Jeyamohan's Blog, page 1017
March 22, 2021
வெய்யோன் வாசிப்பு
அன்புள்ள ஜெ,
வெண்முரசு வரிசை நாவல்களில் வெய்யோன் நாவலை இன்று வாசித்து முடித்தேன். கர்ணன் என்ற ஒரு மனிதன் பலவாறாக என் சிறுவயதில் இருந்தே என்னுள் நுழைந்திருந்த ஒரு ஆளுமை. மகாபாரத கதைகளை செவி வழியாக அறிய தொடங்கிய நாள் முதலே அவனில் இருந்த ஈர்ப்பு ஒரு வித கதாநாயக தன்மை உடையது. இன்று நினைக்கையில் மகாபாரதம் என்றதும் அவன் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. காலப்போக்கில் எங்கோ மறைந்திருந்த அவனை பற்றிய கனவுகள், வெண்முரசை வாசிக்க தொடங்கும் பொழுது முன் வந்து நின்றன. ஆனால், நீங்கள் வெண்முரசின் வழியாக என்னை எடுத்து சென்றது ஒரு பெரும் தரிசனத்தை நோக்கி. அங்கு அனைத்து மனிதர்களும் என்னுள் நிறைந்திருந்தனர். ஒவ்வொருவரும் தன்னளவில் வளர்ந்து வரும் பொழுதெல்லாம் ஒரு தலைமுறை காலகட்டத்தை வாழ்ந்து முடித்த ஒரு நிறைவு மனதில் ததும்பி இருந்தது. ஒவ்வொரு நாவலையும் வாசித்து முடித்த பிறகு உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்தாலும், எனக்குரிய தயக்கமும், கூச்சசுபாவமும் என்னை வென்றன. ஆனால், வெய்யோன் நாவலின் இறுதி கட்டங்களை வாசித்து முடித்த பிறகு தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றிய மறுகணமே தட்டச்சு செய்ய தொடங்கி விட்டேன்.
முதற்கனல் நாவல் வரும் காலங்களில் நடக்கவிருக்கும் அனைத்திற்கும் ஒரு கனல் என்றால், அதன் முதல் அனல் பரவல் இங்கு தான் தொடங்குகிறது. கர்ணன் தன்னையும், தன்னை சுற்றியும் ஓயாமல் நோக்கி கொண்டிருக்கிறான். அவனை பற்றிய மற்றவர்களின் பார்வையை அவன் கடந்து செல்லும் விதங்கள் ஞானத்திற்கு உரியவை. துரியோதனனும் அவனும் மிக சிறந்த நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும், நீங்கள் அவர்களின் உறவை எடுத்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் உணர்வு மேலிட்டு கண்ணீரை உதிர்த்தன கண்கள். கௌரவர்கள் அனைவரும் அவன் மேல் கொண்ட மதிப்பிற்கு சாட்சி அங்கநாட்டில் சுஜதானின் கலிங்கத்து சேடியை நோக்கி உதிர்க்கபடும் சொற்கள். சிறிது நேரம் பித்து பிடித்தாற்போல் இருந்த நொடிகள் அவை. அவனது அஸ்தினாபுர வருகையை அவர்கள் அணுகும் விதமும், அவர்கள் அவனை மூத்தவரே என்று அழைப்பதும் நிறைவான தருணங்கள்.
பீமன் இந்திரப்ரஸ்த நகர் விழாவிற்கு அழைப்பதற்கு வரும் நிகழ்விலிருந்து கதை ஒரு கூரிய பயணத்தை மேற்கொள்வதற்கு தன்னை தயார் செய்து கொள்வது போல் உள்ளது. அங்கிருந்து கர்ணன் நாகர்களை எதேச்சையாக சந்தித்து அங்கிருந்து ஜராசந்தனை துரியோதனிடம் அழைத்து செல்வது எல்லாம் ஊழின் கணங்கள். தன்னை அறியாமலே அவன் ஒரு பெரும் வஞ்சத்திற்கு வழிகோலுகிறான்.
ஜராசந்தனையும் துரியோதனையும் ஒன்றாக பார்க்கும் பீமனும், அர்ஜுனனும் தன்னுள் ஒரு வஞ்சத்தின் துளியை உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதிலிருந்து அந்த இரெண்டு நாட்களும் அவர்களுக்குள் ஒரு நச்சு விதை துளிர்க்க தொடங்கியது என்று தெரிகிறது. துரியோதனன் இடறி விழும் இடத்தில் அந்த நஞ்சு தன்னை முன்னிறுத்துவது ஒரு பெரும் வஞ்சத்திற்கான தொடக்கம். அப்பொழுதும் கர்ணன் அதை கடந்து செல்லவே விழைகிறான். ஆனால், இறுதியில் அந்த அஸ்வசேனனை கையில் எடுத்து அவன் உரைக்கும் வஞ்சினம் ஒரு நொடி அச்சத்தை உடல் முழுதும் சொடுக்கி சென்றது.
அன்புடன்,
நரேந்திரன்.
March 21, 2021
கவிதை,லக்ஷ்மி மணிவண்ணன் உரை
லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத்தொகுதி விஜி வரையும் கோலங்கள் நாகர்கோயிலில் வெளியிடப்பட்டபோது நடந்த விழாவில் பேசியது
கதைகள் கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
மீண்டும் வெண்முரசு நாட்களைப்போலவே தொடர் வாசிப்பில் மகிழ்ந்திருக்கும் நாட்களை அளித்திருக்கிறீர்கள். அதிகாலை வாசிக்கும் கதையின் சாயலிலேயே அந்நாள் முழுதும் இருக்கின்றது. கதையை, கதை மாந்தர்களை, சம்பவங்களை மனம் நினைத்துக்கொண்டே இருக்கிறது வழக்கமான வேலைகளின் .ஊடே.
கதையைப்போலவே நீங்கள் கதையை யாருடைய பார்வையில் சொல்லுகிறீர்கள், எந்த நிகழ்வில் துவங்கி கதையை கொண்டு போகிறீர்களென்பதையும் கவனிப்பதும் கூடுதல் சுவாரஸ்யம்.
டிராக்டரில் வருகையில் தெங்கோலை சேகரிக்கும் நேசையனிலிருந்து துவங்கும் ஒரு அன்னையின் கதை, விரைவில் பணி ஓய்வடையும் ஒரு காவலரின் பார்வையில் குற்றப்புலனாய்வும் காதலுமாக ஓரிழையால் கட்டுண்டிருக்கும் கதை, எருமையிடம் என்னவோ மாற்றமிருப்பதாக சொல்லும் மனைவியின் பேச்சில் துவங்கும் வலமும் இடமுமாக, வாழ்வுக்கும் சாவுக்குமான கதை, ஒரு கார் பயணத்தின் உரையாடலில் சொல்லப்படும் வயிற்றுக்கொதியின் கதை, தேசிய நெடுஞ்சாலையில் லாரிப்பயணத்தில் துவங்கும் இழந்த அரிய சந்தர்ப்பங்களின் கதை, பாதிக்கப்பட்டோரின் ரகசியசந்திப்பில் துவங்கி தீப்பாய்ந்த அம்மனில் முடிந்த கந்தர்வனின் கதை, மலையாளப்பாடல் வரிகளில் துவங்கும் ஒரு இழந்த காதலின் கதை, இப்படி பலநூறு கதைகளை ஒன்றின் சாயல் மற்றொன்றில் இல்லாதது போல எழுதியிருக்கிறீர்கள் என்பது பெரும் ஆச்சர்யத்தை அளிக்கின்றது.
ஒவ்வொன்றுக்குமான தலைப்பும் அப்படித்தான் மிக தனித்துவமானது, கதை மாந்தர்களின் பெயரும் அப்படியே, வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் யாரையாவது நினைவுபடுத்தும் பெயர்கள், எங்கோ கேட்ட பெயர்கள், ஏழாம் கடலின் ’பர்னபாஸ்’ எனக்கு வெகுகாலத்துக்கு முன்பு தொடர்பிலிருந்த ஒரு கிருத்துவ குடும்பத்தினரை நினைவுபடுத்தியது. இவையெல்லாமே நான் மலைத்துப் போகும் விஷயங்களென்றால் கதைகளைக் குறித்த வாசகர்கள் கடிதம் இன்னும் மலைப்பேற்படுத்துகிறது.
நான் எல்லாக்கதைகளுக்குள்ளும், கண்முன்னே தெரியும் ஒரு கதவை திறந்து போகிறேன். பலர் இன்னும் இன்னுமென தொடர்ந்து கதவுகளை திறந்து உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள், ரகசிய கதவுகளை திறந்து உள்ளே நுழைபவர்களும், கதவே இல்லாத இடத்தில் கதவவொன்றை உருவாக்கி உள்ளே செல்பவர்களுமாக கதைகளுக்கு உருவாகிவரும் பரிமாணங்கள் அளிக்கும் ஆச்சர்யங்களுக்கும் அளவேயில்லை.
கதைகளை குறித்து உங்கள் தளத்தில் வெளியாகும் கடிதங்களுடன், கூடுதலாக வாசக நண்பர்கள் நாங்களும் பல கலந்துரையாடல்களில் உங்கள் சிறுகதை வாசிப்பை அவரவர் கோணத்தில் பகிர்ந்துகொள்கிறோம். ஒவ்வொரு கதையும் பல சாத்தியங்களை, பற்பல திறப்புகளை கொண்டவைகளாக மாறிவிடுகின்றது.
பள்ளிக்காலத்தில் வெள்ளைத்தாள் மடிப்பில் ஒரு சொட்டு மையை வைத்து தாளை மடித்து திறந்தால் எதிர்பாரா பல வடிவங்களில் மை ஊறி பரவியிருக்கும். இப்படி கடிதங்கள் கலந்துரையாடல்களுமாக கதைகள் மீண்டும் புதிது புதிதாக மாறிக்கொண்டே இருக்கிறது.
இவற்றையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ அதை வாசகர்கள் மிகச்சரியாக கண்டுகொள்கிறார்களா?
நீங்களே எதிர்பாரா திசையிலும் வாசிப்பை கொண்டு போகிறவர்களும் உண்டா?
புரிதலின் போதாமைகளுடன் இருப்பவர்கள் உங்களுக்கு சலிப்பேற்படுத்துவார்களா?
அல்லது எழுதிய பின்னர் முற்றாக கதையிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு எல்லா கருத்துக்களையும் எட்ட நின்று பார்க்கிறீர்களா?
சிங்கை சுபாவிடம் இதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கையில் ’’இக்கதைகள் எல்லாம் தங்க புத்தகத்தை போன்றவை அவரவர்க்கு அவரவர் பிரதி’’யென்றார். தங்க புத்தகத்தின் எனக்கான பிரதியே என் வாழ்வில் பெரும் பொக்கிஷம்
மிக்க அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள லோகமாதேவி,
இக்கதைகளை ஏன் எழுதுகிறேன் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சென்ற பிப்ரவரியில் கொரோனா பாதிப்பில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் இருந்தேன். நிறைய நூல்களை வாசிக்கக் கொண்டுசென்றேன். ஆனால் வரலாற்றுநூல்களை தவிர எவற்றையும் வாசிக்கமுடியவில்லை. எனக்கு என் புனைவுதான் புனைவுலகில் உலவும் இன்பத்தை முழுமையாக அளிக்கிறது. ஆகவே எழுதினேன். அப்படித்தான் மீண்டும் தொடங்கியது. புனைவு உருவாக்கும் சமானமான மாற்றுலகில் வாழும் இன்பத்துக்காக மட்டுமே எழுதுகிறேன். இவை கதைகள் மட்டுமே. இவற்றிலுள்ள மற்றெல்லாம் நான் என் வாழ்க்கையில் கொண்டிருப்பவை, ஆகவே இயல்பாக அமைபவை. நான் கதைக்காரன், கதையில் பெரும்பகுதியும் மெய்வாழ்வில் கொஞ்சமும் வாழ்பவன். எனக்கு சமகாலம் போதவில்லை, சலிப்பூட்டுகிறது. வரலாறும் கனவும் தேவைப்படுகிறது.
இவற்றை வாசிப்பவர்களில் எவரெல்லாம் இதேபோல கற்பனையின் துணைகொண்டு ஒரு நிகர்வாழ்க்கையை வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் எனக்கு அணுக்கமானவர்கள். அவரவர் அனுபவம், தேடலுக்கு ஒப்ப அவர்கள் கதைகளை விரித்துக்கொள்கிறார்கள். ஆகவே எல்லா வாசிப்பும் சரிதான், எல்லாரும் என்னுடன் வருபவர்களே. கற்பனைத்திறன் இல்லாமல் கோட்பாடு, அரசியல், வடிவப்புதிர்களுக்காக வாசிப்பவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வாழ்வது வேறெங்கோ. அவர்களை நான் பொருட்படுத்துவதில்லை
ஜெ
அன்புள்ள ஜெமோ,
எப்படியிருக்கிறீர்கள்? ”தீற்றல்” சிறுகதை எனக்கு மிகப் பிடித்திருந்தது. எங்கோ எப்போதோ கேட்ட இசையின் கார்வையை மனம் மீட்டிப் பார்ப்பதைப் போன்ற உணர்வை அது தந்தது. மை தீட்டிய கண்ணின் வாலை நினைவில் தீற்றியதற்கான உருவகமென முதலில் வாசித்தேன். ஒரு சிறிய குறிப்பும் முகநூலில் எழுதினேன். எனக்கு அந்த வால் ஆலிஸ் இன் வொண்டர்லாண்டின் செஷயர் பூனையின் சிரிப்பாகத் தென்பட்டது.
ஓர் அலட்சியமான கீற்று. ஒரு கணம், அந்த ஒருகணம், அது அங்கிருந்தது. கண்கள் இல்லை, மையிட்ட இமைகளும் இல்லை, நீட்டிவரைந்த வால் மட்டும் எஞ்சியிருந்தது.
எனச் சிறுகதை முடிவில் வருகிறது.
ஆனால் மீண்டும் கதையைப் படித்தபோது, நடந்த நிகழ்வின் / நிகழ்வுகளின் நினைவுத் தடத்தை அது சொல்லவில்லை என்று தோன்றியது. மாறாக ஒரு துளிக் கணம். அல்லது கதையே கூறுவது போல அந்தக் கணத்தில் ”துள்ளிய” ஒரு ”சொல்.” அந்தக் ”கணம்” அல்லது “சொல்” குறித்த நினைவாக மாத்திரம் கதை சொல்லப்படுகிறது என்று தோன்றியது. ஒருவேளை கதைசொல்லியின் முதுமை இந்தவிதமான நினைவுகூரலைச் சாத்தியப்படுத்தியதோ என்று எண்ணினேன்.
மேலும், ’நினைவு’ எந்தப் பெண்ணைக் குறித்தது, அது கதைசொல்லிக்கு நிகழ்ந்ததா, அல்லது அவன் நண்பனுக்கு நிகழ்ந்ததா போன்ற கேள்விகளைக் கடந்து, முதுமையில் அதன் பெறுமதி ஒன்றுதான் என்றும் கதை தெரிவிப்பது போலிருந்தது. அதாவது முதுமையைப் பொறுத்தவரை, ’நினைவு’ ஒரு கணத்தின் தடம் என்பதற்கு அப்பால், நிகழ்வுக்கோ நபர்களின் அடையாளங்களுக்கோ பெரிய முக்கியத்துவம் இல்லை. ஒருவேளை அதனால்தான் ’நினைவு’ நீட்டி வரைந்த வால் என மாத்திரம் இலேசாக காற்றில் அலைகிறதோ என்னவோ.
கதையின் இடையில் மௌனி வருகிறார். மௌனியின் கதையான ’பிரபஞ்ச கானமோ, அழியாச் சுடரோ’ என வருகிறது (இதிலும் பெயர் முக்கியமில்லை). மௌனியின் கதை என்ற வகையில் அது ஒரு departure point. பொதுவாக மௌனியின் சில கதைகளில் காலமில்லாத காலத்தில் நேசத்துக்கு உரியவரது உயிரிழப்பு சம்பவித்துவிடும். ஆனால் நேசித்தவருக்கு அவரது நினைப்பு அகலாது. அந்தப் பாணியிலிருந்து இக்கதையின் பாதை விலகுகிறது. அதற்குப் பதிலாக கால மாற்றத்தினால் நேசத்தின் இலக்கு ”சூனியமாகிவிடுவதைச்” சொல்கிறது. கதைக்குள்ளேயே மௌனியின் பாணிக்கு எதிர்நிலை எடுத்ததற்கான cues தரப்பட்டிருக்கின்றன. புதிய முயற்சியாக இக்கதை உள்ளது.
சற்றுமுன் ”இரு நோயாளிகள்” படித்தேன். It disturbed me very much. புதுமைப்பித்தனின் அந்திமக் காலத்தை நினைக்கையில் மனம் உடைந்துபோகிறது. இந்தக் கதையை ப்ராசெஸ் செய்ய எனக்கு ஓரிரு நாட்களாவது தேவைப்படும்.
அன்புடன்,
பெருந்தேவி
அன்புள்ள பெருந்தேவி,
எப்போதும் மிகப்பெரிய காலப்பெருக்கை ஒரு சிறு நினைவுத்தீற்றல்தான் எழுப்புகிறது. 1990ல் நான் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். சட்டென்று கல்லூரி நினைவுகள் அலையென வந்து அறைந்தன. பின்னர் ஏன் என்று கண்டடைந்தேன். ‘லாமினேஷன்’ 1978ல்தான் அறிமுகமாகிறது. சீசன் டிக்கெட்டுகள் லாமினேஷன் செய்யப்பட்டன. அந்த வார்னீஷ் மணம் கல்லூரிக்கால பேருந்துப்பயணங்களின் நினைவுடன் பின்னிப்பிணைந்தது. அலுவலகத்தில் ஒரு லாமினேஷன் செய்யப்பட்ட அட்டை அந்த ஒட்டுமொத்த வாழ்க்கைச்சூழலையும் மீட்டிவிட்டது
இரு நோயாளிகள் ஒரு விந்தையான உணர்வெழுச்சியின் கதை. காசநோய் மலையாளத்தில் க்ஷயம் எனப்படுகிறது. க்ஷயம் என்றால் குறைந்து அழிவது. குறைந்து அழிந்த இருவர். ஒரே மாதம், ஒரே ஆண்டில். எனக்கு சங்ஙம்புழ மிகப்பிடித்தமானவர். என் அம்மா சங்ஙம்புழாவின் அடிமை. பித்தி. பல கதைகளில் அம்மா சங்ஙம்புழாவின் ரமணன் காவியத்தை வாய்விட்டுப் பாடுவது பற்றி எழுதியிருக்கிறேன். அம்மாவின் தோழியும் அம்மாவுமாக ஒரு ஆழமான குளத்திற்குள் அமர்ந்து அதைப் பாடி கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அந்த தோழி தற்கொலைசெய்துகொண்டார். அம்மா முப்பதாண்டுகளுக்குப்பின் தற்கொலை செய்துகொண்டார். ரமணன் தற்கொலையை இலட்சியவாதமாக காட்டும் காவியம்- அந்தக்கால கற்பனாவாதம். ஜே.ஜே.சிலகுறிப்புகளில் அதை ஜே.ஜே.கிண்டல் செய்கிறான்.
ஜெ
இ.பா- ஓர் உரையாடல்
அன்புள்ள ஜெ..
உங்கள் நண்பர்கள் மூவர் ( காளி பிரசாத் , சிறில் அலெக்ஸ் , சுரேஷ் பாபு)இந்திரா பார்த்தசாரதியை சந்தித்து உரையாடிய யூ ட்யூப் காணொலி தற்செயலாக என் பார்வைக்கு வந்தது
இந்த வயதிலும்இ,பா வின் தெளிவான சிந்தனையும், பேச்சும் ஆச்சர்யப்படுத்தியது. வெகுஜன இதழ்கள் ஆதிக்கம் நிலவிய காலகட்டங்களில் எத்தனையோ இலக்கிய மேதைகள் பொதுமக்கள் பார்வைக்கே வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட,கொடுமை நடந்துள்ளது. அல்லது , சுந்தர ராமசாமி எனக்கு செய்த துரோகம் , நடிகர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்பது போன்ற அசட்டுத்தனமான தலைப்புகளுடன் பேட்டிகள் வெளியாகும்
எழுத்தாளர் ஆகாவிட்டால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் , இலக்கியம் என்றால் என்ன ? எத்தனை நூல்கள் எழுதியிருக்கிறீர்கள் என டெம்ப்ளேட் கேள்விகளைப்பார்த்து வெறுத்துப்போன நினைவுகள் உள்ளன.இந்த சூழலில் இன்று இப்படிப்பட்ட ஆரோக்கியமான பேட்டிகளைப்பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
சிற்றிதழ் காலகட்டத்தை இலக்கியப் பொற்காலம் என்பார்கள்.இலக்கியவாதிகளும் இலக்கியமேதைகளும் பரவலாக,கவனம் பெறும் இன்றைய இணைய யுகம்தான் இலக்கியப் பொற்காலம் என நீங்கள் நினைக்கிறீர்களா?
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
எரிசிதை, நகை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
எரிசிதை கதையை வாசித்து முடித்தபோது ஒருவகையான நிறைவும் ஏக்கமும் வந்து நெஞ்சை அழுத்தியது. கடந்தகாலத்தில் வாழ்ந்த அனுபவம். அதேசமயம் மகிழ்ச்சியடைவதா நெகிழ்வதா கோபப்படுவதா? ஒரு பெண் சிதையேறுகிறாள். அது கொந்தளிக்கவைக்கிறது. ஆனால் அது அவள் ஓர் அன்னை என்பதன் வெற்றி. அது நெகிழ்ச்சியை அளிக்கிறது. எதுவுமே சொல்லமுடியவில்லை.
சென்றகாலத்தில் மிகமிக ஒடுக்கப்பட்ட மக்களில் அரசியரும் வருவார்கள் என நினைக்கிறேன். தாசிகளுக்காவது ஓர் அடிப்படை உரிமை உண்டு. இவர்களுக்கு அதுவும்கூட இல்லை. வெறும் அடையாளங்கள். அதற்காக கூண்டுக்குள் வளர்க்கப்படும் உயிர்கள்
சிவக்குமார் எம்
வணக்கம் ஜெ
‘எரிசிதை’ ஒருவித நிலைகுலைவையும் நெகிழ்வையும் ஒருசேர அளித்த கதை. முக்கியமாக வரலாறு என்பது எவ்வளவு சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது ? மேலும் வரலாறை இவ்வாறு புனைவாக எழுதும்போது கிட்டத்தட்ட ஒரு முழு சித்திரத்தை அளிக்கவே அது முயல்கிறது. வரலாறு குறித்தோ வழக்கை குறித்தோ நாம் எவ்வித தீர்மானத்துக்கும் வந்துவிட முடியாத தன்மைக்கு அது கொண்டு சென்றுவிடுகிறது. நாயக்க மன்னர்கள், ஆட்சிசூழல், மங்கம்மாள், தாசிகள் உலகம் என அது விரிக்கும் உலகம் ஒரு வரலாற்று நூலை வாசித்த நிறைவைத் தருகிறது.
குழந்தை இறந்து பிறந்தாலும் சின்ன ராணி சிதையேறவேண்டும் என்ற நாகலட்சுமியின் கனவு, குழந்தை பிறந்து ராஜாவாக ஆக தான் சிதையேறவேண்டும் என்ற ராணியின் கனவு, குழந்தையைக் கொன்று விட்டால் தன் நாட்டுக்குச் சென்று அமைதியாக வாழலாம் என்ற கணக்கு, இந்த மூன்று குறித்தும் ராணியின் மனப்போராட்டம். குழந்தையைக் கொன்றுவிட்டு பின்பு தான் இருந்தாலும் இறந்தாலும் அதன் பழிச்சொல் தன் மீது விழவே செய்யும். அதிலிருந்து தப்ப முடியாது. அதற்கு இறந்து புகழடைவதே மேல் என்ற முடிவுக்கு வருகிறாள். சிதையேறுவது எளிய விஷயமல்ல. அதற்கு வலுவான பெருமிதங்களோ, சீற்றமோ நியாயங்களாக அமைய வேண்டும். சின்ன ராணி அந்த நியாயங்களை அமைத்துக் கொண்டாள். என் மகன் பிறந்து பெரிய நாயக்கர் மாதிரி பெரிய ராஜாவாக வேண்டும்; கையில் செங்கோல் பிடித்து, திமிரு பிடித்த மங்கம்மாளுக்கு ஆம்பளைன்னா என்னன்னு காட்டுவான்… என்ற விசையை உருவாக்கிக் கொண்டாள்.
சதிதேவியாகி ஏழுதலைமுறையை ஆழிப்பாள் அல்லது ஏழுதலைமுறையை காப்பாள்.
விவேக் ராஜ்
நகை [சிறுகதை]அன்புள்ள ஜெ
நகை ஒரு விசித்திரமான கதை. சட்டென்று நாயக்கர் காலத்திலிருந்து நிகழ்காலத்தின் உச்சிக்கு தாவுவது ஒரு வகையான டிரெப்பீஸ் விளையாட்டு போலிருந்தது. இந்த யதார்த்தமும் நாம் காண்பதுதான். கிளாஸில் ஆசிரியர்கள் போர்ன் நடிகைகளைப்பற்றிச் சொல்கிறார்கள். மாணவிகள் சிரிக்கிறார்கள்.
அந்தச் சூழலில் உள்ள ஆபாசம்தான் இந்தக்கதை. திமிர் ஆணவம் ஏகத்தாளம். அதன்முன் காலில் விழச்செய்யும் கேவலம். அதைவிட போர்ன் ஒன்றும் ஆபாசமில்லை என்று தோன்றுகிறது. இந்த ஆபாசவாதிகள் உருவாக்கிய ஆபாச உலகில் சிக்கிக்கொண்டால் பெண் கீழ்மை அடைவாளா என்ன ?அவள் வென்று செல்லமுடியும். வெற்றிச்சிரிப்பு சிரிக்கமுடியும்
அர்விந்த்குமார்
அன்புள்ள ஜெ,
ஷீலா ஒர்டேகாவின் சிரிப்பை இந்தக்கதையுடன் இணைத்துப் பார்த்தேன். போர்ன் நடிகையின் சிரிப்பு என்று எடுத்துக்கொள்ளமுடியவில்லை. அது ஒருவகையான திராவிட முகம். கதையிலேயே ஆட்டோகிராஃப் மல்லிகாவுடன் ஒப்பீடு உள்ளது. அந்த வெற்றிச்சிரிப்பும் பலமான கைகுலுக்கலும் அந்த கல்யாணமண்டபத்தில் நிகழும் அற்பமான ஆணவவெளிப்பாட்டுக்கு நேர் எதிரானவை. நேர்கொண்ட பார்வையும் சிரிப்பும் கொண்ட கதாபாத்திரம்
ஆச்சரியமென்னவென்றால் குமிழிகள் கதையும் இந்தக்கதையும் ஒரே புள்ளியில் குவிகின்றன என்பதுதான். பெண்ணின் வெற்றி என்பது பெண்ணைப்பற்றி ஆண் உருவாக்கும் பிம்பங்களில் இருந்து முழுமையாக தாண்டிச்செல்வதில் உள்ளது என்று சொல்லும் கதை இது
எம்
கேளி, குமிழிகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இதுவரை நீங்கள் எழுதிய சிறுகதைகளிலேயே மிக மிக தனித்துவம் கொண்ட, இசையின் தித்திப்பை அதன் விஸ்வரூபத்தை அப்படியே அள்ளி கொண்டு வந்த கதை.
வெண் முரசின் நீலனின் குழலிசைக்கு மேலும் அற்புத இசை தருணத்தை உங்களால் எழுத முடியும் என்று கேளி கதைக்கு முன்பாக எவரும் சொன்னால் அது முடியவே முடியாது என விமர்சன தாண்டவம் ஆடி இருப்பேன். :)
கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
இசையனுபவம் அல்லது கலையனுபவத்தை எழுத முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. நான் பார்த்தவரை ஒன்றுண்டு, நேரடியாக அதைச் சொல்ல ஆரம்பித்தாலே அபத்தமான மொழிப்பாய்ச்சலாக, அல்லது வெறும்படிமமாக ஆகிவிடுகிறது. சிறந்த வழி என்பது அந்தச்சூழலைச் சொல்வதுதான். அந்தச் சூழலிலேயே இசையின் மயக்கம் இருக்கும். அந்த சூழலை சொல்லி அதில் இசை திகழ்வதைச் சொல்ல முடிந்த அருமையான கதை கேளி
என்.ரங்கராஜன்
குமிழிகள் [சிறுகதை]அன்புள்ள ஜெ
குமிழிகள் கதையின் வாசிப்புகளை பார்த்து ஆச்சரியம்தான். ஆனால் ஆச்சரியமும் இல்லை. சங்ககாலம் முதல் நாம் பெண்ணை முகிழ்முலை, பணைமுலை, வறுமுலை என சொல்லித்தான் அடையாளம் செய்திருக்கிறோம். பெண்ணின் அடையாளம் அது. ஆனால் இனி அது பெண்மையின் அடையாளம் மட்டுமே, காமத்தின் அடையாளம் அல்ல என்னும்போது அது பெரிய சிக்கலைத்தான் உருவாக்குகிறது. பிரச்சினை தத்துவார்த்தமாக ஆகிவிடுகிறது
ராஜ்குமார் அருண்
வணக்கம் ஜெ
‘ஆமென்பது’ வாசித்தபின்’குமிழிகள்’ குறித்து மீண்டும் எழுதத் தோன்றியது. இரண்டிலும் ஆணவத்தின் வெளிப்பாடான தனிமனிதவாதத்தின் இருவேறு வெளிப்பாடு. இங்கே நிலவும் தனிச்சுயம், ‘நான்’களின் தன்மை என்ன ? அது எவ்வாறு முற்போக்காகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது ? ஆணவத்தின் திரட்சியாகவே இந்தச் சுயம் உருவாகிறது. எல்லாவித போக்குகளும் ஒரு பின்னணியை, காரணத்தைக் கொண்டிருக்கும். ‘தனி மனிதன்’ நிராகரிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுள்ள நிலைமையை அது அடைந்திருக்கிறது. உறவுகள், குடும்ப அமைப்புகளில் நிலவிய அதிகாரப் போக்கும், வன்முறையும், இத்தகைய அதீத தனிமனிதவாதத்திற்கு பெரும் காரணங்களாய் விளங்குகின்றன. ஆனால் இது இன்று ஒரு முட்டுச்சந்தை அடைந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இன்று மனிதனின் தனித்தன்மைக்கும் சமூகத்தன்மைக்கும் சமநிலை ஒன்றை அடைய வேண்டிய இடத்தில இருக்கிறோம். தனிமனிதவாதம் பேசத்தொடங்கிய காலத்திலும் இது பரவசமாக அணுகப்பட்டிருக்கும். ஜெயகாந்தனின் ‘அந்தரங்கம் புனிதமானது’ அத்தகைய காலகட்டத்தில் எழுதப்பெற்ற கதை. சரியாக இந்த மடைமாற்றத்தை விளக்கும் கதை. ‘ஏய் மந்தைக் கூட்டமே, அந்தரங்கம் என்ற ஒன்று இருக்கிறது தெரியுமா உனக்கு’ என்ற தொனியில் எழுதப்பெற்ற கதை. ஆனாலும் இன்றைய வாசிப்பில் அதன் ஒரு கோணம் லிலியின், ஜயானனின் போலித்தனத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. உறவுகளில் உள்ள அத்தனை போதாமைகளையும் சாதகமாக்கிக் கொண்ட போலித்தனம் அது.
லிலி தன் வாழ்க்கைச் சூழல், தொழில் சூழல், தனது மேட்டுக்குடித்தனம், ஆகியவை சார்ந்து தன்னை எப்படி முன்னிறுத்துவது, வெளிப்படுத்துவது என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறாள். அதாவது பிறரிடம் தன்னை எப்படி வெளிப்படுத்துவது என்பது மட்டுமே. ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அது தனது தன்னம்பிக்கை, தன்முனைப்பு என்று சொல்கிறாள். அதாவது ‘பிறரை’ நோக்கிச் செல்லும் தனது ஆசைகளையும், விழைவுகளையும் வலுக்கட்டாயமாகத் ‘தன்னை’ நோக்கித் திரும்புகிறாள். இந்த இடமே அவளைப் போலி என்று வைக்கிறது. மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது, ஒப்பனை செய்துகொள்வது எல்லாமே அவர்களின் சமூகத் தன்மையின் வெளிப்பாடுதான். அதில் தனிச் சுயத்திற்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அழகுபடுத்துவது என்பது ஒருவகையில் காமத்தின் வெளிப்பாடே. உடல்களின் சேர்க்கையற்ற அருவமான காமம். அது யாரை நோக்கியது ? அது தனிமனிதர்களை நோக்கியதாகவோ, எதிர் பாலினத்தை நோக்கியதாகவோ இருக்க வேண்டியதில்லை. அது அமைப்பை நோக்கியதாக இருக்கலாம். அப்படி வெளிப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நிறைவு என்பது அவர்களின் செயலூக்க விசையாகவும் இருக்கும். பிறரை ஈர்ப்பது என்பது நேரடியான காமத்தின் சமிக்ஞையாக இல்லாமலிருக்கலாம். ஆனாலும் அது ரகசியமான கிளர்ச்சியைத் தருகிறது. பெண்கள் விஷயத்தில் அது ஆண்களை நோக்கியதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. பெண்களை நோக்கியதாகவும் இருக்கும். பெண்களுக்கிடையேயான மெல்லுணர்ச்சி அதன் காரணமாகும்.
சினிமா நடிகர், நடிகைகள் விஷயத்தில் இதை கவனிக்கலாம். இன்றைய முதலாளித்துவச் சூழலில் இவர்கள் தங்களை இருப்பதிலேயே சிறப்பாகக் காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை விட்டு அவர்கள் வெளியே வரமுடியாது. பிறரிடம் ஏக்கத்தைத் தோற்றுவித்தல் என்பது அந்த நிறைவின் முக்கிய அம்சம். அதுவும் எதிரியிடம்/ எதிர்த்தரப்பிடம். தன்னை ஒரு ஆளுமையாகக் காட்டிக் கொள்வதும் சரி, அழகாகக் காட்டிக் கொள்வதும் சரி அது பிறரை உத்தேசித்துதான். ஆனால் நாம் ஏன் அதை அப்படி எண்ணுவதில்லை (அ) ஒப்புக்கொள்வதில்லை ?
இன்று பொதுவாக நம்மிடம் சமூகத்தன்மை மீது ஒருவித கசப்பு உள்ளது. மேலும் இன்று வென்றவர்களாகக் கருதப்படும் தரப்பினரின் விஷயங்களை வரித்துக் கொள்ளும் போக்கு உள்ளது. அதையே நாம் உயர்வானதும் முற்போக்கானதும் என முடிவுசெய்துவிடுகிறோம். இன்று வென்ற தரப்பாகத் தோற்றமளிக்கும் மேற்கின் விழுமியங்களான தன்னை முன்னிறுத்துவது, அதீத சுயம் போன்றவைகளை நாம் கண்மண் தெரியாமல் குழப்பியடிக்கிறோம். இன்று இணைய வெளியில் இளைஞர்களின் ஸ்டேடஸ்களை பார்க்கும்போது இது தெரியும். ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கு யாரும் அடிமையில்லை’, ‘என் உடல் என் உரிமை’, ‘I Love Myself’, ‘நான் யார் என்பதை பிறர் முடிவு செய்ய முடியாது’, ‘ நான் என்னை செதுக்குகிறேன்’, ‘எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது’ போன்ற ‘உரிமை’ வசனங்கள் மலிந்து கிடக்கின்றன. தன்னளவில் இவ்வசனங்கள் சரிதான் என்றாலும் இவைகளை எதோ ‘தன்னை நோக்குதல்’, ‘தன்னை உணர்தல்’ என்ற ஆன்மீக விஷயமாகக் கொள்ளமுடியாது. இது சமூகத்தின் மீது, உறவுகளின் மீது ஏற்பட்ட கசப்பின் வெளிப்பாடே.
அதனால் நாம் நமது வெளிப்படுத்தல்களை, அழகுபடுத்தல்களை பிறருக்காக என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். குறிப்பாக பெண்கள் தங்கள் செயல்களை ‘ஆண்களுக்காக’ என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆண்களை எதிர்நோக்குவது, அவர்களைக் கவர முற்படுவது, அவர்களை விரும்புவதைக் கூட வெளிப்படுத்தக் கூடாது என்பது காலம்காலமாக பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று. ஆண்களை விரும்புவது மட்டுமல்ல, அவர்களை வெறுப்பதிலும் உதாசீனப்படுத்துவதிலும் இதை செய்ய முடியும். லிலிக்கு ஆண்கள் பொருட்டல்ல. Just Hanging balls. அதனாலேயே அவர்கள் முன் தன்னை வெளிப்படுத்த விரும்புகிறாள். அதாவது, ‘நீ என் அழகையும் ஆளுமையையும் கண்டு புழுங்கிச் சாக வேண்டும்; நான் உன்னை அந்த அளவுக்கு தொந்தரவு செய்பவளாக இருக்க வேண்டும். ஆனால் நீ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. Just Hanging balls…. த் தூ… அவ்வளவுதான்.
கே.வி.ஜயானனின் தேவை என்ன ? அவர் தேடியது ஒரு தந்தையை. தடவிக்கொடுக்கும் தந்தையை அல்ல; தட்டிக் கேட்கும் தந்தையை. தன்மீது பிறர் உரிமை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது அடிப்படையான விழைவு. தந்தையைத் தேடும் குழந்தை. தன்னை பிறரிடம் ஒப்புக்கொடுப்பது; சரணாகதி. அதுவே அவருக்கான தேவை. சுயம் என்பதும் தனிமை என்பதும் கடந்து அடைய வேண்டிய விஷயமாகவும், சாதனா மூலம் கைகொள்ள வேண்டிய விஷயமாகவும் இருக்க வேண்டும். சாதனா இல்லாத தனிமை இறுதியில் வெறுமையைக் கொடுக்கும். அது வெறுமனே தர்க்க அறிவு கொடுக்கும் ஆணவ நிறைவு மட்டுமே. உறவுகளை அர்த்தப்படுத்துவதே உரிமை எடுத்துக் கொள்வதில்தான் உள்ளது. அடிப்படையில் உறவுகள் என்பது ஒப்பந்தம் போன்றதே என்றாலும், அது ஜயானன் தயாரித்த ஒப்பந்தம் போன்றதல்ல. நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது, கேள்வி கேட்காமல் இருப்பது ஒருவித சுதந்திரம் என்றாலும், நெருக்கமான அணுக்கமான உறவுகள் சில நம்மைக் கட்டுப்படுத்த, கேள்வி கேட்க இருக்கின்றன என்கிற நிறைவு நமது அடிப்படையான விழைவு. அவைகளைக் கடந்து செல்லலாமே வொழிய கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால் அவை இல்லாமல் ஆகிவிடாது. ஜயானன் அடைந்த வெறுமையையே அடைய வேண்டியதிருக்கும். இன்று செண்டிமெண்ட், உறவுகள், குடும்பம் போன்ற வார்த்தைகள் கெட்டவார்த்தைகள் ஆகிவிட்டன.
லிலியின் போலித்தனம் முதலாளித்துவம்; ஜயானனின் போலித்தனம் கம்யூனிசம். லிலியின் ஆணவம் மேட்டுக்குடி- சந்தை- முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டது. ஜயானனின் ஆணவம் புரட்சிகர பொதுவுடைமையால் உருவாக்கப்பட்டது. இவ்விரு கதைகளும் அழகான கோர்வையாக விளங்குகின்றன.
*
குமிழிகள் கடிதங்களில் ஒரு வாசகர் மட்டுமே காந்தியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவ்விஷயத்தில் நமக்கான தேவை காந்தியே. இத்தகைய போலித்தனங்களை எதிர்கொள்ள திராணியுள்ள ஒரு தரப்பு என்றால் அது காந்தியம்தான். முதலாளித்துவம் உருவாக்கும் சந்தை சர்வாதிகாரம், நுகர்வு வெறி, அர்த்தமற்ற சுய விழைவு, புரட்சிகர முற்போக்கு உருவாக்கும் உரிமை விழைவு, அதற்கான பாதை யாவும் நம் ஆன்மாவை அரித்துக்கொண்டிருக்கின்றன. காந்தி நமக்காக அங்கேதான் இருக்கிறார். அவருக்கான தேவை இனிமேல்தான் இருக்கிறது.
*
விவேக் ராஜ்
https://www.jeyamohan.in/142864/
https://www.jeyamohan.in/144362/
படையல், தீற்றல் கடிதங்கள்
அன்புள்ள ஜெ
படையல் தீற்றல் இரு கதைகளைப் பற்றிய கடிதங்களை ஒரே சமயம் வாசிப்பது ஓரு விசித்திரமான அனுபவமாக இருக்கிறது. இரண்டும் சம்பந்தமே இல்லாத கதைகள். படையல் ஸ்பிரிச்சுவலான கதை. தீற்றல் முழுக்கமுழுக்க லௌகீகம். மிகச்சிறிய விஷயம். ஆனால் இரண்டுமே வாசிக்கும்போது அந்தந்த தளங்களில் நிறைவளிக்கும் கதைகள்
இந்தக்கடிதங்கள் ஒரு வகையில் அந்தக்கதைகளை மீட்டிக்கொள்ள உதவுகின்றன. நாம் கதையிலே இதையெல்லாம் கவனித்தோமா, நாம் வாசித்தோமா என்றெல்லாம் நாமே பார்த்துக்கொள்கிறோம். கதைமழை கொட்டிக்கொண்டே இருக்கிறது. திணறத்திணற கதை
சந்திரகுமார்
அன்புள்ள ஜெ
சிறுகதைகளின் எல்லா வடிவங்களையும் வாசித்துக்கொண்டிருக்கிறோம். தீற்றல் ஒரு சின்னக் கவிதை. அந்தக் கவிதையைச் சுற்றி ஓர் உரையாடல். அந்த உரையாடலே அந்தக் கவிதையைச் சுற்றியிருக்கும் இடத்தை வண்ணம் பூசி கவிதையின் உருவத்தை தெளிவாகக் காட்டுவதற்காக மட்டும்தான்.
கவிதை அப்படி ஒரு தீற்றலாக, விரைவான ஒரு மின்னலாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு
ராஜ்
அன்புள்ள ஜெ. அவர்களுக்கு ,
தீற்றல் கதையை இரண்டு முறை வாசித்தேன். அதற்கு காரணம் அந்த உவமை தான் .கண்கள் சந்திக்கும் தருணம் என்பது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் குளத்தில், திடீரென ஒரு மீன் துள்ளிமறைவதைப் போல.
உச்சமான தருணங்களை சொல்லில் சொல்லி விட முடியாது என ஓஷோ சொல்கிறார். ஆனால், சொல்லித் தோற்கலாம். ‘அப்படி சொல்கையில், சிறப்பான தோல்வியென்பது மகத்தான வெற்றியே’, என்று ஒரு உரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்.
யோசித்து பார்க்கையில் ,சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை காதல் வாழ்வை ,காதலின் தருணங்களை எத்தனை பேர் பாடியிருக்கிறார்கள், எவ்வளவு முறை பேசியிருப்பார்கள்.ஆனால், இன்றும் புதிதென நிகழும் ஒன்றாகவே அது இருக்கிறது, அந்த மீனின் துள்ளலை போல.
கதையின் இறுதியில், குளம் இல்லை. மீன் இல்லை. வால் மட்டுமே, தீற்றல் மட்டுமே எஞ்சுகிறது.வாழ்வின் இறுதியில் எஞ்சுவது, அந்த வாலின் துள்ளலை நினைவில் மீட்டிக்கொள்வது மட்டும்தானா?
தோன்றி மறுகணம் மறையும் அந்த மீனை, பற்றும் முயற்சியை தான் ‘மீன் எறிதூண்டிலின் நிவக்கும்’ என சங்கப்புலவர் பாடினாரா?
அன்புடன் ,
முத்துராஜா
மதுரை
வணக்கம்,
தங்களின் படையல் கதை வாசித்தேன். சிறப்பான கதை. எறும்பு பாவா போன்று எங்கள் ஊரிலும் ஒரு பாவா இருந்தார். அவரை நாங்கள் கொட்டான் பாவா என்று அழைப்போம். சூஃபி ஷாஹ் இனாயத்தினுடைய வரலாறு அண்மையில் வாசித்தேன். அந்தத் தருணத்தில் இக்கதையை வாசிக்கையில் புரிதலும் விளக்கமும் மேலும் வலுவாகிறது. நவாப் கான் போன்ற ஆட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் சூஃபி ஷாஹ் இனாயத்தின் வாழ்க்கையிலும் உங்கள் கதையிலும் பொருந்தி வருகிறது. பத்து இலட்சம் காலடிகள், அன்னம் வரிசையில் வரும் கதையே இதுவும். அருமை.
நன்றி.
ஜிஃப்ரி ஹாசன்
இரு நோயாளிகள், விருந்து – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இரு நோயாளிகள் கதையின் கட்டமைப்பில் இருக்கும் ஈஸியான ஒழுக்கைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். சும்மா ஒரு சம்பவத்தைச் சொல்கிறீர்கள் என்ற பாவனை. யாரோ ஒருவன் யாரோ ஒருவரைப்பற்றிச் சொல்கிறான். ஊடாக தமிழகத்திலும் கேரளத்திலும் வாழ்ந்த இரு பண்பாட்டு நாயகர்களின் கதைகள் வந்து செல்கின்றன
சொல்பவருக்கு இருவரையுமே தெரியாது. இருவருமே ஒரு பொருட்டு அல்ல. அவர் மாறவே இல்லை. அவர் வெறும் சாட்சிதான். கதையில் அந்தச் சாப்பாட்டு வர்ணனை ஏன் என்று நினைத்தேன். அது இந்த மக்கள் வாழும் அன்றாடத்தையும் அவர்கள் திளைக்கும் அந்த ருசியையும் சொல்லும் பகுதி. நீ கவிதை எழுது, கதை எழுது, செத்துப்போ, நான் புழுங்கலரசிச் சோறும் ரசவடையும் தின்றுகொண்டிருப்பேன் என்பதுதானே சாமானியர்களின் அறைகூவல்?
ஜெயக்குமார்
அன்புள்ள ஜெ
கடந்த இரண்டு மாதங்களில் என்னுடைய ஒருநாளின் பெரும்பாலான நேரங்களை உங்களின் இணையதளத்தில்தான் செலவிடுகிறேன். கடந்த வருட நூறு கதைகளைத் தவறவிட்டதுபோல இந்தாண்டு செய்துவிட மாட்டேன். கொதி முதலாக இருநோயாளிகள் வரை படித்துச் சிலிர்த்தேன். மீண்டும் ஒருமுறை வாசித்து என்னளவில் தோன்றுவதை உங்களுக்கு எழுத விழைகிறேன். அது என் எழுத்தையும் சிந்தனையையும் கூர் தீட்ட நல்லதொரு பயிற்சியாகலாம்.
இன்று இப்பொழுது இருநோயாளிகளிலிருந்து தொடங்குகிறேன். இரவு கண்விழித்த 1.40 முதல் உங்கள் தளத்தில் வந்துள்ள கடிதங்கள் மற்றும் உங்களின்கடந்தகாலக் கட்டுரைகளை செல்பேசியில் படித்துக்கொண்டிருந்தேன், அல்லதுதிரைவாசிப்பான் வழியே கேட்டுக்கொண்டிருந்தேன்.உங்கள் அன்றாடக் கதைகளை மட்டும் ஆழ்ந்து வாசிக்க முடிவு செய்துள்ளதால்,அதிகாலை 4 மணிவரை காத்திருந்து, படுக்கை அறைவிட்டு மெல்ல நீங்கிச் சென்றுஎனது மடிக்கணினியில் ஈஸ்பீக் திரைவாசிப்பான் வழியே ஒவ்வொரு வரியாகமெல்லப் படிக்கத் தொடங்கினேன்.
நோய் முதலை வெவ்வேறு அகக்கண்கள் கொண்டு பார்க்கும் துருவ எழுத்தாளர்கள்.ஒருவர் சொன்னாலும்கூட இருவருமே சமூகத்தை இறுகப் பிடித்துத் தன் வாக்கில்பற்றி முத்தமிட்டவர்கள்தானே! ஏன் ஒருவரிடம் மட்டும் விரக்தி மேலிடுகிறது?மெத்தையை அடித்தபடியும் கால்ளை உதைத்தபடியும் சிரிக்கும் அவர் உண்மையில் அடைவது ஒருவிதத் தாழ்வுணர்ச்சி என்றே தோன்றுகிறது. இவ்வளவு எழுதியும் நம்மால் ஒரு பாட்டுக்காரன் மனதைப் பெற இயலவில்லையே என்கிற தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடாகவோ, அல்லது அந்தப் பாட்டுக்காரனிடமிருந்து தான் கனப்பொழுதில் பெற்றுக்கொண்ட கீற்றினால் விளைந்த மகிழ்வோ எதுவானாலும், அந்த இருவரின் நோய்மை என்பது, “தெரியலையே” என்று தொடர்ந்து சொல்லியபடியே, கலையின் தரிசனமின்றி, தனவந்தர்களாய் தலைமுறைக்கும் சேர்த்துவிட்டுச் செத்துப்போகும் M.A. கிருஷ்ணன் நாயர்களாகிய பொதுஜனம்தானே. அதிலும் பெரும்பாலோர் மிக அற்புதமான இசையை வெளிப்படுத்தும் உயிரற்ற வானொலிப்பெட்டிகள் கூட இல்லையே.
பிரெயில் வழி பாடப்புத்தகங்கள் அன்றி பிற எழுத்துகளை அதிலும் சமகால எழுத்துகளை கணினி கைக்கெட்டிய பின்னரும் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தங்கள் கதைகளால் தணியத்தொடங்கியிருக்கிறது. மனமார்ந்த நன்றிகளுடன்
ப. சரவணமணிகண்டன்.
விருந்து [சிறுகதை]அன்புள்ள ஜெ,
விருந்து சிறுகதையையும் அதற்கான வாசகர் கடிதங்ளையும் வாசித்து வருகிறேன். சாமிநாத ஆசாரி ஆட்டுக்கிடாவிற்கு தனது பெயரிட்டு பலியிட்டான் என்பதை தாண்டி மேலதிகமான ஒரு வாசிப்பு சாத்தியமாகிறது என்றே எனக்கு தோன்றுகிறது.
சாமிநாத பிள்ளை கந்தர்வனாக இசை, சித்திரம், கதை என்ற கலைகளின் வழியாக, இவ்வுலகை மற்றும் இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் ஒருவனாகவே இருக்கின்றான் என்றே என் வாசிப்பனுபவம் சொல்கிறது. இதனை அவன் வாழ கடைசி முயற்சியாக செய்து கொள்ளும் கருணை மனுவினை கொண்டு உய்த்துணரலாம். தனது மரணம் நிச்சயம் என்றும் உணர்ந்தவனாக இருக்கின்றான். மரண தேதி குறிக்க பட்டதும் எப்போதும் போல கந்தர்வ வாழ்க்கையினை மேற்கொண்டாலும் ஆழ் மனதில் ஒரு அதிர்வை உணர்ந்திருக்கலாம். கடைசி ஆசையாக அவன் ஆட்டுக்கிடாவை தன்னை பலியிட்டு விருந்தாக்கிய வாசிப்பை இன்னோரு கோணத்தில் கரைநாயரை கொன்று விருந்திட்டதாக வாசித்தால் கதை அடையும் இடம் வேறாக இருக்கின்றது. தன் மரணத்திற்கான காரணத்தை உறுதிபட பற்றி கொண்டு மனதின் சஞ்சலத்தை போக்கிக்கொள்ளவும் அந்த ஆட்டுகிடாவை தன் கண் முன்னால் அறுத்து அது துடித்து இறக்கும் வரை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்திருக்கலாம். இறந்த பின்னும் கிடாவின் கவலை தோய்ந்த சிப்பி கண்களை கரைநாயரின் கண்களாகவே கண்டிருக்கலாம். அதன் பின் சோகமும் அழுகையும் நிறைந்த மரண ஆலாபனையில் கடைசி இரவை கழிக்கின்றான் என்ற வாசிப்பும் சாத்தியமாகிறது.
நன்றி ஜெ
சரத் கே
அன்புள்ள ஜெ
விருந்து கதையை வாசகர் கடிதங்கள் வழியாக விரித்துக்கொண்டே இருக்கிறேன். ஒருவன் சாகப்போகிறான். அவன் ஓர் ஆட்டைப் பலியாகத் தருகிறான்.அதற்கு அவன் தன்பெயரை போட்டான் என்பது ஒரு வாசிப்பு. ஏன் அப்படி இருக்கவேண்டும்? அவன் போட்டபெயர் சாவு என்பதாக இருக்கலாமே? எதைவேண்டுமென்றாலும் போட்டிருக்கலாமே? அந்த மர்மம் சாகிறவனிடமல்லவா இருக்கிறது?
அவன் அந்த ஆட்டை கொஞ்சி ஊட்டிவளர்க்கிறான். நான் அவன் தன் மனதுக்குள் நிறைந்திருந்த வஞ்சத்தைத்தான் அப்படி பலி கொடுத்துவிட்டு தூயவனாக தூக்குமேடை ஏறுகிறான் என நினைக்கிறேன்
செல்வநாயகம்
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை
நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை 28-03-21 அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” – இன் முதல் ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
முதல் ஐந்து பகுதிகள்:
வேழாம்பல் தவம்கானல்வெள்ளிபுயலின் தொட்டில்பீலித்தாலம்முதல்மழைவெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் : 28-03-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9:30
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
March 20, 2021
சிற்றெறும்பு [ சிறுகதை]
[ 1 ]
கர்னல் ஆடம் ஹ்யூக்ஸ் துரை என்னைக் கூப்பிட்டனுப்பிய போது எதற்கு என்று சொல்லவில்லை. ஆனால் அந்தரங்கமான சந்திப்பு என்பது அவர் தன் தோட்டத்திற்கு என்னை வரச்சொல்லியதிலிருந்து தெரிந்தது. அங்கேதான் நான் பெரும்பாலும் அவரைச் சந்திப்பது. அது மதராசப்பட்டினத்திலிருந்து நெடுந்தொலைவில், தாம்பரம் காட்டோரமாக இருந்தது. குதிரைவண்டியில் கப்பிக்கல் சாலையில் நான்கு மணிநேரம் நிற்காமல் போகவேண்டும்.
துரை மாதமொருமுறை வெள்ளிக்கிழமை சாயங்காலங்களில் அங்கே சென்றால் திங்கள்கிழமை காலைவரை இருப்பார். அவருடன் அவருக்கு நெருக்கமான வேலைக்காரன் சிலுவைநாதனும் மெய்க்காப்பாளனான பட்டாணிக்காரன் ரியாஸ் அகமது கானும் இருப்பார்கள். பண்ணைவீட்டில் எப்போதும் காவலுண்டு. இரண்டு ராஜபாளையம் வேட்டைநாய்களுடன் திம்மையா நாயக்கரும் அவர் தம்பி தொட்டண்ண நாயக்கரும் இருப்பார்கள். அவர்களின் வீடுகளும் அதற்குள்தான்.
நன்றாக வேலிகட்டி வளைக்கப்பட்ட தோட்டத்திற்குள் மாமரங்களும் பலாமரங்களும் செறிந்திருக்கும். வாசல்கதவு இரும்பு அழிபோட்டது. அங்கே சிறிய காவல்மாடத்தில் இரு நாயக்கர்களில் ஒருவர் எப்போதுமிருப்பார். அங்கிருந்து செல்லும் மண்சாலை உள்ளே சற்று இறங்கி துரையின் மாளிகையின் ஓட்டுக்கூரையை காட்டும். துரையின் மாளிகையை உள்ளே சென்றாலொழிய பார்க்கமுடியாது. சுற்றிலும் பெரிய வராந்தாவும் இரண்டு சாரட் முற்றங்களும் கொண்ட மாளிகை.
துரை அங்கே வரும்போது ஏற்கனவே பெண்களை அங்கே கொண்டுசேர்த்திருப்பார்கள். குடிவகைகளும் இருக்கும். அதையெல்லாம் சிலுவையே ஏற்பாடு செய்வான். நாயக்கர்கள் அதை அவர்கள் அறியவே இல்லை என்ற பாவனையில் இருப்பார்கள். துரை அங்கே வந்தால் பின்னிரவில் காட்டுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மான்களை வேட்டையாடிக் கொண்டுவருவார். அவர் ஒரு தூக்கம்போட்டு எழும்போது அது சமைக்கப்பட்டு காத்திருக்கும். குடித்தும் சாப்பிட்டும் பெண்களுடன் விளையாடிக்கொண்டிருப்பார். மீண்டும் ஒரு தூக்கம். விழித்ததும் வேட்டை.
துரையிடம் இருபதுக்கும் மேற்பட்ட உயர்தரத் துப்பாக்கிகள் இருந்தன. அவருக்கு அமெரிக்க துப்பாக்கிகள் மீதுதான் மோகம். எல்லா முக்கியமான கம்பெனி துப்பாக்கிகளிலும் ஒன்று வைத்திருந்தார். திம்மையாவுக்கு துப்பாக்கிகளில் பிரியம் உண்டு. அவர் அவற்றை துடைத்து எண்ணையிட்டு பளபளவென்று வைத்திருப்பார். துரை இல்லாதபோதும் வந்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் திம்மையா துப்பாக்கியை கொஞ்சி குலாவியபடித்தான் இருப்பார். மாளிகைக்கு தெற்கே சமையலறை. அதை ஒட்டிய வேலைக்காரர் அறையில் கொம்பன் இருப்பான். அவன்தான் பங்காவை இழுப்பது.
துரை என்னை அவருடைய அலுவலகத்தில் சந்திக்க விரும்புவதில்லை. அவர் தன் அலுவலகத் தனியறையில் எந்த கறுப்பனையும் சந்திப்பதில்லை. பெரிய குத்தகைக்காரர்கள், தனவந்தர்கள், துபாஷிகளை சந்திக்க ஒரு கூடம் இருந்தது. அதில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் துரை அமர்வார். அவர்கள் அப்பால் சிறிய இருக்கைகளில் அமரவேண்டும். நான் வெளியே நின்றுதான் பார்த்திருக்கிறேன். துரை என் நிலையில் இருக்கும் அதிகாரிகளை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. நாம் வணங்கி நிற்கும்போது அவர் கடந்துசெல்வார்.
ஆனால் இருபதாண்டுகளாக நான் துரையை அவருடைய இல்லத்தில், முகாம் அலுவலகத்தை ஒட்டிய சிறிய அறையில் சந்தித்து வருகிறேன். துரைக்காக பலவேலைகளைச் செய்துகொடுத்திருக்கிறேன். பெரும்பாலும் கொலைகள். அவ்வப்போது அதிகாரிகளையும் தனவந்தர்களையும் உளவறிதல். சில வெள்ளை அதிகாரிகளையே உளவறிந்திருக்கிறேன். பெண்விஷயமும் உண்டு. இந்தமாதிரி சில்லறைப் பெண்கள் அல்ல. அவர்கள் சிலுவை கை சொடுக்கினாலே வந்து நிற்பார்கள். பெரிய இடத்துப் பெண்கள். தனவந்தர்களின், துபாஷிகளின் மனைவிகள். அவ்வப்போது வெள்ளைக்கார மனைவிகளும்.
ஒருமுறை மட்டும் காப்டன் ஜேம்ஸ் ஆட்டர்லி என்பவருக்கு அபவாதம் வந்து வேலைபோகச் செய்தேன். அதற்காகச் சில சான்றுகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கினேன். வெள்ளைக்கார கலெக்டர்கள் கர்னல்கள், காப்டன்கள் கர்னல்களைப் பற்றி அவதூறுகளை ரகசியமாகப் பரப்புவதும்செய்வேன். துரை எதையும் என்னிடம் சொல்வார். நான் செய்யமுடியுமா என்று எண்ணவும் மாட்டார். நான் எதையும் செய்யமுடியாமல் ஆனதுமில்லை.
நான் எதைச் செய்யவும் தயங்கியவன் அல்ல. என் அப்பா காலத்தில் சிவகிரி ஜமீன்தார் எங்கள் நிலத்தையும் என் சகோதரிகளையும் பிடுங்கிக்கொண்டார். என் அப்பா நான்கு மகன்களுடன் சென்னப்பட்டிணம் வந்தார். சென்னப்பட்டினத்தில் அவர் குதிரைவண்டி ஓட்டினார். குதிரைக்கு இணையாகச் சவுக்கடி பட்டார். நான் குதிரைவேலைதான் செய்தேன். தற்செயலாக துரை கண்ணுக்குப் பட்டு ராணுவத்தில் சேர்ந்தேன்.
சாதாரண சிப்பாயாக இருந்து துரையின் கருணையால் ஜமேதார் ஆனேன். இன்றைக்கு சிவகிரி ஜமீன் என்ன விலை என்று கேட்குமளவுக்கு என்னிடம் பணமிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் தங்கம் வெள்ளி என்று பலவகையாக பதுக்கியிருக்கிறேன். தம்பிகள் பேரில் நிலங்கள் வாங்கியிருக்கிறேன். அவர்கள் சிறிய பண்ணையார்களாக இன்றைக்கு வாழ்கிறார்கள். இங்கே துரையின் முன் பழைய தரித்திரத்துடன், மேலும் பணிவுடன் தோற்றமளிக்கிறேன்.
இந்த மாளிகையில் துரை என்னிடம் ஒப்படைத்தவை எல்லாமே வெளியே சொல்லமுடியாத செயல்கள்தான். துரைத்தனத்தாருக்குத் தெரிந்தால் அப்போதே தூக்கில் ஏற்றிவிடக்கூடிய குற்றங்கள். ஆனால் நான் துரையை நம்பியிருந்தேன். எனக்குத்தெரியும், இங்கே கவர்னர் வரை அத்தனைபேரும் இந்தப்பாதை வழியாகத்தான் மேலே சென்றிருக்கிறார்கள். துரைக்கு நான் தேவைப்படும்வரை என்னை அவர் பார்த்துக்கொள்வார்.
[ 2 ]
திம்மையா நாயக்கர் என்னை பார்த்து மெல்ல தலையசைத்தார். அவர் அருகே தோல்பட்டையில் கோணன் என்ற பெயருள்ள ராஜபாளையம் நாய் துள்ளி துள்ளி குரைத்தது. நான் என் குதிரைவண்டியில் இருந்து இறங்கினேன். வண்டிக்காரன் பேய்க்காமன் அதைக் கொண்டுசென்று பெரிய மாமரத்தடியில் நிறுத்தினான். நான் நடந்தே மாளிகைநோக்கிச் சென்றேன்.
மாளிகை முகப்பில் துரையின் சாரட் நின்றது. அதன் கன்னங்கரிய பரப்பின் நிழலுருக்களாக அருகிருந்த மரங்கள் தெரிந்தன. அங்கே ஒரு குளிர்ந்த சுனை இருப்பதுபோல தோன்றச்செய்தது. கொம்பன் பங்காவை இழுத்துக்கொண்டு குந்தி அமர்ந்திருந்தான். அவனுடைய தலைப்பாகை முகத்தின்மேல் சரிந்திருந்தது.
நான் முகப்பில் நின்று “சலாம் துரையே”என்று குரல்கொடுத்தேன்.
கான் வெளியே எட்டிப்பார்த்து என்னைக் கண்டதும் தலையசைத்தான்.
‘சலாம் பாய். நல்லா இருக்கிறிகளா?”
கான் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று, சற்றுநேரம் கழிந்த பின்பு திரும்பிவந்து வரும்படி கைகாட்டினான். நான் செருப்பை கழற்றிவிட்டு உடலை குறுக்கியபடி உள்ளே சென்றேன்.
துரை தூங்கி எழுந்திருக்கவில்லை. சுடுமண்ணாலான சிவந்த சதுரவடிவத் தரையோடுகள் வேய்ந்த அகலமான கூடத்தில் மரத்தாலான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. எல்லாமே உள்ளூர்க்காரர்களுக்கு மிக உயரமானவை. துரைகள் கால்சராயுடன் அமர்வதற்குரியவை. அகலமான மேஜைமேல் பீங்கான் குவளையில் சிவந்த தாமரைப்பூக்கள் இருந்தன. ஒரு பெரிய மூங்கில்கூடையில் பழங்கள். பீங்கான் தாங்கி ஒன்றில் வெள்ளியாலான பலவகை கத்திகள் வரிசையாக செருகப்பட்டிருந்தன. கொட்டைகளை உடைப்பதற்கான கருவிகள், ஒயின்குப்பியை திறப்பதற்கான கருவிகள். நாலைந்து புத்தகங்கள். ஆங்கில நாளிதழ்கள் மடிக்கப்பட்டிருந்தன.
மேஜைக்கு அப்பால் பெரிய கண்ணாடி போட்டு மூடிய அல்மாரா முழுக்க ஒயின் குப்பிகளும் பிராந்தி விஸ்கி குப்பிகளும் நின்றிருந்தன. நீலவண்ணப் புட்டிகள், செந்நிறப்புட்டிகள், தெளிந்த கண்ணாடிப்புட்டிகள். எல்லாவற்றிலும் மது. இன்னொரு திறந்த அல்மாரா முழுக்க கண்ணாடிக்கோப்பைகள். நீளமான கண்ணாடி டம்ளர்கள். பீங்கானால் ஆன டீக்கோப்பைகள். சில கோப்பைகள் தங்கவண்ணத்தால் ரேக்குவேலை செய்யப்பட்டவை. மரத்தாலான தாங்கியில் அடுக்கடுக்காக அடுக்கிச் சரித்து நிறுத்தப்பட பீங்கான் தட்டுக்கள். அவை பெரிய மலர் ஒன்றின் இதழ்கள் போல. இளஞ்செந்நிறமானவை, இளநீலநிறமானவை.
நான் ஒருமுறைகூட பீங்கான் தட்டில் உணவு உண்டதில்லை, டீ குடித்ததில்லை. கண்ணாடிக்கோப்பைகளில்கூட எதையும் சாப்பிட்டதில்லை. முடியாது என்றில்லை. அவை துரைமார்களுக்குரியவை. அவற்றை நாம் பயன்படுத்த ஆரம்பித்தால் எங்கோ ஓர் இடத்தில் நாமும் துரைகளும் சமம் என்று அகத்தில் தோன்ற ஆரம்பித்துவிடும். அதை எத்தனை மறைத்தாலும் எங்கோ நம்மிடமிருந்து கசிந்துவிடும். பொதுவாக அவற்றை மறைக்கவே முடியாது. அது நம்மை கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும்.
நான் அறிந்த ஒன்று உண்டு, இந்த துரைமார்கள் நம்மை பார்க்கவே இல்லை என்று பாவனை செய்வார்கள். ஆனால் நம்மை உற்றுநோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மீது தீராத அச்சமும் ஐயமும் இருக்கிறது. நாம் அவர்களை முற்றாக அடிபணிகிறோமா என்று கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் எங்கோ எல்லையைக் கடப்போம் என நினைக்கிறார்கள். அங்கே கொம்பன் பங்காவை இழுத்துக்கொண்டிருக்கிறான். அவன் கை கொஞ்சம் தளர்ந்தால் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் துரைக்கு அது தெரியும்.
சுவர்களில் தொப்பிகள் மாட்டப்பட்டிருந்தன. பிரம்புத்தொப்பிகள், தோல்தொப்பிகள், கம்பிளித்தொப்பிகள், வெண்ணிறமான இனாமல் பூசப்பட்ட இரும்புத்தொப்பிகள். ஒவ்வொரு முறை அந்த அறைக்குள் நான் செல்லும்போதும் அங்கிருக்கும் பொருட்களைத்தான் என் விழிகள் தொட்டுத்தொட்டுச் செல்லும். சன்னல்கள் அனைத்துக்கும் மென்மையான வெண்ணிறத் திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. அவை அலைபாய்வது அங்கே யாரோ நின்றிருப்பதுபோன்ற பிரமையை எழுப்பின.
சிலுவை உள்ளிருந்து வந்து ”மதராசப் பட்டினத்திலே தொத்து நோய் இருக்கிறதனாலே துரையை பக்கத்திலே போய் பேசக்கூடாது. கையை தைலம்போட்டு நல்லா களுவிட்டு தள்ளி நிக்கணும். இங்க உள்ள எந்த பொருளையும் கூடுமானவரை தொடப்பிடாது” என்றான்.
“ஓ” என்று நான் சொன்னேன்.
அவன் ‘கையை அங்கே களுவுங்க” என்றான்.
நான் மறுபக்க வாசல் வழியாக வெளியே சென்று அங்கிருந்த அகன்ற வராந்தாவில் சுவர் ஓரமாக பதிக்கப்பட்டிருந்த எனாமல் தொட்டியில் கை கழுவினேன். கையை கழுவுவதற்கான காரசோப்பு வைக்கப்பட்டிருந்தது.
அப்போதுதான் சற்று தள்ளி தூணருகே குந்தியபடி ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவள் முந்தானையை இழுத்து முகத்தின்மேல் போட்டிருந்தாள். ஆனாலும் அவளை என்னால் அடையாளம் காணமுடிந்தது. நாவிதன் நாகசண்முகத்தின் புதிய மனைவி. அவன் அவளை ஊரிலிருந்து கட்டிக்கொண்டுவந்து ஒருவாரம்கூட ஆகவில்லை. மடத்தனமாக துரைத்தனத்தாரின் ஆசி வாங்க கூட்டிக்கொண்டுவந்திருந்தான். துரை அவனுக்கு பத்துரூபாய் சன்மானம் அளிக்க ஆணையிட்டார். அவன் கொஞ்சம் சம்பள உயர்வை எதிர்பார்த்தான். அதற்காக மனு எழுதி கொடுத்தான்.
“அந்த மரத்தைலத்தை கையிலே போடணும்” என்று சிலுவை சொன்னான்.
நான் அவளைப் பார்த்ததை காட்டிக்கொள்ளாமல் யூகலிப்டஸ் எண்ணையை கையில் பூசிக்கொண்டேன். குமட்டும் நெடி எழுந்தது. ஆனால் அது நல்லது, நாம் தூய்மையாக இருப்பதாக நமக்கு ஒரு பிரமை எழும்.
மீண்டும் கூடத்துக்கு வந்து நின்றுகொண்டேன். சிலுவை உள்ளே போய் பார்த்துவிட்டு வந்து “எந்திரிச்சாச்சு”என்றான். நான் தலையை அசைத்தேன்.
சிலுவை ஒரு வாயகன்ற ஏனத்தில் சூடான நீரில் வெண்மையான டவலை போட்டு எடுத்துச்சென்றான். அதிலும் யூகலிப்டஸ் எண்ணை விட்டிருந்தான். கூடமே அதன் ஆவியால் நாற்றமடித்தது.
சிலுவை வெளியே வந்து பெரிய மரத்தாலத்தை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அதில் ஆவி உமிழ்ந்த கெட்டிலும் பீங்கான் கோப்பையும் இருந்தது.
சிலுவை ஏனத்துடன் திரும்பிச் சென்றான். அதைத்தொடர்ந்து தோல்செருப்பு ஓசையிட துரை கையில் டீக்கோப்பையுடன் வெளியே வந்தார். என்னை பார்த்துவிட்டிருந்தார், முன்னரே சிலுவை என் வருகையை சொல்லியும் இருப்பான். ஆனால் அவர் நான் அங்கிருப்பதை அறிந்ததே உடலில், கண்ணில் எங்கும் தென்படவில்லை. அது அவர்கள் அத்தனைபேருக்கும் இருக்கும் பயிற்சி.
துரை நாற்காலியில் அமர்ந்துகொண்டார். டீயை நிதானமாக உறிஞ்சிக் குடித்தார். கோப்பையை கீழே வைப்பது வரை அவருடைய உலகில் நான் இல்லை. பின்னர் எழுந்துகொண்டு ஒரு ஓலைத்தொப்பியை எடுத்து தலையில் வைத்தபடி வெளியே சென்றார். நான் ஓசையில்லாமல் தொடர்ந்து சென்றேன்.
துரை வெளியே தோட்டத்தில் நடந்தார். நான் கூடவே சென்றேன். சட்டென்று அவர் திரும்பி என்னிடம் “உனக்கு செவத்தானை தெரியுமா?” என்று கேட்டார்.
ஒரு கணம் கழித்துத்தான் நான் ஆளைப் புரிந்துகொண்டேன். துரைச்சானியின் வேலைக்காரன், சாரட் வண்டியில் கூடவே செல்பவன். “தெரியும்” என்றேன். அவனா என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேன். மிகச்சிறிய உயிர், கொசு போல.
“அவனிடம் பேசியிருக்கிறாயா?”
“ஆமாம், சிலமுறை”
“அவனைப்பற்றி ஒரு சின்ன குழப்பம்”
“அவனைப்பற்றி என்ன? துரை யோசித்துக் குழம்பும் அளவுக்கு அவனுக்கு என்ன மதிப்பு? அந்நேரத்தில் அவனை கொன்றுவிடலாம். கட்டைவிரலுக்கும் போதாத சிற்றெறும்பு…”
துரைக்கு என் ஆங்கிலம் கொஞ்சம் கழித்துத்தான் புரியும். ஆகவே நான் ஒற்றை ஒற்றைச் சொல்லாகவே பேசுவேன்.
“உன்னைவிட அவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். ஆகவேதான் தெரேஸாவுக்கு அவனை மிகவும் பிடித்திருக்கிறது”
“ஆமாம், அவன் பேசுவது நன்றாக இருக்கும்” என்றேன். அவன் முழுநேரமும் மாளிகையில் இருக்கிறான். துரைச்சானியும் அவளுடைய அந்தரங்கத்தோழியான மரியாவும் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரியா ஆங்கில இந்தியப்பெண். பரங்கிமலைக்காரி. ஆனால் அவள் மாளிகையிலேயே நிரந்தரமாக இருந்தாள்.
“அவனைப்பற்றி ஒரு குழப்பம்”என்றார் துரை.
நான் காத்திருந்தேன்.
“கொன்றுவிடுவது எளிது. ஆனால் எனக்கு ஒரு விடை தெரியவேண்டும். கொன்றால் அந்த விடை தெரியாமலேயே போய்விடும்.”
எனக்கு என்ன என்று புரிந்தது. ஆனால் நான் அதை அறிந்துகொண்டதை என் உடலேகூட காட்டவில்லை.
“மாளிகையில் அவனுடைய அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்துவிட்டது. அப்போது அவன் இல்லை. காவல்காரன் முஷ்டக் முகமது கான் அவன் அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பாம்பைத் தேடி கொன்றுவிட்டான். அவனுடைய பொருட்களை எல்லாம் கலைத்துபோட்டுவிட்டான். எல்லாவற்றையும் திருப்பி அடுக்கும்படி கட்டையனிடம் சொன்னான்”.
கட்டையன் மாளிகையின் எடுபிடிப்பையன். நான் என்ன என்று அதற்குள் ஊகித்துவிட்டேன்.
”கட்டையன் பொருட்களை அடுக்கும்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்குள் சில துணிகள் இருந்தன. பெண்களின் உள்ளாடைகள். அவன் அவற்றை எடுத்து கொண்டுவந்து அகமது கானிடம் காட்டினான். அகமது கான் அவற்றை திரும்ப அப்படியே கொண்டுசென்று வைக்கச் சொல்லிவிட்டான். எவரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று கட்டையனை எச்சரித்துவிட்டு என்னிடம் வந்து சொன்னான்.”
நான் ஊகித்ததேதான். என்னிடமிருந்து எந்த ஒலியும் எழவில்லை.
”வழக்கமாக ஒரேவகையாகத்தான் ஊகிக்கவேண்டும். அவன் அவற்றை எதற்கு எடுத்துச்சென்றான் என்று சொல்வது எளிய விஷயம்… எனக்கு தேவை அது அல்ல. அதாவது…”
செவத்தான் துரைச்சானிக்கு மிகமிக அணுக்கமானவன். அவனுக்கு முப்பது வயதுக்குமேல் இருக்கும். பெயர்தான் செவத்தான். ஆனால் நல்ல கறுப்புநிறம். பரந்த முகத்தில் பெரிய வெண்பற்கள். ஈரம் மின்னும் எருமைக்கண்கள். மீசையில்லாத மொழமொழவென்ற முகம். மெலிந்தவன், ஆனால் மிக உறுதியான உடல் கொண்டவன்.
செவத்தான் துரைச்சானி லண்டனில் இருந்து வந்தபோதே மாளிகையில் இருந்தான். அவள் வந்து சேர்ந்த அன்று கப்பலில் இருந்து அவளுடைய பொருட்களை எடுத்துவரப்போனவனே அவன்தான்.
அவனுடைய பேச்சை நான் கவனித்திருக்கிறேன். அவனுடைய தனித்திறமை அதுதான் என்று தெரிந்தது. அவன் மிகமிக மென்மையான குரலில், ஒருவருக்கென்று தனியாகச் சொல்வதுபோலத்தான் பேசுவான். அழகான ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடுத்து பூத்தொடுப்பவதுபோல கோத்துக் கோத்து சொற்றொடர்களை உருவாக்குவான். அவன் பேசினால் துரைச்சானி அவனையே கூர்ந்து பார்ப்பாள். அவன் அவளை அடிக்கடி சிரிக்கவைப்பான். தன் கைப்பையால் துரைச்சானி அவனை செல்லமாக அடிப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
“அவன் ஏன் அந்த ஆடைகளை எடுத்து வைத்தான்? அவனுக்கு அவளுடன் என்ன உறவு? அதை நான் தெரிந்துகொள்ளவேண்டும்” என்று துரை சொன்னார் “அதை உறுதியாக தெரிந்துகொண்டபின் அவனைக் கொன்றுவிடலாம். அந்த விடை எதுவானாலும் சரி, விடை தெரிந்தால்போதும்”
“நான் அவனிடம் பேசுகிறேன்” என்றேன்
“பேசு… நீ இதை மிக ரகசியமாகச் செய்யவேண்டும். நீ இப்படிச் செய்வது அவளுக்கு தெரியக்கூடாது. தெரிந்திருக்கும், அவள் ஆலிஸ்பரி குடும்பத்தைச் சேர்ந்தவள். ஜெனெரல் எர்வர்ட்ஸ் அவளுடைய சிற்றப்பா. என்னால் அவளுடைய கோபத்தை தாளமுடியாது”
“நான் பார்த்துக்கொள்கிறேன்”
“சரி” என்று சொல்லி துரை மேலே நடந்தார். நான் தொடர்ந்து செல்லக்கூடாது என்று அறிந்திருந்தேன்.
[ 3 ]
நான் செவத்தானை சந்திக்கவேண்டும் என்று சொல்லி ஆளனுப்பினேன். அவனை அருகிலிருந்த கறுப்பர் நகரத்தின் டிரினிடி தேவாலயத்திற்கு வரச்சொல்லியிருந்தேன். கறுப்பர்களில் ஒருசாரார் அவசரமாக கட்டிக்கொண்ட ஓலைக்கொட்டகை பின்னர் ஓடுபோட்ட கட்டிடமாக ஆகியிருந்தது. அதைச்சுற்றி ஒரு திறந்தவெளி இருந்தது. நாலைந்து சீமைவாகை மரங்கள் நின்றன. சதுப்பு நோக்கிச் செல்லும் ஓரு கலங்கலான ஓடை அருகே ஓடியது. அதிலிருந்து கெட்டநீரின் நாற்றம் காற்றடிக்கும்போதெல்லாம் வந்தது. ஓடைக்கரையில் நாலைந்து மரபெஞ்சுகள் உண்டு.
செவத்தானை நான் சந்திப்பதை கோட்டைக்குள் எவரும் பார்க்கவேண்டாம் என்று நினைத்தேன். வாரநாட்களில் தேவாலயத்திற்கு யாரும் வரமாட்டார்கள். சாயங்காலம் அங்கே நடமாட்டமே இருக்காது. அதேசமயம் எவர் வேண்டுமென்றாலும் வந்து நின்றிருக்க வாய்ப்புள்ள இடம் அது. கறுப்பர் நகரத்தில் எல்லா இடங்களிலும் எல்லாரும் நின்றிருக்க முடியாது. அந்தந்த சாதிகளுக்குரிய இடங்கள் இருந்தன.
செவத்தானிடம் நான் சாதாரணமான உடையில் வரச்சொல்லியிருந்தேன். கோட்டையில் வேலைசெய்பவர்கள் வெளியே செல்லும்போது காக்கி அரைக்கால் சட்டையும் காலர் இல்லாத வெள்ளை மேல்சட்டையும் தோல்சப்பாத்தும் அணிவது வழக்கம். ராணுவத்தில் இருப்பவர்கள் காக்கி கால்சட்டையும் பூட்ஸும் அணிந்து காலர் உள்ள காக்கி சட்டைபோட்டிருப்பார்கள். கழுத்துக் குட்டை கட்டி தொப்பியை கையில் வைத்திருக்கவேண்டும் என்பது விதி. அதிகாரிகள் எதிர்ப்பட்டால் வெறுந்தலையுடனோ மார்பு தெரியவோ எதிர்கொள்ளக்கூடாது.
தொலைவிலேயே நான் செவத்தானைப் பார்த்துவிட்டேன். என்னைக் கண்டதும் அவன் பதற்றம் அடைந்ததை, கண்கள் சுருங்கி முகம் தாழ்ந்ததை கண்டேன். துரைக்காக நான் என்ன செய்கிறேன் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
அருகே வரவர அவன் நடை தளர்ந்தது. மிக அருகே வந்தபோது நான்குபக்கமும் பார்ப்பதுபோல பார்வையை அலையவிட்டான். அருகே வந்து முணுமுணுப்பாக “கும்பிடறேனுங்க” என்றான்.
“ம்”என்றேன். “என்னப்பா செவத்தான். என்ன? எப்டி இருக்கே?”என்றேன்.
“எனக்கென்னங்க?” என்றான் மெல்லிய குரலில்.
“நல்ல தீனி, நல்ல சம்பளம். மினுமினுன்னு இருக்கே. அரண்மனை நாயி… என்ன?”
அவன் சோகையாகப் புன்னகைசெய்தான்.
“உக்காருடே” என்றேன்.
“அய்யா வேண்டாம்”
“டேய் உக்காரு. இது நம்ம ஜமீன் இல்ல. பிரிட்டிஷ் சர்க்காரோட ரூல் இருக்குற எடம்… இங்க நாமள்லாம் சமம். உக்காரு”
அவன் அமர்ந்தான்.
“மாளிகையிலே எல்லாம் எப்டி போய்ட்டிருக்கு?”
“நல்லா போகுதுங்க… நாம நம்ம சோலியை பாக்கிறது”
“அதான் நல்லது, அறியவேண்டியதுக்கு அப்பாலே அறிஞ்சா தலைக்கு அது சுமை பாத்துக்க”
“நமக்கு என்னங்க தெரியும்? நம்ம காதே அடைஞ்சுபோச்சு”
”கண்ணு?”
அவன் படபடப்படைவது தெரிந்தது. உடனே எனக்கு தெரிந்துவிட்டது, நான் அழைத்தது ஏன் என அவனுக்குத்தெரியும். நான் அவன் அருகே சென்று “நான் வளத்த விரும்பல்லை. நான் ஏன் கூப்பிட்டேன்னு உனக்கு தெரியும்”
“இல்லீங்கய்யா”
“அந்தப் கட்டையன் பய சொல்லிட்டான்… ஏன்னா அவனுக்கு நீ தீனி குடுக்குறே”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“சங்கதி துரைக்கு தெரிஞ்சிருச்சு, தெரியுமா?“
அவன் கண்களில் நீர் நிறைந்தது. தலை வெடவெடவென ஆட ஆரம்பித்தது.
“சொல்லுடே”
அவன் குரல்வளை ஏறி இறங்கியது.
“அந்த அடித்துணிகளை எதுக்கு எடுத்து கொண்டாந்து வைச்சே?”
“சும்மா”
“டேய்… நீ என்ன தையல் படிக்கிறியா? உண்மையைச் சொல்லு“
“பட்டுத்துணியாக்கும்… வெள்ளையா பாம்புச்சட்டை மாதிரி அளகாட்டு இருந்தது…அதனாலே”
“அதைவைச்சு என்ன பண்ணினே?”
அவனிடமிருந்து ஒரு விசும்பலோசை மட்டும் எழுந்தது.
“டேய், கேட்டதுக்கு பதில் சொல்லு. என்ன பண்ணினே?”
“என்னையக் கொல்லச் சொல்லியிருக்காங்க. அதாக்கும் உண்மை. கொல்லுங்க. நான் இனி என்ன சொல்லுறது?”
“கொல்லணுமானா எப்பவோ கொன்னிருப்போம்…”என்றேன். “நான் உண்மையை அறிஞ்சுகிடணும். அதை வைச்சு என்ன பண்ணினே?”
“நான் ஒண்ணுமே…”
“டேய்…”
அவன் மீண்டும் விசும்பி தலைகுனிந்தான்.
“அதைவைச்சு மத்தது பண்ணினே… மோந்துட்டு… அதானே? இல்லேன்னு சொல்லு”
“இல்ல”
“செரி வா. வந்து சர்ச்சு படிமேலே தொட்டு சத்தியம் பண்ணு”
“நான் வேதக்காரன் இல்ல”
“அப்ப உன் சாமி எது? மாரியம்மன் கோயிலுக்கு வர்ரியா?”
அவன் கும்பிட்டு “என்னைய கொன்னிருங்க…” என்றான்.
“கொல்லணுமா வளக்கணுமான்னு நாங்க சொல்லுறோம்….நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. துணிகளை வைச்சு என்ன செய்தே?”
அவன் “அதுதான்…”என்றான்.
“ஏன்?”
அவன் ஒன்றும் சொல்லவில்லை
“அது துரைசானியோட துணி… மரியாவோட துணி இல்லை”
“ஆமா”
“அப்ப உனக்கு துரைச்சானிதான் ஆளு, என்ன?”
“என்னைய கொன்னு போட்டிருங்க…நான் வேற ஒண்ணும் சொல்ல மாட்டேன்”
“இங்கபாரு, கொல்லுறது இப்ப பேச்சே இல்லை. கொல்லணுமானா அது ஒரு எறும்பக் கொல்லுறதைவிட சாதாரணம். சும்மா பசப்பாதே. கேட்டகேள்விக்குப் பதில் சொல்லு”
“சாவுறதானா அதுக்குமேலே என்ன? செய்யவேண்டியதைச் செஞ்சுடுங்க”
“மஞ்சக்குப்பத்திலே உனக்கொரு அம்மா இருக்குல்ல? தங்கச்சி ஒருத்தி, அவளுக்கு ரெண்டு சின்னப்பிள்ளைக…”
“அய்யா!”
“அதான், வேரோட பிடுங்குறது வெள்ளைக்காரன் வழக்கம்… பேசாம கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிடு…புரியுதா?”
”அய்யா! அய்யா!”
“அழுதா ஒண்ணும் ஆகாது…லெச்சம்பேரு கோடிபேரு அழுது அழுது செத்தாத்தான் ஒரு அரசன் கோலுநாட்டுறான்… புரியுதா? கேட்டகேள்விக்கு பதில் வரணும்.”
அவன் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். நான் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
அவன் விசும்பி மெல்ல அமைந்தான்.
“சரி, சொல்லு… அது ஏன் துரைச்சானி?”
“தெரியல்ல”
“அவங்க மேலே ஆசையா? அவங்க மணம் புடிச்சிருக்கு, இல்ல?”
“இல்ல, அப்டி இல்ல”
“டேய்”
“அய்யா சத்தியமா அப்டி இல்ல. ஏன் அப்டி செஞ்சேன்னு எனக்கே தெரியல்ல”
“சரி, இதை ஆரம்பிச்சு எவ்ளவு நாளாச்சு?”
“அய்யா, சாமி சத்தியமா, பெத்த ஆயா சத்தியமா, ஒருவாரம்தான்… நாலே நாலு வாட்டிதான்…”
”நாலுவாட்டி, இல்ல?”
“அய்யா என்னைய கொல்லுங்கய்யா, சுட்டுக்கொல்லுங்கய்யா”
“சரி, ஏன் துரைச்சானி? அவங்க உன்மேலே ஆசைய காட்டினாங்களா?”
“அய்யா பெரும்பாவம் அது… அப்டில்லாம் இல்ல”
“பின்ன?”
“அவங்க என்னைய நல்லாத்தான் நடத்தினாங்க. எல்லாத்தையும் சொல்லுவாங்கய்யா. என்னோட பாசையை திருத்தினதே அவங்கதான்… அவங்கள நான் சிரிக்கவைச்சுக்கிட்டே இருப்பேன். அதனாலே என்னைய அவங்களுக்குப் பிடிக்கும்”
“நெருக்கமா இருந்தீக?”
”அய்யா, நெருக்கம்னா என்னன்னு சொல்ல? அவங்களுக்கு சாப்பாடு கொண்டுபோறது நான். படுக்கை விரிக்குறது நான். சிலசமயம் அவங்களுக்க கௌனை அடுக்கி நீவி ஊசிபோட்டு மாட்டிவிட்டிருக்கேன். ஒரு பேதமும் இல்லீங்கய்யா…”
“அப்டித்தான் ஆரம்பிச்சுது, இல்ல?”
“இல்லீங்கய்யா… அப்டி எத்தனை வருசமாச்சு? ஒரு மாத்து நெனைப்பு இல்லைங்கய்யா. ஒரு துளிகூட உள்ளுக்குள்ள அளுக்கு இல்லீங்கய்யா, அப்டி நினைச்சே பாத்ததில்லைங்கய்யா”
“ஓகோ, அப்ப எப்ப நினைக்க ஆரம்பிச்சே?”
“போனவாரம்..”
“போனவாரம் என்ன நடந்திச்சு?” நான் என் கைத்துப்பாக்கியை எடுத்தேன். அதை திறந்து சுழற்றி குண்டுகளைப் பார்த்தபின் பொருத்திக் கொண்டேன். பெருமூச்சுடன் அவனைப் பார்த்தேன்.
”தப்பா ஒண்ணும் இல்லீங்க”
“இதோபார்” என்றேன் “இப்ப நான் உன்னைச் சுட்டுக்கொன்னா கேக்க ஆளில்லை. துரை குடுத்தனுப்பின நகை எங்கிட்டே இருக்கு. நீ திருடி இங்க ஒளிச்சுவைக்க வந்தே, அதை பிடிக்கவந்ததும் என்னைய கொல்லவந்தே, சுட்டுட்டேன். அவ்ளவுதான் கதை. புரியுதா?”
அவன் முகத்தில் ஒரு தசை மட்டும் விலுக் விலுக் என துடித்தது
”சாவுறேன், கொல்லுங்கன்னு சொல்லி அழுறது பெரிசில்ல. நெஜம்மா சாவுக்க முனைங்கிறது வேற. உன்னைமாதிரி அடுக்களைப்பிறவிகளுக்கு அது என்னன்னு தெரியாது… இப்ப தெரிஞ்சிருக்கும்”
“அய்யா”
”சொல்லு, என்ன நடந்தது?”
“துரைசானி எங்கிட்ட வேற மாதிரி நடந்துகிட்டாங்க”
“எப்டி?”
அவன் கைகளை இறுக முஷ்டி பிடித்தபடி நின்றான்.
“சொல்லு எப்ப? என்ன பண்ணினாங்க?”
“போனவாரம், கவர்னர் விருந்துக்கு போய்ட்டு வந்தப்ப”
“ம்”
“கவுனை கழட்டிட்டு இருந்தாங்க… மரியா உள்ள இருந்தா. லேஸை கழட்ட காலை தூக்கினாங்க. நான் குனிஞ்சு காலை பிடிச்சேன். காலைத்தான் புடிச்சேன். கெண்டைக்காலை. அப்டி ஆயிரம் தடவை புடிச்சிருக்கேன். ஷூ போட்டுவிடுவேன். லேஸை அவுப்பேன். அன்னிக்கு என்னமோ அப்டியே சீறிட்டாங்க. சட்டுன்னு பக்கத்திலே இருந்த பீங்கான் தட்டை எடுத்து என் தலையிலே அடிச்சாங்க. திட்டினாங்க”
“என்னன்னு?”
“கறுப்புப் பிசாசு, அசிங்கமான மிருகம், நாத்தம்புடிச்ச புழு அப்டி… அதெல்லாம் வழக்கமா எல்லா துரச்சானிகளும் சொல்றதுதான். என் மூஞ்சியிலே துப்பினாங்க. காலாலே எட்டி உதைச்சு போ போன்னு கத்தினாங்க”
“நீ என்ன பண்ணினே?”
“மன்னிச்சுக்குங்க மதாம்னு சொல்லி எந்திரிச்சு மூஞ்சியை துடைச்சுகிட்டு வெளியே போய்ட்டேன். மூஞ்சியை கழுவிட்டு சமையலறையிலே போய் நின்னேன். என் மூஞ்சியப் பாத்து மரியா என்னாச்சுன்னு கேட்டா. ஒண்ணுமில்லைன்னு சொன்னேன். துரைச்சானி திட்டினாங்களான்னு கேட்டா. ஆமான்னே. சரி, பரவாயில்லை. இந்த துரைச்சானி மத்த துரைச்சானிங்கள மாதிரி இல்ல, நல்லவள்ன்னு சொன்னா. நான் ஆமான்னு சொன்னேன்”
“அப்றம்?”
“அப்றம் வேலைகள் செய்ஞ்சேன். கொஞ்சம் கழிச்சு துரைச்சானிக்கு காலைவைச்சுக்கிட சுடுவெந்நி கொண்டுபோயி வைச்சேன். மரஎண்ணை எடுத்துவைச்சேன். அவங்க மூஞ்சி அப்டியே ரத்தம் மாதிரி சிவந்து இருந்துச்சு. கண்ணெல்லாம் கலங்கி இமை வீங்கி ஒருமாதிரி இருந்தாங்க. என்னைய ஏறிட்டும் பாக்கலை. ஒண்ணுமே சொல்லலை. மரியா காலுக்கு வெந்நி காட்டி எண்ணைபோட்டுவிட போனா. நான் உள்ள நின்னேன். அப்றம் அவங்க அப்டியே தூங்கப்போயிட்டாங்க. நான் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லல நீ”
“அதுக்கு மறுநாள்தான் அதை எடுத்தேன்”
“எப்ப?”
”அதுக்கு மறுநாள் காலம்பற. துரைச்சானியோட பழைய துணியெல்லாம் வெளுக்குறதுக்கு வரும். மூங்கில்கூடையிலே போட்டு வச்சிருப்பாங்க. மரியாதான் அதுக்கு நம்பர்போட்டு வண்ணானுக்கு போடணும்…அவனுக காலம்பற வந்திடுவாங்க. நான் சும்மா அந்தவழியா போனேன். அப்ப அந்த அடித்துணி தெரிஞ்சுது. அதைப்பாத்ததும் படபடப்பா ஆகிப்போச்சு…”
“படபடப்புன்னா?”
“நெஞ்சடைச்சுப்போச்சு. உடம்பிலே வேர்வை பூத்து குளுந்துது. காய்ச்சல் கண்டவன் மாதிரி நடுங்கிட்டிருந்தேன். என்ன ஆச்சுன்னே தெரியல்ல. ஏன் அப்டி செய்தேன்னும் தெரியல்ல. நான் அப்டியே அதை உருவி எடுத்து பையிலே வைச்சுக்கிட்டு ஓடிப்போய் ரூமுக்குள்ளே கதவடைச்சு உக்காந்திட்டேன்”
”முதல்ல அதப்பாத்தப்ப என்ன தோணிச்சு? அந்த மாதிரியா?”
“ஒண்ணுமில்ல… பயம் மாதிரி. வேற என்னமோ ஒண்ணு… அப்டியே உடம்பு உடைஞ்சிடும்கிற மாதிரி… மயிரெல்லாம் சிலுத்துப்போச்சு. ஆனா ரூமுக்குள்ள போனதும் அமைதியாயிட்டேன். அதை ஒளிச்சு வைச்சுட்டு அப்டியே கொஞ்சநேரம் உக்காந்தேன். கண்ணுலே இருந்து ஆவி பறக்கிறமாதிரி இருந்தது. ரொம்பநேரமாச்சு மூச்சு நேரே ஓடுறதுக்கு”
“அப்றம்?”
“என்னைய மரியா கூப்பிட்டுட்டே இருந்தா. அதனாலே நான் திரும்பி சமையலறைக்குப் போனேன். துரைசானிக்கு பூட்ஸ் எடுத்து பாலீஷ் போட்டு வைக்கச் சொன்னா. நான் பாலீஷ் போட்டுவைச்சேன். அப்ப துரைச்சானி வந்தாங்க…”
“என்ன சொன்னாங்க?”
“ஒண்ணும் விசேசமா சொல்லல்ல. நேத்து நடந்தது அவங்களுக்கு யாவுகம் இருக்க மாதிரியே தெரியல்ல. பெட்டிமேலே காலை வைச்சு நின்னாங்க. நான் ரவை நேரம் யோசிச்சேன். அவங்க என்ன தூங்கிட்டிருக்கியான்னு கேட்டாங்க. நான் மேலே பாத்தேன். அவங்க மூஞ்சியிலே வழக்கமான சிரிப்புதான். நான் லேஸும் ஷூவும் போட்டு விட்டேன்”
“ம்”
“ஒண்ணுமில்லைங்கய்யா”
“இப்ப உன் மனசிலே ஒரு சிந்தனை வந்துபோச்சு. அதைச் சொல்லு”
“அய்யா”
“டேய், சொல்லு”
“எனக்கு கொஞ்சம் குளிருநடுக்கம் மாதிரி வந்திச்சு”
“பயமா?”
“இல்ல, சந்தோசம் மாதிரி”
“என்ன சந்தோசம்?”
”தெரியல்ல”
“அவங்களைப்பத்தி நீ என்ன நினைக்கிறேன்னு அவங்களுக்கு தெரியாதுங்கிற நினைப்புலே வார சந்தோசம், சரியா?”
“அய்யா, இல்ல. நான் அப்ப தப்பா ஒண்ணும் நினைக்கல்ல”
”சரி, பிறவு?”
“அன்னிக்கு துரைசானிகூட பந்துவெளையாடுற
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

