காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘வெண்முரசு’ நாவல் தொடரில் எட்டாவது நாவல் ‘காண்டீபம்’. என்னைப் பொறுத்தவரை ‘காண்டீபம்’ என்பது, நெடும் பயணத்திற்கான உந்துவிசை. எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘காண்டீபம்’ என்பதை முடிவற்ற ஆற்றலுக்குக் குறியீடாகவே இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார். அர்சுணனின் உள்ளமும் காண்டீபமும் ஒன்றே.

அர்சுணனின் உள்ளமே அவனை எங்கும் எத்தகைய தடையையும் தகர்த்தபடியே முன்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. காண்டீபமும் தன்னுள் ஏற்றப்படும் அம்பினை அவ்வாறே பாயச் செய்கிறது. ‘காண்டீபம்’ நாவல் முழுக்க முழுக்க அர்சுணனின் அதிதிறமை பற்றியும் பிறரால் அடைய முடியாத அரிய மகளிரையும் எண்ணற்ற தடைகளைத் தன் மனஉறுதியாலும் உடல் வலிமையாலும் தகர்த்து, திருமணம் புரியும் விதங்கள் குறித்தும் பேசுகிறது.

தொடக்கத்திலும் இறுதியிலும் சிறார்களின் கனவுலகம் பற்றி விரியும் இந்த நாவலின் அடுத்தடுத்த அத்யாயங்கள் ‘காமிக்ஸ்’ தன்மை கொண்டு திகழ்கின்றன. வாசகரைச் சிறார்களின் மனநிலைக்குக் கொண்டுவராமல், அவர்களைச் சிறார்களின் கனவுலகத்துக்குள் இழுத்துச்செல்ல முடியாது என்பதற்காகவே எழுத்தாளர் இவ்வாறு அமைத்துள்ளார். அர்சுணன் மேற்கொள்ளும் நெடும் பயணங்கள் அனைத்துமே சாகஸக்காரருக்குரியவைதான். அதனாலேயே அந்தப் பயண வழியில் அர்சுணன் எதிர்கொள்ளும் அனைத்தும் எழுத்தாளரின் சொற்களின் வழியாக அதிகற்பனையில் விளைந்த ‘செவ்வியல் காமிக்ஸா’க மாறிவிடுகின்றன.

அர்சுணன்-உலூபிக்கு அரவான் பிறப்பதும், அர்சுணன் ஃபால்குனையாக மாறி சித்ராங்கதனை அடைந்து, ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறி பப்ருவாகனைப் பெற்றெடுப்பதும் ஐந்து தேவகன்னியர்கள் ஐந்து முதலைகள் போல வடிவெடுத்து வந்து, அர்சுணனைத் தாக்குவதும் அவர்களை அர்சுணன் எளிதில் வெல்வதும் ஏரியில் மிதக்கும் அதிசய நகரத்தைப் பற்றிய சித்திரமும் மீகற்பனைகளே என்றாலும் கூட, வாசகர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் எழுத்தாளர் காட்சிகளை அமைத்துள்ளார்.

எழுத்தாளரின் இனிய சொற்களால் கட்டுண்டு, அவற்றோடு இணைந்து, மிதந்து செல்லும் வாசகர்கள் அனைவருமே எது கற்பனை, எது அதிகற்பனை என்று பிரித்தறிய இயலாதவாறு அந்த அத்யாயங்களைக் கனவில் நடப்பதுபோல நடந்து, கடந்துவிடுவர். இது எழுத்தாளரின் எழுத்தாற்றலுக்கான பெருவெற்றி.

அர்சுணனின் அதிதிறமை வெளிப்படும் வகையில் ஒவ்வொரு அத்யாயத்தையும் ‘செவ்வியல் காமிக்ஸா’க வடிவமைத்துள்ளார் எழுத்தாளர். இது தமிழ் வாசகர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைத் தரவல்லதே! ‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் ‘மாயா யதார்த்தம்’ ஆங்காங்கே மிளிர்ந்தாலும் இந்தக் ‘காண்டீபம்’ நாவலில் அது பெருகி, உச்சம் கொண்டுள்ளது எனலாம். அதனாலேயே அது ‘காமிக்ஸ்’ தன்மையைப் பெற்றுள்ளது. ஒருவகையில் ‘காண்டீபம்’ நாவலை ‘ஆன்மிக காமிக்ஸ்’ வகையைச் சார்ந்தது எனலாம்.

இந்த நாவலில் சில அத்யாயங்களில் உள்ளும் புறமுமாகச் சமண (அருகர்) சமயத்தைப் பற்றி விரிவான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்காலச் சமுதாயத்தில் சமண சமயத்தின் தாக்கம் பற்றியும் இனக்குழு மக்களிடையே சமணம் பெற்றிருந்த செல்வாக்குக் குறித்தும் அறிய இந்தப் பகுதிகள் உதவுகின்றன.

இதுவரை சமணம் பற்றி அறியாத வாசகரும் அந்தச் சமயத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளும் வகையிலும் மகாபாரத மாந்தர்களிடையே சமண சமயத்தின் ஊடாட்டம் பற்றிச் சிந்தித்து உணர்ந்துகொள்ளும் முறையிலும் அவற்றை நிரல்படுத்தி அமைத்திருக்கிறார் எழுத்தாளர். எளிய மக்களிடையே இருக்கும் சமண மதம் சார்ந்த பற்றுதலும் விலகலும் சில காட்சிகளின் வழியாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சமண மதம் மட்டுமல்ல எந்த மதமும் எளிய  மக்களிடையே இத்தகைய பற்றுதலோடும் விலகலோடும்தான் இருக்கும் என்பதை இக்காலச் சமுதாயத்தில் உள்ள எளிய மக்களை முன்னிறுத்தியும் நாம் உணர்ந்துகொள்ள முடியும்தான். அருகநெறியும் கருணைமொழியும் கொண்டவராக அரிஷ்டநேமியைப் படைத்து, அவரையும் இளைய யாதவருக்கு நிகரானவராகக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.

‘வெண்முரசு’ நாவல் வரிசை ஒவ்வொன்றிலும் வாசகர்கள் விதவிதமான அதிமானுடரைக் காணமுடியும் என்பதுதான் ‘வெண்முரசு’ நாவல் வரிசைகளின் பலமும் சிறப்பும் ஆகும். அந்த வகையில்தான் இந்தக் ‘காண்டீபம்’ நாவலில் அரிஷ்டநேமி இடம்பெற்றுள்ளார்.

இவர் இளைய யாதவரையும் வென்றவராகவும் இந்திரனின் வெள்ளையானையின் மீதேறி விண்ணகம் செல்பவராகவும் காட்டப்பட்டுள்ளார். ‘வெண்முரசு’ நாவல் வரிசைகளில் பெரும்பாலும் சைவமும் வைணவமும் இரண்டறக் கலந்துள்ளன. அவற்றோடு, அவற்றுக்கு நிகராகச் சமண சமயமும் பிணைந்துள்ளது என்பதற்கு இந்தக் ‘காண்டீபம்’ நாவலே சாட்சி.

துவாரகையிலிருந்து அர்சுணனும் சுபத்திரையும் தப்பிச் செல்லும் காட்சி சில அத்யாயங்கள் வரை நீள்கின்றன. அந்த அத்யாயங்களில் எழுத்தாளர் பயன்படுத்தியிருக்கும் சொற்றொடரமைப்பின் வழியாக அர்சுணனும் சுபத்திரையும் செல்லும் யவனத்தேரின் அதிவேகமும் துவாரகையின் ஒவ்வொரு குறுக்குத் தெருவின் காட்சியும் நம் கண்முன் துலங்குகின்றன.

சுபத்திரையின் திறமையும் அர்சுணனின் வலிமையும் துவாரகையின் நகர்விரிவும் என மூன்றையும் இணைத்து, அவற்றை வாசகருக்கு உணர்த்தும் வகையில் அந்த அத்யாயங்களின் சொற்களைத் தேர்ந்து எழுதியுள்ளார் எழுத்தாளர். வாசகர்களைத் தன் சொற்தேரில் ஏற்றிக்கொண்டு, துவாரகையைச் சுற்றிக்காட்டி, அர்சுணனுடனும் சுபத்திரையுடனும் வாசகரும் துவாரகையின் கோட்டைவாயிலைக் கடந்துசெல்லுமாறு செய்துவிடுகிறார் எழுத்தாளர்.

‘இந்திரப்பிரஸ்தம்’ பற்றிய விரிவான விவரிப்பு இந்த நாவலில்தான் இடம்பெற்றுள்ளது. ‘வெண்முகில் நகரம்’ நாவலில் ஒரு வரைபட அளவில் மட்டுமே காட்டப்படும் ‘இந்திரப்பிரஸ்தம்’ இந்த நாவலில்தான் அது எவ்வெவ்வகையில் துவாரகையைவிடச் சிறந்தது, வேறுபட்டது என்பது பற்றியெல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஊடாக ‘இந்திரப்பிரஸ்தம்’ குறித்த எதிர்மறை விமர்சனமும் இழையோடுகிறது.

பெண்களின் அதிகாரங்கள் நிறைந்த அந்தப்புரங்கள்; ஆண்களின் விழைவுகள் நிரம்பிவழியும் அரசவைகள்; வணிகர்களின் பேராசைகளால் மிளிரும் வணிகப் பெருநகரங்கள் என மூன்று தரப்புகளால் ‘காண்டீபம்’ நாவல் முப்பட்டை ஊசிபோலத் திகழ்கிறது. ‘அரசு’ என்பது, ‘வணிகத்தால் உருவாக்கப்படுவதே தவிர, படைக்கலங்களால் அல்ல’ என்ற கருத்தினை ‘வெண்முரசு’ நாவல் வரிசைகளில் தொடர்ந்து காணமுடிகிறது.

அர்சுணன்-உலூபி பற்றிய தகவல்களில் இடைவெட்டாக ஆண், பெண் பாலின மாற்றத்தால் ஏற்படும் உடலியல், உளவியல் சார்ந்த நெகிழ்வுகளை நுண்சொற்களால் விளக்கியுள்ளார் எழுத்தாளர். அர்சுணன் உடலளவிலும் மனத்தளவிலும் சிவயோகியாக மாற்றம்கொண்டு ரைவத மலைக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் நுழையும் காட்சிகளில் பிறிதொரு அர்சுணனை வாசகர்கள் கண்டடைகின்றனர். அந்த அர்சுணன் குருதியை வெறுக்கும் அர்சுணன்; படைக்கலங்களைப் புறக்கணிக்கும் அர்சுணன். அத்தகைய அர்சுணனையே சுபத்ரை விரும்புவதாக எழுத்தாளர் காட்டியிருப்பது ஒருவகையில் ஒட்டுமொத்த கதையோட்டத்தில் ஏற்படும் துள்ளல்தான்.

பெண்மீது முடிவற்ற விழைவுகொண்ட அர்சுணனையே அனைத்துப் பெண்களும் விரும்பும்போது, சுபத்ரை மட்டும் சிவயோகி வேடமிட்ட அர்சுணனை விரும்புவது ஒரு முரண்தான். இதற்குச் சுபத்ரைக்கு ஷத்ரியர்களைப் பிடிக்காது என்பது, ஒரு காரணமாக இருந்தாலும் இயல்பாகவே சுபத்ரையிடம் குடிகொண்டுள்ள இறுமாப்புதான் முதன்மைக்காரணமாக இருக்கும்.

ஒருவகையில், ‘திரௌபதியின் மற்றொரு வடிவம்தான் சுபத்ரை’ என்ற நோக்கில் நாம் சிந்தித்தால், சுபத்ரையின் இந்த இறுமாப்புக்குரிய அடிப்படைக் காரணத்தை நம்மால் உய்த்தறிய இயலும். அந்த இறுமாப்பினைத் தகர்ப்பதற்காகத்தான் திரௌபதி இந்திரப்பிரஸ்தத்துக்குள் நெடுநாட்கள் கழித்து நுழையும் அர்சுணன் ‘தன்னையே முதலில் சந்திக்க வேண்டும்’ என்று விரும்பி, அவனை அழைத்துச் சந்திக்கிறாள்.

அர்சுணன்-சுபகைக்கு இடையிலான உறவிலிருந்துதான் இந்தக் ‘காண்டீபம்’ நாவல் தொடக்கம் பெறுகிறது. அந்த உறவின் உண்மைத்தன்மையை வாசகருக்கு விளக்கிய பின்னரேதான் இந்த நாவல் நிறைவுறுகிறது. சுபகை-அர்சுணன் உறவில் சுபகை அர்சுணனுக்குத் தன்னை ஆத்மார்த்தமாக முழுதளித்தாள் என்பதே எழுத்தாளரின் அழுத்தமான கருத்தாக இருக்கிறது. அதனாலேயே அர்சுணனுக்குப் பிற பெண்களைவிட அவளே அகவயமாகிறாள். அவள் விழைவதும் அதைத்தான். அதை அவள் எய்துவிடுகிறாள். ஆம்! அவள் காண்டீபத்தில் பொருத்தப்பட்ட அம்பு. ஆனால், என்றைக்கும் எய்யப்படாதவள். ஆனாலும், தன்னிலக்கை அடைந்தவள். இத்தன்மையே அவளை வாசகரின் நெஞ்சில் நிறுத்திவிடுகிறது.

இதுநாள் வரை வாசகர்கள் ‘காண்டீபம்’ பற்றி நினைத்திருக்கும் கற்பனைப் படிமத்தைத் தகர்த்துள்ளார் எழுத்தாளர். ‘காண்டீபம்’ கனமானது, யாராலும் அதைத் தூக்க இயலாது, அது வடிவில் மிகப்பெரியது, மிகப் பெரிய அம்புகளைப் பொருத்தி எய்யப் பயன்படுவது என்றெல்லாம் நாம் நினைத்திருந்தோம்.

ஆனால், இந்தக் ‘காண்டீபம்’ நாவலில் எழுத்தாளர் ‘காண்டீபம்’ பற்றிக் கூறும்போது, காண்டீபத்தைக் குறிப்பிட்ட பகுதியைப் பிடித்துத் தூக்கினால் எளிதில் தூக்கிவிட முடியும் என்றும் அதைச் சுருக்கி சுருக்கி முழங்கை அளவுக்கு மாற்றிவிடலாம் என்றும் அதில் மிகச் சிறிய அம்பினைப் பொருத்தி எய்ய முடியும் என்றும் கூறுவது பெருவியப்பளிக்கிறது.  தற்காலத்தில் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் அலுமினியக் கைத்தடியைப் போலச் சுருக்கிக்கொள்ளும் தன்மையுடையது என்று அறியும்போது, ‘காண்டீபம்’ பற்றிய நமது தொல்படிமம் சிதறி, புதிய நவீனச் செவ்வியல் படிமம் ஒன்று நம் மனத்தில் குடியேறிவிடுகிறது.

இந்த நாவலில் யாதவப்பெருங்குடிகளின் வல்லமையும் இயலாமையும் யாதவர்களின் வாய்மொழியாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இளைய யாதவர் அவர்களை ஒன்றுதிரட்ட விழையவில்லை எனில் அவர்கள் வெறும் இனக்குழு மாந்தர்களாவே வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும்.

குலத்தலைவர்களின் அதிகார எல்லைகளையும் புலங்கு நில வரம்புகளையும் விரித்து, அவர்களை அரசாட்சி வட்டத்துக்குள் இழுத்துவந்து, அவர்களின் தகுதிநிலையை உயர்த்திய பெருமை இளைய யாதவரையே சாரும். அந்தணர், ஷத்ரியர், வணிகர், வேளாளர் என்ற நாற்பெருங்குடிக்கு இடைநிகர்த்தவராக யாதவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களை மையமாக்க முயலும் இளைய யாதவரின் திட்டமான ‘யாதவப் பேரரசு’ உருவாக்கம் என்பது, ஒட்டுமொத்த பாரதவர்ஷத்துக்கே விடுக்கப்பட்ட அறைகூவல்தான்.

இந்திரப்பிரஸ்தத்தில் மாபெரும் நகரணிவிழாவும் இளைய யாதவரை முதன்மை வேள்விக்காவலராக நிறுத்தி ராஜசூய வேள்வியும் நடத்துவதன் வழியாக மற்றொரு அறைகூவல் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து திரௌபதியால் பாரதவர்ஷத்துக்கு விடுக்கப்பட உள்ளது. ஒருவகையில் துவாரகையும் இந்திரப்பிரஸ்தமும் இணைநகரங்கள்தான். இரண்டுமே யாதவப் பேரரசுகளாகவேதான் மக்களின் முன் நிறுத்தப்படுகின்றன. இந்த இரண்டு நகரங்களும் விடுக்கும் அறைகூவல்கள் ஒட்டுமொத்த பாரதவர்ஷத்துக்குத்தான். அந்த அறைகூவல்களுக்குப் பின்னணியில் இருப்பவை சக்கராயுதமும் காண்டீபமும்தான்.

முனைவர் . சரவணன், மதுரை

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.