ஓஷோ, தகவல்பொறுக்கிகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தகவல்பொறுக்கிகள் என்று அழகாகச் சொன்னீர்கள். ஒரு நண்பர் என்னிடம் ஜெமோ தப்பாகச் சொல்கிறார். ஓஷோ புக்கே எழுதவில்லை. அவர் சொன்னவைதான் புத்தகமாக வெளிவந்தன என்று சொல்லி ஒட்டுமொத்த உரையையும் நிராகரித்தார்

நான் அவரிடம் ஒன்று, ஓஷோ புத்தகமாக எழுத எண்ணியவற்றை உரைகளாக ஆற்றினார். அவற்றை எழுதி எடுத்து சரிபார்த்து நூலாக ஆக்கினார்கள். நித்ய சைதன்ய யதியும் அவருடைய அத்தனை நூல்களையும் அப்படித்தான் எழுதியிருக்கிறார் என்று ஜெமோ சொல்லியிருக்கிறார் என்று சொன்னேன்.

ஓஷோ தன் உரைகளை முன்னதாகவே தயாரிப்பார், எழுதிக்கொள்வதும் உண்டு என்று பலர் பதிவுசெய்திருக்கிறார்கள் என்றேன்.  அவை ‘எழுதப்பட்ட’ நூல்கள்தான். ஆனால் உரைகளாகவும் ஆற்றப்பட்டன. எமர்சன், டி.எஸ்.எலியட் போன்றவர்களின் நூல்களும் அப்படித்தான். அவை குறிப்புகளாகவோ விரிவாகவோ முதலில் எழுதப்பட்டு, பிறகு உரைகளாக ஆற்றப்பட்டு, மீண்டும் எழுதி எடுக்கப்பட்டு நூல்களாக ஆகின்றன. உலகம் முழுக்க உள்ள வழக்கம் இது. அவற்றை நூல்கள் என்றுதான் சொல்கிறார்களே ஒழிய உரைகள் என்று அல்ல. எழுதப்பட்டவை என்றுதான் சொல்கிறார்களே ஒழிய பேச்சுக்கள் என்று அல்ல. எனென்றால் அவை எழுத்து வடிவில் வந்துவிட்டன. உலகில் அப்படி ஏராளமான நூல்கள் உள்ளன.

ஓஷோ உரையிலேயே ஓஷோ சொல்லி எழுதவைத்தமையால் பல நூல்கள் நீர்த்துப்போய்விட்ட நடையில் இருப்பதாக சொல்கிறீர்கள். அந்த தகவல் பொறுக்கியிடம் அதை சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது அவர் உரையை கேட்கவே இல்லை. சும்மா அங்கே இங்கே கேட்டிருக்கிறார். நானும் அறிவுஜீவிதான் என்று காட்டுவதற்காக அப்படிச் சொல்கிறார்

இந்த சமூகவலைத்தள உலகில் இந்த தகவல்பொறுக்கிகள் மிகப்பெரிய சீர்கேடுகள்

என். மகாதேவன்

அன்பின் ஜெ,

துளித்துளியாக, இடைவெளிகளினூடாகத்தான ‘ஓஷோ உரை‘ கேட்க முடிந்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன் – நான் ஓஷோவின் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை. ஆனாலும் பல விதங்களிலும் அவர் பெயர் அவ்வப்போது கண்ணில் தென்பட்டுக் கொண்டே இருக்கிறது – மேற்கோள்களாக, குட்டிக்கதைகளாக… பத்திரிக்கைகள் குறித்து நீங்கள் சொன்ன அந்த ‘அண்டா உருட்டி’ உதாரணம் மிகச்சரியான ஒன்று.

நீங்கள் அந்த உரையில் சொன்ன விஷயம் – தினத்தந்தி ஓஷோவிற்கு ‘செக்ஸ் சாமியார்‘ என்ற அடைமொழி கொடுத்தது. அது உங்களின் மிகச் சரியான அவதானம் என்றே நினைக்கிறேன் (அதை நீங்கள் நமட்டு சிரிப்புடன் சொன்ன விதம், அதுவே அந்த அடைமொழிக்குப் பின் அந்த கட்டுரையாளர் உத்தேசித்த தொனி, அது உங்களை எப்படி அப்போது எரிச்சல் படுத்தியிருக்கும் என்றெல்லாம் துல்லியமாகக் காட்டியது).

இந்த உரையைக் கேட்கும் வரை எனக்கு ஓஷோவைப் பற்றிய மனப்பதிவு அதுதான். உவத்தல் காய்த்தலற்று சிந்திக்கத் தொடங்கி, ஒரு அறிவியக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் வரை ஒரு பொது வாசகன், வாரப்பத்திரிக்கைகள் உருவாக்கும் இது போன்ற மாய்மாலங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது அவசியம் என்றே நினைக்கிறேன் (அது மிகவும் சிரமமும் கூட).

ஓஷோ சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் எந்தவொரு செயலில் நாம் ஈடுபடும்போது நம்மிடம் thought இல்லாமல் போகிறதோ அது தியானம் என்று (அப்படித்தான் நான் புரிந்துகொண்டது, பிழையிருந்தால் மன்னிக்கவும்). சமீபத்தில் இதை இரண்டு புதிய முயற்சி/பயிற்சிகளில் ஈடுபடும்போது உணர்ந்தேன் :

1. கிரந்த லிபியில் வேதம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். ஒரு ஸூக்தம் அல்லது ஒரு மந்த்ரம் முதன்முதலில் எனது குரு முதல்நாள் சொல்லத்துவங்கும்போது, அவர் சொல்வதை மனதில் கொண்டு தப்பில்லாமல் (அக்ஷரம்+ஸ்ருதியுடன்) அந்த வாக்கியத்தை (ஷாகை) இருமுறை திரும்பச் சொல்வதில்தான் எனது கவனம் முழுக்க இருக்கிறது. கிரந்த எழுத்து முறையே புதியது என்பதால் ஒரு நொடி கவனம் வேறெங்கோ திசை திரும்பினாலும் அக்ஷரம்/ஸ்ருதி பிசகி விடுகிறது, திட்டு வாங்குகிறேன். ஆனால் ஒரு நான்கு/ஐந்து நாள் ஒரே மந்த்ரத்தை அவர் சொல்லிக்கொடுக்கயில் முதல்நாள் இருந்த கவனம் நம்மையுமறியாமல் நான்காவது/ஐந்தாவது நாள் அகன்று விடுகிறது; ஒரு ‘மெக்கானிகல் தன்மை’ வந்து விடுகிறது; விளைவாக சில சமயம் உச்சரிப்பு (மூன்றாவது ‘ப’வுக்கு பது நான்காவது ‘ப’ இப்படி) வழுக்கி விடுகிறது.

2. சென்ற மாதம் பத்து நாள் கார் டிரைவிங் கற்றுக் கொண்டோம். அப்போதும் அப்படித்தான். முதல் இரண்டு/மூன்று நாள்கள் கார் ஓட்டத் தொடங்கும்போது நம் முழு கவனமும் அதிலேயேதான் இருக்கிறது; வேறெதையும் சிந்தனை செய்ய நமக்கு அவகாசமோ/சுதந்திரமோ கிடையாது.

இது ஓஷோ சொன்ன thoughtlessness க்கு நெருக்கமாக வருவதாய் நம்புகிறேன்.

உங்கள் கீதை, குறள் உரைகள் போல, தனித்தனியாக (பட்டிமன்ற பேச்சாளர்கள் பாணியில்) உதாரணம் காட்டாமல் ஓஷோவை அணுக வேண்டிய context-ஐ உருவாக்குவதில்தான் உங்கள் உரை பெருமளவு முயன்றது. ஓஷோ எந்தச் சூழலில் கொண்டாடப்பட்டார், ஏன் அவசியப்பட்டார் போன்ற விவரங்கள் இனிமேல் வாசிக்கத் தொடங்குபவர்களுக்கும், தவறான புரிதலுள்ளவர்களுக்கும் நிச்சயம் ஒரு கொடை. தனித்தனியாக உதாரணம் காட்டுவதைக் காட்டிலும் இதுவே அவசியம் என்று நம்புகிறேன் (மற்றும் ஆறு மணி நேர உரையில் இந்த ரீதியில் அமைவதுதான் வாசகனை மேலே வாசிக்கத் தூண்டும்).

மற்றபடி மற்ற மதங்களைப் பற்றிய ஓஷோவின் பார்வை, அவர் ஏன் ஆசார வாதங்களை விமர்சிக்கிறார் (இது மிகவும் மென்மையான சொல்), ஓஷோ வழிபாடிகளின் அபத்தங்கள், நம்பூதிரி நகைச்சுவைகள் போன்றவை ஒரு ஜெயமோகன் உரையில் மட்டுமே காணக்கிடைக்கும் தனித்துவங்கள். செறிவான ஒரு உரைக்கு நன்றி.

அன்புடன்
வெங்கட்ரமணன்

அன்புள்ள ஜெ

ஓஷோ உரையை ஒரு குறிப்பிட்ட வகையான உரை என்று சொல்வேன். ஒரு காட்டில் கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதைச் சூழ்ந்திருக்கும் புதர்கள், முட்களை அகற்றினால் அந்த கட்டிடம் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. அதைப்போல.

ஓஷோ பற்றி ஓஷோவின் பக்தர்களும் பரப்புநர்களும் எதிரிகளும் உருவாக்கிய சிலவகையா பொய்யான நம்பிக்கைகளை இந்த உரை அகற்றுகிறது. அதுதான் முக்கியமானது. ஓஷோ சுத்த சுயம்புவானவர், அவர் சொன்னதை வேறெவரும் சொல்லவே இல்லை, ஓஷோவுக்கு மதங்கள் எல்லாமே எதிரானவை இப்படி பல மாயைகள் ஓஷோ மரபினரிடம் உண்டு. ஓஷோ இந்திய மரபில் எங்கே வருகிறார், அவர் முரண்படும் இடங்கள் எவை, அவர் ஏற்கும் இடங்கள் என்னென்ன ஆகியவற்றை தெளிவுபடுத்தியதுமே ஓஷோ திட்டவட்டமாக தெரிய ஆரம்பித்துவிட்டார்

அதோடு ஓஷோவை அவருடைய வரலாற்றுச்சூழலில் வைத்து அவர் சொன்னவை ஏன் எவரிடம் சொல்லப்பட்டவை என விளக்குகிறீர்கள். எழுபது எண்பதுகளின் புரட்சிகரம்-ஹிப்பி மனநிலை- இருத்தலியம் ஆகிய மூன்று தளங்களை விளக்கி அந்தச் சூழலில் ஓஷோ பேசியதை குறிப்பிடுகிறீர்கள். அந்த பின்னணிப்புரிதல் இன்று ஓஷோ பற்றி பேசுபவர்களுக்கு இல்லாதது. மிகமிக அவசியமானது. இளைய தலைமுறைக்கு சொல்லவேண்டியது

ஓஷோ பற்றி எதிரிகள் உண்டுபண்ணிய செக்ஸ் சாமியார் போன்ற அசட்டுத்தனமான புரிதல்களையும் உடைக்கிறீர்கள். ஓஷோ அளித்த கொடை என்ன என்பதை திட்டவட்டமாக நிறுவுகிறீர்கள். அவருடைய மரபு எப்படியெல்லாம் வளர்ந்தது என்கிறீர்கள்

அதன்பின்னர் ஓஷோ சொன்னவற்றை சில கருத்துமையங்களாகத் தொகுத்துக்கொள்ள முயன்று சில புள்ளிகளை அளிக்கிறீர்கள். 750 நூல்களாக தொகுக்கப்பட்டிருக்கும் அவருடைய உரைகளை புரிந்துகொள்ள அவசியமானவை இந்த புள்ளிகள்.

ஜெயக்குமார் ரவிச்சந்திரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.