Jeyamohan's Blog, page 980
May 25, 2021
ஞானமே இது பொய்யடா!
மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். எதற்காக நாம் மெய்ஞானம், ஆன்மிகம் பற்றிய பகடிகளை விரும்புகிறோம்? உண்மையில் அவற்றில் நம்பிக்கையில்லாத, அவற்றை அறியாத பெருங்கூட்டம் இவற்றுக்கு வருவ்தில்லை. இவை என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. பகடிகளும் புரியாது. இவற்றை விரும்பிப் படிப்பவர்கள், சிரிப்பவர்கள் மெய்த்தேடலில் இருப்பவர்கள்தான்.
மிக அந்தரங்கமான ஒன்று மிக தன்னுணர்வுடன் வெளிப்படுகையில் அது நமக்குக் கூச்சமளிக்கிறது. நிர்வாணமாக ஆவதன் கூச்சம் அது. ஆடையில் தீப்பற்றிக்கொண்டால் உடைகளை களைந்து நிர்வாணமாக ஆகிவிடுவோம். அதேபோல அந்தரங்கமான உணர்ச்சிகளையும், தேடல்களையும் நாம் சிலசமயம் அப்படியே வெளிப்படுத்திவிடவும்கூடும்.
“நீ சொன்னது சரிதான், முதல்ல கோட்டைய கட்டிட்டு அகழிய வெட்டியிருக்கணும்”
ஆனால் கொஞ்சம் தன்னுணர்வு வந்தால்கூட தயங்குகிறோம், கூசுகிறோம், குழம்பி முகம் சிவக்கிறோம். அப்போது நாம் செய்யும் ஒரே வழி அதை கொஞ்சம் பகடியாக ஆக்கிக் கொள்வதுதான். பகடி ஓர் ஆடைபோல ஆகிவிடுகிறது. அந்தரங்கத்தை மூடி மானத்தைக் காக்கிறது.
எண்ணிப்பாருங்கள், ஒரு காதலை திட்டமிட்டு யோசித்து வெளிப்படுத்தினோம் என்றால் அதில் நாம் கொஞ்சம் சுயபகடியும் கலந்துகொள்வோம். அதாவது அக்காதல் அந்தரங்கமான உணர்வு என்றால், அதை முன்வைப்பவர் நுண்ணுணர்வு கொண்டது என்றால். தன்னை, தன் காதலையேகூட பகடியாக ஆக்கிக்கொள்கிறோம்.
மறுபிறப்பு ஆராய்ச்சி சாலை மிதியடி. “மறுபடியும் வந்ததற்கு நல்வரவு”
பொதுவாக அறிவுஜீவி ஆண்களின் இயல்பு இது. ஆனால் பெண்களுக்கு நேரடியாக முன்வைப்பதே பிடித்திருக்கிறது. அதில் பகடி கலந்தால் பெண்களுக்கு அது பொய்யாக, ஒரு படி குறைவானதாக தோன்றுகிறது. தன்னையோ தன் உணர்ச்சிகளையோ கேலிசெய்வதாக எடுத்துக்கொள்வதுமுண்டு. கொஞ்சம் பகடி கலந்து சொல்பவர் மிகச்சூடான தோசைக்கல்லில் குளிர்நீர் தெளிப்பதுபோலத்தான் அதைச் செய்கிறார் என்று பெண்கள் புரிந்துகொள்வதில்லை.
ஆகவே அது இளைய தலைமுறையினருக்கு பரிந்துரைக்கத் தக்கது அல்ல. பழைய காலப் பெண்கள் கணவர்களின் எல்லா கொடுமைகளுக்கும் கொஞ்சம் இடம்கொடுப்பவர்கள். இன்றைய பெண்கள் ‘மோதிமிதித்துவிடு பாப்பா’ என்று பாரதி சொன்னதை தலைகொள்பவர்கள்.
எனக்குத் தெரிந்த மலையாள இயக்குநர் ஒருவர் மனைவியை காதல்செய்த நாட்களில் எழுதினார். “உன் நினைவை வருடிக்கொண்டிருக்கிறேன், அடுத்தபடியாகவே பிற வருடல்கள்”. மனைவி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின் அந்தப் பகடியை புரிந்துகொண்டு அதெப்படி எழுதப்போச்சு என்று ஒரே சண்டை. வயதுவந்த மகள்களுக்குத் தெரியாமல் அதை மறைக்க பெரிய பாடாகப் போய்விட்டது.
”ஸ்ஸ், இங்கபார். எனக்கு இதோ இப்ப ஞானம் வந்தது. இந்த தியானமெல்லாம் செம போர்”
பகடியை கலக்கவில்லை என்றால் அந்தரங்கத்தின் மேல் மூடும் ஆடை என்பது கவித்துவம். உயர்கவித்துவமோ பைங்கிளிக் கவித்துவமோ. பிரமிளோ தபூசங்கரோ. இரண்டுமே வெறும் திரைகள்தான். அவை அளிக்கும் இடைவெளி அல்லது விலக்கம் அந்த தீவிரத்தை நாம் கையாளுமளவுக்கு ஆக்கி நமக்கு அளிக்கிறது. முன்பு பிரமிளின் ஒரு கவிதையைப் பற்றி தேவதச்சன் பகடியாகச் சொன்னார். “மூவாயிரம் ஆண்டுகளா கவிதை எழுதியும் காமத்தை ஒண்ணுமே செய்யமுடியலை பாத்தீங்களா?”
ஆனால் வெறுமே கவித்துவத்தைக் கையாள்பவர்கள் கொஞ்சம் குறைவானவர்கள் என்பது என் எண்ணம். ஏனென்றால் கவித்துவமே அந்தரங்கமானது, அதை அப்பட்டமாக முன்வைப்பது கொஞ்சம் கூச்சமளிப்பது. பலசமயம் நாம் அந்தப்பக்கம் கவித்துவம் இந்தப்பக்கம் பகடி என இரண்டு பக்கமும் கும்கி யானைகளை நிறுத்தி அந்த காட்டுயானையை ஊருக்குள் கொண்டுவருகிறோம்.
”அகஅமைதியே, சீக்கிரம் வந்து தொலை. ஆயிரத்தெட்டு வேலை கெடக்கு”
தோப்பில் பாஸியின் தன் வரலாற்றில் என ஞாபகம். 1950 களில் ஒருவர் தன் கல்யாணப் பத்திரிகையை கொண்டுவந்து தோழரிடம் காட்டுகிறார். தோழர் முகம்சுளித்து சொன்னார். “இப்டி அச்சடிச்சு ஊர் ஊரா குடுக்கிறியே, வெக்கமா இல்ல?”
என்ன ஆச்சரியமென்றால் அழைப்பிதழ் அச்சிட்ட இளைஞர் கூசிச் சுருங்கிவிட்டார். அழுகை வந்துவிட்டது. அத்தனை அழைப்பிதழையும் கிழித்து வீசிவிட்டார். “ஏன் தோழர்?” என்று கேட்கப்பட்டபோது இளைஞர் சொன்னார் “சேச்சே, படு கேவலம். இத்தனாம் தேதி இன்னாருடன் படுக்கப் போறேன்னு நானே அச்சடிச்சு ஊர் பூரா பரப்பிட்டிருக்கேன். இப்பதான் தெரியுது”. அந்தப் பெண்ணிடமும் சொல்லியிருந்தார் என்றால் அவர் குடும்பத்தில் புரட்சி நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு- ஆயுதப்புரட்சி.
“உன்னைப்போல புத்திகெட்ட ஒருத்தனை பார்த்ததே இல்ல”
“ரொம்ப நன்றி மாஸ்டர்”
அதேபோலத்தான் ஞானத்தேடலும், அந்தரங்கமானது, வெளியே வெட்டவெளிச்சமாக வைத்தால் அபத்தமானது. ஆகவே அதை கொஞ்சம் அபத்தமாக ஆக்கி வெளியே வைத்தால் அவ்வளவு கூச்சமளிக்காததாக இருக்கும். presuppressed பாலங்கள் என்று பொறியியலில் சொல்வார்கள். அந்தப்பாலத்தின்மேல் எவ்வளவு எடை ஏறுமோ அதே எடை ஏற்கனவே ஏறியதாக எண்ணி வடிவமைக்கப்பட்டவை. ஆகவே எடை ஏறும்போது எடை இல்லை என்றே அவை கொள்கின்றன.
presuppressed என்பது இலக்கிய அழகியலிலும் உகந்த கொள்கை. படைப்பு, படைப்பாளி என இரு நிலையிலும். ஒரு படைப்புக்குமேல் இந்துத்துவ, பெண்ணிய, பெரியாரிய, மார்க்சிய, கலகிய misreaders என்னென்ன சொல்வார்கள் என ஊகித்து முன்னரே அதற்கான எதிர்வினையையும் படைப்பில் வைத்துவிட்டால் நீடித்து உழைக்கும். அதேபோல எழுத்தாளர் எஞ்சிய வாழ்நாளில் அடையப்போகும் அவமதிப்புகளுக்கெல்லாம் முன்னரே துன்புற்றுவிட்டு எழுத ஆரம்பித்தால் நோயெதிர்ப்புசக்தி வலுவாக இருக்கும். அனுபவ பாடம்.
“எதுக்குமே அர்த்தமில்லை”
”இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்”
[சூனியவாதமும் ஜென்னும்]
ஆனால் பகடியை ஜாக்ரதையாகச் சொல்லவேண்டும். என் மாமா ஒருத்தர் “ஞான் என்ற மலையாள வார்த்தையில் இருந்துதான் ஞானம் வந்தது. ஞான் ஞான் என்று நினைத்துக்கொண்டிருப்பது ஞானம்” என்று சீரியஸாக வாதிட்டார். அது அவருக்கு சரியாகப் பொருந்துவது. அவர் கோயிலுக்குப் போனால்கூட ‘குருவாயூரப்பன் கண்ட நான்’ என்ற அளவில்தான் வர்ணனை இருக்கும்.
ஆனால் அது கேரளத்தின் கீதைப்பேச்சாளர் ஒருவர் பகடியாகச் சொன்னது. தன்முனைப்பு எப்படி ஞானமாகக் கருதப்படுகிறது என்று அவர் சொல்ல இவர் அப்படியே எடுத்துக்கொண்டார். என் அண்ணா ஒருவர் அருகே நின்று “சுவாமிஜி literal ஆகச் சொன்னதை இவர் literature ஆக எடுத்துக்கொண்டார். literally பேசுவதுதானே literature?” என்றார். ’போச்சுடா’ என நினைத்துக்கொண்டேன்.
“அந்தப்பக்கம் வர என்ன வழி?”
“பிரதர் ஏற்கனவே நீங்க அந்தப்பக்கம்தான் இருக்கீங்க”
அப்படியே சாப்பிடுவேன் வகை மெய்ஞானத்தேடலின் ஆபத்துக்கள் பல. அந்தக்காலத்தில் பத்மநாபபுரத்தில் ஒரு பெரிசு “அகம் பிரம்மாஸ்மி, புறம் சிவாஸ்மி’ என்று சொல்லி டீக்கடையில் ஆவேசமாக விளக்கிக் கொண்டிருந்தது. அவருடைய குரு, முன்னாள் போலீஸ்காரர் சாமியாராக ஆனவர், சொன்ன பகடி அது.
நண்பர் கே.ஸி.நாராயணனிடம் அதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் “உலகத்திலுள்ள அத்தனை மதங்களும் literature ஐ literal ஆக எடுத்துக் கொண்டதனால் உருவானதுதானே என்றார். அதுவும் சரிதான். பகடி விடும்போது நாம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.
”தியானத்தில் எச்சொல் கடைசியாக எஞ்சுகிறதோ அதுவே மெய்ஞானம்”
ஒரு சாமியார் சொன்ன கதை இது. ஒருவர் விபச்சாரிகளிடம் செல்லும் வழக்கம் கொண்டவர். ஒரு சாமியாரிடம் அவர் வந்தார். சாமியார் அவருடைய விதைக்கொட்டைகளைச் சுட்டிச் சொன்னார். “எத்தனை நூறு விபச்சாரிகளைச் சுமந்துகொண்டு அலைகிறான் இவன், பாவம்” ஆசாமிக்கு முகம் வெளிறி கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
பகடிவிடுபவர்கள் பல மதங்களை, தியானமுறைகளை, தத்துவங்களை மதங்களை விதைகளாக கவனமில்லாமல் அங்குமிங்கும் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்ரதையாகத்தான் இருக்கவேண்டும்.
நவயுக புத்தர். ஞானத்துக்கான வழி ஃபேஸ்புக்கிலே சண்டை போடுறதுதான்
ஒரு கதை விவாதம்
அன்புள்ள ராதாகிருஷ்ணன்,
உங்கள் கதையை வாசித்தேன். பிரிவு
உங்கள் வாசிப்பில், எழுத்தில் வந்துகொண்டிருக்கும் வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகின்றன. உங்கள் கடுமையான உடலுழைப்புவேலையின் பின்னணியில் இருந்து இலக்கியத்திற்கும் எழுத்துக்கும் வருவதிலுள்ள இடர்கள் என்ன, அதன் தொலைவு என்ன என்று எனக்குத் தெரியும். ஆகவே இந்தக் கதை எனக்கு முக்கியமானது, ஒருவகையில் மகனை சான்றோன் எனக்கேட்ட தாயின் மனநிலையை அளிப்பது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் எழுதத்தொடங்கியிருப்பது மிக முக்கியமானது. வேறு எதற்காக இல்லையென்றாலும் உங்களுக்காக எழுதுங்கள். எழுத்து உங்களுக்கு அளிப்பவை பல. முதலில் உங்களுக்கு அது ஒரு பெரிய விடுதலையை அளிக்கும். உங்கள் அன்றாடத்தின் சலிப்பான இடைவெளிகளை எல்லாம் நிரப்பிவிடும். ஒவ்வொருநாளும் செய்வதற்கு ஏதாவது இருக்கும். மனிதன் வாழ்க்கையை கற்பனையால்தான் நிரப்பிக்கொள்ளமுடியும், யதார்த்தம் மிகச்சிறியது.
அடுத்தபடியாக வாழ்க்கையை நாம் தொகுத்துக்கொள்ள அதை கதையாக்குவது மிகமிக உதவியானது. நாம் வாழ்க்கையை அப்படியே, தனித்தனித் துணுக்குகளாகவே எடுத்துக்கொள்கிறோம். அன்றாட அர்த்தங்களையே அளிக்கிறோம். புனைவாக்கும்போதுதான் அதற்கு ஒரு கட்டமைப்பு உருவாகிறது. மையம் உருவாகிறது. அர்த்தம் உருவாகிறது – அர்த்தமின்மை என்பதுகூட நாம் வாழ்வுக்கு அளிக்கும் அர்த்தம்தான்.வாழ்க்கை பற்றிய தெளிவு அவ்வாறே அமைகிறது.
எழுதுபவர் செய்யவேண்டியது எழுதியபின் தன் எழுத்தை திரும்பத் திரும்பப் படிப்பது. அதை செப்பனிட்டுக்கொண்டே இருப்பது. முறையான கல்வியின்மையால் உங்கள் உரைநடையில் இலக்கணப்பிழைகள் உள்ளன. முன்பு நீங்கள் எனக்கு எழுதிய நீண்ட கடிதங்களில் பிழைகள் மலிந்திருக்கும். சொற்றொடர்த்தொடர்ச்சி இருக்காது. ஆனால் அது ஒரு பயிற்சி என அன்று உங்களிடம் சொன்னேன். இன்று அப்பயிற்சியின் பயன் தெரிகிறது.
இலக்கணப்பிழைகள் இன்னும் சில உள்ளன என்றாலும் உரைநடை ஒழுக்கும் நேர்த்தியும் உடையதாக உள்ளது. வாழ்த்துக்கள். அதை மேலும் செம்மைப்படுத்தவேண்டும். பிழைகளைக் களைந்தபடியே இருங்கள். எவரேனும் உங்கள் உரைநடையை சீர்ப்படுத்தி அளித்தால் அது என்ன என்று கற்றுக்கொள்ளுங்கள். அந்தப்பிழை பிறகு ஒருபோதும் நிகழலாகாது.
உதாரணம். “என் பணி சார்ந்து சொல்லாமல் விட்டுவிட்டேன். நான் பணி செய்வது பனியன் துணிக்கு வண்ண அச்சு ஏற்றித் தரும் தொழிற்கூடம், 20 பேர் வரை உள்ளோம்” நான் பணி செய்யுமிடம் பனியன் துணிக்கு வண்ண அச்சு ஏற்றித்தரும் தொழிற்கூடம் என இருக்கலாம். அல்லது நான் பணிசெய்வது பனியன் துணிக்கு வண்ண அச்சு ஏற்றித்தரும் தொழிற்கூடத்தில் என இருக்கலாம்.
இனி கதைக்குவருகிறேன். சிறுகதையின் வடிவம் என்பது எதைச் சொல்ல வருகிறோமோ அதையன்றி வேறுவிஷயங்களை நோக்கி வாசகனை திசைதிரும்ப விடாமல் முன்செல்வதாக இருக்கவேண்டும். ஏனென்றால் வாசகன் கூர்ந்து வாசிக்கிறான். அவனுடைய அந்தக் கவனத்தை நாம் வீணடிக்கக்கூடாது.
இந்தக்கதையில் கதைசொல்லியின் கதை எதற்கு? அவன் எங்கே வேலை செய்கிறான், அவன் முதலாளியம்மா யார், அவர்களின் பிரச்சினை என்ன என்பதெல்லாம் எதற்காக? அதை வாசகன் நினைவில் வைத்துக்கொண்டு கதையில் அதற்கு ஏதோ முக்கியமான பங்கு இருக்கப்போகிறது என்று நினைப்பான். அப்படி ஒரு பங்கு அதற்கு இல்லை. கதை வேறொரு பெண்மணியின் கதை. அப்போது அவனுக்கு ஏமாற்றம் வருகிறது. அவன் திசைதிருப்பப் படுகிறான், இல்லையா?ஆகவே அது வடிவப்பிழை.
கதை எவருடையதோ அவரை மையமாக முதன்மையாக அறிமுகம் செய்தபடி கதையைக் கொண்டுசெல்வதே தேவை. இது மாரியம்மாளின் கதை என்றால் நேரடியாக அவளிலேயே கதையை ஆரம்பித்திருக்கலாம். வாசகனுக்கு அவளை காட்டி, அவள் சொற்கள் வழியாக அவள் வாழ்க்கையைச் சொல்லியிருக்கலாம். கதைசொல்லி தன்னைப் பற்றி அவ்வளவு பெரிய அறிமுகம் அளித்திருக்கவேண்டிய தேவை இல்லை.
சிலசமயம் சில கதைகளில் கதைசொல்லியின் கருத்தும் பார்வைக்கோணமும் அக்கதைக்கு முக்கியமாக இருக்கும். அவன் அக்கதையில் ஏதோ ஒருவகையில் ஒரு பங்களிப்பாற்றுவான். உதாரணமாக இக்கதையில் கதைசொல்லி மாரியம்மாளின் மகனிடம் போய் பேசுகிறான் என்றால் கதைசொல்லியைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியது அவசியம்.ஆனால் கதையை அவனில் இருந்து தொடங்கினால் கதையே அவனுடையது என்று தோன்ற ஆரம்பிக்கும். அவனைப்பற்றி மிகக்குறைவாகவே சொல்லவேண்டும், கதையின் போக்கில் சொல்லிச் செல்லவேண்டும்.
மாரியம்மாளின் கதையை அவளே சொல்வதுபோல் அமைத்தால் அவள் மொழியிலெயே கதை விரியலாம். அவள் தன் மணவாழ்கை, தன் மகனின் மணவாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறாள்.
சிறுகதை வேறு, கதை வேறு. கதை என்பது ஒரு நிகழ்ச்சியையோ நிகழ்ச்சித்தொடரையோ சொல்லி அதன் முடிவாக ஒன்றைச் சொல்லி நிறுத்துவது. ஒரு நீதி, ஒரு கண்டடைதல் அதில் வரலாம். ஆனால் சிறுகதையில் அந்த முடிவு ஒரு திருப்பமாக, ஒரு விரிதலாகவே வரவேண்டும். வாசகன் எதிர்பாராமல் ஒன்று நிகழவேண்டும். அவன் அதுவரை வாசித்த கதை முடிவில் இருந்து சட்டென்று விரியவேண்டும்.
இந்தக்கதையில் மாரியம்மாளின் பேச்சினூடாக ஆசிரியர் கண்டடைந்த ஒரு கருத்து அல்லது உண்மை இருக்கிறது. ஆனால் அது திருப்பமாகவோ, விரிதலாகவோ வெளிப்படவில்லை.
இப்படி யோசித்துப் பாருங்கள். மாரியம்மாள் அவள் கணவனின் கதையையும் மருமகள் கதையையும் சொல்கிறாள். அப்போது அவள் கணவன் நோயுற்றிருக்கும் செய்தி வருகிறது. அவனை சேர்த்துக்கொள்ளும்படி கதைசொல்லி அவளிடம் சொல்கிறாள். முடியாது, அது தன் அம்மாவுக்கு எதிரான செயல்பாடு, வளையலை உடைத்து கணவனை முறித்துவிட்டவள் தன் அம்மா, அவள் ஆணையை மீறமாட்டேன் என்று மாரியம்மாள் சொல்கிறாள்
அந்த உறுதி கதைசொல்லியை வியக்கச் செய்கிறது. ஆகவே அவள் தன் மகனின் மனைவியைச் சேர்த்துக்கொள்ளவும் சம்மதிக்க மாட்டாள் என அவன் முடிவுசெய்துவிடுகிறான். ஆனால் நிகழ்வது நேர் எதிராக. மாரியம்மாள் மருமகளைச் சேர்த்துக்கொள்கிறாள். “நான் வாழவில்லை, மருமகளாவது வாழட்டும்” என்கிறாள். கதையில் இது திருப்பம். கூடவே இந்தக்கதையில் இதுவரை சொல்லப்படாத மாரியம்மாளின் ஆழத்து ஏக்கமும் வெளிப்படுகிறது. வாசகன் அதைநோக்கி விரியமுடியும்.இதுதான் சிறுகதையின் வடிவம்.
இன்னும் இரண்டு விஷயங்கள். ஒன்று, தவிர்க்கமுடியாத தேவை இருந்தாலொழிய எழுத்தாளனும் கதைசொல்லியும் ஒருவர்தானா என்ற எண்ணம் வாசகனுக்கு வரும்படி எழுதக்கூடாது. அது தேவையற்ற திசைதிரும்பல்
இரண்டு, ஒரு கதையை வெறுமே உரையாடலிலேயே முடிக்கக்கூடாது. கதையில் நிகழ்வுகள் முக்கியம். உண்மையில் கதை உரையாடலில் கேட்டதாகவே இருக்கலாம். ஆனால் அந்த மருமகள், மாரியம்மாளின் கணவர் இருவரையும் கதைசொல்லி சந்தித்திருக்கலாம். அது கதையை கண்முன் நிகழ்வதாக காட்டும். அது இலக்கியத்திற்கு முக்கியமானது
ஜெ
அன்னா கரீனினா – சுகதேவ்
அன்புள்ள ஜெ,
நலம் என்று நினைக்கிறேன், நானும் நலமே. இந்த ஊரடங்கு காலத்தில் ருஷ்ய இலக்கியம் படிக்க எண்ணி டால்ஸ்டாயின் அன்னா கரினீனாவை வாசிக்க தொடங்கினேன் அதை குறித்த என் வாசிப்பனுபவத்தை உங்களுடன் பகிர இந்த கடிதம்.
“அன்னா கரீனினா ” படித்துக் கொண்டு இருக்கும் போது பெரிதாக அதை குறித்து ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் முடித்து விட்டு அதை பற்றி உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணும் போது அதில் சொல்லிய பல சிக்கல்கள் இன்றும் இருக்கும் சிக்கல்களாக தான் இருக்கிறது என்று எனக்கு பட்டது.
அன்னா கரீனினாவை நான் இப்படி ஒரு கோணத்தில் இருத்து பார்க்கிறேன். அதாவது இது மூன்று பெண்களின் கதைகளாக. கிட்டி, அன்னா, டாலி மற்றும் அவர்களின் கணவர்களுடனான அவர்களின் உறவு சிக்கல்கலாக. எனக்கு இப்படி யோசிக்கும் போது அது வெண்முரசில் அம்பையிடம் அவளின் மூன்று பருவங்கள் வந்து உரையாடும் அத்தியாயம் நினைவுக்கு வந்தது அதை எடுத்து வாசித்தேன்.சுவர்ணை – குழந்தை பருவம், சோபை- இளமை பருவம், விருஷ்டி – ஒரு அன்னையின் தேவதையின் வடிவங்களாக வருகின்றன.
அன்னா கரீனினாவிலும் கிட்டியை ஒரு குழந்தை பருவத்து பெண்ணில் இருந்து ஒரு அன்னையாகும் ஒரு வளர்ச்சி கதையில் இருக்கும். ஆனால் அன்னா ஒரு அன்னை பருவத்தில் இருந்து ஒரு குழந்தை பருவத்துக்கு திரும்பி வரும் ஒரு வளர்ச்சி.ஆனால் டாலி மட்டும் தன் அன்னை என்ற ஒரு தகுதியில் இருத்துவிடுகிறவளாக தான் கதையில் இருக்கிறது.
முதலில் கிட்டி ஒரு குழந்தை பருவத்தில் இருந்து அவள் இளமை பருவத்திற்கு நகர்கிறாள்.விரான்ஸ்கியை காதலித்து அவள் அடையும் ஏமாற்றம் ஒரு குழந்தை தனக்கு பிடித்த ஒரு பொம்மையை வாங்க முடியாமல் போகும் அந்த ஒரு விரத்தியாக இருக்கிறது.அவளிடம் அந்த பொம்மையை பறிப்பவளாக அன்னா இருக்கிறாள்.
பின் கிட்டி மற்றும் லெவினின் காதல் அவள் அவனை மனதார விரும்பி திருமணம் செய்கிறார்கள் அவள் அன்னையாகிறாள்.
டாலி அன்னாவின் அண்ணனின் மனைவி. அவர்களிடம் ஏற்படும் சிக்கலுக்காக தான் அவர்களை சேர்த்து வைக்க அன்னா வருகிறாள். டாலி தன்னை கதை எங்கும் ஒரு அன்னை என்பதில் இருந்துவிடுவித்து கொள்ளவில்லை. தன் கணவனிடம் தன் மீது காதல் இல்லாததை உணர்ந்தும் அவனை விட்டு பிரியாமல் இருக்கிறாள். தன் குழந்தைகளுக்காக மட்டுமே அவள் வாழ்கிறாள். ஒரு இடத்தில் அவளுக்கும் அன்னா போல் தன் மண உறவை முறித்து தன் இளமை காலத்திற்கு திரும்பி மீண்டும் காதலிக்க ஏங்குகிறாள் ஆனால் அவளின் நிதர்சனம், தான் ஐந்து குழந்தைகளின் தாய் என்பது அவளை அனுமதிப்பது இல்லை. அவளை ஒரு தாய் என்ற இடத்தில் மட்டுமே எங்கும் பார்கிறோம். வெண்முரசின் அந்த அத்தியாயத்தில் ஒரு வரி ” இதயத்தின் சாறுகளான வேட்கை, விவேகம், ஞானம், என்னும் அற்பகுணங்களால் அலைக்கழிய விதிக்கப்பட்டவர்கள் ஆண்கள். கருப்பை என்னும் நங்கூரத்தால் ஆழக்கட்டப்பட்டவர்கள் பெண்கள்.”டாலிக்கு இந்த வரிகள் பொருந்தும்.
அன்னாவின் பாத்திரம் தான் மிகவும் சிக்கலான பாத்திரம். கிட்டி போல் இளமை – காதல் – அன்னை என்பதில் இருந்து விலகி. அவள் தன் இளமையில் காதலை அனுபவிக்கவில்லை தன் கணவன் கரீன்னிடம் காதல் இல்லாமல் தான் இருக்கிறாள்.ஒரு குழந்தைக்கு அன்னை ஆன பின் மீண்டும் அவள் தன் இளமையில் கிடைக்காத காதலில் திளைக்க ஏங்குகிறாள்.ஆனால் அவளால் தன் காதலையும் தன் அன்னை என்ற தகுதியையும் ஒரு சேர சமாளிக்க முடியாமல் ஆகிறாள். இறுதியில் தன்னை காதலியாக மட்டும் பாவித்துவாடுறாள்.பின் விரான்ஸ்கியுடன் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாலும் அவளால் மீண்டும் தாய் என்ற ஒரு நிலையை அடைய முடியவில்லை அவள் விரான்ஸ்கியிடம் அவனின் முழு காதல் மட்டுமே வேண்டும் என்கிறாள். அந்த காதலின் அதீத வெளிப்பாடக அவள் அவனை குற்ற உணர்வில் ஆழ்த்த தற்கொலை செய்கிறாள்.
கிட்டி தன்னை ஒரு பதற்றமான இளம் பெண்ணில் இருந்து அன்னையாக மாறும் அதே வேளையில் அன்னா தன்னை ஒரு தாய் என்ற இடத்தில் இருத்து ஒரு பதற்றமான பெண்ணாக மாற்றி கொள்கிறாள்.அந்த பதற்றமான நிலையின் வெளிப்பாடே அவளின் தற்கொலை.
கிட்டி மற்றும் அன்னா இருவரும் ஒரு இடத்தில் வேறு படுகிறார்கள். அன்னா, விரான்ஸ்கி,கரீனின் மூவரும் சந்திக்கும் ஓர் இடத்தில் கரீனின் அவர்களின் உரையாடலை வெகு இயல்பாக கடந்து போகிறான். ஆனால் கிட்டி, ஒரு இளைஞனிடம் பேசும் போது உடன் இருக்கும் லெவினால் நிலை கொள்ள முடியவில்லை அவளின் மேல் சந்தேகம் கொள்கிறான் பின் அவனை வீட்டைவிட்டு அனுப்புகிறான், தன் செயலுக்காக அவன் வருந்துகிறான்.லெவின் கிட்டி மீது உள்ள காதல் தன்னவள் மேல் அவன் கொள்ளும் அதீத காதலாக, வெளிப்படுகிறது.ஒரு வேளை அன்னா கரீனின் இடையே ஒரு அதீத காதல் இருந்திருந்தால் அவளுக்கும் விரான்ஸ்கி மேல் காதல் வந்து இருக்காதோ?
அன்னா கரீனினா பல சிக்கல்களை கொண்ட ஒரு படைப்பு.
நான் லெவினை பற்றி அவனின் செயல்கள் பற்றி, அப்போது இருந்த அரசியல் பற்றி ஏதும் இல்லாமல் மூன்று பெண்களின் கதையாக இதில் என் பார்வையை முன் வைக்கிறேன் உங்கள் பார்வைக்கு.
நன்றி,
சுகதேவ்.
மேட்டூர்.
இரா முருகனின் ‘ராமோஜியம்’ -கடலூர் சீனு
இரா முருகன் எழுதிய ராமோஜியம் ஒரு சமகாலவரலாற்று நாவல். 620 பக்க இந்த நாவலின் ஒன் லைனை சொல்லிவிட முடியும். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் பணியில் இருக்கும் ராமோஜிக்கும் அவன் மனைவி ரத்னாவுக்கும் இடையே வருகிறாள் சினிமா நடிகை புவனா. பிறகு என்ன நடந்தது? ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய இந்தக் கதையைத்தான் ஜென்ம ஜென்மமாக மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து மீண்டும் மீண்டும் ராமோஜி வாழும் வகைமையை இடையறாத மெல்லிய நகைச்சுயை பூசி முன்வைக்கும் நாவல்.
இந்த நாவலை எழுதும் பத்மநாப ராவின் மகனான இன்றைய மராட்டிய ராமோஜி 1937 இல் சர்க்கார் உத்யோகத்தில் சேர்ந்து, விட்டோபாவை நண்பனாக பெற்று, ரத்னாவை திருமணம் செய்து, சுதந்திராவைப் பெற்று, காமப் பிறழ்வில் புவனாவை சேர்ந்து, ஏமர்ஜன்சி காலத்தில் ஓய்வு பெற்று 1997 இல் லண்டனில் இயற்கை எய்துகிறார். இவர் எழுதும் இந்த ராமோஜியம் நாவலில் போன தலைமுறை பத்மநாப ராவ் மகன் ராமோஜி புதுவை துப்ளெக்ஸ் துறைக்கு, அனந்தரங்கம்பிள்ளைக்கு உதவியாக அரசு வேலையில் இருக்கிறான். அவன் வாழ்வில் குறுக்கிடும் விட்டோபா, ரத்னா புவனா இந்த ஜென்மத்தில் என்னவாக இருக்கிறார்கள், ராமோஜியை என்ன விதம் பாதிக்கிறார்கள் என்பது இவர்களுக்கும் முந்தைய தலைமுறை ராமோஜியில் இருந்து தொடர்வது.அந்த ராமோஜி சிவாஜியின் இரண்டாவது மகன் ஆளும் மகாராஷ்டிராவில், கடல்படை தளபதி கனோஜி ஆங்கிரே யின் முதன்மை தளபதி, அவன் வாழ்வில் குறுக்கே வரும் விட்டோபாவும் ரத்னாவும், புவனாவும் என்னவாக இருக்கிரார்கள் அவனை என்ன விதத்தில் பாதிக்கிறார்கள் என ராமோஜிக்களின் வாழ்க்கைகள் என விரியும் நாவல்.
மூன்று வெவ்வேறுகாலமும் அவை சித்தரிக்கும் நிலத்தையும், பேசும் மொழியையும் மிக குறைவான சித்தரிப்புகள் வழியே வாசகன் அந்த காலத்தில் வாழும் கற்பிதத்தை சுலபமாக உருவாக்கி விடுகிறார் இரா முருகன். குறிப்பாக பாண்டிச்சேரி ராமோஜி காலம்.
சின்ன சின்ன சித்தரிப்புகள் வழியே அந்த சூழலை விஸ்தாரமாக விவரிப்பதன் வழியே வசீகர காலப் பயணம் ஒன்றை நோக்கி வாசகனை தள்ளி விடுகிறார் நாவலாசிரியர். உதாரணமாக உலகப்போரில் சென்னையில் குண்டு விழப்போகும் பயத்தில், சர்க்கார் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, அதை பொது ஜனம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை, ராமோஜி பார்க்கும் a.r.p வார்டன் பணிக்கு வாசகனையும் உடன் அழைத்து செல்வது வழியே காட்டுகிறார்.
போர்க்கால ரேஷன்கள், அரசு செய்யும் அபத்தங்களை, மெல்லிய நகைச்சுவை இழைய சொல்லி செல்லும் நாவல், உண்மையாகவே ஜப்பான் குண்டு வந்து விழும் இரவில் வேறு உணர்வு நிலைகளை தொடுகிறது. யுத்த பயத்தில் சென்னை மொத்தத்தையும் சர்க்கார் காலி செய்து ஜாகை மாற்றும் அவதிகளை சொல்லிய படியே செல்லும் ஆசிரியர் போகிற போக்கில் அந்த சூழலில் ஒரு வெள்ளைக்காரன் ரிப்பன் பில்டிங் பின்னால் இருக்கும் மிருக காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் யானை புலி சிங்கம் அத்தனையையும் சுட்டே கொல்வதையும், சுட்டு தின்ன முடிந்த உயிர்களை சுட்டு தின்றதையும் சொல்லிச் செல்கிறார்.
அன்றைய சென்னையின் ட்ராம் பயணம், அன்றைய டில்லி என வித விதமான நிலங்களுக்கு பாயும் கதை மெல்லிய தீற்றல் சித்தரிப்புகள் வழியே அந்த காலத்தையும் இடத்தையும் கொண்டு வந்து விடுகிறது.
பக்கங்கள் தோறும் மெல்லிய வினோதத்துடன் கதாபாத்திரங்கள் அறிமுகமாகி அவ்வாறே நீடித்து வளர்ந்து மறைகிறார்கள். உதாரணமாக சினிமா ஆர்ட் டைரக்டர் சாஜுகாந்த் கனிட்கர் வீட்டுக்கு ராமோஜி முதல் முதலாக வரும் சித்திரம். கதவை திறந்தும் முதலில் முட்டி வெளியேறி ஓடுகிறது ஒரு கழுதைக் குட்டி, பின்னாலேயே அந்தரிடிச்சான் சாகிப் என பல்டி அடித்தபடியே வெளியேறுகிறான் கனிட்கரின் சின்ன வயது மகன். கனிட்கர் மனைவியை அறிமுகம் செய்கிறார். அவள் பெயர் குண்டி. (மராத்தியில் பூஜாடி என்று பொருள்). ராமோஜி முதலிரவில் தாபத்துடன் மனைவியை தழுவுகிறான். முக்கிய தருணத்தில் ‘கொஞ்சம் பொறுங்க’ என்றுவிட்டு ரத்னா தலையணைக்கு கீழே எதையோ தேடுகிறாள். கண்டெடுக்கிறாள். மூக்குப்பொடி டப்பி. கற்ற்ற்றர்…என்று ஒரு சிமிட்டா இழுத்து இரண்டு தும்மல் தும்மிவிட்டு ஆங் இப்போ தொடருங்கள் என்கிறாள். இப்படிப்பட்ட தருணங்கள் வழியாக மட்டுமே நகரும் நாவலில், முதன் முதலாக சர்க்கார் தேநீர் தமிழ் நாட்டுக்குள் நிலைபெற முயன்றது, அன்றைய சினிமா சூழல், உலக இந்திய அரசியல் சூழல், என விரிந்து ஒரு முழுமையான உலகத்தில் வாசகனை இறுத்துகிறது. ராமோஜி பார்வை நோக்கில் மட்டுமே நிகழும் ( ரத்னா இடையே புகுந்து இந்த அத்தியாயத்தை நான் எழுதுகிறேன் என்ற ஒரு அத்தியாயத்தை தவிர்த்தால்) இந்த நாவலின் ஓட்டத்தில் நக்சலைட் ஆக மாற குடும்பத்தை விட்டு போகும் கல்பனா, குடும்பத்தை விட்டு வெளியேற வழியே இன்றி முதிர் கன்னியாக வாழ்ந்து சாகும் கங்கா போன்ற துணை கதாபாத்திரங்களும் உண்டு.
அனைத்துக்கும் மேலாக இந்த நாவலை தனித்துவம் கொண்டதாக செய்வது இந்த நாவல் நெடுகிலும் அநேகமாக பக்கத்துக்கு ஒன்று வீதம் விவரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள். சூழ்திரு சிறுகதைக்கு இணையான சந்துஷ்டி அளிக்கும் சாப்பாட்டு வர்ணனை. கூறியது கூறல் இன்றி இத்தனை உண் பண்டங்கள் அடுக்க முடியும் என்பதே ஆச்சரியம்தான்.
இவற்றுக்கு வெளியே இந்த நாவலை எனக்கு அணுக்கமாக்கிய விஷயம் இதிலுள்ள சுகஜீவனம் எனும் அம்சம். தலைமுறைகள் தொடர்ந்தாலும் சரி, புவனா குறுக்கே போனாலும் சரி, தலைக்கு மேலே ஜப்பான் குண்டு போட்டாலும் சரி, இந்த வாழ்க்கை என்பது சுக ஜீவணம்தான் என்பதை இரா முருகன் இந்த நாவல் வழியே அடிக்கோடிடுகிறார். இந்த நாவலை போன வருட நோய்த் துயர் சூழலில் இரா முருகன் அவர்கள் எழுதியதாக தெரிகிறது. இதன் பொருட்டும் இந்த நாவல் முக்கியத்துவம் கொள்கிறது.
கடலூர் சீனு
கதாநாயகி- கடிதங்கள் 3
அன்புள்ள ஜெ
கதாநாயகி படித்து முடிப்பது ஒரு பெரிய சவாலான அனுபவம். ஒரே மூச்சில் படித்திருந்தால் திணறடித்திருக்கும். ஆனால் பகுதி பகுதியாக வாசிக்கும்போது கடைசியில் மொத்தமாக மனதுக்குள் திரட்டிக்கொண்டு அர்த்தம் எடுக்கவேண்டியிருந்தது.
பதினைந்து அத்தியாயம் கடக்கும்போது ஃப்ரான்ஸெஸ் பர்னியின் வாழ்க்கைக்குறிப்பில் இருக்கும் உள்ளோட்டங்கள் எல்லாம் மறந்துவிட்டன. அவள் இளமையில் அடைக்கலாமாக கிரிஸ்பை நாடியது, அவரை தாண்டிச்சென்றது, இலட்சியவாதத்தால் ஈர்க்கப்பட்டது, அதன் கடைசி எல்லையை கண்டபின் ஒரு சினிக் ஆக மாறியது, தன் பெண்மையின் அடையாளங்களை அவள் துறப்பது ஆகியவை முக்கியமானவை. அவற்றைக்கொண்டுதான் அந்த நாவலை புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் அது ஒரு டிஸ்டன்ஸ் பயாக்ரஃபி. அந்த வாழ்க்கை வரலாற்றில்தான் ஹெலெனா தன்னை பொருத்திக் கொள்கிறாள். அவள் அதில் இருவரையுமே காண்கிறாள். இருவரையுமே தொந்தரவுசெய்தது விர்ஜீனியாவின் கதை. அதையும் பார்க்கிறாள். அந்த மூன்றுகதைகளும் இணைந்துதான் அவளுடைய மனநிலையை தீர்மானிக்கின்றன.
இந்நாவலில் மிகக் கவனமாக வாசிக்கவேண்டிய பல இடங்கள் உள்ளன. அவை சுழன்றுசுழன்று வருகின்றன. விர்ஜீனியாவை அவள் அப்பா சந்தித்துப் பேசும் இடம், கிரிஸ்ப் அந்நாடகத்தை எழுதிவிட்டு ஃப்ரான்ஸெஸ் பர்னியிடம் பேசும் இடம், அந்நாடகத்தைப் பற்றி ஹெலெனாவிடம் கர்னல் சாப்மான் பேசும் இடம், மூன்று இடங்களும் ஒன்றுதான். ஒரே நிகழ்வின் சிறிய வேறுபாடுகள். சரித்திரம் முழுக்க நடிக்கப்படும் ஒரு விஷயம் அது. அதில் மூன்றுபேருமே எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது முக்கியம். மூவருமே ஒரேபோல எதிர்வினையாற்றுகிறார்கள். கிண்டலாகவும் அதேசமயம் புதிராகவும் இருக்கிறார்கள். மூன்றுவகையில் இருக்கிறார்கள். அந்த வேறுபாடு, ஒற்றுமைவழியாகவே இந்நாவலைப் புரிந்துகொள்ள முடியும்
ஸ்ரீனிவாஸ்
வணக்கம் ஜெ
அரிதாக சில கதைகள் நம் ஆழத்தைத் துருவி வெளியே எடுத்துவிடும். அப்போதுதான் நாம் அவற்றை விழிப்புணர்வுடன் கவனித்திருப்போம். இல்லாத ஒன்றை கதைகளால் துருவ முடியாது. ஏனெனில் கற்பனை அனைத்தும் உண்மையே. நம் ஆழத்தில் நாம் சேர்த்துவைத்திருக்கிற குரோதங்கள், இச்சைகள், ஏமாற்று வித்தை, பழி உணர்ச்சி யாவையும் கதைகள் நமக்குக் காட்டிவிடுகின்றன. பல நேரங்களில் நாம் அவைகளைக் கண்டு பதற்றமடைகிறோம். உண்மையில் பித்து நிலை என்று தனியே ஏதுமில்லை. நாம் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை சூழலுக்கு உதவாத/பொருந்தாத உளநிலைகளை நாம் கோளாறு என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். கற்பனை அளிக்கும் உளச்சிக்கல்களில் இருந்து விடுபட நாம் எதார்த்தத்தைப் பற்றுவது ஒரு சமநிலையை அளிக்கிறது.
கற்பனையை அளிக்கும் கலை, இலக்கியம் உள்ளிட்ட நாகரிக சமாச்சாரங்கள் கள்ளமின்மையின் அழகைச் சிதைத்துவிடுகின்றன. அக்கற்பனையே அனைத்து அதிகாரத்துக்கும், வன்முறைக்கும், ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் காரணமாகிறது. ‘ஞ‘ கோழி; ‘ஞா‘ குஞ்சுடன் இருக்கும் கோழி. ‘ட‘ நாற்காலி; ‘டா‘ மேசையுடன் இருக்கும் நாற்காலி…. கள்ளமின்மையின் ஞானமும் அழகும் இது. இதை நாம் அறிவையும் நாகரீகத்தையும் கொண்டு அழித்துவிடுகிறோம். நூலில் உள்ள ஏதாவது ஒரு வரி போதும். நம் அகத்தில் ஏதோவொன்றை அது தூண்டிவிடும். அதன்பிறகு நம் விருப்பப்படி அதை விரித்துக் கொள்வோம். கதைசொல்லியும் அவ்வாறே அடைகிறான்.
கதாநாயகி; கதாநாயகர்களே கிடையாது. அவளே அத்தனையையும் தீர்மானிக்கிறாள். ஆண்களை சவாரிக் குதிரைகளாக்கி அவள் வென்றுவிட்டாள். ஆண்களின் சிருஷ்டியாகக் கருதப்படும் அதிகாரக் கட்டமைப்பை அவள் ஆண்களின் கைகளைக் கொண்டே கட்டச் செய்தாள். தன்னைச் சுமப்பவனாகவும் காப்பவனாகவும் அவனை நிறுவிவிட்டாள். தமக்காக ஆண்களை மோதிக்கொள்ளச் செய்வதிலும் அவளுக்கு வெற்றியே. அவள் இது அனைத்தையும் அவள் உடலைக் கொண்டு செய்தாளா அல்லது அருவமான ஒன்றைக் கொண்டு செய்தாளா? எதுவாயினும் அதை ஆண்களால் முழுதாகப் பிடிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய அதிகார-ஆதிக்கக் கட்டமைப்பு, போர்கள், பொன், பொருள் என எதன்மூலமும் ஆண்கள் வெற்றியைப் பெற முடியவில்லை.
நாகரிக உலகின் கறைபடாத ஒருத்தி, நாகரிக சீமான்-சீமாட்டிகளின் அபத்த உலகினை அடைகிறாள். எண்ணற்ற சம்பிரதாயங்கள், ஆசாரங்களாலேயே மனிதன் தன்னை மேம்பட்டவனாக பாவனை செய்கிறான். இக்கதை நிகழும் களமும் அந்த அபத்த நாகரிக உலகில்தான். ஆண்கள் அதிகாரத்தையும் பெண்கள் ஏமாற்று வித்தையையும் கைகொள்கிறார்கள். விலங்குகளிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் தன்னை மேம்பட்டவனாகக் காண்பிக்க அவன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் அவ்வாறான அபத்தத்தைத் தோற்றுவிக்கின்றன. இது ஐரோப்பியச் சூழலில் தெளிவாகத் தெரிகிறது. தான் இயற்கையின் அதிபதி என்ற எண்ணம். அசிங்கமான ஆணாதிக்கத்தையும் அபத்தமான பெண்ணியத்தையும் உருவாக்குகிறது.
அதையும் தாண்டி இந்த ஆண்-பெண் மோதல் விளையாட்டு ரசிக்கும்படியாக உள்ளது. தனது உடல், மனம் , அழகு, கற்பு என அனைத்து கூழாங்கற்களையும் ஆண்களிடம் வைரங்களாக நம்பச் செய்துவிட்டாள். தந்தையும் கணவனும் மட்டுமல்ல, மகனும் அவளுக்குச் சவாரிக் குதிரைதான். அனைத்தையும் தனது ஆணவத்தின் பொருட்டே செய்கிறாள். அந்த ஆணவத்திற்கென்று தனியான கருத்தோ செயலோ கிடையாது. வாய்க்கும் சூழலுக்கேற்ப அதை பொருத்திக் கொள்ளமுடியும். உடலே அவளது ஆயுதம்; அழகே அவளது ஆணவம். தனது இச்சையின் பொருட்டும், ஆணவத்தின் பொருட்டும் அவள் கற்பையும் சாபத்தையும் உருவாக்கிக் கொண்டாள். கற்பு என்பது ஆண்களால் தயாரிக்கப்பட்டு பெண்கள் தலையில் சுமத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டே உள்ளது. ஆணுக்கு அதன் தேவை இருப்பதனால் அதைப் பயன்படுத்திக் கொண்டான். வெளிப்பார்வைக்குத் தெரியாத அவளது ஆணவம் அவளது மெல்லுணர்ச்சி. அதுவே ஆண்களைச் சீண்டும் விஷயம்.
தன்னை முழுமையாக வெளிப்படுத்தாத தன்மையுடன், ‘நான் உன் கையில் சிக்கமாட்டேன்’ என்று ஆணுக்கு அறைகூவல் விடுக்கிறாள். தான் ஒரு புதிர், ஒரு ரகசியம் என்பதே அவள் ஆணவத்தின் கச்சாப்பொருள். காதலிலும் காமத்திலும் தன்னை முழுமையாகக் காட்டிகொள்ளாத தன்மையை நன்கு பயின்றிருக்கிறாள். ஆண் தன்னை முழுமையாக அறிந்துவிட்டால், அது தன் தோல்வி என்று எண்ணுகிறாள். நம் உடலுறவின் உச்சத்தை ஆண்கள் அறிந்துவிடக் கூடாது என்று கற்பிக்கிறாள். ஒரு ஆணை பார்வையாளனாக அமரச் செய்து, அவனை நகரவிடாமல் கட்டிப்போட்டு, அவன் முன்னிலையில் இரண்டு பெண்கள் லெஸ்பியன் உறவு கொண்டால், அதை பார்க்கும் அந்த ஆண் ஏக்கமும், ஏமாற்றமும், வயிற்றெரிச்சலையும் அடைவான். அக்கணம் ஆணாய் இருப்பதன் போதாமையை உணர்வான். அப்போதாமையே அவனை வன்முறையாளனாய் ஆக்குகிறது. மேலும் மேலும் பெண்களை அடையத் தூண்டுகிறது. வெறும் உடல் மட்டும் போதாது. அவளின் மனமும் வேண்டும். இரண்டையும் முழுதாகக் கைப்பற்ற வேண்டும். இரண்டையும் தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று விழைகிறான். ஆனால் அவனால் முழுதாக வெல்ல முடியவில்லை. அவள் நழுவும் தந்திரத்தை ஒவ்வொரு கணமும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறாள்.
அவளும் சீண்டப்படும் இடம் ஒன்றுண்டு. அது அவளின் மன நிர்வாணம். அவள் உடல் நிர்வாணத்தை அஞ்சுவதில்லை. உண்மையில் பெண் தன் உடலை வெளிப்படுத்தவே விரும்புவாள். அது அவளது ஆயுதம் என்று உள்ளூர விழிப்புணர்வற்ற நிலையில் அறிந்து வைத்திருப்பாள். ஆணின் பார்வை தன் உடலைத் தொட வேண்டும். ஆனால் கைகள் தொட்டுவிடக் கூடாது. அப்படித் தொடவேண்டுமெனில் அவன் வாழ்வில் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். இந்த நுட்பமான விளையாட்டையே அவள் விளையாடுகிறாள். இந்த விளையாட்டை மீறும் ஆணை இன்னொரு ஆணைக்கொண்டே கழுவிலேற்றுவாள். பெண் தன்மையுள்ள ஆணே அவளை உண்மையில் அச்சுறுத்துகிறான்.
அழகு, கற்பு, மனம் என்ற அருவமான கூழாங்கற்களை மட்டுமல்லாது, பிள்ளை என்ற உருவ கூழாங்கல்லையும் ஆண் கையில் வைரமாக ஒப்படைத்துவிட்டாள். அவன் வாழ்நாள் முழுக்க அதை ‘வாரிசாக’ சுமப்பவனாகிறான். மனிதப் பரிணாமத்தில் இதுபோன்ற எண்ணற்ற வைரங்கள் உருவாகி விட்டன. இவ்வைரங்கள் இல்லையெனில் நாகரிகம் என்பதே இல்லை. விலங்குகளாகத்தான் இருக்க வேண்டும். விலங்குகளில் ஆண் இனத்தின் வேலை என்ன ? பெண் இனத்திடம் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ பிள்ளை வரம் அளிக்கும் சடங்கை முடித்துவிட்டு, துண்டை தோளில் போட்டுக்கொண்டு ‘வரட்டுமாடி கண்ணு…’ என்று கிளம்பிவிடுவதுதானே ! இந்த மனித ஆணுக்குத்தான் எவ்வளவு சுமை !
குமரித்துறைவி கதையும் இக்கதையும் ஒரு இடத்தில் தொட்டுக் கொள்கின்றன. ஒன்று பெண்ணிடம் சரணடைவது, இன்னொன்று அவளை அதிகாரம் செய்வது, வெல்வது. இந்த இரு தன்மைகளும் ஆணுக்குள் இருக்கின்றன. இந்தப் போராட்டத்திலேயே அவன் இருக்கிறான்.
எவ்வளவுதான் வாசித்தாலும் கற்பனையை விரித்துக் கொண்டாலும் இந்தப் பேய் உலகிற்கு முடிவே கிடையாது என்று எண்ணி, கதைசொல்லி எதார்த்த வாழ்விற்கு வந்துவிடுகிறான். மலைவாழ் மக்களுக்கு வாத்தியார் வேலை பார்க்கும் வாழ்வையே தேர்வு செய்கிறான். இனி இதுவே என் வாழ்க்கை என முடிவு செய்கிறான். கிட்டத்தட்ட பித்து தெளிந்த நிலை. இரவு, கனவு, கற்பனை, மனதின் காம குரோதம் என அனைத்தையும் கழுவிய நிலை. மனிதனின் தேவை என்ன ? பசியும் நோயும் சுரண்டலும் இல்லாத வாழ்வே என்ற எளிய (பிரம்மாண்ட) உண்மையை ஏற்றுக்கொள்கிறான். ஒரு உலுப்பு உலுக்கி எடுத்து பின்னர் லேசாகச் சிரித்து அமைதியாக அமரச் செய்த கதை.
விவேக் ராஜ்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
விர்ஜினியாவாக, ஃப்ரான்ஸெஸாக, ஃபேன்னியாக, ஹெலனாவாக, ஈவ்லினாவாக அந்த கானகத்தில் யக்ஷிகளென அந்தப் புத்தகத்தில் உலவுகின்றனர். மெய்யன் பிள்ளை புத்தகத்தின் உலகில் சென்று மனப்பிறழ்வு கொள்கிறார். மற்றவர்கள் உலகில் நல்ல ஆசிரியரென அமைகிறார். மனப்பிறழ்வு பொதுவாக நமக்கான தனித்த உலகமும் மற்றவர்களின் உலகில் நமக்கான இடமும் இணையும் புள்ளியில் உருவாகும் நிலை. அத்தகைய இணையும் புள்ளி வராத வரை அனைவரும் தெளிவானவர்களென்றே இச்சமூகத்திற்குத் தெரிவோம். ஒவ்வொருவருக்குமான தனித்த உலகில் விர்ஜினியா, ஈவ்லினா போன்ற கதாநாயகிகளும் கதாநாயகர்களும் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டு இருக்கின்றனர்.
அவர்களின் உரைகள் அந்த பிரேஸ்லெட்டைப் போல தவிர்த்து வீசப்படுகின்றன அல்லது கிளர்ச்சியில் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த 15 நாட்களும் அடர்வனமும் கோரனும் துப்பனுமென்றும், காலனிய உலகமென்றும் இருவேறு கற்பனைகளில் வீட்டுத்தனிமையுடன் பயணித்தேன். மெல்லிய உடல்சோர்வில் கதாநாயகி கலைடாஸ்கோப் மாய ஆடிகளையொத்த உணர்வை அளித்து சற்று ஆற்றுப்படுத்தியது. அத்துடன் இன்று instagramஇல் துளாவியபோது ஆதித்யாவால் வரையப்பட்ட இந்த ஓவியம் கிடைத்தது. விளையாடும் வேங்கையுடன் ஊஞ்சல் கட்டியாடுகிறாள் கதாநாயகி!
உங்கள்
வெண்பா
வெண்முரசு, ஆஸ்டின்- பதிவு
அன்பு ஜெயமோகன்,
மகள் அவள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய ஒரு போட்டியில் ஒரு குறும்படம் செய்து அனுப்ப அப்படம் மெல்ல மெல்ல பள்ளி, மாவட்டம் என முதலிடம் பெற்று முன்னேறி மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றது. அதற்காக ஒரு பரிசளிப்பு விழாவிற்காக ஆஸ்டினுக்கு மிக அருகே செல்ல வேண்டியிருந்தது. கோவிட் காலக் கட்டுப்பாடுகள் குறைந்து (நன்றி தடுப்பூசி) இயல்பு வாழ்க்கை எட்டிப்பார்க்கத் தொடங்கியதால் சற்றே நம்பிக்கைக் கொண்டு ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்குப்பின் குடும்பத்துடன் பயணித்தபோதுதான் வெண்முரசு ராலே திரையிடலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தயாரிப்பாளர் டெக்சாஸ்காரர் தான், கண்டிப்பாக இங்கே திரையிடுவார், கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று துண்டு போட்டு வைத்திருந்தேன் . மறுநாளே நம் தளத்தில் வெளியான ஆஸ்டின் அறிவிப்பைக் காட்டி அனுமதி வாங்கிவிட்டேன்.
இசையில் தொலைந்து கொலைக்குத் தலை கொடுத்த முன்னனுபவங்களினால் தனியான பயணங்களில் இளையராஜாவுக்குக் கண்டிப்பானத் தடை. மாற்றாக உங்கள் குறள் உரையுடன் மழைவிட்ட ஈர சாலையில் இனிமையாகத் தொடங்கியது பயணம். கூகுள் மேப்பில் திடீரென தோன்றிய நெரிசல் அறிவிப்பைக் கேட்டுக்கொண்டே ஒரு பாலத்தில் மேலேறியபோது ஒரு கருமேகக்கூட்டத்தைக் கண்டேன். ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே இருள் செறிந்து ஐம்பதடி தொலைவில் பெருமழை பெய்வதை அதற்கு வெளியிலிருந்து கண்டது நீண்ட நாள் நினைவிலிருக்கப்போகும் ஒரு பேரனுபவம்.
மழைக்குள் நுழைந்தது மட்டுமே நினைவில், மற்றபடி மணிக்கு நூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் மூன்று வரிசைகைளில் வாகனங்கள் விரையும் நீர் நிறைந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தின் பின்விளக்கு சற்றே மங்கலாகத் தெரிந்த பதினைந்து நிமிடங்கள் – செய்வதற்கு ஏதுமில்லை எனும்போது மாபெரும் களிப்பெழும் எனக் கண்டுகொண்ட தருணம். “அம்மா மீனாட்சி நீயே ஓட்டிக்க” என்று சொல்லிவிட்டு ஒரே சிரிப்பும் கொண்டாட்டமுமாக கழிந்தது. மழை குறைந்தும் அடுத்த இளைப்பாறும் இடத்தில் நிறுத்தி அங்கிருந்த மழைகழுவிய விரிந்த சோளக்கொல்லையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த போது பின்னால் வந்த ஒரு கறுப்புத் தாத்தா “யூ ஷுட் பீ எ பார்மர் பாக் ஹோம், ஆரின்ட் யூ? ” என்றார்.
டாலஸிலிருந்து மேலும் சிலரும் ஹியூஸ்டனிலிருந்தும் வந்திருந்தார்கள். கி.ராவுக்கு அஞ்சலியுடன் துவங்கிய விழாவில் இந்தப் படத்தின் தேவை குறித்தும் நோக்கம் குறித்தும் சௌந்தர் அவர்கள் விளக்கினார். பின்னர் படம் திரையிடப்பட்டது. என்னளவில் நோக்கம் நிறைவேறியதாகவே எண்ணுகிறேன்.
ஆசிரியர் யார், வெண்முரசின் இடம் என்ன, வாசகர்களிடம் அது ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு வாசிப்பு கோணங்கள், புது வாசகர்களுக்கு உதவும் குழு உரையாடல் தளம் மற்றும் அதன் தொடர் பங்களிப்பு, மரபு என்ற பெயரில் பழைமையை நோக்கி வெறித்தனமாக ஓடும் இக்காலத்தில் மரபை நவீன காலத்தில் நின்று நோக்கும் தன்மை போன்றவை அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தது.
பிரபலங்களும் வாசகர்களாகவே நின்று பேசியது ஒரு சிறப்புக்கூறு. பெயர்களாகவும் படங்களாகவுமே தெரிந்த கடலூர் சீனு, லோகமாதேவி, சுசித்ரா, ஸ்ரீனிவாசன் தம்பதியினர் ஆகியோரை திரையில் பார்த்தது மகிழ்ச்சி.
நீலம் பாடலும் இறுதியில் வந்த தீம் இசையும் இப்படத்தை வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றது. ஷண்முகவேலின் அருமையான ஓவியங்களை மாபெரும் இசைக்கோர்ப்புடன் பெரிய திரையில் கண்டது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவம்.
உங்கள் கடலோர நடை காட்சி “பொன்னொளிர்தடங்கள்” முன்னுரையை நினைவுபடுத்தியது. அருண்மொழி அவர்கள் “வியாசரின் ஆசி என்றும் என் ஜெயனுக்கு உண்டு” என்று சொல்லி சிரிக்கும் இடம் ஒரு குட்டிக் கவிதை.
இந்த சிறப்பான ஆக்கத்தில் பங்குபெற்ற அனைவரும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.
என்றும் நல்லனுபவங்களையே தரும் உங்களுக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்
May 24, 2021
’ஆப்’
”வைஃபை பாஸ்வேர்டா? ’தின்னுட்டுகிளம்பிப்போடா’ எல்லாம் ஸ்மால் லெட்டர்ஸ்”
இதழியல் நண்பர் ஒருவர் சொன்னார். ”மலையாள மனோரமா நாளிதழுக்கு ஒரு சாஃப்ட்வேர் தயாரிக்கிறார்கள். நூறாண்டுகால மலையாள மனோரமாவின் செய்திகளைக்கொண்டு அதை ஓர் ஆப் ஆக மாற்றுகிறார்கள். இணையத்தில் மனோரமாவுக்கு உகந்த டேட்டாக்களை அதுவே தேடி தன்னைத்தானே ஃபீட் பண்ணிக்கொண்டு அதுவே செய்தித்தாளின் பக்கங்களாக படங்களுடன் காட்டும். அதை தயாரித்தபின் அத்தனை செய்தி ஆசிரியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்”
மெய்யான சோகநடிப்புடன் அவர் சொல்ல, நான் நம்பிவிட்டேன்.வாய்பிளந்து அங்கே ஸ்மால் அடித்துக்கொண்டிருந்தவர்ளைப் பார்த்தேன். [கேரளத்தில் இவர்களுக்கு தும்பைப்பூ என்று பெயர். கொஞ்சமே மணம்கொண்ட சின்னபூக்கள். லிட்டில்ஃப்ளவர் கான்வெண்டுகளில் இருந்து இந்தப் பழக்கம் வந்தது என்பதனால் என்றும் ஒரு பாடம் உண்டு] 
”அதுக்குபேருதான் புத்தகம் வாசிக்கிறது. அந்தக்காலத்திலே அப்டித்தான் மூளையிலே புதிய சாஃப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணிக்கிட்டாங்க.”
இன்னொரு இதழியல் நண்பர் [அவர் தும்பை அல்ல தாமரை. சதா நீரில் மிதப்பதனால். தண்ணீரிலே தாமரைப்பூ, தள்ளாடுதே அலைகளிலே என இதை கவிஞர் பாடியிருக்கிறார்] மேலும் சோகமாக “அப்படி ஒரு சாஃப்ட்வேர் வந்தால் அதை அப்படியே காங்கிரஸ் கட்சியும் பயன்படுத்திக்கொள்ளலாம். நாளாந்த அரசியலறிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் எல்லாமே ஆட்டமாட்டிக் ஆகிவிடும்”
அதன்பிறகுதான் பகடி என தெரிந்து மையமாகப் புன்னகைசெய்து வைத்தேன். கவிதைக்கெல்லாம் தமிழில் சாஃப்ட்வேர் இருப்பது சிலருடைய கவிதைகள் வழியாக நான் ஏற்கனவே ஊகித்ததுதான். இந்நாளில் எதுவும் சாத்தியம். சொற்களை கவிதையாக ஆக்கும் ஒரு சாப்ட்வேர் பரவலானால் அது மிக அபாயகரமானது. அதை தீவிரவாதக்குழு ஒன்று கைப்பற்றி உலகிலுள்ள மொத்த மொழியையும் கவிதையாக ஆக்கிவிட்டதென்றால் என்ன ஆகும்? பொருள்மயக்கம், புரிதல்பிரச்சினை, போர்கள், பேரழிவு! ஓர் அற்புதமான அறிவியல்நாவலுக்கான கரு.
”புதிய சாஃப்ட்வேருக்கு இணையா நான் என் மூளையை அப்டேட் பண்ணிக்கிடணுமாம். இல்லேன்னா வேலைசெய்யாதாம்”
தொழில்நுட்பம் பற்றிய காமெடிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. பாதிக் காமெடிகள் தொழில்நுட்பர்களுக்கு மட்டும் புரிபவை. எஞ்சியவற்றில் பெரும்பகுதி சில பொது ‘டெம்ப்ளேட்’கள் கொண்டவை. மௌஸ், வின்டோஸ், கிளவுட் போன்ற கணினித்துறைச் சொற்களை நேரடியாக எடுத்துக்கொண்டு குழம்புவதுதான் நகைச்சுவைகளில் பெரும்பகுதி. கணித்துறையின் நவீனமயமாக்கலுடன் இணைய முடியாது குழம்பும் சாமானியர்களின் திகைப்பு இரண்டாம்வகையானது.
கடவுள், சொர்க்கம் போன்ற கருத்துருவங்களையும் தொழில்நுட்பத்தையும் குழப்பிக்கொள்வது மூன்றாவது டெம்ப்ளேட்.புதிய தொழில்நுட்பமும் பழைய தொழில்நுட்பமும் முட்டிக்கொள்வது நான்காவது டெம்ப்ளேட். பெரும்பாலான ஜோக்குகள் இந்த டெம்ப்ளேட்டுக்கள் சிறிய சிறிய மாற்றங்களுடன் உருவாக்கப்படுபவை.
”பாட்டீ! நாங்க வந்துட்டோம்!”
ஆனால் டெம்ப்ளேட் என்பது உண்மையில் அவ்வளவு எதிர்மறையானது அல்ல. பின்நவீனத்துவப் பார்வையில் அது இல்லாமல் எதையும் எவராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் ஒரு முன்னோடி வடிவம் இருக்கும். சொல்லப்படும் ஒவ்வொன்றும் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றின் விரிவாக்கம்,நுண்மையாக்கம்,தலைகீழாக்கம் ஆகிய மூன்றில் ஒன்றாகவே இருக்கும்.
கதைகளுக்கும் இது பொருந்தும். பொதுவாக நிறையவாசிப்பவர்கள், இலக்கிய விமர்சகர்கள் கதைகளில் முற்றிலும் புதுமை இயல்வதே அல்ல என்பதை அறிவார்கள். எந்த ஆக்கத்துக்கும் உடனடி முன்னோடியை கண்டடைய முடியும். அதன் புராணகாலத் தொடக்கம் வரைச் செல்லவும் முடியும். அந்த டெம்ப்ளேட் மனித மூளையின் அமைப்பிலும் மானுட அனுபவத்தின் சாத்தியங்களிலும் உள்ள எல்லைதான். இப்படித்தான் நிகழமுடியும், அதை இப்படித்தான் அறியவும் முடியும்.
”திட்ட வரைவாளர் அலுவலகம்”
இந்த டெம்ப்ளேட்டுகளுக்குள் நிற்கும் நகைச்சுவைகளில் நாம் ரசிப்பது இரண்டு. ஒன்று அந்த டெம்ப்ளேட்டை சற்றே மீறி அது சென்றடையும் புதிய ஒரு பார்வை. புதிய கோணல் என்றும் சொல்லலாம். அந்த ஜோக் இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்து எதிர்பாராத இடத்தில் நிகழும் திறப்பினால் வியப்படைந்து சிரித்துவிடுகிறோம்.
இன்னொன்று, அந்த டெம்ப்ளேட் அப்படியே நிகழ்வது உருவாக்கும் மகிழ்ச்சி. டெனிஸ் தி மெனாஸ் அல்லது கால்வின் ஹோப்ஸ் கார்ட்டூன்களில் அந்த குட்டிப்பயல்களின் குணச்சித்திரம் நமக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் என்ன செய்வார்கள், சொல்வார்கள் என்று தெரியும். அதையே அவர்கள் செய்யும்போது நாம் மலர்ந்துவிடுகிறோம். அது மனித இயல்பின் ஒரு மாறாத அம்சத்தை, அல்லது இங்குள்ள வாழ்க்கையின் ஒரு மாறாதகூறை நமக்குக் காட்டுவதாக எண்ணிக்கொள்கிறோம்.
”இல்ல, இன்னிக்கு நான் வர்க் ஃப்ரம் ஹோம்”
நம் உலகியல்செயல்பாடுகளில் எல்லாமே ஓர் அபத்த அம்சம் உண்டு. அது முழுக்க உலகியலில் மூழ்கியிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை என்பதுதான் அதில் மிகப்பெரிய அபத்தம். கொஞ்சம் யோசிப்பவர்கள் விலகிநின்று பார்க்கையில் அந்த அபத்தத்தை உணர்கிறார்கள். அவர்களுக்குரியதாகவே பெரும்பாலான மென்மையான நகைச்சுவைகள் உள்ளன. உலகியலாளர்களுக்கு அவர்கள் புழங்கும் உலகியலில் எவரையேனும் மட்டம்தட்டுவதோ கேலிசெய்வதோதான் நகைச்சுவை என்று தோன்றும்.
உலகியல்செயல்பாட்டின் அபத்தத்தைச் சுட்டும் நகைச்சுவைகளை வாசிக்கையில் உலகியலாளர்கள் திகைப்பது ஒரு பெரியவேடிக்கை. ‘இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது?” என்பார்கள். உண்மையில் அவர்கள் அந்த நகைச்சுவையை அன்றாட யதார்த்தமாகவே எடுத்துக்கொண்டு புழங்கிக்கொண்டிருப்பார்கள். ‘எங்கள் ஆபீஸில் ஜிபிஎஸ் இல்லாம வழிகண்டுபிடிக்க முடியாது’ என்று சொல்லிப்பாருங்கள் ‘அப்டியா? அவ்ளவு பெரிய ஆபீசா’என்று சாதாரணமாகக் கேட்பார்கள்.
”உள்ள நுழையறதுக்கு முன்னாடி ஜிபிஎஸ் ஆன் செய்துகொள்ளவும்”
இதேதான் wit எனப்படும் சொற்பகடிக்கும். தாங்கள் பேசும் மொழியை கவனிப்பவர்களால்தான் அவற்றை ரசிக்கமுடியும். பெரும்பாலானவர்களின் இயல்பு அது அல்ல. ஆகவேதான் ஒரே வகையான சொற்றொடர்களை சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப பயன்படுத்துகிறார்கள். ஒரே வடிவேலு காமெடிச் சொற்றொடரை நாளுக்கு நாற்பது முறை கையாள்கிறார்கள். என்னிடம் எவராவது ’ஆணியே புடுங்கவேண்டாம்’ என்றெல்லாம் பேசினால் அவரை அடுத்த முறை சந்திப்பதை தவிர்த்து சுற்றிப்போய்விடுவேன்.
விட் என்பது நாம் பயன்படுத்தும் சொற்களுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள உறவின் தற்செயல்தன்மையை வைத்து விளையாடுவது. [தமிழ் மொழி ஒன்றில்தான் போய்க்கொண்டே இருக்கமுடியும் -அசோகமித்திரன்] மொழி எத்தனை மேலோட்டமாக விஷயங்களைச் சொல்கிறது என்ற திகைப்பு அதிலுள்ளது. அத்துடன் ஒலிகளின் பொதுத்தன்மை சொற்களை எப்படி அபத்தமாக ஆக்குகிறது என்னும் திகைப்பு.
”உங்க இதயத்திலே பேஸ்மேக்கர் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. லிவர் கிட்னி எல்லாத்துக்குமான எல்லா ’ஆப்’களையும் நீங்களே அதிலேயே டௌன்லோடு பண்ணிக்கலாம்”
மலையாளத்தின் முதன்மையான நகைச்சுவை எழுத்தாளரான விகேஎன் இந்த சொற்பகடியில் விளையாடுபவர். அதை ஒரு ‘பிரக்ஞைபூர்வமான கிறுக்குத்தனம்’ என்று சொல்லலாம். சொற்பகடியின் முக்கியமான அம்சம் என்பது அது சரளமாக வந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது. அடிக்கோடிட்டுச் சொல்லக்கூடாது.
நான் திருவனந்தபுரத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் சென்றிருந்தேன். காண்டீனில் இருக்கையில் நண்பர் ஒருவரைச் சுட்டிக்காட்டி பேசிக்கொண்டே போனார். “இது நெல்சன் தி ஆப்மான். ஆளு மிடுக்கன். இங்க எல்லா தொழில்நுட்பமும் இவன்தான். ஆனா போனவாரம் மேனேஜருக்கு ஒரு ஆப் வைச்சான்…நெல்சா, ஒரு ஆப்பம் கடலைக்கறி சொல்லுடா” அரைமணிநேரத்திற்குள் ஆப் என்னும் சொல் முற்றிலும் அர்த்தமிழந்து திகைத்து நின்றிருந்தது.
“இவளோட பாஸ்வேர்ட்ஸ்தான் நாம”
தொழில்நுட்பத்தின் பெரிய நகைச்சுவை என்பது ஒரு கயிறு இழுக்கும்போட்டிதான் என நினைக்கிறேன். மனிதர்கள் இயந்திரங்களை மனிதர்கள் போல ஆக்க முயல்கிறார்கள். இயந்திரங்கள் மனிதர்களை இயந்திரங்கள்போல ஆக்க முயல்கின்றன. டைப்பிஸ்டுகளை பார்த்தாலே நமக்கு டைப்பிஸ்டுகள் என்று தெரியும். டைப்ரைட்டரின் ஏதோ ஒரு அம்சம் அவர்களிடமிருக்கும்.
அப்படிப்பார்த்தால் இன்றைக்கு உலகிலுள்ள மொத்த மக்கள்தொகையும் செல்போன்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒரு செல்போனில் இப்போதெல்லாம் நூறு ஆப்கள் வரை இருக்கின்றன. அதிலொரு ஆப்தான் அதன் உபயோகிப்பாளர் என்று சொன்னால் பிழையாக இருக்குமா என்ன?
”ரெண்டு செகண்டுக்கு ஒருவாட்டி ஃபோன் பாக்காம இருக்க இந்த ஆப் ரொம்ப உதவியா இருக்கு”
எஸ்.என்.நாகராஜன் -அஞ்சலிகள்
கோவை ஞானியின் பெயர் அறிமுகமானபோதே எஸ்.என்.நாகராஜனின் பெயரும் இணைந்தே அறிமுகமானது. தமிழில் கோட்பாட்டு விமர்சகர்கள் எங்கு சுற்றினாலும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இவர்களை சொன்னார்கள். கோவை ஞானியை மதிப்பிடுவது போல எஸ்.என்.என் ஐ மதிப்பிடுவது அத்தனை எளிதாக இல்லை.
கட்சி மார்க்ஸீயர்கள் ஏதோ ஒருவகையில் இருவரையுமே வறுத்தெடுத்தார்கள்.மார்க்ஸீய மூலநூல்வாதம் ஒரு வைதீகத்தைப்போல இறுகிப்போயிருந்த நிலையில் இவர்களின் கீழைத்தேயம் சார்ந்த மார்க்ஸீய அணுகுமுறை அவர்களை பதற்றத்திற்குள்ளாக்கியது. ஆனால் நவமார்க்ஸீயரும் இத்தாலிய அறிஞருமான அன்டனியோ கிராம்ஷியில் இருவருக்குமான வேரை காணமுடியும். கிராம்ஷிய அரசியல் பள்ளியில் ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் கோவை ஞானியும், எஸ்.என்.நாகராஜன் ஆகியோரின் மரபு மீதான முற்றுவிலக்கமற்ற அணுகுமுறையை புரிந்து கொண்டேன்.
வரலாற்றின் தடத்தை நொண்டி விளையாட்டு கட்டங்களைப்போல கால்பரப்பி அழித்து விடமுடியாது. மரபை நம் சமகாலத்திலிருந்தும் முற்றாக தூக்கியெறியவும் முடியாது.
வெகுமக்கள் மனநிலையினுள் ஆயிரம்காலமனிதகுலத்தின் எல்லா இயல்புகளும் கூட்டுநனவிலியாக நீடிக்கிறது. எனவே ஒரு சமூகமாற்றம் ஓரு இரவில் நிகழ்வதில்லை. அப்படியானால் புரட்சியின் வரையறைகளாக இயக்க மார்க்ஸீயர்கள் முன்வைத்தவற்றை நவ மார்க்ஸீயர்கள் மறுத்தார்கள். இந்த திறப்பை தமிழில் அழுத்தமாக துவங்கியவர்கள் என கோவை ஞானியையும் எஸ்.என்.நாகராஜனையும் கொள்ளலாம்.
ஆனால் கோவை ஞானி தனது நிலைப்பாட்டை நிறுவ முன்வைக்கும் தர்க்க ஒழுங்கை எஸ்.என்.என் இடம் காணமுடியாது.. அது சலசலக்கும் காட்டாறு போல.. நம் துல்லியமான கவனம் இருந்தால் ஒழிய நாகராஜனிடம் குழப்பமே எஞ்சும். இந்த ஒழுங்குகளுக்கு உட்படாத சிந்தனை தெறிப்புகளே நாகராஜனின் பலமும் பலவீனமும். மார்க்ஸீயத்தின் நவீன தர்க்கத்தையும் வைணவத்தின் நர நாராயணியத்தையும் இணைத்து முன்வைத்த அவரின் நோக்கு மார்க்ஸீயர்களின் கடும் விமர்சனத்திற்குரியவராக அவரை ஆக்கியது.
ஆனால் ஒரு நவமார்க்ஸீயரின் இடம் அதுவே. அதன்படியே நவீன அறிவியலை அவர் சந்தேகித்தார். அந்த புள்ளியில் காந்தியை நெருக்கமானவராக கண்டார். நேரு அம்பேத்கர் ஆகியோரின் மையப்படுத்தப்பட்ட அரசு என்கிற பார்வையை விமர்சிக்கிறார். மொழி நிகர்மையை மறுப்பதாக இந்திய தேசியத்தை காண்கிறார். இந்த பார்வைகளை முன்வைக்கும் போதே அவரின் போதாமை வெளிப்படுகிறது. நகரங்கள் சாதியை ஒழித்துவிட்டதா? என்கிறார். ஆனால் சாதியின் வீச்சை நீர்க்கச்செய்ததில் நகரமயம் ஒரு முக்கியக்காரணி என்பது நடைமுறை உண்மை. ஆனால் அது வேறுவேறு வடிவங்களில் நுட்பமாக வெளிப்படுவதாக உருமாற்றம் அடைந்துள்ளதும் உண்மை.
“உண்மை ஒன்றல்ல.. மாறாக ஒரு வைரத்தின் பல பட்டைகளைப்போன்றது” என காந்தி நித்யசைதன்யதியிடம் சொன்னதை புரிந்து கொள்ள முற்பட்டால் நாம் எஸ்.என்.நாகராஜன் முன்வைத்தது அந்த பல உண்மைகளில் ஒன்றை என்பதை உணரலாம்.
கிராம்ஷியின் கருதுகோளின்படி எந்த அதிகாரத்தின் இருப்பும் மக்கள் திரளின் கருத்தியல் அங்கீகாரமின்றி நீடிக்க இயலாது. அரசியல் அதிகாரத்தை மாற்ற அதற்கான கருத்தியல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.
அதற்கான கருத்தியல் செறிவை அடைய நிறைய ஆசான்கள் தேவை. நாம் நினைப்பதை சொல்ல மறுப்பவர்களையே ஆசான்களாக கொள்ள வேண்டும்.
எஸ்.என்.நாகராஜன் அப்படியானவர்தான்..
அவருக்கு அஞ்சலி..!
முருகானந்தம் ராமசாமி
[முகநூலில்]
[image error]
அன்புள்ள ஜெ
எஸ்.என்.நாகராஜன் என்ற பெயரை நான் நீங்கள் அயோத்திதாசர் பற்றிய கட்டுரையில் தமிழின் முதற்சிந்தனையாளர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டபோதுதான் கேள்விப்பட்டேன். நான் தொடர்ச்சியாக்ச் சிற்றிதழ்களை வாசிப்பவனாகவும், இணையத்தில் தேடித்தேடி வாசிப்பவனாகவும்தான் இருந்தேன். எஸ்.என்.நாகராஜனைப் பற்றி 1990களில் காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களில் ஒரு பேச்சு இருந்ததை பிறகு கவனித்தேன். கிட்டத்தட்ட மறைந்துவிட்டார். அதன்பிறகு உங்கள் குறிப்பு வழியாக அறிமுகமானார். நான் தலித் சிந்தனைகளில் ஆர்வமுடையவன் என்றவகையில் எஸ்.என்.நாகராஜனை அதன்பிறகு கவனிக்க ஆரம்பித்தேன். பிறகு தமிழ்ஹிந்து அவருடைய பேட்டியை வெளியிட்டது. அவருடைய கீழைமார்க்சியம் என்னும் நூலையும் வாசித்தேன்.
கீழைமார்க்ஸியம் என்ற அவருடைய சிந்தனையில் அவர் ஆதிக்கத்தன்மை இல்லாத, மக்களிடம் கற்றுக்கொள்கிற, மக்களுக்கு ஆணையிடாமல் மக்களுக்குச் சேவை செய்கிற ஒரு மார்க்ஸியத்தை கனவு காண்கிறார். மார்க்சியம் அதன் பெருந்தொழில் உற்பத்தி பற்றிய கனவுகளையும், பெருங்கட்டுமானங்களையும் கைவிட்டுவிட்டு சிறிய அளவிலான, இயற்கையை அழிக்காத தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று சொல்கிறார். அவை பலவகையிலும் இன்றைய சிந்தனைகளுக்கு நெருக்கமானவை. அன்பு ஒரு மெய்காண்முறை என்கிறார். அது குறிப்பிடத்தக்க ஒரு கருத்து. மக்களை ஆட்சிசெய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களைப்பற்றி எழுதப்படும் எந்த ஆய்வும் பொய்யே ஆகும். அது மார்க்ஸியத்தின் பெயரால் எழுதப்பட்டாலும்கூட.
ஆனால் அவரிடம் நான் கண்ட சிக்கல் அவருடைய மாவோ வழிபாடு. அவர் தான் சொல்வதெல்லாம் மாவோ செய்ய முயன்றவை அல்லது செய்தவை என்கிறார். ஆனால் அவர் சொல்வதற்கும் மாவோவின் வாழ்க்கைக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஒரு மதப்பற்றாகவே அவர் மாவோவை அணுகினார் என நினைக்கிறேன்.
முன்னோடியான சிந்தனையாளர். அவருக்கு அஞ்சலி
எம்.மகேந்திரன்
எஸ்.என்.நாகராசன் : காந்தியமும் மார்க்சியமும் சந்திக்கும் புள்ளி
ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் , சில எண்ணங்கள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி
The Power Of Non Violence – Richard Barlette Gregg
புதன் வாசகர் வட்டம் என்னும் அமைப்பு, ஒவ்வொரு புதன் கிழமையும், காந்தியைப் பற்றிய புத்தகங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த அமைப்பை நடத்துபவர்களில் ஒருவரான சரவணன் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்..
குமரப்பா பத்தி ஒரு கட்டுரைத் தொடர் எழுதலாம்னு ஒரு காலத்துல இந்த ரெஃபரன்ஸ் புத்தகத்தை கிண்டிலில் வாங்கி வச்சிருந்தது நினைவுக்கு வந்தது. அதுதான் இந்தப் புத்தகம். – The Power of Non Violence.
இதை எழுதிய ரிச்சர்ட் க்ரெக், 1885 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அதன் பின்னர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிகரமான வக்கீலாக, தொழில்துறை, அரசாங்கம், தொழிலாளர் என்னும் மூன்று தரப்புகளுக்கிடையே வேலை நிறுத்தங்கள், ஒப்பந்தங்கள் என பல்வேறு நிலைகளில் பணிபுரிந்திருக்கிறார். இந்த மூன்றுதரப்புகளுக்குமிடையே ஊடாடியதில் அவர் மிக முக்கியமான சில மனநிலைகளை வந்தடைந்தார். இந்தக் காலகட்டத்தில் ஒருநாள், காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை வாசித்து, அதில் தன் மனதைப் பறிகொடுக்கிறார். 1924 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 ஆம் தேதி,அவருடைய அம்மா, உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் அவசர அவசரமாக ஒரு கடிதத்தை, எழுதி வைத்து விட்டு இந்தியா கிளம்புகிறார்.
’நான் நமது அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறேன்.. பெரும்பாலான அரசுகளுக்கும் எதிராக.. அரசுகள் வன்முறையை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன.. வன்முறை வழியாகவே இயங்குகின்றன.
இயந்திரத் தொழில்முறைகளையும், வணிகக் கலாச்சாரத்தையும் வெறுக்கிறேன். இதன் பின்ணணியில் இருக்கும் முதலாளித்துவத்தையும்..
தொழிலாளர் நல அமைப்புகளும் இந்தக் கட்டமைப்புக்குள் தான் இயங்குகின்றனவே ஒழிய, இதை மாற்ற முயல்வதில்லை.
எனது இந்த நம்பிக்கைகள், நவீன அமெரிக்காவை விட, இந்தியாவுடன் தான் அதிகம் பொருந்தும்.. எனவே நான் இந்தியா போகிறேன்’, என உணர்வு பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, இந்தியா புறப்பட்டுப் போகிறார்..
ரிச்சர்ட் க்ரெக், தொழில் நிறுவனங்களுக்கும், அரசுக்கும், முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே இயல்பாக உருவாகும் முரண்கள், அதற்கான தீர்வுகள் போன்றவற்றை தன் வாழ்வினூடே அவதானித்த அவர், இந்தச் சிக்கல்களுக்கான தீர்வுகள் பெரும்பாலும் வன்முறையின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதை வருத்தத்துடன் அவதானிக்கிறார். அப்போதுதான் காந்தியைப் பற்றிய ஒரு கட்டுரையை அவர் படிக்க நேர்கிறது. தான் கண்ட பிரச்சினைகளுக்குக் காந்திய வழி ஒரு தீர்வாக அமையலாம் என்னும் நம்பிக்கையில் இந்தியா வருகிறார்.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையிலேயே அதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1930-33 ஆண்டுகளில், இந்தியாவில் காந்தி முன்னெடுத்த உப்புச் சத்தியாக்கிரகம், காந்தியின் இந்த வழியின் வலிமையையும், அதன் நடைமுறைச் சாத்தியத்தையும் நமக்கு உணர்த்துகிறது.
இது இந்தியாவில் சாத்தியமெனில், உலகில் பெரும் நாசங்களை விளைவிக்கும் போர்கள், வர்க்க மோதல்களுக்கான தீர்வுகளை, இதே போல அமைதியான வழியில் தீர்த்துக் கொள்ள முடியுமா? இதன் உட்கூறுகளை நாம் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்குப் பயன் படுத்திக் கொள்ள முடியுமா. அறம் மற்றும் அறிவார்ந்த அளவுகோள்களில், இந்த முறை மேன்மையானதா? என்னும் கேள்விகளை கேட்டுக் கொள்கிறார்.
மேற்கத்திய நவீன வழிச் சிந்தனைகளிலும், செயல்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட மேற்கத்திய மனங்களுக்கு, அகிம்சை என்பது ஒரு ஆற்றொழுக்கான, இயல்பான தீர்வு என்பது புரியாது. இதைக் காந்தியே விளக்கினாலும், மேற்கத்தியர்களுக்குப் புரியாது என்கிறார் க்ரெக்.
இது பற்றிய காந்தியின் விளக்கங்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பின்ணணியில், வாழ்க்கை நோக்கங்களில் இருந்து எழுபவை. இந்தியர்களின் அனுமானங்கள், சமூக அனுபவங்கள், சிந்தனை மரபுகள், வரலாறு – இவையனைத்தும் முற்றிலும் வேறானவை. எனவே, இதை, நான் ஆராய்ந்து, இதன் முக்கியக் கூறுகளை, மேற்கத்தியக் கருதுகோள்கள், சொல்லாட்சிகள் வழியே விளக்க முயல்கிறேன் எனத் தன் நோக்கத்தை முன்வைக்கிறார். அகிம்சை என்னும் இந்த வழி, ஏன் வன்முறை மூலம் எட்டப்படும் தீர்வுகளை விட நீடித்து நிலைக்க வல்லது, மேலானது என்பதைச் சொல்வதே என் நோக்கம் என்கிறார்.
நுட்பமான மனம் கொண்டவர்கள், இவ்வழிமுறையில், அறம் சார்ந்த அழகியலைக் காண்பார்கள். அது அகிம்சை வழியின் ஒரு முக்கிய அம்சம் எனினும், இந்தப் புத்தகத்தில் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. பகுத்தறிவின் துணை கொண்டு, இவ்வழியை அலசுவதை மட்டுமே இந்த நூலில் நான் செய்யப் போகிறேன் என நம்மை முன் கூட்டியே எச்சரித்து விடுகிறார்.
இதை எழுத எனக்கு என்ன தகுதி எனக் கேட்டுக் கொள்ளும் க்ரேக், தனது தகுதிகளை முன் வைக்கிறார்.. ஹார்வர்ட் பல்கலையில் சட்டம் படித்தவர். 3 ஆண்டுகளாக வக்கீல் தொழிலில் இருந்தவர்.. அதன் பின்னர் நான்காண்டுகள், தொழில் துறைச் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் மத்தியஸ்தராக, நிபுணராகப் பணியாற்றியவர். நான்கு ஆண்டுகள் இந்தியாவில், காந்தியுடன் தங்கி, அவர் வழிகளை ஆழ்ந்து கற்றவர். பின்னர் உப்புச் சத்தியாக்கிரகம் உருவான காலத்தில் 6 வாரங்கள் அதை நேரில் ஆய்ந்தவர். இவை க்ரெக்கின் தகுதிகள்.
இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயத்தில், அகிம்சை வழிப் போர்கள் பற்றிய சரித்திரத் தரவுகள் கொடுக்கப்படுகின்றன.. அவற்றுள் எவை வெற்றி பெற்றவை.. எவை வெற்றி பெறாதவை என்பன அலசப்படுகின்றன். பின்னர் அடுத்த சில அத்தியாயங்கள், ஜ்யூ ஜிட்சு என்னும் ஜப்பானியச் சிந்தனை முறை, அகிம்சை வழியில் மக்களின் உணர்வு என்னும் சக்தியை எப்படி ஒன்றிணைப்பது, இது போன்ற போராட்டங்களில் நிகழ்வன என்ன என்ன என்பதைப் பேசுகின்றன. அதற்கடுத்த சில அத்தியாயங்கள், பெருமளவிலான அகிம்சைப் போர்கள் சாத்தியமா, ஏன் அகிம்சை வழி என்பது வன்முறைப் போருக்கு எதிரான மாற்று, இதன் அரசியல் அம்சங்கள், உயிரியல் பின்ணணி முதலியன பேசப்படுகின்றன
புத்தகத்தின் இறுதிப் பகுதிகள், அகிம்சை வழியில் ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள், தனி மனிதன் மற்றும் குழுக்களுக்குத் தேவையான ஒழுக்கம், வழிமுறைகள் இவற்றைப் பேசுகின்றன.
முடிந்த வரை எளிதாக எழுதியிருக்கிறேன் எனச் சொல்கிறார் க்ரேக்.. ஆனால், அவ்வளவு எளிதாக இல்லை என்பதே என் அனுபவமாக இருக்கிறது.. ‘என்னை இப்படி மாட்டி வீட்டீர்களே சரவணன்’, எனத் திட்டிக் கொண்டேதான் படித்தேன்.. ஆனால், படித்து முடித்து, இந்த உரையை எழுதும் போதுதான், இதன் அடிப்படைகளை, சாத்தியங்களை உணர்ந்து பிரமித்தேன்.
காந்தியம், அகிம்சை, போன்றவற்றைக் கேள்வி கேட்காமல், பக்தி மனநிலையில் பின்பற்றும் என் போன்றவர்களின் பக்தியின் பாசாங்கை அகற்றி, அடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடி எது என்பதைச் சுட்டுகிறது இந்தப் புத்தகம்.
அகிம்சை, சத்தியாக்கிரக வழிகளின் அற அடிப்படை, உளவியல் , அரசியல், பொருளாதார மேன்மை, சமூகத்தின் உயர்வு, போன்றவை நவீன மேற்கத்திய, தர்க்க ரீதியான அளவுகோள்களில் அலசப்படுகின்றன.
காந்தியத்தின் மேன்மைகளை, தரவுகளின் அடிப்படையில் அறிந்து கொள்கையில், நம் மொத்த இருப்புமே காந்தியத்தின் உயர்வை, இம்மி கூடப் பிசகாமல் உள்வாங்கிக் கொள்கிறது. ‘பசுமரத்தாணி’, என்பதை ஒரு வார்த்தையாக மட்டுமே இதுநாள் வரை அறிந்திருந்தேன். இந்தப் புத்தகம் அறிவியல் வழியில், அதை நம் இதயத்தில் செருகுகிறது.
இதில் ஒரு சிறு நகைமுரண் இல்லாமலும் இல்லை.. முதன் முதலாக, நவீன உலகில், 1967 ஆம் ஆண்டு, ஹங்கேரியில், ஒரு வெற்றிகரமான அகிம்சைப் போர் நிகழ்கிறது. அதற்குப் பின் இரண்டாண்டுகள் கழித்துப் பிறந்த காந்தி, தென் ஆப்பிரிக்காவில், குடியேற்றச் சட்டத்தை எதிர்த்துச் சிறை செல்கிறார். சிறையில், ஹென்றி டேவிட் தொரோ என்னும் அமெரிக்கர் எழுதிய, civil Disbedience கட்டுரையைப் படிக்கிறார்.. அதனால் உந்தப்பட்டு, தான் நடத்தும் போராட்டத்துக்கு, ஒரு செயல்வடிவத்தை உருவாக்கி, அதற்கு, ‘சத்தியாக்கிரகம்’, எனப் பெயர் சூட்டுகிறார். அது முழுக்க முழுக்க ஒரு இந்தியப் போராட்ட வடிவமாகி விடுகிறது. அதன் பிறகு, 30 ஆண்டுகள் கழித்து, அதிலுள்ள கூறுகளை எடுத்து அமெரிக்காவுக்கும் மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ஒரு அமெரிக்கர் கொண்டு செல்கிறார். அதுதான் இந்தப் புத்தகம். கொஞ்சம் நகைச்சுவையாகச் சொல்ல வேண்டுமெனில், கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இரண்டாவது வாழைப்பழம்.
புத்தகத்தின் தொடக்கம், நவீன வரலாற்றில் நிகழ்ந்த பல அகிம்சைப் போராட்டங்களைப் பேசுகிறது.
இதன் முதல் உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹங்கேரியில் நிகழ்ந்த ஒரு போராட்டத்தைக் குறிப்பிடுகிறார் க்ரெக். ஆஸ்திரிய மன்னர் ஃபிரான்ஸ் ஜோசஃப், ஆஸ்திரியாவுக்கும், ஹங்கேரிக்கு இடையில் இருந்த நட்பு ஒப்பந்தத்தைச் சிதைத்து, ஹங்கேரியை ஆஸ்திரியாவுக்கு அடிமைப் படுத்த நினைக்கிறார். ஹங்கேரியின் மிதவாதிகள், பலவீனர்களாய், அதை எதிர்க்கச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள்.
இதைக் கண்டு மனம் கொதித்து, ஃபிரான்சிஸ் டீக் என்னும் கத்தோலிக்க நில உடமையாளர், மிதவாதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். ‘நம் சட்டங்கள் மிதிக்கப்படுகின்றன.. ஆனால், மிதவாதிகளான நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.. இப்படிச் சட்டங்கள் மிதிக்கப்படுகையில் அமைதியாக இருக்கும் தேசத்துக்குப் பெரும் தீங்கு வந்து சேரும். இந்த அமைதி நம்மை அடிமைகளாக்கும். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிர்க்குரல் எழுப்பாமல் பணிந்து போகும் தேசம் அழிந்தே போகும்’, என முழக்கமிடுகிறார்.
ஃப்ரான்சிஸ் டீக், ஆஸ்திரிய அரசாங்கத்தைப் புறக்கணித்துவிட்டு, ஹங்கேரிக்கான தனித்துவமான கல்வி, வேளாண்மை, தொழில் திட்டங்களை வடிவமைக்கிறார்.. ஆஸ்திரியப் பொருட்களைப் புறக்கணிக்கக் குரல் கொடுக்கிறார். அரச வன்முறையைக் கண்டு அஞ்ச வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார். ’ ‘நமது கொள்கை சட்டபூர்வமான, வலுவான பாதுகாப்பான ஒன்று.. நியாயம் நம் பக்கம் இருக்கிறது.
இதன் அடிப்படையில், ஆயுதங்களற்ற நாம், அரசின் ஆயுதப்படைகளை எதிர்த்து நிற்க முடியும்.. ஆயுதப்படையின் வன்முறையினால் ஏற்படும் துயரங்களை, தலைநிமிர்ந்து கண்ணியமாக ஏற்றுக் கொள்வோம்’, என வழிநடத்தினார். அவர் குரலை, மொத்த ஹங்கேரி நாடும் கேட்டு அதன் படி நடந்தது.
ஆஸ்திரிய வரி அலுவலர் வந்த போது, ஹங்கேரி மக்கள் அவரைத் தாக்க்கவில்லை.. எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.. ஆனால் வரியும் கொடுக்கவில்லை. ஆஸ்திரியப் படைகள் மக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தன. அதை ஏலத்தில் விற்க அரசு முயன்ற போது, அவற்றை வாங்க எந்த ஹங்கேரியரும் முன் வரவில்லை..
வேறு வழியின்றி,ஆஸ்திரிய அரசு, ஆஸ்திரியாவிலிருந்து ஏலம் விடுபவர்களை அழைத்து வந்தது.. ஏலத்தில் அந்தச் சொத்துக்களை வாங்க எந்த ஹங்கேரியரும் முன் வரவில்லை. எனவே, சொத்துக்களை வாங்கவும் ஆஸ்திரியர்களை அழைத்து வரவேண்டியிருந்தது. இந்த முறை, அரசுக்கு மிகவும் செலவு பிடித்ததாக இருந்தது. இவ்வளவு செலவுக்குப் பின்னர் பெறப்படும் வரி, செலவை விடக் குறைவாக இருந்தது.ஹங்கேரியரை அடிமைப்படுத்தும் செயல் ஆஸ்திர்யாவுக்கு பொருளாதார நஷ்டமாக முடிந்தது.
ஆஸ்திரிய அரசு, தங்கள் படைவீரர்களை, கட்டாயமாக ஹங்கேரிக் குடிமகன்களின் வீடுகளில் தங்க வைத்தது. ஹங்கேரி மக்கள் அதை எதிர்க்க வில்லை.. ஆனால், வீடுகளில் தங்கிய வீரர்களை ஒருவரும் மதிக்க வில்லை. தங்களுக்கு மரியாதை இல்லாத வீடுகளில் வலுக்கட்டாயமாகத் தங்க வைப்பதை ஆஸ்திரிய வீரர்கள் வெறுத்தார்கள். எதிர்க்குரல் எழுப்பத் தொடங்கினார்கள்.
ஆஸ்திரியப் பொருட்களைப் புறக்கணிப்பதை, ஆஸ்திரிய அரசு சட்ட பூர்வமாகத் தடை செய்தது. ஆனால், ஹங்கேரி மக்கள் அந்தச் சட்டத்தைப் புறக்கணித்தார்கள். மீறுவோர் சிறைப்படுத்தப்பட்டார்கள்.. விரைவில், சட்ட மறுப்பாளர்களால், சிறை நிரம்பி வழியத்தொடங்கியது. ஹங்கேரியின் மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்றத்தைப் புறக்கணித்தார்கள்.
இறுதியில், ஆஸ்திரிய அரசு இறங்கி வந்தது. ஹங்கேரி மக்களுக்கு, பாதி சுயராஜ்ய உரிமையைக் கொடுத்தார்கள்.. ஆனால், ஹங்கேரியர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. முழு சுதந்திரம் கேட்டார்கள். அதை அடக்க ஆஸ்திரிய அரசு அனைவருக்கும் கட்டாய ராணுவ சேவைச் சட்டம் கொண்டு வந்தது. ஹங்கேரியர்கள் அதையும் மீறினார்கள். இறுதியில் 1867 ஆம் ஆண்டு ஆஸ்திரிய மன்னர், வேறு வழியின்றி ஹங்கேரிக்கு முழு சுதந்திரம் அளித்தார். இது நிகழ்ந்த இரண்டு ஆண்டுகள் கழித்துதான் காந்தி பிறந்தார்.
அகிம்சையும் சத்தியமும் இமய மலைகளைப் போன்றே புராதனமானவை எனக் காந்தி சொன்னது அவையடக்கமல்ல. உண்மை.
இதற்கு அடுத்ததாக, 1906 ஆம் ஆண்டு தொடங்கி, 8 ஆண்டுகள் நடைபெற்ற தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தைக் குறிப்பிடுகிறார் க்ரெக். அதன் பின்னர் 1917 ஆம் ஆண்டு சம்பாரனில் நடைபெற்ற, இண்டிகோ உழவர்களின் பிரச்சினையைக் காந்தி முன்னெடுத்த விதத்தில், சத்தியாக்கிரகப் போராட்டங்களில் தலைவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான அடிப்படை அணுகுமுறையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் க்ரேக்.
காந்தி சம்பாரனில் நுழையும் போதே, சம்பாரன் கலெக்டர், அவரை அடுத்த ரயிலில் திரும்பிப் போகுமாறு ஆணையிடுகிறார்.. அதற்கு, காந்தி, இண்டிகோ உழவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மையான தரவுகளைத் திரட்டுவதே தன் நோக்கம் எனவும், தேவைப்பட்டால், தான் சிறை செல்லத்தயாராக இருப்பதாகவும் பதில் சொல்லி அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து, காவலர்கள் காந்தியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள்.. காந்தி தன் வேலையைத் தொடர்கிறார்.. உழவர்களின் பாதிப்புகளை, விருப்பு வெறுப்பின்றி, உண்மைப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கிறார்.. தான் கைது செய்ய்யப்பட்டால், அதைத் தொடர்ந்து செய்ய அடுத்த இருவர், அதற்கடுத்த இருவர் என, அந்த வேலை தொய்வடையாமல் நிகழத் திட்டமிடுகிறார்கள். சில நாட்களில், காந்தி கோர்ட்டுக்கு அழைக்கப்பட்டு, விசாரிக்கிறார். நீதிபதியின் முன்னிலையில், தான் செய்வது சட்டப்படி தவறு, ஆனால், தனது மனசாட்சி, இந்த அநீதிக்குப் பரிகாரம் காணச் சொல்கிறது. எனவே, சட்டப்படி நான் குற்றவாளி என என்னைத் தண்டிக்கலாம் என முறையிடுகிறார். நீதிபதி குழம்பி தண்டனையை ஒத்தி வைக்க்கிறார்.
பின்னர் அப்பகுதியின் லெஃப்டினண்ட் கவர்னர், காந்தியை விடுதலை செய்ய உத்தரவிடுகிறார்.. இண்டிகோ உழவர்களின் குறைகளைக் களைய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, காந்தி அதில் ஒரு உறுப்பினராகச் சேர்க்கப்படுகிறார். உழவர்களுக்கான நீதி பெறப்படுகிறது. போராட்டத்தில், அறிவியற் பூர்வமான முறையில் திரட்டப்படும் தரவுகள், போராட்டத்தின் அற அடிப்படையை உறுதி செய்ய முக்கியமானவை என்பதை இந்தப் போராட்டம் வழியே நமக்குச் சொல்கிறார்.
இப்படியான தயாரிப்புகள் இல்லாமல், நிகழ்ந்த போராட்டங்கள் பெரும் தோல்வியுற்றிருக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக 1925 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த தொழிலாளர் போராட்டத்தைச் சொல்லலாம். பிரிட்டிஷ் தொழிலாளர்களின் தலைவர்கள், ஒரு ஆண்டாக போராடுவோம் என அரசைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்களே தவிர, போராட்டத்துக்கான ஆயத்தங்கள் எதுவுமே செய்ய வில்லை. ஆனால், அவர்களின் எதிர்த்தரப்பான அரசும், அதன் ரகசிய காவல் படையும் தொழிலாளர் போராட்டங்களை எதிர்கொள்ள, பல முன்னேற்பாடுகளைச் செய்து தயாராக இருந்தனர்.
வேறு வழியின்றி, ஒரு நாள் தொழிலாளர் போராட்டம் தொடங்குகிறது. போராட்டம் தொடங்கிய மூன்றாம் நாளில், அரசாங்கம் இந்தப் போராட்டத்தை சட்டத்துக்கு எதிரானது எனச் சொல்லி, நெருக்கடி நிலையை அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் சங்கங்களின் நிதிகள் முடக்கப்பட்டு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டன.. தொழிலாளர் போராட்டத்தின் போது நிகழும் சேதங்களுக்கு, அவர்களின் தலைவர்களே பொறுப்பு என்றும், அதற்கான நஷ்ட ஈட்டை அவர்களே தனிப்பட்ட முறையில் தரவேண்டும் என அரசு அறிவித்தது.
அரசின் இந்த எதிர்வினைகளுக்குக் கொஞ்சமும் தயாராக இல்லாத தொழிலாளர் தலைவர்களும், யூனியனும் நிலை குலைந்து போயினர்.. அரசின் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாள், இத்தலைவர்கள், தொழிலாளர் குழுக்களுடனோ மற்றவர்களுடனோ கலந்தாலோசிக்காமல், பிரதமர் முன்பு நிபந்தனயற்ற சரண் அடைந்து, போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஆனால், இதன் பின் விளைவுகளாக தொழிலாளர்கள் பலர் பழி வாங்கப்பட்டனர். தொழிலாளர் யூனியன்கள் பலமிழந்து போயின..
இதுவும் ஒரு அகிம்சைப் போராட்டம்தான் எனினும், பெரும் தோல்வியில் முடிந்தது. முதலில் தொழிலாளர் தலைவர்களிடம் போராடும் உத்வேகம் இருக்கவில்லை.. போராட்டத்தின் விளைவாகச் சிறை செல்லும் மன உறுதி அவர்களிடம் இருக்கவில்லை. போராட்ட காலத்தில் அவர்கள் நடவடிக்கைகள் ஏதேச்சதிகாரமாக இருந்தன. போராட்டத்தின் விளைவுகளை எதிர்பார்த்துத் திட்டமிட்டிருக்கவில்லை. போராட்டத்தின் நியாயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல, பத்திரிகைகளை அவர்கள் இயங்க அனுமதிக்க வில்லை.. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதிக்க வில்லை. பொய்களைப் பேசினார்கள்.. அவர்கள் பேச்சில் வன்முறையும், வெறுப்பும் வெளிப்பட்டது. இதனால், போராட்டத்துக்குப் பொது மக்களின் ஆதரவு இல்லாமல் போனது. 1925 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் போராட்டம், ஒரு போராட்டத்தை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
போராட்டத்தில் ஈடுபடும் பலரும் மறந்து விடும் ஒரு விஷயம் – போராட்டத்துக்கான சமூக ஆதரவு முக்கியமானது என்பதாகும். எல்லாத் தரப்பு மக்களுமே, சமூகம் என்னும் கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். சமூகத்தின் ஆதரவில்லாத அல்லது அதைப் பாதிக்கும் எந்தச் செயல்களையும், பொதுமக்கள் விரும்புவதில்லை. அந்த ஆதரவின்மை என்பது. போராட்டத்திற்குப் பெரும் பின்னடவை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக 2018 ஆம் ஆண்டு, ஒரு உழவர் போராட்டம் மஹராஷ்ட்ராவில் நிகழ்ந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கிசான் சபை என்னும் பிரிவு, இதை முன்னெடுத்தது. நாசிக் நகரில் இருந்து மும்பை வரை கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் கால்நடையாகச் சென்றார்கள்.. சரியாகத் திட்டமிடப்பட்டு, உணவு, மருத்துவம் என அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உழவர்கள் சாலையின் ஒரு பக்கமாக போக்குவரத்துக்கு எந்த பாதிப்புமில்லாமல் நடந்து சென்றார்கள்.. இறுதி நாள் ஞாயிறு மாலை மும்பை நகரை அடைந்தது அவர்கள் பயணம்.. அடுத்த நாள் மகராஷ்ட்ராவில் பிள்ளைகளுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வு. பகலில் பயணம் செய்வது மும்பை நகரத்தில் போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்திக் குழந்தைகளுக்கு பெரும் அசௌகரியம் ஏற்படும் என்பதைக் குழு உணர்ந்தது. மக்கள், பகல் எல்லாம் நடந்து களைத்திருந்தாலும், சுணங்காமல், புறப்பட்டு இரவே மும்பை நகருக்குள் நுழைந்து, தாங்கள் தர்ணா செய்ய இருந்த மைதானத்தை அடைய முடிவெடுத்தார்கள். இதைக் கேள்விப்பட்ட மக்கள், தெருவுக்கு வந்து, போராட்டக்காரர்களுக்கு தண்ணீர், உணவு, பிஸ்கெட் முதலியவற்றை வழங்கினார்கள்.. அடுத்த நாள் அனைத்து ஊடகங்களும், இந்தக் காட்சிகளை நெகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தன.. இது சமூகப் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அடுத்து அகிம்சா வழியின் அடிப்படைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
ஜ்யூ ஜிட்ஸு
அகிம்சை வழியின் அடிப்படைகள், ஜப்பானிய போர்முறைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பது க்ரேக் அவர்களின் பார்வை..
ஒரு மனிதர் இன்னொருவரை வன்முறை மூலம் தாக்குகிறார் என வைத்துக் கொள்வோம். தாக்கப்படுபவர் திருப்பித் தாக்கும் போது, முதலில் தாக்கியவருக்கு, வன்முறையைத் தொடர ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது. தாக்க்கப்படுபவர் திருப்பிக் கூடத்தாக்க வேண்டியதில்லை… அவர் முகத்தில் அவர் வெளிப்படும் கோபமோ அல்லது பயமோ கூட, முதலில் தாக்கத் தொடங்கியவருக்கு, தாக்குதலைத் தொடர ஒரு காரணத்தைத் தருகிறது.
இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் – இங்கேயும் ஒருவர் இன்னொருவர் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறார்.. ஆனால், தாக்கப்படுபவர், பயமின்றி, நிதானமாக, அமைதியாக, சுய கட்டுப்பாட்டுடன் அந்தத் தாக்குதலை எதிர்கொள்கிறார்.. வன்முறையை, வன்முறையினால் எதிர் கொள்ள வில்லை.. மாறாக, அடிகளை, தன் தரப்பிலுள்ள வலுவான காரணத்தினால் வாங்கிக் கொண்டு, அமைதியாகத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். அந்த எதிர்ப்பு, அறத்தின் மீதானது மட்டுமே. தன் தரப்பு நியாயத்தின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையால், அடிகளை வாங்கிக் கொள்கிறார். திரும்ப அடிப்பதில்லை. எதிராளியின் கண்களை நேரில் பார்த்து, பயமோ வெறுப்போ இல்லாமல், ஒவ்வொரு அடியாக வாங்கிக் கொள்கிறார். வன்முறைக்கு எதிராக அகிம்சையை முன்னிறுத்துகிறார்.
வன்முறையைத் துவங்குபவரின் எதிர்பார்ப்பு, எதிரி, தன் வன்முறையைக் கண்டு பயப்பட வேண்டும் என்பதே. பயந்து தோல்வியை ஒப்புக் கொள்வார் என்பதே. ஆனால், அடியை வாங்கும் அகிம்சாவாதியின் பார்வையிலும், தோற்றத்திலும் தென்படும் தைரியம், வன்முறையைத் தொடங்குபவருக்கு ஒரு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. அவர் அகிம்சை வழியில் தெரிவிக்கும் எதிர்ப்பு அவர் பணிந்து போகமாட்டார் என்பதைக் காட்டுகிறது. அமைதியாக, தொடர்ந்து வன்முறை விளைவிக்கும் உடல்வலியை அவர் தாங்கிக் கொள்வது அடிப்பவரைத் துணுக்குறச் செய்துவிடுகிறது.
வன்முறையினால் பாதிக்கப்பட்டவர், திருப்பித் தாக்காத நற்பண்பு, வன்முறையைத் தொடங்குபவரின் அறச்சமநிலையைக் குலைத்து விடுகிறது. வழக்கமாகப் பாதிக்கப்படுபவர் போல, திருப்பித் தாக்குதலோ, பயமோ ஒரு சத்தியாகிரகியிடம் இல்லாததனால், வன்முறையைத் தொடர்ந்து நடத்த, தாக்குபவரிடம் எந்தக் காரணங்களும் இல்லாமல் போகிறது.
இப்படி எதிர்பாராமல் புதிதாக உருவாகும் சூழல், தாக்குபவரை ஒருவித பாதுகாப்பின்றி உணரச் செய்கிறது. அதை எதிர்கொள்ளத் தெரியாத அறியாமை அவரிடம் வெளிப்படுகிறது. அவர், தனது தன்னம்பிக்கையும், நிதானத்தையும் இழக்கிறார். தனது அன்பினால், பெருந்தன்மையினால், வன்முறையின் வலியை சுயமாக ஏற்றுக் கொள்ளும் பண்பினால், அவர் எதிரியை தன்பால் ஈர்க்கத் துவங்குகிறார். பாதிக்கப்படுபவரிடம், தான் என்ன செய்கிறோம் என்னும் தெளிவும், தாக்குபவரை விட மேலான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறோம் என்னும் அறிதலும், அவரை மேலான ஒரு சமநிலையை அடையச் செய்கிறது. வன்முறையின் துயரை, தன் மேலான அறிவார்ந்த நிலையால் வெல்கிறார்.
இதை இன்னொரு விதமாகவும் பார்க்க முடியும். வன்முறையின் மூலம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இருவர், ஏதோ ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றும். ஆனால், அவர்கள் இருவரும், தங்கள் வேறுபாடுகளை, வன்முறையினால் தீர்த்துக் கொள்ளலாம் என்னும் ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள என்னும் மிக முக்கியமான கோணத்தை நம்மைப் பார்க்கச் செய்கிறார் க்ரெக்.
ஆனால், இதை விடுத்து, வேறுபாடு கொண்ட இருவர்களில் ஒருவர், இதுவரை வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் வழியான வன்முறையைக் கைவிட்டு, வேறுபாடுகளை, தரவுகளின், நியாயத்தின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளலாம் என முன்வைக்கையில், வன்முறை வழியை முன்னெடுப்பவர் திகைத்து விடுகிறார். இந்த முறையில், வன்முறையை முன்னெடுப்பவர், தன் அறமின்மையாலும், அகிம்சையின் இந்த நவீனமான அணுகுமுறையாலும் வீழ்த்தப்படுகிறார்..
இது ஜப்பானிய யுத்த முறையான ஜ்யூ ஜிட்ஸூ முறை போன்றது. வன்முறையை எதிர்க்க வன்முறையைப் பயன்படுத்தாமல், வன்முறையின் விசையைக் கொண்டே வன்முறையை வீழ்த்துதல் போல என்கிறார் க்ரேக்.. ஜ்யூ ஜிட்ஸூ தான் ஜூடோ போன்ற ஜப்பானியக் கலைகளுக்கு அடிப்படை.. இதை இன்றைய மொழியில் சொல்வதென்றால் – இப்படிச் சொல்லலாம். நீங்கள் க்ரிக்கெட் விளையாடுகிறீர்கள்.. உங்களை நிலைகுலைய வைக்கும் நோக்கில், பந்து வீச்சாளர் உங்களை நோக்கி ஒரு பவுன்சர் போடுகிறார்.. நீங்கள் சற்றே விலகி, பந்து வரும் திசையிலேயே, மட்டையால், ஹூக் செய்து, பந்தின் விசையை உபயோகித்தே, பந்தை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பி விடுதல் போன்றது.
க்ரேக், வன்முறையாளரின் இன்னொரு முகத்தையும் காட்டித்தருகிறார். வேற்றுமைகளைத் தீர்த்துக் கொள்ள வன்முறையை நாடும் மனிதர், முழுக்க முழுக்கத் தீயவரில்லை. வன்முறையைத் தாங்கிக் கொண்டு, அகிம்சையை முன் வைப்பவர், வன்முறையில் ஈடுபடுபவரின் ஆளுமையின் நற்பக்கங்களிடம் உரையாடலைத் தொடங்குகிறார்.
இது போன்ற தருணங்களில், இதைச் சில நடுநிலையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும் போது, வன்முறையாளர், தன் அணுகுமுறை பற்றிய சங்கடத்தில் ஆழ்கிறார்.. அவரிடம் தயக்கம் உருவாகத் தொடங்குகிறது.
பொதுவாக, சமூகம் வன்முறையின் அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் முறையின் மீது ஒரு ஒவ்வாமை கொண்டிருக்கிறது. அது அறமல்ல எனக் கருதுகிறது. எனவே பிரச்சினையில், சமூகத்தின் நிலை, தாக்கப்படுபவருக்குச் சாதகமாக மாறுகிறது.
வன்முறையாளர்களிடம் தென்படும் குரூரம், கோபம், பயம், தற்பெருமை என்னும் உணர்வுகளின் கலவையாகும். ஆனால், வன்முறையை அகிம்சை முறை எதிர்கொள்கையில் இந்த குரூரங்கள் மெல்ல மெல்ல மங்கி விடுகின்றன.. அவை அழிகின்றன என்று பொருளல்ல.. அவற்றின் தேவை இங்கே இல்லாமல் போகிறது என்பதே. These traits are not a valid currency against non-violence.
ஜ்யூ ஜிட்ஸுக் கலையின் மிக முக்கியமான அம்சம் – ஒரு உயர் மனச்சமநிலையைப் பேணுதலாகும். இந்த உயர் மனச்சமநிலை என்பது, ஒரு மனிதன், ஒரு உயர்ந்த அறத்தினுடன் வைத்திருக்கும் உண்மையான உறவாகும். இதை இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அன்பு எனச் சொல்லலாம். மனிதர்களின் மீதும், எல்லையற்ற மனித சாத்தியங்கள் மீதும் ஆழமான நம்பிக்கை.. என்றும் மாறாத மானுட விழுமியங்களின் மீதான பெரு மதிப்பு, சத்தியத்தின் மீதான தீராத வேட்கை, எல்லா உயிரும் ஒன்றெனக் கருதும் மனநிலை.. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இது எல்லா மனிதர்களிடமும் பல்வேறு அளவுகளில் உள்ளது. சுய பயிற்சிகளின் மூலமும், ஒழுக்கத்தின் வழியாகவும், இந்தக் குணங்களை பெரிதளவு வளர்த்தெடுக்க முடியும் என்கிறார்.. இந்த வழிமுறைகள் வழியே தன்னை மேம்படுத்தி, ஒரு உயர் சமநிலையை அடைவதே ஒரு சத்தியாக்கிரகிக்கான இலக்கு.
கோபம், அன்பு – இவ்விரண்டு குணங்களுமே மனித சக்தியின் வெளிப்பாடுகள்.. இரண்டுமே படைப்பூக்கச் சக்திகள்தாம். ஆனால், அன்பின் சக்தி பெரிது. அது நீடித்து நிலைக்க வல்லது. அன்பு என்பது உயிரின் தொடர்ச்சியின் அடிப்படை. கோபம், அந்தத் தொடர்ச்சியை மறுக்கும் உணர்வு. அன்பு என்பது, அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் என்னும் நேர்மறை உணர்வு. கோபம் என்பது, எதிர்த்தரப்பு வாழக்கூடாது என்னும் எதிர்மறை உணர்வு
அன்பை ஆயுதமாகக் கையாள்கையில், கோபம் என்னும் ஆயுதத்தை விட மிகுந்த நிதானத்துடனும், செயல் திறனுடனும், துல்லியத்துடனும், தன் இலக்கை எய்துகிறது. அது மனித சமூகத்தின் அங்கீகாரத்தை என்றென்றைக்குமாகப் பெறுகிறது. நீண்ட கால நோக்கில், அன்பே கோபத்தை வென்று அழிவில்லாப் பெருங்குணமாக மனித சமுதாயத்தின் முன் நிற்கிறது.
கோபம், அன்பு, வீரம் என்னும் இந்தக் குணங்களைப் பற்றிய க்ரெக் அவர்கள் எழுதியிருப்பது மிக ஆழ்ந்து கற்க வேண்டிய பகுதிகளாகும். அகிம்சை வழியின் மீது ஆர்வமுள்ளவர்கள், அதை தன் ஆளுமையின் பகுதியாக மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் செல்ல வேண்டிய வழி.
இந்தப் போராட்டத்தில், அகிம்சை வழி போராடுபவர், ஒரு முக்கியமான விஷயத்தை மனத்தில் நிறுத்திக் கொல்வது அவசியம் – வன்முறை போலல்லாமல், எதிராளியை ஒடுக்கி, அவமானப்படுத்தி, அவரது மன உறுதியைக் குலைக்கச் செய்வதல்ல அகிம்சை வழி என்கிறார். எதிராளியின் நற்குணங்களுடன் உறவாடி, அவரது புரிதலை மேம்படுத்தி, அவர் மனதை மாற்றி, இரு தரப்புக்கும் ஒத்துவரக்கூடிய ஒரு இலக்கை எட்டுதலே அகிம்சை வழியின் குறிக்கோளாக இருக்க வேண்டும், பரஸ்பர மரியாதை மற்றும் சுயமரியாதை ஒரு குன்றிமணியளவு கூடக் குறையாமல் இது நிகழ வேண்டும் என்கிறார் க்ரெக்.
ஒரு அகிம்சைப் போராளி, தன்னைத் தாக்கவருபவரை, அவர் தாக்கும் போது என்ன தளத்தில் இருந்து தாக்கினாரோ, அதைவிட அதிக உயர் அறத் தளத்தில், தனது செயல்கள் மூலமாக கொண்டு வைக்க வேண்டும் என்கிறார் க்ரெக், அறப்போராட்டத்தின் முடிவில், இரு தரப்புமே முன்பு இருந்ததை விட, அதிக பாதுகாப்பான, மகிழ்ச்சியான, உண்மையான படைப்பூக்கம் நிலவும் சூழலைச் சென்றடைய வேண்டும். அவர்களுடைய உறவு, பல்வேறு திசைகளிலிருந்தும், ஒன்றிணைந்தும் மானுட ஒருமைப்பட்டை அடைவதாக இருக்க வேண்டும் என்கிறார்.
அகிம்சை வழியில் போராடுபவர், தான் முன்னெடுக்கும் கொள்கைக்காக, வன்முறையின் கொடுமையைத் தாங்கிக் கொள்வதைக் காணும் தாக்குபவர் மற்றும் பொதுமக்கள் மனம் நெகிழ்கிறது என்னும் க்ரேக், இதன் காரணங்களை ஆராய்கிறார்
மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே, தனது உயிரைக் காத்துக் கொள்ள பெரும் துன்பங்களையும், வலிகளையும் எதிர்கொண்டே வந்திருக்கிறது. துவக்க காலத்தில் விலங்குகள், இயற்கைக்ச் சீற்றங்கள், பின்னர் படையெடுப்புகள் என. எனவே, வன்முறையினால் நிகழும் துன்பங்களை நம் நரம்பு மண்டலம் இயல்பாகவே உணர்ந்து கொள்கிறது. மனம் அதை அனுதாபத்துடன் பார்ப்பது மிக இயல்பான ஒன்றாக இருக்கிறது.இரண்டாவது, அடிப்படையில் எல்லா மனிதருமே மிகவும் வீரமானவர்களாக இருக்க விரும்புகிறார்கள்.. எனவே, தான் கொண்ட கொள்கைக்காக, சுயமாகச் சென்று வன்முறையின் கொடுமையை எதிர்கொள்வதை வியந்து பாகதாநாயகி – கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ.,
திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, வழிந்துவரும் தாரையை கத்தியால் நீவி ஓவியம் வனைந்தெடுக்கும் கே.எஸ்.புணிஞ்சித்தாயா என்ற மங்களூர் ஓவியரைப் பற்றி சிலநாட்களுக்கு முன் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள். உங்கள் கதையில் மூன்று வண்ண விசிறல்கள். எழுத்தாளர் ஃப்ரான்ஸெஸ் பர்னியைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் மற்றும் அவள் எழுதிய கதைஉருவான கதை ஒரு விசிறலென்றால் – ஈவ்லினா,ஆர்வில் பிரபு, ரெவெரென்ட் வில்லர் என்று கதாபாத்திரங்கள் புழங்கும் அவளுடைய History of a Young Lady’s Entrance into the World நாவல் (இணையத்தில் உள்ளது) மற்றொன்று – ஹெலனா, மெக்கின்ஸி, கர்னல் சாப்மான் என்று அவர்களுக்குச் சமமாக கதைசொல்லியின் புனைவில் தோன்றும் கதாபாத்திரங்கள் பிறிதொன்று.
இந்த வண்ணவாரியிறைப்பில் சிக்கிக்கொண்ட சிறு பூச்சியே கதைசொல்லி. இந்த பலவண்ண வழிசல்களின் முடிவில்லா சாத்தியக்கூறுகள் வழியே முகிழ்ந்தெழுந்ததே உங்கள் ‘அமானுஷ்ய’ உளவியல் நாவல். கோரன், துப்பன், உச்சன், காபிரியேல் நாடார் என்று கதைசொல்லியோடு நடமாடும் ரத்தமும் சதையுமான பாத்திரங்கள். இதையும் சேர்த்துக்கொண்டால் நான்கு வர்ணவீச்சுக்கள். வாசகனுக்கான ஆகப்பெரிய சவால் என்னவென்றால் எங்கு ஒரு வர்ணத்தின் வீச்சு குறைந்து அடுத்த வர்ணத்தின் வீச்சு ஆரம்பிக்கிறது என்று கண்டுகொள்வது.
மின்சாரவாரியத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற எண்பது வயதான என் உறவினர் ஒருவர் கூறியிருக்கிறார் ‘அப்பர்’ கோதையாறில் ‘டன்னல்’ தோண்டும்போது எலும்புக்கூடும், மண்டையோடும் நிறைய பார்த்ததாக. சரியான இடத்தைத்தான் தேர்வு செய்திருக்கிறீர்கள்.
‘விர்ஜீனியாவும் ஆப்பியஸும்’ எழுதிய ‘அப்பா கிரிஸ்ப்’ பர்னியை பாதித்த முக்கியமான ஆளுமை. அதே ‘விர்ஜீனியாவும் ஆப்பியஸும்’ பற்றித்தான் சாப்மான் ஹெலெனாவிடம் உரையாடுகிறார். நாவலில் உள்ள விர்ஜீனியாவின் கௌரவக் கொலையை நியாயப்படுத்துகிறார். கடைசியில் ஹெலனா சாப்மானுக்குக் கொடுத்த ‘மரணஉதை’க்குக் காரணம் இதுதானா? ‘எதிர்பாராத கணத்தில் இயல்பான அசைவுபோல நீண்டுவந்து என் மார்பைப் பற்றிக் கசக்கி மீண்ட கை’ என்று ஈவ்லினா குறிப்பிடுவது யாருடைய கையை.
புலியின் பொன்னிற உடலின் அழகையும், அதன் அரச கம்பீரத்தையும் சாப்மான் ஹெலெனாவிடம் வருணிப்பதையும் பின் அதேமூச்சில் “துப்பாக்கி வேட்டின் ஓசை போதும், அக்கணமே அது அஞ்சிய பூனையாக ஆகிவிடும். அது பதறியடித்து ஓடுவதை நீ பார்க்கவேண்டும். நாம் துரத்திச் சென்றால் அது தன் வளையை அடைந்து பதுங்கி அமர்ந்துகொண்டு முகத்தைச் சுளித்து மீசை விடைக்க வெண்பற்களைக் காட்டி சீறும். அது ஒரு அபத்தமான சிரிப்பு போலிருக்கும். அஞ்சியவர்கள் வீராப்பு காட்டும்போது வரும் சிரிப்பு அது.” என்று புலிவேட்டையைப் பற்றிச் சொல்லுவதை புலிமட்டும் படிக்க நேர்ந்தால் கண்ணீர் விட்டிருக்கும். அப்பாவிக் குரங்குகளைச் சுட்டுத்தள்ளும் சாப்மான் அதற்குக் கொடுக்கும் விளக்கம் கொடூரத்தின் உச்சம். மனிதர்களையே அப்படித்தானே கொன்றார்கள்.
தலையிலே பாளையிட்ட எளுத்து என்று ‘இ’ யைச் சொல்வதும், சிரிக்குன்ன வீடு என்று கதவு திறந்திருக்கும் வீட்டைச் சொல்வதுமான காணிக்காரர்களின் ஒப்பீடுகள் சிரிப்பை வரவழைப்பவை. உயர்தர மொராக்கோ தோல் சிம்மாசனம் பொருத்திய ஃபீட்டன் ரக சாரட் வண்டிகள், பாரஃபின் விளக்குகள், வெள்ளையர்களின் உடல் மொழிகள், மெய்ப்பாடுகள் என்று நீங்கள் தரும் நுண்விவரணைகள் அபாரம். ஏதோ பதினெட்டாம்நூற்றாண்டு வெள்ளைக்கார எழுத்தாளரின் ஆவி உங்களில் இறங்கி எழுதியது போல இருந்தது.
காட்டைப் பற்றி எழுதும்போது காணிக்காரராக மாறிவிடுகிறீர்கள். ‘ரீ என்னும் ஒற்றை ஓசையால் காடு சூழ்ந்து திகழ்ந்துகொண்டிருந்தது. அது ஆர்கனின் c2 போல முடிவில்லாமல் சுருளவிழ்ந்து செல்லும் ஓசை’ ஒலி வடிவமான காட்டை விளக்க இதற்குமேல் வார்த்தைகள் இல்லை. கதைசொல்லி இப்போது எந்தக்கதையில் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று கண்டுகொள்வது வாசகனாக எனக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி எழுத்துருக்களைப் பயன்படுத்தியிருந்தது நல்ல உத்தி. ‘Raising the bar’ என்பார்கள். அதை நீங்கள் இந்நாவலில் அத்தியாயத்திற்கு அத்தியாயம் செய்திருக்கிறீர்கள். வாசகனுக்கு சவால்விடும் இன்னொரு தனித்துவமான சாதனைப்படைப்பு.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம், இன்று இரவு நீங்கள் கதாநாயகியின் கடைசி பதிவை பதிவேற்றம் செய்ததுமே படித்துவிட்டேன். மிக அருமையான கதை. அதுவும் யாரும் வெளியே செல்ல முடியாத இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தினமும் நான் லண்டனுக்கும் கொன்னமேட்டுக்கும் கோதையாறுக்கும் 30 வருடங்களுக்கு முன்னால் இருந்த காலகட்டத்தில் “கதாநாயகி” வழியாக பயணம் செய்து கொண்டிருந்தேன். சொல்ல போனால் லண்டனுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால். மெய்யன் பிள்ளை, கோரன், துப்பன், உச்சன், காபிரியேல் நாடார், ஹெலெனா, கர்னல் சாப்மான், காப்டன் மெக்கின்ஸி என தொடர்ந்து 7 நாட்கள் என்னுடன் இருந்த நபர்கள் எல்லோரும் விடைபெற்று சென்றார்கள். பதினைந்தாவது பதிவில் கதை நிறைவு பெற்றாலும் நான் கொஞ்சம் பேராசையோடு பதிவின் கடைசியில் மேலும் என்றிருக்கிறதா இல்லை நிறைவு என்றிருக்கிறதா என்று பார்த்தேன். “நிறைவு”யை பார்த்துவிட்டு எனக்குள் நானே சிரித்துக் கொண்டு நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தேன்.
ஜனனி ஆர்
அன்புள்ள ஜெ
கதாநாயகி நீங்கள் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து முழுக்கவே விடுவித்துக்கொண்டு எழுதிய கதை. பழைய கதைகளின் எந்தச் சாயலும் இல்லை. தலைமுறை தலைமுறையாக, சரித்திர காலம் முதலிருந்தே நீளும் ஓர் அடக்குமுறையின், சுரண்டலின் கதை. அது வந்து முடியும் உச்சம். அதிலிருந்துதான் கதை தொடங்குகிறது. அந்த புத்தகம் அதன் சாட்சி. அங்கிருந்து சுற்றி அதையே வந்தடைந்து நிற்கிறது.
விர்ஜீனியாவை கொல்கிறார்கள். ஃபேன்னியும் ஈவ்லினாவும் ஹெலெனாவும் சுரண்டப்படுகிறார்கள். ஆழமாக அவமதிக்கப்படுகிறார்கள். அல்லது அவமானம் அடைகிறார்கள். ஆனால் அவர்களின் சர்வைவலுக்கு அதற்கு உடன்படவேண்டியிருக்கிறது. அது அளிக்கும் ஆழமான கசப்பு அவர்களுக்கு உள்ளது. அதிலிருந்து ஃபேன்னி ஒருவகையில் வெளியே வருகிறாள். ஈவ்லினா இன்னொருவகையில் வெளியே வருகிறாள். ஹெலெனா ஒருவகையில் வெளியே வருகிறாள்.
இத்தகைய கதைகளில் ஹெலெனா கொல்லப்படுவாள். பழிவாங்க காத்திருப்பாள். நான் கதையை அப்படித்தான் எதிர்பார்த்தேன். அது வந்து முடிந்த விதம் ஆச்சரியமானது. ஆனால் அதுதானே நியாயமானது என்றும் சொல்லவைத்துவிட்டது கதை.
அடுக்கடுக்காக விரியும் ஐரோப்பிய வரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டுவரை பெண்ணின் இடமென்ன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. விர்ஜீனியாவில் தொடங்கி ஹெலெனா வரை. ஹெலெனா விடும் அந்த உதைதான் பதினெட்டாம்நூற்றாண்டின் திருப்புமுனை. அங்கிருந்து கதையை நீட்டிச்சென்று மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் ஃப்ரான்ஸெஸ் பர்னி அடையும் விடுதலைக்களியாட்டம் வரை நீட்டலாம்.
எம்.சந்திரசேகர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

