Jeyamohan's Blog, page 982
May 22, 2021
கதாநாயகி-15
கால்நூற்றாண்டுக்கு முந்தைய கதை. சொல்லச்சொல்ல பெருகுவதே உண்மையான கதை. ஏனென்றால் அது வாழ்க்கையின் திருப்பு முனைப்புள்ளி. அங்கிருந்து தொடங்கும் வாழ்க்கையில் அந்தக் கதையின் எல்லா சொற்களும் விதைகள் போல முளைக்கத் தொடங்குகின்றன. அந்தக் கதை நிகழ்ந்தபோது புரிந்திராதவை ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புரிதல்களுடன் எழுந்து வருகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நான் அந்த கதையை முற்றிலும் புதியதாகச் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் ஒருமுறை சொல்வேன் என்றால் சம்பந்தமே இல்லாத புதியகதையாகவே அது இருக்கும்.
காலையில் கோரன் தன் குடிலில் இருந்து இறங்கி வந்தபோது பங்களாவின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டான். நான் உள்ளே இல்லை. அவன் எல்லா இடங்களுக்கும் சென்று அழைத்தும் தேடியும் பார்த்தான். என் பொருட்கள் எல்லாமே அங்கே இருந்தன. அவன் வெளியே வந்து சேற்றில் காலடிகளுக்காகத் தேடினான். மழைபெய்திருந்தமையால் சுவடுகளே இல்லை. என்னை அழைத்தபடி அவன் புலிமடைக்கும் அங்கிருந்து பள்ளிக்கூடத்திற்கும் சென்றான். என்னைக் காணவில்லை.
கோரன் சென்று செய்தி சொன்னதும் கப்ரியேல் நாடாரும் நான்கு காணிக்காரர்களுமாக வந்து என்னை காட்டில் தேடிக் கண்டடைந்தார்கள். நான் காட்டுக்குள் ஓர் ஓடையின் கரையில் அமர்ந்திருந்தேன். என்னை அவர்கள் கண்டடைந்தபோது அவர்களை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. என் கண்கள் வெறிப்பு கொண்டிருந்தன. என்னால் பேசமுடியவில்லை. அவர்கள் என்னை அங்கேயே கைப்பிடியாக பற்றி இழுத்து கீழே கொண்டுவந்தனர்.
என்னை கோதையாறு குவார்ட்டர்ஸில் இருந்து ஜீப் வாங்கி அதில் ஏற்றி கொண்டுசென்று என் ஊரை அடைந்தனர். நான் என் அம்மா அப்பா இருவரையும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தனக்குத்தானே பேசியபடி, தலையை ஆட்டியபடி, அவ்வப்போது அழுதுகொண்டும் சீற்றமடைந்து உறுமிக்கொண்டும் இருந்தேன். ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக ஏதோ சொன்னேன்.
என் அம்மாவும் அப்பாவும் கதறினர். ஏதோ மலைவாதை அடித்துவிட்டது என்று காப்ரியேல் நாடார் அம்மாவிடம் சொன்னார். எனக்கு பூசாரியைக் கூப்பிட்டு மந்திரவாதம் செய்து பார்த்தனர். குலதெய்வக் கோயிலிலும் மனச்சிக்கலுக்காக பூசைகள் செய்யப்படும் மற்ற கோயில்களிலும் வேண்டுதல்கள் நிகழ்த்தினர். நான் அதே நிலையில்தான் இருந்தேன். திடீரென்று எழுந்து வெளியே ஓடினேன். என்னை வயல்வெளிகளில் இருந்தும் தெருக்களில் இருந்தும் கண்டடைந்தனர். என் எதிரே எவரோ இருந்தார்கள் என்று அம்மா சொன்னாள், அவரிடம் நான் பேசிக்கொண்டே இருந்தேன் என்றாள்.
ஊரார் என்னை ஏர்வாடிக்குக் கொண்டுபோகும்படிச் சொன்னார்கள். என் சிற்றப்பா தாணப்பன் பிள்ளையும் அவர் மகன்களும் என்னை கைகளைக் கட்டி இழுத்துக்கொண்டுசென்று திருவனந்தபுரம் ஊளம்பாறையில் இருந்த மனநோய் விடுதியில் சேர்த்தார்கள். அங்கே டாக்டர் சசிகலா மேனோன் எனக்குச் சிகிழ்ச்சை செய்தார். முதல் ஒருவாரம் மருந்துகள் வழியாக மூளையை அமைதிப்படுத்தினார்கள். நான் தூங்கிக்கொண்டே இருந்தேன். அதன்பின் சீரான மருந்துகளும், ஓய்வும், சில பயிற்சிகளும். நான்கு வாரங்களிலேயே நான் மீண்டுவிட்டேன்.
எனக்கிருந்தது மெல்லிய ஸ்கிஸோஃப்ரினியா தாக்குதல்தான் என்றார் டாக்டர் சசிகலா மேனோன். எங்கள் குடும்பத்தில் அந்த பாரம்பரியத் தொடர்ச்சி இருந்தது. ஆகவே என் மூளைக்குள் அதற்கான விதை இருந்தது.அந்தக் காட்டுப் பங்களாவின் தனிமையில் அது முளைத்தது. அந்த வினோதமான புத்தகம் அந்த மனநிலைப் பிறழ்வுக்கு ஒரு வடிவத்தை அளித்தது. என்னை அதற்குள் உலவச்செய்தது.
மூன்றுமாதம் நான் ஊளம்பாறை மருத்துவமனையில் அங்கே இருந்தேன். அந்த தொண்ணூற்றாறு நாட்களும் என் வாழ்க்கையில் கரைந்து கரைந்து நினைவில் இருக்கின்றன. முதல் இருபது நாட்களும் நினைவில் இருந்து மறைந்தே போயின. மொத்தத்தில் கனவுகண்டவைபோல சில மழுங்கிய சித்திரங்கள் மட்டுமே என்னுள் மிஞ்சின. அதன்பின் வீட்டுக்கு வந்து மூன்றுமாதம் மாத்திரைகள் சாப்பிட்டேன். முழுமையாகவே மீண்டு விட்டேன். அதன்பின் எட்டுமாதம் அவ்வப்போது சென்று சசிகலா மேனனிடம் உரையாடல் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டேன். என்னுடைய சிகிழ்ச்சை என்பது என் நிலைமையை தெளிவாகப் புரிந்துகொள்வதுதான் என சசிகலா மேனன் நினைத்தார். ஆகவே விரிவாகவே பேசினார்.
நான் அஞ்சியதுபோல என்னுடையது அரிதான நோயெல்லாம் இல்லை. மிகச் சாதாரணமான உளச்சிதைவுதான். பலருக்கும் சர்வசாதாரணமாக வந்துசெல்வதுதான். சொல்லப்போனால் அந்த நிலைக்குச் சென்று மீள்வதற்கான வாய்ப்பு நம்மில் நேர்ப்பாதிபேருக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேண்டும், அவ்வளவுதான்
எனக்கு அங்கே நிகழ்ந்ததை வைத்துப்பார்த்தால் அந்த நோயின் படிநிலைகள் எல்லாமே சரியாக இருந்தன. ஒரு நோயறிகுறிகூட தவறவில்லை. முதலில் நிகழ்வது ஒருவகை மிகையான ஆர்வமும், பதற்றமும், தொடர்சியான கிளர்ச்சியும். அப்போது நாம் எதிலாவது அசாதாரணமான ஆர்வத்துடன் ஈடுபட்டு அதிலேயே மூழ்கிவிடுகிறோம். தூக்கம் குறைகிறது. எப்போதும் ஒரே எண்ணம் நீடிக்கிறது.காதல் கொண்டதுபோல, எதையோ முக்கியமானதைச் செய்யப்போவதுபோல ஒரு மனநிலை முழுநேரமும் இருந்துகொண்டிருக்கிறது.
அது ஆரம்பநிலையில் ஒரு தீவிரம் என்றே நமக்குத் தோன்றும். அத்தனை கூர்மையுடனும் ஒருமையுடனும் நாம் எப்போதுமே இருந்திருக்க மாட்டோம். நம் மூளைத்திறனே பலமடங்காகிவிடுகிறது.ஆனால் அது உண்மையில் சிதைவின் தொடக்கம். ஒரு குச்சியை கல்லில் குத்திக்கொண்டே இருப்பதுபோல. அழுத்தம் கூடி மெல்ல குச்சி உடைந்து பக்கவாட்டில் விரிந்து சிதையத் தொடங்குகிறது.நம்மை அறியாமலேயே. நாம் மிக ஆரோக்கியமாக, ஆற்றலுடன், உற்சாகமாக இருக்கிறோம் என உணரும்போது உண்மையில் உள்ளே சிதைந்துகொண்டிருக்கிறோம்.
அச்சிதைவை உள்ளம் வெளியே இருக்கும் ஒரு பொருளின்மேல் ஏற்றிக்கொள்கிறது. அந்தப் பொருளில் நிகழ்வன எல்லாம் உண்மையில் நம் மூளையில் நிகழ்பவைதான். ஆனால் நம்மைப் பொறுத்தவரை அந்தப்பொருள் பெரிதாக ஆரம்பிக்கிறது. நம்மை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்கிறது. நான் திருவனந்தபுரத்தில் சந்தித்த கேசவ பிள்ளை என்பவரிடம் அவருடைய வீட்டிலிருந்த ஒரு தூண் உரையாட ஆரம்பித்தது. கம்யூனிசம்கூட பேசியது.
நம் உள்ளம் தன் சிதைவுக்கு எதிராக தானே போராடுகிறது. தப்பிக்கும் பொருட்டு வெளியே உள்ள ஒரு யதார்த்த உலகை அழுத்தமாக அள்ளிப் பற்றிக்கொள்கிறது. அதனால்தான் நான் அந்த காணிக்காரர் பள்ளியில் அத்தனை உற்சாகமாக வேலை செய்தேன். சாதாரணநிலையில் அத்தனை தீவிரமாக நாம் எந்த புறவுலக வாழ்க்கையையும் கவனிப்பதும் ஈடுபடுவதுமில்லை. இந்தப்பக்கம் இருக்கும் உலகின் தர்க்கச்சிதைவுக்கு எதிராக மறுபக்கம் இருக்கும் அந்த அந்த வாழ்க்கையை மிகுந்த தர்க்கபூர்வமான புறவயமான ஒன்றாக ஆக்கிக் கொள்கிறோம். இங்கிருப்பது உயர் அறிவுத்தளம் என்றால் அந்த இன்னொன்று எளிமையானதாக இருக்கும். இரண்டு உலகங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. அனால் அவை ஒன்றையொன்று சமன் செய்பவை.
உளச்சிதைவின்போது தர்க்கபூர்வமாக நம் உள்ளத்தின் குலைவை அடுக்கி வைக்க முயன்றுகொண்டே இருக்கிறோம். நம் மூளையின் பெரும்பகுதி ஆற்றல் அந்த முயற்சியிலேயே செலவிடப்படுகிறது. உள்ளம் மிகுந்த விசையுடன் செயல்படுகிறது. நினைவின் தொகுப்புகளில் இருந்து தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறது. எல்லா தர்க்கமுறைகளையும் வளர்த்துக் கொள்கிறது. அதற்காக தன்னை சவுக்காலடித்து விரட்டி வேகம் கொள்ளச் செய்கிறது.
ஆகவே எல்லா உளச்சிதைவு நோயாளிகளிடமும் மிகத்தெளிவான ஒரு தர்க்கம் இருக்கும். அந்தத் தர்க்கத்தின் ஓரம் சிதைந்து கிடப்பதை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள்.அவர்களிடம் தர்க்கபூர்வமாக விவாதிக்கவே முடியாது. அவர்கள் இணையான இன்னொரு உலகில் மிகமிக தர்க்கபூர்வமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நமக்குத் தோன்றும். உண்மையில் அத்தனை மனிதர்களிடமும் அவருக்கான வாழ்க்கைத் தர்க்கம் ஒன்று இருக்கும், அதில் ஒரு பகுதி தர்க்கமற்றதாகவும் இருக்கும். ஆகவே உளச்சிதைவடைந்துகொண்டிருப்பவர் சாதாரணமானவராகவும் பிறருக்குத் தோன்றுவார்.
இப்படிச் சொல்கிறேனே, உளச்சிதைவின் பிம்பங்களும் பிரமைகளும் உளச்சிதைவால் வருவன அல்ல, அவை உளச்சிதைவை நாம் தர்க்கபூர்வமாக சரிசெய்துகொள்வதற்காக நாம் முயலும்போது உருவாக்கிக் கொள்பவை. தர்க்கபூர்வமாக விளக்கமுடியவில்லை என்றால் தர்க்கத்தை கடந்து கற்பனையை பெருக்குகிறோம். கனவுகளை உண்டுபண்ணிக்கொள்கிறோம்.அதில் உருவாகின்றன பேய்கள், தெய்வங்கள், மாயங்கள்…
அந்த பிரமைகளும் மாயைகளும் நம் உள்ளம் எடுத்தாளும் கருவிகள். நம் அகத்தில் அவை சேமிக்கப்பட்டுள்ளன. தர்க்கத்தைச் சமைக்க துடிக்கும் உள்ளம் அந்த பெரும் கருவூலத்தில் இருந்து கைக்குச் சிக்கியதை எடுத்து வளைத்து ஒடித்து திரித்து இழுத்து பொருத்திக் கொள்கிறது. நான் நிறைய வாசிப்பவன், ஆகவே என் உலகம் புத்தகங்களில் இருந்து உருவாகியது. நான் அதிகம் வாசித்தவை பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்துக்கள். என் கச்சாப்பொருட்களே அவைதான். அவற்றைக்கொண்டு நான் உருவாக்கிய உலகம் அது. என்னுடன் சிகிழ்ச்சையிலிருந்த ஒருவரின் உலகம் தொலைபேசி நிலையத்திலிருந்து உருவாகியது, திருவனந்தபுரம் நகரமே ஒரு மாபெரும் தொலைபேசிநிலையமாக ஆகிவிட்டது. செகரடரியேட் கட்டிடம் அதன் மைய சர்க்யூட்.
நான் என்னை எனக்கே புரிந்துகொள்ளும்படி வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொன்றையும் கற்பனையால் விளக்கிக் கொண்டே இருந்திருக்கிறேன், அதுவே என் மாயைகளை உருவாக்கியது. அதை ‘புரஜக்ஷன்’ என்று சசிகலா மேனன் சொன்னார். மலையாளத்தில் ’விக்ஷேபணம்’ என்று விளக்கினார். தமிழில் எனக்கு வார்த்தை தெரியவில்லை. நம்முள் இருப்பவற்றை வெளியுலகின்மேல் ஏற்றி அதை மெய்யெனக் காண்பது அது. நாம் காண்பதும் நாம் உருவகிப்பதும் மெல்லமெல்ல ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.
நான் விளக்கிவிட்டேனா ? இப்படி மீண்டும் சொல்கிறேனே. உளச்சிதைவில் முதல்நிலை என்பது நம் அன்றாட உலகிலும், நம் பழக்கங்களிலும் சிறிய பிசிறுகள் நமக்கே தென்படுவது. அந்தப் பிசிறுகள் இயல்பானவர்களின் வாழ்க்கையிலேயே உண்டு. ஆனால் நமக்கு அவை கொஞ்சம் மிகுதியாக தெரிய ஆரம்பிக்கும், அதாவது நாமே ‘என்ன இது!’ என வியப்படையும் அளவுக்கு. நான் ஒரு புத்தகத்தில் அதில் இல்லாதவற்றை வாசிக்க ஆரம்பித்ததுபோல.
எப்போதும் நம்மை கூர்ந்து அவதானித்து கொண்டிருக்கும் நமக்கு அந்தப் பிசிறுகள் திகைப்பூட்டுகின்றன, அச்சம் அளிக்கின்றன. மனச்சிக்கலை அஞ்சாதவர்கள் இல்லை. அந்த அச்சத்தால் அந்த பிசிறை மூர்க்கமாக இறுக்கி செருகி முடிச்சு போட்டு நம் உள்ளத்தைச் சரியாக ஆக்கிக்கொள்ள முயல்கிறோம். அதில் மூளையை சலிப்படைய வைக்கிறோம். சலிப்படைந்த மூளை மேலும் தீவிரமாக எதிர்ப்பக்கம் பாய்கிறது. குரல்கள் கேட்கின்றன. அது அடுத்த நிலை.
குரல்கள் காதில் கேட்காத எவருமே இருக்க முட்டியாது. ஒற்றைவரி அல்லது ஒரு சொல் நினைத்திருக்காத நேரத்தில் ஒலித்துவிட்டு மறையும். மேஜையை நகர்த்தும் ஒலி, காரின் ஆரன் ஒலி நம் பெயராக ஒலிக்கலாம். சும்மா இருக்கும்போதே ஒரு கிராங் ஓசை, அல்லது ஒரு வார்த்தை காதில் ஒலித்து மறையலாம். ஓசை மிகுந்த இடத்தில் இருந்து ஓசையே இல்லாத இடத்திற்குச் செல்பவர்களுக்கு இச்சிக்கல் அதிகமாக நிகழ்கிறது. அதிகப்படியான ஓசைகளில் புழங்குபவர்களுக்கும் நிகழ்கிறது. ஆனால் உளச்சிதைவில் இந்த ஓசை என்பது கொஞ்சம் கொஞ்சமாக உரையாடலாகவே மாறிவிடுகிறது.
அது தன்னுள் நிகழும் உரையாடல், அதையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். தூங்குவதற்கு முன்புள்ள மயக்கத்தில் அல்லது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டே இருக்கையில் நம்முள் சிலசமயம் ஓர் உரையாடல் நடந்து முடிகிறது. ஆழ்ந்த உணர்ச்சிகள் கொண்ட தீவிரமான ஓர் உரையாடல் துணுக்கு. சிலசமயம் நம் வாழ்வுடன் தொடர்புள்ள உரையாடல், நாமறிந்தவர்களால் நடத்தப்படுகிறது. சிலசமயம் என்னவென்றே அறியாத உரையாடல் நிகழ்கிறது.
அந்த உரையாடல் பலசமயம் நல்லது. நாம் குழம்பித் தவிப்பற்றுக்கு அது விடையாக அமையலாம். நம்மை யார் என்று நமக்கே காட்டலாம். அரிதாக மிக இனிதாகவும் இருக்கலாம். காமத்தின் வெளிப்பாடாக அமையும் என்றால் நாம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நம்மை நாமே உணர்ந்து மலர்ந்துவிடுகிறோம். அந்த உரையாடல் ஒரு முறையேனும் நிகழாதவர் எவருமே இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், அந்த உரையாடலேகூட ஒருவகையில் உளச்சிதைவுதான் என்று சசிகலா மேனன் சொன்னார். மிகச்சிறிய உளச்சிதைவு, அவ்வளவுதான். உள்ளம் மிகமிக எளிதாக அதைச் சரிசெய்துகொள்கிறது. தன்னைத்தானே கொஞ்சம் சிதைத்து பின் மீட்டுக்கொள்வது வழியாக தன்னை மறுஒழுங்கு செய்துகொள்கிறது உள்ளம். அது மூளையின் ஒரு இயல்பான செயல்பாடு. ஆனால் ஒரு விதை. அது எங்கோ ஒரு புள்ளியில் வளர்கிறது. புறச்சூழல் ஒரு குவளை நீர் அந்த விதைமேல் விழுந்ததுபோல.
ஒலிகளுக்குப் பின்னரே காட்சிகள் தெரிகின்றன. ஒரு காட்சி இன்னொன்றாக மயங்குகிறது. நிழல்கள் மனித உருவங்களாகின்றன. ஒருபொருள் இன்னொன்றாகிறது. அந்த பாதையில் அப்படியே உள்ளம் மேலே சென்றிருந்தால் வெற்றுவெளியிலேயே காட்சிகள் தெரியலாகும். மனிதர்கள், விலங்குகள், தெய்வங்கள், பேய்கள் எல்லாமே நேரில் தோன்றும். அவை நம்முடன் உரையாடும், தொடும், பிடித்து தள்ளும், அழைத்துச் செல்லும். அதுவே உளச்சிதைவின் உச்சநிலை. அதைக் கடந்துவிட்டால் ஸ்கிஸோஃபிர்னியாவை குணப்படுத்துவது கடினம்.
நல்லவேளையாக நான் அந்நிலை வரைச் செல்லவில்லை. ஆனால் உண்மையில் செல்லவில்லையா, சென்று அதை மறந்தேனா? சசிகலா மேனன் ஒரு கணமேனும் எனக்கு அது நிகழ்ந்திருக்கும், அதுதான் என் உடைவுப்புள்ளி என்று சொன்னார். எனக்கு நினைவில்லை. ஆனால் பின்னர் நானே என்னை தோண்டித் தோண்டி யோசித்தேன். அன்று ஏன் காட்டுக்குள் சென்றேன்? சென்ற அந்தக் கணமே எனக்கு ஞாபகமில்லை
அந்த விடியற்காலையில் நான் எப்படிக்கிளம்பிச் சென்றேன். காடு எனக்கு அச்சமூட்டுவதாகவே இருந்தது.கோரன் துணையில்லாமல் பகலில்கூட நான் காட்டுக்குள் சென்றதில்லை. விடியற்காலையில்தான் காடு மிகமிக ஆபத்தானது. எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. நான் காட்டில் இருந்த நினைவே எனக்கில்லை. என்னை எவரேனும் உருவெளித் தோற்றமென வந்து அழைத்துச் சென்றார்களா? அந்த நகைகளை அதன்பின் பார்க்கவே இல்லை. அவற்றை நான் என்ன செய்தேன்?
நான் அந்த உளச்சிதைவு நாட்களில் நிகழ்ந்தவற்றைப் பற்றி யோசிக்கவேண்டாம் என்று சசிகலா மேனன் சொன்னார். “அவற்றை மறந்துவிடுங்கள், அவற்றைப் பற்றி எண்ணாதிருங்கள், அவை நினைவிலெழுந்தால் உடனே நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள், வேறெதையாவது நினையுங்கள், வேறேதாவது செய்யுங்கள். இப்போது அவற்றைப் பற்றி யோசித்தால் நீங்கள் மீண்டும் அந்நிலைக்குச் செல்லக்கூடும்“
அந்த மனநிலைப் பிறழ்வின் காலகட்டத்தில்தான் என் மூளையில் அசிட்டல்கொலைன், டோபோமின், செரட்டோனின் குளுட்டமேட், காபா, நோரோபினஃப்ரின் என எல்லா நியூரோடிரான்ஸ்மிட்டர்களும் மிக அதிகமான அளவில் இருந்திருக்கின்றன. அப்போது என் சிந்தனைத்திறனும் கற்பனைத்திறனும் உச்சத்தில் இருந்திருக்கும்.ஒர் அபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கையில், படைப்புத்தன்மையுடன் இருக்கையில், காமம் கொண்டிருக்கையில் இருக்கும் உச்சம் எப்போதுமே இருந்திருக்கும். உளச்சிதைவு என்பது நம் உச்சநிலை. நம் வாழ்வின் அதிதீவிர நிலை.
அதை எங்கோ ஒர் இனிய நினைவாகவே நான் சேமித்திருப்பேன். அதை மீண்டும் அடையவே விரும்புவேன்.உளச்சிதைவு அடைந்து மீண்டவர்களுக்குக் காத்திருக்கும் பொறியே அதுதான். இயல்பான அன்றாடத்தின் தளர்வான தன்மை அவர்களுக்குச் சலிப்பூட்டும். மீண்டும் உளச்சிதைவுக் காலகட்டத்தின் அந்த கொந்தளிப்பையும் கொப்பளிப்பையும் விரும்புவார்கள். ஆனால் உளச்சிதைவை அஞ்சி அதை அவர்கள் தவிர்க்கவும் முயல்வார்கள். அந்தப் போராட்டமே கொந்தளிப்பாக ஆகிவிடும். உள்ளத்தை சீண்டி மீண்டும் உளச்சிதைவு நோக்கிக் கொண்டுசெல்லும்.
“ஐந்தாண்டுகள் திரும்பியே பார்க்காதே” என்று சசிகலா மேனன் சொன்னார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.என் உளச்சிதைவின் காலகட்டத்தில் என் குடும்பமே உடைந்து போயிற்று. என் அம்மாவுக்கே உளச்சிதைவு போல சில அறிகுறிகள் தோன்றின. அப்பா அவ்வப்போது வலிப்பு வந்து விழுந்தார். ஆகவே நான் அதை ஒரு கொடிய நோய் என அஞ்சினேன். என்னை சீரான செயல்கள் வழியாக மீட்டுக்கொண்டேன். வயல்வேலைகள், கைவேலைகள். முழுக்கமுழுக்க வாசிப்பை நிறுத்திக் கொண்டேன். புத்தகங்கள் மட்டுமல்ல நாளிதழேகூட வாசிப்பதில்லை. முழுமையாக மீண்டுவிட்டேன்.
ஓராண்டுக்குப்பிறகு நான் மாவட்டக் கல்வி அலுவலர் மீரான் மைதீன் மரைக்காயரை சென்று பார்த்தேன். என் உளச்சிதைவைச் சொல்லி எனக்கு மீண்டும் வேலை கொடுக்கும்படி கோரினேன். மீண்டுவிட்டமைக்கான சான்றிதழ்களையும் கொண்டுசென்றிருந்தேன். மலையில் நான் தொடங்கிய அந்தப் பள்ளியை மீண்டும் நடத்த விரும்பினேன். “என்னாலே அதை அப்டியே விட்டிர முடியாது சார். இங்கே, சின்ன வேலை எதையாவது செய்யலாம்தான். ஆனா அத்தனை ஆர்வமா தொடங்கினேன். விட்டுட்டேன்னா அது பெரிய குறையாத்தான் இருக்கும்” என்றேன்.
மரைக்காயர் அற்புதமான மனிதர். என் வாழ்நாளில் சந்தித்த தூயஆத்மாக்களில் ஒருவர். “அங்க இப்பமும் வாத்தியார் அமையல்ல. அதனாலே உங்கள ஒரு வருசம் மெடிக்கல் லீவு தந்து திரும்ப எடுத்துக்கிடுதேன். அதிலே ஒண்ணுமில்ல. ஆனா நீங்க அங்க போனா மறுக்கா இந்த பிரச்சினை வராதா?”என்றார்.
“நான் மறுமடியும் அந்த பங்களாவிலே தங்குறதா இல்ல. கோதையாறிலேயே குவார்ட்டர்ஸ் காலியா கெடக்கு. அங்க வாடகைக்கு தங்கிக்கிடுதேன். நாலு மணிநேரம் நடக்கணும், பரவாயில்லை நடந்து போறேன்.” என்றேன்.
“ஆனா, குவார்ட்டர்ஸை வாடகைக்கு விடுறது குற்றமில்லா?” என்றார் மரைக்காயர்
அவர் நேர்மையின் உச்சம் என்று கேள்விப்பட்டிருந்தேன். புன்னகையை அடக்கியபடி “செரி, காபிரியேல் நாடாரோட கடையிலேயே தங்குறேன்”என்றேன்.
அவர் யோசித்து “செரி, ஆனா ஒரு கண்டிசன். அஞ்சுவருசம் டிரான்ஸ்ஃபர் கேக்கமாட்டீங்கன்னு உறுதி சொல்லமுடியுமா?” என்றார்.
“அஞ்சில்ல சார், மிச்ச வாழ்க்கை முழுக்க அங்கேதான் இருப்பேன்” என்று சொன்னேன்
“என்னன்னு சொல்றிய?” என அவர் திகைத்தார்.
”எனக்க தர்மம் அதாக்கும்” என்று நான் சொன்னேன்.
அவர் கொஞ்சநேரம் என்னைப் பார்த்துவிட்டு “இல்ல, அஞ்சுவருசம் போரும்” என்றார்.
‘நீங்க என்னைய டிரான்ஸ்பர் பண்ணினாலும் வரமாட்டேன்” என்றேன். “என் வாழ்க்கையை நான் கண்டுபிடிச்சாச்சு”
“ஏம் வே?”என்று அவர் கெஞ்சலாகக் கேட்டார்.
“சார் நான் இருந்தது ரெண்டு உலகமாக்கும். ஒண்ணுக்கு நான் திரும்பிப் போகவே முடியாது. இன்னொரு உலகமாவது எனக்கு வேணும்… அது எனக்கு ஒரு பெரிய சொத்தாக்கும்” என்றேன்.
“கல்யாணம்?”
“அதை அப்ப பாத்துக்கிடலாம்”
அவர் என்னை கூர்ந்து பார்த்தார். பிறகு “இன்ஷால்லாஹ்!” என்றார்.
நான் மீண்டும் கோதையாறு வந்து இறங்கினேன். காபிரியேல் நாடார் என்னை ஓடிவந்து தழுவிக் கொண்டார். “செரியாப்போயிட்டுது இல்லியா? நான் அப்பமே சொன்னேன், அது ஏதோ மலைவாதை அடிச்சதாக்கும்னு. பலபேரை அப்டி மலைவாதைகள் அடிச்சிட்டுண்டுன்னு… வேளாங்கண்ணியிலே ஒரு நேர்ச்சை நேர்ந்தா செரியாயிரும். மண்டைக்காட்டம்மைன்னாலும் நல்லதாக்கும்” என்றார்.
குவாட்டர்ஸில் பாதிப்பங்கு வீடுகள் காலியாகவே கிடந்தன. நமச்சிவாயம் சார் ஒரு வீட்டை எனக்கு வாடகை இல்லாமலேயே தந்தார். அங்கே தங்கியிருந்தபோது ஒவ்வொருவராக வந்து நலம் விசாரித்துச் சென்றனர். ஏசுவடியான் காலமாகிவிட்டிருந்தார்.
கோரன் வந்து என்னைப் பார்த்தான். காணிக்காரர் வழக்கப்படி, அவன் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. இமைகளை மட்டும் மூடிமூடித் திறந்தான்.
“நாம மலைமேலே போவோம்… பள்ளிக்கூடம் நடத்தணும்லா?”என்று நான் சொன்னேன்.
அவன் உடனே தரையில் அமர்ந்து விரலால் எ எழுதிக் காட்டினான். நான் புன்னகைத்தேன்.
மறுநாளே கோரனுடன் மலையேறிச் சென்றேன். நாங்கள் செல்லும்போது புலிமடையில் புலி இருந்தது. “புலி இருக்கு” என்று கோரன் சொன்னான்.
“என்ன செய்ய?”என்றேன்.
“அந்தாலே போயிருவோம்… நாம ஒண்ணும் செய்யமாட்டம்னு அதுக்கு தெரிஞ்சா பிறவு பயம் வேண்டாமாக்கும்” என்றான் கோரன்.
நாங்கள் அந்த குகையின் அருகே பாதை வழியாக அமைதியாக நடந்தோம். குகைக்குள் இருந்து உறுமல் எழுந்தது. நாங்கள் மெல்ல சென்றுகொண்டே இருந்தோம். இன்னொரு மெல்லிய உறுமல் எங்களைச் செல்ல அனுமதித்தது.
அந்தப்பக்கம் பள்ளிக்கூடக் குடில் இடம் மாறியிருந்தது. ஒரு பெரிய மழைக்காலம் முடிந்து அங்கே ஓடைவழியாக வந்த மண் வந்து மூடியமையால் மேடாகியிருந்தது. அங்கே எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விடாமல் அங்கே பள்ளிக்கூடம் நடந்துகொண்டிருந்தது. அந்த கரும்பலகை தொங்கியது. அதில் சாக்பீஸால் எழுதப்பட்ட எழுத்துக்கள் இருந்தன.
“யாரு எழுதியது?”என்று கோரனிடம் கேட்டேன்.
“துப்பன்… துப்பன் எழுதி”என்று அவன் சொன்னான். உத்வேகத்தில் அவன் உடலே ஊசலாடியது. “துப்பன்.. புக்கு ..புக்கு.. வச்சு படிச்சு… துப்பன்! துப்பன்!:
“துப்பனை கூட்டிட்டுவா”
அதற்குள் துப்பனே மலைச்சரிவில் கூச்சலிட்டபடி என்னை நோக்கிப் பாய்ந்து வந்தான். அவனை தொடர்ந்து உச்சனும் மற்ற குழந்தைகளும் வந்தனர். அவர்கள் கூச்சலிட்டபடி என்னைச் சூழ்ந்துகொண்டனர். அனைவருமே என்னை தொட விரும்பினர். எம்பி எம்பிக் குதித்தனர். நாய்க்குட்டிகள் போல என்னை முத்தமிட்டனர்.
துப்பனின் கையில் பாலிதீன் தாளில் சுற்றிய புத்தகம் இருந்தது. ”புக்கு! புக்கு! காவிரியேல் நாடார் தந்ந புக்கு” என்றான். அதை பிரித்து என்னிடம் காட்டி “கா!” என்றான். மேலே சுட்டிக்காட்டி “காக்கா!”என்றான்.
அவன் மெய்யெழுத்துக்களை தாண்டிவிட்டிருந்தான். ஆவேசத்துடன் தரையில் எழுத்துக்களை எழுதிக்கொண்டே சென்றான். ’ச!’ என்று கூவினான். “மனுசன்!” என்று சொல்லி இரு கைகளையும் மடித்த கால்முட்டுகளின்மேல் நீட்டி வைத்து அமர்ந்து காட்டினான். “சா” என்று கூவி “சாமி சாமி!” என்றான். கால்மடித்து அதன்மேல் கைவைத்து அமர்ந்திருக்கும் சாத்தன் சமையின் முன் நின்றிருக்கும் நாய்தான் அந்த நெடில்.ஞ என்பது அடையிருக்கும் கோழி. ஞா குஞ்சுடன் இருக்கும் கோழி. ட என்பது நாற்காலி. டா என்பது மேஜையுடன் கூடிய நாற்காலி. ண என்பது யானை. ணா என்பது குட்டியுடன் கூடிய யானை. சென்றுகொண்டே இருந்தது அவன் மொழியறிவு.
உச்சன் “துப்பன் கோதையாறு போய் படிக்கும்!”என்றான். அவன் முகத்தில் பெருமிதம் நிறைந்திருந்தது.
பிறகு நான் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் நான்குமணிநேரம் நடந்து துப்பன் கோதையாறு ஜங்ஷனுக்குப் போய் அங்கே வருபவர்களிடம் கெஞ்சி எழுத்துக்களைக் கற்றுக்கொண்டிருந்தான். காபிரியேல் நாடார் அவனுக்கு அந்த புத்தகத்தை அன்பளிப்பாக அளித்திருந்தார்.
அங்கே அனைத்துக் குழந்தைகளுக்கும் துப்பன் வகுப்பு எடுத்தான். எல்லா குழந்தைகளுமே அவனிடமிருந்து அகரவரிசையை வாசிக்கக் கற்றிருந்தன. உச்சனால் எல்லா எழுத்துக்களையும் வாசிக்க முடிந்தது. துப்பனால் ஓரிரு சொற்களையும் வாசிக்க முடிந்தது. கோரன் எ என்ற ஒற்றை எழுத்துக்குமேல் முன்னகர மறுத்துவிட்டான்.
அன்றே நான் அங்கே பள்ளியை மீண்டும் தொடங்கினேன். பள்ளியை மூன்றாகப் பிரித்தேன். எழுத்துக்களை படித்து முடித்தவர்களுக்கு ஒரு வகுப்பு, எழுத்துக்களை படிப்பவர்களுக்கு ஒன்று, கதைகேட்கும் குழந்தைகளுக்கு ஒன்று.
எட்டுமாதம் நான் கோதையாறிலிருந்து பள்ளிக்கு வந்து சென்றுகொண்டிருந்தேன். பின்னர் நானே அங்கே ஒரு நல்ல குடிலைக் கட்டிக்கொண்டேன். மரம் ஒன்றின் உச்சியில். அதில்தான் நான்காண்டுகள் இருந்தேன். அதற்குள் அங்கே உறுதியான நல்ல பள்ளிக்கட்டிடம் ஒன்றை கொண்டுவந்து விட்டேன். சிமிண்ட்ஷீட் கூரை போட்டதுதான். ஆனால் செங்கல்சுவர் கொண்டது. நாகர்கோயிலில் அலைந்து அந்தக் கட்டிடத்திற்கான நிதியில் பாதியை நன்கொடையாக திரட்டி அளித்தேன். எஞ்சியதை அரசு அளித்தது.
அருகில் நானும் ஒரு வீடு கட்டிக்கொண்டேன். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு. உறுதியான மரங்க்ளை நட்டு வேலி அமைத்து, அதற்கு வெளியே நெஞ்சளவு ஆழத்தில் அகழி தோண்டி, யானைகள் அணுகாமல் பாதுகாப்பட்டது. அடுத்த ஆண்டு நான் ஞானாம்பாளை மணந்தேன்.
அவளுக்கு ஒரு கால் ஊனம். அவ்வாண்டுதான் அவளுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. மிக ஏழைக்குடும்பம். அவளுக்கு சிபாரிசுக்கு ஆளில்லை, ஆகவே அங்கே வேலைக்குப் போட்டுவிட்டர்கள். மரைக்காயர் சார் ஓய்வுபெற்றுவிட்டார். நான் அவளிடம் அவள் வரவேண்டியதில்லை, சம்பளத்தில் ஐநூறு ரூபாயை அளித்தால்போதும், துப்பனையே ஆசிரியராக அமர்த்திக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால் அவளுக்கு அது சரியாகப் படவில்லை. “நம்ம ஜோலியைச் செய்யணும்லா? நடந்து போற தூரத்திலே ஒரு எடம் மட்டும் பாத்துக் குடுங்க…ஆனையடிச்சு செத்தாலும் ஒண்ணுமில்லை”என்றாள்.
நான் அவளுக்கு என் வீட்டை அளித்துவிட்டு மீண்டும் துப்பனின் மரத்து மாடத்தில் குடியேறினேன். ஆனால் இரண்டு மாதம்தான். அதற்குள் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தோம். அவள் நாடார் சாதி. ஆகவே என் அம்மாவுக்கு எதிர்ப்பு இருந்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்பா காலமாகியிருந்தார். என் தங்கைகளுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டிருந்தேன். எனக்கு எந்த பொறுப்பும் இல்லை.
எனக்கு கடன்கள் இல்லை. ஏனென்றால் என் முழுச்சம்பளமும் சேமிப்புதான். காட்டில் ஒரு பைசாகூட எனக்குச் செலவில்லை. காட்டிலிருந்து காபிரியேல் நாடாரின் கடைக்குச் செல்லும்போது நான் கொண்டுசெல்லும் தேன் முதலியவற்றை விற்றபின் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு பாதிக்காசை அங்கேயே நிலுவையில் வைத்துவிட்டுத்தான் வருவேன்.
எங்கள் திருமணம் கோதையாறிலேயே நடந்தது. ஞானாம்பாளின் அம்மாவும் தம்பியும் வந்திருந்தனர். அவர்களுக்கும் அந்த திருமணத்தில் கசப்புதான். அவள் தம்பி பிஏ முடித்து வேலைக்குச் செல்லும்வரை அவள் குடும்பத்திற்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். அதன்பின் அவர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டனர். பிற்பாடு எங்கள் இருவருக்குமே ஊர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நான் என் அம்மா இறந்தபோது மட்டும் ஒருமுறை ஊருக்குச் சென்றேன். ஞானாம்பாள் அவள் தம்பி திருமணத்தின்போதும் அம்மா இறந்தபோதும் ஊருக்குச் சென்றாள். ஒருநாள் கூட தங்கவில்லை.
மற்றபடி இந்த மலைதான். இங்கே எங்கள் பள்ளி இருந்த பகுதிவரை ஓர் ஒற்றையடிப்பாதையை அமைத்தோம். எங்கள் வீட்டை கொஞ்சம் விரிவாக்கினோம். என் இரு பிள்ளைகளும் இங்கேதான் படித்தார்கள். கோரன் பள்ளியில் சமையற்காரனாக வேலைபார்த்தான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு காய்ச்சலில் இறந்தான். நான் அவனுடைய கணக்குகளைச் சரிசெய்தேன். எல்லா ரசீதுகளிலும் அவன் எ என்று நாயை வரைந்திருப்பதைக் கண்டு அன்று கண்ணீருடன் புன்னகை செய்தேன்.
துப்பன் மிகவிரைவாகவே வாசிப்பு எழுத்து என தேறினான். ஆங்கிலமும் மலையாளமும் படித்தான். எங்கள் பள்ளியில் இன்னொரு ஆசிரியராக வேலைபார்த்தான். அவனுக்கு அட்டெண்டர் வேலைபோட்டுச் சம்பளம் அளிக்கப்பட்டது. அவன் பின்னர் அருகே இருந்த இன்னொரு பள்ளியை தன் பொறுப்பில் ஏற்று நடத்தினான். அவன் மிகச்சிறந்த ஆசிரியர். இன்றும் அவனிடம் படித்த ஏராளமான மாணவர்கள் அவனை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்கள்.
துப்பனின் வளர்ச்சியை நான் காட்டில் சில காளான்கள் வளரும் வேகத்துடன்தான் ஒப்பிடுவேன். ஒருமொழியை கற்றுக்கொண்டதும் அதைக்கொண்டே அடுத்த மொழிக்குச் சென்றான். புத்தகங்கள்மேல் பித்துகொண்டிருந்தான். எவர் எந்த புத்தகம் வைத்திருந்தாலும் பின்னால் சென்று கேட்டுவாங்கி பார்ப்பான். ரசீதுபுத்தகங்களைக்கூட.
அவனுடைய வாசிப்பு வெறி வெறி ஏறி ஏறி வந்தது. மூன்றுமொழிகளிலும் அவனுக்கு புத்தகங்கள் தேவைப்பட்டன. என்னிடமிருந்த புத்தகங்கள் தீர்ந்தபின் அவனே குலசேகரம் சென்று நூலகங்களில் இருந்து புத்தகம் எடுத்து வருவான். அவனுடைய வாசிப்புவெறி மனநோயோ என நம்மைத் திகைக்க வைப்பது. வாசிக்கையில் முகம் உறைந்து கண்கள் வெறித்திருக்கும். அசைவே இருக்காது. ஒரு புத்தகம் கிடைத்தால் அது முடிந்த பிறகுதான் உணவு.
துப்பனுக்கு குலசேகரத்தில் ஜே.ஹேமச்சந்திரன் நாயருடன் உறவு ஏற்பட்டது. அவர் அவனை கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்த்தார். கட்சியின் கூட்டங்களுக்கு கோதையாறிலிருந்து சைக்கிளிலேயே சென்றுவருவான். அவன் தலைமையில்தான் கோதையாறு மலைவாழ் தொழிலாளர் யூனியன் உருவாக்கப்பட்டது. காலையில் பள்ளி முடித்து மாலை முழுக்க மலையில் அலைந்து அவன் உருவாக்கிய அந்த அமைப்பு இன்றைக்கு இருநூறு கிளைகள் கொண்ட பெரிய தொழிற்சங்கம்.
கோதையாறு ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு வென்று ஒருமுறை பஞ்சாயத்துத் தலைவாராகவும் துப்பன் இருந்திருக்கிறான். அவன் மேடைகளில் பேசுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆவேசமான பேச்சில்கூட துல்லியமான உச்சரிப்புடன் மிகச்சரியான சொற்கள் வந்து விழும். அந்த வார்த்தைகளையெல்லாம் அவன் எங்கிருந்து கற்றான் என்றே ஆச்சரியமாக இருக்கும்.
துப்பன் கற்ற முதல் மொழி தமிழ்தான், ஆங்கிலமும் மிக நன்றாகத் தெரியும். ஆனால் அவன் எழுதிய நான்கு நூல்களும் மலையாளம்தான். காணிக்காரர்களின் மொழி மலையாளத்துக்கே அணுக்கமானது. அந்த மொழியின்பத்தில் இருந்து அவனால் விடுபடமுடியவில்லை.
“காணி ஜீவிதம்- சம்ஸ்காரமும் சரித்ரவும்’ ‘மலங்காணி தெய்வங்ஙள்’ ‘குறே மலைக்கதகள்’ ‘ஆதிவாசிகளும் கம்யூனிசமும்’ ஆகிய நான்கு புத்தகங்களையும் நான் பார்த
பாலையாகும் கடல்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
வீகன் மத பிரச்சாரத்தில் (அவர்கள் நம்பிக்கையில் உள்ள dooms day பகுதியாக) இப்போது முக்கிய பங்கு வகிப்பது அலி டாப்ராஸி இயக்கிய ஸீஸ்பைரசி எனும் ஆவணப்படம். இப்படம் வீகன் காக எடுக்கப்பட்ட படம் அல்ல, ஆனால் இப்படத்தில் விவாதிக்கப்படும் தீர்வுகளில் ஒன்றாக stop eating sea foods என்பதும் இருக்கிறது.
சமீபத்தில் பார்த்த, life in colour, my actopus teacher போன்ற முக்கிய ஆவணப் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. அலி சிறிய வயது முதல் அவர் வளர்த்துக் கொண்ட கனவு, அட்டன்பரோ போல உயிர் சூழல் சார்ந்த ஆவணப்பட இயக்குனர் என்றாவது. அவரது ஈடுபாடு கடல் உயிர்கள். தன்னார்வலராக கடலில் கலக்கும் பிலாஸ்டிக் குப்பைகளை தடுக்கும் பணியில் முதலில் இறங்குகிறார். ( சமீபத்தில் ஒரு தன்னார்வலர்கள் குழு புதுவை அருகே கடல் உள்ளே இறங்கி அடியில் படிந்திருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய, குப்பையாக கிடைத்ததோ பல நூறு கிலோ பயன்படுத்தி தூக்கி போட்ட கொரானா மாஸ்குகள்) அங்கே துவங்கிய அவரது பயணம், மீன்பிடி பெரு நிறுவனங்களின் நிழல் சாம்ராஜ்யம் தொட்டு அதன் ஆபத்துகள் வரை அவரை கொண்டு சேர்க்கிறது.
உலக மொத்த கடல் உணவின் தேவையில் முக்கால் வாசியை உரிஞ்சி எடுத்து கொடுக்கும் ஆசிய கடல் பகுதியில், குறிப்பாக ஜப்பானின் தாஜி கடல் பகுதியில் துவங்குகிறது ஆவணம். உலக டூனா மீன் ஏற்றுமதியில் 50 சதவீதம் ஜப்பான் கையில். அதன் அதிகாரத்துக்குகு உட்பட்ட கடல் பகுதியில் டூனா வளர பெரும் தடையாக உள்ள ஓங்கில் இனத்தை மொத்தமும் ஜப்பான் இன்றுவரை வேட்டையாடி கொன்றழித்து வருகிறது.
கடலுக்குள் உயிர் ராசிகள் கூட்டு வாழ்வுக்கான உணவு பிரமிட் உடைந்து, ஒன்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மற்றொன்று எனும் சங்கிலி அறுந்து, டூனா மீன்கள் எனும் இனம் இன்னும் கால் நூற்றாண்டில் முற்றிலும் அழிந்து போகும் நிலைக்கு ஜப்பான் கொண்டு வந்து விட்டது. ஒரு டூனா மீன் கு நான்கு ஓங்கில் எனும் கணக்கில் கொல்லப்படுவதாக ஆவணம் சொல்கிறது. சுறாக்களின் தூவிகள் சூப் கான உலகளாவிய சந்தைக்காக சுறாக்கள் வகை தொகை இன்றி கொன்று ஒழிக்கப்படுகிறது.
இதன் நான்கு மடங்கு அழிவை பிரான்ஸ் அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியில் நிகழ்த்துகிறது. 1850 இன் ஒரு கப்பல் மீன் பிடி அளவு எதுவோ அதன் பல நூறு மடங்கு இன்றைய ஆற்றல் கொண்ட கப்பல் வழியே நிகழ்கிறது. (ஆவணம் காட்டும் கார்டூனில் ஒரு பெரிய மீன்பிடி கப்பலின் வலையில் இத்தாலி மாதா பேராலயமே அடங்கி விடுகிறது) கடல் ஆதிக்கத்தில் முன்னிலை வகிக்க ஆப்ரிக்க கடல் பகுதிகளில் சர்வதேசமும் கொண்டு கொட்டும் முதலீடு, அதன் வழியே பெரு மீன்பிடி முன்னே பிச்சைக்காரனாக கையேந்தும் எளிய மடி வலை மீனவன் போன்ற தீவிரம் கூடிய சிறிய சிறிய சித்திரங்களை காட்சிப் படுத்துகிறது ஆவணம். கடலின் மீது மானுட நுகர்வு வெறி தொடுத்த போரின் அடையாளமாக கடலுக்குள் ஆங்காங்கே மிதக்கும் பிலாஸ்டிக் குப்பைத் தீவுகள். அந்தக் குப்பையில் முக்கால் பங்கு, நைலான் மீன் வலை.
உலகின் பல பகுதிகள் மூர்க்கமான கொத்தடிமை முறை வழியே பண்ணை முறையை பேணுகின்றன. ஸ்காட்லாண்ட்ல் உள்ள சால்மன் மீன் பண்ணை ஒன்றில், இயற்கை சூழல் அன்றி செயற்கை சூழலில் வளரும் அம்மீன்களில் பெரும்பான்மை உன்னி பிடித்து குஷ்டரோகி போல காட்சி தருகின்றன. வெட்டி ரசாயனத்தில் முக்கி தர சான்று ஒட்டி ஏற்றுமதி செய்ய வேண்டியதுதான். இப்படி தர சான்று லேபிள்கள் பின்னால் அவற்றை சட்ட விரோதமாக வாங்க நிகழும் பேரங்களில் புழங்கும் கோடிகள் அதிர்ச்சி அளிப்பது.
சர்வதேச கடல் எல்லைகளின் சிக்கலால் பொது கண்காணிப்பு இயலாமல் போவது, கண்காணிப்பு உள்ள இடங்களிலும் காவலர்கள் ‘மர்மமாக’ காணாமல் போவது என்று பல விஷயங்களை தொட்டுப் பேசும் படம், கடலுக்குள் உள்ள செடி கொடிகள் உட்பட இதே மூர்க்கத்துடன் அழித்து சென்றோம் என்றால் இன்னும் அரை நூற்றாண்டில் நமக்கு செத்த கடல் மட்டுமே எஞ்சும் என்கிறது. செத்த கடலுடன் மானுடமும் சேர்ந்து சாக வேண்டியதுதான் என்று சுட்டிக் காட்டுகிறது.
இவ்வாவணம் எழுப்பும் முக்கிய வினா ‘மூலவளம் குன்றா சார்பு நிலை மீன் பிடி’ என்ற ஒன்று உண்மையில் சாத்தியமா என்பது. ஆவணத்துக்கு வெளியே சென்று காந்தி சொன்ன சொல்லுடன் இணைத்துப் பார்த்தால் பதில் இதுதான் “இயற்க்கை மனிதனின் தேவையை பூர்த்தி செய்யும். பேராசையை பூர்த்தி செய்யாது”.
மானுடக் குரோதத்தின் கொடூர முகம் ஆவணத்தின் இறுதி 15 நிமிடத்திர்க்கு முன் வரும் காட்சியில் பதிவாகி உள்ளது. டென்மார்க்கில் எங்கோ நிகழும் திமிங்கல வேட்டை விழா. மிக சில வினாடிகள் மட்டுமே மின்னி மறையும் மான்டேஜ் வெட்டுக்கள். ஒரு கொடும் கனவின் சித்திரங்கள். முற்றிலும் குருதி கொப்பளித்து கொழகொழக்கும் நீர் வெளி, கருத்த திமிங்கலங்கள் சிதைத்து வீசப் படுகிறது. அதில் சிதைந்து கிழிந்து விழும் திமிங்கலங்களில் ஒன்று பூரண கர்பவதி. திமிங்கலம் ஒன்றை வெட்டி வீசும் அப்பா தோளில் ஒரு குழந்தை அமர்ந்து அதை வேடிக்கை பார்க்கிறது.
அ. முத்துலிங்கம் கதைகளில் ஒன்றில் (அல்லது கட்டுரையாகவோ நேர்காணலாகவோ இருக்கலாம்). கனடா தேசம் தேடி முறையற்ற வழியில் கப்பலில் வரும் அகதிகள் குழுவை, அக் கப்பலின் காப்டன் மிகசிறிய படகு ஒன்றில் ஏற்றி, கனடா கடல் எல்லைக்கு பல கிலோ மீட்டர் தள்ளி, நடுக் கடலில் அப்டியே போங்க கனடாதான் என்று சொல்லி விட்டு விடுகிறான்.
பாரம் தாளாமல் தள்ளாடி ததும்பி மெல்ல மெல்ல நகர்கிறது படகு. திக்கு திசை தெரியாத பல நாள் பயணம். வழியில் முற்ற முழுதாக இனி மரணம்தான் என்ற வகையிலான ஒரு ஆபத்து. மிகப்பெரிய கடற்சுழல் ஒன்று குறிக்கிடுகிறது. மெல்ல மெல்ல அதன் சுழிப்பு விளிம்பு நோக்கி படகு இழுபட, பயணிகள் எல்லோரும் கடவுளை நோக்கி கதற, மெய்யாகவே கடவுள் போலும் எழுகிறது ஒரு திமிங்கலம். சுழலுக்கும் படகுக்கும் இடையே வந்து நின்று தன்னைக் கொண்டு ஒரு தடுப்பு சமைக்கிறது. (ஜோ டி க்ரூஸ் அவர்களின் ஆவணப் படத்தில் அவர் ஆவேசமாக சொல்லும் சொல் ஒன்று உண்டு ” அவ கடலம்மா, கடல நம்புநுவங்கள அவா கைவிடவே மாட்டா…”). எங்களுக்கு வாழ்வு அளித்தது கனடா அது இரண்டாம் தாய், அந்த திமிங்கிலம்தான் முதல் தாய் என்று முடிப்பார் அந்த அகதி.
திமிங்கலம் முதல் சென்னா குன்னி வரை கடலில் உள்ள எல்லா உயிருக்கும் தனித்த சமூக வாழ்வு இருக்கிறது என்பது இன்று ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. அவற்றுக்கும் பசி காமம் மொழி கொண்டாட்டம் எல்லாம் உண்டு. குறிப்பாக வலி. எல்லாவற்றும் மேலே சக மனிதன் காட்டாத கருணையை அவற்றால் மனிதனுக்கு வழங்க இயலும். இந்த அறத்தின் மேல் நின்று வினவுவோம். எந்த எல்லை வரை மனிதனுக்கு மீன் உணவு தேவை? நிச்சயம் மானுட உணவுத் தேவையை புரத ஊட்டத் தேவைகளை கீரை கிழங்கு கொண்டு மட்டுமே தீர்த்துவிட முடியாது.
பசி ருசி ஊட்டம் தேவை என எல்லா நிலையிலும் நிச்சயம் மீன் அவசியம். ஆனால் நம்மால் சில வரையறைகளை போட்டுக்கொள்ள முடியும். முதல் வரையறை மற்றும் இறுதி வரையறை ஒன்றே ஒன்றுதான், புலால் அடிமை எனும் நிலையில் இருந்து வெளியேறுவது. இன்று தொடர் குடிகாரன், தொடர் புகை புடிப்பவன், தொடர் டீ காப்பி குடிப்பவன் மூளை அமைப்பில் ரசாயனம் நிகழ்த்தும் அடிமைத்தளை விவாதத்துக்கு வந்து விட்டது. ஆனால் இன்று வரை நாம் நேருக்கு நேர் முகம் காண மறுக்கும் ஒன்று புலால் அடிமை நிலை. ருசி முக்கியம் ருசி இல்லாத வாழ்வு செத்த வாழ்வேதான். ஊட்டமும் முக்கியம். ஆனால் இந்த இரண்டு நிலைகளை தாண்டி நிற்பது. புலால் அடிமை எனும் நிலை. இன்று புலால் உண்ணும் ஆட்களில் குழந்தை முதல் பெண்கள் வரை சரி பாதி மேற்சொன்ன அடிப்படையான இரண்டு நிலைகளை கடந்த புலால் அடிமைகள்தான். இந்த அடிமைத் தனத்தை ஈடு கட்டவே தற்போது கடல் அழிந்து கொண்டு இருக்கிறது. வளம் குன்றா மீன் பிடி எப்போது சாத்தியம் என்றால், இந்த புலால் அடிமை நிலையில் இருந்து எப்போது நாம் விடுபடுகிறோமோ அப்போதுதான் துவங்கும்.
பல விவாத முகங்களை திறக்கும் இந்த ஆவணப் படமும் அதன் இயக்குனரும் உலகளாவிய அளவில் கடும் கண்டனங்களை கண்டு வருவதாக கார்டியன் உள்ளிட்ட செய்தி தளங்கள் வழியே அறியக் கிடைக்கிறது. ஒட்டு மொத்த விமர்சனம் என்பது ‘ஆசாமி பேனை பெருமாளின் விஸ்வரூபம் அளவுக்கு காட்டிட்டார்’ என்பது. நல்ல வேளை ‘பேன் இருக்கிறது’ என்ற அளவுக்காவது நம்மால் ஒப்புக் கொள்ள முடிந்திருக்கிறதே. படத்தில் இறுதியில் முக்கியமான காட்சி மற்றொன்று உண்டு. செத்துக் கரையில் கிடக்கும் திமிங்கலம் மேலே அமர்ந்து குருதி பொங்கும் நீர் வெளியை பார்த்துக் கொண்டிருக்கும் தனியன் என்ற அதிக பட்ச மூன்று வினாடி காட்சி சித்திரம் ஒன்று அது. மொத்த ஆவணத்தின் வினா எதுவோ அதன் காட்சிப் படிமம். நெடு நாள் தொந்தரவு செய்யப் போகும் சித்திரம் என்பது இதை எழுதும் இக்கணம் உணர்கிறேன்.
கடலூர் சீனு
சுந்தர்லால் பகுகுணா – தன்மீட்சிப் பயணம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்தியச் சூழலியக் களச்செயல்பாட்டு முன்னோடியும், இமயமலை வனப்பிரதேசத்தில் சிப்கோ சத்தியாகிரகப் பேரியக்கத்தை முன்னெடுத்தவரும், காந்தியச் சித்தாந்தவாதியுமான மூதாசான் சுந்தர்லால் பகுகுணா அவர்கள் இன்று (21.05.2021) இயற்கை எய்தியுள்ளார். தன்னுடைய 13 வயதில், பள்ளி பயின்றுகொண்டிருந்த காலகட்டத்தில் காதி குல்லா, குர்தா, வேட்டி மற்றும் செருப்பு அணிந்து, கையில் ஒரு சிறுபெட்டியில் இராட்டையை தூக்கி ஊரூராக சுமந்துபோகிற சத்தியாகிரகி மனிதரின் வாயிலாக ‘காந்தி’யை தனக்குள் முதலறிமுகம் செய்துகொண்டவர்.
தான் இணைந்துள்ள சுதேசிக்குழு, பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் அகப்படாமல் இருக்க, ஊருக்கு ஒதுக்குப்புற கல்லறைப் பகுதிகளில் சென்று நூல்நூற்று, அங்கேயே இருந்து காந்தியின் சுயசரிதையை வாசித்தவர். பிர்லா ஹவுசில் காந்தியின் இறுதி நாட்களில் நடந்த பிரார்த்தனைக் கூட்டங்களில் காந்தியை பகுகுணா சந்தித்திருக்கிறார். காந்தி மரணமடைவதற்கு முந்தைய தினம் அது!
கன்சாலி சத்தியாகிரக ஆசிரமத்துக்கு அருகில் ஒரு சாராயக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, சாராயக்கடை முன் சத்தியாகிரகம் செய்ய வினோபாவின் அனுமதியைக் கேட்டுள்ளார் சுந்தர்லால் பகுகுணா. “நீ மக்களை ஒன்று திரட்டி சாராயக் கடைகளை முற்றுகையிட வேண்டும். போதை மருந்துகளிலிருந்து விடுதலை பெற்ற சீனாவை, தன் மக்களை குடிகாரர்களாக்கும் ஒரு அரசால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று ஆட்சி செய்பவர்களைச் சிந்திக்கச் செய்யப் போராட வேண்டும்” என்று அவர் உடனே பதிலளித்துள்ளார். ஆகவே, பெண்களைத் திரட்டி சாராயக் கடைகளுக்கு எதிரான சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் சாதித்தார் சுந்தர்லால் பகுகுணா.
இமயமலைப் பகுதிகளில் உள்ள வனங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கிற, இன்று உலகறிந்த சத்தியாகிரகப் போராட்டமான ‘சிப்கோ பேரியக்கத்தை’ (மரங்களைத் தழுவி அவைகளை வெட்டவிடாமல் காக்கும் உறுதிப்போராட்டம்) முன்னெடுத்து, அதை இமயப்பள்ளத்தாக்கின் எல்லா கிராமங்களுக்கும் விரிவுபடுத்தினார். அகிம்சை வழி போராட்டங்கள் குறித்த கல்வியறிவை உருவாக்க மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட பன்னிரண்டு நீண்ட ஆண்டுகாலமுயற்சியின் விளைவாகவே இந்த கருத்து தோற்றங்கொண்டது.
‘ஒரு மரம் பத்து பிள்ளைகளுக்குச் சமானம்’ என்று உபநிஷ வார்த்தைகளை கலாச்சாரக் குறியீடென ஒவ்வொரு போராட்டத்திலும் முன்னுரைத்து புவியியல் ரீதியான தொடர்போடு போராட்டத்தின் எல்லைகளை எல்லா தளங்களிலும் மக்கள் மனதில் விரிவாக்கியவர். இன்று உலகளாவிய சூழலியல் கருத்துருவாக்கங்களின் இந்திய அகிம்சை முகமென சுந்தர்லால் பகுகுணா எல்லோர் மனதிலும் பரவிநிற்கிறார்.
இரண்டு ஆண்டுகள் முன்பாக, அவருடைய வாழ்விடத்திற்குச் சென்று, தொண்ணூறு வயதான அவரையும் அவருடைய துணைவியாரையும் நண்பர்கள் நாங்கள் ஒருசேரச் சந்தித்து உரையாடிய அந்த ஆசித்தருணங்களை இக்கணம் நினைவுகூர்கிறோம். மேலும் இச்சந்திப்பின்போது , உங்களது ‘தன்மீட்சி’ புத்தகத்தை அவரிடம் கையளித்து, அவருடைய கையொப்பத்தை பெற்றுக்கொண்டோம். வாழ்த்துதலின் சொல்லாக, ‘Yes to Life, No to Death’ எனத் துவங்கும் சிறுகுறிப்பை எழுதியிருந்த அவ்வார்த்தைகள் ஒரு முதுமரத்தின் வேர்கள்போல பதிந்திருந்தன. அதற்குப் பிந்தைய வருடம், தன்னறம் நூல்வெளியின் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்திற்கான ஆசிக்குறிப்பை அவரிடம் கேட்டுப்பெற்று, அவருடைய கையெழுத்தைத் தாங்கியே அப்புத்தகம் அச்சாகி வெளிவரவும், அச்சந்திப்பே மையக்காரணமாக அமைந்தது.
அச்சந்திப்பின் நெகிழ்வுக்கணமாக, அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுடன் சுந்தர்லால் பகுகுணாவை தொலைபேசியில் உரையாட வைத்தது என்றும் நினைவழியாத பெருநிகழ்கை. காந்தியை நேரில் சந்தித்த இரு முதுமனங்கள் பரிமாற்றிக் கொண்ட அன்பின் சொற்களுக்குச் சாட்சியாக அன்றிருந்தோம். தும்பியின் 18வது இதழ் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் ஒளிப்படத்தை முதற்பக்கமாகத் தாங்கி, ‘மரங்களைத் தழுவி அவைகள் வெட்டப்படாமல் காப்பாற்றுங்கள்; மலைகளை வணங்கி அவைகள் கொள்ளை போகாமல் காப்பாற்றுங்கள்’ என்ற அவருடைய மேற்கோளோடு வெளிவந்திருந்தது. அதை அவர் கையில் ஒப்படைத்து அவர்சொன்ன சிறுவயது ஞாபகக்கதைகளை தரையிலமர்ந்து கேட்டுவந்தோம்.
பேச்சினூடாக அவர் சொன்ன, “எல்லா காலத்துலேயும் இந்த வாழ்க்கையில எதிர்மறைகள் இருக்கத்தான் செய்யும். நீங்க அதை மட்டுமே நினைச்சு சோர்ந்து தளர்ந்துபோய்டாதீங்க. எப்பவும் மனச துவளவிடாதீங்க. இப்பமாதிரியே எப்பவும் கூட்டா இருங்க. கூட்டமா இருக்கிறதுதான் மனுச மனசுக்கு எப்பவுமே பலம். அதனால, இந்த கூட்டுமனோபாவம் ஒன்னுபோதும், எவ்ளோ பெரிய எதிர்ப்புக்கு முன்னாடியும் ஆயுதமில்லாம, ஆத்மாவோட உண்மைய மட்டும் நம்பி நிக்கலாம். இந்தத் தன்மையோட அடிப்படை அந்த உண்மைதான்” என்ற வார்த்தைகள் அவ்வளவு தத்துவப்பூர்வமாகவும், வாழ்விலிருந்து பிறந்தவையாகவும் இருந்தன!
‘காந்தியின் சிலுவை’ கட்டுரையில் நீங்கள் இவ்வாறு எழுதியிருப்பீர்கள்… “காந்தியம் அதன் உண்மை வடிவில் கொதிக்கும் அமிலம் போன்றது. சமரசமில்லாமல் நீதிக்கும் உண்மைக்கும் விசுவாசமாக இருப்பது என்ற சவாலை அது நமக்கு அளிக்கிறது. இயற்கைச் சூழலைக் காக்க, மானுட சமத்துவத்துக்காக , அதிகார மையப்படுத்தலுக்கு எதிராக முழுமூச்சான போராட்டங்களைச்செய்ய அது நம்மிடம் அறைகூவுகிறது. அந்தப்போராட்டம் முழுமையாகவே அறப்போராட்டமாக இருந்தாகவேண்டும் என நம் ஆன்ம வல்லமைக்கு ஆணையிடுகிறது…” சுந்தர்லால் பகுகுணாவின் அருகிலமர்ந்து அவருடன் உரையாடிய தருணங்களில், உங்கள் வார்த்தைகளின் உண்மையான பருவடிவமாக அவரைக் கண்டடைந்தோம்.
எல்லாவகையிலும், நமக்கான சூழலியல் மற்றும் வாழ்வியல் முன்னோடிப் பெருமனிதர் என எதிர்வரும் தலைமுறைக்குச் சுட்டிக்காட்ட முழுத்தகுதி வாய்ந்தவர் சுந்தர்லால் பகுகுணா. ‘அமைதியான வழிகளிலேயே நம்மால் உலகத்தை உலுக்க முடியும்’ என்ற கூற்றை மெய்ப்பிக்கத் தங்கள் வாழ்வர்ப்பணித்த ஆயிரமாயிரம் காந்தியர்களில் இவரும் முதன்மையானவர். மூதாசான் ஒருவர் இறப்பைத் தழுவுகையில், இச்சமூகம் அவருக்குச் செய்தாகவேண்டிய நன்றிக்கடன் என்பது, இயன்றவரை தற்காலத்திய தலைமுறையின் சிந்தைக்குள் அவரை உணர்வுநிறைப்பதே.
சத்தியாகிரகப் போராட்டங்களுக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்த சுந்தர்லால் பகுகுணா அவர்களைப்பற்றிய சிறந்த புத்தகமொன்றை தன்னறம் நூல்வெளி மூலம் வெளியிடும் கனவொன்றை இக்கடிதத்தின் வாயிலாக உங்களோடு பகிர்வதில் ஒரு உளநிம்மதி உண்டாகிறது. உயிரால் சிலகாலம் மண்ணில் வாழும் மாமனிதர்கள் சிலர், தங்களுடைய செயலால் நெடுங்காலம் வரலாற்றில் வாழ்வார்கள். இந்தியச் சூழலியல் கருத்துருவாக்கத்தின் இருதயத் துடிப்புகளால் ஒன்றாக, எக்காலத்தும் சுந்தர்லால் பகுகுணா காந்தியத்தின் பெருஞ்சாட்சியாக நிலைபெறுவார். அவர் கனவினை நிறைவேற்றச் செயல்புரியும் கணக்கிலா களச்சீடர்களுக்கு, அவருடைய நல்லான்மா துணிவளித்து துணையிருக்க வேண்டுகிறோம்.
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
தன்மீட்சியின் நெறிகள் கண்கூடான காந்தி அஞ்சலி: ‘அமைதி அறக்கட்டளை’ பால் பாஸ்கர் செவிக்குரிய குரல்கள் எவை?
வைரம் [சிறுகதை] ம.நவீன்
“வைரத்த தோண்டி எடுத்துடலாமா?” எனக் குமாரசாமி கேட்டபோது ஒரு ஜோடி மஞ்சள் பறவைகள், விருட்டென கொன்றை மரத்திலிருந்து பறப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு நேரம் அவை அங்கு இருந்ததை நான் கவனிக்கவில்லை. அது சித்திரை மாதம். மரத்தை மூடியிருந்த கொன்றை மலர்களுக்குள் அவை மறைந்து இருந்திருக்க வேண்டும்.
சிறுகதை: வைரம்இமைக்கணம் வாசிப்பு
அன்புள்ள ஜெ,
நேற்று இமைக்கணம் நாவல் வாசித்து முடித்தேன். வாசித்து முடித்து உடனே தங்கும் எண்ணங்களை எழுதவே இதில் முற்படுகிறேன்.
எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. இந்த நாவல் தொடங்கியபோது இருந்த நாடகமும் தர்க்கமும் இது முடியும்போது கரைந்தழிந்து என்னால் பின்தொடர முடியாத வேறொரு தத்துவ சிந்தனைகளை இது பேசி முடிந்தது. முதலில் சற்று ஏமாற்றமாகவும், வெறும் போதனைகள் போலவும், பின்னர் நான் பின்தொடர முடியாத – தர்க்கத்தால் ஏற்கனவே சென்றடைந்த சில விஷயங்களை சில கருதுகோள்களை மேலும் வேறொரு கோணத்தில் வேறொருவனுக்கு விளக்கும் பொருட்டு சொல்லப்பட்டவையாக அந்த பகுதிகள் இருந்தது – என்று வகுதுக்கொண்டேன். கீதையை எனக்குத் தெரியாததால், பெரும்பாலும் அவை கீதையை ஒட்டி இருந்ததாக எனக்குத் தோன்றியதால் என்னால் பின்தொடர முடியாமல் போனதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை புரிந்துகொள்ள முயற்சி எடுப்பதற்கு பதிலாக improvisation மட்டும் என்ன நிகழ்ந்திருக்கிறது என்று நான் தேடிக்கொண்டிருந்திருக்கலாம்.
இந்த நாவல் அடிப்படையில் என்ன செய்கிறது? இதன் நுழைவாயிலில் ஒரு பெரிய முன்பின் இல்லாத பிரச்சினை நிகழ்கிறது. இறப்பு நின்றுவிடுகிறது. இறப்புக்கு இறைவன் அவன் தொழில் செய்யாமல் உள்ளம் கலங்கி அமைந்துவிட்டதால். அதனால் பூமி தேங்கி அதில் உள்ள உயிர்கள் பல வகையான துன்பங்களை எதிர்கொள்கிறது. அந்த உயிர்களின் பிரதிநிதியாக நாரதர் சென்று யமனிடம் பேசி, அவனுக்கு ஒரு யோசனை சொல்லி, ஒரு தற்காலிகமான தீர்வை சொல்லி அதை முடித்துவைக்கிறார். யமன் அவருக்கு இருக்கும் குழப்பங்களை மானிடர் பல உருவில் சென்று, ராமனின் அவதாரமான காட்டிற்கு சென்று அமைந்திருக்கும் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணன் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் என்னும் கதையாக இந்த நாவல் அமைந்திருக்கிறது. இது outline. ஆனால் உண்மையில் இந்த நாவல் எதை பேசுகிறது?
பலவகையான மனிதர்கள் அவர்களுக்கு இருக்கும் குழப்பங்களை வந்து கேட்கிறார்கள். அவற்றை எதிர்கொண்டு விரிவாக பதில் அளிக்கிறார் இளைய யாதவர். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர் அமைந்திருக்கும் வாழ்க்கையிலிருந்து அந்த கேள்விகளை எடுக்கிறார்கள். அந்த கேள்விக்கான பின்னணியை, அது உருவாகி வந்த விதத்தை, அது எழுவதற்கான காரணத்தை விரிவாகி விளக்கி அந்தக் கேள்வியை திரட்டி முன்வைக்கிறார்கள். அதற்கு பதிலாக இளைய யாதவர் அளிக்கும் விளக்கங்களை, மறுமொழிகளை ஏற்று விடைபெறுகிறார்கள். கர்ணன், பீஷ்மர், சிகண்டி, விதுரர், வியாசர், யுதிஷ்டிரர், திரௌபதி, குசேலன், யக்ஞ முனிவர்கள், சுகர் என்ற உருக்களில் யமன் சென்று அந்த கேள்விகளை கேட்கிறார். யமன் விடைபெற்றபிறகு அர்ஜுனன் இவை எல்லாவற்றையும் தன் கனவில் கண்டதாக ஒரு பெரிய இறுதிபகுதி வருகிறது.
இவர்கள் அனைவருக்கும் விதவிதமான பிரச்சினைகளும் கேள்விகளும் உள்ளன. ஒருவருக்கு முக்கியமானது இன்னொருவருக்கு அவ்வளவு முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் அவரவர் கோணங்களை புரிந்துகொண்டு விளக்கம் அளிப்பவராக இளையயாதவர் இருக்கிறார். ஒவ்வொருவர் கேள்வியும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கேற்ப விடைகளும் தனித்தன்மை வாய்ந்தவையாக. அந்த பிரத்யேகமான விடைகளை அடைந்த பின்னரே அவர்கள் நிறைவுற்று மீண்டு செல்கின்றனர்.
எனக்கு ஏன் முழுதாக நான் விரும்பும் விஷயங்கள் கிடைக்கவில்லை, நான் செய்யும் விஷயங்களை பற்றற்று செய்துகொண்டிருக்கிறேன்- ஏன் நான் இவற்றை விட்டுச்செல்லக் கூடாது, நான் செய்ய நினைக்கும் விஷயம் உண்மையில் செய்யப்படத் தேவையானது தானா, இவ்வளவு நாள் செய்த விஷயங்களுக்கான பொருள் என்ன, உண்மையில் சுற்றி வளைக்காமல் இந்த உலகம், இந்த வாழ்வு இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம், எப்போதும் மறுமுனையிலும் நின்று அறத்திற்காக வாதாடும் நான் எப்போதேனும் ஒரு விஷயத்தை முழு மனதுடன் ஐயமின்றி ஆற்ற முடியுமா, அழகை முதன்மையாக என்னும் நான் அவற்றின் அடிப்படையில் என்னுடைய வாழ்க்கையை எப்படி புரிந்துகொள்வது, இதன்பிறகு கேள்விகள் சிக்கலாகின்றன – இளைய யாதவர் என்பவர் யார் என்று பதைப்புடன் தெரிந்துகொள்ள வரும் அதர்வ வேத முனிவர்கள், குசேலனின் நிறைவு, இன்னொரு செட் முனிவர்களின் கேள்விகள், சுகரின் நிறைவு – அடைக்கலம், மோட்சம் என்பது என்ன என்றா? இன்மையின்மை என்னவென்றா? – இவைகளிலிருந்து அர்ஜுனனின் நீளமான பகுதி ஏற்கனவே கேட்கப்பட்ட இந்த கேள்விகளை தொகுத்து வேறுகோணத்தில் ஆராய்வதா அல்லது முற்றிலும் வேறொரு பேசுபொருளை கொண்டிருக்கும் பகுதியா அது? அந்தப் பகுதிகளை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கவே இல்லை. எப்படியும் திரும்ப வாசிப்பேன் என்ற எண்ணமிருந்ததால், அவற்றை வெறுமே வாசித்துச் சென்றேன். இப்போது தோன்றுகிறது இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கலாம் என. இறுதிப் பகுதி நெருங்க நாவலை முடிக்கும் வேகத்திலேயே இருந்தேன்.
ஒருவேளை கடைசி சில பகுதிகளுக்கு விரிவான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து அந்த கேள்விகளை என்னால் பொருத்திக்கொள்ள முடியாததால் அந்த சோர்வு வந்திருக்கலாம். ஆனால் அது என்னுடைய குறையே. நான்தான் நாவலை இன்னும் பொறுமையாக கவனித்து அதை விரிவாக்க முயற்சி செய்திருக்க வேண்டும். கதை செல்ல செல்ல கேள்விகளும் நுன்மையாகிக் கொண்டே சென்றனவா? Abstraction நோக்கி சென்றபடி இருக்கின்றனவா இந்த கேள்விகள்? ஒருவகையில் நுண்மையை நோக்கி சென்றாலும் abstraction நோக்கி செல்பவை இவை என்று சொல்ல தோன்றவில்லை. மற்ற நாவல்களை விட அதிசயமாக தத்துவத்தை இத்தனை விரிவாக கையாளும் இந்த நாவலில் தத்துவத்தை விளக்குவதாக வரும் நேரடியான உவமைகள், பிற வெண்முரசு நாவல்களை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கின்றது. சொல்வளர்காட்டிலும் கிராதத்திலும் வரும் உவமைகள் இதில் உருவாவதில்லை. இதுவே இங்கு தத்துவம் விளக்கப்பட்டிருக்கும் கோணம் சற்று மாறுதல் ஆனது என்று என்ன வைக்கிறது. அல்லது இது வெறும் அர்த்தமற்ற முதற்கட்ட மனப்பதிவாக மட்டும் இருக்கலாம்.
இவர்களுக்கு எல்லாம் மறுதட்டில் அமர்ந்து பதில் சொல்லும் இளைய யாதவன் என்பது யார் – அல்லது எது அல்லது எதுவாகி வந்த ஒன்று என கேட்டுக்கொள்வதும் ஒரு துவக்கத்தை அளிக்கலாம். இதில் இந்த கேள்விகளும் அதற்கு விடையும் வருவதற்கு ஒரு முறை உள்ளது. எப்போதுமே விடைநாடிவரும் கதாப்பாத்திரங்கள் கேள்விகளை அப்படியே முன்வைக்காமல், முதற்கட்டமாக தங்கள் எண்ணங்களை, அல்லது ஒரு நிகழ்விலிருந்து அடைந்த கொந்தளிப்புகளை தான் முன்வைக்கிறார்கள். நேரடி கேள்விக்கோ, கேள்விகளுக்கோ அவர்கள் வரும் வரை, பின்னிலிருந்து பார்க்கும்போது அந்த கொந்தளிப்புகளே அபூர்வமான வகையில் அந்த கேள்விகளை துக்கத்தை சொல்பவையாக உள்ளன. அதாவது ஒரு மனிதன் எங்கிருந்து தொடங்கினாலும் அங்கு வந்து சேர்ந்தாக வேண்டுமென்பது போல, மறைத்தாலும் தவிர்த்தாலும் அது அங்கு இருந்தால் அந்த சொற்பெருக்கு காட்டுமென்று தோன்றுவது போல. இது எப்படி ஏன் எதனால் நிகழ்கிறது என்று தெரியவில்லை. ஆனால் எண்ணிப்பார்க்கும்போது விந்தையாகவும் அழகாகவும் உள்ளது.
விளைவாக, அவர்கள் மனதின் ஆழங்களுக்குச் சென்று விதவிதமான கேள்விகளை எதிர்கொள்கிறது. விதவிதமான ஆழங்கள். ஆழம் என்பது நாம் ஒருவகையில் எதிர்கொள்ளாதிருப்பது தானே? அதை எல்லாமே வாழ்க்கையாக ஆக்கி அந்தப் பரப்பில் வைத்து கேள்விகளை சந்திக்கிறது. அதிலிருந்து முன்னகர்ந்து அந்த உலகில் எழச் சாத்தியமான அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு விளக்கத்தையோ விடைகளையோ முன்வைக்கிறது. வயதடைய, சோர்வடைய, இறுக்கமாக வைக்கும் பகுதிகள் உள்ளன கர்ணன், பீஷ்மர், விதுரர் ஆகியோரின் அனுபவங்கள் போல. இலகுவாக்கும், துள்ளவைக்கும் – அதே சமயம் பிரம்மாண்டத்தை இன்மையை உணர்த்தும் சிகண்டி, வியாசர் ஆகியோரின் கதைகள். அழகையும் பெண்மையையும் தனக்குத் தானே தொகுத்துக்கொள்ளும் திரௌபதி. தன்னுள் எப்போதும் போரிட்டு கரையும் தருமர், தன்னை வெளிப்படுத்தி தன் எல்லையை, தன்னை கண்டுகொள்கிறார். வகுத்துக்கொள்கிறார், குசேலரின் ஈடற்ற முழுதளித்தல், துளிமனம் எஞ்சாத சுகரின் முகம். மற்றப் பகுதிகள் எனக்கு என்ன தந்தன என்று தெரியவில்லை.
இந்த நாவல் எனக்கு பொருள்படுவது இவற்றை எல்லாம் நான் ஒரு பெரும் நாடகமாக வாசிக்க முடியும் என்பதனால். இது இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் தன்னை காட்டியுள்ளது, மேலும் சில சாத்தியங்களை முன்வைத்துள்ளது என்பதனால். மேலும் இவற்றை நான் வாசிக்கும்போது உணர்ந்த ஒன்று வாசிப்பு அல்லது சிந்தனை அல்லது மொழி ஒரு சில இடங்களில் என்னுள் முன்னகர்ந்து தங்கியதாக நான் உணர்ந்தது. ஒரு செயல்பாடாக.
உங்கள் மொழி குறித்து பேசும்போது உங்கள் வருணனைகள், உவமைகள் குறித்து பேசப்படுவதுண்டு. அதற்கிணையாகவே அவையற்ற விஷயங்களை பேசுவதற்கான மொழி ஒன்றும் உங்களுக்கு கைவரப் பெற்றிருக்கிறது. ஒரு சாதாரண சொல் கூட உங்களிடம் இல்லை. ஒன்று கூட. எத்தனை அரிய விஷயம். ஒளியுண்டான வாக்கு. சொன்னால் ஒரு சொல் துலக்கம் பெறுமென்றால் அதுதானே சொல். இல்லாவிட்டால் அதை ஏன் சொல்லவேண்டும். வியாசர் கலைமகளும் திருமகளும் தோன்றுவதற்கு கோட்டோவியத்தின் கீற்று போல ஒரு சில சொற்களில் அவர்கள் வடிவை சொல்கிறார், தேவி தோன்றி விடுகிறாள். அது நினைவுக்கு வருகிறது. இமைக்கணத்தில் அந்த உவமைகளற்ற மொழியின் திறன் முழுதும் வெளிப்படுகிறதென நினைக்கிறேன். இலக்கியத்தில் தத்துவம் பயின்றாலும், உவமைகள் அதிகம் இல்லாத நீண்ட தத்துவ தன்னுரைகள் கூரியவையாக வெளிப்படும் மொழி.
இதை வைத்துக்கொண்டு தொடங்குகிறேன்.
ஸ்ரீநிவாஸ் ,
மதுரை
இருட்கனி முன்பதிவு
இது ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதத் தொகை நூலின் 21வது நூல்.
விலை: 900 ரூ. (இதில் வண்ணப்படங்கள் கிடையாது.)
முன்பதிவு செய்ய: https://dialforbooks.in/product/irutkani_classic_edition_/
வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், cs@dialforbooks.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்
அனுப்பலாம்.ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ்
044-4959 5818 ஐ அழைக்கலாம்.
யூபிஐ மூலம் பணம் செலுத்த: dfb@hdfcbank
முன்பதிவு தொடர்பான தகவல்கள் மேலே உள்ள லின்க்கிலேயே உள்ளன. அதைப் படித்துப் பார்த்துவிட்டு முன்பதிவு செய்யவும்.
நன்றி.
கிழக்கு
May 21, 2021
அஞ்சலி: சுந்தர்லால் பகுகுணா
இந்தியாவின் சூழியல் இயக்கங்களின் தந்தை எனப்படும் சுந்தர் லால் பகுகுணா மறைந்தார். 1927 ல் பிறந்து ஏறத்தாழ நூறாண்டை நெருங்கிக் கொண்டிருந்தவர்.இமையமலைக் காடுகளில் மரம்வெட்டுதலுக்கு எதிரான சிப்கோ போராட்டம் வழியாக உலக அளவில் அறிமுகமானார்.
இமையமலைச் சாரலில் கண்மூடித்தனமான மரம்வெட்டுதல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. இமையமலைப்பகுதி இன்று பெரும்பாலும் மொட்டைமண் குன்றுகளாக இருப்பதற்கு அந்த காடழிப்பே காரணம்.இந்திரா காந்தி அமைச்சரவையில் பெரும்பொறுப்புகளில் இருந்த சிலர் உத்தரகண்ட் பகுதியின் மரங்களை வெட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். எச்.என்.பகுகுணா முதல் என்.டி.திவாரி வரை பெரும்பாலான அக்கால அரசியல்வாதிகள் மேல் மரம்வெட்டிகள் என்னும் குற்றச்சாட்டு உண்டு.
அரசாங்க அனுமதியுடன், அரசு அமைப்பின் துணையுடன், திட்டமிட்டு மாபெரும் அளவில் காடழிப்பு நடைபெற்றது. எண்பதுகள் வரைக்கும்கூட காடழிப்பு என்பது மாபெரும் பொருளியல் அழிவு, ஒரு பொதுச்சொத்துச் சூறையாடல் என்பது மக்களுக்குத் தெரியாது, அரசுக்கும் தெரியாஅது. தமிழகத்திலும் பெரும்பான்மையான காடுகள் அந்தக் காலகட்டத்தில் அரசு அனுமதியுடன் மறைந்தன. அரசு காடுகளை வெட்டி அழிக்க ஏலத்தில் குத்தகை விட்டுக்கொண்டிருந்தது.என் இளமையில் நானே காடுகளை வெட்ட பேச்சிப்பாறை, கோதையாறெல்லாம் சென்றிருக்கிறேன்.
அக்காலத்தில்தான் காடுகளை அழிப்பதற்கு எதிரான சிப்கோ என்ற இயக்கம் ஆரம்பித்தது. உலக அளவிலேயேகூட தொடக்ககாலச் சூழியல் போராட்டங்களில் ஒன்று அது. மார்ச் 26, 1974ல் உத்தரகண்ட் மாநிலத்தில் இமையமலை அடிவாரத்தில் தொடங்கியது அந்த இயக்கம். மக்களால் புனிதமாக கருதப்பட்டு தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்ட காடுகளின் மரங்களை வெட்டி அழிக்க அரசு குத்தகைதாரர்களுக்கு அனுமதி அளித்தது. அதற்கு எதிராக கிராம மக்கள் திரண்டு மரங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு நின்று போராடினர். அதுதான் சிப்கோ இயக்கம். சிப்கோ என்றால் தழுவிக்கொள் என்று பொருள்.
தன்னெழுச்சியாக தோன்றிய இவ்வியக்கம் அரசாலும் குத்தகைதாரர்களாலும் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டது. அப்போது அதை தலைமைதாங்கி நடத்தியவர் காந்தியவாதியான சுந்தர்லால் பகுகுணா. “நிரந்தரப் பொருளியல்’ என்று அவர் முன்வைத்த பொருளியல்திட்டம் இயற்கையைச் சூறையாடாத பொருளியலுக்கான விரிவான திட்டங்கள் கொண்டது.
1981ல் இமையமலையின் அடிவாரக் காடுகள் வழியாக ஏறத்தாழ 5000 கிலோமீட்டர் தூரம் அவர் நடத்திய நடைபயணம் புகழ்பெற்றது. இறுதியில் போராட்டம் வென்றது. சுந்தர் லால் பகுகுணா இந்திரா காந்தியுடனான நேரடிப் பேச்சுவார்த்தையில் இமையமலைக் காடுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்தினார். இந்தியாவில் சூழியல் சட்டங்கள் உருவாகவும் அச்சந்திப்பே வழிவகுத்தது. இன்று இந்தியாவெங்கும் எஞ்சியிருக்கும் காடுகள் சுந்தர்லால் பகுகுணாவின் கொடை என்றே சொல்லலாம்.
சுந்தர் லால் பகுகுணா இந்தியாவின் சூழியல் போராளிகளில் முன்னோடியானவர், முதன்மையானவர். காந்தியவாதியான சுந்தர்லால் பகுகுணா தீண்டாமை ஒழிப்புப் போராளியாக பொதுக்களத்திற்கு வந்தார். அதன்பின் உழைக்கும் பெண்களின் உரிமைக்காகவும், பழங்குடியினர் நலனுக்காகவும் கடைசிவரை களத்தில் இருந்தார். 2001ல் கூட பெரிய அணைக்கட்டுகளின்பொருட்டு மக்கள் குடிபெயர்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிச் சிறைசென்றார்.
சுந்தர்லால் பகுகுணாவை நான் அறிந்துகொள்வது ஒரு கசப்பு வழியாக. 1984ல் மலையாள நவீன இலக்கிய விமர்சகரான எம்.கிருஷ்ணன் நாயர் ஒரு கட்டுரையில் ஒரு படத்தை போட்டு, ’இந்தப் படத்தில் ஒருவன் ஒரு மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் ஹிப்போக்கிரஸி. மரத்தை கட்டிப்பிடித்தால் என்ன ஆகும்? போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம். கட்டிப்பிடிப்பதற்கு பின்னாலுள்ளது என்ன உணர்வு?” என எழுதி அக்கால இருத்தலிய, ஃபிராய்டியக் கருத்துக்களை கக்கியிருந்தார்.
ஆனால் அந்தப் படம் என்னை கவர்ந்தது. நான் அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் சுந்தர்லால் பகுகுணா என தெரிந்துகொண்டேன். அவர் அன்று நடந்துகொண்டிருந்த சைலண்ட் வாலி சூழியல் பாதுகாப்புப் போராட்டத்தின்பொருட்டு கேரளத்திற்கும் வந்திருக்கிறார்.
எம்.கிருஷ்ணன் நாயருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அதில் பிழையில்லை, அறியாமை பாவம் அல்ல. ஆனால் புரட்டிப்பார்த்த நூல்கள் வழியாக ஆணவம் அடைந்து அந்த அறியாமையை ஒரு கவசமாக மாற்றிக்கொண்டு அனைத்தைப் பற்றியும் அலட்சியமாகக் கருத்துரைத்து கேலிசெய்து ஆராய்ந்து பீராயும் அந்த மனநிலைமேல் ஆழ்ந்த அருவருப்பு அடைந்தேன். அந்தக் கருத்தைச் சொல்ல தனக்கு என்ன தகுதி என எண்ணத் தெரியவில்லை என்றால் என்ன வாசித்து என்ன?
பின்னர் எம்.கிருஷ்ணன் நாயரை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒரேமேடையில் இருந்திருக்கிறோம். என் எழுத்துக்களை அவர் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு வார்த்தை பேசவோ, அவர் புன்னகைத்தபோது மறுபுன்னகை பூக்கவோ என்னால் முடியவில்லை. அவர் மறைந்தபோது ஒரு அஞ்சலிக்குறிப்பு கேட்டார்கள், ‘அவர் ஒரு முட்டாள், வாசிப்பால் இன்னும் பெரிய முட்டாளாக ஆனவர்’ என்று சொன்னேன். அஞ்சலிக்குறிப்பு வெளியாகவில்லை.
இன்று என்றால் அத்தனை சீற்றம் அடைந்திருக்க மாட்டேன். புன்னகையுடன் ‘நோ கமெண்ட்ஸ்’ என்று கடந்து சென்றிருப்பேன். ஏனென்றால் இன்றும் எம்.கிருஷ்ணன்நாயர் வகை பீராய்ச்சியாளர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்தவகைமையில் மூன்றாம் தலைமுறையினர் இன்று தமிழ்ச்சூழலில் ’லாந்திக்’கொண்டிருக்கிறார்கள். அவர்கள்மேல் எந்த மதிப்பும் இல்லை. ஆனால் அவமதிக்க மாட்டேன், அவர்களும் உயிர்க்குலத்தில் ஒரு துளிதான். இருந்துவிட்டுப் போகட்டும்.
அதன்பின் சுந்தர்லால் பகுகுணாவை, அவருடைய சாதனைகளைப் பற்றி காந்தியப் போராளிகளிடமிருந்தும் சூழியல் செயல்பாட்டாளர்களிடமிருந்தும் அறிந்தேன். அவருடைய பேட்டிகளை வாசித்தேன்.
சுந்தர்லால் பகுகுணா 1988ல் சென்னை வந்தார். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஒருங்கிணைத்த இறால்பண்ணை ஒழிப்புப் போரின்போது. அவரைப் பார்ப்பதற்காகவே சென்னை வந்தேன். அன்று அவர் மேடையில் மற்றவர்கள் பேசும்போது ஓரமாக அமர்ந்து சர்க்காவில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார்.சட்டென்று எனக்கு அக்காட்சி ஓர் ஒவ்வாமையை உருவாக்கியது. அது போலித்தனம் என்றும் ‘தன்னை முன்வைத்தல்’ என்றும் தோன்றியது. அரங்கிலிருந்து வெளியேறி என் விடுதியறைக்கு வந்துவிட்டேன்.
ஆனால் வந்ததும் எம்.கிருஷ்ணன் நாயர் நினைவுக்கு வந்தார். அவருக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? நான் ஓருசில புத்தகங்களை படித்திருக்கிறேன். அதைவைத்து மற்றவர்களை மதிப்பிட எனக்கேது தகுதி? அதிலும் செய்துகாட்டிய சாதனையாளர்களைப் பற்றி அப்படி ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக் கொண்டேன் என்றால் நான் எவ்வளவு பெரிய அற்பன்! அவர்களை புரிந்துகொள்ளவே என் அறிவு பயன்படவேண்டும், அவர்கள்மேல் ஏறிநின்று என்னைக் காட்டிக்கொள்ளும் சிறுமை என்னை அணுகலாகாது.
அது ஒரு பெரிய திறப்பு. அறம் கதைகள் வரை வந்துசேரும் ஒரு ஆழ்ந்த புரிதல் அன்று தொடங்கியது. நவீன எழுத்தாளனின் பெரிய உளச்சிக்கல் என்பது தன்னை முன்வைத்து உலகை மதிப்பிடுவது. எதையும் மதிப்பிடும் மையமாக தன்னை கருதிக்கொள்வது. ’இதுபோலித்தனம்’ என அவன் எதையும் சொல்வான். எதையும் ‘பகுப்பாய்வு’ செய்வான். ‘அதுக்கு நீ யாருடா வெண்ண?’ என்று கேட்கும் ஒரு குரல் உண்டு. அக்குரலும் அவனுக்குள் இருந்தே எழுமென்றால்தான் அவன் மெய்யான எழுத்தாளன். முப்பது வயதுக்குள் ஒருவன் அப்படி தன்மைய நோக்கில் ’ஆய்வு’களை உதிர்த்துக்கொண்டிருந்தால் பரவாயில்லை, அதற்குமேலும் அதே மனநிலை நீடித்தால் அவனிடம் ஒன்றும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. அவனிடமிருக்கும் அந்த அற்பத்தனம் எந்த பெரியவிஷயமும் அவனிடம் நிகழாமல் தடுத்துவிடும்.
அவ்வுணர்வுடன் அன்று மேடைக்குத் திரும்பிச் சென்றேன். கருத்தரங்கு முடிந்து பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. சுந்தர்லால் பகுகுணா இருந்தார்.அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன். நாலைந்து கேள்விகளை எழுதிக்கொடுத்தேன். அவர் பதில் சொன்னார். அது அப்போது பிரசுரமாகியது. அந்தச் சிறுசந்திப்பு, அவரை அருகில் நின்று பார்த்தது பெரிய நிறைவை அளிக்கிறது. அவர் ஆங்கிலத்தில் எழுதித்தந்த பதில்களை நெடுநாட்கள் கையில் வைத்திருந்தேன்.
சுந்தர்லால் பகுகுணாவைப் போன்றவர்கள் வரலாற்று நாயகர்கள். அவர்களின் எதிர்ப்பு என்பது ஆழ்ந்த அற அடிப்படையில் இருந்து எழுவது. தாக்குப்பிடிக்கும் பொருளியல் அவருடைய கொள்கை. இயற்கையை அழிக்காத, உற்பத்திமேல் கட்டுப்பாடுள்ள பொருளியல் அது. பெரும்கட்டுமானங்கள், பெருந்திட்டங்களுக்குப் பதிலாக சிறிய அளவிலான விரிவான திட்டங்களை முன்வைப்பது. மையப்படுத்தப்படாத பலமுனைகள் கொண்ட நிர்வாகத்தை கொண்டது.
சென்ற முப்பதாண்டுகளில் சுந்தர்லால் பகுகுணாவை பெருந்திட்டங்களை ஆதரிப்பவர்கள், இடதுசாரிகள் பேசிய கடுமையான வசைகளையும் அவதூறுகளையும் கேட்டிருக்கிறேன். சிலவற்றுக்குப் பதிலும் எழுதியிருக்கிறேன். அரசியலாளர்களுக்கு அவர்களின் அரசியலை ஏற்காத எவருமே கீழ்த்தரமாக எதிர்க்கப்படவேண்டிய எதிரிகள்தான். சுந்தர் லால் பகுகுணாவைப் போன்றவர்கள் அந்தச் சிறியமனிதர்களின் தலைக்குமேல் கால்வைத்துக் கடந்து செல்லும் விராடபுருஷர்கள்.
அவர்கள் நம்மை நாமே அளந்துகொள்ளும் அளவுகோல்களாக வேண்டும். நம் சிறுமைகளை அதனூடாக நம்மால் மதிப்பிட்டுக்கொள்ள முடியும். நம் இலக்குகளை தொலைதூரத்தில் வகுத்துக்கொள்ளவும் முடியும்.
பிகு: சுந்தர்லால் பகுகுணாவிற்கு தமிழில் ஒரு நல்ல விக்கிபக்கம்கூட இல்லை. எவரேனும் ஆங்கில விக்கி பக்கத்தையாவது மொழியாக்கம் செய்து போடலாம்.
https://en.wikipedia.org/wiki/Sunderlal_Bahuguna
சுந்தர்லால் பகுகுணா நினைவுகள்- சிவராஜ்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறாமல் தோல்வியடைந்து, விரக்திமனதோடு ஊர்ஊராக வெவ்வேறு சூழ்நிலைகளில் அலைந்துகொண்டிருந்த சமயம் அது. வாராவாரம் பிசிக்ஸ் மாஸ்டரை சந்திப்பது மட்டுமே மனதுக்கு ஒரே ஆறுதல். அப்பொழுது அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஒருநாள் வீட்டுக்கு அழைத்துச்சென்று ஆவணப்படம் ஒன்றை திரையிட்டுக்காட்டினார். அதன் பெயர் ‘நர்மதா டைரி’ என்றிருந்தது. நர்மதா நதியில் அணைகட்டப்படுவதன் பின்னான அரசியல் சூழ்நிலை மற்றும் அதனால் பாதிப்படையும் மக்களின் வாழ்நிலை இவையிரண்டையும் மையப்படுத்தி 1995ல் எடுக்கப்பட்ட ஆவணப்படம். அதன் இயக்குநர் பெயர் ஆனந்த் பட்டவர்தன் என நினைக்கிறேன்.
அந்த ஆவணப்படம் ஓடிக்கொண்டே இருக்கும்பொழுது, அதில் ஒரு காட்சி வந்தது. அணைகட்டும் திட்டத்துக்கு உலகவங்கி பணம் வழங்கியிருந்தது. அதைத் தருவதற்காக ஒரு அதிகாரி அங்கு வந்திருப்பார். காங்கிரஸ் எம்.பி ஒருவரிடம் மக்கள் எல்லோரும் சேர்த்து செல்வார்கள். அவர் ஏதோ சொல்ல, மக்களெல்லோரும் அவ்வதிகாரியிடம் நேராகச்சென்று கோரிக்கை வைக்க முயல்வார்கள். ஆனால் அவரோ ‘எனக்கு முக்கியமான அவசர வேலையிருக்கு. உங்ககிட்ட இப்ப பேசமுடியாது’ என்று சொல்லி அவ்விடத்தைவிட்டு கிளம்பிவிடுவார். அந்தக்காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்கும்.
கேமிரா பின்னாலேயே தொடர்ந்து நகர்ந்தால், அது ஒரு காட்சியைக் காட்டும். எந்த அதிகாரி முக்கியமான வேலையிருப்பதாகச் சொல்லி கிளம்பிவந்தாரோ அவர் ‘ஃபேஷன் ஷோ’ நிகழ்ச்சியொன்றை நிதானமாக அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பார். மக்கள் திரண்டு அந்த சொகுசு உணவகத்து அரங்குக்குள் செல்ல முற்படுகையில், எல்லோரையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே வீசுவார்கள் காவலர்கள். அப்படி வீசப்பட்டவர்களில் மேதா பட்கரும் ஒருவர். அங்கு கூடியிருக்கும் அந்த மக்கள் கூட்டத்துக்கிடையில் அழுதுகொண்டே மேதா பட்கர் உணர்ச்சியோடு ஒரு உரைநிகழ்த்துவார். அந்தக்காட்சி மனதில் அப்படியே உறைந்துவிட்டது.
அன்றையநாள் முழுக்க மனதில் அக்காட்சியைப்பற்றிய நினைவோட்டம்தான். பிசிக்ஸ் சாரிடம் அக்காட்சியைப்பற்றி கேட்க அவரும் ஏதேதோ நிறைய தகவல்களைச் சொன்னார். அந்த இரவு அவ்வீட்டிலேயே தங்கிப்போனோம். மனதுமுழுக்க பாரம் மட்டும் நிலைத்திருந்தது. மறுநாள் காலை பிசிக்ஸ் சார் ‘ப்ரன்ட் லைன்’ புத்தகத்தை கையில் தந்தார். அதில், வெள்ளைநிற பனியனும் குல்லாவும் அணிந்திருந்த ஒரு முதியவர், நர்மதா நதியைப்பார்த்து சம்மணமிட்டமர்ந்து தனது உண்ணாவிரதத்தை துவங்கும் புகைப்படம் ஒன்றை பிரசுரித்திருந்தார்கள். அம்முதியவர் ‘சுந்தர்லால் பகுகுணா’.
ஆவணப்படத்தில் கண்ணுற்ற அந்தக்காட்சியும், அதன்நீட்சியாக பத்திரிக்கையில் அச்சாகியிருந்த சுந்தர்லால் பகுகுணா அவர்களின் புகைப்படமும் மனதுக்குள் கற்சித்திரமாகப் பதிந்துகொண்டன.அது ஆங்கிலப்புத்தகம், ஆதலால் சுந்தர்லால் பகுகுணாவின் படத்தைமட்டும் கத்திரித்து எனது வீட்டிலிருக்கும் சிறிய அறையின் சுவர்மீது ஒட்டிவைத்துக் கொண்டேன். விரைவாகவும் மெதுவாகவும் காலம் பல்வேறாக நகர்ந்தது. ஆனாலும் நர்மதா டைரிக் காட்சியும், சுந்தர்லால் பகுகுணாவின் உண்ணாவிரதச்சித்திரமும் மனதுக்குள் வந்துகொண்டே இருந்தன.காலம் செல்லச்செல்ல அகத்தைவிட்டு சிற்றளவும் அகலவில்லை.
அதன்பிறகு சிறிதும்பெரியதுமாக நிறைய தகவல்கள் நர்மதா பற்றியும் சிப்கோ இயக்கம் பற்றியும் வந்துசேர்ந்தன. சுற்றுச்சூழலுக்கு ஆதாரமான காடுகளை பயன்படுத்துவது மட்டுமல்ல பாதுகாப்பதும் நமது சுயக்கடமையே என்று பெண்கள் முன்னெடுப்பில் மாபெரும் சமூகப்போராட்டமாக மாறிய அறப்போராட்ட வழிமிறைகள் ஒன்றிணைந்து சிப்கோ இயக்கம் ஆகியிருக்கிறது.இராஜஸ்தானில் 18ம் நூற்றாண்டுவாக்கில் மன்னராட்சி காலத்திலேயே இப்போராட்டத்துக்கான விதையிடப்பட்டிருக்கிறது. அதன் வழித்தோன்றலாக 1970களில் இமயமலைப்பகுதியின் காடுகளை சிப்கோ போராட்டம் மூலம் காப்பாற்றியிருக்கிறார் சுந்தர்லால் பகுகுணா.
காலவயது நகர, நம்மாழ்வாரோடு பழகிப்பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆழ்வாருடனான ஒரு உரையாடல் சமயத்தில் ஆர்வந்தாங்காமல் நான் கேட்டேன், ‘அய்யா, சுந்தர்லால் பகுகுணாவபத்தி…?’ என. அதற்கு ஆழ்வார்,’அய்யா, அவர ஒரே ஒருதடவ டெல்லியில பாத்திருக்கேன். அவரு கொஞ்ச தூரத்திலயிருந்து நடந்துவந்தாரு. அது எனக்கு, ரொம்பகாலமா… பழங்களா காச்சு பழுத்துத்தொங்குற கிழமரம் ஒன்னு அசஞ்சு அசஞ்சு நடந்துவரமாதிரி இருந்துச்சுய்யா’ என முகம்கனியச் சொன்னார்.
அது ஒரு சர்வதேசக் கருத்தரங்கு. மூன்றுநாள் நிகழ்ந்திருக்கிறது. தென்னிந்தியாவின் சார்பாக ஆழ்வார் அதில் கலந்துகொண்டிருந்தார். ஒருநாள் முழுக்க சுந்தர்லால் பகுகுணாவுக்கு பக்கத்திலேயே அய்யா அமர்ந்திருந்திருக்கிறார். ஆனால் ஒருவார்த்தைகூட அய்யா அவரிடம் பேசவில்லை. எல்லோரையும் பார்த்துச்சிரிப்பதும், அருகில் வருபவர்களை அரவணைத்துக்கொள்பவராகவும் சுந்தர்லால் பகுகுணா இருக்கிறார். ஆனால் ஆழ்வாரால் ஒரு வார்த்தைகூட அவரிடம் பேசமுடியவில்லை. ‘ஏனுங்கய்யா?’ என ஆழ்வாரிடம் நான் கேட்டபொழுது, ‘இல்லைய்யா… அவர்கிட்ட பேசுறதுக்கு எனக்கு தைரியமே வரலய்யா. என்னோட ஒட்டுமொத்த செயல்பாடுகளையுமே கேள்விக்குறியாக்குச்சு அந்த நிமிசம். நான் காந்திய புரிஞ்சுக்க தொடங்குனநாள் அன்னைக்குதான்ய்யா’ என கலங்கியகண்களோடு ஆழ்வார் சொல்லிமுடித்தார்.
யோசித்துப்பார்த்தால், அவ்வளவு மக்களை தொடர்ச்சியாகச் சென்று சந்தித்த ஆழ்வாரை, இத்தனை ஆண்டுகளாக அவர் திரட்டிவைத்திருந்த நம்பிக்கையை…ஒட்டுமொத்தமான ஒரு சுயபரிசோதனைக்கு உள்ளாக்கியது சுந்தர்லால் பகுகுணாவின் மெளனம்கலந்த செயல்பாடாகத்தான் இருந்திருக்கிறது. ஆக, தன்னை வருத்திக்கொள்வதும் பிறிதொன்றின் நலனுக்காக தன்னை ஒப்படைப்பதும்தான் தனித்தவொன்றாக உயிர்பெறுகிறது. சுயக்கீழ்மைகளை அறுத்தெறியும் ஒரு கூர்கத்தியை ஒவ்வொரும் தங்களுக்குள் தாங்களே அழுத்தவேண்டியுள்ளது. மானுடவிடுதலைக்கு இச்சுயசுத்தம் சாத்தியவாசலை திறக்கிறது.
அதன்பிறகு, சுந்தர்லால் பகுகுணா அய்யாவை சந்திக்க வேண்டுமென்பதும், அவர் காலலலைந்த இடங்களுக்குச் சென்றுவர வேண்டுமென்பதும், அவருடைய கண்படுதலோ கைத்தொடுதலோ கிடைத்துவிடாதா என்கிற ஏக்கத்தவிப்பும் தீவிரப்பாடும் எப்பொழுதும் இருந்தது. சிறிதுசிறிதான வெவ்வேறு காலகட்டங்களில் அதற்கான சூழ்நிலை அமையும்போதெல்லாம், ஒன்று அவர் உடல்நிலை குன்றிவிடும் இல்லையேல் நம்முடைய நிகழ்வாழ்வுப்போக்கு அதை திசைமாற்றி விட்டுவிடும். நற்சூழலின் கனிவென்பது எப்போதுமே காலங்கள் தள்ளித்தான் நிகழும் போல.
பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்பாக அலைபேசிக்கு ஒரு அழைப்பு. செரின் ஏஞ்சலாவிடமிருந்து. குக்கூவின் துவக்ககாலங்களின் அதன் உள்ளார்ந்த ஆன்மாவோடு பிணைந்திருந்து ஜீவனாக மாறிப்போன ஒரு உள்ளம் ‘செரீன் ஏஞ்சலா’. அழைப்பை எடுத்துப்பேச, ‘ அண்ணா, என்னன்னே தெரியல.திடீர்னு சுந்தர்லால் பகுகுணா அய்யாபத்தியே ஞாபகமா இருக்கு. நான் டெல்லி கிளம்பி போகப்போறேன்’ என் செரீன் சொன்னார். அன்றிரவே தும்பி புத்தகம், நூற்பு கைத்தறி சேலைகள், கிராமப்பெண்கள் தைத்த துவம் விதைப்பைகள், குக்கூ குழந்தைகள் செய்து நிழலில் உலர்ந்த களிமண்பொம்மைகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு குமரன் சென்னைக்கு கிளம்பிப்போய் செரீனிடம் ஒப்படைத்தார்.
நேற்று முன்தினம் (ஜனவரி 9) சுந்தர்லால் பகுகுணா அய்யாவுடைய பிறந்த தினம். அவருடைய பிறந்தநாள் அன்பளிப்பாக, அவரும் அவரது மனைவியும் உள்ள புகைப்படத்தை முகப்பாகத் தாங்கிவந்த தும்பி இதழ்கள் அவர் கைகளில் சேர்ந்திருக்கிறது. சுந்தர்லால் பகுகுணாவின் முதிய கைகள், தும்பி இதழை தொட்டுப்பார்க்கும் புகைப்படங்களை அங்கிருந்தபொழுதுகளிலேயே செரீன் நமக்கனுப்பியவுடன், வெறும் கண்ணீர் மட்டும்தான் எனது ஒற்றை பதிலீடாக இருந்தது.
குரல்வளையைத் தாண்டக்கூட வலுவில்லாமல் குரல்களுடைந்து நெஞ்சுக்குள் விழுந்தன. இரவெல்லாம் விம்மிக்கொண்டே இருந்தேன்.
தொடர்ந்து நிகழக்கூடிய விமர்சனக்கேள்விகளும், வெவ்வேறு பார்வைக்கோண ஊசியேற்றல்களும், செல்லும் இலக்கு குறித்த சுயத்தடுமாற்றங்களும் ஊடும்பாவுமாக உள்ளத்திலிருந்த நேரத்தில் ‘அப்படியெதுவும் இல்லை. தக்கதே இப்பாதை நீ செல்’ என்பதற்கான நிகழ்கால சாட்சியாகவே இந்த நிகழ்தலைக் காண்கிறோம்.
எல்லாக்கேள்விகளையும் தாண்டியும் நாங்கள் நம்பும் நிஜமொன்று இருக்கிறது. நடுநிசி இரவில் வலிப்புவந்து துடித்தழுகிற ஒரு குழந்தையின் கடைவாய் எச்சிலும் கண்ணோரத்துச் சுடுகண்ணீரும்தான் தும்பிக்கு உயிரூற்றுகிறது. அத்தகு குழந்தைகளின் நோய்மையைத் தீர்க்கிற ஒரு சொல்லை எப்படியாவது தேடியடையும் வாழ்நாள் வேட்கையை சுந்தர்லால் பகுகுணா அய்யாவின் இச்சாட்சியம் எங்களுக்குள் தந்திருக்கிறது.
செரீனிடம் சுந்தர்லால் பகுகுணா அய்யாவும் அவருடைய மனைவியும் ‘உன்னுடைய குழந்தையின் பெயர் என்ன?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு செரீன், சிப்கோ இயக்கம் முதன்முதலாக நிகழ்ந்த இமயமலைக்கிராமத்தின் பெயரை உச்சரித்திருக்கிறார் (ரெனி என நினைக்கிறேன்). கண்கள்மகிழச் சிரித்த சுந்தர்லால் பகுகுணா அய்யா, ‘ ஓ… அப்படியா, ரொம்ப மகிழ்ச்சி. நீ அவளையும் குக்கூ குழந்தைகளையும் கூட்டிட்டு வா. நாம அந்த கிராமத்துக்கு மீண்டும்போய்ட்டு வருவோம். அங்க இருக்க மரங்கள் கட்டியணச்சுட்டு திரும்புவோம்’ என தன் பாஷையில் சொல்லியிருக்கிறார்.
செரீன், அவருடைய குழந்தைகள், செரீனுடைய அம்மா, குமரன் என எல்லோரையும் கண்ணீர்மல்க கைகூப்புகிறோம். அனைத்துமான இவ்வான்வெளியை நோக்கி மனம்கசியும் பிரார்த்தனையொன்றை உள்ளத்துக்குள் உச்சரித்துக்கொள்கிறோம். கருவே, சினையாகி உயிர்பெறு. சுந்தர்லால் பகுகுணா அய்யா சொன்ன வார்த்தைகளையே மீண்டும்மீண்டும் நினைவேற்றிக்கொள்கிறோம்,
“ஒரு மரத்தினுடைய இலைகள் எல்லாமே தனித்தனியான பிரசவம் தான். அதற்கான பாரத்தோடும் அப்பாரத்தைத் தாங்கும் விதைகளைத்தான் அம்மரம் பிரசவிக்கிறது”.
கனியேந்திய முதுமரமாய் அன்பில் உயிரியங்கும் அந்த காந்தியவிழுதை தாழ்பணிகிறோம். இருளெல்லாம் யாரோ, ஒளி நீயே…
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
கதாநாயகி-14
நான் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதை நானே எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லை அதை வேறேதோ புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இல்லை அதே புத்தகத்தில் அதை படித்துக் கொண்டிருந்தேன். அதே புத்தகத்தில் அங்கிருந்துகொண்டு அதே புத்தகத்தைப் படிப்பதைப் படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்திற்குள் இருந்துகொண்டு வெளியே நான் படிப்பதை படித்துக் கொண்டிருந்தேன். அல்லது அந்தப் புத்தகத்திற்குள் இருந்து அதற்குள் அதே புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப்புத்தகத்திற்குள்ளும் அவ்வாறு படித்துக்கொண்டிருந்தேன். அதே புத்தகம்தான்.
The moment I was alone my spirits failed me; the exertion with which I had supported them had fatigued my mind; I flung away my work, and, leaning my arms on the table, gave way to a train of disagreeable reflections, which, bursting from the restraint that had smothered them, filled me with unusual sadness. எப்போதுமே கவனிக்கிறேன், நான் என்ன மனநிலையில் வாசிக்கிறேனோ அதுதான் புத்தகத்திலும் இருக்கிறது. அல்லது நான் அந்த வரிகளை வாசித்ததும் இயல்பாகவே அதற்கேற்ப என்னை மாற்றிக்கொள்கிறேன். அக்கணமே, அறியாமலேயே.
ஈவ்லினா எழுதிய கடிதம் அது. அவள் ஒரு மலைப்பங்களாவில் அமர்ந்திருந்தாள். மழை கொட்டத் தொடங்கியது. பாரஃபின் விளக்கின் ஒளியில் அந்த அறை துலங்கியது. வெளியே கூடாரங்கள் மழையின் சாட்டைகளால் அடிவாங்கி துடிதுடிப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். காற்றில் அந்த பாரஃபின் விளக்கு அசைந்தாடியது.அது அந்த அறையையே கப்பல் போல ஊசலாடச்செய்தது.
கர்னல் சாப்மான் பிராந்தியை சிறிது சிறிதாக உறிஞ்சிக்கொண்டிருந்தார். அவர் முன் அவள் அமர்ந்திருந்தாள். அக்காட்சியை நான் பார்த்தேன். தோளில் ஒரு சிவப்புக் கம்பிளிச்சால்வையை மேலோட்டமாக போர்த்தியிருந்தாள். அவள் ஒயின் அருந்தியிருந்தாலும் போதை ஏறவில்லை. கைகளால் தன் பொன்னிறமான கூந்தலிழையைப் பிடித்து சுருட்டிக்கொண்டிருந்தாள். அவள் நிலைகொள்ளாமலிருக்கும்போது எப்போதும் செய்வது அது.
அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் அதை கவிழ்க்கப்பட்ட கூடைபோன்ற மேடைமேல் வைத்துவிட்டு ஏப்பம் விட்டார். “என்ன நினைக்கிறாய்?” என்றார். “அருமையான இடம் இல்லையா?”
“ஆமாம்”என்று அவள் சொன்னாள்.
“இந்தவகையான தன்னுரைகள்தான் ஆங்கிலேயர்களாகிய நாம் உலக இலக்கியத்திற்கு அளித்த கொடை என்பது என் எண்ணம். இந்த ஆசிரியரை எனக்குத் தெரியாது. இந்த புத்தகத்தை நான் எடுப்பதற்கு ஒரே காரணம் இதன் கதைதான். விர்ஜீனியாவும் ஆப்பியஸும் நான் பள்ளியிலேயே படித்த கதை. நான் வெப்ஸ்டர் எழுதிய நாடகத்தை படித்திருக்கிறேன். இதை எங்கள் ராணுவப்பள்ளியில் நடித்தார்கள். பின்னாளில் பிரிட்டிஷ் ஜெனரல் ஆக பதவி வகித்த ஜான் லெஸ்லி பிரபு அதில் விர்ஜீனியஸாக அற்புதமாக நடித்தார். அவரை நீ கேள்விப்பட்டிருக்கலாம். பதினொன்றாவது ஏர்ல் ஆஃப் ரோத்ஸ் அவர்”
“கேள்விப்பட்டிருக்கிறேன்”என்று அவள் சொன்னாள்.
“அப்போது ஒரு விவாதம் நடந்தது. விர்ஜீனியா கொல்லப்பட்டிருக்க வேண்டுமா என்று. அந்த விவாதம் ரோம் காலகட்டத்தில் இருந்தே நடந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் அதில் உண்மையான ஒரு தத்துவப் பிரச்சினை உள்ளது. ஒரு பெண்ணைக் கொல்லலாமா, தந்தை தன் மகளைக் கொலைசெய்யலாமா, குடும்ப கௌரவம் என்பது தந்தைப்பாசத்தைவிட பெரியதா, ஒரு கொலை எப்படி பொதுவாக நம்மால் நியாயப்படுத்தப்படுகிறது—இப்படி பல கோணங்களில் அந்த விவாதம் நிகழும்.அதற்கு முடிவே இல்லை.” என்று கர்னல் சொன்னார்.
“ஆனால், அன்று நடந்த விவாதம் அப்படி அல்ல. ஜான் லெஸ்லீ ஆரம்பத்திலேயே ஒன்றை பேசி ,நிறுவி ,ஒதுக்கிவிட்டார். விர்ஜீனியா என்ற ஒன்றும் அறியாத கன்னிப்பெண் கொல்லப்பட்டிருக்கலாமா? அவர் சொன்னார், கொடி என்பது வெறும் துணிதான். அந்தத் துணியின் மதிப்பு என்பது அதன்பொருட்டு எத்தனைபேர் சாவதற்கு சித்தமாக இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான். எத்தனைபேர் அதைக் கைப்பற்றச் சித்தமாக இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் சாகிறவர்களின் எண்ணிக்கை முடிவாகிறது. பெண் நமது கொடி. அதன் மதிப்பை நாம் முடிவுசெய்வதில்லை, எதிரி முடிவுசெய்கிறான்”
“அன்று ஒலித்த கைத்தட்டலை நீ கேட்டிருக்கவேண்டும்” என்று கர்னல் சாப்மான் தொடர்ந்தார். “அதன்பின்புதான் அவர் உண்மையான சிக்கலை தொட்டுக் காட்டினார். அதை இப்படிச் சொல்கிறேன். கள்ளமின்மையின் அழிவு. அதிகாரம் அவ்வாறு பல கள்ளமின்மைகளை அழிக்காமல் கட்டி எழுப்பப்பட முடியாதது. போரில் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். ஒன்றுமறியாத கன்னிப்பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதைவிடக் கொடுமை, அழகான பச்சைவயல்கள் அழிகின்றன. தொன்மையான கட்டிடங்கள் சிதைகின்றன. அனைத்தையும் விட கள்ளமற்ற உற்சாகத்துடன் கிளம்பிச் செல்லும் நம்முடைய நீலக்கண் பையன்கள் களத்தில் சாகிறார்கள்”
“ஆம்”என்று அவள் சொன்னாள்.
“அதை பேச்சில் சொல்லலாம், ஆனால் மெய்யாகவே அதை களத்தில் காண்பது எளிதல்ல. பிறகு நான் பர்மாவில் அதை உணர்ந்தேன்.டெமோசாவில் ஒரு தாக்குதலுக்காக என் படையை அனுப்பினேன். அத்தனைபேரும் இருபதுக்குள் வயது கொண்டவர்கள். பெரிய மூக்கும், பருக்கள் கொண்ட முகமும், தொண்டைமுழையும், உடைந்த குரலும் கொண்ட நெட்டையன்கள். அவர்கள் அப்போது கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரே கூச்சல் கொண்டாட்டம். அப்போதுதான் தாய்லாந்திலிருந்து ஒரு படை வந்து எல்லைகளை சூறையாடும் செய்தி வந்தது”.
“எங்களிடம் இருந்த மொத்த படைவீரர்களே இருநூறுபேர்தான். ஆனால் அந்த ஊடுருவல்காரர்களை தடுக்காவிட்டால் அப்படியே ராணுவமுகாம் வரை வந்துவிடுவார்கள். அந்த முகாமை கைவிட்டுவிட்டால் மீண்டும் கைப்பற்றவே முடியாது, அத்தனை முக்கியமான இடம் அது. என்ன செய்வது? உதவிகோரி செய்தி அனுப்பினேன். உதவி வந்துசேர ஒருநாள் ஆகும். அது வரை போர் நடக்கவேண்டும். அனைவரையும் போருக்குச் செல்ல ஆணையிட்டேன். ஆணை பிறந்ததுமே சிரித்துக்கொண்டும் கொண்டாடிக்கொண்டும் கிளம்பிச் சென்றார்கள். ஒருவர் கூட மிஞ்சவில்லை” கர்னல் சொன்னார்.
”அன்று நான் ஒரு நாள் முழுக்க ஒன்றும் சாப்பிடவில்லை. நாலைந்துநாள் போதையிலேயே தூங்கினேன். அதைத்தான் முன்பு லண்டனில் ஜான் லெஸ்லீ பிரபு சொன்னார். கள்ளமின்மையை அழிக்க கைகள் தயங்கினால் நம்மால் அதிகாரத்தை அடையவே முடியாது என்று. பழைய கிரீஸில் தன் சொந்தக்குழந்தையையே ஆண்கள் கொல்லவேண்டியிருக்கும். குழந்தை ஊனமுற்றுப் பிறந்தால், கோழையாக வளர்ந்தால் கொன்றுவிடவேண்டும். சில சமயம் தெய்வங்களுக்கே குழந்தைகளைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும்” கர்னல் அவள் கண்களைப் பார்த்துக்கொண்டு சொன்னார். அவர் அந்த சொற்களால் அடித்துச் செல்லப்பட்டிருந்தார்.
”ஆப்ரிக்காவின் பழங்குடிகளிடம்கூட அந்த வழக்கம் இருந்தது அவர்கள் தங்கள் சொந்தக் குழந்தை ஒன்றை கொல்லவேண்டும். அதன்பிறகு எங்குமே அவர்களின் வாள் தயங்காது. ரோமில் மட்டுமல்ல பல நாடுகளிலும் போருக்குச் செல்வதற்கு முன்பே தோல்வி உறுதியென்று தெரிந்தால் மனைவிமக்களை கொன்றுவிட்டுக் கிளம்பும் வழக்கம் இருந்தது. அது ஓர் உறுதிப்பாடு. தயங்காமையைப்போல ஆற்றல் கொண்ட மனநிலை வேறு கிடையாது.”
அவர் குரல் உணர்வெழுச்சியுடன் கிசுகிசுப்பாக ஒலித்தது. ”கள்ளமின்மையை கொன்றுதான் நாம் உலகை வென்றுகொண்டிருக்கிறோம். கீழைநாடுகளில் எத்தனை பழங்குடிகளை அழித்தோம். ஆஸ்திரேலியாவையே அழித்தோம். தென்னமேரிக்காவின் பழங்குடிகளை முழுமையாக அழித்தோம். கள்ளமின்மையின் மேல் வாள் எழுந்துவிட்டதென்றால் அதன்பின் அவனை வெல்ல எவராலும் முடியாது.”
அவர் பேசிப்பேசி வேகமேறிச் சென்று அதற்குமேல் சொல்வதற்கு கருத்துக்கள் இல்லாமல் தடுமாறினார். மீண்டும் ஒரு கோப்பை மதுவை கலந்துகொண்டார். உறிஞ்சியபடிச் சொன்னார்.
“அதைத்தான் அன்று ஜான் லெஸ்லீ பிரபு அற்புதமாகச் சொன்னார். விர்ஜீனியாவின் கதை நம்மை கவர்வது அதிலிருக்கும் விர்ஜீனியஸின் அந்த தயக்கமின்மையால்தான். அது எழுப்பும் அடிப்படையான கேள்வியால்தான்… நான் அன்று அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.அவர் என்னை நினைவு வைத்திருந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விருந்தில் அவரைப் பார்த்ததும் விசாரித்தார்.அவர் மெய்யாகவே உயர்ந்த பண்புகள் கொண்ட பிரபு”
அவள் புன்னகை செய்தாள். அவள் அரைத்தூக்கத்தில் புன்னகைசெய்வதைப் போலிருந்தது. “நான் அதன்பின் இரண்டு நாடகங்களை பார்த்திருக்கிறேன். விர்ஜீனியாவும் ஆப்பியசும். எல்லாமே வெறும் வளவளப்புகள். ஆனால் இந்த நாடகம் ஆழமானது. மெய்யாகவே அடிப்படைப் பிரச்சினைகளை தொடுவது. இந்த ஆசிரியரை நான் கேள்விப்பட்டதே இல்லை. இந்தப் புத்தகத்தை வைத்துப் பார்த்தால் இது பெரிதாக ஏற்கப்பட்ட நாடகம் இல்லை”
”ஆமாம், அவரை எனக்கு தெரியும்” என்று அவள் சொன்னாள்
”இவரையா? இவர் பெயர் சாமுவேல் கிரிஸ்ப்”
“ஆமாம், ஒரு விருந்தில் பார்த்தேன். அவர் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் காவல்தேவதை போல. அப்பாவின் இடத்தில் இருந்தார். அவர்தான் அந்த பெண்ணை பயிற்சிகொடுத்து எழுத்தாளராக ஆக்கிக்கொண்டிருந்தார்”
“குரங்குகளுக்கு துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து ராணுவத்தை உருவாக்கலாமா என்று முன்பு ஜெனரல் ஹாமில்டன் முயற்சி செய்தார் என்பார்கள்” என்று கர்னல் சாப்மான் உரக்கச் சிரித்தார்.
அவளும் சிரித்தபடி “ஆனால் இந்நாடகம் கவனிக்கப்படவில்லை. ஆகவே அவர் கசப்பு நிறைந்தவராக இருந்தார்”என்றாள்.
“அது எப்போதுமே அப்படித்தான். உண்மையை லண்டனில் உயர்குடிப்பெண்கள் விரும்புவதில்லை. அவர்கள் பொய்யான கற்பனாவாதக் காதல்பேச்சுக்களையும் செயற்கையான நெகிழ்ச்சிகளையும்தான் விரும்புகிறார்கள். எப்போது எது கலை, எது இலக்கியம் என்று முடிவுசெய்பவர்களாக பெண்கள் ஆனார்களோ அப்போதே எல்லாம் அழிந்துவிட்டது. ஷேக்ஸ்பியர் இன்றிருந்தால் அவருடைய துன்பியல் நாடகங்களை பெண்கள் வெறுத்து வெளியே தெரியாமலாக்கியிருப்பார்கள்” என்று கர்னல் சாப்மான் சொன்னார். “பெண்களுக்கு அவர்கள் பேசும் வம்புகளையே எழுத்தில் வாசிக்க ஆசை… பேதைகள்”
அவள் அதேபோல புன்னகை செய்தாள், இயந்திரம்போன்ற கச்சிதமான பொய்யான புன்னகை.
“உன் கருத்தைச் சொல்” என்றார் சாப்மான். “நான் இங்கே வரும்போது இந்தப்புத்தகத்தை வேண்டுமென்றேதான் எடுத்துவந்தேன்” என்றார் கர்னல் சாப்மான். “ஏனென்றால் இதில் நீ ஏதோ சொல்வதற்கிருக்கிறது… ஆமாம், அது எனக்குத் தெரியும். நீ ஒன்று சொல்லவேண்டியிருக்கிறது”
But why should I allow myself to be humbled by a man who can suffer his reason to be thus abjectly debased.ஈவ்லினாவின் வரிகளா? அவை ஏன் என் தலைக்குள் ஒலிக்கின்றன. எதிர்பாராத கணத்தில் இயல்பான அசைவுபோல நீண்டுவந்து என் மார்பைப் பற்றிக் கசக்கி மீண்ட கை. புலி வந்து இரை கவ்வுவது போல. புலி தன்னை பூனையென ஆக்கிக்கொள்ளத் தெரிந்த விலங்கு.
முதல் அந்நியத் தொடுகை. அதிலிருந்தது வெறும் வேட்கை. வெறும் தசையாக என் உடலை மாற்றும் ஒன்று அந்த விரல்களில் இருந்தது. அந்தக் கையை எத்தனை முறை எத்தனை வகைகளில் பின்னர் அறிந்துவிட்டேன். கனவுகளில் மேலும் பலநூறுமுறை? நான் ஏன் என்னை சிறுமைசெய்துகொள்கிறேன்? என்னை அறுத்து எடைபோட்டு விற்கிறேனா? …when I am exalted by one who knows no vice, and scarcely a failing, but by hearsay?
”நல்ல படைப்பு” என்று அவள் சொன்னாள்.
அவர் எரிச்சலடைந்தார். “நான் உன்னிடம் கேட்பது அதையல்ல.ஓர் இலக்கிய படைப்பைப் பற்றி சொல்லவேண்டிய வரி அது அல்ல”
“பிறகு எது?” என்று அவள் கேட்டாள். அவளுடைய புன்னகை மீண்டும் இளமையும் கள்ளமின்மையும் கொண்டதாக ஆகியது.அவள் ஓர் ஆயுதத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டுவிட்டாள். பூமுள், ஆனால் நஞ்சு கொண்டது.
”தெரியவில்லை. ஆனால் வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல . நான் கேட்க விரும்புவது அதற்கப்பால் ஆழமான ஒன்று. உன் ஆத்மாவிலிருந்து வரும் ஒன்று. அது உன் சொற்களில் வெளிவரவேண்டும். அதைத்தான் நீ இங்கே சொல்லியிருக்கவேண்டும்” என்றார் கர்னல் சாப்மான்
அவள் “மெய்யாக சொல்லப் போனால் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை” என்றாள்
அவர் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவள் புன்னகையுடன் எழுந்துகொண்டு “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கர்னல் சாப்மான்?”என்றாள். “நான் என்னை விர்ஜீனியாவாக நினைத்துக் கொள்வேன் என்றா?”
அவர் நடுங்கும் கைகளைக் கோர்த்தபடி “அதெப்படி?” என்றார்.
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்று அவள் சொன்னாள்.
“ஏன்?” என்று கேட்டபோது அவர் முகம் அத்தனை கோணலாக வலிப்பு கொண்டிருந்தது. கீழ்பற்கள் வெளித்தெரிந்தன. சுருட்டுப் புகையால் கருமை படிந்த உதடுகள்.
“ஆனால் அத்தனை இளம்பெண்களும் அப்படித்தான் உண்ர்வார்கள். அதனாலென்ன?” என்று சொன்னபின் அவள் எழுந்து படுக்கைக்குச் சென்றாள்.
வெளியே மென்மழை தொடங்கியிருக்கலாம். ஓசை முழங்கியது. அரிக்கேன் விளக்கின் ஆடும் ஒளியில் அறை மிதந்தலைந்தது. நான் புத்தகத்தை தழைத்தேன். கண்களை மூடியபடி அமர்ந்திருந்தேன். கண்களை மூடினாலும் புத்தகம் அதேபோல எழுத்துக்களுடன் அப்படியே தெரிந்தது. அப்படியே படித்துச் செல்லமுடியும் என்று தோன்றியது. There has been company here all day, part of which I have spent most happily: for after tea, when the ladies played at cards, Lord Orville, who does not, and I, who cannot play, were consequently at our own disposal; and then his Lordship entered into a conversation with me, which lasted till supper-time.
அந்த வார்த்தைகள் புத்தகமோ காகிதமோ இல்லாமல் அப்படியே நின்றிருந்தன. அவற்றை அழிக்கவே முடியாது. நான் இல்லாவிட்டால்கூட அவை அப்படியே நின்றிருக்கும். தெளிவான செதுக்கப்பட்ட எழுத்துக்களுடன்.ஆங்கிலமா? ஆமாம் ஆங்கிலம்தான். ஆனால் நான் வாசித்தவை முழுக்க ஆங்கிலம் என்று சொல்லிவிடமுடியாது.நான் தமிழ் உரையாடல்களைத்தான் வாசித்ததாக நினைவில் இருந்தது. என்னுடன் அவள் பேசியவை எல்லாம் தமிழில்தான்.
என் முன் உடையின் அசைவை கேட்டேன். அருகே அவள் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். மிக அருகே, என்னைக் கூர்ந்து பார்த்தபடி.There has been company here all day.
நான் கண்களைத் திறக்கபோனேன். அவள் மிக மெல்ல “வேண்டாம்” என்றாள்
“யார்?”என்று நான் கேட்டேன். “ஹெலெனாவா?”
“இந்நாவலின் கதாநாயகி”
“அதுதான், யார்?”
“கண்களை திறக்கவேண்டாம்” என்று அவள் சொன்னாள். “என்னை கண்களால் பார்க்கமுடியாது”
நான் சற்றுநேரம் கழித்து “ஏன்?” என்றேன்.
“ஏனென்றால் என் இருப்பு மொழிவடிவத்தில்தான்.”
நான் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் “ஆனால் நீ என் மனப்பிரமையாக இருக்கலாமே?” என்றேன்.
”அப்படியென்றால் கைநீட்டி என்னை தொடலாம்”
“அப்படியா?”
”கை நீட்டுங்கள்”
நான் என் கையை மெல்ல நீட்டினேன். மிகமெல்ல, தயங்கி, மீண்டும் நகர்த்தி. என் கைமேல் ஒரு கைவிரல்நுனி பட்டது. நான் அது என் பிரமையா என்று எண்ணினேன். மீண்டும் கையை நீட்டி அந்த விரலை தொட்டேன். மனிதக் கை, வெப்பமும் உயிர்த்தன்மையும் கொண்ட கை.
சட்டென்று கண்களைத் திறந்தேன். எதிரில் எவருமில்லை. ஆனால் அப்போதும் கைகளில் அந்த தொடுவுணர்வு இருந்தது. நான் திகைத்து எழுந்துவிட்டேன்.
ஆனால் சற்றுநேரம் சிறிய நடுக்கத்துடன் நின்றுவிட்டு மீண்டும் அமர்ந்தேன். அந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். ஈவ்லினாவின் வரிகள் கண்ணுக்குப்ப் பட்டன. Almost insensibly have three days glided on since I wrote last, and so serenely, that, but for your absence, I could not have formed a wish. அந்த வரிகள் அப்படியே விசைகொண்டன. பின்னர் நான் அந்த வரிகளில் சென்றுகொண்டிருந்தேன். ஈவ்லினா இயல்பாக ஹெலெனாவாக மாறினாள்.
இன்று காலை நல்ல இருட்டிலேயே எழுப்பிவிட்டார்கள். நான் நேற்று தூங்க நெடுநேரமாகியது. எழுந்து பார்த்தபோது படுக்கையில் கர்னல் இல்லை. அவர் எழுந்து வெளியே அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார். சற்று அப்பால் மக்கின்ஸி தரையில் கால்மடித்து அமர்ந்து துப்பாக்கிகளை சரிபார்த்து குண்டுகளை பெல்ட்டில் அடுக்கிக் கொண்டிருந்தார். அவர் அருகே ஜான் ஃப்ரேசர் நின்று உதவினான். அவர்களைச் சுற்றி கருப்பர்களான வேலைக்காரர்கள் நிழல்கள் போல நடமாடினர்.
அவர்களில் இரண்டு பட்லர்கள் மட்டுமே மேலாடை அணிந்தவர்கள். மற்றவர்கள் கரிய வெற்றுடலில் இடுப்பில் மட்டும் வெள்ளை ஆடையை வரிந்து கால்சட்டை போல உடுத்தவர்கள். அழுக்கடைந்து மண்நிறமாக மாறிவிட்டிருத ஆடை. ஜான் ஃப்ரேசரும் காக்கி உடையில் இருந்தான்.
நான் கர்னலிடம் “குட்மார்னிங்”என்றேன்.
அவர் உற்சாகமாக “வெரி குட்மார்னிங்…நாம் இன்னும் அரைமணிநேரத்தில் கிளம்பவேண்டும். வெளிச்சம் எழும்போது நாம் அந்த மலையின் உச்சியில் இருக்கவேண்டும். அங்குதான் புலி இருப்பதாகச் சொன்னார்கள்” என்றார்.
ஜான் ஃப்ரேசர் நிமிர்ந்து என்னை பார்த்து மரியாதையாக தலைவணங்கிவிட்டு பார்வையை விலக்கிக் கொண்டான். இனி இந்த நாள் முழுக்க என்னுடன் பேசமாட்டான்.
மக்கின்சி என்னிடம் “இந்த ஆடைகள் அணிந்துகொள்ள எளியவை. உனக்கு டீ தரச் சொல்லியிருக்கிறேன். எதையும் சாப்பிடவேண்டாம். சாப்பாடு முழுக்க பெட்டிகளில் உள்ளது. காட்டிலேயே சாப்பிடலாம். நடந்து மேலேறினால் நன்றாகவே பசிக்கும்”என்றார்.
நான் வெளியே தட்டி வைத்து மறைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு அந்த கடினமான காக்கித்துணியாலான கால்சட்டையையும் சட்டையையும் அணிந்துகொண்டேன். முழங்கலவரை வரும் ஃபீல்ட் பூட்ஸுகள் அணிந்து வெளியே வந்தபோது என் நடையே மாறியிருந்தது.
அனைவரும் அப்போது தயாராகி முற்றத்தில் நின்றிருந்தனர். தோல்பைகளுடன் வேலையாட்கள் நின்றனர். வழிகாட்டியான பழங்குடி இளைஞன் இடுப்பில் ஒரு சிறிய ஆடை மட்டும் அணிந்து கையில் ஒரு முனைகூர்த்த கழி வைத்திருந்தான். வேறு ஆயுதம் ஏதுமில்லை.
“கிளம்புவோம்”என்று கர்னல் சொன்னார்.
வழிகாட்டி இளைஞன் முன்னால் சென்றான். அவனுக்குப்பின்னால் துப்பாக்கியுடன் இரண்டு படைவீரர்கள். அவர்களைத் தொடர்ந்து மக்கின்ஸியும் ஜான் ஃப்ரேசரும். கர்னலும் நானும் இணையாக நடந்தோம். எங்களுக்குப்பின்னால் மேலும் இரண்டு படைவீரர்கள். துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு மிகப்பின்னால் பொதிசுமப்பவர்கள். நீண்ட வரிசையாக நாங்கள் மலையில் ஏறிச்சென்றோம்.
இருபக்கமும் காடு இன்னமும் இரவின் ஒலியுடன் இருட்டாகச் சூழ்ந்திருந்தது. உள்ளே விதவிதமான விலங்கொலிகள் கேட்டன. தும்மல்போல ஒலிப்பது காட்டு ஆடின் ஓசை என்று கர்னல் என்னிடம் சொன்னார். இருட்டுக்குக் கண்பழகியபோது நான் மரங்களை தனித்தனியாகப் பார்த்தேன். இலைகளையும் அவற்றில் அமர்ந்திருந்த தவளைகளையும்கூடப் பார்க்கமுடிந்தது.
சற்றுநேரத்திலேயே நுரையீரல் உடையுமளவுக்கு மூச்சுவாங்க ஆரம்பித்தது. வாயால் மூச்சுவிட்டபடி நின்றேன்.
கர்னல் என்னிடம் “இளைப்பாற எளிதான வழி இது. இரு முழங்கால்களிலும் கைகளை ஊன்றி முன்னால்குனிந்து நின்று வாயால் ஆழமாக இழுத்து மூச்சை விடவேண்டும். உன் நுரையீரல் தொங்கியிருக்கவேண்டும், அதனால் அதிகமாக ஆக்ஸிஜனை இழுக்க முடியும்”
நான் குனிந்து நின்று மூச்சை இழுத்தேன். என் வியர்வையின் மணமும், மண்ணின் ஈரமணமும், சூழ்ந்திருந்த பச்சைத்தழைப்பின் மணமும் நுரையீரல்களை நிறைத்தன.
கர்னல் குரல் தாழ்த்தி “சற்று தொங்கவிடுவது உன் மார்பகங்களுக்கும் நல்லது”என்றார்.
நான் புன்னகைத்தேன். நாங்கள் மீண்டும் மலையில் ஏறிச்சென்றோம். மெல்லமெல்ல காடு வெளிச்சம் பெறத்தொடங்கியது. எப்போது விடிந்தது என்றே தெரியவில்லை. இலைகளில் வண்ணம் தோன்றியது. பறவையொலிகள் உச்சம் பெற்றன. நாங்கள் சென்ற பாதை முழுக்க தலைக்குமேல் மரங்களின் இலைகள் செறிந்து கூரையாக இருந்தன. அந்த இலைப்பரப்பின் இடைவெளிகள் வழியாக ஒளிச்சட்டங்கள் இறங்கி மண்ணில் ஊன்றிருந்தன.
எதிரே மலை எழுந்து வந்துகொண்டே இருந்தது. மடிப்பு மடிப்பாக விரியும் பச்சைநிற வெல்வெட்போல. மலைச்சரிவின் உச்சியில் ஒரு பாறை தெரிந்தது.
மெக்கின்ஸி திரும்பி “அது உண்மையில் இரண்டுபாறை. இரண்டுக்கும் நடுவில் நல்ல ஆழமான குகை உண்டு. அது ஒரு புலியின் தங்குமிடம்” என்றார்.
“அங்கே புலி இருக்கிறதா?”என்று கர்னல் கேட்டார்.
“அது பல இடங்களில் தங்கும்… இருக்கிறதா என்று தெரியவில்லை”
“இத்தனை ஓசைக்கு ஓடிவிடப் போகிறது” என்றார் கர்னல்.
“இந்தப் புலிகள் ஓடுவதில்லை. இங்கே எவரும் புலியை வேட்டையாடுவதில்லை. ஆகவே அவற்றுக்கு அச்சமென்பதே தெரியாது” என்று மெக்கின்ஸி சொன்னார்.
நாங்கள் அந்தக் குகையை அடைந்தோம். பழங்குடி இளைஞன் கிட்டத்தட்ட தரையோடு தரையாக உடல்வளைத்து மெல்ல நடந்தான். குகையை அணுகி உள்ளே பார்த்தபின் எழுந்து ’இல்லை’ என கைகாட்டினான்.
அதன்பின் தரையைக் கூர்ந்து பார்த்தான். தரையில் புலியின் பாதத்தடம் இருந்தது. அவன் ’இந்தத்திசையில் ’என்று சுட்டிக் காட்டினான். அங்கே அவன் மட்டுமே தெளிவாக தொடர்புறுத்தக் கூடியவனாக இருந்தான். உலகம் முழுக்க வேட்டைக்காரர்களின் மொழி ஒன்றுதான் போலும்.
நான் மீண்டும் காட்டின்மேல் ஆர்வம் கொண்டேன். அவர்கள் அந்தப்புலியை கொல்லக்கூடும் என்ற எண்ணமே வரவில்லை, அதைப் பார்க்கலாம் என்ற ஆவலே மிகுந்திருந்தது. மெக்கின்ஸி கைகாட்டி அத்தனை சுமையாட்களையும் அங்கேயே நிற்கும்படி ஆணையிட்டார். அவர்கள் பொதிகளை இறக்கி வைத்து பெருமூச்சுவிட்டார்கள். நான்கு படைவீரர்களும், நானும், கர்னலும் ,மெக்கின்சியும், ஃப்ரேசரும் மட்டும் பழங்குடி வழிகாட்டியை தொடர்ந்து சென்றோம்.
அந்த பாறையிலிருந்து மறுபக்கம் நிலம் சரிந்திறங்கிச் சென்றது. மிக ஆழத்தில் ஒர் ஓடையில் முடிந்து அங்கே மடிந்து மேலேறி இன்னொரு மலையாக மாறி எதிரே நின்றது. அதன் உச்சியில் வரிசையாக மரக்கூட்டங்கள். அதற்குமேல் வானம் மழைமேகங்கள் செறிந்ததாக தெரிந்தது. ஆனால் அந்த மேகங்கள் ஒளிகொண்டிருந்தன. சூரிய ஒளிவிழுந்த உறைபனிக்குவியல்கள் போல சாம்பல் படிந்து, விளிம்புகள் வெண்மை கொண்டு, படிகத்தன்மையுடன்…
பக்கவாட்டில் அந்த புலிப்பாதத் தடத்தை பழங்குடி இளைஞன் சுட்டிக்காட்டி சைகையால் ஏதோ சொன்னான். மிகமெல்ல காலடி வைத்து , எதுவும் பேசிக்கொள்ளாமல் நாங்கள் நடந்தோம். அடர்காட்டுக்குள் அதன் பின்னர்தான் ஊடுருவிச் சென்றோம். அது ஒரு பச்சைநுரைப்பரப்புக்குள் மூழ்கிச் செல்வது போலிருந்தது. அத்தனை பச்சை, அத்தனை தாவரச்செறிவு, அத்தனை உயிர்த்திரள். எங்கு பார்த்தாலும் தவளைகள், அட்டைகள், தாவும்புழுக்கள், நெளியும் புழுக்கள், வண்டுகள், பூச்சிகள். நூற்றுக்கணக்கான குளிர்ந்த நாக்குகள் போல பச்சை இலைகள் எங்கள் உடல்களை நக்கின.
மரங்களும் செடிகளும் கொடிகளும் பூசணங்களும் பெரணிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி முண்டியடித்து மேலெழெ முயன்றன. எழுந்து மேலே சென்ற மரங்களின் அடித்தடிகள் கோபுரங்கள் போலிருந்தன. அவற்றில் இடைவெளியில்லாமல் கொடிகள் படர்ந்திருந்தன. அவற்றுக்குள் சிறு பறவைகள். அத்தனை மரங்களும் பச்சை லினன் ஆடையை அணிந்திருப்பதுபோல பாசி மூடியிருந்தன. ரீ என்னும் ஒற்றை ஓசையால் காடு சூழ்ந்து திகழ்ந்துகொண்டிருந்தது. அது ஆர்கனின் c2 போல முடிவில்லாமல் சுருளவிழ்ந்து செல்லும் ஓசை.
பழங்குடி இளைஞன் நின்று புலி சென்ற திசையை கையால் சுட்டிக் காட்டினான். இப்போது அவன் தன் மூக்கையே பெரிதாக நம்பினான். புலி சென்றவழியில் சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்திருந்தது.அதை அவனால் முகர்ந்து தடம் அறிய முடிந்தது.
நின்று தண்ணீர் குடித்துக் கொண்டோம். எங்கள் தலைக்குமேல் பறவைகளின் ஓசைகள் நிறைந்திருந்தன. ஆனால் முதலடுக்கு தலைக்குமேலே உள்ள பச்சைக்கூரைக்கு மேலே அவை இருந்தமையால் பார்க்கமுடியவில்லை. காலடியோசையில் பல பறவைகள் எழுந்து பறந்தன. ஒளிரும் சிவப்புநிற வால்கொண்ட காட்டுக்கோழிகள், தவிட்டுநிறம் கொண்ட காகம் போன்ற ஒரு பறவை, தத்தி நடக்கும் ஒரு சிறுபறவை. நாலைந்து முயல்கள் வெண்பந்துகள் போல துள்ளி அப்பால் சென்றன.
ஆனால் மான்கள், ஆடுகள் எவற்றையும் நாங்கள் பார்க்கவில்லை. அவை புலியை முன்னரே உணர்ந்து பதுங்கியிருக்கக்கூடும். ஒரு பச்சைப்பாம்பை மிக அருகே கண்டு நின்றுவிட்டேன்.
கர்னல் “அது விஷமற்றது” என்றபின் தன் கத்தியால் அதை வெட்டி தள்ளினார். அதன் எஞ்சிய உடல் தரையில் விழுந்து வளைந்து நெளிந்து முறுகியது.
“மரக்கிளைகளில் கொடிபோலச் சுற்றியிருக்கும். உண்மையில் லூசிஃபர் இந்த வடிவில்தான் வந்தான்” என்றார்.
அது நகைச்சுவை என நான் புன்னகையால் ஏற்றுக்கொண்டேன்.
“லூசிஃபர் பெண்களைத்தான் எப்போதும் பின்தொடர்கிறான்” என்றார் கர்னல். நான் அதற்கும் புன்னகைத்தேன்.
வழிகாட்டி தரையைச் சுட்டிக்காட்டினான். யானைக்கூட்டம் ஒன்று சென்றிருந்தது. தரையில் சிதறிய யானைச்சாணி கிடந்தது. ஒரு வண்டி சென்றதுபோல சிதைந்து விலகிய புதர்கள் வழியாக அக்கூட்டம் சென்ற தடம் தெரிந்தது. அது நாங்கள் செல்லவேண்டிய திசை அல்ல.அதிலிருந்து வலப்பக்கமாக திரும்பி புலியின் தடம் தேடிச்சென்றோம்.
நான் கால்களை தூக்கித் தூக்கி வைக்க பயின்றுவிட்டேன். அது நடையை மேலும் எளிதாக்கியது. கொடிகள் சப்பாத்துகளில் சுற்றிக்கொள்ளவில்லை. ஆனால் வேர்களில் கால் படியாமல் தடுமாறவேண்டியிருந்தது. அந்தச் சப்பாத்தின் அடி மிகக் கனமானது, அகன்றது. ஆகவே விழவேண்டியதில்லை. என் நடை என் உள்ளத்தின் எண்ணங்களை மாற்றியது. என்னையே ஆண்மைகொண்டவளாக ஆக்கியது.அந்தக் காட்டிலும் நான் லண்டன் வரவேற்பறைகளுக்காக பழகிய ஒயில் நடையிலேயே அதுவரை வந்துகொண்டிருந்தேன் என்று நினைத்தபோது புன்னகை வந்தது.
மிகப்பெரிய பல்லி போன்ற ஒரு விலங்கு மரத்தில் கைகளாலும் கால்களாலும் கவ்வியபடி அமர்ந்திருந்தது. செதில்செதிலான உடல். முதலையின் சிறுவடிவம். அதன் இமைகள் சிமிட்டி மூடி திறந்தன. எங்கள் தலைக்குமேல் பூனை அளவிலான பெரிய அணில்கள் சில தாவிச்சென்றன. அவற்றின் வால்கள் தவிட்டுநிறத்தில் பூக்குலை போல மென்மயிர்ப் பிசிறலைக் கொண்டிருந்தன. ஒன்று அமர்ந்து எங்களைப் பார்த்தது.சிறிய நாய்க்குட்டி போன்ற முகம் கொண்டிருந்தது.
சட்டென்று ஒரு பிளிறலோசை கேட்டது. பழங்குடி இளைஞன் கைகளை அசைத்தபடி கூவிக்கொண்டு ஓடிவந்தான். புதர்களுக்குள் இருந்து மிக அருகே ஓர் யானை தோன்றியது. ஒரு செம்மண்குன்று போலிருந்தது அது. அதன் உடலெங்கும் மண், அதில் சிறு விதைகள் முளைத்துச் செடியாகியிருந்தன. மிகப்பெரிய தந்தம் மரத்தாலானதுபோலிருந்தது.
நான் சிலகணங்கள் பிரமைபிடித்தவளாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவருக்கும் துப்பாக்கி எடுக்க அவகாசமில்லை. கர்னல் “வா” என்று என் கையை பிடித்துக்கொண்டுஒரு பெரிய மரத்தை நோக்கி ஓடினார். படைவீரர்கள் வானை நோக்கிச் சுட்டார்கள். ஜான் ஃப்ரேசர் விசில் அடித்தபடி எதிர்த்திசையில் ஓடி யானைகளை திசைதிருப்பினான். மெக்கின்ஸி தன் ஃரைபிளுடன் பின்னோக்கி பாய்ந்து முழந்தாளிட்டு அமர்ந்து குறிபார்த்தார்.
வெடியின் ஓசையில் காடு முழங்கியது. மேலும் ஒரு பிளிறல் எழுந்தது. நான் வெறிபிடித்தவளைப்போல ஓடினேன். கர்னல் “அப்படி ஓடாதே, நில்” என்று என்னை நோக்கி கூவியபடி ஓடிவந்தார். இன்னொரு யானை பக்கவாட்டிலிருந்து எழுவதை நான் ஓரக்கண்ணால் கண்டேன்.
யானைகளைச் சுடாமல் வானைநோக்கி சுட்டபடியே அவற்றை திசை திருப்பி வீரர்கள் அங்குமிங்கும் ஓடினர். நான் பாய்ந்தொடிச் சென்றபோது நேர் எதிரில் யானை ஒன்றைக் கண்டேன். நின்று அலறி அப்படியே பக்கவாட்டில் திரும்பி பாய்ந்தபோது அங்கே என்ன இருக்கிறதென்றே உணரவில்லை. அது புதர்ப்பரப்பு. என் கால்கள் அமிழ்ந்தன. நீர்ப்படலம் போல அது என்னை உள்ளே விட்டது. என் கால்கள் அடியிலியை உணர்ந்து பதற, என் உடல் விரைப்பு கொண்டது.
நான் கீழே விழுந்தேன். மிகச்செங்குத்தான சரிவு. ஆனால் புதர்கள் மண்டியிருந்தமையால் நான் அவற்றில் தங்கி தங்கி விழுந்துகொண்டே இருந்தேன். நூற்றுக்கணக்கான கைகள் என்னை பந்து போல ஏந்தி ஏந்தி வீசுவதாகத் தோன்றியது.
“ஹெலெனா… இரு… அவசரப்படாதே… நான் வருகிறேன்” என்று சொல்லி கர்னல் பக்கத்து புதர்மேல் பாய்ந்தார். புதரிலிருந்து புதருக்கு தாவி என்னை தொடர்ந்து வந்தார்.
நான் விழுந்து விழுந்து கடைசியாக ஒரு கிளையில் தங்கி, அது வளைந்து என்னை உதிர்க்க, கீழே ஓடிய ஓடையில் சென்று விழுந்தேன். குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருந்தது. நீர்ப்புல்கள் சூழ்ந்த ஓடை. சேறு இல்லை. நீரில் இருந்து நான் எழுந்தபோது என் மேலிருந்து நீர்ப்பாம்பு ஒன்று உதிர்ந்து நீரில் நெளிந்தோடியது. நான் அலறியபடி ஓடையின் மறுபக்கம் ஏறிக்கொண்டேன்.
கர்னலும் வந்து ஓடையில் குதித்தார். நீரில் காலை இழுத்தபடி எழுந்து மேலே வந்தார். என்னிடம் ”அடி ஒன்றும் படவில்லையே?”என்றார்
எனக்குச் சிறிய சிராய்ப்புகள் அன்றி ஏதுமில்லை. முழங்கையில் இருந்து மட்டும் ரத்தம் வந்து நீரில் கரைந்து வழிந்துகொண்டிருந்தது. முழங்கால்கள் எரிந்தன. உடலெங்கும் புல்லும் இலைகளும் ஒட்டியிருந்தன. அவர் வந்து என் முகத்திலும் கைகளிலும் இருந்த புல்லை தட்டிவிட்டார்.
“நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை”என்றார்
”ஆமாம், அத்தனை ஆழத்துக்கு வந்திருக்கிறோம்”
“இங்கே சரிவுகள் எல்லாமே செடிகள் செறிந்தவை. மொட்டைப்பாறையாலான மலைவிளிம்புகள்தான் ஆபத்தானவை. விழுந்தபோது நீ பயப்படாமல் இருந்திருந்தால் ஏதாவது ஒரு செடியை பற்றிக்கொண்டிருக்க முடியும்”
“எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை”
“விலங்குகள் தாக்கும்போது அப்படி மிரண்டு தன் போக்கில் ஓடக்கூடாது. சமயங்களில் விலங்குகளின் முன்னாலேயே சென்று மாட்டிக்கொள்வோம். அங்கே அவர்கள் யானைகளை திசைதிருப்புவார்கள். நாம் வசதியாக ஒளிந்துகொண்டிருக்கலாம்” என்றார் கர்னல் சாப்மான்.
“என்னால் எதையுமே யோசிக்க முடியவில்லை” என்றேன். என் உடலெங்கும் ஏதோதோ எரிச்சல்கள், காந்தல்கள். கழுத்திலும் கன்னத்திலும் சிறுபூச்சிகள் ஒட்டியிருந்தன. வாயில் சிக்கிய சருகுத்துகள்களை துப்ப
கி.ரா- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
கி.ரா பற்றி அவர் மறைவுக்குப் பின் எழுதப்பட்டவற்றை வாசித்தேன். முகநூலில் பேசப்பட்டவற்றைப் பார்க்கையில் இப்படி தோன்றியது. பெரும்பாலான முகநூல்வாசிகள் இன்னொரு முகநூல் பதிவை மட்டும்தான் படிக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களை வெளிப்படையாக வாசிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை ரகசியமாக வாசிக்கிறார்கள். அவ்வளவுதான். இலக்கியம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் எதையும் தெரிந்துகொண்டிருப்பதில்லை. அடிப்படையாக பேசப்பட்டவற்றைப் பற்றியே தெரிந்துகொண்டிருப்பதில்லை.
கதைசொல்லி என்பதைப் பற்றி நிறைய விவாதம் நடந்திருக்கிறது. நெரேட்டர் என்பதற்குச் சமானமான வார்த்தையாக அதை அக்காலத்தில் உருவாக்கினார்கள். கதையாடல் – கதைசொல்லி. ஆனால் பின்னர் அந்தச் சொல்லுக்கு இன்னொரு வெர்ஷன் வந்தது. எடுத்துரைப்பாளர். அதை வேறு சில இடங்ககளுக்குப் பயன்படுத்தினார்கள். அந்த வார்த்தை பின்நவீனத்துவத்தில் முக்கியமானது. எழுத்தாளர், படைப்பாளி போன்ற வார்த்தைகள் சரியானது அல்ல என்பது அவர்களின் எண்ணம். எழுத்தாளர் என்றால் எழுத்துவடிவ இலக்கியம்- கலை ஆகியவற்றை ஒரு படி மேலே தூக்குவதாக ஆகிறது. அதோடு புனைவு எழுதுபவரை மட்டும் குறிப்பிடும் வார்த்தை அல்ல அது. போலீஸ்ரிப்போர்ட் எழுதுபவரும் எழுதுபவர்தான். அதேபோல படைப்பாளி. அதுவும் ஏற்புடையது அல்ல. படைப்பு என ஏதும் இல்லை. படைப்பு என்பது தொடர்ச்சிதான். முன்பிருந்ததின் மறு வடிவம்தான்.
நான் 1999 ல் கி.ராவை பார்த்தபோது இதைப்பற்றி பேசினேன். அவர் கதைசொல்லி என்ற இதழை நடத்திவந்தார். அவர் சொன்னார் கதைசொல்லிதான் சரியான வார்த்தை. எழுத்தாளன் என்று சொன்னால் தொல்காப்பியன், வான்மீகி ஆகியோரிடமிருந்து தொடங்கவேண்டும். கதைசொல்லி என்று சொன்னால் அதற்கும் முன்னாலுள்ள எல்லா கதைசொல்லிகளிடம் இருந்தும் நமக்கான பாரம்பரியம் தொடங்குகிறது என்று. நான் அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட் தன்னை bard என்றே சொல்லிக்கொண்டார் என்று அவரிடம் சொன்னேன். கதைசொல்லி என்ற சொல்லை மிக விரிவான அர்த்ததில்தான் இலக்கியவிமர்சனம் பயன்படுத்தியது.
ஆனால் எதையுமே தெரிந்துகொள்ளாமல் திடீரென்று தொடக்கத்திலிருந்தே ஒரு விமர்சனம் முகநூலில் ஆரம்பமாகியது திகைப்பாக இருந்தது. அதில் சாதிச்சாயம் பூசியதெல்லாம் அசட்டுத்தனத்தின் உச்சம். வண்ணநிலவன் எழுதினார் என்றால் அவர் என்றைக்குமே தமிழின் தீவிர இலக்கியத்தைச் சேர்ந்தவர் அல்ல. சுமாரான ஒரு எழுத்தாளர் அவர். அவர் வணிக எழுத்தின் பின்னால் போனவர். சிற்றிதழ்ச்சூழலில் என்ன நடக்கிறதென்றே தெரியாதவர். அந்த திகைப்பை அவ்வப்போது எழுதிவிடுபவர். இளைஞர்கள் எழுதியதுதான் ஆச்சரியம்.
1984 ல் நாஞ்சில்நாடனின் நாவல் [தலைகீழ் விகிதங்கள் என்று ஞாபகம்] பற்றி ஒரு விவாதம் வந்தது. அதை வட்டாரவழக்கு நாவல் என்று சொன்னார்கள். அப்போது பாளையங்கோட்டையில் நாட்டார் வழக்காற்றியல் மையம் அமைந்து நாட்டாரியல் பற்றிய பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தன. வட்டாரவழக்கு என்றால் என்ன நாட்டாரியல் என்றால் என்ன என்று பெரிய சர்ச்சை நடந்தது. அதில்தான் நாட்டாரியல் பற்றிய ஒரு தெளிவும் வந்தது. அதுவரை நாட்டாரியலைப் பார்த்துவந்த பார்வை மாறியது. அது ஒரு வேர்நிலம் என்ற எண்ணமும் அதன்மேல்தான் கிளாஸிக்குகளே நிலைகொள்கின்றன என்ற சிந்தனையும் வந்தது.
நாட்டாரியலில் ஒரு அம்சம் வட்டாரவழக்கு. வட்டார மனநிலையை அதுதான் காட்டமுடியும். ஆகவே அதெல்லாம் வட்டார வழக்கு நாவல்கள் அல்ல. அந்த வார்த்தை மையவழக்கு என்ற ஒன்றை வரையறைசெய்தபிறகு பிறவற்றை விளிம்புக்கு தள்ளுவது. ஆனால் அந்த மையவழக்குதான் சிறுபான்மையின் மொழி. பிறமொழிகள்தான் உண்மையான மொழிகள். அந்தப்பார்வைதான் நாட்டாரியல் எழுத்து என்ற கோணத்தை உருவாக்கியது. குளோட் லெவிஸ்ட்ராஸ் முதல் ஆலன் டண்டிஸ் வரை பல நாட்டாரியல் அறிஞர்கள் இங்கே பேசப்பட்டார்கள்.
நாட்டாரியலில்தான் ஒரு பண்பாட்டின் உண்மையான சிந்தனையும் அழகும் இருக்கமுடியும். செவ்வியல் என்பது ஆர்ட்டிக்குலேட்டட் ஆகவே இருக்கமுடியும். நாட்டாரியலில் நேரடியாகவே ஆர்க்கிடைப்புகள் இருக்கின்றன. அதன் ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றலை இலக்கியத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. அந்தப் பின்னணியில்தான் கோணங்கியின் கதைகள், உங்களுடைய படுகை, எஸ்.ராமகிருஷ்ணனின் காட்டின் உருவம் போன்ற கதைகள் எல்லாம் வந்தன. அந்தப்போக்கின் முன்னோடியாகவே கி.ரா கருதப்பட்டார் The Regional Is Universal என்ற வரி பிரபலமாக இருந்தது. அந்த பார்வையிலேயே கி.ராவை கரிசல் எழுத்தாளர் என்றார்கள். அந்த வரியை இணையத்தில் அடித்துப் பார்த்தாலே அந்த கான்செப்ட் முழுசாக தெரிந்துவிடும்.
நான் இருபத்தெட்டு ஆண்டுகள் ஒன்றும் படிக்கவில்லை. வேலைச்சுமை. இப்போது ஓய்வுபெற்றபின் இணையம் வழியாக படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் வம்புப்பேச்சாக ஆக்குவதும் அதைவைத்து கொஞ்சம் சண்டையும், அப்படியே அடுத்த விஷயத்துக்குப் போவதும் என்று அடுத்த தலைமுறை மாறியிருக்கிறது. அந்த கூட்டத்தில் புகுந்துகொண்டு மூத்த எழுத்தாளர்களும் அடையாளம் தேட முயல்கிறார்கள்.
எஸ்.கே.ராம்
அன்புமிக்க ஜெ,
நானும் சந்தோஷும் கி. ரா வை சந்திக்க சென்றோம்… அதை இங்கு எழுதியிருக்கிறேன்.
100 வயது இளைஞர்
தமிழ் நாட்டின் மிக மூத்த மனிதர், இந்தியாவின் மிக மூத்த எழுத்தாளர் சிந்தனையாளர் தமிழில் பண்டித எழுத்து இல்லாமல் சாதாரண மனிதர்கள் பேசும் வட்டார வழக்கிலேயே இலக்கியத்தைப் படைத்து அதன் வழியாக தன்னுடைய இருப்பை இருத்தி கொண்டவர். அதுவும் இலக்கியம் தான் என்று தமிழ் உலகிற்கு காட்டியவர். இலக்கிய உலகில் கடித இலக்கியம் என்ற ஒரு புது வகையை உருவாக்கியவர், நூற்றாண்டை தொட இருக்கும் கி.ரா வை சந்தித்த போதும்..
நானும் சந்தோஷ்ம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு டீக்கடையில் நின்று கொண்டு இருக்கும் போது தான் நான் அவனிடம் சொன்னேன், சந்தோஷ் கிரா வ பாக்க போனும் னு தோணுது, இளவெனில் ட ேபசிட்டேன்.
Address எல்லாம் வாங்கிட்டேன். எப்ப ேவனாலும் வரலாம் னு சொல்லிட்டார். எப்ப எப்படி போக னு யோசிட்டு இருக்கேன்.
அப்படியா, அந்த Address சொல்லு
நா No.10…..
ok, அப்ப ஞாயிற்றுக்கிழமை காலைல சீக்கிரம் போய்டுவோம். நீ ரெடியா இரு….
நா அவனிடம் ” ஏ நீ நெஞமா தான் சொல்றியா ” னு கேட்டேன்.
ஆமா 120 Km தான் வண்டிலே போய்டுவோம்..
அன்று காலையில் மிக அழகான சீதோஷனம், வெயிலே இல்லை. முழுவதும் சிறு சிறு தூரல் தான்.
நல்லா இருக்கிங்கலா ? கிரா என்று நாங்கள் விளித்த போது இருங்க இந்தா வரேன் என்று தன் மெலிந்த தேகத்தோடு, கையில் தடி கொண்டு எங்கள நோக்கி வரார். அவரின் சாய்ந்த நாற்காலியில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு…
என்ன கேட்டீங்க?
நல்லா இருக்கிங்களா, கிரா
இந்தா நானே சாப்பிட்ரேன், நடந்து வர்ரேன், உங்க முன்னாடி இப்படி கால நீட்டி உக்கார்ரேன். இதுக்கெல்லாம் நல்லா இல்லாம இருந்தா செய்ய முடியுமா? என்று முகம் முழுவதும் சிரித்துக் கொண்டே சொன்னார். எங்களுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நான் அவரிடம் வாங்கி வந்த சிகப்புக் கொய்யா பழங்களை தந்தேன்.
என்னது இது,
சிகப்புக் கொய்யா…
ஓ.. ஆனா ரொம்ப சிறுசா இருக்கு. இப்ப வர்ர பழங்கள் ல எல்லாம் மருந்து. பின்ன எப்படி பெருக்கும். கல்யாணம் ஆன உடனே குழந்தை பெத்துக்க முடியுமா, பத்து மாசம் பொருக்க வேண்டாமா…. என்றார் சிரித்துக் கொண்டே…
சாப்பிட்களோ .. ஏன்னா நா இப்பதான் சாப்டேன்,
சாப்பாடாச்சு……
“ராகங்களை ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணபெருமாள் ராமானுஜம்” இதுதான் உன் பேரு… என்றேன்.
அவர் சிரித்துக்கொண்டே பரவாயில்லையே…. ஆமா அதா என் முழு பேரு,
நாங்குநேரி வானமாமலை ஜீயர் தெரியுமா உங்களுக்கு அவரு என்னை இப்படித் தான் கூப்பிடுவார்….
பொதுவாக வைஷ்ணவர்கள் பெரும்பாலான பேரு, பெருசு பெருசா தான் வப்பாங்க….
எங்க குடும்பத்துல இராமானுஜர ரொம்ப பிடிக்கும் அதனால இராமானுசர் னு முடியிர மாதிரி பெயர் வைத்து இருக்கு எனக்கு….
அப்போ உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
என்ன! நம்பித் தான் பார்ப்போமே இப்ப என்ன வந்துச்சா…
வாழ்க்கையில் எதையாவது நம்பிக்கை நல்ல ஒரு பிடிமானம் வேண்டுமா இல்லையா, நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு னு எல்லாரும் சொல்றாங்க நாமளும் நம்பி ைவப்போம்…. கடவுள் இருக்கா இல்லையா அப்படின்னு எனக்கு தெரியாது… நீங்க பார்த்தீங்கன்னா புத்தர்ட்ட ஒருத்தன் இந்த கேள்விய கேட்டான். கடவுள் இருக்கிறாரா அவர் ஒண்ணுமே சொல்லல… பேசாம இருந்தார். புத்தரே கடவுள் இருக்காரா சொல்லுங்க… அவர் தியானத்தில் இருந்தார். ரொம்ப நேரமாச்சு. கடவுள் இருக்காறா இல்லையா இப்படி ஏதாவது சொல்லுங்க. அதுக்கு அவர் ஒண்ணுமே சொல்லல. கேட்டவன் பொறுமை இழந்து போய் விட்டான். இப்ப புத்தர் கண்ண தொறந்து போய்டானா…
சீடர்கள் எல்லாரும் ஏன் நீங்க பதிலே சொல்லல.. னு கேட்டாங்களா அதுக்கு அவர் தெருஞ்சா சொல்ல மாட்டேனா..
இப்ப அவன்ட இருக்கு அப்படி இப்படி சொல்லிட்டா காமிங்க அப்படிம்பான். சரி இல்ல அப்படின்னு சொல்லிட்டா எப்படி நீங்க இல்லைன்னு சொல்றீங்க அப்படிப்பான். எனக்கே தெரியல அவன்கிட்ட என்ன சொல்லிக்கிட்டு அதான் ஒன்னும் சொல்லல … அப்படின்னா ரா …. கேட்டேளா…. சிரித்துக் கொண்டே….
உங்களுக்கு இசை மேல ரொம்ப பிரியம் ல…
எனக்கு அது மேல பிரியம் தான் ஆனா அதுக்கு ஏன் மேல பிரியம் இல்லாம போச்சே எனக்கு பாடவே வராது….
விளாத்திகுளம் சாமிகள் தானே உங்க குரு ?
குரு தான் ஆனா நீங்க என்கிட்ட வந்து அவர்ட என்ன படிச்சிருக்க அப்படின்னு கேட்டா என எனக்கு தெரியாது நான் அவருட படிக்கவே இல்ல நான் எப்படி குருன்னு சொல்ல முடியும் மரியாதை, மிகப்பெரிய மரியாதை அவர் மேல எனக்கு இருக்கு ஒரு பெரிய ஆளு….
இங்க ஒருத்தர் இருந்தாரு அவரு ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டாரு அவர் பெயர் என்ன இப்ப ரொம்ப மறந்து போயிடுது…. என்ன அவர் பேரு ?
“மகாராஜபுரம் சந்தானம்” என்றேன்.
ஆ மகாராஜபுரம் சந்தானம் அவர்தான்…. அப்ப பெரிய ஆள் அவர். எங்க ஊருல சிலோன் ரேடியோ கேட்கும் நான் போய் ரேடியோ பக்கத்துல நின்னு கெடுக்க அப்ப எனக்கு ஒரு பதினேழு 20 வயசு இருக்கும் அப்படி பாடுவாரு தியாகராஜ கீர்த்தனை எல்லாம் அவருக்கு அத்துப்படி அவரை தில்லானா பாடுவாரு நான் அவரைப் பார்த்தது கிடையாது, ஆனா அவர் குரல் எனக்கு ரொம்ப பழக்கமாயிடுச்சு…..ரொம்ப நாளுக்கு அப்புறம் டிவி வந்தது. அதுலயும் சிலோன் சேனல் உண்டு. அப்போ ஒருத்தர் பாடிக்கிட்டு இருக்காரு….நான் கேட்கிறேன், யாருய்யா இவரு அப்படின்னு கேட்டா இவர்தான் சந்தானம் அப்படின்னாங்க. எனக்கு அதிர்ச்சியா போச்சு (சிரிப்பு)
இவர் எப்படி சந்தானமா இருப்பாறு.. ஆள் அப்படி ஒன்றும் சரியில்லையே.
ஆளு சரியில்லைன்னா சந்தானம் இவறு இல்ல னு ஆகிடும்மா? அப்படின்னாங்க.
எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஆளு என்ன இப்படி இருக்கார்… சரி தான் போ…விட்டுட்டேன். ஆனா பிரமாதமா பாடுவாரு….
அவரு கார்ல போய்டு இருக்கும் போது முன்னாடி ஒரு லாரில கம்பி நீட்டிட்டு இருந்தது. இவர் மேல குத்திருச்சு. அப்படியே செத்துப் போய்டார்….. அவர் பாடின தியாக ராஜ கீர்த்தனை எனக்கு பிடிக்கும்.
உங்களுக்கு பிடிச்ச கீர்த்தனை சொல்லுங்களேன்?
கீர்த்தனையா…. அப்படி எப்படி சொல்றது.
பஞ்ச ரத்ன கீர்த்தன ல கடைசி பாட்டு இருக்கே… அது ???
எந்த ரோ மாகானுபாவலு, .,, என்றேன்.
ஆ….. அந்த பாட்டு தான். அந்த பாட்டு பிடிக்கும். மரு கேலரா ஓ ராகவா ன்னு ஒரு பாட்டு மகாராஜபுரம் பாடியிருப்பார், அது என்னமோ ஒரு ராகமே?
ஜெயந்தி ஸ்ரீ ராகம் என்றேன்.
அந்த பாட்டு எனக்கு பிடிக்கும்.
இப்ப கேப்பீங்களா?
அப்ப அப்ப கேட்பேன்…. இந்த Whats app, facebook எல்லாம் படிக்கனும் னு ஆசை… அப்பப்ப பாபுட்ட கேப்பேன். (அவர் இளவெனில சொல்றார்)
காரு குறிச்சி நாதஸ்வரத்த நேர்ல கேட்டிருங்கங்களா ?
அவர்னா எனக்கு உசிரு…. எங்க வீட்டு பக்கத்து வீட்டு பெண்ண தான் அவரு கல்யாணம் முடுச்சுருக்கார். பெரிய ஆளு…
தஞ்சாவுர் இசை மட்டும் தான் எல்லாருக்கும் தெரிந்தது. அப்பயும் அப்படித்தான். அதுல இருந்து மாத்தி காரு குறிச்சி வந்தாரு. ரொம்ப பெரிய மேதை. கலைஞர் கருணாநிதி யோட அப்பா முத்துவேலர், அவரும் ஒரு இசை மேதை, அவர்ட்ட TNR லாம் படிச்சிருக்கார். அவர்ட்டயும் காரு குறிச்சி படிச்சார். அது ஒரு காலம். வானம் பார்த்த பூமில அப்பப்ப தூறலா அவர் இருந்தாரு.
நீங்க அவர் பாட்ட கேட்டிருக்கீங்களா? என்றார். youtube ல கேட்டிருக்கேன்…
இப்ப நீங்க என்ன எழுதிட்டு இருக்கீங்க?
நா மிச்சக் கதைகள் அப்படி னு எழுதிகிட்டு இருக்கேன். நா எழுதின பழைய கதைகள்ள சொல்லாதத இப்ப எழுதுரேன்.
நீங்க தான் வட்டார வழக்க மொதல்ல எழுதுனது?
ஆமா… அப்ப இதெல்லா ஒரு எழுத்தா அப்படின்னாங்க… இப்ப முன்னோடி ங்காறாங்க…. என்ன செய்ய. மொழி என்ன பெரிய மொழி. நானும் கு.அழகிரிசாமியும் பக்கது வீடு. ரெண்டு பேரும் தெலுங்கு. அவன் வீட்ல மோருக்கு வேற பேரு, எங்க வீட்ல வேற பேரு… அவன் தான் சொல்றது சரினு சொல்வான். நா நான் சொல்றது தான் சரினு நா ெசால்லுவேன். என்ன பெரிய மொழி… நா இங்க பல்கலை கழகம் வந்தபோது கூட பல பேரு இது வட்டார வழக்கு னு கூப்பாடு போட்டாங்க. இப்ப தூக்கி கொண்டாடுகிறாங்க….
கடித இலக்கியமும் நீங்க தான் அறிமுக படுத்தியது ?
நாங்க மொத்தம் எட்டு பேர். நா ஒரு நோட்ல கடிதம் எழுதுவேன். அத அழகிரிசாமிட்ட கொடுப்பேன். அவன் எழுதி தி.க.சி ட கொடுப்பான். அவரு சுந்தர ராமசாமிட்ட இப்படி ஒரு சுத்து… கடைசில ஏன்ட வரும். ஒரு செலவு இல்ல பாத்தீங்களா !!!
அரை நூற்றாண்டுக்கு மேல இடைசெவல் வாழ்க்க! இப்ப ஒரு முழுமையான நகர வாழ்க்க! எப்படி ?
அது ஒரு தினுசு இது ஒரு தினுசு ….. இடைசவல்ல இப்ப யாரு இருக்கா… எல்லா மாறிருச்சு… நா பாத்த வீடு இப்ப இல்ல… மனுச பயலுக இப்ப இல்ல. முக்கியமா அழகிரிசாமி இல்ல. ( முகம் சோர்வாகிறது, கொஞ்சம் மெளனம்) அவன் கடைசில யாரும் இல்லாம செத்தான். கையெல்லாம் சொறி மாதிரி வந்துருச்சு… ரொம்ப கஷ்டம் அப்பல்லாம், என்ன செய்ய வாழ்க்க பல பேத்துக்கு வித்தியாசப்படுது.
இன்னும் ஒங்களுக்கு சொல்ல, எழுத நிறையா இருக்கா?
ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு கத இருக்கு கேட்டேளா. எங்க ஊர்ல ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு நாள் இந்த நிலா சில நாள் வராம இருக்கு அது ஏன் தெரியுமா? அதுக்கு பின்னாடி ஒரு கத இருக்கு. இந்த ஊர்ல ஒரு கொடுமைக்கார மாமியா ஒருத்தி இருந்தா. அவ மருமகள விடிய விடிய வேல வாங்குவா. அதான் நிலா வெளிச்சம் இருக்குல டீ , வேல பாரு அப்படிம்பா. இந்த மருமகளால சுத்தமா முடியல. அப்ப இந்த நிலாட்ட இவ சொன்னாலா என்னன்னா, நீ தெனம் வர்ர தாலத்தான நா வேல பாக்க கிடக்கு. நீ வராம இருக்க மாட்டியா அப்படீனாள்ளா. ஒடனே அது மாசத்துல சில நாள் வராம ேபாய் ருச்சா…. (சிரிப்பு) இப்படி ஒரு கத அவேன் சொல்றான். இதுக்கு நம்ம என்ன சொல்ல முடியும்.
இப்படி எல்லார்ட்டயும் ஒரு கத இருக்கு.
அண்டரண்டபட்சி முடுச்சுச்சா ?
ஆமா. அவர் ப்ரபி என்று தன் பையனை அழச்சு அவங்களுக்கு கூடு. என்றார்.
வெளிநாட்டுல பைரன் ன்னு ஒரு கவிஞர் இருந்தாரு. அவரு ஒன்னு எழுதினாரு. அதை எழுதிட்டு பார்த்தார். இதை வெளியே விட்டால் அப்புறம் சண்டைக்கு வருவாங்க. ஆனா வெளியே விடணும்னு ஆசையா இருக்கு. என்ன பண்ண அப்படின்னு யோசிச்சிட்டு,இதை கையெழுத்துப் பிரதியாகவே கொடுத்துருவோம்.யார் யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு. இப்படியே கொடுத்துருவோம் னு அப்படியே கொடுத்தார். அதே மாதிரிதான் இதையும் கொடுக்கப் போறேன். இது புத்தகமா வராது. என் கையெழுத்து அப்படியே இருக்கும் யாராவது தேவை பட்டவங்க வந்து ஜெராக்ஸ் போட்டு வாங்கிடனும். இத வெளியை புத்தகமா வித்தா ரொம்ப பரபரப்பா விற்க்கும். ஏன்னா இதுல நான் சொன்னது காமத்தை பத்தி சொல்லி இருக்கேன்.ஆனா எனக்கு வெளியே விட வேண்டும் ஆசை இல்லை இப்படியே இருந்துட்டு போகட்டுமே இப்ப என்ன…
நான் அவர்ட்ட கடைசியில் ஒன்று கேட்டேன்.
கி.ரா உங்களுக்கு மரணத்தைப் பார்த்து பயம் இருக்கா?
இப்ப பாத்துக்கிட்டீங்கனா யமன் வர்ரான்னு வச்சுக்குவோம். நாம தீவிரமா ஏதாவது வேல பாத்துட்டு இருந்தோம் னா போய்ருவான். நா இப்ப எழுதிக் கிட்டு இருக்கேன். அதுனால வரமாட்டான். நா முடுச்சா வருவான். என்றார்.
ஒன்னு சொல்றேன் கல்யாணம் முடிக்காதீங்க. முக்கியமா கொழந்த பெத்துக்காதீங்க. பெரிய அலப்பற அது. இது என்னோட அனுபவம் கேட்டேளா!!! இதெல்லாம் சொன்னா சண்டைக்கு வருவாங்க. ரெண்டாவது பாலியல் சிக்கல பத்தி இதுல எழுதியிருக்கேன். படிச்சுட்டு பதில் கண்டிபா போடுங்க.
நாங்கள் கிழம்பும் போது “அப்புறம் வெளிய எங்கயும் சாப்டாதிங்க. ஒரு அவல் பாக்கேட், தண்ணி வச்சுக்கோங்க, கொஞ்சம் நாட்டு வெல்லம். போதும். அளவா சாப்டுடுங்க.
என்று எங்களுக்கு விடை கொடுத்தார்.
உங்களுக்குள்ள ஒரு குழந்த இருக்கு கிரா என்று சொன்னபோது, ஆமா அத நான் கொல்லாம இருக்கேன் என்று சிரிப்போடு சொன்னார். நாள் முழுவதும் கேலியும் கிண்டலும் சிரிப்புமாக நிறைந்து இருந்தது. வீட்டிற்கு வந்து தூங்கும் போது கடலைப் பார்த்து கால் நனைத்து சிளிர்த்த அனுபவம் எப்படி இருக்குமோ அப்படி நினைப்போடு கண் அயர்ந்தேன்,அந்த நாளை அர்த்தப் படுத்திய 100 வயது இளைஞன் நினைப்போடு……
(உடன் நண்பர்கள் சந்தோஷ், கவிஞர் திரைப்பட இயக்குனருமான சாம்ராஜ், விவேக், இதில் சாம்ராஜ் மற்றும் அவரது நண்பர் விவேக் எதிர்பாரா விதமாக வந்தார்கள். அவர்கள் சந்தித்துப் பேசியதும், அவர்களும் கி.ரா விடம் உரையாடியதும் மனம் நிறைவுகொள்கிறது)
(இது அவரோடு பேசியதில் இருந்து சுருக்கி எழுதியுள்ளேன்.)
உ. முத்துமாணிக்கம்
கி.ரா.அஞ்சலிகள்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

