Jeyamohan's Blog, page 1014
March 27, 2021
நிறைவிலி, விசை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விசை கதையை வாசித்தபோது ஒரு ஞாபகம். 80களில் எங்கள் வீட்டுக்கு ஒரு வேலைக்கார அம்மாள் வருவாள். கணவனால் கைவிடப்பட்டவள். ஒருபையன். அவனை படிக்கவைத்தாள். அவன் இன்று நல்ல நிலையில் இருக்கிறான். அந்த அம்மாள் செத்துவிட்டாள்.
அந்த அம்மாள் பாத்திரங்களை விளக்கினால் பளபளவென இருக்கும். அலுமினியப்பாத்திரங்களை விளக்கும்போது என் அம்மா அப்படி அழுத்தி தேய்க்காதே, ஓட்டைவிழுந்துவிடும் என்று சொல்வாள். அந்த விசை என்ன என்று இப்போது புரிகிறது
நம்மைச் சுற்றி நம் அன்றாடத்திலேயே எவ்வளவு கதைகள், எவ்வளவு மனிதர்கள்
சரண்ராஜ்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம்தானே? இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பிழைகளை தயவுசெய்து பொருத்துக்கொள்ளுங்கள். இணையத்தின் உதவியுடன் மொழிபெயர்த்துள்ளேன்.
பொதுவாக கலை, இலக்கியம், அறிவிவிசை கதையின் தாக்கம் பல நாட்கள் தொடர்ச்சியாக வருகின்றன. ஆழ்மனதின் ஒளியை உணர்த்தும் படைப்பு என கொள்கிறேன். எலிசாம்மாள் – அடிப்படை சுதந்திரம் கூட அல்லாதவள், வெளியுலகுக்கு மீட்டு வரப்பட்ட பின் தனக்கிருந்த ஒரேஆதரவை இழக்கிறாள். அதன்பின் புறவய உலகோடு தொடர்பு கொள்ளும் தன்மை முற்றிலும் ஒடுங்கிவிடுகிறது. ஓலை பின்னுதல் என்னும் செயல் மட்டுமே அவளை ஆட்கொள்கிறது.
ஓர் எந்திரத்தனமான செயலில் வாழ்வுமுழுதும் தீவிரத்துடன், எப்படி ஈடுபட முடியும்? அவளுடைய உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு (survival instinct) ஆழ் மனதில் விசையாக மாறி, அவள் அறிந்த ஒரே செயலின் வழியே வெளிப்பட்டிருக்கலாம். அகத்தின் உறையாடல்களும் அந்த விசைக்கு இறை. அதிகாலை எழுந்து இருட்டுக்குள் செல்வதில் இருந்து, இரவு சாக்கு போர்த்தி உறங்கும் வரை, சூரியனின் தளர்வற்ற சுழற்ச்சியைப் போன்ற அவளின் அன்றாட வாழ்க்கை என்னை நிலைகுலையச் செய்தது.
இதில் அவளுக்கு கிடைத்ததுதான் என்ன? அவளால் விளக்க முடியாத நிறைவா? வீடுபேறா? ஆயினும், இது மூன்று தலைமுறைகளக்கு ஏதோ வகையில் செல்வாக்கு செலுத்தியது – அவளுடையது , மகனுடையது, அவள் காலத்தை தாண்டி ஊரின் மற்ற பிள்ளைகளுடையது. முரண்பாடாக அதே விசை அவளைச் சுற்றி ஒரு சுவராக மாறி, மகனிடமிருந்து விலக்கி வைத்தது. வழிகாட்டுதல் இல்லாமல் மகன் தனது பாதயை இழந்திருக்கலாம். அவளுடைய செயலை மட்டுமே கவனித்து உணர்ந்து, ஒரு பாதை அமைத்துக் கொண்டான்.
அறிவியல் கோட்பாடுகள் போன்ற காலத்தை தாண்டி நிற்கும் படைப்புகள், மானுடப் பயணத்தை முன்னின்று வழிநடத்துகின்றன. அதற்கிணையாக, எலிசாம்மாக்களின் பங்களிப்பு, பொருட்படுத்தப் படாத, சாலைகளின் அடித்தளத்தில் உள்ள கற்களாக மானுடத்தை வழிநடத்துகின்றன.
இந்தக் கதையை வாசித்ததும் உங்களின் பல எழுத்துக்களில் நான் கண்டுகொண்ட சொற்களை பின்வருமாறு நினைவு கூர்கிறேன் – தன்மீட்சி, செயல் எனும் விடுதலை, “கடமையைச் செய், பயனை காலவெளியை ஆளும்விசைகளுக்கு விட்டுவிடு”. அதாவது முழுதளிப்பு.
நன்றி.
கணேசன் ஆர்.
Nashua (பாஸ்டன் புறநகர்)
நிறைவிலி [சிறுகதை]வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
மிக எளிய அழகான அதே நேரத்தில் ஆழமான ஒரு கதை நிறைவிலி.
நட்சத்திர ஹோட்டல் புல்வெளியின் சிட்டுக்குருவிகள், மும்பை உயர்வர்க்க பெண்கள், மணக்கும் காப்பி, ஒரு ஆதிவாசி குழந்தையின் கப்பரையேந்தும் போட்டோ என நான்கு அழகான குறியீடுகளை மிக அற்புதமாக கதைக்குள் பயன்படுத்தி உள்ளீர்கள்.
எப்பொழுதுமே புதிய நபர்களை சந்திப்பதும், பழகியவர்களே ஆனாலும் அவர்களுடனான சற்றும் எதிர்பாராத சந்திப்புகளும் மிக மிக இனிமையானவை. உணர்வுகளை தூண்டுபவை. ஒரு மணக்கும் உறையிட்டு கொண்டுவரப்பட்ட புதிய காப்பியைப் போல.
காப்பியை மூடும் வெண்ணிறத் துணியுறையை மணம் விரிக்க காத்திருக்கும் ஒரு முறுக்கிக்கொண்ட மலர் என்றெல்லாம் எழுத அசாத்திய கற்பனைத் திறன் வேண்டும்.
பாவம் பகா ராய்க்குதான் காப்பி பிடிக்கவில்லை. காப்பி தோட்டத்திலேயே வளர்ந்தவள் ஆயிற்றே. காப்பித் தோட்ட தொழிலாளர்களின் மகளுக்கு காப்பி பிடிக்காமல் போவது இயல்புதானே. மற்றவர்களுக்காக வெகு அற்புதமாக சமைப்பவனால் அந்த உணவை சாப்பிட முடியாமல் ஆவதுபோல. அல்லது காபி அவளுக்கு அந்த ஏழ்மை நிறைந்த இளமையையும் அவள் இன மக்களின் துயர்மிகு வாழ்க்கைப்பாடுகளையும் நினைவுறுத்துகிறது போலும்.
துணி உறையிட்டு வருகின்ற காப்பியை விரும்புகின்ற ஒரு நபர் “முதலில் எல்லாவற்றையும் நேரடியாகச் சொல். சொல்லும்போதுதான் உண்மையான அர்த்தம் தெரியவருகிறது” என்பது எத்தனை அழகிய நகைமுரண்.
இந்த மும்பை உயர்வர்க்க பெண்களைக் குறித்த விளக்கம், அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் விதம், கண்களுக்கான கருப்பு மை, உதட்டுக்கான அடர்சாயம் என விளக்கிச்சென்ற நீங்கள் அதற்கு எதிர்முகமாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பகா ராய் எப்படி எளிய அலங்காரத்தோடு இருந்தாள், எப்படி தன்னிடமிருந்த இயற்கை அழகை மட்டும் இன்னும் சற்று மேம்படுத்தி காட்டினாள் என்ற ஒப்பீடுகள் வெகு அழகு. உயர்குடி பண்பாட்டிற்கும் பழங்குடி பண்பாட்டிற்குமான வாழ்க்கை கண்ணோட்டம் எப்படி எதிர் எதிர் துருவங்களாக உள்ளன என்பதை பெண்களின் அலங்காரத்தைக் கொண்டே வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.
பழங்குடிக் குழந்தைகளின் நட்பார்ந்த சிரிப்பை எத்தனை அழகாக கவனித்திருக்கிறீர்கள். இமயமலை சரிவுகளில் வாழும் கடுவாலி இனக் குழந்தைகளின் அந்தக் கள்ளமில்லா கண்கொள்ளாச் சிரிப்பு அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. பழங்குடி வாழ்வின் சுதந்திரமே, கூட்டு வாழ்வியல் முறையே இந்தச் சிரிப்பை அவர்களுக்கு தருகிறது போலும்.
நட்சத்திர ஓட்டல் புல்வெளியில் சிட்டுக்குருவிகள் இடம் பிடித்திருப்பது போல தான் பழங்குடி மக்கள் மெல்ல மெல்ல பொருளாதாரத்திலும் தேசிய நீரோட்டத்திலும் இணைந்து வருகிறார்கள். ஆனாலும் என்ன அவர்கள் தங்கள் காடுகளிலும் புல்வெளிகளிலும்தான் மகிழ்ச்சியாக உணர முடியும். அவர்களுக்கு உண்மையிலேயே நாம் ஏதாவது செய்வதாக இருந்தால், அவர்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் செயல்பாடுகளை அவர்கள் இயல்பாக வாழும் இடத்தில்தான் அதைச் செய்யவேண்டும். இன்றளவும் கோண்டு போன்ற பழங்குடி இன மக்கள் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் எதிர்கொள்ளும் துயரங்கள் சொல்லி மாளாது.
“இது கார்ப்பரேட் உலகம். எதிரியின் எந்தப் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்பது இங்கே எழுதாவிதி. ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான் நாம் பேசிக் கொண்டு இருக்கின்ற இந்த கணத்தில் கூட ஒற்றுமை இல்லாமல் அறியாமையில் உழல்கின்ற அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, அதிகார வர்க்கமும் பெரும்தொழில் முதலைகளும் பழங்குடியினரை சுரண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மலைகளிலும் காடுகளிலும் வாழும் மற்ற சில மேம்பட்ட இன மக்கள் கூட பழங்குடியினர் என தங்களை கூறிக்கொண்டு பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீட்டு வாய்ப்புகளையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் பலவீனத்தை ஆற்றலாக எப்படி மாற்றிக்கொள்வது, தங்கள் முன்னிருக்கும் ஒதுக்கீட்டு வாய்ப்புகளை மேலும் சிறப்பாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று நாமும் நம் அரசுகளும் இன்னமும் கூட அந்த மக்களுக்கு சரியாக சொல்லித் தரவில்லை. மண்ணின் மைந்தர்களாக இருந்தபோதும் அவர்கள் இன்னமும் அங்கே பசித்து இருக்கிறார்கள். அவர்களின் பல ஆயிரம் குழந்தைகள் கையில் கப்பரையோடு காத்திருக்கிறார்கள். இன்னும் பல நூறு பகா ராய்கள் எழுந்து வர வேண்டியிருக்கும்.
“நான் மட்டுமல்ல எங்கள் குலமே பிச்சைப்பாத்திரத்தை நீட்டி நின்றிருக்கிறது’, என்று அவள் மனம் அந்த முப்பது ஆண்டுகளாக எத்தனை வேதனைப் பட்டிருக்கும். எவ்வளவு துயரம் மனதின் ஆழத்தில் அழுந்திக் கிடந்திருந்தால் அந்த புகைப்படத்தை பார்க்காமல் திரும்பி அமர்ந்து இருப்பாள். அவள் ஒன்றும் அந்தப் புகைப்படத்தை அவள் படுக்கை அறையில் மாட்ட வேண்டிய அவசியமில்லை. அவள் நினைவறைகளில் அது என்றென்றும் நிரந்தரமாகவே இருக்கிறது. அது அங்கே இருப்பதை அவள் ராமின் மூலம் அறிந்து கொண்டாள் அவ்வளவுதான். அம்மட்டில் ராம் செய்தது அவளுக்கு ஒரு நல்ல உதவியே.
என்றுமே நிறைய முடியாத முற்றாக அடைந்துவிட்டோம் என்று ஒருநாளும் சொல்லிவிட முடியாத இலட்சியத்தை கொண்டவர்கள் பாக்கியவான்கள் தான். இதுவரை மனித குலத்திற்கு அளப்பரிய சேவை செய்த அத்தனை புனித ஆன்மாக்களும் இத்தகையதோர் நிறைய முடியாத பெரியதோர் உன்னத இலக்கை இலட்சியமாக கொண்டவர்கள் தானே. உலக விவகாரம் என்கின்ற சாமானிய தளத்தில், மக்களுக்கான பொதுச்சேவை புலத்தில், செயல்அறம் என்ற கர்ம யோகத்தில், நிறைவின்மையே வெற்றி அடைவதற்கான, என்றென்றும் வென்று கொண்டே இருப்பதற்கான அதிதீவிர கிரியா ஊக்கி, அணைக்க முடியாத பெரும் தீ. அது மற்றவர்களுக்காகவே வாழ்பவர்கள் கொண்ட நிறைவின்மை என்னும் முடிவிலியின் நிறைவிலியின் கருந்துளையின் ஆதித் தீ. அந்தத் தீயில் பிறர் பொருட்டு நித்தம் வெந்து கொண்டு இருப்பவர்கள் வெல்வதற்காகவே பிறந்தவர்கள். அவர்கள் எவராலும் எதன் பொருட்டும் வெல்லப்பட முடியாதவர்கள். ஐயமே இல்லை.
தன் நெஞ்சின் மீதும், தன் முதுகின் மீதும், தன் தலையின் மீதும், தன் இனத்தின் ஒட்டுமொத்த துயரத்தை சுமப்பவள், அதன் விடுதலைக்காக உழைப்பவள், என்றேனும் அவள் வாழ்நாளில் நிறைவை அடைய முடியுமா என்ன?. அவள் ஏந்தி நிற்பது அத்தனை விரைவில் நிறைக்க முடியாத பாத்திரம். அது இன்னும் நிறைய கைகள் மாறி நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.
நாங்களும் பாத்திரங்களை தூக்கி காத்திருக்கிறோம். எங்கள் வாசிப்பு பாத்திரங்களும் நிறைவிலி பாத்திரமே. அது என்றும் நிறைவதில்லை அது நிறையப் போவதுமில்லை. அள்ள அள்ளக் குறையாத உங்கள் புனைவு உள்ளம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து கதைகளை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே இருங்கள். அந்த அட்சய கதைப்பாத்திரம் என்றைக்கும் குன்றப் போவதில்லை. உங்களிடம் இருப்பதுவும் அள்ள அள்ளக் குறையாத குறைவிலி பாத்திரம் அல்லவா.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
அன்புள்ள ஜெ
நிறைவிலி கதையை நான் இப்படித்தான் வாசித்தேன். ஆழமான ஸ்பிரிச்சுவலான ஒரு நிறைவின்மைதான் முடிவே இல்லாமல் செயல்பட வைக்கிறது. அதை ஒருவர் தன் அன்றாடவாழ்க்கையில் இருந்துகூட எடுத்துக்கொள்ளலாம்
சொல்லப்போனால் முதல்கதையான கொதி கூட இதைத்தானே சொல்கிறது? அந்த கலமும் இதுவும் ஒன்றுதானே? ஆனால் அது கிறிஸ்துவின் ரத்தத்தால் நிறைந்தது இல்லையா?
ஆல்வின் எபநேசர்
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
எச்சம், மலை பூத்தபோது – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மிகச்சுலபமான கோடுகள் வழியாக சில மாஸ்டர்கள் வரையும் கோட்டோவியம்போல் இருந்தது எச்சம். ரெஸ்ட் என்ற சொல்லை பாட்டா மண்டையிலேயே நிறுத்த முடியவில்லை. அதாவது எண்பது ஆண்டுகளாக அது ஞாபகத்தில் பதியவில்லை. ரெஸ்ட் என்றால் மிச்சம்தான். மிச்சத்தில் அமைதிகொள்ளுங்கள் என்றுதான் பொருள். தாத்தாவுக்கு இங்கேயே இன்னும் நிறையவில்லை
சென்றதலைமுறையில் இந்த மாதிரி தணியாத செயலூக்கம் கொண்டவர்களை பார்க்கமுடியும். அவர்களை நாம் இன்று ஒரு வகையான அரும்பொருட்களாகவே பார்க்கிறோம். காந்தியவாதிகள், கம்யூனிஸ்டுகள், தொழில்முனைவோர். அவர்கள்தன் இந்தியாவின் சிற்பிகள்
ஆனந்த்குமார்
ஆசிரியருக்கு வணக்கம்,
“அது நமக்கு செரியாவாது கேட்டியாலே” என்றார்.எச்சம் கதையின் பாட்டாவின் கடைசிவரி.எழுவது எம்பது வருஷ கணக்காகும் அது அவரால் ரெஸ்டு எடுக்க முடியாது.
நான் பணிபுரியும் நிறுவன கப்பல்களில் ஞாயிறு மதியம் பிரியாணிக்குப்பின் அரை நாள் ரெஸ்டு கிடைக்கும்.அது கப்பல் துறைமுகத்தில் இல்லாமலும் அந்த நாளில் ஏதேனும் பழுது ஏற்படாமலும் இருக்கவேண்டும்.தினமும் பத்துமணிநேர உழைப்பிற்குப்பின் அந்த அரை நாள் ஓய்வை கப்பல்காரர்கள் எதிர்பார்ப்போம்.
அதுவே முழுநாள் ஓய்வு என்றால் மிக சிரமம் ஆகிவிடும் முழுநாளும் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் பகலில் தூங்கி இரவில் தூக்கம் இல்லாமல் கொஞ்சம் சிரமப்படுவார்கள் கப்பல்காரர்கள்.அசாதாரண சூழ்நிலையில்,எதிர்பாராமல் வரும் பணி சூழலை எதிர்கொண்டு பழகியவர்களுக்கு ரெஸ்ட் கொஞ்சம் கடினம்தான்.
சிலர் பணிஓய்வு வயதான அறுபது வயதுக்கு முன்னே விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்துவிட்டு பணியில் இருந்து நின்றுவிடுவார்கள்.வீட்டிலும்,வெளியிலும் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் அதிக பட்சம் மூன்று அல்லது நான்கு வருடத்தில் வாழ்வே முடிந்துவிடும். அவ்வாறில்லாமல் குடிக்கும்,புகைக்கும் அடிமையாகி நோய்வாய்பட்டு மீண்டும் பணியில் இணைந்து இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுத்தவர்களை கண்டிருக்கிறேன்.
தியான வகுப்புகளில் தியானம் கற்றுகொள்ள வருபவர்கள் சொல்வதுண்டு தியானம் வசப்படவில்லை என.எப்போதும் எதையாவது செய்துகொண்டு இருந்தவர்களுக்கு சும்மா இருத்தல் என்பது இயலாது.
எம் எ எம் ஆறுமுகபெருமாள் நாடாரும் இறுதி மூச்சு உள்ளவரை கடையை திறந்து மூடுவார்.
இன்றும் கதையை எதிபார்த்து காத்திருந்தேன். இருபத்தியைந்து அதோடு இப்போதைக்கு நிறுத்தியுள்ளீர்கள்.எழுதி தீர்ந்து அல்ல என சொல்லியிருக்கீறிர்கள்.மீண்டும் வரட்டும் கதைகள்.
என்னால் முன்பு எப்போதும் தனிமை இயலாது.மும்பையில் இருக்கும்போதும் கப்பல் பணிக்கு வந்த போதும் தூங்க மட்டுமே அறைக்கு செல்வேன்.2014 இல் உங்கள் தளம் அறிமுகமாகி நான் வாசிப்பது இலக்கியம் என உணர்ந்தபோது தனிமை இனிமையாகிவிட்டது.தற்போது வந்த கதைகளை வாசித்து கொண்டிருக்கையில் வந்த ஒரு எண்ணம்.பசிக்கு உணவும்,இரவு துயில ஒரு சின்ன இடமும் உங்கள் கதைகளும் மட்டும் இருந்தால் போதும் என. வாழ்வின் கடைசிநாட்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன தேவை என இப்போதே தெரிந்து விட்டது.
ஷாகுல் ஹமீது.
மலைபூத்தபோது [சிறுகதை]அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது கதையை 25 கதைகளின் வரிசையில் ஒன்றாக அப்போது வாசிக்கமுடியவில்லை. அதற்குள் நுழையவே முடியவில்லை. அது ஒரு மந்திர உச்சாடனம் மாதிரி இருந்தது. ஆனால் இந்தக்கதைகள் முடிந்த பிறகு அதை ஒரு அழகான ஃபேபிள் ஆக வாசித்தேன்.
பூக்களில் எழும் வேங்கைகள். அவைதான் ஊருக்குக் காவல். நாம் அவற்றுக்கு அவமதிப்பை இழைத்துக்கொண்டே இருக்கிறோம். அவை நம்மை மன்னித்துக்கொண்டே இருக்கின்றன
ராஜ்குமார் அர்விந்த்
அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது வாசித்தேன். சொல் எண்ணி வாசிக்க வேண்டிய கதை.
இயற்கை என்னும் தெய்வம், தன்னை அழித்து மண்ணில் வாழும் மனிதர்களும் தன்னில் ஒரு பகுதியே என்றெண்ணி அவர்களை மன்னிக்கிறது. மலையியில் வாழும் இயற்கையே ஆன பழங்குடிகள் மண்ணில் வாழும் மக்களுக்காக அந்த தெய்வங்களிடம் பேசுகிறார்கள்.
இயற்கையில் உள்ள ஒன்றுக்கும் மற்றுக்குமான தொடர்ச்சி இக்கதையில் விவரிக்கபடுகிறது. ஆனால் வழக்கமான சொல்லப்படும் குரூரம் இல்லாமல் இங்கு இயற்கை முழுவதும் மென்மையால் இயங்குகிறது.
“ஆமாம், அதுதான், ஆகட்டும் தெய்வங்களே” என்ற மத்திரம் இயற்கை ஆகிய நீ எதை தருகிறாயோ அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ எந்த முடிவை எடுக்கிறாயோ அதை நான் ஏற்கிறேன், ஏனென்றால் நீயும் நானும் ஒன்றே என்று சொல்கிறது. ஆனால் கதையையின் இறுதியில் மலையில் வாழும் அந்த ஆதி பழங்குடி இயற்கை மனிதன் முதல் முறையாக தெய்வதிடம் மண்ணில் வாழும் மனிதர்களுக்காக கோருகிறான். அதுவும் கனிந்து அருள்கிறது.
“இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும்” என்னும் வாக்கியத்தை கதையில் மலை மனிதன் சொல்கிறான். அதேபோல “இலைகள் உதிர்ந்து தளிர் ஆகின்றன” என்று அவன் சொல்லும் உவமை கீதையில் ஆத்மா அழிவதில்லை என்பதற்கானது. மலையில் ஆதி மனிதன் உணர்ந்து வாழ்ந்த ஒன்றைத்தான் கிருஷ்ணன் கீதையில் சொல்கிறான்.
பூலிகளை பூக்களாக, அனைத்தையும் பொண்ணாக பார்க்க முடியும் கண் ஒன்றால்தான், தெய்வம் தரும் அனைத்தையும், “ஆமாம் அதுதான் ஆகட்டும் தெய்வங்களே” என்று ஏற்றுக்கொள்ள முடியும்.
“கிளகூட்டங்களை ஓசை எழுப்பி துரத்தினர். வயலுக்குமேல் கிளிக்கூட்டங்கள் காற்றில் பறக்கும் பச்சை சால்வை போல் நெளிந்து அலைக்கழிந்தன. சிறுகுறிவிகள் அஞ்சவில்லை. அவை கதிர்கள் மேல் இறங்கிய போது கதிர்களென்றே ஆயின. நெல்மனிகளை கொத்தும் பொருட்டு நெல் மணிகள் போலவே அலகுகள் கொண்டிருந்தன. அவை சிறுகுரல் பேசி சிறுசிறுகுகளை வீசி மேலெழுந்து அமைந்தன.” என்ற விவரிப்பு கதையில் வருகிறது.
கூட்டமான கிளிகள். சின்ன அலகுகள் கொண்ட சின்ன குருவிகள்.மண்ணில் வாழும் மனிதனுக்கும் இயற்கைக்குமான வேறுபாட்டை சித்தரிக்கும் உவமை இது. கிளியை போல் பெரிய கூட்டம் என்பதனாலேயே மண்ணில் வாழும் மனிதன் அஞ்சியவன். அவன் உணவுன்டாக வேண்டும் குலத்தை பெருக்கியாக வேண்டும். அதனால் அச்சதால் அனைத்தையும் அள்ளிவைத்து கொள்ள விரும்புபவன். பரிணாமத்தால் அதிகமாக அள்ளுவதற்காக பெரிய அலகுகளை உருவாக்கி கொண்டான் மண் மனிதன். அதனால்தான் இயற்கையால் துரத்தப்பட்டு அவனுக்கு போதாமை எஞ்சுகிறது. மாறாக இயற்கையில் உருவகமான சின்ன குருவிகள் இயற்கையோடு ஒன்றியிருக்கிறது, மலை மனிதர்களை போல. அதற்கு தன் குலத்தை பெருக்கிகொள்ள வேண்டாம். எனவே அதற்க்கு முதலில் இயற்கை தந்த இயல்பான அந்த சின்ன அலகுகளே போதும். ஆகையால் அதற்கு போதுமான உணவு கிடைத்துவிடுகிறது. அதற்கு அச்சமும் இல்லை.
அதேபோல் கதையில் எலிகள் நெல்மணிகள் பற்றி வரும் உவமையையும் இப்படி விரித்துகொள்ள முடிகிறது. பள்ளத்தில் வாழும் மக்கள் எலிகளையும் எலியின் நெல்லையும் உண்கிறார்கள். மலை மனிதர்களுக்கு வேர்களாகி எலிகள் தெய்வம், அவர்கள் அதை உண்பதில்லை. அனைத்தையும் அள்ளிக்கொள்ள வேண்டும் என்னும் நிதானமின்மையாலேயே மண்மனிதன் வயிலில் எலிகள் உண்பதை விட அதிகமான நெல்மணிகளை சிதறடித்து கரியாக ஆக்குகிறான். ஆதனால் வேரை அழிப்பதன் மூலம் இயற்கையும் தன்னையும் அழித்துகொள்கிறான். தரை தோண்டி எலியை உண்பதை தங்கம், வைரம், நிலகரி், எண்ணை என்று அவன் பூமியில் தோண்டுவதாக கூட பார்க்கலாம்.
மண்ணில் வாழும் மனிதர்கள் தங்கள் ஊர் தெய்வங்களையும், தங்கள் முதல் தெய்வங்களையும் அதற்க்கு செய்ய வேண்டிய காணிக்கையையும் மறந்து விட்டார்கள்.
“பொண்ணாகி பூவாகி நிக்குது தெய்வங்கள் மண்ணில் நிறையவே” என்று அதே இடத்தில் காலம் காலமா பாடும் அந்த பாடலை மனிதர்கள் காதுகொடுத்து கேட்டதில்லை.
மண்ணுக்கும் பொண்ணுக்கும் என்ன பகை என்று கேட்கிறான் மலை மனிதன். அப்படியென்றால் தரைக்கு வர நேர்ந்த மண் மனிதன் முன்பு அவன் மலையில் கண்ட பொண்ணை இழந்தான், அந்த இழந்ததை பூமிக்கு அடியில் தேடுகிறான். அந்த உண்மையை உணர்ந்துதான் புலிகள் பூவாக கனிந்ததா.
நன்றி
பிரதீப் கென்னடி
25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப… [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
இரு கேள்விகள்
அன்புள்ள ஜெ
கீழ்க்கண்ட வரி யார் எழுதியது? உங்கள் ஊகம் என்ன?
எழுத்தாளன் என்பது தொழில் அல்ல; அது ஓர் உணர்வு. அதை அடுத்தவன் சொல்ல வேண்டும் என்பதில்லை. அசல் எழுத்தாளன் அவனே அதை உணர்வான். ஒருவேளை ஒன்றையுமே எழுதாமல் / வெளிவராமல் போயிருந்தாலும் நான் எழுத்தாளனே
சரவணன் அருணாச்சலம்
அன்புள்ள சரவணன்,
சு.வேணுகோபால் ஏறத்தாழ இதேபோல எழுதியிருக்கிறார். நீங்கள் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய தன்னுணர்வு. வேறெந்த அடையாளமும் ஒவ்வாமையை அளிக்கும். இந்த உணர்வு வந்தபிறகே உண்மையில் ஒருவன் முதல்கதையை எழுத ஆரம்பிக்கிறான்.
அரசு, மதம், கொள்கை, கோட்பாடு, கட்சி என அனைத்துக்கும் விசுவாசமின்மையை தெரியப்படுத்திய பின்னர் எழுதுபவனே எழுத்தாளன்.
ஜெ
அன்புள்ள ஜெ.,
வெண்முரசின் சில பகுதிகளைப் படிக்கும்போது இதையெல்லாம் கண்ணாடி முன்னால் நடித்துப் பார்க்காமல் எழுதியிருக்க முடியாது என்றுதான் தோன்றியது. குறிப்பாக ஒரு சொல்லை உச்சரிக்கும்போது பாத்திரங்களின் முகத்தில் பரவும் உணர்ச்சிகளை விவரிக்கும்போது, சில முகபாவங்களை எழுத்தில் உணர்த்தும்போது. அதேபோல் சில பாத்திரங்களை படித்தபோது, நாம் ஏற்கனவே பார்த்த அல்லது அந்தந்த பாத்திரங்களின் இயல்புகளோடு ஒத்துப்போகக்கூடிய நடிகர்களின் முகங்கள் இயல்பாக நினைவில் எழுந்துவருவதைத் தடுக்க முடியவில்லை. குறிப்பாக கர்ணனைப் பற்றிப் படிக்கும்போது நடிகர் திலகம். அதுபோலவே உத்தரன் – நடிகர் சாம்(அடுத்த படியாக வையாபுரி), துச்சலை – தண்ணீர் தண்ணீர் காலத்து சரிதா, பூரிசிரவஸ் காக்கிச்சட்டை கமல் (அல்லது நம்ம சென்னை வட்டம் ஜாஜா – உண்மையாகவே, அர்ஜுனனுக்கும் சரியாகத்தான் இருப்பார்) இப்படி. உங்களுக்கு இதுபோல முகங்கள், எழுதும்போது மனதில் தோன்றுவதுண்டா?
மகாபாரத, இராமாயண நெடுந்தொடர்கள் என்றென்றைக்குமாக இடம்பெறாத தொலைகாட்சி சேனலே இன்று இல்லை. எந்தச் சேனலைப் பார்த்தாலும் மழு மழு ‘ஜில்லட்’ முகத்தோடு ‘ஜிம்பாடி’ சிவனோ, ராமனோ, விஷ்ணுவோ (பலரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது செய்தி) நம்மைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய பொழுதுபோக்கு உலகின் பெருவெடிப்பில் Marvel போன்ற நிறுவனங்கள் வெண்முரசை web series ஆக செய்தாலும் ஆச்சரியமில்லை என்கிற நிலையில் அதன் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நீங்கள் எந்தெந்த நடிகர்களைப் பரிந்துரை செய்வீர்கள்?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,
உண்மையில் வெண்முரசுக்கு இப்போதே மூன்று கோடி வரை காட்சி ஊடகத் தயாரிப்புக்கான உரிமைத்தொகை பேசப்பட்டிருக்கிறது. நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
புராணங்கள் நிகழ்த்துகலைகள் வழியாகவே நிலைகொள்கின்றன. மாபெரும் நடிகர்கள் புராணநாயகர்களை நடித்திருக்கிறார்கள். எவரும் மாறாத முகங்களை புராணநாயகர்களுக்கு அளிப்பதில்லை. அந்த நடிகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். புராணநாயகர்கள் மாறாமலிருப்பார்கள். ஆகவே சினிமாவாக ஆவது தவறில்லை.
ஆனால் எனக்கு உள்ளம் ஒப்பவில்லை. அதற்குக் காரணம் கிடையாது. ஆகவே அக்கற்பனைகளே இல்லை.
ஜெ
March 26, 2021
கோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021
கொரோனாக்காலத்திற்கு முன்பு முடிவுசெய்யப்பட்ட சந்திப்பு இது, அதை மீண்டும் நடத்தலாமென முடிவெடுத்தது சென்ற அக்டோபரில். ஆனால் பலவகையிலும் நீண்டு சென்று இப்போது நடத்த உறுதியானது. பெரியநாயக்கன் பாளையத்தில் நண்பர் பாலுவின் தோட்டத்திலுள்ள பண்ணைவீட்டில்.
பாலு பொறியியல் தொழிற்சாலை ஒன்றை நடத்துகிறார். சரியாக என்ன செய்கிறார் என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் கோவையிலிருந்து 20 கிலோமீட்டரில் உள்ளது அவருடைய பண்ணைவீடு. ஏற்கனவே அங்கேதான் புத்தாண்டு கொண்டாட்டம்.
விழாக்களில், நிகழ்வுகளில் வாசகர்களைச் சந்திப்பதும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொள்வதும் வழக்கமானதுதான். ஆனால் அங்கே உரையாடல் இயல்வது அல்ல. வெறுமே கைகுலுக்கலுடன் முடிந்துவிடும். ஆனால் இலக்கிய உரையாடல் என்பது வேறுவகை. அதற்கு ஒரு தொடர்ச்சி தேவை. ஒருவர் நம் உள்ளத்தில் பதிய வேண்டும்
அதைவிட அவர்களுக்குள் ஓர் அறிமுகம், உரையாடல் உருவாகவேண்டும் ஆகவேதான் இச்சந்திப்புகள். 2016ல் தொடங்கி ஐந்தாண்டுகளாக நிகழ்ந்து வரும் சந்திப்புகள் இவை. ஆண்டுக்கு குறைந்தது மூன்று எனக்கொண்டால் 12 சந்திப்புகள் வரை நடந்துள்ளன.
கோவைக்கு முந்தைய வாரம்தான் வந்து மீண்டிருந்தேன். திங்கள் சென்று சேர்ந்து வெள்ளி மீண்டும் கிளம்பினேன். ரயில் நிலையத்திற்கு கதிர்முருகன் வந்திருந்தார். ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த சென்னை குழு காரிலேயே இருந்தது. அவர்கள் காலைமுதல் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள்.
பண்ணைவீடுகளில் சந்திப்பு நடத்துவதிலுள்ள சிக்கல் அனைவரையும் ஒன்றாகச் சேர்ப்பது. அதில் கதிர் முருகன் உழன்றுகொண்டிருந்தார். அப்போது கூட எவரோ எங்கோ வந்துகொண்டே இருந்த ஃபோன் வந்துகொண்டே இருந்தது. செல்லும் வழியில் ஒரு காபி சாப்பிட்டோம்
பண்ணைவீட்டுக்குச் சென்றதுமே பேசத் தொடங்கிவிட்டோம். இத்தகைய சந்திப்புகளின்போது பெரும்பாலும் கேள்விகளை ஒட்டியே பேச்சுக்கள் இருக்கும். அத்துடன் நான் எப்போதும் சொல்ல விரும்புபவை, அப்போது தோன்றி முன்செல்பவை சில உண்டு.
பொதுவாக நான் இலக்கியம் என்னும் ‘மிஷன்’ பற்றி எல்லா உரையாடல்களிலும் சொல்வேன். ஒருவகையில் முப்பபதாண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமி என்னிடம் சொன்னவை அவை. அவற்றை திரும்பத்திரும்பச் சொல்லி நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. கையளித்துச் செல்லவேண்டியிருக்கிறது. இவை ஒரு இலக்கியவாதியின் சொற்கள் அல்ல. இச்சூழலில் பல தலைமுறைகளாக இருந்துவரும் சிறிய, ஆனால் அழியாத ஒரு தரப்பின் குரல்.
இலக்கியத்தை வேடிக்கையாக, போகிறபோக்கில் செய்வதாக எண்ணிக்கொள்ளும் மனநிலைக்கு எதிரான ஒரு தீவிரத்தை உருவாக்கவே எப்போதும் முயல்கிறேன். இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அல்ல. கதைசொல்லல் அல்ல. அது ஒரு ‘கலை’ மட்டும் அல்ல. ஓர் ‘அறிவுத்துறை’ மட்டும் அல்ல. அது ஒரு பண்பாட்டை உருவாக்கி, நிலைநிறுத்தும் தொடர்ச்செயல்பாடு.
ஒரு சமூகத்திற்கு இறந்தகாலம் எதிர்காலம் இரண்டுமே இலக்கியத்தால்தான் உருவாக்கி அளிக்கப்படுகின்றன. வரலாறு என்பதே உண்மையில் இலக்கியத்தின் கொடைதான். பண்பாடு என்பது இலக்கியத்தின் இன்னொரு முகம் மட்டுமே. இலக்கியம் அன்றாடவாழ்க்கையால் ஒவ்வொரு கணமும் மறக்கப்படுபவற்றை நினைவில் நிறுத்தும் கடமை கொண்டது. காலம் என்னும் நீட்சியை புறவயமாகச் சித்தரித்துக் காட்டும் பொறுப்பு கொண்டது. எதிர்காலக் கனவுகளை உருவாக்கும் பொறுப்பு கொண்டது.
அப்பொறுப்பை வாசகர்- எழுத்தாளர் இரு சாராரிடமும் வலியுறுத்துவதே என் நோக்கம். அவர்கள் மிக எளிய ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் அல்ல. அவர்கள் யுகத்தை கட்டமைப்பவர்கள். மிகச்சிறிய அளவிலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு மையச்செயல்பாட்டில் இருக்கிறார்கள்.
அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர் தன் தலைக்குமேல் இன்னொருவரை நிறுத்தக்கூடாது. அரசியல்தலைவர்கள், அரசியல்கோட்பாட்டாளர்கள், தத்துவவாதிகள் எவராயினும் சரி, அவர்கள்மேல் கண்மூடித்தனமான் வழிபாட்டுணர்ச்சி கொண்டவர் இலக்கியவாதியே அல்ல. அவர்களிடமிருந்து வழிகாட்டுதல்களை, ஆணைகளை பெற்றுக்கொள்பவர் வெறும் கருத்தியல்கூலிப்படைகள்.
எழுத்தாளனிடமிருக்கவேண்டிய அடிப்படைப் பண்பே அந்த தன்னிமிர்வுதான். தான் வரலாற்றை சமைக்கிறோம் என்னும் தன்னுணர்வுதான். கும்பலில் கோஷமிடுவது, கூட்டத்தில் ஒருவராக ஓடுவதன்மேல் ஆழ்ந்த அருவருப்பு ஒருவனுக்கு இல்லையேல் அவன் ஒருபோதும் கலையை உருவாக்கப்போவதில்லை.
ஆசிரியர்கள் அவனுக்கு இருக்கலாம். அவர்கள் இலக்கிய முன்னோடிகளாக, தத்துவ ஆசிரியர்களாக, ஆன்மிக குருக்களாக இருக்கலாம். ஆனால் இலக்கியவாதி அவர்களுடன் ஆழ்ந்த அகவயமான உரையாடலில்தான் இருக்கிறான். அவன் இன்னொருவரின் செயல்திட்டத்தின் கரு அல்ல. இன்னொருவரின் படையின் உறுப்பினன் அல்ல. அந்த தன்னுணர்வை உருவாக்கவே எப்போதும் முயல்கிறேன்.
ஆனால் இது எளிதல்ல. இங்கே எழுதக்கூட வேண்டியதில்லை. வாசிக்க ஆரம்பித்தாலேபோதும், கும்பல் சுற்றிலும் கூடிவிடும். அரசியல்சரிகள் சொல்லி மிரட்டுவார்கள். கூட்டுமனுக்களில் கையெழுத்திட, ஊர்வலங்களில் கோஷமிட, தலைமைகளை ஏற்று பின்தொடர, கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒப்புக்கொண்டு அதன்படி வாசிக்கவும் எழுதவும் வற்புறுத்துவார்கள். ஏற்காவிடில் வசைபாடுவார்கள். ஏளனம் செய்வார்கள்.
நாம் நினைப்பதைவிட வலிமையானது இவர்களின் இந்த சூழ்ந்துகொள்ளுதல். இவர்களை நாம் உள்ளூரப் பொருட்படுத்துவதில்லை. ஏளனமும் கசப்பும்தான் இருக்கும். ஆனால் இந்த அறிவிலிகளின் எண்ணிக்கை மிகப்பெரியது. இவர்களால் நம்மை சோர்வுறச் செய்யமுடியும். இலக்கியவாதி தனித்தவன், அவ்வப்போது உளச்சோர்வுகளுக்குள் செல்லும் தன்மை கொண்டவன். அவனை இவர்களால் சமயங்களில் மிகமிக எதிர்மறையான மனநிலைகளுக்குத் தள்ளிவிடமுடியும்
இங்கே இலக்கியவாசகன், எழுத்தாளன் இருவருமே இந்த கொசுக்கடியை தாங்கி முன்னகரும் அகவல்லமையை ஈட்டியாகவேண்டும். இது நூறாண்டுகளாக இப்படியேதான் இருக்கிறது. வெட்டிக்கூச்சல்களின் முகங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன.
இவர்கள் உருவாக்கும் உளச்சோர்வு வாசகனை தலைமறைவாக இருக்கவைக்கிறது. எழுத்தாளனை சிற்றுலகில் ஒடுங்கவைக்கிறது. தன்னிமிர்வு வழியாக அதை இலக்கியவாதி எதிர்கொண்டே ஆகவேண்டும். இலக்கியச் செயல்பாட்டின் முதல் சோதனையே சிறுமையை எதிர்கொள்வதுதான். அதையே பாரதி ,புதுமைப்பித்தனிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
உரையாடல்களை சிலசமயம் தீவிரமாக, சில சமயம் நகைச்சுவையாகக் கொண்டுசெல்வது வழக்கம். ஆனால் பொதுவாக அரசியல், சினிமா இரண்டையும் தவிர்ப்பது என் விதிகளில் ஒன்று. இந்த தேர்தல்காலத்தில் அரசியல் கலக்காமல் ஒரு குழு இரண்டுநாட்கள் பேசினார்கள் என்பதை வரலாறு பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
உரையாடலில் சிறுகதை, கவிதைகளின் வாசிப்பு மற்றும் எழுத்திலுள்ள நுட்பங்கள் எப்போதுமே பேசப்படும். வருபவர்கள் எழுதிக்கொண்டுவந்த படைப்புக்களை வாசித்து கருத்துச் சொல்வது வழக்கம். அதில் பூசிமெழுகல்கள் இல்லாமல் நேரடியாக வடிவம்சார்ந்த விமர்சனம் முன்வைக்கப்படும். பொதுவாக எழுதுவது பற்றிய விமர்சனம் வாசிப்பையும் கூர்மையாக்குவதை காணமுடியும்.
மாலையில் அருகிலிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் வரை ஒரு நீண்ட நடை சென்றோம். அது ஒரு மலைவிளிம்பு. இரண்டு மலைகளின் சந்திப்பு. அப்பால் பள்ளத்தில் நெடுந்தொலைவு வரை சமவெளி, அதற்கப்பால் கேரளத்து மலைமுடிகள். அந்தியில் அப்படி ஒரு மலைவிளிம்பில் நின்று இருண்டு வரும் வானையும் விளக்கொளிகள் சுடரத்தொடங்கிய நிலத்தையும் பார்ப்பது அன்றாடத்திலிருந்து, கருத்துக்களிலிருந்து, எண்ணங்களிலிருந்து எழும் ஓர் அனுபவம்
ஐந்து கிலோமீட்டர் நடை. மீண்டும் ஐந்துகிலோமீட்டர் திரும்பி வருவதற்கு. மொத்தம் மூன்று மணிநேரம். பலருக்கு அவ்வளவு நடக்கும் வழக்கம் இல்லை என நினைக்கிறேன். அப்படியே திரும்பி வந்து அமர்ந்து மீண்டும் பதினொரு மணிவரை பேசுவதை நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்குப்பின்னரும் பெண்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன்.
காலையில் நடை இல்லை. எழுந்து குளித்து முடிக்கவே எட்டு மணி ஆகிவிட்டது. எட்டரை மணிக்கே அமர்வு. மதியம் ஒன்றரைக்கு முடித்துக்கொண்டோம். அதன்பின் ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். எல்லா சந்திப்புகளிலும் இது ஓர் இனிய நிகழ்வு.
நான் மறுநாள் சென்னை கிளம்புவதாக இருந்தது. ஆகவே அங்கேயே தங்கிவிட்டேன். ஈரோடு, கோவை நண்பர்கள் உடனிருந்தனர். மாலையில் அருகிலிருக்கும் பாலக்கரை பெருமாள் கோயில் வரைச் சென்றோம். அங்கிருந்த அறங்காவலர் என்னை அறிந்திருந்தார். அவர் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் காரருமான கருத்திருமனின் உறவினர். கருத்திருமன் தேர்ந்தெடுத்துத் தொகுத்த கம்பராமாயணப்பாடல்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.
அழகான புதிய ஆலயம். ஆனால் உள்ளிருக்கும் பழைய கட்டிடம் இருநூறாண்டு பழமைகொண்டது. பழங்குடிகளால் வழிபடப்பட்ட ரங்கநாதர் ஆலயம். அருகே சில பழங்குடி ஊர்கள் இருந்தன. இன்று பெரும்பாலானவர்கள் கோவை நோக்கி சென்றுவிட்டனர்
அந்த மாலையும் அழகியது. சூழ்ந்திருக்கும் பசிய மலைகளின் அடியில் அந்தியில் நின்றிருந்தோம். மலைக்குமேல் இன்னும் இரண்டு பெருமாள்கள் உள்ளனர் என்றார்கள். பெருமாளின் மணிமுடி முகம் நெஞ்சு கால் என ஆலயங்கள் மலையுச்சிகளில் அமைந்துள்ளன. கதிர்முருகன் எல்லா பெருமாள்கோயில்களுக்கும் ஏறிச்சென்றிருக்கிறார்.
கோவையின் அருகே இத்தனை அழகிய மலைக்கோயில்கள் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாதென நினைக்கிறேன். கூட்டம் குறைவாகவே இருந்தது. அந்தச் சூழலின் தனிமையும் விரிவும் ஆழ்ந்த அகநிறைவை அளித்தன
அன்றிரவும் பன்னிரண்டு மணிவரை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எனக்கு சென்னைக்கு விமானம். ஊர்சென்று சேர நாள்களாகும். பின்னர் நினைவுகூர்கையில் ஒரு மெல்லிய சிறகடிப்போசையை அகத்தே எழுப்பும் நாட்கள் சில உண்டு. இவை அத்தகையவை.
மலேசியா- ஒரு காணொளி உரையாடல்
மலேசியா தமிழாசியா என்னும் அமைப்பின் சார்பில் நடக்கவிருக்கும் காணொளி உரையாடலில் பங்கேற்கிறேன்.
மலேசிய/ சிங்கை நேரம் : இரவு 8.00
இந்திய/ இலங்கை நேரம்: மாலை 5.30
கூகிள் மீட் இணைப்பு https://meet.google.com/cuc-kjtx-xbw
யூடியூப் லைவ் இணைப்பு https://www.youtube.com/watch?v=UyYdN...
இந்திய ஆங்கில வாசிப்பு
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கங்கள். சமீபத்தில் அமேசானில் மூன்று புத்தகங்கள் வாங்கியிருந்தேன். சேப்பியன்ஸ், குற்றமும் தண்டனையும் மற்றும் அசுரா(அனைத்தும் ஆங்கிலத்தில்). அதில் முதல் இரண்டை தீவிர வாசிப்பிற்கும் கடைசி ஒன்றை இலகுவான வாசிப்பிற்கும் வைத்துக்கொண்டேன்.
‘அசுரா’ – தலைப்பும், அதுகொண்டிருந்த கதைக்கருவும் கொஞ்சம் ஆர்வம் அளித்தது. சேப்பியன்ஸ் படித்ததும் ‘அசுரா’ எடுத்தேன். ஆனால் ‘அசுரா’ வின் கதையோட்டம் முதல் ஐந்தாறு பக்கங்களிலேயே சலிப்படைய வைத்தது. சாதாரண காரணங்களைக் கொண்டு பெருநிகழ்வுகளை விவரிப்பதும், சொல் பிரயோகிப்பும் எனக்கு உகந்ததாக தென்படவில்லை. சரி, புத்தகம் பிடிக்காமல் போனதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணி குறிப்பெடுத்துக்கொண்டு தொன்னூறு பக்கங்கள் வரை படித்தேன். ஆனால் மேலே தொடர்வது நேர விரயம் மட்டுமே என தெரிந்ததும் விட்டுவிட்டேன்.
இவையனைத்திருக்கும் மேலே ஒன்று விசித்திரமாக தென்பட்டது. புத்தகத்தில் ராவணன் படம் பதினொன்று தலைகளுடன் அச்சிடப்பட்டிருந்தது. ‘தாரணி மவுலி பத்து தானே?’ என்றெண்ணி பதினோராவது தலையை கூகிள் செய்து பார்த்தேன். அகப்படவில்லை. ‘சரி புத்தகத்தில் அதைப் பற்றி ஏதாவது குறிப்பு இருக்குமோ என்னவோ. படித்து பார்க்கலாமா?’ என்ற எண்ணமே சுமையாக இருக்கிறது.
நான் வைத்திருக்கும் இப்புத்தகம் 2018-ல் மறுபிரசுரத்தில் அச்சில் வந்துள்ளது. மேலே கூறியவை மனிதத் தவறாகவோ இல்லை அச்சுப் பிழையாகவோ கூட இருக்கலாம். ஆனால் இப்புத்தகம் பொது வாசகர்களுக்கான fiction என்பதாலேயே இது போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வில்லையா? இன்னும் சற்று மெனக்கெடல்களுடன் இப்புத்தகம் வந்திருந்தால் ராவணனுக்கேற்ற சீரிய படைப்பாக இது இருந்திருக்கும் என தோன்றுகிறது.
அன்புடன்,
சூர்ய பிரகாஷ்
சென்னை
அன்புள்ள சூர்யப்பிரகாஷ்
சமீபத்தில் ஈரோடு கிருஷ்ணன் எவரோ தலையில் கட்டினார்கள் என்று அமிஷ்நாவல்களில் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தார். எதையும் நடுவில் வீசிவிடும் வழக்கம் அவருக்கில்லை. ஆகவே ஒவ்வொரு நாளும் பிலாக்காணம், மொட்டைவசை. ‘என்னத்தை எழுதியிருக்கான்? கதைசொல்லவே தெரியல்லை. தினமலர் வாரமலர் எழுத்தாளனுங்க மேல்’ இதில் நான் எங்கோ ‘டான் பிரவுன்கள் நமக்குத்தேவை’ என எழுதியிருந்தேன் என்பதனால் எனக்கு நாலைந்து கண்டனங்கள்.அந்தக்கடுப்பில் நீதிபதியை வசைபாடி கட்சிக்காரனை சிறைக்கு அனுப்பிவிடுவாரோ என்றபயத்தில் நான் சமாதானம் செய்யவேண்டியிருந்தது
உண்மையில் இந்த அமிஷ்நாவல்கள் போன்றவற்றின் வாசகர்கள் யார்? நேற்று சாதாரணமான வணிக எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருந்த அதே பண்பாட்டுப்பயிற்சியோ அறிவுப்பயிற்சியோ அற்ற நடுத்தரவர்க்க வாசகர்கள்தான். அவர்கள் முன்பு வட்டாரமொழிகளில் வாசித்துக்கொண்டிருந்தனர். இன்றைக்கு வட்டாரமொழிகள் நகரங்களில் அனேகமாக வழக்கொழிந்துவிட்டன. ஆங்கிலவழிக்கல்வி இளைய தலைமுறையை ஆள்கிறது. அவர்களால் தாய்மொழியை சரளமாக படிக்கமுடியாது. ஆங்கிலத்தில் மிகமேலோட்டமான எளிய உரைநடையையே படிக்கமுடியும். அவர்களுக்கான நூல்கள் தேவையாகின்றன. அவர்களுக்காக இவை எழுதப்படுகின்றன.
இரண்டு ஆர்வங்கள் இவற்றை நோக்கி வாசகனை உந்துகின்றன. எப்போதும் இயல்பாக இருக்கும் இந்தியப் பண்பாடு பற்றிய ஆர்வம். தொலைதொடர்களிலிருந்து பெற்றுக்கொண்ட எளிய அறிமுகம் இருக்கிறது. ஆகவே அவர்களால் புராணங்கள் மற்றும் தொன்மையுடன் எளிதில் அடையாளம்கண்டுகொள்ள முடிகிறது.அத்துடன் அமெரிக்க பரப்பெழுத்திலும் பரப்பியல் திரைப்படங்களிலும் உள்ள நவீனபுராணங்கள் என்னும் வடிவம். தோர் போன்ற படங்களின் முன்னுதாரணம். இந்நாவல்கள் அவற்றின் கலவைகள்
ஆனால் அமெரிக்க எழுத்து தேர்ந்த தொகுப்பாளர்களால் சரிபார்க்கப்படுகிறது. இங்கே அப்படி ஏதுமில்லை. அட்டைகூட அப்படியே திருடி போடப்படுகிறது. வெண்முரசுக்கு ஷண்முகவேல் வரைந்த ஓவியத்தைக்கூட திருடி அப்படியே அட்டையாகப் போட்டுவிட்டிருக்கிறார்கள். எந்த கவனமும் இல்லாமல் அடித்து குவித்து விற்று பணமும் பார்த்துவிடுகிறார்கள். மொழி உயர்நிலைப்பள்ளித் தரம். கதையின் ஆராய்ச்சியும் அதே தரம்தான்.
இவற்றிலிருந்து சிலர் இலக்கியம் பக்கம் வந்தால் நல்லதுதான். உண்மையில் இந்தியாவில் இன்று கொஞ்சம் தீவிரமான வாசிப்பு இருப்பதே ஆங்கிலத்தினூடாகத்தான். சர்வதேச அளவில் பெரிதும்பேசப்படும் ஆக்கங்கள் படிக்கப்படுகின்றன. உள்ளூர் ஆங்கில இலக்கியத்திலேயே எளிய முற்போக்கு உள்ளடக்கமும் சரளமான மொழியோட்டமும் தெளிவான நாவல்வடிவமும் கொண்ட ஆக்கங்கள் படிக்கப்படுகின்றன. அது பெரிய வணிகமாக வேரூன்றியிருக்கிறது. அந்நூல்களுக்கே ஆங்கில்நாளிதழ்கள் விமர்சனங்களும் ஆசிரியர் பேட்டிகளும் வெளியிடுகின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற பல பரிசுகளும் உள்ளன. ஆகவே அந்த ஆசிரியர்களே இந்திய அளவில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். இந்திய ஆங்கிலத்தில் அமிஷ்நாவல்கள் ஒரு பெரும்போக்கு என்றால் இது இந்திய ஆங்கிலத்திலுள்ள சிறுபான்மை இலக்கியப்போக்கு.
ஆனால் இந்திய ஆங்கில எழுத்துலகில் விமர்சனம் என்பது அனேகமாக இல்லை. அமெரிக்க, ஐரோப்பியச் சூழலில் பேசப்படும் இலக்கியக்கொள்கைகள், இலக்கியவிமர்சன கருத்துக்கள் இங்கே கல்விக்கூடங்களுக்கு வெளியே வருவதில்லை. அவற்றை எவரும் அறிந்திருக்கவில்லை. நாளிதழ்கள், இணைய இதழ்களின் நூல்மதிப்புரைகளில் இலக்கியவிமர்சனத்தின் கலைச்சொற்கள் மட்டும் எளிமையான பொருளில் புழங்குகின்றன.அவ்விமர்சனங்கள் பெரும்பாலும் எழுதவைக்கப்படுபவை. அதற்கு பதிப்பாளர் முன்கை எடுக்கவேண்டும். மதிப்புரைகள் பெரும்பாலும் ஒரேமாதிரியான புகழ்மொழிகள்.
இந்நிலையில் இலக்கிய மதிப்பீடுகள் அற்ற ‘சுவைநாடி வாசகர்’களே எஞ்சுகிறார்கள். ஆகவே எந்த நூல் விற்கிறதோ அதுவே சிறந்தது என்னும் அளவுகோல் நிலைகொண்டிருக்கிறது. ‘டிரெண்ட்’ என்பதே வாசிப்பை தீர்மானிப்பதாக உள்ளது. தன் தனித்தேடலுக்காக வாசிப்பவர்கள் அரிதினும் அரிது. எல்லா இலக்கிய விவாதங்களிலும் அரிய ஒருநூலை எவரேனும் பேசுகிறார்களா என்று பார்ப்பேன். ஏமாற்றமே இதுவரை.
விற்பனையே அளவுகோல் எனும்போது வாசகனின் ‘கமெண்ட்’ முக்கியமானதாக ஆகிவிடுகிறது.இணையதளத்தில் வாசகர்கள் எந்த படைப்பையும் எளிதாக ஒற்றைவரியில் ஏற்கவோ நிராகரிக்கவோ செய்கிறார்கள். வாசகனே நுகர்வோன், ஆகவே அவனே அரசன். முன்பு அவனுக்கு மாணவனின் இடம் இருந்தது. இன்று அம்மனநிலை இல்லை. வாசகன் ஆசிரியனிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்னும் உளநிலையில் இல்லை. ஆசிரியன் தன் விருப்பத்தை நிறைவேற்றவேண்டியவன் என நினைக்கிறான்
ஆகவே வாசகன் இலக்கியப்படைப்புக்காக தன்னை முன்னகர்த்துவதில்லை. வாசிப்பதற்காக எந்த முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை எதையும் தன் வாசலில் கொண்டுவந்து ஆசிரியன் விளம்பவேண்டும் என நினைக்கிறான். ஆகவே தீவிர வாசிப்புத்தளத்தில்கூட வாசகனுக்காக தயாரிக்கப்பட்ட படைப்புகளுக்கே முதன்மை உள்ளது. டிரெண்டிங் காரணமாக எந்த ஆக்கம் அதிகமாக பேசப்படுகிறதோ அதையே எல்லாரும் வாசிக்கையில் கவனிக்கப்படாத நூல் முற்றிலும் கவனிக்கப்படாமலாகிறது. எந்நூலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மறக்கப்படுகிறது.
இந்திய மொழிகளிலிருந்து இலக்கியங்கள் மிகமிகக்குறைவாகவே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. அவற்றில் ஆசிரியரின் கருத்தியல் அடையாளம், அவர் முன்வைக்கப்படும் விதம் சார்ந்து மட்டும் சிலர் கவனிக்கப்படுகிறார்கள். அதுகூட மேலோட்டமான கவனம்தான். மிகப்பெரும்பாலான இந்திய இலக்கியப்படைப்புக்கள் ஆங்கிலத்தில் கவனம்பெற்றதே இல்லை. இலக்கியமேதைகளேகூட.
ஏனென்றால் அவற்றை வாசிக்க இந்தியப்பண்பாடு, வட்டாரச்சூழல் ஆகியவை பற்றிய ஒரு அறிதல் தேவை. அவை உருவாக்கும் அழகியலை அணுகும் கவனம் தேவை. இன்றைய இந்தியஆங்கில வாசகனிடடம் அது இல்லை. அவனால் ஆங்கிலத்தில் பஷீரையோ கி.ராஜநாராரயணனையோ வாசிக்கமுடியாது.
இந்தியப்படைப்புக்களில் கொஞ்சமேனும் கவனிக்கப்படுபவை மேலோட்டமான இந்திய ஆங்கிலவாசிப்பு வட்டத்துக்குள் பொருந்தக்கூடிய சில ஆக்கங்களே. அவை வழக்கமான முற்போக்கு உள்ளடக்கம் மற்றும் எளிமையான சுற்றுலாப்பயணக் கவற்சி ஆகிய இரு இயல்புகளின் கலவைகளாக இருக்கும்
நம் முதல்நிலைக் கல்விக்கூடங்களில்கூட இலக்கியம் ஒருவகை அரசியலாகவே இன்று கற்பிக்கப்படுகிறது. பாடத்திட்டங்களை கவனித்தால் மூன்றாமுலக எழுத்து, பெண்ணிய எழுத்து, விளிம்புநிலை எழுத்து, சூழியல் எழுத்து என்னும் வகையான அரசியலடையாளங்களே இலக்கியத்தை வகைப்படுத்தும் கருவிகளாக கருதப்படுவது தெரிகிறது. அழகியல்சார்ந்து இலக்கியத்தை அணுகும் முறை எந்த கல்விநிலையிலும் இல்லை. ஆசிரியர்களுக்கே அதில் பழக்கமில்லை.
விளைவாக இலக்கிய ஆக்கங்களின் அரசியல் உள்ளடக்கம், அவ்வெழுத்தாளரின் தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் இரண்டும் மட்டும்தான் இலக்கியப்படைப்பை அளக்கும் அளவுகோல்களாக உள்ளன. ‘இலக்கியவாதி மற்றும் களச்செயல்பாட்டாளர்’ என்று போட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயம் எல்லா இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கும் உள்ளது. மேலைச்சமூகத்தின் மேலோட்டமான வாசகன் இந்தியா ஒரு தேங்கிப்போன சமூகம் என்றும் இங்குள்ள எழுத்தாளன் அதை குத்தியெழுப்ப முயன்று கொண்டே இருக்கவேண்டியவன் என்றும் நினைக்கிறான். அவனுக்காக இந்த வேடம் அணியப்படுகிறது
இந்தியாவின் வட்டாரமொழிகளில் இலக்கியம் பெரும் தேக்கத்தில் இருக்கிறது. ஏனென்றால் வாசிக்க ஆளில்லை. நூலகங்கள் செயலற்றுவிட்டன. இன்னொருபக்கம் இந்திய ஆங்கிலச்சூழலில் ஒருவகை போலி எழுத்தும் போலி வாசிப்பும் வலுப்பெற்று மைய ஓட்டமாக நிலைகொள்கின்றன
ஜெ
அமிஷ் நாவல்கள் -கடிதங்கள்திரை, அறமென்ப – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஆழமான நெருக்கடிகளிலிருந்து நாம் எப்படி ஒரு கணத்தில் சட்டென்று வெளியேறிவிடுகிறோம் என்பதை நான் பலமுறை யோசித்தது உண்டு. அந்த நெருக்கடிகளில் நாம் எதையாவது புதியதாக கற்றுக்கொண்டோம் என்றால் , நம்மிடம் ஏதாவது ஆழமான மாற்றம் உருவானது என்றால் சட்டென்று ரிலீவ் ஆகிவிடுகிறோம். சாவு கூட அப்படித்தான்.
ஏன் என்று சிந்தித்தால் ஒன்று தெரிகிறது. நெருக்கடிகள் என்பவை நாம் புரியாமல் தத்தளிக்கும் நிலைதான். இப்படி ஏன் நிகழ்கிறது, இப்படி நிகழ்ந்தால் இனிமேல் என்ன செய்வோம் என்றெல்லாம் நம் மனம் பேதலிக்கிறது. அது நாம் அறியாமையில் நிற்கும் ஒரு தருணம். அங்கே அறிவுதான் விடுதலை.
அந்தவிடுதலையை அறமென்ப கதையில் செல்வா அடைகிறான். அவனுடையது ‘நான் அறமென நினைத்தது இது இல்லையா? நான் நினைத்த அறம் உலகில் இல்லையா?”என்பதுதான். அதற்குரிய ஒரு பதிலை அவன் கண்டுகொண்டான். ஆகவே ரிலீவ் ஆகிவிடுகிறான்.
அந்தப்பதில் கதையில் பூடகமாகவே உள்ளது. அந்தப்பூடகமான பதிலைச் சென்றடைபவர்களுக்கு மட்டுமே இந்தக்கதை கதையாக பொருள்படுமென நினைக்கிறேன்
எம்.ராஜேந்திரன்
வணக்கம் ஜெ
பணக்கார புத்தி, மிடில் க்ளாஸ் புத்தி என்பது போல ஏழை புத்தி என்றும் உண்டு. ஆனால் இவையாவும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கும். இது பொதுவான மனநிலை இல்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட விதமாக வெளிப்படுகிறது. நம்மைச் சுற்றி உள்ள சூழலில் இதை எதிர்கொண்டிருந்தாலும் கதையில் வாசிக்கும்போது ஒருவித கசப்பு உருவாகிறது.
அதைவிட முக்கியமானது, செல்வா அவர்களிடம் பேசிவிட்டு திரும்பிய கணம், அவனுள் ஏற்பட்ட மகிழ்ச்சி. அவன் அவர்களிடம் ‘நான்தான் அவர் உயிரைக் காப்பாற்றினேன், என்மீது இப்படி பழிபோடலாமா ?’ என்று பதற்றமும் பயமும் கலந்து பேசிக்கொண்டிருந்தான். அதை வாசிக்கும்போது நமக்கும் அந்த பதற்றம் தொற்றிக்கொள்கிறது. ஆனால் சட்டென்று ஒரு கணம், எதோ அவன் மனதில் குறுக்கிட, அமைதியாகிறான், நிறைவை உணர்கிறான்.
‘சட்டுன்னு நீ உன்னை நல்லவனா நினைச்சுகிட்ட… ஒரு செயிண்ட் மாதிரி’, என்று பீட்டர் செல்வாவிடம் சொல்லும்போது, எனக்குள் நான் கள்ளமாகச் சிரித்துக் கொண்டேன். ஆம், உண்மையில் ஒரு செயிண்ட்டின் நிறைவுதான். அவன் அவர்களுக்கு நன்மையையே செய்தான். ஆனால் அவர்கள் அவனைக் குற்றவாளியாக்கி, பழிசுமத்தி, அவன் உதவியை இழிவு செய்து விட்டனர். அந்தத் தருணத்தில் எல்லோருக்கும் ஒருவித கசப்பு, பயம், பதற்றம் வரும். கசப்பு என்னவெனில், மனிதர்களின் அறமின்மையை, சுயநலத்தை, இழிவை நினைத்து வருவது. பயமும், பதற்றமும் தன்னுடைய உலகியல் வாழ்வில், ‘அமைப்பு’ வாழ்வில் இதனால் ஏற்படப்போகும் பின்னடைவு, அவப்பெயர் போன்றவை குறித்து. அதாவது வீண் பொருட்செலவு, சிறைவாசம், சமூக அந்தஸ்து இழத்தல், தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படப்போகும் மன உளைச்சல், இன்னும் பல. நிச்சயமாக அந்தத் தருணத்தில் நம் மனம் அமைவு கொள்ளாது. ஆனால் அதைத் தாண்டி ஒன்றுண்டு. நிறைவளிக்கும் ஒன்றுண்டு. அதுதான் செயிண்ட்டின் நிறைவு.
பிறர்க்கு நாம் உதவி செய்யும்போது, அந்தச்சூழல் நமக்கு அவர்கள் மீது ஒருவித ‘உரிமை’யைக் கொடுத்துவிடுகிறது. நாம் அவர்கள் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தப்போவதில்லை என்றாலும், எவ்வித உரிமையையும் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றாலும், எவ்வித பிரதிபலனையும் அடையப்போவதில்லை என்றாலும், அருவமாக அப்படியொரு ‘உரிமை’ உருவாகிவிடுகிறது. கிட்டத்தட்ட reserve ல் வைத்துக் கொள்வது போல. நாம் அதைக் கடைசிவரை பயன்படுத்தாமல் இருந்தாலும், அது அங்கேயேதான் இருக்கும். புண்ணியத்தைச் சேர்ப்பது என்று நாம் சொல்வது கிட்டத்தட்ட இதையேதான்.
செய்த உதவியை ஒருவர் மறக்கும்போது, நன்றியை மறக்கும்போது, எதிர்ப்பு மனநிலைக்குச் செல்லும் போது அந்த அருவமான உரிமை (அ) அதிகாரம் (அ) புண்ணியம் இன்னும் பெரிதாகிறது. இது ‘உதவியை மறத்தல்’ என்பதில் மட்டுமல்ல, ‘தம்மைக் குறித்து தவறான புரிதலில் பேசுவது’ என்பதிலும் உள்ளது. அப்போது, ‘பேசு மகனே பேசு… நீ பேசப்பேச என் கர்மா அக்கவுண்ட்டில் எனக்கு க்ரெடிட் கூடிகிட்டுதான் போகும்’ என்று அந்தரங்கமான- அதே சமயம் நாம் விழிப்புணர்வுடன் உணரமுடியாத- ஒரு உணர்வு ஏற்படுகிறது. பலர் உழல்வதே இந்த இனிய போதையில்தான்.
பல மனிதர்கள் கூப்பிட்டுக் கூப்பிட்டு உதவி செய்வார்கள். அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்குவார்கள். அவர்கள் என் இதைச் செய்கிறார்கள் ? அவர்களுக்குக் கிடைப்பது என்ன ? பெரிதாக ஒன்றுமில்லை. எந்தப் பொருள் நன்மையும் இல்லை. ஆனால் அதைவிட பெரிய ‘நிறைவு’ கிடைக்கிறது. அவர்கள் மீது ‘அருவமான அதிகாரம்’ கிடைக்கிறது. அதை போதை என்றுதான் சொல்லவேண்டும். பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, அந்தக் கணக்குகளைப் போடாதவர்கள் கூட, இந்த நிறைவு விழைவினின்று தப்புவதில்லை.
பீட்டர் சொல்கிறான் ‘காந்திகளாலேதான் நாடே நாசமா போகுது’ என்று. ஆம், காந்தி எவ்வளவு பெரிய மோசமான சுயநலக்காரர் ! ‘அகிம்சை’ என்பதன் மூலமாக அந்த போதையை எவ்வளவு தூரம் அனுபவித்திருக்கிறார் ! நாம்தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. செல்வா இனி யாரையும் காப்பாற்ற மாட்டானா ? இல்லை. அவன் அந்த செயிண்ட்டை கண்டுகொண்டுவிட்டான். எனவே மீண்டும் மீண்டும் காப்பாற்றுவான், மீண்டும் மீண்டும் உதவி செய்வான்.
விவேக் ராஜ்
திரை [சிறுகதை]அன்புள்ள ஜெ
திரை கதை ஒரு முழுநாவலுக்குரிய செறிவுடனிருந்தது. நாயக்கர் அரசின் கடைசிக்காலகட்டம். நாயக்கர்கள் நடுவே அதிகாரப்போட்டி. வழக்கம்போல அதற்கு அன்னியரின் உதவி நாடப்படுகிறது. லஞ்சம்கொடுத்து சமாளிக்கப்படுகிறது. எந்த அமைப்பும் சரியும்போதிருக்கும் சீரழிவுகள் நடைபெறுகின்றன.
அதனை ஒட்டி மக்கள் அலைமோதுகிறார்கள். கூட்டம்கூட்டமாக அவர்கள் பிரெஞ்சு, ஆங்கிலம் டச்சு, போர்ச்சுக்கல் ஆட்சிகள் நடக்குமிடங்களுக்கு குடிபெயர்கிறார்கள். எனக்கு இந்த் இடம் மிக முக்கியமானதாகப்பட்டது. அத்தனைபேருமே வெள்ளைக்கார ஆட்சி நடக்குமிடங்களுக்குச் செல்லுவதற்காகவே முயல்கிறார்கள்.
அத்தனைபேரும் கொள்ளையடிக்கிறார்கள். கைக்குச்சிக்குவதை எடுத்துக்கொண்டு ஓடிவிட முயல்கிறார்கள். எல்லாருமே எல்லாரையும் கொள்ளையடிக்கிறார்கள். அரசாங்க அதிகாரிகளும் சாமானியர்களும் திருடுகிறார்கள். திருடர்களை திருடுகிறார்கள்
சேதுபதி மறவர் வீரம் என்ற ஒரு மாயத்தை நம்பியிருக்கிறார். அடுத்த இருபதாண்டுகளில் அவருடைய அரசே அடிவாங்கி அழியவிருக்கிறது. அது அவருக்குத்தெரியவில்லை.
இச்சூழலில் ஒரு ஞானி. அவர்மேல் அரசி கொண்ட பிரேமை. ஒரு உன்னதமான விஷயம். ஆனால் அது இத்தனை கொந்தளிப்புக்கு நடுவே நடைபெறுகிறது
திரை என்பது என்ன? அன்றாடம்தான் திரை. இப்போது நடப்பதை மட்டுமே நம்மால் பார்க்கமுடியும் என்பதுதான் உண்மையான திரை
செல்வக்குமார்
அன்புள்ள ஆசானுக்கு,
வணக்கம், நலமா?
திரை வாசித்தேன். ஒரு மாபெரும் வாசிப்பனுபவம் அந்த கதையா வாசிப்பது. கடந்த காலத்திற்கே சென்று வந்த ஒரு உணர்வு. தாயுமானவர் மீதான ராணி யின் காதலை காவல் கோட்டம் நாவலில் வாசித்தேன். ஆனால் அது வெறும் அதிகாரம் கொண்டு கைப்பற்றும் ஒன்றாக காண்பிக்கப்பட்டது.
அனால் இந்த சிறுகதையில், அந்த பெண்ணின் தவிப்பு அவள் பக்கம் உள்ள நியாயம் விரிவாகவே பேசப்பட்டுள்ளது. ஒரு கணம் வெண்முரசில் வரும் அம்பிகை, அம்பாலிகை நினைவு எழுந்தது. கவலை படாத அம்மா என்று சொல்ல தோன்றியது.
தாயுமானவர் தூதுவரிடம் பேசும் பொழுது அவர் முகம் சிவந்தது ஒரு கணம் பீஷ்மரை நினைவூட்டியது.
மிக அற்புதம். உங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்.
அன்புடன்
பா. ராஜகுரு
கொதி- கடிதங்கள்
அன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
கொதி சிறுகதை எழுப்பி விட்ட நினைவுகள் பற்றியது. என்னுடைய பாட்டி இருபது வயது வரை குமரி, திருவனந்தபுரம் வட்டாரங்களிலேயே வாழ்ந்தவர். அவரது சிறு வயது நினைவுகளை நிறையப் பகிர்ந்துகொள்வார். அவரது நினைவுகளில் மிக முக்கிய இடம் பெறும் விஷயங்கள் யக்ஷி, ஆயுர்வேத வைத்தியம், யானைகள்,, கேரளத்துக்கென்றே பிரத்யேகமான வீட்டை ஒட்டினாற்போன்ற நீர்நிலைகள் (அது சார்ந்து வாழக்கூடிய தாவரங்கள், உயிரினங்களும் சேர்த்து), திருவிதாங்கூர் ராஜா, . அது போன்ற விஷயங்களைத் தமிழில் எந்த ஒரு எழுத்தாளரும் பதிந்ததில்லை, அவற்றுக்கு இலக்கியத்தில் ஒரு இடம் உண்டு என்றுகூட நான் அறிந்திருக்கவில்லை, உங்கள் எழுத்தைப் படிக்கும் வரை.
அது வரை யக்ஷி போன்ற விஷயங்கள் பிடி சாமி, கோட்டயம் புஷ்பநாத் வகை துப்பறியும் நாவல்களுக்கானது என்றே நினைத்திருந்தேன். மத்தகம் படித்தபோது பாட்டி காலமாகி இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. நீ சொன்ன விஷயங்கள் இலக்கியத்தில் இடம்பெற்றுவிட்டன என்று பாட்டியிடம் சொல்லி மகிழ முடியாததற்கு வருந்தினேன்.
இப்போது கொதி சிறுகதை. என் பாட்டி கொதி மந்திரம் சொல்லி உணவு சம்பந்தமான கண் திருஷ்டியைப் போக்குவார். சுளுக்கு, வாய்வுப்பிடிப்பு போன்றவற்றுக்கும் ஓதுவார். நீங்கள் சொல்லியிருந்த முறையில்தான் சின்ன வேறுபாடு. செம்புக்குள் நீர் உறிஞ்சும் முறை வாய்வுப் பிடிப்புக்குச் செய்வார். ஒரு சிறு துணியைக் கிழித்து செம்பில் போட்டு அது எரிந்து முடிந்ததும் செம்பை வாய்வுப்பிடிப்பு வந்த பகுதியில் வைத்தால் செம்பு உடலில் அப்படியே ஒட்டிக்கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லாமல் நிற்கும். சற்று நேரத்தில் கீழே விழ முற்படும். அப்போது அதை ஒரு தாம்பாளத்தில் நீரில் வைப்பார். சில மணி நேரங்களில் அந்த நீர் சுத்தமாக மாயமாகி இருக்கும். (சோதனைக்காக வேறொரு தாம்பாளத்தில் வேறொரு செம்பை அதே நேரம் கவிழ்த்து வைத்தால் அதில் நீர் மாறாது. அதையும் நான் செய்து பார்த்திருக்கிறேன்)
கொதிக்கு பாட்டி செய்வது நார்த்தங்காய் ஊறுகாயின் ஒரு துண்டத்தை மந்திரித்து பாதிக்கப்பட்டவரிடம் உண்ணக்கொடுத்துவிட்டு இட்லி அல்லது சாத உருண்டையை மீண்டும் மந்திரித்து அதை நான்கு துண்டுகளாக்கி வீட்டைச் சுற்றி நான்கு திசைகளிலும் எறிவார். கண் பட்டவருக்கு உடல் சரியாகிவிடும். கண் வைத்தவருக்கு நோவு வரும் என்று கேள்விப்பட்டதில்லை.
மேற்படி விஷயத்தில் செய்முறைகளில் பல்வேறு வெர்ஷன்கள் இருந்திருக்கலாம். நான் சொல்ல வந்தது அதுவல்ல, ஒரு வட்டார வழக்கத்தை உலகம் முழுமைக்கும் பொதுவான பசி என்கிற உயிரவஸ்தை என்ற படிமத்துடன் நீங்கள் சேர்த்திருக்கும் முறை அருமை. ஞானையா தமது உரைகளில் உதாரணங்களெல்லாம் தீனி தொடர்பாகவே இருப்பது பற்றிச் சொன்னபோதுநூறு நாற்காலிகளில்
”சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம். ஒருகட்டத்தில் என்னால் மேற்கொண்டு உண்ண முடியவில்லை. வாய்வரை உடம்புக்குள் சோறு மட்டுமே நிறைந்திருப்பதாகத் தோன்றியது”
என்ற வர்ணனை நினைவு வந்தது.
எனக்குச் சில காலம் முன்பு சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக உணவு உண்ண முடியாமல் போனது. பசியும் ருசியும் இருக்கவில்லை. பாதிச் சாப்பாட்டை அப்படியே தட்டுடன் மூடி வைத்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து உண்பேன். உணவில் ஆர்வமே இருக்கவில்லை (என்றே நினைத்திருந்தேன்.) அந்நாள்களில் எனக்கு வரும் கனவுகள், கற்பனைகள் எல்லாம் உணவு பற்றியே இருக்கும். உணவு யூட்யூப் சேனல்களைப் பார்க்கும் வழக்கம் வந்தது, தினுசுதினுசான உணவுகளை உண்பதுபோல் கற்பனை செய்துகொள்வேன். என்னையும் அறியாமல் அது ஒரு போதை போலாகிவிட்டது. ஓரளவு அந்த உடல்நலப் பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தபின்பே என் உடல் உணவை ஏற்காதபோது மனம் உணவுமயமாகவே ஆகி இருந்ததை உணரவே இயன்றது. பசி என்ற ஆதி உணர்ச்சியின் சக்தி புரிந்ததும் உணவுதான் பிரம்மம் என்றுகூடத் தோன்றியது.
பாட்டி பசி என்று யார் சொன்னாலும் பொறுக்க மாட்டார். அவரது பதினான்கு வயதில் ஒரு பிச்சைக்காரர் வீட்டு வாசலில் வந்து பாவமாக நிற்பாராம். அதற்கு சில காலம் முன்புதான் பாட்டியின் தாய் காலமாகிப் பாட்டி தானே சமையல் கற்றுக்கொண்டு தன் அப்பாவுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் தானே தாயாகி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். பஜ்ரா என்ற தானியம் அதுவும் வாரத்துக்குக் குடும்பத்துக்கு இவ்வளவு என்று ரேஷன் பண்ணப்பட்டுதான் கிடைக்குமாம். அதை ஒரு நாளுக்கு இவ்வளவு என்று திட்டமிட்டு வகுத்துக்கொண்டு ஒரு கலயத்தில் கஞ்சி பண்ணி வைத்திருப்பாராம்.
பாட்டியின் தந்தை உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு வந்து உண்டபின்பே பாட்டி தானும் சாப்பிட்டு உடன் பிறந்தவர்களுக்கும் தருவார். ஆனால் அந்தப் பிச்சைக்காரர் கஞ்சி வடிக்கும் சமயத்துக்கே வந்து அம்மே என்று அழைப்பாராம். ஆக வீட்டில் யாரும் உண்பதற்கு முன்னால் அவருக்குத்தான் முதலில். இவ்வளவு கஷ்டத்திலும் அவருக்கு ஏன் முதலில் என்று நான் கேட்பேன். பாட்டி சொல்வார். தொண்டைக்குக் கீழே எல்லாருக்குமே கசம்டீ என்பார். பசி எல்லா ஜீவனுக்கும் ஒன்று என்ற பொருளில். அதைக் கேட்கும்போது கண்ணீர் வரும்.
அம்மாவை இழந்து சமையல் கற்றுக்கொண்டு ரேஷன், உணவுப் பஞ்சத்துக்கு நடுவிலும் ஐயமிட்டு உண்ட என் பாட்டி, அந்த மலையாள எல்லை கிராமம் இவற்றையெல்லாம் கொதி சிறுகதை மூலம் நினைவுபடுத்திவிட்டீர்கள். என் பாட்டி பிற உயிர்களின் பசியை உணர்ந்ததற்கும் அவர் கொதி மந்திரம் ஒதியதற்கும்கூட ஏதோ சூக்ஷ்மமான தொடர்பு இருப்பதாக இப்போது தோன்றுகிறது. உணவுப் பஞ்சம் என்றால் என்னவென்று தெரியாத, பசித்தால் ஸ்மார்ட் ஃபோனை எடுத்து விரல் நுனியால் ‘ஸ்விக்கி பண்ணி’ சாப்பிடுகிற ஒரு தலைமுறைக்கு இந்தக் கொதி சிறுகதை அவசியம் சென்று சேர வேண்டும்.
என் மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டியதற்கு மன்னிக்கவும் மீண்டும் அன்பு, நன்றி, வணக்கங்களுடன்,
வித்யா ஆனந்த்.
அன்புள்ள வித்யா
பசி ஒரு தலைமுறைக்கு முன்புவரை நம்முடைய அன்றாடமாகவே இருந்திருக்கிறது. முப்பதாண்டுகளாகவே அதைக் கடந்திருக்கிறோம். மிக எளிதில் அது வெறும் நினைவாக ஆகி அந்தத் தலைமுறையுடன் அழிந்துவிடும். அது அழியலாகாது. அந்நினைவை குறியீடாக, படிமமாக ஆக்கிக்கொள்வதே நாம் செய்யவேண்டியது. இலக்கியத்தின் பணி என்பது நினைவைச் செறிவாக்கி, காலத்தொடர்ச்சியாக்கி, நிலைபெறச்செய்வதுதானே?
ஜெ
அன்புள்ள ஆசானுக்கு
பசியென்னும் அனலின் உக்கிரமான வாழ்க்கைச்சித்திரங்களை ஒரு கையெறி குண்டு போல வாசகனின் மனதில் வீசிவிட்டு படுகாயத்துக்கு நிவாரணமாக ஒரு bandaidஐ கொடுத்துவிட்டு போகிறது “கொதி”, , எனக்குள் இன்னும் கொஞ்சம் புகைந்து கொண்டிருக்கிறது.
பசியைக் கொல்ல பிற உயிர்களை உண்கிறோம் அப்படி முடியாதவர்களை பசி எனும் பாம்பு உண்டுவிடுகிறது ஞானையாவின் சின்னத் தம்பியை விழுங்கிய மலைப்பாம்பு போல, அந்த மலைப்பாம்பை உயிரோடு இருக்கும் மனிதர்களின் பசி உண்கிறது. பசியை பசி உண்டு பிரபஞ்சம் பல்கி பெருகுகிறது, இந்த ஆடல் நிகழ்வதற்க்காக பசி கொள்ளும் தற்காலிக பரு வடிவம் மட்டும் தானா உடல்கள்? பசியற்ற உடல் நிலைக்குமா? பசி என்பது உயிரே தானா? உயிர் தான் பசியா?
பசியில் வெந்து கொண்டிருப்பவனிடம் ஆன்மிக தேடலை பேசுவது போல இழிவான ஆபாசம் வேறேதும் உண்டாஎன்ற கேள்வியை ‘கொதி’ எழுப்புகிறது, இருக்கலாம்.., உண்டு நிறைந்து இந்த உலகத்தின் எல்லா வகையான வளங்களும் தேவைக்கு மேல் கிடைத்த பின்னும் ஒரு துளி ஆன்மிகம் கூட அகத்தில் இல்லாமல் பொருளுக்கான வேட்க்கையுடன் மட்டும் வாழும் வாழ்க்கையை வேண்டுமானால் அதை விட இழிந்த ஆபாசம் என்று சொல்லிக்கொள்கிறேன். கலாச்சாரம், மனிதம் என்றெல்லாம் நாம் செய்துகொள்ளும் அலங்காரங்களை கிழித்தகற்றி பசியினால் செலுத்தப்படும் விலங்காக மனிதனை(நம்மை நாமே) அடிக்கடி உங்கள் படைப்புலகத்தில் காண்கிறோம்,
ஏழாம் உலகத்தில் குய்யன் மீல்ஸ் சாப்பிட தயாராவது, சோற்றுக்கணக்கின் கதை சொல்லி தெருவில் இறந்து கிடைக்கும் நாயின் சடலம் கண்டு எச்சிலூறுவது, நூறு நாற்காலிகள் கதை நாயகன் சொல்லும் நாயாடி வாழ்வின் தீராப்பசி, என்று இந்தமாதிரி பசியை இந்த தலைமுறையில் உள்ளவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன், ஆனால் கடந்த தலைமுறையில் இருந்திருக்கிறது, ஒருவேளை அப்படி ஒரு நிலை நம் வாழ்நாளில் மீண்டும் வந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்? இலக்கியம் படிப்போமா? சிறுகதை படித்து ஆசிரியருக்கு கடிதம் எழுதும் நிலையில் இருப்போமா? விடிய விடிய இலக்கியம் பேசி வாழ்க்கையை கொண்டாடுவோமா? இலக்கியம் எழுதப்படுமா? அந்த மாதிரி நிலையில் ஒருவருக்கு தேவையான உணவு இருந்தால் கூட மனிதத் தன்மையை சமரசம் செய்து தானே வாழ முடியும்?
“அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வாழணும்னு வேதம் சொல்லுது ஆனா பத்துபிள்ளை பெத்து ஒத்த கைப்பிடி சோறு வைச்சிருக்கிற அம்மைகிட்ட அதைச் சொல்லமுடியாது. இல்லாத கூட்டம் இது. அயலானுக்குக் குடுத்து தின்னா எல்லாரும் சேந்து சாவணும்னு இருக்கு வாழ்க்கை”
இந்த நிலையில் என்ன மாதிரி ஆன்மிகம் இருக்க முடியும்? எந்த மதமாகவும் இருக்கட்டும் அதற்க்கெல்லாம் ஏதேனும் மதிப்பு உண்டா? எழுத்தாளனுக்குள் இருள் இருக்கும் என்கிறீர்கள், எல்லா கவசங்களையும் அகற்றி விட்டு படைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுத்து வாசிக்கும் வாசகனும் அந்த இருளில் கொஞ்சம் திளைப்பான் என நினைக்கிறேன், கதையை படித்துவிட்டு நள்ளிரவில் வானத்தைப் பார்த்துக்கொண்டு வரப்போகும் பஞ்சத்தை வித விதமாக கற்பனை செய்துகொண்டு நின்றிருந்தேன். வானத்தில் நட்சந்திரங்கள் பார்த்தேன் என்று சொல்வதை விட முட்டாள்தனம் ஏதேனும் உண்டா என்று கேட்டுக்கொண்டேன். வானத்தில் இருப்பது இருள் அல்லவா? முடிவே இல்லாத நிலையாக இருக்கும் கன்னங் கரிய இருள். அந்த இருளில் பொத்தல்கள் போல அங்கங்கே கொஞ்சம் நட்சத்திரங்கள் அவ்வளவுதான், அவைகூட ஒருளுடன் ஒப்புநோக்க தற்காலிகமானவை. கதையின் முடிவு நட்சத்திரங்களை காட்டுகிறது, சரி நம்புகிறேன், நானும் நட்சத்திரத்தை தான் பார்த்தேன் என்று உங்களிடம் சொல்கிறேன் நீங்களும் நம்புவீர்கள் என நினைக்கிறேன்.
அன்பும் வணக்கங்களும்
ஷங்கர் பிரதாப்
பிகு :அன்புள்ள ஆசானே, இதை எழுதியபின் வெள்ளையானையில் எய்டன் கருப்பர் நகரமான புதுப்பேட்டைக்கு போகும் அத்தியாத்தை வாசித்தேன், கொடும் வறுமையிலும் விருந்தாளிக்கு உணவளிக்கும் அந்த முது அன்னையை மனதில் நிறுத்தி கொண்டேன்
அன்புள்ள சங்கர்
பசி ஒரு நல்ல கதைப்புலம். மிக எளிதில் ஏராளமானவற்றுக்குக் குறியீடாக ஆகிறது. ஏனென்றால் காமம் வன்முறை போன்ற எதைவிடவும் அது மிக ஆழமான அடிப்படை உணர்வு
ஜெ
அன்பிற்கினிய ஜெ,
கொதி பற்றி எழுதாமல் விட்ட பல உண்டு, எழுத மறந்த ஒன்றுண்டு. இந்தக் கதையை எந்த போதகராவது அல்லது குருவானவராவது, சர்ச்சிலோ அல்லது தங்கள் கூட்டங்களிலோ சொல்வார்களா என எண்ணிப்பார்த்தேன். நிச்சயம் சொல்ல மாட்டார்கள். உங்கள் ஓலைச்சிலுவை, அங்கி, ஏதேன் என எந்தக்கதையையும்
அவர்களால் சொல்ல முடியாது. ஒரு இருபது அல்லது இருபத்தைந்து தட்டையான மொக்கைக் கதைகளை வைத்துக்கொண்டு மட்டையடி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதைத்தாண்டி அவர்களால் முடியாது.
எந்த நிறுவனம் சார்ந்த மனிதரும் தங்கள் மக்களிடையே சொல்லத் தயங்கும்ஒன்றால் ஆக்கப்பட்டிருப்பதால்தான் இவை உயர்ந்த இறையியல் மதிப்பைபெறுகின்றன. ஆனால் அதற்குத்தான் உலகியலில் இடமே இல்லையே.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பு என்றென்றைக்கும்
பிரபு செல்வநாயகம்
அன்புள்ள பிரபு,
சர்ச்சில் சிலகதைகளையே சொல்லமுடியும். புதியகதை சொல்வதன் சிக்கல் என்னவென்றால் அது தவறாகப்புரிந்துகொள்ளப்படும். என் நண்பர் ஒருவர் ஏசு பற்றிய என் கதையை ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார். கேட்டவர்கள் நெகிழ்ந்துவிட்டனர். கதைமுடிவில் எழுதியவர் என என்பெயரைச் சொன்னார். கேட்டவர்கள் கொதித்து எழுந்து வசை மழை பொழிந்தனர். நான் எவர் என தெரியாது, ஆனால் கிறிஸ்தவர் அல்ல என்று தெரிந்ததும் சீற்றம். இங்கே கிறிஸ்தவர்களில் உச்சகட்ட மதவெறியும் பிறன்வெறுப்பும் இல்லாதவர்கள் மிகமிகமிகச் சிலர் மட்டுமே
ஜெ
March 25, 2021
படிமங்களின் உரையாடல்
சமீபத்தில் ஒரு நாளிதழில் ஒரு ஆன்மீக கட்டுரை பார்த்தேன். சிவனின் அவதாரமான காலபைரவர் பற்றிய கட்டுரை அது. அதில் வந்த படத்தை இணைத்துள்ளேன். மிக வித்தியாசமான படம். காலபைரவர் படமும் புகழ் பெற்ற ஸர்ரியலிஸ ஓவியமான Dali வரைந்த என்ற persistence of memory படமும் இணைந்த ஓவியம் அது.
இது பல கேள்விகளை எழுப்புகிறது. இது உண்மையிலேயே இது ஒரு வகை ஸர்ரியலிஸ முயற்சியாக தெரிகிறது. நான் இதுவரை காலபைரவர் என்ற பெயரில் உள்ள ‘கால ‘ என்ற பகுதியை பற்றி அதிகம் யோசித்ததில்லை யமன் போல அழிக்கும் கடவுள் என்ற அளவிலேதான் என் அபிப்ராயம்.
என் கேள்வி , இந்த புகைப்படத்தை எப்படி புரிந்து கொள்வது ? இதை கடந்து போகவும் முடியவில்லை.
மேலும் இப்படி இந்து மத symbols/Iconsஐ ஒரு புகழ் பெற்ற ஓவியத்தை தழுவி அமைக்கலாமா? கால பைரவரை வணங்கும் எனக்கு இந்த புகைப்படம் பார்த்தால் பக்தி வரவில்லை ஒருவகையான திகைப்பே வருகிறது. இது போன்ற புகைப்படங்களை நான் எப்படி எதிர்கொள்வது?
கோகுல்
காலபைரவர் சோழர் செப்புதிருமேனிஅன்புள்ள கோகுல்,
இந்த விஷயம் பற்றிய விரிவான விவாதங்கள் நடந்தது எம்.எஃப்.ஹுசெய்ன் சரஸ்வதியை வரைந்தது தொடர்பான எதிர்ப்பின்போது. அன்று நான் என் தரப்பை எழுதினேன். அது முதல் பலகோணங்களில் இதை எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக இதைப்பற்றி பேசிக்கொண்டுமிருக்கிறேன்.
இன்று இந்த விவாதம் அதிகாரக்குரலுடன் எழுந்துவருகிறது. ஒருவகையில் நாட்டை முற்றாக கைப்பற்றிக்கொண்டிருக்கும் அதிகாரமாக ஆகிறது. அரசியல் தலைமை ,மதத்தலைமை ,பெருந்திரள் தலைமை எல்லாம் அதில் அடங்கியிருக்கின்றன. இச்சூழலில் இது சிந்தனையுரிமை, வழிபாட்டுரிமை, படைப்புரிமைக்கான குரலாக உருமாறவேண்டியிருக்கிறது. பன்மைத்தன்மைக்கான வலியுறுத்தலாக ஆகவேண்டியிருக்கிறது.
எதிர்காலத்தில் இது இன்னும்பெரிய பிரச்சினையாக ஆகிவிடும். ஏனென்றால் ஒரு தத்துவ- அழகியல்- ஆன்மிகப் பிரச்சினை அதிகார அரசியலுக்குள் சென்றுவிட்டதென்றால் அதன்பின் அது அதிகாரப்பிரச்சினை மட்டுமே. அதில் ஆதிக்கத்தின் மூர்க்கமே ஓங்கித்தொழிற்படும்.
இந்துப்புராணங்கள், இந்துமதக்குறியீடுகள் போன்றவற்றை இரண்டு தளம் கொண்டவையாகவே காணவேண்டும். ஒன்று, அவை வழிபாட்டுக்குரிய உருவகங்கள், வடிவங்கள். இரண்டு, அவை இந்நிலத்தில் வாழும் தொன்மையான பண்பாட்டுமரபின் ஆழ் படிமங்களும் குறியீடுகளும்.
வழிபாட்டுக்குரிய உருவகங்கள், வடிவங்களை வழிபடுவோர் ஒரு நிலைத்த வடிவுக்கு கொண்டுவருவது இயல்பானதுதான்.ஏனென்றால் அவை வழிபடுவோரின் நினைப்புக்கு ஏற்ப மாறுபடுவன அல்ல. தொடர்ச்சியான நீண்டகால வழிபாடு, தலைமுறை தலைமுறைகளாக நீளும் வழிபாடுதான் அந்த உருவகங்களையும் வடிவங்களையும் ஆழுள்ளத்துக்குச் செலுத்துகிறது. தோன்றும் கருத்துக்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொண்டிருந்தால் அவை ஆழ்ந்த அகவுள ஊடுருவலை நிகழ்த்தாமலாகும். அவை வெறும் பாவைகளாக, குறியீடுகளாக மட்டுமே நீடிக்கும்.
காலபைரவன் வட இந்தியாஅவ்வாறு உருவகங்களையும் வடிவங்களையும் ஆழுள்ளத்துக்குச் செலுத்தும் பொருட்டே பக்திப்பாடல்கள் , தோத்திரங்கள் போன்றவை தொடர்ச்சியாக அவற்றைப்பற்றி வர்ணிக்கின்றன. முருகனின் வேல்,மயில் போன்றவை எப்படி மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன என்பதை கவனியுங்கள்.
இந்த உருவகங்களும் வடிவங்களும் நிலைத்த தன்மைகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆகமங்களும் தாந்த்ரீகநெறிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்ன தெய்வம் இன்னின்னமாதிரி இருக்கவேண்டும், இவ்வாறெல்லாம்தான் வகையில் ஆலயங்கள் அமையவேண்டும், இந்தவகையிலான வழிபாட்டுமுறைகள் நிகழவேண்டும் என அவை வரையறை செய்கின்றன
ஆகவே ஒரு பக்தர் இந்த உருவகங்களையும் வடிவங்களையும் மாற்றுவதற்கு எதிராக இருப்பது இயல்பானதும், ஒருவகையில் இன்றியமையாததும்கூட. மதவழிபாட்டின் எல்லைக்குள் தெய்வங்களை உருவம் மாற்றுதல் மட்டுமல்ல அவற்றுக்கான தொல்முறைமைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யக்கூடாது என்பதே என் கொள்கை.
காலபைரவர், தென்னிந்தியாஅந்த வகையிலேயே ஆலயங்களில் ஆகமமுறைக்கு விரோதமாக செய்யப்படும் பூசைகள் அலங்காரங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. சிலைகளுக்கு அழுக்குத்துணி சுற்றிவைப்பது, பகல்முழுக்க ஏதாவது காப்பு போட்டு மூடிவைப்பது, வழிபாட்டு நேரங்களை விருப்பப்படி மாற்றுவது என இன்று தமிழகத்தில் செய்யப்படும் ஆகமமீறல்கள் ஏராளம். பக்தர்களும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவை வழிபாட்டின் சாராம்சமான உளநிலைகளை அழிப்பவை என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. மையவழிபாட்டு முறைகளில் இருந்து பிரிந்துசென்று துணைவழிபாட்டு முறைகள் உருவாவதென்பது இந்துமதத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அவ்வண்ணம் கிளை பிரிந்து வளர்ந்துகொண்டே இருப்பதுதான் இந்த மரபை ஒரு இறுக்கமான மதநிறுவனமாகவோ, மாறாத கொள்கையாகவோ அல்லாமல் ஒரு ஞானமரபாக, ஒரு மெய்யியல் வெளியாக நிலைகொள்ள வைத்திருக்கிறது.
நாராயணகுரு தீபத்தையும் சொற்களையும் தெய்வமாக பதிட்டை செய்தார். வள்ளலார் ஜோதியை தெய்வமென நிறுவினார். இவ்வண்ணம் மைய உருவகங்களிலேயே பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தன. ஜக்கி வாசுதேவ் நிறுவிய லிங்கபைரவி சிலை மகிஷாசுர மர்த்தனியின் ஒரு நவீன ஓவியம்போல உள்ளது.
அவ்வண்ணம் தங்கள் மெய்ஞானத்தை தொன்மையான உருவகங்களையும் வடிவங்களையும் சற்றே மாற்றியமைப்பதனூடாக வெளிப்படுத்துவது ஞானியர் என்றும் இங்கே செய்துவந்ததுதான். எப்போதும் அது நிகழ்ந்து வந்தது, இனிமேலும் அவ்வாறே தொடரும்.
அந்த கிளைபிரியல்களை மரபுவாதிகள் எதிர்ப்பதும் அவை பயனற்றவை என வாதிடுவதும் வழக்கம்தான். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் தங்கள் மரபார்ந்த நோக்கை முன்வைக்கிறார்கள், அவ்வளவுதான். நாராயணகுருவை, வள்ளலாரை மரபுவாதிகள் அப்படித்தான் எதிர்த்தனர். அது ஓர் உள்விவாதம். அத்தகைய மறுப்பும் விவாதமும் தத்துவதளத்தில் மிகுந்த பயன் அளிக்கும் செயல்பாடுகள்தான்.
சரஸ்வதி எம்.எஃப்.ஹுசெய்ன்நாராயணகுரு அவருடைய கோயில்களை அவரே நிறுவினார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்கக்கூடாது. ஆனால் அவர் பழைய கோயிலுக்குள் சென்று அங்கிருக்கும் உருவத்தை அகற்றினாலோ மாற்றினாலோ அது பிழை. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. தமிழகத்தின் தொன்மையான ஓர் ஆலயத்தில் லிங்கபைரவி நிறுவப்படுமென்றால் அது பிழையான செயல். ஆனால் அதை ஞானியர் செய்ததே இல்லை.
மத, வழிபாட்டு எல்லைக்கு வெளியே நின்றுகொண்டு இந்நிலத்தில் வாழும் தொன்மையான பண்பாட்டுமரபின் ஆழ் படிமங்களும் குறியீடுகளும் என இந்த உருவகங்களையும் வடிவங்களையும் பார்ப்பது என்பது இரண்டாவது பார்வை, விரிவான பொதுவான ஒரு பார்வை.
இந்தியாவின் ஒட்டுமொத்தப் பண்பாடும், ஒட்டுமொத்த மெய்ஞானமும் இந்து மரபில்தான் உள்ளது. பண்பாட்டு நோக்கில் பௌத்த, சமண, சீக்கியப் பண்பாடுகளேகூட இந்து மரபின் கூறுகளே. இந்து மரபின் உருவகங்கள், குறியீடுகளைக் கொண்டே அவையும் பேசுகின்றன.
இந்து மரபு பேணப்படவேண்டும் என்று, பயிலப்படவேண்டும் என்று, அது அழிந்தால் இந்தியா அகவயமாக அழிந்துவிடும் என்று, நான் சொல்வது அதனாலேயே. இந்தியாவுக்கு எதிரான சக்திகள் இந்துப்பண்பாட்டை சிறுமைசெய்வதும் பழிசுமத்தி அழிக்கமுயல்வதும் இதனாலேயே. அதற்கு எதிரான செயல்பாடாகவே என்னுடைய சென்ற முப்பதாண்டுக்கால அறிவியக்கச் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எஞ்சும் நாளிலும் அவ்வாறே.
இந்நிலத்தில் வாழும் தொன்மையான பண்பாட்டுமரபின் ஆழ் படிமங்களும் குறியீடுகளும் இந்துமரபுக்குள் உள்ளன என்பதனாலேயே அவை இந்து மதத்துக்கு உரியவை அல்ல. இந்து மத நம்பிக்கையாளர்களின் உடைமை அல்ல. அவர்களுக்கு அவற்றின்மேல் முற்றுரிமை இல்லை. அவை இந்தியர்கள் அனைவருக்கும் உரிய மரபுச்செல்வம். உலகப் பண்பாட்டுக்கும் உலக மெய்ஞானத்துக்கும் பெருங்கொடை. மானுடர் அனைவருக்கும் அதில் உரிமை உண்டு.
சரஸ்வதி பேலூர்பண்பாட்டுமரபின் ஆழ்படிமங்களும் குறியீடுகளும் எப்போதுமே மறுஆக்கத்திற்கு உரியவை. அவை நாம் எப்படி உலகைப் பார்க்கிறோம் என்பதை நம் உள்ளிருந்து தீர்மானிப்பவை. நாம் என்ன கண்டோம் என்பதை வெளிப்படுத்துவதற்கான கருவிகள். நமக்கு பிறர் கண்ட மெய்யறிதல்கள் வந்தடையும் வழிகள். இம்மூன்று தளங்களிலும் நாம் அறிந்தோ அறியாமலோ அவை தொழிற்பட்டபடியே உள்ளன.
உதாரணமாக, சென்றவாரம் நான் என் ஈரட்டி வனவிடுதியில் இருக்கையில் இரு நாய்களின் காதல்களியாட்டை கண்டேன். அதிலிருந்த கொந்தளிப்பும் களியாட்டும் என்னை ஒரு பரவசநிலையை அடையச்செய்தன. அதை சிவசக்தி லீலையாகவே என்னால் காணமுடிந்தது, ஏனென்றால் அந்த ஆழ்படிமம் எனக்குள் உள்ளது. அது என் மரபுச்சொத்து.
நான் அதை எழுதும்போது லீலை என ஒரு சொல்லை பயன்படுத்துகிறேன். உடனே நான் சொன்னவை மட்டுமல்ல, சொல்லப்பட்டவற்றுக்கு பின்னணியிலுள்ள மொத்த உணர்வுநிலையும் தரிசனமும் வாசகனுக்குப் புரிந்துவிடுகிறது. இப்படித்தான் கலையிலக்கியங்களில், ஆன்மிகத்தில் அறிதலும் தொடர்புறுத்தலும் நிகழ்கின்றன.
அந்த ஆழ்படிமம் என்றோ எங்கோ தோன்றி இங்கே கலையிலக்கியமாக உறைகிறது. அதில் வியாசன், காளிதாசன் முதல் பாரதிவரையிலான கவிஞர்களின் மரபு உள்ளது. எல்லோரா முதல் சுசீந்திரம் வரையிலான சிற்பங்களின் மரபு உள்ளது.
அந்த ஆழ்படிமம் எனக்குள் இருப்பது எனக்கு தெரிகிறது. தெரியாத ஒருவரின் உள்ளேயும் அதுதான் இருக்கும். சிவசக்தி உருவகம் சார்ந்த குறிப்பே இல்லாமல் ஒருவர் இந்த அனுபவத்தை அடைந்து ,அதை முற்றிலும் புதிய ஒரு படிமம் வழியாக தொடர்புறுத்த முடியும். ஆனால் அந்த படிமத்துக்கு அடியில் ஆழ்படிமமாக இருப்பது சிவசக்தி என்னும் உருவகம்தான்.
ஆழ்படிமம் என்பதே அதுதான். [Archetype] படிமங்களுக்கெல்லாம் ஆதாரமாக பண்பாட்டின் கூட்டுநனவிலியில் [collective unconscious] உறையும் தொன்மையான ஆதிப்படிமம் அது. அவைதான் பண்பாடு தனிமனிதனுக்கு அளிக்கும் கொடைகள். தனிமனிதனுக்கு என ‘தனியான’ அகம் ஏதும் இல்லை. அவனுடைய அகம் என்பது இந்த பேரொழுக்கில் ஒரு துளிதான். அத்தனை மனிதர்களும் இதில்தான் இருக்கிறார்கள்.
இந்தியநிலத்தில் பிறந்து இந்த மொழியில் உளம்கொண்டு இச்சூழலில் வாழ்வதனாலேயே இந்த ஆழ்படிமங்களை நான் அடைந்துவிடுகிறேன். நான் என் கல்வியால் இவற்றை மேலும் கூர்மையாக அறிந்துகொள்கிறேன். இவை நான் சிந்திக்க, கண்டடைய, தொடர்புறுத்த உதவுகின்றன.
சரஸ்வதி சோழர்காலம்இவை இந்துமதம் சார்ந்தவை, ஆகவே இந்துமதத்தவரால் கட்டுப்படுத்தவேண்டியவை என ஆகுமென்றால் என்ன பொருள்? என் முழு அகத்தையும் இவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்றுதானே? தங்கள் அரசியல் ஆதிக்க நோக்குக்காக என் கனவுகளையும் கடிவாளமிட்டு ஆட்சி செய்வார்கள் என்றுதானே? அதன்பின் சிந்தனைச் சுதந்திரம், மெய்த்தேடல்சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்பது என்ன? ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அகத்தின்மேலும் எவருக்கு கட்டுப்பாடு இருக்கமுடியும்?
அப்படி ஒரு அதிகாரத்தை எவருக்கு அளிக்கமுடியும்? அதற்கான தகுதி எவருக்கு உண்டு? அரசியல்வாதிகளுக்கா? மதநிறுவனத் தலைவர்களுக்கா? கும்பல் தலைவர்களுக்கா? அப்படி ஒரு அதிகாரத்தை அளிப்பதைப்போல பண்பாட்டுத் தற்கொலை வேறு உண்டா?
அறிதல்- தொடர்புறுத்தல் இருநிலைகளிலும் இந்த உருவகங்களையும் வடிவங்களையும் தொடர்ச்சியாக உருமாற்றிக்கொண்டேதான் இருக்கமுடியும். மறுஆக்கம் செய்வது என்பது அதனால்தான். வெவ்வேறு ஞானங்களுடன் இணைப்பது, வெவ்வேறு உருவகங்களுடன் கலப்பது, வெவ்வேறு மரபுகளுடன் உரையாடவைப்பது வழியாகவே அந்த மறுஆக்கம் நிகழ்கிறது.
அந்த மறுஆக்கத்தை காளிதாசன் முதல் பாரதிவரை அனைவருமே செய்திருக்கிறார்கள். இந்தியவைன் மகத்தான எழுத்தாளர்கள் அனைவருமே செய்திருக்கிறார்கள். ராஜா ரவிவர்மா முதல் கொண்டையராஜு வரை அனைவருமே செய்திருக்கிறார்கள். அது நடந்துகொண்டே இருக்கிறது, இனியும் நிகழும்.
மகிஷாசுர மர்தனிஅது நின்றுபோகும்போது இந்திய ஞானமரபு தேங்கி ஒரு உறைந்த நிறுவனமாக ஆகும். வெறும் கட்டளைகளும் சடங்குகளும் கொண்டதாக மாறும். ஒரு தலைமுறைக்குள் வெறும் அதிகாரக் கட்டமைப்பாக அல்லது வரலாற்றுச் சின்னமாக மாறும். உயிரற்றவை காலப்போகில் அழியும் எனபது விதி.
ராஜா ரவிவர்மா பற்றிய நூல் ஒன்றில் ஆசிரியரான என்.பாலகிருஷ்ணன் நாயர் அவருடைய ஓவியங்களுக்கு அன்று மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று சொல்கிறார். தெய்வங்களை அவர் பார்ஸிநாடக நடிகர்களின் தோற்றத்தில் வரைந்தார். உயிருள்ள பெண்களை தெய்வங்களுக்கு மாடல்களாக ஆக்கினார். சாமுத்ரிகா லட்சணப்படி வரையவில்லை. இன்று அவையே தெய்வ உருவகங்களாக ஆசாரவாதிகளாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.
பாரதியைப் பற்றிய உரையாடல் ஒன்றில் பேரா.ஜேசுதாசன் எஸ்.வையாபுரிப்பிள்ளை சொன்ன ஒரு நிகழ்வைச் சொன்னார். பாரதிக்கு திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சக்தியை பாரதமாதாவாக அவர் உருவகம் செய்தது தவறு என்று. இன்று பாரதி ஒருவகை சித்தபுருஷராக ஆகிவிட்டார்.
இந்த முரண்பாடு எப்போதும் உண்டு. ஆனால் இதைமீறித்தான் படைப்பியக்கம் செயல்படும். முரண்படும் பழைய ஆசாரவாதிகள் ஒரு தரப்பாக ஒலிக்கும் வரை பிரச்சினை இல்லை. அவர்களிடம் கட்டுப்படுத்தும், ஒடுக்கும் அதிகாரம் செல்லும்போது அழிவு தொடங்குகிறது. எம்.எஃப்.ஹுசெய்ன், எம்.எம்.பஷீர் விஷயங்களில் வெளிப்பட்டது அதுவே.
லிங்கபைரவி [அடியில் மகிஷனின் கொம்புகள்]ஆகமமுறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களிலேயேகூட சிற்பிகளின் கற்பனைப்படி சிற்பங்கள் வடிவமாற்றம் அடைந்துள்ளன. சிற்பங்களைப் பார்க்குந்தோறும் அவை எப்படியெல்லாம் மாறுதலடைந்து புதுப்புது அர்த்தங்களை கொண்டிருக்கின்றன என்பதுதான் நம்மை வியப்பிலாழ்த்தும். ஆகமமுறை நெகிழ்ந்து தன் எல்லைகளை விரித்துக்கொண்டு அந்த மாறுதல்களை தன்னுள் இழுத்துக்கொண்டே இருக்கிறது.
காலபைரவம் என்ற உருவகம் சாவை, காலத்தை உருவகப்படுத்துகிறது. சில இடங்களில் காலபைரவரின் வாகனமாக நாய் உள்ளது. சில இடங்களில் நாய் மட்டுமே காலபைரவராக உருவகம் செய்யப்பட்டுள்ளது. விஷ்ணுபுரத்தில் கரியநாயாக ஒரு நவீனக்குறியீடாக காலபைரவர் வருகிறார்.
கலையில் தெய்வ வடிவங்கள் குறியீடாக திகழ்கையில் மாறுதல் அடையலாம், அடைந்தாகவேண்டும். வழிபாட்டு முறைகள் கிளைத்து பிரிந்து எழுகையில் மாறுதல் அடையலாம், அதை ஞானியர் செய்யலாம். நிலைபெற்றுவிட்ட வழிபாட்டுமுறைகளில் புகுந்து அவற்றை மாற்ற எவருக்கும் உரிமை இல்லை, அது பண்பாட்டு அழிப்பு. இதுவே நான் தொகுத்துச் சொல்வது.
உதாரணமாக, இன்று பிள்ளையாரை வெவ்வேறு நவீன வடிவங்களில் வரைகிறார்கள். பிள்ளையார் என்னும் தொன்மத்தை, ஆழ்படிமத்தை படைப்பூக்கத்துடன் ஓங்காரவடிவமாக புரிந்துகொள்ள அவை உதவுபவை. ஆனால் பிள்ளையாரை வழிபடுவதற்கு அவற்றை பயன்படுத்தக் கூடாது.
ஏனென்றால் கலையின் படிமங்கள் அகக்குலைவை உருவாக்குகின்றன. அதிலிருந்து நூறாயிரம் கிளைகள் பிரியச் செய்கின்றன. அதுதான் நம்மை படைப்பூக்கம் கொள்ளச்செய்கிறது. ஆனால் வழிபாடு நேர் எதிரான பாதை கொண்டது. அகஒருமை கூடவேண்டியது. அங்கே நிலைபெற்ற வடிவங்களுக்கே இடம்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த ஓவியத்தை கலைநோக்கில் காலபைரவம் என்னும் கருதுகோளின் இன்றைய நீட்சியாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் காலபைரவராக வைத்து அதை வழிபடக்கூடாது. அவ்வண்ணம் வழிபடவேண்டும் என்றால் அதை ஒரு ஞானி தன் மெய்யறிவால் கண்டு நிறுவவேண்டும். நீங்கள் அந்த ஞானியின் வழியை பின்பற்றவேண்டும். அவர் அதை ஒரு முழுவழிபாட்டுமுறையாக வகுத்து அளித்திருக்கவேண்டும். அது இந்துமரபுக்குள் ஒரு தனிவழியாக நீடிக்கும்.
ஜெ
பிழைப்பொறுக்கிகள்- எதிர்வினைகள்
அன்புள்ள ஜெ
இதை நான் சொன்னால் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லவேண்டுமென்பதற்காக எழுதுகிறேன். முகநூல் என்பது வம்புகளால் மட்டுமே நிறைந்த ஓர் உலகம். அங்கே சென்று, ஓர் ஆர்வத்தில் கொஞ்சம் உழன்று, சலித்துப்போய் இங்கே வருபவர்கள்தான் உங்கள் வாசகர்கள். முகநூலில் நாள்தோறும் ஏதாவது வம்பு எழுதிக்கொண்டிருப்பவர்களின் மனநிலை என்ன என்பது உங்களை விட உங்கள் வாசகர்களுக்கு தெரியும். 99 சதவீதம் பேரின் பிரச்சினை சாதிப்பற்றும் மதப்பற்றும்தான். மிஞ்சிய கொஞ்சம்பேருக்கு அரசியல் காழ்ப்பு. ஆனால் ஒட்டுமொத்தமாகவே எதிர்மறையானவர்கள்.
காலையில் இவர்களை வாசிப்பது மிகுந்த சோர்வளிப்பது. நாம் அன்றாடவாழ்க்கையின் ஆயிரம் சவால்களில் இருந்து கொஞ்ச நேரத்தை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறோம். நாம் தேடுவது கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் தத்துவம். நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள, நம் தேடலை விரிவாக்கிக்கொள்ள. இந்தவகையான எதிர்மறை எண்ணங்களாலும் சில்லறைப்புத்தியாலும் எழுதுபவனுக்கும் அவனைப்போன்ற நாலைந்துபேருக்கும் ஈகோ செயற்கையாக பூஸ்ட் ஆகிறது. மற்றபடி பயன் இல்லை. அவர்களை எல்லாம் இழுத்து இங்கே கொண்டுவரவேண்டியதில்லை. நாங்கள் விட்டுவிட்டு வந்த அந்தச் சில்லறைச் சண்டைகளை மிண்டும் எங்கள் தலைமேல் சுமத்தவேண்டியதுமில்லை
எஸ்.ராகவன்
இனிய ஜெயம்
அறமென்ப கதை மீதான அடிதடியை உங்கள் தளம் வழியே அறிந்தேன். மெல்லிய புன்னகையுடன் கடந்து போக வேண்டிய விஷயங்கள் இவை. கதிர் முருகன் போன்ற நண்பர்களை குறிவைத்துதான் இத்தகு அப்பாவிகள் ‘உழைத்துக்’ கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் “இருவருக்கும் பொதுவான நண்பர்கள் ஜெயமோகன் கிட்ட இதை எடுத்து சொல்லுங்க” என்ற வேண்டுகோள் அவர்களின் அசட்டு பதிவின் இறுதியில் விண்ணப்பமாகவே இணைக்கப்பட்டு இருக்கும்.
இத்தகு அசட்டுத்தனங்களில் உழலத் துவங்கினால் இறுதியில் நாமும் அத்தகு அசடனாக சென்று முடிவதே இதன் இறுதி நிலையாக இருக்கும் என்பதை உணர்ந்து, சென்ற வருட கொரானா முடக்க காலத்திலேயே, இத்தகு வாட்ஸாப் சுட்டி செய்திகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன்.
இத்தகு பிழை காணல்களில் காண்பவர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை திமுகஇடதுசாரி இந்துத்துவ அரசியல் கொள்கையாளர்கள். இத்தனை வருடம் எழுதி ஜெயமோகன் புனைவுகள் வழியே அவர் கொண்டிருக்கும் இடம்தான் பொது மனதில் அவரது கருத்தியல் அதிகாரத்தின் வேர் என்பதை அறிந்து, ஜெயமோகனின் புனைவுகளை கட்டுடைப்பதான் வழியே அந்த கருத்தியல் அதிகாரத்தை அசைத்து பார்க்கவேனும் முடியுமா என்று நிகழும் ப்ரயத்ணம். உதாரணம் ராஜன் குறை கட்டுரைகள்.
துறை சார்ந்த வல்லுநர் என நம்பிக் கொண்டு தர்க்கப் பிழை வழியே புனைவுகளை அதன் இடத்தை விழத்தட்ட வைக்கும் முயற்சிக்கள். உதாரணம் முருக வேள் பதிவு. இந்த இரண்டும் செய்ய கூட சற்றே திராணி வேண்டும் அது கூட இல்லாததால்,ஹே ஹே ஹே மீம்சுகள் வழியே இந்த புனைவு எழுதியவர் இதை வாசிப்பவர் என ஒரு ஒட்டு மொத்த செயல்பாட்டையே பழிப்பு காட்டி மேற்கண்ட அதே செயல்பாட்டை செய்ய முயலும் ஷிட்ஆந்த ரீதியிலான இந்துத்துவர்கள்.
இரண்டாவது வகை “நுட்டு” ப்பமான வாசகர்கள். நுட்டு பமாக வாசித்து வாசித்து ரசனை சிகரத்தின் முனையில் ஒற்றை காலில் நிற்பவர்கள். அந்த இன்னொரு காலை எங்கே ஊன்றுவது என்று தேடித்தான் ஜெயமோகன் போன்ற ஒருவரை நாடி வருகிறார்கள். அந்தோ பரிதாபம் ஜெயமோகன் அவர்களை வன்மையாக ஏமாற்றி விடுகிறார். இரவில் மர நிழலில் காரை நிறுத்தினான் என்று வந்தால் அதற்கு மேல் இவர்களால் அந்தக் கதையில் இருக்கும் ஒற்றை காலை கொண்டு நிற்க முடியாது. அடுத்த வரியிலேயே லைட்டை போட்டு கைகளில் பார்த்தான் என்று வருவது ஏன் என்று அவர்களால் விளங்கிக்கொள்ள இயலாது. எளிய தர்க்கம் இரண்டாவது தகவல் சரி எனில், முதல் தகவல் பிழை. கற்பனைக்கான லீட் ஒன்று வெறும் தகவலாக மட்டுமே உள்ளே சென்று சேரும் நிலை இது. இணையாகவே இவர்கள் இலக்கிய வெளிப்பாட்டின் உயர் வடிவமான கவிதைகள் குறித்த கருத்துக்கள் எதுமற்றவர்களாக (அதில் எடுத்து அடுக்கி சரி பார்க்க தகவல்கள் என ஏதும் இல்லாததால்) இருப்பதை பார்க்கலாம். இத்தகு நிலை கொண்டோரின் பாராட்டு பெரும்பாலும் “ப்ரில்லியண்ட்” என்று இருப்பதையும் பார்க்கலாம். இலக்கியம் என்பதே வெறும் தகவல்களை குறிப்பிட்ட வரிசையில் அடுக்கி காட்டும் மூளை விளையாட்டு எனும் உள்ளார்ந்த புரிதலின் விளைவு இது. மாறாக கற்பனைக் களி மேடையை நிகழ்த்துக் களமாக கொண்ட இலக்கியம் எனும் கலை குறி வைக்கும் இலக்கு ப்ரில்லியண்ட் அல்ல எக்ஸலன்ட். அந்த எக்ஸலன்சியை சென்று எய்த எந்த அளவு வரை தகவல் உண்மை தேவையோ அந்த அளவு தேவை. விஷ்ணுபுரம் போல. இவ்வளவு போதும் எனில் இந்த அளவு போதும்.அனல் காற்று போல. இதை இந்த நுட்டு ப்பமான வாசகர்களுக்கு ஜெயமோகனாலும் சொல்லிப் புரிய வைத்து விட முடியாது.
ஆக இந்த இரண்டு தரப்பும் என்றும் இப்படித்தான் இருக்கும் என்பதே நிலை. ஒரு கதை வெளியான உடன் அது உருவாக்கும் கற்பனை உலகில் வாழ்வதை விடுத்து, அடுத்த அரை மணிக்கூறில் இந்த இரண்டு தரப்பும் என்ன சொல்லுது பாப்பம் என்று இதன் பின்னால் போனால் இத்தகு அசடர்களாக மாறி நிற்பதே இதன் இறுதி விளைவாக இருக்கும். :)
கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
ஒரே விஷயத்தைச் சொல்வதற்காக இதை எழுதுகிறேன். திரு முருகவேல் அவர்களின் குறிப்புக்கு வந்த எதிர்வினையை வாசித்தேன். வக்கீல்களில் ஒருவகையான போலி வக்கீல்கள் உண்டு. மனிதாபிமானம் முற்போக்கு என்று முகநூலிலும் அரசியல்களத்திலும் பாவலா காட்டுவார்கள். கட்சிச்சார்பு பேசுவார்கள். இவர்களை எந்த விஷயத்துக்கும் நம்பக்கூடாது. ஏனென்றால் சட்டமோ அன்றாட நடைமுறையோ தெரிந்திருக்காது. கேஸ் நடத்தவும் தெரியாது. ஆகவேதான் இப்படி ‘படம்’ காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
கேஸ் என்று வந்தால் தொழிலில் வெற்றிகரமாக இருக்கும் வழக்கறிஞர்களை நாடிச்செல்வதே சரியானது. என் அனுபவம் இது. இத்தகைய ஒருவரை நம்பி என் வழக்கில் சீரழிந்தேன். சொல்லப்போனால் ஒரு சின்ன வழக்கு. அதை மனித உரிமை தீர்ப்பாயம் வரை கொண்டுசென்று சிக்கலாக்கி கடைசியில் சொந்தக்காரர்களின் உதவியுடன் நிஜமான வக்கீலுடன் சென்று குறைந்த இழப்புடன் தப்பித்தேன். பணம் போனது மிச்சம்.
ஓர் எச்சரிக்கைக்காக எழுதுகிறேன்
ஆர். ராஜகோபாலன்
அன்புள்ள ஜெ,
நீங்கள் கதை எழுதுங்கள். கதை எழுதும்போது உற்சாகமாக கற்பனையில் திளைக்கிறீர்கள். எழுதாதபோது இப்படி வெட்டிக்கும்பல்கள் உங்களை எரிச்சலூட்டுகிறார்கள்.
செல்வக்குமார்
அன்புள்ள ஜெ
நம் ‘இணைய வக்கீல்கள்’ எந்த தரத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் 2019 ல் அடிபட்ட வழக்கு விஷயமாக நடந்த விவாதத்திலேயே கண்டேன். ஏகப்பட்ட ‘சட்டநுணுக்க’ பேச்சுக்கள். ஏராளமான ‘தார்மீக’ப்பேச்சுக்கள். ஆனால் எவருக்குமே அடிப்படைகள் தெரியவில்லை. ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு எப்படி எழுதப்படும் என்றுகூட தெரியவில்லை. இவர்களெல்லாம் கோர்ட் பக்கம் தலைவைத்துப் படுக்கிறார்களா என்பதே அதிசயம். திரு முருகவேலன் வாகன இழப்பீட்டுக்கு தேவையானவை என்று சொல்லும் பல ஆவணங்கள் தேவையே இல்லை. எல்லாவற்றையும் போலீஸிடமிருந்தே நகல் பெற்றுவிடலாம். போலீஸே கொடுப்பார்கள்.
வழக்கின்போது நீங்கள் சர்க்கார் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொண்டீர்கள், ஏழைகளின் இடத்தை ஆக்ரமித்தீர்கள் என்றெல்லாம் இந்த வக்கீல்கள் எழுதினார்கள். ஒரு அடிதடி வழக்கில் நாம் போலீஸில் புகார் செய்தால் அவர்கள் நமூனா எழுதி நேராக சர்க்கார் ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்புவார்கள். காயங்கள், உடல்நிலை ஆகியவற்றை டாக்டர்தான் சொல்லவேண்டும். அதன் அடிப்படையில்தான் வழக்கு எழுதுவார்கள். டாக்டர்கள் பெரும்பாலும் ஒருநாள் தங்கவைத்து பிபி நார்மலானபிறகுதான் அனுப்பிவைப்பார்கள். டாக்டர்கள் எழுதிய காயங்கள்தான் வழக்கின் அடிப்படையே. இந்த எளிமையான அடிப்படை தெரியாதவர்களெல்லாம் எந்த ஊர் வக்கீல்கள் என்றே தெரியவில்லை.
என் கோரிக்கை இதுதான். அரசியல் அரட்டைக்கு இவர்களை வாசியுங்கள். உண்மையிலேயே ஏதாவது சட்ட ஆலோசனை வேண்டுமென்றால் நல்ல பிராக்டீஸிங் வக்கீல்களை நாடுங்கள்.
ராம் மகாதேவன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


