Jeyamohan's Blog, page 1018

March 20, 2021

இமையம், திராவிட எழுத்து – கடிதம்

இமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்

அன்புள்ள ஜெ

நான் இமையம் பற்றி எழுதியிருந்த கடிதத்தை ஒட்டிய சில விவாதங்களைக் கண்டேன். வழக்கம்போல எல்லாவற்றையும் வசதிப்படி திரித்து பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். எந்த நிலையிலும் உண்மையான பிரச்சினைகளை சந்திக்கவே மாட்டோம், உண்மையை பேசவே மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் கூட்டம் இது.

நான் எழுதியிருந்ததை ஒட்டிய சில விளக்கங்கள். நான் திராவிட இயக்கம் சார்ந்தோ அல்லது வேறு இயக்கங்கள் சார்ந்தோ எழுத்தாளர்கள் எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கலைஞர் மு.கருணாநிதி அவர்களே நல்ல எழுத்தாளர், ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச்சிங்கம் இரண்டும் நல்ல எழுத்துக்கள்தான் என்றுதான் நான் சொல்கிறேன்.

இமையம் தன் எழுத்துக்களை கலைஞருக்கோ அல்லது திராவிட இயக்க தலைவர்களுக்கோ சமர்ப்பித்திருப்பது தப்பு என்று சொல்லவில்லை. அது அவருடைய உரிமை, அதை எவரும் மறுக்கமுடியாது என்றுதான் சொல்கிறேன்.

இமையம் சுந்தர ராமசாமிக்குச் சமர்ப்பித்திருக்கவேண்டும் என்றோ அவர்பெயரைச் சொல்லவேண்டும் என்றோ சொல்லவில்லை. அதுவும் அவருடைய இன்றைய நிலைபாடு. அதில் நாம் என்ன சொல்லமுடியும்?

இப்படியெல்லாம் திரித்துத்தான் இந்த விவாதங்களை எதிர்கொள்ளவேண்டுமா என்று யோசிக்கிறேன். வேறு எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள் இதுவரை என்ற கேள்விதான் எழுகிறது.

நான் சொன்னது இதுதான். இமையம் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளவில்லை. தன் தனிப்பட்ட அரசியல் ஈடுபாடு திராவிட இயக்கம் சார்ந்தது என்றுதான் சொல்லிவந்தார். அதுவேறு இதுவேறு என்று அவரே மேடையில் சொன்னதை நானே கேட்டிருக்கிறேன்.இலக்கியத்திலே அரசியல் பார்க்கவேண்டாம் என்றே அவர் சொன்னார்.

அதேபோல அவரை விமர்சித்தவர்கள் அவரை திராவிட இயக்க எழுத்தாளர் என்று பார்க்கவில்லை. தலித் இயக்கத்தை பிளக்க நினைப்பவர், பிராமணிய சக்திகளின் எழுத்தாளர் என்றுதான் சொன்னார்கள். திராவிட இயக்க எழுத்தாளர்கள் விமர்சகர்கள் எல்லாம் அப்படித்தான் சொன்னார்கள்.

இன்றைக்கு எதுவுமே மாறவில்லை. அவர் திராவிட இயக்க எழுத்தாளர் ஆகிவிட்டார். அவர் என்றைக்குமே திராவிட இயக்க எழுத்தாளர்தான் என்கிறார்கள். அப்படியென்றால் நேற்று ஏன் அவரை அப்படிக் கடுமையாகத் திட்டினார்கள்?

இமையத்தின் எழுத்தில் க்ரியா ராமகிருஷ்ணன் மதுரை சிவராமன் ஆகியோர் செய்த பங்களிப்பை ஆரம்பகால எழுத்துக்களுடன் இன்றைய எழுத்துக்களை ஒப்பிட்டால் தெரியும். அவர்கள் இல்லையேல் இமையம் இந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கமுடியாது. அப்படியென்றால் திராவிட இயக்க எழுத்தை வளர்த்து சாகித்ய அக்காதமி விருதுவரை கொண்டுசென்ற க்ரியா ராமகிருஷ்ணன், மதுரை சிவராமன், சுந்தர ராமசாமி ஆகியோரை திராவிட இயக்க ஆதரவாளர்கள் பாராட்டவேண்டாமா? இமையத்தைக் கண்டுபிடிக்கவோ வளர்க்கவோ திராவிட இயக்கம் ஒன்றுமே செய்யவில்லை. அப்படியென்றால் க்ரியா குழு செய்தது எவ்வளவு பெரிய கொடை. அதை ஏன் மறுக்கிறீர்கள்?

இமையம் மக்களின் வாழ்க்கையை எழுதினார், ஆகவே அவர் திராவிட இயக்க எழுத்தாளர்தான் என ஒரு கோஷ்டி சுற்றுகிறது. தமிழில் எல்லா நவீன எழுத்தாளர்களும் மக்கள் வாழ்க்கையைத்தான் எழுதினார்கள். பூமணி எழுதவில்லையா? சொ.தர்மன் எழுதவில்லையா? இமையம் எழுதிய அந்த எழுத்தைத்தானே பிராமணர்களால் உருவாக்கப்பட்ட எழுத்து என்று தூற்றினீர்கள்? பிராமணர்கள் மக்களின் வாழ்க்கையை எழுதவைத்து, அச்சிட்டு, வெளியிட்டு உலகம் முழுக்க கொண்டுசென்றார்கள் என்று ஒத்துக்கொள்ளலாமே?

ஒருவர் ஓர் இயக்கத்தின் எழுத்தாளர் என்று எப்படிச் சொல்வது? அவர் அந்த இயக்கத்தின் கலாச்சார அமைப்புக்கள் வழியாக உருவாகி வந்திருக்கவேண்டும். அவர்களின் முகமாக நின்று பேசியிருக்கவேண்டும். அவருடைய எழுத்தில் அக்கொள்கைகள் நேரடியாகவோ உள்ளுறையாகவோ இருக்கவேண்டும். அந்த கோணத்திலே பார்த்தால் சு.வெங்கடேசன் மார்க்சிய எழுத்தாளர். பாரதிதாசன், கலைஞர், எஸ்.எஸ்.தென்னரசு போன்றவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள். ஒருவர் ஒரு கட்டத்தில் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர், மார்க்சிய எழுத்தாளர் என்று அறிவித்துக்கொண்டால் வாசகர்களும் வரலாற்றாசிரியர்களும் அப்படி எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.

இமையம் அப்படி வந்தவர் அல்ல. அவர் ஓர் எழுத்தாளராக வந்ததும் நீண்டகாலம் எழுதியதும் க்ரியா- சுரா குழுவின் ஒரு முகமாகத்தான். அவர்களின் பின்புலத்தில்தான் அவர் நின்றார். இன்றைக்கு அவருக்கு திமுக சார்பு இருக்கிறது என்று அவர் சொன்னதுமே அவர் திராவிட இயக்க எழுத்தாளர் ஆக மாறிவிடுவதில்லை. அப்படிப் பார்த்தால் கண்ணதாசன், சு.சமுத்திரம், வைரமுத்து, அப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன் எல்லாருமே கலைஞருக்கு நெருக்கமானவர்கள்தான். அவர்களை எல்லாம் திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிவிடலாமே.

திராவிட இயக்க எழுத்தாளர்களில் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் படைப்பாளி பாரதிதாசன். அவர்தான் தலைசிறந்தவர். அவருடன் ஒப்பிட்டாலே தெரியும் ஏன் இமையம் அப்படி சொல்லப்பட முடியாதவர் என்று. இது இலக்கியவாசகன் எழுத்தாளனின் எழுத்து செயல்பாடு ஆகியவற்றைக்கொண்டு முடிவெடுக்கவேண்டியதே ஒழிய ஒருநாள் காலையில் எழுத்தாளன் சொன்னான் என்றால் உடனே மாற்றிக்கொள்ள முடியாது. மாறவும் மாறாது.

ஆர். சங்கரநாராயணன்   

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:34

நகை, எரிசிதை – கடிதங்கள்

நகை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நகை கதையை மிக அன்றாடத்தன்மை கொண்ட நிகழ்வுகள் வழியாக எழுதியிருக்கிறீர்கள். அதிலுள்ள முதல் யதார்த்தம் இன்று போர்ன் கலாச்சாரம் நம் வாழ்க்கையின் அன்றாடங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும் ஜியோ வந்தபின் அது ஒரு சர்வசாதாரணமான விஷயம். இந்த அளவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நாடாக இந்தியா என்றைக்குமே இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பேச்சில் போர்ன் சார்ந்த உதாரணங்கள் வருவதும், குடும்பங்களிலேயே பேசிக்கொள்வதும்கூட சாதாரணமாக ஆகிவிட்டது. என் காலேஜ் படிக்கும் மகன் சொன்னான். ’அப்பா நம்ம வீட்டுமுன்னாடி ரெண்டு நாய்கள் டாகி பொஸிஷனிலே நின்னுண்டிருக்கு’ என்ன சொல்ல?

இந்த வாழ்க்கைச்சூழலில் பெண்ணின் இடம் என்னவாக ஆகிறது? இது பெண்ணை மேலும் மேலும் உடலாக சுருக்கி ஆபாசப்படுத்துகிறதா? இதுதான் கதை உருவாக்கும் கேள்வி. வலுவான வெற்றிகொள்ளும் பெண்ணுக்கு இதெல்லாம் விஷயமே அல்ல என்று சொல்லி முடிகிறது கதை. அந்த வலுவான கைகுலுக்கல் ஒரு பெரிய அடையாளம். அவன் அந்த பெண்ணை போர்ன் நடிகையாக பார்க்கிறான். ஆனால் அந்த கைகுலுக்கல் ஒரே கணத்தில் அவனை மாற்றிவிடுகிறது. அவள் அவனுக்கு ஒரு தலைவியாக தெரிய ஆரம்பிக்கிறாள். கதை சொல்லும் தீர்வு அல்ல இது. கதை சுட்டிக்காட்டும் நடைமுறை என்றே நினைக்கிறேன்

ஆனந்த்

 

அன்புள்ள ஜெ

நகை கதையின் தலைப்பிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. நகை எது? அவளுடைய நகைப்புதான். அவள் உடலை எப்படியெல்லாம் சுருக்கிச் சிறுமைப்படுத்திச் சதையாக ஆக்கினாலும் அவளுடைய வெற்றிச்சிரிப்பு அவளுடைய நகைதான்.

கதையில் அவளைச் சுற்றி பிற வெற்றிபெற்ற மனிதர்களின் மேட்டிமைபாவனை அலட்சியம் சில்லறைத்தனம் நிறைந்திருக்கிறது. அவள் அந்த சிறுமை தீண்டாதவளாக நிமிர்ந்து நிற்கிறாள். அவளுடைய சிரிப்பு அவர்களை ஏற்கனவே அவள் கடந்துவிட்டதற்கான ஆதாரம். பெருந்தன்மையும் அன்பும் கொண்டவளாக இருக்கிறாள். அவள் ஆணுக்கு எதிரி அல்ல. ஆணை ஜெயிப்பவளோ பழிவாங்குபவளோ அல்ல, அவள் ஆணுக்கு மேலே சென்றுவிட்ட பெண்

அவனுடைய சிறுமை ஒன்று அங்கே வெளிப்படுகிறது. அவளை போர்ன் நடிகையுடன் வேண்டுமென்றெ ஒப்பிடுகிறான். அவள் சீற்றமடைவாள் என நினைக்கிறான். அவள் அதற்கெல்லாம் அப்பால் என்று தெரிந்ததும் மண்டியிட்டுவிடுகிறான்

 

விஜயகுமார்

எரிசிதை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

எரிசிதை கதை வெவ்வேறுவகையில் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நா. பார்த்தசாரதி ராணி மங்கம்மாள் கதையில் எழுதியிருக்கிறார். ஆனால் அதிலெல்லாம் சின்னமுத்தம்மாள் காதலினால் உடன்கட்டை ஏறினதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக்கதை இன்னொரு சித்திரத்தை அளிக்கிறது. அன்றைய அரசியலில் பெண்ணுக்கு இருக்கும் இடம் என்பது சின்னமுத்தம்மாளுடையதுதான். ராணி மங்கம்மாள் விதிவிலக்கு. ஆனால் அவளும் கடைசியில் சின்னமுத்தம்மாளைப்போலவே சிறையில் அடைபட்டு பட்டினிபோடப்பட்டு கொல்லப்பட்டாள்.

சின்னமுத்தம்மாளின் சீற்றம் இக்கதையில் உள்ளது. தன் மகன் வந்து மங்கம்மாளை பழிவாங்கவேண்டும் என்று சொல்கிறாள். அதுவே நடந்தது. சின்னமுத்தம்மாளின் மகன், மங்கம்மாளின் பேரன் தான் மங்கம்மாளை சிறையிலடைத்துக் கொன்றவன். எங்கிருந்து எங்கே தொடுப்புகளை எடுத்து பின்னியிருக்கிறீர்கள் என்பதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்தக்கதையில்.

அரச. முத்துக்குமரன்

 

அன்புள்ள ஜெ,

 

எரிசிதை கதையின் நாயகன் சின்னமுத்தம்மாளின் மகன். அவன் வெளியே வர விரும்புகிறான். ஆகவே அவனே வந்து அம்மாவை இழுத்துச்சென்று சிதையில் ஏற்றுகிறான். அவன் வெளியே வருகிறான். கருக்குழந்தைக்கு தனக்குத்தேவையானதை அன்னை மனதில் தோன்றவைக்கும் சக்தி உண்டு. சிப்பியை பிளந்து முத்து வெளிவருகிறது. சிப்பி அழியவேண்டியதுதான். அது ஒரு பயாலஜிக்கல் மர்மம்

இந்த சின்னமுத்தம்மாளின் மகன்தான் கந்தர்வன் கதையில் வரும் நோயாளியான நாயக்க ராஜா என நினைக்கிறேன்

ஆர். குமாரவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:32

இருநோயாளிகள், விருந்து – கடிதங்கள்

இரு நோயாளிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இருநோயாளிகள் கதையை வாசித்தபோது ஆமென்பது கதையை வாசித்த அதே உணர்ச்சியை அடைந்தேன். தனிமை சோர்வு கசப்பு. அந்தக்கதையிலாவது அந்த கைவிடப்பட்ட நிலை அந்த எழுத்தாளனின் அகத்திலிருந்து வந்தது என்னும் உணர்வு இருந்தது. இங்கே இரு மேதைகளுக்கும் அவர்களின் சூழலில் இருந்து அந்த நோய் வருகிறது.

சங்கம்புழா ரொமாண்டிக் கவிஞர். அவரைப்போன்றவர்கள் வாழ்க்கையின் உண்மைகளில் இருந்து விலகி கனவில் திளைக்கிறார்கள் [ஆனால் இவர்தான் அறிஞர் அண்ணாவின் கதையான செவ்வாழைக்கு முன்னோடியான வாழைக்குலை என்ற கவிதையை எழுதியவர் என நினைக்கிறேன். பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் அதை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த மொழியாக்கத்தைத் தழுவித்தான் அண்ணா எழுதினார்]

ஆனால் புதுமைப்பித்தன் வாழ்க்கையின் உண்மைகளை நேருக்குநேர் எதிர்கொள்கிறார். ஆகவே நோயுறுகிறார். ஒருவர் தனக்கு பிடித்தவற்றை முத்தமிடுகிறார். இன்னொருவர் நேருக்கு நேர் நிற்கிறார். எதுவானாலும் நோய் ஒன்றுதான். அதை நினைத்துத்தான் புதுமைப்பித்தன் சிரித்திருப்பார்

ரவிசங்கர்

இரு நோயாளிகள் கதையை பற்றி: நினைவு 1: ஜெ ஒரு நூலகத்தில் நெடுநேரம் படித்துவிட்டு மண்டை சூடேற சிந்தனை செய்துகொண்டே வெளியே வருகிறார். வாசலில் மக்கள்திறல் இங்கும் அங்கும் எதை எதையோ பேசி கூட்டமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். எதையும் கற்றறியும் ஆர்வமே இல்லாமல் வெறுமனே வாழும் சாமனியதனத்தை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்து மேலெழ கண்கலங்குகிறார்.

நினைவு 2: ஜெ துறவு வாழ்க்கையில் இருக்கும் பொழுது தெருவில் கிடந்து வாழும் ஒரு தொழுநோயாளியை பார்க்கிறார். எந்த பிரயோஜனமும் இல்லாத வாழ்க்கையை ஏன் இவர் வாழ்கிறார், இதற்கு பதில் தற்கொலை செய்து கொண்டு சாகலாம் அல்லவா என்று நினைக்கிறார். மறுநாள் எதேச்சையாக அவ்வழியே வரும்பொழுது அத்தொழுநோயாளி ஒரு தெருநாய்க்கு உணவளிப்பதை பார்க்கிறார். உணர்ச்சி மேலெழ அங்கேயே கண்ணீர்விட்டு அழுகிறார்.

இரு நோயாளிகள் சிறுகதையில் ஒரு வரலாற்று தருணம் ஒரு அற்ப சந்தர்ப்பமாக எவ்வாறு சாமானிய ஆழ்மனதில் பயணம் செய்து சென்றடய வேண்டிய அறிவை சென்றடைந்தது என்பதை குறிப்பதாக படுகிறது.

இக் காலகட்டத்தில் காட்சிஊடக தொழில்நுட்பம் அறிந்த நூண்ணுணர்வு கொண்ட கலைங்கனை ஒரு வரலாற்று தருணம் 80 வருடங்கள் பயணம் செய்து வந்து அடைந்துள்ளது. இனி அக்கலைங்கனின் கற்பனை திறனால் இக்காலாகட்ட தொழில்நுட்ப உதவி கொண்டு அச்சிறு விதை பல நூறு விதைகளாக பரப்பப்படும்.
இவையனைத்தும் மறுபடியும் சாமானிய உள்ளங்களில் எம்மாற்றமும் அடையாமல் பல நூறு ஆண்டுகள் பயணம் செய்து இன்னொரு காலகட்டதை அடையும்.
சமானியனாக வாழ்வதை மிககடுமையாக கண்டித்து வரும் ஜெ, இக்கதை மூலம் சாமானிய இருப்பை நியாய படுத்திருப்பதாக படுகிறது.

சாமானிய மனம் கற்பனை அற்றது, ஒரு நிகழ்வு அவ்வாறே எந்த மாற்றமும் இல்லாமல் பல நூறு வருடம் பயணம் செய்ய ஏற்றது.

சதீஷ்குமார்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலமா

மீண்டும் சிறுகதைகள் ஒவ்வொரு இரவும் வாசிப்பும் அதன் தகிப்பில் உழல்வதும் அதன் உணர்வுகளையும்,உளத்துடிப்புகளையும் உங்களோடு மானசீகமாக உரையாடி விட்டுத்தான் உறங்க செல்கிறேன்.

“விருந்து” இக் கதை ஒரு கிளாசிக். சாமிநாத ஆசாரிக்கு சொல்வதற்கு ஒரு கதயிருக்கு அது நமக்கு தேவையில்லை. தாணப்பன் தாத்தாவிற்கும் சொல்வதற்கு இன்னும் மிச்சம் இருக்கலாம்

தூக்குத் தண்டணை கைதியின் எண்ணப்படும் இறுதி நாட்கள்
இப்படி பெருங்கதையாக களமாட வாய்ப்பிருக்கும் கதையை எவ்வாறு தாண்டி செல்வது என்று பாடம் எடுத்து இருக்கின்றீர்கள்.(நாளைய இயக்குனர்களுக்கு ஒரு அட்டகாசமான கலைப் படைப்பு)

இக்கதையை படித்தவுடன் எனக்கு ஜார்ஜ் ஆர்வெல்லின் -தூக்கிலிடுதல் (A- Hanging) கட்டுரை, அக்கட்டுரை ஏற்படுத்திய அதிர்வுமீண்டும் நினைவிலெழும்பியது.
“விருந்து” பெரும் வாசகர்களால் விவாதத்திற்கும் கொண்டாடபடவும் வேண்டிய கதை

”அவன் தாத்தாவிடம் இன்னொருமுறை புன்னகை செய்துவிட்டு அவர்களுடன் சென்றான். கதவு ஓசையுடன் மூடிக்கொண்டது.”

அன்புடன்
சக்தி
(குவைத்)

அன்புள்ள ஜெ

விருந்து கதையில் ஆசாரியின் சொந்தக்கதை, அந்தத் துயரம் உரையாடலின் வழியாக லேசாகக் கோடிகாட்டப்பட்டுள்ளது. முழுக்கச் சொல்லப்படவில்லை. அதைச் சொல்லாமல் ஏன் விட்டீர்கள், அது கதைக்கு ஆழமான உணர்ச்சிகரத்தை அளிக்குமே என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர் சொன்னார், அப்படிப்பார்த்தால் கதையில் அந்த தூக்குக் காட்சியே இல்லையே என்று. அதன்பிறகுதான் கவனித்தேன். அவன் தூக்கில் தொங்குவதுகூட சொல்லப்படவே இல்லை. அவன் தூக்கில் தொங்கும் சத்தம், சிறையில் எழும் எதிர்வினைச் சத்தம் மட்டும்தான் உள்ளது.

கதையை அந்த ஆட்டில் இருந்து நகர்த்தவே நீங்கள் விரும்பவில்லை என நினைக்கிறேன். அந்த ஆடு மட்டுமே கதையின் மையக்குறியீடாக நின்றிருக்கவேண்டுமென நினைக்கிறீர்கள். அந்த ஆட்டின் உடலை உரித்து தொங்கவிட்டு பங்கிடுவது வரை அத்தனை துல்லியமாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு சிலுவையேற்றம் போலவே உள்ளது

மதன் ராமகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:32

விசை, ஏழாம் கடல்- கடிதங்கள்

ஏழாம்கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஏழாம் கடல் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஏழாம் வானம் ஏழாம் கடல் ஏழாம் உலகம் என்றெல்லாம் சொல்லப்படுவது எட்டமுடியாதது. அப்பாலிருப்பது. அங்கிருந்து வரும் ஓர் அன்பும் நஞ்சும். கதையின் வாசிப்பில் எஞ்சி நின்றிருப்பது அந்த முத்துதான். நஞ்சு வரும் போகும். சாவும் வரும் போகும். தலைமுறைக்குக் கையளித்துவிட்டுப் போவது அந்த முத்துதான். பிள்ளைவாளின் மகனிடம் அந்த முத்துதானே கடைசிவரை இருக்கும்

என்.கிருஷ்ணன்

அன்பு ஜெ,

ஏழுகடல் சிறுகதையின் வழி திருவெளிப்பாடு அதிகாரத்தை மீண்டும் நினைவுகூர்ந்தேன். ஏற்கனவே ஏழாவது சிறுகதையில் மோசஸின் வழி பிதாவானவர் வைச்ச ஏழு முத்திரைகளிலே ஏழாவது முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கிற எடம் பற்றியும் நியாயத்தீர்ப்புநாள் பற்றியும் சொல்லியிருப்பீர்கள்.

ஆனால் இந்தக் கதையில் நீங்கள் ஏழாவது முத்திரையை உடைத்ததும் நடக்கும் விடயத்தின் மேல் புனைவை ஏற்றியதாய் நினைத்தேன். “ஏழாம் வானதூதர் எக்காளம் முழக்கப்போகும் காலத்தில், கடவுளின் மறைவான திட்டம் நிறைவேறும். விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ‘கடலின் மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக் கொள்’ என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது” என்ற திருவெளிப்பாட்டின் வரிகளோடு பிள்ளைவாள் சாப்பிட்ட சிப்பியை இணைத்துப் பார்த்தேன். அதுவே வாயில் இனித்து வயிற்றில் கசந்து போயிருக்கிறது. ஏழு என்ற எண்ணின் புனைவு  அழிவின் உச்சமான திருவெளிப்பாட்டில் வந்து கொண்டேயிருக்கிறது. ஏழு எக்காலம், ஏழு வானதூதர் என முடிவில்லாது புனைவு சென்று கொண்டே இருக்கிறது. அப்படியே பிள்ளைவாளின் இறப்பின் மீதான ஏழாம் கடல் புனைவை வியாகப்பன் ஏற்றிவைப்பதாகப் பார்க்கிறேன். கோடிச்சிப்பியில் ஒரு சிப்பியில் இருக்கும் ஒரு துளிவிஷம் பிள்ளைவாளின் வயிற்றில் வந்து கசப்பதற்கான நிகழ்த்தகவு யாருமே ஊகித்திருக்க முடியாது தான். ஊகிக்க முடியாத ஒன்றின் மேல்தான் புனைவை ஏற்ற முடியும். அப்படித்தான் அது ஏழாம்கடலுக்கான அழிவின் சிப்பியாக நம் முன் புனைவுருக் கொண்டு நிற்கிறது. ஏழாவது கடலினின்று வெளிவந்த அந்த அரிய அருமுத்து, ஆணிப்பொன், மணிமுத்து மரணத்தின் முதல் பிரகடனமாகிறது. அதன்பின் வாயில் இனித்து வயிற்றில் நஞ்சாகும் சாவு நிகழ்கிறது. பிள்ளைவாளின் இறப்பின் புனைவைக் கடத்த வியாகப்பன் இருந்தார். ஆனால் வியாகப்பனின் இறப்பின் புனைவோ இருண்மையாக அல்லது நண்பனின் இறப்பிற்கு காரணமான சிப்பியை தன் கடலினின்று வந்ததாக நினைத்து மனமுடைந்து இறப்பவராக, பிள்ளைவாளின் ‘ஒப்பம் சேர்ந்து போவோம்’ என்ற வரிகளை நினைந்தே இறப்பவராக கதையில் அமைந்துவிடுகிறார். சொல்லப்படாத ஒரு அருமுத்து இருவருக்குமான திறக்கப்பட்ட சாவின் முத்திரையாக ஏழாம் கடலின் நினைவாக நெஞ்சில் நின்றுவிடுகிறது. மேலும் மேலும் புனைவை ஏற்றிக் கொள்ள ஏதுவான ஒரு இருண்மையின் கதை. நன்றி ஜெ.

 

அன்புடன்

இரம்யா.

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை உள்ளத்தை குமையவைக்கும் ஒரு கதை. நம்மால் திருப்பி அளிக்கவே முடியாத கொடை என்பது அன்னை அளிப்பதுதான். அன்னையின் மனதின் ஆன்மவிசையை ஒரு சின்ன கவித்துவக்குறியீடு வழியாகச் சொன்ன கதை இது.

ஆர்.பாலகிருஷ்ணன்

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன்,

அத்தனை விசையோடு அந்த ஓலைக்காரி யாரோடு சண்டைபோட்டுக் கொண்டிருந்தாள்? பிறக்கும்போதே அடிமையாக பிறக்கவைத்த பிதாவிடமா, ஒரு நான்கு ஆண்டுகளுக்கு விடுதலையை காட்டி, குருடன் கண் பெற்று மீண்டும் குருடான கதையாய் கண்ணான கணவனை பறித்த ஊழிடமா?.

பனையை பேரன்னை என்று சொல்வார்கள். அள்ளிக்கொடுக்கவும் அரவணைக்கவும் மட்டுமே அறிந்தவள் பனை அன்னை. எண்ணிறந்த முலை கொண்டு எளிய மானுடர் வாழ பதமான சாறு அளிக்கும் அதன்மூலம் ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் அவளே தன் கணவனை பறித்துச் சென்றால் அந்த ஓலைக்காரி என்னதான் செய்வாள்.

அவள் முழுதும் நம்பிய கர்த்தரே அவளை சிலுவையில் அறைந்தால் அந்த ஏழை விசுவாசி என்னதான் செய்வாள். சிலுவையில் அறையப்பட்ட அந்த இயேசு “பரலோகத்தில் இருக்கின்ற பரம பிதாவே ஏன் என்னைக்கைவிட்டீர்” என்று வாய் திறந்து அன்று கேட்டுவிட்டார். இந்த ஓலைக்காரியோ வாயைத் திறந்து ஒரு சொல் கேளாது, வாழ்நாள் முழுக்க தன் முழு விசையோடு உள்ளம் இறுக்கி, முகம் குறுக்கி, முஷ்டி மடக்கி அந்த வலிய ஊழோடு ஊடி நின்றாள்.

அலைக்குத் தெரியாதா என்ன? எத்தனை முட்டி மோதினாலும் கரையைக் கடக்க முடியாதென்று ஆனாலும் கரையோடு மோதும் முரட்டு விசையை அலை இன்றுவரை விட்டபாடில்லை. அலைக்கு எந்த வகையில் குறைந்துபோனாள் இந்த ஓலைக்கிழவி, அதனால்தானோ என்னவோ சாகும்வரை விசையோடு ஓலையை இழுத்துக் கிடந்தாள். அவள் விசையோடு முண்டிமுண்டி தினம்தினம் இழுத்தது தென்னை ஓலையை அல்ல, இஷ்டத்துக்கு படைத்து கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் கொடுத்துக்கொண்டிருக்கும் அந்தக் கண்ணில்லாத கபோதிக்கடவுளின் கைகளை. பாவப்பட்டு இரத்தம் சிந்தியவள் அவளுக்கு நமது மெய்யியல் விவாதங்களும் மேட்டிமை தரிசனங்களும் எதையாவது செய்து விட முடியுமா என்ன?.

எல்லாம் விதி என்றும், கர்ம வினை என்றும், ஊழ் என்றும், அனைத்தும் அவன் செயல் என்றும் நாம் சுடும் விடை வடைகள் அவளின் இழப்பின் வேதனையை, உயிரின் தவிப்பை நீக்குமா என்ன?

வலியும் வேதனையும் தனக்கு வராதவரை தத்துவம் பேசுவது சுலபம் அல்லவா? ஒருத்தி மட்டுமா உலகத்திலே ஓலைக்காரி,  துயர் கொண்டு தவிக்கும் விடை இன்றி வாடும் கோடான கோடி உயிர்கள் இந்தக் கணத்திலும் அந்த ஊழ் விசையோடு போராடிக் கொண்டுதானே இருக்கிறது….

மேம்போக்காகப் பார்ப்பதற்கு ஒரு துன்பியல் அழகு சித்திரம் போல இந்த கதை தோன்றினாலும் ஆழத்தில் அடிப்படையான ஒரு தீவிர கேள்வியை இந்தக்கதை முன்வைக்கிறது. பேராஇயற்கையின் படைப்பில் துன்பம் ஏன்? சிலரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே ஏன்

துயரமே வடிவானதாக அமைந்துள்ளது? இயற்கை அல்லது இறையாற்றல் அத்தனை கொடூரமானதா? துன்பத்தின் மூலம் என்ன?

எல்லாம் செயலுக்கேற்ற விளைவு என்ற பிரபஞ்ச இயக்க ஒழுங்குப்படி நடக்கும் என்கிறது கர்மவினை தத்துவம்.

முன் வினைகளே துன்பமாக மூள்கிறது என்றால் அப்படி மோசமான வினைகளை ஆதியில் ஒரு உயிரை செய்ய வைத்தது எது? இப்படி எண்ணிறந்த அடிப்படை கேள்விகளே பலரை துரத்தி தூக்கம் இழக்கச் செய்கிறது. விசை சிறுகதை இந்தக் கேள்விகளை பெருவிசையோடு தட்டி எழுப்புகிறது.

எங்கள் கிராமத்திலே நாங்கள் வாழ்ந்த தெருவிலே, குடலச்சி என்ற ஒரு கிழவி இருந்தாள். ஒரு நீண்ட குட்டிச் சுவரும் அதை ஒட்டிய ஒரு சிறு பக்கச்சாய்ப்பு குடிசையுமே அவள் இருப்பிடம். நாள் முழுவதும் ஊரைச்சுற்றி சானி பொறுக்குவதும் அதை அந்தக் குட்டிச் சுவற்றில் தப் தப் என்று வரட்டியாக அடித்துக் கொண்டிருப்பதுமே அவள் வாழ்க்கை. யாருமற்ற தனியள், கணவனையும் இருந்த ஒரே ஒரு குழந்தையையும் எப்போதோ இழந்து விட்டவள். வரட்டியை விற்று வந்த பணத்தில் எதையோ பொங்கிக் குடித்தாள். யார் எந்த உணவை கொடுத்தாலும் வாங்கி வேகவேகமாக உண்பாள். அதனாலேயே ஊரில் அவளுக்குப் பெயர் குடலச்சி. முகம் இறுகி கை கால்கள் குச்சி போல எப்பொழுதும் ஒருவித இறுக்கத்தோடு இருப்பாள். அவள் வரட்டியை தப் தப் என்று சுவற்றில் தட்டுகின்ற வேகம் அந்த வயதில் என்னை மிகவும் பயமுறுத்தும். ஓலைக்காரியும் குடலச்சியும் எதற்காக இந்த மண்ணில் வருகிறார்கள் எதன் பொருட்டு இத்தனை துயருறுகிறார்கள். யார்தான் இந்தக் கேள்விகளுக்கு திட்டவட்டமான, அறுதியான, நிரூபிக்க தக்க, உறுதியான, மாறாத, இறுதி விடையை அளித்து விட முடியும். அப்படியே ஞானிகள் விடையை அளித்தாலும் அவர்கள் அளிக்கின்ற விடையை எத்தனை பேரால் உண்மையாக உணர்ந்து உள்வாங்கிக்கொள்ள முடியும்.

நான் கங்கோத்ரியில் வாழ்ந்த காலங்களில் வேதாந்தானந்தா என்ற ஒரு இளம் துறவி கங்கோத்ரி கங்கை ஆலயத்தில் இருந்து கோமுக் நோக்கி செல்லும் பாதையில் கங்கைக் கரையோரமாக ஒரு குகையிலே வசித்து வந்தார். அவர் எப்பொழுதும் கங்கையின் கரையில் ஒரு பாறை மீது அமர்ந்துகொண்டு கூழாங்கற்களை கங்கையின் மீது வெகு வேகமாக திட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் வீசிக்கொண்டிருப்பார். நாள் முழுவதும் இதேதான் வேலை. அவரை ஒரு சித்தர் என நினைத்து அவருக்கு இரண்டு வேளை உணவு கொண்டுபோய் கொடுக்கவும் கூட சிலர் இருந்தார்கள். நான் அங்கே வெகுநாட்களாக வாழ்ந்து வரும் ஒரு துறவியைக் கேட்டேன் அப்படி எதற்காக வேதாந்தானந்தா கத்தி கூச்சலிட்டு கங்கையை நோக்கி கல்லை எரிந்து கொண்டிருக்கிறார் என. அதற்கு அந்த வயோதிக துறவி சொன்னார் இளமையிலே வேதாந்தானந்தாவும் அவருடைய நெருங்கிய நண்பரான இன்னொரு துறவியும் பிரம்மச்சாரிகளாக கங்கோத்ரியில் கங்கைக் கரையிலே ஒரு குருவின் ஆசிரமத்தில் பாடம் படித்துக் கொண்டு ஒரே அறையில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருநாள் இருவரும் கங்கையில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கின்றபோது திடீரென்று வந்த காட்டு வெள்ளம் வேதாந்தானந்தாவின் நண்பரை அடித்துச் சென்று விட்டது. உடல் கூட கிடைக்கவில்லை. நண்பரின் இறப்பும் அவரை இழந்ததால் ஏற்பட்ட வேதனையும் வேதாந்தானந்தாவை கங்கையின் மீது தீரா வெறுப்புக்கு உட்படுத்திவிட்டது. அன்றுமுதற்கொண்டு கங்கையை திட்டியும் சபித்தும் கங்கையின் மீது கற்களை எறிந்தும் கொண்டிருக்கிறார். இதுவே அவருடைய வாழ்க்கையாக மாறிவிட்டது. எந்த கங்கையை தாய் என்றும் தெய்வம் என்றும் வழிபட்டாரோ அந்தக் கங்கையையே பேய் என்றும் பிசாசு என்றும் ஊழ் என்றும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வாழ்வின் மாயங்களை இதன் மயக்கும் வினோதங்களை இதன் தீராத் துயரங்களை எங்கு சென்று எவரிடம் வைப்பது…

தனக்கே தனக்கென புரியாதவரை, சொந்த அனுபவமாக இயற்கைப் பேருண்மைகள் விளங்காதவரை, எவருக்கும் முற்றாக விலகுவதில்லை மறையின் திரைகள். அந்தப் புரிதல் வரும் வரை, வல்லான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது, ஊழிற் பெருவலி யாவுள என்று அமைதி கொள்வதைத் தவிர வேறு என்னதான் வழி சாதாரண மனிதர்களுக்கு….

ஓலைக்காரிகளாகவும் குடலச்சிகளாகவும் வேதாந்தானந்தாக்களாகவும் மாறி, எல்லா இன்பங்களையும் முற்றாக விலக்கி தீவிர முரட்டு வைராக்கியத்தோடு ஊழின் வல்லமைமிக்க கைகளோடு விசை கொண்டு இழுத்து முட்டி நிற்க எல்லோருக்கும் இயலுமா என்ன?

விசை என்று கதைக்கு பெயர் வைத்த உங்கள் எழுத்து வித்தை கண்டு  வியந்து போகிறேன்.

 

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:32

கொதி, குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்தக் கதை உங்கள் தளத்தில் வந்த இரண்டு நாட்களிலேயே இதற்கான வாசிப்பனுபவத்தை என் தளத்தில் எழுதி விட்டேன். ஆயினும் முக்கியமான ஏதோ ஒன்றை தவற விட்டு விட்டதாகத் தோன்றிக் கொண்டேயிருந்தது. அது ‘உண்ணாமுலை’ அம்மனைப் பற்றி வந்த ஒரு குறிப்பு என்று இப்போது தான் உணர்ந்தேன்.

அடி முடி காணவொண்ணா தழலாய் எழுந்தாடும் அண்ணல் அண்ணாமலையின் அருகில் அமர்ந்திருக்கிறாள் அன்னை, உண்ணாமுலையாக.  அதே போன்ற தழலாய் ஏதோ ஒன்றிற்காக தகித்துக் கொண்டேயிருப்பவள் இக்கதையின் லிலி. அவள் பலியாகக் கேட்பதும் தன் இணையின் காமத்தைத் தான். ஒரு விதமான role reversal.

இக்கதாபாத்திரத்திற்கு லலிதா என்று பெயரிட்டிருக்கிறீர்கள். அம்பிகை லலிதை காமேஸ்வரனின் மீதமர்ந்து, பிரம்மாதி தெய்வங்களைக் கட்டில் கால்களாகக் கொண்டவள்.  ‘பஞ்ச பிரேத மஞ்சாதி சாயினி’ என்றொரு பெயர் உண்டு அவளுக்கு. காமத்தின் மேலெழுந்தவள், அதை ஆட்சி செய்பவள் என்றும் இந்த ஆழமான உருவகத்தை interpret செய்யலாம். அதன் ஒரு துளி எடுத்தாளப்பட்டிருக்கிறது இக்கதையில்.

ஒரு passing reference-ஆக வந்து மிகப்பெரிய திறப்பை அளிக்கிறது அபிதகுசலாம்பாள், லலிதா என்ற பெயர்கள்.

உங்கள் கதைகள் பல விதமான வாசிப்புகளுக்கு இடம் கொடுத்தபடி இருக்கின்றன.

‘கேளி’ கதையும் மிக அழகானது. அவன் உடலில் கணுக்கு கணு ‘கிருஷ்ண மதுரம்’ இனிக்கிறது. அந்த இனிப்பிலேயே திளைத்திருக்க விரும்புகிறான். திருவிழா முடிந்ததும் அதை மிஸ் செய்கிறான்.  பின் ஒரு நொடியில் அவனுக்குத் தோன்றுகிறது, கிருஷ்ணானுபவம் ஒரு திருவிழாவோடு முடிந்து விடுவதில்லை. எங்கெங்கிலும் எப்போதும் நிறைந்திருப்பது என்று.

‘மலைபூத்த போது’ முழுக்க முழுக்க கவிதை. மலை போன்ற பொறுமை கொண்ட அவன், தனக்கு காணிக்கை கொடுக்காதவர்களை மன்னிக்கும் படி தன் தெய்வங்களை வேண்டும் போது பூத்து விடுகிறான். ஒவ்வொரு வரியாக இன்னும் பல முறை வாசிக்க வேண்டிய கதை இது.

 

நன்றி,

கல்பனா ஜெயகாந்த்

 

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதை பற்றிய கருத்துக்களை வாசிக்க வாசிக்க ஒரு கதை எந்த அளவுக்கு விரியமுடியும் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த அளவுக்கு நான் கதையை வாசிக்கும்போது யோசித்திருக்கவில்லை. தமிழில் இத்தனைபெரிய கூட்டுவாசிப்பு முன்பு நடந்ததில்லை என நினைக்கிறேன். தனித்தனி வாட்ஸப் குழுக்களாகவும் வாசிக்கிறார்கள் என அறிந்தபோது மேலும் ஆச்சரியம் அடைந்தேன். என் வாசிப்பு இந்த அளவுக்கு விரிந்ததற்கு இந்த கூட்டுவாசிப்பு மிக முக்கியமான காரணம்.

இந்த கூட்டுவாசிப்புக்கு வெளியே என்ன வகையான வாசிப்புக்கள் உங்கள் கதைகளுக்கு வருகின்றன என்று பார்த்தேன். ஓரிரு நல்ல வாசிப்புக்கள் உள்ளன. ஆனால் மிகப்பெரும்பான்மையான வாசிப்புக்கள் அவர்கள் என்ன அரசியலை அல்லது கருத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்களோ அதையே இதிலும் அப்படியே போட்டு அதையே வாசிப்பு என்பதாகவே உள்ளன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. திமுக, கம்யூனிஸ்டு, பாஜக டெம்ப்ளேட்டுகள் மண்டைக்குள் உள்ளன. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக இப்படி ஒரு சூழல் இருக்கிறது, நாம் ஒரு ஆழ்ந்த வாசிப்பை நடத்த முடிகிறது

 

ராம்குமார் அருணாச்சலம்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

நேற்று ஒரு கிறிஸ்தவ நண்பரிடம் கொதி கதையை உங்கள் பெயர் இல்லாமல் கொடுத்தேன். வாசித்துவிட்டு மெய்சிலிர்த்துவிட்டார். பல கிறிஸ்தவ ஃபாதர்களின் வாழ்க்கையைச் சொன்னார். எப்படியெல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்றெல்லாம் விளக்கினார். ஆனால் கடைசியில் உங்கள் பெயரைச் சொன்னேன். அப்படியே ஆஃப் ஆகிவிட்டார். ‘புளிச்சமாவு’ என்ற வழக்கமான வசையைச் சொன்னார். நம்ப மாட்டீர்கள் வெறும் இருபது நிமிடங்களில் இந்தக்கதை ஒரு சூழ்ச்சி என்று வசைபாட ஆரம்பித்துவிட்டார். இந்த நூற்றாண்டில் இந்தவகையான சாதிமதக் காழ்ப்புகள் இல்லாமல் திறந்த உள்ளம் என்பது ஒரு மிகப்பெரிய அதிருஷ்டம் அல்லது கடவுளின் அருள் என நினைத்துக்கொண்டேன்

ஜெயக்குமார் என்

 

 

அன்புக்குரிய ஆசானுக்கு,

வணக்கம். எங்கள் ஊரில் கொதி ஓதும் முறையை ஒத்த திருஷ்டி கழிக்கும் முறை உள்ளது. ஒரு பித்தளை தாம்பாளத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டு நடுவில் மாட்டுச்சாணியை உருண்டை பிடித்து வைத்துவிடுவார்கள். பிறகு எரிந்து கொண்டிருக்கும் கொட்டாங்குச்சியை சாணிமேல் வைத்துவிடுவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டியவரை தாம்பாளத்தின் ஒரு பக்கத்தில் உட்காரவைத்துவிட்டு, எதிர் பக்கத்தில் நின்றுகொண்டு, ஒரு சிறிய மண்பானையை முன்னும், பின்னும் மூன்று முறை சுற்றிவிட்டு, சாணிமீது எரிந்து கொண்டிருக்கும் கொட்டாங்குச்சி மீது கவிழ்த்துவிடுவார்கள். அப்பொழுது சத்தத்தோடு தண்ணீர் பானையின் உள்ளே செல்லும். சத்தம் அதிகமாக இருந்தால் திருஷ்டி அதிகமாக இருந்ததாக கூறுவார்கள். பின்பு எழுந்து தாம்பாளத்தை தாண்டி, வெளியே சென்று மூன்று முறை துப்பிவிட்டு வந்தால் திருஷ்டி கழிந்துவிட்டதாக சொல்வார்கள்.

ஆசானே, இந்தக் கதையில் பாதர் ஞானையா சொல்லும் ஞானமந்திரத்தை, நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன். மேலும் அந்த பாவப்பட்ட ஜனங்களிலே ஒருவனாகத்தான் பெரும்பாலான நேரங்களிலும் இருக்கிறேன்.

“ஒண்ணுமே போய்விழாத அவ்வளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு” – இந்த ஒரு வரி என்னுடைய மற்றும் அடுத்தவர்களுடைய துன்பங்களுக்கும், பதற்றங்களுக்கும், கோபங்களுக்குமான காரணத்தை கூறிவிடுகிறது. இதன்மூலம் என்னையும், அடுத்தவர்களையும் புரிந்துகொள்வதற்கான திறப்பாக இருக்கிறது.

நன்றி ஆசானே,

அன்புடன்,

தீபப்பிரசாத் பேரணாம்பட்டு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:31

March 19, 2021

அறமென்ப…  [சிறுகதை]

[ 1 ]

காரை மெஜெஸ்டிக் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நிறுத்திவிட்டு வெளியே இறங்கி செல்வா கூவினான். “அட்டெண்டர் டிராலி… டிராலி கொண்டுட்டு வாங்க… ஒரு ஆக்ஸ்டெண்ட் கேஸ்…”

அட்டெண்டர் திண்ணையில் நின்று நிதானமாக அவனையும் காரையும் பார்த்தான். “ஆக்ஸிடெண்டா சார்? எங்க? ஆளு யாரு?”

”ஆளு வண்டிக்குள்ள இருக்காரு… சீரியஸா இருக்காரு… ஸ்ட்ரெச்சர் வேணும்.. உடனே வேணும்… ஏகப்பட்ட பிளட் லாஸ் ஆகியிருக்கு”

அவன்  “இருங்க” என்றான். பெரிய பின்பக்கத்தை உந்தியபடி நிதானமாக உள்ளே சென்றான். செல்வா திரும்பி காருக்குள் கிடந்தவரைப் பார்த்தான். நாற்பது வயதானவர், ஏதோ தொழிலாளி என்று தெரிந்தது. அவருடைய ரத்தம் வழிந்து காருக்குள் பெருகிக்கொண்டிருந்தது. அவருடைய ஒரு கால் மட்டும் மெல்ல துடித்தது.

அட்டெண்டரும் ஒரு பயிற்சி டாக்டரும் வந்தனர். பயிற்சி டாக்டர் இளைஞன், மீசையில்லாத வெண்ணிற முகம். அவன் “யாருக்கு சார் ஆக்ஸிடெண்ட்?”என்றான்.

“இதோ இவருக்குத்தான். நான் மதுரையிலே இருந்து வர்ரப்ப வழியிலே பாத்தேன். எனக்கு முன்னாலே போன யாரோ அடிச்சு போட்டுட்டு போய்ட்டாங்க. உடனே தூக்கிட்டு வந்தேன்… ரொம்ப கிரிட்டிக்கலான நெலைமையிலே இருக்கார்னு நினைக்கிறேன்”

“சார், இது போலீஸ் கேஸ். நாங்க எடுக்க மாட்டோம். நேரா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போங்க”

“என்ன சொல்றீங்க? ஆசாமி செத்துட்டிருக்கார்.”

“ஆனா இது ஆக்ஸிடெண்டா கிரைமான்னு நாங்க சொல்லமுடியாது. லீகல் சிக்கல்கள் இருக்கு”

நம்பமுடியாமல் “ என்ன சொல்றீங்க?”என்று செல்வா கேட்டான்

“சர்க்கார் ஆஸ்பத்திரிக்குத்தான் சார் போகணும்”

சீற்றத்துடன் “அப்ப முதலுதவியாவது பண்ணுங்க” என்றான் செல்வா “இப்பவே நடுராத்திரி… இப்ப நான் வேற எங்க போகமுடியும்?”

“நாங்க இங்க இறக்கவே முடியாது சார். ஆள் போய்ட்டார்னா நாங்க சிக்கிக்குவோம். போலீஸ் எங்களைப் போட்டு படுத்தி எடுத்திருவாங்க… கொண்டுபோயிடுங்க”

“ஆள் செத்திருவான் சார்”என்று செல்வா தளர்ந்த குரலில் சொன்னான்.

”அதான் நாங்க சொல்றோம்”

“அப்ப என்னதான் பண்றது?”

“நேரா கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் கொண்டுபோங்க… வேற எந்த பிரைவேட் ஆஸ்பத்திரியிலேயும் எடுக்கமாட்டான்”

”அதுக்கு சிட்டிக்குள்ளே போகணுமே”

“ஆமா”

அவன் மேற்கொண்டு பேச விருப்பமில்லை என்பதுபோல பார்த்தான்.

“பாஸ்டர்ட்ஸ்”என்று கூவியபடி  செல்வா ஓடிப்போய் காரில் ஏறிக்கொண்டான். தலையை வெளியே நீட்டி “நான் பாத்துக்கறேன். ஐ வில் சேவ் ஹிம்!”என்றான்.

காரை வெளியே எடுத்து சாலையில் சீறவிட்டான். எல்இடி விளக்குகள் எரிந்த சாலை மின்னி மின்னி பின்னால் சென்றது. வெளிச்சம் அத்தனை கண்கூச வைத்ததாக முன்பு உணர்ந்ததில்லை. சாலையில் வண்டிகள் மிகக்குறைவாகவே இருந்தன

திரும்பிப்பார்த்தபோது அந்த ஆள் அசைவில்லாமல் கிடப்பதைக் கண்டான். செத்துவிட்டானா? பின்னால் கிடப்பது பிணமா? அவன் முதுகில் ஒரு குளிர்போல ஏதோ உணர்வு ஏற்பட்டது.

அவன் நெடுஞ்சாலையில் வரும்போது அந்த ஆள் சாலையோரமாக துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். பைக் தூரத்தில் தெறித்து விழுந்து ஒளிமின்னிக் கொண்டிருந்தது. அடிபட்டு அரைமணிநேரமாவது ஆகியிருக்கும். சுற்றிலும் எவருமில்லை. அவ்விடத்தை வேகத்தில் கடந்து சென்ற தன் காரை பின்னாலெடுத்து அருகே கொண்டுவந்தான். முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஏதாவது வம்புகளில் மாட்டிக்கொள்வோமா?

அந்தக்கணம் அந்த ஆள் கைநீட்டி “அய்யா!” என்றான். மன்றாடும் குரல் “அய்யா!” கை அப்படியிலே மண்ணில் விழுந்தது. கண்கள் மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகள் அசைந்தன.

செல்வா முடிவெடுத்தான். காருக்குள் ஒரு பெட்ஷீட் இருந்தது. அதை எடுத்துக்கொண்டுசென்று அடிபட்டவனின் அருகே விரித்தான். அவன் உடலுக்கு அடியில் அதை இழுத்து அவனை அதன்மேல் படுக்கவைத்து அப்படியே இழுத்து கார்வரைக்கும் கொண்டுவந்தான். பின்னர் காருக்குள் இழுத்து பின்னிருக்கையில் படுக்கவைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். பின்பக்கத்திலிருந்து பச்சைக்குருதி வாடை வந்துகொண்டே இருந்தது.

அரசு தலைமை மருத்துவமனையை எளிதில் கண்டுபிடித்துவிட்டான். அந்த வேளையிலும் அதன் முன்னால் ஆள்கூட்டம் இருந்தது. தள்ளுவண்டிக்கடைகள் முன் டீ குடித்துக்கொண்டு சிலர் நின்றிருந்தனர்.

வண்டியை நேராக அவசர சிகிழ்ச்சைப் பிரிவின் முன் கொண்டுசென்று நிறுத்தினான். இறங்கியபோது அவன் மானசீகமாக களைத்திருந்தான். குரலெடுத்துப் பேசமுடியவில்லை. “அட்டெண்டர்… ஒரு ஆக்ஸிடெண்ட்”என்று தளர்ந்த குரலில் சொன்னான்.

ஆனால் அட்டெண்டர் பழகிப்போன வேகத்துடன் நேராக டிராலி ஸ்ட்ரெச்சருடன் வந்தான். அவனுடன் வந்த இன்னொருவன் டிராலியிலிருந்த அலுமினியப் பலகை ஒன்றை எடுத்து அருகே வைத்து அதில் அடிபட்டவனை புரட்டிப்போட்டு அப்படியே இழுத்து டிராலியில் வைத்தான். அதேவேகத்தில் சரிவில் உருட்டி மேலேகொண்டுசென்று மறைந்துவிட்டார்கள். இரண்டு நிமிடம்கூட ஆகவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் அவன் நின்றுகொண்டிருந்தான். ஒரு சிகரெட் பற்றவைத்தான். காரை எடுத்து அப்பால் மரநிழலில் நிறுத்தினான்.  விளக்கு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தபோது கையெல்லாம் ரத்தம். கழுவுவதற்காக அங்குமிங்கும் பார்த்தான். ஒரு கழிப்பறை கண்ணுக்குப் பட்டது.

கழிப்பறைக்குள் சென்று கழுவ முற்பட்டபோதுதான் கையில் மட்டுமல்ல முகத்தில், சட்டையில், பாண்டில் எல்லாம் ரத்தம் என்று தெரிந்தது. கைகளை உரசிக் கழுவி கர்சீஃபை நீரில் முக்கி உடைகளையும் துடைத்துக்கொண்டான்.

ஈர உடையுடன் வெளியே வந்தான். கார் அருகே சென்று நின்றான். அங்கே மேலும் பலர் நின்றனர். ஒருவன் டிரம்மில் டீ கொண்டுவந்து விற்றான். அதைப் பார்த்தபோதுதான் நாக்கு தவிப்பதே தெரிந்தது. ஒரு டீ குடித்தான்.

அதன் பின்னர்தான் மனைவியின் ஞாபகமே  வந்தது. மொபைலில் அவளை அழைத்தான். சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். “டாக்டர்ஸ் ஏதாவது ரிப்போர்ட் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அது முடிஞ்சதுமே வந்திடறேன். காரை கொண்டுவர முடியாது. வாட்டர் செர்வீஸுக்கு விட்டுட்டு ஆட்டோவிலேதான் வரணும்” என்றான்

சற்றுநேரத்தில் முதல் அட்டெண்டர் வந்தான். “சார் வாங்க, டாக்டர் கூப்பிடறார்”

அவன் அட்டெண்டருடன் உள்ளே சென்றான். நீண்ட காரிடாரில் கண்கூசும் வெளிச்சம் இருந்தது. இரண்டு சக்கரநாற்காலிகள் கிடந்தன. ஒரு ஸ்ட்ரெச்சர் காலியாக காத்திருந்தது.

“உங்களுக்கு வேண்டப்பட்டவரா சார்?”என்றான் அட்டெண்டர்.

“இல்லைங்க, வழியிலே அடிபட்டுக் கிடந்தார். எடுத்திட்டுவந்தேன்”

”லக்கி ஆளுங்க… சரியான சமயத்திலே கொண்டாந்திருக்கீங்க”

“பொழைச்சுகிடுவாரா?”

”அப்டித்தான் பேசிக்கிட்டாங்க”

அவன் காரிடாரில் களைப்புடன் நடந்தான். பக்கவாட்டு அறைகளில் வெவ்வேறு பலகைகள் அவை எந்தெந்த இலாகா என்று காட்டின. நீலநிறமான மிகப்பெரிய போர்டில் வெண்ணிற பிளாஸ்டிக் எழுத்துக்களில் அறிவிப்புகள். அருகே சிறிய பலகைகளில் ஏராளமான காகிதங்கள் ஒட்டப்பட்டு காற்றில் பறந்தன.

“இந்தக்காலத்திலே இதெல்லாம் செய்யமாட்டாங்க சார். நீங்க துணிஞ்சு பண்றீங்க” என்றான் அட்டெண்டர்.

“ஏன்?”

“வம்புதான்.. போலீஸ்காரங்க எந்த நியாயத்துக்கும் கட்டுப்படமாட்டாங்க. அதைவிட வக்கீலுங்க. இப்ப வருவாங்க பாருங்க” என்றான் அட்டெண்டர் “இந்தப்பக்கம் சார்… இதான் ரூம்”

அவன் உள்ளே சென்றான். அங்கே நடுவயதான டாக்டர் இருந்தார். வேகமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். உட்காரச்சொல்லி எழுதியதை காத்து நின்ற ஒருவனிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து கண்ணாடிவழியாகப் பார்த்து “நீங்கதான் அந்தாளை கொண்டுவந்ததா? ஆக்ஸிடெண்டிலே அடிபட்ட ஆள்?”

“ஆமா சார், நான்தான்”

”உங்க பேரு?”

“செல்வா, எம்.செல்வக்குமார்”

”என்ன பண்றீங்க?”

”பிஸினஸ் பண்றேன்… எண்ணை ஏஜென்சி எடுத்திருக்கேன். பாமாயில்”

“ஃபைன்… சரியான நேரத்திலே கொண்டுவந்திட்டீங்க. ஜஸ்ட் ஒரு எட்ஜிலே உயிர் பிழைச்சிருக்கார். தலையிலே நல்ல அடி. ரத்தம் குடுத்திட்டிருக்கோம். தலையிலே பட்ட அடியாலே ஏதாவது பாதிப்பான்னு நாளன்னிக்குத்தான் தெரியும்” என்றார் டாக்டர்.  “உங்க ஐடிகார்டு ஏதாவது இருக்கா?”

“டிரைவிங் லைசன்ஸ் காப்பி இருக்கு”

“போதும், குடுங்க”

அவன் பர்ஸிலிருந்து அதை எடுத்துக் கொடுத்தான்.

“ஒரு ரிப்போர்ட் குடுத்திட்டு நீங்க போகலாம். போலீஸ் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்”

“நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணுமா?”

“நாங்க இன்ஃபார்ம் பண்ணிட்டோம். அவங்களுக்கு தெரிஞ்சா வக்கீலுகளுக்கும் தெரிஞ்சிரும். அவங்களும் வந்திருவாங்க”

“வக்கீலுகள் எதுக்கு?”

“ஆக்ஸிடெண்டுன்னா அது அவங்களுக்கு காம்பன்சேஷன் கேஸ்ல? நடைமுறை என்னான்னா காம்பன்சேஷன்லே ஒரு பர்செண்டு வக்கீலுக்கு. முப்பது பர்செண்ட் வரை வக்கீல் ஃபீசா வாங்கிக்கிடறவங்க கூட இருக்காங்க…”

“ஓகோ”

”எழுதுங்க”

அவன் அவர் தந்த காகிதத்தில் நடந்ததை எழுதி டிரைவிங் லைசன்ஸ் நகலுடன் அவரிடம் கொடுத்தான்.

’பாலு இதை மாலினி கிட்டே குடு” என்று அட்டெண்டரிடம் தந்துவிட்டு “ஓக்கே, நீங்க கெளம்பலாம்… உங்க நம்பர் இருக்குல்ல இதிலே?”

‘ஆமா” என்றான் செல்வா ‘உங்க நம்பர் குடுங்க டாக்டர். ஏதாவதுன்னா கூப்பிட்டு கேட்டுக்கறேன்”

அவர் அளித்த எண்ணை சேமித்துக்கொண்டான். வெளியே வந்தபோது நடக்கவே முடியவில்லை. கார் வரைக்கும் நடப்பதற்குள் விழுந்துவிடுவான் போலத் தோன்றியது

 

[ 2 ]

 

அவன் மனைவிதான் அவனை எழுப்பினாள். அவன் அரைத்தூக்கத்தில் கனவில் இருந்தான். அவன் ஒரு பாத்திரத்தை கையால் எடுத்தான், அதில் ரத்தம் இருந்தது. அதை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்தான். அதிலும் ரத்தம். இன்னொரு பாத்திரம், அதிலும் ரத்தம். எல்லா பாத்திரங்களிலும் ரத்தம். அவன் மனைவி அழைத்துக்கொண்டே இருந்தாள். “பாத்திரங்களிலே எல்லாம் ரத்தம்… ஒழுங்கா கழுவுறதில்லியா?”என்றான். விழித்துக்கொண்டான்.

“என்ன?”என்றான்.

பாமா “போலீஸ் ஸ்டேஷன்லே இருந்து கூப்புடறாங்க” என்று செல்போனை நீட்டினாள்.

வாங்கி “வணக்கம்”என்றான்.

“மிஸ்டர் செல்வக்குமாரா பேசுறது?” என்று ஒரு குரல்.

“ஆமா”

”பி த்ரீ ஸ்டேஷனுக்கு வாங்க. ஐயா கூப்புடறாரு. வாறப்ப ஆதார்காடு நகல், ரேஷன் கார்டு நகல் கொண்டுவாங்க”

“பி த்ரீ போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு?”

”வாட்டர் டாங்கு இருக்குல்லா? வாட்டர்டேங்கு ரோடு… பழைய சித்ரா  தியேட்டர் பக்கம்”

“சரி, வந்திடறேன்”

“ஒரு பதினொரு மணிக்கு வாங்க…”

”சரி”

அவன் எழுந்து பல்தேய்த்தபோது பாமா “போலீஸ் ஸ்டேஷனுக்கா?”என்றாள்.

“ஆமா”

“எதுக்கு வம்பு? பாருங்க, இப்ப போலீஸ் அது இதுன்னு..”

”அவங்க வேலையை அவங்க பாக்கணும்ல? ஒருத்தன் அடிச்சுப்போட்டுட்டு போயிருக்கான்…அவனை அவங்க தேடிப்புடிக்கணும்ல? அடிபட்டவருக்கு ஏதாவது நஷ்ட ஈடு வாங்கிக்குடுக்கணும்ல?”

“அதெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று பாமா சொன்னாள்

”நாளைக்கு நான் ரோட்டிலே இதே மாதிரி கிடந்தா இன்னொருத்தன் வந்து பாத்துக்கிடணும்ல, அதுக்குத்தான். வாயை மூடு”

அவள் முகம் சுண்டிவிட்டது. ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றாள்.

அவன் இட்லி சாட்பிட்டுவிட்டு சட்டையை போட்டுக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு ஃபோன் செய்தான். டாக்டர்தான் எடுத்தார்.

“சார், நான் செல்வா பேசறேன்… நேத்து ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸை அட்மிட் பண்ணினேன்… இப்ப எப்டி இருக்கார்?”

”சரியாயிட்டார். நினைவு திரும்பிட்டுது. எலும்புமுறிவுகள் இருக்கு. குணமாகிறதுக்கு நாளாகும். பட் ஹி இஸ் அல்மோஸ்ட் ஓக்கே”

“அவரோட மனைவி சொந்தக்காரங்க யாராவது வந்தாங்களா?”

“ஆமா, மனைவி வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்”

அவன் வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு சாலையில் நுழைந்தான். கேட்டை மூடிவிட்டு வெயில் பரவிய சாலையில் நடக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல தூக்கம் என்றால் உள்ளம் தெளிவாக ஆகிவிடுகிறது. உள்ளம் தெளிந்தால் எல்லாமே எளிமையானவையாக, நன்மைநிறைந்தவையாக தெரிகிறது. ஆனால் பெரும்பாலான நேரம் உள்ளம் பெரிய சிடுக்குகலும் முடிச்சுகளும் நிறைந்ததாகவே இருக்கிறது.

அவன் ஆஸ்பத்திரியைச் சென்றடைந்து பைக்கை நிறுத்திவிட்டு அவசர சிகிழ்ச்சை மற்றும் விபத்து காப்பு பகுதிக்குச் சென்றபோது அந்த அட்டெண்டர் அவனை பார்த்தான். “சார்”என்றான்.

”அந்த ஆள் எப்டி இருக்கார்?”

”மண்டையிலே செம அடி. ரத்தமும் நெறைய போய்டிச்சு. ஆனா பொழைச்சுக்கிட்டான் சார். சரியான நேரத்திலே கொண்டாந்தா இங்க எப்டியும் பொழைக்க வைச்சிருவாங்க. ஏன்னா இங்க எல்லாரும் இதிலே ரொம்ப பழக்கம் உள்ள டாக்டர். ரத்தம் வேற நெறைய ஸ்டாக் வச்சிருக்காங்களா…”

அவன் ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டி “இது இருக்கட்டும்”என்றான்.

“இல்ல சார், வேண்டாம், பரவாயில்லை”

“நானேதானே தாறேன்”

“இப்ப நான் உன்னை நீ போட்டு பேசிட்டிருக்கேன்ல? இந்த ரூபாய வாங்கினா நான் கீழே போயிருவேன்ல?”

“சரிதான்”என்றான்.  “நீங்க எதிர்பார்த்து நான் குடுக்காம இருந்திடக் கூடாதுங்கிறதனாலேதான் தந்தேன். ஸாரி”

“பரவாயில்லை சார், நான் வாங்கிறதில்லை. இங்க ஒருத்தன் மட்டும்தான் வாங்குவான். டாஸ்மாக் பார்ட்டி… இப்டியே வாங்க”

அந்த காரிடார் பகல் வெளிச்சத்தில் வேறுமாதிரி இருந்தது. சுவரில் நிறைய கறைகள். தரையில் பல இடங்களில் சிமிண்ட் பெயர்ந்திருந்தது. நல்ல கூட்டம். குறிப்புகளுடன், குப்பிகளுடன் ,கையில் ஒட்டிய மெல்லிய பிளாஸ்டிக் குழாய்களுடன் எல்லா வாசல்களின் முன்னாலும் காத்து நின்றிருந்தனர். பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களிலும் பாதிக்குமேல் நடுவயதான பெண்கள். ஒருவாரத் தாடி முளைத்த ஆண்கள் முழுக்க முழுக்க பெண்களையே சார்ந்திருந்தது தெரிந்தது. நோய் வந்ததுமே ஆண் வெறும் நோயாளி ஆகிவிடுகிறான்.

“அங்க வராண்டாவிலே இருக்கிறது அந்தாளோட சம்சாரம் சார்” என்றான் அட்டெண்டர்.

”உள்ள போலாமா?”

“போகக்கூடாது. ஆனால் ஒரு நிமிசம் வேணுமானா விடுவாங்க. நான் டாக்டர்ட்ட சொல்லி பாக்கறேன்”

அட்டெண்டர் உள்ளே சென்று திரும்பி வந்து “பாத்துக்கிட்டு வந்திருங்க. பேசவைக்க வேண்டாம்…” என்றான்  “அழுறது பேசுறதெல்லாம் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு”

அவன் உள்ளே சென்றான். உள்ளிருந்த மருந்துவாடை, நீலமும் சிவப்பும் கறுப்புமாக டயல்கள் மின்னும் ஏராளமான கருவிகள், நீலநிறமான படுக்கையுறைகள், இரும்பு நாற்காலிகள், எனாமல் பேசின்கள், வெவ்வேறு மேஜைகளில் வெவ்வேறு கண்ணாடிக் குடுவைகள் அனைத்தும் ஒன்றென ஆகி அவனை பதற்றமுறச் செய்தன. வரிசையான கட்டில்களில் கட்டுகளுடனும், குளூக்கோஸ் கொடுக்கப்பட்ட கைகளுடனும், ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டும் பலர் படுத்திருந்தனர். ஒருவர் மட்டும் மெல்ல முனகிக்கொண்டிருந்தார்.

கட்டிலில் படுத்திருந்தவரை அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அவன் அங்குமிங்கும் பார்க்க வெண்ணிற ஆடை அணிந்த நர்ஸ் ‘ஆக்ஸிடெண்ட் கேஸா, இவருதான்” என்றாள்.

அவன் அந்த கட்டில்முன் நின்றான். பெரிய முண்டாசு போன்ற தலைக்கட்டு. முகம் அதைத்துப் போயிருந்தது. உதடு வீங்கி தொங்கியது. இடையிலும் காலிலும் கைகளிலும் கட்டுகள்.

“எப்டி இருக்காரு?”என்று அவன் நர்சிடம் கேட்டான்.

“ஒண்ணும் பயமில்லை”என்றாள். ஒரு குறிப்பை எழுதி அந்தக் காகிதத்தை கிழித்து ஒரு கிளிப்பில் போட்டுவைத்தாள்.

அவன் பார்த்துக்கொண்டு நின்றான். இன்னொரு இளம் நர்ஸ் அருகே வந்து “இங்க பாருங்க… கூப்பிடுறது தெரியுதா?” என அழைத்தாள்

அவருடைய வீங்கிய இமைகள் பதைத்தன. நீர்வழிய விரிசல் விட்டு திறந்தன. உதடுகள் அசைந்தன.

இளம் நர்ஸ் அவரிடம் குனிந்து “என்ன பண்ணுது? தண்ணி ஏதாவது வேணுமா?”என்றாள்.

அவர் வேண்டாம் என தலையசைத்து ,அவனை நோக்கி கண்களை திருப்பி “இவரா?”என்றார்.

“ஆமா, இவருதான் உங்களை கொண்டாந்து சேத்தது. வழியிலே யாரோ வண்டியாலே முட்டி போட்டுட்டு போயிருந்தாங்க… காப்பாத்தினவரு இவருதான்”

“ஆமா, ஞாபகம் இருக்கு” .அவர் கைகள் அசைந்தன. கும்பிட முயல்பவர்போல.

”வேண்டாம்” என்று அவன் சொன்னான்.

“தெய்வமா கும்பிடுவோம்”என்று அவர் குழறிய குரலில் சொன்னார். “என்னைய காப்பாத்தினீங்க… தெய்வமா..”

அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகள் துடித்தன. நர்ஸ் “போதும்… தூங்குங்க”என்று அவரிடம் சொன்னார்.

“ஒண்ணும் கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்”என்று அவன் சொன்னான்.

பெரிய நர்ஸ் அவன் போகலாம் என்று கையை அசைத்தாள். அவன் திரும்பும்போது பின்பக்கம் வாசலருகே முந்தானையால் வாயை மூடியபடி நின்றிருந்த அவர் மனைவியை பார்த்தான். அவளுக்கே நாற்பது வயதுக்குமேல் இருக்கும் என்று தோன்றியது. வறுமையில் நைந்துபோன உருவம். பழைய புடவை. மங்கலடைந்த கண்களில் நீர் நிறைந்திருந்தது.

“உங்க புருஷனாம்மா?”

”ஆமாங்கய்யா”

அவன் வெளியே போக, அந்த அம்மாள் பின்னால் வந்தாள்.

“குழந்தைங்க இருக்கா?”

“ஆமாங்க, நாலு புள்ளைங்க. நாலுமே சின்னது. ஸ்கூல் படிக்குதுங்க”

“அவரு என்ன வேலை பாக்குறாரு?”

“ஓட்டலிலே சரக்குமாஸ்டருங்க… வேலை முடிஞ்சு வாறப்பதான்…”

“இப்பதான் பிழைச்சுக்கிட்டாரே… சரியாயிரும்”

அவள் விசும்பி அழ ஆரம்பித்தாள்.

”இங்க நல்லாவே பாத்துக்கிடறாங்க. சீக்கிரமே வந்திருவாரு” என்றான். தயங்கியபின் பர்ஸிலிருந்து ரூபாய்களை எண்ணி மூவாயிரம் ரூபாய் எடுத்து நீட்டி “இதை வைச்சுக்கிடுங்க”என்றான்.

“இல்லீங்க”என்றாள்  “பணம் இருக்கு. குடுத்தாங்க”

“யாரு?”என்றான்.

“நேத்து என்னை வீட்டிலே இருந்து கூட்டிட்டு வந்தவங்க… வக்கீலுன்னு சொன்னாங்க”

“வக்கீல் வந்தாங்களா?”

”ஆமாங்க. ரெண்டுபேரு. ராத்திரியே வீட்டுக்கு காரிலே வந்தாங்க. போலீஸ்காரரும் காரிலே இருந்தாங்க. இந்த மாதிரி விசயத்தைச் சொல்லி கூட்டிட்டு வந்தாங்க… வாறப்பவே பத்தாயிரம் ரூபா பணம் குடுத்தாங்க. யார்கிட்டயும் எதுவும் பேசவேண்டாம்னு சொன்னாங்க”

”அவங்க நஷ்டஈடு வாங்கி தருவாங்க… அதிலே அந்தப்பணத்தை கழிச்சுக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன். பரவாயில்லை. இப்ப இந்த பணத்தை வைச்சுக்கிடுங்க… சிலசமயம் வெளியே மருந்துகள் வாங்கச் சொன்னாலும் சொல்லுவாங்க”

”வேண்டாங்க” என்று அவள் உறுதியாகச் சொன்னாள்.

“இருக்கட்டும்”என மீண்டும் நீட்டினான்

“வேண்டாங்க. அவங்க சொன்னதுக்குக்குப் பொறகு வாங்கினா நல்லா இருக்காது”

“சரி”என்று பணத்தை பையில் போட்டுக்கொண்டான். வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்

 

[ 3 ]

 

ஸ்டேஷன் எளிதில் கண்டுபிடிக்கும்படித்தான் இருந்தது. துருப்பிடித்த வண்டிகள் வரிசையாக சாலையில் நின்றன. சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. கேட்டின் மேல் வளைந்த பெயர்ப்பலகையும் பெரிதாகவே இருந்தது. அவன் பைக்கை நிறுத்திவிட்டு தயங்கியபடி நடந்து வாசலை அடைந்தான். காவல் நின்ற செண்ட்ரியிடம் “வரச்சொன்னாங்க”என்றான்

“உள்ள போங்க”என்று அவன் கையை காட்டினான்.

அவன் உள்ளே சென்றான். ஏன் இத்தனை தயக்கமும் பயமும் ஏற்படுகிறது என்று வியப்பாக இருந்தது. உடல் பதறிக்கொண்டே இருந்தது.

“யாரு சார்?”

“ஒரு ஆக்சிடெண்டு கேஸ்… வரச்சொன்னாங்க. என்பேரு செல்வா”

“ராமலிங்கம், உங்காளுய்யா”

ராமலிங்கம் என்ற கான்ஸ்டபிள் உள்ளிருந்து வந்தார். “வாங்கசார், வணக்கம். நான்தான் உங்களை கூப்பிட்டேன். வாங்க”

அவனை அவர் ஒரு சிறு அறைக்கு கொண்டுசென்றார். அங்கே இரண்டு நாற்காலிகள் இருந்தன. இடுங்கலான அறைக்குள் நிறைய ஃபைல் ரேக்குகள்.

“உக்காருங்க” என்று ராமலிங்கம் சொல்லி அவன் அமர்ந்துகொண்டார். செல்வா கிழிந்த நார்ப்பின்னல்கொண்ட நாற்காலியில் அமர்ந்தான்.

“சார் என்ன தொழில் பண்றீங்க?”

“நான் பிசினஸ் பண்றேன். எண்ணை ஏஜென்ஸி நடத்துறேன்.பாமாயில்” என்றான். விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். அவர் அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டார்.

“ஆக்சுவலா என்ன நடந்தது?”

அவன் சொன்னான். அவர் கூர்ந்து கேட்டு தலையை ஆட்டினார்.

“அப்பவே நேரா இங்கவந்தும் ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கலாம்ல சார்?”

“இல்ல, ஆஸ்பத்திரியிலே வீட்டுக்கு போகலாம்னு சொன்னாங்க”

”அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. ஏன்னா அவங்களோட வேலை இல்ல இது. நீங்க உங்க சைடை சேஃப்கார்டு பண்ணியிருக்கணும்ல?”

அவனுக்கு படபடப்பாக இருந்தது. “என்ன சொல்றீங்க?”

“இப்ப என்ன கேஸ் ஆயிருக்கு? ஹிட் ஆண்ட் ரன்”

“யாரு?”

”நீங்கதான்… காரிலே அவனை அடிச்சுப் போட்டுட்டு எடுத்து கொண்டுபோயி ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிட்டு அப்டியே ஓடிப் போய்ட்டீங்க. போலீஸ் உங்களை தேடி கண்டுபிடிச்சிருக்கு. இதான் இப்ப கேஸ்”

“இல்லியே, நான் எல்லா ரெக்கார்டையும் அங்கே ஆஸ்பத்திரியிலேயே குடுத்தேனே..”

“அது உங்க தரப்பு சார்… கேஸ் இப்டில்லா திரும்புது?”

“இதென்ன நான்சென்சா இருக்கு? நான் அந்தாளை காப்பாத்தினேன். அவரு கெஞ்சினாரு, அதனாலே தூக்கிட்டு வந்தேன்”

“அதெல்லாம் சொல்லலாம். ஆனா எவிடென்ஸ் வேணும்ல?”

“அந்தாளே இருக்காரே. அவரு சொல்லட்டும்”

”அதை அப்றம் பாக்கலாம்…இப்ப இன்ஸ்பெக்டர்கிட்டே பிராப்பரா கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு… எஃப்ஐஆர் போடச்சொல்லி வற்புறுத்தறாங்க”

”யாரு?”

“அவங்களோட வக்கீலுங்க… இப்ப உள்ளதான் இருக்காங்க”

அவனுக்கு படபடப்பாக இருந்தது. கைகளை கோத்துக்கொண்டான். விரல்கள் குளிர்ந்து நடுங்கின

“உடனே அரெஸ்ட் பண்ணணும்னு சொல்றாங்க..”

“அரெஸ்டா?”என்றான்.

“ஆமா, அரெஸ்ட் பண்ணினாத்தான் ஹிட் ஆண்ட் ரன் கேஸு ஸ்டிராங்கா ஆகும்…. நாங்களே உங்களை தேடிப்புடிச்சு கைது பண்ணினமாதிரி காட்டணும்…ஹிட் ஆண்ட் ரன்னுன்னா கிட்டத்தட்ட கொலைக் குத்தம் மாதிரி. அடிபட்டவருக்கும் உங்களுக்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா, கொலைமுயற்சியான்னுதான் பேசவே ஆரம்பிப்பாங்க”

”இதென்ன அநியாயமா இருக்கு? நான் என்ன பண்ணினேன்? நான் அந்தாளை காப்பாத்தினேன்… நான் இல்லேன்னா…”

“சத்தம் … சத்தம் வேண்டாம். நிதானமா பேசுங்க. நாங்க அப்டீல்லாம் சட்னு எஃப்ஐஆர் போட்டிர மாட்டோம். உங்களுக்கும் ஆளிருக்கும். அது பெரிய வம்பு. ஆனா வக்கீலுங்க இப்டி வந்து கட்டாயப்படுத்தறாங்க, அதை முன்னாடியே உங்க கிட்ட சொன்னேன். தைரியமா நிதானமா எஸ்ஐ கிட்ட பேசுங்க. அவரு ஒருமாதிரி யோக்கியமான ஆளுதான்”

”சரி’என்றான். நெஞ்சடைத்து அழுகைதான் வந்தது.

“இருங்க”என்று ராமலிங்கம் உள்ளே சென்றுவிட்டு வந்து “போங்க”என்றார்.

அவன் இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றபோது உள்ளே இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் கறுப்பு கோட் போட்டிருந்தார். இன்னொருவர் வெள்ளைச்சட்டை மட்டும். அவர்களில் ஒருவர் நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் அணிந்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார். தொப்பி மேஜைமேல் இருந்தது. மேஜைமுழுக்க ஃபைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மூன்று டீ டம்ப்ளர்கள் காலியாக இருந்தன. மேலே பழைய மின்விசிறி சுழலும் கறக் கறக் ஓசை.

“வணக்கம்” என்றான்.

”நீங்கதான் எம்.செல்வக்குமார் இல்லியா? உக்காருங்க”என்றார் இன்ஸ்பெக்டர். அவர் பெயர் எம்.வெங்கடேசன் என்று தெரிந்தது. குரல் குற்றவாளிகளிடம் பேசிப்பேசி அதட்டும் தொனி கொண்டிருந்தது.

செல்வா அமர்ந்துகொண்டு அவன் மூச்சை இழுத்துவிட்டான். அந்த இருவரையும் பார்ப்பதை தவிர்த்தான்.

“என்ன நடந்தது?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

அவன் மீண்டும் அனைத்தையும் சொன்னான்.

இன்ஸ்பெக்டர் “என்ன சார் சொல்றீங்க?”என்று கோட் போட்டவரிடம் கேட்டார்.

“அது அவரோட தரப்பு. சாட்சிகள் இருக்குன்னா அதை அவர் கோர்ட்லே நிரூபிக்கட்டும்… நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு?”என்றார் கோட்போட்டிருந்தவர்.

சட்டென்று அவன் பொங்கிவிட்டான் “என்ன சாட்சி? என்னய்யா சாட்சி? சாகப்போன ஒருத்தரை காப்பாத்தினேன். அது தப்பா? அதுக்காகவா என் மேலே கேஸ் போடறீங்க?” என்று கூவினான். உடல் பதற எழுந்துவிட்டான். “இந்தமாதிரி பண்ணினா எவன் சார் நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு உதவி பண்ணுவான்?”

”உக்காருங்க” என்றார் இன்ஸ்பெக்டர் “ப்ளீஸ், உக்காருங்க”

“இந்த மாதிரி டிராமாக்கெல்லாம் இங்க எடமில்லை. இது சட்டம்”என்றார் கோட்டுக்காரர்

“யார்யா டிராமா போடுறது? பணத்துக்காக பிளாக்மெயில் பண்றது நீ”

“சார், இங்க சத்தம்போடக்கூடாது…’என்று இன்ஸ்பெக்டர் கடுமையான குரலில் சொன்னார்.

“சத்தம்போட்டா ஆச்சா?” என்றார் வக்கீல்.

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்றார் இன்ஸ்பெக்டர். திரும்பி அவனிடம் “சார் , நிலைமை உங்களுக்கு புரிஞ்சிருக்கும். நீங்கதான் அந்தாளை அடிச்சுப்போட்டுட்டு ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிட்டு தப்பி ஓடிட்டீங்கன்னு இவங்க சொல்றாங்க…”

”ஆனா  ஆஸ்பத்திரியிலே நானே…”

”இருங்க, அதெல்லாம் கோர்ட் விவகாரம்.இவங்க இப்டி ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தா நான் எஃப்.ஐ.ஆர் போடணும். உங்களை அரெஸ்ட் பண்ணி கேஸ் பிரிப்பேர் பண்ணணும்…”

”அரெஸ்டா சார்?” என்றபோது அவன் குரல் உடைந்தது.

“புரியுது… ஆனா எனக்கு வேறவழியில்லை. நீங்க சொல்லவேண்டியதை எல்லாம் கோர்ட்டிலேதான் சொல்லமுடியும்”

“சார், கம்ப்ளெயிண்ட் பண்ண இவங்க யாரு? இவங்க வக்கீல்தானே?”

“ஆமா, நாங்க பாதிக்கப்பட்டவங்களோட வக்கீலுங்க. அவங்க கிட்ட வக்காலத்திலே கையெழுத்து வாங்கியிருக்கோம். இப்ப அவங்களுக்காக நாங்கதான் பேசுவோம்”

“எல்லாம் சட்டப்படிதான் செய்றாங்க”என்றார் இன்ஸ்பெக்டர் “நீங்களே ஒரு சமரசத்துக்கு வந்தா கேஸ் பதிவாகாம விட்டிடலாம்… இல்லேன்னா சிக்கல்தான்”

”நான் என்ன சார் பண்ணணும்?” என்றான்.

”நீங்க இவங்க கிட்ட பேசுங்க… ராமலிங்கம்”

”சர்”

”என்னன்னு பேசுப்பா”

“சர்”

ராமலிங்கம் அவனிடம் “வாங்க சார்” என்றார்.

அவர்கள் வெளியே சென்றார்கள். ராமலிங்கம் “இங்க வைச்சு பேசவேண்டாம் சார். வெளியே டீக்கடை இருக்கு, வாங்க”என்றார்.

டீக்கடை நோக்கிச் சென்றபோது அவனால் நடக்கக்கூட முடியவில்லை. அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு பின்னால் வந்தனர்.

ராமலிங்கம் மெல்லிய குரலில் “உங்களுக்கு வக்கீல் யாராவது இருக்காங்களா சார்?”என்றார்.

”நான் அப்டி யோசிக்கவே இல்லியே” என்றான்.

”உங்க வக்கீல்னு ஒருத்தர் இருந்தா நல்லாருக்கும்… சரி பேசுங்க. விட்டுக்குடுக்காம பேசுங்க. இல்லேன்னா அடிச்சு தின்னிருவானுங்க… ஓநாய்கள் மாதிரி”

டீக்கடையில் அமர்ந்து ஆளுக்கொரு டீ சொன்னார்கள்.

செல்வா கோட்டு போட்டவரிடம் “சார் , நிஜம்மாவே எனக்கு ஒண்ணுமே தெரியாது. உண்மையாகவே ஒரு உசிரை காப்பாத்தணும்னு நினைச்சேன். அதுக்காக அந்தாளை அவசரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டுப்போனேன். சரியான நேரத்திலே நான் கொண்டுபோகலேன்னா அவர் செத்திருப்பார்னு டாக்டரே சொன்னார்… கேட்டுப்பாருங்க”என்றான்

“சார், எங்களுக்கு எல்லாமே தெரியும். நாங்க கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கிறது எங்க தொழிலுக்காக…”

“என்ன சொல்றீங்க? வேணும்னே சொல்றீங்களா? என்னை மாட்டிவிட்டு என்ன பண்ணப்போறீங்க? இப்டி பண்ணினா நாளைக்கு யாரு ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணுவாங்க?”

”நாங்க பண்றதும் ஒரு ஹெல்புக்காகத்தான். ஹிட் ஆண்ட் ரன் பண்ணினவன் யாருன்னு நமக்கு தெரியாது. டயர் தடத்தை வைச்சுப்பாத்தா அது ஒரு பொலிரோ ஜீப்பு. உங்களுது போலோ கார். ஆனா போலீஸ் அதையெல்லாம் துப்பறிஞ்சு அந்த பொலிரோ வண்டியை கண்டுபிடிக்கப்போறதில்லை. ஹிட் ஆண்ட் ரன் கேஸ்லே கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். பல மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வேற ஸ்டேட் காரா கூட இருக்கலாம். கண்டுபிடிக்கணும்னா கண்டுபிடிக்கலாம். ஆனா அது பெரிய வெட்டிவேலை. செய்யவே மாட்டாங்க”

“அதுக்காக?”

“யோசிச்சுப் பாருங்க… ஏழைப்பட்ட குடும்பம். ஆறுமாசம் அந்தாள் வேலைக்கு போகமுடியாது. வாழ்நாள் முழுக்க இனிமே முன்னமாதிரி வேலைசெய்யவும் முடியாது. மருந்து மாத்திரைக்கே லட்சக்கணக்கில ஆயிரும்… அடிச்சுட்டு போனவனை புடிக்கலைன்னா எங்க போயி காம்பன்சேஷன் கேப்பாங்க? ஒத்த பைசா கிடைக்காது”

“அதுக்காக காப்பாத்தினவனை மாட்டிவிடுறதா?”

“வேற வழியே இல்லை… நீங்க சரியான அடையாளத்தோட சிக்கியிருக்கீங்க. சாட்சிகள் இருக்கு. அப்றம் என்ன? எங்க வேலை நஷ்டஈடு வாங்கிக்குடுக்கிறது மட்டும்தான்”

”அதிலே பாதியை பிடுங்கிக்கிடறது?”

“அது எங்க ஃபீஸ். நாங்க சரியான நேரத்திலே வரலைன்னா அவங்களுக்கு ஒத்த பைசா கிடைக்காது…”

“நான் இப்ப என்ன பண்ணணும்?”

அவர் சற்று தயங்கி, செல்போனில் எதையோ கணக்கிட்டு, “பதினைஞ்சு லட்சம் குடுத்திருங்க… ஒரே செட்டில்மெண்ட்” என்றார்.

“என்னய்யா சொல்றே?”என்றபடி செல்வா எழுந்துவிட்டான்.

“தோ பார், மரியாதையா பேசு… இல்லே நானும் அதேமாதிரி பேசுவேன்”

“பதினஞ்சு லட்சமா?”

“உங்க பின்னணி என்னன்னு தெரிஞ்சுதான் இப்டி நடவடிக்கை எடுத்தோம். பதினஞ்சு லட்சத்துக்கு ஒரு பைசா குறையாது… இல்லேன்னா அரெஸ்ட் ஆகி ஜாமீன்ல வெளியே வாங்க.  கேஸை நடத்துங்க… கேஸ்லே அப்டி தப்பிச்சுக்க முடியாது. கிரிமினல் கேஸ்… ஐபிசி 279, 338 ரெண்டு செக்சன்ஸ் இருக்கு. கவனமற்று வாகனத்தை ஓட்டி கொடுங்காயம் விளைவித்தல். இதை கொலைமுயற்சி கேஸா கொண்டுபோகவும் எங்களாலே முடியும்… முன்விரோதம் இருக்குன்னு அந்தாளைச் சொல்லவைச்சா போரும். ஒரு மாசம் ஜாமீன் கெடைக்காம பாத்துக்கிடமுடியும் எங்களாலே… பேப்பரிலே நியூஸ் வரவழைப்போம்”

“எதுக்கு இப்டியெல்லாம் பண்றீங்க? நான் என்ன தப்பு பண்ணினேன்?”என்று சொல்லும்போதே அவன் விம்மிவிட்டான்.

”இதிலே செண்டிமெண்ட்டுக்கு இடமில்லை சார். இது தொழில். எங்க தொழிலிலே நாங்க வெற்றியை மட்டும்தான் பாப்போம்…” என்றார் கோட் போடாதவர். “நீங்க ஆனதை பாத்துக்கலாம்னு முடிவெடுத்தாக்கூட ஒரு வக்கீலை வைச்சுக்கிடணும். அவருக்கு ஃபீஸ் குடுக்கணும். அவரு வழக்கை இழுத்தடிக்கத்தான் முயற்சி ப

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2021 11:35

ஓஷோ- உரை- கடிதம்

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் உங்களின் மூன்றாம் நாள் உரையைக் கேட்டு முடித்தேன்.பிரமாண்டமான ஒரு கேன்வாஸை நிறுத்தி, மிகச் செறிவான,  இயல்பாக ஓடும் வாசகங்களோடு  தத்துவத் தளத்தில் நிகழ்த்திய அதிமானுட முயற்சி..  உங்கள் குரலும், உச்சரிப்பும் கணீரென இருந்ததும், பேச்சுக்குப் பெரும் சக்தியைக் கொடுத்தது.

ஓஷோவை முன்னிறுத்தியதன் மூலம்,  இது போன்ற நிகழ்வுகளை, மதம்/வழிபாடு என்பதிலிருந்து, ஆன்மீகம், தத்துவம் என்னும் தளங்களுக்கு நகர்த்தி, அதை 6 மணி நேர மாரத்தான் உரையாக, செறிவாக அமைத்து வெற்றிகரமாக முடித்தல் அசாத்தியமான ஒன்று.  பல தளங்களில், நீங்கள் மானுட சாத்தியங்களின் புது எல்லைக் கற்களை நட்டுச் செல்கிறீர்கள்.  வரலாறுகள் நிகழும் போது, அவை வரலாறு என்பது தெரிவதில்லை.. 80களின் இளையராஜா இசை போல.

நீங்கள் உரையில் சொல்லியது போல் நான் ஓஷோவைப் பள்ளியிலோ / கல்லூரியிலோ அறிந்துகொள்ளவில்லை. கல்லூரியில் சில மேற்கோள்களாக அறிந்திருந்தேன்.. எனது 44 வயதில் தான் ஓஷோவை கொஞ்சம் தீவிரமாக அறிந்து கொள்ள நேர்ந்தது.  என் பணியின் ஒரு பகுதியாக, மும்பையில் ஒரு குஜராத்தி நிறுவனத்தை வாங்கி உட்செரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரண் பாய் ஷா என்னும் கச்சி (குஜராத்தி) சமணருடன் 3.5 ஆண்டுகள் ஒன்றாக இருக்க நேர்ந்தது. அவர் ஓஷோ பக்தர். அவருடன் பூனா சென்று சில முறை ஆசிரமத்தில் தங்கி வந்திருக்கிறேன்.

அதிர்ஷ்டவசமாக, எனக்கு ஓஷோவுக்கு முன்பு ரமணர் அறிமுகமாகியிருந்தார்.. அவரின், treatise ஆன, ‘நான் யார்’, என்னும் 7 பக்க புத்தகம், மிக அற்புதமான ஒரு assumption ல் துவங்குகிறது. ‘சகல ஜீவர்களும் எப்போதும் சுகமாக இருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன் மீதே ப்ரியம் இருப்பதாலும், ப்ரியத்துக்குச் சுகமே காரணம் என்பதாலும்,   தினமும் நித்திரையில் அனுபவிக்கும், இச்சுகத்தை அறிய, தன்னைத் தான் அறிதல் முக்கியம்’.

அது வரை நான் அறிந்திருந்த மதவாதிகள் எவருமே சுகத்தைத் தேடுவதை ஒரு முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கவில்லை.. சபரிமலைக்குப் போவதுக்குக் கூட, மது, மாது, சிகரெட், செருப்பு போன்றவற்றை ஒறுக்க வேண்டும் என்னும் கட்டளைகள் மீது ஒவ்வாமைதான் இருந்தது.

ரமணரை அறிவார்ந்தோ, பக்தியுடனோ அணுகுவதை விட, நீண்டகாலம், ஒரு காமிக்ஸ் புத்தகம் படிக்கும் சிறுவனைப் போல, அவர் தொடர்பான பலரின் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.. ரமணரை மிகத்தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையை அன்று பெற்றிருக்கவில்லை என்பதனாலும் கூட இருக்கலாம்..

ஒரு முறை உ.வே சா ரமணரைச் சந்திக்கிறார்.. ‘சிவப்பற்றையும், தமிழ்ப்பற்றையும் விடமுடியவில்லையே’, எனப் புலம்புகிறார்.. ‘சிவப்பற்றையும், தமிழ்ப்பற்றையும், யாரைய்யா விடச் சொன்னது;’, எனத் தேற்றி அனுப்புகிறார்.  ந. பிச்சமூர்த்தி ரமணரைச் சென்று சந்திக்கிறார்.. ‘காம எண்ணங்களை விட முடியவில்லை’, எனப் புலம்புகிறார்.. ரமணர், ‘பழம் பழுத்தால், தானே விழும்’, எனப் பதிலுரைக்கிறார்..

‘எனக்கு என் குடும்ப வாழ்க்கை வெறுத்து விட்டது; எனவே சந்நியாசம் வாங்கிட்டு, காசிக்குப் போறேன்னு’, ஒரு பிராமணர் வருகிறார்.. அவரிடம் ரமணர், ‘சந்நியாசி என்பவன் உலகிடம் அன்பு செலுத்துபவன்.. உன்னால் உன் குடும்பத்திடமே அன்பு செலுத்த முடியவில்லையெனில், நீ சந்நியாசியாகவே முடியாது..’,  ந்னு சொல்லி,அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

ஒரு பக்தர், ‘தியானம் செய்யும் போது தூக்கம் வருகிறது. என்ன செய்யலாம்?’, எனக் கேட்கிறார்.. ‘தூங்கி எழுந்து தியானம் செய்யவும்’, எனப் பதில் சொல்கிறார் ரமணர்.

இவை என் நெஞ்சில் மிகப் பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தன.. அதுவரை, லௌகீக வாழ்க்கை மீதான பெரும் ஒரு குற்ற உணர்வு இருந்தது. ரமணர் அதைத் தவறு எனச் சொல்லவில்லை.. லௌகீக வாழ்க்கை தரும் இன்பங்களை அவர் மறுதலிக்க வில்லை.. மாறாக, அவற்றின் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

மனிதன் இன்பத்தை நாடுகின்றான்..  நானும் நாடுகிறேன்.. சரி.. அது நீடித்து நிலைத்திருக்கிறதா? தக்காளி குருமாவுடன் 4 இட்லி சாப்பிடலாம்.. கொஞ்சம் முயன்றால் 8 இட்லி சாப்பிடலாம்.. ஆனால், 40 இட்லி?  உடல் இன்பம் சில முறை துய்க்கலாம்.. சில நூறு முறை?  இன்பம் குறிக்கோள் எனில், அது நீடித்து நிலைக்க என்ன செய்ய வேண்டும்?

’இன்பம்’, என்பதை மிகச் சரியாக வரையறுக்க வேண்டும்..  நமது குறுகிய வரையறைகளால், இன்பம் இட்லிகளிலும், காமத்திலும் இருக்கிறது என மயங்குகிறோம்.. ரமணர், குறுகிய உடல்/புலன் இன்பங்களைத் தாண்டிய  நீடித்து நிலைக்கும் இன்பம் என்னும் வரையறையை நம் முன்பு காட்டுகிறார்.

ரமணரின் வழி ஞான வழி என்பதால், மிகவும் அறிவியற்பூர்வமான ஒன்றாக இருந்தது..  முழுமையான அறிதல் வரவில்லையெனினும், அது சரியெனத் தெரிந்தது.

ரமணரின் அத்யந்த பெண் சீடர்கள் பலர்..  அவர்களுக்கும், ரமணாசிரமத்தை நிர்வகித்து வந்த ரமணரின் தம்பி சின்ன ஸ்வாமிக்கும் ஏழாம் பொருத்தம்.. (விஸ்வாமித்திரர் மேனகை கதை அவருக்கும் தெரிந்திருக்குமல்லவா) சூரி நாகம்மா, கனகம்மா என்னும் அந்த வரிசையில்  மிக முக்கியமானவர்,  மும்பையின் மிகப் பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்த பார்ஸிப் பெண்மணி,  தலையர்கான். இவர்தான், ரமணர் திர்ணாமலை வந்து, ஆதியில் தங்கியிருந்த ஆயிரங்கால் மண்டபத்தை புதுப்பித்தவர்…  பின்னால், பக்வான் ரஜ்னீஷ் என அறியப்பட்டவர் சில காலம் தன்னுடன் திருவண்ணாமலையில் தங்கியிருந்திருக்கிறார் என தலயார்கான் குறிப்பிட்டுள்ளார்..

எனவே, வாழ்க்கையில் மனிதன் தேடுவது மகிழ்ச்சியை என ஓஷோ சொல்லியது எனக்கு மிகவும் இயல்பாகத் தோன்றியது. அதை அவர் ரமணரிடம் இருந்து பெற்றுக் கொண்டாரா எனத் தெரியாது. ஆனால், ரமணரின் வார்த்தைகளை முதலில் அறிந்து கொண்டு, பின்னர் ஓஷோவை அறிந்து கொண்ட எனக்கு அது மிகச் சரி என்றே தோன்றியது.

ரஜ்னீஷின் பலமுகங்களில், நான் அறிந்து கொண்ட இரண்டு முகங்கள் – அவரது ஆளுமை /புத்தக அறிமுகங்கள்.  அந்தப் புத்தகங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் உயர் கவித்துவம் கொண்டவை. எடுத்துக் காட்டாக, பஜகோவிந்தம் பாடல்கள் பற்றிய புத்தகத்துக்கு அவர் வைத்த பெயர் – Songs of ecstasy – அந்தத் தலைப்பே, பஜகோவிந்தம் பாடல்களை நான் உணர வேண்டிய தளம் எதுவெனச் சொல்லியது.  அதுவரை நான் கேட்டிருந்தது, மயில் வண்னப் பட்டுப்புடவை (எம்.எஸ்.ப்ளூ) கட்டிக் கொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு பாந்தமாய் மேடையில் அமர்ந்து எம்.எஸ் அம்மா பாடும் பக்திப் பாடல். அதில் பக்தி இருந்தது. பரவசம் இல்லை. அதில் தவறேதும் இல்லை.. ஆனால், ஒரு செவ்வியல் இசை மரபு அந்தப் பாடலை சுவீகரித்துக் கொள்வதன் எல்லை அது என உணர முடிந்தது. அதே போல சுஃபி ஞானிகள் பற்றிய புத்தகத்துக்கு அவர் வைத்த பெயர் – wisdom of the Sands

உலகத்தின் ஞானிகளை அவர் ஒரு பரவசத்தோடு, காதலோடு அறிமுகம் செய்கிறார்.. கிருஷ்ணரோ, மகாவீரரோ – அந்த அறிமுக உரைகளைக் கேட்கும் எவரும், தத்தம் குறுகிய அடையாளங்கள் தரும் கிட்டப்பார்வையை விடுத்து, ஒரு உலகப்பார்வையில், அந்த ஞானிகளை உணர்ந்து கொள்வார்கள் என்பது நிச்சயம்.. அந்த வகையில், உலகின் பன்மைத்துவத்தை ஒரு சுஃபி ஞானியின் காதலோடு எடுத்துச் சொன்ன பேராசான்.. கவிஞன்.

அவரின் இன்னொரு பரிமாணமாக, நீங்கள் சொன்ன dynamic meditation – நான் பூனா ஆசிரமம் சென்ற போதெல்லாம், அதில் பங்கு பெற்றிருக்கிறேன்..  அது போக இன்னும் சில முறைகளும் உண்டு..  நான் பெரிய சாதகன் இல்லை என்பதால், அதைப் பற்றி எழுத என்னிடம் எதுவும் இல்லை. ஆனால், இது பெருமளவில் ஏற்கப்பட்ட ஒன்றா என்பது சந்தேகமாகவே உள்ளது.

சில விலகல்களையும் சொல்லிவிடுகிறேன்.. ஜேகே பற்றி நீங்கள் சொல்லியதில் ஒரு தகவல் பிழை இருந்தது.  ஜேகே ஒரு நிறுவனத்தை உருவாக்க முயன்றார்.. ப்யூபல் ஜெயகர் போன்றவர்களை வைத்து எனச் சொல்லியிருந்தீர்கள் (அல்லது அப்படி நான் புரிந்து கொண்டேனா எனக் குழப்பம்). துவக்கத்தில் தியோசோபிகல் சொசைட்டியின் உலக வழிகாட்டியாக நிறுத்தப்பட்ட அவர்,  அந்த நிறுவன அமைப்பையே கலைத்தார்.  தியோசபிகல் நிறுவன அமைப்புகளை விட்டு வெளியேறினார்.. அவர்  உருவாக்க விரும்பிய ஒரே அமைப்பு, குழந்தைகளுக்கான பள்ளிகள் தாம்.  வழமையான நெருக்கடி தரும் ரெஜிமெண்டட் பள்ளிமுறைகளுக்கு மாற்றாக ஓரளவு சுதந்திரமான கல்வி பயிலும் சூழலை உருவாக்கும் பள்ளி அமைப்புகளை ஏற்படுத்தினார்.. இந்தியாவில் மாற்றுக்கல்வி முறையை முன்னிறுத்திய மிக முன்னோடி முயற்சி அது.

இன்று ஜேகே ஃபவுண்டேஷன், ரமணாசிரமம், ஓஷோ கம்யூன் – இவை மூன்றும், அவர்களின் படைப்பை, நினைவைச் சேமித்து வைத்திருக்கும் களஞ்சியங்களாக மட்டுமே உள்ளன.. அவற்றிலிருந்து இன்னொரு ஜேகே, ரமணர், ஓஷோ வரமாட்டார்.. ஆனால், அவர்களின் தாக்கத்தில்,  அடுத்த தலைமுறை ஞானிகள் வருவார்கள் என நம்புகிறேன்.

ஓஷோ பற்றிய மிக முழுமையான ஒரு அறிமுகம் என்னும் வகையில், இந்த வழியின் மிகப் பெரும் அடையாளமாக, இந்த ஆறுமணி நேர உரை இருக்கப்போகிறது.  உங்களுக்கு என் வணக்கங்களும் நன்றியும்

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2021 11:34

ஏழாம் கடல், மலைபூத்தபோது – கடிதங்கள்

ஏழாம்கடல் [சிறுகதை]

வணக்கம் ஜெ,

ஏழாம் கடல் கதை சார்ந்து பதிவான பார்வையில் மிக நுட்பமான உளவியல் சார்ந்த ஒரு பார்வையை சுபா எழுதியிருந்தார்,/முத்து கிடைத்ததை பிள்ளை வியாகப்பனிடம் சொல்லாத போது அகத்தில் ஒரு துளி விஷம் சுரந்திருக்கும்./ இது ஒரு முக்கியமான கருத்தாக நான் கருதுகிறேன். ஆழமான நட்புக்குள் எந்த இடத்தில் நஞ்சேறியிருக்கலாம் என்று சுட்டிக் காட்டுகிறார் இதனைநான் ரசித்தேன்.

கோ.புண்ணியவான்

அன்புள்ள ஜெ

ஏழாம் கடல் போன்ற ஒரு கதையை எத்தனை சூட்சுமமாக வாசிக்கவேண்டும் என்பதை கடிதங்கள் வழியாகவே அறிந்தேன். ஆனால் ஓவர் ரீடிங்கும் ஆகிவிடக்கூடாது. இந்தவகையான படிமம் சார்ந்த கதைகள் அவரவர் அனுபவத்தில் சென்று தொடுபவை. முத்து, விஷம் இரண்டுமே சப்ஜெக்டிவானவை. அவவரவர் சொந்த அனுபவம் சார்ந்து நாம் விளங்கிக்கொள்கிறோம். அவற்றை அப்படி ஃப்ரீஸ் செய்ய முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்

அந்த முத்து முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதை அந்தரங்கமாகவே அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர் அதை மிகமிக உயர்வாக தன் மனதின் ஆழத்தில் வைத்திருக்கிறார். எவரிடமும் சொல்லவில்லை. மனைவி மக்களிடம் கூட. வியாகப்பனிடமும் சொல்லவில்லை. வியாகப்பன் அதன்பின் நஞ்சு கொடுத்தார். அதே முத்துச்சிப்பியில் லட்சத்தில் ஒன்றில் ஊறும் நஞ்சு. ஆனால் அதையும் முத்தையும் சம்பந்தப்படுத்த முடியுமா? சிப்பியில்தான் நஞ்சும் முத்தும் வருகின்றன என்று மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும்

சிவபாலன்

மலைபூத்தபோது [சிறுகதை]

சிறுகதை “மலை பூத்த போது” பற்றி. காடுகளில் வாழும் தொல்குடி மக்களையும் தொல் கடவுள்களையும் காலம் செல்ல செல்ல மறந்த வேளாண்குடி மக்களையும் காட்டுகிறது “மலை பூத்த போது”.

மாறாத ஒன்றை வைத்து இங்குள்ள் உலகை பார்த்தால், இவையும் அப்படியே மாறாமல் தான் உள்ளது. அதே முகம் கொண்ட மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள், வளர்க்கிறார்கள், இறந்து மண்ணாகிறார்கள்.

ஆனால் மனிதர்களின் அகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது.தொல்கடவுளை கொல்லைப்புற சாக்கடை வழியாக நடமாட விடுவதும், அவ்ர்களுக்கு நன்றி உணர்வோடு  அளித்து வந்த படையலை படிப்படியாக குறைத்து இறுதியில் ஒரு கவளம் கூட படைகாமல் நிறுத்துவதும் என்பது காலமாற்றதை உணர்த்துகிறது.

நல்ல விளைச்சல் இருந்திருக்கிறது, அவர்கள் தோற்றுவித்த மையகடவுளுக்கு படையல் கொடுக்கபட்டிருக்கிறது. கைவிடப்பட்டது காடுகளில் இருக்கும் தொல்தெய்வங்கள் தான்.

முன்னகர தேவையானதை மட்டும் வைத்துகொண்டு முன்னகரும் வேட்கையுடன் சென்று கொண்டிருக்கும் மனித இனம் செய்வது சரி தவறுக்கு அப்பாற்பட்ட தாக படுகிறது.

ஆம் இந்த சுழற்சி தொடர்ந்து இங்கு நடைபெற்று கொண்டுதான் இருக்கும் என்று மாறிகொண்டிருக்கும் இதை சுட்டி மாறாமல் இருக்கும் ஒன்று சொல்கிறது ” ஆமாம் அதுதான் ஆகட்டும் தெய்வங்களே” என்று.

சதீஷ்குமார்

 

அன்புள்ள ஜெ

மலைபூத்தபோது பலவகையான எண்ணங்களை உருவாக்கிய கதை. நாம் இன்றைக்குச் செய்யும் விவசாயம் எப்படிப்பட்டது. பூச்சிமருந்துக்களைக்கொண்டு எல்லா உயிர்களையும் அழிக்கிறோம். பூச்சிகளை தின்னும் பறவைகளைக்கூட அழிக்கிறோம். இது நஞ்சுவிவசாயம். இதில் மலையிலிருந்து வருபவர்களுக்கு ஏது இடம்?

நான் சின்னப்பையனாக இருக்கும்போது அறுவடை முடிந்ததுமே குடுகுடுப்பைக்காரன், குறவன் என பலர் வந்து நெல்பெற்றுச் செல்வார்கள். அத்தனைபேருக்கும் வயல் ஊட்டியது. அன்றும் இதேவயல்தான். இதேபோல பம்ப்செட் கூட கிடையாது. ஆனால் வயலில் அவ்வளவு மிச்சமிருந்தது. இன்றைக்கு கடன்காரனுக்குத்தான் கொடுக்கவேண்டும்.

எப்படி இந்த மாற்றம் வந்தது? நம் விவசாயத்தின் 80 சதவீதம் பூச்சிமருந்து உரக்கம்பெனிக்காரனுக்கு விவசாயம் நடக்கும்போதே கொடுக்கப்படுகிறது. இதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் மலைகளின் அருளை ஏற்கனவே இழந்துவிட்டோம். நம் நதிகளெல்லாம் வரண்டுவிட்டன

சரவணன் சுப்ரமணியம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2021 11:34

எரிசிதை, இழை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எரிசிதை நீங்கள் இந்த வரிசையில் எழுதிய கந்தர்வன், யட்சன், படையல் கதைகளின் வரிசையில் வரும் அற்புதமான படைப்பு. பலமுறை அதை வாசித்தேன். ஒரேநாளில் ஐந்தாயிரம் வார்த்தைகொண்ட கதையை மூன்றுமுறைக்குமேல் வாசிப்பதென்பது ஒரு பெரிய அப்செஷன்தான். எனக்கு பதினேழாம்நூற்றாண்டு நாயக்கர் ஆட்சிக்காலம் பற்றிய ஓர் ஆர்வம் உண்டு. இந்தக் காலகட்டம் தமிழகத்தின் ‘வைல்ட் வெஸ்ட்’  காலகட்டம். தடியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் என்ற நிலை இருந்த காலம் இது. பாளையக்காரர்களின் அட்டகாசம். நடுவே இருந்த நாயக்கர் அரசுகள் வலுவிழந்த காலகட்டம்.

இந்தச் சிறுகதையில் அத்தனை விரிவாக பின்னணி அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது. ராணி மங்கம்மா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடக்கும் கதை. அவள் மகன் இறந்து மருமகள் கருவுற்றிருக்கிறாள். மருமகள் பெற்ற பிள்ளையை ராஜாவாக்கித்தான் அவள் ஆட்சியமைக்கப்போகிறாள். பதினேழு ஆண்டுகள் நல்லாட்சி தரவும்போகிறாள். ஆனால் அதற்கு அரசபதவியை கைப்பற்றவேண்டும். அதற்கு மக்கள் ஏற்பை அடையவேண்டும். அதற்கு சின்னமுத்தம்மாள் உடன்கட்டை ஏறவேண்டும். இதில் சின்னமுத்தம்மாள் சிக்கிக்கொண்டிருக்கிறாள்.

சரித்திரத்தில் குழந்தையைப் பெற்றதுமே சின்னமுத்தம்மாள் உடன்கட்டை ஏறினாள் என்றும் ஒரு குறிப்பு உண்டு. அவள் காய்ச்சலுக்கு வைத்திருந்த பன்னீர்மருந்தை நிறையக்குடித்து செத்தாள் என்றும் அதன்பின்னர்தான் உடன்கட்டை ஏற்றினார்கள் என்றும் குறிப்பு உண்டு. இரண்டு வாசிப்புக்கும் இடமளிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.

சின்னமுத்தம்மாளுக்கு இரண்டு சாய்ஸ்தான் உள்ளது. சாவது, மகனை ராஜாவாக ஆக்குவது. அல்லது விதவையாக திரும்பிச் செல்வது. அன்றைய பெண்கள் முதல்வழியைத்தான் தேர்வுசெய்வார்கள். உயிராசைப்பட்டு பிறந்தவீட்டுக்கு திரும்பிச் சென்றால் அங்கே இருப்பது ஒரு நரகவாழ்க்கை. நாயக்கர் காலத்தில் விதவை என்றால் தீண்டத்தாகதவளுக்கும் ஒரு படி கீழே. இப்போதிருக்கும் இந்தச் சிறைவாழ்க்கையை மேலும் முப்பதாண்டுகள் நீட்டித்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

எம். விஜயராகவன்

 

அன்புள்ள ஜெ

 

எரிசிதை கதையை வாசித்து வாசித்து முடிக்க முடியவில்லை. ஒரு குட்டி நாவல் போல எவ்வளவு விரிவான சித்திரங்கள். சின்னரங்கமகாலின் அமைப்பில் தொடங்கிவிடுகிறது கதை. அந்த மாளிகையே அன்றைய அதிகார அமைப்பின் அடையாளமாக தோன்றுகிறது. பல அடுக்குகள். கீழே வேலைக்காரர்கள், முன்பக்கம் காவலர்கள், கொல்லைப்பக்கம் அடிமைகள், மாடியில் அரசகுடும்பம். ஆனால் அரசகுடும்பத்தினர்தான் சிறையில் இருக்கிறார்கள்.

இந்தக்கதையில் அரசகுடும்பத்தினரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. ஆனால் கூடவே புழக்கடை வாழ்க்கை, தாசிகளின் வாழ்க்கையும் மிக விரிவாகச் சொல்லப்படுகிறது. விரைவான கதையோட்டம் இருக்கிறது. ஆனால் கூடவே வந்துகொண்டே இருக்கிறது அன்றைய வாழ்க்கையின் நுணுக்கமான செய்திகள். அன்றைய பேச்சுமொழிகூட உறுத்தாமல் வந்துகொண்டிருக்கிறது. தாசிகள் ஒருவனின் வைப்பாட்டியாக இருப்பதை விரும்பிய செய்தியுடன் வரும் அந்த உவமை ஒரு கிளாஸிக். அதேபோல மங்கம்மா பற்றி முதிய தாசி சொல்லும் சொலவடை

ஓர் இலக்கியம் வாழ்க்கையின் ஒட்டுமொத்த்ததையே ஒரு கதைக்குள் சொல்லிவிடும் என்பதற்கான சான்று இந்தக்கதை

 

ராஜசேகர்

இழை [சிறுகதை]

பேரன்பிற்குரிய ஜெயமோகன்,

முடியை பற்றியவனுக்கு, முடியை மோகித்தவனுக்கு முடியாலேயே முடிவில் முடிவு!எதைப் பற்றினாலும் துக்கம்!

இழையை பற்றினாலும் எழவு அதுவே இழவு ஆகித்தொலைகிறது! ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று சும்மாவா பாடினான் சித்தன்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், துணிந்தவளுக்கு முடியை கொண்டையாக்கி முடிந்தவளுக்கு முடியும் ஆயுதம்.

இது கொஞ்சம் போரிங் டெம்பிளேட் பாணி டைம் பாஸ் கதை என எனக்கு தோன்றியது. ஆமென்பது சென்ற உச்சத்தை சமன் செய்ய நீங்கள் வேண்டுமென்றே குதித்த ஆழப் பள்ளம். எனக்குத்தான் சரியா வாசிக்க தெரியலையோ என்னவோ!இந்த பாணி கதைகளை விரும்பிப் படிக்கும் அன்பர்கள் என்னை மன்னிப்பார்களாக!

ஒரு இலக்கிய வாசகன் தனது வாசிப்பின் மூலம் தனது முழுமையை கண்டு கொள்வதைப் பற்றி அதை நோக்கி தன்னை நகர்த்துவது பற்றி அதன் அவசியம் பற்றி நீங்களே பலமுறை குறிப்பிட்டுள்ளீர்கள்.

எனது நோக்கிலே முழுமை என்பது மன நிறைவான மகிழ்ச்சியான ஆனந்தமான உற்சாகமான உடல் நலத்தோடும் மன வளத்தோடும் கூடிய, எல்லா உயிர்களிடத்திலும் இணக்கத்தோடும் ஒழுக்கத்தோடும்

மன அமைதியோடும் அன்போடும் கருணையோடும் அருளோடும் கூடிய பூரணவாழ்வு. வாழ்வாங்கு வாழ்தல். ஒரு முழுமை பெற்ற நல்வாழ்வு வாழ்தல். மெய்யறிவு பெற்று இங்கேயே இப்போதே பேரானந்த வாழ்வு வாழ்தல். தன்னைப்போலவே மற்றவர்களும் ஒரு நல்ல வாழ்வை வாழ தன்னால் இயன்றதை செய்தல். ஒட்டுமொத்த சமூகமும் இயற்கையும் ஒரு முழுமையை நோக்கி அதன் உன்னதத்தை நோக்கி நகர்வதற்கு இங்கேயே இப்போதே இயன்றதைச் செய்தல்.

மேலே குறிப்பிட்டதை ஒருவன் செய்வானாயின் அல்லது குறைந்தபட்சம் அதை நோக்கிய நகர்தலாக தனது வாழ்வை அமைத்துக் கொள்வானாயின் அவன் முழுமையை நோக்கி நகர்ந்தவன் ஆவான்.

அவன் வாசிக்கின்ற ஒரு இலக்கியப் படைப்பு மேலே சொன்ன வகையில் அவனை முழுமையை நோக்கி நகர்த்துவதில் எவ்விதமேனும் பயன்பட்டால் அது அவனுக்கான ஒரு நல்ல படைப்பு.

இது ஆளுக்கு ஆள் மாறுபடும் எனினும் கூட ஒவ்வொரு மனிதனும் தனக்கான முழுமையை நோக்கியே எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கிறான் என்பதே எனது புரிதல். இதில் சிலருக்கு உடன்பாடு இருக்கலாம் சிலருக்கு மாறுபாடு இருக்கலாம். எந்த ஒரு படைப்பையும் அது முழுமையை நோக்கி என்னை நகர்த்துகிறதா என்பதை இதைக் கொண்டே நான் மதிப்பிடுவேன்.

இந்த அடிப்படையில் இழை கதை மற்ற கதைகளைப் போல என்னை முழுமையை நோக்கி அவ்வளவாக நகர்த்தவில்லை என்பதே எனது புரிதல்.

நான் இதை விவாதத்திற்காக உங்களிடம் கூறவில்லை உளப்பூர்வமாக கூறுகிறேன். இங்கே அறிவைவிட என் உணர்வுகளுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். உணர்வுபூர்வமாக இழை கதையோடு என்னால் பயணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

நமக்கு இங்கு இவ்வண்ணம் இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.  இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மிக மிக முக்கியமானது. நிறைவும் மகிழ்ச்சியும் உவகையும் தனக்கும் பிறருக்கும் அளிக்காத ஒன்றின் பொருட்டு வீணாக்க நேரமில்லை. ஒருவரி படித்தாலும் அதில் என்னை உன்னத படுத்த ஏதோ ஒன்றை தேடுபவன் நான். ஒரு வரி எழுதினாலும அது மற்றவர்கள் தங்களை ஏதோ ஒரு வகையில் உன்னத படுத்திக்கொள்ள உதவ வேண்டும் என நினைப்பவன். பெரும்பாலான நேரங்களில் இதையே உங்கள் எழுத்துக்களில் நிச்சயமாக நான் காண்கிறேன்.

இந்த பாணி கதைகளை எழுத எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஜெ போன்ற முதன்மை ஆளுமை இடம் நாங்கள் எதிர்பார்ப்பது மனிதனை மேம்படுத்தும் உன்னதப் படுத்தும் பயனுறு இலக்கியத்தை. இது ஒரு அன்பு கோரிக்கைதான்.உங்களை எவ்வகையிலும் வாசகர்களாகிய நாங்கள் கட்டுப்படுத்த முடியாது, அது கூடவும் கூடாது என்பதை நன்கு அறிந்திருக்கிறோம். இந்த எனது தனிப்பட்ட பார்வை தங்களுக்கு தவறாக தோன்றினால் தயவுசய்து

இதை ஒதுக்கி விடுங்கள். வெண்முரசு என்னும் உலகப் பெருங்காவியம் தந்து வியாச பீடத்தில் அமர்ந்தவருக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்.

நித்ய சைதன்ய யதி என்னும் ஞானகுருவின் பராமரிப்பில் வளர்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட காமதேனு நீங்கள். சீரழிந்து கிடக்கும் சமூகத்திற்கு அற விழுமியங்களை உணர்வுப்பூர்வமாக தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் உன்னதக்கலை எனும் ஞானப்பால் நிறைமடி உங்கள் வசம் உள்ளது.  அந்த அரிய காமதேனு பசுவின் அமிர்தப் பொழிவிற்காக காத்திருக்கின்றன அறத்துக்காகவும் ஞானத்துக்காகவும் பசித்த பல்லாயிரம் வயிறுகள் .

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ

’இழையோடியது’ என்ற சொல்லை அடிக்கடி பார்ப்பதுண்டு. இழை என்றால் என்ன என்று காட்டிய கதை இது. டெய்சிக்கும் ஜானுக்கும் நடுவே இழையோடுவது என்ன? வெறுப்பு, ஆனால் மிகமெல்லிய இழை. அந்த இழையே அவனைக் கொன்றுவிடுகிறது. கதை முழுக்க கூந்தல் பற்றி வரும் இடங்களை தொகுத்து வேறொரு கதையை வாசிக்க முடிகிறது. அவள் கூந்தலின் வலிமையை கண்டுபிடித்தவன் ஜான். அவள் மேல் அவனுக்கு இருக்கும் பித்தே அந்த கூந்தலினால்தான். அவன் கொண்ட மோகத்தாலேயே அவனை கொல்கிறாள். அந்தக்கூந்தலில் அவள் காதலன் பற்றி ஏற இடமிருக்கிறது. அந்தக்கூந்தலைக்கொண்டு அவளை கொல்ல ஜான் ஆசைப்படுகிறான். அல்லது அப்படி ஒரு வன்மமும்அவனிடம் உள்ளது. அப்படியென்றால் அந்த இழையோடும் உணர்வுதான் என்ன?

மகேஷ்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2021 11:34

கந்தர்வன், விருந்து- கடிதங்கள்

 கந்தர்வன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்களின் ஓஷோ உரையை நேற்றுக் கேட்டேன். நல்ல, துணிச்சலான முன்வைப்பு. இதுவே உங்களுடைய பலம். பல பரிமாணங்களுடைய விரிவான பார்வை. பல விதமான உள்ளடக்குகள் கொண்ட உரை. சிறப்பு.

தவிர, நீங்கள் எழுதி வரும் புதிய கதைத் தொடரில் கந்தர்வன் சமகாலப் பரப்பை நேரடியாக உள்ளெடுத்துப் பேசுகிறது. கதை நிகழும் காலம் வேறு என்று வெளியே தோன்றினாலும் அதன் உள்முகம் நம்முடைய காலமும் சூழலுமே. சமகால அரசியல் பரப்பையும் சமூக வெளியையும் அது உள்ளடக்குகிறது. அணஞ்சபெருமாள்கள் எதன்பொருட்டெல்லாம் மிக நுட்பமாக உருவழிப்புச் செய்யப்படுகிறார்கள். எப்படிப் பலியிடப்படுகிறார்கள்? பின் எப்படி வழிபாட்டு மகத்துவமாக ஏற்றப்படுகிறார்கள்? இதற்கமைய தமக்கேற்ற விதத்தில் இவர்களைப் பயன்படுத்தும் அதிகாரத் தரப்பின் உளவியல், அந்த உளவியலை வடிவமைக்கும் அதன் நலன்கள், அதற்கு அது பயன்படுத்திக் கொள்ளும் தந்திரங்கள் (அறிவு?!) இப்படியே அத்தனை நுட்பங்களையும் சொல்கிறது கதை. நான் இந்தச் சூழலுக்குள்  – இந்த வரலாற்றுக்குள் பயணித்து வந்தவன் என்பதால் இதன் தந்தர முடிச்சுகளை நன்றாக அறிவேன். இதையெல்லாம் நேரில் இருந்து பார்த்தைப் போல அத்தனை உண்மையாக – நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள். தமிழகத்தில் பூங்கொடி, முத்துக்குமார் தொடக்கம் ஈழத்தில் பலிகொடுக்கப்பட்ட பல நூறு கரும்புலிகள் மற்றும் போராளிகள் வரையில்  கண்முன்னே தோன்றுகிறார்கள். அதற்குப் பின்புலமாக இருந்த தரப்புகளையும் இழுத்து வரலாற்றின்  சந்தியில் நிறுத்தியுள்ளீர்கள்.

அணஞ்சபெருமாளின் அப்பாவித் தனத்தையும் ஒரு வகையில் அறியாமையையும் அதனடியாகவுள்ள துணிச்சலையும் பிள்ளைவாள்களின் சந்தேகப் பதற்றங்களையும் துணிவின்மையையும் அதன் அடியாக ஓடும் நபுஞ்சகத்தையும் கேலிப்படுத்துவது உச்சம். அதில் ஊடாடும் நகைச் சுவை அருமை. நன்றி.

வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பைக் கூறுங்கள்.

மிக்க அன்புடன்,

கருணாகரன்

அன்புள்ள ஜெ

கந்தர்வன் கதையை வாசித்த பின்னர் அதைப்பற்றி சில மொண்ணைகள் அங்கிங்கே எழுதியதை வாசித்தேன். தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக திரும்பி வந்தேன். இத்தனை மொண்ணைத்தனம் நம் சூழலில் இருப்பதும், அதை அறிவு என ஒரு கூட்டம் முன்வைப்பதும் நினைத்தே பார்க்கமுடியவில்லை. நடுகல் கலாச்சாரத்தை அவமானம் பண்ணிவிட்டார் என்று ஒரு கூட்டம்.  பதினேழாம் நூற்றாண்டில் பலமுறை நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்தான் கதை என்றுகூட தெரியவில்லை. குறைந்தபட்சம் தன்னைச்சுற்றி இருக்கும் மக்களின் சாமிகள் எப்படியெல்லாம் உருவானார்கள் என்றுகூட தெரியவில்லை. பொதுவெளியில் ஒரு மடத்தனத்தைச் சொல்வதில் வெட்கமே இல்லை. ஆச்சரியம்தான்

ஆர். சிவக்குமார்

விருந்து [சிறுகதை]

அன்பு ஜெ,

நேற்று விருந்து சிறுகதையைப் படித்தபின் ஒரு வெறுமையை அடைந்தேன். ஆட்டின் அந்த மரணம், அதன் கண்கள் மற்றும் சாமிநாத ஆசாரியின் மரணம் என தாங்கவியலாத் தருணங்களைக் கொடுத்திருந்தீர்கள். ஏற்கனவே கடந்து வந்த சிறுகதைகளிலிருந்து எத்தனை மரணத்தைத் தாங்கிக் கொள்வது. ஃபாதர் ஞானப்பன், வலது மாடு, ஆரிஸ் கொலை செய்தவன், அணைஞ்சன் மற்றும் வள்ளியம்மை என மரணதத்தையே கடந்து வந்து கொணடிருக்கிறேன். மனசாட்சியே இல்லாமல் முன் சென்று கொண்டிருக்கிறீர்களே என்று நினைத்தேன். ஆசாரியின் மரணத்தைவிட அந்த ஆட்டின் மரணம் மிகவும் பாதித்தது. அடுத்த சிறுகதைக்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். மீண்டும் இன்று காலை விருந்து சிறுகதையை மீள்வாசிப்பு செய்ய எத்தனித்தபோது முகப்புப்படத்திலுள்ள அந்த ஆட்டுக்குட்டியின் கனிவான முகம் என்னை மீண்டும் தடுத்தது. அதை உருப்பெருக்கி பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென நேற்று நீங்கள் ஓஷோ உரையில் கிறுத்துவத்தின் அடிப்படைப் புரிதலைக் கூட வாசிப்பவர்கள் அடைவதில்லை என்று கூறியது நினைவிற்கு வந்தது. தன் இரத்தத்தையும் சதையையும் படைக்கும் கிறுத்து பற்றிய புரிதலை நீங்கள் சொன்னபோது கூட நான் வரிசையாக ஏழாவது, ஏழாம் கடல், லாசர் என சிறு பட்டியலைப் போட்டுப் பார்த்தேன். அப்போது கூட விருந்து கதையை கிறுத்துவோடு இணைக்கும் திறப்பை நான் அடையவில்லை. ஆட்டுக்குட்டியின் கனிவான அந்த முகத்தைக் கண்டு ஆட்டுக்குட்டியானவர் என்ற சொல் என்னுள் ஒலித்து. தன்னைத் தானே விருந்து படைத்துக் கொண்டவர் அவர் மட்டும் தான்.

ஆசாரி படைத்த அந்த விருந்துப் படையல் கத்தோலிக்கத் திருவழிபாட்டின் உச்சத் தருணமான திருவிருந்தில் நடக்கும் சடங்குச் செயல்களை இப்போது இணைத்துப் பார்க்க வைத்தது. திருப்பலியில் ஒப்புக் கொடுக்கப்படும் அந்த அப்பமும் இரசமும் கிறுத்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுவதுபோலவே இங்கு இந்த ஆட்டின் விருந்து ஆகிறது. ஆசாரியின் இறுதி விருந்து இங்கு கிறுத்துவின் இரவுணவுக்கு ஒப்பு நோக்கலாம். ”இது பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மானிட மகனுடைய சதையை உண்டு, இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” என்ற வரிகளும் உடன் நினைவிற்கு வந்தது. இறுதியில் அவன் ஆட்டிற்கு போட்ட அந்த பெயர் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை. இறுதியில் அவனே அந்த ஆட்டுக் குட்டியானவராக பாவ மன்னிப்பின் பலியாக தூக்கில் தொங்கினான் என்று தான் தோன்றியது. அந்த விருந்து பலியை உண்ட அனைவரின் உடலிலும் ஒரு பகுதியாக அவனே கரைந்து விட்டிருப்பதாக நினைத்துக் கொண்டேன். இன்னும் சில இருண்மைகள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் எழுத்துக்களை இன்னும் ஆழ அறியும் போது அது மேலும் எனக்குத் திறக்கலாம். அந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்

இரம்யா

அன்புள்ள ஜெ

விருந்து தன்னையே விருந்தாகக் கொடுத்த ஒருவனின் கதை. தன்னை முன்னால் நின்று அச்சுறுத்திய சாவை அவன் நேருக்குநேராகப் பார்த்துவிடுகிறான். உரித்து கண்முன்னால் தொங்கவிடுகிறான். அவ்வளவுதான் விடுதலை அடைந்துவிட்டான்

சில மோசமான தருணங்களில் நமக்கே இதேபோன்ற அனுபவம் அமைவதுண்டு. எனக்கே அமைந்தது உண்டு. நான் செத்து கிடப்பதை, லாரியில் அடிபட்டுக்கிடப்பதை நானே பார்ப்பேன். அந்த அனுபவம்தான் இந்தக்கதை

செந்தில்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2021 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.