கதாநாயகி கடிதங்கள் -9

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலம்

கதாநாயகி நாவலை இரண்டாம் முறை ஒரே வீச்சில் மீண்டும் வாசித்தபோதுதான் முழுமையாக பிடிகிடைத்தது.

ஒரு நல்ல நாவலென்பது உள்ளே மடிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய காகிதக்கலை போன்றது. இந்த நாவலின் மடிப்புக்களை விரித்து எடுக்கவேண்டியிருக்கிறது.

மெய்யன் இரண்டு இடங்களிலிருந்து ‘பூதங்களை’ விடுவிக்கிறான். ஒரு வகை பூதங்கள் நூல்களில் உள்ளன. இன்னொரு வகை பூதங்கள் காட்டில் மக்களில் உள்ளன. ஒன்று இறந்தகாலம். இன்னொன்று எதிர்காலம்.

காலம் அழியாமல் உருமாறி தொடர்கிறது. ஒரு டெஸ்மண்ட் பேக்லி நாவலில் ஒரு வரி வரும். பாலைவனத்தை ஹீரோ பார்க்கிறான். அப்போது ஒருவன் சொல்கிறான். ‘இங்கே ஒரு எதிர்காலக் காடு மறைந்திருக்கிறது’

ராஜாராம் கோவிந்த்

*

அன்புள்ள ஜெ,

எழுத்தை வெளியே உள்ள பொருட்களோடு தொடர்புபடுத்தி கொள்ளும் பொழுதே தும்பனின் தருக்க மனம் அதை ஏற்றுகொள்வது  போல்தான் மெய்யப்பன் அவன் கண்ணில் மட்டும் படும் ஒன்றை புற ரீதியாக தர்கபடுத்தி கொள்ளும் முயற்சி என்று அந்த மணநோயை பார்க்கலாமா. பருப்பொருள் இன்றி நம் மணம் எதையும் புரிந்து கொள்வதில்லை, ஏற்பதில்லை. அருவமானதை உணர்ந்தாலும் அதை பருவுடையதாக மாற்றி மணம் ஏற்று கொள்கிறது, நம்புகிறது. ஏன் என்றால் உடல் பருவாக உள்ளது. இங்கு அனைத்தும் பொருள்வயமாக உள்ளது. கடவுள்கள் பேய்கள் என நாம் உருவக படுத்தி வைத்திருக்கும் அனைத்தும் அப்படிதானா.

நம்மிடம் உள்ள எழுத்துகளுக்கு மொழிக்களுக்கு அப்பால் நம் தர்கத்துக்கு அப்பால் நம் மூளையின் திறனுக்கு அப்பால் விஷயங்கள் இங்கு இவ்வெளியில் உள்ளது. நம் எல்லைக்குள் இருந்து நாம் புரிந்துக்கொண்டதே இதுவரை நமக்கு தெரிந்தது. தும்பன் எழுத்து வழியாக புற உலகை அறிகிறான். மெய்யப்பன் மொழியை கலைத்து கனவு வழியாக வேறு ஒன்றை அறிகிறான். இரண்டு வழிகளிலும் மொழி என்ற இறுகிய கட்டுமானம் தகர்கிறது. மொழி உருவாகும் ஊற்றுக்கு செல்கிறது. அங்கு அது தான் மொழியே என்று உணர்த்துகிறது.  கதையில் ஒருபுறம் ஒருவன்  மொழியில் இருந்து மொழியின்மை நோக்கி செல்ல இன்னொருவன் மொழியின்மையிலிருந்து மொழிநோக்கி வருகிறான். ஒருவன் விலங்கு எல்லையை கடக்கிறான் இன்னொருவன் மனித எல்லையை கடக்கிறான் என்று வாசிக்கலாமா.

யோசிக்க விசித்திரமாக இருக்கிறது. அந்த பங்கலா, டேபுல் நாற்காலி, ரகசிய அறை, புத்தகம், வெள்ளையர்கள், சூழந்திருக்கும்  கடுமையான காடு, அந்நியமான இடம், தனிமை  ஆகிய இவ்வளவு பொருள் வயமான விஷயங்கள் வழியாக அதை ஊன்றுகோலாக வைத்துதான் மனசிதைவு அல்லது அந்த அனுபவம்  முழுக்க முழுக்க வெளிப்படுகிறது. அந்த பங்களாவும்  காடுகளும் கதைகளும் தொன்மங்களா. அது அந்த மக்கள் அனைவருக்குள்ளும் இருந்ததா. அது மெய்யப்பனில் இப்படி வெளிப்பட்டதா. அல்லது ஒவ்வொரு புத்தகமும் தொன்மத்தின் புற உருவங்களா. வாசிப்பு என்பது ஆழ்மன செயல்பாடா.

புலியும் யானையும் பாம்பும் மழையும் இருக்கும் அந்த காடுதான்  இந்த வெளி. அதில் நாம் கட்டிவைத்திருக்கும் பங்களாவோ குடிலோதான் நம் அகம். எவ்வளவுக்கு எவ்வளவு நம் அகமும் அதன் புறவெளிபாடானா பங்களாவும் காட்டை வென்று விட்டதாக நினைக்கிறதோ அந்த அளவுக்கு அது எதிர்திசையிலும் பயம் செய்ய நேரிடுமா. அதுதான் பங்களாவில் வாழ்பவர்களின் மனநோயும் மரணமும் உணர்த்துவதா. அதனால் தான் கோரன்  பங்களாவில் இருந்து வெளியேறி தனக்கான குடிலை மரத்தின் மீது கட்டிகொள்கிறானா. தனக்கு ‘எ’ மட்டும் போதும் என்ற அவனுடைய தேவையா.

மேலும் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கூட ஒவ்வொரு மனநிலை கூறுகளின் வெளிப்பாடுகளாக உள்ளதாக பார்க்க முடிகிறது. ஹெலனாவின் உதையை அடக்கு முறையில் இருந்து மீளும் வெளிப்பாடாக பார்க்கலாம். அதே சமையம் அச்சபட்டு ஓடும் ஹெலனாவை போன்றது தான்  ஆண்களுடைய இயல்பும், தனக்குள் அதை அடக்கி ஒதுக்கி மறைத்து கொண்டு வீரனாக மட்டும் இருக்க முயள்கிறான். ஆண்மை என்று தான் நம்பும் ஒன்றின் பொருட்டு தன் கல்லமின்மையை  பலிக்கொடுகிறான்.

இறுதியில் அவனுள் ஒழிந்திருக்கும் இயல்பான அந்த அச்சமே, அவன் அவனுள் அடக்கி வைத்திருந்த ஒன்றே அவனை பலியாக்கி விடுகிறது என்று வாசிக்கலாமா. அல்லது பெண்களை யானைகளாக வாசிக்க வேண்டுமா. அல்லது அவள் வழக்கமான வரலாற்றுக்கு மாறாக ஆண்மையில் இருக்கும் கல்லமின்மையை பயண்படுத்தி கொண்டாளா. தன் வஞ்சம் தீர்த்து கொண்டாளா. ஹெலன்னா தன் வாழ்வின் இக்கட்டில்  இருந்து தப்பிக்க மெக்கின்ஸியை பயன்படுத்திகொண்டாள். அங்கிருந்து தப்பிக்க கர்னலை பயன்படுத்திகொண்டாள்.

புலியிடம் இருந்து தப்பிக்க கர்னலை பலியாக கொடுத்தாள். அவள் வாழும் சூழலில் அவள் எங்கும் நிறைவாக மகிழ்வாக இல்லை. யதார்த்தத்தில் இருந்து தப்பிக்கதான் அவளுக்கு கலைகளும் நூல்களும். நிறைவின்மை கொண்ட ஆத்மாக்கள்தான் நூல்களில் உயிர்வாழ்கிறதா கட்டுண்டு கிடக்கிறதா.  இக்கதையில் ஏன் பெண்கள் எல்லோரும் எழுந்து வருகிறார்கள். அவர்கள்தான் மெய்யப்பனை கருவியாக கொண்டார்கள்.  அவர்கள்தான் அனைத்து ஆண்களையும் இயக்கினார்கள் அதன் வழியாக நடக்கும் அனைத்தையும். அதனால் தான் அவர்கள் கதாநாயகியா.

இன்னொன்று புற ரீதியாக மெய்யப்பனுடைய வாழ்க்கையும் அந்த வெள்ளையர்களின் வாழ்க்கையும் ஒன்றுபோல் தோற்றம் அளித்தாலும் வேறு வேறு. வெள்ளையர்கள் தங்கள் நாட்டுக்காக செயல்படுகிறார்கள் அப்பாவி பெண்களுக்கு வாழ்க்கை தருவதில் பெருமையடைகிறார்கள். தங்களை அடக்கியிருக்கும் ஆண்களின் மயக்கத்தின் வழியாக பெண்கள் விடுதலையை தேடி கொள்கிறார்கள். இங்கும் மெய்யப்பன் காட்டில் கல்விக்காக தன்னை அற்பனித்து கொள்கிறான். தன் குடும்பத்தை ஒரு ஊரை இனத்தை சமூகத்தை மாற்றுவதில் முக்கிய விசையாக இருக்கிறான். கால் ஊனம் கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். வெள்ளையர்கள் செய்தது அனைத்தும் தங்கள் ஆண்மைக்காக, மெய்யப்பன் செய்தது எல்லாம் தன் கடமையை. இது தன்னை விட்டால் யாரும் செய்ய முடியாது என்பதற்காக. மெய்யப்பனிடம் இருந்த தாய் உள்ளம் அவர்களிடம் இல்லை.

நான் சிலமுறை பயந்தது உண்டு. கதையில் தெரியும் சப்டெக்ஸ்டுகளும், வாசக இடைவெளிகளும் கூட ஸ்கீர்சோபோனியாவோ என்று. இருப்பதில் இருந்து இல்லாமல் இருப்பதை வாசிப்பது. ஆனால் அறுதியாகவும் கூறிவிட முடியாது. அப்படி கூற முடிந்தாலும் பிறர் நம்புவதற்கு அதை அவராக உணரவேண்டும். நம் அனுபவத்தில் இருந்து நம் கண்ணுக்கு மட்டும் தெரிவது. அதை புற ரீதியாக கூறி விளக்கிவிட முயன்றபடி இருப்பது.

நன்றி

பிரதீப் கென்னடி

*

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். நலமாக வாழ வேண்டுகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். என்னை பற்றி சில வரிகள் தங்கள் வாசகி கடந்த 10 ஆண்டுகளாக. ஊர்:  கோவை தொழில்:    Veterinary Medical

கதாநாயகி கதையை பற்றி எனக்கு தோன்றிய எண்ணம்.தங்களின் தங்க புத்தகம் கதையும் கதாநாயகி கதையும் ஒரே தளத்தில் நடக்கிறது. தங்க புத்தகம் ஆன்மிக தளம். கதாநாயகி நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒரு தளம்.

எப்போதுமே எல்லா புத்தகங்களும் தனக்கு உரிய முறையில் மட்டுமே ஒருவருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.அதனை நாம் எவ்வாறு நடைமுறை வாழ்வில் அல்லது மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கொள்கிறோம் என்பதே வாழ்க்கை என்று புரிந்து கொண்டேன். கிடைத்த புத்தகத்தை வாழ்க்கை முழுவதுமாக முழு அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு அலைபவர்கள் பாட் போன்று வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.

மெய்யன் பிள்ளையும் முக்தாவும் வாழ்க்கையை நிறைவுடன் வாழ்கிறார்கள் இன்னும் பல கோணங்களிலும் ஆராய வேண்டிய கதை.

நன்றி

ஆவுடையம்மாள் சுடலைமுத்து 

கதாநாயகி, கடிதங்கள் -8

கதாநாயகி கடிதங்கள்- 7

கதாநாயகி, கடிதங்கள்-6

கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.