Jeyamohan's Blog, page 1019
March 19, 2021
இருளில், ஆமென்பது- கடிதங்கள்
அன்புள்ள ஜெபமோகன்,
துவக்கமும் முடிவும் அறியாத வாழ்க்கை எனும் நெடுஞ்சாலையில் முற்றிலும் தற்பெருக்காக நம்மைத்தீண்டும் பேறாற்றலின் பரம்மாண்டத்தை ஒரு முறை அனுபவித்த பின் மற்றவை எல்லாம் பொருள் இழந்து விடுகறது. அதை அனுபவித்ததால் தானோ நமது சித்தர்களும், ஞானிகளும், பாபாக்களும் சாதாரண உலகற்கு திரும்ப மனமில்லாமல் அந்த பேரானந்த உணர்வு நிலையாக அமைய தேடி அலைகின்றனரோ ?
நெல்சன்
பேரன்பிற்குரிய ஜெயமோகன்,
இந்த கடிதத்தை என்னால் எழுத முடியுமா என தெரியவில்லை. காலையிலிருந்து தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு முயன்று பார்ப்போம் எனத் துவங்கி இருக்கிறேன்.
கதையைப் படித்த பிறகு 2 மணி நேரம் ஒரு செயலற்ற நிலையில் எண்ணங்கள் எல்லாம் ஓய்ந்து ஒடுங்கிக் கிடந்தேன்.
இந்த கதை இதோடு முடியவில்லை என்று என் அகம் சொல்கிறது. யாதேவி கதை மூன்று பகுதிகளாக வந்தது போல இதுவும் கூட தொடரும் என்றே நினைக்கிறேன். இது தொடரவேண்டும் என்றும் உள்ளூர விரும்புகிறேன்.
அப்துலுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நிகழ்ந்தது என்னவென்று என்னால் இன்னமும் கூட ஊகிக்க முடியவில்லை. ஆனால் அவனை ஆழமாக பாதித்த ஏதோ ஒன்று அந்த உறவில் இருந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவு. அப்துலுக்கு நிஜத்தில் நிகழ்ந்தது நிஜத்தையும் பாதித்து கனவையும் பாதித்தது. அதனால்தான் கனவில் கூட சோறு என உண்டு மண்ணை துப்பிக் கொண்டே இருக்கிறான். நனவிலும் கனவிலும் யாரோடும் அவனால் கூட முடியவில்லை.
தருணின் அனுபவம் வேறு தளங்களில் வேறு விதமாக ஆன்மிக பூர்வமாக எனக்கு நிகழ்ந்திருக்கிறது. அப்படி நிகழ்ந்த ஒன்றை கனவு என புத்தி வாதிடும் ஆனால் அது நிஜம்தான் என உணர்வு அடித்துச் சொல்லும். தருணைப் பொருத்தவரை அன்று இருளில் நிகழ்ந்த ஒன்று நிஜமாகவோ அல்லது கனவாகவோ எதுவாக இருந்த போதும் அவனின் நிஜவாழ்வை முற்றிலுமாக பாதித்திருக்கிறது.
ஆழ்மனம் குறித்தும் கனவுகள் குறித்தும் இளவயது முதலே நிறைய படித்தும் ஆராய்ச்சி செய்து கொண்டும் வந்திருக்கிறேன். எந்த ஒன்றை தீவிரமாக நம் ஆழ் மனம் விரும்புகிறதோ, எது நிகழ வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறதோ, அப்படி ஒன்று நிகழ்வதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறும் இல்லாதபோது, நம் மனம் அதை கனவாக அல்லது உணர்வு காட்சிகளாக(visions) அல்லது ஆழ்மன வெளிப்பாடுகளாக (mental projections)நிகழ்த்திக் காட்டி விடுகிறது.
எனது இருபத்தோரு வயதிலேயே துறவியாக வேண்டும் என்று திடமாக முடிவு செய்திருந்த போதும் உடல் உணர்வுகளுக்கும் உள்ளுணர்வின் வழிகாட்டுதலுக்கும் இடையேயான ஊசலாட்டமாகவே 35 வயது வரையான எனது வாழ்க்கை காலகட்டம் இருந்தது. உடல் உணர்வுகள் உடையக் காத்திருக்கும் அணை போலவும் ஒழுக்க நெறிகளின் மீதான பிடிப்பு அதன் சுவர்கள் போலவும் முட்டிமோதி தவித்த அலைகழிவு பொழுதுகள் அவைகள்.
ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை அத்தகைய அதீத கனவு உடலுறவு அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்திருக்கின்றன என்றால் நம்பக்கூட மாட்டீர்கள். இன்றைக்கும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் அவைகள் சாதாரண கனவுகளே அல்ல. அவைகள் அளித்த அனுபவங்கள் நிஜ அனுபவங்களை விட தெளிவானவை தீர்க்கமானவை மூர்க்கமான வை அதீதமானவை. பிரத்தியட்சம் என அந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட நபர்களையும் சூழலையும் என்மனமே கட்டமைத்த விதத்தை எண்ணி எண்ணி இன்று வரை வியந்து கொண்டுதான் இருக்கிறேன். அப்படி ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்தது அந்த மூன்று பெண்களுக்கும் தெரியவே தெரியாது அதை அவர்கள் ஊகித்து இருக்க கூட முடியாது. ஏனென்றால் நான் கூடியது அந்தப் பெண்களின் ஸ்தூல உடலோடு அல்ல. அவர்களாக நானே உருவாக்கிய அவர்களின் சூக்கும உடலோடு. ஜாக்ரத் அவஸ்தையில் அவர்களை தள்ளி நின்று ஒரு உத்தம நண்பனாக நான் அறிந்ததை விட அந்தக் கனவு அவஸ்தையில் மிகத் துல்லியமாக அணு அணுவாக அறிந்து அனுபவித்து இருக்கிறேன். உண்மைதான் கனவில் நிகழ்வனவற்றுக்கு பாவ புண்ணிய கணக்குகள் இல்லைதானே. அந்த வகையில் பார்த்தால் நான் பாவம் செய்யாதவன். ஆனால் கனவில் நிகழ்ந்தது என்ற போதிலும் அனுபவங்களின் தீவிரம் எல்லா வகையிலும் ஜாக்ரத் அனுபவத்திற்கு இணையானது தானே. இதன்படி பார்த்தால் முழுமையான பூரண உடலுறவு அனுபவத்தை கனவில் பெற்றதின் மூலம் நான் ஏதோ ஒரு வகையில் பேறு பெற்றவன் எனலாம் ஏனெனில் அந்த மூன்று பெண்களையும் ஜாக்ரத் அவஸ்தையில் துளி கூட தொடாமல் கனவு அவஸ்தையில் தொட்டு அனுபவித்து அறிந்தவன் தானே. கனவு அவஸ்தைக்கு பாவம் உண்டு என்றால் நானும் பாவியே. கனவு அவஸ்தைக்கு பாவம் இல்லை என்றால் நான் பாவி இல்லை.
அப்துலுக்கு நிஜத்தில் நிகழ்ந்தது கனவிலும் பாதிக்கிறது. தருணுக்கு கனவில் நிகழ்ந்தது நிஜத்திலும் பாதிக்கிறது. அந்த கிளீனர் பையனோ தொடர்ந்து தூக்க நிலையிலேயே இருக்கிறான். கதைசொல்லியையோ ஜாக்ரத் ஸ்வப்ன சுசூப்தி என்ற மூன்று நிலைகளையும் கடந்த துரிய நிலையில் இருப்பவனாக நான் காண்கிறேன். ஒருவன் நிஜத்தை கனவு என்கிறான். மற்றவன் கனவை நிஜம் என்கிறான். கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ஒரு கணம் இருக்கிறது. அந்த இடைப்பட்ட கணத்தில் நிகழ்கின்ற ஒன்றை அத்தனை சுலபமாக வரையறுத்துவிட முடிவதில்லை. கதைசொல்லி அந்த இடைப்பட்ட துரிய நிலையில் எப்போதோ ஒருமுறை வாழ்வில் நிச்சயமாக நின்றிருக்கிறான். அதனாலேயே அத்தனைத் தெளிவாக அவனால் அந்த இருளில் வந்த அவள் உயர்வான ஒரு ஆன்மீக நிலைக்கு சென்றிருக்க முடியும் என்று ஒரு பேச்சுக்கேனும் கூறமுடிகிறது. அந்தக் கதை சொல்லியில் நான் உங்களை கண்டேன் என்பதையும் இங்கே ஒத்துக்கொள்ளவேண்டும்.
தருணுக்கு நிகழ்ந்த அந்த அனுபவம் நிஜத்திலேயே நிகழ்ந்தது என வைத்துக்கொண்டாலும், அவனோடு உறவு கொண்ட அந்தப் பெண்ணின் மனநிலையை பலவாறாக வகுத்துக்கொள்ள முடியும்.
1.சட்டென்று கொண்ட உணர்வு எழுச்சியின் மூலமாக தனது ஆழ் மன ஏக்கத்தை அந்த சூழ்நிலையிலே தருணை பயன்படுத்தி தீர்த்துக்கொண்டாள். அதன் பிறகு முற்றாக அந்த நிகழ்வை கனவு என தன் அகத்தில் வளர்த்து தனது கணவனோடு முன்பைப் போலவே வாழ்ந்து வருகிறாள். வேறு யாரையும் அவள் தேடிப் போகவில்லை.
தருண் உடனான உறவிற்கு பிறகு தன் கணவன் உட்பட யாருடனும் கூட முடியாமல் தருணைப் போலவே தவித்து அலைகிறாள்.தருண் உடனான உறவிற்கு பிறகு ஒருமுறை எல்லை கடந்ததால் கிடைத்த விடுதலை மற்றும் சுதந்திரத்தை கொண்டு, எல்லா ஆண்களிலும் தருணின் ஒரு அம்சத்தை தேடி நாளும் அலைந்து, காம நிறைவை நோக்கி தேடுதலோடு வேட்கை கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாள்.தருணுடனான உறவிற்கு பிறகு, தன் கணவனையும் விட்டுப் பிரிந்து ஆன்மீக பூர்வமான தேடலோடு தன்னை விரித்து வேறுவிதமான உயர்நிலைக்கு நகர்ந்து விட்டாள். ஒரு காமம் கடந்த உன்னத நிலை. அனைத்தையும் ஒன்றே எனக் காணும் உயர்நிலை.என்னிடம் அந்த நாலாவது நிலை குறித்து பகிர ஒன்று உண்டு.
எல்லோரோடும் ஒரு உயர்ந்த பரமானந்த பாவத்தில் தொடர்புகொண்டு தன்னை நாடி வந்தவரை மேல்நிலைக்கு உயர்த்தும் தகைமை கொண்டிருந்த ஒரு அம்மையாரை குறித்த பலர் அறிந்திராத ரகசிய தகவல் இது. நான் உத்தர காசியில் வாழ்ந்த பொழுதுகளில் கேள்விப்பட்டிருக்கிறேன். 1930 காலகட்டங்களில் இந்த அம்மையார் உத்தரகாசி பகுதியிலே ஒரு பத்து ஆண்டு காலம் வாழ்ந்ததாக கூறுகிறார்கள். தன்னுடைய 25 வயது காலகட்டத்தில் அவர் உத்தரகாசி வந்திருக்கிறார். பேரழகியாக இருந்திருக்கிறார். ஒரு பத்து ஆண்டுகள் உத்தரகாசியில் துறவுக் கோலத்தில் வாழ்ந்திருக்கிறார் எனக் கூறுகிறார்கள். காமத்தை வெல்ல முடியாமல் தவித்த அல்லது அதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளான தீவிர ஆன்மீக சாதகர்களுக்கு இவர் பேருதவி புரிந்திருக்கிறார் எனக் கூறுகிறார்கள். இவரை சந்தித்துவிட்டு வந்த பிறகு பல ஆன்மீக சாதகர்கள்மேம்பட்டு உன்னத நிலைக்கு போய் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. மிக உயரிய மாத்ரு பாவனையில் அந்த அம்மையார் அந்த சாதகர்களுக்கு முலையூட்டி அவர்களை குழவி ஆக்கி அவர்களின் ஆற்றலை மடை மாற்றி கனிவித்ததாக கூறப்படுகிறது. அந்த அம்மையாரின் ஸ்பரிசத்திற்கு பிறகு அந்த பாதிக்கப்பட்ட ஆன்ம சாதகர்கள் மிக உயரிய நிலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதிலேயே தான் வந்த பணி முடிந்து விட்டது எனக் கூறி அவர் கங்கையில் பாய்ந்து விட்டாராம். இதைக் குறித்த மேலதிக குறிப்புக்கள் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு முதிய துறவியிடமிருந்து வாய்மொழி மூலமாகவே இந்த தகவலை நான் பெற்றேன்.
ஆம் மனித மனதுக்கு தான் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன. மரண அனுபவத்திற்குப் பிறகு ஞானியாக வெளிப்பட்டார் ரமணர். சில அனுபவங்களின் தீவிரத்தைத் தாங்க முடியாமல், இன்றைக்கும் எத்தனையோ பேர் பித்தர்களாக பைத்தியங்களாக வெளியுலக உணர்வின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் திருவண்ணாமலையில் கூட இன்றைக்கும் ஒரு ஆத்தா அப்படி சுற்றிக்கொண்டிருக்கிறார்.
ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் அந்த ஆன்மிக அனுபவம் அவருக்கு நிகழ்ந்த பொழுது அனைத்துமே அவராக மாறிவிட்டதாக. காண்பான் காட்சி காணப்படுவது என மூன்றுமே கடந்த ஒரு நிலைக்கு சென்றுவிட்டதாக.
பப்பா ராமதாஸ் திருவண்ணாமலையில் ஒரு குகையில் அத்தகையதொரு வாழ்நாள் அனுபவத்தை பெற்றதாகக் கூறுகிறார்.
தருண் சொன்னது போல “சிரிக்காதீர்கள்…. உங்களுக்குப் புரியாத விஷயங்கள் எல்லாம் சிரிக்க வேண்டியதல்ல” என்றுதான் இவற்றை நாம் ஏற்றும் கடந்தும் போக வேண்டியிருக்கிறது.
அதிதீவிர துக்கத்தில் உறைந்து போனவர்கள் எத்தனையோபேர். அதீத இன்பத்தால் அதன் அனுபவத்தால் உறைந்து போனவர்கள் எத்தனையோ பேர்.
இந்த மொத்த கதையுமே எதிர்பாராத ஒரு அனுபவம் என்ற குறியீட்டு தளத்திலேயே நிகழ்வதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு அனுபவம் ஜாக்ரத் ஸ்வப்ன சுசூப்தி என்ற மூன்று நிலைகளில் எதில் வேண்டுமானாலும் நிகழட்டுமே, அந்த அனுபவம் நம்மை எப்படி பாதிக்கிறது என்பதுதான் மிகப்பெரிய முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது.
நான் நினைவுகூர்கிறேன், முதல் முதலாக திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்குள் நான் சென்ற பொழுது ஆலயக் கருவறையில் அர்ச்சகர் உட்பட ஒருவருமே இல்லை. நானும் அகிலாண்டேஸ்வரியும் மட்டுமே, அன்று அங்கு அவள் இருந்ததும் அவள் முன்னிலையில் நான் இருந்ததும் பிரத்தியட்ச அனுபவம். அங்கு எரிந்த விளக்கின் ஒளியில் சுடர்ந்த அவளின் முகம், இன்னதென்று கூறமுடியாத ஒரு மலரின் மணம், என் உடலின் ஒவ்வொரு அணுவிலும் மயிர் கால்களிலும் நிகழ்ந்த ஒரு உணர்வு வெளிப்பாடு. அதை எத்தனை முயன்றாலும் என்னால் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது. அதன்பிறகு நூற்றுக்கணக்கான முறை அந்த அனுபவத்தை நாடி அது கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு அந்த ஆலயத்தை நாடி அகிலாண்டேஸ்வரியின் கருவறைக்கு நான் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் சென்று கொண்டே இருந்தேன். அந்த முதல் அனுபவம் மீண்டும் எனக்கு கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் சென்று வரும்பொழுது எரிச்சலும் விரக்தியும் மட்டுமே மிஞ்சின. இன்றைக்கு இருக்கின்ற அத்வைத புரிதல் இன்றி பக்தியில் உழன்ற எனது ஆரம்ப காலகட்டம் அது.
புத்தூருக்கும் திருப்பதிக்கும் இடைப்பட்ட இடத்தில் சதாசிவகோனே என்கின்ற ஒரு மலை உள்ளது. 2003-ஆம் ஆண்டு ஒரு டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் நான் அந்த மலைக்கு 14 கிலோமீட்டர் நடந்து தனியாகச் சென்றேன். அருவியில் குளித்து ஆனந்தித்த பிறகு அருவிக்கு மேலாக செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஓடையின் ஊடாகவே ஏதோ ஒரு வேகத்தில் மேலேறிக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர யாருமே அங்கு இல்லை. ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் மேலாக நடந்த பிறகு ஒரு இடம் மிகவும் ரம்யமாக இருந்தது. ஒரு பாறையின் மீது அமர்ந்து நான் தியானம் செய்யத் துவங்கினேன்.ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு உணர்வுமேலீட்டால் கண்களைத் திறந்து பார்த்தேன். என்னைச் சுற்றிலும் ஒரு 30க்கும் மேற்பட்ட குரங்குகள் அமர்ந்து என்னையே நோக்கிக்கொண்டிருந்தன. நான் ஒரு வித பய உணர்வுக்கு ஆளாகிவிட்டேன். என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. சரி நடப்பது நடக்கட்டும் என்று கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டேன். ஒரு குரங்கு என் தலையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. எனது இரண்டு தொடைகளிலும் இரண்டு குரங்குகள். என் முதுகின் மீது ஒரு குரங்கு. எனது இரண்டு கால் விரல்களையும் பற்றி இரண்டு குரங்குகள் இழுக்கத் துவங்கின. இரண்டு கைகளையும் பற்றி இரண்டு மூன்று குரங்குகள். என் உடல் முழுவதும் ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம். அதன் காரணம் உச்சகட்ட பயமா என்றுகூட எனக்கு தெரியாது. ஒரு கட்டத்திற்குப் பிறகு என் முழு உடலுமே அந்த அனுபவத்தில் துடிக்கத் துவங்கிவிட்டது. நான் கண்களை திறக்கவே இல்லை. ஒரு பத்து நிமிட நேரம் அவைகள் என்னை ஒரு பொம்மை எனக் கொண்டு வருடி விளையாடிக் கொண்டே இருந்தன. நானோ ஆனந்த அனுபவத்தில் திளைத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு பேரமைதி.எனக்கு என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை. நான் தூங்கிவிட்டேனா என்றும் எனக்கு தெரியாது. திடீரென்று விழிப்பு வந்து பார்க்கிறேன் அந்தப் பாறையின் மீது நான் மட்டுமே இருந்தேன். எனது பையும் அப்படியே இருந்தது. அன்று எனக்கு நிகழ்ந்த அந்த அனுபவம் என் வாழ்வில் நிகழ்ந்த உன்னதமான அனுபவங்களில் ஒன்று. இன்று வரையில் அதை ஒரு மாபெரும் வரமாகவே நினைக்கிறேன்.
தருண் அப்படி ஒரு காம அனுபவம் தனக்கு நிகழும் என்று வாழ்க்கையில் என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை.அதனால் அவனுக்கு அன்று அந்த இரவில் நிகழ்ந்த அந்த ஒரு நிகழ்ச்சி பேரதிசயமாகவும் அவன் வாழ்வில் அவனுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குவதாகும் இருக்கிறது.
ஆனால் எனது 13 வயது முதல் 21 வயது வரை அப்படி ஒரு அனுபவம் திடீரென்று எனக்கு நிகழப்போகிறது என்று நம்பி ஏங்கி தவித்திருக்கிறேன். யார் என்றே தெரியாத ஏதோ ஒரு அழகான பெண் திடீரென்று வந்து என்னோடு கூடப் போகிறாள் என்று நான் பல ஆயிரம் முறை ஏங்கி தவித்து இருக்கிறேன். இதை எப்படி விளக்குவது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. இதுபோல வேறு எவருக்கேனும் இப்படி தோன்றி இருக்கிறதா என்பதையும் நான் அறியேன். ஆரம்பகால அலைதல்கள் தேடல்கள் அறிதல்கள் காலகட்டத்தில், இதுகுறித்து சுவாமி கங்கானந்தர் என்கின்ற 86 வயது முதிய துறவியிடம் மனம் விட்டுப் பேசினேன். அவர் சொன்னார் உச்சகட்ட ஆனந்த அனுபவத்திற்கான, காமத்துக்கான தீவிர ஏக்கமே ஒருகட்டத்தில் தீவிர ஆன்மீக தேடலாக உருமாறுகிறது என்று. மேம்பட்ட ஏதோ ஒன்றிற்கான தேடல் தானே ஆன்மீகம். அவர் மிகச் சரியாக சொன்னதாகவே எனக்கும் தோன்றியது. ஆனால் இன்னொன்றையும் கூட அவர் சொன்னார். இப்படி காமத்திற்கான தேடல் திசைமாறி ஒரு மனிதனை சீரழிவு பாதையில் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகளும் மிக அதிகமாக உள்ளன என்று. ஏதோ ஒரு பெரும் கருணையினால், மாபெரும் இயற்கை சக்தியினால், இலக்கை நோக்கி கணம் கணம் என நகர்த்தப்பட்டதாகவே நான் நம்புகிறேன். இன்று காமம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல ஆனால் காமம் மட்டுமே எண்ணங்களாக மனம் முழுவதும் வியாபித்து இருந்த ஒரு காலமும் எனக்கு இருந்தது. எனது தீவிர ஆன்மீக தேடுதலுக்கு அது ஏதோ ஒரு வகையில் அடித்தளமாக இருந்தது என்பதை இன்று திரும்பிப் பார்க்கையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. ஆம் அது அவ் வண்ணம் இருந்தது அவ்வளவுதான்.இதில் வெட்கப்படவோ வேதனைப்படவோ ஒன்றுமில்லை.
துறவு மேற்கொண்டு 9 ஆண்டுகளாக எத்தனையோ முயன்று என்னென்ன விதமாகவோ ஆத்ம சாதனைகளை தொடர்ச்சியாக செய்தும் குறிப்பிடத்தக்க நிறைவு ஏற்படாமல் நான் தவித்துக் கொண்டிருந்த காலம். மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்ய முயன்று கொண்டிருந்தேன். தினம் தினம் எல்லாம் வல்ல பரம்பொருளிடம் இரஞ்சி கதறி அழுதிருக்கிறேன். ஏன் இன்னும் எனக்கு ஆன்மீக நிறைவு ஏற்படவில்லை என்று மன அழுத்தத்தோடு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்பொழுது ஒரு நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. அதைக் கனவு என்று கூட குறிப்பிட முடியுமா என்று தெரியவில்லை. தூக்கத்திற்கும் கனவிற்கும் இடையேயான ஒருவிதமான ஆழ் நிலை அனுபவம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
ஒரு மிகச்சிறிய ஒரு ஒல்லியான நபர் மட்டுமே செல்லக்கூடிய ஒரு மலையிடை குகை போன்ற துவாரத்தின் முன்பாக
நின்று கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னாலிருந்து கோடிக்கணக்கான மக்கள் அந்த துவாரத்தின் வழியாக முட்டிக்கொண்டு செல்ல
அழுத்துகிறார்கள். எனக்கு முன்பாக அந்த துவாரத்தை கடக்க ஒரு மூன்று பேர் இருக்கிறார்கள். அந்த மலை துவாரத்திற்கு அடுத்த பக்கமாக என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எனக்குப் பின்னாலிருந்து அழுத்தியவர்களின் அழுத்தம் காரணமாக எனக்கு முன்னால் இருந்தவர்கள் துவாரத்தை கடந்து மறுபக்கம் செல்கிறார்கள். என்னுடைய முறை வந்து நான் துவாரத்தில் நுழைந்தவுடன் அதில் சிக்கிக் கொள்கிறேன். முன்பாகவோ பின்பாகவோ நகர முடியவில்லை. எனக்கு முன்பாக மலையின் அடுத்த பக்கம் கோடிக்கணக்கான மக்கள் அழுந்தி குவிந்து என்னை துளி கூட முன்னகர விடாமல் அடைத்து கிடக்கிறார்கள். எனக்குப் பின்னாலிருந்து கோடிக்கணக்கான மக்கள் என்னை முன்னகர அழுத்துகிறார்கள். நான் பிதுங்கி நசுங்கி மூச்சுமுட்டி மரணத்தின் விளிம்பில் நிற்கிறேன். ஓ என்று கதறுகிறேன். எதுவுமே செய்ய முடியாத ஒரு பேரழுத்தத்தில் மாட்டி தவிக்கிறேன். கிட்டத்தட்ட மரணம். இறைவா என்னை காப்பாற்று என்று கதறுகிறேன். எங்கிருந்தோ ஒரு குரல்,”எழுந்திருடா இது கனவுதான் பார்”என்றது. சட்டென விழித்துக் கொண்டேன். உடல் முழுவதும் வியர்த்து நனைந்து இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், படுக்கை சிறுநீரால் நனைந்து சிறிது சுக்கில வாடையோடு பிசுபிசுப்பாகவும் ஆகிவிட்டிருந்தது. படுக்கையில் சற்று மலம் கூட கழிந்திருந்தது. அந்த கணத்தில் ஒரு மாபெரும் விடுதலை உணர்வை அனுபவித்தேன். அந்தக் கனவு அல்லது மனக்காட்சி அனுபவத்திற்கு பிறகுஎனது ஆன்மிக வாழ்க்கையே முற்றாக மாறிவிட்டது. நிகழ்வுகளை இலகுவாக எதிர்கொள்ள முடிந்தது. தியானம் என்பது ஒரு முயன்று செய்கின்ற செயல்பாடாக இல்லாமல் இனிய மனதுக்கு உகந்த செயலாக மாறிவிட்டது. அந்த அனுபவத்திற்கு பிறகான கடந்த 4 ஆண்டு வாழ்தல் என்பது கொண்டாட்டமாக தான் சென்று கொண்டிருக்கிறது. அன்று அந்த கனவில் அல்லது காட்சியில் நிகழ்ந்தது என்ன என்பதைக் குறித்து நான் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை ஆனால் அது என்னை மிகவும் இலகுவாக்கி விட்டது என்பது மட்டும் சத்தியம்.
எத்தனை பெரிய எத்தனை உன்னதமான ஆன்மீக அனுபவமாக இருந்தாலும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற உயரிய புரிதலுக்கு இன்று நான் வந்துவிட்டேன். இப்படி நிகழ வேண்டும் அப்படி நிகழ வேண்டும் இந்த அனுபவம் வேண்டும் அந்த அனுபவம் வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளே எல்லா துயரங்களுக்கும் காரணம் என்ற தெளிவு வந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் தியானத்திற்கு அமரும் பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்தவித இலக்கும் இல்லாமல் வெறுமனே சும்மா என்னால் அமர முடிகிறது. எது நிகழ்கிறதோ எது வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இந்த மனநிலைதான் நீடித்த அமைதியை அளிக்கிறது. இது போதும் எனக்கு. இதுவே நான் தேடியது என்ற புரிதலுக்கும் வந்துவிட்டேன். தியானத்தை தியானத்தின் பொருட்டே வெறுமனே செய்கிறேன். அறிவதற்கும் அடைவதற்கும் அனுபவங்கள் வேண்டும் என ஏங்கி மனம் எதையும் நாடுவதில்லை. புதுப்புது மற்றும் உன்னத ஆன்மீக அனுபவங்களுக்கான ஏக்கம் எப்பொழுதும் தியானத்திற்கு தடையாகவே அமைகிறது என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.
நேற்று காலை எழுதத் துவங்கி இன்று மாலை இந்த கணம் வரை எனக்கு தோன்றிய எதையெதையோ கொஞ்சம் கொஞ்சமாக எழுதிவிட்டேன். இத்தனை நினைவுகளை உங்கள் இருளில் கதை என்னுள் எழுப்பி விட்டது. மற்றவர்களுக்கு எப்படி புரிபடுகிறதோ இந்த கதை நான் அறியேன் ஆனால் எனக்கு இது ஒரு சூட்சுமமான ஆன்மிக கதையாகவே படுகிறது. ஏனோ இவற்றையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு தோன்றியதால் பகிர்ந்து கொண்டேன். ஒரு கதைக்கான கடிதமாக இவற்றையெல்லாம் எழுதலாமா எழுதக்கூடாதா என்பது எனக்கு இன்னமும் குழப்பமாகவே உள்ளது. ஆனால் இவைகள் எவ்வகையிலேனும் ஆன்மீகத் தேடல் உள்ள யாருக்கேனும் பயன்படக்கூடும் என்கின்ற ஒரு எண்ணமும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனது உள்ளத்தை உங்களோடு பகிர்ந்து கொண்ட மனநிறைவோடு இந்த கடிதத்தை முடிக்கிறேன்.
இப்படி ஒரு உன்னத கதை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். உங்களைத் தவிர வேறு யார் இன்று தமிழில் இப்படி ஒரு சூட்சுமமான கதையை எழுத முடியும்! உங்களின் குரு நித்ய சைதன்ய யதியின் அளப்பறிய ஆசிகளும் கருணையும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதை, நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் முற்றாக வெளிப்பட அளப்பரிய ஆற்றலை அளிப்பதை என்னால் மிக நன்றாக உணர முடிகிறது.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
ஆமென்பது[ சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆமென்பது ஒரு முழு வாழ்க்கைச் சித்திரம். இது உண்மைக்கதை என்று தோன்றுவதனாலேயே ஆழமான படபடப்பை உருவாக்குகிறது. எதற்காக இந்தப் பரிதவிப்பு? அரசியலில் சமூகவியலில் எதையெதையோ கண்டு போரிட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் போரிடவேண்டியது அவருக்குள் இருந்த அந்த ஏக்கத்திடம். அதற்கு மறுமுனையாக எடுத்துக்கொண்ட வஞ்சத்திடம். அதைச் செய்யவில்லை. அதை அப்படியே மூடிவைத்துவிட்டார். அரசியல் எல்லாம் தீயின்மேல் வைக்கோலை கொட்டுவதுபோலத்தான். தன்னை அறிவது என்பது உண்மையில் தன்னுடைய ஆசை என்ன ஏக்கம் என்ன பகைமை என்ன என்று அறிந்துகொள்வதுதான்
ராஜேஷ் எஸ்
அன்புள்ள ஜெ,
தங்களின் “ஆமென்பது…” சிறுகதை வாசித்தேன். முதல் வாக்கியத்திலேயே ஆவலோடு உள்நுழைந்துவிட்டேன். “எண்ணங்கள், சொற்கள், எழுத்துக்கள்”. ஆம், நாம் “எண்ணுவது” கோடி என்றால் , சொல்வது லட்சம், எழுதுவது வெறும் ஆயிரம் கூட இருக்காது.
நாம் எதை எழுத வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதை எழுதலாம் அல்லது எழுதாமல் இருக்கலாம். அதைப்போலவே சொல்வதையும். ஆனால் நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா. ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் உள்ள பாலம் எது. அந்த பாலம் எதனால் ஆனது. யார் கட்டுப்படுத்துவது. எண்ணங்களுக்கு இடையில் தொடர்பு உண்டா? அல்லது அவை தனித்தனி உலகத்தில் உள்ளவையா. சில சமயம் நினைத்துபப் பார்த்தால், நாம் காலமெனும் சட்டத்தில் மட்டுமே எண்ணங்களை ஏற்றுகிறோம் என்றே தோன்றுகிறது. காலம் என்பது இல்லை என்றால் எண்ணங்களுக்கு எந்த பொருளும் இல்லை.
கே.வி.ஜயானன் அவர்கள் தன் வாழ்க்கை பூராவும் ஒரு பிடிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். நோயுற்ற பிறப்பு, தாயின் இறப்பு, தந்தையின் புறக்கணிப்பு. இவை அனைத்தும் தனக்கு கிடைக்காததால், இவற்றை புறக்கணிக்கும் அனைத்து செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்க்கொள்கிறார். திருமணம் செய்து கொள்ளும்போது கூட, அதை வெறும் ஒப்பந்தமாகவே நினைத்தார். கதையில் அவரும் அவர் மனைவியும் பிரியும் தருணம் தான் உண்மையில் அவர் அனைத்தையும் தன் ஆழ் மனதில் இருத்திவைத்து அதற்கு நேர் எதிராகவே அனைத்து செயலையும்செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அப்படி செய்யவில்லை என்றால் அவரால் எந்த ஒரு செயலையும் செய்திருக்க முடியாது.
அவரை வாழ வைத்தது எல்லாம் “இரு ஸ்டாலின்”கள் மட்டுமே. அதுவே அவரின் வாழ்க்கையின், சிந்தனையின், எழுத்தின் ஆணிவேர். அதனால் தான் சோவியத் ருஷ்ய உடைந்தபோது தானும் உடைந்து விட்டார். அந்த பிம்பம் நேர்மறையாக இருந்தாலும் , எதிர்மறையாக இருந்தாலும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அதுவே ஒருவரின் வேர். அப்பிம்பம் உடையும் போது, தானும் உடைந்து போகிறான்.
சிறு வயது முதலே கண்ட புறக்ககணிப்பு அவரை அனைத்தின் மீதும் ஒரு பகடிப் பார்வைக் கொள்ள வைக்கிறது. அதுவும் ஒரு இருத்தலியியலே. பிடிப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். உறவுகளின் , உணர்வுகளின் மேல் மீது எழும் அவ நம்பிக்கை, வேறு ஒரு தூணைப் (பகடி) பற்றிக்கொண்டு தன் இருப்பை காட்டிக்கொள்கிறது. அது அவருடைய தடித்த கண்ணாடியின் உணர்வு. அந்த தடிமம் தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள தேவையாக உள்ளது. ஆனால் ஆழ்மனதில் வெறும் சிறகாகவே அது உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏங்கிக்கொள்கிறது. தன் மகன் கையால் செய்யும் இறுதிச் சடங்கே அவரை அந்த ஏக்கத்திலிருந்து விடுபட வைக்கும்.
அவரின் மகனுக்கு அவர் மேல் பிடிப்பில்லை. தன் தந்தைக்கு செய்யும் சடங்கில் நம்பிக்கை இல்லை. தந்தையைப் போலவே அவனும். அவன் அப்படி ஆக இவரும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத தந்தையின் பாசத்தை (தன் இருத்தலியல் காரணமாக) தன் பிள்ளைக்கு இவர் கொடுக்கவில்லை. ஆனால் அதையே அவர் அவனிடம் கடைசியில் எதிர்பார்க்கிறார். இவரின் தந்தை கடைசியில் இவரை எண்ணி ஏங்கியது போல. ஏன் இவ்வாறு சக்கரமாக புறக்கணிப்புகளும் எதிர்பார்ப்புககும் நடந்து கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் “தான்” என்னும் எண்ணதிலிருந்தே தொடங்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி `தான்` என்ற எண்ணத்தை விடுத்து உலகியலில் ஒன்றி இருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. அனைத்தும் “பிரதிகிரகை” தலை அசைப்பில்தான் உள்ளதோ.
நம் செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே “நாம்” என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன் உள்ள “எண்ணங்களே” இவற்றுக்கு காரணம். அந்த எண்ணங்களை தீர்மானிப்பதும் நம் “செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே” ஆகும். இது ஒரு சக்கரம் போன்றது என்றே தோன்றுகிறது.
அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி
March 18, 2021
நகை [சிறுகதை]
”ஷீலா ஒர்ட்டேகா” என்று ஷிவ் சொன்னான். அதை ரகசியமாக என் காதில் சொன்னான்.
“யாரு?”என்றேன்.
“ஷீலா ஒர்ட்டேகா” அதை அவன் மேலும் ரகசியமாகச் சொன்னான். அப்படி ரகசியமாகச் சொல்லியிருக்கவே வேண்டியதில்லை. அந்தக் கல்யாணமண்டபமே இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது. தோளோடு தோள் முட்டும்படி நெரிசல். அத்தனைபேரும் கத்திப் பேசிக்கொண்டிருந்தனர்.கூடவே நாதஸ்வரம் தவில். எதிரொலி வேறு.
”யாரு?”என்று நான் மீண்டும் கேட்டேன்.
அவன் உடனே செல்போனை திறந்து அந்த படத்தை காட்டினான். யாரோ ஒரு குண்டுப்பெண் கண்ணாடி போட்டுச் சிரித்துக்கொண்டிருந்தாள். கொஞ்சம் முன்னுந்திய தாடைகொண்ட முகம். பெரிய பற்கள், ஆனால் அவை மிகச்சீராக இருந்தன. தடித்த புருவங்கள்.
”யார்டா இவ?”என்றேன்.
“பாரு” என்று அவன் காட்டினான். ஒரு சிறு காட்சித்துளி ஓடியது. நான் திடுக்கிட்டு செல்லை அணைத்துவிட்டு சுற்றிலும் பார்த்தேன்.
ஷிவ் சிரித்தான். “யாரும் பார்க்க மாட்டாங்க. பயப்படாதே”
”இதை ஏன் இப்ப காட்டுறே? நல்ல காரியம் நடக்கப்போகுது”
”இதுவும் நல்ல காரியம்தானே? என்ன தப்பு?” அவன் கண்களைச் சிமிட்டி “அதோ அங்கே மணவறையிலே இருக்கிறவங்களும் இந்த நல்ல காரியத்துக்காகத்தான் காத்திருக்காங்க. அவங்க ரெண்டுபேருமே இதைத்தான் நினைச்சுக்கிட்டிருக்காங்க”
நான் பெருமூச்சுவிட்டேன். ஷிவ் நான் தவிர்க்க நினைக்கும் ஆள். எம்.இ முடித்து திருவனந்தபுரத்தில் பெரிய வேலையில் இருக்கிறான். என் கூடவே படித்தவன். நான் எஞ்சீனியரிங்கை ஒப்பேற்றிவிட்டு ஒரு கட்டுமானக் கம்பெனியில் ஓவர்சீயராக அலைந்து கொண்டிருக்கிறேன். உண்மையில் மேஸ்திரியின் வேலைக்காரன் என்று சொல்லவேண்டும். அவன் போட்டிருக்கும் சட்டையின் விலை பதினைந்தாயிரம் இருக்கும். நான் உள்ளூர் ரெடிமேட் சட்டை போட்டிருக்கிறேன். என்னிடம் இருப்பவற்றிலேயே நல்ல சட்டை. ஆனால் இந்த கல்யாண மண்டபத்திலேயே மலிவான சட்டை இதுதான்.
ஆகவேதான் கல்யாணத்துக்கு வரமாட்டேன் என்று அம்மாவிடம் அடம்பிடித்தேன். அம்மாவுக்கு நேற்று சர்க்கரை ஏறிப்போய் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட வேண்டியிருந்தது. கல்யாணம் அம்மாவின் ஒன்றுவிட்ட அக்காளின் மகளுக்கு. வேறு வழியே இல்லை. கல்யாண மண்டபத்தில் நல்ல கூட்டம் என்பதுதான் எனக்கு ஆறுதல். எவர் கண்ணுக்கும் படாமல் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கவேண்டும். பரிசெல்லாம் கொடுக்கவேண்டியதில்லை. இவர்களுக்கு பரிசு கொடுக்குமளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. சாப்பிட்டுவிட்டு சந்தடியில்லாமல் நழுவிவிடலாம். அப்போதுதான் ஷிவ்வை பார்த்தேன். அவனும் கூட்டத்தில் ஒட்டாமல் இருந்தான். அந்தவகையில் நல்லதுதான் என்று சேர்ந்துகொண்டேன்.
“ஷீலா ஒர்ட்டேகாவுக்கு ஒரு சிஸ்டர் உண்டு. அவ பேரு கேஷா ஒர்ட்டேகா. இரட்டைபோல இருப்பாளுக” என்றான் ஷிவ்.
“வாயைமூடு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது”
“ஷீலா ஒர்ட்டேகா இங்கே வந்திருக்காடா மடையா”
நான் மூச்சுத்திணறினேன். “இங்கேயா? எங்கே?”
”இந்தக் கல்யாணத்துக்கு… இதோ இந்த மண்டபத்த்துகு. நமக்கு மிகப்பக்கத்திலே இருக்கா”
“டேய்!” என்றேன். எப்படி ஒருகணம் நம்பிவிட்டேன் என்று ஆச்சரியமாக இருந்தது.
“நீ என்ன செய்றே, நல்லப்புள்ள மாதிரி நேராக மணமேடை வரை நடக்கிறே. ஏதாவது ஒரு வேலை இருக்கிற மாதிரி பாவலா செய்கிறே. அப்படியே திரும்பி இடதுபக்கம் பாத்துக்கிட்டே வர்ரே. அவளை பார்த்திருவே”
“போடா”
“வேண்டாம்னா வேண்டாம்…”
நான் கொஞ்சம் யோசித்துவிட்டு “பார்க்கிறேன்…” என்றபடி எழுந்து நடந்து மணமேடைப் பக்கம் போனேன். பெண்ணுக்கு ஏதோ சடங்கு நடந்துகொண்டிருந்தது. மணமகன் அதை வாய் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். கேசவபிள்ளை தாத்தா அச்சடங்கை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.
நான் திரும்பி வரும்போது இடதுபக்க வரிசையைப் பார்த்துக்கொண்டே வந்தேன். என்ன சொல்கிறான் என்று தெரியவில்லை. பெண்களைத்தான் பார்த்தேன். இளம்பெண்கள் குறைவுதான்.
சட்டென்று என் மேல் ஓர் உதை விழுந்ததுபோல் இருந்தது. மூச்சுத்திணறல் போல வந்தது. ஓடி வருபவன் போல வந்து ஷிவ் அருகே அமர்ந்துகொண்டேன்.
“என்ன பார்த்துட்டியா?”
”டேய் ,டேய்”என்றேன்.
ஷிவ் சிரித்து என் முதுகைத் தட்டினான். “எப்டி? சாயல் இருக்குல்ல? ஐயா சொன்னா அது அச்சொட்டா இருக்கும் பாத்துக்க”
“டேய், வேண்டாம்டா”
”நான் என்னடா பண்ணினேன்? அவ அப்டி இருக்கா”
“டேய்”
நான் பதறிக்கொண்டே இருந்தேன். அது என் அத்தை பிரபாவதி. அவளுக்கு கொல்லம் பக்கம் சொந்த ஊர். மாமாவை கல்யாணம் செய்துகொண்டு நாலைந்து ஆண்டுகள்தான் ஆகிறது. ஏதோ மத்திய அரசு வேலையில் இருக்கிறாள். இப்போதுதான் பாறசாலைக்கு வேலைமாறுதலாகி வந்திருக்கிறாள். நானே நாலைந்து தடவைதான் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை.
கொல்லம் பக்கம் எங்கள் சாதியில் பலருக்கு தோற்றத்தில் கொஞ்சம் ஆப்ரிக்கக் கலவை உண்டு. கல்யாணமாகி அத்தை வந்த நாட்களில் அவளைப் பார்க்க ஆட்டோகிராஃப் படத்தில் நடித்த மல்லிகா போல இருப்பதாகப் பேசிக்கொள்வார்கள். பற்கள் பெரிதாக, பளிச்சென்று, சீரான வரிசையாக இருக்கும். ”சிரிச்சா ஜிப் திறந்தமாதிரி தெரியும்”என்று கோமதி அத்தை சொல்ல அவளுக்கு ஜிப் என்ற பேரும் ரகசியமாகப் புழங்கியது.
“சாயல் இருக்குல்ல?”என்று ஷிவ் கேட்டான்
“வேண்டாம், நாம இதைப்பத்தி பேசவேண்டாம்”
“சரி, இதோ இவ எப்டி இருக்கான்னு சொல்லவா?” என்று இன்னொருத்தியைக் காட்டினான்.
“உனக்கு வேற வேலையே இல்லியா?”
“பாத்தா எல்லா பொண்ணும் ஏதாவது ஒரு போர்ன் ஸ்டார் மாதிரியே இருக்காடா. நான் என்ன பண்றது? அனிதா ராஜ்னு ஒருத்தி… கொஞ்சம் பழசு.அவளுக்கு சிலிக்கா ராஜ்னு பேரு வச்சிருக்கணும்… அவ ஆக்சுவலா…”
“ப்ளீஸ்”
“சரி”
அதன்பின் நான் பேசவில்லை. கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். என் மனம் ஏன் அத்தனை கிளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தெரியவில்லை. அந்தக் கல்யாணவீட்டில் அமர்ந்திருக்கவே பிடிக்கவில்லை. எழுந்து வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றியது
கல்யாணச் சடங்குகள் மிகமிக மெதுவாக நடந்துகொண்டிருந்தன. என்னென்ன சடங்குகள்! எல்லாமே மிகத் தொன்மையானவை. தலைப்பாகை கட்டிக்கொள்வது, குச்சி ஏந்திக்கொள்வது. செடிநடுவது, நீர் ஊற்றுவது, குடத்தில் நீர் கொண்டு செல்வது, மரக்காலில் அரிசியை அள்ளுவது, தென்னைப்பூக்குலை நடுவது…இதெல்லாம் ஏதோ பழங்குடிக் காலத்துச் சடங்குகள். இன்னும் அப்படியே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண் திருவனந்தபுரத்தில் ஒரு ஃபேஷன் டிசைனர். பையன் துபாயில் ஒரு எஞ்சீனியர். பெண் முகத்தை பியூட்டி பார்லருக்குச் சென்று பார்பி பொம்மை போல ஆக்கிக்கொண்டிருந்தாள். முகம் தொலைவிலிருந்து பார்க்க அழகாகவும், அருகே செல்லச்செல்ல ஜெல்லிமீன் போலவும் தெரிந்தது.
”அவ பேரு என்ன?” என்றேன்.
“எவ?”என்று ஷிவ் கேட்டான்
”டேய் வெண்ணை, நீ காட்டினியே அவ”
“ஷீலா ஒர்ட்டேகாவா?”
“ஆமா”
“அப்ப அவளைத்தான் நினைச்சிட்டிருக்கே?”
“அவ ஆப்ரிக்காவா?”
“இல்ல. லத்தீனா. ஆப்ரிக்க வெள்ளைக்கார கலவை. அதான் நம்மூரு கலர், நம்மூரு முகம். நம்ம பயக்க பாதிப்பேரு லத்தினா பொண்ணுகளைத்தான் பாக்கிறாங்க”
“நான் பாக்கிறதில்லை”
”இனிமே பாப்பே”
“போடா”என்றேன்.
“இப்ப இது சாதாரண ஹேபிட்டா ஆயாச்சு. காலேஜ் கேர்ல்ஸெல்லாம்கூட பாக்கிறாளுக. எல்லார் பேரும் எல்லாருக்கும் தெரியும். ஏதாவது பேரைச் சொல்லிப்பாரு, சின்னப்பொண்ணுகளுக்குக் கூட கண்ணிலே சிரிப்போ ஜாக்ரதையோ வந்திட்டுப் போகும். பழைய சினிமாக்களிலே அந்தக் காலத்து பையன்கள் போர்ன் படம் பாக்க நாயா அலையறத இப்ப பாத்தா வேடிக்கையா இருக்கு. இப்ப இது மெயின்ஸ்டிரீம் கல்ச்சர்… அதனாலே இதை தவிர்க்கவே முடியாது”
“ஆமா. ஆனா நீ செய்றது அநியாயம். நான் இனிமே எப்டி அவங்க முகத்தைப் பாக்கமுடியும்?”
“நீ எதுக்கு முகத்தை பாக்கிறே?”
“டேய்”
“சரிடா, இங்க பார். போன ஜெனரேஷன்லே ஒவ்வொரு பொண்ணையும் எந்த நடிகைய மாதிரி இருக்கான்னு வெளிப்படையாச் சொல்லி ஞாபகம் வச்சிருந்தாங்கள்ல?”
“ஆமா, இந்த அத்தையைக்கூட ஆட்டோகிராஃப் மல்லிகான்னு சொல்லுவாங்க”
“அதேதான் இப்ப இப்டி. இத்தனைபேர் இவ்ளவு போர்ன் பாக்கிறப்ப இது நடக்காம இருக்குமா?”
”அதுவும் இதுவும் ஒன்னா?”
“என்ன வித்தியாசம்?”
”நீ வேணும்னே பேசுறே. நான் ஆர்க்யூ பண்ண வரலை”
”போர்ன் பத்துவருசம் முன்னாடி குடுத்த பரபரப்பை இப்ப குடுக்கலை. இன்னும் கொஞ்சநாளிலே எல்லாம் பழகிரும். சன்னி லியோன் மெயின்ஸ்டிரீம் சினிமாவுக்கு வந்தாச்சு. கடைதிறப்புவிழாவுக்கு கூப்பிடறாங்க. ஆயிரக்கணக்கானபேர் திரண்டு அந்தம்மாவைப் பாக்க போறாங்க. ஏர்ப்போர்ட்டிலே காலேஜ்பொண்ணுக அந்தம்மாகிட்டே ஆட்டோகிராஃப் வாங்குறாங்க… மியா கலிஃபா அரசியல் கருத்துக்கள் சொல்றாங்க. அப்றம் என்ன?” என்றான் ஷிவ் “போன வாரம் எங்க காலேஜ் கிளப்லே ஒரு பொண்ணை கிளப்டேக்கு அறிமுகம் செய்றப்ப அவளைப் பாத்தா இசபெல்லா டெய்லர் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. அவ வெக்கப்பட்டு சிரிச்சுக்கிட்டே கையாட்டுறா… ஈஸி”
“அது யாரு இசபெல்லா?”
“ஒரு தெய்வம்… டெய்லர்களோட சாமி. விடு. இது வேற உலகம்”
“இது நடந்திட்டிருக்குன்னு நானும் ஒப்புத்துக்கறேன். ஆனா கேவலமா இல்லியா?”
“என்னது?”
“பொண்ணுங்களை இப்டி வெறும் உடம்பா, செக்ஸ் டாய்ஸா பாக்கிறது?”
“உடனே உன்னோட தங்கச்சியை அப்டி நினைப்பியா அப்டீன்னெல்லாம் ஆரம்பிச்சிராதே. க்ளீஷே”
“எதிக்கலா இது சரியா இருக்கா? பொண்ணுகளை இப்டி வெறும் சதையா பாக்கிறது?”
“சதையா பாக்கலை டூட், டிரேட் ஆப்ஜெக்ட்ஸா பாக்கிறோம். டிஸ்ப்ளே மெட்டீரியலா பாக்கிறோம். ஆனா பொம்புளைங்களை மட்டுமில்லை எல்லாரையுமே அப்டித்தான் இப்ப பாக்கிறோம்… நான் மாசம் எட்டாயிரம் ரூபா குடுத்து ஃபிட்னெஸ் பாருக்கு போய் பைசெப்ஸையும் செஸ்டையும் ஏத்திக்கிட்டு வந்திருக்கேன்ல? லீவ் இட்”
நான் பெருமூச்சு விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஷிவ் அவனுடைய நண்பன் ஒருவனைப் பார்க்க எழுந்து சென்றான். “வரேண்டா… பாப்பம். சிலசமயம் அப்டியே போய்டுவேன்”
சந்திரசேகர் மாமா என்னை அழைத்தார். “அங்க என்னடா பண்றே தனியா உக்காந்து?”
“சும்மா”
“என்ன சும்மா? இதான் உன்னோட பிரச்சினை. இத்தனைபேர் இருக்காங்க. எல்லாரும் உன்னோட ரிலேட்டிவ்ஸ். பாதிப்பேரு பெரிய இடங்களிலே இருக்காங்க. உன்னை கைதூக்கி விடுறதுக்கு பல பேருக்கு சக்தி இருக்கும். அதெல்லாம் தண்ணியிலே கிடக்கிற எறும்பை தூக்கிவிடுறது மாதிரி அவங்களுக்கு… நீ என்ன பண்ணணும்? அறிமுகம் செஞ்சுக்கிடணும். உன்னைப்பத்தி அவங்களுக்கு ஞாபகம் இருக்கிற மாதிரி செஞ்சுகிடணும். அதுக்குப்பேருதான் மார்க்கெட்டிங். உன்னை நீ மார்க்கெட்டிங் பண்ணிக்கிடணும். கூவிக்கூவி விக்கணும். இல்லேன்னா இங்கதான் இருப்பே. நெய்யாற்றங்கரையிலே மேஸ்திரிகள் கிட்டே மல்லாடிக்கிட்டு. என்ன பேமெண்ட் குடுக்கிறான் உனக்கு?”
நான் முனகியது அவர் காதில் விழவில்லை.
“சத்தமாச் சொல்லு, எவ்ளவு?”
“பன்னிரண்டாயிரம்”
“டீசல் செலவு சேத்தா, சேக்காமலா?”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“அதாவது சோறு போடுறான், அவ்ளவுதான். மேஸ்திரி வாங்குறதுலே பாதிச்சம்பளம். வெக்கமா இல்லை?”
நான் தலைகுனிந்து நின்றேன்.
“நான் சிலபேரை அறிமுகம் பண்றேன். பாத்து பதமா நடந்துக்க. அவங்களுக்கு உன்மேலே நம்பிக்கை வரணும்”
நான் உதட்டை இழுத்துக் கடித்துக்கொண்டேன். அப்படியே நழுவிவிடலாமா என்று யோசித்தேன். இதனால்தான் நான் எந்த விழாக்களுக்கும் போவதில்லை.
“வா, அவருதான் ஜிஎம் கன்ஸ்டிரக்ஷனோட ஆடிட்டர். அனந்தகிருஷ்ணன்னு பேரு. உனக்கு முறையிலே பெரியப்பா வேணும்…”
“இல்ல, நான்…”
“என்ன?”
”அவரு ஏதாவது கேட்டா?”
“கேட்டா பதில்சொல்லு…வாடா”
நான் அவர் பின்னால் சென்றேன். மாமா என்னிடம் “கல்யாணத்துக்கு வர்ரே, ஒரு நல்ல சட்டை போட்டுட்டு வரக்கூடாதா? பழசுபட்டையை போட்டுட்டு கட்டுமான சைட்டுக்கு போறது மாதிரி வந்திடறே…”என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
மிகமெல்லிய சட்டம்போட்ட கண்ணாடியும் வெண்ணிற சட்டையும் வேட்டியுமாக நின்ற அனந்தகிருஷ்ணனைச் சுற்றி நான்குபேர் நின்றனர். அவர்கள் உரையாடிச் சிரித்துக் கொண்டிருக்க அவர் மிகமெல்ல புன்னகைத்து ,தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார், கூடிநின்றவர்கள் அவரை மகிழ்விக்க முயல்வது அவர்களின் முகபாவனைகளில் தெரிந்தது. கோயிலில் சாமிச்சிலையை சுற்றி நிற்கும் முனிவர்களின் பாவனை.
சந்திரசேகர் மாமா வைத்த வணக்கத்தை அவர் மிகச்சிறிய புன்னகையால் ஏற்றுக்கொண்டார். என்னை திரும்பிப் பார்க்கவில்லை. நானும் வணக்கம் வைத்தேன். அவர் அதை கண்டாரா என்று தெரியவில்லை.
ஏதோ ஒரு எஞ்சீனியரைப் பற்றிய பேச்சு போய்க்கொண்டிருந்தது. ”அவனுக்கு டிரிகோனமெட்ரியே தடுமாறுது… பின்ன என்ன?”என்றார் அனந்தகிருஷ்ணன். அத்தனைபேரும் சிரித்தனர்.
அந்த வேடிக்கை முடிந்து சிரிப்பு கொஞ்சம் அடங்கியதும் சந்திரசேகர் மாமா “எஞ்சீனியருங்க பெருத்துப் போய்ட்டாங்க… இந்தா இவனும் எஞ்சீனியர்தான். நம்ம மீனாட்சிக்க மகன்… அதான் செத்துப்போன பிரபாகரனோட பெஞ்சாதி. பிரபாகரன் உங்களுக்கு முறையிலே தம்பி” என்றார்.
அவர் என்னைப் பார்த்தார். புன்னகையா என்று சொல்லாதபடி உதடுகள் கொஞ்சம் இழுபட்டன.
“இங்க நெய்யாற்றங்கரையிலே எஞ்சீனியரிங்குக்கு என்ன சான்ஸ்? சும்மா ஏதோ வேலை பாக்கிறான்… நான்தான் சொன்னேன், நம்ம சொந்தத்திலேயே மகாராஜாக்கள் மாதிரி ஆளுங்க இருக்காங்கன்னு. கடைக்கண்ணாலே பாத்தாப்போரும், அப்டியே மேலே பறந்திரலாம்னு சொன்னா முழிக்கறான். பெரியவங்க அருள் பெருமாள் அருள்னு சொல்றதுண்டு. என்ன நான் சொல்றது? டேய், பெரியப்பாவை பாத்து கும்பிட்டுக்க. இப்பல்லாம் தெய்வம் கோயிலிலே இல்லை. கண்ணெதிரிலே மனுஷங்களா நடமாடுது. பெரியப்பா ஒரு வார்த்தை சொன்னா அதோட உனக்கு ஒரு லைஃப் அமைஞ்சாச்சுன்னு வைச்சுக்கோ”
அனந்தகிருஷ்ணன் என்னை பார்த்தார். கண்களில் என்ன என்று சொல்லத்தெரியவில்லை.
“பையனுக்கு ஏதாவது கண்பார்த்து செய்யணும்”என்றார் சந்திரசேகர் மாமா.
“என்ன படிச்சிருக்கே?”என்று அனந்த கிருஷ்ணன் கேட்டார்.
“பி.இ” என்றேன்.
“எவ்ளவு பர்சண்டேஜ்?”
“கம்மிதான்”
”அதாவது நாலுபேர் நடுவிலே சொல்லிக்க முடியாது…நல்லது” அவர் இன்னொருவரிடம் ”இப்பல்லாம் படிப்புன்னா என்ன? நாலஞ்சு வருஷத்தை வெட்டியா செலவழிக்கிறது. தினம் சினிமா ,கண்டபடி தீனி, ராத்திரி கண்ணுமுழிப்பு. உடம்பு பஞ்சுப்பொதி மாதிரி ஆயிடும். உண்மையைச் சொன்னா அந்தப் படிப்பு இல்லேன்னா மண்ணு சுமந்தாவது வாழலாம்” என்றார்.
“ஆமா, இதெல்லாம் என்ன படிப்பு? ஒண்ணுமே தெரியாது. டிகிரிய மட்டும் தூக்கிட்டு வந்திருவானுக” என்றார் ஒருவர்.
“சொல்லாதீங்க. நான் உக்காருற இடத்திலே வந்து ஒருநாள் உக்காந்து பாருங்க. வருவானுக, மண்ணு கூட சுமக்க முடியாத தடியனுங்க. ஒருத்தன் இப்டித்தான் எம்.காம்.னு சொல்லிட்டு வந்தான். போஸ்டாபீஸுக்கு அனுப்பினேன். அவன் எங்க போனான் தெரியுமா? போஸ்டல் சூப்ரண்டெண்ட் ஆபீஸுக்கு. அங்கே போய் என் பேரைச் சொல்லி என்னமோ உளற அவரு என்னை கூப்பிட, என்னத்தைச் சொல்ல?” என்றபின் “ நீ என்ன ஐடியா வச்சிருக்கே?”என்று என்னிடம் கேட்டார்.
“கன்ஸ்டிரக்ஷன்”
“கன்ஸ்டிரக்ஷன்னா? மண்ணு கல்லு சுமக்கிறது?” என்றார். பின்னால் மெல்லிய சிரிப்பொலிகள் கேட்டன.
“இல்ல” என முனகினேன்.
“பின்ன?”
”எஞ்சீனியரிங்”
”உன் மார்க்கை வைச்சுகிட்டு நீ எஞ்சீனியரிங் வேலை செஞ்சா கட்டிடம் தலையிலே விழுந்திருமே?”
“அதெல்லாம் கத்துக்கிடுவான்”என்று சந்திரசேகர் மாமா சொன்னார்.
“அதாவது சம்பளம் குடுத்து கம்பெனிக்காரன் உனக்கு எஞ்சீனியரிங் கத்துக்குடுக்கணும். கத்துக்கிட்டதும் கூடுதல் சம்பளம் வேணும்னு கேப்பே?”
அதற்குள் முகூர்த்தநேரம் அணுக, நாதஸ்வரம் வேகமெடுத்தது. அவர் திரும்பிப் பார்த்துவிட்டு என்னிடம் “நான் யாரையும் ஈசியா ரெக்கமெண்ட் பண்றதில்லை. மொக்க மடையனுங்களை ரெக்கமெண்ட் பண்ணி இதுவரை நான் அனுபவிச்சது போரும்… பாப்பம்”என்றார்
ஒருவர் அருகே வந்து அவரிடம் பேச ஆரம்பிக்க அனந்த கிருஷ்ணன் திரும்பிய தருணம் பார்த்து சந்திரசேகர் மாமா என் கையைப் பிடித்து “டேய் அப்டியே காலிலே விழுந்திரு” என்றார்.
நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். என் காதில் மொத்த ஓசையும் ஒரு பெரும் ரீங்காரமாக ஒலித்தது.
“நான் ஒரு நல்ல வாக்கு சொல்லுறேன். அப்ப நீ அப்டியே காலிலே விழுந்து கும்பிட்டிரு…”
என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. என் மூளையே களிமண் மாதிரி இருந்தது
அனந்தகிருஷ்ணன் திரும்பியதும் மாமா “பையனுக்கு ஆருமில்லை. உங்க கருணையாலே மேலே வந்தாத்தான் உண்டு… இல்லேன்னு சொல்லிரப்பிடாது”என்றார். கூடவே என் கையை அழுத்தினார்.
நான் சட்டென்று குனிந்து அவர் காலைத் தொட்டேன்.
“சேச்சேச்சே, என்ன இது… ச்சே” என அவர் பின்னகர்ந்தார். ”ஒரு தெறமையும் இல்லேன்னாலும் காலுபிடிக்க கத்து வச்சிருக்கானுக. என்னைய கேட்டா காலுபிடிக்கிறவனுகதான் காலை வாரவும் செய்வானுக”
நான் ஒரு கணத்தில் உடலெங்கும் ஒரு குறுகலை உணர்ந்தேன். எல்லாத் தசைகளும் இழுத்துக்கொள்வதுபோல.
“அப்டி விட்டிரப்பிடாது”என்றார் மாமா.
“பாப்பம் பாப்பம்”என்று அனந்த் கிருஷ்ணன் அவரை அழைக்க வந்தவருடன் நடந்தார்.
மாமா என்னிடம் “செய்வாரு… நீ நம்பிக்கையா இருடே’என்றார்.
அங்கே நின்ற ஒருவர் “கெட்டியா காலைப்புடிச்சுக்கோ தம்பி, முன்னுக்கு வந்திருவே” என்றார்.
“அதான் பையன் படிப்பில்லேன்னாலும் மத்ததிலே சூட்டிகையா இருக்கானே. சட்டுன்னு விழுந்துட்டான் பாருங்க. நம்ம பையனுங்க செய்வானுகளா?”
என் கண்களில் நீர் நிறைந்தது. என்னால் நிற்கவே முடியவில்லை. தொண்டை ஏறியிறங்கியது.
“செரி,போ. நாம சொல்லியாச்சு. இனி தெய்வ சங்கல்பம்”என்றார் சந்திரசேகர மாமா.
நான் அடிபட்ட நாய் போல அங்கிருந்து ஓடினேன். அத்தனை கண்களும் என்னையே பார்ப்பதுபோல உணர்ந்தேன். மையவாசல் வழியாக வெளியே போகமுடியாது. ஆகவே சந்துக்குள் நுழைந்து கைகழுவும் இடம் வழியாக வெளியே சென்றேன். கார் பார்க்கிங்கை அடைந்து அவ்வழியாக வெளியே செல்லலாம். மண்டபத்திற்கு பின்பக்கம் அது. அங்கும் மையச்சாலைதான்.
கூட்டமில்லாத பகுதியை அடைந்தபோது அப்பால் செல்போனில் பேசியபடி ஷிவ் நிற்பதைக் கண்டேன். உடனே எதிர்ப்பக்கம் திரும்பிவிட்டேன். அருகே கழிப்பறை வரிசை. ஒன்றைத் திறந்து உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். சிறிய தனிமையான அந்தச் சதுரம் எனக்கு ஆறுதலை அளித்தது. என் உடல் அவ்வளவு வியர்த்திருப்பதை, என் கைகள் அத்தனை நடுங்குவதை, என் கால்கள் அவ்வளவு பதறிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
மெல்ல மெல்ல என் உடல் தளர்ந்தது. இயல்புநிலையை அடைந்தேன். அப்போது ஒரு சிகரெட் வேண்டுமென்று தோன்றியது. நான் சிகரெட் பிடிப்பதில்லை. வாழ்க்கையிலேயே பத்துப்பதினைந்து தடவைக்குமேல் சிகரெட் பிடித்ததில்லை. பிடித்த போது சிகரெட் ஒத்துக்.கொள்ளவுமில்லை. ஆனால் அப்போது சிகரெட் தேவைப்பட்டது.
ஆனால் எழுந்து வெளியே செல்லவும் பிடிக்கவில்லை. செல்போனை எடுத்து வெறுமே வாட்ஸப் செய்திகளை பாத்தேன். பெரும்பாலும் ஃபார்வேர்ட் மெசேஜ்கள். அவற்றிலும் பெரும்பாலும் நம்பிக்கையூட்டும், உற்சாகமூட்டும், சுயமுன்னேற்றப் பொன்மொழிகள். அவை எனக்குப் பிடிக்கும். அவற்றை வாசிக்கையில் நான் அடையும் ஆறுதல் அந்தரங்கமானது. ஆனால் அவற்றை நண்பர்களிடம் கேலியாகப் பேசிக்கொள்வேன்.
நான் ஓர் எண்ணத்தால் தொடப்பட்டேன். அதை எவரோ என்னை உண்மையாகத் தொட்டதுபோல் உணர்ந்து அங்குமிங்கும் பார்த்தேன். அந்த இடத்தின் அந்தரங்கம் எனக்கு இனிமையான ஓர் உணர்வை அளித்தது. புன்னகையுடன் ஷீலா ஒர்ட்டேகா என்று தேடினேன். சிறு வீடியோ கிளிப்கள் ஓடின. அவற்றை பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு காம உணர்வு உருவாகவில்லை. விந்தையான ஒரு நிமிர்வு உருவானது. ஒரு திமிர், கொஞ்சம் கசப்பும் ஏளனமும் கலந்த ஒரு கெத்து.
வெளியே எவரோ கதவை தட்டினர். நான் திடுக்கிட்டு விழித்தேன். செல்போனை ஆஃப் செய்துவிட்டு எழுந்து ஆடை சீரமைத்து வெளியே வந்தேன். யாருமில்லை. யாரோ எங்கோ தட்டிய ஓசை.
முகம் கழுவிக்கொண்டேன். கர்ச்சீஃபால் முகத்தை அழுத்தமாகத் துடைத்தேன். தலையைச் சீவிக்கொண்டேன். முதல் பந்தி முடிந்து மக்கள் வெளியேறுவதை பின்பக்கம் நின்று பார்த்தேன். வந்தது வந்துவிட்டோம். போய் சாப்பிட்டுவிட்டால் என்ன?
வேண்டாம் என்று தோன்றியது. இந்த கெத்து ஏன் வந்தது என்று தெரியவில்லை. இதை இப்படியே தக்கவைத்துக்கொண்டு போய்விடுவதே நல்லது. நான் பைக் கொண்டுவரவில்லை. என் பைக் அரதப்பழசான டி.வி.எஸ். பத்தாண்டுகள் கட்டுமான பகுதிகளில் உழைத்து மண்ணும் துருவும் படிந்தது. குஞ்சன் மேஸ்திரியிடம் வாங்கினேன்.ஆட்டோதான் பிடிக்கவேண்டும். ஆனால் மண்டபத்தின் முகப்புக்குச் சென்றால் அங்கே மீண்டும் சந்திரசேகர மாமாவைச் சந்திக்கவேண்டும். அல்லது அனந்த கிருஷ்ணனை.
கார் பார்க்கிங்குக்கு போக ஒரு சின்ன இடைவழி இருந்தது. அதன் வழியாக நான் அங்கே சென்றேன். மதியவெயிலில் விதவிதமான கார்களின் சிப்பியுடல்கள் தெரிந்தன.வண்ணம் வண்ணமாக விதைகளைப் பரப்பி வைத்ததுபோல.சிறிய நீர்ச்சுனைகள் போல முகப்புக்கண்ணாடிகளில் ஆங்காங்கே சூரியன்கள் சுடர்ந்தன.
நான் கார்கள் நடுவே செல்லும்போது பிரபா அத்தையை பார்த்தேன். ஒரு காரில் ஏறப்போனாள். எனக்கு ஏன் அப்படித் தோன்றியது என்று தெரியவில்லை. நான் நேராக அவளை நோக்கிச் சென்று குனிந்து “ஹாய்” என்றேன்.
“ஹாய்” என்று அத்தை சொல்லி அணிந்திருந்த கூலர்ஸை கழற்றினாள்.
“நான் விஜி… விஜயகுமார். நான் உங்களை பாத்திருக்கேன். பேசினதில்லை”
பிரபா அத்தை புருவம் சுருங்க “ஓ”என்றாள்.
“நான் மீனாட்சியோட பையன்”
அத்தை முகம் மலர கார்க்கதவை திறந்து இறங்கி நின்று “மீனாட்சி பையனா? நாலஞ்சு வருஷம் முன்னாடி பாத்தது. வளந்திட்டே”என்றாள்.
“ஆமா, இப்ப பிஇ முடிச்சுட்டேன். கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பண்றேன்”
“அப்டியா, நைஸ்… அம்மா கல்யாணத்துக்கு வரலியா?”
“இல்லை. அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. சுகர்… நான் மட்டும்தான் வந்தேன். உங்களை அப்பவே பாத்தேன்”
“அப்பவே பாத்திருக்கலாமே. நான் உடனே போகணும். இன்னிக்கு ஒரு போர்டு மீட்டிங் இருக்கு. இந்தா என்னோட கார்டு. திருவனந்தபுரம் வந்தா வந்து பாரு என்ன? ஃபோன் பண்ணு”
அவள் நீட்டிய கார்டை பார்த்தேன். நேஷனல் ஹைவேஸ் நிறுவனத்தின் வட்டார மேலாளர். நானெல்லாம் கும்பிட்டு காலடியில் புழுதியாக அமரவேண்டிய அளவு பெரிய பதவி.
மீண்டும் ஏன் அதைச் செய்தேன் என்று தெரியவில்லை. நான் ஒரு கோணல் புன்னகையுடன் “உங்களுக்கு ஷீலா ஒர்ட்டேகாவோட சாயல் இருக்கு” என்றேன் “ஷீலா ஒர்டேகா, போர்ன் ஸ்டார்”
“ஆமா, சிலர் அப்டிச் சொல்லுவாங்க…” என்று அத்தை வாய்விட்டுச் சிரித்தபோது சீரான பெரிய பல்வரிசை ஒளியுடன் தெரிந்தது. எத்தனை நேர்த்தியான பற்கள். சிறிய பற்கள்தான் அழகு என்பார்கள். ஆனால் பெரிய பற்கள்போல அத்தனை பெரிய சிரிப்பை அவற்றால் உருவாக்க முடியாது.
நானும் சிரித்தேன். உண்மையில் அப்போது எல்லாவற்றையும் மறந்து மனம்விட்டுத்தான் சிரித்தேன்.
“நைஸ், பாப்போம். வந்துபார் என்ன?” என்று அத்தை கைகுலுக்க கைநீட்டினாள்.
எங்களூர்ப் பக்கம் அந்த வழக்கமே இல்லை. ஆண்களே கைகுலுக்குவதில்லை. பெண்களுடன் நான் கைகுலுக்கியதே இல்லை.
நான் ஒருகணம் திகைத்தபின் கைநீட்டினேன். அத்தை என் கையைப் பற்றி குலுக்கினாள். உறுதியான வலிமையான கைகுலுக்கல்.
“பை”என்று காருக்குள் அமர்ந்தாள். கதவு மூடியபோது நான் ஒரு சொல்லும் இல்லாமல் நின்றிருந்தேன். வெண்ணிறமான ஆடி கார் ஓசையில்லாமல் முன்னகர்ந்து மிதந்து சென்றது.
என் கைகளில் அந்தக் கைகுலுக்கல் அப்படியே இருந்தது. என்ன ஒரு வலுவான கை. பெண்களின் கைகள் இத்தனை வலிமையாக இருக்குமா என்ன? அந்தக் கையை அசைத்தாலே அக்குலுக்கல் அதிலிருந்து விலகிவிடும் என்பதுபோல அப்படியே கொண்டுசென்றேன்.
ஆட்டோவுக்காக சாலையோரம் நின்றேன். ஷீலா ஒர்ட்டேகாவை நினைத்துக்கொண்டேன். என்ன ஒரு அழகான பல்வரிசை. பற்கள் பெரிதாகத்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் அத்தனை விரிந்து சிரிக்க முடியும்.
***
19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]அ.பாண்டியனும் தமிழ்ப்புத்தாண்டும்
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் இன்றைய காந்தி என்ற பேரில் பின்னாளில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். அதில் வைக்கம் போராட்டத்தில் ஈவேரா அவர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி எழுதியிருந்தேன். நான் எழுதியிருந்தது வைக்கம் போராட்டத்தின் ஓர் ஒட்டுமொத்தச் சித்திரம். அது எப்படி தொடங்கப்பட்டது, எவரெவர் பங்கெடுத்தனர், எப்படி அது முடிக்கப்பட்டது, அது உருவாக்கிய தொடர்விளைவுகள் என்ன என்று ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன்.
டி.கே.மாதவன் தொடங்கிய அவ்வியக்கம் காந்தியர்களால் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் நாராயணகுருவின் ஈடுபடலால் முடிவுக்கு வந்தது. அதில் ஈவெரா பங்கெடுத்தார், சிறைசென்றார். ஆனால் அவர் அதை தொடங்கவில்லை, தலைமைதாங்கி நடத்தவில்லை, முடித்துவைக்கவுமில்லை. அப்போராட்டத்தின் ஒரு சிறு கால அளவில் அதில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து போராடிய எம்.வி.நாயிடு, கோவை அய்யாமுத்துபோன்ற மூத்த காங்கிரஸ்காரர்களுடன் ஈவேராவும் சென்றார்.
அவருடைய பங்களிப்பை நான் மறுக்கவில்லை. ஆனால் அத்தனை பாடநூல்களிலும் அவர் அப்போராட்டத்தை Launched என்றும், தொடங்கி நடத்தி முடித்து உரிமைகளை ‘வாங்கிக்கொடுத்தார்’ என்றும் சொல்லப்பட்டிருப்பது மிகை, பொய் என்று சொன்னேன். திரும்பத்திரும்ப ஈவேரா ‘தொடங்கவில்லை நடத்தவில்லை முடிக்கவில்லை- பங்கெடுத்தார்’ என்று விளக்கினேன். குறைந்தது இருபதுமுறை சொல்லிவிட்டேன்.
ஆனால் இன்றும் திரும்பத்திரும்ப அவர் பங்கெடுத்ததற்கான சில ஆதாரங்களை காட்டுகிறார்கள். பெரும்பாலும் அவரோ அவர் ஆதரவாளர்களோ எழுதிய ஆதாரங்கள். அவருடன் அங்கே போராடியவர்கள் அளிக்கும் ஆதாரங்கள். அதன்பின் ஈவேரா வைக்கம்போராட்டத்தை முழுக்க அவரே நடத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது, ஜெயமோகனுக்கு பதில் இதோ என்று கொக்கரிக்கிறார்கள். நூல்களையே இந்த ஒழுங்கில் எழுதி வெளியிடுகிறார்கள். தமிழ் ஹிந்து போன்ற கூலி ஊடகங்களை பயன்படுத்தி ஒருபக்கச் செய்திகளாக பரப்புகிறார்கள். தமிழ் ஹிந்து ஆதாரபூர்வமாக அவற்றுக்கு அளிக்கப்பட்ட மறுப்புகளைக்கூட வெளியிடுவதில்லை.
ஒரு கட்டத்தில் இந்த வைக்கோல்புதர் விவாதம் இவர்களின் நூறாண்டு பழக்கமுள்ள உத்தி, இதனுடன் அறிவார்ந்த விவாதம் நடத்தமுடியாது என்று நான் ஒதுங்கிவிட்டேன். என் எழுத்துக்கள் அப்படியே ஆவணமாக, இணையத்தில் எப்போதும் எடுக்கக்கூடியவையாக உள்ளன.
இதே சீரில்தான் தை பொங்கலே தமிழர் புத்தாண்டு என்று ‘1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய நாநூறு தமிழறிஞர்கள் ஒரே குரலாக முடிவுசெய்து அறிவித்தனர்’ என்ற பொய் சொல்லப்படுகிறது. அதற்கு ஆதாரம் எங்கே, மறைமலை அடிகளார் எங்கேயாவது அதைச் சொல்லியிருக்கிறாரா, அவருடைய நாட்குறிப்புகள்கூட பிரசுரமாகியிருக்கின்றனவே என்று அ.பாண்டியன் கேட்கிறார்.
அதற்கு அவருக்கு தைப் பொங்கலே தமிழர்புத்தாண்டு என்று [இன்று] சொல்லப்படுவது தெரிந்திருந்து அவர் [அன்றே] மறுத்திருப்பாரே, மறுப்பே இல்லையே, மறுப்பு இல்லாவிட்டால் உடன்பாடுதானே என உருள்கிறார்கள். இந்த ஆழ்ந்த தர்க்கத்தை முத்திரைகுத்துதல், வசைபாடுதலுடன் கலந்து முன்வைக்கிறார்கள்.
இந்தக் கேள்விகள் எவையும் அரசியல் தரப்புக்கள் அல்ல. அ.பாண்டியனே சொல்வதுபோல தை பொங்கலே தமிழ்ப்புத்தாண்டு என்பதில் அவருக்கு மறுப்பில்லை. ஆதாரம் எங்கே என்று கேட்கிறார். ஒரு சூழலில் ஒரு வரலாற்றுக் கருத்து சொல்லப்படுகையில் அதற்கு குறைந்த பட்ச வரலாற்று ஆதாரம் கேட்பதுதான் அறிவுச்செயல்பாடு. அந்த அறிவுச்செயல்பாட்டின்மேல் நடக்கும் இந்த வசைமழைதான் உண்மையில் ஃபாசிசம் என்பது
தைப்புத்தாண்டு: அந்த இன்னொரு வாழைப்பழம்தான் அது!இருளில், கூர்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இருளில் கதையின் தலைப்புத்தான் முக்கியம். இருளில் இருப்பவை பற்றியது அந்தக்கதை. இருளில் எவ்வள்வோ இருக்கின்றன, பேசப்படவே முடியாதவை. ஆனால் அவைதான் வாழ்க்கையை நிர்ணயம்செய்கின்றன. இருள் என்பது கற்பனையா, வாழ்க்கையின் ஆழமா, எதிர்பாராத தன்மையா எதுவானாலும் இருக்கலாம்.
வெளிச்சத்தில் நிகழும் சம்பவங்களுக்குத்தான் நமக்கு விளக்கம் இருக்கிறது. இருளில் நடக்கும் சம்பவங்களுக்கும் நாம் வெளிச்சத்தால் விளக்கம் அளிக்கிறோம். ஆனால் உண்மையில் விளக்கத்துக்கு அப்பாலிருக்கின்றன பெரும்பாலான வாழ்க்கையின் அடிப்படைகள்.
அப்துல் வாழ்க்கையில் இருட்டில் வேறொரு உண்மை இருக்கிறது. மனைவியை அவளும் அவள் மூஞ்சியும் என்று திட்டுபவன் அவள்மேல் பெருங்காதல்கொண்ட ஆண். அதை அவரே அறிவதில்லை. தருண் தேடுவதென்ன என்று அவனுக்கே தெரியாது
அந்த இருட்டு ஒரு யானை மாதிரி. அது ஒவ்வொருவரையும் அறைந்து தெறிக்க விடுகிறது. ஆனால் கதைமுடிவில் அப்படி அறைந்து ஒருவரை அது மேலேற்றிவிடுமா, விடுதலையை அளித்துவிடுமா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. ‘யா ரஹ்மான்’ என அதற்கு அப்துல் பதில் சொல்கிறார்
ராஜசேகர்
அன்புநிறை ஜெ,
இருளில் மிக மிக ஆழமான ஒன்றைப் பற்றிய கதை. வாழ்வில் எதிர்பாராது ஒரு முறை நிகழ்ந்து விடும் பேரனுபவம் என்றைக்குமாக அதிலிருந்து வெளியேற முடியாது செய்து விடும் வாதையைப் பற்றிய கதை.
உண்மையில் இருளில் கதையைப் படித்ததும் கடிதம் எழுத எண்ணிய மனதை, எழுத நினைத்த விஷயங்களை மனதின் அனைத்து கடிவாளங்களையும் இட்டு இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது. அனைத்தையும் எழுதுவதற்கு அந்த இருளே வடிவாக வந்த பெண் போல சத்தியம் வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.
அலைகள் அடங்கிய பிறகு கதை மெல்ல வேறொன்றாகியது. எதை வாசித்தாலும் முதலில் வெண்முரசில் சென்று பட்டு எதிரொலிக்கும் அகம் ஊர்வசி புரூரவஸிடம் வாங்கிக் கொள்ளும் சத்தியத்தை நினைவுபடுத்தியது.
இக்கதையில் எதற்கு மூவர் என்ற கேள்வி எழுந்தது. அப்துல் நினைவுகளால் அது கிளர்த்தும் உணர்வுகளால் கட்டுண்டவர். அதுவே அவரைக் கனவிலும் தொடர்கிறது. அவரைக் கட்டியிருக்கும் ஜின் அதுதான். தருண் புலன்களின் அதி தூய்மையான அனுபவத்தால் என்றைக்குமாக கட்டப்பட்டிருக்கிறான். அவன் பித்தனல்ல. ஷேர் மார்க்கெட்டில் பணம் செய்யும் திறமை உள்ளவன், நீலம் அல்ல இண்டிகோ என திருத்தும் அளவுக்குக் கூர்மையானவன். அவனது பேரனுபவத்தை அவனது உடலும் உள்ளமும் தாள முடியாது அவனை நாடோடியாக்கி இருக்கிறது. கதைசொல்லி தூய தர்க்கமாக வருகிறான். அறிவின் துலாக்கோல் கொண்டு அப்துலையும் தருணையும் அளந்து கொண்டே இருக்கிறான். அப்துலின் உணர்வுகளையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் அவனது தர்க்கம் நகைத்துக் கடக்கிறது. தருணின் உடல் சார்ந்த உணர்வெழுச்சியையும் அவன் போதை தரும் உச்சத்தில் இருக்கிறானோ என்று சந்தேகிக்கிறான். இறுதியாகவும் தருண் அத்தருணத்தில் உருவாக்கிக் கொண்ட ஒரு கதையைத் திறம்பட நடித்துவிட்ட சென்ற ஒருவனாக கதைசொல்லி சந்தேகிக்கிறான். அவரவர் இயல்பே வாழ்வின் அனுபவங்களைத் தீர்மானிக்கின்றன. ஓட்டும் கையில் ஜின் இருந்து காப்பது அப்துலின் அகநம்பிக்கை. உடலின் எல்லை வரை பயணித்துக் கடப்பது தருணின் பயணம். ஒரு மாபெரும் அனுபவத்துக்குப் பின் தருண் செய்வதனைத்தும் உடல் ஆற்றலை சிதறடித்துத் தனை மீட்டுக் கொள்வதாகவே இருக்கிறது. இந்த இரண்டு நோக்குகளையும் தன் அறிவால் கேட்டு வெறும் பார்வையாளனாக மட்டும் இருப்பது கதைசொல்லியின் பயணம். அனைவருக்கும் சாலை பொதுவானது. பயணங்கள் வேறானது.
இச்சம்பவத்துக்குப் பிறகு அவள் என்னவாகி இருப்பாள் என்பது குறித்த அப்துல் மற்றும் கதைசொல்லியின் உரையாடல் ஒரு உச்சம். கீழே சிந்திய நீர் சிதறிப் பரவுவது போல சித்தம் அவரவர் போக்கில் விரித்து நீட்டிக் கொள்ளும். அவர்கள் பேசிக் கொள்ளும் ஒவ்வொரு சாத்தியமுமே நடக்கக்கூடியதுதான். அவளும் தருணைப் போலத் தேடலில்தான் இருப்பாள் என்பது உணர்வுபூர்வமான ஒரு எதிர்பார்ப்பு, திரைப்படமாக எடுப்பதற்கும், ஒரு ஆணின் விருப்பக் கற்பனையாக எண்ணிக் கொள்ளவும் உகக்கும் முடிவாகக் கூட இருக்கலாம்.
எல்லாவற்றிலும் அவனைக் காணக்கூடியவளாக மாறியிருக்கலாம் என்பது அறிவு சென்று தொடக்கூடிய உச்சம். அகத்தின் அலைக்கழிவை உற்றுநோக்கும் தர்க்கம் ஓரிடத்தில் ஒரு உன்னதமாக்கலை சென்று தொடுகிறது. அனைத்தையும் கடந்து பெரும் உயரத்துக்கு அவள் சென்றிருக்கலாம் என்பது அனைத்துக்கும் மேலான ஒரு ஆன்மீக உச்சத்துக்கு கதையை எடுத்துச் செல்கிறது.
உங்கள் கலையில் நீங்கள் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் நிறுவுகிறீர்கள்.ஒரு துளி சம்பவத்தை நீங்கள் உருவாக்கி வார்த்த மேதைமை மலைப்பை உருவாக்குகிறது.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள ஜெ
கூர் கதையில் அந்தச் சிறுவர்களை போலீஸ்காரர்கள் அஞ்சுவது அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது. நானே அதைக் கண்டிருக்கிறேன். சிறுவர்கள் போலீஸை பயப்படுவதில்லை. அவர்களுக்குப் பயமே இல்லை. பயப்படாதவர்களிடம் போலீஸ்காரர்கள் தோற்றுவிடுவார்கள்.அதைவிட போலீஸ்காரர்களுக்குக்கூட அந்தச் சிறுவர்களைப் பார்த்தால் ஒரு குற்றவுணர்ச்சியும் இருக்குமென நினைக்கிறேன்
செல்வக்குமார்
அன்புள்ள ஜெ..
கூர் கதை ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் நடக்கிறது ஆனால் ஒட்டுமொத்த மானுட வாழ்க்கையையும் புரிந்து கொள்ள வைக்கிறது;
யார் எந்த நேரத்தில் கூர்மை பெற்று பிறரை கிழிப்பார்கள் என்பது பல சமயங்களில் அவரவர்களுக்கே தெரியாது
உங்கள் பழைய சிறுகதை ஒன்றில் , மனைவியின் துரோகத்தை மன்னித்து இயல்பாக பேசும் கணவன் திடீரென ஒரு கணத்தில் கூர் கொண்டு அவளை வெட்டி எறிவான்
அசோகமித்திரனின் ஒரு ராத்தல் இறைச்சி கதையில் , நாய் தன்னை கடித்ததைக்கூட மன்னிக்க தயாராக இருப்பவனால் அது தன் காலை நக்கும் அடிமைத்தனத்தனத்தால் சீண்டப்படுகிறான்.
அதேபோல கூர் கதையில் இளம் குற்றவாளிகளை கருணையுடன் பார்க்கத்தெரிந்த , மனிதாபிமானம் மிக்க இன்ஸ்பெக்டரின் ஈகோ , ஒரு விசுவாசமான முழு கீழ்ப்படிதல்மிக்க பணியாளைப்பார்த்து சீண்டப்படுகிறது. காரணம் , அவர் வாழ்க்கையே மேலதிகாரிகளுக்கும் அரசு இயந்திரத்துக்கும் விசுவாசமாக இருக்கும் அடிமைப்பிழைப்புதானே.
அந்த வகையில் ஒரு கணத்தில் அவர் கூர் , ஒரு அப்பாவியின் வாழ்க்கையை அழிக்கிறது. அதன் மூலம் அப்பாவி − பலிகடா என்ற முடிவற்ற தொடர் அழியாமல் இருக்க தன்னை அறியாமல் இன்ஸ்பெக்டரும் பங்களிப்பு செய்கிறார். அந்த அப்பாவி பணியாளின் குழந்தைகள் நாளை யாரையாவது குத்திக்கிழிக்க தயாராவார்கள்
அன்புடன்
பிச்சைக்காரன்
கொதி, வலம் இடம் – கடிதங்கள்
அன்பின் ஜெ,
நலமா? நூறு சிறுகதைகள் பலவற்றை மீண்டும் வாசித்தேக்கொண்டிருந்தேன்.அவை தனிமைநாட்களில் உண்டாக்கிய மனநிலைகளை பற்றி சில வாரங்களாக நினைவு படுத்திக்கொண்டேஇருந்தேன். ஆனையில்லா, கீர்டிங்ஸ், குருவி, நற்றுணை, அங்கி, வருக்கை என்று ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு வாசிப்பனுபவங்களை எனக்கு அளித்தவை.சென்ற ஆண்டு இருந்த இறுக்கமான புறச்சூழல் களை மறந்து வாசிப்பில் ஆழ்ந்திருந்த நாட்களை அவை மீண்டும் எனக்களிப்பவை.
இப்பொழுது மீண்டும் சூழ்ந்துள்ள தேர்தல் செய்திகளிலிருந்து தப்பிக்க நான் மீள் வாசிப்பை தொடங்கிய சிலநாட்களில் கொதி சிறுகதை வந்துவிட்டது.மிக அற்புதமான நிகழ்வு தான் இது.
கொதி சிறுகதை அளிக்கும் மனநிலை நான் உள்ளுக்குள் எப்போதும் வேண்டுவதே. ஃபாதர் ஞானய்யா அவரது இறைப்பணி , நல்ல பண்டாரம்,மலைமக்களின் கொதிப்புகள் எல்லாமே சில மாறுதல்களுடன் நான் பார்த்தவையே.பழங்குடிகளுக்கு ஓதுவது போன்ற ஒரு புற அடையாளம் எப்பொழுதுமே தேவைப்படும்.
விவிலியத்தை நன்கறிந்த விசுவாசிகளுக்கு அவையெல்லாமே சாத்தானின் சடங்குகள் என்ற அனுமானம்.இத்தகைய பல்வேறு முரணான இந்திய கிறித்தவ மனநிலை எனக்குமே இளம் வயதில் இருந்ததுன்டு.ஞானய்யாவைப் போன்றே திருநெல்வேலியில் நடந்த ஒரு சாதிக்கலவரத்தில் யாருமற்று நின்ற ஒரு சிறுவனாக பிஷப் ஸ்டீபன் நீல் என்பவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர் என் தாத்தா.அது ஒரு சுவையான கதை.ஆனால் அதனாலேயே இன்று நாங்கலெல்லாம் நல்ல கல்வியுடன் மேம்பட்ட நிலையிலிருக்கிறோம் என்பது எங்கள் குடும்பத்தின் மூத்தவர்கள் அனைவரின் நம்பிக்கை.பிஷப்பின் பெயர் இன்றும் எங்கள் குடும்ப பிள்ளைகளின் பெயர்களில் தொடர்கிறது.அது ஒரு நன்றிக்கடன்.
இச்சிறுகதை எனக்களித்த உணர்வு ற்புதமானது.பழங்குடியினருடன் சிறிய மலையில் வளர்ந்ததால் எனக்கு அந்த பசி நன்கு தெரிந்ததே. எலி,ஓணான், உடும்பு, நீர்க்கோழிகள், காட்டுப்பறவைகளின் முட்டைகள் என்று காணும் அனைத்தையும் பிடித்து சுட்டுத்தின்னும் மக்களுடன் நானும் திரிந்திருக்கிறேன்.மிக நல்ல வாசிப்பு.
அன்புடன்
மோனிகா மாறன்.
கொதி கதையைப்பற்றி கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எனக்கும் அந்த கதைக்கொண்டாட்ட காலம் திரும்பிவந்துவிட்டது என்ற பரவசம்தான் ஏற்பட்டது.
ஆன்மிகம் பற்றிப் பேசும்போது ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓரிடத்தில் சொல்கிறார் உலகத்திலிருந்தே தொடங்கமுடியும். எது நம் வாழ்க்கையோ அதிலிருந்தே தொடங்கமுடியும். எது அன்றாட அனுபவமோ அதைத்தான் ஆன்மிக அனுபவமாக ஆக்கிக்கொள்ளமுடியும். துறந்து வேறெதையோ அடைந்து ஆன்மிகமாக ஆக்கிக்கொள்ளமுடியாது
ஞானையா அறிந்ததெல்லாம் பசிதான். அந்தப்பசியையே தன் ஆன்மிகமாக அவர் ஆக்கிக்கொண்டார். அதன்வழியாகவெ ஞானமீட்பையும் அடைகிறார்
என்.சத்யநாராயணன்
வலம் இடம் [சிறுகதை]அன்புள்ள ஜெ
வலம் இடம் கதையை வெறிகொண்டு பலமுறை வாசித்தேன். எனக்கு அதிலிருந்த இனிய குடும்பச்சித்திரம்தான் அழகான அனுபவமாக இருந்தது. அந்த தம்பதிகளுக்கு எருமை என்பது செல்வம் அல்ல, உறவு. எருமையை அவர்கள் பார்த்துக்கொள்ளும் விதமும் எனக்க ராத்திரியே என அவள் அதை எண்ணி அலறுவதும் ஆகா என்ன ஒரு வாழ்க்கை என்ற எண்ணத்தை உருவாக்கின. அன்புகாட்டுவதையே தொழிலாகக் கொள்வது என்பது ஓர் அதிருஷ்டம். விவசாயத்திலும் மாடுமேய்ப்பதிலும்தான் இது உள்ளது
இதை நான் ஒரு ரொமாண்டிக் மனநிலையில் சொல்லவில்லை. என் அப்பா விவசாயிதான். அவரை கவனித்து வருகிறேன். அவர் அந்த மனநிலையில்தான் இருக்கிறார். இன்றைக்கு அவரால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஆனாலும் விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்று இருக்கிறார். ’மாடும், தோட்டமும் இல்லேன்னா செத்திருவேன். நான் யார்ட பேசுறது வேற?” என்று சொல்வார்
என் இளமையில் வீட்டில் எருமைகள் இருந்தன. ஒவ்வொரு எருமைமுகமாக நினவில் வந்து செல்கிறது. எல்லாமே தெய்வங்களின் கனிவு கொண்ட கண்களுடன் ஞாபகம் வருகின்றன
நன்றி ஜெ
செந்தில்குமார் அருணாச்சலம்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகனுக்கு,
வலம் இடம், தன் வளர்ப்பு பிராணியின் மீது உயிரையே வைத்திருப்பவர் அதன் இறுதி காலத்தில் அடையும் தடுமாற்றத்தையும், மனப் பிரம்மையையும் காட்சி படுத்தும் சிறந்த கதை.
ஆறு மாதம் சினையுள்ள எருமைக்கு ஏதோ பிரச்சனை என அது நிலைக்கொள்ளாமல் குளம்போசை எழுப்புவதை செல்லம்மை அவளுடைய கணவனான குமரேசனிடம் சுட்டிக்காட்டும்போது அவனும் கவனிக்கத் தொடங்குகிறான். அந்த எருமைக்காகவே வாழ்வதைப்போல வேப்பெண்ணை தடவிவிட்டு, உண்ணிப்பொருக்கி, குளத்தில் குளிப்பாட்டி, தேடிப்போய் நாக காட்டிலுள்ள கொழுத்த புல்லை அறுத்துப்போட்டு கண்ணும்கருத்துமாக பார்த்துகொள்கிறான்.
குளத்தில் எருமையின் கொம்புகளைப் பற்றியபடி மிதப்பவனை அது அப்படியே தூக்கி விளையாடுவதைப் பார்த்த நாராயண வைத்தியர் “கூட்டுக்காரியோட கும்மாளமா” என்று கேட்பதும் அவனும் அப்படிதான் என்பதும்.. அட என்ன ஒரு சித்திரம். எருமைக்கும் குமரேசனுக்கும் உள்ள நேசத்தை வாசகர் மனதில் ஆழமாக உணரச்செய்கிறது.
அந்த ஆழமான நேசம் அவன் ஆழ்மனதை ஊடுருவி கனவில் விரிகிறது. கனவில் எருமை அதன் பிம்பத்தைப்போல் வேரொரு எருமையுடன் கொம்பு பூட்டி விளையாடுவதைக் காண்கிறான். கனவிற்கும் நனவிற்குமான ஊசலில் தன் மனதிலிருக்கும் எருமையை உண்மையென அதையும் சேர்த்து பராமரிக்கிறான்.
ஒருநாள் கனவில் அவன் அப்பாவே எருமையை அழைத்து செல்கிறார். அவனால் தடுக்க இயலாமல் போவது அவன் அப்பாவை காலன் வடிவாக கண்டிருக்கக்கலாம் எனத் தோன்றியது. கனவின் வழியாகவே நகரும் கதை இறுதியில் அவர்கள் வணங்கும் அளப்பங்கோட்டு அப்பச்சி கையால்கனவில் வரும் மீட்பு.
மிகவும் நெகிழ்ச்சியான கதை. நல்லதொரு வாசிப்பனுபவம்.
நன்றி
விஜய் சத்யா
வாஷிங்டன்
கதைகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
வணக்கம். தங்கள் நலனுக்கு என்றும் இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்களாகிறது. ஆனாலும் என்றும்போல் நான் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன். நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து நான் காலையில் கண் விழிப்பது உங்கள் எழுத்தில்தான். தினமும் இப்படி உரையாடலில் வேறு எவருடனும் நான் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. உங்கள் கட்டுரைகளில் நான் உங்கள் தோழமையை அறிகிறேன் என்றால் உங்கள் கதைகளைப் படிக்கையில் நீங்கள் அன்புடன் என்னை ஆரத் தழுவிக்கொள்வதாக உணர்கிறேன். இத்தகைய மகிழ்வை தினந்தோறும் தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு என் நேசத்தை காண்பிக்கக்கூட முடியாதவனாக இருக்கிறேன்.
இப்போது என்னைப் போலவே உணரும் பல வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை காண்கையில் பெரிதும் மகிழ்கிறேன். காந்தியையும் அப்போதைய மக்கள் இப்படித்தான் உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு எழுதும் கடிதங்களில் அவர்கள் எழுத்தின் தரம் மிகச்சிறப்பாக இருக்கிறது. சமவய நோக்கும் அறிவுக்கூர்மையும் மிக்க தமிழர்கள் அனைவரும் உங்களை நோக்கி வந்தடைந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய அறிவியக்கத்தை தமிழகத்தில் தமிழில் முன்னெடுத்துச் செல்கிறீர்கள்.
இதெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. இதை என் உளத்திருப்திக்காக மட்டுமே எழுதுகிறேன். இப்படி உங்கள் மீதான காதலை அவ்வப்போது தெரியப்படுத்தாவிட்டால் எனக்கு பெரிய மனக்குறையாக இருந்து கொண்டே இருக்கும். மற்றபடி இக்கடிதத்தின் நோக்கம் வேறெதுவுமில்லை.
அன்புடன்
த. துரைவேல்.
அன்புள்ள ஜெ,
அன்புள்ள ஜெ,
இந்த முறை வரும் எல்லா கதைகளையும் (ஏழாம் கடல் தவிர) படித்துவிட்டேன். சிறப்பான கதைகளாக வந்துக்கொண்டிருக்கிறது.
கொதி, வலம் இடம், கந்தர்வன், யட்சn இவை நான்கும் அற்புதம். கொதியில் ஞானய்யாவின் உரையாடல்கள் என்னை நெகிழ வைத்தன.
கந்தர்வன் கதையில் தான், எத்தனை கோணங்கள். தந்திரங்கள் ! அணைஞ்ச பெருமாளின் உறுதியில் அவனது தெளிவு தெரிகிறது. ஆண்களுக்கு தான் அவன் கொஞ்சம் மக்கு என்பது போன்ற பாவனைகள் ஊர் பெண்கள் அவனை சரியாகவே புரிந்திருக்கின்றனர்.
வள்ளியம்மை உள்ளுர நேசித்திருக்கிறாள். காற்றில் ஆடுவதல்ல. அவள் வேர் பிடித்தது கந்தர்வனிடம். எத்தனை நாட்கள் ஏங்கி நின்றது, திடீரென்று ஒரு நாள் கண் முன் நிகழ்கிறது. இதோ உன் கணவன் என்று ஊர்கூடி அவளது கந்தர்வனை காட்டுகிறது. அவள் ஏன் மறுக்கபோகிறாள் ? இதே ஊருக்கு அஞ்சியல்லவா அவள் அச்சம், மடம் நாணம் பூண்டிருந்தது ? அந்த தளையும் அறுந்து விட்டது. எத்தனையோ பெண்களுக்கு கிடைக்காத வரம் இவளுக்கு வாய்த்து விட்டது. இன்னும் உறுதியாக அதை பிடித்துக்கொள்ள சிதையுமேறிவிட்டாள்!
இதே வள்ளியம்மைக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் ? மறுத்து திரும்பியிப்பாள் என்றே தோன்றுகிறது. அப்போதைய அவளது கந்தர்வன், அவள் முலைகுடிக்கும் மழலை.
வலம் இடம் கதையின் அவன் கற்பனையிலான இன்னொன்றை தேர்வு செய்திருக்கவே வேண்டும். இனி இரண்டும் எப்போதும் நிற்குமல்லவா.
இது சிறப்பான காலக்கட்டம் என்று தோன்றுகிறது ஜெ. எழுத எழுத தீராது அற்புதமான கதைகள் தோன்றட்டும்.
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
அன்புள்ள ஜெ
கதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்று உலகம் முழுக்க உருவாகிவரும் இலக்கியத்தில் இருந்து ஒரு டிரெண்ட் உள்ளது. நான் கல்வித்துறையின் ஆய்வுப்பொருளாக எழுதப்படும் இலக்கியங்களைச் சொல்லவில்லை. வேறெந்த காலத்தை விடவும் கல்வித்துறை பொது அறிவுத்துறையிலிருந்து விலவிவிட்டிருக்கும் காலம் இது. இன்று இலக்கியத்தில் இருப்பது பெரிய சலிப்பு. கதையின் சுவாரசியமே இல்லாத ஒரு எழுத்துவகை இலக்கியமாக நிறுவப்பட்டது. 90களின் இறுதியுடன் அது காலாவதியாகிவிட்டது. 2000த்திற்குப்பிறகு அது எங்கும் இல்லை. இன்னும் அந்த டிரெண்ட் தமிழில் வரவில்லை. இந்தக்கதைகள் அதை உருவாக்கினால் நல்லது. நேரடியான அழகான கதைகள். கதையை நீ சொல்லு, மிச்சமெல்லாம் நான் உருவாக்கிக்கறேன் என்றுதான் வாசகனாக நான் எழுத்தாளனிடம் சொல்வேன். வேறு எல்லாமே சின்ன விஷயங்கள். கல்வித்துறை நிபுணர்கள் உருவாக்குவார்கள். செய்தியாளர்கள் உருவாக்குவார்கள். எழுத்தாளனிடம் மிஞ்சியிருப்பது, வேறு எவரும் செய்யமுடியாதது, கதை சொல்வது மட்டும்தான்
ராமச்சந்திரன்
குமிழிகள், ஆமென்பது – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதை பற்றி வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள் அதன் ஆழமான கலாச்சாரப் பிரச்சினையை காட்டுகின்றன. காலந்தோறும் ஆண்பெண் உறவு மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதைப்போல அடிப்படையான கேள்வி பலநூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் எழுகிறது. ஆணுக்குப் பெண் உடம்பில் என்ன உரிமை, உரிமை உண்டா இல்லையா என்பது ஒரு கேள்வி. பெண்ணின் ஆளுமை ஆணைச்சாராமல் அமைய முடியுமா என்பது இன்னொரு கேள்வி. கேள்வியுடன் நின்றுவிடுகிறது அந்தக்கதை. ஒவ்வொருவரும் விடைகளைத் தேடிச்செல்கிறார்கள்
கிருஷ்ணமூர்த்தி என்,ஆர்.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நாங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறோம் என்று தெரிந்துகொண்டு, அப்படியே ப்ரௌசரில் இன்னொரு வின்டோ திறந்து வைத்து நம் கதைகளும் வாசிக்கட்டும் என்று மீண்டும் கதைகளை எழுதித் தள்ளுகிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் இதுவரை எழுதியதில் ‘விருந்து’ மட்டும்தான் வாசிக்கவில்லை.
‘வலம் இடம்’, ‘விசை’, ‘படையல்’, ‘குமிழிகள்’ , இந்த நான்கில் எதற்கு கடிதம் எழுதுவது என்று குமிழிகள் தேர்வு செய்துகொண்டேன். பழைய வரலாற்றுப் பின்னனி, விவசாயம், எருமை, பனைமரம் ஏறும் குடும்பம் என்று இருக்கும் கதைகளைவிட, இன்றைய சமுதாயத்தைப் புரிந்துகொண்டு, இக்கால காதலர்களை, மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு பேசும் தம்பதிகளை வைத்து பின்னும் கதைகளில், காலத்தை கடந்து, இருக்கும் இடத்தைக் கடந்து பார்க்கும் உங்களின் விசாலமான பார்வை சொல்லும் கதைகளை அறிவதிலும், அலசுவதிலும் எனக்கு ஓர் ஆர்வம்.
ஆண், நேர்முகத்திற்கு செல்லும் முன்னர், மீசையை ஒதுக்கிக்கொள்கிறான். தாடியை வழித்துவிடுகிறான் அல்லது ட்ரிம் செய்துகொள்கிறான். அவன், செல்லும்பொழுது , அங்கே நேர்முகம் செய்ய இருப்பவர் ஒரு பெண்ணாக இருக்கலாம், ஆதலால், அவரை மயக்கி வேலை வாங்க இருக்கிறான் என்று கற்பனை செய்வதில்லை. அவன் செல்லும்பொழுது அவனை ‘ப்ரசன்டபலாக’ எடுத்துச் செல்கிறான் அவ்வளவே. அதே சமயம் பெண் நேர்முகத்திற்கு கொஞ்சம் லிப் ஸ்டிக் போட்டுக்கொண்டு, ஜீன்ஸ் , டீ ஷர்ட் போட்டுக்கொண்டால், அவள் மயக்கி வேலை வாங்கப் போகிறாள் என்ற கற்பனை ஓடுகிறது. அவளை நேர்முகம் செய்பவள் ஒரு பெண்ணாக இருக்கக் கூடாதா என்ன?
நான் முழுக்க முழுக்க இந்தக் கதையின் லிலியின் பக்கம்.
ஆண், பொருள் தேடி நாடு விட்டு நாடு சென்று பொருள் தேடும் காலத்தில், வீட்டில், அந்தக்காலத்து லிலி, காமம் மறந்து வருடக்கணக்கில் அவனுக்காக காத்திருந்தாள். அன்று, அவளுக்கில்லாமல், சாமிநாதன் முழு உடலையும் எடுத்துச் சென்றான். அவளிடம் எதிர்பார்த்தது தியாகம்.
இன்று லிலி சம்பாரிக்கும் பணம் வேண்டும், நினைத்தவுடன் எதுவும் வாங்குமளவு வரும் வருமானம் வேண்டும். அவள் கொடுக்கவேண்டிய காமமும் குறைவில்லாமல் வேண்டும் என்றால் என்ன செய்வது. பெண் அலங்கரித்தாலே, செக்ஸுக்கான அறைகூவல்தான் என்ற பொதுப்புத்தியை செருப்பால் அடிக்கும் கதை இது என்றே எடுத்துக்கொள்கிறேன். இந்தக் கதை சாமிநாதனுக்கு மட்டும் இல்லை. சாமிநாதனைப்போல நினைக்கும் பெண்களுக்கும். நீங்கள் , குமிழிகள் என்று பெயர் வைத்து, லிலியின் வாதங்களின் மூலம், ஓவர் டோஸ் கொடுத்தது மிகச்சரி. இன்றைய பிரச்சனையை சொல்லும் இந்தக் கதையை மொழி கடந்து வாசிக்கலாம். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, நானோ அல்லது எனது ரெப்பர்சன்டேட்டிவோ உங்களிடம் அன்புடன் கேட்டு உரிமையை வாங்கிக்கொள்கிறோம் J.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்
ஆமென்பது… [சிறுகதை]அன்புள்ள ஜெ
ஆமென்பது என் வாழ்க்கையின் கண்டடைந்த உண்மைகளில் ஒன்றைச் சொல்கிறது. என் 30 வயது வரை நான் அவநம்பிக்கை நிறைந்தவன். துயரமானவன். ஏன் துயரமானவன் என்றால் எனக்கு துயரம் பிடித்திருந்தது என்பதனால்தான். நான் வாழ்க்கையில் வெற்றியை விரும்பவில்லை, இந்தவாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன் என்று எனக்குநானே சொல்லிக்கொண்டேன். என்னை நானே துக்கமாக ஆக்கிக்கொண்டேன். சொல்லச் சொல்ல எல்லா துக்கமும் மெய்யாகவே எனக்கு வந்தது.
மனிதனின் அகங்காரம்தான் ‘நான் துக்கமானவன்’ என்பது. அவன் தான் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள துக்கமானவன் என்று காட்டிக்கொள்கிறான். அதை உணர்ந்தபோது இனி எனக்கு துக்கம் இல்லை என்று சொல்லிக்கொண்டேன். ததாஸ்து என்று அந்த தேவதையும் சொல்லிவிட்டது
அருண்குமார்
அன்பு ஜெ,
சிலைகளையெல்லாம் குமரன் போன்ற சிற்பிகளின் வழியே ஆகாயம் சிறுகதை வழியே பார்த்திருந்தேன். இன்று நீங்கள் தெய்வங்கள் வழி, அதை நிறுவிய மனிதர்களின் வழி ஒரு சித்திரத்தை அளித்திருக்கிறீர்கள். அது மேலும் சிந்திக்கத் தூண்டியது.
“தாயின் கருவிலிருக்கும்போதே என்னை தெரிந்து கொண்ட இயேசுவே” என்ற ஒரு வரியை சிறுவயதில் என் வழிபாட்டின் போது உபயோகிப்பதுண்டு. அந்த வார்த்தையை வழிபாட்டின் போது இணைத்துப் பழக ஈர்க்கப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். தெய்வங்கள் தான் நம்மைத் தெரிந்து கொள்கின்றன என்ற சிந்தனையை இன்று அடைந்தேன் ஜெ. சிறுவயதில் என் கழுத்திலுள்ள ஜெபமாலையைப் பார்த்துவிட்டு சித்தப்பா ராஜமுனி அருகே அழைத்து கடவுள்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஒருவாராக அவர் சொல்ல வந்தது இதைத்தான். நம்மைச் சுற்றியிருக்கும் தெய்வங்கள் தான் நமக்கானவை. நம்ம ஊரு எல்லையிலிருக்கும் இசக்கியம்மன், ஊரின் தெய்வங்களான முப்பிடாரி, ராசாத்தியம்மன், அதைத்தாண்டி நம் ஊரிலுள்ள ஆண்டாள்- ரங்கமன்னார், வைத்தியநாதசாமி ஆகியோரை நீ என்றும் மறந்துவிடக் கூடாது. அவை நம் மக்களைத் தேர்ந்து கொண்ட தெய்வங்கள் என்று கூறினார். ஏசுவும் ஒரு கடவுள் தான். ஆனால் அவர் இஸ்ரேல் மக்களுக்கானவர். நீ வேறெங்கோ இருக்கும் தெய்வத்தை ஏன் இவ்வளவு தீவிரமாக வழி பட வேண்டும் என்று கேட்டார். சிறுவயதாதலால் எனக்கு அவர் சொன்னது புரியவில்லையெனினும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் சரி சித்தப்பா என்று சொல்லி வைத்தேன். ஆனால் எனக்கு ஒன்று தோன்றும் “நானா தேடிப் போறேன். அது தான் என்னைப் பிடித்து ஆட்டுவிக்கிறது” என்று. என்னை தேர்ந்து கொள்வது அவர்கள் தான். சில கோவில்களும், சில கடவுளர்களும் நம்மை அவை நோக்கி ஈர்த்து வைக்கின்றன.
முதன் முறை வர்ப்புறுத்தி தான் நான் அவனை இடைக்காட்டூருக்கு கூட்டிச் சென்றேன். ஆனால் அதன் பின் அவன் ஒரு நாள் நான் இல்லாதபோது தானாகவே அங்கு சென்று வந்தான். நான் ’என்ன அங்க’ என்று கேட்டபோது ’அங்க போன மனசுக்கு நல்லா இருக்கு’ என்று கூறினான். அதன்பிறகு அவன் மிக நல்ல தருணங்களின் போதும் மிக துயரமான தருணங்களின் போதும் இடைக்காட்டூருக்கு நான் அறியாமல் கூட சென்று வருகிறான். இடைக்காட்டூரின் திரு இருதயம் அவனை ஈர்த்திருக்கிறது.
அதேபோல் பல பேய்க் கதைகளை என் பாட்டியிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன். சாத்தானை பாம்பாக உருவகப்படுத்த தள்ளப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் ஒரு தருணம் கூட இன்னும் நான் அனுபவித்ததில்லை. இன்னும் அவை என்னை தேர்ந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். எனக்கான பேய்த்தருணம் இன்னும் அமையவில்லை என்று கொண்டேன்.
இது தவிர உறவின் ஏக்கங்கள் கதை முழுவதுமாக விரவியிருந்தது. உறவுகளைப் பொறுத்தவரையில் புறக்கணிப்புகளே அவர்களுக்கு நாம் தரும் மிகப் பெரிய தண்டனை என்று நினைக்கிறேன். ஒரு முதிர்ச்சி வரும் வரை அல்லது சுயாதீனமாக வாழ முடியும் என்ற எண்ணம் வரும் வரையிலுமே கூட மிகப் பெரிய அளவில் நாம் உறவுகளைச் சார்ந்தே இருக்கிறோம். அது வரை நாம் எதிர்பார்த்திருந்த அன்பு கிடைக்காத போது அவர்கள் நம்மை அன்பு செய்யவில்லை என்று உணரும் தருவாயில் துணிந்து நாம் அவர்களுக்கு கொடுக்ககூடிய மிகப் பெரிய தண்டனை புறக்கணிப்பு மட்டுமே. அதை நானும் என் நெருங்கிய உறவுகளுக்கு கொடுத்திருக்கிறேன். அதை அவர்களால் வெளிக்காட்ட இயலாது, எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று திணருவதைக் கண்டு ஏளனப் பார்வையோடு கடந்து வந்திருக்கிறேன். நம் அன்புக்கு உரிமையானவர்களால் மட்டுமே விலக்கத்திற்கும் விளக்கம் கேட்க முடியும். எங்கு அன்பான மனிதர்களைக் கண்டாலும் நான் நெகிழ்ச்சி அடைவதுண்டு. சமீபத்தில் ஜெ-சைதன்ய சிந்தனை மரபு என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு மிகவும் கலங்கிப் போனேன். நீங்கள் சைதன்யாவை எப்படியெல்லாம் கூப்பிடுவீர்கள் என்று பட்டியலிட்டு அதை இன்னொரு புத்தகமாகப் போடலாம் எனும்போது புன்னகையோடு சேர்ந்து கண்ணீரும் வந்தது. என்னையெல்லம் ரம்யா என்பதைத் தவிர என் வீட்டில் வேறு பெயர் சொல்லி அழித்ததேயில்லை. இன்னும் சிலருக்கெல்லாம் தடிமாடு, சனியன், எருமை என்ற பெயர்கள் தான் நிரந்தரமாக இருக்கின்றன. அதே போல வெண்முரைன் மழைப்பாடலில் திருதிராஷ்டிரனுக்கும் விதுரனுக்கும் இடையே நடக்கும் உரையாடலின் போது “நான் இறந்து விட்டால் நீ உயிருடன் இருக்காதே” என்று கூறிய அந்தத் தருணம்… மிகவும் ஏங்கி அழுதுவிட்டேன். அதுவரை கூட “விதுரா மூடா” என்பதை அவ்வளவு பாசமாக நான் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் காந்தாரி வசுமதியிடம் அவன் விதுரன் தனக்கு எத்துனை முக்கியம் என்று கூறிய தருணத்திற்குப் பின் அவன் கூப்பிடும் மூடா என்ற ஒவ்வொரு இடத்திலும் பொங்கி வரும் அன்பையே பார்க்கிறேன்.
பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும் உச்ச நிகழ்வு ஒரு நாளில் அமைந்துவிடுவதில்லை. அது கால நெடுகிளும் ஒவ்வொரு ஏக்கத்தருணங்களாக கூடிக் கொண்டே வந்து இனி ஒரு போதும் தாங்கிக் கொள்ளவியலாத வலியை அவர்கள் தரும் தருணத்தில் தான் சாவில் கூட விழிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தமைகிறது. கே.வி.ஜயானுக்கு அவரது தந்தை மேலும், அவர் மேல் அவருடைய பையனுக்கும் வந்தமையும் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தேன் சிட்டு கூடமைத்து குஞ்சு பொறித்து அது பறக்கும் வரை உடனிருந்து அந்த வானத்தில் அதை கரை சேர்ப்பது வரை உடனிருக்கும் நிகழ்வை முதன் முதலில் என் கல்லூரி விடுமுறை நாட்களின் போது பார்த்தேன். அது என்னில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பறவைகள் கூட இந்த வாழ்வென்னும் உயிர்ப்பின்னலில் தங்களுக்கான கடமையை சரிவர செய்கின்றன. ஆனால் இந்த சில மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி சுயமோகங் கொண்டு சிறு குஞ்சுகளை கே.வி.ஜயான், அவருடைய பிள்ளை போன்றவர்களை துன்பத்திற்கு ஆளக்குகின்றனர் என்று நினைத்துக் கொண்டேன். அன்னை தந்தை அல்லது வேறு எந்தவொரு உறவையும் புனிதமென்ற போர்வைக்குள் அடைக்கும் செயலையே நான் வெறுக்கிறேன். அதனால் தான் எனக்கு மிகப் பிடித்தவர்களை நான் உறவைச் சொல்லி அழைப்பதில்லை.
மேல் குறிப்பிட்ட ஒவ்வொரு சிந்தனையையும் ஏக்கத்தையும் கேள்விகளையும் இந்த சிறுகதை விவாதத்தின் வழி நித்ய சைதன்ய யதியின் வரிகளாக நீங்கள் சொன்னவற்றில் கரைக்கிறேன்.
“நீ செய்யவேண்டியதை செய்துவிட்டாய் என்றால் உனக்கு செய்யப்படவேண்டியது செய்யப்படாவிட்டாலும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள உன்னால் முடியும். அளிக்கவேண்டியவற்றை அளித்தவர் அவற்றை கடந்துசென்றவராவார். வாழ்க்கையில் எதையும் எச்சம் விட்டு மேலே செல்லாதே. விட்டுவிட்டவை வளரும், விழுங்கும்’ என்ற வரிகளைக் கொண்டு இந்த சிறுகதையை நிறைவு செய்கிறேன். நான் எச்சம்விட்டுச் செல்லாத ஒரு வாழ்வை வாழ்ந்து முடிக்கவே தலைப்படுகிறேன். என் பெற்றோருக்கானாலும் சரி, இனி பிறக்கப் போகும் என் பிள்ளைக்கானாலும் சரி. ஏனெனில் பிரதிகிரகை என்னும் தேவதை ஆமெனச் சொல்ல எப்போதும் காத்துக் கொண்டு அருகிருப்பதை தரிசித்துவிட்டேன். இதன் மூலம் என்னிலிருந்த ஒரு சிந்தனையை மாற்றி ஒரு துளி ஞானத்தைப் பரிசளித்திருக்கிறீர்கள். மேலும் கேட்க முற்படுகிறேன். நன்றி ஜெ.
பிரேமையுடன்
இரம்யா.
நற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) மூன்றாம் அமர்வு வரும் மார்ச் 21 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘விஷ்ணுபுரம்’ நாவலின் இரண்டாம் பாகமான ‘கெளஸ்துபம்’ பகுதி குறித்து கடலூர் சீனு பேசுவார். அடுத்தடுத்த மூன்று அமர்வுகளாக நிகழும் விஷ்ணுபுரம் கலந்துரையாடலின் இரண்டாவது அமர்வின் அறிவிப்பு இது
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -3
நாவல் – விஷ்ணுபுரம்
பாகம் :- கெளஸ்துபம்
கலந்துரையாடல் நாள்:- 21-03-21
நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
நாவல் குறித்து உரையாடுபவர்:- கடலூர்சீனு
(எழுத்தாளரும் இலக்கிய திறனாய்வாளருமான கடலூர் சீனு அவருடைய கட்டுரைகள் / உரைகள் வாயிலாக வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். பாண்டிச்சேரி வெண்முரசு கூடுகையை தொடர்ச்சியாக நடத்தி வருபவர்.
நன்றி!!!
அன்புடன்,
சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்
March 17, 2021
ஓஷோ,கோவை, நான்குநாட்கள்
ஓஷோ பற்றிய ஓர் உரையை நான் நிகழ்த்த முடியுமா என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அவர்களின் சார்பில் நண்பர் நடராஜன் கேட்டுக்கொண்டிருந்தார். நான் ஒப்புக்கொண்டாலும் நாட்கள் தள்ளிச்சென்றன. நடுவே ஓராண்டு கொரோனாவால் வரலாற்றிலிருந்தே மறைவதுபோல இல்லாமலாகியது. இம்முறை நிகழ்த்திவிடலாமென்று முடிவுசெய்தோம். தேதி முடிவாகியது.
நான் ஒன்று முடிவுசெய்தேன், ஓஷோ பற்றி நான் புதியதாக வாசிக்கக்கூடாது. ஓஷோவின் மேற்கோள்களிலேயே கூட என் மண்டைக்குள் இருபத்தைந்து ஆண்டுகளில் எவை நீடிக்கின்றனவோ அவற்றைச் சொல்லவேண்டும். அது ஒருவகையான காலச் சல்லடை. என் மதிப்பீட்டை கேட்பவர் விரித்தெடுக்கும்படிச் சொல்லவேண்டும். அத்தனைக்கும் மேலாக நான் ஓஷோவை வாசித்த நாட்களில் இருந்த மனநிலைக்குச் சென்று பேசவேண்டும்
போஸ்டர்11 ஆம் தேதி மாலை கிளம்பி 12 காலை கோவையைச் சென்றடைந்தேன். நண்பர் ’டைனமிக்’ நடராஜன் வந்து அழைத்துச் சென்றார். நண்பர்கள் சந்திப்பதற்கும் தங்குவதற்கும் பெரிய இடமாகப் போடும்படி கோரியிருந்தேன். விழா நிகழும் கிக்கானி பள்ளியின் அருகிலேயே சாய் வில்லா என்னும் பங்களா ஏற்பாடாகியிருந்தது. 25 பேர் தங்கும்படியாக.
நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். நான்குநாட்கள் நண்பர்கள் புடைசூழ இருந்தேன். விஷ்ணுபுரம் விருதுவிழாவின் களியாட்டம் இம்முறை இல்லாமலாகிவிட்டதோ என்ற உளக்குறை நீங்கியது. வழக்கம்போல கல்யாணக் கொண்டாட்டம். ஆனால் முழுக்க முழுக்க கிருஷ்ணா ஸ்வீட்ஸ் செலவு.
வரும்போதே பார்த்தேன். நகரெங்கும் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். மிகப்பெரிய போஸ்டரில் என்படமும் ஓஷோ படமும். கோவையில் நான் ஆற்றும் தொடர் உரைகளில் இது மூன்றாவது. ஏற்கனவே கீதை, குறள் பற்றிப் பேசியிருக்கிறேன்.
பகல் முழுக்க பேசாமல் தொண்டையை காத்துக்கொள்ளவேண்டும் என பழைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டிருந்தேன். ஆனாலும் பேசாமலும் இருக்க முடியவில்லை. தொடர்ச்சியாக நண்பர்கள் உடனிருந்தார்கள்.
அரங்குமாலையில் கூட்டம் சரியாக ஆறரைக்கு. ஆறரைக்குத்தான் திரளும் வந்தது. கிக்கானியின் பெரிய அரங்கு நிறைந்து வெளியிலும் அமர்ந்திருந்தனர். நான் பேசிய அரங்குகளிலேயே மிக அதிகமாக கூட்டம் வந்தது இங்குதான். என் உரையை தொடங்குவதற்குமுன் நிறைந்திருந்த திரளின் முகங்களைப் பார்த்தேன். ஒருவகையான காலத்தை கடந்து நின்ற உணர்வு ஏற்பட்டது
பேசுவது எனக்கு இயல்பானது அல்ல. பேசுவதற்குரிய மூச்சும் குரலும் இல்லை. பேசுவதற்குமுன் என்னை காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. பேசியபின் இருக்கும் உளநிலையை காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே பேசுவதற்கு முன் மேடைக்கு வந்து பேசியதும் அப்படியே ‘தப்பிச்செல்வதே’ சரியானது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன்.
வெளியே இருந்தவர்கள்நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் பேச்சு படிப்படியாக ஓர் உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறது. கருத்துக்களால் மட்டுமேயான ஓர் உச்சம், தியானநிலைக்கு நிகரானது. அதிலிருந்து இறங்குவது கடினம். படபடப்பும் நிலையழிவும் உருவாகிறது.
கடைசிநாள் மதியம் கோவை நன்னெறிக் கழகம் சார்பில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துகொண்டேன். சிவராமன் தமிழகத்தின் தேர்ந்த பேச்சாளர்களில் ஒருவர்.
கொரோனா காலகட்டத்தின் நலப்பிரச்சினைகளைப்பற்றி, சித்தமருத்துவத்தின் சாத்தியங்களைப் பற்றி அழகாகப் பேசினார். நான் கேட்ட முதல் மருத்துவப்பேருரை- எனக்கு அதிலிருந்து இலக்கியக் கருக்களாக எழுந்து வந்துகொண்டிருந்தன. எல்லாமே இலக்கியத்தின் குறியீடுகளாகப் பட்டன.
15 ஆம் தேதியும் கோவையில் தங்கியிருந்தேன். அன்றுதான் கோவையின் புகழ்மிக்க அசைவ உணவை மதியம் இயக்காக்கோ சுப்ரமணியம் அழைப்பின்பேரில் சென்று உண்டேன். டி.பாலசுந்தரம் அவர்களை அன்று சந்தித்தேன். மாலை நாகர்கோயில். தூக்கமும் களைப்பும் கூடவே ஆழ்ந்த நிறைவும்.
இந்த மூன்றுநாள் உரைக்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் டைனமிக் நடராஜன் இருவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த உரை இல்லையேல் இத்தனை தீவிரமாக ஓஷோவைத் தொகுத்துக்கொண்டிருக்க மாட்டேன்
முதல்நாள் உரை
மலைபூத்தபோது, கேளி – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது ஒரு இரட்டைத்தன்மையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இரண்டு உலகங்கள். ஒன்று கீழே, இன்னொன்று மேலே. கீழே வயல்கள், மேலே காடு. மேலே இருப்பவர்கள் வானுக்குச் செல்பவர்கள், கீழே இருப்பவர்கள் புதைபவர்கள். இங்கே உள்ள தெய்வங்கள் கோயிலில் இருக்கின்றன. அங்குள்ளவை மரங்களில் இருக்கின்றன
மலையிலிருந்து வருபவன் கோயில் பகுதியிலேயே செல்வதில்லை. அவன் இருட்டுக்குள் இருட்டாகவே நடமாடுகிறான். அவன் வீடுகளின் கொல்லைப்பக்கம் வருகிறான். கழிப்பிடங்களுக்கு அருகே உள்ள நெல்லைத்தான் கொள்கிறான். ஆனால் அவர்கள் மலைக்கு அதையும் கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்
கொன்றையிலும் வேங்கையிலும் மலர்களில் தோன்றி உறுமி பின்னர் அப்படியே பின்னகர்ந்து மறையும் புலியும் சிறுத்தையும் அற்புதமான கவித்துவ உருவகங்கள். கண்களிலேயே அந்த அசைவைப் பார்க்கமுடிகிறது
ராஜசேகர்
அன்புநிறை ஜெ,
இன்றைய கதை முற்றிலும் வேறொரு அனுபவம். கதை என்றே சொல்லிவிட முடியாத கதை. ஆனால் அந்தப் பொன் பூத்த மலைக்காடும், பொன் விளைந்த வயல்வெளியும், கதிரறுத்த களமும், அந்த ஒடுக்கப்பட்டோருக்கான இருள்வழியும் அதிலேயே மலைவிட்டிறங்கி நடந்து வந்து வெறுங்கையோடு காட்டு தெய்வங்களிடம் திரும்பியது போன்ற உணர்வைத் தந்தது.
காட்சி விவரிப்புகள் வாழ்ந்தறியா நிலத்தில் சென்று நிறுத்துகின்றன. வார்த்தைக்கு வார்த்தை காட்சி விரிந்து, அதிலிருந்து வேறொரு தளத்துக்கு சிறகு விரித்தெழும் அனுபவம். வீட்டில் நுழைந்து விட்ட சிட்டுக்குருவி போல அழகிய உவமைகள் கதையில் அங்கும் இங்கும் சிறகு கொள்கின்றன. “மழையில் முளைத்த புதுப்பூசணியின் கொடி போல புதர்களையும் பாறைகளையும் ஊடுருவிச்சென்றுகொண்டிருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில்”, “இலைப்புயல் போல வந்திறங்கும் கிளிக்கூட்டங்களை”, ” கிளிக்கூட்டங்கள் காற்றில்பறக்கும் பச்சை சால்வை போல”, “அறுத்து அள்ளிச்செல்லும் இயந்திர யானைகள்”.
சில இடங்களில் மனது அருகில் ஓர் அறியா இருப்பை உணர்ந்த கணங்களை எண்ணி சிலிர்த்துக் கொண்டது.
//காலடியோசையாக, நிழலாக, நினைவுணர்வாக உடன்வருபவர்கள் என்னுடன் சேர்ந்துகொண்டனர்//
இயற்கையின் மாறா சுழற்சியும், பிறவிச்சுழற்சியும் வருகிறது. மனிதர்கள், வயல்கள் என அனைத்தும் மீண்டும் மீண்டும் நிகழ கரடிமலை அநாதி காலமாய் அகாலமாய் நின்றிருக்கிறது. அதனாலேயே காணிக்கை கோரும் தெய்வமாய் அமர்ந்திருக்கிறது.
//இலைகள் உதிர்ந்து தளிர்களாகி வருகின்றன. எதுவும் எங்கும் இல்லாமலாவதில்லை. அனைத்தும் எப்போதும் நிலைகொள்கிறது.//
//விதையை வயலாக்கி வயலை விதையாக்கி சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.//
கதையில் மலையில் வாழ்பவர்கள், மண்ணில் வாழ்பவர்கள், மண்ணுக்கும் கீழே வாழ்பவர்கள் என்றொரு அடுக்கு வருகிறது. ஒன்றுடன் ஒன்று இணைந்த தொடர் கண்ணிகள். மலை எப்போதும் இருக்கும் ஒன்றாக, அழிவின்மையாக வருகிறது. நிலம் மலை தந்த கொடையாக வருகிறது //மலைகள் உருகி வழிந்து பரவிய ஊர்கள்//. அவற்றை இணைக்கும் பாதையும் தொன்மையானது. அதற்கும் கீழே வாழ்ந்தவர்கள் ஊர்களுக்கு வெளியே பள்ளங்களில் வாழ்ந்தவர்கள், எலிவளை சேர்த்த நெல்லையும் அந்த எலிகளையும் உணவெனக் கொள்பவர்கள்.
இதில் அந்தப் பள்ளங்களை நோக்கிய சரடு ஏற்கனவே அறுந்துவிட்டது. வயலில் பொன் அதற்கு முந்தைய மாதம் பொலிந்து நின்றிருக்கிறது. இயந்திரக் கரங்களால் அறுவடை செய்யப்பட்டு எலிகள் உண்ணக்கூடிய அளவை விட பல மடங்கு நெல்லும் வயலில் உதிர்ந்திருக்கிறது. எலிகளும் இல்லை, அதைச் சார்ந்திருந்த மனிதர்களும் இல்லை.
மலை நோக்கிய சரடும் இற்றுப் போகத் தொடங்கிவிட்டது. இக்கதையின் காணிக்காரன் மலை தெய்வங்களை சாட்சியாக்கி மண் விளைந்த பொன்னை மலை விளைந்த பொன்னுக்குக் காணிக்கையாகப் பெற வருகையில் புறங்கடைகள் ஒளியற்று, கதவடைத்திருக்கின்றன. இரவுப்பூசையில் நாட்டு தெய்வங்களுக்கு படையல் இருந்திருக்கலாம். காட்டு தெய்வம் பசியோடிருக்கிறது.
இவற்றில் கடுத்தா, பிறுத்தா என்ற காடுகாக்கும் தெய்வங்களும் தங்கள் முதலாமன் கதை வழியாகவே அறிமுகம். கொக்கறை என்ற சொல் இதற்கு முன் வாசித்ததும் கிளி சொன்ன கதையில்தான். “காணம் வாங்க வரும் காணிக்காரன் வாசிக்கும் கொக்கறை போல” என வரும். காணிக்காரர்கள் என்ற பழங்குடியினர் பெயருக்கு காணிக்கு உரியவர்கள், நிலத்துக்கு வழிவழி உரிமை கொண்டவர்கள் என்ற பொருள் என அப்போது வாசித்தறிந்தேன். இங்கே இக்கதையில் இம்மண்ணுக்குரிய காணிக்காரன் வெறும்கையோடு மீள்கிறான்.
“தாழ்ந்த நிலம் ஒரு மணிநெல்லைக்கூட அளிக்கவில்லை” என்ற வரியில் நிலம் தாழ்ந்தே இருக்கிறது. கதை முழுவதும் மலையின் பார்வையில் என்பதால் நிலம் தாழ்நிலமாகவே வருகிறது.
இக்கதை ஒரு மாபெரும் இயற்கை சுழற்சியின் கண்ணிகள் அறுபடுவதையும், அதன்பொருட்டு மானுடர் மேல் இயற்கை சீற்றம் கொள்ளாதிருக்க வேண்டிக்கொள்ளும் ஒரு பெருங்கருணையையும் சொல்கிறது.
இமைக்கணத்தில் வேள்வி எதன் பொருட்டு என்ற கேள்விக்கு ஒரு விடை வரும் “தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி அள்ளி அன்னைக்கு திரும்பி ஊட்டமுயலும் மைந்தர் அல்லவா நாம்?” என. வானவருக்கு அவி அந்த மைந்தரால் மறுக்கப் படும்போது மண்மீது முனியாதிருக்கும் படி தெய்வங்களை இறைஞ்சும் அந்த ஞானியரின் கருணையால் இப்புவி பிழைத்திருக்கிறது.
//மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்?// – விசும்பின் துளிவீழின் அல்லால் போல இதுவே இக்கதை எழுப்பிக்கொள்ளும் கேள்வி.
எதன் காலடியோசையை , இயற்கையின் மொழிகளை கேட்டு விடக்கூடாதென நம் கதவுகளை இறுகப் பூட்டி கொல்லைப்புறங்களை இருள வைத்திருக்கிறோமோ அதன் காலடியோசை கணந்தோறும் பெருகும்.
மிக்க அன்புடன்,
சுபா
கேளி [சிறுகதை]அன்புள்ள ஜெ
கேளி கதையை ஒரு ஆழ்ந்த மயக்கத்தில் வாசித்தேன். என் இளமையில் கிராமத்தில் காப்பு கட்டிவிட்டால் திருவிழாதான். ஊரிலிருந்து யாரும் எங்கேயும் போக முடியாது. பத்துநாளும் மேளம்தான். கொண்டாட்டம்தான். எங்கே படுப்போம் எங்கே சாப்பிடுவோம் என்றே தெரியாது
திருவிழா முடிந்தபின்பு உடலுக்குள் மேளம் இருக்கும். கொஞ்சம் தூங்கினால் கேட்க ஆரம்பித்துவிடும். கண்களுக்குள் வண்ணங்கள் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மறந்தாலும் சட்டென்று திரும்பிவந்துவிடும்
இதே அனுபவம் எனக்குண்டு. நான் திருவிழா முடிந்து பத்துநாளுக்குப்பின் அண்ணன் ஒரு கோயிலென்றால் என்ற பாட்டைக்கேட்டேன். அதிலுள்ள ஏதோ இசை அப்படியே மொத்த திருவிழா இசையையும் காதுக்குள் கொண்டுவந்துவிட்டது.
கொஞ்சம் தொட்டதுமே பொலபொலவென மழைத்துளி மரத்திலிருந்து உதிர்வதுபோல அந்த அனுபவம். அந்த நுட்பமான அனுபவத்தை எழுதிவிட்ட கதை கேளி
ஜெயராமன்
வணக்கத்திற்கும் அன்புக்குமுரிய ஜெயமோகன்,
கேளி ஒரு அழகான கதைக் கவிதை. கவிதைக் கதை. நெல்லிக்கனியை உண்டு நீர் அருந்திய பின் அடிநாக்கில் எழும் ஒரு இனிமையை அளித்த கதை.
கனவிலும் கேளி கொட்டு கேட்டு அதிர்ந்தது அனந்தனின் உடல் மட்டுமா?எழுத்தாலேயே செண்டைமேளம் வாசித்து எங்கள் நினைவுகளிலும் உடல் விதிர்த்து தோல் அதிர தாம் தரிகிட தோம் தீம் என நசை நாடடிகளில் வார் பிடித்து விட்டீர்கள். ஓசைகள் வழியாக மட்டுமா கதைகள் வழியாகவும் தான் உலகம் முடிவிலாக் காலத்தில் ஒழுகிச் செல்கிறது.
//ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகிச்செல்கிறது//
விழாக்கால மேகம் எல்லாம் உலாப் போன காலங்கள் கனவாய் தான் போனதே. செண்டை மேளமும் இலைத் தாளமும், உடுக்கையும் பறையும், தவிலும் நாதஸ்வரமும் நினைவின் ஓரங்களில் கானல் நீராய்….
//கூழாங்கற்களின் அருகிலெல்லாம் கரிய மையை கையால் தீற்றியதுபோல அவற்றின் நிழல்கள் நீண்டிருந்தன//
கற்கள் மட்டுமா கரிய மையை நிழல் என தீற்றிக் கொண்டன…. மனித மனங்களும் தானே தங்கள் நிஜங்கள் மறந்து இருட்டில் ஒளிந்தன.
புதியன புகுதல் இயல்பே எனினும், கழிந்தன எண்ணி ஏங்கித் தவிப்பதைப் தவிர உன்னதக் கலைகளின் இனிமையை இழந்தவர்களுக்கு வேறு என்னதான் வழி. எங்கள் ஊர் திருவிழாக்களில் தெருக்கூத்து ரெக்கார்ட் டான்ஸ் ஆக மாறிவிட்டிருக்கிறது, கரகாட்டத்தை ஓரம்கட்டி குத்தாட்டம் கொலு வீற்றிருக்கிறது.ஏதோ கொஞ்சம் பெரிய கோயில்களில் கலைகள் போனால் போகட்டும் என்று பிழைத்துக் கிடக்கின்றன.
//நாக்கு நுனியில் இரும்பைத் தொட்டது போல அதன் இனிமை எஞ்சியிருந்தது//இன்னமும் எஞ்சிக் கிடக்கிறது…
பத்து நாள் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் பத்து நாள் இரவும் விடாமல் விழித்துக் கிடந்து தெருக்கூத்து பார்த்த அனுபவத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் இனி பெற முடியுமா? வில் வளைப்பும் அர்ஜுனன் தபசும் பகடை தூதும் கர்ண மோட்சமும் பதினெட்டாம் போரும் மீலாக் கனவாய் நெடுங்கால நினைவாய் எங்கோ நெஞ்சின் அடியில்.
வாயோரம் நீர் வழிய ஆடைகள் எங்கெங்கோ கிடக்க மூலைக்கு ஒருவராய் இரவெல்லாம் கண்விழித்து கூத்துப் பார்த்த அலுப்பில் தூங்கிக் கடக்கும் எங்களை மாலை 4 மணிக்கு தட்டி எழுப்பி பாட்டி கொடுக்கும் அந்த கொதிக்கும் டீக்கும் கொறித்த முறுக்குக்கும் இணையான சுகம் மண்ணில் வேறுண்டோ?
//டீ நன்றாக இருந்தது. தூக்கத்தில் இருந்து விழித்தெழும்போதுதான் டீ அத்தனை மணமும் சுவையும் அடைகிறது//
இமயக் குளிரில் குகைகளில் ஒடுங்கிக் கிடந்த பொழுதுகளில் ஏலமும் வெல்லமும் இஞ்சியும் தட்டிப் போட்ட ஒரு குவளை கொதிக்கும் கட்டன் சாயா கொடுக்த சுகம் தியானத்தின் உச்சத்தில் கூட கிடைப்பதில்லை. இதை எழுதுவதில் வெட்கப்படவும் ஒன்றும் இல்லை. உண்மை அதுதானே! சோர்ந்து கிடக்கும் சமயங்களில் எந்த தேவனை விடவும் தேநீர் தேவனே நெஞ்சுக்கு உகந்தவன்.
கங்கைக் கரையில் அமர்ந்து மனம் அசைவற்று நின்ற பொழுதுகளில் ஆறு மட்டுமே ஒழுகிக் கொண்டிருக்கும் அந்த அனுபவம் எனக்கும் உண்டு.
//ஊர் அசைவற்று நிற்க ஆறுமட்டும் ஒழுகிக்கொண்டிருப்பது//
ஒவ்வொரு சித்திரை தேர் திருவிழாவின் முடிவிலும் விழா காண வந்திருந்த பெரியம்மா சின்னம்மா அத்தை பிள்ளைகளும் பெண்களும் ஊர் போனபின்பு ஏற்படும் வெறுமை ஐயோ சொல்லிமாலுமா? கூடிக் களித்த சுற்றம் ஊர் போன சோகம் ஒரு புறம், பார்த்துக் களித்த கூத்துக்கள் கேட்டு ஆனந்தித்த கச்சேரிகள் முடிந்து போன சோகம் ஒரு புறம்.
//ஒரு கணம் கழித்து ஆழமான ஏமாற்றத்தை அடைந்தான். அவனுள் ஒலித்துக் கொண்டிருந்த செண்டையின் தாளம் முடிந்துவிட்டிருந்தது//
கேளிக்கையில் இருந்து வந்ததோ கேளி அல்லது கேளியில் இருந்து வந்ததோ கேளிக்கை. கேளிக்கை இல்லாத வாழ்க்கைக்கு பொருளென ஏதாகிலும் இருக்கிறதோ. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு என கேளிக்கை நாட்களையும் விழாக்களையும் கொண்டாட்டங்களையும் வகுத்தவன் வாழத் தெரிந்தவன்.
நாமும்தான் கசங்கி கைந்துணி போல ஆகிவிட்டிருந்த தினத்தந்தி என ஒவ்வொரு திருவிழாவிற்கு பிறகும் மனதால் நைந்து போகிறோம் அடுத்த திருவிழாவிற்காக எங்கித் தவித்திருக்கிறோம்.
//அவருக்கு எந்த மாறுதலும் தெரிந்திருக்காது. நேற்றுபோலவே இன்றும், அதே நேரம் அதே செயல்கள். நேற்று அத்தனை மக்கள் கொந்தளிப்பின் நடுவே எவர் உடலிலும் முட்டிக்கொள்ளாமல் கோயிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குச் சென்று வழக்கமான நேரத்தில் படுத்திருப்பார்//
இவர் போல எத்தனையோ Routine னே வாழ்க்கையாய், காசே குறியாய், கருமமே கண்ணாகிய, எந்த விழாக்களாலும் சற்றும் வெளுக்க முடியாத, நித்தியமாய் நிறம் மாறாத கருப்பு சிங்கங்கள்(!) நிறைய பார்த்திருக்கிறேன் எங்கள் ஊரில் நானும் கூட. என்ன செய்வது அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கை அவ்வளவுதான். பொன் மழை பொழிந்தாலும் உடலெங்கும் விளக்கெண்ணெயை தடவி வீதியில் உருண்டாலும் ஒட்டுவது தானே ஓட்டும். இவர்களுக்கெல்லாம் சொன்னால் புரியவா போகிறது.
சிவப்புக் கால்சட்டை மீது வேட்டி கட்டத் துவங்கிய போதே மாற்றங்கள் வரத் துவங்கிவிட்டன. இன்றோ வேட்டிகள் முழுதாக காணாமல்போய் கால் சட்டைகள் மட்டுமே போட்டு அலைகிறோம். விழாக்கள் மெல்லமல்ல தங்கள் விசால தன்மை இழந்து வெற்றுத் தளங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாற்றங்கள் நிச்சயம் தேவைதான் ஆனால் அவை மரபின் மேன்மையை மறுத்து அல்ல மரபின் மேன்மையை உண்டு செரித்து அதனினும் மேலாய் எழ வேண்டும். அத்தகைய மாற்றமே மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
//செம்பட தாளம் விரியும் விழியசைவுகள். விரிந்து மலர்ந்து குவிந்து சுழிக்கும் விரல்கள்//என வழக்கம் போல உன்னதம் நோக்கி மகிழ்ச்சி சிறகை விரிக்கும் கதை… அனந்தன் காட்டில் அன்றாடம் மழை…
மானிடர் வாழ்வெங்கும் விழாக்கள் தொடரட்டும். செண்டி மேளத்தீன் கேளி கொட்டு கொண்டாட்டம் நெஞ்சங்களில் என்றென்றும் தித்திக்கட்டும். உணர்வும் அறிவும் இணைந்ததுதானே வாழ்க்கை. கலையும் இலக்கியமும் இல்லாது போனால் வரண்டு போகாதோ மானுடம். உங்கள் திருக்கரங்களால் இலக்கிய வானில் இசைக்கு இன்னும் ஒரு மகுடம் என கேளி கதை.
தினம் ஒரு கதை கொண்டாட்டத்தில் தித்திக்க வைத்த இன்னுமொரு தினம். நெஞ்சம் நிறை நன்றிகளும் வாழ்த்துக்களும்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
திருவண்ணாமலை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

