Jeyamohan's Blog, page 1013

March 29, 2021

திரை, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அறமென்ப வாசித்தபோது எனக்குப் பட்டது ஒன்று உண்டு. பொதுவெளியில் இருக்கும் அறமின்மையை நாம் மண்டையில் அடிப்பதுபோல சந்திக்கும் ஒரு தருணம் உண்டு. துரோகம், மீறல், திருட்டு என்று எதையாவது நாம் சந்திப்போம். நம்முள் எல்லாமே ஆடிவிடும்.

பத்தாண்டுகளாக நான் மகனைப்போல வேலைக்கு வைத்திருந்த பையன் திருடினான். போலீஸ் பிடித்ததும் நான் அவனுக்குச் சம்பளமே கொடுக்காமல் அடித்தேன், ஆகவே சாப்பாட்டுக்காக திருடினேன் என்று சொல்லிவிட்டான். அவன் அக்காக்களின் இரு திருமணங்களை நான் நடத்தி வைத்திருக்கிறேன்

அதிலிருந்து வெளியேற நீண்டநாட்கள் ஆகியது. இந்தக்கதை அந்த ஞாபகத்தை கிளறியது. எப்படி செல்வா வெளியேறினான் என்பது கதையில் சொல்லப்படவில்லை

தங்க. ராமநாதன்

அறமென்ப..வாசித்தேன்.

தாஸ்தெவஸ்கியின் அசடன் நாவலின் மிஸ்கின் தான் இதுவரை எதிர்பட நேர்ந்த சாமானிய மக்களுள் அறத்தையும் மனசாட்சியையும்  மானுடம் என்னும் கனவுக்கான, மனிதனுள் கிருஸ்து இருக்கிறார் என்பதற்கான  ஆதாரங்களாக சொல்கிறான். அதே போல் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்க்கலோவ்நிக்கோவ் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக, குற்றத்தை எண்ணி உண்மையாக குற்ற உணர்வு அடைவதற்காக மக்களிடம் எங்கேனும் உண்மையும் அறமும் மனசாட்சியும் இருக்கிறதா என்று பிட்டர்பர்க்ஸ் வீதியில் அலைகிறான். அந்த நகரத்தில் ஒருத்தியை மட்டும் தான் அவன் அப்படி சந்திக்கிறான்.

பொதுவாக அறத்தை பற்றி நாம் மெய்சிலிர்க்கும் சம்பவங்கள் கதைகள் அனைத்தும் தனிப்பட்ட அல்லது சமூகத்தில் நிலவும் யூகத்தை முன்முடிவையே காட்டுகின்றன.

என் அனுமானபடி முன்பு சென்ற காலகட்டத்தில் நிலவிய யூகம் என்பது உயர்தட்டில் இருப்பவர்கள் எழைகளுக்கு அறமோ மனசாட்சியோ இருக்காது, தன் நட்பு வட்டத்தில் இருக்கும் பணக்காரர்களே இவ்வளவு சுயநலமாக பணத்தாசை பிடித்தவர்களாக இருக்கும் பொழுது கட்டாயம் ஏழைகள் இன்னும் சுயநலாமானவர்களாக மனசாட்சி அற்றவர்களாக இருப்பார்கள் என்பது அன்று நிலவிய யூகம். சினிமாக்களும் கதைகளும்  அந்த யூகம் தவறு என்று ஆக்கியது.

இன்று பொதுவாக நிகழும் சராசரி சமூக யூகம் அல்லது அபிப்ராயம், எழைகள் அறமும் மனசாட்சியும் கொண்டவர்கள் ஆனால் பணக்காரர்கள் வஞ்சகர்கள் என்பது.

இக்கதை இரண்டு யூகங்கள் அல்லது கற்பனை அபிப்ராயங்களை பற்றி பேசுகிறது. ஒன்று பொருளாதாரத்தில் உயர் தலத்தில் இருக்கும் கதைநாயகன் செல்வத்தின் Romanticised மனசாட்சி மற்றும் ஏழைகள் பற்றியது. இரண்டாவது யூகம்  எழைகள் பணக்காரர்களை ஏமாற்றுக்காரர்கள் என்றும் தங்களுக்குள்ளாக வந்து பேசுவது போல் பேசி திருடும் ஓநாய்கள் நல்லவர்கள் என்னும் அவர்களின் அனுமானம் பற்றியது.

இக்கதையில் வரும் கதாநாயகன் செல்வம் ஒருவரின் உயிரை காப்பாற்றுகிறான். நல்லது செய்யபோய் அவன் பொரியில் சிக்க வைக்கபட்டபோது ஒரு தெய்வத்தின் அறத்தின் குறல் வந்து தன்னை காக்கும் என்று நினைத்து கொள்கிறான். எதிரே மனசாட்சியின் குறலாக யாரும் வந்து நீ ஏன் காப்பாத்தல என்று விட்டால் வரும் குற்ற உணர்வின் பயத்தால் தான் செல்வம் அவரை காப்பாற்றினான். ஆனால் எதிரே அப்படி எந்த மனசாட்சியும் இல்லை மானுடர்கள் சந்தர்பங்களால் ஆனவர்கள், வாழ்க்கை நாடகமும் இல்லை என்ற கதையின் முடிவு அவனக்கு விடுதலையை அளிக்கிறது.

இனி யாரும் அடிபட்டு கிடந்தாலும் செல்வா ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பான். ஆனால்  மனிதர்கள்,மனசாட்சி,அறம் பற்றி முன்பிருந்த கற்பனைவாத சுமை அவனுக்கு இருக்காது.

“அறம் அது அவள்டல்ல இருந்துச்சு” என்பது அறம் கதையின் வரி. அது அறம் நிகழ்ந்த கதை. அறமென்ப.. அறம் என்றால் என்ன என்பது பற்றிய கதை. யூகங்கள் அனுமானங்களுக்கு மத்தியில் உள்ள உண்மை பற்றிய கதை.

Human values என்பது கொடுப்பதே, என்று இந்த கதையை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி

பிரதீப் கென்னடி

திரை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

திரை என்பது என்ன? பிரேமை எப்படி திரையாக ஆகும்? அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். திரை அழகானது. பட்டால் ஆனது. அதுவே வாழ்க்கைக்கும்போதும்தான். ஆனால் எங்கோ அதை விலக்கி உள்ளிருப்பதையும் பார்க்கவேண்டியிருக்கிறதா? பெருமாளை தங்க அங்கி இல்லாமல் பார்க்கமுடியாது. ஆனால் உள்ளெ இருப்பது கரிய கற்சிலை என தெரிந்திருக்கவும் வேண்டுமா?

எஸ்.

 

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்கள் – சுவாமி சித்பவானந்தர் உரையுடன், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை பத்துக்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ளது. அத்தனையும் சொக்கத்தங்கம்.

ஒரு சாதாரண வாழ்க்கை குறிப்பாக இந்தப் புத்தகங்களில் தாயுமானவர் வரலாறு கூறப்படும். இது அனைவருக்கும் தெரிந்த கதையே எனினும் தங்கள் கைப்பட்டு இந்தக்கதை மிளிர்கிறது. இந்தக் கதையைப் படித்தவுடன் மீனாட்சி ராணியை குறித்த எனது முந்தைய இறுகிய பார்வை கொஞ்சம் கனிவு கொண்டது.

கனிந்த மனம் கொஞ்சம் விம்மி ஒரு கவிதையை சட்டென்று முணுமுணுத்தது…

திரையே திரையாகி திரையை மறைத்தால்…

திரையில் எல்லாமாகி தெரிவதும் திரையே என்றானால்…

இருப்பதெல்லாம் திரையே எனில் திறப்பது எதனை?

 

திரை கொண்டு மறை மூடினான்…

மறை கொண்டு திரை மூடினான்….

திரைகள் எத்தனை திரைகளடி….

திரையை நீக்க முயலுது மறைகளடி…

 

திரையே மறையாய், மறையே திரையாய்

மனம் மயங்குதடி…

மனம் மயங்குதடி…

 

சிறுவயது முதலே என்னை மிகவும் கவர்ந்த ஞானக் கவி தாயுமானவர். அந்தப் பெருந்தகைக்கு இப்படி ஒரு கதை மூலம் புஷ்பாஞ்சலியாய் உங்கள் கதாஞ்சலி.

நான் முதல் முதலில் திருச்சி தாயுமானவசுவாமி சிவன் கோவிலுக்கும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் விருப்பப்பட்டு போனதே தாயுமானவரை படித்த பிறகுதான். அவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டுதான்.

துறவியான பிறகு எனது சுற்றல்களின் பகுதியாக இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிபுரம் தாயுமானவர் கோயிலில் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து தியானித்து இருக்கிறேன். மிக அருமையான இடம்.

அதுவரை ஊர் சுற்றிக் கொண்டு இருந்த என்னை அங்கேதான் யாரென்றே தெரியாத ஒருவர் என்னிடம் வந்து இன்னும் எத்தனை நாளைக்கு சுத்தப் போகிறாய் என்று கேட்டார்… ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார முடியாதோ என நான் சாட்டையடி வாங்கிய திருத்தலம்.

காதலுக்கும் பக்திக்கும் ஒரு நூல் இழை தான் வித்தியாசம். அரசியின் கண்களை இருளாகி மறைத்தது மானுடக் காதல். அடிகளின் கண்களை ஒளியாகி திறந்தது பராபக்தி. கண்களை காதல் மறைத்தால் விடிவே இல்லையா???அதற்கும் விடிவு உண்டு அஞ்சாதே அடுத்த பிறவியுண்டு என்று தாயுமானவ சுவாமிகளின் அமுதவாக்கைக் கொண்டே அன்போடு அருள் கொண்டு அரவணைத்துச் செல்கிறது உங்கள் இலக்கிய கரங்கள் .

பங்காரு ராம நாயக்கன் என்ற ஒரு கற்பனைப் பாத்திரத்தை படைத்து எத்தனை அழகாய் எத்தனை எத்தனை வரலாற்று பாத்திரங்களை இணைத்து நிஜமும் கற்பனையும் ஊடும் பாவும் என ஒரு பெரு நெசவு செய்து படைத்தீர் இந்தக் கதையை….. ஆஹா அருமை அருமை.

பூடகமாய் சைவசித்தாந்தம் காட்டும் ஏழு திரைகளையும் விலக்குகிறீர்களோ எனவும் கூட ஒரு கணம் வியந்தேன். கதைசொல்லியின் வழியாக காட்சிகள் மாறும் தோறும் ஒவ்வொரு திரையாக பல திரைகள் விலகுவதாகவே நான் விரித்துப் பொருள் கொண்டேன். அதற்கேற்ப நீங்கள் அளித்திருந்த ஒவ்வொரு புகைப்படமும் அர்த்தம் பொதிந்தவை.

ராமலிங்க வள்ளல் பெருந்தகையின் பின்வரும் பாடல் நினைவில் தட்டியது.

“கரைவின் மாமாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !”

மாயா சக்தி,கிரியா சக்தி, பரா சக்தி,இச்சா சக்தி,ஞான சக்தி,ஆதி சக்தி,சிற்சக்தி என்ற ஏழு திரைகளால் எல்லா மனிதர்களும் எப்படி எப்படி எல்லாம் ஆசை வயப்பட்டு மாயை திரையினால் ஆட்டி வைக்கப் படுகிறார்கள் என்று ஒவ்வொரு கதைமாந்தரின் மூலமாகவும் ஒவ்வொரு விதமாக காட்டிச் சென்றீர்கள்.

கதையில் வருகின்ற ஒவ்வொருவரும் ஒரு படிநிலையில் அவரவர் நிலைக்கு ஏற்ப சிலபல திரைகளால் கட்டுண்டு.

தாயுமானவ சுவாமி ஒருவர் மட்டுமே ஏழு திரையும் விலக்கி அந்த உன்னதப் பெரு நிலையில்.

“திரையற்ற நீர்போல் தெளிய எனத் தேர்ந்த உரை பற்றி உற்றங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ?” என்று தானே கேட்டு, அடங்கா திரைகளால் சலனமுற்று அலையும் கடல் போன்ற உள்ளத்தை ஒடுக்கி உணர்ந்து அமர்ந்த ஒப்பிலா பெருந்தகை அவர் அல்லவா?.

தூய பனித் திங்களும் சுடுவதென பித்தேற்றும் மாய மடவார் குழர் காட்டில் சிக்குவாரா அவர்? சித்தமெல்லாம் சிவமயமானவருக்கு சிந்தையில் வேறு எதுவும் உதிக்கத்தான் கூடுமோ.

எந்தப் பெரிய கோபுரத்தையும் உண்மையில் தாங்குவது அதன் அடித்தளத்தில் பூமிக்கு அடியில் மறைந்து கிடக்கும் தாங்கு கற்களின் கட்டுமானமே. மாபெரும் இயற்கை வாலறிவும் பேரறமும் எல்லாவற்றையும் இம்மி பிசகாத துல்லியத்துடன் இயக்கிக் கொண்டிருக்கின்ற போது நாம் அகந்தையினால் எண்ணிக் கொள்கிறோம் நாமே எல்லாவற்றையும் இயக்குவதாகவும் கட்டுப்படுத்துவதாகவும். இப்படி எண்ணி வீணாய் போனவர்கள்தானே அன்று இருந்த அத்தனை அரசு அதிகாரிகளும், பாளையக்காரர்களும், நாயக்கர்களும். மராட்டியர்களும், நவாபு களும். தங்களுக்குள் அடித்துக்கொண்டு வெள்ளையனுக்கு விலை போனார்கள்.

பெரியகோயில் கோபுரத்துக்கு அடியில் அத்தனை எடையையும் தாங்கிக்கொண்டு உடல்குறுகி தொப்பை பெருத்து விழிதெறிக்க வரிசையாக அமர்ந்திருக்கும் பாதாள முண்டன்களில் ஒருவன் என்று ஒருவர் எண்ணிக்கொண்டால் அது எத்தனை பெரிய மாயையில் அவர் கட்டுண்டு கிடப்பதை காட்டுகிறது. அத்தனை திரைக்கும் ஆதி காரணமாய் இருப்பது இந்த அகந்தையும் அறியாமையும் தானே.

நீங்கள் ராணி மீனாட்சியையும் அவளது அறையையும் குறித்து வருணித்த விதம் அவற்றை அப்படியே கண்முன் கொண்டு வந்து  நிறுத்திவிட்டது. அப்பப்பா என்ன ஒரு கற்பனை திறன். அதேபோல தாயுமானவர் ஸ்வாமியை பங்காரு ராமநாயக்கன் சந்திக்கின்ற நந்தவனத்தின் வர்ணனைகளும் அந்த நீர்த் துளிகள் விழுந்து மண்ணில்  புழுதியுடன் திரண்டிருந்த  காட்சி அமைப்பும் எங்கோ கொண்டு சென்று விட்டது.

ராணி மங்கம்மாள் துவங்கி ராணி சின்ன முத்தம்மாள் ராணி மீனாட்சி என மூன்று ராணிகளின் வாழ்வில் தான் எத்தனை எத்தனை புயல்கள் எத்தனை எத்தனை துயரங்கள். இந்த விதியின் கைகள் தான் எத்தனை வலிமையானவை யார் யாருடைய வாழ்வில் எப்படி எப்படியெல்லாம் விளையாடிச் செல்கிறது. மாண்டுவிட்ட அரசன், பொறுப்பில் மாட்டிக்கொண்ட ராணி, வந்துவிட்ட அல்லது வரப்போகிற அல்லது வரிந்து கொண்ட மகன், இவைகள் போதாதென்று ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான அன்புக்குரியவர் என நான்கு பகடைகள் உருண்டு உருண்டு விளையாட்டு காட்டுகின்றன உங்கள் இலக்கிய சதுரங்கப் பலகையில். மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டுமா இல்லையா எனத் தெரியாது, ஆனால் மங்கையாய் பிறந்து விட்டால் வாழ்க்கையே ஒரு பெரிய தவம்தான். அதில் மட்டும் எந்தவித ஐயமும் இல்லை. அப்பப்பா எத்தனை எத்தனை நரக வேதனைகள், நம்பிக்கை துரோகங்கள், சூழ்ந்துகொல்லும் நச்சுப்பாம்பு கூட்டங்கள். அபலைப்பெண் என்றாலும் அரசு ஆளும் ராணி என்றாலும் அவர்கள் அடைகின்ற துயரங்கள் மாறுவதே இல்லை.

அவர்கள் கொண்ட அன்பும் காதலும் தாய்மை உணர்வும் சமூகப் பொறுப்பும் அவர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என வியக்க வைத்த கதை.

மாரியை நம்பலை, மாதேவரை நம்பலை, அந்த மகாராசி பெயரைச் சொல்லி பிள்ளைபெத்தோம் என்று எளிய மக்கள் வாழ்த்துவது என்றால் எத்தனை பாரத்தை சுமந்து இருக்க வேண்டும் அந்தப் பெண்ணரசி ராணி மங்கம்மாள். குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உயிர் துறப்பது என்றால் எத்தனை துயர் சுமந்து இருக்க வேண்டும் ராணி சின்ன முத்தம்மாள். பணமும்  பெற்றுக்கொண்டு குர்ஆன் மீது செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி நம்பிக்கை துரோகம் செய்தார்கள், நாட்டையே சூறையாடினார்கள் என்றால் எத்தனை நரக வேதனைப்பட்டு தன்னை மாய்த்துக் கொண்டிருப்பார் ராணி மீனாட்சி. தங்கள் சொந்த வாழ்க்கை பொது வாழ்க்கை என எதிலுமே சுகப்படவில்லை இவர்கள்.

வாசகர்களாகிய எங்களுக்கும் வரலாற்றின் மீதான திரைகள் விலகி, ஆன்மீகத்திலும்  லௌகீகத்திலும் வரலாற்றிலும் எத்தனையோ புதிய திறப்புகள்.

எத்தனை நன்றிகள் உங்களுக்கு உரைத்தாலும் போதுவதில்லை எங்களுக்கு.

நெஞ்சம் நிறை அன்புடனும் நன்றிகளுடனும்

ஆனந்த் சுவாமி

 

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 11:31

இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்

இந்து என உணர்தல்

அன்புள்ள ஜெ

கட்டுரைக்கான எதிர்வினைகளில் ஒன்று இது. வாசுதேவன் என்பவர் எழுதியது.

ஒவ்வொரு மதத்திலும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புகள் திரட்டப்பட்டுள்ளன. இதை கற்க/ரசிக்க ஒருவர் தன் மதத்தோடு இணைத்துக்கொண்டு பெருமிததோடு அணுக வேண்டும் என்பது பிழையான வாதம். வாடிக்கன் போப் ஆண்டவர் ஆலய கூரையில் டாவின்சி வரைந்த ஓவியத்தை ரசிப்பதற்கு நான் கிறிஸ்துவனாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில்லை. இஸ்லாமியர்களின் ‘காலிகிராஃபி” சித்திர எழுத்தை புரிந்துகொள்ள நான் முஸ்லீமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

கலை,இலக்கியத்திற்கு அடிப்படை ‘சுயம் அழித்தல்’. அடையாளத்தை மறுப்பதில்தான் கலையின் பல பரிமாணங்கள் புலப்படும். பண்டைய இந்து மதத்தின் கலைச்செல்வங்களை அணுகுவதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டும் என்ற நியதியெல்லாம் இல்லை.

*

இந்தக்கட்டுரையில் இந்துமதத்தில் பாராட்டபடவேண்டிய அம்சங்களை அவர் எழுதியிருந்தாலும் மேற்கிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்ற தொனியும், அனைத்தும் இந்திய பூமியில் இருக்கிறது என்ற சாராம்சமும் மிக ஆபத்தானது

*

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இது எனக்கும் உண்மை என்று தோன்றியது.

என். ராஜ்குமார்

 

அன்புள்ள ராஜ்குமார்,

நம்மவர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் ஒரு விவாதத்தில் தொடர்புடனோ இல்லாமலோ பத்துப்பதினைந்து ஆங்கில அதிபாண்டித்திய நூல்களை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் ஓர் எளிய கருத்தை நேரடியாக்ப் புரிந்துகொள்ளாமல் மொண்ணையாக முழக்கிக் கொண்டுமிருப்பார்கள்.என்னதான் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த ஆங்கில அதிபாண்டித்திய ஆசிரியர்களுக்கு இதைவிடப்பெரிய அவமதிப்பு வேறில்லை.

முந்தைய கட்டுரையில் இந்துமதத்தை புரிந்துகொள்ள இந்துவாக இருக்கவேண்டும் என எங்கே சொல்லியிருக்கிறேன்? இந்துவாக இருக்கும் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்? நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் என்கிறேன். ஒருவர் பெருமிதம் கொள்ள வேண்டுமென்றால் எதன்பொருட்டு பெருமிதம்கொள்ளலாம் என்கிறேன். அவ்வளவுதான்.

இந்து மதமென்பது சாதி மட்டுமே என ஒருவர் சொல்லும்போது ஒரு சிந்திக்கும் மனிதனுக்கு, கற்பனைகொண்ட படைப்பாளிக்கு, ஆன்மிகத்தேடல் கொண்டவனுக்கு சாதி போன்ற சமூக ஆசாரங்களுக்கு அப்பால் இந்துமதம் எவ்வகையில் பொருள்படுகிறது என்கிறேன். அதை அவர் ஏற்கவில்லை, அவருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் அவர் இந்து எதிர்ப்பாளராகவோ மறுப்பாளராகவோ நீடிக்கலாம். மதம்கூட மாறலாம்.

*

இன்னொரு கடிதம். பழங்குடிகளை இந்துக்கள் என்கிறேன் என ஒருவர் எகிறிக் குதிக்கிறார். கிறித்தவர் அவர். சரி, பழங்குடிகளை எவரும் மதமாற்றம் செய்யக்கூடாது என சொல்ல உங்களால் முடியுமா என்று கேட்டேன். அதற்கு மேலும் வசைகள்.

பழங்குடிகள் எல்லாம் இந்துக்கள் என எங்கே சொல்லியிருக்கிறேன்? அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொன்னால் இந்துக்களே. நான் சொல்லியிருப்பது இந்துமதத்தின் அடிப்படைக் குறியீடுகளுக்கு பழங்குடிப் பண்பாட்டில், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கும் வேர்களைப் பற்றி மட்டுமே.

*

நான் ஐரோப்பிய அல்லது வெளிநாட்டு சிந்தனைகளை எங்கே நிராகரிக்கிறேன்? இந்து அல்லது இந்திய சிந்தனைமுறை மட்டும் போதும் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்? எழுதியதை படிக்கமாட்டார்கள், எழுதாதவற்றை படிப்பார்கள். அவற்றுக்கு பதில்சொல்லுவார்கள்.

நான் ஐரோப்பிய சிந்தனை மரபை- இலக்கியக் கலைமரபை என் வேர்நிலமாக ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிடுபவன். அதைப்பற்றிய நிராகரிப்புகள் எதையும் எந்நிலையிலும் ஏற்காதவன். என் ஞானாசிரியர்கள் பலர் ஐரோப்பிய அறிவொளிக்காலத்தில் தோன்றியவர்கள். இந்து மெய்யியலைக் கற்கவேகூட அவர்களில் சிலரையே வழிகாட்டியாகக் கொள்கிறேன்.

அந்தக் குறிப்பிட்ட கட்டுரையிலேயே ஐரோப்பியச் சிந்தனைமரபு – பண்பாட்டு மரபு எந்நிலையிலும் நமக்கு அன்னியமானதாக ஆகக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். அது நம்மைச் சுரண்டிய ஐரோப்பாவின் சிந்தனையும் பண்பாடும்தான் என ஒருவர் சொல்வார் என்றால்கூட அதை ஏற்கமுடியாது என்று சொல்லியிருக்கிறேன்.

அச்சிந்தனைகளை , அப்பண்பாட்டை ஐரோப்பாவின் இலட்சியவாதமாகக் கண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும், ஐரோப்பாவின் நடைமுறை அரசியல் நாம் அவற்றை அணுகுவதற்கான நிபந்தனையாக அமையலாகாது என்றே எப்போதும் சொல்லியிருக்கிறேன். உண்மையில் என் கட்டுரையின் மையப்பேசுபொருளே அதுதான்.

ஓர் இந்து ஏசுவைக்கூட மறுக்கவியலாது என்பதே என் எண்ணம். எதன்பொருட்டும் கிறிஸ்தவ ஆன்மிகத்தை மறுக்கலாகாது என்று அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். எப்போதும் சொல்லியும் வருகிறேன்.

கவனியுங்கள், இதையெல்லாம் இன்னொரு கட்டுரையில் சொல்லவில்லை, அதே கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். என் கட்டுரைகளை நீளமாக எழுதுவது இதனால்தான். அக்கட்டுரையிலேயே வரப்போகும் எல்லாவகையான திரிபுகளையும் முன்னரே கண்டு விளக்கம் அளித்திருப்பேன். ஆனாலும் விளக்கம் அளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தமிழ்நெறி.

ஒரு மிகச்சிறிய விஷயம் நான் சொன்னது. அதை திரும்பத் திரும்ப திரிக்கவே நம் அறிவுச்சூழல் பயிற்றுவிக்கிறது. எதையுமே விவாதித்துப் புரிந்துகொள்ளும் சூழல் இங்கில்லை. ஆகவே நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்து விடுவது என் வழக்கம்.

*

மதம் பற்றிய விவாதங்களில் எப்போதும் நான் சொல்லிவருவது இது. பலமுறை சொன்னதை இங்கு மீண்டும் சொல்கிறேன். ஓர் இந்து இந்துமதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட சாதிக்கொடுமைகளுக்காக, ஒரு கிறித்தவன் பைபிளின் பெயரால் ஆசிய ஆப்ரிக்க தென்னமேரிக்க நாட்டுக் குடிகள் ஒழிக்கப்பட்டமைக்காக, அதன் மதமாற்ற வெறியின் உலகளாவிய பண்பாட்டு அழிப்புக்காக, ஓர் இஸ்லாமியன் இஸ்லாமின் பெயரால் நடந்த பண்பாட்டு அழிப்பு மற்றும் போர்களுக்காக வெட்கப்படவேண்டும். அந்நிலையிலேயே அவன் அந்த மரபை ஏற்றுப்பேச தகுதி கொண்டவன் ஆகிறான். நான் பேசுவது அதற்கப்பால் மதங்கள் அளிக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சி பற்றி மட்டுமே.

*

இத்தகைய எந்த விவாதத்திலும் மையத்தை மழுப்பும் பேச்சுக்கள் உடனடியாக எழுகின்றன. அதிலொன்றுதான் இந்த ’அடையாளப்படுத்திக் கொள்ளுதல்’ பற்றியது.

’இந்துப்பண்பாடு என்பது சாதியை உருவாக்கி நிலைநிறுத்துவது மட்டுமே’ என்ற பிரச்சாரத்திற்குப் பதிலாக, அது அழியவேண்டும் என்ற கூச்சலுக்கு எதிர்வினையாக அதன் தத்துவ- பண்பாட்டு கொடைகளைப் பற்றிப் பேசுகிறேன். இந்துப் பண்பாடு அழியவேண்டும் என்று சொல்பவர்களின் அறிவின்மை அல்லது உள்நோக்கம் பற்றிய விளக்கம் அது.

இதில் விவாதிக்க வருபவர் முதலில் இதற்குப் பதில் சொல்லவேண்டும். இந்துப் பண்பாடு மானுடச்செல்வம் என ஏற்கிறீர்களா, அது அழியலாகாது என ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆனால் அதை அப்படியே கடந்து, அந்தப் பதிலை ‘ இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்ளுதல்’ என்பதாக மாற்றிக்கொண்டு, அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டிய தேவையில்லை என விவாதத்தை எடுத்துக் கொண்டுசெல்வது ஒரு ஜாலம். இப்படித்தான் இது எப்போதும் நடைபெறுகிறது.

இந்துப் பண்பாட்டின் கொடையை, மானுடத்திற்கு அதன் தேவையை உணர்ந்த ஒருவர் அது அழியவேண்டும் என்று சொல்ல மாட்டார். அழியவேண்டுமெனச் சொல்பவர் அதிலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளவும் முடியாது. அது அவருடைய பெரும் அறிவுத்தள வறுமையையே காட்டுகிறது. இந்தத் தரப்பு இப்போதைக்கு மறுக்கப்படவில்லை அல்லவா? சரி, மேலே செல்வோம்.

இந்துப்பண்பாடு மானுடச்செல்வம், அது நீடித்து வாழவேண்டிய ஒரு மரபு என ஒருவர் ஏற்றுக்கொண்டபின், அதை ஆழ்ந்தறிய முயலும்போது, அவர் அம்மரபின் உள்ளிருந்து அதைப் பார்க்கிறாரா வெளியே நின்று பார்க்கிறாரா என்பது முற்றிலும் வேறு விவாதம். நான் உள்ளிருந்து அணுகுகிறேன் என்று மட்டுமே நான் சொல்கிறேன்

’கற்க’ முனையும் ஓர் ஆய்வாளர் வெளியே நின்று பார்க்கமுடியும். வெளியே நின்று பார்ப்பது மேலும் உகந்ததும் கூட. ஆகவேதான் நான் எப்போதும் வெளியே நின்று பார்க்கும் ஐரோப்பிய ஆய்வாளர்களை தகவல்களுக்கு முதன்மையாக நம்புகிறேன்.‘ரசிப்பதற்கு’ம் ஒருவர் வெளியே நிற்பது தடை அல்ல.

ஆனால் படைப்பாளி, சிந்தனையாளர் அவ்வண்ணம் ‘வெளியே’ நின்று பார்த்தால் அவருக்கு பொருட்படுத்தும்படி ஒன்றும் கிடைக்காது. மதத்தில் பண்பாட்டில் மட்டுமல்ல எதிலும் வெளியே நின்று பார்ப்பவரால் பொருட்படுத்தும்படி எதையும் எழுத முடியாது, உருவாக்க முடியாது. இதுதான் வேறுபாடு.

ஏனென்றால் தத்துவம், கலை, இலக்கியம் மூன்றும் ‘அறிதல்நிலை’யில் இருந்து வருவன அல்ல. ‘உணர்தல்நிலை’யில் இருந்து வருபவை. குறிப்பாகச் சொல்லப்போனால் ஆழ்படிமங்கள் மற்றும் அவற்றிலிருந்து உருவாகும் படிமங்களைச் சார்ந்து இயங்குபவை. அச்செயல்பாடுகளுக்கு அந்த ஆழ்படிமங்களை, படிமங்களை ‘அறிந்தால்’ மட்டும் போதாது. ’ரசிப்பது’ மட்டும் போதாது. அவற்றை ஆழுள்ளம் உள்வாங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கு நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வகையிலேனும்.

ஒரு பண்பாட்டின் கொடைகளை முற்றாக உள்வாங்கிக் கொள்ள, அவற்றினூடாக உளம் வளர அதன் பகுதியாக ஆகவேண்டியிருக்கிறது. அந்த அடையாளப்படுத்திக் கொள்ளலால்தான் நாம் மிகச்சாதாரணமாக இருந்தாலும் ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க இடத்தில் நின்று மெய்சிலிர்க்கிறோம். ஒரு குறியீட்டால் உளம் உந்தப்படுகிறோம். அந்த உணர்வை அடைந்த எவரும் நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியும்.

நம் பிரச்சினை என்னவென்றால் ஒருவர் தன் மொழி சார்ந்து அந்தச் சிலிர்ப்பை அடைந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். அந்த அடையாளம் போற்றப்படும். அங்கே எவரும் போய் அடையாளமின்மையின் புனிதம் பற்றி பேசுவதில்லை. மதம் சார்ந்து அதை அடைந்தால் மட்டுமே இங்கே முத்திரைகுத்தி வசைபாடப்படும்.

‘தன்னேரில்லா தமிழ்’ என்ற வரி எனக்கு அளிக்கும் அதே பேருணர்வை ‘அசதோமா சத்கமய:”வும் அளிக்கலாம் என்பதே நான் சொல்ல வருவது. அது ஒரு முழுமையுணர்வு, நாம் நமக்கென அடையும் ஒரு தன்னிலை.

*

அடையாளங்கள் தனக்குத் தேவையில்லை என ஒருவர் சொல்கிறார் என்றே கொள்வோம். அதை நான் எங்கே அய்யா மறுக்கிறேன்? அடையாளங்களை மறுப்பதோ அடையாளமில்லாதவராக இருப்பதோ அவருடைய தெரிவு. இந்து மெய்ஞான மரபிலேயே அனைத்து அடையாளங்களையும் துறப்பவர்கள் பல்லாயிரவர் உண்டு.

ஒருவர் மானுடப் பண்பாட்டுச் செல்வம் ஒன்றை அழிக்கவேண்டும் என்று சொல்லும்போது அது எத்தகைய முக்கியத்துவம் கொண்டது என்று சொல்கிறேன். உடனே அடையாளத்தை முன்வைக்கிறேன் என்கிறார். அடையாளத்தை வலியுறுத்துகிறேன் என்கிறார். என்ன மோசடி வாதம் இது!

*

’கலை, இலக்கியத்திற்கு அடிப்படை சுயம் அழித்தல், அடையாளத்தை மறுத்தல்’ போன்ற மகாவாக்கியங்களெல்லாம் எங்கிருந்து வருகின்றன, எந்த இலக்கியமேதையால் சொல்லப்படுகின்றன என்று தெரியவில்லை. உண்மையிலேயே அவற்றைச் சொன்னவர் படைப்பிலக்கியச் சாதனைகள் செய்த ஒருவர் என்றால் அவருடைய தரப்பாக மட்டும் அதை கருத்தில்கொள்ளலாம், அவ்வளவுதான்.

கலையிலக்கியங்களுக்கு அப்படி மாறாநெறிகளென ஏதுமில்லை. பொதுவாக, நாம் உலகக் கலையிலக்கியத் தளத்தில் பார்க்கும் அத்தனை பெரும்படைப்பாளிகளும் தங்களை குறிப்பிட்ட பண்பாடுகளுடன் ஆழமாக பிணைத்துக் கொண்டவர்களே. ’ஒற்றைமொழியுடன், ஒற்றைப் பண்பாட்டுடன் தன்னை ஆழமாக பிணைத்துக்கொள்ளாத பெரும்படைப்பாளிகள் இல்லை’ என்றே விமர்சன மரபு மீளமீள குறிப்பிடுகிறது.

அத்தனை பெரும்படைப்பாளிகளும்  தங்கள் மரபில் இருந்து தங்கள் கனவுகளை உருவாக்கிக் கொண்டவர்களே. அவர்கள் தொழிற்படும் மொழியே அந்த முதற் தன்னிலையை அவர்களுக்கு அளித்துவிடுகிறது. அவர்கள் அதற்குமேல் தங்கள் பண்பாடுகளை ஆழ்ந்தறிந்து, அவற்றை தங்கள் அகமெனக்கொண்டு , தங்கள் கனவுகளினூடாக முன்செல்பவர்கள். தங்கள் தன்னிலைகளை உருவாக்கி அழித்து வளர்பவர்கள்.

அப்படைப்பாளிகளின் வழியாகவே அப்பண்பாடு முன்னகர்கிறது. அவர்களையே அது தன் அடையாளமாகக் கொண்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் இங்கிலாந்து என எப்படிச் சொல்கிறோமோ அப்படியே ஹெமிங்வேயின் அமெரிக்கா என்றும் சொல்லமுடியும்.  அவர்களை அப்பண்பாடுகளில் இருந்து பிரித்தறிய இயலாது. அப்பண்பாடுகளைக் கருத்தில்கொள்ளாமல் அவர்களை அறியவும் இயலாது.

ஆனால் அரிதாகச் சிலர் அடையாளங்களை மறுப்பவர்களாக, சுயமற்றவர்களாக இருக்கவும் கூடும். அது விதியல்ல, விதிவிலக்கே. ஆனால் மறுப்பதும் கடப்பதும்கூட அப்பண்பாட்டின்மீதான எதிர்வினைகள்தான். பலசமயம் அவர்களின் மறுப்புக்கள் ஒருவகை பண்பாட்டு எதிர்வடிவங்களாக இருக்கும். அவர்களின் இன்மைகள் இருத்தலின் தலைகீழ் வடிவங்களாக இருக்கும். அவர்களை அப்பண்பாட்டிலேயே இருக்கும் விதிமீறலின் தொடர்ச்சிகள் என்று எளிதில் வரையறை செய்துவிடமுடியும்.

தனித்த பண்பாட்டு அடையாளம், பண்பாட்டுப் பின்னணி இல்லாத இலக்கியப் படைப்பாளி, கலைஞர் என எவரும் இன்றுவரை இந்த புவியில் செயல்படவில்லை. படைப்பிலக்கியம் தனக்கான பொருளுற்பத்தியை அந்த பெரும் பகைப்புலத்தில் இருந்தே உருவாக்குகிறது. அது இல்லையேல் படைப்பிலக்கியம் வெறும் சொற்கள் அன்றி வேறல்ல.

*

இந்த ‘சுயமழித்தல்’ போன்றவை எல்லாம் பொத்தாம்பொதுவான சொற்கள். இலக்கியவாதிகள் அவற்றை கவனமில்லாமல் பயன்படுத்தலாகாது. நவீனத்துவத்தின் தொடக்க காலகட்டத்தில், இருத்தலியலாளர் சிலரால் சொல்லப்பட்டவை இச்சொற்கள்.

மொழியே ஒரு பண்பாட்டுவெளி எனும்போது பண்பாடற்ற நிலை என ஒன்றில்லை. மரபற்ற நிலை என்றும் ஒன்றில்லை. ஆகவே சுயத்தை அழிக்க எவராலும் இயலாது. அவ்வாறு சுயம் அழிய ஒருவர் சித்தராக, பரமஹம்சராக நிர்விகல்ப சமாதியில் இருக்கவேண்டும். அல்லது மூளைச்சிதைவுநோயிலும் இருக்கலாம்.

சுயம் [Self] போன்ற சொற்களை இந்தவகை விவாதத்தளத்தில் நான் பயன்படுத்துவதில்லை. என் சொல் தன்னிலை. [subjectivity]. அது ஒரு காலப்புள்ளியில் ஒரு சொற்களனில் திரண்டுவரும் ஒரு தன்னுணர்வுநிலை. அதை இந்திய மரபின் அஹம் என்னும் சொல்லுக்குச் சமானமானதாகக் கொள்ளலாம்.

தன்னிலை இல்லாத நிலை என ஏதுமில்லை. பல தன்னிலைகள் உள்ளன. மொழி உருவாக்கி அளிக்கும் தன்னிலைகள் முதல் பற்பல தன்னிலைகள் மனிதர்களில் திகழ்கின்றன. அந்த தன்னிலைகளுக்கு இடையேயான மோதலும் இயைபுமே ஒருவரில் வெளிப்படும் படைப்பு வெளிப்பாடு என்று சொல்லலாம்.

மரபுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அது உருவாக்கி அளிக்கும் தன்னிலையை அப்படியே எடுத்து தலைமேல் சூடிக்கொள்வது அல்ல. எந்த சிந்திக்கும் மனிதனும் அதைச் செய்வதில்லை. என் கட்டுரை இறுதியில் மிகத்தெளிவாகவே அதை சொல்கிறது. வழிகளை, நூல்களை, படிமங்களை மட்டுமே மரபு அளிக்கிறது என.தனக்கான தன்னிலையை உருவாக்கிக் கொள்வதற்கான மூலப்பொருட்களான கருத்துக்களையும் படிமங்களையும் தேடியே சிந்திப்பவன் மரபை அணுகுகிறான், அதனுடன் இணைந்துகொள்கிறான்.

தன்னிலை என்பது நாம் ஏற்று அணிந்துகொள்ளும் அடையாளம் அல்ல. நம்மில் உருவாகிக்கொண்டே இருப்பது. அழிந்து அழிந்து உருவாவது. [அத்வைத மரபின்படி ஒருவன் முதல்முழுமையின் பகுதியாக தன்னை அறுதியாக உணர்வதே முழுத்தன்னிலை. அதைக் கடந்து சென்று தன்னிலையழிவது வீடுபேறு]

*

’கிறிஸ்துவைத் தெரிந்துகொள்ள ஒருவன் கிறிஸ்தவனாக இருக்கவேண்டும் என்பதில்லை’ என்பதுபோன்ற வரிளை விவாதங்களில் எதிர்கொள்வது மிகக்கடினம். கிறிஸ்தவம் ஒரு நிறுவன மதம். அதில் உறுப்பினரானால் மட்டுமே கிறிஸ்துவை புரிந்துகொள்ள முடியும் என்று சிந்திக்கும் எவரும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் கிறிஸ்து என்னும் ஆன்மிகப் பெருநிலையை உணர்ந்தவர், அகத்தே கிறிஸ்துவை எண்ணி உளமுருகும் வாய்ப்புள்ளவர், கிறிஸ்துவுடன் இணைந்துள்ள ஆழ்படிமங்களால் தன் கனவுகளை நிறைக்கக் கற்றவர் மட்டுமே கிறிஸ்துவை உண்மையாக உணரமுடியும்.

அப்படி உளமுருகும் ஒருவரை கிறிஸ்தவர் என்று சொல்லலாம் என்றால் அவர் கிறிஸ்தவரே. அவ்வகையில் நானும் என்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ள தயங்குவதில்லை. எந்தமேடையிலும். கீதையுரைகளில்கூட அதைச் சொல்லாமல் இருந்ததும் இல்லை.

இந்து என்று சொல்வதும் அந்த வகையான ஓர் உணர்வுநிலைதான்.  இந்துமதத்தின் ஏதேனும் அமைப்பில் உறுப்பினராவது அல்ல. இந்து மரபின் கனவுகளுடன் தன்னைப் பிணைத்துக்கொள்வது, தன் ஆழுள்ளத்தை அதன் படிமங்களாலும் உணர்வுகளாலும் நிரப்பிக்கொள்வது, அதனூடாக தன்னை கண்டடைந்து உருவாக்கி முன்னேறுவது.

இந்து என உணர்தல் என நான் சொல்வது ஒருவர் அறுதியாக நான் ஓர் இந்து என உணர்வதை அல்ல. நான் ஓர் இந்து மட்டுமே என உணர்வதை அல்ல. இந்து என்னும் கண்வழியாகவே அனைத்தையும் பார்ப்பதை அல்ல. என் தன்னிலைகளில் ஒன்று என இந்து என்று உணர்வதை. அதனூடாக எனக்குக் கிடைக்கும் மாபெரும் சிந்தனைப்பரப்பை, உள்ளுணர்வுப் பெருவெளியை அடைவதை.

*

மிக உறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நவீன இலக்கிய- சமூக சிந்தனையின் வெற்றுத்தர்க்கப் பரப்பில் இதற்கு ஏற்பு குறைவாகவே இருக்குமென நான் அறிவேன். ஆனால் தான் உணர்ந்த தர்க்கமற்ற ஒன்றைச் சொல்வதற்கு இருக்கும் துணிவே எழுத்தாளனின் அடிப்படை.

மிக இளம்வயதிலேயே உள்ளத்துள் நுழையும் ஆழ்படிமங்கள் ஒருவரின் கற்பனைப் பெருக்கு, உள்ளுணர்வுப் பயணம் ஆகிய இரண்டுக்கும் மிக மிக உதவியான கருவிகள். அவற்றை அவன் தனக்கே உரியமுறையில் உருமாற்றிக் கொள்வதனூடாகவே தனக்கான படிமங்களை அடைகிறான். அது இலக்கியம் கலை ஆகியவற்றுக்கு மிக அடிப்படையானது.

அதைவிட அவை ஊழ்க [தியான] மரபில் மிக முக்கியமானவை. மிகமிக எளிதாக பேருணர்வுகளை முழுமைநிலையை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடியவை. அவை அறுதியானவை என்று சொல்லவரவில்லை. அவை மிகமிக முக்கியமான கருவிகள் என்று சொல்ல வந்தேன்.

ஒருவன் இந்துவாகப் பிறந்து இளமையில் இந்துச்சூழலில் வாழ்வான் என்றால் அவன் அடையும் ஆழ்படிமங்கள் அவனை கடைசிநாள் வரை உள்ளிருந்து வழிகாட்டுவதைக் காண்பான். அவற்றில் மேல்கீழ் என ஏதுமில்லை. எல்லாமே நிகரானவையே. எனக்கு விஷ்ணுவோ புத்தரோ எவ்வளவு ஆழத்தில் இருப்பவர்களோ அதைவிட நீலி ஆழத்திலிருப்பவள் என்பதை என் வாசகர் உணர்வார்கள். நீலியே என் வழித்தேவதை என அமைந்தாள்.

இதை புரிந்துகொள்ளாதவர்கள் விட்டுவிடுங்கள். உங்களுக்குரியதல்ல இந்த கருத்து. இந்த இடத்தில் ஏற்கனவே கொஞ்சம் குழம்பியிருப்பவர்களுக்காக மட்டும் இதைச் சொல்கிறேன்.

*

இதற்குமேல் இதை விவாதிக்கமுடியாதென நினைக்கிறேன். இதற்குமேலும் புரியாதவர்களுக்கு எதையுமே சொல்லிவிடமுடியாது.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 11:30

March 28, 2021

இந்து என உணர்தல்

உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது. உங்களின் வாசகன் என்னும் தகுதியைக்கூட நான் இன்னும் அடையவில்லை என நினைக்கிறேன்.

பலரையும் போல நானும் உங்கள் “அறம்” தொகுப்பின் வழியே உங்களை அடைந்தேன். அதன்பின் “வெண்கடல்”, “ரப்பர்”, “பனிமனிதன், “வெள்ளையானை”, “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளையும், “முன்சுவடுகள்”, “இன்று பெற்றவை” போன்ற அபுனைவுகளையும் மற்றும் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” என்ற தத்துவ நூலையும் வாசிப்பதன் வழி உங்களுடன் ஒரு நெருக்கமான அக பயணத்தை மேற்கொண்டேன். இப்போது உங்கள் வலைதளத்தின் வாயிலாக தினமும் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

பின் நவீனத்துவத்தின் மீதான என் காதலை வார்த்தெடுத்தவர் நீங்கள் தான். தர்க்கத்தையும் தாண்டிய உச்ச நிலைகளை உங்கள் படைப்பின் மூலம்தான் கண்டுணர்ந்தேன். ஆனாலும் உங்களின் உன்னத படைப்புகளாகக் கருதப்படும் விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு போன்றவற்றை நான் வாசித்தது இல்லை. இன்னும் நான் அவ்வளவு வளரவில்லை அல்லது இன்னும் நான் அங்கு வந்து சேரவில்லை என்றே எண்ணிக்கொள்கிறேன். அதனாலேயே உங்களின் தீவிர வாசகன் என கூறிக்கொள்ளும் நிலையை நான் அடையவில்லை என்றே நினைக்கிறேன்.

நிறைய முறை உங்களுக்கு எழுத எண்ணித் தோற்றிருக்கிறேன். என்ன எழுதுவது?. நான் எழுத நினைப்பவற்றையும், எனக்கு தேவைப்படுவன பற்றியும் முன்பே அறிந்ததைப்போல் எழுதித் தீர்த்துவிடும் ஆசானிடம் புதிதாக என்ன கேட்பது. நிறைய கட்டுரைகளை நீங்கள் எனக்காக எழுதியதாகவே எண்ணி உள்ளம் மகிழ்ந்திருக்கிறேன்.

இன்றும் வழக்கம் போல் தோற்றுப்போகாமல் உங்களுக்கு எழுதிவிடுகிறேன்.

எனது ஐயங்கள்

அ) இந்துக்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி நீங்கள் நிறைய எழுதிவிட்டீர்கள். சலித்திருக்கூடும். என்னுடைய கேள்வியும் இதை ஒட்டிதான். அந்த வேறுபாட்டை என்னால் நன்கு உணரமுடிகிறது. ஆனால் ஒரு இந்துவாக நான் ஏன் பெருமைப்பட வேண்டும்? உங்களின் சாதியாதல் கட்டுரையில் “ஒரு மனிதனை அவனுடைய சொந்த ஆளுமையை வைத்து மதிப்பிடும்போதுதான் அவனுக்குரிய உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது” என்ற உங்கள் சொற்கள் காட்டும் வெளிச்சத்தின்வழி பார்த்தால் இந்துவாக பிறந்ததைத்தவிர வேறு என்ன செய்துவிட்டேன் நான் பெருமை கொள்வதற்கு? சாதியைப் போல் மதமும் ஒரு குறுகலான மனப்பான்மைதானே?

ஆ) நான் அண்ணல் அம்பேத்கரின் கண்களால் இந்து மதத்தை அணுகியவன். எனக்கு இந்துக்கள் என்பவர்கள் சாதிகளால் பிணைக்கப்பட்ட குழுமம் என்ற புரிதலே மேலோங்கி இருக்கிறது. ஒரு சக இந்து வலியால் துடித்துக்கொண்டிருக்க, நான் மட்டும் எவ்வாறு ‘இந்து’ எனக் கூறி பெருமிதம் அடைய முடியும். நீங்கள் சொல்லும் ஆசாரங்கள் வேறு இந்து தரிசனம் வேறு என்ற வேறுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த புரிதல் யாருடைய வலியையும் நீக்கப் போவதில்லை. அப்படியிருக்க, இப்போதைய இந்துக்கள் யாரும் இந்து மதம் போதிக்கும் தத்தவங்களை அறியாதவர்களா? அந்த அறியாமையில் என்ன பெருமை?

இந்த ஐயங்களை உங்களிடம் சமர்பிக்கிறேன். இவற்றில் ஏதேனும் பிழையிருப்பின் மன்னிக்கவும்.

இப்படிக்கு

கருப்பன்

[விக்னேஷ் முத்துக்கிருஷ்ணன்]

அன்புள்ள கருப்பன்,

உங்கள் புனைபெயருடன் உண்மைப்பெயரையும் பிரசுரிக்கிறேன். ஏனென்றால் இளமையில் நாம் இப்படிச் சில அடையாளங்களை சூட்டிக்கொண்டு அதனூடாகச் சிந்திக்கிறோம்.  பிறரையும் அப்படி நம்மை பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறோம். இதனால் நம்மை பிறர் பார்க்கும் பார்வையையும் கட்டுப்படுத்திவிடுகிறோம். மெய்யான எதிர்வினைகள் வராமல் செய்துவிடுகிறோம்.

உங்களுடைய ஐயங்கள் மெய்யானவை. இந்த ஐயங்களை அல்லது இவற்றுக்குப் பின்னாலுள்ள அறவுணர்வை மழுங்கவைக்க நான் முயலப்போவதில்லை. அவை அவ்வாறே கூர்மையுடன் நீடிக்கட்டும் என்றே சொல்ல விரும்புகிறேன்.

*

முதலில் ஏன் இந்து என்ற அடையாளம் அல்லது மரபுத்தொடர்ச்சி தேவை என நான் நினைக்கிறேன்? இது என் தரப்பு, நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதற்கான பதில். நீங்கள் இதை யோசித்துப்பார்க்கலாம் என்று மட்டுமே சொல்வேன்.

நான் மானுட அறிதல் என்பது நிகழ்காலத்தின் எல்லைக்குள் நின்றிருப்பது அல்ல என்று உறுதியாக அறிகிறேன். நிகழ்காலத்தின் அரசியல், சமூகவியல், பண்பாட்டுச்சூழலில் இருந்து அறிதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை தவிர்க்கமுடியாது, அது இயல்பான செயல்பாடு. ஆனால் அறிதல் என்பது தொடர்ச்சியானது. மிகமிகத் தொன்மையான காலத்தில் இருந்து, பழங்குடிக் காலத்திற்கும் முன்பிருந்து, திரண்டு வந்துகொண்டிருப்பது. நம் வழியாக முன்செல்வது.

யோசித்துப்பாருங்கள், இப்படி புரிந்துகொண்டால் ஒழிய சிந்தனைக்கும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் எப்பொருளும் இல்லை. நமக்கு நேற்று பொருட்டல்ல என்றால் நாளை வருபவர்களுக்கு நமது இன்றைய சிந்தனைகளும் பண்பாடும் பொருட்டே அல்ல. அப்படியென்றால் நாம் சிந்திக்கவேண்டாம், கலைகளை உருவாக்கவும் வேண்டாம், இல்லையா?

மானுட அறிவு மிகத்தொன்மையான காலம் முதல் தொடர்ச்சியாக உருவாகி, ஒன்றுடன் ஒன்று மோதி முரண்பட்டு இணைந்து, தன்னைத்தானே திரட்டிக்கொண்டு நம்மை வந்தடைந்திருக்கிறது. நாம் சிந்திப்பதும் கனவுகாண்பதும் அதன் நீட்சியாகவே. சமகாலத்திலேயே உழல்பவர்கள் கூட அந்த நீட்சியிலேயே இருக்கிறார்கள்.

அன்றாட வணிகம்,அன்றாட அரசியல் ஆகியவற்றிலேயே திளைப்பவர்களின் அகம்கூட தொன்மையிலிருந்து நீண்டு வரும் மரபின் மேலேதான் நிகழ்கிறது. அவர்கள் என்னென்ன தர்க்கம் பேசினாலும் அவர்களின் எளிய அறிவால் பதில் சொல்லிவிட முடியாத கேள்விகளுக்கு மரபின் பதில்களையே நாடுவார்கள். அன்றாடத்தில்கூட தன்னையறியாமலேயே மரபின் பதில்களை மறுசமையல் செய்து கையாள்வார்கள்.

அறிவியக்கத்தில் செயல்படுபவன் அந்த மரபு குறித்து அறிந்திருக்கவேண்டும், அதை ஆராயவேண்டும், தன்னுணர்வுடன் அதைக் கையாளவேண்டும் என்று மட்டுமே நான் சொல்கிறேன். என் பயணங்களை நீங்கள் பார்க்கலாம். தொல்பழங்காலச் சின்னங்கள் முதல் இன்றைய பண்பாட்டுநிலைகள் வரை சென்றுகொண்டே இருக்கிறேன். அது இந்த தேடலால்தான்.

மரபின் சிந்தனைகளின் பெரும்பகுதி மதத்திலேயே உள்ளது.மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல.ஆசாரங்களின் தொகுதி மட்டும் அல்ல. சட்டதிட்டங்கள் அல்ல. அது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அது குறைந்தது ஆயிரமாண்டுகளாக மானுடசிந்தனை செயல்பட்ட ஒரு பெருக்கின் பதிவாகவே நமக்கு கிடைக்கிறது. அதை எந்தச் சிந்திக்கும் மனிதனும் முற்றாக நிராகரிக்க முடியாது.

அதிலும், இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் போன்றவை மிகமிகத் தொன்மையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிந்தனையில், பண்பாட்டுத்தளத்தில் செயல்பட்டு வருபவை. பல்லாயிரம் அறிஞர்கள் மற்றும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புக்கள் அவற்றில் திரட்டப்பட்டுள்ளன. அவை மாபெரும் மானுடச்செல்வங்கள்.

அவற்றிலேயேகூட இந்துமதம் மேலும் தொன்மையானது. அதன் ஒருபகுதி வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலத்தில் உள்ளது. கற்காலத்துத் தொல்குடி வாழ்க்கையில் உள்ளது.மறுபகுதி இதோ நம் கண்ணெதிரில் உள்ளது. இன்று, இந்த உலகப்பரப்பில் வேறெந்த மதத்துக்கும் இந்த தனித்தன்மை இல்லை. மானுட சிந்தனை, மானுடக்கலை இத்தனை நூற்றாண்டுகளில் எப்படி உருவாகி வந்தது என்று கண்கூடாக காணும் வாய்ப்பை அளிக்கும் பிறிதொரு களமே உலகில் இல்லை. இது கொஞ்சம் புரட்டிப்படிக்கும் பழக்கமுள்ள, காழ்ப்பற்ற, எவரும் காணக்கூடிய உண்மை.

ஓர் உதாரணம் சொல்கிறேன். கற்காலத் தொல்குடிச் சின்னங்களில் இரண்டு மான்களை வேட்டையாடி கையிலேந்தி நின்றிருக்கும் ஒரு வேடனின் உருவம் காணப்படுகிறது. Master of Animals என அதை ஆய்வாளர் சொல்கிறார்கள். எல்லா தொல்குடிப் பண்பாடுகளிலும் அந்த வடிவம் ஏதோ ஒருவகையில் உள்ளது. மெசபடோமியா, எகிப்து பண்பாடுகளில் உள்ளது.

அதை ‘அதிருஷ்டம் கொண்டுவருபவன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் பசித்தபோது உணவுடன் வரும் தந்தை என்றும் கொள்ளலாம். கனவில் உணவுடன் வந்த தந்தை வடிவமாக இருக்கலாம். நாம் ஊகிக்கவே முடியாத ஒரு காலகட்டத்தின் வடிவம் அது.

அவ்வடிவங்கள் இந்தியாவின் கற்காலச் சின்னங்களில் உள்ளன. அதே வடிவம் கொஞ்சம் உருமாறி இந்தியாவின் மிகத்தொன்மையான சிவவடிவமான குடிமல்லம் சிவலிங்கத்தில் உள்ளது. மானை தலைகீழாகப் பிடித்து ஒரு கையில் வேட்டை ஆயுதத்துடன் இருக்கும் சிவன். பின்னர் அந்த மான் அருகே துள்ளி நின்றிருப்பதாக மாறியது. சிவனின் வடிவங்களில் அவர் வேடனாக வரும் பிட்சாடனர், கிராத மூர்த்தி போன்ற உருவங்கள் முக்கியமானவை.

யோசித்துப்பாருங்கள், கண்ணெதிரே ஐம்பதாயிரம் ஆண்டுக் காலம் நீண்டு வளர்ந்து வந்திருக்கும் ஒரு மகத்தான படிமம் நின்றிருக்கிறது. நினைப்புக்கெட்டா தொல்வடிவிலிருந்து நம் மூதாதையர் எண்ணி எண்ணி, கனவுகண்டு கனவுகண்டு, திரட்டி எடுத்த ஒன்று. நம் ஊரில் ஆலயத்தில் கரிய மழமழப்பான கல்லென அமர்ந்திருக்கிறது அது. எத்தனை அரியது அது. மானுடகுலத்தில் எத்தனைபேருக்கு அப்படி ஒன்று மரபில் இருந்து வந்து சேர்ந்திருக்கிறது?[கற்காலத்து மழை]

என்னை அது வெறும் தூசியென, காலக்குமிழியென உணரச் செய்கிறது. கூடவே மானுடமென இந்த முப்பதாயிரம் ஆண்டுகளும் அறுபடாது நீடித்த மரபுத்தொடர் நான் என்னும் பெருமிதத்தையும் அளிக்கிறது. இதை நான் ஏன் இழக்கவேண்டும்? இழந்து நான் அடைவதுதான் என்ன?

நான் அதனுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறேன். என் அடையாளத்தை அவ்வாறு உருவாக்கிக் கொள்கிறேன். பெரும் கனவுகளைக் காண்கிறேன். அதை தவிர்த்துவிட்டு நான் எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும்? அரசியல்வாதிகள் சமைத்தளிக்கும் மந்தை அடையாளங்களையா? அல்லது தொழில்நுட்பம் உருவாக்கி அளிக்கும் நுகர்வோர் அடையாளத்தையா?

 

கிமு 350 எகிப்துமேய்க்கோப் பண்பாடு, கிமு 2600ரத்னகிரி அருகே, குடோப்பி. கற்கால பாறைச்செதுக்குகுடிமல்லம் சிவன்பிட்சாடன சிவன்கிராதமூர்த்தி [வேடனாகிய சிவன்]சோழர்கால செப்புத்திருமேனி.

ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் அங்கிருந்த பாகன் மதங்களை அழித்தன. தடையமே இல்லாது செய்தன. இன்று பேரறிஞர்கள் மிகப்பெரிய உழைப்பு செலுத்தி துளித்துளியாக அவற்றை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பணி தொடங்கி இருநூறாண்டுகளாகின்றன. சாதாரணமாக இணையத்திற்குச் சென்று பார்த்தாலே அந்த அறிவுச்செயல்பாட்டின் பேருருவை காணமுடியும்.

அப்படி இருக்க கண்ணெதிரே ஏறத்தாழ முழுமையுடன் நின்றிருக்கும் அத்தகைய ஒரு தொல்மதம் எத்தனை பெரிய பண்பாட்டுச் சொத்து. எவ்வளவு பெரிய மானுடச்செல்வம். அதை அழியவேண்டும் என்பவர்கள் அறியாமூடர்கள் அன்றி வேறல்ல.

இந்து மதத்தின் அறிவுத்தொகுப்பு,  பண்பாட்டுத் தொகுப்பு மனம் பிரமிக்கச் செய்யும் அளவுக்குப் பிரம்மாண்டமானது. மானுடசிந்தனை தவிர்க்கவே முடியாதவர்கள் என இருநூறு தத்துவஞானிகளை அதில் சுட்டமுடியும். மானுடன் கொண்டாடவேண்டிய முந்நூறு பெரும்படைப்பாளிகளை அட்டவணையிட முடியும். ஞானிகளின் நிரை மிகப்பெரியது.

அதில் ஓர் உறுப்பினர் என்று சொல்வதில் எந்த இழிவும் இல்லை. அது பெருமிதத்திற்குரியது. அது இழிவு என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது – கற்பிப்பவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். மானுடத்தின் செழிப்பான ஒருபகுதியை ஏற்கனவே அழித்தவர்கள். எஞ்சுவதை அழிக்க நினைப்பவர்கள்.

இந்த பெரும்பெருக்கின் தொடர்ச்சியாக என்னை நான் உணரும்போது சிந்தனையில் பண்பாட்டில் ஒரு பெருஞ்செல்வத்தை அடைந்தவனாகிறேன். அதை என்னால் இழக்கமுடியாது. ஆகவேதான் நான் இந்து. அதைச் சொல்வதற்காக சென்ற முப்பதாண்டுகளில் இங்குள்ள மூளைச்சலவை செய்யப்பட்ட அரசியல்கும்பலால் இழிவுசெய்யப்படுகிறேன், பல தளங்களில் வெளியேற்றப்படுகிரேன். ஆனால் அதைச் சொல்லாமலிருக்க மாட்டேன்.

*

அறிவு- கலைச்செல்வத்தின் நுட்பமான தொடர்ச்சியாகச் சொல்லத்தக்கது ஆழ்படிமங்கள்.[ Archetype] தொன்மங்கள், படிமங்கள், நம்பிக்கைகள், கதைகள் என அது பலமுகம் கொண்டிருக்கிறது. ஆழ்படிமங்கள் வழியாகவே மானுட உள்ளம் ஆழ்ந்து யோசிக்கமுடியும். தன் அடிப்படைகளைப் பற்றி உசாவமுடியும்.

இப்படிச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் அன்றாடச் சிக்கல்களைப் பற்றிப் பேச அன்றாட அடையாளங்களும் குறியீடுகளும் போதும். அடிப்படைகளைப் பற்றிப் பேச ஆழ்படிமங்கள் தேவை. நீங்கள் நீங்கள்மட்டுமாக நின்று சிந்திக்க அன்றாட விஷயங்கள்போதும், பல்லாயிரம் ஆண்டு தொன்மைகொண்ட மானுட உள்ளமாக நின்று யோசிக்க ஆழ்படிமங்கள் தேவை.

அந்த ஆழ்படிமங்கள் பழங்குடி வாழ்க்கையிலிருந்து தொடங்கி மெல்லமெல்ல வேரூன்றியிருப்பவை. அவற்றை உருவாக்க முடியாது, அவை காலத்தில் உருவாகி வரவேண்டும். அவற்றுக்கு எந்த தர்க்கமும் ஒழுங்கும் இல்லை. அவை நம் என்றுமுள்ள தேடல்கள், அச்சங்கள், கண்டடைதல்களிலிருந்து பிறப்பவை. அவை மதங்களில்தான் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்துமதம்போன்று மிகமிகத் தொன்மையான ஒரு மதத்தில், பழங்குடிப் பண்பாடு அப்படியே உள்ளே உறையும் ஒரு மதத்தில் அவை அழியாது பேணப்படுகின்றன. அவை எந்த புனைவிலக்கியவாதிக்கும், எந்த சிந்தனையாளனுக்கும் பெருஞ்செல்வம். அவன் உள்ளத்தை கட்டமைக்கின்றன, மேலும் சிந்திக்க வழியமைக்கின்றன

பசுபதி, மொகஞ்சதாரோ யோகேஸ்வர சிவன்

ஐரோப்பாவின் மாபெரும் மறுமலர்ச்சி என்பது அது தன் புதைக்கப்பட்ட பாகன் பண்பாட்டின் ஆழ்படிமங்களை மீட்டெடுத்ததில் இருந்து தொடங்குகிறது. அதன் சிந்தனை, கலை எல்லாம் அங்கிருந்தே பெருகிப் பேருருக்கொண்டன. அதன் தத்துவம் அங்கிருந்தே உருவாகியது. அந்த தத்துவமே அறிவியலை உருவாக்கியது. நம் கண்முன் நமது தொன்மை விரிந்து கிடக்கிறது. எவரோ சொன்னார் என்று நாம் புறந்திரும்பி நின்று கொண்டிருக்கிறோம்.

அந்த ஆழ்படிமங்களை நான் அடையவேண்டும் என்றால் நான் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். நன் அதன் நீட்சியாக என்னை உணரவேண்டும். ஆகவேதான் நான் இந்து.

நான் இப்போது பதினேழாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள்தான் உலகமெங்கும் புதியகவிதையின் அடிப்படைகளை உருவாக்கிய முன்னோடிகள். அவர்கள் அனைவரிலும் இருக்கும் பாகன் பண்பாட்டு அடிப்படைகள் பிரமிக்கவைக்கின்றன. அவர்களை அந்தப் பண்பாட்டுக் கூறுகள் இல்லாமல் புரிந்துகொள்ளவே முடியாது.

அந்த பாகன் பண்பாடு பன்மைத்ன்தமை, இயற்கையுடனான அணுகுமுறை, பிரபஞ்சப்பார்வை ஆகியவற்றில் இந்துமதத்திற்கு மிக அணுக்கமானது. நமக்கு என்ன தடை? எவர் அளிக்கும் தடை?

இந்த மாபெரும் தொடர்ச்சியை நான் ஏன் உதறவேண்டும்? உதறியபின் எனக்கு எஞ்சுவது என்ன? ஐரோப்பாவில் இருந்தும் மத்திய ஆசியாவில் இருந்தும் வந்துசேரும் எளிமையான தீர்க்கதரிசன மதங்கள். அவற்றின் ஒற்றைநூல் நம்பிக்கைகள். அவற்றை நோக்கி என்னை செலுத்தும்பொருட்டுத்தானே இந்த மூர்க்கமான இந்து எதிர்ப்பு இங்கே கட்டமைக்கப்படுகிறது?

அந்தத் தீர்க்கதரிசன மதங்கள் உலகமெங்கும் பேரழிவுகளை உருவாக்கியவை. தங்களுக்குள்ளேயே தீராப்போர்களை உருவாக்கி தங்களையே அழித்துக் கொண்டவை, கொள்பவை. அடிமைமுறையை பலநூறாண்டுக்காலம் நிலைநிறுத்தியவை. இனவெறுப்பை பேணுபவை. அம்பேத்கரே அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்.

சரி, அதீத கூர்மையுடன் நான் தேடிச்சென்றால்கூட ஐரோப்பா உருவாக்கிய மறுமலர்ச்சிக்கால பொருள்முதல்வாத பண்பாட்டை அல்லது அறிவொளிநோக்குப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை அங்குள்ள பாகன் மதத்தின் ஊற்றுக்களில் இருந்து அவர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை நான் ஏன் இங்கேயே தேடிக்கொள்ள கூடாது? அறிவொளிநோக்கு வேண்டுமென்றால் எனக்கு சங்கரர் போதுமே. பொருள்முதல்வாதம் வேண்டுமென்றால் கபிலரோ கணாதரோ போதுமே? நான் ஏன் இரவல் சிந்தனையாளனாக ஆகவேண்டும்? எவருடைய நலனுக்காக?

*

சரி, நீங்கள் கேட்ட கேள்விகள். முதலில், இந்துமதம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டதா?

ஆமாம், அது உருவாகி வந்த பரிணாமத்தில் அது பிறப்படிப்படையிலான சாதியடுக்குகளாகவே திரண்டு வந்தது. அது எவராலும் அப்படி கட்டமைக்கப்படவில்லை. பலநூறு இனக்குழுக்கள் பொதுவான நம்பிக்கைகள் ஆசாரங்களின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டு இந்துசமூகம் உருவானபோது அவர்களின் எண்ணிக்கை, போர்வல்லமை, ஆதிக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மேல் கீழ் என்னும் அடுக்கு உருவானது. அது பின்னர் தத்துவார்த்தமாக விளக்கப்பட்டது.அதுவே சாதிமுறை.

அவ்வண்ணம் பிறப்பு அடிப்படையிலான அடுக்குமுறை இல்லாத ஒரு சமூகம்கூட உலகில் எங்கும் இல்லை. நிலப்பிரபுத்துவத்தின் இயல்பு அது. உலகமெங்கும் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையானது. இந்தியாவில் அது சாதிமுறை. அதில் ஒடுக்குமுறை இருந்தது. ஆனால் உலகமெங்கும் அதே ஒடுக்குமுறை இருந்தது என்பதே வரலாறு.

உலகம் முழுக்க நிலப்பிரபுத்துவம் அழிந்துவருகிறது. அன்றிருந்த சமூக அமைப்புக்களும் அழியும். அவற்றை நிலைநிறுத்தும் உளப்போக்குகள் மேலும் சில தலைமுறைகளில் அழியும். சாதியும் அவ்வண்ணமே நம் கண்முன் அழிந்து வருகிறது. இன்று அது மேல்கீழ் அதிகார அடுக்கு அல்ல. அரசியலுக்கான திரளடையாளம் மட்டுமே. அதுவும் மறையலாம்.

நீங்கள் இந்த வரலாற்று உண்மையை ‘இந்துமதம் என்பது சாதிகள் மட்டுமான ஒன்று’ என்று திரித்துக்கொள்கிறீர்கள். நம் சூழலில் செய்யப்படும் பொதுவானதிரிபு இது. இளைஞர்கள் அதை அரசியலில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள்.

இந்துமதம் என்பது சாதிமுறை மட்டும் அல்ல. அதன் சமூகக் கட்டமைப்பில் ஒரு சிறு பகுதிதான் சாதி. அதன் மெய்யியல் சாதி சார்ந்தது அல்ல. அதன் அடிப்படை ஞானம் சாதிச்சார்பு கொண்டது அல்ல. சாதி ஒழிந்தாலும் இந்துமெய்ஞானம் எந்த ஊறுமின்றி நிலைகொள்ளும். மேலும் வளரும்.

இந்து மதத்தின் மெய்யியல், தத்துவம், இலக்கியம், கலை ஆகியவை அனைத்துமே சாதிமுறைக்காக மட்டுமே நிலைகொள்பவை என ஒருவன் எண்ணுவான் என்றால், அவன் எந்தத் தரப்பினன் ஆயினும், அறிவிலியே. சாதிமுறையின் பொருட்டு அவை அனைத்தையும் ஒருவன் துறப்பான் என்றால் அவன் கண்மூடிக்கொண்டவன் மட்டுமே.

இந்துமதத்தின் வரலாற்றிலேயே சாதிகள் தொடர்ந்து முன்னும் பின்னும் படிநிலைகளில் நகர்ந்துகொண்டே இருந்திருக்கின்றன. சாதிமுறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த புரட்சிகள் உருவாகியிருக்கின்றன. சாதிமுறை இன்று தளரும்போதும் இந்துமதம் எவ்வகையிலும் தளர்வடையவில்லை. வளர்ச்சியே அடைகிறது.

ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அரசியல் தளத்தில் செயல்படும் அறிஞர்கள் வரலாற்றை நோக்கி விளக்கியிருக்கலாம். அவர்கள் காலகட்டத்தின் அரசியல் தேவைகள், வரலாற்றுப் பார்வைகள் அவர்களை இயக்கியிருக்கலாம். நமக்குத்தேவை நாமே அறியும் வரலாற்று நோக்கு, பண்பாட்டு நோக்கு.

 

*

மதம் அளிப்பது மெய்யியலை. அந்த மெய்யியலை தத்துவம் என்றும், கலை என்றும், அறவியல் என்றும் விரித்துக்கொள்வது அந்தச் சமூகத்தின் பொறுப்பு. அச்சமூகத்தின் தோல்விகளுக்கு மதமே காரணம் என்று சொல்வதென்றால் அதை அத்தனை சிந்தனை, கலை, இலக்கியம் அனைத்துக்கும் போட்டுப்பார்க்கலாமே?

சரி, இந்துமதம் எளியோருக்காக ஒன்றும் செய்யவில்லை. வேறு எந்த மதம் செய்கிறது? அடிமைமுறையை பல நூறாண்டுகள் நிலைநிறுத்திய மதங்களா? அயல்நிலங்களை ஆக்ரமித்து அங்குவாழ்ந்த கோடானுகோடி மக்களை வேரோடு அழித்த மதங்களா? அச்செயல்களுக்கு பலநூறாண்டுகள் நியாயம் கற்பித்த மதங்களா? இனவாதத்தை இன்றும் பின்னின்று இயக்கும் மதங்களா?

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். உங்கள் பார்வையில் பார்த்தால்கூட பாவக்கணக்கு மிகக்குறைவான மதங்கள் மூன்று இந்திய மதங்கள் மட்டுமே.

சரி, மதங்களை விடுவோம். நவீனச் சிந்தனைகளை எடுத்துக் கொள்வோம். ஐரோப்பாவின் களத்தில் உருவானவை நவீன ஜனநாயகச் சிந்தனைகள். நவீன இலக்கிய- தத்துவச் சிந்தனைகள். நவீனக் கலைகள். ஆனால் காலனியாதிக்கம் அந்த ஐரோப்பாவின் கொடை. உலகை பஞ்சத்திலாழ்த்திச் சூறையாடியவை ஐரோப்பிய நாடுகள். உலகப்போர்களை விட பலமடங்கு மக்களை பட்டினியில் சாகவிட்டவை. ஐரோப்பியச் சிந்தனைகள் அனைத்துமே காலனியத்தின் கறைபடிந்தவை என தூக்கி வீசிவிடலாமா?

சரி, அது நேற்று. இன்று? நீங்கள் சொல்லும் பின்நவீனச் சிந்தனைகள் எங்கே உருவாகின்றன? முதன்மையாக ஃபிரான்ஸில். ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்காவில். அங்குள்ள கல்விநிலையங்களில். பெரும் ஊதியத்தையும் நிதிக்கொடைகளையும் பெறும் பேராசிரியர்கள் அவற்றை உருவாக்குகிறார்கள். அந்த பல்கலைகளுக்கு நிதியளிப்பவர்கள் யார்? பெரும்வணிகர்கள், வணிக நிறுவனங்கள், அங்குள்ள அரசு.

அந்த வணிகர்கள் , நிறுவனங்கள் செய்யும் தொழில் என்ன? அங்குள்ள அரசுகளின் வருவாய் முதன்மையாக எது? ஆப்ரிக்க ஆசிய நாடுகளில் போலி ஆட்சியாளர்களை நிறுவி அவர்களின் வளங்களைச் சுரண்டுவது. ஆயுதங்களை உற்பத்திசெய்து ஆசிய ஆப்ரிக்க நாடுகளுக்கு விற்று அவர்களை சுரண்டுவது. அவர்கள் ஓயாது போர்புரியும்பொருட்டு உட்பூசல்களை, தேசியமோதல்களை உருவாக்குவது.

அந்தச் சிந்தனைகளை ஏற்க ,பயில இந்த உண்மைகள் உங்களுக்கு தடையாக அமையவில்லை இல்லையா? இந்தச் சிந்தனைகள் அவர்களுக்கு அளிக்கப்படும் நேரடி நிதிகள் எவ்வாறு உருவாகின்றன என்னும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்று தோன்றவில்லை இல்லையா?

உங்கள் அளவுகோல்களின்படி இங்கே அநீதி உள்ளது, சுரண்டல் உள்ளது. ஆகவே திருக்குறள் தேவையில்லை. சங்க இலக்கியம் பயனற்றது. அத்தனை தத்துவங்களும் வீண், இல்லையா?

அப்படிச் சொல்லமாட்டீர்கள். ஆனால் ஆனால் சாதிமுறையை, அல்லது சமகாலத்தில் உள்ள சுரண்டலை இந்து மெய்ஞானம் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பீர்கள். அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை காரணமாக ஆக்குவீர்கள், இல்லையா? அந்த மனநிலையை உங்களில் உருவாக்கியவர் யார்? அதை யோசியுங்கள்.

உங்கள் பிழையை நான் செய்ய மாட்டேன். பிரான்ஸ் அரசு ஆயுத வியாபார அமைப்பு என்பதனால், சார்போன் பல்கலை ஆயுதவியாபாரிகளின் நன்கொடையால் இயங்குகிறது என்பதனால், எனக்கு சார்த்ர் முதல் ஃபூக்கோ வரையிலானவர்கள் பொருளற்றவர்களாக தோன்றமாட்டார்கள். ஐரோப்பா காலனியாதிக்கம் செலுத்தியது என்பதனால் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் அன்னியமாக தோன்றமாட்டார்கள்.

கிறிஸ்தவ மத அமைப்பு அடிமைமுறையை பரப்பியது,  உலகமெங்கும் தொல்குடிகளை முற்றழித்தது என்பதனால் நான் கிறிஸ்தவ மெய்ஞானத்தை பழிக்கமாட்டேன். அந்த மெய்ஞானம் எனக்கு தேவை. அது வேறொரு தளம். எனக்கு எந்நிலையிலும் கிறிஸ்து தேவை.

மதத்திலுள்ள மெய்யியல், தத்துவம், கலை ஆகியவை ஓர் இலட்சியதளத்தில் செயல்படுகின்றன. மதமென்னும் உலகியல் அமைப்பு வேறொரு தளத்தில் செயல்படுகிறது. உலகியலை இலட்சியவாதம் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் முயல்கிறது. ஆனால் உலகியல் ஒருபோதும் இலட்சியவாதத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒரு பண்பாட்டின் உலகியல் நடத்தையை வைத்து அப்பண்பாட்டில் உள்ள இலட்சியவாதத்தை நிராகரித்தால் உலகின் எந்தச் சமூகமும் பொருட்டாக மிஞ்சாது.

நாம் மதத்தில் இருந்து அதன் இலட்சியவாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதை சமகால இலட்சியவாதத்துடன் இணைத்து மேலெடுக்கலாம். மதம் உருவாக்கும் உலகியல் அமைப்புக்களை அந்த இலட்சியவாதத்தின் அடிப்படையில் காலந்தோறும் மறு அமைப்பு செய்யலாம். மதத்திற்குள் உருவாகும் அத்தனை சீர்திருத்தவாதிகளும் செய்தது அதையே. சங்கரர், ராமானுஜர் முதல் நாராயண குரு, வள்ளலார் வரை.

*

கடைசியாக ஒன்று. இதெல்லாம் சிந்தனை, கலை, இலக்கியம் போன்ற தளங்களைச் சார்ந்தவை. இவற்றுக்கு அப்பால் மானுடன் தேடும் மீட்பு ஒன்றுண்டு. முழுமையறிதல், நிறைவடைதல் என அதை சொல்கிறேன். வாழ்வினூடாகச் சென்றடையும் நிறைநிலை அது. அதை நான் வேதாந்தத்தில் கண்டடைகிறேன். நான் நேற்றுவரை அதை கொஞ்சம் ஐயத்துடன் கற்றறிந்ததாக மட்டுமே முன்வைப்பேன். இன்று அந்த தயக்கமேதுமில்லை. வேதாந்தம் மெய்மையின் வழி.

வேதாந்தம் எனக்கு மெய்ஞானத்தை ’வழங்கவில்லை’, நான் செல்லவேண்டிய பாதையை அளித்தது. உரிய ஆசிரியர்கள் வழியாக, நூல்கள் வழியாக, குறியீடுகள் வழியாக, ஊழ்கம் வழியாக…. ஆகவே நான் வேதாந்தி. வேதாந்தம் இந்துமதத்தின் ஒரு பிரிவு என்பதனால் நான் இந்து.

நீங்கள் இந்துமதத்தில் பிறந்தமையால் ’மட்டும்’ பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்துமதத்தை அறிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது, பிறப்பாலேயே சில அடிப்படை உருவகங்கள் ஆழ்மனதில் உருவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதனால் மகிழ்ச்சி அடையலாம். கற்கலாம், கற்றபின் பெருமிதம் கொள்ளலாம்.

ஜெ

நான் இந்துவா? கலாச்சார இந்து இந்துமதமும் ஆசாரவாதமும் இந்துவும் இந்துத்துவரும் – கடிதம் காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை இந்துமதமும் வலதுசாரி அரசியலும் இந்துமத விவாதங்கள் இந்துமதத்தைக் காப்பது… இந்துத்துவ முத்திரை எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம் இந்துமதமும் தரப்படுத்தலும் இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 11:35

அநீதிகளின் மேல் கலாச்சார கேரளம்

கேரளத்தின் காலனி

போகன் சங்கர் இந்தப் பதிவை எழுதியிருக்கிறார். என்னிடம் நேரில் பேசும்போதும் இதைச் சொல்லியிருக்கிறார்.

நான் திரும்பத் திரும்ப எழுதிவரும் ஒன்று உண்டு, ஆதிவாசிகள் கேரளத்தின் காலனியாதிக்கத்தில் இருக்கிறார்கள். கேரளத்தின் வலுவான இடது- வலது கட்சிகள் ஆதிவாசிகளை ஒடுக்குவதில் போட்டியிடுகின்றன. மிகச்சில நடுநிலை அறிவுஜீவிகளை தவிர எவருடைய மனசாட்சியும் இதில் உறுத்தல் கொள்வதில்லை.

ஆதிவாசிப்போராட்டங்கள் எல்லாமே மூர்க்கமாக இருதரப்பு ஆட்சியாளர்களாலும் ஒடுக்கப்பட்டுள்ளன. ஆதிவாசிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான அத்தனை வழக்குகளும் மழுப்பப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆதிவாசி அடித்துக்கொல்லப்படுவது கொன்றவர்களாலேயே பதிவுசெய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு உருவானது. என்னாயிற்று வழக்கு? அங்கே குற்றவாளிகள் வலதுசாரிகள்.

அங்கும் பிரச்சினை கட்சிச்சார்புள்ள அறிவியக்கவாதிகள்தான். கட்சியின் கண்காட்டலுக்கு ஏற்ப அறச்சீற்றம் அடைபவர்கள். கட்சி செய்யும் பாவங்களை மழுப்ப எல்லாவகையான தர்க்கங்களையும் கண்டடைபவர்கள். அங்கும் குரலெழுப்பிக்கொண்டே இருப்பவர்கள் நடுநிலையாளர்கள். அங்கும் மிக அதிகமாக வசைபாடப்படும் சொல் நடுநிலை என்பதுதான்

ஜெ  

ஒரு சிகப்பு அநீதி

இதை நான் எழுதுவதை ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தேன்.வேறு யாராவது எழுதி வசவு வாங்கிக் கட்டிக்கொள்ளட்டுமே என்ற தற்காப்பு உணர்வு ஒரு காரணம்.இங்கே எப்படி ஒரு தரப்பின் அநீதியை சுட்டிக் காட்டுவது இன்னொரு தரப்பின் அநீதியை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளவோ மாற்றப்படவோ பயன்படுத்தப்படவோ படுகிறது என்பது இன்னொரு காரணம்.

கடந்த சில வருடங்களாக திருவனந்தபுரம் செல்லும்போதெல்லாம் அங்குள்ள தலைமைச் செயலகம் முன்பு நிரந்தரமாக இரண்டு தொடர் உண்ணாவிரத போராட்டங்களைப் பார்ப்பேன்.ஒன்று கேரளத்தில் இருக்கும் ஜாக்கோபைட் சர்ச்சுக்கும் இன்னொரு கத்தோலிக்க சர்ச்சுக்கும் இடையே நூற்றாண்டுகளாய் நடக்கும் வாய்க்கால் வரப்பு தகறாறு பற்றியது. சுதந்திரத்துக்கும் முன்பு சி பி ராமசாமி அய்யரிலிருந்து இன்று மோடி வரை இந்த வழக்கில் பஞ்சாயத்து பேச அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னொரு சமரம் 2017 ல் வாளையாரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுமிகள் குறித்த வழக்கில் நீதி வேண்டி.

இருவரும் கட்டிடத் தொழிலாளி பெற்றோருக்கு பிறந்தவர்கள்.2017 ஜனவரி 13 அன்று பெற்றோர்கள் வேலைக்குப் போயிருந்த போது இவர்களின் மூத்த பெண் அவர்களின் ஒரே அறை கொண்ட வீட்டில் உத்திரத்திலிருந்து பிணமாகத் தொங்குகிறார்.அவளுக்கு அப்போது வயது 13.,அப்போது அவளுடன் 9 வயது தங்கையும்

உடன் இருந்திருக்கிறாள்.அவள் தனது வீட்டிலிருந்து இரண்டு பேர் முகத்தை துண்டால் மூடிக்கொண்டு சென்றதைக் கண்டிருக்கிறாள்.நேரில் கண்ட சாட்சி.ஆனால் இந்த ஒன்பது வயதுப் பெண்ணும் அவளது அக்கா மரித்த அதே உத்திரத்தில் பிணமாய் சரியாக 52 தினங்கள் கழித்து தொங்குகிறாள்.

இரண்டு சிறுமிகளும் தொடர்ச்சியாக பிரதீப் குமார் என்கிற ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பினராயி அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதாகவும் சர்ச்சை எழுகிறது.இரண்டு சிறுமிகளின் தாயே அதைச் சொல்கிறார்.இரண்டு சிறுமிகளின் கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றியது,பிணக் கூறாய்வில் முதல் சிறுமி பாலியல் உறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார் என்று எழுதியதை மாற்றி அரசு தரப்பு டாக்டர் மூலம் அவளது ஆசன வாயில் ஏற்பட்டிருந்த காயங்கள் பைல்ஸ் தொந்திரவினால் இருக்கலாம் என்று சொல்லவைத்தது உபியில் நடந்தது போலவே தலித் சிறுமிகளின் உடல்களை பெற்றோர்க்கும் சொல்லாமல் அதிகாலையில் போலீசாரே எரித்தது என்று பல விஷயங்களில் பினராயி அரசின் அழுத்தம் இருந்தது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.இதன் உச்சமாக அல்லது நிரூபணமாக இந்த போக்சோ வழக்கில் குற்றம் சாட்ட்டப்பட்ட பிரதீப் குமாருக்கு ஆதரவாக வாதாடிய ராஜேஷ் என்ற வக்கீலையே அரசு குழந்தைகள் நல வாரியத்துக்கும் தலைவராக பிறகு அரசு நியமித்தது!அவர் இதுபோன்றே பல போக்சோ குற்றவாளிகளுக்காக வாதாடியவர் என்பதுதான் அவரது சிறப்புத் தகுதி!

எதிர்பார்த்தது போல எதிர்க் கட்சிகள் இதில் சேர்ந்துகொண்டு கூச்சலிட ஆரம்பித்ததும் வழக்கு சிபி ஐக்கு மாற்றப்பட்டுள்ளது.நடுவில் பிரதான குற்றவாளியான பிரதீப் குமாரும் மர்மமான முறையில் ‘தற்கொலை’செய்துகொண்டார்.

பிரச்சினை வெளியானதும் தலித் சிறுமிகளின் தாயாரை ஒரே ஒருமுறை பினராயி சந்தித்திருக்கிறார்.அப்போது ‘இதை அரசியலாக்கக் கூடாது’என்ற ஒரே ஒரு ‘ஆறுதல் வார்த்தையை’ மட்டுமே அவர் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

இத்தோடு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் அந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை.கிடைக்கும் அறிகுறியும் இல்லை.நேரில் கண்ட சாட்சியும் முக்கியக் குற்றவாளியும் இறந்து விட்டனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர்.அவருடன் இருந்த கூட்டாளிகள் ஜாமீனில் விடப்பட்டு விட்டார்கள்.

இன்று அந்த சிறுமிகளின் தாய் தன் தலையை மொட்டை அடித்துக்கொண்டு பினராயியை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார் என்ற செய்தி படித்தேன்.தோற்றுப் போய்விடுவார் என்பதில் ஐயமில்லை. இந்த அநீதியை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதே அவர் நோக்கம்.

ஆனால் இதுபற்றி அண்டை மாநிலமான தமிழ் நாட்டில் கூட யாரும் ஒருவரி இதுவரை எழுதவில்லை.பலருக்கு இந்தச் செய்தியே தெரியாது என்றால் கேரளத் தொடர்புடைய அறிவுஜீவிகள்,எழுத்தாளர்கள், முக நூல் கொந்தளிப்பாளர்கள் யாருக்கும் கூட இது ஒரு பொருட்படுத்தத் தக்க செய்தியாகவே ஏனோ தோன்றவில்லை.அவர்கள் கவனத்துக்கு தொடர்ந்து மர்மமான முறையில் வராமலே இந்த செய்தி கண்ணாமூச்சி காட்டுகிறது

வலது சாரிகளின் குற்றங்களை இடது சாரிகளும் இடது சாரிகளின் அக்கிரமங்களை வலது சாரிகளும் தயங்காது கூச்சமின்றி செய்கிறார்கள்.

இவர்களைப் பிரித்திருப்பதாக சொல்லப்படும் அந்தக் கோடுதான் என்ன?எங்கே?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 11:34

ஓஷோ -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஓஷோவின் சிந்தனைகளை மற்றவரிடம் பேச முயலும் பொழுதெல்லாம், முதலில் நாம் அவரை சரியாக விளங்கிக் கொண்டோமா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். ஓஷோவை சிலாகிக்க காலங்கள் போதாது  என்று நான் நினைத்திருந்ததுண்டு. ஆறு மணிநேரங்களில் அவரை குறித்து ஏறக்குறைய சரியான அறிமுகத்தை  அளிக்க முடியும் என்பது ஆச்சர்யம் அளித்தது. எனது உளமார்ந்த நன்றிகள். ஓஷோவிடம் இருந்து துவங்கிய எனது ஆன்மீக பயணத்தின் சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது உங்களுக்கு சிறிய வெளிச்சக்கீற்றை  கொடுக்கக் கூடுமானால் மகிழ்வேன்.

ஓஷோவின் புத்தகளுக்காக அலைந்து திரிந்த காலங்களில், ஒரு நண்பரின் மூலம் ஓஷோ ஆற்றிய உரைகளின் மொத்த தொகுப்பும் CHTML வடிவில் கிடைத்தது. ஓஷோவிடம் புத்தகங்களில் மூழ்கித்திளைத்த பதினைந்து ஆண்டுகளும் எனக்குள் நிகழ்த்தியிருந்த அற்புதங்களை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில், அறிவின் தலைக்கனமும், வாழ்க்கையை குறித்த அலட்சியப் போக்கும் மட்டுமே எஞ்சி இருந்தது. சராசரி மனிதக்கும், ஓஷோவின் சிந்தனைகளில் வாழ்பவனுக்கு இதைத்தவிர வேறு எந்த வித்தியாசமும் இருப்பதாக என் வாழ்க்கை எனக்கு உறுதியளிக்கவில்லை. காலப்போக்கில் ஓஷோவின் எழுத்துக்களுக்கு அடிமையாகி விட்டிருந்ததை உணர்ந்த தருணம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சி ஓஷோவின் சிந்தனைகளுக்கு நேரெதிரான மார்க்கத்தை நோக்கி என்னை தள்ளியதாக பின்னர் உணர்ந்தேன்.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில், என்னைவிட பத்து வயது சிரியவரான ஒரு இளைஞருடன் அறிமுகம் கிடைத்தது. அவருடன் நான் கொண்ட மிகச்சிறிய அறிமுக உரையாடல்களில், அவரது யதார்த்தமான சிந்தனை செறிவு என்னை ஈர்த்தது. அதை தொடர்ந்த சந்திப்புகளில் நட்பு மேலும் உறுதியானது. நமது அன்றாட வாழ்க்கையில், ஆன்மீகம் மற்றும் தத்துவங்களை தாண்டிய போலித்தனமான யதார்த்தம் குறித்து, மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் தர்க்கரீதியாக விவாதிப்பது எங்கள் வழக்கம்.

ஓஷோவின் சிந்தனை தாக்கம், எனக்கு தர்க்கவாதத்தில் எவர் வாயையும் அடைக்கும் திறனை அல்லது அதை போன்ற தோற்றத்தை தந்திருந்தது. இருப்பினும் இந்த இளைஞரின்  எளிமையான தர்க்கங்கள் உண்மைக்கு மிகவும் அருகில் இருப்பதாக எனக்கு தோன்றியது. எனக்கு நேரெதிராக, அவர் மிகவும் ஒழுக்கசீலராக இருந்தது மேலும் வியப்பளித்தது. எங்களது தர்க்கங்களில் யார் ஜெயிப்பது என்ற போட்டி மனப்பான்மை இருந்ததாக எனக்கு நினைவில்லை. உண்மையை அறியும் வேட்கை மட்டுமே இருந்தது. மூன்று வருட தினசரி சந்திப்புகளுக்கு பிறகும் கூட, அவர் எந்த தத்துவார்த்தத்தை  சார்ந்திருக்கிறார் என்று இனம் காண முடியவில்லை.

ஒரு நாள் கேட்டு விட்டேன். நீங்கள் ஒரு நாளும் உங்களுடைய விவாதங்களில் யாருடைய கருத்துக்களையும் மேற்கோள் காட்டியதில்லை. உங்களுடைய சிந்தனைகள் எதை ஆதாரமாக கொண்டிருக்கின்றன? அவர் நான் கிறிஸ்த்துவை பின்பற்றுகிறேன் என்றார். நீங்கள் தேவாலயத்திற்கு சென்றதை நான் பார்த்ததில்லை என்றேன். அவர், எந்த தேவாலயத்தில் கிறிஸ்து இருக்கிறார் என்று சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்றார். இந்த பதில் எனக்கு ஏனோ ஓஷோவை ஞாபகப்படுத்தியது. நீங்கள் பேசியவை அனைத்தும் கிறிஸ்து பேசி இருக்கிறாரா என்று கேட்டேன். இன்று அவர் இருந்திருந்தால் இப்படி தான் பேசி இருப்பார் என்று பதில் சொன்னார். அது எப்படி உங்களுக்கு நிச்சயமாக தெரியும் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே வாருங்கள் என்று அருகில் இருந்த ஒரு கிறிஸ்தவ புத்தக நிலையத்திற்கு அழைத்து சென்றார். ஒரு பைபிளை வாங்கி பரிசளித்தார்.

அதற்கு பின்பு வந்த நாட்களில் நாங்கள் பெரும்பாலும் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளையும், அவரது எதிர் வினைகளையும், அவரது உவமை கதைகளையும், அவைகள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்று இரவும் பகலும் பேசிக்கொண்டோம். நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன். நாளடைவில் பைபிளின் முதன்மை கருத்தியலான மனம் திரும்புதல், என் சித்தத்தின் படியல்ல போன்ற சுய மறுப்பு சிந்தனைகளுடன் என் மனம் ஒத்துபோனாலும், நம்பிக்கை சார்ந்த விஷயங்களான இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்றவைகளை நம்புகிறேன் என்று சொல்வது எனக்குள் முரண்களை ஏற்படுத்தியது. என்னை பொறுத்தவரை உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறப்பதின் குறியீடு என்று கொண்டாலும், இயேசுவின் மறுவருகை போன்றவைகளுக்கு என்னால் எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை.

ஒரு நாள் நண்பரிடம், பைபிளில் இயேசு சொன்ன உவமை கதைகளை தவிர மற்ற சம்பவங்களில், பின்பு வந்த மனிதர்கள் சில நிகழ்வுகளை மிகைப்படுத்தியும், பல இடங்களில் தங்கள் சுய சிந்தனைகளையும் புகுத்தியிருக்கக் வாய்ப்பிருக்கிறது என்று வாதம் செய்தேன். அவர், பைபிளில் உள்ள அனைத்து வசனங்களும் பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்ட சத்தியங்கள் என்றார். இதை போன்ற சிந்தனைகள் தான் கிறிஸ்த்தவ மார்கத்தில் பல பிரிவுகளை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று பேசிக்கொண்டோம். எங்கள் இருவர் நிலைப்பாடுகளிலும் முரண் இருப்பதை இருவரும் உணர்ந்தே இருந்தோம். ஆயினும் இயேசுவை நான் மறுதலிக்கவில்லை என்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது என்று நினைக்கிறேன். எங்கள் நட்பு எப்பொழுதும் போல இன்றும் தொடர்கிறது.

எனக்குள் எப்பொழுதும் ஒரு அடிப்படையான முரண் இருந்து கொண்டே இருந்தது. நான் எவ்வளவு முயன்றாலும் பெருமைக்காக அற்பமான பொய்களை சொல்வதில் இருந்து என்னால் விடுபட முடிந்ததில்லை. செய்த பின்பு அதற்காக வருத்தப்படுவதும், பின்னர் எந்த உணர்வும் இன்றி அதையே மீண்டும் செய்வதும், எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தொடர்கதையாகவே இருந்தது. இந்த பழக்கதோஷத்தில் இருந்து  என்று நான் விடுபடுகிறேனோ அன்று தான் உண்மையை சந்தித்ததாக ஏற்றுக்கொள்வேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு.

வெறுமையின் பிடியில் சிக்கி, மீண்டும் ஓஷோவிடம் செல்வோமா என்ற கேள்வியுடன் ஒரு வருடம் வாழ்தேன். ஆனாலும் ஏனோ செல்லவில்லை. பின்னொரு நாள் ஜெ, கிருஷ்ணமூர்த்தியின் ஒரு சிறிய காணொளியை வலைதளத்தில் காண நேர்ந்தது. எந்தவித நம்பிக்கைகளும்  வழிமுறைகளும் அற்ற, உண்மையை நேர்மையுடன் சந்திக்க முயலும் அவரது அணுகுமுறை என்னை முழுமையாக ஈர்த்தது. ஒரு காணொளியில் அவர், ‘உங்களைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு உதவ முடியாது. நீங்கள் விவேகமானவராக இருந்தால், நான் உட்பட யாரையும் நீங்கள் சார்ந்து இருக்க மாட்டீர்கள்’ என்றார்.

இதே வார்த்தைகளை ஓஷோவும், இயேசுவும், புத்தரும் மற்றும் எனக்கு தெரிந்த வரையில் எல்லா மதம் சார்ந்த மற்றும் மதம் சாராத  துறவிகளும் ரிஷிகளும் நேரடியாகவோ இலைமறை காயாகவோ சொல்லி இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  Be a light unto yourself என்கிற ஒற்றை நூலிழை எல்லா மதங்களையும் மனிதர்களையும் இணைப்பதை எண்ணி எண்ணி மகிழ்தேன்.

எனக்கு புரிந்தவரையில் ஓஷோ, ஜெ.கே,  இயேசு, புத்தர் போன்ற ஆளுமைகள் எல்லாக் காலத்தவருக்கும்  நுட்பமான வகையில் உதவி செய்கிறார்கள். இவர்களது எண்ணற்ற உரைகள், பலவிதமான கண்ணோட்டங்கள், வித்தியாசமான பார்வைகள், இரண்டு விதமான மறைமுக வேலைகளை செய்வதாக கருதுகிறேன். முதலாம் படிநிலையில், நமக்கே தெரியாமல் நம்மை கட்டுப்படுத்தும் எல்லாவிதமான அறிவு மற்றும் நம்பிக்கை சார்ந்த வெளிப்புற அடிமைத்தளைகளை அகற்றுகிறார்கள். இரண்டாம் படிநிலையில், மிகச்சரியான தருணத்தில் குரு-சிஷ்ய அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலை அளிக்கிறார்கள். கடைசியாக, நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான், கிடைக்கப்பெற்ற வெளிச்சத்தின் உதவியுடன், முற்றிலும் பலமிழந்து ஒளிந்து கொள்ள முற்படும் நமது சுயத்தை ஒரே ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தாலே போதும்.

நம்மில் பெருபாலானோர் முதல் படிநிலையிலேயே தேக்கம் அடைந்து விடுகிறார்கள். மிகச் சொற்பமானோர், இரண்டாம் படிநிலையை அடைகிறார்கள், இருப்பினும் குரு விடுதலை அளிக்க முயல்வதை துரத்துவதாக எண்ணிக் கொண்டு, வேறு குருவை நாடி சென்று அதே சுழற்சியில் மீண்டும் சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு சிலர், கடைசி நிலையை அடையக் கூடும், இது மிகவும் நுட்பமானது ஏனெனில் இங்கிருந்து மீண்டும் முதல் படிநிலைக்கு செல்ல முடியாது. ஒன்று சுயம் ஆண்டு கொள்ளும் அல்லது வெளிச்சம் மட்டுமே இருக்கும்.

அன்புடன்,

சிவகுமார் ஜெயராமன்

அன்புள்ள சிவக்குமார்,

ஓஷோ பற்றிய என்னுடைய உரை என்பது ஒரு தொடக்கம், ஒரு வாசல்திறப்புதான். அது ஒரு பொது உரை. பொதுவான ஓர் அறிமுக விளக்கம். ஆனால் ஓஷோ பற்றியோ, அல்லது ஓஷோவினூடாக ஆன்மிகப்பயணம் செய்ய நேரிட்டவர்கள் அவ்வனுபவம் பற்றியோ பேசவேண்டுமென்றால் அது ஒரு தனிப்பட்ட உரையாடலாகவே இருக்கமுடியும். பொதுவெளி உரையாடல் ஆன்மிகத்திற்கு உரியது அல்ல. பொதுவெளியில் முன்வைப்பது ஒரு வழி அடையாளம் மட்டுமே.

அகவய அனுபவங்களைப் பேசும்போது அதற்கு விவாதம் எவ்வகையிலும் உதவாது. இது கவிதைக்கும் பொருந்தும். எது நுண்மையானதோ அதை விவாதிக்க முடியாது. விவாதிக்க விவாதிக்க விவாதப்பொருள் ஆணவப்பொருளாக உருமாறும். ஆகவே அனுபவப்பரிமாற்றம் மட்டுமே சாத்தியம்.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 11:34

அறமென்ப, இரு நோயாளிகள்- கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அறமென்ப கதைக்குச் சமானமான ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் ஒருவரை ஆபத்தில் காப்பாற்றினேன். அவருடைய கஷ்டங்களில் நான் மட்டும்தான் துணைநின்றேன். இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. பரிதாபம் பார்த்தேன். மனிதன்தானே என நினைத்தேன். அவர் ஒரு மடத்தனமான தப்பு பண்ணி மாட்டிக்கொண்டார். வேலை போய்விடும். வாழ்க்கை போய்விடும். அந்த நிலைமை. படிக்கிற குழந்தைகள், பெண்குழந்தைகள் இருக்கின்றதே என்று பார்த்தேன்.

ஆனால் அவர் வக்கீலிடம் போனபோது வக்கில் என்னையும் கோத்துவிட ஆலோசனை சொன்னார். நான் பெரிய பதவி. என்னையும் கோத்துவிட்டால் நானே வழக்கை பார்த்துக்கொள்வேன், தப்பிவிடலாம் என்று ஐடியா கொடுத்தார். அவர் எனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். நான் உடைந்தே போய்விட்டேன். அவரிடம் பேசினால் ‘நான் என்ன செய்ய? வக்கீல் சொல்றார்’ இதுமட்டும்தான் பேச்சு.

எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். எனக்கு பல இழப்புகள். ஒருவழியாக தப்பிவிட்டேன். ஆனால் இன்றைக்கு வரை இதுதான் யுகதர்மம் போல என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். செல்வா போல புன்னகைக்கும் சந்தர்ப்பம் வரவில்லை

ஜி.வீரராகவன்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

மற்றுமொரு  அருமையான கதை. பணம் படைத்தவன் எப்படி தனக்கு என்று ஒரு நியாயம் வைத்திருப்பானோ, அதே போல், சரியோ தவறோ, ஏழைகளும் அப்படியே. சொல்ல போனால் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இதில் இல்லை. ஆனால் சமூகத்தின் அவலம் என்னவெனில், ஒரு ஏழை பாதிக்கப்பட்டால், எந்த சிந்தனையும் இல்லாமல், அவர்கள் சார்பே எடுக்கும்.  நம் சமூகம் ஏழைகளை புனிதமாக்கியே (romanticize) வைத்திருக்கிறது.  கதாநாயகன், தான் உதவி செய்த ஏழை, அறம் ஒழுகி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நிதர்சனம் புரிந்த கணத்தில் சிரிக்கிறார். அதிலே ஒரு விடுதலை அடைகிறார்.

நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள் – கண்டிப்பாக ஒருவர் ஜெயமோகன் ஏழைகளுக்கு எதிராக எழுதி விட்டார் என்று கம்பு சுத்தி கொண்டு வருவார்.

எனக்கு தெரிந்த ஒருவர் (உண்மையில் நடந்தது – பல வருடங்களுக்கு முன்பு), ஒரு கல்யாண மண்டபத்தில் இருந்து வரும்போது வேறு செருப்பை போட்டு வந்தார். நான் கவனித்து சொன்னேன். அதற்கு அவர், “என் செருப்பை எவனோ தூக்கிட்டு போய்ட்டான்.. அதான் நான் அவன் செருப்பை போட்டுட்டு வந்துட்டேன்” என்றார். நான் “அது அவன் செருப்பு இல்லை.. யாரோடதோ” என்றதை காது கொடுத்ததும் கேட்க அவர் தயாராக இல்லை. அவர் ஏற்கனவே தனது நியாயத்தை முடிவு பண்ணியிருந்தார்.

அன்புள்ள

சக்தி  – மதுரை

இரு நோயாளிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இரு நோயாளிகள் கதையை வாசித்தபோது புதுமைப்பித்தனின் இறுதிநாட்களைப் பற்றிய இரு குறிப்புகள் நினைவுக்கு வந்தன. அப்போது அவருடன் இருந்த சிதம்பரம் எழுதியவை. பிராமணர்கள் தனக்கு குழிதோண்டிவிட்டார்கள் என்று புதுமைப்பித்தன் கண்ணீர்விட்டிருக்கிறார். தன்னை ஒழித்துக்கட்டிவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். கசப்பும் சிரிப்பும் கண்ணீருமாக இருந்திருக்கிறார்.

அதைப்பற்றி பேசும்போது சுந்தர ராமசாமி ஒரு முறை என்னிடம் சொன்னார். அந்த மனக்கசப்பு நோயினால் புதுமைப்பித்தன் உருவாக்கிக்கொண்டது என்று சொன்னார். உண்மை அதுவல்ல. அவருக்கு பண ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் நெருக்கமாக இருந்தவர்கள் பிராமணர்கள்தான். அவர் மறைந்தபிறகு அவரை தொடர்ச்சியாக முன்வைத்து சரித்திரத்தில் நிலைநாட்டியவர்களும் க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரையிலான பிராமணர்கள்தான். அவருக்குப்பின்னால் உருவான திராவிட இயக்கம், பிராமணரல்லாதார் இயக்கம், வேளாளர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. இன்றுவரை கண்டுகொள்ளவில்லை. இது சரித்திர உண்மை.

புதுமைப்பித்தனின் அந்த இலக்கில்லாத கசப்பு இக்கதையிலும் பதிவாகியிருக்கிறது. நான் ஒரு நண்பரிடம் விசாரித்தேன். சங்கம்புழா கிருஷ்ணபிள்ளா கடைசிநேரத்தில் பாடிக்கொண்டே இருந்தார் என்றார். இவர் மாடர்னிஸ்ட். அவர் ரொமாண்டிக் கவிஞர். சரியாகத்தான் இருக்கிறது

ராஜகோபால்

 

அன்புள்ள ஜெ

இரு நோயாளிகள். ஆமென்பது போன்ற கதை. ஒன்று உண்மையான வாழ்வாக இருக்கும் பொழுது அதை அணுகுவது சிரமமாக உள்ளது.

காசநோய் ஆஸ்பத்திரியில் இரு இளம் கவிஞர்கள். ஒருவர் ஜட்டி போட சொல்கிறார். மற்றொருவர் முக கவசம் போட சொல்கிறார். ஒருவர் அழகை பார்க்கும் கற்பனாவாதி. மற்றொருவர் அப்பட்டமான யதார்த்தங்களை பார்க்கும் நவீனத்துவர். இருவருமே அதன் அதன் அடியாழங்களை நெஞ்சுருகும் வரை சென்று பார்த்தவர்கள். காசநோய் ஆஸ்பத்திரியில் வந்து படுத்திருக்கிறார்கள்.

ஆனால் அதே காசநோய் ஆஸ்பத்திரியில் ஒரு குடும்பமே தன் வாழ்க்கையை, தொழிலை துவங்கி காலத்தில் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அந்த நோயாளிகளுக்கு மத்தியிலே இருந்தாலும் ஏன் எம்.ஏ. கிருஷ்ணன் நாயருக்கோ அவர் அப்பாவுக்கோ மாமனாருக்கோ மனைவிக்கோ குழந்தைகளுக்கோ அந்த நோய் தொற்றவில்லை. நெஞ்சை உருக்கும் அளவுக்கு அவர்கள் எதையுமே காணவில்லை என்பதாலா.

ஆனால் எம்.ஏ. கிருஷ்ணன் நாயரால் விட விட பேசி கொண்டுதான் இருக்க முடியும். இதுவரை இந்த சமூகம் பெரிதாக ஒன்றும் செய்துவிடாத அந்த இரு இளம் நேயாளிகள் தான் கிருஷ்ணன் நாயருக்கு எடுக்கப்படும் ஆவணப்படத்தில் கூட இருப்பார்கள். அவர்கள் என்றும் நினைவில் நீடிப்பார்கள், அப்படி அந்த இருவர் நினைவு கூறபடுவதால் தான் எம்.ஏ கிருஷ்ணன் நாயரின் வரலாற்றுக்கு கூட மதிப்பு.

 

நன்றி

பிரதீப் கென்னடி

 

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 11:33

இழை, எச்சம் -கடிதங்கள்

எச்சம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

எச்சம் கதையை சிரித்துக்கொண்டே வாசித்தேன். பாட்டாவுக்கு அந்த வார்த்தை ஏன் ஞாபகமே வரவில்லை? ஏனென்றால் அது அவருக்கான வார்த்தையே அல்ல என்பதுதான். ஏசுவும் முருகனும் நிற்கவேண்டும் என்று சொர்க்கத்திலும் ஒழுங்கை உருவாக்கி வைத்திருக்கும் ‘பிதாமகன்’ அவர். தந்தைகளுக்கு தூக்கமே இல்லை. கடமைகள் மட்டும்தான். வெண்முரசிலே இந்த வரி ஏறத்தாழ இதேபோல வருமென நினைக்கிறேன்

ராஜலட்சுமி

 

அன்புநிறை ஜெ,

பாட்டாவுக்கும் கதைசொல்லிக்குமான மிக சுவையான உரையாடலாக நகரும் இனிய கதை.

ரெஸ்ட் எனும் வார்த்தையை பாட்டா அடையும் அன்றே அதன் வேறு பொருள்களையும் அறிய நேர்ந்து விடுகிறது. உறங்குவது போலும் சாக்காடு என்பதாய் கல்லறையின் ரெஸ்ட் இன் பீஸ் அவருக்கு செய்தி சொல்லிவிடுகிறது. ஓய்வு என்றல்லாது எச்சம் என்ற பொருளைத் தலைப்பாகத் தேர்ந்தது, தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் எனும் குறளில் வருவது போல; அவரது வாழ்வின் எச்சம் தக்காருக்குரியது.

இக்கதையை நான் வாசிக்க நண்பர் கணேஷ்-மாதங்கியோடு சேர்ந்து அவர்களது இளைய மகன் பத்து வயது நிரம்பிய மேதான்ஷ் கேட்டுக் கொண்டிருந்தான். வட்டாரப் பேச்சு மொழியில் அமைந்த கதை அவனுக்குப் புரியாதோ என எண்ணினேன். வசன ஏற்ற இறக்கங்களுக்குத் தக்க சிரித்துக் கொண்டே கேட்டு வந்தவனிடம் இறுதியாக என்ன புரிந்தது என்று கேட்டேன். ‘The way you narrated was funny’ என்றான். கதை புரிந்ததா எனக் கேட்டதற்கு, ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் வழக்கம் கொண்ட அவன் இவ்விதம் சொன்னான்: “An old man is trying to understand the word ‘Rest’ from another person. Finally he understands its also used in Rest in peace which is used for praying for dead people, so he decides not to take rest”. வேறொரு பொருளும் இருக்கிறதே ரெஸ்ட்டுக்கு என்றேன். ‘Yes, that which is leftover’ என்றான். அந்தப் பொருளில்தான் கதைத்தலைப்பு என்று சொன்னேன். ‘Why did uncle choose that?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். May be he says no rest for rest of life? என்றான்.

பெரிய விஷயங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரிந்துவிடுகிறது.

மிக்க அன்புடன்,

சுபா

இழை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இழை சிறுகதையை வாசித்துக்கொண்டிருந்தபோது கதையில் இழை என தெளிவாகவே வருகிறதே என்று யோசித்தேன். ஏன் துப்பறிபவர் கண்டுபிடிக்கவில்லை? ஆனால் பிறகு ஒன்று தெரிந்தது, துப்பறியும் கதைகளை வாசித்து முடிவை அறிந்ததும்  ‘நான் இதை ஊகித்துவிட்டேன்’ என்று சொல்வது பெரும்பாலானவர்களின் வழக்கம். இது சும்மா சொல்வது அல்ல. உண்மையிலேயே தோன்றுகிறது. நாம் நம்பித்தான் அதைச் சொல்கிறோம்

ஒரு கதையில் பல பாஸிபிலிட்டிகள் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் நாம் யோசிப்போம். யோசித்த ஒன்றுதான் எப்படியும் கிளைமாக்ஸாக வரமுடியும். ஆகா நானே யோசித்துவிட்டேன் என்று சொல்லிவிடுவோம். இது நமக்கு ஓர் உற்சாகத்தை அளிக்கிறது. தேர்ந்த துப்பறியும் கதைகள் புதியதாக ஒரு குற்றவாளியை கொண்டு வந்து நிறுத்துவதில்லை. அது அமெச்சூர் எழுத்து. புதிய ஒரு கோணத்தை மட்டும்தான் சொல்லும். ஆகா இப்படி நாம் யோசிக்கவில்லையே என்றுதான் நாம் நினைக்கமுடியும்

இழை என்ற தலைப்பும் கதைகளும் கூந்தல் பற்றிய விவரணைகளுமெல்லாம் இருந்தாலும் கதைக்குள் இருப்பவர்களால் ஒரு தலைமுடி எப்படி கொலைக்கார ஆயுதமாக ஆகமுடியும் என ஊகிக்கவே முடியாது. சொன்னாலும் நம்ப முடியாது. இழை எல்லா விஷயங்களையும் ஒன்றாக இணைக்கிறது. ஒரு மயிரிழையில் கட்டப்பட்டிருந்தது அவர்களின் அன்பும் பகைமையும்

எஸ்.ராஜ்குமார்

 

அன்பு ஜெ,

சிறுகதை முடித்த பின்னரும் “இழை”  என்ற சொல்லைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது தன்னை உருப்பெருக்கி விரிந்து கொண்டிருந்தது. இழை என்பதை வெறுமே தலைவியின் தலை மயிர் என்ற அர்த்தத்தை எடுத்துக் கொள்வதா? குறுந்தொகையில் இழை என்ற சொல் வரும் இடங்கள் தோறும் அது தலைவனுக்கு அல்லது தலைவனைப் பற்றிச் சொல்லும் போது மட்டுமே பயன்படுத்தப்படுவதைக் கண்டேன்.

“பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே; பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்; வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற மல்லல் ஊரன்…” போன்ற குறுந்தொகைப் பாடல்களில் வரும் இழை என்ற சொல்லுக்கு அணிகலன்/இயற்றுதல் என்ற பொருள் வருகிறது. சில சமயம் பொருள் கூறுவோர் அந்த சொல்லைப் பற்றிய சிந்தையின்றி விளக்கம் கூறியிருக்கின்றனர். இழை என்ற சொல்லின் பொருளைப் போலவே அதை மறந்துவிடுகின்றனர் போலும். ஆனால் ஓர் மயிரிழையின் முக்கியத்துவமானது அந்த கணத்தில் உயிர்ப்பிழைத்தவருக்கே தெரியும். இந்தக் கதையில் மயிரின் இழையால் நிகழும் ஒரு கொலையின் தருணத்தை நோக்கி கதை சென்று கொண்டே வந்து அந்தப் புள்ளியை அடைந்து பதற்றமுறச் செய்கிறது. அதன் முடிச்சுகளை கதை சொல்லி அவிழ்க்கும் ஒவ்வொரு தருணமும் சுவரசியமாக அமைந்திருந்தது. எளிதாக ஊகிக்கக்கூடிய ஒரு கொலையின் தருணத்தை நோக்கி கதை சொல்லி சிந்திக்கும் கோணம் ஒன்று சொல்லப்பட்டு இறுதியில் அவன் தீர்மானமாக கொலைக்கான கருவியை கண்டறிந்த இடத்தில் அவன் எடுக்கும் முடிவானது ஆற்றுப்படுத்துகிறது.

நரம்பு புடைத்திருக்கும் அந்த ஜானின் சித்திரத்தை நீங்கள் வடித்தவுடனேயே ஒருசிறு இழையால் அறுபடக் கூடிய நரம்பாகத்தான் அது தென்பட்டது. அது அறுபடுவதற்குத் தேவையான அத்தனை உந்தல்களையும் தானே சரிபார்த்து அமைத்துக் கொண்டு அவன் அந்த பீரங்கியில் உட்கார்ந்திருந்ததாகப்பட்டது. அவனால் பார்த்துப் பார்த்து இழைக்கப்பட்ட அந்த இழையாலேயே ஓர் இழை நேரத்தில் நிகழப்பட்ட மரணம் ஜானுடையது.

டெய்சியும் தோமஸும், மற்ற பெண்களும் நல்ல ஜீவிதம் வாழ சரியாக இழைக்கப்பட்ட இழையின் கதை. அருமையாட்டு இருந்தது. நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 11:31

தன்மீட்சி வாசிப்பனுபவங்களை கெளரவித்தல்…

 

“நம்செயல்பாடுகள் நேர்நிலை இலட்சியங்கள் கொண்டதாகவே இருக்கவேண்டும். அது கடினமானது, ஆனால் இலக்கு அதுவே. எச்செயல்பாடும் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். சிரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உரியதாகவே சேவைகளும் இருக்கவேண்டும். நாம் செய்தவற்றால் வெளியே என்ன நிகழ்ந்தது என்பது நம் கேள்வி அல்ல, நாம் என்னவானோம் என்பதே முக்கியம். நாம் நமக்குரிய வாழ்க்கையை தேர்ந்துகொண்டோம் என்றால் நம் தன்னறத்தை ஆற்றினோம் என்றால் நம் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறோம். அதுவே நம்மளவில் போதுமானது.”

நீங்களெழுதிய தன்மீட்சி வார்த்தைகளை சொல்லிக்கொண்டு, இக்கடித்ததை துவங்குவதற்கு ஒரு காரணமிருக்கிறது.

ஆரம்பந்தொட்டே தொடர்ந்து உங்களது எழுத்துக்களை வாசிக்கக் கூடியவர்களாக நாங்களிருந்தோம். அதுமட்டுமின்றி, நாங்கள் எல்லோரும் வெவ்வேறு துறைசார்ந்த பணிகளில் இயங்கிக் கொண்டிருந்ததால், உங்களது படைப்புகளை வாசிக்கையில் அது எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான உள்ளுணர்தலைத் தோற்றுவித்தது. அவரவர் அர்த்தத்தில் அவைகளை உள்வாங்குகையில், உங்களுடைய சொற்கள் தொடர்ந்து தன்னாழத்தை விஸ்தரித்தபடியே நீண்டது.

ஆகவே, ஒருமித்த எண்ணமுடைய நண்பர்கள் ஒன்றுகூடி, எங்களின் செயலியக்கத்தில் உங்களுடைய எழுத்தின் அனுபவப் பங்களிப்பு குறித்தும், அதுவுண்டாக்கும் அகமலர்வு குறித்தும் உங்கள் முன்னிலையில் உரையாட விழைந்தோம். அந்த விருப்பத்தின் நிறைவேற்றம்தான், திருப்பரங்குன்றம் சமணர்மலை அடிவாரத்தில் நிகழ்ந்த சந்திப்பு நிகழ்வு. இன்றெண்ணிப் பார்க்கையில் பெரும் செயல்விசைக்கான உளவேகத்தை நாங்களடைந்த ஒரு திருப்புமுனை தினமென்றே நண்பர்கள் எல்லோரும் அதை எங்களுக்குள் மனப்படுத்தியுள்ளோம்.

அந்நிகழ்வு குறித்து உங்கள் தளத்தில் நீங்கள் எழுதிய ‘தன்மீட்சி’ என்னும் கட்டுரை என்றென்றைக்குமான நன்றிப்பெருக்கை எங்களுள் விதைத்தது. அதைத்தொடர்ந்து நாங்கள் எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் பெரும் பரிவோடு நீங்கள் அனுப்பிய பதில்கள் இச்சமகாலத்தில் எங்களை சமநிலைகுலையாமல் செயல்படவைத்தது. அத்தகையதொரு நற்கணத்தின் நீட்சியில்தான், நீங்கள் வாசகமனதின் தத்தளிப்பு மற்றும் தத்துவக்குழப்பம் புரிந்து எழுதிய நம்பிக்கைக் கட்டுரைகளை ”தன்மீட்சி’ என்னும் தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தொகுக்கும் எண்ணத்தை ஸ்டாலின் பாலுச்சாமி முன்வைத்தார். இறையாசியால் அது கைகூடியது.

தன்மீட்சி நூல் வெளியாகி ஓராண்டு காலத்திற்குப் பிறகு, அந்நூலை விலையில்லாப் பிரதிகளாக அனுப்பிவைக்கும் தீராவிருப்பம் எங்களுக்குள் பிறக்கவே, அதன்படியே அவ்விருப்பத்தை செயல்படுத்தினோம். உண்மையில், தன்மீட்சியின் உயரெழுகை என்ன என்பதை அப்போதுதான் உணரமுடிந்தது. வெவ்வேறு மட்டங்களிலுள்ள நண்பர்களிடமிருந்து எங்களை வந்தடைந்த கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் இந்நூல் அவர்களுக்குள் உருவாக்கிய திசைவெளிச்சத்தை சாட்சிப்படுத்தின.

ஆகவே, தன்மீட்சி நூல்குறித்த செயலசைவுகளை அறுபடாத ஒரு அனுபவநீட்சியாக ஆக்க விரும்புகிறோம். இனிவரும் ஒவ்வோராண்டும் ‘தன்மீட்சி உரையாடல்கள்’ நிகழ்த்தவும் திட்டமிட்டு வருகிறோம். எனவே, தன்மீட்சி நூல் குறித்தும், அந்நூலில் உள்ள கட்டுரைகள் குறித்துமான நேர்மறையான அக-அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்பிவைக்கும் கோரிக்கையினை வாசக மனங்கள் எல்லோரிடமும் இக்கடிதத்தின் வாயிலாக முன்வைக்கிறோம்.

இதன்படி, தன்னறத்தை வந்தடையும் சிறந்த ‘தன்மீட்சி-அனுபவப்பகிர்வு’ எழுத்தாக்கங்களுக்கும் கடிதங்களுக்கும், வருகிற ஏப்ரல் மாதம் நிகழவுள்ள தன்னறம் நிகழ்வுதனில் உங்கள் முன்னிலையில் உரிய கெளரவிப்பும் நினைவுப்பரிசும் தரவிருக்கிறோம். பக்களவு எல்லைகளோ, எவ்வித நிர்ணயிப்புகளோ இதற்குக் கிடையாது. தன்மீட்சி என்னும் புத்தகம் அவரவர் அகத்தில் உருவாக்கிய அனுபவங்களின் எளிய எழுத்துப்பதிவு என்கிற வகையில், இதன் உள்ளார்ந்த நேர்மறைத்தன்மை ஒன்றுதான் எங்களின் ஒரே வேண்டல்.

எவ்வகையிலும் இந்த முன்னெடுப்பு அடையாளம் சார்ந்ததல்ல. எழுத்தாளர் ஜெயமோகன் என்னும் சமகாலப் படைப்பாளுமை மனிதரை, அவரின் அகத்திற்கு அணுக்கமான ஒரு தோழமைப்புரிதலோடு அவரை கண்டடைவதற்கான சிறுமுயற்சி. தன்னகங்காரம் அல்லாத தன்னெழுகையை நாங்கள் மீளமீள உங்கள் தத்துவப் பேராழத்தின் நீரசைவில் நிழலுணர்கிறோம். தன்மீட்சி எனும் நூல்கொண்டு அதை துலங்கச்செய்தலே இம்முன்னெடுப்பின் ஒற்றைநோக்கம்.

தன்மீட்சி புத்தகம் குறித்த அகமன அனுபவக் கட்டுரைகளை வருகிற ஏப்ரல் 8ம் தேதிக்குள், thannarame@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம். ஏப்ரல் மாத நிகழ்வுகுறித்த முழுமையான தகவல்களை விரைவில் எல்லோருக்கும் அறிவிக்கிறோம்.

கரங்குவிந்த நன்றிகளுடன்,

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

 

 

தன்மீட்சி நூல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 11:30

March 27, 2021

முழங்கும் ஒரு நாள்

26 அன்று காலைதான் சென்னையிலிருந்து நாகர்கோயில் வந்தேன். மேலும் பணி இருந்தாலும் லக்ஷ்மி மணிவண்ணனின் அப்பாவுக்கான விண்விளக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவருக்கு அது மிக அகவயமான ஒரு நிகழ்வு என உணர்ந்திருந்தேன்.

காலை வந்ததுமே சில கடிதங்களுக்குப் பதில் எழுதினேன். இரவில் ரயில்தூக்கம், மதுரைக்குப் பிறகு ஒரு பெருங்குடும்பம் ஏராளமான பெட்டிகளுடன் ஏறி இறங்கியது. லக்கேஜ் என என்னையும் ரகளைக்கு நடுவே இறக்கி கொண்டு சென்று விடுவார்களோ என்று அஞ்சி சரியாகத் தூங்கவில்லை. ஆனாலும் பகலில் தூங்கவில்லை.

மதியம் இரண்டு மணிக்கு கே.பி.வினோத் வந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அஜிதனும் ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் அன்றுகாலை வந்தனர். அவர்களுடன் சேர்ந்து தெங்கம்புதூரில் இருக்கும் தாணுமாலைய சாமி ஆலயம் சென்றோம். அங்குதான் மணிவண்ணனின் தந்தைக்கான விண்விளக்குச் சடங்கு.

தெங்கம்புதூர் தாணுமாலைய சாமி ஆலயம் பழையது, சோழர் காலத்தையதாக இருக்க வாய்ப்பு. இப்படி குமரிமாவட்டத்தில் இன்னொரு தாணுமாலையன் ஆலயம் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. கோயில்களை நன்கறிந்த அனீஷ்கிருஷ்ணன் நாயருக்குக் கூடத் தெரியவில்லை. தெங்கம்புதூர் ஜங்ஷனிலேயே பலருக்கு தெரியவில்லை.

அழகான கோயில். 96க்குப்பின் சீரமைக்கப்படவில்லை. ஆகவே அழகான குளம் கெடுநீர் நிறைந்து கிடக்கிறது. அச்சூழலே இனிதாக இருந்தது. பிரதோஷமானதனால் நல்ல கூட்டம். கோயிலின் அமைப்பே வேறுபட்டது. இரண்டு இணையான நுழைவாயில்கள், இரண்டு இணையான கருவறைகள். ஒன்றில் பெரிய பிள்ளையார் பதிட்டை செய்யப்பட்டிருந்தார். இன்னொன்றில் சிவன். உள்ளே பக்கவாட்டில் முருகன் சன்னிதி.

சிவன் முருகன் பிள்ளையார் மூவரும் மூன்று கருவறைகளில் தனித்தெய்வங்களாக இருக்கும்  இன்னொரு ஆலயம் குமரிமாவட்டத்தில் உண்டா? இது சோழர்காலத்தின் எந்த முறையைச் சேர்ந்த ஆலயம்? அ.கா.பெருமாளைச் சந்திக்கையில் கேட்கவேண்டும்.

கோயிலில் இருக்கும்போது அனீஷ்கிருஷ்ணன் நாயர் அழைத்து திருவட்டார் கோயிலில் அன்று துரியோதனவதம் கதகளி இருக்கிறது போகலாமா என்று கேட்டார். உடனே முடிவுசெய்தேன். தூக்கக் கலக்கம் இருந்தது. இன்னொரு முழு இரவும் விழித்திருக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது.

ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் கொஞ்சம் தயங்கினாலும் நாம் வேண்டாம் என்ற முடிவையே எடுப்போம். அந்த தயக்கம் வயதாக ஆக கூடிக்கொண்டே வரும். ஆகவே நானெல்லாம் அந்த தயக்கம் வருகிறதா என்ற சந்தேகத்தாலேயே உடனே சரி என முடிவெடுத்துவிடுவேன்.

நான், போகன் சங்கர், அனீஷ்கிருஷ்ணன், போகனின் நண்பர் ஆகியோர் இரவு பத்து மணிக்குக் கிளம்பி 11 மணிக்கு திருவட்டாறு சென்றோம். இது கோடைகால ஆறாட்டுவிழா. முறைமைப்படி 10 நாட்கள் கதகளி இருக்கவேண்டும். ஆறாட்டு அன்று வழக்கமாக கிராதவிருத்தம் என்னும் கதகளி. ஒரு காலத்தில் பத்துநாட்களும் கதகளி பார்த்து பகலெல்லாம் அங்கே எங்காவது கிடந்து தூங்கி வாழ்ந்திருக்கிறேன்.

இதழாளர் திருவட்டார் சிந்துகுமார் அங்கே இருந்தார். அவர் வரவேற்றார். அவருடன் அவர் வீட்டுக்குச் சென்று சுக்கு காபியும் பழங்களும் சாப்பிட்டோம். அவர் மனைவி மீனாம்பிகையும் அவ்வப்போது முகநூல்களில் எழுதுபவர். ஆசிரியையாக இருக்கிறார்.

துரியோதன வதம் கதகளி வயக்கரை ஆரியநாராயணன் மூஸது என்பவரால் 1870களில் எழுதப்பட்டது. மலையாள மொழியின் உருவாக்கக் காலகட்டம் அது. ஆகவே சம்ஸ்கிருதக் கலவைமிக்க மொழி. ஆனால் வர்ணனை அல்லாமல் உரையாடல்கள் வருமிடங்களில் மலையாளம் மிகுந்திருக்கும். கதகளி ஆட்டக்கதையை ஒரு ஷேக்ஸ்பியர் நாடகப்பிரதியுடன் ஒப்பிடலாம். பாட்டால் ஆன நாடகம்.

துரியோதன வதம் பற்றி மெல்லிய நினைவு இருந்தது. துரியோதனன் பானுமதியுடன் நந்தவனத்தில் பாடிக்கொண்டிருக்கிறான். இந்திரப்பிரஸ்தத்தில் மயன் அரண்மனை அமைக்கும் செய்தி வருகிறது. அங்கே சென்று சிறுமைப்படுகிறான். வஞ்சினம் உரைத்து மாமனின் துணைகோருகிறான். சூது நிகழ்கிறது. திரௌபதி துகிலுரியப்படுகிறாள். காடுசென்று மீண்ட பாண்டவர்கள் கிருஷ்ணனை தூதனுப்புகிறார்கள். கிருஷ்ணனை பிடித்துக் கட்ட துரியோதனன் முயல அவர் விஸ்வரூபம் காட்டுகிறார்.

போரில் துச்சாதனனை பீமன் நெஞ்சுபிளந்து கொன்று குருதியால் பாஞ்சாலியின் கூந்தலை முடிகிறான். துரியோதனனைக் கொல்கிறான். கொலைக்குப்பின் கடும்சீற்றமும், சகோதரனைக் கொன்ற ஆற்றாமையுமாக நிற்கும் ரௌத்ரபீமனை கிருஷ்ணன் ஆறுதல் சொல்லி தேற்றுமிடத்தில் கதகளி முடிகிறது. அதன்பின் கிருஷ்ணன் பார்வையாளர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

கொல்லம் ராமநாட்யம் கதகளி குழுவின் கதகளி. சற்றே சுருக்கப்பட்டிருந்தாலும், காட்சிகள் சில வேகமாக ஓடிச்சென்றாலும், ஐந்து மணிநேரத்தில் நாடகீயத்தன்மையுடன் கதகளி நடந்தது. [சாதாரணமாக எட்டு மணிநேரம் ஆகும்] வழக்கமான திரைநோட்டம், தோடயம், ரங்ககேளி என்னும் செண்டைத்தாளம் ஆகியவற்றுடன் ஒரு நல்ல கதகளி அனுபவம்.

ஆனால் நான் கதகளி பார்த்து நெடுநாட்களாகிறது. தொடர்பே விட்டுப்போன நிலை. நடுவே திருவனந்தபுரம் சென்று ஒருமுறை நளசரிதம் பார்த்ததுடன் சரி. ஆகவே சென்று அமர்ந்தபோது பொதுவாகவே ஒரு குழப்பம். கதைக்குள் நுழைவதற்கு தடுமாற்றம். முன்பு பார்த்த கதகளியின் அரைகுறை நினைவுகளின் சிக்கல்.

தொடக்கத்திலுள்ள பார்வண சசிவதனே ஒரு காலத்தில் எனக்கு பிடித்தமான பாடல். [முழுநிலவு முகத்தாளே] துரியோதனன் பானுமதியிடம் பாடுவது. அது இல்லை. ஆனால் பெரும்பாலான துரியோதனவதம் கதகளியில் இப்போது இருப்பதில்லை, ஏனென்றால் பானுமதி அதற்குப்பிறகு வரும் கதாபாத்திரம் அல்ல என்று பிறகு அறிந்துகொண்டேன்.

செவ்வியல்கலைகளை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வுலகிலேயே மூழ்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு சிறு தொனிமாறுபாடுகளையும் உணரும்படி அதில் வாழவேண்டும். நான் இழந்திருப்பதென்ன என்றும் கண்டுகொண்டேன்.

[துரியோதனவதம் கதகளி முழுமையாக. இணையத்தில் இருந்து]

கொஞ்சம் கொஞ்சமாக கதகளிக்குள் செல்ல முடிந்தது. முடியும்போது முழுமையாகவே ஆட்கொண்டிருந்தது. நளசரிதம் போன்ற கதகளிகள் மென்மையானவை, இனிமையானவை, காதலையும் கனிவையும் முன்வைப்பவை. துரியோதனவதம், நரகாசுர வதம் போன்றவை மூர்க்கமானவை, நாடகத்தன்மை மிக்கவை.

கதகளியின் இரண்டு மைய உணர்ச்சிகள் சிருங்காரமும் ரௌத்ரமும்தான். பீபத்சம் [அருவருப்பு] ரௌத்ரத்துடன் இணைந்து வெளிப்படும். இந்நாடகம் ரௌத்ரத்தன்மை மிக்கது. ஆனால் மகத்தான கதகளிகள் சிருங்கராச் சுவை கொண்டவை. துரியோதன வதத்தில் தொடக்கம் மட்டுமே மெல்லிய சிருங்காரம் கொண்டது. அதன்பின் முழுக்க சவால்கள், பூசல்கள், போர்கள்.

இதன் நாடகீயத்தன்மையை ஊராரும் அறிவார்கள் போல. நல்ல கூட்டம். படிகளில் எல்லாம் ஆட்கள் இருந்தனர். கதகளிக்கு ஐம்பதுபேரே திரள். இங்கே இருநூறு பேர் இருந்தனர். கதகளிக்காரர்களுக்கு கூட்டம் பிரச்சினையே இல்லை. ரசிகர்களுக்காக அவர்கள் ஆடுவதுமில்லை. ஆட்டம் முழுக்க முழுக்க அவர்களுக்கு நடுவே நிகழ்வதுதான்.

பாஞ்சாலி துகிலுரிதலும் துச்சாதனன் நெஞ்சுபிளத்தலும் உக்கிரமாக இருந்தன. வழக்கமாக திரௌபதியை அரசகுணங்கள் கொண்டவளாக காட்டுவார்கள். பீமன் துச்சாதனனின் குருதியுடன் குழல்முடிய வரும்போது திரௌபதி அருவருப்பும் விலக்கமும் அடைவாள். பீமன் கட்டாயப்படுத்தி குருதிநீவி குழல்முடிந்துவிடுவான். இந்த கதகளி நாடகத்திலும் திரௌபதி கொஞ்சம் அஞ்சி, கொஞ்சம் தயங்கி, மெல்லமெல்ல பீமனின் போர்க்களியாட்டில் கலந்து தானும் ஆடுகிறாள்.

ஆனால் அஜிதன் முன்பு கோட்டக்கல்லில் பார்த்த ஒரு கதகளியில் பீமனைவிட பெரும் களியாட்டுடன், வெறியுடன் குருதி கண்டு கொந்தளித்து ஒரு பேய்த்தெய்வம் போலவே மாறிவிட்ட திரௌபதியை அந்நடிகர் நடித்துக் காட்டினார் என்றான். அது அந்தந்த நடிகர்கள் அங்கே அப்போது உருவாக்கும் உணர்வு மாறுபாடு. அவர்களின் அக்கணக் கற்பனை. கதகளியின் கலையே அதில்தான்.

ஒருவகையில் மிகக்கொடிய காட்சிகள். ஆனால் செவ்வியல் இசையாகவும் நடனமாகவும் உருமாற்றம் அடையும்போது பிறிதொன்றாக ஆகிவிடுகின்றன. கலையின் ஒரு பாவனையாக.

தமிழகத்தில் தெருக்கூத்து ஒரு நாட்டார்கலை. நாட்டார்கலைக்குரிய பண்படா வேகமும் வீச்சும் கொண்டது. கதகளி முழுக்கமுழுக்க செவ்வியல் கலை. ஆனால் நாட்டார்கலையின் பல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டது. சம்ஸ்கிருத நாடகம், பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றுடன் தொன்மையான கேரள [தொல்தமிழ்] ஆட்டக்கலை, ஒப்பனைக்கலை, பண்ணிசை ஆகியவற்றின் கலவை.

இருநூறாண்டுகளுக்கும் மேலாக மேதைகளால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது கதகளி. அரசர்களின் ஆதரவால் செழித்தது.  சென்ற நூறாண்டுகளாக வலுவான அமைப்புப்பின்புலமும் அரசாங்க ஆதரவும் கொண்டு வளர்வது. இத்தகைய பின்புல ஆதரவு செவ்வியல் கலைக்கு மிக இன்றியமையாதது. தமிழகத்தில் கர்நாடக சங்கீதத்திற்கும் பரதநாட்டியத்திற்கும் மட்டுமே இப்படி ஓர் ஆதரவுப்புலம் உள்ளது.

கதகளி அறிஞர்களுக்கான கலை. கதை தெரிந்திருக்கவேண்டும். அத்துடன் கதகளி நடிகர் குறிப்பாலுணர்த்தும் புராணநுட்பங்களும் தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக கிருஷ்ணனிடம் துரியோதனன் இழைத்த கொடுமைகளைச் சொல்லி  முறையிடுகையில் பாஞ்சாலி கிருஷ்ணன் காளியனை வதம்செய்ததை, புள்வாய் கீண்டதை கைகளால் நடித்து காட்டுகிறாள். அந்நடிப்பை அறிய ஓரளவு கைமுத்திரைகள் தெரிந்திருக்கவேண்டும். அதோடு அந்த கதகளி நாடகமும் தெரிந்திருக்கவேண்டும்.

ஆனால் எந்த அளவுக்கு தெரிந்தாலும் அந்த அளவுக்கு ரசிக்கமுடியுமென்பதே செவ்வியல்கலைகளின் இயல்பு. கதகளி இன்றும் குழந்தைகளுக்கு விருப்பமான கலையாக நீடிப்பதனால்தான் அது நிலைகொள்கிறது.

கதகளியை அறிமுகம் செய்துகொள்ள விரும்பும் நண்பர்கள் பலர் நம் வட்டத்தில் உண்டு. சிலர் துணிந்து கேரளம் சென்று மலையாளம் கற்று கதகளி ரசனையில் தேர்ச்சியே பெற்றிருக்கிறார்கள். உதாரணம் அழகிய மணவாளன். கேரளத்தில் பல கதகளி நிகழ்வுகளில் விஷ்ணுபுரம் வட்டத்தின் ஒருவராவது இருப்பார்கள். என்ன ஆச்சரியமென்றால் பல கதகளி நடிகர்களுக்கே இது தெரியும்.

பிறருக்கு கதகளி அறிமுகம் ஆகும் பொருட்டு ஒரு நல்ல கதகளி குழுவை அழைத்து இரண்டுநாள் கதகளி நிகழ்வு ஒன்றை கோவையில் ஒருங்கமைக்க ஒருமுறை திட்டமிட்டோம். மொத்த ஆட்டக்கதையையும் தமிழாக்கம் செய்து, உரிய உட்குறிப்புகளுடன் முன்னரே நூல்வடிவிலோ மின்வடிவிலோ பங்கேற்பாளர்களுக்கு அளித்துவிடவேண்டும். ஓர் எளிய அறிமுகமும் செய்யவேண்டும். அதன்பின் கதகளி நிகழ்வு.

ஆனால் ஒரு நல்ல கதகளி நிகழ்வுக்கு இரண்டு லட்சம் வரை ஊதியம் தேவை. அரங்கு மற்ற செலவுகள் என்றால் ஐந்தாறு லட்சம் ஆகிவிடும். அப்படியே ஜகா வாங்கிவிட்டோம். நண்பர்கள் இப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்றாவது முயலலாம்.

கதகளி கண்டு திரும்பும் அனுபவம் என்பது இரவெல்லாம் ஒலித்த செண்டைமேளம் பகலிலும் தொடர்வது. தூக்கத்திலும் எங்கோ ஒலிப்பது அந்த முழக்கம். நமக்குள் இருந்தே. கேளி அந்த அனுபவத்தைச் சொல்லும் கதை.

இன்று அந்த முழக்கத்தில் இருக்கிறேன்.

ஆட்டக்கதை [சிறுகதை] கேளி [சிறுகதை]

 

கலைக்கணம் நிகரற்ற மலர்த்தோட்டம் அழியா வண்ணங்கள் கர்ணா தயாளு… சென்னித்தல செல்லப்பன் நாயர் கலையில் மடிதல் வணங்குதல் செவ்வியல்கலையும் நவீனக்கலையும்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2021 11:35

’ஆமென்பது’- அறிவும் உணர்வும் – கடிதம்

ஆமென்பது’- அறிவும் உணர்வும் ஒரு விவாதம்.

அன்புள்ள ஜெ,

உங்கள் மறுமொழியை ஒருவாரமாக அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன். சில இடங்கள் செரித்துக்கொள்ள முடியாத அளவுக்கு தகிப்பாக இருந்தன. குறிப்பாக ‘சரியான சொற்களில் சொல்லப்பட்டுவிட்டதனால் மட்டுமே ஒன்று உண்மையென்று நம்புவதைப்போல அறிவின்மை ஏதுமில்லை’ என்ற வரி. சாராம்சத்தில் இதை எப்படியோ நம்பிக்கொண்டுதான் செயல்படுகிறோம் என்று புரிந்தது. அதில் உள்ள பிழையும். வார்த்தைக்கச்சிதமான எத்தனை தர்க்கங்களை நாம் உள்ளூர பொய் என்று அறிகிறோம் என்று தட்டியதும் புரிந்தது. எலிப்பொறியே தான். உண்மையிலேயே புலி என்றால் அதில் சிக்கக்கூடாது தானே :)

அதேபோல் ஒரு திறப்பாக அமைந்த வரி ‘புனைவெழுத்து சரியான கலைத்தன்மையுடன் இருக்கும் என்றால் முழுமையை நோக்கியே சுட்டும்.முழுமையைச் சுட்டும் அறிவு மாயை அல்ல, துண்டுபட்ட உண்மையே மாயை.’ என்னிடம் இருந்த ஓர் அடிப்படையான பிழைப்புரிதலை கழற்ற மிக உதவிகரமாக இருந்த விவாதம் இது. புனைவை நிகழ்வாழ்க்கைக்குள் ‘செருகி வைக்கப்படும்’ கதை வாழ்க்கைகள் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஒரு மாபெரும் நூலகத்தில் புதிது புதிதாக புத்தகங்களை அடைத்து வைப்பது மாதிரி. அப்படி அல்ல. அது கனவுத்தளத்தில் வாழ்க்கைக்கு நிகரான ஒரு மறுவாழ்க்கை. வாழ்க்கைக்கு அடிநாதமாக சாரமாக எதுவுள்ளதோ அதுவே அதன் அடிநாதமும் சாரமும் கூட. அந்த முழுமையிலிருந்தே உதிக்குமாயின் அங்கும் சுட்டப்படுவது அதே முழுமையே. ஆக கலை என்பது ஒரு நொடி முழுமை தரிசனம். துண்டுபட்ட உண்மை, அரை உண்மை வாழ்க்கையின் சரியான பிரதிபிம்பம் இல்லை. அதன் சாரத்தை அது பிரதிபலிப்பதில்லை. ஆகவே மாயை. இந்தப் புரிதலை அடைந்தேன்

என் கேள்வியையும் உங்கள் பதிலையும் பலமுறை படித்துவிட்டேன். உண்மையில், இந்தக்கதை பற்றிய ஒரு கேள்வி என்ற தளத்தைத் தாண்டி, அறிவின் இடம் என்ன என்ற தர்க்கப்பூர்வமான கேள்வியையும் தாண்டி, இதிலிருந்து நான் சேகரித்துக்கொண்டது ஒரு முழுமையான அழகியல்-அறவியல் நோக்கு என்று சொல்ல முடியும்.

நீங்கள் சொன்னவற்றை மூன்று புள்ளிகளாக தொகுத்துக் கொள்கிறேன்

அ. அறிவார்ந்து மட்டும், அல்லது உணர்வுதளம் சார்ந்து மட்டும், வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைவதில்லை. ஆணவநிறைவுக்கான ஆசையே அவற்றுக்கு அடியில் நின்று அறிவாகவும் தூய உணர்வாகவும் செயல்படும். அறிவால் கட்டுப்படுத்தப்படும் உணர்வுகள், உணர்வுகளால் வழிநடத்தப்படும் அறிவு, இந்த சமநிலை முக்கியம். முழுமை நோக்கு இருக்கும் பட்சத்தில், அதில் உதிக்கும் உள்ளுணர்வே வழிகாட்டும்.

ஆ.வேதாந்தம் வாழ்க்கைசார் அறிவுகளுக்கு எதிரானது அல்ல. பாதி-உண்மைகளுக்கே எதிரானது. முழுமையுடன் நம்மை பொருத்திக்கொண்டு அடையும் அறிவு தன்னறிவு. அறிவாணவம் பிரிவுபட்ட அறிவு. தன் ஆணவத்தை நிறைவு செய்துகொள்வதே அதன் முதல் குறிக்கோள். வேதாந்தம் இதையே மாயை என்கிறது.

இ.ஆகவே முழுமையே முக்கியம். தன் அகங்காரத்தை ரத்து செய்து கொண்டு, அதற்கடியில் இருப்பதை உள்ளுணர்வால், நுண்ணுணர்வால் கண்காணித்துச் சென்று பெருவதே உண்மையான அறிவு. அங்கே உணர்வுக்கும் அறிவுக்கும் மோதல் இருக்காது, ஏனென்றால் பிளவில்லாத நிலை. அப்படி அறிந்துகொள்ளும் அந்த பயணமும் அதில் பெரும் அறிதல்களும் மொத்தமாக அறிவு தான். அந்த ஐக்கிய நிலையையே ‘தியானிக்கப்பட்ட அறிவு’, அதுவே முழுமையைச் சுட்டும்.

வாழ்க்கைத்தளத்தில் அறிவுக்கும் உணர்வுக்கும் என்ன இடம் என்ற கேள்வியைத் தாண்டி இப்போது உங்கள் பதிலை உள்வாங்க உள்வாங்க, தன்னளவில் ஒரு அழகியல் கொள்கையாகவே இவற்றுக்கு ஒரு ஆழம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அதாவது இலக்கிய உண்மை என்றால் என்ன என்ற கேள்விக்கு இதுதான் பதில். புனைவு ‘உண்மையாக’ இருக்கவேண்டுமென்றால் அதில் அறிவுக்கும் உணர்வுக்குமான சரியான சமநிலை இருக்கவேண்டும். உதாரணமாக, மெல்லுணர்ச்சிகள் (empty sentiment, cheap romanticism) ஓங்கிய படைப்புகளை நம்மை நிறைவுசெய்வதில்லை. அவற்றில் ஒரு போலித்தனத்தை நான் உணர்கிறோம். பெரும்பாலும் அவ்வகைப் படைப்புகள் அந்த உணர்ச்சியை மட்டும் தனியாக எடுத்து அதற்கான காண்டெக்ஸ்ட் இல்லாமல் நீட்டுகிறது. மாறாக நாம் உண்மையென்று கண்டுகொள்ளும் படைப்பில்  உணர்வுகள் உருவாவதற்கான சூழலை மறுக்கமுடியாத தர்க்கத்துடன் கட்டமைக்கிறது. அந்த அறிவுக்கட்டை மறுதட்டில் வைத்துத்தான் இந்த உணர்வுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது.

இதேபோல் இலக்கியத்தில் அறிவார்ந்த தன்மை எந்த அளவிற்கு தேவை, தர்க்கத்தின் பங்கு என்ன என்ற கேள்விக்கும் இதுதான் பதில். உண்மையான உணர்ச்சிகரம் இல்லாது ஒரு தர்க்கத்தை மட்டும் கொண்டு ஒரு படைப்பு அமையுமாயின் அது முழுமையாக அமையாது. பிரச்சார எழுத்துக்கும் சரி, தத்துவ, அறிவியல் அல்லது பிற துறை ‘உண்மைகளை’ மீண்டும் சொல்ல எழுதப்படும் படைப்புகளுக்கும் சரி, இது பொருந்தும். அவை அரை உண்மைகள்.

இதுதான் செவ்வியலின் அழகியல். சரிதானே? இவ்வாறு தொகுத்துக்கொண்டேன் – செவ்வியலை ஒரு பழமையான அழகியாலாக பாவிக்கும் பார்வையே பொதுவானது. ஆனால் இது முக்கியமான இடம். செவ்வியலின் செம்மை என்பது அதன் பழமையில் இல்லை, அதன் முழுமையில் உள்ளது. ஆகவே தான் செவ்வியல் காலத்தைத் தாண்டி நிற்கிறது.

இந்த சமநிலையே, இந்த முழுமையுணர்வே, வாழ்க்கைப்பாதைகளை தீர்மானிக்குமென்றால் அது அழகான, உண்மையான, நல்ல வாழ்க்கையாக அமையும். இதையே அறிவு-உணர்வு சமநிலை என்ற விவாதத்தில் சுட்டுகிறீர்கள். ஒருவேளை கனிந்த மனிதர்களுக்கு, ஞானியருக்கு அது பொருந்தலாமா? சாதாரண  மனிதன் சவாரிசெய்யும் தன்னாணவம் என்ற ஒற்றைக்குதிரை அதற்கு பல சமயங்களில் தடையாக இருக்கிறதே? மனிதனின் ஆதார சிக்கலே அதுதான் போலும்.

மனிதன் தன்னுடைய உள்ளுணர்வை, ஆழத்துடனான பிணைப்பை, முழுமைக்கான தேடலை தக்கவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையே இந்த புரிதல் எனக்கு முதன்மையாக உணர்த்துகிறது. இதற்கு மேல்  புறவயமாக பேசமுடியுமா என்று தெரியவில்லை. அடுத்தக்கட்டமாக உள்ளுணர்வின் இயங்குதலைச்சார்ந்து கேள்விகள் எழுகின்றன. வேறொரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்திக்கையில் வாய்ப்புக்கிடைத்தால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த விஷயங்களைச்சார்ந்து மேலும் உரையாட விரும்புகிறேன்.

இந்த பதில்களை நீங்கள் உங்கள் குருவின் மாணவர் என்ற நிலையிலிருந்து சொன்னதாக எழுதியிருந்தீர்கள். தொகுத்துக்கொள்கையில், தொடர்ந்து தியானத்து வரும் ஒரு மாபெரும் செவ்வியல் கலைஞரின் விடைகள் இவை என்பதும் எனக்கு அதே அளவு முக்கியமாகப் படுகிறது.

அன்புடன்’

ஆர்

பிகு – இந்தக் கேள்விபதில்களை அசைப்போட்டுக்கொண்டிருந்த அதே சமயம் உங்கள் ஓஷோ உரைகளையும் கேட்கப்பெற்றேன். ஓஷோவும் இந்தக்கதையின் நாயகர் இயங்கியதும் ஏறத்தாழ ஒரே காலகட்டம் என்பதால், அவர் ஓஷோவிடம் சென்றிருந்தால் என்ன பதில் பெற்றிருப்பார் என்ற கேள்வி இயல்பா எழுந்தது.

ஓஷோ அவரிடம் அவர் எடுத்த முடிவுகளோடு எப்படி சுமுகமாக வாழ்வது என்று சொல்லியிருக்கக்கூடும் – கடந்தகால ஏக்கங்களை கைவிட்டு, எதிர்பார்ப்புகள் இல்லாமல், நொடிக்கு நொடி பொருந்திப்போய் வாழச்சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படி உண்மையிலேயே வாழ்வது மானுடருக்குச் சாத்தியமா? அவருடைய ஆழம் அந்த விலக்கத்தை மேற்கொள்ள அனுமதிக்குமா? அதை நிகழ்த்த எத்தனைப்பெரிய பிரயத்தனங்களும் பயிற்சிகளும் தேவையாகும்? அந்தக் கருத்தைக் கேட்டதில் ஏற்படும் ஒரு நொடி ‘சுளீர்’ உடைவால் அது அத்தனை எளிதாக நடக்குமா என்ன?

இப்படி யோசிக்கையில் ஓஷோவின் தனிமனிதனை முன்னிறுத்திய – பௌதீகவாதத்தில் ஊரிய – தரிசனத்துக்கும் வேதாந்தம் போன்ற முழுமைக்கோட்பாட்டுக்குமான தூரம் ஓரளவு துலக்கம் பெருகிறது. முழுமைவாதத்தின் முக்கியத்துவமும். இன்று நாம் வாழும் பொருள்முதவாத-முதலாளித்துவ-தொழில்நுட்ப யுகத்துக்கு இந்த நுட்பத்தின் புரிதல் மிக முக்கியமெனப் பட்டது.

அன்புள்ள ஆர்,

செவ்வியல் என்பதைப் பற்றிச் சொல்கிறேன். செவ்வியல் தர்க்கம்- கற்பனை- உள்ளுணர்வு ஆகிய மூன்றும் சரியாகக் கலந்த ஒரு வெளி. மிகைபடச் சொல்லல்,குறைபடச் சொல்லுதல், விளையாட்டாகச் சொல்லுதல், அங்கதம், குழந்தைத்தனம் என எல்லாவகை கூறுமுறைகள் வழியாகவும் வாழ்க்கையை அள்ளிவிட முயலும் ஓர் அழகியல். ஏதேனும் ஒன்று குறைந்தால்கூட அது முழுமையான செவ்வியல் அல்ல.

இன்று சுரேஷ்குமார இந்திரஜித்திடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் முன்பு சுந்தர ராமசாமியிடம் பேசியதைச் சொன்னார். அவர் சுந்தர ராமசாமியிடம் நான் வரலாற்றை எழுதுவதாகச் சொன்னபோது சுந்தர ராமசாமி ‘அவர் எழுத நினைக்கிறது காவியம். அவரோட இடம் அதுதான்’ என்றார். நான் முழுமை என்ற ஒன்றையே இலக்காக்குகிறேன். அது காவியத்திலேயே இயல்வது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.