Jeyamohan's Blog, page 1021
March 16, 2021
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
ஓவியம்: ஷண்முகவேல்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’. பிரயாகை’ என்றால், ‘ஆற்றுச்சந்தி’ என்று பொருள். இரண்டு ஆறுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆறுகள் ஒன்றையொன்று சந்தித்து, இணைந்து, சங்கமமாகும் இடத்தை ‘பிரயாகை’ என்பர்.
நதிகள் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் இடம் ‘பிரயாகை’. அவை ஒன்றின் வலிமையைப் பிறிதொன்று உணரும் புள்ளியே ‘பிரயாகை’ என்றும் கூறலாம். அதனாலேயே ஆறுகள் சங்கமமாகும் இடத்தைப் புனிதமாகக் கருதுவர். இந்த நாவலைப் பொறுத்தவரை ‘பிரயாகை’ என்பது, ஆறுகளின் சங்கமம் அல்ல; பேராற்றல்களின் சங்கமம். வலிமைகள் சங்கமமாகும் இடமும் புனிதமானதே!
இளைய யாதவன், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை எனப் பேராற்றல் மிக்கவர்கள் தம்மைத் தாமே வெளிப்படுத்திக்கொள்ளும் இடமாகவும் தம்மை ஒத்த பிறரின் வலிமையை உணர்ந்துகொள்ளும் இடமாகவும் இந்த ‘பிரயாகை’ நாவல் அமைந்துள்ளது.
தம்மையும் பேராற்றலுடையவர்களாக நிறுவிக்கொள்ள விழைபவர்கள், அதற்காக முயன்று, அது ஈடேறாமல், தோற்றுத் திரும்பும்போது, அவர்களுக்குள் ஏற்படும் தாழ்வுணர்ச்சியையும் இந்த நாவலில் காணமுடிகிறது. பேராற்றல்களின் சங்கமத்தில் தமக்கொரு இடம் கிடைக்காததால் மனத்தளவில் தத்தளிப்பவர்களாகச் சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் மாபெரும் மாட்டுவண்டியின் ஒரு மரச்சக்கரமாக உருவகித்துக்கொள்வோம். அதில் உள்ள ஒவ்வொரு ஆரக்காலும் பேராற்றல் மிக்கதாகத்தான் இருந்தாக வேண்டும். அதுமட்டுமல்ல, உருவத்திலும் உறுதியிலும் அது ஒவ்வொன்றும் பிறிதொன்றை நிகர்த்ததாகவே இருந்தாக வேண்டும். அந்தச் சக்கரம் ஒருமுறை முழுவதுமாகச் சுழலும்போது, வண்டியின் முழுச் சுமையையும் ஒவ்வொரு ஆரக்காலும் ஒரு தருணத்தில் அது மட்டுமே தாங்க நேரும். ஆரக்கால்களுள் ஒன்று வலுவற்றதாக அமைந்துவிட்டாலும் சக்கரம் உடைந்து நொறுங்கும்.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் இந்த ‘பிரயாகை’ நாவலில் இளைய யாதவன், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை எனப் பேராற்றலுடைய ஆரக்கால்களை உருவாக்கியுள்ளார். இந்த ஆரக்கால்கள் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் வெவ்வேறு தருணத்தில் சுமக்க உள்ளது. அதற்குரிய வலிமை ‘இவர்களுக்கு உண்டு’ என்பதை ஆங்காங்கே குறிப்புணர்த்தியுள்ளார் எழுத்தாளர்.
துரோணர் கேட்கும் குருதட்சணையை வழங்குவதற்கான முதற்போரில் பாண்டவர்கள் வெல்வது துருபதனை அல்ல; கௌரவர்களையே! கௌரவர்களை முன்செல்ல வைத்து, அவர்கள் போரில் தேற்கும் நிலை ஏற்படும்போது, பாண்டவர்கள் சென்று, கௌரவர்களைக் காப்பாற்றுவதன் வழியாகவே அவர்கள் கௌரவர்களையும் துருபதனையும் வென்றுவிடுகின்றனர்.போரில் துருபதனை வென்றவுடன் யார் சொல்லுக்கும் செவிமடுக்காமல், அவனைத் தன் தேர்ச்சக்கரத்தில் கட்டி இழுத்து வரும் அர்சுணன்.பாண்டவர்கள் சௌவீரநாட்டு மன்னனை வென்று அவனுடைய மணிமுடியைத் (பறவை இறகுகளால் ஆனது) தன் தாய் குந்தியின் தலையில் சூட்டி மகிழ்தல்.இளைய யாதவனுக்கும் குந்திக்கும் இடையே நிகழும் உரையாடல்கள்.இளைய யாதவனுக்கும் விதுரருக்கும் இடையில் நிகழும் முதல் சொல்லுரசல்.இளைய யாதவனின் படைவியூகத்திறமை. தொடர் திட்டங்களால் மிகத் திறமையாகவும் விரைவாகவும் மதுராவை வெற்றிகொள்தல்.பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையே நடக்கும் கடும் தனிப்போர்.கடோத்கஜனின் அதீத வளர்ச்சி கண்டு வியக்கும் பீமனின் மனநிலை.கர்ணனின் முதற்போரைக் கண்டு அவனைத் தன் மனத்தளவில் போற்றும் அர்சுணன்.ஏகலவ்யனின் வீரமும் ஆட்சியாளுமையும் குறிப்பிடத்தக்கவை. யாதவர்களை அவன் தொடர்ந்து விரட்டியடிக்கிறான்.குந்தியிடம் குடிகொண்டுவிடும் பேரரசிக்குரிய தோரணை, திரௌபதையின் நிமிர்வு.அம்பெய்து ஐந்து மரப்பறவைகளையும் வீழ்த்தி, திரௌபதையை அடையும் அர்சுணன்.இப்படி, எண்ணற்ற அரிய தருணங்களைக் காட்டி, நம் மனத்தில் அவர்களின் பேராளுமையை நிறுவிவிடுகிறார் எழுத்தாளர்.
இங்கு இவர்கள் இவ்வாறு நிறுவப்படாவிட்டால், நாம் இவர்களின் உண்மைப் பேராளுமையை உய்த்தறியவும் பேராற்றலைக் கண்டுணரவும் இவர்களைச் சரியாக மதிப்பிடவும் தவறிவிடுவோம். இனிவரும் ‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசைகளின் மீது மகாபாரதச்சக்கரம் சுழன்று, மெல்ல மெல்ல ஏறிச் செல்லும்போது, நாம் இவர்களின் புறப் பேராற்றலையும் அகப் பேராளுமையையும் புரிந்துகொள்ள இயலாமல், திகைத்து நிற்போம்.
அப்போது, நம்மால் எழுத்தாளரின் எண்ணவோட்டத்தையும் கற்பனைத் திறத்தையும் கதையை நகர்த்திச் செல்லும் ஒழுக்கையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது. அப்போது நாம் நம்முடைய இயலாமையை உணர்ந்துகொள்வோம். அதை ஏற்றுக்கொள்ள இயலாமல், அதனை எழுத்தாளரின் மீதான நமது வெறுப்பாகவே வெளிப்படுத்துவோம். இது ஓர் இழிநிலைதான்.
இந்த இழிநிலையிலிருந்து வாசகரைக் காப்பாற்றுவதற்காகவும் வாசகருக்கு உதவுவதற்காகவும் எழுத்தாளர் இந்த நாவலில் இளைய யாதவன், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோரின் அக, புற வலிமைகளை மிகச் சரியாக நிறுவியுள்ளார். இது, ‘எழுத்தாளர் தன் வாசகருக்குச் செய்யும் பேருதவி’ என்றே நான் நினைக்கிறேன்.
இந்த உதவியைச் செய்யாத எந்த எழுத்தாளரும் ‘வாசகரின் புரிதல் திறன் சார்ந்து’ எந்தக் கேள்வியையும் எழுப்பவே இயலாது. ஒருவகையில் இது எழுத்தாளருக்குரிய ‘எழுத்தாற்றலின் தர்மம்’ என்றும் கூறலாம். அந்தத் தர்மத்தை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் மிகச் சரியாகப் பின்பற்றியுள்ளார்.
‘கதைமாந்தர் உருவாக்கம்’ மிகச் சரியாக அமையாத, அமைக்கப்படாத எந்தப் படைப்பும் குறைப் பிரதிதான். உலக அளவில் ‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசை உண்மையிலேயே மிகப் பெரிய ஆக்கம். இத்தகைய மாபெரும் ஆக்கத்தில் ‘கதைமாந்தர் உருவாக்கம்’ என்பது, துல்லியமாக இல்லையெனில், வலுவற்ற ஆரக்காலால் ஒட்டுமொத்த வண்டிச் சக்கரமும் நொறுங்குவது போல ஒட்டுமொத்த ‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசையும் சரிய நேரும்.
துரோணர், சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன் ஆகியோரிடம் பேராற்றல் குறைவாகவே உள்ளது என்பதைக் காட்டுவதற்காகவே நாடகீய அடிப்படையில், சில நிகழ்வுகளை உருவாக்கியுள்ளார் எழுத்தாளர்.
துரோணரின் காலடியில் துருபதனைப் பணிய வைக்கிறான் அர்சுணன். அப்போது துரோணரின் முகத்தில் ஏற்படும் புன்னகை அர்சுணனின் மனத்திற்குள் ஒரு நெருடலை உண்டாக்குகிறது. இதுநாள் வரை அர்சுணன் தன் குருவின் மீது கொண்ட தீராப் பற்றினை ஒரு கணப்பொழுதில் அது துடைத்தெடுத்துவிடுகிறது. அர்சுணனின் பார்வையில் துரோணர் பலபடிகள் கீழிறங்கிவிடுகிறார். தன் குருவின் ஆளுமையின் மீது அர்சுணன் கொண்டிருந்த பெருமயக்கம் தெளிவடைகிறது. அந்தத் திடீர்த் தெளிவை ஏற்றுக்கொள்ளாத அர்சுணனி மனம் அலையாடுகிறது. இதனை மிகச் சரியாகக் கண்டுகொள்கிறார் பீமன்.
அவர் அர்சுணனிடம், “”துரோணர் முன் துருபதனைக் கொண்டுசென்று போட்டபோது உன் கண்களையே நான் நோக்கினேன். நீ துரோணர் கண்களையே நோக்கினாய். அவர் புன்னகை செய்ததை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று நேரடியாகவே கூறிவிடுகிறார்.
துருபதனைப் பழிவாங்கும் பெருஞ்சினத்தின் வழியாகத் துரோணர் தன் பேராற்றலை நழுவவிட்டுவிட்டார் என்றே கருத முடிகிறது. ‘பேராற்றல்’ என்பது, வலிமை சார்ந்தது மட்டுமல்லவே! அது ஆளுமை சார்ந்ததும்தானே!. ஒருவகையில் அது சான்றாண்மையும் கூட. சான்றாண்மையற்ற பேராற்றல் அரக்கக் குலத்துக்குரியதே!
‘சகுனியின் ஆற்றல்’ என்பது, ஒருபோதும் பேராற்றலாக உருவெடுக்க முடியாதது என்பதனை நாம் அவன் அஸ்தினபுரியை விட்டுத் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் பயணத்தின் வழியாக அறிய முடிகிறது. போரில் தோற்றுத் திரும்பும் முதுவீரனின் மனநிலையோடுதான் சகுனி தன் நாட்டுக்குத் திரும்புகிறான்.
மாபெரும் கனவோடு அஸ்தினபுரியில் இத்தனை ஆண்டுகாலம் தங்கியிருந்த சகுனி, இனித் தன் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்ற மனநிலைக்கு வந்த பின்னரே தன் நாட்டுக்குத் திரும்புகிறான். சகுனியிடம் நிறைந்திருப்பது சூது நிறைந்த சொல்லாற்றல் மட்டும்தான். அது ஒருபோதும் பேராற்றலாக அமைவுகொள்ளாது. அறத்தைப் பற்றிக்கொண்டு சுழலும் சொல்லாற்றல் மட்டுமே பேராற்றலாக உருக்கொள்ளும்.
அவர் தன்னுடைய பாதிப் பயணத்தில் பயணத்தைக் கைவிட்டு, மீண்டும் அஸ்தினபுரிக்குத் திரும்ப நினைக்கிறார். அப்போது அவருக்குக் கிடைப்பவர் கணிகர். கணிகரின் உள்ளமே சூதால் ஆனதுதான். சூதால் பெருகிய சொல்லாற்றல் கொண்டவர் கணிகர். அவர் சகுனியின் ‘சிந்தனைத்துணை’யாக அமைவது, சகுனியின் சொல்லாற்றலுக்கு ஒரு ‘துணைச்சொல்’லாகவே அமைகிறது. அது ஒருபோதும் சகுனியின் சொல்லாற்றலைப் பேராற்றலாகப் பெருகச் செய்ய உதவப் போவதில்லை. அதைத்தான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள், மதுரா மீதான போரில் சகுனி முழுக்க முழுக்க கணிகரின் திட்டத்தை நம்பித் தோற்பதன் வழியாகக் காட்டியுள்ளார்.
இளைய யாதவனிடம் விதுரர், “என் ஆணையில்லாமல் அஸ்தினபுரியின் படை புறப்படாது” என்று கூறுகிறார். எந்த நாட்டிலும் அமைச்சரின் ஆணையை ஏற்று படைபுறப்படுவதில்லை. இதை உணராமல் தன் மீதும் தன் நாடு தனக்களித்திருக்கும் அதிகாரத்தின் மீதும் நம்பிக்கைகொண்டே, விதுரர் இவ்வாறு பேசிவிடுகிறார். அதனால்தான், இளைய யாதவன் தன்னிடம் யாதவ அரசி குந்தியின் முத்திரையிட்ட ஓலை இருப்பதாகக் கூறி, அஸ்தினபுரியின் படை புறப்பட உங்களின் அனுமதி தேவையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். விதுரர் நிலைகுலைந்து போவதும் இந்தத் தருணத்தில்தான். விதுரரின் பேராற்றலின்மை வெளிப்படும் புள்ளி இந்த இடம்தான். அதிலிருந்து அவரால் மீளவே முடிவதில்லை. இளையோரிடம் தோற்பதை எந்த முதியோராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லைதானே!
துரியோதனன் பலராமரிடம் செல்வதும் கர்ணன் பரசுராமரிடம் செல்வதும் தம்முடைய ஆற்றலைப் பேராற்றலாக வளர்த்துக்கொள்வதற்கே. அவர்களுக்கு லட்சியமே தம் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டே இருப்பதுதான். நிறைவுபெற்ற, முழுமையுற்ற பேராற்றலைப் பெறவே அவர்கள் விழைகிறார்கள்.
துரியோதனன் பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் உதவ அஸ்தினபுரியின் படையைக் கொண்டு வருவதாக உறுதியளிப்பதும் அது முடியாததால் தலைகுனிவதும் அவனின் பேராற்றலின்மையையே வெளிப்படுத்துகிறது. ‘தன்னால் எதைச் செய்ய முடியும், எதையெல்லாம் தன்னால் செய்யவே முடியாது’ என்பதைப் புரிந்துகொள்ளாமல், அறியாமல் இருப்பதும் ஒருவகையில் பேராற்றலின்மைதானே!.
கர்ணனின் மடியில் பரசுராமர் துயிலும் போது, கர்ணன் தன் தொடையைத் துளைக்கத் துணிந்த வண்டிடம் தன்னுடைய மன, உடல் உறுதிகளை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், அவன் பரசுராமரின் சினத்திற்கு ஆளாக நேர்ந்திருக்காதே! ‘தான் சத்திரியன் அல்லன்’ என்ற உறுதிமொழியை அளித்துத்தானே அவன் பரசுராமரிடம் அதிவில்பயிற்சியைப் பெற்றுவந்தான்?. அவன் தன்னை ஒவ்வொரு கணமும் சத்திரியன் என்றே நினைத்ததால்தான், அவனால், வண்டு ஏற்படுத்திய வலியைத் தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதுவே, அவனைச் ‘சத்திரியன்’ என்று நிறுவிவிட்டது. அதனால்தானே பரசுராமர் அவனைச் சபித்தார். தேவையற்ற தருணத்தில் தன்னுடைய பேராற்றலை வெளிப்படுத்துவது கூட ஒருவகையில் பேராற்றலின்மைதானே!
பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையிலான கொல்போரில் இறுதித் தருணத்தில் பீமன் தோற்கும் நிலை ஏற்படும்போது, அனுமனின் அருள் ஒரு குரங்கின் வழியாகப் பீமனுக்குக் கிடைக்கிறது. ‘வலுகுறைந்த மெல்லிய கிளைகளில் மட்டும் ஏறிச் செல்’ என்று அந்தக் குரங்கு தன்மொழியில் கூறுகிறது. அதனைச் செயல்படுத்துவதன் வழியாகவே பீமனால் இடும்பனைச் சரிக்க முடிகிறது. இடும்பனின் பேராற்றல் நிலைகொள்ள இயலாமல் போவது வலுகுறைந்த கிளைகளில்தான்.
மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தரும் கோட்டைக்காவல் அமைச்சருமான கைடபர், துரியோதனிடம் “நானறிந்தவரை அத்தனை எளிதாக ஏகலவ்யனை வென்றுவிடமு டியாது இளவரசே!. பாரதத்தின் மூன்று பெரும் வில்லாளிகள் எனப் பரசுராமர், பீஷ்மர், துரோணர் பெயர் சொல்லப்பட்ட காலம் உண்டு. இன்று அர்ஜுணர், கர்ணர், ஏகலைவன் என்கிறார்கள்” என்றார். பாரதவர்ஷத்தின் சிறந்த வில்லாளிகளுள் ஒருவனாகத் தன்னைத் தன் விற்திறத்தின் பேராற்றலாலேயே நிறுவிக் கொண்டுவிட்டான் ஏகலவ்யன். இளைய யாதவனால் மதுரா தாக்கப்படும்போதும்கூட யாராலும் ஏகலவ்யனைக் கொல்ல முடியவில்லை. ஏகலவ்யன் தப்பிவிடுகிறான்.
குந்தியின் பேராற்றலே தனக்கு எதிர்த்தரப்பில் உள்ளவர்களின் உளநிலை அறிந்து, அதற்கேற்ப சொல்தொடுத்து, தன் திட்டத்தைச் செயல்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. அனைவரும்கூடி, ‘துரியோதனனுக்குகே பட்டம் சூட்டலாம்’ என முடிவெடுக்கும் இறுதிக் கணத்தில்,
“ மாமன்னர் பாண்டுவுக்கு ஓர் மணிமுடி அளிக்கப்பட்டது. அது பதினெட்டு வருடங்களுக்கு மட்டுமே என்ற நெறி அவரிடம் சொல்லப்படவில்லை. அதை பிதாமகர் காந்தார இளவரசருக்கு அளித்ததை மாமன்னர் பாண்டு அறியவில்லை என்றால் அதற்கு என்ன பொருள் ? தனக்கு அரசுப்பட்டம் அளிக்கப்பட்டது என்றும் மைந்தன் அரியணை ஏறுவான் என்றும் நம்பியவராக அவர் இவ்வுலகை நீத்தார் என்றால் நாம் இறந்தவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றை மீறுகிறோம் அல்லவா ?”
எனக் கேட்டு, தன்னுடைய வாக்குத் திறமையால் திருதராஷ்டிரனின் ஆழ்மனத்தை அசைத்துவிடுகிறார் குந்தி.
அஸ்தினபுரியின் அரியணையைப் பாண்டுவுக்குப் பெற்றுத் தந்ததில் பெரும்பங்கு வகித்தது விதுரரின் வாக்குத் திறமை என்றால், பாண்டுவுக்கு உரிய அரியணையைத் தருமனுக்குப் பெற்றுத்தருவது குந்தியின் வாக்குத் திறமையே! விதுரரும் திருதராஷ்டிரனின் உளநிலையை அறிந்தே அவ்வாறு பேசி, பாண்டுவுக்கு அரியணையைப் பெற்றுத் தந்தார். குந்தியும் திருதராஷ்டிரனின் உளநிலையை அறிந்தே இவ்வாறு பேசி, தருமனுக்கு அரியணையைப் பெற்றுத் தருகிறார். தன் வாக்குத்திறத்தால் பேராற்றல் கொண்ட சக்கரவர்த்தினியாகக் குந்தி நிலைகொள்கிறார்.
மலர்ந்த முகத்துடன் கட்டளையிடுவதும் பிறரின் மனத்தை மயக்கி, பணியச் செய்வதும் தன் பேரன்பால் பிறரைத் தன் காலடியிலேயே கிடத்திக்கொள்வதும் இளைய யாதவனின் பேராற்றல்தானே!.
அதனால்தான், துரியோதனன் இளைய யாதவனைப் பற்றித் தன் தந்தையிடம், “அவனை நாம் மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். இனி, இப்பாரதவர்ஷத்தின் அரசியலாடலில் ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டாக வேண்டிய முதல் மனிதன் அவனே” என்கிறான்.
திரௌபதியின் தன்னேற்பு விழாவில் நிர்ணயிக்கப்பட்ட பந்தையத்தில் இளைய யாதவனும் கலந்துகொள்கிறான். அவனால் மட்டுமே இனி இந்தப் போட்டியில் வெல்ல முடியும் என்று அனைவரும் நினைத்திருக்கும் தருணத்தில், ஐந்தாவது மரப்பறவையின் மீது மட்டும் அம்பினை எய்யாமல், அழியா ஊழின் பெருவழியை உய்த்துணர்ந்து, தன்னுடைய வில்லைத் தாழ்த்திக்கொள்வது இளைய யாதவனின் உலகாளும் பேராற்றலன்றி வேறு என்ன?
திரௌபதியின் மனத்தைத் தன் பக்கம் ஈர்க்க பீமன்னுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. திரௌபதையின் அணித்தேரைத் தன் உடல் வலுவாலேயே பீமன் இழுத்துச் செல்கிறார். பீமன், திரௌபதியிடம், ‘தாங்கள் ஆணையிட்டால் என்னால் அணித்தேரைச் சுமந்துவரவும் முடியும்’ என்று இயல்பாகக் கூறுவது, பீமன் அடைந்திருக்கும் பேராற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது.
திரௌபதை பாஞ்சாலத்தின் தொல்குல வழக்கத்தின் அடிப்படையில், தானும் ஐந்து கணவர்களை அடையவே விரும்புகிறாள். அதைத் தன் தாயிடம் கூறவும் செய்கிறாள் திரௌபதை. ஐந்து விதமான தனித்திறன் கொண்டவர்களைக் கணவர்களாக அடைவதன் வழியாகத்தான் தான் பேராற்றல் மிக்கவளாகத் திகழ முடியும் என்று நம்புகிறாள்.
திரௌபதையின் இந்த முடிவுக்கு ஒத்த முறையில்தான் குந்தியின் பெருந்திட்டமும் இருப்பதால், அவளுக்கு இவ்வாறு ஐவரையும் தன் கணவர்களாக அடைவதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை.
திரௌபதை தன்னை நெருப்பாகவே ஒவ்வொரு கணமும் கருதுகிறாள். அந்த நெருப்பை அணையவிடாமல், அதற்குத் தொடர்ந்து தீனியிடும் பெரும்பொருட்களாகவே பாண்டவர் ஐவரையும் அவள் கருதுகிறாள். அவர்களின் பேராற்றலால்தான் தன்னுடைய பெருநெருப்பு தொடர்ந்து எரிய முடியும் என்று நினைக்கிறாள் போலும். தன்னுடைய பெருநெருப்பு எரிவதே தன்னுடைய ‘பேராற்றல்’ என்று அவள் கருதுகிறாள் எனலாம்.
பேராற்றல் நிறைந்தவர்களுக்கும் பேராற்றல் குறைந்தவர்களுக்கும் இடையில் நிகழும் உடல், மனப் போராட்டங்களாகவே இந்த ‘பிரயாகை’ நாவல் விரிந்துள்ளது. பேராற்றல் குறைந்தவர்கள் புதுவெள்ளத்தால் அடித்துச் சுருட்டி, நதிப் பாதையிலிருந்து விலக்கப்படும் சருகுகளாகவே மாறி, தோற்கிறார்கள். பேராற்றல் மிக்கவர்கள் தடையற்ற மலைச்சரிவில் விரைந்து இறங்கும் நதி போலவே வெற்றியை நோக்கி, இறங்கிச் செல்கின்றனர்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
– – –
March 15, 2021
இரு நோயாளிகள் [சிறுகதை]
மானந்தொடியில் அச்சுதன் நாயர் கிருஷ்ணன் நாயரிடம் ஒரு பேட்டியை நான் எடுக்க நேர்ந்தது முற்றிலும் தொழில்முறையாக. எம்.ஏ.கிருஷ்ணன் நாயரின் மணிகண்டவிலாஸ் என்னும் ஓட்டல் 1970ல் தொடங்கப்பட்டது. 2020ல் அதற்கு ஐம்பதாவது ஆண்டுவிழா. அவருக்கு எண்பதாவது வயது நிறைவு விழா. அதாவது சதாபிஷேகம். இரண்டையும் சேர்ந்துகொண்டாட அவர் மகன்கள் முடிவெடுத்தனர். அவரைப்பற்றியும் ஓட்டலைப்பற்றியும் ஓர் ஆவணப்படம் எடுத்து யூடியூபில் ஏற்றுவதற்கு என்னை அழைத்தனர். நான் திருவனந்தபுரம் கரமனையில் ஒரு வீடியோ ஸ்டுடியோ நடத்திவந்தேன்.
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் அவர்களின் நான்கு மகன்களுமே ஓட்டல் தொழிலில்தான் இருந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு திருவனந்தபுரம், ஆற்றுகால், வர்க்கலை, கொல்லம் நகர்களிலாக பதினெட்டு ஓட்டல்கள் இருந்தன. மகன்கள் எல்லாருமே பெரிய அளவில் நிலைபெற்று விட்டிருந்தனர். பேரப்பிள்ளைகள் ஓட்டல் தொழிலுக்கு வந்துவிட்டார்கள். எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் ஒரு பெரிய ஆலமரம்.
திருவனந்தபுரம் பேட்டையில் இருந்த மணிகண்டவிலாஸ் பழைய கட்டிடத்தில் அப்படியே இயங்கிக் கொண்டிருந்தது. அப்பாவின் காலம் வரை அதை இடித்துக் கட்டவேண்டாம் என்று மகன்கள் முடிவுசெய்திருந்தார்கள். எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் நாள் தவறாமல் அதிகாலையிலேயே குளித்து, வெள்ளை ஆடை அணிந்து, பழவங்காடி கணபதியை ஒரு தேங்காய் எறிந்து கும்பிட்டு, சந்தனக்குறி போட்டு , காதில் துளசி இலையுடன் ஐந்துமணிக்கு கடைதிறக்கும் நேரத்தில் மணிகண்டவிலாஸின் கல்லாவில் அமர்ந்திருப்பார்.
மணிகண்டவிலாஸ் பழையபாணி கேரளச் சிற்றுண்டி வகைகளுக்கு புகழ்பெற்றது. திருவனந்தபுரத்தில் அங்கேதான் ஓட்டப்பமும் இலையப்பமும் கிடைக்கும். காபி தண்ணீர் மாதிரி இருக்கும். டீ தண்ணீரைவிட கொஞ்சம் மேலாக இருக்கும். ஆனால் அரைச்செம்பு தருவார்கள். இட்லி மிகப்பெரிதாகவும் தோசை அப்பளவட்டத்தில் அரை இஞ்ச் தடிமனாகவும் இருக்கும். மசாலாதோசை, முறுகல்தோசை கிடையாது. ஆனால் நல்ல வத்தல்மிளகாய் வைத்து அரைத்த நீர்த்த தேங்காய்ச்சட்டினி கிடைக்கும். தோசையை ஊறவைத்துச் சாப்பிடலாம். பிரமாதமான ரசவடை, பழம்பொரி உண்டு. அரிசியில் செய்யும் சுறுக்கா என்னும் ஒரு விந்தையான பலகாரம் புகழ்பெற்றது. அங்கே புட்டுதான் பெரும்பாலானவர்களால் சாப்பிடப்பட்டது. உடன் அப்பளமும், பயறும், வேகவைத்த நேந்திரம்பழமும் உண்டு. சம்பா அரிசிப்புட்டு சாலையிலேயே மணக்கும்.
மதியச்சாப்பாடு புளியங்கொட்டை போன்ற சம்பா அரிசிச் சோறு. தேங்காய் அரைத்து வெள்ளரிக்காயோ தடியன்காயோ போட்ட கறி. உருளைக்கிழங்கு அல்லது காய்ச்சில்கிழங்கு கூட்டுகறி. வாழைக்காய் விழுக்குபிரட்டி, நாட்டுப்பயறு பொரியல். புளிசேரியும், மிளகுரசமும், கருவேப்பிலைபோட்டுக் காய்ச்சிய மோரும் உண்டு. சிறு கிண்ணத்தில் நாலுகரண்டி அடைப்பிரதமன் நாள்தோறும் உண்டு. சைவம்தான். அசைவ ஓட்டல் என்றால் அதை தூய்மையாக நடத்த முடியாதென கிருஷ்ணன் நாயர் நம்பினார். அந்த சாப்பாட்டுக்கென்றே தேடிவருவார்கள்.
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் கடையில் கல்லாவில் மதியம் வரை அமர்ந்திருப்பார். கொஞ்சம் ஓய்வெடுத்தபின் மூன்று மணிக்கு வந்தால் இரவு எட்டரை மணிக்கு கடைமூடும் வரை இருப்பார். மாலையில் அங்கே சூடான செந்நிறச் சம்பா அரிசிக்கஞ்சியும், மரவள்ளிக்கிழங்கு மயக்கியதும், பயறு மற்றும் காணத்துவையல்களும், மரவள்ளிக்கிழங்கு பப்படமும், சீனியவரைக்காய் வற்றல் பொரித்ததும் கிடைக்கும். பரோட்டா சப்பாத்தி அங்கே நுழைந்ததே இல்லை. சமையற்காரர் கேசு நாயருக்கும் எம்.ஏ.கிருஷ்ணன் நாயருக்கும் ஒரே வயது.
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் நல்ல நினைவுடன், தெளிவுடன் இருந்தார். ஆனால் அவருக்கு எந்த நினைவும் உள்ளே போய் பதியவே இல்லை. 1970ல் அவர் மணிகண்டவிலாசத்தை தொடங்கியபிறகு கல்லாவிலிருந்து விலகியதில்லை. ஆரியசாலை பசாருக்கு காய்கறிகள் மளிகைகள் வாங்க சென்றுகொண்டிருந்தார். பத்தாண்டுகளில் மளிகைப்பொருட்கள் அனைத்தையும் எஸ்.கோலப்பப் பணிக்கர் ஆண்ட் சன்ஸ் நிறுவனம் கொண்டுவந்து அளிக்க ஆரம்பித்தது. பரிசுத்தநாடார் ஆண்ட் சன்ஸ் காய்கறிகளை கொண்டுவந்து தந்தார்கள். அவர் கல்லாவை விட்டு நகரத்தேவையே இருக்கவில்லை.
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் அவர்களின் கண்முன் வரலாறு ஓடிச்சென்றிருந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. திருவிதாங்கூர் அரசர் முடியிழந்தார். அசுரபிராமணனான திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யரை கே.சி.எஸ்.மணி வெட்டினார். அய்யர் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றார். ஐக்கிய கேரளம் பிறந்தது. கம்யூனிசக் கிளர்ச்சி நடந்தது. தேர்தல் பாதைக்கு வந்து இ.எம்.எஸ் ஆட்சியைப் பிடித்தார். விமோசன சமரம் நடந்து, இ.எம்.எஸ் ஆட்சியை இழந்தார். மாறிமாறி ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்றது. நடுவே நக்சலைட் கிளர்ச்சி நடந்தது. நெருக்கடிநிலை வந்தது. ராஜன் கொலை கேரளத்தை உலுக்கியது.எம்.டி.வாசுதேவன் நாயர் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தன. தகழி சிவசங்கரப்பிள்ளைக்கு ஞானபீடம் கிடைத்தது. எதுவுமே எம்.ஏ.கிருஷ்ணன் நாயருக்குத் தெரியாது. எவராவது சொன்னால் மட்டும் ‘ஆமாமாம், சொன்னார்கள்’ என்று நினைவுகூர்வார்.
தனிப்பட்ட நினைவுகளிலும் ஒன்றும் சொல்வதற்கில்லை. குழந்தைகள், குடும்பம் எதைப்பற்றியும் எந்தப் பெரிய நினைவும் இல்லை. ஆகவே மேலும் பின்னால் நகர்ந்து 1970ல் அந்த ஓட்டல் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தை நோக்கி அவரை இழுத்துச் சென்றேன். அவருக்கு ஓட்டல் தொழிலில் முன் அனுபவம் உண்டா? எப்படி உள்ளே வந்தார்? ஏதோ ஒரு கொக்கி கிடைக்கும். மனிதன் எவரானாலும் முற்றிலும் காலியானவர் அல்ல.
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் திருவனந்தபுரம் காசநோய் ஆஸ்பத்திரி இருக்கும் புலயனார்க்கோட்டை என்னும் இடத்தில்தான் ஒரு டீக்கடையை முதலில் தொடங்கியிருந்தார். அந்தச் செய்தி அவர் மகன்களுக்கே தெரியாது. புலயனார்கோட்டை! என் மண்டை மின்னியது. முன்பு புலையர்கள் நாடாண்ட ஒரு குறுநிலம். அங்கே ஒரு கோட்டை இருந்ததாக தொன்மம் உண்டு. ‘புலயனார் மணியம்ம பூமுல்ல காவிலம்ம’என்ற அழகான சினிமாப்பாட்டும் உண்டு. அதை பின்னணி இசையாகச் சேர்க்கலாம். எதையாவது காட்டவேண்டுமே.அங்கே மேற்கொண்டு அகழ்ந்தேன்.
புலயனார்கோட்டை ஒருகாலத்தில் திருவனந்தபுரம் நகருக்கு வெளியே இருந்தது. 1930-ல் அங்கே திருவனந்தபுரம் மகாராணி சேது லட்சுமிபாய் ஒரு காசநோய் விடுதியை தொடங்கினார். அன்றெல்லாம் காசநோய்தான் இந்தியாவின் மிகப்பெரிய தொற்று. வறுமையுடன் பட்டினியுடன் இணைந்து பெருகும் நோய். நெஞ்சுருக்கி. அத்துடன் நம்மவர்களின் துப்பும் பழக்கம் வேறு. ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக்கொண்டிருந்தனர்.
பல்லாயிரம்பேரை புலயனார்க்கோட்டை ஆஸ்பத்திரி காப்பாற்றியிருக்கிறது. பிறகு அது நெஞ்சுநோய்களுக்கான தனி மருத்துவமனையாக ஆக்கப்பட்டது. அந்தக்காலத்தில் 117 ஏக்கர் நிலம் இருந்தது. விமானப்படைக்கு பெரும்பாலான இடம் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் வெறும் 12 ஏக்கரில் இப்போது செயல்படுகிறது. அங்கே இப்போதே மக்கள் நடமாட்டம் குறைவு. அக்காலத்தில் மயானம்போல் இருந்திருக்கும். ஏன் அங்கே டீக்கடையை தொடங்கினார்?
”என்னுடைய அப்பா மானந்தொடியில் அச்சுதன் நாயர் அங்கே டீ வியாபாரம் செய்தார்” என்று எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார். “அப்பாவுக்குச் சொந்த ஊர் எர்ணாகுளம் பக்கம், வைற்றிலா. அங்கே வீட்டில் சோறில்லாமல் தாய்மாமனால் துரத்தப்பட்டு கொல்லம் வந்தார். துறைமுகத்தில் எடுபிடிப் பையனாக இருந்தார். அவருடைய முதலாளி செறியான் சாக்கோவுக்கு காசநோய் வந்தது. அவர் புலயனார்க்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்ந்தபோது துணைக்கு அப்பாவையும் கூட்டிக்கொண்டார். அப்பா அங்கே அவருடன் தங்கினார்.”
செறியான் சாக்கோ ஓராண்டில் இறந்தார். அப்பா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். சிகிச்சையிலிருக்கும் நோயாளிகளுக்கு எதையாவது வாங்கிவந்து கொடுப்பது அவருடைய வேலை. சில்லறை கிடைக்கும். அப்படியே தூக்குவாளியில் டீ விற்க ஆரம்பித்தார். டீ அப்போதுதான் வந்து பிரபலமாகியிருந்தது. பால்விட்ட டீ காசநோய்க்கு நல்லது என்றனர் டாக்டர்கள். அப்பா அனல்போட்ட வாளிக்குமேல் எனாமல் தகரப்பானையை வைத்து அதில் தண்ணீர் கொதிக்க எனாமல் கோப்பைகளுடன் உள்ளே அலைந்து வார்டுகளில் இருப்பவர்களுக்கு டீ கொடுப்பார். டீக்கோப்பையை கொதிக்கும் நீரில் கழுவ இன்னொரு கையில் கொதிக்கும் தண்ணீர் கொண்ட வாளி வைத்திருப்பார்.
புலயனார்கோட்டை காசநோய் ஆஸ்பத்திரி என்பது ஒருவகையில் சிறைச்சாலை. நோய் என்னும் தண்டனைபெற்றவர்களுக்கான சிறைச்சாலை அது. ஆனால் அங்கே வந்து சிகிழ்ச்சைபெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள். காய்ச்சலும் இருமலும் வந்ததுமே டாக்டர்களிடம் செல்லும் அறிவிருந்தவர்க்ள். மற்றவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் உழைத்து, மெலிந்து, வற்றலாக ஆனபின்னர் சாவதற்காக அங்கே வருபவர்கள். அங்கிருப்பவர்கள் ஒரு சமூகமாக காலப்போக்கில் மாறினார்கள். அங்கேயே ஒரு வகையான வியாபார உலகம் உருவாகியது. அங்கே பணத்துக்கும் பொருளுக்கும் வேறு மதிப்பு.
அப்பா கொஞ்சம் கொஞ்சமாக பணம்சேர்த்து அங்கே ஒரு சின்ன நிலத்தை வாங்கினார். அங்கே ஒரு ஓட்டுவீடு கட்டினார். ஆனால் டீக்கடை போடவில்லை. ஏனென்றால் அன்று சானட்டோரியத்துக்கு வெளியே மக்கள் நடமாட்டமே இல்லை. சானட்டோரியத்திற்கு சாமான்களை ஏற்றிக்கொண்டு அவ்வப்போது வந்து போகும் மாட்டுவண்டிகள் மட்டும்தான். அப்பாவின் வியாபாரம் நன்றாகவே நடந்தது. அப்பா அங்கே சானடோரியத்தில் வேலைபார்த்த மேலேக்கல் வேலாயுதன் நாயரின் மகள் காளியம்மையை திருமணம் செய்துகொண்டார். நான் பிறந்தேன்.
“நீங்கள் அங்கே புலயனார்க்கோட்டையில்தான் பிறந்தீர்களா?” என்று நான் கேட்டேன்
“இல்லை, நான் பிறந்தபோது என் அம்மாவின் அப்பா வேலாயுதன் நாயர் டிபி சானட்டோரியத்தின் வேலையை விட்டுவிட்டு திரிச்சூர் மங்களோதயம் ஆஸ்பத்திரியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவருடைய ஊர் திரிச்சூர் அருகே அய்யந்தோள். மங்களோதயம் ஆஸ்பத்திரி திருப்பணித்துறை அப்பன் தம்புரான் ராமவர்மா தொடங்கிய தனியார் ஆஸ்பத்திரி. அங்கே அவருக்கு இங்கிருந்ததைவிட நல்ல சம்பளம். என் அம்மா என்னை அங்கேதான் பெற்றாள். நான் எட்டு வயதுவரை அங்கேதான் இருந்தேன்.”
”அப்படியென்றால் 1948 இல்லையா?” என்றேன்.
“அப்படியா?” என்று என்னைக் கேட்டார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர்.
“ஆமாம்” என்றேன்.
“இருக்கும்… நான் எட்டுவயதில்தான் அம்மாவுடன் திரும்ப புலயனார்க்கோட்டைக்கு வந்தேன். அதுவரை இரண்டுமாதத்துக்கு ஒருமுறை அப்பா வந்து பார்த்துவிட்டுச் செல்வார். அப்பாவை எனக்கு அதுவரை மங்கலாகத்தான் ஞாபகம். இரு கைகளிலும் எடை சுமந்து முதுகு கூனலாகி கைகள் நன்றாக இழுபட்டு இருக்கும். ஆனால் உடலில் கொழுப்பே கிடையாது. நார்நாரான உடம்பு. அம்மா நல்ல குண்டாக இருப்பாள். அவள் அப்பா டிபி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தின்னக்கொடுக்கும் கொழுப்பு உணவை முழுக்க எடுத்துக்கொண்டுவந்து மகளுக்கு கொடுத்து ஊட்டி வளர்த்தார். என்னையும் அப்படித்தான் வளர்த்தார்.”
“எட்டுவயதில் திருவனந்தபுரம் திரும்பினீர்கள் இல்லையா?”
“ஆமாம், எட்டு வயதில். என் தாத்தா செத்துப்போனார். ஏற்கனவே பாட்டியும் செத்திருந்தார். சடங்குகள் முடிந்ததும் அப்பா என்னையும் அம்மாவையும் புலயனார்கோட்டைக்கு கூட்டிவந்தார்.”
“எட்டுவயது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? என்ன நினைவு?”
அவர் யோசித்து “ஒரு சின்ன நினைவுதான். அங்கே நான் மங்களோதயம் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடிச் செல்வேன். தாத்தா என்னை அங்கே கூட்டிச்செல்வார். அங்கே நிறைய தின்னக்கிடைக்கும். அங்கே பாதிப்பேர் முட்டை சாப்பிடமாட்டார்கள். எனக்கு அதையெல்லாம் கூப்பிட்டு தருவார்கள். ஒருவர் என்னைக்கூப்பிட்டு முட்டை தருவதுண்டு. அவர் அன்றைக்கு என்னிடம் என் வயது என்ன என்று கேட்டார். நான் போய் தாத்தாவிடம் என் வயது என்ன என்று கேட்டேன். தாத்தா எட்டு என்றார். நான் எட்டு என்று சொன்னதும் அவர் என் குஞ்சாமணியில் கையால் தட்டி எட்டு வயதாகியும் நீ ஜட்டிபோடாமல் அலைகிறாயா என்றார்.”
“நீங்கள் ஜட்டி போடவில்லையா?”
“இல்லை. நான் இடுப்பில் ஒரு துண்டு மட்டும்தான் கட்டியிருந்தேன். அதுவும் அடிக்கடி அவிழ்ந்துவிடும்” எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார். அவர் முகம் மலர்ந்தது. “அவரை நன்றாக ஞாபகமிருக்கிறது. இளைஞர். வட்டக்கண்ணாடி போட்டிருப்பார். நன்றாகப் பாடுவார். அவர் கவிஞர் என்றார்கள். கவிஞர் இருக்கிறாரா என்று கேட்டு சிலர் அவரைப் பார்க்க வருவார்கள். அடிக்கடி பத்திரிகைகள் வரும். அவற்றில் அச்சிடப்பட்டு வரும் கவிதைகளை அவர் படிப்பார். பாட்டு போலவே பாடுவார்.”
“அவர் பெயர் என்ன?”
“பெயர் தெரியாதே…”
”பிறகுகூட பெயரை கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லையா?”
“இல்லை, நான் அவரை ஞாபகப்படுத்திக்கொள்வதே இப்போதுதான். நீ கேட்டதனால்தான். அவர் மங்களோதயம் ஆஸ்பத்திரியிலேயே செத்துவிட்டார். அதற்குள் நாங்கள் புலையனார்கோட்டைக்கு வந்துவிட்டோம். அம்மாவின் அண்ணாவுக்கு அங்கே காசநோய் ஆஸ்பத்திரியிலேயே அவருடைய அப்பாவின் வேலை கிடைத்தது. அவர்தான் அந்தக் கவிஞரைப் பார்த்துக்கொண்டார். அவர் படம்கூட பேப்பரில் வந்தது. அவர் ரொம்பநாள் கழித்து புலையனார்கோட்டைக்கு வந்தபோது அந்தக் கவிஞர் செத்துவிட்டதைச் சொன்னார். பேப்பரைக்கூட காட்டினார்”.
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார் “புலயனார்கோட்டையில்தான் நான் பள்ளிக்கூடம் போனேன். மிஷன் பள்ளிக்கூடம். எட்டாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின் அப்பாவுக்கு உதவியாக நானும் டீ விற்றேன். அப்பா ஒரு டீக்கடை திறந்தார். எங்கள் வீட்டுக்கு முன்னாலேயே கொஞ்சம் ஓலை வைத்து சாய்ப்பு இறக்கி டீக்கடையை ஆரம்பித்தார். அவர் கடையில் இருப்பார். நான் சானட்டோரியத்திற்குள் சென்று டீ விற்று வருவேன். அப்பா இறக்கும்போது எங்களுக்கு நிலமும் வீடும் எல்லாம் வந்துவிட்டன. நான் என் முப்பதாவது வயதில் இந்த மணிகண்டவிலாசை ஆரம்பித்தேன். இந்த ஓட்டலை நான் ஆரம்பித்தது பெரிய கதை…”
அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே நான் கூகிளில் தேடிவிட்டேன். மங்களோதயம் ஆஸ்பத்திரியில் காசநோயால் மறைந்தவர் கேரளத்தின் மாபெரும் கற்பனாவாதக் கவிஞரான சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை. ரமணன் என்ற காதல் காவியத்தை எழுதியவர். கண்ணீரும் கனவும் காதலும் நிறைந்த அவருடைய கவிதைகள் வழியாகவே மலையாளம் தன் முதிராஇளமையை கண்டடைந்தது.
சங்ஙம்புழ கிருஷ்ண பிள்ளை 1911 அக்டோபர் பத்தாம் தேதி எர்ணாகுளம் அருகே இடப்பள்ளியில் பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜாஸ் காலேஜிலும் திருவனந்தபுரம் ஆர்ட்ஸ் ஸ்கூலிலும் படித்தார்.கொஞ்சகாலம் ராணுவத்தில் பணியாற்றினார். ஆசிரியராக வேலைபார்த்தார். 1948 ஜூன் மாதம் 17 ஆம் தேதி சாகும்போது அவருக்கு முப்பத்தாறு வயதுதான். அவர் மனைவி ஸ்ரீதேவி அம்மாவுக்கு வயது இருபத்திரண்டு.
சங்ஙம்புழ கிருஷ்ண பிள்ளை தன் கல்லூரிக்காலத்திலேயே மாபெரும் கவிஞர் என்று புகழ்பெற்றிருந்தார். கற்பனாவாதம் அவருக்கு கவிதைக்கான பொருள் அல்ல, வாழ்க்கையேதான். பெண்கள்தான் அவருடைய தீராப் போதை. தெற்குக்கேரளம் முழுக்க விபச்சாரிகளை தேடி அலைந்தார் என்று சொல்கிறார்கள். ‘எல்லா பெண்ணும் பேரழகியாக தெரியுமளவுக்கு அவர் கற்பனாவாதக் காதலனாக இருந்தார். எல்லா பெண்களையும் கவர்ந்து அடையும் கந்தர்வனாகவும் திகழ்ந்தார்’ என்று பிரபல விமர்சகர் எம்.பி.பால் எழுதியிருந்தார்.
“நீங்கள் அங்கே பார்த்த கவிஞர் சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளையா?” என்று கேட்டேன்.
“தெரியவில்லையே.”
“அவரை பற்றி பிறகு விசாரிக்கவே இல்லையா? மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஆயிற்றே? எல்லா பாடநூல்களிலும் அவர் கவிதைகள் இருக்குமே.”
“நான் கவனிக்கவே இல்லையே.”
“அவரைப்பற்றி வேறு யாராவது சொன்னார்களா?”
“இல்லை” என்றார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் பிறகு “ஆ, நான் அவரைப்பற்றி வேறு ஒருவரிடம் சொன்னேன். ஞாபகம் வருகிறது.”
“யாரிடம்?”
“அவரும் ஒரு காசநோயாளிதான். அவர் தமிழ்நாட்டு ஆள். சைவவேளாளப் பிள்ளை. அவரும் பாடுவார். எல்லாம் தமிழ்ப்பாட்டு. சிவனைப்பற்றிய பாட்டு. அவர் மனைவியும் இன்னொருவரும்தான் அவரைக் கொண்டுவந்தார்கள். அவருக்கு காசநோய் முற்றியிருந்தது. இங்கே சானட்டோரியத்தில் சேர்த்தார்கள். கொஞ்சநாள் இருந்தபிறகு திரும்பக் கொண்டுபோனார்கள். அவர் செத்துவிட்டார் என்று பிறகுதான் தெரிந்தது” என்றார் கிருஷ்ணன் நாயர் “அவர் மனைவியின் ஊர் திருவனந்தபுரம். ஆனால் அவர் திருநெல்வேலிக்காரர். அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் பணம் மிச்சம் வைத்திருந்தார்கள். அப்பா அதை வாங்க என்னை அனுப்பினார். சொன்னேனே, அவருடைய மனைவி வீடு திருவனந்தபுரம்தான். நான் அங்கே சென்று பணம் வாங்கிவந்தேன். அப்போதுதான் அவர் செத்ததைச் சொன்னார்கள்”
நான் மெல்லிய படபடப்பை அடைந்தேன். “அவர் பெயர் என்ன தெரியுமா?”
“அவர் பெயரா? ஞாபகமில்லை. அவர் மனைவி பெயர் கமலா. என் தங்கைபேரும் கமலாதான். கூடவே ஒரு இளைஞர் வந்தார். அவர்பெயர் பழனி… இல்லை சிதம்பரம்…”
நான் பரபரப்பை இழந்து தளர்ந்தேன்.
“அவர் அங்கே சானடோரியத்தில் நாலைந்துநாள்தான் இருந்தார். நான் அவரை பார்த்தேன். அவரிடம் பேசினேன். அப்பா என்னிடம் டீ கொடுத்தனுப்பினார். அவரிடம் அதை கொடுத்தேன்….”
“என்ன பேசினீர்கள்?”
“அவர் என்னிடம் நீ முகத்தில் துணித்திரை போடாமல் இங்கே சுற்றி அலையாதே, உனக்கும் காசநோய் வந்துவிடும் என்றார். நான் அவரிடம் உங்களுக்கு எப்படி காசநோய் வந்தது என்று கேட்டேன். அவர் சொன்னார், இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரும் அவர் முகத்தில் காறித்துப்பினார்கள். அதனால் காசநோய் வந்தது என்று.”
“நீங்கள் என்ன சொன்னீர்கள்?”
“நான் சொன்னேன், ‘நான் திரிச்சூரில் பார்த்த கவிஞர் மாமா வேறுமாதிரி சொன்னாரே?’ என்று. இவர் சிரித்தபடி ’என்ன சொன்னார்?’ என்று கேட்டார். ’இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரையும் முத்தமிட்டதனால் காசநோய் வந்தது என்று சொன்னாரே?’ என்று சொன்னேன்.”
நான் எம்.ஏ.கிருஷ்ணன் நாயரின் உதடுகளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். நாம் சிலவேளைகளில் மிகப்பெரிய ஒன்றை பார்த்துவிடுகிறோம். ஆனால் அவர் மிக அற்புதமான இசையை வெளிப்படுத்தும் உயிரற்ற வானொலிப்பெட்டி போல் இருந்தார்.
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார் “இவர் என்னிடம் ‘அந்த மாமாவின் பெயர் என்ன?’ என்று கேட்டார். ‘பாட்டுகாரன்’ என்று நான் சொன்னேன். ‘அவர் இருக்கிறாரா?’என்று கேட்டார். ‘இல்லை செத்துவிட்டார்’ என்று சொன்னேன். உடனே இவர் பயங்கரமாகச் சிரித்தார். சிரிப்பென்றால் அப்படி ஒரு சிரிப்பு. யாரோ அவரை போட்டு அடித்து மிதித்து துவைப்பதுபோல உடல் துள்ளியது. மிகவும் மெலிந்தவர். பெரிய குரல்வளை ஆட கையால் மெத்தையை அடித்தபடியும் கால்களை உதறியபடியும் சிரித்தார்”
எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் புன்னகைத்து“ அதேபோல சிரிப்பவர்களை நான் அதற்கு முன் பார்த்ததே இல்லை. அவரை நாலைந்து கைகள் கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல அப்படி ஒரு சிரிப்பு. சிரித்துச் சிரித்து இருமல் வந்துவிட்டது. இருமியபோது அவர் மனைவி ஓடிவந்தார். அவர் மனைவிக்குக்கூட இளம்வயதுதான். கூடவே அவருடனிருந்த சிதம்பரமும் வந்தார். இருமி துப்பியபோது கட்டிகட்டியாக ரத்தம் வந்தது. அதன்பின் மூச்சுத்திணறி துடிக்க ஆரம்பித்தார். நான் விலகி வந்துவிட்டேன்.” என்றார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர். “அதன்பிறகு கொஞ்சநாளில் அவரும் செத்துவிட்டார். சொன்னேனே?”
“ஆமாம், 1948 ஜூன் முப்பதாம்தேதி. சங்கம்புழ கிருஷ்ண பிள்ளை இறந்து பதிமூன்று நாட்கள் கழித்து”
“அப்படியா? அவர் பெயர் என்ன?”
“சொ.விருத்தாசலம், தமிழில் புதுமைப்பித்தன் என்ற பெயரில் கதைகள் எழுதினார்”
“பாவம், மெலிந்த மனிதர்” என்றார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர்.“நான் இங்கே பேட்டையில் ஓட்டல் தொடங்கியபிறகுதான் எனக்கு வளர்ச்சி. என் அப்பா அங்கே புலயனார்க்கோட்டையில் ஆரம்பித்த ஓட்டலுக்குப் பெயர் இல்லை. அப்பா சபரிமலை பக்தர். அவருக்கு சபரிமலை போகவே வாய்ப்பு அமையவில்லை. அவர் நினைவாக மணிகண்டவிலாஸ் என்று பெயர்போட்டேன். நானும் ஐயப்ப பக்தன்தான். ஆனால் சபரிமலை போனதில்லை. நேரமே இல்லை…” எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொல்லிக்கொண்டே சென்றார் “என் மகன்கள் ஆரம்பித்த எல்லா ஓட்டல்களும் அய்யப்பனின் பெயரால்தான். ஐயப்பவிலாஸ், சபரிவிலாஸ், ஹரிஹரசுதம், இப்படி. அதாவது…”
*****
16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்
முதல் சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்று ஆசிரியருக்கும் வாசகருக்கும்.ஆசிரியன் தன்னை முதன்முதலாக வாசகன் முன் வைக்கும் தருணம் அவன் வாழ்வில் என்றும் இனிமையாக நினைவில் இருக்கும்.ஆசிரியன் தன் வாசகனையும்,வாசகன் ஒரு ஆசிரியனையும் கண்டுகொள்ளும் நிகழ்வு இதன்மூலம் நடக்கிறது.பின்னாளில் அவன் அடையும் உச்சங்களும் கண்டடைதல்களும் விதையாக இங்கே உறங்குகின்றன.தமிழில் மகத்தான படைப்பாளிகளின் முதல் தொகுப்புகளில் அவர்களின் ஆளுமை திரண்டு வருவதை காணலாம்.
அசோகமித்திரனின் அவருக்கே உரிய கறாரான யதார்த்தவாதம் அவ்வெதார்த்ததிலிருந்து மெலெழும் அழகியல்,இனிமையும் கறிப்புமாக அவர் அளிக்கும் வாழ்க்கை அவரின் முதல் தொகுப்புகளில் நாம் அடையலாம். ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில்,அவர் பின்னால் விரிந்து பரவிய நாட்டாரியல், காவியவாதம்,மாயாவாதம்,கேரள கன்னியாகுமரி வரலாறு கதைகள் என அனைத்திற்கும் தொடக்கத்தை அங்கே காணலாம்.
அவ்வகையில் ஆர்.காளிப்ரஸாத்தின் “ஆள்தலும் அளத்தலும்” முதல் சிறுகதைத் தொகுப்பு யதார்த்தவாதத்தில் ஆரம்பித்து கதைகளின் வழியே அதை மீறி மேலெழ முயற்சிக்கின்றன. இத்தொகுப்பை வாசிக்கும் பொழுது அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி கதைகள்
நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை, பெரும் முன்னோடிகளின் கதைகளை நினைவூட்டுவது சாதகமே தவிர எதிர்மறை அம்சம் இல்லை. இம்முன்னோடிகள் போல
நகர் சார் வாழ்க்கையை எழுதியதால் அல்ல நினைவிற்கு வருவது அகச்சித்தரிப்பினூடே புறச்சித்தரிப்பும் பின்னி அதன் வழியே கதைகள் செல்கின்றன. உதாரணமாக “விடிவு” “ஆர்வலர்” “ஆள்தலும் அளத்தலும்” கதைகளைக் கூறலாம். குத்தூஸ் தன் வீடு மதம்
சார்ந்து கட்டுப்பட்டவராயின் பன்றிகளிடம் அன்புடன் இருக்கவே முயற்சி செய்கிறார் தாய் பன்றி ஒரு சரடெனில் குத்தூஸ் இப்பக்கம் இன்னொரு சரடு, பேரனுக்காக பன்றிக் குட்டியை குத்தூஸ் தூக்கியதால் தாய் பன்றி குத்தூஸ் இருக்கும் இடத்தை விட்டு தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்கிறது, பன்றிக்கு, மனிதன் தீண்டத்தகாத சேர்ந்து வாழ தகுதியற்றவனாக ஆகும் இடம் கதை முடிகிறது.
ஆசிரியரின் பலம் கதாப்பாத்திரங்களை நம் மனதில் பதியவைப்பது தான்,கதைகளை விட ஆசிரியர் கதாப்பத்திரங்களை சொல்வதில் தான் அதிக மகிழ்ச்சி அடைகிறார் போலும், அது மனதில் நிற்கவும் செய்கிறது.”பூதம்” கதையில் கதை என்று எதுவும் இல்லை நீலகண்டனின் அகச்சித்தரிப்பின் மூலம் புறம் விவரிக்கப்படுகிறது.
சென்ற தலைமுறையில் தந்தையின் நகையையும் வீட்டையும் பங்கிட்டுக் கொள்கிறார்கள் சகோதரர்கள்,வீட்டின் மதிப்பு உயர்கிறது, நகை வீடு அளவிற்கு லாபம் தரக் கூடியதாக இல்லை, மனைவி மகளின் நச்சரிப்புக்கு ஆளாகும் நீலகண்டன்,யதார்த்தமாக கோயிலுக்குச் செல்கிறார். அர்ச்சகர் சிவ சந்நிதியில் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்,வேறொரு சந்நிதியில் வரும் மற்றொரு அர்ச்சகர் பிரசாதத்தையும் மாலைகளையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்,பார்வதி பரமேஸ்வரனை எள்ளி நகையாடும் இடத்தில் கதை தன்னை, பகடியின் மூலம் நிகழ்த்திக் கொள்கிறது.
இத்தொகுப்பின் ஆசிரியரை முழுமையாகக் அடையாளம் காட்டும் கதை “ஆள்தலும் அளத்தலும்”.வேலைத் தேடி அலையும் “நான்” சமூக பெரியவர்களைக் கண்டு வெறும் பரிசுப் பொருளுடன் திரும்பும் பொழுது வேசியுடன் இருக்கும் தன் சக ஊழியர்களை கண்டு திடுக்கிடுகிறான், பின் சகஜமாக அதை எடுத்துக் கொள்கிறான் .நாஞ்சில் நாடன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல எதையோ ஒன்றை தேடி மற்றொன்றை கண்டுகொள்வதோடு கதை முடிவடைகிறது. அவன் கண்டடைந்த ஒன்று முழுமையாக வாசகனிடமே உள்ளது. அதே போல் “பழனி” கதையில் பழனியின் மீறல்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தது.அவனின் மீறல்கள் மூலமாகவே கதை நம்மை வந்தடைகிறது.
“கரி” நம் அன்றாட தருணங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் காமத்தை நுட்பமாக வாசகனுக்கு உணர்த்துகிறது.
“ஶ்ரீஜீ” “விடிவு” போன்ற கதைகளில் திருப்பத்தை ஆசிரியர் உண்டு பண்ணுவது போல் இருக்கிறது. வடிவ சிதறலும் அநேக கதைகளில் வாசகனின் கவனத்தை சிதைப்பதாக இருக்கிறது.
இக் கதைகளின் வழியே ஆசிரியரின் கண்டடைதல்களையும் பயணத்தையும் நம்மால் அறிய முடிகிறது. இத்தொகுப்பில் கடைசி கதையான “பராசக்தி” யில் ஆசிரியர் தன்னுடையதான எழுத்தை வந்தடைகிறார் நம் கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தை
அச்சக்தியை , பெரும் பிரபஞ்சத்தியில் ஒன்றாக காணும் போது கதையும் இத்தொகுப்பும் நிறைவடைகிறது, பின் நாட்களில் மகத்தான படைப்புகளை ஆசிரியர் தருவார் என்னும் நம்பிக்கையை தருகிறது.
– அனங்கன்
ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்
விருந்து, ஏழாம் கடல் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விருந்து கதையை வாசிக்கும்போது ஒன்றை நினைத்துக்கொண்டேன். தன்னைக்கொன்று அனைவருக்கும் ஊட்டிவிட்டுச் செல்கிறான். அது எவ்வளவு குரூரமான செயல். ஏன் கடைசிவரை தாத்தா அவனை நினைத்துக்கொண்டிருக்கிறார்? ஏனென்றால் அவர் அவனை தின்றிருக்கிறார். அவன் உடல் அவர் உடலாக ஆகியிருக்கிறது. ஆப்ரிக்கர்கள் ஒருவர் இறந்துவிட்டால் அவர் உடலை உண்பார்கள். ஏனென்றால் அவர் அதன்பின் தன் உடலிலேயே நீடிப்பார். அதேபோல அவர்கள் அனைவருமே அவனுடைய உடலை உண்டுவிடுகிறார்கள் இல்லையா?
அன்றைக்கு அவன் தூக்கிலேறியபின் அவர்கள் என்ன நினைப்பார்கள்? எப்படித்தூங்குவார்கள்?
சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
விருந்து ஒரு திகைப்பூட்டும் கதை. ஆனால் ஆசாரியின் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. அவன் மரபார்ந்த முறையிலேயே அதைச் செய்கிறான். ஒருவன் சாவதற்குமுன் உயிருடனிருக்கையில் அளிக்கும் பலிக்கு இரிக்கப்பிண்டம் என்று பெயர். அவன் அதை தனக்கே செய்துகொள்கிறான். 16 ஆவது நாள் விருந்தை போட்டுவிட்டு உயிர்துறக்கிறான்.
அவன் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக பார்க்கிறான். அவனுடைய நகைச்சுவை, அவனுடைய அந்த விளையாட்டுத்தன்மை எல்லாமே முக்கியமனாவை.அவனுக்கு வாரிசு இல்லை. ஆகவே அவனுக்கு எவரும் திதி அளிக்கப்போவதில்லை. அவனே தனக்கு திதி அளித்துவிட்டு செல்கிறான்
ஸ்ரீதர்
ஏழாம்கடல் [சிறுகதை]அன்புள்ள ஜெ
ஏழாம்கடல் சிறுகதை வாசித்தேன்.
உங்கள் இளைமையில் இங்மர் பெர்மனின் seventh seal பார்த்து விட்டு வியந்து அதை பற்றி சுந்தர ராமசாமியிடம் பேசியதை நினைவின் நதியில் சுரா விலோ வேறு பதிவிலோ படித்திருக்கிறேன். நூறுகதைகளில் கூட ஏழாம் முத்திரை என்று ஒரு கதை உண்டு.
கிருஸ்துவம் இந்து மதம் இரண்டிலுமே ஏழு என்னும் எண்ணிற்க்கு முக்கியமான இடம் உண்டு என்று தேடிப் பார்த்ததிலிருந்து தெரிகிறது. Seven sins, Seventh seal, Seven seas, ஏழாம் நாள் கடவுள் உலக்கதை படைத்து முடித்தார் போன்று கிருஸ்துவத்திலும். சப்பத ரிஷிகள், ஏழு கடல் போன்று இந்து மதத்திலும்.
இது இரண்டு மதங்களின் ஏழாம் கடல் பற்றிய கதை.
இத்தனை ஆண்டு தீவிர நட்பு இருந்தும் கூட ஏன் யாகப்பா சிப்பிகளை திறந்து பார்ப்பதில்லை. பயமா. தொடக்கூடாது என்று சொல்லிவிட்டதனாலேயே எடுத்து உண்ட ஆப்பிள் தரும் அச்சமா. முதலில் சரவணனை பார்த்ததும் அவருக்கு தான் செய்யாத குற்றத்துக்கு ஏன் இவ்வளவு குற்றவுணர்ச்சி, ஏன் இவ்வளவு அழுகை. எப்படி அதற்க்கு பொறுப்பேற்று கொள்கிறார். அனைத்திற்க்கும் நீயே காரணம் என்று சொல்லிவிட்டதனாலா. அல்லது ஊழ் என்றோ தெய்வத்தின் செயல் என்றோ யாகப்பனிடம் சொல்ல ஒன்று இல்லை என்பதாலா.
முதலில் யாகப்பனை சரவணனின் அம்மா வெறுத்திருந்தாலும் அவளுக்கு அவரை எவ்வளவு அனுக்கமாக தெரிந்திருக்கிறது. ஏன்னென்றால் அவள் பெண். தாய். அன்பாலும் உணர்ச்சியாலும் ஆனவள் என்பதானாலா.
ஆனால் மகனாகிய கதைசொல்லி சரவணன் ஏன் முழுக்க அன்பின் மீது அவநம்பிக்கை உடையவனாக இருக்கிறான். நாளாம் கிளாஸ் படிக்கும் குழந்தை ஒன்று அவன் மனதில் இல்லையா அல்லது அன்புக்கான மானுடர் மீதான நம்பிக்கைக்கான வாய்பு அவன் மரபிலும் மதத்திலும் இல்லையா. நாற்பது ஆண்டுகளாக அந்த நடப்பின் முன்னால் சென்று ‘கேஸ் வேண்டான்னு சொல்லியாச்சு’ என்கிறான் பெருந்தன்மை பாவனையுடன். துளி துக்கம் அவனக்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் முத்தை கொண்டுபோய் சோதனை செய்து ‘அசல் முத்து’ என்கிறான். எத்தனை சுயநலமானவன். அவனை பார்த்து என்ன பிறப்பு என்றே எண்ணத்தோன்றுகிறது.
அந்த இன்ஸ்பெக்டர் பென் ஜோசப் வெளிபடுத்துவது என்ன. ஒரு பாவியை கண்டுபிடிப்பதன் மூலம் தன்னை பரிசுத்த ஆத்மாவாக ஆக்கிக்கொள்ள முயள்கிறாரா. அல்லது சாத்தான் உள்ளறையாத எதவும் இல்லை என்று சொல்ல வருகிறாரா..
சரவணனின் அப்பாவின் ஏழாம் கடலில் முத்து இருந்தது. ஏனென்றால் அது குறித்து அவருள் எந்த எதிர்பார்ப்பும்மில்லை அச்சமும்மில்லை. அதனால் தான் அவரின் ஏழாம் கடலில் வந்தது முத்து. ஆனால் யாகப்பாவின் ஏழாம் கடலில் வந்தது துளி விசம். காரணம் அவருக்கு இரண்டும் வருவதற்கான சாத்தியம் பற்றி முன்பே தெரியும். ஒன்றுக்கான எதிர்பார்ப்பும் மற்றொன்றுக்கான அச்சமும் அவரிடம் நாற்பத்தெட்டு ஆண்டுகளும் இருந்தது. மனதிர்களின் அக கடலில் உள்ளத்தைதான் அவர்கள் ஏழாம் கடலில் காண்கிறார்கள். அக கடல் அவர்களுடைய நம்பிக்கைகள், அகத்தில் உள்ளுரைந்த மதபடிமங்களால் உணர்வுகளால் ஆனது என்று இக்கதையை வாசிக்கலாமா.
ஏழாம்கடல் கதை புறவையமாக இரண்டு மதங்களின் மீதான விமர்சனத்தை, இடைவெளிகளை, போதாமைகளை சுட்டிகாட்டுகிறது. கதையின் அகம் தன் ஒரு கையில் பிள்ளைவாளையும் மறுகையில் யாகப்பாவையும் பிடித்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
இல்லை என்றால் இக்கதை முழுக்க முழுக்க சரவணன் மீதான இன்ஸ்பெக்டர் பென் மீதான விமர்சனமா. ஆதாவது இத்தலைமுறையின் மதம் மீதான விமர்சனம்.
நாளம் கிளாஸ் பிள்ளைவாளும் யாகப்பாவும் சொர்கத்தில் விடிய விடிய பேசி கொண்டு அமர்ந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்கு துளி விசமும் ஒரு பொருட்டில்லை ஒரு முத்தும் ஒரு பொருட்டில்லை.
நன்றி
பிரதீப் கென்னடி
அன்புள்ள ஜெ,
யார்மேலும் எந்தப் பிராதும் இல்லாத இரு பெருசுகள். தங்கள் உலகத்தை பால்யத்திலேயே நிலைநிறுத்தி அவர்களின் ஒவ்வொரு சந்திப்பிலும் அவ்வாழ்க்கையில் நுழைந்து கழித்து வெளியேறுபவர்கள். மீண்டும் அடுத்தவாரம் அவ்வுலகிற்குள் ஒரு மீனைச் சாவியாகக் கொண்டு நுழைய எதிர்நோக்கிக் காத்திருக்கும் அதே சிறுவர்கள். எந்தக் கள்ளமும் இவர்கள் மனதில் தங்க வாய்ப்பில்லை. அப்படியே தோன்றும் பிணக்குகளும் ஒரு படீர் அடியிலோ, பரஸ்பர கெட்டவார்த்தைகளிலோ மறைந்து போய் அவ்வனுபவங்களை அழித்து அழித்து புதிதாய்த் தோன்றும் சிறுவர்களின் மனம் கொண்டவர்கள்.
முத்தை அடைந்து பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் பிள்ளை நஞ்சை அடைவதும் இயல்பான செயலே. உண்மையில் கடலுக்குச் செல்ல முடியாத, சிரமப்பட்டாவது சந்திக்க வரும் நட்பின் முடிவு அவ்வியற்கையிடம்தான் விடப்பட வேண்டும். சுற்றியுள்ளவர்களுக்கு ஏதுமற்ற சடங்காய்ப் போன இந்நட்பின் முடிவுக்கு பிள்ளை சிப்பியின் அந்நஞ்சை உள்ளூர எதிர்பார்த்தும் இருந்திருக்கலாம். இரவெல்லாம் கண்விழித்து சிரித்துக்கொண்டிருக்கும் பிள்ளை கண்ணயர வியாகப்பன் தன்னையறியாமல் தரும் ஓர் அடிதான் இந்த சிப்பியின் நஞ்சு.
அன்புடன்,
ராஜேஸ்.
உன்னிகிருஷ்ணன் வீட்டு ராஜகுமாரி
மிகச் சமீபத்தில் தான் இந்தச் சிறு பெண்ணின் குரல் கேட்டேன்.சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை இடையுடுத்தி, சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் என சீர்காழியின் குரலில் கேட்ட என் மனத்துள் தோன்றிய உருவே நேரில் வந்தது போல.
தெளிவான குரல்.. அழகான உச்சரிப்பு.. சரியான பாவம்.. பிசிறுகளை வெர்னியர் காலிப்பரில்தான் அளக்க வேண்டும் போல..
பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் என்னும் வரிகளையடுத்த ஆலாபனையைக் கேளுங்கள்.
துயர் போயின போயின துன்பங்கள் என்னும் இந்தக் குரல் கேட்ட பின்னும் தொலைந்து போகாதோ துன்பங்கள்?
(149) Malarnthum Malaratha Ft. Uthara Unnikrishnan | Vasudev Krishna – YouTube
பாலா
கொதி,வலம் இடம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
மீண்டும் தங்கப்பனும் போற்றியும் பிறருமாக 100 கதைகளின் மாந்தர்களும் கதைகளில் வருவது பெரும் சந்தோஷத்தை கொடுக்கின்றது. அவர்கெளெல்லாருமாய் இருக்கும் ஓருலகில் நானும் 100 நாட்கள் இருந்தேன் என்பதால். பலநாட்கள் கழித்து வேண்டியவர்களை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியுடன் இன்றைய வலம் இடம் வாசித்தேன்.
வழக்கம்போல உங்கள் தளத்தை விழித்தெழுந்தவுடன் தெளிவான மனநிலையில் வாசிக்கமுடியாதபடிக்கு இன்று நிறைந்த நாளாக இருந்ததால், வழக்கத்தை விட கல்லூரிக்கு சீக்கிரமே சென்றேன். அங்கும் தொடர் வகுப்புக்கள், தேர்தல் வருவதால் சீக்கிரமாக பாடங்களை முடிக்கவேண்டிய அவசரம் என்று பரபரப்பான நாளில் வலம் இடம் கதையை கிடைத்த இடைவெளிகளில் வாசித்து முடித்தென்.
பாதி வாசித்து பின்னர் வகுப்புக்கு சென்று பாடத்தை போர்டில் எழுதத்துவங்கி விட்டாலும் மனம் குமரேசனின் தொழுவத்திலேயெ சுற்றிக்கொண்டிருந்தது, எருமை சினையாக இறந்ததும் செல்லம்மையின் அழுகையுமாக நெஞ்சு கனத்து ஈரக்கண்களுடன்தான் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தேன். அதுவும் செல்லம்மை ’’எனக்க ராத்திரியே’’ என்றது எத்தனை பொயடிக் வெளிப்பாடு என்று யோசித்துக்கொண்டெ இருந்தேன். குமரேசனுக்கு எருமைக்கன்று கனவில் கிடைத்ததை வாசிக்கையில் என்னையறியாமல் உடல் மெய்ப்புக்கண்டது. அது கதையென்று என்னால் இன்னுமே நினனைக்கவே முடியவில்லை
வலம் இடமென்று சொல்லி இருப்பதில் ஏதேனும் மறைபொருள் இருக்குமா என்றெல்லாம் எனக்கு புரியவில்லை மிக நேரடியாக இக்கதையை நான் மனதுக்கு நெருக்கமாக புரிந்துகொண்டேன். அதுவே எனக்கு தாங்க முடியாமலிருக்கிறது.
இக்கதையில் எருமை இறந்த பின்னர் தொழுவத்தில் இருக்கும் அந்த வெறுமையை சொல்லும் வெளிச்சத்தையும் என்னால் குமரேசனாகவெ இருந்து உணரமுடிந்தது
2015ல் வீட்டில் வளர்ந்திருந்த வாகை, மரமல்லிகை, பென்சில் என மூன்று பெரு மரங்களை ஒரு காவலுயரதிகாரி வம்படியாக என்னை மிரட்டி மகன்களை பிடித்துக்கொண்டு நிராதரவாக நின்ற என் கண் முன்னேயே மின் ரம்பத்தில் ஆட்களை வைத்து அறுத்து வேனில் ஏற்றிக்கொண்டு போனார். பின்னர் அவற்றை 9000 ரூபாய்களுக்கு விற்றார் என தகவலறிந்தேன். என் மகன்களைப்போலவே வளர்ந்த, அப்போது தன் மலரத்துவங்கி இருந்த அவை இருந்த. அந்த இடங்களின் வெறுமை நிறைந்த வெளிச்சம் இன்று எத்தனையோ மரங்கள் வளர்ந்தும் நீக்க முடியாததாகவே இருக்கிறது. உண்மையில் அந்த வெறுமை என் மனசில் அந்த மூன்று மரங்களும் வீட்டைவிட்டு போகும் போது உண்டானது அது அப்படியெதான் இருக்கும்.
இங்கு என் கிராமத்தில் புஷ்பா என்று ஒரு பெண் தினமும் வீட்டருகே மாடுகளை மேய்ப்பாள் நான் வீடுதிரும்புகையில் அவளும் அவற்றை ஒட்டிக்கொண்டு வீடுசெள்லுவாள். பலசமயங்களில் அவள் மாடுகளுடன் குமரேசனைப்போலவெ பேசிக்கொண்டு நடப்பதை கவனித்திருக்கிறேன். ’’ஒழுங்கா வரியா இல்லையா என்ன கொழுப்பு உனக்குன்னு கேட்கறேன், மழைன்னு சொல்லறேன் காதில் விழுகுதா’’ இப்படி. அப்போதெல்லாம் எனக்கு அவள் மீது பொறாமையாக இருக்கும் எத்தனை அழகிய அன்பு நிறைந்த உலகில் இருக்கிறாள் என்று.
இந்தகதை இப்படி பலவற்றை நினைவு படுத்திவிட்டது. திரும்ப வந்த அந்த குட்டி வாயில் செம்பருத்தி குச்சியை வைத்துக்கொண்டிருந்த சித்திரத்தை நான் குமரேசன் சூச்சும எருமையை கண்ணால் பார்த்ததுபோல பார்த்தேனெனென்று தான் சொல்லனும். உடலும் உள்ளமும் அப்படியே பொங்கிவிட்டது வாசிக்கையில்.
’’போனா வரும்’’ என்று தங்கையா டீக்கனார் சொன்னதும் பெரும் ஆறுதலைதந்தது.
எருமையைகுறித்த எத்தனை நுண்மையான விவரங்களை சொல்லியிருக்கிறீர்கள் என்றும் ஆச்சரயப்பட்டேன். அதன் பனையோலை மூக்கணாங்கயிறு குறித்தெல்லாம் எத்தனை எத்தனை தகவல்கள். வாசித்ததும் காட்சன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன்.
கைகூப்பி ’’எனக்க அம்மையில்லா’’ என்று குமரேசன் அழுதது அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது.. மதியம் உணவு இடைவெளையில் உங்களுக்கு வலம் இடம் குறித்து எழுத நினைத்தும் துடைத்துவிட்டதுபோல மனம் காலியாக இருந்தது. ஒருவரிகூட எழுதவே முடியவில்லை.
வீடுவந்து இரவானதும் தான் கொந்தளிப்பு அடங்கி எழுதுகிறேன் என்ன எழுதினாலும் இந்தகதை என்னை என்ன செய்தது என்று எழுத முடியாது..
வீடு திரும்புகையில் வழியில் ஏதேனும் எருமையோ அல்லது குமரேசனென்று யாராவதோ எதிர்பட்டிருந்தால் பாய்ந்து கட்டிக்கொண்டிருப்பேன். முழு உலகின் மீதும் அப்படியொரு பெரும் பிரியமேற்பட்டுவிட்டது .
அன்புடன்
லோகமாதேவி
கொதி[ சிறுகதை]
அன்பு ஜெ,
“கொதி சிறுகதை” எனப் பார்த்ததும் மகிழ்ந்தேன். ஏற்கனவே நெல்லையில் சிறுகதை மீண்டும் எழுதுவதைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். பணியிட மாறுதலால் இரண்டு நாட்கள் ஒரு இனம் புரியா மனச்சுமை அழுத்தியிருந்தது அதை உங்கள் சிறுகதைகளின் தொடக்கம் ஆற்றுப்படுத்தி அணைத்துக் கொண்டது.
எப்பொழுதும் உங்கள் கிறுத்தவ பின்புலம் கொண்ட கதைகள் என் பள்ளி வாழ்வை மீட்டச் செய்வன. பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கப் புலத்தைச் சேர்ந்தவை என்பதாலும் அது என் வாழ்வுக்கு அணுக்கமான ஒன்றைப் பற்றி பேசுவதாக உள்ளது. கொதி சிறுகதையைப் படித்துவிட்டு பசியையும் நிறைவையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு லூக்கா நற்செய்தியில் அதிகாரம் ஆறில் வரும் இந்த வரிகள் நினைவிற்கு வந்தது. “21:இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். 25: இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.” லூக்கா பசியையும் துன்பத்தையும், நிறைவையும் சிரிப்பையும் ஒப்பிடுவதைப் பற்றி சிந்தித்திருந்தேன். பசியைப் போல நிறைவு கொள்ளச் செய்யும் ஒன்று உலகில் இல்லை. ஃபாதர் ஞானையனுக்கு வயிற்றுப் பசியைப் போல சூசை மரியானுக்கு படிப்புப் பசியைப் போல ஏதோவொரு பசியைக் கைக் கொள்ளாவிடில் வாழ்வில் நிறைவென்பதில்லை என நினைத்தேன் ஜெ.
அதிகமாக சிரிக்கும் போது சிலர் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். பார்க்க வைத்து சாப்பிட்டால் வயிறு வலிக்குமே என பிட்டுக் கொடுத்து உண்பார்கள். இந்த அன்றாட நம்பிக்கைகளின் வழி கொதி சடங்கைப் பார்த்தேன். “இந்திரர் அமுதம் இயைவது ஆனாலும் இனிது எனத் தமியர் உண்டலும் இலர்” என்ற சங்க வரிகளிலிருந்து இங்கு பத்து பிள்ளை பெற்று ஒரு கைப்பிடி சோறு மட்டுமே வைத்திருக்கும் அம்மையைப் பார்க்கிறேன். பின்னும் ”தீனி இல்லைனா அப்பவே செத்திடும் எறும்பு போன்ற சனங்க” என்ற வரிகளின் வழி அந்த மக்களைப் பார்க்கிறேன். மலைக்கும் மடுவுக்குமான தூரமாக அது துயருறச் செய்கிறது. ஆனாலும் கொடுக்காமல் சாப்பிடும் ஒரு குற்ற உணர்வே கொதி இருப்பதாக, கூளிப்பேய் பிடித்திருப்பதாக நினைக்க வைக்கும் நம்பிக்கையாக மாறியிருக்கும் ஒரு காலத்தினின்று அந்த மக்களை மீட்டெடுக்கும் கருவியாக ஃபாதர் பிரனெனும், ஞானையாவும் பயன்படுகிறார்கள். “கொதி இருப்பது வாயிலயோ வயித்துலயோ இல்ல. ஆத்மாவிலயாக்கும்” என்ற வரிகளில் இந்தத் திறப்பை அடைந்தேன்.
அங்கிருந்து கொதி ஓதுவது மறைந்து அப்பத்தை பிட்டு சாப்பிடும் காலத்தை எதிர்நோக்கியவராக ஞானையாவைப் பார்க்கிறேன். கொதி சடங்குகள் அந்த நிலையினின்று அவர்களை முன்னகர்த்தும் வெறும் ஆத்ம திருப்தி என்ற புரிதல் அவருக்கு இருந்திருக்கிறது. அதனாலே தான் தன் வாழ்நாள் தோறும் நிறைந்தொழுகாமல் பசியுடன் போக்கொதியை கொண்டு தத்தழியும் தன் மனதை போக்கொதி சடங்கின் மூலம் நிறைவடையச் செய்கிறார்.
நான் பன்னிரெண்டாவது படிக்கையில் எனக்கு அம்மை போட்டுவிட்டது. அதன் பிறகு ஒருமாதம் கழித்து வைரல் காய்ச்சல் வந்து இரண்டு மாதம் வாட்டிவிட்டது. எப்பொழுதும் தூங்கிக் கொண்டும் உப்பிக் கொண்டுமிருந்தேன். ஒரு இரவு என் தலைமை ஆசிரியர் என்னைக் கூட்டிக் கொண்டு போய் கான்வென்ட் சமையலறையில் நிறுத்தி விட்டு அங்கிருக்கும் ஒரு அக்காவிடம் உப்புக்கல் மற்றும் காய்ந்த மிளகாயைக் கொடுத்து சுற்றிப் போடச் சொன்னார்கள். அதை அவள் மூன்று முறை சுற்றி கொழுந்து விட்டெரியும் அடுக்களையில் விட்டெரிந்தாள். அதன் சத்தமே என்னிலிருந்து அனைத்தையும் முறிப்பது போலப் பட்டது. நான் வரும் வழியில் சிஸ்டரிடம் ”இதையெல்லாம் நம்பரீங்களா” என்று கேட்டேன். ”உனக்குத் தெரியாதுடி கழுத. நீ உங்க வீட்டிலேயே இந்து முறைப்படி வளர்ந்திருந்தா இத செய்திருப்பாங்க. இப்பலாம் கிளாஸ்லயும் தூங்கிக்கிட்டே இருக்கியாம். என்ன செய்யறதுனு தெரில. கண்ணேறா இருக்கலாம்னு உங்க டீச்சர் சொன்னாங்க. அதான். இத யார்க்கிட்டயும் உலரிட்டு இருக்காத… போ போய் படி ஒழுங்கா. ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கலனா தொலைச்சிடுவேன் சாத்தானே” என்று சொல்லிவிட்டு நெற்றியில் சிலுவையைப் போட்டு அனுப்பினார். ஆன்மாவின் சோர்வு நீங்கிவிட்டாலே ஒருவகையான புத்துணர்வு வலிந்து பிறந்து நம்மை உந்தித் தள்ளி நிறைவை நோக்கி பயணப்படச் செய்கிறது ஜெ. அப்படித்தான் நான் அந்த சோர்விலிருந்து விலகினேன் என்று நினைக்கிறேன். கண்ணேறுக்காக சூடத்தைக் கொளுத்திப் போடுவதும், தேங்காயை பூசணியை உடைப்பதுமென செய்யும் ஒவ்வொரு செயலின் போதும் உடைபடுவது ஆன்ம அழுத்தங்களே என உணர்கிறேன் ஜெ.
எளியவர்களின் ஆத்மாவை ஓர் எளிய கொதி சடங்கு செய்து நிறைவு செய்பவராக, பாவப்பட்ட சனங்களை மேய்ப்பவராக அன்றி அவர்களுக்குக் கொடுத்து நிறைவு செய்பவராக இருந்த ஞானையன் திருஇருதயமாகவே மனதில் நின்றுவிடுகிறார். நிறைவான கதை ஜெ. நன்றி.
அன்புடன்
இரம்யா.
வலம் இடம்- கடிதங்கள் கொதி- கடிதங்கள் 2 கொதி -கடிதங்கள்-1தீற்றல் ,படையல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தீற்றல் ஓர் இளமைப்பருவ நினைவாக தெரிகிறது. நீட்டி கண்மை இடுவது என்பது இப்போதுகூட குழந்தைகளுக்குச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்றை கதையில் சேர்க்கவில்லை. அன்றெல்லாம் பெண்கள் தலைகுனிந்துதான் நடப்பார்கள். தெருக்களில் கூட்டம்கூட்டமாகப் பெண்கள் தலையை கவிழ்த்து மண்ணைப்பார்த்துக்கொண்டு நடக்கும் காட்சிகள் எழுபதுகளில் சாதாரணம்.
அ.முத்துலிங்கம் கூட ஒரு கதையில் ஐரோப்பாவிலிருந்து வந்த ஒரு சின்னக்குழந்தை இந்த அக்காக்கள் எல்லாம் எதை தேடுகிறார்கள் என்று கேட்டதாகவும் அவர்கள் தொலைத்துவிட்ட பணத்தை தரையில் தேடிக்கொண்டே செல்வதாகவும் எழுதியிருந்தார். குனிந்து செல்பவர்கள் ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். ஓரவிழிப்பார்வை, கடைக்கண் பார்வை எல்லாம் மறைந்துவிட்டது.
‘லஜ்ஜாவதியே உந்தன் கள்ளக்கடைக்கண்ணாலே’ என்று ஒரு பாட்டுவந்தது. ஆனால் என்ன ஆச்சரியமென்றால் அது பாப் வகை பாட்டு. அரைகுறை ஆடையுடன் நடனமாடும் இளைஞர்கள் பாடும் பாட்டு அது. அந்த மறைந்த காலத்தைப் பற்றிய பகடி அது
கண்மையும் வாலிட்டு எழுதிய கண்ணும் எல்லாம் அந்த சிறைப்பறவைகளின் உலகில் உள்ள விஷயங்கள்
சந்திரகுமார். என்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
மனதில் அழியாதிருக்கும் ஒரு கணத்தின் இப்படியான தீற்றலை வாசித்த அனைவரும் இன்று ஒருமுறை எடுத்துப்பார்த்திருப்பார்கள். நானும் எடுத்து பார்த்துக்கொண்டேன். ஆம் அது ஒரு கணத்தின் தீற்றல்தான், மீன் நீரீல் துள்ளுவதைப்போல ஒரே ஒரு பரவசக்கணம்தானென்றாலும் மனதில் அழியாசித்திரமாக இருந்துவிடுகின்றது.காடு கிரியும் நீலியும் ஒரு கணம் மனதில் வந்து போனர்கள் வாசிக்கையில்
அக்காலத்தில் சென்னையில் படித்துக்கொண்டிருந்த என் அத்தையொருத்தியை அவரின் இஸ்லாமியரான ஆசிரியர் காதல் திருமணம் செய்துகொண்டிருந்ததால், அந்த செளகத் அலி மாமாவினால் அதிகம் ஹிந்தி திரைப்படங்கள் பார்ப்போம்
பல படங்களில் ஷர்மிளாதாகூர் பெரும்பாலும் கண்களில் இரட்டை வாலெழுதியிருப்பார் நீளமும் அகலமுமான அவரின் கண்களை அந்தெ மையெழுதுதல் இன்னும் அழகாக்கி, கூராக்கி, துலக்கிக் காட்டும். ஷர்மிளாவே இரண்டு பெரிய கண்கள் மட்டும்தானென்று தோன்றும்.. மனதை கண்ணாடி போல் காட்டும் அவரின் கண்கள் முன்கூட்டியே பேசிவிடும் அவர் அடுத்து சொல்லப்போவதை.
இன்றும் சில இளம்பெண்கள் கண்ணெழுதிக்கொள்ளுகிறார்கள், குறிப்பாக இஸ்லாமியப்பெண்கள். வகுப்பறைக்கு வெளியிலும், பேருந்திலும் கூட என்னால் புர்காவுக்குள் இருப்பது பாத்திமாவா, பர்வீனா, பிர்தெளஸா என்று அவர்களின் சிறு கருங்குருவிகளைப் போலிருக்கும் மையெழுதிய கண்களிலிருந்தே கண்டுகொள்ள முடியும். முகத்தை மறைத்திருப்பதனாலோ என்னவோ அவர்கள் தங்கள் அடையாளங்களை கண்களிலேயே கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அழியாக்கணமொன்றின் சிறு தீற்றல் மட்டும் மனதில் எஞ்சி இருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் கதை இது.
கடந்த கல்வியாண்டின் ஒரு பருவம் முழுவதும் வீட்டிலிருந்து பணிசெய்ததால் அதற்கும் சேர்த்து இரட்டைப்பணிசெய்யும் இந்தப் பருவமும், கடும் கோடையில் தேர்தல் பயிற்சி வகுப்புக்களுமாக சோர்வூட்டும் இந்நாட்களில் உங்களின் தினசரிக்கதைகள் அளிக்கும் உளஎழுச்சியையும் ஆசுவாசத்தையும் எப்படி எழுதியும் தெரிவித்து விடமுடியாது. நன்றி
அன்புடன்
லோகமாதேவி
படையல் [சிறுகதை]அன்புள்ள ஜெ
மிஸ்டிசிசம் என்ற வார்த்தையைப் பற்றி என் வகுப்பில் சொல்லிக்கொண்டிருந்தேன். மிஸ்டிக் மிஸ்டிசிசம் என சொல்லப்படும் வார்த்தைகளெல்லாமே மேலோட்டமானவை. அந்த ஒற்றை வார்த்தையில் ஆன்மிகத்தேடல் முழுக்கவே கொச்சைப்படுத்தப்பட்டு விடுகிறது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் வெளியே நின்று ஒருவன் போட்ட பெயர் அது.
மிஸ்டிசிசம் என்று சொல்லப்படும் செயல்பாடுகளில் கடுமையான நோன்பு கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொள்வது இடம்பெறுகிறது. தன்னை மறந்து களியாட்டமிடுவதும் இடம்பெறுகிறது. இரண்டும் ஒன்றல்ல. சிவக்களி எய்தி என்றுதான் சொல்லப்படுகிறது. ஞானக்கூத்து என்றுதான் இந்தியா மிஸ்டிசிசத்தைச் சொல்கிறது.
துன்பங்கள் இல்லாத நிலை அல்ல. துன்பங்கள் உண்டு. அதைக் கடந்த நிலை. அதற்கு எறும்புபாவா சரியான உதாரணம், அடிவாங்குகிறார். பிஸ்மில்லா சொல்லி நடனமாடவும் ஆணையிடுகிறார். மாறாத களிப்பு நிலைதான் இந்தியாவின் மிஸ்டிசிசம். அதைச் சொல்லும் கதை இது
சாந்தகுமார்
அன்புள்ள ஜெ
நான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். மீண்டும் நீங்கள் தொடர்ச்சியாக எழுதப்போவதைப்பற்றி பேச்சுவந்தது. ஏன் இவ்வளவு எழுதுகிறார் என்று கேட்டார்கள் நண்பர்கள். இன்றைக்கு எழுதுவது எளிது, வாசிக்கத்தான் ஆளில்லை என்று சொன்னார்கள். சென்ற நூறு கதைகளிலேயே முப்பது நாற்பது கதைகளைத்தான் பெரும்பாலானவர்கள் வாசித்திருப்பார்கள் என்று சொன்னார்கள்
நான் சொன்னேன், ஒருத்தருமே வாசிக்கவில்லை என்றால்கூட அவர் எழுதுவார். அவருக்கு வாசகர்களே முக்கியமில்லை. அவருக்கு இந்த எழுத்து ஒரு களியாட்டம் ஒரு கொண்டாட்டம். எழுதி எழுதி அதில் திளைக்கிறார். அவருடைய சொந்தப் பயணம் அது. வாசிக்கவில்லை என்றாலும் அவருக்கு ஒன்றுமில்லை. இந்த அளவுக்குதரமான கொண்டாட்டமான எழுத்து முழுக்க இலவசமாக வாசகர்களுக்கு அளிக்கப்படுகிறது. அள்ளி வீசிவிட்டு அவர் போய்க்கொண்டே இருக்கிறார். யார் பொறுக்கிக்கொண்டால் என்ன யார் காலால் தள்ளி விட்டாலென்ன அவருக்கு பொருட்டே கிடையாது என்றேன்.
இன்று படையல் வாசிக்கும்போது அதுதான் தோன்றியது. அதில் ஆனைப்பிள்ளைச் சாமி பாடி ஆடுவதைப் பார்த்தேன். அதைப்போல நீங்களும் இந்தக்கதையால் களியாட்டமிடுகிறீர்கள். அந்த பண்டாரப்பாட்டை எழுதும்போது எத்தனை கொண்டாட்ட மனநிலையில் இருந்திருப்பீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். அதை கதைவாசிப்பவர்களும் மற்ற இலக்கியவாசகர்களும் புரிந்துகொள்ளமுடியுமா என்ன? அந்த மண்டபத்தில் எவருமே இல்லை என்றாலும் பண்டாரங்கள் பாடுவார்கள். ரத்தம் சிந்தினாலும் பாடுவார்கள் பட்டினியிலும் பாடுவதே அவர்களின் இயல்பு
ஜெயராமன்
March 14, 2021
மலைபூத்தபோது [சிறுகதை]
நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக இந்த கரடிமலை, இந்த கைதையாறு, நீரோட்டத்தை ஏறிக்கடப்பதற்கான பல்வரிசைப் பாறைகள், அப்பாறைகளின் நடுவே ஓசையுடன் எழும் நுரை எல்லாமே இப்படியேதான் இருக்கின்றன என்று பாட்டுகள் சொல்கின்றன. அந்தப்பாட்டுகள் இங்கே பறவைகளால் பாடப்படுகின்றன. புறா உறுமியும் குயில் கூவியும் கானாங்கோழி கொஞ்சியும் மரங்கொத்தி தாளமிட்டும் அந்தப்பாட்டுக்களைத்தான் பாடிக்கொண்டிருக்கின்றன. இவை இப்படித்தான் இருக்கும் என்று அறிந்ததனால்தான் எங்கள் முன்னோர் அந்த மலையை, இந்த ஆற்றை, இங்குள்ள பாறைகளைத் தொட்டு “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொன்னார்கள். பெண் கருவுற்றதை உறுதிசெய்ததும் அவளை அவள் கணவனும் சுற்றமும் அழைத்துவந்து மலைகளைச் சுட்டி அதை சொன்னார்கள். அக்குழந்தை பிறந்ததும் இருபத்தெட்டாவதுநாள் காட்டுக்கொடி எடுத்து முறுக்கி இடுப்பில் நாண்கட்டி கொண்டுவந்து ஆற்று நீரில் நனைத்து அதை சொன்னார்கள். திருமணத்தின்போது ஆணையும்பெண்ணையும் பாறைமேல் அமரச்செய்து அதை சொன்னார்கள். செத்த பிணங்களை புதைத்துவிட்டு வந்து நீரில் மும்முறை மூழ்கி எழுந்து அதை சொன்னார்கள். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” ஏனென்றால் இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும். ஆகவே நான் அந்த கரடிமலையை பார்த்தபடி கைகளை ஏழுமுறை தட்டி சொல்லிக்கொள்கிறேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” பின்னர் கைதையாற்றை பல்வரிசைப் பாறைகளின் வழியாக ஏறி மறுபக்கம் இறங்கிக் கடந்ததும் திரும்பிப்பார்த்து பன்னிருமுறை கைதட்டி சொல்லிக்கொண்டேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!”
நான் தன்னந்தனியாக இந்த அயல்நிலத்தில் மழையில் முளைத்த புதுப்பூசணியின் கொடி போல புதர்களையும் பாறைகளையும் ஊடுருவிச்சென்றுகொண்டிருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில் நடந்துகொண்டிருக்கிறேன். என் தலைக்குமேல் கொண்டைக்குருவிகள் பேசிக்கொண்டிருந்தன. என் கால்களுக்கு அருகே வாழைப்பூநிற உக்கிலுகள் உறுமியபடி சருகுப்புதர்களை ஊடுருவிச் சென்றன. புள்ளிச்சங்கு போன்ற கௌதாரிகள் ஈரச்சுனைகளின் அருகே நின்று தலைதூக்கி என்னை பார்த்தன. பூத்து குலைதாழ்ந்த மரக்கிளைகளில் தேன்சிட்டுகள் பூக்களின் அருகே சிறகடித்து வானில் நின்றிருந்தன. மைனாக்களும் வானம்பாடிகளும் அத்தனை பறவைகளின் ஓசையையும் தாங்கள் எழுப்பின. கைதையாற்றுக்கு இப்பாலுள்ளவை எங்களை அஞ்சுகின்றன. நாங்கள் இந்த அயல்நிலத்தை அஞ்சுவதுபோல. ஆனால் இந்தப் பாதை மிகமிக தொன்மையானது. இந்தப்பாதையில் நடக்கும் என் கால்களிலிருக்கும் வழியுணர்வும் மிகமிகத் தொன்மையானது. இந்த வழிகளிலுள்ள கூழாங்கற்கள் என் கால்பட்டு உருள்கின்றன. அவற்றில் சில கற்கள் அந்த கரடிமலை உச்சியில் கரடிப்பாறை அமைந்தபோதே தாங்களும் அமைந்தவை. இனி அக்கரடி ஒருநாள் உருண்டு உறுமிக்கொண்டு கீழிறங்குவது வரை அசைவிலாது அமையப்போகின்றவை. ஒவ்வொரு கல்லிடமும் நான் “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொல்லிக்கொள்கிறேன். அதை சொன்னபடியே இந்த மலையிலிருந்து இறங்கிச் செல்கிறேன்.
மலைக்குக் கீழே மலைகள் உருகி வழிந்து பரவிய ஊர்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் மக்கள் நிறைந்து வாழ்கிறார்கள். நாங்கள் பறக்கும் மனிதர்கள், மரங்களில் பறவைகள் போல மலைகளில் வாழ்பவர்கள். அவர்கள் ஊரும் மனிதர்கள், மண்ணில் வாழ்கிறார்கள். மண்ணுக்கு அடியிலும் மனிதர்கள் உண்டு. மலைமேல் வாழும் நாங்கள் காற்றால் ஆனவர்கள். நாங்கள் இறந்ததும் எங்கள் உடல்கள் மண்ணில் விழுகின்றன. எங்கள் சிறகுகள் வெண்மேகங்களாகி மேலே சென்று கரடிப்பாறை உச்சியில் சென்று நின்றிருக்கின்றன. மேலிருந்து வந்து தொடும் அமைதி அவற்றை எடுத்துக்கொள்கிறது. மேலே நிறைந்திருக்கும் மேகங்களாக ஆகிவிடுகிறோம். அங்கே இந்த உலகின்மேல் மிதந்து நின்றிருக்கிறோம். இங்கே கீழே வாழும் மனிதர்கள் கல்லால் ஆனவர்கள். அவர்கள் எடையுடன் நடக்கிறார்கள். எடைமிகுந்ததும் அப்படியே சரிந்து மண்ணில் விழுந்து புதைகிறார்கள். புதைந்து புதைந்து உள்ளே சென்றுவிடுகிறார்கள். உள்ளே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களின் எலும்புகளின் கணுக்கள் முளைக்கின்றன. அவர்களைப் போலவே அவர்களின் வாரிசுகள் உருவாகி வருகிறார்கள். இந்த ஊர்களில் நான் பார்த்த பலநூறுபேர் திரும்பத் திரும்ப வந்திருக்கிறார்கள். அவர்களும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்கள். இலைகள் உதிர்ந்து தளிர்களாகி வருகின்றன. எதுவும் எங்கும் இல்லாமலாவதில்லை. அனைத்தும் எப்போதும் நிலைகொள்கிறது. ஆகவே நான் சொல்லிக்கொள்கிறேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று.
நான் என் தோளில் மாட்டுத்தோல் பையை தொங்கவிட்டிருக்கிறேன். தலையில் முடியை சுருட்டி கொண்டைகட்டியிருக்கிறேன். வழியை கால்களுக்கு விட்டு கண்களால் காட்டை பார்த்தபடி ஊர்களுக்குச் செல்லும் சிறுபாதையில் நான் நடக்கிறேன். மலையிறங்கிச் செல்லும் ஓடைபோல அந்தப்பாதை கிளைபிரிந்து செல்கிறது. உண்மையில் அது ஊரிலிருந்து வரும் பாதை. ஊர்களிலிருந்து மாடுகளை அந்தவழியாக மேலேற்றுகிறார்கள். அவை காட்டை உண்டு திரும்பிச் செல்கின்றன. காட்டிலேயே கருவுறுகின்றன. அவற்றின் அகிடுகளில் காட்டின் பால் ஊறுகிறது. அங்கே அவர்களின் கிணறுகளில் காட்டின் நீர்தான் ஊறுகிறது. காட்டிலிருந்து ஓடைகளும் சிற்றாறுகளும் இறங்கி அவர்களின் வயல்களையும் ஊர்களையும் வளைத்து ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கே கலப்பைகளால் மண்ணை கீறுகிறார்கள். உரித்த தோலைப் புரட்டுவதுபோல மண்ணை கிளறிவிடுகிறார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவரும் விதைகளை விதைக்கிறார்கள். அந்த விதைகளை அவர்கள் தங்கள் வீடுகளில் மண்கலங்களில் வைத்திருக்கிறார்கள். விதையை வயலாக்கி வயலை விதையாக்கி சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
பின்காலையின் வெயில் முற்றி வெண்ணிறமாக சூழ்ந்து நிற்கிறது. இது தாழ்நிலங்களில் மட்டும் பெருகி நின்றிருக்கும் வெயில். மூழ்கி சுனையாழத்துக்குச் செல்கையில் அங்கே அசைவற்ற நீல இருளாக அடிநீர் நின்றிருப்பதுபோல. இது வெம்மையானது. அலைகளற்றது. இதை நாங்கள் அடிவெயில் என்கிறோம். இந்தப்பாதையில் இந்தப்பொழுதில் எவருமிருப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நான் மலையிறங்கி ஊருக்குள் செல்லும் இந்தப்பருவத்தில் வயல்வெளிகளில் எவரும் இருப்பதில்லை. வயல்கள் மண்நிறமாக மாறி விரிந்திருக்கும். சேற்றுநிலம் வெடித்து முதலைத்தோல்போல ஆகிவிட்டிருக்கும். நண்டுகள் வளைகளிலிருந்து வந்து வெளியே உலவும். கொக்குகளும் நாரைகளும் ஒற்றைக்கால்களில் நின்றிருக்கும். இப்பறவைகளை அங்கே மலைகளின்மேல் பார்ப்பது அரிது. நத்தைக்கொத்திநாரைகள், அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன்கள். அவை சிறகடித்து எழும்போது காற்றொலி கேட்கும். அவற்றின் நிழலும் அவையும் இரு சரிந்த கோடுகளாக வந்து சந்தித்துக்கொள்ள அவை இறங்குகின்றன. நிழல் விலகிச்செல்ல வானிலெழுகின்றன.
இந்த வயல்வெளிக்கு நான் சென்றமாதமும் வந்தேன். அன்று இதில் என் கண்கள் நிறையும்படி நெடுந்தொலைவுக்கு பொன் விளைந்திருந்தது. ஒவ்வொன்றும் ஒருவகை பொன். இது செம்பொன், அது பசும்பொன், அப்பால் அது வெண்ணிறப்பொன். நான் மலைவிளிம்பில் நின்றுகொண்டு கைகளை விரித்து “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொன்னேன். மலைக்குமேல் பூக்களாகின்றவை இங்கே மணிகளாகின்றன. மலைகள் பூக்கும் காலம் உண்டு. சித்திரையில் கொன்றைகள் பூக்கின்றன. வேங்கை பூக்கின்றது. தேக்கு பூத்து குலைதள்ளுகிறது. மாமரங்கள் பூச்செண்டுகளால் நிறைகின்றன. மாபெரும் பூக்குடையாகிறது கள்ளிப்பாலை. பூத்தால் மலை பொன்னென்றாகிறது. வேங்கையின் செம்பொன். கொன்றையின் பசும்பொன். தேக்கின் வெண்பொன். மாம்பூவின் கறைமணக்கும் அரக்குநிறப் பொன்.
இந்த வயல்களில் அப்போது பொன்னுருகி அலைகொண்டது. காற்றில் சலசலப்பொலி எழுந்து சூழ்ந்தது. நான் மலையிறங்கி வந்தபோது கதிர்காப்பவர்கள் சிறிய பரண்களை கட்டிக்கொண்டு கைகளில் பெரும்பறைகளுடன் அமர்ந்திருந்தனர். சிலர் தகரடப்பாக்களை வைத்திருந்தனர். இலைப்புயல் போல வந்திறங்கும் கிளிக்கூட்டங்களை ஓசையெழுப்பி துரத்தினர். வயல்களுக்குமேல் கிளிக்கூட்டங்கள் காற்றில்பறக்கும் பச்சை சால்வை போல நெளிந்து அலைக்கழிந்தன. சிறுகுருவிகள் அஞ்சவில்லை. அவை கதிர்களின் மேல் இறங்கியபோது கதிர்களென்றே ஆயின. நெல்மணிகளை கொத்தும்பொருட்டு நெல்மணிபோலவே அலகுகள் கொண்டிருந்தன. அவை சிறுகுரலில் பேசி சிறுசிறகுகளை வீசி மேலெழுந்து அமைந்தன.
அந்தியில் அவர்கள் தங்கள் பறைகளுடனும் தகரங்களுடனும் சென்றபின் நான் மலைவிளிம்பிலிருந்து இறங்கிவந்து வயல்வரப்பில் நின்றேன். காற்றில் கதிர்சிலம்பும் ஓசை என்னைச் சூழ்ந்திருந்தது. நெல்மணிகளில் வாழும் சிறுதெத்துப்பூச்சிகளின் பச்சைத்தழை மணம். செவிகளில் ரீங்கரிக்கும் அவற்றின் மிகமெல்லிய ஓசை. மூங்கில் இலைகள் காற்றில் சீறுவதுபோன்றது அது. நான் காட்டிலிருந்து கொண்டுவந்திருந்த மூன்று பொன்வரிக் கற்களை வரப்பின் மேல் வைத்தேன். மஞ்சள்கோடுகள் கொண்ட கடுத்தா. பொன்னிறப்புள்ளிகள் கொண்ட பிறுத்தா. சிறிய புள்ளிகளுடன் சிறுத்தா. காடுகாக்கும் தெய்வங்கள். யானைகளும் எருமைகளும் பன்றிகளும் காட்டின் கிழங்குகள். முயல்கள் விதைகள். பிறவிலங்குகளெல்லாம் இலைகள். மான்கள் தளிர்கள். வரிப்புலியும் புள்ளிப்புலியும் பூனைப்புலியும்தான் காட்டின் மலர்கள். பொன் எனப் பொலிபவை அவை. வரிப்புலியென எழுந்தது கடுத்தா. புள்ளிப்புலி என பிறுத்தா. பூனைப்புலி என சிறுத்தா. மலையாளும் தெய்வங்களே காத்தருள்க! மலைமேல் பூத்த பொன்னே காத்தருள்க! இங்கு மானுடருக்கு பசியாற்றும் இப்பொன்னை காத்தருள்க!
நெல்மணிகளை உருவி மூன்று தெய்வங்களுக்கும் மூன்று சிறுகுவியல்களாக படைத்தேன். என் கட்டைவிரலை சிறுகத்தியால் வெட்டி ரத்தம் சொட்டச்செய்து அந்நெல்லுடன் கலந்தேன். அதை அள்ளி கரடிமலை நோக்கி, பச்சைக்காடுநோக்கி பொன்னுருவான மூன்று தெய்வங்களையும் எண்ணி உள்ளத்தில் நோற்றபடி வீசினேன். “கொள்க, கொள்க, கொள்க. நிறைக, நிறைக, நிறைக! மலையில்பூத்த தெய்வங்களே மண்ணில் விளைந்தவற்றை ஏற்று அருள்க! மண்பொன் மலைப்பொன்னை கொண்டருள்க!” என்றேன். ஏழுமுறை கைதட்டி எல்லா தெய்வங்களுக்கும் நான் வணங்குவதை அறிவித்தேன். நான்குதிசைகளையும் வணங்கினேன். உச்சிவானை வணங்கினேன். பின்னர் திரும்பிப்பாராமல் நடந்து காட்டுக்குள் நுழைந்தேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே” என்று என்னை தொடர்ந்துவந்து காட்டுவிளிம்பில் நின்றுவிட்ட வழித்துணைத் தெய்வங்களிடம் சொன்னேன். காலடியோசையாக, நிழலாக, நினைவுணர்வாக உடன்வருபவர்கள் என்னுடன் சேர்ந்துகொண்டனர். நான் மலைக்குச் சென்று, நள்ளிரவில் என் குடிலுக்குள் புகுந்து அங்கே தெற்குமூலையில் ஏழு உருளைச்சிறுகற்களாக அமைக்கப்பட்ட மூதாதையரிடம் “நிறைவுற ஆற்றி மீண்டேன், தந்தையரே, இம்முறையும் நீங்களாக இருந்தேன்”என்று சொன்னேன்.
மறுநாள் காலையில் நான் எவரும் எழுவதற்கு முன்னரே என்னுடைய பூசைத்தடியுடன், குடுவையில் குடிநீருடன், மலையேறி நடந்தேன். பன்றிகள் உருவாக்கிய தடத்தினூடாக வளைந்து வளைந்து மேலேறிச்சென்று மலைகடந்து மறுபக்கச் சரிவை அடைந்தேன். அப்போது இளங்காலை எழுந்துகொண்டிருந்தது. பொன்பூத்துப்பரவியிருந்த காட்டின் அலையலையலையை நோக்கியபடி நின்றேன். ”தெய்வங்களே” என்றேன். “மலைபூத்த பொன்னே” என்றேன். பூத்த வேங்கையின் குலைமலர்களின் அசைவிலெழுந்தது கடுத்தா. அலைவுற்ற பாலையின் மலர்களில் தோன்றி தோன்றி தன்னை கலைத்துக்கொண்டே இருந்தது சிறுத்தா. உதிர்ந்து பரவிய கொன்றையின் மஞ்சள்மலர்ப்பரப்பில் ஒன்று நூறு இதோ மேலும் என தோன்றித்தோன்றி விரிந்தன பிறுத்தாக்கள். நான் கைகூப்பியடி சொன்னேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!”
இன்று, இந்த அறுவடை செய்யப்பட்ட வயல்களினூடாக நான் நடக்கிறேன். இந்தவயல்களின் மேல் வண்டிகள் ஓடிய பெரிய சக்கரத்தடங்கள் சுழன்று சுழன்று தெரிகின்றன. சிறிய படிக்கட்டுகள் போல அவற்றில் வெட்டுமடிப்புகள் உள்ளன. அவை அறுத்து அள்ளிச்செல்லும் இயந்திர யானைகள். அவை நின்ற இடங்களிலெல்லாம் கசக்கப்பட்டு புழுதியென்றே ஆன கூளம் குவிந்திருக்கிறது. அங்கே காகங்களும் சிறுகுருவிகளும் மைனாக்களும் கூடி கிளறி கொத்தி சிறகடித்து எழுந்து மீண்டும் கொத்திக்கொண்டிருக்கின்றன. அந்த சக்கரத்தடங்களிலெல்லாம் நெல்மணிகள் உதிர்ந்து நீளமாக விழுந்திருக்கின்றன. சரம்போல, கொடிபோல. இங்கு முன்பெல்லாம் அறுவடைக்குப்பின் இவ்வூர்களுக்கு வெளியே பள்ளங்களில் வாழ்பவர்கள் வந்து வரப்புகளை வெட்டிப்பிளந்து உள்ளே எலிகள் சேர்த்துவைத்திருக்கும் நெல்லை எடுத்துக்கொள்வார்கள். ஓடும் எலிகளை வளையின் மறுஎல்லைக்குச் சென்று காத்திருந்து மூங்கில் கூடையிட்டு பிடிப்பார்கள். அவர்களும் அவர்களின் குழந்தைகளும் அந்த வேட்டையை கொண்டாடும். அவர்கள் அன்றே அந்நெல்லை அரிசியாக்கி அந்த எலிகளையும் சமைத்து உண்பார்கள். மலைமேல் வாழும் நாங்கள் எலிகளை உண்பதில்லை. அவை விலங்குகளில் வேர்கள். வேர்களை எங்கள் தெய்வங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எலிகள் உண்பதைவிட பலமடங்கு நெல் இதோ வயலெங்கும் உதிர்ந்திருக்கிறது. ஆனால் இவற்றை அள்ளமுடியாது. சேறுடன் சேறென கலந்து இவை மூன்றாம் நாள் மென்மயிர்ப்பரவல் போல முளைத்தெழும். அலைகொண்டு பச்சைப்பரப்பாக நிற்கும். கோடையில் வாடி கருகி மறையும். சேர்த்து உழுது மீண்டும் விதைபொழிவார்கள்.
என் காலடியோசை எழுந்து சுழன்று செல்லும் காற்றில் மறைகிறது. இருள் வந்துகொண்டிருக்கிறது. அக்கரையில் தாழைசெழித்த வரப்பை நான் அடையும்போது என்னை நான் பார்க்கமுடியாமலாகும். என் காலடியோசையே நான் என்றாகும். நான் கன்னங்கரியவன். உடலில் மேலும் கரிபூசிக்கொண்டிருக்கிறேன். கரிய ஆடையை அணிந்திருக்கிறேன். கரிய கல்மணிமாலைகள் என் கழுத்தில் கிடக்கின்றன. கரிய இறகுகளை என் தலையில் சூடியிருக்கிறேன். இருட்டில் நான் கரைந்து மறைந்துவிடுவேன். இந்த ஊர் என்னை பார்க்கமுடியாது. என் மூதாதையரை இவர்கள் பார்த்ததில்லை. இவர்கள் என் காலடியோசையை மட்டுமே அறிவார்கள். என் காலடியோசை என் மூதாதையரின் காலடியோசையேதான். இவர்கள் நூறாண்டுகளாக நூறுநூறுநூறாண்டுகளாக இந்தக் காலடியோசையை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மலையிறங்கிவந்து மீளும் இக்காலடிகளை இவர்கள் அறிவார்கள். இவர்கள் அதற்காக இந்தப்பொழுதுகளில் செவிகூர்ந்திருக்கிறார்கள்.
நான் வயல்விரிவைக் கடந்து வரப்பின்மேல் ஏறிக்கொள்கிறேன். தாழைமரப்புதர்கள் நிழல்களாக மாறிவிட்டிருந்தன. அவற்றுக்குள் என் காலடியோசை கேட்டு இரைதேடக்கிளம்பிய எலிகள் அஞ்சி சருகோசையுடன் ஓடுகின்றன. அப்பால் ஓடையில் நீர் வளையும் இடங்களில் ஒளிகொண்டு ஓசையிட்டுச் செல்கிறது. என் பாதையை ஒரு நாகம் கடந்துசெல்கிறது. சீவிடுகளின் ரீங்காரம் சூழ்ந்திருக்கிறது. மலைக்காடுகளை அதிரவைக்கும் ஒலி இங்கே அவற்றுக்கில்லை. அவை வேறெங்கோ என கேட்கின்றன. நான் நீரில் இறங்கி மறுபக்கம் கரையேறுகிறேன். அந்தப்பாதை மையக்கோயிலை நோக்கி செல்வது. என் காட்டுத்தெய்வங்கள் மையக்கோயிலில் அமர்ந்திருக்கும் நாட்டுத்தெய்வங்களை விலக்குகின்றன. ஆகவே அந்தக் கோயிலின் தட்டகவளைப்புக்குள் என் முன்னோர் கால்வைத்ததில்லை. என் முன்னோர் காலடிவிழாத இடங்களில் நான் காலடிவைப்பதில்லை. நான்கு காவல்தெய்வங்களாலானது இந்த தெய்வத்தின் தட்டகம். யானைமேல் அமர்ந்திருக்கும் ஆனைச்சாத்தன், புலிமேல் அமர்ந்திருக்கும் வரிச்சாத்தன், கால்களில்லாத நாகயட்சி, ஆலமரத்தடியிலமர்ந்த வடயட்சி. அவற்றை வளைத்துக்கொண்டு நான் நடக்கிறேன். அங்கே ஆலயத்தில் மணியோசை எழுகிறது. இரவுப்பூசை முடிந்து நடைசாத்தவிருக்கிறார்கள். நான் தாழைப்புதர்களுக்குள் பாறையொன்றில் அமர்ந்து காத்திருக்கிறேன். இந்த இருள் கொழுத்து தடித்து கரிய பிசுக்கு போல ஆகவேண்டும். என் மலைத்தெய்வங்கள் அதன்பின்னரே இங்கே எழமுடியும்.
வானத்தின் மின்னும் கூழாங்கற்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை மிகமெல்ல இடம் மாறிக்கொண்டிருந்தன. கூர்ந்து பார்த்தால் அவை நம்மை இடம்மாற்றுவதுபோல தெரியும். நள்ளிரவு என்று அவை எனக்கு அறிவித்தபோது நான் எழுந்தேன். என் தோளிலிருந்த தோல்பையிலிருந்து இரும்பாலான கொக்கறையையும் மீட்டு கம்பியையும் எடுத்துக்கொண்டேன். தலைப்பாகையை அவிழ்த்து கொண்டையாக அணிந்திருந்த தலைமுடியைப் பிரித்து மயிர்க்கற்றைகளை தோளில் விரித்துப்போட்டேன். சுருட்டி காட்டுக்கொடிகளால் கட்டி தோல்பையில் வைக்கப்பட்டிருந்த சாக்குப்பையை எடுத்து விரித்து உதறி தோளிலிட்டுக் கொண்டேன். நீரில் இறங்கி நீர்வழியாகவே நடந்து நீரிலிருந்து பிரிந்து செல்லும் சிறுபாதையினூடாக ஊருக்குள் நுழைந்தேன். இந்தச் சிறுபாதைகள் வீடுகளின் பின்பக்கங்களினூடாகவே செல்பவை. அத்தனை வீடுகளையும் இவை தொட்டு இணைக்கின்றன. இவை பெண்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் கீழ்க்குடிகளுக்கும் உரியவை. இங்கே வீட்டிலுள்ளோர் மலம்கழிக்கும் சிறிய அறைகள் உள்ளன. அங்கிருந்து மலம் சிறுதிறப்புகள் வழியாக வெளியே வருகிறது. அவற்றை எடுத்துச்செல்பவர்களும் இவ்வழியேதான் வருகிறார்கள். எலிகளும் பாம்புகளும்கூட இவ்வழியே வருகின்றன. அங்கே மையக்கோயிலில் இருக்கும் தெய்வங்களோ அவர்களின் துணைத்தெய்வங்களோ இந்தப்பாதையில் வருவதே இல்லை.
நான் அந்தச் சிறியபாதையில் நடந்தபோது என் காலடியோசை அதன் இருபக்கமும் இருந்த சுவர்களில் பட்டு எதிரொலித்தன். குகைவழிபோல அந்த ஓசையை அப்பாதை முழங்கவைத்தது. கொக்கறையை மீட்டி நான் இந்த பொழுதுக்குரிய பாடலை பாடினேன். “கொத்தோடு குலையோடு வாரித்தா மாதாவே, மக்களும் பசுக்களும் வாழணும்…” அந்தப்பாடல் என் மொழி அல்ல. அவர்களுக்கான மொழி அது. “நெல்லோடு மணியோடு வாரித்தா மாதாவே சட்டியும் பானையும் நெறையணும்!” கொக்கறை மலைகளில் உறுமும், கொக்கரிக்கும், எக்களிக்கும். இங்கே அதை நான் மிகமெல்ல மீட்டினேன். அது தொலைந்துபோன எதையோ எண்ணி புலம்புவதுபோல சிலம்பலோசையை எழுப்பியது. “பொன்னாயி பூவாயி நிக்குது தெய்வங்கள் மண்ணிலும் மலையிலும் நிறையவே” இந்தப்பாடல் இந்த பருவத்தில் இந்த விண்துளிகளுக்குக் கீழே, இதே காற்றில் இப்படியே முன்பும் ஒலித்திருந்தது. “காயாக கனியாக கையில் நிறையணும் காடெல்லாம்!”
ஒவ்வொரு வீட்டு கொல்லைப்பக்க கதவின் அருகிலும் மரத்தாலத்திலோ மூங்கில்கூடையிலோ கைக்குவை நெல்லை மூன்றுமுறை அள்ளி வைத்திருக்கவேண்டும். மண்ணகலில் எண்ணையிட்டு திரிகொளுத்தி அது அணையாமலிருக்க இரு செங்கற்களையோ ஓடுகளையோ சேர்த்து கூடுவைத்திருக்கவேண்டும். அந்த நெல் மூன்று பொன்னுருத் தெய்வங்களுக்கும் உரியது. மலைபூத்த மஞ்சள் மலர்களெனப் பொலியும் கடுத்தாவும் பிறுத்தாவும் சிறுத்தாவும் அளித்தது இந்தத் தாழ்நிலம். இது அவர்களுக்கு அளிக்கும் காணிக்கை. ”புந்நெல்லும் பொன்னெல்லும் வாரித்தா மாதாவே கைகளும் கால்களும் வாழணும்! செந்நெல்லும் கன்னெல்லும் கோரித்தா மாதாவே கண்ணுமே காதுமே வாழணும்” நான் கொக்கறையை மீட்டியபடி பாடினேன். “கடுத்தாவும் பிறுத்தாவும் காணிக்கை கொள்ளணும், சிறுத்தாவும் நிறையட்டும் காணிக்கை கொண்டே” நான் அந்த சிறிய இடுங்கிய பாதையில் திகைப்புடன் நடந்தேன். எந்த வீட்டின் பின்புறத்திலும் விளக்கு இல்லை. எங்குமே புதுநெல் காணிக்கை வைக்கப்படவில்லை. “பொன்னாய் விளையுத புதுநெல் வேணுமே, பொன்னாய பூவாய மலைதெய்வம் கொள்ளவே!” ஒவ்வொருமுறை நான் வரும்போதும் விளக்குகளும் நெல்லும் குறைந்துகொண்டிருந்தன. சென்றமுறை ஒன்றிரண்டே இருந்தன. ஒற்றைக்கையால் நெல்சாக்கை தூக்கிக்கொண்டு நான் மலையேறியிருக்கிறேன். என் முன்னோரின் காலத்தில் நெல்மூட்டைகளைச் சுமக்க ஓடைக்குள் துணைவந்த மலையர் நின்றிருப்பார்கள்.
ஊரை வளைத்துச்சென்ற சிறுபாதை ஆங்காங்கே குப்பைக்குவியல்களால் மூடப்பட்டிருந்தது. இடிபாடு மண்ணும் கல்லும் குவித்திருந்தார்கள். சாக்கடை தேங்கி நுரைக்குமிழிகளுடன் தெரிந்தது. ”வாழுக வாழுக மக்களும் குடிகளும் வாழுக! வாழுக வாழுக மன்னனும் கொடியுமே வாழுக!” நான் அந்தப்பாதையின் இறுதிக்கு வந்தபோது கொக்கறையை மீட்டுவதை நிறுத்திவிட்டேன். பெருமூச்சுடன் வந்த இருண்ட வழியை திரும்பிப்பார்த்தபின் மீண்டும் ஓடையில் இறங்கி தாழைசெறிந்த வயல்மேட்டில் ஏறி மறுபக்கம் சென்று நீண்டு சென்ற வரப்பினூடாக நடந்தேன். காட்டின் விளிம்பை அடைந்ததும் திரும்பி ஊரைபார்த்தேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொன்னபிறகு காட்டுப்பாதையில் நடந்தேன். இருண்ட காடு என்னைச்சூழ்ந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தது. என் காலடிகளை ஒவ்வொரு மரமும் கேட்டறிந்தன. தொலைவிலிருந்த பாறைகள் மென்மையாக எதிரொலி செய்தன.
நான் என் குடியை அடைந்தபோது கருக்கிருள் செறிந்திருந்தது. என் குடிசைக்குள் சென்று தெற்குமூலை மூதாதையரிடம் நடந்தவற்றை சொன்னேன். ”வெறுங்கையுடன் வந்திருக்கிறேன் போனவர்களே, அங்கே தாழ்ந்த நிலம் ஒரு மணிநெல்லைக்கூட அளிக்கவில்லை” என்றேன். அவர்கள் துயர்மிக்க அமைதியுடன் அமர்ந்திருந்தனர். “நான் என்ன செய்யவேண்டும்?”என்று கேட்டேன். ”சொல்லுங்கள், நான் செய்யவேண்டியது என்ன?” என் தந்தை மெல்லிய முனகலாக “நாம் செய்வதற்கென்ன? தெய்வங்கள் முடிவெடுக்கட்டும்”என்றார். என் மூதாதை ஒருவர் “ஆம், நாம் எப்போதும் தெய்வங்களிடம் சொல்வதையே சொல்வோம்”என்றார். இன்னொரு மூதாதை “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!”என்றார். நான் பெருமூச்சுடன் “ஆம், அவ்வாறே” என்றேன். பின்னர் என்னுடைய கைக்கோலை எடுத்துக்கொண்டு வெளியே இறங்கி கரடிமலை நோக்கி சென்றேன்.
நான் நடக்கையில் காட்டுக்குமேல் வானின் ஒளி விழுந்து பரவத்தொடங்கியிருந்தது. முதலில் கரடிமலையின் உச்சி ஒளிகொண்டு எழுந்து வந்தது. பின்னர் இலைகள் வண்ணம் கொண்டன. காட்டுக்குள் இலைப்பரப்புகளின்மேல் ஒளித்துண்டுகள் அசைவுகளாக மின்னல்களாக தெரியலாயின. கரடிமலைச் சரிவை கடந்து பூத்துப்பெருகியிருந்த மஞ்சள்மலர்ப்பரப்பை அடைந்தேன். தீயென பொன்னென மலர்கள். கொன்றையும் வேங்கையும் ஒன்றெனக் கலந்திருந்தன. நான் கைகூப்பியபடி காட்டின்முன் நின்றேன். “காடுபூத்த தெய்வங்களே!” என்று அழைத்தேன். “மலை கனிந்த செம்பொன்னே!”என்று கூவினேன். “கனிவுள்ள தெய்வங்களே, கடுத்தாவே பிறுத்தாவே சிறுத்தாவே, காத்தருளவேணுமே” என்றேன். “காடு கொடுத்த நிலத்திலுள்ளோர் கையள்ளி தரவில்லை. வெறுங்கை கொண்டு வழியெல்லாம் நடந்து வந்தேன். முப்பொன்னே, மூத்தோரே கனிவுகாட்டவேண்டுமே” என் முன் காற்றில் எழுந்தமைந்தன செம்மலர்க்குலைகள். கொப்பளித்து அசைந்தது பொன்னுருகிய பரப்பு. நான் பார்த்திருக்கவே அவற்றிலெழுந்தன நிமிர்வுகொண்ட வேங்கைவரிப்புலிகள். புள்ளிச் சிறுத்தைகள் உடல்நெளித்தன. பூனைப்புலிகள் சீறி பதுங்கின. வெண்சிப்பி விழிகள், திறந்த வாயில் தீத்தழலென வளைந்த நாக்குகள், எழுந்து நெளிந்த நீண்ட வால்கள், மெத்தென மெத்தென காலடுத்து வைத்தன ஆயிரம், பல்லாயிரம், பற்பல ஆயிரம் பொன்னுருவப் புலிகள். அவற்றின் உறுமலை என் செவியருகே கேட்டேன். கரடிமலை உச்சியில் இருந்து பெரும்பாறை நிலைபிறழ்ந்து உருண்டு அணைவதுபோல பேரொலி.
நான் கொக்கறையை என் தோளிலிட்டிருந்தேன். நடுங்கும் கைகளால் அதை எடுத்தேன். கம்பியால் அதை மீட்டியபோது அடிபட்டு விழுந்து பதுங்கும் சிறுநாய்க்குட்டியின் முனகல் என அது ஒலித்தது. “பிழையெல்லாம் பொறுக்கவேண்டும். பெற்றவரென்றே கனியவேண்டும். மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்?” என்றேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. என் உதடுகள் துடித்தன. அழுகையில் உடைந்து பிசிறிட்ட குரலில் “பொன்னுக்கு மண்ணுடன் ஏதுபகை உடையோரே? மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ?” என்றேன். என் குரல் தாழ்ந்து தாழ்ந்து எனக்குள்ளேயே ஒலித்தது. வேங்கை மெல்ல பின்காலெடுத்துவைத்து பதுங்கி மறைந்தது. சிறுத்தை தன்னைத்தானே சுருட்டிக்கொண்டது. பூனைப்புலி பொன்மலர்களின் மஞ்சள்நிழல்களில் கரைந்தது. புலிகள் மறைந்து மலர்க்கூட்டம் என ஆவது வரை நான் பாடிக்கொண்டிருந்தேன். பின்னர் என் கொக்கறையை எடுத்து தலைமேல் தூக்கி “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்றேன்.
15.கேளி [சிறுகதை] 14. விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]ஆமென்பது, விருந்து – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
பலவகையான கதைகள். ஆனால் எனக்கு இந்த ஆமென்பது ஒரு பெரிய அனுபவமாக அமைந்த கதை. கற்பனையே இல்லை, உண்மையான வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது [யார் என்ன என்று விக்கிப்பீடியாவில் போய் அறிந்துகொண்டேன்]
ஒரு முழுவாழ்க்கையும் கூர்மையான விமர்சனம் கலந்து சொல்லப்படுகிறது. அந்த வாழ்க்கைக்கு மிக அணுக்கமாக இருந்து கவனித்துக்கொண்டே இருந்த ஒருவரால். [நிஜவாழ்க்கையில் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகவே வேறெந்த கவனமும் இல்லை. அண்ணாவைப்பற்றி நிறையவே சொல்லமுடியும்]
நோயுற்றவராக இங்கே வருகிறார் ஆசிரியர். ஆகவே நேர் எதிர்த்திசையில் திரும்பிக்கொள்கிறது அவருடைய ஆற்றல். அவருடைய வாழ்க்கை முழுக்க முழுக்க எதிர்வினைதான். எதிர்வினையே வாழ்க்கையாக இருப்பது ஒரு நல்ல வாழ்க்கையாக ஆகுமா? கம்யூனிசம் இருத்தலியல் மீதெல்லாம் அவர்கொண்ட பற்று கூட எதிர்வினைதான். கடைசியில் ஆன்மிகமே கூட அந்தவகையான எதிர்வினைதான். அவரால் அதிலும் எதையும் அடையமுடியவில்லை.
அந்த எதிர்வினைகள் எல்லாம் அவருக்கு அடியிலிருந்த உண்மையான ஏக்கங்களை மறைப்பதற்காகத்தான். அவருடைய அந்தப்பாவனைகள்தான் இலக்கியமாக வெளிப்பட்டன.
ஆனால் இசகாக்கின் புராணம் அதைமீறி பாசிட்டிவானது. அதில் அவர் உண்மையாக வாழ்கிறார். அன்பில் திளைக்கிறார். அதுதான் அவர். மற்றதெல்லாம் அவருடைய துக்கம் மட்டும்தான்.
சிவக்குமார்
அன்புள்ள ஜெ
ஆமென்பது பலவகையான எண்ணங்களை உருவாக்கிய கதை. ‘தெய்வங்கள் போதும், புதிய தெய்வங்களை பிரதிஷ்டிக்காதீர்கள்’ என்ற வரிதான் மையம். ‘எழுத்தாளர்கள் அவர்களுக்கு என்ன என்றே தெரியாத தெய்வங்களை பிரதிஷ்டை செய்துவிடும் துரதிருஷ்டசாலிகள்’ என்ற வரி இன்னொரு திறப்பு. கே.வி.ஜயானனன் அதைத்தான் செய்தார். பெருந்துக்கம் என்ற தெய்வத்தை நிறுவி விட்டார். அது அவரையே பலிகேட்டது. அதை அவராலேயே கட்டுப்படுத்த முடியாது.
மிகவேகமாகச் சொல்லப்படுகிறது கதை. எதற்கென்றே தெரியாத முடிவில்லா காத்திருப்புகளாகிய மலைகள் நடுவே பிறந்து வளர்ந்தவர். வாழ்க்கையின் அலைகள் வழியாகச் செல்கிறார். ஒவ்வொரு தளத்திலும் வெறிகொண்டு எதிர்வினையாற்றுகிறார். தன்னை விதவிதமாகக் கற்பனைசெய்துகொள்கிறார். ஆனால் எஞ்சுவது அந்த ஏக்கமும் தனிமையும் மட்டும்தான்
ஆர்.
விருந்து [சிறுகதை]அன்பிற்குரிய ஜெயமோகன்,
இசையில் உன்னதமானது கந்தர்வகாணம் என்பார்கள். இலக்கியத்திலேயும் சிறந்தது கந்தர்வக்கதைகள் என வரும்தலைமுறை கூறுமளவிற்கு இலக்கிய கந்தர்வனாகவே மாறி அவர்களின் கதைகளை படைப்புகளாக்கிக்கொண்டு இருக்கிறீர்களோ என்ற ஐயம் எழுகிறது.இது எனது மிகக் கற்பனையாகக் கூட இருக்கலாம். அட இருந்து விட்டுத்தான் போகட்டுமே!
கந்தர்வன், யட்சன், படையல், விருந்து என வரிசையாக வந்து கொண்டிருக்கும் கதைகள் ஒருவகையில் சிறந்த கந்தர்வ இலக்கியமே தான்.
உலகிலே கொலைகள் இரண்டு வகை ஒன்று மற்றவர்களை மாய்க்கும் கொலை இன்னொன்று தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை. மாய்க்கும் கொலையிலேயும் இரண்டு உண்டு ஒன்று தன்னலத்தினாலே உணர்ச்சிவசப்பட்டு கொல்வது மற்றொன்று அறத்தைக் காக்க செய்யப்படும் தண்டனை கொலை. தற்கொலைகளும் இரண்டு வகை ஒன்று உணர்ச்சி மேலீட்டால் வாழ்க்கை தோல்விகளால் தன்னைத் தானே கொன்று கொள்வது மற்றொன்று அறத்தின் பொருட்டு தன்னையே அளிக்கும் தற்கொடை. இவைகளை சீர்தூக்கிப் பார்த்தால் அறத்தின் பொருட்டு செய்யப்படுகின்ற தண்டனை கொலைகளும் தற்கொலைகளும் என்றென்றும் வியந்து போற்றத்தக்கது.
சாமிநாத ஆசாரி செய்த தண்டனைக் கொலையை தாணப்பன் பிள்ளை வியந்து போற்றுவதாலேயே, மிகப்பெரிய அறச்செயலாக மதிப்பதாலேயே, சாமிநாதன் தூக்கிலிடப்பட்டதை ஒரு அறப் பிழை என வருந்துவதாலேயே, அவர் வாழும் வரை சாமிநாத ஆசாரியின் பெயரில் திருவட்டார் ஆதி கேசவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவன் இறந்த நாளிலே புஷ்பாஞ்சலி செய்து கொண்டிருந்தார்.
அம்மிணி தாயாலும் அவளை வற்புறுத்திக் கட்டாயமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான உறவுக்கு ஆட்படுத்தி வைத்திருந்த ஆனால் அதை வெளிப்படையாக முன்வைக்காத கரை நாயர் திவாகர குரூபாலும் ஒரு சந்தையிலே கைவிடப்பட்ட சிறுவன் போலவேதான் சாமிநாத ஆசாரி வளர்க்கப் பட்டிருக்கிறான்.அவனும் ஒரு பலி ஆடு தானே.
சாமிநாத ஆசாரியின் தந்தை அவனது பத்து வயதில் இறந்த பிறகு, அவனது இருபத்தாறு வயது வரை ஒரு ஆடு புல்லும் தழையும் போட்டு வளர்க்கப்படுவது போல சாமிநாத ஆசாரி கரைநாயரால் வளர்க்கப்பட்டான் என்பதையே பத்து வயது முதல் அவன் தொடர்ந்து போடும் வெற்றிலைக் குறியீடு காட்டுகிறது. அந்த வெற்றிலை போடுதல் மட்டுமே அவன் உள்ளக் கொதிப்புக்கு ஆறுதலாக மனதிற்கு விடுதலையை தருவதாக இருக்கிறது. வெற்றிலை போடுவதின் மூலம் அவனால் எல்லாவிதமான துயரங்களில் இருந்தும் விடுபட்டு ஒருவித தியானம் போன்ற அனுபவத்தில் திளைக்க முடிகிறது. மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆடு ரசித்து ருசித்து பச்சிலையை மெல்வது போல வெற்றிலை அவனை அவன் எல்லாத் துன்பங்களிலிருந்தும் மீட்கிறது. ஒருவகையில் தாணப்பன் பிள்ளைக்குக்கூட வெற்றிலை போடுவதே அவரை கடைசிவரை உணர்வு சிக்கல்களில் இருந்து மீட்கும் ஒரு செயல்பாடாக இருந்திருக்கிறது.
ஒரு ஜென் துறவி ஒவ்வொரு சிறிய செயலையும் எவ்விதம் தியானமாக யோகமாக செய்கிறாரோ அவ்விதம் சாமிநாத ஆசாரி வெற்றிலை போடுவது காட்டப்பட்டுள்ள விதம் வெகு அருமை.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சாமிநாத ஆசாரியிடம் அம்மிணி கரைநாயர் எவ்விதம் அவளை சீரழித்தார் என்பதை உணர்த்தி, அவனை வளர்க்க வேண்டிய தன்னுடைய கடமை முடிந்துவிட்டது காரணமாகவும் தற்கொலை செய்து தன் வாழ்வை முடித்துக் கொண்டு இருப்பார். அதனாலேயே சாமிநாத ஆசாரி அவளுடைய விதி முடிந்துவிட்டது என்று தாயின் மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.
தன் தாய் ஆதரவற்ற நிலையில் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டது, அவளைப் போலவே கரைநாயரால் வேறு சிலரும் சீரழிக்கப்பட்டதை அறிய நேர்ந்தது போன்றவற்றிற்காக தண்டிக்கும் விதமாகவே கரையிநாயர் சாமிநாத ஆசாரியால் கழுத்தறுத்து கொலை செய்யப்படுகிறார். அவன் உண்மையில் அவருடைய தலையை அவனுடைய தாய்க்கு குழிமாடத்தில் படையல் விருந்தாக அளிக்கவே விரும்பினான். அது இயலாமல் போனதால் தலையை ஆற்றில் வீசுகிறான். சாமிநாத ஆசாரி கரைநாயரின் தலையை வெட்டும்பொழுது நிச்சயமாக வாய்நிறைய வெற்றிலையை போட்டுக்கொண்டுதான் போயிருப்பான். அந்த வெற்றிலைதான் அவனுக்கு கந்தர்வ வல்லமை தந்து ஒரே வீச்சில் தலையை எடுக்க வைத்தது. அந்த வெற்றிலையின் போதை இறங்கியவுடன் கந்தர்வத் தன்மை நீங்கி அந்தத் தலையை அவனால் சுமக்க முடியாமல் ஆகிவிட்டது.
அன்றைய நீதி நிர்வாகத்தில் இருந்த அனைவருக்குமே இந்த உண்மை தெரிந்திருந்த போதும் ஜாதிப்பற்றின் காரணமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து சாமிநாத ஆசாரியை தூக்கிலிட்டுவிடுகிறார்கள். அதே ஜாதிப் பற்று அவனுடைய கருணை மனுவை நிராகரிக்க வைக்கிறது. இந்த மோசமான நீதி நிர்வாகத்தை குறித்த விமர்சனமாகவே ஆடு ஜெயிலுக்குள் அவன் அறைக்குள் வருவதை சாப்பாடு உள்ளே வரலாம் தப்பில்லை என்கிறான்.
அன்றைய சமூக அமைப்பின் படி பார்த்தால், இது போல இன்னும் எத்தனையோ பேருடைய வாழ்க்கையை கரை நாயர் சீரழித்திருக்கக்கூடும். அவை அனைத்தையும் அறிந்து அதற்கான தண்டனையாகவே அவன் ஒருவகையில் தன்னை வளர்த்தவராகவே இருந்தபோதிலும் பலரின் வாழ்வை சீரழித்த கரைநாயரின் தலையை எடுக்கிறான். அவர் கொல்லப்பட வேண்டியவர் அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் சொல்கிறான். ஒருவேளை இது அவனது தாய் அவனுக்குக்கிட்ட அற ஆணையாகக் கூட இருக்கலாம். அதனாலேயே மரணத்தை எதிர்நோக்கி இருந்த போதும் சாமிநாத ஆச்சாரி தன்னுடைய அறக் கடமை முடிந்து விட்ட நிறைவில் இறப்பை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராகிறான்.
ஆடு போல உருமாற்றம் கொண்ட மகாபாரத கந்தர்வன் ஸ்தூலகர்ணனை நினைவூட்டிய நல்ல கதை. முதல் வாசிப்பில் எனக்கு அம்மிணி சாமிநாதனின் தாயெனப்பட்டது. சுக்கிரி இலக்கிய உரையாடல் குழுவில் சிங்கை சுபஸ்ரீ, அம்மிணி சாமிநாதனின் மனைவி என தந்த குறிப்பை கண்டு, மறுவாசிப்பு செய்கையில், கதை மேலும் விரிந்து, சைலெந்திரியின் பொருட்டு கந்தர்வனால் நிகழ்த்தப்பட்ட கீசகவதம் நினைவுக்கு வந்தது. அம்மிணியை சாமிநாதனின் தாய் எனக் கொண்டாலும் அல்லது மனைவி எனக் கொண்டாலும் அவன் செய்தது அறத்தின் பொருட்டான கொலையே.
எங்கள் ஊரிலே ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நோஞ்சானான ஒருவன், தன்னுடைய மனைவியிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக, அவர் காலைக்கடன் கழிக்க வயல்வெளிக்கு சென்ற பொழுது அவருக்குப் பின்னாலிருந்து கடப்பாரையால் மண்டையை உடைத்துக் கொன்றான். அறத்தின் தேவனான எமன்
எவனைக் கொல்ல எவன் மீது ஏறி வருவான் என்று எவருக்கும் தெரியாது. 15 ஆண்டுகளாக அந்த சப் இன்ஸ்பெக்டரின் மண்டையை உடைத்தவன் இன்றுவரை பிடிபடவில்லை என்பதும்கூட அறத்தின் விளையாட்டே, மானுடனுக்கு மறைக்கப்பட்ட நாடகமே.
தன்னுடைய கடைசி ஆசையாக ஒரு ஆட்டை வாங்கி வரச்செய்து தனக்கு வந்த உணவையெல்லாம் அதற்குக் கொடுத்து, வெற்றிலையை அதன் காதில் வைத்து ஒரு சடங்காக தன் பெயரையே அதற்குச் சூட்டி, அந்த வெற்றிலையை அதற்கு உண்ணவும் கொடுத்து தன் கண்ணெதிரிலேயே அது கொல்லப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். அதன் தலையை அறுத்து அதன் முகம் அதன் கண்கள் தன்னை பார்க்குமாறும் வைக்கச்சொல்கிறான். ஒருவகையில் அந்த ஆடு அவனேதான். அந்த ஆடு கைதிகள் சிறை காவலர்கள் என அனைவருக்கும் விருந்தாவது போல அவன் அன்றைய ஜாதியால் சீரழிந்த ஒட்டுமொத்த நீதி நிர்வாக அமைப்பினால் உண்ணப்படுகிறான். தன் மரணத்தின் மூலம் அந்த அறம்கெட்ட சமூகத்திற்கு தன்னையே துட்டிச் சோராக்கி சாவு விருந்திடுகிறான்.
பல தளங்களிலான குறியீட்டு சொற்றொடர்களை உள்ளடக்கிய, விடுவிக்கப்பட வேண்டிய முடிச்சுக்களை உள்ளடக்கிய, துட்டி விருந்தாக வந்தபோதும் சுவையான பெருவிருந்தே இது. எப்படிப் பார்த்தாலும் சீரழிந்து கிடந்த அன்றைய சமூகத்திற்கு ஜாதி அமைப்புக்கு அளிக்கப்பட்ட சாவுச் சாப்பாடு ஆயிற்றே.
கரை நாயர்கள் அவன் உயிரை விருந்தாக உண்டனர். சிறைக்கு வந்த ஆட்டுக்கு களியும் இலையும் விருந்து. சிறைவாசிகள் மற்றும் அதிகாரிகள் அவனாகிவந்த ஆட்டை விருந்தாக உண்டனர். ஆனால் அவனுக்கோ வெற்றிலை மட்டுமே முழு விருந்து. வாசகர்களாகிய எங்களுக்கு விருந்து கதையே ஒரு நல்விருந்து.
மிக்க நன்றி ஜெயமோகன்
அன்புள்ள
ஆனந்த் சுவாமி
தீற்றல், படையல் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கொஞ்சம் வயதாகி நனவிடை தோய்தல் ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய மர்மம் மனதிலே வரும். நாம் அடைந்த அந்த அனுபவங்கள் எல்லாம் எங்கே போகின்றன? அவை நமக்கு எவ்வளவு பெரியவை. எவ்வளவு அழுகை, கண்ணீர், எவ்வளவு கோபதாபங்கள். அதெல்லாம் எங்கே? அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால் மிகச்சாதாரணமாக இருக்கின்றன. ஆனால் அவை நமக்கு நடக்கும்போது நமக்கே உரியவையாக இருந்தன. இன்னொன்று அதைப்போல இல்லை என்று தோன்றியது.
அந்தந்த காலகட்டத்தில் நாம் அடைந்த உணர்ச்சிகளை எண்ணிப்பார்க்கையில்தான் நாம் எவ்வ்ளவு சின்னவர்கள் என்று தெரிகிறது. வெறுமொரு தீற்றல். ஒரு காலத்தீற்றல். அவ்வளவுதான். அது நாம் இல்லாவிட்டாலும் இருக்கும் என்று நினைத்துக்கொள்ளலாம்
கதையில் வருவதுபோல 19 வயதில் நான் அழுதியிருக்கிறேன். 64 வயதில் அதை நினைத்துச் சிரிக்கிறேன். இரண்டும் ஒன்றுதான்.
என்.ஆர்.ராமகிருஷ்ணன்
வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
என் தாய் தந்தையர் ஒருவகையில் காதலும் கலந்து பெற்றோர் ஒப்புதலோடு உற்றாரும் போற்ற திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரே தெருவில் அருகருகே அமைந்த வீடு. எனது தாயார் அந்தக்கால சரோஜாதேவி. என் தாயாரின் கண்களும் பெரிதாக மிக அழகானவை. அவருடைய இளவயது போட்டோவில் மை தீட்டி(தீற்றி!) பார்ப்பதற்கு சரோஜாதேவிக்கு மேல் ஒருபடி அழகாகவே இருப்பார். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு என் தாய் தந்தையர் தான் நினைவுக்கு வந்தார்கள். நான் குழந்தையாக இருந்த பொழுது என் தாயார் தன் கண்களுக்கு மை தீட்டி நான் பார்த்ததே இல்லை அல்லது அப்படி ஒரு நினைவு எனக்கில்லை.அப்பாவை கை பிடித்த பிறகு அவசியமில்லை என விட்டு விட்டாரோ என்னவோ. ஆனால் என் தாயார் திருமணத்திற்கு முன்பாக அழகாக மை தீற்றி எடுத்துக் கொண்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் எங்கள் வீட்டில் இப்பொழுதும் இருக்கக்கூடும்.
எனது மாமாக்கள் என்னிடம் பலமுறை உங்கம்மா அந்தக்கால சரோஜாதேவியாக்கும் என்று பலமுறை கேலியாக சொல்வார்கள். அப்பாவை ஏதாவது நோண்டிக் கேட்டால் ஒரு மென் மின் புன்னகையோடு அந்தக் கணத்தை கடத்தி விடுவார்.
ன் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் மற்றும் பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை தேங்கி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே போன்ற பாடல்கள் ரேடியோவில் ஒலிக்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் ஒரு அற்புத திரைமறைவு நாடகம் எங்கள் இல்லத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதை எண்ணி சிரிக்கிறேன். என் பெற்றோரின் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் அந்த தீற்றல் இன்றைக்கும் ஒரு அழியாச் சித்திரமாகத்தானே பிரபஞ்ச கானம் இசைத்துக் கொண்டிருக்கும்.
பின்னாடி திரும்பிப் பார்த்தால் எத்தனையோ மின்னலடிக்கும் தீற்றல் கணங்கள் யார் வாழ்வில்தான் இல்லை. என் வீட்டுத் தோட்டத்தில் எத்தனையோ ரோஜாக்கள் எதைப் பரிப்பது என்பதிலே தான் எனது போராட்டம் என கவிதை எழுதி, மைவிழி குவளைக் கண்களில் மையல் தேடி, காதல் பித்தெடுத்து அலைந்த இளமைப் பின்புலம் எவருக்கும் இருக்கும்.
மகளிர் தினத்தில் தீற்றல் என வந்த தீற்றல் கதை. மௌனியின் கதைகளைப் படித்து பித்துப் பிடித்த இளவயது நாட்கள் நினைவுக்கு வந்தன. நெஞ்சத்து ஆழத்து மின்னல் நினைவுகளை மயிலிறகாய் மீட்டிய கதை தந்தமைக்கு நன்றிகள் ஜெ.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
படையல் [சிறுகதை]ஜெ
பிடரியில் பலமான அடி ஒன்றைத் தந்து, சீக்கிரமே தலையைத் தைவரல் செய்யவும் கூடிய உங்கள் சிறுகதைகளில் ஒன்று படையல். இந்த உணவு செரிக்குமா என்ற கேள்வி, எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கக்கூடிய கேள்வி, இதை இது உண்டு செரித்திடுமா?
இது எதையும் உண்டு செரிக்கும், ஏனெனில் இதன் உடலின் ஒரு அங்கம் தான் இது, இரண்டும் வேறல்ல என்று சொல்லி முடியும் கதை. தேடல்மிகுந்த, ஒவ்வருவருக்கும் ஒரு விடையையும் பின்னர் வினாக்களையும் தரக்கூடிய கதைகளுக்கு களம் அமைவது அரிதுதான். இரு நிகர்விசைகொண்ட ஆறுகள் கலப்பது போலத்தான் இந்தக் கதையின் நிகழ்தளமும், அதன் மெய்மையும் ஆக்ரோஷமாக கலக்கின்றன. இந்த அறிதல்களை எனக்கு எளிதாக்கித் தந்த வெண்முரசை இன்னும் இறுகப் பற்றிக்கொள்கிறேன். அது இன்னும் பல இரும்புக் கடலைகளை என்னை உண்ணச் செய்யக்கூடும்.
அன்பும் நன்றியும்,
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
அன்புள்ள ஜெ
படையல் கதையைக் கடந்துசெல்வது கடினம். அது என்னென்னவோ செய்கிறது. அதிலுள்ள எல்லாமே உச்சமாக உள்ளன. கொடுமைகளும் உச்சம். அந்தப் பக்கிரிகளின் களியாட்டும் உச்சம். ஒரு அபத்தநாடகம் போல இருக்கிறது அது. ஒரு அற்புதமான நாடகமாக நடித்துவிடமுடியும் இதை. இந்தக்கதையை எவராவது நாடகவடிவமாக ஆக்கவேண்டும்
இன்றைய காலகட்டத்தின் கதை. இன்று அவநம்பிக்கைகளும் காழ்ப்புகளும் கசப்புகளும் பெருகிக்கிடக்கும் காலகட்டத்தில் நமக்கு இருந்த ஆழமான குளிர்ந்த நீர்ச்சுனையை சுட்டிக்காட்டும் கதை. அந்த சுனை இன்னும் வற்றாமலிருக்கிறது என்று நினைக்க ஆசைப்படுகிறேன்
பாலா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


