கல்வி நிலையங்களில் சாதி
அன்புள்ள ஜெ
நலமா?
நான் இளநிலை படித்த கல்லூரியில் (அருண்மொழி அம்மா படித்த கல்லூரியும் கூட) தற்போது இரண்டாம் ஆண்டு படிக்க வேண்டிய ஒரு தலித் மாணவி அவருடைய அறைத்தோழியாலும் உடன் பயின்ற மாணவிகளாலும் சாதிய வன்முறையால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக, கடந்த ஆண்டு கொரோனாவினால் வீட்டிலிருந்த போது முகநூலில் செய்தி பரவியது. இதன் உண்மைத்தன்மையை அறிய நட்புவட்டத்தின் மூலம் கல்லூரியில் விசாரித்தோம். மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை எங்களால் அறிய முடியவில்லை. அவருக்கு வேறு சில உடல்நல பிரச்சினைகள் இருந்ததாகவும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தபோது உயிரிழந்ததாகவும் ஊகங்கள் மட்டுமே கிடைத்தன.
ஆனால், அம்மாணவி, அவரின் சாதி காரணமாக, அவரின் உடன் பயின்றவர்களால் சிறுமைப்படுத்தப்பட்டதை உறுதிபடுத்திக் கொண்டோம். மறைந்த மாணவியின் புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் சில மாணவிகளை விசாரித்துள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோர் ஆளும் கட்சியின் பிரமுகர்களாதலால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவியின் மரணம் குறித்து விசாரிக்கையில் கல்லூரியில் சில ‘இடைநிலைச் சாதி’களின் அராஜகம் குறித்தும் அறிந்தோம். கல்லூரி விளையாட்டு மைதானம் தொடங்கி வகுப்பறை வரை சில இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தலித் மாணவர்களை சிறுமைப்படுத்துவதாக அறிந்தோம்.
சில சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வாட்சப் குழுவின் மூலம் தத்தம் சாதியைச் சேர்ந்த பிற மாணவர்களை ஒருங்கிணைக்கின்றனர். எந்த சாதி மாணவன் எச்சாதி மாணவியை காதலிக்கிறான் என்பதை கண்காணிக்கின்றனர். முதுனிலை மற்றும் முனைவர்பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையிலும், புதிய பேராசிரியர் தேர்விலும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக சலுகை அளிக்கப்படுவதாக அறிந்தோம்.
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் இவ்வநீதிகளுக்கு எதிர்வினையாற்ற நினைத்தோம். மாணவர்சேர்க்கையிலும் புதிய பேராசிரியர் தேர்விலும் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா, தலித், ஆதிவாசி மாணவர்களுக்கான உரிய உரிமைகள் கிடைக்கின்றனவா (இன்னும் பிற) என்பனவற்றை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்திடம் தகவல்கள் கேட்டோம். பல்கலை அபத்தமான காரணங்களைக் கூறி தகவல்களைத் தர மறுத்துவிட்டது. மேல்முறையீட்டிற்காக தமிழ்நாடு தகவல் ஆணையத்தை அணுகினோம். கிட்டத்தட்ட பத்துமாத காத்திருப்புக்குப் பின் தகவல் ஆணையத்தின் தலையீட்டின் பேரில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு குறித்த தகவல்களை இரு வாரத்திற்குமுன் பல்கலை கொடுத்தது. எங்களின் பிற மேல்முறையீட்டு மனுக்கள் இன்னும் தகவல் ஆணையத்தின் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் George Floyd கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வினையாக நடந்த #BlackLivesMatter இயக்கம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கல்வித்துறையில் நிலவும் நிறப்புறக்கணிப்பைப் பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும் ஒருவார காலம் ஆராய்ச்சி பணிகள், ஆய்வரங்கங்கள், வகுபுகளுக்கு விடுப்பு வழங்கின. ரோஹித் வெமுலா (தற்)கொலையின் போதோ, அன்றாடம் தலித்துகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளுக்கு எதிராகவோ இந்தியாவில் ஏன் #DalitLivesMatter இயக்கம் நடக்கவில்லை என்று (நான் பெரிதும் மதிக்கும்) பேராசிரியர் Deepak Malghan ஒரு கட்டுரை எழுதியிருந்தார் (பார்க்க). அதில் அமெரிக்க உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் கருப்பின மக்களின் மிகமுக்கியமான அங்கத்தையும் #BlackLivesMatter இயக்கத்தில் கருப்பின பேராசிரியர்கள்/ஆராய்ச்சியாளர்கள்/மாணவர்களின் பங்களிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தியாவில் அதுபோல் ஒரு இயக்கம் உருவாகவேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்களில் தலித்துகளின் எண்ணிக்கை உயரவேண்டியதன் அவசியத்தை விவாதித்திருந்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்திருந்தாலும், IIM IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்றுவதில்லை (பார்க்க 1, பார்க்க 2, பார்க்க 3). IIM Ahmedabad இல் இன்றுவரை முனைவர் பட்ட படிப்பிற்கு இடஒதுக்கீடு இல்லை (சட்டப்போராட்டம் இன்றும் தொடர்கிறது). தமிழகத்து இருளர் பழங்குடிகளுக்கோ சாதி சான்றிதழ் கிடைப்பதே குதிரைக்கொம்பாய் உள்ளது (பார்க்க).
இப்பின்னணியில்தான் எங்கள் கல்லூரியில் செய்ததைப் போன்று பிற பல்கலையிலும் தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உபயோகிக்கத் தொடங்கினோம். தலித்/ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக நாம் ஏன் ஒரு முறைசாரா அமைப்பாய் திரளக்கூடாது என்று நினைத்தோம். நண்பர்கள் நண்பர்களின் நண்பர்கள் என்று ஒரு இருபதுபேர் சேர்ந்து Egalitarians என்ற அமைப்பை உருவாக்கினோம். அமைப்பின் நோக்கம் சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தலித் மற்றும் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக இயன்றவகையில் பணிசெய்து கிடப்பது. எங்களுக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதில் உறுதியாயிருக்கிறோம். இப்போதைக்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தலித்/ஆதிவாசி உரிமைகளை உறுதி செய்ய முயல்கிறோம். ஆண்டிற்கு ஒரு தலித்/ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவருக்கு குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவத்ற்கு வேண்டிய பொருளாதார உதவிகளைச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
வருகிற ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி. Egalitarians சார்பாக ஆண்டுதோறும் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு Ambedkar Memorial Lecture ஒன்றை இவாண்டு முதல் நடத்தலாம் என்று திட்டமிட்டோம். யாரை அழைக்கலாம் என்று யோசித்தபோது, நண்பர்கள் அனைவரும் முதல் தேர்வாக தங்களையே அழைக்க விரும்பினோம். தலைப்பு தங்கள் தேர்வு. அம்பேத்கர், இந்தியவியல், தலித், ஆதிவாசி, பௌத்தம், மானுட அறம், இலக்கியம் ஆகிய புள்ளிகளைத் தொட்டு பேசலாம். உரையாகவோ, தாங்கள் விரும்பும் பட்சத்தில் உரையத் தொடர்ந்த கலந்துரையாடலாகவோ வைத்துக்கொள்ளலாம். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால் நிகழ்வை இணையம் மூலமே நடத்த விரும்புகிறோம். YouTube லும் நேரலையில் ஒளிபரப்பப்படும். இவ்வாண்டு ஏப்ரல் 14 புதன்கிழமையில் வருகிறது. ஏப்ரல் 11 (ஞாயிறு) அன்றோ ஏப்ரல் 18 (ஞாயிறு) அன்றோ, அல்லல் தங்களுக்கு வசதியாக உள்ள தேதியிலோ நிகழ்வை வைத்துக்கொள்ளலாம். தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
தங்களின் சொல் என்றும் துணையிருக்கட்டும்.
நாளும் தங்களின் நலம் விரும்பும்
அன்பு மற்றும் நண்பர்கள்
அன்புள்ள அன்பு,
மிக முக்கியமான பணி. அவசியமான பணி.
இதில் தொடர்ந்து வெவ்வேறு பொதுநல இயக்கங்களை அவதானித்து வருபவன், தொழிற்சங்க அனுபவமும் உள்ளவன் என்றவகையில் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். இவை பல ஆண்டுகளுக்கு முன் [கிருஷ்ணம்மாள்] ஜெகன்னாதன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னவை.
அ. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தொடங்கப்படும் இயக்கம் அதை மட்டுமே செய்யவேண்டும். செயற்களத்தை விரிவாக்கிக்கொண்டால் எதையும் செய்ய முடியாமலாகும். அதை பிடிவாதமாக, என்ன வந்தாலும் சரி என, ஒரு இருபதாண்டுகள் செய்வது என முடிவெடுத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
ஆ. முடிந்தவரை சட்டம் அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சட்டம், நீதிமன்றம் போன்றவை பயனற்றவை என தோன்றும். ஆனால் அது உண்மை அல்ல. பொறுமையான விடாப்பிடியான செயல்பாடு மட்டும் இருந்தால் எந்த பொதுப்பணிக்கும் இந்திய அரசியல்சட்டமும் நீதிமன்றமும் மிகப்பெரிய கருவிகள்.
இ. ஒரு குறிப்பிட்ட போராட்டம் சமூகநோக்கம் கொண்டதாக இருந்தால் அதில் நேரடியாக கட்சியரசியல் ஊடுருவ விடக்கூடாது. கட்சியரசியல் நம்மால் எதிர்க்க முடியாத பெரிய எதிரிகளையும் கொண்டுவந்து சேர்க்கும். நமது செயல்பாடுகளும் கட்சியரசியலுக்குள் செல்ல வழிவகுத்து இலக்குகளைச் சிதறடிக்கும்
ஈ. மிகையுணர்ச்சியுடன் பேசுபவர்களை முற்றாகத் தவிர்த்துவிடவேண்டும். அவர்கள் உண்மையில் எதையும் தங்கள் சொந்த விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள். பெரும்பாலும் வாய்ச்சொல் வீரர்கள்
உ. எந்த மெய்யான இயக்கமும் கூடுமானவரை நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஓரளவு ஆதரவைக்கூட முற்றாதரவாக மாற்ற முயலவேண்டும். எதிரிகளிலேயே நண்பர்கள் கிடைக்க வாய்ப்புண்டா என்று பார்க்கவேண்டும். வெற்றுத்தீவிர நிலைபாடு எதிரிகளையும் துரோகிகளையும் கற்பனைசெய்ய வைக்கும். ஆதரவை வெல்வதே எந்த இயக்கமும் மெய்யான வெற்றி நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
எல்லா நிலையிலும் உடனிருக்கும்
ஜெயமோகன்
பிகு. ஏப்ரல் 11 அன்று பேசுவோம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

