Jeyamohan's Blog, page 1006

April 8, 2021

வேதப்பண்பாடு நாட்டார் பண்பாடா?

வணக்கம் திரு. ஜெயமோகன் ,

நான் நாட்டாரியலில் ஆர்வம் கொண்டவன்.

வானமாமலை தொட்டு பரமசிவன் வரையில் வாசிப்பு (மிகக்குறைவே) எனினும் தமிழ்நாட்டில் நாட்டாரியல் என்பது பன்முகத்துடன் உள்ளதாகவே உணர்கிறேன்.

குறிப்பாக, திருநெல்வலியின் நாட்டார் வழக்குகள் மதுரைக்கு அந்தப்பக்கம் என்னவென்றெ தெரிவதில்லை என்பது என் கருத்து. நாட்டாரியலையே சமூகத் திரட்டாக (Social Capital) நினைக்கிறேன்.

எனது கேள்வி என்னவென்றால் யாகங்களும் (புரோகித பண்பாடு) ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு இனக்குழுவின் நாட்டாரியலாகத்தானே இருக்க முடியும்?

இல்லை, புரோகித பண்பாடு மற்றும் நாட்டாரியல் இரண்டிற்கும்  வேறுபாடு உள்ளது எனில் அது இருவேறு வட்டார நாட்டாரியலிக்கும் பொருந்தும்தானே?

இதை எப்படி புரிந்து கொள்வது?

நாராயணன்

திருநெல்வேலி

அன்புள்ள நாராயணன்

இதை நீண்டகாலம் முன்பு நான் திரிவிக்ரமன் தம்பி அவர்களை எடுத்த ஒரு மலையாளப் பேட்டியில் கேட்டிருந்தேன். அவர் அளித்த விளக்கம் சிறப்பாக இருந்தது

நவீன அறிவுத்துறைகள் உருவாவதற்கு ஒரு தர்க்கமுறை உண்டு. ஓர் அறிவுத்துறையின் ஆய்வுமுறைமை சிலவற்றை ஆராய போதுமானதாக இல்லாதபோது அதிலிருந்து இன்னொரு அறிவுத்துறை முளைக்கிறது. அவ்வாறுதான் புதிய அறிவுத்துறைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அறிவுத்துறையும் உண்மையில் இன்னொன்றின் கிளைதான். முந்தைய அறிவுத்துறை எதை பேசவில்லையோ அதையே இது பேசும்.

வரலாற்றாய்வு என்பது நவீன அறிவுத்துறைகளில் தொன்மையானது. ஆனால் அதனால் சமூகம் உருவாகி செயல்படும் விதத்தை, அதன் உட்கூறுகளை தன் ஆய்வுமுறையைக் கொண்டு விளக்கமுடியவில்லை. ஆகவே வரலாற்றாய்விலிருந்து சமூகவியல் பிரிந்து தனி அறிவுத்துறையாக ஆகியது

சமூகவியல் சமகால சமூகங்களை ஆராய்கிறது. ஆனால் தொல்குடிகளின் வாழ்க்கையை ஆராய அதன் ஆய்வுக்கருவிகள் போதவில்லை. ஆகவே மானுடவியல் என்னும் துறை உருவானது. சமூகவியல் மையம் சார்ந்த செவ்வியல் நோக்கை கொண்டிருந்தது. அடித்தள மக்களின் பண்பாட்டை அதனால் ஆய்வுசெய்ய முடியவில்லை. அதன்பொருட்டு உருவானதே நாட்டாரியல். நாட்டாரியல்கூட புதிதாக உருவாகிவரும் விளிம்புநிலை கலாச்சாரக்கூறுகளை ஆராய போதுமானதாக இல்லை. ஆகவே விளிம்புநிலை ஆய்வுகள் என்னும் துறை உருவானது

வரலாற்றிலிருந்து தொல்லியல் தனியாகப் பிரிந்தது. வரலாற்றுக்கு முந்தையகால ஆய்வு தனியாக பிரிந்தது. வரலாற்றிலிருந்து தொல்வரலாற்றாய்வு தனியாக பிரிந்தது. வரலாற்றிலிருந்து வரலாற்றுப் பொருளியல் தனியாகப் பிரிந்தது.

ஆக , இந்த ஒவ்வொரு ஆய்வுமுறையும் அதற்கேற்ற பார்வைக்கோணத்தை, ஆய்வுப்பொருளை, ஆய்வுமுறையை வகுத்துக்கொண்டிருக்கின்றன. வேதகாலப் பண்பாடு, தொல்தமிழ்ப்பண்பாடு ஆகியவை வரலாற்றாய்வின் எல்லைக்குள் வருபவை. வரலாற்றாய்வுக்குள்ளேயே தொல்வரலாற்றாய்வு முறைக்குள் அமைபவை.

ஏனென்றால் அவை மிகத்தொல்காலத்திலேயே மையப்பண்பாடாக ஆகிவிட்டவை. அவற்றை செவ்வியல்பண்பாடுகள் எனலாம். அவைதான் நம் சமூகத்தை தொகுத்து நிலைநிறுத்தியிருக்கின்றன.

நாட்டாரியல் என்பது மையப்ப்படுத்தப்பட்ட பண்பாட்டின் பகுதியாக அல்லாமல் மக்கள்வாழ்க்கையில் நீடிக்கும் பண்பாட்டுக்கூறுகளையே ஆராய்கிறது. அதன் பேசுபொருளை இப்படி வரையறைசெய்துகொண்டிருக்கிறது. ஒரு பண்பாட்டின் மையப்போக்காக இல்லாதது நாட்டார் பண்பாடு. மையப்பண்பாடு எழுத்துமரபுக்குள் சென்றிருக்கும். மதம், அரசு ஆகியவற்றின் முகமாக இருக்கும். ஆதிக்கத்தன்மை கொண்டிருக்கும். அது அல்லாததே நாட்டார் பண்பாடு. அந்த வேறுபாட்டைக்கொண்டே நாட்டார் பண்பாட்டை அடையாளப்படுத்துகிறார்கள்.

நாட்டார் பண்பாடு இன்றும் வாழ்வதாக இருக்கவேண்டும் என்பது இன்னொரு வரையறை. வளஞ்சியர் என்னும் வணிகக்குழு பற்றி தமிழ் வரலாற்றில் வருகிறது. ஆனால் இன்று அவர்களைப்பற்றிய செய்திகளே இல்லை. ஆகவே அது நாட்டாராய்வுக்குள் வருவதில்லை. உமணர்கள் யார் என்ற கேள்வி நாட்டாரியலின் எல்லைக்குள் இல்லை, ஏனென்றால் இன்று உமணர்கள் இல்லை.

நாட்டாரியல் என்பது உண்மையில் வேறுபாடுகளையே ஆராய்கிறது. ஒரு பண்பாடு நாட்டார் பண்பாடு என எப்படி கண்டடைவது? அது மையப்பண்பாட்டிலிருந்து வேறுபட்டிருக்கும். பறை இசைக்கலைஞர் நாட்டாரியலின் ஆய்வுப்பொருள். தவுலிசைக் கலைஞர் நாட்டார்ப்பண்பாட்டின் ஆய்வுவட்டத்திற்குள் வரமாட்டார்.

அதன்பின் வட்டாரம், இனம் சார்ந்து பண்பாட்டில் காணப்படும் வேறுபாடுகளைத்தான் ஆராய்கிறது. நெல்லையின் நாட்டார் பண்பாட்டில் எது சிறப்பாக பதிவுசெய்யப்படவேண்டும்? மதுரையிலோ கோவையிலோ இல்லாத தனித்தன்மைதான். இந்த வேறுபாடுகளை தொகுத்து அதை ஆராய்வதே நாட்டாரியலின் அறிதல்முறை’

தமிழ்ப்பண்பாடு ஒன்றுதான். அதற்குள்தான் நாட்டாரியல் கருத்தில் கொள்ளும் பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. வரலாற்றுப்பார்வையில் தஞ்சையும் மதுரையும் ஒன்று, நாட்டாரியல் அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கருத்தில்கொண்டு ஆராயும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 11:36

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-9

[ 9 ]

மறுநாள் நான் எழுவதற்கு முன்னரே அவள் எழுந்துவிட்டாள். அவள் உள்ளே ஏதோ செய்யும் ஓசை கேட்டுத்தான் நான் விழித்துக்கொண்டேன். இருட்டிலேயே அவள் வெளியே சென்று வந்துவிட்டிருந்தாள். நான் மிகமிக களைத்திருந்தேன். முழு இரவும் நான் தூங்கவில்லை. அத்தனை தூக்கம் அழுத்தியது. சாவுபோல எடைமிக்க தூக்கம். ஆனால் பத்துநிமிடம் தூங்கியதுமே மனம் விழித்துக்கொண்டது. அதன் பின் உழற்றிக்கொண்டே இருந்தது. விடியவிடிய.

நான் அந்தத்தருணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முயன்றேன். அவளிடம் அவ்வாறெல்லாம் சொல்லாமல் இருக்க, அவ்வாறு எண்ணமே வராமலிருக்க. அந்த தருணத்தை வெவ்வேறு வகைகளில் மாற்றி நடித்தேன். என்னுள் நிகழ்த்தி நிகழ்த்திச் சலித்தேன். அதில் அவளை நான் தழுவி ஏற்றுக்கொண்டேன். காதலியை முதலில் அடைவதன் வேட்கை, தவிப்பு, பரவசம், தவிப்பு, தளர்வு என்று திளைத்தேன். பகற்கனவுகளில்தான் காமம் எத்தனை வண்ணம் கொள்கிறது. எத்தனை சாத்தியக்கூறுகளை அடைகிறது. எவ்வளவு தூரம் அதில் செல்லமுடிகிறது!

ஆனால் அவை பகற்கனவு என்றும் தெரிந்திருக்கிறது. ஆகவே சலிக்கிறது. அல்லது பகற்கனவுகளிலுள்ள ஒற்றைப்படைத்தன்மைதான் சலிப்பாகிறதா? வேண்டுவன வேண்டியதுபோல் நிகழ்ந்தபின் ஆணவ நிறைவின் வெறுமையை அன்றி எதையும் விட்டுவைக்காமல் பகற்கனவுகள் சலித்து நின்றுவிடுகின்றனவா? சலிக்காத பகற்கனவு என உண்டா? அதைத்தான் சொர்க்கம் என்கிறார்களா? தெவிட்டாத தேன் என்ற கற்பனைதான் எத்தனை முறை காதில் விழுந்திருக்கிறது!

பகற்கனவின் ஊசல் ஒரு திசையில் எல்லை தொட்டதும் மறுதிசைநோக்கி பாய்கிறது. தித்திக்கத் தித்திக்க அவளுடன் இருந்தவன் அவளை சிறுமைசெய்தேன். அவள் உளமுடைந்து அழச்செய்தேன். அவள் அழுவதைக் கண்டு நானும் உளமுருகி அழுதேன். துன்பத்திலும் திளைத்தேன். அதன் உச்சியில் பாட்டரி முனையில் நாநுனி தொடும் இனிப்பைக் கண்டுகொண்டேன். மீண்டும் திரும்பி வந்தேன். ஓயாத ஊசல்.

இரவில் படுக்கையில் கண்ணீர் வழிய நெடுநேரம் கிடந்தேன். கண்ணீர் வழிந்ததுமே கொஞ்சம் அமைதியடைந்தேன். அந்தக் கண்ணீர் அப்பகற்கனவு நாடகத்தில் நான் சொன்னவற்றுக்கும் செய்தவற்றுக்கும் அல்ல, உண்மையில் அவளிடம் நான் சொன்னவற்றுக்காக. ஆனால் அப்படி நேரடியாக அதை எனக்கே சொல்லிக்கொள்ள என்னால் இயலவில்லை. ஆகவே அதை நூறுமுறை திருப்பிப்போட வேண்டியிருந்தது. ஒரு செயற்கையான தருணத்தை கற்பனையில் உருவாக்கி பகற்கனவில் அதை விரித்தெடுக்கவேண்டியிருந்தது.

விடியற்காலையில் தூங்கியிருப்பேன். எப்போதோ விழித்துக்கொண்டேன். அந்த தூக்கத்தால் என் மனம் மிக நன்றாகத் தெளிந்திருந்தது. ஒவ்வொன்றும் மிகமிக துல்லியமாக, எந்தப் பூச்சுமில்லாமல் தெரிந்தது. அவளை நான் இழந்துவிட்டேன், அதுதான் உண்மை. ஏன் அதை அவளிடம் சொன்னேன்? அந்த தருணம் என்னை அச்சுறுத்தியது, அதன் எதிர்பாராத தன்மை. நான் என்னிடமிருந்த எதையோ இழக்க அஞ்சினேன். அதன்பின் நான் வேறொருவனாக ஆகிவிடுவேன். அது பாய்ந்து விடுவதற்கு முந்தைய கணத்தின் தயக்கம் மட்டும்தான், வேறொன்றுமல்ல. ஆனால் அது வேறேதேதோ சொற்களை தன்மேல் அணிந்துகொண்டுவிட்டது.

அந்த தருணத்தில் என்னை அதிலிருந்து விலக்கிக்கொள்ள விரும்பினேன். என்னை என் காமத்திலிருந்து அறுத்துக் கொள்ளவேண்டும் என முயன்றேன். அதை மூர்க்கமாகச் செய்தேன். ஆகவேதான் அந்த கடுமையான வார்த்தைகள். உண்மையில் அவளை ஒரு வாளால் வெட்டினேன். அந்த வாள் அவளை வெட்டுமென்று தெரிந்திருந்தது. அதை முன்னரே கண்டடைந்து ரகசியமாக வைத்திருந்தேன். ரத்தம் வழிய, துடிதுடிக்க வெட்டினேன்.

அந்த விடியற்காலையில் கண்ணீருடன் நான் என்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த வாளை நான் வைத்திருந்திருக்கிறேன். நான் அவளிடம் சொன்னவை பொய் அல்ல. ஆனால் அவையே உண்மை என்றும் இல்லை. அது உண்மையின் ஒரு பகுதி. அதுவும் என் எண்ணம்தான். ஆனால் அவள்மேல் நான் பெரும் பித்து கொண்டிருந்தேன். அந்தப் பித்தையே நான் அஞ்சினேன். ஆனால்  உண்மையில் அதற்கு ஆழத்தில் அருவருப்பும் இருந்தது. அவளை அடைந்தால், அந்த கிளர்ச்சி அடங்கினால், அந்த அருவருப்பு மேலெழுமா? இல்லை இல்லை என்றது அதற்கும் அப்பால் ஓர் ஆழம். அவளே என் பெண். இன்னொருத்தி அல்ல. அவள்தான். அவளை இழந்தால் வாழ்நாளில் என்றென்றைக்குமான பெண்ணை இழந்துவிட்டேன் என்றே பொருள்.

அதை அவளை எழுப்பிச் சொல்லிவிடவேண்டும் என்று எண்ணினேன். அவளை தொட்டு எழுப்ப கைநீட்டிவிட்டேன். ஆனால் எழுப்பவில்லை. அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படி தூங்க முடிகிறதென்றால் என் வார்த்தைகள் அவளை ஆழமாகப் புண்படுத்தவில்லை என்றுதான் பொருள். அவள் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. என்னை இழந்துவிட்டோம் என்னும் எண்ணம் அவளிடமில்லை. அந்த எண்ணம் சீற்றம் அளிக்க கையை விலக்கிக் கொண்டேன்.

பின்னர் மீண்டும் உள்ளம் நெகிழ்ந்தது. அவள் என் மேல் கொண்ட அக்கறையால் நான் நடந்துகொண்டது சரி என எண்ணுகிறாள். அதன்வழியாக என்னிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டது அவளுக்கு நிறைவை அளிக்கிறது. என் நலனுக்காக என்னை இழப்பது அவளுக்கு இயல்பாக தெரிகிறது. அவளிடம் நாளை பேசவேண்டும். என் மனதில் என்ன என்று சொல்லவேண்டும். ஒரு சொல் மிச்சமில்லாமல் உரையாடிவிடவேண்டும்.

ஆனால் கூந்தலை அவிழ்த்து கையால் நீவியபடி உள்ளே வந்த அவளைப் பார்த்ததும் அந்த உணர்வெழுச்சிகள் அணைந்தன.அவள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று தோன்றியது. நேற்றிரவு நான் பேசியது அவளுக்கு நினைவிலிருப்பதாகவே தெரியவில்லை. அப்படியென்றால் அவள் மனம் காய்த்துப் போயிருக்கிறது. நுண்ணுணர்வுகளே இல்லை. அவமானங்கள்கூட ஒருபொருட்டாக இல்லை.

அல்லது, அந்த வார்த்தைகள் அவளுக்கு அவமதிப்பாகத் தோன்றவில்லை. அவள் அந்த நிலைக்கு இறங்கிவிட்டிருப்பது அவளுக்கு பொருட்டாகத் தெரியவில்லை. அவள் அங்கே இயல்பாக இருந்துகொண்டிருக்கிறாள். எந்தக் கீழ்நிலையிலும் மனிதர்கள் பழகிப்போனால் இயல்பாக இருப்பார்கள். அவள் அங்கே மகிழ்ச்சியாகக்கூட இருப்பாள். ஒருவேளை அவள் விரும்பும்படியான ஆண்கள் அவளிடம் வந்தால் அந்தக் காமத்தில் திளைக்கக்கூட செய்வாள்.

அதை மனதுக்குள் சொல்லிச்சொல்லி அவள்மேல் காழ்ப்பை வளர்த்துக்கொண்டேன். என் முகம் கடுமையாக இருந்தது. அவளை நேராகப் பார்ப்பதையே தவிர்த்தேன். அவளே சிறிய அறைக்குள் சென்று ஒடுங்கிக்கொண்டாள். நான் காலையின் வேலைகளை முடித்தேன். காலையுணவை நிறைய அள்ளி எடுத்து கொண்டுவந்து அவளுக்காக வைத்தேன். அவளிடம் ஒன்றும் சொல்லாமல் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

படப்பிடிப்புக்குச் சென்றேன். அங்கே என்.டி.ஆரும் பானுமதியும் கண்ணீருடன் கைகளைப் பற்றிக்கொண்டு பேசும் வசனங்கள் படமாகிக்கொண்டிருந்தன. இருவரும் பிரிவதற்கு இயலாமல் கண்ணீருடன் நின்றனர். பற்றிக்கொண்ட கைகளிலிருந்து தன் கையை உருவிக் கொள்ள பானுமதி முயன்றார். என்.டி.ஆர் அவள் கையை விடாமல் மீண்டும் மீண்டும் பற்றிக்கொண்டார். இருவர் முகங்களும் உருகிக்கொண்டிருந்தன. சூழ்ந்திருந்தவர்கள் முகங்களும் அதேபோலத் தெரிந்தன.

காமிரா ஓடிக்கொண்டே இருந்தது. என்.என்.ரெட்டி ஏதோ சொல்ல முயல ‘இல்லை, போகட்டும்’ என்று மெல்லி இரானி கைகாட்டினார்.  அந்தக்காட்சியில் அவர்கள் இருவரும் உணர்ச்சிகரமாக ஈடுபட்டுவிட்டிருந்தனர். விஜயேஸ்வரியும் நல்லமராஜுவும் அவர்களுக்குள் நிறைந்துவிட்டிருந்தனர். அவர்களின் துடிப்பும் தவிப்பும் அங்கிருந்த அத்தனைபேரையுமே முள்நுனியில் நிறுத்தியிருந்தது.

ஒருகட்டத்தில் விடுவித்துக்கொள்ள முடியாது, அறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று முடிவெடுத்தவர் போல பானுமதி கையை உருவிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடினார். அழுதபடியே முகத்தை பொத்திக்கொண்டு ஓடிச் சென்று காமிரா ஃபீல்டை விட்டு வெளியே சென்று அப்படியே கால் தடுக்கியது போல விழுந்துவிட்டார். உதவியாளர்கள் ஓடிச்சென்று தூக்கினர். அவர் இரும்பு நாற்காலியில் அமர்ந்து முகத்தை கையால் மூடிக்கொண்டு மடிமேல் கவிழ்ந்துகொண்டார்.

என்.டி.ஆர் அவர் ஓடிப்போவதை பெருந்தவிப்புடன் பார்த்து ஓர் அடி முன்னெடுத்து வைத்தார். மிகப்பெரிய எடை உடல்மேல் அழுந்துவதுபோல மெல்ல தளர்ந்தார். கைகால்கள் எல்லாம் அந்த தளர்வு தோன்றியது. மிகமெல்ல பின்னடி எடுத்து வைத்து உதிர்வதுபோல ஒரு பாறையில் அமர்ந்தார். கைகள் அறியாமல் இடையிலிருந்த புல்லாங்குழலைத் தொட்டன. தாகத்தால் தவிப்பவன் நீரைக் கண்டதுபோல பரபரப்புடன் அதை உருவி எடுத்து வாயில் வைத்து வெறிகொண்டவராக வாசிக்கலானார்.

அவர் முகம் உணர்வுகளால் நெளிந்தது. கழுத்துத்தசைகள் துவண்டன. கால்கள் தாளமிட்டன. உடலெங்கும் இசை தெரிந்தது. முகம் மெல்ல அழுகையிலிருந்து புன்னகை கொண்டது. முகம் மலர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். மெல்ல அண்ணாந்து நிலவை பார்த்தார். முகம் முழுக்க ஒளியுடன் நிலவை நோக்கி பரவசத்துடன் அமர்ந்திருந்தார். டிராலியில் காமிரா வெண்ணைபோல வழுக்கிச் சென்று நின்றபின் ஃபிலிம் ரோல் ஓடும் ஓசையே கேட்டுக்கொண்டிருந்தது.

பின்னர் மெல்லி இரானி பெருமூச்சுடன் காமிராவை நிறுத்தி, என்.என்.ரெட்டியின் தோளை மெல்ல தொட்டுவிட்டு விலகிச்சென்றார். அவருடைய உதவியாளன் அவரை நோக்கி கையில் பிளாஸ்குடனும் துவாலையுடனும் ஓடினான். நாலைந்து உதவியாளர்கள் என்.டி.ஆர் நோக்கி ஓடினார்கள். ஒருவன் பிளாஸ்கிலிருந்து எதையோ ஊற்றி அவருக்கு அளித்தான். என்.டி.ஆர் தன் ஒருமைநிலை கலைந்து கடும் சீற்றத்துடன் அவனை அடிக்க கையோங்கினார். வசைபோல எதையோ சொன்னபின் எழுந்து மறுபக்கமாக நடந்து சென்றார். அவர் கண்களை அருகே என பார்த்தேன், அதிலிருந்தது கடும் துயரம், வலி.

நான் பெருமூச்சுடன் திரும்பி நடந்தேன். வெயில் வெள்ளைநெருப்பு போல நின்று எரிந்தது. அடுப்பில் போடப்பட்ட கற்கள்போல சூழ்ந்திருந்த பாறைகளெல்லாம் கனலாகி வெம்மையை உமிழ்ந்தன. அங்கிருந்து விலகிச் சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. காலடிகளை வெறியுடன் எடுத்து வைத்தேன். வீசப்பட்டவன்போல விலகிச்சென்றேன்.

எந்த திட்டமும் இல்லாமல் ஹம்பியில் நடந்துகொண்டிருந்தேன்.துங்கபத்ரை கரையில் ஒரு செட் வேலை நடந்துகொண்டிருந்தது. உடலசைவாலேயே நாகலிங்க ஆசாரியை அடையாளம் கண்டேன். அருகே சென்று “நாகு”என்றேன்.

“ஆகா, ராவுகாரு… இங்கே என்ன செய்கிறீர்கள்?”

“ஆடைகள் கொண்டுவந்தேன்” என்றேன்.

“தெரியுமா, ஒரு பெண் ஒருவனை மண்டையில் அடித்தாளே. அவள் பலே கைகாரி. அவளுக்கு இங்கே யாரோ துணை இருந்திருக்கிறது. அன்றே சாகசமாக பெல்லாரி போய்விட்டாள்”

“பெல்லாரிக்கா?”

“ஆமாம், இங்கிருந்து அங்கே லாரிகள் போகும்… அதில் போய்விட்டாள்.”

“உன்னிடம் யார் சொன்னது?”

“இங்கே அதேதான் பேச்சு… காலையில்தான் சித்தலிங்கப்பா சொல்லிக்கொண்டிருந்தார்… இந்த ரங்கா ரெட்டியின் ஆட்கள் சுத்த மடையன்கள். அவளை நேற்றெல்லாம் இங்கே சல்லடைபோட்டு சலித்துவிட்டார்கள். எருமைமாடுகள்…”

நான் “நரசிங்கன் இங்குதான் இருக்கிறான், தெரியுமா?”என்றேன்.

“இங்கேயா? அவன் வரமாட்டான் என்றானே?”

“அவன் படப்பிடிப்பு தொடங்கியபிறகுதான் வந்தான்”

“படப்பிடிப்பு எப்படி போகிறது? நான் ஒருநாள் கூட பார்க்கவில்லை.”

“இன்று எடுத்தது உணர்ச்சிகரமாக இருந்தது. இருவருமே அழுதுவிட்டார்கள்”

”ஆமாம், அதைச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் அப்படி ஒருவருக்கொருவர் இணைந்துவிட்டார்களாம். இருவருக்கும் உலகில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அங்கே மதராசிலே கூட அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். அவர்கள் கண்களில் அப்படி ஒரு காதல்…”

“சேச்சே” என்றேன்.

“உண்மை, ஆனால் அது ஸ்டுடியோ. அங்கே அவர்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். இது வெளியூர். இதோபார், நிலம் மாறினால் நாம் நம்முடைய வழக்கமான கட்டுப்பாடுகளை இழந்துவிடுவோம். நஞ்சுண்டராவ் அங்கே என்றால் குடிக்கமாட்டார். இங்கே ஒவ்வொரு நாளும் குடி என்ன, பாட்டு என்ன, நடனம் என்ன…”

”என்.டி.ஆருக்கு திருமணம் ஆகிவிட்டதே”

“அதனாலென்ன? இந்தமாதிரியான உறவுகள் சினிமாவில் வருவதுண்டு. நாலைந்து ஆண்டுகளுக்கு அது நீடிக்கும். பெரும்பாலும் பிரிந்து விடுவார்கள். ஆனால் ஒன்று, அந்த மாதிரி இருவர் உண்மையாகவே காதல்கொண்டுவிட்டால் அந்தப்படங்களில் அது தெரியும். உலகுக்கே தெரியும். அந்தப் படங்களெல்லாமே பயங்கரமாக ஓடும். நான் சொல்கிறேன், இந்தப்படம் மிகப்பெரிய ஹிட். சந்தேகமே இல்லை”

நான் அவனுடனேயே இருந்தேன். அவர்கள் செட்டுக்கான அச்சுகளை கொண்டு வந்திருந்தார்கள். துணியைப் பரப்பி பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், களிமண் கொண்டு சிறிய யானை உருவங்களை செய்து கொண்டிருந்தனர். காய்ந்தவற்றுக்கு மேல் வண்ணம்பூசப்பட்டு கல்போல ஆக்கப்பட்டன. கல்லுக்கான அதே வண்ணம், அதேபோன்ற கோடுகள் ,விரிசல்கள், புள்ளிகளுடன். அவற்றின்மேல் சாக்குப்படுதா போட்டு மூடப்பட்டது.

“ஏன் மூடிவைக்கவேண்டும்?”என்றேன்

“அவை கல் என்று நினைத்து கையை ஊன்றிவிடுகிறார்கள். அழுத்தினால் அவை உடைந்துவிடும்” என்றான் நாகலிங்க ஆசாரி.

மாலையில்தான் நான் அங்கிருந்து திரும்பினேன். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. பானுமதி போய்விட்டார் என்றார்கள். என்.டி.ஆர் பாறைகள் மேலிருந்து பாறைகளுக்கு தாவியும், மண்டபங்களில் சாய்ந்து நின்றும், கோயில் கோபுரங்களின்மேலே நின்றும் பாடிக்கொண்டிருந்தார். காமிரா கோடாவின் மேல் நின்று அவரை நோக்கி திரும்பியது. அது ஒரு கழுகு என எனக்குத் தோன்றியது.

தயாரிப்பு உதவியாளன் ஜெகபதி ராவ் என்னிடம் “உங்கள் தோட்டத்திலிருந்து ஒரு குட்டி ஓடிப்போய்விட்டாளாமே?” என்றான்.

“அப்படியா?”

“ஆமாம், ரெட்டிகாருவை அடித்தவள். ஓடும்போது அவருடைய பர்ஸையும் எடுத்துப் போய்விட்டாள். சாலைக்குச் சென்று அங்கே போய்க்கொண்டிருந்த லாரிகளில் ஒன்றில் ஏறி பெல்லாரி போய்விட்டாள். அவளிடம் நிறைய பணமிருந்திருக்கிறது”

“யார் சொன்னது?”என்றேன்.

“கிருஷ்ணா ராவ் நேரிலேயே பார்த்திருக்கிறான். அவன் ஏதோ வாங்கிக்கொண்டு ஹொஸ்பெட்டிலிருந்து சைக்கிளில் வந்திருக்கிறான். இந்தப்பெண் லாரியில் ஏறிச்செல்வதை கண்ணால் பார்த்திருக்கிறான்”

நான் துங்கபத்ராவில் குளித்துவிட்டுக் கிளம்பும்போது நாகலிங்க ஆசாரியிடம் அவன் சைக்கிளை கேட்டேன். “எனக்கு அங்கே தேவைப்படுகிறது. நாளை திரும்ப தந்துவிடுகிறேன்”

“நாளைக்கு பகலில் எனக்கு தேவைப்படும்”

”தந்துவிடுகிறேன்” என்றேன்.

அந்த சைக்கிள் மிகப்பழையது. அது முழுக்க பெயிண்ட் சொட்டி புள்ளிகளும் கோடுகளுமாக வண்ணக்கலவையாக இருந்தது. கலை இலாகா சைக்கிள்கள் அப்படித்தான் இருக்கும். அவற்றை நாங்கள் புள்ளிமான் என்போம். அதை ஓட்டிக்கொண்டு நான் எங்கள் பண்ணை வீட்டை அடைந்தேன்.

கோதண்டம் “எது இந்த புள்ளிமான்?” என்று கேட்டார்.

“சும்மா வாங்கிக்கொண்டு வந்தேன்… அங்கிருந்து வர லாரிகள் இல்லை”என்றேன்.

வேலைகள் முடிந்து பத்தரை மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டேன். சாப்பாட்டுத்தட்டை வைத்து மெல்ல ஓசையிட்டேன்.

அவள் உள்ளிருந்து எழுந்து வந்தாள்.

“நல்ல தூக்கமா?” என்றேன்.

“இல்லை, கொஞ்சம் தூங்கினேன். ஆனால் போதுமான அளவு தூங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்”

“சாப்பிடு” என்றேன்.

அவள் சாப்பிட ஆரம்பித்தாள். நான் “எல்லாம் நான் நினைத்தபடியே நடந்திருக்கிறது. நீ பெல்லாரி போய்விட்டாய் என்ற வார்த்தை பரவிவிட்டது. ஆகவே இன்றிரவு காவல் இருக்காது. நான் ஒரு சைக்கிள் வாங்கி வந்திருக்கிறேன். உன்னை ஹொஸ்பெட் வரை கொண்டுசென்று விடுகிறேன். பணம் தருகிறேன். நீ கிளம்பிப் பொய்விடு”

”சரி” என்று அவள் சொன்னாள்.

சாப்பிட்டுவிட்டு அவள் வந்து துணிப்பொதிகளில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்துகொண்டாள். அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவளை மீண்டும் சந்திக்கப் போவதில்லை என்று தோன்றிவிட்டது. அது ஒரு வகை பரபரப்பை அளித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த கண்தயக்கமும் இல்லாமல், நேருக்குநேராக. அவள் கன்னங்களை, கழுத்தை, தோளை, மென்மயிர்படர்ந்த கைகளை தாகம் தீராத பதற்றத்துடன் பார்த்தேன்.

அவள் அதை கவனித்தாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் நான் தன்னுணர்வை அடைந்தேன். பெருமூச்சுடன் வேறுபக்கம் பார்த்தேன். எழுந்து சென்று அவளிடம் சரணடைந்துவிட வேண்டும் என எனக்குள் எழுந்த வெறியை தடுத்து நிறுத்தியது அவள் என்னை பொருட்படுத்தவே இல்லை என்னும் எண்ணம். அவள் என்னையும் நிரந்தரமாகப் பிரியப்போகிறாள், ஆனால் அந்த வருத்தம் அவளிடம் இருப்பது போலவே தெரியவில்லை.

இருவரும் ஒரு சொல்லும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தோம். அவ்வப்போது பெருமூச்சுடன் கலைந்து சற்று உடல்மாற்றி அமர்ந்துகொண்டோம். நான் ஒர் ஆடையின் வெள்ளிச்சரிகையை பிரிக்க ஆரம்பித்தேன். கறுப்புவெள்ளை படமாகையால் எல்லா சரிகைகளும் வெள்ளிதான். வெள்ளி அல்ல, அலுமினியநூல். அந்த வேலை எப்படியோ என்னை ஈர்த்தது.அதிலிருந்து வெளியேற முடியவில்லை.

அந்தச்சரிகை மிக நீளமானது. அது வளைந்து வளைந்து நெளிந்து பின்னி சிக்கலான வடிவங்களாகி அந்த ஆடை முழுக்க ஓடியிருந்தது. மலர்கள், மொட்டுகள்,கனிகள், கொடிகளாகியது. விதவிதமான வடிவங்களாகியது. அதை அறுந்துவிடாமல் பிரித்துக்கொண்டே இருந்தேன். இரண்டுமணிநேரம் ஆகியிருக்கும். என் கை முழுக்க வெள்ளிநுரை போல அது இருந்தது.

அவள் நான் அதைப் பிரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்ததும் புன்னகைத்து கையை நீட்டினாள். நான் அதை அவளுக்கு அளித்தேன்.

“கோழிக்குஞ்சு போலிருக்கிறது” என்றாள்.

“நுரைபோல” என்று நான் சொன்னேன்.

“சுருட்டி தலைக்கு பூபோல வைத்துக்கொள்ளலாம்”என்றாள்.

நான் புன்னகைத்தேன். அப்படி நான் எண்ணிப்பார்க்கவே இல்லை. பெண்களுக்குத்தான் அப்படி தோன்றுகிறது.

அவள் “நாம் எப்போது கிளம்புகிறோம்?”என்றாள்.

“கொஞ்சம் போகட்டும், அத்தனைபேரும் தூங்கியிருக்கவேண்டும். ஆனால் மிகவும் பிந்தினால் ஹொஸ்பெட் போய் சேரும்போது விடிந்திருக்கும். அது நல்லது அல்ல”

“நான் குளிக்கவேண்டும்” என்றாள்.

“பம்ப்செட்…” என்றபின் “அது ஆபத்து” என்றேன்.

”நீங்கள் ஒரே ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டுவாருங்கள். நான் இங்கே உள்ளேயே குளித்துவிடுகிறேன். மூடிய அறையில் இருந்து இருந்து ஒரே வியர்வை”

நான் எழுந்து வெளியே பார்த்தேன். அசைவே இல்லை. அத்தனைபேரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவ்வேளையில் பம்ப்செட் வரை போகலாமா?

“கொட்டகையில் குடிநீராக பானையில் தண்ணீர் வைத்திருக்கிறார்கள். அதை எடுத்துவரட்டுமா?”

“அதுபோதும்”

கொட்டகை மிக அருகேதான். நான் கதவைத்திறந்து வெளியே சென்று மிக விரைவாக அதை எடுத்துவந்துவிட்டேன்.

அவள் எழுந்து அதை என்னிடமிருந்து வாங்கி அறையின் மூலையில் வைத்தாள்.

“இங்கேயா குளிக்கப்போகிறாய்?”

”மற்ற எல்லா அறைகளிலும் ஸ்டாக் இருக்கிறது”

“நான் வெளியே நிற்கவா?”

“எதற்கு? யாராவது கவனிப்பார்கள், உள்ளே இருங்கள்… பரவாயில்லை”

அவள் அங்கேயே தன் ஆடைகளை களைந்தாள். அவள் துண்டு கட்டிக்கொள்ள போகிறாள் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் எல்லா ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக நின்றாள்.

“என்ன, என்ன இது?” என்றேன் படபடப்புடன்.

“பரவாயில்லை” என்று அவள் என்னை நோக்கி புன்னகைத்தாள்.

என்னை கவர முயல்கிறாள், என்னை வீழ்த்திவிட நினைக்கிறாள். நான் வீம்புடன் பார்வையை திருப்பிக்கொண்டேன்.

அவள் பானையில் இருந்த நீரில் துணியை முக்கி உடலை துடைத்துக்கொண்டாள். அந்த ஓசை என்னை சீண்டியது. நான் திரும்பிப்பார்த்தேன். அவள் என்னை பார்க்காமல் உடலை துடைத்துக் கொண்டிருந்தாள்.

நான் பார்க்கும் முதல் நிர்வாணப் பெண்ணுடல். நான் படத்தில்கூட பார்த்ததில்லை. இப்படித்தான் இருக்குமா? முதற்கணம் அந்த வெற்றுடல் சாதாரணமாக இருந்தது. ஒரு சிறுவனின் உடல்போல. கணம் கணமாக அது அளித்த ஈர்ப்பு பெருகியது. சிறிய மார்பகங்களின் முனை மெல்லிய சிவந்த கறை போல காம்புகள் அற்று தெரிந்தது. மார்புகளின் வளைவுகளின் பளபளப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். பொருட்களின் மெருகு அல்ல. உயிரின் மெருகு அது.

மெய்யாகவே அப்படி ஒளிகொண்டிருக்குமா? நான் கற்பனைசெய்துகொள்கிறேனா? ஆனால் சிற்பம்போல் இல்லை. ஒரு மார்பை விட இன்னொன்று சற்று சிறியது. உருண்டு அரைப்பந்துகள் போல் இல்லை. வழிந்து திரண்டு சொட்டநிற்கும் இரு துளிகள் போலிருந்தன. அசைவில் அவை மெல்ல ததும்பி அசைந்தன.

பின்பக்கமும் தொடைகளும் தோல் விரிந்ததன் மெல்லிய வரிகளுடன் தெரிந்தன. வெள்ளரிக்காய்போன்ற வரிகள் என்று தோன்றியது. அவள் உடலில் இருந்த வழவழப்பு புதிய காய்கறிகளுக்குரியது. நீர்த் துளிகள் தயங்கி வழிந்து இணைந்து ஓடி கீழிறங்கிய பளபளக்கும் சருமம்.

அவள் எனக்கு தன் உடலை நன்றாக காட்ட விரும்பினாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. நன்றாகவே திரும்பி முன்பக்கத்தை காட்டினாள். தொடைகள் நடுவே புகைக்கரிபோல அந்தரங்க மயிர்ப்பரவல். அக்குளில் ஒட்டடைபோன்ற மயிர்ப்பூச்சு. அண்ணாந்தபோது கழுத்தில் தெரிந்த தொண்டை வளையங்கள்.

எஞ்சிய நீரில் கூந்தலை விட்டு அலம்பினாள். பின்னர் நிமிர்ந்து முடியை பின்னால் அள்ளி போட்டு துண்டால் துவட்டிக்கொண்டாள். கைகள் உயர்ந்து துவட்ட அவளுடைய இரு சிறு மார்புக்குமிழ்களும் ததும்பி எழுந்து எழுந்து அமைந்தன. இரு சிறிய முயல்குட்டிகள்.  விலாவெலும்புகள் மென்மையான தோலுக்குள் அசைந்தன.

அவள் இன்னொரு ஆடையை அணிந்துகொண்டாள். தலைமயிரை நீட்டி பரப்பியபி கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

“பின்பக்க ஜன்னலை திறந்து வைக்கவா? காற்றிருந்தால் கூந்தல் சீக்கிரமாக உலரும்”

“சரி” என்றேன். “அப்படியென்றால் விளக்கை அணைத்துவிடு”.

அவள் கதவை திறந்தாள். காற்று சீறிக்கொண்டு உள்ளே வந்து சுழன்றது. நான் தரையில் கொஞ்சம் நீர் சொட்டியிருப்பதை தவிர்த்தால் கலத்தில் நான் கொண்டுவந்த நீர் அப்படியே இருப்பதைக் கண்டேன்.

“நீர் செலவழியாமலேயே குளித்துவிட்டாய்”என்றேன்.

“சென்னப்பட்டினத்தில் தண்ணீரே கிடையாது. எங்கள் குடிசைக்கு அருகில் குழாயும் இல்லை. கோடைகாலத்தில் நாலைந்து குடம் நீர்தான் கிடைக்கும். நான் கொஞ்சநீரில் குடிசைக்குள்ளேயே குளிப்பேன்”

“ராஜமந்திரியில் கோதாவரி ஓடுகிறது, இல்லையா?”

”ஆமாம், அது எவ்வளவு பெரிய ஆறு… கடல்போல மறுபக்கம் தெரியாத ஆறு… ஆண்டுக்கு நாலைந்துமுறை சாமிகும்பிடப் போய் கோதாவரியில் குளிப்போம். அருகே ஆறு இருப்பதனால் எங்கள் கிணறுகளில் எல்லாம் நிறைய தண்ணீர் இருக்கும். வெறும் குடத்தைவிட்டே தண்ணீரை அள்ளிக்கொள்ள முடியும். என் அம்மா சிலசமயம் நூறுகுடம் தண்ணீர்கூட விட்டு குளிப்பாள்”

“அப்படியா?” என்றேன்.

”குளித்துக்கொண்டே இருப்பாள். நான் போய் கூப்பிட்டால்தான் நிறுத்துவாள்” என்றாள் “நானும் அதேபோல குளிக்கவேண்டும்… போனதுமே நூறுகுடம் நீர்விட்டு குளிக்கவேண்டும்”

“அம்மா என்ன செய்கிறாள்? தனியாகவா இருக்கிறாள்?”

“எங்கள் சாதியில் எல்லா பெண்களும் செய்வதைத்தான் அம்மாவும் செய்கிறாள்” என்றாள் “அங்கே வேறேதும் செய்ய முடியாது”

“ஓ” என்றேன்.

மீண்டும் சற்றுநேரம் அமைதி நிலவியது. நான் அந்த சரிகையற்ற ஆடையை மடித்துவைத்தேன். பிறகு எழுந்து சென்று வெளியே பார்த்தேன்.

“கிளம்புவோம்” என்றேன்.

“நான் இதே ஆடையில் வரலாமா?”

“இந்த ஆடையில் போனால் இங்கே தனியாக தெரியும்… ஆனால் வேறு ஏதாவது போட்டுக்கொண்டால் அங்கே ஹொசபேட்டையில் வேறுமாதிரி இருக்கும்” என்றேன். பிறகு “இதே ஆடை போதும்.ஆனால் மேலே ஒரு சட்டையை போட்டுக்கொள். தலைமுடியை சுருட்டிவைத்து ஒரு துணியை முண்டாசாக கட்டிக்கொள்.பார்த்தால் சட்டென்று ஆண் என்று தோன்றினால்போதும். நாம் சைக்கிளில்தான் போகப்போகிறோம்”

”நிலா இருக்கிறது”

”ஆமாம்”

அவள் ஒரு பெரிய சட்டையை போட்டுக்கொண்டாள். கீழே அவள் அணிந்திருந்த கவுனின் கீழ்நுனி தெரிந்தது. தலைமுடியை முண்டாசாக கட்டிக்கொண்டாள். வெளியே இறங்கி நின்றாள்.

ஒரு பையில் நாலைந்து துணிகளை எடுத்து வைத்தேன்.

“இது எதற்கு?” என்றாள்.

“கையில் பையே இல்லாமல் போனால் தேவையில்லாத சந்தேகங்கள் வரும்”

“ஆமாம்” என்றாள்.

நான் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டேன். கணக்கு புத்தகங்களை மேலே வைத்தேன்.  வெளியே சென்று வீட்டைப்பூட்டி சாவியை தூங்கிக்கொண்டிருந்த கோதண்டம் அண்ணனின் தலையருகே வைத்துவிட்டு சைக்கிளை எடுத்தேன். “வா” என்றேன்.

[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 11:35

இன்னொரு மெய்யியல் நாவல்- கடிதம்

தமிழில் மெய்யியல் நாவல்கள்

அன்புள்ள ஜெ

வணக்கம்,

தமிழில் வந்த மெய்யியல் நாவல் குறித்த பதிவு மிகவும் உபயோகமான ஒன்று. எழுத்தாளர் அமலன் ஸ்டேன்லி எழுதி, தமிழினி பதிப்பித்து இந்த வருட சென்னை புத்தக கண்காட்சி சமயத்தில்  வெளியாகியுள்ள ‘வெறும் தானாய் நிலை நின்ற தற்பரம்’ புத்தகமும்  ஒரு மெய்யியல் சோதனையை மேற்கொள்கிறது. அது குறித்து என்  blog ல் எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு, வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் – இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ளல் நன்றிஅன்புடன்R. காளிப்ரஸாத் தானாய் நின்ற தற்பரம் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 11:34

கொரோனா- கடிதங்கள்

கொரோனா

அன்புள்ள சார்,

’25 கதைகள்’ பதிவில்  ‘கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி…’ என்கிற வரியை பார்த்து நானும் துணுக்குற்றேன்.
‘இவருக்குமா… எப்போ?’ என்ற கேள்விதான் மனதில் எழுந்தது. இப்பொழுதும் தனிமையில் தான் இருக்காரா… என்ற கேள்வியுடன் இரண்டு மூன்று நாட்களில் உள்ள பதிவுகளை பார்த்தேன். உங்களின் பயணங்களின் குறிப்புகளை பார்த்து அப்பாடா என்று பட்டது. நண்பரின் கேள்வியில் தான் முழு விடை  கிடைத்தது. அதை பார்த்ததுமே ‘இவர் இப்படித்தான் இருக்கமுடியும். உடல் நோய்மையை பற்றி பீதி அடைய கூடியவர் அல்ல’ என்ற எண்ணம் தான் வந்தது. எனது காரோண தொற்றின் பொழுது நான் போட்ட கூப்பாடுகளும்… அழுகைகளும் நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டேன்.

நோயயையோ, உயிர் வதையையோ நேராக நோக்கி நிக்க கூடிய தீரர்கள் தான் வாழ்க்கையில் சொல்ல தக்க எதையாவது சாதிக்க முடியும் என்று நினைப்பேன் நான். நான் பார்த்த ஆக பெரும் வெற்றியாயாளர்கள் எல்லோருமே இப்படித்தான். ‘இதெல்லாம் வைரம் பாய்ஞ்ச உடம்பு…’ என்கிற குருட்டுத்தனமான தைரியத்தை சொல்ல வில்லை.  நோய் வாய்ப்படுகையில் நமக்கு இருக்கவேண்டிய ‘ஸ்தித பிரஞ்ஞயை’ சொல்ல வந்தேன்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் தாமுண்டு தம் கலையுண்டு என்றுதான் இருப்பார்கள், மிகவும் மேன்மையனாவர்களாய் வாழ்வார்கள்  என்கிற எண்ணமெல்லாம் உங்களை பார்த்து மாற்றிக்கொண்டேன். நீங்கள் வாழ்க்கையை ஆக முழுமையாய் வாழும் ஒருவர். சவால்களை தலை உடையும் அளவுக்கு எதிர்க்கொள்ளும் தீரர். அதுதான் வாழ்க்கையின் எல்லா கோணத்தையும் முழுமையாக பார்த்து… அதற்கும் மேலே சென்று பற்றின்றி எழுத வைக்கிறது. வ்யாஸனும், வால்மீகியும் இப்படித்தான் வாழ்ந்து இருப்பார்கள்.

ராஜு.

***

அன்புள்ள ராஜு

எனக்கு மூச்சுத்திணறல் உட்பட எச்சிக்கல்களும் இருக்கவில்லை. ஆகவே இயல்பாக இருந்தேன். ஆனால் ஒன்று சொல்லலாம். பயப்படவில்லை. சாவுபயம் பலருக்கும் உடனே வந்துவிடுகிறது. அதுவும் என் வயதில். எனக்கு அது வரவில்லை.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

இன்று அதிகாலை ஒரு குடும்பவிழாவின் பொருட்டு பயணத்திலிருக்கையில் இந்துவும் இந்துத்துவரும் கடிதத்திற்கான உங்கள் பதிலைவாசித்தேன். உங்கள் மீதான என் பெரும் வியப்பு வசைகளின் நடுவில் உங்களுக்கிருக்கும் சமநிலை குறித்துத்தான். வசைகள் ,பழிச்சொற்கள் ,பொய்குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்தாமலிருக்க நானும் ஆனமட்டும் இப்போதெல்லாம் முயற்சிக்கிறேன்.ஆனாலும் வசைபாடியவர்கள் மீதுமான உங்கள் பெருந்தன்மையான அன்பைத்தான் ஆச்சர்யமாக பார்க்கிறேன்.

அந்தக்குழந்தைக்கு சிறுதொகையும் பிராசாதமும் அனுப்பியதையும் அந்த நபர்  “அந்த ஊரு வேணாம் சார், நீ நம்மூருக்கு வந்திரு சார்” என்றதையும் வாசிக்கையில் என்னையறியாமல் கண்ணீர்விட்டழுதுவிட்டேன்.

கார் ஓட்டிக்கொண்டிருந்த மகனிடம் “கேட்டியா சரண் “என்று இதை முழுவதுமாக சொல்லிமுடித்ததும் அவன் புன்னகையுடன் அதென்ன கேட்டியா சரண்?  அவர் போனில் பேசினதையா?  என்றான்.எனக்கு வாசித்தறிந்தது போலல்லாமல் அவர் போனில் பேசினதை கேட்டதுபோலவேதான் இருந்திருக்கிறது.

விழாவிற்கான மனநிலை மாறி மனம் வேறு ஒரு உச்சத்திலிருக்கிறது. காரணமில்லாமல் பொங்கிப்பொங்கி நிறைகிறது மனது.

நன்றி

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள லோகமாதேவி,

மனிதர்களை எங்கும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் அன்பு காழ்ப்பு சிறுமை பெருமைகளுடன். ஒன்றை வைத்து இன்னொன்றை எடைபோடாமலிருப்பது, ஒன்றைப் பெருக்கி இன்னொன்றைக் காணாமலிருப்பதுதான் பயிலவேண்டிய நிலை.

ஜெ

***

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இன்றைய கடிதமும் அதற்கு தங்களின் பதிலும் சற்றே ஆறுதலாக இருந்தது. கொரோனா குறித்து தாங்கள் எழுதியதும் அதிர்ச்சி அடைந்தேன்.நலமாக இருக்கிறீர்கள் என்றதும் மகிழ்ச்சி.நன்றிபலராம கிருஷ்ணன்***அன்புள்ள பலராம கிருஷ்ணன்நோய் என்றால் அதிர்ச்சி என்று பொருளா? கொரோனாவுக்காக கிளம்பி செப்டெம்பரில் வெளியே சென்றவன் இத்தனை ஊர்சுற்றலுக்குப் பின் அது இல்லாமல் இருந்திருக்கமுடியுமா?ஜெ***அன்புள்ள ஜெகிட்டத்தட்ட உங்கள் டைரியே இணையத்தில் வெளியாகிறது. கொரோனா பற்றி ஏதும் எழுதவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறதுராமகிருஷ்ணன்அன்புள்ள ராமகிருஷ்ணன்நோயும் ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. நலம்பெற்று வந்துவிட்டேன். பொதுவாக நான் சோர்வான விஷயங்களை எழுதுவதில்லை. உண்மையில் சோர்வாக எதையாவது எழுதவேண்டுமென்றால் அதில் ஒரு வகையான சமூகப்பிரச்சினை இருக்கவேண்டும். என்னுடைய நோய் அல்லது சிக்கல்களில் அப்படி ஒன்றும் இல்லை.ஜெ ***
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 11:31

படையல், அறமென்ப- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது கதையை கடைசியாகவே வாசித்தேன். இந்தக்கதைகளின் தொடக்கம் அது என்பதனால் அது பலவகையிலும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அந்தக்கதையில் மனித மனம் இன்னொரு மனித மனத்துடன் கொள்ளும் உறவில் இருக்கும் முடிவில்லாத சிக்கல் ஒன்று உள்ளது. தீர்க்கவே முடியாத விஷயம் அது. நெருங்க முயல்கையில் அகல்வது. விலகிச்செல்ல முடியாமல் பிடித்துக்கொள்வது.

நான் இந்த இருபத்தைந்து கதைகளை வாசிக்கையில் ஓர் எண்ணம் ஏற்பட்டது. நீங்கள் எழுதி எழுதி அடைவதாக இருக்கலாம். ஆனால் ஒரு முன்னகர்வு இக்கதைகளில் உள்ளது. முந்தைய நூறுகதைகளிலும் அற்புதமான தருணங்களும் தரிசனங்களும் இருந்தன. ஆனால் பிரித்தறியவே முடியாத புதிர்க்கணங்கள், விடையே அறியாமல் திகைக்கவைக்கும் இடங்கள் பெரும்பாலும் இல்லை. இந்தக்கதைகள் பலவற்றில் அவைதான் உள்ளன. ஆகவே இந்தக்கதைகளை இன்னொருவகையானவை, ஒருபடி மேலானவை என்றுதான் சொல்வேன்

கந்தர்வன், யட்சன், திரை, படையல், இருளில் போன்ற பல கதைகள் முன்வைக்கும் மெய்மை சார்ந்த புதிர்களுக்கு கதையில் பதில் இல்லை. வாசகன் கண்டடையவேண்டியவை அந்த பதில்கள். அதற்ககவே இந்தக்கதைகளை படித்துக்கொண்டே இருக்கிறேன்

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெ

இந்த இருபத்தைந்து கதைகளில் படையல் போன்ற கதையில்தான் உங்கள் ஆன்மிகத்தேடல் வெளிப்படுகிறது. பழைய கதைகளில் வந்த முதுநாவல் கதையின் நீட்சி இது. ஆனால் இதுதான் உச்சம் என நினைக்கிறேன். அந்தக்கதையில் ரத்தச்சோறு எதைக்குறிக்கிறது என அறிய இலக்கியஞானம் போதாது.

ஸ்ரீ

அன்புள்ள ஜெ

அறமென்ப கதை நடுத்தர வர்க்கத்தவருக்கு ஒருவகை பதற்றத்தை உருவாக்கும் கதை. அவர்களில் பலர் இரக்கம், பாவபுண்ணியம் பார்த்து நல்லது செய்பவர்கள். நல்லது செய்தால் நல்லது விளையும் என நம்ப பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அப்படி நிகழாது என்று இல்லை. ஆனால் நிகழ்ந்தாகவேண்டும் என்பதில்லை. வாழ்க்கை அந்த விதிகளுக்கு அப்பாற்பட்டது. அது நமது நல்லது – கெட்டதை தீர்மானிக்கவேண்டியதில்லை. தீர்மானித்தால் ‘இந்த உலகமே இப்டித்தான் சார்’ என்ற பிலாக்காணம்தான் மிச்சமாகும்.

ஒருவன் தன் தன்னியல்பால் நல்லது செய்தால் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். நல்லதுசெய்வதிலேயே ஒரு மகிழ்ச்சி நிறைவு உள்ளது. ஒரு நிமிர்வு உள்ளது. அது வந்துசேரும். அந்தக் கணத்தை செல்வா அடைந்துவிட்டான்

சரவணக்குமார்

***

அன்புள்ள திரு ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

அறமென்ப… கதை படித்தேன். மனதை மிகவும் வலித்தது. புண்ணியச் செயல் செய்வது என்பது அத்தனை எளிதல்ல. புண்ணியம் எளிமையாக கிடைத்து விடாது. இது என் அனுபவத்தில் ஒரு முறை உணர்ந்தேன். ஒரு முறை அல்ல பல முறை…

அப்போது ஹைதராபாதில் டாக்டர் ஏஎஸ் ராவ் நகர் உருவாகத் தொடங்கியிருந்த காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு வீடுகள் எழுந்தன. எங்கள் வீடு அப்போது முழுமையடைந்து நாங்கள் சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம். எண்பதுகளின் தொடக்கம்.  சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் குழாய் வசதி எதுவும் இன்னும் கொடுக்கப்படவில்லை. எங்கள் கிணற்றிலிருந்து நீர் இறைத்து கொண்டு, மண்ணெண்ணெய் விளக்குகளை வைத்துக்கொண்டு… அது ஒரு காலம்.

அப்போது காய்கறிக் கடைகளும் எங்கள் காலனியில் வந்திருக்கவில்லை. யாராவது  தலையில் கூடை சுமந்து கொண்டு வருவார்கள். மிகவும் அரிதான காட்சியாக இருக்கும். தொலைதூரம் நடந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் வீடுகளில் காய்கறி விற்றுச் செல்வார்கள். பார்க்கவே பாவமாக இருக்கும். நாங்கள் எங்கள் காய்கறிகளை சிகந்திராபாத் சென்று வாரம் ஒருமுறை மோண்டா மார்க்கெட்டிலிருந்து வாங்கி வருவோம். எப்போதாவது வாசலில் கூவி விற்கும் இவர்களை நிறுத்தி கூடையை இறக்கி வாங்குவது வழக்கம். ஏதோ ஒரே ஒரு காய்கறி வாங்கினால் அவர்களுக்கு கோபம் வரும். இவர்களின் கோபத்துக்குப் பயந்து நாங்கள் இரண்டு மூன்று காய்கறிகள் வாங்குவது வழக்கம்.

ஒரு முறை அவ்வாறு மதிய வெயிலில் உணவு நேரத்தில் கூடை சுமந்து வந்த ஒரு பெண்மணியை அழைத்து இறக்கி காய்கறிகள் வாங்கினேன். அப்போது என் அம்மா ஊரிலிருந்து வந்திருந்தார். அந்தப் பெண்மணியை பார்த்து இரக்கப்பட்டு, “இரு. உனக்கு சாப்பாடு போடுகிறேன். சாப்பிட்டு விட்டுச் செல்” என்றேன்.

“நான் கை கழுவ வேண்டும். முகம் கழுவ வேண்டும்” என்றாள்.

“கொல்லையில் கிணறு இருக்கிறது. தண்ணீர் இறைத்து செய்து கொள்” என்றேன்.

அவள் சொன்னாள், “இந்த கூடையை இங்கே வைத்துவிட்டு நான் போக மாட்டேன். நீ போய் ஒரு வாளி தண்ணி எடுத்து வா” என்றாள்.

“நான் பார்த்துகொள்கிறேன். நீ போ” என்றேன்.

“அதெல்லாம் முடியாது” என்றாள்.

அவளுக்காக கிணற்றிலிருந்து  ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன்.

அப்போது என் அம்மா இதே வார்த்தையை சொன்னார்கள்.

“புண்ணியம் சம்பாதிப்பது என்பது எளிதல்ல. நாம் இரக்கப்பட்டு செய்தாலும் அதன் மூலம் நமக்கு புண்ணியம் வந்து சேருகிறது அல்லவா? அது அத்தனை சுலபமாக கிடைத்து விடாது” என்று.

இந்தக் கதையை படித்த போது அந்தச் சிறு சம்பவம் நினைவுக்கு வந்தது.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

ராஜி ரகுநாதன்,

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 11:31

April 7, 2021

நியூசிலாந்து உரை

நியூசிலாந்து உரை

நாள் 11.4.2021

நேரம் காலை 8 மணி [இந்திய நேரம்]

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 18:53

குழந்தை இலக்கியத்தின் நெறிகள்

வாண்டுமாமா

அன்புள்ள ஜெ,

வணக்கங்கள்.

‘கவலைப்பட நேரமில்லை என்ற உணர்ச்சி எப்போதும் என்னுடன் இருக்கிறது. வீணடிக்க நாள்கள் இல்லை. இந்த 23 வருட காலத்தில் நான் சோர்ந்திருந்த கணங்களே இல்லை. என் உச்சக்கட்ட சோர்வுகளைக் கூட எழுத்தால் கொண்டாட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஊக்கம் குன்றிய என்னை எவரும் பார்க்கப்போவதில்லை. கணமும் சோராத நிலையே நான். நான் அடைவதொன்றும் இல்லை,  இங்கே அடையப்படும் எதிலும் எனக்கு மதிப்பும்  இல்லை. ஆயினும், செயலாற்றலில் நான் பேரின்பம் கொள்கிறேன்.”

சில ஆண்டுகளுக்கு முன்பு, கட்டுரை ஒன்றில் இந்த வரிகளைச் சொல்லி இருந்தீர்கள்.  தங்களது செயல்கள் யாவும், மேற்சொன்ன வாக்கியங்களை எப்போதும் மெய்ப்பித்துக் கொண்டே இருக்கின்றன. இடைவிடாமல் ஆறு ஆண்டுகள்  ’வெண்முரசு’  எழுதி முடித்த  சாதனையின் பிரமிப்பு அடங்குவதற்குள், தொடர்ச்சியாக, தரமான  100 கதைகள்.!  திடமான மனமும், செய்யும் வேலையில் முழு அர்ப்பணிப்பும் கொண்ட, ‘தேர்வு செய்யப்பட்ட மனிதர்களால்’ மட்டுமே இது சாத்தியம்.

நன்றியும் வாழ்த்துக்களும் ஜெ.

சில நாள்களுக்கு முன்னதாக, ஹரன் பிரசன்னா எழுதிய ’மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்’ என்ற சிறுவர் கதைப் புத்தகத்தைப் படித்தேன். அதன் முன்னுரையில் ஹரன் பிரசன்னா சில வருத்தங்களைப் பகிர்ந்திருந்தார். மூடநம்பிக்கை என்ற பெயரில் புராணக்கதைகள் வளரும் தலைமுறைக்கு மறுக்கப்படுவதைை சுட்டிக்காட்டி நீண்ட முன்னுரை எழுதியிருந்தார்.

“கற்பனை விரிவை தரும் கதைகளுக்கான இடம் இன்று கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. இதற்கான காரணங்களை நானாகத் தொகுத்தேன்.

முதல் காரணம்,  மூடநம்பிக்கை என்ற பெயரில் கதைகள் அனைத்தும் மேற்கத்திய சிந்தனைகளை ஒட்டி வலுக்கட்டாயமாக நவீனமயமாக்கப்பட்ட இந்திய மரபு போதித்ததாக இருந்தால் அவை எல்லாம் பிற்போக்குத்தனமான வை என்ற எண்ணம் புகுத்தப்பட்டது.

நம் கதைகளில் வலுவாக இருந்த கடவுள் நம்பிக்கை மிகத் தந்திரமாக நீக்கப்பட்டது.  தீவிர நாத்திகர்கள், கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் அனைத்து இடங்களிலும் நிரம்பி அவர்களே சிறுவர்களுடன் உரையாட ஆரம்பித்தார்கள்.  அவர்கள் சொல்வதுதான் சிறுகதை என்றானது.

அறிவியல் சொல்லும் உண்மை களுக்கும் நிஜமான முற்போக்கான கருத்துக்களுக்கும் நான் நிச்சயம் எதிரி அல்ல. அவை தேவையானவை தான் ஆனால் இன்னொரு பக்கம் என்ற ஒன்று உண்டு என்ற மனப்பான்மையை மூட மறுக்கும் போக்கையே நான் கண்டிக்க முயல்கிறேன்.  அதேபோல் நாட்டுப்பற்று கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஆக்கப்படும் போக்கையும் எதிர்க்கிறேன்.”

– ஹரன் பிரசன்னா.

உண்மையில் சிறுவர் நூல்களுக்கான அடிப்படைத் தன்மைகள் என்னவாக இருக்க வேண்டும்.? புராணக்கதைகள் மூடநம்பிக்கையை வளர்கின்றன என்ற தட்டையான வாதம் இங்கு (இப்போது) இருக்கின்றதா?

கற்பனை விரிவையும் மொழி வளமையையும் உருவாக்கும் கதைகளே, நல்ல சிறுவர் கதைகள் என்ற அடிப்படை சரியானது தானா?

தங்களின் பார்வையில், சிறுவர் இலக்கியத்திற்கான செவ்வியல் தன்மைகளைக் எப்படி வரையறை செய்வீர்கள்?

நன்றி..ஜெ.!

 

மிக்க அன்புடன்,

வளநாடு சேசு.

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்

அன்புள்ள சேசு

குழந்தைகளுக்கான கதைகள் நிறைய வரவேண்டியிருக்கிறது. பலவகையான கதைகள். ஏனென்றால் குழந்தைகள் பலவகையானவை. தெரிவுகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கவேண்டும்.

குழந்தைக்கதைகளில் அவற்றின் அழகியல் சார்ந்து பல வகைமைகள் உள்ளன. மிகைக்கற்பனைக் கதைகள், சாகசக்கதைகள், அறிவியல் கதைகள், நீதிக்கதைகள், புதிர்க்கதைகள், வேடிக்கைக்கதைகள் என. ஒவ்வொன்றிலும் கிளாஸிக்குகள் உள்ளன. அவற்றைக் கொண்டே நாம் ஒரு குழந்தைக்கதையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று வகுக்கிறோம். அதையே இலக்கணம் என்றுகொள்கிறோம்

குழந்தைக்கதைகளிலும் வயதுசார்ந்த பிரிவினை உண்டு. பொதுவாக சிறு குழந்தைகளுக்கான கதைகள், வளரும் குழந்தைகளுக்கான கதைகள், முதிர்சிறுவர்களுக்கான கதைகள் என பிரிப்பார்கள். இந்த ஒவ்வொரு வகையிலும் கதைகளின் மொழிநடை, அமைப்பு ஆகியவற்றில் சில வரையறைகள் உண்டு.

பிரசுரகர்த்தர்கள் மேலைநாடுகளில் சிலவரையறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை விற்பனையாளர் அளிக்கும் தகவல்களைக்கொண்டு உருவாக்கப்பட்டவை. எழுத்தாளராக நான் அவதானித்த சிலவற்றைச் சொல்லலாம் என்று படுகிறது

டேனியல் டூஃபோ

ஒவ்வொரு வகை கதைகளிலும் அவற்றின் இலக்கணங்களை உருவாக்கிய முன்னோடி வடிவங்கள், செவ்வியல் படைப்புக்கள் உள்ளன. மிகைக்கற்பனை கதைகளில் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் தேவதைக்கதைகள் முன்னுதாரணமான செவ்வியல் படைப்புகள். சாகசக்கதைகளில் ராபின்சன் குரூஸோ ஒரு தொடக்கம்.

விளையாட்டுத்தனமான கதைகளுக்கு சந்த் எக்ஸூபரியின் குட்டி இளவரசன், புதிர்விளையாட்டுக்கதைகளுக்கு லூயிஸ் கரோலின் ஆலிசின் அற்புத உலகம் போன்றவை உதாரணங்கள்.

இந்த நூல்களே ஆங்கிலத்தில் பின்னர் வந்த பல்லாயிரம் நூல்களுக்கு முன்னுதாரணங்கள். இவற்றிலிருந்து சில இயல்புகளை ஊகிக்கலாம். ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் கதைகள் மரபான நாடோடிக்கதைகளின் மறுவடிவங்கள், அல்லது அந்த பாணியில் எழுதப்பட்டவை. ஆனால் அவை வெறும் கதைகள் அல்ல. குழந்தைகள் வளர்ந்த பின்னரும் அவற்றின் அர்த்தம் வளரும். அவை நவீனக்கவிதை அளவுக்கு குறியீட்டுத்தன்மை கொண்டவை.

ராபின்சன் குரூசோ ஒரு சாகசக்கதை மட்டுமல்ல, அது குழந்தைகளுக்கு இயற்கையைக் கற்பிக்கும் கதையும்கூட. உதாரணம் ராபின்சன் குரூசோ  பனிக்கட்டியை லென்ஸ் ஆக ஆக்கி நெருப்பை உருவாக்குவது. சாசசக்கதைகளில் அறிவியல்செய்திகள், சமூகவியல்செய்திகள் நிறைந்து , அவை கற்கும் அனுபவமாகவும் இருக்கவேண்டும்.

குட்டி இளவரசன், ஆலீஸின் அற்புத உலகம் போன்றவை கற்பனைவீச்சு கொண்டவை. அவை பெரியவர்களின் உலகை, மொழியை பேசவில்லை. குட்டி உலகை, குட்டிகளின் மொழியை பேசுகின்றன. ஆனால் குட்டிகள் வளர வளர அவைபேசும் மர்மங்களும் புதிர்களும் புதிய அர்த்தம் கொள்கின்றன. குட்டி இளவரசன் தான் வாழும் குட்டிக்கிரகத்தை ‘செப்பனிட்டுக்கொண்டே’ இருக்கிறான். அதை வாசிக்கையில் எல்லாம் நம் சூழியல்பேச்சுக்கள் நினைவுக்கு வந்து புன்னகையை உருவாக்குகின்றன.

லூயிஸ் கரோல்

நமக்கு தொன்றுதொட்டே குழந்தைக்கதைகள் இருந்துள்ளன. மகாபாரதத்தின் பல உட்கதைகள் குழந்தைகளுக்கானவை. உதாரணம், யுதிஷ்டிரரின் ராஜசூயப் பந்தலுக்கும் பாதி உடலை தங்கமாக்கிக்கொண்டு எஞ்சிய உடலை தங்கமாக ஆக்கும்பொருட்டு வந்த கீரியின் கதை. பஞ்சதந்திரக்கதைகள் பொதுவாகக் குழந்தைகளுக்கானவை

நவீனக் கல்விமுறை உருவாகி, நவீன இலக்கியம் தோன்றியபின் குழந்தைக்கதைகளுக்கான தேவை உருவானது. ஆகவே இங்கே குழந்தைக்கதைகள் எழுதப்பட்டன. தமிழில் கல்வி கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா இருவரும் ஏராளமான குழந்தைக்கதைகளை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் எண்பதுகளுக்குப்பின் நம் கல்வி முழுக்கமுழுக்க ஆங்கிலத்திற்கு மாறியது.நம் பெற்றோர்கள் ஆங்கிலத்திலேயே குழந்தைநூல்களை வாங்கலாயினர். குழந்தைநூல்களுக்கான தமிழ்ப்புத்தகச்சந்தை அனேகமாக இல்லாமலாயிற்று. அதை நம்பி எழுத்தாளர்கள் இயங்கமுடியாத நிலை உள்ளது. இன்று குழந்தைநூல்கள் அரசுப்பள்ளிகளின் நூலகங்களை நம்பியே வெளியிடப்படுகின்றன.

இன்றைய குழந்தைகளுக்கு குறைவாகவே நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அவை வாசிப்பதும் மிகக்குறைவு. ஒன்று, பெற்றோர்கள் வேறு நூல்களை வாசிப்பதை ஊக்கப்படுத்துவதில்லை. பள்ளிகளில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூல்கள் வாசிக்க தடையே உள்ளது.

உண்மையில் பாடநூல்களை கடுமையாக படித்து வரிவரியாக எழுதினால் மட்டுமே மதிப்பெண்ணும் வாழ்க்கையில் வெற்றியும் கிடைக்கும் என்ற சூழலே இன்று இந்தியக் கல்வித்தளத்தில் உள்ளது.ஆகவே குழந்தைகளை நூல்களை படிக்கவைக்கும்படிச் சொல்லலாமா, அது உகந்ததாகுமா என்ற ஐயம் எனக்கே உள்ளது.

உண்மையில் நம் கல்விமுறை ஒட்டுமொத்தமாக வாசிப்புக்கு எதிரானது. பாடத்திட்டமும் சரி, ஆசிரியர்களும் சரி வாசிப்பின் எதிரிகள். கல்விமுறையை நம்பியே இங்கே வாழ்க்கை உள்ளது. புத்தகம் வாசிக்கும் குழந்தை இந்தியாவிலுள்ள மிகக்கடுமையான பலவகை மனப்பாடத் தேர்வுகளில் தோற்றுவிடக்கூடும், வாய்ப்புகளை இழக்கவும்கூடும். ஆகவே வேறுவழியில்லை.வாசிக்காவிட்டால் பரவாயில்லை என்று இன்று நினைக்கிறேன்.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழும் குழந்தைகளுக்கு வாசிப்பை இளமையிலேயே ஊட்டி அவற்றை முதன்மைநிலைக்கு கொண்டுசெல்ல முடியும். அங்குள்ள பாடத்திட்டமும் ஆசிரியர்களும் வாசிப்புக்கு ஊக்கமூட்டுவன. வாசிப்பை கட்டாயமாக்குவன. வாசிக்கும் குழந்தை அங்கே மேலே செல்கிறது.

இந்தியக் குழந்தைகள் காட்சியூடகத்தில் சிக்கிக் கிடக்கின்றன. கட்டற்ற காட்சியூடகப் பெருக்கம் உள்ளது. அமெரிக்கா சென்றபோது பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் டிவி பார்க்கும் நேரம் வரையறை செய்யப்பட்டிருப்பதை கண்டேன். டிவி அருகிலேயே எழுதி ஒட்டிவைத்திருந்தார்கள். இந்தியாவில் அப்படி கட்டுப்பாடே இல்லை.

சிங்கப்பூரில் இன்னும் மோசம், அங்குள்ள குழந்தைகள் விலை உயர்ந்த கணிப்பொறி விளையாட்டுக்களில் மூழ்கிக்கிடக்கின்றன. அங்கிருந்த நாட்களில் இலக்கியப் பயிற்சிக்காக தெரிவுசெய்து அனுப்பப்பட்ட 500 மாணவர்களை சந்தித்திருப்பேன். அவர்களில் ஒரு மாணவர்கூட எதையும் வாசிப்பவராக நான் காணவில்லை. எனக்கு திகைப்பளித்த ஓர் உண்மை அது.

இச்சூழலில் நாம் குழந்தை இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அதை எவர் வாசிப்பார்கள் ? இலக்கியவாசகர்கள் சூழலின் அழுத்தத்தை கடந்து, இலக்கியத்துக்காக வாழ்க்கையில் சிலவற்றை இழந்து வருகிறார்கள். அதேபோல  தவிர்க்கமுடியாத தேடலால் வாசிக்கவரும் சில குழந்தைகளுக்காக நாம் குழந்தை இலக்கியங்களை உருவாக்கலாம், அவ்வளவுதான்.

மேலே சொன்ன எல்லா வகைமைகளிலும் குழந்தை இலக்கியங்கள் எழுதப்படலாம் என நினைக்கிறேன். நமக்கு இன்று மிகுதியாகத் தேவைப்படுவன சாகசக்கதைகள். அறிவியல் சமூகவியல் செய்திகளை கலந்து அளிக்கும் சாகசக்கதைகள் கற்றலின்பத்தையும் பயண இன்பத்தையும் புனைவின்பத்தையும் ஒன்றாக அளிக்கக்கூடும். நான் எழுதிய பனிமனிதன், வெள்ளிநிலம் இருநாவல்களும் அத்தகையவை.

மிகைபுனைவுக்கதைகள் குழந்தைகளை அறியா உலகுக்குக் கொண்டுசெல்பவை. அவற்றின் கற்பனைகள் சிறகடித்தெழச் செய்பவை.

எவை எழுதப்படவேண்டும் என்பதைவிட எவை தவிர்க்கப்படவேண்டும் என்பது குறித்த சில புரிதல்கள் எனக்கு உள்ளன

அ.எதிர்மறைத்தன்மைகொண்டவை தவிர்க்கப்படவேண்டும். உதாரணம் பேய்க்கதைகள். பேய்க்கதைகளை குழந்தைகள் விரும்புகின்றன. ஆனால் மிகச்சோர்வான ஒரு மனநிலையை குழந்தைகளிடம் அவை உருவாக்குகின்றன. அது டிராக்குலா கதையாக இருந்தாலும் சரி பழையன்னூர் நீல் கதையாக இருந்தாலும் சரி.

ஆ.நேரடி நல்லுபதேசம் கதைகளை சலிப்பூட்டுவது ஆக்குகிறது. குழந்தைகள் அவற்றை விரும்புவதில்லை. மிக இளம்வயதிலேயே நல்லுபதேசக்கதைகள் மேல் குழந்தைகளுக்கு ஏளனம் உருவாகிவிடுகிறது.

இ. கற்பனையின் அம்சம் இல்லாமல் எல்லாவற்றையும் சொல்லிவிடும் கதைகள் குழந்தைகளுக்கு எந்தப்பயனையும் அளிப்பதில்லை.

ஈ. மதம் சார்ந்த கதைகளை அப்படியே சொல்லிக்கொடுப்பது சிக்கலானது. அதில் பலசமயம் பழைய விழுமியங்களும் இருக்கும். குழந்தைகளை அது நவீன உலகுக்கு எதிரானவர்களாக ஆக்கும்.

மதம் சார்ந்தவற்றில் எந்தக்கதை நவீன அற-விழுமியங்களுக்கு உகந்ததோ அதை மட்டும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். உதாரணமாக பிள்ளைக்கறி சமைக்கும் சைவக்கதையை, கண்ணப்பநாயனாரின் கதையை, திருமங்கை மன்னனின் கதையை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாகாது. அவை என்னபொருள்கொண்டவை என குழந்தைகள் புரிந்துகொள்ளும் வயது ஆனபின் அவை பயிலப்படலாம்

ஈ. தொன்மக்கதைகள், நாட்டார்கதைகள் சொல்லிக்கொடுக்கலாம். ஆனால் அவற்றில் குறியீட்டு அம்சம் ஓங்கிய கதைகளையே சொல்லிக்கொடுக்கவேண்டும். அக்கதை குழந்தை மனதில் நவீனப் பொருளுடன் வளரவேண்டும். தொன்மங்களிலேயே இன்றையவாழ்வுக்கு ஒவ்வாத கதைகள் பல உள்ளன.

நல்லதங்காள் குழந்தைகளை கிணற்றில் தள்ளும் கதையை, அரிச்சந்திரன் குழந்தையையும் மனைவியையும் விற்ற கதையை எல்லாம் இன்று குழந்தைகளுக்கு சொல்லவேண்டியதில்லை.ஆனால் பிடிவாதமாக உழுத ஒரே ஒரு உழவனின்பொருட்டு மழை பெய்தகதையை, மணிமேகலை அமுதசுரபி பெற்ற கதையை, தர்மனை கடைசிவரை நாய் தொடர்ந்துசென்ற கதையைச் சொல்லலாம்.

உ. குழந்தைகளுக்கு அரசியல்கதைகளைச் சொல்வதுபோல அபத்தம் வேறில்லை. அவை குழந்தைகளின் கற்பனையைச் சிதைக்கின்றன. அவர்களை அவர்கள் புரிந்துகொள்ளமுடியாத உலகுக்கு இழுக்கின்றன. அவர்களால் கையாளமுடியாத உணர்வுக்கொந்தளிப்புகளை அளிக்கின்றன. அவர்கள் புறவுலகை புரிந்துகொள்ளவே முடியாதபடிச் செய்கின்றன.

குழந்தைகள் பதின்பருவத்திற்குப் பின் அரசியல் கற்றுக்கொள்வதே நல்லது. அதற்கு முன்னரே அரசியல் திணிக்கப்படும் குழந்தைகள் கற்பனையை இழந்துவிடுகின்றன. சில எளிய அரசியல் நிலைபாடுகளையும் அதுசார்ந்த மூர்க்கமான உணர்வுகளையும் மட்டுமே அடைகின்றன. இயற்கை அறிவியல் வாழ்க்கையுண்மைகள் எவற்றையும் அறியமுடியாதவை ஆகிவிடுகின்றன.

ஊ.படக்கதைகள் குழந்தைக்கதைகள் அல்ல. படங்கள் இருக்கலாம். ஆனால் கதை என்பது மொழியிலிருந்து கற்பனை விரியவேண்டிய அனுபவம். மொழியை கற்பதே வாசிப்பின் அடிப்படைப்பயிற்சி. அதை அளிக்காதவை குழந்தைக்கதைகள் அல்ல. வாசிப்பின் ஆரம்பகட்டத்தில் மட்டுமே குழந்தைக்கதைகளில் படங்கள் இருக்கலம.

*

தொன்மக்கதைகள் சொல்லப்படவேண்டுமா என்ற கேள்வி அவற்றின் உள்ளடக்கம் சமகாலத்தன்மை கொண்டதா என்ற ஐயத்திலிருந்து எழுகிறது. அது மெய்யான ஐயமே. பல பிற்காலத் தொன்மங்கள் சாதிமேட்டிமை ,பிறப்புப்பாகுபாடு சார்ந்த உள்ளடக்கம் கொண்டவை. அவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான தொன்மக்கதைகள் குழந்தைகளின் கற்பனையைச் சிறகடித்தெழச்செய்பவை. அபாரமான விளையாட்டுத்தன்மை கொண்டவை. உதாரணம் பீமன் அனுமனின் வாலை எடுக்க முடியாமல் தவிக்கும் இடம். அவை குழந்தைகளின் உள்ளத்தில் ஆழ்படிமங்களாக பதிகின்றன. ஆற்றலுக்கு எல்லையென அமையவேண்டிய பணிவையும் உணர்த்துகின்றன.

பீமன் கதையை நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் ஹெர்குலிஸ் கதையை குழந்தை சென்றடையும். அவற்றை தவிர்க்க முடியாது.

புராண இதிகாசங்களின் நவீன வடிவங்களையே குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கவேண்டும். அவற்றை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்து விரித்தெடுக்க கதைசொல்பவர்களால் முடியவேண்டும். இன்றைய அறவியலுக்கும் தர்க்கவியலுக்கும் அவை பொருந்தவேண்டும். முழுமையாக விளக்க வேண்டியதில்லை, ஆனால் குழந்தை கேட்டால் அதற்கான பதில் நம்மிடம் இருக்கவேண்டும்.

தமிழ்க் குழந்தைக் கதைகளை இன்று  பார்க்கையில் அவற்றில் வாசகர்களின் வயதுசார்ந்த பாகுபாடு இல்லை என்பதை காண்கிறேன். அவை எத்தகைய குழந்தைகளுக்கானவை என்பது தெளிவாக இருக்கவேண்டும்.

சிறுகுழந்தைகளுக்கான நூல்கள் பெரிய எழுத்தில் அச்சிடப்படவேண்டும். ஒரு சொற்றொடரில் ஏழு சொற்களுக்குமேல் இருக்கலாகாது. மொத்தமே ஆயிரம் சொற்களுக்குள் அக்கதைகள் சொல்லப்பட்டிருக்கவேண்டும். ஒருகதையில் இருநூறு வார்த்தைகளுக்குமேல் செல்லக்கூடாது.

வளரும் குழந்தைகளுக்கான கதைகளில் ஒரு சொற்றொடரில் பன்னிரண்டு வார்த்தைகள் வரை இருக்கலாம். மூவாயிரம் வார்த்தைகளுக்குள் அமையவேண்டும்.

இப்படிச் சில நிபந்தனைகள் உண்டு. அவற்றை கருத்தில்கொண்டு குழந்தைக்கதைகள் எழுதப்படவேண்டும்

ஜெ

வெளிக்கட்டுரைகள்

சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை – சுகுமாரன் ஏன் வேண்டும் குழந்தை எழுத்தாளர் சங்கம்? சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்

 

முந்தைய கட்டுரைகள்

 

குழந்தையிலக்கியம் – தொகுப்பு குழந்தையிலக்கியம் பட்டியல்கள்

குழந்தையிலக்கியம் – கடிதம்

ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா

குழந்தை இலக்கியம் -நிறைவு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 11:36

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-8

 

[ 8 ]

நான் மாலையில்தான் ஹம்பியில் இருந்து திரும்பி வந்தேன். கிளம்பும்போது நரசிங்கனுடன் போய் துங்கபத்ராவில் குளித்தேன். திரும்பி வரும்போது பண்ணைவீட்டில் ஏதாவது நடந்திருக்கும் என்று கற்பனைசெய்து பதற்றத்தை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் ஒன்றுமில்லை. எல்லாம் வழக்கம்போல. ரங்கா ரெட்டியின் ஆட்கள் கண்காணிக்கிறார்களா என்று பார்த்தேன். வழக்கம்போல கண்காணிக்கப்படும் உணர்வு இருந்ததே ஒழிய எவரும் கண்ணுக்குப் படவில்லை.

தையல் கூடத்தில் வேலை வழக்கம்போல நடந்துகொண்டிருந்தது. ஷூட்டிங்குக்குப் போன ஆடைகளை கணக்கிட்டு திரும்பி வாங்கி அடுக்கினேன். அன்று தைக்கப்பட்டவற்றை பட்டியலிட்டேன். கணக்குகள் முடிக்கும்போது இரவு பத்துமணி ஆகிவிட்டது. ஒன்பது மணிக்கே சாப்பாடு வந்துவிட்டது. நான் மதியமே நரசிங்கனுடன் நன்றாகச் சாப்பிட்டேன். மாலை கிளம்பும்போதும் மீண்டும் புரடக்‌ஷனில் இருந்து வந்த ஒப்பிட்டும் வடையும் காபியும் சாப்பிட்டேன். எப்போதுமே கலை இலாகாவில் நல்ல சாப்பாடுதான். ஆகவே இரவுச்சாப்பாடாக வந்த தோசையையும் வடையையும் அப்படியே கொண்டுவந்து வைத்துவிட்டேன்.

பத்தரை மணிக்கு கதவையும் சன்னல்களையும் உட்பக்கமாக மூடிவிட்டு அவளை அழைத்தேன். அவள் துணிக்குவியல்கள் மேல் தூங்கிக்கொண்டிருந்தாள். ஸீரோ வாட் பல்பு எரிந்துகொண்டிருந்த அறைக்குள் கொசுக்கள் சில பறந்து அலைந்து கொண்டிருந்தன.

“இவ்வளவுநேரம் தூங்கினாயா?”

“ஆமாம்” என்று புன்னகைத்தாள். “எனக்கு தூங்குவது ரொம்ப பிடிக்கும். எப்போதும் தூங்குவதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன்… “

”சாப்பிடு” என்றேன்.

அவள் தட்டை வாங்கி ஆவலுடன் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பாட்டிலும் இவளுக்கு ஆர்வம் அதிகம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

“உன்னை இன்னும் தேடுகிறார்கள். இன்றைக்கு இரவும் நீ இங்கேயேதான் இருக்கவேண்டும். நீ பெல்லாரிக்கு போய்விட்டாய் என்று கொளுத்திப் போட்டுவிட்டேன். அது நாளைக்கு பரவினால் தேடுவது நின்றுவிடும். நீ நாளை இரவில் கிளம்பலாம்”

“சரி” என்றாள், அதில் அவளுக்கு அக்கறையே இல்லாததுபோல தோன்றியது. அவளுக்கு நன்றாகப் பசிக்கிறது என்று சாப்பிடும் விரைவில் இருந்தே தெரிந்தது. அதில்தான் அவள் கவனம் இருந்தது.

வெளியே ஓசைகள் அடங்கின. நெடுந்தொலைவில் ஒரு காரின் ஓசை. வெளிச்சம் சுழன்று சென்றது.

அவள் தட்டை வழித்து சாப்பிட்டபடி “ இப்போது வெளியே நடமாட்டம் குறைந்திருக்கிறதா?” என்றாள்.

“ஆமாம்… நீ வெளியே போகவேண்டுமா?”

“ஆமாம்”

“நீ இந்த ஆடையில் வெளியே போனால் வித்தியாசமாக தெரியலாம்” என்றேன்.

”நான் போர்வையை நன்றாகபோர்த்திக்கொண்டுதான் போகிறேன்”

“சரி”

அவள் வெளியே சென்றுவிட்டு வந்தாள். எனக்கு தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது. நாள் முழுக்க வெயிலிலோ பாறைகளின் வெக்கையிலோ நின்றிருக்கிறேன். வெம்மை தூக்கத்தை கொண்டுவருகிறது. குளிரும் தூக்கத்தை கொண்டு வருகிறது.

அவள் வந்து பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள். கூந்தலை தலையணைக்குமேல் தூக்கி போட்டு விட்டு சற்று ஒருக்களித்து என்னை நோக்கி “எங்கே போயிருந்தீர்கள்?”என்றாள்.

“ஷூட்டிங் பார்க்கப்போனேன்.” என்றேன்.

“பானுமதி வந்துவிட்டார்களா?”

“ஆமாம். அவளும் என்.டி.ஆரும் நடிக்கிறார்கள்”

“அந்தப்பெண்ணுக்கு நடிக்கவே தெரியாது. பூசணிக்காய் முகம் வேறு”

“ஆமாம், தலைமயிர் வேறு நுரை மாதிரி”

அவள் முகம் மலர்ந்தாள். “ஆமாம், அதை எண்ணை போட்டு நீவுவார்கள். ஆமணக்கெண்ணையும் வேறேதோ ஒரு கிரீமும் போட்டால் பசை போல ஆகிவிடும். அதை வைத்து பூசி சீவி சீவி நீட்டுவார்கள். அப்படியும் கொஞ்சம் முடி பிசிறாக நின்றுவிடும்…”

“பிசிறாக நின்றாலென்ன? பெண்களின் தலைமுடி அப்படித்தானே நிற்கிறது?”

நான் பானுமதியை ரசிக்கிறேன் என நினைத்துக்கொண்டாள் போல. அவள் முகம் மாறியது. நான் அவசரமாக “உன் முடி காதோரம் பிசிறாக நிற்பது ஆகாக இருக்கிறது” என்றேன்.

“ஆமாம். நிறையபேர் சொன்னதுண்டு” என்று மீண்டும் முகம் மலர்ந்தாள். “ஆனால் சினிமாவில் முடியுடன் முடியின் நிழலும் தெரியும். அவை ஆடுவது தவறாக இருக்கும்”

”தவறாக என்றால்?”

“பேபியின் வெளிச்சம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ப நிழலும் மாறும். அது தப்பாக தெரியும்”

“ஓ”

“எனக்கு தெரியாது… அங்கே சொன்னார்கள். ருத்ரப்பா என்று ஒரு லைட்பாய் அண்ணன்”

“ஓ”என்றேன் பொதுவாக.

அந்த ஒற்றை ஒலியில் என் மனம் கொஞ்சம் சலித்ததை புரிந்துகொண்டாள். பேச்சை மாற்றி “வெளியே என்ன நடக்கிறது?”என்றாள்.

“ஷூட்டிங் பார்ட்டி வேறெதையும் பொருட்படுத்துவதில்லை… அவர்களுக்கு வேலைதான் முக்கியம்” என்றேன்.

அவள் மிகமெல்ல எனக்கு மட்டுமே கேட்கும்படிப் பேசினாள் “கடுமையாக காவல் இருக்கிறதா?”

“கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இது அவர்களின் ஊர். முக்கியமான இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருக்கலாம்” என்றேன். “நீ அடித்த அந்த ஆள் சாகக்கிடக்கிறான். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.”

”சாகட்டும் நாய்” என்று அவள் அலட்சியமாகச் சொன்னாள்.

“ஆனால் அவன் செத்தால் நீ ஜெயிலுக்கு போவாய்” என்றேன். ஆனால் ஏனோ அந்த அலட்சியம் எனக்குப் பிடித்திருந்தது.

“ஜெயிலுக்கு போனால்தான் என்ன?”

நான் “அவர்கள் விடாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.

“அவர்கள் மிருகங்கள் போல இருந்தார்கள். அப்படியொன்றும் புத்தி இருப்பதுபோல தோன்றவில்லை”

“மிருகங்கள்தான் துரத்திவருவது, காவல்காப்பது எல்லாவற்றிலும் மனிதனைவிட திறமை வாய்ந்தவை”

அவள் “ம்ம்”என்று முனகினாள். புரண்டு மல்லாந்து படுத்தாள். நான் அவளை பார்த்தேன். அவளுடைய தலைமுடி விரிந்து நிழல்போல அவளுக்கு கீழே விரிந்திருந்தது. கன்னங்கரிய திரவம் வழிந்து பரவியதுபோல.

“என்ன?”என்றாள்.

”ஒன்றுமில்லை” என்றேன்.

“பகல் முழுக்க தலைமுடியை சுருட்டி இறுக்கி கட்டிவைத்திருந்தேன், அதுதான்…” என்றாள்.  “இந்த சினிமாவில் எப்போதுமே கொண்டைதான். ஆகவே இரவில் அவிழ்த்து பரப்பி காற்றாட விட்டுவிடவேண்டும். வெட்டிக்கொள்ளட்டுமா என்று அம்மாவிடம் கேட்டேன். ஆனால் நிறைய படங்களில் இந்த முடியை விரும்புகிறார்கள். நிறைய முறை நான் பேயாக நடித்திருக்கிறேன்”

”நீ நிறையபடங்களில் நடித்திருக்கிறாயா?”

“சின்னப்பெண்ணாக இருந்தபோதே நடிக்கிறேனே… இதுவரை ஒன்பது படம் நடித்துவிட்டேன். எல்லாமே சின்னச்சின்ன ரோல்கள்தான்… இந்தப்படத்தில்தான் படம் முழுக்க வருகிறேன். ஆனால் இதுவரை வசனமே பேசவில்லை”

“ஓ”

”துணைநடிகைதான்… கொஞ்சம் கொஞ்சமாக நடிகை என்ற அந்தஸ்து வந்துவிட்டால் இந்த அவஸ்தை இல்லை”

“என்ன அவஸ்தை?”

”யாரும் இழுத்துக்கொண்டு போகமாட்டார்கள்”

நான் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பிக்கொள்ள விரும்பினேன். அது எப்படியோ என் உடலசைவில் வெளிப்பட்டிருக்கவேண்டும்.

“பெரிய நடிகைகள் வேண்டாம் என்று சொல்லமுடியும்… எல்லாரிடமும் சொல்ல முடியாது. இந்த மாதிரி எருமைமாடுகள் வேண்டாம் என்று சொல்லமுடியும்…  அப்படிச் சொல்லமுடிந்தாலே போதும், நிம்மதியாகத் தூங்கலாம்”

நான் என்னை இறுக்கிக்கொண்டு படுத்திருந்தேன். என்ன எண்ணினேன். ஒன்றுமில்லை, நம்மை ஒருவர் அடிக்கப்போகும்போது உடலைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்போமே, அப்படி மனதை வைத்திருந்தேன்.

“தலைமுடியைப் பற்றி கேட்டீர்களே, அதை சுருட்டிப் பிடித்துக் கொண்டுதான் என்னை அடிப்பார்கள்”

“யார்?”

“குடிகாரர்கள்… எல்லா நாயுமே குடிகார நாய்தான்”

“எதற்கு அடிக்கிறார்கள்?”

”நிறையபேருக்கு அடித்தால்தான் நிறைவு வருகிறது. பெண்களுடன் இருக்கும்போது பெண்களை வெறுக்கிறார்கள். வெறுக்கும் பெண்களெல்லாம் அவர்களின் நினைவுக்கு வருகிறார்கள். போதை ஏற ஏற காமம் குறைந்து கோபம் ஏற்படுகிறது…. அடித்தால் கேட்க யாருமில்லை என்றால் அடிக்காமலிருக்க பெரும்பாலானவர்களால் முடியாது” என்றாள்.

அனால் உடனே மெல்ல சிரித்து “தேவ்டியா தேவ்டியா என்று சொல்லியபடியே அடிப்பார்கள். தெரிந்துதானே வந்தாய் நாயே என்று ஒருமுறை கேட்டேன்” என்றாள்.

“வேண்டாம்”என்றேன்.

“ஏன்?”

“இதையெல்லாம் என்னிடம் நீ சொல்லவேண்டாம்”

”ஆமாம், ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. நீங்கள் நல்ல மனிதர். உயர்ந்த குடும்பம்”என்றாள் கண்களை மூடி கால்களை ஆட்டிக்கொண்டு “நான் பகல் முழுக்க தூங்கினேன். இரவு உடனே தூக்கம் வராது என்று நினைக்கிறேன்”

”எனக்கு தூக்கம் வருகிறது”

”தெரிகிறது, ஆனால் என்னால் பேசாமலிருக்க முடியாது” என்று அவள் சொன்னாள். “கொஞ்சநேரம் முன்னால் நீங்கள் என்னிடம் என்னை தேடுவதைப் பற்றியெல்லாம் சொன்னீர்கள். அதற்கு என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசனை செய்தீர்கள். அப்போது எனக்கு மனம் உல்லாசமாக இருந்தது”

“ஏன்?”என்றேன்.

“என்னைப்பற்றி ஒருவர் இத்தனை அக்கறை எடுத்துக்கொள்வது இப்போதுதான்… நான் இங்கே வந்தபிறகு என்னைப்பற்றி நினைக்கவே இல்லை. எல்லாம் நீங்களே பார்த்துக் கொள்வீர்கள் என்று முழுக்கமுழுக்க விட்டுவிட்டேன். அப்படி நம்மை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றாக என்றால் மிகவும் நன்றாக. மிகவும் நன்றாக மிகவும் நன்றாக என்றுதான் என் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது… நான் இப்படி மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை. ”

“எல்லாரும் இப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் சாலையில் செல்லும்போது பெண்களைப் பார்ப்பேன். எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாதிப்பெண்கள் ஆண்களை திட்டுகிறார்கள். அவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு திட்டுகிறார்கள். அப்படி திட்டுவதுகூட நன்றாக இருக்கிறது, நம்மால் ஒருவரை திட்டமுடியும் என்றால் நமக்கு அந்த உரிமையை அவர்கள் அளித்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அது எவ்வளாவு நல்ல விஷயம்… நினைக்கவே நன்றாக இருக்கிறது”

நான் தூக்கத்தில் சரிந்து சரிந்து சென்றேன். சால சால என்று அவள் சொல்லிக்கொண்டிருப்பதுபோல கேட்டது.  அரைத்தூக்கத்தில் அந்த வார்த்தை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதுபோலிருந்தது. விழித்துக்கொண்டு “என்ன?” என்றேன்.

“இப்படி நன்றாக இருப்பதுதான் எல்லாப் பெண்களுக்கும் பிடித்திருக்கிறது போல” என்றாள்.

“ம்?” என்றேன்.

”அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்படி பாதுகாப்பாக இருப்பது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது.நம்மை பாதுகாக்க ஆண் ஒருவன் இருக்கிறான் என்று ஒரு நிலைமை… அது மிக நன்றாக இருக்கிறது. இப்படி நன்றாக இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. அதுதான் அவ்வளவு தூக்கம். பகல் முழுக்க தூக்கம்”

“ம்” என்றேன்.

”நடுவே விழித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். நான் திருமணம் செய்துகொண்டு எங்கோ ஒரு சின்ன வீட்டில் இருப்பதுபோல தோன்றியது. அந்த வீட்டைக்கூட என்னால் பார்க்க முடிந்தது. ஓட்டுவீடு. இந்த வீடு மாதிரி. இந்த வீடு சின்னது. ஆனால் இது நல்ல வீடு. இங்கே யாரோ நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்”

நான் அதைச் சரியாகக் கேட்கவில்லை, என் குரட்டையோசையை அவள் கேட்டிருக்கலாம்.

“தூங்கிவிட்டீர்களா?” என்றாள்.

”ம்ம்? இல்லை” என்று புரண்டேன்.

”கொஞ்சநேரம் தூங்காதீர்கள். நான் கொஞ்ச நேரம் ஏதாவது என் மனசுக்கு வந்ததுபோலப் பேசிக்கொண்டிருக்கிறேன்”

“இல்லை, தூங்கவில்லை”

“என் தோழிகளெல்லாம் இப்படியெல்லாம் கனவு காண்பதைச் சொல்வார்கள். நான் அப்படி யோசித்ததே இல்லை. ஆனால் இங்கே இன்றுதான் அப்படியெல்லாம் யோசித்தேன்…”

“ம்”

“எப்படியெல்லாம் என்று கேளுங்கள்”

“சொல்”

“அதுதான் சொன்னேனே, கல்யாணமாகி இதைப்போல ஒரு வீட்டில் இருப்பதைப்போல. ஆனால் இங்கே இல்லை, ராஜமந்திரி பக்கம் எங்கள் ஊரில்..”

”உன் ஊர் எது?”

“முனிப்பள்ளி… ராஜமந்திரிக்கு பக்கம்தான்”

“ஓ”

“எனக்கு என்னென்னவோ நினைப்பு…”அவள் சட்டென்று சிரித்து “நீங்கள் கவலைப்படுவது பதற்றப்படுவது எல்லாமே எனக்கு பார்க்கப்பார்க்க சந்தோஷமாக இருந்தது” என்றாள். “அதையே திரும்பத்திரும்பச் சொல்கிறேனா?”

நான் மீண்டும் தூக்கத்திற்குள் நழுவிக்கொண்டிருந்தேன். உண்மையில் அந்த வார்த்தைகளை அப்போது சரியாகக் கேட்கவில்லை. மீண்டும் நினைவுகூர்ந்தபோது தெளிவாக, சொல் சொல்லாக, உள்ளிருந்து எழுந்து வந்தன.

“நான் ஏன் ஓடி இங்கே வந்தேன்? தெரியவில்லை. எப்படியோ, அந்த தருணத்தில் தோன்றியது. வந்துவிட்டேன். நாகா தான் சொல்லிக்கொண்டே இருப்பாள். நீங்கள் என் மேல் விருப்பம் கொண்டிருப்பதாக. சின்னப்பையன், ஆகவே காதல்தான் கொண்டிருப்பான் என்று சொல்வாள். நான் அதை கவனித்ததே இல்லை. அப்படியெல்லாம் யோசிக்க எனக்கு நேரமே இல்லை”

“ம்” என்றேன்.

“ஆனால் இப்போது உங்கள் கண்களை நினைத்துப்பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது.அவற்றில் அப்படி ஒரு மயக்கம் இருந்தது” அவள் சிரித்து “இப்போது அதை நினைக்க அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

மீண்டும் சால சால என்ற சொல் மட்டும் கேட்டது எனக்கு.

“பார்க்கிறீர்களா?”

“ம்?”

“கேட்டேனே”

நான் விழித்துக்கொண்டு “என்ன?” என்றேன்.

“என் கூந்தலைப் பார்க்கிறீர்களா?”

நான் நன்றாகவே விழித்துக்கொண்டேன். என் நெஞ்சு அடித்துக்கொண்டது.

“வேண்டாம்”

“ஏன்? ஆசைப்பட்டீர்களே?”

“நானா?”

“ஆமாம், இப்போது சொன்னீர்களே”

நான் அதை நினைவுகூரவே இல்லை. ஆனால் சொல்லியிருப்பேன். அல்லது என் கண்களிலேயே தெரிந்திருக்கும்.

அவள் எழுந்து நின்று தன் கூந்தலை கையால் நீவி ஒழுக விட்டு திரும்பி நின்றாள். பொதுவாக நீள்கூந்தல்கள் பட்டையான சுருளற்ற அழுத்தமான முடியாலானவையாக இருக்கும். அவளுடைய கூந்தல் சுருள் சுருளாக, மென்மையாக, கரிய அருவிபோல விழுந்திருந்தது.

நான் உடலெங்கும் குருதியின் துடிப்பை உணர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் திரும்பி என்னை நோக்கிச் சிரித்து “பிடித்திருக்கிறதா?”என்றாள். அவள் சிரிப்பு ஆணைக் கவரும் பெண்ணின் சிரிப்பாக இல்லை, உற்சாகமான சிறுமியின் சிரிப்பாக இருந்தது.  வயது, வாழ்க்கைச்சூழல், இருக்கும் நிலைமை எல்லாவற்றையும் ஒரு சிறு துள்ளல் வழியாக கடந்துவிட்டாள். ஏனோ அவளுடைய சிரிப்பு ஆற்றில் மீன் ஒளியுடன் எழுந்து விழுவதுபோல என எனக்கு தோன்றியது. அவளுடைய மாநிற முகத்தில் வெண்பற்கள் தெரிந்தமையாலாக இருக்கலாம்.

முடியைச் சுழற்றி முன்னாலிட்டு கையால் நீவியபடி “நான் உடம்பில் ஆடையே அணியவில்லை என்றாலும் இந்த முடியை வைத்தே உடலை மறைக்கமுடியும்…”என்றாள்.

“ம்” என்றேன். என் மூச்சுதான் என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

“காட்டட்டுமா?” என்றாள். அப்போதும் கண்களில் அச்சிறுமிதான் தெரிந்தாள்.

நான் மூச்சுத்திணறி “வேண்டாம்” என்றேன்.

”ஏன்? உங்களுக்கு என்னை பிடிக்கும் தானே?” அவள் கழுத்தை சற்றே நொடித்து, குழந்தைத்தனமாக முகவாயை தூக்கி,உதட்டைச் சுழித்தபடி கேட்டாள்.

நான் திணறலுடன் பேசாமலிருந்தேன்.

“பிடிக்கும் என்று உங்கள் கண்களைப் பார்த்தால் தெரிகிறது… நான் இப்படிப்பட்ட கண்களைப் பார்த்ததே இல்லை. ஆனாலும் நன்றாகத் தெரிகிறது” பெண்ணின் அந்த மெல்லிய சிரிப்பொலி போல் அந்தரங்கமானது ஏதும் இல்லை.

அவள் சிறுமிகள் பேசுவதுபோல மூச்சை வாயால் உறிஞ்சி “அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? உண்மையில் நம்மை ஒருவருக்கு பிடிக்கிறது என்று நினைக்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி. மனம் குதித்துக்கொண்டே இருக்கிறது. நான் மட்டும் ஊரில் இருந்திருந்தால் மாடுமேய்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு தோட்டத்துக்குப்போய் துள்ளிக்குதித்திருப்பேன்”

“அப்படியா?” என்றேன். அந்த சந்தர்ப்பத்தின் விசித்திரமான இறுக்கத்தை அந்தச் சொற்கள் எளிதாக்கிவிட்டன. கோதாவரியின் பளபளக்கும் நீர்ப்பரப்பை நினைவில் கொண்டுவந்தன. என் முகம் மலர்ந்துவிட்டது.

“பகலில் என்னால் இங்கே இருக்கவே முடியவில்லை. மனதுக்குள் துள்ளிக் குதித்துக்கொண்டு படுத்திருப்பது எவ்வளவு கஷ்டம்… பாட்டுப் பாடவேண்டும் என்றுகூட தோன்றியது” மீண்டும் அந்த மெல்லிய சிரிப்பொலி.  “ஆனால் நான் பாடமாட்டேன். எனக்கு பாட்டே தெரியாது”

நான் “ம்” என்றேன்.

“சொல்லுங்கள் என்னை உங்களுக்கு பிடிக்கும்தானே?”

“ம்” என்றேன். முனகல்போல அந்த ஒலி எனக்கே கேட்கவில்லை. என் அகம் பதறிக்கொண்டிருந்தது.

“உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

“சொல்லுங்கள் நான் ஒன்றும் உங்களிடம் என்னை கல்யாணம் செய்துகொள்ள கேட்கமாட்டேன்”

“அதில்லை” என்றேன். அவள் என்னிடம் விளையாட விரும்புவது நன்றாகவே தெரிந்தது. ஆனால் அந்த தருணம், அத்தனை உடல்நெருக்கம் இருந்தாலும், காமத்தை எழுப்பவில்லை. என் உடலில் அதன் துடிப்பே இல்லை.

அவள் என் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்துகொண்டு “சரி, இப்படி கேட்கிறேன். உங்களுக்கு என்னிடம் பிடித்தது என்ன?”என்றாள்.

“என்ன?”

“இதுவா?”என்று மார்பகங்களை தொட்டு காட்டினாள்.

“இல்லை”

“பின்னே?”

”ஒன்றுமில்லை”

”சொல்லுங்கள்” என்று கொஞ்சினாள்.

“உன் கண்கள்… நீளமானவை”

“அப்படியா?” என்று அவள் முகம் மலர்ந்தாள். அவள் முகம் சிவந்து கன்றியதுபோல ஆகியது. மூச்சிரைப்பவள்போல கழுத்து குழிந்து எழுந்தது. “அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்… மேக்கப் போடுபவர்கள் சொல்வார்கள்” என்னருகே மேலும் அணுகி “பிறகு?” என்றாள்.

அவள் முகத்தை அருகே பார்த்தேன். மேலுதட்டின் மென்மயிர்களை, கன்னத்து முகப்பருக்களை.

“சொல்லுங்கள்”என்று கொஞ்சி என் மேல் கையை வைத்தாள்.

“உன் மேலுதடு”என்றேன்.

”ம்” என்றாள். முனகலாக அவ்வொலி எழுந்தது.

”அது கொஞ்சம் வளைந்து இருக்கிறது. நீ சிணுங்குவதுபோலவே தெரிகிறது”

அவள் என்னருகே படுத்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டாள். அவள் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. அவளுடைய மூச்சு என்மேல் பட்டது. அவளுடைய மார்பகங்கள் என் தோளில் அழுந்தின. அவள் கழுத்தில் வியர்வை பளபளத்தது. அதன் மென்மையான உப்புமணம்.

“ம்ம்” என்று நான் ஓசையிட்டேன்.

அவள் ஒரு காலை தூக்கி என் மேல் போட்டாள். கையால் என் தோளை வளைத்து மேலெழுந்து என்மேல் கவிந்து என் உதடுகளில் முத்தமிட்டாள். பச்சைக்கற்பூரம் போல ஏதோ வாசனை. மென்மை, வெம்மை, ஈரம். அவள் உடலின் எடை. நெஞ்சிலும் இடையிலும் அதன் அழுத்தங்கள்.

நான் அவளை உந்தினேன். ”வேண்டாம்”என்றேன்.

“நான் … மிகவும் மிகவும்…” என்று திணறினாள். அவள் கண்களில் கண்ணீர்ப்படலம் இருப்பதுபோலத் தோன்றியது. கழுத்தும் கன்னங்களும் தீயில் தெரிபவை போல பளபளத்தன.

“வேண்டாம்” என்றபோது என் குரல் தேவைக்குமேலேயே ஒலித்தது.

அவள் “நான் வேறென்ன கொடுப்பது?” என்றாள்.

நான் அவளை உந்திவிட்டு உருண்டு எழுந்துகொண்டேன். “வேண்டாம், தள்ளிப்போ”என்றேன்.

புரண்டு ஒருக்களித்து, “என்னை பிடிக்கவில்லையா?”என்றாள்.  ஜாக்கெட்டுக்குள் அவள் மார்புகள் ஒன்றுடனொன்று மென்மையாக அழுந்தியிருந்தமை தெரிந்தது.

“இல்லை” என்றேன்.

“பிடித்திருக்கிறது என்று சொன்னீர்கள்?”

“அது வேறு… நீ தொடும்போது அருவருப்பாக இருக்கிறது”

“ஏன்?” என்றபோது அவள் முகம் சுருங்கி, வாய் இழுபட்டு அழகனைத்தும் மறைந்துவிட்டது.

“நான் உலகத்திலேயே வெறுப்பவர்கள் ரங்கா ரெட்டி போன்ற ஆட்கள். வெறும் மாமிசங்கள்… கலை இலக்கியம் இசை ஒன்றுமே தெரியாத பிண்டங்கள். அவர்களெல்லாம் உன்னை…” என்றேன். பல்லைக் கடித்தபடி  “அவர்களுக்கு பின்னால் நான்…” என்றேன்.

“எச்சில் என்கிறீர்கள்?” அவள் முகம் கடும் குரோதம் கொண்டதுபோல ஒரு கணம் தோன்றியது.

“ஆமாம்” என்றேன், வஞ்சத்துடன் தீர்மானத்துடன் என் குரல் ஒலித்தது.

ஆனால் அதைச் சொன்னதுமே என் உள்ளம் உருக ஆரம்பித்தது. அது நான் உத்தேசித்தது அல்ல. அது என்னுள் வேறெங்கோ இருந்து வந்தது. அதை நான் ஏதோ ஒரு ஆங்காரத்தால் வெளியே எடுத்தேன். வேண்டுமென்றே நான் அந்த அழகிய தருணத்தை அழித்துக்கொண்டேன். இனி மீளவே முடியாதபடி ஒன்றை உடைத்துவிட்டேன்.

வெளியே போகப்போவதுபோல் ஓர் அசைவு என்னில் எழுந்தது. ஆனால் என்னால் அசையவும் முடியவில்லை. அவள் கீழே என் காலடியில் முழங்கால்மேல் கைகளை பூட்டி அமர்ந்திருந்தாள். அவள் கழுத்து மூச்சில் எழுந்து அமைந்தது.

அவள் மிகவிரைவில் இயல்பானாள். எழுந்து தன் தலைமுடியை சுற்றிக் கட்டிக்கொண்டாள். ”நீங்கள் சொல்வது சரிதான்…நான் அதை யோசிக்கவில்லை. என்னை கூட்டிக்கொண்டு போகிறவர்கள் அயோக்கியர்கள். அவர்களே என்னை எச்சில் எச்சில் என்று சொல்லித்தான் அடிப்பார்கள். ஒருவன் முகத்திலேயே காறி துப்பியிருக்கிறான்”

நான் தலைகுனிந்து நின்றேன். நான் ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

“பரவாயில்லை, நீங்கள் சொல்லிவிட்டது நல்லது. இல்லாவிட்டால் வாழ்க்கை முழுக்க குற்றவுணர்ச்சியால் கஷ்டப்படுவீர்கள்”

அவள் துணிப்பொதி ஒன்றை தலையணையாக எடுத்துப்போட்டு படுத்துக் கொண்டாள். நான் அவளை பார்த்தபடி நின்றேன்.

“ஒன்றும் கவலைப்படவேண்டாம். எனக்கே நிம்மதியாக இருக்கிறது. நானும் பெரிய ஏதோ தவறுசெய்துவிடப் பார்த்தேன். பின்னாளில் நினைத்து வருந்தும் தவறு ஏதும் இதுவரை நான் செய்ததில்லை. இப்போது ஒன்றை செய்திருப்பேன்… அது வேறு வாழ்க்கை முழுக்க குற்றவுணர்ச்சியை தந்திருக்கும்”

“நான் உன்னை குற்றம்சாட்டவில்லை” என்றேன்.

“இல்லை, நீங்கள் இயல்பாகத்தான் சொன்னீர்கள்… நான்தான் தவறாக நினைத்துவிட்டேன். எல்லா ஆண்களும் ஒன்று என்று நினைத்தேன். எனக்கு தெரிந்ததெல்லாம் இது மட்டும்தானே?”

நான் பெருமூச்சுவிட்டேன். ஏதோ சொல்லவேண்டும் போலிருந்தது, உடலெங்கும் குருதிக்கொப்பளிப்பு நிகழ்ந்து செவிகளில் ஆவி பறந்தது.

“வெளியே போய் வாருங்கள். ஒரு நிமிடம் வெளியே திறந்த வெளியில் நின்றால் நீங்கள் மீண்டு வருவீர்கள். நீங்கள் தவறு ஒன்றும் செய்யவில்லை. என்னை புண்படுத்தியதாக எல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம்… நான் நிம்மதியாகத்தான் உணர்கிறேன்”

நான் வெளியே சென்று காற்று பெருகியோடிய திறந்தவெளியில் நின்றேன். மரங்கள் சுழன்றுகொண்டிருந்தன. வானில் ஒளியுடன் நிலா நின்றிருந்தது. விண்மீன்கள் பெருகிக்கிடந்தன. உண்மையாகவே திறந்தவெளி ஆறுதலாக இருந்தது. அனைத்து இடுங்கல்களில் இருந்தும் விடுவித்தது.

எண்ணங்களாக ஆகாத உதிரிச்சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க மெல்லமெல்ல நான் எளிதானேன். வியர்வை அடங்கி நெஞ்சொலி அமைந்து இயல்படைந்தேன். அதன்பின்னர்தான் நெடுநேரமாக கதவு திறந்துகிடப்பது என்னுள் தோன்றியது.

வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டேன். உள்ளே சென்று பார்த்தேன். அவள் சன்னமான மூச்சொலியுடன் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றேன்

மேலும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 11:35

இரு கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நீங்கள் தொடர்ந்து எழுதி உங்கள் எழுத்தால் பல்லாயிரம் வாசகர்கள் மனதில் நிலை நிறுத்தப்பட்ட மண்ணில் இருந்து நீங்கள் அன்னியமானவனாக உணர்வது என்னைப் போன்ற உங்கள் தீவிர வாசகர்களுக்கு அதே சமயம் அந்த மண்ணின் மைந்தர்களாகவும் உணர்பவர்களுக்கு வருத்தமே அளிக்கிறது. நான் மலையாளத்தில் ஒரு ஐந்து சிறு கதையாவது எழுத ஆசைப்படுகிறேன் என்று சொன்னது கூட நாஞ்சில் மண்ணைப் பற்றி தமிழில் எழுதப்பட்டுவிட்டது ஆனால் மலையாளத்தில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு இருப்பதால் தான். அது மண் மீதான பற்றே. எந்த கலைஞன் ஒரு மண்ணை தொடர்ந்து முன் வைத்து நிலைநிறுத்துகிறானோ அவனே அதிலிருந்து விலக்கம் கொள்வது அம்மண்ணின் சாபம் என்றே நினைக்கிறேன்.

ஆனால் இதை உங்கள் வாசகர்கள் மட்டுமே உணர்வார்கள். மற்றவர்களுக்கு ஒவ்வொரு தினமும் ஒன்றே. இருந்தாலும் தமிழ்நாட்டில் கல்வியில் சிறந்த மாவட்டமாக மார்தட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களுக்கு வாசகர்கள் குறைவு என்பது நம்பவே முடியவில்லை. இவர்கள் வெறும் பாடபுத்கங்களை மட்டும் தான் வாசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவுறுகிறது. என் நிலைமை வேறு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இருக்காமல் அப்பா பார்த்துக் கொண்டதால் நாளிதழ் வாசிப்பு ஓவியம் அலமாரியில் இருந்த புத்தகங்களுடன் நீங்கள் அப்பாவிற்கு பரிசளித்த புத்தகம் பிறகு சென்னை வாழ்க்கை ஓவியக் கல்லூரி என்று ஆரம்பித்து இன்று வெண்முரசு வரை வந்து நிற்கிறேன்.

என்னால் துல்யமாகச் சொல்ல முடியும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாசிப்பு பற்றாக்குறைக்குக் காரணம் தொலைக்காட்சி பெட்டி தான். இன்று அதனுடன் மிதமிஞ்சிய இணையம் மற்றும் கைப்பேசி பயன்பாடு. நான் எனக்கு பத்து வயது குறைவான என் சித்தப்பா பையன்களை பார்க்கிறேன். அவர்கள் குடும்ப வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். அங்கே அவர்கள் பிறப்பதற்கு முன்பே தொலைக்காட்சி ஓடத்துடங்கி விட்டது. நான் அங்கே விடுமுறைக்குச் செல்லும்போது அவர்கள் பள்ளி முடித்து வந்தவுடன் டிவி பெட்டி தான் கதி என்று கிடப்பார்கள். அவர்கள் வயதுக்கு பெரும்பாலும் வரைகலைத் தொடர்கள் பார்ப்பார்கள். டிஸ்கவரி கூட அதில் ஒருவன் விருப்பத்துடன் பார்ப்பான். டியூசன் நேரம் வந்தவுடன் அம்மாக்களால் கிளப்பப்பட்டு மீண்டும் வந்தவுடன் தொலைக்காட்சி தான் உறங்கப் போகும் வரை. வாசிப்பின்பத்திற்கும் கதை கேட்கும் இன்பத்திற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பெற்றோர்களுக்கு பையன்கள் வகுப்பில் முதல் பத்து இடத்திற்குள் இருந்தால் அதுவே போதும். வேறெந்த கவலையும் இல்லை.

அன்றெல்லாம் வாசிப்பின் மகத்துவத்தையெல்லாம் புரிந்து கொண்டு என் தம்பிகளுக்குச் சொல்லவேண்டும் என்றெல்லாம் தோன்றியது கிடையாது. இன்று அதைச் சொல்லிப் புரிய வைப்பது மிகக் கடினம். ஆறு ஏழு வயதிற்குள்ளேயே அஸ்திவாரம் போடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சூழலை பெற்றோர்களும் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். சென்னையில் என் மேல் மாடியில் இருக்கும் பத்து வயதிற்கும் குறைவான சிறுவனுக்கு தும்பி இதழை வாங்கிக் கொடுத்து வாசிப்பை பழக்கப்படுத்தலாம் என்று நினைத்தாலும் ஏற்கனவே  ‘கார்டூண்கள்’ பழகிவிட்டதனால் இயல்பாக கதை புத்தகம் கூட அவனால் வாசிக்க முடியவில்லை.

ஆனால் தொலைக்காட்சி கேரளாவிலும் தான் பார்க்கிறார்கள். அங்கே இலக்கிய வாசகர்கள் நிறைய இருக்கிறார்களே? கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பாதிப்பு கேரளாவைப் போல கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பாக கல்குளம் விளவங்கோடு தாலுக்காவிலும் இருந்ததால் வாசிப்பவர்கள் இருப்பார்கள் என்று நினைத்தேன். வாசிப்பவர்கள் இருந்தால் உங்களையும் வாசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மதவெறி அங்கே உருவானதும் கம்யூனிசம் இல்லாமல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். அத்துடன் வாசிப்பும் நின்றுவிட்டிருக்க வேண்டும்.

உங்கள் எழுத்து மூலமாகவே என் மண்ணை(எனக்கு சென்னையும் கூட இப்போது என் மண் தான். இதுவரையான வாழ்க்கையின் மூன்றில் ஒன்றை இங்கே கழித்தாகிவிட்டது. நாஞ்சில்நாடு பெற்றத்தாய் என்றால் சென்னை வளர்ப்புத்தாய்) கனவு காணப் பழகிய எனக்கு இப்போது நீங்கள் மண்ணிலிருந்து விலகியவுடன் உங்களை வாசிக்கும் எனக்கும் அவ்விலக்கம் சிறிதளவேனும் ஏற்பட்டுவிடுமோ என்று ஐயமடைகிறேன். இவ்வருடம் நானும் ஊருக்குச் சென்றது குறைவு. நான் ஊரில் இருந்த நாட்களை விட உங்களுடன் ஈரோடு புதிய வாசகர் சந்திப்பிலும் ஈரட்டியிலும் இருந்த நாட்கள் தான் எனக்கு மனதிற்கு இனியன.

உங்கள் நிறைவிற்கு எந்த முடிவெடுத்தாலும் அதனுடன் நிற்பது தான் நாங்கள் செய்யவேண்டியது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அந்த மண்ணைக் கொண்டு நீங்கள் சமைத்த கனவுகளும் அதை விட நீங்களும் தான் எனக்கு முக்கியம்.

ஜெயராம்

அன்புள்ள ஜெயராம்

இதில் வருந்த ஏதுமில்லை. ஒருவர் தன்னுடைய இடமென பிறந்த ஊரையே கொள்ளவேண்டுமென ஏதுமில்லை. பெரும்பாலானவர்கள் இன்னொரு இடத்தை கண்டுகொண்டவர்கள்தான்

ஜெ

அன்புள்ள  ஜெயமோகன்  அவர்களுக்கு ,

உங்களை  “விஜி வரையும் கோலங்கள்”   நிகழ்ச்சியின்  முடிவில்  சந்தித்து  கையெழுத்து  வாங்கியது  மிகுந்த  மகிழ்ச்சி  அளித்தது. நான் தொடர்ந்து  6 ஆண்டுகளாக  உங்கள்  புத்தகங்கள்  மற்றும் கட்டுரைகளை  தொடர்ந்து  வாசித்து  வருகிறேன். உங்கள்  பயணக்குறிப்புகள் பலவற்றை  பின்பற்றி  அந்த  இடங்களுக்கு  பயணித்துள்ளேன். குறிப்பாக ஒடிசா  மற்றும்  லடாக்  பயணம்  என்  வாழ்க்கையின்  மிக அற்புதமான அனுபவங்களாய்  அமைந்தன.

உங்கள்  பயணக்கட்டுரைகள்  மேல்  உள்ள  ஈர்ப்பினால்  நானும்  என் பயண  அனுபவங்களை  “blog”இல்  பதிவிட்டுவருகிறேன். சச்சின் விளையாடுவதை  பார்த்து  தெருவில்  கிரிக்கெட்  விளையாடுவது  போல என்று சொல்லலாம் :) மேலும்  உங்கள்  உரைகளின்  வாயிலாக  பிற  சிறந்த ஆளுமைகளையும்  அறியும்  வாய்ப்பு  அமைந்தது. Carl Sagan  பற்றி  நீங்கள்  நாகர்கோயிலில்  ஒரு  உரையில்  சொல்லியதன்  மூலமாக  நான்  அவரது  “Contact” நாவலையும்  “Cosmos” தொடரையும் அடைந்தேன். அவர் மூலமாக  Neil De Grasse Tyson, Michio Kaku, V S Ramachandran  போன்றவர்களின் புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது.

“போரும்  வாழ்வும்”  மற்றும்  “புயலிலே  ஒரு தோணி” ஆகிய நூல்களையும்   உங்கள்  உரைகளின் வாயிலாகவே  நான் சென்றடைந்தேன். உங்களது “இன்றைய காந்தி” புத்தகமும் காந்தி பற்றிய பிற உரைகளும் எனக்கு காந்தி  மீது பெரும் பக்தி மற்றும்  மதிப்பை  ஏற்படுத்தியது. நாம்  நம்பும்  விஷயத்திற்காக  தொடர்ந்து  பணியாற்றவும் மாற்று   கருத்துக்களை வெறுப்பின்றி ஆராயவும் அவை கற்றுத்தந்தன.

உங்களது 10 அறைவுரைகளின்  படி தினமும் குறைந்தது  1 மணி நேரம்  படித்து வருகிறேன். உங்கள் புனைவுகளின்  வாயிலாக  மிக  நுட்பமான அனுபவங்களை உணரச்செய்ததற்கும் பிற ஆளுமைகளை அறிமுகம்  செய்வதன்  மூலம்  வாழ்க்கையின்  பல்வேரு  தளங்களை அறியச்செய்ததற்கும்  மிகவும்  நன்றிகள். நான்  அவ்வப்போது  பார்வதிபுரம்  பகுதிக்கு  சைக்கிளில் வரும்போது உங்களை பார்ப்பேன். பேசலாம் என்று நினைத்து  பிறகு பயந்து விட்டுவிடுவேன்.

நாகர்கோயிலில்  இனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க  போவதில்லை என்ற  உங்கள்  அறிவிப்பு  வருத்தத்தை  அளிக்கிறது.

அன்புடன்

கார்த்திக்

 

அன்புள்ள கார்த்திக்,

நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாசிப்பும் விவாதமும் இணையாகவே நிகழும்போதுதான் அதன் உண்மையான பயன் அமைகிறது. இணையத்திலோ அல்லது நேரிலோ பிணக்கின்றி, அரசியலின்றி விவாதிப்பதற்கான நண்பர்களை கண்டடையுங்கள்.

சந்திப்போம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 11:34

சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி

ஆனந்தக் குமாரசாமியின் ‘சிவநடனம்’ என்னும் புகழ்பெற்ற கட்டுரை இரண்டு கோணங்களில் காலம் கடந்தும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, இந்தியக்கலை என்பது தனிப்பட்ட கலைஞனின் ஆளுமை வெளிப்படாத வெறும் அலங்காரக்கலை என்று மேலைநாட்டு கலைவிமர்சகர்கள் முன்வைத்த மழுங்கிய பார்வையை எதிர்த்து இந்தியக்கலையின் அடிப்படை என்பது கூட்டான குறியீட்டுச் செயல்பாடு, குறியீடுகளின் தொடர்வளர்ச்சி என அவர் நிறுவினார்.

இரண்டாவதாக, இந்தியக் கலையையும் இந்தியத் தொன்மங்களையும் இந்தியாவின் மாபெரும் மெய்யியல் மரபின் பின்னணியில் வைத்தே அணுகவேண்டும், அவை தத்துவச் செயல்பாட்டின் வடிவங்கள் என காட்டினார். அந்தப்பார்வை இன்று வேரூன்றிவிட்டது

ஆனந்தக் குமாரசாமி இன்றும் முக்கியமானவர் என்று தெரிவது இன்றும் ஆண்டுக்கு ஒரு ஐரோப்பிய [கிறித்தவப் பின்னணிகொண்ட] அறிஞர் கிளம்பி வந்து ஆனந்தக் குமாரசாமியை மறுத்து ஏதாவது எழுதுவார். ஆனந்தக் குமாரசாமி நிராகரிக்கப்பட்டார் என உள்ளூர் ஆங்கில நாளிதழ்களில் ஓரிரு கட்டுரைகள் வெளிவரும். அவருடைய அந்தப்பார்வை அவ்வண்னமே இன்றும் நீடிக்கிறது. அது இந்திய, இந்து மெய்மரபையும் கலையையும் அணுகுவதற்கான வழிகாட்டி.

‘சிவானந்த நடனம்’ என்றபேரில் இக்கட்டுரை முன்பும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நவீன மொழியாக்கம் தேவை என்று ஒரு தனிப்பட்ட உரையாடலில் நான் ஆனந்தக்குமராசாமி பற்றிப் பேசும்போது சொன்னேன். நண்பர் தாமரைக்கண்ணன் மீண்டும் மொழியாக்கம் செய்திருக்கிறார்

ஆனால் அழகியல் கோட்பாட்டுக் கட்டுரை. சற்று கூர்ந்த வாசிப்பு தேவைப்படுவது. அதன் மொழி ஒவ்வொரு சொற்றொடரிலும் நின்று செல்வதாகவே அமையும். ம்

எந்தவொரு மதத்திலும் கலையிலும் உள்ள ஒரு மிகச்சிறந்த கூறு, மற்றும் சிறந்த குறியீடாக உள்ள எதுவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக ஆகிறது; அது எல்லா காலங்களிலும் மனிதர்கள் தங்கள் ஆழ்மனதால் தேடி கண்டடையத்தக்க பொக்கிஷத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. சிவ நடனத்தின் தொடக்கம் எதுவாக இருந்தாலும், அது எல்லா மதங்களிலும் கலைகளிலும் இருப்பதைவிட கடவுளின் செயல்பாட்டை குறிக்கும் சிறந்த வடிவமாக காலத்தால் உருவாகி வந்துள்ளது

சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி

 

இந்த மாபெரும் சிதல்புற்று

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…

நத்தையின் பாதை 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.