Jeyamohan's Blog, page 1012

March 30, 2021

தமிழில் மெய்யியல் நாவல்கள்

ஜெ

எனக்கு மெய்யியல் சார்ந்த நாவல்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும்.

விஷ்ணுபுரம், கொற்றவை, மடம் (குறுநாவல்), வெண்முரசு, கிருஷ்ண பருந்து, மோகமுள்ளில் தேவியை ஆராதிக்கும் பகுதிகள், நாகூர் ரூமியின் திராட்சைகளின் இதயம், நூருல் அமீனின் கனவுக்குள் கனவு போன்ற நாவல்களைப் போல் தமிழில் வெளிவந்துள்ள மெய்யியல்சார் நாவல்களைச் சுட்டிக் காட்ட இயலுமா?

அன்புடன்

இமான்

அன்புள்ள இமான்,

மெய்யியல் என்றால் எதைச் சொல்கிறீர்கள் என வகுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் சிந்தனையில் நம் அடிப்படைச் சொற்களுக்கு நமக்கான வரையறை இருப்பது இன்றியமையாதது.

இரு கோணங்களில் இச்சொல்லை வகுக்கலாம். ஒன்று, மதம் சார்ந்த என்னும் பொருளில். மதக்குறியீடுகள், மதவரலாறு, மதக்கொள்கைகளைப் பயன்படுத்துதன். அதாவது மரபான மெய்யியல்.

இன்னொன்று விரிந்தபொருளில். வாழ்க்கையின் சாராம்சம் சார்ந்த வினாக்களை எழுப்பிக்கொள்ளுதல். அன்றாடத்திலிருந்து அகன்று ஒட்டுமொத்த நோக்கில் வாழ்க்கையை அணுகுதல். அதாவது நவீன மெய்யியல்.

இரண்டுக்கும் இடையே வேறுபாடு குறைவுதான். ஏனென்றால் மெய்யியலைப் பேசினாலே பல்லாயிரமாண்டுகளாக இங்கே புழங்கிவந்துள்ள படிமங்களை, கொள்கைகளை கையாள வேண்டியிருக்கும். அது மதத்திற்குள் கொண்டுசெல்லும். மதமே அந்த படிமங்கள், கொள்கைகளின் பெருந்தொகை.

ஆனால் வரையறையை மதம் சாராமல் வைத்துக்கொண்டால் மேலும் பல படைப்புக்களையும் இணைத்துக்கொள்ள முடியும். ஆகவே நான் இரண்டாவது வரையறையை எடுத்துக்கொள்கிறேன்

மெய்யியல் சார்ந்த நாவல்கள் தமிழில் மிகக்குறைவு என்பதே உண்மை. ஏனென்றால் தமிழில் நவீன இலக்கியம் நவீனத்துவ இலக்கியமாகவே அறிமுகம் ஆகியது. நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் குறிப்பிட்ட உலகநோக்கு. அது மரபு எதிர்ப்புநோக்கு, தனிநபர்சார்ந்த பார்வை, புறவயமான தர்க்கம் சார்ந்த அணுகுமுறை, அன்றாட உலகியல் சார்பு ஆகிய தன்மைகள் கொண்டது. ஆகவே அது மெய்யியல் பார்வைகளுக்கு முற்றிலும் எதிரானது.

ஆனாலும் மெய்யியல் நோக்கு என்றும் இருந்து கொண்டிருக்கும். ஏனென்றால் அது அடிப்படைத் தேடல். அத்தகைய தேடல்கொண்ட ஆக்கங்கள் என என் நோக்கில் சிலவற்றைச் சொல்வேன்

1.பொய்த்தேவு- க.நா.சுப்ரமணியம்

2.அவதூதர்- க.நா.சுப்ரமணியம்

3.கிருஷ்ணப்பருந்து- ஆ.மாதவன்

4.மானசரோவர்- அசோகமித்திரன்

5.விழுதுகள்- ஜெயகாந்தன்

6.ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்

7.புத்ர- லா.ச.ர

8.இடைவெளி- சம்பத்

9.லங்காபுரி ராஜா- பிரமிள்

10.திருவரங்கன் உலா- ஸ்ரீவேணுகோபாலன்

11.விஷ்ணுபுரம் -ஜெயமோகன்

12 கொற்றவை – ஜெயமோகன்

13.வெளியேற்றம்- யுவன் சந்திரசேகர்

14. குள்ளச்சித்தன் சரித்திரம்- யுவன் சந்திரசேகர்

15.சுபிட்ச முருகன் – சரவணன் சந்திரன்

 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 11:35

சிறுகதை எழுதுவது- கடிதம்

அன்புள்ள ஜெ

நான்‌ சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.கேள்விகள், குழப்பங்கள் நிறைந்த ஆரம்பக்கட்டம். எனது பயணம் பற்றிய  குழப்பத்திற்கு முக்கிய காரணம்: ‘ எழுதி அனுப்பிய எந்தவொரு படைப்பும் பிரசுரிக்கப்படவில்லை’.தங்களை தொடர்ந்து சில காலம் படித்ததிலேயே தோன்றியது உங்களை போல் ஒருவரின் விமர்சனம் இந்த 22 வயது இளைஞனை செதுக்குமென.தங்களால் இயலுமெனில் நான் எழுதிய ஒரு சிறுகதையை (மிகச்சிறிய) மின்னஞ்சல் செய்யட்டுமா?

ஆவலுடன்

பாலமுருகன்.

 

அன்புள்ள பாலமுருகன்

சிறுகதை எழுதுவோர் பலர் எனக்கு எழுதுகிறார்கள். கதைகளும் அனுப்புவதுண்டு

சிறுகதை எழுத எண்ணுகிறீர்கள் என்றால் தமிழில் எழுதப்பட்ட நூறு முக்கியமான சிறுகதைகளை படித்திருக்கவேண்டும். அதில் பல தேர்வுகள் உள்ளன. எஸ்.ராமகிருஷ்ணன் நூறு கதைகளை தேர்வுசெய்திருக்கிறார். நான் ஒரு பட்டியல் போட்டிருக்கிறேன்

அக்கதைகளில் பெரும்பாலானவை இணையத்திலேயே கிடைக்கும்

சிறுகதைகளின் வடிவம் குறித்து நான் சற்று விரிவாகவே எழுதியிருக்கிறேன். அதில் கொஞ்சம் பயிற்சி எடுக்கலாம்

இத்தகைய பயிற்சிகளுக்குப்பின் உங்கள் மொழியும் வடிவமும் மாறியிருக்கும். எது எழுதவேண்டிய கரு என ஒரு தெளிவு வந்திருக்கும். அதன்பின் நீங்கள் தைரியமாக எழுதலாம்

எழுத்து முதன்மையாக ஒரு மனப்பழக்கம். உங்கள் மொழியை எழுதி எழுதி சரளமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்

ஜெ

தமிழ்ச் சிறுகதை – திறனாய்வாளன் பட்டியல்சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 11:33

ஞாநி- நடுநிலையின் அறம்

நண்பர் சரவணன் விவேகானந்தன் அவர்களின் பதிவு இது. வாட்ஸப்பில் பகிரப்பட்டது. ஞாநி என்ற ஆளுமையின் முகம் இதில் தெரிகிறது. அவருடன் நல்லுறவும் மோதலும் கொண்டவனாகவே எப்போதும் இருந்தேன். அவருக்கு கலைச்செயல்பாடுகள் பிடிகிடைப்பதில்லை, கலைஞர்களையும் என்பது என் கணிப்பு. ஆனால் ஒருவகையான போராட்ட உணர்வுடன் தான் உணர்ந்த அறத்தை முன்வைத்தவர்.இக்குறிப்பில் கவனிக்கத்தக்கது இன்றைய சமூக ஊடகச்சூழல் உருவாக்கியிருக்கும் ஒரு குறிப்பிட்ட மனநிலை. ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையின் ஆதரவாளராக இருந்தால் அவர் என்ன செய்தாலும் கூடித்திரண்டு அவரை ஆதரிக்கிறார்கள். அது அக்கருத்தியலுக்கான ஆதரவாகவும் உண்மையைச் சொல்பவர் எதிர்தரப்பினராகவும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். வசைபாடி இழிவுசெய்கிறார்கள்.இதில் இன்றைய எந்தக் கட்சிசார்புகளும் கருத்துநிலைகளும் விதிவிலக்கு அல்ல. நடுநிலை என்ற சொல்லை அழித்தொழிப்பதையே இன்று எல்லா தரப்பினரும் சேர்ந்து ஒரு பொதுத்திட்டமாகக் கொண்டிருக்கிறார்கள். ஞாநி பொதுவாக திராவிட இயக்க – மார்க்ஸிய இயக்கச் சார்புள்ளவர். ஆனால் தன் உளமறிந்ததைச் சொல்ல தயங்கியவரல்ல. அதற்காக முன்பும் அவர் சார்புகொண்டிருந்த தரப்பினராலெயே சாதி சார்ந்து வசைபாடப்பட்டவர்.ஞாநியின் குரலை நினைவுறவேண்டிய தருணம் இது.  இதை எழுதாமல் கடந்து போகவும் முடியும்…. ஆனால் ஏனோ இதை எழுத வேண்டும் என்று தோணுகிறது. காரணம், ஞாநி இறந்த பின்னும், அவர் வந்து விளக்கம் அளிக்க முடியாது எனும் நிலையிலும் இந்த பிரட்சனையில் அவர் மேல் குற்றம் சுமத்தி சென்ற வருடம் கூட என் நண்பர்கள் எழுதினார்கள். அதற்க்கு பதிலளிக்காமல் கடந்தே வந்தேன். எனவே இதை இன்று எழுத அவர்கள் காரணமாகிறார்கள்.இது 7 ஆண்டுகளுக்கு முன்பான கதை. 2014 ம் ஆண்டு.அன்று மிக பிரபலமாக இருந்த (இன்றும் பிரபலமா என்று நான் அறியேன்) ஒரு திராவிட மருத்துவரின் கர்பமாக இருந்த மனைவி வீட்டில் கழிவறைக்கு சென்றபோது தவறி விழுந்து இறப்பு என்று முதல் செய்தி வந்தது. சமூக வலைத்தளமே அந்த குறிபிட்ட மருத்துவரின் பிரபலத்தால் பரபரப்பானது…இரண்டாவது வந்த செய்தி, Ectopic Pregnancy தான் அந்த பெண்ணின் இறப்புக்கு காரணம் என்று சொன்னது. இத்தனைக்கும் கணவன்/மனைவி இருவருமே மருத்துவர்கள்.அதன்பின்பு சில நாட்கள் கழித்து இறந்தவரின் சகோதரி தம் சகோதரியின் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் துறையில் புகார் அளித்தார், பேஸ்புக்கில் எழுதினார். பின் அவர் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் வரை சென்று சம்பந்தபட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று புகார் கொடுத்தார்கள்.இந்த நிலையில் ஞாநி இது சார்ந்த செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அவ்வளவுதான், திராவிட ஆதரவாளர்கள் அவர் மேல் பாய்ந்தார்கள், என் நண்பர்களும். இதில் ஞாநி அந்த செய்தியை பகிர்ந்து அதை கவனப்படுத்தியற்க்கு உள்நோக்கம் கற்பித்தார்கள். அந்த மருத்துவர் ஞாநியுடன் ஒரு பிரட்ச்சனை சார்ந்து கடுமையாக விவாதித்ததற்கு பழிவாங்கத்தான் ஞாநி இந்த பிரட்ச்சனையை கவனப்படுத்துகிறார் என்று ஞாநியை திட்டி தீர்த்தார்கள்.சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் எதோ ஒரு வலுவான காரணமே பாதிக்கபட்டவர்களை கலெக்டர் ஆபீஸ் வரை இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வைத்திருக்கும். கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்கப்பட்டு, பத்திரிகைகளில் வந்த செய்தியை ஞாநி பகிர்ந்ததில் எந்த தவறும் இல்லை என்று நான் வாதாடினேன். நண்பர்கள் என் மேல் கடும் கோபம் கொண்டார்கள்.நாம் “கடவுள்” இல்லை. உண்மை எது என்பதை நாம் அறியோம், சந்தேகமற்ற ஒன்றாக இருந்தால், யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இதில் சந்தேகிக்க காரணங்கள் உள்ளன, என்ன என்ன எல்லாம் Prima facie இருக்கிறது என்று சொல்லி எனவே இரு தரப்பு குரல்களும் கேட்கபடவேண்டும்தான். அதைத்தான் இன்று ஞாநி செய்கிறார். எனவே அதை கவனப்படுத்தும் எல்லா உரிமையும் ஞாநிக்கு இருக்கிறது, நமக்கு தெரிந்தவர், நண்பர் என்பதால் ஒருதரப்பு மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு, இறந்தவரின் சகோதரி சொல்லுவது போல “உண்மை வெல்லட்டும்”, என்று சொன்னேன்.அதன்பின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எல்லாம் வந்தது. இறப்பு Ligature strangulation, கயிற்றால் கழுத்து நேரிக்கபட்டு, உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கவிடாமல் செய்து,உடல் இயக்கம் முடக்கப்பட்டு இறப்பு நடக்க பெற்றதாக, உடல் காயங்கள் இறப்பிற்கு முன் போராட்டம் நடந்ததை குறிக்கிறது என்று கூறப்பட்டது.ஆனால் அப்போதும் நண்பர்களுக்கு ஞாநி மேல் இருந்த கோபம் குறையவில்லை, ஞாநியை தற்காத்ததற்காக என் மீதும் கோபம் கொண்டார்கள். இன்பாக்ஸில் வந்து “உள்வட்ட தகவல்”களை சொல்லி மருத்துவர் குற்றமற்றவர், ஞாநி வன்மத்தில்தான் இதை செய்கிறார் ஞாநியை நான் தற்காத்தது மிகவும் தவறு என்றார்கள். அவர்கள் சொன்ன ஒவ்வொரு “உள்வட்ட” தகவலும் எப்படி பிழையானது என்று சொன்னேன். சென்ற வருடம் கூட இதை முன்வைத்து ஞாநி மீது குற்றம் சுமத்தி போஸ்ட் போடடார்கள்.இன்று, அந்த பெண் மருத்துவர் இறந்த வழக்கில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு அந்த டாக்டர் கணவருக்கும், மாமியாருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.அவர்களுடனான அந்த விவாதத்தை ஞாநி இப்படி சொல்லி முடித்தார்.என்னைப் படிக்காமல் போவதால், பொருட்படுத்தாமல் போவதால் உங்களுக்கு பெரிய நஷ்டம் எதுவும் இல்லை. எனக்கும் இதில் ஏதும் நஷ்டம் இல்லை. இதனால் நம் இருவர் வாழ்க்கையிலும் எந்த பாதிப்பும் இல்லை. என் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. என் மனசாட்சி தெளிவாகவே உள்ளது. காலம் எப்போதும் எது நீதி எது நியாயம் என்பதை நிரூபிக்கும், அப்போது நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். நன்றி. -ஞாநி அஞ்சலி : ஞாநி ஞாநி பற்றி… ஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 11:33

கேளி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அறமென்ப கதையை நான் அந்த தலைப்பிலிருந்து வாசித்தேன். அறம் என்ப என்றால் அறமென்று இப்படிச் சொல்கிறார்கள். அந்த என்ப ரொம்ப முக்கியம்.

நாம் அப்படிச் சொல்லித்தான் அறத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல என்று தெரிந்துகொள்ளும் தருணம்தான் நாம் நம்முடைய பார்வையில் அறத்தை கண்டுகொள்ளும் இடம்.

செல்வா தன் அறத்தை கண்டுகொண்டான். ஆகவேதான் புன்னகை செய்கிறான். அந்த அறம் என்ன? அவன் அந்த ஏழைகளை அவர்களின் அந்த பலவீனங்களையும் சிறுமைகளையும் புரிந்து ஏற்றுக்கொண்டு விரும்புகிறான். அதுதான் அவனுடைய அறம்.

கதையில் அது தெளிவாகவே இருக்கிறது. அவன் அந்த இரண்டு லட்சத்தையும் அவர்களுக்கே நேரடியாகக் கொடுத்து விடலாமே என்று யோசிக்கிறான். அந்த கிழவிக்கு அவன் பணம் கொடுக்கும் இடம் உதாரணம்.

நான் 22 ஆண்டுகள் கிராமப்புற சேவையை செய்தவன். செல்வாவின் இந்த மனநிலை இல்லாவிட்டால் கிராமப்புற மக்களிடம் சேவையே செய்ய முடியாது. அவர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவோம்.

அறமென்பது செல்வா கண்டடைந்த பற்றற்ற, எதிர்பார்ப்பே இல்லாத அறம்தான். கசப்பில்லாத நிலைதான்

கணேஷ் குமார்

 

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

அறமென்ப..என்று துவக்கி அப்படியே விட்டீர்களே ஆஹா இது கவிதை… ஒரு சொல் கவிதை… ஒரு சொல் ஒரு எழுத்து ஒரு காற்புள்ளி ஏதாவது ஒன்று கூடி இருந்தால் கூட அது கவிதையாகி இருக்க முடியாது.

பல்லாயிரம் அறநூல்களும் பலநூறு அற சூத்திரங்களும் அறப் பேருரைகளும் சொல்ல முயன்று முயன்று முட்டி தவிப்பதை, காலந்தோறும் எழுந்து வந்த மதங்கள் விளக்க முயன்று விளக்க முயன்று திகைத்துப் திகைத்து மீண்டும் மீண்டும் புதிது புதிதாய் முயன்று பார்க்கின்ற ஒரு விஷயத்தை, ஒரு சிறுகதை எத்தனை சிறப்பாக செய்கிறது என்பதே இலக்கியத்தின் சிறப்பு.

அவரவர்களுடைய இயல்புக்கும் அறிவுத் தகுதிக்கும் குண அமைப்புக்கும் ஆளுமைத் தன்மைக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் மெய்யியல் புரிதலுக்கும் ஏற்ப இந்தக்கதையின் முடிவு பல்வேறு வகையான உணர்ச்சிகளை புரிதல்களை இதைப் படிக்கின்ற பலருக்கு பலவிதமாக தரலாம்.

இனி இவ்வகையில் விபத்தினால் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்ற ஒருவனை காப்பதற்கான எந்த முயற்சியையும் செய்வதில்லை என ஒருவர் முடிவு செய்யலாம். அல்லது கதையின் நாயகன் செல்வா மிகத் தெளிவாக ஆணித்தரமாக குறிப்பிட்டதைப் போல இதைப்போல ஒரு சூழ்நிலை மீண்டும் வந்தால் இதைப்போலவே அடிபட்டவரை மருத்துவமனையில் கொண்டு வந்து கட்டாயம் சேர்ப்பேன் என்றும் முடிவு செய்யலாம். ஆற்று நீர்வழிப் படும் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படும் என்று அவரவர் இயல்புக்கு ஏற்றபடி முடிவெடுப்பார்கள் என எண்ணிக்கொண்டேன்.

நீங்கள் கதையில் தொட்டுக்காட்டி இருப்பது ஒரு சூழ்நிலைதான். இதுபோல கோடிகோடி சூழ்நிலைகள் கோடிகோடி சந்தர்ப்பங்கள் அவை உருவாக்கும் அறச் சிக்கல்கள் தர்மசங்கடங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. ரயிலிலே கதையில் கூட இதேபோல ஒரு அறச்சிக்கலை சித்திரமாக்கிக் காட்டியிருந்தீர்கள். ஒரு சூழலிலே நாம் எவ்விதமாக முடிவெடுத்து செயல்படுகிறோம் என்பது பல கோடிக்கணக்கான கண்ணிகளை சார்ந்தது. நாம் பிறந்த இடம் சூழ்நிலை காலம் நாம் பிறந்த குடும்பம் அதன் அமைப்பு நாம் பிறந்த சமுதாயம் அதன் போக்கு மற்றும் நாம் வளர்ந்த வளர்க்கப்பட்ட விதம் நாம் படித்த புத்தகங்கள் நாம் தொடர்பு கொண்ட நம்மோடு தொடர்பு கொண்ட மனிதர்கள் என எண்ணிலடங்கா காரணிகள் ஒரு மனிதன் ஒரு சூழ்நிலையில் எடுக்கின்ற முடிவுகளுக்கு மறைமுகமாகவோ நேர்முகமாகவோ பெரும் பங்காற்றுகின்றன.

கோடானகோடி வினைகள் கோடான கோடி விளைவுகள் எந்த வினைக்கு எந்த விளைவு என்று எவராலும் சமன்பாடு எழுதிவிட முடியாது கர்மத்தின் போக்கிற்கு. நல்லது செய்தால் நல்லது விளையும் கெட்டது செய்தால் கெட்டது விலையும் என்று சும்மா ஒரு போக்குக்கு வேண்டுமானால் சொல்லிப்போகலாம். அதற்கு மேலாக கர்மவினை கொள்கையை எந்த வகையிலும் அறிவுப்பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் நிரூபித்தல் மிகவும் கடினமே.

நல்லது கெட்டது இல்லை, வினைக்கேற்ற விளைவில்லை, கர்ம வினை செயல்பாடு என ஒன்றில்லை, நியதி என ஒன்று இல்லை,, தர்மம் இல்லை அதர்மம் இல்லை, மறு பிறப்பில்லை சொர்கம் இல்லை நரகம் இல்லை, ஆண்டவன் இல்லை அவன் பரிபாலனம் இல்லை, எந்த ஒரு சிஸ்டமும் எவரையும் கண்காணிக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வதால் அற வழி நடப்பதால் என்னதான் பயன் என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் விடையாக வருவது ஒன்றே ஒன்றுதான், “என்னால் முடிந்தவரை என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நான் நல்லவனாக வாழ்ந்தேன் வாழ்கிறேன் என்கின்ற நிம்மதியும் அது தருகின்ற நிறைவும்“. அப்படி ஒரு நிம்மதி மட்டுமே ஒரு நல்வழி நடக்கிறவன் பெறுகின்ற பேறு. ஆனால் அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த நிம்மதி தருகின்ற சுகம். அவர்கள் மேலும் மேலும் அந்த சுகத்தை நாடுவார்களேதவிர அதை ஒருபோதும் இழக்கத் துணிய மாட்டார்கள்.

அறம் என்பது இன்னதென்றோ அதன் செயல்பாடு இவ்விதமானது என்றோ எவராலும் வரையறுத்துவிட முடியாது. அறத்தை அறுதியாக இறுதியாக உறுதியாக அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது என்பதும் சாத்தியமில்லாதது.

ஒரு குழந்தைக்கு முலையூட்டும் பொழுது கடிக்கிறது என்பதற்காக எந்த அன்னையும் குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்திவிடுவதில்லை. பரிவு என்றாலே அன்னைதான் எவருக்கும் நினைவுக்கு வருவாள். எத்தனை ஆயிரம் முறை தவறு செய்தாலும் அன்னை தன் குழந்தையை முடிந்தவரை மன்னித்து மன்னித்து அவனைத் திருத்த கருணையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்த வண்ணம்தான் இருப்பாள். அந்தப் பேரியற்கையும் அளவிலா கருணைகொண்டு உயிர்களுக்கு மேம்படுவதற்கு எண்ணிறந்த வாய்ப்புகளை பெரும் கருணையோடு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

போலீஸ்காரர்களையும் சட்டத்தையும் நீதித் துறையையும் அரசையும் மட்டும் நம்பி நாம் இங்கு நம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. நாம் நமது சக மனிதனை அவனது அற உணர்வை நமது சமுதாயத்தை அதன் ஒட்டுமொத்த பேரறத்தை நம்புவதால் மட்டுமே இங்கே சற்றேனும் ஆசுவாசமாக வாழ முடியும்.

சக மனிதனின் மீதுள்ள அவன் அற உணர்வின் மீதுள்ள நம்பிக்கையினால் மட்டுமே நாம் நம் பெண் பிள்ளைகளை நம்பி தெருவில் அனுப்ப முடிகிறது. அறவுணர்வு என்பது எவரிடமுமே இல்லை என்றாகிப் போனால் அடுத்தவனின் அற உணர்வின் மீதான நமது நம்பிக்கை முற்றாக இல்லாமல் ஆகிப்போனால் எப்படித்தான் வாழ்வது இந்த மண்ணில்? வீடு நாடு காடு என எவருக்குமே எங்குமே வாழ முடியாமல் போகும் அல்லவா.

ஆம் இங்கே அயோக்கியர்கள் இருக்கிறார்கள், இங்கே ஏழ்மையின் பெயரால் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள், இங்கே பலாத்காரம் செய்பவர்கள் இருக்கிறார்கள், இங்கு ஏழைகளின் வயிற்றில் அடித்து கோடிகோடியாய் சுருட்டிக் கொள்ளும் ரத்தம் உறிஞ்சும் கிரிமினல்கள் அவர்களின் வக்கீல்கள் இருக்கிறார்கள், கருணையே இல்லாத அரசு அதிகாரிகள் காவலர்கள் அரசியல் பகா சூரர்கள் இருக்கிறார்கள், கல்வியின் பெயரால் மருத்துவத்தின் பெயரால் வியாபாரத்தின் பெயரால் நீதியின் பெயரால் சேவையின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் இன்னும் ஏதேதோ செயல்களின் பெயரால் திருடி கொழுப்பவர்கள் இருக்கிறார்கள். விழுமியங்களே இல்லாத திட்டம் போட்டு திருடும் கார்ப்பரேட் கம்மனாட்டிகள் இருக்கிறார்கள், எத்தனை கோடி கீழ்மக்கள் இருந்தபோதும் அத்தனைக்கும் பலகோடி மடங்கு மேலாக அறத்தின் மீது நம்பிக்கை கொண்ட சகமனிதனின் அற உணர்வின் மீது விசுவாசம் கொண்ட சகமனிதனின் நல்வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட ஒரு மாபெரும் மனிதத்திறலும் இங்கு இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த அறம்சார்ந்த நல் விழுமியங்கள்சார்ந்த மானுடத்திறலின் பேரறத்தின் ஆனை பலத்தின் முன்பாக ஒட்டுமொத்தக் கீழ்மையின் பலம் ஒரு சிறு தூசு. அதனாலேயே இன்னும் வான் பொழிந்து கொண்டிருக்கிறது, மண் கருணையோடு புல்லாகி மலர்ந்து காய்த்து கனிந்து உயிர்களை இங்கு இன்னும் வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மானுட பேரறம் திகழும் வரை, பிற உயிர்களின், சக மானுடனின் நலனுக்காக தயை கொண்டு தன்னை வருத்திக் கொண்டு உதவவும் தயங்காத அந்தப் பெருந்தகையாளர்களின் பெருந்திறல் உள்ளவரை, மண் வாழும் வாழ்த்தும் இங்கு உயிர்களை வாழவைக்கும்.

இழப்புக்களை சந்திக்காமல் வலியையும் வேதனையும் பொறுத்துக் கொள்ளாமல் இங்கு ஒரு விழுமியத்தை கூட நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியாது. நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்பத்தை நோக்கி நகர்வதையே தனது இயல்பாக கொண்டிருக்கிறது. உடல் ஒரு செல்களின் தொகுப்பாக எப்பொழுதும் ஒரு கம்போர்ட் ஜோனில் (comfort zone) இருக்கவே எப்போதும் விழைகிறது. தனது இந்தத் தேவையை நோக்கி உடல் மனத்தை இடைவிடாது கவ்வி செயல்பட வைக்க முயல்கிறது. ஆனால் மனமோ உன்னதத்தை நோக்கி விரிந்து தனது பரிணாம வளர்ச்சி பயணத்தை அடி அடியாக வைக்கிறது. அதனாலேயே மனம் எப்பொழுதும் உணர்வு என்றும் அறிவு என்றும் இரண்டாகப் பிரிந்து உள்ளே இடைவிடாமல் விவாதித்துக் கொண்டே இருக்கிறது. மானுட அறம் என்பதும் மனிதனின் அறவிழுமியங்கள் என்பதும் மனம் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சி தானே. அந்த மனதின் உன்னதமாக்கல்தானே இடைவிடாமல் வழிவழியாக வாழையடி வாழையென மனித குலத்தை அதன் ஒட்டுமொத்த தாக்குப் பிடித்தலை, இருப்பை, வாழ்வை, அதன் உச்சகட்ட மானுட அறத்தை சாத்தியப்படுத்தி உள்ளது.

உற்றநோய் நோற்றும் உயிர்க்குறுகண் செய்யாமலும் தனக்குத் துன்பம் வந்த போதும் பிறர் நலம் பேணி இதுவரை மனித குலத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற சாதாரணன் என்கின்ற அந்தப் பெருந்தகையாளர்களாலேயே மானுடம் இன்றுவரை வந்திருக்கிறது. எவ்வகையிலேனும் பிறஉயிர்கள் இனிது வாழ எல்லா வகையிலும் தன்னை ஈந்தும் பிற உயிர்களோடு இசைந்தும் வாழ்ந்தும் தானே மனிதன் இங்கு தன் உயிர் நிலைப்பதற்கான ஊதியத்தை ஈட்டிக் கொள்கிறான். அளவிலாது ஈபவனுக்கு அடுத்த உயிரின் துயர் துடைப்பவனுக்கு எதுவரினும் முடிந்தவரை பிறர் நலன் நாடுபவனுக்கு அகத்தில் ஆனந்தமும் உவகையும் அதுவாகவே பெருகத்தானே செய்யும். Spontaneous emotion என்று வோர்ட்ஸ்வொர்த் இதைத்தானே கூறிச் செல்கிறான்.

இதைத்தானே செல்வா “லைஃப்ல அவ்ளவு சந்தோஷமா இருந்ததே இல்லை”,  “அந்த சந்தோஷம் எனக்கு வேணும்” , “மே பி… தெரியலை. ஆனா அப்டியே நிறைவா, சந்தோஷமா, ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றேன்” என்றெல்லாம் மூச்சுக்குள் சீட்டி அடித்து கொண்டிருந்தான்.

ஒரு உயிரை நம்மால் உருவாக்க முடியாது ஆனால் ஏதோ ஒரு வகையில் துன்பப்படும் உயிரின் துன்பத்தை போக்குகின்ற அந்த உயிரை காக்கின்ற ஒரு வரத்தை இயற்கை சில பொழுதேனும் நமக்கு அளித்திருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பும் வரமும் கிடைக்கப்பெற்ற ஒருவன் அதை வீணாக்குவானா?. தனக்கு மகிழ்ச்சி அளிப்பது எது என கண்டுகொண்ட ஒருவன் மகிழ்ச்சி தருகின்ற எந்த ஒரு வாய்ப்பையும்

விடுவதில்லைதானே…. மாறாக அந்த வாய்ப்பை தேடித்தேடி அலைவான் அல்லவா?…மொத்தத்தில் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் நாடிய பயணம் தானே… ஆம் அது அப்படித்தான்.

இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு எத்தனை கோடானகோடி தலைமுறைகளாக மானுடம் என்னவெல்லாம் விலைகொடுத்து இருக்கும். அன்று அவர்கள் அந்த விலையைக் கொடுக்காமல் தன்நலமாக வாழ்ந்து இருந்தால் இன்று நாம் ஏது?. நாம் வாழ்கின்ற ஒவ்வொரு கணமும் நம் கோடான கோடி பாட்டனும் முப்பாட்டனும் நமக்கு அளித்த கொடைதானே இதை எப்படி நாம் மறந்துவிட முடியும்?. இந்தக் கொடையை இனி வரும் தலைமுறைகளுக்கு கடத்த வேண்டிய பெரும் பொறுப்பும் நமக்கு உள்ளது தானே.

ஆம் பொறுப்புக்கள் வலி தருவனதான், துன்பம் தருவனதான், நேரத்தை எடுத்துக் கொள்பவைதான், பெரும் செலவு வைப்பவைதான், இருந்துவிட்டுப் போகட்டுமே. இயற்கையும் எதிர்கால சமுதாயமும் இன்னும் பல தலைமுறை இனிதே வாழ இந்த விலையை கூடவா நம்மால் தரமுடியாது. நாம் தருகின்ற இந்த சமூக பொறுப்புணர்ச்சி என்ற விலை நம் முன்னோர்களுக்கு நாம் தருகின்ற வட்டி தானே தவிர அவர்களுக்கு நாம் பட்டிருக்கின்ற கடனை என்நாளும் எவ்வகையிலும் அடைத்துவிட முடியாது.

நாம் சாலையில் அடிப்பட்டால் சாகக் கிடந்தால் நம்மை யாராவது ஒரு நல்லவனாவது மருத்துவமனையில் சேர்ப்பான் என்ற ஒரு நம்பிக்கையில் தான் நாம் ஒவ்வொருவரும் துணிந்து சாலையில் வண்டி ஓட்டிச் செல்கிறோம். அந்த நம்பிக்கை ஒளிதான் என்றும் அணையாத அறத்தின் ஒளி. அதுவே மானுடம் என்ற பெரு நதியின் ஜீவ ஊற்று. அந்த அற உணர்வு என்ற ஊற்றை வற்ற விடாது காப்போம். மானுடப் பேரறம் என்ற ஒளியை என்றென்றும் ஏந்தி நிற்போம்.

தொடர் அற விவாதங்களை உருவாக்கி அற விழுமியங்களை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வளர்ப்பதற்காக நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இந்தக் கதைகளின் நித்திய வேள்வி வாழ்க வளர்க!

உங்கள் அற விவாதங்களுக்கான, அவைகளை உள்ளடக்கிய கதைகளுக்கான அட்சய பாத்திரம் என்றும் குன்றாது இருப்பதாக!

மாநிலமெங்கும் அற விழுமியங்கள் ஓங்கி வளரட்டும்! மண்ணில் மானுடம் என்றென்றும் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழட்டும்!

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

கேளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

இந்த வாசகர் கடிதங்கள் வழியாக கதைக்குள் செல்வது நாம் காணாத பலவற்றை காணவைக்கிறது. கேளி கதையை ஒரு திருவிழாவை மீண்டும் நினைவுகூறும் கதை என்றே நினைத்திருந்தேன். ஆனால் கடிதங்களைப் படிக்கப்படிக்க ஒட்டுமொத்தமாக வாழ்க்கையையே நினைவுகூறும் கதை என்று புரிந்துகொண்டேன். நினைவு என்பதே இப்படி ஒரு சின்ன விரிசல் வழியாகத்தான் வந்துகொண்டிருக்கிறது. தீற்றல் கதைகூட இதைத்தான் பேசுகிறது.

செல்வி மகேந்திரன்

அன்புள்ள ஜெ ,

கேளி. இதுபோன்ற கதைகளை கதைக்குள் வரும் உருவங்களை தொடர்புபடுத்தி வாசிக்கும் போதுதான் சரியான வாசிப்பு நிகழ முடியும் என்று தெரிகிறது.

விழித்தெழுந்ததும் உள்ள ஓசையின்மையும் கண்களை குத்தும் ஒளியும் உணர செய்வது வெறுமையை. கதை சொல்வது போல “ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகி செல்கிறது, ஓசை இல்லை என்றால் அது எங்கோ தரைதட்டி நின்றுவிட்டது”

திருவிழாக்கள் முடிவில் எப்பொழுதுமே அந்த வெறுமையை கொண்டிருக்கும். பல நாள் திருவிழா முடிந்த மறுநாள் காலையின் கோயில் திடல் உணர்த்தும் வெறுமை அனைவரும் உணர்ந்தது.

இக்கதையில் வீடுகள், தெரு, ஊர், கோயில் என அனைத்தை பற்றியும் வரும் விரிவான சித்திரம் உணரசெய்வதும் அந்த வெறுமையை தான்.

இக்கதையில் வெறுமையையும் அதை நிறப்பும் உள்ளுரைந்தவைகளும் உருவகங்களாக வந்தபடியுள்ளன. ஆற்றில் வற்றாத மீன்கள், டீ, ஈரமான சிவப்பு ஜட்டி, சோம்பல் முரிப்பது, இசையின் தாளம் என.

கதையின் புறச்சூழல் அப்படி இருக்கிறதே ஒழிய மனிதர்களின் அகம் அப்படி இல்லை. அந்த இசை அவனிடம் மட்டுமல்ல அந்த  கிழவரிடமும் இருக்கிறது. அவரில் இருந்து அவனுக்கு பற்றி கொள்ளுகிறது. பெண்களின் உடலசைவில் அந்த தாளம் இருக்கிறது.

மோகனம் என்பது  மயக்கும் அழகு. ஓர் ஊரே அல்லது மானுடமே திருவிழா மூலம் என்ன செய்கிறது.  இசை மூலம் ஓசையின்மை என்னும் பிரமாண்ட வெறுமையை, அழகு மூலம் அந்த காலமின்மை என்னும் நதியை கடக்கிறார்கள் என்று இக்கதையை வாசிக்கலாமா.  அல்லது  உள்ளே மோகனமாகவே இருந்து வெளியே காணும் அனைதிலும் மோகனத்தையே காண்பது  மாயை அல்ல என்றா.

நன்றி

பிரதீப் கென்னடி 25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 11:32

விசை, எச்சம் – கடிதங்கள்

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

விசை கதையை வாசிக்கும்போது சென்ற தலைமுறையினருக்கு இருந்த மன உறுதியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். என் சொந்தகாரர்களின் வீட்டில் ஒரு சாவு. இறந்தது 12 வயதுப் பையன். அவர்களின் பாட்டி “செரி, போனது போச்சு. ஆகிறதைப் பாப்போம்” என்று சொன்னார். மற்றவர்கள் உடைந்து அமர்ந்திருந்தனர். பாட்டிதான் வந்தவர்களுக்கு தேவையான எல்லாம் செய்தார். நிதானமாக இருந்தார். நாங்களெல்லாம் பாட்டியை கல்நெஞ்சு என்று திட்டியபோது ஒரு மாமா சொன்னார். பாட்டியின் 4 மகன்கள் இளவயசிலேயே செத்துவிட்டனர். ஒரு மகன் மட்டும்தான் மிச்சம் என்று. எல்லாமே பார்த்துவிட்டார்கள். அந்த விசைதான் அது. அந்த விசை கடவுளுக்கும் விதிக்கும் எதிரான மனிதனின் விசை

அருண் சந்திரசேகர்

 

அன்பு ஜெ,

“விசை” எனக்கு அனக்கனின் பாட்டியான கொரம்பையம்மாவை நினைவு படுத்தியது. ஆமைக்காரி என்று அழைக்கப்பட்டு கொரம்பையையே கூடாக்கி வாழ்ந்தவள் அவள். ஆனால் இங்கு ஓலைக்காரியைக் காணித்திருக்கிறீர்கள். விசை என்ற சொல் மேலும் பெருகி “உயிர்விசை என்ற சொல்லாக என்னுள் நின்றது.

வாழ்வென்னும் இந்த பயணப்பாதையில் ஏதோவொரு விசை ஏதோவோர் தருணத்தில் நம்மை அது நோக்கி உந்துகிறது. அது நம்முள் நிகழ்த்தும் தாக்கத்தால் இனி ஒரு போதும் அதை விட இயலாது இறுகப் பற்றிக் கொண்டு பயணப்பட்டு மாண்டு போகிறோம். எல்லோரும் அத்தகைய விசை கொண்டு வாழ்வதில்லை. ஆமைக்காரி, ஓலைக்காரி என்று நிலைக்குமளவுக்கான விசை மிகச் சிலரிடமே இருக்கிறது. புனைவுக்களியாட்டு சிறுகதைத் தொகுப்பில் அத்தகைய விசையோடு இருந்த பலரை நினைவு கூர்ந்தேன். ஷம்பாலாவை நோக்கிய பயணப்படும் ஆடமின் விசை, தங்கப்புத்தகத்தை நோக்கிய பாட் -ன் விசை, சிற்பக்கலையை நோக்கிய குமரனின் விசை. அருகே கடலின் கதை சொல்லிக்கு புத்தகம் நோக்கிய விசை; கல்வியின் மீது ஆனந்தவள்ளிக்கு இருந்த விசை; அரிகிருஷ்ணனுக்கு துப்பறிவதில் இருந்த விசை… இது தவிரவும் தீவண்டி ஜான், காளியன், காரியாத்தான் யாவருக்குள்ளும் ஏதோவொரு விசை இருந்து தான் அவர்களை முன்நகர்த்திச் சென்றிருக்கிறது.

ஆனால் சில விசைகள் விடுபட வேண்டியவையாக இருக்கிறது. வாழ்வின் மொத்தத் தருணங்களையும் அது விழுங்கிச் செறிக்கும் விசையாக மாறிவிடுகிறது. அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேறோர் விசையை பற்றிக் கொள்ள தெளிந்தமனது தேவைப்படுகிறது.

எங்கள் கிராமத்தில் ஒரு அத்தை எந்நேரமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருப்பாள். யாரையும் அவள் வீட்டுக்குள் விடுவதில்லை, யாரிடமும் பேசுவதில்லை, வெளி வாசலை மட்டுமே இரண்டு மணி நேரமாக பர் பர் என்று கூட்டிப் பெருக்குவாள். அவள் வீட்டின் வாசல் மட்டும் ஒரு இன்ச் தரைக்குக் கீழே இருக்கும். அவளுடைய கணவர் ஊரிலேயே வேறொருவருடன் காதல் கொண்டது தெரிய வர அதன் பின் மேலும் விசையுடன் சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவளை எங்கள் வீட்டின் முற்றத்து அரட்டைகளின் போது கிண்டல் செய்வதை பார்த்திருக்கிறேன். பாட்டி வீட்டிற்கு செல்லும் போது அவள் வாசலை பார்க்கத் தவறுவதில்லை. அவள் இன்றும் நித்தமும் நாள்முழுவதும் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறாள். அவளுக்கு அதிலிருந்து விடுதலையில்லை. ஓலைக்காரியின் விசையையுங் கூட அப்படி ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அவள் தன் அடிமை வாழ்வு, கணவனின் இறப்பு என ஏதோவொன்றிலிருந்து வெளிவரும் விசையாக ஓலையைத் தேர்ந்தெடுத்து அந்த விசையின் உச்சியிலேயே மரணத்தைத் தழுவியிருக்கிறாள். அவள் அதிலிருந்து வெளிவந்திருக்கலாம் தான். ஆனால் அது ஒரு தவம். அது அடையும் இறுதிப் புள்ளியும் தவம் செய்பவர் இறுதியில் அடையும் புள்ளியும் ஒன்றே என்று கருதுகிறேன். இங்கு விசைகளுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் நியூட்டன் சொல்வது போல அவற்றின் தீவிரத்தைப் பொருத்து ஒரு பொருளின் முடுக்கம்  (F=ma) அமைகிறது. இங்கு இந்தக் கதையில் ஓலைக்காரியின் விசையையும், அவளின் முடுக்கம் சென்றடைந்த திசையையும் காணித்திருக்கிறீர்கள். தரிசணமாய் அமைந்தது. நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

 

எச்சம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

எச்சம் கிட்டத்தட்ட என் அப்பாவின் கதை 36 ஆண்டுகளில் மொத்தம் 2 நாட்கள்தான் கடையை மூடியிருந்தார். காமராஜ் பக்தர். ஆனால் காமராஜ் இறந்த அன்றுகூட கடை திறந்தார். அன்று வந்த லாபத்தை காமராஜர் பேருக்கு கோயிலுக்கு கொடுத்தார்.  தன் சொந்த திருமணத்தின்போதே மதியத்துக்குமேலே கடைதிறந்துவிட்டார். அந்த தொழிலே தான் என ஆகிவிட்டவர். அது ஒரு வகை தவம். அங்கே ரெஸ்ட் என்பதே கிடையாது

என். மணிக்குமார்

 

அன்புள்ள ஜெ,

எச்சம். எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆதி தெய்வம். அவர் புவியில் செய்ய வேண்டிய செயல்கள் இன்னும் எஞ்சி இருக்கிறது. அவரால் காக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதன் பின் தான் ஓரமாக நிற்க்கும் இளைஞர்களாகிய   முருகனும் ஏசுவும் சொல்வது வாஸ்தவம் என்றாலும் அவரால் கேட்கமுடியும். மண்ணில் அனைவருக்கும் சொத்து கிடைத்து, அனைவருக்கும் ஓய்வெடுக்கும் வாய்ப்பு வந்தபின் தான் அவர் அகத்தில் சாந்தி ஏற்படும், அதன் பின்தான் அவரால் சமாதிநிலை போன்ற எஞ்சியதை யோசிக்க முடியும். அதனால் தான் அவருக்கு ரெஸ்ட் செரியாகவராது அதைதான் அந்த இளைஞனுக்கும் சொல்கிறார்.

இறந்தபின்னும் ரெஸ்ட் நமக்கு தேவையில்லை. மீண்டும் திரும்பி வந்து செய்ய வேண்டிய செயல் இருக்கிறது என்று சொல்கிறா அறுமுகபெருமாள் நாடார்.

உலகில் அனைவராலும் என்று ரெஸ்ட் எடுக்க முடியுமோ அன்று தான் இவராலும் ரெஸ்ட் எடுக்க முடியும். ஏன்னென்றால் இவர் பசியை பார்த்தவர். அவர் கடையாட்களை வசைபாடுவது ஒரு நடிப்பு, அவர்களையும் ஆளாக்கிவிடதான் அவர் உழைக்கிறார். அனைவருக்கும் என்று செத்து இருக்கிறதோ அன்று தான் அவருக்கு பீஸ்.

ஆனால் அத்தனை பேர் பட்டினியில் ஓடும் பொழுது பக்கத்தில் இருந்துகொண்டே, அவர்களிடமிருந்து எடுத்து கொண்டதை வைத்தே எப்படி வெள்ளைகார துரையால் ரெஸ்ட் எடுக்கமுடிந்தது. இன்றும் ஏழ்மையில் இருக்கும் இந்தியாவில் கோவலத்தில் வந்து அவர்களால் இளைப்பாற முடிகிறது. இதுதான் இருவேறு அழகியல் மரபுகளான வசனத்துக்கும் நடிப்புக்கும்மான வித்தியாசமா. கிழக்குக்கும் மேற்க்குக்கும்.

சொர்க்கத்தில் இருக்கும் ஆறு தெய்வங்களும் அறுமுகபெருமாள் அவர்கள்தான்.  இங்கு வாழும் ஏழைகளும் சொத்து இல்லாதவர்களும்தான் எம்.ஏ.எம். ஆறுமுகபெருமாள் நாடாருடைய சண்ஸ் என்று வாசிக்களாமா.

25 கதைகள். ஆம் இனிமையான பயணம். கற்பிப்பதும்.

 

நன்றி

பிரதீப் கென்னடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 11:32

இந்து என உணர்தல்- கடிதம்

இந்து என உணர்தல் இந்து என உணர்தல்- ஒரு கடிதம்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இன்று தளத்தில் “இந்து என உணர்தல்” கட்டுரையைப் படித்து சிறிது புலங்காகிதம் கொண்டு ஒரு மேம்பட்ட உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டேன். இக் கால சூழ்நிலைக்கு மிகவும் தேவையான ஒரு கட்டுரை. இந்து மதம் என்றால் என்ன என்று புரியாமலேயே மேம்போக்கான ஆதாரமற்ற வாதங்களை அறிவுஜீவி வேடம் புனைந்து பலர் இளைய சமுதாயத்தை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தெளிவான அறிவுப்பூர்வமான பகுத்தறிவுக்கு உகந்த அனுபவப் பூர்வமான கட்டுரைகளே இன்றைய தேவை.

அறிவுஜீவி வேடமிட்டு மேலைக் கைக்கூலிகள் ஒரு பக்கம் குழப்புகிறார்கள் என்றால், அதற்கு ஏற்றார் போல சில அடிப்படைவாதிகளும் தங்கள் பிற்போக்குத் தனத்தை கால மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல், இன்னமும்கூட குருட்டுப் போக்கில் எதை எதையோ பேசி நிலைமையை மேலும் சிக்கல் ஆக்குகிறார்கள். அது போதாதென்று மதத்தை கையில் எடுத்து சுய அரசியல் லாபத்திற்காக

ஒரு கூட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று பேருக்குமே சனாதன தர்மத்தை பற்றி அதன் தரிசனத்தை பற்றி அதன் உன்னதங்களை பற்றி, அதன் விரிந்த தன்மை பற்றி பெரிதாக ஒரு மண்ணும் தெரியாது. உள்ளங்கை நீரை கொண்டு கடலாக்கி காட்டி கும்பி நிறைக்கும் கூட்டம்

இந்துமதம் என்பது ஏதோ பிராமணர்களுக்கும் மேல்தட்டு வர்க்கத்திற்கும் ஆதரவான ஒரு மதம் என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்து மதம் இந்தியர்களுக்கான மதம். இந்துமதம் என்பதை சனாதன தர்மம் என்று அழைப்பதே சாலச் சிறந்தது. இது ஒரு தொகுப்பு வாழ்வியல் முறை. இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்குமான பண்பாட்டு களஞ்சியம். பலநூறு ஞானியர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக திரண்டு வந்த மாபெரும் தத்துவ தரிசனமே, உலகம் முழுமைக்குமான பெரும் கொடையே சனாதன தர்மம். சனாதன தர்மம் என்று சொல்லும் பொழுது, இங்கே நான் இந்தியாவில் தோன்றி கொண்டும் கொடுத்தும் வளர்ந்து இன்றுவரை வந்துள்ள ஒட்டுமொத்த இந்திய வாழ்வியல் முறையை குறிப்பிடுகிறேன். இந்து, பௌத்தம், சமணம், சீக்கிய என்று வேறுவேறாக இன்று அறியப்பட்டாலும் இவை அனைத்தும் உரையாடி திரண்டு வந்துள்ள ஒன்றே இன்றைய சனாதன வாழ்வியல் முறை. இன்றைய இந்திய இந்து மதம் என்பது ஒருவகையில் இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களின் உரையாடலினால் திரண்டு வந்த ஒன்றே.

ஜாதிகள் இல்லாத ஒரு நாள் நிச்சயம் இங்கு வரத்தான் போகிறது. ஜாதிகளை காரணம்காட்டி எவர் ஒருவராலும் சனாதன வாழ்வியல் முறையை இங்கே அழித்துவிட முடியாது. ஜாதிகள் அழிவதற்கான முகாந்திரம் நிறைய இடங்களில் மிகத் தெளிவாகவே தெரிகிறது. எல்லாத் தரப்பு இளைஞர்களும் யுவதிகளும் இதை துணிந்து முன்னெடுத்து கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக பிராமண இளைஞர்களும் பெண்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அந்த சமூகம் தான் கலப்பு மணங்களை அதிதீவிரமாக

ஆதரித்தும் ஏற்றும் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. இது மெல்ல மெல்ல மற்ற ஜாதிகளிலும் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. ஓட்டு வங்கி அரசியல் மட்டும் இல்லையென்றால் ஜாதி என்றோ இன்னும் விரைவாக அழிந்து போயிருக்கும்.  இவர்கள் அரசியல் நடத்த ஜாதியை வைத்து கொண்டு, சனாதன தர்மத்தின் மீது பழி போடுகிறார்கள். ஆனால் விடியல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 100 ஆண்டுகளாக ஜாதியின் பிடியிலிருந்து இந்து மதம் வெகுவேகமாக விடுபட்டு கொண்டிருப்பதை நாம் கண்கூடாக காணலாம். கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்து மதம் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது.அதன் மெய்யியல் தத்துவங்களும் தரிசனங்களும் உலகம் முழுமைக்கும் ஆனது. ஜாதி, இனம், மொழி, தேசம், ஏன்? மதம் கூட கடந்தது சனாதன தர்மம்.

எனது பிரத்யட்ச அனுபவத்தை கொண்டு திட்டவட்டமாக இதை நான் கூற முடியும். இன்று இந்தியாவில் உள்ள மொத்த சனாதன தர்ம துறவிகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களே. ராமகிருஷ்ண மடமும், சிவானந்த ஆசிரமும், சின்மயா மிஷனும், ஆர்ஷ வித்யா குருகுலமும் என இன்னும் எத்தனையோ பல அமைப்புகள் முறையாக துறவு அளிப்பதற்கு முன்பாக எந்த ஜாதி எனக் கூட கேட்பதில்லை. இவ்வளவு ஏன் சில உபநிடதங்களும் விவேகசூடாமணியும் துறவுக்கான அடிப்படைகளில் ஒன்றாக பிராம்மண குடிப்பிறப்பை சுட்டும் இடங்களை, பல ஆச்சாரியார்கள் வெகு சுலபமாக அவைகள் அந்த பழைய காலகட்டத்திற்கு வேண்டியவைகளாக இருந்திருக்கலாம் ஆனால் இன்றைக்கு அவைகள் தேவையில்லை என இயல்பாக சொல்கிறார்கள். இன்று எல்லாத் தொழில்களையும் எல்லோரும் செய்ய முடியும் என்கின்ற பொழுது வர்ண பிரிவினையே அர்த்தமற்றுப் போகிறது என்று கூடுதல் விளக்கம் அளித்து கடந்து செல்கிறார்கள். ஒரு சில ஆசார மற்றும் பழமை வாதிகளின் மடங்களை தவிர்த்து பெரும்பாலான அமைப்புகள் குடிப்பிறப்பு விஷயத்தில் முற்போக்காகவே செயல்படுகின்றன.

அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி எந்த ஒரு ஞானிக்கும் பிறப்பு மூலம் காணததாகவே நமது மரபு இருந்து வந்துள்ளது. தன்னை அறிந்த ஒருவன் எந்த வர்ணமாக இருந்த போதும் துறவு பாதையைத் தேர என்றைக்குமே சனாதன தர்மம் பூரண அனுமதி அளித்திருந்தது. அப்படி உதித்தவர்கள்தான் பலப்பல ஞானியர்கள் இங்கே. மடத்தின் பரம்பரை சொத்துக்களை எவ்வகையிலேனும் காக்க முயன்று கொண்டிருக்கும் சில காவல் பூதங்களை, ஜாதிவாதம் பேசுகின்ற  ஆசார வாதிகளை ஞானிகள் என்ற கணக்கில் எடுத்துக் கொள்வது ஏற்புடையதல்ல. ஏனெனில் அத்தகையவர்கள் சனாதன தர்மத்தின் துறவுக்கான அடிப்படை இலக்கணம் கூட அறியாதவர்கள். தன்னலத்தின் பொருட்டு விலை போனவர்கள்.

ஜாதி என்ற ஒன்றை மட்டும் கொண்டு சனாதன தர்மத்தை தாக்குவதை போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. உங்கள் கட்டுரை இதை வெகு அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளது.

சற்று காட்டமாக எதிர்வினை ஆற்றி உள்ளேன் என்பதை அறிவேன். சில பூனைகளை, பல பச்சோந்திகளை இது உறுத்தக் கூடும். எனினும் இதன் தேவை கருதி இது இவ்வண்ணமே அமைவதே நன்று. புத்தரின், விவேகானந்தரின், வள்ளலாரின், ரமணரின் நாராயண குருவின் வழி வந்த எவனும் இதையே சொல்வான். ஆயிரம் கோடி கைகள் மறைத்து நின்றாலும் சனாதன தர்மத்தின் ஞான தரிசனத்தின் ஒளி என்றும் மறைவதே இல்லை. அதன் ஒரு சிறு அங்கமாக உள்ளே இருக்கின்ற, அதைச் சாராத, மற்றும் வெளியிலிருந்து அதை அழிக்க நினைக்கின்ற மூடர்களின் மூச்சுக்காற்றால் அது அணைந்து விடுமா என்ன?

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 11:31

March 29, 2021

நாட்டார்கலைகளில் ஆபாசம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் சில கரகாட்ட காணொளிகளை யூடியூபில் கண்டேன் https://www.youtube.com/watch?v=1W5bPH2NUxA . இதில் பெரும்பான்மையானவை பால் உணர்வுகளை தூண்டும் படியும் பால்உறவுகளை பற்றி பேசுவது போன்றே உள்ளன.  இதுதான் உண்மையான கரகாட்டமா அல்லது காலப்போக்கில் இப்படி ஆகிவிட்டதா.

நான் நகரத்தில் வளர்ந்தவன் எனக்கு தெரிந்து இவ்வளவு பொதுவாக பாலியில் விஷயங்களை பொதுவெளியில் பேச மாற்றங்கள்.  நமது பண்பாட்டில் பாலியில் விஷயங்களை திறந்து பேசும் வழக்கம் இருக்கிறதா , மேலை கல்விமுறையில் இதெல்லாம் பொது வெளியில் பேசக்கூடாது என்ற உருவாக்கம் ஏற்பட்டுவிட்டதா?

நன்றி,

இராமகுமரன்

அன்புள்ள இராமகுமரன்

உலக அளவில் இரண்டு தளங்களில் இடக்கரடக்கலை கடந்து ‘ஆபாச’த்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஒன்று, நாட்டார்கலை. இரண்டு, பகடிக்கலை.

நாட்டார்கலை ஐரோப்பாவில் பெரும்பாலும் ஜிப்ஸிகளிடம் இருக்கிறது. அதன் தவிர்க்கமுடியாத அம்சம் பாலியல்பிறழ்வும் மீறலும் அவை சார்ந்த பகடியும். இந்தியாவிலும் எல்லா பகுதிகளிலும் நாட்டார்கலைகளில் இந்த கூறு உண்டு.

ஏறத்தாழ இந்த காணொலியில் உள்ள இதே வடிவை, இப்படியே, வடக்கே ஜாத்ரா என்ற பெயரில் நடத்துகிறார்கள். தாராசங்கர் பானர்ஜி எழுதிய கவி என்ற வங்காள நாவல் இந்த ஜாத்ரா என்னும் கலையில் ஈடுபடும் கலைஞனைப் பற்றியது

நாட்டார்கலைகளில் ஏன் ‘ஆபாசம்’ இருக்கிறது என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஒன்று, இவை உடல்சார்ந்த உழைப்பாளி மக்களுக்குரிய கலைகள். ஆகவே இவை கலைப் பயிற்சியற்ற பார்வையாளர்களுக்குரியவை. அவர்கள் ரசனையை இவை காட்டுகின்றன.

அத்துடன் உடல்சார் உழைப்பாளிகளின் இன்பம் உடல்சார்ந்தது. உடல் அவர்களுக்கு இடக்கரடக்கல்கள், பூடகங்கள் கொண்டது அல்ல. உடலை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதன் விழைவையும்கூட. ஆகவே நாம் ஆபாசம் என நினைப்பதை அவர்கள் அப்படி நினைப்பதில்லை.

இக்காரணங்களால், நம் உழைப்புக் களங்களிலேயே உழைப்பாளிகள் அல்லாதவர்கள் ‘ஆபாசம்’ என நினைக்கும் பேச்சுக்கள் நடந்தபடியே இருக்கும். வயல்வேலை செய்பவர்கள், கட்டிடவேலை செய்பவர்களின் பேச்சுக்களை கவனித்தால் இது தெரியும். அதை நான் காடு நாவலில் எழுதியிருக்கிறேன். அது அவர்களின் இளைப்பாறுதல் கொண்டாட்டம். அதுவே அவர்களின் கலையிலும் வெளிப்படுகிறது.

இன்னொரு விளக்கமும் இதற்கு அளிக்கப்படுகிறது. இந்த ’ஆபாசம்’ என்பதை மேலும் விரிவான பார்வையில் ‘மீறல்’ எனலாம். இதை ஆடுபவர்களும் ரசிப்பவர்களும் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்கள். அவர்கள் பலவகையிலும் அடக்கப்பட்டவர்கள். அவர்கள் அடக்குமுறைக்கு எதிர்வினையாற்றும் வழி இது.

சற்று கவனித்தால் தெய்வங்கள், அரசாங்கம், ஊர்த்தலைமை, ஆண்டைகள் ஆகியோர் இவற்றில் ஏளனம் செய்யப்படுவதைக் காணலாம். ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்லியல்பு எனச் சொல்லப்படுபவற்றைக்  கிண்டல் செய்வார்கள். படிப்பு, அறிவு போன்றவையும் கிண்டல்செய்யப்படும். இவை ஒருவகை எதிர்ப்புச்செயல்பாடுகள். பண்பாட்டில் இயல்பாக எழுபவை. இவை கீழிருந்து எழும் குரல்கள் என்பதனாலேயே பண்பாட்டில் எவ்வகையிலும் தவிர்க்கமுடியாதவை.

இந்த ‘ஆபாசக்’ கிண்டல்களை ஆய்வுசெய்து பல்வேறு சமூக உளநிலைகளை கண்டறிந்திருக்கிறார்கள். தெய்வங்கள் ,அரசர்கள், பிராமணர்கள், நாட்டாமைகள், பண்ணையார்கள் ஆகியோருக்குச் சமானமாகவே செட்டியார்களும் கிண்டல்செய்யப்பட்டிருப்பதை ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியிருந்தது. அது இவற்றை ஆடும் மக்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு எதிரான உணர்வுகள் இருந்தமைக்குச் சான்று.

நிறைய தருணங்களில் உள்ளூரிலுள்ள அநீதிகளும் சுரண்டல்களும் இந்த ஆட்டங்களில் சுட்டிக்காட்டப்படும். அவற்றுக்கு தீர்வும் உருவாகும். சுடலைமாடன், இசக்கி போன்ற சில தெய்வங்களுக்கு இந்தவகை ‘ஆபாச’ பேச்சு பிடிக்கும் என்றும், இவை  ஒருவகையான வழிபாடுகள் என்றும் பல இடங்களில் நம்பப்படுவதனால் இவற்றை அதிகாரவர்க்கம் தடைசெய்யவும் முடியாது.

கேரளத்தில் கொடுங்கல்லூர் பகவதி போன்ற சில தெய்வங்களுக்கு ஆபாசப்பாடல் பாடி வழிபடும் காவுதீண்டல் போன்ற சில வழிபாட்டுச் சடங்குகள் ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை இருந்தன – இன்றும் சிறிய அளவில் காணப்படுகின்றன. தமிழகத்திலும் இருந்து வந்தது. இன்று வழக்கொழிந்துள்ளது

மூன்றாவது விளக்கமும் உண்டு. எந்த நாட்டார்கலையும், எந்த நாட்டார் சடங்கும் அதற்கு முந்தைய பழங்குடிக்காலத்தில் வேர்கொண்டிருக்கும். பழங்குடிகளிடம் ஆண்டுக்கு ஓரிருமுறை கொண்டாடப்பட்ட கட்டற்ற பாலியலுறவுகொள்ளும் விழாக்களில் இருந்தே இந்தவகையான களியாட்டுக்கள் தோன்றி, காலப்போக்கில் வெறும் சொல்விளையாட்டாக மாறி நீடிக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

வட இந்தியாவில் அறுவடைத்திருவிழாவான ஹோலி பண்டிகையை ஒட்டியே ஜாத்ரா நிகழ்கிறது. அறுவடைக்கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் பாலியல் மீறலின் களியாட்டு இன்றும் அனுமதிக்கப்படுகிறது.

இம்மூன்று விளக்கங்களுமே நாட்டாரியலாளர்களால் முன்வைக்கப்படுபவை. இவற்றில் எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் உண்மையாக இருக்கலாம்.

பல வரலாற்றுத் தருணங்களில் இவற்றினூடாக மக்களின் எதிர்ப்பு ஒன்றுதிரட்டப்பட்டு பெரிய கிளர்ச்சியாக மாறியிருக்கிறது. கேரளத்தின் ரண்டிடங்கழி கிளர்ச்சி எனப்படும் இரண்டு கைப்பிடி கூடுதல்நெல் கோரும் போராட்டம் முழுக்கமுழுக்க இப்படித்தான் பரவியது. கேரளச்சூழலில் இக்கலையை மிக அதிகமாக கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொண்டனர். [தகழி சிவசங்கரப்பிள்ளை ரண்டிடங்கழி என்னும் நாவலை எழுதியிருக்கிறார்]

ஆனால் தமிழகத்தின் ஆரம்பகால கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் உயர்சாதியினர், தூய்மைவாதிகள், செவ்வியல்பார்வை கொண்டவர்கள். அவர்கள் நாட்டார்கலைகளுக்கே எதிரானவர்கள். ஆகவே இங்கே கம்யூனிச இயக்கத்துக்கும் நாட்டார்கலைகளுக்கும் தொடர்பிருக்கவில்லை. நாட்டார்கலைகளுடன் இணைந்திருக்கும் நாட்டார் தெய்வங்களின் வழிபாடுகளும் சடங்குகளும் அவர்க்ளுக்கு மூடநம்பிக்கையாகவே தோன்றின.

நாட்டார்கலைகளை ஆராய்ந்த முன்னோடியான நா.வானமாமலை கூட அவற்றிலுள்ள ‘ஆபாச’ அம்சத்தை வடிகட்டி அவற்றை ‘தூய்மைப்படுத்தி’யபின்னரே பதிவுசெய்தார். இவற்றிலுள்ள கெட்டாவார்த்தைகள், சாதிப்பழிப்புகள் ஆகியவற்றை அவர் தணிக்கை செய்தார். பின்னர் எண்பதுகளில் ஆலன் டன்டிஸ் போன்ற ஆய்வாளர்களின் தொடர்பால் ஐரோப்பிய நாட்டாரியல் ஆய்வுநோக்கு இங்கே வந்தபின்னரே அப்பார்வை நிராகரிக்கப்பட்டது.

இன்று நாட்டார்கலைகள் அருகி வருகின்றன. அவற்றை நிகழ்த்துபவர்கள் மையச்சமூக அமைப்புக்கு வெளியே இருக்கும் புறனடையாளர்கள். பலசமயம் நாடோடிகள்.அவர்கள் இன்று இல்லாமலாகி வருகிறார்கள். இன்று இவற்றுக்குப் பார்வையாளர்களும் இல்லை. ஆகவே இவை சினிமா சம்பந்தமான கூத்துக்களாக உருமாறிவருகின்றன. அவற்றை நடத்த நகர்ப்புறத்திலிருந்து வேறு  ஒரு தனிக்குழுவினர் உருவாகி வந்திருக்கிறார்கள். ’ஆபாச அம்சம்’ மட்டும் நீடிக்கிறது.

அதாவது நீங்கள் சுட்டும் இந்த ‘ஆபாச’ நாட்டார்கலையே அசல்தன்மையையை இழந்து ‘தரம்’ குறைந்து வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 11:35

நொபரு கரஷிமா

இனிய ஜெயம்

புத்தகச் சந்தையில் கண்ட அக்கணமே ஹய்யா என மனதுக்குள் கூவ வைத்த பெயர் நொபொரு கராஷிமா. உங்களது -வரலாற்றை வாசிக்க- பதிவில் விட்டுப்போன முக்கிய ஆளுமை.  அவர் எழுதிய= சுருக்கமான தென்னிந்திய வரலாறு; பிரச்னைகளும் விளக்கங்களும்= நூல் நா.மகாலிங்கம் அவர்களின் பதிப்பகம் வழியே வெளியாகி சில வருடம் கடந்திருப்பினும் இப்போதுதான் என் கவனத்தில் வருகிறது.

தென்னிந்திய வரலாற்று ஓட்டத்தை வரைந்தளித்த முன்னோடிகளில் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் திரு நீலகண்ட சாஸ்திரி. மற்றவர் திரு கே.கே. பிள்ளை. முன்னவர் ‘முதல்’ ஆதரங்களை வரிசைக்கிரமமாக அமைத்து அதில் தனது தலையீடு என ஏதும் இன்றி, உள்ளது உள்ளபடி தென்னிந்திய வரலாறு இவ்வாறுதான் என்று முன்வைத்தவர்.

இரண்டாமவர் அந்த முதல் ஆதாரங்கள் வழியே கண்டடைந்த  சமூக பண்பாட்டு வளர்ச்சியை தொடுத்து அதன் வழியிலான தென்னிந்திய வரலாற்றினை எழுதியவர்.  இருவருமே விஜயநகர சாம்ராஜ்ய காலத்துடன் நின்று விடுகிறார்கள். அங்கிருந்து மேலே செல்கிறார் கராஷிமா.

வரலாற்று வரைவுகள் மேலை சிந்தனையில் அரசர்களை மையம் கொண்டு துவங்கி, வர்க்க பேத உற்பத்தி உறவுகள் நோக்கு  என நகர்ந்து, சபால்டைன் வரலாறுகள் என்று முகிழ்ந்து, பின்நவீன மாபெரும் கதையாடல் என்று காணாமல் போய், அந்தக் கானல் தத்துவம் வறண்ட பின்னான வரலாற்று வரைவியல் என்னவாக பரினமித்துள்ளதோ, இந்த வரிசையின் நோக்கிலுள்ள நேர்மறை அம்சங்கள்  அதன் பின்னணி கொண்டு தொல் பழங்காலம் முதல் ஜனநாயக காலம் வரையிலான  இந்த தென்னிந்திய வரலாற்று நூலை கராஷிமா எழுதி இருக்கிறார். (வாசித்த பின்னர் விரிவாக எழுதுகிறேன்).

கராஷிமா எனக்கு அறிமுகம் ஆனது, முன்னர் வாசித்த – வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் ; சோழர் காலம் – எனும்  நூல் வழியேதான். அன்று வாசிக்கையில் ஒரு காலகட்டம் ஒன்றில் ஊடறுத்து அதன் சமூகஅரசியல், பொருளாதார வரலாற்றினை துப்பரிந்து கொண்டிருக்கிறோம் எனும் பரபரப்பை வாசிப்பு இன்பம் என நல்கிய அபூர்வமான ஆய்வு நூல் அது.

அந்த நூலின் முக்கியத்துவமே ஆய்வுத் தகவல்களுக்குள் இறுகிக் கிடந்த சோழர் கால  வரலாற்றை, அதன் அரசியல்  சமூக பொருளாதார வளர்ச்சி கூறுகளை கொண்டு உருக்கி ஓட விட்டு, ஒரு உரையாடல் களமாக அந்த காலத்தை மாற்றியது என்பதுதான்.

சோழர் காலம் குறித்த பொதுத் தகவல்களுக்கு வெளியே நின்று ஒரு வரலாற்று ஓட்டத்தை நிகழ்த்திக் காட்டிய நூல். 850 முதல் 1300 வரை முதல் இடை கடை காலம் என்று சோழர் காலத்தை மூன்றாக பிரித்து,  நில உடமை, சமூக கட்டுமானம், அரசு வருவாய் இந்த மூன்றும் முதல் பகுதியில் எவ்வாறு துவங்கி, இரண்டாம் பகுதியில் எவ்வாறு வளர்ந்து, மூன்றாம் பகுதியில் எவ்வாறு முழுமை கொண்டது என்ற வகைமையை கராஷிமா கல்வெட்டு ஆதாரங்கள் வழியே சித்தரித்துக் காட்டுகிறார்.

நாமறிந்த சித்திரத்துக்கு நேர் மாறாக, சோழர் காலத்தின் முதல் பகுதி நில உறவுகள்  பெரும்பான்மையும் மய்யப்படுத்தப்பட்ட ஒன்றாக அன்றி கூறுபடுத்தப்பட்ட ஒன்றாகவே ஐஐந்இருக்கிறது. இதை காவிரிக் கரையில் அமைந்த ப்ரம்மதேய ஊர் ஒன்றையும், வெள்ளான் ஊர் ஒன்றையும் அதன் நில நிர்வாக அமைப்பின் கல்வெட்டு ஆதாரங்கள் கொண்டு விரிவாக முன் வைக்கிறார்.

இரண்டாம் பாதியில் இந்த வெள்ளான் நிலங்கள் அடங்கிய நாடு, மண்டலங்கள் இவற்றுக்கு இடையே இவற்றை தொகுத்து அரசின் மைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்ற வள நாடு என்ற அரசு நிர்வாக பிரிவு அதன் வளர்ச்சி, பிரம்ம தேய நிலங்களும் வளநாடும் மய்யப்படுத்தப்பட்ட வகைமை  இவை வழியே மூன்றாம் காலத்தில் காவிரிக் கரையின் பெரும்பான்மை நிலம், நில உடமை சமூகமாக மைய படுத்தப்பட்ட அரசின் கீழ் வருவதை விரிவான தரவுகளின் பின்புலம் வழியே விவரிக்கிறார் கராஷிமா.

அரசு அதிகார படி நிலைகள், வரி வசூல் படி நிலைகள், வலங்கை இடங்கை உள்ளிட்ட சமூக படி நிலைகள், மதம் சார்ந்த அதிகாரம் இவை ராஜராஜன் காலத்தில் துவங்கி, அடுத்த காலத்தில் வளர்ந்து, மூன்றாம் காலத்தில் வரலாற்று சமுக பொருளாதார ஓட்ட காரணியை நிர்ணயிக்கும் அடுத்த கன்னியாக முழுத்து நிற்கும் சித்திரத்தை கராஷிமா அந்த நூல் வழியே எனக்கு அளித்தார்.  தமிழ் சமூகம் சார்ந்த கல்வியில் இந்த நூல் அளிக்கும் அளிக்கும் அறிவுசார் உவகையும் தன்னம்பிக்கையும் அலாதியானது.

கராஷிமா குறித்து தேடுகையில் தமிழ் எண்ம நூலகத்தில் இந்நூல் பொது வாசிப்புக்கு கிடைப்பதை கண்டேன்.

கடலூர் சீனு

சுட்டி கீழே

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6jZhy#book1/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 11:34

திருவட்டார்- கடிதங்கள்

”முழங்கும் ஒருநாள்” படித்தேன். துரியோதனவதம் கதகளி முடிந்து மூன்று நாட்கள் கடந்தபின்னரும், அந்த கதகளி காட்சிகளும், இசைக்கருவிகளின் ஒலியும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

”திருவாட்டாறில் துரியோதன வதம் கதகளி பார்க்க வாங்க” என முகநூலில் போட்டிருந்த பதிவைப்பார்த்து எழுத்தாளர் போகன் சங்கர் அழைத்திருந்தார். ”இரவு பத்தரை மணிக்கு மேல் கதகளி துவங்கி விடிய விடிய நடக்கும்” என்றேன்.

மாலையில் அவர் உங்களுடன் வருகை தருவதாகக்கூறியிருந்தார். நான் சிறுவயதில் திருவட்டாறு கோயில் திருவிழாவின் போது கிட்டத்தட்டஏழு நாட்கள் கோயில் வளாகத்தில் இருப்பேன்.. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்ப்பது, இரவிலிருந்து விடிய விடிய கதகளி பார்த்து, மறுநாள் பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் தூங்கி வழிந்து ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் உண்டு.சிலநாட்கள் கோயிலுக்குப்போய்விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்ததற்காக அப்பாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.

அப்பாவின் ஹோட்டல் திருவட்டாறு காங்கரையில் இருந்தது. காங்கரையில் “தாணுமாலை அய்யர்” கடை என்றால் பேமஸ். திருவட்டாறு அரசு போக்குவரத்துக்கழக கம்ப்யூட்டர் பிரிவில் உங்கள் அண்ணன் திரு. பாலசங்கர் வேலை பார்த்த காலத்தில்  எங்க ஹோட்டலில் பெரும்பாலான நாட்களில் எங்க ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறார்.  அவரது திருமணம் திருவட்டாறு ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் நடந்தபோது நீங்கள் வந்திருந்தீர்கள்.. உங்களை முதல் முதலில் சந்தித்தது அப்போதுதான். 1990 என நினைக்கிறேன்.

கதகளிக்கான  ”வேஷப்பெரை” (Makeup Room) முன்பு  கிழக்கு நடையின் முன்புள்ள பழைய ஷெட்டில் இருந்தது. இப்போது கதகளி மண்டபத்தின் பின்புறம் மாற்றி விட்டார்கள்.  வேஷப்பெரையில் கதகளிக் கலைஞர்கள்   ஒப்பனை செய்வதே ஒரு கலை..வர்ணங்களை, ஈர்க்கில் குச்சியில் தொட்டு நேர்த்தியாக, துல்லியமாக அவர்கள் முகத்தில் ஒப்பனை செய்யும் பாங்கையே வெகு நேரம் வேடிக்கைப்பார்ப்போம்.

கதகளியின் இடைவேளையில் சில நாள் கோயில் படிக்கட்டில் தூங்கியிருக்கிறேன். வளர்ந்த சேட்டைக்கார குசும்பர்கள், வேஷப்பெரையில் இருந்து வர்ணக்கலவை எடுத்து வந்து படியில் படுத்துத் தூங்குபவர்களுக்கு மீசை வரைந்து போவார்கள். அப்படி ஒரு முறை படிக்கட்டில் படுத்திருந்த எனது முகத்திலும் மீசை வரைய, விடியற்காலையில் என்னை எழுப்பிய அண்ணன் சிவகுமார் எனது முகத்தைப்பார்த்து சிரித்த சிரிப்பு இப்போதும் நினைவிருக்கிறது. கதகளி பெரும்பாலும் மகாபாரதக்கதையைக்கொண்டிருந்ததாலும், அந்த வயதில் அவை குறித்து சற்று தெரிந்திருந்தாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

குமுதம், குமுதம் தீராநதி, குமுதம் சிநேகிதி இதழ்களுக்காக உங்களை பார்வதி புரத்தில் உங்கள் வீட்டில் பல முறை சந்தித்திருந்தாலும், என்னுடைய ஊரான திருவட்டாறில் உங்களை அன்று வரவேற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். எப்போதும் போல மாறாத அன்புடன நலம் விசாரித்தீர்கள். கதகளியை ரசிக்க வேண்டிய விதம் பற்றி சொல்லித்தந்தீர்கள்.

அன்றைய தினம் திரநோட்டம்  காட்சியே முதலில் நம்மைக்கட்டிப்போட்டது. அதன் பின்னர் செண்டை தாளம், கடம் இசை முடிந்ததும், சற்று ரிலாக்ஸாக இருக்க வீட்டுக்கு அழைத்தேன். இரவு நேரம் என்பதால் உங்களை சரிவர உபசரிக்கவும் முடியவில்லை.  உங்களின் தளத்தை நான் அடிக்கடி படிக்காவிட்டாலும்,  வெள்ளாங்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றும் எனது மனைவி. எல். மீனாம்பிகா தினமும் படித்து விடுவார். முன்பு பதினைந்து ஆண்டுகளாக மாதம் இருமுறை நாகர்கோவில் ஒழுகினசேரி மைய நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வருவோம். அதில் பெரும்பாலானவை உங்களின் புத்தகங்கள்தான்.  ஒரு வருட லாக்டவுனுக்குப் பின்னர் நூலகம் செல்வதும் நின்று விட்டது. இணையமே துணை.. உங்களின் “ரப்பர்”, “காடு” புதினங்களை அடிக்கை சிலாகித்துச்சொல்வார். அவர் எழுதிய முதல் சிறுகதையும் மாலை மதி இதழில் வெளியானது. அன்று உங்களிடம் சரியாகப்பேசி , விருந்து கொடுத்து உபசரிக்க முடியவில்லை என வருத்தப்பட்டார்.

பின்னர் நாம் கோயில் சென்று விடிய விடிய கதகளி பார்த்தோம்.. வழக்கமாக கதகளி பார்க்க இருபது பேர் இருந்தாலே அதிசயம்..ஆனால் அன்றைய தினம் கிட்டத்தட்ட ஐநூறுபேர்வரை கதகளியை இறுதிவரை பார்த்து ரசித்த காட்சியைப்பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஞாயிறன்று சுவாமி பள்ளி வேட்டைக்கு தளியல் சிவன் கோயிலுக்குச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக சுவாமி எழுந்தருளும்போது கொட்டு மேளம், நாதஸ்வரம் ஒலிக்கும். காட்டாளனுடன் சுவாமி வேட்டைக்குச்செல்வதால் அமைதியாக ஆதிகேசவப்பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணனும்  கோயிலில் இருந்து இறங்கி ஊர்வலமாக வேட்டைக்குச்சென்றனர். பின்னர் தளியல் வேட்டை சிவன் கோயிலில் வேட்டை முடிந்து திரும்பும்போது தளியல் கிராம மக்கள், திருவட்டாறு மக்கள் வீட்டின் முன்பு விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது மேள தாளம் நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. வீடுகளின் முன்பு மக்கள் வழங்கிய மலர்களால் புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது

வேட்டையாடி முடிந்து கோயிலுக்குத்திரும்புகிறார் ஆதிகேசவப்பெருமாள்.  அப்போது கோயில் வாசல் அடைக்கப்பட்டது.  இது பற்றி ஏற்கனவே வழங்கப்படும் புராண சம்பவம் ஒன்று உண்டு.  வேட்டை முடிந்து கோயில் உள்ளே நுழைய முயன்றவரைத்தடுத்து நிறுத்தும் லட்சுமிதேவி அவரை கோயிலினுள் நுழையவிடாமல் ‘‘என்ன எங்கே போயிட்டு வருகிறீர்?’’ என சந்தேகத்துடன் கேட்க ஆதிகேசவப்பெருமாள்,‘வேட்டைக்குச்சென்று விட்டு வந்திருக்கிறேன்..!’’ என்று பதிலளிக்க அவரது பதில் தேவிக்கு திருப்தியாகவில்லை. இறுதியில் லட்சுமி தேவியின் கையைப்பிடித்து,‘‘தளியல் முத்தாரம்மை சத்தியமா நான் வேட்டைக்குப்போயிட்டு தான் வர்றேன்’’ என்று கூறியபின்னரே தேவி சமாதானமாகி பெருமாளை கோயிலினுள் நுழை விடுகிறார்.  இந்த புராண சம்பவம் நிகழ்த்திக்காட்டப்பட்டது.

சுவாமி வேட்டைக்கு கிழக்கு நடை வழியாக வெளியே சென்று விட்டு, வேட்டையாடி, மேற்கு வாசல் வழியாக உள்ளே செல்வார். நேற்று மாலை (29.ம் தேதி) ஆறாட்டுக்காக சுவாமி மேற்கு நடை வழியாக வெளியேறி, மூவாற்று முகம் ஆற்றில் ஆறாட்டுக்குச்சென்றுவிட்டு கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்கு வருகை தந்தார்.

இப்போது கோயில் புனரைமைப்பணிகள் நடந்து வருகிறது. விமானம் சீரமைக்கும் வேலைகள், கொடிமரத்துக்கு செப்புத்தகடு அமைக்கும் வேலைகள், மடப்பள்ளி சீரமைத்தல் நடந்து வருகிறது. கிருஷ்ணன் கோயிலில் மியூரல் பெயிண்டிங் வேலைகள் முடிவடைந்து, ஆதிகேசவப்பெருமாள் சன்னிதான கருவறையில் மியூரல் ஓவியம் வரையும் பணிகள் நடந்து வருகிறது. நான்கு மாதத்தில் கோயில் புனரைமைப்புப் பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் எனத்தெரிகிறது.

திருவட்டாறு கோயிலை நிகழ்வை உலகறியச்செய்த உங்களுக்கு நன்றி.

அன்புடன்,

திருவட்டாறு சிந்துகுமார்,

நிருபர் – குமுதம் வார இதழ், கன்னியாகுமரி & கேரளா

 

ப்ரியமுள்ள ஜெயமோகன்,

“முழங்கும் ஒரு நாள்” என்ற குறிப்பு பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது.

சின்னஞ்சிறு  பருவத்தில் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில் திருவிழாவில் ஒன்பதாம் நாளில் மாலை நான்கு மணிக்கு கேளிகொட்டு நடக்கும்.கதகளிக்காரர்கள் வந்து விட்ட செய்தி அது.

சிறுவர்கள் சிறுமியர் என்ற வேறுபாடு இல்லாமல் ஏராளமானோர் உடனே ஓடி கோயிலுக்குள் சென்று விடுவார்கள். ஸ்ரீ கோவிலின் பின்புற தளத்தில்தான் கதகளிக்காரர்கள் வேடம் போடும் இடம். அதற்காக பெரும்பகுதி அவர்களுக்கு தேவைப்படும். மல்லாந்து படுத்து கிடந்து சில மணி நேரங்கள் கூட ஆகும் வேடம் போடுவது முடிவதற்கு.

ஆட்டம் துவங்கியதும்  கதாபாத்திரங்கள் அந்த இடத்தைவிட்டு நடந்து மேடைக்கு நடந்து செல்லும்போது ஒரு கூட்டமாக நாங்கள் பின்தொடருவோம். சில விகிருதிக்காரர்கள் வேடமணிந்த வரின் ஆடையை தொட்டுப் பார்ப்பது நீண்ட கிரீடம் தாங்கிய முடிகளை தொட்டுப் பார்ப்பதுமாக தொடரும் பயணம். தொல்லை தாங்க முடியாமல் வேடம் போட்டவர் மேடையில் நடத்தும் மிதியை நடத்த நாங்கள் வெட்டி விலகிவிடுவோம்.

கதகளி துவங்கிய பின்பு கோயிலில் முதியவர்கள் முன்னால் அமர்ந்து இருக்க சிறுவர்கள் பின்னால் விளையாடிக் கொண்டிருப்பார்கள் .அது கண் கொள்ளா காட்சியாக தான் அப்போது இருந்தது. காலையில் சூரிய ஒளி வரும்போதும் சிறுவர்கள் கோயில் மணலில் தூங்கி எழுந்திருக்க மாட்டார்கள். கதகளி முடிந்து போனதும் அவர்களுக்கு நினைவில்லை.

திற்பரப்பு மகாதேவர் கோயிலில் கதகளி நாட்டிய குழு கதகளி நடத்தி யதை தொடர்ந்து திருநந்திக்கரை திரு நந்தீஸ்வரர் கோவில் விழாவிலும் பின்பு திருவட்டார் ஆதிகேசவ கோயிலில் முழு நாட்களும் கதகளி நடத்திக்கொண்டு அடுத்து பொன்மனை திரும்பி லால்குடி மகாதேவர் கோவிலில் 9ஆம் நாள் திருவிழாவில் ஒருநாள் கதகளியும்  நடக்கும்

புதிய தலைமுறைக்கு கதகளி அந்நியமாகி விட்டது.கன்னியாகுமரி திருக்கோயில் நிர்வாகம் சிறு தொகை மட்டும் கதகளிக்காக அனுமதித்து வந்தார்கள். அந்த தொகையை வைத்து எதுவும் செய்ய முடியாத நிலையில், கதகளி பிரியர்களும் புதிய தலைமுறையில் இல்லாத காரணத்தால் பாரம்பரிய  கதகளி அந்த நிகழ்ச்சி நிரலில் முடிவுக்கு வருகிறது.

இந்த ஆண்டு பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவிலில் 30– 3 –2021 ஒன்பதாம் திருவிழாவில் கதகளி இல்லை.இனி கதகளி காண கதகளி விரும்புவோர்களுக்கு செலவு அதிகமாகும்.

குறுகிய காலத்தில் கதகளி என்பது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் திருவிழாவில் தான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

அன்புடன்

பொன்மனை வல்சகுமார்,

கன்னியாகுமாரி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 11:32

படையல், நகை- கடிதங்கள்

படையல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் சொன்னார் ‘ஜெமோ இந்த நூற்றியிருபது கதைகளிலும் செக்குலர் ஆக எழுதுகிறார் பார்த்தீர்களா?” என்று

நான் ‘என்ன?’ என்று கேட்டேன். கதைகளில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்வத ஸ்பிரிச்சுவாலிட்டியை பேசுபவை இருந்துகொண்டெ இருக்கின்றன என்றார். முதுநாவல், படையல் போன்றவை இஸ்லாமிய ஸ்பிரிச்சுவாலிடி. அங்கி, கொதி லாசர் போன்றவை கிறிஸ்வ ஸ்பிரிச்சுவாலிட்டி. திரை போன்றவை இந்து ஸ்பிரிச்சுவாலிட்டி

ஜெமோ இதை வேண்டுமென்றே திட்டமிட்டு எழுதுகிறார் என்றார் நண்பர். நான் கேட்டேன். ‘சரி இப்படி எழுதினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?’. அவர் உடனே ‘அதெப்படி, அவர் சங்கி. ஏமாற்றுவதற்காக இப்படி எழுதுகிறார்’ என்றார்

’அதாவது நீங்கள் என்ன எழுதினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று தெரியாத அளவுக்கு அவர் முட்டாள். அவர் எதை எழுதினாலும் கண்டுபிடிக்கும் அளவுக்கு நீங்கள் அதிபுத்திசாலி. மொத்தமாக இதுதானே உங்கள் தரப்பு?” என்று கேட்டேன் ஒரு மொண்ணைத்தனமான வெற்றிச்சிரிப்புதான் பதில்

ஜெ, தமிழிலக்கிய வரலாற்றில் இத்தனை மொண்ணைகளால் சூழப்பட்டு எதிர்க்கப்பட்ட இன்னொரு எழுத்தாளர் இல்லை. இத்தனை வன்மம் எவர்மேலும் கக்கப்பட்டதில்லைல்லை

ஜெயராமன்

அன்புள்ள ஜெ

படையல் பலமுறை வாசித்த கதை. அந்தச் சூழலே அற்புதமானது. சுற்றியிருக்கும் மதம், அரசியல், கலவரம் அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு ஞானவெளி அது. அங்கே எல்லாம் ஒன்றுதான். சிவனடியார் சொல்வதுபோல தீயாக இருந்த எல்லாவற்றையும் வானமாக ஆக்கிக்கொண்டவர்கள் அவர்கள். அங்கே ஞான சிம்மாசனத்தில் எறும்புபாவா அமர்ந்திருக்கிறார்.

இன்றைய அரசியலும் இப்படித்தான் இருக்கிறது. வெளியே ரத்தம் ஓடவில்லை. ஆனால் அதே அளவுக்கு வெறுப்பு ஓடுகிறது. அதற்கு அப்பால் ஒரு ஞானவெளியாக இருக்கிறது இந்த கதைகளின் உலகம்

ஆர்.ரவீந்திரன்

நகை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த நூறு கதைகளின் வரிசையிலும் இருபத்தைந்து கதைகளின் வரிசையிலும் பல கதைகள் பெண்களின் வெற்றியைச் சொல்பவை. சென்ற நூறுகதைகளில் நற்றுணை அப்படிப்பட்ட ஒரு கதை. அந்தக்கதையின் தொடர்ச்சிகள் என்று இதில் நிறைவிலி, நகை போன்ற கதைகளைச் சொல்லமுடியும்.

நகை கதையை நற்றுணை கதையின் தொடர்ச்சியாகவே நான் வாசித்தேன். பெண் வெற்றிபெறுவதற்கு மரபு உருவாக்கும் தடைகள் நற்றுணையில் உள்ளன. அவள் தன்னை பேயாக ஆக்கி அதை கடக்கிறாள். வெற்றிபெற்றபின் உள்ள தடை அவளை வெறும் உடலாகச் சுருக்கும் முயற்சிகள். நான் உட்பட நாள் தோறும் சந்திப்பவை இவை. அவள் அதை சிரித்து கடந்துசெல்கிறாள்

தேவி

அன்புள்ள ஜெ

நகை. சடங்கு என்பது மிக அருகே இருந்து செய்வது. அங்கு அதில் யாருடைய மனமும் ஒன்றியில்லை. ஒருபுறம் மணமேடையில் சடங்கு நடந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் மணபெண் தொலைவில் இருந்து பார்க்க அழகாக இருக்கிறாள். அருகே சென்று பார்த்தால் அந்த மேக்கப் மூலம் ஜெல்லி மீனை போல் இருக்கிறாள். மரபு நவீனம் இரண்டிலும் அதில் ஈடுபட்டிருப்பவர்களின் அகத்துக்கும் புறத்துகுமான இடைவெளியை காட்டுகிறது அது.

அனந்தகிருஷ்ணன்  காலில் கதைசொல்லியாகிய விஜயகுமார் விழுந்தது தொட்டு வணங்கியது ஒரு புறநடிப்பு.  அதில் மன ஒன்றுதல் இல்லை. அனந்தகிருஷ்ணுக்கும அதில் நம்பிக்கையில்லை அது அவருக்கு நடிப்பாகவே படுகிறது. அவரும் அவனை சிறுமையே செய்கிறார். அந்த மரபான சடங்கு உணர்த்தும் எதுவும் அவர்கள் மணதுக்குள் இல்லை. பின் ஏன் இப்படி நடித்தேன் என்று சிறுமைக்குள்ளான விஜயகுமார்  சுயவெறுப்படைகிறான். பாத்ரூம் அறையில் தன் அகத்தை முழுவதும் திறந்து வைத்த கொள்கிறான். அதன் மூலம் ஒரு விடுதலையை உணர்வும் அகத்தை திறப்பது தவறில்லை என்னும் நிமிர்வும் அவனுக்கு வருகிறது.

சந்திரசேகர மாமா சென்ற காலகட்டத்துக்கும், ஷிவ் இந்த காலகட்டத்துக்கும் தன்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டவர்கள். அவர்களும் உண்மையான அகத்தை வெளிக்காட்டுவதில்லை அவர்கள் செய்வதும் நடிப்பு. அவர் செய்வது மார்கெட்டிங், ஷிவ் செய்து டிஸ்ப்ளே. கதைசொல்லி விஜயகுமார் மரபுக்கும் நவீனத்துக்கும் மையத்தில் சிக்கி இருக்கிறான். இறுதியில் நிர்பந்ததுக்காக மரபை மீறுவதற்காக தன்னை திரட்டி நவீனமாக முன்வைக்கிறான். அவன் அகத்தை தட்டுவது  போல் ஒரு கேள்வி வந்தால் அவன் பதறிவிட கூடும்.

ஆனால் அந்த பிரபா அத்தைக்கு எதார்த்தமும் இயல்பும் தெரியும். அவள் யாரிடமும் நடிப்பை எதிர்பார்ப்பதில்லை. அகத்தை திறந்து முன்வைக்க அவள் அனுமதிக்கிறாள். அந்த சிரிப்பு அவர்களின் அகவிரிவை காட்டுகிறது. அகத்துக்கும் புறத்துக்குமான இனைவுதான் அந்த முடிவு. ஷீலா ஒர்டேக்கா பிரபா அத்தை இருவரும் உண்மையான மரபு மீறல் இருண்டுக்குமான உருவகம்.

நன்றி

பிரதீப் கென்னடி

 

 

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.