Jeyamohan's Blog, page 1005

April 10, 2021

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-11

[ 11 ]

ஹொஸ்பெட்டை அணுகியதுமே அவளிடம் சட்டையை கழற்றி வீசச்சொன்னேன். முண்டாசையும் அவிழ்த்துவிட்டாள். ரயில்நிலையம் செல்வது ஆபத்து என்று தெரியும். இரவில் செல்லும் ரயில் ஒன்றே ஒன்றுதான். முதல் பஸ் விடிந்தபிறகுதான். வெளிச்சத்தில் ஹொஸ்பெட்டில் நின்றிருப்பது தற்கொலைத்தனமானது. லாரிதான், வேறு வழியே இல்லை. வெங்காய லாரிகள் பெல்லாரிக்குச் சென்றுகொண்டே இருக்கும். பெல்லாரியிலிருந்து திரும்பும் லாரிகள் இருந்தால் நல்லது.

சைக்கிளை அங்கிருந்த ஒரு கடை முன் நிறுத்தி வைத்தேன். அதற்கு பூட்டெல்லாம் இல்லை. ஆனால் எவரும் எடுத்துப் போக வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு பெயின்ட் சிந்தியிருந்தது. அரைக்கிலோமீட்டர் தூரத்திலேயே எவருடைய சைக்கிள் என்று தெரிந்துவிடும்.

நான் அவளிடம் “என் பின்னால் நின்றுகொள். சாலையில் போகிறவர்கள் உன்னைப் பார்க்கக்கூடாது”என்றேன்.

“சரி” என்றாள்.

லாரிகள் அதிகமாக கண்ணுக்குப் படவில்லை. பெல்லாரி செல்லும் லாரிகள் ஓரிரண்டு முகப்பு வெளிச்சத்தை வாரி வீசியபடிச் சென்றன.

ஒரு லாரி அங்கிருந்து வந்தது. நான் வெளிச்சத்திற்குச் சென்று கைகாட்டினேன். பழைய லாரி உதறியபடி நின்றது. டிரைவர் ஏதோ சொல்ல க்ளீனர் இந்தியில் “என்ன?”என்றான்.

“ஒரு சாவு… அவசரமாகப் போகவேண்டும்… பஸ் காலையில்தான். எங்களை கொப்பலில் விட்டுவிட முடியுமா? இந்த வண்டி எங்கே போகிறது?”

‘நாங்கள் கதக் வரை போகிறோம்”

“கொப்பலில் பஸ் இல்லை என்றால் நாங்கள் கதக்கில் இறங்குகிறோம்… பணம் தருகிறோம்”

“யார் இறந்தது?”

“இவள் அப்பா. என் மாமனார்”

“சரி ஏறிக்கொள்ளுங்கள்… இங்கே இடமில்லை. பின்பக்கம் ஏறிக்கொள்ள வேண்டும்..”

“பரவாயில்லை”

“தலைக்கு ஐந்து ரூபாய் ஆகும், கதக் என்றால் பத்துரூபாய்”

“சரி”

நான் தொற்றி ஏறி அவளையும் பிடித்து ஏற்றிக்கொண்டேன். லாரி கிளம்பியதும் அவள் தடுமாறினாள். அவளை பிடித்து அமரச்செய்தேன்.

“நீங்களும் வருகிறீர்களா?” என்றாள். ஆனால் ஆச்சரியமில்லாமல் அதைக் கேட்டாள்.

“வரும்போது அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் உன்னை எப்படி லாரியில் தனியாக ஏற்றிவிடுவது? இவர்களிடம் என்ன சொல்லமுடியும்?”

அவள் “ஆமாம்” என்றாள்.

”கொப்பல் போகும்போது விடியவில்லை என்றால் அப்படியே கதக் போய்விடலாம்… அங்கிருந்து ஹைதராபாதுக்கு பஸ் இருக்கும். ஹைதராபாதில் இருந்து நேராகவே ராஜமந்த்ரி போய்விடலாம்”

“ஹைதராபாத் நெடுந்தூரம் அல்லவா?”

”ஆனால் பஸ் கண்டிப்பாக இருக்கும்…இங்கே பாதிப்பேர் தெலுங்கர்கள்…அவர்கள் ஹைதராபாத் போய்க்கொண்டே இருப்பார்கள்”

லாரி சீராக ஓடிக்கொண்டிருந்தது. நான் நிம்மதியாக உணர்ந்தேன். லாரியில் காய்கறி மூட்டைகள்போல ஏதோ இருந்தன. நான் அவற்றில் அமர்ந்து கைகலை நீட்டி உடலை நிமிர்த்திக்கொண்டேன். அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்தது களைப்பாக இருந்தது. அவள் நின்றுகொண்டே இருந்தாள். லாரி திரும்பியபோது தடுமாறியபின் அமர்ந்துகொண்டாள்.

“வேண்டுமென்றால் படுத்துக்கொள்” என்றேன். “தப்பிவிட்டோம் என்று நினைக்கிறேன்”

”ஆமாம், எனக்கு கிளம்பும்போதே தப்பிவிட்டேன் என்ற எண்ணம் வந்துவிட்டது”

“ஆமாம்” என்று கொட்டாவி விட்டேன்.  அமைதி தூக்கத்தைக் கொண்டுவந்தது. அல்லது அந்த நீண்டநேர பாட்டின் நிறைவு தூக்கமாக மாறியது.மேலே நிலவு கூடவே வந்துகொண்டிருந்தது. அண்ணாந்து அதைப் பார்த்தேன். அது இப்போது வேகமாக, வீசப்பட்ட வாள் போல முகில்களை வெட்டிக்கொண்டு பாய்ந்தது.

அவளும் அண்ணாந்து நிலவைப் பார்த்தாள். “நாளைதான் முழுநிலவு என்று நினைக்கிறேன்” என்றாள்.

“ஆமாம்” என்றேன்.

அத்தனை தூரம் பாடியபின் பேச்சு பொருளில்லாததாக ஆகிவிட்டிருந்தது. இருவரும் வெறுமே நிலவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

நான் அப்படியே மல்லாந்து படுத்து தூங்கிவிட்டேன். கொப்பலில் லாரி நின்றபோதுதான் விழித்தேன். கிளீனர் உள்ளிருந்து எம்பி எட்டிப்பார்த்து என்னிடம் “பஸ் ஸ்டாண்டில் விளக்கே இல்லை” என்றான்.

“கதக் போகலாம்” என்றேன்.

”மொத்தம் இருபது ரூபாய் ஆகும்” என்றான்.

“சரி” என்றேன்.

“பணம் இப்போதே வேண்டும்”

நான் இருபது ரூபாய் கொடுத்தேன். கிளீனர் “யார் இறந்தது?” என்றான்.

“என் மாமனார்”

லாரி கிளம்பியது. அவள் தூங்காமலிருப்பதை கண்டு மெல்லிய குரலில் “விழித்துக் கொண்டாயா?”என்றேன்.

“தூங்கவே இல்லை” என்றாள்.

“என்ன செய்தாய்?”

“சும்மா, நிலவை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பாட்டுதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த முகில், இந்த முகில்…”

“தூங்கு”

அவள் புன்னகைத்து “பரவாயில்லை” என்றாள்

“தூங்குடி” என்றேன். “நாம் நீண்டதூரம் போகவேண்டும்”

“பரவாயில்லை. இந்த ஓர் இரவு எனக்கு இருக்கட்டும்”

“என்ன?”என்றேன் புரியாமல்.

“ஒன்றுமில்லை , தூங்குங்கள்” என்று சொல்லி புன்னகையுடன் என் கால்களை தட்டி தமிழில் “தாச்சுக்கோ பாப்பா” என்றாள்.

நான் புன்னகை செய்தேன். ஆனால் எதுவும் பேசமுடியாமல் தூக்கம் வந்து அழுத்தியது.

கதக் சென்றடைந்தபோது வானத்தில் வெளிச்சம் சிவப்பாக படர ஆரம்பித்திருந்தது. பறவைக் குரல்கள் லாரியை தொடர்ந்து வந்தன. பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகள் முன்விளக்கு எரிய நின்றிருந்தன.

இறங்கியதும் கிளீனர்  “எனக்கு இரண்டு ரூபாய் கொடுங்கள் சாப்” என்றான்.

நான் அவனுக்கும் பணம் கொடுத்தேன். பையை நான் எடுத்துக்கொண்டேன். அவள் என் பின்னால் வந்தாள். “டீ சாப்பிடலாம்” என்றேன்.

ஒரு சிறிய டீக்கடையில் அரிக்கேன் விளக்கொளியில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் அனைவரும் அவளையே பார்த்தனர். டீக்கு சொன்னோம். அவள் குவளைநீரை எடுத்துச்சென்று முகம் கழுவி வந்தாள்.

அவள் கன்னத்தில் மென்மயிர் நீளமாக படிந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை இழந்து கொண்டிருக்கிறேன். எப்போதைக்குமாக. அந்த எண்ணம் திக்கென நெஞ்சை அடைத்தது. அந்த தருணத்தை ஒத்திப்போடத்தான் அவளுடன் கூடவே இத்தனை தூரம் வருகிறேனா?

அவள் கிராமத்துக்காரிகளைப் போல டீ டம்ளரை சுழற்றிச் சுழற்றி டீ குடித்தாள். கண்ணிமைகள் சற்றே வீங்கியமையால் கண்கள் இன்னும் பெரிதாக தெரிந்தன. அப்போது குழந்தைபோல, அத்தனை பரிசுத்தமாக தெரிந்தாள். அவளை அணைத்துக்கொள்ளவேண்டும் போலிருந்தது.

நான் கையை மெல்ல நகர்த்தி அவள் கையில் என் கை படுவதுபோல வைத்துக்கொண்டேன். அவள் திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தபின் என் கையை மெல்ல பற்றிக்கொண்டாள். அந்தரங்கமான ஒரு தழுவல் அது. தழுவல்கூட அத்தனை உணர்ச்சிகரமாக இருக்குமா என்ன?

நினைத்ததைப் போலவே ஹைதராபாத் பஸ் அங்கே நின்றது. பஸ்ஸில் நான்கு பேர்தான் ஹைதராபாத் டிக்கெட் எடுத்தார்கள். கண்டக்டர் செல்லும் வழியை விளக்கினார். ஒரே டிக்கெட் எடுத்தால் போதும் ஆனால் வேறுவேறு பஸ்களில் மாறி ஏறவேண்டும். பாகல்கோட், விஜயபுரா, ஷோலாபூர் ஆகிய இடங்களில் வேறு பஸ்ஸில் ஏறிக்கொள்ள வேண்டும். மறுநாள் விடியற்காலை ஐந்தரை மணிக்கு ஹைதராபாத். ஷோலாப்பூரில் இரண்டு மணிநேரம் இடைவேளை உண்டு.

பஸ்ஸில் அவள் சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். நான் அருகே அமர்ந்தேன். நீண்ட பயணம் ஒன்று தொடங்கவிருக்கிறது. இந்நேரம் நான் இல்லை என்பதை கண்டுபிடித்திருப்பார்கள். எல்லாம் வெட்டவெளிச்சமாகியிருக்கும். கோதண்டம் அண்ணா தையல் இலாகாவின் பொறுப்பை ஏற்றிருப்பார். ரங்கா ரெட்டிக்கே தெரிந்திருக்கும், என்ன நடந்தது என்று. ஆனால் நான் அனைத்திலிருந்தும் என்னை துண்டித்துக் கொண்டிருக்கிறேன். பறவைபோல சிறகு விரித்து பறந்துவிட்டேன். இனி என்னை பிடிக்க முடியாது.

பஸ் கிளம்பியதும் மிகமிக இதமான ஓர் உணர்வு ஏற்பட்டது. மகிழ்ச்சி அல்ல, ஒரு வகையான சொகுசான, மிதப்பான, இனிமையான உணர்வு. இங்குள்ள எதனுடனும் தொடர்பில்லை என்பதுபோல. அவளுடைய கூந்தலிழைகள் காற்றில்பறந்து என் முகத்தில் பட்டன. அவள் புன்னகையுடன் அவற்றை எடுத்து தன் காதருகே செருகிக்கொண்டே இருந்தாள்.

அந்த அசைவு ஒவ்வொரு முறையும் என் மனதை அதிரச்செய்தது. அவள் கழுத்தின் நீளம்தான் அந்த நளினத்தை உருவாக்குகிறது. நீளமான கழுத்துகொண்ட பெண்கள் திரும்பிப்பார்க்கையில் எல்லாம் அதை நடனமாக ஆக்கிவிடுகிறார்கள்.

அவள் ஒரு விளம்பரத்தை சுட்டிக்காட்டினாள். புவ்வுல சூரிபாபுவின் புராண நாடகம் ’ஜெகதலப் பிரதாபன்’ அங்கே நடிக்கப்படவிருப்பதை தெரிவித்தது.

“இங்கே பாதிப்பேர் தெலுங்கர்கள்தான்” என்று நான் சொன்னேன்.

“சூரிபாபுவை ஒருநாள் சந்திக்கவேண்டும்” என்றாள்.

“அய்யோ, நான் நினைக்காத நாளே இல்லை. ஆனால் சந்தித்தால் அழுதுவிடுவேன்…” என்றேன்.

”நான் அவர் நாடகங்களைப் பார்த்ததே இல்லை. பாட்டு கேட்டது மட்டும்தான். அதுவும் சென்னப்பட்டினத்தில் எங்கள் குப்பத்திற்கு பக்கத்தில் ஒரு ஆந்திரா ஓட்டலில் பிளேட் போடுவார்கள். அதைக்கேட்பேன்.”

“அங்கே ஆந்திர ஓட்டல் இருக்கிறதா?”

“பின்னே? நிறைய ஓட்டல்கள்… அங்கே எல்லாருமே ஆந்திராதான். நிறையபேர் கட்டிடவேலை செய்பவர்கள். பெரும்பாலும் ஆண்கள் ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். அங்கே மலிவுச்சோறு உண்டு. சோறு பருப்புப்பொடி ஆவக்காய் ஊறுகாய், அவ்வளவுதான். ஆனால் நன்றாக இருக்கும். ஒரு சோறு வாங்கினால் நானும் என் அம்மாவும் சாப்பிடமுடியும்”

”அவர் உன் அம்மா இல்லை என்றாய்”

”ஆமாம், ஆனால் அம்மா என்றுதான் நான் அழைப்பது” என்றாள். “அவளுக்கு பேராசை. ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டவள். அவள்மேல் ஒருவன் கொதிக்கும் சாம்பாரை கொட்டிவிட்டான். அவளுடைய கழுத்தும் இடது தோளும் வெந்து சிவப்பாக இருக்கும். அதன்பிறகு அவளுக்கு வருமானமே இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டாள்”

“நீ எதுவரை உன் ஊரில் இருந்தாய்?”

“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் அம்மா என்னை இந்த அம்மாவுக்கு கொடுத்தாள்”

“ஐந்தாம் வகுப்புதான் படித்திருக்கிறாயா?”

“ஆமாம். எனக்கு பள்ளிக்கூடம் போக மிகவும் பிடிக்கும். மிகவும் சந்தோஷமாக இருக்கும்”

அவள் அதுவரை அவளிடமிருந்த கட்டுப்பாடுகளை இழந்து பேசிக்கொண்டே இருந்தாள். அவளுடைய ஊர், அங்கிருக்கும் ஒரு சிற்றாறு, பள்ளிக்கூடம், தோழிகள், கோதாவரியின் அகலம், அது கடலுடன் கலக்குமிடத்தில் இருக்கும் ஒரு கனகதுர்க்கா ஆலயம்…

பேசிப்பேசி அவளே அந்த பேச்சில் அடித்துச் செல்லப்பட்டாள். தலையை ஆட்டி ஆட்டி கைகளை விதவிதமாக அபிநயம் பிடித்து ,நீண்ட விழிகள் உருண்டு உருண்டு உடன் நடிக்க ,அவள் பேசுவதை நான் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பெண்கள் திருமணம் ஆனபின்னர் சிலநாட்கள் கணவனிடம் அப்படி பேசித்தள்ளுவார்கள் என்று சலம் எழுதிய ’தெய்வமிச்சின பாரியா’ என்ற நாவலில் வாசித்திருந்தேன். அதுவரைக்கும் அவர்களுக்கு பேச உரிமையில்லை. பிறந்தவீட்டில் நிறையப் பேசினால் பெண்கள் பேசக்கூடாது என்று அடக்குவார்கள். சேர்த்து வைத்த அனைத்தையும் பேசிப்பேசித் தீர்ப்பார்கள். அது தனக்கே உரியவன் என்று ஒருவன் அமைந்ததனால் பேசுவது என்று சலம் எழுதியிருக்கிறார். ஆனால் அவர்கள் பேசிப்பேசி தங்களை வரைந்துகொள்கிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் மறுபிறப்பு எடுக்கிறார்கள், காதலிகளாகவும் மனைவிகளாகவும்.

அவள் மிகவிரிவாக தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தாள். தன்னுடைய குழந்தைப் பருவம் முதல் அன்றுவரையிலான வாழ்க்கையில் இனிதான அனைத்தையும் நினைவு கூர்ந்து அவற்றை மட்டுமே கொண்டு ஒரு வாழ்க்கையை பின்னி உருவாக்கினாள். “அய்யோ, அப்படி இருக்கும் தெரியுமா!” என்று வியந்தாள். “அப்பாடி, அப்டி ஒரு சந்தோஷம் அன்றைக்கு!” என்று நெஞ்சில் கைவைத்து மருகினாள். “என்ன ஒரு கிறுக்குத்தனம்… அப்போதெல்லாம் அப்படி இருந்தோம்!” என்றாள்.

பிறகு பேச்சு ஓய்ந்து அப்படியே என் தோளில் தலைவைத்து தூங்கினாள். அவள் தலைமுடி பாதி அவிழ்ந்து என் தோளில் இருந்து மடிவரை சுருள்களாக தொங்கியது. அவ்வப்போது அவள் அசைந்தபோது நான் அவள் தோளை அணைத்தேன். சில தருணங்களில் அவளை எழுப்பி அமரச்செய்தேன். ஒருமுறை அந்த முடிச்சுருளை தொட்டேன். அதன் மென்மையை என் கையில் நெஞ்சில் உணர்ந்தேன். மெல்ல வருடிக்கொண்டிருந்தேன்.

வழியில் பாகல்கோட்டில் இறங்கி ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம். மதியம் சாப்பாடு விஜயபுராவில். அவள் “அய்யோ, இங்கே பாயசம் கிடைக்கிறது! பாயசம் உண்டு!” என்றாள்.

“சத்தம் போடாதே” என்றேன்.

“எங்களூரில் ஒரு வாழைப்பழம் உண்டு… அந்தப்பழத்தை பாயசத்தில் பிசைந்து சாப்பிடலாம். தயிர்சாதத்தில்கூட பிசைந்து சாப்பிடலாம்” என்றாள்.

“இங்கே அப்படியெல்லாம் சாப்பிடமாட்டார்கள்… சும்மா இரு” என்றேன்.

“இங்கே தெலுங்கர் இருந்தால் சாப்பிடத்தான் செய்வார்கள்”

“பேசாமல் இரு” என்றேன் பல்லைக் கடித்துக்கொண்டு.

பஸ்ஸில் ஏறியபோது உம் என்று இருந்தாள்.

“என்ன?” என்றேன்.

“ஒன்றுமில்லை”

“என்ன?” என்று உரக்க கேட்டேன்.

கண்களில் நீருடன் “ஒன்றுமில்லை” என்றாள். முகத்தை கூம்பவைத்துக்கொண்டு தலைகுனிந்தாள்.

“வாழைப்பழம் வேண்டும், அவ்வளவுதானே?”

“இல்லை”

நான் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடி அங்கிருந்த கடையில் தேடி கோதாவரி வாழைப்பழத்தை கண்டுபிடித்து வாங்கிக்கொண்டு வருவதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.

“விழுந்து சாகவா வந்தாய்? அறிவுகெட்ட முண்டம்” என்றார் கண்டக்டர்.

“என்ன இது? நான் பதறியே போய்விட்டேன்” என்று அவள் சொன்னாள்.

“நீதானே கேட்டாய்?”

“நான் கேட்டேனா?”

“சரி அப்படியென்றால் வேண்டாமா? வீசிவிடலாமா?”

“அய்யோ” என்று அதை வாங்கிக்கொண்டாள். ஒரு வாழைப்பழத்தை எனக்குத் தந்தாள். உண்மையிலேயே அது கோதாவரியின் சுவைகொண்டிருந்தது. ஒருவாய் சுவையிலேயே ஆந்திர மண் நெருக்கமாக வந்துவிட்டது.

ஷோலாப்பூரை அடைந்தபோது ஒன்பது மணி ஆகிவிட்டது. இரண்டு மணிநேரம் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்கவேண்டும். அப்போது ஓட்டல்கள் ஏதும் இல்லை. ஆனால் பஸ் ஸ்டாண்டில் அப்படி காத்திருப்பவர்கள் பலர் இருந்தனர். சைக்கிளில் பெட்டி வைத்து கட்டி ஆப்பம் கொண்டுவந்து விற்றார்கள். அதை சாப்பிட்டோம்.

அவள் மிகவும் தூக்கக் கலக்கமாக இருந்தாள். “எப்போது வண்டி வரும்?” என்று சிணுங்கினாள்.

“வரும்” என்றேன்.

அதற்குள் அவ்வளவு நடித்துவிட்டேன். கவலை கொண்ட கணவனாக, பொறுப்பான குடும்பத்தலைவனாக, கடுகடுப்பானவனாக, அன்பானனவனாக. அவளும் அறியாமல் அந்த நடிப்பில் இருந்தாள். நாங்கள் நெடுங்காலமாக அப்படி வாழ்க்கையென்னும் பயணத்தில் சென்றுகொண்டிருப்பவர்கள். நெடுங்காலம் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் நன்கறிந்து,  தம்பதிகளுக்குரிய சலிப்பையும் அடைந்துவிட்டவர்கள்.

ஹைதராபாத் பஸ் வந்து நின்றது. டிக்கெட்டை காட்டி ஏறிக்கொண்டோம். அவள் “நான் இந்தபக்கம் உட்கார்ந்துகொள்கிறேன்… அங்கே காற்று” என்றாள்.

”சரி” என்றேன்.

உட்கார்ந்ததுமே அவள் என் மேல் சாய்ந்து தூங்கினாள். பிறகு சரிந்து என் மடி மேலேயே தலையை வைத்துக்கொண்டாள்.

நான் அவள் தோளில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தேன். வெளியே விண்மீன்கள் நிறைந்த வானம் உடன் வந்துகொண்டிருந்தது. வெண்சுடர் விடும் முழுநிலவு. அன்று பௌர்ணமி.

அந்த இரவு முழுக்க அந்தப் பாட்டுதான் ஓடிக்கொண்டிருந்தது. “அந்த முகில் இந்த முகில்” .அவள் கன்னத்தில் கையை வைத்தேன். மலர்மடலில் தொடுவதுபோலிருந்தது. மிக மென்மையான முகப்பருக்கள். உதடுகளின் மென்மையே சுருக்கங்களாக ஆன பரப்பு. உதடுகளின் இரு விளிம்புகளிலும் தொடுகையில் மட்டும் உணரக்கூடிய மென்மயிர். அவள் கூந்தலில் இருந்து கலைந்து அலைந்த மயிரிழைகளை எடுத்து காதருகே செருகினேன். மிகமெல்ல, தொட்டேனா இல்லையா என்பதுபோல அவள் கூந்தலை வருடினேன். அத்தனைதூரம் மனம் மென்மையானாலொழிய அப்படித் தொடமுடியாது.

ஹைதராபாதை அடைந்தபோதுதான் விழித்துக்கொண்டேன். நன்றாக விடிந்துவிட்டது. அசந்து தூங்கியிருக்கிறேன். ஆனால் தூக்கத்திலும் அந்தப்பாடலே ஓடிக்கொண்டிருந்தமையால் விழித்திருந்ததுபோலவே தோன்றியது.

ஹைதராபாதிலிருந்து ராஜமந்திரிக்கு மதியம்தான் பஸ் இருந்தது. அதுவும் குண்டூர் போய் இரண்டுமணி நேரம் கழித்து ராஜமந்திரி செல்லும். அதுவும் நல்லதுதான் என்று தோன்றியது. மறுநாள் விடியற்காலையில்தான் ராஜமந்திரி வரும்.

பஸ் ஸ்டாண்டிலேயே கழிப்பறையும் குளியலறையும் இருந்தன. அருகே இருந்த ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம். நான் அதற்கு முன் ஹைதராபாத் வந்ததில்லை. அத்தனை பெரிய ஊரின் பரபரப்பும் ஓசையும் என்னை பதற்றம் கொள்ளச் செய்தன. வெளியே சென்றால் தொலைந்து விடுவோம் என்று தோன்றியது. பஸ் ஸ்டாண்டிலேயே அமர்ந்திருந்தோம். இருவருமே களைத்திருந்தோம்.

ஆரம்பத்தில் இருந்த பதற்றமெல்லாம் விலகிவிட்டது. அந்தப் பரவசமும் கிளர்ச்சியும்கூட குறைந்துவிட்டது. யதார்த்தமாக , தேவைக்கு மட்டும் பேசிக்கொண்டோம். இயல்பாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஒருவரை ஒருவர் சாதாரணமாகத் தொட்டுக்கொண்டோம். அவள் என் மடியில் படுத்தாள். தோளில் சாய்ந்தாள். நான் அவளுடைய உள்ளாடை வெளியே தெரிந்திருந்ததை பிடித்து உள்ளே தள்ளி வைத்தேன். உண்மையிலேயே சலித்துவிட்டோமா? இல்லை, ஒருவரை ஒருவர் கொஞ்சமாவது தொட்டுக்கொண்டிருக்க விரும்பினோம்.

அவள் என்னிடம் உரிமை எடுத்துக்கொண்டாள். நான் கடையில் ஒரு புட்டி வாங்கி அதில் குடிக்க தண்ணீர் பிடித்து வந்தேன். அதை அவள் அருகே வைத்தபோது அவள் ஆடையின் விளிம்பின் மேல் வைத்துவிட்டேன். அவள் அறியாமல் எழுந்தபோது அது சரிந்து தண்ணீர் கொட்டியது. அவள் சலிப்புடன் “அய்யோ” என்று தலையில் அடித்துக்கொண்டாள். “பார்க்க மாட்டீர்களா?”

“பார்க்கவில்லை” என்றேன்.

“எதையுமே பார்ப்பதில்லை. அப்படியே வேடிக்கை பார்க்க மட்டும் தெரிகிறது” என்றாள்.

“ஏன் நீ பார்ப்பதுதானே?”

”சொல்லிக்கொண்டே இருக்கிறேன், கேட்பதில்லை. நான் என்ன செய்ய?”

“ஒன்றும் செய்யவேண்டாம், பேசாமல் வாயைமூடிக்கொண்டு வா”

நான் அவள் மேல் அவ்வப்போது எரிச்சல் அடைந்தேன். அதட்டிப் பேசினேன். “அந்த பஸ் எப்போது வரும்” என்று அவள் நான்காம் தடவையாக கேட்டபோது “வந்தால் சொல்வார்கள். சும்மா இரு, தொணதொணவென்று பேசாதே” என்றேன்.

ஆனால் அந்த சலிப்பும் எரிச்சலும் மிக இயல்பாக இருந்தன. அவை எங்களைப் புண்படுத்தவில்லை. முன்பிருந்த மனக்கிளர்ச்சியை விட அவை எங்களை மேலும் அணுக்கமானவர்களாக ஆக்கின.

மதியம் சென்று ஓட்டலில் சாப்பிட்டோம். ஆவக்காயை அள்ளிப் போட்டு பிசைந்து சோற்றை உண்டாள். அது ராஜ்மந்திரிப்பக்கம் உள்ள பழக்கம். எங்களூரில் அதை கேலி செய்வார்கள். நான் அவளிடம் “மெல்ல சாப்பிடு” என்றேன்.

“ஏன்?” என்றாள்.

”சும்மா”

அவள் கொஞ்சம் படுக்க விரும்பினாள். நான் ஒரு செய்தித்தாள் வாங்கி விரித்து அவளை படுக்க வைத்தேன். தலைமாட்டில் அமர்ந்து பஸ் ஸ்டாண்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மாமா என்னை துரத்திவந்து அங்கே பிடித்துக் கொண்டால் என்ன செய்வேன் என்று யோசித்தேன். அப்படி ஒரு பெண்ணுடன், அந்த அன்னிய இடத்தில். ஆனால் அப்போது எவருமே எங்களை தனியாகக் கவனிக்கவில்லை.எவருக்கும் நாங்கள் கணவன் மனைவி என்பதில் சந்தேகம் வந்திருக்காது.

ஹைதராபாத் பேருந்தில் ஏறிக்கொண்டபின் நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. மிகமிக விலகி வந்துவிட்டிருந்தோம். ஹம்பி, சென்னை எல்லாமே எங்கோ கிடந்தன.

“இது எப்போது ராஜமந்திரி போகும்?” என்று அவள் கேட்டாள்.

“நாளை காலை ஐந்து மணிக்கு”

“ம்” என்றாள். ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அவளை சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். முகவாய்க்குமிழ் பளபளவென்றிருந்தது. கழுத்தின் மெல்லிய வரிகள் தளிர்க்கோடுகள். மூச்சில் கழுத்துக்குழி அசைந்தது.

என்ன ஒரு மென்மை, உயிர்ப்பரப்புக்கு மட்டுமே உள்ள மென்மை. உயிர் தன்னை மென்மையென ஒளியென வெளிப்படுத்துகிறது. இதை மட்டும் எத்தனை முறை நினைத்துவிட்டேன்! இந்த மென்மையை எப்படி அனுபவிப்பது? எப்படிக் கொண்டாடுவது? முத்தமிடலாம். ஆனால் அதைவிட இப்படி பார்த்துக்கொண்டிருக்கலாம். இது கண்களால் முத்தமிடுதல். நெஞ்சத்தால் முத்தமிடுதல்.

ஹைதராபாத் முதல் ராஜமந்திரி வரை பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருந்தோம். ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து விழுந்தும் எழுந்தும். அவளுடைய எச்சில் என் மடியில் சொட்டி நனைந்திருந்தது. எழுந்து வாயை துடைத்துக்கொண்டு அதைப் பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் “இன்னும் எவ்வளவு தூரம்?” என்றாள்.

“விஜயவாடாவே வரவில்லை” என்றேன்.

விஜயவாடா நள்ளிரவில் வந்தது. கிருஷ்ணாவின் மேல் பாலத்தில் பஸ் சென்றபோது காற்று அறைந்து வீசி அவள் கூந்தலை என் மேல் அள்ளிப்பரப்பியது. அதை பிடித்து அள்ளி சுருட்டி முடிச்சுபோட்டு வைத்தேன். அவள் சலிப்புடன் உச் கொட்டி அசைந்து படுத்தாள்.

”விஜயவாடா வந்துவிட்டது. வண்டி கொஞ்சநேரம் நிற்கும்… எதாவது சாப்பிடலாம்” என்றேன்.

“வேண்டாம், எனக்கு பசியில்லை” என்றாள்.

நான் ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினேன். அதை இருவரும் சாப்பிட்டோம். நான் புட்டியில் தண்ணீர் பிடித்து வந்தேன்.

மீண்டும் வண்டி கிளம்பியதைக்கூட நான் அறியவில்லை. பின் கம்பியில் தலைசாய்த்து ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். அவள் கனவில் வந்தாள். ஆடை இல்லாமல் நின்றுகொண்டிருந்த பஸ்ஸில் ஏறி வந்து என் அருகே அமர்ந்தாள். அவள் நிர்வாண உடலை மிக நுணுக்கமாக, மிக அருகே பார்த்தேன். அவள் ஆடையில்லாமல் இருப்பது எனக்கு தவறாகத் தோன்றவுமில்லை. அவள் மார்பகங்களின் மேல் அக்குளுக்கு அருகே மென்சதை மடிந்து சிறு குமிழிகளாக இருந்தது.அதை மெல்ல தொட்டேன், “அய்யோ”என்றாள்.

விழித்துக்கொண்டேன். ராஜமந்திரி நெருங்கி வருகிறது என்று எனக்கு தோன்றியது. அந்தப்பகுதியே எனக்கு புதியது. கைகாரம் என்ற ஊரில் சிலர் இறங்கினார்கள். நான் கண்டக்டரிடம் “ராஜமந்திரி எப்போது வரும்?” என்றேன்.

“மூன்று மணிநேரம்…. அல்லது நான்குமணிநேரம்.. மேலே கூட ஆகும்”

நான் கால்களை நீட்டிக்கொண்டேன். நெருங்கிக்கொண்டிருக்கிறது முடிவு. அது எப்படி இருக்கும்? அவளிடம் நான் என்ன பேசப்போகிறேன்? பதற்றமாக படபடப்பாக இருந்தது. அப்போது அசட்டுத்தனமாக ஏதோ உளறப்போகிறேன் என்று தோன்றியது.

ஆனால் எல்லாரும்தான் உளறுவார்கள். வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் எல்லாமே முன்பின் பழக்கமில்லாதவையாக இருக்கின்றன. என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒருவருக்கு நிகழ்வது இன்னொருவருக்கு நிகழ்வதில்லை. ஒருமுறை நிகழ்ந்தது இன்னொருமுறை நிகழ்வதில்லை. எவரும் எதையும் முன் அனுபவத்தைக்கொண்டு செய்யமுடியாது. எந்தப் பயிற்சியும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒருமுறை நிகழ்ந்தது எப்போதைக்குமாகத்தான். திருத்திக்கொள்ளவே முடியாது.

அவள் தோளில் கைவைத்தபோது அவள் தூங்கவில்லை என்ற உணர்வு ஏற்பட்டது. குனிந்து பார்த்தேன். அவள் விழிகள் இமைகளுக்குள் உருண்டுகொண்டிருந்தன. உதடுகள் ஜிகினாத்தாள் போல உலர்ந்து ஒட்டியிருந்தன.

அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. தூங்கவில்லையா என்று கேட்கலாம். ஆனால் நான் பேசாமலிருந்தேன்.

அவள் அப்படியே படுத்திருந்தாள். பின்னர் எழுந்து தலைமுடியை அள்ளி சுருட்டி கட்டிக்கொண்டாள். அந்தப் பையை காலருகே இழுத்துக்கொண்டாள்.

நான் “ராஜ்மந்திரி வருகிறது” என்றேன்.

”ஆமாம்” என்று அவள் சொன்னாள். அவள் கையை தூக்கியபோது இனிய வியர்வை மணம் எழுந்தது.

மீண்டும் பேச்சில்லாமல் அமர்ந்திருந்தோம். நான் “என் மாமாவுக்கு இந்நேரம் செய்தி சென்று சேர்ந்திருக்கும்” என்றேன்.

“அவர் கிளம்பி வருவாரா?” என்றாள்.

“இல்லை, கோதண்ட மாமாவே பார்த்துக்கொள்வார். கணக்கு சரியாகத்தான் இருக்கும். நான் ஐநூறு ரூபாய்தான் எடுத்துக்கொண்டேன்”

”ஐநூறு ரூபாயா?”

”ஏன்?”

“பெரிய தொகை”

“அவருக்கு அது பெரிய தொகை இல்லை”

“நீங்கள் எப்படி போகிறீர்கள்?” என்றாள்.

“ராஜமந்திரியில் இருந்து ஓங்கோலுக்கு பஸ் இருக்கும். மறுபடியும் விஜயவாடா வந்து குண்டூர் வழியாக போகவேண்டும்… ஒரு பகல் முழுக்க ஆகும்”

“நீங்கள் விஜயவாடாவில் இறங்கியிருக்கலாமோ? வீண் அலைச்சல்”

”பரவாயில்லை” என்றேன்.

அந்தப் பேச்சு இருவரையும் இயல்பாக்கியது. சாதாரணமாகப் பேசிக்கொண்டோம். சின்னச்சின்ன விஷயங்கள். எல்லாமே ராஜமந்திரி பற்றியவை. ஓங்கோல் பற்றியவை. நான் என் அம்மாவைப்பற்றிச் சொன்னேன். அப்பா சின்ன வயசிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். என்னை வளர்த்ததே தாய்மாமன்தான்.

“அவருக்கு துரோகம் செய்ததுபோல ஆகிவிட்டது இல்லையா?”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

“பரவாயில்லை. எல்லா இளைஞர்களும் செய்வதுதான்” என்று சிரித்தாள்.

நான் பலவீனமாகப் புன்னகைசெய்தேன்.

ராஜமந்திரிக்கு தொலைவு காட்டும் கற்கள் கண்ணுக்குப் படலாயின. அந்த எண்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து வந்தது. அப்போது சந்தேகமில்லாமல் தெரிந்தது, அந்தப் பயணம் முடிவுக்கு வருகிறது. அவளை ஒருவேளை மீண்டும் பார்க்காமலாகிவிடவே வாய்ப்பு. ஆனால் அந்தப் பயணத்தில் நிறையவே தூங்கியிருக்கிறேன். நாவல்களில் என்றால் தூங்கவே மாட்டார்கள். கணம் கணமாக அந்த பகல்களையும் இரவுகளையும் அனுபவிப்பார்கள்.

ஆனால் தூங்கியதனால்தான் விழித்திருக்கையில் என் உள்ளம் அத்தனை கூர்மையுடன் இருந்தது. தூக்கத்தில் கனவுகள் வந்துகொண்டே இருந்தன. அந்தப் பயணத்தில் நிஜத்தைவிட கனவுகளே மேலும் தீவிரமானவையாக இருந்தன.

என் உள்ளம் கலைந்து கொண்டே இருந்தது. துயரங்களில் மனம் அடுக்குகலைந்து கிடப்பதுதான் பெரிய பிரச்சினை என அறிந்தேன். அதை அடுக்கிக் கொள்ளும் பொருட்டு அவளிடம் பேசினேன். ராஜமந்திரி பற்றி கேட்டேன். ஆனால் அவளுக்கு ராஜமந்திரி பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. அவள் அம்மா ராஜமந்திரிக்கு அனேகமாக தினமும் வந்துசெல்கிறாள். அவள் நாலைந்து முறை வந்திருக்கிறாள். ஆனால் ராஜமந்திரி அவளுக்கு பிடிக்காத ஊர்.

ராஜமந்திரியை நெருங்கியபோது மீண்டும் சொற்கள் மறைந்து அமைதி உருவாகியது. இருவரும் வெறுமே இருபக்கமும் ஓடிமறைந்த நிழலுருவங்களாகிய மரங்களை பார்த்துக்கொண்டிருந்தோம். வானில் நிலவு அர்த்தமில்லா ஜொலிப்பாக நின்றுகொண்டிருந்தது. விடிகாலைப்பனியில் பொன்னிறமாக இருந்தது அது. அது அனல்கொண்டு சிவந்திருக்கிறது என நினைத்தேன். அந்நினைப்பு ஒருபக்கம் இருக்க குளிர்காற்றில் நிலவின் ஒளி ஊறிக்கலந்திருப்பதை உடல் உணர்ந்தது.

கோதாவரிக்கு குறுக்காக அமைந்த பாலத்தில் பஸ் சென்றபோது காற்றில் அது பறந்து செல்வதுபோல தோன்றியது. பாலம் ஆர்ப்பரித்து முழக்கமிட்டது.மீண்டும் அவள் கொண்டை அவிழ்ந்து கூந்தல் எழுந்து பறந்தது. என் முகத்தின்மேல் பொழிந்த முடியிழைகளை அள்ளி ஒதுக்கினேன். அவள் தொகுத்து முடிச்சிட்டபடி “இது பெரிய தொந்தரவு” என்றாள்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

ராஜமந்திரிக்குள் நுழைந்தபோது விடியற்காலை ஆகியிருந்தது. பஸ் ஸ்டாண்டில் நிறைய பஸ்கள் நின்றன. உறுமியபடி முகப்பு வெளிச்சத்துடன் பல பஸ்கள் கிளம்பிச் சென்றன. எங்கள் பஸ் உலுக்கி அதிர்ந்தபடி சென்று நின்றது. டிரைவர் சாவியை எடுக்க அது உரக்க சீறி பெருமூச்சுவிட்டது

“ராஜ்மந்திரி… ராஜ்மந்திரி” என்று கண்டக்டர் குரலெழுப்பினார்

“வந்துவிட்டோம்” என்றேன். அப்போதுதான் அவள் சற்று தூங்கியிருப்பதை உணர்ந்தேன்

“ம்ம் ம்ம்” என எழுந்துகொண்டாள். வாயை துடைத்தபின் கூந்தலை அள்ளி பின்னாலிட்டாள்.

“தூங்கினாயா?”

“இல்லை”

“பின்னே?”

“சும்மா” என்றாள்

பஸ்ஸில் இருந்து இறங்கியதும் அந்த தரை வந்து என்மேல் அறைவதுபோலிருந்தது. டீசல்வாடை, சாக்கடை வாடை, அழுகிய இலைதழைகளின் வாடை. தாரிட்ட தரையின் சொரசொரப்பு.

நின்று கைகளை நீட்டி உடலை சோம்பல் முறித்தேன். வாய் திறந்து கொட்டாவி விட்டேன். உள்ளம் பரபரப்பு அடைந்திருந்தது. ஆனால் அந்தச் சலிப்பு நிறைந்த உடல்பாவனைகள் உள்ளத்தை கொஞ்சம் அமைதிப்படுத்தின.

“உன் ஊர் என்ன என்று சொன்னாய்?” என்றேன்.

“முனிப்பள்ளி…”

“பக்கமா?”

“பக்கம்தான்… பஸ்ஸில் அரைமணிநேரம்”

“அதற்கு காலையில் பஸ் உண்டா?”

”ஆமாம், எங்களுக்கு சந்தை இங்கேதான். சந்தைக்கு வந்துவிட்டு ஊருக்கு போவார்கள்… காலையிலேயே பஸ் உண்டு”

”நான் ஏற்றிவிடுகிறேன்”

“வேண்டாம், நீங்கள் கிளம்பி போங்கள். இனி நான் போவேன். எனக்கு பயமில்லை. பஸ்சுக்கான பணம் மட்டும் கொடுங்கள்”

நான் அவளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தேன்.

“அய்யோ, இவ்வளவு எதற்கு?” என்றாள்.

“இருக்கட்டும்” என்றேன்.

“ஆமாம், அம்மா எதிர்பார்ப்பாள்” என்றபின் அவள் பணத்தை சுருட்டி மேலாடையில் முடிந்து இடுப்பில் செருகிக்கொண்டாள்.

“உன் ஊருக்கான பஸ் எங்கே வரும்?”

“இங்கே இல்லை. அந்தப்பக்கம் டவுன் பஸ் ஸ்டாண்ட்… இந்த சந்துவழியாக அங்கே போய்விடலாம்”

“வா உன்னை கொண்டுபோய் விடுகிறேன்”

“பரவாயில்லை, நானே போய்க்கொள்வேன்… நீங்கள் அங்கே வரவேண்டாம்”

“ஏன்?”

“என்னைத் தெரிந்தவர்கள் இருப்பார்கள்…”

“உன்னை தெரிந்தவர்களா? இவ்வேளையிலா?”

“என் ஊரிலிருந்து நிறைய பெண்கள் ராஜமந்திரிக்கு சாயங்காலம் வருவார்கள். விடியற்காலையில் திரும்புவார்கள்…”

“எதற்கு?” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு மெல்லிய குரலில் “நான் வருகிறேன்” என்றாள்.

“ம்” என்றேன்.

அவள் அந்தப்பையுடன் நடந்து சென்று சந்தில் நுழைந்து மறைந்தாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் என நினைத்தேன். பார்க்கவில்லை. அவள் பின்பக்கத் தோற்றம் சிலகணங்கள்தான் தெரிந்தது. பின்பு மறைந்தது. நான் அங்கேயே வெறுமை நிறைந்த நெஞ்சுடன் நின்றிருந்தேன்.

[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 11:34

தன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தன்மீட்சி புத்தகம் சமகாலத்தில் உருவாக்குகிற நேர்மறை அதிர்வுகளை எங்களை வந்தடையும்ஒவ்வொரு குரலிலிருந்தும், கடிதத்திலிருந்தும் நாங்கள் நேரிடையாக உணர்ந்துவருகிறோம். ஒன்றடுத்து ஒன்றென எங்காவதோர் மூலையில் தன்மீட்சி உரையாடல்கள் ஒருசில உதிரி மனங்களால் நிகழ்த்தப்படுவதையும் அறிகிறோம். ஆகவே, அத்தகைய வாசிப்பு மனிதர்களை தன்னறம் கண்டடைந்ததை பொதுவெளியில் அறிவிக்கும்பொருட்டு, அவர்களுக்கான கெளரவிப்பு ஒன்றையும் நிகழ்த்திடத் திட்டமிட்டோம். உங்கள் இருப்பில், உங்கள் கைகளால் அந்த கெளரவிப்பு அவர்களுக்கு கிட்டவேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம்.

அதற்கான சரியான தருணமாக  ஏப்ரல் 14, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நீங்கள் வந்து கலந்துகொள்ளும் ‘கல்லெழும் விதை’ நிகழ்வு இயல்பாக அமைந்துவிட்டது. முகநூலிலும், உங்கள் இணையத்திலும் வெளியிட்டிருந்த ‘தன்மீட்சி வாசிப்பனுபவங்களை கெளரவித்தல்’ பதிவுக்குப் பிறகு நிறைய வாசக அனுபவ மற்றும் விமர்சனக் கடிதங்கள் எங்களை வந்தடைந்தன. அதிலிருந்து, பின்வரும் தோழமைகளின் வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

ரா.பாலசுந்தர், உஷாதீபன், விக்னேஷ் ஹரிஹரன், ப. அரவிந்தன், முனைவர். தயாநிதி – ஓமன், சி.பரமகுரு- காரைக்கால், முத்தரசு, இருவாட்சி, பா. மோகனகிருஷ்ணன், தீபா, பெருட்செவியின் இலக்கிய ஒலிதம், சக்திவேல், பிரசன்னகிருஷ்ணன், முரளிதரன் வைத்திலிங்கம், இரம்யா, கோவர்த்தனன், கிருஷ்ணன் சுப்ரமணியன், மோகன் தனிஷ்க், செந்தில் ஜெகந்நாதன் ஆகியோர்.

இவர்கள் ஒவ்வொருவரின் தன்மீட்சி அனுபவமும் ஏதோவொருவகையில் தீராத தவிப்புணர்வையும், அதை வென்றுகடப்பதற்கான நேர்மறைப்பாதையை கொண்டிருப்பதையும், அகசோர்வுள்ள இன்னொரு மனிதருக்கு தாம்பெற்ற அதே நம்பிக்கையை தருவதாகவும் இருப்பதை தீர்க்கமாக அறியமுடிகிறது. இன்னும் தன்மீட்சியின் சாட்சிச்சொற்கள் இழையறுபடாமல் நீள்கிறது. ‘வாளைப் பிடிப்பதுபோல செயலைப் பற்றுக’ என்கிற நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள் தாங்கியிருக்கும் சத்தியத்தை மேற்கண்டவர்களின் ஒவ்வொரு கடிதமும் சுமந்திருந்தன.

வாழ்வின் எல்லாகட்டத்திலும் நாங்கள் பற்றிக்கொள்ளும் மீட்புச்சொற்களை ஒவ்வொரு படைப்பின் உள்ளான்மாவிலும் வைத்திருக்கும் உங்கள் நல்லிருப்புக்கு எங்களின் நெஞ்சன்பின் நன்றிகளும் இறைவேண்டலும்!

இப்படிக்கு,

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 11:33

வைஷ்ணவ ஜனதோ

அன்பின் ஜெ,

சமீபத்தில் மிக யதேச்சையாக கண்டுகொண்ட காணொளி இது:(Vaishnav Jan To | Instrumental Folk | Gandhi | 150 Years | Celebrations |Doordarshan)

காந்திக்குப் பிடித்தமான ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடல் (பாரம்பரிய) இசைக்கருவிகளைக் கொண்டே ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
(இத்தனை பாரம்பரிய இசைக்கருவிகளா என்று அதிசயப்பட்டது உண்மை)

இசைக்கலைஞர்களில் காணக் கிடைக்கும் கலை மீதான பெருமிதம் கலந்த உணர்வுகள் – அமைதி, குதூகலம், ஆழம், கூர்மை, பரவசம்…
இராட்டையில் நூல் நூற்கையில் பெண்மணியின் கவனம் வெளிப்படும் அவரது அமைதியும் கூர்மையும் பதிவு செய்யப்பட்ட விதம் (மூன்றே வினாடிகள் பிண்ணனிகளில் வரும் காந்தியுடன் தொடர்புடைய இடங்கள் எழுப்பும் பெருமிதம்
அக்கலைஞர்களை ஒருசேரப் பார்க்கையில் வரும் ஆச்சரியம்.
ஆறு நிமிடங்களில் மொத்தமாகவே நிச்சயம் பரவசமானதொரு அனுபவம்…

தொடர்புடைய மற்றும் இரண்டு காணொளிகள்:

 

Vaishnava Jan To Full HD |

Yakshagana Artist Performance | Instrumental | Gandhi 150 | DD Chandana

Vaishnav Jan to – song

நன்றி

அன்புடன்
வெங்கட்ரமணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 11:32

இரு நோயாளிகள், ஏழாம் கடல் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நமது இணைய வக்கீல்களின் சட்டஞானம் பற்றி பிராக்டீஸிங் வக்கீல்கள் உட்பட சிலர் எழுதியிருந்தனர். இன்னொரு உதாரணம் என் நண்பர். அவரும் வக்கீல்தான். இணையத்தில் மற்றவக்கீல்கள் எழுதுவதை படித்துவிட்டார். ஏழாம் கடல் கதையில் தப்பு இருக்கிறது என்றார். ஏன் என்று கேட்டேன்.

”வியாகப்பன் மேல் பிள்ளையின் மகனோ குடும்பமோ கேஸ் கொடுக்காமல் போலீஸ் எப்படி கேஸ் எடுக்க முடியும்?”என்றார். ஒரு ஹெஹெஹெ சிரிப்பு வேறு.

எங்களுடன் இன்னொரு பிராக்டீஸிங் வக்கீல் இருந்தார்.அவருக்கு கதை தெரியாது. அவரிடம் கேட்டேன். அவர் உடனே அதிர்ச்சியுடன் அந்த இணையவக்கீலிடம் கேட்டார். “சந்தேக மரணம்னா போஸ்ட்மார்ட்டம் செய்யணுமா இல்லியா?”

“ஆமா” என்றார்.

“டாக்டருக்கு சந்தேகம் என்றால் அவரே போஸ்ட்மார்டம் செய்யலாமா? இல்லை போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமா?”

இணையவக்கீலுக்கு சொல்லத் தெரியவில்லை. “போலீஸுக்கு தெரிவிக்கவேண்டும். கேஸ் பதிவுசெய்யவேண்டும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் அடிப்படையில் விசாரணைசெய்து கேஸை முடிக்கவேண்டும். அதுதான் நடைமுறை” என்றார் நிஜவக்கீல்.

”அந்த விசாரணைக்கு கதைசொல்லி போவதுதான் கதை”என்று நான் சொன்னேன்.

“அப்படியென்றால் இணையத்தில் இதை யாருமே ஏன் எழுதவில்லை? வக்கீல்கள்கூட எழுதவில்லையே?”என்று இணையவக்கீல் கேட்டார்.

இந்த லட்சணத்தில் இணையத்தில் ‘வாசிப்புப்போர்’ நடந்துகொண்டிருக்கிறது. அதையும் வாசிக்க கொஞ்சபேர்.

ஜெ

அன்பிற்கினியஜெ,

வணக்கம்.

மீண்டும் ஒருமுறை ஏழாம்கடல் வழியாக ஒரு நிகர்வாழ்வை அளித்திருக்கிறீர்கள், நன்றி.

பொருள் மயக்கம், திகைப்புறுநிலை, நேர்நிலை அர்த்தமின்மை என நான்ஏழாம்கடலை வகுத்துக்கொள்கிறேன். இது இரு நண்பர்களுக்கிடையேயான கொள்வதும்கொடுப்பதுவும், உயர்தளத்தில் மட்டுமே நிகழக்கூடிய ஒரு உறவு, அதை
உற்றுநோக்கும் சுற்றம், அதனுள் பொதிந்திருக்கும் ஏழாம்கடல். அறிந்துகொள்ளவேண்டிய வாழ்க்கை இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே என்பதைஅழுத்தமாக என்னுள் பதியச்செய்த ஒரு கதை ஏழாம்கடல்.

முத்துவிளைவதற்குள் அனைத்துச்சிப்பிகளும் கடலிலிருந்து எடுக்கப்பட்டுவிடுகின்றன. பல்லாயிரத்தில் ஒன்று மட்டும் முத்தினைக் கருக்கொள்வதால்த்தின் மதிப்பு என்றுமே அதிகம்தான் இல்லையா? கோடிச்சிப்பியில் ஒன்றுவிஷம் கொண்டிருப்பது, லட்சம் சிப்பியில் ஒன்று முத்தினைக் கருக்கொள்வதைவிட அபூர்வமானதுதானே என எனக்குத்தோன்றுகிறது. ஆனாலும் இதைமனதில் ஏற்றிக்கொள்ள நம்மால் முடிவதில்லை. ஏன்??

நாற்பத்தொன்பது வருட நட்பில், பிள்ளைவாளும், வியாகப்பனும் மற்ற எவரையும்பொருட்டாக நினைத்து தங்கள் நட்பில் தோயவில்லை. அவர்கள் வாழ்வதே நட்பின்வழி இவ்வாழ்வை சுவைப்பதற்காகத்தானே! சனிக்கிழமைகளில் வியாகப்பன் வந்ததுமுதல், ஞாயிற்றுக்கிழமை அவர்செல்லும் வரை, இருவரும் தோய்ந்து வாழும்அந்நட்புநிறைந்த வாழ்வு, மற்ற அனைவருக்கும் பொறாமையை தேற்றுவிக்கும்படிஇருப்பது மேல்மட்டத்தில்தான். ஆழத்தில் அனைவருக்கும், நமக்கு அப்படியொரு நட்பு அல்லது உறவு இங்கில்லையே என்கிற ஏக்கம் மட்டுமே. அனைத்துஉறவுகளைக்காட்டிலும் நட்பு சிறப்பது, அதில் கொள்ளவும், கொடுக்கவும் ஏதும்இல்லாதபோது மட்டும்தானே!

எல்லா மனிதர்களின் கடலிலும், முத்து விளைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால்முத்து விளைவதற்கு முன்பேயே கொள்ளப்படுகிற சிப்பிகள்தான் அதிகம். அப்படிஒரு சிப்பியில் முத்து விளைகிறபோது அதை அருமணி என உணர்ந்துபொத்திப்பாதுகாப்பதுதானே நாமெல்லோரும் செய்வது! மாறாக அரிதாகக் கிடைக்கிற விஷம் மிக மலிவாகக் கிடைக்கும் கடலும், மனித மனம்தான். வியாகப்பன்,மற்றும் பிள்ளைவாளின் நட்ப்பைகண்டு கதைசொல்லியின் அன்னைக்கு விளைவதுமுதலின் விஷம்தான். அதே விஷத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் முன்பு கதைசொல்லி தன் அன்னையிடமே கொட்டுவதும், இன்ஸ்பெக்டர் பென், என்னஇருந்தாலும் வேற சாதி, வேற மதம்…என்று உமிழ்வதுவும், விஷம்தானே அன்றிவேறென்ன?! இத்தனையும் விஷம்தானா எனவும் எண்ணிக்கொள்கிறேன். கரந்துவைத்திருப்பதை பிறர்அறியாமலிருக்க, காண்பிக்கப்படுகிற ஒருதன்நடிப்புதானே இந்த விஷம்.

இந்த விஷத்திற்குப் பின்னால், கதைசொல்லியின் அன்னை ஒளித்து
வைத்திருக்கும் முத்துஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. வியாகப்பனுக்குமிக விரிவாக சமைத்துப்போடும் அம்மா, அந்தநொடியில் கரந்திருப்பது, அவர்கள்நட்ப்பின் தூய்மைகண்டு தன்னுள் விளைந்த முத்தையல்லவா! அரிதான ஒன்று மறைந்திருப்பதுவும், மறைத்து வைக்கப்படுவதும் இங்கும், அங்கும்
சகஜம்தான்போல.

காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு விளைந்த நட்பு பிள்ளைவாளுக்கும், வியாகப்பனுக்குமானது. மற்ற நண்பர்கள் ஊர்ப்பெரிய மனிதராக, அரசுஅதிகாரியாக அவரைக்கண்டு மரியாதை செலுத்தும்போது, “கண்டு பிடிடே மயிரே…
நாப்பது வருசமாட்டு நக்குதேல்ல?” என்று கேட்டுச்சிரிக்கும் அந்த
களங்கமற்ற, நான்காம் வகுப்புச்சிறுவன்மேல் பிள்ளைக்கு அன்புவராமல்இருந்தால்தான் ஆச்சர்யம். இந்த அன்யோன்யத்தை இழந்துதான் அனைவரும்வாழ்க்கைப்படிகளில் மேலே, மேலே சென்றுகொண்டே இருக்கிறோம், ஆனால் இவர்கள் இருவரும் அதைத் தக்கவைத்துக்கொள்கின்றனர் – இறப்புவரை.

எண்ணிப்பார்க்கையில் உரக்கச்சிரித்து ஆரவாரத்துடன் தொடங்கி, உணவுண்டு,கிசுகிசுத்து, பின் கிளுகிளுத்துச் சிரித்து, அமைதியில் மறையும் இந்தநட்புதானே விலையேயற்ற மணிமுத்து. அவர்களிடையே என்னதான் மறைந்திருக்கமுடியும்?! பிள்ளைவாளுக்கு கிடைக்கும் வியாகப்பனின் கடல்முத்து, அவரைப்பொருத்தவரை, இந்த வாழ்வின் மிக, மிக உயர்ந்த ஒரு பரிசு,ஏழுகடலிலும் தேடினாலும் கிடைத்தற்கரிய நட்பின் பரு வடிவம். அதைஉள்ளாழத்தில் கரந்து வைத்து, தானே ஒரு முத்துச்சிப்பியாய்க்கருக்கொள்ளுதலே அவர் செய்யக்கூடிய ஆகச்சிறந்த செயல், அதைத்தான் அவரும் செய்கிறார். அன்புக்குரியவரை விளையாட்டில் ஏமாற்றுவதையும், அவரிடம்ஏமாறுவதையும்  விட சிறந்த இன்பங்கள் மிகச்சிலவே இப்புவியில் உள்ளனஅல்லவா?!

இருந்து, சிறந்து, மகிழ்ந்து, வாழ்ந்த ஒருவாழ்வு நோயில் நைந்து, இற்று
முடிவது  நிறைவளிப்பது ஆகாதல்லவா? பெருவாழ்வு வாழ்ந்து நிறைவில் முழுத்துஅமைந்திருக்கும் இவர்களுக்கு ஏழாம்கடல் கொடுக்கும் பரிசு, ஒருநீலரேகைச்சிப்பி. “நான் சடைஞ்சுபோட்டேன்… போறவளி தெரிஞ்சாச்சு..ஒப்பம்சேந்து போலாம்னு பிள்ளைவாள் சொல்லுவாரு.” என்கிற வார்த்தைகளின்நிறைவுதானே அந்தச்சிப்பி. அனைவரும் விரும்பியபடி ஒப்பம் சேர்ந்து போக ஒரு சிறப்புப் பரிசு அது. மற்றவர்களுக்குத்தான் இது தற்செயலா அல்லவா என்கிறகுழப்பங்களும், மனச்சாய்வுகளும். வியாகப்பன் மேல் அவர்கள் அனைவரும் அதைஏற்றிவைத்தாலும், பிள்ளைவாள், வியாகப்பனை கடலுக்கு அப்பால் காணும்போது,அவர்களுக்கிடையே எந்தஒரு தூரமும் இருக்காது, “ எந்தடா மயிரே….உனக்கு சனிக்கிழமை முன்னமே வந்துபோட்டோ…?” என்றுதான் வெடிச்சிரிப்புடன்கேட்பார், வேறுமாதிரி கேட்ப்பாரென்றால் இந்த அரிதினும் அரிதானமனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா என்ன?

ஏழாம்கடலில் என்ன உள்ளதென்பது, பரமபிதாவுக்கும், மனுஷகுமாரனுக்கும், மாதவுக்கும் கூட தெரியாது, பரிசுத்த ஆவியானவரைத்தவிர, பின் ஏழாம்கடல்அளித்ததென்ன என்பதை நாம் மட்டும் எப்படிப் பொருள்கொள்வது?? பொருளேற்றம் நம்மால் அளிக்கப்படுவதன்றி வேறல்ல. அது பொருளில்லா வெளி. மாபெரும்அர்த்தமின்மை என்றுதான் அதை சொல்லமுடியும். நான் அதை நேர்நிலையாகவேபார்க்கின்றேன்…ஆம், த்தமின்மை…பொருளின்மை…அர்த்தத்திற்கும்,பொருளுக்கும் அப்பாற்பட்ட வெளி.

ஏழாம்கடல் கொடுத்தது முத்தா, அல்லது அரிதினும் அரிதான விஷமா எனபொருளேற்றம் செய்துதான் எனக்கு ஆகப்போவது என்ன?? அது பரிசுத்த ஆவிக்குமட்டுமே தெரிந்த ஒன்றல்லவா?? அவருக்கு முத்தும், விஷமும் ஒன்றைஒன்றுநிரப்புபவையன்றி வேறென்னவாக இருக்கமுடியும்?? பாருங்கள் மீண்டும்பொருளேற்றுகிறேன். அர்த்தமின்மைக்கு அப்பாற்பட்ட கடலை எண்ணி வியந்து, திகைத்து, வாய்பிளந்து நிற்பதொன்றே எனக்கு இயல்கிறது.

வாழ்த்துக்கள்.
அன்புடன்,
பிரபு செல்வநாயகம்.\

அன்புள்ள ஜெ

இரு நோயாளிகள் கதை பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். அவமதிக்கப்பட்டவர்களாக உணர்வது நவீன எழுத்தாளர்களின் ஒரு மனநிலை. ஆனால் அது தவறானது அல்ல. அந்த மனநிலையால்தான் அவர்கள் துன்பப்படுபவர்களுடன் இணைந்து நின்று வாழ்க்கையைப் பார்த்தார்கள். Humiliated and Insulted  என்ற டாஸ்டாயெவ்ஸ்கியின் தலைப்பு எல்லா நவீனத்துவ எழுத்தாளர்களுக்கும் பொருந்துவதுதான். அது ஓர் உணர்வுநிலை மட்டுமல்ல ஒரு ஆன்மிகநிலையும்கூட. அழகுடனும் மேன்மையுடனும் தன்னை இணைத்துப்பார்த்த ரொமாண்டிக் கவிஞர்களின் நிலைக்கு இதுவும் சமானமானதுதான்

சாரங்கன்

 

அன்பு ஜெ,

தத்துவத்தை இரு வகையில் அணுகும் நபர்களை ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பீர்கள். ஒன்று  எல்லாமே தற்செயல் எனும் கருத்தாக்கம். இரண்டாவது நம்மால் அறிய முடியாத மாபெரும் செயல் திட்டத்தின் சிறுபகுதி என்றறிவது. ஆனால் இது போன்ற எந்தத் தரப்புமின்றி எதுவுமே சிந்திக்காது ஒரு மின்சார விளக்கை அதன் எந்தவித அறிவியல் கோட்பாட்டையும் அறிந்து கொள்ளும் சிந்தையற்று அதை பயன்படுத்தும் மனிதர்களைப் பற்றியும் சொல்லியிருப்பீர்கள். அவர்களில் ஒருவராகவே எம். ஏ. கிருஷ்ணன் நாயரைப் பார்த்தேன். அவருக்கு தத்துவங்களின் திறப்பு இல்லாமலிருக்கலாம். ஆனால் அவரும் இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் செயல்திட்டத்தின் சிறுபகுதி என்று கண்டேன். அவருடைய வாழ்க்கை ஆமைக்காரியைப் போல ஓலைக்காரியைப் போல விசை கொண்டதாக செயலையே கர்மமாக்கி வாழ்பவர்.

ஆனால் அவர் சந்தித்த இரு நபர்களும் வாழ்வை கவிதைத் தருணத்தில் நுணுகி வாழ்பவர்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையோ ‘காடே ஒரு பெரிய பூவாக மாறிவிட்டது. நடுவே மலை ஒரு பெரும் மகரந்தக்கொத்து’ என்று பாடியவர். காதலில் ஒருவரும், எள்ளலிலும், விமர்சனத்தால் கையறுநிலையென இன்னொருவரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் வழி தத்தமது தத்துவத்தை கண்டடைந்தவர்கள். அத்தனை பெரிய சிரிப்பிற்கு காரணமாக புதுமைப்பித்தனின் கடந்த வாழ்வின் துன்பங்கள் வந்தமைகிறது. பாரதி தன் மரணப்படுக்கையில் ‘காலா வாடா உன்னை எட்டி உதைக்கிறேன்’ என்று சொன்னதுபோல காலனைக்கண்டே அவர் எள்ளி நகையாடி தான் வாழ்ந்து முடித்த காலம் அனைத்தையும் பார்த்து நகையாடி காலமானார் என்று நினைத்தேன்.

இந்த இரு நோயாளிகளுக்கும் அமைந்த அந்த ஒற்றைத்  தத்துவார்த்த தருணம் போல கிருஷ்ணப்பிள்ளைக்கும் வாய்க்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை வாய்க்க நேர்ந்தால் கதை சொல்லியைக் கூட தன் வாழ்நாளில் தற்செயலாகக் கடந்தவருக்காக பரிகாசம் செய்யப்பட வேண்டியிருக்கும். நீங்கள் அடிக்கடி சொல்லும் எறும்புப் புற்று பற்றிய வரிகளோடு கதையை நிறைவு செய்து கொண்டேன். ‘நம்மால் அறிய முடியாத மாபெரும் செயல் திட்டத்தின் சிறுபகுதிதான் நாம்’. நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 11:31

April 9, 2021

பண்பாட்டின் உரிமையாளர்கள் யார்?

அன்புள்ள ஜெ

“மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?” உரையை கண்டிப்பான ப்ரொபஸரின் வகுப்புக்கு செல்லும் ஒரு சோம்பேறி மாணவனின் ஆயாசத்துடன் தான் கேட்கதுவங்கினேன்,  தலைப்பை பார்த்தவுடன் இந்த உரை கடினமான இலக்கிய மற்றும் கலை கோட்பாடுகளை கொண்டிருக்கும், எனக்கு அவற்றை புரிந்துகொள்வதற்கான பயிற்சி இல்லாததால் உரையின் நுணுக்கமான கூறுகளை உள்வாங்க மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும் என அனுமானித்திருந்தேன்.

ஆனால் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை பார்ப்பதை விட அதிகமான ஈடுபாட்டுடன் உரையின் இரண்டு பாகங்களையும் கேட்டு முடித்தேன், பல திறப்புகளை அளித்தது இந்த உரை, இதே போல மேலும் உரைகள் நிகழவேண்டும்.

உரை எளிதாக அணுகக்கூடியதாக அமைந்ததற்கு ‘பாதாதிகேச’ அணுகுமுறையே முதல்காரணம், இரண்டாவது இந்த உரையை  கேட்பதற்கான முன்தகுதியாக திறந்தமனதையும், தேடலையும் அவற்றின் இருப்புக்கான பொருண்மை சான்றாக ரூபாய் 300ஐ தவிர வேறு எந்த பயிற்சியையும் கோராமலிருந்தது.

உரை எளிதில் அணுகக்கூடியதாக இருந்தாலும் உள்வாங்கி கிரகிக்க நிறையநேரமும், கருத்துழைப்பும் தேவைப்படும். மீண்டும் மீண்டும் பலமுறை திரும்ப வரவைக்கும் reference புத்தகங்களை போன்றது இந்த உரை.

தொடர்பாக  ஒரு கேள்வி, பாதாதிகேச அணுகுமுறையில் இந்த கேள்வி பாதத்திலிருந்து அல்லது அதற்கும் கீழிருக்கும் நடைமுறை யதார்த்தத்திலிருந்து வருகிறது என்றே வைத்துக்கொள்வோம்.  “மரபை பகிர்ந்துகொள்வது எப்படி?”

மரபு என்பது பொருண்மை அற்ற ஒன்றாததால் மனமிருந்தால் எளிதில் பகிர்ந்துகொள்ளலாம், எவ்வளவு கொடுத்தாலும் தீராததாகையால் மரபிற்கு உரிமைபேணுபவர்கள் பகிர்வதில் தாராளம் காட்டலாம், அனால்  பொருண்மை அற்றது என்ற அதே காரணத்தால் நீங்கள் சொல்வது போல மரபின் கூறுகளை யாருடையது என அடையாளப்படுத்தவோ அல்லது ஆதிக்கமரபு/ஒடுக்கப்பட்டவர்களின்மரபு என வகைப்படுத்துவதோ கூட கடினம், ஆனால் இந்த சிக்கல்கள் அனைத்தும் மரபை ஆய்வு நோக்கிலோ அல்லது மெய்தேடலின் பாகமாகவோ அணுகுபவர்களுக்கு மட்டுமே,  தினசரி வாழ்க்கையில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அங்கே சாதியும் மரபும் வேறு வேறு அல்ல,  அங்கே பகிர்தல் என்பது கொடுக்கல் வாங்கல் என்று மாறுகிறது, கொடுக்கும்  நிலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் நிலை பற்றியோ மரபின் மீதான உரிமை பற்றியோ எந்த ஐயமும் இல்லை, பெற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவர்களுக்கும்கூடதான்.  அப்படி அவரவர் நிலை பற்றி ஏதேனும் ஐயம் இருந்தால் கூட 40 வயது தாண்டியவுடன் பெரும்பாலானவர்கள் விளையாட்டு முடிந்து வகுப்பறைக்கு திரும்பும் மாணவர்கள் போல அவரவர்களுக்கான  இருக்கையில் சரியாக வந்து அமர்ந்துகொள்கிறோம்.

இந்த நிலையில் மரபை பகிர்வதற்கான அழைப்பை விடுப்பது கொடுக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு எளிது, சுயமரியாதை கொண்ட பிறருக்குதான் வாங்கிக்கொள்ள தயக்கம், அதற்கு மாற்றாக மரபை புறக்கணிப்பது அதன்மீதான காழ்ப்பில் தான் பெரும்பாலும்  முடிகிறது.  தயக்கத்தை களைவது எப்படி?

நவீன தமிழ் இலக்கிய மரபை எடுத்துக்கொண்டால் சென்ற தலைமுறை வரை பெரும்பான்மையான முன்னோடிகள் பிராமணர்கள், சிறந்த கர்னாடக இசை கலைஞர்கள் இன்றும்கூட பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள், சுதந்திரத்துக்குபிறகு இந்தியாவை வடிவமைத்தவர்களில் கணிசமானவர்கள் உயர்சாதியினர், சென்ற இரு தலைமுறைகளுக்கு முன் வரை சிறந்த கல்வி ஆசிரியர்கள் உயர்சாதியினர்கள், அவ்வளவு ஏன் இன்று யூடியூபில் கிடைக்கும் ஆரோக்கியமான தரமான உணவுகுறிப்புகள் கூட பெரும்பான்மையானவை அக்ராஹார சமையல்கட்டிலிருந்து வருகின்றன.

இந்த நிலையில் “இது நாங்கள் உனக்கு கொடுத்தது” என்று உயர்சாதியில் பிறந்த ஒரு கீழ்மனம் கொண்ட ஒருவன் ஒரு தலித் இலக்கிய வாசகரை நோக்கியா அல்லது அக்ராஹார சமையல் குறிப்பை பார்த்து குழந்தைகளுக்காக ஆரோக்கியமான பருப்பு உசிலி சமைக்க கற்றுக்கொள்ளும் தலித் சகோதரியை நோக்கியோ சொல்வானேயென்றால் சொல்ல என்ன பதில் உள்ளது?

இப்படி சொல்லலாம் “தலைமுறை தலைமுறையாக  இந்த நிலத்தில் வியர்வையும் இரத்தமும் சிந்தி உணவை விளைவித்தவர்கள் நாங்கள், அந்த உணவை உண்டு செரித்து இசையாகவும், இலக்கியமாகவும், ஆன்மிக தரிசனமாகவும்  வேறு பலதாகவும் விளைவித்தவர்கள் நீங்கள், நாங்கள் விளைவித்த தானியங்களை எங்களிடம் நியாமான விலைகொடுத்து வாங்கியதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம், நாங்களும் புத்தகங்களை நியாமான விலைகொடுத்து வாங்கியதாக நம்பிக்கொண்டிருக்கிறோம், ஆகவே கணக்கு சரியாக இருக்கிறது”

இந்த பதில் சரியானது என நினைக்கிறீர்களா?  ஆமெனில்  இந்த தரப்புக்கு முன்னோடிகள் உண்டா? சரியல்ல என்றால் காரணத்தை விளக்க முடியுமா?

அன்பும் வணக்கங்களும்

ஷங்கர் பிரதாப்

பிகு

பதில் நேரடியாக வரவில்லை எனினும்  உங்களுடன் ஒரு விவாதத்தை நடத்திக்கொண்டு இருக்கிறேன், உங்கள் தரப்பை முன்னரே நீங்கள் எழுதியவற்றில் இருந்து விரித்தெடுத்து கொள்கிறேன், உதாரணமாக இந்த கட்டுரை  “அடிமைகளும் கலையும்

அன்புள்ள ஷங்கர்

இந்தக் கேள்வி அடிப்படையானது, அடிக்கடி காதில் விழுவது. ஆனால் இதற்கான விளக்கம் இடதுசாரி சிந்தனையாளர்களாலேயே மிக விரிவாக நூறாண்டுகளுக்கு முன்னரே பதிலளிக்கப்பட்டுவிட்ட ஒன்று இது.

ஒரு சமூகத்தின் கலாச்சார வெற்றிகள், அறிவார்ந்த சாதனைகள், தொழில்நுட்ப திறன்களை நிகழ்த்துபவர்கள் ஒரு சாரார். அவர்கள் அச்சமூகத்திலிருந்து திரண்டுவரும் சிறுபான்மையினர். எல்லாச் சமூகத்திலும் அப்படித்தான்.

ஆனால் அவர்களை பேணி நிலைநிறுத்துவது அந்த மொத்தச் சமூகமும்தான். அந்லையில் அந்த சமூகத்தின் அத்தனைபேருக்கும் அந்த கலாச்சார வெற்றிகளில், அறிவார்ந்த சாதனைகளில், தொழில்நுட்ப திறன்களில் முழு உரிமை உண்டு. அவை அந்தச் சமூகத்தின் அத்தனைபேருக்கும் நலம் பயப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக, தொடர்பே அற்ற ஒரு வினா எழுப்பப்படுகிறது. அந்த கலாச்சார வெற்றிகளில், அறிவார்ந்த சாதனைகளில், தொழில்நுட்ப திறன்களில் அச்சமூகத்தின் அத்தனைபேரும் நேரடியாகப் பங்குபெற முடியுமா? அத்தனைபேரும் அவற்றை புரிந்துகொள்ள முடியுமா?

கோவிட் தடுப்பூசிமேல் அத்தனை வரிகட்டுபவர்களுக்கும் உரிமை உண்டு. ஆகவே அதை அனைவருக்கும் அளிக்கவேண்டும். ஆனால் அதை தயாரிப்பதில் அத்தனை பேரின் கருத்தும் கேட்கப்படவேண்டும் என்றோ அத்தனை பேருக்கும் அதன் ஆய்வுநெறிகளும் தொழில்நுட்பமும் புரியும்படி விளக்கப்படவேண்டும் என்றோ சொல்லமுடியுமா?

ஒவ்வொரு அறிவுத்துறைக்கும் அதற்குரிய சொல்லாடல் உண்டு. அதற்குரிய தர்க்கமுறைமை உண்டு. அத்துறையில் முன்னோடிகள் உருவாக்கிய அறிவுத்தொகை உண்டு. அத்துறையில் நுழையும் எவரும் அச்சொல்லாடலை, தர்க்கத்தை, அறிவுத்தொகையை கற்றே ஆகவேண்டும். கற்பவர்களுக்கே அத்துறை இடமளிக்கும்.

அவ்வாறன்றி  ‘அத்தனைபேருக்கும்’ உரியதாக அத்துறை ஆகுமென்றால் அது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும். அது இயல்வதே அல்ல. எவருக்கேனும் அதைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுமென்றால், அதில் நுழைவதற்கு செயற்கையான தடைகள் இருக்குமென்றால் அது அநீதி. கற்கவிரும்புபவர்களுக்கு, அவர்களின் அடித்தளப் பின்னணியால் சில பின்னடைவுகள் இருக்குமென்றால் அதற்குரிய தூண்டுதலும் சலுகைகளும் அளிக்கப்படவேண்டும். அச்சலுகைகள் மறுக்கப்படுவதென்றால் அதுவும் அநீதி.

எல்லா சமூகத்திலும் பேணப்படும் வர்க்கம் ஒன்று உண்டு.[ privileged class] அப்படி ஒன்று இல்லாத சமூகம் இதுவரை பூமிமேல் அமையவில்லை.சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அந்த பேணப்பட்ட வர்க்கம் பிறப்படிப்படையில் அமைந்தது. இப்போது பொருளியல் அடிப்படையில் அமைகிறது.

யோசித்துப் பாருங்கள் நேற்று புரோகிதச் சாதியினரும், அறிவுத்தளச் சாதியினரும், தொழில்நுட்பச் சாதியினரும் இருந்த இடத்தில் இன்று இதழாளர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் உயரதிகாரிகளும் இருக்கிறார்கள். இச்சமூகம் அவர்களுக்கு பெரும்செல்வத்தை அளித்துப் பேணுகிறது.

இன்று ஒரு கல்லூரிப் பேராசிரியர் பெறும் சம்பளம் ஒரு நல்ல தொழில்நுட்ப உழைப்பாளரை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அல்லவா? அதெல்லாம் இங்குள்ள உழைக்கும் மக்களின் வரிப்பணம்தான். ஒரு மருத்துவர் வாழும் வாழ்க்கையை இங்கே எந்த உழைப்பாளியாவது கற்பனைசெய்ய முடியுமா? இன்று அவர்கள்தான் பேணப்படும் வர்க்கம்.

இந்த பேணப்பட்டவர்க்கமே அறிவுச்செயல்பாடுகளில் இயல்பாக ஈடுபடுகிறது. கலைகளையும் அறிவியலையும் வளர்க்கிறது. நேற்றைய அறிவுத்தள வெற்றிகள், தொழில்நுட்ப வெற்றிகள் ஆகியவற்றை அன்றைய பேணப்பட்ட வர்க்கம் நிகழ்த்தியது. அதில் எப்படி அடித்தள மக்களுக்கு உரிமை உண்டோ அதே உரிமை இன்றும் உண்டு.

அன்றும் இன்றும் பேணப்பட்ட வர்க்கம் மேட்டிமை மனநிலை கொண்டுதான் இருக்கிறது. அறிவு அளிக்கும் ஆணவம் அது. அவர்களிடம் அந்த ஆணவத்தை ஏற்கமாட்டோம் என்று சொல்ல அடித்தளத்தோருக்கு உரிமை உண்டு. கூடவே உங்கள் சாதனைகள் எங்களுடையவும்கூடத்தான் என்று சொல்ல உரிமை உண்டு.

அத்துடன் இன்னொன்றும் உள்ளது. பேணப்பட்ட வர்க்கத்தின் சாதனைகள் எவையும் அவர்களிடமிருந்து மட்டுமே தோன்றுவதில்லை. அவை அவர்களால் தொகுக்கப்படுகின்றன, வரையறைசெய்யப்படுகின்றன, கூர்மையாக்கப்படுகின்றன, பயனுறச்செய்யப்படுகின்றன. ஆனால் எப்போதும் அவற்றுக்கான கச்சாப்பொருள், மூலப்பொருள் மக்கள் வாழ்க்கையிலேயே இருக்கும். அந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்தத்தில், பெரும்பாலும் அடித்தளத்தில் இருந்து சென்றதாகவே இருக்கும்.

செவ்வியல் இசை என்றால் அது நாட்டார் மெட்டில் இருந்தே சென்றிருக்க முடியும். இலக்கியம் என்றால் அடிப்படை சொல்லாட்சிகளும் ஆழ்படிமங்களும் மக்களிடமிருந்தே எழமுடியும். ஆன்மிகம் என்றால் தொன்மங்களும் ஆசாரங்களும் குறியீடுகளும் மக்களிடமிருந்து எழுந்து சென்றவையாகவே இருக்கமுடியும். விதிவிலக்கே இல்லை.

ஒரு சமூகத்தின் வாழ்வை கடைந்து எடுக்கப்படும் வெண்ணை என அதன் பண்பாட்டு, அறிவுத்தொகையைச் சொல்லலாம். சமீபத்திய ஆய்வுகள் அறிவியலின் அடிப்படைகளே கூட வேளாண்மை தொழிற்தளங்களில் மக்கள் கண்டடைந்த அறிதல்களின் மேம்படுத்தப்பட்ட உருவாகவே எழுகின்றன என்று காட்டுகின்றன.

ஆகவே அடித்தள மக்கள் எந்த மேட்டிமையாளரிடமும் நீ வைத்திருப்பவை அனைத்தும் என்னுடையவையும்கூட, என் கையில் இருப்பவற்றை கூர்தீட்டியதே உன் பங்களிப்பு என்று சொல்லமுடியும்.

ஆனால் அவ்வண்ணம் திரட்டி மேம்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட்ட பண்பாட்டு மரபை, அறிவுத்தொகையை அது தங்களால் உருவாக்கப்பட்டதல்ல என்றோ தங்களைச் சுரண்டி உருவாக்கப்பட்டது என்றோ எண்ணி ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அடித்தளத்து மக்கள் முயல்வார்கள் என்றால் அது அறியாமை உருவாக்கும் பெரும்பிழை. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் செயல்பாடு.

மாறாக, அந்த அறிவியக்கத்தை நோக்கி தங்களை கொண்டுசெல்லவே அவர்கள் முயலவேண்டும், அதை தங்களை நோக்கி இழுத்தார்கள் என்றால் அதை அவர்கள் அழிக்கிறார்கள். அதை வென்றெடுக்கவேண்டும், உரிமைகொள்ளவேண்டும், பயன்படுத்திக்கொள்ளவேண்டும். புறக்கணிப்பது வரலாற்றை, பண்பாட்ட, அறிவுத்தொகையை நிராகரிப்பதுதான். அது ஒரு தோல்வி.

தமிழின் சங்க இலக்கியங்களை ஈராயிரமாண்டுகளாக பேணியவர்கள் சமணர்களும் சைவர்களும் வைணவர்களுமான உயர்குடியினர்தான். அவற்றை பிழைநோக்கி அச்சில் கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான்.ஆகவே அவை அடித்தளத்தோருக்கு உரிமையற்றவை என்று சொல்லமுடியுமா?

சங்க இலக்கியங்களை பயில்வதற்கு ஒரு கல்விமுறை உள்ளது. அதற்கு ஆய்வுத்தொகை ஒன்று உண்டு. கற்பதற்கான உரிமை தேவை என எவரும் கோரலாம். ஆனால் அதை கற்கமாட்டோம் என்றும், எந்த முயற்சியும் எடுக்காதவர்களுக்கும் அவை புரியவேண்டும் என்றும், புரியாதவற்றை அழிப்போம் என்றும் ஒருவர் சொல்லமுடியுமா? சொன்னால் எவருக்கு இழப்பு?

இன்றும்கூட மக்களுக்குப் புரியாதவை மக்கள்விரோத அறிவுச்செயல்பாடுகள் என்று சொல்லும் ஒரு மொண்ணை வாதம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. நான் அப்படிச் சொன்ன ஒருவரிடம் கேட்டேன். மக்களுக்காகப் பேசும் புரட்சி இலக்கியங்களிலேயே மக்களுக்கு புரிபவை எத்தனை?

மக்கள் என்பவர்கள் வெவ்வேறு வாழ்க்கைக்களங்களில் வெவ்வேறு தொழில்களில் வாழ்பவர்கள். அவர்களில் சிலருக்கே அறிவியக்க ஆர்வம் இருக்கும். எஞ்சியோர் அவர்களின் வாழ்க்கையையே வாழ்வார்கள். அறிவியக்க ஆர்வமுடையவர்கள் அறிவியக்கத்தை வந்தடைவார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 11:36

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-10

[ 10 ]

நாங்கள் சைக்கிளை உருட்டிக்கொண்டு மிகமெல்ல வெளியே சென்றோம். அந்தப் பண்ணைவீட்டுக்கு மைய வாசல் தவிர நாலைந்து சிறிய வழிகள் இருந்தன. அதில் ஒன்றில் ஏறி வெளியே சென்று அங்கிருந்த சிறிய மண்பாதையை அடைந்தோம் “ஏறிக்கொள்” என்றேன். அவள் ஏறியதும் நான் சைக்கிளை மிதித்து அந்த வழியினூடாக மிகமெல்ல ஓட்டிச்சென்றேன்

“இந்த வழி எங்கே போகிறது?”

“இப்படியே வளைந்து பெரிய சாலைக்குத்தான் போகும். ஹொஸபேட்டை போக தார்ச்சாலை மட்டும்தான் ஒரே வழி”

”ஹொஸ்பெட் எவ்வளவு தூரம்?”

”பன்னிரண்டு கிலோமீட்டர்… இரண்டு மணிநேரத்தில் போய்விடலாம்…  மெதுவாகவே போவோம்… லைட் போடாமல் போகவேண்டும்”

இருட்டிலேயே சைக்கிளில் சென்றோம். தார்ச்சாலையிலும் விளக்குகள் இல்லை. தார்ச்சாலையில் ஏறிக்கொண்டதும் உண்மையில் பயம் வரவேண்டும், அது திறந்தவெளி போலிருந்தது. ஆனால் பயத்திற்குப் பதிலாக சுதந்திர உணர்வுதான் வந்தது.

என் உள்ளம் இதமான ஓர் உணர்வை அடைய ஆரம்பித்தது. இதம் என்றுதான் சொல்லவேண்டும். அது மகிழ்ச்சி இல்லை. நிறைவும் இல்லை. கொந்தளிப்போ அலைக்கழிப்போ இல்லை. இதம். வெயிலுக்குப்பின் நிழலில் வந்ததுபோல, குளிரில் கம்பிளிக்குள் தங்கிய உடலின் வெம்மை போல

நிலவொளியில் நிழல்கள் கலந்து உருவாக்கிய நிலப்பரப்பு. சாலைடோர மரங்கள், வானத்து முகில்கள் எல்லாமே நிலவால் உருவாக்கப்பட்டவை. சட்டென்று ஓர் அகவிழிப்பு போல அந்த எண்ணத்தை அடைந்தேன். அந்த உலகமே கறுப்புவெள்ளையால் ஆனது. ஃபில்டர் போடப்பட்டு எடுக்கப்பட்டது. கறுப்பு வெள்ளை கனவின் நிறம். அங்கே தெய்வங்களின் ஆடல் இல்லை. அங்கே எல்லாமே கதைதான். அங்கு அழிவும் துக்கமும் இருக்கலாம், ஆனால் அவைகூட உண்மையல்ல. கனவும் கற்பனையும்தான்

நான் சைக்கிளை மிதித்தபடி வானை நோக்கி அண்ணாந்து முழுமைகொள்ளத் தொடங்கியிருந்த நிலவின் ஒளியை முகத்தில் வாங்கிக்கொண்டேன். எப்போதும் இதை நான் உணர்ந்திருக்கிறேன். நிலவொளியோ சூரிய ஒளியோ விளக்கொளியோ முகத்தில் ஒளிவிழுந்தால் அது உள்ளத்திலும் பரவுகிறது. ஒளி நம்மை அனைத்திலிருந்தும் விடுதலை செய்துவிடுகிறது. அறியா மகிழ்ச்சியை உருவாக்கிவிடுகிறது. நம் அகமும் முகமும் மலர்ந்துவிடுகின்றன.

மலர்களைப்போல. மலர்கள் ஒளியில்தான் இதழ்விடுகின்றன. கதிரொளியில் தாமரை, நிலவொளியில் அல்லி. மனிதர்களும் அப்படித்தான். புவ்வுல பாபு எங்கோ ஒருமுறை சொல்லியிருந்தார். மேடையில் விளக்கொளியில் நிற்காமல் வாழமுடியாது என்று. விளக்கு வெளிச்சத்தில் தன் உடல் மட்டுமல்ல உள்ளமும் ஜொலிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று. உண்மை அது. தூங்கும்போது முகத்தின்மேல் ஒளிவிழுந்தால் அற்புதமான கனவுகள் வருகின்றன. அதை நானே கண்டிருக்கிறேன்

இந்த ஒளியில் என் முகம் புன்னகையில் பொலிவு கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய நாடகமேடை. அந்த குளிர்ந்த வெண்ணிற ஒளியில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். மிக மிக மெல்ல இந்த சைக்கிளை மிதிக்கிறேன். என் ஆடைகளை குளிர்ந்த காற்று அலைவுறச் செய்கிறது. இப்படியே நான் நெடுநேரம் மிதித்துக்கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால் இது கனவு. இங்கே காலம் இல்லை. இங்கே விசையும் இல்லை. எடையில்லாதிருக்கிறேன். அந்த முகில்களைப்போல

வான் நிறைய விண்மீன்கள். அவற்றை மறைத்தபடி இரண்டு மேகங்களைப் பார்த்தேன். அவை இரண்டு யானைகள் துதிக்கையை பிணைத்து நிற்பவைபோல வானில் மிதந்தன. என் சித்தம் திரும்பி வந்தது.

“அந்த மேகத்தை பார்த்தாயா?”

“ஆமாம்”

“ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா… அந்த பாட்டை கேட்டிருக்கிறாயா?”

“ஆமாம், எனக்கு பிடித்த பாட்டு அது”.

“அப்படியா?”

“ஏன்?”

“அந்தப்பாட்டை அவ்வளவு விரும்பக்கூடிய இன்னொருவரை நான் பார்த்ததில்லை”

“அதை யாரால் மறக்க முடியும்? நான் சின்னப்பெண்ணாக இருக்கும்போதே கேட்ட பாட்டு” அவள் மெல்ல பாடினாள். “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யன”

“நீ நன்றாக பாடுகிறாய்” என்றேன்.

“அய்யே, என் குரலே நல்ல குரல் அல்ல” என்றாள். “காலி வெங்கடேஸ்வர ராவ் குரல் என்ன ஒரு கம்பீரம்… அதோடு ஒப்பிடும்போது காஞ்சனமாலா குரல்  அவ்வளவாக பொருத்தமாக இல்லை”

அவள் எந்தப்பெண்ணைப் பற்றியாவது ஏதாவது நல்லவாறாகச் சொல்லியிருக்கிறாளா என்று எண்ணிக்கொண்டேன். “காஞ்சனமாலா நாடகப்பாடகி.அதற்காக அப்படி பாடி பழகியவர்”

”காலி வெங்கடேஸ்வர ராவ் கூடத்தான் நாடகப்பாடகர்” என்றாள்.

”அவர் பெயரிலேயே காற்று இருக்கிறது…” என்றேன்.“காலி வெங்கடேஸ்வர ராவ்… ஒரு பாடல் பாடிவிட்டால் போதும், சாவே வராது”

“ஆமாம், அவர் குரலில் ஒரு கனவு இருக்கிறது… வானத்தைப் பார்த்து பாடுவதுதான் பாடல். மண்ணையோ மனிதர்களையோ பார்த்துப் பாடுவது பாட்டே அல்ல” என்றாள்.

“உண்மையில் இது நாடகப்பாடல். பசவராஜு அப்பாராவ் இதை ஒரு புரஃபஷனல்  நாடகத்திற்காகத்தான் எழுதினார். இரண்டு மேகங்கள் கரைவதுபோல மனம் ஒப்பி காதலிப்பதைப்பற்றி… “

”ஆமாம்” என்று அவள் சொன்னாள். வானை அண்ணாந்து பார்த்தபோது அவள் முகவாய் என் முதுகில் முட்டியது. அவளுடைய நீண்ட கழுத்தின் வளையங்களை, மென்மையான சருமத்தின் மெருகை நான் மனக்கண்ணில் கண்டேன்

அவள் பெருமூச்சு விட்டாள். என் மேல் சாய்ந்துகொண்டாள். மீண்டும் பெருமூச்சுவிட்டாள். அவள் உடலே வெம்மையாக இருப்பதுபோலிருந்தது

“என்ன?” என்றேன்

“ஒன்றுமில்லை”

“நீ பெருமூச்சுவிட்டாய்”

“ஆமாம்” என்றாள். பிறகு ஒன்றும் சொல்லவில்லை. நானும் ஒன்றும் கேட்கவில்லை. சற்றுக்கழித்து அவள் “நிலாவில் மேகங்களைப் பார்ப்பது ஒருமாதிரி இருக்கிறது”

“ஒருமாதிரி என்றால்?”

“ஒருமாதிரி பித்துப் பிடிக்க வைப்பதுபோல”

“ஆமாம்” என்று நான் மூச்சிளைப்புடன் சொன்னேன். “ஆனால் இந்த மேகங்கள் இருப்பது நன்றாக இருக்கிறது”

“ஏன்?”

“தலைக்குமேல் அவை மிதக்கின்றன. எவருமே தொடமுடியாது. அவற்றுக்கு பயமே இல்லை”

அவள் மிகமெல்லச் சிரித்தாள். இனிய சிறிய பறவை ஒன்றின் ஒலிபோல. “அவற்றுக்கு என்ன பயம்?” என்றாள்

“நமக்குத்தான் பயம்” என்றேன்

“நமக்கு என்ன பயம்?” என்று அவள் சொன்னாள்.

“பயம் இல்லையா?” என்றேன்

“என்ன பயம்?”

“என்ன பயமா? என்ன நினைக்கிறாய் நீ? எப்போது வேண்டுமென்றாலும் ரங்கா ரெட்டியின் ஆட்கள் நம்மை பிடிக்கலாம்… அந்த ஆள் இன்னும் நினைவு திரும்பாமல் ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்… போலீஸும் உன்னை தேடிக்கொண்டிருக்கிறது”

“எனக்கு பயமே இல்லை”

“ஏன்?”

“நீங்கள் கூடவே இருக்கிறீர்கள் அல்லவா?”

“அப்படியா?” என்றேன் “நான் என்ன செய்யமுடியும்? நானும் நீயும் ஒரே வயதுதான் என்று நினைக்கிறேன்”

”அதனாலென்ன? நீங்கள் ஆண்” என்றாள்

“ஆண் ஆனால் என்ன?” என்றேன்“வேண்டுமென்றால் பாடுகிறேன். தப்பி ஓடிவிடுவார்கள்”

அவள் என் நகைச்சுவையைக் கவனிக்காமல், “நான் இப்போதுதான் ஓர் ஆணுடன் இருக்கிறேன்… அவ்வளவு நன்றாக இருக்கிறது. எந்த பயமும் இல்லை. எந்தக் கவலையும் இல்லை” என்றாள்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. மேகங்கள் அசையாமல் அங்கேயே நின்றன. அவற்றை பார்த்தபடியே சைக்கிளை மிதித்தேன். மீண்டும்  “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா” என்று பாடினேன்.

அந்த முகில் இந்த முகில், ஆகாய நடுவினிலே. அதுபோல உள்ளம் இணையவேண்டும் நாம் அன்பே இப்புவியினிலே.

”சத்தமாக பாடுங்கள்” என்று அவள் சொன்னாள்

“விளையாடுகிறாயா?” என்றேன்.

“இந்தக் காற்றில் யாருக்கும் கேட்காது… “ என்று சிரித்தாள்

“வேண்டாம்” என்று நான் எரிச்சலுடன் சொன்னேன். ஆனால் அவளுடைய அந்தச் சிரிப்பு அவ்வேளையில் அத்தனை தித்திப்பாக இருந்தது.

”உங்கள் குரல் நன்றாக இருக்கிறது… நீங்கள் சூரிபாபு மாதிரியே பாடுகிறீர்கள்”

நான் சைக்கிளை காலூன்றி நிறுத்திவிட்டேன்.  திரும்பிப்பார்த்து“யார்?” என்றேன்.

“புவ்வுல சூரிபாபு… அவரைப்போலவே பாடுகிறீர்கள்”

மூச்சு இறுகி நெஞ்சை நிறைப்பதுபோலவே உணர்ந்தேன். பலமுறை மூச்சை இழுத்துவிட்டபின் “நான் சூரிபாபு பற்றி உன்னிடம் சொன்னேனா?”என்றேன்.

“இல்லையே, ஏன்?”

”நான் அவரைப் போல  ஆக விரும்புகிறேன். அவராகவே என்னை கற்பனை செய்துகொள்வேன்”

“அவரைப் போலத்தான் இருக்கிறீர்கள்”

“பொய் சொல்ல தெரிந்து வைத்திருக்கிறாய்” என்றேன்.

“இல்லை, உண்மை. நான் முதலில் பார்த்ததுமே நினைத்தேன்”

நான் அந்த தருணத்தின் உச்சத்தை எதிர்கொள்ள முடியாதவனாக அதை மழுங்கவைத்து அப்படியே கடக்க விரும்பி இன்னொன்றுக்குள் நுழைந்தேன். சரசரவென பேசிக்கொண்டே சென்றேன். அவள் என்னுடன் நடந்து வந்தாள்.

“இந்தப்பாட்டு சினிமாவில் கொஞ்சம்தான் வந்தது. நிறைய மாற்றிவிட்டார்கள். சினிமாவில் இது மிகவும் சின்ன பிளேட். பழைய படம் மாலாப் பிள்ள என்று ஒரு படம்… ஆனால் இந்த பாட்டு நாடகத்தில் பெரிய பாட்டு. இரண்டுபக்க பிளேட் அளவுக்கு இருக்கும். என் மாமாவிடம் ஒரு பழைய பிளேட் இருக்கிறது. அதில் எட்டு சரணங்கள் உண்டு… சினிமாவுக்காக நிறைய மாற்றிவிட்டார்கள். அதை புவ்வுல சூரிபாபு நிறைய மேடைகளில் பாடியிருக்கிறார்.”

“அப்படியா?”

“சூரிபாபுவின் குரல் காலி வெங்கடேஸ்வர ராவ் போல கம்பீரமானது இல்லை. கொஞ்சம் மென்மையான குரல்… கொஞ்சம் பெண் போலவே இருக்கும். அவர் பெயர் போலவே பூ போன்ற குரல்…”

”அது நல்லதுதான்… எனக்கு மென்மையான ஆண்குரல் பிடிக்கும்… எனக்கு என்ன தோன்றும் தெரியுமா? ரொம்ப பழைய அம்மிகள் இருக்குமே. பழைய வீடுகளில். கருங்கல்தான் ஆனால் மழமழவென்று தளிர்வாழை இலை போல மென்மையாக ஆகியிருக்கும்… அதைப்போல” என்று அவள் சொன்னாள் “அதாவது கல்லாகவும் இருக்கவேண்டும். பூவிதழாகவும் இருக்கவேண்டும்”

நான் நின்று அவளைப்பார்த்தேன். அவள் கண்கள் நிலவொளியில் ஈரமானவைபோல மின்னின. இமைமயிர்கள் வெள்ளிபோல ஒளிகொண்டிருந்தன.

“நீ எப்படி இப்படியெல்லாம் சொல்கிறாய்?”

“ஏன்?”

“இல்லை, இப்படியெல்லாம் யாருமே பேசமாட்டார்கள் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்”

“நான் இப்படியெல்லாம் மனசுக்குள் நினைப்பேன். இன்றைக்குத்தான் பேசுகிறேன்”

“நீ கதை படிப்பாயா?”

“ஆமாம், கிடைக்கிற காசுக்கெல்லாம் புத்தகம் வாங்கிவிடுவேன். மூர்மார்க்கெட்டில் அப்துல் ரசாக் பாய் எல்லா தெலுங்கு புத்தகமும் வைத்திருக்கிறார்”

“அய்யோ, நானும் அவரிடம்தான் வாங்குவேன்” என்றேன் “கடைசியாக என்ன வாங்கினாய்?”

“எட்டு கதைகள் என்று ஒரு புத்தகம். புச்சிபாபு எழுதியது”

“புச்சிபாபுவா? அவர் நாடகங்கள் எழுதுபவர் அல்லவா?”

”கதைகளும் எழுதியிருக்கிறார்” என்றாள்.

”நான் அதிகமாக கதைகள் படிப்பதில்லை. கவிதைதான்.தேவுலப்பள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் எல்லா கவிதைகளும் என்னிடம் இருக்கின்றன” என்றேன் “நிறைய கவிதைகளை நானேகூட மெட்டு போட்டு பாடுவதுண்டு”

”நான் அதிகமும் கதைகள்தான் படிப்பேன்…”

“யார் உனக்கு பிடித்தமானவர்?” என்று நான் கேட்டேன். ஒரு பெண்ணிடம் அப்படி கேட்கும் ஒரு தருணம் வரும் என்று நான் எண்ணியதே இல்லை. சினிமாக்களில்தான் அப்படிப் பெண்களிடம் பேசமுடியும்.

“கவிராஜு திரிபுனனேனி ராமஸ்வாமி” என்று அவள் சொன்னாள்.

”அவரா? ஒரு நாடகம் படித்தேன். எனக்கு பிடிக்கவில்லை” என்று நான் சொன்னேன்.

“ஏன்?” என்றாள்.

”உணர்ச்சிகளே இல்லை. கருத்துக்களாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்”

“அவர் நல்ல கருத்துக்களை எழுதுகிறார். பெண்கள் படிக்கவேண்டும், விதவைகளுக்கு மறுமணம் செய்யவேண்டும் என்கிறார்” என்றாள்.

“ஓகோ” என்றேன்.

“ஏன் அது உங்களுக்குப் பிடிக்காதா?”

“பிடிக்காதென்றில்லை” என்றேன்

“பெண்கள் படிக்கவேண்டும். படித்து விட்டால் போதும், கௌரவம் வந்துசேரும்”

“ஏன், கௌரவத்துக்கு என்ன இப்போது?”

”நான் மட்டும் படித்திருந்தால்…” என்று அவள் சொன்னாள். அப்போது அவள் குரல் இறங்கி விட்டது.

“ஆனால் எல்லாரும் உன்னைப்போல இல்லை”

அதை ஏன் சொன்னேன் என உடனே எண்ணினேன். அந்த முள் வந்துகொண்டேதான் இருக்கிறது.

ஆனால் அவள் அப்போது வேறொரு மனநிலையில் இருந்தாள். “எல்லா பெண்களும் ஒன்றுதான். அக்கவுண்டண்ட் சீதாராம சாஸ்திரி குழந்தைக்கு மருந்து வாங்க பணம் கேட்ட மனைவியை ஸ்டுடியோவில் வைத்து அறைந்து முகத்தில் துப்பினார்”

நான் அந்தப்பேச்சை மாற்ற நினைத்தேன். “எனக்கு கதைகளில் இந்த மாதிரி வாழ்க்கைப் பிரச்சினையை பேசுவது பிடிக்கவில்லை. வாழ்க்கைப் பிரச்சினைதான் எங்கேயும் இருக்கிறதே. ஏன் அதை புத்தகத்திலும் படிக்கவேண்டும்?”

“பிறகு என்ன வேண்டும்?”

“இதே போன்ற நிலவு… சினிமா போன்ற நிலவு”

“சினிமாவில்கூட நிலவுதான் அழகாக இருக்கிறது” என்றாள். “நான் சினிமாவில் நிலவைப்பார்த்தால் அய்யோ இப்படி ஒரு நிலவை நேரில் பார்த்ததே இல்லையே என்றுதான் நினைப்பேன்”

“நிலவும் பனியும்தான் சினிமாவின் லைட்டுக்கு அழகாக இருக்கும்” என்றேன்.

“இந்த நிலவில் என்ன நினைப்பீர்கள்?”

“நான் இங்கே இருக்கிறேன், இதோ இதோ என்று” என்றேன். “நீ?”

அவள் “தேவுலப்பள்ளியின் கவிதை ’முண்டு தெலிசினா பிரபு..’ அதை கேட்கும்போதெல்லாம் நான் அழுவேன்”

“ஏன்?”

”நாம் அப்படித்தானே முறையிட்டுக்கொண்டே இருக்கிறோம். ’என்னை தெரியவில்லையா? என்னை புரியவில்லையா?” என்று அவள் சொன்னாள். ”தியாகையா, புரந்தரவிட்டலா எல்லாருடைய பாடல்களிலும் இதேபோன்ற வரிகள் உண்டு”

“சாஸ்த்ரீய சங்கீதம் கேட்பாயா?”

“நான் முறையாகவே படித்தேன்… ஆனால் என்னால் நன்றாக பாடமுடியவில்லை… எனக்கு பாடுவதைவிட மனசுக்குள் பாட்டை ஓடவிடுவதுதான் பிடித்திருக்கிறது”

“எனக்கும்தான்”என்றேன்.

“எனக்கு பாட்டைவிட பாட்டின் வரிகள்தான் பிடிக்கும்”

“உண்மையிலேயே எனக்கும் அப்படித்தான்” என்றேன்.

எப்படி இவளை முதற்கணத்திலேயே எனக்கு பிடித்தது? இவள்தான் இவள்தான் என எது சொன்னது? இதெல்லாம் இவள் உடலில் இருந்தனவா? அசைவில் வெளிப்பட்டனவா?

அவள்  “அந்த நாடகப்பாடலைப் பாடுங்கள்…ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யன…”

”நான் பசவராஜு அப்பாராவ் எழுதிய கவிதையையே பாடுகிறேன். நாடகப்பாட்டில் அந்த வாத்திய சங்கீதமெல்லாம் இல்லை. ஆர்மோனியம் மட்டும்தான். தபலாகூட இல்லை”

“சரி பாடுங்கள்”

“ஏறிக்கொள்”

அவள் ஏறிக்கொண்டதும் நான் பாடிக்கொண்டே ஓட்டினேன்.

 

அந்த முகில் இந்த முகில்

ஆகாயத்தின் நடுவினிலே

அதுபோல உள்ளம் இணையவேண்டும் நாம்

அன்பே இப்புவியினிலே

 

ஒருவரான பின்னர்

இருவராக கூடாது.

கொடுப்பதுமில்லை பெறுவதுமில்லை

தழுவுதலும் கூட இல்லை.

அங்கிருப்பது ஒற்றை மேகம்.

 

அந்த முகில் நிலவொளியில்

காணும் கனவொன்று உண்டு.

அந்த நிலவுதான் இந்த முகிலில்

அதே கனவை நிறைத்திருக்கிறது.

கனவல்லவா அன்பே

இரண்டு முகில்களையும் ஒன்றாக்குகிறது?

 

நிலவில் ஊறிய முகில்கள்

ஒளிகொண்டு நின்றிருக்கின்றன.

வானம் அத்தனை பெரியது

அதன் பாதையோ முடிவற்றது.

ஆனால் முகில்களுக்கு அவசரமே இல்லை.

அன்பே அவை எங்கும் செல்ல விரும்புவதுமில்லை.

 

ஒன்றை ஒன்று தழுவிய முகில்களுக்கு

வானம்தான் எதற்கு?

ஒருவரை ஒருவர் அறிந்தபின்னர்

விண்மீன்களை எண்ணி கணக்கிடுவது எதற்காக?

 

எத்தனை உயரத்தில் அந்த முகில்கள்!

மண்ணிலிருந்து எத்தனை உயரத்தில் அந்த முகில்கள்!

கால்களில்லை,எனவே மண்ணுக்கு உறவே இல்லை.

சிறகுகள் இல்லை ,எனவே காற்றையும் அறிவதில்லை..

ஒளியை அள்ளும் உடல்மட்டும் இருக்கிறது

உடலே ஒளியாகும் காதல் மட்டும் இருக்கிறது.

 

அந்த முகில் இந்த முகில்

ஆகாய நடுவினிலே

இரண்டு முகில்களும் மெல்ல கரைகின்றன

அன்பே வானில் அவை பரவுகின்றன

வானம் மட்டுமே எஞ்சியிருக்கும்

 

முகில்கள் மறைந்துவிடும்

அன்பே வானம் அங்கிருக்கும் அல்லவா?

முகில்களை அறிந்த

அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா?

 

என் அன்பே என் அன்பே

அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா?

 

நான் நீண்டநேரம் பாடினேன். பல சரணங்களை திரும்பத்திரும்ப ஆலாபனை செய்தேன். பாடப்பாட பாட்டு தீரவே கூடாது என்று தோன்றியது . அந்த வானம் அங்கிருக்கும் அல்லவா? அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா? என் அன்பே அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா?

ஹொஸ்பெட் சாலையில் ஒரு வண்டிகூட இல்லை. நிலாவன்றி ஒரு வெளிச்சம்கூட இல்லை. எங்கள் சைக்கிள் மட்டும் ஒரு சிறிய பறவைபோல சென்றுகொண்டிருந்தது.

[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 11:35

செம்மீன் -விவேக்ராஜ்

கடத்தற்கரியதன் பேரழகு செம்மீன் வாங்க

வணக்கம் ஜெ

கடந்த மாதம் தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் வாசித்தேன். மீளமுடியாத உணர்வு. வெயில் காயும் கடற்கரை, எதிரே தென்னைமர நிழல்கள், இடையிடையே மீனவக் குடிசைகள், கறுத்தம்மா இவையாவும் அப்படியே படிமம் போல் படிந்து விட்டன. எவ்வளவோ காதல் கதைகளை சிறுவயது முதலே கவனித்திருக்கிறோம். சினிமா முழுக்க காதல்தான். ஆனால் கறுத்தம்மா பரீயின் காதல் எனக்கு அவ்வளவு எளிதானதாக இல்லை. காதலை நாம் என்னதான் தெய்வீகமானதாக ஆக்கிக் கொண்டாலும், இவ்வளவுதான் காதல்…இது என்ன பெரிய விஷயமா என்கிற மட்டுப்படுத்தலும் என்னுள் இருக்கிறது.

ஆனால் செம்மீன் காதலை என்னால் எளிமைப்படுத்த முடியவில்லை. சிலவகைக் கதைகள் நம் நிம்மதியைக் குலைத்து விடும். கதையைப் படித்த சில நாட்களுக்கு மனம் முழுக்க அதுமட்டுமே நிரம்பிக் கிடக்கும். வேறு எதிலும் சிந்தனை செல்லாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவித எண்ணத்தை, உணர்வை ஏற்படுத்தும். ஆனால் நான் இதுவரை படித்த எந்தக் கதைக்கும் அழுததில்லை.  செம்மீனைப் படித்து, மறுநாள் இரவு படுத்திருக்கும்போது என்னையும் மீறி அழுதுவிட்டேன். அழுதபோது எனக்கு உங்கள் முகமே நினைவுக்கு வந்தது. உங்கள் அருகில் அமர்ந்து பேசி அழுவது போன்ற உணர்வு. செம்மீன், என் வாழ்நாளில் எனக்கு அணுக்கமான கதையாகிவிட்டது.

பொதுவாக இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் காதல், அது சமூகத்தால் மறுதலிக்கப்படுவது, விருப்பத்திற்கு மாறான திருமண வாழ்வு, காதலுக்காக உயிர்விடுவது போன்ற மிகவும் பழக்கப்பட்ட விஷயமாக இருந்தாலும், அதோடு தொடர்புடைய விஷயங்களையும் நுணுக்கமாகப் பேசுகிறது. ஒவ்வொரு வகையான சமூகங்கள், அதன் தொழில் வாழ்க்கை, அதையொட்டிய அவைகளின் நியதிகள், மதிப்பீடுகள், அதிலுள்ள தனிமனிதர்களுக்கும் அமைப்புக்குமான சிக்கலான முரண்பாடுகள் போன்றவை நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மீனவ வாழ்க்கையில் உள்ள மதிப்பீடுகளும், நியதிகளும் சற்று மூர்க்கமானதாகவே இருக்கும். எல்லா சமூகங்களிலும் உள்ள பொதுவான நியதிகளுக்கும், அதன் தனிமனித விழைவுகள் சுதந்திரங்களுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது. மீனவ சமுதாயம் போல ஒருவரையொருவர் அதிகம் சார்ந்திருக்கும் வாழ்க்கைச் சூழலில், தனிமனிதர்களே கிட்டத்தட்ட இல்லாத சூழலில் அத்தகைய முரண்பாடுகள் அதிகமாகவே இருக்கும். ஆனால் அதன் உறுப்பினர்கள் தன்னளவில் அந்தரங்கமாக சுதந்திரத்தையும் மீறல்களையும் நாடுபவர்களாகவே இருக்கின்றனர்.

சக்கியும் அக்கம் பக்கத்து மரக்காத்திகளும் வாய்ச் சண்டையில் ஈடுபடும்போது, அத்தனைபேரும் அந்தரங்கமாக பலமுறை மீறியிருப்பது தெரியவரும். அப்போ எவளும் இங்க யோக்கியம் இல்லையா… என்பதாக கறுத்தம்மாவின் மனவோட்டம் சிரிப்பு வரவழைத்தது. வெளிப்படையாக மீறும்போது சமூகத்தின் இழிவுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக நேரிடும். ஏனெனில் அங்கு சமூகப் பாதுகாப்பு என்பது தவிர்க்க முடியாததாகிறது. அமைப்பு தனிமனிதனைப் புறக்கணிக்கிறது. தனிமனிதனோ அந்தரங்கமாக அமைப்பை உதாசீனப்படுத்துகிறான்.

பரீக்குத் தான் கடன்பட்டிருக்கக் கூடாது என்கிற கறுத்தம்மாவின் பதற்றம், உள்ளுக்குள் கறுத்தம்மாவின் காதலை அனுமதிக்கும், ஆனால் அமைப்பைக் கண்டு அஞ்சும் சக்கியின் பதற்றம், கற்புமீறலால் தன் துறை அழிந்துவிடும் என்கிற இருவரின் பதற்றம். கறுத்தம்மா சுயநலமாகத்தான் நடந்துகொண்டாளா ? தன் துறைக்கோ குடும்பத்துக்கோ அவப்பெயரோ அழிவோ வந்துவிடக் கூடாது என்று பயந்தாளேவொழிய பழனியைப் பற்றியோ அவன் வாழ்வைப் பற்றியோ கவலைப்படவில்லை. பழனியைத் திருமணம் செய்யும் முன்பே அவள் பரீயுடன் கடலில் விழுந்து மாய்திருக்கலாம். ஆனாலும் அவள் கணக்குப் போட்டுவிட்டாள்.

‘உங்கள் துறை அழிஞ்சிரக் கூடாது என்பதற்காக எங்களிடம் தள்ளிவிடப் பாக்குறீங்க’ என்ற பழனி ஊர்க்காரர்களின் கோபம். ‘ஆணவம்’ என்று சொல்வதற்கு அருகதையற்றவனாகவே பழனி இருக்கிறான். கிட்டத்தட்ட விதியின் கைப்பாவை. அவனும் விதியால் ஏமாற்றப்பட்டு கருணையின்றிக் கொல்லப்பட்டவனே. அவன்தான் அனாதையாயிற்றே. அதனால் அவன் உடலை கடலம்மாவே  உண்டுவிட்டாள். இங்கு அநீதியிழைக்கப்பட்டது கறுத்தம்மா மட்டுமல்ல. பழனியும்தான்.

உங்கள் பத்துலட்சம் காலடிகள் கதை இக்கதையோடு ஒருவிஷயத்தில் ஒத்துப்போகிறது. இக்கதை குறித்து நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா என்று தளத்தில் தேடியபோது கடந்த ஆண்டுதான் செம்மீன் திரைப்படம் குறித்து எழுதியிருந்தீர்கள். நான் அப்போது எதோ ஒரு மலையாளத் திரைப்படம் குறித்த கட்டுரை என்பதாக அதை படித்துக் கடந்துவிட்டேன். தற்போது தற்செயலாக நூலகத்தில் தேடியபோது இது கண்ணில் பட்டது. இது என்னிடம் இருக்க வேண்டிய நூல் என்பதால் வேறொரு நூலை இணையம் வழியாக வாங்கியும் வைத்துவிட்டேன். கதையைப் படித்தபின் திரைப்படத்தயும் பார்த்துவிட்டேன். நான் பழைய படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் இப்படம் எனக்கு சோர்வளிக்கவில்லை. ஏற்கனவே கதையைப் படித்துவிட்டதால் படக்காட்சியைப் புரிந்துகொள்வதற்கு புரியாத மலையாளம் தடையாக இல்லை. சிறந்த திரைப்படம்.

இலக்கிய ஆக்கங்களை சினிமாவாகப் பார்ப்பதில் உள்ள வசதி, சொற்களாகப் படித்தவற்றை அது காட்சிகளாகக் காட்டிவிடுகிறது. நமக்கு ‘உருவம்’ கிடைத்துவிடுகிறது. கறுத்தம்மா, பரீ, மீனவப் படகுகள், தென்னங்கீற்றுகளுக்கு மத்தியில் குடில்கள் போன்றவை காட்சிகளாகப் பதிந்துவிடுகின்றன. நாம் என்னதான் கதைச் சூழலை கற்பனையில் உருவகித்துக் கொண்டாலும், அதைவிடப் படக்காட்சி எளிதில் பற்றிவிடுகிறது. இனி கறுத்தம்மா என்றால் அப்படத்தில் நடித்த கதாநாயகியின் உருவம்தான் நினைவுக்கு வருமேவொழிய அருவமான கறுத்தம்மா அல்ல. இப்படத்தின் முக்கிய அம்சம் பாடல்வரிகள். முழுமையாகப் புரியாவிட்டாலும் ஓரளவு புரிகிறது. அவ்வரிகள் நாவலுக்குத் தொடர்பல்லாத ஏதோவொன்றாக இல்லாமல், அதற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. தினம் இரவு மானஸ மைனே பாடலோடுதான் தூங்கப்போகிறேன்.

இவை எனக்குப் பிடித்த வரிகள். (எழுத்துப் பிழைகளை சகித்துக் கொள்ளவும்)

பண்டோரு முக்குவன் முத்தினு போயி…
படிங்ஙாரன் காட்டத்து முங்கி போயி…
அரையத்தி பெண்ணு தபஸ்ஸிருந்நு…
அவனே கடலம்மா கொண்டு வந்நு…

பண்டோரு முக்குவன் முத்தினு போயி…
படிங்ஙாரன் காட்டத்து முங்கி போயி…
அரையத்தி பெண்ணு பெழச்சு போயி…
அவனே கடலம்மா கொண்டு போயி…

விவேக் ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 11:32

ஓஷோ- கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு

தங்களது கோவை ஓஷோ உரைகள் அறிவிப்பு வந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை. அதுவும் கோவையில் என்பது  தனிப்பட்ட முறையில் மேலும் நெகிழ்ச்சி ஊட்டுகிறது. கோவையில் தான் எனது வேளாண் கல்லூரி முதலாம் ஆண்டில் ‘be oceanic’ மற்றும் ‘one earth one humanity’ என்ற சிறு பாக்கெட் அளவு புத்தகங்கள் மூலம் 1991 இல் ஓஷோ அறிமுகம் ஆனார். அன்று மொத்த வாழ்வே புதிதாக மாறியது போன்று இருந்தது அன்று முதல் இன்று வரை அவரை எண்ணி  வணங்காமல்  நாள் நிறைவதே இல்லை.

ஆன்மிகம் தத்துவம் உறவுகள் என்று எந்த வகையில் நண்பர்களிடம் பேச தொடங்கினாலும் எங்களது உரையாடல் ஓஷோ மேற்கோள்களை சார்ந்தே இருந்தது.அவர்தான் ஞானத்தின் எல்லை என்பதில் எங்களுக்கு எந்த சிறு மாற்றுக் கருத்தும் இருந்ததே இல்லை. கிட்டத்தட்ட அவர் புத்தகங்கள் அனைத்தும் பெரும்பாலான ஆடியோ  கேட்டு இருக்கிறோம் நானும் என் நண்பனும். பெயர் செந்தில் முருகன் . அமெரிக்காவில் இருக்கிறார். உங்கள் தீவிர வாசகர்.ஈரோடு வாசகர் சந்திப்பிற்கு வந்து இருந்தார்.

ஆனால் படித்த அனைத்தும் புத்தக அறிவாகவோ அல்லது அல்லது நிறைய அறிந்த ஆணவமாகவோ ஓங்கி  நின்றதை உணர முடிந்தது தன்னளவில் . அவர் காலகட்டத்தில் அவரோடு  இருந்தால் கண்டிப்பாக வழி காட்டி இருப்பார் என்ற போதிலும்.பிறகு நிறைய குருமார்களை தேடி சும்மா அலைந்தோம். திருவண்ணாமலை செல்வது போன்று .

எனக்கு ஜக்கியிடம் சென்ற பிறகு பெரும்பாலான ஆன்மீக குழப்பங்கள் தீர்ந்துவிட்டன. அவருடைய யோக வழிமுறைகள் பிற volunteering tools மிக சிறப்பாக உள் நிலை வளர்ச்சிக்கு உதவுகின்றன.  practical யோக வழிமுறைகள் செய்ய ஆரம்பித்தபின் மீண்டும் ஓஷோவை படித்தவுடன் அவர் சொன்ன அனைத்துமே மீண்டும் புத்துயிர் கொண்டு எழுந்தன. இருவர் சொல்வதும்   ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து மேலும் புரிய வைக்கின்றது.

ஆனால் பொது வெளியில் ஓஷோவை பற்றி அவருடைய ஆன்மீகம் பற்றி  ஆரோக்கியமான தர்க்கங்கள் விவாதங்கள் முன்னெடுப்புகள் இல்லாதது பெரிய வருத்தமே. பேசுவது எல்லாம் அவருடைய rebellious  thoughts ஐ தமது குறைந்த பட்ச சமூக மீறல்களுக்கு ஒரு supportive arguments ஆக எடுத்து கொள்ளும் பழக்கம் மட்டுமே . இன்றைய நவீன தலைமுறை சந்திக்கும் உறவு திருமணம் காமம் சார்ந்த சிக்கல்களுக்கு ஓஷோ மட்டுமே அதிக பட்ச தீர்வாக உள்ளார் என்பது எனது எண்ணம். ஆனால் அவரை பற்றி ஆழ்ந்த உரையாடல் இல்லாமல்  அவர் சரியாக புரிந்து கொள்ள பட மாட்டார் என்று  நினைக்கிறேன்.

தாங்கள் கோவையில் தொடங்கி வைக்கும் இந்த உரையாடல் ஓஷோவை சற்று புரிந்தவர்களுக்கும், தவறாக புரிந்தவர்களுக்கும், எதுவும் தெரியாதவர்களுக்கும் பெரிய திறப்பாக இருக்கும் .அவரை புரிந்து கொள்வது இந்திய ஆன்மிகத்தின் அனைத்து பக்கங்களையும்  மேலும் புரிய உதவும் என்று நம்புகிறேன்.

நன்றி

த .அனந்த முருகன்
சென்னை

 

அன்புநிறை ஜெ,

மூன்று நாள் ஓஷோ பற்றியான உரையை நேரில் கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். முதல் இரண்டுநாள் உரைகளுக்கும் பிறகு ஒரு நீண்ட நினைவுகூரல், பின்பு உரையில் கூறப்பட்ட கருத்துக்கள் மற்றும் தரவுகளை மேலும் என் நோக்கில் எவ்வாறு விரிவாக்கி கொள்ளலாம் என்பதை பற்றியும் சிந்தித்திருந்தேன். மூன்றுநாள் உரையையும் பெரும் உற்சாகத்துடன் கேட்டிருந்தேன். என் சிந்தனை முறையில் முக்கியமான சில மாற்றங்களை ஏற்படுத்தவல்ல அணுகுமுறையொன்றை நெருங்கியிருப்பதாக உணர்கிறேன்.

‘நான் இந்நாட்களில் முக்கிய தெளிவுகள் சிலவற்றை அடைந்துள்ளேன்’, என்றெண்ணி உவகை பூண்டிருந்த தருணத்தில் பலமுறை நீங்கள் ஏற்கனவே சொன்ன சொற்களை மீண்டும் நினைவு கூர்ந்தீர்கள் , அதாவது ‘மானுட சிந்தனை பெருக்கில் நாம் ஒரு குமிழி மட்டுமே’ என்பது. பல்வேறு தருணங்களில் இதை மற்றவர்களிடம் கூறியதுண்டு, படித்ததுண்டு. ஆம் இது உண்மை என மனமும் ஏற்றுக்கொண்டது. இவேற்பு என் அறிவால் ஏற்பட்டது என்ற கர்வம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் இன்று உரையின் முடிவில் இச்சொற்களை கேட்டபோது நடுக்கமொன்று உடலில் பரவி சென்றது. வீடு திரும்பும் வழி நெடுகிலும் குமிழி என்ற ஒற்றைச் சொல் மட்டும் பயணித்தது. கோவையில் குளிர் குறைய தொடங்கி மூன்று வாரம் ஆகிறது. ஆனால் இன்று என்னுடல் அதீத குளிரை உணர்ந்தது. ஞாயிற்று கிழமையாகையால் சாலை வாகன நெரிசலின்றி இருந்தது. ஆனால் மனம் கூட்டத்தை ஏங்கியது. சிவராத்திரிக்கு அலங்கரிக்கபட்ட விளக்குகள்மட்டும் எரிய கோவிலும் மைதானமும் வெறித்துக் கிடந்தது. பெரும் இழப்பை சந்தித்தது போன்ற உளச்சோர்வு

‘விரிந்து பரவுகிறேன்’ என்றெண்ணியிருந்த தருணத்தில் கூர்முனையொன்றால் தீண்டப்பட்டேன். குமிழி உடைந்தது. “ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறீர்கள்?”,என்றே கேட்கத் துணிவேன். ஆயினும் ஒருவித நிறைவு உடலிலும் மனதிலும் பரவியிருப்பதை உணர முடிகிறது. மீண்டும் பிரயாகைக்கு  செல்கிறேன். இளைய யாதவன் நகர்புகுந்ததை கொண்டாட அங்கே அஸ்தினபுரி விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

நன்றி

ஆனந்த் குரு

ஓஷோ தன்முனைப்பின் வழிகள் ஓஷோ – கேள்விகள் ஓஷோ- கடிதங்கள் ஓஷோ- உரை- கடிதம் ஓஷோ,கோவை, நான்குநாட்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 11:32

மலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

மலைபூத்தபோது கதையை ஒருவர் கதையாகச் சொல்லமுடியாது. அந்த தனித்தன்மைகொண்ட நடையில் தான் கதையே இருக்கிறது. அந்த பழங்குடியின் மொழி அல்ல அது. அவர்கள் அப்படிப் பேசுவதில்லை. அவர்களின் அகமொழிக்கு ஒரு நடை உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நடை ஒரு தனித்தன்மைகொண்ட கவிதைத்தன்மையில் அவர்களின் பிரபஞ்சதரிசனத்தையும் அதற்கு நேர்மாறான சமவெளிமக்களின் பிரபஞ்சதரிசனத்தையும் சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த முரண்பாடுதான் அதிலுள்ள கதை என்பது

மலைமக்களுக்கு விளைச்சல் அல்லது பொன் என்பது இயற்கையின் கொடை. அவர்கள் மண்ணிலுள்ளவர்களிடம் கேட்பது மலைக்கான பங்கை. மலைதெய்வங்களுக்கான படையலை. ஆனால் மண்ணிலுள்ளவர்கள் அதை பிச்சை என நினைக்கிறார்கள். இந்த முரண்பாட்டைத்தான் கதை சொல்கிறது.
மண்ணிலுள்ளவர்களின் தெய்வங்கள் வீதிகளில் குடியிருக்க அவர்களின் அன்கான்ஷியஸின் இருண்ட பாதைகளில் நடமாடுகின்றன மலைத்தெய்வங்கள்.

சரவணன் குமார்

அன்பு ஜெ,

ஓர் அற்புதமான புனைவின் காட்டை கட்டி எழுப்புவதற்கு ஏதுவான கதையைப் பரிசளித்திருக்கிறீர்கள். மீள முடியாத பாரவசத்தை அது அளித்தது. காட்டின் மக்களைப் பற்றி, அவர்களின் உள்ளுணர்வைப் பற்றி பல கதைகளில் சொல்லியிருக்கிறீர்கள். இன்று அந்த உள்ளுணர்வின் தெய்வங்களின் வழி தெய்வம் ஏறப்பட்டு, காடேயாகி கதை சொல்வதாகப் பட்டது எனக்கு. கதை முடிபில் ஒரு கலக்கம் நிறைத்துக் கொண்டது. ஏதோ சில வரிகள் மீண்டொலித்தது என்னுள்.

”ஊரை பசியுடன், உடைமைவெறியுடன் காடு உற்றுநோக்கிக் கொண்டே இருந்தது. ஊ என்பது ஒரு பிழை என, ஓர் அத்துமீறல் என காடு எண்ணியது. ஊர்கள் பகலில் மட்டுமே தனித்து திகழ்ந்தன. இரவில் அவை காட்டுடன் இணைந்துகொண்டன.”

இந்த வரிகள் ஏன் எனக்குள் வர வேண்டும் என்று சிந்தித்திருந்தேன். இந்த வரிகளின் கதையான முதலாமன் சிறுகதையை மீண்டும் படித்தேன். குலத்தின் தெய்வமாக, முதலாமனாக காளியன் மாறும் ஒரு தருணத்தை மீட்டியிருந்தேன். அதே கரடிக் காடு. அதே மக்களை காலத்தில் பின் சென்று இந்தக் கதையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. அழியாமையில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் இங்கு கண்டேன்.

எங்கள் தாத்தாவின் காடு மேற்குத் தொடர்ச்சிமலையின் கிழக்குப் பக்கம் செண்பகத்தோப்பைத் தாண்டிய குட்டதட்டி மலைக்கு அருகில் உள்ளது. மலையை ஒட்டி அது வழிந்து உருவாகிய வயல் தான் அது. இன்று செண்பகத்தோப்பை சுற்றியிருக்கும் பெரும்பாலான பகுதிகளை, மேகமலை மற்றும் திருநெல்வேலி சரணாலயத்துடன் இணைத்து புலிகள் சரணாலயமாக மாற்றும் திட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் சரணாலயமாக திருவில்லிபுத்தூர் மாறியிருக்கிறது.

வைகை தன்னை அதன் பிறக்கும் இடத்திலேயே புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக அமையுமென சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  காடு மீண்டும் தன்னுடன் மண்ணை இணைத்துக் கொண்டது என நினைத்தேன். இன்று புனைவின் வழி அங்கு அந்த வயலில் நின்று கொண்டு அந்த மலையைப் பார்க்கிறேன். அதன் கொடையை, தெய்வங்களை, ஆசிர்வாதங்களை என அனைத்தையும் காண்கிறேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொல்லிக் கொள்கிறேன்.

”நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக… இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும்.” என்று சொன்னீர்கள். இந்த வரிகளின் வழி காலம் முழுமைக்கும் சென்று அந்த வயல்காடுகளின் மண்ணின் மக்களை தரிசிக்கிறேன்.

காட்டிலிருந்து வளங்கள் வருவது போலேயே ”காட்டிலிருந்து நோய்களும் வந்தன” என்றும், கொடுநோய்களை கொண்டுவரும் குளிகன் பற்றியும், ஒவ்வொன்றுக்குமான காட்டின் தெய்வங்களையும் நீங்கள் முதலாமன் கதையில் கூறியது நினைவில் எழுந்தது. இங்கு இந்தக் கதையின் தெய்வங்களும் அதனோடு இணைந்து கொண்டன. நோயின் காரணமாகவோ, விளைச்சலின்மையின் காரணமாகவோ, வறுமை, பசியின் காரணமாகவோ மனிதர்கள் தங்கள் தெய்வங்களை மறந்து புலம் பெயர்கிறார்கள். மேலும் மேலும் காட்டிலிருந்து விலகி தெய்வங்களை மறந்து தங்களுக்கான தெய்வங்களை சமைக்கிறார்கள்.

இன்று அதிகாலை இதைப் படித்துவிட்டு தான் நடை சென்றேன். அங்கு அந்தக் கடற்கரையில் நின்று கொண்டு என் காட்டைப் பற்றி நினைத்துப்பார்த்தேன். காட்டிலிருந்து நான் வெகு தொலைவில் வந்துவிட்டேன். அது உருகி வழிந்து தந்த மண்ணைப் பற்றிய எந்த சிந்தையுமின்றி ஒரு தலைமுறை வேறெங்கோ சென்றுவிட்டது. இன்னும் பல்லாண்டுகள் கழித்து அவையும் காடாகிவிடும். சில பூதத்தான்களும், பர்வத ராஜன்களும் மட்டும் இந்நாடு நமக்கு வேண்டாம் ராஜாவே, இந்த மண்ணு வேண்டாம் ராஜாவே! நமக்கு ஆனப்புல்லு மண்ணுண்டு எனக்க பொன்னு ராஜாவே!” என்று மீளமுடியாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள் என்று நினைத்தேன்.  “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று யாரோ சொல்வது போல இருந்தது.

மீளமுடியவில்லை ஜெ. இந்த கதை தந்த சித்திரப் புனைவும், எண்ண அலைகளும் அது தந்த கையறு நிலையும், தத்தளிப்புமென இன்று முழு நாளையும் நிறைத்துக் கொண்டது. இன்னும் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அவையாவற்றயும் என் இந்த எழுத்துக்களால் சொல்லிவிட முடியுமா என்று வியக்கிறேன். இந்த அனுபவத்திற்காக நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

அன்புள்ள ஜெ

அறமென்ப கதை நம்மை நோக்கி பேசுகிறது. அறம் என்கிறீர்களே, அது உண்மையில் என்ன என்று. அறமென்பது ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. கொடுக்கப்பட்டவன் அப்படியே அதை திரும்ப தரவேண்டுமென்பதில்லை. கொடுப்பவன் எதையும் விலையாக எதிர்பாக்கவும் வேண்டாம். கொடுப்பவனின் நிலை மட்டும்தான் அறம். நாம் அறத்தை வியாபராமாக மாற்றிக்கொள்கிறோம். அந்தக்கதையில் சட்டென்று தன்னுடைய வியாபாரத்தை செல்வா உணர்கிறான். அக்கணமே அவன் விடுதலை அடைந்துவிடுகிறான்

மதன்

அன்பு ஜெ….வணக்கம். அறமென்ப….

இந்தச் சிறுகதை நாளை நமக்கே நேரலாம் எனும் அனுபவம்…அல்லது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிச் செல்ல உதவும் அனுபவம். சராசரிகளின் இரக்கச் சிந்தை இங்கே மதிக்கப்படாது என்பதற்கு இது சான்று. கழுகுகள் கொத்திக் கொதறக் காத்துக் கொண்டிருக்கும் உலகம். பொய்யும் புனை சுருட்டும் வெற்றிகரமாய் வலம்வர சட்டம் பாங்காய் துணை நிற்கும் அவலம். நல்ல உள்ளம் படைத்தோரையும் நமக்கெதற்கு…என்று ஒதுங்கி ஓட வைக்க,ஏனடா இதில் தலையைக் கொடுத்தோம் என்று கலங்கடிக்க, எப்படியேனும் மீளணும் என்று ஏற்படும் நஷ்டத்திற்கு இணங்க…என்று எளிய மனிதனை ஆட்டிப் பார்க்கும் அவலம்…

எத்தகைய வளமானவனெனினும் தனக்கு நம்பிக்கையான ஒருவனைக் கூடவே வைத்துக் கொண்டால்தான் இந்த உலகில் ஜுவிக்கவே முடியும் என எடுத்துக் காட்டும் சோகம். தனியொருவனின் நியாயம் எதுவுமே இங்கு செல்லுபடியாகாது என்கிற யதார்த்தம், வறுமையை,ஏழ்மையைச் சாதகமாக்கி  அதைக் காசு பண்ணத் துடித்து அதுவும் ஒரு வாழ்வுதான் என்று அலையும் மோசடி…அதற்கு மோசம் போகும் ஏழ்மை…இப்படி எத்தனையெயோ கற்பிக்கும், மறக்கக் கூடாத கதை…

அருமை…உரையாடல்கள் விறுவிறுப்பாய்,கச்சிதமாய், யார் யார் எவரெவரிடம் எந்த அளவுக்கே பேச வேண்டும் என்பதை கதையின் கருவுக்கேற்றதுபோல் நன்குணர்ந்து, அளவான, பொருத்தமான, பூடகங்களோடு அமைந்த அளந்தெடுத்த வார்த்தைகளால் வடிவமைத்த சிறப்பு….ஒரு நல்ல படைப்பைப் படித்த திருப்தி யோடு, இந்தப் பாழும் உலகில் நாளைக்கு நமக்கே நேர்ந்தால் நிச்சயம் உதவும் என்ற எச்சரிக்கையுடன் கூடிய சேகரிப்பை உணர்த்திய அதி முக்கியமான படைப்பு.

நன்றி

உஷாதீபன்

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 11:31

முதற்கனல் தொடங்கி…

ஓவியம்: ஷண்முகவேல்

குடும்பத்திற்குத் தேவையான மளிகை சாமான்களும், பெரியவர்கள் போட்டுக்கொள்ள வெற்றிலையும் பாக்கும், சுண்ணாம்பும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியும், நான் வளர்ந்த குக்கிராமத்திலிருந்து, பக்கத்து பெருங்கிராமத்தில் வாரம் ஒருமுறை நடக்கும் சந்தைக்கு சென்றுதான் வாங்கவேண்டும். அப்படி என் தந்தை, வாரச்சந்தையில் வாங்கிவரும் நொறுக்குத் தீனிகளுக்காக காத்திருக்கும் காலங்களில், தை மாதத்தில், கடித்து சுவைக்க முழுக்கரும்பும் கிடைக்கும். கரும்பை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, எனக்கும் என் சகோதரிகளுக்கும் பங்கிட்டு கொடுக்கும் என் தந்தை, ‘அடிக்கரும்பை முதலில் திங்காதே’ என்று சொல்லி வைப்பார். அப்பா பேச்சை கேட்காத மகனாக, அடிக்கரும்பை எடுத்து கடித்து சாரை உறிஞ்ச ஆரம்பித்துவிடுவேன். யாரும் கவனிக்காமல் விட்டுவிட்ட நுனிக்கரும்புத் துண்டை பிறகு தின்பேன். பள்ளிக்குச் சென்றால், பாட்டி ஒருவர் துண்டுகள் போட்டு வைத்து விற்கும் கரும்பை வாங்கித் தின்பேன். நுனிக்கரும்பிலிருந்து , அடிக்கரும்பு வரை திங்க திங்க ஏறி வரும் ருசி தனிதான் என்றாலும், எப்படித் தின்றாலும் கரும்பின் இனிமை இனிமையே.

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வாசிப்பும் எனக்கு பாகம் பாகங்களெனுவும், பின்னரும் முன்னரும் எனவுமே அமைந்திருக்கிறது. 26 பாகங்கள் கொண்ட இந்த நாவல் வரிசையை நேரம் காலம் கருதி அவரவர் விருப்பங்களின்படி எந்தவொரு அத்தியாயத்தையும், நூலையும் எப்பொழுது வேண்டுமென்றாலும் எடுத்து வாசிக்கலாம், இல்லை முதலிலிருந்து முறையாகவும் வாசிக்கலாம் என்பதே , இப்பெருங்காவியத்தின் வாசகனான எனது அனுபவம்.

ஜெயமோகன் அவர்களின் தளத்தை வாசிக்கும் தவறாத வாசகன் என்று ஆன பிறகு, நான் முதலில் வாசித்தது, கண்ணனின் பிறப்பையும் ராதையின் காதலையும் சொல்லும் நீலம் எனும் நான்காம் நூலின் முதல் அத்தியாயம்தான். ஒரே நாளில், முதல் அத்தியாயத்தை மூன்று முறை வாசித்தேன். அதன் கவிதை மொழியில் மயங்கி பித்தனென்று ஆனேன். முதல் அத்தியாயத்தில், உறங்கும் ராதையின் வீடு நுழைந்த காலைத் தென்றல், அவள் அழகில் மயங்கி அப்படியே நின்று விடும். நானும் அப்படித்தான், ஜெயமோகன் கவிதை நடையில் மயங்கி முதல் அத்தியாயத்தில் நின்றேன். பன்முகத்துடன் வாழும் இந்த வாழ்க்கையில் , நீலம் வாசிக்க வாசிக்க எனது இன்னொரு முகம் கண்டேன். நண்பர்களுக்கு, “உனக்குத் தெரியுமா, முப்பிறவியில் நான்தான் ராதை” என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.

தாமதமாக வந்து அவரை அறிந்துகொண்டு அவர் எழுதிய எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவேண்டும் என்று அகோரப் பசியுடன் இருந்தவனுக்கு, வெண்முரசுவை முதலிலிருந்து வாசிப்பதற்கு, ‘நேரம் இல்லாமை’ எனும் சிக்கல் இருந்தது. அவரை முழுதும் அறிய எண்ணி, ரப்பரில் ஆரம்பித்து, உலோகம், இன்று பெற்றவை, சங்கச் சித்திரங்கள், கொற்றவை, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், இரவு, கன்னி நிலம் , நினைவின் நதியில், நாவல் கோட்பாடு, என்று எல்லாவற்றையும் கவளம் கவளமாக அள்ளி உண்ணவேண்டியதாக இருந்தது. நாளொரு சிறுகதை பொழுதொரு கட்டுரை என்று நாட்களை பங்கிடவேண்டியிருந்தது. என்ன வாசித்தாலும், வெண்முரசுவை வாசிக்கமுடியவில்லை என்ற அகோரப்பசி இருந்துகொண்டே இருக்கும். ஜெயமோகன் தளத்தில் ‘முந்தையப் பதிவுகள் சில’ என , வெண்முரசுவின் சில பக்கங்களும் வலப் பக்கம் வந்து நிற்கும். முற்றத்தில் சிதறிக் கிடக்கும் பொரியை அள்ளி வாயில் போட்டுக்கொள்ளும் குழந்தையைப் போல, அந்தப் பக்கங்களை வாசித்து அவ்வப்பொழுது என் வெண்முரசு பசியை ஆற்றிக்கொள்வேன்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனியொரு சிறுகதையென நிற்க அது கொடுக்கும் வாசிப்பனுபவத்திலும் என்னை இழப்பதுண்டு. சதசிருங்கத்தில், குந்திக்கு தருமன் பிறந்திருப்பான். பாண்டு வந்து குழந்தையைக் கையில் எடுப்பார். எங்கே தன் குழந்தையை பாண்டு கொன்றுவிடுவாரோ என குந்தியின் தாயுள்ளம் பதறும். துச்சளை , சிந்து நாட்டிலிருந்து, தனது கணவன் ஜயத்ரதன் மற்றும் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு முதன் முதல் வந்திருப்பாள். அவள் குழந்தைக்கு சீர் செய்து கூட்டி வரவேண்டிய கர்ணன் , இளைய கௌரவக் குழந்தைகளுடன் விட்டுவிட்டு வந்துவிடுவான். கர்ணன், கௌரவர்களின் மனைவிகளின் கேலியிலும், கிண்டலிலும், அன்பிலும் திண்டாடும் சமயம், நான் அறிந்த கர்ணன் அல்ல என்று விழி திறப்பேன். ‘இருட்கனி’-யின் ஒரு பாகத்தில், அர்ஜுனன், தலைகுனிந்து அமர்ந்திருக்க, வந்து கேட்கும் யுதிஷ்டரனிடம், கர்ணனை தான் கொன்றவிதம் அறப்பிழை என்று சொல்வான்.

சொல்வளர் காடு எனும் நூலின் ஒரு அத்தியாயத்தில், தருமரும், தம்பியரும் திரௌபதியும் சாந்தீபனிக் கல்வி நிலையில் இருக்கும் சமயம் இளைய யாதவர் வந்திருப்பார். திரௌபதி, அவை நடுவே தான் சிறுமை கொண்டு நிற்கும் பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள் என்று இளைய யாதவரிடம் கோபப்படுவாள். இளைய யாதவர் , ‘சக்ரவர்த்தினியாக ஆவதற்கு நீதானே ஆசைப்பட்டாய் , உன் ஆடலுக்கு கிடைத்த பரிசு’ என்று வாதிடுவார். ‘அட இது புதுசா இருக்கே!’ என்று ஜெயமோகனின் மறுஆக்கப் பார்வையை முழுதும் படித்து உணரும் நாட்களை என்ணி என் மனம் ஏங்கும்.கொலுஞ்சி செடிப் பிடுங்கினாலும் சரி, பிள்ளை ஒன்று பிறந்திருந்தாலும் சரி, எங்கள் வீட்டில், மகாபாரதக் கதை ஒன்றைச் சொல்லியே சொல்வார்கள். தருமன் சொல்வதை மறுகேள்வி கேட்காமல் அடிபணியும் தம்பிகளை சுட்டிக்காட்டி, அண்ணன் தம்பி படிநிலை வீட்டில் எழுதாத சட்டமாக இருந்தது.

எங்கள் பாட்டன், தன் தங்கையைக் கலந்தாலோசிக்காமல் ஒரு மாப்பிள்ளையை நிச்சயத்திவிட, மாப்பிள்ளை ஏதோ முடியாதவர் என்று புரளி கிளம்பி விடுகிறது. என் பாட்டனின் தங்கை, ‘அதனால் என்ன அண்ணா, நளாயினி, தன் கணவனைக் கூடையில் சுமந்து காப்பாற்றவில்லையா? நீ கொடுத்த வாக்கை மீறவேண்டாம்” என்று சொல்லியுள்ளார். இந்தக் கதை கேட்டு வளர்ந்த எனக்கு, நளாயினி பற்றி அறிய ஒரு ஆவல் இருந்துகொண்டே இருக்கும். வெண்முரசில், நான் தேடிப்படித்து அறிந்துகொண்ட முதல் பெண் நளாயினி. நளாயினிதான் திரௌபதியின் முற்பிறவி என்று ஒரு புரிதலும் கிடைத்தது.

மிகச்சரியாக ஒரு வருடத்திற்கு முன்னாள், கோவிட்-19 தீநுண்மிப் பரவல், இன்னொரு இனிய வாய்ப்பைக் கையில் எடுத்துக் கொடுத்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்க , காலையும் மாலையும் அலுவலகத்திற்கு பயணம் செய்யும் அந்த நாற்பது கூட்டல் நிமிடங்கள் நாளொன்றுக்கு கையில் மிச்சமிருந்தன. வெண்முரசுவை, ஒவ்வொரு மாலையும், முறையாக முதலிலிருந்து வாசிக்க வைத்துக்கொள்ளலாம் என்று படிக்க ஆரம்பித்தேன்.

வீடும் ஊரும் சொல்லிக்கொடுத்த வாய்மொழி மகாபாரதம், ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதி விடுமுறையில், ஆடு மேய்த்துக்கொண்டே படித்த ராஜாஜியின் மகாபாரதம், ஞாயிறு காலையில், டில்லி தெருக்களில் நின்றுகொண்டு, மின்னனு உபகரணங்கள் விற்கும் கடைகளில் இருக்கும் டிவியில் பார்த்த BR Chopra-வின் மகாபாரதம் எல்லாம் விவரிக்காத நிலங்களையும், சித்தரிக்காத பாத்திரங்களையும் வெண்முரசு எனக்கு காண்பித்து மாயாஜாலம் செய்து அதன் பணியைத் தொடர்ந்தது. ஒரு நாளைக்கு நாற்பது நிமிடம், திட்டம், அட்டவணை, கட்டுப்பாடு என்று எல்லாம் தாண்டி, சில விடுமுறை நாட்களில் தன்னைமறந்த பித்தனாக பதினொரு மணி நேரம் எல்லாம், வெண்முரசுவில் மூழ்கியிருக்கிறேன். இப்பொழுது அதுவே என்னை இட்டுச் செல்கிறது.

ஏற்கனவே தெரிந்த கதை, அதில் ஆழ்ந்து மூழ்கிவிட என்ன இருக்கிறது? பீஷ்மர் , சுயம் வரத்திற்கு சென்று மூன்று காசி இளவரசிகளை வலுக்கட்டாயமாக ஈர்த்து வருவார் என்பது தெரிந்ததுதானே என்று ஒரு கேள்வியை வைத்துக்கொள்வோம். “முதல் இளவரிசியின் பெயர் அம்பை. அனலைக் கழலாக அணிந்த கொற்றவையின் பெயர் கொண்டவர். முக்கணம் ஆறு மதங்களையும் ஆறு தரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர். கலைஞானமும், காவியஞானமும் கொண்டவர்சொல்லுக்கு நிகராக யானைகளையும் கையாளப்பயின்றவர். வில்லையும் வாளையும் பாரதவர்ஷத்தின் பெரும் குதிரைகளையும் ஆளத்தெரிந்தவர். சக்ரவர்த்தினியான அஸிதினபுரியின் தேவயானிக்கு நிகரானவர்” என்று ஜெயமோகனின் வரிகளில் அம்பை, முதல் நூலான முதற்கனலில் அறிமுகமாகிறார். சிந்திக்கும் எந்த ஒரு வாசகனுக்கும், அவளை அறியாத பீஷ்மர் கையைப் பிடித்து இழுத்தால், சும்மா இருப்பாரா என்று கேள்வி எழும்தானே? பீஷ்மரின் ஆணையின்படி அவரது மாணவர்கள் அணுக, அம்பை தனது அருகில் நிற்கும் மன்னன் ஒருவனின் உடைவாளை உருவி தன்னை தொடவந்தவனை வெட்டி வீழ்த்துகிறாள். அவள் வாள் சுழற்றுவதைப் பார்த்து பீஷ்மரே வியந்து நிற்கிறார்.

கண்ணாடி முகத்தைக் காட்டும். வெண்முரசு வாசகனின் அகத்தைக் காட்டும். நான் பிறந்த அன்றே என் உடலமைப்பைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதைக் கேட்ட என் தாயின் மனம் அன்று என்ன அல்லல் பட்டிருக்கும் என நான் நினைக்கும் நாட்களில் விம்மும் என் நெஞ்சின் ஓசை அருகில் இருப்பவர்களுக்கும் கேட்கும். அவமானத்தின் வலியை அனுபவித்தவன் என்பதால், கேட்டு வளர்ந்த மகாபாரதத்தின் மூலம், கர்ணனே எனக்கு அணுக்கமானவன். அவன் கொடையில் மகிழ்ந்தான் என்று கற்று அதையே என் பாதை என்றும் வகுத்துக்கொண்டேன். அது கிடக்கட்டும் கழுதை! வெண்முரசு வாசிப்பிற்கு வருகிறேன்.

வெண்முரசின் மூன்றாம் நூலான, வண்ணக்கடலில், துரோணர், அக்னிவேசரின் குருகுலத்தில் தன்னுடன் கற்கும் சமயம் ராஜ்யத்தில் பாதி கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்த பழைய நண்பன் துருபதனிடம் சென்று யாசிக்கிறார், துருபதன், துரோணரை ஷத்ரியரா, பிராமணரா என்று குலம் கேட்டு அவமானப்படுத்துகிறான். துரோணரும் எனக்கு அணுக்கமானவர்களில், கர்ணனுடன் இணைந்து கொள்கிறார். நான்காம் நூலான ‘பிரயாகை’யில் துரோணர், துருபதனை அவமானப்படுத்தும் பொருட்டு, அர்ஜுனனிடம், குரு காணிக்கையாக அவரைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவரச் சொல்ல, துரோணர் எனக்கு அணுக்கமானவர்களின் நிலையில் இறங்கிவிடுகிறார்.

அழகு என்று வரும்பொழுது சினிமாக்களும், தொலைக்காட்சி நாடகங்களும் நிறத்திற்கு கொடுக்கும் மதிப்பில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. அது சமுதாயத்தின் பிரதிபலிப்பு என்பதைவிட, வியாபாரம் என்று அங்கு உள்ளே நுழைந்து விடுகிறது. BR Chopraa-வின் மகாபாரதத்தில் கருமை நிறக்கன்ணா என்ற பாடல் பின்னனியில், இளமைக்கால கண்ணன் சிகப்பாக இருப்பான். ஜெயமோகன், வெண்முரசு பாத்திரப்படைப்புகளில் அதை உடைத்திருக்கிறார். திரௌபதி, கருமை நிறம் கொண்ட , சீரான தோள்கள் கொண்ட, நிமிர்வு நடை நடக்கும் அழகி. யானையை அடக்கும் மொழியையும் கற்றவள். இந்திரப்பிரஸ்தத்தை வடிவைக்கும் கட்டடக்கலை வல்லுனர். 2020 தீபாவளிக்கு FB-யின் பயனர் ஒருவர் , வெண்முரசுவிற்காக ஓவியர் ஷண்முகவேலு வரைந்திருந்த திரௌபதியின் ஓவியத்தை லட்சுமி என்று தனது வாழ்த்துக்களைச் சொல்ல உபயோகித்திருந்தார். மின்னும் கருமை நிற அழகி மக்களின் மனதை நிறைக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எதைச் செய்தாலும், பிரதிபலன் இருக்க வேண்டும் என நினைத்தாலும், வெண்முரசு வாசிப்பதில் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது. நான், சாதாரண வேலையாளாக இருக்கும்பொழுது, என் மேலாளர் சில சந்திப்புகளுக்கு என்னை உடன் அழைத்துச் செல்வார். அந்தச் சந்திப்புகளில் , வேறு துறையினர், அவர்களது அரசியலை உள்ளுக்குள் புதைத்து சில உடன்படாத கேள்விகளை கேட்டு என் மேலாளரை இக்கட்டில் தள்ளுவார்கள். நான் தெரிந்தும் தெரியாமலும், மேலாளரைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பதில் சொல்வேன். அவர் தெரிந்துதான் என்னை அழைத்துச் செல்கிறார் என்று பிறகு அறிந்துகொண்டேன்.

உண்மை என்னவென்றால், இப்பொழுது நான் செல்லும் சந்திப்புகளுக்கு எடுத்துச்செல்ல பழிகிடாக்கள் வைத்துள்ளேன். அஸ்தினாபுரியின் மணிமுடி துரியோதனனுக்கா, தருமருக்கா என்று விவாதம் நடக்கும் அவைக்கு இளைய யாதவர் பலராமனை உடன் இட்டுச்சென்று காயை பாண்டவர்கள் பக்கம் நகர்த்துவார். வாதம் திசை மாறுவது அரசுசூழ்தல் தெரியாமல் பேசும் பலராமரின் கேள்விகளும் பதிலும்தான் என்பதை இளைய யாதவரின் அணுக்கத் தோழன் சாத்யகி அறிந்துகொள்வான். அவனுடன் வாசகர்களும் கற்றுக்கொள்வார்கள்.

வெண்முரசின் மொழி தனிச்சிறப்பு. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் கீதை, இமைக்கணம் எனும் நூலில் எளிதில் புரியும் தமிழில். எமனே வெவ்வேறு உருவில் , அர்ஜுனனாக, கர்ணனாக, சகுனியாக, திரௌபதியாக, தருமராக வந்து கேள்வி கேட்க இளைய யாதவர் சொல்லும் விளக்கங்கள் கீதையின் சாராம்சம்.

இது எல்லாவற்றையும் காட்சிகளாய்க் கண்டுகளிக்கும் காலம். மகாபாரதக் காலகட்டத்தின் நகரங்களையும், கிராமங்களையும், ஆறுகளையும், பாலை நிலங்களையும், புல்வெளிகளையும் வெண்முரசு விவரிக்கும் விதத்தில் யூடுயூப் காணோளி ரசிகன் தனது அகவெளியில் வடித்தெடுத்துக்கொள்ள எல்லா சாத்தியங்களும் உள்ளன. முதற்கனலுக்கு அப்புறம் வரும் நூல்களில், அஸ்தினாபுரியின் கங்கை படித்துறையில் படகிலிருந்து இறங்குபவர்கள் முதலில் காண்பது அம்பையின் சிலை என அறிவார்கள். அஸ்தினாபுரியிலிருந்து இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்லும் வழியில் கங்கையும் யமுனையும் இணையும் இடத்தில் படகு திரும்பும் என வழி சொல்வார்கள். பாலை வனத்தில் குதிரைகள் செல்ல அதற்கென்று தனி இலாடம் கட்டவேண்டும் என்று பரிந்துரைக்கலாம்.

ஜெயமோகன், வெண்முரசு நாவல் வரிசையை எழுத 2014, ஜனவரி முதல் 2020, ஜூலை வரை ஏழு வருடங்கள் எடுத்துக்கொண்டார். அந்தக் காவியத்தின் வாசகனாக, அதை குறைந்தது இரண்டு வருடங்களாவது மாதம் ஒரு முறை, தனி நூலொன்றுக்கோ, தனிப்பட்ட அத்தியாயத்திற்கோ வாசிப்பனுபவமாக எழுத இருக்கிறேன். நான் காகிதத்தில் எதை எழுதினாலும், ‘அ’ என்று முதலில் எழுதுவேன். நான் முதலில் கற்றது , ‘அ’, வணங்குவது அம்மாவும் அப்பாவும் எனும் வகையிலும் ‘அ’. வெண்முரசு எனும் காவியத்தில் இதுவரையில் என்னைக் கவர்ந்த தலையாய பாத்திரம் அம்பை. ஆதலால், அன்னை அம்பை மேல் உள்ள பற்றிலும் பக்தியிலும் ஒரு ‘அ’ போட்டு காவியத்தின் வாசிப்பனுபவத்தை தொடங்குகிறேன்.

வெண்முரசு நாவலுக்கு ஓவியர் ஷண்முகவேல் வரைந்த ஓவியங்களையே எனது பதிவுகளுக்கும் பயன்படுத்த இருக்கிறேன். அதில் எந்த விதமான வணிக நோக்கமும் இல்லை.

ஆஸ்டின் செளந்தர்

https://www.facebook.com/katrinnizhal/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.