Jeyamohan's Blog, page 1023
March 12, 2021
புதிய வாசகர் சந்திப்பு – கோவை
நண்பர்களே,
இந்த வருடம் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள நண்பர் பாலுவின் பண்ணை இல்லத்தில் நடத்தலாம் என உள்ளோம். நிகழ்வானது மார்ச் மாதம் 20, 21ம் தேதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் 1.30 வரை நடைபெறும்.
இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார். இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக உரையாடல் அமையும். கடந்த ஆண்டுகளில் இது மிகுந்த பயன் அளித்ததாக சந்திப்பிற்கு வந்திருந்த வாசகர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஓரிரு முறை சந்தித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டு சந்திப்புக்கு விண்ணப்பித்தவர்கள் 10 பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டனர்.
விருந்தினர் இல்லத்தில் 20 பேர்வரை தங்கலாம் எனவே சுமார் 20 நபர்களையே ஏற்றுக்கொள்ள முடியும்.
கடந்த ஆண்டுகளில் பதிவு செய்துவிட்டு தகவல் அளிக்காமல் வரத்தவறியவர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,
பெயர் :
வயது :
தற்போதைய ஊர் :
தொழில் :
மின்னஞ்சல்:
செல் பேசி எண் :
ஆகிய விபரங்களுடன் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் சில நாட்களில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
சந்திப்பு நடைபெறும்
இடம் : கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்
தேதி, நேரம் : 20.3.2021 சனி காலை 10 மணி முதல் 21.3.2021 ஞாயிறு மதியம் 1.30 வரை.
தொடர்புக்கு:
மணவாளன்
98947 05976
azhaindian@gmail.com
கோவை தொடர்புக்கு :
பாலு
98422 33881
விசை[சிறுகதை]
கரடிக்காட்டு எஸ்டேட் அருகே டிராக்டரில் வரும்போது நேசையன் வண்டியை நிறுத்தி இறங்கி கீழே கிடந்த தென்னையோலைகளை எடுத்து வண்டிக்குள் போட்டான்.
“என்னண்ணாச்சி ஓலைய பெறுக்குதீக?”என்று சாமிக்கண் கேட்டான்.
“கெடக்கட்டும்லே, என்னத்துக்காம் வச்சுக்கலாம்.”
“இப்பம் ஆரு ஓலை முடையுதா? தெங்கோலை கூரையுள்ள வீடு இப்ப எங்க இருக்கு? ஓலைமுடையுயதுக்கும் ஆளில்லை.”
“வெறகு எரிக்கலாமே?” என்றான் நேசையன்.
“அங்க நம்ம வீட்டு தோட்டத்திலே மட்டையும் ஓலையும் கெடந்து செதலரிக்குது… இப்பம் ஆரு ஓலையை வச்சு வெறகெரிக்காவ? கேஸ் சிலிண்டரு கூவிக்கூவி குடுக்கான்…”
“நீ சும்மா வாடே”
”கை அரிக்குது, என்னண்ணே?”
“ஏலே சும்மா வாறியா இல்லியா?”
டிராக்டர் மீண்டும் ஓலைகள் அருகே சென்றது. இறங்கி எடுக்கலாமா என்று நேசையன் நினைத்தான். பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தான். தென்னை ஓலைகளுக்கு இன்று விலையே இல்லை. விறகாகக்கூட. தேங்காய்நாருக்கே விலை இல்லை. தென்னந்தோப்புகளில் அவற்றை குழிவெட்டி மூடவேண்டியிருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட தென்னைமட்டைக்கு அவ்வளவு தேவை இருந்தது. முடைந்த ஓலை ஒரு கீற்று பத்துரூபாய் போயிற்று. தேங்காய் ஒன்று ஆறுரூபாய்க்கு போனபோது தேங்காய்மட்டை இரண்டுரூபாய்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேங்காய்ப்பட்டினம் சாயவுக்கள் வண்டிகளில் வந்து எண்ணி எடுத்துக்கொண்டு காசு கொடுத்தார்கள். தேங்காய்நாரால் கயிறு முறுக்கிக்கொண்டிருந்தவர்கள். நைலான் கயிறுகள் வந்த பிறகு தேங்காய்நாரை அப்படியே மெத்தை கம்பெனிக்கு கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கும் நார் வேண்டியதில்லை.
நேசையனின் அம்மை இருபது வருடம் முன்புதான் செத்தாள். ஓலைக்காரி என்றுதான் அவளை ஊரில் சொல்வார்கள். அவளுடைய முழுவாழ்க்கையே தென்னையோலையுடன் இணைந்தது. அவனுக்கே ஓலைக்காரிமகன் என்றுதான் நீண்டநாள் பெயர் இருந்தது. ஓலை என்று இப்போதுகூட சிலர் சொல்வதுண்டு.
சாவதற்கு முந்தைய நாள்வரை கிழவி கை ஓயாமல் வேலைசெய்துகொண்டிருந்தாள். அதைப்பற்றி ஊரில் பலரும் அவனிடம் பேசியதுண்டு. அவன் ரப்பர் கொட்டை வியாபாரம், ரப்பர் ஷீட் வியாபாரம் என்று ஒரு ஆளாக அறியப்பட்டுக்கொண்டிருந்தான். “ஏம்பிலே, உனக்க அம்மைய இனியெங்கிலும் வீடடங்கி கிடக்கச் சொல்லுலே… பாவம் அறுவது எளுவது வருசமா வேலைசெய்யுதாள்லா?”என்று தங்கையா டீக்கனார் ஒருமுறை சொன்னார்.
“நான் சொன்னா கேக்கமாட்டா… கெட்டிப்போடவா முடியும்?”என்று நேசையன் சொன்னான்.
“நயமா சொல்லணும்” என்றார் டீக்கனார். “ஆனா நீ சொல்லுகது உண்மையாக்கும். சோலிசெய்த கையாலே சும்மா இருக்க முடியாது”
ஆனால் பெண்கள் அப்படி புரிந்துகொள்வதில்லை. நயமாக ஊசி இறக்குவார்கள். “என்னவே நேசையன் பெருவட்டரே… உமக்கு ரெண்டு வருமானம்லா… அங்க அம்மையும் கை நிறைய சம்பாரிக்குதாள்லா?”
அவன் ஒன்றும் சொல்லமாட்டான். ஆனால் கண்கள் கோத்துக்கொண்டபின் இன்னொரு கிழவி “அது பின்னே அப்டியாக்குமே. அரைபைசாவா இருந்தாலும் அரசனாக்குமே” என்பாள்.
அவன் ஆரம்பத்தில் அம்மையிடம் சொல்லிப்பாத்தான். “அம்மை வீட்டிலே கிடக்கணும்… இனி என்னத்துக்கு கஷ்டப்படுதது? நான் சம்பாரிக்குதேன்லா?”
ஆனால் அம்மை அவனிடம் பேசுவது குறைவு. அவன் ஏதாவது சொன்னால் அவள் வேறெங்காவது பார்த்துக்கொண்டிருப்பாள்.
“நல்லா சொல்லுங்க… வயசான காலத்திலே நானாக்கும் வேலைக்கு விடுதேன்னு ஊரிலே போக்கத்தவளுக சொல்லுதாளுக” என்றாள் மேரி.
“நீ சும்மா கெட… நான் சொல்லுதேன்”என்றான் நேசையன். “இஞ்சேருங்க… வீட்டிலே இருந்து என்னமாம் செய்யுங்க. எருமை நிக்குது. பனையோலை கொண்டுவந்து தாறேன். பெட்டி செய்யுங்க. கையை சும்மா வைச்சிருக்க முடியாது. அதுக்குண்டானத செய்யுங்க… காலம்பற எந்திரிச்சு காட்டுக்குப் போகவேண்டாம்… ஊருக்கு ஆயிரம் நாக்காக்கும்”
ஆனால் அம்மை அதையெல்லாம் கேட்டதாகவே தெரியவில்லை. அவன் சொல்லச்சொல்ல அவள் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள். பின்னர் ஒன்றுமே தெரியாதவளாக எழுந்து போனாள். அவனுக்கு தெரிந்துவிட்டது, அவளிடம் ஒன்றும் சொல்லமுடியாது. அவள் செவியில்லாதவளாக ஆகி நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது. அவள் பேசி சிரித்து அவன் பார்த்ததே இல்லை. அவளால் சிரிக்கமுடியுமா என்றே அவனுக்கு சந்தேகம்.
அவளுக்கு எப்போதுமே இடுப்பில் ஓர் அழுக்கு வேட்டி, மேலே இறுக்கிக்கட்டிய இன்னொரு அழுக்கு வேட்டி. ஒரு வேட்டி வாங்கி பாதிப்பாதியாக கிழித்துக்கொள்வாள். அதையே பகலிலும் இரவிலும் அணிந்திருப்பாள். பலநாட்களுக்கு ஒருமுறைதான் குளியல். அன்றைக்குத்தான் ஆடைமாற்றிக்கொள்வாள். அவள் எப்போது சாப்பிடுகிறாள் என்பதே தெரியாது. கூடவே இருந்து பார்த்துக்கொண்டிருந்தால் தெரியும் அவள் ருசியோ அளவோ பார்க்காமல் கையில் இருப்பதை நாலைந்து கவளமாக விழுங்கிவிடுவாள். “முதலை விளுங்குத மாதிரி திங்குதா” என்று அணைக்கரை ஆத்தா அவளைப்பற்றி சொல்வதுண்டு.
அவனுடைய அப்பன் அவனுக்கு மூன்றுவயதாக இருக்கும்போது பனையிலிருந்து விழுந்து இறந்தார். அவனுக்கு அது மங்கலாகத்தான் ஞாபகம். யாரோ ஏதோ ஓடிவந்து சொல்ல அம்மை நெஞ்சிலும் தலையிலும் அடித்துக்கொண்டு ஓடினாள். அவனை அணைக்கரை ஆத்தா வந்து அப்படியே கட்டிப்பிடித்து கூட்டிக்கொண்டு போய்விட்டாள். அவன் திரும்பி வந்தபோது வீட்டில் அப்பன் இல்லை. அம்மை மட்டும்தான் இருந்தாள். வெறித்த கண்களுடன் எதுகேட்டாலும் பதில் சொல்லாதவளாக இருந்தாள். அவன் அவளை அடித்து உதைத்து கூச்சலிட்டு சோறு கேட்டான்.
அதன்பிறகுதான் அம்மை அப்படி ஆகிவிட்டாள். அவனும் அதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டான். அவன் வீட்டுக்கு வருவதே சாப்பிடுவதற்காகத்தான். பள்ளிக்கூடம் அவனுக்கு சரிவரவில்லை. எட்டுவயதிலேயே ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். பதினாறுவயது முதல் ரப்பர் பால் வெட்டினான். அதனுடன் இணைந்து ஒட்டுகறையும் ரப்பர் கொட்டையும் வாங்கி விற்க ஆரம்பித்தான்.
கையில் பணம் வந்தபோது அவன் அம்மைக்கு நல்ல சேலை வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தான். அவள் அதை தொட்டே பார்க்கவில்லை. வீட்டில் அரிசியும் மளிகையும் வாங்கி நிறைத்து வைத்தான். அவளுக்கு சமையலே தெரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் சோறுபொங்கி தேங்காய் அரைத்து துவையல் செய்வது மட்டும்தான். தேங்காய்த்துவையலை சோற்றில் போட்டு பிசைந்து தின்றுதான் அவன் வளர்ந்தான். அவன் நல்ல சோறு தின்றதெல்லாம் ஓட்டல்களில்தான்.
மேரியை அவன் திருமணம் செய்த அன்று அம்மைக்கு நல்ல வெள்ளை துணி அணிவித்தான். அணைக்கரை ஆத்தா வந்து அவளே சொல்லி வெள்ளை உடுக்கவைத்தாள். அம்மை அந்த கோலத்தில் சர்ச்சுக்கும் வந்தாள். அவனும் மேரியும் வந்து ஆசீர்வாதம் கோரியபோது மேரியின் தலையை சும்மா தொட்டாள்.
“இப்பவெங்கிலும் முகத்திலே ஒரு சிரிப்பு வந்தா நல்லாருக்குமே” என்று யாரோ சொன்னார்கள். ஆனால் அம்மை வழக்கம்போல அதையும் கேட்டதாக தெரியவில்லை.
அம்மையின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவள் அதிகாலையிலேயே எழுந்து இருட்டுக்குள் நடந்து தோட்டக்காட்டுக்கு போய்விடுவாள். யாருடைய தோட்டமானாலும் சாலையிலும் ஆற்றங்கரை மணலிலும் விழுந்துகிடக்கும் ஓலைமட்டைகள் பொதுச்சொத்து என்பது கணக்கு. அவள் ஊர் எல்லைக்கு அப்பால் காடு வரை போவாள். அயக்காட்டு எஸ்டேட்டில் ஆற்றுக்குள் ஐம்பது ஓலைகளாவது விழாமலிருக்காது. அவற்றை எடுத்து சேர்த்துக் கட்டி ஆற்றில் போட்டு நீரொழுக்கு வழியாக கொண்டுவருவாள். கரையில் இழுத்து எடுத்து கீறி உலரப்போட்டபின்புதான் சுடுகாப்பி குடிக்க வருவாள். அப்போதுதான் அவன் எழுந்து டிராக்டரை உறுமவைத்துக்கொண்டிருப்பான்.
அம்மைக்கு வந்த மாற்றம் என்றால் காப்பி குடிப்பதுதான். முன்பெல்லாம் காலையில் பழங்கஞ்சியில் உப்பு போட்டு குடிப்பாள். மேரி வந்தபின் ஒருநாள் காபி கொடுத்தது பிடித்திருந்தது. அதன்பின் காபி கேட்டு வாங்கினாள். அவளுக்கென ஒரு பெரிய சருவம். அது நிறைய கொதிக்கும் கடுங்காப்பி வேண்டும். கருப்பட்டி போட்டு காபித்தூளுடன் கொதிக்கவைத்த கருப்பான திரவம். அப்படியே கொதிக்கக்கொதிக்க சருவத்திலிருந்து வாய்க்குள் விட்டுக்கொள்வாள். பல்லில்லாத வாயிலிருந்து புகை கிளம்பும். டிராக்டரின் ரேடியேட்டர் மாதிரி.
“தீதின்னி… தீ தின்னிக்கெளவி…” என்று மேரி சொல்வாள். “அப்டியே வெந்து போவும் உள்ள”
“அவளுக்குள்ள எல்லாம் எப்பமோ வெந்து அடங்கியாச்சு பிள்ளே” என்றாள் வேலைக்காரி குருசம்மை.
காப்பிக்குப் பின் நேராக ஆற்றுக்குப்போய் முந்தையநாள் ஊறப்போட்ட ஓலைக்கீற்றுகளை எடுத்துவந்து முடைய ஆரம்பிப்பாள். முடைந்த ஓலைகளை வெயிலில் போட்டு காயவைத்து அடுக்கி சுருட்டி கட்டி சிப்பங்களாக்கி கொட்டகையில் அடுக்குவாள். அது முடிய சாயங்காலம் ஆகிவிடும். அதன்பின் இடுப்பில் அரிவாளுடன் மீண்டும் ஒருமுறை ஓலைபொறுக்கச் சென்று அந்தி இருண்டபிறகுதான் திரும்பிவருவாள்.
இருட்டில் அவள் திரும்பி வரும்போது அவன் திண்ணையில்தான் இருப்பான். கிழவி மெலிந்து சிறுத்து ஒரு சிறுமியைப்போல ஆகிவிட்டிருந்தாள். அமர்ந்து அமர்ந்து கூன்விழுந்து இடுப்பும் ஒடிந்துவிட்டது. இடுப்பை ஒருகையால் தாங்கிக்கொண்டு இன்னொருகையை தொங்கவிட்டு மூன்றாம்கால் போல வீசி வீசி வருவாள். சருகு காற்றில் ஏற்றி எற்றி வருவதுபோலிருக்கும். அருகே வந்து உடலை உந்தி எழுந்து அவனை ஒருமுறை பார்ப்பாள். ஒன்றும் சொல்வதில்லை. அப்படியே வீட்டை வளைத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் போய்விடுவாள்.
அவன் இரவில் எப்போதாவது கொல்லைப்பக்கம் போவான். உரல் அருகே அவளே பழைய சாக்கை இழுத்துப்போட்டு ஓர் இடம் செய்துவைத்திருந்தாள். பழைய சாக்காலான ஒரு போர்வை. அதை போர்த்திக்கொண்டு லாடம்போல ஆகி தூங்கிக்கொண்டிருப்பாள். குறட்டை ஓசை சற்று விசில்கலந்து கேட்கும். அவன் அவளுக்கு கட்டில் மெத்தை எல்லாம் போட்டுக்கொடுத்து பார்த்தான். அது அவள் அந்த வீடு குடிசையாக இருந்தபோது படுத்திருந்த அதே இடம், அவள் அங்கிருந்து வரவில்லை.
அவன் சிலசமயம் நின்று அவளை பார்த்துக்கொண்டிருப்பான். அவளை அவன் அப்பன் பேச்சிப்பாறையிலிருந்து கூட்டிவந்ததாக சொல்வார்கள். அங்கே ஒரு எஸ்டேட்டில் அடிமைவேலை செய்தவள். நாநூறுரூபாய் பணம் கட்டி அவளை மீட்டார். அவர் நல்ல பனையேறி. ஆனால் எந்த பனையேறிக்கும் அடிசறுக்கும். பனை தனக்கான உள்ளம் கொண்டது.
அப்பன் இருந்தபோதே அவள் தென்னையோலை திரட்டி முடைந்து விற்க ஆரம்பித்திருந்தாள். அது அவள் கைச்செலவுப் பணமாக இருந்தது. அதன்பிறகு அதுவேதான் அரிசியும் உப்புமாக ஆகியது.
அம்மை ஆண்டுக்கு பத்துப்பதினைந்தாயிரம் ரூபாய்க்கு முடைந்த ஓலைக்கீற்றுகளை விற்றுவிடுவாள். அந்நாளில் அவளுடைய ஓலைக்கீற்றுகளுக்கு தனிப்பெயர் இருந்தது. ”நல்ல மரப்பலகை மாதிரி இறுக்கமாட்டு இருக்கும்டே. கிளவி ஜீவனைக்குடுத்து இளுத்து வலிச்சுல்லா முடையுதா” என்று அனந்தன் நாடார் சொல்வார்.
உண்மைதான். அம்மை ஓலைமுடைவதை தொலைவிலிருந்து அவன் பார்ப்பான். அவள் வாயை இறுக்கி பல்லைக்கடித்திருப்பாள். கழுத்துத் தசைகள் இறுகி தலை நாணிழுக்கப்பட்ட பறை போலிருக்கும். ஓலையை சொடுக்கிச் சொடுக்கி இழுப்பாள். முடிச்சை இறுக்கி மீண்டும் இறுக்கி ஒருமுறை மூச்சுப்பிடித்து மீண்டும் இறுக்குவாள். அவள் முடைந்த ஓலைக்கீற்றுக்களை நிற்கவைத்து பார்த்தால் ஊசிப்பொட்டு வடிவாகக்கூட மறுபக்க வெளிச்சம் தெரியாது.
“இந்த மட்டுக்கு வலிச்சு முடையுதாளே, இதேமாதிரி பனம்பாயோ பெட்டியோ முடைஞ்சா நல்லா பைசா நிக்கும்லா?” என்று ஒருமுறை அனந்தன் நாடார் சொன்னார். அவன் அம்மையிடம் அதை சொன்னான். அம்மை அதை செவியில் வாங்கவேயில்லை. பிறகு அவனே கண்டுகொண்டான். அம்மைக்கு எந்த தொழில்தேர்ச்சியும் இல்லை. அவளுக்கு கையில் கவனமும் இல்லை. அவளிடமிருந்தது ஒரு விசை மட்டும்தான். ஓலை முடைவது மிக எளிமையான ஒரு செயல். திரும்பத்திரும்ப ஒன்றையே அம்மை செய்தாள். உயிரைக்கொடுத்து ஓலையை இழுத்து முடி போட்டு செருகிக்கொண்டே இருந்தாள்.
அவள் வாயை இறுக்கி வைத்திருப்பதை அவன் பலநாட்கள் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவள் ஏதோ சொல்லவந்து அதை உதடுகளில் நிறுத்தி வைத்திருப்பதுபோலிருக்கும். எந்தக் கணத்திலும் ஆவேசமாக அதை கூவிவிடுவாள் என்று தோன்றும். அது ஒரு கெட்டவார்த்தையாகவே இருக்கும் என அவன் எண்ணியதுண்டு. அவனை நோக்கி அதை சொல்லலாம். அல்லது இங்கே உள்ள எவரைநோக்கியும் அதை சொல்லலாம்.
அம்மை இரவில் தூங்கும்போதுகூட அவள் வாய் அப்படித்தான் இறுக்கமாக இருந்தது. எந்நேரமும் ஏதோ வடத்தைப் பற்றி இழுப்பவள்போல. மிகப்பெரிய எடையை பாதி தூக்கியிருப்பதுபோல. குழந்தைகளை பார்க்கும்போதாவது அந்த வாய்முடிச்சு நெகிழ்கிறதா என்று பார்ப்பான். அம்மை குழந்தைகளை பார்ப்பதே இல்லை. ஒருமுறை ஒரு நாய்க்குட்டி போய் அம்மையின் ஆடைநுனியை கவ்வி இழுத்து விளையாடியது. அவள் தன் முகத்தில் அந்தக் கடுமையான முடிச்சு அப்படியே இருக்க வேட்டியை இழுத்து நாயை தூக்கி அப்பால் விட்டாள்.
அம்மை செத்தபோது ‘எலிசாம்மாள் [ஓலைக்காரி] வயது 82, கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்’ என்றுதான் போஸ்டர் அடித்து ஊரில் ஒட்டினான். அவனை காலையில் எழுப்பிய மேரிதான் “இஞ்சேருங்க, வந்து பாருங்க. என்னமோன்னு கிடக்குது கிளவி” என்றாள். அப்போதே அவனுக்கு தெரிந்துவிட்டது. அவன் போய் பார்த்தபோது அம்மை அதே அரைச்சுருளாக இறுக்கிக்கொண்டு கிடந்தாள். முகம் சுருங்கி உதடுகள் இறுக்கமாக முடிச்சிட்டிருந்தன. கைவிரல்கள் ஓலைநாரை இழுப்பதுபோல இறுக்கமாக விரலைச் சுருட்டிப் பிடித்திருந்தன.
அனந்தன் நாடாரிடம் அம்மை கணக்கில் பதினெட்டாயிரம் ரூபாய் இருந்தது. போஸ்டாபீஸில் மூன்று லட்சம் போட்டு வைத்திருந்தாள். ஆகவே மோட்சச் சடங்குகளெல்லாம் மிகப்பெரிதாகவே நடந்தன. சொர்க்கஜெபம் செய்த அன்றைக்கு நாநூறுபேருக்கு கறிசோறு. மிஞ்சிய பணத்தை சர்ச்சிலேயே ஒரு வைப்பு நிதியாக வைத்து ஏழைப்பிள்ளைகளுக்கு படிப்புத்தேவைக்கு கொடுப்பதாக ஏற்பாடு செய்தான். ஓலைக்காரிப் பணம் இன்றைக்குக் கூட ஆண்டுக்காண்டு ஏழைகளுக்கு கொடுக்கப்படுகிறது. ’ஓலைக்காரி பண்டு’ என்றால் தெரியாதவர்கள் இல்லை. ஆண்டுதோறும் அவள் போஸ்டர் அடித்து ஒரு கூட்டுஜெபமும் நடத்துகிறான்.
அம்மை செத்தபோது அவளை எடுத்துப் படுக்கவைக்க பாய் தேடினார்கள். அனந்தன் நாடார்தான் “லேய் என்னத்துக்கு பாய்? கிளவி பின்னின ஓலை இருக்கே.. தட்டி மாதிரி இருக்கும்” என்றார்.
அம்மை முடைந்த ஓலைக்கீற்றுகள் இரண்டை அடுக்கி அதன்மேல்தான் அவளை படுக்கவைத்தனர். வெள்ளை வேட்டி போர்த்தி கண்மூடி படுத்திருந்தாள். அந்த வார்த்தை அவள் உதடுகளில் இறுக்கமாக இருந்தது. சவப்பெட்டி வந்து அதில் அவளை தூக்கி வைத்து கொண்டு சென்றபோது ஓலைகளைத் தூக்கி கொல்லைப்பக்கம் போட்டார்கள்.
மூன்றாம் நாள் மேரி அவனிடம் “கிளவிக்க ஒரு பெட்டியும் நாலஞ்சு பளைய வேட்டியும் இருக்கு. அதை தோட்டத்திலே குளியிலே போட்டு எரிச்சிருங்க” என்றாள்.
அந்த வேட்டிக்கிழிசல்கள் அழுக்கும் கறையும் படிந்திருந்தன. பனைநார்ப்பெட்டியில் வேறு ஒன்றுமே இல்லை. ஒரு வெற்றிலைப்பெட்டிகூட. அவன் தோட்டத்தில் குப்பை ஏரிக்கும் குழியில் அவற்றை எடுத்து வைத்தான்.
”இந்த ஓலைகளையும் வையுங்க… கிளவியை கிடத்தியிருந்த ஓலை “ என்றாள் மேரி.
அவன் ஓலைகளையும் வைத்து தீவைத்தான். கொழுந்து எழுந்து நின்றாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். அதிலிருந்து சட்டென்று கிழவி தோன்றிவிடுவாள் என்று ஒரு கணம் தோன்றியது. அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை.
மறுநாள் அவன் சாம்பல் குழிக்கு அருகே போனபோது அந்த ஓலைகள் எரியாமல் அப்படியே இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். வேறு ஓலைகளை மேரி வைத்திருப்பாளோ என மறுகணம் நினைத்தான். அதன்பிறகுதான் அவை ஓலைகள் அல்ல, கரி என்று தெரிந்தது.
அந்த ஓலைகள் எரிந்து கரியாகியபிறகும் ஓலைவடிவம் அழியாமல் அப்படியே இருந்தது. அவன் ஒரு கழியால் மெல்ல தட்டினான். அப்போதுகூட அவை அந்த பின்னல் வடிவத்துடனேயே உடைந்து விழுந்தன
மேரி அருகே வந்து இடையில் கைவைத்து நின்று “அப்பிடி இளுத்து இளுத்து முடைஞ்சிருக்கா கிளவி… அப்டி என்னதான் இளுத்தாளோ” என்றாள்.
”நீ போடி…” என்றான் நேசையன்.
“ஓலைய எதுக்கு கொண்டு போறிய?” என்றார் எதிரில் சைக்கிளில் வந்த தங்கையா நாடார்.
”கெடக்கட்டு டீக்கனாரே, நான் ஓலைக்காரிக்க மகன்லா?”என்றான் நேசையன்.
13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
ஆமென்பது,ஏழாம்கடல் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
’ஆமென்பது’ மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் [கசாக்கின் இதிகாசம்] வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்ட கதை. அவருடைய இறுதிச்சடங்கைச் செய்ய அவருடைய மகன் வர மறுத்துவிட்டான் என்பது அக்காலத்தில் வந்த செய்தி. சரியா என்று தெரியவில்லை. அது தவறான செய்தியாகவும் இருக்கலாம். ஆனால் கதையில் அவருடைய பெர்சனாலிட்டி மிகத்தீவிரமாக வந்திருக்கிறது. அவருடைய உடல்நலச்சிக்கல்கள், அவருடைய அரசியல், அவர் கடைசியில் போத்தன்கோடு கருணாகர சுவாமிகளின் மடத்தில்தான் இருந்தார்.
விஜயனைப் போன்றவர்களின் வாழ்க்கை சபிக்கப்பட்டது. அவர்கள் ஒன்றை தொலைத்து வேறொன்றை தேடிக்கொண்டிருப்பவர்கள். அதைத்தான் கதையும் சொல்கிறது என நினைக்கிறேன். எழுத்தாளர்களையும் உண்மையான மனிதர்களையும் கதைநாயகர்களாகக் கொண்டு பலகதைகளை எழுதியிருக்கிறீர்கள். முன்பு எம்.கோவிந்தனா என்று சந்தேகம் வரும் ஒரு கதை இருந்தது. எண்ணி எண்ணிக் குறைவது. ஜெயகாந்தன் வரும் இரண்டு கதைகள் உள்ளன. மதுரைசோமு ஒருகதையில் வருகிறார். இந்தக் கதைகளை எல்லாம் தொகுக்கலாமென நினைக்கிறேன்
எஸ்.ராஜகோபாலன்
அன்புள்ள ஜெ
நானே நினைத்துக்கொண்ட ஒரு விஷயம்தான் ஆமென்பது கதையிலுள்ளது. நான் சோதிடம் பார்ப்பவன். சோதிடம் பார்க்கும் ஒருவன் நவீன இலக்கியம் வாசிக்கலாமா என்று கேட்கமாட்டார்கள் என நினைக்கிறேன். நாங்கள் படித்த ஒன்று ‘சுபம் வத மங்களம் வத’ என்பது. சுபமானதே பேசவேண்டும். மங்களமானதே பேசவேண்டும். ஏனென்றால் தப்பான எதையாவது பேசினால் உடனே அருகே நின்று தெய்வம் ஒன்று ஆம் என்று சொல்லிவிடும். அந்த ததாஸ்து சொல்லும் தெய்வம் நாமேதான்
இந்த எழுத்தாளர்கள் எதிர்மறையாகவே சிந்திக்கிறார்கள். கசப்பு கோபம் வன்மம் என்றே எழுதுகிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் அதெல்லாம் இருக்கலாம். ஆனால் அவற்றை கொஞ்சம் ஜாஸ்தியாக்கிக் கொள்கிறார்கள். சிலர் சும்மாவே அதையெல்லாம் எழுதுகிறார்கள். எழுத்தில் உக்கிரம் வேண்டும். ஆகவே எல்லாமே உக்கிரமாக ஆக்கிக்கொள்கிறார்கள்
எழுத்தாளர்கள் எழுதும் மிகச்சிறந்த புனைவு அவர்கள்தான் என்று சொல்வார்கள். தாங்கள் புரட்சியாளர்கள் கலகக்காரர்கள் துக்கமானவர்கள் என்றெல்லாம் எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். உடனே ததாஸ்து விழுந்துவிடுகிறது. அதுவே அவர்களின் வாழ்க்கையாக ஆகிறது. கதையில் பிரபானந்தரும் அதைத்தான் சொல்கிறார். ஏற்கனவே இங்கே இவ்வளவு துக்கம். மேலும் ஆகாசத்தில் பறக்கும் துக்கங்களை ஏன் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து வைக்கிறாய் என்கிறார்
சங்கரநாராயணன் ஜி
ஏழாம்கடல் [சிறுகதை]அன்புள்ள ஜெ
ஏழாம் கடல் கதை தொடர்ச்சியாக பல கேள்விகளை எழுப்புவது. பல பதில்கள் அவரவர் கண்டடையவேண்டியவை. அந்தக்கேள்விகளை ஒருவாசகர் எந்த அளவுக்கு ஆழமாக எழுப்புகிறார் என்பது அவருடைய சிறப்பு சார்ந்த விஷயம்
எனக்கு தோன்றிய ஒரு சின்ன விஷயம். என் பாட்டியும் இன்னொரு பாட்டியும் நாற்பதாண்டுகள் மிகமிக நெருக்கமாக இருந்தார்கள். அந்த இன்னொரு பாட்டிக்கு கொஞ்சம் நோய்கள் உண்டு. அடிக்கடி நான் போய்ட்டா நீ இருக்கக்கூடாதுடீ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதேபோல அவர் இறந்த பதினேழாம் நாள் என் பாட்டியும் மறைந்தார்
யோசித்துப்பார்த்தால் அதுவும் ஒரு நஞ்சுதான் என்று தோன்றுகிறது
அழகு பாலசுப்ரமணியம்
பேரன்பிற்குரிய ஜெயமோகன்,
உருண்டு திரண்ட அன்பாகிய அமிழ்தும் அதனடியில் ஒரு நுண் துளி வெறுப்பாகிய நஞ்சும் கலந்தது தானே மனித மனசு. கோடி கோடியாய் அன்பென்னும் முத்து விளைக்கும் சிப்பி கணங்கள் மானிடர் வாழ்வில் நிறைந்திருந்தாலும் எங்கோ ஒரு நீல ரேகை துளி நஞ்சு துளிர்த்த சிப்பிக் கணமும் இருக்கத்தானே செய்கிறது.
எல்லாச் சிப்பியும் முத்து தருவதில்லை. எல்லாக் கரையோர பாறைப் சிப்பியும் முத்து வளரும்வரை பிடிக்கப் படாமல் தப்புவதில்லை. பிடிக்கப்படுகின்ற கோடிகோடி கரையோர பாறைப் சிப்பிகளில் ஏதோஒன்று முத்து கொண்டதாக உள்ளது. அதிலும் லட்சம் கோடிகளில் ஒன்று நீல ரேகை நச்சு கொண்டதாக உள்ளது.
வியாகப்பனின் அன்பு திரண்டு, அவன் பிரார்த்தனைகள் பலித்து, அந்த பரிசுத்த ஆவி ஏழாம் கடலான பாராவாரத்திலிருந்து பேரன்பின் பெருநட்புக்கு பரிசாக பழுநுதலால் அமிழ்தாகி ஒரு முத்துச்சிப்பியை பிள்ளைவாளுக்கு எப்போதோ கொடுத்துவிட்டது. ஆனால் பிள்ளைவாளுக்குள் இருந்த சிறு நஞ்சோ அந்த நீல ரேகை விஷ சிப்பி கிடைக்கும் வரை காத்திருந்தது. அந்த காத்திருப்புக்கும் காரணம் வியாகப்பனிடம் அவருக்கிருந்த பேரன்பில் துளிர்த்த துளி நஞ்சே. அந்தத் துளி நஞ்சே வியாக்ப்பனிடம் தனக்கு முத்து கிடைத்ததை பற்றி சொல்ல விடாமல் நீல ரேகையாய் தடை செய்திருந்தது.
அறுபது ஆண்டுகால பேச்சுக்களிடை நிச்சயமாக வியாகப்பனிடமிருந்து அந்த நீல ரேகை சிப்பியை குறித்து பிள்ளைவாள் எப்போதோ அறிந்திருந்தார், அது வரும் நாளுக்காக அறிந்தே காத்திருந்தார். அதனாலேயே,
“நான் சடைஞ்சுபோட்டேன்… போறவளி தெரிஞ்சாச்சு.. ஒப்பம்சேந்து போலாம்னு” பிள்ளைவாள் சொல்லியும் இருந்திருக்கிறார்.
பிள்ளைவாளுக்கு நிச்சயம் தெரிந்து இருந்திருக்கிறது தனக்குப்பின் தன் உயிர் நண்பன் வியாகப்பன் வாழ மாட்டான் என்று. செம்புலப் பெயல் நீர் போல நெஞ்சோடு நெஞ்சு கலந்த அன்பு நெஞ்சுக்கு தெரியாதோ இன்னொரு நெஞ்சின் பாடு.
நாலு பக்க சிறுகதைக்குள் ஒரு நட்புக் காவியம் படைத்து எங்கள் உள்ளக் காட்டில் மென் தூறல் தூவி மண்வாசம் கிளப்பிவிட்டுவிட்டீர்கள்.
எண்ணங்கள் கிளர்ந்து எழுத்தாய் ஓடி வருகிறது….
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் உயிர் தோழனாக இருந்தவன் அந்த கிராமத்தில் இருந்த ஒரே ஒரு செருப்பு தைக்கும், சால் போன்றவற்றை தைக்கும் ஒரு தொழிலாளியின் மகனான முனுசாமி.
நோஞ்சானாக நான் பலசாலியான அவன் லாரல் அண்ட் ஹார்டி போல ஒரு விசித்திர கலவை. நாவல் மரத்திலும் அத்தி மரத்திலும் மாமரத்திலும் ஏறி அவன் உதிர்க்கின்ற பழங்களில் அவன் இறங்கி வருவதற்குள் முக்கால்வாசி தின்று தீர்த்த ஒரு விசித்திர நட்பு பந்தம். எதற்காகவோ வீட்டில் சண்டை போட்டுவிட்டு ஓடிப் போனான் அந்த மடையன். இன்றுவரை என்ன ஆனான் எங்கு இருக்கிறான் எனத் தெரியாது. ஆனாலும் நட்பு குறித்து எதைப் படித்தாலும் பார்த்தாலும் அவன் நினைவு வராமல் போவதே இல்லை. முதற் காதலை மட்டுமா முதல் நட்பையும் தான் மறக்க முடியாது.
ஓடிப்போன முனுசாமியின் வெறுமையை சட்டென வந்து பிடித்தான் தனவேல். ஒரு ஒன்றரை கிலோமீட்டர் ஊரைவிட்டு தள்ளி இருந்த கிராமத்தைச் சார்ந்த சிறிய சேரியிலிருந்து படிக்க எல்லா வகுப்பையும் சேர்த்து 40 பேரே இருந்த பள்ளிக்கு வந்தவன். எனக்காக எப்போதும் அவன் பள்ளிப் பையில் மாங்காயோ, வேர்க்கடலையோ, கரும்போ கம்பங் கதிரோ, மக்காச்சோளமோ, இலந்தைப் பழமோ, கோண புளியங்காயோ அல்லது குறைந்தபட்சம் சில்லுக்கருப்பட்டியோ இல்லாது போன நாளே கிடையாது. ஐந்தாம் வகுப்பில் என் தந்தை மாற்றலாகி அவர் சொந்த கிராமத்திற்கு வந்தபோது அழுது கொண்டேதான் அவனைப் பிரிந்தேன். நான் முதன் முதலில் 15 காசு போஸ்ட் கார்டில் கடிதம் எழுதியதும் அவனுக்குத் தான். அதன்பிறகு அவன் படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலை செய்ய பெங்களூரு சென்று விட்டதால் தொடர்பே இல்லாமல் போனது. எங்கு இருக்கிறான் என்று இன்றைக்கும் தெரியாது.
அப்பாவின் சொந்த ஊருக்கு சென்ற பொழுது அந்த ஊரில் வஜ்ஜிரம் என்ற ஒருவன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆனான். வயல்வெளி ஓடை குளத்தங்கரை ஏரிக்கரை பள்ளி மைதானம் அம்மன் கோயில் வாகனக் கூடம் என சேர்ந்து கிடந்து பல மணி நேரம் பேசிப்பேசி கூத்தடிப்போம். அத்தனை நெருக்கம்.
யார் கண் பட்டதோ அல்லது உள்ளத்தின் ஆழத்து அறியா சிறு வெறுப்போ அல்லது அவனை எது தூண்டியதோ ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னையும் எங்கள் வகுப்பில் இருந்த இன்னொரு பெண்ணையும் இணைத்து கழிப்பறை சுவற்றுக்கு வெளியே கரித்துண்டால் ஒற்றை வரி புனைகதை எழுதி விட்டான். நான் மனம் உடைந்து போனேன். இல்லாத ஒன்றை கதை கட்டியது மட்டும் அல்ல தேவையில்லாமல் ஒரு பெண்ணின் மீது களங்கம் ஏற்படுத்துவதை அந்த வயதில் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனது. அந்த நாளிலிருந்து அவனை பார்ப்பதையே அவன் பக்கம் திரும்புவதையே தவிர்த்துவிட்டேன். அவன் என்னோடு பேச எவ்வளவோ முயன்றும் முற்றாக அவனை விலக்கினேன். ஏதோ காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பிலேயே அவன் பள்ளியை விட்டு நின்று விட்டான். அவன் தந்தையோடு சேர்ந்து அருகில் இருந்த நகரத்தில் அவர்களுக்கு சொந்தமான சிறிய ஜவுளிக்கடையில் வியாபாரம் செய்ய போய்விட்டான். அதன் பிறகு என்னுடைய 35 வயதுவரை அவனை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவேயில்லை.
நான் துறவு மேற்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பாக எனக்கு உள்ளுணர்வாக நான் அவ்விதம் அவனை முற்றாகத் தவிர்த்தது சரியல்ல என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஒரு முறை பெற்றோரைப் பார்க்க கிராமத்திற்கு சென்றிருந்த பொழுது அவன் வீட்டுக்கு அவனைத்தேடி நானே சென்று மனம் விட்டுப் பேசினேன். ஒருமணி நேரம் பொதுவாக வாழ்க்கை நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டோம். அந்த நேரத்தில் அவன் செயலுக்கு அவன் எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டான். என் செயலுக்காக அவனை முற்றாக ஒதுக்கியதற்காக நானும் எண்ணிறந்த முறை அவனிடம் மன்னிப்பு கேட்டேன். என்ன காரணமோ ஏதோ தெரியாது நான் துறந்து இமயமலை செல்வதற்கு சில தினங்களுக்கு முன்பாக எனது கிராமத்து நண்பன் ஒருவன் வஜ்ஜிரம் எதன் பொருட்டோ தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் சொன்னான். நான் மனம் கலங்கி அந்த பரம்பொருளுக்கு நன்றி சொல்லி அழுதேன். இறைவன் எத்தனை கருணை மிக்கவன், வஜ்ஜிரம் இறப்புக்கு முன்பாக அவனிடம் மன்னிப்பு கேட்கின்ற ஒரு நல்வாய்ப்பை என்மீது கனிந்து வழங்கினானே!
வஜ்ஜிரம் இடத்தைப் பிடித்தது என்னைவிட ஒரு வயது பெரிய நரசிம்மன். மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லும் வரை ஆட்டமும் அட்டகாசமும், அந்த வயதுக்கே உரிய பருவ மாற்ற தடுமாற்றங்களும், தத்துபித்து செய்கைகளும், திருட்டுச் சினிமாக்களும், கீழ்மையும் மேன்மையும் என பால்யத்திற்குரிய அனைத்துக்கும் என் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் துணைவனாகவும் இருந்தவன். இன்றைக்கும் தொடர்பில் இருக்கிறான். ஆனால் என்ன நான் கல்லூரிக்குச் சென்று விடுதியில் தங்கி விட்டதாலும் அதன் பிறகு வாழ்க்கை முறையே கிராமத்திலிருந்து என்னை துண்டித்து விட்டதாலும் அவனுடனான தொடர்பு மிக மிகக் குறைந்து விட்டது.
SRM பொறியியல் கல்லூரியில் முதல் நாளிலேயே முதல் பார்வை முதல் புண்ணகையிலேயே உயிரில் வந்து கலந்தவன், ஒரு உயிர்த் தோழனாக இன்றுவரை தொடர்பவன் சக்திவேல்.
படிப்பாளி கோஷ்டியில் ஒருவனாக இருந்து மெரிட்டில் சீட் வாங்கி அந்த கல்லூரிக்கு போனவன் நான். அவன் தந்தை படிக்க முடியாமல் போன அவரின் இழப்பை ஈடுகட்ட முட்டிமோதி நிர்வாக கோட்டாவில் டொனேஷன் கட்டி அவனை கல்லூரியில் சேர்த்திருந்தார். எங்கள் இணைப்பே கொஞ்சம் வித்தியாசமானது தான்.
நான்கு ஆண்டுகள் என் விடுதிஅறை, வகுப்பறை, ஊர் சுற்றல், பொழுதுபோக்கு என ஒன்றாக பகிர்ந்த வாழ்வின் உன்னத கணங்கள் அவை. அவனுக்கு படிப்பு கொஞ்சம் இழுபரி, கடைசி வருஷத்திலே என்னுடைய அனைத்து தேர்வுகளும் முடிந்து போன பிறகும் ஒரு மாதம் அறையிலேயே தங்கி இருந்து அவனுடைய முன்னர் எழுதி விடுபட்டுப் போன 17 பாடங்கள் தேர்வு முடியும் வரை அவனோடு இருந்து அவன் அனைத்திலும் வெற்றி பெற இருவரும் சேர்ந்தே உழைத்தோம். வியக்கத்தக்க வகையில் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்று அவன் என்னோடு சேர்ந்து பொறியியல் படிப்பையும் முடித்தான்.
நான் வேலை கிடைத்து என்னுடைய முதல் வேலையாக இந்தூர் மத்திய பிரதேசத்தில் ஓராண்டு பணியாற்றிய பொழுது என்னை காண்பதற்காகவே அவன் சென்னையில் தங்கியிருந்த மாமா வீட்டில் பொய் சொல்லி காசு வாங்கி அங்கு வரை வந்தவன். அதன்பிறகு அவன் மாமா வீட்டில் தங்கி கொண்டே சொந்தமாக நீர் சுத்திகரிக்கும் மெஷின்களை பழுது பார்க்கும் வேலையை செய்து கொண்டிருந்தான்.
ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நான் சென்னை வந்து சிட்டி குழுமம் ஆரம்பித்திருந்த உலகளாவிய வங்கி செயல்பாட்டு மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் சேர்ந்து அதிவேகமாக பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில்தான் சக்திவேல் குடிநீர் சுத்திகரிப்பு, பாட்டிலிங் மற்றும் பேக்கேஜிங் இயந்திரங்களை செய்யும் ஒரு சிறு தொழிலை சென்னையில் துவங்கி இருந்தான். இருவரும் சேர்ந்தே பொருளாதாரத்தில் வளர்ந்தோம். ஒத்தும் உதவியும் வாழ்ந்தோம்.
நான் துறவு மேற்கொண்டு இமயத்தில் இருந்த ஐந்து ஆண்டுகளிலும் சலைக்காமல் என்னோடு தொடர்பில் இருக்க தொடர்ந்து முயன்று கொண்டிருந்தவன் சக்திவேல்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் திருவண்ணாமலை வந்தது எங்கள் நட்பை மேலும் இறுக்கியது. நான் திருவண்ணாமலை வந்த நாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு மாதமும் என்னை காண்பதற்காகவே ஏதோ ஒரு ஞாயிறு காலை சென்னையிலிருந்து தனியாக காரில் கிளம்பி திருவண்ணாமலை வந்து ஒரு நான்கு ஐந்து மணி நேரம் என்னோடு செலவு செய்து நள்ளிரவு வீடு போய்ச் சேருவான்.
துறவு வாழ்வில் எனக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் சக்தியின் பங்களிப்பு இன்றுவரை போற்றத்தக்கது நினைவு கூறத்தக்கது. எத்தனையோ தொடர்புகளை துறவின் பொருட்டு முற்றாக உதற முடிந்த என்னால் இந்த நண்பனே எதன்பொருட்டும் தவிர்க்க முடிந்ததே இல்லை.
இந்தக் கதை என் நினைவுகளை எப்படி எப்படியோ கிளறிவிட்டது.
//“அது எந்த பெஞ்சாதிக்கும் மனசாக்கும்… இன்னொருத்தர் அப்டி நெருக்கமா இருந்தா எரியத்தான் செய்யும்…//
இதை நான் பிரத்தியட்சமாக அனுபவித்திருக்கிறேன். மாதாமாதம் என்னை காண சக்தி வருவது சக்தியின் மனைவிக்கு எப்போதும் எரிச்சலை தருகின்ற ஒன்றுதான்.ஒரு சில முறை அவரிடம் சொல்லாமலேயே சக்தி வந்தபோது அதை அறிந்து நான் ஒரேயடியாக அவ்விதம் மனைவியிடம் சொல்லாமல் சக்தி வருவதற்கு தடை சொல்லிவிட்டேன். அவரிடம் “நீ எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் நண்பனே ஆனால் மனைவியிடம் சொல்லிவிட்டு வா” என்று உறுதியாகக் கூறிவிட்டேன். இதை சக்தியின் மனைவியிடமும் அவன் முன்நிலையிலே அழைத்துக் கூறிவிட்டேன்
இப்போதெல்லாம் ஒரு மாத இடைவெளியில் நண்பர் திருவண்ணாமலை வரத் தவறினால் அவர் மனைவியே “கிளம்புங்க! கிளம்புங்க!, திருவண்ணாமலை போய் உங்கள் நண்பரோடு குலாவி விட்டு வாருங்கள், எங்களை கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடுங்க” என்று துரத்தி அனுப்புகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நண்பரின் மகளோ “அப்பா திருவண்ணாமலை எந்த வாரம் போறீங்க ?”என்று கேட்டு தந்தை ஊரில் இல்லாத நாட்களுக் கேற்றவாறு தனது நாட்களை திட்டமிட்டுக் கொள்கிறார்.
நண்பரின் மனைவியையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு சன்யாசியோடு சேர்ந்து நெருங்கிய நண்பராக இருக்கின்ற ஒருவர் சன்னியாசியாகி விட்டால் என்ன செய்வது என்ற அவரது பயமும் புரிகிறது. அவர் அவ்வப்போது என்னிடம் “அண்ணா அவருக்கு கடமைகள் உள்ளன அதனால் ஒழுங்காக வேலை பார்க்க சொல்லுங்கள் சாமியார் அவதெல்லாம் வயசு என்பதுக்கு மேல வச்சுக்கலாம்”என்று அடி போடுவார்.
ஆனால் என்னதான் சொல்லுங்கள் எப்பொழுதாவது வெகு அரிதாக தவிர்க்க முடியாத ஏதாவதின் பொருட்டு சென்னைக்குச் சென்றால் தங்குவது சக்தி வீட்டில்தான். சக்தியே பலமுறை சொல்லி விட்டிருக்கிறார் சுவாமி நீங்கள் வருவதால் அருமையான சாப்பாடு எனக்கு கிடைக்கிறது என்று. எனக்கு உண விடுவதற்காக சக்தியின் மனைவி பல மணிநேரங்கள் சமையல் கூடத்தில் தவம் கிடப்பது எனக்கு எப்போதுமே வியப்பு அளிக்கின்ற ஒன்று. இந்தப் பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எத்தனை அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்…
//ஒரு நாளைக்காவது நல்ல சோறு போடாமல் விட்டதுண்டா?//உண்மைதானே…
சக்தியின் துணைவியை பெண் பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தோம். அவர் எப்படியோ எங்கள் ஆழ்ந்த நட்பை மோப்பம் பிடித்து முதல் பேச்சிலேயே “அண்ணா” என்று உள்ளன்போடு அழைத்தார். வேற வழி நானும் சக்தி அவர் பார்த்த அந்த முதல் பெண்ணையே மணப்பதற்கு, அந்த முடிவை சக்தி எடுப்பதற்கு ஆமாம்சாமி லிஸ்டில் சேர வேண்டியதாகிவிட்டது.
எத்தனைதான் அடிநெஞ்சில் எங்கள் நெருங்கிய நட்பு காரணமாக சக்தியின் மனைவிக்கு சற்று எரிச்சல் இருந்தாலும் ஆண்டுக்கு இரு முறையேனும் அவர்கள் குடும்பத்தோடு வந்து சில மணிநேரங்களை என்னோடு செலவழித்து விட்டு செல்கிறார்கள். என்ன செய்வது ஒரு விஷயத்தை மாற்றவே முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதானே சரி. சக்தியின் துணைவியும் முற்றாக வேறு வழியின்றி எங்களின் நட்பை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டார்.
ஒரு குடும்பமே கொண்டாடுகின்ற நட்பு என்பது மாபெரும் கொடுப்பினை. இத்தனைக்கும் பிறகும் ஏதாவது மனபாரம் என்றால் நண்பரும் அவரின் மனைவியும் அன்பு மகளும் சேர்ந்து எல்லாவற்றையும் கொட்டித் தீர்ப்பது என்னிடம் தான்.
ஒரே ஒரு நல்ல நட்பு கிடைத்தால் கூட போதும் அந்த ஒன்றைப் பிடித்துக்கொண்டு இந்த முழு வாழ்க்கையையும் நிறைவாக வாழ்ந்து விடலாம். எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு உன்னத உறவு நட்பு மட்டுமே. ஒரு நல்ல நட்பு இருந்தால் ஆலகால விஷத்தைக் கூட கண்மூடி தைரியமாக அருந்தலாம். எண்ணிறந்த நல்ல நட்புகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பேரியற்கைக்கு நன்றி.
பரிசுத்த ஆவியின் அருள் கொண்டு ஏழாம்கடலில் மூழ்கி நட்புக்கொரு அசல் முத்தெடுத்து கொடுத்துள்ளீர்கள். இனிய நினைவலைகளை எழுப்பிய உங்கள் இனிய எழுத்துக்கும் அதன் குழவிக் கையென வருடிச் செல்லும் மென் தொடுகை நடைக்கும் நெஞ்சம் நிறை நன்றிகள்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
கந்தர்வன், யட்சன் கடிதங்கள்.
அன்புள்ள ஜெ
கந்தர்வன் யட்சன் இருகதைகளிலும் ஆண்கள்தான் கதாநாயகர்கள். ஆனால் கதை வள்ளியம்மை என்ற உடனுறைமங்கையைப் பற்றியது. அவள் எப்படி கந்தர்வனையும் யட்சனையும் அப்படி ஆக்குகிறாள் என்பதுதான் கதை.
இந்த கோபுரத்திலிருந்து பாயும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்துள்ளது. நம் கோயில்களைச் சுற்றி பிரம்மஹத்தி போல நீத்தார் தெய்வமாக ஆன சிறுதெய்வங்கள் நிறையவே உள்ளன. நான் நெல்லையில் பயணம்செய்யும்போது பலர் இப்படி மாடசாமியாக மாறிவிட்டதை கேட்டிருக்கிறேன். சென்ற ஐம்பதாண்டுகளில்கூட பலர் மாடனாகியிருக்கிறார்கள். ஹைகோர்ட் மாடன் என்றுகூட ஒரு சாமி உண்டு. அவர் வக்கீலாக இருந்தார்.
ஊருக்காக செத்தவன் மாடனாகி வழிபடப்படுகிறான். சித்தர்கள் சமாதியாகி வழிபடப்படுகிறார்கள். அருங்கொலையுண்டவர்களும் சதிதேவிகளும் வழிபடப்படுகிறார்கள். இந்த தொன்மங்களை எல்லாம் கலந்து வரலாற்றுடன் இணைத்து எழுதப்பட்ட கதை
ஜெயவேல் கிருஷ்ணசாமி
அன்புள்ள ஆசிரியருக்கு,
கந்தர்வன் சிறுகதை அணஞ்சிக்கும் கள்ளன் தங்கனுக்குமான ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் மிக முக்கியமானவை. இரு ஆளுமைகளுக்கு நடுவே நிற்கும் ஒரு சாதாரண ஆண் இருவரையும் துலா தட்டில் வைத்தால் கிடைக்கும் சமநிலையை அறிதல் என்பது பெண்ணை அறிவதற்கான வழிமுறையாக கூட இருக்கலாம். ஒருபக்கம் அன்றாடத்தை தாண்டிய adventure. மறுபக்கம் எடையற்ற அன்றாடம். துள்ளலும் அமைதியும். இருவரும் பெண்களால் விரும்பப்படுகிறவர்கள். மிக மிக ரகசியமாக அல்லது வெளிப்படையான ரகசியமாக (open secret). இருவரும் ஒன்றின் இரு எல்லைகள். கள்ளத்தனமும் கள்ளமின்மையும் சந்திக்கும் புள்ளி தான் பெண்களா? இருவரிடமும் பெண் அடைவது சுதந்திரத்தை என்று அந்த துலா முள் காட்டக்கூடும்.
உண்மையில் தங்கனை காட்டிலும் அணஞ்சியையே ஆண்கள் மிக வெறுக்கக்கூடும். ஏனெனில் தங்கன்கள் எல்லோடரிமும் சிறிதளவிலேனும் உண்டு. ஆனால் அணஞ்சியை அடைய எல்லாவற்றையும் துறக்க வேண்டுமல்லவா. கள்ளமின்மையின் முன் கள்ளம் ஓர் எல்லைக்கு மேல் முன்னகர முடியாதல்லவா. காராய்மைக்காரர்களின் கள்ளத்தனத்தை தூய்மையால் மட்டுமே கடந்து செல்லும் அணஞ்சியை அசைப்பது எந்த கள்ளனுக்கும் கடினம் தானில்லையா. அதனால் தான் தங்கனை மாடன் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. ஆனால் அணஞ்சி மாடனாகவே மாற முடிகிறது.
உண்மையில் கந்தர்வன் கதை முடியுமிடத்தில் தான் தொடங்குகிறது. அங்கே உடன் கட்டை ஏறும் வள்ளியம்மை கதையை துவக்கி வைக்கிறாள். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் கதையை போலவே. ஆனால் கந்தர்வன் கதையின் கதைப்பின்புலம் ஒரு நாவலுக்கானது. மிக விரிவான வாசிப்பை கோருவது.
அன்புடன்,
பிரேம் குமார் ராஜா
யட்சன் [சிறுகதை]வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
அந்த முருகேசனின் பாதாள அரிசி பதுக்கி விற்கும் அறை மனுஷன் வாழும்போதே யட்சன் ஆக வாழ்ந்தான் என்பதற்கான ஒரு குறியீடு. அதேபோல பணங்குடி ஊருக்குள் அவன் அரிசி கடையில் சுவற்றில் பொன்னை பதுக்கி வைத்திருந்தது புராணத்தில் வருகின்ற குபேரன் போன்ற யட்சர்களின் இயல்பு. கரப்பான்பூச்சி பாபா என்பதுகூட மண்ணுக்குக் கீழே சாக்கடை பொந்துகளில் வாழும் இயல்பைக் காட்டுகிறது. அவன் பிச்சைக்காரனாக அலைந்த போதும் கந்தல் மூட்டையில் பொன்னைத்தான் யட்சனை போல் மறைத்து வைத்து இருந்திருக்கிறான்.
இரண்டு ஆண்கள் ஒருவன் சாதாரணமாக வாழும்போதே உன்னத வாழ்வு கைக்கொண்டு கந்தர்வன் போல் இலகுவாக இருந்திருக்கிறான் இன்னொருவன் கீழ்மை குணங்களோடு இரண்டுவிதமான முகங்களை காட்டி யட்சனாக வாழ்ந்திருக்கிறான்.
யட்சன் போன்ற ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்ந்தபோதும் ஒரு நல்ல மனுஷியாக வாழ்ந்ததால் சட்டென்று கந்தர்வ நிலைக்கு உயர்ந்து எறிமாடன் உடனுறை அம்மையாகிறாள் ஒருத்தி.
முருகேசனுக்கு இரண்டு முகம் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. வள்ளியம்மையை மற்றும் உறவுக்கு வரும் எல்லா வேசிகளையும் வைது தீர்க்கும் ஒரு கீழ்மை முகம், வள்ளியம்மையை போற்றும் தொழுது ஏத்தும் ஒரு மேன்மை முகம். அச்சு அசல் யட்சன் போன்ற குணம்.
ஏதோ ஒரு வகையில் வள்ளியம்மை மீதான தீராக்காதலினாலேயே முருகப்பனும் இயக்கன் சாமி ஆகி அந்தக் கோயிலுக்குள் தனக்கும் ஒரு இடத்தை பிடித்து விடுகிறான்.
நாட்டிலே அனஞ்ச பெருமாள் மற்றும் வள்ளியம்மை போன்ற கந்தர்வர்களுக்குத்தான் பஞ்சம் மத்தபடி இங்கே முருகேசன் போன்ற யட்சர்களே எல்லோரும். என்ன செய்வது ஏதோ ஒரு வகையில் தங்களின் நல்ல முகத்தை காட்டி யட்சர்களும் கோபுரங்களிலும் கோயில்களிலும் இடம்பிடித்து விடுகிறார்கள். ஒருவகையில் மனிதர்களுக்கு கந்தர்வர்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாக யட்சர்களும் யட்சிகளும் தேவையாகத்தான் உள்ளார்கள்.
ஆ ஊ ன்னா எடுத்ததற்கெல்லாம் ஒரு கோயில் கட்ட வேண்டியது. ஆஹா ஓஹோ அப்படின்னு கொண்டாட வேண்டியது. அப்புறம் கோஷ்டி பூசல் குலம் கோத்திரம் பூசல் ஜாதி சண்டை ஜாத்திரை சண்டை அப்படின்னு அடிச்சுக்க வேண்டியது. அப்புறம் கட்டின கோயில அதுல இருக்கும் கடவுளை அம்போன்னு விட்டுட்டு பெரிய பூட்டா மாட்ட வேண்டியது. வேற புதுசு புதுசா கோயில் கட்ட வேண்டியது இதைத் தான் காலங்காலமாக பண்ணிக்கிட்டு இருக்கோம்.
இந்த நல்லா வச்சு வாங்கி இருக்கீங்க ஜெ. பராமரிக்கப்படாமல் ஒரு தீபம் கூட ஏற்ற படாமல் இருண்டு கிடக்கும் உன்னத கலை படைப்புகளான ஆயிரக்கணக்கான கோயில்கள். பேருக்காகவும் புகழுக்காகவும் தினம் தினம் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் கான்கிரீட் கோயில்கள்…. வேதனை தான்.
கந்தர்வன் யட்சன் இரண்டு கதையும் சேர்த்து ஒரு குறுநாவல் வாசித்த இனிய அனுபவம் தந்தீர்கள்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
அன்பு ஜெ,
உங்கள் புனைவுக் களியாட்டு சிறுகதைகளின் வரலாற்றுப் புனைவுகளில் கேரள மார்த்தாண்ட வர்மாவைப் பற்றிச் சொல்கையில் வேறெங்கோ இருந்து ஓர் நிலத்தை அதன் மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்று நீங்கள் மங்கம்மாளின் பேரனான விஜயரங்க சொக்கநாதநாயக்கரைப் பற்றிச் சொல்லும் போது எங்கள் நிலத்தின் வழி தொடரும் ஒரு வரலாற்றுப் புனைவாக, காலத்தின் வழியே ஒரு குறுக்குசால் ஓட்டி அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மதுரை எனும் மூதூர் தென்னகத்திலிருக்கும் பெரும்பான்மையான இடங்களின் மூலம் என்று தான் சொல்ல வேண்டும். மதுரையை திருநெல்வேலியோடு இணைக்கும் ஒரு இணைப்பை நான் நெல்லைப் பயணத்தின் போது பார்த்தேன். மதுரையிலிருந்து திருவில்லிபுத்தூருக்கு வரும் வழியில் சீரான இடைவேளையில் மண்டபங்கள் இருப்பதைக் காணலாம். அங்கு ஒவ்வொரு மணடபத்திலும் ஒரு பெரிய மணி இருந்ததாகவும், ஆண்டாள் கோவில் பூசை முடிந்ததும் இங்கிருந்து ஒரு மணி அடிக்கப்பட்டு அது மதுரையிலிருக்கும் மன்னனைச் சென்றடையும் போது அவன் தெற்கு நோக்கி ரெங்கமன்னாரையும், ஆண்டாளையும் வழிபடும் ஒரு கதையைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட மண்டபங்களின் முடிவு ராஜபாளையத்திற்குப் பிறகான தென்காசிப் பயணப்பாதையில் இல்லை. ஆனால் நெல்லைப் பயணப்பாதையில் அதே போன்ற மண்டபங்களை அதே சீரான இடைவேளையில் கண்டேன். இப்படி நீங்கள் இணைத்த மதுரை, சீவில்லிபுத்தூர் (இந்த வார்த்தையைப் பார்த்ததும் மகிழ்ந்தேன் ஏனெனில் இங்குள்ள மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றோ திருவில்லிபுத்தூர் என்றோ சொல்வதில்லை. சீவில்லிபுத்தூர், சீலுத்தூர் என்று தான் கூறுவர்), திண்ணவேலி, ஆரல்வாய்மொழி, திருக்கணங்குடியை இணைக்கும் ஒரு பாதையின் வழியான கதையை மேலும் நன்றாக தொடர்புபடுத்திக் கொள்ளமுடிந்தது. விஜரங்கசொக்கநாதரின் பாதையின் புனைவை பதினெட்டம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் சென்று கண்டேன். அவரைப் பற்றிய உங்களின் சித்தரிப்புகள் மிக நுணுக்கமாக இருந்து புனைவை ஏற்றிக் கொள்ள ஏதுவாக இருந்தது.
பின்னும் அணைஞ்சன் என்ற பண்டாரம் ஒரு குலத்துக்கான எறிமாடன்சாமியான கதையை சொல்லியிருந்தீர்கள். ஊருக்கே முதலாமனாக ஆவதற்கு ஒரு கொடுப்பனை வேண்டும் தான். ஆனால் அது பெரும்பாலும் வீரம் செறிந்த கதையாகவே நாட்டுப்புறப்பாடலில் கேட்டிருக்கிறோம். கந்தர்வனாக யட்சனாக மாறுபவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வு மட்டும் ஏன் சாமானியர்களைப் போலில்லை என்று நினைத்தேன். தோற்றத்தில் வசீகரமானவர்களாக, பெண்களால் காதல் செய்யப்படுபவர்களாக, ஆண்கள் பொறாமைப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். திடீரென இறந்த அவனின் அப்பா எண்ணைச் செட்டியைப் போலவே திடீரென அரிசிச்செட்டி என்ற வேடமிட்டு இறந்துபோய் செட்டி குலத்தின் குலசாமியாய் மாறிய அணைஞ்சனை ஆச்சரியமாகவே பார்த்தேன். அவனைப் பற்றிய சித்திரத்தை ஒரு புடிபடாதவனாக காண்பிக்கும்போதே சொல்லப்படாத ஒன்றை வாசகர் ஏற்றிக் கொள்ள ஏதுவாயிருந்தது. மரயக்குட்டிப்பிள்ளை அவனிடம் கோபுரத்திலிருந்து கீழே குதிப்பதற்கான தேவையை சரியான கோர்வையோடு சொல்லும்போது அவன் சொன்ன ஒவ்வொரு “ஆம்” –ம் அவன் எறிமாடன்சாமியாக மாறப்போவதற்கான முடிவுகளை நோக்கிய ஆம் –ஆக பார்த்தேன்.
முருகப்பனைப் பற்றியும் அவனின் புது மனைவியைப் பற்றிய சித்திரத்தையும் கந்தர்வன் சிறுகதையிலேயே கொடுத்திருந்தாலும், கந்தர்வன் யட்சனாக நிறைவு கொள்வதற்கான யட்சியின் சித்திரத்தை அளித்திருந்தீர்கள். வள்ளியம்மை முதல் கதையில் காணிக்கும்போதே “இவ கொஞ்சம் அடங்காத எனம்; படிச்ச கள்ளி” என்ற சித்திரத்தைக் கொண்டு இரண்டாம் கதையில் அவள் முருகப்பனிடம் கன்னத்தில் அடிவாங்கும் இடத்தில் இரவு நாவலில் நீங்கள் சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது.”ஒரு சாதரணமான ஆண் திருமணமாகி ஆறு மாதத்திற்குள் பெண்ணின் மென்மையான தோற்றத்திற்குள் இருக்கும் உலோகத்தைக் காண்பான். குரூரம், பிடிவாதம், கூர்மை. அவன் பூரணமாக அவளிடம் தோற்பான். அனேகமாக அப்போது தான் அவன் முதல்முறையாக அடிப்பான். பெண்களை அடிக்கும் ஆண்கள் பரிதாபமாக பெண்களிடம் தோற்றுக் கொண்டே இருப்பவர்கள்தான். எங்கோ ஒரு புள்ளியில் அந்த உண்மையுடன் அவன் சமரசம் செய்து கொள்ள ஆரம்பிக்கிறான். தோல்வியை ஒத்துக் கொள்கிறான். ஆனாலும் அவ்வபோது உக்கிரமான கழிவிரக்கமாக ஆங்காரமாக ஆணிலிருந்து அந்த தோல்வியின் தாபம் வந்து கொண்டுதான் இருக்கிறது” –இரவு நாவல். இப்படியான ஒரு சாதரண ஆணாக முருகப்பனும் அவனால் எதிர்கொள்ள முடியாத ஒரு யட்சியாகவுமே வள்ளியம்மையைப் பார்க்கிறேன். ஏதோ ஓர் தருணத்தில் யட்சனாக அவள் அணைஞ்சனைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு. பிணம் தன் கணவனில்லை என்று தெரிந்தும் தான் விரும்பிய ஒரு யட்சனை பற்றிக் கொண்டு காலத்திற்கும் எறிமாடனின் உடன் நின்ற நங்கையாக தன்னை மாற்றிக் கொள்ளும் தீவிரமான யட்சி தான்அவள். இப்படி தீவிரமாக புனைவை எற்றிக் கொண்டு வந்த என்னை “ஏன் இப்ப இவ்ளோ சீரியஸா ஆகுற” என்று கூறி யட்சன் கதையில் மிக நகைச்சுவையாக முடித்துவிட்டீர்கள். கதையின் எல்லா அம்சங்களையும் மறந்துபோய் வெறுமே சிரித்துக் கொண்டிருந்தேன் ஜெ.
ஒரு எறிமாடன்சாமி, உடன்நின்றநங்கை, இயக்கன் சாமி ஆகியவர்களின் சிலைகளின் மேல் இத்துனை நகைச்சுவையான புனைவை ஏற்றியிருக்கிறீர்கள். சிரித்துக் கொண்டே தான் படித்து முடித்தேன். மக்களின் அறியாமையை புனைவின் மூலம் பகடி செய்து தெறிக்க விட்டிருக்கிறீர்கள். குறிப்பாக உங்கள் வசவுகளும் சொலவடைகளும் தான் சிறப்பான சம்பவங்கள். ”நாயர் சத்தியமும் நாய்மூத்திரமும்”; “செட்டி அடிச்சும் தவளை கடிச்சும் செத்தவன் உண்டாவே” என்ற வரியை படித்துவிட்டு கண்களில் நீர் வரும்வரை சிரித்தேன். நீங்கள் அதை உபயோகித்திருந்த இடமும் ஒரு காரணம். இந்த இரு கதையையும் நான் என்ன சொல்வது!!! வரலாற்று புனைவாக ஆரம்பித்து, ஏதோ முதலாமன் கதை போல ஒரு தீவிரமான ஒன்று என விரைப்போடு படித்துக் கொண்டிருந்தபோது சிறந்த சிரிப்பு மூட்டும் நகைச்சுவைக் கதையாக முடித்து வைத்துவிட்டீர்கள். இறுதியில் அந்த இயக்கன் சாமி கல்லாக மாறியும் கூட அந்த வசவுச் சொற்களோடே வெறித்துப் பார்ப்பதுபோல் இருந்தது. நகைச்சுவையான கதை. மிக்க நன்றி ஜெ.
அன்புடன்
இரம்யா.
கொதி,குமிழிகள் – கடிதங்கள்
அன்புள்ள ஆசானே,
இரண்டு நாட்களாக கொதி சிறுகதை மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
படித்ததும் டால்ஸ்டாயின் மூன்று குருமார்கள் கதை நினைவுக்கு வந்தது. எனினும் இதில் பல நுண்ணடுக்குகள் உள்ளன. இன்னும் பொறுமையாக வாசிக்கவேண்டும்.
கிறித்தவத்தின் அடிப்படை நான் கருதுவது பாவம் குறித்த அதன் விழுமியங்கள். மனிதனை குற்ற உணர்வுக்குள் தள்ளி, மீட்பு தருவது அதன் வழி. தன்னை முழுமையாக ஒப்புவிக்க தயாராக இருக்கும், விமோசனம் மூலமாக மனித மனதின் மகத்தான உயரங்களை அடைய விரும்பும் தனி மனிதனுக்கு அது உதவலாம். ஆனால், அந்த விழுமியங்களை அடிப்படை உண்மையாக எண்ணி, அவற்றை அளவுகோலாகக் கொண்டு எல்லோரையும் வரையறுப்பதென்பது பிளவுண்ட மனம் கொண்ட சமூகத்தை உருவாக்கும்.
அதுதான் மேற்கில் நடந்து முடிந்திருக்கிறது. மதம் மூலமாக மூதாதையர்களுக்கு தந்த நோய்களுக்கு, உளநல சிகிச்சை மூலம், இப்போது மருந்து தடவ முயன்று கொண்டிருக்கிறார்கள்.
தனி மனிதன் இதிலிருந்து தப்பவியலாது. அவன் செய்யக்கூடியதெல்லாம் தன நோயை அறிந்து, ஏற்றுக் கொள்வதுதான். அதன்பின் அவன் மதத்துக்குள்ளேயோ, வெளியேயோ இருக்கலாம்.
Chogyam Trungpa-வின் வரிகளில் ஒன்று – Knowledge becomes wisdom thorugh compassion. ஞானியாவையும், ஃபாதர் சூசைமரியானையும் பிரிக்கும் புள்ளி அதுதான்.
இதில் சொம்பு, மெழுகுவர்த்தி, தண்ணீர், ரத்தம் போன்ற உருவகங்கள் அருமை. பசியைத் தீயாக உருவகித்தால், மெழுவர்த்தி சுடர் மேலும் பிரகாசமாகிறது. அது கதையில் புரியாத அனைத்தையும் உள்ளிழுத்து கவிதையாக்கி விடுகிறது.
[இன்னும் விரிவாக எழுதவேண்டும் சார். நான் சரியாக வாசித்திருக்கிறேனா என்று தெளிவுபடுத்திக் கொள்ளவே, அவசரமாக அனுப்புகிறேன். பிற கதைகளையும் படித்துவிட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றை குறித்தும் தனியாகவும், மொத்தமாகவும் எழுதும் எண்ணம் உள்ளது. விரிவாக எழுதுகிறேன் சார்]
“தொண்ணூத்தொண்ணு வருசமாச்சு… அறிஞ்சது எல்லாம் பசிதான். பசி அடங்கணும்… கடேசிப்பசி.” என்ற வரிகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
(இக்கடிதத்தை தளத்தில் வெளியிடுவதெனில், பெயரை நீக்கிவிடுங்கள். இன்னும் படிக்க புரிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அதுவரை hybernation-ல் இருக்க விரும்புகிறேன்)
அ.
அன்புள்ள ஜெ
கொதி கதையைப் பற்றிய வாசிப்புகள் வர வர அது பெருகிக்கொண்டே செல்கிறது. நீங்கள் பலமுறை எழுதிய ஒரு வாழ்க்கைச்சூழல். ரப்பர் நாவலில் அது வருகிறது. பலகதைகளில் வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மலைப்பகுதிகளிலிருந்த கொடிய வறுமை, பஞ்சம். பசியைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். எத்தனை எழுதினாலும் எழுதித்தீராது என்றும் தோன்றுகிறது. இந்தக்கதைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு பெரிய நாவலாக ஆகிக்கொண்டே இருக்கின்றன என் மனதில். எத்தனை முகங்கள். காடுநாவலில் வரும் ஃபாதர். சாமர்வெல்.
எத்தனையோ முகங்கள். இத்தனை முகங்களை வேறெந்த இலக்கியப்படைப்பாளியின் உலகில் பார்க்கமுடியும்? உங்கள் நூறு கதைகளில் வரும் முகங்களை பட்டியலிட்டாலே ஆயிரம் தாண்டும். அனைவருமே தனித்தன்மைகொண்ட மனிதர்கள். எவருமே டைப் கதாபாத்திரங்கள் அல்ல. சொல்லப்போனால் மனிதர்களை எழுதுவதுதான் இலக்கியம். மானுடத்தைப் பாடுவது என்றால் இதுதான். இத்தனை ஏழைகள் எளியவர்கள் சாமானியர்கள் சரித்திரநாயகர்கள் வேறெந்த புனைவுலகிலும் இல்லை
என்.சம்பத்குமார்
குமிழிகள் [சிறுகதை]அன்புள்ள ஜெயமோகன் சார்,
குமிழிகள் சிறுகதை வாசிக்கும் எவரையும் உடனே சீண்டக்கூடியது. நம் காலத்தின் மிகத் தீவிரமான உறவுச்சிக்கலை எந்த காவியத்தன்மையும் இன்றி வாசகனை தரையில் ஊன்றி நிற்க வைத்து அவன் முன் நிறுத்துகிறீர்கள். கதையை வாசித்து முடித்தவுடன் மேற்கத்திய தத்துவத்தின் Ship Of Theseus paradoxதான் நினைவுக்கு வந்தது. இன்றைய லிலி நேற்றைய லலிதா இல்லை. சாம் சாமிநாதன் இல்லை. இன்றைய லிலி நேற்றைய லிலிகூட இல்லை. முற்றிலும் புதிய ஒருத்தி. அதே தான் சாமுக்கும். ஆனால், இருவரும் தங்களை மாற்றிக்கொண்டே அந்த மாற்றத்தை வெறுக்கிறார்கள். சாமிநாதன் விரும்பிய லலிதா, லிலியாக மாறாமல் தடுக்க சாம் முயலும் அபத்தம், நம் காலத்தின் முரண்தான்.
இந்த சமூக வலைதள யுகத்தில் நாம் அனைவருமே நம்மை தினமும் புதிதாய் கட்டி எழுப்பி நிறுவவே போராடிக்கொண்டிருக்கிறோம். நம் ஆளுமை என்பது அப்படி நாம் கட்டி எழுப்பும் ஒன்றுதான். ஆனால், அதன் அஸ்திவாரமாக நமக்குள் இருக்கும் சுயம், நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்று. அந்த சுயம் நமக்கு ஒவ்வாததாகிவிட்டது. அதை மாற்ற போராடுகிறோம். அதன் மேல் ஆயிரம் தர்க்கங்களை கொட்டி அதை மறைப்பதை நியாயப்படுத்த முயல்கிறோம். சிலிக்கான் ஜெல்லிக்களையும், ஹேர் ட்ரான்ஸ்பிளாண்ட்களையும், கேமரா பில்டர்களையும் கொண்டு உண்மையில் நாம் செய்ய முயல்வது அதைதான்.
கதையின் உச்சமாக நான் நினைப்பது அந்த ஐடியல் ஆளுமைக்கான தேடல்தான். வட இந்தியர்களை போல மாறும் தென் இந்தியர்கள், அமெரிக்கர்களை போல மாறும் வட இந்தியர்கள், சீனர்களை போல மாறும் அமெரிக்கர்கள் என்று இந்த ஐடியலுக்கான தேடல் ஒரு வேடிக்கையான சங்கிலியாக நீண்டு கொண்டே இருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன் இந்த சங்கிலி ஐரோப்பியர்ளிடம் சென்று முடியும். அவர்கள் அவர்களுடைய தொன்மங்களில் இருந்து கிரேக்கர்களை மீட்டெடுத்து அவர்களை ஐடியல்களாக முன்னிறுத்துவர். இப்படி மனிதனின் ஐடியல்களுக்கான தேடல் முடிவற்றதாகவே இருக்கிறது. இந்த ஐடியல் ஆசைகளும் அங்கீகாரத்திற்கான தவிப்பும் இன்று நம் எல்லோர் வாழ்க்கையிலும் இயல்பாகவே கலந்துவிட்டது. சில லட்சங்கள் இருப்பவர்கள் சிலிக்கான் ஜெல்லிக்கள் வழியாகவும், சில ஆயிரங்கள் இருப்பவர்கள் நல்ல கேமரா போன்கள் வழியாகவும் இதை தீர்த்துக்கொள்கிறோம். இந்த அதிவேக பரிணாம வளர்ச்சிகளுக்கு சம்பந்தமே இல்லாமல், ஆண்-பெண் உறவு மட்டும் திருவிழாவில் தொலைந்த பிள்ளைபோல மிரண்டு நிற்கிறது.அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதையை பற்றி நாங்கள் வாசித்துப் பேசிக்கொண்டே இருந்தோம்.இந்தவகையான இண்டெலக்சுவல் கதைகள் அடிப்படையான கேள்விகளை எழுப்பும்போதுதான் ஆழமாகின்றன. ஆணுக்கோ பெண்ணுக்கோ மாற்றுப்பாலினத்தைப் பற்றி கவலையே படாமல் தன்னை டிஃபைன் செய்துகொள்ள உரிமை உண்டா என்பதுதான் கேள்வி. ஏன் இல்லை என்று சொல்லலாம். ஆனால் உண்மை அது அல்ல. அப்படிச் செய்யலாம் என்றால் இயற்கையுடன் ஒத்திசையாமல் மனிதர்கள் தங்களை டிஃபைன் செய்துகொண்டே செல்லலாம் என்றுதான் பொருள். ஒரு மிஷின் உறுப்பு இஷ்டத்துக்கு வடிவம் எடுக்கமுடியாது. அதன் பங்களிப்பு என்பது ஒட்டுமொத்தச் செயல்பாட்டுடன் இணைந்ததுதான். அதன் ஐடியல் வடிவம் அப்படித்தான் உருவாக முடியும்
அருண்குமார்.எம்
குமிழிகள், கடிதங்கள் குமிழிகள் -கடிதம் குமிழிகள்- கடிதங்கள் குமிழிகள்,கடிதங்கள் குமிழிகள்- கடிதங்கள்
படையல், தீற்றல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
தீற்றல் கதை அளித்த ஒருவகையான ஏக்கமும் சலிப்பும் மிதப்பும் பகல் முழுக்க நீடித்தது. வாழ்க்கையின் தீற்றல் என்றுதான் அதைச் சொல்லமுடியும். இளமையில் அப்படி சில சிறிய விஷயங்கள் இருக்கின்றன. என் இளமையில் நான் இரண்டு கால்களாலும் ஒரே சமயம் பாண்ட் போட்டுக்கொள்வேன். இன்றைக்கு நினைத்தாலே சுளுக்கு வரும். இளமையின் அடையாளமாகச் சில விஷயங்கள் அப்படி நினைவில் நீடிக்கின்றன. நினைவுத்தீற்றல்
அந்தக் கண்ணெழுதும் தீற்றலை நான் பார்த்திருக்கிறேன். நிலைக்கண்ணாடிகளின் அருகில் மைத்தீற்றல் இருக்கும். பெரும்பாலும் அப்படி தீற்ற மாட்டார்கள். ஆனால் மிக அவசரமாம போகவேண்டுமென்றால் அப்படி தீற்றிவிட்டு சென்றிருப்பார்கள். அந்த அவசரமான பெண்ணையே பார்க்கமுடிகிறது
குழந்தைத்தன்மையும் கன்னித்தன்மையும்தான் அவ்வளவு குறுகிய ஆயுள் கொண்டவை. ஆகவேதான் கன்னிகளை பூ என்கிறார்கள் என நினைக்கிறேன்
ஆர்.அருணாச்சலம்
ஜெ,
இன்று தீற்றல் படித்தேன் அருமையான கதை சொல்லுவதும் சொல்லாமல் விடுவதும் கண்களின் மை தீற்றல் மூலம் அழகுற விளக்கம் சொல்லி முடிக்கும் கதை உண்மையில் மை தீற்றல் என்பதை இந்த கதை சொல்லும் வரை பெரிய விடயம் ஆக இல்லை என்றே பலரும் எண்ணி இருப்பார்கள் ஆனால் அப்படி அல்ல என்பதை அமுதாவைப்போல நாங்களும் உணர்கிறோம் கண் மை மட்டுமல்ல கண்களும் சிரிக்கும் என்று நான் சொன்ன போது நண்பன் நம்பாமல் சிரித்தான் ஆனால் சிரிக்க வைத்து காடியா போது வியந்தான் அன்புடன் பாராட்டினான் கண்களின் மை போல சிரிப்பும் மனதில் தீற்றல் ஆகி கிடக்கிறது ஒரு நொடி என்றாலும் ஓராயிரம் கதை சொல்லும் உண்மை நெஞ்சில் நிழல் ஆடுகிறது காடு சொல்லும் வனமோஹினி … நினைவு ,,,வருகிறது தொடரும் நினைவுகள் தொடரட்டும்
அன்புடன்
கவிஞர் ஆரா
படையல் [சிறுகதை]அன்புள்ள ஜெ
படையல். தங்களுக்குள் சில வேறுபாடுகள் கொண்டிருந்தாளும் பொதுவாக இது ஆண்டிகளை பற்றிய கதை. வழிபடும் தெய்வம் வேறு என்றாலும், உச்சரிக்கும் நாமம் பிரிதொன்று என்றாலும் சென்று சேரும் இடம் ஒன்றென உணர்ந்த பிச்சைகார பண்டார துறவிகள். ஒரு மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள், அந்த மண்டபம் இந்தியாதான். கதை நடக்கும் காலக்கட்டத்தில் அது பாழடைந்திருக்கிறது. அங்கு தெய்வத்துக்காக கொலை புரிந்த சிவனடியாரும், கொலை புரிந்த வீரர்களும் வந்து இவர்களை சந்திக்கிறார்கள். அதுவும் அந்த இந்தியாவின் இரு தரப்புகள் தான். முதலில் மண்டபத்தில் அமர்திருக்கும் பிச்சைகார தூறவிகளுக்கு கூட அவர்கள் அப்படி ஆனதற்கு அக்காலகட்டத்தின் ஒவ்வொரு காரணங்கள்.
உங்கள் கதை உலகம் பல அடுக்குகளால் ஆனது. அதில் மதம் அதன் உட்போக்குகள், ஆன்மீகம், இறையியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைகள் இன்னும் பல அடுக்குகளால் ஆனது. பண்பாடு, மதம், தத்துவம், ஆன்மீகம், வாழவு என பல விசைகள் திரண்டு வந்து நிற்கும் வரலாற்று காலகட்டத்தை பற்றிய படைப்புகள் விஷ்ணுபுரம் வெண்முரசு போல். யட்சி கதைகள் போன்ற நாட்டார் தெய்வங்களில் உள்ள மானுட உண்மையை பற்றிய கதைகள். தாய் தெய்வம் அறச்சீற்றம் கொண்ட கொற்றவை பற்றிய படைப்புகள். அழுக்குகளிலிருந்து ஆண்டிகளின் பண்டாரங்களில் மெய்யியலை சென்று தொடும் கதைகள். கிருஸ்துவ மனிதநேயத்தை சென்று தொடும் படைப்புகள். சூஃபி பற்றிய கதைகள். இவளவு பெரிய கதை உலகத்தின் அடியில் உள்ள ரத்தத்தையும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். படையல் அத்தகைய கதை.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தளத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்று வெளியானது. மதத்தின் அடிப்படைவாத பற்று பற்றி. எங்கோ அந்த மூர்க்கமான அடிபடை பற்றுதான் மதத்தின் உயர்தளத்தில் உள்ள உண்ணதங்களை, தத்துவ தரிசனங்களை, ஆன்மீகத்தை காத்து நிற்கிறது. அந்த இறுகிய பற்று நிறைந்த பக்தி கீழே இல்லாமல் ஆனால் நாம் உயர்தளத்தில் உள்ளவற்றை இழக்க நேரிடும் என்பது அக்கட்டுரையின் சாரம்சம் என நான் புரிந்து கொள்கிறேன். நான் தமிழில் வெளியான நித்திய சைத்தன்ய யதி அவர்களின் சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். என் புரிதலும் நினைவும் சரியென்றால் அவர் மதத்தின் மீதான அடிப்படைவாத பற்றை தவறு என்று எதிர்க்கிறார். அவர் சொல்வது எது அவசியம் அவசியமில்லை என்பது பற்றி. நீங்கள் சொல்வது இது எப்படி இயங்குகிறது என்னும் நிதர்சனம் பற்றி. அது அப்படி இருக்க. மக்களிடம் மதத்தின் அடிபடைவாத பற்றும் பக்தியும் இல்லாமல் ஆகும் போது உயர்தளத்தில் தத்துவ, ஆன்மீக செயல்பாடு பாதிக்கப்படுமா, அது பண்பாடு வீழ்ச்சிக்கு இட்டு செல்லுமா, அப்படி என்றால் இந்த பற்று எந்த காலக்கட்டம் வரை நீடிக்க வேண்டும் என்பதை ஒரு யூகமாக (hypothesis) வைத்து, புரிந்துகொள்ள சிந்தித்து பார்த்துகெள்ளலாம்.
தத்துவமும் ஞானமும் பலி கேட்பதில்லை. ஆனால் அவற்றுக்கு அடிநாதமாக இருக்கும் பக்தி கேட்பது பலிகளை. காரணம் அது மக்களிடம் பரவி பற்றாக வேண்டும். அதற்கு பொருளாதாரம் வேண்டும். அல்லது பொருளாதாரம் வளர்ந்த நிலையில் தான் மக்கள் பக்தியின் பக்கம் செல்ல முடியும்.
சிவனடியார் தன் தெய்வத்தின் உருவத்தின் மீது பற்று கொண்டவர். தன் தெய்வம்மீதான பற்றினால் கொலை செய்தவர். அதனால் தான் அவர் அவ்வளவு கடுமையான ரத்த பாதையை கடந்து வருகிறார்.
எறும்பு பாபா அனுநொடியும் அல்லாவை நினைத்திருப்பவர். அவர் தனக்கு எந்த எல்லை வரை அவமதிப்பும் வன்முறையும் நடந்தாலும் எதையும் எதிர்ப்பதில்லை. ஆனால் அந்த பச்சை நிற தொப்பி அவருக்கு அப்படி அல்ல. அது தன்னைவிட அவருக்கு மேன்மையானது. அது வீழ்ந்தால் எடுத்து வைத்துக்கொள்வார். அவர் அங்கு ஒரு Statement ஆக அமர்ந்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவர் அடிபட நேர்கிறது.
கையில் சிமிழி ஏந்திய ஆணைபிள்ளை சாமி பக்தியின் பற்றுடையவர் அல்ல. அவர் ஆண்டி. அவர் முழுக்க கருத்தால் ஆனவர்.
“இனி இனி என்று சொல்லாதீங்க” என்கிறார் ஆணைபிள்ளை சாமி. அப்படி என்றால் இனி என்று ஒன்றில்லை அனைத்தும் ஒன்றே என்று உணர்ந்தவரா அவர்.
“கருனைக்கும் கரவுக்கும் காரணம் அல்லவோ” என்கிறார் ஆணைபிள்ளை சாமி. மெய்மைக்கும் ரத்ததுக்கும் காரணம் அது அல்லவோ, அடுப்பெரியும் விறகுக்கும் ஆள்ளில்லா வீட்டுக்கும் காரணம் அது அல்லவோ என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
இக்கதையை வாசிப்பதற்கா இணையத்தில் தேடினேன்
“யானை முதாலா எறும்பு ஈராய”
என்பது திருவாசக பாடல் வரி. பெரியவர்க்கும் சிறியவர்க்கும் பிரசவகால வலி ஒன்றே, நாம் ஒன்றிலிருந்து ஒன்றென தப்பி பிழைத்து எங்கோ சென்றுகொண்டிருக்கிறோம், என தளம் ஒன்று பொருள் சொல்கிறது.
ரத்த அரிசியும், ஆளில்லா வீடுகளும், வெட்டப்பட்ட தலைகளும், ரத்தமூரிய பச்சை முன்டாசும் மெய்மைக்கான படையல்.
அந்த ரத்த அரிசி படையல் உருவகம் இரண்டுக்கானது. ஒன்று, நாம் இன்று அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி. இரண்டு, இன்று நாம் அடைந்துள்ள பண்பாட்டு ஞானம்.
அன்று படைத்த படையல் தான் இன்று நாம் உண்பது. ஆனால் அதுவும் அவன் திருபுகழே அவன் பெயராலே.
பகடியாக எதவாவது செல்லி முடிக்க சொல்லும் அளவுக்கு இறுக்கமாக கதை.
நன்றி
பிரதீப் கென்னடி
அன்புள்ள ஜெ,
வணக்கம்
படையல் சிறுகதையை வாசித்தேன்.
செத்தவர்கள் இருக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் பேரளியாக ரத்தம் கலந்த அரிசி இருந்தது. பாவா என்னும் நிலைச்சக்தியின் உள்ளூறைவே உலகை இயக்குகிறது. அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு உலகுக்கு அன்னம் புரக்கிறது. அருமையான கதை.
அரவின் குமார்
மலேசியா
இமையத்திற்குச் சாகித்ய அக்காதமி
இந்த ஆண்டு [2020]க்கான சாகித்ய அக்காதமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவலினூடாக தமிழ்ச்சூழலுக்கு அறிமுகமானவர் இமையம். ஓர் எழுத்தாளராக அவருடைய அறிமுகமும் அவர் பெற்ற ஏற்பும் முதன்மையாக அவர் எழுத்தின்மேல் பெருமதிப்பு கொண்டிருந்த சுந்தர ராமசாமியால் உருவாக்கப்பட்டது. ‘ஆறுமுகம்’ ‘செடல்’ ’எங்கதெ’ ஆகிய நாவல்களும் ‘மாடுகள்’ போன்ற சிறுகதைகளும் அவரால் எழுதப்பட்டுள்ளன. செல்லாத பணம் என்னும் நாவலுக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இயல்புவாத எழுத்தின் உச்சங்களில் ஒன்று இமையத்தின் எழுத்து. புகைப்படத்துல்லியத்துடன் வாழ்க்கையைப் பதிவுசெய்வது, அதனூடாக ஆழ்ந்த சமூகவியல் உசாவல்களுக்கு வாசகர்களைக் கொண்டுசெல்வது.
இமையம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
March 11, 2021
’ஆமென்பது’- அறிவும் உணர்வும் ஒரு விவாதம்.
அன்புள்ள ஜெ
‘ஆமென்பது’ என்ற கதை வாசித்ததிலிருந்து மிகவும் தொந்தரவு செய்தது. இக்கதையையொட்டி, கதையைத்தாண்டி, பல சிந்தனைகள். என்னால் என் சிந்தனைகளை கோர்வையாக முன்வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் மிகவும் சென்சிட்டிவான புள்ளியில் இந்த கதை வந்து அடித்தது. அதை அந்த உணர்வுச்சூட்டோடு ஒரு பதிவுக்காகவாவது எழுதியாகவேண்டும் என்று நினைத்தேன்.
‘வாழ்க்கையே சாவுக்கான காத்திருப்பது. செத்தப்பிறகும் காத்திருப்பதென்றால் எத்தனைப்பெரிய அபத்தம்’ என்கிறார் கதையில் வரும் பிரபானந்தர். வரப்போகாத மகனுக்காக காத்திருப்பு. ‘செண்டிமெண்ட்’ என்று புறம்தள்ளிய மகன் வருகைக்கான கடைசிகால ஏக்கம். இளமையில் வெறுத்தொதுக்கிய தந்தையை வாழ்க்கை முழுவதும் தேடித்தேடி அலைந்து குருவடிவில் தந்தையை – அல்லது தந்தை வடிவில் குருவை – கண்டடைவது.
இருத்தலியல்வாதத்தையும, அபத்தவாதத்தையும் அறிவார்ந்த நிலைப்பாடுகளாகக் கொள்ளும் ஓ.வி.விஜயனை ஒட்டிய கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் வெளிப்படும் அபத்தங்கள், அசட்டுத்தனங்கள், துணுக்குறவைப்பவை. அறிவார்ந்த தேடல் – intellectual quest – சாராம்சத்தில் மனிதனின் வாழ்க்கைக்கு அளிப்பதுதான் என்ன என்ற கேள்வியில் வந்து முட்டி நிற்க வைக்கிறது.
நோய்களை குறி காணும் மருத்துவருக்கு நோய்வராமல் போகும் என்று எந்த உத்தரவாதமும் இல்லையே. அறிவொன்றும் தடுப்பூசி இல்லையே. சரி, அப்படியென்றால் அறிவின் பயன் தான் என்ன? விஜயனின் வாழ்க்கைக்கு அவர் கண்ட அறிவு என்ன பொருள் கொடுத்தது? பிரபானந்தர் புனைவெழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக கழித்துவிட்டுப் பேசிச்செல்லும் வாக்கியம் இங்கே முக்கியமாகிறது. “நான் எதையும் வாசித்ததில்லை. எழுத்தாளர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். தாங்கள் அறியாத தெய்வங்களை பிடித்து நிறுவிவிடும் துரதிர்ஷ்டம் கொண்டவர்கள் என்று சொன்னேன்.”
பிரபானந்தரின் கோணம் கதையின் இரண்டாம் அடுக்கு. அவர் பார்வையில் எல்லாமே அபத்தம் கொள்கிறது. சடங்குகள், கவலைகள், காத்திருப்புகள், எல்லாம். “சாமியார்கள் பிறப்பு, சாவு, கல்யாணம் எல்லா சடங்குகளிலும் அபத்தமாக தெரிகிறார்கள்” என்று இன்னொரு கதாபாத்திரம் சொல்கிறது.
விஜயன் கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்தக் கதையைச் சொல்லும் அவர் தங்கையாரின் கோணம் மூன்றாவது அடுக்கு. உண்மையில் இவரது பார்வைக்கோணம் இந்த மொத்த narrative-விலும் என்னை மிக அணுக்கமாக பாதித்தது. ஒரு கவிஞரின், பெண்ணின், தங்கையில், தூய பார்வையாளரின் பார்வை இந்தக் கோணத்தில் வெளிப்படுகிறது. சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் வாழ்க்கை விசைகளின் அச்சாணியில் நின்று பார்ப்பதுபோல் கூறுகிறாள்.
தந்தைக்கும் அண்ணனுக்குமான பிணக்குகளை, அண்ணனுக்குள் ஓடும் அரசியல், அறவியல், அழகியல் சார்ந்த மோதல்களை, அவர் சலனமில்லாமல் அவதானிக்கிறாள். வாழ்க்கையையும் அவ்வாறே அந்தப் பெண்மணி அவதானிக்கிறாள், அவள் கவிதையின் ஊற்று அது என்று ஊகிக்கமுடிகிறது. அங்கே அவள் நின்று பேசும் பீடத்தை விஜயன் கதாபாத்திரம் ‘செண்டிமெண்ட்’ என்று கேலி செய்கிறார். “உன் கவிதைகளைப்போல் இருக்கிறது உன் பேச்சு,” என்கிறார்.
ஆனால் தங்கை விட்டுக்கொடுப்பதில்லை. “ உலகமே செண்டிமெண்டுகளால்தான் இயங்குகிறது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அசட்டு கருத்துக்களால் அல்ல. அதெல்லாம் சும்மா வாசித்து சுருட்டி பழையபேப்பர் வியாபாரிக்குப் போடும் குப்பைகள்” என்கிறாள். “உங்களுக்கு செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ளும் வரலாற்று அறிவும் பண்பாட்டு அறிவும் இல்லை என்றால் செண்டிமெண்டுக்கு பொருள் இல்லை என்று ஆவதில்லை” என்கிறாள்.
இவளில் வெளிப்படுவது வாழ்க்கைச்சார்ந்த ஆ யதார்த்த பார்வை ஒன்று. ஆனால் அதை என்னிலையிலும் மறுக்கமுடியவில்லை. ஆணித்தனமாக நிற்கிறது. அதற்கு அத்தாட்சி விஜயன் கதாபாத்திரமே. அவர் வாழ்க்கைக்கொள்ளும் திருப்பமே. சுருக்கமான கார்ட்டூன் கோடுகளாக அவர் வரையும் குழந்தையின் சித்திரம் – அது வளர்ந்த மகன் அல்ல, காரில் சிரித்துக்கொண்டே ஏறிச்சென்ற அவர் இழந்த குழந்தை – மிகமிக ஆழமான இமேஜ். அந்த கடைசி நாளை அவர் ‘சர்வ சாதரணமாக’ சொல்லிச்செல்லும் இடம், அங்கிருந்து அவர் நகர்ந்து வரும் தூரம், மிகப்பெரிய ஒன்றாக உள்ளே அதிர்ந்துகொண்டே இருக்கிறது.
அந்தப் பேரிழப்பு. அதற்கு புன்னகையுடன் ‘ததாஸ்து’ சொன்ன கொடுந்தெய்வம். எங்கிருந்து வருகிறது இந்தப் பெருந்துயரம்? ரணவலி? அந்தநாள் விஜயன் எடுத்த முடிவுகளை ‘வீம்பு’ என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. அதில் அதீத நிலைப்பாடு, கன்விக்ஷன் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அறிவதிகாரத்திலிருந்து பிறப்பது. அறிவென்பது என்ன? ஒரு திறப்பு. ஒரு புரிதல். பிரபானந்தர் அதைத்தான் கதையின் ஆரம்பத்தில் சொல்கிறார். அதை ஒரு வார்த்தை, ஒரு தேவதை, என. நாம் எண்ணத்தில் கண்டுகொண்டுவிட்டால், ஒரு வார்த்தையென்று ஆக்கிவிட்டால், எழுத்தென்றோ பொருளென்றோ வடிவம் கொடுத்துவிட்டால், அது இங்கே நிலைகொண்டுவிடுகிறது.
ஆனால் பிரபானந்தர் சொல்வதெல்லாம் எச்சரிக்கைகளே. தேவதையை பின்னால் துறத்திச்செல்லக்கூடாது. அப்படியே விட்டுவிடவேண்டும். அவை திரும்பிப் பார்த்தால் பேயாகிவிடும். மலையின் முகத்தில் காற்று அறைந்து அதை வடித்தெடுக்கிறது. ஆனால் மலை காற்றைப் பற்ற முயல்வதில்லை. அதேபோல் தெய்வங்களையும் பேய்களையும் அப்படியே விட்டுவிடவேண்டும். இல்லையென்றால் அவை ஒருவனை வாழ்னாள் முழுவதும் பலிகேட்டு பலிகேட்டுப் பீடிக்கக்கூடியவை. இருக்கும் தெய்வங்கள் போதும், இனியும் ஒரு தெய்வத்தை இங்கே நிறுத்தாதே, என்பது பிரபானந்தரின் தரப்பு.
அறியமுடியாமை கோடானுகோடிகோடி விதங்களில் இங்கே அறிவாக திறந்துகொள்ளும் சாத்தியம் கொண்டது. அத்தனை சாத்தியங்களையும் மனிதன் இங்கே இழுத்து நிலைத்து வைத்தால் உலகம் தாங்குமா, என்று பிரபானந்தர் கேட்கிறார். இது அறிவுமறுப்புக் கொள்கையா? சொல்லத்தெரியவில்லை. அறிவின் விஸ்தரிப்பை மறுக்கிறது. அல்லது அதன் எல்லைகள் என்ன, ஆபத்துகள் என்ன, என்று எச்சரிக்கிறது. தொடர்ந்து விரியும விஜயனின் வாழ்க்கைக்கதை இந்த சிந்தனைக்கு ஒரு முத்தாய்ப்பாக அமைகிறது.
அதுவும் ஒரு பெரிய அதிர்வுதான். ஏனென்றால் விஜயன் அபத்தத்தை எதிர்நோக்கும் மனிதன் மட்டுமல்ல. சிந்தனையாளன். புனைவுகளை உருவாக்குபவன். அறிவதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவன். அந்த அறிவின் வெகுமதி அவன் வாழ்க்கையில் என்ன என்று என்னால் வகுத்துக்கொள்ள முடியவில்லை. கதையிலும், கதையைத்தாண்டிய உலகிலும், பெரிய மர்மமாகவே எஞ்சுகிறது.
*
எனக்குள் இருக்கும் ஐயங்களை இவ்வாறு சொல்கிறேன். உலகத்தில் எதுவுமே பிரபானந்தரின் தரப்புக்கு முன் பொருள் கொள்வதில்லை. அது வேதாந்தியின் நெருப்பு. அதற்கு முன்னால் மங்கலமும் அமங்கலமும் அபத்தமாகிறது. தெய்வங்களை உருவாக்காதே என்று அவர் சொல்வதும் ஒரு வித மாயை எதிர்ப்பு வாதம் என்று கொள்ள இடமுள்ளது.
வேதாந்திகளிடம் பொதுவாக மாயையின் இயல்பைப் பற்றி கேள்வி கேட்டால், அதிகமாக விஸ்தாரிக்க மாட்டார்கள் என்பது என் புரிதல். மாயையை ஆராய்ந்துகொண்டிருக்காதே, அதை வெட்டிவிட்டு மேலேச்செல் என்று சொல்வார்கள்.
ஆனால் புனைவெழுத்தோ, மாயைக்குள் மாயையை உருவாக்கியே திளைக்கிறது. அதன் வழியாக மேலும் மேலும் அறிவை சேர்த்துக்கொள்கிறது. புனைவெழுத்தாளனும் வாசகனும் அனுபவம் வழியாக அறிந்தவர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த அறிவால் அவர்களுடைய துக்கம் விலகுவதில்லை. ஆகவேதான் இந்தக்கதையில் பிரபானந்தர் எழுத்தாளர்கள் மீது அலட்சியம் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
என் ஐயம் இந்தப் புள்ளியில் தான். அறிவுக்கு சாராம்சத்தில் மதிப்பு உண்டா? எங்கு, எதில் உள்ளது? அறிவைப்பெறும் இன்பத்தைத் தாண்டி அதில் சாரமென்று ஏதும் இல்லையா? Pure intellectual quest என்பதற்கு ஓர் எல்லை வரையிலும் தான் அர்த்தமிருக்கிறதா? நீங்கள் இந்தக் கேள்விகளை ஒட்டி நித்ய சைதன்ய யதியுடன் பேசியதுண்டா?
ஏனென்றால் எனக்கு புரிந்த வரையிலும் வேதாந்தத்தின் பாதையும் கலை இலக்கியம் அறிவுச் சேகரிப்பின் பாதையும் நேரெதிரானவை. ஒன்று இருக்கும் உலகையே தாண்டிச்செல்லச் சொல்கிறது. மற்றொன்று அதற்குள் ஏனைய பிரபஞ்சங்களை கண்டடைய முனைகிறது. இந்த முரணை ஒருநோக்காக்கிக் கொள்வது எப்படி? இந்த புள்ளியில் நீங்கள் அதிகம் பொதுவில் பேசமாட்டீர்கள் என்று அறிகிறேன். இருந்தாலும் வலுவாக எனக்குள் இந்த ஐயம் இருப்பதால் இத்தருணத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.
இன்னொன்றும் உள்ளது. அறிவின் கோட்பாடுகளை யதார்த்தத்தளத்துக்குக் கொண்டு வந்து வாழ்வதென்பது தான் இலட்சிய வாழ்வு. ஆனால் பலநேரங்களில் நம் பட்டறிவு வேறொன்றை சொல்கிறது. ரமா சொல்வது போல ‘செண்டிமென்டாக’, ஆனால் அது ஆழமானதும் கூட. உண்மையில் எனக்கு அதை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, உள்ளுணர்வாக ரமா சொல்வதன் ஆழத்தை அறிகிறேன். ஆனால் அதைப் புறவயமாகச் சொல்ல முடியவில்லை.
கே.வி.ஜயானனும் இந்தக்கதையில் ரமாவின் தரப்புக்கு எதிராக அப்படி ஒரு அறிவார்ந்த முறையையே தன் வாழ்வில் பரிசோதிக்கிறார். பலமாகத் தோல்வியுறுகிறார்.
இதை எப்படி புரிந்துகொள்வது? வாழ்க்கைக்கு வராத அறிவுக்கு என்ன மதிப்பு? அதே சமயம் அறிவு வாழ்வின் உயிர்ப்பையே குலைக்குமென்றால் அந்த அறிவு மனிதனுக்கு கொடுப்பதுதான் என்ன? அதற்காக அறிவே வேண்டாம், லௌகீக யதார்த்த செண்டிமெண்டுகளே போதும் என்றும் இருக்க முடியவில்லையே? அறிவில் ஒன்றை கண்டடைந்து நடத்தையில் வேறொருவிதமாக ஒழுகினால் அது ஹிப்போகிரசி இல்லையா?
ஜெ, உண்மையில் இந்தக்கணம் எனக்குள்ளும் விஜயன், ரமா, பிரபானந்தர் என்று மூன்று குரல்களும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் வலுவான பின்னணி, வாதங்கள் இருக்கின்றன. அதில் எழுந்து வரும் பெரிய கேள்வி, அறிவுக்கு சாராம்சத்தில் மதிப்பு உண்டா?
*
இவ்வரிசைக்கதைகளில் இதுவரை கந்தர்வன் கதையே பேருச்சம் எனக்கு. ஆனால் இந்தக்கேள்விகளை ஒட்டி இந்தக்கதை உருவாக்கிய அதிர்வுகளாலேயே இதை மிகவும் நெருக்கமாக உணர்கிறேன். நன்றி .
ஆர்.
அன்புள்ள ஆர்,
மிக நீண்ட கடிதம். தனிப்பட்ட செய்திகளைச் வெட்டிவிட்டு சுருக்கி இதை வெளியிடுகிறேன். ஏனென்றால் இது எழுப்பும் கேள்வி அடிப்படையான ஒன்று. அதோடு இத்தகைய விஷயங்களை பொதுவில் விவாதிக்கும்போது வரும் புறவயத்தன்மை ஒரு வகையான ஒழுங்கை அளிக்கிறது.
நீங்கள் உணர்ந்தது சரி, நான் சிலவற்றை பொதுவில் விரிவாகப் பேசுவதில்லை. ஏனென்றால் அதனால் குழப்பமே எஞ்சும். குழப்பத்துக்கு ஒருபடி முன்னரே நின்றுவிட முயன்று, கவனமாகவே பேசுவேன். ஆதாரமான விஷயங்களை பேசத்தொடங்கினால் விவாதமாக ஆகும். விவாதத்தால் அறியமுடியாதவையே சாராம்சமானவை.
இரண்டு சிக்கல்கள் உண்டு இதில். ஒன்று, இதற்கு ஒரு கடிதத்தில் முழுமையாகப் பதில் சொல்ல முடியாது. இரண்டு, சொல்லப்படும் பதிலால் இந்த வினா நிறைவுறாது. தானாகக் கண்டடையவேண்டும்.
சொல்லப்படும் பதிலென்பது ஒரு தொடக்கமாக, ஒரு சிந்தனைச்சீண்டலாக மட்டுமே அமைய முடியும். ஆகவே சுருக்கமாகச் சொல்கிறேன். அது இந்தக் கதையை விளக்குவதற்காக அல்ல, உங்கள் கேள்வியை ஒட்டி ஒரு பதில். முழுமையான விளக்கம் அல்ல நீங்கள் சொந்தச் சிந்தனையை முன்னெடுக்கும்பொருட்டு ஒரு குறிப்பு மட்டுமே.
*
‘அறிவார்ந்த’ , ‘உணர்வுசார்ந்த’ என்னும் இரு அணுகுமுறைகளுமே அதீதத்தின் சிக்கல்கள் கொண்டவை. இரு எல்லைகள் அவை. ஆகவே இரண்டுவகை பிழைகள்.
அறிவார்ந்த என்பதில் ’நான்’ என்னும் தற்பிடித்தம் உள்ளது. நாம் ‘என் அறிவு’ என்பதையே பொதுவாக அறிவு என்கிறோம். அந்த தற்பிடித்தமே அறிவுத்தேடல் கொண்டவர்களின் ஆதாரச் சிக்கல்.அறிவை பயனற்றதாக்கும் அம்சம் இதுவே.
நான் நித்யாவிடம் இதைப்பற்றிப் பேசியிருக்கிறேன். அவர் சொன்ன பதிலை எழுதியுமிருக்கிறேன். ‘தானே கண்டறிந்தது என்பதனால் ஒன்று உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புவதுதான் அறியாமையின் உச்சம்’ என்று அவர் சொன்ன வரியை பலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறேன். நாம் நம் அறிவால் அறிவது அனைவருக்குமான உண்மையாக இருக்கவேண்டியதில்லை.ஏன், நமக்கேயான உண்மையாகவும் இருக்கவேண்டியதில்லை. அது வெறுமே தர்க்கபூர்வமானதாகவும், பொருத்தமானதாகவும் மட்டும் இருக்கலாம். தர்க்கபூர்வமானதும் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானதும் உண்மையாக இருக்கவேண்டியதில்லை.
நான் இன்னொருவகையில் அதைச் சொல்வேன். ‘சரியான சொற்களில் சொல்லப்பட்டுவிட்டதனால் மட்டுமே ஒன்று உண்மையென்று நம்புவதைப்போல அறிவின்மை ஏதுமில்லை.’ ஆனால் அந்த மாயை எழுத்தாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் உரிய சொந்த எலிப்பொறி. [ஈகோ அடிபடுகிறதென்றால் புலிப்பொறி என்று வாசிக்கவும்
]
அறிவை நம்பி, உணர்வை அதற்குமேல் ஏறும் களிம்பென எண்ணி எள்ளி நகையாடி விலக்கி, தூய தர்க்கத்தால் மட்டுமே முடிவுகளை எடுப்பவர்கள் உண்மையில் ஆணவத்தின் விழைவாலேயே அந்த முடிவுகளை எடுக்கிறார்கள். கதையின் கே.வி.ஜயானன் எடுக்கும் எல்லா முடிவுகளும் அப்படித்தான். அவை அறிவார்ந்தவை என அவர் நினைக்கிறார். ஆனால் அவை வெறும் ஆணவநிறைவுக்கான முயற்சிகள், ஆழத்தில் நிறைவேறாத ஏக்கத்தின் வெளிப்பாடுகள் என்றுதான் கே.வி.ரமா சொல்கிறார். அதுதான் கதையின் சாராம்சமே.
இன்னொரு பக்கம் வெறும் உணர்வுரீதியான முடிவுகள் உள்ளன. அறிவார்ந்த ஒருவரால் முற்றாக உணர்வுகளுக்கு ஒப்புக்கொடுத்து வாழமுடியாது. அது காற்றுக்கு சருகு தன்னை அளிப்பதுபோல. வாழலாம், காற்று நம்மை முள்ளில் கொண்டுசென்று குத்தி வைத்தால் புலம்பாமலிருக்க முடியுமென்றால்.
கே.வி.ரமா வெறும் செண்டிமெண்டுகளால் இயக்கப்பட்டு அதைச் சொல்லவில்லை. அவர் மிகக்கூர்ந்த அறிவாற்றலுடன்தான் உணர்வுகளை ஆராய்கிறார் என்பதைக் கதையில் காணலாம்.
அறிவை உணர்வு கட்டுப்படுத்த, உணர்வை அறிவு கண்காணிக்க ஒரு சமநிலைப்பயணமே எவருக்கும் உகந்தது.மிக எளிமையான பதில். ஆனால் எப்போதுமுள்ளது. அத்வைதத்தின் வழி அதுவே- நடுவே உள்ள பாதை. பொன்னிறப்பாதை என்பது அதுதான்.
அறிவால் ஒன்றை கண்டுகொண்டதுமே அதை நம்புவதல்ல சரியான வழி. அது நம் ஆணவத்தின் நிலவொளியால் பொன் என மாற்றப்பட்ட சிப்பியாக இருக்கலாம். அந்தக் கால இடத்தை கடந்தால், அது தன்னுரு வெளிக்காட்டலாம். அறிவின் அறிதல்களை உணர்ச்சிகளால் பரிசீலிக்கவேண்டும். உணர்ச்சிகள் பல. பிறர் தரப்பையும் நோக்கும் அறவுணர்வே ‘செண்டிமெண்டு’களில் முதன்மையானது.பற்று பாசம் என செண்டிமெண்டுகள் ஏராளமாக உள்ளன இவ்வாழ்க்கையில்.
உதாரணமாக, தன் தந்தையை கைவிட்டு விலகிச்சென்று இருத்தலியலில் திளைத்த கே.வி.ஜயானன் அப்போது நித்யசைதன்ய யதியைச் சந்தித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?
‘நீ முற்றிலும் தனியன், நீ உன் வாழ்க்கையை முடிவுசெய்ய முழுஉரிமை கொண்டவன், உன் வாழ்வென்பது நீ உருவாக்கிக்கொள்வது மட்டுமே என நீ எண்ணிக்கொண்டிருப்பதெல்லாம் உன் ஆணவம் அளிக்கும் வசதியான நிலைபாடுகள் மட்டுமே. நீ ஓர் உயிரியியல் தொடர்ச்சி. நீ துண்டித்தாலும் அது உன்னை துண்டித்துக் கொள்ளாது. இங்கே எடுக்கப்பட்டது கொடுக்கப்பட்டாக வேண்டும்.
தந்தையை அளவிடும் அளவுகோல் மைந்தரிடம் இல்லை. மூதாதையரை மதிப்பிடுமளவுக்கு உனக்கு வாழ்க்கை நீளமில்லை. உன் அளவுகோல்களைக் கொண்டு நீ உன் சொந்த வாழ்க்கையிலேயே எதையும் அறுதியாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆகவே உன் எளிய கோபதாபங்களுக்கு அப்பால் சென்று என்றுமுள்ள உண்மையை தொட முயல்க.
ஒரு கணம் கண்மூடி அமர்ந்து, உன்னை ரத்து செய்துகொள்ள முடிந்தால் உனக்கே தெரியும், நீ இப்புடவியின் உயிர்ப்பெருக்கில் ஒரு வெறும் துளி என. எல்லா உயிருக்கும் உரிய நியதிகளே உனக்கும் என. நீ அரியவன் அல்ல, நீ முற்றிலும் தனித்தன்மையானவனும் அல்ல. உனக்கென்று மட்டும் ஓர் இருத்தல் இல்லை. ஆகவே உனக்கென்று மட்டும் இருத்தலியல் கேள்விகளும் அதற்குரிய விடைகளும் இல்லை. அப்படியொன்றை நீ தேடுவது நான் நான் என எழும் வெற்றாணவத்தால்தான்.
ஆகவே உன் அப்பாவிடம் சென்று பணிந்து அவர் அந்திமகாலத்தில் விரும்புவதைச் செய். அவருக்கு அளிக்கவேண்டிய அனைத்தையும் அளி. அதற்கு உன் சிறிய ஆணவம் தடையாகக் கூடாது. அதை வென்று செல்க. நீ செய்யவேண்டியதை செய்துவிட்டாய் என்றால் உனக்கு செய்யப்படவேண்டியது செய்யப்படாவிட்டாலும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள உன்னால் முடியும். அளிக்கவேண்டியவற்றை அளித்தவர் அவற்றை கடந்துசென்றவராவார். வாழ்க்கையில் எதையும் எச்சம் விட்டு மேலே செல்லாதே. விட்டுவிட்டவை வளரும், விழுங்கும்’
– என்று சொல்லியிருப்பார்.அதாவது, ஒரு செண்டிமெண்டின் ஆழத்தையே சுட்டிக்காட்டியிருப்பார். ஆனால் அது வெறும் உணர்வுநிலை அல்ல. ஒரு முழுமையில் வைத்துப்பார்க்கும் பார்வை.
கே.வி.ஜயானன் அவர் அப்பாவுக்கு கடைசியில் நல்ல மகனாக இருந்திருந்தால் அவருக்கு அந்தத் துயர்கள் அத்தனை பூதாகரமானதாக ஆகியிருக்காது இல்லையா?. அத்தனை அறிவுக்கூர்மையுடனிருந்தவர் அந்த அறிவால் உணர்ச்சிகளை கண்காணித்திருந்தால் தன் செயல்களின் உணர்வுத்தளம் என்ன என்று புரிந்துகொண்டிருப்பார்.அந்த உணர்வுத்தளத்தை அறிவார்ந்து கையாள முடிந்திருக்கும். அது ரகசிய சக்தியாக இருந்து ஆட்டிப்படைத்திருக்காது. அவர் கடைசிவரை அதைப் புரிந்துகொள்ளவில்லை.
இந்தக்கதை அறிவுக்கு எதிரானது அல்ல. அறிவென நடிக்கும் உணர்வுகளைப் பற்றியது இக்கதை. வஞ்சம் ஏக்கம் போன்றவை அறிவை கருவியெனக் கையாள்வதைப் பற்றியது.
*
வேதாந்தம் அறிவை மறுக்கவில்லை, ஐயப்படவுமில்லை. ஆனால் அறிவு என்பது என்ன என்று அறியவும் வரையறுக்கவும் தொடர்ந்து முயல்கிறது.
அறிவு பயனற்றது அல்ல. இருவகை அறிவுகள் உண்டு. தான் என்பது ஒரு முழுமையின் துளியே என்றும், தன் வாழ்க்கை என்பது இங்குள்ள வாழ்க்கைவலையின் ஒரு கண்ணிதான் என்றும் உணர்வது தன்னறிவு. தன்னறிவு முழுமையறிவுக்கான தொடக்கம்.
மாறாக, தான் தான் என தன் அறிதலையே முழுமை என முன்வைப்பது அறிவாணவம். இரண்டுக்கும் வேறுபாடுண்டு. தன்னறிவு தன் எல்லைகளை, பொறுப்புகளை முதன்மையாகச் சுட்டும். கூடவே தான் என ஒன்றில் சிக்கியிருக்காமலிருக்கவும் செய்யும்.
பிரிவுபட்ட அறிவின் விளைவே அறிவாணவம். ஒரு துறை, ஒரு தளம் சார்ந்த அறிவு. ஒரு தருணம், ஒரு கோணம் சார்ந்த அறிவு. அறிவாணவமே வெறுமையை அளித்து உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது.
நீங்கள் ’அறிவென்பது மாயை என்றால் புனைவெழுத்து மாயைக்குள் மாயையை உருவாக்கியே திளைக்கிறது. அதன் வழியாக மேலும் மேலும் அறிவை சேர்த்துக்கொள்கிறது’ என்கிறீர்கள். அப்படி அல்ல. புனைவெழுத்து சரியான கலைத்தன்மையுடன் இருக்கும் என்றால் முழுமையை நோக்கியே சுட்டும்.முழுமையைச் சுட்டும் அறிவு மாயை அல்ல, துண்டுபட்ட உண்மையே மாயை.
அறிவின் படி வாழலாகாதா என்று கேட்டதற்கு இதுவே பதில். பிளவுண்ட அறிவின்படி வாழ்வது இழப்புகளையே அளிக்கும். ஏனென்றால் அந்த அறிவுக்கு இணையான எதிர் அறிவும் இருக்கும். இதைக் கடந்ததுமே அது வந்து முன்னால் நிற்கும். இதற்கு அளிப்பதற்கு இணையாக எதிர் அறிவும் நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும். முழுமையறிவையே நாம் நாடவேண்டும். அதைக்கொண்டே முடிவெடுக்கவேண்டும்.
அவ்வண்ணம் முழுமைசார்ந்த ஓர் உள்ளறிதல் நிகழாதபோது உணர்வால் அறிவால் சமன்செய்யப்பட்ட துலாமுள் பாதையே சரியான வழி.மாறாக ஓர் உள்ளறிதலின் ஆணை எழுந்ததென்றால் அதன்பொருட்டு எதையும் இழக்கலாம், கடந்துசெல்லலாம். ஏனென்றால் நாம் நமது சாரமென்ன என்று அறிந்துவிட்டிருக்கிறோம். அதன்பின் நமது இலக்கு, வழி எதைப்பற்றியும் ஐயமில்லை. இன்று எனக்கு ஐயமேதுமில்லை.
நித்யாவின் மாணவனாக கே.வி.ஜயானனுக்கு நான் இப்படிச் சொல்வேன். ’ஒவ்வொரு தெய்வத்துக்கும் அதற்கான கொடைகளை அளி, பலிகளைப் போடு. கையில் குழந்தையுடன் காட்டில் தப்பிச்செல்லும் அன்னை துரத்திவரும் ஓநாய்களுக்கு கையிலுள்ள உணவுகளை வீசுவாள். கடைசியில் தன் தசையையும் வெட்டிவீசுவாள். குழந்தையை கொண்டுசென்று சேர்த்துவிடுவாள்’
*
வேதாந்தம் அறிவின் பாதையை முன்வைக்கவில்லை – பேரறிவின் பாதையை முன்வைக்கிறது. அறிவை மாயை என்று சொல்லவில்லை, முழுமையுடன் இணையாத துண்டுபட்ட அறிவையே மாயை என்கிறது. இந்த உலகில் இதுவரை தோன்றிய ஞானமார்க்கங்களிலேயே கலையிலக்கியத்திற்கு அணுக்கமானது வேதாந்தமேயாகும். ஏனென்றால் அது கலையிலக்கியங்களை மயக்கங்கள், வெற்றுணர்ச்சிகள் என்று சொல்லவில்லை – அவை முழுமையைச் சுட்டுகின்றனவா என்று மட்டுமே நோக்குகிறது.
நாராயண குரு அறிவு என்னும் சிறிய நூலை இயற்றியிருக்கிறார்.அதன் சாராம்சம் இதுவே. அறிவு ஒரு ஓரு தனிப்பிரக்ஞையில் அதன் விளைச்சலாக நிகழ்கையில் சிற்றறிவு. அதுவே ஆணவஅறிவு.
தன்னறிவு தன்னை ரத்துசெய்து அறிவது .அதை உணர்வால், நுண்ணுணர்வால் கண்காணித்து பெருக்கி அறிந்தறிந்து செல்லுமிடம்தான் பேரறிவு. எந்த ஓடையைத் தொடர்ந்தாலும் கடலைச் சென்றறிவதுபோல.
பேரறிவு என்பது முழுமையறிவு. பிளவற்ற அறிவு. சிற்றறிவின் தளத்தில் அறிவே அறிவுக்கு எதிராக நின்றிருக்கிறது. பேரறிவு ’நமது- பிறிது’ என்ற பிளவற்றது. ஒட்டுமொத்தமானது. அது அறிதலால் மட்டும் ஆவது அல்ல. அறிதலில் அமைவதனாலும் ஆவது.
பொதுவாக இதை இப்படிச் சொல்கிறேன். ‘உரிய முறையில் தியானிக்கப்படாத அறிவு என்பது வெறும் ஆணவமாகவே முடியும். தியானம் என்பது அறிவை, அது எதன் துளியாக இருக்கிறதோ அந்த ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியென உணர்வது. அப்போதுதான் அந்த அறிவுக்கு உண்மையின் பெறுமதி அமைகிறது’.
இது எழுத்தாளனாகிய ஜெயமோகன் சொல்வது அல்ல. அவன் மூளையின் செரட்டோனின் அளிக்கும் தூண்டுதலால் மட்டுமே கதைகளை எழுதிக்கொண்டிருப்பவன். எழுதும்போதிருக்கும் திளைப்புக்கு அப்பால் எதையும் அறியவோ விளக்கவோ செய்யாதவன். இந்தப் பதில் நித்யாவின் மாணவனால், முற்றிலும் வேறொருவனால், எழுதப்படுவது.
ஜெ
விருந்து, ஏழாம் கடல் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஏழாம் கடல் ஒரு சிக்கலான கதை. அந்தக்கதையை சமூகச்சூழல், அரசியல்சூழல், காலகட்டம் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துப்பார்த்தாலொழிய புரிந்துகொள்ள முடியாது. அந்தக்கதைக்கு ஃப்ராய்டிசம் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் விளக்கம் அளித்தாலும் கதை அப்படியே நழுவிச்சென்றுவிடும். அக்கதை மனித மனதின் நஞ்சும் முத்தும் எங்கிருக்கிறது என்று காட்டுகிறது
கதையைப் புரிந்துகொள்ள மிக எளிமையான வழிதான். நம் உறவில், எத்தனை நெருங்கிய உறவாக இருந்தாலும் ஒரு சொட்டு நஞ்சு நமக்கு ஊட்டப்பட்டதில்லையா? நாம் ஊட்டியதில்லையா? அதை கேட்டுக்கொண்டாலே போதும்
ராஜசேகர்
ஜெ,
முற்றும் தூய்மையான உறவென்பது மனிதர்களுக்கு சாத்தியமே இல்லாதது. கடலாழத்தில் உள்ள கோடி கோடி முத்துக்கள் நமது எண்ணங்களே தான். கோடி எண்ணங்களில் ஓன்று நஞ்சாக வல்லது. அந்த நஞ்சு யாரிடமிருந்து யாருக்கு சென்றது என்பதே கதை.
ஏழாம்கடல் துரியம் தான். பிள்ளையின் மனமோ வியாகப்பனின் மனமோ அல்ல, மானுடத்துக்குப் பொதுவான முழுமனம் அது. அந்த மனத்தில் இருந்துதான் அனைத்து நஞ்சும் அமுதும் வருகிறது. அதன் ஆழத்துக்கும் தொலைவுக்கும் முடிவே இல்லை. (மண்ணிலயும் விண்ணிலயும் இருக்கப்பட்ட அத்தனையையும் அறிஞ்ச பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் அதிலே என்னென்ன எங்கெங்க இருக்குன்னு தெரியும். மத்தவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மனுசப்பயக்களுக்கு தெரியாது. பரமபிதாவுக்கும் மனுசகுமாரனுக்கும் மாதாவுக்கும்கூட தெரியாது… தெரிஞ்சுகிடவே முடியாது.)
வியாகப்பன், பிள்ளைக்கு கொடுக்க நினைத்தது ஆணிப்பொன் மணிமுத்து, ஆனால் சிக்கியது ஒரு துளி விஷம். வாழ்வின் இனிமையை மட்டுமே அடைய எண்ணி கடையும் பொழுது, கீழ்மைகளும் நஞ்சும் வெளிப்படுவதற்கிணையான மர்மம் இது. இந்த அறியமுடியாமை அல்லது அடையமுடியாமையே மனித குலத்தின் மாபெரும் மர்மங்களில் ஓன்று.
வியாகப்பன் ஒரு மணிமுத்தை பிள்ளைக்கு கொடுத்தும் இருக்கிறார். அந்த முத்தை பிள்ளை ஏன் வியாகப்பனுக்கு காட்டவில்லை? அதை வெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி வைத்திருப்பவர், மாதாவிடம் வியாகப்பன் மன்றாடியதை அறியாமலா இருந்திருப்பார்? வியாகப்பனுக்கு, மணிமுத்திற்கும் மேலான ஒன்றை திருப்பி அளிப்பதற்கான வாய்ப்பல்லவா அது?
அந்த நஞ்சும் ஏழாம்கடலிலிருந்து தோன்றியது என்பதாலேயே, அது வியாகப்பனின் நஞ்சும் ஆகும்.
ஒருவேளை வியாகப்பனுக்கு பின்னர் தெரிய வந்திருந்தால் கூட பிள்ளையை வெறுக்க மாட்டார், ‘அப்டி வெறுத்துப்போட்டா பின்ன மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா?’ என்றே சொல்லி இருப்பார்.
கதையைப் படித்ததும் துலங்கி வந்தது யின் யாங் குறியீடு தான். அமுதத்தில் ஒரு துளி நஞ்சு, நஞ்சில் ஒரு துளி அமுது. இரண்டும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பி எய்தும் முழுமை.
அன்புடன்,
கிருஷ்ணபிரபா
விருந்து [சிறுகதை]அன்புள்ள ஜெ
விருந்து மீண்டும் ஒரு நெகிழ்வான கதை. எத்தனை கதைகள். எழுதி எழுதித்தீராத கதைகள் இங்கே உள்ளன. கதைகளை நோக்கித் திரும்பிக்கொண்டால்போதும்
ஏன் கதைகள் இப்படி வந்துகொண்டே இருக்கின்றன என்று யோசித்தேன். இதே போன்ற செய்திகளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டேதானே இருக்கின்றன. அவற்றை எல்லாரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?
செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் திறக்கவேண்டியிருக்கிறது. ஆர்ட்டிஸ்டிக் எக்ஸ்டென்ஷன் என்பார்கள். அதை கலைரீதியாக நீட்டிக்கொள்ளவேண்டும். அதற்கு தத்துவப் பரிச்சயம், வரலாற்று வாசிப்பு, ஸ்பிரிச்சுவலான ஒரு தேடல் இருக்கவேண்டும். அதைத்தான் கதையை உருவாக்கும் மனநிலை என்று சொல்கிறோம்
இந்தக் கதையில் ஒரு தூக்குமேடைக் கைதி பிரியாணி சமைத்துப்போட்டான், அவ்வளவுதான் கதை என்று சொல்லிவிடலாம். ஆனால் ஆடு இங்கே ஒரு பலி. தன்னைத்தானே பலிகொடுக்கிறான். தன்னையே பிறருக்கு ஊட்டிவிட்டுப்போகிறான் என்று பார்க்க ஒரு தத்துவப்பார்வை வேண்டும்
ஆடு என்பது கிறிஸ்தவ மரபில் ஏசுவின் குறியீடு. திவ்யபலி என்று கிறிஸ்து மரபில் சொல்வார்கள். ஊருக்காக தன்னையே பலிகொடுத்தார். பலிநிறைவேற்றம் என்பார்கள்.அந்தச்சாயலை கதைக்கு கொண்டுவர வரலாற்றுவாசிப்பு வேண்டும். அதெல்லாம் இயல்பாக வந்து படியும்போதுதான் கதை ஆழமானதாக ஆகிறது
எஸ்.ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
விருந்து கதையில் ஆசாரியின் குணாதிசயம் ஆழமாக வெளிப்பட்டுள்ளது. ஆசாரியின் மென்மை, நகைச்சுவை உணர்வு எல்லாமே அழகானவை. அவனை மென்மையானவனாக, புனிதமான பலியாடாக, காட்டியிருக்கிறது கதை. அவன் செய்த கொலையை ஏன் எதற்காக என்று விளக்காமல் விட்டிருப்பதும் அழகு. ஏனென்றால் அதைச் சொல்லியிருந்தால் கதை அங்கே திரும்பிவிடும். அந்த கதை அல்ல முக்கியம், அவனுடைய பலி மட்டும்தான் என்று கதை சொல்கிறது. ஒவ்வொரு டீடெயிலும் மிகச்சரியாக அமைக்கப்பட்டிருக்கிறது
ஆனந்த்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

