கதை, முகநூல், ஒரு விவாதம்

சுருள்வில்

எனக்கும் போகன் சங்கருக்கும் இன்று [26-5-2021] இடையே ஒரு சின்ன உரையாடல் நடந்தது. அவருடைய சுருள்வில் என்னும் கதையை ஒட்டி. தமிழில் எழுதப்பட்ட குறுங்கதைகளில் மிக முக்கியமான ஒன்று அது.

அக்கதையை காலையில் எனக்கு இரண்டுபேர் அனுப்பியிருந்தனர். இரண்டுபேருமே அக்கதையின் மையம், அல்லது தூண்டும்புள்ளியை சரியாக வாசித்திருந்தனர். அந்த இரு கடிகாரங்களும் ஓட ஆரம்பிக்கின்றன. உறைந்து நீண்டநாட்களாக நின்றிருந்தவை. அந்தக் காலம் மீண்டும் தொடங்குகிறது. மீண்டும் வந்தவர்களின் காலம் நிகழ ஆரம்பிக்கிறது. அதுதான் கதையின் வெடிப்புறுபுள்ளி. அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. வாசகனின் கற்பனையில்.

அதற்கான சாத்தியங்களை கடிகாரம் என்னும் படிமம் அளித்துக் கொண்டே இருக்கிறது. அதன் சுருள்வில் தளர்ந்து அது நின்றிருக்கவில்லை. இறுகி இறுகி காத்திருந்திருக்கிறது. அதை இறுகச்செய்தபடி அதற்குள் எவரோ இருந்திருக்கிறார்கள்.

எல்லா பேய்க்கதைகளும் காலத்தைப் பற்றியவையே. மீளவியலா இறந்தகாலம் மீள்வதன் முடிவில்லாத மர்மத்தையே அவைப் பேசிப்பேசி பேசிவிட முடியாமல் கற்பனையை தூண்டிவிட்டு நின்றுவிடுகின்றன

அவர்கள் இருவரும் யார் என்பதை கதையின் முதல்நான்கு வரிகளை வாசித்த கதைவாசிக்கும் வழக்கமுள்ள எவரும் ஊகிக்க முடியும். அதுவல்ல உண்மையான கதை. இத்தகைய கதைகளின் ‘டெம்ப்ளேட்’ ஒன்றுதான். அது கதையின் டெம்ப்ளேட் அல்ல. நம் அச்சம் உருவாவதன், நம் கற்பனை ஒன்றுதொட்டு ஒன்றென விரிவதன், நம் அகத்தின் டெம்ப்ளேட். அதை மீறினால் அங்கே கதை நிகழாது. அது என்றும் அப்படித்தான். நாட்டுப்புறக்கதைகளில்கூட அதேவகையில்தான்.

அது நவீன இலக்கியத்திற்குள் வரும்போது அந்த நுண்மையாக்கம், [improvisation] அல்லது கூடுதலாக்கம்தான் அதை இலக்கியப்பிரதியாக ஆக்குகிறது. அதை நோக்கியே நல்ல வாசகனின் கற்பனை செல்லும். எளியவாசகன் உடனே அந்த டெம்ப்ளேட்டை மட்டுமே பிடித்துக்கொண்டு ‘அதுதானே? நான் அப்பவே கண்டுபிடிச்சுட்டேன்’ என்று சொல்வான், அதற்குமேல் அவனால் சொல்லமுடியாது.

இன்னொன்று, சல்லிசாக்குதல்.  [trivialization] இத்தகைய கதையை கேலிசெய்ய ஆரம்பித்தால் உடனே கதை இயங்குவது நின்றுவிடும். ’லக்கேஜ் இல்லாமல் வந்தால் ரூம்கிடைக்குமா” என்றெல்லாம் விவாதித்தாலே கதை ஸ்தம்பித்துவிடும்.

ஆனால் பொதுவாசிப்புத்தளத்தில் இதெல்லாம்தான் நிகழும். நான் இரு நண்பர்களிடம் கேட்டேன். இது வெளியான முகநூல் எதிர்வினைகளில் எவரேனும் ஓரளவேனும் பொருட்படுத்தத்தக்க வாசிப்பை அளித்திருந்தார்களா என. இல்லை, சல்லிசாக்குதல், டெம்ப்ளேட்டை வாசித்தல் மட்டுமே நிகழ்ந்தது என்றார்கள்.

அவ்வாறுதான் நிகழும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கலைக்கான வாசிப்பு என்பது அதற்காக உருவாக்கப்படும் ஒரு வட்டத்திற்குள் மட்டுமே நிகழவாய்ப்புள்ளது. தொடர் வாசிப்பு மற்றும் உரையாடல் வழியாக உருவாகி நிலைகொள்ளும் வட்டம் அது. கலை ஒருபோதும் பொதுவெளிக்கு உரியது அல்ல. அங்கே அது கூசிச்சுருங்கிவிடும். தகழி சொன்னதுபோல “கதகளி வேஷம் தெருவில் வந்ததுபோல” [அல்லது வி.கே.என் ஒருமுறை சொன்னதுபோல “சிருஷ்டிமூலத்தை சம்பந்தப்படாதவர் பார்க்கக்கூடாது”]

கலைக்கான வட்டத்திற்குள் உள்ளவர்கள் சில அடிப்படை மனநிலைகளைப் பயின்றவர்கள்.

ஒன்று, ஓர் இலக்கிய ஆக்கம் அதிலிருந்து விரியும் கற்பனைக்காக மட்டுமே எழுதப்படுகிறது. அது அளிக்கும் குறிப்புகளைக் கொண்டு கற்பனையில் விரிந்தெழும் வாசகர்களை மட்டுமே உத்தேசிக்கிறது.

இரண்டு, ஆகவே கலைப்படைப்புக்கு கூர்ந்த வாசிப்பை அளிப்பதும், அதைநோக்கி தன் கற்பனையை திருப்பி வைப்பதும் வாசகனின் கடமை.

மூன்று, ஆகவே ஒரு கலைப்படைப்பை ஒருபோது சாதாரணமாக கையாளலாகாது. தனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றுக்குள் இழுத்துச் செல்லலாகாது. அது தெரியாத ஓருலகை உருவாக்கி அளிக்கிறது என்றே அதை அணுகவேண்டும்.

நான்கு, எந்தக்கதையாக இருந்தாலும் கதைகேட்கும்போது நாம் கதைசொல்லிக்கு கீழே ஏற்புநிலையிலேயே இருக்கிறோம். அங்கே இணைபாவனை பிழையானது, மேட்டிமைப் பாவனை அறிவின்மை.

போகனிடம் அவர் இப்படிப்பட்ட கதைகளை முகநூலில் எழுதுவதைப் பற்றி பேசினேன். அது ஒரு வீணடிப்பு. அங்கே வாசிப்பவர்கள் எவ்வகையிலும் முன்னகர்வதில்லை, எழுதுபவர்கள் வளர்வதுமில்லை.

ஆனால் அவர் தனக்கு தன் கெடுபிடிமிக்கச் சூழலில் ஒரு சமூகவயமாதலுக்கு அது தேவையாகிறது, அதிலுள்ள தொடர்புறுத்தல் அல்லது தொடர்பாடல் தனக்கு தேவையாகிறது என எழுதியிருந்தார்.

*

போகன் எழுதிய கடிதம்

நன்றி ஜெ.போக மார்க்கம் என்று ஒரு ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணம் கொஞ்ச நாட்களாக இருக்கிறது.மின்னிதழ்களில் எழுதும்போது கொஞ்சம் வேறு வகையான வாசகர்கள் கிடைக்கிறார்கள்.

நான் முகநூலில் இருக்க இலக்கியம் தவிர  வேறு காரணங்களும் )) உண்டு.பெரும்பாலும் நான் அதில் விளையாடுகிறேன்.ஒரு கணினி விளையாட்டு போல என்னுடனும் பிறருடனும் விளையாடும் ஒரு மன விளையாட்டு.அதில் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். சிலர் சேர்ந்து கொள்வதில்லை.மேலும் மனிதர்களை அணுகுவதில் என்னிடத்தில் அணுகவிடுவதில் சிக்கல்கள் உள்ள எனக்கு இது மிக உபயோகமாக இருக்கிறது. பல நேரங்களில் உபத்திரவம் உபயோகத்தை மீறிவிடவும் செய்கிறதுதான்.அப்போது அவ்வாறு உபத்திரவாதிகளை ப்ளாக் செய்துவிடுகிறேன்.அல்லது விலகிவிடுகிறேன்.

மேலும் இடாலோ கால்வினோ எழுதிய  ஏன் க்ளாசிக்குகளை வாசிக்க வேண்டும்?புத்தகத்தில் ஓரிடத்தில் இலக்கியத்துக்குப் புறம்பான விஷயங்களை (அவருக்கு அப்போது செய்தித்த்தாள்கள், தொலைக்காட்சிகள் என்பதாய் இருந்தது நமக்கு இப்போது வாட்சப் பேஸ்புக் என்பதாய் இருக்கிறது)இரைச்சல் என்கிறார்.ஆனால் இசையை அதன் முழு தித்திப்புடன்  உணர்ந்துகொள்ள தேவைப்படுகின்ற பின்னணி இரைச்சல் என்பதாய் சொல்கிறார்.contrast என்று நிறங்களில் சொல்வது போல.

ஒருவர் முழுமையாக இலக்கியத்திலேயோ இசையிலேயோ மூழ்கிவிட முடியும் என்றால் நல்லதுதான்.ஆனால் அதன் சாத்தியக் கூறுகள் பற்றி எனக்குச் சந்தேகம் உண்டு.சாமுவல் ஜான்சன் cant என்று சொல்கிற அற்ப விஷயங்கள்,ஆர்ப்பாட்டங்கள், புலம்பல்கள் இந்த contrast ஐ அளிக்கின்றன என்பது என் கருத்து.கடுமையான இலக்கியம் தொடர்பில்லாத சர்ச்சைகளுக்கு பிறகு நீங்கள் மிக நல்ல கதைகளை எழுதியது கண்டிருக்கிறேன்.ஒருவகையில் அவைதான் அந்தக் கதைகளின் உந்துசக்தி என்றும் சொல்லலாம்தானே?அந்த வகையில் அவற்றுக்கு ஒரு பயன்மதிப்பு உண்டு.

இன்னொரு பக்கம்  கலை என்பது என்ன (அல்லது இலக்கியம் அல்லது இசை)அவற்றின் ஊடகங்கள் என்ன என்பதைக் குறித்து இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்  Andy Warhol ,Duchamp போன்றவர்கள் மறுவிளக்கம் கொடுத்ததையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஒருவர் எழுதுவதற்கான அனுபவங்களை எங்கிருந்து சேகரித்துக் கொள்கிறார் என்பது இதனுடன் தொடர்புடைய கேள்வியாகக் கருதுகிறேன்.தொடர்ந்த வாசிப்பு பிற இலக்கியவாதிகளுடன் தொடர்பு,உரையாடல் ,பிரயாணம் போன்றவை முக்கியமான கச்சா பொருட்களாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

வாசிப்பைப் பொறுத்தவரையில் நான் நிறையவே வாசிக்கிறேன்.நீங்கள் சொல்கிற சஹ்ருதயர்கள் அல்லது ட்ராட்ஸ்கி சொன்ன ‘சக பயணிகள்”கொஞ்சம் குறைவுதான்.இருந்தாலும் சிலர் இருக்கிறார்கள்.மூன்றாவதாக எனது லவுகீக சூழலினால் அதிகம் பிரயாணங்கள் மேற்கொள்ள முடியாததையே என் ஆளுமையில் பிரதான குறைவாக கருதுகிறேன்.முக நூல் ஏதோ ஒரு வகையில் அதை பூர்த்தி செய்கிறது. பல தரப்பட்ட நிலைகளில் உள்ள  மனிதர்களை இங்கு சந்திக்க முடிகிறது.

நான் அதற்கு எழுதிய பதில் இது

ஆம் அது உண்மை. அது ஓர் உலகம். அது முழுக்க பாவனைகளால் ஆனது. ஆனால் பாவனைகளிலிருந்து உண்மையை காண எழுத்தாளர்களால் முடியும். நீங்கள் அங்கே புழங்குவது பற்றி எனக்கு குறையேதுமில்லை. ஆனால் வாசிப்புக்கான இடம் அல்ல அது என உணர்வது நல்லது. அதற்கு வேறு தளங்களில்தான் எழுதவேண்டும். முகநூலில் நீண்டநாட்களாக எழுதுபவர்கள் கூட நடையில் மேம்படவில்லை. வாசிப்பவர்கள் வாசிப்பிலும். 

இலக்கியத்துக்கு அன்றுமின்றும் சிறிய ஒரு வட்டம்தான். இலக்கியம் என்பது முக்கியமான ஒரு நடவடிக்கை, அதற்கு தொடர்ச்சியான கூர்ந்த கவனம்தேவை, அது விளையாட்டல்ல என்னும் எண்ணம் கொண்டது அது. அந்த அக்கறையே காலப்போக்கில் வாசிப்புப் பயிற்சியாக ஆகிறது.

ஜெ

பிகு. ஒருநண்பர் கதையை வாட்ஸப்பில் அனுப்பி “கரகரவென்று அந்த முள்ளை பிடித்து பின்னால்கொண்டுசென்றுவிடவேண்டும் என்று தோன்றியது’ என எழுதியிருந்தார். அது மேலும் முன்னகரும் வாசிப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.