Error Pop-Up - Close Button Must be signed in and friends with that member to view that page.

வ.உ.சி- ஒரு செய்தி

அன்புள்ள ஜெ.,

வ.உ.சி யின் கடைசி காலத்தைப் பற்றி ஒரு பழைய தினமணிச் செய்தி. ஒரு கப்பல் கம்பெனி முதலாளிக்கு அவர்கள் அளிக்கும் தொகை, அதைப் பெற்றுக்கொள்ளும் அவரின் நிலை மனதை உலுக்கியது.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

1936ல் ல் அந்த 75 ரூபாய் என்பது சிறியதொகை அல்ல. தங்கக் கணக்குப்படி பார்த்தால் 1936ல் தங்கம் ஒரு சவரன் [8 கிராம், 22 காரட்] 25 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மூன்று சவரன். இன்று ஒரு சவரன் முப்பதாயிரம் ரூபாய். அதாவது ஒரு லட்சம் ரூபாய். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் அன்றைய நடுத்தரவர்க்க வாழ்க்கையின்படி ஆறுமாதம் வாழ்வதற்கான பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தனிநபர்க்குழு அதை அளித்தது நல்ல விஷயம்தான். அதைப்போல பல உதவிகள் தொடர்ச்சியாக அவருக்கு வந்தன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வ.உ.சி தேசபக்தர், அதற்காக பெரும்பொருளை இழந்தவர், இன்னும் பெரிய அளவில் உதவிக்குத் தகுதியானவர்தான். அந்த உதவிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய சூழல் என்ன? பொதுவாக இத்தகைய உதவிகள் செய்யப்படுவது அமைதியான, நிலையான காலகட்டங்களில். மக்களிடையே பொருள் புழங்கும் போது. போர், பஞ்சம், போராட்ட காலங்களில் தனிமனிதர்கள் எவராயினும் கவனிக்கப்படுவதில்லை.

1931ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். இந்தியா முழுக்க பல்லாயிரம்பேர் அதன்பொருட்டு அரசு வேலைகளை துறந்தனர்.வணிகங்களை கைவிட்டனர். குடும்பத்தை விட்டு கிளம்பி போராடிச் சிறைசென்றனர். முற்றாக அழிந்துபோனவர்களும் பலர் உண்டு. கொடிய வறுமையை எய்தியவர்கள் உண்டு. அவர்களின் தியாகங்கள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன. பெயர் அறிந்த சிலரே நினைவுகூரப் படுகிறார்கள். அன்று எவருக்கும் எவ்வித உதவியும் செய்யும் நிலையில் காங்கிரஸ் இருக்கவில்லை. ஏனென்றால் தியாகிகளின் பட்டியலே பல்லாயிரம்.

அச்சூழலில் வ.உ.சி இந்த அளவுக்கு நினைவுகூரப்பட்டு உதவிகள் செய்யப்பட்டதேகூட நல்ல விஷயம்தான். காங்கிரஸ் ஒருங்கிணைத்த நிகழ்வு அது என்பது செய்தியிலேயே தெரிகிறது. கடைசிக்காலத்தில் வ.உ.சி சுதந்திரப்போராட்ட அரசியலில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கி சென்னையில் மளிகைக்கடை வைத்து வாழ்ந்துவந்தார். நோயுற்றபின் தூத்துக்குடி சென்றார். ஆகவேதான் வக்கீல் சங்கத்தவர் அவருக்கு இவ்வளவு வெளிப்படையாக உதவமுடிகிறது, அது செய்தியாகவும் ஆகமுடிகிறது.

வ.உ.சி கடைசிக்காலத்தில் காங்கிரஸுடன் முரண்பட்டிருந்தார், காங்கிரஸ் அவரை கண்டுகொள்ளவில்லை, அவருக்கு தனிப்பட்டமுறையில் ஈவேரா மட்டுமே உதவினார் என்றெல்லாம் தொடர்பொய்கள் இங்கே எழுதப்படுகின்றன. அவை உண்மையல்ல, கடைசிவரை அவர் காங்கிரசின் ஆதரவில்தான் இருந்தார், காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார்.

அன்றைய ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள், பலர் ஜமீன்தார்கள். அனைவருமே பிரிட்டிஷ் ஆதரவாளர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அள்ளிக் கொடுத்திருக்க முடியும். செய்யவில்லை. வேளாளர் அமைப்புகள்கூட அன்றிருந்தன. சைவ அமைப்புக்கள் அன்றிருந்தன. அவர்களும் செய்யவில்லை. அரையணா ஒன்றரையணா என மக்கலிடம் திரட்டி அரைப்பட்டினியாகக் களத்தில் போராடிக்கொண்டிருந்த காங்கிரஸே உதவி செய்தது.

இவை அவருடைய வாழ்க்கைவரலாற்றில் திரும்பத்திரும்ப எழுதப்பட்டாலும் வாய்மொழி வம்பாகவே இன்னொரு வரலாற்றை நிலைநிறுத்துகிறார்கள்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.