Jeyamohan's Blog, page 1004

April 14, 2021

முகில் -கடிதங்கள்-3

அன்புள்ள ஜெ

மல்லீஸ்வரியின் பாடல்காட்சியில் ஸ்ரீபாலாவை கண்டுபிடித்துவிட்டேன். வெட்டி அனுப்பியிருக்கிறேன். இவர்தானே?

ஆர்.ஸ்ரீராம்

 

அன்புள்ள ஸ்ரீராம்,

சரிதான். ஆனால் சில பெட்டிகளை திறக்க, பொதுவில் வைக்க நமக்கு உரிமை இல்லை.

அத்துடன் நமக்கு ஏன் இந்த ஆர்வம் வருகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்

ஜெ

 

அன்புள்ள ஜெ,

அந்த முகில் இந்த முகில் ஒருவகையில் ஒரு மல்டிமீடியா டெக்ஸ்ட். அடுத்த காலகட்ட புனைவுக்கு உதாரணம். ஏற்கனவே பிழை போன்ற சில கதைகள் இதற்கு உதாரணமாக உள்ளன. அந்த சினிமா, அந்தப்பாடல்காட்சிகள், பாடல்கள் இல்லாமல் இந்தக்கதை முழுமை அடையாது.

மூன்றுவகை யதார்த்தங்கள். நடைமுறை வாழ்க்கையிலிருந்து சினிமா ஒன்றை உருவாக்குகிறது. அதிலிருந்து இந்த புனைவு இன்னொன்றை உருவாக்குகிறது. கனவுக்குள் இன்னொரு கனவுபோல.

இந்தக் கதையை ஒரு ரொமாண்டிக் கற்பனைக் கதையாக நான் வாசிக்கவில்லை. இதில் காதல் என்ற அந்த உலகம் சினிமா என்ற இன்னொரு மாய உலகத்துடன் ஊடாடும் விதம்தான் நவீனப் புனைவுக்குரிய முக்கியமான அம்சம் என நினைக்கிறேன்.

சினிமா, அதிலும் கருப்புவெள்ளை சினிமா மனிதக்கண் பார்க்கவே முடியாத ஓரு உலகை உருவாக்குகிறது. அதேபோன்ற ஒரு உலகம்தான் நிலவொளியில் அவர்கள் உருவாக்கிக் கொண்டது. நிலவும் முகிலும் சேர்ந்து உருவாவது

முகில் அவ்வளவு நிலையற்றது. ஆனால் சினிமா அதை கல்லில் செதுக்குவதுபோல நிலைக்கவைத்துவிட்டது. பல்லாயிரம் காதல்கள் அப்படியே மறைந்துவிடும். ஆனால் ராவ்- ஸ்ரீபாலா காதல் அப்படியே நீடிக்கும். ஆகவேதான் அவள் என்ன ஒரு அதிருஷ்டம் என்று அதைச் சொல்கிறாள்

 

கே.சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்,

ஒவ்வொருவருக்கும் அப்படி எஞ்சும் ஒரு துளி இருக்காதா என்ன?

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

எழுத எழுத எழுத்தாளனிடம் ஒரு லோட் வந்து சேர்கிறது. அதுவரை எழுதியவற்றின் நெடி. அந்த எழுத்துக்கள் அளிக்கும் ஒரு ஜாக்ரதை உணர்வு. வழக்கமாக செஞ்சுரி அடிக்கும் பேட்ஸ்மேனின் எச்சரிக்கை உணர்வு. அந்த உணர்வெல்லாம் இல்லாமல் சட்டையை கழற்றுவதுபோல வெண்முரசு எழுதிய ஜெயமோகனை கழற்றிவிட்டு வேறுவேறு உலகங்களில் பயணம் செய்கிறீர்கள்.

அந்த முகில் இந்த முகில் நாவலை உங்கள் வயதில் எழுதுவது ஒரு சாதனைதான். அதில் இருக்கும் ஆழமான போதை இளமைவயதுக்கே உரியது. கனவும் கண்ணீருமாக நாம் தவித்த பிராயம் பிறகு யோசித்தால் அபத்தமாக ஆகிவிடும். அந்த அபத்த உணர்வு கொஞ்சம் பாக்கியிருந்தால்கூட இதை எழுதியிருக்க முடியாது. சரித்திர உணர்வு, அரசியலுணர்வு எதுவுமே இல்லாத ஓர் இளமையில் நின்றுகொண்டு எழுதவேண்டிய படைப்பு இது.

 

சாரங்கன்

 

அன்புள்ள சாரங்கன்,

நான் இந்தக்கதையை எழுத எண்ணியது 2006ல். அன்று நாகராஜு இருந்தார். எழுதுவது இப்போதுதான்.

தகழி சிவசங்கரப்பிள்ளை பஷீரிடம் அவர் ஒரு காதல்கதை எழுதவிருப்பதாகச் சொல்கிறார். கொஞ்சம் வயது முதிர்ந்தபின் எழுதும்படி பஷீர் சொல்கிறார். நாற்பத்தைந்து வயது கடந்தபின் தகழி செம்மீனை எழுதினார்

கனவு திரண்டு ஒளிகொள்ளவேண்டும் என்றால் கொஞ்சம் வயது ஆகவேண்டும்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

தெலுங்குப் பண்பாடு பற்றிய பல நுண்செய்திகள் இக்கதையில் உள்ளன. புவ்வுல பாபுவை பற்றி தமிழ் கதை ஒன்றில் வாசிப்பது அதிருஷ்டம்தான். காலி அவர்களின் பாடல் அப்படி ஒரு கார்வை கொண்டது. நாவல்கள் கதைகள் என்று ஏராளமான செய்திகள்.

சத்யநாராயணன் என்.

 

அன்புள்ள சத்யா

தகவல்களை முன்னரே பலவகை வாசிப்பு, இசை ஈடுபாடு வழியாக அறிந்திருந்தேன். இதற்காக தனியாக ஒன்றும் ஆய்வு செய்யவில்லை. தமிழ் சினிமாவின் ஒப்பனை, தையல் கலைஞர்களில் பலர் புவ்வுல பாபுவின் ஆராதகர்கள்.

எழுதியபின் செய்திகளை ஈநாடு தெலுங்கு இதழின் துணையாசிரியரும் நண்பருமான ராஜு சரிபார்த்து உதவினார்

 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2021 11:31

முதற்கனல் வாசிப்பு- ஜெகதீஷ்குமார்

முதற்கனல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்புள்ள ஜெ,

நீண்ட ஆண்டுகளுக்குப் பின் கடிதம். பீமனின் குறுக்காக விழுந்த வாலைப்போல் வெண்முரசு விழுந்து கிடந்தது. தினமும் உங்கள் தளத்தில் மேய்ந்தாலும் கட்டுரைகளை மட்டுமே (இலக்கிய, ஆன்மிக) வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.வெண்முரசை வாசிக்காமல் உங்களுக்கு கடிதம் எழுத எனக்குத் தகுதியில்லை என்று எண்ணியிருந்தேன். அதை வாசிக்காததனாலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா பற்றி தங்கள் தளத்தில் கடிதம் கண்டும் சேரலாமா என்ற தயக்கம் இருந்தது. தயக்கத்தை மீறி சௌந்தர் அண்ணாவுக்கு மின்னஞ்சல் அனுப்பி வட்டத்தில் இணைந்தவுடன் புரிந்தது. இதில் சேர்வதன் மூலமே வெண்முரசை என்னால் வாசித்து முடிக்கக் கூடிய ஊக்கத்தைப் பெற இயலும் என்று.வசந்த காலத்தைத் தாண்டும் துடிப்பே அதை வசந்தமாக்கி விடும் என்று நீங்கள் சொல்வதைப் போல. சேர்ந்து விட்டேன்.

இம்மாதம் 20ம் தேதி முதற்கனல் கலந்துரையாடல் இருந்தது. ஐந்து நாட்களில் முதற்கனலை இரண்டாம் முறையாக வாசித்து (ஏற்கனவே நீலம் வரை வாசித்து விட்டிருந்தேன்.) அதற்கு அத்தியாயக் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். இக்குறிப்புகள் வாசித்தபின் என் மனைவி அனுவிற்குக் கதையாகச் சொல்ல உதவின.இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் பகிர்ந்தேன். அவர்களும் குறிப்புகள் வாசித்ததைத் தொகுத்துக் கொள்ள உதவியதாகச் சொன்னார்கள்.

முதற்கனல் அத்தியாயக் குறிப்புகள்.

சந்திப்புக்கு ஐந்து நாட்கள் முன்புதான் விஷ்ணுபுரத்தில் இணைந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே நண்பர்கள் அதன் ஓர் அங்கமாக என்னை உணரச்செய்து விட்டனர். குழுவில் நிறைய ராஜன்கள் இருப்பதால் வரும் குழப்பத்தைப் பற்றி கொஞ்ச நேரம் கலாட்டா ஓடியது. சிலர் அவர்களுக்கு ராஜாதி ராஜ ராஜகுல திலக…. என்று குலோத்துங்குவை மட்டும் விட்டு விட்டு பராக் பாட ஆரம்பித்து விட்டனர். நான் மன்னர்கள் நிறைய இருப்பதால் இந்த சூதர்களுக்குச் சில பொற்காசுகளை வீசுவார்களா என்றேன். அது சூதர் பாடும் பாடலைப் பொறுத்தது என்றார் ஒருவர். மண்டபத்தில் நமக்கு யாராவது எழுதித்தர மாட்டாங்களா என்றேன் நான். மதுரைத்தமிழ் கலந்து அம்பைகுறித்து ஓர் உணர்ச்சிகரமான உரையாற்றிய ஜமீலா அவர்கள் கூட தன் அற்புதமான உரையை முடித்து விட்டு இது யாரும் மண்டபத்தில் எழுதிக் கொடுத்து எடுத்து வரவில்லை என்றார்.

பழனி அவர்களின் என்ன தவம் செய்தனையுடன் இனிதே துவங்கியது நிகழ்வு. ஜமீலா அவர்கள் அம்பை குறித்தும், கிஷோர் முதற்கனலில் இச்சையின் இடம் குறித்தும், ஷங்கர் சிக்கி முக்கிக் கற்கள் என்ற தலைப்பில் முதற்கனலில் ஆண்பெண் உறவு குறித்தும் உரையாடினர். ஒவ்வோர் உரைக்குப் பின்னரும் அவையோர் தங்கள் கருத்துகளைப் பரிமாற வாய்ப்பு வழங்கப்பட்டது. நண்பர்கள் அனைவருமே நாவலை ஆழ்ந்து வாசித்திருந்தனர். நான் அம்பை ரசிகன், நான் விசித்திர வீரியனின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். நான் வாசிக்காத பல கோணங்கள்  திறந்து கொண்டு நாவல் என்னுள் விரிந்து கொண்டே சென்றது. நீண்ட காலமாகவே வாசிப்பு, எழுத்து என்று இருந்தாலும் ஒரு இலக்கிய வட்டத்தில் நான் இணைவது இதுவே முதல் முறை. இது என் வாசிப்பையும், எழுத்தையும் முறைப்படுத்தும் என்று திண்ணமாக நம்புகிறேன்.

இரண்டாவது முறை வாசிக்கும்போது முதல் முறை எத்தனை விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று தெரிந்தது. முதல் முறை அம்பையும், பீஷ்மரும், விசித்திரவீரியனும், சிகண்டியும், சத்யவதியும் பேருருவம் கொண்டு எழுந்திருந்தனர். இரண்டாம் முறை ஜெ என்னும் ஆசிரியரின் பேருருவத்தைத் தரிசிக்க வாய்த்தது.

சொல்லித்தீராத உவமைகள் :நீந்தும் யானை போல தன் கரிய பெருங்கால்களை ஓசையின்றித் துழாவி நடக்கும் காலம், இறந்தவளின் தலையிலிருந்து பேன்கள் இறங்கிசெல்வதுபோலத் தாயின் உடலை விட்டுச் செல்லும் குழந்தை, அறுபடாத சில்வண்டு ஒலியில் கோர்க்கப்பட்டிருந்த பிற ஒலிகள்(ஸூத்ரே மணி கனா இவ!), வியர்த்த பளிங்கு மேல் விரலால் இழுத்தது போல் உருவாகி வரும் அமைதியாலான வழி, படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிக்கும் விசித்திர வீரியனின் நாடி, கிழிந்த பறைபோலக் கிடந்த நகரம்…,

ஒவ்வொரு கணத்திலும் முளை விட்டெழும், கிளை விட்டெழும் கேள்விகள்: க்ஷத்ரிய அறமா? பெண்களின் கண்ணீரா என்று பீஷ்மர் திகைத்து நிற்கும் தருணம், தன்னறமா? பொது அறமா என்று நம் மண்ணில் காலகாலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்வி ஒலிக்கிறது. இந்தக் கேள்வி நாவல் முழுதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. என்னுள்ளும் சில கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. வியாசன் வனத்திற்குள் சென்று சுகனைக் காண்கையில் எல்லாக்கிளிகளும் வேதம் பாடுகின்றன. பாடித்திரியும் ஆயிரம் கிளிகளில் ஊழ்கத்தில் அமர்ந்தது ஒரு கிளிதானே! என்று நினைத்துக் கொண்டேன். சாந்தோக்கிய உபநிஷத்தில் உத்தாலகர் ஸ்வேதகேதுவுக்குச் சொன்ன சொற்றொடரை அக்னிவேசர் சிகண்டிக்குச் சொல்கிறார். வேத வேதாங்கங்கள் கற்றுத் திரும்பிய ஸ்வேதகேதுவுக்கு ஒரு சொல் போதும். குரோதத்தால் கொதித்துக் கொண்டிருக்கும் சிகண்டிக்கு அச்சொல்லே போதுமா? பீஷ்மரின் ஆடியில் ஏன் புரு தெரியவில்லை?

நாவல் முழுக்க நிறைந்துள்ள நுண்தகவல்கள்:  நிலக்காட்சி வர்ணனைகள், மானுடர் புரியும் தொழில்கள், மென்மழை விடாது தூறும் வேளிர்கிராமம், அதன் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும், முதியோரும், கூரைகளுக்கு மேலாக எழுந்தபடி இருக்கும் இனிய சமையற்புகையும், இருளேயாகி நிறைந்திருக்கும் எருமைகளும், வருவிருந்து கொடுத்தனுப்பும் அவர்தம் தன்மையும்… பீஷ்மர் தனக்கு மட்டும் வாய்ப்பிருந்தால் அந்தக்கிராமத்திலேயே வாழ்நாள் முழுக்கத் தங்கி விடுவேன் என்று சொன்னதை என் அவாவாகவே உணர முடிந்தது. கள்ளுண்ட சூதன் பீஷ்மரையும், க்ஷத்ரியர்களையும் கலாய்த்துப் பாடும் அத்தியாயம், எளிய மக்கள் பார்வையில் அரசுகள் எப்படிப் பொருட்படுகின்றன என்று காட்டியது. சிவையும், அவள் தோழியும் பேசிக்கொள்ளும் அத்தியாயமும் (அதென்ன க்ஷத்ரியர்களுக்கு தவமிருந்தால்தான் குழந்தை பிறக்கிறது. சூதப்பெண்களுக்கு முனிவன் கல்லெறிந்தாலே பிறந்து விடுகிறது.). அவர்கள் இருவரும் குழந்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தது, பின் சிவையை வியாசனிடம் கருக்கொள்ளத் தேர்ந்தெடுப்பதற்கான அடித்தளமிட்டதைபோல இருந்தது.

இடையனின் குழலோசையில் வனவேங்கை மலர்களை உதிர்ப்பது கண்டு தான் இயற்றிய சம்ஹிதை அதற்கு ஈடாகாது என்று அதை எரியிடத் துணிந்த பராசரரின் கவிமனம், நிலவெழுந்த யமுனையைக் கண்டு கண்ணீர் பெருகும் பராசரரின் மனவெழுச்சி, அம்பையைக் கவர பத்தடி முன்னகர்ந்து பின் சீடர்களை ஆணையிட்டு அதைச் செய்யச்சொன்னதில் அவர் காதலை அறிந்த அம்பையின் அறிவுக்கூர்மை, கங்கைக்கரையில் படகில் நீங்குகையில் தன்னிலை இழந்து பீஷ்மர் என்ற மகாவீரரிடம் காதலில் விழும் அம்பையின் அதிரும் பெண்மை என்று நீங்கள் தொட்டு மட்டும் காட்டிய நான் நெகிழ்ந்த கணங்கள் எண்ணற்றவை. கவர்ந்த கணங்களைப் பட்டியலிட்டால் முழுமுதற்கனலையும் இட வேண்டியிருக்கும். முதற்கனலை மேற்கோள்களின் தொகுப்பாக மாற்றிவிடாமலிருக்க இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

முதற்கனல் என் உள்ளத்தில் விழுந்து விட்டது. இதை எழுதும் கணம் மழைப்பாடலில் இருக்கிறேன். வெண்முரசை முழுதும் வாசிக்க எனக்கும் முனைப்பையும், ஆற்றலையும் அருளுமாறு  நவீன வியாசரிடம் வேண்டுகிறேன். என் போன்ற பலருக்கும் இலக்கியம், ஆன்மிகம், கலை, வரலாறு எனப் பல்துறைகளின் ஞானாசிரியனாக விளங்கி வரும் உங்கள் முன் அகம் பணிகிறேன். எழுத்திலும், வாசிப்பிலும், ஆன்மிகத்திலும் தடையின்றி முன்னேறத் தங்கள் ஆசி வேண்டுகிறேன்.

ஜெகதீஷ் குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2021 11:30

April 13, 2021

மேகமாலை

தெலுங்குப் பாடல்களில் என்னை மிகக்கவர்ந்த வரி ‘மேகமாலா’ பல பாடல்களில் இந்த வரி வருகிறது. தமிழில் இப்படி ஒரு சொல்லாட்சி இல்லை. முகில்மாலை. முகிலாரம். சங்கப்பாடல்களில் கூட இல்லை. மாலா என்றால் அங்கே கருமை என்றும் பொருளுண்டு என நினைக்கிறேன். கருமேகமா?

வேகமான தாளம் கொண்ட இந்தப்பாடலை வேறுவேறு வடிவங்களில் கேட்டுக்கொண்டே இந்த இரவைக் கடக்கிறேன். ‘அந்த முகில் இந்த முகில்’ உருவாக்கிய ஒருவகை தீவிரநிலையை தாண்ட வேண்டியிருக்கிறது. எரியும் உலோகப் பரப்பின்மேல் நீரூற்றிக் குளிரச் செய்வதுபோல. இன்னொருவரின் துயரை தன் துயரென உணர்வதே எழுத்தாளனின் உச்சம். அவனுடைய நரகம்.

அந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு.

அந்த நுரைக்கு என்ன மதிப்பு? இலக்கியத்தில் அதை கற்பனாவாதம் என்றே சொல்லமுடியும். பழுத்த யதார்த்தவாதம் அதிலுள்ள நெகிழ்வையும், கனவையும் பொருட்படுத்தாதுதான். நவீனத்துவம் உருவாக்கிய ‘கணக்குவழக்கும்’ ‘கச்சிதத்தன்மையும்’ அதற்கு நேர் எதிரானதுதான். செவ்வியலின் ஒட்டுமொத்தப்பார்வை அதை தன்னுள் ஒரு துளியென அடக்கிக் கொள்ளும்தான். வாழ்க்கையை அறிய, வாழ்க்கையை பயனுறச்செய்ய அது எவ்வகையிலும் உதவாதுதான்

ஆனால் எப்போதுமே இலக்கியத்தில் அது இருந்துகொண்டிருக்கிறது. ‘கண்ணீர்த்துளி வார உள்ளுருக்கும் கலை’. அத்தனை நவீன இலக்கிய அலைகளுக்குப் பின்னரும் அவற்றை எழுதிய பெரும்படைப்பாளிகள் அப்படியே திசைமுனைகளில் மலைமுடிகள் என எழுந்து காலமே இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது அனைவருக்கும் உரியது அல்ல. உண்மையில் ஏராளமானவர்களுக்கு அந்த கற்பனாவாதத்தின் மென்மை, ஒளி, இனிமை வாழ்க்கையில் எப்போதுமே அனுபவமாகியிருக்காது. அவர்களுக்கு எண்ணி எண்ணி அளிக்கப்பட்டவையே கிடைத்திருக்கும். சிலரை அப்படி வடிவமைத்திருக்கிறது இயற்கை.

பெரும்பாலானவர்களுக்கு இளமையில் அந்த நிலவொளி வந்து வாழ்க்கையின்மேல் படிகிறது. சிலகாலம். சிலசமயங்களில் ஓரிரு மாதங்கள், ஓரிரு வாரங்கள். ஆனால் அதன் இனிமைத்தீற்றலை அனுபவித்திருப்பார்கள். பின்பு வந்தமைகிறது கணக்குகளின் உலகம். அனைத்தும் சமப்படுத்தப்பட்ட வாழ்க்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் பொருளும் தேடும் உள்ளம்.

நானறிவேன். தத்துவம் வழியாக நான் சென்றடைவது அந்த முழுமைநோக்கின் உச்சத்திலேயே. அங்கே எல்லாமே சிறியவையாகத் தெரிகின்றன. உணர்வுகளை நம்பி வாழ்வதென்பது முகிலள்ளி இல்லம் சமைப்பது போன்றது.

ஆனால் அங்கிருக்க விரும்பாமல் அவ்வப்போது இங்கு வருகிறேன். இந்தக் கனவில், இந்த நெகிழ்வில், இந்த பொருளற்ற தித்திப்பில், இந்த அழியா இளமையில் சிலகாலம் திளைக்கிறேன். எதன்பொருட்டும் என்னுள் இருக்கும் கற்பனாவாதியை, காதலனை இழந்துவிடலாகாது என்று சொல்லிக்கொள்கிறேன்

ஏனென்றால் வாழ்க்கை என்பது நடைமுறை உண்மைகளால், புறவய உண்மைகளால், சமன்படுத்தப்பட்ட பார்வைகளால், முழுமைநோக்கின் மகத்துவத்தால் மட்டும் ஆனது அல்ல. மனிதர்கள் எளிய கனவுகளில் வாழ்கிறார்கள். அக்கனவுகளை அருமணிபோல முதுமையிலும் பொத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாடலின் அடியில்  விரஜநந்தன் ராவ் என்பவர் எழுதிய குறிப்பு ஒன்று இருக்கிறது.Year 1957. I was in V Form. BHSchool Chandragiri. We went on School Excursion to Ooty, Koimbatore in the Month of May after exams. என ஆரம்பிக்கும் ஒரு குறிப்பு. 2018ல் எழுதியிருக்கிறார். அவருக்கு 75 வயது எழுதும்போது. எங்கோ ஒர் ஒலிப்பதிவுக்கருவில் பதிவாகியிருக்கிறது அவர் குரல் என உணரும்போது அவர் அடையும் ஓர் உணர்வு – அதை எழுத்து சென்றடைய முடியும் என்றால் அதுவும் பேரிலக்கியமே.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2021 11:35

கல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு

துள்ளுதல் என்பது…

இனிய ஜெயம்

ஒரு சிறிய பயணம். அதிகாலை குளிர் முகத்தை வருடும் வசதி கொண்ட ஜன்னலோர பேருந்து இருக்கை. உங்கள் தளத்தின் இன்றைய பதிவுகள் வழியே கல்பனா ஜெய்காந்த் அவர்களின் கவிதைகள் வாசித்தேன்.

நீண்ட நாள் கழித்து உங்கள் பரிந்துரை வழியே வாசிக்கப்புகுந்த கவிதைத் தொகுப்பு.  கடந்த சில மாதங்களாக குறிப்பாக கொரானா முடக்க சூழலில் நான் கவனமாக தவிர்த்த பல விஷயங்களில் ஒன்று, வாசிச்சு சொல்லுங்க என்று எனக்கு அளிக்கப்பட்ட புதியவர்களின் கவிதைகள்.சில கவிதை நண்பர்கள் திமிரு புடிச்சவன் என்று கூட உள்ளுக்குள் கருதி இருக்க நியாயம் உண்டு.  என்னளவில் இந்த கவிதை விஷயத்தில் மட்டும் என் அகம் மிகுந்த ஜாக்கிரதை கொண்டு விடுகிறது.

முதல் காரணம் மொழி. மொழி வழியே இலக்கியம் கண்ட உச்ச சாத்தியம் என்றால் அது கவிதைதான். ஆகவே ஒரு சிறந்த கவிதை அது மொழி வழியிலான  வெளிப்பாடு என்ற வகையில் மிகுந்த நேர்மறை தாக்கம் அளிப்பது.

அதே போல முதிர்ச்சி குன்றிய கவிதை அதன் மொழி அளிக்கும்  தாக்கம் வழியே மிகுந்த எதிர்மறை தாக்கத்தையும் அளிக்கும்.

தொடர் வாசிப்பின் வழியே ஒவ்வொரு வாசகனுக்கும் அவனது அக மொழி இயக்கத்தின் லாவகம் ஒன்று அவனுள் செயல்பட்டுக்கொண்டு இருக்கும். ஒரு நல்ல கவிதை அந்த லாவகத்துக்கு கிரியா ஊக்கி ஆக மாறுவதை போல, ஒரு முதிராக் கவிதை அந்த லாவத்தின் இயக்கத்தை இடை முறித்துவிடும் ஒன்றாக மாறி விடும். அடுத்த பாடல் பாட தயாராக இருக்கும் ஒரு பாடகனுக்கு குரல் சுருதி விட்டுப் போவதை போன்றது அது. மீண்டும் அக மொழியின் லாவக இயக்கத்தை மீட்க ஒரு வார கால தொடர் நவீன செவ்வியல் வாசிப்பு தேவையாகும்.

ஆக தொடர் வாசிப்பின் பகுதியாக என்னால் மோகன ரங்கன், இசை, தேவதேவன் போல மொழி திகைந்த ஆளுமைகளின் புதிய தொகுதிக்குள் ஐயமின்றி நுழைய முடியும். புதிய கவிஞரின் தொகுதி எனில் தளராத தயக்கம் ஒன்றே என் முன் நிற்கும்.

இரண்டாவது காரணம் நீங்கள் சொல்வது மாட்ரிக்ஸ் பட ஸ்மித் போல எல்லாமே ஒரே கவிதைகள். எல்லா கவிஞர்களுக்குமே ஒரே பிரச்சனை. இல்லாவிட்டால் மத்திய அரசை மல்லாக்க கவிழ்க்க வேண்டிய தேவைக்கு துணை நிற்கும் கவிதைகள், எதிர் கவிதைகள், பக்கவாட்டு கவிதைகள் என பீதிகளின் வெவ்வேறு வகை மாதிரிகள். இத்தகு நிலையில்தான் பரிந்துரைகளின் முக்கியத்துவம் கூடுகிறது.

அந்த பாதுகாப்பான பரிந்துரை பாதை வழியே நான் சென்றடைந்த நல்ல கவிதைத் தொகுப்பு என்று கல்பனா ஜெய்காந்த் அவர்களின் கவிதைத் தொகுப்பை சொல்வேன். பல வகையிலும் வேணு வெட்றாயன் அவர்களின் அலகில் அலகு கவிதைத் தொகுப்புடன் ஒப்பிட்டு உரையாடி ரசிக்கவேண்டிய நூல். எழுமொழியால், வடிவ கச்சிதத்தால், புதிய புதிய  சொல்லிணைவால், தனித்தன்மை கொண்ட உணர்வுக் களத்தால் இந்த இரு தொகுதிகளையும்  ஒப்பு நோக்கி உரையாடல் ஒன்றை திறக்க முடியும்.

ஒரே ஒரு இழை மட்டும் உடனடியாக சுட்ட தோன்றுகிறது. வேணு அவர்களின் கவிதைகளின் ஆத்மீக தளம் ஆண் என்ற (அல்லது சிவம்) தன்னிலையில் காலூன்றி எழுந்து பால் பேதமற்ற வெளியில் எழுந்து பறப்பது. அதே போல கல்பனா அவர்களின் கவிதைகளின் ஆத்மீக தளம் பெண்மை எனும் (அல்லது சக்தி) தன்னிலையில் துவங்கி பால் பேதமற்ற வெளியில் எழுந்து பறக்கிறது.

குறிப்பாக கல்பனா அவர்களின் தொகுதியின் முதல் இரண்டு கவிதைகளின் ஆத்மீக ஆழம். 44, மற்றும் 48 தவ நிலை என்பதன் இரு வேறு நிலைகளின் அற்புதக் கவிச் சாட்சியம். அகவயமாக ஆழம் நோக்கி  பயணிக்கும் கவிதைகள் போலவே புற வயமாக முன்செல்லும் கவிதைகளும் அதன் சாரத்தை  மொழியால் கூறு முறையால் சிரமம் ஏதும் இன்றி நிலை கொண்ட கவிஞரின் ஆளுமை கொண்டு சென்று  தொட்டு விடுகிறார்.

அக உலகு, அகமும் புறமும் இணைந்த நிலை புற உலகு என்ற இந்த மூன்று நிலைக்கும் கல்பனா அவர்களின் மொழி ஒரு ஊஞ்சல் போல இயல்பாக அங்கும் இங்கும் சென்று வருகிறது.32,63,20 இந்த மூன்று கவிதைகளை இதே வரிசையில் வாசித்தால் மேற்ச்சொன்னா ஊஞ்சல் அசைவின் அழகை அறிய இயலும். உணர்வின் துல்லியத்தை அதன் வசீகரம் குன்றாமல் கையளிக்கிறது மொழியால் கூறுமுறையால் கச்சிதமான 67 ஆவது கவிதை.

இந்தத் தொகுப்பில் எனது கவிதை என்று இது நானேதான் என்று உளம் பூக்க வைத்த கவிதை 15 ஆவது கவிதை. எல்லா கவிஞர்களும்

கவிதை என்ற தலைப்பில் ஒரு கவிதையேனும் மனதிற்குள் எழுதி அழித்திருப்பார்கள். நான் தனிப்பட்ட முறையில் கவிதை எனத் தலைப்பிட்டு அதன் கற்பனை சாத்தியத்தில் திளைத்த கவிதை 61 ஆவது கவிதை. மொழி வழியே போத மனம் கடந்து , அப்போத மனம் துளைத்து கவிதை சென்று தொடும் அந்த பரம்பொருளின் இணையடி, கவிதை எனும் அந்த கலை வடிவின் செயல் முறை எதுவோ அதுவான கவிதை,

நேராக நுழைந்த

கத்தி

செவி வழி

ஆன்மாவைத் தொட்டு

சொல்லாய்த்

தீயாய்

தலை வணங்கத்

திகழ்வதே

அது

பார்வையோ

வாசனையோ

அற்றவனின்

பாதமே

சென்னியில் அமைவது.

கவிதை

//சொல்லாய்த்

தீயாய்

தலைவணங்கத்

திகழ்வதே அது//

இல்லையா?.

கல்பனா ஜெயகாந்த் அவர்களுக்கு மென் மேலும் கவி சிறக்க வாழ்த்துக்களும் என்றென்றும் என் அன்பும்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2021 11:32

முகில் கடிதங்கள்-2

கடந்த சில ஆண்டுகளில் உங்கள் படைப்புகள் நிறைய வாசித்துள்ளேன். ஆனால் தினமும் இரவு பனிரெண்டு வரை காத்திருந்து படித்தது “அந்த முகில், இந்த முகில்” தான். காத்திருக்க வைத்ததும் இது மட்டும் தான்.

நிலவொளியில் வானத்தை பார்த்து கொண்டிருப்பது அரிய அனுபவம். சிறுவயதில் எங்கள் கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் இரவுகளில், வானம் பார்த்தே படுத்திருப்பேன். முக்கால்வாசி பெளர்ணமி இரவுகளை வானத்தை பார்த்தே கழிதிருக்கிறேன். கனவுகள் கண்டிருக்கிறேன். அந்த நாட்களுக்கு சென்று வந்த பிரமை.

நீங்கள் இன்னும் நிறைய படைக்க வேண்டும்.

இதன் தாக்கத்தில் மல்லீஸ்வரி படத்தை வேறு பார்க்க ஆரம்பித்து, இன்னும் முடிக்கவில்லை. ஓரிரு தினங்களில் அதை முடிக்க வேண்டும்.

நன்றி,

ராஜசேகரன்

 

அன்புள்ள ஜெ

மொத்தம் மூன்று காதல்கதைகள். ஸ்ரீராஜவிஜயேஸ்வரிக்கும் நல்லமராஜுவுக்குமான ஒரு காதல். பானுமதிக்கும் என்.டி.ஆருக்குமான ஒரு காதல். மோட்டூரி ராமராவுக்கும் ஸ்ரீபாலாவுக்குமான ஒரு காதல். மூன்று நிலைகளில் அவை இருக்கின்றன. முதற்காதல் ஒரு கனவு. மனிதன் கண்டுகொண்டே இருக்கும் ஒரு கனவு. இரண்டாவது காதல் அந்த கனவின் ஒரு சாயம் கொஞ்சம் கலந்தது. மூன்றாவது காதல் கனவே இல்லாத யதார்த்தம். சினிமாவில் நடந்தால்கூட ராமராவ்- ஸ்ரீபாலா காதல் அதன் அடித்தளமான அப்பட்டமான யதார்த்தத்தில் நடைபெறுகிறது.

நடைமுறையில் காதல் என்பது இவ்வளவுதான். இத்தனை யதார்த்தமானதுதான். பலவகையான பயங்கள், பலவகையான தயக்கங்கள், சாதி மதம் சமூக அந்தஸ்து எல்லாம் உண்டு. எல்லையை கடக்க பெரும்பாலும் முடிவதே இல்லை.அந்த அனுபவம்தான் 99 சதவீதம் பேருக்கும் இருக்கும். ஆனால் அந்தக் கனவு இருந்துகொண்டும் இருக்கும். அதை நோக்கி ஏங்கிக்கொண்டும் இருப்போம். அந்த கண்ணீர்துளிக்க வைக்கும் ஏக்கம் பதிவாகியிருக்கும் அபூர்வமான படைப்பு இது. என் அனுபவங்களுடன் நெருக்கமானது.

அந்தக் கடைசிக்காட்சியில் அவர்கள் உணர்ச்சிக்கொந்தளிப்புகள் ஒருபக்கம் நடைமுறை உணர்வு இன்னொரு பக்கம் என்று நின்று பேசிக்கொண்டிருப்பதில் உள்ள மிகையில்லாத யதார்த்தம்தான் இந்நாவலை கலைப்படைப்பாக ஆக்குகிறது

 

எம். மகேந்திரன்

அன்புள்ள ஜெ,

தமிழில் அசோகமித்திரன்தான்  ஐம்பது அறுபதுகளின் சினிமா பற்றி எழுதியிருக்கிறார். விஜயா வாஹினியில் பி.என்.ரெட்டி- நாகி ரெட்டி சகோதரர்களுடன் வேலைபார்த்த அனுபவம் பற்றி சாண்டில்யன் எழுதியிருக்கிறார். அவர் கதையிலாகாவில் வேலைபார்த்தார். ஆனால் அவற்றில் எவற்றிலும் சினிமாவின் தொழில்நுட்பம் பற்றி ஒன்றுமில்லை. ஏனென்றால் அன்றெல்லாம் நிர்வாகம், கதை இலகா வேறு. தொழில்நுட்பம் வேறு. அங்கே தலையிடவே அனுமதிக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சினிமா அனுபவத்திலிருந்து பல்வேறு விஷயங்களை தொட்டு எழுதியிருக்கிறீர்கள். அவை வெறும் செய்திகளாக இல்லாமல் நாவலின் உணர்ச்சித்தளத்துடன் கலந்து வேறுவேறு அர்த்தங்களை எடுத்துக்கொண்டே இருக்கின்றன. இந்நாவலுக்கு கருப்புவெள்ளை என்றுகூட பெயர் வைத்திருக்கலாம். கருப்புவெள்ளையின் கனவுலகம், அதற்கும் நிலவுக்குமான உறவு என பல உள்ளிணைப்புக்கள். கருப்பு வெள்ளை சினிமாவே முகில்களாலான ஓர் உலகம் என்பது ஒரு அபாரமான கற்பனை.

எத்தனை குறிப்புகள் வழியாக கதை நீண்டு செல்கிறது. காமிரா தெய்வமாக அமர்ந்திருக்கும் அந்த செட். மறைந்துபோன ஒரு நகரின் இடிபாடுகளில் இருந்து ஒரு சமகாலக் கனவை உருவாக்குகிறார்கள். அதைத்தான் ராவுகாரு கடைசிவரை பார்த்துக்கொண்டிருக்கிறார்

என்.ஆர்.சுவாமிநாதன்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

நாம் காண்கின்ற காட்சி ஒன்று, நம் மனதில் பதிவாகின்றது ஒன்று, அதை நாம் நினைத்துப் பார்க்கும்பொழுது எழுந்து வருவது ஒன்று,பல ஆயிரம் முறை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து கடைசியாக முழுமை பெற்று நிற்கின்ற நினைவு என்பது ஒன்று.

நாம் விரும்புகின்ற ஒருவரோடு இருந்த கணங்களை விட, நம் நினைவில் உருவாக்கி வைத்திருக்கும் அவரோடு இருந்த கணங்கள் பல ஆயிரம் மடங்கு மிகப் பெரியது.

எனது கல்லூரி பருவத்தில் மிகவும் அழகான ஒரு பெண்ணை நண்பர்கள் எல்லோருமே விரும்பினோம், அவளை குறித்து இரவு பகலாக நண்பர்கள் கதைத்து கிடந்தோம்.படிப்பு முடிந்து அவரவர் வாழ்வில் அவரவர் மூழ்கிய பொழுது அந்தப் பெண் குறித்த தொடர்பே இல்லாமல் போனது. 25 ஆவது ஆண்டு அலுமினி மீட்டிங் நடந்த பொழுது அதில் நான் கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்வின் புகைப்படம் மற்றும் வீடியோவை நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். 25 ஆண்டுகளாக எனது நினைவில் அவ்வப்போது வந்து போன அந்த அழகியின் உருவத்திற்கும் அவர்கள் அனுப்பியிருந்த நிகழ்கால போட்டோ விற்கும் துளிகூட தொடர்பே இல்லை. உருவம் பெருத்து வாழ்வின் சுமைகளை தாங்கி அவள் அழகே அற்றுப் போய் இருந்தாள் . அந்த போட்டோவை ஏனடா பார்த்தோம் என்று ஆகிவிட்டது.அவளின் அந்த இனிமையான நினைவுகளை அது ஒரேயடியாகக் குலைத்து போட்டுவிட்டது. நினைவில் வாழ்பவர்கள் காலத்தைக் கடந்து நின்று விடுகிறார்கள்.

இந்தக்கதை ஆழத்தில் ஒரு துயரத்தையே உருவாக்குகிறது. நாம் உண்மையில் செய்ய விரும்புவது ஒன்று செய்து தொலைப்பது வேறு ஒன்று. தொலைந்தவைகள் திரும்பி வருவதே இல்லை. நாம் விரும்பிய வண்ணம் வாழ்வதற்கான எல்லாம் சுதந்திரங்களையும் இயற்கை பல நேரங்களில் நிச்சயமாக அளிக்கிறது.ஆனால் நாம்தான் அவற்றை பல நுட்பமான காரணங்களால் பயன்படுத்திக் கொள்ள தவறி விடுகிறோம். இது கதையே ஆனாலும் கூட இழப்பின் வலி என்பது துயர் தருவதே.

மனம் கொஞ்சம் கணக்கத்தான் செய்கிறது. நிகர் வாழ்க்கை அனுபவம் தருதல் என்பது இலக்கியத்தின் வெற்றியாக இருக்கலாம் ஆனால் சில நேரங்களில் இலக்கியம் ஏற்படுத்தும் துயர் நிஜ வாழ்வில் வலியையும் தருகிறது தானே? இது தேவையா என்கின்ற கேள்வியும் எனக்கு எழுகிறது சில நேரங்களில்… உள்ளதைச் சொன்னேன் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

இழந்துபோன கணங்களை எங்கு போய் பெறுவது. எத்தனை எத்தனை அற்பக் காரணங்களால் எத்தனை எத்தனை உன்னத வாழ்வின் பேறுகளை இழந்திருப்போம்?

ஆனந்த் சுவாமி இது வெறும் கற்பனை கதை தான் கவலைப்பட ஒன்றுமில்லை என்று எனக்கு நானே சொல்லி வெளியே வந்து விட்டேன். அது வேறு விஷயம். அதையும் தவிர இங்கே வாழ்க்கையில் கவலைப்பட ஒன்றுமே இல்லை என்ற எனது ஆன்மீக புரிதலும் என்னை காத்து நின்றது. ஆனால் அதே நேரத்தில் இந்த கதை கொஞ்சம் வலிக்கவைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மையே…….

ஸ்ரீ பாலாவின் கோணத்திலிருந்து இன்னொரு 12 அத்தியாயங்கள் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் ஒருபுறம் நினைத்துக் கொண்டேன். பாவம் அந்தப் பேதை என்னென்ன துயரங்களை எதிர்கொண்டாளோ….அவளுக்கும் தன்னுடைய தரப்பு என்று ஒன்று இருக்கும் தானே…காதலின் துயரங்கள் இருவருக்கும் பொது தானே….

இதுபோன்ற துயர் தரும் கதைகளை படிக்கவே கூடாது என முடிவு செய்கிறேன். இவைகள் என்னுடைய ஆழ்ந்த அமைதியை, நிறைநிலையை சற்று நேரத்திற்கேனும் குலைக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் துயர் அளிக்கின்ற எந்த புனைவையும் இப்பொழுதெல்லாம் என்னால் படிக்கவே முடிவதில்லை. உங்கள் எழுத்திற்கு அதன் நடைக்கு வசப்பட்டு மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கிறேன்… இந்த வேடிக்கை எனக்கு இன்னும் பிடிபட்ட பாடில்லை…. எனது மன ஓட்டத்தை எழுதிச் செல்கிறேன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்….

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2021 11:31

மட்காக் குப்பை – கடிதங்கள்

மட்காக்குப்பை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மட்காக்குப்பை பதிவில், வாசகர் ஒருவரின் கேள்விக்கு நீங்கள் எழுதிய எதிர்வினையைப் பார்த்தேன். எனக்கு என்னவோ பொதுவாகவே, சுயமாக எதுவும் தேடிக்கொள்ளாமலேயே கேள்வி கேட்பார்கள் என்று நினைக்கிறேன். நான் சிறு வயதாக இருக்கும்பொழுது, சில சின்ன கேள்விகளுக்கு, என் தந்தை பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்பார். உதாரணத்திற்கு இன்றைக்கு என்ன தேதி என்று கேட்டால், நேற்று என்ன தேதி என்று கேட்பார்.  நேற்றைய தேதியை சொல்லிவிடுவேன். அவர், அதன் மூலம் எனக்குச் சுட்டிக்காட்டிய வழி, கொஞ்சம் நீயே யோசி என்பதுதான்.

அமெரிக்காவில், என்னை மேலாளராக்க சொல்லாமல் பயிற்சியளிக்கும் மேலாளர்களும் அதே முறைதான் கையாண்டார்கள். ஏதாவது ஒரு பிரச்சனை என்று நான் போய் நின்றால், அவர்கள் காலில் நின்று, அதற்கான பதிலை நீயே யோசி என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள், அதற்குப் பிறகு கேள்வியையும் பதிலையும் எடுத்துச் சென்று பொதுவான ஒரு முடிவு ஒன்றை தேர்ந்தெடுக்கவே மேலாளரிடம் செல்வேன்.  இதை நான் பயிற்சியாக எடுத்துக்கொண்ட அதே சமயம், சிலர், இவர் மேலாளர் என்பதால்தானே , பிரச்சனையை எடுத்துக்கொண்டு செல்கிறோம். நமக்கு பதில் தெரிந்தால், எதற்கு இவரிடம் செல்கிறோம் என்று கேட்பார்கள். அவர்கள் இன்றும் மேலாளர்களைக் குறை சொல்லிக்கொண்டு அங்கேயே உள்ளார்கள்.

மொண்ணையாக கேள்வி கேட்பவர்களுக்கு,  நீங்கள் ஒரு பொறுப்பான ஆசிரியராக பதில் சொல்கிறீர்கள். என் தந்தையைப் போல, என் மேலாளர்களைப் போல எதிர்க்கேள்வி கேட்டு தரவுகள் எதிர்பார்த்தால், அது மேலும் வளர்ந்து சம்பந்தமில்லாத கேள்விகள் வரும் என நினைக்கிறேன். சமூக ஊடகங்களில் விஷமெனப் பரவும் பொய்த்தகவல்களுக்கு மத்தியில், சரியான விஷயங்கள் பதிவாகட்டும் என்பதால் உங்களால் முடிந்ததை பொறுமையுடன் பதில் சொல்கிறீர்கள் என தொடர் வாசகனான எனக்குப் புரிகிறது.

மடையர்களுடன் விவாதிக்கும்படி தொடர்ந்து இழுக்கப்படுகிறேன். மடத்தனமோ மட்குவதுமில்லை. எழுந்து எழுந்து வந்துகொண்டே இருக்கிறது. 

நீங்கள் இப்படி வருத்தப்பட்டிருப்பதால், நண்பனாக பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அல்லது, தரவுகள் இல்லாமல் கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு இந்தத் தளத்தின் மேன்மையை சீராட்டும் பாராட்டும் வாசகனின் பதிவாக இது இருந்துவிட்டுப் போகட்டும். உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் எந்த ஒரு வாசகனும், அடிப்படைத் தகவல்களை அவனே தேடுவான். ‘தேடு’ என்று தளத்தில் உள்ள option-ல் சரியான குறிச்சொல்லைப் பயன்படுத்தி, நீங்கள் இதற்கு முன்னால், அவன் கேட்கவிருக்கும் கேள்விக்கு என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று பார்ப்பான்.

உங்களால் ஒரு பெரும் அறிவியக்கம் உருவாகியிருக்கிறது என்று இந்த உலகம் அறியும் நாட்கள் வெகுதூரம் இல்லை. கடந்த ஒரு வருடமாக, நான் குறைந்தது இருநூறு தனிப்பட்ட நபர்களுடன் , சக வாசகன் என்ற முறையில் பேசியிருக்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். உங்களைப் பற்றி பேச்சு வந்தால், உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன், நண்பர்களுடனான உரையாடலில் , கிராதத்தில் குபேரன் மாளிகைக்குச் சென்று ஒவ்வொரு வாயிலையும் கடக்கும் அர்ஜுனன் கூழாங்கல்லை வைரத்திற்கு இணையாக வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பற்றிப் பேச்சு வந்தது.  அந்த அத்தியாயம் முழுவதும் க்ரைப்டோ கரன்சியின் அடிப்படை. சில வருடங்களுக்கு முன்னர், ஒரு கட்டுரையில், தனி நபருக்கு சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரன் இல்லாமல் போகும் ஒரு நாள் வந்துவிடும் என்று எழுதியிருப்பீர்கள். அதில் கணினிமயமாக்குதல் எப்படி தையல்காரனை இல்லாமல் ஆக்கும் என்று நீங்கள் விவரித்திருப்பது இன்று நாங்கள் எல்லாம் பேசிக்கொள்ளும் Data Science / Machine Learning அடிப்படை.

ஒரே நேரத்தில் உங்களால் 1700-லும் வசிக்கமுடியும். 2091-லும் வசிக்கமுடியும். அதை அறிந்து வைத்திருக்கும் வாசகர்கள் அதிகம் உள்ளவர்கள் நீங்கள் என்பதால் , அவ்வப்பொழுது மடத்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலைமை ஏற்படுவது கண்ணேறு படாமல் இருப்பதற்கு என்று வைத்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

அன்புள்ள சௌந்தர்,

கூடுமானவரை இவர்களைப் புறக்கணிக்கிறேன். ஆனால் அவற்றை வாசித்துவிட்டு ஓர் இளம் வாசகர் கேள்வி கேட்கும்போதுதான் இவர்கள் உருவாக்கும் அழிவு என்ன என்று தெரிகிறது

ஜெ

அன்புள்ள ஜெ,

மட்காக்குப்பை பார்த்தேன். நானே எழுதவேண்டுமென நினைத்தேன். சமீபத்தில் ஒரு இடதுசாரி வழக்கறிஞர் [ முருகவேள்] உங்கள் அறமென்ப கதையை வைத்து சில பிழைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு ஒரு பிராக்டீஸிங் வக்கீல் வந்து ஆணித்தரமான மறுப்புகளைச் சொல்லிவிட்டார். ஆனால் அந்த வக்கீல் சொன்னதை அறியாதவர் போல அவர் நீங்கள் அவரை மறுத்தீர்கள் என்று சொல்லி அதே குற்றச்சாட்டுக்களை திரும்ப ஆனந்தவிகடனில் ஒரு பேட்டியில் சொல்கிறார். அவரைப்போன்ற ஒரு வக்கீலுக்கு ஒரு பிராக்டீஸிங் வக்கீலின் மறுப்பின் அர்த்தம் என்ன என்று தெரிந்திருக்கும். அவர்கள் இந்தமாதிரி கேஸில்லாமல் அரசியல்பேசும் வக்கீல்களை பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். ஆனாலும் அதை திரும்பச் சொல்கிறார்.

இதையே நான் பார்க்கிறேன். நீங்கள் ஆணித்தரமான மறுப்பைச் சொன்னாலும் மறுக்கவில்லை, ஓடிவிட்டார், தவிர்க்கிறார் என்று திரும்பத்திரும்ப எல்லா இடங்களிலும் போய் சொல்லிக்கொண்டிருப்பார்கள். பெரியார் விஷயத்திலும் இதையே செய்கிறார்கள். மறுக்கப்படும்போது சரி, தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று ஏற்றுக்கொள்ளாமலிருந்தாலும் பரவாயில்லை. அதே குற்றச்சாட்டை மீண்டும் சொல்கிறார்கள். சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் நீங்கள் எழுதவேண்டியிருக்கிறது

ஆர்.சந்தானம்

அன்புள்ள சந்தானம்

அதை தெரியாமல் அவர் சொல்லவில்லை. அது ஓர் உத்தி. அந்த ஒரு கேள்வியும் பதிலும் இல்லாவிட்டால் அவருடைய பேட்டியை எவர் பொருட்படுத்தி படிக்கப்போகிறார்கள்? அது அவருக்கு தெரியாதா என்ன? இது ஒட்டுண்ணிகணின் வாழ்வுத்தந்திரம், அவ்வளவே.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2021 11:31

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஏழாவது நாவல் ‘இந்திர நீலம்’. ‘இந்திர நீலம்’ என்பது, பரம்பொருளின் நிறம். ‘சியமந்தக மணி’ என்பது, இந்திர நீல நிறத்தை உடைய ஓர் ஒளிர்கல். இந்த நாவல் ‘சியமந்தக மணி’ என்ற ஒன்றைச் சுற்றியே எழுதப்பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை ‘சியமந்தக மணி’ என்பது, ஊழின் விழிதான்.

எல்லாவற்றையும் தன்னிடம் ஈர்த்துப் புதைத்துக்கொள்ளும் ‘கருந்துளை’ (BLACK HOLE) போலவே ‘சியமந்தக மணி’ எல்லோரின் மனத்தையும் தன்னகத்தே ஈர்த்து, அவர்களை நெறிபிழைக்கச் செய்கிறது. நம்மை மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) ஆழ்த்தும் விழைவுகளின் பெருவாசலே ‘சியமந்தக மணி’.

ஒட்டுமொத்த உலக வாழ்வே ஊழின் ஆடல்தான் என்று புரிந்துகொண்டால், அந்த ஆட்டத்தின் முதல் அசைவு மும்மலங்களுள் ஒன்றிலிருந்தே தொடங்குகிறது என்பதை உணர முடியும்.  ‘ஊழின் பெருங்கரத்தில் அகப்படாமல் இருக்க நாம் எதைப் பற்றியிருக்க வேண்டும்?’ என்ற வினாவுக்குரிய விடையாகவே இந்த ‘இந்திர நீலம்’ நாவல் அமைக்கப்பட்டுள்ளது.

யுகந்தோறும் ‘பரம்பொருள்’ அவதாரபுருஷராக வடிவம்கொண்டு பூமியில் தோன்றுகிறது. அவ்வாறு தோன்றிய பரம்பொருளின் ஒரு வடிவம்தான், அவதாரபுருஷர்தான் இளைய யாதவர். அவர் ‘ஊழ்’ என்ற பெருங்கருத்தாக்கத்தைக் கொண்டு உலக உயிர்களை ஆட்டிப்படைக்கிறார். ஒவ்வொரு கணமும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றுக்கும் அவர் ஊழை முன்வைத்து பெருந்தேர்வு ஒன்றை நடத்துகிறார். அதில் வெற்றி பெறுபவர்களைத் தன்னருகிலும் தோல்வியடைபவர்களைத் தன் கண்பார்வைபடும் தொலைவிலும் நிறுத்திக்கொள்கிறார்.

இந்த நாவலில் இளைய யாதவர் எட்டு மனைவியரைத் திருமணம்புரிந்தமை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ‘இளைய யாதவர் ஏன் எட்டுப் பெண்களை மணந்தார்?’ என்ற வினாவுக்கு ஒரு பொதுவிடையாகத் துவாரகையின் விரிவாக்கத்துக்காகவே என்று கூறும் எழுத்தாளர், அந்த வினாவுக்குச் சிறப்பு விடையாகத் ‘திருமகள் எங்கிருந்து புறப்பட்டாளோ அங்கேயே திரும்பி வரவேண்டும்’ அதற்காகத்தான் இளைய யாதவர் திருமகளின் எட்டு வடிவங்களையும் திருமணம் செய்துகொள்கிறார் என்கிறார். இந்த விடைகளை எழுத்தாளர் இந்த நாவலில் எந்த இடத்திலும் நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறந்த வாசகர்களால் இந்த விடைகளை இந்த நாவலின் வரிகளிலிருந்தே உய்த்தறிய இயலும்.

திருமாலின் நெஞ்சிலிருந்து எட்டு முறை புறப்படும் திருமகள் மீண்டும் எட்டு விதங்களில் திருமாலிடமே வந்து சேர்கிறார். திருமாலின் சுதர்ஷனச்சக்கரம் அவரின் விருப்பப்படி சென்று, வினைமுடித்து, மீண்டும் அவரிடமே திரும்பி வருவது போலவே, திருமகளும் திருமாலின் திட்டங்களுக்குத் தலைவணங்கி, அவரின் வினையை நிறைவுசெய்ய அவருக்குத்  துணை நிற்பதற்காகவே புறப்படுகிறார். வினைமுடித்ததும் மீண்டும் அவரிடமே  திரும்பி வருகிறார்.

இளைய யாதவரின் வாழ்க்கையில், ‘எட்டு’ என்ற எண் பல வகையில் பொருள்கொள்கிறது என்பதையும் நம்மால் மறுக்க முடியாதுதான். இளைய யாதவரின் எட்டு மணநிகழ்வுகளையும் எட்டுவிதமான கோணத்தில் காட்டி, அந்த எட்டு மனைவியரும் எவ்வாறு ‘அஷ்டலக்ஷ்மி’யராகத் திகழ்கின்றனர் என்பதையும் குறிப்புணர்த்தியுள்ளார் எழுத்தாளர்.

‘வெண்முரசு’ நாவல் தொடரில் நான்காவது நாவலான ‘நீலம்’ நாவலில்தான் ராதா-கிருஷ்ணனின் முடிவற்ற ஆன்மிகப்பித்துநிலையைக் காண முடியும். இந்த ‘இந்திர நீலம்’ நாவலில் அஷ்டலக்ஷ்மி-கிருஷ்ணனின் ஊடல், கூடல் சார்ந்த முடிவற்ற ஆன்மிகப்பித்துநிலையைக் காண முடிகிறது. அஷ்டலக்ஷ்மியருக்கு இருக்கும் கிருஷ்ணப் பித்தினையும் இளைய யாதவரின் அதிவீரத்தையும் ஒருங்கே காணும் பெருமுற்றமாக இந்த நாவல் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒவ்வொரு மணக்களமும் ஒரு போர்க்களமாகவே அமைந்துவிடுவதும் அதை மிக எளிதாக இளைய யாதவர் எதிர்கொள்வதும் ஊழின் ஆடலன்றி வேறு என்ன?

இந்த நாவலில் அஷ்டலக்ஷ்மியரின் வாழ்வைச் சொல்வதற்காக எழுத்தாளர் கையாளும் சொல்வளமும் காட்சியமைப்பும் நம்பகமான கற்பனை விரிவுகளும் நம்மைத் திக்குமுக்காடச் செய்கின்றன. அதனாலேயே நான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களை ‘இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற பாணர் அல்லது சூதர்’ என்பேன்.

இந்த நாவலின் தொடக்கத்தில் திரௌபதியின் மனத்துக்குள் கருக்கொண்ட ‘இந்திரப்பிரஸ்தம்’ நிஜத்தில் உருக்கொள்ளும் விதத்தினைக் காட்டியுள்ளார் எழுத்தாளர். பெண்ணால் உருவாக்கப்படும் பெருநகரம் எவ்வகையில் எல்லாம் பெண்களைக் காக்கும் என்பதற்கு ஒரு சான்றாகவே இந்த நாவலின் மூன்றாம் அத்யாயம் அமைக்கப்பட்டுள்ளது.

‘சுஃப்ரை’ என்ற கலைப்பெண்ணைத் திரௌபதியின் தம்பி திருஷ்டத்யுமன் அவமானப்படுத்தி, கொலைபுரியும் நிலைக்குச் சென்றுவிடுகிறான். ஆனால், திரௌபதியோ ‘சுஃப்ரை’யை அவனிடமிருந்து மீட்டு, பாதுகாப்புக்கொடுத்து, அவளைத் தன்னுடைய அணுக்கச் சேடியாக்கிக்கொள்கிறார். திரௌபதி உருவாக்கும் ‘இந்திரப்பிரஸ்தம்’ நிச்சயமாகப் பெண்களின் நகரமாகத்தான் உருமாறப்போகிறது என்பதை எழுத்தாளர் இங்கேயே ‘சுஃப்ரை’யை முன்னிறுத்திக் காட்டிவிடுகிறார். இளைய யாதவர் உருவாக்கியுள்ள துவாரகை முழுக்க முழுக்கப் பெண்களின் நகரமாகவே இருக்கிறது. அங்குப் பெண்களுக்குக் கிடைக்கும் அதிஉரிமைகள் நம்மைத் திகைக்கச்செய்கின்றன.

இளைய யாதவரின் அகத்தையும் புறத்தையும் சுற்றிப் பெண்கள் இருப்பதுபோலவே துவாரகைக்குள்ளும் வெளியிலும் பெண்களே நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இளைய யாதவரும் துவாரகையும் பெண்களின் கனவுகளில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றனர். இனி உருவாகும் ‘இந்திரப்பிரஸ்தம்’ அகத்திலும் புறத்திலும் உறுதியாகத் துவாரகையைப் போலவேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ‘துவாரகை’ ஓர் ஆணால் உருவாக்கப்பட்ட பெண்ணிய நகரம். ‘இந்திரப்பிரஸ்தம்’ ஒரு பெண்ணால் உருவாக்கப்படும் மற்றொரு பெண்ணிய நகரம்.

போரில் படுகாயமுற்று படுத்தபடுக்கையாக இருக்கும் திருஷ்டத்யுமன் தன்னுடைய உள்ளத்தளவிலும் உடலளவிலும் வலிமைகுன்றிவிடுகிறான். அதனாலேயே அவன் பிறரின் வலிமையைக் கண்டு சினக்கிறான். அவனின் விற்திறன் மழுங்கிவிடுகிறது. அதன் பின்விளைவாகவே அவன் சுஃப்ரையை வெறுக்கிறான்.

திருஷ்டத்யுமன் இளைய யாதவர் தனக்கு அளிக்கும் பெருவாய்ப்புகளின் வழியாகத் தான் இழந்த அக மற்றும் புற வலிமையை மெல்ல மெல்ல மீளப் பெறுகிறான். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அதிதருணத்தையும் அவன் சிறந்த முறையில் தனதாக்கிக்கொள்கிறான். தன்னைத்தானே இணையற்ற வீரனாக மீட்டுக்கொள்ளவும் அதைப் புற உலகத்துக்கு நிறுவவும் அவனால் இயல்கிறது. ஆனால், அவன் மனம் சுஃப்ரையைவிட்டு ஒரு கணமும் விலகவில்லை. இறுதியில் அவன் அவளையே தன்னுடைய பட்டத்தரசியாக அமர்த்திக்கொள்ள வேண்டும் என்று உறுதிகொள்கிறான்.

இந்த நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை திருஷ்டத்யுமனின் மனவோட்டம் முதன்மை இடம் பெறுகிறது. ஒருவகையில், ‘அவன் அடைய உள்ள ‘சியமந்தக மணி’ சுஃப்ரைதானோ?’ என்றும் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. அவன் அவளையே தன் மனத்துள் ஒரு சியமந்தக மணியாக அணிந்துகொண்டிருக்கிறான் போலும். அவள் அவனுள் இருந்து சியமந்தக மணியாகவே அவனை நோக்கிக்கொண்டிருக்கிறாளோ? ஒவ்வொருவரின் மனத்திலும் யாரோ ஒருவரின் வடிவில் ஒரு ‘சியமந்தக மணி’ இருக்கத்தான் செய்கிறது.

திருஷ்டத்யுமன் கலைப்பெண்ணான சுஃப்ரையிடம் கண்டது ஊழின் பெருமாயைக்கு அஞ்சி, அதற்கு அடிபணிந்துவிடாத பெருந்தவநிலையைத்தான். இத்தகைய பெருந்தவநிலையை உடையவர்தான் இளைய யாதவரின் எட்டு மனைவியர்களுள் ஒருவரான காளிந்தி. அவரே இளைய யாதவரின் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை இளைய யாதவரின் திருவாயாலேயே அறியமுடிகிறது. ஊழின் மாயையை உணர்ந்து, அதைவிட்டு விலகி, அதை வெற்றி கொள்பவர்களுக்கே இறையருள் கிடைக்கிறது. இந்தப் பேருண்மையை நிறுவும் வகையில் இந்த நாவல் அமைந்துள்ளது. அதனாலேயே இந்த நாவலை முழுக்க முழுக்க ‘மெய்யியல் நாவல்’ என்றும் கூறலாம்.

சமண மதத்தைச் சார்ந்த பெருங்காப்பியங்களுள் ஒன்றான திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தில் சீவகன் என்ற காப்பிய நாயகன் எட்டுப் பெண்களை மணம்புரிவான். இறுதியில் சமண மதக் கருத்தினை ஏற்று, எல்லாவற்றையும் எல்லோரையும் துறந்து, தவவாழ்வை மேற்கொண்டு, பெருநிலையை அடைவான். திருத்தக்கதேவர் சீவகனை வீர, தீரம் உடைய, ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த, தன்னிகரற்ற தலைவனாகக் காட்டியிருப்பார்.

என் மனம் சீவகனோடு இளைய யாதவரை ஒப்பிட விழைகிறது. ‘இந்திர நீலம்’ நாவலில் இளைய யாதவர் பெருநிலையில் இருப்பவர்தான். ஆனாலும் அவர் எட்டு லக்ஷ்மியரை மணந்து பெருவாழ்வு வாழ்கிறார். காரணம், எட்டு லக்ஷ்மியரும் தனித்தனியாக இளைய யாதவரை வேண்டி, ஒருவகையில் தவவாழ்வில், யோகப்பெருநிலையில் இருந்தவர்களே! அவர்களுக்கு அருளும் வகையில்தான் இளைய யாதவர் தக்க தருணத்தில், அவர்களை அணுகி, அவர்களைத் திருமணம் செய்துகொள்கிறார். இளைய யாதவரும் சீவகனைப் போலவே வீர, தீரம் உடைய, ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த, தனிப்பெருந்தலைவனே!. சீவகன் இறுதியில் ஆன்மிக வழியில் செல்கிறான். இளைய யாதவரோ எல்லோரையுமே ஆன்மிக வழியில் செலுத்துகிறார்.

‘வெண்முகில் நகரம்’ நாவல் முழுக்க பூரிசிரவஸ் அலைந்து திரிவதுபோலவே இந்த நாவலில் திருஷ்டத்யுமன் அலைந்து திரிகிறான். தூதனாக வந்து, சிறு போரில் பங்கேற்று, இளைய யாதவருக்கு அணுக்கராக மாறி, அந்த நிலையையே தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறான். தனக்கொரு தீராப் பகையையும் தேடிக்கொள்கிறான். பூரிசிரவஸின் மனமோ கடலின் விளிம்புபோல அலைபாய்ந்துகொண்டே இருக்கும். ஆனால், திருஷ்டத்யுமனின் மனம் நடுக்கடல் போன்றது. அலையற்ற பெருநிலை. அதனால்தான் அவனால் ‘சியமந்தக மணி’யிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக்கொள்ள முடிகிறது அல்லது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பிறரிடம் (சாத்யகி) அதைக் கையளிக்கவும் முடிகிறது.

‘சுபத்ரை’யின் ஆளுமை பற்றிய சித்தரிப்பு, ஒரு கோட்டோவியம் போலவே மெல்ல மெல்ல விரிந்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது. ‘கதாயுதத்தை ஏந்தும் பெண்’ என்ற படிமமே நம்மை மெய்ச்சிலிர்க்கச் செய்துவிடுகிறது. மொத்த நாவலில் இரண்டொரு அத்யாயங்களில் மட்டுமே இடம்பெறும் சுபத்ரையை நம் மனம், ‘பெண்ணாகி வந்த இளைய யாதவராகவே’ நினைவில் கொண்டுவிடுகிறது. சுபத்ரையின் நிமிர்வையும் துணிவையும் நுண்ணறிவையும் கண்டு, துரியோதனனே அவளை வாழ்த்துவதால், நம் மனத்தில் துரியோதனனும் ஒளிரத் தொடங்குகிறான்.

சாத்யகி, திருஷ்டத்யுமன் ஆகியோருக்கு இடையிலான ‘நட்பு’ என்பது, இளைய யாதவருக்கும் அர்சுணனுக்கும் இடையில் இருக்கும் நட்புக்குச் சமமானது. இளைய யாதவரும் அர்சுணனும் பெருந்தெய்வ நிலையில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், சாத்யகியும் திருஷ்டத்யுமனும் சிறுதெய்வ நிலையில் இருப்பதாகவே கொள்ளவேண்டும்! எப்போதும் எளிய மானுடருக்கு அணுக்கமானவை சிறுதெய்வங்களே!

இந்த நாவலில் ‘சியமந்தக மணி’ பெரியதொரு குறியீடாகவே எழுத்தாளரால் கையாளப்பட்டுள்ளது. ‘சியமந்தக மணி’ என்பது, மானுடர்களின் மனத்துள் நுழைந்து, அவர்களிடம் உளவியல் அடிப்படையில் உரையாடி ,அவர்களைத் தன் வசப்படுத்தும் நீல நிற ஒளிர்கல். உள்ளத்தில் பேருறுதியை அசைக்கவல்ல சிறுகல். மானுட மனங்களோடு உளவியல் அடிப்படையில் போர்த்தொடுக்கும் மாயக்கல்.

‘சியமந்தக மணியைப் பற்றிய நினைவு’ என்பதே இறைவன் மானுடர்களுக்கு வைக்கும் ஒரு தேர்வுதான். அந்தத் தேர்வினை இளைய யாதவர் தன்னுடைய மனைவியரான அஷ்டலக்ஷ்மியர் முதல் எளிய படைவீரன் வரை அனைவருக்குமே வைக்கிறார். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் இருவர்தான். அவர்கள் ஊழின் மாயைக்கு மயங்காதவர்கள். ஒருவர் காளிந்தி. மற்றவர் திருஷ்டத்யுமன். இவர்களோடு சுஃப்ரையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காளிந்தியும் சுஃப்ரையும் யோகப்பெருநிலையில் இருப்பவர்கள். பெண்கள் அனைவரும் காளிந்தியையும் ஆண்கள் அனைவரும் திருஷ்டத்யுமனையும் தங்களின் வாழ்வில் முன்மாதிரியாகக் கருதினால் இந்தப் பிறவிப்பெருங்கடலை எளிதில் கடந்து, கரையேறிவிடலாம்.

 

முனைவர் . சரவணன், மதுரை

– – –

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2021 11:30

April 12, 2021

சில நேரங்களில்…

சில நேரங்களில் சில மீன்கள்

நதிப்பெருக்கில் இருந்து துள்ளி எழுகின்றன

பல்லாயிரம்கோடி மீன்களோ

நீருடன் வேறின்றி ஒழுகுகின்றன

சில நேரங்களில் சில மீன்கள்

பாய்ந்தெழுந்து

செதில்களைச் சிறகுகளாக்கி பறக்கின்றன.

 

சில நேரங்களில் வரலாறு

எளிய முத்திரைகளால் குறுக்கப்பார்க்கலாம்

வசைகளை மட்டும் அளிக்கலாம்.

இல்லையென்றே காட்டி

கடந்தும் செல்லலாம்.

உன் சொற்களின் முடிவில்லாத பொறுமை

உன் கருணையின் தெளிந்த உறுதி

வெற்றோசைகளால் மூழ்கடிக்கப்படலாம்

 

வரலாறு எப்போதும்

அதிலிருந்து மேலெழுபவர்களுக்கு உரியது.

*

 

திருமா

அலைகளில் இருந்து எழுந்த அறிதல்

திருமாவளவன் ஒரு கடிதம்

விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்

காந்தி,திருமா

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

அசோகமித்திரனும் திருமாவளவனும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2021 11:35

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-13

[ 13 ]

இருபத்தேழு ஆண்டுகளுக்கு பின்னர் அவளை சந்தித்தேன். ஸ்ரீராஜவிஜயேஸ்வரி ஓடிக்கொண்டிருந்த அதே திரையரங்கில். ராஜமந்திரியில் நகருக்கு வெளியே அப்போது புகழ் இழந்து ’பிட்’ படங்கள் மட்டும் வெளியிடும் இடமாக மாறிவிட்டிருந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ற திரையரங்கில். நான் குண்டூரிலிருந்து அந்த அரங்கில் அந்தப் படத்தைப் பார்ப்பதற்காகவே வந்திருந்தேன்.

அந்த திரையரங்குக்கு அதேபடத்தைப் பார்க்க நான் நான்குமுறை முன்னரே வந்தது உண்டு. அங்கிருந்து திரும்ப ராஜமந்திரி போக ஆட்டோ கிடைக்காது. ஆகவே அங்கேயே ஓர் ஓட்டலில் அறை போட்டேன். அதுவும் பழைய ஓட்டல். கருங்கல்லில் வெட்டிய பழைய பாணி கழிப்பறை கொண்ட இடுங்கலான நீளவடிவ அறை. ஆஸ்பத்திரிபோல பச்சைநீல நிறமான படுக்கைவிரிப்புகள். சுவரில் பலவகைக் கறைகள். ஆனால் தண்ணீர் நன்றாக இருந்தது. குளித்துவிட்டு அறையை பூட்டிவிட்டு நேராக திரையரங்கு நோக்கிச் சென்றேன்.

வெங்கடேஸ்வரா திரையரங்கத்தைச் சுற்றி பெரிய சேரிதான் இருந்தது. நகரை ஒட்டி உருவாகும் அத்தகைய சேரிகளை நகரின் குப்பைக்கூடைகள் எனலாம். கழிப்பறை என்றும் சொல்லலாம். அது பெரும்பாலும் தாழ்வான நிலம். ஆகவே நகரின் மொத்தச் சாக்கடையும் அங்கேதான் வந்துசேரும். நகரம் அப்பகுதிமேல் மலம் கழித்துக்  கொண்டே இருப்பதுபோல. அங்குள்ள நீர்நிலைகள் சாக்கடையால் நிறைந்திருக்கும். அத்துடன் நகரிலிருந்து லாரிகள் குப்பைகளை கொண்டுவந்து அங்கே கொட்டிக் கொண்டிருப்பார்கள்.

அந்தக் குப்பைமேடுகளை ஒட்டியே இடுங்கலான தெருக்களில் தகரக்கூரையும் ஓலைக்கூரையும் கொண்ட சிறுவீடுகள். உள்ளே இடமே இருக்காது. பெரும்பாலானவர்கள் சாலையில்தான் அமர்ந்திருந்தார்கள். அந்த திரையரங்கம் ஓட்டுக்கூரை போடப்பட்டது. வாசலின்மேல் இருந்த சுதையாலான இரண்டு சிங்கங்களில் ஒன்று உடைந்துவிட்டிருந்தது. திரையரங்கைச் சுற்றி முள்மண்டிக் கிடந்தது. மாலையில் அங்கே பெண்கள் மலம் கழிக்க செம்புகளுடன் சென்றுகொண்டிருந்தார்கள்.

நான் செல்லும்போது பாட்டு போட்டிருந்தார்கள். படம் பார்க்க ஒரு பதினைந்து பேர்தான் இருந்தார்கள். பலர் வெளியே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் வெவ்வேறு வேலை விஷயமாக வந்து பொழுதைக் கொல்ல அங்கே வந்தவர்கள். ஒருவரை ஒருவர் பார்க்காமல் சிகரெட் பிடித்தபடி குனிந்து நின்றனர் சிலர். இளைஞர்கள் நாலைந்துபேர், தோற்றத்திலேயே அடிமட்ட வாழ்க்கையும் போதையும் குற்றப்பின்னணியும் தெரிந்தது. மூன்றாவது பாட்டு போடப்படும்போது இரண்டு பெண்கள் சேர்ந்து வந்தனர். மணியோசை ஒலித்து டிக்கெட் கொடுக்கப்பட்டதும் நான் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.

பழங்காலத்து மரநாற்காலிகள். மூட்டைப்பூச்சிகள் கண்டிப்பாக இருக்கும். இரண்டு தூண் வரிசைக்கு நடுவே அழுக்கான பழைய திரைச்சீலை. சமீபகாலமாக வர ஆரம்பித்த சினிமாஸ்கோப் படங்களுக்காக திரையை இருபக்கமும் விரிவாக்கியிருந்தனர். அந்தப்படங்கள் திரையிடப்பட்டால் படத்தில் ஒருபகுதி தூண்களின் மேல்தான் ஓடும். நான்கு படிகளாக இறங்கிச் சென்ற தரை திரைச்சீலையைச் சென்றடைந்தது. தூண்களில் கரிய தார் பூசப்பட்டு சிவப்பு நிற தீயணைக்கும் உருளைகள் தொங்கின. திரையை ஒட்டி சிவப்பு நிறமான வாளிகளில் தீயணைக்கும் மணல். அவற்றை வெற்றிலைச் சாற்றை துப்புவதற்காகத்தான் பயன்படுத்துவார்கள்.

கால்களை நீட்டி இயல்பாக சாய்ந்துகொண்டேன். முதல்வகுப்பில் என்னையும் சேர்த்து மூன்றே பேர்தான். பெஞ்சில்தான் ஆளிருந்தது. மின்விசிறிகள் ஒட திரையின்மேல் அவற்றின் நிழல்கள் சுழன்றன. கதவு திறந்து மூடியபோது சரிந்த நிழல்கள் விழுந்து சினிமாவே ஓட ஆரம்பித்ததுபோல் இருந்தது. கறுப்பு வெள்ளை சினிமா என்பது ஒருவகை நிழல்தான். வாழ்க்கையின் ஒரு நிழல்காட்சி.

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மனிதர்களை வெள்ளைத் திரைமுன் நிறுத்தி நிழல்விழச்செய்து அந்த நிழல்களை வரைந்து கொடுப்பார்கள். போட்டோ வருவதற்கு முந்தைய காலகட்டம். ஏழைகளின் ஓவியம் அது. ஆனால் அந்நிழல்கள் திகைப்பூட்டும் அளவுக்கு அந்த மனிதர்களைப் போலிருந்தனர் என்கிறார்கள். மனிதர்களை தொடர்ந்தே அலைந்து நிழல்கள் மனிதர்களை நகல் செய்ய கற்றுக்கொண்டிருந்தன போல.

என் அம்மா சினிமாவை ’நிகல்’ என்றுதான் சொல்வாள். நிகல் என்பது பேயும்கூடத்தான். அம்மா சினிமாவே பார்த்ததில்லை. சினிமாவில் தெரிவது பேயுருவங்களே என அவள் நம்பினாள். என்.டி.ஆரின் பேய். பானுமதியின் பேய். அவர்கள் மறைந்தாலும் பேய்கள் அப்படியே இருக்கும். அவற்றுக்கு மூப்பு இல்லை, மாற்றமும் இல்லை. அவர்கள் என்றோ எப்போதோ காட்டிய சில பாவனைகள் அழியாமல் அப்படியே நிலைத்து விடுகின்றன. ஹம்பியே விஜயநகரின் பேய்தான்.

நான் ஹம்பியில் பேயால் ஆக்ரமிக்கப்பட்டேன் என்று அம்மா நினைத்தாள். ஆகவே தொடர்ச்சியாக எனக்காக பிரார்த்தனைகளும் பூஜைகளும் செய்தாள். ஜானகி வந்தபின் என்னிடமிருந்து பெரும்பாலான பேய்கள் விலகின என நம்பினாள். ஆனால் பேய்கள் அப்படி முற்றாக விட்டுச் செல்வதில்லை. அடங்காத பேயை விட அடங்கும் பேய்தான் ஆபத்தானது. அடங்காத பேயை அடக்கி துரத்தலாம். அடங்கிய பேய் ஒளிந்திருக்கும். சமையல் பாத்திரத்தில்  எஞ்சிய கரிபோல எங்கோ இருந்துகொண்டிருக்கும்.

விளக்குகள் அணைந்தன. ஏதோ பாட்டு ஒலித்தது. விளம்பரங்கள் போட ஆரம்பித்தனர். எப்போதுமே ஸ்ரீராஜவிஜயேஸ்வரி பார்க்க ஆரம்பிக்கும்போது எனக்கு இதமான, சொகுசான ஓர் உணர்வு ஏற்படும். மிக வசதியான இருக்கையில் அமரும்போது ஏற்படுவதுபோல. மிக நல்ல ஒரு செய்தியை கேட்டபின் வருவதுபோல. வயிறுபுடைக்கச் சாப்பிட்டபின் தோன்றுவதுபோல. முன்பொரு நாள் ஸ்ரீபாலாவுடன் பஸ்ஸில் அருகருகாக அமர்ந்தபோது ஏற்பட்ட அதே நிறைவுணர்வு. படம் பார்த்து முடிக்கும்போது ஒரு மிதப்பு, போதை. ’ஆகாச வீதிலோ’ என்ற பாடல் என்னை நிறைத்திருக்கும். அப்படியே ’அந்த முகில் இந்த முகில்’. அவை வேறுவேறல்ல.

மறுநாள் காலையில் எழும்போது நெஞ்சில் ஒரு பெரிய எடைபோல முந்தையநாள் இரவு பார்த்த படம் நினைவுக்கு வரும். கைகால்களை அசைக்கவே முடியாது. மச்சை பார்த்தபடி அப்படியே நெடுநேரம் கிடப்பேன். எதையெதையோ தொட்டுத்தொட்டு எண்ணிக்கொண்டிருப்பேன். பிறகு என் அகத்தை அப்படியே போர்வை போல சுருக்கி எழுந்து, உதறிவிட்டு எழுந்து என் வேலைக்குத் திரும்புவேன். ஆனால் அன்றுமுழுக்க ஏக்கமும் சோர்வும் இருந்துகொண்டிருக்கும். மீண்டும் இந்தப்படத்தைப் பார்க்கவே கூடாது என்று நினைப்பேன். ஆனால் அகத்தில் மீண்டும் அந்தப் படத்தை தேட ஆரம்பித்திருப்பேன்.

ஸ்ரீராஜவிஜயேஸ்வரி போட்டுவிட்டார்கள். மோகினி ஸ்டுடியோவின் கொடிபறக்கும் முத்திரை தோன்றியது. நான் படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் வைத்திருந்த ஒவ்வொன்றும் அங்கேயே இருக்கிறதா என்று பார்ப்பவன் போல. கண்களால் தொட்டுத்தொட்டு பார்த்துக்கொண்டே சென்றேன். என்.என்.ரெட்டி பெயர் எழுந்து கண்முன் வந்து நின்று நடுங்கியது. மெல்லி இரானி சீனியர் தோன்றி மறைந்தார்.

இடைவேளை விட்டதும் உடனே எழும் வழக்கம் எனக்கில்லை. படத்தில் இருந்து என்னை விலக்கிக்கொள்ள வேண்டும். கண்களை மூடி சற்றுநேரம் அமர்ந்திருப்பேன். பிறகு பெருமூச்சுடன் என்னை நானே அசைத்துக்கொண்டு எழுவேன். விளக்கு எரிந்தபோது முதல்வகுப்பில் ஏழெட்டுபேர் இருப்பதைக் கண்டேன். படம் போட்டபின் வந்திருந்தார்கள். இரண்டு பெண்கள். ஒரு பெண் எழுந்து வெளியே சென்றாள். இரண்டாவது பெண் அவளிடம் ஏதோ சொன்னாள். அதன்பின் என்னை கூர்ந்து பார்த்தாள். மீண்டும் கூர்ந்து பார்த்தபின் எழுந்து என்னை நோக்கி வந்தாள்.

“நீங்கள் ராமராவ் தானே? மோட்டூரி ராமராவ்?” என்றாள்.

“ஆமாம்” என்றேன் “நீங்கள்?”

அவள் சிரித்து  “என் பெயர் விஜயலட்சுமி, நாம் முன்பு மோகினி ஸ்டுடியோவில் சந்தித்திருக்கிறோம்… இந்த படம் அங்கே எடுக்கும்போது நாம் சேர்ந்து வேலைபார்த்தோம்.”

நான் வாய்திறந்து திகைத்து அமர்ந்திருந்தேன். இது என்ன ஏதாவது விளையாட்டா என்பது போல சுற்றிலும் பார்த்தேன். அதன்பின் மூச்சொலியுடன் “ஸ்ரீபாலா?” என்றேன்.

“ஆமாம், அந்தப்பெயரையே மறந்துவிட்டேன்” என்றாள். என் அருகே வந்து அமர்ந்துகொண்டு “இப்படிப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அதிலும் இந்தப்படம் பார்க்க வரும்போது..”

“நான் இந்தப்படத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்… “ என்றேன்.

“இங்கேதான் இருக்கிறீர்களா?”

“இல்லை, குண்டூரில் இருக்கிறேன்… இந்தப்படத்தைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன்.”

“இதைப்பார்க்கவா?” என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பில் முதல்முறையாக பழைய ஸ்ரீபாலாவை கண்டேன். அவளுடைய நீளமான கூந்தல் முடி உதிர்ந்து கைப்பிடியளவே இருந்தது. நீண்ட கண்கள் கூட மாறிவிட்டன. கண்களின் நீளமே மறைந்துவிட்டது. இமைகள்கூட சிறிதாகிவிட்டன. கண்களுக்கு கீழே ஆழமான கருமைச் சுருக்கம். கன்னம் ஒட்டியதில் பற்களுடன் முகவாய் கொஞ்சம் முன்னுந்தியிருந்தது. சிறிய மேலுதடு இழுபட்டு வெற்றிலைக்கறையுடன் பற்கள்மேல் படிந்திருந்தது.

“நீ மிகவும் மாறிவிட்டாய்” என்றேன்.

“வயதாகிறதே” என்றாள்.

“ஆனால் சிரிக்கும்போது பழைய ஸ்ரீபாலாவைபோல் ஆகிவிடுகிறாய்”

அவள் புன்னகைத்தாள். “கொஞ்சம் எங்காவது மிஞ்சியிருக்கும் இல்லையா?” என்றபின் “கல்யாணம் ஆகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்?” என்றாள்.

“ஆமாம், மூன்று குழந்தைகள். இரண்டுபையன்கள் ஒரு பெண். எல்லாரும் கல்யாணமாகி குழந்தைகுட்டி ஆகிவிட்டார்கள்.”

“மனைவி பெயர் என்ன?”

“ஜானகி, அவள் இப்போது இல்லை. இரண்டு வருடம் முன்பு தவறிவிட்டாள். நான் மகளுடன் இருக்கிறேன்.”

“அடாடா” என்றாள்.

”உனக்கு கல்யாணமாகிவிட்டதா?” என்றேன்.

”கல்யாணமா, எனக்கா?” என்றாள். சிரித்துக்கொண்டு “என்னைப்போன்ற பெண்களுக்கு கல்யாணமெல்லாம் சரியாக வராது. ஒரு ஆள் கூட இருந்தேன். அவனுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.”

“இப்போது என்ன செய்கிறாய்?”

“இங்கே பக்கத்திலேதான் இருக்கிறேன். அதோ என் கூட வந்தாளே அவளும் என்னைப் போலத்தான். இப்போது ஒரு சின்ன கடை வைத்திருக்கிறேன்… நானும் அவளும் சேர்ந்து இருக்கிறோம்.”

அவள் அங்கிருந்து கையை காட்டினாள். வருகிறேன் என்று இவள் கையை காட்டினாள்.

நான் என்ன கேட்பதென்று தெரியாமல் திகைத்தேன். அவளே சொன்னாள். “நான் எப்படி வாழ்ந்தேன் என்று கேட்க வேண்டாம்… அதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“நீங்கள் என்னை நினைத்துக்கொள்வது உண்டா?”

“நான் மறக்கவே இல்லை” என்றேன்.

“நினைத்தேன்” என்றாள்.

அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். நான் அவளிடம் “வெளியே போகலாமா?” என்றேன்.

“என்னை இங்கே எல்லாருக்கும் தெரியும். நான் உங்களிடம் தனியாக நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்…” என்றாள்.

“என்னை இங்கே யாருக்கும் தெரியாது.”

“சரி அப்படியென்றால் போகலாம்” என்றாள்.

நாங்கள் வெளியே சென்றோம். டீக்கடையை மூடிக்கொண்டிருந்தார்கள். நான் இரண்டு டீ சொன்னேன். டீக்கடைக்குள் மிகப்பெரிய சாய்பாபா படம். அவருடைய கைகளிலிருந்து கொட்டும் பொற்காசுகள். டீ பிளாஸ்கில்தான் இருந்தது. பழைய பாலின் நெடி கொண்ட டீ அது. எப்போதும் அப்படித்தான்.

நாங்கள் சுவர் ஓரமாக நின்றோம். எங்கள் மேல் எதிரிலிருந்த குண்டு பல்பின் வெளிச்சம் விழுந்தது. கொசுக்கள் சுற்றி சுற்றிப் பறந்தன. டீயை வாங்கிக்கொண்டோம்.

“நீங்கள் என்னை மறக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்…”என்றாள்.

“எப்படி?”

“நான் நினைத்துக்கொண்டே இருப்பேன், நீங்கள் மறந்திருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். கொஞ்சநேரம் அழுவேன்.”

“அழுவாயா?”

“அழுவேன்… இதற்காக இல்லை. வேறு பலவற்றுக்காக அழவேண்டியிருக்கும். அப்படி துக்கமாக இருக்கும்போது இதை நினைத்து அழுவேன். இதற்காக அழுதால் ஒரு நிம்மதி வரும்” அவள் புன்னகை செய்து “எதையாவது நினைத்து அழவேண்டுமே. இதை நினைத்து அழுதால் அழுது முடித்தபின் நிம்மதியாக இருக்கும்… மகிழ்ச்சியாகக்கூட இருக்கும்.”

நான் புன்னகைசெய்தேன்.

“ஆனால் எனக்கு தெரியும், நீங்கள் என்னை மறக்கவே மாட்டீர்கள் என்று.”

“எப்படி?”

“அன்றைக்கு நான் குளித்தேனே?”

நான் நெஞ்சில் ஓர் உதைபோல உணர்ந்தேன். “ஆமாம்”

”அது வேண்டுமென்றேதான்.”

“தெரியும்” என்றேன். எனக்கு மூச்சுத் திணறியது. “அப்போது உன் கண்கள் எப்படி இருந்தன என்பதெல்லாம் நன்றாக ஞாபகமிருக்கிறது”

“அப்போது என்ன நினைத்தேன் என்றால் நீங்கள் என்னை விரும்புகிறீர்கள், ஆனால் என்னுடன் ஓர் உறவு உருவாவதை நினைத்து பயப்படுகிறீர்கள் என்று. உங்களுக்கு நான் எதையாவது தரவேண்டும் என்று நினைத்தேன். என்னை அப்படிப் பார்த்தால் உங்கள் ஆசை பாதி நிறைவேறியதுபோல. ஆனால் நீங்கள் குற்றவுணர்ச்சியும் அடையவேண்டியதில்லை. நீங்கள் தவறான உறவையும் தொடங்கியதாக இருக்காது… அதனால்தான் அப்படிச்செய்தேன்.”

“ஓ” என்றேன்.

“அப்படித்தான் அப்போது நினைத்தேன். ஆனால் பிறகு தெரிந்தது, எல்லாம் என்னை நீங்கள் மறக்கக்கூடாது என்பதற்காகத்தான்” என்று மீண்டும் சிரித்தாள்.

நான் புன்னகைசெய்தேன்.

“நான் கூந்தலை பஸ்ஸில் அவ்வப்போது பறக்கவிட்டதுகூட அதற்காகத்தான்” என்றபோது அவள் கண்களில் பழைய ஸ்ரீபாலாவின் குறும்பு தோன்றியது.

”அப்படியா?” என்றபோது உண்மையாகவே சிரித்துவிட்டேன்.

“என்னைப் பார்க்கத்தான் இந்தப்படத்தை பார்க்கிறீர்களா?”

“உன்னைப் பார்க்க மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாகவே இந்தப்படத்தில் எல்லாமே இருக்கிறது. அந்தக் காலகட்டம் முழுக்க…”

“ஆமாம், நானும் அதற்காகத்தான் பார்க்கிறேன்… எங்கு ஓடினாலும் பார்ப்பேன்.”

“எத்தனை முறை பார்த்திருப்பாய்?”

”அது இருக்கும், ஆயிரம் முறை. என்னிடம் கேஸட் இருக்கிறது. இருந்தாலும் தியேட்டரில் இந்தப்படம் வந்தால் பார்ப்பேன். எங்கே எப்போது வந்தாலும் எடுப்பதுவரை பார்த்துக்கொண்டே இருப்பேன்” என்றாள்.

“நானும்தான்” என்றேன் “ஆனால் நாம் எப்படி சந்திக்காமல் போனோம்?”

“நான் இருபது ஆண்டுகள் பெல்காமில் இருந்தேன். அதற்குப்பிறகு ஹைதராபாதில். இரண்டு ஆண்டுகளாகத்தான் இங்கே இருக்கிறேன்”

“அப்படியா?” என்றேன்.

என் நெஞ்சு கனமாகவே இருந்தது. அந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு கிளம்பத்தான் ஆசைப்பட்டேன். ஏதாவது பேசவேண்டியிருக்கிறதா? ஏதாவது மிச்சமிருக்கிறதா?

நாங்கள் விலகி தனியாக அரையிருளில் நின்றோம். சாலையில் ஓடும் வண்டிகளின் வெளிச்சம் மட்டும் சுழன்று சுழன்று எங்களை கடந்துசென்றது. அதில் அவள் ஒளியுடன் தெரிந்து மீண்டும் இருண்டாள்.

“நான் உன்னைத்தேடி உன் ஊரில் பலமுறை அலைந்திருக்கிறேன்” என்றேன்.

“என் ஊரிலா? எங்கே?”

“முனிப்பள்ளியில்”

“முனிப்பள்ளியில் நான் ஒருவாரம் கூட இருக்கவில்லை. அங்கேபோன நான்காவது நாளே அம்மா என்னை பெல்காமுக்கு அனுப்பிவிட்டாள்”

“எனக்கு தெரியாது, நான் ஒருமாதம் கழித்து தேடிவந்தேன். நாலைந்து வருடம் தோன்றும் போதெல்லாம் அங்கே போய்க்கொண்டே இருந்தேன்”

“அங்கே என்னைப் பார்த்தால்கூட என்ன செய்ய முடியும்? அந்த இடமே தவறான இடம். உங்களைப்போன்றவர்கள் அங்கெல்லாம் போகவே கூடாது” என்றாள்.

“நான் அதன்பிறகு கிறுக்கு போலவே இருந்தேன். ஒருவருடம் என்னவாக இருந்தேன் என்றே தெரியாது… என் மனைவி மட்டும் வரவில்லை என்றால் முழுக்கிறுக்கனாகியிருப்பேன். இப்போது வாழ்க்கை முடிந்துவிட்டது. ஆனாலும் மிகப்பெரிய ஒரு பள்ளம் இருக்கிறது வாழ்க்கையில்…” என்றேன். நினைவுகூர்ந்து “கொடவட்டிகண்டி குடும்பராவ் வாசித்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.

“ஆமாம், காருண்யம் என்று ஒருநாவல்”

“இன்னொரு நாவல், காலபைரவுடு என்று. அதில் ஒரு வரி வருகிறது. செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது என்று.”

“ம்” என்றாள். அவள் இமைகள் சரிந்தபோது மீண்டும் அந்த ஸ்ரீபாலா தெரிந்து மறைந்தாள்.

“நான் என்ன செய்திருக்கவேண்டும் தெரியுமா? நீ என்னைவிட்டு பிரிந்து நடந்து போனாய் அல்லவா? ராஜமந்திரி பஸ் ஸ்டாண்டில். அப்போது உன் கையைப் பிடித்துக்கொண்டு, உன் கண்ணைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும். எனக்கு உன்னை வேண்டும் என்று. உன்னை சொந்தமாக்கிக் கொள்ளப்போகிறேன் என்று. உன்னுடைய வாழ்க்கையில் நடந்த எல்லா தவறுகளையும் நான் சரிசெய்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கவேண்டும்” என் குரல் நடுங்கியது. பேசப்பேச உயர்ந்து சற்று உடைந்து ஒலித்தது.

அவள் சட்டென்று சிரித்துவிட்டாள். பின்னர் சிரிப்பை அடக்கியபோது கண்களில் கண்ணீர் இருந்தது. முந்தானையால் கண்களை துடைத்தாள்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்றேன்.

“ஒன்றுமில்லை” என்று தலைகுனிந்து சொன்னாள்.

”அர்த்தமில்லாமல் பேசுகிறேன் என்று சொல்கிறாய்…”

“இல்லை, இப்போதாவது அதைச் சொன்னீர்களே. அதை நான் கேட்கவும் வாய்ப்பு அமைந்ததே… அதுவே போதும்.”

“காலம் கடந்த பிறகு சொல்லி என்ன பிரயோசனம் முட்டாள் என்று சொல்கிறாய் இல்லையா?”

“அய்யய்யோ, அப்படி இல்லை. அப்படியெல்லாம் இல்லை சுவாமி. காலம் எங்கே கடந்தது? நான் இங்கே இருக்கிறேன். இதோ நீங்கள் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரே ஒருநாள் இதை நினைத்துக்கொண்டு வாழ்ந்தாலும் எனக்கு நிறைவுதான்.”

“அதெல்லாம் சும்மா சொல்வது… வாழ்க்கை அழிந்துவிட்டது.”

“அதெல்லாம் ஒன்றுமில்லை…” என்றாள் “நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். கடையில் சுமாரான வருமானம் இருக்கிறது. பேங்கில் கொஞ்சம் பணமும் இருக்கிறது. எல்லாம் நன்றாகத்தான் போகிறது. இன்னும் எவ்வளவுநாள்? அதுவரை எல்லாம் இப்படியே போகும். ஒன்றும் குறையில்லை… ”

“நீ எதிர்பார்க்கவில்லையா?” என்றேன்.

”என்ன?”

“அன்றைக்கு? பஸ் ஸ்டாண்டில்?”

அவள் புன்னகையுடன் “அதெல்லாம் இப்போது எதற்கு?” என்றாள்.

“சொல், நீ எதிர்பார்க்கவே இல்லையா?”

“என்ன எதிர்பார்க்க?”

“நான் அப்படிச் சொல்வேன் என்று? நான் பின்னால் அழைப்பேன் என்று?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“சொல்”

“எதிர்பார்த்தேன்” என்றாள். ஆனால் முகத்தில் உணர்வுகள் மாறவில்லை. கண்கள் மிக இயல்பான புன்னகையுடன் என்னை பார்த்துக் கொண்டிருந்தன.

“ஏமாற்றமாக இருந்ததா?” என்றேன்.

“அதெல்லாம் போகட்டும்… பழையகதை… நான் கிளம்புகிறேன். இனிமேல் நாம் சந்திக்கவேண்டாம்” என்று அதே புன்னகையுடன் சொன்னாள்.

“ஏன்?”

”சந்தித்தால் நன்றாக இருக்காது. இது நன்றாக இருக்கிறது. எல்லாம் மிக அழகாக முடிந்துவிட்டது. இப்படியே இருக்கட்டும். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு உறுதியாகிவிட்டது. நானும் நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்துவிட்டது” அவள் திரும்பி அந்தபடத்தின் போஸ்டரைப் பார்த்தாள் “இந்தப் படம் இப்படியே மாறாமல் இருந்து கொண்டிருக்கும். நீங்கள் தைத்த ஆடையுடன் அதில் நான் அப்படியே இருந்து கொண்டிருப்பேன். உயிரோடு இருக்கும் வரை இதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்”

“ஆமாம்” என்று பெருமூச்சு விட்டேன்.

“நாம் போனாலும் இந்தப்படம் இருக்கும்” என்று அவள் அந்த போஸ்டரை அண்ணாந்து பார்த்தபடிச் சொன்னாள்.

நான் திடுக்கிட்டேன். நெஞ்சு துடித்ததில் என் உடல் தளர்ந்தது. கொடிமரத்தை பிடுங்கிக்கொண்டு பறக்கத்துடிக்கும் கொடி என் உயிர் என்று தோன்றியது.

“என்ன பாட்டுகள்!  எல்லா பாட்டுமே அற்புதமானவை. இந்தப்படத்தையே நான் என்னுடைய கதையாக ஆக்கிக்கொண்டேன். நான் விஜயேஸ்வரி. நான் உங்களுடன் ஓர் அழகான ஊரில் மாடுகளை மேய்த்து வாழ்கிறேன். நீங்கள் என்னை பார்த்து சிற்பங்கள் செய்கிறீர்கள்.  என்னை பல்லக்கில் பொன் கொண்டு வந்து தந்து அழைத்துப் போகிறார்கள்” அவள் சிரித்து “நான் பாவா என்றுதான் உங்களை அழைக்கிறேன். மனசுக்குள் பாவா என்றுதான் நினைத்துக்கொள்வேன்.”

நான் பெருமூச்சுவிட்டேன். புன்னகையால் மலர்ந்த முகத்துடன்கூட நம்மால் பெருமூச்சுவிடமுடிகிறது!

“ஆகாச வீதிலோ என்ற பாடல்… பானுமதி பாடுவது. அதில்தான் பாவா என்று அழைப்பார்” என்று அவள் சொன்னாள். ”மேகங்களைப் பார்த்தே பாடுவார்கள். அங்கே மெல்லி இரானி மேகங்களை எடுப்பதை ஒருநாள் பார்த்தேன்…அவர் வானத்திலிருந்து எதையோ தொட்டுத் தொட்டு எடுப்பதுபோல இருந்தது. அந்த மேகம் அரைமணி நேரத்தில் கலைந்திருக்கும். ஆனால் அந்தப்பாட்டில் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது”

“ஞாபகமிருக்கிறதா, ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யன… “ என்றேன்.

”மறப்பேனா? அந்த சைக்கிள் பயணத்தில் பார்த்த மேகங்களின் வடிவத்தையே அப்படியே பார்க்கமுடியும் என்னால்” என்று அவள் சொன்னாள். “புவ்வுல சூரிபாபு… நீங்கள் அவரைப்போல இருந்தீர்கள்”

“அவரை நான் நினைத்துக் கொள்வதே இல்லை. அவர் பாடல்களையே கேட்பதில்லை. எப்போதாவது ஞாபகம் வந்தால் திடுக்கிட்டு உடனே விலகிவிடுவேன்.”

அவள் அந்தப் பேச்சை இயல்பாக மாற்றினாள். “ஆ மப்பு ஈ மப்பு… அழகாக பாடினீர்கள். இந்த படம்போலவே கறுப்புவெள்ளையாக அந்த நிலா வெளிச்சம்.”

“இந்தப் படத்தில் உள்ள ஆகாச வீதிலோ பாட்டைத்தான் அன்றைக்குப் பாடினேன் என்றுகூட எனக்குச் சிலசமயம் தோன்றும்… என் மனதில் இரண்டு பாட்டுகளும் ஒன்றாகிவிட்டன.”

“எனக்கும்தான்” என்று அவள் சொன்னாள். தலைகுனிந்து மிகமெல்ல “ஆகாச வீதிலோ” என்று பாடினாள்.

“பாடுவாயா?”

“எப்போதாவது, எனக்கே எனக்காக. அதுவும் ஆ மப்பு ஈ மப்பு. அப்புறம் இந்தப்படத்தின் பாட்டுகள்… இவை மட்டும்தான்” என்றாள். முகவாயை தூக்கி, அக்கணத்தில் அவளில் கூடிய அழகான குழந்தைத்தனத்துடன், “அதைப் பாடுங்கள்.. மெல்லப் பாடினால் போதும்” என்றாள்.

“எதை?”

“ஆ மப்பு ஈ மப்பு”

நான் மெல்லப் பாடினேன்.

“அந்த முகில் இந்த முகில்

ஆகாயத்தின் நடுவினிலே

அதுபோல உள்ளம் இணையவேண்டும் நாம்

அன்பே இப்புவியினிலே

ஒருவரான பின்னர்

இருவராக கூடாது

கொடுப்பதுமில்லை பெறுவதுமில்லை

தழுவுதலும் கூட இல்லை

அங்கிருப்பது ஒற்றை மேகம்”

“அப்படியே பாடுகிறீர்கள். அன்று பாடியதுபோலவே” என அவள் முகம் மலர்ந்து சொன்னாள்.

“எத்தனை ஆயிரம் முறை பாடியிருப்பேன். வேறு படம் பார்த்ததும் இல்லை, வேறு பாட்டை கேட்டதும் இல்லை” என்றேன்.

அவள் பெருமூச்சுவிட்டாள். பிறகு அவளே பாடினாள்.

ஆகாய நடுவினிலே

இரண்டு முகில்களும் மெல்ல கரைகின்றன.

அன்பே வானில் அவை பரவுகின்றன.

வானம் மட்டுமே எஞ்சியிருக்கும்”

அவள் குரல் உடைந்திருந்தது. பாடி நெடுநாள் இருக்கும். அது பாடுவதல்ல, பாட்டை சொல்லிப் பார்த்துக் கொள்வதுதான்.

அதன்பின் பேசுவதற்கு ஒன்றுமில்லை. பேசாமல் ஒருவரை ஒருவர் பார்க்கவும் முடியவில்லை. நான் சுவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் தொலைவில் இருண்டிருந்த முள்காட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.

பிறகு “படம் விடப்போகிறது” என்றாள்.

“ஆமாம்” என்றேன். பின்னணியிசையைக் கொண்டே என்னால் காட்சிகளைச் சொல்லிவிடமுடியும்.

“நான் சொன்னேனே, நாம் இனி சந்திக்கவேண்டாம்”

“ம்” என்றேன்.

”நான் இப்போது இப்படி இருக்கிறேன். இன்னொரு முறை சந்தித்தால் இப்படி இல்லாமல் இருக்கலாம்….”

“எப்படி?”

“பறக்காதபோது பறவையல்ல. ஆத்ரேயா எழுதியது”

”நீ இப்போதும் நாவல்கள் படிக்கிறாயா?”

“படித்துக்கொண்டேதான் இருப்பேன். வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் சும்மாதானே இருக்கிறேன். அப்போதெல்லாம் படிப்புதான். இப்போது கடையிலும் படிப்புதான்.”

“நான் படிப்பதே இல்லை. ஆத்ரேயா பெயரைக் கேட்டபோது மனம் திடுக்கிட்டது. அந்த பெயர் காதில் விழுந்தே நீண்டநாட்களாகிறது” என்றேன். என் நினைவில் தேவுலப்பள்ளி என்ற பெயர் எழுந்தது. இவள் சொன்ன பெயர்தான். ஆனால் எங்கே?

“தேவுலப்பள்ளி” என்றேன். “ஞாபகமிருக்கிறதா?”

அவள் புன்னகையுடன் “மறக்கமுடியுமா? அவருடைய கவிதை ’முந்து தெலிசினா பிரபு…”

“ஆமாம், ஆமாம்” என்றேன் பரபரப்புடன்.”என்னை தெரியவில்லையா? என்னை புரியவில்லையா? அதுதான் அந்த வரி.” என் குரல் உடைந்து தழுதழுத்தது. ”அந்த வரிகளை நீ சொன்னாய். அதை அன்றைக்கு நான் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.”

நான் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டேன். என் கைகள் அவள் கைகளுடன் சேர்ந்து நடுங்கின.

அவள் திரும்பி டீக்கடையைப் பார்த்தாள். டீக்கடைக்காரர் எங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவள் கையை இழுத்துக்கொண்டாள். படம் முடியும் இசை எழுந்தது.

“வேண்டாம்” என்றாள்.

“ஆமாம்” என்று பெருமூச்சு விட்டேன்  “நாம் மறுபடி சந்திக்கக்கூடாது என்றுதான் தோன்றுகிறது… ஏனென்றால் நாம் இருவருக்குமே வயதாகிவிட்டது…” என்றேன்.

“ஆமாம், இந்தப்படத்தை வாழ்நாள் முழுக்கப் பார்த்தால்போதும்” என்று அவள் மீண்டும் சொன்னாள். திரும்பி அங்கிருந்த பழைய போஸ்டரை ஏறிட்டுப் பார்த்தபின் “என்ன ஒரு அதிருஷ்டம், இப்படியொன்று மிச்சமிருக்கிறது!” என்றாள்.

இம்முறை என் இதயம் முழக்கமிடவில்லை. ஒரே கணத்தில் இந்த உலகத்திலுள்ள அத்தனை பொருட்களும் காணாமலாகிவிட்டால், மலைகள்கூட மறைந்துவிட்டால், எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. என் தொண்டை கரகரத்தது. நான் நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

உள்ளே இசை ஓங்கி எழுந்தது. கிருஷ்ணதேவராயர் மன்னித்துவிட்டார். நல்லமராஜுவுக்கும் விஜயேஸ்வரிக்கும் திருமணம் நடக்கிறது.

“முன்பெல்லாம் நான் இந்தக் காட்சி வரும்போதெல்லாம் அழுவேன். அப்படி பொங்கிப் பொங்கி அழுவேன்…” என்று அவள் சொன்னாள். “இப்போது அழுகை வருவதில்லை. ஆனால் நெஞ்சில் பனிக்கட்டி போல ஏதோ இருக்கும்… வீடுபோவது வரை பேசவே முடியாது”

நான் பெருமூச்சு விட்டேன். பெருமூச்சுகள் வழியாக மீண்டு வந்தேன். அவள் பெருமூச்சுவிடவில்லை. கண்களைச் சுருக்கி அந்த போஸ்டரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கதவுகள் திறந்து ஆட்கள் களைத்த நடையுடன் வெளியேறினார்கள். சிலர் சிகரெட் பற்றவைத்துக்கொண்டார்கள்.

அந்தப்பெண் வந்து அப்பால் நின்றாள். “மல்லி வந்துவிட்டாள். நான் கிளம்புகிறேன். உங்களை மீண்டும் சந்திக்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் சாமுண்டீஸ்வரி அந்த பாக்கியத்தை தந்துவிட்டாள்” என்றாள்.

”ஸ்ரீபாலா” என்றேன். என் தொண்டை அடைத்திருந்தமையால் எவருடைய குரலோ என ஒலித்தது.

அவள் தயங்கி நின்றாள். ஒருகணம் தோழியைப் பார்த்தாள். கடைசியாகச் சொல்வது எப்போதுமே முக்கியமானது. ஆனால் அது இனியதாக இருக்கவேண்டும் என்பதில்லை.

“அன்றைக்கு நான் பின்னாலிருந்து உன்னை அழைக்க வேண்டும், உன்னை என்னிடம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினாய் அல்லவா?”

அவள் சஞ்சலத்துடன் தோழியைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ எனக்கு வேண்டும் என்று சொல்வேன் என்று நினைத்தாய் இல்லையா?” என்று மேலும் உரக்க கேட்டேன்.

”ஆமாம்”

”ஆனால் நீ திரும்பிப் பார்க்கவே இல்லை. வேகமாகப் போனாய்”

“ஆமாம்” என்றாள்.

“ஏன்?”

நிமிர்ந்து என் கண்களைப் பார்த்து “நீங்கள் அப்படிச் சொல்லிவிடுவீர்களோ என்று பயந்தேன்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்றேன்.

“ஆமாம்” என்று புன்னகைத்தபின் திரும்பி விலகிச் சென்றுவிட்டாள். தோழியுடன் ஓரிரு சொற்கள் பேசியபின் திரும்பியே பார்க்காமல் நடந்து இருட்டுக்குள் மறைந்தாள்.

[நிறைவு]

[மறைந்த கொண்டப்பள்ளி வி.நாகராஜுவுக்கு, எடைமிக்க நினைவுகளுடன்] 

முந்து தெலிசினா பிரபு…

ஈ மந்திரமிடுலுஞ்சேனா

மந்தமதினி நீவு வச்சு

மதுர க்ஷணமேதோ  காஸ்ட

*

https://gaana.com/song/aa-mabbu-ee-mabbu ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மாத்யான்ன

முந்து தெலிசினா பிரபு – https://www.raagabox.com/lyrics/?lid=999497

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2021 11:34

திரை, எரிசிதை- கடிதங்கள்

திரை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த நாயக்கர் கால ஆட்சிமுறையில் மற்ற எந்த ஆட்சிமுறையையும் விட பீரோக்ரசி மிக வலிமையாக இருந்திருப்பதாக தோன்றுகிறது. அரசரைப் பார்ப்பதே அவ்வளவு கடின்மாக இருக்கிறது. பற்பல அடுக்குகளாக அதிகாரிகள் உள்ளன. அவர்களின் அதிகாரமும் விரிவாக உள்ளது

ஒருவேளை சோழர் காலமும் இப்படித்தான் இருந்ததா? நமக்கு நாயக்கர் காலத்து அரசமைப்புமுறை நன்றாகத் தெரிகிறதா? சோழர் காலத்தில் அரசர்கள் மக்களுடன் பழகி கலந்திருந்ததுபோல கதைகளில் வாசித்தேன். ஆகவேதான் இந்தச் சந்தேகம்

என். ஜானகிராமன்

அன்புள்ள ஜெ.,

எத்தனை கதைகள்? எழுதித் தீராதவை. ஆச்சரியம் எனக்கு என்னவென்றால் கதாபாத்திரங்களுக்கு நீங்கள் போடும் பெயர்கள். இடம்,காலம்,சாதி என்று எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நீங்கள் போடும் பெயர்கள் ஒரு கதையில் கூட பொருத்தமில்லாமல் இல்லை, திரும்ப வருவதும் இல்லை. வெண்முரசில் கூட நூறு கௌரவர்கள் பெயர்களும், அவர்கள் மனைவிமார் பெயர்களும் கூடச் சொல்கிறீர்கள். குதிரைகள், புத்தகங்கள், மலைகள், மற்றும் எத்தனை ஆயிரம் உப கதாபாத்திரங்கள்? இத்தனை பெயர்களை எப்படி உண்டாக்குகிறீர்கள்?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

எரிசிதை [சிறுகதை]

எரிசிதை ஒரு ஆழமான கதை. அந்தக்கதையின் அடுக்குகள் ஆச்சரியப்பட வைப்பவை. முத்தம்மாள் ஒரு சிறையில் சாவைக்காத்து இருக்கிறாள். அதை எண்ணி பொறாமைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் கூடவே இருக்கும் மற்ற இளவரசிகள். சிதையேறுவதே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது அவர்களுக்கு.

முத்தம்மாளின் நினைவில் மங்கம்மாளும் இன்னொரு ராணியும் வருகிறார்கள். இருவருமே வலிமையான அரசிகள். அந்த இரண்டு அரசியரால் ஒடுக்கப்பட்ட அரசி இவள்

இந்நாவலில் வரும் பெண்களின் உலகமே விசித்திரமானது. சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தாசிகள். ஆனால் அவர்கள் ஒருவனைக் கட்டி ஒரு வீட்டில் இருக்க ஆசைப்படுகிறார்கள்

எஸ்.ராஜேஷ்குமார்

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

எரிசிதை என்கின்ற வார்த்தையே புதுமையாக இருந்தது. சிதையை பெயர்ச்சொல்லாக அர்த்தப் படுத்திக் கொண்டால் எரிசிதை எனஒரு புதிய வினைத்தொகை வார்த்தையையே உருவாக்கிவிட்டீர்கள்.

இறந்த நிகழ் எதிர் என்ற முக்காலங்களையும் கடந்து எல்லா காலங்களிலும் பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு சிதை எரிந்து கொண்டுதான் இருக்கிறது. சிதை எரியாத காலம் என ஒன்று இல்லவே இல்லை. அப்படி ஒரு காலம் தாய்மை என்ற ஒன்று உள்ள வரைபெண்களுக்கு வரப்போவதும் இல்லை. சிலருக்குச் சிதை உள்ளிருந்து எரிக்கிறது சிலருக்கு சிதை வெளியிலிருந்து எரிக்கிறது. சிலருக்கு சிதை உள்ளே வெளியே என இரண்டு பக்கமிருந்தும் எரிக்கிறது.

ராணி மங்கம்மாள் அகத்தின் உள்ளே சிதையில் எரிந்து வெந்து வெளியில் வாழ்ந்து தன் மகனை, தனது ராஜ்ஜியத்தை, தன் மக்களை காத்தாள்.

ராணி சின்ன முத்தம்மாள் கணவனை இழந்த பொழுதும் அவனுடைய உயிர் அவள் மகனாக அவள் வயிற்றிலே வாழ்ந்து கொண்டிருந்தது எனவே அவள் வெளியில் எரிவதை தள்ளிப்போட்டு தன் அகத்தில் நாளும் என எரிந்து தன் உயிரான மகனை வயிற்றில் காத்தாள். அந்த மகனைப் பிரசவித்த உடன் பன்னீரை குடித்து தன் அகத்தீயைத் அணைத்து அதன் மூலம் தன்னை புறத்தில் எரித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.

எந்த ஒரு பெண்ணும் பிறக்கும் பொழுது தாயாகவே பிறக்கிறாள். தனது கருப்பையில் ஒரு மில்லியன் சினைமுட்டை செல்களைக் கொண்டே பிறக்கிறாள். இது இயற்கை பெண்களுக்கு மட்டுமே அளித்துள்ள கொடை. தான் தாயின் கர்ப்பத்தில் வளரும் பொழுதே தன் வயிற்றில் சினைமுட்டைகளை உருவாக்கும் விந்தையை என்னவென்று சொல்வது. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஜெகத் ஜனனியாம் ஆதி படைப்புச் சக்தியின் வாழும் வடிவங்கள் அல்லவா அனைத்துப் பெண்களும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கு ஏற்ப தாயுள்ளம் செயல்படும் விந்தைகளை யாரால் சொல்லிவிட முடியும்.

தாசிப் பெண்ணாக இருந்தாலும் நாகலட்சுமியும். ஒரு தாய் உள்ளம் கொண்ட கருணைமிகு பெண் தானே.ஒரு வேளை அவளும் கர்ப்பம் தரித்திருந்தாளோ என்கின்ற ஐயம் இரண்டு இடத்தில் எழுந்தது. அதற்கான மெல்லிய குறிப்பையும் அளித்துள்ளீர்கள். அதனாலேயே ராணி முத்தம்மாளை அவள் காக்க விழைகிறாள். அதனாலேயே தானும் சிதையில் எரிவது போல கனவும் காண்கிறாள்.

ஆனால் ஒன்று மட்டும் எப்பொழுதும் புரிவதே இல்லை. இந்தப் பெண்கள் ஏன் தங்களுக்குள் இப்படி முட்டி மோதிக் கொள்கிறார்கள். ராணி மங்கம்மாள் சிறப்புக்களை பற்றி நன்கு அறிந்திருந்தும் கூட ராணி முத்தம்மாள் தன் மகன் வந்து அவளை பழிவாங்க வேண்டும் என்கிறாள். ராணி முத்தம்மாள் தன் குழந்தையை காத்து பிரசவிக்க போகிறேன் என்று சொன்னவுடன் தாசி நாகலட்சுமி அவள் மீது வெறுப்பு கொள்கிறாள். இவர்களுடைய இந்த மன ஓட்டங்கள், ஒருவருக்கு ஒருவர் இடையேயான ஊடாட்டங்கள், மன விரிசல்கள் எல்லாம் எப்படித்தான் உங்களுக்கு புரிகிறதோ. வியப்பாக இருக்கிறது எனக்கு.

மற்றொரு விஷயமும் கவனித்தேன்.கருவுற்று இருக்கும் பொழுது பெண்கள் மோசமான மன நிலையில் இருந்தால் அது குழந்தையை மிகவும் பாதிக்கிறது. கடைசி வரை அந்தக் குழந்தைகள் அந்த மன பாதிப்பில் இருந்தும் உடல் பாதிப்பிலிருந்து விடுபட முடிவதில்லை. ஏற்கெனவே கந்தர்வன் மற்றும் யட்சன் கதைகளில் அந்த மங்கம்மாளின் பேரனைப் பற்றி அறிந்திருந்ததால் இணைத்துப் பார்க்க முடிந்தது. நிஜ வாழ்விலும் பல குழந்தைகள் உடல் மற்றும் மன பாதிப்படைவதற்கு அவர்களின் தாயாரின் கர்ப்பகால மனநிலை காரணமாக இருப்பதையும் கண்டுள்ளேன். மோசமான தொலைக்காட்சித் தொடர்களை பார்க்காதீர்கள் என்று சொன்னால் யார் கேட்கிறார்கள். கர்ப்ப காலத்தில் தான் விழுந்து விழுந்து அதி மோசமான தொலைக்காட்சி தொடர்களையும் திரைப்படங்களையும் பார்த்து தள்ளுகிறார்கள்.

பாளையக்காரர்களின் சூழ்ச்சிகள், பலவிதமான அடுப்புகள், தீ, சிதை, எல்லா நிலைகளிலும் இருந்த அக்காலப் பெண்களின் அவல வாழ்வு என ஆழ்ந்து சிந்திக்க வைத்த கதை.

தாய்மையை தூக்கிப்பிடித்த இன்னுமொரு படிமக்கதை.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.