Jeyamohan's Blog, page 1016
March 23, 2021
எச்சம் [சிறுகதை]
”இந்த வெள்ளைக்காரன்லாம் எடுப்பான்லா, அது” என்றார் எம்.ஏ.எம்.ஆறுமுகப்பெருமாள் நாடார். அவர்தான் எம்.ஏ.எம்.ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸ் புரவிஷனல் ஸ்டோர்ஸின் நிறுவனர், உரிமையாளர்.
“என்னது?”என்று நான் கேட்டேன்.
அவர் கையைச் சுழற்றி “வெள்ளைக்காரன் எடுப்பான்லா, அதான் லே, சோலிகளை எல்லாம் முடிச்சுப்போட்டு ,அந்தாலே ஆத்தலா படுத்துக்கிட்டு…”
“ஆமா” என இழுத்தேன்.
“ஏலே, சொல்லிட்டே இருக்கேன்ல? வெள்ளைக்காரத் தொரை எடுக்கப்பட்டது… சட்டைகளை களட்டிப்போட்டு டவுசரை போட்டுக்கிட்டு வலையூஞ்சாலிலே படுத்துக்கிடுவான்லா? கையிலே கிளாஸிலே குடிக்கதுக்கு வைச்சிருப்பான். சிலபேரு பக்கத்திலே பிளேயரை வைச்சு பாட்டுகூட கேப்பான்”
“ஆமா” என்றேன், ஒன்றுமே புரியவில்லை.
“அதான்லே, அதுக்கு பேரு என்ன?”
“என்ன பாட்டா கேக்குறியோ?”
“ஏலே, அவன் அந்தாலே எடுக்குதான்லா? அதுக்கு பேரு என்ன?”
எனக்கு அவர் சொல்வதென்ன என்று புரியவில்லை. ஆனால் உலகில் அவருக்கு தெரியாத எல்லாமே எனக்குத் தெரிந்திருக்கவேண்டும் என எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் நினைத்தார். நான் பிஎஸ்ஸி படித்திருந்தேன். ஆகவே எனக்கு அவரது மளிகை – ஸ்டேஷனரி கடையில் கணக்குப்பிள்ளை உத்தியோகம். மாதம் பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம். டீ காப்பி இலவசம்.முந்திரி பாதாம் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம்.
மனம் வந்து அவர் அந்தச் சம்பளம் கொடுப்பது எனக்கு மட்டும்தான். ஏனென்றால் அவருடைய பார்வையில் நான் ‘பீயேக்காரன்’. நானும் பிஎஸ்எஸி என்று பலமுறை சொல்லிப்பார்த்தேன். அது ஒருவகை பீ.ஏ என பாட்டா புரிந்துகொண்டார். நான் கம்ப்யூட்டரில் கணக்குகளை ஏற்றுவேன்.
பாட்டா கடைக்கு அவருடைய நண்பர்கள் யார் வந்தாலும் சலிப்புடன் பேசும் பாவனையில் “பீயேக்காரனாக்கும். விவரமுண்டுண்ணு நினைச்சு வச்சுகிடுதது. இப்ப இந்த கம்பௌண்டரிலே கணக்குகளை ஏத்தணும்லா?” என்பார். அதையும் நான் திருத்தவேண்டும். “பாட்டா, கம்ப்யூட்டராக்கும்” என்பேன். ”அதத்தானேலே சொன்னேன், செத்த சவமே” என்று சொல்லிவிடுவார்.
ஆனால் பாட்டா ஓய்ந்தவேளையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். அவர் அறிவியல் முதல் அரசியல்வரை அனைத்தையும் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்வார். கொடுக்கும் காசு முதலாகி வரவேண்டுமே?
“இவன் ஒரு கேணையன். இவங்கிட்டே சொன்னேன் பாரு… வெள்ளைக்காரன் எடுக்குதத பாக்காதவன் இல்ல. சினிமா புடிச்சு டிவியிலே போடுதான். அது என்னான்னு கேட்டா இவன் நம்மகிட்டே முளிக்கான்” என்றார் பாட்டா.
“அவன் என்ன பாட்டா எடுக்கான்?”என்றேன்.
“அதைத்தாம்லே உங்கிட்டே கேக்குதேன், செத்த மூதி”
“செரி, எடுத்து என்ன செய்யுதான்?”
“என்ன செய்வானா? ஏலே, என்ன கேக்கே?”
“இல்ல எடுத்து எங்க வைப்பான்?”
“எடுபட்டச் சிறுக்கிபிள்ள மவனே, கிண்டல் பண்ணுதியோ? தமாசு பண்ணுதியோ?வெட்டி பொலிபோட்டிருவேன்…”பாட்டா டஸ்டரை எடுத்து என்மேல் எறிந்தார். அது அப்பால் விழுந்தது. செலவு சுருக்கும் நோக்குடன் அவர் மூக்குக்கண்ணாடியே போட்டுக்கொள்ளவில்லை.
நான் மேற்கொண்டு பேசவில்லை.
“ஒரு விசயம் கேட்டா சொல்லத் தெரியல்ல. சம்பளம் மட்டும் எண்ணி எண்ணி வாங்குதேல்லா? ரூவா நோட்ட கைதொட்டு கைதொட்டு நக்கி பாக்குதேல்லா?”
நான் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். அதில் எதையாவது தட்டினால் கிழம் ஒன்றும் சொல்வதில்லை. உச்சகட்ட கவனத்துடன் செய்யவேண்டிய வேலை அது என நினைத்திருக்கிறார். நான் அந்த நினைப்பை பேணியும் வந்தேன்.
“வெள்ளைக்க்காரன் எடுக்குதான்… நமக்கு அதுக்கு வளியிலே” என பாட்டா முனகிக்கொண்டார்.
வருகிற ஆனியில் அவருக்கு வயது எண்பது. எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸ் மளிகை வியாபாரம் நிறுவனத்தின் எட்டு கிளைகள் மாவட்டம் முழுக்க இருந்தன. பாட்டாவின் மகன்களும் பேரன்களும் நடத்தினர். என்னை அவருடைய இளைய மகன் கணேசலிங்கம் தான் இங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டார். கணக்குகள் பொதுவான அக்கவுண்டுக்கு நேரடியாகவே போகும்படி ஏற்பாடு.
இங்கே பழையகடைக்கு கணேசலிங்கம் வாரம் ஒருமுறைதான் வருவார். பாட்டா தான் அதிகாலை கடை திறப்பது முதல் நள்ளிரவில் பூட்டுவதுவரை எந்நேரமும், ஆண்டில் எல்லா நாளும் இருப்பார். எம்.ஏ.எம்.ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆன்ட் சன்ஸ் மளிகையின் இந்த ஆதிக்கடைக்கு ஆண்டில் எல்லா நாளும் வேலைநாளே. தீபாவளி அன்றைக்குக் கூட.
“தீவாளிக்கு மத்தவன் கடைய மூடுவான், அப்ப நமக்கு ஏவாரம் ஆகும்லா?” என்று பாட்டா சொல்வார்.
“அப்ப தீவாளிக்கு முன்னாடி லீவு விடலாம்லா?”என்றேன் ஒருமுறை.
”எவம்லே அவன், வெங்கப்பய வெளங்காப்பயலா இருக்கான்? தீவாளிச்சாமான் வாங்க ஆளுக வருவாகள்லா?”
நான் விடாமல் “அப்ப தீவாளி களிஞ்சு லீவு விடலாமே”என்றேன்.
“நாசமத்துப் போவ. நினைச்சுத்தான் பேசுதியா? ஏலே, தீவாளிக்கு எல்லா சாமானும் செலவாயிரும்லா? அப்ப எங்க போயி மேக்கொண்டு சாமான் வாங்குவான்? ஏவாரம்னா கணக்கு வேணும்லே கணக்கு”
டீக்கடை அற்புதமுத்து பட்டியலுடன் வந்தான். கடைப்பையன் காமராஜ் சாப்பிடப் போயிருந்தான். கொஞ்சம் மூத்தவரான கடையாள் இன்னாசி முத்து இரண்டு நாட்களாக வரவில்லை. காய்ச்சல் என்றார்கள். அவரைத்தான் காலையில் இருந்தே பாட்டா நினைத்து நினைத்து வசைபாடிக்கொண்டிருந்தார். “அவன் இங்க ஆனைக்க சுண்ணிய தூக்கி சொமந்தான்லா, அலுப்பிலே காய்ச்சல் வந்துபோட்டு. வெளங்காப்பய. வரட்டு, இருக்கு அவனுக்கு”
“என்னவே, கடையிலே ஆளில்லியா?”என்றார் அற்புத முத்து.
“ஏன் இருக்கப்பட்டது ஆளா தெரியல்லியா? வே, இந்தக்கடையை உம்ம அப்பன் குருசந்தோணி காலம் முதல் ஒத்தைக்கு நடத்தினவனாக்கும் நான். இந்தக்கடைக்கு நான் ஒருத்தன் போரும். பின்னே ரெண்டு ஏழைப்பட்டவனுக சூடுசோறு திங்கட்டுமேன்னு வெலை குடுத்து சம்பளம் போடுதேன்… அவனுக நம்ம சூத்திலே நாட்டுமிளகாயை அரைக்கானுக… நீரு லிஸ்டை எடும்”
பாட்டா சொன்னதுபோலவே சரசரவென எடுத்து அடுக்கினார். ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறதென்று யோசிக்காமல் தேடாமல் தெரிந்தாலொழிய மளிகை வியாபாரம் செய்ய முடியாது. பாட்டாவுக்கு அதெல்லாம் கையிலேயே இருந்தது. கண் அவருக்கு காகிதத்திலும் கல்லாப்பெட்டியிலும்தான் இருக்கும்.
“நல்ல வெயிலு” என்று அற்புத முத்து சாலையைப் பார்த்துக்கொண்டு சொன்னார். “எட்டடி நடந்தா நட்டந்தலை வெடிக்குது… ஆனா எல்லா சாமானும் இப்பதான் வாங்க முடியும். இந்தா இப்ப மறுக்கா சோலி தொடங்கிரும். வடைக்கு அரைக்கணும், பரோட்டா மாவு பிசையணும். இப்பல்லாம் மூணுமூணரைக்கே அந்திக்கூட்டம் வர தொடங்கிருது”
“அப்ப எப்ப ரெஸ்ட் எடுக்கிறது?”என்றேன்
“என்னத்த ரெஸ்டு….ஓட்டல் வைக்கிறவனுக்கு ரெஸ்டுன்னு ஒண்ணு இல்ல”
அவர் போனபிறகு பாட்டா என்னிடம் “ஏலே இப்ப சொன்னியே, அதென்ன சொல்லு?”
“என்னது?”
“லே, எந்திரிச்சு வந்து வெட்டிருவேன் பாத்துக்க”
“என்ன பாட்டா சொல்லுதீரு? மனுசனை போட்டு பாடாப்படுத்துதீரே?” என்று நான் பொறுமையிழந்து கூச்சலிட்டேன்.
பாட்டா தணிந்தார். “இப்ப சொன்னேல்லா? ஏலே, இப்ப நீ அற்புதம் பயகிட்டே கேட்டேல்லா? எப்ப எடுப்பேன்னு. அது என்னது? ஏலே, நீ என்ன எடுக்குததப் பத்தி கேட்டே?”
”அவரு என்ன எடுத்தாரு?” அவர் எதையும் எடுத்ததுபோல தெரியவில்லை. “சாமானை எடுத்தாரு… பத்துகிலோ நாட்டுவெல்லம்…”
“சீ அறுதலிமிண்டை மவனே… செருப்பாலே அடிப்பேன்… நீ இப்ப கேட்டேல்லா? மூணுமூணரைக்கு அந்திக்கூட்டம் வந்திரும்னு அவன் சொன்னப்ப?”
“அந்திக்கூட்டம் வந்தா என்ன எடுத்திட்டு வருவானுக? பாட்டா தண்ணி போடுததைச் சொல்லுதேளா?”
“என்னை கொலகாரன் ஆக்காதே கேட்டுக்கோ. ஏலே செறிக்கிமிண்டைமவனே, நீ அவன் என்ன எடுப்பான்னு கேட்டியே? தோசை மாதிரி ஒரு வார்த்தை ”
”தோசையா?”. சாதா தோசை, மசால் தோசை, பிளெயின் தோசை, நெய் ரோஸ்ட்….என் மண்டை மின்னியது. “ஆ! ரெஸ்டு, அவரு எப்ப ரெஸ்டு எடுப்பான்னு கேட்டேன்”
“ஆ, அதுதான்… அதுதான் கேட்டேன். இப்ப மட்டும் நாக்குலே வருதுல்ல? அதைத்தான் வெள்ளைக்காரன் எடுப்பான்”
“கொன்னு போட்டியளே… பாட்டா பாடாப்படுத்தி போட்டியளே. இதையா இவ்ளவு நேரம் வைச்சு ஊதினிக?”
“ஏலே அதை எடுக்குதது கஷ்டம்லா? அதுக்கு ஒரு ஐவேஜு வேணும்லா?”
”ரெஸ்டு எடுக்கவா? வெளங்கீரும். ஏன் பாட்டா, இந்தாலே துவர்த்தாலே திண்ணையை துடைச்சுக்கிட்டு படுத்தா ரெஸ்டு…”
“ஆமா நீ உலத்தினே, அது நடுவு நீட்டுகது. ஆடுமாடெல்லாம் செய்யுதது. மத்தது வெள்ளைக்காரன் எடுக்குத வித்தை. அதுவேற…”
“அப்ப சாயங்காலம் வீட்டுக்குப்போனா நீரு படுக்க மாட்டீராக்கும்?”
”வீட்டுலே போனா நூறுகூட்டம் சோலி கெடக்குல்லா? ஒண்ணொண்ணா முடிச்சுகிட்டு பத்து பன்னிரண்டு மணிக்கு அந்தாலே சாய்ஞ்சா காலம்பற முதல் பள்ளிமணி அடிக்குறப்ப எந்திருசிருவேன். அது எளுவது எம்பது வருசக்கணக்காக்கும். ஒண்ணாம் பள்ளிமணிக்கு பிறகு உறங்கினவனுக்கு பின்ன மூதேவிதான்லே கூட்டு”
“அப்டி படுக்கப்பட்டதுதான் ரெஸ்டு”
“போக்கத்த பேச்சு எங்கிட்ட வேண்டாம் கேட்டியா, அது உறக்கம். நான் சொல்லுதது வேறே”
காலை நான்கு மணிக்கு அடிக்கும் மாதாகோயில் மணி. நான் அப்போதுதான் ஒன்றுக்கடிக்க எழுவேன். அந்நேரம் ஆறுமுகப்பெருமாள் பாட்டா குளிக்கச் செல்வார். நேராக வந்து அவரே நின்று கடையை திறக்கவைப்பார். சரியாக காலை ஐந்துமணிக்கு நெற்றியில் பட்டை விபூதி, காதில் துளசி இலையுடன் கல்லாப்பெட்டியில் அமர்ந்துவிடுவார். அவருடைய அணுக்கவேலையாள் இன்னாசிமுத்து நாலரைக்கே வந்து பீடி பிடித்தபடி காத்து நிற்பார். நானும் காமராஜும் எட்டு மணிக்குத்தான் வருவோம். அதற்கு ஒவ்வொருநாளும் கிழவர் பாட்டாகப் பாடுவார்.
“பாட்டா அப்ப ரெஸ்டுன்னா என்னான்னு நினைக்குதீக?”
“அதாம்லே, வெள்ளைக்காரன் எடுக்குதானே?”
“நானும் ரெஸ்டு எடுக்குதேன்லா?”
“நீ நொட்டினே… அதுக்கொரு ஐவேஜு வேணும். நீ கையிலே காசில்லாத வெட்டிமுட்டை… நீ என்ன எடுத்தே? தெருவுநாயி மாதிரி சுருண்டு கிடந்தா ஆச்சா?”
“பின்ன?”
“வெள்ளைக்காரன் எடுக்குதான்லா? அது, அதுமாதிரி எடுக்கணும்”
“எப்டி?”
“அதாக்கும் சொன்னது, அந்த மாதிரி டவுசர் வேணும். குப்பியிலே தண்ணி இல்லேன்னா நுரை வரப்பட்ட சாராயம். வலையூஞ்சாலிலே ஒயிலாட்டு சரிஞ்சு கிடக்கணும். இல்லேன்னா சாய்வுநாக்காலியிலே. பாட்டு இருக்கணும்”
“செரி, அதுக்கென்ன இப்ப? நாம நினைச்சா ஒரு டவுசர் கிட்டாதோ?”
“டவுசர் மட்டும் இருந்தா ஆச்சா? படுக்கப்பட்ட எடம் தோட்டமா இருக்கணுமே. பின்னாடி நல்ல பங்களா இருக்கணும். அதிலே சடைநாயி இருக்கணும். வேலைக்காரனுக இருக்கணும், துரைச்சானி இருக்கணும்…”
”பெட்டியிலே பூத்த பணம் இருக்கணும்”
“ஆமா, பின்ன இல்லியா?”என்றார் எம்.ஏ.எம்.ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸின் உரிமையாளரான எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் பாட்டா. “சும்மா நீயும் நானும் நினைச்சா முடியுமா? ஏலே, ஆனை சாணி போடுதுன்னு ஆடு முக்கினா நடக்குமா? இல்ல கேக்கேன்”
நான் புன்னகைத்தபடி கணக்குகளை டைப் அடித்துக்கொண்டிருந்தேன்.
”ஏலே மூஞ்சியிலே என்ன சிரிப்பு? என்ன சிரிப்புங்கேன். உனக்கு என்ன தெரியும்? அந்தக் காலத்திலே நான் வெள்ளைக்காரனைப் பாத்தவன். எங்க வீட்டுக்கு நேர் பின்னாலே திரித்துவப் பொற்றை. அதுக்குமேலே துரையோட பங்களா. சடைநாயி வச்சிருக்கிற அசல் வெள்ளைக்காரன். நான் அவன் இந்த மாதிரி இதை எடுக்குததை பலநாள் பாத்ததுண்டு. அதுக்கு அந்தப்பக்கமாக்கும் பனைமடுவு. எங்க அப்பன் அங்க பனையேறப் போவாரு. நான் அக்கானி சுமந்துட்டு வருவேன். வாற வளியிலே ஒரு நிமிட்டு நின்னு பாப்பேன். என்னமா விளுந்து கெடப்பான்னு நினைக்கே? மகாவிஷ்னு மாதிரி கெடப்பானே. எரையெடுத்த மலைப்பாம்பு மாதிரில்லா கண்ணு சொக்கிச் சொக்கி அடிக்கும். நீ என்ன வேணுமானாலும் சொல்லு, வெள்ளைக்காரன் எடுத்தாத்தான் அது… அது என்ன சொன்னே?”
“ரெஸ்டு”
”ஆமா அது… வெள்ளைக்காரன் எடுக்கணும், அது ஒரு ஐசரியமாக்கும்…”
“ஆமா”என்றேன். எனக்கே பொறாமை வந்துவிட்டது. கோவளம் பீச்சில் வெள்ளைக்காரர்கள் தென்னைமர நிழலில் ஜமக்காளம் விரித்து பெரிய வண்ணக்குடையுடன் அரைநிர்வாணமாக படுத்திருப்பார்கள். உரித்த சீனிக்கிழங்கு மாதிரி உடல்கள். கைகளில் எலுமிச்சை வளையம் செருகப்பட்ட ஜின். கூலிங்கிளாஸ்கள், அருகே பெரிய பிளாஸ்கில் ஐஸ். அழகான வெள்ளைக்காரிகள். தொப்புளுக்கு மிகமிக கீழே ஜட்டி விளிம்பு படிந்திருப்பவர்கள்.
“நான் அப்ப நினைப்பேன் நாமளும் ஒருநாள் அதை எடுத்துப்போடணும்னு. அப்பல்லாம் என்ன, அப்பன் பனையேறி வந்தா பழங்கஞ்சிக்கே தட்டுப்பாடு. நாங்க எட்டு பிள்ளைக. எங்கன்னு கஞ்சி ஊத்த? ராத்திரி ஒருநேரம் கிளங்கும் கஞ்சியும் உண்டு. மத்தநேரம்லாம் கண்டதை தின்னுக்கிடணும். ஆனால் சோலி ஒருநேரம் ஒழியாது. ஓடிக்கிட்டே இருக்கணும். எங்கயாவது உக்காந்திருக்கிறத அப்பனோ அம்மையோ பாத்தா அந்தாலே அடிக்க வருவாங்க. ஒரு நேரம் இருந்து ஒருவாய் தண்ணி குடிக்க முடியாது. பனையோடு பனை ஓட்டம். பிறவு எரிக்கதுக்குச் சருகுதேடி ஓட்டம். பிறவு சந்தைக்கு ஓட்டம். திரும்பி வந்து பாத்திரங்களை களுவி வைச்சுகிட்டு அந்தாலே அப்டியே படுத்து உறக்கம்… காலம்பற ஒண்ணாம் மணி அடிக்கப்பட்ட நேரத்திலே எந்திரிச்சு அப்டியே பனங்காட்டுக்கு ஓடணும்…”
“கஷ்டம்தான்”என்றேன். அந்தக் கதைகளெல்லாம் பாட்டா நூறுமுறை சொன்னது
“ஆனா நான் மனசிலே கருதி வைச்சுக்கிட்டேன். ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் நாமளும் இந்தமாதிரி வெள்ளைக்காரன் எடுக்கப்பட்டதை எடுத்துப்போடணும்னு… அதுக்குத்தான் மளிகைக்கடையிலே சோலிக்குச் சேந்தது. ராப்பகல் ஓடினவனுக்கு ராப்பகல் நின்னுட்டிருக்கப்பட்ட வாழ்க்கை. வாங்காத பேச்சும் அடியும் இல்லை. மொள்ளமா சின்ன கடைவைச்சேன். இசக்கியம்மையை கெட்டினப்ப கிட்டின ஸ்ரீதனப் பணத்தை வைச்சு கடையை விருத்தி பண்ணினேன். பாவம் அவளும் மேல போயி இருபது வருசம் திகைஞ்சாச்சு… இந்தா இதுவரை கடை ஓடிட்டிருக்கு”
“இப்ப எட்டு கடை இருக்குல்லா?”
“ஆமா இருக்கு. ஆனா அது எட்டுபேருக்குல்லா? மக்களும் பேரப்பயக்களும் இருக்கானுகளே…” என்றார் பாட்டா. “ஒருத்தனும் சொல்லுவளி நிக்குறதில்லை. அவனவன் பாடு. இந்தா இந்தக்கடையை நான் இப்பமும் ஒத்தையிலே நிண்ணு நடத்துதேன்”
“மயிரேபோச்சுன்னு சொல்லிப்போட்டு பேசாம போயி வெள்ளைக்காரன் மாதிரி ரெஸ்டு எடுக்க வேண்டியதுதானே?”
“உனக்க அண்டியிலே ஆமணக்கெண்ணையை வைச்சு திரும்மணும்…ஏலே, கடைமேலே கடன் என்ன இருக்குன்னு நினைக்கே? ஒண்ணுரெண்டுல்ல, ஒம்பது லெச்சம். நாளொண்ணுக்கு அம்பதாயிரம் வித்தாலும் கட்டுமாலே?”
அந்தக் கணக்குக்குள் போனால் நாறக்கெட்டவார்த்தை கேட்கவேண்டியிருக்கும். நான் அடங்கிவிட்டேன். ஒருநாளுக்கு சராசரியாக நான்கு லட்சம் ரூபாய் வியாபாரம் ஆகும் இடம். முப்பதாயிரம் ரூபாய் லாபம் நிற்கும்.
காமராஜ் வந்தான். நாலைந்து பேர் சாமான் வாங்க வந்தனர். பாட்டா பரபரப்பாகிவிட்டார். மூன்றரை மணிக்கு டீ வந்தது.
நாலேகாலுக்கு சாந்தப்பன் சைக்கிளில் வந்து இறங்கி “பாட்டா சங்கதி தெரியுமா?”என்றான்.
“ஏவாரம் நடக்குதுல்லா? சங்கதிகளை நாளைக்குச் சொல்லு”என்றார் பாட்டா.
“பாட்டா, உங்க கடையாளு இன்னாசிமுத்து போய்ட்டான்”
”ஏலே, எங்க போனான் அவன்? நான் இங்க தேடிட்டிருக்கேன்லா?”
“செத்துப்போயிட்டான். ரெண்டுநாள் காய்ச்சலு இருந்திருக்கு. நேத்து ஆஸ்பத்திரிக்கு போயிருக்கான். காலம்பற போய்ட்டான்”
பாட்டா கையில் பென்சிலுடன் திகைத்து வாய் திறந்து அசைவிழந்தார்.
நான் “அவன் ஊரு இங்க பக்கமில்லா?”என்றேன்.
“மத்தியாஸ் நகரிலே… பெரிய பள்ளி பக்கத்திலே”
பாட்டா சட்டென்று “ஏலே கடைய மூடு… நாம கெளம்புவோம்” என்றார்.
“எண்ணைக்காரன் வாற நேரம். காமராஜ் இங்க நிக்கட்டு” என்றேன்.
“எண்ணைக்காரனை வீட்டிலே கொண்டு வைக்கச்சொல்லு. இண்ணைக்கு ஒருநாள் கடையிலே பலகை திறந்திருக்கப்பிடாது” என்றார் பாட்டா “வித்தபணம் கையிலே எம்பிடுடே வரும்?”
“மூணுலெச்சம் பக்கத்திலே”
“ஒரு அம்பதாயிரம் எடுத்துக்கோ…”
“அவ்ளவு தேவைப்படுமா?”
“எடுத்துக்கோ… அவனுக்க மகனும் பெஞ்சாதியும் உண்டு. அவனுக்க பய படிக்குதான். இன்னும் வேரு உறைக்கல்ல”
பாட்டா ஐந்தே நிமிடத்தில் கிளம்பிவிட்டார் “எலே ஒரு ஆட்டொ பிடிலே. வாயப்பாத்துட்டு நிக்கான்”
நான் ஆட்டோ பிடிக்க ஓடினேன். காமராஜ் கடையை மூடினான். பாட்டா வந்து ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.
“குடிகார நாயி… சொன்னா கேக்கமாட்டான். இங்க இருக்கப்பட்ட நேரம் மட்டும் பொத்திக்கிட்டு இருப்பான். ராத்திரியானா ஆளு வேற. இப்ப என்ன ஆச்சு? இல்ல கேக்கேன். இப்ப உனக்க குடும்பம் அந்தோன்னு நிக்குதா இல்லியா? சொல்லுறவன் வயசானவனானா அவன் சொல்லை கேக்கணும். உனக்கெல்லாம் மூத்தவன் சொன்னா ஒரு மாதிரி எளக்காரம்… இப்ப என்னலே ஆச்சு? செத்த மூதி… இப்ப உனக்கு ஆரு இருக்கா?”
ஆட்டோ முழுக்க செத்துப்போன இன்னாசிமுத்துவிடம் பேசிக்கொண்டே வந்தார் பாட்டா. “குடி, வேண்டாம்னு சொல்லல்ல. அப்பப்ப கொஞ்சம்போல மருந்துபோல குடிக்கலாம். ஏலே, கஞ்சியக்கூட ஒருவேளைக்கு நாலுவேளை குடிச்சா ரோகமாக்கும். பின்ன இந்த நாத்த தண்ணியை குடிச்சா குடலு வெளங்குமாலே? நாம சீவிக்குதது நமக்கா? நம்ம பிள்ளைக பூத்து தளிர்த்து வரவேண்டாமா? தங்கம்போலத்த பையன். பாத்தா வாளைக்கண்ணு மாதிரி இருப்பான். இப்பம் எல்லாம் போச்சுல்லா?”
நாங்கள் எளிதில் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டோம். பழைய இஞ்ஞாசியார் கோயிலுக்கு பின்பக்கம் சிறிய ஓட்டு வீடு. அங்கே கோயிலில் சாவுமணி ஒலித்துக் கொண்டிருந்தது. சிறிய கூட்டம்தான். அவர்களின் மொத்தச் சாதிசனமும் அங்கேயே கூடியிருந்தார்கள். அவர்கள் மீன்விற்பவர்கள். மொத்தமே நான்கே தெருக்கள்தான்.
பாட்டா என்னிடம் “அந்தப் பயலை பதமாக் கூப்பிட்டு இந்த பணத்தை அவன் கையிலே குடுத்திரு” என்றார்.
“ஆனா அவன் அளுதிட்டிருக்கானே?”
“ஆமா, உலகம்தெரியாத பய. ஆனால் இப்ப இங்க ஆரையும் நமக்குத் தெரியாது. அதோட அவன் இப்பதான் உலகத்தை தெரிஞ்சுகிடணும்… இதுதான் அதுக்குண்டான நேரம்… எங்க அப்பன் செத்தப்ப என் கையிலே இருந்தது நாப்பது ரூவா. வச்சு சமாளிச்சேன்லா?”
நான் இன்னாசிமுத்துவின் மகன் மைக்கேல்ராஜை தேடிப்போனேன். அவன் சடலம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அப்பால் தனியாக நின்றிருந்தேன். இன்னாசி முகம் கறுத்து சுருங்கி பாயில் கிடந்தார். அவன் அருகே மனைவி தலைவிரிக்கோலமாக அமர்ந்து சன்னமாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்.
நான் மைக்கேல் அருகே சென்று நின்றேன். அவன் என்னை பார்த்தான்.
“பாட்டா வந்திருக்காரு” என்றேன்.
“பாத்தேன்” என்றான்.
“அம்பதாயிரம் ரூவா பணம் குடுத்தாரு… இந்தா இருக்கு”
“அவ்ளவு பணம் வேண்டியிருக்காதே”
“குடுத்தாரு”
“என்ன செய்யன்னு சொன்னாரா?”
“சொல்லல்ல. அது சொல்லமாட்டாரு. ஆனா நீ பக்குவமா செலவளிக்கியான்னு பைசாபைசாவா பிறவு கணக்கு கேப்பாரு… பாத்து செய்யி” என்றேன் “முடிஞ்சபிறகு பாட்டாவை வந்து பாரு. நமக்கு வேற ஆரு இருக்கா?”
அவன் கண்கள் கலங்கி வழிய தலைகுனிந்தான்.
“இந்தாலே”
அவன் பணத்தை வாங்கிக்கொண்டான். நான் திரும்பிச் சென்றபோது பாட்டா இயல்பாக ஆகி, இன்னொரு கிழவருடன் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்.
“பரமண்டலத்திலே இருக்கப்பட்டது ஆருண்ணு இப்பம் நமக்கு தெரியாது. போனவன் பாத்துட்டு வந்து சொல்லப்போறதில்லை. அங்க நடுவிலே விஸ்ணு இந்தாலே சிவன். பக்கத்திலே முத்தாலம்மையும் மாதாவும். முருகனும் ஏசுவும் அருகிலே நிக்காங்க. அதாக்கும் நம்ம கணக்கு”.
முருகனும் ஏசுவும் இளைஞர்கள் என்று பாட்டா நினைப்பது தெரிந்தது. இளைஞர்கள் பெரியவர்களுக்குச் சமானமாக அமர்வது அவருக்குப் பிடிக்காது.
ஏழுமணிக்கு சர்ச்சில் மாஸ். ஆகவே ஐந்தரைக்கே எடுத்துவிட்டார்கள். இன்னாசியின் மனைவி மட்டும்தான் கொஞ்சம் ஓசையிட்டு அழுதாள். பையன் இறுகிய முகத்துடன் வந்தான்.
சர்ச்சுக்கு பின்னாலேயே செமித்தேரி. மிகப்பழைமையான செமித்தேரி. பெட்டியில் இன்னாசியை கொண்டுபோனார்கள். நாங்கள் பின்னால் சென்றோம். ஒரு ஃபாதர் அங்கியுடன் முன்னால் சென்றார்.
அங்கே பல வெள்ளைக்காரர்களுக்கு கல்லறை இருப்பதைப் பார்த்தேன். பாட்டாவிடம் சொல்லலாம், சந்தோஷப்படுவார் என நினைத்துக்கொண்டேன்.
கிறிஸ்தவச் சடங்குகள் சீக்கிரமாக முடிந்துவிடும். அவர்களுக்கு பேச்சு கொஞ்சம் கூடுதல் என்று பாட்டா சொல்வார். கல்யாணம் சாவு எல்லாவற்றுக்குமே பேச்சுதான் . “நமக்கு நடிப்பு கூடுதல்” என்று நான் ஒருமுறை அவரிடம் சொன்னேன். பாட்டா சரியாக கவனிக்காமல் “ஆமா”என்று ஏற்றுக்கொண்டார். எனக்கு சினிமாக்களில் வசனம் பிடிக்காது, நடிப்பு தேவை. நான் ரஜினிகாந்த் ரசிகன்.
சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது பாட்டா அந்தப் பெட்டிமேல் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டினார். நான் அதை படித்துக்கொள்ளவேண்டும். பிறகு கேட்பார். அதன்பின் சிலுவைகளிலும் அதுவே எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இன்னாசியின் குழியில் நானும் பாட்டாவும் ஆளுக்கொரு கைப்பிடி மண் போட்டோம். பாட்டா நிதானமாக இருந்தார். சாவு வீடுகளில் பொதுவாக அவர் கலங்குவதில்லை.
திரும்பும்போது பாட்டா ஞாபகமாக “அதென்னதுலே எளுதியிருந்தது?”என்றார்.
“ஆர்.ஐ.பி”என்றேன்.
“அப்டீன்னா?”
”ரெஸ்ட் இன் பீஸ்… அமைதியிலே ஓய்வுகொள்ளுங்கன்னு அர்த்தம்”
“என்ன சொன்னே?” என்றார் பாட்டா, அவர் பதற்றமாகி விட்டது ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
“ரெஸ்ட் இன் பீஸ்… அமைதியிலே ஓய்வு…”
”ரெஸ்டா?” என்று அவர் உரக்கக் கேட்டார்.
”ஆமா”
“ரெஸ்டுன்னா போட்டிருக்கான்?”
“ஆமா”
”ஏலே அப்டீன்னா ரெஸ்டுன்னாக்க சாவுன்னா அர்த்தம்?”
“அப்டியும் உண்டு” என்றேன்.
சிலகணங்களுக்குப்பின் “ஆமா, அது உள்ளதாக்கும். அப்டித்தான்”என்றார் பாட்டா.
“ரெஸ்டுன்னா மிச்சம்னும் அர்த்தம் உண்டு”
“அதுவும் செரிதான்”என்றார் பாட்டா. தனக்குத்தானே “ரெஸ்டு!”என்று சொல்லிக்கொண்டார்.
“ஆனா ரெஸ்டு எடுக்கதுன்னா சாவுன்னு அர்த்தமில்லை” என்றேன்.
”அதுக்கும் அதுதான் அர்த்தம்… கொஞ்சமாட்டு சாவுறது, அதாக்கும் ரெஸ்டு” என்றார் பாட்டா.
நான் பேசாமல் ஆட்டோவில் அமர்ந்திருந்தேன். பாட்டா மெல்ல தனக்குத்தானே “ரெஸ்டு!” என்றார். பிறகு என்னிடம் திரும்பி “அது நமக்கு செரியாவாது கேட்டியாலே” என்றார்.
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]பிழைசுட்டுபவர்கள்
அன்புள்ள ஜெ
உங்கள் கதைகளில் தகவல்பிழைகள் உள்ளன என்று சொல்லப்படும் கூற்றுக்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அடிக்கடி இவை கண்ணில் படுகின்றன. சாதாரண வாசகர்கள் இவற்றை அப்படியே நம்பிவிட வாய்ப்புள்ளது. நீங்கள் விளக்கம் அளிக்கவில்லை என்பதையே ஒரு சாதக அம்சமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
எஸ்.சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்,
விஷ்ணுபுரம் வெளிவந்தகாலம் முதலே இந்த போக்கு தொடங்கிவிட்டது. நான் அனைத்துக்கும் புனைவு சார்ந்த விளக்கமும், நூலாதாரமும் அளித்தேன். ஆனால் அவற்றைச் சொன்ன எவரும் அவர்களின் பிழைகளை ஒப்புக்கொள்ளவில்லை, பிழையாகச் சொன்னதற்கு வருந்தவும் இல்லை. அப்படியே நழுவி அடுத்த பிழையைச் சொல்ல ஆரம்பித்தனர்.
சுந்தர ராமசாமி என்னிடம் ‘இந்த கும்பலுடன் நீங்கள் நூறாண்டுகள் சண்டையிட்டாலும் தீராது. அப்படியே விட்டுவிடுங்கள். அவர்களுடையது வேறு பிரச்சினை’ என்றார். நான் விளக்கம் அளிப்பதை நிறுத்திவிட்டேன். அந்நாவலின் இரண்டாம் பதிப்பில் இப்படி முன்னுரையில் எழுதிச்சேர்த்தேன். ‘இந்நாவலில் பிழைகளை கண்டுபிடித்து பலர் எழுதியிருந்தனர். இந்த இரண்டாம் பதிப்பில் திருத்தும் அளவுக்கு உண்மையான பிழை ஏதும் சுட்டிக்காட்டப்படவில்லை’. அதன்பின் அது அடங்கியது.
என் நிலைபாடு இதுவே. இந்த பிழைகண்டுபிடிப்பவர்கள் மிகப்பெரும்பாலும் அரைகுறை அறிவுடையவர்கள், நடைமுறையோ புனைவின் சாத்தியங்களோ தெரியாதவர்கள். இவர்களுடன் போராடவே முடியாது. அதைப்போல அபத்தமான சக்தி விரயம் வேறில்லை.
என் கதைகளை வெவ்வேறு கதைக்களத்தைச் சார்ந்தே எழுதுகிறேன். அக்கதைக்களத்தில் எனக்கு ஒரு குறைந்தபட்ச அனுபவம், அறிமுகம் இருக்கும்.அதற்குமேல், ஒருதுறையை எழுதினால் அத்துறையின் முதன்மை நிபுணர் என்று சொல்லத்தக்க சிலரிடம் அனுப்பி பரிசீலனை, ஒப்புதல் பெற்றே வெளியிடுகிறேன். சட்ட நடைமுறைகள், அறிவியல் கருத்துக்கள், வரலாறு, தொன்மம் எதுவானாலும்.
ஆகவே அவற்றில் பிழைகள் இருந்தால் இன்னொரு நிபுணர் கண்டுபிடிக்கும் அளவுக்கே இருக்குமே ஒழிய முகநூலில் உலவும் எளிய உள்ளங்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கெல்லாம் இருக்காது.
பொதுவாக இந்த இலக்கிய அரசியல்சூழலில் உலவும் கூட்டம் தங்கள் துறைகளில் எந்த மதிப்பும் இல்லாதவர்களாக, எந்த அடிப்படை அறிதலும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். துறையில் பொருட்படுத்தத் தக்கவர்கள் முகநூலில் வெட்டிவேலை செய்வதில்லை. இவர்களின் தாழ்வுணர்ச்சியும் அதன் விளைவான அசட்டு ஆணவமுமே இப்படி எதிர்வினைகளை உருவாக்குகிறது. அவர்களை நானல்ல, எவரும் பொருட்படுத்தமுடியாது.
இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன். நான் எழுதிய ஒரு நக்சலைட் கதையில் நக்சலைட்டின் பெயர் கோனார் என்று இருக்கிறது. ஓர் அரைவேக்காடு ‘எந்த நக்சலைட்டுக்கு கோனார் என்று பெயர் இருக்கும்? அவர்கள் புரட்சிப்பெயர்கள் தான் வைத்துக்கொள்வார்கள். அவர்கள் சாதிகடந்தவர்கள்’ என பத்துபக்க கட்டுரை எழுதியிருக்கிறது.
இடதுசாரி இயக்கங்களில் சாதாரணமாக மூன்றுபெயர் இருக்கும். அவர்களின் இயக்கத்துக்காக வைத்திருக்கும் பெயர் ஒன்று. அது பெரும்பாலும் பாவெல், நிகிதா போன்று ஏதாவது புனைபெயராக இருக்கும். அவருடைய அசல்பெயர் அரிதாகவே பேசப்படும்.
மூன்றாவது, சம்பந்தப்பட்டவரின் தலைமறைவுப்பெயர். அது எவரும் அடையாளம் காணமுடியாத இயல்பான பெயராகவே இருக்கும். அதைத்தான் பெரும்பாலும் போலீஸ் அவர் பெயராகக் கொண்டிருக்கும்.
உண்மையில் கோனார் என்றபெயரிலேயே ஒரு நக்சலைட் தலைவர் அறியப்பட்டிருந்தார். அவர் சாதியால் கோனார் அல்ல, அது அவருடைய தலைமறைவுப்பெயர். அவர் தலைமறைவாக இருந்த இடம் கோனார்கள் வாழும் இடம். ஒரு புரட்சிக்காரர் தலைமறைவு வாழ்க்கையில் புரட்சிப்பெயருடன்தான் வாழ்வார் என வாதிடும் ஒருவரிடம் என்ன பேசமுடியும்?
ஒருவர் கொஞ்சம பயிற்சி அறிவு குறைவானவர், கொஞ்சம் பாமரத்தனமானவர் அல்லது எளியவர் என்று காட்ட ஒரு பிழையான தகவலை அவர் சொல்வதுபோல எழுதுகிறோம். உடனே ஆசிரியரின் அறிவுக்குறைவை அது காட்டுகிறது என ஒருவர் கிளம்பினால் என்ன செய்யமுடியும்?
இத்தனை விளக்கத்தையும் நான் அந்த அரைவேக்காட்டுக்கு நான் அளிக்கிறேன் என்று கொள்வோம். ஏற்றுக்கொள்வாரா என்ன? ஈகோ சீண்டப்பட்டு இன்னொன்றை தொடங்குவார். அது இன்னொரு வெட்டிவேலை.
சமீபத்தில் ஓஷோ உரையில் ஓஷோவின் மேல் இளைஞர்களுக்கு ஆர்வம் வருவதற்கான காரணங்களில் ஒன்று அவர் ஒருவகையான ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்று சொன்னேன். அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் அல்ல, கல்லூரி ஆசிரியர், இதுகூட தெரியாதா நாயே என்ற வகையில் ஏகப்பட்ட கடிதங்கள். என்ன சொல்ல?
ஆகவே, என் கதைகளில் தவறுகள் மெய்யாகவே சுட்டிக்காட்டப்படும் என்றால் நானே அதை குறிப்பிட்டு அப்பிழையை திருத்திக்கொள்வேன். அப்படி நான் வெளிப்படையாகச் சொல்லித் திருத்திக்கொள்ளாவிட்டால் அது பிழையெல்லாம் ஒன்றும் அல்ல, சுட்டிக்காட்டுபவரின் அறியாமையின் வெளிப்பாடாக மட்டுமே அதை கொள்கிறேன் என்று பொருள்.
அப்படி சமீபத்தில் பொருட்படுத்தும்படி எந்தப்பிழையும் சுட்டிக்காட்டப்படவில்லை.
ஜெ
ஓஷோ- கடிதங்கள்
அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு, வணக்கம்.
மீண்டும் ஒருமுறை என்னை மிகக்கடுமையாக உழைக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் படைப்புகள் மட்டுமல்ல, உங்கள் பேச்சும்கூட மாபெரும் உழைப்பை கேட்கிறது ஜெ. வெறுமனே உங்களுடன் உரையாடுவது சாத்தியமல்ல என்று உங்கள் ஓஷோ – மரபும் மீறலும் உரைக்குப் பின் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டேன். என்ன ஒரு உரை! இதுவரை நான் கேட்ட உரைகளிலிருந்து இந்த உரை எப்படி மாறுபடுகிறது என்று ஒரு வரியில் சொல்லப்போனால், இந்த உரை உழைப்பைக் கேட்கிறது, மற்றவை (மணல் படிந்த) கைகளைத்தட்டிவிட்டு எழுந்து வெளிவர மட்டுமே செய்தன.
முதலில் நன்றிக்குரியவர்களாக நான் நினைப்பது, அங்கு குழுமியிருந்த மக்களைத்தான். செல்பேசி மிகக்குறைந்த அளவு (மிக மிக மிகச் சில மட்டுமே) தொல்லையளித்த ஒரு திரள் என்றால் அது என் அனுபவத்தில் இதுதான். கிட்டத்தட்ட இரண்டேகால் மணிநேரம் தொடர்ந்து மூன்றுநாள் என்றால், அது நிச்சயம் அதிசயம்தான். கட்டுக்கோப்பான, அல்லவை மறந்து உரை கேட்க மட்டுமே வந்த சிறப்பான மனிதர்கள் என்னோடு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள். (முதலிடம் உங்கள் வரலாறு, பண்பாடு மற்றும் நாம் எனும் கற்பனை உரைக்கு வந்தவர்களுக்குத்தான்.)
இரண்டாவது நன்றி உரையின் இடையில் பாடிய நண்பர் ஜான் சுந்தருக்கு. தத்துவ உரையின் மனநிலை கலையாத, குறைந்த வசதிகளுடன் வழங்கப்பட்ட இனிய இசை. மூன்றாவதும் மற்றும் தலையாயதுமான நன்றி, பிசிறில்லாத மேடை ஒலி மற்றும் ஒளி அமைப்பிற்கும், அதில் இருந்த நிழற்படங்களின் தேர்விற்க்கும். ஓஷோ எங்களைப்பார்க்க, நீங்கள் ஓஷோவையும், எங்களையும் பார்க்கும் கோணத்தில் அமைந்திருந்ததாக நான் உணர்ந்தேன் – மூன்று இடங்கள் மூன்று பார்வைகள். உரைகேட்கும் மனநிலையை பெருக்கி அளித்தது மேடை அமைப்பு. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபருக்கும், இந்த உரையை ஏற்பாடு செய்ததில் பங்குள்ள அனைவருக்கும் மனமார்ந்த சிறப்பு நன்றிகள்.
“மறுக்கத்தான் போகிறேன், மறுப்பதற்குமுன் எப்படி மறுப்பது என்று சொல்லத்தான், இத்தனை தூரம் வருகிறேன்” – என்று நீங்கள் மூன்று மணிநேரத்திற்குப் பிறகு சொன்னதுதான் Classic ஜெ. இதுவரை நான் பழகியிருந்த அத்தனை உரையாடல்களிலும், விவாதங்களிலும் இருந்த குறைபாடு என்ன என்பதை புரிந்துகொண்ட ஒரு தருணம் அது. பரபக்கத்தை பேசாமல், விளக்காமல், தொகுக்காமல் சுபக்கத்தைப்பேசி பயனில்லை என்பது. சுபக்கத்தைப்பேசிய பின்பு அங்கேயே முடிந்துவிடாமல் அதன் நீட்சியாக சிந்தனை முன்செல்ல வழிவகுக்கும் நான் கேட்ட முதல் உரைவடிவம் இதுதான். அதற்காகவே உங்களை இறுக கட்டி அணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஓஷோ விரும்பிகள், மறுப்பாளர்கள், ஓஷோ என்றாலே அலறி ஓலமிடுபவர்கள், அவர் யாரென்றே தெரியாதவர்கள், அவரை என்ன செய்வதென்று தெரியாமல் புலிவால் பிடித்தவர்கள், அவரை உடைத்துப்போட்டுவிட்டு உடைந்துபோனவர்கள் என அனைவருக்குமான உரையாக கட்டமைக்கப்பட்டிருந்தது உங்கள் உரை. மேற்சொல்லப்பட்ட அனைவருக்கும் புகழ், ஓஷோயிஸ்டுகள், கொடை, காலகட்டம், புராண மயமாக்கம், மரபில் இடம் (ஓஷோ ஒத்துவருபவை, சீறிச்சினப்பவை), தொகுப்பு, தியானமுறை-அவற்றிற்கான மூலம் என மிகச் சிக்கலான ஓஷோவின் உலகத்தை படிநிலைகளாக, காலகட்டங்களாக நீங்கள் பிரித்த விதம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
நான் கல்லூரிக்குள் நுழைந்த புதிதில் ஒரு சிறிய புத்தகக்கடையின் புத்தக அடுக்கிலிருந்து எனக்கு ஓஷோ அறிமுகமானார். ஊழ் என்றுதான் சொல்லவேண்டும். நானே பிடித்த புலிவால் அது. அன்பு..அன்பு..அன்போ அன்பு…அந்த புத்தகம் முழுதும் இருந்தது அதுதான்(அன்பின் இருப்பிடம் என்று நினைக்கிறேன்). பிடித்தது பித்து…ஓஷோதாசன். அப்படியே அன்பு காதலாகி பின்பு காமத்தில் தவறில்லை என்று பயணித்து, இறுதியில் “எதுவுமே தவறில்லை ஏனென்றால் எல்லோருமே வெறும் நடிகர்கள்..அதிலும் இந்த வாத்தியார்கள், சாமியார்கள், ஃபாதர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்களே….கொல்லனும் அவனுகள.…”என்பதுபோல…இப்படியாக அர்த்தமற்ற, சாரமற்ற ஒரு உலகில் போய் முடிந்தது.
என்னதான் மிச்சம் என்று பார்த்தால், எதுவுமே இல்லை. அன்றன்றைக்கு வாழ்வது, இலக்கில்லாமல் இருப்பது, ஞானத்திற்க்கான பாதையில் முன்னே செல்வதான கற்பனை! ஐந்து வருடங்கள் கழித்து முற்றிலுமாக ஓஷோவைவிட்டு வெளியேவந்தேன். எளிமையான காரணங்கள்தான், போதிதர்மர் கிழக்கிலிருந்து சீனாவிற்க்கு வந்ததாக ஓர் உரையில் அவர் குறிப்பிட்டது, தண்ணீரும் எண்ணெய்யும் இருக்கும் குப்பிக்குள் குண்டூசியைப் போட்டால் மிதக்கும் என அவர் கூறி அந்த குண்டூசியை பார்வையால் நகர்த்தும் அளவு தியான ஆற்றல் பெற்றால், பொருளாக்குதலில் வெற்றிபெற முடியும் என கூறியதை நம்ம்ம்பி முயன்று பின் தோற்றது, எய்ட்சுக்கு கைகளை கிருமினாசினி கொண்டு சுத்தம் செய்தால் பெரும்பாலும் போதுமானது என கொரோனாவே அடங்காத வெற்று முறைகளை பரிந்துரைத்தது போன்ற சில(மேலும் பல உண்டு).
ஆனாலும் தவறு என் பக்கம்தான் இருக்கும் என்றெண்ணி உலகப்படத்தை திருப்பித் திருப்பி வைத்து, இறுதியில் உலகம் உருண்டை எனவே போதிதர்மர் பாகிஸ்தான், ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா,ரஷ்யா வழியாக கிழக்கிலிருந்து சீனா வந்தார் என கண்டறிந்தது, வேறு ஏதாவது எண்ணெய்யில் குண்டூசி மிதக்கும் போல என அந்த எண்ணெயை கண்டறிய முயற்சித்தது, எய்ட்ஸ் வந்தால் பாத்துக்கலாம் என புறம்காட்டியது என வாழக்கற்றுக்கொண்டேன். “ஓஷோ எப்படிங்க தவறா சொல்ல முடியும், ஏதாவது உள் அர்த்தம் இருக்குங்க….”என்று மனதை தேற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், எந்தப்புத்தகத்தில் இவையெல்லாம் இருந்தனவோ அவற்றை மறைத்தும் வத்தேன்.
ஓஷோ யார்தெரியுமா? ஞானி…பார்வையிட வந்தவர்…நீங்கள் நிறையப்படிக்கவேண்டும் என்றெல்லாம் உங்களுக்கு வந்த அந்த கடிதத்தைப்போலவே பேசிக்கொண்டிருந்த எனக்கு ஓஷோ இன்னும் நிறையப் படித்திருக்க வேண்டுமோ என்ற அபத்தமான சந்தேகங்கள் எல்லாம் ஏற்பட்ட காலம். அவர் புத்தகங்களின் முன்னும் பின்னும் அவரக்குறித்த கவித்துவமான வாசகங்களையும், அவர்குறித்த The Ultimate Guru, புத்தர் மைத்ரேய அவதாரமாகி வந்தவர் என்ற பரப்புரைகளையும் கேட்டு நம்பி மட்டையடி அடித்துக்கொண்டிருந்த எனக்கு வாழைமட்டையால் விளாசியதுபோல உணர்வெழுச்சிமேலிட்ட காலம்.
இறுதியாக பிடித்த புலிவாலை விட ஒருவழி கண்டுபிடித்தேன்…ஓஷோ பற்றிய குற்றச்சாட்டுகளை தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் கவர்ந்த குற்றச்சாட்டுகள் என்றால், வழக்கமான சைஸிலிருந்து பெரிதாக இருக்கக்கூடிய அவரது தலைதான் அவரது இந்தமாதிரியான குறுக்குச் சிந்தனைகளுக்குக்கு காரணம் என அவரது வழுக்கை தலையின் பிரம்மாண்டத்தை காட்டிய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை…ஆசுவாசத்தைவிட “என்னது ஓஷோவுக்கு தலையில முடி இல்லயா?! அடப்பாவிங்களா இன்னும் என்னென்னத்தடா மறச்சிவெச்சிருக்கிறீங்க…?” என வீறிடவைத்தது. பலப்பல செய்திகள் ஓஷோதாசனான என்னை கதறவும் பதறவும் வைத்தது. இறுதியாக Stripping The Guru’s என்ற ஒரு புத்தகம் படிக்கும்போது சிரிப்புத்தான் வந்தது. அதற்குப்பின்பு இன்றுவரை ஓஷோவைத் தொட்டதில்லை. சுபம்.
எழுதியவர்கள் யார்? உண்மைத்தன்மை எவ்வளவு? விபரங்கள் சரியா என எதையுமே சரி பார்க்கத்தெரியாத, ஒரு முதிர்சியற்ற இளம் வயது. ஆனால் பிரச்சினை வர ஆரம்பித்தது அதற்குப் பின்னர்தான். ஓஷோவை நான் முழுமையாக உடைத்துப்போட்டிருந்தேன். அதற்குப்பின்பு ஓஷோ என்னை உடைத்துப்போட்டிருப்பதை கண்டுகொண்டேன்.
ஓஷோ படிக்கும்வரை கிறிஸ்தவத்தைத்தவிர எந்த மதமும் அறியாத அல்லது அறிந்துகொள்ளத் தேவையற்ற உன்னத சமயத்தைச் சேர்ந்த எனக்கு, இந்து முஸ்லிம் தாண்டி மேலும் பல மதங்கள் இருப்பதையும், அவற்றின் உன்னதங்களையும், கவித்துவத்தையும் அவர் என்னுள் புகுத்தியிருந்தார். உலக இலக்கியம் என நான் இன்று அறிந்துகொண்டிருக்கிற பல படைப்பாளிகளை, (அன்று பெயர்களை மட்டும்… பெயர் மட்டும் தெரிந்திருப்பதே போதுமே இங்கே மட்டை சுழற்றுவதற்கு) அவர்தான் தொட்டுக்காட்டியிருந்தார்.. அனைத்திற்கும் மேலாக ‘கரடிக்குப்போட்ட’ கயிற்றிலிருந்தும் விடுதலை அளித்திருந்தார்.
இந்து மதத்தில் உள்ள பிரிவுகளையும், தந்திர யோக முறைகளையும் அவர்வழியாகத்தான் நான் அறிந்துகொண்டிருந்தேன். இவையெதுவும் இல்லாத மதத்திலிருந்து வந்த எனக்கு, இவற்றின் இருப்பையும், சிறப்பையும் மறுக்க இயலாதபடியான வாதங்களையும் விட்டுச்சென்றிருந்தார். ஓஷோவை புகழ்பவர்களிடம்..”அடப்போங்க அது ஒரு கிறுக்கு” எனவும் இகழ்பவர்களிடம்.. “நீதாய்யா கிறுக்கு” என புரட்டவும் அவர்வழி பயிற்சியளிக்கப்பட்டிருந்தேன். இந்த இருமைத் தன்மை – அவரை சரியான இடத்தில் பொருத்தமுடியாத தவிப்பு, அவரை அவர்மேல் ஏற்றிவைக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து பிரித்துப்பார்க்க சரியான வழிமுறைகள், கருவிகள் என ஏதுமற்றநிலை, அவரை முழுக்க மறுக்கவும் இயலாத தர்க்கத்தின் போதாமை என அவரை உடைத்துப்போட்டதால் உடைந்து போன ஆட்களில் நானும் ஒருவன். கொடையளித்தவரையே கொல்ல நேர்ந்த ஒருவன்!
உங்கள் உரை எனக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நான் இனி சொல்லவேண்டியதில்லை அல்லவா! பதறிக்கொண்டே இருந்தேன். நீங்கள் “மறுக்கத்தான் போகிறேன், மறுப்பதற்குமுன் எப்படி மறுப்பது என்று சொல்லத்தான், இத்தனை தூரம் வருகிறேன்” – என்று சொல்லும்வரை. காலத்தன்மையை விடுத்து காலாதீதத்தன்மையை முன்னிறுத்துதல் ஓஷோவுக்கும் எனக்குமான இணைவை மீண்டும் புதுப்பிக்கிறது ஜெ. உரைகள் மற்றும் நூல்களுக்கிடையேயான வேறுபாடு அதை நீங்கள் ஊசலாட்டம், கூறியது கூறல், தயாரிப்பின்மை வழி விளக்கியது ஒரு புதிய சாத்தியத்தை எனக்கு கொடுக்கிறது.
அதற்கும் மேல் தத்துவம், ஞானம், இலக்கியம் ஆகியவற்றிற்கிடையேயான ஒற்றுமை மற்றும் அவற்றிலிருந்து ஒழுக்கம் இருக்கும் தொலைவு குறித்த புரிதலை இப்போதுதான் நான் தொடுகிறேன். உங்கள் உரை தொட்டுச்சென்ற பல துறைகள் இதுவரை நான் தொடத் தயங்கிநின்ற துறைகள்தான். போதுமான அடிப்படை அறிவு இல்லை என்பதாலும் அவற்றைப்புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப்பட்டதாலும் தள்ளியே நின்றுகொண்டிருந்தேன். தத்துவக் கல்வியின் தேவை உங்கள் உரையின் வடிவத்தைப்பார்க்கும்போதே அவசியம் என எண்ணவைக்கிறது. யோகம் குறித்த எனது புரிதலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். புராண இயந்திரம் தந்தையரைக்கூட விட்டுவைப்பதில்லை என்பது எனக்கு மாபெரும் அதிர்ச்சியைத்தான் அளித்தது, அது உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். என்னளவில் மாற்று ஆன்மீகத்திற்கான தேடல் என்பதன் வரலாற்றுப் பிண்ணனியையும், அதன்வழி இந்திய ஆன்மீக வழிகளுக்கிடையேயான ஒத்திசைவையும், முரண்களையும் சட்டகமாக முன்வைத்திருக்கும் அற்புதத்தை உங்கள் உரை நிகழ்த்தியிருக்கிறது.
சிந்தனை என்னும் மாபெரும் Lego விளையாட்டின் வாசலை ஒரு புதிய கோணத்தில் திறந்து வைத்தமைக்கு நன்றி.
அன்புடன்,
பிரபு செல்வநாயகம்.
அன்புள்ள ஜெ
ஓஷோ உரை கேட்டேன். எனக்கு அந்த உரை ஒரு பெரிய தொடக்கம். என் முதல் எண்ணம் இந்த அளவுக்கு வரலாற்றில் பொருத்தியும், தத்துவரீதியாக கூறுபோட்டும் பார்க்கவேண்டுமா என்பதுதான். ஆனால் அந்த சந்தேகம் தீர்ந்தது அந்த உரை யுடூயுபில் ஏற்றப்பட்டபோது கீழே இருந்த பின்னூட்டங்களால்தான். பெரிய புரிதலை அளிக்கக்கூடியவை அந்த பின்னூட்டங்கள்.
ஒன்று, பெரும்பாலானவர்கள் ஓஷோ பெரிய ஞானி, அவரைப்பேச உனக்கென்ன தகுதி என்று எழுதியிருந்தனர். ஓஷோ சொன்னதற்கும் அந்த மனநிலைக்கும் நேர் எதிர்த்திசைகள் இல்லையா? அவரை இவர்கள் இன்னொரு மதநிறுவனராக ஆக்கி மூர்க்கமாக வழிபடுகிறார்கள்.
இரண்டு, அப்படி எழுதியிருப்பவர்களில் பலர் தாங்கள் அந்த மெய்ஞானத்தை அறிந்துவிட்ட இன்னொருவகை ஓஷோக்கள் என்று நம்பி எழுதியிருக்கிறார்கள். அந்த அபத்தமான ஆணவம் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.
மூன்று, அங்கே எழுதியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கோர்வையாக எழுத தெரியவில்லை. சிந்திக்கும்பயிற்சி இருப்பவனுக்கு மொழி முதிர்ச்சி அடைந்திருக்கும். அங்கிருக்கும் கீழ்த்தர வசைகளைக் கண்டால் இவர்களையா ஓஷோ உருவாக்கினார் என்ற திகைப்பு ஏற்படுகிறது.
இவர்களில் ஒருவராக ஆகாமலிருக்கத்தான் இத்தனை சிந்தனையும் தேவையாகிறது. இந்தியாவின், உலகின் ஆன்மிக மரபில் ஓஷோ எங்கே இருக்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எதை அவர் எடுத்தார், எதை கடந்தார், எங்கே நிற்கிறார் என்று தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
என்.கிருஷ்ணன்
அறமென்ப, திரை – கடிதங்கள்
அன்புநிறை ஜெ,
இன்றைய ‘திரை’ கதை சற்று அமைதியின்மையை ஏற்படுத்தியது.
வரலாற்றின் மடிப்புகளில் இருந்து விரிந்தெழும் கதை. அன்றைய வழக்கத்திலிருந்த எத்தனை விதமான அரசாங்கப் பதவிகள் காறுபாறு, ராயசம், சம்பிரதி, தளவாய் என. காலத்தில் நின்றவையும், உதிர்ந்தவையுமாய் எத்தனயோ வரலாற்றுப் பெயர்கள், மனிதர்கள், சம்பவங்கள், போர்கள். அன்றைய மொழி, விளிகள், வாழ்த்துக்கள் என அந்த காலகட்டம் கண் முன் விரிகிறது. ஒல்லாந்தன் அல்லது லந்தக்காரர்கள் என்பது (டச்சுக்கார்கள்) ஹாலந்துக்காரர்கள் என்பதன் பேச்சுவழக்கென நினைக்கிறேன்.
வரலாற்றின் அத்தனை சூறாவளிக்கு இடையே துடிதுடிக்கும் சுடரென ராணி மீனாட்சியின் மனமும் உணர்வுகளும். மகாராணியாக இருந்தாலும் பெண்ணென இறைஞ்சி நிற்கும் அபலை. யாரிடமும் எதையும் பெறத் தேவையற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்கு எதையும் தருவேன் எனக் காத்திருக்கும் அப்பாவிப் பெண். அவரது முடிவு என்னவாயிருக்கும் எனத் தெரிந்தாலும் அவளுக்காக அவளது பிரேமைக்காக, பேதைமைக்காக கண்ணீர் துளிர்த்தது. யாரும் அறியாது மனதில் வைத்து பூசை செய்தால் போதுமென்றால் அதற்கு ராமநாதபுரமோ சிராப்பள்ளியோ ஒரே தொலைவுதான். அது மாயத்திரை கொடுக்கும் மயக்கு. இச்சொற்களை இறுதி வரை அவள் சொல்லாதிருந்தால் அப்போதும் அவள் மனதில் பிரேமை இருந்திருக்கும்தானே. எது அவளை வேறொரு மானுடன் அறிய அதைச் சொல்ல வைக்கிறது என எண்ணிக் கொண்டேன். மறுமொழி வராத தூது ஒன்றின் உறுபயன் என்ன, நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் எனும் நிறைவா? எண்ணப்பட்டு சொல்லாக வெளிப்படாத ஒன்று இன்னும் எடை கொண்டு அழுத்தும் என்பதால் தாங்காது இறக்கி வைத்துவிட்டாள் என எண்ணுகிறேன். பெருமூச்சு வருகிறது.
இதைத் தவிரவும் இன்றைய கதையில் தனிப்பட்ட முறையில் பல நினைவுகள் எழுந்து வந்தன. ராமநாதபுரத்தில் நான் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் குடியிருந்த வெளிப்பட்டிணத்தில் இருந்து மிக அருகேதான் லட்சுமிபுரத்தில தாயுமானவர் சமாதி அமைந்திருந்த தபோவனம் இருந்தது. பல நாட்கள் மாலை நடையில் தாத்தாவுடன் சென்று அமர்ந்திருக்கும் இடம் அது. தாயுமானவரின் பல பாடல்கள் அங்குதான் அறிமுகமாயிற்று. அனைவரும் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்க அங்கிருக்கும் கரிய மெலிந்த தாயுமானவர் உருவச் சிலையை பலநாட்கள் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். ஏனோ அவர் அப்படி அமர்ந்திருப்பதைப் பார்ப்பதற்கு மனதுக்கு மிக உருக்கமாக இருக்கும். பல நாட்கள் நானும் தாத்தாவுடன் வந்து அவ்விதம் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஒரு முதியவர் என்னிடம் ஏதேனும் தாயுமானவர் பாடல் பாடு என்றார். அன்றுதான் பள்ளியில் ‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்’ நடத்தியிருந்தார்கள். அப்போது நான் படித்த சையது அம்மாள் பள்ளியில் வகுப்புக்கு நூறு மாணவர்கள், பெருங்கூட்டம், ஆசிரியர் நடத்துவது காதில் கூட சரியாக விழாது. ஒரே ஒரு முறை வாசித்து விட்டு அருஞ்சொற்பொருள் விளக்கம் எழுதிப்போடுவார் ஆசிரியர், அவ்வளவே தமிழ்ப்பாடம். அந்த பெரியவர் கேட்டதும் ஏதோ உந்துதலில் ‘அங்கிங்கெனாதபடி’ எனத் துவங்கிவிட்டேன். முழுப் பாடலும் நினைவிலிருந்தது, சொல்லிவிட்டேன். எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது, அதன் பிறகு அந்தப் பாடல் மட்டும் இன்று வரை மறக்கவேயில்லை. அப்பாடல் அந்த கருணை கொண்ட தாயுமானவர் முகத்தோடு இணைந்து மட்டுமே இப்போதும் மனதில் இருக்கிறது.
இன்றைய கதையில் மீனாட்சியின் செய்தி கேட்டு கண்களில் ஒரு கணம் நீரோட்டத்தோடு அந்த ஏழை மகாராணிமீது பரிவோடு நின்ற தாயுமானவரை எனக்கு நேரில் பிரத்யட்சமாகப் பார்த்தது போன்றே இருந்தது.
அங்கு முனகுவது போன்ற குரலில் ஒருவர் அடிக்கடி பாடும் “வரைராசனுக்கு இருகண்மணியாய் உதித்தமலைவளர் காதலிப் பெண் உமையே” என்று ஈற்றடிகள் கொண்டு முடியும் பாடலும் மனதில் ஒலிக்கிறது. அதில் அம்மையை தாயுமானவர் ‘சுதந்தரி’ எனப் பாடியிருப்பார். “பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி”. அவ்வரிகள் மந்திர உச்சாடனம் போல பெரும் உச்சத்தைக் கொடுக்கும் வரிகளாயிருந்தன. இன்று வாசித்ததும் ராணி மீனாட்சிக்கு சுதந்தரியாய் இருக்க நேரவில்லை என எண்ணிக் கொண்டேன்.
உத்தரகோசமங்கை கோவிலில் எனது முன்னோர்களில் ஒருவர் சமாதி அடைந்திருக்கிறார். அவர் அடங்கிய குறிப்பு கொண்ட இடமும் இருக்கிறது. ஆருத்திரா தரிசனத்தின் போது மட்டுமே கூட்டமிருக்கும்; பிற நாட்களில் அப்பெரும் கோவிலில் ஆட்களே இன்றி காற்றில் சருகுகள் ஓட அந்த மாபெரும் குளக்கரையில் அமர்ந்திருந்த நாட்களும் உண்டு. மேலும் ஒரு தனிப்பட்ட கண்ணி, சந்தா சாகிபிடம் பங்காரு திருமலை போரிட்டு தோற்கும் அம்மையநாயக்கனூர்தான் எனது சொந்த ஊர். இன்றைய கதையை வாசித்ததும் அனைத்து நினைவுகளும் கிளர்ந்தெழுந்து வந்தன.
பல கண்ணிகளில் சிக்க வைத்தது இக்கதை.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள ஜெ
திரை அறியப்பட்ட இரு வரலாற்றுத் தொன்மங்களுக்கு திரை என்ற சொல் வழியாக ஒரு நீண்ட தொடர்ச்சியைப் புனைந்து உருவாக்குகிறது. உண்மையில் ராணி மீனாட்சியின் கடைசிக்காலம் கொந்தளிப்பானது. அவருடைய சாவும் பரிதாபகரமானது. அந்தச் சாவின் மூலமே அவர் வரலாற்றில் இடம்பெற்றார். அவரை எப்படி வேண்டுமென்றாலும் பார்க்கலாம். அரசை கைவிட மறுத்த பிடிவாதக்காரர், தாயுமானவரை துரத்திய காமாந்தக்காரி என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இந்தக்கதை அவரை அபலையாகவும், தனிமைகொண்டவராகவும் காட்டுகிறது. எப்படியோ அவரை இப்படிப் பார்ப்பதே பிடித்திருக்கிறது. வரலாற்றின் கற்பாறைகளின் இடுக்கில் மலர்ந்த ஒரு மலர்
ராஜசேகர்
அறமென்ப… [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
‘அறமென்ப’பெரும்பாலானவர்கள் சந்தித்த ஒன்றின் கதை.விபத்தில் உதவுவதோ ஆபத்தில் உடனிருப்பதோ, கைகொடுப்பதோ ஏதேனும் செய்து பெரிய எதிர்பாரா கஷ்டங்களில் மாட்டிக்கொண்டதை குறித்து எல்லோருமே நினைத்துப் பார்த்துக் கொள்ளும் கதை. ‘வாயைமூடு’ என்று கடிந்து கொண்ட செல்வகுமார் பின்னர் பாமா எத்தனை சரியாக சொல்லுகிறாள் என்று நினைக்கிறான்.
என் அக்காவின் மாமியார் அடிக்கடி இதை சொல்லுவார்கள். “”யாருக்காவது பாவம்னு பார்த்தா அப்போவே நாம பாவமாயிருவோம்””என்று. ஒருக்கில் நான் இதற்கெதிராக ஏதோ சொல்லப்போக அவர் “நாம சாதாரணமாவே என்ன சொல்லறோம்? அவன் பாவம் நல்லவன்னுதானே? நல்லவனா இருக்கறதே பாவந்தான்.சும்மாவா இதெல்லாம்சொல்லிருக்கு” என்றார்கள். அமைதியாகிவிட்டேன்.
நன்றி
லோகமாதேவி
அன்புள்ள ஜெ
ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன் என் நெருக்கமான உறவினருக்கு நிகழ்ந்த அதே சம்பவம் அறமென்ப. மதுரை மேலூர் பக்கம் நடந்தது. இதில் அவர் லேசாக ஒரு வயோதிகரை முட்டிவிட்டார். அடியெல்லாம் பெரிதாக இல்லை. அடிபட்டவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அவர் மேல் கொலைமுயற்சி வரை புகார்கொடுத்தார்கள். அவர் பயந்துவிட்டார். அவர் பயப்படுகிறார் என்பதுதான் அவர்களின் பலமாக இருந்தது. பணமும் கொடுத்துவிட்டார். எதுவும் பதிவாகாமல் பார்க்கவேண்டும் என்று மட்டும்தான் அவர் நினைத்தார்.
ஆரம்பத்தில் இருந்தே நானும் கூட இருந்தேன். ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது. பிறகு வக்கீல்களிடம் பேசியபோது அது ஒரு வழக்கே இல்லை, ஆனதை பார் என்று சொல்லியிருந்தால் ஒன்றுமே செய்திருக்க முடியாது என்று தெரிந்தது. அந்த தருணத்தில் பயம்தான் வேலைசெய்கிறது. என் உறவினரின் அதீதபயம்தான் அவர்களின் பலமாக இருந்தது. இன்றைக்கு எனக்கே கேவலமாகத்தான் இருக்கிறது.
கதையில் பீட்டர் வந்ததுமே எல்லாம் சரியாக முடிகிறது. வழக்கு பதிவுசெய், பார்த்துக்கொள்கிறேன் என்று செல்வா சொல்லியிருந்தால் ஒரு பைசா செலவு இருந்திருக்காது. ஆனால் அதைச் சொல்ல செல்வா போன்றவர்களால் முடியாது. அதில்தான் சிக்கல்கள் உள்ளன. முதலில் இன்ஷூரன்ஸ் எகிறும். அது உண்மையிலேயே ஒரு பிரச்சினை. பல ஆண்டுகளாக கணக்கிட்டால் அதுவே நாலைந்து லட்சமாக ஆகிவிடும். அதற்கு வழக்கு பதிவாகாமல் இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே வழி. தொழில்செய்பவர்களுக்கு அதிலும் பல சிக்கல்கள் உள்ளன. அதன்பின் தேவையில்லாமல் சிக்கல்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது.
இந்தக்கதையில் வரும் இரண்டு தரப்புகள்தான் முக்கியமானவர்கள். ஒன்று வக்கீல்கள். இதேபோல மிரட்டுவதற்காகவே கறுப்பு கோட் போட்டுக்கொண்டு வருவார்கள். இதேபோல இரண்டுபேர், ஒருவர் கறுப்பு கோட்டு போட்டிருப்பார். இன்னொருவர் சாதாரணமாக வருவார். அவரைக் காட்டி இவர் பயமுறுத்துவார். கூடவே சமாதானம் செய்ய முயல்பவர்போல நடிப்பார். பத்துலட்சம் இருபது லட்சத்தில் ஆரம்பிப்பார்கள். ஐம்பதாயிரம் இருபதாயிரத்தில் முடிப்பார்கள். இவர்கள் பணத்தில் விளையாடுபவர்கள். அடிபட்டதுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் கைப்பணத்தை கொடுப்பார்கள். அதுதான் இவர்களின் துருப்புச்சீட்டு. இன்னொருவர் அந்தச் சொந்தக்காரர். அவர்தான் உண்மையில் பிரச்சினை செய்பவர். எங்கள் கேஸில் நான்குபேர். நான்குபேருக்குமே ஆளுக்கு பத்தாயிரம் கொடுக்க நேர்ந்தது.
இந்தக்கதையிலுள்ளதுபோல டாக்டர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். என்ன பேசினாலும் போலீஸ் ஸ்டேஷனில் பேசிக்கொள், அவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம் என்றுதான் சொல்வார்கள். ரிப்போர்ட் எழுதாமல் ரிஜிஸ்டர் கூட எழுதாமல் வைத்திருப்பதே போலீஸ் சொன்னதுபோல பிறகு எழுதிக்கொள்வதற்காத்தான்.
கதையில் சொல்லப்படுவதுபோல இன்றைக்கு தனியார் மருத்துவமனைகள் விபத்துக்களில் சிக்கியவர்களை தவிர்ப்பதில்லை. அதில் பெரும்பணம் பார்க்கிறார்கள். ஆனால் அதுகூட ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே. பலர் மருத்துவமனைகள் சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. அது அவர்களுக்கு போலீஸிடம் இருக்கும் ராப்போர்ட் என்ன என்பதைப் பொறுத்தது.
அறமென்ப ஒரு அப்பட்டமான யதார்த்தம். எல்லா பிராக்டீஸிங் வக்கீலுக்கும் தெரிந்ததுதான். எது எழுத்திலிருக்கிறதோ அதைச் சொல்வது அல்ல கதை. எது உண்மையில் நடக்கிறதோ அதுதான் கதை. ஒரு டாக்டர் வந்து அப்படியெல்லாம் ரிஜிஸ்டரில் எழுதாமலிருக்க மாட்டார்கள் என்று வாதிட்டால் நாம் மறுக்கமுடியாது. ஆனால் அப்படித்தான் நடக்கிறது இங்கே.
ஆனால் அந்தக்கதை அந்த அப்பட்டத்தைச் சொல்லவில்லை. பார் ஏழை எப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லவில்லை. இந்தப்பக்கம் இவர்களும் ஒரு ஃபிராடுதான் செய்கிறார்கள். சிவா ரிலீவ் ஆகி புன்னகைக்கும் இடம் என்ன, ஏன் என்பதுதான் கதை. அதை உணரமுடிபவர்களுக்குத்தான் அந்தக்கதை இலக்கியமாகிறது
ஆனந்த்குமார்
நகை, சிற்றெறும்பு- கடிதங்கள்
வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
மயிரிழை மீது நடந்து நெருப்பாற்றை கடந்து இருக்கிறீர்கள். கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தே நாளை குறித்து இன்றில் எழுதப்பட்ட கதை. இதற்குத்தான் இங்கே ஜெயமோகன்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்தக் கதை ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டால் அது புஸ்வானமாய் போன ஊசிப் பட்டாசு. பழைய பஞ்சாங்கம் என வசைபாட பட்டிருக்கக் கூடும். இன்னுமொரு புதிய பெயரையும் உங்களுக்கு தந்திருப்பார்கள்.
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக இப்படி ஒரு கதையை முதன்மைப் படைப்பாளி எவரேனும் எழுதி இருந்தால் கண்டிப்பாக வதைபட்டு இருப்பார். அல்லது குறைந்தபட்சம் கேவலப்படுத்த பட்டிருப்பார். பெண்ணியவாதிகளால் அவருடைய உருவ பொம்மை கொளுத்தப்பட்டு இருக்கும்.
ஒரு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக கூட பல நண்பர்கள் என்னிடம் வந்து ,”நான் போர்னோகிராபிக்கு அடிமையாக இருக்கிறேன்”, “எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது அதிலிருந்து விடுபடுவது எப்படி?”, என்று ஆலோசனை கேட்டு விடுபட முயன்று இருக்கிறார்கள்.
இன்று ஒருவர் கூட என்னிடம், “நான் போர்னோகிராபிக்கு அடிமையாக இருக்கிறேன் அதிலிருந்து விடுபடவேண்டும்” என்று கேட்பதே இல்லை.
நீங்களே கதையில் குறிப்பிட்டதுபோல போர்னோகிராபி என்பது இன்று இயல்பு வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டிருக்கிறது. நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள் இன்று வருகின்ற மேலை காட்சித்தொடர்கள் அத்தனையும் அதன் ஒரு அங்கமாக பாலுறவு காட்சிகளை அப்பட்டமாக கொண்டிருப்பதாக. மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.ஒட்டுமொத்த சமூகம் எதை விரும்புகிறதோ அதை நோக்கியே எப்பொழுதும் அது நகரும். யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
இந்தக் கதையில் நான் முக்கியமாக கூற விரும்புவது ஒன்றுதான். ஒரு பெண் தன்னை தானே காட்சிப் பொருளாக்கி விற்க விரும்பினால் அதற்கு அவளுக்கு முழு சுதந்திரமும் உள்ளது. அதை அவள் செய்யலாம் அதில் ஒரு குற்றமும் இல்லை. ஒரு எல்லைக்கு மேல் எந்த மதமும் அரசும் சமூக அமைப்பும் இதில் தலையிட முடியாது. அப்படியே தலையிட்டாலும் அதையும் மீறி திருட்டுத்தனமாக இது நடந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் ஆன நியதி இதுதான்.
ஆனால் எதன் பொருட்டேனும் இன்றும் என்றும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதையும், கட்டாயத்தின் பேரில் அவள் உடலுறவுக் காட்சியில் நிர்வாண காட்சியில் நடிக்க நிர்ப்பந்திக்கப் படுவதையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவர் படம் பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதையும் ஏற்க முடியாது.
இதை நாம் ஏற்காவிட்டாலும் கூட ஒரு குற்றமாக இன்றளவும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது இதனால் பெண்கள் பெருமளவில் இன்றைக்கும் பாதிப்பிற்கு உள்ளாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு பாதிப்பு நம் மகளுக்கோ மனைவிக்கோ சகோதரிக்கோ அன்னைக்கோ ஏற்படுவதை நம்மால் சுலபமாக இன்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் நம் அன்னையிடம் அல்லது மகளிடம் போய் அவர்கள் ஒரு குறிப்பிட்ட போர்னோகிராபி நடிகையை போல் இருப்பதாக இன்றைக்கும் கூறமுடியாது.
இந்தக்கதையின் நாயகன் விஜய் செய்தது எப்படிப் பார்த்தாலும் கீழ்மை. அதனால்தான் அதை சொல்லும் பொழுது அவன் வாய் கோணி புன்னகையும் கோணல் ஆனது.
அந்த பிரபாவதி அத்தை அதை எதிர்கொண்ட விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது. இனி எதிர்காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் இது நேரலாம். கதை என்ற போதும் ஒரு முன்னுதாரணமான வலுவான பெண்ணை நீங்கள் கட்டமைத்து நாளைய பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து முன்னெழுதிச் செல்கிறீர்கள்.
நாளைய நம் பெண் குழந்தைகளுக்கு நாம் முக்கியமாக போடவேண்டிய நகை என்பது இந்த தைரியம் மற்றும் தன்னம்பிக்கை என்கின்ற விழுமியமே. நாளைய பெண்களுக்கு நீங்கள் அளித்த விழுமிய நகை ஆகவே இந்த நகை சிறுகதையை கொள்கிறேன்.
சில பல தேவையற்ற போர்ன் நடிகைகளின் பெயர்களை நீங்களே வலிந்து கதையில் குறிப்பிட்டதை தவிர்த்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் நஞ்சம் இருக்கின்ற ஒரு சில நல்ல பையன்களையும் நீங்களே ரூட்டு போட்டுக்கொடுத்து உள்ளே வரச்சொல்லி அழைப்பது போல் இருந்தது….. இது தேவையா என நிச்சயமாக எனக்கு தோன்றியது……ஒரு துறவியாக இதை நான்கூட சொல்லா விட்டால் வேறு யார் சொல்வார்கள்…. ஆகவே சொல்லிவிட்டேன். ஊதுற சங்கை ஊதி வைப்போம் என்று…..உங்களிடம் விவாதிக்கின்ற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது…..என்னால் இது குறித்து விரிவாக விவாதிக்கவும் முடியாது…. எனக்குத் தோன்றியது சொன்னேன் அவ்வளவுதான். மற்றபடி ஒரு புனைவை புரிந்து கொள்வதும் அதை சரியானபடி விரித்து எடுத்துக் கொள்வதும் அதில் ஒரு நிகர் வாழ்வு வாழ்ந்து தனக்கானதை தேடி நிறைவடைவதுவும் தன்னை தனது வாழ்வை மேலும் உன்னத படுத்திக் கொள்வதுவும் மட்டுமே இங்கு மிக முக்கியம். கோட்பாட்டு விவாதங்களோ சரி தவறு அரசியல்களோ முக்கியமே அல்ல. அதெல்லாம் சும்மா ஒரு பாவ்லா தான். உண்மை பயன் அவற்றால் ஒருபொழுதும் விளைவதில்லை. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல சமூகம் தனக்கு வேண்டியவற்றை எல்லா முனைகளிலிருந்தும் எடுத்துக் கொண்டு தன்னை எவ்வகையிலேனும் நிலைநிறுத்திக் கொள்ளும். எது அதற்குத் தேவையோ அதை நோக்கி முன்நகர்ந்து செல்லும்.
குறையும் நிறையும் நிறைந்தது தானே வாழ்க்கை. மேன்மையும் கீழ்மையும் கலந்தது தானே மானுடம். நல்லதையே பேசிக்கொண்டிருந்தால் போரடித்துப் போகுமென்று
கெட்டதையும் கீழ்மையும் கூட தொட்டுத்தொட்டு போகிறது உங்கள் பேனா. கீழ்மையை கெட்டதை சற்றே தொடுவது கூட எப்பொழுதும் நல்லதையும் மேன்மையையும் அடைவதற்காகவே எனும்பொழுது ஏற்கப்படுகிறது. இந்தக்கதையில் நம் வருங்கால பெண் குழந்தைகளுக்காக தைரியம் என்னும் விழுமிய நகை வடிக்க நீங்கள் அதை கரி அடுப்பில் இட்டு உருக்கினாலும் அதன் இறுதிப் பயன் கருதி அதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
பிரபாவதி போன்ற தைரியமான தன்னம்பிக்கை நிறைந்த பெண்களால் நிறையட்டும் நம் சமூகம். இனிவரும் காலங்களில் அவர்களுக்குத் தேவை இந்த நகைதான். பொன்நகை அல்ல.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
அன்புள்ள ஜெ
நகை கதையை வாசிப்பது ஒரு சோர்வூட்டும் அனுபவமாக இருந்தது. அது ஓர் நடைமுறை உண்மை. போர்ன் பார்ப்பது நம் அகம். நாம் ரகசியமாகச் செய்வது அது. ஆனால் என்னதான் அதை நாம் பூடகமாக வைத்திருந்தாலும் நாம் வாழும் புறவாழ்க்கையில் அது நம்மை மாற்றியமையாமல் இருக்குமா? நாம் பெண்களைப் பார்க்கும் பார்வையை அது மாற்றாமலிருக்குமா? வாய்ப்பே இல்லை.
அந்த மாற்றம் நம் கன்முன் நடந்துகொண்டிருக்கிறது. எல்லா பெண்களும் போர்ன் பார்வையால் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. போர்ன் பெண்களை வெறும் உடல்களாக காட்டுகிறது. வெறும் காமப்பண்டங்களாக காட்டுகிறது. பெண்கள் அந்த பார்வையை மீறி வெற்றிபெற்று எழுந்துகொண்டும் இருக்கிறார்கள். ஈஸியாக உதறி மேலே சென்றுகொண்டிருக்கிறார்கள்
அர்விந்த்குமார்
சிற்றெறும்பு [ சிறுகதை]
அன்புள்ள ஜெ,
நலம் தானே?
சிற்றெறும்பு கதையை வாசித்தேன். அந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலச் சூழல், அவர்களின் வாழ்க்கைமுறை, அதிலிருக்கும் அடிமைத்தனமும் ஆண்டைத்தனமும் ஒரு பெரிய திரைப்படக் காட்சி போல விரிந்தது. அந்த ஆட்சியில் பெண்கள் இருந்த அதிகாரநிலையையும் காணமுடிந்தது. அன்றெல்லாம் ஆண்கள் திருமண உறவுகள் வழியாகவே மேலே செல்லமுடிந்தது. ஆகவே துரைசானியை துரை ஒன்றுமே செய்யமுடியாது
துரைக்காக கொலை வரைச் செய்யும் ஒருவன். துரைச்சானியின் வேலைக்காரனாகிய ஒரு சிறிய எறும்பு. இந்தக்கதையின் சதுரங்கத்தில் சொல்லப்படாமல் விடப்பட்ட இடம் ஒன்றுதான். துரைச்சானி ஏன் வேலைக்காரனை அடிக்கிறாள். காலில் கை பட்டதனால் என்றால் அது அடிக்கடி நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது. வேறெதற்கு அடித்தாள்?
அடித்தபின் மறுநாள் எப்படி இருந்தான் என்று கேட்கிறான். வேலைக்காரன் மிகச்சாதாரணமாக இருந்தாள், கண்களில் ஒன்றுமே தெரியவில்லை என்கிறான். அப்போதுதான் சதிகாரனும் கொலைக்காரனுமாகிய கதைசொல்லிக்கு எல்லாம் புரிகிறது. துரைச்சானியால் வேலைக்காரனை விடமுடியாது. அவள் சிக்கிக்கொண்டிருக்கிறாள். அதைஅவளே அறிந்ததனால்தான் அடிக்கிறாள். வெறுக்க முயல்கிறாள். அருவருப்பை உருவாக்கிக்கொள்கிறாள்.
அவள் மறுநாளே வேலைக்காரனை துரத்திவிட்டிருந்தால் அவள் தப்பியிருப்பாள். அனுப்பவில்லை.மீண்டும் அவனை சாதாரணமாகச் சந்திக்கிறாள்.ஆகவே அவள் வீழ்வது உறுதி. அதனால்தான் அவன் வேலைக்காரனை போ, போய் வென்றுவா என்று அனுப்புகிறான். அது நடக்குமென நினைக்கிறான்.
ஏனென்றால் அவனும் இழிவுபடுத்தப்பட்டவன்தான். அவனுக்கும் பழிவாங்கும் வெறி இருக்கிறது. அவனுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது
செந்தில்குமார்
அன்புள்ள ஜெ
சிற்றெறும்பு வாசித்தேன். இவ்வளவு காலம் விஸ்வாசத்துடன் இருந்து துரைச்சானி எட்டி உதைத்து முகத்தில் உமிழ்ந்த பின் ஏன் செவத்தானின் மனம் மாறுகிறது. அந்த நிகழ்வுக்கு முன்புவரை அவன் தூரைச்சானியால் மதிக்கப்பட்டு வந்தான். அவர்கள் இருவருக்கும் இடையில் அதுவரை இருந்தது ஒரு மானசீகமான உறவை போன்றது என்று நினைத்திருந்தான். அந்த நிகழ்வுக்கு பின் புறத்தில் மட்டும் நான் அடிமை அகத்தில் நீ பெண் நான் ஆண் என்பதற்க்கு அப்பால் பேதமில்லை என்றாக்கிக் கொள்கிறான். உள்ளுக்குள் அவனும் சிவத்தவன்தான் அவனும் துரைதான். அந்த துறையிடமும் அந்த துரைசானியிடம் விஸ்வாசமாக இருப்பதில் பொருளில்லை அவர்கள் அதற்க்கு தகுதியானவர்களுமில்லை என்று அவனை அறியாமலே அவன் அகம் முடிவு செய்துவிட்டது போலும்.
கதைசொல்லி செய்வதும் அதைத்தான். முகத்தில் பாவனையில் மட்டும் தான் அவன் அடிமை. அந்த விஸ்வாச பாவனையும் அவன் பிழைப்புக்காக தன் நலனுக்காக மட்டுமே. அப்படியென்றால் அடிமை முறையே அப்படித்தானா. அடிமைகள் தங்கள் அகத்தில் தங்களுக்கு மேலாக யாரையும் நினைப்பதில்லை என்று இந்த கதையை விரித்துகொள்ளலாம்.
ஆனால் கதையில் உள்ள சூட்சமம் என்று நான் நினைப்பது. இத்தனை வருட நல் உறவுக்கு பின் ஏன் துரைச்சானி பார்ட்டி முடிந்து வந்து செவத்தானின் முகத்தில் உமிழ்ந்தாள், அவனை ஏன் அடிமையாக உணர செய்தாள் என்பது. ஏன் என்றால் துரைச்சானி செவத்தானை அடிமையாக பார்க்கவில்லை ஒரு ஆணாகத்தான் பார்க்கிறாள். தன்னை ஆண்டானாக அல்ல பெண்ணாகத்தான் உணர்கிறாள். அணைத்து ஆண்களை போல நீயும் என்மீது ஆசை படு என்னை அடைய நினை என்று செவத்தானை உணர செய்வதுதான் அந்த நிகழ்வு என்று வாசிக்கலாமா. (இது over reading ஆக கூட போய் விட வாய்ப்புள்ளது)
நன்றி
பிரதீப் கென்னடி
March 22, 2021
புதுவை வெண்முரசு கூடுகை 41 அழைப்பிதழ்
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் ,
நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 41 வது கூடுகை 27.03.2021 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 5 “ பிரயாகை ” ,
பகுதி ஒன்று . பெருநிலை -1,2,3,4.
பகுதி இரண்டு . சொற்கனல் -5,6,7,8,9,10 பதிவுகள் குறித்து நண்பர்
தாமரைக்கண்ணன் உரையாடுவார் .
இடம் :
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ ஶ்ரீநாராயணபரம் ” முதல் மாடி ,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001
தொடர்பிற்கு :-
9943951908 ; 9843010306
நிறைவிலி [சிறுகதை]
டாப்ஸ் ஆன் கபேயில் நான் என் நண்பர் பரிந்துரைத்த பெண்ணுக்காக காத்திருந்தேன். எங்கள் நிறுவனம் இந்த ஆண்டுடன் ஐம்பதாண்டு நிறைவுசெய்கிறது. அடுத்த ஆண்டு முழுக்க நாங்கள் நடத்தும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், அதையொட்டிய ஆடம்பர விருந்துகள், நான்கு மாநாடுகளை ஒருங்கிணைப்பதற்கான குத்தகையை எடுத்திருந்த கார்டியல் நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளர் அந்தப்பெண். பகா ராய் என்று பெயர். அந்தப்பெயரை நான் அதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை.
காலையில் ஒரு சந்திப்பு முடிந்துவிட்டது. இதையும் முடித்துவிட்டு நான் கிளம்பி மாதுங்காவில் ஒரு கருத்தரங்குக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஒருமுறை அழைத்துவிட்டார்கள். நான் அதன் மைய உரையாற்றுபவன். எங்கள் தலைமைநிர்வாகி சிறப்பு விருந்தினர்.
எட்டுநாட்களாக நான் மும்பையில் அந்த நட்சத்திர விடுதியில்தான் தங்கியிருந்தேன். ஷெரட்டன் குழுமத்து விடுதி. அந்த குழுமவிடுதிகளின் எல்லா அறைகளும் ஒன்றுபோலவே இருக்கும். ஆகவே நிரந்தரமாக ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிறைவை அடையமுடியும். அரைத்தூக்கத்தில்கூட நடமாட முடியும். வேறுவேறு வகையான விடுதிகளில் தங்கி சலித்துப்போகும்போது நாம் செல்லுமிடங்களில் எல்லாம் நம் இல்லத்தை எதிர்பார்க்கிறோம். ஆகவே நான் ஷெரட்டனைத்தான் எப்போதும் தேர்ந்தெடுப்பேன்.
காலை பத்துமணியுடன் இங்கே காலையுணவு முடிந்துவிடும். அதன்பின் மாலை நான்கு மணிவரை பெரும்பாலும் எவருமே இருக்க மாட்டார்கள். ஒரு காபியுடன் எவரை வேண்டுமென்றாலும் இங்கே சந்திக்கலாம். கருஞ்சிவப்புச் செயற்கைத் தோலுறையிடப்பட்ட வசதியான பெரிய மெத்தை நாற்காலிகள். வெண்ணிறமான மேஜைப்பரப்புகள். பின்னணி ஓசை என்று மெல்லிய இசை மட்டும்தான் இருக்கும். கையை தூக்கினால் மட்டுமே வெயிட்டர் வந்து நிற்பார். ஓசையில்லாத நடமாட்டம் கொண்ட வெள்ளை ஆடை உருவங்கள்.
இதமான வெளிச்சம். மிகப்பெரிய கண்ணாடித்திரைக்கு அப்பால் புல்வெளியும் சீரமைக்கப்பட்ட பசும்புதர்களும் பூச்செடிகளும் குட்டை மரங்களுமாக தோட்டம் பகல்வெளிச்சம் பொழிந்து ஓவியம்போலத் தெரியும். அங்கே நூற்றுக்கணக்கான சிறிய மண்கலங்களை வரிசையாக கட்டியிருக்கிறார்கள். அவற்றில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டியிருக்கின்றன. கண்ணாடிக்கு இப்பால் அவற்றின் ஓசை கேட்பதில்லை, அவை ஒளியை சிறகுகளால் துழாவியபடி பறந்து சுழல்வதை மட்டும் பார்க்கலாம். வெறுமே இங்கே அமர்ந்து அந்த கண்ணாடிப்பரப்பை பார்த்துக்கொண்டிருப்பதுகூட எனக்குப் பிடிக்கும். மேலும் நான் ஒரு காஃபி அடிமை.
இங்கே கிடைக்கும் தரமான காபி அரிதானது. மென்துணியானால மெத்தை உறையால் மூடப்பட்டு அது கொண்டுவரப்படும். உறையை நீக்கியதும் எழும் புதிய காபிக்கொட்டையின் மணம் அளிக்கும் கிளர்ச்சி உடலெங்கும் பரவுவது. காபியை வேறெங்கோதான் வறுத்து அரைக்கவேண்டும். காபி அரைக்கப்பட்டு வடிகட்டப்படும் மணத்தை உணர்ந்தபின் அந்தக் காபியை குடிப்பது அனுபவம் தணியும் நிறைவின்மையை அளிப்பது. எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழ்வதுபோல மேஜையில் காபியின் மணம் எழவேண்டும். அந்த வெண்ணிறத் துணியுறை ஒரு முறுக்கிக்கொண்ட மலர். அதன் இதழ்கள் மொக்கவிழ எழுவது வானுலகத்து நறுமணம்.
என் செல்போன் சிணுங்கியது. “ராம்” என்றேன்.
“சாரி, இது பஹா ராய். ஸ்ரீ ராம்சந்த் ராய் என்னைப் பற்றிச் சொல்லியிருப்பார்”
“ஆமாம், உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உள்ளே வா. ரிசப்ஷனில் என் பெயரைச் சொல். நான் இங்கே முதல்நிலையில் பின்பக்கம் தோட்டத்திற்கு அருகில் டாப்ஸ் ஆன் கஃபேயில் இருக்கிறேன்…”
“பத்துநிமிடம் சார்”
“சார் வேண்டாம். என்னை ராம் என்று கூப்பிடு”
“ஷ்யூர் சார், ராம்” மெல்லிய சிரிப்பு.
நான் இடக்கையால் மேஜையில் தட்டிக்கொண்டு வலக்கையால் குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் பார்த்துவிட்டு செல்பேசியை ஒலியின்மை ஒழுங்கில் அமைத்து பையில் போட்டுக்கொண்டேன். கைகளை கட்டியபடி அமர்ந்திருந்தேன். அப்பால் நீண்ட இடைநாழி வழியாக பகா ராய் வருவது தெரிந்தது. சிறிய உருவம், சிறுமியைப்போலவே இருந்தாள். கையில் ஒரு பெரிய ஆடம்பரப் பை. குதிகால் கூர்ந்த செருப்பு அளிக்கும் கொக்கு நடை.
அவள் வருவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதை அவளும் பார்த்துவிட்டிருந்தாள். நான் எதிர்பார்த்திருந்ததுபோல மும்பையின் வழக்கமான பெண்ணுருவம் அல்ல. இங்கே பெரும்பாலான பெண்கள் கூர்மையான மூக்கும், சிறிய உதடுகளும், சிறுகுழிக்குள் அமைந்த கண்களும் அமைந்த சிறிய முகம் கொண்டவர்கள். சிறிய தோள்கள், சிறிய மார்புகள், சிறிய இடுப்பு என ஒரு செப்புப்பொம்மையின் தன்மை இருக்கும். கூந்தலை நீவி செஞ்சாயமிட்டு நீட்டி, கண்களில் மையிட்டு, ரத்தச்சிவப்பாக லிபஸ்டிக் பூசி, மெல்லிய விரல்களில் நகச்சாயங்களுடன் அந்த பொம்மைத்தன்மையை கூட்டிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் இவள் கருப்பாக வட்டமுகத்துடன் இருந்தாள். கூந்தலை நீட்டி தோளில் இட்டிருந்தாள். வெள்ளைநிறமான காலர் வைத்த மேல்சட்டையும் நீலநிறமான ஜீன்ஸும் அணிந்திருந்தாள். நல்ல கருப்பு முகம், அதை பளபளப்பாக்கும் ஏதோ பூசியிருந்தாள். லிப்ஸ்டிக் நிறமற்றது. கண்களில் மை இல்லை. காதுகளில் பெரிய வெள்ளிவளையங்கள். கைகளில் பாசிமணிகளாலான எதையோ அணிந்திருந்தாள். ஒரு வெள்ளி மோதிரம்.
நான் எழுந்து “வெல்கம், ஐயம் ராம் சந்தீப்” என்றேன்.
அவள் அருகே வந்து “ஹாய், நான் பகா ராய்” என்று கையை நீட்டினாள்.
நான் அவளுடைய மென்மையான சிறிய கையை பிடித்து குலுக்கி “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்றேன்.
“தேங்க் யூ” என்று அவள் அமர்ந்துகொண்டாள்.
“நீங்கள் ஹிந்தி பேசுவீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.
“பேசுவேனே, ஏன்?”
“இல்லை, தென்னிந்தியச் சாயல் இருந்தது.”
“இல்லை, நான் வடக்குதான்.”
“மன்னிக்கவும்” என்று நான் இந்திக்கு மாறிக்கொண்டேன். “என்ன சாப்பிடுகிறீர்கள்? இங்கே காஃபி கிளாசிக் சுவையுடன் இருக்கும்…”
“நான் காபி சாப்பிடுவதில்லை.”
“ஓ, எவ்வளவு பெரிய இழப்பு. பரவாயில்லை. வேறு என்ன? பழச்சாறு?”
“ஆமாம், எனக்கு ஒரு தர்பூசணிச் சாறு.”
“நல்லது” என்று கையை தூக்கினேன். வெயிட்டர் வந்து நின்றான். நான் எனக்கு ஒரு காஃபியும் அவளுக்கு பழச்சாறும் சொன்னேன்.
அவள் கண்களால் டாப்ஸ் ஆன் கஃபேயைச் சுற்றிப் பார்த்தாள். கண்ணாடிப்பரப்புக்கு அப்பால் பச்சை ஒளியுடன் இருந்த தோட்டத்தைப் பார்த்துவிட்டு “நைஸ் பிளேஸ்” என்றாள்.
“ஆமாம், இந்தவகையான அறைவடிவமைப்புதான் இன்றைக்கு புகழ்பெற்று வருகிறது. வீட்டுக்குள் இருக்கும் எல்லா வசதியும் வேண்டும். ஆனால் வெளியே தோட்டத்தில் அமர்ந்திருக்கும் உணர்வும் வரவேண்டும்… இங்கே உட்கார்ந்து அந்தச் சிட்டுக்குருவிகளை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்”
அவள் முகம் மலர்ந்தது. “நர்சரிக் குழந்தைகளைப் போல சண்டை போடுகின்றன” என்றாள்.
“ஆமாம், அருமையான உவமை” என்று நான் சொன்னேன்.
அவள் முகம் சட்டென்று இறுகியது.
“என்ன?” என்றேன்.
“ஒன்றுமில்லை” என எழுந்துகொண்டாள். “நாம், அங்கே அமர்ந்திருக்கலாமே”
“ஏன்?”
“இல்லை”
நான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு “சரி” என்றேன்.
அவள் எழுந்து சென்று இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள். ஏற்கனவே அவள் அமர்ந்திருந்த திசைக்கு முதுகைக் காட்டியபடி. நான் அவள் எதிரே அமர்ந்தேன். அவள் ஏன் திரும்பிக்கொண்டாள் என்று பார்த்தேன். அங்கே ஒன்றுமில்லை. வெற்றுச்சுவர், அதில் சில கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள், மூங்கிலால் ஆன அலங்காரங்கள் அவ்வளவுதான். வாசல்கூட இல்லை.
காபியும் பழச்சாறும் வந்தது. “எடுத்துக்கொள்” என்றேன்.
அவள் “நன்றி” என எடுத்துக்கொண்டாள். நிதானமடைந்துவிட்டிருந்தாள்.
“நீ இந்தவகையான ஓட்டல்களுக்கு வந்ததில்லையோ? உன்னை சிரமப்படுத்தவேண்டாம் என்றுதான் இந்த இடத்தைச் சொன்னேன்.”
”இல்லையில்லை, நான் எல்லா சந்திப்புகளையும் நட்சத்திரவிடுதியில்தான் செய்கிறேன்… ஷெரட்டனுக்கே பலமுறை வந்திருக்கிறேன். இந்த கஃபேக்கு இப்போதுதான் வருகிறேன்.”
“நல்லது” என்றேன்.
“நான் ஃபைல்களை கொண்டுவந்திருக்கிறேன். எங்கள் பிராஜக்ட் என்ன, எஸ்டிமேட் என்ன, பட்ஜெட் என்ன எல்லாமே இதில் உள்ளது..” என்று ஒரு ஃபைலை எடுத்து வைத்தாள். சிறிய ஃபைல்தான். ஆனால் அழகான சிவப்புப் பிளாஸ்டிக் உறையுடன் இருந்தது.
“அதை நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். முதலில் எல்லாவற்றையும் நேரடியாகச் சொல். சொல்லும்போதுதான் உண்மையான அர்த்தம் தெரியவருகிறது.”
“சொல்கிறேன்” என்று அவள் புன்னகைத்தாள். முதல்முறையாக அவள் முகத்தில் ஒரு குழந்தைத்தன்மை வெளிப்பட்டது. அவள் சிரித்தபோது கன்னத்தில் விழுந்த குழியும், கண்கள் சற்றே இடுங்கியமையும்தான் அதற்குக் காரணம் என்று தெரிந்தது. நெற்றியில் விழுந்த முடியை நீவி ஒதுக்கிவிட்டு “எங்கள் நிறுவனம் இந்தியாவிலேயே சிறந்த வரவேற்பாளர்களை அளிக்கிறது என்று சொல்ல மாட்டேன். அது மிகை. ஆனால் அப்படி எங்கள் வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்” என்றாள்.
நான் சிரித்துவிட்டேன். அவளும் சிரித்து “வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. மும்பையில் இந்த ஐடியாவுக்கே நாங்கள்தான் முன்னோடிகள். ஏழாண்டுகளுக்கு முன்பு சிறியதாக இது ஆரம்பிக்கப்பட்டது அப்போது இப்படி ஒரு தேவை இருப்பதே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு மாதம் நாற்பது நிகழ்ச்சிகளுக்குமேல் இருக்கின்றன. நிரந்தர ஊழியர்கள் ஐம்பதுபேர் இருக்கிறார்கள்.”
அவள் அதே புன்னகையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் “இப்போது எங்களிடம் ஐந்தாயிரம் முகங்கள் இருக்கின்றன. எல்லா வகையிலும் உள்ளவர்கள். இளம் ஆண்கள், அழகான இளம்பெண்கள். எல்லா சமூகநிலைகளிலும் எங்களிடம் முகங்கள் இருக்கின்றன. வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் கிழக்குப் பகுதி மக்கள் ஆங்கிலோ இந்தியர்கள்…. உங்கள் தேவைக்கு ஏற்ப ஆட்களை அனுப்புவோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதற்கேற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.”
“கல்லூரி மாணவர்கள்தான் மிகுதியும். அவர்களுக்கு இது பகுதிநேர வேலை. நாங்கள் அழகு, தோரணை எல்லாம் பார்த்துத்தான் ஆளை எடுப்போம். அவர்களுக்கு இரண்டுமாதப் பயிற்சி கொடுப்போம். மொழிப்பயிற்சியும் நன்னடத்தைப் பயிற்சியும் இடர்சமாளிப்புப் பயிற்சியும் உண்டு. அதற்கே நிறைய முதலீடு செய்கிறோம். அவர்களுக்கு மாதம் மூன்று நிகழ்ச்சிகளுக்காவது அழைப்பு அனுப்புகிறோம். அது ஒரு நல்ல ஊதியம் அவர்களுக்கு. மாணவர்கள் படிப்பை முறிக்காமலேயே வேலைசெய்து பணமீட்டலாம். ஆகவே நடுத்தரவர்க்கப் பெண்கள் மட்டுமல்ல உயர்குடிப்பெண்களும்கூட வருகிறார்கள்.”
“சீருடை அணிந்திருப்பார்களா?”
“சீருடை வேண்டுமென்றால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே அதை வடிவமைத்து அளிக்கவேண்டும்…”
“எங்கள் செலவில்?”
“ஆமாம், அது ஒப்பந்தத்திலேயே உள்ளது” என்றாள். “ஆனால் இந்த சேவையே சீருடை அணியாமல் பணியாற்றுபவர்கள் தேவை என்பதனால்தான். பெரும்பாலும் யாரும் சீருடை வேண்டுமென்று சொல்வதில்லை. வீட்டு நிகழ்ச்சிகளிலேயே கூட விருந்தினர் போலவோ குடும்ப உறுப்பினர் போலவோ தோற்றமளிப்பவர்கள் வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்”
“ஆமாம், அது வேறொரு உணர்வை உருவாக்குகிறது…” என்றேன்.
“எங்கள் பணியாளர்கள் தங்களை ஊழியர்கள் என்று சொல்லமாட்டார்கள், தன்னார்வலர் என்று சொல்வார்கள். நல்ல உயர்தர உடைகளும் ஆபரணங்களும் அணிந்திருப்பார்கள். சீருடை அணிந்த ஊழியர்களிடம் தோன்றாத நெருக்கமும் மதிப்பும் இவர்களிடம் தோன்றும்… பலர் உயர்படிப்பு படித்தவர்கள், படித்துக்கொண்டிருப்பவர்கள். முனைவர் பட்ட ஆய்வுசெய்பவர்களே எழுபத்தேழுபேர் உள்ளனர்.”
“நல்லது” என்றேன் “உண்மையில் எங்களுக்கும் அப்படிப்பட்டவர்கள்தான் தேவை… எங்கள் நிறுவனம் பற்றியும் எங்கள் விருந்தினர்களைப்பற்றியும் ஓர் அறிமுகம் அவர்களுக்கு இருந்தால் நல்லது.”
“அது சிறப்புச் சேவை, ஆனால் அதற்கான ஆட்கள் நிறையபேர் இருக்கிறார்கள். உங்களுக்கு முழு நிறைவு ஏற்படும்.”
“இவர்கள் உங்கள் முழுநேர ஊழியர்களல்ல என்றால் இவர்களின் நடத்தைக்கு யார் பொறுப்பு?” என்றேன்.
“இவர்கள் அனைவரிடமிருந்தும் ஒரு பாதுகாப்புத்தொகையை வாங்கியிருக்கிறோம். ஏதாவது சிக்கலென்றால் அந்தப்பணம் இழப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தம். எங்கள் நிரந்தர ஊழியர்கள் இருந்து நேரடியாக கண்காணிக்கவும் செய்வார்கள்.”
“எங்கள் விருந்தினர்கள் பாதிக்குமேல் வெளிநாட்டவர்கள்…”
“சரியான உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவர்கள் எங்களிடம் உண்டு. பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபு, ஜப்பானிய மொழி பேசுபவர்கள்கூட இருக்கிறார்கள்.”
“கட்டணம்?” என்றேன்.
“மொத்த நிகழ்ச்சிக்கும் சேவைக்குத்தகை எடுப்பதுதான் எங்கள் வழக்கம்… அது பேரம்பேசத்தக்கது” அவள் மீண்டும் புன்னகைசெய்தாள்.
நான் நீண்ட மூச்சுடன் கைகளைக் கோத்துக்கொண்டேன். சூட்டிகையான பெண் சூட்டிகையானவள். ஆனால் எந்த எல்லைவரை பொறுமை தாங்கும் என பார்த்தாகவேண்டும்.
“ஆனால் நீ விருந்துகளில் வந்து நிற்க மாட்டாய் என நினைக்கிறேன்.”
“இல்லை, நான் மக்கள்தொடர்பு மட்டும்தான் செய்கிறேன்.”
“மக்கள் தொடர்புக்கு உன் தோற்றத்தில் ஒருவர் வருவது ஆச்சரியம்தான்… தென்னிந்தியாவில் உன்னை விரும்புவார்கள்” என்றேன்.
”ஆமாம் ராம், ஆனால் வட இந்தியாவிலும் விரும்புகிறார்கள். நான் இந்த நிறுவனத்தில் நுழைந்தபோது இருந்த வியாபாரத்தை என் முயற்சியால் இருபது மடங்காக ஆக்கியிருக்கிறேன்.”
”ஓ” என்றேன் “உன் வழி என்ன?”
“பொழிவது, கொட்டி மூடுவது… இருபதுபேர் போனால் போதும் என்ற இடத்தில் நாற்பதுபேரை அனுப்புவேன்.”
“ஓ” என்றேன்.
“இந்த விழாக்களெல்லாமே கொண்டாட்டமானவையாக இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள். அதிகம்பேர் வந்து ஓடியாடினால் நிறைவடைகிறார்கள்… ஆனால் எங்கள் ஊழியர்களை மிகச்சிறப்பாக உடையணிந்து செல்லவைப்பேன். ஆகவே அவர்களை எடுபிடிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது.”
“ஆனால் நீ மக்கள் தொடர்புதான் செய்கிறாய்” என்றேன். “நீ வியாபாரம் பேசச்சென்றால் வருபவர்கள் உன்னைப்போன்ற தோற்றம் உடையவர்கள் என்று நினைப்பார்கள்.”
“ஆமாம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்று அவள் புன்னகைத்தாள். “அதற்குத்தான் இந்த ஃபைல். நீங்கள் அறைக்குச் செல்வதற்குள் நான் நூறு முகங்களை மின்னஞ்சலில் அனுப்பிவிடுவேன். இந்தி நடிகர்களைப் போல் இருப்பார்கள்.”
“அதிகமாக எப்படிப்பட்டவர்களை கேட்கிறார்கள்?”
“கோவாப்பகுதி ஆங்கிலோ இந்தியர்களை… அவர்களைப் பார்த்தால் வெள்ளையர் போலிருப்பார்கள்.”
“நீ எந்த பகுதி? தமிழ்நாடா?”
“இல்லை, நான் ஜார்கண்ட்…”
“உன் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை.”
“பகா என்றால் எங்கள் இனத்துக்குரிய பெயர்”
“நீ?”
“நான் கோண்ட் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள்” என்றாள்.
“அப்படியா?” என்றேன். “ஆனால் இப்போது தெரிகிறது. உன் முகம் அப்படியே கோண்ட் முகம்தான்… எங்களுக்கு அங்கே ஒரு எஸ்டேட் இருக்கிறது. நிறைய கூலிகள் வேலைசெய்கிறார்கள்.”
“ஆம், கோண்டுகள் அஸாமில்கூட எஸ்டேட் வேலைசெய்கிறார்கள்.”
“நீ எப்படி இங்கே வந்தாய்? நீ என்ன படித்திருக்கிறாய்?”
“எம்.காம், அதன்பின் எம்.பி.ஏ. கூடவே ஃபேஷன் டிசைனிங்.”
“உன் குடும்பம்…?”
“அவர்கள் ஜார்கண்டில்தான் இருக்கிறார்கள். என்னை ஒரு மும்பைக்காரர் தத்தெடுத்து படிக்க உதவிசெய்தார்.”
நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் எத்தனை தூரம் தாங்குவாள்? மேஜைமேல் நாஃப்கினில் சுற்றி வைக்கப்பட்டிருந்த கரண்டியையும் முள்ளையும் என் கைகள் நெருடிக்கொண்டிருந்தன.
”என்ன படித்தாலும் உன் முகம் உன் இடத்தை தீர்மானித்துவிடுகிறது இல்லையா?” என்றேன்.
“ஆம், அது ஒரு எல்லைதான். ஆனால் எந்த எல்லைகளையும் கடக்கமுடியும்… நீங்கள் எங்கள் சேவைக்குப்பின் என் முகம் மாறியிருப்பதை காண்பீர்கள்.”
நான் சிரித்துவிட்டேன். “உன்னால் நன்றாகப் பேசமுடிகிறது” என்றேன்.
அவள் புன்னகைத்து “கற்றுக்கொண்டேன்” என்றாள்.
”நான் இந்த ஒப்பந்தத்தைத் தரமுடியும், ஒரு நிபந்தனையின் பேரில். எக்காரணம் கொண்டும் நீ எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது”
“பொதுவாக நான் வருவதில்லை ராம், நீங்கள் கவலையே படவேண்டியதில்லை.”
“ஏன் சொல்கிறேன் என்றால் எங்கள் நிகழ்ச்சிகளில் எல்லாருமே உயர்வர்க்கம் உயர்குடிகள்… சட்டென்று அவர்கள் உன்னை அவமதித்துவிட வாய்ப்புண்டு…”
“அப்படி நான் நினைக்கவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் பரவாயில்லை, நான் வரமாட்டேன்.”
“இல்லை, வாய்ப்பிருக்கிறது. உன் தோற்றத்தைப் பார்த்தால் நீ ஏதோ சாப்பாட்டுக்காக வந்து நிற்கிறாய் என்று நினைத்துக்கொள்வார்கள்…”
அவள் சிரித்துவிட்டாள். “அந்த வாய்ப்பைக்கூட பயன்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.”
நான் என் கையிலிருந்த முள்கரண்டியை மேஜைமேல் வைத்தேன். அதை இறுகப்பற்றியிருந்தேன் என்று தெரிந்தது.
“ஸாரி நேகா.”
“பகா”
“எஸ் பகா ராய்… இந்த ராய் யார்?”
“என்னை படிக்க வைத்தவர்”
“ஓ” என்றேன். “மீண்டும் ஸாரி… இது கார்ப்பரேட் உலகம். எதிரியின் எந்தப் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது இங்கே எழுதாவிதி. எந்தப் பலவீனத்தையும் ஆற்றலாக எப்படி மாற்றிக்கொள்வது எப்படி என்பது அதன் இன்னொரு பக்கம். உன் தோற்றமும் பிறப்பும் உனக்கு பலவீனமா என்று சோதனைசெய்து பார்த்தேன்… தப்பாக நினைத்துக்கொள்ளாதே.”
“ராம், எனக்குப் பின்னால் அந்த படத்தை பார்த்தீர்களா?”
“எந்த படம்?”
“அந்த கறுப்புவெள்ளை படம்… உணவை வீணாக்கக்கூடாது என்று ஃபுட் ரெஸ்க்யூ நிறுவனம் வைத்திருக்கும் விளம்பரம்… அதில் ஒரு குழந்தை கையில் பெரிய பாத்திரத்துடன் நின்றிருக்கிறது.”
கரிய குழந்தை, கன்னத்துக் குழியுடன் அழகான வெள்ளைப் பற்களுடன் காமிராவைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. பரட்டைத்தலைமுடி. இடையில் ஒரு கந்தலாடை. கையிலிருந்த பெரிய அலுமினியத் தட்டில் கொஞ்சம் அரிசிச் சோறு. ’நீங்கள் ஒரு குழந்தைக்கு உணவூட்டவிரும்பினால் உணவு வீணாவதை குறைத்தாலே போதும்.’
“ஆமாம்” என்றேன்.
”அது நான்தான்… இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம்… எங்கள் மலைக்கிராமத்திற்கு வெள்ளைக்காரர்கள் வந்து எடுத்தது. நான் கல்லூரியில் படிக்கும்போது மும்பையில் ஓர் உணவகத்தில் இந்தப்படத்தை முதலில் பார்த்தேன்.”
“ஓ” என்றேன். அந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். சிரிக்கும்போது தோன்றும் பகாவின் உருவம்தான் அது. பழங்குடிக் குழந்தைகளுக்குத்தான் அந்த நட்பார்ந்த சிரிப்பு உண்டு. அவர்கள் குழந்தைகளை அதட்டுவதோ அடிப்பதோ இல்லை. கட்டாயப்படுத்தி எதையும் செய்யவைப்பதுமில்லை. அங்கே அத்தனைபேரும் குழந்தைக்கு பெற்றோர்தான்.
“முதலில் அந்தப்படத்தைப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுவிட்டேன். பார்த்ததுமே தெரிந்துவிட்டது. இன்றுவரை எவருக்குமே அது நான் என்று தெரியாது. அன்று எனக்கு தலைசுற்றியது. விழுந்துவிட்டேன். அதன்பிறகு அவ்வப்போது இதைப் பார்ப்பேன். என்னால் இதை நேருக்குநேர் பார்க்கமுடியாது” அவள் புன்னகைத்தாள். “முதலில் பார்த்தபோதிருந்தே தோன்றியது இந்த உலகத்திடமே பிச்சை எடுத்துக்கொண்டு நின்றிருக்கிறேன் என்று. நான் மட்டுமல்ல எங்கள் குலமே பிச்சைப்பாத்திரத்தை நீட்டி நின்றிருக்கிறது. பிறகு தோன்றியது, அங்கிருந்து மீண்டுவிட்டேனே என்று. மீளவேண்டும் மீளவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். எவ்வளவு மீண்டுவிட்டேன் என்று திரும்பிப்பார்க்கையில் பெருமிதம்தான். ஆகவே நீங்களோ உங்கள் விருந்தினரோ என்னை ஒன்றும் செய்யமுடியாது.”
நான் புன்னகையுடன் “பகா, நான் என்ன தொழில்செய்கிறேன் தெரியுமா?”
“நிர்வாகம்” என்றாள்.
“இல்லை, முக்கியமாக நிர்வாகிகளுக்கான ஆளுமைப் பயிற்சி” என்றேன். “அந்தப் படத்தை நீ வீட்டில் உன் படுக்கையறையில் ஒட்டிவைக்கலாம். நாள்தோறும் பார்க்கலாம். அது உனக்கு உதவும்.”
அவள் முகம் மாறியது. கண்கள் கூர்கொண்டன.
“நிர்வாகவியலில் ஒன்று உண்டு, வெற்றி வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் ஜெயிக்கமுடியும். ஆனால் எதன்பொருட்டு அந்த வெறி? வெறுமே ஆணவநிறைவுக்காகவோ புகழுக்காகவோ பணத்துக்காகவோ என்றால் சீக்கிரம் சலித்துவிடும். ஏதோ ஒரு புள்ளியில் தோல்வியை ஒப்புக்கொள்ள தோன்றும். நமது எல்லைகளை நாமே எங்கோ வகுத்து வைத்திருப்போம். ஞாபகம் வைத்துக்கொள் ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுவிடவேண்டியதுதான் என்று எண்ணியிருப்பவரை எந்தப்புள்ளியிலும் தோற்கடித்துவிட முடியும்.”
அவள் முகத்தை கூர்ந்து நோக்கிச் சொன்னேன் “ஆனால் உனக்கு தீர்க்கவே தீர்க்கமுடியாத காரணம் இருக்கிறது. நீ ஜெயித்துக்கொண்டே இருக்கமுடியும்” என்றேன். “நீ அந்த பாத்திரத்தை நிறையவே விடக்கூடாது.”
அவள் “ஆமாம் ராம்” என்றாள். மீண்டும் புன்னகைத்தாள்.
“வாழ்த்துக்கள்” என்று எழுந்து கைநீட்டினேன். ”சிலர் ஜெயிப்பதற்காகவே பிறக்கிறார்கள், அவர்களில் ஒருவரை இன்று சந்தித்திருக்கிறேன்.”
“நன்றி” என்று அவள் கைகுலுக்கினாள்.
23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதைவிசை,தீற்றல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விசை ஒர் அற்புதமான சிறுகதை. கூர்மையான ஒற்றைப்படிமம் மட்டுமே கொண்ட கதை. உங்கள் கதைகளில் இந்த இரண்டுவகை கதைகளும் உள்ளன. வலுவான நாடகீயமான சம்பவங்களும் பிளாட்டும் உள்ள கதைகள். இந்தவகையான ஒற்றைப்படிமம் மட்டுமே கொண்ட கதைகள். வலுவான பிளாட் உள்ள கதைகளில் விரிவான வாழ்க்கைச்சித்திரத்தையும் அமைத்துவிடுகிறீர்கள். வலிமையான கதாபாத்திரங்களும் உள்ளன. அவர்களை விரிவாகச் சொல்ல இடமும் உள்ளது
ஆனால் இந்தவகையான ஒற்றைப்படிமக் கதைகளில் அவ்வளவு விரித்துச் சொன்னால் கதை நீர்த்துவிடும். அந்த ஒற்றைப்படிமத்துக்கு மிகச்சீக்கிரமே வந்துசேர்ந்துவிடவேண்டும். அதற்காகத்தான் இத்தனை கூர்மையாக சுருக்கமாக கதைச் சொல்கிறீர்கள். பெரும்பாலும் வேறொருவரின் நினைவுவழியாக மையக்கதாபாத்திரத்தைச் சொல்லிவிடுகிறீர்கள். ஆகவே சுருக்கமாகச் சொல்லமுடிகிறது. ஓலைக்காரியின் வாழ்க்கையே ஓரிரு சொற்றொடர்களில் அவள் மகன் வழியாக உணர்ச்சிகரமான முறையில் சொல்லப்படுகிறது. அவளுடைய விசை, அவளுக்குள் இருக்கும் தீ எல்லாமே சொல்லப்பட்டுவிடுகிறது
அர்விந்த்
அன்புள்ள ஜெ.,
அன்றைக்கெல்லாம் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் இடையே மெல்லிசைப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். பாலமுரளிகிருஷ்ணாவின் ‘எந்தன் தாயை எண்ணிடும் போது இதயம் விம்மிடுதே..’ அடிக்கடி ஒளிபரப்பப்படும் பாடல். அன்னையின் நினைவு தரும் பூரிப்பினால் இதயம் விம்மிடுதலின் உண்மையான அர்த்தத்தினை, அந்த விம்மிடுதே என்ற வார்த்தையை பாலமுரளியின் கார்வையில் கேட்டபோது நான் உணர்ந்தேன். “கெடக்கட்டு டீக்கனாரே, நான் ஓலைக்காரிக்க மகன்லா?” என்ற நேசையனின் பூரிப்பு அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.
இப்போதும் கூட நான் இருக்கும் சென்னை நங்கநல்லூரில் பழுத்து உதிர்ந்த தென்னை மட்டைகளைச் சேகரித்து தெருவோரத்தில் வயதானவர்கள் துடைப்பத்துக்காக ஓலை கீறிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ‘உதிராத மட்டைகள்’ என்று நினைத்துக்கொள்வேன். நேசையனின் அம்மைக்கு தென்னை ஓலையைப் பலகையாய் முடையும் விசை கூடியது எப்படி? அடிமையாய் இருந்து மீட்கப்பட்டவள், கணவனை இழந்து குழந்தையோடு நிர்கதியாய் நின்றவள் தனக்குத் தெரிந்த ஒரே வேலையான ஓலை முடைவதை கரை தெரியாத வாழ்க்கைக்கடலைக் கடக்கும் தோணியாகவே நினைத்திருப்பாள். இது போல முகம் இறுகி , அகம் தொலைத்த, தலைவன் இல்லாக்குடும்பத்தை தூக்கிநிறுத்திய, எத்தனை அன்னையர் குடும்பம் தோறும். நெகிழ்ச்சியான கதை.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
தீற்றல் [சிறுகதை]அன்புள்ள ஜெ
தீற்றல் என்ற பெயரில் நான் ஒரு கவிதை முன்பு எழுதியிருந்தேன். கணையாழியில் பிரசுரமானது என நினைக்கிறேன். அதுவும் சுவரில் இருக்கும் ஒரு தீற்றல் பற்றியதுதான். பழைய ஞாபகம் ஒன்று சுவரில் ஒரு மெல்லிய தீற்றலாக எஞ்சியிருக்கிறது. அதாவது அழிந்த குங்குமம் போல. அழிந்த குங்குமத்தீற்றல் உருவாக்கும் மன எழுச்சியே அபாரமானது. வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்போது அந்த அழிந்த குங்குமத்தீற்றல் போலத்தான் தோன்றுகிறது
கணபதி சுப்ரமணியம்
அன்பு ஜெ,
மரணத்தைப் பற்றி ஜிட்டு அவர்கள் சொல்லும் போது, ‘மரணம் என்பது எங்கோ ஒரு புள்ளியில், ஒரு நாளில், வருங்காலத்தில் நிகழக்கூடியது அல்ல. காலம் என்ற பரிமாணத்தையே மரணிக்கச் செய்வதன் மூலம் காலம் அர்த்தமற்றதாகிவிடுகிறது. இறப்பு என்பது மட்டுமே காலத்தின் இறுதி அல்ல. அந்த ஒரு கணத்தில் மட்டுமே காலம் தன் இறுதியை அடைவதில்லை. மாறாக அது ஒவ்வொரு நிகழ்வு, நாள், உணர்வு, காதல், காமம் ஆகியவற்றின் இறுதியிலும் நிகழ்கிறது. இதை உணர்ந்து கண கணமும் மரணத்தை நிகழச் செய்து அந்த நொடியில் வாழ்பவனால் காலத்தை நீட்டச் செய்ய முடியும்’ என்கிறார். இந்த வரிகளை ஜிட்டுவின் உரையிலிருந்து நானே மொழிபெயர்ப்பு செய்து கொண்டேன் அல்லது இப்படித்தான் புரிந்து கொண்டேன் ஜெ. உங்கள் கதைகளில் வரும் அந்த நுண் தருணங்கள் கூட இத்தகைய கூர்மையுடன் தான் இருக்கின்றன. இத்துனை நுணுக்கமாக உங்கள் வாழ்வின் தருணங்களை, மனிதர்களை எடுத்துரைக்கிறீர்களே என்று நான் சிந்திப்பதுண்டு. காலத்தை முன்னும் பின்னும் வெட்டிக் கொண்டு அதற்கு மரணத்தைப் பரிசளித்து காலமற்ற ஒரு பரிமாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அங்கு தான் ‘நான்’ என்ற ஒன்று இருக்காது அல்லது ’நான்’ கணகணமும் மரணித்து பிறந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு மிகப் பெரிய விடயங்களையும் வாழ்வுப் பயணத்தில் செய்து விட்டு ’அது நான் அல்ல’ என்று நீங்கள் சொல்வதும் ‘நானா எழுதினேன்’ என்பது போல இருப்பதும் அதனால் தான் என்று நினைக்கிறேன் ஜெ.
தீற்றல் கதையில் நீங்கள் சொல்லியிருப்பதும் அப்படியான ஒரு நுண்தருணம் தான்.
“சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி.
அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை கண்டேன்.
கண்ணில் மையிட்டபின் அப்படியே விரலைத் தீற்றிக்கொண்டது.
ஒரு சின்னஞ்சிறு குருவியின் சின்னஞ்சிறு இறகுபோல.
ஒரு மெல்லிய வளைவு.
ஓர் அலட்சியமான கீற்று.
ஒரு கணம்,
அந்த ஒருகணம், அது அங்கிருந்தது.
கண்கள் இல்லை,
மையிட்ட இமைகளும் இல்லை,
நீட்டிவரைந்த வால் மட்டும் எஞ்சியிருந்தது.”
-என்ற கவிதைத்தருணத்தைச் சொல்கிறீர்கள். அமுதாவின் தாத்தா காலத்தை வெட்டிக் கொண்டு ஒரு ஃப்ளாஷ் போல மனதில் பதித்திருந்த அந்த வால் தீற்றலை தரிசித்தேன். நெகிழ்வாக இருந்தது. தாத்தா சரோஜாதேவியின் அட்டைப்படத்தைக் கண்டு அந்த ஒரு தருணத்தை நினைவுகூர்ந்தது போலவே, மிகச் சிலரும் ஏதோ ஓர் இசையின் துணுக்கில், வாசனையில், நினைவுப் பொருளில், புகைப்படத்திலென தங்களின் ஒரு தருணத்தை ஃப்ளாஷ் செய்து வைத்திருக்கிறார்கள். அவைகளை மீட்டி எடுக்கும் ஒரு சிறுகதையாக கதை அமைந்தது. நானும் அந்த சில தருணங்களை மீட்டி சிலாகித்திருந்தேன். அருமையான கதை ஜெ. நன்றி
பிரேமையுடன்
இரம்யா.
இருளில் ,குமிழிகள்- கடிதங்கள்
இருளில் கதை ஒரு அற்புதம்.ஒவ்வொருவருக்கும் இப்படியான ஏதோ ஒரு அலைதல் இருக்கிறது.நான் அம்மாவை வெகுகாலம் இப்படி தேடிக் கொண்டே இருந்தேன் மீண்டு வருவாள் என.அதை நிறுத்திக் கொண்ட பின்னரே உலகம் சற்று புரிந்தது
லக்ஷ்மி மணிவண்ணன்
அன்புள்ள ஜெ
இருளில் கதையை ஒரு ஃபேண்டசியாகவே பார்க்க முடிந்தது. ஆனால் இதைப்போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நான் என் 13 வயதில் அப்பாவின் அடி தாங்கமுடியாமல் ஓடிப்போனேன். திருவனந்தபுரத்தில் ரயில்நிலையத்தில் அமர்ந்திருந்தேன். இரவுநேரம். பசி தாங்கமுடியாமல் பலமுறை குழாயில் நீர் குடித்தேன். பசிக்களைப்பில் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் என் சட்டைப்பையில் நாற்பது ரூபாய் இருந்தது. யார் வைத்தது என்றே தெரியாது. நான் அந்தப்பணத்தால் சாப்பிட்டேன். கொல்லத்தில் என் தாய்மாமா வீட்டுக்குப் போனேன். அங்கே அவருடைய ஓட்டலில் வேலைபார்த்தேன்
ஆனால் அந்த பணம் வைத்தது எவர் என்று இன்றைக்கு வரை தெரியாது. இந்த நாள் வரை அந்த முகத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன். பலவகைகளில் கற்பனைசெய்துகொள்வதுமுண்டு. வாழ்க்கையிலே முடிவில்லாத மர்மங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் தேடிப்போகவே முடியாது. அன்றைய அந்த நிகழ்ச்சி எனக்கு உலகத்தைப்பற்றிய பார்வையையே மாற்றிவிட்டது
கிருஷ்ணசந்திரன்
குமிழிகள் [சிறுகதை]
வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன்,
எங்களுடைய சுக்கிரி இலக்கிய உரையாடல் குழுவில் இந்த குமிழிகள் கதையை குறித்த விவாதம் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நீண்டு கிடந்தது. இந்தக் கதை குறித்து எத்தனையோ கடிதங்கள் வெளியான பின்பும் கூட பேசுவதற்கு ஏதோ இன்னும் கொஞ்சம் என ஏதாவது இருந்து கொண்டுதான் இருக்கிறது. சுக்கிரி போன்ற காத்திரமான ஒரு இலக்கிய உரையாடல் குழுவில் இணைந்திருப்பது என்பதே தன்னளவில் வாசகனுக்கு பல வாசிப்பு தளங்களை திறப்பது. இந்தக் குழு பல எமகாதக, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்க்கும் இலக்கிய வாசகர்களை உறுப்பினர்களாக கொண்டு இலக்கிய விவாதத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
எங்கள் விவாதங்களில் போது என்னுடைய தரப்பாக சிலவற்றை முன்வைத்து இருந்தேன். அவற்றைத் தொகுத்துக் கொள்ள இந்த கடிதத்தில் முயன்றிருக்கிறேன்.
ஜெயமோகன் அவர்கள் கடைசியில் எதிர்காலத்தில் எல்லாருக்கும் Album மற்றும் இணையவெளி நீலப் படங்கள் மற்றும் virtual augmentation மட்டுமே கதி என தீர்ப்பெழுதிவிட்டார். பாவம் மானுடம் என்ன செய்யப் போகிறதோ எதிர்காலத்தில்.
லிலி யாருடைய அனுமதிக்கவும் காத்திருப்பதாக கதையில் தெரியவில்லை. எதைச் செய்தேனும் அவள் விரும்பியதை அடைபவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.
கதையில் அவளுடைய பொருளாதார சுதந்திரமும். தான் விரும்பியதை அடைந்தே தீரும் தீவிர ஆளுமையும் தெளிவாகவே கட்டப்பட்டுள்ளது.
அவள் ஒன்றும் சுதந்திரத்திற்காக ஏங்கிக் கொண்டு இருப்பவள் அல்ல அதை எடுத்துக் கொள்பவள். ஏற்கனவே எடுத்தும் கொண்டவள். இந்தப் பின்புலத்தில்தான் கதை உண்மையில் என்ன சொல்ல வருகிறது என பார்க்க வேண்டும்.
லிலி ஒன்றும் வெற்றி கதையின் நாயகி அல்ல
அதே போல இந்த கதையின் நாயகன் ஒரு கோப்பை காபி நாயகன் போன்றவனும் அல்ல. இரண்டு பேருமே ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான் இந்த கதையின் அழகு. ஆணியம் பெண்ணியம் என்பதைவிட நாம் எதிர்கொள்ளப் போகும் உணர்ச்சி சிக்கல்களை உணர்வு போராட்டங்களை முன் உரைப்பதாகவே இந்தக் கதையை நான் காண்கிறேன்.
எந்த விதத்திலும் லிலியோடு சாமினால் கடைசிவரை தான் எண்ணியதை எண்ணியபடி தெளிவாக உரையாடவே முடியவில்லை. ஒருவனை ஆணாதிக்கவாதி என்று முடிவு கட்டி விட்ட பெண்ணிடம் அவன் என்ன சொன்னாலும் எடுபடுவதே இல்லை. பாவம் சாம் அவன் உண்மையில் ஆணாதிக்கவாதி அல்ல. உணர்வுப்பூர்வமனவன் அதனாலேயே பேசத்தினறுபவன். இதைப் போலவே ஒரு வகைப்பட்ட முன் நிலைப்பாட்டை எடுத்து விட்ட ஆண்களிடமும் பெண்களால் ஆக்கப்பூர்வ உரையாடலை நிகழ்த்த முடிவதே இல்லை.
இயற்கையே எதிர் பாலினத்தை ஈர்க்கும் வண்ணம் தான் பரிணமித்திருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு இதை நேர்மையாக புரிந்துகொண்டு கடந்து இணைந்து வாழ முயல்வதே அறிவுப்பூர்வமானது. ஆணும் பெண்ணும் தன்னையும் தன் சிறப்பியல்புகளையும் தன் போதாமைகளையும் அறிந்திருப்பது அமைதியான வாழ்வுக்கு உதவும்.
துறவியே ஆனாலும் தான் என்கின்ற அகந்தையும் உடல் உணர்வும் உள்ளவரை பிரகிருதியும் இயற்கையும் முக்குணங்களும் அவரை மாயையில் அழுத்தியே வைக்கும். மாயை கடந்தவர் தன்னை துறவி என்று கூட முன்வைப்பதில்லை. அவர் எல்லா அடையாளங்களையும் கடந்துவிட்ட வராகிறார். துறவு என்பது ஒரு பயிற்சி நிலைதான். ஞானமே அதன் உச்சம். ஞானம் எல்லா அடையாளங்களையும் கடந்தது.
மனிதனுக்கு தன் உணர்வும் உடல் உணர்வும் உள்ளவரை மனிதர்கள் தங்களுடைய பயாலஜிக்கல் இயற்கையை கடத்தல் சாத்தியமே இல்லை. அது அவர்களின் மீது உருவாக்கும் பாதிப்புகளை மிக லாவகமாக கடக்கின்ற கையாளுகின்ற தகைமையை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்து விட்டார்கள் என்று ஒருபோதும் கூற முடியாது. இது எல்லாத் துறையிலும் உள்ள ஆண் பெண் இருபாலருக்கு
ம் பொதுவானது. பூரண ஞான நிலையை எழுதுவதற்கு முன்பாக தன்னுடைய உயிரியல் இயல்புகளை துறந்து விட்டோம் என்று யாராவது கூறினால் அதை ஏற்றுக் கொள்வது அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் எவருக்கும் மிகவும் கடினம்.
இந்தக் கதைகள் ஒருவிதமான அகவய நோக்கு கொண்டவைகளாக உள்ளதாக தோன்றுகிறது. மேலோட்டமாக படிக்தால், தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அடையாளப்படுத்திக் கொண்டு இந்தக் கதையை வாசித்தால், அகவய புரிதல்களை உள்முகத் திறப்புகளை நாம் தவற விட்டுவிடுகிறோம் என்பதே என் புரிதல்.
இந்த சிறுகதை தன்னளவில் ஒரு முழுமை தரிசனமாக, ஒரு காட்சி சிறப்பாக, வாழ்வின் ஒரு கணத்தை, நவீன வாழ்க்கைப் போக்கை படம் பிடிப்பதாக இருந்தபோதும், ஒரு போதும் எளிதில் தீர்த்துவிட முடியாத கட்டற்ற விவாதங்களை உருவாக்குகிறது.
மிக்க நன்றி ஜெயமோகன்.
நெஞ்சம் நிறை அன்புடன்
ஆனந்த் சுவாமி
அன்புள்ள ஜெ.,
எத்தனை கதைகள்? எழுதித் தீராதவை. ஆச்சரியம் எனக்கு என்னவென்றால் கதாபாத்திரங்களுக்கு நீங்கள் போடும் பெயர்கள். இடம்,காலம்,சாதி என்று எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நீங்கள் போடும் பெயர்கள் ஒரு கதையில் கூட பொருத்தமில்லாமல் இல்லை, திரும்ப வருவதும் இல்லை. வெண்முரசில் கூட நூறு கௌரவர்கள் பெயர்களும், அவர்கள் மனைவிமார் பெயர்களும் கூடச் சொல்கிறீர்கள். குதிரைகள், புத்தகங்கள், மலைகள், மற்றும் எத்தனை ஆயிரம் உப கதாபாத்திரங்கள்? இத்தனை பெயர்களை எப்படி உண்டாக்குகிறீர்கள்?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
ஆமென்பது, நகை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
முதலில் நகை என்ற கதை ஆழமான ஒவ்வாமையை அளித்தது. எங்கிருந்து ஏங்கே தாவுகிறது இந்தக்கதை என்று நினைத்தேன். அதெப்படி போர்ன் நடிகையுடன் ஒரு கௌரவமான பெண்ணை ஒப்பிடுவது என்று நினைத்தேன். ஆனால் எண்ண எண்ண வேறுவேறு நினைப்புக்கள். என் அம்மா நர்ஸாக இருந்தார். 1980 கள் வரை எல்லா பத்திரிகைகளிலும் நர்ஸ் ஜோக்குகள் பிரபலம். நர்ஸ்களை ஒருவகையான போர்ன் ஸ்டார் கணக்காகத்தான் அன்றைக்கு எழுதிக்கொண்டிருந்தார்கள். செகரெட்டரி ,டைப்பிஸ்ட் எல்லாரைப்பற்றியும் அப்படித்தான் ஜோக்குகள் வந்தன
ஆனால் பெண்கள் அந்த அடையாளங்களை மீறித்தான் எழுந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பொதுவெளிக்கு வந்ததுமே தோற்றம் சார்ந்த கிண்டல், ஒழுக்கம் சார்ந்த அவதூறு எல்லாம் வந்துசேரும். அதைக் கடந்து அவர்கள் வெற்றிபெற்றாகவேண்டும். அந்த வெற்றியைப் பெறும்போது நெகெட்டிவ் ஆகாமலிருக்கவும் வேண்டும். இந்தக்கதையின் கதைநாயகியைப்போல
ஆர். சித்ரா
அன்புநிறை ஜெ,
நகைப்பு எனும் இயல்பான நகையை தன்னம்பிக்கையின் வெவ்வேறு படிக்கட்டுகளில் நிற்பவர்கள் அணிந்து கொள்ளும் விதங்களின் அவதானிப்பாக இக்கதையை வாசிக்கலாம்.
கதையில் ஒவ்வொருவரும் எவ்விதம் நகைக்கிறார்கள் எனப் பார்த்தால் ஷிவ் வெற்றி பெற்றவன், அதை ஒவ்வொரு கணமும் காட்டிக் கொள்ளக்கூடிய சிரிப்பைக் கொண்டிருக்கிறான். பதினைந்தாயிரம் ரூபாய் சட்டை அணிந்தவர்களுக்கு உரிய முதுகைத் தட்டிய ஆர்ப்பாட்டமான சிரிப்பு.
அனந்தகிருஷ்ணனைச் சுற்றி நின்று கொண்டிருப்பவர்களின் சிரிப்பு – சமூக அளவுகோல்களில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரை மூலவராக்கி அவரைக் குளிர்விப்பதற்காக செய்யும் அபிஷேகச் சிரிப்பு. அவரோ கருவறை பீடத்தில் நிற்பது போல மென் புன்னகையுடன் ஏற்று அருள்கிறார். அவர்களது துலாத்தட்டில் வெற்றி பெறாதவர்களைக் குறித்த ஏளனச் சிரிப்புகள். கதைசொல்லியைப் பார்த்து புன்னகை செய்து அங்கீகரித்து விட்டதாகக் கூட இருந்து விடக்கூடாதென அவரது இழுபடும் உதடுகளின் இகழ்ச்சிச் சிரிப்பு. இவனை மட்டம் தட்டியதும் ஒத்து ஊதுபவர்களின் கேலிச் சிரிப்பு.
கதைசொல்லி யாருமில்லாத தனிமையில் சுயமுன்னேற்றப் பொன்மொழிகளில் ஆறுதல் அடைவது போல, அந்தக் கழிவறையின் தனிமை தரும் ஆசுவாசத்தில் ஷீலா ஒர்டேகாவைத் தேடி ஒரு புன்னகை – முதல் முறையாக கதை சொல்லி எளிதாகிறான். அதன் பிறகும் தெரிந்தவர்களைக் காணும் தன்னம்பிக்கையின்றி புறக்கடை வழிகளைத் தேடும் கதைசொல்லி எதேச்சையாக பிரபா அத்தையைப் பார்க்கிறான்.
பற்கள் பெரிதாக, பளிச்சென்று, சீரான வரிசையாக இருக்கும், அவளது திறந்த வாய் சிரிப்புக்காகவே ஜிப் எனப் பெயர் பெற்ற, போர்ன் நடிகை போன்ற சாயலில் இருக்கும் பிரபா அத்தை.
அவளை அணுகி அந்த போர்ன் நடிகை போல இருக்கிறாள் எனச் சொல்லும் போது கதைசொல்லி முகத்தில் எழும் ஒரு கோணல் புன்னகை. அவன் கிட்டத்தட்ட பொன்மொழி தரும் தற்காலிக தன்னம்பிக்கை போல அந்தக் காணொளி தந்த ஒரு சிறு கெத்தில் அந்த தருணத்தில் நடந்து கொள்வதால் வரும் கோணல் சிரிப்பு அது. அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அத்தையின் வாய்விட்டு சிரிக்கும் பெரிய பற்கள் தெரியச் சிரிக்கும் சிரிப்பு.
அந்த மனம்திறந்த வெளிப்படையான சிரிப்பில் அவனும் எளிதாகி மலர்ந்து சிரிக்கிறான். இதற்கு முன்னர் ஷிவ் கல்லூரி தினத்தில் அறிமுகமான ஒரு பெண் மற்றொரு போர்ன் நடிகை போலிருக்கிறாள் என்றதற்கு வெட்கப்பட்டு சிரித்ததை சொல்வான். அது வேறு விதம், தன் அழகின் வெளிப்பாட்டுக்கான புகழுரையாக அதை ஏற்கும் புன்னகை அவளுடையது. இங்கு பிரபா அத்தை நம்பிக்கை மிகுந்தவர்களுக்கு உரிய சிரிப்போடு அதைக் கடக்கிறாள். அதன் பிறகான கைகுலுக்கலில் அவள் உணர்த்துவது அவளது வலிய தன்னமபிக்கையை. அவளுக்கு இவ்வகையான சொற்கள் ஒரு பொருட்டுமல்ல.
இக்கதை முழுவதும் வரும் ஷீலா ஒர்டேகாவின் அழகான பல்வரிசை சிரிப்பு. அவளுக்கு இவ்வுலகைப் பார்த்து சிரிக்க விஷயங்களா இல்லை.
மிக்க அன்புடன்,
சுபா
ஆமென்பது… [சிறுகதை]அன்புள்ள ஜெ
ஆமென்பது கதை ஓர் அமைதியின்மையை உருவாக்கியது. ஏனென்றால் நானே சென்ற ஆறேழு மாதமாக இன்றைய அரசியல்சூழலுக்கு ஆவேசமாக எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறேன். என் சிந்தனை முழுக்க அதிலேயே இருக்கிறது. சொல்லப்போனால் வேறு ஞாபகமே இல்லை. ஏதோ போர்க்களத்தில் நிற்பவன் போல உணர்கிறேன். அந்த ஆவேசத்தின் பயனின்மையைச் சொல்லும் கதையாக ஆமென்பது இருந்தது. இப்படித்தான் ஜயானன் என்ற எழுத்தாளர் இருந்திருக்கிறார். பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விண்ட்மில் யுத்தத்தின் அபத்தம் புரிவதே இல்லை. கொஞ்சகாலம் இப்படியே ஓடும். அடுத்த விண்ட்மில் வந்துசேரும். அப்படியே வாழ்க்கை ஓடிவிடும். இந்த ஆவேசமெல்லாம் வேறெங்கோ எதற்கோ செலவிடவேண்டியது. வேறெதையோ பேலன்ஸ் செய்வதற்குரியது. அதை சட்டென்று உணரவைத்த கதை இது. இந்த தேர்தல்காலத்துக்கு, உச்சகட்ட உணர்வுகள் பகைமைகளாக மாறிவிட்டிருக்கும்போது மிக அவசியமான கதை. ஆனால் அரசியல் வெறியுடன் கூவிக்கொண்டிருப்பவர்கள் படிக்க வாய்ப்பில்லை
ராஜேந்திரன் எம்
அன்பிற்குரிய ஜெயமோகன்
கதையின் மீதான R இன் கடிதமும் அதற்கு உங்களின் பதிலும் கதையை விட வெகு அருமை. அந்த டோபமைன்/செரட்டோனின் எழுத்தாளர் ஜெயமோகனை விட எனக்கு நித்ய சைதன்ய யதியின் அன்பு மாணவர் ஜெயமோகனேயே எப்போதும் நிரம்ப பிடிக்கிறது. என்ன செய்வது நம்ம வார்ப்பு இப்படி.
நித்ய சைதன்ய யதி போன்ற ஒரு நவீன ஞானி இன்று இருந்தால் எப்படி எழுதுவாரோ அப்படியே இருந்தது உங்களின் பதில்.
ஆமென்பதைக் குறித்து எழுத நிறைய உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக எழுதப் பார்க்கிறேன்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

