வனவாசி- வாசிப்பு

வனவாசி நாவல் வாங்க

”நாவல் இருமையமும் குவிதலும் உள்ளதாக இருக்கலாகாது. நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக்கூடாது. வலைபோல நாலாபுறமும் பின்னி பின்னி விரிவடைவதாக இருக்க வேண்டும். நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் இருக்கக் கூடாது” (நாவல் கோட்பாடு) என்ற வரையரைக்கு பொறுந்திய அபாரமான நாவல் வனவாசி. விபூதி பூஷண் வந்த்யோபாத்யாயாவால் எழுதப்பட்டது.

சத்தியசரணாவின் நாட்குறிப்பை போலத்தான் நாவல் பரந்து விரிகிறது. வனம் விவசாயி நிலங்களாக மாற்றப்பட்ட சித்திரத்தை விரிவாக பதிவு செய்கிறது. இன்று நாம் விவசாய நிலங்களை நகரமாகவோ தொழிற்சாலைகளாக மாற்றும் காலத்தில் உள்ளோம். வனத்தின் அழகில் ஆழ்ந்தவனையே ஒரு கருவியாக கொண்டு வனம் அழிக்கப்படுகிறது.

சத்தியசரணா கல்லூரி முடித்து வேலைக்காக தேடி அழைந்து கொண்டிருக்கிறான். அவனது நண்பன் அவிநாசனுக்கு (ஜமீன் வம்சத்தை சேர்ந்தவன்)  சொந்தமான முப்பாதாயிரம் பிகா நிலத்தை (சுமார் 10 ஆயிரம் ஏக்கர்). பிரித்துக்கொடுக்கும் பொறுப்பு கதைநாயகனுக்கு வருகிறது. அவனும் ஆரம்பத்தில வனத்திலிருந்து வெளியேறிவிடவே முயற்சி செய்கிறான். அப்போதே கோஷ்ட சககரவர்த்தி என்ற குமாஸ்தா கொஞ்சம் காலம் கொடுங்கள் வனம் உங்களை இழுத்துவிடும் என்ற கூற்றே உண்மையாகிறது.  அவ்வாறே சத்தியசரணா வனத்தின் அழகில் ஆழ்ந்து போகின்றான். அதே வேளையில் வனத்தை விவசாயநிலமாக மாற்றும் பணியும் தொடர்கிறது. இந்த நாவலின காலகட்டம் தோரயமாக 1940 முதல் 1950க்குள் என ஊகிக்கலாம். தான் ஆறு வருடத்தில் வனத்திலிருந்ததை ஒரு ஞாபக குறிப்பாக பதினைந்து வருடம் கழித்தே எழுதுகிறார்.

பூர்ணியா மாவட்டத்திற்கு அருகில் உள்ள லப்டுலியா, புல்கியா போன்ற வனப்பகுதிகளே கதைகளம். கதைசொல்லி பரந்த கலைஅவதானிப்புகளும் தேர்ந்த இலக்கிய வாசிப்பும் கொண்டவர். தன்னுடைய அனுபவ பகிர்வுகளை கலை இலக்கியத்தோடு சேர்ந்தே பதிவு செய்துள்ளார்.

கதை நாயகன் தொடர்ச்சியாக தனிமையில் வனத்தோடு பல மணி நேரம் செலவிடுகிறான். காலை மாலை அந்தி என வனத்தின் பல்வேறு தோற்றங்களை அனுபவத்தை நமக்கும் கடத்துகிறார்.

லப்டுலியா போன்ற அடர்நத வனத்தில் கூட  கிராண்ட் துரையில் பெயரிலிருக்கும் ஆலமரம்  ஆங்கிலேயர்கள் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளார்கள் என்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

இந்த நாவல் பல்வேறு வனச்செடிகள், மரங்கள் , மலர்கள் என விரித்து அதோடு சேர்த்து  பல்வேறு சமூகங்கள், ஆளுமைகள், நிகழ்வுகள் மற்றும் நுண் தகவல்கள், இயற்கை சித்தரிப்புகள் என வலையாக பின்னி பின்னிச் செல்கிறது.

பிபூதிபூஷன்

சந்தாலிகள்

கதைகளமான காடு  சந்தாலி என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்த இடமாகும். வேட்டையாடுதல் அவர்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது. ஆங்கிலேயர்களின் வரவுக்கு பிறகு நிலம் பொருளாதார நோக்கிலான பார்வையால் சந்தாலிகளை அப்பகுதியிலிருந்து விரட்டி காட்டை அழித்து விவசாயநிலமாக மாற்றுகிறார்கள். அதற்கு  ஜமீன்தார்களும்,  வட்டித்தொழில் (சாவுகார்கள்) செய்பவர்களும் துணைபுரிகிறார்கள். (இந்த சந்தாலிகள் திராவிடமக்களின் தொடர்பு கொண்வர்களாக உள்ளனர். உபயம் – விக்கிபிடியா).சந்தாலி கிளர்ச்சி முதல் இந்திய சுதந்திரப்போர் நடக்கும் காலகட்டத்தில்தான் நடக்கிறது.

சூரிய வம்சத்தை சேர்ந்த அரசே இல்லாத அரசர் தோப்ரூபன்னா. ஈட்டி வேல் போன்ற நேரடியாக கையால் கையாளும் ஆயுதங்களை தவிர வில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஒரு படி குறைவாக நினைக்கும் அரசர் தோப்ரூபன்னா. பானுமதி (இளவரசி), ஜகரூபான்னா (இளவரசன்). சத்தியசரணாவிற்கு பானுமதிக்கு உள்ள உறவை நவீன காலத்திற்கு ஒரு தோல்வி அடைந்த  அரசுக்கு உள்ள உறவாக பிரதிபலிக்கிறது. கயை, முங்கோர், பான்னா என ஐந்து ஆறு மைல்களுக்குள் வாழும் பானுமதி போன்றவர்களின் பார்வையில் நிலப்பரப்பு ரீதியாக இந்திய தேசத்தை பற்றிய பார்வைகள் யோசிக்க வேண்டியவையே?

இந்த நாவலில் வரும் மைதிலி பிராமணர்கள் – உழவுத்தொழில் ஈடுபடும் பிராமணர்கள்.சற்று அகங்காரம் மிகுந்தவர்களானாலும் நேர்மையானவர்கள.

  இந்த நாவலில் வரும் பல்வேறு நுண் தகவல்கள் நம்மை அந்த சூழலோடு ஒன்றச் செய்கிறது

ஹரிஹரசத்திரத்துச்  சந்தையில் விற்கப்படும் குதிரைகள். அந் குதிரைகளின் குதியாட்டமும் (ஜமைதி, ஃபனைதி) ஜமைதி குதியாட்டமாடும் குதிரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

பண்டமாற்று முறையில் ஒரு சோப் ஐ 7 மடங்கு விலைக்கு விற்கும் வியாபாரிகள். ஒரு வகையில் இன்றைய நவீன கார்ப்ரெட்களின் முன்னோடியோ? என எண்ண வைக்கிறது  கட்டுப்படுத்தும் விசையாக அரசு இல்லாத போது வியாபாரிகளின் கொள்ளை லாபத்தை நினைவுபடுத்துகிறது.

டான்டோபாரோ என்ற காட்டெருமைகளை பாதுகாக்கும் தொன்ம தெய்வங்கள்

இந்த நாவலில் வரும் நிகிழ்வுகள் சில் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.

விருந்தினர்களே இருப்பை எண்ணெய் குளியலும் அவர்களே சமைத்து சாப்பிடுவதும் விநோதம்.பொது சந்தையில் தான் பிறந்த ஊர்காரர்களை பார்க்கும் போது அழுகும் வித்தியாசமான சமூக பழக்கவழக்கங்கள்.பிக்கானீர் கற்கண்டு நுகர்வை சமூக அந்தஸ்தாக பார்க்கும் ராஜபுத்திரர்கள்.பயிற்றந்தாழை கொடியை போர்வையாக பயன்படுத்து காங்கோக என்ற வேளாண் குலத்தினர்.இயற்கை குறித்த எவ்விதமான அவதானிப்புகளும் இல்லாமல் வனப்பயணத்திற்கு குடும்பத்தோடு வரும் டெபுட்டி மாஜிஸ்டிரேட் போன்றவர்கள் இன்றைய காலகட்டத்திலும் தொடர்கிறார்களோ?

இந்த நாவலில் வரும் கவனிக்க வைத்த சிலர்.

5-ஆம் எண் உள்ள இரும்புக் கடாயே வாழ்கை லட்சியமாக கொண்டமுனேசுவர்.யுகல் பிரசாத்எவ்வித லௌகீக பலன்களையும் எதிர்பார்க்காது வனத்தின் மேல் காதல் கொண்ட ஒரு நபர். வித்தியாசமான செடிகள் , மலர்கள் போன்றவற்றை வனம் முழுவதும் விதைத்துக்கொண்டே செல்கிறார். யுகல் பிரசாத்துக்கும் சத்தியசரணாவிற்கும் உள்ள வித்தியாசமே கலை, இலக்கியம் தான். யுகல் பிரசாத் தன்னுடைய அனுபவத்தை அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே கடத்துகிறான். அதிலும் சிலர் அவனை பிழைக்கத்தெரியாத பைத்தியகாரனாகவே பார்கிறார்கள். ஆனால் கதைநாயகனோ நாவலாக காலத்திற்குமானதாக படைத்துள்ளார்.தாதுரியாஅடிப்படைத்தேவைகளுக்கேகூட போராடும் சூழ்நிலையிலும் கலையின் மீதான ஆர்வம் அதிசியக்க வைக்கிறது. சக்கர்பாஜி நடனத்தை கற்பதற்காக அவனுடைய தேடுதல் முயற்சியும் கலைதாகம் கூட ஒருவிதமான அடிப்படை தேவை தானோ?. இருப்புப்பாதையில் அவனுடைய மரணம் நவீனத்தால் வனம் சந்திக்கும் அழிவை சித்திரப்படுத்துகிறது.வேதாந்த பண்டிதர்மடுகநாத பாண்டே – தன்னுடைய வேதாந்த அறிவை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சி. வழி நூலாக முக்த போதம் பயன்படுகிறார். தன்னுடைய தேவைகளையும் மீறி வேதாந்த கல்வியை முக்கியமாக பார்க்கும் வித்தியாசமான ஆளுமை. இவர்களை போன்றவர்களால்தான் நம்முடைய வேதம் பல்லாயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் அவை நிலைத்து நிற்கிறது.காட்டு யானைகளை பற்றி விவரிக்கும் மஞ்சி அவளது கணவன் நக்சேதி. வெந்நீர் ஊற்று இருக்மிடத்தில் மஞ்சி நடத்தப்படும் விதம். சாதிய பாகுபாடுகளை பதிவு செய்கிறது.தாசியின் மகள் குந்தா – மைஷண்டி சந்தையில் கதைசொல்லி சந்திக்கும் கிரிதாரிலால் என்ற வேளாண் (காங்கோத) குலத்தவன். குந்தவிற்கு கிரிதாரிலாலுக்குமுள்ள உறவு.ராஜு பாண்டே சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் பற்றிய அபார நம்பிக்கையும் அதற்கான தர்க்க முறைமைகளும் பிரமாதம்.தாவ்தால் ஸாஹீ – வட்டித் தொழில் செய்பவன்.குதிரையை பயிற்சி செய்த நம்பிக்கையில் கணு மாஹாதோ மற்றும் சட்டுசிங் – டோல்பாஸ்யா காட்டில் காட்டெருமையை பிடித்து பழக்குவதற்கு செய்து தோல்வியில் முடியும் முயற்சிமிசி ஆற்றின் வடகரை காட்டில் வாழும் துறவி. விவசயமயமாக்கல் காட்டுவிலங்குகளுக்கு மட்டுமான பிரச்சனையா? இவரை போன்ற துறவிகளின் இன்றைய நிலை ?

இந்த நாவலில் குறிப்பிட்ட மலர்கள், செடிகள்,மரங்கள் பறவைகளில் பெரும்பாலானவை நமக்கு பெயர்களால் மட்டுமே அறிமுகமானவை. இருந்தாலும் இந்த நாவல் நம்மை வனத்தில் வாழ வைத்தது.

துத்லி என்ற ஒரு வகை காட்டுபூ, தாதுப மலர்கள்., தேவுடிப்பூ, குசும்பா மலர் வாட்டர் க்ரோ ஃபுடட் நீர் பூச்செடி. குட்மி- காட்டுபழம், லதானே என்ற காட்டுச்செடி, சேபாலிகை மரங்கள், பகாயின் காட்டு மரம், மஞ்சம புல், பிம்யோரா என்ற பம்பரகொடி, , க்ரேஃபுட் சீமைச்செடிகள்.

மோகன்பரா காடுகள் , மகாலிகாரூப மலைகள் , சரஸ்வதி குண்டம் (ஏரி)

சரஸ்வதி குண்டத்தை சுற்றியுள்ள பறவைகள் கரிக்குருவி, வாலாட்டிக் குருவி, காட்டுக் கிளி, ஃபீஸண்ட் க்ரோ என்ற புதுவகைப்பறவை காடை கவுதாரி பலவகைகப் புறாக்கள் எல்லாம் இருந்தன.

நா.சந்திரசேகர்

இந்த நாவலின் வாசிப்பிலிருந்து வெளிவந்தாலும் அந்த வனத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிற உணர்வில் நம்மை வைத்திருக்கிறது. இறுதியாக ஆசிரியர் எழுப்பும் கேள்வி நம்மில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

”மனிதனுக்கு வாழ்வில் வேண்டியது என்ன? முன்னுக்கு வருவதா? மகிழ்ச்சியா? முன்னுக்கு வந்தும் மகிழ்ச்சி இராவிட்டால் அதனால் என்ன பயன்? முன்னுக்கு வந்திருக்கும் எத்தனையோ பேரைப்பற்றி எனக்குத் தெரியும்; ஆனால் அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பாதாகத் தெரியவில்லை. அளவுமீறி இன்பம் நுகர்ந்தததால் அவர்களுடைய மனப்போக்கு, கூர்மையெல்லாம் போய் மழுங்கிவிட்டது. இப்போது எதிலும் அவர்களுக்கு இன்பம் கிட்டுவதில்லை; வாழ்வு, அவர்களைப் பொறுத்தவரையில் ஒரே மாதிரியாக, ஒரே நிறங்கொண்டதாயும், பொருளற்றதாயும் மாறிவிட்டது. மனதில் எவ்விதமான சுவைக்கும் இடம் இராது போயிற்று; அதன் கூர்மை மழுங்கிவிட்டது. ” (பக்கம் 331)

சந்திரசேகர்

ஈரோடு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.