Jeyamohan's Blog, page 1026
March 8, 2021
கொதி,வலம் இடம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கொதி கதையை வாசித்தேன். அதுவரை நீங்கள் எழுதிய பல கதைகளுடன் வந்து இணைந்துகொண்டது. இந்துமதம் ஒரு நிறுவனமாக இங்குள்ள ஏழை மக்களின் பசியை அட்ரஸ் செய்யவில்லை. அதை வெள்ளையானை முதல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். சமூக ஒடுக்குமுறையையும் அட்ரஸ் செய்யவில்லை. அந்த இடைவெளியில்தான் கிறிஸ்தவமும் இஸ்லாமும் நுழைந்தன. ஆனால் அதை இன்றுவரை இங்குள்ள மதக்கண்மூடித்தனம் கொண்டவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஏற்கவில்லை. வேதத்தில் உணவை பங்கிடு என்று சொல்லியிருக்கிறது, உபநிஷத்தில் எல்லாரும் சமம் என்று சொல்லியிருக்கிறது என்று பசப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
கொதி கதையிலுள்ள கொதிப்பை எப்போது ஒரு சமூகமாக நாம் அடையாளம் காண்கிறோமோ அப்போதுதான் நாம் வெற்றிபெறும் சமூகமாக இருக்கமுடியும். அந்த உண்மையை பழிப்பு பேசியோ பசப்பு பேசியோ மழுப்பவே முடியாது.
எஸ்.சரவணக்குமார்
அன்புள்ள ஜெ,
கொதி கதையை உணர்ச்சிக்கொந்தளிப்புடன் வாசித்தேன். நரநாராயணசேவை என்றால் ஃபாதர் ஞானையா செய்வதுதான். பாவப்பட்ட ஜனங்க என்ற ஒரு வார்த்தையையே ஆப்தமந்திரமாக கொண்டவர். நான் எங்களூர்ப்பக்கம் அருந்ததியர் காலனியை பார்ப்பதுண்டு. அங்கே மதம்சார்ந்து நுழைபவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டும்தான். எந்த இந்து சாமியாரும் அங்கே நுழைந்ததில்லை.
[இப்போது கோவை பகுதியில் ஜக்கி குருகுலம் சார்ந்து சில பணிகளை அருந்ததியர் நடுவே செய்கிறார்கள். அதை பார்த்தேன். ஆனால் அதற்கு அவ்வளவு எதிர்ப்பு இடதுசாரிகளிடமிருந்து வருகிறது. அவர்கள் ஜக்கியை கொச்சைப்படுத்துவது இதனால்தான்]
ஞானையாவின் ஞானம் என்பது அவருடைய பசி வழியாக அவருக்குக் கிடைப்பதுதான். அவர் தன் கண்ணீரை ஏழைகளுக்கு கொடுத்தார். கிறிஸ்துவின் ரத்தம் அவருக்குக் கிடைத்தது
எம்.செந்தில்குமார்
வலம் இடம் [சிறுகதை]அன்புள்ள ஜெ
வலம் இடம் கனவில் நாம் எதை தொடுகிறோமோ அதைதான் நிஜத்தில் தொடுகிறோம். அல்லது நிஜத்தில் தொடவேண்டியதை முன்பே கனவில் தொட்டுவிடுகிறோம்.
பகவதி தன் மீதான அளவில்லா அன்பு கொண்ட பக்தனுக்கு அலைதல் இல்லாமல் அவரிடமே செல்லும் கதைதான் காவில் பகவதியின் தொமம். கணேசனுக்கு எருமைதான் அவனின் தெய்வம். அதனால் தான் முதலில் செல்லமை அளப்பங்கோடு சாஸ்தாவை பற்றி சொன்ன போது கணேசனுக்கு பொருட்டாகயில்லை. பின்னால் அளப்பங்கோடு அப்பசியாலேயே கணேசனின் பக்திக்காக அவனிடமே அது அவரால் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இக்கதையில் எழுதபடாத ஒன்று அது கணேசனுக்கும் செல்லமைக்கும் இன்னும் குழந்தைகள் இல்லை என்பது. வழக்கமாக என்றால் அதுதான் கதையாக்கபட்டு, பிராணிகளின் மீதான அவர்களின் அன்பு விளக்க பட்டிருக்கும்.
வடம் இடம் கதை சிறுகதையின் நேர்க்கோட்டில் இல்லையென்பதுபோல் இருந்தாலும் ஒரு முழு வாழ்க்கையை காட்டுகிறது. ஹிந்துஸ்தானி இசையைபோல் தன்னுள்ளேயே அழைத்து அழைத்து ஒரு உச்சத்தை தொடுகிறது.
இக்கதையை முழுவதுமாக என்னால் மேல்லதிக வாசிப்பு செய்ய முடிந்ததா என்று தெரியவில்லை. தளத்தில் பிற கடிதங்கள் வெளியாகும்போது இன்னும் வாசிப்பின் சாத்தியங்கள் தெரியவரலாம்.
நன்றி
பிரதீப் கென்னடி.
அன்புள்ள ஜெ
வலம் இடம் ஓர் அருமையான கதை. அந்தக்கதையின் ஆழமும் நுட்பமும் பேசிப்பேசி தெளிந்து வரும். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கைக்கு அருகே சாவு உள்ளது. ஒவ்வொருவருக்கு அருகிலும் சாவு உள்ளது. சாவு நெருங்கும்போது அது நமக்கே தெரியும். என் அம்மா சாவதற்கு ஒருநாள் முன்பு அவர் கண்ட ஒரு கனவைச் சொன்னார்கள். அம்மா காலையில் திண்ணையில் அமர்ந்திருக்கும்போது எதிர்த்திண்ணையில் அம்மாவின் அக்கா அமர்ந்திருப்பதுபோல கனவு வந்தது. அம்மாவின் அக்கா இறந்து ஏழு ஆண்டுகள் கடந்திருந்தன. அம்மாவுக்கு அந்த கனவின் அர்த்தம் தெரிந்திருந்தது. இன்னும் கொஞ்சநாள்தாண்டா சீக்கிரம் போயிருவேன் என்று சொன்னார். மறுநாளே போய்விட்டார்
கதையில் எருமைக்கு அருகே அவன் கண்டது எருமையின் சாவைத்தான். அவன் கனவில் அதைக் கண்டுவிட்டான்
சண்முகராஜா
கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்.
அன்புள்ள ஜெ
கந்தர்வன் யட்சன் என்ற இரு கதைகளிலும் முக்கியமானது தலைக்குமேல் எழுந்து நின்றிருக்கும் அந்த கோபுரமும் அதிலிருக்கும் சிற்பங்களும்தான். அந்தச் சிற்பங்களில்தான் யட்சர்களும் கந்தர்வர்களும் தேவ கன்னிகைகளும் இருக்கிறார்கள். அவர்களின் மனமெல்லாம் அங்கே நோக்கித்தான் இருக்கிறது. அவர்களில் சிலர் அங்கே சென்று சேர்கிறார்கள். இரண்டுபேர் இரண்டு வழிகளினூடாக அங்கே சென்று சேர்ந்தார்கள்.
முன்பு நீங்கள் எழுதிய ஒரு உவமைதான். அம்பும் இலக்கை அடைகிறது. அம்பின் நிழல் சேறு குப்பை எல்லாவற்றிலும் விழுந்து அதேபோல இலக்கை சென்று அடைந்துவிடுகிறது
மகேஷ்
அன்புள்ள ஜெ
கந்தர்வன் : இக்கதை வரிசைகளில், மத தொன்மங்கள் உருவகங்கள் குறியீடுகளுக்கு மேலதிக பொருளும் வாழ்க்கை கோணமும் கொடுக்கப்படுகிறது.
மத தொன்மங்களின் குறியீடுகளின் உண்மையை நவீன இலக்கியம் வாழ்க்கையிலிருந்து தொடுகிறது என்று இக்கதைகளை புரிந்துகொள்ளலாம். கருத்துருக்களாக புராணங்களில் உறைந்துள்ள ஒன்றை மீண்டும் வாழ்க்கையிலிருந்து சென்று தொடும் கதைகள். இந்த இயல்பு நூறு கதைகளிலும் இருந்தது. வெண்முரசுக்கு பின்பாக உங்களின் புனைவில் ஏற்பட்ட மாறுதலாக இதை பார்க்கலாம். இதற்க்கு முன் இறுதியாக வந்த உங்களின் சிறுகதை தொகுப்பு பிரதமன். அது முழுக்க நவீன இலக்கியத்தின் வாழ்வு. அதில் பெரிதாக தொல்படிமங்களின் பங்கில்லை (archetype). வெண்முரசுக்கு முன்பும் மத நாட்டார் தொன்மங்கள் உங்கள் கதைகளில் இருந்திருந்தாலும் என்னுடைய வாசிப்பில் அது அவ்வுலகங்களுக்குள் மட்டுமிருக்கும். ஆனால் இக்கதைகள் சாமானிய மானுட வாழ்விலிருந்து அத்தொன்மங்களின் உண்மைகளை தொடுபவைகளாக, கூடதல் அர்த்தம் சேர்ப்பவையாக அமைந்துள்ளது. வெண்முரசுக்கு பின்பாக முக்கியமாக நிகழ்ந்த மாறுதலிது.
கந்தர்வர்கள் கதை வாசித்தேன். எனக்கு பெரிதாகா புராணங்களும் மத்தொன்மங்களுத் அறிமுகமில்லை. தேடி அறிந்ததை வைத்து என்னால் முடிந்தவரை இக்கதையை இப்படி புரிந்து கொள்கிறேன்.
கந்தர்வர்கள் மகிழ்ச்சியில், இசையில்,கொண்டாட்டத்திலிருப்பவர்கள். அப்சரசுகள் கந்தர்வர்களுடன் நடனமாடி உடனிருப்பவர்கள். அணஞ்சபெருமாள் கந்தர்வன் அவனால் ஈர்க்கபட்ட பெண்கள் அவனை நினைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
முதலில் அணஞ்சபெருமாள் துள்ளலுடையவனாக பெண்களை ஈர்ப்பவனாக கந்தர்வனாக உருவகிக்கபடுகிறான். பின் அவன் அணுமானாக தியாகத்தின் சின்னமாக ஆகிறான். கந்தர்வனிலிருந்து அனுமானாக முருகையாவாக எறிமாடானாக ஆகிறான். முதலில் அப்சரசுவுனான பின் முருகனின் வள்ளியான ஒருத்தி அவன் எரியில் உடனேறி நங்கையாகிறாள். ஒன்றிலிருந்து ஒன்று என முடிச்சிடப்பட்டு ஒரு நீட்சியாகிறது.
தங்களின் உயிரையும் வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ள போராடும், கண்ணீர்விட்டு கையெடுத்து கும்பிட மட்டுமே முடியும் மக்களுக்கும், அவர்களுள் உள்ள தெய்வத்துக்கும் இடையே நிகழும் ஆடல் இக்கதை.
எனக்கு கோயில் சிற்பங்களை பற்றி தெரியவில்லை. சிற்பங்களின் அடுக்குகள் தெரிந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாசிக்கலாம். அதே போல் கதை பின்னணியில் உள்ள சாதிகள் பற்றி ஓரளவுக்கு தெரிந்தாலும் விரிவான அறிதல் இல்லை.
அணஞ்சபெருமாளுக்கு இக்கோயிலில் தனி சன்னதி ஒன்று கட்டப்படும். அனுமானுக்கு வைணவ கோயில்களில் இருப்பது போல். இயல்பில் கந்தர்வனாக இருக்கும் அணஞ்சபெருமாள் தன் தியாகத்தின் மூலம் அனுமானாகிறான். பின் முருகையாவாகி வள்ளியம்மை உடன் கட்டையேருவதால் எறிமாடானாக ஆகிறான். அடிப்படையில் கந்தர்வனான ஒருவன் வைண கடவுளாக, சைவ கடவுளாக, தமிழ் கடவுளாக, நாட்டார் தெய்வமாக இருப்பது தான் இக்கதையா. அப்படியென்றால் தெய்வம் என்பது இயல்பில் மகிழ்வும் கொண்டாட்மும் இன்னிசையும் மட்டுமே ஆனதா, அதாவது கலைஞனா. சூழல்தான் அதை வேறு ஒன்றாக்கி கொள்கிறதா.
இறுதியில் உணர்வாக இது தெய்வங்களை பற்றிய கதை. நம்மிடம் சொல்ல ஒன்றுமில்லை. பார்த்திருக்கத்தான் முடிகிறது.
நன்றி
பிரதீப் கென்னடி.
யட்சன் [சிறுகதை]அன்புள்ள ஜெ
கந்தர்வன் யட்சன் இருகதைகளும் ஒரு சிறிய நாவலை வாசித்த அனுபவத்துக்குக் கொண்டுசென்றன. வந்துகொண்டே இருக்கும் முகங்களும் ஊர்களும் மிகப்பெரிய நாவல்களுக்குரியவை. பணகுடி, திருக்கணங்குடி, மணக்கரை, அஞ்சுதெங்கு, கொல்லம் என விதவிதமனா ஊர்கள். அங்குள்ள வாழ்க்கைகள். அன்றைக்கிருந்த ஆசாரங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள். குறிப்பாக அன்றும் அரிசி-நெல் கள்ளக்கடத்தல் இருந்தது என்பது ஆச்சரியமானது. இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எழுபதுகளில் உடுமலை கேரளா பாதையில் இதேபோல அரிசி நெல் போய்க்கொண்டிருந்தது.
அன்றிருந்த சாதிநிலைகளும், ஆனால் ஒருவகை பகடியுடன் ஒருவரை ஒருவர் அணுகிக்கொண்டதுமெல்லாம் வாழ்க்கைச்சித்திரங்கள்
அர்விந்த்
அன்புள்ள ஜெ
பதினேழாம்நூற்றாண்டில் கோட்டாறு கம்போளம் இருந்ததா? அது பாலராமவர்மா உருவாக்கிய சந்தை என்றுதான் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
செல்வின்குமார்
அன்புள்ள செல்வின்,
கலிங்கத்துப் பரணி பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கன் கோட்டாற்றை வென்றதைப் பற்றி பாடுகிறது. “முன்னொருநாள் அநபாயன் முனிந்த போரில் கோட்டாறும் வெள்ளாறும் புகையால் மூட” என்கிறது. அன்றுமுதலே கோட்டாறு கம்போளம் இருந்து வருகிறது
ஜெ
வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
வெண்முரசு’ நாவல்தொடரில் மூன்றாவது நாவல் ‘வண்ணக்கடல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘கடல்’ என்பது, நீரால் ஆனது அல்ல; சினத்தால் ஆனது.
ஒருவர் தன்னைப் படைத்த தெய்வத்தாலேயே வஞ்சிக்கப்படுவது என்பது மீள முடியாப் பெருந்துயர். அத்தகைய துயரை அடைந்தவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள் அல்லது தமக்கு நிகரானவர்களை அழிக்கத் துடித்தெழுவார்கள்.
அவ்வாறு அவமானமடைந்தவர்களைக் காலவரிசைப்படுத்திக் காட்டுவதாகவே இந்த ‘வண்ணக்கடல்’ நாவல் அமைந்துள்ளது. இந்த நாவல், ‘மகாபாரதப்போரே அவமானமடைந்தவர்களின் சினத்தால் தொடங்கியதுதானோ?’ என்று நம்மை நினைக்க வைத்து, திகைக்கச் செய்கிறது.
இத்தகைய பெருந்துயரை மனிதர்கள் மட்டுமல்ல தேவர்களும் அசுரர்களும் அடைந்திருக்கிறார்கள். ‘இவர்களைப் படைத்த தெய்வமே ஏன் இவர்களைக் கைவிட்டது, வஞ்சித்தது?’ என்று வினா எழுப்பிக்கொண்டால், அதற்கு விடையாக ஒற்றைச் சொல் மட்டுமே கிடைக்கிறது. ஆம், அது ‘ஊழ்’ என்ற பெருஞ்சொல்.
அன்பு, அறிவு, வலிமை ஆகிய மூன்று முதன்மையான குணநலன்களைப் பெற்றிருந்த துரியோதனன், துரோணர், கர்ணன் ஆகிய மூவரையும் மூன்று பெரும்புள்ளிகளாக மாற்றியது ஊழ்தான். அந்த ஊழ்தான் அவர்களை அவமானமடையச் செய்து, அவர்களை வரலாற்றில் இடம்பெறத்தக்க பெரிய மனிதர்களாக்கியது.
இவர்களை இவ்வாறு ஆக்கியதற்கு அடிப்படைக் காரணமாக இவர்களின் பிறப்பினையே நாம் கருதமுடிகிறது. துரியோதனன் மதங்கக் கர்ப்பத்திலிருந்து பிறந்தவன். துரோணர் குலமுறைப் பிறழ்வுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்தவர். கர்ணன் தெய்வத்தால் உண்டான கர்ப்பத்திலிருந்து உதித்தவன். இவர்கள் அவமானப்படுவது இவர்களின் பிறப்பினாலேயேதான்.
துரியோதனன் யானைக்கு நிகரான வலிமையுடன் திகழ்வதாலேயே தன்னுடைய வலிமைக்குச் சிறிதளவு இழுக்கு ஏற்படும்போதும் அவன் தன்னுள்ளேயே பொங்கிக் கொந்தளித்துச் சரிகிறான்.
துரோணர் அதீத திறனிருந்தும் தன்னுடைய குலமுறைப் பிறழ்வாலேயே எல்லா இடத்திலும் சரிக்கப்படுகிறார். அதன் பின்விளைவாக அவரின் ஆசைகள் விரிந்து வரிந்து பேராசைகளாக மாறிவிடுகின்றன.
கர்ணன் தன்னுடைய தனித்திறமையை நிறுவ முயலும் ஒவ்வொரு இடத்திலும் பிறப்பு குறித்து பழிக்கப்பட்டே எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறான். புறக்கணிப்பின் வலியே அவனுக்கு மேலும் மேலும் வலிமையை வாரி வழங்குகிறது.
இவர்கள் மூவரும் தாங்கள் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்முடைய ஆன்மாவைப் பற்றிக்கொண்டு, தம்மை முழுவதுமாகவே புதுப்பித்துக் கொள்கிறார்கள். துரோணரும் கர்ணரும் தம்முடைய வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ள நேர்கிறது. துரியோதனனோ பரந்து விரிந்த அஸ்தினபுரியில் வாழ்ந்தாலும் தன்னுள்ளேயே சிறைப்படுகிறான்.
துரோணர் தன் மகன் அஸ்வத்தாமனுக்கும் தன்னுடைய முதன்மையான மாணவன் அர்சுணனுக்கும் ஏற்பட்ட பிணக்கினைச் சீர்செய்ய இயலாமல் திண்டாடும் தருணத்தில்தான் கர்ணன் அவரிடம் வந்து சேர்கிறான். தன் மகனுக்குத் துணையாகவும் அர்சுணனுக்கு இணையாகவும் அவரால் கர்ணனை மட்டுமே வைக்க முடிகிறது. துரோணருக்கும் கர்ணனுக்கும் இடையில் ஒருவித மனப்பிணைப்பு ஏற்படக் காரணம் ‘இருவருமே பிறப்புசார்ந்து பிறரால் புறக்கணிக்கப்படுபவர்கள்’ என்பதே!. இருவருமே தங்களின் வாழ்வில் பல்வேறு தருணங்களில் அவமானப்பட்டவர்கள் என்பதையும் நாம் இங்குக் குறிப்பிட்டுக் கூறலாம்.
‘அவமதிப்பு’ குறித்து, துரோணர் கர்ணனிடம் எழுப்பும் வினாக்கள் மிக முக்கியமானவை. துரோணர் கர்ணனிடம் “அந்த அவமதிப்பில் இருந்து நீ வில்வேதத்தால் மீளமுடியுமா என்ன? நான்குவேதங்களையும் கற்றாலும் இவ்வுலகையே வென்றாலும் அந்த அவமதிப்பின் நாற்றம் உன் ஆன்மாவிலிருந்து நீங்குமா?” என்று கேட்கிறார்.
‘அவமானமே’ ஒருவரின் ஆன்மாவை அசைக்க வல்ல பேராயுதம். அந்த ஆயுதத்தைத்தான் ‘ஊழ்’ தன் கையில் எடுத்து, துரியோதனன், துரோணர், கர்ணன் ஆகிய இந்த மூவரையும் தாக்கியுள்ளது. ஊழால் தாக்கப்பட்ட இந்த மூவரும் அடிபட்ட புலிபோலவே தன்னுள் தானே போரிட்டு, தன்னைத்தானே வென்று, நிமிர்வுகொள்கின்றனர். அந்த நிமிர்வு இவர்களிடமிருந்து பெருஞ்சினமாக வெளிப்படுகிறது.
இந்த மூவரின் பெருஞ்சினத்தால்தான் ஒட்டுமொத்த மகாபாரதமும் விரிவும் ஆழமும் கொள்கிறது. ‘ஊழ்’ இவர்கள் வெளிப்படுத்தும் பெருஞ்சினத்தைக் கொண்டே ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் உருவாக்கிவிட்டது எனலாம். இந்த மூன்று பெரும்புள்ளிகளுள் யாரேனும் ஒருவர் வலுப்பெறாமல் இருந்திருந்தாலும்கூட ‘மகாபாரதம்’ இத்தனை வலிமையுடையதாக இருந்திருக்க முடியாதுதான்.
பீமசேனன் காட்டிலும் துரியோதனன் நாட்டிலும் அரக்கர்களைப் போலவே நடந்து கொள்கின்றனர். இருவருமே தம் அன்னை அஞ்சும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சுவதில்லை. ஆனால், இருவருமே ‘தமக்கான இணை எதிரிகள் தாமே’ என்பதைக் கண்டுகொண்டவுடன், ஒருவரையொருவர் மோதி, சரிந்து, ‘இருவருமே சமமான அளவு வலிமையுடையவர்களே!’ என்பதைத் தங்களுக்குள் நிறுவி, தங்களின் ஆழ்மனம் அதை ஒப்புக்கொண்ட பின்னர், இணைபிரியாத நண்பர்களாகி விடுகின்றனர்.
ஒருகட்டத்தில் பீமசேனனும் துரியோதனனும் நகுலன், சகாதேவன் போலவே இரட்டைப் பிள்ளைகளாகவே மாறி விடுகின்றனர். ஒரே காந்தத்துண்டின் எதிரெதிர்த் துருவங்கள் போல அவர்கள் இருக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இரண்டு துருவங்களாகத் தெரியும். ஆனால், அந்தக் காந்தத்துண்டைப் பொருத்தவரை அது ஒரே காந்தத்தின் இரண்டு முனைகள் மட்டுமே. இளமையில் பகையும் நட்பும் நீட்டிப்பதில்லைதான். காலத்தின் முன் அது அலுங்கும்போது மட்டுமே, மெல்ல நழுவும்போது மட்டுமே அது நட்பாகவோ அல்லது பகையாகவோ தனித்து நிலைத்து, நீட்டிக்கும்.
கானாடுதலின்போது அன்னைக் கரடி துரியோதனனைத் தாக்குகிறது. பீமசேனன் துரியோதனனைக் காப்பாற்றுகிறான். பீமசேனனின் இந்தச் செயலால் தான் தன் தம்பியர்களின் முன்னால் தான் வலுவிழந்தவனாக உணர்ந்த துரியோதனன் கடும்சினம் கொள்கிறான். தன்னுடைய உடல்வலு அவமானப்படுத்தப்பட்டதாகவே அவன் கருதுகிறான். அந்த அவமானத்தால் அவனுள் பொங்கிய சினம்தான் பீமசேனனைக் கொல்லத் தூண்டுகிறது. அதற்கு முயற்சி செய்கிறான்.
இந்த நிகழ்வுக்கு முன்பாகவே துரியோதனனும் துச்சாதனனும் மதம் ஏறிய ‘சியாமன்’ என்ற யானையைத் தேடிச் செல்கின்றனர். அவர்களுடன் யானைப் பாகர்களும் வீரர்களும் இருக்கின்றனர். துரியோதனனையும் துச்சாதனனையும் அந்த யானையில் உறைந்திருந்த தெய்வம் துரியோதனனைத் தாக்கத் தொடங்குகிறது. அப்போது துச்சாதனன் துரியோதனனைக் காக்கிறான். பின்னர் துரியோதனன் அந்த யானையுடன் தனித்துச் சண்டையிட்டு, அதனை அடக்குகிறான்.
தன்னைத் துச்சாதனன் காப்பாற்றியதற்காகவோ அல்லது தான் யானையுடன் தனித்துச் சண்டையிடுவதைத் தடுக்கும் விதமாகத் துச்சாதனன் குறுக்கே வந்துவிட்டான் என்றோ துரியோதனன் துச்சாதனன் மீது துளியும் சினம்கொள்ளவில்லை. துச்சாதனன் தன்னைத் தன்னுடைய வீரர்கள், யானைப் பாகர்கள் ஆகியோரின் முன்பாகக் காப்பாற்றியதால், வலுவிழந்தவனாகத் தன்னைத் துரியோதனன் உணரவும் இல்லை, தன்னுடைய உடல்வலு அவமானப்படுத்தப்பட்டதாகவும் கருதவும் இல்லை. ஆனால், கானாடுதலின் போது கரடியிடமிருந்து தன்னைப் பீமசேனன் காப்பாற்றியதற்காகத் துரியோதனன் கடும் சினம் கொள்ளக் காரணம் என்ன? இதற்கு விடை ‘ஊழ்’ என்பது தானோ?
துரியோதனனைப் பொருத்தவரை துச்சாதனன் அவனுக்கு நிழல்தான். தன் நிழலை யாரும் வெறுக்க மாட்டார்கள். அதனைத் தன்னிலிருந்து பிரித்து நோக்கவும் விரும்ப மாட்டார்கள். தன் தாய் காந்தாரியின் ஆணையின்படிதான் துச்சாதனன் தன் அண்ணன் துரியோதனனை நிழல் போலத் தொடர்கிறான் என்றும் கொள்ளலாம்.
துரியோதனனைப் பொறுத்தவரை பீமசேனன் அவனுக்கு ஆடிப்பாவை. தான் நிஜம் என்பதால் ஆடியில் தெரியும் தன் உருவான பீமசேனன் அவனுக்கு வெற்றுருதான், மாயைதான். ‘தன்னுடைய வெற்றுருவா தன்னைக் காப்பாற்றுவது?’ என்று கூடத் துரியோதனன் இறுமாப்பு அடைந்திருக்கக் கூடும். அதன் இறுமாப்புதான் அவனுக்குள் அவமானத்தை உணரச் செய்து, அவனைச் சினங்கொள்ள வைத்து, பீமசேனன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தூண்டியிருக்கிறது.
ஆனால், அந்தத் தாக்குதலைத் துச்சாதனன்தான் முதலில் தொடங்குகிறான். அதுவும் துரியோதனன் அறியாத வகையில். ‘துச்சாதனன் நாகநச்சினை உணவில் கலந்து பீமசேனனுக்கு அளித்தமை துரியோதனனுக்குத் தெரியாது’ என்றுதான் இந்த நாவலில் காட்டப்பட்டுள்ளது.
தெரிந்திருந்தால், ஒருவேளை துரியோதனன் துச்சாதனனின் மீது சினம்கொள்ளவும் கூடும். ‘தன் எதிரியைத் தன் தம்பி கொல்வதால் தன்னுடைய வலிமை வெளிப்படாமல் போக வாய்ப்புள்ளதே!’ என்றோ அல்லது ‘தன்னுடைய எதிரியைத் தன்னால் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சிசெய்து வீழ்த்த நேர்ந்ததே!’ என்றோ கருதி துரியோதனன் துச்சாதனனை வெறுக்க நேர்ந்திருக்கும்.
ஆனால், துச்சாதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அஸ்தினபுரியில் படைக்கலப்பயிற்சிக்குக் களம் அமைக்கின்றனர். ‘பீமசேனனும் துரியோதனனும் கதாயுதச் சண்டையிடுவார்கள்’ என்றுதான் அனைவருமே எதிர்பார்க்கின்றனர். தன்னைச் சந்திக்க வந்த துரியோதனனிடம் துச்சாதனனிடமும் சகுனி பீமசேனனின் வீரத்தை உயர்த்தியும் துரியோதனனின் வீரத்தைத் தாழ்த்தியும் பேசுகிறார். துரியோதனன் சினமடைந்து அங்கிருந்து செல்கிறான். சகுனி, துச்சாதனனிடம் ‘துரியோதனனுக்குச் சினம் ஏற்பட்டால்தான் அவனால் பீமசேனனை வெற்றிகொள்ள முடியும்’ என்கிறார்.
துரியோதனனின் மனத்தை முழுவதும் அறிந்தவர் சகுனி. அதனால்தான் துரியோதனனை அவமானப்படுத்துகிறார். அந்த அவமானமே அவனுள் பெருவலிமையைத் திரளச்செய்யும் என்று நினைக்கிறார். சகுனி தன்னை அவமானப்படுத்தியதை நினைத்து நினைத்து துரியோதனன் தொடர்ந்து பயிற்சி செய்கிறான். இரவில் துயிலாமல் தவிக்கிறான். பீமசேனன் மீது அவனுக்குத் தீராச் சினம் ஏற்படுகிறது.
பொழுது விடிந்தபோது துரியோதனன் பேராற்றல் கொண்டவனாக உருவெடுத்து, படைக்கலப்பயிற்சிக் களத்துக்குத் தன் கதாயுதத்துடன் செல்கிறான். அங்குக் கிருபர் பீமசேனனுடன் கதாயுதச் சண்டையிட துச்சாதனனை அழைக்கிறார். அதுவே, துரியோதனனுக்கு ஏமாற்றமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.
வேறுவழியின்றித் தன்னுடைய கதாயுதத்தைத் துச்சாதனனிடம் தருகிறான். அதைக் கொண்டு பீமசேனனனை எதிர்கொள்ளும் துச்சாதனன் முதல்தாக்குதலையே கொலைவெறியுடன் தொடங்குகிறான். அதைப் பீமசேனன் உணர்கிறான். அந்தச் சண்டையில் பீமசேனன் எளிதாக வெற்றி பெறுகிறான். ஒருவேளை அந்தச் சண்டையில் துச்சாதனன் பீமசேனனை வென்றிருந்தால் துரியோதனன் துச்சாதனனை வெறுத்திருப்பான் என்றுதான்படுகிறது. தனக்கு இணையான எதிரியெனப் பீமசேனனையே நினைத்திருந்த துரியோதனனுக்கு அது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கும். அதனால், அவன் துச்சாதனனைச் சினந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
எழுத்தாளர் ஜெயமோகன் மற்ற இரண்டு நாவல்களைவிட (முதற்கனல், மழைப்பாடல்) இந்த நாவலில்தான் கதைநிகழ்வுகளைப் பெரும் பாய்ச்சலுடன் கொண்டு சென்றுள்ளார். அந்தப் பாய்ச்சலுக்கு இடைப்பட்ட வெற்றிடங்களை ‘இளநாகன்’ என்ற சூதனின் பயணத்தைக் கொண்டு நிரப்பியுள்ளார்.
இளநாகன் இந்தியாவின் அதிதென்முனையிலிருந்து அஸ்தினபுரி வரை பயணிக்கிறான். அனைத்து நாட்டு அரசுகள் சார்ந்த அனைத்துத் தகவல்களும் சூதர்களின் வாழ்வு வழியாக எவ்விதமாக பலநாடுகளைக் கடந்தும் பரப்பப்படுகின்றன எனபதை நாம் இளநாகனின் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சூதர்களின் சொற்களைக்கொண்டு தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் பார்த்தால், சூதர்களின் சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் நாம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து அறிந்துவருகிறோம் என்ற உண்மை புலப்படுகிறது.
இளநாகனின் பயணத்தின் வழியாகப் பாரதவர்ஷத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் எழுத்தாளர் ஜெயமோகன் நம் கண்முன் கொண்டுவருகிறார். காரணம், இந்த ‘பாரதவர்ஷப் பொதுக்குடிகளின் மனத்தில் அஸ்தினபுரி எத்தகைய இடத்தில் உள்ளது?’ என்பதை நமக்குக் காட்டுவதற்காகத்தான்.
நாம் இந்தியாவின் அதிதென்முனையில் இருந்த, இருக்கும் நகரங்களைப் பற்றியும் ஆறுகள், மலைகள் ஆகியன குறித்தும் சங்க இலக்கிய வரிகளிலிருந்து சிறிதளவு தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை ஆகிய நூல்களின் வழியாக. சிலப்பதிகாரம் கடலாடுகாதையில் மேலும் சில குறிப்புகளைக் கண்டடைய முடிகிறது.
அவற்றின் வழியாக இவற்றை அறிந்தவர்களுக்கு இந்த ‘வண்ணக்கடல்’ நாவல் பெருங்களிப்புணர்வை ஏற்படுத்தும். அக்காலப் பெருவழிச்சாலைகளில், அக்காலப் பெருவணிகக் குழுக்களுடன் (வணிகச் சாத்துகளுடன்) நம்மைப் பயணிக்க வைக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இந்த மகாபாரதத்துக்கும் இந்த நாவலில் இடம்பெற்றுள்ள இளநாகனுக்கும் என்ன தொடர்பு? அவன் தையல்ஊசிபோலவே பாரதவர்ஷத்தின் பாதைகளில் ஊடாடிச் சென்று அஸ்தினபுரியை நெருங்குகிறான். அவன் சென்ற பாதை தையல்ஊசியால் பின்னிப்பிணைக்கப்பட்ட நூல்போல நமது மனத்தில் ஒட்டிக்கொள்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் தன் வாசகர்களை நேரடியாக அஸ்தினபுரிக்கு அழைத்துச் செல்ல விரும்பாமல், அவர்களைத் தன் சொற்பல்லக்கில் ஏற்றி, பாரதவர்ஷத்தின் பலவண்ணப் பெருநிலங்களில், அவற்றின் ஊடுபாதைகளின் வழியாகவே தூக்கிச் சென்று அஸ்தினபுரியை நெருங்குகிறார்.
ஒட்டுமொத்தத்தில் ‘வண்ணக்கடல்’ நாவல், பாரதவர்ஷத்தின் பல வண்ணம் கொண்ட நிலப்பரப்பைச் சொற்களில் ஏந்தி, அலையாடும் பெருங்கடல்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
March 7, 2021
தீற்றல் [சிறுகதை]
”வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?” என்று ஒரு மலையாளப்பாட்டு. அவ்வளவு பழைய பாட்டெல்லாம் இல்லை. பழைய கவிஞர் எழுதியிருக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் பெண்கள் கண்ணில் மையெழுதுவது குறைவு. மையிட்டுக்கொண்டால்கூட இமைகளை இழுத்து அதன் விளிம்புகளில் கொஞ்சமாக தீற்றிக்கொள்கிறார்கள். கண்ணை கொஞ்சம் துலக்கிக் காட்டும், அவ்வளவுதான். புருவத்திலும் கொஞ்சமாக மைதீற்றிக் கொள்கிறார்கள். வாலிட்டு கண்ணெழுதுவது அக்கால வழக்கம்.
அன்றெல்லாம் புருவத்துக்கு நல்ல பட்டையாக பெரிதாக மையிடுவார்கள். வில்போலிருக்கவேண்டும் புருவங்கள் என்று கணக்கு. மேலிமையின் மயிர்க்கால்களில் மையிட்டு நீவுவார்கள். கீழிமைகளில் நன்றாக இறக்கி அழுத்தமாக மையிட்டு கொண்டு சென்று கண்களின் இருமுனைகளையும் அடைந்தபின் அப்படியே நீட்டி மேல்நோக்கி வளைத்து விட்டிருப்பார்கள். அதுதான் வால்.
கண்கள் மீன் என்றால் அந்த மீனின் துள்ளும் வால் அது. இரண்டு கரிய சிறு கோடுகள்தான். நகவளைவு என்று சொல்லவேண்டும். ஆனால் அவை கண்களை கூர்மையாக ஆக்கிவிடும். இரண்டு வேல்முனைகள் போல. ஆனால் மென்மையே கூர்மையாக ஆனவை.
பத்திரிகையில் பெரிய சரோஜாதேவியின் படம். வாலிட்டு எழுதிய நீலக்கருங்கண். நான் அமுதாவிடம் காட்டினேன். “பார்டி, இதான் அந்தக்காலத்து கண் எழுதுற ஸ்டைல்.”
அவள் வாயைப்பொத்தி “அய்யே” என்றாள்.
“ஏண்டி?” என்றேன்.
“இது என்ன வரைஞ்சு வச்ச மாதிரி இருக்கு?”
”வரையறதுதான்… இதான் அப்ப பேஷன். கண்ணு எழுதுறதுன்னு சொல்லுவாங்க.”
அகிலா சமையலறையில் இருந்தவாறு “இப்பல்லாம் பொண்ணுக பரீட்சைகள் எழுதுதுங்க. அப்பல்லாம் கண்ணு எழுதுறதோட சரி” என்றாள்.
அமுதா வாயைப்பொத்தி சிரித்தாள்.
“என்ன சிரிப்பு?” என்றேன்.
“ஒண்ணுமில்லை.”
”ஒரு தலைமுறைக்கு ஃபேஷனா இருக்கிறது இன்னொரு தலைமுறைக்கு சிரிப்பாத்தான் இருக்கும். இப்ப நீ போட்டிருக்கிற சட்டைய பாத்து உன் பேத்திகள் ஒரு காலத்திலே சிரிப்பாளுக.”
”இல்ல தாத்தா, நான் ஜஸ்ட் ஸ்மைல் பண்ணினேன். கிண்டல் பண்ணலை.”
”கண் எழுதுறது எவ்ளவு கஷ்டம்தெரியுமா? எப்பவுமே நீளவெரலிலேதான் மையை எடுப்பாங்க.”
“ஏன்?”
”ஆள்காட்டிவிரல் பொதுவா கொஞ்சம் காய்ச்சுப்போய் மரமரன்னு இருக்கும்.”
“ஓக்கே.”
“மையை விரலிலே எடுத்திட்டு இமையை அப்டியே இழுத்து மென்மையா கையாலே நீவி பூசிக்கிடணும்… இமையிலே மை படணும், கண்ணுலே பட்டிரக்கூடாது. கையாலே போட்டாத்தான் அப்டி பதமா போட முடியும். போடுறவங்களோட கைக்குத்தான் அது தெரியும். கண்ணுக்கும் கைக்கும் அப்டி ஒரு இசைவு வேணும்.”
”ஆமா” என்றாள்
“அப்றம் அந்த வால். அதை வரைஞ்சா அசிங்கமா கோடு மாதிரி இருக்கும். அப்டியே நீட்டிக் கொண்டுபோயி இழுத்து தீத்தி விட்டிரணும். அலட்சியமா ஒரே செகண்டிலே தீத்திக்கிடணும். இமையிலே மை எழுதின கையை எடுக்காம அப்டியே ஒரு தீற்றல்… அவ்ளவுதான். கொஞ்சம் யோசிச்சு, கவனம் வச்சு தீத்தினாலும் சரியா இருக்காது.”
”ஓவியம் வரையற மாதிரி இருக்கே.”
“ஓவியத்தை யாராவது இப்டி வரைவாங்களா? எப்பவுமே சின்னப்பொண்ணுகள்தான் வெடுக்வெடுக்னு பேசும். துள்ளிட்டே அலையும். அந்த வயசிலே அதுக அலட்சியமா சர்னு வால்போட்டு வரைஞ்சிரும். சரியா அப்டியே அமைஞ்சிரும். அதுகளுக்கே கொஞ்சம் வயசாக ஆக கையிலே அந்த அலட்சியம் போயிரும். ஏன்னா மனசிலே அந்த துள்ளல் போயிருக்கும். அவங்க பாத்து வரைவாங்க. அது எப்டி வரைஞ்சாலும் நல்லா இருக்காது… சொல்லப்போனா கன்னிவயசிலே வால்போட்டு கண்ணெழுதினாத்தான் நல்லாருக்கும். அப்றம் யாருக்கானாலும் அமையவே அமையாது. அந்த வால்கிறதே கன்னிவயசோட ஒரு அடையாளம். எ சிக்னேச்சர் ஆஃப் வெர்ஜின் ப்யூரிடி.”
“பாட்டியும் இதே மாதிரி கண்ணு எழுதியிருக்காளா தாத்தா?” என்றாள்.
“அந்தக்கால ஸ்டைல் இல்ல அது?”
“சொல்லுங்க, பாட்டி இதேமாதிரி கண்ணு வரைஞ்சு நீட்டியிருப்பாங்களா? பழைய போட்டோ இருக்கா? அம்மா, பாட்டி போட்டோ இருக்கா?” என்றாள் அமுதா.
நான் “உன் பாட்டி அப்டி எல்லாம் கண்ணு வரைய முடியாது. அவங்க வீட்டிலே அவ பாட்டி இருந்தா. சின்னவயசிலேயே விதவையானவ. சரியான ஆசாரம். பூபோட்ட புடவை கட்டுறதே ஆசாரவிரோதம்னு சொல்லி சத்தம்போடுறவ. கண்மை பௌடர் ஒண்ணும் கெடையாது” என்றேன்
“லிப்ஸ்டிக்?”
“உண்டு, அதை தாம்பூலம்னு சொல்லுவோம்” என்றேன்.
“பௌடர்கூட கிடையாதா?” என்றாள் அமுதா.
“எங்க வீட்டுக்கு வந்த பிறகு பௌடர் போடுவா. ரகசியமா எங்க ரூமிலே வச்சுக்கிடுவா. பௌடர் போட்டு அதை நல்லா துணியாலே துடைச்சுகிட்டுதான் வெளியே போகணும்… எங்கம்மா அதுக்குமேலே ஆசாரம். எங்கம்மாவும் சின்னவயசிலேயே விதவை ஆனவ”
“அப்பல்லாம் விதவைன்னா ரொம்ப ஆசாரம் இல்லை?”
”ஆசாரமா இருக்கிறது ஒரு பாதுகாப்பு வழிமுறை. எந்த அளவுக்கு ஆசாரமா இருக்காங்களோ அந்த அளவுக்கு மரியாதை இருக்கும். கொஞ்சம் ஆசாரம் தவறினாலும் பழிச்சுப் பேச ஆரம்பிச்சிருவாங்கள்ல?’
“அப்டியா?” என்றாள் அமுதா.
அகிலா உள்ளே இருந்து “அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆசாரத்தை வைச்சு எங்களை அடக்கினீங்க இல்ல, அதே ஆசாரத்தை வைச்சு உங்களை படுத்தி எடுக்கிறோம்னு ஒரு வீம்பு, அவ்ளவுதான்” என்றாள்.
“பாட்டி வால்போட்டு கண்ணு வரையறதில்லையா?”
“இல்லை.”
“வரையச் சொன்னீங்களா? ரூமிலே பௌடர் போட்டுக்கிடறப்ப?”
”ரெண்டுவாட்டி வரைஞ்சுபாத்தா. சரியா வரலே.”
“சரி, அப்ப யாரு வரைவாங்க?”
“அந்தக்கால பெண்கள்” என்றேன்.
“ஸே, அந்தக்காலப் பெண்களிலே யாரு?”
“எல்லாரும்தாண்டி… என்ன கேக்கிறே நீ?”
“எல்லாரும் வரைஞ்சா நீங்க இவ்ளவுநாள் அதை நினைச்சிட்டிருக்க மாட்டீங்க.”
“அது கேள்வி… சரியான கேள்வி” என்றாள் அகிலா.
நான் சிரித்து “சினிமா பாத்து கெட்டுப்போயிருக்கே” என்றேன்.
“சொல்லுங்க” என்றாள்.
“அப்டி தனியா யாரும் இல்லைடி… சின்ன வயசிலே பாக்கிறதுதான்… அப்ப பாக்க நல்லாருக்கும்.”
“இதுவா? இதுவா பாக்க நல்லாருக்கும்? பரதநாட்டியம் ஆடுறவங்க மேக்கப் போட்டுக்கிடற மாதிரி இருக்கு.”
“இப்ப பரதநாட்டியம் ஆடுறவங்க எதுக்காக இப்டி கண்ணை வரைஞ்சுகிடறாங்க?”
“ஆடியன்ஸுக்கு முகபாவங்கள் தெரியணும்ங்கிறதுக்காக”
“அதேதான் அப்ப. இப்ப பரதநாட்டியம் ஆடுறவ ஸ்டேஜ்லே நிக்கிறா. ஆடியன்ஸ் இருக்கிறது அம்பதடி நூறடி தள்ளி. அவங்க அவளோட முகபாவங்களை பாக்கணும்னா கண்ணை பெரிசா எழுதணும். பரதநாட்டியத்திலே பெரும்பாலான உணர்ச்சிகளை கண்வழியாத்தான் காட்டணும். அதுக்கு கண்ணு நல்ல துலக்கமா தெரிஞ்சாகணும்…”
“ஆமா” என்றாள் அமுதா.
“அதேதான் அப்ப. அப்பல்லாம் பெண்களை ஆண்கள் ரொம்ப தூரத்திலேதான் பாக்கமுடியும்…. தெருவிலே போறப்ப ஜன்னலிலே பாக்கலாம். இல்லே வண்டியிலே போறப்ப பாக்கலாம். கோயிலிலே பாக்கணும்னா அங்கே பொம்புளைங்க ஏரியாவே வேற. ஆம்புளைங்க ரொம்ப தள்ளி நின்னு பாக்கணும்… எதுவா இருந்தாலும் ஒரு செகண்ட் பார்வைதான். பாக்கிறதை யாரும் பாத்திரக்கூடாது. மீன் துள்ளுறது மாதிரித்தான் கண்ணு ஒரு செகண்ட் மின்னி அப்டியே மறைஞ்சிரும். ஒரு செகண்டிலே அந்தக் கண்ணாலே என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லமுடியும். அதைத்தான் புரிஞ்சுகிடமுடியும். அப்ப உள்ள பொண்ணுகளுக்கு பாஷைன்னாலே கண்ணோட அசைவுதான்.”
“க்யூரியஸ்” என்று அமுதா சொன்னாள் “அம்மா கேட்டியா, தாத்தா என்ன சொல்றார்னு?”
”யாரைப்பத்தியோ சொல்லிட்டு வர்ரார்.”
“ஆமா, ஐ திங் ஸோ.”
“இல்லடி, நான் பொதுவாச் சொன்னேன்.”
“சரி அப்டியே ,பொதுவாகவே சொல்லிட்டு வாங்க… அப்றம்?”
“அப்றம் என்ன அப்றம்? அதுக்காகத்தான் கண்மை போட்டுக்கிடறது, வாலுபோட்டு நீட்டுறது. அதைத்தான் சொல்லிட்டிருந்தேன்.”
”சொல்லுங்க.”
“என்னத்தைச் சொல்ல?”
“எ ஸ்டோரி… எ க்யூட் லவ் ஸ்டோரி… இல்லேன்னா ஒரு சோகமான கதை. எ ரியல்லி மெலென்கொலி ஸ்டோரி.”
“அப்டி எல்லாம் ஒண்ணுமில்லை.”
“எதையாவது இமேஜின் பண்ணி சொல்லுங்க, கேக்கற மூடுக்கு வந்திட்டோம்ல?”
“அப்ப ஒரு கதை சொல்றேன், மௌனி கதை. மௌனின்னு ஒரு ரைட்டர் அந்தக்காலத்திலே இருந்தார். அவர் எழுதினது.”
“ஓக்கே.”
“ஸ்டோரின்னு சொல்ல முடியாது. ஒரு எக்ஸ்பீரியன்ஸ். அல்லது ஒரு ஃபேண்டஸின்னு வைச்சுக்கோ. இதெல்லாம் அந்தக்காலத்திலேதான் சாத்தியம். ஆணும் பெண்ணும் பேசிக்கவே முடியாத காலத்திலே.”
“ஓக்கே.”
“ஒருத்தன் மனசுக்குள்ளே பேசிட்டே இருக்கிறவன். ஒரு சாஃப்டான லவ்வர் பாய். அவன் ஒருநாள் ஒரு கல்யாணத்திலே ஒரு பெண்ணைப்பார்க்கிறான். அவ இந்தமாதிரிதான் வால்போட்டு கண் எழுதியிருக்கா. பெரிய கண். அவன் ரொம்ப தூரத்திலே இருந்து அவளை பாக்கிறான். அவளோட கண்ணிலே ஏன் அப்டீங்கிற ஒரு கேள்வி இருக்கிறதா அவனுக்கு தோணுது. அந்த கேள்வி ஏன்னு அவனுக்கு புரியலை. அது அவனா கற்பனை பண்ணிக்கிட்டதான்னும் தெரியல்லை. ஆனா அந்தக் கேள்வியிலே இருந்து அவனாலே வெளியே போகவே முடியலை. அவ ஏன் அப்டி பாக்கிறா? ஏன் அவ முகத்திலே அப்டி ஒரு துக்கம்? அந்த துக்கத்தாலேதான் அந்த கேள்வியா, அல்லது அந்த கேள்விதான் அப்டி துக்கமா ஆயிட்டுதா?”
அமுதாவின் கண்கள் மாறிவிட்டன.
“அப்றம் ஒருநாள் அவனுக்கு ஒரு செய்தி கிடைக்குது. அவளுக்கு ஹார்ட்லே நோய் இருக்கு. அவ ஒரு சங்கீதக்காரி. ஆனா பாடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிடறாங்க. அதான் அந்த துக்கமா, அந்த ’ஏன்’ங்கிறது அதனாலேதானான்னு நினைச்சுக்கிடறான். இன்னொருநாள் ஒரு கல்யாணம் மாதிரி ஒரு விருந்து. யாரோ பாடிட்டிருக்காங்க. யார் பாடுறதுன்னு இவன் எட்டிப்பார்க்கிறான். அவதான் பாடிட்டிருக்கா. யாரோ அவளை பாடச்சொல்லிட்டாங்க. அவ பாடுறப்பவும் கண்களிலே ஏன் அப்டீங்கிற கேள்விதான் இருக்கு. ஏன் ஏன் ஏன்னு பாடுற மாதிரி இருக்கு. அப்றம் சட்டுன்னு விழுந்திடறா. எல்லாரும் பரபரப்பா சத்தம் போடுறாங்க. அவ பாதிப்பாட்டிலே அப்டியே செத்துப்போயிடறா.”
“ஹார்ட் ஃபெய்லியரா?”
“ஆமா. அவ செத்து கிடக்கிறா. அவ முகத்திலே ஏன் அப்டீங்கிற பாவனை அப்டியே இருக்கு… “
“அவ்ளவுதானா?”
“அவ்ளவுதான் மௌனி எழுதினது. பிரபஞ்சகானம்னு நினைக்கிறேன். இல்ல அழியாச்சுடரா, சரியா ஞாபகமில்லை. அந்தக்காலத்திலே படிச்ச கதை.”
“ஸோ ஆர்ட்டிஃபிஷியல். மெலோட்டிராமாக்குன்னே உருவாக்கின மாதிரி இருக்கு”
“இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கதையெல்லாம் வந்ததே அந்தக்காலத்திலே வாயாலே பேசிக்கிட முடியாதுங்கிறதனாலேதான். கண் பேசுறதெல்லாம் மௌனத்தோட பாஷைதானே? அதோட அர்த்தமெல்லாம் அதை வாங்கிக்கிறவன் கிட்டே இருக்கு. ஒரு சின்ன பாவனை, அப்டியே வாழ்க்கை முழுக்க என்னென்னமோ சொல்லிட்டு இருக்கும்.”
“ஃபன்னி” என்றாள்.
“என் ஃப்ரண்டு ஒருத்தன் இப்டித்தான் ஒரு அனுபவம் சொன்னான். அவன் மதுரையிலே படிச்சிட்டிருந்தான். ஒரு மாடியிலே அவனும் இன்னொரு ஃப்ரண்டுமா ரூம் போட்டிருந்தாங்க. நேர் கீழே ஒரு வீடு. அதிலே ஒரு தாசில்தார் ஆபீஸ் கிளார்க்கோட குடும்பம் இருந்தது.”
“அதிலே ஒரு பொண்ணு.”
“எஸ்…ஒரு பொண்ணு.”
“அழகா?”
“அழகான்னா? தெரியல்லை. அவனுக்கு அவ அழகா தெரிஞ்சிருக்கா. அவ எட்டாம் கிளாசோட படிப்பை நிறுத்திட்டு வீட்டிலே இருந்தா. வீட்டிலே எந்நேரமும் சிலோன் ரேடியோ பாடிட்டிருக்கும். அந்தக்காலப் பெண்கள் சிலோன் ரேடியோவாலேதான் வாழ்ந்தாங்க. பாட்டுபாட்டு அதுதான் வாழ்க்கையே. கே.எஸ்.ராஜான்னு ஒருத்தர். அவரோட குரல்தான் அவங்களுக்கு எல்லாமே. ஏன்னா வீடு ஒரு ஜெயில்மாதிரி… படிப்பை நிப்பாட்டி பத்துவருசம் வீட்டுக்குள்ளே இருக்கணும். அது ஒரு ஆயுள்தண்டனை… ”
நான் சொன்னேன் ”அவ வீட்டிலே அவளை வெளியேவே விடுறதில்லை. கன்னிப்பொண் சினிமா பாக்கிறதெல்லாம் அப்ப நினைச்சே பாக்கமுடியாது. எப்பவாவது யாராவது சின்ன வியாபாரி முன்னாடி வந்து சத்தம்போடுறப்ப வீட்டிலே அவ அம்மா கைவேலையா இருந்தா இவ சட்டுன்னு வெளியே வந்து வாங்கிட்டு போவா. மின்னல் மாதிரி தெரிஞ்சு மறைஞ்சிருவா. ஆனா அதுக்காக மாடி வராந்தாவிலே தவம் கெடக்கணும்…”
“உங்க ஃப்ரண்டு தவம் கிடப்பாரோ?”
“இல்லல்ல. அவனுக்கு அவமேலே அப்டி எல்லாம் ஒரு மோகம் கிடையாது. அடிக்கடி கண்ணிலே படாததனாலே ஒரு ஆர்வம். கண்ணிலே படுறப்ப ஒரு சின்ன அதிர்ச்சி. அந்தமாதிரித்தான்… அப்பப்ப நைட்லே அவ ஞாபகம் வரும். மத்தபடி ஒண்ணுமில்லை. அப்ப எல்லா பெண்ணுமே அந்த அதிர்ச்சியை குடுத்தா… இப்ப நீ ஒரு குளத்தைப் பாக்கிறே. சட்டுன்னு ஒரு மீன் துள்ளினா அதிர்ச்சியா இருக்கும்ல? அதே மாதிரி. அந்த மீனை சரியாக்கூட பாக்கமாட்டோம். ஒரு ஃப்ளாஷ், அவ்வளவுதான்”
“அவகிட்டே பேசினதே இல்லியா?”
“பேசுறதா? நல்ல கதை. நேரே பாக்கவே முடியாது.”
“ஓ…”
“ஒருவாட்டி அவன் ரோட்டிலே வர்ரப்ப வளையல்சத்தம் கேட்டுது. அவன் நிமிர்ந்து பாத்தா அவ கீரைக்காரிக்கிட்டே கீரை வாங்கிட்டு உள்ளே போனா. அவ பார்வை வந்து அவன் பார்வையை ஒரு செகண்ட் தொட்டுட்டுப் போச்சு. அப்பதான் அவ வால்போட்டு கண் எழுதியிருக்கிறது அவனுக்கு தெரிஞ்சுது. அவ கண்களிலே கூர்மையா என்னமோ இருந்தது. அவ என்னமோ சொல்ல வர்ரதுபோல. வால்போட்டு கண்ணெழுதினாலே அப்டி ஒரு கூர்மை வந்திரும். ஒரு விஷயத்தை எந்த அளவுக்கு சுருக்கமாச் சொல்றோமோ அந்த அளவுக்கு அது கூர்மையா ஆயிடுது. வார்த்தையே இல்லாம ஒரு கண்ஜாடையாலே சொன்னா அது ஒருமாதிரி மந்திரம்போல சக்தியா ஆயிடுது” என்றேன்.
அமுதாவின் விழிகளில் சிரிப்பு மறைந்துவிட்டிருந்தது.
“அவன் மனசு கலைஞ்சு போச்சு. அதோட அடிக்கடி அவளை நினைக்க ஆரம்பிச்சான். ஒரு நோட்டுபுக்கிலே அவ கண்ணை வரைஞ்சு வரைஞ்சு வைப்பான். வால்போட்டு நீட்டி கண் எழுதின கண்கள்.”
“அப்றமாவது பேசினாரா இல்லியா?”
“அதான் சொன்னேனே, பேசவே இல்லை. பேசுறது அந்தக்காலத்திலே அவ்ளவு ஈஸி இல்லை. அவன் அடிக்கடி அந்த வீட்டையே பார்த்திட்டிருந்தான். அப்பப்ப அவ வந்து வந்து மறைவா. அவ புடவையோட நெறம்தான் தெரியும்னு வை. அதுவே ஒரு படபடப்பு மாதிரி வந்திரும்.”
“தென்?”
“அதுக்கப்றம் மீனாட்சி திருக்கல்யாணத்தன்னிக்கு கோயிலிலே அவளை பாத்தான். எதிர்பாராம எதிரே வந்திட்டா. அவளும் அவங்க வீட்டு பொம்புளைங்களுமா. அவன் முதல்லே அவளைத்தான் பாத்தான். அவளோட அந்த சேலையோட அசைவே அவளை காட்டிட்டுது. அவ கையை தூக்கி தாழ்த்தினப்ப வளையலோட சத்தமும் கேட்டுது…”
“அது வேணும்னே கேக்கவைக்கிறது. ஐ நோ” என்றாள் அமுதா, அருகே சற்று நெருங்கி அமர்ந்தபடி.
“இருக்கலாம்… அவன் அவ கண்களை பாத்தான். வால்போட்டு எழுதின கண்ணு. நேருக்குநேர் ஒரு அரைசெகண்ட் தான் பாத்திருப்பான். அவ்ளவுதான். ஒரு மூச்சுக்காத்து வந்து தொட்டுட்டு போன மாதிரி. என்னமோ சொன்னா. அவன் மனசுக்கு அது தெரிஞ்சுது. என்னமோ சொல்லிட்டு போனா. முதல்வாட்டி கூர்மையா வந்து தொட்ட அந்த வார்த்தை. அது இப்ப அப்டியே கனிஞ்சிருந்ததுன்னு தோணிச்சு. அவன் அப்டியே நின்னான். ஆளில்லாத கோயில் பிரகாரத்திலே கல்தூண் பக்கத்திலே எங்க இருக்கோம் என்ன யோசிக்கிறோம்னு தெரியாம பைத்தியம் மாதிரி நின்னிட்டிருந்தான்.”
“அப்றம்.”
“அந்த உருக்கம் அப்டி ஒரு இனிப்பா இருந்ததுன்னு சொல்லுவான். அதை நினைச்சு நினைச்சு அம்பது அறுபது வருசம் ஏங்கியிருக்கான். ரொம்ப நேரம் கோயிலிலே அங்கேயே நின்னுட்டிருந்தான். அப்ப பக்கத்திலே அம்மன் சப்பரம் போச்சு. நாதஸ்வரமும் தவிலுமா சங்கீதம். அவனுக்கு அப்டியே மெய்சிலிர்த்திருச்சு. கைகூப்பி நின்னு கண்ணீர் விட்டான். அழுதுகிட்டு அங்கேயே உக்காந்துட்டான். விடியறது வரை அங்கேதான் இருந்தான். விடியற்காலையிலே சொக்கநாதர் பவனி வாறப்பதான் வெடிச்சத்தம் கேட்டுத்தான் எந்திரிச்சு வீட்டுக்கு போயிருக்கான்.”
”அப்றம் அவங்களை சந்திக்கலையா?”
“இல்லை, அதுக்குப்பிறகு அவளை பாக்க நிறையவாட்டி அந்த வீட்டுமுன்னாடி நடந்திருக்கான். அதுக்குப்பிறகு பரீட்சை வந்திட்டுது. லீவு விட்டாங்க. ஊருக்கு போறதுக்குள்ள ஒரு தடவை பாத்திரணும்னு நினைச்சான். முடியல்லை. ஊருக்கு போய்ட்டு ஒருமாசம் கழிச்சு வந்தா அந்த வீட்டிலே அவங்க இல்லை. மாத்திட்டு போய்ட்டாங்க.”
“தேடிப் போகலையா?”
“இல்ல.”
“ஏன்?”
“ஏன்னா அந்தக்காலத்திலே அதெல்லாம் வழக்கம் இல்லை.”
“தாசில்தார் ஆபீஸிலேயே விசாரிச்சிருக்கலாமே.”
“அதுக்கெல்லாம் ஏது தைரியம் அந்தக்காலத்திலே? அவன் அப்டியே நினைச்சுக்கிட்டே இருந்தான். அப்றம் அவனுக்கு வேலைகிடைச்சுது. கல்யாணம் ஆச்சுது. புள்ளைகுட்டி பிறந்தது, அதுக பெரிசாச்சு. அப்டியே லைஃப் போச்சு”
“அவங்க என்ன ஆனாங்க?”
“என்ன சொல்றது? அவ அங்கேருந்து போன மறுமாசமே ஒரு விஷக்காய்ச்சலிலே செத்துட்டா”
“அய்யோ, நிஜம்மாவா?”
“ஆமா, அப்பல்லாம் விஷக்காய்ச்சல் ஜாஸ்தி”
“உண்மையாகவா?”
“ஆமா”
“ஸோ பாத்தட்டிக்”
“பாத்தியா, மெலென்கொலி தேவைப்படுதுல்ல? அவ அப்டியே செத்தாத்தானே கதைக்கு ஒரு அர்த்தம் வருது? அதான் மௌனி அப்டி எழுதறார்.”
“வெளையாடுறீங்களா?”
“சரி, அவ சாகல்லை. கொஞ்சநாள் கழிச்சு அவளை ஒரு கோயிலிலே பாத்தான். ரெட்டை மூக்குத்தி போட்டு பட்டுப்புடவை கட்டி பின்னலிலே மரிக்கொழுந்து வைச்சுக்கிட்டு எல்லா பொண்ணுகளையும் மாதிரிதான் இருந்தா. இடுப்பிலே ஒரு குழந்தை, கையிலே ஒண்ணு.”
அமுதா “உம்” என்று என்னை பார்த்தாள்.
“அப்றம் ரொம்பநாள் கழிச்சு அவளை மதுரை பஸ்ஸ்டாண்டிலே பாத்தான். அவளோட பையன் தோளுக்குமேலே வளந்தாச்சு. அவ ஒரு சணல்சாக்கிலே ஏதோ கட்டி எடுத்துக்கிட்டு பையன் பின்னாலே பஸ் புடிக்க ஓடுறா.”
“போரும்” என்றாள் அமுதா எரிச்சலுடன்.
“பாத்தியா? நாம வேற ஒண்ணை எதிர்பார்க்கிறோம். டிவைனா, பொயட்டிக்கா, மிஸ்டீரியஸா. அதான் கதையை சட்டுன்னு சாவுக்கு கொண்டுபோறோம்” என்றேன். “ஆக்சுவலா பாத்தா இதும் சாவுதான். இதுதான் பூர்ணமான சாவு. ஒண்ணுமே மிச்சமில்லாம ஆகிறது. நினைச்சுக்கிடக்கூட ஒண்ணும் இல்லை. சாவுன்னா ஆளு போனபிறகு அந்த இடத்திலே இன்னும் பெரிசா என்னமோ வந்திடுது. இது பரிபூர்ணமான சூனியம்… ஜஸ்ட் எம்ப்டினெஸ்..”
“ஏன் தாத்தா?” என்றபோது அவள் கண்கள் தழைந்திருந்தன. அழுபவள் போலிருந்தாள்.
“அவ்ளவுதான்… அந்த வால்போட்டு எழுதின கண்ணு. அதிலே துள்ளின அந்த ஒற்றை வார்த்தை. அது எங்க இருக்கு? அந்த கணத்திலே அந்த எடத்திலே அது இருக்கு. நாம இங்க வந்திடறோம். அது அப்டியே நிகழ்ந்து மறைஞ்சிருது. ஒரு மாயை. அவ்ளவுதான்… அதைத்தான் எப்டி எப்டியோ மாத்தி மாத்திச் சொல்லிடலாம்னு பாக்கிறாங்க.”
”யூ நோ, அவங்க கண்ணிலே என்ன இருந்ததுன்னு உங்களுக்கு தெரியும்.”
“நோ… சத்தியமா தெரியாது. எனக்கு எப்டி தெரியும்.”
“அது நீங்கதான்.”
“இல்ல. சொன்னேன்ல, என் ஃப்ரண்டு. ஆனா அதிலே என்ன? அவனாலேகூட சொல்லிட முடியாது. நினைச்சு நினைச்சு பாக்கலாம். கற்பனையாலே பின்னாலே பின்னாலே போயி அந்த ஒரு செக்கண்டை ஞாபகத்திலே திருப்பி நடத்திக்கலாம். ஆனா அது வேறே எங்கியோ எப்டியோ இருக்கு. நாம நினைக்கிறதும் கற்பனை பண்ணிக்கிடுறதும் வேறே. அது அந்த கணத்திலேயே அப்டியே காணாம போயிடுச்சு. அந்த கணம் நிஜம். அப்ப மனசு தித்திச்சதும் கண்ணீர் வந்ததும் எல்லாம் உண்மை. அந்த ராத்திரியே உண்மைதான். ஆனா அது அப்பவே முடிஞ்சாச்சு. ஒரு தீற்றல். லைஃபோட ஒரு ஃப்ளாஷ். அவ்ளவுதான், அதுக்குமேலே ஒண்ணுமில்லை.”
“அதெப்டி?” என்றாள்.
“அதைத்தான் மௌனி மாதிரி சொல்லணும்னா அவ அந்த பார்வையோட அப்டியே செத்துட்டா. அவன் அந்த ராத்திரியோட அப்டியே செத்துட்டான். ரெண்டுபேருமே இப்ப இல்லை” என்றேன்.
அவள் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். சட்டென்று எழுந்து சென்றாள். இளமையின் துடிப்பான உச்சத்தில் இருந்தாலும்கூட அது புரியத்தான் செய்யும்.
நான் மீண்டும் வார இதழில் சரோஜாதேவியின் படத்தைப் பார்த்தேன். “வாலிட்டு எழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ”.
அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒருமுறை போனேன். வெள்ளையடித்து மறுபடியும் வாடகைக்கு விட வைத்திருந்தார்கள். வெறுமையான அறைகள் தோறும் சுற்றிவந்தேன். உள்ளே சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி. அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை கண்டேன். கண்ணில் மையிட்டபின் அப்படியே விரலைத் தீற்றிக்கொண்டது. ஒரு சின்னஞ்சிறு குருவியின் சின்னஞ்சிறு இறகுபோல. ஒரு மெல்லிய வளைவு. ஓர் அலட்சியமான கீற்று. ஒரு கணம், அந்த ஒருகணம், அது அங்கிருந்தது. கண்கள் இல்லை, மையிட்ட இமைகளும் இல்லை, நீட்டிவரைந்த வால் மட்டும் எஞ்சியிருந்தது.
அதை பார்த்துக்கொண்டு நின்றேன். அது அழியவே இல்லை. அது எப்போதும் மிஞ்சிவிடும்.
***
8.படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில்
மீனோ இளமானோ ?
ஓலஞாலி குருவியோ கூடுகூட்டும் புளகமோ
பீலிவீசி ஆடும் மாமயிலோ?
இசை -இளையராஜா
பாடல்- பிச்சு திருமலை
பாடியவர் -ஜேசுதாஸ்,ஜானகி
நுண்வரலாற்றின் குரல்
குமரிமாவட்டத்தில் உண்மையில் இலக்கியவாசகர்கள் மிகமிகக் குறைவு. இங்குள்ள பொதுப்போக்கு மதமான கிறிஸ்தவம் வாசிப்பை பாவம் என சொல்லிக்கொடுப்பது. வாசிக்கும் கிறிஸ்தவர்கள் அரிதினும் அரிது, அவர்களும் ரகசியமாகவே வாசிக்கவேண்டும். வேளாளர்கள் தேங்கிப்போய் பழமையில் வாழ்பவர்கள்.
ஆயினும் இங்கே இலக்கியம் தொடர்ச்சியாக எழுதப்படுவதற்குக் காரணம் பொதுமனநிலையில் இருந்து விலகி ஒருவகையான அறிவியக்கம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது என்பதுதான்.அது குமரிமாவட்டத்திற்கே உரிய அறிவியக்கம். இருபதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் இங்கே மாதந்தோறும் வெளியாகின்றன. எல்லாமே உள்ளூர் இதழ்கள். குறிப்பிடத்தக்க ஐம்பது நூல்களாவது ஓர் ஆண்டில் வெளியாகின்றன. உள்ளூர் அரசியல், உள்ளூர் வரலாறு, உள்ளூர் இலக்கியம்.
தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இத்தகைய ஓர் அறிவுச்செயல்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அறிவியக்கம் இலக்கியத்திற்கு அடிப்படைச் செய்திகளை அள்ளித்தந்து கொண்டே இருக்கிறது. அ.கா.பெருமாள் ஒருவரே ஒர் இலக்கியவாதிக்கு வாழ்நாள் முழுக்க எழுதுவதற்குண்டான மூலக்கதைகளை அளித்துவிடுவார். அத்தகைய பலர் உள்ளனர்.
அத்தகையவர்களில் ஒருவர் ஜோ.தமிழ்ச்செல்வன். திருத்தமிழ்த்தேவனார் என்ற பெயரிலும் எழுதுகிறார். வழக்கறிஞர், ஆனால் எழுத்தே முதற்தொழில். சிறிய ஆய்வுநூல்களை எழுதுபவர். கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர், ஆனால் கிறிஸ்தவம் மீது விமர்சனம் கொண்டவர். அனேகமாக எல்லாவற்றின்மீதும் விமர்சனம் கொண்டவர் எனலாம்.
மிகத்தீவிரமாக பலமாதங்கள் உழைத்து எழுதப்படும் ஆய்வுநூல்கள் அவருடையவை. சிறியவை, எப்போதுமே சுவாரசியமானவை.குமரி மாவட்டத்திற்கு வெளியே அவர் அறியப்பட்டதில்லை.ஒருவேளை வெளியே இருப்பவர்களுக்கு அவருடைய தலைப்புக்கள் மேல் ஆர்வம் குறைவாக எழலாம். ஆனால் இரு காரணங்களுக்காக அவருடைய நூல்கள் முக்கியமானவை.
முக்கியமாக இன்று மைக்ரோ ஹிஸ்டரி என்னும் நுண்வரலாறே புதிய அறிவுத்துறை. பொதுப்போக்கு வரலாற்றில் விடப்படும் சிறிய புள்ளிகளை ஆய்வுநோக்கில் நிரப்பிக்கொள்வது அது. சிறியவிஷயங்களின் வரலாறு, பெரியவிஷயங்களில் மறைந்துள்ள வரலாறு. அத்தகைய நுண்வரலாற்று நூல்கள் தமிழகம் முழுக்க அனைத்து நிலங்களைப்பற்றியும் எழுதப்படவேண்டும்.அதற்கு தமிழ் அறிவுச்சூழலில் மிகச்சிறந்த முன்னுதாரணம் அவருடைய நூல்கள்.
இரண்டாவதாக, அவருடைய நூல்கள் அளிக்கும் புதியபார்வை நாம் வரலாற்றை, அரசியலை அணுகும் கோணத்தை மாற்றியமைக்கக்கூடியது. எந்த நிலப்பகுதியைச் சேர்ந்தவரானாலும் அவருடைய நிலத்தை பார்க்கும் பார்வையை அவை மாற்றிவிடக்கூடும். புனைவுபோல சுவாரசியமான வாசிப்பை அளிப்பவை. நம் அரசியலின் சாதியத்தை நோக்கி நேரடியாகப் பேசுபவை அவை.
ஜோ.தமிழ்ச்செல்வனின் நூல்களுக்கு இரண்டுவகை உதாரணங்களாக இரண்டு நூல்களைச் சொல்லலாம். ‘குமரி காங்கிரஸின் தந்தை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி’ என்னும் நூல் மீனவசமூகத்தில் பிறந்து காங்கிரஸின் முகமாக எழுந்த பெருந்தலைவர் ஒருவரைப் பற்றியது. அவர் பின்னாளில் முற்றாகவே மறக்கப்பட்டார். நான் அவருடைய பெயரையே ஜோ.தமிழ்ச்செல்வனின் நூல் வழியாகத்தான் அறிந்தேன்.
மாபெரும் தலித் இனத்தலைவர்கள் இங்கே உருவான இடைநிலைச்சாதிச் சொல்லாடலால் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டதற்கு நிகராகவே மீனவர் குடித் தலைவர்களும் மறைந்தனர். அவர்களில் ஒருவர் கொட்டில்பாடு துரைசாமி. விரிவான தரவுகளுடன் இந்நூலை ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கிறார். அவர் ஏற்கனவே எழுதிய ’மீனவ முன்னோடி லூர்தம்மாள் சைமன்’ என்னும் நூலின் தொடர்ச்சி இந்நூல்.
ஜோ.தமிழ்செல்வனுக்கே லூர்தம்மாள் சைமன் பற்றி ஆராய்ச்சி செய்யும்போதுதான் கொட்டில்பாடு துரைசாமி பற்றிய தகவல் கிடைக்கிறது, அதற்குமுன் அவரும் அறிந்ததில்லை. ஆனால் இந்நூல் காட்டும் கொட்டில்பாடு துரைசாமி சுதந்திரப்போராட்ட வீரர், திருவிதாங்கூர் காங்கிரஸின் முதன்மைத்தலைவர்களில் ஒருவர், குமரிமாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகளில் பங்காற்றியவர், அன்று மிக மதிக்கப்பட்டிருந்த தலைவர்.
இந்தியச் சுதந்திரத்திற்குப்பின் கொட்டில்பாடு துரைசாமி கவனத்திலிருந்து விலகினார். லூர்தம்மாள் சைமனுக்கும் அவருக்குமான கருத்துமுரண்பாடும் அதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்நூல் புகழ்மொழிகள் ஏதுமில்லாமல் ஆதாரபூர்வமான செய்திகளை மட்டுமே சொல்லி ஒரு வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது.
ஜோ.தமிழ்ச்செல்வனின் ஆய்வுநூல்களுக்கு இன்னொருவகை உதாரணம் ’குளச்சல்போர் கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’. மார்த்தாண்டவர்மா மகாராஜா 1740ல் குளச்சலில் சிறிய டச்சுக் கடற்படை ஒன்றை வென்று ஒரு கப்பலைக் கைப்பற்றினார். [குளச்சல் போர்] அதன் காப்டனாக இருந்த டி லென்னாய் பின்னர் மகாராஜாவின் நண்பராகி, திருவிதாங்கூரின் தலைமைப் படைத்தளபதியாகி, நவீனத் திருவிதாங்கூரை உருவாக்குவதில் பங்களிப்பாற்றினார்.
இந்தப்போர் நடந்து இருநூற்றைம்பது ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் இப்போரை அதற்குள் வரலாற்றுத்தொன்மம் ஆக மாற்றி ஏகப்பட்ட கதைகளை ஏற்றிவிட்டனர். குமரிமாவட்டத்தில் ஒவ்வொரு சாதியினரும் அப்போரை அவர்கள்தான் செய்தார்கள் என்று கதைகட்டி வரலாற்றை எழுதியிருக்கின்றனர்.இன்றைய சாதிய அரசியலின் தேவைக்கேற்ப சமைக்கப்பட்டவை அவை.
ஜோ.தமிழ்ச்செல்வன் திருத்தமிழ்த்தேவனார் என்ற பெயரில் குளச்சல் போரின் உண்மை பற்றி ’குளச்சல்போர் கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். அதில் அப்போரைப்பற்றி தன் சாதியினர் உட்பட அனைவரும் சொல்லும் பொய்களை ஆதாரபூர்வமாக உடைக்கிறார். அதன்பின் டி.லென்னாயின் உறவினரான மார்க் டி லென்னாய் எழுதிய குளச்சல் போர் என்னும் நூலை மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
மார்க் டி லென்னாய் ஏறத்தாழ குளச்சல்போரின் சமகாலத்தவர். ஆகவே அது ஒரு நேரடி வரலாற்றுப் பதிவு. குளச்சல்போர் பற்றிய எல்லா கதைகளுக்கும் அதுவே பதில். அது அளிக்கும் சித்திரமே வேறு. அது நாம் அப்போர் பற்றிக் கொண்டிருக்கும் எல்லா கற்பனைத்தாவல்களையும் இல்லாமலாக்கி அப்பட்டமான யதார்த்தத்தில் நிறுத்துகிறது. ஆனால் இத்தகைய ஒரு நூல் இருந்தும்கூட இதுவரைப் பேசிய எவரும் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. இனி கருத்தில்கொள்ளப்போவதுமில்லை.
அறிவுத்தேடலின் தளராத முனைப்பே ஜோ.தமிழ்ச்செல்வனை இயக்குகிறது. குமரிமாவட்டத்தின் வரலாற்றில் அவர் நிகழ்த்திய ஊடுருவல்களால் அவர் முக்கியமான அறிவுப்பங்களிப்பாற்றியவர் என்று கருதுகிறேன்.
குளச்சல் போர்- மார்க் டி லென்னாய்
குளச்சல் போர்- திருத்தமிழ்த்தேவனார்
தொடர்புக்கு. ஜோ தமிழ்ச்செல்வன், தெற்கு பதிப்பகம், 9487187193
வானோக்கிய வாசல்
மலையாள கவிஞர் கே.ஏ.ஜெயசீலனின் ஒரு கவிதை. சுவர்மூலையில் அமர்ந்திருக்கிறது பல்லி. அதன்முன் வரிசையாக பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. நேர் எதிரில் பல்லியைக் கண்டதும் திகைக்கின்றன.பக்கவாட்டில் விலக முயல்கின்றன. முடியாமல் தத்தளிக்கின்றன. பின்பக்கம் வரும் பூச்சிகள் முன்னால் உந்தி செலுத்த பல்லியின் வாய்க்குள் சென்றுகொண்டே இருக்கின்றன. எந்த பூச்சிக்கும் மூன்றாவது சாத்தியம் ஒன்று இருப்பது தெரியவில்லை. சுவரிலிருந்து பிடிவிட்டு உதிர்ந்தால்போதும்.
அந்தவகையில் பிடிவிட்டு உதிர்வது என்பது ஒருவகையான பைத்தியம். மண்டையின் ஒரு வாசலை திறந்துவிடுதல். இன்னொரு கவிதை. ஒரு மாறுதலுக்காக கூரையில் வானம்நோக்கிச் செல்ல ஒரு வாசல் வைக்கவேண்டும் என்று ஏன் எவருக்கும் தோன்றவில்லை?
இலக்கியத்திற்கும் கருத்துச்செயல்பாட்டுக்கும் இடையே உள்ள முதன்மை வேறுபாடே இந்தப் பித்து அம்சம்தான்.சீராகவும் ஒழுங்காகவும் சிந்திக்கவே நாம் வளர்ப்பால், கல்விமுறையால், பொதுப்போக்கு அறிவியக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.அதுவே முறையானது, தேவையானது. வீட்டில்தான் வாழமுடியும். ஆனால் அவ்வப்போது கூரைவழியாகவும் வெளியேறலாம்.
முறையான சிந்தனைப்போக்கிலிருந்து உடைத்துக்கொண்டு மீறிச்செல்லும் தன்மை இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளிலொன்று. ஆகவேதான் ஆசாரவாதிகளிலிருந்து புரட்சியாளர்கள் வரை அத்தனைபேருக்கும் இலக்கியம் மீது ஒரு ரகசிய ஒவ்வாமை உள்ளது. அதை ‘வழிகாட்டி’ நடத்திச்செல்ல ‘சீர்திருத்த’ அதில் ‘பிழைகளை கண்டுபிடித்து திருத்த’ தொடர்ச்சியாக முயன்றுகொண்டே இருக்கிறார்கள்.
எல்லா நல்ல படைப்புக்களிலும் அந்த வான்நோக்கிய வாசல் திறந்து கிடக்கும். ஆனால் சில படைப்புக்கள் முதன்மையாக அந்த மீறலையே முன்வைக்கும். அதன்பொருட்டு மட்டுமே எழுதப்பட்டிருக்கும். அவை பொதுவாசிப்பிலிருப்பவர்களுக்கு திகைப்பையும் ஒவ்வாமையையும் உருவாக்கக்கூடும்.
தமிழில் அத்தகைய ஆக்கங்களுக்கு முதன்மை உதாரணம் ரமேஷ் பிரேதனின் கதைகள், கவிதைகள். ‘திரும்பிநோக்கி காறித்துப்பிவிட்டு கிளம்பிச் செல்லும் மனநிலையில் எப்போதுமிருப்பவை’ என அவற்றை வரையறை செய்யலாம். நமக்கு எழுதியளிக்கப்பட்ட, பேசியளிக்கப்பட்ட அனைத்தையும் மீறும்தன்மை கொண்டவை அவை.
கசப்பு கோபம் ஆகியவற்றில் தொடங்கி மீறிச்சென்று அடையும் ஓர் அமைதியை அவை கண்டடைகின்றன. அங்கே வள்ளலார் அமர்ந்திருக்கிறார். நாமறிந்த வள்ளலார் அல்ல, வேறொருவகையில் கண்டடையப்பட்ட வேறொருவர்
நம் சமூக ஒழுங்கை, நம் பாலியல் நடவடிக்கைகளை, நமது வரலாற்றை தன்போக்கில் உடைத்து மறு ஆக்கம் செய்யும் படைப்புக்கள் ரமேஷ் பிரேதனுடையவை. அவை நம்மை வெவ்வேறு வகையில் ஊடுருவுகின்றன. நாம் அவற்றை வாசிக்கையில் எழும் ஒவ்வாமையே அவை உண்மையில் உத்தேசிப்பது என்று புரிந்துகொண்டால், அவை நம்மை ஊடுருவ அனுமதித்தால், நமக்கு அவை புதியவாசல்களை திறக்கக்கூடும்.
மொழியின் சிடுக்கு, எண்ண ஓட்டங்களின் கட்டற்ற தன்மை, இங்குள வாழ்க்கையுடன் சம்பந்தம்ற்ற வேறொரு யதார்த்தத்தில் உலவுதல் ஆகிய காரணங்களால் ரமேஷ் பிரேதனின் கதைகள் பொதுவாசிப்பிலிருந்து விலகியே இன்றுள்ளன. ஆனால் தன் வாசிப்பை தானே உடைத்து முன்செல்ல விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கு அவை முக்கியமானவை.
குமிழிகள் கடிதங்கள்
குமிழிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
குமிழி கதையை அதன் கதையிலிருக்கும் விவாதங்களைக்கொண்டும் அதன் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைக்கொண்டும் புரிந்துகொள்ளலாம். இரண்டு கதாபாத்திரங்கள். ஒன்று ஆண், இன்னொன்று பெண். பெண் தன்னுடைய ஐடியல் வடிவத்தை அடைய நினைக்கிறாள். என்ன பிரச்சினை என்றால் ஆணே இல்லாமல் அந்த முழுமையை அடைய நினைக்கிறாள். அப்படியென்றால் ஆணின் இடமென்ன என்பதுதான் கேள்வி. இதையே ஆணுக்கும் கேட்டுக்கொள்ளலாம்.
மானுடம் ஆணும் பெண்ணுமாக பிணைந்து வாழ்ந்த காலகட்டத்தைக் கடந்து ஆணும்பெண்ணும் தொடர்பே இல்லாமல் வாழும் காலம் நோக்கிச் செல்லப்போகிறதா? குழந்தைபெறக்கூட இனி காமம் தேவையில்லையா? என் உடல் என்னுடையது என்ற எண்ணம் அங்கேதான் செல்கிறதா? அது லிலி சொல்லும்போது சரி என்றுதான் எனக்குப் படுகிறது. அது பரிணாமத்தின் ஒரு கட்டம் என்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைக்கிறேன்
எம்.
அன்பு ஜெ,
மீண்டும் சிறுகதைகள் கொண்டாட்டத்தை தொடங்கியதற்கு மிக்க நன்றி. நோய்சூழ் காலத்தில் தங்களின் சிறுகதைகள் தந்த ஆசுவாசம் அளப்பரியது.
இன்றைய குமிழி சிறுகதை அனைத்து விதத்திலும் புதுமையானது. இருத்தலின்மையை, இருத்தலை நவீன காலத்திற்கேற்றவாறு காலச்சிடுக்குகளுக்கேற்ப பின்னி எழுதப்பட்டுள்ளது. தன்னை என்று எதை முன்னிறுத்துவது என்ற கேள்வி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதன் முன் உள்ள சிக்கல். இந்த பிரபஞ்சத்தில் நான் என்பது உடல்தானா? காமம்தான் என்னை வழிநடத்துவதா? எதை நான் அவன் முன் நான் என முன்னிறுத்துவது எனும் பெரும்வினாவாக இந்த சிறுகதை எழுந்துள்ளது. லிலி தன்னை வெறும் உடலாகத்தான் உணர்கிறாள். தன் வேலையில், தன் திறமையைவிட தன் உள்ளொளியைவிட அவள் தன் சதைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறாள். அனைத்துவிதத்திலும் உடலால் மட்டுமே எண்ணக்கூடியவளாக இருக்கிறாள். தன் எண்ணங்கள் எவ்வளவு அபத்தமாக இருந்தாலும், அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதையின் இறுதியில் தன் கணவன் சாம் முன் அவள் தோற்றுவிட்டாள் ஆனால் அவளின் தன்முனைப்பு அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஒரு பெண்ணியவாதியாக அவளால் யார் முன்னிலையிலும் தோற்கமுடியவில்லை. தான் எனும் கர்வம், அந்த மாயை தான் நம் மரபில் முதலில் அகற்றவேண்டிய ஒன்று. ஆனால் அதுவே அவளை முழுவதும் வழிநடத்துகிறது.
அனைத்துவிதத்திலும் உடலால் மட்டுமே எண்ணக்கூடியவர்கள் ஒருகட்டத்தில் மேல் அவர்களால் எவ்விதத்திலும் செயலூக்க நிலையுடன் இருக்கமுடியாது என்று கூறியிருப்பீர்கள். இதில் அவள் தான் செயலூக்கநிலையில் இருப்பதற்காக மட்டுமே தன் உடல் அங்கங்களை மாற்றுகிறேன் என்று நிலைப்பாடு எடுக்கிறாள். அது அவள் வேலையில் எங்கே தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்ற அன்செர்ட்டைனிட்டியில் ஏற்படுவது.
சமீபத்தில் சாருவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் இப்படி ஒரு பகுதி வரும்
“நீ நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய், அதுதான் உன் தோல்வி. நீ நேசிக்கப்பட வேண்டும் என்று ஏங்கினால் நீ யாராக இருக்கிறாயோ அதிலிருந்து நீ விலகிச் செல்கிறாய். மற்றவர்கள் நீ எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே நீ மாறுவாய். பிறகு அதற்கு முடிவே இராது. நீ எப்போதும் மற்றவர்களின் விருப்பமாக மாறிக்கொண்டேயிருப்பாய். அதனால்தான் என்னதான் மனிதர்கள் புதிய விடியலை மகிழ்ந்து கொண்டாடினாலும் ஜனநாயகங்கள் முடிவில் தோல்வியுறுகின்றன. அவை தங்கள் உண்மையான முகத்தை வெளிக்காட்டாத மனிதர்களாலேயே செலுத்தப்படுகின்றன. நிழல்கள் நிழல்களோடு பொருதுகின்றன. எல்லோரும் நிழல்களை விரட்டிச் செல்கிறார்கள்.
இதில் குறிப்பட்டது போல அவள் மற்றவர்களுக்காக, மற்றவர்களின் விருப்பத்திற்காகவே மாறுகிறாள். ஆனால் மற்றவர்களுக்காக அல்ல தனக்காகவே தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று அவள் தொடர்ந்து கூறுவது மற்றவர்களின் பார்வையில் தான் இளமையாக தெரிய, செயலூக்கத்துடன் தெரிய, மற்றவர்களின் பார்வை வழியே தனக்கான கேள்வியையும் பதிலையும் கண்டடைகிறாள். இங்கு இளமைக்கு சமமாக செயலூக்கத்தை பொருத்துகிறாள். செயலூக்கம்தான் இளமையைதரவல்லது, இளமை செயலூக்கத்தை தரவல்லதல்ல எனும் நிலைப்பாட்டை அவள் ஏற்கமறுக்கிறாள். நம் மரபில் வாழ்ந்த வாழும் உதாரணங்கள் நிறையவே உள்ளனர். தன் உடலை மாற்றுவதன் மூலம் தன் மரபை தன் அடையாளத்தை, தன் இனத்தை அனைத்திலும் இருந்து விடுபட்டு மற்றொரு கூண்டிற்குள் செல்ல விரும்புகிறாள். அதுவே தனக்கான விடுதலை என்றும் மயங்குகிறாள்.
இதன் அடுத்தக்கட்ட உச்சநிலை பரிணாமமாக அவள் அகாலமின்மைக்கு செல்வாள் என்று தோன்றியது. தன்னை இளமையாக காண்பித்துக்கொள்ள இன்னும் ஒருபடி முன்னேறி பெரும் குமிழிவழியே தன் செல்களை மாற்றிக்கொள்வதன் மூலம் மரணமின்மையை நோக்கி செல்வாள். அவள் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள சிறுக சிறுக மாற்றும் உடலமைப்பின் அடுத்தகட்டம் செல்களை மாற்றிக்கொண்டு மரணமற்றவளாக உருமாறுவாள் என்று தோன்றியது. அவள் அகாலமின்மைக்கு சவால் விடும் கண்ணி. என்றும் கண்ணியாகவே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள துடிப்பவள். அவள் அவ்வாறுதான் எண்ணுவாள். நிரந்தரத்துவமாக இருக்க எண்ணி நிரந்தரமின்மைக்கு செல்லும் குமிழி. அவள் நிழலோடு நிழலாக இருப்பவள். மேலும் அவள் நிழலில் உருவான நிரந்தரமின்மையின் குமிழிக்கண்ணி எனவே குமிழி எனும் பெயர் மிகவும் பொருத்தமானது.
பலபல படிநிலைகளில் பலகூறுகளில் பல உள்ளார்ந்த விஷயங்களில் அனைத்துவிதத்திலும் நுணுகி ஆராய்ந்து விமர்சனப்பூர்வமாக ஆராய்வதற்கேற்ற மிக மிக முக்கியமான சிறுகதை குமிழி. உளவியல், உடற்கூறியியல், அறிவியல், இனவரையியல், மேலாண்மை, பெண்ணியம் எனப் பலத்துறைகளைப் பேசுபொருளாக கொண்ட குறிப்பிடத்தக்க சிறுகதை. பலரால் பெரிதும் கவனத்திற்குள்ளாக்கப்பட வேண்டியது. நம்காலத்தில் வெளிவந்துள்ள ஆகச்சிறந்த கதைகளுள் ஒன்று.
அன்புடன்
ரா. பாலசுந்தர்
அன்புள்ள ஜெ
குமிழிகள் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு கதை. இந்தக்கதையின் ஒரு சிறு அம்சமாவது இன்றைக்கு எல்லா சமூகங்களிலும் உண்டு. என் மனைவி வேலைக்குச் செல்லும்போது லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வாள். அவள் வேலைக்கு அது தேவை.
ஆனால் என் அப்பா அம்மாவுக்கு அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதை அவர்கள் ஒரு டிஸ்ப்ளே என்று நினைக்கிறார்கள். உதட்டுச்சாயம் என்பது வெளிப்படையாகவே காமத்துக்கான அழைப்பு என நினைக்கிறார்கள்.
என் மகள் குட்டைப்பாவாடை அணிவாள். அதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவள் டென்னிஸ் விளையாடுபவள். ஆனால் என் மனைவி அதை தொடையைக் காட்டுதல் என்றுதான் புரிந்துகொள்கிறாள்.
இந்தப் பூசலின் அடிப்படையான விஷயம் என்பது ஒருவரின் உடல் அவருக்குச் சொந்தமா சமூகத்துக்குச் சொந்தமா என்பதுதான். ஆணுக்கு இந்தப்பிரச்சினை இன்றுபெரிதாக இல்லை. பெண் உடலில்தான் எல்லா கட்டுப்பாடுகளும் இருக்கின்றன
தன் உடலை தன் ஆளுமையின் ஒரு பகுதி, அதை அழகாகவும் சிறப்பாகவும் காட்டுவது தன்னுடைய வெளிப்பாடு என்று பெண் நினைக்கிறாள். ஆனால் அவள் உடல் என்பது ஒரு காமப்பொருள், ஒரு டிஸ்ப்ளே என்று ஆணும் சமூகமும் நினைக்கிறது. ஆகவே அவள் அத்துமீறக்கூடாது என்று கண்டிக்கிறது. இதுதான் பிரச்சினையே
ஜி.எஸ்
குமிழிகள்- கடிதங்கள் குமிழிகள்,கடிதங்கள் குமிழிகள்- கடிதங்கள்
கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்
அன்புநிறை ஜெ,
எனது குழந்தைப் பருவத்தில் எங்கள் தெருவில் ஒருவன் இருந்தான். ஊரார் சோறிட்டு வளர்ந்தவன். யார் பிள்ளை, எதனால் அங்கு வந்தான் என்பதெல்லாம் தெரியாது. கைகால் எல்லாம் சற்று சூம்பிப் போய் பற்கள் எத்தி இருக்கும். ஆனால் முகத்தில் ஒரு நிரந்தர சிரிப்பு. பேசுவதும் சற்றுக் குழறல்தான். மிக எளிய வேலைகளே அவனால் செய்ய இயலும். கடைகளுக்கு சென்று சிட்டில் எழுதிக்கொடுத்த பொருட்களை வாங்கி வருவது போன்ற வேலைகள், அதிலும் காசு கணக்கெல்லாம் தெரியாது, கொடுத்த காசை வாங்கிக்கொண்டு வருவான். பிள்ளையார் கோவிலில் இருப்பான், சிதறுகாய் பொறுக்குவான். காலை மாலைகளில் குளித்து நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டையணிந்து சத்சங்க வாசலில் அமர்ந்திருப்பான். அவனது பெயர் ஆடல், அப்படித்தான் கூப்பிடுவார்கள். ஆடலரசு போல ஏதேனும் இருந்திருக்கலாம்.
நான் சிறுவயதில் சாப்பிட மிகவும் படுத்துவேன். எனை அரைக்கிண்ணம் சாப்பிட வைக்க தெருவில் இருக்கும் காக்காய், அணில், குருவி அனைத்தையும் வேடிக்கை காட்டி உணவூட்டுவார் அத்தை. அந்த வரிசையில் ஆடலும் ஒருவன். அவன் ஆடுவது போலவும் பாடுவது போலவும் ஏதேதோ செய்து வேடிக்கை காட்டுவான். ஒரு நாள் அவன் எதையோ திருடிவிட்டான் என அடுத்த தெருவில் புதிதாகக் குடியேறிய ஒருவர் அவனை அடித்துக் கொண்டிருந்தார்.
சாதாரணமாக எதற்குமே அதிர்ந்து பேசாத பூக்கடை அம்மாச்சி அன்று தெருவிலேயே சண்டைக்கோழி போல அந்த அயலவருடன் சண்டைக்கு நின்றார். அப்பன் ஆத்தா இல்லாததால் கேட்க யாருமில்லைன்னு நினைச்சீகளா என்றும் பெத்தாதான் பிள்ளையா, அவனுக்கு இந்த ஊரில் அத்தனை பேரும் ஆத்தாதான். இந்தக் கையாலதான் உணவூட்டியிருக்கிறோம் அவன் திருடமாட்டான் என்றும் சண்டைக்கு நின்ற அந்த அம்மாச்சியும் வள்ளியம்மை போலதான். அக்கம்பக்க பெண்களும் சேர்ந்து கொண்டு வெகுகாலம் அதுகுறித்து அங்கலாய்த்தார்கள்.
அவன் தீனமாக முனகிக் கொண்டே விடுங்க ஆத்தா அவர் பொருளைக் காணோமின்னு கோபத்துல அடிச்சிட்டார் என சொன்னதோடு சரி. அதன் பிறகும் அவர்கள் வீட்டுப் பிள்ளைக்கும் அவனே வேடிக்கை காட்டுவதும், அவருக்குத் தெரியாமல் அந்த அம்மாளுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும் உண்டு.
இக்கதை வாசித்ததும் அது நினைவில் வந்தது. எனைக் கலங்க செய்த பகுதி அவரிடம் ரொம்பக் காரியமாக பேசிவிட முயலும் மாராயக்குட்டிபிள்ளைக்கும் அணைந்தபெருமாளுக்குமான உரையாடல். ‘கொஞ்சம் மங்கின’ ஆளு என்று இந்த ஊர்ப்பெரிசுகள் சொல்லும் அவன் கோவிலுக்கே ஒளியேற்றுபவன். அவர் ஆஞ்சநேய பக்தி என்று இழுக்கத் தொடங்கும்போதே எலும்பு கூட எஞ்சாது என்று உணர்பவன். அவன் புத்தி அணைந்தவன் அல்ல, சிவன் அணைந்த பெருமாள்.
அவர்களது திட்டங்களுக்குள்தான் எத்தனை கணக்குகள். தன்னுயிரை அளிக்க சித்தமாக இருக்க வேண்டும், மரணத்தையே எண்ணித் தனிமையில் இருந்தாலும் தளரக்கூடாது, ராஜா தலையில் விழுந்து வைக்கும் மடையனோ மட்டியோ ஆகாது, தெளிவாக செய்தியை சொல்லிவிட்டு உயிர்விடக்கூடிய தெளிவுள்ளவன், கோபுரத்தில் ஏறக்கூடிய உயர்ந்த சாதியாக வேறு இருக்கவேண்டும். அவர்களை சபித்து விட்டோ, மனதில் ஒரு சொல் சடைத்துக்கொண்டோ உயிர் விடக்கூடாது. மொத்தத்தில் குறைகளற்ற ஒரு உன்னதன் தற்பலி கொடுக்க வேண்டும். அங்குள்ள அனைவரும் அத்தனை உயரமான கோபுரத்தில் ஏற ஏலாதவர்களே.
“ஊருக்காக செத்தா நல்லதுதான். இது ஊரு போட்ட சோத்திலே வளந்த உடம்பு”
நடுகல்லு நாட்டுதது, கொடை குடுக்குதது, இந்தமாதிரி…”
“வேண்டாம்”
கன்னி களியாம…. அதாக்கும். ஆசை இருந்தா ஒரு குட்டிய பாத்து கெட்டி வைக்குதோம்”
“அவ தாலியறுக்கணுமா? வேண்டாம்”
“தாலி அறுக்காத சாதி இருக்கே… தாசிக்குடியிலேகூட நல்ல குட்டிகள் இருக்கு”
“வேண்டாம்”
இவrகளிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் அப்போதே அவன் இல்லை.
நடுகல்லோ தன் பெயரோ எதுவும் அவனுக்கு முக்கியமல்ல.
“செரி. நல்லா வாழுங்க…நல்லபடியா நெறைஞ்சு வாழுங்க” என்ற வரியிலேயே அவன் கந்தர்வனாகிவிட்டான். அவனுக்கு சலனமில்லை.
வள்ளியம்மை அவனைத் தன் கணவனில்லையென மறுக்கமாட்டாள் என்பதை முன்னுணர நேர்வது அதனால்தான். ஆனால் அவள் தீப்பாய்ந்து அவனது தியாகத்தில் இணை சேர்வது பெரும் உச்சம்.
அவனது வயது, தோற்றம், அனைத்தையும் வைத்து அனுதினமும் பெண்களை அவன் மேல் மையல் கொண்டவர்களாகப் பார்க்கும் சமூகம். தனியன், தூயன், எளியன், அன்றாடங்களுக்கு அப்பாற்பட்டவன் பெண்களை ஈர்ப்பதில் வியப்பில்லை. முலையூறி, மகன் என்று வரிப்பதும் அனுதினம் வயிறுக்கு சோறிடுவதும், அவனை மானசீகமாக காதலனாக வரிப்பதும் எல்லாம் ஒன்றின் வெவ்வேறு வெளிப்பாடுகளே. அனைத்தும் பாவனைதான், வரித்துக்கொள்ளுதல்தான். சிதையேறுவதன் மூலமாக அவள் அன்றாடம் அவளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரே ஒரு விடையை அளிக்கிறாள்.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள ஜெ,
கந்தர்வன் கதை மிகச்சீக்கிரத்திலேயே ஒரு தொன்மமாக ஆகிவிடும். சிறந்த கதை என்பது சொன்னாலே நிலைகொள்வது என்று நீங்கள் ஓர் உரையில் சொன்னீர்கள். ஒரு செவிவழிக்கதையாக மாறிவிடும் தன்மைகொண்டதே நல்ல கதை. நவீனக்கதைகளில் எல்லாவகையான சோதனைகளுக்கும் இடமுண்டுதான். ஆனால் சிறந்தகதை எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்கும்
கந்தர்வன் ஓர் அழகான காதல்கதையும்கூட. இன்னொரு மொழியில் என்றால் உடனே ஒரு நல்ல சினிமாவாக ஆகிவிடும்
எம்.ராஜேந்திரன்
யட்சன் [சிறுகதை]அன்புள்ள ஜெ
யட்சன் கந்தர்வன் இருகதைகளையும் ஒரே கதையாக வாசிக்கலாம்.சூழல், கதைத்தொடர்ச்சி எல்லாம் சமம்தான். ஆனால் கொஞ்சம் கூட பொருந்தாத வேறுபட்ட வாழ்க்கைப்பார்வையை அவை வெளிப்படுத்துகின்றன. அர்ப்பணிப்பு களங்கமின்மை ஆகியவற்றின் வெற்றியை கந்தர்வன் கதை சொல்கிறது என்றால் முற்றிலும் அபத்தமான ஒரு வரலாற்றுப்போக்கையோ புராணப்போக்கையோ சொல்கிறது யட்சன். எதற்கும் எந்த அர்த்தமும் இல்லை. என்னவேண்டுமென்றாலும் நடக்கும். நாம் வெறும் பார்வையாளர்கள் என்கிறது.
முருகப்பனின் வாழ்க்கை அவனுடைய எந்த முயற்சியும் இல்லாமல் ஒரு பெரிய ஒழுக்குபோல ஓடிச்செல்கிறது. அதில் எந்த இலக்கும் இல்லை. ஆனால் அவனும் தெய்வமாகி அமர்ந்திருக்கிறான். வெறும் தீவிரமே அங்கே அவனைக்கொண்டுசென்று சேர்க்கிறது. ஒரு கதையை எழுதியபின் அந்த உச்சம் மேல் சந்தேகப்பட்டு நேர் எதிர்த்திசையில் சென்றதுபோலிருக்கிறது யட்சன் என்ற கதை
ஜெயராமன்
அன்புள்ள ஜெ
யட்சன் கதையில் அணைஞ்சபெருமாளுக்கும் முருகப்பனுக்கும் இருக்கும் வேறுபாடு ஆச்சரியப்படுத்துகிறது. சாவதற்குள் தாசி வேண்டுமா என்ற கேள்விக்கு ஒன்றுமே வேண்டாம் என்று சொன்னவன் அவன். இவன் தாசிகளுடன் வாழ்ந்தவன். அவன் ஆணழகன் என்றால் இவன் நோயாளி. அவன் எந்த அடையாளமும் வேண்டாம் என்றவன். இவன் பொன்னைப்பதுக்கி வைத்தவன். மாலையைப்பிடுங்கப்போய் செத்தவன்
இந்தக்கதைகளில் வரும் நாயக்கராட்சிக்கால தமிழகம் ஒரு சிக்கலான உலகம். அப்போதுதான் ஏரிகள் வெட்டப்பட்டன. கோயில்கள் கட்டப்பட்டன. சாலைகளும் சந்தைகளும் வந்தன. ஆனால் அன்று போர் நடந்துகொண்டே இருந்தது. பலமுறை முகலாயர் படைகொண்டுவந்தனர். அவர்களுக்கு உரிய கப்பம் அளித்து திருப்பி அனுப்புவதுதான் நாயக்கர்களின் வழக்கம். ஆகவே வரிவசூலும் உச்சத்தில் இருந்தது
இந்தக்கதையிலேயே அந்தச் சூழல் இருக்கிறது. வரிவசூல் பற்றிய குறை இருந்துகொண்டே இருந்தாலும் அமைதியான கொண்டாட்டமான வாழ்க்கையும் இருக்கிறது
ராஜசேகர்
கந்தர்வன், யட்சன் – கடிதங்கள் கந்தர்வன் – கடிதங்கள்
கூர் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
வழக்கம்போல கதைகள் வேறுவேறு களங்களிலிருந்து வேறுவேறு மனநிலைகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பதினேழாம்நூற்றாண்டு நாயக்கர் காலத்திலிருந்து சமகாலக் குற்றச்சூழலுக்குத் தாவுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். ஆனால் இந்த கதைவிழாவின் கொண்டாட்டமே அதுதான். ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஒரே நாளில் சம்பந்தமில்லாமல் படங்களைப் பார்ப்பதுபோலிருக்கிறது
கூர் ஒரு விஷம்போன்ற கதை. அந்தப்பையன் எங்கே கூர்கொள்கிறான் என்பதுதான் கேள்வி. அவனுடைய முரட்டுத்தனம், அவனிருக்கும் கைவிடப்பட்ட நிலை எல்லாமே கதையின் வழியாக உருவாகி வருகிறது. கதையின் கேள்வி அவன் ஞானப்பனைக் கொல்லும் வெறியை எங்கிருந்து அடைகிறான் என்பது. அவன் அந்த வெறியை அடைவது ஞானப்பன் தன் பேரனைக் கொஞ்சுவதைக் கேட்கும்போதுதான். அந்த இடத்தில் குற்றம் என்ற இடத்திலிருந்து கதை அந்த சிறுவனின் ஏக்கம் என்னும் இடத்திற்குச் சென்றுவிடுகிறது. ஆழமான ஒரு மானுடத்துக்கத்தைச் சொல்லிவிடுகிறது
ஜெயக்குமார்
அன்புள்ள ஜெயமோகன்
எனக்கு எப்பவும் ஓர் எண்ணம் மனதை கீறுவதுண்டு.நமக்கு எப்போது பிறர் மேல் வெறுப்பு வருகிறதென.’கூர்’ கதை வாசித்தேன்.வெறுப்பு கூர் கொண்டு வருவதை அளவிட்டு கொண்டே வாசித்தேன்.பிறர் மேல் வெறுப்பு வருவதற்கு,அவர்களை விட நாமே பெரும் காரணம்.வெறுப்பு வருவதற்கு காரணம் தேடி கொண்டிருந்த சிறுவனுக்கு ஏக்கம் தான் அதை கொடுப்பதாய் இருக்கிறது.இப்படி சொல்லலாம்- கோபம் கொண்டவனுக்கு கோபம் கொண்டவனை விட மகிழ்ச்சியுடையவனே எதிரி.ஆற்றல் விரிந்து கிடப்பது சிறு வயதில் தான்.அவ்வயதில் நம் மனநிலையும் வாழ்க்கைமுறையும் கூர் அடைகிறது.
அன்புடன்
பாலா
அன்புள்ள ஜெ
கூர் போன்ற நான்கு ஐந்து கதைகள் முந்தைய நூறுகதைகளிலும் இருந்தன. குற்றத்தின் உலகம். ஆனால் குற்றத்தின் தீவிரம், அதைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் ஆகிய இரண்டையுமே இக்கதைகள் பொருட்படுத்தவில்லை. குற்றம்வழியாக வெளிப்படும் ஒரு மனிதமனத்தைத்தான் கூறமுயல்கின்றன. சின்னப்பையன் கொல்வது அவனுடைய அப்பனைத்தான். தன் பேத்தியைக் கொஞ்சும் ஞானப்பனில் அவன் காண்பது தன்னை கைவிட்டுச்சென்ற அப்பனைத்தான்.
கதைமுழுக்க அப்பன் என்ற அடையாளம் அந்தப் பையன்களை எப்படியெல்லாம் படுத்துகிறது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. கிண்டலாகவும் கசப்பாகவும் அவர்கள் அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ
கூர் சட்டென்று தூக்கி கீழே போட்டுவிட்டது. இந்தக்கதையின் அழுத்தமும் இது அளிக்கும் கசப்பான உண்மையும் எனக்கு தெரியும். ஒரு அடிபோல விழுகிறது. ஆனாலும் இந்தவகையான கதைகள் உங்களுடையவை அல்ல. இவை உங்களுக்கு தூரமான கதைகள் என்று நினைக்கிறேன்
செல்வி ஆர்
கொதி, வலம் இடம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கொதி ஆழ்ந்த துயரத்தை மட்டுமல்ல துயரமே ஓர் ஆன்மிக அனுபவமாக ஆவதைக் காட்டும் கதை. இந்த கொதி எடுக்கும் சடங்கு வட இந்தியாவிலும் உண்டு. ஆனால் கடுமையான பஞ்சம் திகழும் ஆப்ரிக்காவில் இல்லை. அங்கே என்னென்னவோ சடங்குகள் உண்டு. இது இல்லை. இந்தச் சடங்கு இப்போது இல்லை. ஆச்சரியமென்னவென்றால் முப்பதாண்டுகளுக்கு முன்புகூட இருந்தது. இன்றைக்கு இல்லாமலாகிவிட்டது. பகிர்ந்து உண்பதற்கு நேர் எதிரான சடங்கு இது. பக்கத்துவீட்டானை உணவை பங்குபோடவந்த எதிரியாகப்பார்க்கும் சடங்கு. இப்படி ஒரு சடங்கு இங்கே இருந்தது என்பதே ஆச்சரியமானதுதான். இப்படி ஒரு நிலைமையிலிருந்து சென்ற இருபதாண்டுகளாகவே வெளியே வந்திருக்கிறோம் என்பது மேலும் ஆச்சரியமானது
சிவ.குமாரவேல்
அன்புள்ள ஜெ
கொதி கதை நெகிழ்ச்சியடையச் செய்தது. இரண்டு எல்லைகள் இங்கே உள்ளன. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் இங்கே வரவில்லை என்றால் நாமெல்லாம் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்போம் என்ற ஒரு பக்க பிரச்சாரம். இன்னொரு பக்கம், கிறிஸ்தவர்கள் ஒன்றுமே செய்யவில்லை, அவர்களெல்லாம் ஆதிக்கத்தின் ஐந்தாம்படை என்று பிரச்சாரம். இரண்டு பிரச்சாரங்களுமே உண்மைக்கு எதிரானவை. வெறும் வெறுப்புகள்
ஆனால் மதப்பிரச்சாரம் செய்வதற்காக பாதிரிமார் வரவில்லை என்றால் நாம் பட்டினியால் செத்திருப்போம் என்று சொல்வதை மன்னிக்கலாம். அதேசமயம் அதற்கு எதிர்ப்பிரச்சாரமாக அந்த பாதிரிமார்களின் அர்ப்பணிப்பையும் மனிதாபிமானத்தையும் இழிவுசெய்வதை மன்னிக்க முடியாது. அது நன்றிகொன்ற செயல். ஆன்மீகமான இழிவு அது. இருட்டில் தள்ளிவிடுவது
இந்த இரு நிலைகளுக்கு நடுவே கூர்மையான சமநிலையுடன் சென்றுகொண்டே இருக்கிறீர்கள். கால்டுவெல்லைப் பற்றிய லாசர் கதையும் ஓலைச்சிலுவை கதையும் நற்றிணை கதையும் எல்லாம் தமிழிலக்கியத்தில் நிகழ்ந்துள்ள நன்றிக்கடன் செலுத்துதல்கள். தமிழிலக்கியத்தில் இந்தவகையான பதிவு உங்கள் கதைகளில் மட்டுமே உள்ளது
பொன். முருகானந்தம்
வலம் இடம் [சிறுகதை]அன்புள்ள ஜெ
ஓராண்டுக்குப் பிறகும் தனிமையின் புனைவுக்களியாட்டுக்கு கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னமும் அக்கதைகள் வாசிக்கப்பட்டு முடிவுறவில்லை. இதோ அடுத்த களியாட்டு. ஒவ்வொரு கதையும் அற்புதமான அனுபவங்கள். ஒன்று ஒருவகைக் கதை. அதை வாசித்து நிறைவதற்குள் அடுத்த கதை. ஒன்றைவிட ஒன்று மேல். ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் சம்பதமே இல்லை. மிக ஆச்சரியமானதுதான்
வலம் இடம் ஒரு புதிரான கதை. ஆனால் நெகிழ்ச்சியான கதையும்கூட. சாவும் பிறப்பும்தான் அந்தக்கதையில் இரண்டு எருமைகள். வருவதும் போவதும். கண்ணுக்கு வாழ்வு தெரிகிறது. சாவு தெரிவதில்லை. அருகே நின்றிருக்கிறது. ஆனால் நுட்பமாக தெரியவும் செய்கிறது
சிவராம்
அன்பு ஜெ,
மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அருகிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் அவர்களோடு நாமறியாத உள்ளுணர்வின் மூலம் தொடர்பு கொண்டிருபோம். இங்கு குமரேசனுக்கும் அவருடைய எருமை மாட்டுக்கும் இடையேயான ஒரு அலவலாவள் சொற்களேதுமில்லாத உணர்வுகளின் வழி கடத்தக் கூடியதாய் அமைந்தொழுகி மனதை நிறைக்கிறது. முதன் முதலில் குமரேசன் இடது பசுவைப் பற்றி பிதற்றும்போது நானும் செல்லம்மாவைப் போலேயே அவனை தவறாக நினைத்துவிட்டேன். கதையை வாசித்துவிட்டு இரவு அதை அசை போட்டுக் கொண்டிருந்தேன். கனவில் இடது பசுவைக் கண்டேன். கதையின் ஆரம்பத்தில் மாட்டிற்கு வரும் வயிற்றுவலியின் போது இறந்து போன கன்றே இடது பசுவாக நின்றிருக்கிறது. அன்னையன்னும் நுண்ணுணர்வில் தன் கன்றை அறிந்து கொண்ட தாயை விட குமரேசன் என்னும் தாயின் அன்பு சிலிர்க்கச் செய்தது. அவன் இறுதியில் அந்தக் கனவில் ”மாட்டுவேவாரத்துக்கு மறைவெரல் பாசையில்” கண்டிப்பாக வலது மாட்டையே நினைத்துத் தொட்டிருப்பான். அதுவே லட்சுமி. அதுவே பல்லாயிரமாகப் பெருகி நிறைக்க முடியும். திடீரென நின்ற கோலத்தில் பெருமாள் நினைவிற்கு வந்தார். அவருக்கு வலத்தில் இருப்பவள் ஸ்ரீதேவி, இடத்தில் இருப்பவள் பூதேவி.. பின்னும் தங்கையா நாடார் சொன்ன இந்த வரிகளை நினைத்துப் பார்த்தேன் “தொளுவம் ஒளிஞ்சு கிடக்கக்கூடாது. மூத்தவ வந்து நின்னுகிடுவா”. கண்டிப்பாக அவர் வலத்தையே தொட்டிருக்க வேண்டும்.
”தாங்குறவனுக்குத்தான் தெய்வம் துக்கத்தை தரும். தாங்காதவனுக்கு சொப்பனத்தை குடுக்கும்.” என்று சொல்லியிருந்தீர்கள். குமரன் தாங்கமாட்டாதவன் தான். அவனுக்காகவே அம்மையின் அனுக்கிரகமாய் மீண்டும் வந்து சேர்ந்த ஸ்ரீதேவிக்காய் மகிழ்ந்தேன்.
மிக நெருக்கமானவர்களின் இறப்பின் உள்ளுணர்வு மீண்டும் என் தாத்தாவை நினைவுபடுத்தியது. எனக்கும் அது இருந்தது. அவர் இறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே அவர் இறந்துவிடுவார் என்று எண்ணி அழுது கொண்டிருந்தேன். அவர் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் அவரைப் பார்க்க வயல்காட்டிற்கு சென்றபோது அவர் மிகவும் சுருங்கிப் போயிருந்தார். எப்பொழுதும் போல என் கைகளை தன் மடியில் வைத்து கையின் ரேகைகளை தொட்டு கோடு போட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் சொல்லும் கிருஷ்ணரின் கதைகளினின்று ஏதும் சொல்லவில்லை. தன் கைகளை என்னிடம் நீட்டி தனக்குக் கைகளின் நடுவில் சக்கரம் இருப்பதாகக் காட்டினார். நான் சரி என்று முத்தமிட்டேன். மதிய உணவை நான் ஊட்டி விட்டபின் அவர் வேப்பமர நிழலில் நாற்காலியில் உட்கார்ந்து வயல்காட்டையே வேறேதோ இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல மூழ்கியிருந்தார். நான் அருகே போய் படுத்துக் கொண்டு அவரையே பார்த்திருந்தேன். திடீரென அவரிடம் “தாத்தா சாவறத பத்தி நீ என்ன நினைக்கிற” என்று சொன்னேன். அவருக்குக் காது கேட்காது என்பது நினைவிற்கு வரவே அமைதியானேன். மீண்டும் அழைத்து ”படு” என சைகை காணித்தேன். “படுத்தா எந்திரிக்க மாட்டேன். உக்காந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வயக்காட்டில் உழுத மண்ணை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து அவர் எழுந்திரிக்கவே முடியாத ஒரு இடத்தில் தூங்கிப் போனார். எப்போதும் போல் இன்றும் எங்கோ தொலைவில் அவர் இருப்பதாய் நினைத்து அவருடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் இல்லையென்று சொல்லிவிட முடியாது. குமரேசனுக்கு மீண்டும் அம்மை கிடைத்தது போல எனக்கும் அந்தத் தருணம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். நுண்ணுணர்வின் அன்பு ஆழமானது. பைத்தியமானதும் கூட. நெகிழ்வான கதை ஜெ. நன்றி.
அன்புடன்
இரம்யா.
கொதி, வலம் இடம்- கடிதங்கள் வலம் இடம்,கொதி- கடிதங்கள் கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

