Jeyamohan's Blog, page 1010
April 3, 2021
பற்றற்றான் பற்று
திருவள்ளுவர், சமணர்களின் சித்தரிப்புஅன்பு ஜெ,
இந்தக் குறளை சிந்தித்துக் கொண்டிருந்தேன்..
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
பற்றுகளையெல்லாம் விட்டொழிக்க கடவுளை பற்றிக்கொள் என்பது மேலோட்டமான ஓர் விளக்கம். ஆனால் இங்கு “பற்றற்றான்” என்பதை ஒரு நிலை எனக் கொள்ளலாமா? அதாவது ”நான்” என்பது எந்தவொரு இச்சையையும் கைக்கொள்ளாமல் பற்றைக் கடந்த நிலை. அந்த நிலையை அடைய வேண்டுமானால் முதலில் அந்த நிலையைக் கடந்த அவனைப் பற்று எனக் கொள்ளலாமா? அவன் வழியில் அல்லது அவன் சென்ற மார்க்கத்தைக் கடைபிடிப்பது, கண்டறிவதே முதல்படி என்க் கொள்ளலாமா?
கடவுள் என்பதையும் கூட ஒரு நிலை/ பரிமாணம் என்று கொள்ளலாம் என்ற சிந்தனை வந்தது ஜெ.
அப்படியானால் கடந்து உள் சென்று கண்டடைவது என்பது நம்முடைய ஒரு பரிமாணம் தானா! ”நான்” என்ற ஒன்று தான் கடந்து உள் செல்ல வேண்டும். ”நான்” கடவுளாக உருப்பெரும் தருணம் பற்றுகளை வேரறுக்கும் தருணம் தானா. அந்த நிலையை அடைய சாமானியமாக அடைய முடியாது. அதுவும் உலகியல் ரீதியாக இயங்கிக் கொண்டிருப்பவர்களால் நிச்சயம் முடியாது ஆகவே பற்றற்றான் என்ற நிலையில் இருக்கும் இறைத்தன்னமையை பற்றுவதே நமக்கான செயல் என்று வள்ளுவர் கூறுகிறாரா.
விளக்க உரைகளைப் பார்த்தேன் ஜெ. சமீபத்தில் உள்ளவைகள் இறைவனைத் தொழுவது பற்றி மட்டுமே பேசுகின்றன. ஆனால் மணக்குடவர் மற்றும் பரிமேலழகர் உரையில் “தியான சமாதி அடைவது பற்றியெல்லாம் கூறுகிறார்கள். அதாவது பற்றற்றான் பற்றுவது தியான சமாதி என்று பொருள் தருகிறார்கள்
நான் மீண்டும் மீண்டும் குறளை சொல்லிப் பார்த்தேன். ”பற்றற்றானின் பற்று எது” என்று சரியாகப் பிடிபடவில்லை. உங்களுடைய எண்ணம் இந்த குறள் சார்ந்து என்ன என்று நேரம் கிடைக்கும்போது சொல்ல இயலுமா.
அன்புடன்
இரம்யா.
***
பார்ஸ்வநாதரும் பத்மாவதியும். அலங்காரம் வழிபாடு எல்லாம் பத்மாவதி யட்சிக்குத்தான். அருகர் முற்றும் துறந்த வெற்றுருவம்அன்புள்ள இரம்யா
குறளின் பல பாடல்களுக்கு சமணமதத்தின் கோணத்தில் பொருள்கொண்டால் மிக எளிதாகப்புரியும். இன்று நாம் கொண்டிருக்கும் இறை என்னும் கோணத்தில் பொருள்கொள்வதன் சிக்கல் நீங்கள் கொண்டிருப்பது.
இந்து தெய்வங்களில் எதையும் பற்றற்றான் என்று சொல்லமுடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில்கூட அளவற்ற அருளாளன், பெருங்கருணையாளன் என்றே தெய்வம் குறிப்பிடப்படுகிறது.
சமணர்களுக்கு ‘தெய்வங்கள்’ இல்லை. அவர்களுக்கு அருகர்களே முதன்மை வழிபாட்டுருவங்கள். அவர்கள் பற்றறுத்தவர்கள். முற்றிலும் பற்றறுத்தமையால்தான் அவர்கள் தெய்வத்திருக்கள் ஆனார்கள்.
சமண மதத்தில் அன்றாட வழிபாட்டுக்கு, வேண்டுதல்களுக்கு தீர்த்தங்காரர்களின் காவல்தேவதைகளான யட்சிகளையும் தேவர்களையுமே வழிபடுவார்கள். தீர்த்தங்காரர்களிடம் எதையும் வேண்டிக்கொள்ளலாகாது. அவர்களை வழிபடுவது உலகத்தின் பற்றிலிருந்து விடுபடுவதற்காக மட்டுமே. அந்த வீடுபேற்றை மட்டுமே அவர்களிடம் கோரவேண்டும்.
உதாரணமாக, பார்ஸ்வநாதரிடம் நாம் வாழ்க்கைநலன்களை வேண்டக்கூடாது. வாழ்க்கைப் பற்றை அறுத்து மீள்வதற்கான ஞானம், வைராக்கியம், தவம் ஆகியவற்றையே கேட்கவேண்டும். அவருடைய யட்சியான பத்மாவதி அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள்.
பற்றறுத்த தீர்த்தங்காரர்களைப் பற்றிக்கொள்க, இவ்வுலகத்துப் பற்றுகளை விட்டுவிடுவதற்கான வழி அதுவே—நேரடியாக இக்குறளின் பொருள் இதுதான்.
ஜெ
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-4
[ 4 ]
எங்கள் படப்பிடிப்பு ஹம்பியில் நடக்கிறது என்று ஆறுமாதம் முன்பே எனக்கு தெரியும். அந்நாளில் விஜயநகரம் பற்றியே ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. பாடப்புத்தகங்களில் ஒரு குறிப்பு உண்டு, அவ்வளவுதான். ஹம்பியில்தான் விஜயநகரம் இருந்தது, அங்கேதான் கிருஷ்ணதேவராய நாயக்கர் ஆண்டார் என்பதெல்லாம் தெரிந்தவர்கள் அனேகமாக கிடையாது.
ஆகவே ஹம்பிக்குப் படப்பிடிப்புக்குப் போகிறோம் என்ற செய்தியை நான் சொன்னபோதும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஹம்பியில் அதற்குமுன் படம் எடுத்திருக்கிறார்களா என்று தெரியாது, ஆனால் ஆந்திராவில் எங்கள் படம்தான் ஹம்பியை அறிமுகம் செய்தது. அதன்பிறகு பல படங்கள். அங்கே எப்படி ஷாட் வைக்கவேண்டும் என்பதையே மெல்லி இரானிதான் சொல்லிக்கொடுத்தார் என்பார்கள்.
நான் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு போகும் வழக்கமில்லை. ஆகவே ஹம்பிக்கு நான் போகவேண்டியிருக்கும் என்று நினைக்கவில்லை. மாமா என்னை அழைத்து ஹம்பிக்கு நான்தான் பொறுப்பேற்றுச் செல்லவேண்டும் என்றும், அவர் கொஞ்சம் பிந்தித்தான் வரமுடியும் என்றும் சொன்னார். அவர் சூரத் செல்லவேண்டியிருந்தது. கடைசிக்காட்சிக்கான ஆடைகளுக்கு துணிகளை ஒட்டுமொத்தமாக எடுக்கவேண்டும்.
எனக்கு அது பெரிய பொறுப்பு, பதற்றமாகவும் பெருமிதமாகவும் உணர்ந்தேன். முதல்நாள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கிருந்து தொடங்குவது, என்ன செய்வது? நரசிங்க ரெட்டியிடம் கேட்டேன்.
“நீ உதவி இயக்குநர்களிடம் என்னென்ன காட்சிகள் அங்கே எடுக்கப்போகிறார்கள் என்று கேட்டு வாங்கு” என்றான்.
அதைத்தான் முதலில் செய்யவேண்டும் என்பது அதற்குப்பின்னர்தான் உறைத்தது. ஆனால் உதவி இயக்குநர்கள் பொதுவாக காட்சித்தாள்களை கொடுக்கவே மாட்டார்கள். அதனால் சரியான கலையமைப்பும் ஆடையமைப்பும் இல்லாமலாகி அவர்கள்தான் எல்லாரிடமும் வசை வாங்குவார்கள். ஆனாலும் காட்சித்தாள்களை கொடுப்பது தங்கள் அதிகாரத்தை இழப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அதை புதையல் ரகசியம் போல பாதுகாப்பார்கள். பொதுவாக எவரும் தங்கள் வேலையைப்பற்றிய செய்திகளை எவரிடமும் சொல்வதில்லை. தையல் இலாகாவிலேயே எதை தைக்கிறார்கள் என்பதை வெட்டுபவர்கள் அவற்றைத் தைப்பவர்களிடம் சொல்வதில்லை.
நான் உதவி இயக்குநர் வெங்கடேஷ் நாயிடுவிடம் கேட்டுப்பார்த்தேன். உதவி இயக்குநர்களுக்கெல்லாம் அக்காலத்தில் ஐம்பது வயது தாண்டியிருக்கும். அனேகமாக அனைவருமே உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்கள். உதவி இயக்குநர் இயக்குநராகும் வழக்கம் அன்றில்லை. இயக்குநர்கள் மேலிருந்தே வந்தார்கள். இவர்கள் அடிமைகள். நான் வெங்கடேஷிடம் திரைக்கதையில் ஹம்பி காட்சிகள் எவை என்று கேட்டேன்.
வெங்கடேஷ் புகையிலை நிறைந்த வாயை நீட்டி “உண்மையைச் சொன்னால் எனக்கே தெரியாது. சதானந்த ராவுக்கு மட்டும்தான் தெரியும். அவர் அதை மெல்லி இரானிக்கே சொல்வதில்லை” என்றார்.
எனக்குப் புரிந்துவிட்டது, அவர் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அனைவருமே சொல்லும் ரெடிமேட் பதில் அதுதான். நான் அவரிடம் மேலே பேசவில்லை. ஆனால் அதற்கு அடுத்தநாள் அவருக்கு இரண்டு அருமையான சட்டைகளைப் பரிசளித்தேன். அவருடைய அளவிலேயே. மகிழ்ந்துபோய்விட்டார். “என் அளவு எப்படி தெரியும்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
அவர் தனக்கு பதினைந்து வயதில் ஒரு மகளும் எட்டுவயதில் ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். நான் “இந்த அளவு இருக்குமா?” என்று ஒரு பையனைச் சுட்டிக்காட்டி கேட்டுக்கொண்டேன். அவருக்கு நம்பிக்கையை அளித்தேன். அதன்பிறகு காட்சித்தாள்களை கேட்டேன்.
அப்போதுதான் மெய்யாகவே வெங்கடேஷ் அதை எவ்வளவு பெரிய விஷயமாக நினைக்கிறார் என்று தெரிந்தது. அந்த காட்சித்தாள்களை அவர் அளித்துவிட்டது தெரிந்தால் அவர் வாழ்க்கையே அழிந்துவிடும் என்றார். பதறிக்கொண்டே இருந்தார். “என்னை ஒழிச்சிடுவாங்க” என்றார்.
பலமுறை சத்தியங்கள் வாங்கிக்கொண்டபின் அவர் திரைக்கதை எழுதப்பட்ட தாளை எடுத்துக்கொண்டுவந்து என்னிடம் தந்தார். அதை அன்று சீன்பேப்பர் என்பார்கள். “இதைக் கொண்டுபோய் நீயே அமர்ந்து நகல் எடுத்துவிட்டு என்னிடம் திருப்பிக்கொடு, நான் கொண்டுப்போய் அங்கேயே வைக்கவேண்டும்” என்றார்.
”இது கார்பன் காப்பிதானே?” என்றேன்.
“ஆனால் எல்லா நகல்களையும் எண்ணிக்கை போட்டு வைத்திருக்கிறார்கள். இதோபார்.”
அது ஐம்பத்தெட்டு என்ற எண். அறுபதுபேருக்கு அளிக்கப்பட்ட ஒன்று எப்படி ரகசியமாக நீடிக்கமுடியும்? முதலில் அது ஏன் ரகசியமாக நீடிக்கவேண்டும்? அதில் வேலைசெய்பவர்களுக்கு அது கிடைக்காது என்றால் வேறு யாருக்கு அது?
எனக்கு வந்த வெறிக்கு அதை நகலெடுத்து நூற்றுக்கணக்கில் செட்டில் வினியோகம் செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆனால் புன்னகையுடன் அவரை ஆறுதல் படுத்திவிட்டு கொண்டுபோய் ஒரே இரவில் நகல் எடுத்துவிட்டேன். மூலத்தை திருப்பி கொடுத்தேன். அவருடைய மகனுக்கும் மகளுக்கும் இரண்டு உடைகளை தைத்துக்கொடுத்தேன்.
பிறகு பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு வெங்கடேஷ் மேல் பரிதாபம்தான் வந்தது. அங்கே எவருக்கும் எவரும் தொழில்சொல்லிக் கொடுப்பதில்லை. நீண்ட கால அனுபவத்தால் கற்றுக்கொண்ட ஒரு சின்ன விஷயம்தான் பிழைப்புக்கே ஆதாரம். சட்டென்று முதலாளி கோபித்துக்கொண்டு அருகே நின்றிருக்கும் ஒருவனிடம் ‘டேய் நீ இதைச் செய்வாயா?’ என்று கேட்டு அவனும் ‘ஆமாம், தெரியும், செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான். வேலை போயிற்று.
அன்றெல்லாம் ஒருவேலை போனவர் அப்படியே அழிந்துவிடுவார். இன்னொரு வேலையில் சென்று நீடிப்பவரால் எதையும் எப்போதும் செய்யமுடியும். ஆனால் அத்தகையவர்கள் குறைவு. அவர்கள் காலப்போக்கில் என்.என்.ரெட்டி ஆகிவிடுவார்கள். பெரும்பாலானவர்கள் அவமானத்தால் வடிவமைக்கப்பட்டவர்கள். அவமானப்படாமல் இருக்க, அவமானப்பட்டதை செரித்துக்கொள்ள பழகியவர்கள். வேலைக்கான தகுதி, பிழைப்பதற்கான தந்திரம் அது மட்டும்தான்.
நான் ஸ்டுடியோவில் கண்டது ஒன்றுதான். பொதுவாக அவமானப்பட தயாராக இருப்பவர்கள் எதிலும் திறமைசாலிகள் அல்ல. திறமைசாலிகளால் சொற்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் முதல்வகையானவன், ஒளிந்து ஒளிந்து தப்பித்துவந்தேன். இரண்டாம் வகையானவன் என்று என்னை கற்பனை செய்துகொண்டேன்.
காட்சித்தாள் கையில் வந்ததுமே என் வேலை ஒழுங்குக்கு வந்துவிட்டது. என்னென்ன ஆடைகள் தேவை என்பதை முடிவுசெய்தேன். அவற்றை காட்சிவாரியாக பிரித்து, தனித்தனியாக பொதி கட்டி, அவற்றின்மேல் காட்சி எண்ணையும் எழுதிக்கொண்டேன். காட்சித் தொடர்ச்சிக்கான ஆடைகளை தனியாக கட்டி எடுத்துக்கொண்டேன். மாற்று ஆடைகளையும் தனியாக எடுத்துக்கொண்டேன்.
நல்லையாவும் அவருடைய குழுவும் பிரதான நடிகர்களுடன் ஹம்பிக்கு வருவதாக இருந்தது. நானும் என் கூட்டமும் இரண்டு நாட்களுக்கு முன்னரே கிளம்பி ஹம்பி செல்லவேண்டும். எங்களுக்கென இரண்டு லாரிகள் ஏற்பாடாகியிருந்தன. ஒரு லாரியில் ஆடைகள். இன்னொரு லாரியில் ஊழியர்கள், தையல் இயந்திரங்கள் முதலியவை. இரண்டு லாரி தேவையா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் ஒவ்வொன்றாக லோடு ஏற்றத்தான் எவ்வளவு சரக்கு இருக்கிறது என்று தெரிந்தது. நூறு பொதிகளுக்குமேல் இருந்தன ஆடைகள். மேலே மேலே அடுக்கி தார்ப்பாய் போட்டு கட்டவேண்டியிருந்தது.
ஹம்பியின் இடிபாடுகளை மறைப்பதற்கு அவற்றின் மேலெல்லாம் சித்திரம் எழுதப்பட்ட விரிப்புகள் போடவும், இரும்பு தூண்களில் மண்டபங்கள் வரையப்பட்ட திரைச்சீலைகளை இழுத்துக் கட்டவும் தொங்கவிடவும் கலை இயக்குநர் திட்டமிட்டிருந்தார். காமிரா பார்க்கும் கோணத்தில் ஓர் எல்லைக்குமேல் எல்லாமே இரட்டைப்பரிமாணம் கொண்டவைதான். முப்பரிமாணம் கொண்ட செட்டுக்குப் பின்னால் இரட்டைப் பரிணாம சித்திரம் கொண்ட திரை இருந்தால் கண் அதையும் புடைப்புருவம் என மயங்கிவிடும்.
இரவுபகலாக திரைச்சீலைகளில் கருப்புவெள்ளையில் மண்டபங்கள், மரங்கள் என வரைந்துகொண்டிருந்தார்கள். அவையெல்லாம் எங்களிடம்தான் இருந்தன. அவை மட்டுமே பதினெட்டு பொதிகள். தையல் இயந்திரங்களை ஏற்றிக்கொண்ட லாரியில் இடம் கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவற்றில் தையல்காரர்கள் ஏறிக்கொண்டார்கள். பகலில் திறந்த லாரியில் வெயிலில் போகமுடியாது. ஆகவே இரவில்தான் பயணம்.
நான் இரண்டாவது லாரியில் டிரைவர் இருக்கை அருகே ஏறி அமர்ந்துகொண்டேன். நாங்கள் கிளம்பும்போது அத்தனைபேருமே உற்சாகமாகத்தான் இருந்தார்கள். அன்றெல்லாம் வெளிப்புறப் படப்பிடிப்பு என்பது அபூர்வத்திலும் அபூர்வம். ஆகவே தையல்காரர்களுக்கு அது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே செல்வதற்கான வாய்ப்பு. அவர்களின் மாற்றமே இல்லாத வாழ்க்கையில் சுவாரசியமான சிலநாட்கள். ஆனால் எவருக்குமே ஹம்பி எங்கே இருக்கிறது, அங்கே என்ன இருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை. கிளம்பிச் செல்கிறோம் என்பதே போதுமானதாக இருந்தது.
நான் ஹம்பி பற்றி தேடி படித்து வைத்திருந்தேன். அந்தப் படம் எடுக்கும் செய்தி வந்தபோதே விஜயநகரம் பற்றி சூரி ரங்கய்யா எழுதிய புத்தகம் ஒன்றை மூர்மார்க்கெட்டில் வாங்கி படித்தேன். கிருஷ்ணதேவராயர் என்னை மெய்சிலிர்க்க வைத்த அரசராக இருந்தார். கிருஷ்ணதேவராயரின் ஹம்பி எப்படி துரோகத்தால் அழிந்தது, எப்படி அதை சுல்தான்கள் சூறையாடினர் என்பதெல்லாம் எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் அதையெல்லாம் சொன்னால் கேட்கக்கூடியவர்கள் எவருமில்லை.
இப்போது ஒன்று தோன்றுகிறது, மக்களுக்கு இயல்பாக சரித்திரத்தில் ஆர்வமே இல்லை. அது அவர்களின் வாழ்க்கை அல்ல. நம் சினிமாக்கள்தான் சரித்திரத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லின. சினிமாவின் வழியாக சரித்திரம் அறிமுகம் ஆனபிறகுதான் அந்தச் சரித்திரத்தில் மேலே ஏதாவது தெரிந்துகொள்ள மக்களால் முடிகிறது. 1950-ல் அப்போதுதான் சினிமாக்களே வரத் தொடங்கியிருந்தன. பெரும்பாலான சினிமாக்கள் புராணக்கதைகள். சரித்திரக்கதைகளே புராணக்கதைபோலத்தான் இருக்கும்.
நான் ஒவ்வொரு கணமும் என ஹம்பியை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். ஹம்பியை மங்கலான கறுப்புவெள்ளை படங்களில்தான் பார்த்திருந்தேன். அந்த கையொடிந்த நரசிம்மரின் சிலைதான் நினைவில் தெளிவாக இருந்தது. ஆனால் சூரி ரங்கய்யாவின் நூலில் நான்கே படங்கள்தான். அதைக்கொண்டே ஹம்பியை என் கற்பனையில் உருவாக்கிக்கொண்டேன். இரவெல்லாம் அந்த நிலத்தில் பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருந்தேன்.
அந்தப் பயணத்தில் நான் அவளை நினைக்கவே இல்லை என்பதை பின்னர் நினைத்து நினைத்து வியந்திருக்கிறேன். பலசமயம் மனம் நிகழும் விதம் நமக்குப் புரிவதே இல்லை. அவள் ஹம்பிக்கு வருவாளா என்று தெரியவில்லை. மீண்டும் நான் மதராசுக்கு வரும்போது அவள் அங்கிருப்பாளா என்றும் சொல்ல முடியாது. அவளிடம் நான் விடைபெறவில்லை. ஏனென்றால் விடைபெறுமளவுக்கு நான் அவளுக்கு நெருக்கமாக ஆகவில்லை.
அன்று அந்த இரவில் என் உள்ளம் உருகி உருகி, இனித்து இனித்து, நெகிழ்ந்து கரைந்து எப்போதோ தூங்கி காலையில் எழுந்தபோது தெளிவாக இருந்தது. அவள் மிக விலகிச் சென்றுவிட்டிருந்தாள். அவள் நினைவே அவ்வப்போது மெல்லிய இசை ஞாபகத்தில் ஒலிப்பது போல வந்து சென்றது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் புலன்கள் கூர்மையாக மாறியிருந்தன. கண்ணிலிருந்து ஒரு படலத்தை உரித்து எடுத்துவிட்டதுபோல உலகமே துலங்கியது. தோட்டத்துப் பூக்கள் மட்டுமல்ல காம்பவுண்டு சுவரின் செங்கல்கூட வண்ணம் பொலிந்து தெரிந்தது. சின்னச்சின்ன ஓசைகள்கூட தெளிவாகக் கேட்டன.
அத்தனை மகிழ்ச்சியான நிலை தன்னளவிலேயே பரிபூர்ணமானது. அதற்கு மேற்கொண்டு எதுவும் தேவையில்லை. கற்பனைகள் கூட. எந்த மனிதரும் உடனிருக்காமல் நாம் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்க அந்த மனநிலையில் முடியும். என் சுவைமொட்டுக்கள் கூர்மையடைந்திருந்தன. நான் இனிப்பு சாப்பிட்டேன். மாமிச உணவு சாப்பிட்டேன். நல்ல சட்டைகளை அணிந்துகொண்டேன். மனதுக்குள் பாடிக்கொண்டே இருந்தேன். என்னையறியாமலேயே மனம் பாடல்கள் வழியாகச் சென்றுகொண்டே இருந்தது. அத்தகைய பரவசநிலையில் இசை தவிர எதுவுமே நம்முடன் இசைந்துபோவதில்லை.
நாலைந்து நாள் அவளைப் பார்க்கவே இல்லை. அதன்பின் பாடல்காட்சிகள் எடுக்கப்படவுமில்லை. அவளை பார்க்கவேண்டுமென நான் நினைக்கவுமில்லை. ஏனென்றால் அவள் எனக்குத் தேவையிருக்கவில்லை. அவள் ஒரு பெண். எனக்குத்தேவையாக இருந்தது ஒரு காதல். அதற்கு பெண் எதற்கு? பெண்ணின் தோற்றமே போதும். முகம் மட்டும் போதும் முகத்தின் நினைவுகூடப் போதும்.
அந்த இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் நிறைந்திருந்தன. மதராசின் வானம் புழுதியால் மறைந்தது. கடற்கரை என்பதனால் மேகங்கள் நிறைந்தது. நட்சத்திரங்கள் குறைவாகவே தெரியும். ஆனால் ராயலசீமாவின் வானம் துல்லியமானது. பகலில் அது வெறும் நீலநிற வளைவு விதானம். இரவில் பல்லாயிரம்கோடி நட்சத்திரங்கள் செறிந்த கரும்பட்டு விதானம். சித்திரை மாத விண்மீன்கள். அவற்றில் மிகமிகச் சிறிய விண்மீன்கள்கூட முழுத்து எழுந்து வந்திருந்தன.
நான் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். இரவெல்லாம். வேறொரு நினைப்பில்லாமல். ஆனால் விண்மீன்களைப் பற்றி நினைக்கவில்லை. நான் என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நான் நான் என நினைத்துக்கொண்டிருந்தேன். இருக்கிறேன் இருக்கிறேன் இருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன். இதோ இதோ இதோ என. இங்கே இங்கே இங்கே என. இக்கணம் இக்கணம் இக்கணம் என.
நாங்கள் ஹொஸ்பெட் சென்று சேர காலையாகிவிட்டது. வழியில் எல்லாரும் தூங்கிவிட்டனர். டிரைவரும் நானும் மட்டும்தான் விழித்திருந்தோம். டிரைவர் பீடா போட்டு சாலையிலேயே எட்டி எட்டி துப்பிக்கொண்டிருந்தார். இந்தியில் கிளீனரிடம் பேசிக்கொண்டே இருந்தார். அவன் அவருடைய ஒரு வார்த்தையையும் கேட்காமல் தூங்கிவிட்டான். ஹொஸ்பெட்டில் ஒரு டீ சாப்பிட்டோம். அங்கிருந்து காலை ஏழரை மணிக்கு கமலாப்பூரில் நாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்ந்தோம்.
அது ஒரு பெரிய பண்ணை. நூறு ஏக்கருக்குமேல் இருக்கும். பண்ணைக்குள்ளேயே கரடுமுரடான பாறைகளால் ஆன இரண்டு சிறு குன்றுகள் இருந்தன. பெரும்பகுதியில் கரும்புதான். மேடான பகுதியில் சோளம். விவசாயக்கூலிகள் தங்குவதற்கு குடிசைகளும், பொருட்கள் வைக்கும் கொட்டகைகளும் இருந்தன. பண்ணையின் உரிமையாளர்கள் நடுவே ஒரு பெரிய ஓட்டுக்கட்டிடத்தில் தங்கியிருந்தனர்.
முன்னரே அங்கே வந்துவிட்டிருந்த எங்கள் ஸ்டுடியோவின் வேலையாட்கள் எங்களுக்கு அந்தப் பண்ணைக்குள் இருந்த சிறிய கட்டிடங்களை காலிசெய்து வைத்திருந்தனர். புதிதாக நிறைய கொட்டகைகளும் குடிசைகளும் அமைக்கப்பட்டிருந்தன. துணிகள் இருந்தமையால் எங்களுக்கு ஒரு சிறிய ஓட்டுவீடு கிடைத்தது. மூன்று அறைகளும் ஒரு கூடமும் கொண்ட வீடு. ஆனால் அது மிகவும் தள்ளி மாமரங்களுக்கு நடுவே மறைந்தது போல இருந்தது. அதில் துணிகளை அடுக்கி வைத்தபோது ஒரு அறை மட்டும்தான் மிஞ்சியது. அதில் நான் தங்கிக்கொள்வதாக ஏற்பாடாயிற்று.
எங்கள் தையல் அணிக்கு பெரிய கொட்டகை ஒன்று சற்று அப்பால் இருந்தது. அதை ஒட்டி எட்டு குடில்களில் தையல்காரர்கள் தங்கலாம். அனைவருக்கும் குளிப்பதற்கு பம்புசெட் ஒன்று இருந்தது. அங்கேயே தட்டிவைத்து மறைத்து ஏழெட்டு கழிப்பறைகளை கட்டியிருந்தனர். குழி எடுத்து மேலே பலகை போட்ட கழிப்பறைகள். எல்லா இடங்களிலும் மூங்கில் நட்டு ஒயர் இழுத்து மின்விளக்கு அளிக்கப்பட்டிருந்தது. என் கட்டிடத்தில் ஏற்கனவே மின்சார வசதி இருந்தது. மண்ணாலான தரையோடுகள் பதிக்கப்பட்ட அறைகள். கட்டில் இல்லை, தரையிலேயே பாய்போட்டு படுத்துக்கொள்ள வேண்டும்.
ஹொஸ்பெட்டில் மொத்தம் நான்கு பண்ணைகளிலாக அனைவரும் தங்க வைக்கப்பட்டிருந்தோம். நடிகர்களும் நடிகைகளும் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் மற்ற முக்கியமானவர்களும் சற்று அப்பாலிருந்த பெரிய பங்களாக்கள் இரண்டில் இருந்தனர். துணைநடிகர்கள் மட்டும்தான் இரண்டு பண்ணைவீடுகளில் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எங்கள் பண்ணைவீட்டில் தையல், ஒப்பனை, முடிதிருத்துநர் போன்றவர்கள் இருந்தோம். அந்த பண்ணை பெரிதாகையால் அத்தனைபேர் அங்கே தங்கியும் நெரிசல் தெரியவில்லை.
கலையமைப்பாளர்களும் உதவியாளர்களும் ஒருமாதம் முன்னரே வந்து ஹம்பிக்கு உள்ளேயே கூடாரங்களில் தங்கியிருந்தனர். தொடர்ந்து லாரிகளில் எடுத்து வரப்பட்ட அவர்களின் பொருட்களெல்லாம் அங்கேயே கொண்டு சென்று வைக்கப்பட்டிருந்தன. பிளாஸ்டர் ஆஃப் பாரீஸிலும் களிமண்ணிலும் துணியோடு குழைத்துச் செய்யப்பட்ட தூண்கள், மண்டபங்கள், நந்திகள், யாளிகள், இன்னும் என்னென்னவோ சிற்பங்கள். முன்னரே ஹம்பிக்கு வந்து புகைப்படங்களும் களிமண் மாடல்களும் எடுத்துவந்து மதராசில் செய்யப்பட்டவை அவை.
அலுமினியத்தை உருக்கி களிமண் அச்சில் வார்த்து எடுத்த உடைவாள்கள், கேடயங்கள், நகைகள், கிரீடங்கள் என ஏகப்பட்ட பொருட்கள். அவையெல்லாம் காட்சித்தொடர்புக்காக எண்கள் இடப்பட்டு பெட்டிகளில் வைக்கப்பட்டு அந்தப் பெட்டிகளுக்கும் எண்கள் இடப்பட்டிருந்தன. எல்லா பொருட்களுக்கும் எண்களுடன் ஏ,பி,சி என்று இருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு டம்மிகள். எல்லாமே ஒன்றுபோலத்தான் இருக்கும். ஏ என்று ஒன்றுக்கு எண் போடப்பட்டதனாலேயே மற்ற இரண்டும் டம்மிகளாக ஆகிவிட்டன.
மூன்று காகிதக்கூழாலான பெரிய நந்திகள், எட்டு மெய்யுருவ யானைகள். அவற்றை வைக்கோலில் சுருட்டிக் கட்டி மதராசிலிருந்து கொண்டுவந்தார்கள். ஹம்பியில் களிமண் இல்லை. ஆகவே அருகே எங்கிருந்தோ களிமண் கொண்டுவரப்பட்டது. அங்கேயே மாதக்கணக்கில் தங்கி அவர்கள் அங்கே அவர்கள் களிமண்ணும் துணியும் சேர்த்து பிசைந்த தட்டிகளால் ஒரு கோட்டையையே கட்டியிருந்தார்கள். களிமண்ணை குழைத்து மர அச்சில் அழுத்தி மேலும் யானைகளையும் நந்திகளையும் செய்துகுவித்தார்கள். அவற்றுக்குக் காவலாக தடியுடன் பதினைந்துபேர் ஸ்டுடியோவிலிருந்தே கொண்டுவந்து அங்கே நிறுத்தப்பட்டார்கள்.
ஒரு சரித்திர சினிமாவுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதற்கு எல்லையே இல்லை. தலைப்பாகைகள், கச்சைகள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவகை. எங்கள் தையல் இலாகாவே கிறுக்கு பிடித்ததுபோல இயங்கிக்கொண்டிருந்தது. கலை இலாகா பத்து மடங்கு பெரியது. ஸ்டுடியோ ஓர் அரசாங்கம் என்றால் அவர்கள் அதற்குள் இன்னொரு அரசாங்கம் போல. அங்கே பொருட்களை பட்டியல் இட்டு கொடுத்து எண்ணிப்பார்த்து திரும்ப வாங்குவதற்காக மட்டுமே இருபது முப்பது ஊழியர்கள் இருந்தார்கள்.
நாங்கள் பண்ணைவீட்டுக்கு வந்த முதல் ஒருநாள் ஒரே குழப்பமாக, சந்தடியாக இருந்தது. ஒவ்வொருவரும் எதையோ ஒன்றை கேட்டுக்கொண்டு அலைந்தார்கள். சிலருக்கு இடம் கிடைக்கவில்லை, சிலருக்கு பைகளைக் காணவில்லை, சிலரையே காணவில்லை. ஆனால் அன்று அந்திக்குள் எல்லாம் எப்படியோ நுரை படிவதுபோல ஆங்காங்கே அமைந்துவிட்டன. பலர் படுத்துக்கொண்டு பயணத்தின் அலுப்பைப் பற்றிப் பேசத்தொடங்கினர். பலருக்கு பயணமே திகட்டிவிட்டிருந்தது.
எட்டுமணிக்கு ஆளுயர கேரியர்களில் இரவுச்சாப்பாடு வந்தது. கமலாப்பூரில் இருந்த அனைவருக்கும் சாப்பாடு ஒரே இடத்தில் செய்யப்பட்டது. அங்கிருந்து வேன்களிலும் லாரிகளிலும் கொண்டுவந்து பரிமாறினார்கள். முதல்நாள் வெறும் பருப்புசாதம் மட்டும்தான். அப்பளம் நமுத்திருந்தது. ஆனால் உருளைக்கிழங்கு வறுவல் இருந்ததனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். அன்று உருளைக்கிழங்கு ஒரு பெரிய ஆடம்பரம்.
சாப்பிட்டதுமே அத்தனைபேரும் ஆங்காங்கே விழுந்து தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப்பகுதியின் நில அமைப்பு ராயலசீமா போல. அள்ளிக்கொட்டிய பாறைக்குவியல்கள்தான் எல்லா பக்கமும். மரங்கள் குறைவு. ஆகவே தொடுவானம் வரை அலையலையாக கிடக்கும் மண்ணை பார்க்கமுடியும். பகலெல்லாம் கொடுமையான வெயில். ஆனால் மாலையானதும் மலைப்பாறைகள் நடுவே சீறிக்கொண்டு காற்றுவீசியது. அதில் வெந்த மணம்கொண்ட புழுதியும் சருகுத் துகள்களும் நிறைந்திருந்தது. முகத்தின்மேல் வேட்டியைப் போட்டுக்கொண்டு தூங்கவேண்டும். பலர் படுத்ததுமே குறட்டை விட்டனர். சிலர் வெற்றிலையை மென்றுகொண்டு மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.
நான் ஒருவழியாக எல்லாவற்றையும் ஒழித்து, அறையில் ஒரு பகுதியை புழங்குமிடமாக ஆக்கிக்கொண்டு, தரையில் பாயை விரித்து அதன்மேல் ஒரு கம்பளத்தை போட்டுக்கொண்டு தூங்குவதற்காக படுத்தபோதுதான் அந்த பண்ணையின் உரிமையாளராகிய ரங்கா ரெட்டி அவனுடைய ஆட்களுடன் வந்தான். பேச்சுக்குரல்கேட்டு நான் எழுந்து வெளியே வந்தேன்.
அவன் எருது போன்ற உடல்கொண்ட ஆள். அப்படி ஏன் தோன்றியது என்று அப்படி தோன்றிய பிறகுதான் புரிந்தது. அவன் கழுத்து மடிப்பு மடிப்பாக காளைபோல இருந்தது. கழுத்திலும் கன்னத்திலும் ஏராளமான பாலுண்ணிகள் மாடுகள் மேல் வண்டுகள் கவ்வியிருப்பதுபோல ஒட்டியிருந்தன. மிகச்சிறிய கண்கள். மீசையை நீவிக்கொண்டே பேசும் வழக்கம் அவனுக்கு இருந்தது. பத்துபவுனுக்கு மேல் எடைகொண்ட செயின் அணிந்திருந்தான். காதுகளில் வைரம் பதித்த கடுக்கன்கள்.
என்னிடம் அவன் எந்த முகமனும் இல்லாமல் கைசுட்டி “தெலுங்கு தெரியுமா?” என்று கேட்டான்.
“நான் ஓங்கோல்காரன்” என்று பதில் சொன்னேன். “என் பெயர் மோட்டூரி ராமராவ்.”
“ஓகோ… நம்ம ஆள்” என்று அவன் உரக்கச் சிரித்தான். அவனுடன் இருந்தவர்களும் புன்னகைத்தனர்.
“நான் இந்த பண்ணை உரிமையாளன். என்னை ரங்கா ரெட்டி என்பார்கள்” என்றான். திரும்பி தூங்குபவர்களைப் பார்த்தான். “எல்லாம் குறக்கூட்டம் போல இருக்கிறார்கள். எங்கே வேண்டுமென்றாலும் தூங்கிவிடுகிறார்கள்” என்றான்.
நான் மையமாக புன்னகைத்தேன்.
”இவர்களெல்லாம் அரவாடுகள்தானே?”
“இல்லை, பெரும்பாலும் எல்லாருமே மனவாடுகள்தான்”
“நம்ம ஆட்கள் இப்படி கஷ்டப்படுகிறார்கள்” என்றான். பின்னர் குரலை தாழ்த்தி “ஆண்கள் மட்டும்தானா? பெண்கள் இல்லையா?” என்றான்.
அவனுடைய நோக்கம் எனக்குப் புரிந்தது. நான் பொறுமையுடன் “இல்லை, எங்கள் குழுவில் ஆண்கள் மட்டும்தான்” என்றேன்.
“நிறைய பெண்கள் வருவார்கள் என்றார்களே… டான்ஸ் ஆடுவதற்கு பெண்கள் வேண்டுமே?” அவனால் எந்த உணர்வையும் ஒளிக்க முடியாது, அறிவின்மையே உருவான முகம்.
”எனக்கு அதெல்லாம் தெரியாது” என்று நான் சொன்னேன்.
”பெண்கள் வந்தார்கள். நானே பார்த்தேன். நிறைய அழகான பெண்கள். கொண்டையா பார்த்திருக்கிறான். அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?”
”தெரியாது, நானே இப்போதுதான் வந்தேன்” என்றேன்.
அவன் ஒரு பத்து ரூபாயை எடுத்து எனக்கு நீட்டி “வைத்துக்கொள்” என்றான்.
“இல்லை வேண்டாம்”
”பரவாயில்லை, இருக்கட்டும்” என்று அவன் கண்ணைச் சிமிட்டினான்.
“இல்லை, நான் வாங்குவதில்லை. நான் இந்த தையல் பகுதியின் உரிமையாளரின் மருமகன்” என்றேன். “இவர்களெல்லாம் என் ஊழியர்கள்”
“சரி, பரவாயில்லை” என்று அவன் அந்த ரூபாயை திரும்ப தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான். ”இங்கே பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டுவந்து என்னிடம் சொல்… அவர்களை எப்படி பார்ப்பது என்று சொன்னால் நான் உனக்கு நிறைய உதவிசெய்வேன்.”
நான் பேசாமல் நின்றேன்.
அவன் கண்களைச் சிமிட்டி சிரித்து “பெண்கள் இருக்குமிடமெல்லாம் உனக்கு தெரியாமலிருக்காது. நீ தையல்வேலை செய்கிறாய். அவர்களுக்கு அளவெல்லாம் எடுப்பாய்” என்றான்.
நான் அதற்கு இறுகிய முகத்தால் எதிர்வினை ஆற்றினேன்.
“உன் தொடர்பில் ஏதாவது நல்ல பெண் இருந்தாலும் சொல்… எல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நான் இந்தப்பகுதியின் ராஜா போல. கேட்டுப்பார் சொல்வார்கள்.”
“சரி” என்றேன், அவனை போகவைக்க விரும்பினேன்.
அவன் “வருகிறேன்” என்று கிளம்பிச் சென்றான். நான் அவனுடைய நடையைப் பார்த்துக்கொண்டே நின்றேன். எருதுநடை. ஒரு மனிதன் வெறும் மாமிசத்தால் மட்டுமே ஆனவன் என்றால்தான் அப்படித் தெரிவான். அத்தகையவர்களை நான் சினிமாவில் நிறையவே பார்த்திருக்கிறேன். அவர்கள் மாமிசமல்லாமல் வேறேதும் அல்ல. ஆகவே அவர்களுக்கு மாமிசம் மீது அவ்வளவு வெறி. மாமிச உணவு, பெண்களின் சதை.
குமட்டல் எழுவதுபோலிருந்தது. திரும்ப சென்று படுத்துக்கொண்டபோது நீண்டநேரம் எனக்கு தூக்கம் வரவில்லை. வெளியே வெந்த காற்று கொதிக்கும் பாறைகளின் மேல் பரவி ஊடுருவி ஊளையிடுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.
[மேலும்]
கவிதை உரைகள்- கடிதம்
அன்புநிறை ஜெ,
லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையை மீண்டும் மீண்டும் கேட்டேன். மதார் கவிதை உரையில் ஒரு புதிய கவிதைத் தலைமுறையை அடையாளம் காட்டி, அதன் பேசுபொருள் எப்படி உருமாறி வந்திருக்கிறது என்று விளக்கினீர்கள். ஒரு இரும்புகுண்டை சுமந்தலைவது போன்ற அழுத்தத்தில் இருந்த தலைமுறையில் இருந்து இறகுபோன்ற மிதந்தலையும் எடையின்மையை கவிதை எப்படி வந்தடைந்திருக்கிறது என்று தொடங்கி கவிதையில் தத்துவப்படுத்துதல், வரையறை செய்தலில் இருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியைப் போல மாறும் தன்மையை சுட்டியிருந்தீர்கள். தான் சென்று படிய வேண்டிய இடத்தை பிரபஞ்ச விதிக்கு விட்டுவிடும் இறகு, காற்றின் அடையாளமாக, பிரதிநிதியாக மாறி விடுகிறது என்பது மிக அழகான சித்திரம்.
அந்த எடையின்மையைக் கொண்ட தலைமுறையின் கவிதைகளில் இரண்டு வகைகள்; அதில் முதல் வகைக் கவிதைகளில் லஷ்மி மணிவண்ணன் அவர்களின் ஆரம்ப காலக் கவிதைகளின் மீறல் எனும் அம்சத்தை சுட்டி, இரண்டாம் வகைக் கவிதைகளில் அந்த எடையின்மையின் வெறுமை தரும் துயர் கூட இல்லாத கவிதைகளில் மதார் கவிதைகளைச் சொல்லியிருப்பீர்கள்.
அங்கு பேசிய உரையின் அறுபடாத தொடர்ச்சி போல, அங்கு கிளையில் அமர்ந்து சிறகு விரித்து படபடத்த பறவை, சட்டென்று விண் ஏகியது போல இந்த ‘விஜி வரையும் கோலங்கள்’ கவிதை வெளியீட்டில் நிகழ்த்திய உரை இருந்தது. மொத்த உரையும் கவிதை வெளியில் ஆன்மீகம் எனும் ஒட்டுமொத்தத்தைக் காணும் வகையில் விண்ணில் பறக்கும் கருடநோக்கோடும், அதன் ஒவ்வொரு துளியையும் மிகச் சரியாக தொட்டுச் செல்லும் கூர்த்த பார்வையோடும் இருக்கிறது.
எடையின்மையின் முதல் வகைமையில் ஆரம்ப காலத்தில் அதன் வெறுமையை, ஒரு மீறலைப் பேசிய கவிஞனின் கவிதைகள் ஆன்மீகத்தால் தொடப்பட்டு கனிவு கொண்டு இப்போது மிளிர்வதைத் தொட்டுக் காட்டியது இவ்வுரை. ஆன்மீகம் நோக்கித் திரும்பும் கவிஞன் சந்திக்கும் தடைகள் என்ன, ஆன்மீகத்திலிருந்து கவிதை அடைவதென்ன என்பதான இந்த உரையின் பேசுபொருளுக்கு இதற்கு முன்னர் முன்னோடிகள் உண்டா என எனக்குத் தெரியவில்லை. துல்லியமாக அடையாளம் காட்டப்பட்ட நான்கு விதமான முரண்கள், அதைச் சொல்ல சரளமாக வந்து விழும் படிமங்கள்: ஓடெனும் சிறையோடு பிறந்துவிட்ட ஆமை – முட்டையிலிருந்து வெளியேறியது முதல் விண்ணை அளக்கும் சிறகுகள் கொண்ட பறவை,தானே வகுத்துவிட்ட பாதையை மீறாத நதி – கட்டற்றுப் பரவும் சிற்றோடை என ஆன்மீகத்துக்கும் கவிதைக்குமான முரண்களைச் சொல்லும் படிமங்கள். மாம்பிஞ்சிலே துவர்த்ததை, காயிலே புளித்ததைக் இனிமையாகக் கனிய வைக்கும் பரிணாமமாகக் கவிதையில் ஆன்மீகம் வருகிறது என்று தன்னியல்பாக ஆன்மீகம் மலரும் தருணத்தைச் சொன்னது ஒரு உச்சமாக இருந்தது. ஒரு கவிதை எங்கு தொடங்கி, எவ்விதம் ஒளியேற்று ஒளிர முடியும் என்பதன் அழகிய விளக்கங்களாக இந்த இரண்டு உரைகளை இணைத்து புரிந்து கொள்ளலாம்.
ஒரே ஒரு நல்ல கவிதையையேனும் என்னால் எழுத முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால் அது போல கவிதையில் உள்ளொளியாக மிளிரும் ஒரு ஆன்மீக கணத்தைத் தொட்டுணர முடியும் என நினைக்கிறேன்.
மிக்க அன்புடன்,
சுபா
விசை,படையல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விசை. புறத்தில் வாழ்க்கை மாறிக்கொண்டிருந்தாலும் உள்ளத்தில் விசைக்கொண்டு நிரப்ப வேண்டிய இடைவெளி இருந்து கொண்டிருக்கிறது.
ஓலைக்காரி தன் உதடுகளில் உரைந்திருந்த சொல்லை தான் ஓலைகளில் முடைந்தாள். அழுதோ சொல்லி தீர்க்கவோ முடியாத இடைவெளி. அடிமையில் இருந்து மீட்பது போல் மீட்டு மீண்டும் சிறைபடுத்திய ஒன்றின் மீதான விசை. ஊழ்க்கு எதிரான இயற்கை எனும் பிரம்மாண்டத்துக்கு எதிரான விசை அது. தனெக்கென உள்ளம் ஒன்று கொண்ட பனைக்கு எதிரான விசை. இறங்கி ஓடியிருந்தால் இறப்பதுவரை ஓடும் விசைதான் ஒலை முடைந்த விசை.
ஓலைக்காரி முடைந்தது சாம்பலானாலும் பிரியாத நெருக்கம் ஒன்றை. காட்டை நிரப்பும் மனதொன்றின் வேகம் என்பது நீங்கள் குறிப்பிடும் குமரகுருபரனின் கவிதை வரி.
நேசையனும் தன் அம்மையின் இடைவெளியை நிரப்பதான் ஓலை எடுத்து சொல்கிறானோ என்னவோ. இவனது சற்று தணிந்த விசை.
நன்றி
பிரதீப் கென்னடி
***
அன்புள்ள ஜெ
விசை கதையை நான் என் அம்மாவின் நினைவுடன் படித்தேன். எனக்கு பத்துவயது இருக்கையில் அப்பா இறந்தார். உறவினர்கள் எவரும் உதவவில்லை. கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. பியூன் கேடர் வேலை. வழங்கல்துறையில்.
அம்மா தன்னந்தனியாக எங்களை வளர்த்து படிக்கவைத்தாள். நாங்கள் வேலைக்குச் சென்று திருமணமாகி செட்டில் ஆனபிறகும் அம்மா கடுமையாக உழைத்துக்கொண்டேதான் இருந்தார். ஓய்வுபெற்றபின்பும் கொஞ்சநாள் தொகுப்பூதிய வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். பணத்துக்காக அல்ல. அந்த மனோவேகம் அடங்கவில்லை. பணம் சேர்த்து பேரப்பிள்ளைகளுக்கு கொடுத்தார். சட்டென்று இறந்துபோனார்.
அக்ரெஸிவ் என்பது ஒரு பண்புநலன் இல்லை. அது ஒரு ஆழமான நிறைவில்லாமையில் இருந்து வருவது. அக்ரஸிவானவர்கள் இந்த உலகை விட்டுவிடவே முடியாது
விசையின் ஓலைக்காரியும் சரி எச்சத்தின் பெருமாள்நாடாரும் சரி ஒரே வார்ப்புகள்தான்
சக்தி குமார்
படையல் [சிறுகதை]அன்புள்ள ஜெ,
இருபத்தைந்து கதைகளில் ஐந்து கதைகள் ஒரே வார்ப்பு கொண்டவை. யட்சன், கந்தர்வன், படையல், எரிசிதை, திரை. ஐந்தும் சேர்ந்தால் ஒரு நாவலாகவே ஆகிவிடுமென நினைக்கிறேன்.
இவை எல்லாமே ஒரே விஷயத்தைச் சொல்கின்றன. அந்தக்காலத்தின் அராஜகம், வன்முறை. அவற்றை தாண்டிச்செல்லும் அகவல்லமையையே இவற்றின் உச்சங்கள் காட்டுகின்றன அந்த ஸ்பிரிச்சுவல் வலிமையின் உச்சம் தாயுமானவரும் எறும்பு பாவாவும்தான். ஒரே நூலாகக்கூட இவற்றை தொகுக்கலாம்
எம்.அப்துர் ரஹீம்
***
அன்புள்ள ஜெ,
படையல் கதை பதினேழாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. முதுநாவல் கதையும் பதினேழாம் நூற்றாண்டுதான். இந்தப் பதினேழாம் நூற்றாண்டு ஒரு முக்கியமான காலகட்டம் என நினைக்கிறேன். இந்தக் காலகட்டத்திலேதான் தமிழகம் முழுக்க இன்றிருக்கும் பெரும்பாலான சூஃபிகள் உலகுக்கு அறிமுகமாகிறார்கள்.
விரிவான இஸ்லாமிய படையெடுப்பும் பூசல்களும் நடந்த காலகட்டம் இது. கூடவே இஸ்லாமிய மெய்ஞானம் மற்ற மெய்யியல்களுடன் உரையாடியது. அதன்விளைவாக உருவான சமரச ஞானமே சூஃபி மரபு. மேல்தளத்தில் போரும் அடித்தளத்தில் இந்த மெய்ஞானமும் இங்கே விளைந்தன.
இன்றைக்கும் அப்படியொரு சூழல் மேலே நிகழ்கிறது. அரசியலில் அந்த கசப்புகள் உள்ளன. ஆழத்தில் அவ்வாறு ஒரு மெய்ஞானம் விளைந்தால் நன்றாக இருக்கும். அந்த ஏக்கமே இந்தக்கதையிலும் உங்களிடமிருந்து வெளிவருகிறது என நினைக்கிறேன்.
ஜே. அப்துல் ரசாக்
***
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதைவிஷ்ணுபுரம் விழா- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். கோவிட்-19 காலத்திற்கு முன்னெரெல்லாம், ஆறு மாதங்களுக்கு முன்னரே விஷ்ணுபுரம் விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட்டிற்குப் பதிவு செய்துவிட்டு நானும் ராதாவும் காத்திருப்போம். 2020-ல் எங்கள் வீட்டில் நடந்த கல்யாணத்தையும் சரி, விஷ்ணுபுரம் விழாவையும் சரி யூடுயூப் லைவில்தான் பார்க்கவேண்டிய நிலைமை. பரவாயில்லை, நேரில் வந்து க்விஸ் செந்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் பல்பு வாங்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. இப்பொழுது நிறைய நண்பர்களை அணுக்கமாகத் தெரியும் என்பதால், அநியாயத்திற்கு வெட்கப்படவேண்டியதாக இருந்திருக்கும்.
விழாவில் எல்லொரையும் கலர் கலர் தாடியுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. எல்லோரும் பேசும்பொழுது விழாவிற்கான மகிழ்வுடன் இருந்ததை உங்கள் கண்கள் காட்டின. இல்லையென்றால், நான் என்ன சொல்லியிருப்பேன் என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளவும்.
நான் நீண்ட நேரம், நிகழ்வைத் தொகுத்து வழங்குபவர் சுஷில் குமார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எதற்கும் கேட்டு அறிந்துகொள்ளலாம் என்று காளிப்ரசாத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ‘சார், அவர் கோவை நரேன் சார்’ என்றார். “சரி, அவருக்கு கண்ணு நல்லா இருக்கும்போல” என்று நம்பிக்கொண்டேன்.
ரேஷனலாக இருக்கும் மனிதனையும் பொருளாதாரத்தையும் சொல்லும் பிஹேவியரல் எகானாமிக்சை விளக்க ஆரம்பித்து, சுரெஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகளைப் பற்றி சுனீல் கிருஷ்ணனின் உரை மிக்க கச்சிதமாக இருந்தது. காற்றினிலே வரும் கீதம் பாடும் பெண், தெலுங்கு கீர்த்தனையை பாடுவதால் வாழ்வு மாறும் கதையையும், எம்ஜிஆர் படம் ஸ்க்ரிப்ட் போல் இருக்கும் அவரது அறிக்கை கதையையும் சொல்லி முழு விமர்சனத்தை எட்டு நிமிட உரையில் வைத்துவிட்டார். இது, நகுலனுக்கு, கா.நா. சு-விற்கு, புதுமைப்பித்தனுக்கு கொடுக்கவேண்டிய பரிசு என்று உங்கள் கண்கள் கணிவுடன் சொல்வதை கேமரா அழகாகப் படம் பிடித்திருந்தது. பேய்ச்சி நாவல் பற்றி பேசிய அருண்மொழி ஜெயமோகனைக் குறிப்பிட்டு சொல்லி, இனிமேல் எழுதும் சில படைப்புகளை கொஞ்சம் வர்ணனைகளுடன் எழுதுகிறேன் என்று சொன்ன, மாற்றத்திற்கும், கற்பதற்கும் என்றும் தயாராக இருக்கும் விழா நாயகனின் ஆளுமைக்குத் தலைவணங்குகிறேன்.
தற்செயலின் வரைபடம் என்ற ஆவணப்படத்தின் தலைப்பே விருது பெறுபவரின் கதைகளின் தன்மையை அழகாக சொல்கிறது. ந. முருகேஷ பாண்டியன், சுனீல் கிருஷ்ணன், நீங்கள், என அனைவரும் பேசியது என்னவோ சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் படைப்புகளைப் பற்றித்தான், பார்ப்பவனுக்கு, படத்தின் தலைப்பிற்குத் தகுந்தாற்போல் பேசுங்கள் என்று கேட்க நீங்கள் அனைவரும் பேசியதுபோல் இருந்தது. அவரது குழந்தைகளும், அவரது படைப்புகளை பெயர் சொல்லி புரிதலுடன் பேசியது சிறப்பு. கலைஞனை சொந்த வீட்டினர் புரிந்து வைத்திருப்பது ஒரு கொடுப்பினை.
தலைப்புதான் அப்படி என்றால், ராஜன் சோமசுந்தரத்தின் இசையைக் கூர்ந்து கவனித்தால், சென்ற வருடம் விருது பெற்ற ‘அபி’யின் ஆவணப்படத்திற்கும், இந்த ஆவணப்படத்திற்கும் பின்னனி இசையில் அவர் காட்டியிருக்கும் வேறுபாடு தெரிகிறது. அந்த வேறுபாடு படைப்பாளிகளின் படைப்பின் தன்மையை அவர் இசையிலேயே உணர்த்துவதால். அத்வைதம் பேசிய அபியின் கவிதைகளைச் சொல்ல ராஜனுக்கு தேவையாக இருந்த இசைக்கருவிகள், தற்செயலின் வரைபடத்தை வரையும் கதையைச் சொல்லும் சுரேஷ்குமார் இந்திரஜித் கதைகளுக்குத் தேவையில்லை. சமகாலக்கதைகளைச் சொல்லுபவரின் ஆவணப்படத்திற்கு அவர் சமகால இசைக்கருவிகளை மட்டுமே உபயோகித்துள்ளார். இசையும் இலக்கியமும் அறிந்த ஒருவர், விருது பெறுபவரின் படைப்புகளை வாசித்துவிட்டு, ஆவணப்படத்திற்கு இசையை அமைப்பதால், வரம் பெறுவது பார்வையாளன்தான்.
விருது பெறும் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
விழாவினை ஏற்பாடு செய்து குறைவான நண்பர்களுடன், நிறைவாகச் செய்ததற்கும், பாதுகாப்பு உணர்வுடன் நடத்தியதற்கும், விழாக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்!
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
அன்புள்ள சௌந்தர்
விஷ்ணுபுரம் விழா நிறைவாக நடைபெற்றது- சிறப்பாக என்று சொல்லமுடியாது. ஆண்டில் மூன்றுநாள் சந்தித்து தழுவி பேசி மகிழ்வது அவ்வாண்டு முழுக்க நீடிக்கும் ஒரு நினைவு, செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல். அது இந்த ஆண்டு இல்லை.
சென்ற மே மாதம் ஊட்டி குருகுலத்தில் குருநித்யா முகாம் நிகழவில்லை. இவ்வாண்டு நடத்தலாமென நினைக்கிறேன். பார்ப்போம்.
ஜெ
விஷ்ணுபுரம் விருது விழா-2020 விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள் விஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…April 2, 2021
அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-3
[ 3 ]
அன்று அவளைப் பற்றி அவள் தோழி சொல்லி கேள்விப்பட்டபோது பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் திரும்பி வரும்போது இயல்பாக சிந்தனை அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, எங்கெங்கோ சென்று தொட்டுக்கொண்டு வந்தபோது முற்றிலும் ஒவ்வாத ஒன்றை தொட்டு விதிர்த்து துடித்து நின்றுவிட்டது. அது ஒரு காட்சி. முற்றிலும் கற்பனை. ஆனால் பிறிதொரு முறை நான் எண்ணிக்கூட பார்க்க விரும்பாதது.
நான் கிட்டத்தட்ட ஓடினேன். மூச்சிரைக்க பாய்ந்துசென்று தைக்கப்போட்டிருந்த துணிக்குவியல்கள் மேல் விழுந்தேன். அவற்றை அள்ளி என் மேல் போட்டுக்கொண்டு என் தலையை புதைத்துக்கொண்டேன். வலிகொண்டவன் போல புரண்டு நெளிந்தேன். நெஞ்சில் அறைந்துகொண்டு அலறி அழவேண்டும் என்று, தலையை எங்காவது முட்டிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் அங்கே வீசியெறியப்பட்டவனாகக் கிடந்தபடி கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்.ஓசையற்ற குளிர்ந்த கண்ணீர்.
நான் நாட்கணக்கில் தூக்கமில்லாமல் தவித்தேன். எனக்கு இதெல்லாம் இப்படியெல்லாம்தான் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் இவள் அப்படியல்ல என்று நினைத்தேன். அதற்கு கற்பனை அன்றி வேறு அடிப்படையே இல்லை. முதல் நிலைகுலைவுக்குப் பின்பு அவள்மேல் கடுமையான எரிச்சலும் கசப்பும்தான் வந்தது. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், செத்து தொலைந்தால் என்ன? இதற்கு அப்பாலும் ஏன் உயிருடன் இருக்கவேண்டும்?
அவளை வெறுத்து வெறுத்து மனதுக்குள் பேசிக்கொண்டேன். அவளை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் சந்தித்து அவமானப்படுத்துவதை பகற்கனவில் துளித்துளியாக நடத்திக்கொண்டிருந்தேன். வார்த்தைகள் பெருகிப்பெருகி மண்டை விம்மியது. எவரிடமாவது பேசியாகவேண்டும் என்ற நிலை வந்தது. இல்லாவிட்டால் கிறுக்கு பிடித்துவிடும். ஆனால் எப்படி எவரிடம் எதைச் சொல்வது?
மாலை நரசிங்க ரெட்டியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இயல்பாகப் பேச்சை இந்தப் பெண்களைப்பற்றி கொண்டுசென்றேன். நாங்கள் பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தோம். அவன் எப்போதுமே தெலுங்கானா புரட்சியை தொட்டுத்தான் பேசுவான்.நையாண்டியும் சீற்றமும் தகவல்களுமாக பொழிந்துகொண்டே இருப்பான்.
அவ்வழியாக ஒருத்தி சென்றாள். அவளைப் பார்த்தபின் “இவர்கள் எல்லாம் ஏன் இதற்கு வருகிறார்கள்?” என்றேன்.
“தானாக வருகிறவர்கள் ஒருவர்கூட இல்லை, அத்தனைபேரையும் அம்மா அப்பா தாய்மாமன் யாராவது இங்கே கொண்டுவருகிறார்கள்”என்றான் நரசிங்க ரெட்டி.
“அவர்கள் வேறுதொழில் செய்கிறார்கள் என்றால் இங்கே ஏன் வரவேண்டும்?” என்றேன். ஆனால் அதை கேட்கும்போது என் குரலில் வெறுப்பு வெளிப்படவில்லை. அது விசித்திரமாக நடுங்கியது. பார்வையை தாழ்த்தி நிலம் பார்த்துக் கொண்டிருந்தேன். சீற்றம் போதவில்லையா என்று தோன்றியதும் “வேசிகள்” என்றேன்.
“பாவம்”என்று நரசிங்க ரெட்டி சொன்னான்.
நான் என் சீற்றம் கொஞ்சம் மிகையோ என உடனே உணர்ந்தேன். அதைச் சமாளிக்கும்படியாக “சினிமாத் தொழிலையே கேவலமாக ஆக்கிவிடுகிறார்கள். நாலுபேரிடம் சொல்லவே கூச்சமாக இருக்கிறது” என்றேன்.
நரசிங்க ரெட்டி “பாவப்பட்ட பெண்கள்”என்றான்.
”இவர்களை இதிலிருந்து திருப்பி வேறுவேலைக்கு அனுப்பவேண்டும்”என்றேன்
“அவர்கள் வரமாட்டார்கள்” என்று நரசிங்க ரெட்டி சொன்னான் ”அவர்களில் இதை முழுநேரத் தொழிலாக செய்பவர்கள் கொஞ்சம் வயதானவர்கள். சின்னப்பெண்கள் எல்லாருமே ஹீரோயின் ஆகிவிடலாம் என்றுதான் வருகிறார்கள். அதைச் செய்வதாக இருந்தால் ஏன் இங்கே வந்து லைட்டில் நின்று கறுப்பாகவேண்டும்?”
“உண்மையாகவா?” என்றேன்.
“பேசிப்பார், ஒருத்தி மிகச்சுமாராக இருப்பாள். ஆனால் அவள் கூட ஹீரோயின் ஆகிவிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பாள்.இப்போது அவள் படும் கஷ்டமெல்லாம் அதற்காகத்தான் என்று நினைப்பாள். அவளைவிட அவள் அம்மாவும் அப்பாவும் தாய்மாமனும் உறுதியாக நம்பிக்கொண்டிருப்பார்கள்”
எனக்கு அது உண்மை என்று தோன்றியது. ஆனாலும் “அவர்களுக்கு ஒருபோதும் தெரியாதா?”என்றேன்.
“வயது கடந்து போவதுவரை தெரியாது… அவர்களிடம் பேசி உண்மையை புரியவைக்க முயன்றால் அவர்களே அதையெல்லாம் ஏற்கனவே யோசித்து அதற்கான நியாயங்களை சேர்த்து வைத்திருப்பார்கள். எஸ்.ஆர்.ராஜகுமாரி நல்ல கறுப்பு நிறம். அவள் பெரிய ஹீரோயின் ஆகவில்லையா என்பார்கள். எஸ்.ஆர்.ராஜகுமாரிமேல் ஃபோட்டோ ஃபிலிம் டெவெலெப் செய்யும் சில்வர் நைட்ரேட்டை மேக்கப் போல பூசி படமெடுத்தார்கள் என்பார்கள். உண்மையாக இருக்கலாம். ஒரு வெள்ளைக்கார டைரக்டர் அப்படிச் செய்தானாம். வெள்ளிபூசப்பட்டது போல இருப்பாள்.படத்தில் லைட் அடிக்கும்போது அவள் பளபளவென்று தெரிவாள். ஆனால் பிற்பாடு தோல்நோய் வந்துவிட்டது”
நான் பேச்சை திசைதிருப்ப விரும்பவில்லை “இதெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது?”என்றேன்.
“உண்மையைச் சொல்லப்போனால் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. போனவாரம் என் சொந்தக்காரன் ஒருவன், இங்கே பஞ்சாலையில் வேலை பார்ப்பவனை பார்த்தேன். அங்கே வேலைசெய்யும் பெண்களின் நிலைமையும் இதுதான்… ஸ்வப்னதாராவுக்காக ஒரு டீ எஸ்டேட்டுக்கு போயிருந்தோமே, அங்கே என்ன நடக்கிறது? ஆபீஸ்களில்கூட பெண்களை விட்டுவைக்க மாட்டார்கள்”
“அவர்கள் தப்பவே முடியாதா?” என்றேன். என் கசப்பு மறைந்து ஒரு ஆற்றாமை வந்துவிட்டிருந்தது.
“முடியும்… பாம்பேயில் எல்லாம் டிரேட் யூனியன் வந்துவிட்டது. அதெல்லாம் இங்கேயும் வரவேண்டும். ஏதாவது தப்பு நடந்தால் எல்லாரும் சேர்ந்து வேலையை நிறுத்திவிடவேண்டும். முதலாளிக்கு நஷ்டம் வந்தால் கையை நீட்டுகிறவன் கையைத்தான் முதலில் ஒடிப்பார்… இல்லை நாமே ஒடிக்கக்கூட முடியும். எல்லா தொழிலாளர்களும் ஒன்றாய்ச் சேர்ந்தால் அது நடக்கும்”
“அதெல்லாம் நடக்கிற காரியமா என்ன?”
“நடக்கும். நடக்கத்தான் போகிறது. அன்றைக்கு நமக்கெல்லாம் சம்பளம் இப்படி ஐந்து பத்து என்று கெஞ்சி மன்றாடி வாங்குகிறதுபோல் இருக்காது… மாதம் பிறந்தால் சரியாக கைக்கு வந்துவிடும்”
நான் புன்னகை செய்தேன்.
“நீ சிரிக்கிறாய், எனக்கு நம்பிக்கை இருக்கிறது”என்றான் நரசிங்க ரெட்டி.
ஆனால் அதன்பின் எனக்கு மனம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. அவன் சொன்னதில் ஆறுதலடைய ஒன்றுமே இல்லை, ஆனால் பேசியதனாலேயே அது சின்ன விஷயமாகிவிட்டது. ஒன்றை நாம் உள்ளே இருந்து வெளியே எடுத்தாலே மிகவும் சிறிதாகிவிடுகிறது.
நான் அவளுக்காக துணியை வைத்துத் தைப்பதா என்று யோசித்தேன். அதைப் பற்றியே யோசிக்க யோசிக்க வேண்டாம் என்றுதான் தோன்றியது. ஒன்றை யோசித்தால் அது எப்படியோ பேச்சில் வெளிப்படுகிறது. அது எப்படியும் அனைவருக்கும் தெரிந்துவிடும். வம்பர்கள் நடுவே வாய்ப்பேச்சு ஆகும். இங்கெல்லாம் ஒரு வதந்தி கிளம்பினால் மிக விரைவில் பரவும் “வதந்தி சொறி மாதிரி… நெரிசல் இருந்தால் வேகமாகப் பரவும்”என்று நாகலிங்க ஆசாரி சொல்வான். வதந்திக்குப்பின் நம்மால் யாரிடமும் எதுவும் சொல்லி விளக்க முடியாது.மக்கள் வதந்திகளை நம்பவே விரும்புவார்கள்.
ஆனால் அத்தனை யோசித்தாலும் இறுதியில் நான் அவளுக்காக ஆடையை தனியாக தைக்கத்தான் செய்தேன். அடியில் பழைய பருத்தித்துணி வைத்து தைத்து அதைச் சுருட்டி நீலரிப்பனால் கட்டி துணிகளுக்கு நடுவே போட்டுவைத்தேன். அந்த பொட்டலம் தையல் இலாகாவிலிருந்து செட்டுக்குச் சென்றபோது களைப்பாக உணர்ந்தேன். நெடுந்தொலைவு ஓடிவிட்டு வந்து அமர்ந்ததுபோல. ஒரு காதல் கடிதத்தை தபாலில் சேர்த்ததுபோல. திரும்ப மீட்கமுடியாத எதையோ செய்துவிட்டது போல.ஓடிப்போய் அதை திரும்ப எடுத்தாலென்ன என்றுகூட தோன்றியது.
ஆனால் அந்த துணியை வைத்துத் தைக்கும்போது அப்படி ஒரு பரவசத்தில் இருந்தேன். ஒரு திருட்டுத்தனத்தைச் செய்யும் கிளர்ச்சிதான் முதலில் இருந்தது. பின்பு மெல்ல மெல்ல மனம் கற்பனைகளை வளர்த்துக்கொண்டது. அந்த ஆடையை அவள் அணிவதை, அணிந்து எனக்கு வந்து தன்னை காட்டுவதை, அவளுடைய நீண்ட கண்களின் ஓரப்பார்வையை, இறுக்கமான முகத்தில் வரும் மெல்லிய புன்னகையை எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்த ஆடை அவள் உடலே என்று ஆயிற்று. நான் அதை தொட்டு வருடிக்கொண்டிருந்தேன். உள்ளம் கனிந்து புன்னகையுடன் தைத்தேன். “என்ன சிரிப்பு?”என்று தண்டபாணி அண்ணன் அதைப்பார்த்து கேட்கும்படி ஆயிற்று.
அதை அவள் போட்டிருக்கிறாளா என்று பார்ப்பதற்காக அவள் நடிக்கும் செட்டுக்கு போனேன். ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் வந்தபோது விழிகள் என்னை தேடுகின்றனவா என்று பார்த்தேன். இல்லை, அது சற்று ஏமாற்றத்தை அளித்தது. இன்னும் கொஞ்சம் முன்னால் சென்று நின்றேன். அவள் நன்றாகப் பார்க்கும்படி நின்றேன். அவள் என்னைப் பார்த்ததாகவே தெரியவில்லை.
ஷாட் முடிந்ததும் அவள் அமர்ந்திருக்கும் இடத்தருகே சென்றேன். அவள் தோழிதான் என்னை அடையாளம் கண்டாள். அவள் சுட்டிக்காட்டிய பின்னரே ஸ்ரீபாலா அடையாளம் கண்டாள். மிகக்குறைவான புன்னகை ஒன்றை அளித்தாள். கண்களில் எச்சரிக்கையோ ஆர்வமோ ஏதுமில்லை. அதே பாதிமூடிய இமைகள், தழைந்த பார்வை, சிறு சிணுங்கல் கொண்ட உதடுகள். மேலுதட்டில் வியர்வையின் மினுமினுப்பைக் கண்டேன்.
“எப்படி இருக்கிறது?”என்றேன்.
“நன்றாக இருக்கிறது… இங்கே மட்டும் கொஞ்சம் பிரிந்திருக்கிறது… கையை அசைக்காமல் வைத்திருக்கிறேன்”என்றேன்.
“எங்கே?”என்றேன்.
அவள் தன் விலாவை காட்டினாள். அங்கே தையல் பிரிந்திருந்தது. அது தையலின் பிழை அல்ல. அவள் மார்புகளுக்கு அவள் அளவை விட பெரிய பேட் வைத்திருந்தார்கள்.
நான் நினைத்து முடிப்பதற்குள் அவள் தோழி “பெரிதாக பஞ்சை கொண்டுவந்து அடைத்துவிட்டார் நாயிடு”என்றாள். “இரண்டு பெரிய பப்பாளி மாதிரி இருக்கிறது…”
நான் பார்வையை விலக்கிக்கொண்டேன். “கழற்றிக்கொடுங்கள், நான் தையல்போட்டு தருகிறேன்”என்றேன்.
“கழற்றுவதா? நல்ல கதை. எப்போதுவேண்டுமென்றாலும் கூப்பிடுவார்கள். அப்படியே தைப்பதுதான் வழக்கம்”என்றாள் தோழி.
“அப்படியேவா?”என்றேன்.
அவள் “சாமி”என்று சாமிராஜை கூப்பிட்டான். அசமஞ்சமான தையல் உதவியாளன் ஓடிவந்தான்.
“கொஞ்சம் பிரிஞ்சிருக்கு பாரு”
அவன் “ஆமா”என்றபடி தையல் ஊசியை எடுத்து தைக்க ஆரம்பித்தான். அவள் கையை தூக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
நான் பார்வையை விலக்கிக்கொண்டு அவள் தோழியிடம் “உங்கள் பெயர் என்ன?”என்றேன்.
“நாகலட்சுமி…இவளுடைய பெயர் விஜயலட்சுமி. எங்களூரில் எல்லா பெண்களும் ஏதோ ஒரு லட்சுமிதான்”
“நீங்கள் குண்டூரா?”என்றேன்.
“அய்யே, இல்லை. நாங்கள் இரண்டுபேருமே ராஜமந்த்ரி… நீங்கள்? ”
“நான் ஓங்கோல்…”என்றேன்.
“உங்கள் தெலுங்கைக் கேட்டதுமே தோன்றியது”
சாமி தைத்து முடித்தான். அந்த தையலை நான் போட்டேன் என்பதுபோல என் நரம்புகள் எல்லாம் அதுவரை உச்சத்தில் இருந்தன. அவன் சென்றதும் நான் தளர்ந்தேன்.
“நான் வருகிறேன்”என்றேன்.
அவள் அதே அரைப்புன்னகையுடன் தலையசைத்தாள். வேறெங்கோ வேறேதோ எண்ணி ஆழ்ந்திருப்பதுபோன்ற ஒரு பாவனை, புன்னகை.
அவள் என்னை நினைக்கவில்லை, அடையாளம்கூட காணவில்லை. அது எனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கவேண்டும். ஆனால் நான் ஏனோ புன்னகை புரிந்து கொண்டிருந்தேன். புன்னகையுடனேயே தையல்கொட்டகைக்கு வந்தேன்.
“என்னய்யா தம்முடு?”என்றார் கோதண்டராமன்.
“ஒன்றுமில்லை”என்றேன்.
“இந்தப் புன்னகைக்கு ஒரே அர்த்தம்தான். தம்முடு சீனி தின்ன ஆரம்பித்துவிட்டான்” என்றார் கோதண்டராமன்.
அத்தனைபேரும் சிரித்தார்கள்.
“என்ன ராமுடு?” என்றான் சித்தலிங்கையா.
நான் முகம் சிவந்து “என்ன பேசுகிறீர்கள்? சும்மா, உளறக்கூடாது. நான் நரசிங்கனிடம் ஒரு விஷயம் பேசிவிட்டு வருகிறேன்”
“தம்பி, நீ ஆளே பூத்துவிட்டாய்… அப்படி ஒரு தேஜஸ் வந்துவிட்டது. இது வேறு ஒன்றுமே அல்ல, அதுதான். அது மட்டும்தான்”
“கிறுக்குத்தனமாகப் பேசக்கூடாது” என்றேன். என் குரல் உடைந்து ஒலித்தது.
“டேய் சிட்டிபாபு பாருடா, இது அதுதானே?”
“அதே தான் சந்தேகமே இல்லை” என்றான் சிட்டிபாபு. “நாம் எவ்வளவு பார்த்திருக்கிறோம். பௌர்ணமி என்று தெரிய வானைப் பார்க்க வேண்டுமா என்ன?”
அது சங்கமித்ரா படத்தின் வசனம். நான் எரிச்சலுடன் தையல் எந்திரத்தை மிதித்துக் கொண்டிருந்தேன்.
“ஆகா, நம் கொட்டகையில் ஒருவன் சீனி தின்று எவ்வளவு நாளாயிற்று?”
“மணம் மட்டும் கிடைத்ததா, இல்லை சாப்பாடே ஆயிற்றா?”
”மணம் மட்டும்தான் இது. சாப்பாடு என்றால் முகம் வேறுமாதிரி இருக்கும்”
ஆனால் உண்மையில் அந்தச் சிரிப்பும் கேலியும் எனக்குப் பிடித்திருந்தது. நான் எனக்குள் புன்னகைத்துக்கொண்டு, அது தெரியக்கூடாது என்று முகத்தை இறுக்கியபடி தைத்துக் கொண்டிருந்தேன்.
காதல்களை நான் அதன்பிறகு நிறையவே பார்த்திருக்கிறேன். காமவிசை கொண்டு தவித்து, காமத்தின் இன்னொரு வடிவமாக காதலை அறிபவர்கள்தான் பெரும்பகுதி. அவர்களுக்கு காதல் என்பது உடலில் உள்ளது. ஓரிரு உடலுறவுகளில் அவர்கள் அதை கடந்துவிடுவார்கள். நினைவில்கூட நீடிக்காமலாகிவிடும். இன்னொருசாரார் ஆணவத்துக்காக காதலிப்பவர்கள். வென்றெடுப்பதற்காக, பிறரிடம் காட்டிக்கொள்வதற்காக, அந்தப் பருவத்தை அதனூடாக கடந்து அடுத்த கட்டத்தை அடைவதற்காக. அவர்களின் ஆணவம் வென்றதுமே முடிந்துவிடும். அதன்பின் ஆட்சிசெய்வதே ஆணவத்தின் வழியாக இருக்கும். கட்டுப்படுத்துவது, அழுத்துவது, எதிரில்லாமலாக்குவது, தானன்றி ஒன்றும் எஞ்சாமல் செய்வது.
பிறிதொரு வகையான காதல் உண்டு. அது கள்ளமற்ற உள்ளத்தில் எழுவது. அவர்கள் இளமையில் தங்கள் காமத்தைக் கண்டு உள்ளூர அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். வெட்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை தவிர்க்கவும் கடக்கவும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.ஆகவே அதைப்பற்றி அவர்கள் பேசுவதில்லை. பேசும்போதே மூச்சுத்திணறுவார்கள். முகம் சிவந்து சொல்குழறுவார்கள். கண்களை எதிர்கொள்ள மாட்டார்கள். காமத்தின் மீதான அச்சம் அவர்களை துறவறம் நோக்கிச் செலுத்துகிறது. யோகம், தியானம் என்று பேசுகிறார்கள். அல்லது தியாகம் சேவை என்கிறார்கள்
அவர்கள் அனைவருக்குமே ஆதர்சமானவர் விவேகானந்தர். அவர்களின் சட்டைப்பையில் விவேகானந்தர் இருப்பார். அவர்களின் அறைகளில் ஒட்டப்பட்டிருப்பார். கூர்மையான இடக்கும் குறுக்குப்புத்தியும் கொண்ட சிட்டிபாபு போன்றவர்கள்தான் இதை உடனே சுட்டிக்காட்டுபவர்கள். “விவேகானந்தரை வச்சிருந்தானோ அவன் செத்தான். அவன் தான் முதல்ல போயி வலையிலே சிக்குவான்” என்று அவன் சொன்னான்.
“ஏன் வள்ளலார் படம் வச்சிருந்தா?”என்றான் நாகலிங்க ஆசாரி.
“அது வேற, இது வேற” என்று சிட்டிபாபு சொன்னான்.
இது வேறுதான். ஏன் விவேகானந்தரைப் பிடிக்கிறதென்பது ஒரு ரகசியம். துறவு வேண்டும். ஆனால் அதனுடன் இளமையும் ஆண்மையும் அழகும் கலந்திருக்கவேண்டும். பெண்களை நினைத்து நினைத்து ஏங்கச்செய்யும் ஆண்மகனின் துறவாக இருக்கவேண்டும் அது. தாடி வளர்த்து மெலிந்து இருக்கும் துறவி அதற்குரியவர் அல்ல. விவேகானந்தர் ஆவேன் என்பவன் நேர் எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிறான். மிக மிக ஆழத்தில். அவனே அறியாமல்.
அவன் எப்படி காதலில் விழுகிறான்? இதை நான் என்னை வைத்தே சொல்கிறேன். நான் என்னை அத்தனைதூரம் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அவன் காதலைக் கண்டதும் காமம் என அருவருக்கிறான். விலகி ஓடுகிறான். ஆனால் அவன் காமத்தை அத்தனை தூரம் விலக்கி வைத்திருப்பதனாலேயே தூய காதலை அடைகிறான். அதன் மதுரத்தை, மென்மையை காண்கிறான். அது அளிக்கும் மேன்மையையும் விடுதலையையும் கண்டு அதில் திளைக்கிறான். அவனால் அதை அதன்பிறகு நிந்திக்கவோ நிராகரிக்கவோ முடியாது.
அவன் அதில் விழுந்துவிட்டான் என்று சொல்லலாம். இல்லை, அவன் அதை சிறகெனச் சூடிக்கொண்டு பறக்கிறான். அவன் அதுவரை எங்கும் பறக்காதவன். தன் எல்லைகளை தானே வரையறுத்துக்கொண்டு சிறையில் இருப்பவன். தூய்மை என்பது மிகப்பெரிய சிறை. அவன் அதை மீறிவிடுகிறான். மீறும்கணமே வானில் எழுகிறான். ஒளியில் காற்றில் இனிமையில் கும்மாளமிடுகிறான். அவன் கண்ட முதல்பேரனுபவம் அது. அதன்பின் அவனுக்கு வேறேதும் ஒரு பொருட்டு அல்ல. வீம்புக்கு அவன் பற்றிக்கொண்டிருந்த யோகமும் சேவையுமெல்லாம் வெறும் மாயைகள்.
அவன் முழுமையாக திளைப்பதனாலேயே அந்தக்காதல் அவனுக்கு காதல் மட்டுமல்லாமல் ஆகிறது. அது பிரேமை என்றாகிறது. இப்படிச் சொல்கிறேன், காதலென்பது ஒரு பெண்மேல் வருவது. பிரேமை என்பது அப்பெண்ணின் வடிவில் வந்த பெண்மை என்னும் தெய்வீகமான ஒன்றின்மேல் வருவது. அதிலிருந்து அவனுக்கு விடுதலையே இல்லை. பிரேமையிலிருந்து எவருக்கு விடுதலை வந்திருக்கிறது? எவர் விடுதலையை வேண்டுவார்? பிரேமை என்பது ஒரு வரமல்லவா? ஆயிரம் பல்லாயிரல் லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அளிக்கப்படுவதல்லவா?
காதலின் பொருட்டு ஒருவன் சாவான் என்றால், அதனால் அணுவணுவாக அழிவான் என்றால் அவன் அதிருஷ்டசாலி அல்லவா? மானுடர் எவருமே வாழ்க்கையை எதன்பொருட்டும் விட்டுக்கொடுப்பதில்லை. வாழ்க்கையையே தூசென உதறச்செய்யும் ஒன்றை அடைந்தான் என்றால் அவன் பேறுபெற்றவன் அல்லவா?
அந்தக் காதல், பெரும்பாலும் அது முதற்காதல்தான். அவர்களுக்கு அதன்பின் காதல் இல்லை. அது அவன் நெஞ்சில் தேனாக ஊறி பளிங்காக உறைந்துவிடுகிறது. சிற்பமாகிவிடுகிறது. அவன் நினைவில் ஒரு நிரந்தரமான வடுவாக. வலியா இன்பமா என்று தெரியாமல் அவனுள் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது. அவனுக்கு வேறு என்னென்னவோ நிகழலாம். ஏதேதோ கிடைக்கலாம். ஆனால் அவனுள் இருப்பது அது மட்டுமே. அவன் சிந்தையை செயலை ஆள்வது அது மட்டுமே.
அன்றிரவு எல்லாரும் சென்றபின் நான் மட்டும் கொட்டகையில் இருந்தேன். தைத்த துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நடுவே என் பாயை எடுத்துப் போட்டுக் கொண்டேன். கொசுவலையை கட்டினேன். ஸ்டுடியோ இருக்குமிடம் சதுப்பு. பின்பக்கமே பெரிய ஏரிப்படுகை உண்டு. அங்கே எப்போதும் தண்ணீர் பளபளக்கும். எருமைகள் மேயும். ஆகவே ஸ்டுடியோவில் பகலிலேயே அங்கே கொசு கொஞ்சம் கடிக்கும்.
கொட்டகையில் எப்போதும் ஒலிக்கும் தையல் இயந்திரங்கள் அமைதியாக நின்றிருந்தன. ஸ்டுடியோவில் எங்கோ செட் வேலை நடந்துகொண்டிருந்தது. உளியும் கொட்டுவடியும் ஓசையிட்டன. எவரோ ஏதோ பேசிக்கொண்டே இருந்தனர். எவரோ வெற்றிலையை காறித்துப்பினர்.
இரவில் சிலசமயம் என்னுடன் படுத்துக்கொள்ள நரசிங்கன் வருவதுண்டு, அவன் வருவான் என்று எதிர்பார்த்தேன். அவன் வரவில்லை. நான் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். பின்னர் எழுந்து மறுநாளைக்கான ஆடைகளில் ஒன்றை எடுத்தேன். அது இக்கால சுடிதார் போன்ற ஓர் ஆடை. கீழே விசிறிக்குடைபோல விரியும். கணுக்கால்வரை வரும். மேலே தோளில் சிறகுகள்போல ஜிகினா. கையும் கணுக்கை வரை வருமளவுக்கு நீளம். முழு ஆள் அளவுக்கே இருந்தது அந்த ஆடை.
அதை நீட்டி நிற்கவைத்து பார்த்தேன். சட்டென்று அவள் அங்கே வந்துவிட்டதுபோலத் தோன்றியது. என் நெஞ்சில் பரவசம் நிறைந்தது. அந்த ஆடையை கண்ணாடி அருகே கொண்டுசென்று எனக்கு இணையாக நிற்கவைத்துப் பார்த்தேன். என் உடலுடன் ஒட்டவைத்தேன். அதை தொடும்போது எனக்கு உடல் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. அதை மிகமெல்ல, ஒரு மென்மையான கோழிக்குஞ்சை தொடுவதுபோல தொட்டேன். என் முகம் சிவந்து சூடாக இருந்தது.
என்னை நான் அப்பூரி வரப்பிரசாத ராவ் ஆக நினைத்துக்கொண்டேன். மேடையில் அவளுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா…”என்ற பாடல். அந்த முகில் இந்த முகில் வான் நடுவினிலே. பலர் பாடிய நாடகப்பாடல். பின்பு சினிமாவில்கூட வந்தது. அந்த இரண்டு முகில்கள் இணைவதுபோலே இணைவோம். ஒன்றாகி, இரண்டிலாதாகி, ஒளிர்ந்து, இருண்டு, மீண்டும் ஒளிர்ந்து, கலைந்து கூடி, முடிவில்லாத வான்வெளியில். முற்றிலும் ஒளி ஊடுருவும் தூய்மையுடன்.
அவளும் என்னுடன் பாடினாள். நாங்கள் ஆடிச் சுழன்றோம். தழுவியும் விலகியும் மீண்டும் தழுவியும் ஆடிக்கொண்டிருந்தோம்.அங்கே எவராவது வந்து என்னைப் பார்த்திருந்தால் கிறுக்கன் என்று நினைத்திருப்பார்கள்.
அதன்பின் என்னருகே அந்த ஆடையை போட்டுக்கொண்டு தழுவியபடி படுத்திருந்தேன். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் எப்போதோ மௌனமாக அழத்தொடங்கினேன். கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிய அழுதுகொண்டிருந்தேன்.உடலெல்லாம் இனிக்க, சிந்தையெல்லாம் இனிக்க, சூழலே இனிப்பென்றாக, அப்படி அழுவது ஒரு தெய்வ அருள். ஒரு தெய்வ சாபம்.
[மேலும்]
தமிழாசியா- வாழ்த்துரை
மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை.
புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை
புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…
அன்புள்ள ஜெயமோகன் ,
உங்கள் பதிலில் நீங்கள் கூறியது உண்மைதான். நான் என் ஆணவத்தை பாதுகாக்கும் முயற்சியிலேயே இருந்தேன். அது என் ஆணவம் என்று உணரவே எனக்கு இந்த கொரோனா காலமும் உங்கள் தன்மீட்சியும் தேவைப்பட்டது. என் சிக்கல்களும் தேடல்களும் எனக்கு மட்டுமே நிகழும் பெரும் துயரங்கள் என்றும், என்னைப்போல் அதை அனுபவிப்பவர்கள் இந்த உலகில் வேறு எவரும் இல்லை என்றும் நினைக்கும்வரை நான் ஒரு காவியநாயகன் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தன்மீட்சியை படித்தபோதுதான் அவை அனைத்தும் நம் காலத்தின் பொதுச்சிக்கல்கள்தான் என்ற உணர்வு வந்தது. அதற்கு பிறகு நான் காவியநாயகனாக இருக்க நியாயமில்லை.
தேடல்கொண்ட இன்னொரு இளைஞனாக என்னை உணர்ந்த பிறகுதான் என்னை ஆளுமைகளின் சிந்தனைகள் பாதிக்கத் தொடங்கியது. அதற்கு பிறகுதான் இத்தனை வருடங்களாக உங்களை வாசித்திருந்தாலும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதவும், உங்களை சந்திக்கவும் துணிவு வந்தது. ஒரு இலக்கிய வட்டத்தில் இணைந்து சகவாசகர்களின் பார்வைகளையும், மூத்த வாசகர்களின் பார்வைகளையும் கேட்கமுடிந்தது. அந்த ஆணவம் முழுவதுமாக தகர்ந்துவிட்டது என்றெல்லாம் நான் மிகைப்படுத்தவில்லை. ஆனால் அதில் இப்போது நல்ல விரிசல் விட்டிருக்கிறது. அந்த விரிசல்களை பெருக்கி, அதை உடைத்துதான் நான் என் ஆளுமையை செதுக்கியாக வேண்டும். உங்களையும், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தையும் துணைகொண்டுதான் நான் அதை செய்தாகவேண்டும். இதில் மேலும் பல ஆளுமைகளை நான் அடையாளம் கண்டுகொள்வேன் என்றால் அவர்களின் வழிகாட்டுதல்களையும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதற்கு நான் என்னை மேலும் திறக்கவேண்டும். அந்த முயற்சியை நிச்சயம் மேற்கொள்கிறேன்.
ஒரே ஒரு சந்தேகம் மட்டும்தான் Sir. இந்த தேடலில் நிஜ ஆளுமைகளையும் பொய்யான பாசாங்குகளையும் எப்படி பகுத்தறிவது? என்னை திறந்து அவர்கள் என்னை பாதிக்கவிட்டுவிட்டால், அந்த போலி பாசாங்குகளும் சேர்ந்துதானே என்னை வந்தடையும். அவை என்னை திசைதிருப்பவில்லை என்றாலும் என் தேடலில் என்னை சோர்வடையச் செய்துவிடாதா? அதில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழிகள் உள்ளதா? கேள்விகளற்ற விசுவாசத்தை நாம் யாருக்கும் அவ்வளவு எளிதில் கொடுத்துவிடமாட்டோம். ஆனால் கேள்விகளற்ற விசுவாசம் அளவுக்கே தவறான கேள்விகளுக்கான விவாதங்களும் ஆபத்தானதுதானே?
இலக்கியக் குழுக்களைப் பற்றிய உங்கள் இரண்டாவது பதிலை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். அது என் ஆரம்பகால பயம். இப்போது எனக்கே அது ஒரு அர்த்தமற்ற தயக்கம் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் கூறியதுபோல் விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களால் நேர்மையான சமரசமற்ற இலக்கியக் குழுக்களாக உருவாக்கப்பட்டு வரும் சுக்கிரி, நற்றுணை போன்ற குழுக்களில் இப்போது பங்குபெற்றுக் கொண்டிருக்கிறேன். அவற்றின் வழியே என் வாசிப்பிலும் படைப்பிலும் வளர்ச்சியும் தேர்ச்சியும் பெறுவேன் என்று நம்புகிறேன்.
அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
அன்புள்ள விக்னேஷ் ஹரிஹரன்
ஒரு விஷயம் நாம் மறந்துவிடுகிறோம். கற்றல் என்ற அளவில் ஒன்றில் நுழைந்து, அதில் நிகழ்வதற்கு இணையானதுதான் அதிலிருந்து வெளியேறுவதும். ஒன்றிலிருந்து வெளியேறுவதனால் நாம் ‘தோற்று’ வெளியேறுவதில்லை. ‘கற்று’ வெளியேறுகிறோம். ஆகவே அது ஓரு வெற்றிதான்.
எங்கும் நம்மை வழிகாட்டிச் செல்வன இரண்டு. ஒன்று நம் அறிவுத்தன்மையும் நம் தேடலும். இன்னொன்று நம் உள்ளுணர்வும் நம் இயல்பும். நானும் பல சிந்தனைகளில், பல அமைப்புகளில் நுழைந்து வெளியேறியிருக்கிறேன். ஆகவே என் நுண்ணுணர்வும் அறிவும் கூர்மையாக மாறின. அவ்வனுபவங்கள் என் அறிதலாகவும் என் அனுபவச்செல்வங்களாகவும் மாறின.
நம் நுண்னுணர்வை நம்பி, நம் அறிவார்ந்த தேடலை நம்பி இயங்கவேண்டியதுதான். அவை நம்மை கைவிடுவதில்லை. நம்மை திசையழியச் செய்பவை, நம் பார்வையை மறைப்பவை நம்முடைய ஆணவமும் நம்முடைய தாழ்வுணர்வும்தான்
ஜெ
அன்னம்- ஒரு கடிதம்
அன்புநிறை ஜெ,
கதைத் திருவிழாவின் நூறு கதைகளில் ஒன்றாகிய அன்னம்(https://www.jeyamohan.in/132369/) சிறுகதை இந்த வாரம் சுக்கிரி குழுமத்தில் கலந்துரையாடுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக இக்கதையை மீள்வாசிப்பு செய்யும் பொழுது கீதை உரையின் ஒரு பகுதியான “கர்மயோகம் 4”-ன்(https://www.jeyamohan.in/7038/) இலக்கிய வடிவமாக அக்கதை தோன்றியது.
“அன்னத்திலிருந்து உயிர்கள் உருவாகின்றன.
மழையிலிருந்து அன்னம் உருவாகிறது
வேள்வியால் மழை உருவாகிறது
வேள்வியோ செயல்களால் உருவாகிறது
செயல் பிரம்மாவிலிருந்து உருவாகிறது
பிரம்மா எழுத்திலிருந்து உருவானவர் என்று அறிக.
ஆகவே எங்கும் நிறை பரம்பொருள்
என்றும் வேள்வியில் உறைகிறது.”
என்ற பாடலைக் குறித்த கட்டுரை அது.
ஓஷோ உரை கேட்ட பிறகு கீதை உரையை மீள்வாசிப்பு செய்து கொண்டிருந்தேன். இரு மீள்வாசிப்புகளும் சேர்ந்து, இந்த அன்னம் கதையும் கீதை கட்டுரையும் பிரிக்க முடியாதபடி பிணைந்துகொண்டது.
“வேதங்களில் அன்னம் என்பது விரிவான பொருளில் கையாளப்பட்ட ஒரு கலைச் சொல். முதல் தளத்தில் அது ‘உணவு’தான். ஆனால் பூமியில் உள்ள எல்லாமே எதற்கோ உணவுதானே?” – என்ற கீதை உரையிலிருந்து இக்கதையின் இழை துவங்குகிறது. அதையே அன்னம் கதையில் //யக்ஷகானத்தில் அன்னசம்யோகம் என்று சாப்பாட்டைச் சொல்கிறார்கள். உடலும் உணவும் அன்னம் என்றுதான் சொல்லப்படுகின்றன. அன்னம் என்றால் பிசிக்ஸில் மேட்டர் என்கிறோமே அது. அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.// என்று கிருஷ்ண பட் அவர் கலந்து கொண்ட முதல் விருந்தை விவரிக்கிறார்.
கீதை உரை அதிலிருந்து தொடங்கி பிரணவவாதம் குறித்துப் பேசுகிறது.
“பிரபஞ்சத்தை அதில் உள்ள பருப்பொருள் அப்பருப்பொருளை இயக்கும் கருத்து என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். பருப்பொருளை அன்னம் என்று கூறலாம். கருப்பொருளை சத் என்று கூறியது வேததரிசனம். அது என்ன என்ற வினாவை பிரம்மாண்டமாக அது எதிர்கொண்டது. ”
என்பதைத் தொடர்ந்து வரும் வரிகளின் வாயிலாக சென்று
“இந்த அகன்ற பருப்பொருள் வெளியை கருத்து வடிவமாக எடுத்துக் கொண்டால் அது ஒரு மாபெரும் ஒலிமயமான வெளியாக இருக்கும் அதாவது எவராலும் கேட்கப்படாத ஒலியாலானதாக எவரும் உணராத மொழிமயமானதாக, இல்லையா? அந்த மொழிவெளியை அல்லது ஒலி வெளியை இவையனைத்திற்கும் மூலப்பரப்பாக கொள்ள வேண்டும். அந்த வெளியின் வேராக, தொடக்கப்புள்ளியாக உள்ள ஒரு முழுமுதல் ஒலி எதுவாக இருக்க முடியும்? அதுவே ஓம். அல்லது பிரணவம். மெளனம் ஒலியாக உருவம் கொள்ளும்போது ஏற்படும் முதல் ஒலி ஓங்காரமே. அதுவே ஒலிகளுக்கெல்லாம் அன்னை. ஒலிக்காட்டுக்கு மூலவிதை. அதுவே தொடக்கம். அதில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதுவே படைப்பு சக்தியாகும்.”
இதையே புராணங்கள் எளிமையாக்கி பிரம்மாவின் தியானத்தின் முடிவற்ற மெளனத்தில் இருந்து ஓம் என்ற ஒலி முதலில் பிறக்கிறது. அந்த ஓங்காரத்தில் இருந்தே மூவுலகங்களிலும் பிறந்து வருகின்றன என்று கூறுகிறது. ஒலி எப்படி பருப்பொருளாக ஆகிறது என்பதற்கான விளக்கமே பிரணவவாதம் என்கிறது அவ்வுரை.
சாகிபை படுக்கையில் பசியின்றி உணவின்றி வருத்துவது எது, அவரது வாழ்நாள் அன்ன வேள்வி அதன் கருத்து வடிவில் அது அவருக்கு என்னவாக இருந்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டால் இவ்விதம் இணைந்து கொள்கிறது.
அவரது அன்ன விருந்து எனும் பரு உலக செயல்பாடு நின்று போய், படுக்கையில் பக்கவாதத்தில் விழும் அவருக்கு வேறேதும் குறைகள் இல்லை. அனைவரும் அவரை ஒரு அரசனைப் போல, கைக்குழந்தையின் தேவைகளை நிறைவேற்றுவது போல கவனிக்கிறார்கள். ஆனால் அவரது வேதனை இந்த சாமானிய தளத்தின் நிகழ்வுகளால் அல்ல. அவரது பசி வேறொன்று. அவரது ஆன்மா வீட்டை சூழ்ந்த சூனியத்தில் அல்லல்படுகிறது. அவ்வளவு நாட்கள் ஆட்களை நிறைத்துக் கொண்டு உணவு வழங்குதல் என்னும் செயல் வழியாக அவர் எப்போதும் தனைச் சூழந்தவர்களின் நிறைவின்மைகளை நிறைவு செய்கிறார். அவரைச் சுற்றி இருந்தவர்களின் தேவை பசித்தவர்கள் என்பதால் உணவு, பொருள் இல்லாதவர்களுக்கு பொருளுதவி, சமையற்காரனுக்கு பாராட்டு. சமூகத்தில் சம இடம் அளிக்கப்படாதவர்களுக்கு நிகரான இடம். அவர்களது நிறைவின் ஒலியைத்தான் அகத்தில் நிறைத்துக் கொள்கிறார்.
“காலிப்பானைகளுக்கும் குடங்களுக்கும் ஒரு பதற்றம் இருக்கிறதைப்போல தோன்றுவதில்லையா சார்? அவை வாய் திறந்து அலறுகின்றன. குருவிக்குஞ்சுகள் வாய்திறந்து எம்பிக்குதிப்பதுபோல. தண்ணீரை அள்ளி ஊற்ற ஊற்ற இன்னும் இன்னும் என்கின்றன. அதன்பின் நிறையும் ஓசை. அது ஒரு பெருமூச்சு. ஓம் என்ற ஓசை அது.” என்று சொல்கிறார் கிருஷ்ண பட்.
அவருக்கு தொடர்பேயற்ற மனிதர்களின் குரல்கள் கூட அந்த நிறைவின் ஒலியாகவே அவருக்குப் பொருள்படுகின்றன. ஒரு வாழ்நாள் சாதகம். எனவே பிறருக்குப் பொருளற்றதெனத் தோன்றும் சூன்ய எண்ணில் ஒலிக்கும் அந்த உரையாடல்களின் பொருளற்ற ஓங்காரம் அவருக்கு மீண்டும் அந்த நிறைவை அளிக்கிறது. அந்த நிறைவின் மலர்ச்சியோடு உதிர்கிறார்.
கைவிடப்பட்ட கோயிலில் இருண்ட கருவறையில் பூசாரி என்ற தோற்றத்தோடு அறிமுகமாகும் கிருஷ்ண பட் அதே வேலையைத்தான் செய்கிறார். அந்த சாகிபின் நிறைவின்மையை கனவில் அறிந்து அதை நிறைக்கும் அவரும் அந்த வேள்வியில் இணைகிறார்.
“வேள்வியோ செயல்களால் உருவாகிறது
செயல் பிரம்மாவிலிருந்து உருவாகிறது
பிரம்மா எழுத்திலிருந்து உருவானவர் என்று அறிக.” என்ற தத்துவத்தை ஒரு கதையாக உணரத் தந்தமைக்கு நன்றி ஜெ.
மிக்க அன்புடன்,
சுபா
100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96. நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]குமிழிகளை முன்வைத்து…- கடிதம்
அன்புள்ள ஜெ,
குமிழிகள் கதை, மரபுகளுடன் மாற்றங்களினால் வரும் உராய்வுகளை ஒரு ஆண் – பெண் உறவுச் சிடுக்கு மூலம் உருவகப்படுத்துகிறது. இரு பக்கமும் சற்று வளைந்து கொடுத்துப் போனால் உறவு முறிவின்றித் தொடரும்.
இக்காலத்து liberated பெண்ணான லிலியுடன் வாழும் சாம் சற்று மரபான, ஆனால் receptive-வான மனம் கொண்ட ஒரு ஆண் மகன். தன் சாதனைகளின் எல்லைகளை அவள் கடந்து விட்டதை உணர்ந்திருக்கிறான். துள்ளும் கன்றுக்குட்டியாக அவள் பாய்ந்தோடி முன்னேறுவதை ரசிக்கிறான்.
சாமிடம் வாழ்ந்து விட்ட ஒரு நிறைவு இருக்கிறது. ஆணின் சராசரிக் கடமைகளான வீடு பேறு, மனைவி, செல்வம் ஈட்டுதல் போன்றவையெல்லாம் அடைந்தாயிற்று. இதற்கு மேலும் திரைக்கடலோடித் திரவியம் தேட வேண்டியிருக்கவில்லை. ஆனால் லிலி இன்னும் எதையோ நிரூபிக்க பெரும் உளவேகத்துடன் முனைந்து நிற்கிறாள். உலகமெங்கும் பறந்து, நூற்றுக்கணக்கான சக ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பணித் திட்டங்களையும் வழிநடத்துபவள்.
வயதானாலும் பணியிடத்தில் தொடர்ந்து முன்னேற, பெண்மை ததும்பும் பொலிவான உடல் லிலிக்கு ஒரு கருவி. வயதாவதால் தளர்ந்து வரும் உடல் பகுதிகளை அறுவை சிகிழ்ச்சை செய்தாவது மெருகேற்றிக் கொள்ளச் சித்தமாயிருக்கிறாள். அவள் பார்வையில், அழகூட்டிக் கொள்வதன் அத்தியாவசியம் புரியாத மரபான மனங்கள், அதனை வெறும் ஆணை மயக்கும் உத்தியாக, அல்லது வயதாவதை ஏற்க மறுக்கும் மனப் பிறழ்வாக, சிறுமைப்படுத்த முயலும்; பணியிடத்தில் முன்னேறுவதற்காக லிலி எதையோ இழந்துவிட்டுச் செல்வதாக ஜோடிக்கும். எனவே தன் போன்ற பெண்களை முன்னேற விடாமல் நிறுத்தும் ஒரு தளையாக அதனை லிலி நிராகரிக்கிறாள்.
“நீதான் முடிவெடுத்து விட்டாயே, நான் சொல்ல என்ன இருக்கிறது” என்கிற விதமாக பரபரபற்றிருக்கும் சாமின் தன்மை அவளை எரிச்சலுறச் செய்கிறது. விவாதம் செய்யாமல் நழுவும் அவனை இழுத்து உட்கார்த்தி வைத்து, “இது தேவையா” என்ற பாணியில் அவன் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை வெளியே உருவிப் போட்டு எதிர்வாதம் செய்து தகர்க்கிறாள். “உன்னுடன் மல்லுக்கு நிற்கப் போவதில்லை, தெரிந்து செய்தால் சரி” என்று அவளுக்குப் பாதை விட்டு விலகி நிற்கும் அவனை அவள் விட்டு முன்செல்லவில்லை; “உன் சம்மதத்தைப் பெறுவதுதான் முதல் வெற்றி” என்று தன்னுடன் இழுத்துச் செல்கிறாள்.
அவளது இயற்கை மீறிய உருமாற்றங்கள் சாமுக்கு உள்ளூர இழப்புதான். ஒவ்வொரு மாற்றத்துக்குப் பின்னும் புதிதாகப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மாறாதிருக்கும் சுவர்ச் சித்திரங்களும் புத்தகப் படங்களும் மதுக் கோப்பையின் வடிவமும் கிளைத்துவிடும் இனிய நினைவுகளில் அமிழ்ந்து திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
‘கந்தர்வன்’ சிறுகதையில் வரும் முருகப்பன், ஆற்றலுள்ள பெண்ணுடன் எப்படி வாழ்வது என்று தெரியாமல் மிரட்டல், வெற்றுக் கூச்சல், புலம்புதல், குழைதல் என்று எல்லா பாணங்களையும் பிரயோகித்துப் பார்க்கிறான். ஊரையும் அரசாங்கத்தையும் திறமையாக ஏய்த்துக் கோடிப் பொன் சேர்த்து வைத்த தனது ஆண்மை வள்ளியம்மையின் மதிப்பைப் பெறவில்லையே என்ற ஏக்கம் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கிறது. வலிவு காட்டினாலும் ‘உன்னால் இவ்வளவு தானே முடியும்’ என்ற ஏளனப் பார்வை முன் அவன் மொத்தமாகத் தோற்றுப் போகிறான். ஊரின் alpha male-லாக வலம் வரும் அணைஞ்ச பெருமாளுடன் அவள் தீப்பாய்ந்தது அவனைப் பொறுத்தவரை அவனுடைய ஆண்மைக்கு அவளால் செய்யப்பட்ட உச்ச கட்ட அவமதிப்பு. நிமிடப் பொழுதில் நிலைமையை அனுமானித்து வள்ளியம்மை செய்த செய்கை, அவன் அடையாளத்தையே மாற்றி எழுதிவிட்டது. உண்மையைச் சொன்னால் ஊரே சிரிக்கும், உயிரே போகும் என்ற நிதர்சனம் பயங்கரமாக உருவெடுத்து நிற்கிறது. வேறிடம் பெயர்ந்து போய் புதிய தன்னடையாளத்தை நிறுவி மேலும் செல்வம் சேர்த்து கட்டற்ற இன்பம் துய்த்து வாழ்ந்து ஓய்ந்து விழும்போது வள்ளியம்மையிடம் தோற்றுப்போன மனவலி புற்றுநோய் போல் கிளைத்துப் பரவி ஆட்கொள்கிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணனை வெறுப்புடன் நினைத்துக் கொண்டே இருந்த துரியோதனனுக்கு விஸ்வரூப தரிசனமாவது கிடைத்தது; இவனுக்கு எஞ்சியது பால்வினை நோய்களும், போதைப் பழக்கமும், வசவுச் சித்தன் என்ற வரலாற்று அடையாளமும்தான்.
அ.பின்வரும் பகுதி, ‘Roosh V’ என்ற புனைபெயர் கொண்ட Daryush Valizadeh என்ற infamous இணைய ஆளுமையின் இணையப்பதிவுகளையும், அவர் நடத்திய விவாத தளங்களில் (online forum) பங்கேற்றவர்கள் நாலைந்து வருடங்களில் எழுதியவற்றை வைத்தும், சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் எழுதப்பட்டது. ஜனவரி 2021இல் அமெரிக்க கேப்பிடல் ஹில் முன் அரங்கேறிய வலதுசாரிக் கிளர்ச்சியால், வலதுசாரிக் கருத்தோட்ட இணையதளங்கள் சட்ட அமைப்புகளின் கவனத்துக்கு வரவும் அவரது இணையதளத்தின் பல பகுதிகள் பொதுப் பார்வையிலிருந்து ‘பூட்டி வைக்கப்பட்டு’ விட்டன. ஏற்கனவே சில வருடமுன்பு ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவத்துக்கு மாறியதால் ‘பெண்களைக் கவர்வது எப்படி’ வகைப்பட்ட தனது முந்தைய பல ஆக்கங்களையும் இணையப் புத்தகங்களையும் பாவ வழிச் செல்லத் தூண்டுவன என்று சொல்லி அழித்துவிட்டார்.
ஆ. Liberalism என்பதைத் தாராளவாதம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.Liberalization என்ற தாராளமயமாக்கலுடன் குழப்பப்படுமா என்று தெரியவில்லை.
இ. இதை வெளியிடுவதால் ‘பெண்ணிய எதிர்ப்புவாதி ஆணாதிக்கத்தை மீட்க விரும்புகிறார்’ போன்ற தேவையில்லாத வசவுகள் / பிம்பங்கள் வருமென்ற தயக்கமிருந்தால் நீக்கிவிடவும். வெளியிடுவதானால் இந்தக் குறிப்பை நீக்கிவிடவும்.
*
முருகப்பன் போன்ற பழமைவாத ஆண்களின் உலகம், டேட்டிங் மூலம் துணை தேடும் கலாச்சாரம் நிலவும் மேற்கத்திய நாடுகளில் பல்வேறு விதங்களிலும் இன்று மோசமாகி விட்டது. இன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி ஓய்வூதியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தாத்தா, தனக்காகும் வயதில் வெறும் பத்தாம் வகுப்புப் படிப்புடன் ஒரு சாதரண தொழிற்சாலை வேலையிலிருந்தபடி இல்லத்தரசி, குழந்தைகள், சொந்த வீடு, தொழிற்சங்கம் என்று ஆதிக்க நாயகனாக ராஜாங்கம் நடத்திவந்தது போல் தனக்கு ஏன் அமையவில்லை என்ற கேள்வி உறுத்திக் கொண்டே இருக்கிறது. வீட்டு விலையேற்றத்தின் பயனையும் அவுட்ஸோர்ஸிங் போன்றவற்றின் பொருளாதாரப் பயன்களையும் தாத்தாவின் தலைமுறை அனுபவித்துவருகிறது. ஆனால் அந்த வாழ்க்கைத் தரவுயர்வு, பேரன்களின் தலைமுறைக்கு வீடு பேறு, செல்வமீட்டும் வாய்ப்புக்கள் போன்றவற்றை எட்டாக் கனியாக்கிவிட்டது. ஒரு சராசரி ஆண் தன் சொந்தக்காலில் நிற்கத் தொடங்க உதவும் தொடக்கநிலைப் பணிகள் வேலைவாய்ப்பில் சமத்துவம், உலகமயமாக்கம், தானியங்கி உற்பத்தி இயந்திரங்கள், அதீத தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பெருமுதலீட்டுடன் வரும் தொழிற்போட்டி போன்றவற்றால் அருகி விட்டன.
படித்து முடித்து, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தேடி, தோதான இனம், நிறம், உடலழகு போன்ற லட்சணங்களும், குடும்பம் அமைக்கும் விருப்பமும் இருக்கும் பெண்ணைக் கண்டுபிடித்து அவளை ஈர்த்து உடன் வாழ சம்மதிக்க வைத்து ஒரு வீட்டை வாங்கிக் குடியேறிக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதைப் பற்றி யோசிக்கத் தொடங்கும் போது இருவருக்கும் முப்பத்தைந்து நாற்பது வயதாகி ஆசுவாசம் வந்துவிடுகிறது. வயதானபின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்துக்கு உத்தரவாதம் தரும் சமூகப் பாதுகாப்பு வலை (social security / universal health care) இல்லாத அமெரிக்கா போன்ற தேசங்களில் குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்குவதற்கான மொத்த செலவு பற்றிய பயமும், முப்பத்தைந்து வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் பெண்களுக்கு உள்ள கஷ்டங்களும் அத்தனை வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்று குடும்பத்தை விரிவாக்கும் ஆர்வத்தை இருவருக்குமே மேலும் குறைத்து விடுகிறது.
அண்மையில் ஐம்பது வயதொத்த பிரிட்டானிய ஆண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது கவனத்துக்கு வந்தபோது, தனிமையும், ஆண்மகனுக்கான சாதாரண இலக்குகளைக் கூட அடையாமல் வயது கடந்து விட்டதான விரக்தியும் முக்கிய காரணங்களாகப் பேசப்பட்டன.
வேலைவாய்ப்பில் சமத்துவம், பெண்ணியம், முற்போக்குவாதம், பணியில் முன்னேறும் முனைப்பு போன்றவை வாழ்க்கை நோக்கில் கொணர்ந்த மாற்றம், பெண்களுக்கு ஆண் துணையின் தேவையை இரண்டாம் பட்சமாக்கி விட்டது. ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளிலுள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கள் தரும் ஆதரவால் பெண்கள் உறவற்றோ உறவுடைத்துப் பிரிந்து வாழவோ தைரியமாக முடிவெடுக்க முடிகிறது. Tinder போன்ற டேட்டிங் செயலிகள், வெறும் விரல்வீச்சு (swipe left to reject) மூலம் நூற்றுக்கணக்கான ‘துணை தேடும் ஆண்’களை வீட்டிலிருந்தபடியே வடிகட்டும் சக்தியைக் கொடுக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு சேர்க்கும் நல்ல விஷயம் தான்; ஆனால் கூகிளில் தோன்றும் முதல் நாலைந்து தலங்களுக்கே சராசரி சுற்றுலாப் பயணிகளின் கும்பல் சென்று குவியச் செய்யும் funnel effect-டால், பரவலாகப் பெண்கள் விரும்பும் ஆணழகு லட்சணங்களுடைய அதே பத்து இருபது ஆணழகர்களின் தொடர்புக்கே மொத்தப் பெண்களும் மொய்க்கிறார்கள். அத்தகைய தர நிலுவையில் சராசரிக்கு அருகேயோ கீழேயோ இருக்கும் ஆண்கள் நீண்டகாலம் தேடியும் ஜோடி கிடைக்காது ஒதுங்கிப் போகிறார்கள்.
பலர் சமூக சகவாசத்தையே தவிர்த்து இணையக் கேளிக்கைகளில் முழுநேரமும் ஈடுபடுகிறனர். வட அமெரிக்காவில் இவர்கள் தங்களை incel (involuntarily celibate) என்று அழைத்துக் கொள்கிறார்கள். Beta males, soyboys என்ற இழிச் சுட்டுகளும், MGTOW (men going their own way) என்ற வகையும் உண்டு. ஜப்பானிலும் தென் கொரியாவிலும் இத்தகைய மனநிலைக்கு ஹிகிகோமோரி (hikikomori) என்று பெயர்.
வேறு சிலர் பெண் தொடர்பு இல்லாத கடும் சமயச் சடங்குகளையோ உடற்பயிற்சிகளையோ மேற்கொண்டு மாற்று வழியில் மனநிறைவைத் தேடுகிறார்கள். இன்னும் சிலர் பெண் ஆணுக்கு அடங்கியவளே என்று வலியுறுத்தும் தீவிர மத உட்பிரிவுகளைத் தேடிச் சென்றடைகிறார்கள்; பெண்ணுரிமை, பெண்ணியம், சுதந்திரமாகச் சிந்திக்கும் பெண், பால்மாற்றம் போன்றவற்றின் மேல் கடும் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
மிகக் குறைந்த காலத்திலேயே இது அனைத்து தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான மனநிலையாக மாறும். ஊரிலிருக்கும் பெண்கள் தங்களது டேட்டிங் அழைப்பை மதித்துத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்று ஏற்கனவே குமைந்து கொண்டிருந்த ஐரோப்பிய இளைஞர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்ப்பந்தங்களால் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கள் ஊர்ப் புறங்களில் புதிதாகக் குடியேற்றம் செய்யப்படுவதைக் கண்டு ஊர்ப் பெண்களை ஈர்ப்பதற்கான போட்டி இன்னும் கடுமையாகிவிட்டதே என்று மேலும் வெறுப்படைந்தார்கள். 2016 வாக்கில் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் தாராளவாதக் கட்சிகள் தேர்தல் தோல்வியடைந்ததற்கு இந்த மனநிலை ஒரு காரணம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த போது அரசியலனுபவமற்ற பண்படாத கோமாளிச் செல்வந்தராக உலகத்தால் நகைப்புடன் பார்க்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், எவருமே எதிர்பாராமல் வென்றதற்கு முக்கிய காரணம், அவருக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த ஸ்டீவ் பேனன் (Steve Bannon) இந்த மரபுவாத/பழமைவாத ஓட்டு வங்கியை அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக் கொண்டதுதான்.
2001 வரை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்கு இணையான ஆற்றலுடையவராக முன்னின்றார் அவர் மனைவி ஹிலாரி கிளிண்டன்; 2016 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். போட்டியாளர்களுக்கான விவாத மேடையில் நேரடியாகவே அவரைக் கீழ்த்தரமாகப் பேசி, பல பொய்ச் செய்திகளைப் பரப்பி தேர்தலில் அவரை வென்ற ட்ரம்ப் பல விதத்திலும் ‘மீண்டெழும் ஆணாதிக்கத்தின்’ சின்னமாக இந்தக் குழுவால் பார்க்கப்பட்டார். ட்ரம்ப்பின் வெற்றியைத் தங்கள் வெற்றியாகப் பாவித்துக் கொண்டார்கள். சபாநாயகர் நான்ஸி பெலோஸி, பெண் பத்திரிகையாளர்கள் என்று ஆற்றல் மிக்க பெண்கள் மீண்டும் மீண்டும் அவரால் அவமதிக்கப்பட்டபோது இணைய ஊடகங்களில் கெக்கலித்து ட்ரம்ப்பைக் கொண்டாடினார்கள். பொதுவெளியில் தோன்றும்போது அவரது மனைவி மெலனியா எப்போதுமே அவருக்கு ஓரடி பிந்தியே நடந்து வருவதும், அதிகம் கவனம் ஈர்க்காமல் வெள்ளை மாளிகையில் வாழ்ந்ததும் ட்ரம்ப்பின் ஆண்மைத்தனத்துக்கு உட்பட்டு நிற்பதாக அவர்களால் பார்க்கப் பட்டது.
2020 தேர்தலின் போது இந்த ஓட்டு வங்கி அப்படியே மொத்தமாக மீண்டும் அவரது குடியரசுக் கட்சிக்கே வாக்களித்தது. (எனினும் அவரது எதிர்சாரியிலிருந்த ஜனநாயகக் கட்சி, தேர்தல்களில் வேண்டுமென்றே பங்கேற்காத, அல்லது பங்கேற்க விடப்படாத, ஒரு பெரும் ஜனத் திரளை தபால் மூலம் பெருவாரியாக வாக்களிக்க ஊக்குவித்து, வாக்காளர் பங்கேற்பு சதவிகிதத்தை இரட்டிப்பாக்கியது. பிரச்சாரத்தின் போது இந்த இரட்டிப்பைக் கணக்கில் கொள்ளாத குடியரசுக் கட்சி வாக்குச் சாவடிகளில் இடப்பட்ட பெருவாரியான வாக்குகளை அள்ளியது; தபால் வாக்குகள் கடைசியாக எண்ணிச் சேர்க்கப்பட்டபோது ஜனநாயகக் கட்சி வென்றிருந்தது. பெருவாரியான தபால் வாக்குகள் அவர்களுக்கே இடப்படிருந்தன.)
இன்று இத்தகைய ஆண்களின் மனநிலை புரிந்து அவர்கள் வழிகாட்டிகளாகவோ ‘மெய்நிகர் சகா’க்களாகவோ மனம் திறந்து உரையாடக்கூடிய பல வழிகள், பாலியல் பாகுபாட்டைத் தூண்டுவதாகவும் பெண்ணியவாதிகளைத் தூற்றுவதாகவும் தீவிர வலதுசாரித்துவமாகவும் காரணம் காட்டி அடைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறன. புனைபெயர்களிலோ அநாமதேயராகவோ இணையங்களில் உலவி வந்த Mens Rights Activist (MRAs) ஆளுமைகள் doxxing போன்ற உத்திகள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டனர்.
“தனக்கென ஒரு வீடு கூடக் கிடையாது; வேலை கிடையாது; அம்மா வீட்டில் வாடகையில்லாமல் வாழ்ந்து கொண்டு ஆண்மைத்தனம் பற்றி வழிகாட்டிக் கட்டுரைகள் எழுதுபவன்” என்ற விதமாக ‘அடையாளப் படுகொலை’ செய்யும் செய்திக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ஓயாத கவன ஈர்ப்பின் மூலமும், புகார் மனுக்கள் மூலமும் அவர்கள் இணையம் மூலம் வருவாய் ஈட்டும் வழிகள் அடைக்கப்படுகிறன. குறுஞ்செய்திகளும் காணொளிகளும் நீக்கப்படுகிறன; அல்லது அக்காணொளிகளில் விளம்பரம் தரும் நிறுவனங்களுக்கு அவற்றை நிறுத்துமாறு மனுச் செய்யப்படுகிறது. மின் புத்தகங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்படுகிறன; பொதுநிகழ்ச்சிகள் முதலியன தடை செய்யப்படுகிறன. பன்னாட்டுப் புகழ் கொண்ட சில MRA ஆளுமைகள் வெறும் முப்பது பேர் கொண்ட கூடுகைகளுக்கு வர விஸா மறுப்பு / பயணத் தடை கொண்டு வரப்பட்டது. அவர்களது இணைய குழுமத்துக்கு மட்டுமான தனிக் கூடுகைகள் நடக்கும் இடங்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கு வருபவர்களை படம் பிடித்து அம்பலப்படுத்தி “பாலியல் பாகுபாட்டு ஆதரவாளர்” என்ற முத்திரை உண்டாக்கி, தொழில்முறை இழப்புகள் உண்டாக்கப்படுகிறன.
12 Rules போன்ற புத்தகங்களை எழுதிய டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்டான் பீட்டர்ஸன், எவரையும் புண்படுத்தாத politically correct பேச்சு / எழுத்து வழக்கு கனடாவில் விவாதமின்றி சட்டதிட்டங்களால் நிர்பந்திக்கப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசத் தொடங்கியவுடன் transphobia கொண்ட பழமைவாதியாக அடையாளமிடப்பட்டார். வெளிவரவிருந்த புத்தகங்களை நிறுத்துமாறு அவரது பதிப்பகத்தாருக்கு அழுத்தம் வந்தது. ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் அவரைப் பாடம் நடத்த அழைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. அவரது வகுப்பறைகளிலும், விவாதக் கூடுகைகளிலும் புகுந்து கோஷங்களெழுப்பித் தடங்கல் உண்டாக்கப் பட்டது.
தாராளவாதப் பேச்சுரிமையைப் பறிக்க எந்த ஒடுக்குமுறைகள் உபயோகிக்கப் பட்டனவோ, அதே ஒடுக்குமுறைகளை இன்று பதவியிலிருக்கும் தாராளவாதிகள் பழமைவாதத்தின் மேல் பிரயோகிப்பது வேதனையானது. சமூக எதிர்பார்ப்புகளிலும் சக வயதுப் பெண்களின் மனதில் வந்த மாற்றங்களாலும் கட்டுமானம் குலைந்து இலக்கின்றித் திரியும் இளவயதினரை சமுதாயம் கண்டுகொண்டு அவர்கள் திசைதேர்ந்து செல்ல முடிந்தவரை உதவவேண்டும். இன்னொரு தலைமுறை இவ்வாறு திசையற்றுப் போகாமலிருக்க தாராளவாதம் லிலியைப் போல் இவர்களையும் மெல்ல மாற்றி உடனழைத்துப் போக வேண்டும்.
– சுப்பிரமணியன்
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

