Jeyamohan's Blog, page 1024
March 11, 2021
படையல், தீற்றல் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
படையல் கதையின் மையம் என்பது அந்தச் சிவனடியார் ரத்தத்தின் வழியாக மறுபடி பிறந்து எழுந்தது. ரத்தம் வழியாகச் சென்று அண்ணாமலையானை கண்டது. அதுவரை தீயாகத் தெரிந்த லிங்கம் வானமாக மாறியது. ஆனால் அங்கே அந்த கல்மண்டபத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே அப்படி ஆகிவிட்டவர்கள். அவர்களுக்கு மறுபிறப்பு நடந்துவிட்டது. ஆகவேதான் யானைகள் போரிடும் காட்டுக்குள் அவர்கள் அன்றில்கள்போலப் பறந்தலைகிறார்கள். அவர்களிடம் இருப்பது சிரிப்பு மட்டும்தான்.
அந்த புரிதல்தான் ஆனையப்ப சாமியை அந்த ரத்தச் சோற்றை தின்போம் என்று சொல்லவைக்கிறது. அவர்கள் அந்தச் சிவனடியாருக்குத்தான் ரத்தச் சோற்றை ஊட்டுகிறார்கள். என்ன ஒரு கதை. நவாப்பால் கொல்லப்பட்டவர்களின் ரத்தம் கலந்த சோற்றை மராட்டியரால் கொல்லப்பட்டவர்களின் வழியாக மீண்டவருக்கு ஊட்டுகிறார்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி அதை வாழ்த்துகிறார் எறும்பு பாவா
இந்த மண்ணிலிருந்த ஒருமைப்பாவனையை, அதை நிலைநிறுதிய சூஃபிகளையும் சாமிகளையும் ஒரே பார்வையில் ஒரே இடத்தில் காட்டிய கதை. ஒரு உச்சகட்ட புனைவு என்று சொல்லமுடியும்
கே.ரவிக்குமார்
அன்புள்ள ஜெ
நலம்தானே? சங்ககாலம் முதலே நமக்கு தெய்வங்களுக்கு குருதிச்சோறு கொடுக்கும் வழக்கம் உண்டு. நெல்லைமாவட்டத்தில் நாங்கள் படப்புச்சோறு என்போம். சோறு பொங்கி அதன்மேல் அறுத்த பலியின் பச்சை ரத்தத்தை விட்டு குழைத்து ஒன்பது உருண்டைகளாக ஆக்கி எட்டுதிசைக்கும் வானத்துக்கும் வீசி படையலிடுவார்கள். சுடலைமாடன் இசக்கி முதலிய தெய்வங்களுக்குரிய பலி அது. அதை முருகனுக்கு வேலன் வெறியாட்டில் செய்ததாக சங்கப்பாட்டிலே பார்க்கிறோம். அந்தச்சடங்குதான் இங்கே நடைபெறுகிறது. அந்தப்பலியை தனக்காக ஏற்றுக்கொள்கிறார் எறும்புபவா. சிவனடியாரும் ஏற்றுக்கொள்ள வைக்கிறார்.அவர்கள் அனைவரும் தெய்வங்கள்போல மனித துக்கங்களுக்கு அப்பால் நின்றிருக்கிறார்கள்
என். காளிமுத்து
தீற்றல் சிறுகதைஅன்புள்ள ஜெ
தீற்றல் ஒரு சிறிய கீறல்போன்ற கதை. மையிடுவது என்பது தமிழகத்தில் எத்தனை ஆயிரமாண்டுகளாக இருக்கிறது. மையுண்டகண்கள், மைவிழி என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் மை பற்றி ஒரு கதை இப்போதுதான் எழுதப்படுகிறது.மையிட்ட கண்களுக்கு பெரிய அளவிலான ஒரு எக்ஸ்பிரஷன் உண்டு. கண்களை பார்ப்பதற்காக மட்டுமல்லாமல் பார்ப்பதற்காக தயாரித்துக்கொள்வது. கண் ஒரு கம்யூனிகேஷன் கருவியாக ஆகிவிடுவது. ஆச்சரியம்தான். நடனக்கலைஞர்கள்போல நம் பெண்கள் கண்களை ஆக்கியிருந்தார்கள். பெண்களுக்கு கல்வி வந்து பொருளாதார விடுதலை வந்து சமூகத்தில் ஓர் இடம் வந்ததுமே அந்த மையிடும் தேவையும் இல்லாமலாகிவிட்டது
எஸ்.ரவிச்சந்திரன்
அன்புள்ள ஜெ
தீற்றல் கதையை வாசிக்கும்வரை நான் பெண்களின் மையிடும் பழக்கத்தில் இவ்வளவுபெரிய மாறுதல் வந்திருப்பதை கவனிக்கவில்லை. உண்மையில் பெண்களின் உடல்களை மூடிமூடி வைத்திருந்த காலகட்டத்தில் கண்கள் அவ்வளவு எக்ஸ்பிரஸிவாக இருந்தன என்று நினைக்கிறேன். இப்போது உடலை மூடுவது குறைவு, கண்கள் மையிடுவது இல்லை. உலகம் முழுக்கவே அதிகமாக கண்களுக்கு மையிடுவது புர்க்கா போடும் பழக்கமுள்ள அரேபியநாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது.
எழுபதுகளில் பாப் ஸ்டார்கள் கூட பெரிதாக கண்வரைந்திருக்கிறார்கள். எலிசபெத் டெய்லர் படங்களில் அந்தம்மா வாலிட்டு கண் எழுதியிருக்கிறார்கள். அந்த வழக்கம் ஒரு பழைய ஞாபகமாக ஆகிவிட்டது. இன்றைக்கு அதைப்போல பெரிய கண்கள் பரதநாட்டியத்தில் மட்டும்தான் உள்ளன என்பது உண்மைதான்.
அந்த கண்களின் ஓர் அசைவு அவனை பித்தாக்கி அழவைக்கும் இடம் ஆழமானது. அந்த நெகிழ்ச்சி என்னைப்போன்ற அறுபதுவயதுக்காரர்களுக்குத்தான் புரியும்
ஆர்,மாதவன்
கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
‘கந்தர்வன்’ உங்களுடைய பல சாதனைக் கதைகளைப் போன்றே, ஒரு குறுநாவல் அளவுக்கே நீண்டிருந்தாலும்,கச்சிதமான, வெகு சுவாரசியமான ஒரு கதை. மொழ மொழவென தொப்பை குலுங்கும் முருகப்பன், வாழைக்குருத்தாய் வள்ளியம்மை, கோயில் காளையாய் அணஞ்சபெருமாள் என்று தெளிவான ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறீர்கள். நோயாளிச் சிறுவனைப் போன்ற மன்னர், அவரைச் சுற்றிய சாதீய வட்டங்கள், அதிகார அடுக்கு வரிசைகள், சமூகத்தில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை என்று காலயந்திரத்தில் ஏற்றி பதினேழாம் நூற்றாண்டு நாஞ்சில் நாட்டில் கொண்டுபோய் இறக்கி விடுகிறீர்கள். கதையின் மைய நிகழ்வுக்கான பின்புலத்தை விளக்கவே வெகுநேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் அந்த அளவு விரிவாகச் சொல்லவில்லையென்றால் பின்பாதி இவ்வளவு ருசித்திருக்கவும் ருசித்திருக்காது. ‘இந்தா முக்குக் கடைல போயி வாழைப்பழம் வாங்கிட்டு வாலே’ என்பது போல அணஞ்சபெருமாளின் உயிரைக் கேட்டு அனுமதியும் வாங்கி விடுகிறார் மாராயக்குட்டிபிள்ளை.தேவர்களை மிதித்து கோபுரத்தின் மேலேறும் போதே நம் மனதில் கந்தர்வனாய் அமர்ந்து கொள்கிறான் அணஞ்சபெருமாள் . அதிலிருந்து உச்சக்காட்சி வரை உங்களுடைய ராஜாங்கம்தான்.
அதுவும் மூன்று உச்சக்காட்சிகள். முதல் உச்சக்காட்சி அணஞ்சபெருமாள் கோபுரத்தின் உச்சியில் தோன்றுவது. இரண்டாவது வள்ளியம்மையின் வருகை. மூன்றாவது சிதையேற்றம். ‘பெண்ணடிகள் மானமா சீவிக்க வழியில்லையா?’ என்பது முருகப்பனின் பராதி மட்டும்தானா? அணஞ்சபெருமாள் உண்மையிலேயே வள்ளியம்மையை அணஞ்சபெருமாள்தானா? அவன் வாழ்வில் ஒரு வள்ளியம்மைதானா? சிதையை நோக்கி வள்ளியம்மையைச் செலுத்தியது எது, அணஞ்சபெருமாளின் மீதான காதலா? முருகப்பன் மீதான வன்மமா? என்று விரித்தெடுக்க பல சாத்தியங்கள். இதில் வள்ளியம்மையின் பார்வையில் இன்னொரு வெகு சுவாரசியமான கதைக்கு இடமிருக்கிறது.
வரலாற்றில் நிலைபெறும் யோகம் செத்தவன் சாதிக்குக் கிடைக்காமல் வேறு சாதிக்குக்கிடைப்பது, அந்த நிலைப்பேறை சொந்தம் கொண்டாடும் உள்சாதிப் பூசல்கள், ஊர்ப் பூசல்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளச் சுதந்திரம் அபாரம். கரையாளர்களிடையே நடக்கும் சம்பாஷணைகள் நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியானவை. ‘அனாதையைப் பலிகுடுக்குததாவே ஆதிசிவனுக்க வளி’ ஒரு சோறு பதம். ஏனோ நாஞ்சில் நாடனின் முகம் நினைவில் வந்தது. ரசித்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்தக் கதையிலும் இதன் தொடர்ச்சியான ‘யட்ச’னிலும் இடம்பெறும் செட்டியார்கள் குறித்த பழமொழிகள் படிக்கும்போதே தெரிந்தது உங்கள் சொந்தச் சரக்கு என்று. இருந்தாலும் மறுநாள் அரசு நூலகம் சென்றபோது அங்கிருந்த கி.வா.ஜ வின் ‘தமிழ்நாட்டுப் பழமொழிகள்’ தொகுப்பில் இதில் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். செட்டியார்கள் குறித்த ஐம்பது பழமொழிகள் நூலில் இருந்தன. இதில் ஒன்று கூட இல்லை.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெ
கந்தர்வன் கதையில் அத்தனை பிள்ளைமார்கள் ஏன் வருகிறார்கள், அவர்களுடைய அன்றாடச் சதிகளும், சில்லறைப்பூசல்களும் எதற்காக என்று நான் கதையை வாசித்தபோது யோசித்தேன். கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சட்டென்று தோன்றியது கதையே அதுதானே? அன்றாடத்தில் திளைக்கும் மிகச்சிறிய மனிதர்களுக்குமேல் எழுந்து நின்றிருக்கும் கந்தர்வனைப் பற்றியதுதானே அந்தக்கதை. அந்தச் சிறியமனிதர்களுக்குமேல் கோபுரத்தில் எழுந்து நிற்பதுபோல நின்றிருக்கிறான் கந்தர்வன்
எஸ்.ரமேஷ்
யட்சன் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கந்தர்வன் கதையை பற்றி எழுதியபோது உண்மையான முருகப்பனின் நிலை என்னவாக இருக்கும், அவன் இவற்றையெல்லாம் எப்படி கடந்திருப்பான் என்பதை கேள்வியாக ஓரிரு வரிகள் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கதைக்குள் இல்லாத கதையை வாசிக்கிறோமோ என்று நினைத்து விட்டுவிட்டேன்.கந்தர்வன், யட்சன் ஆகிய இரு கதைகளிலும் சாதி குளங்களின் பிரத்தியேக மனநிலைகள், பிளவுகள் தாழ்வுணர்ச்சிகள், திறமைகள், பூசல்கள் அதன் அழகியலோடு வெளிப்படுகிறது. ஒருபுறம் மக்கள் தங்களின் நலனுக்காக தனித்தவர்களை பலி கொடுக்கிறார்கள். அப்படி செய்ததன் குற்றவுணர்வினால் மக்கள் பழிக்கு பயந்து அவர்களை தெய்வமும் ஆக்கி சரணடைந்துவிடுகிறார்கள். காலம் கடந்து குற்றவுணர்வு நீங்கிய பின் தெய்வங்களை இலகுவாக்கிக் கொண்டு தங்கள் நலனுக்காக மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சித்தன் சிதையில் வந்த ஆடகபொண் முருகையா பதுகிய பொண்னை திருடிய பங்காளி பழிபாவத்திற்கு பயந்து எரியில் கொண்டு வந்து போட்ட பொண்ணாகவுமிருக்கலாம்.கந்தர்வனும் யட்சனும் இரு எதிர் எதிர் துருவங்களின் கதை. தன்னில் தான் மகிழ்ந்திருக்கும் தெய்வம் ஒன்றும். வெளியே பிறவற்றில் தன் மகிழ்வை தேடும் தெய்வம் இன்னொன்றும். நவீன மொழியில் சொல்வதென்றால் இருவேறு வாழ்கை நோக்கு கொண்ட கலைஞர்கள்.முருகையா முதலிலிருந்து காமத்தில், தன் அழகில் தாழ்வுணர்ச்சி கொண்டவனாக, நிச்சியமின்மை பற்றிய அச்சம் கொண்டவனாக சித்தரிக்கபடுகிறான். அந்த அக குறையை கடக்கவே அவன் பெண்பித்தனாகிறான், செல்வம் சேர்க்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அவன் இயல்பில் போகி, செல்வத்தை தேடுபவன், தன்னிடமிருந்து எதையும் இழக்க விரும்பாதவன். காலம் காலமாக வரலாறு நெடுகிலும் அவன் இழந்தபடி இருப்பதாலும் அவனிடமிருந்து பரித்துகொள்ளபடுவதாலும் முருகையாவுக்கு அது ரத்ததில் ஊரிய இயல்பாக இருக்கலாம்.நாடு முழுவதும் இருவேறு நிலங்களில் இருவேறு இயல்புடன் பலியிடபட்ட நாட்டார் தெய்வங்கள் இனைந்து கந்தர்வர்களாகவும் யட்சர்களாகவும் ஒரு பொது தொன்மமானார்களா.இறுதியில் பிச்சைகார பாபாவாகி தன்னை யட்சன் என்று அழைத்துக்கொள்ளும் முருகையா களிமாடனுக்கும் உடனுரை நங்கைக்கும் வசை அபிஷேகம் செய்கிறான். கோபுர அடுக்குகளில், அழுது அடங்கும் போது புரியும் எதிர்தரப்பின் நியாயத்துக்கு பின்னும் கந்தர்வர்களோடு சமர்புரிந்தபடி அமர்ந்திருக்கிறார்களா யட்சர்கள்.கந்தர்வன் கதையில் அணஞ்சபெருமாள் ஒன்றிலிருந்து அடுத்த அடுத்த தெய்வமாவதுபோல் இக்கதையிலும் முருகையா ஒரே இயல்பு கொண்ட ஒரு தெய்வதிலிருந்து அடுத்த தெய்வமாகியபடி இருக்கிறான்.நான் இந்திய மத வரலாற்றையும் தொன்மவியலையும் சமூக வராலாற்றையும் முழுவதுமாக படித்து அறிந்தவனில்லை. அது அனைத்தும் ஆகி நிற்க்கும் இக்கதைகளை முன்னிட்டு புரிந்துகொள்ள வாசித்தவைதான்.யட்சர்கள் இந்து பொளத்த சமண மதங்களின் தெய்வங்கள், இறை உருவகங்கள். எதிர் மனநிலை கொண்டவர்கள், போகதின் மீது செல்வத்தின் மீது அளவில்லா ஆசை கொண்டவர்கள், கட்டுக்கடங்காதவர்கள். செல்வங்களின் தெய்வமாகி குபேரனும் யட்சர்களுள் ஒருவராக சொல்லப்படுகின்றான். ஒருவிதத்தில் யட்சர்கள் குழந்தை மனம் படைத்தவர்கள்.இயக்கன் ஆரியர்களை எதிர்க்கும் சாமியாக சொல்லப்படுகிறது. நான் பார்த்தவரை காலம் காலமாக நீளும் சமர் இது என்று தெரிகிறது.முருகன் எதிர்ப்பது முருகனைதான். அது யாருக்கும் தெரிவதில்லை.அதாவது பழைய முருகன், தன் இடத்தை எடுத்து கொண்டதற்காக புது முருகனை எதிர்க்கிறான். மற்றது வலியது என்பதற்காக தன்னைவிட்டு பிரிந்த பெண்னை தன்னுடையவளான வள்ளியையும் எதிர்கிறான். ஆனால் இரண்டு முருகனுக்கும் கந்தர்வர்ளாக யட்சர்களாக அவர்களின் இடம் கோபுரத்தில் கொடுக்கபட்டுள்ளது. மூவரும் நாட்டார் தெய்வங்காளாக வழிபடபடுகிறார்கள். இதுதான் இந்திய சமூகத்தின் அடிப்படை வரலாறு தெய்வங்களின் வரலாறு என்று இக்கதைகளை புரிந்துக் கொள்ளலாமா.இரண்டு கதைகளிலும் ரத்ததாளும் பழியாலும் சமராளும் தெய்வங்களாலும் ஆன இடியாப்பம் ஒற்றை பிரித்து மீண்டும் இடியாப்பம் ஆக்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் மூளையை நினைத்தால்தான் வியப்பாக இருக்கிறது.நன்றிபிரதீப் கென்னடி.அன்புள்ள ஜெ,யக்ஷன் கதையின் சித்தரை சித்தரா போகியா பித்தரா என்று கொள்வது கடினம். அனால் இரண்டு மர்மங்கள். ஒன்று அத்தனைபெரிய பொன்குவியலை கையிலேயே வைத்திருக்கிறார். இரண்டு, செத்தவன் தானே என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார். உண்மை கலங்கிவிடுகிறது. பொய்யும் கலங்கிவிடுகிறது. ஆகவே அதற்கு அப்பாலுள்ள ஒன்று அவருக்கு சிக்குகிறதுமகாதேவன்குமிழிகள், கூர்- கடிதங்கள்
குமிழிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதை விவாதங்களை உருவாக்குவதைக் காண்கிறேன். அவற்றை வெறும் ஒழுக்கவியல் விவாதங்களாக என்னால் காணமுடியவில்லை. அவற்றில் அடிப்படைக் கேள்வி ஒன்று உள்ளது. ஒரு கதை அந்த அடிப்படைக் கேள்வியை சென்று தொடும்போது மட்டும்தான் இத்தனை விவாதங்கள் உருவாகின்றன. அந்த கேள்வியை சரியாக காட்டும் உருவகம் தேவை. அந்த வகையான உருவகம்தான் மார்பகங்கள். என்றுமே மனிதகுலத்துக்கு அது ஒரு அடிப்படையான உருவகமாக இருந்துள்ளன.
சங்க இலக்கியங்களில் பார்த்தால் பெண்ணின் அடையாளமாகவே முலைகள் உள்ளன. இளம்பெண்ணை ஏந்திளமுலை என்று சொல்கிறார்கள். முதியபெண்ணை பொல்லா வறுமுலை என்கிறார்கள். முலை பாலியல் அடையாளமாக மட்டும் இல்லை. பெண்ணடையாளமாகவும் உள்ளது. இந்தியச்சிற்பங்களும் முலைகளின் மேல் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றன
ஒர் உறுப்பு இத்தகைய குறியீடாக மாறியிருக்கும்போது அதைப்பற்றிய ஒரு பேச்சு என்பது மிகப்பெரிய கேள்விகளைக் எழுப்புவதாக ஆகிவிட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விஷயத்தைப் பேசி முடியாது என்றே நினைக்கிறேன்.
குமிழிகள் கதையில் எழும் கேள்விகள் இரண்டுதான். முலை என்பதற்கான தேவை இரண்டு. குழந்தைக்குப் பாலூட்டுவது. காமத்திற்கான தூண்டுதல். இரண்டுமே சாத்தியமில்லை என்றான பின் அது வெறும் அடையாளமாக ஆனால் அது என்னவாக பொருள்படுகிறது. பாலூட்டவும் முடியாது, தொடவும் முடியாது. பெண்ணுக்கான ஓர் அடையாள அறிவிப்பாக மட்டும் அது ஆகிவிடுமா என்ன?
கார்த்திக்
அன்புள்ள ஜெயமோகன்
தங்களின் தளத்தில் படித்த குமிழிகள் சிறுகதை தொடர்பில் என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
யதார்த்தத்திற்கும்,நவீனத்திற்கும் இடையே உள்ள போராட்டம் தான் கதை.
சாமிநாதன் உலகோடு ஒட்டி வாழ விரும்புவனாக உள்ளான். ஆணும் பெண்ணும் உடம்பாலேதான் உரையாடிக்க முடியும்.அந்த தொடர்பு ரொம்ப டீப்பானது.அதற்கு பல லட்சம் ஆண்டு பரிணாம வரலாறு உள்ளது என்கிறான்.
அதற்கு லிலி அதிலே ஒரு சுரண்டல் இருக்கு. அடிமைத்தனம் இருக்கு. அது வேண்டாம் என்கிறாள்.வேறு வகை உரையாடல் நடக்கலாமேன்னு சொல்றேன் என்கிறாள்.
குழந் தைத்தனமான மூக்கை ஐரோப்பிய மூக்காக மாற்றம் செய்து கொள்வது மற்றும் செஸ்ட் டெவலப்மெண்ட் செய்து கொள்வது தொடர்பான விவாதங்களில் அவன் மனது முற்றிலும் காம ம் நோக்கியே சிந்திக்கிறது.
ஆண் ஆதிக்க மனதுக்கு நிகராக பெண் ஆதிக்க மனது இருந்தால் தான் பெண்மை வெல்ல முடியும். அதையே லி லி செய்கிறாள். அவள் பெண்ணிற்கே உரிய உரிமைகளை இரு விவாதங்களின் போதும் பின்வருமாறு ஸ்தாபிதம் செய்கிறாள்.
உடம்பு மாறிட்டு இருக்கு.முகம் மாறிட்டு இருக்கு. அதுக்கேத்தாப்ல உன்னோட டேஸ்டும் மாறித்தான் ஆகனும்.
எக்ஸ்பிரசன்னா செக்ஸ் மட்டும் இல்லை. அழகு, திறமை,பலம், இளமை அனைத்தும் தான் என்கிறாள்.
அவள் தன் வேலையைச் செய்து முடிக்க இளமை,துடிப்பு மற்றும் ஹெல்த் முக்கியம் என்கிறாள்.
மேல்வர்க்கத்திலும், மத்திய தர மேல்வர்க்கத்திலும் தற்போது இது சாத்தியம் தான். காலம் செல்லச்செல்ல அனைத்து மக்கள் வர்க்கத்திலும் சாத்தியம் ஆகும் வாய்ப்புகளே அதிகம்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே வந்த பிறகு தான் பல கிராமங்கள் நகர நாகரிகத்திற்கு பழகின.
தற்போது இணையம் அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
இனிவரும் காலங்கள் சில பழமைகளைப் பாதுகாக்க தான் போராட வேண்டி வருமே தவிர இது போன்ற செயல்களில் அனைவரும் தங்களை எளிதாக தகவமைத்துக் கொள்வது சாத்தியமே.
நன்றி
மு.மாணிக்கம் ,
நற்சாந்துபட்டி
புதுக்கோட்டை.
கூர் [சிறுகதை]அன்புள்ள ஜெ
கூர்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
என்பது குறள். எனவே குழந்தைதனமாக இறாய் ஊக்கமுள்ளதுவே என்கிறார் வள்ளுவர்.
நீ என்றோ தாக்கபடலாம் என்பது மட்டுமல்ல. இங்கு உன் கூரால் நீ குத்தமுடியாது வெறுளவும் சில உண்டு என்றும் இக்கதையை வாசிக்கலாம் போல.
நன்றி
பிரதீப் கென்னடி.
அன்புள்ள ஜெ
கூர் போன்ற கதையைப் புரிந்துகொள்வதில் நமக்கு பலவகையான சிக்கல்கள் உள்ளன. இந்த உலகத்தை நாம் இன்னும் அணுக்கமாக தெரிந்துகொள்ளவில்லை. உண்மையில் இங்கே கேஸ்கள் எழுதப்படுவது மிகமிக இயந்திரத்தனமாகத்தான். உண்மையான சிக்கல்களை கோர்ட்டுக்கு கொண்டுவரவே முடியாது. நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது. ஆகவே காலாகாலமாக எப்படி கேஸ் எழுதப்படுமோ அப்படி, அதே வார்த்தைகளிலேயே கேஸை மீண்டும் எழுதுவது வழக்கம். அதுதான் பப்ளிக் பிராசிக்யூட்டருக்கு எளியது. அவர் நன்றாகக் கேசை நடத்தமுடியும். ஆகவே நீதிமன்றத்தில் ஒரு புதியவிஷயம் பேசப்படுவது மிக அபூர்வம்.
ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் புதியபுதிய செய்திகள் வந்துகொண்டே இருக்கும். ஏராளமான புதிய செய்திகள் வரும். அந்தச் சிறுவனைப்போன்ற ஒருவனை நானே கண்டிருக்கிறேன். அவனுடைய வன்மத்தையும் கண்டிருக்கிறேன். மனிதர்கள் குப்பைக்கூடையில் தூக்கி போடப்படுகிறார்கள் என்பது உண்மை. பைபிளில் அந்த மனிதர்களுக்கான வாசகம் உள்ளது. வேறெந்த மதமும் குப்பைக்கூடைகளில் உள்ள மனிதர்களுக்காகப் பேசவில்லை.
அந்தச் சின்னப்பையன் ஆரீஸ் ஏன் அதைச் செய்கிறான். அவனுக்கு அவனைக் கைவிட்ட சமூகம் மீது வன்மம் உள்ளது. அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு அவர்கள் எவர் என்றும் தெரியாது. கொலைசெய்ய வாய்ப்பு வரும்போது அதைச் செய்கிறான். அன்புதான் அவனுக்கு கோபம் வரச்செய்கிறது. பிச்சைக்காரர்கள் நிறையப் பிச்சைபோடுபவர்களை வெறுப்பார்கள் என்பதை கண்டிருக்கிறேன். ஞானப்பன் தன் பேரனிடம் அன்பாகப் பேசுவதைக்கண்டு ஆரீஸ் அவனைக் கொல்கிறான். அவனிடமே ஞானப்பன் அன்பாகப்பேசியிருந்தாலும் கொன்றிருப்பான். மக்கா என்று அழைத்ததுமே அந்தப் பிள்ளைகளுக்கு வரும் கோபம் அதைத்தான் காட்டுகிறது
டேவிட் தேவாசீர்வாதம்
குமிழிகள், கடிதங்கள் குமிழிகள் -கடிதம் குமிழிகள்- கடிதங்கள் குமிழிகள்,கடிதங்கள் குமிழிகள்- கடிதங்கள்
March 10, 2021
ஆமென்பது… [சிறுகதை]
”எண்ணங்களுக்கு வானம் அளவுக்கு சுதந்திரம் உண்டு, சொல்லுக்கு கையளவுக்குச் சுதந்திரம்தான்” பிரபானந்தர் சொன்னார். “சொல்லுக்கு இருக்கும் சுதந்திரம்கூட எழுத்துக்கு இல்லை. ஆகவே நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சொன்னதை எல்லாம் எழுதிவிடக்கூடாது. எண்ணங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். அவை பறக்கும் தேவதைகள் போல. பின்னால் துரத்திச்செல்லக் கூடாது. சில தேவதைகள் திரும்பிப் பார்க்கும் கணமே பேய்களும் ஆகிவிடும்”
நான்கு நாட்களுக்கு முன்புதான் நாங்கள் ஹைதராபாதுக்கு வந்தோம். அது முதலே அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் அதேபோல எதிலும் பட்டுக்கொள்ளாமல் வேறெதையோ பேசிக்கொண்டிருந்தார். நான் கவிஞர் கே.வி.ரமாவை பார்த்தேன். அவர் கைகளை மடியில் ஊன்றி முதுகை குவித்து தலைகுனிந்து மண்ணை நோக்கி அமர்ந்திருந்தார். நான் தூணில் சாய்ந்து நின்றிருந்தேன்.
அது போதானந்த மடத்திற்குச் சொந்தமான விருந்தினர் விடுதி. ஆனால் காவி உடையுடன் பிரபானந்தர் அங்கே பொருந்தாமல் தெரிந்தார்.“வானத்தில் கோடானுகோடி தெய்வங்கள், தேவர்கள், தேவதைகள், பேய்கள், ஆவிகள் நிறைந்திருக்கின்றன. உண்மையில் அதெல்லாம் சொற்கள், நான் அச்சொற்களால் உத்தேசிக்கப்படும் ஒன்றைச் சொல்கிறேன். அவை நம்மை ஒவ்வொரு கணமும் கடந்துசெல்கின்றன. நம்மிலெழும் ஒவ்வொரு எண்ணமும் அவ்வாறு ஒன்று நம்மைக் கடந்துசெல்வதனால் உருவாவது. அவற்றை அப்படியே விட்டுவிடவேண்டும். மலைகளின்மேல் காற்றுபோல அவை சென்றுவிடவேண்டும்” என்றார்.
பித்தர்களுக்குரிய இடம்பொருள் தொடாத ஒரு பாவனை அவரிடமிருந்தது. ”உண்மைதான், காற்று தடம்பதிக்காமல் செல்வதில்லை. மலைகளின் முகங்கள் காற்றால் செதுக்கப்பட்டவை. ஆனால் மலை காற்றை அள்ளிப்பற்ற முயல்வதில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் தெய்வங்களையும் பேய்களையும் அப்படியே விட்டுவிடவேண்டும்” என்று அவர் தொடர்ந்தார். “சில தெய்வங்கள் நம்மில் ஒருகணம், கணத்தில் ஆயிரத்திலொரு துளிநேரம் நிலைகொள்கின்றன. சில தெய்வங்கள் சில நிமிடங்கள். சில தெய்வங்கள் மணிக்கணக்கில் நாட்கணக்கில் வாரக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நிலைகொள்கின்றன. சில தெய்வங்கள் சிலரை வாழ்க்கை முழுக்க கவ்விக்கொள்கின்றன.”
”அதை நாம் தீர்மானிக்கமுடியாது. அது விதி. அதை அவை தீர்மானிக்கின்றன. அவை இங்கே தங்களை ஊன்றிக்கொள்ள முயல்கின்றன. அவ்வாறுதான் இத்தனை தெய்வங்கள் இங்கே” என்றார் பிரபானந்தர் “பூமியில்தான் எத்தனை கோடி தெய்வங்கள். கொடியும் கோட்டையும் கொண்டு படுத்துக் கிடக்கும் அனந்தபத்மநாப சாமி முதல் வயல் வரப்பில் ஒற்றைக்கல்லாக அமர்ந்திருக்கும் காட்டு மறுதா வரை…அவையெல்லாம் ஒவ்வொரு கணத்தில் மானுட மனத்தை தொட்டவைதான். ஏதோ காரணத்தால் அவற்றை அறிந்தவர்கள் அவற்றை பிடித்து நிறுத்திக்கொண்டார்கள்”
“ஒரு கல்லில் அவற்றை இங்கே நிறுத்திவிடலாம். ஆனால் நிலைகொண்டுவிட்ட தெய்வம் பலி கேட்கிறது. வழிபாடுகளை பூசைகளைக் கோருகிறது. அதற்கு துதியும் தோத்திரமும் தேவைப்படுகிறது. அது ஒருபோதும் நம்மை அதை மறக்கும்படி அனுமதிப்பதில்லை….” கைகளை விரித்து பிரபானந்தர் சொன்னார் “ஆகவேதான் நான் சொல்கிறேன், இருக்கும் தெய்வங்கள் போதும் நமக்கு. தெய்வங்களை அதன் போக்கில் விட்டுவிடுங்கள்… எதையும் பிடித்து நிறுவ முயலாதீர்கள். பிரதிஷ்டிக்காதீர்கள். ஆமாம்,பிரதிஷ்டிக்கவே செய்யாதீர்கள். நான் சொல்லும் ஒரே உபதேசம் அதுதான்”
அவர் ஒரு வகையான ’எக்ஸெண்டிரிக்’ என்று முன்னரே சொல்லியிருந்தார்கள். சூடன்சாமி என்றுதான் அவரைப்பற்றி மடத்திலும் சொன்னார்கள். “… ஆனால் பிரச்சினையற்றவர், அவர் சொல்வதை காதுகொடுத்துக் கேட்காமலிருந்தால் மட்டும் போதும்” என்று திருவனந்தபுரம் தலைமை மடத்தில் சாது சங்கரதாஸ் நாங்கள் கிளம்பும்போது சொன்னார்.
“நேற்று என்னிடம் கௌமுதியிலிருந்து கே.வி.ஜயானனைப்பற்றி கேட்டார்கள். நான் எதையும் வாசித்ததில்லை என்று சொன்னேன். எழுத்தாளர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். தாங்கள் அறியாத தெய்வங்களை பிடித்து நிறுவிவிடும் துரதிர்ஷ்டம் கொண்டவர்கள் என்று சொன்னேன். அவன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. நான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்காது” என்றார் பிரபானந்தர்.
உள்ளிருந்து அர்ஜுனன் நாயர் வெளியே வந்தார். வாயில் போட்டிருந்த வெற்றிலையை சுவர் மடிப்பில் துப்பிவிட்டு நாவால் பற்களை துழாவியபடி படியேறிவந்தார். வேட்டி நுனியை தூக்கி வாயின் ஓரங்களை துடைத்துக்கொண்டு சுவர் ஓரமாக திண்ணை விளிம்பில் அமர்ந்தார்.
“என்ன ஆயிற்று?”என்று நான் கேட்டேன்.
“இன்னும் திரும்பி வரவில்லை… வந்தால் உடனே சொல்வதாக வீட்டு உரிமையாளர் பெண்மணி சொன்னார்… அதைத்தான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்”
நான் கவிஞர் கே.வி.ரமாவை பார்த்தேன். அவர் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.
“அவன் எங்கே போனான் என்று எவருக்குமே தெரியாதா? ஆச்சரியம்தான்”என்று பிரபானந்தர் சொன்னார்.
“அமெரிக்கா அப்படித்தான். தேவையென்றாலும் இல்லாவிட்டாலும் இன்னொருவரைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இன்னொருவரைப் பற்றி அக்கறையே காட்டமாட்டார்கள். எங்கு போகிறீர்கள் என்று கேட்பது இருக்கட்டும், உடம்பு சரியில்லையா என்று கேட்பதெல்லாம்கூட பெரிய உரிமைமீறலாக நினைப்பார்கள்”
“இவன் ஏதோ விளம்பர நிறுவனத்தில்தானே வேலைசெய்கிறான்?” என்றார் பிரபானந்தர்.
“ஆமாம், புகைப்படம் எடுப்பான் என்கிறார்கள்” என்றார் அர்ஜுனன் நாயர் “வயது முப்பத்தாறு ஆகிறது. திருமணம் செய்து விவாகரத்து ஆகிவிட்டது. நல்ல திறமையான ஆள் என்கிறார்கள்… இந்தியாவுக்கு வந்து நாலைந்து ஆண்டுகள் இருக்கும்”
நான் அதில் ஏதும் தலையிட விரும்பவில்லை, வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
“அவர்கள் அங்கே எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று சிந்திக்கக்கூட முடியவில்லை. சாதனா இல்லாத தனிமை என்பது ஒருவகை நோய்” என்றார் பிரபானந்தர். “எங்கே போயிருப்பான் அப்படி?”
“ஏதாவது பெண்ணுடன் போயிருப்பான். அவர்களுக்குத்தான் அங்கே காம்பிங், டிரெக்கிங் என்று என்னென்னவோ உண்டே”என்றார் அர்ஜுனன் நாயர்
பிரபானந்தர் சலிப்புடன் “இங்கே இப்படி காத்திருப்பதில் அர்த்தமில்லை. இப்போதே இரண்டு நாட்களாகிவிட்டது. செய்தி அறிந்து கிளம்பி வருவதாக இருந்தாலும் டிக்கெட் கிடைத்து, விமானம் ஏறி, நடுவே ஊர்மாறி வந்துசேர ஒருவாரமாகும்… வாழ்க்கையே சாவுக்கான காத்திருப்பு. செத்தபிறகும் காத்திருப்பதென்றால் பெரிய அபத்தம்” என்றார்.
“ஆனால் அவர் தனக்கு முறையாக இறுதிச்சடங்குகள் செய்யப்படவேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் மகனே செய்யவேண்டுமென்று விரும்பினார். உயில்கூட எழுதியிருக்கிறார்” என்று நான் சொன்னேன்.
“அதெல்லாம் வெறும் செண்டிமெண்டுகள்”என்றார் பிரபானந்தர் “ஒரு வேதாந்திக்கு சடங்குகள் எல்லாம் குறியீடுகள் மட்டுமே என்று தெரியும். பஞ்சபூதங்களாலானது உடல். மிருண்மய மனோஞ்யம். ஆத்மா அந்த ரதத்தில் ரதன். அவனுடைய வழி வேறு. ரதம் உடைந்தபின் அக்கணமே ரதன் தாவிவிடுகிறான்…” அவர் கைகளை நீட்டி சோம்பல் முறித்தபின் “சடங்கு வேண்டும் என்றால் அதற்குரிய மறுவழிகளைப் பார்க்கலாம். சாஸ்திரப்படி மகனாக எவர் வேண்டுமென்றாலும் நின்று சடங்குகளைச் செய்யலாம்”
”ஆனால் அவர் ஆசைப்பட்டார்…”
”மகன்தான் சடங்குகள் செய்யவேண்டுமென்று சொன்னாரா?”என்று பிரபானந்தர் கேட்டார்
”நான் சொன்னேனே, பலமுறை சொல்லியிருக்கிறார். கடைசியாக எழுதியும் வைத்திருக்கிறார்”
“அதைத்தான் சொன்னேன், வெறும் செண்டிமெண்ட்” என்று பிரபானந்தர் எழுந்துகொண்டார். “சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் கவிதை உண்டே. பஞ்சபூதங்களென் காத்ரம்… நல்ல வரிகள்” கொட்டாவி விட்டு “நான் கொஞ்சம் படுக்கவேண்டும்”
காவிமேலாடையை சுழற்றி சுற்றியபடி அவர் உள்ளே செல்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்
“சாமியார்கள் பிறப்பு, சாவு, கல்யாணம் எல்லா சடங்குகளிலும் அபத்தமாக தெரிகிறார்கள்” என்றார் அர்ஜுனன் நாயர்
“அவன் வந்து இறுதிச்சடங்குகள் செய்யவில்லை என்றால் அவர் ஏமாந்துதான் போவார்”
“அவர்தான் போய்விட்டாரே”
“போகவில்லை என்பதுதானே நம் நம்பிக்கை? நமக்கு என்ன தெரியும்?”
“இங்கே அலைகிறாரா என்ன?”
“அந்த உடலருகே இருப்பார் என்று சொல்வார்கள்”
“சரிதான்”என்றார் அர்ஜுனன் நாயர் “கடைசிக்காலத்தில் அவர் எழுதிய கதைகள் எல்லாமே இந்தவகையான நம்பிக்கைகள் கொண்டவை. எஸ்.வினோதகிருஷ்ணன் அவற்றை மெட்டஃபிசிக்கல் ரியலிசம் என எழுதியிருக்கிறார். ஆனால் அவை அவருக்கு புனைவுகள் அல்ல, அனுபவ உண்மைகள்…”
நான் புன்னகைசெய்தேன்.
“ஆனால் ஒருகணக்கில் அவர் சொல்வது சரிதான். இது ஒரு சாதாரண மனிதன் என்றால் எத்தனை நாள் வேண்டுமென்றாலும் காத்திருக்கலாம். பிரச்சினை இல்லை. இப்போது மொத்த கேரளமும் காத்திருக்கிறது. நான்குநாட்களாக ஊடகங்களில் பெரிய செய்தியே இதுதான். மறைந்தவர் கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர். நாடறிந்த கார்ட்டூனிஸ்ட். அத்தனை பேரின் காத்திருப்பும் ஒன்றாகச் சேரும்போது மலைபோல எடைமிக்கதாக ஆகிவிடுகிறது” என்று அர்ஜுனன் நாயர் சொன்னார்.
“அதற்கென்ன செய்வது? நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும். அவருடைய ஆசை என்ன என்று இப்போது ஊருக்கே தெரியும்”
“ஆமாம், பார்ப்போம். எப்படியும் இன்று வந்துவிடுவான்”
“மகனுடன் அவருக்கு தொடர்பே இல்லையா?” என்றேன்.
அர்ஜுனன் நாயர் திரும்பி கே.வி.ரமாவைப் பார்த்துவிட்டு குரல் தழைய, “பெரிதாக தொடர்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். போனில் பேசியதாக தெரியவில்லை. கடிதங்களும் போடுவதில்லை. ஒருமுறை அவருக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக ஆனபோது ஃபோனில் அழைத்தோம். பதில் இல்லை….”
கே.வி.ஜயானன் கடைசி ஆறாண்டுகளை போதானந்த மடத்தில்தான் கழித்தார். அவருக்கு என ஒரு குடில் இருந்தது. அதில் தன் பூனையுடன் தனியாக இருந்தார். அவருக்கு பார்க்கின்சன் நோய் இருந்தது. ஆகவே கூடவே ஒரு வேலையாளும் துணையிருந்தார். அறுபது வயதான குஞ்ஞப்பன். ஆனால் குஞ்ஞப்பனுக்கு அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாது.
”நல்ல ராயல்டி வருமானம் உண்டு. அதையெல்லாம் சட்டப்படி மகனுக்குத்தான் எழுதிவைத்திருக்கிறார்”என்று அர்ஜுனன் நாயர் சொன்னார்.
சற்றுநேரம் மீண்டும் அமைதி நிலவியது. இப்படி அவ்வப்போது உருவாகும் அமைதிகள்தான் பெரிய எடைகொண்டவை. அவற்றை வெல்லத்தான் பேசிக்கொண்டிருந்தோம். அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தாலும் பிரபானந்தர் இருந்தவரை நன்றாகத்தான் இருந்தது என்று தோன்றியது.
வாசற்கதவருகே ஓர் அசைவை கண்டதும் உண்மையில் ஆறுதல்தான் தோன்றியது. தோளில் காமிராவுடன் வந்தவன் பத்திரிகையாளன் என்று தெரிந்தது. பத்திரிகைக்கரானா என்ற எண்ணம் வந்ததுமே நல்லவேளை டிவிக்காரன் இல்லை என்ற நிம்மதியும் உருவாகியது
கருப்பான, குள்ளமான இளைஞன். அருகே வந்து வெளியே தயங்கி நின்றான். அர்ஜுனன் நாயர் “ம்?” என்றார்
“நான் ஜன்மபூமி இதழின் நிருபர் திவாகரன். ஒரு சின்ன பேட்டிக்காக வந்தேன்”
“யாரிடம்?”
”அப்படி இல்லை… பொதுவாக” என அவன் தயங்கி என்னை பார்த்தான்.
“இங்கே நடப்பதைத்தான் டிவியில் காட்டிக்கொண்டே இருக்கிறார்களே”
“ஆமாம். அதனால்தான் கொஞ்சம் ஆழமாக ஒரு ஃபீச்சர் மாதிரி ஏதாவது எடுத்துத் தரச்சொன்னார்கள். நான் அரசியல் நிருபர். இலக்கியம் எல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு வேறுவழியில்லை”என்றான்.
“பேட்டி கொடுக்கும் சூழல் இல்லை…நாளைக்குப் பார்க்கலாம்”என்றார் அர்ஜுனன் நாயர்.
“அது கவிஞர் கே.வி.ரமா தானே? மறைந்த எழுத்தாளர் கே.வி.ஜயானனின் தங்கைதானே? நான் ஃபோட்டோக்களில் பார்த்திருக்கிறேன்” என்றான். “ஹலோ மேடம் என் பெயர் திவாகரன். ஜன்மபூமி நிருபர். எனக்கு ஒரு ஐந்துநிமிடம் பேட்டி வேண்டும்… ஐந்தே நிமிடம்போதும்”
கே.வி.ரமா கோபமாக ஏதோ சொல்லப்போகிறார் என நான் நினைத்த கணம் அவர் அசைவுகொண்டு கையசைத்து அவனை அருகே அழைத்தார். அவன் அருகே வந்தான்.
“என்ன?”என்றார்.
“ஒரு சின்ன பேட்டி… நாலே நாலு கேள்விகள்”
“கேள்”
“டீச்சர் இப்போது கொஞ்சம் களைப்பாக இருக்கிறார்…”என்று நான் ஊடே புக அவர் பரவாயில்லை என்று கைகாட்டினார். பேசவிரும்புகிறார் என்று தெரிந்தது. அவர் பேசிக்கேட்டே நீண்டநேரம் ஆகிறதென்று எண்ணிக்கொண்டேன்.
“மேடம், நான் இலக்கியத்துக்கு புதியவன். நான் சேகரித்த தகவல்களில் இருந்து கேட்கிறேன். ஒரு தங்கையாக நீங்கள் கே.வி.ஜயானன் அவர்களிடம் நெருக்கமாக இருந்தீர்கள். உங்களுக்கும் இலக்கிய ஆர்வம் இருந்தது. அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
தடித்த மூக்குக் கண்ணாடியை சுட்டுவிரலால் தூக்கிவிட்டுக்கொண்டு கே.வி.ரமா சொன்னார், “தாயில்லாக் குழந்தை… ஒருவகையான அனாதை. உணர்வுரீதியாக அலைபாய்ந்து கொண்டே இருந்தார். அவருக்கு அடைக்கலம் தேவைப்பட்டது. எங்காவது ஒண்டிக்கொள்ளவும், எதையாவது பிடித்துக்கொள்ளவும் தவித்துக்கொண்டே இருந்தார்”
“ஓ”என்றான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்று தெரிந்தது. இவன் எதையும் உருப்படியாக எழுதமாட்டான் என்று புரிந்துகொண்டேன். அது நல்லதுதான். எதைப்பற்றியும் எச்சரிக்கை அடையவேண்டியதில்லை. எனக்குப் புன்னகை வந்தது.
“அவரை நீங்கள்தான் போதானந்தர் மடத்துக்குக் கொண்டுவந்தீர்கள் இல்லையா? நீங்கள் முதலிலேயே இங்கே வந்துவீட்டீர்கள்தானே?” என்றான் திவாகரன்.
“ஆமாம், அவருக்கு தேவை ஒரு தந்தை. போதானந்தரை அவருக்கு தந்தையாகத்தான் அறிமுகம் செய்தேன். அவருக்கு குருவும் தெய்வமும் தேவையில்லை. அவர் தேடியதெல்லாம் தந்தையை மட்டும்தான்”
அவன் முற்றாகவே குழம்பிப்போய் என்னைப் பார்த்தான். ஆனால் கே.வி.ரமா தொடர்ந்து பேச ஆரம்பித்தார்
“எங்கள் அப்பா மலபார் ஸ்பெஷல் போலீஸில் உயரதிகாரி. கம்பீரமானவர், கண்டிப்பானவர். கிழக்குவாதுக்கல் அச்சுதன் வைத்தியன் வேலாயுதன் என்றால் அந்தக்கால பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அனைவருக்கும் தெரியும். பல முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்தவர். ஆகவே நிர்வாகச் சிக்கல்கள் கொண்ட இடங்களுக்கு அவரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் என்றால் மலபார் முதல் விசாகப்பட்டினம் வரை. அப்பா பெரும்பாலும் தமிழ்நாட்டிலும் பாலக்காட்டிலும்தான் வேலைபார்த்தார்”
“நாங்கள் இளமையில் பதிமூன்று ஆண்டுகள் பாலக்காட்டில்தான் வாழ்ந்தோம்.பாலக்காடு அருகே ஒரு சிறிய ஊர்.விஜயசிருங்கநல்லூர். எங்கள் வீட்டைச்சுற்றி மலையடுக்குகள் சூழ்ந்து நின்றிருக்கும். அமைதியான மலைகள். எதற்காகவோ முடிவில்லாமல் காத்திருப்பவை போன்ற மலைகள். அந்த மலைகள் எங்கள் வாழ்க்கையில் மிகமிக ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. அண்ணா அந்த மலைகளை கனவில் பார்த்தபடியே இருந்தார். கடைசிநாட்களில் அவர் வரைந்த எல்லா ஓவியங்களிலும் அலையலையாக மலைகள்தான் இருந்தன”
கே.வி.ரமா கண்களைத் தாழ்த்தி நிலத்தைப் பார்த்தபடி சொல்லிக்கொண்டே சென்றார். திவாகரன் தன் ரெக்கார்டரை இயக்கிவிட்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். கே.வி.ரமாவே ஓர் ஒலிக் கருவியாக ஆகிவிட்டதுபோல குரல் சீராக எழுந்தது.
அப்பா எங்களை தொட்டு கொஞ்சி பேசிய நினைவே இல்லை. அவர் வீட்டுக்கே வருவதில்லை. பெரும்பாலும் பயணங்கள். பாலக்காட்டின் மலைப்பகுதிகளில் அன்றைக்கு நாடோடித் திருடர்கள் மிகுதி. கொங்குநாட்டிலிருந்து கணவாய் வழியாக வரும் சரக்குவண்டிகளில் கொள்ளையடிப்பவர்கள். அன்று கொங்குநாட்டில்தான் எல்லா மில்களும் இருந்தன. துணி முழுக்கமுழுக்க அங்கிருந்துதான் வரவேண்டும். கொள்ளைக்காரர்களைப் பிடிக்கச்சென்று ஆங்காங்கே காம்ப் அமைப்பார். அம்மாவும் நாங்களும் உறவினர்களுடனும் வேலைக்காரர்களுடன் தனியாக இருந்தோம். அம்மா இறந்தபின் அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். என்னைவிட எட்டுவயது மூத்தவர் எங்கள் சித்தி. சித்தியும் பெரும்பாலும் அப்பாவுடன் காம்புகளுக்குச் செல்வார்.
அண்ணா குறைப்பிறவியாகப் பிறந்தார். ஏழுமாதத்தில். அவர் ஒரு உள்ளங்கைக்குள் வைக்கும் அளவே இருந்தார் என்பார்கள். அவரை கோயம்புத்தூரில் ஒரு வெள்ளைக்கார டாக்டர்தான் காப்பாற்றினார். ஆனால் அவருடைய நரம்புகள் சரியாக அமையவில்லை. உடம்பின் அசைவுகளில் ஒருமை கூடவே இல்லை. இளமைக்காலம் முழுக்கவே அவர் நோயுற்றிருந்தார். மூட்டுகளின் வீக்கமும் வலியும் உண்டு. அடிக்கடி வலிப்பு வந்து விழுந்து விடுவார்.அவரை பதினான்கு வயதுவரை பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அவருக்கு வீட்டிலேயே ஆங்கிலமும் பொதுப்பாடமும் சொல்லிக்கொடுத்தார்கள். பதினைந்து வயதில் இ.எஸ்.எஸ்.எல்.சி எழுதி பள்ளிக்குச் சென்றார். அவர் பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். அவர் அக்காலத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ இலக்கியத்தில் தங்கப்பதக்கம் வாங்கினார்.
ஆனால் அவர் எப்போதும் பதறிக்கொண்டே இருந்தார். எப்போதாவது அவர் கைகளை தொட்டால் அவர் நடுங்கிக்கொண்டே இருப்பது தெரியும். அவருடைய உள்ளங்கைகள் ஈரமாகவே இருக்கும். உதடுகள் வெளுத்திருக்கும். சிறுவயதிலேயே தடிமனான கண்ணாடி போட்டுவிட்டார். கண்கள் நீருக்குள் மிதந்து அலைவதுபோல தெரியும். உரக்க ஓசை எழுந்தால் அண்ணாவின் உடல் துள்ளிவிழும். எதிர்பாராமல் எதையாவது அவரிடம் சொன்னாலோ, அவர் சொல்லமுயன்றாலோ, வலிப்பு வந்துவிடும். அவரை அவர் பார்க்காதபோது நாம் தொடவே கூடாது. உணர்ச்சிகரமாக ஏதாவது பேசினால் வாய் கோணலாகி, கழுத்து இழுபட்டு திக்கல் வரும்.அண்ணா அணைந்து அணைந்து எரியும் ஒரு தீச்சுடர் போலத்தான் எப்போதும் எனக்குத் தோன்றினார்.
ஆனால் அவர் வாசித்துக்கொண்டே இருந்தார். ஒருநாளில் பத்துப்பன்னிரண்டு மணிநேரம் வாசித்தார். இலக்கியம் ,தத்துவம் ,கலை ,அரசியல், வரலாறு. கணிதமும் அறிவியலும் அவருக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அல்லது அவருக்கு அவை பிடிபடவே இல்லை. பெரும்பாலான நேரம் படித்துக் கொண்டிருப்பார். அப்போது அவருடைய கண்கள் கண்ணாடி வழியாக தனியாகப் பிரிந்து வந்து நிற்கும். மேஜைவிளக்கு மட்டும் எரிய இரவில் அவர் படித்துக்கொண்டிருக்கையில் அவர் மறைய , அவருடைய கண்கள் மட்டும் சுடர்கொண்டிருப்பதுபோல தோன்றும். அவர் தூங்கும்போது அவர் மேஜைமேல் புத்தகங்களுக்கு மீதாக அவருடைய தடித்த கண்ணாடியின் சில்லுகளில் அவருடைய விழிமணிகள் இருக்கும். அவை அப்போதும் வாசித்துக்கொண்டிருக்கும். அல்லது திகைத்து விழித்துக்கொண்டிருக்கும். இரவின் இருளில் அவை அவருடைய மேஜைமேல் தூங்காமல் மின்னிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.
அவர் பேசுவதில்லை. அவருக்கு அன்றாடப்பேச்சுக்களில் ஆர்வமே இல்லை. பேச ஆரம்பித்தால் வெறிகொண்டு பேசுவார். பேசிப்பேசி இருமல் வந்து, மூச்சிளைப்புடன் படுப்பதுவரை பேசித்தள்ளுவார். ஆனால் பேச்சு உளறல் அல்ல. அண்ணாவின் மகத்தான பல நூல்கள் அப்படி பேச்சாக காற்றில் கரைந்துவிட்டன என்று எனக்குத் தோன்றியதுண்டு. அண்ணா அப்போது எங்கோ பிறந்துவிட்டிருந்த அவருடைய எதிர்கால வாசகர்களுக்காகப் பேசிக்கொண்டிருந்தார் என்று இப்போது தோன்றுகிறது.
வெள்ளையனே வெளியேறு போராட்டம் அறைகூவப்பட்டபோது அண்ணாவுக்கு பதிமூன்று வயது. அண்ணா அரசியலை ஆவேசமாகத் தழுவிக்கொண்டது அப்போதுதான். ஒவ்வொருநாளும் வானொலியிலும் நாளிதழ்களிலும் செய்திகளுக்காக அவர் தவித்தார். செய்திகளுடன் சேர்ந்து அவரும் எரிந்தார். உடல் துள்ளிவிழ, திக்கித்திக்கி “சுதந்திரம், சுதந்திரம், சுதந்திரம்” என்று அவர் சொன்னதை நினைவுகூர்கிறேன். அவர் சொன்னது எந்த சுதந்திரம் என்று இன்றுவரை பிடிகிடைக்கவில்லை.
அண்ணா பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் நாடே எரிந்துகொண்டிருந்தது. பள்ளியில் பெரும்பாலும் போராட்டமும் அடைப்பும்தான். மாணவர்கள் சாலைகளில் இறங்கி சிறிய அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர். அண்ணா பாதுகாப்பாக ஒரு கான்ஸ்டபிளுடன் பள்ளிக்கு காரில் சென்று திரும்ப கொண்டுவரப்படுபவர். அவரால் எங்கும் செல்லமுடியாது. அவரால் பள்ளிக்குச் சென்ற சில ஆண்டுகளில் சகமாணவர்களுடன் நெருங்கமுடியவில்லை. அவர் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை. அவர்களின் முரட்டுத்தனமான சுதந்திரம் அவரை அச்சுறுத்தியது.
அவர் பள்ளியில் ஓர் அன்னியராக, ஏளனப்பொருளாகவே இருந்தார். பள்ளியில் அவருக்கு ஆந்தை என்று பட்டப்பெயர் இருந்தது. பகலில் வந்த ஆந்தைபோல வகுப்பில் அமர்ந்திருப்பார். பின்னாளில் அவர் ஆந்தை என்றபெயரில் எழுதியிருக்கிறார். அவருடைய கதைகளிலும் ஆந்தை வந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர் அவர்களுடைய போராட்டங்களிலும் களியாட்டங்களிலும் மானசீகமாக உடனிருந்தார். பள்ளியில்தான் அவர் தன்னுடைய அறிவே தன் வலிமை என்று உணர்ந்திருக்கவேண்டும். அவருடைய சகமாணவர்களை விட அவர் மிகமிக மேலே இருந்தார்.
அண்ணா கல்லூரிக்குச் சென்றதும் சட்டென்று மாறினார். மெட்ரிக்குலேஷனில் அவர் பெற்ற தங்கப்பதக்கம்தான் அவரை மாற்றியது. அவர் ஒரு மாணவர் தலைவராக ஆனார். ஆனால் அப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி புதிதாக வந்த முதலாளிகளாலும் நிலக்கிழார்களாலும் நிரம்பியது. அவர்கள் அதன் முகங்களாக தோன்றலாயினர். அத்தனை அதிகாரப்பதவிகளிலும் அவர்களே அமர்ந்தனர். இளைஞர்களிடம் அவநம்பிக்கை உருவானது. வடக்கே நிகழ்ந்த மதக்கலவரங்கள் அவர்களை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பயனற்றவை என்று எண்ணச்செய்தன.
அன்று உருவான நாளிதழ்களின் பெருக்கம் அனைவரையும் வாசிக்கச் செய்து கம்யூனிஸ்டுக் கொள்கைகளை நோக்கி தள்ளியது. அண்ணா நீண்ட தடித்த ஜிப்பா அணிய ஆரம்பித்தார். சுருண்ட அடர்ந்த தலைமுடியும் மென்மையான மீசையும் அவருடைய முகமாக ஆயின. கடைசிவரை அவரிடமிருந்த அந்த தோற்றம் அப்போது உருவாயிற்று. அந்த தோற்றத்தில் ரவீந்திரநாத் டாகூரின் செல்வாக்கு உண்டு. அண்ணா மேடையேறி கைசுருட்டி உயர்த்தி அழுத்தமாகப் பேசுவதை நான் கேட்டேன். அது அவர்தானா என்ற பிரமிப்பை அடைந்தேன். அவரால் ஆவேசமாகப் பேசமுடியாது. ஆனால் நையாண்டியாகப் பேசமுடியும். மிகச்சரியான சொற்கள் வழியாக மனங்களை ஊடுருவ முடியும். அண்ணா மிகப்புகழ்பெற்ற பேச்சாளராக இருந்தார் என்று சொன்னால் அவருடைய தீவிர ரசிகர்கள்கூட இன்று நம்பமாட்டார்கள்.
அண்ணாவின் மெலிந்த தோற்றமே அவருக்கு கம்யூனிசச் சூழலில் ஏற்பை உருவாக்கியது. அவர் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னையிலேயே ஒரு கல்லூரியில் உடனடியாக ஆசிரியராக பணியாற்றலானார். அது வரை அவருடைய கம்யூனிச ஈடுபாடு அப்பாவுக்கு தெரியாது. வேலைக்குச் சென்றபின் அண்ணா அப்பாவை முற்றாகவே நிராகரித்தார். தொடர்பையே துண்டித்துக்கொண்டார். அவருடன் தொடர்பிலிருந்தது நான் மட்டுமே. நான் அப்போது கல்லூரி மாணவி.
அப்பாவுக்கு அண்ணாவைப் பிடிக்காது. மகனை அவர் ஒரு பொருட்டாக காட்டிக்கொண்டதே இல்லை. நோயுற்ற மகன்கள் அப்பாவுக்கு இரண்டு எதிர் உச்சங்களை அளிக்கிறார்கள். ஒன்று, அவர்கள் மகன்கள்மேல் பெரும் பித்துகொண்டு இரவுபகலாக பேணுகிறார்கள். அல்லது வெறுத்து ஒதுக்குகிறார்கள். அப்பா ஆணவமும் நிமிர்வும்கொண்டவர். அவருடைய மகன் அப்படி இருப்பது அவரை எவரோ கேலி செய்வதுபோல. அப்பா அண்ணாவைக் கண்டாலே முகம் சுளிப்பார். சுளிப்பதல்ல அது, அறியாமலேயே அந்தச் சுளிப்பு வந்துவிடும். அப்பா அண்ணாவை தொட்டதே இல்லை, ஒரு சொல் அன்பாகப்பேசியதில்லை.
அண்ணா ஆரம்பத்திலெல்லாம் அப்பாவுக்காக ஏங்கினார். அப்பா வீட்டுக்கு வரும் நாட்களை எண்ணி எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அப்பா வீட்டுக்கு வந்தால் மறுநாளே அவர் போனால் போதுமென்று ஆகிவிடும். அப்பா வீட்டை அப்படியே முழுமையாகக் கையில் எடுத்துக்கொள்வார். அவருடைய நெடி வீடெங்கும் நிறைந்திருக்கும். அப்பா பேசுபவர் அல்ல, அதிலும் வீட்டில் அவர் ஓசையே இடுவதில்லை. ஆனால் அவரை நம்மால் எங்கிருந்தாலும் கேட்கமுடியும்.
சிறுவயதில் அண்ணா அப்பாவை வதைப்பதனூடாக மட்டுமே அவரிடம் தொடர்பு கொண்டிருந்தார். அப்பா வரும்போதெல்லாம் அண்ணாவுக்கு வலிப்பு வரும். வாயோரம் நுரை எழ விழுந்து துடிப்பார். போர்வையில் இட்டு தூக்கி காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்வோம். ஆனால் அப்பா அருகே வந்து அண்ணாவை தொட்டுப்பார்ப்பதுகூட இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கூட வரமாட்டார். இப்போது ஞாபகம் வருகிறது, அப்பாவைச் சந்திக்க எவராவது முக்கியமானவர் வீட்டுக்கு வந்தால், சின்னம்மாவும் அப்பாவும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தால் அண்ணாவுக்கு வலிப்பு வரும்.
வளர்ந்தபின் அண்ணா அப்பாவை முழுமையாக நிராகரிக்கவும் மறக்கவும் கற்றுக்கொண்டார். ஊரைவிட்டுச் சென்றபின் அவர் அப்பாவுக்கு ஒரு கடிதம்கூட போட்டதில்லை. உண்மையிலேயே ஒரே ஒரு கடிதம், ஒருவரி குறிப்புகூட எழுதியதில்லை. அண்ணா ஊரில் அப்பா இருப்பதையே அறியாமல் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அது அவர் அப்பாவை வதைக்க கண்டறிந்த வழி. அது நன்றாகவே வேலைசெய்தது.
அண்ணாவால் புறக்கணிக்கப்பட்ட அப்பா அண்ணா நினைவாகவே இருந்தார். ஆனால் அண்ணாவைப் பற்றி ஒரு சொல் கேட்கவில்லை. அதனாலேயே அண்ணா அவருக்குள் கான்சர் போல வளர்ந்தார். உண்மை. அப்பாவுக்குள் வளர்ந்த அண்ணா என்ற நோய்தான் அவரைக் கொன்றது. கடைசிக்காலத்தில் தன்னந்தனிமையில் முற்றிலும் சொல்லின்றி அவர் வாழ்ந்தார். வெற்றிலை அவருடைய வாயை பூட்டியிருந்தது. அவருடைய உள்ளத்தின்மேல் புகையிலைப் போதையின் புகை படர்ந்திருந்தது.
1948 ல் ரணதிவே தீஸிஸின் போதும், முதல் கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியின்போதும் அண்ணா முழுமூச்சாக கம்யூனிஸ்டுக் கட்சியில் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை கட்சி மேடையில் பேச்சின் நடுவிலேயே வலிப்பு வந்து விழுந்துவிட்டார். அந்நாட்களில் அவருடைய உடல் நலிவுற்றிருந்தது. அவரால் அந்தக் காலகட்டத்தின் வேகத்தை தாங்கவே முடியவில்லை. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தது அந்தக் காலகட்டத்தில்தான் என நினைக்கிறேன். அவரை கைதுசெய்ய சென்னை மாகாண அரசில் வாரண்ட் வந்தது. அப்பா தந்திரமாக அவரை மலபாருக்கு கொண்டுவந்து தப்பவைத்தார்.
அப்பாவின் தயவால்தான் சிறைசெல்லாமல் தப்பினோம் என்பது அண்ணாவுக்கு தெரியும். ஆனால் தெரியாதவர் போலவே கடைசிவரை காட்டிக்கொண்டார். சிறை சென்றிருந்தால் அவர் செத்திருப்பார். அப்போது அவருக்கு அனேகமாக தினமும் வலிப்பு வந்துகொண்டிருந்தது. ஆனால் வலிப்புதான் அவருடைய படைப்புத்தன்மைக்கு அடிப்படை என்று அவர் சொல்லுவதுண்டு. அவருக்குள் இருந்த சிறுவனை அழியாமல் பாதுகாத்தது அந்த நோய்தான். “தஸ்தயேவ்ஸ்கிக்கும் வலிப்புநோய் உண்டு. வலிப்பு நோய் என்பது மூளையை நாம் சவுக்காலடித்து சுண்டிவிடுவது. அம்மிக்கல்லால் மாமரத்தை அடித்து சருகுகளையும் வாடிய மாம்பிஞ்சுகளையும் உதிரவைப்பது போன்றது. ஒவ்வொரு வலிப்புக்குப் பின்னரும் நாம் புதிதாகப் பிறக்கிறோம்…” என்று அண்ணா சொல்வார்
கட்சி ஆயுதப்போராட்டத்தை கைவிட்டபோது அண்ணா ஏமாற்றமடைந்தார். சென்னையில் இன்னொரு கல்லூரியில் ஆசிரியரானார். அக்காலத்தில் ஓர் ஆசிரியராக அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். அவருக்கு இலக்கியம் கற்பிப்பது பிடித்திருந்தது. அவர் ஐரோப்பிய இலக்கியவாதிகளை ஆழ்ந்து பயின்ற நாட்கள் அவை. அவர் மாப்பசானின், அலக்ஸாண்டர் குப்ரினின், வில்லியம் சரோயனின் ரசிகர். ஆனால் பலருக்கு தெரியாத ஒன்றுண்டு, அவருக்கு அமெரிக்க சாகச நாவல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக போர்சாகசங்கள். அலிஸ்டெர் மக்லீன் போன்ற புகழ்பெற்றவர்கள் மட்டுமல்ல, கார்னிலியஸ் ரயான் போன்ற யாரென்றே தெரியாதவர்களையெல்லாம் தேடித்தேடி வாசிப்பார்
1956ல் கம்யூனிஸ்டுக் கட்சி கேரளத்தில் ஆட்சிக்கு வந்தபோது அண்ணா மீண்டும் பெரும் கிளர்ச்சியை அடைந்தார். கம்யூனிச கேரளத்தைப் பார்ப்பதற்காக ரயிலில் மலபாருக்கு வந்ததையும், பாலக்காட்டு எல்லையில் முதல் செங்கொடியைக் கண்டு கண்ணீர் மல்கியதையும் அவர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் எழுதியிருக்கிறார்.
’ஒரு குருதித்துளியின் நினைவு’ என்ற அந்த கட்டுரையை அவர் கண்ணீர் சிந்தியபடித்தான் எழுதியிருப்பார். ஏனென்றால் அப்போது சோவியத் ருஷ்யா உடைந்துகொண்டிருந்தது. 1988ல் கிளாஸ்நோஸ்டும் பெரிஸ்ட்ராய்க்காவும் உச்சத்திலிருந்தன. அண்ணா சோவியத் ருஷ்யா உடையும் என்பதை கணித்துவிட்டிருந்தார். அரசியல்நோக்கராக எழுதிக்கொண்டிருந்த அவருக்கு சர்வதேச இதழாளர்களுடனும் டெல்லியின் உயர்வட்ட அதிகாரிகளுடனும் நல்ல தொடர்பு இருந்தது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிசக் கனவு அண்ணாவிலிருந்து விலகி முப்பதாண்டுகளாகியிருந்தன.அப்போது அவர் கம்யூனிச எதிர்ப்பாளர் என்றே அறியப்பட்டிருந்தார். ஆனாலும் சோவியத் ருஷ்யாவின் உடைவு அவரை நோயுறச் செய்தது. அவர் வலிப்புவந்து விழுந்து நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர் நீண்டகாலம் சிகிழ்ச்சையில் இருந்தது அப்போதுதான். அவருடைய இயல்பான உடலியக்கம் பெரும்பாலும் இல்லாமலாயிற்று. குச்சி இல்லாமல் நடக்க முடியாது. பேனாவால் எழுத முடியாது. சுட்டுவிரலால் தட்டித்தட்டி டைப் செய்வார். ஆனால் பிரஷ் எடுத்தால் வரைய முடியும். அது எப்படி என்று தெரியவில்லை.
அண்ணா கம்யூனிசத்திலிருந்து வெளியேறியபின் உண்மையில் எப்போதாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாரா? கேரளத்தில் இ.எம்.எஸ் முதல் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த விதமும், அது விமோசன சமரம் என்ற பேரில் பிற்போக்காளர்களால் வீழ்த்தப்பட்டதும், அதைத் தொடர்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியின் உட்பூசல்களும் அண்ணாவை ஏமாற்றமடையச் செய்தன.1964 ல் கட்சி உடைந்தபோது அண்ணா ஏற்கனவே கம்யூனிசத்திலிருந்து விலகிச் சென்றிருந்தார். ஏனென்றால் அவர் சோவியத் ருஷ்யாவில் நடந்த ஒடுக்குமுறைகளைப் பற்றியும், சோவியத் ருஷ்
குமிழிகள், கூர் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதையின் பல தளங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும்கூட பேசமுடியும். ஓர் அறிவார்ந்த பிரச்சினையை அக்கதை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையாடலால்தான் அப்படி தோன்றுகிறது. படித்த, உயர்பதவி வகிக்கும் அறிவான பெண்ணின் பேச்சு அது, அவ்வளவுதான். பிரச்சினை உணர்ச்சிகரமானது. அவள் ஏன் அதை தன் கணவனிடம் சொல்கிறாள். அவள் கலந்தாலோசிக்கவில்லை. முடிவெடுத்துவிடுகிறாள். ஆனாலும் சொல்கிறாள். ஏனென்றால் அவளுக்கு அதில் ஏதோ ஒரு பிரச்சினை உள்ளது.அந்தப்பிரச்சினைதான் கதையின் மையம் என நினைக்கிறேன்
கே.ராம்குமார்
அன்புள்ள ஜெ,
மீண்டும் கதை தொடர்மழைக்கு நன்றி,
என் இரவுகள் எப்போதுமே தூக்கம் கொள்ளாதவை. அந்த நேரத்தை உங்கள் கதைகள் நிறைவு செய்துகொண்டிருக்கிறது.
குமிழிகள் கதை இவ்வரிசையில் எனக்குப் பிடித்த கதையாகும். படித்து மேல்தட்டுக்கு வந்துவிட்ட பெரும்பாலான பெண்களுக்கு ‘ஆணாதிக்க’ப் போக்கு வந்துவிடும். குறிப்பாக தன்னைவிட குறைந்த வருமானமும் சமூக அந்தஸ்தும் கம்மியான கணவன்மார்களிடம் இந்த’ ஆணாதிக்கப் போக்கு’ தலைகாட்ட ஆரம்பிக்கும். இயல்பாகவே மனைவியை விட கணவன் குறைந்த வருமானம் பெறுபவனாக இருப்பின் அவன் தன் மனைவியை காழ்ப்புணர்ச்சியோடுதான் அணுகுவான். ஆனால் இக்கதை கணவனையின் விட்டுக்கொடுப்பவனாக சகித்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவனாக காட்டுகிறீர்கள் . அது அப்பாத்திர வார்ப்புக்கு பொருந்தி வருகிறது.
வயது ஏற ஏற இந்த மெத்தப் படித்து மேல்நிலைக்கு வந்துவிட்ட மனைவி உடல் சார்ந்து தன்னை முன்னெடுத்துக் கொண்டால் சமூக மதிப்பும் மரியாதையும் கூடும் என்று நினைக்கிறாள். அதற்காகவே மூக்கு பிலாஸ்டிக் சர்ஜக்குப் பிறகு மார்பக லிப்டு( face lift) செய்துகொள்ள ஆயத்தமாகிறாள். அதற்கான முன்னேற்பாடுகள் செய்துகொண்டே கடமைக்காக கணவனிடம் அபிப்பிராயம் கேட்கிறாள். கணவனை அனுமதி கேட்க வேண்டிய அவசியம்கூட அவளுக்கு இல்லை. ஏனெனில் அவனைவிட அவள் உய்ர்ந்துவிட்டவள் என்கின்ற நினைப்பு அவளுக்கு. அந்த விவாதத்தை இருவரிடையே நடக்கும் செறிவான உரையாடலாக நடத்திக் காட்டுகிறீர்கள். அந்த்ஸ்து இருப்பில் மேல்நிலையில் இருக்கும் மனைவியின் குரலே இங்கேயும் ஓங்கி ஒலிக்கிறது. அவன் அந்த மார்பக எழுச்சி வேண்டாமே என்றுதான் அபிப்பிராயப் படுகிறான். அது அவள் உடல் ஸ்பரிஸத்திற்கு இடம் கொடுக்காது என்பதாலும். ஆனால் அவள் திட்டவட்டமாக இருக்கிறாள். தன்னை தகவமைத்துக்கொள்ள கணவன் தொடுதலிலும் உடலறவிலும் இன்பம் சுகிப்பதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் ஏக்கம் கடைசியில் வெளிப்படுவதுதான் கதையின் உச்சமே அடங்கியிருக்கிறது. அவன் வேறென்ன செய்வான் .இனி அவனுக்கு ஆசை வரப்போகும் எல்லா இரவுகளும் போதையில் தவழ்ந்து காகிதத்தில் ஏறிய சித்திர முலைகளை தட்டு இன்புறுவதைத் தவிர்த்து. அட்டகாசம்.
கோ.புண்ணியவான்.
கூர் [சிறுகதை]அன்புள்ள ஜெ
கூர் கதையில் இன்ஸ்பெக்டரின் மனைவி கதாபாத்திரத்தை நான் தனியாகக் கவனித்தேன். அவர் ஆழமான மதநம்பிக்கை கொண்டவராகவும், தீவிரமான அறவுணர்ச்சியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கிறார். அதை நானும் நிறைய பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகள் போலீஸ்காரர்கள் ரவுடிகள் போன்றவர்களின் மனைவிகள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குற்றவுணர்ச்சி இருக்கிறது. அதை இப்படி கடக்கிறார்கள். ஆனால் அதற்காக கணவர்களிடம் போராடவோ, அவர்களின் பிரச்சினைகளை தடுக்கவோ ஒன்றும் செய்யமாட்டார்கள்
ஞானப்பனின் மனைவிகூட அப்படித்தான் இருக்கிறாள். வீட்டுக்குள் அவர் வன்முறையைப் பேசக்கூடாது. பிள்ளைகள் முன் அதையெல்லாம் சொல்லக்கூடாது. அவ்வளவுதான். அவர்களின் அறவுணர்ச்சி நிறைவடைந்துவிடுகிறது. அதைத்தான் இன்ஸ்பெக்டர் சொல்கிறார். அந்தப்பையனின் படம் வெளியானால் உடனே அவனை பார்த்து அய்யோ பாவம் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்று.
அர்விந்த்
அன்புள்ள ஜெ
இந்த சிறுவர்களை ஸ்டேஷனில் விசாரிக்கும் காட்சி ஏற்கனவே ஏழாவது என்ற கதையில் வேறொரு ஆழத்துடன் வந்துவிட்டது. நீங்கள் எழுதிய ஆறுமெழுகுவத்திகள் படத்தில் ஒரு சிறிய காட்சியாக வந்துசெல்கிறது. நீங்கள் முதல்வடிவை எழுதிய ரேனிகுன்டா படத்திலும் உள்ளது. [ஆனால் சினிமாவில் அவை சரியாகக் காட்டப்படவில்லை. சினிமாவுக்கு அந்த நுட்பங்கள் தேவையில்லை என நினைக்கிறார்கள்] இந்த சம்பவத்தை நீங்கள் எங்கேயோ நேரில் பார்த்திருக்கிறீர்கள். அதைத்தான் எழுதி எழுதிப்பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்
மதன்குமார்
குமிழிகள், கடிதங்கள் குமிழிகள் -கடிதம் குமிழிகள்- கடிதங்கள் குமிழிகள்,கடிதங்கள் குமிழிகள்- கடிதங்கள்படையல்,தீற்றல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
பேதம் ஓங்கி ரத்தமும் நிணமுமாக வழியும் காலகட்டத்தில் எல்லாமே ஒண்ணுதான் என்று அமர்ந்திருக்கும் ஒரு பண்டாரக்கூட்டம். சூஃபி, சிவனடியார், பண்டாரம், மஸ்தான். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அரசியல் என்ன ஆன்மிகம் என்ன என்று காட்டிவிடுகிறது இந்தக்கதை. யோசித்துப்பார்த்தால் இது 17 ஆம் நூற்றாண்டுக் கதையே அல்ல. இன்றைக்கும் உள்ள கதை இதுதானே? வெளியே நடந்துகொண்டிருப்பது அந்த ரத்தப்போர் அல்லவா? உள்ளே சாராம்சமாக அத்தனை பேதங்களையும் கடந்த ஒருமையை முன்வைக்கும் ஞானம் நிறைந்திருக்கிறது.
இந்த விசித்திரமான தேசத்தின் சித்திரமே இந்தக்கதையில் உள்ளது. ஒருபக்கம் தீ. இன்னொருபக்கம் அதை அணைக்கும் குளிர்ந்த நீர். வெளியே அந்த கொடுமைகளை வாசிக்கையில் ரத்தம் கொதிக்கிறது. கூடவே ‘ஆறுமுக புருசனென்றால் அடுக்குமோடி எம்மகளே- ஏய்அடுக்குமோடி எம்மகளே?’ என்று கைதட்டிக்கொண்டு ஆடிப்பாடவும் தோன்றுகிறது.
சத்யன் முருகவேல்
அன்புள்ள ஜெ
படையல் கதையை வாசிக்க வாசிக்க மனம் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தது. அந்தப்போர்ச்சூழலில் ரத்தச்சோறையே படையலாக ஏற்றுக்கொண்டு பண்டாரங்கள் மெய்ஞானத்தை முன்வைக்கிறார்கள். ‘எல்லாம் ஒண்ணுதான்’ என்ற ஞானம்.
திருவண்ணாமலையில் எரிவதுதான் சிதம்பரத்தில் வானமாக இருக்கிறது என்கிறார் பண்டாரம். பிஸ்மில்லாஹ் சொல்லி அதை ஆமோதிக்கிறார் சூஃபி மெய்ஞானி. வெளியே ரத்தமழையாக கொட்டுவதுதான் உள்ளே பிரசாதமாக வருகிறது
தீயும் வானமும் ஒன்றுதான். வானத்திலே தீ இருக்கிறது என்று கிறிஸ்துவம் சொல்கிறது. வானத்திலிருந்துதான் மழையும் வருகிறது.
ஜான் ஆசீர்
தீற்றல் [சிறுகதை]அன்புள்ள ஜெ
தீற்றல் கதை ஒரு சொந்த அனுபவத்தை நினைவூட்டியது. இது ஒரு இருபதாண்டுகளுக்கு முந்தைய சங்கதி. அன்று ஒரு பெரிய காதல் இருந்தது. வெறிகொண்ட காதல். வேறெந்த நினைப்பும் இல்லாமல் ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்த காதல் அது. அப்படிப்பட்ட காதலெல்லாம் இன்றைக்கு இருக்க முடியாது. சின்ன ஊர். ஆகவே பார்ப்பது பேசுவதெல்லாம் மிக அபூர்வம். ஆகவேதான் அந்தக்காதல் அத்தனை தீவிரமாக இருந்தது. என்னைவிட ஒருவயது மூத்தவள்.
ஒருமுறை தனியாக ஆற்றங்கரையில் பார்த்ததும் சட்டென்று கையை பிடித்துவிட்டேன். நகத்தால் என் கையை கீறிவிட்டு சிரித்துவிட்டு ஓடிவிட்டாள். கையை கீறியது ஒரு கணம்தன. அப்படி ஈசியாக கீறிவிட்டள். ஆனால் அந்த காயம் ஆர ஒருவாரமாகியது. அந்த தீற்றலின் எரிச்சல் ஒரு இனிய ஞாபகமாக இருந்துகொண்டே இருந்தது. அதை ஒரு அற்புதமான இனிமையாக வைத்திருந்தேன்
இன்றைக்கு அந்த வடுவெல்லாம் இல்லை. ஆனால் ஞாபகத்தில் அந்தத்தீற்றல் இருக்கிறது
என்
அன்புள்ள ஜெ
காதல், அதிலும் இளமைக்காதல் என்பது ஒரு தீற்றல்தான். விரைவாக அலட்சியமாகப் போடப்படும் ஒரு தீற்றல். ஒரு கணம்தான் அது. அந்தக்கதையில் வரும் வரி. மிகமென்மையானது, ஆனால் மிகக்கூர்மையானது. அதை மெல்லிய குருவி ஒன்றின் இறகுபோல என்கிறீர்கள். அவ்வளவுதான். அன்புள்ள ஜெ, அதைப்பற்றி அவ்வளவுதான் சொல்லமுடியும். சாவு, பயங்கரவசீகரம் எல்லாம் தேவையில்லை. அந்த தீற்றல் என்ற சொல்லே போதும்
சாந்தகுமார்
கொதி,வலம் இடம்- கடிதங்கள் தீற்றல்,வலம் இடம்- கடிதங்கள் படையல்- கடிதங்கள் படையல் கடிதங்கள்கொதி,வலம் இடம்- கடிதங்கள்
அன்பிற்கினிய ஆசான் ஜெ அவர்களுக்கு, வணக்கம்.
‘கொதி’ கதை என்னைப்போல நூறு கதைகளுக்குப் பிறகு “கொதிகுத்திக்” காத்திருந்தவர்களுக்கு சரியான தீனிதான்.,
நீங்கள் சோற்றைப்பற்றி எத்தனை கதைகள் எழுதினாலும், எப்படி எழுதினாலும் அத்தனையும் எனக்கு ருசிக்கிறது. சோற்றின் ருசியை அறிந்துகொள்ள எனக்கு சற்றேறக்குறைய பத்துவருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இன்றெல்லாம் பசி இல்லை என்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை அடுத்தவர் பசியை உணரும் மனிதர்கள்தான் இல்லை என்பேன். சோறிருந்தும் சாப்பிட இயலாதவர்கள் மத்தியில் இன்றும்கூட சோற்றுக்காய் பரிதவிக்கும் மக்களை எத்துனை பெரிய நகரத்திலும் என்னால் காணமுடிகிறது. கையில் காசு வைத்திருந்தும் உணவகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத கந்தலாடை மனிதர் முதல், “தல கிறுகிறுன்னு வருது. எனக்கு சாப்பாடு வாங்கித்தாப்பா”.. என உரிமையுடன் கேட்ட அந்த தாய் வரை எத்தனைபேர்! உணவக வாசல்களில் உள்ளே செல்லும்போது ஏதும் கேட்காமல், வெளிவரும்போது ஏந்தப்படுகிற அந்தக் கைகளும், மட்டை வெயிலில் கோவை பாரிஸ் சிக்னலில் முழு உடலும் நடுங்க பேனா விற்றுக்கொண்டிருந்த முதியவரும் அந்த அதலபாதாளத்தை அஞ்சுவிரல் கைப்பிடிகொண்டு நிறையவைக்க முயற்சிப்பவர்களின் பிரதிநிதிகள்தானே!
ஏன் இவர்களுக்கு இத்தனை பசி? கொதி அதற்கு தன்னளவில் ஒரு விடை சொல்கிறது. இது வெறும் வயிற்றுப்பசியல்ல…மனமும் அதைத்தாண்டிய ஆத்மாவும் கொண்ட சூன்யம். இந்த அதலபாதாளத்தை நிறைக்க முயலும் அஞ்சுவிரல் கைப்பிடி.
எது சூன்யம்? எது அஞ்சுவிரல் கைப்பிடி? இது நிறையுமா? அல்லது நிறைவு என்பதே ஒரு நிமித்தம்தானா? எத்தனை கேள்விகள்!!
மனித வாழ்வின் ஆகப்பெரிய சுமை என்பது உடல்தானே! தேவைப்படும்போது கைவிடுவதும், தேவையற்ற பொழுதில் குறுக்கிடுவதும், சோர்வையும், வலியையும் உணர்வதுமாக என்றென்றும் இங்கு மனிதனை கட்டிவைப்பதுமான இந்த உடலுக்கு என்னதான் தேவை? இந்தக் குறுக்கீடுகளும் வேதனைகளும் சோர்வும் உடலால் மட்டும் தான் வருகிறதா என்ன?
ஃபாதர் ஞானையாவின் வார்த்தைகளில் சொன்னால் “பாவப்பெட்ட சனங்க. பசிதான் அவங்களுக்கு எல்லாமே. அது வெறும் சோத்துப்பசி இல்லை. ஒண்ணுமே போய்விழாத அவ்ளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு. அதை நிறைக்கிறதுக்கு உண்டான வெறியைத்தான் பசீன்னு நினைச்சுக்கிடுறானுக. கொண்டா கொண்டான்னு உடம்பும் மனசும் ஆத்மாவும் சத்தம்போடுது. அது அதலபாதாளம், ஆனா அள்ளிப்போடுதது அஞ்சுவிரல் கைப்பிடி…..”
எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பிரிவினை சபை ஒன்றில் போதகராக இருப்பவர் ஒருமுறை ஆதாம் ஏவாள் செய்த சாவான பாவத்தைப்பற்றி பேசி என்னை “நல்வழிப்படுத்த” முயன்றுகொண்டிருந்தார். நான் கேட்டேன்…”அது சாவான பாவம்னா, பைபிள்ங்குற பட்டயத்த தூக்கிட்டே நடந்துக்கிட்டிருக்கற ரட்சண்ய வீரரே….நீங்க முதலில் அறுத்தெரிய வேண்டியது என்ன சொல்லுங்க?” – அவர் என் உறவை அறுத்து எறிந்து எனக்கு சாத்தான் பட்டமும் கொடுத்துவிட்டுப்போனார்.
சரிதானே? பசிதான் பிரச்சினை என்றால் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் இல்லையா? எவ்வளவு எளிது! எதை மறக்க பசியை மட்டுமே பிரதானமாக எண்ணி வாழும் வாழ்வை ஏற்கிறோம்? கைநிறைய அள்ளி அள்ளித்தின்றாலும் அடுத்தவேளை என்று ஒன்று வரத்தானே செய்கிறது! வெறும் கொதி. இது சுழல்…மாபெரும் சுழல். எண்ணிப்பார்க்கையில் பசியை மட்டும் எண்ணும்போது, அதற்குப்பின் மறைந்திருக்கும் அதல பாதாளத்தை அந்த சூன்யத்தை எதிர்கொள்ளாமல் முகம்திருப்பிக்கொள்ள முடியுமல்லவா! பசியைத்தாண்டி பார்க்கும் கண்கொண்ட ஒருவன் அதற்கு அடுத்த நிறைவின்மையத்தானே கண்டுகொள்ள முடிகிறது, ஃபாதர் சூசைமரியானைப் போலவும், ஞானையாவைப் போலவும். முன்னவருக்கு விடுதலை இறையியல், பின்னவருக்கு பாவப்பட்ட சனங்களின் வாழ்வு. வருகொதி தீர்ந்து, போக்கொதி நிறைவுறும் வரை எத்தனை எத்தனை வேதனை!
ஆனால் ஃபாதர் ஞானையா அதைத்தாண்டி பார்க்கிறார், தன் மீட்பராகிய ஃபாதர் பிரென்னனைப்போல. புசித்துக் குடித்து மகிழ்ந்திருந்த ஃபாதர் பிரென்னன், இந்த மக்களிடையே பார்த்தது என்ன? மூதாதையர் சொத்தை துறந்து பாவப்பட்ட சனங்களோடு வந்து தங்கி தன் வாழ்வை அர்பணிக்க தூண்டுகோல் என்ன? அவர் கொண்ட கருணை….அவர் வாரிசான ஃபாதர் ஞானையாவிடம் வெளிப்படும் “பாவப்பட்ட சனங்க’’ என்கிற அந்த மகத்தான கருணை. தனது இறையியலை ஒதுக்கி இறைவனுடன் உரையாடும் அந்த இரு மகத்தான மனிதர்களின் சித்திரம் இது.
பசி மட்டுமே பிரதானமாகக்கொண்ட ஞானையா, அதன் மூலம் ருசியையும் தெரிந்து கொள்கிறார். அவருக்கு ஆண்டவர்கூட ருசிக்கும் உணவுதான், கிறிஸ்தவ இறையியலில் இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் தானே உண்கிறார்கள். பசியறிந்து, அதன் ருசியறிந்து உண்ணும் ஞானையா, கிறிஸ்துவின் துக்கத்தையும் அவரது இரக்கம்மிகுந்த இருதயத்தையும் ருசித்துவிடுகிறார். இறையியல் வழியாக அவர் இறைவனை சென்றடையும் பயணம் அது. நேரெதிராக விடுதலை இறையியலில் இருந்து, கண்ணீருடன் ஓடிவந்து இறையியலில் தஞ்சம் புகும் சூசைமரியானுக்கும் அவர் இறைவனின் ருசியை காட்கிறார். இன்று இங்கு நடப்பதுவும் இதுதானே. இந்த மக்களை மட்டுமல்ல எந்த மக்களையும் மேய்க்க எவரும் வரவேண்டியதில்லை, அவர்களுக்கு கொடுக்க மட்டுமே செய்யவேண்டும் அல்லவா! தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல, இன்று பைபிள் தூக்கியவனல்லாம் பாஸ்டராகிவிடுவது நடக்கிறது.
ஃபாதர் பிரென்னனைப்போல இந்த மக்களின் சுகதுக்கங்கள் புரிந்து, அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடன் நடக்கும் போதகர்கள்தானே இன்று தேவை. இன்றுமட்டுமல்ல என்றுமே அவர்கள் மட்டும் தான் தேவை. இதை புரிந்துகொள்ளும் ஞானையாவையும், அவரது ஞானவாரிசான சூசைமரியானையும் போன்றவர்களை இன்று காணவேண்டும் என்பது எனது கொதி.(பலமுறை சாத்தானே என்று அன்போடு அழைக்கப்பட்ட பிறகும்)
மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள் மற்றும் சூனியக்காரிகள் புத்தக அறிமுகம் உங்கள் தளம் மூலம் எனக்கு ஏற்பட்டது. அதிலுள்ள குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளுக்குப் பிறகு, கிறிஸ்தவ இறையியல் மற்றும் கிறிஸ்து குறித்த என் பார்வை வெகுவாக மாற்றம் பெற்றது எனலாம்.(சில கருத்துக்கள் என் தர்க்கத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்கிறபோதிலும்)
ஃபாதர் ஞானையா சிறில் ஐசக்கிடம் சொல்லும் அந்த வார்த்தைகள் “கடப்பொறம் ஆளாடே – அந்த ஏரியாப்பக்கம் போகாதே. அவனுகளுக்குள்ள ஆயிரம் சண்டை. அதிலே உன்னையும் இளுத்து விட்டிருவானுக… மலைப்பக்கமா போ. பாவப்பெட்ட சனங்களாக்கும் அங்க…”
ஆம் அந்த கடப்பொறம் ஆளின் (புனித இராயப்பர்) வழிவந்தவர்கள், நிச்சயம் நம்மை அவர்களின் சண்டைக்குள் இழுக்கத்தான் செய்வார்கள். மலைமேலல்லவா நாம் செல்லவேண்டும்!
ஃபாதர் ஞானையாவுக்கு சங்கீதம் 34:8 என்றால், எனக்கு மத்தேயு 5:48 (“உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராயிருங்கள்”). இன்று இயேசுவின் போதனைகளாக நான் மனம் நிறைந்து, கண்கள் பனிக்க ஏற்பது மலைப்பிரசங்கத்தை மட்டும் தான். மற்றவை எனக்கு பெரிதாகப்படவில்லை. அதன் அடிப்படையில் அந்த திரு இருதயத்தை நானும் நேசிக்கிறேன். எரிந்து கொண்டிருப்பதுவும், பிறருக்காக இரத்தம் சிந்திக்கொண்டு, முள்முடியால் நெருக்கப்பட்டிருப்பதுவுமான அந்தத் திரு இருதயம் கிறிஸ்துவத்தின் மையம். முழுவாழ்வையும் பிறரன்புப்பணியில் செலவிட்டு, இறுதிவரை அந்த பாதாளத்தை நிறைக்க முடியாத ஃபாதர் ஞானையாவின் கொதியை, அதைவிட பல மடங்கு கொதி கொண்ட தன்னிடத்தில் எடுத்துக்கொள்ளும் அந்த மாசற்ற திரு இருதயம் எனக்கும் அருளட்டும்.
மனம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.
அன்புடன்,
பிரபு செல்வநாயகம்.
வலம் இடம் [சிறுகதை]வணக்கம் ஜெமோ,
1963ல் கி.ரா எழுதிய “குடும்பத்தில் ஒரு நபர்” என்ற சிறுகதைக்கும் நீங்கள் சமீபத்தில் எழுதி “ஓலைச்சுவடி” இணைய இதழில் வெளிவந்த ‘வலம் இடம்’ கதைக்கும் தொடர்புகளும் ஒற்றுமைகளும் இருப்பதாகப்படுகிறது. கி.ராவின் கதை எதார்த்தத்தின் பக்கம் நின்று கதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது உங்களுடையது மாயத்தோற்றத்தின் பக்கத்தில் நிற்கிறது. அங்கு காளை, இங்கு எருமை. அங்கு மூடநம்பிக்கையின் பின்னணியில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை. இங்கு பிரம்மையினுள் மூழ்கிவிட்டிருக்கும் ஒரு விவசாயி மற்றும் அவனின் பிரக்ஞையின் பிரதிபலிப்பிலிருந்து வெளிப்படும் கதை. தொட்டணன் கவுண்டரைவிட அயிரக்கா பாத்திரப்படைப்பின் நேர்த்தியின் வழியாக காளையின் கதைவடிவம் வெளிவரும். அவளுக்கும் “புல்லை”க்கும் இருக்கக்கூடிய உறவு, அது அப்படியே வாக்கப்பட்டு போகின்ற தொட்டணனின் அகத்திற்குள்ளும் புகுந்துவிடும். மாட்டைக் காப்பாற்ற அவன் எடுக்கும் சிரத்தையையும் மாடு இறந்து போய் இயலாமையில் துவண்டு புலம்பித் தவிக்கின்ற போதும்கூட செல்லாமாவையும் குமரேசனையும் இங்குப் பொருத்திப் பார்க்கலாம். உங்கள் கதையில் மாயை இன்னொரு எருமையாய் காட்சியளித்திருக்கிறது.
செல்லம்மாள், அயிரக்காவின் குணத்தைப் பெற்றிருந்தாலும் அவளுக்குள் தொட்டணனின் ஊற்றே சுரந்துகொண்டிருக்கிறது. குமரேசனின் ஆழ்மனச்சிக்கலில் கிளர்ந்து சுரந்துகொண்டிருக்கும் பிம்பத்தினை நீங்கள் இதற்குமுன் உங்களின் வேறு கதைகளில் கையாண்டிருப்பதாய் எனக்குத் தோன்றினாலும் கதைப்போக்கின் தன்மை உள்ளுக்குள் ஒட்டி நிற்கிறது. தற்கால கதைகளில் பாத்திரங்களின் உரையாடல்கள் மலிந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை உரையாடல்களே சிறுகதைக்கு வலு சேர்க்கும் அச்சாணி. இந்தக் கதையின் உரையாடல்களே இக்கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. கி.ரா, காளை இறப்பதோடு கதையை முடித்துவிடுவார். நீங்கள் இன்னொரு குட்டி எருமையை செத்த எருமையின் உருவில் உயிர்ப்பிக்க செய்வது போன்ற அளவீடைக் கொண்டு முடித்திருக்கிறீர்கள். இது வாசகனுக்குத் தரக்கூடிய முடிவு அல்ல, குமரேசனின் பித்துநிலைக்கு கொடுத்திருக்கும் வைத்தியம்.
– தமிழ்மணி
அருப்புக்கோட்டை.
கொதி,வலம் இடம்- கடிதங்கள் கொதி, வலம் இடம்- கடிதங்கள் வலம் இடம்,கொதி- கடிதங்கள் கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3 கொதி -கடிதங்கள்-1 வலம் இடம்- கடிதங்கள் கொதி- கடிதங்கள் 2 கொதி, வலம் இடம்- கடிதங்கள்ஏழாம் கடல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஏழாம்கடல் கதையை பெரிதாக விளக்கவேண்டாம் என்றும் விளக்க விளக்க அது மண்ணுக்கு இறங்கிவிடும் என்றும் தோன்றுகிறது. ஏழாம் கடலில் இருக்கிறது முத்தும் விஷமும். அதை மாதாகூட அறியமுடியாது. ஆனால் அதுதான் அத்தனை உறவுகளையும் தீர்மானிக்கிறது. புரிந்துகொள்ளவே முடியாது உறவுகளின் நஞ்சும் அமுதமும். ஒப்புக்கொடுப்பதை தவிர வேறுவழியே இல்லை
ஆர். ஸ்ரீனிவாஸ்
ஆசிரியருக்கு வணக்கம்,
ஏழாம் கடல் வாசித்தேன். இணையம் இருப்பதால் கதைகளை தினமும் வாசித்துவிடுகிறேன். நட்பு அப்படிதானே ஜாதி,மதம் எதுவும் பார்ப்பதில்லை.எனது நண்பன் ஜெகனை 1995 ஆம் ஆண்டு பட்டிவீரன் பட்டி என் சி சி முகாமில் சந்தித்தேன்.இருபத்தியைந்து ஆண்டுகள் கடந்து இப்போது அண்ணன் தம்பியாக இருக்கிறோம்.
பல வருடங்கள் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் அவர் வீட்டில் தான் கொண்டாடியிருக்கிறோம்.மாலையில் நாகேர்கோயிலில் இருந்து ரயிலில் ஏறினால் நள்ளிரவு போய் இறங்கும் போது ரயில் நிலையத்தில் காத்திருந்து எங்களை அழைத்துக்கொண்டு மத்திய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு மணிக்கு மார்வாடி கடையில் சூடாக பாதாம் பால் வாங்கித்தருவார்.அப்போது ஆரம்பிக்கும் எங்கள் உரையாடல் இரவுகள் உறக்கமின்றி மீண்டும் ரயிலேறும் வரை.இவ்வளவு அணுக்கம் ஆனபின்பும் நான் அவருடன் மட்டும் இன்று வரை வா,போ என பேசியதே இல்லை.அவரும் ஷாகுல் வாங்க போங்க என்று தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நண்பனின் திருமணதிற்கு என் குடும்பத்தினர் பதினாறுபேர் ரயிலில் சென்று இறங்கினர்.திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எங்கள் வீட்டு பெண்கள் அனைவரும் தலையை மறைக்கும் இஸ்லாமிய ஆடையுடன் கோயிலுக்குள் அமர்ந்து கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு அதே வயலூர் முருகன் கோயிலில் அவரது தம்பியின் திருமணத்தில் கலந்துகொண்டபோது அவர் சொன்னார் நமது நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என.எனது மகன் சல்மானும்,அவரது மகன் ஆதித்யாவும் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு .
ஏழாம் கடல் வாசிக்கையில் பிள்ளைவாளும்,வியாக்கப்பனுமாய் மட்டுமே இருந்தேன்.நண்பனின் அம்மா சுத்த சைவம், அவர்கள் என் வீட்டிற்கு வந்தால் தோசை சுட தனியாக ஒரு தோசைக்கல் வாங்கி வைத்திருக்கிறாள் சுனிதா .
“முட்ட ஊத்துன கல்லுல்ல,தோசை சுட்டா அம்மாக்கு பிடிக்கதுல்லா” என்பாள் சுனிதா .
கதையின் ஆழமான வரிகளில் ஒன்று
// “ஆனா ஒண்ணு உண்டு. எனக்க கடலிலே பிள்ளைவாளுக்காக ஒரு முத்து உண்டு… ஒரு அருமுத்து, ஆணிப்பொன் மணிமுத்து. அதை நான் எடுக்கல்லை. ஆனா எனக்கு தெரியும். அப்டி ஒரு முத்து அங்க ஆழத்திலே காத்து இருக்குன்னுட்டு. நான் சிப்பி கொண்டுபோயி குடுக்கிறப்ப அதை திறக்காம குடுக்குறது அதனாலேதான். பிள்ளைவாள் அந்தக் கறிய திங்கிறப்ப அவருக்க வாயிலே ஒருநாள் அது தட்டுபடும்… கையிலே எடுத்து பாப்பாரு. முத்துன்னு தெரிஞ்சிரும். லே, தாயோளி இது உனக்க முத்தில்லாடேன்னு சொல்லுவாரு. என்னென்னமோ மனசிலே நினைச்சுக்கிட்டேன். என்னென்னமோ சொப்பனம் கண்டேன். மாதாகிட்ட அப்டி நடக்கணும்னு நேந்துகிட்டேன்… .//
வியாகப்பன் வேண்டிய முத்து பிள்ளைவாளுக்கு கிடைத்தது.
“அவருக்கு மேல பேச ஆள் வேணுமுன்னு பெரியவர அப்பா கூட்டிட்டு போய்ட்டார்னு அம்மா சொன்னாள்” என சரவணன் சொன்னது எனக்கு கேட்டது .
எனது சகோதரியுடன் பள்ளியில் படித்த மீனவ தோழிகளுடன் இப்போதும் அவளது நட்பு தொடர்கிறது.அவ்வப்போது மீன்களும் வீட்டிற்கு கொடுத்து விடுவார்கள் .எனது சகோதரி உடல் நலமில்லாமல் இருந்தபோது மாதாவிடம் வேண்டி குடும்பத்துடன் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தியவள் ஒருத்தியும் உண்டு.
ஷாகுல் ஹமீது .
அன்புள்ள ஜெ,
உறவின் ஆழங்களை வெளியில் இருந்து புரிந்து கொள்வது என்பது எப்பொழுதும் முடியாது என்றே தோன்றுகிறது. அந்த அளவில் சம்மந்தப்பட்ட இருவருக்குமே பெரும்பாலான நேரங்களில் அவர்களின் ஆழம் தெரிவதில்லை என்றே நினைக்கிறேன். அதுவும் நட்ப்பை போன்ற உறவு வேறு அனைத்தையும் விட நுண்ணியதும், அந்தரங்கமும் ஆனது. அந்த உறவில் மனிதன் வேறு ஒருவனாக இருக்கிறான் என்றே தோன்றுகிறது. தன் சமூக அடையாளங்கள், தன் மேல் ஏற்றி வைக்கப்படும் அத்தனை அடுக்குகளையும் களைந்த ஒருவனாக இருக்கிறான். எப்போதும் கண்டிப்புடன் இருக்கும் அப்பா தன் நண்பனிடம் வேறொரு பரிமாணத்தில் இருக்கிறார். தன் தோழிகளை பற்றி பேசும் அம்மா ஒரு குழந்தைக்கான கண்களை கொண்டு விடுகிறாள். ஒட்டு மொத்தத்தில் இது ஒரு அற்புதமான உணர்வு என்றே நினைக்கிறேன்.
ஏழாம்கடல் கதையும் அதை போன்ற உணர்வை உரசி சென்றது. நான்காம் வகுப்பு வரையிலான ஒரு இணைவு இறப்பின் கரங்களை பற்றிக்கொள்வது வரை வரும் என்பது ஒரு பெரும் தரிசனம். அவர்கள் பற்றிய ஒரு பின் கதை ஒரு பளிச்சிடும் நினைவுகளுக்கு உரியது. எங்கோ பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஆரம்ப பள்ளி நட்பு, அவர்கள் தங்களுக்கு என்று தனித்தனி பாதைகளில் பயணிக்க தொடங்கினாலும், குடும்பம், தொழில் என்று வேறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் எங்கோ ஆழத்தில் அவர்கள் ஒரு நான்காம் வகுப்பின் சேர்தலை கனவு கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. அதற்கான ஒரு தூதுவனாக வந்து சேர்கிறது அந்த சிப்பி. முத்தை கொண்டு வந்த சிப்பியும் நச்சை கொண்டு வந்த சிப்பியும் ஒன்றே. எங்கோ அந்த பரிசுத்த ஆவி மட்டுமே அறிந்த அந்த ஏழாம் கடலில் அவர்கள் இணைந்திருப்பார்கள்.
அன்புடன்,
நரேந்திரன்.
அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
ஏழாம்கடல் சிறுகதையில், //நான் பைக்கை எடுத்து கடுப்புடன் உதைத்து கிளப்பி சாலையில் ஏறி விரைந்தேன். சீரான வேகம் என்னுடைய எரிச்சலையும் பதற்றத்தையும் குறைத்தது.// என் காதுகிழிய கம்யூனிசம் பேசிக்கொண்டே வாட்ச்மேன் சம்பளத்தை குறைக்க பரிந்துரைத்த நண்பர்களை கண்டு நான் எண்ணக்கொதிப்புடன் இருந்த நாட்களில், காத்திருந்து அரசுப்பேருந்துகளில் மட்டுமே சென்றேன். சீரான வேகத்தில் ஒரு ஆறுதல் இருக்கத்தான் செய்தது.
(தீற்றல் சிறுகதையை தொடர்ந்து வந்ததாலோ என்னவோ) ஏழாம்கடல் சிறுகதை ஒரு காதல் கதையின் உருவகமென்றே தோன்றியது.
வை. பாலகுமார்
இனிய போர்வீரன்
எனக்கான போரை நான் செய்யவே போவதில்லையோ என அர்ஜுனன் வினவுகிறான். பீமனுக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள புன்னகையின் பின்னுள்ளது ஒன்றுதான். பீமனுக்கு ‘குற்ற உணர்ச்சி’ மரத்து விட்டது. கிருஷ்ணனின் ஆன்மாவில் அத்தகு தீமையின் முத்தத்தின் சுவடு ஏதும் இல்லை.
இனிய போர்வீரன்March 9, 2021
விருந்து [சிறுகதை]
திருவிதாங்கூர் கொச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே தனி சமஸ்தானமாக இருந்த காலகட்டத்தில், 1946-ல் கடைசியாக தூக்கிலிடப்பட்டவன் பெயர் சாமிநாத ஆசாரி. அப்போது அவனுக்கு வயது இருபத்தாறுதான். என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளைதான் அவனுடைய தனி ஜெயில் வார்டன். தாத்தாவின் வாழ்க்கையில் சாமிநாத ஆசாரி ஒரு முக்கியமான இடத்தில் இருந்தான். தாத்தா 1974-ல் மறைவதுவரை சாமிநாத ஆசாரி பெயருக்கு ஆண்டுதோறும் அவன் தூக்கிலிடப்பட்ட மே 12 ஆம் தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் ஒரு புஷ்பாபிஷேகம் வழிபாடு நடத்திவந்தார்.
அதிகமாக சாமிநாத ஆசாரியைப்பற்றி தாத்தா பேசுவதில்லை. பொதுவாகவே அவர் பேசக்கூடியவர் அல்ல. பல காரணங்களில் ஒன்று வாயில் எப்போதுமே வெற்றிலை போட்டிருப்பார் என்பது. ஒருமுறை போட்ட வெற்றிலையை துப்பி வாயை கழுவினாரென்றால் உடனே அடுத்த வெற்றிலை. அவர் அமர்ந்திருக்கும் திண்ணையின் ஓரமாக ஒரு தென்னைமரம். அதன்கீழ் அவர் மென்றுதுப்பிய வெற்றிலைச் சக்கையே கரிய குவியலாக இருக்கும்.
அவர் காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காவல்பணியில் இருப்பவர்கள் வெற்றிலை போட்டுக்கொள்ளக்கூடாது. வேலைபோவது மட்டுமல்ல, சமயங்களில் தலையே போய்விடும். வெற்றிலைபோட்டுக்கொண்ட நாயர்படைவீரர்கள் அதை துப்புவதற்காக அடிக்கடி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போனார்கள். வெற்றிலை வாயுடன் மேலதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு குழறலாக பதில் சொன்னார்கள். சீருடையில் காவிச்சாறு வழியவிட்டார்கள். திருவிதாங்கூர் காவல்துறை தலைவர் காப்டன் பிட் ஒருமுறை இன்ஸ்பெக்ஷன் வந்தபோது ஒருவன் அவர் ஆடைமேலேயே எச்சில் தெறிக்க பேசினான். அவனுக்கு சவுக்கடி கிடைத்தது. படையில் வெற்றிலை போட்டுக்கொள்வது இருமடங்கு சவுக்கடிக்குரிய குற்றமாகவும் ஆகியது.
தாத்தா ஓய்வுபெற்று கையெழுத்துபோட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சல்யூட் அடித்து வெளியே வந்ததுமே முதலில் முழங்கால்வரை சுற்றிக்கட்டியிருந்த கம்பளிப்பட்டையை அவிழ்த்து தலைசுற்றி வீசி எறிந்தார். வெற்றிலை போட்டு துப்பினார். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை உயிருடன் இருப்பதை நிரூபிக்க திருவனந்தபுரம் போகும்போது மட்டும்தான் சட்டையும் கால்சட்டையும் போடுவார். மற்ற நேரமெல்லாம் எப்போதும் பாதி அவிழ்ந்த வேட்டியும் சரிந்து கிடக்கும் மேல்துண்டும்தான்.
தாத்தா சவுத் திருவிதாங்கூர் தேர்ட் நாயர் பிரிகேடில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று திருவனந்தபுரம் சிட்டி கார்ட்ஸ் நாயர் பிரிகேடில் ஹெட்கான்ஸ்டபிளாக ஆனார். அதன்பின்னர் ஐந்தாண்டுகள் சப்இன்ஸ்பெக்டர் ராங்கில் சிறையில் ஸ்பெஷல் வார்டர் வேலை. அப்போதுதான் சாமிநாத ஆசாரி தூக்கு விதிக்கப்பட்டு சிறைக்கு வந்தான். மகாராஜாவிடம் அவனுடைய கருணைமனு சென்றிருந்தது. அவர் முடிவெடுக்கும் வரை கண்டெம்ட் வார்டில் அவன் தனியறையில் சிறையிருந்தான். அவனுக்கு தாத்தா தனிக்காவல்.
ஜெயிலில் வெற்றிலை அனுமதி இல்லை. ஆனால் தாத்தா ரகசியமாக ஒரு பொட்டலம் வெற்றிலைபாக்கு கொண்டுசென்று சாமிநாத ஆசாரிக்கு கொடுப்பார். ஆசாரி பத்துவயதில் வெற்றிலை போட ஆரம்பித்தவன். தூங்கும்போதுகூட ஒரு கொட்டைப்பாக்கை கடைவாயில் அதக்கிக்கொண்டுதான் படுப்பான். எந்நேரமும் வாயில் வெற்றிலை நிறைந்திருக்கவேண்டும். வெற்றிலை ஊறி ’ரசம்பிடித்து’ நிறைந்திருந்தால்தான் அவனுக்கு கையில் கலை வரும்.
ஜெயிலில் ஆசாரி ஆசைப்பட்டதெல்லாம் வெற்றிலைதான். தாத்தா வெற்றிலையை கொடுத்ததும் அவன் உள்ளே சென்று அதை முகர்ந்து பார்ப்பான். பின்னர் நிதானமாக, ஒவ்வொன்றாகப் பிரிப்பான். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என எடுத்து வைத்தபின் சீராக வெற்றிலைபோட்டுக் கொள்வான். அவன் வெற்றிலை போடுவது ஏதோ தாந்த்ரிக பூஜைகர்மம் செய்வதுபோலிருக்கும். அவ்வளவு கவனம். அவ்வளவு நளினமான அசைவுகள்.
வெற்றிலைபோட்டதும் அவன் முகம் இன்னொன்றாக ஆகிவிடும். அதுவரை சந்தையில் கைவிடப்பட்ட சிறுவனின் முகம் அவனுக்கு இருக்கும். பதற்றப்பட்டுக்கொண்டே இருப்பான். மீசைமயிரை இழுத்து வாயில் வைத்து கடிப்பான். தாடியை நீவி நீவி இழுப்பான். அமரமுடியாமல் சுற்றிச்சுற்றி வருவான். வாய் அசைந்துகொண்டே இருக்கும். விழிகளும் நிலையற்றிருக்கும். வெற்றிலை போட்டுக்கொண்டதும் முகம் மலரும். தெய்வச்சிலைகளில் காணும் அமைதியும் புன்னகையும் தோன்றும். அதன்பின் எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக இருப்பான்.
அந்த சாமிநாத ஆசாரியை தாத்தா விரும்பினார். அவனிடம் பேசிக்கொண்டிருக்க முடியும். அவனுக்கு அவர் ராத்திரிகாவல்தான். பகலுக்கு பிரபாகரன் நாயர் என்பவர் காவல். அவன் இரவில் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பதனால்தான் தாத்தாவை காவல்போட்டிருந்தார்கள். வெற்றிலை போட்டுக்கொண்டால் அவன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று தாத்தா கண்டுபிடித்தார். ஆகவே தினமும் பத்து வெற்றிலை நான்கு பாக்குடன் வந்தார். ஆனால் அவர் கடமையை மீறி அவர் வெற்றிலை போட்டுக்கொள்ளவில்லை.
வெற்றிலை நிறைந்த வாயுடன் அமர்ந்திருக்கும் ஆசாரி பேச்சில் கெட்டிக்காரன். வெறும் முகபாவனைகளைக் கொண்டே வெவ்வேறு மனிதர்களை தன் மேல் தோன்றச்செய்வான். கதகளி நடிகரைப்போல விரல்களால் சைகைகள் செய்து விளையாடுவான். சொற்களை விதவிதமாக வளைத்து பகடி பேசுவான். குட்டிக்கதைகள் சொல்வான். அனுபவக்கதைகளை வளைத்தும் திரித்தும் சொல்வான். தேவை என்றால் எழுந்து நின்று நடித்தும் காட்டுவான்.
கைதி- காவலன் என்ற நிலைமுறைகள் மறந்து தாத்தா வெடித்துச் சிரிப்பார். வயிற்றைப் பிடித்துக்கொண்டு தரையில் உருள்வார். கண்ணீரை துடைத்தபடி “டே போதும்டே ஆசாரியே. சிரிப்பாணி காட்டி கொன்னிராதே ஆளை” என்று மன்றாடுவார். கொஞ்சநேரம் சிரித்தபின் “டே பாடுடே” என்பார். ஆசாரியின் குரல் சன்னமானது. அவனால் உரக்க குரலெழுப்பிப் பாடமுடியாது. ஆனால் நல்ல சுகபாவம் கொண்ட ஆலாபனை.
பெரும்பாலும் கதகளிப்பதங்கள்தான் பாடுவான். “சாம்யமகந்நொரு உத்யானமே” அவன் பாடிக்கேட்டபின் எந்த கதகளிப் பாடகன் வந்து பாடினாலும் மெருகில்லாமல்தான் இருந்தது என்றார் தாத்தா. உண்ணாயி வாரியார் கேட்டால் மகனே என்று ஆசாரியை அள்ளி அணைத்துவிடுவார். அப்படி ஒரு கனவு பாவனை கொண்ட பாட்டு. “அவன் பாடி முடிச்சபின்னாடி மெல்ல கொஞ்சநேரம் மெல்லமாட்டு முனகுவான்லே. செத்திரலாம்போல இருக்கும்” என்றார் தாத்தா.
விடியற்காலையில்தான் தூக்கம். ஆசாரி கண்டெம்ப்ட் பிரிசனர் ஆதலால் வேலை ஏதும் செய்யவேண்டியதில்லை. டிரில்லும் இல்லை. காலையில் ஒருமுறை அட்டெண்டன்ஸ் கொடுக்கவேண்டும். பகலில் இரண்டுவேளை சாப்பாட்டுக்குப் பிறகும் நல்ல ஆழ்ந்த தூக்கம்தான். அவனை பகலில் காவல்காக்க வரும் பிரபாகரன் நாயர் “என்னமா உறங்குதான்… என்னமோ கடமைய முடிச்சுட்டு சப்பரமஞ்சத்திலே கிடக்குத மாதிரி” என்று அடிக்கடிச் சொல்வார்.
சாயங்காலம் எழுந்து சிறையின் சுவர்களில் அவன் படம் வரைவான். கருங்கல்லை கூர்முனையாக்கி அதைக்கொண்டு உரசி உரசி வரையப்படும் படங்களில் ஆண்களே இல்லை. பெண்கள், மயில்கள், மான்கள், கிளிகள், அன்னங்கள், பூக்கள், மலர்மரங்கள். எல்லாம் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து ஒரே படலம் போலிருக்கும்.
“இதென்னடே ஆசாரி தண்ணியிலே பாசம் படிஞ்சதுமாதிரி எல்லா படமும் சேந்து ஒரே படமா இருக்கு?” என்று ஒருமுறை தாத்தா கேட்டார்
“வெளியே பாருங்க வார்டர் சாரே. எல்லாம் கலந்து ஒற்றை படமாட்டுல்லா இருக்கு. தனித்தனி படமா என்ன இருக்கு பூமியிலே?” என்று ஆசாரி கேட்டான்.
“அதுவும் சரிதான்” என்று தாத்தா சொன்னார்.
அவனுடன் தாத்தா அணுக்கமாக ஆனபின் ஒருமுறை மெல்ல கேட்டார். “ஏண்டே, கெந்தர்வன் மாதிரி இருக்கே. எதுக்குடே அந்த நாயரை கொன்னே?”
அவன் புன்னகைத்து “கெந்தர்வர்கள் கொலை பண்ணுவாங்க வார்டர் சாரே. மகாபாரதம் கதை கேட்டதில்லையோ?” என்றான்.
“செரி, ஏன் கொன்னே?” என்றார்.
“கேஸு முடிஞ்சுபோச்சுல்லா?”
“ஏம்டே கொன்னே?”
“கொல்லவேண்டிய ஆளு. கொன்னாச்சு…”
”நிஜம்மாவே நீதான் கொன்னியா?”
“ஆமா”
“பொய் சொல்லக்கூடாது”
“உங்க கிட்ட எதுக்கு பொய் சொல்லணும்?”
“உன்னாலே கொல்லவும் முடியுமாடே ஆசாரி?”
“நான் கெந்தர்வன்லா?”
ஆசாரி உருளக்கட்டிவிளை கரைநாயர் திவாகர குறுப்பை ஒரு அரிவாளால் வெட்டி கொன்றான். அவர் தன் இல்லத்து முகப்பில் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தபோது ஆசாரி அவரைப் பார்க்கவேண்டும் என்று வந்து நின்றிருக்கிறான். ‘என்னடா?’ என்று அவர் கேட்டபோது இரண்டு படி மேலே ஏறியவன் மேலாடைக்குள் வைத்திருந்த அரிவாளால் ஒரே வெட்டில் தலையை துண்டாக்கினான். வெட்டி எடுத்த தலையை குடுமியில் பிடித்து தூக்கிக் கொண்டு கோயிலடி தெருவில் நடந்து சென்றான். ஆட்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். ஆற்றங்கரை வரை சென்றவன் அங்கே தலையை வீசிவிட்டு போலீஸ் வரும்வரை அரிவாளுடன் மதகில் அமர்ந்திருந்தான்.
“ஏம்டே தெருவிலே தலையோட போனே?”
“எனக்க வீடுவரை போகணும்னு நினைச்சேன்… அம்மிணிக்க குழிமாடம் இருக்குத எடம் வரை. ஆனா மனுசத்தலை இந்த கனம் கனக்கும்னு நான் கண்டேனா? கல்லு மாதிரி இருக்கு. தோளு இத்துப்போச்சு.”
“அம்மிணி எப்டிடே செத்தா?”
“அவளுக்க ஆயுசு முடிஞ்சுபோச்சு.”
“தூக்குபோட்டுல்லா செத்தா?”
அவன் அதற்கு “செரி ,உமக்கு நான் பொரகாட்டு குறத்திக்க கதையைச் சொல்லுதேன். அவ கீழ்வாயாலே பேசுவா தெரியுமா?”
அதன்பின் சிரிப்பு. ஆசாரி சொல்லும் பெரும்பாலான கதைகள் ஆண்களுக்கு மட்டும் உரியவை.
கரைநாயர் ஒருவரின் கொலை. அதுவும் அவருடைய குடிகிடப்பு ஊழியனால். கொன்றது மட்டுமல்ல, தலையை கொண்டுசென்று ஆற்றில் வீசிவிட்டான். போலீஸ் தலையை தேடி எடுக்கவே ஒருநாள் ஆகியது. எல்லா கரைநாயர்களும் வெறியுடன் இருந்தனர். எல்லா நீதிபதிகளும் கரைநாயர்கள்தான். ஆகவே தூக்கு. கருணைமனு மகாராஜா மேஜையில் இருந்தது. ஆனால் என்ன முடிவு வரும் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அங்கே முடிவெடுப்பவர் திவான் பேஷ்கார். அவர் ஒரு கரைநாயர்.
அப்படியே முடிவு அறிவிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்கு தேதி முடிவுசெய்யப்பட்டு, ஒரே கடிதத்தில் ஜெயிலருக்கு அனுப்பப் பட்டது. ஜெயிலர் கட்டமம் வர்கீஸ் தாமஸ் மாப்பிள்ளை தாத்தாவை நேரில் அழைத்தார். அலுவலகத்தில் அவர் மட்டும் தனிமையில் இருந்தார். ஒன்றும் சொல்லாமல் கடிதத்தை நீட்டினார். தாத்தா படித்துவிட்டு மேஜையில் கடிதத்தை வைத்தபோது காகித ஓசை மட்டும் கேட்டது.
“நம்ம தலையிலே பாவம் விடியப்போகுது பிள்ளைவாள்.”
“அதுக்கு நாம என்ன செய்ய? நாமளா செய்யுதோம்?”
“தீர்ப்பு எளுதின நீதிபதிக்கு பொறுப்பில்லை. உத்தரவு போடுத ராஜாவுக்கும் பொறுப்பில்லை. பின்ன ஆருக்குடே பொறுப்பு?”
“நாம நினைச்சா அவனை விட்டிர முடியாதுல்லா? அப்ப நாம பொறுப்பில்லை. அவ்ளவுதான்” என்றார் தாத்தா.
”எல்லாத்துக்கும் ஒரு வளி கண்டுபோடுவே. சரி, நீ அவனுக்கு நெருக்கம். நீ வெத்திலைபாக்கு கொண்டுபோய் குடுக்கிறதெல்லாம் எனக்கு தெரியும்… நீயே அவன்கிட்டே சொல்லிடு.”
“நானா?”
“அஃபிசியலா நான் சொல்லணும். என்னாலே முடியாதுடே. நீ சொல்லு.”
“இந்த லெட்டரையே கொண்டுபோயி காட்டினா என்ன? ஆசாரிக்கு மலையாளம் வாசிக்க தெரியும்.”
“அதுவேண்டாம்… லெட்டரை ஆவேசத்திலே கிளிச்சுட்டான்னா? இது டாக்குமெண்டாக்கும்.”
தாத்தா கடைசியில் அவரே சொல்வதாக ஒப்புக்கொண்டார். அதை எப்படிச் சொல்வது என்று விதவிதமாகச் சொற்களை அமைத்துப் பார்த்தார். “பிறப்பவன் சாவான், சாகிறவன் பிறப்பான்” என்று வேதாந்தமாக சொல்லிப்பார்த்தார். “மனுசனானா என்னிக்குமே சாவு உண்டு” என்று லௌகீகமாக சொல்லிப்பார்த்தார். எப்படிச் சொன்னாலும் அபத்தமாகவும் குரூரமாகவும் இருந்தது.
கடைசியில் அவர் நேரடியாகவே சொல்லும்படியாகியது. அவரை பார்த்ததுமே ஆசாரி எச்சரிக்கை அடைந்தான். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவர் ஒன்றும் சொல்லாமல் வெற்றிலை கட்டை அவன் முன் வைத்தார். வழக்கத்தைவிட இரு மடங்கு இருந்தது.
“என்னவாக்கும் சங்கதி?” என்றான்.
“ஒண்ணுமில்லை.”
“சொல்லுங்க வார்டர் சார்.”
“ஒண்ணுமில்லடே, ஒரு ஒற்றைத்தலைவலி.”
“லெட்டர் வந்தாச்சா?”
“என்ன? என்னடே சொல்லுதே?”
”தூக்கு எத்தனாம ்தேதி?”
அவர் அவனை கூர்ந்து பார்த்தார். இனிமேல் ஒளிக்க ஒன்றுமில்லை. ”மேட மாசம் இருபத்தொன்பதாம் தேதி…அதாவது மே 12.”
”செரி” என்று அவன் சாதாரணமாகச் சொன்னான்.
“மகாராஜா உத்தரவுடே.”
“இனிமே எத்தனை நாள் இருக்கு?”
“ஒம்பது நாள்.”
“ஒம்போது” என்று அவன் தனக்குதானே சொல்லிக்கொண்டான்.
“ஞாயித்துக்கிழமை.”
“அன்னைக்கு என்ன நாள்?என்ன நச்சத்திரம்?”
அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு “அத்தம் நட்சத்திரம், துவாதசி” என்றார்.
“நல்ல நாளா பிள்ளைவாள்?”
அவர் ஒன்றும் சொல்லவில்லை.
“சாவுறதுக்கு எல்லா நாளும் நல்ல நாளுதான்” என்று அவன் சிரித்தான்.
“ஏண்டே மக்கா” என்று கேட்டபோது அவர் அழுதுவிட்டார்.
“சேச்சே, என்ன இது? நானே அழல்லை. நீங்க என்னத்துக்கு? விடுங்க… நான் ஒரு கதை சொல்லுதேன்”
“வேண்டாம்…”
“அப்ப பாடுதேன்.”
அவன் அன்றிரவு முழுக்க பாடிக்கொண்டிருந்தான். அவர் கல்படிகளில் அமர்ந்து அவனுடைய பாட்டை கேட்டுக்கொண்டிருந்தார். துக்கமான பாட்டுக்கள் அல்ல. எல்லாமே திருவாதிரக்களி, ஓணக்களி பாட்டுக்கள். நாற்றுநடவுப்பாட்டு, தோணிப்பாட்டு. அவன் மகிழ்ச்சியாகத்தான் பாடினான். அவர் அவ்வப்போது கண்ணீர் சிந்தினார். அப்படியே தூங்கி அதில் அவனை கனவு கண்டார். அவன் சுதந்திரமனிதனாக ஒரு சந்தையில் கவிழ்த்துப்போட்ட தோணிமேல் அமர்ந்து தோணியில் தட்டியபடி பாடினான். விழித்துக்கொண்டு பெருமூச்சுவிட்டார்.
மறுநாள் காலையில் அவர் கிளம்பும்போது சாமிநாத ஆசாரி “வார்டர் சாரே, தூக்குக்காரனுக்கு கடைசி ஆசை உண்டுல்லா?” என்றான்.
“ஆமா.”
“அதை எப்டியும் நிறைவேத்துவாங்கள்லா?”
“ஆமா.”
“எனக்கு ஒரு கடைசி ஆசை. ஒரு நல்ல முட்டன் ஆட்டுக்கிடா வாங்கணும். அதை இங்கயே பொலிபோட்டு கறிவைச்சு இந்த ஜெயிலிலே உள்ள எல்லாருக்கும் குடுக்கணும். வார்டர்மாரு, கான்விக்ட்மாரு எல்லாருக்கும்.”
“அது செய்துபோடலாம். நான் சொல்லுதேன்” என்றார் தாத்தா.
அவர் சொன்னதுமே ஜெயிலர் “செய்யலாம்… கடாதானே? நல்ல காரியம்தான்” என்றார்.
செண்ட்ரிமேன் கருணாகரன் நாயர் எண்பது ரூபாய்க்கு நல்ல முட்டன் ஆட்டை வாங்கிக்கொண்டு வந்தான். கருப்பும் வெள்ளையுமாக பளபளத்த முடியும், நீண்ட தாடியும், சிப்பி போன்ற கண்களும் கொண்ட ஆட்டுக்கடா. கல் குழவிபோல விதைகள் தொங்கின. பரபரவென்று இருந்தது. அங்குமிங்கும் மோப்பம் பிடித்து தும்மலோசை எழுப்பியது. காரைச்சுவரை நக்கிப்பார்த்துவிட்டு பச்சையாக நாலைந்து சொட்டு சிறுநீர் கழித்தது.
“நல்லா விளைஞ்ச ஆடாக்கும். நெஞ்சிலே கொளுப்பு தொங்குது” என்றார் ஜெயிலர்.
“கிடா வாங்கியாச்சா வார்டர் சார்?” என்றான் சாமிநாத ஆசாரி.
”வாங்கியாச்சுடே… “
“அதை இங்க கொண்டு வந்து கட்ட முடியுமா? நான் அதை பாக்கணும். அதுக்கு நல்ல தழையும் இலையும் ஒடிச்சு என் கையாலே கொடுக்கணும்.”
தாத்தா கொஞ்சம் தயங்கினார். ஆனார் ஜெயிலர் “செரி, அது ஆசைன்னா அப்டி ஆவட்டு. இப்ப என்ன? அவன் செல்லுக்கு முன்னாலே ஒரு வராந்தா இருக்குல்ல?” என்றார்.
அந்த வராந்தாவில் ஜெயிலறையின் கம்பியிலேயே கடாவை கொண்டுசென்று கட்டினார் தாத்தா. அவனுக்கு கொண்டுவந்து கொடுத்த கம்புச்சோறு, களிக்கட்டிகள் எல்லாவற்றையும் அதற்கு அவன் ஊட்டினான். அது ஆவலாக நாக்கை நீட்டி தின்றது. அருகே நின்றிருந்த அரசமரத்திலிருந்து இலைகளை ஒடித்து கொண்டுவந்து அவனுக்கு கொடுத்தார். அதை அவனே அதற்கு ஊட்டினான்.
“ஆடு எப்பமுமே அவசர அவசரமாத்தான் திங்குது. என்னமோ ஜோலி கிடக்குதுங்கிற மாதிரி” என்றான்.
”அதோட வாய் அமைப்பு அப்பிடி” என்றார் தாத்தா.
“ஒருவேளை சாவுறதுக்குள்ள இந்த அளவுக்கு தின்னுடணும்னு அதுக்கு ஏதாவது கணக்கு இருக்கோ என்னமோ.”
அவன் சிரித்தபோது அவரால் சிரிக்க முடியவில்லை.
மூன்றுநாள் கடா அங்கேதான் நின்றது. தூக்குக்கு இரண்டுநாள் முன்னதாக அவன் அவரிடம் “ஒரு அரை மணிநேரம் ஆட்டை என் ரூமுக்குள்ள விடமுடியுமா?” என்றான்.
“எதுக்குடே?”
“அதுக்கு நான் ஒரு சடங்கு செய்யணும்”
“அதுக்கு ரூல் இல்லை பாத்துக்க.”
“தயவு செய்யுங்க வார்டர் சார், ஒரு சாவப்போறவன் கேட்கிறதுல்லா?””
“நீ என்ன செய்யப்போறே? உன் உடம்பிலே அது எங்கியாம் குத்திட்டுதுன்னா பிரச்சினையாயிடும்.”
“காயம் ஆறுறது வரை கொல்லமுடியாது இல்லியா? நான் அப்டி செய்ய மாட்டேன்.”
”எதுக்குடே வம்பு?”
“நீங்க நின்னுக்கிடுங்க… நான் வெளியே வந்துகூட ஆட்டுக்கிட்ட அந்த சடங்கை செய்வேன். ஆனா வெளிய விட்டா அது சட்டவிரோதம்.”
“ஆடு உள்ள வந்தாலும் சட்டவிரோதம்தான்.”
“ஆனா உள்ள வரக்கூடாதுன்னு சட்டம் இல்லியே.”
“அன்னியர் உள்ள வரக்கூடாது.”
“ஆடு அன்னியரா? அது மனுசன் இல்லைல்ல. அது சாப்பாடு. சாப்பாடு உள்ள வரலாமே?” என்றான்.
“வெளையாடாதே.”
“வார்டர் சார், உள்ள வார சாப்பாடு வெளியே போய்த்தான் ஆகணும்.”
தாத்தா சிரித்துவிட்டார். “செரிடே, உள்ள விடுதேன். ஒரு அரைமணி நேரம்…”
கம்பிக்கதவை திறந்து ஆட்டை உள்ளே விட்டார் தாத்தா. கம்பிக்கதவை மூடியபின் அவர் வெளியே நின்றுகொண்டார்.
ஆடு உள்ளே போனதுமே நிலையழிந்து அங்குமிங்கும் முட்டி மோதியது. அவன் தயாராக வைத்திருந்த கம்பங்களி உருண்டைகளை கொடுத்ததும் அவசரமாக சாப்பிட ஆரம்பித்தது.
அவன் ஒரு வெற்றிலையை எடுத்து அதன் வலது காதின்மேல் வைத்தான். அந்த வெற்றிலைமேல் வாயை வைத்து ஏதோ முணுமுணுத்தான். ஆடு திரும்பி அந்த வெற்றிலையை மென்றது.
“அவ்ளவுதான்… ஆட்டை வெளியே கொண்டுபோங்க” என்றான்
“அவ்ளவுதானா? என்ன செய்தே?”
“அது ரகசியம்” என்று புன்னகைத்தான்.
மறுநாள் காலையில் ஆட்டை சமைக்க கைதிகள் தயாரானார்கள். ஆயுள்தண்டனைக் கைதியாகிய அப்துல் நாசரும், கரீம் குட்டியும் கசாப்புக்கும் சமையலுக்கும் பொறுபேற்றார்கள். அன்றெல்லாம் சிறையில் அசைவமே இல்லை. அரிசிச்சோறே அபூர்வத்திலும் அபூர்வம். பெரும்பாலும் உப்புடன் உருட்டிய வெறும் களியுருண்டைகள்தான். ஒருவனின் சாவுச்சோறாக இருந்தாலும் கைதிகள் கொஞ்சநேரத்திலேயே அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். சிறையெங்கும் கைதிகளின் குரல்கள் ஓங்கி ஒலித்தன. மகாராஜா பிறந்தநாள் அன்று கைதிகளுக்கு இனிப்பு வழங்குவார்கள். அன்று வேலையும் கிடையாது. அன்று மட்டும்தான் அத்தனை உற்சாகம் இருக்கும்.
“ஆனா நல்ல பய… நாளைக்கு அவனுக்கு தூக்கு” என்று மூத்த கைதி அப்துல்லா குட்டி சொன்னான்.
“அது அவனுக்க தலையெழுத்து…. அவனைச்சொல்லி ஒருவாய் நல்ல சோறு திங்கிறது நம்ம தலையெழுத்து… நாம மட்டும் எத்தனைநாள் இருக்கோம்னு என்ன தெரியும்?” என்றார் காட்டுமாடம் கருணன் ஆசான்.
சாமிநாத ஆசாரி தாத்தாவிடம் “அந்த கிடாயை அறுக்கிறதை நான் பாக்கணும்” என்றான்.
“அதென்னதுடே?” என்றார் தாத்தா.
“இங்க வச்சு வெட்டச் சொல்லுங்க… இந்த அரசமரத்திலே தொங்கட்டும்”
“உனக்கு என்னடே கிறுக்கா? நாலுநாளு நம்ம கூடவே நின்னிருக்கு. நம்ம கையாலே வாங்கித்தின்னிருக்கு.”
“நான் பாக்கணும்.”
”என்னாலே அதை பாக்க முடியாது”
“நான் பாக்கணும்” என்று அவன் பிடிவாதமாகச் சொன்னான். சிறுகுழந்தைபோல தலையை அசைத்தான்.
”செரிடே செரிடே”.
அவன் கேட்டபடி கிடாயை அவன் சிறைக்கு முன்னாலேயே கொன்று அறுத்தார்கள். அதன் கால்களை கட்டி பக்கவாட்டில் வீழ்த்தி தாடை எலும்பைப் பற்றி தலையை தூக்கி கழுத்தை நீட்டி வைத்து கூரிய வளைந்த கத்தியால் அதன் கழுத்து நரம்பை அறுப்பதை அவன் கம்பிகளைப் பிடித்தபடி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதன் உடல் உலுக்கி உலுக்கி இழுபட்டது. கால்கள் மணலில் துடித்தன. ஓடுவதுபோல உடல் கிடந்து எம்பியது. பின்னர் அது அடங்கியதும் தலையை வெட்டி அருகே ஒரு செங்கல்மேல் வைத்தனர்.
“அதை இப்டி திருப்பி வையுங்க காக்கா” என்று அவன் சொன்னான்
”எதுக்கு?” என்று கரீம்குட்டி கேட்டார்.
“நான் அதைப் பாக்கணும்”
அவர் திருப்பி வைத்தபோது அதன் சிப்பிக்கண்கள் சிறையிலிருந்த சாமிநாத ஆசாரியை சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆட்டை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அதன் வயிற்றை கிழித்து குடல் இரைப்பை ஈரல்களை கொத்தாக பிடுங்கி எடுத்தனர். அவற்றை ஒரு பனம்பாயில் வைத்தனர். பின் சிறியகத்தியால் அதன் தோலை வெட்டி அந்தச் சிவந்த வடுவில் கைவிட்டு பிரித்து, வெடுக் வெடுக்கென்று இழுத்து தோலை உரித்தனர். வெள்ளைப்பற்றுக்களை கத்தியால் அறுத்தனர்.
கம்பிளிச்சட்டை போல தோலை கழற்றி அப்பால் வைத்தனர். அது செத்த குழிமுயல்போல அங்கே இருந்தது. சிவந்த மாமிசத்தில் வாதாமரத்து இலைபோல நரம்புப்பின்னல் படர்ந்திருந்தது.
கரீம் குட்டி “போதுமா பாத்தாச்சா? சமையலறைக்கு கொண்டுபோகலாமா?” என்று கேட்டார்.
அவன் புன்னகையுடன் தலையசைத்தான்.
“காலு போட்டு சூப்பு வைச்சு குடுக்கவா மகனே?” என்றார் கரீம் குட்டி.
“வேண்டாம் இக்கா” என்றான் சாமிநாத ஆசாரி.
கறிவேகும் மணம் சிறைமுழுக்க பரவியது. கைதிகள் எல்லாம் ரத்தமணம் கொண்ட நரிகள் போல அமைதியிழந்தனர். கூச்சல்கள் பூசல்கள் சிரிப்போசைகள். சிலர் வேண்டுமென்றே ஊளையிட்டனர்.
மதியம் இரண்டு மணிக்கெல்லாம் பிரியாணியும் கறியும் தயாராகிவிட்டன. பெரிய எனாமல் தட்டுகளில் ஜெயிலருக்கும் வார்டருக்கும் பிரியாணியையும் கறியையும் கொண்டுவந்து வைத்தார்கள்.
“எப்டிடே சாப்பிடுகது?” என்றார் ஜெயிலர்.
தாத்தாவாலும் சாப்பிட முடியவில்லை. ஆனால் பிரபாகரன் நாயர் “அப்பிடிப்பாத்தா நாம சாவு வீட்டிலே விருந்து சாப்பிடுதோம். துட்டிச்சோறு சாப்பிடாமலா இருக்கோம்?” என்றார் “நாம நல்லா சாப்பிட்டு வாழ்த்தினா அவனுக்கு சொர்க்கமாக்கும்.”
அவர் சாப்பிட ஆரம்பித்தார்.
“சாப்பிட்டு வைப்போம்” என்று ஜெயிலரும் பிரியாணியை எடுத்துக்கொண்டார்.
தாத்தா பேசாமல் இருந்தார்.
“நல்லா பண்ணியிருக்கான்… சாப்பிடும் ஓய்” என்றார் ஜெயிலர்.
தாத்தாவால் தட்டமுடியவில்லை. சாப்பிடாமல் இருந்தால் ஜெயிலர் தப்பாக நினைக்கக்கூடும்.
அன்று சாயங்காலம் வரை ஜெயிலில் சாப்பாடு கொண்டாட்டம் நடைபெற்றது. பிரியாணி வைத்த அண்டாக்களை சுரண்டி தின்ன கைதிகள் நடுவே போட்டியும் அடிதடியும் நடைபெற்றது.
மாலையில் தாத்தா அவன் அறைக்கு போனார். “என்ன செய்யுதான்?” என்று காவல் மாறும்போது பிரபாகரன் நாயரிடம் கேட்டார்.
“சும்மாதான் இருக்கான்.”
”உறங்குதானா?”
”இல்ல, சும்மாவே இருக்கான்.”
அவர் உள்ளே பார்த்தார். அவன் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான். அருகே அந்த பிரியாணியும் கறியும் அப்படியே இருந்தன.
“சாப்பிடலியாடே?”
“வேண்டாம்” என்றான்.
ஆனால் அவன் அவர்கள் கொண்டுவைத்த வெற்றிலைய முழுக்க மென்று கலம் நிறைய துப்பி வைத்திருந்தான். மீண்டும் வெற்றிலையும் பாக்கும் கொண்டுவந்து வைத்துவிட்டு தாத்தா ஒன்றும் சொல்லாமல் வெளியே திண்ணையில் அமர்ந்துகொண்டார்.
நள்ளிரவு வரை அவன் அப்படியே அமர்ந்திருந்தான். வெற்றிலை மெல்லும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அதன்பின் எப்போதோ பாட ஆரம்பித்தான். ஆனால் பாட்டு அல்ல. சொற்களே இல்லை. வெறும் ஆலாபனம். ஒரு வலிமுனகல் போல ஆரம்பித்தது. அழுகைபோல ஆகியது. எங்கோ பறந்துபோவதுபோல மாறியது. சுழன்றுகொண்டே இருந்தது.
அதைக் கேட்டுக்கொண்டு தாத்தா அமர்ந்திருந்தார். யாரோ கந்தர்வர் தேவர்களெல்லாம் வந்து அவனுக்காக இசைமீட்டுவது போலிருந்தது. மனித உடலை ஒரு வீணையோ நாதஸ்வரமோ ஆக மாற்றி அந்த இசையை வாசிக்கிறார்கள்.
பின்னிரவில் அவன் தூங்கிவிட்டான். விடியற்காலையில் தூக்கு. மூன்றுமணிக்கு ஆராச்சாரும் உதவியாளனும் தூக்குமேடைக்கு வந்துவிட்டார்கள் என்று பிரபாகரன் நாயர் வந்து தாத்தாவிடம் சொன்னார்.
“அவனை எழுப்புங்க… அவன் பல்லுதேய்ச்சு குளிக்கணுமானா செய்யட்டும்… இப்ப ஜெயிலர் வந்திருவாரு.”
”சாவுறதுக்கு எதுக்குடே குளியலும் பல்லுதேய்ப்பும்?” என்றார் தாத்தா.
“தெய்வத்துக்கிட்டே போறதில்ல?”
அவர் கழியால் கம்பியை தட்டி சாமிநாத ஆசாரியை எழுப்பினார். “ஆசாரி, டேய், ஆசாரி”
அவன் எழுந்து அமர்ந்து தலையைச் சொறிந்தான். அவன் மனம் விழித்தெழவில்லை என்று தெரிந்தது.
“டேய் ஆசாரி, எந்திரி. இப்ப ஜெயிலர் வந்திருவார். உனக்கு பல்லு தேய்ச்சு குளிக்கணுமானா கூட்டிட்டு போறேன்”
அவனுக்கு அப்போதுதான் எல்லாம் உறைத்தது. “ஆமா…. ஆமா… பல்லு தேய்க்கணும்” என்று சொன்னான். எழுந்துகொண்டான்.
“செரி வா”
அவனை தாத்தாவும் பிரபாகரன் நாயருமாக அழைத்துச் சென்றார்கள். அவன் காலைக்கடன் கழிக்கும்போது அருகே நின்றார்கள். பல்தேய்த்தபின் தொட்டித்தண்ணீரில் பக்கெட்டை முக்கி அள்ளி மூன்றுமுறை விட்டுக்கொண்டான்.
தலைதுவட்டிவிட்டு அங்கே தேடினான். ஒரு சின்ன பிறையில் விபூதி இருந்தது. அதை தொட்டு ஈரநெற்றியில் போட்டுக்கொண்டான்.
“என்னமாம் சாப்பிடணுமாடே?” என்று பிரபாகரன் நாயர் கேட்டார்
“வேண்டாம்”
“ஜெயிலருக்கு காப்பி கொண்டு வந்திருப்பான். பிளாஸ்கிலே இருக்கும். ஒருவாய் குடிக்குதியா?”என்றார் தாத்தா.
“வேண்டாம்” என்றான்.
அவன் திரும்பச் சென்று அறையில் சப்பணம் இட்டு அமர்ந்து கண்களை மூடி எதையோ ஜெபித்துக்கொண்டிருந்தான்.
விடியற்காலை நான்கு மணிக்கு ஜெயிலரும் டாக்டரும் வந்தார்கள். ஜெயிலரின் ஃபைல்களை பியூன் வேதமாணிக்கம் கொண்டுவந்தான். ஆங்கிலோ இந்திய டாக்டர் ஜான்சன் டேவிட் தொளதொளவென்ற சட்டை அணிந்து டைகட்டி பிளாண்டர் தொப்பி அணிந்திருந்தார். அவர் நடந்தபோது நீளமான ஷூக்கள் விசித்திரமாக முனகின.
பிரபாகரன் நாயர் கம்பியை கழியால் மெல்ல தட்டி ஜெயிலர் வந்திருப்பதை அறிவித்தார். ஆனால் சாமிநாத ஆசாரி எழுந்திருக்கவில்லை. அதேபோல கண்களை மூடி ஜெபித்துக்கொண்டிருந்தான்.
தாத்தா ஜெயிலை திறந்தார். டாக்டரும் பிரபாகரன் நாயரும் உள்ளே சென்றனர். டாக்டர் அவன் கையைப்பிடித்து சும்மா நாடி பார்த்தார். அவன் நெஞ்சில் ஸ்டெதெஸ்கோப் வைத்துப் பார்த்தார். தலையை அசைத்தார். ஜெயிலர் காகிதத்தில் ஏதோ எழுதினார்.
டாக்டர் வெளியே வந்ததும் ஜெயிலர் “குற்றவாளி நம்பர் டி.கே எஸ் பார் த்ரீ பார் ஃபார்ட்டினைன் பார் ஒன் டேட்டட் ட்வெல்வ் மே நைண்டீன் ஃபார்ட்டி சிக்ஸ்” என்றார். அவன் கண்களை திறக்கவில்லை.
ஜெயிலர் அவனுடைய மரணவாரண்டை படித்தார். விடுவிடுவென பல வார்த்தைகளை விட்டு விட்டு படித்து முடித்தார். மரணவாரண்டை தூக்கில்போடும் இடத்தில்தான் படிக்கவேண்டும் என்று தாத்தா கேட்டிருந்தார். ஆனால் அந்த ஜெயிலில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு நீண்டநாட்கள் ஆகியிருந்தன.
ஜெயிலர் முன்னால் நடக்க சாமிநாத ஆசாரியை பிரபாகரன் நாயரும் தாத்தாவும் அழைத்துச் சென்றனர். அதற்குள் ஜெயிலில் பலர் தூங்கி எழுந்துவிட்டிருந்தனர். அங்கிருந்து பலர் சேர்ந்து பேசும் முழக்கம் இருட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.
தூக்குமண்டபம் கதவு மாற்றப்பட்டு பழுது பார்க்கப்பட்டிருந்தது. கதவின் முன் சாமிநாத ஆசாரியும் தாத்தாவும் நின்றனர். ஜெயிலரும் டாக்டரும் பிரபாகரன் நாயரும் உள்ளே போனார்கள்
ஆசாரி தாத்தாவைப் பார்த்து புன்னகைச் செய்தான். தாத்தாவால் அந்த தருணத்தை என்ன செய்வதென்று முடிவுசெய்ய முடியவில்லை. அவரும் புன்னகைத்தார். அது அபத்தமாக இருப்பதாக உடனே தோன்றியது
“சாமி கும்பிட்டுக்கோ” என்று சொன்னார். அது இன்னும் அபத்தமாக இருந்தது.
அவன் புன்னகைத்தான்.
அவர் அந்த நிமிடங்களை இயல்பாக ஆக்கும்பொருட்டு “எல்லாரும் உனக்காக பிரார்த்தனை செய்யுதாங்கடே” என்றார்.
“ஆமா, நேத்து நல்ல பிரியாணில்லா?” என்று மெல்லிய புன்னகையுடன் ஆசாரி சொன்னான்.
“நல்ல ஆடு” என்றார் தாத்தா. உடனே நினைவு வந்தவராக “நீ அதுக்கு என்ன சடங்குடே செய்தே?” என்றார்.
“பேரு போடுத சடங்கு”என்றான் ஆசாரி.
“பேரு போட்டியா? ஆட்டுக்கடாவுக்கா?”
“ஆமா”
“எதுக்கு?”
“சும்மா” என்று அவன் சிரித்தான்.
தாத்தா அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் நாயரும் ஆராச்சாரின் உதவியாளனும் வெளியே வந்து அவனிடம் வரும்படி கைகாட்டினார்கள். அவன் தாத்தாவிடம் இன்னொருமுறை புன்னகை செய்துவிட்டு அவர்களுடன் சென்றான். கதவு ஓசையுடன் மூடிக்கொண்டது.
உள்ளே கொண்டி விலகும் ஓசை கேட்டதா என்று தாத்தா எண்ணுவதற்குள் மடேர் என்று காலடிக்கதவு விழும் ஓசை கேட்டது. அந்த ஓசை சிறை முழுக்க ஒலித்தது. சிறையிலிருந்து குரலாக திரளாத ஒரு முழக்கம் எழுந்தது.
தாத்தாவின் உள்ளே ஒரு நடுக்கம் ஓடியது. அந்தக் குளிர்நடுக்கத்தை அவர் வாழ்க்கை முழுக்க கடந்து செல்ல முடியவில்லை. எப்போது நினைத்தாலும் அந்நடுக்கம் அவருக்கு வரும். நள்ளிரவில் அந்நடுக்கம் வந்து எழுந்து அமர்ந்து நடுங்கும் கைகளைக் கூப்பிக்கொண்டு “நாராயணா! ஆதிகேசவா!” என்பார்.
அவனுடைய உடலை வாங்க யாரும் வரவில்லை. ஆகவே அது கரமனை ஆசாரிமார் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. அவனைப்பற்றி கொஞ்சநாள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின் வேறு சம்பவங்கள். தாத்தா ஓய்வுபெற்றுவிட்டார்.
”அவன் அதுக்கு என்ன பேரு தாத்தா போட்டான்?” என்று நான் கேட்டேன்
“அதை நான் கேக்கல்லடே” என்றார் தாத்தா.
“ஏன்?”
“என்னமோ கேக்கல்ல.”
நான் தாத்தாவிடம் மீண்டும் வெவ்வேறு தருணங்களில் அதை கேட்டிருக்கிறேன். அவர் உண்மையாகவே அதை கேட்டுத்தெரிந்துகொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அவர் கடைசிவரை அதைச் சொல்லவே இல்லை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

