Jeyamohan's Blog, page 1008
April 5, 2021
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-6
[ 6 ]
நாலைந்து நாள் கழித்துத்தான் படப்பிடிப்பு தொடங்கியது. நாளை படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லிச்சொல்லியே நாலைந்துமுறை தள்ளிவைத்தார்கள். ஏதோ ஒன்று வந்துசேரவில்லை. ஏதோ ஒன்று மக்கர் செய்தது. கட்டக்கடைசியாக ஜெனெரேட்டர் ஓடவில்லை. ஒவ்வொன்றுக்கும் அலைந்து ஆள்களை தேற்றிக்கொண்டுவந்து தொடங்கியபோது உண்மையிலேயே தொடங்கிவிட்டார்களா, இல்லை நின்றுவிடுமா என்றுதான் சந்தேகமாக இருந்தது. படப்பிடிப்பு ஒரு புதிய இடத்தில் தொடங்குவது பற்றிய எல்லா பதற்றங்களும் ஆர்வங்களும் வடிந்து அன்றாட வேலைபோல அது ஆரம்பித்தது.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கியபிறகு ஒரு பெரிய புயல் வந்து எல்லாவற்றையும் சுழற்றியடிப்பது போல ஆகியது. ஸ்டுடியோவில் எல்லாமே பல ஆண்டுகளாக நிலைபெற்று விட்டவை. ஒவ்வொன்றுக்கும் வழிகளும் மாற்றுவழிகளும் வழிகாட்டிகளும் கண்காணிப்பாளர்களும் உண்டு. இங்கே எல்லாமே புதியவை. எவருக்கும் எவரும் வழிகாட்டவோ ஆலோசனை சொல்லவோ முடியாது. ஆகவே முட்டிமோதிக்கொண்டோம். கூச்சலிட்டு வசைபாடிக்கொண்டோம். ஒவ்வொருவருவரும் சுழன்று பறந்து கொண்டிருந்தோம். என்ன செய்கிறோம் என்று ஒருவரை ஒருவர் நின்று கேட்டுக்கொண்டால் வெடித்துச் சிரித்திருப்போம்.
ஒவ்வொரு பொருளும் தேவையானபோது மறந்துவிட்டது. ஒன்றை எடுக்க பலவற்றை கலைத்தோம். ஒருவர் செய்யும் வேலை இன்னொருவரை வேலைசெய்ய முடியாமலாக்கியது. ஆனால் வேலை நடந்துகொண்டிருந்தது. ஏனென்றால் அந்தப் பதற்றத்தில் அகங்காரங்களும் தங்கள் இடம் பற்றிய சந்தேகங்களும் மறைந்துவிட்டிருந்தன. ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு உதவினார்கள். ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தார்கள். ஆகவே ஒற்றை விசையாக மாறினார்கள்.
ஒரு வேலை தீவிரமடையும்போது அது ஒரு புள்ளியில் மையம்கொண்டுவிடுகிறது. அதைத்தவிர வேறு உலகமே இல்லை. இருந்தால் அது அந்தப்புள்ளியைச் சுற்றிச் சுழல்கிறது. எனக்கு தையல்கொட்டகை, என்னுடைய வீடு தவிர நினைப்பே இல்லை. எங்கோ படப்பிடிப்பு நடக்கிறது என்பதே ஞாபகத்தில் இல்லை. என் வேலை துணிகளை அடுக்கி அனுப்புவது. கணக்குவைப்பது. படப்பிடிப்பு முடிந்தபின் திரும்ப வரவழைத்து அதேபோல மறுபடியும் அடுக்குவது. துணிகளில் திருத்தங்கள் செய்வது, புதிதாக தைப்பது.
துணைநடிகர்களுக்கான ஆடைகளை துவைப்பதில்லை, துவைத்தால் அவை சாயம்போய் அழிந்துவிடும். அவை வாரக்கணக்கில், சிலசமயம் மாதக்கணக்கில் வெவ்வேறு மனிதர்களால் மாற்றி மாற்றிப் போடப்படும். வியர்வையும் அழுக்குமாக மீண்டும் போட்டாக வேண்டும். துணைநடிகர்கள் துணிகளை எடுத்ததுமே முகர்ந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். புதிய துணிகளைக்கூட எடுத்து முகர்ந்து முகம் சுளிப்பார்கள்.
உண்மையில் புதிய துணிகளில்கூட எலிப்பாஷாண நாற்றம் அடிக்கும். அத்துடன் துணிகளில் கஞ்சிபோடும்போதே நவச்சாரமும் கலந்து விடுவோம். இல்லையேல் எலிகளையும் கரப்பான்களையும் சமாளிக்க முடியாது. பெருங்குவியலாக ஆகும்போது எல்லா பொருளுமே வேறு ஒன்றாக ஆகிவிடுகின்றன. மலையென குவிக்கப்பட்ட துணி ஒருவகை குப்பை, ஆடை அல்ல. புதியதே ஆனாலும்.
ஸ்ரீபாலாவுக்கான ஆடைகளை மட்டும் நானே அடியில் பருத்திவைத்து தைத்தேன். அவற்றை தனியாக அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு பொட்டலத்திலும் நீல ரிப்பனால் கட்டப்பட்ட ஏழெட்டு உடைகளாவது இருக்கும். மற்றவர்களை ஏமாற்றுவதற்காக மஞ்சள் சிவப்பு பச்சை ரிப்பன்களாலும் வேறு பொட்டலங்களை கட்டி அனுப்புவேன். அவை அவளை அடைந்தனவா என்று கேட்க எனக்கு நேரமில்லை. எதையுமே எண்ண பொழுதில்லை.
படப்பிடிப்பு எப்படி நடைபெற்றது என்று தெரியவில்லை. அதன் தொலைதூர அலை மட்டுமே என்னை அடைந்துகொண்டிருந்தது. என் இடத்தில் இருந்து படப்பிடிப்பை என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. நான் செய்ததெல்லாம் தையல்கள், தையல் மாற்றங்கள், எண்ணிக்கை பார்த்து அனுப்பிவைத்து எண்ணிக்கை பார்த்து திரும்ப எடுத்தல் மட்டுமே. ஆனால் ஓடும் வண்டியிலேயே இருந்து கொண்டிருப்பது போலிருந்தது. எப்போது விடிகிறது, எப்போது இருட்டுகிறது, எப்போது படுத்து எப்போது விழிக்கிறோம் என்றே தெரியாத ஓட்டம். அப்படி ஓர் இளமையை கழித்தவர்கள் அதை மறக்கவே மாட்டார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக ஓர் கால ஒழுங்கு அமைந்தது. படப்பிடிப்பு மாலை ஐந்துமணிக்கு முடியும். எல்லாரும் கலைய ஆறுமணி ஆகிவிடும். ஆடைகள் திரும்பிவர எட்டுமணி. அதன்பின் இனம்பிரித்து எண்ணி அடுக்கி பட்டியலில் சரிபார்த்து முடிக்க பத்துமணி. அதன்பிறகுதான் நான் குளித்து சாப்பிடுவேன். தூங்கும்போது பதினொருமணி ஆகிவிடும். கொஞ்சநேரம் அதுவரைச் செய்த வேலைகளின் விசை இருக்கும். மனம் பரபரப்பு அடங்கி ஓய அரைமணிநேரம் ஆகிவிடும்.
அதிகாலை நான்கு மணிக்கே பண்ணைவீடு எழுந்துவிடும். அதன்பின் தூங்க முடியாது. கூச்சல்கள், பாத்திர ஓசைகள். நான்கு மணிக்கெல்லாம் அன்றைக்கான ஆடைகளை எடுத்து அடுக்கி கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். காலை எழு மணிக்கு முதல் ஷாட் வைப்பார்கள். துணைநடிகர்கள் ஆறு மணிக்கே சாப்பிட்டு முடித்து ஆடையணிந்து மேக்கப் முடித்து தயாராக இருக்கவேண்டும். அப்படியென்றால் ஐந்து மணிக்கே ஆடைகள் கிளம்பிச் சென்றால்தான் முடியும். உதவி இயக்குநர்கள், கலை உதவியாளர்கள் ஐந்துமணிக்கே அங்கே இருப்பார்கள்.
ஆனால் மெல்லி இரானி காலை ஐந்து மணிக்கே வந்துவிடுவார். ஹம்பியின் பின்னணியில் சூரிய உதயத்தையே அவர் ஒவ்வொருநாளும் எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஃபில்டர்கள் மேல் மோகம் அதிகம். அப்போதுதான் அவற்றில் விதவிதமான சோதனைகள் நடந்துகொண்டிருந்தன. கறுப்புவெள்ளையை வெளியே இருக்கும் வண்ண உலகத்துடன் இணைப்பதற்கான முயற்சி. வண்ணங்களை ஒளிநிழலின் விளையாட்டுக்களாக, கருமையின் அழுத்த மாறுபாடுகளாக உருமாற்றிக் காட்டும் வித்தை.
உண்மையில் இல்லாத ஒன்றை உருவாக்குவதுதான் கலை. வண்ணத்தால் உருவாகி கண்ணுக்குத்தெரியும் அனைத்தையும் கறுப்புவெள்ளை வழியாக காட்டித்தருவதற்கு அன்றைய சினிமா செய்த முயற்சி மனிதகுலம் ஒரு புதிய கலையைக் கண்டு கொண்ட அற்புத தருணம். மனிதன் இசையை, ஓவியத்தை கண்டுபிடித்ததற்குச் சமானமானது அது. சினிமா உருவான முதல் இருபத்தைந்தாண்டுகளிலேயே கலையாக அது உச்சம்தொட்டுவிட்டது என்று என்னைப்போன்ற வயோதிகர்கள் சொல்வார்கள். ஆனால் அது உண்மை.
பிற்பாடு ஓரிரு வண்ணப்படங்களை நான் டிவியில் துண்டுகளாகப் பார்த்தபோது அதிலிருந்த அப்பட்டம் எனக்கு அருவருப்பையே ஊட்டியது. கறுப்பு வெள்ளை என்பது பூடகமானது. உண்மையில் அது எங்குமில்லாத ஓர் உலகம். ஒரு கனவு அது. முழுக்க முழுக்க ஒளிப்பதிவாளரால் உருவாக்கப்படுவது. மனிதன் காணவே முடியாத ஓர் உலகை உருவாக்கி முப்பது நாற்பது ஆண்டுகள் மனிதனை அது வாழ்க்கைதான் என நம்பவைத்திருக்கிறார்கள். அது இயற்கைதான் என எண்ணி மயங்க வைத்திருக்கிறார்கள். அதை இன்று எண்ணிப்பார்ப்பவர்களே இல்லை.
மெல்லி இரானி காலையில் வரும்போது அவர் மனதில் அன்றைய படப்பிடிப்பின் காட்சிகள் ஏதாவது இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். அவருக்கு அந்த விரிந்த இயற்கைதான் முக்கியம். அவருடைய உதவியாளர்கள் நான்கு மணிக்கே வந்து முந்தைய நாள் அவர் குறித்துக் கொடுத்த இடத்தில் காமிராவை பொருத்தியிருப்பார்கள். ஹம்பி கடல் தொலைதூரத்தில் இருக்கும் மையநிலம், ஆகவே மேகங்கள் குறைவு. கிட்டத்தட்ட பொட்டல் போல விரிந்த சமவெளி. ஏதாவது சிறிய பாறைக்குன்றின்மேல் காமிராவை பொருத்தினால் பிரம்மாண்டமான அகண்ட காட்சி கிடைக்கும்.
ஹம்பியில் காலை ஐந்தரைக்கே வானம் செக்கச்சிவப்பாக ஆகிவிடும். மெல்லி இரானி ஃபில்டர்களை மாற்றி மாற்றி அமைத்து கறுப்புவெள்ளையில் செக்கச்சிவப்பையும் பொன்வண்ணத்தையும் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருப்பார். பலநாட்கள் நான் சென்று பார்த்திருக்கிறேன். அவர் முகம் ஒரு வகை பரவசம் கொண்டதாக, விளையாடும் குழந்தைபோல, வெறிகொண்டதாக மாறிக்கொண்டே இருக்கும்.
நான் ஐந்துமணி நேரம்கூட இரவில் தூங்கமுடியாது. புது இடம், புதுவேலை என்பது ஆழத்தில் படிந்திருக்கும் கனவுகளை கலைத்துவிடுகிறது. என்னென்னவோ கனவுகள். பலசமயம் பொருளற்ற துண்டுகள், அரிதாக முழுமையான வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள். என் கனவில் ஸ்ரீபாலா வரவே இல்லை. மெல்லி இரானியும் சூரிய உதயங்களும்தான் வந்தன. ஒருநாள் அவள் ஏன் கனவில் வரவில்லை என்று எண்ணிக்கூட பார்த்தேன். பதில் தெரியவில்லை, மனம் என்ன செய்கிறதென்றே தெரியவில்லை.
அந்த இரவின் உச்சநிலைப் பரவசத்திற்கு பின் மறுநாள் காலையில் அப்படியே நிலத்துக்கு வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இதுவே நிகழ்கிறது. கனவின், பரவசத்தின் உச்சத்தில் உலவினால் அது உடனே மிகமிக யதார்த்தத்திற்கு கொண்டு வருகிறது. எப்போதெல்லாம் அவளை எண்ணி நெஞ்சம் களியாட்டமிட்டதோ அப்போதெல்லாம் மிக விலகி வந்திருக்கிறேன்.
கலைந்து கலைந்து தூங்கியதனால் இரவில் ஐந்து மணிநேரத் தூக்கம் என்பது மூன்று மணிநேரத் தூக்கத்திற்குச் சமம்தான். ஆனால் பகலில் ஒரு மணிநேரம் தூங்குவேன். வெளியே வெயில் எரிந்து கொண்டிருக்கும்போது கொட்டகைக்குள் புழுதிக்காற்றில் முகத்தின்மேல் துண்டை போட்டுக்கொண்டு தூங்குவது இனிய அனுபவம். அது ஆழ்ந்த தூக்கம் அல்ல. என்னைச்சுற்றி தையல் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஓசை. பேச்சொலிகள்.
ரேடியோவில் மதியம் பழைய தெலுங்கு பாட்டுகளை போடுவார்கள். மதியத்தூக்கத்தின் மயக்கத்தில் அவற்றை கேட்பது மனதை உருகி வழியச்செய்துவிடும். ஒரு புகைப்படலமாக பறந்துகொண்டு கரைந்துகொண்டு இருப்பேன். மென்மையான அழகான கனவுகள் வரும். நனவென்றே தோன்றும் கனவுகள். ஏனென்றால் நனவின் ஒசைகள் ஊடே கேட்டுக்கொண்டிருக்கும்.
ஒருநாள் அக்கனவில் அவள் வந்தாள். ஏதோ ஒரு தெலுங்குப்பாட்டின் இசைக்குழைவு அளித்த நெகிழ்வினூடாக. ஆனால் கனவில் அவள் மிக யதார்த்தமாக இருந்தாள். எப்போதும் ஏதோ ஒரு வேலைக்காகவே என்னைத் தேடிவந்தாள். ஆடையை திருத்தியமைக்க. புதிய ஆடைக்காக. ஒருமுறை அல்லூரி ரங்கராஜுவின் ஒரு பாட்டின் ஒருவரிக்கு பொருள் தெரிந்துகொள்ள.
அவள் எப்போதுமே ஒப்பனை இல்லாமல் இருந்தாள். மெழுகால் பாலீஷ் போடப்பட்ட குதிரைச்சேணம் போல மெருகேறிய மாநிறக் கன்னங்களில் மெல்லிய சிவந்த பருக்களும், செம்பருத்தி இதழ்போல சிவந்த சுருக்கங்கள்கொண்ட உதடுகளும், காதோரம் ஆடும் குறுமயிர்களுமாக. அவளுடைய உடலின் மணம், ஆடையின் தொடுகை, மூச்சின் அலைவு என்னை அடைந்தது. அவள் கைகளின் மென்மயிர். கண்விழித்து அவை கனவென உணர்ந்தபின்னரும் அந்த உணர்வு நீடித்தது. சிலசமயங்களில் மெய்யாகவே அவள் வந்தாள் என்றே என் நினைவு பதியவைத்துக்கொண்டது.
அப்போது தெரியவில்லை, பிறகெப்போதோ தான் அதை உணர்ந்தேன். அந்தக் கனவுகள் அனைத்துமே கறுப்பு வெள்ளை. அவளும் கனவில் கருப்பு வெள்ளைதான். அவளுடைய தோற்றத்திற்குக் கருப்புவெள்ளை போல உகந்தது வேறில்லை. ஹம்பியையே கறுப்புவெள்ளையில் மட்டும்தான் கற்பனைசெய்ய முடியும். பாறைகள், கரிய பாறையே உருகி உருவெடுத்ததுபோல கோயில்கள், ஒளிரும் மணல், மொட்டை வானம், வெயில்.
அன்றிரவு நான் தூங்க பன்னிரண்டு ஆகிவிட்டது. பலமுறை கதவு தட்டப்பட்டபோது விழித்துக்கொண்டேன். என் மேல் ஏதோ பலகைகள் விழுவதுபோல அந்த ஓசையை என் கனவு எனக்கு காட்டியது. ஆகவே ஒரு நிமிடம் கழித்தே கதவு தட்டப்படுகிறது என்பதை புரிந்துகொண்டேன். அதற்குள் விடிந்து விட்டதா என்று வியந்தபடி எழுந்தேன். என் வாய் உலர்ந்திருந்தது. கண்கள் எரிந்தன. உடலில் களைப்பு எடைபோல அழுத்தியது. எந்த எண்ணமும் இல்லாமல் விளக்கைப்போட்டுவிட்டு கதவை திறந்தேன்.
என்ன நடக்கிறது என்று நான் புரிந்துகொள்வதற்குள் வெளியே நிழலுருவாக நின்றிருந்த ஒரு பெண் என் அறைக்குள் நுழைந்தாள். அதேவேகத்தில் கதவை மூடினாள்.
“யார்? யார்?” என்று குழறினேன்.
“விளக்கை அணையுங்கள்… தயவுசெய்து … உடனே” என்றாள். அப்போதுதான் அது ஸ்ரீபாலா என்று கண்டேன். அவள் ஒரு பெரிய ஆண்சட்டை மட்டும் அணிந்திருந்தாள்.
நான் “ஏன்? யார்?”என்றேன். என்ன நிலையில் இருக்கிறேன் என்பதே எனக்கு தெரியவில்லை.
அவளே பாய்ந்து விளக்கை அணைத்துவிட்டு சுவரில் சாய்ந்து நின்று நெஞ்சை அழுத்தியபடி பெருமூச்சுவிட்டாள்.
“என்ன ஆயிற்று? என்ன?” என்றேன்.
“என்னை துரத்தி வருகிறார்கள்”
“யார்?” என்றேன்.
“இந்த பண்ணைவீட்டு ஆள்… அவனுடைய ஆட்கள்… அவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்தேன்”
அந்தச் சட்டைக்குள் அவள் நிர்வாணமாக இருந்தாள். நான் மெல்ல நிதானமடைந்தேன்.
“சரி, நீ இங்கே இருக்கும் ஆடைகளில் ஒன்றை அணிந்துகொள்”என்றேன்.
அவள் அங்கே குவிந்துகிடந்த ஆடைகளில் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டாள். “கொஞ்சம் தண்ணீர் வேண்டும் எனக்கு”
”பானையில் இருக்கிறது”
அவள் நெடுந்தூரம் ஓடியிருக்கவேண்டும். பானையில் இருந்து இரண்டுமுறை குடித்தபோது இருமினாள். இருமல் ஓசை கேட்காமலிருக்க நெஞ்சை அழுத்திக்கொண்டாள்.
பின்னர் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். அப்படியே மல்லாந்து மூச்சிழுத்து விட்டுக்கொண்டாள். நான் சற்று தள்ளி துணிக்குவியல்மேல் அமர்ந்தேன். மெல்ல மெல்ல மூச்சடங்கி அமைதியடைந்தாள்.
“என்ன ஆயிற்று?” என்றேன். என் குரலில் எச்சரிக்கை வந்திருந்தது.
“இருங்கள்… அவர்கள் தேடிவருவார்கள். பேச்சுக்குரல் அவர்களுக்கு கேட்கவேண்டாம்” என்று அவள் சொன்னாள்.
நாங்கள் இருட்டில் அமர்ந்து காத்திருந்தோம். நெடுநேரம் ஓசை ஏதும் இல்லை. நான் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் வேண்டாம் என சைகை காட்டினாள்.
அதன்பின்னர் டார்ச் லைட் ஒளியை சுழற்றி வீசியபடி மூவர் வருவது தெரிந்தது.
“வருகிறார்கள்” என்றேன். ”அந்த அறை துணிகள் வைக்கும் ஸ்டோர். உள்ளே போய் ஒளிந்துகொள்”
அவள் உள்ளே போனாள். நான் எழுந்து பாதிமூடிய சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் டார்ச் விளக்குகளை திருப்பித்திருப்பி கொட்டகையில் படுத்திருந்தவர்களை பார்த்தார்கள். மரங்களுக்கு கீழேயும் மேலே கிளைகளிலும் மூன்று வெளிச்சங்கள் அலைந்தன.
மிகக்கவனமாக அவர்கள் தேடினார்கள். ஒரு சிறு இடம்கூட விடவில்லை. மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். இதைப்போன்ற செயல்களில் நல்ல பழக்கம் கொண்டவர்கள் என்று தெரிந்தது.
அவர்கள் என் வீடு நோக்கி வர ஆரம்பித்தபோது நான் சென்று பாயில் படுத்துக் கொண்டேன். அவர்களின் குரல்கள் அணுகி வந்தன. ஒளிவட்டங்கள் சுழன்றபோது சன்னலின் இடைவெளி ஒர் ஒளிக்கோடாக அறைக்குள் வளைந்து திரும்பியது.
என் நெஞ்சு படபடத்தது. அவர்கள் கதவைத் திறந்து என்னிடம் பேசினார்கள் என்றால், என் முகத்தைக்கொண்டே அனைத்தையும் புரிந்துகொள்வார்கள்.
ஆனால் அவர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். பேச்சொலிகள் தேய்ந்து மறைந்தன.
நான் மிக மெல்ல எழுந்து சன்னல் வழியாக பார்த்தேன். மிகத்தொலைவில் மூன்று ஒளிவட்டங்கள் சுழல்வதைக் கண்டேன்
“போய்விட்டார்கள்”என்றேன்.
”ம்”என்றாள்.
“இருந்தாலும் கொஞ்சநேரம் பொறு”
”சரி”
அந்தச் சரி எனக்கு அத்தனை தன்னம்பிக்கையை, நிறைவை அளித்தது. ஒரு பெண் தன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைத்ததன் வார்த்தை அது.
பின்னர் அமைதி நிலவியது. வெளியே பறவைகளின் ஒலி கேட்டது. வௌவால்களாக இருக்கும். நான் படுத்துக்கொண்டு அந்த ஓசையை கேட்டுக்கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல மிக அமைதியானவனாக, மிகவும் தர்க்கபூர்வமானவனாக ஆகிக்கொண்டிருந்தேன்.
அவள் மிக மெல்லிய காலடியோசைகளுடன் வெளியே வந்தாள்.
“இங்கே ஒரு பாய்தான் இருக்கிறது. அந்த விரிப்பை வேண்டுமென்றால் போட்டுக்கொள்… படுத்துக்கொள்ளலாம்” என்றேன்
அவள் விரிப்பை போட்டு எனக்கு சற்று அப்பால் படுத்துக்கொண்டாள்.
“என்ன நடந்தது?” என்றேன்.
“என் அம்மா இந்த பண்ணை உரிமையாளனுடன் வரச்சொன்னாள். இவன் என்னை ஜீப்பில் கூட்டிவந்தான்”
நான் ஒன்றும் சொல்லவில்லை. என் உடலெங்கும் கசப்பு நிறைந்தது. ஆனால் அதைக் கேட்கவேண்டும் போலவும் இருந்தது.
“ஒருவன் என்றுதான் சொன்னார்கள். இங்கே வந்தால் இவர்கள் நாலைந்துபேர். எல்லாரும் முரட்டுக் குண்டர்கள். சரியாகக் குடித்திருந்தார்கள். நான் பயந்துவிட்டேன். என்னிடம் ஆடும்படி சொன்னார்கள்”
‘என்ன ஆட்டம்?”
“சும்மா” என்றாள்.
“துணியில்லாமலா?”
“ம்”
நான் தொண்டையைச் செருமிக்கொண்டேன்.
“எனக்கு அப்படி ஆடத்தெரியாது என்றேன். அவன் என்னை அடித்தான்.அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து என் ஆடைகளை கிழித்தார்கள். என்னை நிர்வாணமாக்கி மிகவும் கேவலமாக நடந்துகொண்டார்கள்”
”கேவலமாக என்றால்?”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. மூச்சொலி மட்டும் கேட்டது. பின்னர் “நான் வாந்தி எடுத்தேன். அதனால் ஒருவன் என்னை அடித்தான். அவனை நான் தள்ளிவிட்டேன். உடனே எல்லாரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். அதையே விளையாட்டாக ஆக்கிக் கொண்டு என்னை அவர்கள் அடித்துக்கொண்டே இருந்தார்கள். வலி தாங்கமுடியாமல் நான் புட்டியால் ஒருவன் மண்டையில் அறைந்தேன். அவன் அலறிக்கொண்டு விழுந்தான். மற்றவர்கள் அவனை தூக்க ஓடினார்கள். நான் அப்படியே தப்பி வெளியே ஓடினேன்”
”அவன் செத்திருப்பானா?”
“அதெல்லாம் இல்லை. சாதாரண அடிதான். ஆனால் ரத்தம் வந்தது”
அவள் நீள்மூச்சுவிட்டாள். மீண்டும் ஒரு சிறு அமைதி.
“நான் வெளியே ஓடியபோது உங்கள் நினைவு வந்தது. நீங்கள் சொன்னதெல்லாம் அப்படியே படம்போல தெரிந்தது. நேராக ஓடி வந்துவிட்டேன்”
நான் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எதுவும் என் மண்டைக்குள் எழவில்லை. சிந்தனை அதுவரை நடந்தவற்றையே உழற்றிக் கொண்டிருந்தது.
“அவர்கள் என்னை விடமாட்டார்கள்” என்றாள்.
“உன் அம்மாவிடம் நான் போய் சொல்லவா?”
”அது என் அம்மா இல்லை”
ஒரு கணம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு “சரி, யாரிடம் சொல்லவேண்டும்?” என்றேன்.
“அம்மா பணம் வாங்கியிருப்பாள். ஆகவே அவளே என்னை பிடித்துக்கொடுக்கத்தான் நினைப்பாள்…”
“பிரகாஷ்ராவ் தானே துணைநடிகர்கள் ஏஜெண்ட்?”
“அவனும்தானே பணம் வாங்கியிருப்பான்? இந்த ஆளை கொண்டுவந்ததே அவன்தான்”
ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. பொதுவாக சினிமா கம்பெனி இந்த விஷயங்களில் தலையிடாது. போலீஸ் கேஸ் வந்தாலும்கூட துணைநடிகர்கள் ஏஜெண்ட்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி ஒரு ஆள் இருப்பதே இந்த சிக்கலான உலகத்தை சினிமாக் கம்பெனிகளில் இருந்து அகற்றி நிறுத்துவதற்காகத்தான். ஸ்டுடியோவுக்கு எல்லா தொடர்பும் அவன் வழியாக மட்டும்தான். ஆகவே அந்த உலகில் அவன் ஒரு அரசன். ஒரு கொடூரமான சர்வாதிகாரி. அவனுடைய குற்றவுலகத் தொடர்பு மிகப்பிரம்மாண்டமானது.
“நான் ராஜமந்திரிக்கு எப்படியாவது போனால் போதும்” என்றாள்.
“அங்கே யார் இருக்கிறார்கள்?”
“என் அம்மா”
நான் அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் “இங்கிருந்து ராஜமந்திரிக்கு நேரடி ரயில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஹொஸ்பெட் போகவேண்டும். ஆனால் அங்கே ரயில்நிலையத்திலேயே இவர்கள் வந்துவிடுவார்கள்”
”என்ன செய்வது?” என்று அவள் கேட்டாள்.
“எதையாவது செய்வோம். இந்த வீட்டுக்குள் எவரும் வரமாட்டார்கள். நீ இன்றிரவு இங்கேயே இரு. நாளை என்ன செய்யமுடியும் என்று பார்ப்போம்”
அவள் “ம்” என்றாள்.
“இப்போது நன்றாக தூங்கு… நான் காலையில் எழுப்புகிறேன்”
”சரி”
அவள் படுத்துக்கொண்டு பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் விரைவிலேயே தூங்கிவிட்டாள். அவளுடைய மெல்லிய குரட்டையோசை கேட்டுக்கொண்டிருந்தது.
அந்த நெருக்கடியிலும் நான் மனதுக்குள் மிகமிக இதமான ஓர் உணர்வையே அடைந்தேன். மிக அருகே அவள் படுத்திருக்கிறாள். அவளுடைய மூச்சொலி கேட்டுக்கொண்டிருக்கிறது. அவளை என்னால் கைநீட்டி தொடமுடியும். அவளுடன் நேருக்குநேர் கண்களை நோக்கிப் பேசமுடியும். பெண்ணுக்கு காவலாக பொறுப்பேற்றுக் கொள்ளும்போதுதான் ஆண் தன்னை முழுமையானவனாக உணர்கிறான் போல. சிறுவன் ஆண்மகனாக ஆவது அந்த இடத்தில்தான். எனக்கு அந்த இரவு அப்படிப்பட்ட ஒரு தருணம். அதன் நிறைவில் பெருமிதத்தில் நான் திளைத்துக்கொண்டிருந்தேன்.
அவள் அந்த ஆபத்தில் என்னை நாடி வந்திருக்கிறாள் என்பதுதான் என்னை அப்படி உளம்பொங்க வைத்தது. அதைவிட ஓர் அங்கீகாரம் வேறென்ன? அவள் என்னை நேருக்குநேர் பார்த்ததே குறைவாகத்தான். பேசியது அதைவிட குறைவாக. ஆனால் நெருக்கடியில் அவளுக்கு நான் நினைவுக்கு வந்திருக்கிறேன்.
என்ன செய்வது என்று நான் திட்டமிட்டேன். நாளை பகலில் அவளை வெளியே கொண்டுசெல்லவே முடியாது. பகல் முழுக்க கமலாப்பூரிலும் ஹொஸ்பெட்டிலும் ஹம்பியிலும் ரங்கா ரெட்டியின் ஆட்கள் அவளை தேடி அலைவார்கள். ஒரு இடம் மிச்சம் வைக்க மாட்டார்கள். அவள் அம்மாவும் பிரகாஷ் ராவும் தேடுவார்கள்.
ஆனால் அதுகூட நல்லதுதான். நாளை பகல் முழுக்க தேடிவிட்டார்கள் என்றால் அவள் வெளியேறிவிட்டாள் என்று எடுத்துக்கொள்வார்கள். அவர்களின் தேடல் நின்றுவிடும். நாளை பகல் முழுக்க அவள் இங்கே உள்ளேயே இருக்கவேண்டும். நாளை இரவு முடிந்தால் அவளை இங்கிருந்து வெளியே கொண்டுபோகலாம்.
ஆனால் ரயிலில் போகமுடியாது. எங்கள் வண்டிகள் எதிலும் போகமுடியாது. வேறு ஏதாவது வழி கண்டடையவேண்டும். நான் அதை விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்.
[மேலும்]
ஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்
அன்புள்ள ஜெ,
உங்கள் ஓஷோ உரையின் அடியில் உள்ள கமெண்டுகளைப் பார்க்கிறீர்களா? அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வேடிக்கையாக கேட்கவில்லை. உண்மையான வேதனையுடன் கேட்கிறேன்.
ராஜேந்திரன் எம்
***
அன்புள்ள ராஜேந்திரன்,
அந்த வகையான கருத்துக்கள், வெளிப்பாடுகள் ஆன்மிகத்தளத்தில் குவிந்து கிடக்கின்றன. எப்போதும் நம் கண்ணுக்குப் படுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறுபேர் இத்தகையவர்கள்தான்.
இது ஏன்? பாருங்கள் அரசியல், சமூகக்கோட்பாடுகள் ஆகிய தளங்கள் மிக தூலமானவை. திட்டவட்டமாக ஒருவரின் அறிவை அளக்க அங்கே வழிகள் உண்டு. அங்கேயே முக்கால்வாசிப்பேர் போலிகள். ஒன்றுமே தெரியாமல் ஓரிரு வரிகளை பிடித்துக்கொண்டு படம் காட்டிக்கொண்டிருப்பவர்கள்.
இலக்கியம் இன்னும் நுட்பமானது. அங்கே இன்னொரு நுட்பமானவர்தான் ஒருவரின் மெய்யான தகுதியை அளவிடமுடியும். அவர்கள் குறைவு. ஆகவே பொதுவாக பாவலாக்கள் செல்லுபடியாகும். ஒருவர் தன்னைப்பற்றி மிகையான எண்ணம் கொண்டிருந்தால் அது அப்படியே உடையாமல் வாழ்நாள் முழுக்க நீடிக்க முடியும். ஆகவே போலிகள் மேலும் அதிகம். அசடுகள் அதைவிட மிகுதி.
ஆன்மிகம் இன்னமும் நுட்பமானது. நாம் விரும்புவதுபோலவே நாம் பார்ப்பவை அனைத்தையும் மாற்றிவிடும் தன்மை ஆன்மிகத்துக்கு உண்டு. அது பெரிய மாயை. அதில் சிக்கியவர்களே பெரும்பாலானவர்கள். சொல்லப்போனால் ஆன்மிகத்தின் நுழைவாசலில் இந்த வலை உள்ளது. அதில் சிக்காதவர்களே உள்ளே நுழைய முடியும்.
ஓர் எளிய கருத்து அல்லது ஓர் உருவகம் நாம் எல்லாவற்றையும் அறிந்துகொண்டாயிற்று என்ற பிரமையை உருவாக்கும். நம்மைப்பற்றிய நம்பமுடியாத உயர்வெண்ணத்தை அடையநேரிடும். நம்மை நாமே விதவிதமாக முன்வைக்க ஆரம்பிப்போம். காலப்போக்கில் நடிக்க ஆரம்பிப்போம். மெதுவாக கோமாளிகளாக ஆவோம்.
அதைவிடத் துயரம் அந்நடிப்பை மற்றவர்கள் ஏற்கவில்லை என்றால், கேலிசெய்கிறார்கள் என்றால் மற்றவர்களை வசைபாடும் எதிர்மறையாளர்களாக மாற ஆரம்பிப்போம். அது நாம் அடையநேரும் இழிநிலை. ஓர் ஆன்மிகவாதியிடமிருந்து எதிர்நிலை வெளிப்படாது.
இது ஏன் நிகழ்கிறது? நேரடியாக, குரு இல்லாத நிலையில் நூல்களை வாசிப்பது, தன்னிச்சையாகச் சில பயிற்சிகளைச் செய்வது ஆகியவற்றினூடாக நாம் சில வழிகளில் செல்ல நேர்கிறது. இந்த பயணத்தில் ஒரு காலடி தவறாக வைத்தால் மிகமிக தொலைவுக்கு தவறாகச் சென்றுவிட்டிருப்போம்.
அதில் என்ன சிக்கல் என்றால் நாம் சொந்தமாக அத்தனை தொலைவு வந்துவிட்டதனாலேயே அதை நாம் உதறவோ திரும்பிச் செல்லவோ முடியாது. அதை நியாயப்படுத்த எல்லா சொற்களையும் கண்டடைந்திருப்போம்.
ஆன்மிகத்தில் எவனொருவன் சீண்டப்பட்டு சீற்றம் கொண்டு பேசுகிறானோ அவன் இந்நிலையில் கழுத்தளவுச் சகதியில் புதைந்தவன். பரிதாபத்திற்கு உரியவன்.
குரு தேவையாக ஆவது இங்குதான். குறியீட்டு வடிவான, பொது ஆளுமையான குருவைச் சொல்லவில்லை. நேரடியாக உங்களை அறிந்த, உங்களுடன் சில ஆண்டுகள் உடனிருந்து வழிகாட்டக்கூடிய குரு. அவர் வழிகாட்டவேண்டியதில்லை. ஏனென்றால் வழிகள் இல்லை. அவர் உங்கள் ஆணவத்தை, தன்முனைப்பை உடைத்து அவ்வப்போது உங்களை சிதறடித்தால் மட்டும் போதும்.
ஆனால் அத்தகைய ஒருவரை கண்டடைவது அரிதினும் அரிது. ஏனென்றால் இரண்டு வகையில் நாம் அவர்களை நம்மிடமிருந்து மறைத்துக்கொள்கிறோம். முதற்காரணம் நமது ஆணவம். நாம் நம் ஆணவத்தை வருடிவிடும் ஒருவரை ஆசிரியர் என ஏற்றுக்கொள்வோம். இது அபத்தமாக தெரியும். ஆனால் இதுவே எப்போதும் நிகழ்கிறது.
பெரும்பாலான போலிகள் தங்களிடம் வருபவர்களை ‘நீ அசாதாரணமானவன், நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன், நீ ஞானத்தை அடையும் நிலைக்கு பக்கத்தில் இருப்பவன்’ என்று சொல்வார்கள். ‘அப்படி எல்லாம் இல்லை’ என்று சொல்ல பெரும்பாலும் எவராலும் முடியாது.
நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். இந்த ’ஆன்மசாதகர்கள்’ பலர் ‘என்னை பாத்ததுமே குரு சொல்லிட்டார், டேய் நீதாண்டா என்னோட ஆளுன்னு’ என்பதுபோல ஏதாவது சொல்வார்கள். அர்த்தம் ‘ நான் எவ்ளோ பெரிய ஆளு’ என்பதுதான். ’சும்மா பாத்தார் சார், உடனே ஒளி ஒண்ணு தெரிஞ்சுது’ என கதைவிடுவார்கள். அர்த்தம் இவர் ஒளியைப்பார்க்கும் கண் கொண்டவர் என்பது.
இந்த ஆணவம், இதிலுள்ள எல்லையற்ற அசட்டுத்தனம், நம்மிடமிருந்து மெய்யான ஆசிரியர்களை மறைத்துவிடும். நம்மை ஏற்பவர்களை நாம் ஏற்போம். நம்மை தூக்குபவர்களை நாம் தூக்குவோம். நாம் விரும்பியபடி அவர்களை வரைந்து உருவாக்கிக் கொள்வோம்.
இரண்டாவது, உறைநிலை. பெரும்பாலான மனிதர்கள் கருத்தியல் உறைநிலையில் இருப்பவர்கள். அதைத்தான் நம்பிக்கை என்கிறோம். அவ்வாறுதான் இருக்கமுடியும். அப்படி இருந்தால்தான் வாழமுடியும். பெண்களின் கற்பில் நம்பிக்கை இல்லாதவன் பிள்ளைகளை வளர்ப்பானா என்ன?
ஆனால் ஆன்மிக ஆசிரியன் அந்த உறைநிலைகளை உடைப்பான். அது சீண்டுவது, நிலைகுலையச் செய்வது. அது நிகழக்கூடாது என்று எண்ணுபவன் அத்தகைய ஆசிரியர்களை நாடமாட்டான். அச்சீண்டலால் ஆணவம் புண்படுபவன் ஆசிரியரை அணுகினாலும் பிற்பாடு விலகிச் சென்றுவிடுவான்.
ஆக, வழிகாட்டிகள் இல்லாமல் இந்த பாதையற்ற பாதையில் அலையும் தற்குறிகளே மிகுதி. அவர்கள் வெவ்வேறு தோரணைகள் பாவனைகள் வழியாக தங்களையும் பிறரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு துயரமான விஷயம், ஆனால் இன்றல்ல பல்லாயிரமாண்டுகளாக இது இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஒன்றுமே செய்யமுடியாது.
ஏன் என்றால் ஆன்மிகப் பயணத்திற்கு எதிராக நிலைகொள்ளும் சக்தி என்பது ஆணவம். அது ஆன்மிகத்தை விட பலமடங்கு விசை கொண்டது. பலநூறு முகங்கள் கொண்டு ஏமாற்றுவது.
ஜெ ஓஷோ – கேள்விகள் ஓஷோ- கடிதங்கள் ஓஷோ- உரை- கடிதம் ஓஷோ,கோவை, நான்குநாட்கள்விருந்து, தீற்றல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
விருந்து கதைக்குச் சமானமான ஒரு கதை முன்பு நூறு கதைகளில் வந்திருந்தது. அதை எவருமே ஞாபகப்படுத்திச் சொல்லவில்லை. சிவம் என்ற கதை. தன்னை கங்கைக்குக் கொடுக்கப்போகும் ஒரு சாமியார் அனைவருக்கும் விருந்து வைத்துவிட்டு கங்கையில் பாய்ந்து மறைகிறார். அதைத்தான் இங்கே ஆசாரியும் செய்தான். அவனுடைய 16 ஆம் நாள் சடங்கைத்தான் செய்திருக்கிறான் [சிவம் [சிறுகதை]
மறைந்த என் பாட்டா சிவசண்முகம் பிள்ளை அடிக்கடிச் சொல்வார். என்னொட 16 நாள் விருந்து கிராண்டா இருக்கணும். எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டு போகணும்’. இதை ஏன் சொல்கிறார் என்று நினைத்திருந்தோம். அதை அவ்வாறு நடத்தவும் செய்தோம். அந்த மனநிலை இப்போது புரிகிறது
சிவக்குமார்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
அருமையான 25 கதைகள். கந்தர்வன், விருந்து இரு கதைகளுமே இரண்டு வேள்விகளைச் சொல்லுகின்றன.
வேள்விகளில், யாரை முன்னிறுத்தி வேள்வி செய்யப்படுகிறதோ, யாருக்கு அந்த வேள்வியின் பயன் சென்று சேருமோ, அந்த யஜமான் தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கிறார். மாறாக. அந்த யஜமான் தானே பலியாக வேள்வித் தீயில் விழுந்து விட்டால்? யஜமான்கள் அப்படி தங்களைத் தாங்களே பலி கொடுத்திருக்கிறார்கள்.
விருந்து கதையின் ஆசாரிக்கு மரண தண்டனை கொடுத்தவர்கள் வேண்டுமானால் தாங்கள் பலி கொடுத்து கடமையை முடித்து விட்டதாக நினைத்து திருப்தி பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆசாரி தானே முன்னின்று வேள்வி நடத்தி அதில் தானே பலியாக விழுந்த ஆளுமையாகத்தான் தெரிகிறான்.
கொல்லும்போதும் அரசனைப் போல்தான் கொல்கிறான். “கொல்லவேண்டிய ஆளு. கொன்னாச்சு…”இறக்கும்போதும் அரசனைப்போல்தான் இறக்கிறான்.
பலி கொடுப்பதோ, யஜமானே பலியாவதோ நடக்கக் கூடியதே. ஆனால், தேவனே பலி ஆனால்? மனிதர்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு வேள்வித்தீயில் தேவ குமாரனே விழுந்ததை பைபிள் சொல்லுகிறது. புருஷ சுக்த மந்திரம் பரம புருஷன் பலியாக இடப்பட்டு நடந்ததாக ஒரு வேள்வியை சிருஷ்டிக்கு உருவகமாகச் சொல்லுகிறது.
கந்தர்வன் கதையில் அணைஞ்ச பெருமாளின் இறப்பில் இந்த தெய்வ அம்சம் இருக்கிறது. தங்கள் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக வேண்டுதல் வேண்டாமை இலான் ஒருவனை சாகச் சொல்லுகிறார்கள். அவனுக்கு இடும்பையே இல்லை. தயக்கமின்றி இறக்கிறான்.
– வைகுண்டம்
***
தீற்றல் [சிறுகதை]அன்புள்ள ஜெயமோகன்,
வாழ்க்கையின் சில தருணங்கள் மிகவும் அந்தரங்கமானது. மோகமுள்ளைப்போல் பிறர் அறியாமல் இதயத்தின் ஆழத்தில் இருந்து கொண்டு என்றும் ரணப்படுத்திக்கொண்டிருப்பது . எண்ணும்தோரும் இனிமையையும் துன்பத்தையும் தீராத ஏக்கத்தையும் அளிப்பது. புனிதமானதும் கூட.
நெல்சன்
***
அன்புள்ள ஜெ
தீற்றல் ஒரு மென்மையான கதை. போகிற போக்கில் ஒரு கீற்று. அந்த மயிரிழையால் கீறிய கதைபோல. அப்படியே ஆளைக்கொன்றுவிடும் கதை. அத்தகைய தீற்றல்கள் நெஞ்சில் இல்லாதவர்களே இருக்க முடியாது. மனித மனதின் ஆழத்தில் அது இருந்துகொண்டே இருக்கும்.
என் உடலில் அப்படி ஒரு தீற்றல் உண்டு. குற்றாலம் அருவியில் ஒரு சின்ன தள்ளு தள்ளியபோது போய் விழுந்து கம்பியில் சிராய்த்துக்கொண்டது. தள்ளியவள் எங்கோ இருக்கிறாள். தீற்றல் மட்டும் இருக்கிறது
என்
***
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]April 4, 2021
கல்வி நிலையங்களில் சாதி
அன்புள்ள ஜெ
நலமா?
நான் இளநிலை படித்த கல்லூரியில் (அருண்மொழி அம்மா படித்த கல்லூரியும் கூட) தற்போது இரண்டாம் ஆண்டு படிக்க வேண்டிய ஒரு தலித் மாணவி அவருடைய அறைத்தோழியாலும் உடன் பயின்ற மாணவிகளாலும் சாதிய வன்முறையால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக, கடந்த ஆண்டு கொரோனாவினால் வீட்டிலிருந்த போது முகநூலில் செய்தி பரவியது. இதன் உண்மைத்தன்மையை அறிய நட்புவட்டத்தின் மூலம் கல்லூரியில் விசாரித்தோம். மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை எங்களால் அறிய முடியவில்லை. அவருக்கு வேறு சில உடல்நல பிரச்சினைகள் இருந்ததாகவும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தபோது உயிரிழந்ததாகவும் ஊகங்கள் மட்டுமே கிடைத்தன.
ஆனால், அம்மாணவி, அவரின் சாதி காரணமாக, அவரின் உடன் பயின்றவர்களால் சிறுமைப்படுத்தப்பட்டதை உறுதிபடுத்திக் கொண்டோம். மறைந்த மாணவியின் புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் சில மாணவிகளை விசாரித்துள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோர் ஆளும் கட்சியின் பிரமுகர்களாதலால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவியின் மரணம் குறித்து விசாரிக்கையில் கல்லூரியில் சில ‘இடைநிலைச் சாதி’களின் அராஜகம் குறித்தும் அறிந்தோம். கல்லூரி விளையாட்டு மைதானம் தொடங்கி வகுப்பறை வரை சில இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தலித் மாணவர்களை சிறுமைப்படுத்துவதாக அறிந்தோம்.
சில சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வாட்சப் குழுவின் மூலம் தத்தம் சாதியைச் சேர்ந்த பிற மாணவர்களை ஒருங்கிணைக்கின்றனர். எந்த சாதி மாணவன் எச்சாதி மாணவியை காதலிக்கிறான் என்பதை கண்காணிக்கின்றனர். முதுனிலை மற்றும் முனைவர்பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையிலும், புதிய பேராசிரியர் தேர்விலும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக சலுகை அளிக்கப்படுவதாக அறிந்தோம்.
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் இவ்வநீதிகளுக்கு எதிர்வினையாற்ற நினைத்தோம். மாணவர்சேர்க்கையிலும் புதிய பேராசிரியர் தேர்விலும் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா, தலித், ஆதிவாசி மாணவர்களுக்கான உரிய உரிமைகள் கிடைக்கின்றனவா (இன்னும் பிற) என்பனவற்றை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்திடம் தகவல்கள் கேட்டோம். பல்கலை அபத்தமான காரணங்களைக் கூறி தகவல்களைத் தர மறுத்துவிட்டது. மேல்முறையீட்டிற்காக தமிழ்நாடு தகவல் ஆணையத்தை அணுகினோம். கிட்டத்தட்ட பத்துமாத காத்திருப்புக்குப் பின் தகவல் ஆணையத்தின் தலையீட்டின் பேரில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு குறித்த தகவல்களை இரு வாரத்திற்குமுன் பல்கலை கொடுத்தது. எங்களின் பிற மேல்முறையீட்டு மனுக்கள் இன்னும் தகவல் ஆணையத்தின் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் George Floyd கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வினையாக நடந்த #BlackLivesMatter இயக்கம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கல்வித்துறையில் நிலவும் நிறப்புறக்கணிப்பைப் பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும் ஒருவார காலம் ஆராய்ச்சி பணிகள், ஆய்வரங்கங்கள், வகுபுகளுக்கு விடுப்பு வழங்கின. ரோஹித் வெமுலா (தற்)கொலையின் போதோ, அன்றாடம் தலித்துகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளுக்கு எதிராகவோ இந்தியாவில் ஏன் #DalitLivesMatter இயக்கம் நடக்கவில்லை என்று (நான் பெரிதும் மதிக்கும்) பேராசிரியர் Deepak Malghan ஒரு கட்டுரை எழுதியிருந்தார் (பார்க்க). அதில் அமெரிக்க உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் கருப்பின மக்களின் மிகமுக்கியமான அங்கத்தையும் #BlackLivesMatter இயக்கத்தில் கருப்பின பேராசிரியர்கள்/ஆராய்ச்சியாளர்கள்/மாணவர்களின் பங்களிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தியாவில் அதுபோல் ஒரு இயக்கம் உருவாகவேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்களில் தலித்துகளின் எண்ணிக்கை உயரவேண்டியதன் அவசியத்தை விவாதித்திருந்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்திருந்தாலும், IIM IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்றுவதில்லை (பார்க்க 1, பார்க்க 2, பார்க்க 3). IIM Ahmedabad இல் இன்றுவரை முனைவர் பட்ட படிப்பிற்கு இடஒதுக்கீடு இல்லை (சட்டப்போராட்டம் இன்றும் தொடர்கிறது). தமிழகத்து இருளர் பழங்குடிகளுக்கோ சாதி சான்றிதழ் கிடைப்பதே குதிரைக்கொம்பாய் உள்ளது (பார்க்க).
இப்பின்னணியில்தான் எங்கள் கல்லூரியில் செய்ததைப் போன்று பிற பல்கலையிலும் தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உபயோகிக்கத் தொடங்கினோம். தலித்/ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக நாம் ஏன் ஒரு முறைசாரா அமைப்பாய் திரளக்கூடாது என்று நினைத்தோம். நண்பர்கள் நண்பர்களின் நண்பர்கள் என்று ஒரு இருபதுபேர் சேர்ந்து Egalitarians என்ற அமைப்பை உருவாக்கினோம். அமைப்பின் நோக்கம் சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தலித் மற்றும் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக இயன்றவகையில் பணிசெய்து கிடப்பது. எங்களுக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதில் உறுதியாயிருக்கிறோம். இப்போதைக்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தலித்/ஆதிவாசி உரிமைகளை உறுதி செய்ய முயல்கிறோம். ஆண்டிற்கு ஒரு தலித்/ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவருக்கு குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவத்ற்கு வேண்டிய பொருளாதார உதவிகளைச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
வருகிற ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி. Egalitarians சார்பாக ஆண்டுதோறும் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு Ambedkar Memorial Lecture ஒன்றை இவாண்டு முதல் நடத்தலாம் என்று திட்டமிட்டோம். யாரை அழைக்கலாம் என்று யோசித்தபோது, நண்பர்கள் அனைவரும் முதல் தேர்வாக தங்களையே அழைக்க விரும்பினோம். தலைப்பு தங்கள் தேர்வு. அம்பேத்கர், இந்தியவியல், தலித், ஆதிவாசி, பௌத்தம், மானுட அறம், இலக்கியம் ஆகிய புள்ளிகளைத் தொட்டு பேசலாம். உரையாகவோ, தாங்கள் விரும்பும் பட்சத்தில் உரையத் தொடர்ந்த கலந்துரையாடலாகவோ வைத்துக்கொள்ளலாம். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால் நிகழ்வை இணையம் மூலமே நடத்த விரும்புகிறோம். YouTube லும் நேரலையில் ஒளிபரப்பப்படும். இவ்வாண்டு ஏப்ரல் 14 புதன்கிழமையில் வருகிறது. ஏப்ரல் 11 (ஞாயிறு) அன்றோ ஏப்ரல் 18 (ஞாயிறு) அன்றோ, அல்லல் தங்களுக்கு வசதியாக உள்ள தேதியிலோ நிகழ்வை வைத்துக்கொள்ளலாம். தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
தங்களின் சொல் என்றும் துணையிருக்கட்டும்.
நாளும் தங்களின் நலம் விரும்பும்
அன்பு மற்றும் நண்பர்கள்
அன்புள்ள அன்பு,
மிக முக்கியமான பணி. அவசியமான பணி.
இதில் தொடர்ந்து வெவ்வேறு பொதுநல இயக்கங்களை அவதானித்து வருபவன், தொழிற்சங்க அனுபவமும் உள்ளவன் என்றவகையில் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். இவை பல ஆண்டுகளுக்கு முன் [கிருஷ்ணம்மாள்] ஜெகன்னாதன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னவை.
அ. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தொடங்கப்படும் இயக்கம் அதை மட்டுமே செய்யவேண்டும். செயற்களத்தை விரிவாக்கிக்கொண்டால் எதையும் செய்ய முடியாமலாகும். அதை பிடிவாதமாக, என்ன வந்தாலும் சரி என, ஒரு இருபதாண்டுகள் செய்வது என முடிவெடுத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
ஆ. முடிந்தவரை சட்டம் அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சட்டம், நீதிமன்றம் போன்றவை பயனற்றவை என தோன்றும். ஆனால் அது உண்மை அல்ல. பொறுமையான விடாப்பிடியான செயல்பாடு மட்டும் இருந்தால் எந்த பொதுப்பணிக்கும் இந்திய அரசியல்சட்டமும் நீதிமன்றமும் மிகப்பெரிய கருவிகள்.
இ. ஒரு குறிப்பிட்ட போராட்டம் சமூகநோக்கம் கொண்டதாக இருந்தால் அதில் நேரடியாக கட்சியரசியல் ஊடுருவ விடக்கூடாது. கட்சியரசியல் நம்மால் எதிர்க்க முடியாத பெரிய எதிரிகளையும் கொண்டுவந்து சேர்க்கும். நமது செயல்பாடுகளும் கட்சியரசியலுக்குள் செல்ல வழிவகுத்து இலக்குகளைச் சிதறடிக்கும்
ஈ. மிகையுணர்ச்சியுடன் பேசுபவர்களை முற்றாகத் தவிர்த்துவிடவேண்டும். அவர்கள் உண்மையில் எதையும் தங்கள் சொந்த விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள். பெரும்பாலும் வாய்ச்சொல் வீரர்கள்
உ. எந்த மெய்யான இயக்கமும் கூடுமானவரை நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஓரளவு ஆதரவைக்கூட முற்றாதரவாக மாற்ற முயலவேண்டும். எதிரிகளிலேயே நண்பர்கள் கிடைக்க வாய்ப்புண்டா என்று பார்க்கவேண்டும். வெற்றுத்தீவிர நிலைபாடு எதிரிகளையும் துரோகிகளையும் கற்பனைசெய்ய வைக்கும். ஆதரவை வெல்வதே எந்த இயக்கமும் மெய்யான வெற்றி நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
எல்லா நிலையிலும் உடனிருக்கும்
ஜெயமோகன்
பிகு. ஏப்ரல் 11 அன்று பேசுவோம்
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-5
[ 5 ]
நாகலிங்க ஆசாரி ஒருநாள் முன்னதாகவே வந்து ஹம்பியிலேயே கலை இலாகாவின் கூடாரத்தில் தங்கியிருந்தான். படப்பிடிப்பு தொடங்க நான்கு நாட்கள் இருந்தன. எங்கள் தையல் வேலைகள் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. கொண்டுவந்த பொருட்களை அடுக்கி வைத்தபின் ஓய்வாக அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பிக்கொண்டிருந்தோம். கலை இலாகாவில் நாகலிங்க ஆசாரி இருப்பதை சாப்பாடு கொண்டுவரும் சிவலிங்கம் சொல்லி நான் அறிந்தேன்.
நான் ஹம்பிக்குள் சென்று நாகலிங்க ஆசாரியைப் பார்த்தேன். அவன் அடையாளமே தெரியாதபடி புழுதி மூடி களிமண் பொம்மை போலிருந்தான். தலைமுடி மண்ணாலான திரிகளாக தொங்கியது. புருவமே மண்ணாலானதாக இருந்தது. அவன் எனக்கு புட்டியில் அடைக்கப்பட்ட ஒரு திரவத்தை குடிக்க கொடுத்தான். இனிப்பானது. சர்பத் போலிருந்தது. ”எனர்ஜி டிரிங்க். இதைக்குடித்தால் களைப்பே தெரியாது” என்றான். எனக்கு ஏப்பம் வந்துகொண்டே இருந்தது. ஆனால் தாகம் அடங்கிய மாதிரியும் இருந்தது. “அமெரிக்காவில் இந்த பானம் இல்லாமல் சினிமாவே எடுக்க மாட்டார்கள்” என்று அவன் சொன்னான்.
அங்கே கலை இலாகாவினர் வெறிகொண்டு வேலைசெய்தபடி இருந்தனர். அன்றெல்லாம் ஹம்பியில் யுனெஸ்கோ நடத்திய பழுதுபார்ப்பு வேலைகள் ஆரம்பிக்கவில்லை. தொன்மையான நகரத்தின் பெரும்பகுதி அப்படியே சீட்டுக்கட்டு போலச் சரிந்து கிடந்தது. மத்திய தொல்லியல்துறையின் வேலைகள் ஆங்காங்கே சின்ன அளவில் நடைபெற்றன. அங்கே என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியாதபடி அவை ஆமை வேகத்தில் நடைபெற்றன. ஆனால் யாரோ எங்கோ ஏதோ செய்துகொண்டும் இருந்தனர்.
அங்கே தொல்லியல்துறையில் கூலிவேலைக்கு வந்திருந்த தமிழ்நாட்டு மக்கள் அங்கேயே விரூபாக்ஷர் கோயில் முன்னால் இருந்த இடிந்த கல்மண்டபங்களில் தட்டிகட்டி மறைத்து வீடுகளாக்கிக் குடியிருந்தார்கள். ஹம்பியின் இடிபாடுகளுக்கு உள்ளேயே விவசாயிகள் நிலத்தை ஆக்ரமித்து கரும்பும் சோளமும் நட்டிருந்தார்கள். இடிந்த கோயில்களிலேயே விவசாயக்கருவிகள் சேமிக்கப்பட்டிருந்தன. பல மண்டபங்கள் எருமைத்தொழுவங்களாக இருந்தன. பல கோயில்களின் மேல் வைக்கோல் போர்கள் தெரிந்தன.
ஹம்பியில் அன்று ஏராளமான தேனீக்கூடுகள் இருந்தன. அங்கே கொஞ்சம் தனிமையான இடங்களுக்குச் சென்றால் தம்பூரா சுதிபோல தேனீக்களின் ரீங்காரம் கேட்கும். அந்த இடத்தின் அழுத்தமான அமைதியை அது அச்சுறுத்துவதாக மாற்றிவிடும். எவரோ அக்காட்சிகளுக்கு இசையமைத்ததுபோல. அந்த ஓசையே இறந்தகாலத்தில் இருந்து எழுவது. சாவின் நாதம்.
அதோடு காற்று அள்ளிவரும் புழுதிமணல் சருகுகள் மேல் மெல்லப்பொழியும் ஓசை. அது எங்கோ நீர் ஓடிக்கொண்டிருப்பதுபோல பிரமை எழுப்பும். ஹம்பி அசைவிழந்து ஒரு மாபெரும் ஓவியம்போலிருந்தது. விவசாயம் செய்பவர்கள், மாடுகள், அலையும் நாய்கள், தொல்லியல் துறை கூலியாட்கள் அனைவருமே அந்த அசைவின்மையில்தான் அசைவின்மையாக இருந்தனர்.
எப்படியோ இடிந்த மண்டபங்களின் நடுவே, நெருஞ்சிக்காடுகளினூடாக வழிதேடி துங்கபத்ராவின் கரையை அடைந்துவிட்டால் நீரின் சலசலப்பு கேட்கும். மொத்த ஹம்பியே அசைவிழந்து கிடக்க நதி ஓடிக்கொண்டிருக்கும். எதிர்காலத்தை நோக்கி. ஏனென்றால் அது நிகழ்காலம். நதி எப்போதுமே நிகழ்காலம்தான். ஒரு சிறுமியின் சிரிப்பொலி போல அத்தனை இளமையானது அதன் சத்தம்.
நீரலைகளின் ஒளியைக் கண்டதுமே நெஞ்சின் அழுத்தம் மறைந்துவிடும். நீரிலிறங்கி அள்ளி அள்ளி மேலே விட்டுக்கொள்வோம். கடந்தகாலத்தை கழுவிவிட்டு நிகழ்காலத்திற்கு வரமுயல்பவர்களைப்போல. நீரின் தண்மையில்தான் அத்தனை தூரம் வெயிலில் அலைந்து தோல் வெந்துவிட்டிருப்பதே தெரியும். முகத்தை கழுவிக்கொண்டாலே முகம் சிவந்துவிடும்.
ஹம்பியின் இடிபாடுகளில் ஓரளவு தேறக்கூடிய இடங்களை தேர்வுசெய்து அங்கே இடிபாடுகளை மறைத்து பிளாஸ்டர் ஆஃப் பாரீஸிலும் களிமண்ணிலும் அதேபோன்ற மண்டபங்களை கட்டி இணைத்தும், தேவையில்லாதவற்றை ஓவியத் திரைச்சீலைகளால் மறைத்தும் பழையகாலச் செழிப்பான தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். இடிந்த ஆலயங்களின் மேல் வரிசையாக நந்திகளையும் யானைகளையும் பதித்தபோது அவை உயிர்கொண்டு வந்தன.
உண்மையிலேயே பிரமிப்பாக இருந்தது. பல இடங்களில் களிமண் மண்டபங்களுக்கும் உண்மையான மண்டபங்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை. கருங்கல் கட்டுமானங்களில் இடிக்கப்பட்ட பகுதிகளை களிமண்ணால் தூண்களும் சிற்பங்களுமாக நிரப்பி முன்பிருந்தது போலவே ஆக்கியிருந்தனர். பல கோயில்கள் தற்காலிகமாக இறந்தகாலத்திலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்கு வந்து நின்றிருந்தன. அல்லது அந்த இடமே இறந்தகாலத்திற்கு மூழ்கிச்சென்றுவிட்டதா?
ஹம்பியில் நான் பகல் முழுக்க பித்துப்பிடித்தவன்போல அலைந்தேன். எத்தனை விதமான கல்மண்டபங்கள், எத்தனை வகையான கோயில்கள். அனைத்தும் ஏதோ வானிலிருந்து உதிர்ந்து உடைந்து கிடப்பவை போல கண்ணெட்டும் தொலைவுவரை விரிந்து கிடந்தன. கல்மண்டபங்கள் மேல் வெயில் விழுந்து விந்தையான காட்சிவெளியை உருவாக்கியது. சமப்பரப்புகளில் வெயில் ஜொலித்தது, அருகிலேயே ஆழ்ந்த நிழல் விழுந்து கிடந்தது. வளைவுகளில் வெயில் வழிந்தது.
பார்க்கப் பார்க்க நிழல்கள் மாறிக்கொண்டே இருந்தன. காட்சியை எவரோ மாற்றிக்கொண்டே இருப்பதுபோல. மெல்ல ஓடும் ஒரு சினிமா அது என நினைத்தேன். கண்கள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்க அலைந்தேன். அது ஒரு பரவசநிலைதான், ஆனால் மனதில் துக்கமும் நிறைந்திருந்தது. ஏனென்றால் அது பாழடைவு என்று, சாவின் வெளி என்று என் அகம் அறிந்திருந்தது. ததும்பிக்கொண்டே இருந்தேன். அழுதுவிடுவேன் போலிருந்தது.
ஏப்ரல்- மே மாதம் ஹம்பியில் சென்னப்பட்டினத்தைவிட இரண்டுமடங்கு வெயில். தூசுமணம் கொண்ட புழுதிக்காற்று வீசிக்கொண்டே இருந்தது. கல்மண்டபங்களின் மேலிருந்து புழுதி அமைதியாக வழிந்தது. கைவிடப்பட்ட கோயில்களில் இடிந்த கற்தூண்களின் அருகிலும் சுவர்மூலைகளிலும் சருகுகளும் புழுதியும் சேர்ந்து குவிந்திருந்தது. தோண்டப்பட்ட கண்கள் போல கருவறைகள் காலியாக கிடந்தன. தெய்வமில்லாத பீடங்களை காண்கையில் ஒரு திடுக்கிடல். அங்கே சூட்சும வடிவில் தெய்வம் நின்றிருப்பதுபோல. இருட்டுக்குள் இருந்து எவரெவரோ நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினேன்.
வௌவால்கள் செறிந்த இருண்ட கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் கருந்திரைபோல அடர் இருளாக தெரிந்து, மெல்லமெல்ல கண் தெளிந்து, கரிய திரவப் பளபளப்புடன் நந்தியோ சிவலிங்கமோ எழுந்து வருவது கனவு போலவே இருந்தது. மண்ணில் பாதி புதைந்த சிற்பங்களில் உறைந்த சிரிப்பு. எல்லா சிற்பங்களும் எதையோ கூவிச் சொல்லிக் கொண்டிருந்தன. கைகளால், விரல் முத்திரைகளால், சிரிப்பால், உதட்டுச்சுழிப்பால், கண்களால். ஒட்டுமொத்தமாக ஹம்பியே கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. செவிக்கு கேட்காத இரைச்சல்.
ஒரு கல்மண்டபத்தில் களைத்து அமர்ந்தபோது அப்படியே தூங்கிவிட்டேன். என் உடலில் இருந்து வியர்வை வழிவதை உணர்ந்தேன். காதோரம் வியர்வை அப்படி ஊறிச்சொட்டுவது முன்பு நிகழ்ந்ததில்லை. கைகால்கள் எடைகொள்ள அப்படியே மூழ்கி மூழ்கிப்போனேன். தூக்கத்தில் கனவில் விக்கி விக்கி அழுதேன். என் விம்மலோசையைக் கேட்டு விழித்துக்கொண்டேன். எழுந்து கண்களை துடைத்தேன். எனக்கு அருகே புழுதியில் விழுந்து கிடந்த ஒரு கல்தூணில் இருந்த சிற்பம் வெறித்த பார்வையுடன் உடைந்த கூரையை பார்த்துக்கொண்டிருந்தது.
துங்கபத்ரா கோடையிலும் வற்றுவதில்லை. அந்த நீரில் மேலே வெயிலின் வெப்பமும் ஆழத்தில் பாறைகளின் தண்மையும் இருந்தது. பாறைகளில் இருந்து எழுந்த ஒருவகை சுட்டசெங்கல்லின் வாசனை நீரில் இருந்தது. கரையோரத்து ஆழமற்ற பாறைகளில் பாசி படர்ந்திருந்தது. நீரிலும் பாசி மணம். பச்சைப்பாசி நீரோட்டத்தில் தானும் செல்ல தவிப்பது போல நெளிந்து அலைகொண்டது. கால்கள் பட்டு உருண்ட உருளைப்பாறைகள் இன்னொரு முறை உருள நூறாண்டுகள் கூட ஆகக்கூடும் என்று தோன்றியது.
அந்தியில் வேலைமுடிந்ததும் கலை இலாகாவில் அத்தனைபேரும் அதில் நீந்தி திளைத்தார்கள். பகல் முழுக்க வெயிலில் காய்ந்தபின் அந்தக் குளியல் உடலை அலுப்புறச் செய்து இரவில் ஆழமான தூக்கத்தை அளித்தது. எனவே காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்தார்கள். அங்கே அனைவருமே மலர்ந்த முகத்துடன், கேலிப்பேச்சுகளுடன் இருந்தனர். அவர்களின் அன்றாடத்திலிருந்து மிக விலகிவந்துவிட்டிருந்தனர். வீடு, குடும்பம் என்ற நினைவுகள் அகன்றுவிட்டிருந்தன. அந்த விடுதலையை அவர்கள் கொண்டாடினர்.
ஓரிரு நாட்களிலேயே அந்த இடம் பழகிவிட்டது. ஓர் இடம் இனிதாக இருக்கவேண்டும் என்றால் அது முற்றிலும் பழகியதாகவும் இருக்கக்கூடாது, முற்றிலும் புதிதாகவும் இருக்கக்கூடாது. பழகிய இடம் சலிப்பூட்டும், புதிய இடம் திகைப்பூட்டும். கண்டுபிடிக்க ஏதோ ஒன்று எஞ்சியிருக்கும் இடத்தில் அன்றாட வாழ்க்கை மட்டும் பழகிவிட்டதாக இருந்ததென்றால் அது ஒருவகை கனவுலகு. ஹம்பியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் எதையாவது புதிதாகச் சொன்னார்கள். புதிய சிலைகள், புதிய கோயில்கள், அபூர்வமாக பாம்புகள், ஒருமுறை ராஜநாகமே கூட. அவற்றைவிட பெரிய காட்சிகளை அனைவரும் கனவுகளில் கண்டனர்.
நான் மூன்று நாட்கள் ஹம்பியிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். முதலிரண்டுநாட்கள் இருந்த பரவசமும் நெஞ்சுக்கனமும் மூன்றாம் நாள் குறைந்துவிட்டது. ஹம்பியின் அதிகம் பேர் பார்க்காத இடங்களை போய்ப்பார்த்தேன். ஒரு கோயில் முக்கால்வாசி புதைந்து போயிருந்தது. அதை அகழ்ந்து எடுத்திருந்தனர். ஆகவே ஒரு குளத்திற்குள் அது இருந்தது. கற்சுவர்களில் தொற்றி சென்று கீழிறங்கி கோயிலுக்குள் நுழைந்து பார்த்தேன். உள்ளே இருளுக்குள் கரிய நீரின் பளபளப்பில் பாதிமூழ்கி நந்தி அமர்ந்திருந்தது. அங்கிருந்து கருவறை வரை கற்பரப்புகளில் நீரலைகளின் ஒளிநெளிவு தெரிந்தது.
நீரில் இறங்கலாமா என்று சிந்தனைசெய்தபோது சளசளவென்று நீந்திச்சென்ற மூன்று நீர்நாய்களைக் கண்டேன். நீர் அவற்றின் மென்மையான முடியை அழகாக சீவி விட்டிருந்தது. அவற்றை நான் முன்பு கண்டதில்லை. ஆகவே அஞ்சி விதிர்த்து மேலேறிவிட்டேன். அவை மெழுகால் செய்தவை போலிருந்தன. பெரிய எலிகள். எலிக்கண்கள், எலி மீசை. எலியின் அச்சம். அவை நீந்திச் சென்று மறைந்தபோது தொலைவில் சிவலிங்கம் ஒளியலையில் நெளிந்தது. நெடுநேரம் அங்கே நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மறுநாள் விரூபாக்ஷ சுவாமி கோயிலை இன்னொருமுறை பார்த்தேன். அங்கேதான் கோயில் இடிபடாமல் முழுமையாக இருந்தது. ஆனால் அதன் பிராகாரங்கள் ஓய்ந்து கிடந்தன. தரையெங்கும் பசைபோல வௌவால் எச்சம் மிதிபட்டது. தலைக்குமேல் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் கண்கள் மின்ன கோழிக்குஞ்சுக் கூட்டம் போல கிளுகிளு ஓசையெழுப்பியபடி கூரைக்கல் பரப்பில் செறிந்திருந்தன. காலடியோசையில் சில வௌவால்கள் எழுந்து நீருக்குள் நீந்துவதுபோன்ற ஓசையுடன் சிறகடித்தன.
கோயிலுக்குள் ஓர் அறையில் ஒரு சிறுதுளை. அதன் எதிரிலிருந்த சுவரில் கோயிலின் கோபுரம் தலைகீழாகத் தெரியும். அங்கே நின்ற ஒரு தமிழகத் தொழிலாளி அதை எனக்கு காட்டினார். அந்த நிழலுருவமே எனக்கு விசித்திரமாக இருந்தது. ஏன் கோபுரத்தை தலைகீழாகப் பார்க்க ஆசைப்பட்டார் அந்தச் சிற்பி? அரசர் அதை விரும்பியிருப்பாரா? அவரே கட்டிய மாபெரும் கோபுரம் அது. இன்றும் ஏன் அதை மக்கள் கண்டு மகிழ்கின்றனர்?
அது ஒரு வகை சினிமாவா என்ன? நிழல்களில் எப்போதுமே மக்கள் திகைப்பும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். பொருட்கள் தன்னிடமிருந்து காட்சியுருக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. தன்னை வெவ்வேறு வகையாக காட்டி நடித்து விளையாடுகின்றன. அல்லது அவை அப்பொருட்களின் இன்மையின் வடிவங்கள். சினிமாவை என் அம்மா வெறுத்தார். நிழலாட்டம் என்று சொல்வார். அவர் ஒரே ஒரு சினிமாவை அரைமணிநேரம்தான் பார்த்தார்.
விரூபாக்ஷர் ஆலயத்தின் முன் இருந்த நீண்ட தெரு மிகப்பழமையானது. முழுக்க முழுக்க கல்மண்டபங்கள். அவையெல்லாம் அப்படியே இடிந்து சரிந்து நின்றன. அவற்றை தொழிலாளர்கள் கைப்பற்றி கை போனபடி கற்களும் செங்கல்லும் சாக்குப் படுதாவும் வைத்து மூடி வீடாக்கிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் இருளில் சிற்பங்கள் வெறித்த கண்களுடன் நின்றிருந்தன. சிற்பங்கள் வாசற் படிகளாக போடப்பட்டிருந்தன். சிற்பங்களின் உடைசல்கள் சாலையோரமாக குவிந்துகிடந்தன. சிற்பம் மீண்டும் கல்லாக மாறமுயன்றது, ஆனால் எத்தனை உடைந்தாலும் அது கல்லாகி விடுவதில்லை.
ஒரு டீக்கடையில் டீ குடித்தேன். அங்கே பெஞ்சாகப் போடப்பட்டிருந்தது ஒரு வீரபத்ரர் சிலை. என் பரவசம் முழுக்க வடிந்துவிட்டது. சோர்வு களைப்பாக மாறி உடலை அழுத்தியது. ஏன் அந்தச் சோர்வு என்று என்னையே கேட்டுக்கொண்டேன். உடற்களைப்பு அல்ல. உண்மையில் உடற்களைப்பு உள்ளத்தை ஊக்கப்படுத்துவது. அது உள்ளக் களைப்பு. ஆனால் நான் உளச்சோர்வூட்டும் எதையும் அடையவில்லை. அந்த இடிபாடுகளைத்தான் பார்த்தேன். அவற்றில் இருந்த சாவைப் பார்த்தேன்.
அந்த நிழலாட்டம். அது கடந்தகாலமாக, சாவின் வடிவாக ஆகிவிட்டிருந்த கோபுரத்தின் உயிருள்ள தோற்றம். நிழல்தான், ஆனால் அசைவது நெளிவது, தோன்றி மறைவது, ஆகவே உயிருள்ளது. அனிமேஷன் என்று எங்கள் எடிட்டிங் துறை ஆட்கள் சொல்வார்கள். அனிமா என்றால் அசைவது. உயிர், விலங்கு. நாங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது உயிரை. செத்த ஹம்பியில் இருந்து உயிருள்ள விஜயநகரை.
நேராகச் சென்று துங்கபத்ராவில் இறங்கினேன். குளிர்ந்த நீர் என்னை கொஞ்சம் அமைதியடையச் செய்தது. குளித்துவிட்டு மேலேறியபோதுதான் முதல்முறையாக நீண்ட நாட்களுக்குப்பின் ஸ்ரீபாலாவை நினைவுகூர்ந்தேன். என் மனம் இனிமை கொண்டது. என் உணர்வுகள் மெல்ல அடங்கின. அவளை நினைத்துக் கொண்டு நீரை பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்தேன்.
திரும்பி கூடாரத்துக்கு வரும்போது நாகலிங்க ஆசாரி விசில் அடித்து அழைத்து கமலாப்பூர் திரும்புவதற்கான வண்டி கிளம்புவதாக சொன்னான். நான் ஓடிப்போய் அந்த லாரியில் ஏற்றிக்கொண்டேன்.
டிரைவரிடம் “வண்டி எங்கே போகிறது?” என்று கேட்டேன்.
”ஹொஸ்பெட் போகவேண்டும் சார்… ரயிலிலே கொஞ்சம் பெண்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை கூட்டிவந்து விடவேண்டும்…”
”துணைநடிகர்களா?”
“ஆமாம். எல்லாம் கிழவிகள்… அதற்குமுன் இங்கிருந்து கொஞ்சபேரை கூட்டிக்கொண்டு சென்று ரயில் நிலையத்தில் விடவேண்டும். அவர்கள் ஊருக்குப் போகிறார்கள்…”
“ஏன்?”
“நல்ல காய்ச்சல்… இந்த வெயில் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.”
அப்போதும் நான் எதையும் எண்ணவில்லை. என்னுடைய பண்ணை வீட்டுக்கு போவதற்கான வழித்திருப்பத்தை அடைந்தபோது சட்டென்று தோன்றியது “நான் அங்கே வருகிறேன். அங்கே ஒரு சின்ன வேலை இருக்கிறது” என்றேன்.
சொன்னபின் என் மனம் படபடக்க ஆரம்பித்தது. என் முகம் சிவந்து கண்களில் நீர்ப்படலம் வந்துவிட்டது. டிரைவர் என்னை பார்த்திருந்தால் திகைத்திருப்பான்.
வண்டி அந்தப் பண்ணை வீட்டை அடைந்தது. அது நாலைந்து கிலோமீட்டர் தள்ளி இன்னும் சமநிலத்தில் இருந்தது. அங்கே புதிய கட்டிடங்கள் நாலைந்து இருந்தன. நான் லாரியில் இருந்து இறங்கிய பின்னர்தான் என்ன செய்வது என்று யோசித்தேன். எப்படி எவரிடம் சென்று கேட்பது?
ஆனால் அங்கே எவரும் எவரையும் கவனிக்கவில்லை. பண்ணை வீட்டில் ஆங்காங்கே கூடி அமர்ந்து வெற்றிலைபோட்டு துப்பிக்கொண்டிருந்தார்கள். நிழல்களில் அமர்ந்து சீட்டாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அங்கே அவர்கள் அடைந்த நிம்மதியை, உல்லாசத்தை அவர்கள் அடைந்து நெடுங்காலமாகியிருக்கவேண்டும். ஏனென்றால் அங்கே எவருக்கும் குடும்பம் உடனில்லை.
பெண்களின் தங்குமிடம் சற்று தள்ளி இருந்தது. அங்கே செல்லவேண்டும். ஆனால் அதற்கொரு காரணம் வேண்டும். தைரியமாகச் செல்லலாம், அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் தயங்கி குழம்பி அலைந்துகொண்டிருந்தேன். எவரிடமும் எதையும் கேட்கவேண்டுமென்று தோன்றவில்லை. தைரியம் வரவில்லை என்று சொல்லவேண்டும். திரும்பி விடலாமென்று எண்ணினேன். ஆனால் என்னால் என்னை திருப்பிக்கொள்ளவும் முடியவில்லை.
என்னை அவள் தோழி பார்த்துவிட்டாள். “ராவுகாரு, இங்கே ஏன் நிற்கிறீர்கள்?” என்றாள்.
“சும்மாதான்” என்றேன்.
அவள் சட்டென்று புன்னகைத்து “விஜி இங்கேதான் இருந்தாள்… இருங்கள் பார்க்கிறேன்” என்றாள்.
“யார்?” என்றேன்.
”விஜி, விஜயலட்சுமி… ஸ்ரீபாலா என்பது அவள் சினிமாப்பெயர்தான்.”
“ஆமாம், முன்பு சொன்னாய்” என்றேன் “நான் சும்மா இந்தப்பக்கமாக வந்தேன்.”
அவள் அதற்குள் சென்றுவிட்டாள். நான் திரும்பிச் செல்லலாமா என்று யோசித்தேன். ஒரு துணைநடிகையை தேடி வந்திருக்கிறேன். என் மாமாவுக்கு தெரிந்தால் அப்படியே செருப்பைக் கழற்றிவிடுவார்.
ஆனால் அங்கேயே நின்றிருந்தேன். சற்றுநேரத்தில் அவள் தோழியுடன் வருவதைக் கண்டேன். திரும்பி ஓடிவிடுவது போல ஓர் அசைவு என் உடலில் வந்தது. என் நெஞ்சு படபடத்தது. உடலெங்கும் குளிர்ந்த வியர்வை எழுந்தது. அப்போதுதான் அவளிடம் சொல்வதற்கு என்று எதையும் யோசிக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. ஏன் பார்க்கவந்தேன் என்று என்ன சொல்வது?
அதற்குள் அவர்கள் அருகே வந்துவிட்டார்கள்.
“ராவுகாரு உன்னை விசாரித்தார்” என்று தோழி சொன்னாள்.
நான் மறுப்பதுபோல அசைந்தேன். ஆனால் அந்த அசைவு என் உடலில் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. இல்லை நான் விசாரிக்கவில்லை. நான் வேறு வேலையாக வந்தேன். ஆனால் நான் அதையும் சொல்லவில்லை.
அவள் என்னைப் பார்த்து மிகக்கொஞ்சமாக புன்னகை செய்தாள். நான் புன்னகை போல உதட்டை சுழித்தேன். என் கைவிரல்கள் வியர்வையில் நனைந்துவிட்டன. உள்ளங்காலே வியர்த்து நிற்கமுடியாமலாகியது.
“பேசிக்கொண்டிருங்கள்” என்று தோழி விலகிச் சென்றாள்.
அவள் வெறுமே என்னை பார்த்துக்கொண்டு நின்றாள், ’சரி சொல்’ என்பதுபோல. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மெல்ல கனைத்தேன். அவள் திரும்பி மிக அப்பால் நின்ற தோழியை பார்த்தாள். அவள் திரும்பிய கழுத்தசைவு மெல்லிய சிறிய பறவைபோல அவளைக் காட்டியது. அவள் கழுத்து நீளமானது, மெல்லியது, மாநிறமான மெருகு கொண்டது. அதில் பாசிமணிமாலை நலுங்கியது.
“இங்கே எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?”என்றேன். என் குரல் உடைந்ததாக இல்லை என்பது ஆறுதலளித்தது.
அவள் பொதுவாகத் தலையசைத்தாள்.
அது அபத்தமான கேள்வி என்று எனக்கு தோன்றியது. நான் அந்த இடத்துக்கு பொறுப்பில்லை. அவளுக்கும் பொறுப்பில்லை.
அதற்குள் பேசவேண்டியதை கண்டுபிடித்தேன். “இங்கே ஒருவரை பார்க்க வந்தேன். அப்போதுதான் அவளைப் பார்த்தேன். உங்களுக்கு சரிகைக்கு அடியில் துணிவைத்து தைத்த ஆடை வேண்டும் அல்லவா?”
“ஆமாம்”என்றாள்.
“அதை நான் தனியாக கொடுத்து அனுப்புகிறேன்”
“அய்யோ வேண்டாம், எவராவது பார்த்தால் வம்பு”
“இல்லாவிட்டால் வழக்கம்போல நீலரிப்பனில் கட்டி போடுகிறேன்”
“ஒரே ஒரு ஆடையை அப்படி போடவேண்டாம், நாலைந்து போட்டால்தான் எனக்கு கிடைக்கிறது”
“சரி, போடுகிறேன்” என்றேன்.
அத்தோடு பேசுவதற்கு ஏதுமில்லாமல் ஆகிவிட்டது. அங்கேயே வேறெங்கோ பார்த்தபடி, உடலால் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி நின்றுகொண்டிருந்தோம். காற்று கடந்து சென்றது. ஒரு சருகு உதிர்ந்தது
அவள் மீண்டும் தோழியைத் திரும்பிப் பார்த்தாள். அந்த அசைவில் என் உள்ளம் திடுக்கிட்டு படபடத்தது. எத்தனை அழகிய அசைவு. அவள் கழுத்தின் கன்னங்களின் தோளின் தளிர் போன்ற மென்மையை விடாய்கொண்டவனாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கன்னங்களில் இரண்டு சிறிய புதுப்பருக்கள் முளைத்திருந்தன. அந்த மேலுதட்டின் மென்மயிர்.
அவள் திரும்பி “நேரமாகிறது…நான் வருகிறேன்” என்றாள். இயல்பான அசைவால் நெற்றிமயிரை ஒதுக்கினாள். மீண்டும் என் நெஞ்சில் அதிர்வு. தற்செயலாக கை வீணைக்கம்பிகள்மேல் பட்டதுபோல.
”சரி” என்று நான் சொன்னேன்.
அவள் திரும்பிச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் இயல்பாகவெ நடனக்காரி. அவள் அசைவுகள் எல்லாமே அழகிய நடனங்கள். நடை ஒரு நடனம். இயல்பான நடனம். காற்றில் ஓர் இறகு மிதந்துசெல்வதுபோலச் சென்றாள்.
நான் அங்கிருந்து நடந்தே என் பண்ணைவீட்டுக்கு வந்தேன். வரும் வழியெல்லாம் புவ்வுல சூரிபாபு, அப்பூரி வரப்பிரசாத ராவ் பாடல்களை பாடிக்கொண்டே இருந்தேன். அந்தி கவிந்து இருட்டாகிவிட்டது. சாலையில் யாருமில்லை. கோடைகாலத்து முன்நிலவு. வெளிச்சம் நன்றாகவே மண்சாலையையும், இருமருங்கும் இருந்த மரங்களையும் துலக்கியது. நான் கைவீசி நடிப்புடன் எதையெதையோ பாடினேன்.
சட்டென்று நினைவுக்கு வந்தது அந்த பாட்டு. “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா…” அந்த முகில் இந்த முகில், வான்நடுவினிலே.. இரு முகில்கள் இணைவதுபோல் இணைவோம். வானில் ஒரு மேகம், அதன் கீழே இன்னொன்று. நிலாவெளிச்சத்தில் மண்ணில் தெரிந்த எல்லா காட்சிகளுமே மேகத்தாலானவை போலிருந்தன. வானிலிருந்த மேகங்களும் மண்ணும் ஒன்றாகி ஒற்றைவெளியாகி நின்றிருந்தன. முக்கால்வடிவ நிலா வெண்ணிறச் சுடர்போல தெரிந்தது.
அந்தப்பாடலை பாடிக்கொண்டே சென்றுசேர்ந்தேன். இரவு சாப்பிடவில்லை. எனக்கான சாப்பாடு மூடிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை எடுத்துச் சாப்பிடுவது உலகியல்சார்ந்த செயலாக, கீழானதாகத் தோன்றியது. “அந்த முகில் இந்த முகில் ஆகாய நடுவினிலே”. நிலவொளி ஊறி சொட்டி நின்ற மேகங்களைப் பார்த்தபடி இரவெல்லாம் அமர்ந்திருந்தேன்.
மேலும்
அம்பேத்கர் நினைவுப்பேருரை
Egalitarians வழங்கும் முதலாம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நினைவு சிறப்புரை
உரையாற்றுபவர் – எழுத்தாளர் ஜெயமோகன்
தலைப்பு – அம்பேத்கரின் வரலாற்று அணுகுமுறை என்ன?
இவ்வாண்டிற்கான உரை பதிப்பாளரும் களசெயற்பாட்டாளருமான மறைந்த வே.அலெக்ஸ் அவர்களுக்கு உரித்தாக்கப்படுகிறது.
நாள் – 11.04.2021, ஞாயிறு
நேரம் – காலை 10 மணி (இந்திய நேரம்)
இது ஓர் இணையவழி நிகழ்வு. Zoom செயலி மூலம் நடத்தப்படும். YouTube வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.
அனைவரும் கலந்துகொள்ளலாம். முன்பதிவு அவசியம்.
கொதி,அறமென்ப- கடிதங்கள்
எங்கள் பகுதியில் வீட்டு விசேஷங்கள் சமயம் ஏற்பாடு செய்த உணவு மிகுந்து விட்டால் அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில் விநியோகம் செய்வார்கள். அவர்களும் எந்த நேரமாக இருந்தாலும் வாங்கி கொள்வார்கள். எத்துனை அளவாயினும் நொடியில் தீர்ந்துவிடும். எப்படி ஏனென்று “கொதி” ஃபாதர் ஞானய்யா எனக்கு இன்று விளக்கினார்.
“பாவப்பெட்ட சனங்க. பசிதான் அவங்களுக்கு எல்லாமே. அது வெறும் சோத்துப்பசி இல்லை. ஒண்ணுமே போய்விழாத அவ்ளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு. அதை நிறைக்கிறதுக்கு உண்டான வெறியைத்தான் பசீன்னு நினைச்சுக்கிடுறானுக. கொண்டா கொண்டான்னு உடம்பும் மனசும் ஆத்மாவும் சத்தம்போடுது. அது அதலபாதாளம், ஆனா அள்ளிப்போடுதது அஞ்சுவிரல் கைப்பிடி…”
உயர்ந்த உலக இலக்கிய படைப்புகளக்கென ஒரு வரிசை இருப்பின் “கொதி” எளிதாக அதில் இடம் பெறும். பெரிய பெரிய உண்மைகளை இக்கதை எத்துனை அலட்சிய பாவத்துடன் அரிதாரம் பூசாமல் வேம்பாய் கசந்தாலும் உள்ளதை உள்ளபடியே சொல்கிறது.
” தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து வாழணும்னு வேதம் சொல்லுது. எசக்கியேல் பதினெட்டு ஏழு. ஆனா பத்துபிள்ளை பெத்து ஒத்த கைப்பிடி சோறு வைச்சிருக்கிற அம்மைகிட்ட அதைச் சொல்லமுடியாது. இல்லாத கூட்டம் இது. அயலானுக்குக் குடுத்து தின்னா எல்லாரும் சேந்து சாவணும்னு இருக்கு வாழ்க்கை. அப்டித்தான் இருப்பாங்க. அம்மைகள் அப்டித்தான் இருந்தாகணும். அவங்க பிள்ளைகளை சாகாம காப்பாத்தணும்ல?”
வாழ்வின் அபத்தத்தையும் அர்த்தத்தையும் முழுமையாய் உணர்த்தும் வாசகங்கள்.
icf சந்துரு
கோவை – 19
***
அன்புள்ள ஜெ
தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். சென்ற முப்பதாண்டுகளில் படிப்படியாக இந்தியாவில் பசி மறைந்துவிட்டது. கொடுமையான பசி இன்றில்லை. அதற்கு இலவச அரிசி கோதுமை ஒரு காரணம். அடிப்படை வேலைவாய்ப்புக்கள் இன்னொரு காரணம். பொதுவாக கிராமப்புறங்களில் பிச்சைக்காரர்கள் வருவதே இல்லாமலாகிவிட்டது. பெருந்து நிலையத்தில் இருப்பவர்கள், கோயிலில் இருப்பவர்கள் வேறொரு வாழ்க்கையில் இருக்கிறார்கள்.
ஆனால் தொடர்ச்சியாக பசியை ஆவணப்படுத்திக்கொண்டும் இருக்கிறீர்கள். பசியை ஞாபகம் வைத்து என்ன ஆகப்போகிறது என்றுதான் தோன்றும். ஆனால் பசி உருவாக்கும் சில வேல்யூஸ் முக்கியமானவை. அவற்றை என்றைக்கும் ஞாபகம் வைத்துத்தான் ஆகவேண்டும். கொதி கதையை அப்படித்தான் நான் வாசித்தேன்
சாம் ஆசீர்
அறமென்ப… [சிறுகதை]வணக்கம் ஜெயமோகன். நலம்தானே. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.
அறமென்ப சிறுகதை படித்தேன்.நல்லவை செய்பவர்கள் நாளுக்கு நாள் ஏன் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதற்குச் சரியான காரணத்தைச் சிறுகதை கூறுகிறது. அத்துடன் பணம் வருகின்றது எனில் எளியமக்கள் மனம் எப்படியும் மாறிவிடும் என்பதையும் கதை காட்டுகிறது. வழக்கறிஞர் மற்றும் காவலர்களின் மறுபக்கத்தையும் நாம் அறிய முடிகிறது. ஆனால் ஒரு கேள்வி ஜெ. இப்படியே எல்லாரும் தங்கள் பாதுகாப்பை மனத்தில் முன்நிறுத்தி மனிதாபிமானத்தைச் சாகடித்தால் வருங்காலம் என்ன ஆகுமோ என்னும் வேதனைதான் கதை படித்து முடித்தவுடன் தோன்றுகிறது. மனம் கனமாகிறது. ஒரு குறும்படமாகத் தயாரிக்கக் கூடிய சிறுகதை இது.
வளவ.துரையன்
கடலூர்
***
அன்புள்ள ஜெ
அறமென்ப கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். வறுமை வேல்யூஸை இல்லாமலாக்குமா? ஆக்கும். வறுமைக்கு முன் செழிப்பு காட்டப்பட்டால், கூடவே அந்தச் செழிப்பு அறமின்மையால் வந்தது என்று திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டால் வேல்யூஸ் இல்லாமலாகும். இன்றைக்கு தமிழகத்திலே நடப்பது அதுதான். இந்தியாவிலும் அதுதான். கண்ணெதிரிலே பெரிய கோடீஸ்வரர்கள். கோடீஸ்வர அரசியல்வாதிகள். ஆனால் அவர்கள் செய்யும் ஊழல்கள் ஒவ்வொரு நாளும் செய்தியில் வருகின்றன. அவர்கள் ஏய்த்து பெரியவர்களாகி வசதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
ஆகவே அடித்தளத்தில் மட்டுமல்ல நடுத்தரவர்க்கத்திலேயே கூட இன்று வேல்யூஸ் தேவையில்லை என்று ஆகிவிட்டது. ஓட்டுக்கு பணம் பெறுவது முதல் எல்லா இடங்களிலும் இது பரவியிருக்கிறது. அதுதான் அந்தக்கதையிலும் வெளிப்படுகிறது. கொஞ்சம் கண்ணைமூடிக்கொண்டால் கஷ்டம் தீர்ந்துவிடும் என்பது எல்லாருமே நினைப்பது
நான் கிராம ஆய்வுக்குச் செல்லும்போது அங்கே எந்தவிதமான மராமத்து பணிகளும் நடந்திருக்காது. ஆனால் ஊர்க்காரர்களுக்கு காண்டிராக்டர் கொஞ்சம் பணம் கொடுத்திருப்பான். வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் தவலை இந்தமாதிரி ஏதாவது கிடைத்திருக்கும். அதை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு குடிநீரை அளிக்கும் ஏரியை தூர்வாராமல் அப்படியே பில் எழுத விட்டுவிடுவார்கள். இது எங்கேயும் நடக்கிறது. நூறுநாள் வேலையிலும் இதுதான் நடக்கிறது
மிகமிக வேகமாக ஏழைகள் கரப்ட் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு கவலைப்படவேண்டிய விஷயம்
மாணிக்கம் ராஜா
***
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]புதியவாசகர் சந்திப்பு கோவை- கடிதம்
அன்பின் ஜெ
வணக்கம் நான் உங்களை கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து வாசித்து வந்தாலும் இதுவரை நீங்கள் நடத்திய எந்த ஒரு நிகழ்வுக்கும் வந்ததில்லை கூச்சம் காரணமாகவே தவிர்த்து வந்தேன் .அதுமட்டுமல்லாமல் நான் இதுவரை இலக்கியம் தெரிந்த ஒரு நபரை கூட நேரில் பார்த்து உரையாடியது இல்லை. அது மனக்குறையாகவே எனக்குள் இருந்தது.அதனால் இந்த முறை தளத்தில் அறிவிப்பை பார்த்தவுடனேயே பதிவு செய்துவிட்டேன் .எனக்கு வருகை உடனடியாக உறுதி செய்யப்பட்டு மின்னஞ்சல் வந்தது உங்கள் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பு தரத்தைப் பற்றி பல கடிதங்களில் வாசித்து இருந்தாலும் அதை இந்த முறை நேரில் பார்த்து பிரமித்துப் போனேன்.
கதிர் அண்ணா மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து அனைவரையும் நிகழ்விடத்திற்கு சரியான நேரத்தில் வரச் செய்தார்கள் கூகுள் மேப் உதவியுடன் நாங்கள் வந்த கார் நிகழ்வு இடத்தைத் தாண்டி அடுத்த சாலையில் இறங்கியது உள்ளே சென்றவுடன் மூன்று மான்கள் எங்களை வரவேற்றna, ஆனால் கொஞ்ச தூரம் சென்ற பின்னர் அது தவறான பாதை என்று தெரிந்தது, பின்னர் பாலு அண்ணாவிடம் வழி கேட்டு திரும்பி சரியாக வந்து சேர்ந்தோம்.பண்ணை வீட்டின் வாசலிலேயே கதிர் அண்ணா எங்களை வரவேற்றார்,நான் வந்த பொழுதே பல நண்பர்கள் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாலு அண்ணா என்னை உள்ளே சென்று குளித்து விட்டு வருமாறு கூறினார்.
நான் உள்ளே செல்லும்போது சார் உள்ளேதான் இருக்கிறார் என்று சொன்னார், நான் எவ்வளவு முறை கற்பனை செய்து பார்த்த தருணம் இது. சட்டென்று கதவை திறந்து நீங்கள் வெளியே வந்தவுடன் என்னைப் பார்த்து புன்னகை செய்து பின்பு என் ஊர் பெயர் பற்றி விசாரித்தீர்கள்.
நான் குளித்துவிட்டு வரும்பொழுதே உரையாடல் தொடங்கியிருந்தது முதலில் நீங்கள் வாசிப்பில் விவாதத்தில் செய்ய படும் தவறுகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தீர்கள், அதை உங்களுக்கே உரிய பாணியில் பல வகையக பிரித்து கூறினீர்கள், இதையெல்லாம் நான் உங்கள் தளத்தில் ஏற்கனவே படித்திருந்தாலும் அதை நீங்கள் கூறி நேரில் கேட்கும் போது தெளிவாக தொகுத்துக்கொள்ள முடிந்தது அதன்பின் மதிய உணவிற்கு பிறகு புதிய வாசகர்களின் படைப்புகளை விவாதித்து அதன் நிறை குறைகளையொட்டி விவாதம் சென்றது.
பின் உங்கள் நிகழ்வுகளின் சிறப்பம்சமாகிய மாலை நடை கிளம்பினோம் மாலை நடை செல்லும் பொழுது பல நண்பர்களுடன் சுற்றி இலக்கியம் பற்றி உரையாடிக் கொண்டே வந்தேன் அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, நீண்ட நடைக்குப் பின் ஒரு குன்றின்மீது அமைந்திருக்கும் பெருமாளை தரிசித்து விட்டு மலை விளிம்பில் நின்று சமவெளியை அந்த அந்தி நேரத்தில் பார்த்தது இந்த நாளின் மற்றும் ஒரு அழகிய தருணம்.
இருளில் திரும்பி பண்ணை வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வந்து சேர்ந்தவுடன் மீண்டும் உரையாடல் ஆரம்பித்தது இந்த இரவு உரையாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத உரையாடலாக அமைந்தது. நீங்கள் கூறிய அனைத்தையும் சிரித்துக்கொண்டே கண்களில் நீர் வழிய கேட்டுக் கொண்டிருந்தோம். பின் இரவு உணவு முடிந்து மீண்டும் உரையாடல், முடிக்க மனமில்லாமல் 12 மணிக்கு எழுந்து உறங்கச் சென்றோம். அதன்பின்னும் நீங்களும் உங்கள் நண்பர்களும் வெளியில் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை கேட்க முடிந்தது. உங்களின் சிரிப்பு சத்தம் காதில் கேட்டுக் கொண்டிருக்கவே அப்படியே தூங்கிப்போனேன்.
காலை ஆறு மணிக்கு எழுந்து சில நண்பர்களுடன் இலக்கியம் பேசியபடி காலை நடை சென்று வந்தோம், நாங்கள் திரும்பி வரும் பொழுது நீங்கள் எழுந்து உரையாடலை துவக்கி இருந்தீர்கள், உங்கள் உரையாடலில் நீங்கள் முக்கியமாக குறிப்பிட்டது தமிழில் எழுத அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன அதைவிடுத்து எளிய அன்றாட எதார்த்தங்களை எழுதாமல் பெரிய கனவுகளுடன் பெரிய நிகழ்வுகளைப் பற்றி எழுத வேண்டுமென்று அழுத்தமாக குறிப்பிட்டிர்கள்.
நீங்கள் உரையாடலுக்கு இடையில் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களையும் பல நண்பர்கள் குறிப்பெடுத்து நாங்கள் சென்ற பின் அதை எங்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்கள். மதியம் ஒரு மணிக்கு நிகழ்வு முடியும் தருவாய் நெருங்கியது அப்பொழுது ஒரு நண்பர் சிற்பங்களையும் வரலாறையும் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டார் சொல்ல நேரம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
அதன்பின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குழுப்படமும் பின் ஒவ்வொருவராக உங்களிடம் தனியே நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். என்னைப் போலவே பல நண்பர்கள் புத்தகத்தில் உங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள், அதன் பின் உணவு உண்டுவிட்டு ஒவ்வொருவராக உங்களிடம் பேசி விடைபெற்றோம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் வாசகர்கள் வந்து கைகுலுக்கி செல்லும் பொழுது உங்கள் முகத்தில் சட்டென்று வந்து குடிகொள்ளும் கனிவை பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.
உங்கள் நண்பர் ஈரோடு கிருஷ்ணனை நீங்கள் நிறைய எழுதி எழுதி அவரும் உங்கள் புனைவின் ஒரு கதாபாத்திரமாகவே ஆகிவிட்டார் அவரை நேரில் பார்க்கும் பொழுது உங்கள் புனைவின் ஒரு கதாபாத்திரத்தை நேரில் பார்க்கும் அனுபவமாகவே இருந்தது குட்டப்பனை போல கிரிதரனை போல புத்தகத்தில் இருந்து இறங்கி வந்தவரைப் போல் இருந்தார்.
நிகழ்விடம் உணவு அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது அதற்கு உதவிய பாலு அண்ணா மற்றும் கதிர் அண்ணா அவர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் நன்றிகள் பல. எந்தவிதச் சச்சரவுகளுமன்றி 30 நபர்கள் கூடி தீவிரமாக இலக்கியம் வரலாறு தத்துவம் மட்டும் இரண்டு நாட்கள் பேசினோம் என்று சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை (யாரிடமும் சொல்லப் போவதுமில்லை).
ரயிலில் செல்லும் பொழுது தொண்டையை அடைக்கும் அளவிற்கு ஏக்கமாக இருந்தது என் வாழ்நாளில் அருமணி போல் நான் பாதுகாக்க போகும் இரண்டு நாட்கள் அதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது இனி இவ்வாறு வரும் ஒரு நிகழ்வையும் தவற விடப் போவதில்லை.
தினேஷ் ரவி
திருச்சி
அன்புள்ள தினேஷ்
புதியவாசகர் சந்திப்பு என்பது நீங்கள் சொல்லும் அந்தத் தயக்கங்களை களைவதற்காகத்தான். அறிவியக்கம் என்பது தனித்தனியாக உள்ளங்களில் நிகழ்ந்தாலும் ஒட்டுமொத்தமாக அது ஒரு பெரும்பெருக்கு என்று உணர்வதற்காக. நாம் தனியாக இல்லை. நாம் எளியவர்களும் அல்ல. நாம் சேர்ந்து இக்காலகட்டத்தின் அடித்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வே செயல்பட ஊக்கமளிப்பது
ஜெ
உலகவரலாறு- ஒருவரைபடம்
யூடியூபில் இந்த காணொளியை பார்த்தேன். உலகவரலாறு மிகச்சுருக்கமாக வரைபடமாக காட்டப்பட்டுள்ளது
எஸ்.பி.சரவணன்
அன்புள்ள சரவணன்
எனக்கு உதவியாக இல்லை. ஆனால் பொறியியல் படித்தவர்களுக்கு உதவியாக இருக்கலாம்
இதேபோல உலகவரலாற்றை சித்தரிக்கும் ஏராளமான காணொளிகளும், குறும்படங்களும் இணையத்தில் உள்ளன. அவற்றை பலர் பார்க்கிறார்கள். ஆனால் காணொளிகள் வழியாக வரலாற்றாய்வாளர் ஆன எவரையும் நான் பார்த்ததில்லை. அவை உதிரிச்செய்திகளாகவே நினைவில் நிற்கின்றன
இதையே இயற்கை சார்ந்த ஆவணப்படங்களுக்கும் சொல்லமுடியும். அவை மேலோட்டமான அறிமுகத்தை அளிக்கும். ஒருவகையான ஆர்வத்தை கிளர்த்தும். அத்தோடு சரி
வரலாறோ இயற்கையோ உண்மையாகவே அறிந்துகொள்ளவேண்டும் என்றால் நூல்களை ‘பயில’ வேண்டும். வாசிப்பது அல்ல, பயில்வது முக்கியம்.
அ.நூல்களை முழுமூச்சாக அமர்ந்து கற்கவேண்டும்.
ஆ.கற்றவற்றை சொந்த மொழியில் குறிப்புகளாக எழுதிக்கொள்ளவேண்டும்.
இ. அவற்றைப்பற்றி தனக்குள்ளும் பிறரிடமும் விவாதிக்கவேண்டும்.
ஈ.அவற்றின்மேல் சொந்த வினாக்களை எழுப்பிக்கொண்டு உசாவிச்செல்லவேண்டும்– அப்போதுதான் அவை நம் அறிவாக மாறுகின்றன. நம்முள் வளர்கின்றன
வரலாறோ பிறதுறைகளோ ஓரிரு செய்திகளைச் சொல்பவர் அத்துறைகளை அறியாதவர். ஒரு கொள்கையை, ஒரு முடிவை சொல்லி அதை தர்க்கரீதியாக நிறுவுபவரே அத்துறைகளில் அறிவுகொண்டவர்
அதற்கு உண்மையான ஓர் அறிஞனுடன் உரையாடுவது, மாணவனாக இருப்பது மிகமிக முக்கியமானது.
ஜெ
April 3, 2021
என் உரைகள்,ஒரு தயக்கத்துடன்…
அன்புள்ள ஜெ
இந்த இணைப்பு ஷேர் செய்யப்பட்டு எனக்கு வந்தது. நாவலாசிரியர் சரவணக்கார்த்திகேயன் தொகுத்தது. கிட்டத்தட்ட இணையத்தில் இருக்கும் உங்கள் உரைகள் அனைத்தும் இத்தொகுப்பில் உள்ளன.
சிவக்குமார்
அன்புள்ள சிவக்குமார்
203 உரைகள். ஏறத்தாழ இருநூறு மணிநேரமிருக்கும் என நினைக்கிறேன். இது எனக்கு ஒரு சின்ன ‘சம்மல்’ மனநிலையையே அளிக்கிறது
ஏனென்றால் சமீபகாலமாக எனக்கு ஒர் எண்ணம் உள்ளது. நாம் வாசிப்பு என்னும் செயல்பாட்டில் இருந்து விலகிச் செல்கிறோமா என்று. இது உலகளாவிய போக்கு அல்ல. அமெரிக்கா- ஐரோப்பா இன்றும் வாசித்துக்கொண்டேதான் இருக்கிறது—மின்வாசிப்பு வந்தபின் பலமடங்கு வாசிக்கிறது. இங்கே இந்தியாவில் நாம் வாசிப்பிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறோம்
சமீபத்தில் முனைவர் ஆய்வுசெய்யும் ஒரு பெண்ணை சந்தித்தேன். முனைவர் ஆய்வுக்கே கூட எவரும் எதையும் வாசிப்பதில்லை என்றார். இணைய உரைகள், காணொலிகளையே நம்பியிருக்கிறார்கள். கல்லூரிகளில் வாசிப்பென்பதே மறைந்துவிட்டது. நூலகங்களுக்கு மாணவர்கள் செல்வதே இல்லை. முன்பெல்லாம் இலக்கியம் போன்றவை வாசிக்கப்படாவிட்டாலும் அறிவியல் போன்ற துறைசார் நூல்களை வாசிப்பார்கள். இன்று அவ்வழக்கமும் இல்லை
என் வழக்கறிஞர் நண்பர்கள் சொல்வது, வழக்கறிஞர்களிலும் வாசிப்பவர்கள் அருகிக்கொண்டிருக்கிறார்கள் என்று.அவர்களும் உரைகளையே நாடுகிறார்கள். ஆய்வுமாணவர்கள்,வழக்கறிஞர்கள்தான் வாசித்தேயாகவேண்டிய நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கும் வாசிப்புப் பழக்கம் இல்லை.
இளமையிலேயே காட்சியூடகத்திற்குப் பழகிய ஒரு தலைமுறை உருவாகிவந்துவிட்டது. அவர்களால் எழுத்துக்களை தொடர்ந்து பார்ப்பதே இயல்வதில்லை. எழுத்துக்களை மொழியாக, மொழியை கற்பனையாகவும் கருத்துக்களாகவும் மாற்றிக்கொள்ளும் பயிற்சி இல்லை.ஆகவே வாசிப்புப்பழக்கம் குறைகிறது
வாசிப்புக்கு ஈடு வேறில்லை. அது அந்தரங்கமானது, விரிவான சுயமான அறிதலை அளிக்கிறது. முதல் உலகுக்கும் இரண்டாமுலகுக்கும் உள்ள வேறுபாடே வாசிப்புப்பழக்கத்தால்தான் உருவாகிறது. ஆகவே முதல் உலகமாக ஆகநினைக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் வாசிப்புப்பழக்கத்தை வளர்க்க பெருஞ்செலவு செய்கின்றன.நாம் இருக்கும் வாசிப்பை இழந்துகொண்டிருக்கிறோம்
குறைந்தது இலக்கியமாவது வாசிப்புக்கு உரியதாக இருக்கவேண்டும், ஏற்கனவே கொஞ்சம் வாசிப்பவர்களை வெளியே அனுப்பிவிடலாகாது என்பது என் எண்ணம். என்னிடம் நோய்த்தொற்று காலத்தில் இலக்கியக் காணொலிகள் போடும்படி நண்பர்கள் சிலர் சொன்னார்கள். கூடாது என மறுத்துவிட்டேன். மாறாக எழுதித்தள்ளினேன், அவர்களை கூடுமானவரை வாசிக்க வைத்தேன்.
கூடுமானவரை தவிர்த்தாலும் நானே ஒருவருடம் கேட்குமளவுக்கு பேசி பதிவாகியிருக்கிறேன் என்பதை கொஞ்சம் சோர்வுடனேயே எதிர்கொள்கிறேன். வேறுவழியே இல்லை, இக்காலகட்டத்தின் அலை. இந்த உரைகள் இளையவர்களை வாசிக்கச்செய்யுமென்றால் சரிதான் என எண்ணிக்கொள்கிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

