிவு என்பதில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது என்ன என்று பாருங்கள், ‘புறவயத்தன்மை’[Objectivity] இல்லையா? இன்னொன்று நிரூபணம். எந்த கருத்தானாலும் அனைவரும் அறியத்தக்க சான்றுகளுடன், அனைவருக்கும் உரிய தர்க்கத்துடன், பொதுவெளியில் புறவயமாக நிரூபிக்கப்படவேண்டும்
இந்த புறவயத்தன்மை ஒரு பெரிய அறிவுக் கட்டமைப்பாக இன்றைக்கு நம் சூழலில் உள்ளது. அங்கேதான் எல்லாவகையான அறிவியல் உண்மைகளும் முன்வைக்கப்படுகின்றன. சமூகவியல் உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை பொதுவாக விவாதிக்கப்படுகின்றன. நிரூபிக்கப்படுகின்றன, அல்லது மறுக்கப்படுகின்றன. கலையும் இலக்கியமும் அந்த புறவயத்தன்மை என்னும் அறிவுக்கட்டமைப்புக்குள் இருப்பவை அல்ல
அந்த அறிவுக்கட்டமைப்புக்குள் நாம் அறிபவை அனைத்துக்குமே ஒரு பொதுத்தன்மை உள்ளது. அந்த புறவய அறிவுக்கட்டமைப்பில் இருந்து எவர் எதைச் சொன்னாலும் அது அதேவகையான பயிற்சி கொண்ட இன்னொருவர் சொல்வதைப்போலவே இருக்கும் அல்லவா? இருந்தாகவேண்டும், அப்போதுதான் அது புறவயமானது.
கலைஞன் தன் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டியவன். புறவயமான அறிவுச்சூழலில் இருந்து அவனும் தன் அறிவை பெற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்துவான் என்றால் அவனுக்கும் ஆய்வாளனுக்கும் என்ன வேறுபாடு? அவன் ஏன் செயல்படவேண்டும்? ஆய்வுகள் ஏராளமாக நிகழ்ந்தபடியே இருக்கின்றன, மிகப்பெரிய நிறுவனங்களாக அவை செயல்படுகின்றன அல்லவா?
ஓர் எழுத்தாளன் ஓர் உண்மையை உணர்கிறான். அதை அவன் அகவயமாகவே உணர்கிறான். அதை அவன் புறவயமான உண்மையாக ஆக்கவேண்டும் என்றால் அவன் அதிலுள்ள தன் சொந்த அனுபவத்தை களைந்துவிடவேண்டும். அனைவருக்கும் உரிய அனுபவங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அதை தர்க்கபூர்வமாக முன்வைக்கவேண்டும். ஆனால் இதை அவன் செய்தால் அது கலையாக இருக்காது, அறிவியலாக ஆகிவிடும்.
கலை என்பதும் இலக்கியம் என்பதும் நிரூபணவாதத்திற்கு எதிரான உண்மைகளை முன்வைப்பவை. [Anti-empirical truth.] அவை பொதுவான உண்மைகளை முன்வைப்பதில்லை. ஆசிரியனின் தனியுண்மைகளையே முன்வைக்கின்றன. [Private truth]. அவை அகவயமானவை மட்டுமே. அவற்றை அவன் அகவயமாகவே முன்வைக்கிறான்.
ஒரு கதைசொல்லி, ஒரு கவிஞன், ஓர் ஓவியன் அவன் உணர்ந்த உண்மைக்கும் அறிந்த மெய்மைக்கும் என்ன ஆதாரத்தை முன்வைக்கமுடியும்? தன்னைமட்டுமே அவனால் முன்வைக்கமுடியும். இது என் அனுபவம் என்று மட்டுமே அவன் சொல்லமுடியும். என்னை நம்புங்கள், இதை உண்மையென ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மட்டுமே எந்தக்கலைஞனும் சொல்லமுடியும்.
அவனிடம் ‘இல்லை எனக்கு ஆதாரம் தேவை’ என ஒருவன் கேட்பான் என்றால் அவன் கலைக்கும் இலக்கியத்திற்கும் ரசிகனோ வாசகனோ அல்ல. அவன் அந்த கலைப்படைப்பையோ இலக்கியப்படைப்பையோ நிராகரிக்கவில்லை. கலையிலக்கியம் என்பதையே நிராகரிக்கிறான். அவனிடம் கலைஞனும் எழுத்தாளனும் பேச ஒன்றுமில்லை.
சரி, இந்த தனிப்பட்ட உண்மையை வாசகன் எப்படி ஏற்றுக்கொள்கிறான்? கலைஞனும் எழுத்தாளனும் தங்கள் அகத்தை முன்வைக்கிறார்கள். ரசிகனும் வாசகனும் தங்கள் அகத்தால் அதை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வேறுவேறு மனிதர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அகம் ஆழத்தில் ஒன்றுதான். நான் வழக்கமாகச் சொல்லும் உவமை ஒன்றுண்டு- கிணறுகள் தனித்தனி, நிலத்தடிநீர் ஒன்றே.
வாசகனும் எழுத்தாளனும் ஒரே ஆழத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆகவே எழுத்தாளனின் உண்மையை வாசகன் ஏற்றுக்கொள்கிறான். அவனுக்கு அதற்கு புறவய நிரூபணம் தேவையில்லை.
இங்கே அறிவியல்,சமூகவியல், தத்துவம் எல்லாமே புறவயமாக பேசப்படுகின்றன, நிரூபிக்கப்படுகின்றன. இலக்கியமும் கலையும் அவை விட்டுவிட்ட இடங்களைப் பேசுபவை. அவற்றில் குறைவுபடும் ஓர் இடத்தை நிரப்புபவை. ஆகவே அவை அகவயமான உண்மைகளைப் பேசுகின்றன. இவற்றுக்கு பண்பாட்டுச் செயல்பாட்டில் மிக முக்கியமான இடம் உண்டு
இலக்கியமும் கலையும் ஒருபோதும் அறிவியலுக்கோ, தத்துவத்திற்கோ மாற்று அல்ல. அறிவியலும் தத்துவமும் பொய், இலக்கியமே மெய் என்று இலக்கியவாதிகள் சிலர் சொல்வதுண்டு. சுந்தர ராமசாமிகூட அவ்வாறு சொன்னதுண்டு. அது ஒரு இலக்கியவாதியின் பற்று மட்டுமே. அறிவியலும் தத்துவமும் அவற்றின் கிளைகளுமே மைய ஓட்டமாக அமைய முடியும். புறவய உண்மைகளே சமூகத்தின் அடித்தளத்தை கட்டமைக்கவேண்டும். இலக்கியம் அதன்மேல் எழும் இன்னொரு பார்வை, இன்னொரு தரிசனம், அவ்வளவுதான்.
இலக்கியமும் கலையும் புறவயத்தன்மை அற்றவை, ஆகவே அவைகூறும் உண்மைகள் நம்பகத்தன்மை இல்லாதவை என அறிவியலாளர்களும் தத்துவஞானிகளும் சொல்வதுண்டு. ரசலும், ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அறிவியலும் தத்துவமும் நிரூபித்த உண்மைகளைப்போலவே இலக்கியம் கண்டடைந்த உண்மைகளும் வேரூன்றி நிலைகொள்வதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.
ஏனென்றால் விழுமியங்களை அறிவியலும் தத்துவமும் உருவாக்கமுடியாது. அவற்றை இலக்கியமே ஒர் இலட்சியக்கனவாக கண்டடைகிறது. அறம், நீதி, அன்பு, கருணை, கொடை, சமத்துவம், மானுட உரிமை என நாம் இன்று தலைக்கொள்ளும் அனைத்து விழுமியங்களும் இலக்கிய தரிசனங்கள்தான்.
ஆகவேதான் பகுத்தறிவு கலைக்கும் இலக்கியத்துக்கும் எதிரானது என்கிறேன். கலைஞன் ஓர் உண்மையை தன்னுள் உணர்கிறான். அவன் மேலும் தன்னுள் ஆழ்ந்து சென்று அதை கூர்ந்து அறிய, உரிய முறையில் அதை முன்வைக்கவே முயலவேண்டும். அதன் ஆழம்தான் மானுடர் அனைவருக்கும் பொதுவானது. ஆழத்துக்குச் செல்லச்செல்லத்தான் மானுட உள்ளம் ஒன்றாக உள்ளது. ஆழமாகச் சொல்லப்பட்டால்தான் கலையின் உண்மை நிறுவப்படுகிறது
அதற்குப் பதிலாக அவன் பகுத்தறிவுநோக்கை நம்பினால் அதை வெளியே கொண்டுவருகிறான். தரவுகளால் புறவயமாக அறியவும் நிரூபிக்கவும் முயன்றால் அது அறிவியலுண்மையாக, சமூகவியலுண்மையாக ஆகிவிடும். அது மறுக்கப்படலாம். ஏற்கப்பட்டால்கூட கலையாக நிலைகொள்ளாது.
நீங்கள் கேட்ட கடைசிக்கேள்விக்கு வருகிறேன். கலையை அறிவுபூர்வமாக கற்றுக்கொள்ள முடியாதா? கலையின் தொழில்நுட்பத்தை மட்டும் அறிவுபூர்வமாக கற்றுக்கொள்ளமுடியும். கற்றாகவேண்டும். ஆனால் கலைநிகழும் அகத்தளம் தானாகவே உருவாகிவரவேண்டும். கற்கவோ கற்பிக்கவோ இயலாது.
கலையின் கட்டமைப்பில் அறிவுத்தள கூறுகள் தேவையா? ஆமாம், அறிவுத்தளத்திலிருந்து செய்திகளை தரவுகளை கலை கையாளவேண்டும். நான் நாவலாசிரியனாக வரலாற்றையும் தத்துவத்தையும் பயின்றபடியே இருக்கிறேன். ஆனால் அவை அல்ல கலை, கலை அந்த அறிவுக்கூறுகளை பயன்படுத்திக்கொள்கிறது அவ்வளவுதான்.
கவனியுங்கள் இவை அறிவுக்கூறுகள். இவற்றை பகுத்தறிவு என்ற சொல்லால் சுட்டினால் பொருட்குழப்பத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
ஜெ
எழுத்தாளனின் பார்வை- கடிதம் எழுத்தாளனின் பார்வைJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

