நிறைவிலி, விசை – கடிதங்கள்

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை கதையை வாசித்தபோது ஒரு ஞாபகம். 80களில் எங்கள் வீட்டுக்கு ஒரு வேலைக்கார அம்மாள் வருவாள். கணவனால் கைவிடப்பட்டவள். ஒருபையன். அவனை படிக்கவைத்தாள். அவன் இன்று நல்ல நிலையில் இருக்கிறான். அந்த அம்மாள் செத்துவிட்டாள்.

அந்த அம்மாள் பாத்திரங்களை விளக்கினால் பளபளவென இருக்கும். அலுமினியப்பாத்திரங்களை விளக்கும்போது என் அம்மா அப்படி அழுத்தி தேய்க்காதே, ஓட்டைவிழுந்துவிடும் என்று சொல்வாள். அந்த விசை என்ன என்று இப்போது புரிகிறது

நம்மைச் சுற்றி நம் அன்றாடத்திலேயே எவ்வளவு கதைகள், எவ்வளவு மனிதர்கள்

சரண்ராஜ்

 

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்தானே? இது உங்களுக்கு நான் எழுதும்  முதல் கடிதம். பிழைகளை தயவுசெய்து பொருத்துக்கொள்ளுங்கள். இணையத்தின் உதவியுடன் மொழிபெயர்த்துள்ளேன்.

பொதுவாக கலை, இலக்கியம், அறிவிவிசை கதையின் தாக்கம் பல நாட்கள்  தொடர்ச்சியாக வருகின்றன. ஆழ்மனதின் ஒளியை உணர்த்தும் படைப்பு என கொள்கிறேன். எலிசாம்மாள் – அடிப்படை சுதந்திரம் கூட அல்லாதவள், வெளியுலகுக்கு மீட்டு வரப்பட்ட பின் தனக்கிருந்த ஒரேஆதரவை இழக்கிறாள். அதன்பின் புறவய உலகோடு தொடர்பு கொள்ளும் தன்மை முற்றிலும் ஒடுங்கிவிடுகிறது. ஓலை பின்னுதல் என்னும் செயல் மட்டுமே அவளை ஆட்கொள்கிறது.

ஓர் எந்திரத்தனமான செயலில் வாழ்வுமுழுதும் தீவிரத்துடன், எப்படி ஈடுபட முடியும்? அவளுடைய உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு (survival instinct) ஆழ் மனதில் விசையாக மாறி, அவள் அறிந்த ஒரே செயலின் வழியே  வெளிப்பட்டிருக்கலாம். அகத்தின் உறையாடல்களும் அந்த விசைக்கு இறை. அதிகாலை எழுந்து இருட்டுக்குள் செல்வதில் இருந்து, இரவு சாக்கு போர்த்தி உறங்கும்  வரை, சூரியனின் தளர்வற்ற சுழற்ச்சியைப் போன்ற அவளின் அன்றாட வாழ்க்கை என்னை நிலைகுலையச் செய்தது.

இதில் அவளுக்கு கிடைத்ததுதான் என்ன? அவளால் விளக்க முடியாத நிறைவா? வீடுபேறா? ஆயினும், இது மூன்று தலைமுறைகளக்கு ஏதோ வகையில் செல்வாக்கு செலுத்தியது – அவளுடையது , மகனுடையது, அவள் காலத்தை தாண்டி ஊரின்  மற்ற பிள்ளைகளுடையது. முரண்பாடாக அதே விசை அவளைச் சுற்றி ஒரு சுவராக மாறி, மகனிடமிருந்து விலக்கி வைத்தது. வழிகாட்டுதல் இல்லாமல் மகன் தனது பாதயை இழந்திருக்கலாம். அவளுடைய செயலை மட்டுமே கவனித்து உணர்ந்து, ஒரு பாதை அமைத்துக் கொண்டான்.

அறிவியல் கோட்பாடுகள் போன்ற காலத்தை தாண்டி நிற்கும் படைப்புகள், மானுடப் பயணத்தை முன்னின்று  வழிநடத்துகின்றன. அதற்கிணையாக, எலிசாம்மாக்களின் பங்களிப்பு, பொருட்படுத்தப்  படாத, சாலைகளின் அடித்தளத்தில் உள்ள  கற்களாக மானுடத்தை வழிநடத்துகின்றன.

இந்தக் கதையை வாசித்ததும் உங்களின் பல எழுத்துக்களில் நான் கண்டுகொண்ட சொற்களை பின்வருமாறு நினைவு கூர்கிறேன் – தன்மீட்சி, செயல் எனும் விடுதலை, “கடமையைச் செய், பயனை காலவெளியை ஆளும்விசைகளுக்கு விட்டுவிடு”. அதாவது முழுதளிப்பு.

நன்றி.

கணேசன் ஆர்.

Nashua (பாஸ்டன் புறநகர்)

நிறைவிலி [சிறுகதை]

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

மிக எளிய அழகான அதே நேரத்தில் ஆழமான ஒரு கதை நிறைவிலி.

நட்சத்திர ஹோட்டல் புல்வெளியின் சிட்டுக்குருவிகள், மும்பை உயர்வர்க்க பெண்கள், மணக்கும் காப்பி, ஒரு ஆதிவாசி குழந்தையின் கப்பரையேந்தும் போட்டோ என நான்கு அழகான குறியீடுகளை மிக அற்புதமாக கதைக்குள் பயன்படுத்தி உள்ளீர்கள்.

எப்பொழுதுமே புதிய நபர்களை சந்திப்பதும், பழகியவர்களே ஆனாலும் அவர்களுடனான சற்றும் எதிர்பாராத சந்திப்புகளும் மிக மிக இனிமையானவை. உணர்வுகளை தூண்டுபவை. ஒரு மணக்கும் உறையிட்டு கொண்டுவரப்பட்ட புதிய காப்பியைப் போல.

காப்பியை மூடும் வெண்ணிறத் துணியுறையை மணம் விரிக்க காத்திருக்கும் ஒரு முறுக்கிக்கொண்ட மலர் என்றெல்லாம் எழுத அசாத்திய கற்பனைத் திறன் வேண்டும்.

பாவம் பகா ராய்க்குதான் காப்பி பிடிக்கவில்லை. காப்பி தோட்டத்திலேயே வளர்ந்தவள் ஆயிற்றே. காப்பித் தோட்ட தொழிலாளர்களின் மகளுக்கு காப்பி பிடிக்காமல் போவது இயல்புதானே. மற்றவர்களுக்காக வெகு அற்புதமாக சமைப்பவனால் அந்த உணவை சாப்பிட முடியாமல் ஆவதுபோல. அல்லது காபி அவளுக்கு அந்த ஏழ்மை நிறைந்த இளமையையும் அவள் இன மக்களின் துயர்மிகு வாழ்க்கைப்பாடுகளையும் நினைவுறுத்துகிறது போலும்.

துணி உறையிட்டு வருகின்ற காப்பியை விரும்புகின்ற ஒரு நபர் “முதலில் எல்லாவற்றையும் நேரடியாகச் சொல். சொல்லும்போதுதான் உண்மையான அர்த்தம் தெரியவருகிறது” என்பது எத்தனை அழகிய நகைமுரண்.

இந்த மும்பை உயர்வர்க்க பெண்களைக் குறித்த விளக்கம், அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் விதம், கண்களுக்கான கருப்பு மை, உதட்டுக்கான அடர்சாயம் என விளக்கிச்சென்ற நீங்கள் அதற்கு எதிர்முகமாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பகா ராய் எப்படி எளிய அலங்காரத்தோடு இருந்தாள், எப்படி தன்னிடமிருந்த இயற்கை அழகை மட்டும் இன்னும் சற்று மேம்படுத்தி காட்டினாள் என்ற ஒப்பீடுகள் வெகு அழகு. உயர்குடி பண்பாட்டிற்கும் பழங்குடி பண்பாட்டிற்குமான வாழ்க்கை கண்ணோட்டம் எப்படி எதிர் எதிர் துருவங்களாக உள்ளன என்பதை பெண்களின் அலங்காரத்தைக் கொண்டே வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.

பழங்குடிக் குழந்தைகளின் நட்பார்ந்த சிரிப்பை எத்தனை அழகாக கவனித்திருக்கிறீர்கள். இமயமலை  சரிவுகளில் வாழும் கடுவாலி இனக் குழந்தைகளின் அந்தக் கள்ளமில்லா கண்கொள்ளாச் சிரிப்பு அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. பழங்குடி வாழ்வின் சுதந்திரமே, கூட்டு வாழ்வியல் முறையே இந்தச் சிரிப்பை அவர்களுக்கு தருகிறது போலும்.

நட்சத்திர ஓட்டல் புல்வெளியில் சிட்டுக்குருவிகள் இடம் பிடித்திருப்பது போல தான் பழங்குடி மக்கள் மெல்ல மெல்ல பொருளாதாரத்திலும் தேசிய நீரோட்டத்திலும் இணைந்து வருகிறார்கள். ஆனாலும் என்ன அவர்கள் தங்கள் காடுகளிலும் புல்வெளிகளிலும்தான் மகிழ்ச்சியாக உணர முடியும். அவர்களுக்கு உண்மையிலேயே நாம் ஏதாவது செய்வதாக இருந்தால், அவர்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் செயல்பாடுகளை அவர்கள் இயல்பாக வாழும்  இடத்தில்தான் அதைச் செய்யவேண்டும். இன்றளவும் கோண்டு போன்ற பழங்குடி இன மக்கள் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் எதிர்கொள்ளும் துயரங்கள் சொல்லி மாளாது.

“இது கார்ப்பரேட் உலகம். எதிரியின் எந்தப் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்பது இங்கே எழுதாவிதி. ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான் நாம் பேசிக் கொண்டு இருக்கின்ற இந்த கணத்தில் கூட ஒற்றுமை இல்லாமல் அறியாமையில் உழல்கின்ற அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, அதிகார வர்க்கமும் பெரும்தொழில் முதலைகளும் பழங்குடியினரை சுரண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மலைகளிலும் காடுகளிலும் வாழும் மற்ற சில மேம்பட்ட இன மக்கள் கூட பழங்குடியினர் என தங்களை கூறிக்கொண்டு பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீட்டு வாய்ப்புகளையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் பலவீனத்தை  ஆற்றலாக எப்படி மாற்றிக்கொள்வது, தங்கள் முன்னிருக்கும் ஒதுக்கீட்டு வாய்ப்புகளை மேலும் சிறப்பாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று நாமும் நம் அரசுகளும் இன்னமும் கூட அந்த மக்களுக்கு சரியாக சொல்லித் தரவில்லை. மண்ணின் மைந்தர்களாக இருந்தபோதும் அவர்கள் இன்னமும் அங்கே பசித்து இருக்கிறார்கள். அவர்களின் பல ஆயிரம் குழந்தைகள் கையில் கப்பரையோடு காத்திருக்கிறார்கள். இன்னும் பல நூறு பகா ராய்கள் எழுந்து வர வேண்டியிருக்கும்.

“நான் மட்டுமல்ல எங்கள் குலமே பிச்சைப்பாத்திரத்தை நீட்டி நின்றிருக்கிறது’, என்று அவள் மனம் அந்த முப்பது ஆண்டுகளாக எத்தனை வேதனைப் பட்டிருக்கும். எவ்வளவு துயரம் மனதின் ஆழத்தில் அழுந்திக் கிடந்திருந்தால் அந்த புகைப்படத்தை பார்க்காமல் திரும்பி அமர்ந்து இருப்பாள். அவள் ஒன்றும் அந்தப் புகைப்படத்தை அவள் படுக்கை அறையில் மாட்ட வேண்டிய அவசியமில்லை. அவள் நினைவறைகளில் அது என்றென்றும் நிரந்தரமாகவே இருக்கிறது. அது அங்கே இருப்பதை அவள் ராமின் மூலம் அறிந்து கொண்டாள் அவ்வளவுதான். அம்மட்டில் ராம் செய்தது அவளுக்கு ஒரு நல்ல உதவியே.

என்றுமே நிறைய முடியாத முற்றாக அடைந்துவிட்டோம் என்று ஒருநாளும் சொல்லிவிட முடியாத இலட்சியத்தை கொண்டவர்கள் பாக்கியவான்கள் தான். இதுவரை மனித குலத்திற்கு அளப்பரிய சேவை செய்த அத்தனை புனித ஆன்மாக்களும் இத்தகையதோர் நிறைய முடியாத பெரியதோர் உன்னத இலக்கை இலட்சியமாக கொண்டவர்கள் தானே. உலக விவகாரம் என்கின்ற சாமானிய தளத்தில், மக்களுக்கான பொதுச்சேவை புலத்தில், செயல்அறம் என்ற கர்ம யோகத்தில், நிறைவின்மையே வெற்றி அடைவதற்கான, என்றென்றும் வென்று கொண்டே இருப்பதற்கான அதிதீவிர கிரியா ஊக்கி, அணைக்க முடியாத பெரும் தீ. அது மற்றவர்களுக்காகவே வாழ்பவர்கள் கொண்ட நிறைவின்மை என்னும் முடிவிலியின் நிறைவிலியின் கருந்துளையின் ஆதித் தீ. அந்தத் தீயில் பிறர் பொருட்டு நித்தம் வெந்து கொண்டு இருப்பவர்கள் வெல்வதற்காகவே பிறந்தவர்கள். அவர்கள் எவராலும் எதன் பொருட்டும் வெல்லப்பட முடியாதவர்கள். ஐயமே இல்லை.

தன் நெஞ்சின் மீதும், தன் முதுகின் மீதும், தன் தலையின் மீதும், தன் இனத்தின் ஒட்டுமொத்த துயரத்தை சுமப்பவள், அதன் விடுதலைக்காக உழைப்பவள், என்றேனும் அவள் வாழ்நாளில் நிறைவை அடைய முடியுமா என்ன?. அவள் ஏந்தி நிற்பது அத்தனை விரைவில் நிறைக்க முடியாத பாத்திரம். அது இன்னும் நிறைய கைகள் மாறி நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.

நாங்களும் பாத்திரங்களை தூக்கி காத்திருக்கிறோம். எங்கள் வாசிப்பு பாத்திரங்களும் நிறைவிலி பாத்திரமே. அது என்றும் நிறைவதில்லை அது நிறையப் போவதுமில்லை. அள்ள அள்ளக் குறையாத உங்கள் புனைவு உள்ளம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து கதைகளை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே இருங்கள். அந்த அட்சய கதைப்பாத்திரம் என்றைக்கும் குன்றப் போவதில்லை. உங்களிடம் இருப்பதுவும் அள்ள அள்ளக் குறையாத குறைவிலி பாத்திரம் அல்லவா.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

அன்புள்ள ஜெ

நிறைவிலி கதையை நான் இப்படித்தான் வாசித்தேன். ஆழமான ஸ்பிரிச்சுவலான ஒரு நிறைவின்மைதான் முடிவே இல்லாமல் செயல்பட வைக்கிறது. அதை ஒருவர் தன் அன்றாடவாழ்க்கையில் இருந்துகூட எடுத்துக்கொள்ளலாம்

சொல்லப்போனால் முதல்கதையான கொதி கூட இதைத்தானே சொல்கிறது? அந்த கலமும் இதுவும் ஒன்றுதானே? ஆனால் அது கிறிஸ்துவின் ரத்தத்தால் நிறைந்தது இல்லையா?

ஆல்வின் எபநேசர்

 

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.