Jeyamohan's Blog, page 1007

April 7, 2021

இருபத்தைந்து கதைகள்- கடிதம்

Seamless tropical pattern with tigers and bunch of hibiscus flowers and leaves

இருபத்தைந்து கதைகள். மொத்தமாக திரும்பி பார்க்கையில் மற்றுமொரு நிகர் வாழ்வனுபவ நாட்கள். தங்களை அக்கதைகளில் கண்டவை, வேறு ஒன்றை கண்டடைந்தவை, அலசி ஆராய்ந்தவை என ஒவ்வொரு கடிதமும் ஒரு கதைகள் கூடத்தான்.  அனல் பழுத்த இரும்பு, நீர் தொட்ட அனுபவம் என, மழை நீர் இருக்கும் மரம் காற்றில் எதிர்பாரா கணத்தில் சிதறித்த துளிகள் என, பின் மாலையின் இருட்டில் மரங்களில் கீழ் அசைந்தபடி இருக்கும் தீப ஒளி என எக்கதைகள் எனக்கு படிக்கும் போது   தரிசனத்தை தந்தன, ஒரு கணத்தில் ஒடுங்கி காலம் மறக்க வைத்தன என

திரும்பி பார்க்கிறேன்

23 – திரை

நாயக்கர் ஆட்சி உலகத்தில் வாழ்ந்து திரும்பினேன். ஒரு ஆணையின் வேலை முடிப்பை நிறைவேற்றி மறந்து வாழும் ஒரு வாள் போல அவனின் மொத்த வாழ்வும். உள்விழித்த விழியுடன் அனைத்தையும் முடித்து நாயகன் புதுசேரி சென்று ஒதுங்குவது முத்தாய்ப்பு. அலை ஒதுக்கிய ஓர் உயிர். மீனாட்சி எனும் அரசி பற்றி அல்ல, இத்தகைய அரசின் வேட்டை நாய் என இருக்கும் ஒருவனின் பார்வையில் கதை சென்றது அருமை. ஹைதராபாத் சந்தா சாஹிப் தனியே வந்து இருந்து, அரசனுக்கும் பெரிய தொகை வாங்கி கொடுத்த மாதிரி காண்பித்து தானும் ஒரு முப்பது பார்த்து விட்டு அங்கே சென்று அம்மைநாயக்கனூரில் போரில் துரத்தி விட்டு, திரும்ப வந்து வழித்து எடுத்து செல்கிறான். எத்தனை சுரண்டல்கள்? திரும்ப திரும்ப இன்று வரை.

அக்காலத்தின் முறைகள், உடைகள், பேச்சு, வழக்கங்கள், அரசியல் படிநிலைகள், பொருளாதாரம் என வேகமாக செல்லும் ஒரு நதியின் விரைவிலும் தவறாமல் வந்தபடி இருக்கும் கதையின் தகவல் ஓட்டம். ராஜாங்கத்தில் நடக்கும் அத்தனை அரசியலும் ஒரு கதையில் அடக்கி வைத்து இருப்பது அதிசயம்.

மீனாட்சி தாயார் சட்டென நீர் கோர்த்து சிறுமி என எழுகையில், மதுரையில் ஜனங்கள் பெருங்கூட்டம் வெளியேறி செல்லுகையில், ஒரு ராட்சச கல் உருளை என காலம் கொன்று விட்டபடி செல்வதை காண முடிந்தது. தாயுமானப்பிள்ளை மட்டும் விதிவிலக்கா? அவரும் வேறுஒரு திரை அணிந்து தான் அடங்கி இருக்கிறார். மெய்மை எனும் இறுதி திரை.

18 – இருளில்

உண்மையில் எப்படி இருந்திருக்க வேண்டும் எனும்படியான கனவுகளில் ஒன்று அந்த இரவு. திகைக்க வைத்த அவ்விரவின், அவனின் அனுபவம். ஜன்னலும் கதவும் அவள் சாத்தியிருக்காவிடில், ஒரு பெருங்கனவென கூட நினைக்க வைக்கும் அளவு அடர்த்தி நிறைந்த சொற்கள். தீவிரமான முழுமையான மற்றும் முதல் அனுபவம் என்பதாலேயே திகைத்து கழன்று விட வைத்து விட்டது. உன்னதம் என்று கூட சொல்லி கொள்ளலாம். அந்த இரவை, இரவின் அவளை மீண்டும் தேடியபடி அவன். ஒருவேளை மிக கீழ்மையாக, அருவருக்கும் படியாக அப்பெண் அனுபவம் இருந்திருந்தால்? மறந்து சென்று இருப்பானா அல்லது ஒரு உன்னதத்தை தேடி இதை போல ஓடி கொண்டு இருந்திருப்பானா?

அப்படி மின்னல் என இல்லாமல், கருப்பு என்றும் நேசிக்கவில்லை என்றும் சொல்லிக்கொண்டாலும் இன்னொரு பெண்ணை தொடாத மனைவியின் பதிவுகளோடு அப்துல், மிக எளிதாக அவனிடம் இணைவை காண்கிறார், உணர்ந்து கொள்கிறார். மற்றவனுக்கு அது பிளந்து ஆராய ஒரு அனுபவ தகவல்.

இப்படி இறுக்கி மூச்சு முட்ட வைக்க கடந்த அனுபவம் இருக்கையில், மல்லாந்து விரிந்த நெடுஞ்சாலையில் தான் உறங்க முடியும். வந்துபோனபடி இருக்கும் வாகனங்கள் பெரிய ஆசுவாசம்

8- படையல்

கண் தெரியா இருட்டு. அடைந்து கிடந்த கோவில். தெய்வங்கள் சிலைகளாகி கல்லாகி போன காலம். அடர் மலை. ரத்தம் உடல் வழுக்கி, சிவனடியார் உள் சென்று சிவன் தொட்டு சுடர் ஏற்றி கண்ட உணர்தல்…  கணங்கள். புது துணி உடுத்தி, புதுத்தொடர் தொடங்கும் ஒருவர். ஆனால், இருந்த இடத்தில் ரத்தம் கண்டும் அசையாமல், அல்லா என சொல்லியபடி இருக்கும் பாவா எனும் ஒருவர். எல்லாவற்றையும் தின்று விட்டு செல்லும் வீரர்கள், வெறும் வயிற்றில் பாட்டு பாடியபடி இருக்கும் பிள்ளை, நயினார் என ஒரு கூட்டம்.

மண்டபம் என்பதில் இருக்கும் காலம் தாண்டிய அனைவருக்குமாம் என இறை. நமது தேசத்தின் மொத்த சாராம்சம் அந்த இடத்தில் சொல்லியாகி விட்டது.

9-தீற்றல்

இதே இழையில் இந்த கண் கவிதை கதை. அலை அடங்கி காணாது ஆழத்தில் கிடக்கும் கரும்நெடும் பாறை என அவளில் அந்த தீற்றல்

மதுரை திருவிழாவில் உறைந்த போன காலத்தில் விழிநீர் வழிய இறை கண்ட தேவன் என அவன் நிற்பதும் அப்படி வாழ்வின் ஒரு கணம். என் இளமையின் வயதுகளில் கண்ட கண் கவிதைகள் மிளிர்ந்து வந்தது. முகத்தை மட்டுமே பார்த்து பிரமிக்க வைத்து இமை விழிப்பதற்குள் கடந்து விடும் காற்றின் தீற்றல்கள்.

“அது அந்த கணத்திலேயே அப்டியே காணாம போயிடுச்சு… அந்த கணம் நிஜம்.” தெய்வங்கள் இறங்கி வந்து கன்னம் தொட்டு தலை முடி சிலுப்பி சென்ற கணங்கள். தேவதச்சனின் கவிதைகளில் உறைந்து நிற்கும் சில satori எனும்படியான ஜென் கணங்கள். வாழ்வு அதற்கு முன், பின் என மாறி விடுகிறது

10- ஏழாம் கடல்

முத்தும் ஒன்றே விஷமும் ஒன்றே எனும் போது முத்து கண்டவுடன் எதற்கு குதித்தோடி சொல்ல வேண்டும்? விஷம் வந்தால் உண்டு இறக்க வேண்டியது தான். அவ்வளவே.  உயிருடன் இருப்பது வரை வாராவாரம் சந்திப்புகளும் குலவல்களும் தான் முதன்மை. இறுதி வரை கொடுக்க முடியாத முத்துவிற்கு ஏங்கி, விஷமாகி போன சிப்பி பற்றி அழுது செத்து விட்டு போன வியாகப்பன் ஒரு முத்து.

சொல்லி வைத்தாற்போல வந்து பேசி சிரித்து சாப்பிட்டு சென்ற ஒரு ஆத்மா. இவனின் அப்பா அங்கே போனதாக ஒரு வரி இல்லை. எதையும் எதிர்பாரா ஆண்களின் நட்புலகம். ஆசிர்வாத உறவு. இருந்தார்கள் இறந்தார்கள் – ஒரு அதிசயமாக. இதற்கு மேல் போட்டு என்ன கருமத்துக்கு ஆராய வேண்டி கிடக்கிறது. போட்டு அலச, நீர்த்து போகும் அர்த்தங்கள்

20 – நகை

தன்னின் வேலை, சம்பளம் தந்ததை ஷிவ் போன்ற முன் சென்றவனோடு ஒப்பிட்டு செத்து கிடக்கையில் காலில் விழ வைத்து சுத்தமாக சுய மதிப்பை கொன்று விட்டு, அவன் எதை அந்த தனித்து இருந்த கழிப்பறையில் அடைந்தான்?  உடலாக பொருளாக பார்க்கும் பார்வையை? அது தந்த விடுதலையை போல உணர்வில் ஹாய் சொல்லி காலில் விழ வைக்கும் பதவி கார்டு பார்த்த பின் தெரிகிறான் ஆடி காரில் அவளை போன்றோர் இருக்கும் தொலைவு பற்றி. புன்னகையை தன் நகையென அணிந்து செல்லும் சுடர் ஒளி நம்பிக்கை கொண்டவள்கள்.

1 – என்னும்பொழுது

கணக்கெடுத்தா நஷ்டப்படும் மனுஷ ஜீவிதத்தில … அமிர்தா டீவியில் சுளீர் என இவ்வார்த்தை மின்னியது

உங்களின் கோட்டை ஏரியா. ஆண்-ண் முள் விளையாட்டு. சுஜாதா நினைவு வந்தது – உடலின் வர்ணனைகள் படிக்கும் போது.

எதனால் அவர்களுக்குள் இந்த அனல் நீரோட்டம்? தெரியாது. ஆனால் நஞ்சென பரவி பின் உறவில் மறந்து தரை இறங்கி பின் மீண்டும் முளைக்கும் அந்த முள் மரம். தீவிர அலை ஆட்படுத்தலுக்கு பின் உள்ளிருந்து மேல் வருகிறது – யார் முதலில் என அவள் கேட்கிறாள். எதிர் பக்கம் கை நீட்டியபடி தான் எப்போதும் துவங்குகின்றன இந்த வகை விளையாட்டுகள். எண்ணுவதை மறைத்தபடி செல்வது தான் நிம்மதி போல

5/6 – ஒரு கணம் –

“சரி, நான் குதிக்கிறேன்” அவனின் நகர்தல இது. வள்ளியம்மை தீயில் பாயிகையில் அவளின் தருணம். கந்தர்வர்கள். சாமிநாத ஆசாரி எனும் பாட்டு பாடி, சிரிக்க வைத்து, படம் வரைந்து செல்லும் ஒரு கலைஞன் ஒரு மனிதன் பெயரிட்டு மரிக்கும் அந்த ஆட்டின் கண்கள் வழியே என்ன கண்டான்?

1700 கால வரலாறு, நாயக்கர் ஆட்சியின் தகவல்கள் கந்தர்வனின் சொட்டு, எரிசிதையிலும் திரையிலும் மிக விரிவாக படமாக காண வைக்கும் நுண் தகவல்கள், பேச்சு வழக்கம், ஊர் நிலவரம் என விரிவாக ஒரு காலகட்டத்தின் ஆவணம்

இடைவிடாத மனிதர்கள். கூர் கதியில் வரும் போலீசை அப்பா என்று கூப்பிடும் நக்கல் சிறுவர்கள், கேஸ் கிடைத்தவுடன் மிரட்டும் ஓநாய் வக்கீல்கள், முதல் அனுபவத்தில் ஆபத்தில் காப்பற்றிவிட்டு மாட்டி கொள்ளும் சராசரி, காசு எனும்போது ஏழை என்றவன் கொள்ளும் மாற்றங்கள் என பொங்கி நுரைக்கும் மனிதர்கள்.

ஆனால்,

அந்த 100 கதைகளில் வெளியே வந்த அத்தருணங்களில் இதில் நான் அடையவில்லை. வரம் – தூவக்காளி – மாயப்பொன் –பொலிவதும் கலைவதும் என பல தடவை சென்று தொட முடிந்த இடத்தை இவைகளில் எட்ட முடியவில்லை என்று சொல்லி கொள்கிறேன் எனக்குள்.

இந்த 4 வரிகளை எடுத்து விடவும். ஒன்றை மற்றொன்று கவ்வ முடியாது அல்லவா. மொழி எல்லையின் சாத்தியங்களை எல்லா வகைகளிலும் வளர்த்து செல்லும் கைகளுக்கு ஒரு பொன் மோதிரம்

 

அன்புகளுடன்,

லிங்கராஜ்

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 11:31

April 6, 2021

அஞ்சலி:வே.ஆனைமுத்து

வே.ஆனைமுத்து

ஈ.வே.ரா அவர்களின் படைப்புக்களை சேகரித்துக் காலவரிசைப்படி தொகுத்த அறிஞர் வே. ஆனைமுத்து ஏப்ரல் 6 ,2021 அன்று மறைந்தார். கோவையில் ஒருமுறை அவரை சந்தித்து வணக்கம் சொல்ல வாய்த்திருக்கிறது.

ஓர் ஆளுமையுடன் முழுமையாக தன்னை பிணைத்துக்கொண்டு வாழ்க்கையை முற்றளிப்பது என்பது அறிவுச்செயல்பாட்டில் முதன்மையான ஒரு நிகழ்வு.பெரும்படைப்பாளிகள், பேரறிஞர்கள், பொது ஆளுமைகள் ஆகியோருக்கு அவ்வண்ணம் ஒருவர் அமையும்போதே அவர்களின் பங்களிப்பு நிலைபேறடைகிறது. ஈ.வே.ராவுக்கு அவ்வண்ணம் அமைந்தவர் ஆனைமுத்து.

அஞ்சலி

 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 18:55

அஞ்சலி- சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன்

சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன்

அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரனை நான் மரபின் மைந்தன் முத்தையா 2001ல் தஞ்சையில் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில்தான் முதல்முறையாகச் சந்தித்தேன். அன்று கம்பராமாயணம் பற்றி அவருடன் உரையாடியிருக்கிறேன்

அதன்பின் இருமுறை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. அவருடைய இல்லத்தில் இருந்த பிரம்மாண்டமான நூலகத்தையும் பார்த்தேன். நீண்ட உரையாடல்கள் அமையவில்லை என்றாலும் இரண்டாம் முறை அவர் சைவ இலக்கியங்களிலுள்ள சமணர்கள் பற்றிய குறிப்புகளைப் பற்றிப் பேசினார்.

சேக்கிழார் அடிப்பொடி என்று தனக்கு பெயர்சூட்டிக்கொண்டவர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் அறிஞர். தமிழ் பக்தி இலக்கியங்களில் பொதுவாகவும் சைவத்திருமுறைகளிலும் ஆழ்ந்த கல்வியும் ஆராய்ச்சியும் கொண்டவர். பாரதியார் ஆய்வாளர்களில் ஒருவர்.

இன்று 6-4-2021 அன்று மறைந்த சேக்கிழார் அடிப்பொடிக்கு அஞ்சலி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 18:45

வ.உ.சி- ஒரு செய்தி

அன்புள்ள ஜெ.,

வ.உ.சி யின் கடைசி காலத்தைப் பற்றி ஒரு பழைய தினமணிச் செய்தி. ஒரு கப்பல் கம்பெனி முதலாளிக்கு அவர்கள் அளிக்கும் தொகை, அதைப் பெற்றுக்கொள்ளும் அவரின் நிலை மனதை உலுக்கியது.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

1936ல் ல் அந்த 75 ரூபாய் என்பது சிறியதொகை அல்ல. தங்கக் கணக்குப்படி பார்த்தால் 1936ல் தங்கம் ஒரு சவரன் [8 கிராம், 22 காரட்] 25 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மூன்று சவரன். இன்று ஒரு சவரன் முப்பதாயிரம் ரூபாய். அதாவது ஒரு லட்சம் ரூபாய். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் அன்றைய நடுத்தரவர்க்க வாழ்க்கையின்படி ஆறுமாதம் வாழ்வதற்கான பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தனிநபர்க்குழு அதை அளித்தது நல்ல விஷயம்தான். அதைப்போல பல உதவிகள் தொடர்ச்சியாக அவருக்கு வந்தன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வ.உ.சி தேசபக்தர், அதற்காக பெரும்பொருளை இழந்தவர், இன்னும் பெரிய அளவில் உதவிக்குத் தகுதியானவர்தான். அந்த உதவிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய சூழல் என்ன? பொதுவாக இத்தகைய உதவிகள் செய்யப்படுவது அமைதியான, நிலையான காலகட்டங்களில். மக்களிடையே பொருள் புழங்கும் போது. போர், பஞ்சம், போராட்ட காலங்களில் தனிமனிதர்கள் எவராயினும் கவனிக்கப்படுவதில்லை.

1931ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். இந்தியா முழுக்க பல்லாயிரம்பேர் அதன்பொருட்டு அரசு வேலைகளை துறந்தனர்.வணிகங்களை கைவிட்டனர். குடும்பத்தை விட்டு கிளம்பி போராடிச் சிறைசென்றனர். முற்றாக அழிந்துபோனவர்களும் பலர் உண்டு. கொடிய வறுமையை எய்தியவர்கள் உண்டு. அவர்களின் தியாகங்கள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன. பெயர் அறிந்த சிலரே நினைவுகூரப் படுகிறார்கள். அன்று எவருக்கும் எவ்வித உதவியும் செய்யும் நிலையில் காங்கிரஸ் இருக்கவில்லை. ஏனென்றால் தியாகிகளின் பட்டியலே பல்லாயிரம்.

அச்சூழலில் வ.உ.சி இந்த அளவுக்கு நினைவுகூரப்பட்டு உதவிகள் செய்யப்பட்டதேகூட நல்ல விஷயம்தான். காங்கிரஸ் ஒருங்கிணைத்த நிகழ்வு அது என்பது செய்தியிலேயே தெரிகிறது. கடைசிக்காலத்தில் வ.உ.சி சுதந்திரப்போராட்ட அரசியலில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கி சென்னையில் மளிகைக்கடை வைத்து வாழ்ந்துவந்தார். நோயுற்றபின் தூத்துக்குடி சென்றார். ஆகவேதான் வக்கீல் சங்கத்தவர் அவருக்கு இவ்வளவு வெளிப்படையாக உதவமுடிகிறது, அது செய்தியாகவும் ஆகமுடிகிறது.

வ.உ.சி கடைசிக்காலத்தில் காங்கிரஸுடன் முரண்பட்டிருந்தார், காங்கிரஸ் அவரை கண்டுகொள்ளவில்லை, அவருக்கு தனிப்பட்டமுறையில் ஈவேரா மட்டுமே உதவினார் என்றெல்லாம் தொடர்பொய்கள் இங்கே எழுதப்படுகின்றன. அவை உண்மையல்ல, கடைசிவரை அவர் காங்கிரசின் ஆதரவில்தான் இருந்தார், காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார்.

அன்றைய ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள், பலர் ஜமீன்தார்கள். அனைவருமே பிரிட்டிஷ் ஆதரவாளர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அள்ளிக் கொடுத்திருக்க முடியும். செய்யவில்லை. வேளாளர் அமைப்புகள்கூட அன்றிருந்தன. சைவ அமைப்புக்கள் அன்றிருந்தன. அவர்களும் செய்யவில்லை. அரையணா ஒன்றரையணா என மக்கலிடம் திரட்டி அரைப்பட்டினியாகக் களத்தில் போராடிக்கொண்டிருந்த காங்கிரஸே உதவி செய்தது.

இவை அவருடைய வாழ்க்கைவரலாற்றில் திரும்பத்திரும்ப எழுதப்பட்டாலும் வாய்மொழி வம்பாகவே இன்னொரு வரலாற்றை நிலைநிறுத்துகிறார்கள்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:35

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-7

[ 7 ]

மறுநாள் காலையில் நான் எழுந்தபின்னரும் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை தட்டி எழுப்பினேன். பலமுறை உசுப்பியபிறகுதான் அவள் விழித்தாள்.

கடுமையான குரலில் “என்ன?” என்றாள், அவள் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கண்கள் காட்டின. விழிகள் சிவந்திருந்தன.

“அறைக்குள்ளே போய் ஒளிந்துகொள்…”

“ஏன்?”

நான் சிலகணங்கள் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவளுக்கு அதன் பின்னர்தான் எல்லாம் புரிந்தது.  எழுந்து வாயைத்துடைத்துக்கொண்டு “நான் ஒன்றுக்கு போகவேண்டும்” என்றாள்.

”பின்னால் கதவு இருக்கிறது. அதுவழியாக இப்போது வெளியே போ …” என்றபின் “பகலில் வெளியே போகக்கூடாது. இங்கே ஒரு பாத்திரம் ஏதாவது கொண்டு வைக்கிறேன். பகலில் அந்த அறைக்குள்ளேயே இரு” என்றேன்.

சரி என்று தலையசைத்தாள். நான் கைதூக்கி சோம்பல் முறித்தேன். வெளியே ஓசைகள் கேட்கவில்லை. ஒருவேளை ரங்கா ரெட்டியின் ஆட்கள் அவளுக்காக தேடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த நாளை மிக பரபரப்பாக நிகழ்த்தவிருக்கிறோம் என்ற உற்சாகம்தான் என்னிடமிருந்தது.

வெளியே வந்து இருட்டில் ஒளிவிட்ட நிலவை பார்த்தேன். ஆங்காங்கே ஓரிருவராக எழ ஆரம்பித்து விட்டார்கள். நான் சென்று முகம் கழுவி பல் தேய்த்துவிட்டு வந்தேன். இவளுக்கு ஏதாவது உணவு கொண்டுவரவேண்டும். ஆனால் அதற்கு எந்த வழியும் இல்லை.

அவள் வழக்கமாக விடியற்காலைகளில் ஆழ்ந்து உறங்குபவள் என்று தோன்றியது. வெளியே போய்விட்டு வந்ததும் அப்படியே அமர்ந்து வாய் திறந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.

“ஏய், ஏய்” என உசுப்பினேன்

“என்ன” என்று தூக்கத்தால் கம்மிய குரலில் கேட்டாள்

“உள்ளே போய் தூங்கு”

“ம்” என தலையைச் சொறிந்தபின் எழுந்து தள்ளாடி நடந்துசென்றாள். விழுந்துவிடுவாள் போலிருந்தது. உள்ளே சென்றதுமே அப்படியே தூங்க ஆரம்பித்துவிட்டாள். மெல்லிய மூச்சொலி கேட்டது.

சீக்கிரமே வேலை ஆரம்பமாகி விட்டது. ஆடைகளை கொடுத்தனுப்பி கணக்கு முடித்தபோது ஏழுமணி. அப்போது அவ்வழியாக ரங்கா ரெட்டியின் ஆட்கள் அனைத்து முகங்களையும் கூர்ந்து பார்த்தபடிச் செல்வதைக் கண்டேன். மீண்டும் ஒரு விரிவான தேடலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது.

எட்டுமணிக்கு காலையுணவு வந்தது. பெரிய பித்தளைப் போணிகளில் கொண்டுவந்து இறக்கிவைத்து வெள்ளை எனாமல் தட்டுகளில் உப்புமா, பொங்கல், இட்லி பரிமாறினார்கள். நான் அதை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தேன். பலநாட்கள் அப்படி வந்து அமர்ந்து எதையாவது வாசித்தபடி சாப்பிடுவது வழக்கம்.

அதை அந்த அறைக்குள் கொண்டுசென்று வைத்தேன். அவளை உசுப்பி எழுப்பினேன் “சாப்பிடு. நான் வெளியே சாப்பிட்டுக்கொள்கிறேன்… என்ன ஏது என்று விசாரித்துவிட்டு வருகிறேன். அவர்கள் மிகத்தீவிரமாக உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சந்தடி காட்டாமல் இரு” என்றேன்.

அவள் பயம் எதையும் காட்டவில்லை. என் கையில் இருந்து தட்டை ஆவலாக வாங்கிக்கொண்டாள். அப்படியே கைகழுவாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

“போதுமா?”என்றேன்.

“பசிக்கிறது” என்றாள். “நல்ல பசி. வயிறு எரிகிறது. நான் நேற்றிரவு அவர்கள் தந்த ஏதோ சாராயத்தை மட்டும்தான் குடித்தேன்”

நான் அப்பேச்சை அப்படியே உதறி  வெளியே வந்தேன். வீட்டுக்கதவை பூட்டிவிட்டு பண்ணைவீட்டிலிருந்து வெளியே சென்றேன். முடிதிருத்தும் சாம்ராஜின் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு துணைநடிகர்கள் தங்கியிருக்கும் பண்ணைவீட்டுக்குச் சென்றேன்.

அங்கே ஏன் செல்கிறேன் என்பதை உள்ளே செல்வது வரை யோசிக்கவில்லை. உள்ளே நுழைந்தபின் தயாரிப்பு உதவியாளன் நாராயண ராவை பார்த்தேன். “என்ன?” என்றான்.

அப்போது தோன்றிய எண்ணம் பொருத்தமாகவே இருந்தது. “போர்க்காட்சிகளை எப்போது எடுப்பார்கள்? படைவீரர்களின் உடைகளை தனியாக அடுக்கி வைக்கவேண்டும்” என்றேன்.

“அது இப்போது ரெட்டிகாருவுக்குக் கூட தெரியாது” என்று அவன் என் தோளில் தட்டினான். “நீ அராமாக இரு தம்முடு. உனக்கு என்ன? துணி இருந்தால் கொடு. இல்லாவிட்டால் பேசாமலிரு. நீ பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை. என்னைப்போல சோற்றுக்கில்லாமல் வந்தவனா? ஒரு ஐந்து ரூபாய் இருந்தால் கொடு. நாளைக்கு தருகிறேன்”

அங்கே அத்தனைபேரும் இயல்பாகத்தான் இருந்தனர். ஏதேதோ வேலைக்காக அலைந்துகொண்டிருந்தனர். இருவர் இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளை தூக்கிக் கொண்டு சென்றார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. ஆனால் இங்கே எல்லாமே எல்லாவற்றுக்கும் தேவைப்படுவதுண்டு.

அங்கே கொஞ்சநேரம் வெறுமே சுற்றிவிட்டு திரும்ப வந்தேன். அங்கும் சாலையிலும் எல்லாம் ரங்கா ரெட்டியின் ஆட்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களின் அலைவு எனக்கு அச்சமூட்டவில்லை, ஒளிந்திருக்கும் இன்பத்தையே அளித்தது.

சைக்கிளிலேயே ஹம்பிக்குச் சென்றேன். நாகலிங்க ஆசாரியைப் பார்த்தேன். அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. படப்பிடிப்பு வழக்கம்போல நடந்து கொண்டிருந்தது. பொதுவாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்ப எங்கள் பண்ணைவீட்டிற்கே வந்தேன்.

கோதண்டம் அண்ணன்தான் என்னை தனியாக அழைத்துச்சென்று “தம்முடு ஒரு பிரச்சினை” என்றார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

”இங்கே எல்லாருக்கும் தெரியும். ஆனால் பேசாமலிருக்கிறார்கள்” என்றார் கோதண்டம். “நேற்று இந்த ரங்கா ரெட்டியும் ஆட்களும் துணைநடிகை ஒருத்தியை கூட்டி வந்திருக்கிறார்கள். அவள் அவர்களில் ஒருவனை மண்டையில் புட்டியால் அடித்துவிட்டு ஓடிவிட்டாள். அவளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளை வெறிகொண்டு தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிக்கினால் அடித்தே கொன்று விடுவார்கள் போல”

“அந்த ஆள் என்ன ஆனான்?”

“நல்ல அடி… ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறான். நிறைய தையல்கள் போடவேண்டும். இன்னும் நினைவு வரவில்லை. நேற்றே ஜீப்பில் தூக்கிப்போட்டு ஹொஸ்பெட் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனதனால் பிழைத்தான். போலீஸில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கே போலீஸ் உடனே கம்ப்ளெயிண்ட் எடுப்பதில்லை. ஆளைப் பிடித்து ரங்காரெட்டியிடம் கொடுப்பதுதான் போலீஸின் வழக்கமாம். போலீஸ் அந்தப்பெண்ணின் அம்மாவை கூட்டிக்கொண்டு போயிருக்கிறது…பிரகாஷ் ராவ் போலீஸ் ஸ்டேஷனில்தான் இருக்கிறான்”

”சரி, இதில் நமக்கென்ன?” என்றேன்.

“நமக்கு ஒன்றுமில்லை. ஆனால் அந்தப்பெண் இங்கிருந்து எங்கே போனாள் என்று தெரியவில்லை. ரங்கா ரெட்டியின் ஆட்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.”

“ஓகோ”

”அந்தப்பெண் சிக்கவில்லை என்றால் ரங்கா ரெட்டி எல்லாருக்குமே சிக்கல் கொடுப்பான்”

“அவனைச் சமாளிக்க பிரகாஷ் ராவுக்கு தெரியாதா என்ன?”

”ஆமாம், பிரகாஷ்ராவ் பெரிய கிரிமினல்”

காலை கொஞ்சம் பிந்தி, வெயில் ஏறியபிறகுதான் நான் வீட்டுக்குள் சென்றேன். கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டேன். பகலில் சிலசமயம் அப்படி தாழிட்டுக்கொண்டு நான் தூங்குவதுண்டு. காலையில் துணிகள் சென்றபின் உதிரி தையல் வேலைகள் மட்டும்தான் இருக்கும். ஸ்டாக்கை எடுக்கவேண்டியிருக்காது.

அவளிடம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னேன். அவள் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. “நிலைமையைப் பார்த்தால் இன்று இரவு வெளியே கிளம்புவதுகூட ஆபத்து. நீ இந்த ஊரிலிருந்து போய்விட்டாய் என்று அவர்கள் நினைக்கவேண்டும்… அந்த மாதிரி எதையாவது பரப்பி விட்டுவிட வேண்டும்… அதன்பிறகுதான் வெளியே  வரமுடியும்”

அவள் ‘உம்” என்றாள். ஆனால் அதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.

“பார்க்கிறேன்” என்றேன் “எதாவது வழி இல்லாமல் போகாது”

அங்கே வீட்டை பூட்டிக்கொண்டு இருப்பதும் ஆபத்துதான். யாரோ ஒருவர் ஏதோ வேண்டுமென வந்து கதவைத்தட்டி திறந்து உள்ளே வர வாய்ப்பிருந்தது. நிரந்தரமாக பூட்டியும் வைக்கமுடியாது. நான் வழக்கமாக பூட்டுவதோ தாழிடுவதோ இல்லை. அங்கே இருக்காமலிருப்பதே ஒரே வழி. வெளியே போகும்போது நான் ஸ்டாக் அறையை பூட்டிக்கொண்டுதான் வழக்கமாகச் செல்வேன்.

ஆகவே  அறையையும் முன்வாசலையும்  பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே போய்விட்டேன். அங்கே பெரிய திறந்த வெளி செட்டில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. என்.டி.ஆர், பானுமதி இருவரும் இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குமேல் மிகப்பெரிய வண்ணத் துணிக்குடை நிழல் அளித்தது. சற்று அப்பால் நாடா நாற்காலியில் என்.என்.ரெட்டி மல்லாந்து கண்மேல் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்.

தொப்பியை கவிழ்த்துக்கொண்டு, கறுப்புக்கண்ணாடி மாட்டிய ஆதி மெல்லி இரானி ஒளி அமைத்துக்கொண்டிருந்தார். அவருடைய கையசைவுக்கு ஏற்ப உதவியாளர்கள் ஓடி ஓடி வேலைபார்த்தனர்.முதல் உதவியாளர் யூ.ராஜகோபால் ஒரு விசிலை வாயில் வைத்து ஊதி ஆணைகளை பிறப்பித்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். ஒளிப்பதிவு இலாகாவினர் முழுக்கவே வெள்ளை சட்டையும் காக்கி கால்சட்டையும் அணிந்திருந்தனர். மெல்லி இரானி வெள்ளை பாண்ட் அணிந்து ஷூ போட்டிருந்தார்.

வெள்ளிபோல மின்னும் பிரதிபலிப்பான்கள், இரும்புக் குழாய்களாலான சட்டகத்தில் கறுப்புத் துணியை இழுத்து கட்டிய மிகப்பெரிய இரும்புத்தட்டிகள். ஒருபக்கம் வெள்ளித்தாளும் மறுபக்கம் கருப்புத்தாளும் ஒட்டப்பட்ட கனமற்ற மரப்பலகைகள். மினி, பேபி லைட்டுகள் மரமேடைகளின் மேல் வைக்கப்பட்டு அருகே லைட்பாய்கள் நின்றிருந்தனர். மாக்ஸி லைட்டுகள் பெரிய வெந்நீர் அண்டாக்கள் போல அப்பால் வைக்கப்பட்டிருந்தன. இரவுக்குத்தான் அவை தேவை. தொலைவில் ஜெனரேட்டர் உறுமிக்கொண்டிருந்தது. பூசணி கொடிகள் போல மின்சார ஒயர்கள் தரையில் கிடந்தன.

லைட் அமைக்க தேவையான மரத்தாலான கோடாக்கள், அவற்றில் ஏற சிறிய ஏணிகள் போன்றவற்றை தூக்கிக்கொண்டு ஓடினர். குட்டிக்குட்டியான மர ஸ்டூல்கள் எங்கும் கிடந்தன. அமர்வதற்கும், உயரத்துக்கு ஏற்ப அடுக்குவதற்கும் உரிய பலவகையான பெட்டிகளை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தார்கள். குழம்பிப்போய் திரும்பக் கொண்டுவந்து வைத்தார்கள். வசைபாடப்பட்டு மீண்டும் கொண்டு சென்றார்கள்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அப்பால் அடுத்த காட்சிக்காக டிராலி அமைத்துக் கொண்டிருந்தனர். மரக்கட்டைகளை அடுக்கி அதன்மேல் தண்டவாளத்தை பொருத்தினர். ரசமட்டம் வைத்துப் பார்த்து ஆப்புகளை அடித்துச் சீரமைத்தனர். அருகே டிராலி நன்கு இரும்புச் சக்கரங்கள் மேலெழுந்து தெரிய, பக்கவாட்டில் மண்ணில் பாதி ஊன்றிக்கிடந்தது. அதன் சக்கரங்களில் மண் படக்கூடாது, தண்டவாளத்தில் நொடிப்பு உருவாகும். அதைப் பார்த்தாலே அதன் எடை தெரியும். அதை கையாள்பவர்கள் எல்லாருமே பயில்வான்கள். எடைதான் அதற்கு அந்த சீரான நிதானத்தை அளித்தது.

அதற்கு அப்பால் இருபதடி கிரேன் பல இரும்புச்சட்டங்களாக பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தது. கிரேனில் மாட்டவேண்டிய எடைமிக்க உருளைகள் புழுதியில் மூழ்கியவை போல கிடந்தன. காமிரா அனைத்துக்கும் நடுவே ஒரு கறுப்புத் துணியால் மூடப்பட்டு கருவறைத் தெய்வம் போல, மண்ணில் ஊன்றிய மூன்று கால்களின்மேல் நின்றிருந்தது. அதன் காவலர்கள் இருவர் எந்நேரமும் உடனிருப்பார்கள். அவர்களை துவாரபாலகர் என்போம்.

அருகே லென்ஸ் பெட்டியுடன் இருவர். லென்ஸ்களை எடுத்து துருத்தியால் காற்றை ஊதி தூசியைத் துடைத்து அளிப்பது திரும்ப வாங்கி வைப்பது மட்டும்தான் அவர்களின் வேலை. இந்த படப்பிடிப்புத் தளத்தில் என்.என்.ரெட்டி, மெல்லி இரானிக்கு பிறகு மதிப்பு மிக்கவை காமிராவும் லென்ஸ்களும்தான். அவற்றை அழுக்கு நீக்க இறக்குமதி செய்யப்பட்ட திரவம் ஒன்று உண்டு. சாராயம் போல வாடை வரும்.

ஒருவன் குடிக்க குளிர்பானத்தையும் மோரையும் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தான். மிக அப்பால் காக்கித் துணியாலான குடைக்கு கீழே நாகராவுடன் ஒலிப்பதிவாளர் அமர்ந்திருந்தார். அதன் அருகே சென்று நின்றேன், அதற்கு அப்பால் கலை இலாகாவினரின் இடம். அங்கே காக்கி துணியால் மூடப்பட்டு ஏராளமான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அங்கே நின்ற நரசிங்கன் என்னை பார்த்துவிட்டான். “வாடா, மோர் சாப்பிடு” என்றான் ”நெல்லிக்காய் போட்ட மோர். வெயிலுக்கு நல்லது”

“நீ எப்போது வந்தாய்?”

“நேற்றே வந்துவிட்டேன். செகண்ட் அசோசியேட் டைரக்டர் கூட வந்தேன். நீ எங்கே தங்கியிருக்கிறாய்?”

“தையல் இலாகா இருக்கும் பண்ணை வீட்டில்தான்… இங்கே என்ன காட்சி?”

“இங்கேயா? இங்கே விஜயேஸ்வரியை தேடி நல்லமராஜு விஜயநகரத்திற்குள் நுழைந்துவிடுகிறான். மாறுவேடமிட்டு அரண்மனையை அடைந்து அங்கே நந்தவனத்தில் ஒரு கோயிலில் ஒளிந்திருக்கிறான். அங்கே பிற அரசிகளுடன் சாமி கும்பிட வரும் விஜயேஸ்வரியை பார்த்துவிடுகிறான். அவளை தனிமையில் சந்தித்து பேசுகிறான். அப்போது பெரிய அரசி திருமலாதேவி வந்துவிடுகிறார். விஜயேஸ்வரி அவனை தன் அரண்மனைக்குள் கொண்டுசென்று தன் படுக்கையறையிலேயே ஒளித்து வைத்துக்கொள்கிறாள்.”

“படுக்கையறையிலேயா? அங்கே எவரும் பார்க்க மாட்டார்களா?”

“சினிமாவில் பார்க்க மாட்டார்கள். அவன் தந்திரமாக அந்த மாளிகையிலேயே அவளுடன் இருக்கிறான். பகல் முழுக்க ஒளிந்திருக்கிறான். இரவில் நிலவில் அவன் அவளுடன் வெளியே வந்து உத்தியானத்தில் பாடுகிறான்”

“அதை யாரும் கேட்கமாட்டார்களா?”

”சினிமாவில் கேட்க மாட்டார்களடா மடையா”என்றான் நரசிங்கன் “அந்த பாட்டுதான் எடுக்கப்போகிறார்கள்”

“பாட்டா? இரவில் அல்லவா பாடுகிறார்கள்?”

“ஆமாம், அதற்காக இரவில் எடுத்தால் படத்தில் தெரியுமா? பகலில்தான் இரவையும் எடுப்பார்கள்”

“அதெப்படி?”

”காமிராவுக்கு ஃபில்டர் போடுவார்கள்… கறுப்புக் கண்ணாடி மாதிரி. நிலாவெளிச்சம் மாதிரி ஆகிவிடும்… அங்கே பார் நிலவு”

அங்கே வானத்தில் ஒரு கரிய துணி இழுத்து கட்டப்பட்டு அதற்குப் பின்னால் ஒரு வட்டவடிவ விளக்கு வாயை துணியில் ஒட்டிக்கொண்டு  இருந்தது.

“லைட் போட்டதும் அது நிலவாக ஆகிவிடும்”

மெல்லி இரானி வைக்கோல் தொப்பியை கழற்றி வியர்வையை துடைத்துக் கொண்டு காமிரா அருகே சென்றார். விளக்கொளிகள் பலமுறை போட்டு அணைத்து போட்டு அணைத்து கோணங்கள் மாற்றப்பட்டு அமைக்கப்பட்டு விட்டன. ஒருவன் இடம் மாறி இடம் மாறி நின்று சிறிய வெண்குமிழி போன்ற லைட் மீட்டரைக்கொண்டு ஒளியை அளந்து சைகையால் சொல்லிக் கொண்டிருந்தான்.

மெல்லி இரானி கைகாட்டி ஓசையின்றிச் சொன்ன இடங்களில் அவர் உதவியாளர்கள் நின்றனர். அவர் கையை செங்குத்தாக மேலே தூக்கி காட்டியதும் எல்லா விளக்குகளும் எரிந்தன. அந்தப்பகுதி கண்கூசவைக்கும் ஒளிகொண்டதாக ஆகியது.

“பகலில் இத்தனை வெயில் வெளிச்சம் இருக்கிறதே, இது போதாதா? எதற்கு இத்தனை லைட்?”

“போதாது, வானம் பளிச்சென்று இருக்கிறதே, முகம் நிழலாக ஆகிவிடும். ஆகவே முகத்தில் வானத்திலிருப்பதை விட அதிக வெளிச்சம் வேண்டும்” என்றான் நரசிங்கன்.

“நீ இதையெல்லாம் எப்படி தெரிந்துகொண்டாய்?”என்றேன்.

”நான் மூன்று வருடங்களாக இதில் இருக்கிறேன். பார், ஒருநாள் நானும் படம் இயக்குவேன்”

நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். விளக்குகள் அணைந்தபோது வெயிலிலேயே அந்த இடம் இருள்வதைப்போல தோன்றும் விந்தையை நான் எண்ணிக்கொண்டேன்.

நரசிங்கன் அவனுடைய உலகிலேயே இருந்தான்.“அது இதேபோல அரசர்களையும் காதலையும் பற்றிய படமாக இருக்காது. மக்கள் படும்பாடுகளைப் பற்றிய படமாக இருக்கும்”

“மனதேசம் மாதிரியா?”

”அது படமா? வெள்ளைக்காரன் கதையை திருடி எடுப்பது. நான் சொல்வது மக்களின் கதை. மக்கள் எப்படி விடுதலை அடைவது என்பது பற்றிய படம். பார், ஒருநாள் நான் எடுப்பேன். இதெல்லாம் மாறவேண்டும். அதை மக்களிடம் சொல்ல சினிமாதான் நல்ல வழி”

டிராக் அமைந்துவிட்டது. டிராலியை தூக்கி அதன்மேல் வைத்தார்கள். மெல்லி இரானி டிராலியில் ஏறி அமர்ந்து வலக்கையை சதுரமாக குவித்து கண்மேல் வைத்துக்கொண்டு ஃப்ரேம் பார்த்து கைகளை காட்டினார். யூ.ராஜகோபால் அதைக்கண்டு கைகளை வீசினார். அவை ஆணைகளாகப் பரவின. மெல்லி இரானியின் கைகள் முணுமுணுக்க யூ.ராஜகோபாலின் கைகள் கூச்சலிடுவதுபோல நினைத்துக்கொண்டேன்.

அனைத்து விளக்குகளும் எரிந்தன. மெல்லி இரானியின்உதவியாளர்கள் தரையில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த இலைகளை அடையாளம் வைத்துக்கொண்டு அவற்றின் மேல் கால்வைத்து, பேசியபடி நடந்து வந்து , கடைசி புள்ளியில் நின்றனர். அதற்கேற்ப கோடாக்களின் மேல் லைட்டுகள் மெல்லத் திரும்பின. அந்தக் கூட்டத்தில் அவர்கள் மட்டும் கண்கூச ஒளிகொண்டிருந்தனர். டிராலி டிராக்கில் தள்ளப்பட்டு வழுக்கியபடி மெல்ல ஓடிவந்து நின்றது. அது நின்ற இடத்தை சாக்பீஸால் அடையாளப்படுத்தினர். திரும்பச் சென்று நின்றபோது அந்த இடமும் அடையாளப்படுத்தப்பட்டது.

“மெல்லி இரானி வெறும் கையாலேயே ஃப்ரேம் மட்டுமல்ல ஃபோகஸையும் அளவிட்டுவிடுவார்” என்று நரசிங்கன் சொன்னான். “ஒருவர் ஒன்றிலேயே மூழ்கி இருந்தால் அவருக்கு எல்லாமே எளிதாகிவிடுகிறது”

மீண்டும் அதே ஒத்திகை. அதேபோல பேசியபடி அவர்கள் வந்து நின்றனர்.அவர்கள் பேசவில்லை, அப்படி நடித்தனர். ஆகவே தலையசைவுகளும் கையசைவுகளும் செயற்கையாக இருந்தன.

மெல்லி இரானி மேலும் சில திருத்தங்கள் சொன்னார். அதை இருவர் ஓடிப்போய் செய்தார்கள். இலைகளை கொஞ்சம் மாற்றி வைத்து இரண்டு பேபி விளக்குகளை இடம் மாற்றினார்கள். யூ.ராஜகோபால் நடனம் ஆடுவதுபோல தெரிந்தது.

“நீ இந்த காட்சி காமிராவில் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு வழி உண்டு”என்றான் நரசிங்கன். தன் பையில் இருந்து இரண்டு ஃபிலிம் நெகெட்டிவ்களை எடுத்து தந்தான்.  “இவற்றை  ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அதன் வழியாகப்பார்…”

நான் அப்படிப் பார்த்தபோது மெய்யாகவே நிலவொளி போலத்தான் தெரிந்தது. இலைகள் எல்லாம் மென்மையாக பளபளத்தன. மண்டபங்களின் கூரைவளைவுகள் மெருகு கொண்டிருந்தன. தரை பட்டாலானதுபோல் இருந்தது.

“ஏறத்தாழ இந்த ஃபில்டர்தான் போட்டிருக்கிறார்” என்று நரசிங்கன் சொன்னான்.

மெல்லி இரானி திருப்தி அடைந்து இரு கட்டைவிரல்களையும் காட்டினார். ஓர் உதவியாளர் போய் என்.என்.ரெட்டியிடம் சொன்னார். அவர் எழுந்து கைநீட்ட ஒருவன் ஈரமான டவலை அளித்தான். அதைக்கொண்டு முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு அவர் எழுந்தார்.

காமிரா மிகமிகக் கவனமாக கொண்டுவரப்பட்டது. அதை டிராலியில் பொருத்தி ஸ்க்ரூக்களால் இறுக்கினர். காமிராவில் லென்ஸ்கள் போடப்பட்டன. லென்ஸ்களை எப்போதுமே ஒரு மஞ்சள்நிற பூந்துவாலையால் எடுத்தனர். மிகமிக மெல்ல அதை காமிராவில் பொருத்தினர். லென்ஸ்களை கைக்குழந்தை என்று சொல்வார்கள். மெல்லி இரானியே சைல்ட் என்றுதான் சொல்வார்.

என்.டி.ஆர், பானுமதி இருவரிடமும் உதவியாளர்கள் போய்ச்சொன்னார்கள். அவர்கள் இருவரும் கடைசி டச்சப் செய்துகொண்டு எழுந்தார்கள். அதன்பின் முடியமைப்பாளன் அவர்களின் கன்னத்துமுடியை சரி செய்தான். இன்னொருவன் பானுமதியின் ஆடை மடிப்பை சரிசெய்தான். இதையெல்லாம் அவர்கள் எவரையும் கவர்வதற்காகச் செய்யவில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு ஒரு பதற்றத்தால்தான் செய்தனர்.

பாடல்காட்சி ஆனதனால் பெரிதாக ஒத்திகை இல்லை. நடன இயக்குநர் அவரே வந்து என்.டி.ஆருக்கு அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார். செயற்கைப் படிகளில் ஏறியபடியே நிலவைப் பார்த்து கைவிரித்து அவர் பாடினார். பாடியபடியே திரும்பிப் பார்க்க ஒரு கோயிலின் பின்னாலிருந்து பானுமதி தோன்றவேண்டும். அவர்கள் இருவரும் பாடியபடியே நடந்து வரவேண்டும். அவர்கள் வந்து நிற்கும் இடத்தில் காமிரா வந்து நிற்கும்.

அவர்கள் இருவரையும் நிற்க வைத்தும் நடக்க வைத்தும் அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார்கள். திரும்பத்திரும்ப அது நடந்தது. காமிரா நீரில் மிதப்பது போல டிராலிமேல் மெல்ல ஓடி அவர்களை தொடந்தது. ஃபோகஸ் புல்லர் மெல்லி இரானியின் இணையாக டிராலியில் அமர்ந்து ஃபோகஸ் டிராக்கை காமிரா வாயின் வளையவட்டத்தில் சிவப்புப் பென்சிலால் அடையாளப்படுத்தினார்.

மெல்லி இரானி கையசைத்ததும் மீண்டும் விளக்குகள் எரிந்தன. என்.டி.ஆரும் பானுமதியும் அவரவர் இடங்களில் சென்று நிற்க நாகராவில் பாடல் ஒலித்தது. முழு விளக்கொளியில் அந்த ஒத்திகை மீண்டும் நடந்தது. என்.டி.ஆரும் பானுமதியும் அந்த ஒளியில் வேறொரு உலகில் இருப்பவர்களாக தோன்றினர். ஆடைகளும் நகைகளும் மின்ன அவர்கள் கந்தர்வர்கள் போல தெரிந்தனர். மற்றவர்கள் மானுடர்கள். உண்மையிலேயே அப்படித்தான். அங்கே அந்த ஒளியில் நின்றால் அவர்களே அப்படி தன்னை நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.

முதல் கிளாப் அடிக்கப்பட்டது. முதல் ஷாட் எடுக்கப்பட்டது. இந்த நாளின் இரண்டாவது ஷாட் இது. ஏதோ சின்ன பிழை. என்ன என்று தெரியவில்லை. மெல்லி இரானி ரீடேக் கேட்டார். காமிராவில் ஃபோகஸ் சற்று மாற்றப்பட்டது.  என்.டி.ஆர் பானுமதியிடம் தனியாக ஏதோ சொன்னார் போலிருக்கிறது. பானுமதி முகம் சிவக்க சிரித்தார். என்.டி.ஆரின் குரல்வளை உற்சாகமாக ஏறியிறங்கியது.

நரசிங்கன் “என்னால் இந்த கூத்தை பார்க்க முடியாது, வேலை கிடக்கிறது” என்றான். அவன் சென்றபின் நான் பார்த்துக் கொண்டு நின்றேன். ஒரே அசைவை திரும்பத் திரும்ப எடுத்தார்கள். அதற்கு வெவ்வேறு லென்ஸ்கள் போடப்பட்டன. அதற்குள் வானத்தில் மேகம் வந்து வெயில் மங்கிவிட்டது. மெல்லி இரானி தலையசைத்து காத்திருந்தார். விளக்குகள் அணைய அத்தனைபேரும் வானைப் பார்த்துக்கொண்டிருந்தனர். என்.டி.ராமராவுக்கும் பானுமதிக்கும் டச்சப் நடந்தது. நடன இயக்குநர் என்.டி.ஆரிடம் அந்த நடன அசைவை மீண்டும் நடித்துக்காட்டினார். என்.என்.ரெட்டி கூழ் போல எதையோ கொஞ்சம் அருந்தினார்.

சூரியன் விலகியபோது ஓர் ஓசை எழுந்தது. மெல்லி இரானி புறங்கையை நீட்டி ஒளியை அளந்தார். அவர் ஒளியை அளப்பதற்குரிய கருவிகளை பயன்படுத்துவதில்லை. ஃபோகஸ் புல்லர் ஏதோ சொல்ல மெல்லி இரானி ஒளியின் அளவைச் சொன்னார். ராஜகோபால் வெண்குமிழி போன்ற கருவியை வைத்து ஒளியை அளந்து சரிதான் என்பதுபோல தலையசைத்தார்.

மீண்டும் விளக்குகள் ஒளிவிட்டன. என்.டி.ஆரும் பானுமதியும் சென்று தங்கள் இடங்களில் நின்றுகொண்டனர். ராஜகோபால் வெறியுடன் அங்குமிங்கும் ஓடினார். விசில் சத்தம் ஒலித்தபடியே இருந்தது. மீண்டும் என்.டி.ஆரும் பானுமதியும் மீண்டும் பாடியபடியே மெல்ல நடந்தனர். காமிரா தொடர்ந்து வந்தது. அதனுள் ஃபிலிம் ரோல் ஓடும் ஓசை வண்டு ஒன்றின் சிறகடிப்போசை போல கேட்டது. அது ஓடியபோது அனைவரும் அமைதியடைந்தமையால் அது ஓர் ஆணை போல ஒலித்தது.

நான் சலிப்புடன் சென்று அப்பால் ஓர் மண்டபத்தில் அமர்ந்தேன். அங்கே நல்ல நிழலாகவும் தண்மையாகவும் இருந்தது. கல்மண்டபங்களில் வெயில் தெரிவதில்லை. கால்களை நீட்டிக்கொண்டு வானை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பால் ஷூட்டிங்கின் ஓசைகள். விசில் ஓசை அவ்வப்போது எழுந்தது.

மதிய உணவை நரசிங்கனுடன் உண்டேன். “அங்கே அரண்மனையிலேயே நல்லமராஜு இருந்துவிடுகிறானா?” என்றேன். உண்மையில் நான் திரைக்கதையை வாசித்திருந்தேன். ஆனால் அப்போது கதையையே கவனிக்கவில்லை.

”ஆமாம், உள்ளேயே கொஞ்சம் காட்சிகள். கடைசியில் அவனை பிடித்துவிடுகிறார்கள். அவனை கொன்றால் அரசிக்கு கெட்டபெயர் வந்துவிடும் என்பதனால் அமைச்சர் ருத்ரையா தயங்குகிறார். நீ விஜயேஸ்வரியை மறந்துவிடுவாய் என்றால் உன்னை போகவிடுகிறேன். நீ வேறு நாட்டுக்குச் சென்று வாழலாம். உனக்கு இருபது கழஞ்சு பொன்னும் தரச்சொல்கிறேன். அவளை மறப்பேன் என்று உன் புல்லாங்குழல்மேல் தொட்டு சத்தியம் செய்யவேண்டும் என்று சொல்கிறார். அவன் மறுத்துவிடுகிறான். இல்லாவிட்டால் அவனை கழுவிலேற்றுவேன் என்று அவர் சொல்கிறார். கழுவில் புல்லாங்குழலுடன் அமர அனுமதிவேண்டும், வாசித்தபடியே சாகிறேன் என்கிறான் நல்லமராஜு. அவனை மிரட்டியோ கெஞ்சியோ பணியவைக்க முடியவில்லை”

”ஆமாம், அப்படித்தான் கதை” என்றேன்.

”அவனை தூக்கிலிடப் போகிறார்கள். அவனுடன் தானும் செத்துவிடுவேன் என்று விஜயேஸ்வரி சொல்கிறாள். அரசபோகம் மரியாதை எதுவுமே அவளை மயக்கவில்லை. அவன் தூக்குமேடையில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே இருக்கிறான். அவள் அரண்மனையில் இருந்து அவனை நோக்கி ஓடிவருகிறாள். கடைசியில் அவர்களின் காதலை அறிந்த ராயர் அவர்களை மன்னித்து இணைத்துவைக்கிறார். அவளுக்கு பரிசுகள் கொடுத்து அவளை கூட்டிவந்த பல்லக்கிலேயே ஊருக்கு அனுப்புகிறார். நல்லமராஜுவுக்கு ராஜகுடும்பத்தினருக்குரிய முத்திரை மோதிரமும் உடைவாளும் அளிக்கப்படுகிறது. அவன் அத்தனை காவல்களையும் மீறி அரண்மனைக்குள் நுழைந்தவன். ஆகவே கோட்டையின் காவல்பொறுப்பு அவனிடமே ஒப்படைக்கப்படுகிறது. உண்மையைச் சொன்னால் நல்ல கதை”

”ஆனால் இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கிறது?”

“நம்ப விரும்புவார்கள். ஒரு சாமானியன் அரசனை ஜெயிக்கவேண்டும். கோட்டையை ஊடுருவவேண்டும். ஆனால் கிருஷ்ணதேவராயர் பெரிய சரித்திரபுருஷன். அவரை கெட்டவராகவும் காட்டக்கூடாது. இதுபோன்ற சமரசங்கள் கொண்ட படங்கள் மக்களுக்குப் பிடிக்கும்”

“நான் கேட்பது அதை அல்ல. அப்படி ஒரு பெண்ணுக்காக உயிரையே கொடுப்பார்களா என்ன? எந்தப் பெண்ணாவது அப்படி அவனுக்காக அரசபதவியை துறப்பாளா? அவளுடைய குழந்தைகள், தலைமுறைகள் எல்லாருக்கும் நல்லது அரசகுடும்பமாக ஆவது தானே? ஒரு காதலனுக்காக அதை வேண்டாம் என்று சொல்வாளா?”

“சொல்லியிருக்கிறார்களே. எல்லாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சொல்பவர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள்.”

“காதல் எல்லாம் அவ்வளவு முக்கியமா என்ன?”

”இதோபார், வாழ்க்கையில் எதுவுமே முக்கியம் இல்லை. ஆனால் எதையாவது முக்கியமாக நினைத்துக்கொண்டால்தான் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு. இப்போது நான் சினிமா யூனியனுக்காக வேலைசெய்கிறேன். பின்னால் யோசித்துப்பார்த்தால் இதெல்லாம் அர்த்தமில்லாததாகக்கூட தோன்றலாம். ஆனால் இப்போது அது எனக்கு ஒரு நம்பிக்கையையும் நிமிர்வையும் அளிக்கிறது. நான் என்னை முக்கியமானவனாக உணரவைக்கிறது. உருப்படியாக எதையாவது செய்கிறோம் என்று எண்ணிக் கொள்கிறேன். நாளை ஒரு யூனியன் உருவாகி நாமெல்லாம் மானம் மரியாதையுடன் வாழமுடிந்தால் எனக்கு நிறைவுதான். அதேபோலத்தான். காதலிப்பவர்களுக்கு அந்த தீவிரம் இருக்கிறது. அது அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தமாகத் தெரிகிறது”

”நீ யாரையாவது காதலிக்கிறாயா?”

“நானா? காதலா? என் சம்பாத்தியத்தில் என் வீடே தின்கிறது”

நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். சாகும்வரை, வாழ்க்கையையே தூக்கி கொடுப்பதுபோல, கொஞ்சம்கூட மிச்சமில்லாமல் அடிபணிந்து காதலிக்கிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எங்கோ அப்படிக் காதலிக்கிறார்கள். அப்படி காதலிக்காதவர்கள்கூட அதை விரும்புகிறார்கள். கற்பனையில் அப்படி வாழ நினைக்கிறார்கள். ஆகவேதான் சினிமாக்களில் அதை விரும்பிப்பார்க்கிறார்கள்.

“உனக்குத்தெரியுமா, நேற்று உன் பண்ணைவீட்டில் ஒரு அடிதடி. ஒரு துணைநடிகையை கூட்டிச்சென்றிருக்கிறார்கள். அவள் அந்த வீட்டிலிருந்த ஒரு தடியனை பாட்டிலால் அடித்துப்போட்டுவிட்டு ஓடிவிட்டாள்”

”தெரியும்”

“நன்றாகச் செய்தாள்… பெண்கள் அவ்வப்போது இப்படிச் செய்தால் இந்த நாய்களுக்கு ஒரு பயம் இருக்கும்”

”அவளை உனக்கு தெரியுமா?” என்றேன்.

“தெரியாது. ராஜமந்திரிக்காரி என்றார்கள். அவள் அம்மாவை போலீஸ் கொண்டுபோயிருக்கிறது” என்றான் நரசிங்கன் “ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்? பிரகாஷ்ராவ் அதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான். அந்த ஆள் பரம அயோக்கியன். கூட்டிக்கொடுக்கும் சில்லறை. ஆனால் மிகவும் செல்வாக்கானவன். ஏகப்பட்ட பணம், ஏராளமான தொடர்புகள்… ஒரு யூனியன் இருந்தால்கூட நாமும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்”

“ஆமாம்” என்றேன். என் முகத்தை உறைந்ததுபோல வைத்துக்கொண்டேன்.

“நான் நம் ஸ்டுடியோவில் யூனியன் அமைக்க பேசிப்பார்த்தேன். சி.நரசிம்மாச்சாரியுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. பி.சுந்தரையா வரும்போது  என்னைக் கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தொழிலாளர்களும் ஒத்துவரவில்லை. முதலாளிக்கும் யூனியன் என்றால் கசப்பு… இப்போது நம்மால் எதுவுமே செய்யமுடியாது. அவர்கள் அந்தப் பெண்ணை கொன்றால்கூட ஒன்றும் சொல்லமுடியாது. அவளை வெறிகொண்டு தேடிக்கொண்டிருக்கிறார்கள் .பிரகாஷ் ராவ் இங்கிருந்து தப்ப வேண்டுமென்றால் அந்தப் பெண்ணை பிடித்து அவர்களிடம் கொடுத்தாகவேண்டும்…”

”அவளுடைய ஊர்க்காரன் ஒருவன் அங்கே இருக்கிறான். அவன் சொன்னான் அவள் ஒரு லாரியில் பெல்லாரிக்கு போய்விட்டாள் என்று” என்றேன்.

“பெல்லாரிக்கா? ஏன்?” என்றான் நரசிங்கன்.

“அந்த லாரி பெல்லாரிக்குத்தான் போயிருக்கிறது” என்றேன்.

“நல்லவேளை… தப்பித்தாள்”என்றான் நரசிங்கன்.

நரசிங்கன் ஓட்டைவாய், அதை சொல்லிப்பரப்பி மறுநாள் காலைக்குள் அனைவரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்று எனக்கு தெரியும். நான் பெருமூச்சுவிட்டேன்.

[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:35

கதகளி அனுபவம்- கடிதம்

முழங்கும் ஒரு நாள்

அன்புள்ள ஜெ,

‘முழங்கும் ஒரு நாள்’ கதகளி அனுபவத்தை நீங்கள் எழுதியவுடன் என்னுடைய கதகளி சார்ந்த அனுபவங்களை உங்களுக்கு எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எழுத ஆரம்பித்தவுடன் 2016லிருந்து 2020 வரை பார்த்த கதகளிகளின் இனிய நினைவுகளின் கொப்பளிப்பை சரியான வடிவத்தில் எழுத முடியவில்லை. உங்கள் வழியாக கதகளி எனக்கு அறிமுகமான பின்னணியும் கதகளி மேல் எனக்கிருக்கும் ஈர்ப்பை மட்டும்தான் எழுத முடிந்திருக்கிறது.

எல்லா நண்பர்களையும் போல தளத்தில் இருக்கும்  பழைய பதிவுகளை தேடித்தேடிப்படிப்பது எனது வழக்கம். எப்போது திறந்தாலும் நான் படிக்காமல் விட்ட ஏதாவது ஒரு பழைய பதிவு கண்ணில்படும். அப்படி  பழைய பதிவுகளில் தற்செயலாகப் படித்த ”கலைக்கணம்  கட்டுரை வழியாகத் எனக்கு கதகளி அறிமுகமானது. கதகளியின் நாடகீயம் பற்றியும், கதகளி அறிமுகம் செய்துகொள்வது பற்றியுமான விரிவான நல்ல கட்டுரை. இப்போதும் கதகளி பார்க்க விரும்பும் நம் நண்பர்களுக்கு அந்த கட்டுரையை பரிந்துரை செய்வேன்.

அந்த கட்டுரையை படித்துவிட்டு யூடியூபில் கதகளி பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், எந்த நிகழ்த்துகலையையும் போல கதகளி நம்மை ஆட்கொள்ள  நேரில்தான் பார்க்க வேண்டும். அதுவும் கதகளி ஏற்கனவே அறிமுகமான connoisseur நமக்கு எந்த அம்சங்களை உற்று கவனிக்க வேண்டும் என சொல்லித்தரவும் வேண்டும். 2016 கோவை புதிய வாசகர் சந்திப்பிற்கு அஜிதன் வந்திருந்திருந்தான். அப்போது நிகழ்ந்து முடிந்த கோட்டக்கல் கதகளி உற்சவத்தை 5 நாட்கள் பார்த்துவிட்டு பரவசத்துடன் அவன் பார்த்த கதகளிகளை பற்றி பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு கதகளி கலைஞர் ”கோட்டக்கல் சசீதரன்”  நுட்பமான கதகளி முத்திரைகளையும், மனோதர்மங்களை புரிந்துகொள்வது பற்றியும் என்னென்ன சொல்லிக்கொடுத்தார் என விளக்கினான்.(இன்னும் அஜிக்கு அவர் நல்ல நண்பர்)

நீங்கள் கதகளி பார்ப்பதில் புராணங்கள் சார்ந்த அறிமுகம் எவ்வளவு அவசியம் என்பது பற்றியும், இந்து புராணங்கள், காளிதாசன் போன்றவற்றில் கதகளி ஆசான்களின் தேர்ச்சி பற்றியும், கதகளி சங்கீதத்திற்கும் கர்நாடக சங்கீதத்திற்கு இருக்கும் வேறுபாடுகள் பற்றியும் பேசினீர்கள். கதகளி பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக கதகளி திருவிழா ஒன்றை பார்க்க வேண்டும் என்ற அவசியத்தையும் கூறினீர்கள். கதகளி சார்ந்த ஆர்வம் மேலும் அதிகமாகியது.

நானும் பாரியும் கதகளியை நேரில் பார்த்தே தீர்வது என முடிவெடுத்து எர்ணாகுளித்திலிருந்து 25 km தொலைவில் இருக்கும் பனவள்ளி என்ற கிராமத்திற்கு நான்கு, ஐந்து பஸ்கள் மாறி சென்று சேர்ந்தோம். கிட்டத்தட்ட பௌராணிக கேரளத்தில் நுழைந்ததுபோன்ற அனுபவம். நவீன வாழ்க்கையின் எந்த மாலின்யமும் தீண்டாத, செழிப்பான, கிட்டத்தட்ட 1900களிலேயே நின்றுவிட்ட அழகிய கிராமம் பனவள்ளி. அங்கு உள்ள நால்பத்தெண்ணீஸ்வரம் மகாதேவன் கோவிலில் இரவு 10 மணிக்கு கதகளி தொடங்குகிறது. தற்செயலாக அஜிதன் தன் நீண்ட மகாராஷ்ட்ரா பயணத்தை முடித்துவிட்டு அங்கு வந்திருந்தான். நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. தன் நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு திரும்பாமல் அவன் அங்கு வந்து எங்களுக்கு கதகளி ரசிக்க சொல்லிக்கொடுத்தது ஒரு நிமித்தம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அன்றைய கதகளி- பாலி விஜயம், கிராதம். கதகளி பார்க்க ஆட்களே இல்லை. கதகளி நடன்மார்க்கு அது பொருட்டே இல்லை என்பதுபோல, உற்சாகமான நீண்ட மேளப்பதத்துடன் கதகளி துவங்கியது. நான், பாரி, அஜிதன் மூவர் மட்டும்தான். மேலும் ஒருவர் இருந்தார். வந்தவுடனேயே தன் துண்டை விரித்து தூங்கிவிட்டார். எனக்கும் பாரிக்கும் 24 அடிப்படை கைமுத்திரைகளும், தாமரை, வண்டு, ராஜா,சிம்மம் போன்ற எளிமையான முத்திரைகள் மட்டும்தான் தெரிந்திருந்தன. ஒரு கதகளியை  ரசிக்க அது போதுமானதாக இல்லை. அஜிதன் அந்த ஆட்டத்தில் வெளிப்பட்ட ஒவ்வொரு முத்திரையையும், கதகளியின் நுட்பமான improvisationகள் வெளிப்படும் பகுதிகளை விளக்க ஆரம்பித்தான்.

பாலிவிஜயத்தின் முதல் அங்கம் ராவணன் மண்டோதரியுடன் காதல் சல்லாபத்தில் இருக்கும் புகழ்பெற்ற பதிஞ்ச-பதம்(சிருங்காரப் பகுதி) “அரவிந்த விலோசனே”. அதில், மண்டோதரியை யார் முத்தமிடுவது என ராவணனின் பத்து முகங்களும் தங்களுக்குள் பூசலிட்டுக்கொள்ளும் ஒரே ஒரு வரியை மட்டும் கிட்டத்தட்ட 45 நிமிடம் ஆடுவார்கள். அந்த ஒருவரியை மட்டும் பின்னணியில் பாடகர்கள் பாடுவார்கள். அதை அஜிதன் விளக்கினான். பத்து முகங்களும் ஒன்றை ஒன்று விஞ்ச துடிக்கும், ஒன்று முன்னேற மற்றவை தத்தளிக்கும், ஒரு முகம் தன்னை முன்னேற விடாமல் தடுக்கும் மற்ற முகங்களை கோபம்கொண்டு பழிப்பு காட்டும், வசைபாடும். அஜி விளக்கவில்லை என்றால் கதகளி அறிமுகம் இல்லாதவர்களுக்கு அந்த 45 நிமிடம் முகத்தை இப்படி அஷ்டகோணலாக்கி ராவணன் என்னதான் செய்கிறான் என்றே புரியாது. இப்படி விஸ்தாரமான மனோதர்மங்கள் “பாலிவிஜயம்” கதகளியில் ஏராளமாக இருக்கின்றன.

நடுவில் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. மின்னிணைப்பு போய்விட்டது. வெளிச்சமோ, மைக்கோ  இல்லை. அதை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் நிலவிளக்கின் வெளிச்சத்தில் கதகளி கலைஞர்கள் ஆட்டத்தில் கொஞ்சம்கூட தொய்வின்றி தொடர்ந்தனர். பாடகர்கள் மைக்கே இல்லாமலேயே பாடினர். வெறும் நிலவிளக்கின் ஒளியில், வெறும் வாயால் பாடிய பாடல்கள் ஒலிக்க, கிட்டத்தட்ட 1900களில் நடந்த கதகளி ஒன்றை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை அடைந்தோம். கதகளி கலைஞர்களின் வேஷம், சிவந்த கண்கள், புஜகீர்த்திகளின் திளக்கம் போன்றவற்றை எந்த டியூப்-லைட்டும் குறுக்கிடாத வெறும் நிலவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்கவேண்டும். பார்த்துவிட்டால் கதகளியில் இருந்து நமக்கு மீட்பில்லை. எந்த மைக்கின் குறுக்கீடும் இல்லாத பாடகர்களின் தூய ஆலாபனை போன்ற கதகளி பதங்களும் இணையும்போது நம் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவம் ஒன்றை அடைந்துவிட்டிருப்போம்.

”குடிலத்திங்களும் ஜடமுடியும்” என்ற தனாசி பாடலுடன் கதகளி அதிகாலை 5:30க்கு முடிந்தது. கோவை திரும்பும்வரை நான் அஜியை விடவில்லை. ஒவ்வொரு கைமுத்திரையையும் மீண்டும் மீண்டும் கேட்டு நினைவில் நிறுத்திக்கொண்டேன். பின்னர் முத்திரைகளை புரிந்துகொள்வதற்காக மட்டும், பதிவுசெய்யப்பட்ட கதகளி ஆட்டங்களின் யூட்யூப் வீடியோக்களை பார்த்தேன். கதகளி கலைஞர் பிஷப்பள்ளி ராஜீவன் கைமுத்திரைகளை, அதன் கலைஅம்சங்களைப் பற்றி புரிந்துகொள்வதற்காக எடுத்த விரிவான வகுப்புகள் youtubeல் இருக்கின்றன. கதகளி அறிய அவை மிக உதவியானவை. ஆனால் அவை மலையாளத்தில்தான் இருக்கின்றன. மலையாளம் அறியாதவர்களுக்கு அஜி பரிந்துரைத்தது david bolland எழுதிய  ”A Guide to Kathakali: With the Stories of 35 Plays”  மிக உதவியான வழிகாட்டி நூல். கதகளியின் ஒவ்வொரு ஆட்டக்கதையின் சுருக்கப்பட்ட வடிவம் இந்நூலில் ஆங்கிலத்தில் இருக்கும்.

பின்னர் நான்கு வருடங்களாக 2016ல் இருந்து 2020 மார்ச் நோய்த்தொற்றுகாலம் வரை நானும் பாரியும் மாதம் ஒருமுறையாவது நேரில் சென்று விடிய விடிய கதகளி பார்ப்பதுத் திரும்பும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கதகளி இவ்வளவுதூரம் ஆட்கொள்ளும் போதையாக மாறும் என யாராவது  முன்னர் சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். ஏதாவது காரணத்தால் ஒரு மாதம் கதகளி பார்க்க முடியாவிட்டால் வீட்டில் அனாவசியமான பூசல் ஏற்படும். அம்மாவே ஒருகட்டத்தில் பூசலுக்கு காரணம் கதகளி பார்க்காததுதான், சென்று பார்த்துவிட்டு வா என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. அஜி இன்னும் குறுகிய இடைவெளியில், கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு ஒருமுறை கதகளி பார்த்துவந்தான். ஒவ்வொருமுறையும் நாங்கள் பார்த்த கதகளி பற்றி உற்சாகமாக அஜியும் நானும் ஃபோனில் பேசிக்கொள்வோம்.

நம் நண்பர்கள் தாமரைக்கண்ணன், தீபன், செல்வராணி, விக்ரம், அருள் இவர்களுடன் கதகளி பார்த்திருக்கிறோம். சென்னை கலாஷேத்ராவில் நடந்த கதகளியை செந்தில், ராகவ் இருவருடனும் பார்த்திருக்கிறேன். ஈரோட்டிலிருந்து நாங்கள் ஈரோடு கிருஷ்ணன், ராஜமாணிக்கம் என அணியாக கிளம்பி பாலக்காட்டில் கதகளி பார்த்து திரும்பியிருக்கிறோம்.

ஆனால் கதகளி அனுபவம் பற்றி ஒன்று சொல்லவேண்டும். சிலசமயம் நாம் பார்க்கும் கதகளி அவ்வளவு உவப்பான அனுபவத்தை அளிக்காது. அதற்குப் பல காரணங்கள். சிலசமயம் ஆடிட்டோரியங்களில் நடக்கும் கதகளிகளில் நல்ல கூட்டம் இருக்கும். மறைக்காத இடம் கிடைக்காமல் போனால் சரியாக பார்க்க முடியாது.

நல்ல கலைஞர்களே கூட தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும் காலங்களில் தளர்வு, சோர்வு காரணமாக தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியாது போகும். சில சமயம் ஒரே இரவில் நான்கு, ஐந்து capsule கதகளிகள் நடக்கும். அப்படி துண்டுதுண்டான 4 ஆட்டங்களில் எந்த கதகளியும் நம்மை கவராமல் போகும் வாய்ப்பிருக்கிறது.

சில சமயம், சின்ன அரங்குகளில் கதகளி நடக்கும். ஆனால், அந்த அரங்கின் தேவைக்கு மீறிய ஸ்பீக்கர் அமைப்புகள் இருக்கும். அளவுக்கு மீறிய சத்தம் காது ஜவ்வின் அதிகபட்ச சாத்தியத்தை சோதனை செய்யும். இத்தனைக்கும் மேலாக புதிதாக கதகளி பார்ப்பவர்கள் பாலிவிஜயம், ராவணோத்பவம், கீசகவதம் போன்ற எளிதாக உள்ளே நுழைய சாத்தியமான கதகளிகளில் இருந்து தொடங்க வேண்டும். கதகளி பார்க்க ஆரம்பிப்பவர்கள் ’ நளசரிதம் நான்காம் நாள்’ போன்ற மலையாள மொழியை அதன் கவித்துவத்தை அதிகமும் சார்ந்த கதகளிகளை பார்க்கநேர்ந்தால் ”என்ன இது?” என்று தோன்றிவிடும்.

இத்தனைக்கும் பிறகு கதகளி அனுபவம் என்பது கேரளத்தின் அழகிய உள்கிராமங்களை நோக்கிய கிளர்ச்சியூட்டும் பயணம். பொதுப்போக்குவரத்து குறைவான இடங்களுக்கு வயல்கள் வழியாக, ரப்பர் எஸ்டேட்களை கடந்து 3-4 கிலோமீட்டர் நடந்தே அடைவது நல்ல அனுபவம். விடிய விடிய கதகளி பார்த்துவிட்டு டீயும் பழம்பொரியும் சாப்பிட்டுவிட்டு தூக்கக் கலக்கத்தில் ஊருக்குத் திரும்புவது மற்றுமொரு சுவையான அனுபவம். சிலமுறை நள்ளிரவிலேயே 12-1 மணிக்கு கதகளி முடிந்துவிடும். திரும்ப பஸ் இருக்காது. கோயில் திண்ணைகளில் அதிகாலை வரை தூங்கிவிட்டு குளத்தில் குளித்துவிட்டுத் திரும்புவது இன்னும் நல்ல அனுபவம்.

ஒருமுறை தீபாவளிக்கு முந்தைய நாள் கோட்டயம் அருகே அய்மனம் என்ற ஊரில் கதகளி பார்க்க சென்றிருந்தோம். எப்போதுமே கிராமங்களில் நடக்கும் கதகளிகளில் பார்க்க ஆட்கள் இருக்கமாட்டார்கள். சும்மா தலையை காண்பித்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், இம்முறை தீபாவளி விடுமுறை என்பதால் பலர் வந்திருந்தனர். ”நளசரிதம் மூன்றாம் நாள்” கதகளியில் நளனை பிரிந்த தமயந்தி வேறொரு சுயம்வரத்திற்கு தயாராகிறாள் என்ற செய்தியை கேட்டவுடன் கையறுநிலையில் நளன் பாடும் ”மரிமான் கண்ணி மௌலி “ என்ற புகழ்பெற்ற உருக்கமான பகுதி வந்தவுடன் சில பார்வையாளர்கள் பாடகர்களுடன் சேர்ந்து மெல்லமாக பாட ஆரம்பித்துவிட்டனர். சிலர் அதற்கு தாள போட ஆரம்பித்தனர். சிலர் கொஞ்சம் கண்கலங்கக்கூட செய்தனர். ஒட்டுமொத்த திரளே நளனாக ஆகி அழுத அந்த நிகழ்வை என்னால்  மறக்கவே முடியாது.

கதகளியை பற்றி நீங்கள் எழுதியிருக்காவிட்டால், அஜிதனுடன் சேர்ந்து கதகளி பார்க்காமல் இருந்திருந்தால் எனக்கு நல்ல கதகளி அனுபவங்களும், கதகளி மீதான குறையாத ஈர்ப்பும் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்

மணவாளன்.

ஆட்டக்கதை [சிறுகதை] கேளி [சிறுகதை]

கலைக்கணம் நிகரற்ற மலர்த்தோட்டம் அழியா வண்ணங்கள் கர்ணா தயாளு… சென்னித்தல செல்லப்பன் நாயர் கலையில் மடிதல் வணங்குதல் செவ்வியல்கலையும் நவீனக்கலையும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:34

நியூசிலாந்தில் ஓர் உரை

வணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே,

என் பெயர் செல்வா. நான் Quora தமிழின் சமூக மேலாளராகப் பணி புரிகிறேன். தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறேன். நாங்கள் இங்கே புதிதாக நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றம் ஒன்றைத் துவங்கியுள்ளோம். தன்னார்வலர்களால் நடத்தப்படும் இந்த மன்றம் தமிழ் சார்ந்து இயங்க விரும்புபவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தமிழ் மொழி வாசிப்பு, பேச்சு, எழுத்து சார்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகும். இதன் மூலம் தமிழ்ப் புத்தகங்களை நியூசிலாந்து வாழ் தமிழர்களுக்கு வாசிக்கத் தருகிறோம். தற்போது கிறைஸ்ட்சர்ச் நகரில் செயல்பட்டு வரும் இந்த மன்றம் விரைவில் மற்ற நகரங்களிலும் செயலாற்றத் துவங்கும்.

இந்த மன்றத்தின் சார்பாக வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஒரு சிறிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நீங்கள் கலந்து கொண்டு உரையாற்ற ஒப்புக்கொண்டிருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இணைய வழி காணொளி மூலம் இந்த நிகழ்வை நடத்தவிருக்கிறோம். Zoom இணைப்பு வழிகாக உங்களது உரையை இங்குள்ள மக்கள் கண்டு மகிழ்வார்கள்.

நீங்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டிருப்பீர்கள். அங்கே மக்களுடன் உரையாடிய உங்களது பட்டறிவினை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். அந்நிய மண்னில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாய்மொழி பேச, எழுத நேர்கொள்ளும் இன்னல்களும் அதை எதிர்க்கொள்ள உதவும் உத்திகளையும் குறித்து நீங்கள் உரையாடிய பின்னர் ஒரு சிறிய வினா விடை அங்கத்தையும் நிகழ்ச்சியுடன் சேர்க்க நினைக்கிறோம்.

இந்திய நேரப்படி காலை 8 மணி துவங்கி காலை 9 மணி வரை உங்களுடைய உரை மற்றும் வினா விடை நிகழ்வை நடத்த உள்ளோம்.

இது குறித்து மேலும் உங்களுடன் கைபேசியில் அழைத்து உரையாடுகிறேன்.

நன்றி,

செல்வ கணபதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:34

வழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்


தே ர் இலையின் வரலாறு வாங்க

ராய் மாக்ஸம் எழுதிய தே [தேயிலையின் வரலாறு] சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் வெளியாகியிருக்கிறது. அதற்கு ராய் எழுதிய சிறிய வாழ்த்துக் குறிப்பு

ஜெ 

தேயிலையின் வரலாறு கூறும் எனது புத்தகத்தை சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிப்பெயர்த்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உலகளாவிய தேயிலை பயன்பாடு,  வளர்ப்பு மற்றும் தயாரிப்பு குறித்த வரலாற்றை இப்புத்தகம் பதிவு செய்கிறது. தமிழ்நாட்டில் ஒருபோதும் பெரிய அளவில் தேயிலைப் பயிரிடப்படவில்லை என்றாலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் இத்துணைக்கண்ட பகுதியிலிருந்த தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்துள்ளனர். உண்மையில் இவர்கள் இல்லையென்றால் சிலோனில் (ஸ்ரீ லங்கா) தேயிலைப் பயிரிடப்படுவது இருந்திருக்கும் வாய்ப்பு குறைவே.

பத்தொன்பதாம் நுற்றாண்டின் இரண்டாம் பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய் அதன் விளைவாக உருவாகிய பஞ்சங்கள் தமிழர்களை அபாயகரமான பயணங்களின் வழியே புதிதாக உருவாக்கப்பட்ட சிலோன் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லத் தூண்டின. ஊரில் பட்டினிகிடந்த தன் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப முடியும் எனும் எதிர்நோக்குடன் இவர்கள் சென்றனர். ஆனால் இவர்களில் பலரும் பயணத்தின்போது உணவின்றி தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் கடுமையான பாதைகளிலேயே செத்து மடிந்தனர். பிறர் தோட்டங்களைச் சென்றடைந்தனர், உடல் சோர்ந்தும், பட்டினியில் வாடியும் வந்து சேர்ந்த அவர்கள் அங்கே தங்களுக்குப் பழக்கமே இல்லாத மலைப்பகுதிகளின் குளிரில் வாடி மடிந்தனர்.தோட்டங்களில் வீட்டுவசதிகள் பொதுவாகப் படுமோசமாகவே இருந்தன. நெருக்கமும், மோசமான சுகாதார வசதிகளும் மாசுபட்ட குடிநீரும் சேர்ந்து பலரும் காலறாவில்  மரித்தனர்.

பல தசாப்தங்கள் கடந்தபின்னர்  இலைங்கை தோட்டங்களின் நிலைமை முன்னேறியுள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் பல குடும்பங்களின் மூதாதையர்கள் அத்தோட்டங்களுக்கருகேயும் தோட்டங்களுக்குச் செல்லும் வழியிலும் புதைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பல சவக்குழிகளிகளும் பெயரற்றவையே. இந்த வரலாறு இன்றையத் தமிழர்களுக்குப் வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாட பட்டினியில் வாடிய தன் குடும்பத்துக்காக தியாகங்கள் பிரிந்த முன்னோர்களைத் தெரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன்.

ராய் மாக்சம்.

ராய் மாக்ஸம் – மூன்று நூல்கள்

இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு வாங்க

உப்புவேலி வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:32

கேளி, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..

மேலே எழுதிய தலைப்பு, blood money என்பதன் நானறிந்த மொழிபெயர்ப்பு.. blood money என்பது இன்சூரன்ஸ் கம்பனியிடம் இருந்து பிடுங்கும் பணத்திற்கான பெயர்.. வக்கீல்கள் வட்டாரத்தில் அந்த பணத்திற்கு அதான் பெயர்..

எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் வக்கீல். அவன் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திறுந்தோம்.  அப்போது அங்கே ஒரு accident கேஸ் வந்தது. சிறிது நேரத்தில் சாதாரண உடையில் ஒரு இளைஞன் வந்தான். பார்க்க வெகு சாதாரணமான உடையில் இருந்தான். அவனை பார்த்ததும் அங்கு இருந்த  வக்கீல் நண்பர்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டு பேசி கொண்டிருந்தனர்..

ஒன்னும் தேராது, சாதாரண அடிதான் என்று கேலி பேசி கொண்டிருந்தனர். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.. சிறிது நேரத்தில் ஒரு போலீஸ்காரர் வந்தார்.. விசாரித்தார்.. சென்றார்..

அவன், போன பின் அங்கு இருந்த வக்கீல் நண்பரிடம் கேட்டேன். அவனும்  இளைஞன்.. 30 வயதுக்குள்ளானவன்..  அவன் சொன்ன கதை உங்கள் அறமென்ப சிறுகதை..

உங்கள் பக்கத்தில் தான் இருப்பான்.. ஆனால் அவன் வக்கீலின் ஆள் என்று தெரியாது. சாதாரணமாக விசாரித்து அறிவுரை கூறி, உங்களை வக்கீலிடம் அழைத்து செல்வான்.. உங்கள் நிலையை பார்த்த வக்கீல் உடனே உங்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லுவார்.. செலவிற்கு ஒரு லட்சம் பணமும் கொடுப்பார்.. கருணை வழிய நீங்கள் அவரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு கிளம்புவீர்கள்.. அந்த மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை..

இன்சூரன்ஸ் பணம் வந்ததும் உங்களுக்கு அழைப்பு வரும்.. மேசையில் பணமும், வக்கீல் ,உங்களை வக்கீலிடம் அழைத்து வந்த அந்த சாதாரண நபரும்..  10 லட்சம் பணம்..

உங்களுக்கு நான் கொடுத்த 1 லட்சம், இதை நான் எடுத்து கொண்டேன். அடுத்து கோர்ட் செலவு, ஜட்ஜ்கு பணம், எதிர் கட்சி லாயற்கு என்று அந்த வகையில் 1 லட்சம். அடுத்து போலீஸ் ஸ்டேஷன் பத்தி உங்களுக்கு தெரியும், எல்லாருக்கும் காசு போகும், அதுக்கு ஒரு லட்சம். அப்புறம் ஹாஸ்பிடல் செலவு, பில்  amount இந்த வகையில் 50,000.. இது போக அலைந்தது வந்தது னு 50,000..

இப்போ என்னோட பீஸ் .. பொதுவா இன்சூரன்ஸ்ல பாதிக்கு பாதிதான்.. ஆனா நீங்க பாவம்.. அதனால் நீங்க எவ்ளோ கொடுகிறீங்களோ பாத்து செய்ங்க.. லட்சத்தை பார்த்த அந்த ஏழைகள் இவ்ளோ கஷ்ட பட்டிருக்காரே நமக்காகன்னு 3 லட்சம் கொடுப்பார்கள்.. பாதிக்கு பாதி.. இப்போ வக்கீலுக்கு, 7 லட்சம்..

அதில், போலீஸ், அந்த சாதாரணமான தூதுவன், டாக்டர், தனியார் மருத்துவ மனை, கோர்ட் ஊழியர் என்று எல்லோருக்கும் பங்குண்டு.. அது அந்த பணத்தை பொறுத்தது..

இதில் நம்ப முடியாதது எது என்றால், விபத்து கேஸ் வந்ததும்  எப்படி வக்கீலின் ஆள் வருகிறார்.. அவருக்கு செய்தி சொல்வது அங்கு இருக்கும் கடை நிலை ஊழியர்கள்..  வாட்ச்மேன், wardboy,  போன்றோர்கள்.. அவர்கள் எதோ ஒரு வக்கீலுக்கு விஸ்வாசமாய் இருப்பார்கள்.  சில பேர் ஒரே நேரத்தில் பலருக்கும் தகவல் கொடுத்து பணம் பெறுவார்கள்..  முந்துவோர்க்கு முன்னுரிமை..

இதை அந்த நண்பர் சொல்லி முடிக்கும் போது அவர்கள் உலகத்தில் எத்தனை அரசியல் என்று ஆச்சரியமாய் இருந்தது.. அவர் சொன்னதை ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்.. அதன் தலைப்பு blood money..  ’குருதிப்பணம்’

உங்கள் தளத்தில் அந்த சிறுகதை படித்ததும் எனக்கு அதிர்ச்சியாய், ஆச்சரியமாகவும் இருந்தது.. இதை இனி எப்படி படமாக்குவது என்று.. எடுத்தாலும் அது அறமென்ப சிறுகதையை மையமாய் வைத்ததாய் ஆகிவிடும்.. பார்க்கலாம்..

உங்கள் கதையில், ஒன்றுதான் உறுத்தியது..  அந்த அடிபட்டவர்கள் காப்பாற்றியவனை காட்டிகுடுப்பது.. அதை மனம் ஏற்கவில்லை.. உண்மையில் மனிதர்களுக்கு மனம் வருமா தெரியாது.. வராது என்றே நினைக்கிறேன்..

இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மூத்தவர்கள் என்பது உண்மை.. எனக்கு உண்மைகளை சொன்ன அந்த வக்கீல் 30 வயதுதான்.. அந்த பணமெல்லாம் நமக்கு வேணாங்க.. அது பாவம்.. அப்படி சம்பாதித்தவர்களின் நிலைமை படு மோசமாக இருக்கிறது என்றார்.. ஒருவருக்கு பணம் இருந்தும், திருமணம் ஆகாமல் தனி மரம்..  இன்னொருவருக்கு தோல் வியாதி, என்று அடுக்கி கொண்டே போனார்..

அறத்திற்கு ஆதரவாக அவர்கள் பேசியத்திற்கு சந்தோஷ படுவதா.. அறத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு கோபப்படுவதா தெரியவில்லை..

பாலமுருகன்

***

அன்புள்ள ஜெ

அறமென்ப ஓர் அப்பட்டமான யதார்த்தத்தின் கதை. விபத்து வழக்குகளில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு பெரும் கொள்ளை. 50 சதவீதப்பணம் பாதிக்கப்பட்டவர் கைக்கு வந்தால் ஆச்சரியம். இந்த வகையான குற்றச்சாட்டுக்கள் பல எழுந்தபின் இப்போதெல்லாம் நீதிமன்றம் பணத்தை பாதிக்கப்பட்டவர் அக்கவுண்டுக்கு நேரடியாக அனுப்பிவிடுகிறது. ஆனால் அதற்கும் இவர்கள் வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். எற்கனவே நம்மிடம் காலிசெக் வாங்கி வைத்துக்கொண்டு நாம் பணம் கொடுத்தால்தான் தருவார்கள். இவர்களிடம் அவசரத்தில் சிக்கிக்கொள்வோம். பிறகு வந்தது லாபம் என ஒதுங்கவேண்டியதுதான். இவர்கள் மிகப்பெரிய மாஃபியா. வட்டித்தொழில், ரியலெஸ்டேட் தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் பேசிப்பாருங்கள். அத்தனை சோட்டா வக்கீல்களும் சேர்ந்து அப்படியெல்லாம் இல்லை, வக்கீல்களெல்லாம் மானுடசேவை செய்யும் மாமனிதர்கள் என்று சொல்வார்கள். இதுதான் உண்மை

ஜெகதீசன் ஆர்.

***

கேளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நீங்கள் எழுதிய கதைகளில் இயல்பான சின்னக்கதை என்பது கேளிதான். ஆனால் அது என்னமோ செய்துவிட்டது. ஏனென்றால் அது வாழ்க்கையனுபவம். நான் இழந்துவிட்ட ஒரு கிராமம் உண்டு. கோயிலில் பத்துநாள் கொடைவிழா நடக்கும். கொடைமுடிந்தபின் சுவர்களில் எல்லாம் மேளம் ஒலிக்கும் என்று தோன்றும். அந்த அனுபவத்தை அத்தனை நுட்பமாக எழுதியிருந்தீர்கள். இலக்கியமென்றால் என்ன என்று எனக்குத் தோன்றியது அப்போதுதான். பருவெட்டான விஷயங்களை சொல்வது அல்ல. இந்த மாதிரி நமக்கே உரியது என நாம் நினைத்திருப்பதை இன்னொருவரான எழுத்தாளர் எழுதி வாசிக்கநேர்வதுதான் உண்மையான இலக்கிய அனுபவம்

மாரிச்செல்வம்

***

அன்பு ஜெ,

அமைதி ஒருவகையான காலமின்மையை உணரச்செய்தது. ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகிச்செல்கிறது, ஓசையில்லை என்றால் அது எங்கோ தரைதட்டி நின்றுவிட்டது.

இந்த வரிகளை அசைபோட்டிருந்தேன். தன் முதல் தடத்தை இந்த பூமியில் பதிக்கும் குழந்தை ஓசையுடன் தான் பிறக்கிறது. ஓசையடங்கி கருக்குழந்தையாக இருக்கும் போது அது காலத்தை உணர்வதில்லை. ஓசையே காலத்தின் முதல் பிரகடனம் என்று கண்டடைந்தேன். அப்படியானால் இடம் அமைந்து சொல்லடங்கிய பாதையில் செல்வோர் உணர்வது காலமின்மை அல்லது காலநீட்டிப்பு என்று கண்டேன்.

ஆனால் காலத்தில் இயல்பாய் வாழ்பவனுக்கு அங்ஙனம் அமைய முடியாதே. அவன் ஓசைகளோடு, சொற்களோடு இருந்தாக வேண்டும். காலத்தில் ஒழுகிச் செல்ல வேண்டும். அப்படி ஒழுகிச் செல்லுந்தோறும் காலத்தை நீட்டிக்க விரும்புவோர் இசையின் நுண்அதிர்வுகளோடு பயணிக்க வேண்டும். கதையின் நாயகனும் கூட செண்டை ஓசையின் வழி, கதகளி எனும் கலையின் வழி அவனின் காலத்தில் ஒழுகி அதன் ஒவ்வொரு அதிர்விலும் காலத்தை நீட்டிக் கொண்டு முழுமையாக வாழ்பவனாகப் பார்த்தேன். அதற்கு ஏதுவாக அவனின் நுண்ணிய வாழ்வுச் சித்திரத்தை அளித்திருந்தீர்கள்.

ஆற்றைப் பற்றி அவன் சொல்லும் போது “ஒழுகும் ஆறு” என்று சொன்னது கவித்துவமாக இருந்தது. “ஒழுகும் ஆற்றை பார்த்துக் கொண்டிருப்பது இதமாக இருந்தது. ஊர் அசைவற்று நிற்க ஆறுமட்டும் ஒழுகிக்கொண்டிருக்கிறது.” இந்த வரிகளே இதமாக இருந்தது. இப்படி ஒரு தருணத்தில் உந்தப்பட்டு தான் புறநானூற்றின் கவிஞன் ‘நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படுஉம்’ என்ற தருணத்தை தரிசித்திருக்க முடியும்.

இறுதியில் அவன்  உடல் அதிர்வுக்குக் காரணமான அந்தப் பாடலை இணையத்தில் தேடி அடைந்தேன். அந்த அதிர்வின் துளிகளை சுகுமாரி அவர்கள் முக பாவத்தில் ஏந்தியிருந்தார். அவன் காலத்தை நிறுத்தி அல்லது நீட்டி ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை மீட்டியிருந்ததைக் கண்டேன். கவித்துமான தருணம். நன்றி ஜெ.

பிரேமையுடன்

இரம்யா.

***

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:32

April 5, 2021

இளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா?

அன்புள்ள ஜெ,

சில வாரங்களுக்கு முன் மந்த்ரா என்னும் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தை மொழிப்பெயர்த்து உங்களிடம் மதிப்பீடு  ஒன்று கேட்டிருந்தேன். அதன் பின் காளிப்ரசாத் அண்ணா அவர்களின் நட்பு கிடைத்தது. அவரிடம் நான் மொழிப்பெயர்த்த அத்தியாயத்தை காட்டினேன். அதை பற்றி கூறுகையில் அதன் மொழிநடை வெண்முரசின் சாயலை கொண்டுள்ளதையும் பொது வாசகர்களின் வாசிப்பு சரளத்திற்கு சில சொற்கள் தடை ஏற்படுத்தும் படி உள்ளது என்று கூறினார்.

இதை தாண்டி அவர் கூறியது உன்னுடைய மொழிநடை வெண்முரசின் சாயலை கொண்டுள்ளது. இங்கிருந்து கவிதைக்கு செல்லலாம், உனக்கென ஒரு மொழிநடையை உருவாக்கி படைக்கலாம். ஆனால் இது போன்ற இயந்திரத்தனமான மொழிப்பெயர்ப்பை செய்வது உன்னுடைய மொழித்திறனையும் படைப்பாற்றலையும் மழுங்கடிக்க செய்யும் என்றார். வேண்டுமென்றால் ஜெ வின் எண்ணை தருகிறேன், அவர் தீர்க்கமாக தெளிவாக்கி விடுவார் என்றார். அண்ணாவிடமிருந்து உங்கள் எண்ணை பெற்று கொண்டேன். ஆனால் உங்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு என் கேள்விக்கு தகுதியுள்ளதா என்ற ஐயமும் என் தயக்கத்தாலும் உங்களை தொடர்பு கொள்ளவில்லை.

என் கேள்வியை இப்படி தொகுத்து கொள்கிறேன். ஒரு எழுத்தாளர் அல்லது அவ்வாறு ஆக சாத்தியுமுள்ள தொடக்கநிலையில் இருக்கும் ஒருவர் மொழிப்பெயர்ப்பு செய்வதாக இருந்தால் எவற்றை செய்யலாம்? எவற்றை செய்யக்கூடாது?

இந்த கடிதம் தகுதியுள்ளது எனில் பதில் அளியுங்கள் ஜெ.

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்

ஓரு தொடக்கநிலை எழுத்தாளர் மொழியாக்கம் செய்யலாமா? அதுதான் உங்கள் கேள்வி. செய்யலாம், அதில் சில எச்சரிக்கைகள் தேவை என்பதே என் பதில்.

எழுத வருபவர் எதைவேண்டுமென்றாலும் எழுதலாம். தொடர்ந்து சிலகாலம் மொழியிலேயே உழன்றுகொண்டிருக்கவேண்டும். அதற்கு வாசிப்பும் எழுத்தும் இரண்டு வழிகள்.

வாசிப்புகூட பலவகையானதாக இருக்கவேண்டும். வரலாற்று நூல்கள், கோட்பாட்டுநூல்கள், தத்துவநூல்கள், இலக்கியவிமர்சனங்கள் ஆகியவற்றையும் வாசிக்கவேண்டும். புனைவற்ற எழுத்துக்கள் புனைவெழுத்தாளனின் நடைக்கு ஓர் ஆழத்தை அளிக்கின்றன. அவை அவனுடைய கருத்துசார்ந்த வெளிப்பாட்டை வலுவாக்குகின்றன.

கூடவே சமகாலச் செய்திநடை ஊடகநடை ஆகியவற்றையும் அவன் கவனிக்கவேண்டும். ஆனால் சமகால ஊடகநடையில் மிகுதியாக ஈடுபடுபவர்கள் ஆழ்ந்த நடை இல்லாமல் அக்கப்போர் நடைக்கு பழகிவிடும் அபாயம் உண்டு.

புனைவு எழுத விரும்புபவர்கள் புனைவைத்தான் நிறைய வாசிக்கவேண்டும். ஆனால் வணிக எழுத்தை நிறைய வாசித்தால் அது ஒட்டுமொத்தமாக உருவாக்கியிருக்கும் நடை, அதன் கற்பனைமுறை ஆகியவற்றுக்கு மனம் பழகிவிடநேரிடும். வணிக எழுத்தையும் வாசிக்கவேண்டும். ஆனால் சூழலின் சிறந்த புனைவுகளிலேயே உள்ளம் தோய்ந்திருக்கவேண்டும்.

அதுவே எழுத்துக்கும். எல்லாவகை எழுத்திலும் ஈடுபடலாம். குறிப்புகள் எழுதலாம். மொழியாக்கம் செய்யலாம். எல்லாமே மொழிப்பயிற்சிதான். ஆனால் புனைவல்லாத கடினமான தத்துவ – கோட்பாட்டு நூல்களை மிகுதியாக மொழியாக்கம் செய்தால் காலப்போக்கில் நடை கெட்டிதட்டிப்போய்விடும்.

புனைவுநூல்களை மொழியாக்கம் செய்யலாம். ஆனால் அதுகூட எல்லைக்குட்பட்டே செய்யவேண்டும். இல்லையேல் மொழியாக்க நடையே தன் புனைவுக்கும் வரும். அப்படி வீணாகிப்போன பலர் உண்டு.

மொழியாக்கம் உட்பட அனைத்தையுமே தன் புனைவுமுயற்சிக்கு துணையாக அமையும்படி, ஓர் எல்லைக்குள் நிறுத்திக்கொள்வதே உகந்தது. இப்படிச் சொல்கிறேன், எப்போதுமே தன் சொந்தப்புனைவு ஒன்றை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். ஊடாக அவ்வப்போது மொழியாக்கங்கள் செய்யலாம். அதில் புனைவு மிகுதியாகவும் மற்றவை குறைவாகவும் இருத்தல் நன்று.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2021 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.