Jeyamohan's Blog, page 985

May 17, 2021

கதாநாயகி-10

 [𝟙𝟘 ]

நான் கோதையாறுக்கு வந்தபோது அந்த சிறிய சாலைச்சந்திப்பே எனக்கு திகைப்பூட்டும்படி பரபரபானதாக இருப்பதைக் கண்டேன். அதைச் சாலைச்சந்திப்பு என்று சொல்லக்கூடாது. அன்று குலசேகரம்- கோதையாறு சாலை தார் போடப்படவில்லை. மண்போட்டு ஜல்லி கொட்டப்பட்ட எட்டடி அகலச் சாலைதான். அதிலும் புல்முளைத்து இரண்டு இணைகோடுகள்போல டயர்த்தடங்கள்தான் தெரியும். அந்தச்சாலை வழியாக வரும் பஸ் அங்கு நின்றிருக்கும் பெரிய இலஞ்சி மரத்தை சுற்றிக்கொண்டு திரும்பி நிற்கும். அதுதான் ‘ஜங்ஷன்’

இலஞ்சிமரத்தைச் சுற்றி ஒரு சைக்கிள் வாடகைக்கு விடும் கடை, காப்ரியேல் நாடாரின் கடை, ஆரோக்கியசாமியின் டீக்கடை, சின்னச்சாமி நாடாரின் வெற்றிலைபாக்குக் கடை. சுட்டகிழங்கு விற்கும் சில கிழவிகள், காட்டில்பொறுக்கிய பழங்களையும் காய்களையும் விற்கும் காணிக்காரர்கள் என சிலபேர் அமர்ந்திருப்பார்கள். மின்ஊழியர் குவார்ட்டர்ஸில் அவர்களுக்கு மொத்தமாகவே மளிகை மாதிரி பொருட்களை குலசேகரத்திலிருந்து கொண்டுவந்துவிடுவார்கள். ஆனாலும் அவர்களுக்கு காப்ரியேல் நாடாரின் கடையில் எந்நேரமும் ஏதாவது வாங்குவதற்கு இருக்கும். குவார்ட்டர்ஸில் வாரம் இரண்டுமுறை டாக்டர் வருவார். அவர்களுக்கு பார்த்தபின் பிறரையும் கவனிப்பார். அன்று ஜங்ஷன் முழுக்க நோயாளிகள் நிறைந்திருப்பார்கள்.

ஆகவே பொதுவாக எந்நேரமும் அங்கே ஆளிருக்கும். பஸ்ஸுக்காக ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரமெல்லாம் முன்னாலேயே வந்து காத்திருப்பார்கள். மலைக்குடிகள் பஸ்ஸில் அபூர்வமாகவே ஏறுவார்கள். மலையில் குடியேறியவர்களுக்கும் அங்கே வந்தபின் நேரப்பிரக்ஞை இல்லாமலாகிவிடும். தோன்றியபோது வந்து பஸ் வரும்வரை நிற்பார்கள், அமர்ந்திருப்பார்கள், படுத்திருப்பார்கள். எல்லா கடைகளுமே காட்டுநிலத்தில்தான். ஆகவே இடம் பிரச்சினை இல்லை. கடைகளுக்கு முன்னால் ஐம்பது ஆள் நிற்கும்படி பெரிய பெரிய கொட்டகைகளாக போட்டிருந்தனர். மரத்தடியை இரண்டாகப்பிளந்து பெஞ்சாகப் போட்டிருந்தனர். அவற்றில் அமர்ந்திருப்பார்கள். கிழவிகள் படுத்திருப்பார்கள். எந்நேரமும் நாலைந்துபேர் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.

நான் முதலில் அங்கே வந்திறங்கியபோது அந்த இடம் ஆள்சந்தடியில்லாமல் கைவிடப்பட்டு கிடப்பதாக நினைத்தேன். ஆனால் மலைமேலேயே தங்கி அவ்வப்போது இறங்கி வரத்தொடங்கியபோது அந்த இடம் பரபரப்பானதாக தோன்றியது. அங்கே வரும்போது தூரத்திலேயே அந்த இடத்தின் ஆளசைவுகளும் குரல்களும் கேட்டு இனிய உணர்வொன்றை அடைவேன். ஒரு டீ குடித்து சில பொருட்களை வாங்கியதுமே ஒரு விடுதலைநிலை ஏற்படும். அங்கே நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். திரும்பவேண்டும், மழைவந்துவிடும் என்ற எண்ணம் உள்ளிருந்து வந்து உசுப்பும். அதன்பின்னரும் அரைமணிநேரம் ஆகிவிடும்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு மறைந்து அங்கே நிற்க ஆரம்பித்ததுமே சிறிய பதற்றம் ஏற்படலாயிற்று. ஒலிகள் திடுக்கிட வைத்தன. குறிப்பாக ஆரன் ஒலிகள். கார்கள் செல்லும் ஒலி தலைக்குமேல் என ஒலித்தது. ஒருமுறை குலசேகரம் பஸ் சுற்றித்திரும்பி பின்னாலும் முன்னாலும் அசைந்து ஊர்ந்து இறுதியாக சீறலோசையுடன் நின்றபோது ஓசை தாளமுடியாமல் எனக்கு வாந்தி வந்தது. அதேபோல வண்ணங்கள். காட்டில் எவரும் அடர்வண்ணங்களில் ஆடை அணிவதில்லை. ஒருவன் ரத்தச்சிவப்புச் சட்டையுடன் பஸ்ஸில் இருந்து இறங்கினான். என் கண்ணுக்குள் மின்னலடித்ததுபோலிருந்தது.

என்னைப்போலவே காணிக்காரர்களும் ஒவ்வொரு ஆரன் ஒலிக்கும் திடுக்கிடுகிறார்கள் என்பதை உணந்தேன். ஒலி என்பது அத்தனை நுட்பமானது அவர்களுக்கு எல்லா ஒலிகளையும் அவர்கள் கவனிக்கிறார்கள். அவர்களை விட அவர்களின் ஆழ்மனம் கவனிக்கிறது. அவர்களின் காதுகள் மட்டுமல்ல உடலின் தோல்பரப்பே கவனிக்கிறது. கண்கள் எல்லா அசைவுகளையும் வண்ணங்களையும் கவனித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நாகரீக உலகம் ஓசைகளையும், வண்ணங்களையும் அள்ளி சிதறடிக்கிறது. அங்கே காதுகளும் கண்களும் பதற்றமடைந்துவிடுகின்றன.

நான் காப்ரியேல் நாடாரைப் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் மலைக்கு வந்து இரண்டு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே எனக்கு நானிருக்கும் இடம் என் இயல்பான இடமாக ஆகிவிட்டிருந்தது, பிற எல்லாமே அன்னிய நிலங்கள். என் ஊர், என் வீடு எல்லாம் எங்கோ நினைவின் ஆழத்தில் இருந்தன. காட்டுக்கு வந்தவர்களில் சிலர் உடனே ஓடிவிடுவார்கள், சிலர் திரும்பவே மாட்டார்கள் என்று எஞ்சீனியர் ராஜப்பன் சொன்னார். அது உண்மைதான்.

காப்ரியேல் நாடாரிடம் ஒரு பிளாஸ்டிக் வாளி, ஒரு பிளாஸ்டிக் குடம் ஆகியவற்றுக்குச் சொல்லியிருந்தேன். அவை வந்திருந்தன. மேலும் பல சிறு பொருட்கள். தீப்பெட்டி, மெழுகுவத்தி. மளிகைப்பொருட்கள் இருந்தன, பட்டியல் கொடுத்தால் அவரே கழுதையில் கொடுத்து அனுப்புவார். அவர் ஒரு கரும்பலகை செய்து தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். சாதாரணப் பலகையில் கருப்பு தார்ப்பெயிண்ட் அடித்தாலே போதும். மின்னுற்பத்தி நிலையத்தில் பிளைவுட் கிடைக்கும். அங்கே கருப்புப் பெயிண்ட் தாராளமாக பயன்படுத்தப்பட்டது. பெரும்பலான இரும்புப் பொருட்களுக்கு அவர்கள் கருப்பு பெயிண்ட்தான் பூசியிருந்தனர். அப்பொருட்கள் ஓயாத மழையில் துருப்பிடிப்பதை தடுக்கும். அதைவிட யானைகளின் எரிச்சலில் இருந்து அவற்றை பாதுகாக்கும்.

பெயிண்ட் உலர்ந்து கரும்பலகை தயாராக இருந்தது. எடையும் இல்லை. நான் காப்ரியேல் நாடாரிடம் அதற்கான பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் ரசீது வாங்கிக்கொண்டேன். அந்த ரசீதுகளை பாலிதீன் தாளில் பொதிந்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டிருந்தபோது அங்கே கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த வயதான காக்கிக் கால்சட்டைக்காரர் என்னிடம் “சார் மேலே வாத்தியாரா?”என்றார்.

“ஆமா” என்றேன்.

“அது என்னது போர்டா?”

“ஆமா” என்றேன் “பிள்ளையளுக்குச் சொல்லிக்குடுக்கணும்லா?”

“அது எதுக்கு அதுகளுக்கு? அதுக பாட்டுக்கு அங்கிண சந்தோசமாத்தானே கிடக்குதுக?”

“தெரியல்ல, நமக்கு இதுக்காக்கும் சம்பளம். நம்ம வேலையை நாம செய்யணும்லா?”

“அதுசெரியாக்கும்… இங்கிண வாறவனுகளிலே அப்டி வேலைசெய்யணும்னு நினைக்கப்பட்டவன் கொஞ்சபேருதான்…”என்றார்

நான் புன்னகை செய்தேன்.

“நமக்க பேரு ஏசுவடியான்… இங்கிணதான், மஞ்சமலை”என்றார்.

நான் “சந்தோசம்” என்றேன்.

”அங்க மேலே வங்களாவிலேயா தாமசம்?”என்றார்.

“ஆமா”

”நல்ல உறப்புள்ள கட்டிடமாக்கும்”

அவர் ஏதாவது தப்பாகச் சொல்வார் என நான் எதிர்பார்த்தேன். அங்கே பேய் இருப்பதாக. பழைய பங்களாக்கள் அனைத்தைப்பற்றியும் அப்படித்தானே கதைகளில் சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் “பலபேரு அங்க தங்கினதுண்டு… பண்டு சத்யன் நடிச்ச ஒரு சினிமா எடுத்தப்ப அங்கிணதான் எல்லாரும் தங்கினாக… நல்ல படமாக்கும்… ஆனா நெறமில்லாப் படம்” என்றார். நினைவுகூர்ந்து “படம்பேரு ஞாபகமில்லை. நல்ல படமாக்கும். செத்திருவாரு, நான் கொலசேகரத்திலே பாத்தேன்” என்றார்.

“அத கட்டினது ஆராக்கும்?”என்றேன்.

“அத கெட்டினது வெள்ளக்காரன்லா?”

‘ஆமா, அது ஆராக்கும்?”

“அது நமக்கு செரியாத்தெரியாது… நம்ம அப்பன் இங்க தோட்டத்திலே வாச்மேனாட்டு இருந்தாரு. அவருக்க அப்பனுக்க அப்பன், அதாகப்பட்டது நம்ம கொள்ளுத்தாத்தா அதே எஸ்டேட்டிலே இருந்தாரு… அடுக்களைச் சோலி. நாங்க மாடு திங்குத கூட்டம். மாடுதிங்கிறவனைத்தான் வெள்ளக்காரன் அடுக்களைச் சோலிக்கு வச்சுக்கிடுவான். ஆனா துலுக்கனாலே இந்த மலைக்காட்டிலே இருந்துகிட முடியாது. அதனாலே நம்ம ஆளுகதான்…” என்றார்.

“நெறையபேரு வந்திகளோ?”என்றேன்.

“அன்னைக்குள்ள காலமில்லா? மூணுவேளை முட்ட சோறு கிட்டுமானா அதுல்லா நம்மாளுகளுக்கு சொற்கம்? ஒருத்தன் வேணும்னு கேட்டா ஒம்பதாளு வந்து நிப்பாங்க… பேச்சிப்பாறை அணைய கெட்டினது முளுக்க எங்காளுகளாக்கும். இந்தா இந்த கோதையாறு சானலு கெட்டினதும் எங்காளுகதான்…” என்றார் ஏசுவடியான் “அதொரு பெரிய கதை… ஆனா எங்க கொள்ளு தாத்தா இங்கிண வந்தப்ப இங்க ஆருமில்லை. கொடுங்காடு. ராப்பகல் மழை. இப்பல்லாம் என்னத்த மழை? இது எல்லாம் மழையா? நான் சின்ன வயசிலே பாத்திருக்கேன் அது மழை. மழை தொடங்கினா ஒரு மாசம் அப்டியே மழையாக்கும்… இப்ப அந்த மழையெல்லாம் இல்ல. வானம் காஞ்சுபோச்சு… என்ன சொல்லிட்டு வந்தேன்?”

”உங்க கொள்ளுத்தாத்தா…”

”ஆமா, அவருக்க பேரு மூக்கன்.அவருக்க பதினேளு வயசிலே துரைக்க கூட வந்தாரு. அவருக்க அப்பா திருவனந்தபுரம் பாங்ஙோட்டிலே பட்டாளத்திலே குக்கா இருந்தாரு. அவருக்கு கறுத்தான்னு பேரு. அவரு அப்பமே நல்லா வெள்ளை சட்டைபோட்டு காக்கி கால்சட்டைபோட்டு தோல்பெல்டு கெட்டி கைக்கு உறையும்போட்டு கெம்பீரமாட்டு இருப்பாரு. அவரு துரைகூட நிக்கப்பட்ட ஒரு போட்டோ இருக்கு. கறுத்தானுக்கு எட்டு பிள்ளைக. மூத்தவரு நம்ம கொள்ளுத்தாத்தா மூக்கன்”

அவர் விரிவாகப்பேசும் ஆர்வம் கொண்டவராகத் தெரிந்தார்.“அப்பமாக்கும் இங்க இந்த எஸ்டேட்டை வெட்டி உண்டாக்கிட்டிருந்த வெள்ளக்காரத்துரை பாங்ஙோட்டிலே இருந்த ஒரு வெள்ளைக்காரப் பட்டாளத்துத் துரைகிட்டே சமையலுக்கும் எடுபிடிக்கும் ஆளுவேணும்னு கேட்டிருக்காரு. அவரு கறுத்தானைக்கூப்பிட்டு சொல்ல அவரு தனக்க பையன அனுப்பிப்போட்டாரு. அப்டியாக்கும் நம்ம கொள்ளுத்தாத்தா கறுத்தான் இங்கிண வந்தது. வெள்ளைக்காரன் கிட்ட அரிவைப்பும் மற்றுமா சேந்துகிட்டாரு. ரொட்டி சுடுவாரு, காட்டிலே பழம்பறிச்சு வைச்சு ஒயினு கூட செய்வாரு. அப்டிப்பட்ட கைமணம்”என்றார் “நான் என்ன சொன்னேன்?”

‘உங்க கொள்ளுத்தாத்தா துரைகூட வந்தாரு”

“ஆமா, அந்த துரையாக்கும் மேலே இருக்கப்பட்ட வங்களாவ கெட்டினது. கெட்டி எரநூறு வருசமாச்சு. அதாவது இங்கிலீசு வருசம் ஆயிரத்தி எழுநூற்றி எழுவதிலே கெட்டின பங்களா அது. கொல்லவருசக்கணக்க இங்கிலீசு கணக்குக்கு மாத்தியாக்கும் நான் சொல்லுறது. கொல்லவருசம் தொள்ளாயிரத்தி நாப்பத்தஞ்சு. தர்மராஜாவாகப்பட்ட கார்த்திகத் திருநாள் ராமவர்ம மகாராஜா பொன்னுதம்புரான் உடையது எழுந்தருளி ராஜ்யபாரம் செய்யுற காலம். இப்ப மாதிரி இல்ல. மகாராஜா கல்பிச்சு வெளியே வந்து வானத்தைப் பாத்து பெய்யுன்னு சொன்னா மழை அப்ப பெய்யும்….ஸ்ரீபத்மநாபான்னு ஒரு விளி விளிச்சா பத்மநாபனுக்க கருவறையிலே எந்தோன்னு மறுவிளி கேக்கும்…. அந்த காலம் இப்ப இல்ல. அது போட்டு. நான் என்ன சொல்லிட்டிருந்தேன்?”

“அப்ப உண்டுபண்ணின எஸ்டேட்டாக்கும்”

”ஆமா அப்ப அந்த வெள்ளக்காரத்துரைக்கு இந்த காட்டை மகாராஜா குடுத்தாரு. அவன் நூறு ஆளை ஊரிலே இருந்து ஆளுக்கொரு வெள்ளிச்சக்கரம் முன்பணம் குடுத்து கூட்டிட்டு மேலே வந்தான். அவன் குதிரையிலே வந்தான். கழுதையிலே அவனுக்க பெட்டியும் சாமானும் வந்திச்சு. அவனுக இங்கிண கூடாரம் கெட்டி தங்கி காட்டை திருத்தினானுக.”என்றார் ஏசுவடியான் “முதல்ல கெட்டினது எஸ்டேட்டு வங்களா. அது நல்ல இரும்பு மாதிரி உள்ள தேக்குமரங்களை வெட்டி வைச்சு கட்டினது. இப்பமும் உருக்கு மாதிரி நின்னிட்டிருக்கு. பிறவு பத்து வருசம் கழிஞ்சு கெட்டினதாக்கும் அக்கரை பங்களா. அது வேட்டைக்குப் போறப்ப தங்குறதுக்கு கெட்டினது”

“அங்க ஒரு பாறை இருந்தது. அதை வெட்டி உடைச்சு அங்கிணயே கட்டின வங்களாவாக்கும்” என்று அவர் சொன்னார் “பழைய வெள்ளக்காரன் காலத்திலே அங்க எப்பவும் ஆளிருக்கும். வானம் உடைஞ்சு மழை பெய்யுறப்பக்கூட நனையாச்சட்டை போட்டுக்கிட்டு துப்பாக்கிய தூக்கிட்டு வேட்டைக்கு போவானுக. இறைச்சியை அவனுக கொஞ்சம் திம்பானுக. மிச்சத்த அப்டியே காட்டிலேயே விட்டிட்டுப் போவானுக. கொல்லுறதிலேயாக்கும் அவனுகளுக்க சந்தோசம். அசுரகணம்லா? வேட்டைப்  வங்களான்னாக்கும் அந்தக்கால பேரு. இந்தப்பக்கம் கரண்டாப்பீஸ் வந்தப்ப அது அக்கரை வங்களாவா ஆயாச்சு… செரி, அதுவும் காலத்துக்க கோலம்…”

நான் அவரிடம் “அதை கெட்டின வெள்ளக்காரன் பேரு ஜெரால்ட் அட்கின்ஸன்ன்னாக்குமா? என்றேன்.

”ஜெரால்டா? அது நம்ம ஜார்ஜுக்க பய பேருல்லா?” 

காப்ரியேல் ஆர்வமாக, “ஆமா, அத கெட்டின வெள்ளக்காரன் பேரு அப்டித்தான். இங்க ஆரோ சொல்லி கேட்டிருக்கேன்” என்றார். “ஆமா, யாவுகம் வருது. முன்னாலே இங்க காமராஜ் அப்பச்சி வந்தப்ப ஒருத்தன் பிரசங்கம் பண்ணினான். அப்ப சொன்னான். ஜெரால்டு. ஏன்னா அப்பம் இந்த ஜார்ஜுக்க பய சின்னப்பிள்ளை. அதைக்கேட்டுத்தான் அவனுக்கு பேரு விட்டது”

நான் ”ஜெரால்ட் அட்கின்ஸன்” என்றேன். ”அந்த மறுகரை எஸ்டேட்டுக்கு அட்கின்ஸ்டன் எஸ்டேட்டுன்னா பேரு?

”அது மேக்காலை எஸ்டேட்டுன்னு பேரு இல்ல… இப்பம் அங்க முளுக்க ரெப்பராக்கும்”

“அட்கின்ஸன் எஸ்டேட்டுன்னு சொல்லுறதுண்டா?”

“இல்ல, நானறிய இல்ல” என்றார்.

காபிரியெல் நாடார் “அத ஆட்டுக்காரன் எஸ்டேட்டுன்னு சொல்லுகதுண்டு. அதுக்கும் ஆட்டுக்கும் ஒரு எணக்கமும் இல்ல. ஆட்கின்ஸன்னு பேர அப்டி மாத்தியிருப்பானுகளோ?” என்றார்.

நான் மெல்லிய மூச்சுத்திணறலை உணர்ந்தேன். இன்னும் ஒரு கேள்விதான் நான் கேட்கவேண்டும். அதை கூடுமானவரை இயல்பாகக் கேட்க என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். மூச்சை இழுத்து விட்டேன். “கொலசேகரம் பஸ் எப்ப வரும்?”என்றேன்.

“பஸ்ஸிலே போறியளா? மலைக்கு போறீகன்னு சொன்னிய?” என்றார் காப்ரியேல் நாடார்.

“மலைக்குத்தான். பஸ் வந்தா லெட்டர் இருக்கான்னு பாக்கலாம்…” என்றேன்

”குலசேகரத்திலே இருந்து குடுத்தனுப்பின லெட்டரா? ரொம்ப அத்தியாவசியமா?” என்றார் நாடார்

“இல்ல அப்டி ஒண்ணும் அவசியமானது இல்ல” என்றேன். சாதாரணமாக குரலை வைத்துக்கொண்டு, வேறெங்கோ பார்த்தபடி  “அங்க பங்களாவிலே சாவு நடந்திட்டுண்டா?” என்று கேட்டேன்.

“சாவா? சாவு பலதும் உண்டு. பழைய வாத்தியாரு ஆனை சவிட்டி செத்தாரு. அதுக்கு முன்ன உள்ளவரு பாம்பு கடிச்சுல்லா செத்தாரு? ஒரு எஞ்சீனியரு நெஞ்சடைச்சு செத்தாரு. மூங்கிலிலே கெட்டித்தூக்கியாக்கும் கொண்டு வந்தாக” என்றார் ஏசுவடியான்

”முன்ன, வெள்ளக்காரங்க காலத்திலே?” என்றேன்.

“அதும் பல சாவுண்டு… ஆனை சவிட்டி நாலஞ்சு வெள்ளக்காரனுக செத்திருக்கானுக. வெள்ளைக்காரன் கூட வேட்டைக்குப் போறவன் சாவுறது எப்பவுமே உள்ளதாக்கும் ஏன்னா வெள்ளக்காரன் துப்பாக்கியோட போவான், இவன் துப்பாக்கி இல்லாம போவான்…  வெள்ளக்காரன் ஒரு நல்ல எடத்திலே நின்னுக்கிட்டு இவன்கிட்டே ஆனையை துரத்திவிடச் சொல்லுவான். ஆனை கலைஞ்சு வெள்ளைக்காரனை பாத்து போறப்ப அவன் சுடுவான். ஒரு யானை விளும். மத்த யானைகள் கலைஞ்சு திரும்பி விரட்டினவனுகளைப் பாத்து வரும். சவிட்டி அரைச்சுக்கிட்டு அந்தாலே போவும்… ஆனைவேட்டை உண்டோ ஆளுபலியும் உண்டு… அது ஒரு வளக்கமாக்கும்” என்றார் ஏசுவடியான்.

“வேட்டைக்கு போனவனுக செத்ததுண்டா?” என்று நான் கேட்டேன். நேரடியாகவே கேட்டுவிடலாமா? ஆனால் அவர்களே சொல்லக்கூடும்.

”பலபேரு… அப்பல்லாம் சாவுக்கு ஒரு மதிப்பில்லே… யுத்தம் நடக்குத காலம். வாளோ தோக்கோ இல்லாத ஆளில்லை. இப்ப நம்ம ஆருக்க கையிலே ஆயுதமிருக்கு? பண்டு இப்டி ஆயுதமில்லாம வருவோமா?” என்றார் ஏசுவடியான்.

நான் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாமல் நின்றிருந்தேன். திரும்பி விடலாமென்று தோன்றியது. ஆனால் அதேபோன்ற தருணங்களில் ஏதோ ஒன்று மேலும் வரும் என் நம் அகம் அறிந்திருக்கிறது, அதற்காக எதிர்பார்க்கிறது.

ஆனால் ஒன்றும் நிகழவில்லை. நான் கோரனிடம் போர்டை எடுத்துக்கொள்ளச் சொல்லி கைகாட்டினேன். கோரன் போர்டை எடுத்துக்கொண்டான்.

நான் கிழவரிடம் “பாட்டா என்ன செய்யுதீரு?”என்றேன்.

“அவரு இருக்குற கோலத்தை வச்சு வல்லதும் நினைச்சுக்கிடாதீரு… அவரு எஸ்டேட்டு ஓனராக்கும். எம்பத்தஞ்சு ஏக்கர் ரப்பர் இருக்கு. நாலு லாரி ஓடுது. அவருக்க நாலு மக்களும் இந்த ஏரியாவிலே பெரிய காண்டிராக்டர்மாரு. பேரப்பிள்ளைக குலசேகரத்திலே டாக்டரும் மற்றுமா இருக்காங்க… அவருக்கு இங்க சர்ச்சிலே டீக்கனாரு போஸ்டும் உண்டு” என்றார் காபிரியேல் நாடார்.

“அப்டியா? பாட்டாவுக்கு வயசென்ன ஆச்சு?”

“அதாச்சு பிள்ளே, எம்பத்தேளு…” என்றார் ஏசுவடியான்.

அவர் தொப்பையே இல்லாமல் இறுகிய உடலுடன் இருந்தார். நான் “பாத்தா அறுவது மாதிரி இருக்கீய” என்றேன்.

“அது நம்ம அப்பனம்மைமாருக்க சுகிர்தமில்லா?”என்றார் கிழவர். “அதுக்குமேலே நாம சவைச்சரைச்சு தின்ன கறிக்க சக்தி… பதினெட்டு தடவை சவைச்சு தின்ன கறி நேரா உசிராட்டு மாறி உடம்பிலே நின்னிரும் பாத்துக்கிடுங்க”

நான் புன்னகைசெய்தேன்.

காபிரியேல் சட்டென்று “அங்க ரெட்டப்பாறைக்கு அந்தாலேதானே பண்டு ஒரு வெள்ளக்காரக் கிளவனை புலி அடிச்சுப்போட்டுது” என்றார். ”ஒருக்கா சொன்னீருல்லா ஓய்?”

”அது பளைய கதைல்லா?”என்றார் கிழவர்.

“பண்டுன்னா?”என்றேன். என் உள்ளம் பதறிவிட்டது. அது என் கட்டுப்பாட்டை மீறி முகத்திலும் உடலிலும் வெளிப்பட்டது.

“பண்டுன்னா, அது நம்ம கொள்ளுத்தாத்தா காலத்திலேயாக்கும். தாத்தா சொல்லி அப்பன் சொல்லி அறிஞ்ச கதை. நல்ல பெரிய உத்யோகத்திலே இருக்கப்பட்ட கிளவன்… பட்டாளத்துக்காரனாக்கும். வேட்டைக்கு வந்த எடத்திலே புலி கொண்டுபோச்சுது. அந்தாளுக்க மிச்சம் மீதி உண்டான்னு தேடி உள்ள காணிக்காரனுகளை எல்லாம் கூட்டிட்டு காட்டுக்குள்ள வலை போட்டு தேடினாங்க. கடைசியிலே அவருக்க சட்டையிலே கொஞ்சமும் தொப்பியும்தான் கிட்டிச்சுது. ஆனால் முத்திரை கிட்டிப்போச்சு. அது போரும், ஆளு செத்தாச்சுன்னு மேலே ரிப்போர்ட் அடிக்கணும்லா? பாவம் துரைக்க நாலஞ்சு நக்கி வெளுப்பிச்ச எலும்பும் கிட்டியிருக்கு. அதையெல்லாம் இங்க கொண்டுவந்து வச்சாங்க. பாங்கோட்டிலே இருந்து பட்டாளம் வந்து சல்யூட்டு அடிச்சு கவாத்து சவிட்டி நடந்து அதை பெட்டியிலே ஆக்கி கொண்டு போனாங்க. பீகிள் ஊத்தும் பறங்கிமுரசும் உண்டு…”

”ஓ”என்றேன்.

“பெரிய உத்தியோகஸ்தனாக்கும்… மகாராஜாவே நேரிலே வந்தாக்கும் அவருக்கு சடங்கு செய்திருக்காரு…”

நான் பெருமூச்சுவிட்டேன்.“எப்டி நடந்தது சம்பவம்?” என்றேன்.

”அது நமக்கு தெரியாது… பழைய கதைல்லா? நம்ம தாத்தா சொல்லுகதுண்டு அவரு சின்ன நாளிலே காட்டுக்குள்ளே ஒரு வெள்ளைக்காரக் கிளவர் சிவப்பு கம்பிளி சட்டையும் உசரமான சப்பாத்தும் போட்டு பெல்டு கட்டிக்கிட்டு போறத பாத்ததுண்டுன்னு…. அதைவைச்சாக்கும் நான் சொன்னது”

”அவரையா பாத்திருக்காரு?

“அதெல்லாம் அந்தக்காலம். அப்ப காட்டிலே பேயும் பிசாசும் நெறைய உண்டு… மலைவாதைகள் உண்டு. புலியடிச்சும் ஆனையடிச்சும் செத்தவனுகளுக்க ஆவிகள் அலைஞ்சுக்கிட்டிருக்கும். அப்பவாக்கும் கரண்டு வந்தது. கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்துவும் வந்தாரு. பிள்ளே இந்த கரண்டுன்னா என்ன? அது ஏசுவுக்க அக்கினியாக்கும். இப்ப கரண்டு கம்பி பக்கத்திலே நில்லுங்க. என்ன கேக்குது? இல்ல, என்ன கேக்குது? ஏசுவுக்க சங்கீதம்லா? நாங்க சர்ச்சிலே பாடுத பாட்டுல்லா கேக்குது? மெய்யான ஆண்டவரு வந்தப்ப பேயும் பிசாசும் மலைவாதையும் எல்லாம் போச்சு… உம்மாணை பிள்ளே, நான் இந்த எம்பது வருசத்திலே ஒரு பேயையும் பாத்ததில்லை, வாதையையும் பாத்ததில்லை. நான் அலையாத மலைமடக்கு இல்லை. உறங்காத குகை இல்லை… செரி, நம்ம களுத்திலே கர்த்தாவாகிய ஏசுவுக்க சிலுவையில்லா கிடக்குது”

கோரன் அங்கே நின்று அசைந்தான். அவன் தலையில் கரும்பலகை இருந்தது.

“செரி நான் போறேன்” என்றேன். “அந்த வெள்ளைக்காரனைப்பற்றி வேற எதாவது கேட்டதுண்டா?”என்றேன்

“அதைப்பற்றி கேக்கணுமானா இனிமே திருவனந்தபுரத்துக்குத்தான் போகணும்”என்றார் காபிரியேல் நாடார். ”ஆயிரத்தி தொள்ளாயிரத்தில் இருபத்தாறிலேயே எஸ்டேட்டை திருவிதாங்கூர் சர்க்காரு ஏற்றெடுத்துப் போட்டுது. டாக்குமெண்டெல்லாம் திருவனந்தபுரத்துக்குப் போயிட்டுது…அங்க போனா தெரியும்… பாங்கோட்டிலே பண்டு வெள்ளக்கார பட்டாளம் இருந்தது. இப்ப இந்தியா ராஜ்ஜியத்துக்க பட்டாளமாக்கும் அங்க. அங்க ஒண்ணும் தெரிஞ்சுகிட முடியாது. மகாராஜாவுக்க கொட்டாரத்துக்கு போனா தெரிஞ்சுகிடலாம்” புன்னகைத்து “என்னத்துக்கு கேக்குதிய? பேப்பரிலே கதை எளுதப்போறியளா?”

”இல்ல, சும்மா கேட்டேன்” என்றேன்.

காபிரியேல் நாடார் “கேட்டா நெறைய கதைகள் இங்க உண்டு. ஒரு உலகம் உண்டாகி வந்திருக்குல்லா? இந்தா இதைச்சுத்தி இப்பம் நாப்பது நாப்பத்தஞ்சு ஊரு ஆயாச்சு. எல்லா ஊரும் இந்த நூறு வருசத்திலே உண்டாகி வந்ததாக்கும்” என்றார்.

“ஆமா” என்று நான் சொன்னேன்.

“ஒண்ணொண்ணா தெரிஞ்சுகிடுங்க. பள்ளி வாத்தியில்லா? நாலஞ்சு கதகளை எளுதி விடுங்க. நம்ம எடம் பேமஸ் ஆகட்டு. நமக்கு நாலஞ்சு ஏவாரம் கிட்டுமே”

“பாப்போம்” என்று புன்னகை செய்தேன்.

“அந்த ஆப்பீசரு செத்தாருல்லா, அவருகூட பலபேரு செத்திருக்கானுக. அப்ப ஒரு வெள்ளக்காரியும் வந்திருக்கா. அவளும் செத்துட்டான்னும் கதை”

நான் இம்முறை நடுங்கிவிட்டேன். என் முகமே அதைக் காட்டியது. ‘செத்துட்டாள்னா?”என்றேன்

“ஒரு குட்டி வந்தா, செத்துட்டா. சாகல்ல, அப்டியே காட்டுக்குள்ள காணாம போயிட்டாள்னும் கதை உண்டு. அதுக்குமேலே ஆருக்கும் தெரியாது. தெரிஞ்சவனுக ஆரும் இங்க இப்ப இல்ல…” என்றார் காபிரியேல் நாடார்.

“அவரு சொல்லுகது உள்ளதாக்கும். அந்த வெள்ளக்காரி காட்டுக்குள்ளே போயி மறைஞ்சிட்டா. பிள்ளே, இந்த காடுன்னா என்ன? கரகாணா கடலாக்கும். ஆழம்காணா கயமாக்கும். அப்டி எத்தனபேரு உள்ள போயி மறைஞ்சிருக்காங்க. பண்டு ராஜாக்கமாரு வயசானா ராஜ்யத்தை பிள்ளைக கையிலே குடுத்துட்டு அப்டியே வந்து காட்டிலே முங்கித் தாழ்ந்து போயிருவாங்க… அங்க அவங்களுக்க பூர்விகர்களான ராஜாக்களெல்லாம் வந்து நின்னு கூட்டிட்டு போவாங்க… அதெல்லாம் இப்ப உண்டா? அது புண்ணியபுருசங்க ஆட்சி பண்ணின காலம்லா? காமராஜு செத்ததோட எல்லாம் போச்சு… சல்லிப்பயக்களுக்க காலம் வந்தாச்சு”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“சார் பயந்துபோட்டாரு. சார், அப்டி வெள்ளக்காரி வந்திருந்தா அவ எஸ்டேட்டிலே தங்கியிருப்பா. இங்க வேட்டைக்கு எதுக்கு வாறா” என்றார் காபிரியேல் நாடார் “வே, வாய வைச்சுகிட்டு சும்மா இரும்வே. அவரு எளம் வயசாக்கும். பய்ந்துட்டாருன்னா?”

“பயந்தா ஒரு அருமருந்து உண்டு. கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம். அம்பிடுதான். ஒரு பயம் அடுக்காது. அனுபவ மருந்தாக்கும்”

நான் புன்னகைத்தபின் தலையசைப்பான் விடைபெற்றுக்கொண்டேன்.

நாங்கள் மீண்டும் மலைஏறினோம். கோரன் “ஆனைப்பலகை. ஆனா கனமில்லை”என்றான்.

அவன் என்ன சொல்கிறான் என்று அதன்பிறகுதான் புரிந்தது. கரும்பலகைக்கு யானைப்பலகை என்று பெயர்போட்டுவிட்டான். இனி மலையில் அந்தப்பெயர்தான் புழங்கப்போகிறது.

மழை வருவதற்கான வெக்கை காட்டுக்குள் நிறைந்திருந்தது. இலைநுனிகளில் அமர்ந்திருந்த தவளைகளின் அடித்தாடைகள் தவிதவித்தன. அவற்றின் கண்களில் தாகம் தெரிந்தது.பறவைகளின் குரல்களும் அழுந்தி ஒலித்தன.

நான் வியர்வையில் நனைந்தபடி மூச்சுவாங்க நடந்தேன். கோரன் தோளில் ஒரு மூட்டையும் தலையில் பலகையுமாக இயல்பாக வேடிக்கை பார்த்தபடி நடந்தான். அவர்களின் நுரையீரல்கள் பெரியவை. இதயங்கள் ஆற்றல்மிக்கவை.

வீட்டை சற்று தொலைவில் இருந்தே பார்த்தேன். நான் எண்ணியதெல்லாம் சரிதான். அங்கே இருக்கிறவள் அவள்தான். ஹெலெனா. அவளேதான். வீட்டுக்குச் செல்லத்தான் வேண்டுமா?

ஆனால் மறுகணம் தோன்றியது, நானே சொன்ன வார்த்தைகள்தான். இருநூறாண்டுகள் தனிமையில் இருப்பவள். அவளுக்கும் வேறு எவருமில்லை. , பிறந்த நாட்டிலிருந்து ஆறாயிரம் மைல்களுக்கு இப்பால் அந்நியநிலம், அறியாத மனிதர்கள்.

நான் பெருமூச்சுடன் நடந்தேன். கோரன் “வீடு உறங்கிட்டிருக்கு” என்றான்.

”ஆமாம்” என்றேன். “இப்ப முழிச்சிரும் பாத்துக்கோ”

அங்கே துப்பன் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவன் என்னைப் பார்த்ததும் பெரிய பற்கள் தெரிய சிரித்தபடி ஓடிவந்து, உடல் துள்ளித்தவிக்க, தரையில் ஒரு குச்சியால் அ வரைந்தான். “அ” என்றான். வாயை அகலத்திறந்து “அ!” என்றான்.

அவன் அந்த எழுத்தை பயின்றிருக்கிறான் என்று தெரிந்தது. அனேகமாக வேட்டைக்கெல்லாம் சென்றிருக்க வாய்ப்பில்லை. இரவுபகலாக பயிற்சி எடுத்திருக்கவேண்டும்.

கோரனுக்கு அவன் எழுதியது பிடிக்கவில்லை. அவன் முகத்தை நொடித்தபடி உள்ளே சென்றான்.

துப்பன் திரும்பத்திரும்ப முற்றத்தில் அ என்று எழுதிக்கொண்டிருந்தான். என்னை பார்த்து ‘அ’ என்றான். பரவசம் தாளாமல் எழுந்து நின்று உடலை ஊசலாட்டினான்.

நான் ‘நல்லா எழுதறே… அடுத்த எழுத்தை எழுதிப்பாரு” என்றேன்.

அவன் “ஆ” என்றான்.

அந்த எழுத்தும் அவனுக்கு தெரியும் என்கிறான்.சட்டென்று எனக்கு சிரிப்பு வந்தது. அவர்கள் உலகை நோக்கிச் சொல்லும் அந்த பதிலை எழுதக் கற்றுக்கொண்டுவிட்டான். இனி அதை அவன் ஊருக்கு வெளியே எழுதி வைத்தால்போதும்.‘யாருக்குத்தெரியும்!”

நான் உள்ளே சென்றேன். கோரன் டீ போட்டுக் கொண்டுவந்தான். நான் கோரனிடம் “துப்பன் அ எழுதியிருக்கான்”என்றேன்.

கோரன் அதை கேட்கவே விரும்பவில்லை.அவர்கள் விரும்பாததை பார்ப்பதை தவிர்ப்பார்கள். விரும்பாததை கேட்காமலிருக்க வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொள்வார்கள்.

நான் “அது வேற அ” என்றேன்.

கோரன் கொஞ்சம் மலர்ந்து, அதிருப்தியுடன் கதவு வழியாக வெளியே தரையில் அ வரைந்துகொண்டிருந்த துப்பனைப் பார்த்துவிட்டு “அந்த அ பற்றூல்ல… அது பணியெடுக்கூல்ல” என்றான். அந்த அ வேலைசெய்யாது என்கிறான்.

“அவனுக்கு வேலைசெய்யும்” என்றேன்.

கோரன் மீண்டும் அதிருப்தி அடைந்து உள்ளே சென்றான்.

நான் டீ குடித்தபின் வெளியே வந்தேன். முற்றம் முழுக்க துப்பன் அ எழுதிப் பரப்பியிருந்தான். நல்ல வேளையாக இந்தக் காட்டில் இதைப்போல அதிக இடம் இல்லை. எல்லா இடத்திலும் புல்லும் புதரும். இருந்திருந்தால் காடே அ என்று கூச்சலிட்டுக்கொண்டிருக்கும்.

துப்பன் என்னிடம் “அ குரங்கு எழுதும்” என்றான்.

என்ன சொல்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. “குரங்கும் எழுதுமா?”என்றேன்.

அவன் ஆ எழுதினான். அதன் நெடிலைச் சுட்டிக்காட்டி “வால்!”என்றான்.

ஆ என்னும் எழுத்து குரங்காக மாறி பின்பக்கம் வாலை வளைத்துப் போட்டிருப்பதை அக்கணமே கண்டேன். குறில் அ வாலில்லா குரங்காகவும் ஆகிவிட்டது

“நல்ல குரங்கு!நல்ல குரங்கு!” என்றபடி துப்பன் இடைவெளிகளில் ஆ என்ற எழுத்தை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தான்.

“சரி, அடுத்த எழுத்தை எழுது”என்றேன்.

“அடுத்ததா?”என அவன் திகைத்தான்.

“இ”என்றேன்.

“இ”என அவன் பிரமை பிடித்தவனாகச் சொன்னான்.

“இ எழுது” என்றேன்.

”இ எழுத அறியில்ல”

“சரி எழுதிப்படி”என்றேன்.

அவன் சோகத்துடன் தலையாட்டிவிட்டு அப்படியே திரும்பி நடந்தான். காணிக்காரர்கள் பொதுவாக விடைபெறுவதில்லை. பார்த்ததும் முகமன் சொல்வதுமில்லை.

அவன் புதர்களுக்குள் மறைந்தான். கோரன் அதுவரை அங்கே மறைந்து நின்று அதை பார்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அவன் வந்து “துப்பன் முயலு கொண்டு வந்நு”என்றான்.

“சரி அதை சமை” என்றேன்.

கோரன் உள்ளே சென்றான். நான் முற்றத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன். மெல்ல எனக்குள் அங்கிருக்கையில் வரும் அந்த எடைமிக்க தனிமை வந்து அமைந்தது.

மழைத்துளிகள் அ என்ற எழுத்தின்மேல் விழுந்தன. பின்னர் சடசடவென்று விழுந்து மூடின. முற்றத்தின் எழுத்துக்கள் அழிந்தன. காடு கலைந்து மறைய நீர்த்திரை. கூரைவிளிம்பில் இருந்து நீர் பொழியத் தொடங்கியது.

நான் உள்ளே சென்று அந்த புத்தகத்தை எடுத்து வைத்து வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். மூடிய கதவுபோலிருந்தது அது.அதை தட்டி திறக்கவேண்டும். அதை திறந்தால் வருவது வழக்கமான பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கிலம், அக்கால மனிதர்கள். ஆனால் வரிகளுக்கிடையே இருந்து வேறொன்று தோன்றும். அல்லது இது ஒரு கல்லறை. இதை நான் தோண்டவேண்டும். செத்தவர்கள் எழுந்து வரவேண்டும்.

அதை இனிமேல் தொடக்கூடாது என்று நான் உறுதிகொண்டிருந்தேன்.ஆனால் இப்படி எத்தனை உறுதிப்பாடுகள். அவற்றை எனக்குநானே சொல்லிக்கொள்ளும்போதே எனக்குத் தெரியும், அவற்றை நான் கடைப்பிடிக்கப்போவதில்லை என்று.இந்த மாதிரி உறுதியெடுத்துக்கொள்வதெல்லாம் இதை நோக்கி வரும் வேகத்தைக் கூட்டிக்கொள்வதற்காகத்தான். இதை மேலும் தீவிரமாக வாசிப்பதற்காகத்தான். இது என்னை விடப்போவதில்லை.

அதைப் பிரித்தேன். நாவல் முடியப்போகிறது. ஆர்வில் பிரபுவுக்கும் ஈவ்லினாவுக்குமான உறவு தெளிவடைந்துகொண்டே வந்தது. ஈவ்லினா ஆர்வில் சீமாட்டியாகும்போது நாவல் முடியலாம் .OH, Sir, what a strange incident have I to recite! what a field of conjecture to open! எனக்குச் சிரிப்பு வந்தது. இந்த பழைய நாவல்களில் ஒன்று செயற்கையான மர்மங்களும் திகில்களும். அல்லது சாதாரண நிகழ்வுகளுக்கே உணர்ச்சிகளை ஏற்றி மிகையாக்கியிருப்பார்கள். அது ஒரு சாதாரண கேளிக்கை நிகழ்ச்சிக்குச் செல்லும் சந்தர்ப்பம், அங்கே ஒரு சின்ன சிக்கல்.

ஈவ்லினா கடிதத்தில் எழுதியிருந்தாள்.இந்தப் பெண்கள் எல்லாவற்றையும் பெரிதாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் சிறிய உலகில் எல்லாமே பெரிதானவை. அவ்வாறு பெரியதாக்கிக் கொண்டால்தான் அவர்கள் முக்கியமானவர்களாக ஆக்கமுடியும். அவர்கள் ஆண்களை உதவிக்கு அழைக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அலட்சியமாகச் சிரித்தபடி அவர்களுக்கு உதவுவதற்காக வந்து அவர்கள் கோருவதைச் செய்யமுயன்று எரிச்சலும் ஏமாற்றமும் அடைவார்கள். அந்தச் சிறிய விஷயத்தை அவர்களால் செய்யமுடியாது. ஒரு மூட்டை கோதுமையில் இருந்து கற்களைப் பொறுக்கச் சொன்னால் செய்ய அவர்களால் முடியுமா என்ன?

அவர்கள் படைகளை நடத்துபவர்களாகக் கூட இருக்கலாம். அவர்களால் கூந்தலில் சிக்கிக் கொண்ட ஒரு கொண்டையூசியைக்கூட எடுக்க முடியாது. அதற்கான கண்ணும் கைகளும் அவர்களுக்கு இருக்காது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2021 11:34

குற்றமும் தண்டனையும்- பிரவீன் 

அன்புள்ள ஜெ,

‘குற்றமும் தண்டனையும்’  வாசித்து முடித்து உழன்று கொண்டிருக்கையில், அதை எப்படியாவது எழுதி விட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எங்கு ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நாவலின் உட்கூறுகள் கதையில் எண்ணற்றவையாக இருந்தன. எண்ணங்கள் ஒரு இடத்தில நிலைபெறாமல் ஓடிக்கொண்டே இருந்தது. அதனால் எண்ணங்களை அப்படியே எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன்.

எழுத முற்படுகையில் சொற்கள் வர கடினமாக இருந்தது. அதனால் ஒரு புது முயற்சி செய்து பார்த்தேன். என் எண்ணங்களை அப்படியே “Speech to Text” வழியாக, நான் பேசி சொற்றொடர் ஆக்கினேன். ஒரு பத்திக்கு மேல் செல்ல முடியவில்லை. திரும்பவும் எழுத ஆரம்பித்தேன். நாவலின் கதை மாந்தர்களைக் கொண்டு ஒவ்வொரு சம்பவமாக நினைவு கூர்ந்து, எழுதி முடித்தேன். கதையில் வாழ எழுத ஒரு சிறந்த வழி.

பிரவீன்

தர்மபுரி

குற்றமும் தண்டனையும்- பிரவீன் 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2021 11:31

டோல்கின் – கடிதம்

மிகுபுனைவுகள்,கனவுகள்

வணக்கம் ஜெ

இன்று தளத்தில் வந்த மிகுபுனைவு பற்றிய பதிவை வாசித்தேன். த லார்ட் ஆஃப த ரிங்க்ஸ் வெறும் மிகுபுனைவு மட்டுமே, நாம் சற்று reality ஐ மறந்து ஒரு நிகர் கற்பனை உலகில் வாழ அது இடமளிக்கிறது என்பது மட்டுமல்ல அந்நாவல். ஒருவேளை த லார்ட் ஆஃப த ரிங்க்ஸ் மட்டும் வாசித்தவர்களுக்கு அவ்வாறு தோன்றலாம். அல்லது அதை வெறும் மிகுபுனைவு என அணுகுபவருக்கு அது அவ்வாறே காட்சியளிக்கலாம்.

ஆரம்பகால இலக்கியம்,காவியம் அல்லது கதை என நாம் பொதுவாக ஒப்புக்கொள்வது ஹோமரின் தி இலியட் மற்றும் தி ஒடிசி. இவை இரண்டும் அடிப்படையில் ஒரு நாயகனின் சாகச பயணக்கதைகள். ஆனால் அவை அது மட்டுமல்ல என அதை வாசித்தவர் அறிவர். தத்துவம், உளவியல், வரலாறு என பலவும் பொதிந்த கவிதை நிறைந்த கதைகள். த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸும் அதுவே. பில்போ மற்றும் ஃப்ரோடோ என இரண்டு ஹாப்பிட் நாயகர்களின் சாகச பயணக்கதை என முதலில் தோன்றினாலும் ஹோமரை கிளாஸிக் இலக்கியம் என ஒப்புக்கொண்டால் டோல்கீனும் அதுவே.

டோல்கீன் எழுத்துக்கள் பல வகையாக பொருள்கொள்ள பட்டிருக்கின்றன- யூதர்களுக்கு எதிரானது என ஒரு தரப்பும், அவர்களுக்கு ஆதரவானது என மற்றொரு தரப்பும், இது வகுப்புவாதத்தை, இனவாதத்தை ஆதரிக்கிறது எனவும், முதல் உலகப்போரின் மாற்றுவடிவு தான் இது என்றும், இந்நாவல் தொழில்மயமாக்கலுக்கு எதிரானது என பல வகை தரப்புகள். இவை அனைத்தையும் தாண்டி அது மிகப்பெரியது. அது எந்த காலமானாலும் நிற்கும். அதற்கு உரியவர்கள் தலைமுறைந்தோறும் வந்துக்கொண்டே இருப்பார்கள். அது அவர்களை சென்றடைந்துக்கொண்டேயிருக்கும்.

கார்ல் யங்க் 1913 ஆண்டு தொடர்ச்சியாக பல கனவுகளை காண்கிறார். அவற்றில் ஐரோப்பாவை மாபெரும் வெள்ளம் மூழ்கடிப்பது போலவும் பெரும் நாசம், சாவு, ரத்தபெருக்கு என காட்சிகள் அவருக்கு தோன்றுகின்றன. 1914 முதல் உலகப்போர் வெடித்து நான்கு ஆண்டுகள் ஐரோப்பா அக்கனவுகளுக்கு வண்ணம் ஏற்றியது. அக்கனவுகளை பதிந்து அவற்றை புரிந்துக்கொள்ள முயல்கிறார் யங். அவர் அவ்வாறு எழுத்தொடங்கியவை பின்னாளில் த பிளாக் புக்ஸ் என அழைக்கப்பட்டது. இன்று அச்சில் அவை ஏழு தொகுதிகளாக வாசிக்க கிடைக்கின்றன. அவர் இக்கனவுகளின் மூலம் அடைந்த ஞானம்/அறிவை த ரெட் புக்கில் எழுதினார். அதற்கு அவர் Liber Novus என லத்தீனில் தலைப்பிட்டார். புது நூல் என அர்த்தம். அது சிகப்பு உறையிடப்பட்ட புத்தகம் என்பதால் த ரெட் புக் எனவும் அறியப்படுகிறது. இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். டோல்கீனும் ஒரு ரெட் புக் வைத்து எழுதினார் என்பது பலர் அறியாதது.

டோல்கின்

யங்கின் ரெட் புக்கில் அவர் கீழுலக்கத்திற்கு சென்று அங்கிருந்து அறிவைப் பெற்று அதை நம் உலக மக்களுக்குச் சொல்ல மீண்டும் இங்கு வந்து சேர்கிறார், அதை நூலாக எழுதுகிறார். (கீழுலகத்தை நம் ஆழ்மனம் என கொள்பவர்க்கு அது ஆழ்மனம், இல்லை அது கீழுலகம் தான் என்பவருக்கு அவ்வாறே; அவ்விவாதத்திற்குள் இங்கே செல்ல விரும்பவில்லை) அவர் அடைந்த அவ்வறிவின் வெளிப்பாடு இப்புத்தகம். டோல்கீனை கூர்ந்து வாசித்தவர்களுக்கு தெரியும் பில்போவின் பயணம் தான் த ஹாப்பிட் நூல்- அதற்கு பில்போ தரும் தலைப்பு There and Back Again. யங்கின் எழுத்திற்கும் டோல்கீனின் எழுத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை ஒருவர் இங்கிருந்து அறிய துவங்கலாம்.

வாக்னரின் த ரிங்க் சைக்கிள் ஓபராக்களை பார்த்தவர் டோல்கீன் அதை அப்பட்டமாக திருடிவிட்டார் என நினைக்கலாம். அக்கதைகளின் ஊற்று Nordic ட்ரேடிஷனில் உள்ளது. டோல்கீன் அங்கிருந்து மட்டுமல்ல கிரேக்க தொன்மத்திலிருந்தும் கையாண்டிருக்கிறார்.

வாக்னர்

மேற்கூறியது போல இதை இலியட் ஒடிஸியுடன் ஒப்பிடலாம். பில்போவை அக்கீலிஸ் என்று கொண்டால் ஃப்ரோடோ ஒடீஸியஸ். இலியட் அக்கீலிஸின் சாகசத்தையும் புகழையும் பாடும் காவியம். த ஹாப்பிட் கிட்டதட்ட அதேபோல. ஒடிஸியில் ஒடிஸியஸ் கீழுலகிற்கு செல்கிறான். கிரேக்கர்களின் தொன்மையான வரலாற்றில் இவ்வாறாக கீழுலகங்களுக்கு சென்று அறிவை பெற்று திரும்புபவர் பலர் உண்டு- பார்மணீடிஸ், பித்தாகோரஸ் நன்கு தெரிந்த சில உதாரணங்கள். சாக்ரடீஸ் காலத்திற்கு முந்திய பார்மணீடிஸ்ஸின் வரலாறு பிளேட்டோவாலேயே திரிக்கப்பட்ட பல நூற்றாண்டுகள் மறைக்க, மறக்க பட்டது. சமீபத்தில் அவரின் உண்மையான வரலாற்றை பேசும் நூல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. பீட்டர் கிங்க்ஸ்லியின் நூல்கள் அவ்வகையில் முக்கியமானவை. ஒடிஸியஸ் போலவே ஃப்ரோடோ கீழுலகத்திற்கு சென்று மீண்டு வந்து பில்போ விட்டு சென்ற There and Back Again நூலை தொடர்ந்து எழுதுகிறார். அதன் கடைசிப் பக்கங்கள் அவருடன் கீழுலகிற்கு சென்ற சாம் இடம் விடப்படுகின்றன, அவரே அக்கதையை முடித்து வைக்கிறார்.\

கார்ல் யுங்

ஃப்ரோடோ கீழுலகிற்கு செல்ல துவங்குவதை இந்த ஒரு காட்சியை மட்டும் கொண்டு இங்கு சொல்கிறேன். அவர் வசித்து வந்த த ஷயர் நகரத்தை விட்டு முதல் முறையாக பெரும் பயணத்திற்கு வெளியே செல்கையில் அவர் மூன்று நாய்களை எதிர்க்கொள்கிறார். கிரேக்க தொன்மத்தில் கீழுலக வாசலை பாதுகாப்பது மூன்று தலைக்கொண்ட நாய். அதன் பெயர் Cerberus(நம் மரபிலும் ஸர்வரா/கர்வரா என்ற நாய் எமனின் கதவின் காவல்காரன் என உள்ளது). இதே போல் பல உதாரணங்கள் அதை தேடுபவர்களுக்கு த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸில் கிடைக்கும்.

எனவே த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் ஒரு மிகுபுனைவு நூல் மட்டுமல்ல. அதை வாசிக்க தெரிந்தவருக்கு அது அள்ளி அளிப்பது பல. அதன் சிறு துளியை உணர்ந்தவன் என்ற வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். மேலும் சொல்ல பல இருக்கின்றன ஆனால் அதை எழுத்து வடிவில் தெரியப்படுத்த எனக்கு எழுத்துத்திறமை இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

ஸ்ரீராம்

 

பி.கு. யங் மற்றும் டோல்கீனை வாசித்தவர்கள் அவ்விருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை தொகுத்துக்கொள்ள ஒரு திறவுகோலாக இவ்வுரைகளை கேட்கலாம்.

https://youtu.be/l6oh14vfhlI

https://youtu.be/3soOYajHUBM

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2021 11:31

May 16, 2021

கம்யூட்டர் யுகத்துக் கடவுள்

கடவுள் ஸ்டீவன் ஹாக்கின்ஸிடம் “ “என்னது பிரபஞ்சத்தோட மர்மங்களை தெரிஞ்சுக்கணுமா? ஜோக்கை எல்லாம் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது”  மனம் குருவும் குறும்பும் இடுக்கண் வருங்கால்…

ஒன்றை தேடினால் அதைப்போல ஏராளமானவற்றை அளிக்கும் கூகிள் தொழில்நுட்பம் நல்லதுதான். ஒரு பெண்ணை தேடினால் நிறைய பெண்களை பரிந்துரைக்கிறது. இறையியலில் இந்துமதம் ஒரு கூகிள். ஒரு கடவுளை தேடினால் முப்பத்துமுக்கோடி கடவுள்கள் பரிந்துரைப்பட்டியலில் வந்து முண்டியடிக்கிறார்கள். ஆனால் காலை எழுந்து அப்படி கூகிள் அளிக்கும் ஜோக்குகள் வழியாக ஒரு சுற்று வந்தால் ஏற்படும் அற்புதமான சலிப்பு சிரிப்புக்கு உரியது.

மேலைநாட்டு கடவுள் ஜோக்குகளில் 99.9 சதவீதம் ’கடவுளும் கம்ப்யூட்டரும்’ என்ற தலைப்புக்குள் அடக்கப்படவேண்டியவை. கடவுள் லேப்டாப் வைத்திருக்கிறார். கடவுள் பாஸ்வேர்ட் மறந்துவிட்டார். கடவுளுக்கும் ஸ்டீவ்ஜாப்ஸுக்கும் பிரச்சினை. இப்படியே. அவர்களுக்கு கடவுளுக்கு மறுபக்கமாக வைக்கப்படும் தத்துவக்கொள்கை என்பது ஆப்பிள் செல்போன்தான் என்று நினைக்கிறேன். கடவுளே அதை எதிர்பார்த்திருக்க மாட்டார். பாதி அமெரிக்கர்கள் கடவுள் என்பது ஒரு ஆப் என்றுதான் நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

கடவுளின் ஜிபிஎஸ். “நீங்கள் எங்கும் இருக்கிறீர்கள்”

தொழில்நுட்பம் எப்படி கடவுளுக்கு எதிராக ஆகும் என்றால் அவர்களின் கடவுள் ஒரு பாலைவனத்து மேய்ச்சலினத்தின் வயதான தந்தை என்பதனால்தான். அவருக்கு புதிய தொழில்நுட்பமெல்லாம் பிடிப்பதில்லை. ஆடுகளை அவர் இப்போதும் தொட்டுத்தொட்டு எண்ணத்தான் விரும்புகிறார்.கால்குலேட்டரையே அவர் சந்தேகத்துடன்தான் பார்க்கிறார். அவருக்கு எல்லாமே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு. இது பாவம், அது மீட்பு. ஆகவே இது நரகம் அது சொற்கம். இவன் நல்ல பையன் ஆகவே மீட்பர், அவன் சொன்னபேச்சு கேட்காத தறுதலை, ஆகவே சாத்தான்.

வைணவர்களின் கடவுளை அவருக்கு அறிமுகமில்லை என நினைக்கிறேன். அவர் பைனரியை கடந்த பைநாகசயனன் அல்லவா? உளனெனின் உளன் இலனெனின் இலன் என்று அவரைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் மொத்த கம்ப்யூட்டரிலும் புதிய நிரல் எழுதவேண்டும்.

”ஆமா, என் வடிவத்திலேதான் மனுஷனைப் படைச்சேன். ஆனா நீங்க பரிணாமம் அடைஞ்சிட்டீங்க”     

மிக அரிதாகத்தான் கடவுள் என்ற கொள்கையை அதற்கிணையான கொள்கையால் எதிர்கொள்ளும் நகைச்சுவைகளை மேலைநாடுகளில் காணமுடிகிறது. உண்மையில் கடவுள் என்பதே ஏகப்பட்ட நகைச்சுவைக்கு இடமிருக்கும் ஒரு கருத்துதான். ரொம்ப வயதான ஒருவர் மேலே அமர்ந்துகொண்டு அவரால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாத ஒரு எக்கச்சக்கமான சிக்கலை திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றால் வேடிக்கைதானே?.

கிறிஸ்தவத்தில் அவரேதான் அதை அழிக்கவும் வேண்டும். இந்து மதம் என்றால் பரவாயில்லை, அழிப்பவர் வேறொருவர். ”அடப்பாவி, கொஞ்சம் கொஞ்சமா உருப்பட்டிரும்னு நினைச்சேனே, அதுக்குள்ள முந்திக்கிட்டியே, ஒருவார்த்தை கேக்கமாட்டியா?“ பிலாக்காணம் வைத்து சமாதானம் ஆகிக்கொள்ளலாம்.

’மேகமா? சேச்சே இல்ல. சொற்கம்னா அவரோட பெரிய வெள்ளைத்தாடி. நாங்கள்லாம் அதிலே சின்ன பூச்சிங்க”

நம் கடவுள் இன்னும் சிக்கலானவர். அவர் ஒரு சாப்ட்வேர். ஹார்ட்வேர் என்பது அந்த  சாஃப்ட்வேரின் மாயை. சாஃப்ட்வேர் தன்னையே ஹார்ட்வேராக ஆக்கி- சரி விடுங்கள் அதெல்லாம் மிகச்சிக்கலான விஷயம்.

நமக்கு இதற்கெல்லாம் நல்ல ஓவியர்கள் இல்லை. இருந்திருந்தால் நம் தெய்வங்களைப் பற்றி ஏகப்பட்ட கார்ட்டூன்கள் போட்டிருக்கலாம். எனக்கே நிறைய ஆன்மிகச்சிக்கல்கள் உண்டு. ஆனால் வரையத்தான் ஆளில்லை. சிலையாகச் செய்ய நிறையபேர் இருக்கிறார்கள். நம் சிமிண்ட் கோயில் கோபுரங்களில் எல்லாம் பலவண்ணங்களில் சாமிகளின் கார்ட்டூன்களைத்தானே சிலையாக வைத்திருக்கிறோம்?                              

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2021 11:36

தமிழ்நாட்டில் சமணர்

அருகர்களின் பாதை வாங்க

வணக்கம் ஜெமோ,

நான் தற்சமயம் தங்களின் “அருகர்களின் பாதை” என்ற புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.அதை படிக்கும் போது நமது நாட்டில் சமணர்கள் பெரும்பான்மையாக இருந்திருப்பதாகவும் வசதி செல்வாக்காகவும் இருந்திருப்பதாகதெரிகிறது.தமிழகத்தில் எந்த பகுதியில் அதிகமாக இருந்தார்கள்? தற்போது அவர்களின் எண்ணிக்கை குறைந்த காரணம் என்ன?இந்தியாவில் மற்ற மதங்களை சேர்ந்த மக்களைவிட அதிக எண்ணிக்கையில் இருந்திருப்பார்களா? தற்போது குறைய காரணம் என்ன?

நன்றி

கேசவன் ஶ்ரீனிவாசன்.

அன்புள்ள கேசவன்

தமிழகத்தில் உருவான பக்தி இயக்க அலை சமண நம்பிக்கையாளர்களாக இருந்த ஏராளமானவர்களை சைவ வைணவம் நோக்கி திருப்பியது. சைவ,வைணவ அரசர்கள் வந்ததும் ஒரு காரணம்.ஆனாலும் சமணர்கள் தொடர்ந்து குறிப்பிடும் எண்ணிக்கையில் நீடித்தனர்.

பதினேழாம் நூற்றாண்டுமுதல்தான் சமணர்கள் படிப்படியாக தமிழகத்தில் குறைந்துகொண்டே வந்தனர். அதுவரைக்கும்கூட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர். மேல்சித்தமூர் போன்ற பெரிய சமண ஆலயங்கள் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை. மேல்சித்தமூர் போல சமணர்கள் மட்டுமே வாழும் ஊர்கள் தமிழகத்தில் பல இருந்திருக்கின்றன. இன்றும் செயல்படும் தொன்மையான சமண ஆலயங்கள் இருக்கும் இடங்களைப் பார்த்தால் தஞ்சையில் மன்னார்குடி போன்ற ஊர்களில்கூட நிறைய சமணர்கள் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் இங்கிருந்து செல்லவில்லை, அவர்கள் சமணத்தை காலப்போக்கில் மெல்ல கைவிட்டனர். சமணர்களிலுள்ள இல்லறத்தார் முன்பு இந்துமத தெய்வங்களையோ குலதெய்வங்களையோ கைவிட்டுவிட்டு சமணர்களாக ஆனவர்களல்ல. சமணதத்துவம் சமண ஆசாரம் ஆகியவற்றை முதன்மை நம்பிக்கையாகக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் குலதெய்வங்களையும் பிற இந்து தெய்வங்களையும் [குறிப்பாக வைணவ தெய்வங்களை] வழிபட்டுக்கொண்டிருந்தனர். சமணம் கைவிடப்பட்டபோது அவர்களிடம் மற்றவழிபாட்டுமுறைகள் எஞ்சின.

இன்று தமிழகத்தின் வடமாவட்டங்களில் சமணர்கள் இருக்கிறார்கள். தமிழகத்துச் சமணர்களில் வன்னியர்கள் எண்ணிக்கையில் மிகுதி. விழுப்புரம். காஞ்சீபுரம், வேலூர் மாவட்டத்தில் பொதுவாக அதிகம்பேர் இருக்கிறார்கள். நாங்கள் 2010ல் சமணப் பயணம் செய்தபோது தென்னகத்திற்கு தலைமையகமாக இருந்த கும்சா [கர்நாடகம்] மடத்திற்கு தமிழகத்தில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அவர்கள் வன்னியர்கள். புதிய சமணக்கோயில் கட்ட அனுமதி கோரி வந்திருந்தனர்.

தமிழ்ச்சமணம் பற்றிய செய்திகளுக்கு http://banukumar_r.blogspot.com/ என்னும் இணையதளம் ஒரு நல்ல இடம்

ஜெ

மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

தங்களின் பல்வேறு உரைகளின் காணொலி வாயிலாக தமிழ்நாட்டின் சமணர்களை பற்றிய அறிமுகம் கிடைத்தது.சமணர்கள் அவர்களின் மத நம்பிக்கைகளை இங்கு பரப்ப வந்தாலும், இங்கு தமிழைக் கற்று அதன் மூலம், அவர்களின் கொள்கைகளை எவ்வாறு பரப்ப முடிந்தது?பள்ளி நடத்தும் அளவுக்கு தமிழில் தேர்ச்சி அடைந்து கவிதைகள் அல்லது நீதி நூல்கள் மூலமாக பாடம் நடத்தியது அசாதாரணமான செயல்.

இங்கு தமிழை இவ்வாறு வருபவர்களுக்கு(தமிழறியாத) கற்றுத்தந்தவர்கள் பற்றிய குறிப்புகள் உண்டா?(வெவ்வேறான கால கட்டங்களில்)

பாலாஜி,
சென்னை.

 

அன்புள்ள பாலாஜி

சமணர்கள் அனைவரும் இங்கு வந்தவர்கள் அல்ல. சமண ஞானத்தை இங்கே கொண்டுவந்தவர்கள் அந்த மதத்தின் மெய்யறிவர். அவர்களில் இங்கிருந்து சென்று அவற்றைக் கற்றவர்களும் இருக்கலாம். அவ்வாறு ஒரு மெய்யறிவை கொண்டுசெல்லும் முதல்வர்கள் எளிய மானுடர் அல்ல. வியப்பூட்டும் அறிவுத்திறனும், உளத்திண்மையும் கொண்டவர்கள். அவர்களின் சாகசங்கள் எந்த மாவீரனும் எண்ணினால் அஞ்சும் அளவுக்கு தீவிரமானவை.

சமணர்களின் துறவுநெறிகள் கடுமையானவை.ஆடையில்லா உடலுடன், பிச்சை எடுத்த உணவை  வெறுங்கைகளால் உண்ணவேண்டும். வெறுந்தரையில் படுக்கவேண்டும். மறந்தும் உயிர்களைக் கொல்லக்கூடாது. மண்படிந்த மேனியர் என அவர்களை தொல்நூல் சொல்கிறது

அவர்கள் தன்னந்தனியாக பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு நடந்தே அலைந்திருக்கிறார்கள். மனிதர்கள் எளிதில் அணுகமுடியாத மலையுச்சிக் குகைகளில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கிறார்கள். தாங்கள் பிச்சையெடுத்தாலும் பல்லாயிரம்பேருக்கு உணவு அளிக்கும் அன்னசாலைகளை நடத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் அமைத்த அஞ்சினான் புகலிடங்கள் அவர்களின் ஆன்மபலத்திற்கான சான்றுகள். தங்கள் எல்லைக்குள் ஆயுதங்களை அனுமதிப்பதில்லை என நோன்புகொண்டிருப்பார்கள். அந்த எல்லைக்குள் ஆயுதமெடுத்தவர்களின் இல்லங்களின் முன் சென்று உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவார்கள். ஆகவே அரசர்களும் அவர்களின் பழியை அஞ்சினர்.

அவர்களுக்கு ஒரு மொழியை கற்று தேர்வது கடினமா என்ன?பழைய சமண அறிஞர்களில் பலர் சம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ், கன்னடம் உட்பட பலமொழிகளில் விற்பன்னர்கள். தென்னக மொழிகளுக்கு இலக்கணம் அமைத்தும், தொகைநூல்களாக அம்மொழிகளின் செல்வங்களை திரட்டியும் அடித்தளப் பணியை ஆற்றினார்கள். அந்தந்த மொழிகளில் பெருங்காவியங்களையும் இயற்றினார்கள்.\

அவர்களால் வழிகாட்டப்பட்டு இங்கே பெரிய சமணச்சமூகங்கள் உருவாயின. கிபி ஒன்றாம்நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சமணம் ஓங்க ஆரம்பித்தது. கிபி ஏழாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் தலைமை மதமே சமணமாக இருந்திருக்கக்கூடும் என இன்று கிடைக்கும் ஆயிரக்கணக்கான சமண வழிபாட்டிடங்களில் இருந்து தெரிகிறது.

ஜெ

தமிழ்ச் சமணம்

அருகர்களின் பாதை – ஓர் அனுபவம்

அருகர்களின் பாதை- வாசிப்பனுபவம்

சமணர் கழுவேற்றம் பற்றி இன்னும் ஏன் சொல்லப்படுகிறது?

சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை

சமணர் கழுவேற்றம்- ஒரு கட்டுரை

சமணர் கழுவேற்றம்

சமணர் கற்படுக்கை

பற்றற்றான் பற்று

சமணத்தில் இந்திரன்

மணம் ஒரு கடிதம்

சமணம் ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2021 11:35

கதாநாயகி-9

கோதையாறு வந்து இறங்கினாலே அருமைநாயகம் கடையில் ஒரு டீ குடிக்காமல் இருக்கமுடியாது. மேலிருந்து இறங்கும்போதே அந்த நினைவு வந்துவிடும். அவ்வப்போது கோதையாறு வரும்போது மட்டும் பால்டீ குடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒரே சமயம் பால் டீ பிடித்தமானதாகவும் ஒவ்வாததாகவும் இருந்தது. பால் முறுகி வரும் மணமும் அதில் சரியான அளவில் டீ கலந்து உருவாகும் மணமும் நாவூறச் செய்தன. அங்கே நல்ல கெட்டி எருமைப்பால். டீக்கடையின் பின்னாலேயே நான்கு எருமைகள் நின்றன.

நான் ஒரு டீ சொன்னேன். பெஞ்சில் அமர்ந்துகொண்டேன். கசங்கிய தினத்தந்தி கிடந்தது. அங்கே தந்திப்பேப்பர் மதியம் வந்து விடும், என் காலடியில் தரையில் கோரன் குந்தி  அமர்ந்திருந்தான். அவன் பால் விட்டு எதையும் குடிப்பதில்லை. காணிக்காரர்கள் பொதுவாகவே பால் குடிப்பதில்லை. அவர்கள் அதை எப்படியோ சீழுடன் சம்மந்தப்படுத்தி வைத்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் மாடுகளின் ரத்தத்தை நேரடியாக குடிப்பதுண்டு .மாடுகளின் கழுத்தில் ஒரு இடத்தில் மிகச்சிறிய அளவில் ஒரு இடத்தில் வெட்டி ரத்தத்தை  ரத்தத்தை குடித்தபிறகு அதன்மேல் ஒரு பச்சிலையைக் கசக்கி வைத்து ரத்தத்தை நிறுத்திவிடுவார்கள் அது உடலுக்கு நல்லது, குழந்தைகளுக்கு நல்ல மருந்து என்று அவர்கள் நம்பினார்கள். கோரன் பால் காய்ச்சுமிடத்திற்கு வந்தாலே அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவன் போல தரையில் அமர்ந்துகொள்வான்.

ஆனால் அவன் பீடி பிடிப்பதை விரும்பினான். அவனால் ஒரு பீடியை முழுக்க பிடிக்க முடியாது. இரண்டு மூன்று முறை புகை இழுத்ததுமே கம்றி இரும ஆரம்பித்துவிடுவான். ஆனால் அந்த மணம் அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் பீடி வாங்கிக்கொண்டு சென்று பிடிக்கும் வழக்கமில்லை. கோதையாறு வந்தால்தான் பீடி.அங்கேயே ஒரு பீடியை வாங்கி ஏழெட்டு முறை இழுத்துவிட்டு கீழே போட்டுவிடுவான். பிறகு ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல்  இருமிக்கொண்டும் தும்மிக்கொண்டும்  தொண்டையை கனைத்துக்கொண்டும் இருப்பான்.

கப்ரியேல் நாடார் கைவீசி என்னை அழைத்தார்.நான் காப்ரியேல் நாடாரிடம் சென்று “என்ன நாடாரே?” என்றேன்.

“ஒரு லெட்டர் உண்டு” என்று அவர் எனக்கு ஒரு இன்லண்ட் உறையை கொடுத்தார்.

நான் அதை வாங்கி விளிம்புகள் எச்சில் தேய்த்து மிகக்கவனமாகக் கிழித்தேன். என் அப்பாவை எனக்குத் தெரியும் அவர் இன்லண்டின் கடைசி இடுக்கு வரை விடாமல் எழுதக்கூடியவர். அது பணம் கொடுத்து வாங்கப்பட்ட பொருள் என்பதனாலேயே முழுக்க பயன்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணுவார்.ஆகவே தேவையில்லாத தகவல்களை எழுதி குவித்திருப்பார்.

நான் பயிற்சியிலிருக்கும்போது அவருடைய கடிதங்களை தவறாகக் கிழித்து முக்கியமான செய்தியை தொலைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் எழுதிய பிறகுதான் அவருக்கு தெரிவித்தே ஆகவேண்டிய முக்கியமான செய்தி நினைவுக்கு வரும். அதை பெரும்பாலும் இன்லண்டின் மடிப்புகளில் தான் எழுதியிருப்பார்.அதுவும் சுருக்கமாக, பொடி எழுத்துக்களில். நான் தவறாக கிழித்து பலமுறை முக்கியமான செய்தியை தவறவிட்டிருக்கிறேன்

கடிதத்தில் வழக்கமான குடும்பச் செய்திகள். யார் யாருக்கெல்லாம்  உடம்பு சரியில்லாமல் ஆகி மீண்டது என்பது விரிவாக. நெல் விதைத்தது, விருந்தினர்கள் வந்தது, பக்கத்துவீட்டு விசேஷங்கள். வழக்கம் போல விளிம்பில் ஒரு செய்தி இருந்தது. நாங்குநேரி மாமா ஒரு சம்மந்த ஆலோசனையுடன் வந்திருக்கிறார். அவர்களுக்கு குலசேகரம்தான். நல்ல வசதியானவர்கள். அவர்களே தேடி வந்தார்கள். நல்ல இடம் என்று தெரிகிறது. அதை நீ சொன்னால் முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

ஆச்சரியமாக இருந்தது அதென்ன அத்தனை சீக்கிரமாக முடிவு செய்துவிட்டார்கள் என்று நினைத்தேன். நாடார் கடையில் சோப்பு போன்ற தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டேன். குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக நூறு சீனி மிட்டாய்களையும் புளிப்பு மிட்டாய்களை வாங்கினேன்.

திரும்பும்போது நாடார் “இருங்க  இன்னொரு  லெட்டர் இருக்கு” என்றார்.

“இன்னொரு லெட்டரா?” என்று நான் வியப்புடன் அவரை பார்த்தேன்

அவர் எனக்கு இன்னொரு இன்லண்டை எடுத்து தந்தார் .அதை அம்மா சொல்ல இளைய தங்கை தன் கையெழுத்தில் உருட்டி உருட்டி எழுதியிருந்தாள். அதில் அம்மா பேசுவது போலவே எழுதப்ப்ட்டிருந்தது .

குலசேகர்த்திலிருந்து திருமண ஆலோசனையுடன் வந்த குடும்பம் முன்பும் தென்தாமரைக்குளத்தில் இருந்தது. அங்கே அவர்கள் சமையல் வேலை பார்த்தவர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே குலசேகரத்திற்கு வந்து அங்கே ஒரு மளிகைக்கடையை தொடங்கி அதை பெரிய அளவில் நடத்தி பணம் சேர்த்திருக்கிறார்கள். சக்ரபாணிப் பிள்ளைக்கு ஒரே மகள். அவளுக்கு சரியாக காது கேட்காது. வாய்ப்பேச்சும் சரியாக வராது. ஆகவே வீட்டோடு இருக்கும் மருமகனை தேடுகிறார்கள். என்னைப்பற்றிய தகவல்களை நாங்குநேரி மாமா என அழைக்கப்படும் சண்முகம்பிள்ளை மாமா சொல்ல அவர்களுக்குப் பிடித்துப்போய் தொடர்பு கொண்டார்கள்.

திருமணம் நடந்தால் நான் குலசேகரத்தில் அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். என்னுடைய குடும்பத்தை நான் என் வருமானத்திலேயே பார்த்துக் கொள்ளலாம். அந்தச் சம்பளம் அவர்களுக்கு தேவையில்லை. பெண்ணுக்கு நூறு பவுன் நகை போட்டு கையில் ஐந்து லட்சம் பணமும் கொடுப்பார்கள். அதை வைத்து மற்ற தங்கைகளுக்கு உடனே திருமணம் செய்துவிடலாம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மூன்றே மாதத்தில் பேச்சிப்பாறையிலிருந்து குலசேகரம் அருகே ஒரு ஊருக்கு வேலை மாறுதலும் வாங்கிக்கொடுப்பார்கள். ஓய்வு நேரத்தில் மளிகைக்கடையும் பார்த்துக் கொள்ளும்படியாக பக்கத்திலேயே வேலை இருக்கும்படி ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

எல்லாவகையிலும் சிறந்ததென்று நினைக்கிறேன் என்று அம்மா எழுதியிருந்தாள். ஒரு வருடத்திற்குள் எல்லாப்பொறுப்புகளும் முடிந்து நிம்மதியாக ஆகிவிடமுடியும். இது குமாரகோயில் முருகனே கொண்டு வந்த சம்மந்தம். நான்குநேரி மாமாவுக்கு நமது குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தெரியும். இந்த ஆலோசனை வந்ததுமே நமது  பேரை அவர்தான் சொல்லியிருக்கிறார். நீ உடனே உன் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பு. நீ குடும்பத்துக்கு நன்மையைத்தான் செய்வாய் என எனக்குத்தெரியும். குலசேகரத்திலிருந்து அவர்கள் ஒருவேளை வந்து உன்னைப்பார்ப்பார்கள்.

நான் உறையை மடித்து பையில் வைத்துக்கொண்டு கையில் பொருட்களை எடுத்துக்கொண்டு நடந்தேன். கோரன் என்னிடம்  “கரண்டு” என்றான்.

நான் திரும்பி அவனைப்பார்த்தேன்.

அவன் காட்டுக்குள் ஓடிய கம்பிகளைப்பார்த்து ”கரண்டு பாடுந்நு” என்றான்

கம்பிகளில் காற்று வீசும்போது ஏற்படும் விம்மலோசையும் இசையும் எழுந்துகொண்டிருந்தது. நான் ஆமென்று தலையசைத்தேன். காட்டுக்குள் நடக்கும்போது மிகப்பெரிய வண்டின் ஓசை போல அந்தக்கம்பிகள் ரீங்கரித்துக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டு நடந்தேன்.

நான் பங்களாவை அணுகுவதற்குள்ளேயே அங்கே எவரோ வந்துவிட்டிருப்பது தெரிந்தது. பறவைகளின்  சத்தத்தின் மாறுபாட்டை உடனடியாக என் காதுகள் எப்படி கவனித்தன? அதைவிட அதை என் உள்ளம் எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டது என்பது வியப்பாக இருந்தது.

நான் வந்து அதிக நாளாகவில்லை. அதற்குள்ளாகவே காட்டை என் அகம் உள்வாங்க ஆரம்பித்துவிட்டது. ஏனெனில் அது என்னுடைய உயிர்வாழ்தலுடன் தொடர்பு கொண்டிருந்தது. காட்டில் எவரும் காட்டைப் புரிந்துகொள்ளாமல் வாழ முடியாது.  ஒரு நகரத்தை புரிந்து கொள்வதற்கு அறிவும், தொடர்ந்த கவனமும், கல்வியும் தேவை .காட்டை நம் அறிவு புரிந்துகொள்ளவில்லை. உள்ளுணர்வுதான் புரிந்துகொள்கிறது.

காடு எப்போதும் நம்முள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. மனிதனின் ஆதி வீடு என்று காட்டை சொல்வார்கள். எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அத்தனை பேருக்கும் காடு உள்ளே இருக்கிறது. கால்களில் பாம்பு பற்றிய பயம் இருப்பது போல.

கோரனிடம் “யார் வந்திருக்கிறது?” என்று கேட்டேன்.

கோரன் “ஆ” என்று சொல்லி கைவிரித்தான்.

அவனுடைய ஆ ஒரு அழகான சைகை. யாருக்குத்தெரியும் என்பது போலிருக்கும் அது. அவர்கள் புறத்தார்கள் கேட்கக்கூடிய பெரும்பாலான கேள்விகளுக்கு அந்த ஓசையைத்தான் பதிலளிக்கிறார்கள். யாருக்குத் தெரியும்! தெரிந்து என்ன ஆகப்போகிறது! எனக்கெப்படி தெரியும்! நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்! அதைப்போன்ற எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு வரும். தெரிந்துகொள்ள நான் யார் என்பது கூட சில சமயங்களில் தோன்றும்.

பங்களாவின்  முன் இரண்டு காணிக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். முற்றத்தில் இரு தோல்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அலுமினிய கம்பிச்சுருள்கள், இரும்புக்கம்பிகள், பலவகையான இரும்பு கொக்கிகள், மூங்கில்கள் கிடந்தன. மின்சாரத்துறை சார்ந்த யாரோ வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

நான் வீட்டை  நெருங்கியதும் உள்ளிருந்து ஒருவன் வந்து என்னைப் பார்த்து சலாம் வைத்தான்.

“யார் வந்திருக்கிறது?” என்று நான் கேட்டேன்.

”இஞ்ஜினியர் சார்” என்று அவன் சொன்னான்.

அதை நான் எதிர்பார்த்திருந்தேன். உள்ளே சென்றபோது அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்த பெரிய மீசை வைத்த வழுக்கை நபர் எழுந்து  கைநீட்டி “ஹலோ” என்றார்.

நான் ”வணக்கம்” என்று சொல்லி “என் பேரு மெய்யன் பிள்ளை. இங்கே வாத்தியாரா வந்திருக்கேன்” என்றேன்.

“தெரியும், தெரியும். சொன்னாங்க” என்றார். “என் பேரு ராஜப்பன். இங்கே ஜேஈயா இருக்கேன்.சோலியா இந்தப் பக்கமா போனேன் .ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு தோணுச்சு. இன்னிக்கு கொஞ்சம் நேரமே மழை வந்துரும்னு இவன் சொல்றான்” என்றார்.

”இவங்க மழையைப்பத்தி பெரும்பாலும் சரியாதான் சொல்றாங்க” என்றேன். டீ குடிக்கிறியளா என்று கேட்டேன்.

“டீ போட்டாச்சு” என்று அவர் சொன்னார்.

“சாப்பாடு என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்.

”அதுவும் ஏற்பாடாக்கியாச்சு. வந்ததுமே பாக்கச்சொன்னேன்.
அரிசி இருக்கு, கறி ஒண்ணும் இல்லன்னு சொன்னான். ஒருத்தன காட்டுக்குள்ள அனுப்பி எதையாவது பொறிவச்சு பிடிச்சுட்டு வான்னு அனுப்பியிருக்கு” என்றார்

உள்ளே வந்த ஒருவன் தயங்கி சுவர் அருகே நின்றான்.

“இவன் பேரு செபாஸ்டியன் லைன்மேனா இருக்கான்” என்றார்.

நான் அவனைப்பார்த்து புன்னகைத்தேன்.

“எப்படிப் போயிட்டிருக்கு பள்ளிக்கூடம்? எல்லாம் சும்மா ஒரு நாலஞ்சு நாள் என்ன ஏதுன்னு பாருங்க. அதுக்கப்புறம்  எப்பவாவது வந்துட்டு போனா போதும். இங்க  இவுனுகளும் யாரும் படிக்கிற மாதிரி தெரியல்லே” என்றார்.

நான் அதற்கும் புன்னகைத்தேன்.

“இந்தக்காட்டில் எவன் தங்க முடியும்? இது வெயிலு காலம். மழக்காலம் வருது. மழக்காலம்னா இங்க ஒத்த ஒரு  மழயாக்கு.ம் ஒத்த மழன்னா ஒரு முழூ மழக்காலத்துக்கு ஒத்த மழ… ஆமா, தொடங்கினா முப்பத்தஞ்சு நாள் களிச்சுதான் நிப்பாட்டும். சீவிக்க முடியாது” என்று அவர் சொன்னார்.

நான் அதற்கும் புன்னகைத்தேன்.

”ஆனா ஒண்ணு, சிலபேருக்கு காடு பிடிச்சுப்போயிரும். ரெண்டு டைப்பு ஆளுங்கதான். வந்த நாலாம்நாளிலே போறத நினைக்க ஆரம்பிப்பான். தலைய அடகுவச்சாவது கெளம்பி போயிருவான். சிலபேரு அப்டி இல்ல, வந்தா இங்கியே வாழ்ந்து சாவான்…” என்றார் ராஜப்பன் “நமக்கு எப்டின்னு தெரியல்ல. வந்தேன், ஆனால் இதுவரை போகத்தோணல்ல”

”எனக்கு இங்க பிரச்சினை ஒண்ணுமில்லை. நல்ல எடம்” என்றேன்.

“ஆமா, இந்த பங்களா ஒரு நல்ல எடமாக்கும்” என்றார் ராஜப்பன். “இந்தப் பங்களாவுக்கு பளைய பேரு ஹண்டர்ஸ்ஹட். நல்ல ஒறப்புள்ள பங்களாவாக்கும். இது கெட்டி எரநூறு வருஷம் ஆச்சு பண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் இருந்தப்ப ஒரு ப்ளாண்டர் கட்டினது… ஆயிரத்தி எழுநூற்றி அறுபதிலேயோ எழுவதிலேயோ…”

நான் “அவருக்க பேரு அட்கின்ஸன், ஜெரால்ட் அட்கின்ஸன் இல்லியா?” என்று கேட்டேன்.

“ஆமா , சரிதான். ஜெரால்ட் அட்கின்சன். எப்படித் தெரியும்? யாரு சொன்னானுவ?”என்றார். ”எனக்கே ஆறு மாசம் முன்னாடிதான் தெரியும். பழய ரெக்கார்டு ஒண்ணை பாத்திட்டிருந்தபோது நம்ம நாகப்பன் சார் தான் சொன்னார். பாத்தயாலே அக்கரை பங்களா 1922-ல தான் திருவிதாங்கூர் சர்க்காருக்கே ஹேண்ட் ஓவர் ஆகியிருக்குன்னு. அக்கரை எஸ்டேட் ஓனருக்குச் சொந்தமா இருந்தது. எஸ்டேட்டையும் திருவிதாங்கூர் சர்க்கார் எடுத்துக்கிட்டுது”

“அப்றம் தமிழ்நாடு சர்க்காருக்கு வந்ததா?”

“இல்ல, எஸ்டேட் இப்பவும் திருவிதாங்கூர் சர்க்காருக்குத்தான். மகாராஜாவோட பிரைவேட் பிராப்பர்ட்டி. அதை அவரு ஒரு கோவாப்பரேட்டிவ் சொசைட்டிக்கு குடுத்திட்டார். இந்த பங்களா தமிழ்நாடு   ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்டுக்கு வந்தது. கொஞ்சநாள் யாருக்கும் அக்கறை இல்லாம கெடந்தது. ஒரு அறுபது வருஷம் அப்படியே பாழடஞ்சு கிடந்தது. இங்க கோதையாறு பிராஜக்ட் வந்தப்ப வந்த முதல் எக்ஸிகியூட்டிவ் எஞ்சினியர் ஒரு ஆங்கிலோ இண்டியனாக்கும். ஹால்மான்னு பேரு. அவர்  பங்களாவ ரிப்பேர் பண்ணி இப்ப இருக்கிற மாதிரி ஆக்கினாரு. ஓடெல்லாம் போயிருந்தது. மொத்த ஓடும் மாத்தியிருக்கு” என்றார்.

“நான் அப்படியா?” என்றேன்.

“உங்களுக்கு யார் சொன்னது இது கட்டின வெள்ளக்காரன் பேரெல்லாம்?” என்றார் ராஜப்பன் “அவன் பேரெல்லாம் இங்க யாருக்குமே தெரியாது அதனாலே கேக்கேன்”

”யாரோ சொன்னாங்க” என்று நான் சொன்னேன்.

அச்செய்தி ஏன் எனக்கு படபடப்பை தரவில்லை, ஏன் அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

“வெள்ளக்காரன் இந்த அத்துவான காட்டுக்குள்ள எதுக்கு கட்டினான்னு தெரியல்ல .அந்தக்காலத்துல அவனுங்க இங்க வந்தான்னா ஒரு பதினஞ்சு இருபது நாள் தங்கி வேட்டையாடுவானுக. சின்ன சின்னதெல்லாம் வேட்டையாடினா திம்பானுக. பெரிய வேட்டையாடுனா தலையை எடுத்துக்கிடுவானுக. காட்டெருது,மானெல்லாம் வேட்டையாடினா தலையை வெட்டி கொண்டு போவானுங்க. பாடம் பண்ணி வீட்டுகள்ல வெக்கிறதுக்கு. அப்புறம் தான் ஆனத்துப்பாக்கி வந்தது. தெரியும்ல. ரொம்ப பெரிசு. பத்து காஜ் காலிபர் ரைபிள்.அது வந்த பிறகு ஆனைய கொல்றது ஒரு பெரிய வேட்ட அவனுகளுக்கு”

“திருவிதாங்கூர் ராஜா 1936 லே ஆனய கொல்லக்கூடாதுன்னு ஒரு ஆர்டர் போட்டாரு. அதோட இங்க ஆளுக வ்ர்றது கொறஞ்சிருச்சு. ரகசியமாட்டு கொஞ்ச நாளக்கி சில பேரு வந்தும் போயும் இருந்தானுங்க. அப்புறம் அப்படியே விட்டாச்சு. அதுக்கப்புறம் பேச்சிப்பாறை அணை கட்டினாங்க. அதுக்கான ஆளுங்க வந்து தங்கியிருக்காங்க. பிறகு ஈபி கைக்கு வந்த பிறகு நாங்க மெயிண்டெயின் பண்ணினோம். பிறகு எங்களுக்கும் ஆர்வம் கிடையாது. வாத்தியார் வந்துட்டு போறதுனாலயாவது இங்க ஒரு இது இருக்கு” என்று ராஜப்பன் சொன்னார். “இப்படி ஒரு இடம் இருக்கது நல்லதாக்கும். இந்த வழியா போனா வந்து ஒரு நாள் தங்கி போலாம் மழ வந்தா இந்தக்காடு ஒரு நரகமாக்கும் பாத்துக்கிடுங்க

நான் தலையை அசைத்தேன். அவர் திரும்பி அருகிலிருந்த புத்தகத்தை பார்த்தார்.

”சாருக்கென்ன படிப்பு?” என்றார்

நான் ”எஸ்எஸ்எல்சி தான். அப்புறம் டீச்சர் ட்ரெயினிங்” என்றேன்.

“ஓ நான் டிகிரி உண்டோன்னு நெனச்சுப் போட்டேன். ஏன்னா இந்தப் புக்கெல்லாம் டிகிரி இல்லாதவன் படிக்க முடியாது பாத்துக்கிடுங்க” என்றார்.

நான் ”காலேஜ்ல போகல” என்றேன்.

“ஆனா இங்கிலீஷ் நல்ல வசமுண்டுன்னு தோணுது. இத படிக்கிறதுக்கு இங்கிலீஷ் நல்ல வேணுமே?” என்றபடி அதை கையிலெடுத்து புரட்டினார். கூர்ந்து படித்து “சுத்திச் சுத்தி எழுதுதாங்க. ஆனால் பழய திருவிதாங்கூர் டாக்குமெண்டெல்லாம் பார்த்தா இப்படித்தான் எழுதிருக்காங்க. அதப் படிச்சு புரிஞ்சுக்கறதுக்குள்ள செத்திருவோம். இந்த கோதையாறுக்கு லேண்ட் அலொகேஷன் டாக்குமெண்ட் எல்லாமே இந்த பாஷையிலதான் இருக்கும். அதக் கொண்டுபோய் நாகருகோயிலே ஏதாவது கிளட்டு வக்கீல் கிட்ட குடுத்து அதுக்கு அர்த்தம் என்னன்னு இங்கிலீஷ்ல இன்னொருவாட்டி எழுதி வாங்கிட்டு வருவோம்” என்றார்

“ அந்தக்காலத்து பாஷை” என்றேன்

“இப்படி எழுதிருக்க ஒரு முன்னூர்று நானூறு லெட்டர் உண்டு. பழய திருவிதாங்கூருக்கும் தமிழ்நாடு அரசுக்குமான லெட்டர்ஸ் .இதுல காமராஜர் எழுதின  நாலு லெட்டர் இருக்கும் .அது ஒண்ணு தான் மனுசன் வாசிக்கிறது மாதிரி இருக்கும்” என்றார்.

நான் ”நீங்க இருங்க. நான் ஏதாவது சாப்பிடறதுக்கு ரெடி பண்றேன்” என்றேன்.

“அத அவனுக பாத்துக்கிடுவானுக. நீங்க இருங்க” என்று அவர் சொன்னார். நான்  அமர்ந்துகொண்டேன்.

அவர் அதைப்படித்தபடி  “ஆனா இந்தப் பாஷை படிக்கிறதுல ஒரு சௌகரியம் என்னான்னா இந்தப் பாஷையே நம்மள  கொஞ்சம் பழய காலத்துக்கு கொண்டு போயிடும் பாத்துகிடுங்.க ரொம்ப பழய பாஷ இல்ல?” என்றார்  “மணமும் பாஷயும்தான் நம்மள அப்டியே பழய காலத்துக்கு கொண்டு போற விசயங்கள்”என்றார்.

நான் அவரிடம்  ‘உங்க படிப்பெல்லாம் எங்கே?” என்று கேட்டேன்.

“நான் படிச்சது மெட்ராஸ் ஆர்ஏசில. இஞ்சினியரிங் முடிச்சிருக்கேன். கோதையாறு எலக்ட்ரோ ப்ராஜக்ட் வாற சமயத்துல நாம இங்க வந்தாச்சு. ஒரு சின்னக் கேஸ்ல மாட்டிக்கிட்டேன். ஒரு லேண்ட்கிராபிங்க கையோட பிடிச்சேன். அவன் அரசியல்வாதி. அதனாலே ஒரு சிக்கல். அதனாலயாக்கும் இன்னும் ஜேஈ யா இருக்கேன். முடிஞ்சிரும் இந்த ஆண்டுக்குள்ளே ஏஈ ஆயிருவேன். டீஈயா ரிட்டயர் ஆகலாம். பிள்ளயள்ளாம் நாகர்கோவில்ல இருக்காங்க. அங்க மாசத்துக்கொருதடவ போயிட்டு வர்றது” என்றார்

நான் எழுந்து சென்று உடைகளை மாற்றிக்கொண்டேன். முற்றத்தில் நின்று சுற்றிலும் காடு ஒளியடங்கி வருவதைப்பார்த்தேன். வானத்தில் மேகங்கள் பெருகிக் கொண்டிருந்தன.

இங்கே மேகங்கள் வருவது பார்க்க வியப்பாக இருக்கும். மெல்ல மெல்ல தண்ணீர் ஊறி தேங்குவது போலத்தான்  பொதுவாக வானத்தில் மேகங்கள் வரும். இங்கு காட்டில் மட்டும் ஒரு மேகம் இன்னொரு மேகத்தை முட்டி முட்டி நெரித்து உந்திக்கொண்டு மேலே வருவது போல் தோன்றும். சில சமயம் அலையலையாக வருவதும் உண்டு. கரிய தார் வழிந்து நிறைவது போல. ஒரு பெரிய திரையை இழுத்து மொத்தமாக வானத்தை மூடுவது போல.கண் இருட்டிக்கொண்டு வருகிற்தா என்ற சந்தேகம் வரும்.

முழுமையாக இருட்டியது. வெளியே போயிருந்த இரு காணிக்காரர்கள் ஒரு மானைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அதன் நான்கு கால்களையும் இரண்டிரண்டாகச் சேர்த்துக் கட்டி நடுவே ஒரு கழியை செலுத்தி தூக்கிக்கொண்டு வந்தார்கள். பெரிய மான் முப்பது நாற்பது கிலோ எடை இருக்கும். ஆனால் இவர்கள் அனைவரும் சேர்ந்து அதை தின்று முடித்துவிடுவார்கள்.

அவர்கள் அதை சமையலறைக்கு கொண்டு சென்றார்கள்.அங்கே கோரனின் உற்சாகக்குரல் கேட்க தொடங்கியது.

நான் படிகளில் அமர்ந்து மழை வருவதற்காக காத்திருந்தேன். இதோ இதோ என்று ஒவ்வொரு கணமாக சென்று கொண்டிருந்தது. பின்னர் மழை எதையோ சத்தியம் செய்வது போல மண்ணை ஓங்கி அறைந்தது

நான் எழுந்து நின்றேன். ஒரு கணத்திற்குள் என் கால்கள் முழுக்க நனைந்துவிட்டன. பெட்டிகளையெல்லாம் ஏற்கனவே உள்ளே கொண்டு சென்றிருந்தார்கள். முற்றம் நீரில் கொப்பளிக்க ஆரம்பித்தது. நீரில் நீர்விழுந்து தெறிப்பது நீராலான சிறிய நாற்றுக்கள் போல தோன்றியது.

உள்ளே வந்து அரிக்கன் விளக்கை ஏற்றிவைத்தேன். ராஜப்பன் மேஜைவிளக்கை ஏற்றிவிட்டு அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார்.

என்னைப்பார்த்து புன்னகைத்து “நல்ல புக்காக்கும்”  என்றார்.

“கத புரியுதா?” என்றேன்

“கத புரியல்ல. சும்மா புரட்டிப்பார்த்தேன். ஒரு பொண்ணு சும்மா இப்படியே லண்டனுக்கு போறா பாத்தேளா. அங்க உள்ள சடங்கு சம்பிரதாயங்கள்ல கெடந்து நீந்துதா. ஆனா அவளுக்கு அது பிடிக்கவும் இல்ல” என்றார் பிறகு திரும்ப படிக்க  ஆரம்பித்தார்

நான் சமையலறைக்குச்சென்றேன். அங்கு அந்த மானை தோலை உரித்துக்கொண்டிருந்தார்கள் அதன் கண்கள் திறந்திருக்க முகம் உயிருள்ளது போல பார்த்துக் கொண்டிருந்தது. பின்பகுதியிலிருந்து அதன் தோலை அவர்கள் உரித்துக்கொண்டிருக்க அது அசைந்து அசைந்து தன் தோலை உரிக்க ஒப்புக்கொடுப்பது போல இருந்தது.

கோரன் என்னிடம் ”மான் கறி! கடைமான்!” என்றான்.

சரி என்று தலையசைத்துவிட்டு வெளியே வந்தேன். என்ன செய்வதென்றறியாமல் அக்கூடத்திற்குள்ளேயே மெல்ல நடந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எழுதியது நினைவுக்கு வந்த.து அந்த முடிவைத்தான் நான் எடுக்க வேண்டும். வேறொரு முடிவெடுக்க எனக்கு உரிமை கிடையாது. என்னுடைய பொறுப்பென்பது என் தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பது. இந்த பிறவிக்கே அதுதான் நோக்கமென்பது போல.

நான் சின்னப்பையனாக இருக்கும்போதே எல்லாரும் அதை சொல்லிவருகிறார்கள். அதற்கு என்னை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். ஏழாங்கிளாஸ் எட்டாங்கிளாஸ் படிக்கும்போதே ஒவ்வொரு முறை மதிப்பெண் கார்டை பார்க்கும்போதும் அப்பா அதைத்தான் ஞாபகப்படுத்துவார். வேலை கிடைத்தபோதும் அதுதான் பேச்சாக இருந்தது.

இந்த வாத்தியார் வேலையில் எனக்குக்கிடைக்கும் சம்பளத்தை சேர்த்து வைத்து ஒருபோதும் அந்தப்பணத்தை நான் சேர்த்துக்கொள்ளபோவதில்லை. அதை வைத்து திருமணம் செய்ய வேண்டுமென்றால் குறைந்தது பத்தாண்டுகள் சேமிக்க வேண்டும். மீண்டும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் கடனை அடைக்க வேண்டும். அப்படியென்றால் என் வாழ்க்கை முழுக்க இதற்கே செலவாகிவிடும்.

இந்த திருமணம் என்பது ஒரே ஆண்டில் எல்லாவற்றையும் முடித்து மீள்வது. அந்தப்பெண் காது கேட்காதவள், பேச முடியாதவள். அதற்கென்ன ,அதைவிட ஒரு நல்ல பெண்ணை நான் அடைவதற்கு வாய்ப்பில்லை. பத்துபதினைந்து ஆண்டுகள் கழித்து நாலைந்து லட்ச ரூபாய் கடனுடன் நான் பெண் தேடிப்போனால் எனக்கு இந்தப் பெண்ணைப்போல ஒருத்தி கிடைப்பதற்கு கூட வாய்ப்பில்லை. வேறொன்றை யோசிப்பதற்கு வழியே இல்லை நான் என்னுடைய தாள்களை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

அன்புள்ள அப்பாவுக்கு என்று  எழுதி பிறகு நெடுநேரம் தாளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பிறகு ’அனேக நமஸ்காரம்’ என்று தொடங்கி எழுதினேன். என்னுடைய வேலையைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. தங்குமிடம் வசதியாக இருக்கிறது .சாப்பாட்டுக்கு குறைவில்லை. இங்குள்ள பணிச்சூழலும் நன்றாக இருக்கிறது. எல்லாரும் அன்பாகவே இருக்கிறார்கள் என்று பொதுவாகவே எழுதிக்கொண்டு சென்றேன்.

கடைசியில் பெரியவர்கள் பார்த்து எதைச்செய்தாலும் எனக்கு சம்மதம்தான் என்று எழுதினேன். நமது குடும்பத்திற்கு குமாரகோயில் முருகன் துணையிருப்பான். எழுதி அதை மடித்து வைத்தேன் .நாளை அதை அனுப்ப முடியாது. பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் தான் கோதையாறு செல்ல வேண்டும். அல்லது இவர்களில் எவராவது நாளைக்கு கோதையாறு செல்வார்கள் என்றால் காப்ரியேல் நாடாரின் கைகளில் கொடுத்தால் போதும் அவரே ஸ்டாம்பு ஒட்டி தபாலில் சேர்த்துவிடுவார்.

நான் மழையைப் பார்த்துக்கொண்டு நின்றபோது கோரன் வந்து “சாப்பிட வாங்க… மான்கறி உண்டு” என்றான்

”ரெடியாயிருச்சா?” என்று நான் கேட்டேன்.

“கறிக்கஞ்ஞி! சுட்ட மான்கறி!” என்று கையைத்தூக்கி உடலை ஊசலாட்டியபடி சொன்னான். “நெறைய கறி! சுட்ட கறி! சுட்ட கறி!” என்றான்.

நான் புன்னகையுடன் “கொண்டு வா” என்று சொன்னேன்.

எஞ்சினியர் புத்தகத்தை மடித்து மேஜைமேல் வைத்துவிட்டு “இது எங்க கெடச்சுது?” என்றார். “கொண்டு வந்திங்களா??”

“இல்ல இங்க இருந்தது”

”அதான் பாத்தேன். ரொம்பப் பழசா இருக்கு. அது மட்டும் இல்ல ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இருக்கு பாத்தேளா?” என்றார்

”ரப்பர் ஸ்டாம்பா?” என்று நான் கேட்டேன்.

“இங்க பாருங்க” என்று அவர் புரட்டி உள்ளே ஓரு பக்கத்தில் அடிக்கப் பட்டிருந்த ரப்பர் ஸ்டாம்பை காட்டினார். அது திருவனந்தபுரம் பிரிட்டிஷ் ராணுவத்தின் முத்திரை.

“ஆமாம் இது பட்டாளத்துக்காரன் புக்காக்கும். பட்டாளத்துக்காரனுக்க எல்லா உடைமையிலேயும் சீலு வைச்சுப்போடுவான். இப்ப உள்ள பட்டாளம் இல்ல. பழய திருவிதாங்கூர்ல இருந்த வெள்ளக்காரப் பட்டாளம். ரெசிடெண்ட் ஆர்மின்னு சொல்லுவாக..அவனுகளுக்கு அங்க நல்ல லைப்ரரி  எல்லாம் வெச்சிருந்தாவ. அவனுக படிக்க மாட்டாங்க.  அவுனுக எல்லாம் தண்ணிப் பார்ட்டியாக்கும். சாயங்காலம் ஆனா அவனவன் மண்ணுமோந்து விழுந்துருவாங்க .ரம்மு ஃப்ரீ இல்ல? ஆனா அவனுக லண்டன்லே இருந்து கெட்டி கொண்டு வரப்பட்ட பொம்பளக வாசிப்பாளுக. அவளுகளுக்கு வேற வேலயே கெடயாது. இங்க ஒவ்வொருத்திகளுக்கும் வீட்டு வேல செய்யுதுக்கு அஞ்சு ஆறோ ஆளு ஆளு இருப்பா. துணி துவெக்க ஒருத்தி. பாத்திரம் கழுவ ஒருத்தி. சமைக்க ஒருத்தி. காலப்பிடிக்க ஒருத்தி. கையப்பிடிக்க ஒருத்தி. பின்ன என்ன பண்ணுவாளுக ? நேரம் போகணுமே? படிப்புதான். அப்ப இந்த மாதிரி ரேடியோ ஒண்ணும் கெடயாதில்ல? புக்கு படிச்சுட்டே இருப்பாளுக”

“அவளுக படிக்கதுக்காக அங்கிருந்து புத்தகங்கள கொண்டு வருவானுங்க. அங்க லைப்ரரில அடுக்கி வெப்பாங்க. எங்க அப்பா திருவனந்தபுரத்தில வேல பாத்தாரு.  அவர் ஓவர்சீயராக்கும். பிடபிள்யூடி ஓவர்சீயர். திருவனந்தபுரத்திலே. அதாவது பழய திருவனந்தபுரத்தில.  அவர் சொன்னதுண்டு, அங்க இப்ப பாங்ஙோடு இருக்கில்ல,  மிலிட்டரி ஹெட்குவார்ட்டஸ் ?அது பண்டு ரெசிடெண்ட் பட்டாளம் இருந்த எடமாக்கும். அங்க உள்ள பாதிக் கட்டிடம் எங்க அப்பன் நின்னு கட்டினதாக்கும்”

“ஒகோ” என்று நான் சொன்னேன்.

“அன்னிக்கெல்லாம் காண்ட்ராக்ட் நல்ல லாபம். பழய பிரிட்டிஷ் ஆட்சியாக்கும். நூறு ரூபான்னா முப்பது ரூபா பிரிட்டிஷ் துரைக்கு. பத்து ரூபா நமக்கு. பாக்கி அறுவது ரூவால அங்க ஒங்கன்னு ஒரு இருவது. மிச்சம் நாப்பது ரூவாயிலே கெட்டினா போதும். இப்ப ஊழல் ஊழல்னு சொல்லுதோம். அன்னிக்கு இருந்த ஊழல் சாதாரண ஊழல் கெடயாது. தொர கையில பைசா இல்லாம  ஒண்ணுக்கும் கையெழுத்து போடமாட்டான்”

“அப்டியா?”

“பின்ன? ஒருத்தன் அங்கேருந்து காப்டனோ கர்னலோ ஆகி வந்தான்னா பத்து வருஷத்துல அவன் லண்டன்ல வீடு கட்டிப்போடுவான் .நல்ல ரெண்டு சாரட் வண்டி வாங்கி விட்டுட்டு சக்ரவர்த்தி மாதிரி அலைவான். அவனுகளுக்கெல்லாம் ஒருமாதிரி ஒரு நரச்ச விக் உண்டு. சணல்ல செஞ்சிருப்பாங்க. அத தலையில வெச்சுகிட்டு அலையணும்னு அவனுகளுக்கு ஆச. அத வச்சுகிட்டா பெரிய ஆள்னு நெனப்பு. அதுக்காக எவன் சங்கறுத்தாலும் சரி” என்றார் ராஜப்பன்.

“அந்தக்காலத்தில இந்தப் புக்கெல்லாம் கப்பல்ல வருமாம். அங்க இதெல்லாம் படிச்சுப்போட்டு செகண்ட் ஹாண்டில குடுக்கது. அத வாங்கி டப்பால போட்டு போட்டா இங்க அஞ்சு தெங்கு துறைமுகத்துக்கு வந்துரும். அங்கருந்து எடுத்துக்கொண்டு வந்து இந்த மாதிரி வெள்ளக்காரன் இருக்க எடத்துல வித்தா லாபம் உண்டு. மகாராஜா கூட நெறய புக் வாங்கி வெச்சிருந்திருக்காரு. ஏன்னா இங்கிலீஸ் படிப்புள்ளவன்லா பெரிய ஆளெல்லாம்.இங்கிலீஸ் படிக்கப்பட்ட ஆளுகெல்லாம் அந்த புக்க விரும்பிப் படிப்பாங்க”

“ஆமா, நாகர்கோயிலிலே லைப்ரரியிலேயும் நெறைய புக் இருக்கு”என்றேன்.

“அந்தக்கால பிரிட்டிஷ் பொம்புளைக அந்த புக்கெல்லாம் எடுத்து வெச்சு காணாதத கண்ட மாதிரி கொஞ்சம் கொஞ்சமா படிப்பாளுகன்னு நெனக்கறேன். நான் அந்தக்காலத்துல ஒண்ணு ரெண்டு புத்தகம் படிச்சு பாத்திருக்கேன். ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட்டு… ரெயினால்ட்ஸ் நல்ல எளுத்தாளராக்கும். அவருக்க லண்டன் அரண்மனை ரகசியங்கள்னு புக் உண்டு படிச்சிருக்கியளா?”

“இல்ல”

“லண்டனுக்கு அடியில முழுக்க எலி வளையா நோண்டி வச்சிருக்கானுகன்னு தோணிப்போடும். பாதிக்கதை சுரங்கப்பாதையிலேதான். எங்க பாத்தாலும் எல்லாரும் சதி பண்ணிட்டே இருப்பாங்க. சின்ன வயசில நானும் நெனப்பேன்,  நாமளும் பெருசாயி இந்த மாதிரி நல்ல சதி பண்ணனும் அப்படின்னு. சதி பண்ணினாதான் பெரிய ஆளு அப்படின்னு ஒரு நெனப்பு. நான் பண்ண வேண்டிய சதிகளைப் பத்தில்லாம் அப்பவே யோசிச்சு அலஞ்சுட்டு கெடப்பேன். பெரிய ஆளுகள்ளாம் அப்படி பயங்கரமா சூழ்ச்சிகளா பண்ணிட்டிருக்காங்கன்னு ஒவ்வொருத்தர் மூஞ்சிகளா பாப்பேன். அது ஒரு காலம்” என்றார்

கோரன் பெரிய கமுகுப்பாளை தொன்னைகளில் கறிக்கஞ்சியும் சுட்டகறியும் கொண்டு வந்து  இருவருக்கும் வைத்தான்.

“இவனுகளுக்கு சமைக்க தெரியாது. மொதல்ல இது என்னடான்னு சப்புன்னு இருக்குன்னு தோணும். ஆனா இத தின்னு பாத்தப்புறம் இது பிடிச்சுப்போடும் .எனக்கு வீட்டுல சமயல் பிடிக்காது இப்போ. அவங்க காரத்த வாறி போடுகா, புளிய பிழிஞ்சு விடுகான்னு தோணும். ஒரே சண்ட. நமக்கு மட்டும் சுட்டு குடுன்னு கேட்டு சுட்டோ அவிச்சோ தின்னுட்டு வந்திறது” என்றபடி எஞ்சினியர் சாப்பிட ஆரம்பித்தார்.

வெளியே மழை உரத்து பெய்து கொண்டிருந்தது.  “இவனுக திங்கறதுதாங்க சரி. மனுசனுக்கு தானியம் இவ்வளவு வேண்டாம் கேட்டியளா? கறிதான் மனுசனுக்கு நேச்சுரலான ஃபுட். என்ன சொல்லுதியோ?”

“ஆமாம்” என்றேன்

”ஒரு நேரம் நல்ல கறி சாப்பிட்டா பிறகு மறுநாளைக்கு சாப்பிட்டா போதும். நான் ஒரு நேரம் தான் சாப்பிடுவேன்.அரக்கிலோக்கு மேல  கறி சாப்பிடுவேன் அவ்ளொதான். இப்ப இன்னிக்கு சாப்பிடுறேன். நாளைக்கு ராத்திரிதான் சாப்பிடுவேன் .நடுவுல ஒரு டீயோ வெள்ளமோ குடிச்சா உண்டு. பழங்கள் ஏதாவது கெடச்சா சாப்பிடுவேன்” என்றார்.

“காலையில சாப்பிட மாட்டிங்களா?” என்றேன்.

“இல்லியே காலையில் ஒரு சாயா. சில சமயம் ஒரு துண்டு ரொட்டி .மத்தபடி சாப்பிடுகதில்ல” என்றார்

நினைத்தது போலவே  அவர் பெரிய அளவு கறி சாப்பிட்டார். ஏப்பம் விட்டு கழுவி மீசையை நீவியபடி வந்து அமர்ந்தார். “இந்த ராத்திரி முழிச்சிருக்கிற வழகமும் நமக்கு கெடயாது. சாப்பிட்டமா அந்தால படுத்துர்றது. காலையில விடிஞ்சபிறகுதான் எந்திருக்கது.  பத்துமணிநேரம் நல்ல ஒறக்கம். ஆனா அதுக்கான கொணம் உண்டு. பகல்ல ஒரு பத்து மணிக்கூர் நேரம் காட்டுக்குள்ள கெடந்தாலும் எனக்கொண்ணும் ஆகறதில்ல” என்றபின் ஏப்பம் விட்டு “உங்களுக்குக் காட்டுக்குள்ள நடந்தா மூச்சுவாங்குமா?” எ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2021 11:34

இஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்

இஸ்லாமிய வெறுப்பா?

அன்புள்ள ஜெ,

இஸ்லாமிய வெறுப்பா என்ற கட்டுரை வாசித்தேன். என்னைப்போன்ற பலர் நினைப்பதை தெளிவாகச் சொல்லியிருந்தீர்கள். அந்தக் கட்டுரைக்கு இருக்கும் கூல் ஆன எதிர்வினையே அது உண்மை என்று காட்டுகிறது.

இன்றைய சூழல் இதுதான். இஸ்லாமியர்களில் ஒரு சாரார் அதிதீவிரவாத நிலைபாடு எடுக்கிறார்கள். இஸ்லாமியர் உலகை ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். அதை தடுக்கும் சக்திகள் எல்லாமே சாத்தானின் படை என நினைக்கிறார்கள். மற்றவர்களிடம் ஒத்துப்போவதைவிட அவர்களிடமிருந்து விலகவேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஒடுக்கப்படுவதாக நம்பவைக்கிறார்கள். இந்த மனைநிலை ஒரு தரப்பு இந்துக்களிடம் உள்ளது. ஆகவே பிளவு பெரிதாகிக்கொண்டே செல்கிறது.

இதற்கு நடுவேதான் பெரும்பான்மையினரான இந்துக்கள் உள்ளனர். அவர்கள் மதவெறியர்கள் அல்ல. பிறர்மேல் ஆதிக்கம் கொள்ள நினைப்பவர்களும் அல்ல. ஒத்துப்போக நினைப்பவர்கள். ஆகவே எல்லாவகையான தீவிரவாத நிலைபாடுகளையும் எதிர்ப்பவர்கள். அதிலிருந்து விலக நினைப்பவர்கள்.

இந்த நடுநிலையாளர்கள்தான் உண்மையில் மதச்சார்பின்மையின் காவலர்கள். ஜனநாயகத்தின் தூண்கள். இவர்களை குறிவைத்தே இருபக்கமும் இடிக்கப்படுகிறது. இவர்கள் மறைந்தால் இருபக்கமும் வெறியர்கள் மட்டும்தான் மிஞ்சுவார்கள். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மிக வேகமாக இவர்கள் மறைந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த அழிப்புப்பணியில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுபவர்கள் யாரென்றால் இங்கே உள்ள போலி முற்போக்காளர்கள். அவர்கள் பெரும்பாலானவர்கள் எழுதவோ சிந்திக்கவோ திறமையில்லாத வெட்டிகள்.ஆனால் எழுத்தாளர் சிந்தனையாளர் என்று பாவனை செய்பவர்கள். அவர்களை ஏற்காதவர்கள் மேல் காழ்ப்பு கொண்டவர்கள். அந்தக்காழ்ப்புதான் அவர்களை செயல்பட வைக்கிறது. இரவுபகலாக காழ்ப்பின் மொழியிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காழ்ப்புக் கும்பல் இவர்களின் சொந்த எதிரிகளை எல்லாம் இஸ்லாமியவிரோதி என்று முத்திரை குத்துகிறது. அவர்கள் சொன்ன வரிகளை திரித்து அர்த்தம் அளிக்கிறது. மூட்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஒரு சின்ன ஐயத்தை கிளப்பினால்போது சங்கி என்று சொல்லிவிடுகிறார்கள். சங்கி படைக்கு ஆள் சேர்ப்பதே இந்தக் கும்பல்தான். இப்படி பத்து தடவை ஒருவனைச் சொன்னால் ஆமாடா சங்கிதான் என்பான். அவ்வளவுதான். ஒரு ஆளை அந்தப்பக்கம் தள்ளிவிட்டாயிற்று. இந்தக் கும்பல்தான் இஸ்லாமியர்களின் உண்மையான எதிரிகள். மதச்சார்பின்மைக்கும் ஜனநயாகத்துக்கும் துரோகிகள். இவர்களுக்கு எந்த அஜெண்டாவும் இல்லை. தனிப்பட்ட காழ்ப்பும் தாழ்வுணர்ச்சியும் மட்டும்தான்.

தீவிரமதவெறியர்கள் இருபக்கமும் உண்டு. அவர்கள் சொல்லும் உச்சகட்ட மதவெறியை அப்படியே ஏற்றுக்கொண்டால்தான் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். இல்லாவிட்டால் எதிரி என்று சொல்லிவிடுவார்கள். அவதூறு வசை என்று ஆரம்பிப்பார்கள். ஒருவன் எனக்கு மதவெறி இல்லை என்று சொல்கிறான், அவனை நோக்கி இல்லை நீ மதவெறியன் என்று சொல்வதைப்போல அபத்தமான ஒன்று உண்டா? கொஞ்சம் மதவெறி உள்ளவனைக்கூட ஜனநாயகமாக ஆக்கவேண்டியதுதானெ உண்மையான வேலை.

இணையத்தில் இலக்கியவாதிகள், முற்போக்காளர்கள் என்று பாவலா காட்டி அலையும் ஒரு நரம்புநோயாளிக் கும்பல் உருவாக்கும் அழிவு மிகப்பெரியது. தலித்துக்களுக்கு தலித் எதிரிகளை இவர்கள்தான் சொல்வார்கள். இஸ்லாமியருக்கு இஸ்லமைய எதிரிகளை இவர்கள்தான் சுட்டிக்காட்டுவார்கள். இந்த மனநோயாளிகள் மிகப்பெரிய சமூக விரோதிகள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள இஸ்லாமியர்களில் கொஞ்சம் சிந்திப்பவர்கள், கொஞ்சம் தாராளப்போக்கு கொண்டவர்களாவது முன்வரவேண்டும்

எஸ்.ராகவன்

 

அன்புள்ள ராகவ்

இந்த ஒரு குரலை இடைவிடாமல் எழுப்பிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் நாம் நினைவில் வைக்கவேண்டிய ஒன்று உண்டு. காந்தி முல்லா என்றும் சனாதனி என்றும் ஒரேசமயம் திட்டப்பட்டார்.

ஜெ

இனிய ஜெயம்

இஸ்லாமிய வெறுப்பா எனும் தலைப்பிட்ட இன்றைய பதிவு கண்டேன். உங்கள் அளவே பொது வெளியில் நானுமே பாதிக்கப்பட்டு இதுவரை அதை நான் வெளியே சொன்னதில்லை. சமீபத்தில் ஒரு இலக்கிய கூட்டத்துக்கு ஒரு நண்பருடன் சென்றிருந்தேன். அவர் சற்றே இலக்கிய அறிமுகமும் ஈடுபாடும் கொண்டவர் என் குடும்ப நண்பர் இஸ்லாமியர்.  அக் கூட்டத்தில் வழமை போல ‘அதுல ஒரு அரசியல் இருக்குது தோழர்’ வகையறா நண்பர் ஒருவரும் இருந்தார். அவர் உரையாடல் ஒன்றின் முடிவில்  “ஜெயமோகன் வாசகர் ஒருத்தரும் முஸ்லீம் ஒருத்தரும் இப்புடி ஒரு நட்புல இருக்கிறது ஆச்சர்யமா இருக்கு” என்று சொன்னார். உண்மையில் இது எதிரில் உள்ளவரை எந்த அளவு அவமதிக்கும் ஒரு சொல் என்பதை உண்மையிலேயே அவர் அறிந்திருக்க வில்லை. ” பாருங்களேன் உங்களை விட உசந்த சாதி ஆனா உங்க தோள் மேல கைய போட்டு பழகுறார் ஆச்சர்யமா இருக்கு ” என்று ஒருவர் அவர் முகத்தின் முன்னால் சொன்னால் அவர் என்ன ஆவார்? ஆனால் உண்மையில் அவருக்கு இது ஒரு அவமதிக்கும் சொல் என்று தெரியாது. இத்தகு ஆளுமைகள் வசம்தான் ஐயையோ ஜெயமோகன் என்ன சொல்லிருக்கார் பாருங்க என்று போலி கரிசனையுடன் அத்தனை துருவப் படுத்தும் வெறுப்பு இரட்டை நிலைகளும் விதைக்கப்படுகிறது.

என் பால்யம் முதலே சூழ சூழ முகமதிய குடும்பங்களின் நட்பு சூழலில் வளர்ந்தவன் நான். என் அப்பாவின் நெருங்கிய நண்பர் ( எனக்கு பைதா மாமா)  என் அப்பாவின் முதன்மை இன்றி அவர் வீட்டின் எந்த கொண்டாட்டமும் நிகழாது. அன்று துவங்கி  இன்று வரை நண்பர்கள் கொண்டு வந்து தரும் நோம்பு கஞ்சி இன்றி என் கோடைகள் கடந்ததே இல்லை. இப்போது நம் நண்பர்கள் எவரையும் விட மிக அதிக முகமதிய நண்பர்கள் கொண்டவன் நான். அதில் சிலர் lkg முதல் என்னுடன் தொடர்பவர்கள். என் நண்பன் ஒருவனுக்கு செல்ல வாப்பா என்று பெயர் எங்களுடன் எல்லா கோவில் விஷேஷத்திலும் அவன் இருப்பான். பட்டை குங்குமம் சகிதம் எங்களுடன் நின்றிருப்பான். சிறு வயது முதலே சிறு சிறு உடல் பிணிகளுக்கு அப்பா என்னை தர்க்கா அழைத்து செல்வார். எனக்கு “ஓதி” விட்டு வியாழன் ஒரு நாள் இரவு முழுக்க என்னுடன் அங்கே இருப்பார்.

இப்படி நீருக்குள் மீன் நீர் குறித்த கேள்வி இன்றி இருப்பது போலத்தான் என் நண்பர்களும் நானும் இருந்தோம். சமூகமும் அவ்வாறே இருந்தது. சுதந்திர இந்தியாவின் மத சார்பற்ற அரசியல் சாசனத்தின் படி அமைந்த குடியரசின்  கரசேவகர்கள் செய்த சேவை வழியே மெல்ல மெல்ல எல்லாம் என் கண்முன்னே திரிபு பட துவங்கின.

அதற்கு முன்பு வரை ஒட்டுமொத்த ஸ்ரீ ரங்க வரலாற்றிலும் துலுக்க நாச்சியாருக்கும் ஒரு இடம் இருந்தது. இங்கே கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் என்றொரு ஊர் உண்டு. அங்கே 8 ம் நூற்றாண்டு இலக்கிய சான்றுகளும் சோழர் கால கல்வெட்டு சான்றுகளும் தஞ்சை நாயக்கர் கால பெரு விழா சான்றுகளும் கொண்ட  பூவராக ஸ்வாமி கோவில் உண்டு. அங்கே கோவில் தேரோட்டம் வரும் அந்த ஒரு நாள் விழா ஸ்ரீமுஷ்ணம் பகுதி முஸ்லீம் சமூகத்துக்கு உரியது. தீர்த்தவாரியின் போது உற்சவர் கையில் இருந்து மாலையும் பிரசாதங்களும் மசூதிக்கு செல்லும்.  இப்படி அங்கே  கோவில் விழாக்களின் பல அலகுகளுடன் கலந்து நிற்பது அங்குள்ள முகமதிய பண்பாடு. ஆனால் இன்று ? …இதே நிலைதான் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும். அடிப்படை வாதங்களின் ஓநாய்ப்  பசிக்கு இப்படி எத்தனையோ பண்பாட்டு தொகுப்பு முறைமைகளை உண்ணக் கொடுத்து விட்டோம். அந்தப் பசி வேட்டையின் களம் சுருங்கி சுருங்கி இதோ என் நட்பு வட்டம் வரை வந்து விட்டது.

என் நல்விதி என் அத்தனை முகமதிய நண்பர்களும் இத்தகு சிறுமைகளுக்கு வெளியே நிற்பவர்கள். ( இதில் என் நண்பர் ஒருவர் வீட்டில் இருந்த நூலகத்தை கண்ட அவரது மத குருவால்  எல்லாம் ஹராம் இதெல்லாம் வீட்ல இருக்க கூடாது என்று மட்டுருத்த பட்டவர்). அத்தனை அரசியல் சிறுமைகளுக்கு வெளியே நிற்கும் நட்பு சாத்தியம் என்பதை நான் அறிவேன். ஓநாய்கள் பசிக்கு பலி ஆகாமல் அந்த நட்பை பேணி எங்கள் அடுத்த தலைமுறைக்கு அதை கையளித்து செல்வதே இந்த காலம் எங்களுக்கு அளித்திருக்கும் கடமை என்று நினைக்கிறேன்.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

நான் கண்டவரை இந்த வேறுபாடுகள் இல்லாமல் உண்மையான நட்பு இருந்த இடமென்பது தொழிற்சூழல். தொழிற்சங்கச் சூழல். அங்கேயே இதெல்லாம் அழிக்கப்பட்டாயிற்று

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2021 11:33

அதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா

( காடு நாவல் – வாசிப்பனுபவம்)

நோய் பெருந்தொற்றுக்காலத்தில் பதற்றமும் அச்சமும் அலைக்கழிக்க பெரும்பான்மை நேரம் நான்கு சுவருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை இரக்கமற்ற இச்சூழலிலிருந்து முற்றிலுமாக விடுவித்து மிளாக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் அயனி மரத்தடியில் அமரச் செய்தது காடு. வெண்ணமுதைப் பொழியும் நிலவொளியில் கையில் செறியாழோடு அமர்ந்திருக்கும் என் செவியில் கீறக்காதன் பிளிறும் ஓசை கேட்கிறது. காதருகே குறிஞ்சிப்பூவைச் சூடி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் என்னிடமிருந்து எழுந்து பரவும் சந்தன வாசனை காற்றில் கரைந்து இரவை ரம்மியமாக்குகிறது. கை எட்டும் தூரத்தில் நிற்கும் மணிக்கெட்டி என்னை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் மேயத் தொடங்குகிறது.

சற்று தொலைவிலிருக்கும் புதர்களில் குறுக்கன்கள் ஒற்றை உடலாக மாறி பாய்வதற்கு நேரம் பார்த்துப் பதுங்கி இருக்கின்றன. பார்க்கப் பரிதாபமாக இருக்கும் ரெசாலத்தின் தேவாங்கு மரத்தின் உச்சியில் அமர்ந்து இலைகளைத் தின்றுகொண்டிருக்கிறது. சற்றுத் தள்ளி இருக்கும் குட்டப்பனின் அடுப்பிலுள்ள கங்கு நெருப்பைப் போல எனக்குள் காதல் கனன்று கொண்டிருக்கிறது. ஓலைக்கூடையிலிருந்து தேனீக்கள் செத்து மிதக்கும் சற்றுப் புளித்த மலைத்தேனை காதலனுக்குக் கொடுத்து, ருசிக்கும் அவனை கண்களால் அள்ளிப் பருகிறாள் இந்த நீலி. ஆம். நான்தான் அந்த நீலி. அப்படித்தான் என்னை ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன்.

வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதத்தில் பிறந்தவளாகிய என்னை “இனியசெய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!” என வருந்தவிடாமல் “கொடியர் அல்லர் எம் குன்றுகெழு நாடர்” என கூறச் செய்கிறது காடு. மருத உழத்தியை குறிஞ்சி மலையத்தியாக மாற்றும் மாயத்தைச் செய்கிறது காடு. எந்த நிலத்திணையில் பிறந்தவரையும் காடு குறிஞ்சிக்கு கட்டி இழுத்து வந்து விடும் வல்லமை கொண்டது என்றாலும் கூட நான் என்னை நீலியாக உணர்வதற்கு காரணமிருக்கிறது. எனது வாழ்வில் எனக்குள் முதல் காதல் முகிழ்த்தது குறிஞ்சியில்தான். மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள முண்டன்துறை காடும் யாருமற்ற ஒற்றையடிப் பாதையில் காதலனுடன் பேசிக்கொண்டே நடந்த அந்தச் சித்திரா பௌர்ணமி இரவும் சொல்லில் அள்ள முடியாத பரவசமாக, இனிய கனவாக இன்றும் என்னுள் இருக்கிறது. என்றும் என்னுள் இருக்கப் போவது. நீலியும் கிரியும் போல எங்களிடமிருந்தும் உலகிலிருந்தும் விடுபட்டு இனிமை மட்டுமே சூழ வெறுமனே இருந்தோமென்பதை காடு வழியாக அறிந்தபோது, ஏதோ ஒரு மலை உச்சியிலிருந்த எல்லாம் அறிந்த சாத்தன் பறவை எங்கள் காதலுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தபோது நான் அடைந்த அகஎழுச்சி  அளவில்லாதது. காதலிக்காதவர்கள் கடவுளையும் அறிவதில்லை என்கிறது காடு. தெய்வத்தை அறிமுகம் செய்யும் காதலை தெய்வங்கள் வாழும் காட்டில் சந்தித்த வகையில் நான் எத்தனை பாக்கியம் செய்தவள் என்பதை காடு வழியாகத்தான் உணர்ந்தேன். இந்த ஒரு காரணத்தினாலேயே காடு எனக்கு மிக, மிக நெருக்கமான படைப்பாக வாழ்நாள் முழுதும் இருக்கும்.

நீலி மீது காதல் வயப்பட்ட கிரி ஏன் அத்தனை தெய்வீகத்தோடும் புனிதத்தோடும் அவளை அணுகினான்? அவனைச் சுற்றி இருந்தவர்களிடம் இயல்பாக தினசரி அரங்கேறிக் கொண்டிருந்த காமம் அவனுக்குள் எழவில்லையா? பெண் நினைவையும் காம நினைவையும் தூண்டி அவனை சுயபோகம் செய்ய வைத்த காடு நீலியோடு இருக்கையில் அவனுக்குள் ஏன் காமத்தைக் கிளர்த்தவில்லை? என்ற எனது கேள்விகளுக்கு இளையராஜாவின் கதைதான் பதிலாக கிடைத்தது. காஞ்சிர மரத்தில் ஆணியில் சிறைப்பட்டிருக்கும் வனநீலி குட்டப்பனின் சொற்கள் வழியாக கிரியின் ஆழ்மனதுக்குள் ஊடுருவி மீண்டும் நிஜ நீலியாக நீட்சியடைந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

நல்லவேளையாக கிரி சுண்டன் மலையனின் மகள் நீலியை மணக்காமல் கண்டன் புலையனின் மகள் வேணியை மணந்தான். இல்லாவிட்டால் ‘அம்மா வந்தாள்’ தண்டபாணி அலங்காரத்தம்மாவின் காமத்தை எதிர்கொள்ள இயலாமல் அவளை அம்பாளாக ஆராதித்தது போல கிரியும் வாழ்நாள் முழுதும் லௌகீக வாழ்க்கையில் நீலி என்ற அணங்கை எதிர்கொள்ள முடியாமல் களைத்திருப்பான். கனவில் உறைந்த நீலியோடும் வாழ்வில் உடனிருந்த வேணியோடும் இரு வேறு வாழ்க்கை வாழ்ந்ததால் அவன் ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போல புறப்பார்வைக்குத் தோன்றினாலும் எனது வாசிப்பில் அவனது காதல் வாழ்வு நிறைவான ஒன்றாகவே தோன்றுகிறது. பலாச் சுளைகளைச் சாப்பிட்டுவிட்டு நாரகத் தளிர்களை மென்றால்தான் பசி அடங்குகிறது. கரிய யானையைத் தள்ளி நின்று பார்த்து மகிழ்ந்தாலும் கரிக்குரங்கோடு இருக்கையில்தான் விளையாட்டு பூரணத்துவத்தை அடைகிறது. கனவில் இளையோளோடும் நிஜத்தில் மூத்தோளோடும் வாழ்ந்த கிரி அந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தவன்தான்.

ஆயுதமேந்தும் கடவுளை வணங்கும் குட்டப்பனும் ஆட்டை ஏந்தும் கடவுளை வணங்கும் குரிசுவும் மதமென்ற புள்ளியில் தொடர்ந்து முரண்பட்டாலும் மனிதமென்ற புள்ளியில் இறுதியில் ஒன்றிணைகிறார்கள். விஷக்காய்ச்சலால் மரணித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு சீனிக்கிழங்கை அவித்து எடுத்துக்கொண்டு ஓடும் குட்டப்பனும் “நோயில கிடக்குத ஒரு ஜீவனிட்ட கையப் பிடிச்சு கண்ணீரோட நாம பேசுத பாஷை சினேகமாக்கும். அதாக்கும் கிறிஸ்துவுக்க பாஷை” என்று கூறும் குரிசுவும் காமமென்ற சாத்தானின் பாதையில் பயணித்து இறுதியில் கடவுளை கண்டுகொள்பவர்களாகவும் இதுதான் கடவுளை அடைவதற்கான வழி என்று நமக்கு அடையாளம் காட்டக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குட்டப்பன், குரிசு இருவருக்கும் எதிர்துருவத்தில் நிற்கிறார் ‘தவளை’ பாதிரி. ‘டெவிள்’ என பெண்களை வசைபாடியவாறு சாத்தானை சிறிதும் அண்டவிடாமல் சிலுவை தூக்கும் பாதிரி மரண வாசலில் கோம்பன் சங்கரனுடைய மனைவியின் அழுக்கான கால்கள் வழியாக சாத்தானைப் பார்க்க விழைந்து அந்த இறுதி வாய்ப்பும் நழுவிப் போக கழுவிய கால்களின் தூய்மை வழியாக வீடுபேறைத் தவறவிடுகிறார்.

இருத்தல், வெறுமனே இருத்தல், தன்னைப் பற்றி எண்ணாமல் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தைப் பற்றி எண்ணாமல் நிகழ்கணத்தில் இருத்தலென்பது பெரும் சுகம். பெரும் தவம். அப்படியான சில தருணங்கள் கிரிக்கு காதலில் கிடைக்கின்றன. சிலருக்குப் பக்தியில் கைகூடலாம். ஐயருக்கு அது காடு மூலம் சாத்தியமாகிறது. மது, மாது, இசை, இயற்கை என அனைத்திற்கும் ரசிகனான  ஐயர் இருக்கிறார். சும்மா இருக்கிறார். காட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாலும் ஏதோ ஒரு ஏக்கம் கொண்டவராக அந்த ஏக்கத்திற்கான காரணத்தையும் அறிந்தவராக இருக்கிறார். காரணம் என்னவாக இருக்க முடியும்? ஐயர் இயற்கையோடு தன்னைக் கரைத்துக்கொள்ள விரும்புகிறார். பரு வடிவான உடலும் பிரமாண்டமான இயற்கையோடு ஓர் எல்லைக்கு மேல் கலக்க விடாமல் கட்டுப்பாடு விதிக்கும் மனதும் அவருக்குத் தடையாக இருக்கின்றன. உடலிலிருந்தும் மனதிலிருந்தும் விடுபட்டு காற்றோடு கரைந்து காடு போல வான் நோக்கி எழும் ஏக்கமே ஐயரை வதைக்கிறது.     

அறம் மீறி பல கொடூரங்களையும் பெரும் பாவங்களையும் செய்யும் மிருகங்களை விட மோசமான இருவர் காட்டில் உலாவுகின்றனர். சதாசிவம் மாமா ரெசாலத்தால் குத்துப்பட்டுச் சாகிறார். சண்முகம் பிள்ளை அண்ணாச்சியோ புளுத்து சாகும் தருவாயில் இருக்கிறார். இவ்வளவுதான் இவர்களது பாவங்களுக்கான தண்டனையா? மாமாவின் மகன் அமெரிக்காவில். அண்ணாச்சியின் மகன் வக்கீலாகி சுகபோக வாழ்வில். தந்தைகள் செய்த பாவங்கள் மகன்களைத் தொடரவில்லையா? வாழ்விலும் இலக்கியத்திலும் விடை தெரியாமல் தொக்கி நிற்கும் இந்த கேள்விக்கு மதங்களும் தத்துவங்களும் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் வஞ்சிக்கப்பட்ட செட்டிச்சி, கால்கள் சூம்பிய அவளது மகள், குறைப்பிறவி தங்கன், மேரி, கிரி, ரெசாலத்தின் குறைப்பிறவி மகள் ஆகியோரது வலியும் கண்ணீரும் அணைக்க இயலா பெருந்தீயாக மாறி எனக்குள் கொழுந்துவிட்டு எரிகிறது.

காடு முதற்பொருள் சார்ந்து குறிஞ்சி, முல்லை என்ற இரண்டு நிலப்பரப்பில் நிகழ்ந்தாலும் உரிப்பொருள் சார்ந்து அனைத்து ஒழுக்கங்கள் வழியாகவும் குறிப்பாக பெண்கள் மூலம் பயணிக்கிறது. குட்டப்பனோடு கூடிப் புணரும் சினேகம்மையில் குறிஞ்சி, கிரிக்காக காத்திருக்கும் நீலியில் முல்லை, கணவனோடு செல்ல சண்டையிடும் அம்புஜத்தில் மருதம், நாகராஜ ஐயரின் மனைவியில் நெய்தல், சிறு வயதில் விதவையான அனந்தலட்சுமி பாட்டியில் பாலை, ஒரு தலைக் காதலோடு இருக்கும் வேணியில் கைக்கிளை, பொருந்தாக் காமத்தை வெளிப்படுத்தும் புவனா மாமி, மேனன் மனைவி இருவரில் பெருந்திணை என ஒட்டு மொத்த காட்டின் வழியாக பெண்களின் அக உணர்வுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுகின்றன. காடு காட்டும் சில பெண்களில் அன்னை, அணங்கு, அம்மன் என மூன்று தன்மைகளும் மாறி, மாறி ஊடாடுகின்றன. எத்தன்மை எப்போது வெளிப்படும் என்று அறியாதவர்களாக, வெளிப்படும் தருணத்தில் அதை எதிர்கொள்ள திராணியற்றவர்களாக, சில சமயங்களில் அந்த உக்கிர வெளிப்பாட்டின் முன் தோற்றுப் போகிறவர்களாக காடு காட்டும் சில ஆண்கள் இருக்கிறார்கள்.

பெரும் இரைச்சலோடு பெய்யும் மழையால் காடு வேறொன்றாக மாறுவது போல புயலென அடிக்கும் காமத்தால் மனிதர்கள் வேறொன்றாக மாறுகிறார்கள். சிலர் அப்புயலை எதிர்த்து நின்று களமாடுகிறார்கள். சிலர் இருக்குமிடம் தெரியாமல் அடித்துச் செல்லப்படுகிறார்கள். காமத்தை விருத்தி கெட்ட காரியமாக பார்க்கும் சினேகம்மை, “லஸ்ட் இஸ் மை பவர்” என்று சொல்வதன் மூலம் காமத்தைப் பலமாக பார்க்கும் மேனன் மனைவி, காமத்தை விளையாட்டாக நிகழ்த்தும் குட்டப்பன், காமத்தை வக்கிரமாக நிறைவேற்றிக் கொள்ளும் மாமா, காமம் பெண் உடல் சார்ந்ததா என்ற கேள்விக்குப் பதிலாக எப்போதும் பிணைந்தே இருக்கும் நாகங்களான ஆபேல், ராபி, காதலற்ற காமத்தை எதிர்கொள்ளும் வேணி, கன்னிமையை அழிக்கும் அதிகார காமத்தால் திணறும் கிரி, பேசிப் பேசி சொற்கள் வழியாக காமத்தைக் கடக்கும் அனந்தலட்சுமி பாட்டி, காமத்தின் மூலம் கடவுளை நெருங்கும் குரிசு, அணையா நெருப்பாக காமத்தைச் சுமக்கும் புவனா மாமி என காமம் மனிதர்களிடம் வெவ்வேறாக வெளிப்பட்டு வாசகனை நிலைகுலையச் செய்கிறது.

நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையும் காடு புதிதாக திறக்கக்கூடியதாகவும் விரியக்கூடியதாகவும் இருக்கிறது. வாசிப்பனுபவத்தில் ஒட்டுமொத்தக் காட்டையும் ஒரு வாசகன் தனது சொற்களால் கடத்திவிட முடியுமா என்பது சந்தேகம்தான். எனது மதுர காதலை மதுர சொற்கள் வழியாக இனிமை சொட்ட, சொட்ட மீண்டும் நிகழ்த்திக் காட்டி என்னைப் பரவசத்தில் ஆழ்த்திய காட்டில் அதிமதுர தழைகளைத் உண்டு உணர்வெழுச்சி கொள்ளும் யானையாகவே என்னை உணர்ந்தேன். காட்டின் ராஜ யானையான ஆசானுக்கு அதிமதுரம் தின்ற யானையின் அன்பும் நன்றியுமான பிளிறல்.

 

[அழகுநிலா சிங்கப்பூர்]

காடு அமேசானில் வாங்க காடு வாங்க

காடு- கதிரேசன்

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

காடு இரு கடிதங்கள்

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு – கடிதம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2021 11:31

May 15, 2021

𝟙𝟛

𝟙𝟛
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 23:23

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- ஆஸ்டின்

வட கரோலினா, ராலேயில் திரையிடப்பட்ட வெண்முரசு ஆவணப்படத்தை பார்த்து ஆதரவளித்த நண்பர்களுக்கும், தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.

அடுத்து டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் , 22, மே, 2021 – 3.00 மணிக்கு Galaxy Theaters-ல் திரையிடவிருக்கிறோம். ஆர்வமுள்ள நண்பர்கள், வாசகர்கள் vishnupuramusa@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

[Galaxy Theatres,

6700 Middle Fiskville Rd,

Austin TX 78752.

22 May 2021 Saturday 3 PM]

 

ஆஸ்டின் சௌந்தர்

ராஜன் சோமசுந்தரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 22:28

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.