இந்திய ஆங்கில வாசிப்பு

அமிஷ் நாவல்கள் நாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும் இந்திய ஆங்கில இலக்கியம் ஆங்கிலமும் இந்தியாவும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கங்கள். சமீபத்தில் அமேசானில் மூன்று புத்தகங்கள் வாங்கியிருந்தேன். சேப்பியன்ஸ், குற்றமும் தண்டனையும் மற்றும் அசுரா(அனைத்தும் ஆங்கிலத்தில்). அதில் முதல் இரண்டை தீவிர வாசிப்பிற்கும் கடைசி ஒன்றை இலகுவான வாசிப்பிற்கும் வைத்துக்கொண்டேன்.

‘அசுரா’ – தலைப்பும், அதுகொண்டிருந்த கதைக்கருவும் கொஞ்சம் ஆர்வம் அளித்தது. சேப்பியன்ஸ் படித்ததும் ‘அசுரா’ எடுத்தேன். ஆனால் ‘அசுரா’ வின் கதையோட்டம் முதல் ஐந்தாறு பக்கங்களிலேயே சலிப்படைய வைத்தது. சாதாரண காரணங்களைக் கொண்டு பெருநிகழ்வுகளை விவரிப்பதும், சொல் பிரயோகிப்பும் எனக்கு உகந்ததாக தென்படவில்லை. சரி, புத்தகம் பிடிக்காமல் போனதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணி குறிப்பெடுத்துக்கொண்டு தொன்னூறு பக்கங்கள் வரை படித்தேன். ஆனால் மேலே தொடர்வது நேர விரயம் மட்டுமே என தெரிந்ததும் விட்டுவிட்டேன்.

இவையனைத்திருக்கும் மேலே ஒன்று விசித்திரமாக தென்பட்டது. புத்தகத்தில் ராவணன் படம் பதினொன்று தலைகளுடன் அச்சிடப்பட்டிருந்தது. ‘தாரணி மவுலி பத்து தானே?’ என்றெண்ணி பதினோராவது தலையை கூகிள் செய்து பார்த்தேன். அகப்படவில்லை. ‘சரி புத்தகத்தில் அதைப் பற்றி ஏதாவது குறிப்பு இருக்குமோ என்னவோ. படித்து பார்க்கலாமா?’ என்ற எண்ணமே சுமையாக இருக்கிறது.

நான் வைத்திருக்கும் இப்புத்தகம் 2018-ல் மறுபிரசுரத்தில் அச்சில் வந்துள்ளது. மேலே கூறியவை மனிதத் தவறாகவோ இல்லை அச்சுப் பிழையாகவோ கூட இருக்கலாம். ஆனால் இப்புத்தகம் பொது வாசகர்களுக்கான fiction என்பதாலேயே இது போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வில்லையா? இன்னும் சற்று மெனக்கெடல்களுடன் இப்புத்தகம் வந்திருந்தால் ராவணனுக்கேற்ற சீரிய படைப்பாக இது இருந்திருக்கும் என தோன்றுகிறது.

அன்புடன்,

சூர்ய பிரகாஷ்

சென்னை

அன்புள்ள சூர்யப்பிரகாஷ்

 

சமீபத்தில் ஈரோடு கிருஷ்ணன் எவரோ தலையில் கட்டினார்கள் என்று அமிஷ்நாவல்களில் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தார். எதையும் நடுவில் வீசிவிடும் வழக்கம் அவருக்கில்லை. ஆகவே ஒவ்வொரு நாளும் பிலாக்காணம், மொட்டைவசை. ‘என்னத்தை எழுதியிருக்கான்? கதைசொல்லவே தெரியல்லை. தினமலர் வாரமலர் எழுத்தாளனுங்க மேல்’ இதில் நான் எங்கோ ‘டான் பிரவுன்கள் நமக்குத்தேவை’ என எழுதியிருந்தேன் என்பதனால் எனக்கு நாலைந்து கண்டனங்கள்.அந்தக்கடுப்பில் நீதிபதியை வசைபாடி கட்சிக்காரனை சிறைக்கு அனுப்பிவிடுவாரோ என்றபயத்தில் நான் சமாதானம் செய்யவேண்டியிருந்தது

உண்மையில் இந்த அமிஷ்நாவல்கள் போன்றவற்றின் வாசகர்கள் யார்? நேற்று சாதாரணமான வணிக எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருந்த அதே பண்பாட்டுப்பயிற்சியோ அறிவுப்பயிற்சியோ அற்ற நடுத்தரவர்க்க வாசகர்கள்தான். அவர்கள் முன்பு வட்டாரமொழிகளில் வாசித்துக்கொண்டிருந்தனர். இன்றைக்கு வட்டாரமொழிகள் நகரங்களில் அனேகமாக வழக்கொழிந்துவிட்டன. ஆங்கிலவழிக்கல்வி இளைய தலைமுறையை ஆள்கிறது. அவர்களால் தாய்மொழியை சரளமாக படிக்கமுடியாது. ஆங்கிலத்தில் மிகமேலோட்டமான எளிய உரைநடையையே படிக்கமுடியும். அவர்களுக்கான நூல்கள் தேவையாகின்றன. அவர்களுக்காக இவை எழுதப்படுகின்றன.

இரண்டு ஆர்வங்கள் இவற்றை நோக்கி வாசகனை உந்துகின்றன. எப்போதும் இயல்பாக இருக்கும் இந்தியப் பண்பாடு பற்றிய ஆர்வம். தொலைதொடர்களிலிருந்து பெற்றுக்கொண்ட எளிய அறிமுகம் இருக்கிறது. ஆகவே அவர்களால் புராணங்கள் மற்றும் தொன்மையுடன் எளிதில் அடையாளம்கண்டுகொள்ள முடிகிறது.அத்துடன் அமெரிக்க பரப்பெழுத்திலும் பரப்பியல் திரைப்படங்களிலும் உள்ள நவீனபுராணங்கள் என்னும் வடிவம். தோர் போன்ற படங்களின் முன்னுதாரணம். இந்நாவல்கள் அவற்றின் கலவைகள்

ஆனால் அமெரிக்க எழுத்து தேர்ந்த தொகுப்பாளர்களால் சரிபார்க்கப்படுகிறது. இங்கே அப்படி ஏதுமில்லை. அட்டைகூட அப்படியே திருடி போடப்படுகிறது. வெண்முரசுக்கு ஷண்முகவேல் வரைந்த ஓவியத்தைக்கூட திருடி அப்படியே அட்டையாகப் போட்டுவிட்டிருக்கிறார்கள். எந்த கவனமும் இல்லாமல் அடித்து குவித்து விற்று பணமும் பார்த்துவிடுகிறார்கள். மொழி உயர்நிலைப்பள்ளித் தரம். கதையின் ஆராய்ச்சியும் அதே தரம்தான்.

இவற்றிலிருந்து சிலர் இலக்கியம் பக்கம் வந்தால் நல்லதுதான். உண்மையில் இந்தியாவில் இன்று கொஞ்சம் தீவிரமான வாசிப்பு இருப்பதே ஆங்கிலத்தினூடாகத்தான். சர்வதேச அளவில் பெரிதும்பேசப்படும் ஆக்கங்கள் படிக்கப்படுகின்றன. உள்ளூர் ஆங்கில இலக்கியத்திலேயே எளிய முற்போக்கு உள்ளடக்கமும் சரளமான மொழியோட்டமும் தெளிவான நாவல்வடிவமும் கொண்ட ஆக்கங்கள் படிக்கப்படுகின்றன. அது பெரிய வணிகமாக வேரூன்றியிருக்கிறது. அந்நூல்களுக்கே ஆங்கில்நாளிதழ்கள் விமர்சனங்களும் ஆசிரியர் பேட்டிகளும் வெளியிடுகின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற பல பரிசுகளும் உள்ளன. ஆகவே அந்த ஆசிரியர்களே இந்திய அளவில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். இந்திய ஆங்கிலத்தில் அமிஷ்நாவல்கள் ஒரு பெரும்போக்கு என்றால் இது  இந்திய ஆங்கிலத்திலுள்ள சிறுபான்மை இலக்கியப்போக்கு.

ஆனால் இந்திய ஆங்கில எழுத்துலகில் விமர்சனம் என்பது அனேகமாக இல்லை. அமெரிக்க, ஐரோப்பியச் சூழலில் பேசப்படும் இலக்கியக்கொள்கைகள், இலக்கியவிமர்சன கருத்துக்கள் இங்கே கல்விக்கூடங்களுக்கு வெளியே வருவதில்லை. அவற்றை எவரும் அறிந்திருக்கவில்லை. நாளிதழ்கள், இணைய இதழ்களின் நூல்மதிப்புரைகளில் இலக்கியவிமர்சனத்தின் கலைச்சொற்கள் மட்டும் எளிமையான பொருளில் புழங்குகின்றன.அவ்விமர்சனங்கள் பெரும்பாலும் எழுதவைக்கப்படுபவை. அதற்கு பதிப்பாளர் முன்கை எடுக்கவேண்டும். மதிப்புரைகள் பெரும்பாலும் ஒரேமாதிரியான புகழ்மொழிகள்.

இந்நிலையில் இலக்கிய மதிப்பீடுகள் அற்ற  ‘சுவைநாடி வாசகர்’களே எஞ்சுகிறார்கள். ஆகவே எந்த நூல் விற்கிறதோ அதுவே சிறந்தது என்னும் அளவுகோல் நிலைகொண்டிருக்கிறது. ‘டிரெண்ட்’ என்பதே வாசிப்பை தீர்மானிப்பதாக உள்ளது. தன் தனித்தேடலுக்காக வாசிப்பவர்கள் அரிதினும் அரிது. எல்லா இலக்கிய விவாதங்களிலும் அரிய ஒருநூலை எவரேனும் பேசுகிறார்களா என்று பார்ப்பேன். ஏமாற்றமே இதுவரை.

விற்பனையே அளவுகோல் எனும்போது வாசகனின் ‘கமெண்ட்’ முக்கியமானதாக ஆகிவிடுகிறது.இணையதளத்தில் வாசகர்கள் எந்த படைப்பையும் எளிதாக ஒற்றைவரியில் ஏற்கவோ நிராகரிக்கவோ செய்கிறார்கள். வாசகனே நுகர்வோன், ஆகவே அவனே அரசன். முன்பு அவனுக்கு மாணவனின் இடம் இருந்தது. இன்று அம்மனநிலை இல்லை. வாசகன் ஆசிரியனிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்னும் உளநிலையில் இல்லை. ஆசிரியன் தன் விருப்பத்தை நிறைவேற்றவேண்டியவன் என நினைக்கிறான்

ஆகவே வாசகன் இலக்கியப்படைப்புக்காக தன்னை முன்னகர்த்துவதில்லை. வாசிப்பதற்காக எந்த முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை எதையும்  தன் வாசலில் கொண்டுவந்து ஆசிரியன் விளம்பவேண்டும் என நினைக்கிறான். ஆகவே தீவிர வாசிப்புத்தளத்தில்கூட வாசகனுக்காக தயாரிக்கப்பட்ட படைப்புகளுக்கே முதன்மை உள்ளது. டிரெண்டிங் காரணமாக எந்த ஆக்கம் அதிகமாக பேசப்படுகிறதோ அதையே எல்லாரும் வாசிக்கையில் கவனிக்கப்படாத நூல் முற்றிலும் கவனிக்கப்படாமலாகிறது. எந்நூலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மறக்கப்படுகிறது.

இந்திய மொழிகளிலிருந்து இலக்கியங்கள் மிகமிகக்குறைவாகவே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. அவற்றில் ஆசிரியரின் கருத்தியல் அடையாளம், அவர் முன்வைக்கப்படும் விதம் சார்ந்து மட்டும் சிலர் கவனிக்கப்படுகிறார்கள். அதுகூட மேலோட்டமான கவனம்தான். மிகப்பெரும்பாலான இந்திய இலக்கியப்படைப்புக்கள் ஆங்கிலத்தில் கவனம்பெற்றதே இல்லை. இலக்கியமேதைகளேகூட.

ஏனென்றால் அவற்றை வாசிக்க இந்தியப்பண்பாடு, வட்டாரச்சூழல் ஆகியவை பற்றிய ஒரு அறிதல் தேவை. அவை உருவாக்கும் அழகியலை அணுகும் கவனம் தேவை. இன்றைய இந்தியஆங்கில வாசகனிடடம் அது இல்லை. அவனால் ஆங்கிலத்தில் பஷீரையோ கி.ராஜநாராரயணனையோ வாசிக்கமுடியாது.

இந்தியப்படைப்புக்களில் கொஞ்சமேனும் கவனிக்கப்படுபவை மேலோட்டமான இந்திய ஆங்கிலவாசிப்பு வட்டத்துக்குள் பொருந்தக்கூடிய சில ஆக்கங்களே. அவை வழக்கமான முற்போக்கு உள்ளடக்கம் மற்றும் எளிமையான சுற்றுலாப்பயணக் கவற்சி ஆகிய இரு இயல்புகளின் கலவைகளாக இருக்கும்

நம் முதல்நிலைக் கல்விக்கூடங்களில்கூட இலக்கியம் ஒருவகை அரசியலாகவே இன்று கற்பிக்கப்படுகிறது. பாடத்திட்டங்களை கவனித்தால் மூன்றாமுலக எழுத்து, பெண்ணிய எழுத்து, விளிம்புநிலை எழுத்து, சூழியல் எழுத்து என்னும் வகையான அரசியலடையாளங்களே இலக்கியத்தை வகைப்படுத்தும் கருவிகளாக கருதப்படுவது தெரிகிறது. அழகியல்சார்ந்து இலக்கியத்தை அணுகும் முறை எந்த கல்விநிலையிலும் இல்லை. ஆசிரியர்களுக்கே அதில் பழக்கமில்லை.

விளைவாக இலக்கிய ஆக்கங்களின் அரசியல் உள்ளடக்கம், அவ்வெழுத்தாளரின் தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் இரண்டும் மட்டும்தான் இலக்கியப்படைப்பை அளக்கும் அளவுகோல்களாக உள்ளன. ‘இலக்கியவாதி மற்றும் களச்செயல்பாட்டாளர்’ என்று போட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயம் எல்லா இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கும் உள்ளது. மேலைச்சமூகத்தின் மேலோட்டமான வாசகன் இந்தியா ஒரு தேங்கிப்போன சமூகம் என்றும் இங்குள்ள எழுத்தாளன் அதை குத்தியெழுப்ப முயன்று கொண்டே இருக்கவேண்டியவன் என்றும் நினைக்கிறான். அவனுக்காக இந்த வேடம் அணியப்படுகிறது

இந்தியாவின் வட்டாரமொழிகளில் இலக்கியம் பெரும் தேக்கத்தில் இருக்கிறது. ஏனென்றால் வாசிக்க ஆளில்லை. நூலகங்கள் செயலற்றுவிட்டன. இன்னொருபக்கம் இந்திய ஆங்கிலச்சூழலில் ஒருவகை போலி எழுத்தும் போலி வாசிப்பும் வலுப்பெற்று மைய ஓட்டமாக நிலைகொள்கின்றன

ஜெ

அமிஷ் நாவல்கள் -கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.