முகில் -கடிதங்கள்11

அன்புள்ள ஆசிரியர்க்கு,

“அவர்களின் சட்டைப்பையில் விவேகானந்தர் இருப்பார்”  இந்த வரியை படித்தவுடன் சிரித்துவிட்டேன். நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த நாவலின் ஒரு பகுதியை வாழ்ந்திருக்கிறேன், அதன் உச்ச தருணங்களை அடைந்திருக்கிறேன். அவளை நான்கு முறை நேரில் பார்த்திருக்கிறேன், ஒருமணி நேரத்துக்கும் குறைவாகவே பேசியிருக்கிறேன்,நேரில் பேசியதேயில்லை. ஆனால் இதை வைத்துக்கொண்டு ஏழு வருடங்கள் ஒவ்வொரு நாளுமென கடந்துகொண்டிருக்கிறேன். உறவுப்பெண்தான், சில ஜோதிட நம்பிக்கைகள், அது சார்ந்த அச்சம் காரணமாக அம்மா வேண்டாம் என்றார்கள். அம்மாவை மீறமுடியவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்பு இனி இல்லை என்றபோதுதான் அவளிடம் பேசினேன். அப்போதுதான் அவள் தன் காதலை ஒத்துக்கொண்டாள். நான் எழுதிய கடிதத்தை ஒவ்வொரு நாளுமென வாசிப்பதாகவும் நிறையமுறை அழுதிருப்பதாகவும் சொன்னாள். “அதெல்லாம் இப்போது எதற்கு?” இந்த வரியைக்கூட அப்படியே சொன்னாள். எங்காவது சந்திப்போம் என்று முடித்துக்கொண்டேன்.

அவளை சந்தித்த அந்நாட்களில் வெறுமனவே நிலவை பார்த்துக்கொண்டு மனதுக்குள் பேசிக்கொண்டிருப்பேன். இரு மாதங்களுக்கு முன்பு பௌர்ணமி இரவன்று வெள்ளியங்கிரி மலையேறினேன். மூன்று வருடங்களுக்கு பிறகு அன்றுதான் அத்தனை மகிழ்ச்சியாக நிறைவாக இருந்தேன். அவளை என் அருகிலென உணர்ந்தேன். அவள் இல்லையென்ற ஏக்கம் துளிகூட அப்போதில்லை.

நாவலின் கடைசி பகுதியை வாசிக்கும்போது கட்டுப்பாடுகளை இழந்து கதறி அழுதேன். அவள் பெயரை உள்ளுக்குள் அரற்றிக்கொண்டேன். என் அன்னை அவள். அங்கு இருந்தது நானும் அவளும்தான். ஒரு காதலின் வழியாக நான் அடைந்தது என்னளவில் மிக உயர்ந்த இடம். அது இல்லையெனில் கீழானவனாக இருந்திருப்பேன். வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களாகவே இதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன், அந்த காதலை மீண்டும் அடைவேனா? தெரியவில்லை.

என் வாழ்வின் உச்ச தருணங்களை மீண்டும் என்னுள் நிகழ்த்தியமைக்காக நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்

ஆர்.எம்

***

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதையை வாசிக்கும் ஏராளமானவர்களுக்கு ஒரு கதை சொல்வதற்கு இருக்கும். பெரும்பாலும் பிரிவின் கதைதான் அது. ஏன் பிரிந்தோம் என்று தெரியாமல்தான் அந்த பிரிவு நிகழ்கிறது. இங்கே திருமணம் என்பது வேறு காதல் வேறு. காதல் என்பது இரண்டுபேரின் அந்தரங்கம். திருமணம் சமூக நிகழ்வு. இந்தியாவில் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான மோதல் மிகமிக அதிகம். திருமணம் ஆனால்கூட காதல் தம்பதிகள் சமூகத்தை தொடர்ந்து சமாளிக்கவேண்டும். அவர்கள் தங்கள் சொந்தப்பெண்களின் திருமணத்தின்போதும் அந்தச் சிக்கலை சமாளிக்கவேண்டும்.

என் காதல் உடைந்தது. உடைத்துக்கொண்டது நானேதான். ஏனென்றால் எனக்கு இரண்டு தங்கைகள். அவள் இன்னொருவனை மணந்தாள். அந்த கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன். அதன்பின்னர் அடிக்கடி சந்திப்போம். கண்களால் புன்னகை புரிந்துகொள்வோம். ஆரம்பத்தில் பெரிதாக தெரியவில்லை. ஏனென்றால் அன்றைய நினைப்பு சுமைகளைப்பற்றி மட்டும்தான். ஆனால் எல்லாம் முடிந்து கொஞ்சம் உட்கார்ந்தபோது, இனிமேல் என்ன வாழ்க்கை என நினைத்தபோதுதான் மிகப்பெரிய வெறுமை. வாழ்க்கையில் மிக அழகான ஒன்றை இழந்துவிட்டோம் என்ற எண்ணம்.

இன்றுவரை அந்த வெறுமை குறையவில்லை. எனக்கு 51 வயது. இப்போதுகூட அந்த கண்ணீர் மிச்சமிருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையில் நமக்கெல்லாம் அரியவை என அப்படி எதுவும் பெரிதாக அளிக்கப்படவில்லை. நல்லவை இனியவை என்பதெல்லாம் ரொம்பவே கொஞ்சம்தான். அதையெல்லாம் இழந்துவிட்டால் பிறகு மிச்சம் ஏதுமில்லை.

தமிழ்ச்சூழலில் யாருக்கானாலும் காதலுடன் சினிமாப்பாடல்களும் கலந்திருக்கும். எனக்கும்தான். என்ன அழகு எத்தனை அழகு என்ற பாட்டை எப்போது கேட்டாலும் நெஞ்சை ஒரு கை வந்து பிடித்துக் கசக்குவதுபோலிருக்கும்

நினைவுகளைச் சொல்ல எல்லாருக்கும் நிறையவே இருக்கும். பல கதைகள் அந்நினைவுகளை தூண்டுபவை. ஆனால் அந்த முகில் இந்த முகில் அப்படி ஒரு எளிமையான காதல்கதை அல்ல. அந்த மனநிலையின் மெக்கானிசம் என்ன என்பதையே அது சொல்கிறது. ஆர்வமும் தயக்கமும் உருவாகும் விதம் அப்படியே நுட்பமாக சொல்லப்பட்டுள்ளது. அதைவிட ஒரு காதல் அவ்வளவு தீவிரமாக இருக்க முக்கியமான காரணம் அதன் வழியாகத்தான் ஒரு சிறுவன் ஆணாக மாறுகிறான் என்பது. அதை இத்தனை ஆழமாகச் சொன்ன நாவல் தமிழில் இதுதான்[ துர்க்கனேவின் மூன்று காதல்கதைகள் மாதிரி]

அவன் இழந்தது யதார்த்தத்தை. பெற்றது துயர்நிறைந்த கனவை. ஒரு பெரிய சுமையை வாசகன்மேலும் ஏற்றிவைக்கும் கதை

என்.விஜயகுமார்

***

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதைப்பற்றி வாட்ஸப் குழும பேச்சும் போய்க்கொண்டிருந்தது. நானெல்லாம் காதலிக்காத காதலன். ஸ்ரீபாலா ஒரு லட்சியக்காதலி. அவளைப்போன்ற ஒரு பெண்ணை காதலிக்கலாம் என்று நினைப்பவன். ராமராவின் வாழ்க்கையை எடுப்போம். அவன் அடைந்த மனைவி ஒரு லட்சிய மனைவி. மிகமிக அன்பானவள். பொறுமையும் பொறுப்பும் கொண்டவள். அவனுக்கும் அவள்மேல் அன்புதான்.

ஆனால் ஸ்ரீபாலா அவனுக்கு வேண்டியிருக்கிறது. ஏன் என்றால் மனைவி வேறு காதலி வேறு என்பதுதான். காதலி என்பவள் ஒரு தோழி. ஜானகி தோழி அல்ல. ஸ்ரீபாலா தோழி. அந்த வேறுபாடு முக்கியம். கலைமனம் கொண்டவனுக்கு இணையான மனம்கொண்ட தோழி மிகமிக இன்றியமையாத ஓர் உறவு. அதற்கு சமானம் வேறு ஏதுமில்லை. ஜானகி அல்ல நூறு ஜானகி வந்தாலும் ஸ்ரீபாலாவுக்கு சமானம் அல்ல

ராமராவுக்கு மனைவி காதலி இரண்டுமே இலட்சியவடிவம். ஆனால் காதலியை இழந்துவிட்டார். ஏனென்றால் காதல் ரொம்ப பெரிதாக வேண்டுமென்றால் அது இழந்தாகவேண்டும்

எஸ்.ராஜ்கண்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.