Jeyamohan's Blog, page 1011
April 1, 2021
புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…
அன்புள்ள ஜெயமோகன் ,
கோவை புதிய வாசகர் சந்திப்பு முடிந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. இப்போது நினைத்தாலும் அந்த இரண்டு நாட்களில் நீங்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் அவை என் சொற்களாகவே மாறிவிட்டதை உணர்கிறேன். அதுதான் சரியான முறை என்றும் கூறிவிட்டீர்கள். இந்த கடிதத்தை ஒரு சமநிலையோடு எழுத கடந்த இரண்டு நாட்களாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது படித்துப் பார்த்தால் நிறைய சமன்குலைவுகள்தான் தெரிகிறது. ஆனால் அவற்றை முழுவதுமாக நீக்கினால் இந்த கடிதம் அர்த்தமில்லாமல் போய்விடும். சுந்தர ராமசாமிக்கு நீங்கள் 25 பக்க கடிதங்கள் அனுப்பியதாக சந்திப்பில் சொன்னீர்கள், எனவே அந்த அசட்டு நம்பிக்கையையும் சேர்த்து இதில் இதற்க்குமேல் திருத்தங்கள் செய்யாமல் அனுப்புகிறேன்.
உங்களை நேரில் சந்தித்துவிடலாம் என்று நினைத்தபோதெல்லாம் எனக்குள் எழுந்த மனத்தடைகளில் மிக முக்கியமான ஒன்று உங்கள் charisma பற்றிய பயம். ஆழ்ந்த சிந்தனையும் அதை அதன் தீவிரத்தன்மை குறையாமல் கேட்பவர்களிடம் கடத்தும் ஆளுமையும் பொருந்தியவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் அந்த ஆளுமையால் கட்டமைக்கும் அவர்களின் charisma, அதன் அருகில் செல்பவர்களுக்கும் அதனால் அரவணைக்கப்படுபவர்களுக்கும் ஒரு விதமான பெரும் போதையை தரக்கூடியது. அந்த போதை அவர்களின் ஈகோவை திருப்த்திப்படுத்தும் போதை. அவர்கள் சராசரிகள் இல்லை என்று அவர்களை அங்கீகரிக்கும் போதை.
அப்படியான ஆளுமைகளை நான் எப்போதும் அஞ்சுகிறேன். அவர்கள் நம் சுயமாக சிந்திக்கும் திறனை அழித்துவிடுகிறார்கள். அவர்களை சுற்றி உருவாகும் cult மனநிலை அவர்களை நெருங்கிச்செல்லும் எவரையும் ஆட்கொண்டுவிடுகிறது. பிறகு, அது அங்கு இருப்பவர்களின் சுயத்தை அழித்து, அதற்குப் பதிலாக அந்த கட்டமைக்கப்பட்ட cult மனநிலையை அவர்களுக்குள் நிறைத்துவிடுகிறது. அதன் பிறகு அங்கு நம்மால் பிழைகளை காண முடியாது, மாற்று சிந்தனைகளை ஏற்க முடியாது, சமநிலை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது. ஒரு விதமான fanaticismதான் அங்கு பெரும்பாலும் மிஞ்சும். இந்த மனநிலையை தொடர்ந்து அரசியலிலும், ஆன்மீகத்திலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படியான charisma மீதான பயம்தான் எனக்கு உங்கள்மீதும் இருந்தது. உங்களையும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தையும் தூரத்தில் இருந்து பார்க்கும் எவருக்கும் ஒரு விதமான ஓஷோ தன்மை தெரிவது இயல்புதான். அப்படியான மனநிலையில்தான் நானும் இருந்தேன். அந்த மனநிலையை உடைப்பதற்கான இரண்டு முக்கிய காரணிகள் இந்த பெருநோய் காலத்தில்தான் கிடைத்தன. முதல் காரணி தன்னறம் நூல்வெளி வெளியிட்ட உங்களின் தன்மீட்சி. தன்மீட்சியின் 300 இலவச பிரதிகளை பெற்றுக்கொண்டவர்களில் நானும் ஒருவன். அதன் வழியேதான் என் முதல் திறப்பு ஏற்பட்டது. சுயசிந்தனை என்றும், எனக்கு மட்டுமேயான பிரத்தியேகமான அகச்சிக்கல்கள் என்றும் நான் கருதிக்கொண்டிருந்த பலவும் நம் காலத்தின் பொதுச் சிக்கல்கள்தான் என்பதும், அவற்றுக்கான பதில்களை அத்தனை தெளிவாக கண்டடைய முடியும் என்பதும் எனக்கான முதல் திறப்பாக அமைந்தது.
இந்த சிக்கல்களும் தேடல்களும் நம் காலத்தின் பொதுச் சிக்கல்கள்தான் என்ற புரிதல் கொஞ்சம் கொடுமையானது. அது நம் தன்னகங்காரத்தில் விழும் அடி. இத்தனை வருடங்களாக திரண்டு வந்து உருக்கொண்ட அகங்காரத்தில் விழும் விரிசல். ஆனால் அந்த விரிசல்தான் திறப்பு. ஒரு ஆசிரியர் அதைத்தான் செய்வார். அந்த புத்தகத்தின் வழியே கிடைத்த முதல் திறப்பு எனக்கு உங்களையும் உங்களிடம் தினமும் உரையாடிக்கொண்டே இருக்கும் உங்கள் வாசகர்களையும் சற்று நெருங்கிப் புரிந்துகொள்ள எனக்குள் இருந்த மனத்தடையை நீக்கியது.
இரண்டாவது திறப்பாக அமைந்தது சுக்கிரி இலக்கிய குழுமம். சுக்கிரிதான் எனக்கு உங்கள் வாசகர் வட்டத்தோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. ஒரு ஓஷோ cult என்று நான் கற்பனை செய்து பயந்திருந்த ஒரு வாசகர் வட்டம் என் முன்தீர்மானங்களை புரட்டிப்போட்டது. பல வருடங்களாக உங்களை தொடர்ந்து வாசித்தும் எனக்கு நிகழாத வாசிப்பு அனுபவங்களை நிகழ்த்திக் காட்டியது. விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைப் போன்ற ஒரு வாசகர் வட்டம் எத்தனை அவசியமானது என்பதையும் அதன் வழியே ஒரு தனி வாசகன் அடையக்கூடியவைகளையும் எனக்கு நிகழ்த்திக் காட்டியது. இந்த இரண்டு திறப்புகளின் வழியேதான் நான் இந்த வாசகர் சந்திப்பிற்கு வரத்துணிந்தேன்.
கோவை வாசகர் சந்திப்பு நிகழ்வு இந்த திறப்புகளின் அடுத்த படிநிலையாகவே அமைந்தது. அங்கு நிகழ்ந்த ஒவ்வொரு உரையாடலும் ஏதோ ஒரு விதத்தில் என் முன்தீர்மானங்களை நிராகரித்தது. விவாத நெறிமுறைகளில் தொடங்கி கடைசி மதியத்தில் நிகழ்ந்த கவிதைக்கான மதிப்பீடுகள்வரை என் முன்தீர்மானங்களுக்கு எதிராகவே இருந்தது. இப்போது சிந்தித்துப்பார்த்தால் அந்த விவாத நெறிமுறைகளில் வெளிப்படும் கூரிய தர்க்கமும் அவற்றின் விதிமுறைகளும் மிரட்சியை தருகின்றன. ஒவ்வொரு முறை அவற்றை சுயநினைவின்றி மீறியபிறகும் ஒரு தன்னுணர்வு வருகிறது. இனி கொஞ்சம் அந்த தன்னுணர்வோடே விவாதங்களைத் தொடங்க வேண்டும் என்ற எனக்கு நானே கூறிக்கொள்கிறேன். இந்த முறைகளை என்னால் முழுவதுமாக செயலில் கொண்டுவரமுடிந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் பிறந்திருக்கிறது. ஆனால் நீங்கள் கூறியதுபோலவே இது கடும் பயிற்சியால் மட்டுமே சாத்தியப்படுவது. ஒரு சந்திப்பில் அது முழுவதுமாக நிகழ்ந்துவிடாது என்று நான் அறிவேன். இது ஒரு பயணத்தின் தொடக்கம்தான்.
இந்த கடிதத்தை எழுத்துகையிலும்கூட இதில் இருக்கும் நெறிமீறல்களை கவனிக்கிறேன். நல்லதொரு தொடக்கம்தான். அதேபோல் கவிதைகளை பற்றிய உங்கள் மதிப்பீட்டை கேட்டபின் நான் மனுஷ்யபுத்திரனின் சிறந்த கவிதைகள் என்று நினைத்தவற்றிலெல்லாம் எடுப்பையும் துடுப்பையும் தேடிக்கொண்டிருக்கிறேன். அதுவே கொஞ்சம் துயரமானதுதான். சிறுகதைக்கான உங்கள் மதிப்பீடுகள், கட்டுரைக்கான மதிப்பீடுகள், எழுத்துக்கான பயிற்சி, தத்துவம், இலக்கிய மதிப்பீடுகள் என்று அந்த உரையாடலின் பெரும்பகுதியை நான் இன்னும் தொகுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல் அதற்கு சிறந்த வழி நான் ஒரு உரை நிகழ்த்துவதாகவோ அல்லது ஒரு குருவுடன் விவாதத்தில் இருப்பதாகவோ கற்பனை செய்வதுதான் என்று உணர்கிறேன். பெரும்பாலும் நான் என் கல்லூரி ஆசிரியர்களைக்கொண்டு இரண்டாவது வடிவத்தை உபயோகிப்பேன். இப்போது இந்த விவாதங்களை உங்களோடு நிகழ்த்துவதாக கற்பனை செய்துகொள்கிறேன். ஆனால் உங்கள் எதிர் விவாதங்களை ஊகிப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. போகப்போக பழகிவிடும் என்றுதான் நினைக்கிறேன். அவ்வப்போது வரும் சந்தேகங்களை அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுகிறேன்.
இந்த சந்திப்பிற்கு முன் நான் உங்களுக்கு மொத்தமாக மூன்று கடிதங்கள் எழுதி இருக்கிறேன். உங்களை நான் வாசிக்கத் தொடங்கிய 5 வருடங்களில் மொத்தமாக மூன்று கடிதங்கள் எழுத காரணம் நான் முதலில் கூறியcult பயமும், ஆசிரியர் என்ற படிமத்தின் மீதான அவநம்பிக்கையும்தான். இந்த காலத்தின் எந்த ஒரு இளைஞனையும்போல ஒரு ஆசிரியருக்கான தேடல் என்னை எப்போதும் ஆக்கிரமித்தே இருக்கிறது.
என் சந்தேகங்களுக்கும் தேடல்களுக்கும் ஒரு சொல்லில் முழுமையான பதிலளிக்கக்கூடிய ஜென் ஞானிகளைத்தான் நான் முதலில் தேடினேன். ஆனாள் பள்ளியிலும் கல்லூரியிலும் ஜென் ஞானிகள் மட்டுமின்றி சாதாரண உலகியல் ஆசிரியர்களுக்கே பஞ்சம் நிலவுகிறது என்று உணர்ந்தபோது பெரும் ஏமாற்றம்தான் வந்தது. அதனால்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி என்னை கவர்ந்தார். ஆசிரியரே இல்லாமல் என்னால் என் தேடல்களுக்கான விடைகளை அடைந்துவிட முடியும் என்பது பொய்யாக இருந்தாலும் கவர்ச்சிகரமானது. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் ஜே.கே.வும் என்னை கைவிட்டார். என்னால் என் கடந்தகாலத்தில் இருந்தும் எதிர்காலத்தில் இருந்தும் என்னை முழுவதுமாக விடுவித்துக்கொள்ள இயலவில்லை.ஆனால் அந்த ஆசிரியருக்கான தேடல் மட்டும் என்னுள் இருந்துகொண்டேதான் இருந்தது. அப்படியான ஆசிரியர்களுக்கான தேடலின் ஒரு பரிமாணம்தான் என் இலக்கிய வாசிப்போ என்றுகூட இப்போது தோன்றுகிறது.
ஆனால் இலக்கியம் தரக்கூடிய நிகர்வாழ்க்கைகளை தாண்டியும் ஒரு ஆசிரியர் எப்போதும் தேவைப்படுகிறார். அந்த இலக்கியத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அதைக்கொண்டு நம்மை எப்படி கட்டமைக்கவேண்டும் என்றும் நமக்கு கற்றுத்தர வேண்டியிருக்கிறது. இங்கிருந்து அடுத்து எங்கே செல்லவேண்டும் என்ற வழிகாட்டி தேவைப்படுகிறார். இலக்கிய உலகில் வழிதவறிவிட்டால் சுற்றிச்சுற்றி சுஜாதாவிலோ பாலகுமாரனிலோ நின்றுவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அகத்தேடல்களில் வழி தவறிவிட்டால் எலும்புகூட மிஞ்சாத போலி ஆன்மீக/அரசியல்/existentialism பாதாளங்களில்தான் சென்று சேர்கிறார்கள். எனவே என்னால் எதையும் முழுவதுமாக நம்ப முடியவில்லை.
நான் முதலில் சொன்னதுபோல் எனக்கிருந்த முன்தீர்மானங்களைக்கொண்டே நான் உங்களையும், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தையும் அணுகினேன். ஆனால் இந்த வாசகர் சந்திப்பு எனக்கு ஒரு பெரும் விடுதலையை அளித்தது. இதுவரை நான் அணுகிய ஆசிரியர்கள் அனைவருமே என்னை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள், என்னை எந்த விதத்திலும் சீண்டாமல் எனக்குள் இருந்த சிந்தனைகளையே பெருக்கினார்கள். அல்லது கண்மூடித்தனமான விசுவாசத்தை எதிர்பார்த்தார்கள். அவர்களிடம் உரையாடல்களுக்கான எந்த வாசல்களும் இல்லை. ஆனால் இந்த வாசகர் சந்திப்பில் உங்கள் உரையாடல்கள் பெரும்பாலும் என்னை சீண்டின. அவை என் முன்தீர்மானங்களுக்கு எதிரானவை. ஆனால் அவை கண்மூடித்தனமான விசுவாசத்தால் ஏற்கப்பட வேண்டியவையல்ல. தர்க்கத்தாலும், நுண்ணுணர்வாலும் நிறுவப்பட்டவை. அதன் வாதங்களுக்கான சரியான எதிர்வாதங்களை இன்றுவரை யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவற்றை நான் முழுவதுமாக எதிர்க்க முடிந்தாலும் அந்த வாதங்களின் தரப்பை யாராலும் மறுக்க முடியாது. அந்த வாதங்களின் வழியேதான் நான் உங்களை காண்கிறேன்.
உங்கள் எழுத்துக்களின் வழியே கட்டமைக்கப்பட்ட உங்கள் ஆளுமையான நீங்களும், கோவையில் நான் சந்தித்த நீங்களும் ஒருவராகவே இருப்பதுதான் எனக்கு அந்த விடுதலையை அளித்தது. உங்களிடம் நான் உண்மையாகவே உரையாட முடியும் என்கிற உணர்வும், என் இலக்கிய/தத்துவ தேடல்களுக்கான விடையை எந்த விதமான போலித்தனங்களும் இல்லாமல் உங்களிடம் இருந்து பெறமுடியும் என்ற உணர்வும் தரும் விடுதலையை அலாதியானதாக உணர்ந்துகொண்டுதான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த ஒரு சந்திப்பில் நான் உங்களிடம் சரணடைந்துவிட்டேன் என்றோ என் கேள்விகளற்ற விசுவாசத்தை உங்களுக்கு அளித்துவிட்டேன் என்றோ நான் எந்த மிகையுணர்ச்சிகளையும் கடத்த முயலக்கூட விரும்பவில்லை. அது பயனளிக்காது என்றும் தெரியும். இந்த வரிகளை எழுதும்போதும் எனக்குள் இருக்கும் cynic கொஞ்சம் விழித்திருக்கத்தான் செய்கிறான். ஆனால் இனி நான் உங்களுக்கு கடிதங்கள் எழுத முடியும். உங்களிடம் சரியோ தவறோ தொடர்ந்து உரையாட முடியும். அதன் வழியே என் அகங்காரத்தை மேலும் உடைத்து என் ஆளுமையை கட்டி எழுப்ப முடியும். அதற்காக வாசிக்கவும் பயிற்சி எடுக்கவும் முடியும்.
இதற்க்கெல்லாம் மேலாக எனக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்ற இந்த கிளர்ச்சியூட்டும் போதையை அனுபவிக்க முடியும். சுந்தர ராமசாமியை நீங்கள் சந்தித்ததை பற்றியும் அவருடனான உங்கள் உரையாடல்களைப் பற்றியும் நீங்கள் பல முறை எழுதியும் கூறியும் இருக்கிறீர்கள். நான் நீங்களா என்று எனக்கு தெரியாது. நீங்களாக மாறமுடியும் என்ற அசட்டு நம்பிக்கை மட்டும் என் அகங்காரத்தில் இருக்கிறது. அது இல்லை என்றால் என் உரையாடல்களுக்கு அர்த்தமில்லை. அந்த அகங்காரமும் ஆசையும் இல்லாத என்னிடம் உரையாடுவது உங்கள் நேரத்தையும் வீணடிக்கும் வேலைதான். ஆனால் எனக்கு நீங்கள் சுந்தர ராமசாமிதான். எனக்கான குரு நித்ய சைதன்ய யதியின் தேவை வந்தால், அதுவும் நீங்களாகவே இருப்பீர்கள் என்று பிரயாசைப்படுகிறேன்.
இலக்கியத்தில் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அவன் தன்னை இணைத்துக்கொள்ள ஒரு இடம் தேவைப்படுகிறது. அவன் வாசிப்பு பாதையை முடிவு செய்யவும், அவனுக்கான இலக்கிய மதிப்பீடுகளையும், அழகியல் மதிப்பீடுகளையும் தேர்வு செய்யவும் ஒரு குரு மரபு தேவைப்படுகிறது. பெரும்பாலான செவ்வியல் கலைகளைப்போல இலக்கியத்திலும் இந்த குரு மரபுதான் ஒரு வாசகனை என்னவாக மாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கிறது. நான் இத்தனைக் காலமாகவும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வழியே வந்தபோதும் நான் அதன் பாகமாக என்னை உணர்ந்ததில்லை. எந்த நிமிடத்திலும் த.மு.எ.க.ச.விற்கு சென்று சேர்ந்துவிட முடியும் என்றே நான் நம்பினேன். ஆனால் இந்த சந்திப்பின் வழியே நான் இங்கு நிறுவப்பட்டுவிட்டேன்.என் தொடக்கம் இந்த வழியே அமைந்துவிட்டது. இந்த தொடக்கம் எங்கு செல்லும் என்றோ, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் ஒருவன் என்று கூறிக்கொள்ளும் தகுதியை நான் பெறுவேனா என்றோ எனக்கு தெரியாது. ஆனால் என் தொடக்கம் இங்கு நிறுவப்பட்டுவிட்டது.
இங்கிருந்து தமிழின் முக்கிய படைப்புகளையும், உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளையும் நான் வாசித்து முடிக்க எனக்கு குறைந்தது 3 வருடங்கள் ஆகும். ஆனால் நான் வாசிக்கலாம். ஏனென்றால் இப்போது அவற்றை தொகுக்க என்னிடம் ஒரு மரபு உள்ளது. அந்த மரபை முழுவதுமாக கற்று அதைக்கொண்டு இலக்கியப்படைப்புகளை மதிப்பிடவும் தொகுக்கவும் எனக்கு ஒரு திறப்பு கிடைத்திருக்கிறது. இந்த தொடக்கம் சென்றடைய வேண்டிய தூரங்களை அடைய என்னை உந்தித் தள்ளும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
அன்புள்ள விக்னேஷ்
இந்த கடிதத்தில் இரண்டு விஷயங்களை கவனப்படுத்த விரும்புகிறேன். ஒன்று, உங்களை ஆழமாக பாதிப்பவர்களை பாதிக்கவிடாமல் தடுத்து நீங்கள் பேணிக்கொள்வது எதை?
உங்கள் ஆணவத்தை. அதை உங்கள் தனித்தன்மை என எண்ணிக்கொள்கிறீர்கள். அந்த தனித்தன்மை என்ன? அது எப்படி வந்தது? அது உங்களிடம் பிறப்புச்சூழலில் இருந்து, பொதுக்கல்வியில் இருந்து உருவான எளிமையான ஒரு தன்னடையாளமும் அடிப்படைப் பண்பாட்டுப் பயிற்சியும் மட்டும்தானே? அதை உடையாமல் பேணிக்கொண்டு நீங்கள் செல்லவிருக்கும் தொலைவுதான் என்ன?
இந்த உலகிலுள்ள எந்த அறிவார்ந்த தரப்பும் உங்களை பாதிக்கவில்லை என்றால் நீங்கள் எதைக் கற்கமுடியும்? எப்படி உருமாற முடியும்? அத்தனை சிந்தனையாளர்களும் பிறரை- சூழலை பாதிக்கும்பொருட்டுத்தான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். அவர்கள் உங்களிடம் பேசமுடியாமல் நீங்கள் உங்களை மூடிக்கொண்டால் இழப்பு உங்களுக்கே. அவ்வாறு அத்தனை பேரும் அவரவர் உலகை மூடிக்கொண்டால் அதன்பின் இங்கே சிந்தனை, இலக்கியம் என்பதெல்லாம் எப்படி நிகழமுடியும்?
அனைவரும் உங்களைப் பாதிக்கவிடுங்கள். அப்படி உங்களுக்கு ஒரு தனித்தன்மை இருக்குமென்றால் அது அந்தப் பாதிப்புகளினூடாக முட்டி மோதி உருவாகி திரண்டு வரும் ஒன்றாகவே இருக்கும். அத்தனை சிந்தனையாளர்களும், கலைஞர்களும் அவர்களை வெல்லும் பாதிப்புகள் வழியாக செதுக்கப்பட்டவர்கள். அப்பாதிப்புகளை கடந்து தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள்.
*
ஆன்மிக தளத்திலும் அரசியலிலும் ’கல்ட்’கள் உள்ளன.நம் அரசியல்கட்சிகளேகூட வெறும் கல்ட்கள்தான். அவை ஆபத்தானவையே. ஆனால் இலக்கியத்தில் கல்ட்கள் இருக்கமுடியாது. ஏனென்றால் இங்கே அடிப்படையில் இருப்பது படைப்பியக்கம். அது ஒருவர் தன்னந்தனியாகச் செய்யவேண்டியது. அது அவரை அடிமையாக ஆக விடாது.
இலக்கியத்தில் சிறிய திரள்கள் அல்லது குழுக்கள் எப்போதும் உண்டு. அவை இல்லாத காலமே உலக இலக்கியத்தில் இருந்ததில்லை. இலக்கியத்தில் குழுக்களை எதிர்மறையாகப் பேசுபவர்களுக்கு இலக்கியமென்பது என்ன என்றே தெரியாது.
இலக்கியக் குழுக்கள் பிறர் சொல்வதுபோல ஒருவரை ஒருவர் தூக்கும்பொருட்டு உருவாகின்றவை அல்ல. அரசியல்குழுக்களே அவ்வாறு செயல்படுகின்றன. தமிழில் இலக்கியக்குழுக்களில் ஒன்றுகூட அவ்வாறு செயல்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. உள்விவாதமும் ,விமர்சனமும், சேர்ந்து பயில்தலுமே அவற்றின் வழிமுறையாக உள்ளது.
இக்குழுக்கள் பொதுவான அழகியல் – தத்துவ நோக்குகளால் உருவாகின்றவை. ஒருவரோடொருவர் விவாதிக்கவும், வளரவும் அவை தேவையாகின்றன. முரண்பாடு கொள்ளுவதற்குக் கூட இணையானவர்கள் இலக்கியத்தில் தேவை. குழுக்களின் பங்கு அவ்வளவே. ஓர் எழுத்தாளரை அல்லது ஒரு நிறுவனத்தை அல்லது ஓரு சந்திப்பிடத்தை மையமாகக்கொண்டு அவை உருவாவது எங்குமுள்ள வழக்கம்.
இன்றுவரை உலக இலக்கியத்தில் இத்தகைய எந்தக்குழுவும் இலக்கியத்தில் எதிர்மறை விளைவை உருவாக்கியதில்லை. ஒரேபோன்ற இலக்கியவாதிகளை, இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியதில்லை. அக்குழுவைச் சேர்ந்த எவரையும் அவருடைய எல்லையை அடைய முடியாமல் தேங்கவிட்டதாக ஒரே ஒரு உதாரணம்கூட உலக இலக்கிய வரலாற்றில் இல்லை.
ஆனால் அக்குழுவின் உறுப்பினராக ஆனமையாலேயே தங்கள் எல்லைக்குமேல் செல்ல நேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் இயல்பான விசையும் தீவிரமும் பலமடங்கு கூடுவதன் விளைவு அது. தமிழிலக்கியத்திலேயே அப்படி பல ஆக்கபூர்வமான குழுக்கள் இருந்தன. நீண்ட பட்டியலையே இடமுடியும்.
ஆனால் அவை புறவயமான ஓர் அரசியல், மத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்றால் அவை இலக்கியக்குழுக்கள் அல்ல. இலக்கியக் குழு என்பது சிலவகையான இலக்கிய விழுமியங்கள், சிலவகையான அழகியல்கொள்கைகள் மீதான நம்பிக்கையால் மட்டுமே உருவாவது.
இலக்கியக்குழுக்கள் மிகத்தீவிரமாகச் செயல்பட்ட காலத்திலேயே படைப்பிலக்கியம் தீவிரமாக இருந்துள்ளது. இன்று அத்தகைய ஆக்கபூர்வமான குழுக்கள் அரிதாகி விட்டன. ஆகவே ஆர்வத்துடன் எழுதும் பலருக்குக் கூட எழுத்தின் ஆரம்பகட்ட பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நீடிக்கின்றன. மிக எளிமையாக ஓரிரு அமர்வுகளில் நட்பார்ந்த உரையாடல்கள் வழியாக தெரிந்துகொள்ளத்தக்க எழுத்து நுட்பங்கள், வெளிப்பாட்டு நுட்பங்கள்கூட தெரியாதவர்களாகவே பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மூத்த எழுத்தாளருடன் இயல்பாக உரையாட இவர்களின் ஆணவம் இடமளிப்பதில்லை. சமானமான ஒருவரிடம் உரையாடுவதுகூட இயல்வதில்லை. ஆரம்ப நிலையிலேயே அடிமையென வரும் வாசகர்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்கள்தான் இலக்கியக்குழுக்களில் எதிலும் தாங்கள் இல்லை என்றும், தாங்கள் சுயம்பு என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் புதிய பல எழுத்துக்களை வாசிக்கையில் அவற்றிலிருக்கும் முதிராமொழியும் பயிலாத வடிவமும் பெரும் ஒவ்வாமையை உருவாக்குகின்றன. இந்த நிலை சமகால இலக்கியத்துக்கு ஒரு பெரும் குறைபாடே.
இதை உருவாக்கியதில் இங்குள்ள அரசியலாளர்களுக்கும், இலக்கிய வம்பர்களுக்கும் பெரும் பங்குண்டு. அரசியலாளர்கள் அரசியல் குழுக்களை உருவாக்கி கொடிபிடிக்கும் அடிமைகளை உண்டுபண்ணுபவர்கள். ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள் ஒரு சிறு குழுவாக திரண்டால் குழுமனப்பான்மை, அடிமைநிலை என வசைபாடுவார்கள். என்ன வேடிக்கை என்றால் அங்கே கொடிபிடிக்கும் கும்பலும் அதையே ஏற்றுச்சொல்லும்.
இலக்கிய வம்பர்களுக்கு எந்த ஆக்கபூர்வ இலக்கியக் குழுக்களிலும் இடமிருக்காது. அவர்கள் அங்கே நுழைந்தாலும் உடனே வெளியேற்றப்படுவார்கள். ஆகவே அவர்கள் தங்கள் வம்புகளில் இலக்கியக்குழுவாகச் செயல்படுபவர்களை தொடர்ச்சியாக இழிவு செய்து கேலி செய்து அவர்களிடம் ஒரு தாழ்வுணர்ச்சியை, பிழையுணர்ச்சியை உருவாக்கி விடுகிறார்கள். முகநூல் சூழலில் வம்புகள் மட்டுமே அதிகம் கவனிக்கப்படுகின்றன. ஆகவே வம்பர்களின் செல்வாக்கு இப்போதுள்ளது போல இலக்கியத்தில் என்றும் இருந்தது இல்லை. இன்று, இந்த இருபதாண்டுகளில் உருவாகி வந்திருக்கும் இலக்கியப் பிரச்சினை இது.
இவர்களின் குரலைச் செவிகொள்ளும் இளம் எழுத்தாளன் தான் அடையவேண்டிய அரியவற்றை இழக்கிறான். தன் ஆளுமையின் வெளிப்பாட்டின் முழுமையை தவறவிடுகிறான். தன் பாதையை தானே கண்காணிக்கத் தெரிந்தவனே அறிவுச்செயல்பாட்டில் இருக்கிறான். அவனுக்கு புறக்குரல்கள் வழிகாட்டிகளாக மட்டுமே அமையமுடியும். திசைதிருப்ப முடியாது.
ஜெ இலக்கியவாதிகளும் அமைப்புகளும் விருதுகள், அமைப்புகள் புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது இலக்கியத்திற்காக ஒரு தொலைக்காட்சி இலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்…. இலக்கியம்,அரசியல்:கடிதங்கள்அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-2
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-1
[ 2 ]
ஸ்ரீபாலா அந்த நடனப்பெண்களின் நடுவே கையில் நெய்விளக்குகள் எரியும் தாலத்துடன் ஆடிக்கொண்டிருந்தாள். அவளுடைய ஆடையாலா, அந்த விளக்கொளியாலா, அல்லது நான் நின்ற கோணத்தாலா, அவள் பானுமதியைவிடவும் அழகாக இருப்பதாகத் தோன்றியது. நான் அவளை இயல்பாக கண்களை ஓடவிட்டபோது பார்த்தேன். அதன்பின் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றேன்.
அவளுக்கு பதினெட்டு வயது இருக்கும். கொடிபோல ஒல்லியாக இருந்தாள். நடனத்திலேயே வாழ்பவள் போல மிக இயல்பாக ஆடினாள். அவளுடன் பானுமதியை நிற்க வைத்து ஆடவிட்டால் பானுமதி திமிர் பிடித்த மந்தபுத்திப்பெண் என்று தோன்றுவார். உண்மையில் பானுமதிக்கு ஆடவே தெரியாது, எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது. நின்ற இடத்திலேயே ஆட்டம்போல ஒன்றைச் செய்ய மட்டும்தான் முடியும். கண்களை உருட்டி, உதட்டை சுழித்து, மூக்கைச் சுளித்து அதை கொஞ்சம் இயல்பாகவே செய்துவிடுவார். பிற்பாடு அது பானுமதியின் தனிப்பாணியாகவே ஆகிவிட்டது. ஆனால் அங்கிருக்கும் மெல்லிய மஸ்லின் திரைச்சீலைகளைப்போல ஸ்ரீபாலா அசைந்தாள்.
நான் அவளைக் கண்டு ஏன் அப்படி மெய்மறந்தேன் என்று பின்னர் நிறைய யோசித்திருக்கிறேன். அவளுடைய நடனத்தால்தான் என்று பின்னர் தெரிந்தது. நடனத்தில் கொஞ்சம்கூட மனம் செல்லாமல் இயல்பாக உடல் உள்ளத்திலிருக்கும் தாளத்தை வெளிப்படுத்தினால்தான் அது நடனம். “நாக்கு மாதிரி இருக்கணும்டீ டேன்ஸு. நாக்கு ஆடுறதை நாம அறியறதில்லை” என்று சிவருத்ரப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஆனால் அது மட்டுமல்ல. அவள் அங்கே இருக்கும் பிற நடிகைகளைப்போல இருக்கவில்லை. அவளைப் போன்ற துணைநடிகைகளைப்போலவும் அல்ல. அவளிடம் அந்தப் பெண்களின் அம்சங்கள் எதுவுமே இல்லை. அவள் கண்களில் உண்மையான மருட்சி இருந்தது. அக்காலத்து குடும்பப்பெண்களின் கண்களில் இருந்த மருட்சி அது. ஒருவேளை அது ஒரு சாயலாக மட்டும் இருக்கலாம். நானே கற்பனை செய்துகொண்டதாக இருக்கலாம். ஆனால் இருந்தது. அது அவளை வேறுபடுத்திக் காட்டியது.
’கட்’ சொல்லப்பட்டதும் கையிலிருந்த விளக்குத்தாலத்தை அங்கே வைத்துவிட்டு அவள் வந்து ஓரமாக நின்றாள். டச்சப் பெண் வந்து வியர்வையை ஒற்றும்போது சலிப்புடன் கண்மூடிக் கொண்டாள். நன்கு வியர்த்திருந்தாள். அன்றெல்லாம் விளக்குகள் கடுமையான வெப்பம் கொண்டவை. உச்சிவெயிலில் நிற்பதற்கு சமம் அந்த வெளிச்சத்தில் நிற்பது. அதிலும் அதேபோல விரிந்த கூடத்தில் பலர் ஆடும் காட்சிகளில் அவர்களின் நிழல்களைக் கரைப்பதற்காக அதிகமாகவே வெளிச்சம் போடுவார்கள். காமிராவில் ஃபில்டர் போட்டு வேண்டிய அளவுக்கு வெளிச்சத்தை குறைத்துக் கொள்வார்கள்
அவள் அங்கே போடப்பட்ட சிறிய மரஸ்டூல்களில் அமர்ந்து எவருடனும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஏன் மருண்டவை என தெரிகின்றன என்று நான் கண்டுகொண்டேன். அவை மிக நீளமான விழிகள். அத்தனை நீளமான கண்களை நான் பார்த்ததே இல்லை. மான்விழிகள் என்று நாடகப்பாடல்களில் அதைத்தான் சொல்கிறார்கள். அவற்றை மையிட்டு, நீட்டி எழுதி மேலும் நீளமாக ஆக்கியிருந்தார்கள். அத்தனை நீளமான கண் என்பதனால் அவள் திரும்பிப் பார்க்கையில் ஓரவிழியால் பார்ப்பதுபோலிருந்தது. அல்லது அப்படிப் பார்ப்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
ஏன் அவள் கதாநாயகியாக ஆகமுடியாது என்பதை அருகே கண்டதும் உணர்ந்தேன். அவளுடைய முகம் ஒடுங்கி நீளமாக இருந்தது. கன்னங்கள் உப்பலாக இல்லை. அன்றெல்லாம் சினிமாவுக்கு உருண்டையான முகமும், உப்பிய கன்னங்களும்தான் முக்கியமானவை. அன்று ஃபிலிம் லோ சென்சிட்டிவ் வகை. சுரணைகெட்ட ஃபிலிம் என்று காமிரா உதவியாளர்கள் சொல்வார்கள். ஆகவே காமிரா பார்க்கும் பொருள் மேல் நேரடியாகவே ஒளி வீசப்படும். மெலிந்து நீண்டமுகம் மீது ஒளி அடிக்கப்பட்டால் கன்ன எலும்பின் நிழலுடன் சேர்ந்து முகம் மேலும் ஒடுக்கமாகத் தெரியும். கண்ணுக்கு அவ்வளவு அழகியாகத் தெரிபவள் காமிராவுக்குள் பதிவாகும் அந்த வெள்ளிப்பிம்பத்தில் பஞ்சத்தில் அடிபட்ட முகம்கொண்டவளாக இருப்பாள். தோழியாகத்தான் அவளை நடிக்க வைப்பார்கள். ‘அரசி, மன்னர் வந்துகொண்டிருக்கிறார்’என்றுதான் அதிகம்போனால் வசனம் இருக்கும்.
அவள் கேலி பேசிச் சிரிக்கவில்லை என்பதைக் கவனித்தேன். அவளிடம் ஏதாவது சொல்லப்பட்டால்கூட அவள் அச்சொற்களை முற்றிலும் கேட்காதவள் போலிருந்தாள். அதைவிட அவள் உடலில் கூச்சம் இருந்தது. அத்துமீறி ஒப்பனைக்காரன் கையை வைத்தால் நெளிந்து, விலக்கி, அதை தானே செய்துகொண்டாள். நான் தொலைவில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் கற்பனையில் நெகிழ்ந்து கொண்டே சென்றது. அவள் ஓர் அபலைப்பெண், வீட்டில் நோயுற்ற அப்பாவும், ஊட்டப்படவேண்டிய ஏழெட்டு இளைய குழந்தைகளும் கொண்டவள். தெரியாமல் இங்கே வந்து அவமானப்பட்டு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறாள். அல்லது அனாதை. கொடுமைக்காரப் பெண்மணி ஒருத்தி அவளை அடிமையாக வைத்திருக்கிறாள்.
அன்றைய கதைகளில் எல்லாம் வரக்கூடிய அழகான, அடக்கமான, நல்ல குடும்பத்தில் பிறந்த கதைநாயகி. அவளுக்குத்தான் உலகத்திலுள்ள அத்தனை துயரங்களும் வரும். வறுமை, அவமானம், தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது. அவள் தியாகம் செய்துகொண்டே இருப்பாள். அவளை பார்ப்பவர்கள் அனைவரும் அடைய முயல்வார்கள். கற்பழிக்க வருவார்கள். கையை நீட்டுவார்கள். கண்டபடி மிரட்டுவார்கள். ஆனாலும் அவள் அன்பானவளாகவே இருப்பாள். துயரம் மிஞ்சிப்போனால் பாட்டுதான் பாடுவாள். கடைசியில் செத்துப்போய்விடுவாள். அல்லது நல்லவனாகிய ஹீரோ அவளை திருமணம் செய்வான். ஆனால் அதற்கு முன் அவள் கற்பை இழந்திருக்கக்கூடாது.
அன்று நெடுநேரம் பிந்தித்தான் நான் தையல்கொட்டகைக்கு திரும்பினேன். தையலில் மூழ்கி நெடுந்தூரம் விலகிச் சென்ற பின்னர் நினைத்துப் பார்த்தால் அந்த உணர்ச்சிகளெல்லாம் அபத்தமாக இருந்தன. நானே என்னை கேலியாக நினைத்துச் சிரித்துக்கொண்டேன். அங்கே நான் வேலைக்கு வந்தபோதிருந்தே என்னை என் தாய்மாமா எச்சரித்துக்கொண்டே இருந்தது இந்த நடனப்பெண்கள் விஷயமாகத்தான். அங்கிருந்த தையல்காரர்களும் மாறி மாறி எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். அந்தப்பெண்கள் வலைவிரித்து அமர்ந்திருக்கும் சிலந்திகள் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது.
உண்மையிலேயே அவர்கள் வலைவிரித்துக் கொண்டும் இருக்க வாய்ப்புண்டு. அவர்கள் வெளியேற ஒரே வழி அதுதான். ஆர்ட் துறையில் ஒரு ஆசாரி ஒரு நடனப்பெண்ணை மணந்துகொண்டான் என்று தெரிந்த அன்று தையல் துறையில் அதைப்பற்றியே பேசிப்பேசி ஓய்ந்தார்கள். அவனைப்பற்றிப் பேசுவதில் அனைவருக்கும் ஒரு கிளர்ச்சியும் இளக்காரமும் ஒருங்கே இருந்தது. அவனை இழிவுபடுத்தினார்கள். ஆனால் அவனாக ஒவ்வொருவரும் மானசீகமாக நடித்தார்கள் என்று தோன்றியது. ஏனென்றால் ஒவ்வொருவரும் இன்னொருவரை அவன் இடத்தில் நிறுத்தி கிண்டல் செய்தார்கள்.
நான் ஒரு வாரம் படப்பிடிப்புப் பக்கமே போகவில்லை. ஆனால் அவளை நினைத்துக்கொண்டே இருந்தேன். அப்படிப் போய்விடக்கூடாது என்று தவிர்த்துக் கொண்டும் இருந்தேன். ஒருவாரம் கடத்திவிட்டுத்தான் ஃப்ளோருக்குப் போனேன். அப்போது அங்கே அத்தாணி மண்டபக் காட்சியை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதுவே சட்டென்று ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் நான் அங்கே அதே நடனக்காட்சி நடந்துகொண்டே இருக்கிறது என்று என்னுள் கற்பனை செய்துகொண்டேன். என்னுள் அதுவே ஓடிக்கொண்டிருந்தது.
அங்கே அவளுக்காக என் கண்கள் தேடின. செட்டுக்குள்ளேயே இருநூறுக்குமேல் தலைகள். படைவீரர்கள், காவலர்கள், ஏவலர்கள், அமைச்சர்கள், குடித்தலைவர்கள், சேடிப்பெண்கள், கவரிவீசும் பெண்கள். தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள்போல விக் வைத்த தலைகள் எங்கும் தென்பட்டன. படப்பிடிப்புக் குழுவே நூறுக்குமேல் இருக்கும். டீ காபி பரிமாறுபவர்கள், லைட்பாய்கள், ஆர்ட் உதவியாளர்கள், இன்னும் எவற்றையெல்லாமோ செய்துகொண்டிருப்பவர்கள். அனைவருமே காக்கி நிஜார் அணிந்திருந்தனர். லைட்பாய்களுக்கு சட்டையும் காக்கி. தலையில் காக்கித்துணியால் நேருத்தொப்பி. காமிரா உதவியாளர்கள் மட்டும் நெற்றிக்குமேல் நீட்டிய தொப்பி வைத்திருந்தனர்.
நான் நடிகர்களை மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். எல்லா முகமும் பேன்கேக் சிவப்பு. எல்லாருமே பளபளக்கும் வண்ண உடைகள் அணிந்தவர்கள். விசித்திரமான உடைகள். பழங்காலத்தில் எவரும் அதைப்போல உடையே அணிந்திருக்கவில்லை என்று நாகலிங்க ஆசாரி சொன்னான். படைவீரர்கள்கூட கோவணம்தான் அணிந்திருந்தார்கள். பழங்காலத்தில் பருத்தியே குறைவாகத்தான் பயிரிடப்பட்டது. கம்புசோளம் பயிரிடவே நிலமும் மழையும் இல்லை. சினிமாவுக்காக அவர்களுக்கெல்லாம் முகலாய உடைகள் அளிக்கப்பட்டன. அவை கால்களுக்குக் கீழே பெண்கள் அணியும் உடைபோல தொளதொளவென்றிருந்தன.
அவள் அங்கே இல்லை. அதை உணர்ந்ததும் ஏமாற்றம், பின்னர்கொஞ்சம் ஆறுதல். அவள் இல்லை என்றால் நான் அவளை நினைப்பதை நிறுத்திவிடுவேன். அவளிடமிருந்து விடுபட்டுவிடுவேன். ஒருவாரமாக அவளையே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்ன இது என்ன இது என்று வியந்தபடி அதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன். அவளைப்பற்றிய நினைவுகளை தொட்டுத்தொட்டு வளர்த்து, எங்கோ சென்று, அங்கே திகைத்து நின்றிருக்கிறேன்.என்னையே கீழாக எண்ணி சலிப்படைந்திருக்கிறேன். அதிலிருந்து விடுதலை. ஒருவழியாக மீண்டுவிட்டேன். இனி இங்கே வரமாட்டேன்.
ஆனால் ஷாட் வைக்கப்பட்டதும் ஒத்திகைக்காக திருமலாதேவியாக நடித்த மிஸிஸ் குமாரியுடன் அவளும் தாலமேந்தி பின்னால் வந்தாள். என் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஆயிரம் பேரில் அவளை மட்டுமே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். தாலத்துடன் நடந்தபோது அவளுடைய இடை மிக இயல்பாகவே துவண்டது. கண்கள் தயங்கி, பக்கவாட்டில் பார்த்து மருண்டு, அழகாக அலைபாய்ந்தன. நான் என்னுள் திரவங்கள் நுரையாகக் கொப்பளிப்பதை அறிந்தேன்.
அந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெல்லி இரானி. மும்பையிலிருந்து பெருஞ்செலவில் அவரை வரவழைத்திருந்தார்கள்.அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும், இந்திகூட சுமார்தான். சதுர முகமும், மெல்லிய மீசையும் கொண்ட சிடுசிடுப்பான மனிதர்.அவர் ஒரு சர்வாதிகாரி, கிறுக்கு பிடித்த சர்வாதிகாரி. அதை சொல்லிச் சொல்லி பரப்பி அவரை எவரும் நேருக்குநேர் பார்க்காமலாகியிருந்தனர்.
அன்றெல்லாம் காமிராக்கோணங்களை ஒளிப்பதிவாளர்தான் முடிவுசெய்வார். ஷாட் பிரிப்பதும் அவர்தான். இயக்குநர் நடிப்பை மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்கே நடப்பதில் நடிப்பு மட்டும்தான் இயக்குநர்களுக்கு புரியும். படம் எப்படி வந்திருக்கிறது என்பது பிரிண்ட் எடுத்து ரஷ் போட்டுப்பார்க்கும் வரை தெரியாது. சொல்லப்போனால் ரஷ் பார்த்தாலே பல இயக்குநர்களுக்குப் புரியாது. எடிட்டிங்குக்குப் பிறகுதான் அது சினிமாக் காட்சியாக ஆகும். வசனமும் இசையும் கலந்தபிறகுதான் சினிமாவாக தெரியும்.கத்ரி வெங்கட்ட ரெட்டி தியேட்டரில் படம் பார்த்தபிறகுதான் தன் சினிமாவை புரிந்துகொண்டார் என்பார்கள்.
தரையில் வரையப்பட்ட வெள்ளிமின்னும் கோடு வழியாக மிஸிஸ் குமாரி வரவேண்டும். அவருக்குப் பின்னால் வருபவர்கள் அவரை தொடாமல் ஆனால் விலகாமல் வரவேண்டும். நாலைந்து முறை ஒத்திகை நடைபெற்றது. மிஸிஸ் குமாரியின் நிழல் ஸ்ரீபாலா மேல் விழுந்தது. அதை கரைப்பதற்காக ஒளி செலுத்தியபோது ஸ்ரீபாலா மிஸிஸ் குமாரியைவிட ஒளியாக தெரிந்திருப்பாள் போலிருக்கிறது. அவளை சற்றுப்பின்னால் செல்லும்படிச் சொன்னார் மெல்லி இரானி. அப்போதும் சரியாகவில்லை, அவளை மீண்டும் அருகே வரச்சொன்னார். அவருடைய உதவியாளர்கள் அவருடைய ஆணைகளுடன் ஓடிச்சென்று ஸ்ரீபாலாவுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் ஏன் முன்னால் வரச்சொல்கிறார்கள், ஏன் பின்னால் நகரச் சொல்கிறார்கள் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் மிரட்சி தெரிந்த கண்களுடன் தலையைத் தலையை அசைத்தாள். அவள் நெற்றியில் ஒரு முடிச்சுருள் விழுந்து ஆடியது. அதை ஹேர்டிரஸ்ஸர் எடுத்து சேர்த்து கிளிப் போட்டுவிட்டான். அவள் மேலுதடு வியர்த்து விட்டது, அதை டச்சப் ஆள் ஒற்றினான். மீண்டும் ஒத்திகை. ஒருவழியாக ஒத்திகை முடிந்தது. மெல்லி இரானி கைகாட்ட ‘ஆல் லைட்’ ஒத்திகை ஆரம்பித்தது. மேலிருந்த மாக்ஸி விளக்குகளும் மினி விளக்குகளும் சூரியன்கள் போல எரிந்தன. அரங்கில் நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒரு சிறு விளக்கு போல ஒளிவிடத் தொடங்கினார்கள். “பேபி”என்றார் மெல்லி இரானி.
அரங்கை முழுக்க ஒளிரச் செய்ய மேக்ஸி, நடிகர்களை ஒளிர வைக்க மினி, அவர்களின் முகங்களுக்கு மட்டும் பேபி.மூக்கின் நிழல் மேலுதட்டில் விழாமலிருக்க முகவாயை சற்றே தூக்கி ஒளியை வாங்கிக்கொள்வார்கள். அந்தக்கால படங்களில் அத்தனை பேரும் முகத்தை ஏந்தி நடிப்பது இதனால்தான். அதற்கு பேபி வாங்கி நடித்தல் என்று பெயர். பேபி வாங்குதல் என்பதை ஒரு சிலேடையாக திரும்பத் திரும்ப பயன்படுத்துவார்கள். எந்த நடிகையிடமும் ஒளிப்பதிவு உதவியாளர் ‘பேபி வாங்கிக்கிறியா?”என்று கேட்கலாம்.
பேபி லைட் வெளிச்சம் ஸ்ரீபாலா மேல் விழுந்தது. அவள் கண்ணில் நேரடியாக வெளிச்சம் விழுந்திருக்கவேண்டும். அவள் கையால் தூக்கி கண்ணை மறைத்தாள். அது ஓர் அனிச்சையான செயல். மெல்லி இரானி ஆங்கிலத்தில் ஏதோ சொல்லி சலித்துக் கொண்டு தலையை அசைத்தார். அவர் உதவியாளன் பாய்ந்து சென்று ஸ்ரீபாலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவள் முகத்தில் துப்பினான். பிற உதவியாளர்கள் அவனை இழுத்து வந்தனர்.
அவள் திகைத்து கண்களில் கண்ணீருடன் நின்றாள். மிஸிஸ் குமாரி அவளிடம் சமாதானமாக ஏதோ சொன்னாள். மெல்லி இரானி முக்காலியில் அமர்ந்து ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். என்.என்.ரெட்டி மூத்த ஒப்பனைக்காரரிடம் கைகாட்டினார். ஒளிப்பதிவுக் கூட்டமே மும்பையிலிருந்து வந்தது. அவர்களை ஒருவார்த்தை சொல்லிவிடமுடியாது.
ஒப்பனைக்காரர் அவளை அழைத்துச்சென்று மீண்டும் ஒப்பனை செய்து கூட்டிவந்தார். அவள் முகம் முந்தையதுபோல் இருக்கவில்லை. முன்பும் மிரட்சிதான் இருந்தது. இப்போது ஓர் இறுக்கம் இருந்தது. ஆனால் அவள் கதாநாயகி அல்ல. அவள் முகம் தெளிவாக தெரியப்போவதே இல்லை. ஆகவே எவரும் அதைக் கவனிக்கவில்லை. நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் வெடித்து அழுதுவிடுவாள் என நினைத்தேன். ஆனால் அவள் முகம் மண்பொம்மை போலவே இருந்தது.
என்.என்.ரெட்டி தன் கைவிரல்களைப் பார்த்தபடி, மெல்லி இரானி சிகரெட்டை முடிப்பதற்காக காத்திருந்தார். அவர் மட்டும்தான் செட்டில் புகைபிடிக்க முடியும். என்.என்.ரெட்டி முன்னால் கால்மேல் கால்போட்டு அமர முடியும். என்.என்.ரெட்டி கையசைத்தால் ஓடிவரவேண்டியதில்லை. மெல்லி இரானி சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு உதவியாளனிடம் கைகாட்டினார். அவன் ஒரு துவாலையை கொண்டுவந்து அவரிடம் அளிக்க அவர் முகத்தை ஒற்றிக்கொண்டு காமிராவின் வியூஃபைண்டரில் கண்களை பொருத்தினான்.
என்.என்.ரெட்டி எழுந்து தன் உதவியாளர்களுக்கு சைகையால் ஆணையிட்டார். அவர்கள் ஓடிச்சென்று நடிகர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினர். மெல்லி இரானி கையசைக்க ஸ்டேண்டுகளின் மேல் மேக்ஸியும் மினியும் மீண்டும் ஒளிவிடத் தொடங்கின. கோடாக்கள் மேல் நின்றிருந்த லைட்பாய்கள் ஒளிப்பதிவு உதவியாளர்களின் கையசைவுக்கு ஏற்ப விளக்குகளை திருப்பினார்கள்.
நான் அவள் முகத்தை பார்த்தேன். அவள் இமைகள் கண்ணீரால் நனைந்திருக்கின்றன என்று எனக்கு தோன்றியது. அங்கு நிற்க என்னால் முடியவில்லை, திரும்பிவிட்டேன்.செல்லும் வழியெல்லாம் கொதித்துக் கொண்டிருந்தேன். அவளை அப்போதே சென்று கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு வந்துவிடுவது போல, அவள் என் தோளில் தலைசாய்த்து கதறி அழுவதுபோல, அவள் வீட்டுக்கு தேடிச்சென்று அவள் குடும்பத்திற்கே நான் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுபோல கற்பனைகள் ஓடிக்கொண்டே இருந்தன.
இளமையில் மனிதர்கள் பலமடங்கு பற்பல மடங்கு உள்ளே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு புறவுலகம் வெறும் சக்கை. என் இடத்துக்குச் சென்று அமர்ந்து தைக்க ஆரம்பித்தபோதுதான் என் உடலில் எத்தனை ஆவேசம் இருக்கிறது என்று எனக்கே தெரிந்தது.
ஆனால் மறுநாள் அந்த வேகம் அடங்கியது. இது ஒரு பொறி என்று நானே எனக்கே சொல்லிக்கொண்டேன். இது எவரும் அமைக்கும் பொறி அல்ல, விதியால் அமையும் பொறி. முதலில் எனக்கு அவள்மேல் ஈடுபாடு வருகிறது, அதன்பின் இரக்கம் வருகிறது, இனி நெருக்கம் வரும். அதைநோக்கித்தான் இந்த பெருக்கு என்னைச் சுழற்றி அடித்துக்கொண்டுசெல்கிறது. என் முழு பலத்தாலும் அதற்கு எதிராக நின்றாகவேண்டும். இல்லாவிட்டால் நான் அந்த படுகுழியில் சென்றுவிழுவேன். அதன்பின் மீட்பே இல்லை.
இரக்கம்தான் மிக ஆபத்தானது. அது என்னை மேலானவனாக, ஆற்றல் கொண்டவனாக உணரச் செய்கிறது. பெண்ணிடம் இரக்கம் கொள்பவன் அவளுக்கு பொறுப்பேற்கிறான். பெண்கள் அதன் பொருட்டே ஆண்களிடம் இரக்கத்தை தூண்டுகிறார்கள். காமத்தைவிட பத்துமடங்கு ஆற்றல் மிக்க தூண்டில் இரக்கம்தான். அதை அங்கே ஸ்டுடியோவில் எவரோ ஏதோ வகையில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதனாலேயே பலர் இரக்கமற்றவர்களாக பெண்களிடம் நடந்துகொள்வார்கள்.
ஆனால் அவ்வப்போது நடனக்காரிகளை மணந்துகொள்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.பெரும்பாலானவர்கள் அதன்பின் ஸ்டுடியோப் பக்கமே வரமாட்டார்கள். ஆனால் வேறு போக்கிடமில்லாமல் வந்தார்கள் என்றால் ஒன்று அவமானப்பட்டு சிறுமையடைந்து அந்தச்சிறுமையை ஏற்றுக்கொண்டு இளிக்க ஆரம்பித்து விடுவார்கள். மிக அபூர்வமாகச் சிலர் சீற்றம் கொள்வார்கள். லைட்பாய் நாராயணன் கலைப்பிரிவை சேர்ந்த குணசேகரனை கம்பியால் தாக்கியது நினைவுக்கு வந்தது. லைட்பாய் நாராயணனை பார்க்குமிடமெல்லாம் குணசேகரன் “ரேட் என்ன தோஸ்த்?”என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறான்.
மெல்லமெல்ல நான் அடங்கி சமநிலையை அடைந்தேன். தர்க்கம் மீண்டபோது எல்லாவகையான சொற்களையும் உருவாக்கிக் கொண்டேன். அசட்டுத்தனமான ஒரு ஈர்ப்புதான் அது. வேறொன்றுமில்லை.அதை நானே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால் அது கடந்துபோகும். எனக்கு எல்லாமே சொல்லப்பட்டிருக்கிறது. எனக்கு எச்சரிக்கையுணர்ச்சி இருக்கிறது, விழுந்துவிட மாட்டேன். இந்த உலகம் என்னவென்று எனக்கு தெரியும். நாம் யோசிக்க ஆரம்பித்தால் அந்த திசையில் நெடுந்தூரம் சென்றுவிடுகிறோம். ஒரு கட்டத்தில் நான் அவள்மேல் வெறுப்பையே உருவாக்கிக் கொண்டேன். ஒரு பெரிய வஞ்சத்தில் இருந்து தப்பிய மகிழ்ச்சியைக்கூட அடைந்தேன்.
மேலும் சில நாட்களுக்குப்பின் அவளை அருகே கண்டேன், ஓரிரு வார்த்தைகள் பேசினேன்.எங்களுக்கு தையல் பகுதிக்கே சாப்பாடு வந்துவிடும். மிக எளிமையான சாப்பாடுதான். சோறு, குழம்பு, ஒருபொரியல், மோர், ஊறுகாய்- அவ்வளவுதான். அன்றெல்லாம் சினிமாச் சாப்பாடு ஒரு கொண்டாட்டமாக ஆகியிருக்கவில்லை. எங்கள் சாப்பாடு முதல்தரம். அன்றன்று கூலிக்கு வந்துசெல்லும் பெருங்கும்பலுக்கு புளிசாதம், எலுமிச்சைச்சாதம், தயிர்சாதம்தான் பொட்டலங்களில் அளிக்கப்படும். அசைவம் எல்லாம் ஆண்டுக்கு ஒருமுறைதான்.அபூர்வமாக அனைவருக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு இருக்கும். அது ஏதாவது விருந்து விசேஷமாக இருக்கவேண்டும். அன்று அப்படி ஒரு விருந்து.
நான் சாப்பிடுவதற்காக போயிருந்தேன். விதவிதமான சாப்பாடுகள் அண்டாக்களில் வைக்கப்பட்டிருந்தன. பிரியாணிகூட இருந்தது. வேண்டியதை வாங்கிச் சாப்பிடவேண்டியதுதான். பிரியாணி இடத்தில் பெரும் நெரிசல். எனக்கு அப்படிச் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆந்திராப் பருப்புச்சாதம் வாங்கிக்கொண்டு ஓரமாகச் சென்று அமர்ந்தேன். அப்போது அவள் என்னை நோக்கி வந்தாள்.
அவள் வருவதை எப்படியோ நான் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தேன். அவள் வந்துகொண்டே இருந்தாள். என் நெஞ்சு படபடத்தது. எழுந்துவிடுவேன் என்று தோன்ற வலுக்கட்டாயமாக அமர்ந்துகொண்டேன். நான் அவளைப் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டாள். நான் அவள்மேல் பித்தாக இருப்பது அவளுக்கு தெரியும். என் எண்ணங்களை முழுக்கவே புரிந்துகொண்டுவிட்டாள். என்னை முழுக்க வெல்ல வந்துகொண்டிருக்கிறாள். என்னை எடுத்து இடுப்பில் வைத்துக்கொள்வாள். என்ன கேவலம், எப்படி அதை சமாளிக்கப்போகிறேன்!
அவள் என் அகத்தை அறிந்துகொண்டது எனக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. அவளை புண்படுத்தி அனுப்பவேண்டும் என்று நினைத்தேன். அவளை அவமானப்படுத்தும்படி ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. அவளுக்கு முகமே கொடுக்கக்கூடாது. அவளை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று தெரிவிக்கவேண்டும். அதுதான் செய்யவேண்டியது, ஆமாம்.
ஆனால் அவள் அருகே வந்து நின்றபோது அந்த அசைவின் காற்றும், அதிலிருந்த வியர்வை மணமும், நகைகளின் ஆடையின் மெல்லிய ஓசையும் அன்றி எதுவுமே பிரக்ஞையில் இல்லை. நான் பார்வையை தாழ்த்தி தட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முகம் இறுகி இருந்திருக்கவேண்டும். என் கைகள் நடுங்கிக்கொண்டிருந்திருக்கவேண்டும்.
அவள் என்னிடம் “நீங்கள் தையல் இலாகாவா?”என்றாள்.
”ஆமாம்”என்றபோது என் குரல் அடைத்திருந்தது. “என் பெயர் மோட்டூரி ராமராவ்” ஏன் பெயரைச் சொன்னேன்? ஏன் என் குடும்பமும் சாதியும் தெரியும்படிச் சொன்னேன்?
“என் பெயர் ஸ்ரீபாலா.நான் இந்தப்படத்தில் சின்ன ரோலில் நடிக்கிறேன். எனக்கு ராணியின் தோழி வேடம். என்னுடைய உடைகளில் எப்போதுமே ஜரிகையை மடித்து உள்ளே வைத்து தைக்கிறார்கள். அது என் உடலை உரசுகிறது. உள்ளே புண்ணாகி விடுகிறது. நான் பலமுறை சொல்லிவிட்டேன். தையல் வேலையில் தலையிடமுடியாது என்று புரடக்ஷனில் சொல்கிறார்கள். தையல் உதவியாளருக்கு ஊசிநூலில் சின்ன தையல் போடத்தான் தெரிகிறது”என்றாள். படபடவென்று பேசினாள். சின்னப்பெண்களின் பேச்சு அப்படித்தான் பொரியும்.
அவளுக்கு என்னை தனிப்பட்டமுறையில் தெரியவில்லை என்பது தெரிந்தது. அது எனக்கு ஆறுதலை அளித்தது. ஒளிந்திருந்து பார்ப்பதுபோல ஒரு சுவாரசியத்தை உணர்ந்தேன்.
“இவள் என் தோழி. இவள்தான் சொன்னாள், நீங்கள் தையல் இலாகாவில் இருக்கிறீர்கள் என்று” என்றாள். அவளுக்கு பின்னால் இன்னொரு பெண் நிற்பதை அப்போதுதான் கண்டேன்.
“ஆமாம், என் தாய்மாமாதான் தலைமை தையல்காரர்”என்று சொன்னேன். அந்த மேட்டிமைப்பாவனையை நானே உள்ளே உணர்ந்து என்னைச் சலித்துக்கொண்டேன்.
“அப்படியா?”என்றாள், அவள் பெரிய ஆர்வமேதும் அதில் காட்டவில்லை.
அந்த ஆர்வமின்மை என்னை கொஞ்சம் சீண்டியிருக்கலாம். நான் கொஞ்சம் நிமிர்வுடன் “இதோ பாருங்கள், பெரிய நடிகர் நடிகைகளின் பட்டியல்தான் எங்களுக்கு தருவார்கள். அவர்களின் அளவும் தருவார்கள். அவர்களுக்கு மட்டும்தான் தனித்தனியாக ஆடைகள் தைப்போம். மற்றவர்களுக்கு அப்படி அவர்களுக்கான ஆடைகள் இல்லை. பொதுவாக நாலைந்து அளவுகளில் தைப்போம். பொருத்தமானதை எடுத்து அணிந்துகொள்ள வேண்டியதுதான். அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் தையல்காரர் சரிசெய்து கொடுப்பார்… “ என்றேன்.
“என் பெயர் பட்டியலில் இல்லை” என்றாள். “நான் துணைநடிகைதான்”
”அப்படியென்றால் உங்களுக்காக நாங்கள் என்ன செய்ய முடியும்? பொதுவான துணிகளில் ஏதோ ஒன்று உங்களுக்கு வரப்போகிறது” துணைநடிகர்களுக்கு பெயர்கள் இல்லை, துணிகளுக்கு அளவுகள்கூட இல்லை.
அவள் முகம் வாடியது. சட்டென்று அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியை இழுத்து நன்றாக தழைத்து “பாருங்கள், எப்படி இருக்கிறது என்று”என்றாள்.
அங்கே தோல் சிராய்ப்பு போல உரிந்து புண்ணாகியிருந்தது. நான் பார்வையை தாழ்த்திக் கொண்டேன். இந்த சரிகைகள் மட்டமான தரம் கொண்டவை. ஒரே ஒருதடவைதான் பயன்படுத்த முடியும். துவைத்தால் உதிர்ந்துவிடும்.சூரத்திலிருந்து ஒட்டுமொத்தமாக வாங்கிக்கொண்டு வருவார்கள். வெள்ளிச்சரிகை, ஆனால் அலுமினியத்தாலானது.
“நான் பார்க்கிறேன்”என்றேன்.
“மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு இடுப்பிலும் காலிலும் எல்லாம் புண் ஆகிவிட்டது. விளக்கு வெளிச்சத்தில் வியர்க்கும்போது தீபட்டதுபோல எரிகிறது”
“பார்க்கிறேன்”என்றேன்.
தழைந்த குரலில், ”ஏதாவது செய்யுங்கள்… மிகவும் உதவியாக இருக்கும்”என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தேன். அன்று அவள் மேக்கப் போட்டிருக்கவில்லை. பழைய பாவாடைத் தாவணி அணிந்திருந்தாள். வெண்ணிறமான பாசிமணி மாலை. காதுகளிலும் பாசிமணிக் கம்மல். மிக எளிமையான குடிசைவாசிப் பெண் போலிருந்தாள். முகத்தில் சிறிய சிவந்த பருக்கள். மேலுதட்டில் மெல்லிய பூனைமயிர். கன்னமயிர் நன்றாகவே இறங்கியிருந்தது. அவள் உதடுகளை அப்போதுதான் பார்த்தேன். மேலுதடு சற்று மேலேழுந்து வளைந்து அவளுக்கு சிணுங்கும் குழந்தையின் பாவனையை அளித்தது.
மேக்கப் இல்லாமல் அவள் மிகப்பெரிய அழகியாக தெரிந்தாள். மாநிறமானவள். மெருகிட்ட தேக்குமரப் பலகையின் நிறம். அவள் கழுத்திலும் தோள்களிலும் நன்றாகத் தேய்க்கப்பட்ட செம்புக்கலங்களின் மிளிர்வு தெரிந்தது. முகமே பாளை விரிந்து வெளிவந்த புதிய வாழைப்பூ போல மென்மையின் ஒளியுடன் இருந்தது. கைகளில் சாதாரணமாகப் பெண்களின் கைகளில் இருப்பதைவிட அதிகமான மயிர்ப்பரவல். அவள் கூந்தலும் சுருளாக ,கனமாக ,இடைவரை அலையலையாக கிடந்தது. நடிக்கும்போது அதை சுருட்டி கொண்டையாக கட்டிவிடுகிறார்கள்.
நான் அவளிடம் “நான் உங்கள் உடைகளை தனியாக தைத்து அனுப்புகிறேன். உள்ளே ஒரு பருத்தித்துணி வைத்து தைக்கச் சொல்கிறேன். அதை தனியாக அனுப்ப முடியாது. ஆனால் அதை மட்டும் ஒரு நீல ரிப்பனால் கட்டி போட்டிருப்பேன். நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்”என்றேன்.
“ரொம்ப நன்றி”என்று கும்பிட்டாள்.
பின்னால் நின்றபெண் “நல்லவேளை, எனக்கு சரிகைத் துணியே இல்லை”என்றாள்.
நான் ”அடுத்தபடத்தில் வரட்டும்”என்றேன்.
அவள் சிரித்து “இந்தக்குதிரை அவ்வளவு எடை தாங்காது”என்றாள்.
“நடிக்க முடியாதா?”என்றேன்.
“நடிப்பது நடித்துவிடலாம். கொஞ்சம் முகம் தெரிந்தால் மேலிருந்து கீழே வரை அத்தனைபேரும் வந்து மேலே ஏறுவார்களே, அதை தாளமுடியாது”என்றாள்.
நான் திடுக்கிட்டேன். என் நெஞ்சு துடிக்க ஆரம்பித்தது. “அப்படியா?”என்று அசட்டுத்தனமாகக் கேட்டேன்.
”இவளிடம் கேளுங்கள். இவள் அம்மா இவளை முன்னால் நிற்கவைத்துவிட்டாள். ஒருநாளைக்கு எத்தனைபேர். எல்லாரும் குடிகார எருமைகள்…”
அனிச்சையாக நான் ஸ்ரீபாலாவைப் பார்த்தேன். பார்த்திருக்கக் கூடாது. அவள் பலவீனமாக புன்னகைத்துவிட்டு திரும்பிப்போய்விட்டாள். நான் பேசாமல் அவள் போவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
அவள் “பாவம் இவள், நல்ல பெண்” என்றாள். “குடிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள், திட்டாமல் கூட இருக்க எவனாலும் முடியாது. அடிக்காமலாவது இருக்கலாமில்லையா?”
“அப்படியா?”என்றேன். மந்தபுத்தி போல உணர்ந்தேன். என்ன சொல்கிறேன்? என்ன சொல்ல முடியும்?
“பாவம்” என்றபின் அவளுக்குப் பின்னால் ஓடிச் சென்றாள். நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் அதற்குப்பின் ஒரு வாய் சோறை அள்ளி வாயில் வைக்கமுடியவில்லை.
[மேலும்]
ஓஷோ உரை – கேள்விகள்
அன்புள்ள ஜெ,
மூன்றுநாட்கள் ஓஷோ உரையைக் கேட்டேன். முன்பு நீங்கள் ஆற்றிய உரைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உரை. இதிலிருந்த விளையாட்டும் நையாண்டியும் வேறெங்கும் இருந்ததில்லை. விளையாட்டிலிருந்து தீவிரமான விவாதங்களுக்குச் சென்றீர்கள். மீண்டும் திரும்பி வேடிக்கைக்கு வந்தீர்கள். அந்த ஊசலாட்டம் அற்புதமாக இருந்தது.
ஆனால் என் கேள்வி அதிலுள்ள அந்த பாலியல் நகைச்சுவை தேவையான? அதன் பங்கு என்ன? அதை தொடரப்போகிறீர்களா?
ரமேஷ்குமார்
அன்புள்ள ரமேஷ்,
ஆன்மிக – தத்துவ உரைகளில் அதிர்ச்சி -திகைப்பு- நிலைகுலைவு என்னும் அம்சத்திற்கு ஓர் இடமுண்டு. ஆன்மிக -தத்துவ விவாதங்களில் நாம் தொடர்ந்து ஒன்றை அடைந்து உடனே உறைந்துவிடுகிறோம். நாம் காணும் ஆன்மிகப்பேச்சுக்களில் பெரும்பாலானவை உறைந்து கல்லானவர்களால் முன்வைக்கப்படுபவை. தொடங்கும் முன்னரே உறைந்தவர்களே பல்லாயிரம்.
அந்த உறைவை உடைப்பது அவசியமானது. அந்த உடைவு நிகழவில்லை என்றால் மேலே கற்கமுடியாது. அந்த அவைக்கு அந்த உடைவு தேவையாகியது. ஆகவே அந்த உரை அப்படி அமைந்தது. அது என் வழியெல்லாம் அல்ல.
ஜெ
அன்புள்ள ஜெ,
உரையில் நீங்கள் உங்கள் நண்பர்கள் இருவர் ஓஷோ பற்றிப் பேசவந்ததைச் சொன்னீர்கள். ஆனால் சொல்லி முடிக்கவில்லை. அங்கிருந்து பேச்சு நகர்ந்துவிட்டது. உரையில் மெல்லிய குறிப்பு இருந்தது. அவர்கள் என்ன சொன்னார்கள்?
பார்த்தா
அன்புள்ள பார்த்தா,
என் நண்பர்கள் போகன் சங்கர், அனீஷ் கிருஷ்ணன் நாயர் இருவரும் வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தனர். ஓஷோ உரைபற்றிய பேச்சுவந்ததும் இருவரும் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். போகன் ஓஷோ வழியாக நவீன ஆன்மிகத்தின் பல இடங்களில் அலைந்தவர். அனீஷ் ஆசாரவாதி, மாத்வ மரபைச் சேர்ந்தவர்.
இருவரும் சொன்ன இரு கோணங்களினான மறுப்புகள் இரண்டுவகையில் பொருள் கொண்டவை என்று சொல்லவந்தேன். ஓஷோ சொன்ன அந்த ‘இன்று’ இப்போது இல்லை என்று போகன் சொன்னார். ஓஷோவின் பார்வையில் மரபை எளிதில் மறுத்துவிடமுடியாது என்று அனீஷ் கிருஷ்ணன் சொன்னார்.
அக்கருத்துக்களை விவாதித்தேன் என நினைக்கிறேன்.
ஜெ
அன்புள்ள ஜெ,
உங்கள் ஓஷோ உரை மிக மிக விரிவானது. தொட்டுத்தொட்டு சென்று ஒட்டுமொத்த மெய்ஞான மரபிலும் ஓஷோவை பொருத்திப்பார்க்கிறீர்கள். என் எளிமையான கேள்வி என்னவென்றால் இதை நாம் எல்லா ஞானிகளிடமும் செய்யவேண்டுமா என்ன? இப்படிச் செய்யும் அறிவுப்பயிற்சி இருந்தால்தான் அவர்களை அணுகமுடியுமா?
மேலும் இத்தகைய அறிவுப்பயிற்சிகள், அறிவுநிலைகள் எளிமையான ஆன்மிகத்துக்கு எதிரானவை அல்லவா?
ஜெயராம் கிருஷ்ணன்
அன்புள்ள ஜெயராம்
எல்லா ஞானிகளையும் இப்படி வகுத்தாகவேண்டும் என்று இல்லை. பெரும்பாலானவர்கள் எங்கே நிலைகொள்கிறார்கள் என்பது மிகத்தெளிவு.
ஆனால் ஓஷோ போன்றவர்கள், அவர்களின் வழிச்செல்பவர்களால் முன்னும் பின்னும் எவருமில்லாத தனித்தன்மை கொண்டவர்கள் என முன்வைக்கப் படுகிறார்கள். அவர்களிடம் வேறெதையும் வாசிக்காதே என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே அவர்கள் அந்த மாயையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் மானுட வரலாற்றிலேயே முதல்முறையாக ஓஷோ சிலவற்றைச் சொன்னார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர் எங்கே வேர்கொண்டு எங்கே பரவுகிறார் என்று சொல்லவேண்டியிருந்தது.
ஓஷோ தந்த்ரா உட்பட பலவற்றை விளக்குகிறார். ஆனால் அவர் வழியாக மட்டுமே அவற்றை அறிந்துகொள்வது ஆபத்து. அவரிடம் நாம் அடைவது அவர் அளிக்கும் விளக்கம் மட்டுமே. அவை அவருக்கு முன்னரே வேரூன்றிச் செழித்த மரபுகள். அம்மரபுகள் மெய்ஞானப் பரப்பில் எங்கே உள்ளன, என்னென்ன பொருள்கொண்டிருக்கின்றன என்னும் புரிதல் ஒருவருக்குத் தேவை. ஆகவே ஓர் அறிமுகக்குறிப்பை அளிக்கவேண்டியிருந்தது.
ஆன்மிகம் அறிவுநிலைக்கு எதிரானது என்பது ஓர் பிழையான புரிதல். நம் ஆன்மிகச்செல்வர்கள் பலரும் பேரறிவாளர்கள்தான். அரிதாக யோகநிலை வழியாக அறிவுநிலையை கடந்தவர்கள் இருக்கலாம். ஆனால் அறிவின்மை என்பது ஆன்மிகம் அல்ல. அறிவுகடந்த நிலையே ஆன்மிகம். அறிவினூடாகவே அது இயல்வதாகும்.
அறியாமை எவரையும் விடுவிக்காது, மேலெடுத்துச் செல்லாது. அது ஒருவகை அழுக்கு மட்டுமே. ’தன்மையப் பார்வை’, ’இறுகிய கருத்துநிலை’, ’கண்மூடித்தனமான பற்று’ ஆகிய மூன்றும் அதன் மூன்று தோற்றங்கள். மூன்றையுமே நீங்கள் ஓஷோ பற்றிய என் உரையின் அடியிலுள்ள பின்னூட்டங்களில் பார்க்கலாம்.
ஜெ
ஓஷோ- கடிதங்கள் ஓஷோ- உரை- கடிதம் ஓஷோ,கோவை, நான்குநாட்கள்இரு கடிதங்கள், பதில்கள்
அன்புள்ள ஜெ,
This is official now. I am addicted to you. தாங்கள் எழுதிய அல்லது பரிந்துரைத்த ஏதாவது புத்தகம் என் அலமாரியில் படிக்கப்படாமல் இல்லாமல் போனால் பதட்டமடைகிறேன். கூரியரில் வந்துகொண்டிருந்தால் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை எங்கே வருகிறது என்று பார்க்கிறேன். கையிருப்பில் பணம் குறைந்து கொண்டே வந்ததால் இன்று புறப்பாடு நூலைத் திருட்டு pdfஆகத் தரவிறக்கம் செய்தேன் (முதல் பாகத்தைத் தங்கள் தளத்தில் படித்துவிட்டேன்). பின்னர் அதை ரத்து செய்துவிட்டு amazonஇல் order செய்திருக்கிறேன். இனி அது வந்து சேர ஒரு வாரம் ஆகும். இன்று தங்களது ஓஷோ உரையைக் கேட்ட போது உள்ளே கொதித்துக்கொண்டிருந்த ஏதோ குளிர்வது போல் உணர்ந்தேன். நிகழ்காலத்தில் உங்கள் இருப்பை உணர்வது இது எனக்கு முதல் முறை. Weirdஆக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் முகத்தோடு முகம் வைத்து உரசுவது போல் கற்பனை செய்துகொண்டேன்.
விஷ்ணுபுரத்துக்குப் பிறகு நான் ஆவல் தாங்காமல் காத்திருக்கும் புத்தகம் யதி : தத்துவத்தில் கனிதல். பல முறை தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் தொல்லை கொடுத்துவிட்டேன். நாளை வந்துவிடும் என்றிருக்கிறார்கள். புலி வாயில் சிக்கிய மான் போல் குருவிடம் சீடன் சிக்க வேண்டும் என்பார் ரமணமகரிஷி. எழுத்தாளரிடம் வாசகனும் அப்படித்தான் சிக்குகிறான் போல.
அன்புடன்
பன்னீர்செல்வம்
அன்புள்ள பன்னீர்செல்வம்,
நன்றி. தீவிரமான வாசிப்பு என்றல்ல, தீவிரமான எதுவும் உண்மையில் கற்றல் அனுபவங்கள். என் நண்பர் ஒருவர் சட்டென்று கதகளிப் பிரியரானார். என் வழியாகத்தான். காய்ச்சல்போல சில ஆண்டுகள் அவரை அது ஆட்டிவைத்தது. எந்த ஒரு புதிய கலைக்குள்ளும், அறிவுத்துறைக்குள்ளும் நுழைகையில் அந்த அதிதீவிர அர்ப்பணிப்பு நிகழவேண்டும். அது நம்மை மிகக்கூர்மையானவர்களாக ஆக்கும். நெடுந்தொலைவு கொண்டுசெல்லும்
கடைசியில் கணக்கிட்டுப் பார்த்தால், இந்த வாழ்க்கையில் இப்படிச் சில ’அடிக்ஷன்’கள் தவிர ஏதும் பெரிய பொருட்டாக இல்லை. இருபது முப்பதாண்டுகள் கழித்து திரும்பிப்பார்க்கையில் இப்படி ‘பித்தெடுத்து அலைந்த’ நாட்களே மெய்யான வாழ்க்கையாக இருந்திருக்கின்றன என்று தெரியவரும்.
எந்த பித்துக்கும் ஆட்படாத உள்ளம் கொண்டவர்கள் ,ஜாக்ரதையானவர்கள், இழப்பே இல்லாதவர்களாகவும் எங்குமே உரசிக்கொள்ளாதவர்களாகவும் மறுகரைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் அடைந்தவை என ஒரு சில கணங்கள்கூட இருக்காது. அவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள், வெறுமே கடந்து சென்றிருப்பார்கள். அதற்காகவா வந்தோம்?
ஜெ
வணக்கம் ,
என் முதல் புத்தக வாசிப்பு பொன்னியின் செல்வன்.அதன் பிறகு நான் வெண்முரசு மட்டுமே வாசிக்கிறேன் வாசித்து வாசித்து சொல்லமுடியாத மணக்கிளர்ச்சி அடைகிறேன்.
எங்கள் கிராமத்தில் ஓர் அறக்கட்டளை தொடங்க ஆசை. உங்க வழிகாட்டுதல் வேண்டும். உங்க வெண்முரசு வாசகர்கள் நாங்கள்.நான் Dubai ல UNITED HEALTHCARE LLC நிறுவனம் நடத்திட்டு இருக்கிறேன் 40% பங்கில். உங்க எல்லா வீடியோ வும் follow பண்ணிருக்கிறேன்.
நன்கொடை சரியானதா இருக்கவேண்டும். அது கோவிலுக்கும் கேளிக்கைக்கும் இருந்துவிடக்கூடாது என்று நீங்க ள்சொன்னதற்கு பிறகுதான் அதை மட்டுமே செயெதேன். நான் இப்போது ஒரு 5 லட்சம் சேர்த்து இருக்கிறேன்
என் பெயர் செல்வராஜ் +1மனைவி பெயர் செல்வி mphil Bed மகன் செ.செ.varsan மகள் செ. செ. சைதன்யா. எனது மகள் பெயர் உங்கள் எழுத்தின் மேல் இருந்த பெரு விருப்பத்தால் வைத்தேன் .
உங்களுக்கு நேரம் இருந்தால் உங்களது வாசகர் உங்களை 15 நிமிடம் சந்திக்க அனுமதி கிடைக்குமானால் எங்களுக்கு உங்கள் அறிவுரை வழிகாட்டல் வேண்டும்.
எனது நீண்ட நாள் ஆசை, அடுத்த வருடம் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவுக்கு வரவேண்டும்
செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்
வெண்முரசு வாசிப்பதில் மகிழ்ச்சி. நாம் சந்திப்போம்.
சேவை குறித்த எண்ணங்கள் ஒருவரின் மன உயர்வைக் காட்டுகின்றன. அவைதான் வாழ்க்கையை நிறைவுற்றதாக்குகின்றன. ஆனால் மறுபக்கம் தெளிவான யதார்த்தநோக்கும் தேவை. இல்லையேல் சீக்கிரமே ஏமாற்றம் ஏற்படலாம். உடனே அறம், சேவை ஆகியவற்றின்மேல் ஒவ்வாமையும் உருவாகலாம். அது பெரிய ஆன்மிக இழப்பு.
சேவை என்றால் எந்த சேவை, அதன் தேவை உள்ளதா , அதைச் சிறப்புறச் செய்ய இயலுமா என்று சிந்திக்கவேண்டும். அதில் உறுதிப்பாடு வேண்டும். அதன்பின்னரே முடிவெடுக்கவேண்டும்
எந்தச் சேவையும் உடனடியாக கண்கூடான பயனை வெளிப்படுத்தாது. எளிதில் அங்கீகரிக்கவும் பெறாது. நம் தரப்பில் சரியாகச் செய்யவேண்டும், நாம் நிறைவுறவேண்டும், அதுவே போதும் எனச் செயல்படுபவர்களே நீண்டநாட்கள் செயல்படுகிறார்கள். நீண்டநாட்கள் செயல்படுபவர்களே உண்மையான சாதனைகளைச் செய்கிறார்கள். கொடைகளை அளிக்கிறார்கள்
சேவை எதுவானாலும் அது நம்மால் செய்யப்படவேண்டும். நம் கண்காணிப்பில் நிகழவேண்டும். ஏனென்றால் சேவை என்பது எளிதல்ல. உலகியலில் ஈடுபடுபவர்களால் அதைச் செய்ய முடியாது. ஓர் ஆன்மிகமான எழுச்சியே தன்னலத்தை விட்டு மேலெழச்செய்து சேவைக்கு மனிதர்களைச் செலுத்துகிறது. ஆனால் அந்த ஆன்மிக எழுச்சி மிக தற்காலிகமானது. மிக எளிதில் தன்னலத்துக்கு வழிவிடக்கூடியது.
ஆகவே தொடர்ச்சியாக தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டு செயல்படவேண்டியது. மனிதர்கள் எவராயினும் அதை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆகவே சேவைக்குப் பிறரை எதிர்பார்ப்பவர் எளிதில் ஏமாற்றமடைவார். தன்னுடைய சேவை சார்ந்த மனநிலையை தொடர்ச்சியாக ஆன்மிகமாக, உணர்ச்சிகரமான, கருத்தியல் ரீதியாக திரட்டி மறுபடியும் குவித்துக்கொள்ளாதவர் காலப்போக்கில் ஆர்வமிழப்பார்.
இந்த தெளிவுடன், எந்த மிகையான கனவும் எதிர்பார்ப்பும் இல்லாமல், சின்ன அளவில் தொடங்குங்கள். வாழ்த்துக்கள்
ஜெ
சிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நிறைவிலி கதை விவேகானந்தர் சூத்திரர்களை நோக்கிச் சொன்னதை நினைவுறுத்துகிறது. நீங்கள் சென்றகாலத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் வருங்காலத்தில் அடையவேண்டும். ஆகவே இருமடங்கு விசையுடன் எழுக என்று அவர் சொல்கிறார். ஆனால் சூத்திரர் உட்பட அத்தனை பேராலும் கீழே தள்ளப்பட்ட ஆதிவாசிகளுக்கு போடவேண்டுமென்றால் இந்த உலகமே தேவை
நூறுநாற்காலிகள் வேண்டும் என்று காப்பன் சொன்ன வரியின் இன்னொரு வடிவம்
செந்தில் முருகேசன்
அன்புள்ள ஜெ
நிறைவிலி. நான் ராமச்சந்திர குஹா எழுதிய வெரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் என்ற நூலை வாசித்திருக்கிறேன். முதலில் பழங்குடிகளை சீர்திருத்துவதற்காக காட்டுக்குள் செல்லும் எல்வின், பழங்குடி வாழ்வு தான் அனைத்து வகையிலும் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார். அம் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, இறையியல் ஆகியவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு, இது உங்கள் நவீன நாகரீகத்தை விட எவளவோ மேன்மையான வாழ்வு என்று உலகிடம் காட்டுகிறார். அதில் கோண்டு பழங்குடிகளும் உண்டு்.
கார்பரேட்டில் இருக்கும் ராம் சந்தீப்க்கு அந்த மலையில் ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது, அங்கு அம்மக்கள் கூலிகளாக இருக்கிறார்கள். பாங்கா ராய் பழங்குடி வாழ்வில் இருந்து நகரத்துக்கு வந்து நிகழ்வுகள் நடத்தி தரும் தொழிலில் இருக்கிறாள். இரு வேறு பூர்வீகத்தில் இருந்து விரிந்த நவீன தொழில் வடிவங்கள். ராம் காப்பி குடிக்காதது எவ்வளவு பெரிய இழப்பு என்று சொல்கிறான். பழங்குடிகளை இழந்தது இன்றைய நாகரீகத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு.
தன் பிறப்பையும் அது தரும் உணர்வுகளையும் கடந்துவிட்டதாக பாகா ராய் நினைக்கிறாள். ஆனால் அவள் கடக்கவில்லை. அவளால் காப்பி குடிக்கமுடியவில்லை . சுவரில் ஒட்ட பட்டிருக்கும் அந்த தன் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அவளால் பார்க்க முடியவில்லை. அது இரண்டும் அவளை தொந்தரவு செய்கிறது. இருவருக்கும் காப்பி தரும் பொருள் வேறு வேறு. தான் பழங்குடி என்று அவனுக்கு தெரிந்த பின்னர்தான் அவள் ராம் என்று பெயர் சொல்லி அழைக்க துவங்குகிறாள்.
உன் தட்டு நிறைய வேண்டாம் அப்பொழுதான் நீ மேல சென்று கொண்டிருக்க முடியும் என்று சொல்கிற ராம் சந்தீப் தான் அந்த தட்டை குறையுள்ளதாக ஆக்கினான். ஆத்மார்தமாக என்றாலும் அவன் ஆளுமை நிர்வாகத்தை பற்றி ஒரு கோண்டுக்கு பாடம் எடுக்கிறான்.
நிறையவே கூடாது என்பது ராமின் வேரில் இருந்து வந்த சித்தாந்தம். பொழிவேன் என்பது பகா வின் வேரில் இருந்து வந்த சித்தாந்தம். எந்த நவீன நாகரீகம் பழங்குடி வாழ்வை அழித்ததோ, அது தன் காண்ணாடி ஜன்னலுக்கு வெளியே வைத்து இயற்கையை ரசிக்கிறது. தலையை சுற்றி மூக்கை தொடுகிறது.
நிறையவே நிறையாது என்றால் ஒன்றை ஏன் செய்யவேண்டும். பழங்குடி வாழ்கை போதும் என்று நிறைவுண்டு இருப்பதுதான். நிறைவடையாதே என்பது தான் இன்றைய நாகரீகம். பகா ராய் இரண்டு முரண்களுக்கு இடையே மாட்டி இருக்கிறாள். மானுடமே அப்படிதான் மாட்டியிருக்கிறது.
இல்லை. மீண்டும் பகா ராய் நவீன வாழ்வில் தன் பழங்குடி அழகையும் நர்மனத்தையும் பரப்புகிறாளா. அதுதான் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே உருவாகி வரும் தோட்டமா. நிகழ்வுகள் கொண்டாட்டமாக இருக்வேண்டும் என்று உருவான அலையா. பகா ராய் இரண்டுக்குமான சந்திப்பு புள்ளியாக இருக்கிளா. இரண்டு வாழ்வுகளை நாகரீகங்களை ஒன்றாக இணைக்கிறாளா. அதுதான் இறுதி நன்றியும் கைகுழுக்களுமா.
இழை கதையை தொடர்ந்து வரும் கதை வரிசை யார் அடிமை, எது அடிமை என்று கேட்கிறது என்று நினைக்கிறேன்.
நன்றி
பிரதீப் கென்னடி
சிற்றெறும்பு [ சிறுகதை]அன்புள்ள ஜெ,
நலம்தானே?
சிற்றெறும்பு அதிகமாக வாசிக்கப்படாமல் போன ஒரு கதை. அது முழுக்கவே பழிவாங்குவதைப் பற்றிய கதை. பழிவாங்குவதிலிருப்பது ஆணவம் அல்லது தன்மதிப்பு. அது சீண்டப்பட்டால் எங்கோ பழிவாங்கித்தான் தீர்வார்கள். கதைசொல்லுபவனின் கதை ஒரே வரியில் வந்துசேர்கிறது. அவன் துரோகமிழைக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சிப்பகுதிக்கு தப்பி ஓடி வந்தவன், அங்கே அடிமைவேலை செய்கிறான். அவனுக்கு துரையை, ஆதிக்கத்தை பழிவாங்கும் வெறி இருக்கிறது.
துரைச்சானிக்கு துரையை பழிவாங்கும் வேகம் அவளை அறியாமலேயே எங்கோ இருக்கிறது. அந்தச் ’சிற்றெறும்பு’க்கும் அந்த பழிவெறி இருக்கக்கூடும். அவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி பாதிக்கிறார்கள் என்பதுதான் கதையின் கண்காணாத பின்னல். சொல்லப்பட்ட கதையிலிருந்து இந்த வலைப்பின்னலை ஊகிக்கும்போது மனித உள்ளம் பற்றிய ஒரு பெருந்திகைப்பு உருவாகிறது
ரா. சந்திரசேகர்
அன்புள்ள ஜெ.,
கைபேசியில் தளத்தில் உங்கள் கதையைத் திறந்தவுடன் முதலில் நான் செய்வது விரலால் மேலிருந்து கீழாக ஒரு தேய்ப்பு. வலது ஓரத்தில் ‘scroll bar’ என்ன சைஸில் இருக்கிறது என்று பார்த்துக்கொள்வேன். கடுகு சைஸில் மேல் மூலையில் மினுங்கிக்கொண்டிருந்தால் மனதுக்கு நிறைவாக இருக்கும். ‘கல்கோனா’ போல நிதானமாக ‘வைத்து’ச் சாப்பிடலாம். தூக்கம் பிடிக்காமல் ஒவ்வொரு பள்ளியெழுச்சியின் போதும் கொஞ்சம் படிப்பது. பின் மறுநாள் எழுதப்போகும் கடிதத்தின் வரிகளை யோசித்துக்கொண்டே படுத்திருப்பது வாடிக்கை. ‘சரி, அதான் எழுதுறாங்கள்ல’ என்று ஒழிந்துவிட்டு தூக்கமுயற்சி அடுத்த பள்ளியெழுச்சி வரை. சில கதைகள் ஒவ்வொரு பள்ளியெழுச்சியின் போதும் முழுமையாகப் படிக்கச் செய்பவை. இது ரெண்டாவது வகை. மூன்று முறை படித்தேன் ஒரே இரவில்.
துரையின் இருப்பிடத்தையும், அவர் வேலைக்காரர்களின் அதிகாரவட்டத்தையும், கதைசொல்லியின் ‘சாதனைகளை’யும், உளவியலையும் விவரிக்கும்போதே உங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விடுகிறீர்கள். நான் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேம்பரில் தாசில்தார் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் அந்த நீண்ட இரும்புக்கழியைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் ‘பங்கா’ (Punkah) தொங்கிக்கொண்டிருந்தது அங்கே. பரவலாக மின்விசிறி வருவதற்கு முன்னால்கூட ‘பங்கா புல்லர்’ என்ற பதவியும், ஆட்களும் இருந்தார்கள் என்றார் தாசில்தாராக ஓய்வு பெற்ற என் தந்தை. அடித்துணி முகர்தலை (Bromidrophilia) வைத்து அசாதாரணமான கதை ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். Paraphilic பிறழ்வினைப் பற்றிய கதை. ஆனால் பிறழ்வெழுத்து அல்ல. விலங்குக்கும் இரைக்கும் நடக்கும் உளவியல் ஆட்டம். ஆனால் இந்த விலங்கும் கூட தன்னிச்சையாக வேட்டையை நிகழ்த்த முடிந்த விலங்கல்ல. அதற்குமேல் வேறொரு பெரிய விலங்கு கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இரையும் சாதாரண இரையல்ல. கதைசொல்லி செவத்தானை சிற்றெறும்பு என்கிறான். துரைக்கு இவனுமே சிற்றெறும்புதான். ஆனால் இந்தச் சிற்றெறும்பை காதில் புகுத்தி எத்தனை யானைகளை விழுத்தாட்டியிருப்பான் துரை.
துரையே மெச்சும்படி ஆங்கிலம் பேசும் செவத்தான் ஒரு இலக்கிய வாசகனாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ‘தையல் படிக்கணும்னு மாடலுக்காகத்தான் திருடினேன்’ன்னு துரைகிட்ட சொன்னால் அவர் நம்பிடுவாரா என்ன? உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாத உடல்மொழியும், பார்வையும் கதைசொல்லிக்கு மட்டுமே சொந்தமா என்ன? “நாமளும் பதிலுக்கு என்னமாம் செய்யணும்லடே?” யோடு கதை முடிந்திருந்தால் அது வேறு கதை. அதற்கடுத்த நான்கு வரிகளில் நீங்கள், புனைவுலகின் உச்சத்திலிருக்கும் எழுத்தாளனாக ஆடியிருப்பது, ஊழிக்கூத்து. கதை முடியவில்லை என்றுதான் நினைக்கிறேன். ‘நீ ஆடு தல’ என்றுதான் சொல்லத் தோன்றியது. ஆட்டம் தொடரட்டும்.
அடித்துணி முகர்தலைப் பற்றிய ஞானத் தேடலை நிகழ்த்தியபோது கிடைத்த ஒரு கட்டுரை கீழே. இன்பம் துய்ப்பதன் எல்லையில்லா சாத்தியக்கூறுகள். ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ என்று சும்மாவா சொல்லியிருப்பான் நம் முப்பாட்டன்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதைMarch 31, 2021
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-1
[ 1 ]
ஸ்ரீராஜவிஜயேஸ்வரி என்று ஒரு தெலுங்கு படம். 1951ல் அது வெளியான காலகட்டத்தில் ஒரு சராசரி வெற்றிப்படம். ஏனென்றால் அதன் பட்ஜெட்டுக்கு அது மும்மடங்கு வசூல் செய்திருக்கவேண்டும். அதோடு அது அன்றைய மற்ற பெரிய தெலுங்குப் படங்களைப்போல தமிழில் டப் செய்யப்படவுமில்லை. நஷ்டம் வராமல் தப்பித்தது.
ஆனால் பின்னர் அது ஒரு கல்ட் கிளாஸிக் தகுதியை அடைந்தது. இந்தியாவின் மிகச்சிறந்த நூறு படங்களின் பட்டியலில் அந்தப்படத்தை அடிக்கடிச் சேர்ப்பார்கள். அழியாவரம் பெற்ற பாடல்கள், திரைக்கதை ஒருமை, மிதமான நடிப்பு ஆகிய அனைத்துக்கும் மேலாக வெளிப்புறப் படப்பிடிப்பில் அது அன்று ஒரு சாதனையாக கருதப்பட்டது.
கறுப்புவெள்ளைப் படம் அது. என்.டி.ராமராவ் நடித்திருந்தார். இளமையான, பெரிய குரல்வளை கொண்ட, அழகான என்.டி.ஆர். நுரைபோன்ற சுருட்டை முடியுடன் குண்டுச் சின்னப் பெண்ணான பானுமதி அவருக்கு ஜோடி. எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் கண்டசாலா இசையமைத்த பதிமூன்று பாட்டுக்கள். பின்னர் மிகப்பிரபலமாகி அதே சாயலில் பல பாடல்களை உருவாக்கின.
ஆகவே அந்தப்படம் தலைமுறை தலைமுறையாக பார்க்கப்பட்டது. அடுத்தடுத்த ரிலீஸ்களில் வெற்றிபெற்றுக்கொண்டே இருந்தது. எங்கோ ஏதோ தியேட்டரில் அதன் எல்லா பிரிண்டுகளும் ஓடிக்கொண்டேதான் இருந்தன. டிவி வந்ததும் அது மீண்டும் புகழ்பெற்றது. யூடியூபிலும் இருக்கிறது. யார் யாரோ அதற்கு உணர்ச்சிகரமாக பின்னூட்டமெல்லாம் போடுகிறார்கள். பலர் இப்போது வயோதிகர்கள். அவர்களுக்கு அந்தப் படம் அவர்களின் இனிமையான இறந்தகாலத்தில் ஜொலித்த ஒரு நட்சத்திரம் போல.
அது ஒரு காதல்கதை. சரித்திரப்பின்னணி கொண்டது. விஜயேஸ்வரி ஒரு சாதாரணப் பெண். அவளை முறைப்பையன் நல்லமராஜு காதலிக்கிறான். அன்று ஒருவழக்கம் இருக்கிறது, ஒரு பெண் எல்லா இலக்கணங்களும் ஒத்து அமைந்தவள், அரச ஜாதகமும் உள்ளவள் என்றால் அவளை அரண்மனைக்கு ராணியாக கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.அவளை வேறு அரசர்கள் மணந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கைதான் ஒரு காரணம். அவள் வழியாக அரசகுடியில் தகுதியான குழந்தைகள் பிறக்கவேண்டும் என்பது இன்னொரு காரணம்.
அந்தப்பெண்ணைப் பற்றிய செய்தி பரவினால் அவள் வீட்டுக்கு ஒரு பல்லக்கு நிறைய நகைகளும் பட்டும் வரும். அதை பெண்ணின் பெற்றோர் எடுத்துக்கொண்டு அந்தப் பல்லக்கில் பெண்ணை ஏற்றி அனுப்பிவிடவேண்டும். அதற்கு ராணிவாசம் என்று பெயர். அதன்பின் அவளை அவர்கள் பார்க்கமுடியாது. அவள் அரண்மனையில் வாழ்வாள். அது அந்தப்பெண்ணுக்கும் அவள் குடும்பத்திற்கும் மிகப்பெரிய கௌரவம், அதிருஷ்டம். அந்தக் குடும்பம் அந்த ஜாதிக்கு தலைமை வகிக்க முடியும். ஆட்சி செய்ய நிலம்கூடக் கிடைக்கும்.
விஜயேஸ்வரியின் ஜாதகம் அப்படிப்பட்டது. எல்லா லக்கினங்களும் அவளை அரசி என்றே காட்டின.அவள் சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவள். ஆகவே அவளை விஜயநகரத்து அரசர் கிருஷ்ணதேவராயரின் அரண்மனைக்கு கூட்டிச்சென்று விடுகிறார்கள். அவள் பெற்றோர் அதில் பெருமிதம் அடைகிறார்கள். சகோதரர்கள் கொண்டாடுகிறார்கள். அவள் ஜாதியே களியாட்டமிடுகிறது.
ஆனால் நல்லமராஜு தன் காதலியை விட முடியாமல் தவிக்கிறான். கடைசியில் அவளை தேடிச்செல்கிறான். விஜயநகரத்திற்குள் நுழையவே முடியவில்லை. ஆகவே ஒரு சிற்பக்குழுவில் சேர்கிறான். நன்றாக புல்லாங்குழல் வாசிக்கும் அவனை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடன் நகரத்திற்குள் செல்கிறான். தந்திரமாகக் கட்டுக்காவல்களை மீறிச்சென்று அரண்மனையில் சிறையிருக்கும் அவளைச் சந்திக்கிறான்.
அவளும் அவன்மேல் பைத்தியமாக இருக்கிறாள். அரசபோகத்தை அவள் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இரவுகளில் அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். பிடிபடும் அபாயம் இருந்தும் அவர்களால் சந்திக்காமலிருக்க முடியவில்லை. அங்கிருந்து அவளை அழைத்துச்செல்ல நல்லமராஜு முயல்கிறான். ஆனால் தப்பி ஓடும்போது காவலர்களிடம் பிடிபட்டு தூக்கில் தொங்கவிருக்கிறான். ஏற்பாடுகள் நடக்கின்றன.
தன் பட்டத்தரசி வழியாக அச்செய்தியை அறிந்த கிருஷ்ண தேவராயருக்கு ஆச்சரியம். ஒரு பெண் ஏன் அரசிப்பட்டத்தை துறந்து ஓடவேண்டும்? அவளை விசாரிக்கிறார். அவளுக்கு அரசிப்பட்டம், சுகபோகங்கள் எதுவுமே தேவையில்லை. அவன் மட்டும் போதும். அவனுடன் அவளையும் கொல்ல ஆணையிடுகிறாள். அரசியாக வாழ்வதை விட அவனுடன் சாவதையே அவள் தேர்வுசெய்கிறாள். அவர்களின் மெய்க்காதலை உணர்ந்த கிருஷ்ணதேவராயர் அவனை விடுவிக்கிறார். அவளை அவனுக்கு அவரே திருமணம் செய்துவைத்து சீர் செய்து அனுப்பிவைக்கிறார்.
அது எனக்கு முக்கியமான படம். ஏனென்றால் அந்தப் படத்துடன் என்னுடைய சினிமா வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. ஆனால் நான் சினிமாவில் தையல்காரனாகத்தான் இருந்தேன். சினிமாவை விட்டுவந்தபிறகு இன்னும் நன்றாகத்தான் வாழ்க்கை அமைந்தது. குண்டூரில் ஒரு தையல்கடை வைத்தேன். சப்தகிரி டெய்லர்ஸ் ஒரு காலத்தில் குண்டூரில் சூட் தைத்துக்கொள்வதற்கு இருந்த ஒரே கடை என்னுடையதுதான். என்னுடைய ‘கர்வ்ஸ்’ அழகாக கச்சிதமாக இருக்கும்.
ஊரிலேயே சொந்தத்தில் வீடு வாங்கினேன். இரண்டு பிள்ளைகளை படிக்கவைத்து ஒரு பெண்ணை கட்டிக்கொடுத்தேன். பெண்ணுக்கும் ஒரு வீடு வாங்கிக்கொடுத்தேன். பையன்களுக்கும் பெண்ணுக்குமே இப்போது வயது ஐம்பது தாண்டிவிட்டது. மனைவி மறைந்து விட்டாள். நான் மகளுடன் குண்டூரிலேயே இருக்கிறேன். இன்று என் சினிமாக் காலகட்டம் இளம் வயதில் நான் கண்டு மறந்த ஒரு கனவுபோல. அது கனவாகவே நீடிக்க ஒரு காரணம், நான் ஐம்பதுகளுக்குப்பின் புதிய படம் என எதையுமே பார்த்ததில்லை. நான் பார்த்த கடைசிப்படமும் ஸ்ரீராஜவிஜயேஸ்வரிதான்.
ஐம்பதுகளில் என் தாய்மாமா ராவுரி சுப்பா ராவ் சினிமாவில் இருந்தார். சென்னையில் தையல்கடை வைத்திருந்தவர் சினிமாவுக்கு துணி தைக்க ஆரம்பித்து அதையே முழுநேரத் தொழிலாக ஆக்கிக்கொண்டார். நான் அவருக்கு உதவியாக என் அம்மாவால் அனுப்பப்பட்டேன். தையல் கற்றுக்கொண்டேன், கணக்குவழக்குகளும் பார்ப்பேன். தாய்மாமா வழியாக நானும் சினிமாவுக்குள் நுழைந்தேன். மூன்று படங்களில் என் பெயர் தையற்கலை உதவியாளர்களின் பட்டியலில் முதலாவதாக மோட்டூரி ராமராவ் என்று கறுப்புவெள்ளையில் நடுங்கியபடி மின்னிச்செல்லும்.
நான் சினிமாவில் நுழைந்தபோது எனக்கு பதிமூன்று வயது. ஏழுவருடம் மூன்று படங்களில் வேலை பார்த்து நான்காவதாக ஸ்ரீராஜவிஜயேஸ்வரியில் வேலை பார்க்கும்போது எனக்கு இருபது வயது. மீசை பட்டுபோல இருக்கும். குரல் பெண்மைச் சாயல் கொண்டது. என்.டி.ஆர் போல பெரிய குரல்வளையுடன் நெட்டையாக, சிவப்பாக இருப்பேன். கண்டசாலாவின் பாடல்களை உருக்கமாகப் பாடுவேன். அது பானுமதி பாடுவது போல் இருப்பதாக நண்பர்கள் கேலி செய்வார்கள்.
எனக்கு அப்போது சினிமா பற்றிய பெரிய பிரேமை எல்லாம் இல்லை. அன்று சினிமா அந்த அளவுக்கு பெரிய பித்தாக ஆகியிருக்கவில்லை. மற்ற பலரையும் போல கொஞ்சம் சலிப்பூட்டும் பொம்மலாட்டமாகவே அது எனக்கு தோன்றியது. புவ்வுல சூரிபாபு, அப்பூரி வரப்பிரசாத ராவ் போல பெரிய நாடக நடிகனாகவும் பாடகனாகவும் ஆகிவிடவேண்டும் என்றுதான் ரகசியமாகக் கனவுகண்டேன். அன்று அவர்கள் ஆந்திராவில் சினிமா நடிகர்களைவிட பெரிய ஆட்கள்.
என் தாய்மாமாவுக்கு பெரிய இசையார்வம் இல்லை என்றாலும் ஒரு கௌரவத்திற்காக கிராமஃபோனும் எல்பி ரெக்கார்டுகளும் வாங்கி வைத்திருந்தார். அதில் பெரும்பகுதி நாடகப்பாடல்கள்தான். நான் அக்கால நாடகப்பாடல்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். பாடியபடியேதான் தையல் இயந்திரத்தை ஓட்டுவேன். நிறைய ஆளிருந்தால் மனதுக்குள் பாடிக்கொள்வேன். ஆனால் தையல் பெரும்பாலும் தனிமையில் செய்யவேண்டிய வேலை.
ஆகவே எனக்கு எங்கள் சினிமாவில் நடிக்க வந்த என்.டி.ராமராவ் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவரைப்போன்ற ரெட்டிப்பையன்கள் எங்களூரில் அங்குமிங்கும் அலைவார்கள். பானுமதி கொழுத்த சிறுமியாகத் தெரிந்தாள். அதோடு அந்தப் படத்துக்கு ராஜேஸ்வர ராவ் அமைத்த பாடல்கள் எல்லாமே எனக்கு வெறும் இங்கிலீஷ் பியானோ மெட்டுகளாக அன்று தோன்றின. பொதுவாகவே அந்த சினிமாவில் எனக்கு ஈடுபாடே வரவில்லை.
அன்று சினிமாவில் வேலைபார்த்த பலருக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. ஏனென்றால் அன்றைய சினிமா அப்படி. மலைகளில் வாழும் உயிர்கள் மலையையே பார்த்திருப்பதில்லை அல்லவா? அன்று படங்களை பெரிய படநிறுவனங்கள்தான் எடுத்தன. சினிமாவில் வேலைபார்த்தவர்கள் அந்த ஸ்டுடியோவின் ஊழியர்கள் அவ்வளவுதான். ஒவ்வொருநாளும் நேரத்துக்கு வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை விரும்பியோ விரும்பாமலோ செய்து மாதச்சம்பளம் வாங்கிச் செல்வார்கள். பல ஸ்டுடியோக்களில் கதாசிரியர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனைக்காரர் எல்லாருமே முழுநேர ஊழியர்கள். சில ஸ்டுடியோக்களில் ஒளிப்பதிவாளரே அப்படித்தான்.
எங்கள் மோகினி ஸ்டுடியோ என்பது ஒரு குட்டி அரசாங்கம் போல. ஒவ்வொரு பிரிவும் மேலும் மேலும் பிரிந்து சென்றுகொண்டே இருக்கும். ஸ்டுடியோ ஓர் எறும்புப்புற்று போல தோன்றும். எறும்புகள் என்ன செய்கின்றன என்றே தெரியாது, ஆனால் எல்லா எறும்பும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும். சில எறும்புகள் வெளியே ஓட சில எறும்புகள் உள்ளே வரும். படப்பிடிப்பு உள்ள நாட்களில் கலைக்கப்பட்ட எறும்புப்புற்றாக ஆகிவிடும்.
அங்கே எல்லாருமே அந்நியர்கள்தான். பல ஆண்டுகளாக வேலைபார்ப்பவர்கள்கூட. பாதி முகங்கள் தெரிந்தவையாக இருக்கும் , ஆனால் அறிமுகமானவர்கள் ஓரிருவர்தான் இருப்பார்கள். செட் அமைப்பது, ஒளி அமைப்பது, ஒப்பனை, ஆடை அலங்காரங்கள், சாப்பாடு ஏற்பாடுகள், வாகன ஏற்பாடுகள், துணைநடிகர்கள் என்று குறைந்தது ஐநூறுபேர் ஒவ்வொருநாளும் வேலைசெய்வார்கள். நிறையபேர் வேலைசெய்ய வேண்டும் என்றால் அவர்களை வேலைசெய்யவைக்க மேலும் நிறையபேர் வேலைசெய்யவேண்டும்.
என் தாய்மாமா மோகினியில் நிரந்தர ஊழியர் போல. மாதச்சம்பளம் இல்லை, தையல்வேலையை குத்தகைக்கு எடுத்தவர் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். எங்கள் குழுவில் நாற்பது முதல் நூறு பேர் வரை வேலைபார்த்தனர். ஸ்டுடியோவின் பின்பக்கம் ஒரு பெரிய கொட்டகைதான் எங்கள் இடம். அங்கே மூன்று பெரிய அறைகள் துணிகளை வைத்து பூட்டுவதற்கு. கொட்டைகையில் ஐம்பது தையல் எந்திரங்கள் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும்.
நான் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே போவதில்லை. ஸ்டுடியோவின்பின்பக்கம் வழியாக நேராக தையல்கொட்டகைக்குப் போகமுடியும். என் கையில்தான் ஓர் அறையின் சாவி இருந்தது. நிறைய நாட்களில் இரவிலும் அங்கேயே தங்கவேண்டியிருக்கும். இளமையில்தான் நாம் அப்படி தீனியிலேயே வாழும் புழு போல ஒரு வேலையில் மூழ்கிக்கிடப்போம். எனக்கு அன்றெல்லாம் வேறொரு வெளியுலகம் இல்லை. நான் சென்னப்பட்டினத்தையே சரியாகப் பார்த்ததில்லை.
தையல் பகுதி வேறொரு உலகம். அது ஒரு ஸ்டுடியோவின் பகுதி என்றே தோன்றாது. உண்மையில் அதெல்லாம் அங்கிருப்பவர்களுக்கே தெரியாது. அவர்களில் பலருக்கு என்ன தைக்கிறோம் என்றே தெரியாது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்வார்கள். அது ஒரு மாபெரும் திரைச்சீலையின் தொங்கட்டான்களாக இருக்கும். அந்த திரைச்சீலை எங்கே தொங்கப்போகிறதென்று தெரிந்துகொள்ளவே முடியாது. அந்த திரைச்சீலையையே முழுமையாக கற்பனை செய்து பார்க்க முடியாது.
என்னுடைய பொறுப்பில் இருந்தது துணைநடிகர்களின் ஆடைகள், பின்னணித் திரைச்சீலைகள் போன்றவை மட்டும்தான். பெரிய நடிகர் நடிகையரின் ஆடைகள் நல்லையா என்ற சீனியரின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. நல்லையா மாமாவுக்கு நெருக்கமானவர். அவர் கிட்டத்தட்ட பார்ட்னர் போல. அவருடைய இடம் வேறு. அது நடிகர்கள் தங்கும் பங்களாவின் அருகிலேயே ஒரு தனிவீடு. அவருக்கு அங்கே ஏழு தையல்காரகளும் பன்னிரண்டு உதவியாளர்களும் இருந்தார்கள்.
நான் ஸ்டுடியோவுக்குள் செல்வதே இல்லை. அங்கேதான் என்.டி.ராமராவும் பானுமதியும் கிருஷ்ணதேவராயராக நடித்த ஸ்ரீவத்சாவும் திருமலாதேவியாக நடித்த ஸ்ரீகுமாரியும் எல்லாம் வந்துசென்றார்கள். இயக்குநரும் தயாரிப்பாளருமான என்.என்.ரெட்டி வரும்போது அங்கே கேட்கும் ஓசையின் மாற்றத்திலேயே அது தெரியும். ஓர் அலை சுருண்டு பின்வாங்கி கடல் மிகத்தொலைவுக்கு நகர்ந்து சென்றுவிட்டதுபோல தோன்றும்.
என்.என்.ரெட்டி ஒரு பண்ணையார். கண்டிப்பான, திறமையான, அடிப்படையில் நல்லவரான பண்ணையார். அப்படிப்பட்ட பெரிய நிறுவனங்களை கட்டி எழுப்ப நல்லவர்களால்தான் முடியும். கெட்டவர்களுக்கு நல்ல இரண்டாவது அணி அமையாது. நம்பிக்கையான உள்வட்டமும் உருவாகாது. அவர்களாலும் எதையும் எவரிடமும் நம்பி விடமுடியாது. ரெட்டிகாருவின் தம்பிகள் இருவரும் அண்ணன்மேல் பெரிய பக்தி கொண்டவர்கள். ராமனுக்கு பரதனும் லட்சுமணனும் போலத்தான் இருப்பார்கள்.
தயாரிப்பு நிர்வாகத் துறையிலும், கலையமைப்பு துறையிலும் எனக்கு சில நண்பர்கள் இருந்தனர். தயாரிப்பு உதவியாளனாகிய நரசிங்க ரெட்டி என் ஊருக்கு பக்கத்து ஊர்தான். கலை உதவியாளனாகிய நாகலிங்க ஆசாரி தமிழ்நாட்டுக்காரர், ஆனால் தெலுங்கும் நன்றாகப் பேசுவார். அன்றெல்லாம் எல்லா சினிமாக்காரர்களும் தெலுங்கு பேசுவார்கள், பேசியாகவேண்டும். என்னை பார்ப்பவர்கள் இயல்பாகவே தெலுங்கில்தான் பேச ஆரம்பிப்பார்கள். பொதுவாக சினிமாவில் பெயரைக் கேட்பார்கள், அதிலேயே ஜாதியும் இருக்கும். நான் மோட்டூரி ராமராவ் என்றதுமே “ஓ மனவாடு”என்பார்கள்.
புதிய செட் அமைக்கப்பட்டால் நான் சென்று வேடிக்கை பார்ப்பேன். பெரும்பாலும் பின்னிரவில். அவ்வேளையிலும் ஆசாரிகளும் கொத்தனார்களும் குயவர்களும் அடங்கிய அந்தக்கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கும். கடைசியில் படப்பிடிப்புக்கு காமிராமேன் வந்து லைட் அமைக்கும்போது கூட வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களின் வேலை முடிவதே இல்லை. ஒரு ஷாட் எடுத்து, அடுத்த ஷாட் வைப்பதற்குள் ஏதாவது திருத்தம் செய்ய பாய்ந்து வந்து இயக்குநரிடம் திட்டு வாங்குவார்கள். ஸ்வர்கசீமா படத்தை எடுத்தபோது படம் ரிலீசானபிறகுகூட செட்டில் திருத்தங்கள் செய்தார்கள் என்று ஒரு வேடிக்கைப்பேச்சு உண்டு.
ஸ்டுடியோவில் டீ , காபி எவ்வளவு வேண்டுமென்றாலும் கிடைக்கும். ஆனால் சிகரெட் பீடி பிடிக்கக்கூடாது, அங்கே பாதிப்பொருட்கள் காகிதக்கூழால் ஆனவை. சிகரெட் பிடிக்க வெளியே நடந்து நெடுந்தொலைவு போகவேண்டும். ஆகவே அங்கே எல்லாருமே வெற்றிலைவாயர்கள்தான். கால்வைக்கும் இடமெல்லாம் மணலோ மரத்தூளோ கொட்டப்பட்ட தகரடப்பாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதைச்சுற்றியே துப்பி வைத்திருப்பார்கள். புதுப்பெயிண்ட்டின் பாரஃபின் மணமும், மரத்தூளின் அரக்குவாசனையும், துணிகளின் வாஷிங்சோடா மணமும், பிளாஸ்டர் ஆஃப் பாரீசின் சுண்ணாம்பு நெடியும் கடந்து பன்னீர்புகையிலை, வாசனைப்பாக்கு மணம் எழுந்துகொண்டிருக்கும்.
எப்போதாவது என்னை நரசிங்க ரெட்டி அழைத்து “இன்றைக்கு படப்பிடிப்பு பார்க்க வாடா” என்று கட்டாயப்படுத்துவான். அவன் அழைப்பதெல்லாம் நடனக்காட்சிகள் படம் பிடிக்கப்படும்போதுதான். நூற்றுக்கணக்கான நடனப் பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். நாங்கள் தைத்த இறுக்கமான ஜிகினா ஆடைகளை அணிந்திருப்பார்கள். பான்கேக்கால் உரசி அத்தனை பேரையும் செம்மண் சிலைகள் போல ஆக்கியிருப்பார்கள். எல்லையம்மன் கோயிலில் வரிசையாக இருக்கும் சிலைகள் போல கண்ணைப்பறிக்கும் வண்ணங்களுடன் அமர்ந்திருப்பார்கள்.
கறுப்பு – வெள்ளை படமாகையால் வண்ணங்கள் துலக்கமாக மாறுபட்டு தெரியவேண்டும். நாங்கள் தையல் இலாகாவில் வண்ணங்களை ‘காண்டிராஸ்ட்’ என்றே சொல்வோம். “ஈரோயினிக்கு என்ன காண்டிராஸ்டு?”என்றுதான் மாமா கேட்பார். மஞ்சளும் நீலமும், சிவப்பும் கறுப்பும் என பட்டைகளும் பூக்களுமாக ஆடைகள் கண்ணில் அறையும். ஒருத்தியை பார்த்துவிட்டு கண்ணைமூடினாலும் அரைக்கணத்துக்குமேல் கண்ணுக்குள் எஞ்சுவாள்.
வளைத்து வரையப்பட்ட பெரிய புருவங்கள். கன்னத்தில் நீட்டி விடப்பட்ட கன்னங்கரிய கண்மைத் தீற்றல். ரத்தச்சிவப்பு உதடுகள். மார்புகளை பஞ்சுவைத்து பெரிதாக்கி இறுக்கமாக தூக்கி கட்டி இரு செம்புகள் போல ஆக்கி வைத்திருப்பார்கள். இடுப்புத் தசைகளும் பிதுங்கித்தெரியும். அந்தப்பெண்கள் எல்லாம் வேறுவேறு நிறமும் உருவமும் கொண்டவர்கள். ஆனால் அந்த ஒப்பனையில் பெரும்பாலும் அனைவருமே ஒரேமாதிரி இருப்பார்கள். அவர்களின் இயல்புகளும் ஒன்றுதான். சின்னப்பெண்கள் பேச்சு, சிரிப்பு, கிண்டல் என்று இருப்பார்கள். கொஞ்சம் முதிர்ந்தவர்கள் அரைத்தூக்கத்தில் இமைசொக்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் வாய் வழிவதும்கூட உண்டு.
அவர்களுக்கு உடல் பற்றிய சுரணை என்பதே இருக்காது. பெரும்பாலும் ஆந்திராவின் சிற்றூர்களில் பிறந்து, சென்னப்பட்டினத்தின் சேரிகளுக்கு வந்து, எங்கெங்கோ என்னென்னவோ அடிபட்டு, இழப்பதற்கு என்று எதுவும் இல்லாமல் இங்கே வந்து சேர்ந்தவர்கள். அவர்களின் மார்பகங்களை ஒப்பனைக்காரர் அலட்சியமாக கையால் அள்ளி எடுத்து பிதுக்கி அலுமினியக் கச்சுகளுக்குள் வைத்து இறுக்கி கட்டும்போது அதை அறியாமல் அருகிலிருப்பவர்களிடம் பேசிச்சிரிப்பார்கள். அவ்வழியே செல்பவர்களிடம் நையாண்டியாகப் பேசுவார்கள்.
அவர்களிடம் எவரும் உடலுறவு சம்பந்தமாக அல்லாமல் எதையுமே பேசமாட்டார்கள். ஒப்பனைக்காரர் முதல் டீ கொண்டுவருபவர் வரை ஆபாசமாக மட்டும்தான் பேசுவார்கள். அதை எதிர்கொள்ள ஒரே வழி அவர்களும் ஆபாசமாக பேசுவதுதான். நடன இயக்குநர் சிவருத்ரப்பா சின்னவயதிலேயே பரதம் ஆடி ஆடி பெண்மைச்சாயல் கொண்டவர். நடனம் சொல்லிக் கொடுக்கும்போது “ஏண்டி தேவ்டியாளுங்களா, நல்லா தூக்கி ஆட்டுங்கடீ” என்றுதான் பேசுவார். ஆனால் வசைபாடமாட்டார்.
அவருடைய உதவியாளர்கள் கடுமையானவர்கள். குறிப்பாக கொஞ்சம் மூத்த பெண் நடன உதவியாளர்கள். அவர்கள் பழைய நடனக்கலைஞர்கள். ஒத்திகையில் முதுகை முறித்து விடுவார்கள். கையில் நீண்ட பிரம்பு இருக்கும். தப்பாகச் செய்பவர்களுக்கு சுளீர் சுளீர் என அடி கிடைக்கும். தவறாக தூக்கிய கையிலேயே அடி விழும். அவர்களெல்லாம் அத்தனை அனுபவசாலிகள். ஆனாலும் தவறு நடந்துகொண்டேதான் இருக்கும். அடிக்கும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். “அரைமணி நேரம் தட்டு தூக்குறதுக்குள்ள கனக்குதாக்கும்? ராத்திரியிலே எத்தனை வெயிட்டு தூக்குறே? கஸ்மாலம்!” எத்தனை வசையானாலும் சிரிப்பார்கள். மீண்டும் பிழையே செய்வார்கள்.
அது ஏன் என்று நான் யோசித்திருக்கிறேன். அவர்கள் வேண்டுமென்றே தவறுசெய்கிறார்கள் என்று நரசிங்க ராவ் என்னிடம் சொன்னான். அவர்கள் சிவருத்ரப்பாவை பழிவாங்குகிறார்கள், ஸ்டுடியோவில் உள்ள அனைவரையும் பழிவாங்குகிறார்கள் என்பான். ஆனால் உண்மை அது அல்ல. அடிவாங்கிய பெண்கள் அழுவதை கண்டிருக்கிறேன். தனியாக அமர்ந்து அழும் பெண்களைக்கூட கண்டிருக்கிறேன். அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. அவர்களுக்கு இந்த அமைப்பு மேல் ஒரு கசப்பு இருக்கிறது. அதை நையாண்டியாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அது அவர்களுக்குள் இருப்பதனால் ஆட்டத்தில் அவர்களை மீறி வெளிவந்துவிடுகிறது.
அது அங்குள்ள அனைவரிடமும் உண்டு. அவ்வளவுபெரிய ஸ்டுடியோவில், எல்லாமே அவ்வளவு கச்சிதமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும் இடத்தில், எண்ணிக்கையில் வேலை செய்பவர்களுக்கு சமானமாகவே மேஸ்திரிகளும் மேலதிகாரிகளும் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் தவறுகள் நடந்துகொண்டே இருக்கும். அற்பமான பிழைகள், அபத்தமான பிழைகள். ஒருமுறை படப்பிடிப்பு நடக்கும்போது ராயரின் அரசமாளிகையில் ஒரு மூலையில் இருந்த இருக்கைக்கு பின்னால் நஞ்சங்கோடு பல்பொடி விளம்பரத்துடன் ஒரு மஞ்சள்பை தொங்கிக்கொண்டிருந்தது. அதை இயக்குநரே கடைசிநேரத்தில் கண்டுபிடித்து தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார். அத்தனை பெரிய அமைப்பின்மேல் அதன் ஒருபகுதியாக இருக்கும் சாமானியனின் எதிர்ப்பு அது.
நடன ஒத்திகையும் நடனப்படப்பிடிப்பும் ஒரேமாதிரித்தான் இருக்கும். ஒரே அசைவை திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு பட்டுப்புடவையை நூல்நூலாக பிரித்துப் போடுவதுபோல என்று நாகலிங்க ஆசாரி ஒருமுறை சொன்னான். பார்க்கப் பார்க்க சலிப்பும் எரிச்சலும்தான் வரும். ஒருவழியாக எல்லாரும் மிகச்சரியாக அந்த அசைவை செய்தால் காமிராமேன் இன்னொரு ஷாட் கேட்பார். அல்லது லைட் தவறாக ஆகிவிடும். இயக்குநரே ஏதாவது தவறு கண்டுபிடிப்பார்.
அந்த நடனக்கூட்டத்தில்தான் ஸ்ரீபாலாவை முதல்முறையாகப் பார்த்தேன். அப்போது என் வாழ்க்கையில் அத்தனை முக்கியமான இடம் அவளுக்கு இருக்கும் என நான் அறிந்திருந்தேனா? பிறகு அந்த தருணத்தை நினைத்துப் பார்க்கையில் எல்லாம் அப்படி எதையாவது இணைத்து அர்த்தம் அளித்துக்கொண்டேன். உண்மையில் நாம் அப்படி அறிவதில்லை. எந்த சிறு குறிப்பும் தெய்வம் அளிப்பதில்லை. நான் அவளை சாதாரணமாகத்தான் பார்த்தேன். நினைவுகூர்ந்து சொல்லவேண்டும் என்றால் அவள் மிக அழகாக இருப்பதாகவும், கதாநாயகியாகவே நடிக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டேன்.
[மேலும்]
மதம் அரசியல்,அடையாளங்கள்
நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இதை எழுதியிருந்தார். அவர் தெளிவான ஆசாரவாதி. ஆனால் அவருடைய இத்தரப்புத்தான் ஆசாரவாதத்தை எதிர்ப்பவனாகிய என் தரப்பும்.
“அவர்கள் மத நிறுவனங்களில் செய்கிறார்கள் இவர்கள் மத நிறுவனங்களில் செய்கிறார்கள் என்று சொல்லி ஹிந்து கோவில்களில் / மத கூடுகைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வது தவறு .நாம் இத்தனைக் காலம் பிழைத்திருக்க காரணமே நமது ஸ்வதந்திர சிந்தனை தான். பிரச்சாரம் செய்ய விருப்பம் உடையவர்கள் களத்திற்கு வாருங்கள் .அதை விட்டு உபன்யாசம் , பஜனையில் எல்லாம் சிலேடை பேசாதீர்கள் .
காஞ்சி பெரியவர் பெயரில் ஒரு பொய் .அதற்கு பிறகு கடையநல்லூர் பாகவதரின் வினோத பகவத் கீதை விளக்கம் என்று கடுப்படிக்கும் விஷயங்கள் பல.”
ஒரு மதத்தை அப்படியே அரசியல்தரப்பாக ஆக்குவதென்பது நீண்டகால நோக்கில் அந்த மதத்தை முற்றழிப்பது. மதத்தின் படிமங்களும் குறியீடுகளும் வெறும் அடையாளங்கள் அல்ல. அவை நம் ஆழுளத்தில் நிலைகொள்ள வேண்டியவை. அங்கே வளரவேண்டியவை. நம்மை கற்பனை வழியாக, உள்ளுணர்வு வழியாக முன்னெடுத்துச் செல்லவேண்டியவை. அவை நம் வீடுபேறுக்குரியவையாகவே சொல்லப்பட்டுள்ளன, தெருச்சண்டைக்குரியவையாக அல்ல.
அன்றாட அரசியலுக்காக அவற்றைப் பயன்படுத்தினால் அவை அன்றாடத்துடன் தொடர்புள்ளவையாக ஆகிவிடுகின்றன. அதன்பின் கூட்டுப்பெருங்காய விளம்பரத்திற்கும் அவற்றுக்கும் வேறுபாடில்லை. அதன் வழியாக நாம் இழப்பது பல்லாயிரமாண்டுக் காலம் அகச்செறிவூட்டப்பட்ட அவற்றின் ஆற்றலைத்தான்.
ஆன்மிகம் வேறு, மதம் வேறு. மதம் வேறு, மத அரசியல் வேறு. மத அரசியல் மதத்தை வழிநடத்துமென்றால் அது மதத்தின் மாபெரும் ஞானத் தொகுப்பை வெறும் அடையாள அரசியலின் காய்களாக ஆக்குகிறது. அரசியலின் அத்தனை பிழைகளையும் அன்றாட அயோக்கியத்தனங்களையும் மிகையுணர்ச்சிகளையும் மதத்தின்மேல் ஏற்றுகிறது.
மத நிறுவனங்களை, மதத்தலங்களை, மத அடையாளங்களை அரசியலாக்கினால் பின்னர் அரசியலில் இருந்து அவற்றை மீட்கவே முடியாது. அவற்றிலிருந்து ஆன்மிகம் வெளியேறிவிடும். ஏனென்றால் அவை மிகமிக நுட்பமாக நம் உள்ளத்தில் அமர்ந்துள்ளன. நம் கனவுகளில் நிலைகொள்கின்றன. நம் ஊழ்கத்தில் அவை பொருளேற்றம் செய்யப்பட்டு விரிகின்றன.
தியானம் செய்பவர்களுக்கு தெரியும், தாமரை என்பது சக்திநிலைகளை குறிக்கும் அடையாளம். முடிவிலாத மலர்தலின் குறியீடு. சகஸ்ரபத்மம் நோக்கிய ஊழ்கத்தில் தாமரைக்கு அளிக்கப்பட்டிருக்கும் அன்றாட அரசியல் அடையாளங்களை நம் அகத்தில் இருந்து பிடுங்கி நீக்குவது இன்று பெரும்பாடு. அத்தனை தியான மையங்களிலும் இதைச் சொல்லித்தருவார்கள்.
அத்தனை அடையாளங்களும், அத்தனை தலங்களும், அத்தனை வழிபாட்டுமுறைகளும் அவ்வண்ணம் அரசியல் அர்த்தம் பெற்றுவிட்டால் இந்துவுக்கு எஞ்சுவது என்ன?
நாம் வாக்களிப்பது நம் வரிப்பணத்தை கையாளும் உரிமையை ஒரு கட்சிக்கு அளிப்பதற்காக மட்டுமே. நாம் வீடுபேறு அடையும் வழியைக் காட்ட மரபும் ஆசிரியர்களும் உள்ளனர்.
மதம் அரசியலானால் மதத்தை இழக்கிறோம். உலகவரலாற்றில் மீளமீளக் காணக்கிடைக்கும் இந்த விஷயத்தை மீண்டும் நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.
இந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
இந்து என உணர்தல் அற்புதமான கட்டுரை. உங்களின் தெளிவும் விளக்கமும் இந்து என்பதாலேயே குற்ற உணர்ச்சி கொள்ளவைக்கப்படும், என்னைப் போல் எத்தனையோ பேருக்கு நிம்மதியை தருபவை. மிகத் தீவிரமாக மதங்களை நிராகரிக்கும் என் மகனை (பத்தாம் வகுப்பு ) இந்தக் கட்டுரையை வாசிக்கச் சொல்லியுள்ளேன்.
இந்த கட்டுரையின் சாராம்சத்தை நீங்கள் பல வருடங்களாக பேசியும் எழுதியும் வந்துள்ளீர்கள். ஆனால் இப்போது தேர்தல் சமயத்தில் தந்திரமாக எடுத்து எழுதுவதாகவும், hidden agenda வை கண்டுபிடுத்துவிட்டதாகவும் முக நூலில் எழுதி தள்ளப் படுகிறது.எத்தனை சொன்னாலும் மீண்டும் மீண்டும் தாங்கள் பேசியதையே திரும்ப பேசும் இந்த மூடர் கூட்டத்திடம் நீங்கள் சளைக்காமல் போராடுவது பிரமிக்க வைப்பது.
ஆனால் இது என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிகுந்த மனச்சோர்வை தருகிறது. உங்களின் வாசகன் என்பதாலேயே நட்பு விலக்கம் கொண்டவர்கள் உண்டு. தனிப்பட்ட வாழ்வில் எங்கும் எந்த ஏற்ற தாழ்வை கடைபிடிக்காதவன், இடது சாரி ஆதரவாளன் , எனினும், உங்களின் எழுத்தை புகழ்பவன் என்பதாலாயே எளிதாக பட்டம் கிடைத்துவிடுகிறது. முக நூலில் உங்களுக்கு ஆதரவாக ஒரு பதில் மொழி இட்டாலே திட்டி பத்து பதில் வந்துவிடும்.அதுவும் ஏக வசனத்தில். அது போன்ற பதிவுகளை கண்டுகொள்ளாமல் தாண்டிச் செல்லவும் முடிவதில்லை. என்ன செய்வது?
அன்புடன்
ஆ .கந்தசாமி
புனே
அன்புள்ள கந்தசாமி,
அக்கட்டுரை தெளிவாகவே இந்து என உணர்தல் என்பது ஓர் அகவுணர்வு, ஒருவகை மரபுசார்ந்த தன்னிலை, அதற்கு எந்த அமைப்புச்சார்பும் தேவையில்லை என்று பேசுவது. அமைப்புச்சார்புக்கு எதிரானது. அரசியலுக்கு எதிரானது.
பொதுவாக தேர்தல்காலங்களில் எல்லாரும் கொஞ்சம் உக்கிரமாக இருப்பார்கள். எந்தக் கருத்தும் தேர்தலரசியல் சார்ந்ததாகக் கொள்ளப்படும். எந்த மறுப்பும் தங்கள் வெற்றிக்கு எதிரான செயலாகக் கொள்ளப்படும். அது ஒருவகை ஃபோபியா.
சென்ற சிலநாட்களில் நானறிந்த அதிதீவிர திமுக ஆதரவாளர்களான இரு நண்பர்கள் முகநூலில் எதையோ எழுதப்போய் அவர்களின் திமுக நண்பர்களாலேயே திமுக மீதான ‘வன்மத்தை’ கக்குபவர்களாக முத்திரை குத்தப்பட்டனர். நண்பர்கள் சி.சரவணக் கார்த்திகேயன், சரணவன் விவேகானந்தன் இருவருக்கும் மானசீகமாக என் புன்னகையை அனுப்பி வைத்தேன். பாவம். [ஆனால் அதிபயங்கரக் கொடூரம், யமுனா ராஜேந்திரனையே ஒரு திமுகக்காரர் சங்கி என்று சொல்லிவிட்டார் என்பது.]
அரசியலில் இருப்பவர்களுக்கு ஒற்றை அஜெண்டா மட்டுமே உள்ளது. நான்கைந்து சொற்றொடர்களாகச் சுருக்கத்தக்க ஒரு தரப்பு அது. அது திராவிடத் தரப்போ இடதுசாரித் தரப்போ இந்துத்துவத் தரப்போ. அந்தத் தரப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாருமே அவர்களுக்கு எதிரிகள், மறைமுக ஒற்றர்கள். அவர்கள் எல்லாவகையிலும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அதில் சிந்தனைக்கெல்லாம் இடமே இல்லை.
ஆனால் இவர்கள் ஒரு வட்டம்தான். இவர்களுக்கு வெளியே சிந்திக்கக்கூடியவர்கள் உள்ளனர். புதியவற்றை தெரிந்துகொள்ள விழைபவர்கள் உள்ளனர். இலக்கியம் தத்துவம் எல்லாமே அவர்களை நோக்கியே பேசப்படுகின்றன. அவர்களைப் பொருட்படுத்தினால் போதுமானது.
மற்றவர்களின் ஏற்போ மறுப்போ நமக்கு எதற்கு? அவர்களின் ஏற்பு தேவையென்றால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் அதே கோஷத்தை அப்படியே இடவேண்டும். அது உங்களால் இயலாது. அப்படியென்றால் அவர்களை எதற்கு கருத்தில்கொள்ள வேண்டும்?
ஜெ
வணக்கம்.
இந்து என உணர்தல் பதிவுகள் படித்தேன். உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி எங்களை போன்ற சாதாரண ஆட்களிடமும் சக நட்பு சூழல்களில் கேட்கப்படுகின்றது.
இரண்டு விதங்களில் கட்டமைக்கின்றார்கள்
1.மானுட நல்லறங்களில் வரும் ஈகை, சிந்திக்கும் திறன், அன்புடமை, முயற்சி, வீரம், இசை, ஓவியம், நடனம், படைப்பு திறம் போன்ற கலை போன்ற விசயங்களில் இந்து மதம் பங்களிக்க பெரிதாக எதுவும் இல்லை என முன் வைக்கின்றார்கள். பேச்சு சுவாராஸ்யத்தில் மாய்ந்து மாய்ந்து பதில் சொன்னால் இப்படி பெருமிதம் பேசாதே, இதெல்லாம் உலகமெல்லாம் எல்லா இடங்களிலும் உள்ளது, உன்னிடம் உள்ளது என சொல்வது வீண் பெருமை என சிறுமை படுத்துகின்றார்கள். இந்துவிடமும் உள்ளது என சொல்ல விழைந்ததை இந்துக்களிடமும் மட்டும் உள்ளது சொன்னதாக திரித்து விடுகின்றார்கள்.
2. மானுட தாமச குணங்களின் வெளிப்பாடான சாதி பூசல்கள் போன்ற குழு பூசல்கள், பொறாமை பேச்சுக்கள் போன்றவற்றினை இந்து அடையாளமாக மட்டும் முன் வைக்கின்றார்கள். மீண்டும் மாய்ந்து மாய்ந்து இது உலகெங்கும் பல இடங்களில் உள்ளதல்லவா என பல சர்வதேச எடுத்துக்காட்டுக்களை முன் வைத்தால், பிறரை குறை சொல்லும் தவறான குழுக்களாக சித்தரிக்கின்றார்கள். இந்துவிடமும் உள்ளது என சொல்ல முற்பட்டால், இந்துக்களிடம் மட்டும் உள்ளது என ஆக்கி விடுகின்றார்கள்
நல்லது, கெட்டது என இரண்டு பக்கமும் கதவடைத்து விடுகின்றார்கள். உங்கள் பதில் இதை எதிர்க் கொள்ள எங்களை போன்றோருக்கு உதவும். இந்து என்னும் அடையாளத்துக்கு எதிரான நியாயம் பேசி பேசி பெரும் மதில் சுவராக உள்ளது. அதை எதிர் கொள்ளும் நியாய தர்க்கங்களை என்னை போன்றோர் புரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவுகின்றது.
–சஞ்சீவ் மன்னவன்
அன்புள்ள சஞ்சீவ்
சில கருத்தியல்கள் மிகமிகக் குறுகியவை. தங்கள் தரப்பை ’இதுவே உண்மை, பிறிதெல்லாம் பொய்’ என்பவை. ஆனால் அத்தகைய குறுகிய கருத்தியல்கள் அக்குறுகல் காரணமாகவே அவற்றை நம்புபவர்களுக்கு மாறாத, மெய்யான ஒன்றை நம்புகிறோம் என்னும் அபாரமான தன்னம்பிக்கையை, உயர்வுமனப்பான்மையை அளித்துவிடுகின்றன. அதை நாம் வாதிட்டு வெல்ல முடியாது. நம் தரப்பைச் சொல்லி விலகவே முடியும். அத்தகைய தன்னம்பிக்கையை அளிக்கும் தரப்புகளில் ஒன்று கம்யூனிசம்.
உலகமெங்கும் சர்வாதிகாரிகளை, மாபெரும் மானுடப் படுகொலைகளை, பேரழிவுகளை உருவாக்கிய அக்கருத்தியலை நம்பும் ஒருவன் அவன் மாறா உண்மையும் குன்றா அறமும் கொண்ட ஒன்றை ஏற்றுக்கொண்டவனாக எண்ணிக் கொண்டு இந்துவிடம் ’சாதிபேதமே உன் மதம், பிறிதொன்றும் அல்ல’ என்று சொல்லமுடிகிறது. அவனுடைய சித்தாந்தம் சமகாலத்தில் உருவாக்கிய பேரழிவுகளெல்லாம் ‘சிறிய நடைமுறைப் பிழைகள்’ என்று சொல்ல முடிகிறது.
ஆனால் ஐந்தாயிரம் ஆண்டு தொன்மையும், போராடும் இனக்குழுக்களை தொகுத்து ஆற்றல்மிக்க அறிவுவளம் மிக்க சமூகங்களாக ஆக்கிய வரலாறும், மானுட ஆழ்படிமங்களின் பெருந்தொகையும், தத்துவ தரிசனங்களும், கலைவெற்றிகளும், இலக்கியச்செல்வங்களும், மெய்ஞான வழிகாட்டல்களும் கொண்ட ஒரு மதத்தைச் சார்ந்திருப்பவன் அதற்கு பதில்சொல்ல முடியாமல் குற்றவுணர்வு கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம், அவனுக்கு தன் மதம் பற்றி ஏதும் தெரியாது என்பதே. அவன் அந்த மதத்திலேயே உண்மையில் எதைப்பற்றி குற்றவுண்ர்வு கொள்ளவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியாது
அவன் தெரிந்துகொள்ள வேண்டியது இந்து மரபின் தத்துவ, கலை, இலக்கிய, ஆன்மிக வெற்றிகளைப் பற்றி. ஆனால் தெரிந்திருப்பது எளிமையான நம்பிக்கைகள் , ஆசாரங்கள் அல்லது அரசியல். அவையிரண்டுமே ஒரு நவீனச் சூழலில், ஒரு விவாதக்களத்தில் முன்வைக்கத்தக்கவை அல்ல. நம்பிக்கையை முன்வைத்தால் அது ஏளனத்துக்கு உரியதாகும். ஆசாரம் கண்மூடித்தனமாக தெரியும். அரசியல் எதிர்மறை விசை மட்டுமே கொண்டது.
இன்று எழும் இந்துக் குரல்கள் இவ்விரு தன்மைகள் மட்டுமே கொண்டவை. ‘முன்னோர் முட்டாள்களில்லை’ வகை நம்பிக்கைப் பேச்சுக்கள். அல்லது ‘இந்துவை விமர்சிக்கிறாய், அவனை விமர்சிப்பாயா?’வகை அரசியல் கேள்விகள். இந்துக்களுக்கு இந்துமதம் என தெரிந்திருப்பவை எளிமையான அற்புதகதைகள், ஆசார அனுஷ்டாங்கள், பழமைவாத நோக்குகள். சமீபகாலமாக அரசியல் சார்ந்த கோபங்கள்.
ஓர் இந்து தனக்கு, தன் அறிவுக்கு, கலையுணர்வுக்கு, ஆன்மிக மீட்புக்கு இந்துமதம் என்ன தந்தது என தெளிவுடன் திட்டவட்டமாகப் பேசும்போது மட்டுமே அதன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு உண்மையான பதில் அளிக்கப்படுகிறது. அப்பதில் அளிக்கப்படும்போது எப்படி மழுப்புகிறார்கள், எப்படி தாவுகிறார்கள் என்று பாருங்கள். இந்துமதம் என்பது சாதி மட்டுமே, ஆகவே அது அழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர்களே ‘ஆமாம், அது பெரிய செல்வம்தான், ஆனால் அதை அறியவெண்டுமென்றால் அதை ஏற்கவேண்டியதில்லை’ என்கிறார்கள் அல்லவா?
ஜெ
அன்புள்ள ஜெ,
இரு கேள்விகள். ஒன்று, இந்து என உணர்தலில் நீங்கள் செய்திருப்பது whataboutery என்று சொல்லலாமா? சாதிகளின் அடிப்படையில் இந்து மதத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொல்லலாமா? நான் விவாதித்தபோது சில நண்பர்கள் எழுப்பிய கேள்விகள் இவை
சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்
நடந்தது என்ன விவாதம்? ‘இந்து மதம் என்பது சாதிமுறை மட்டுமே, சாதி இந்து மதத்தில் மட்டுமே உள்ளது, ஆகவே இந்துமதம் மட்டுமே கொடுமையானது, அது அழியவேண்டும்’ என்று சொல்லப்பட்டதற்கான பதில் அது.
இந்து மதம் என்பது சாதிமுறை மட்டுமே என்பதற்குப் பதிலாக இந்துமதம் சாதி மட்டும் அல்ல, அதற்குமேல் தத்துவ- கலையிலக்கிய- ஆன்மிக சாதனைகள் கொண்டது, தொன்மையான பண்பாட்டின் வாழும் தொடர்ச்சி, ஆகவே ஒரு மானுடச்செல்வம் என பதில் சொன்னேன். விரிவாக.
சாதி இந்து மதத்தில் மட்டுமே உள்ளது என்ற வாதத்திற்குப் பதிலாக பிறப்பு அடிப்படையிலான சமூகப்பிரிவினை நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் இயல்பாக உலகமெங்கும் இருந்தது என பதில் சொன்னேன்.
இந்துமதமே கொடுமையானது என்ற வாதத்திற்கு எதிராக அதைச் சொல்பவர்கள் ஆதரிக்கும் மதங்கள் இழைத்த மானுடக்கொடுமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படிச் சொன்னேன். இந்துமதத்தில் ஒற்றைப்பார்வை உருவாக்கும் அழித்தொழிப்புகள் இல்லை என்றேன்.
இதில் எங்கே whataboutery வருகிறது? எங்காவது ஒரு வார்த்தையைக் கண்டால் அசட்டுத்தனமாக அதைப் பிடித்துக்கொள்ள வேண்டியது. எல்லாம் தெரிந்த பாவனையில் பேசவேண்டியது
ஒரு பிழையைச் சுட்டிக்காட்டும்போது மற்றவன் மட்டும் செய்யலாமா என்று கேட்பது whataboutery. நான் சொல்வது ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை. அதில் இந்துமதமும் மற்றவையும் வகித்த பாத்திரங்களை.
சாதிமுறை சென்றகால நிலப்பிரபுத்துவத்தின் உருவாக்கம். அதை இந்து மதத்தின் அங்கமென கொள்ள முடியாது. ஆனால் இந்துமத ஆசாரங்கள் அதை ஏற்றுக்கொண்டன, ஆதரித்தன. இன்றும் கணிசமானவர்கள் ஆதரித்தும் நிற்கின்றனர். அதை கடந்தாகவேண்டும். அதை அக்கட்டுரையிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். திரும்பத்திரும்பச் சொல்லிவருகிறேன்.
சாதிமுறை இந்து மதத்தின் அங்கமல்ல, அதை இந்துமதம் கடந்தாகவேண்டும் என்பவர்களே உண்மையில் சாதியை எதிர்க்கவும் கடக்கவும் முற்படுபவர்கள். ஏனென்றால் அவ்வாறு பெருவாரியான இந்துக்களை ஏற்கவைப்பது மட்டுமே சாதியைக் கடக்கவும், ஒழிக்கவும் ஒரே வழி. இந்துமதத்தை அழித்து சாதியை அழிப்போம் என்பவர்கள் அந்தரங்கமாக இந்துமதம் அழியாது என அறிந்தவர்கள்.
இவர்கள் யார்? பெரும்பாலும் தமிழகத்தின் சாதிவெறி மிக்க இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த அரசியலைப் பேசுபவர்கள். தங்கள் வீடுகளில் சாதிமுறையையே வாழ்வாகக் கொண்டு பொதுத்தளத்தில் போலிமுற்போக்கு பேசுபவர்கள். அல்லது தங்கள் மதவெறியை முற்போக்காக மாற்றி நடிக்கும் மாற்று மதத்தவர்.
மூத்தபறையர் வள்ளுவர்களால் ஏழாம்நூற்றாண்டு வரை பூசை செய்யப்பட்டவை இந்து ஆலயங்கள். இன்று அவ்வாறு அவர்கள் தலைமையில் ஒரு இணை இந்துமதம் உருவாகுமென்றால் நான் அதில்தான் இருப்பேன். அதுவே எனக்கு உகந்தது. என் குருமரபும் சென்ற நூற்றாண்டுவரை ஆலயப்பிரவேச உரிமை இல்லாமலிருந்ததுதான்.
ஒரு தெளிவான மறுமொழி சொல்லப்படும்போது எப்படியெல்லாம் பதறுகிறார்கள், உருள்கிறார்கள். இவர்கள் உண்மையில் எவருடைய குரல்கள்?
ஜெ
அன்புள்ள ஜெமோ
இந்துமதம் பற்றி அம்பேத்கர் சொன்னதை கேள்வி கேட்டவர் குறிப்பிடுகிறார். அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. அம்பேத்கர் இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றி சொன்னதை மேற்கோள் காட்டுகிறீர்கள்
சாம் ஆசீர்
அன்புள்ள சாம்,
அம்பேத்கர் இஸ்லாம் கிறிஸ்தவத்தை முழுமையாக நிராகரித்துப் பேசியவற்றை ஏன் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது என்றால் இன்று இந்து மதம் பற்றி அம்பேத்கர் பேசியவற்றைச் சுட்டிக்காட்டி தாக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்பதனால். பதில் சொல்லவேண்டியவர்கள் அவர்கள்.
இந்து மதத்தின் மேல் அதன் சாதிய அடிப்படையை சுட்டிக்காட்டி அம்பேத்கர் முன்வைத்த எல்லா எதிர்ப்புகளுடனும் விமர்சனங்களுடனும் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதையே நானும் எழுதியிருக்கிறேன். அம்பேத்கரின் வரலாற்று, பண்பாட்டு ஆய்வுமுறைகளை ஏற்பவன். அவருடைய பௌத்தம் எனக்கு அணுக்கமானதுதான். ஆகவேதான் இன்று தலைவர் திருமாவளவன் முன்வைக்கும் அத்தனை எதிர்ப்புகளையும் வெளிப்படையாக ஆதரிக்கிறேன். எந்நிலையிலும் அவருடைய எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் முழு ஆதரவு என்னுடையது. அவரை ஆதரித்து எழுதி தொடர்ச்சியாக வசைபாடப்படுகிறேன். இனிமேலும் அப்படித்தான்.
ஆனால் நான் ஆன்மிக தளத்தில் நாராயணகுருவின் பார்வையை எனக்கானதாக ஏற்றுக்கொண்டவன். முப்பதாண்டுகளாக நாராயணகுருவின் மெய்ஞான மரபில் உறுதியாக நீடிப்பவன். அதன் பொதுத்தள முகங்களில் ஒருவன். என் வழி அது என, அதில் நான் என் விடைகளையும் நிறைவையும் கண்டுகொண்டேன் என தெளிவாக முன்வைப்பவன். நான் சொல்வன அனைத்தும் நாராயணகுருவின் மரபால் சொல்லப்பட்டவைதான். என் மீதான எல்லா குற்றச்சாட்டுக்களும் நாராயண குரு மேல் முன்வைக்கப்பட்டவை. அவரால் தெளிவாக பதிலிறுக்கப்பட்டவை.
ஜெ
இந்துமதமும் ஆசாரவாதமும்
அறமென்ப… இழை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
அறமென்ப கதை அறமென்பது ரிலேட்டிவ் ஆனது அல்ல என்பதைச் சொல்லும் கதை. மிகத்தெளிவாகவே கதையில் இது உள்ளது. ஆனாலும் கதைவாசித்த ‘சிந்தனையாளர்’ பலர் முட்டிமோதுவதைக் காணமுடிகிறது. இலக்கியம் வாசிக்கும் பழக்கமுள்ள, ஆனால் தங்களையும் இலக்கியவாதிகளாகக் கற்பனைசெய்துகொள்ளாத வாசகர்களுக்கு சிக்கலே இல்லை.
அறம் என்பது நம்மிடம் மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள், நன்றியுடன் இருக்கிறார்களா, நாம் செய்வதற்கு எதிர்வினை இருக்கிறதா, அது வரலாற்றில் பதிவாகிறதா, மற்றவர்கள் அறமுடன் இருக்கிறார்களா என்பதையெல்லாம் வைத்து முடிவாவது அல்ல. உன் இயல்புப்படி நீ அறத்துடன் இருப்பது, அவ்வளவுதான். அதுதான் இக்கதை சொல்வது
ராஜா அருணாச்சலம்
ஜெ,
இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தத்தம் செயல்களை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் அவரவர் இயல்புபடியே வினையாற்றுகின்றனர்.
தனக்கு அநீதி இழைத்த ஒவொருவரின் நீதி உணர்வையும் கேள்விக்குள்ளாக்கும் செல்வா ஒருகணத்தில் வாழ்வின் நிதர்சனத்தை மின் வெட்டுப்போல் உணரும் போது மிகப்பெரும் அகவிடுதலையை அடைகிறான்.
இவ்வளவு நேர்ந்த பின்னரும் தன்னிடம் உதவி கோரும் கிழவிக்கு மனம் இரங்குகிறான். மனிதர்கள் எப்படி இருப்பினும் நான் என் இயல்பு படியே வாழ்வேன் என்று உறுதி பூணுகிறான். மானுடம் வென்றதம்மா!
நெல்சன்
இழை [சிறுகதை]அன்புள்ள ஜெ,
இழை கதையை வாசிக்கையில் விதவிதமான உணர்ச்சிகளை அடைந்தேன். நமக்கு ஒரு ஐம்பது வயது ஆகிவிட்டால் ஒரு விஷயம் தெரியும். ஆண் பெண் உறவு என்பது ஒரு இழைதான். அது ஒரு மெல்லிய மயிரிழை. ஒரு காலத்தில் அது அருவிபோல இருந்தது. ஆலம் விழுதுபோல அதில் தொங்கி ஏற முடிந்தது. ஆனால் மெல்லிய இழை. கூர்மையான ஆயுதமாக ஆகி கழுத்தையும் அறுப்பது.
ஆனால் அந்த மெல்லிய இழையே கொலைக்கு ஆயுதமாகும்போது பெருகி பெரிய வடமாகவும் ஆகும்.இந்த கதையே கதைக்குள் வரும் மூன்று வெவ்வேறு உருவகங்களை இணைப்பதற்காக சொல்லப்படுவது. மயிரிழை எப்படியெல்லாம் உருமாறுகிறது என்று காட்டுவது. அது ஒரே துப்பறியும் கதையால் இணைக்கப்பட்டுள்ளது
ஆர். மகாதேவன்
அன்புள்ள ஜெ,
இழை. பூடகமான கதை. இதை தொடர்ந்து வரும் கதைகளுக்கும் அந்த தன்மையுள்ளது.
டெய்சி தான் ஜானை கொன்றாள் என்றும், தன் முடியை கொண்டு தான் ஜானை கொன்றாள் என்றும் கதை முன்பே வாசகருக்கு உணர்த்தி விட்டு முன் செல்கிறது.
ஜான் செய்யும் கொடுமைகளை பொருக்க முடியாமல், அவனை பிரிந்து சென்று புது வாழ்க்கை ஒன்றை துவங்குவதற்கான ஆசை இருந்தாலும் அவனை கொலை செய்ய எந்த கணத்தில் முடிவெடுத்தால். இவ்வளவு திறமையும் பலமும் வாய்ந்த ஜானை கொல்லும் ஆயுதம் எது என்று டெய்சி எப்படி கண்டுக்கொண்டாள் என்பது தான் கதை என்று நினைக்கிறேன். எலியாம்மா சொல்லும் மறுபக்கத்தால் தான் அவள் ஜான் இறந்தபின் அழுகிறாள். அந்த ஜானின் இன்னொரு இயல்பால் தான் இதுவரை அவனை கொலை செய்யாமல் பொருத்து உடனிருந்தாள். அப்படி இருந்தும் அவள் கொலைசெய்யும் முடிவை, தன்னால் அதை செய்யமுடியம் என்ற நம்பிக்கையை எப்பொழுது அடைகிறாள்.
ஜான் அந்த நாடகத்தை சொல்லி அவளின் கூந்தலை வைத்து கழுத்தை நெறித்து உயிர் பயம் காட்டி, புகையை முடிமேல் ஊதும் பொழுதுதான் டெய்சி அந்த கொலை செய்யும் முடிவை எடுக்கிறாள். தன் முடியின் சாத்தியத்தையும் கண்டுக்கொள்கிறாள்.
அந்த நாடகத்தை போல் ஜான் எதற்காக தன்னை இவ்வளவு நெருக்கமாக வைத்திருக்கிறானோ அதை கொண்டே தன்னை கொள்வான் என்பதை உணர்ந்துகொள்கிறாள். ஏன்னென்றால் இவ்வளவு திறமை இருக்கும் ஜானுக்கு தன்னைவிட வலுவானது அந்த கூந்தல் என்று தெரியும். ஒன்று தனக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் இல்லை என்றால் அது அழியவேண்டும் என்று நினைக்கிறான். தன்னை வைத்தே தன்னை அழிக்கும் அந்த நாடக முடிவுக்கு காலம்காலமான முடிவக்கு எதிரான முடிவு ஒன்றை டெய்சி கொடுக்கிறள். அதுவும் அந்த முடியை வைத்தே. A Girl’s Anti-climax to History.
கதையில் தொன்மையான வித்தைகளுக்கும் சர்க்கஸ்க்குமான வேறுபாடு சித்தரிக்கப்படுகிறது. அதை வைத்து இரண்டிலும் உள்ள மனித தன்மை பற்றி யோசிக்கலாம். அதில் தலைமுறை தலைமுறையான கல்வி பண்பாடக இருக்கிறது சர்க்கஸ் அப்படி இல்லை என்றும். வித்தையில் கழைகூத்தாட்டம் போன்றவை கூடுதல் வியப்பை தந்தாளும் ஏன் சர்க்கஸ் மீது மக்களுக்கு நாட்டம் என்பதை கேள்விகளாக எழுப்பி கொண்டு சிந்திக்க கதையில் வாய்புள்ளது. அதேபோல ஆணின் வலுக்கு எதிராக அதைவிட இன்னும் வலுவான ஒன்றாக இயற்கை பெண்ணுக்கு முடியை கொடுத்தா அழகிலும் சரி வலுவிலும் சரி என்றும் கதையை வாசிக்கமுடியும். மற்றும் மயிர் இழையில் உயிர் பிழைத்தேன் என்று சொல்வார்கள், அந்த இழையின் வலிமையை சொல்லும் கதை இது.
சர்க்கஸ் மிருகங்கள் வாழும் இடும். உனக்கு மனிதன் வாழும் வீடு கிடைத்து விட்ட பின், அந்த முடிக்கான அந்த ஆயுதத்துக்கான அவசியம் இனி இல்லை என்றுதான் காண்ஸ்டபுல் சொல்லி செல்கிறார்.
நன்றி
பிரதீப் கென்னடி
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஆறாவது நாவல் ‘வெண்முகில் நகரம்’. என்னைப் பொறுத்தவரை ‘வெண்முகில் நகரம்’ என்பது, எண்ணற்றோரின் பெருவிழைவுகள் வான்மேகங்களெனத் தனித்தலையும் கனவுவிண்ணகம்.
‘மேகம்’ என்பதுதான் என்ன? வானில் தனித்தனியே பங்கு வைக்கப்பட்ட துண்டு நிலங்கள்தானே! அவை இணைவதும் உதிர்ந்து பிரிவதும் ஊழின் விளையாட்டே! தனித்துக் கிடக்கும் சிறுநிலங்களையும் நல்மனங்களையும் இணைப்பதும் இணைந்திருக்கும் பெருநிலத்தைப் பங்கிட்டுப் பிரிப்பதுமே ‘வெண்முகில் நகரம்’ நாவலின் மையச் சரடு.
‘வெண்முகில் நகரம்’ என்பது, திரௌபதி உருவாக்க உள்ள இந்திரபிரஸ்தமே. ஆனால், பாரதவர்ஷத்தை ஆள நினைக்கும் ஒவ்வொரு சக்கரவர்த்திக்கும் சக்கரவர்த்தினிக்கும் கனவில் உருக்கொண்டுவிட்ட ஒரு பெருநகரமே அது. ஒருவகையில் அது அவர்களின் பெருவிழைவுகளின் ஒட்டுமொத்த சித்திரம்.
முகில்கள் ஒன்றுடன் ஒன்று இணைவதும் பிரிவதும் இயல்பு. அவற்றின் இணைவுக்கும் பிரிவுக்கும் எந்த வரையறைகளையும் நம்மால் வகுத்துவிட முடியாது. இந்த நாவலில், மானுட மனங்கள் ஒன்றுடன் ஒன்றோ அல்லது சிலவற்றுடன் பலவோ இணைவதும் பிரிவதும் மீண்டும் இணைவதுமாகத் தொடர்ந்து ஏதோ ஒரு வகையிலான முறைமையில் அல்லது முறைமையை மீறிய விதங்களில் அல்லது முன்னரே வகுத்துவிட முடியாத ஓர் ஒழுங்கில் செயலாற்றுகின்றன.
அவற்றின் இணைவுகளையும் பிரிவுகளையும் புரிந்துகொள்ள முயல்வது ஊழின் ஆடலைப் புரிந்து பயில்வதற்கு ஒப்பானதே. அதை முற்றறிந்தவர் இந்தப் பெருநாவலுக்குள் ஒருவர்தான் இருக்கிறார். அவர்தான் இளைய யாதவர். இந்த நாவலில் முதன்மையான தருணங்களில் மட்டும் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த கதையொழுக்கை ஊழுக்கு ஏற்ப திசை திருப்பியவாறே இருக்கிறார். ‘மகாபாரதம்’ எனும் மாபெரும் அறக்கப்பலின் ‘சுக்கான்’ அவரின் கையில்தான் இருக்கிறது.
அஸ்தினபுரியை எந்தச் சிக்கலுமின்றி இரண்டாகப் பிரிப்பதும் திருதராஷ்டிரனின் முன்பாகப் பாண்டவர்களையும் கௌரவர்களையும் கைக்கோத்து, இணைந்து நிற்கச் செய்வதும் அவரின் சொல்லாற்றலே! அவற்றுக்குரிய தக்க தருணங்களை முன்னுணர்ந்து, அவற்றின் திசையில் அனைவரையும் இழுத்துச் செல்வதும் அவரே. எல்லாம் ஒழுங்கான பின்னர் அங்கிருந்து யாருமறியாமல் மென்முகில்போல மெல்ல விலகிச் செல்வதும் அவரே.
கொற்றவையின் மானுட வடிவமே திரௌபதி. அவளின் ஆறு கரங்களும் ஆறு பருவங்கள் என்று கொள்ளலாம். தன்னுடைய ஐந்து கணவர்களையும் அவள் தன் கைகளுக்கு ஒருவராகப் பிடித்திருக்கிறாள். ஆறாவது கை முற்றிலும் அவளுக்குரியது. அவள் தன் ஐந்து கைகளில் தன் கணவர்கள் ஐவரையும் ஐந்து படைக்களமாகவே கொண்டுள்ளாள்.
மானுடக் கொற்றவையான திரௌபதியின் படைக்களங்களே அந்த ஐவர். ஐந்துவிதமான தன்மையும் ஆற்றலும் கொண்ட அந்த ஐந்து படைக்களங்களே, ஐந்து விதமான பேராற்றல் உடைய அந்த அதிமானுடர்களே அவளின் வலிமையும் பாதுகாப்புமாகும். ஐம்பூதங்களை அடக்கிய ஆறாம் பூதமான அஸ்தினபுரியை நோக்கி எழுந்துள்ளாள் திரௌபதி.
குந்தி தேவி முன்னாளில் தன் மகன்கள் ஐவரையும் தன் படைக்களமாகத்தான் கொண்டிருந்தார். ஆனால், திரௌபதியின் வருகைக்குப் பின்னர் குந்தி தேவி தன் ஐந்து மகன்களைக் கொண்டு, திரௌபதி எனும் அந்த மானுடக் கொற்றவைக்குப் பலிபூசைகள் பலசெய்து, தெய்வக்கொற்றவையாகவே திரௌபதியை எழச் செய்துவிடுகிறார்.
இந்த நாவலில் இரண்டு முதன்மையான கதைமாந்தர்கள் அறிமுகமாகியுள்ளனர். ஒருவர் சாத்யகி. மற்றொருவர் பூரிசிரவஸ். இருவருமே நம்மைப் போன்ற எளிய மானுடர்களே!. இங்கு ‘நாம்’ என்று நான் குறிப்பிடுவது ஆண், பெண், இருபாலர் ஆகிய முத்தரப்பினரையும்தான். சாத்யகி, பூரிசிரவஸ் ஆகிய இருவரும் ஒருபோதும் தன்னிகரற்ற தலைவர்களாக மிளிரப்போவதில்லை. அதனாலேயே அவர்களை நான் நம்மைப் போன்றவர் என்கிறேன். அந்த இருவரில்தான் நம்மை நாம் முழுதாக அடையாளம் கண்டுணர முடிகிறது.
எந்தப் பயனையும் கருதாது தன்னை இளைய யாதவரிடம் அடிமையாக்கிக்கொள்ளும் சாத்யகி. கொலுக்கொம்பைப் பற்றிக்கொண்டு முன்னேறிவிடுவதற்காகத் தன்னைக் கௌரவர்களிடம் அணுக்கராக்கிக்கொள்ளும் பூரிசிரவஸ்.
நம்முள் சிலர் சாத்யகியாகவும் பலர் பூரிசிரவஸாகவும் இருப்பது இயல்பே. அவர்கள் இருவரும் நமக்காகவே படைக்கப்பட்ட எளிய மானுட நெஞ்சங்கள். அதற்காகவே, அவர்களின் குணநலன்களை நம்மைப் போன்றே படைத்தமைக்காகவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள்.
சாத்யகி, பூரிசிரவஸ் ஆகியோரின் செயல்களின் வழியாகவும் அதனால் அவர்கள் அடையும் எதிர்விளைவுகளைக் கண்டும் நாம் உலகியல் பேருண்மைகளின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை நமது அகக்கண்களால் கண்டுணர்வோம். அவை நம்மை நாமே இந்த உலகியலிலிருந்து கடைத்தேற்றிக்கொள்ள உதவும். ‘சாத்யகி கண்டடைந்துள்ள ‘கர்மயோகமே’ சிறந்த வழி’ என்பது, என் கணிப்பு.
சாத்யகி போல இறைவனிடமே தன்னை முழுதளித்தவர்களும் உண்டு. பூரிசிரவஸ் போல வல்லோரிடமே தன்னை அடகுவைத்துக்கொண்டவர்களும் உண்டு. சாத்யகி கர்மயோகி. பூரிசிரவஸ் செயல்வீரர். சாத்யகி தெய்வங்களால் வாழ்த்தப் பெற்றவர். பூரிசிரவஸ் தெய்வங்களால் விளையாடப்படுபவர். அதனாலேயே சாத்யகியை நாம் நமக்கு முன்னால் உள்ள முகம்பார்க்கும் கண்ணாடியில் தெரியும் நமது பிம்பமாகவும் பூரிசிரவஸை அந்தப் பிம்பத்தின் நிஜ உருவான நாமாகவும் நாம் அறிகிறோம்.
நம்மைப் போன்ற எளிய மானுட உள்ளம் என்றும் தெய்வத்தால் விளையாடப்படும் பூரிசிரவஸ் போன்றோரையே விரும்புகிறது. பூரிசிரவஸின் ஒவ்வொரு வெற்றியின் போதும் நமது உள்ளம் துள்ளுகிறது. அவனின் ஒவ்வொரு தோல்வியின் போதும் நமது உள்ளம் கண்ணீர் வடிக்கிறது. பூரிசிரவஸ் கதைமாந்தர் ஒருவகையில் நாமாகிவந்த நாம். அதனால்தான், அவரின் வெற்றியும் தோல்வியும் நமக்குரியதாகவே நம் மனம் உணரத்தொடங்கிவிடுகிறது.
பூரிசிரவஸின் ஒவ்வொரு விழைவும் நமக்குரியதே! அவன் தோற்றாலும் வென்றாலும் நம்மவனே! நமது பகற்கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாகவே அவன் இருக்கிறான். அதனாலாலேயே அவன் நம்முடைய கலையாக் கனவாகிவிடுகிறான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் துள்ளிக்கொண்டிருக்கும் இலட்சிய உருவம் அவன். எளிய மானுடர்களின் உண்மை உருவம் அவன். அவன் அடையும் ஒவ்வொரு தலைக்குனிவும் ஒவ்வொரு அகவெழுச்சியும் நாம் நம் வாழ்வில் விரும்பியும் விரும்பாமலும் அடையக்கூடியதே!. அதனாலேயே அவன் நமக்கு மிகவும் அணுக்கமானவனாகிவிடுகிறான்.
சாத்யகியும் எளிய மானுடர்களால் விரும்பப்படக் கூடியவன்தான். ஆனால், அவனின் நோக்கம் செலுத்தப்பட்ட அம்புக்கு நிகரானது. அதனாலேயே அவன் நோக்கம் பிழைபடுவதில்லை. பூரிசிரவஸின் நோக்கம் அல்லது நோக்கங்கள் ஆவநாழியில் அடுக்கப்பட்ட அம்புகளுக்கு ஒப்பானவை. அவற்றுக்கான தருணம் வாய்க்கும்போது மட்டுமே அவை பூரிசிரவஸால் ‘பதற்றத்துடன்’ பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுக்குரிய இலக்கினை நிறுவுவதில்தான் ஒவ்வொரு முறையும் பூரிசிரவஸ் தடுமாறிவிடுகிறான். அவன் தன் முடிவுகளை எடுப்பதில் ஒவ்வொருமுறையும் காலம்தாழ்த்திவிடுகிறான். உண்மையில், ‘தன் முடிவுகள்’ என்று ஏதுமே அவன் வாழ்வில் இல்லை. இதை அவன் இறுதிவரையில் உணர்வதே இல்லை.
காலத்தின் குதிரைக்கு அவன் ஒரு கடிவாளம் மட்டுமே. குதிரைக்கும் குதிரையோட்டிக்கும் இடையே சில தருணங்களில் தொய்ந்து, சில தருணங்களில் இறுகியும் நிற்கும் கடிவாளம். ஊழே அவனை அசைக்கிறது. அவனறியாமலேயே அவன் அசைகிறான். காலக்குதிரை குதிரைக்காரனுக்கு ஏற்பவும் அவனுக்கு எதிராகவுமே ஒவ்வொரு முறையும் தன் கால்களை எடுத்துவைக்கிறது.
பேரரசி தேவயானி, பேரரசி சத்யவதி, யாதவ அரசி குந்திதேவி, பாஞ்சாலத்து இளவரசி திரௌபதை என்ற இந்த நால்வரிலும் தனிக்குணமான ஒன்று மட்டுமே ஒரே இசைமையுடன் குடிகொண்டுள்ளது. அது சக்கரவர்த்தினிகளுக்குரிய நிமிர்வு.
ஒருவேளை அம்பை அஸ்தினபுரியின் அரசியாகியிருந்தால் மொத்த ஆட்டமும் முன்பே முடிவுக்கு வந்திருக்கும். அது தவறியதால், அவளுருவில் திரௌபதை அஸ்தினபுரிக்குள் நுழைகிறாள்.
பேரரசி சத்யவதி அஸ்தினபுரியை ஆளும்போது அவருக்கு மனத்தளவில் இடையூறு செய்பவர்களாக அம்பிகையும் அம்பாலிகையும் இருந்தார்கள். அவர்களைப் போலவே யாதவ அரசி குந்திதேவிக்குத் தேவிகையும் விஜயையும். பேரரசி சத்யவதியும் யாதவ அரசி குந்திதேவி இவர்களைப் புறக்கணித்தபடியேதான் தம்முடைய பெரும்பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
காந்தார அரசி காந்தாரிக்குப் பானுமதி அமைந்ததைப் போலவே யாதவ அரசி குந்திதேவிக்குத் திரௌபதை. யாதவ அரசி குந்திதேவிக்கும் காந்தார அரசி காந்தாரிக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக அன்பும் வெறுப்பும் இருப்பதைப் போலவே திரௌபதைக்கும் பானுமதிக்கும் இனி இருக்கக் கூடும். காலந்தோறும் ஊழ் காலத்தின் களத்தில் சரியான வகையில்தான் எதிரெதிர்க்காய்களை நிறுவிவிடுகிறது. அவற்றின் வழியாகவே முடிவற்ற களமாடல் நிகழ்கிறது.
அஸ்தினபுரி இரண்டாகப் பங்கிடப்படுவதை விளக்குவதாகவே இந்த நாவல் அமைக்கப்பட்டது என்றாலும்கூட, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மணப்பெண் தேடும்பொருட்டு நிகழும் அனைத்துத் திட்டங்களும் இறுதியில் ஒட்டுமொத்த பாரதவர்ஷத்தையே பங்கிடுவதாகவே மாறிவிடுகிறது.
மொத்தத்தில் இரண்டே தரப்புகள்தான். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதால் அல்லது தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்படுவதால் ஒட்டுமொத்த பாரதவர்ஷமுமே அவர்களின் மனத்தளவில் இரண்டு தரப்பாகிவிடுகிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மனத்தளவில் ஒற்றுமை ஏற்பட்டதாகத் தெரிந்தாலும் மானுட மனத்தின் ஒட்டுமொத்த வரைபடத்தில் அஸ்தினபுரியும் அதனை மையப்படுத்திய பாரதவர்ஷமும் இரண்டு தரப்பாகவே வேறுபட்டுவிடுகின்றன.
விழைவுகள் இல்லாத மனிதர்களே இல்லை. அவர்கள் கொள்ளும் பெருவிழைவுகளே அவர்களை நிலையிழக்கச் செய்கின்றன. நீர் ஆவியாகி வான்னோக்கிச் சென்று, மேகமாவதைப் போலவே மண்ணில் வாழும் மனிதர்களின் பெருவிழைவுகள் அனைத்தும் ஆழ்மன எண்ணங்களில் கரைந்து, மறைந்து, வான் சென்று மென்மேகமாகின்றன. அவற்றின் தொகுப்புத்தான் ‘வெண்முகில் நகரம்’.
மானுடப் பெருவிழைவுகளின் கூட்டங்கள் இணைந்து இணைந்து பெருந்திரளாகின்றன. அவை தனித்தும் இணைந்தும் பிரிந்தும் அந்தப் பெருந்திரளின் ஒரு பகுதியாகிவிடுகின்றன. பாண்டவர்களும் கௌரவர்களும் இரண்டு பெருந்திரளான முகில்கள். இரண்டு முகில்கள் தற்காலிகமாகவே இணையவும் பிரியவும் முடியும். முகில்களுக்குள் ஒருபோதும் நிரந்தரமான இணைவும் பிரிவும் இருப்பதே இல்லை. ‘வெண்முகில் நகரம்’ நாவல் உணர்த்துவதும் இதைத்தான். இறுதியில் நிலைப்பது ஊழின் ஆதிப் பெருவிழைவு மட்டுமே. அது தனிப்பெருந்திரள்முகில்.
– முனைவர் ப. சரவணன்– முனைவர் ப. சரவணன், மதுரை
– – –
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

