கதாநாயகி – கடிதங்கள்-4

கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1

அன்புள்ள ஜெ,

எளிமையின் பேரழகுகொண்டது குமரித்துறைவி. நேர்நிலை அம்சம் ஓங்கியது. இரண்டுமே அற்றது கதாநாயகி. சிக்கலின் அழகியல். எதிர்மறைகளின் அழகியல். நீங்கள் உங்களை ரீவைன்ட் செய்துகொள்ள எழுதியது. [ஆனால் முடியும்போது அந்த இனிமையான பாஸிட்டிவ்னெஸ் அதுதான் நீங்கள் இன்றிருக்கும் மனநிலை. அதை விடவே உங்களால் முடியாது]

கதாநாயகி ஆண்களால் எழுதப்படும் கதாபாத்திரமாக இருக்கிறாள் [விர்ஜீனியா] பின்னர் பெண்களால் எழுதப்படும் கதாநாயகியாக மாறுகிறாள் [ஈவ்லினா] பின்னர் பெண்ணால் வாசிக்கப்படுகிறாள். வாசகி கதாநாயகியாகிறாள். இந்த மூவாயிரமாண்டுக்கால மாற்றம்தான் இந்த சிறிய பேய்க்கதைக்க்குள் செறிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

[கதைக்குள்ளேயே பெண்கள் எழுத ஆரம்பிப்பதன் மீதான ஆண்களின் கசப்பு பதிவாகியிருக்கிறது. ஷேக்ஸ்பியர் இருந்திருந்தால் இன்றைய பெண்களின் எழுத்துவாசிப்பு சூழலில் நிரகரிக்கப்பட்டிருப்பார் என்ற பிலாக்காணம்]

பெண் பெண்ணை எழுதும்போது ஆணின் ரொமாண்டிசிசம் இல்லை. வில்லியாக்குவதும் இல்லை. ஈவ்லினா வில்லியா? இல்லை கதாநாயகியா? அவள் சூழ்ச்சியானவள். எல்லா தந்திரமும் அறிந்தவள். அந்தக் களத்தில் குரூரமாக விளையாடுகிறாள். ஆனால் இயல்பாக இன்னொரு பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளவும் செய்கிறாள்.

இந்நாவலின் அழகான பகுதிகள் லண்டனின் உயர்குடி வட்டார இலக்கியவிவாதங்களும் அவர்களுக்குள் ஓடும் சூழ்ச்சிகளும் பாவனைப்பேச்சுக்களும்தான். அந்த உலகிலிருந்து இன்னொரு உலகுக்கு வந்துசேர்கிறாள் ஹெலெனா. இங்கேதான் அவள் கர்னல் சாப்மானை உதைத்து தள்ளமுடியும்

 

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள  ஜெ..

உஙககளது   ,”மத்துறு தயிர் ” சிறுகதையில் ஒரு மாமனிதரும் உன்னத கிறிஸ்தவரும் நல்லாசிரியருமான ஒரு பேராசிரியர்  இப்படிச் சொல்வார்.இதை சொன்னதெல்லாம் கம்பன் இல்லை   அவன் நாவில் சரஸ்வதிதேவி குடியேறி அவனைஇப்படியெல்லாம் பாட வைத்திருக்கிறாள்.அதேபோல கதாநாயகி கதையில் துப்பனின் கல்வி வெறியைப்பார்த்து “சரஸ்வதி தலைக்கு அடிச்சுப்போட்டா. இனிமே வேற வளியில்லை” என்பார் ஞானப்பன். இந்த சரஸ்வதிதான்  கதாநாயகி கதையின் கதாநாயகி என கருதுகிறேன்

தொன்ம நாயகி விர்ஜினியா ,  படைப்பாளி பர்னி , கதையின் ஒரு பாத்திரமான ஈவ்வினா ஆகியோரின் ஆற்றாமையை நன்கு அறிந்து பதிலடி அளி்க்கும் ஹெலேனா  ,இவர்களது தாஙககவொண்ணா விசையை தன்னுள் தாங்கிக்கொண்டு ,  கல்விப்புரட்சி    நடத்தும் அரசு ஆசிரியர் ,   படிப்பால் நூல்களால் ஒரு தலைவராக உயரும் துப்பன் , கல்வியில் மாறுகின்ற மலைவாசிகள் என அனைவரையும் இணைக்கும் மையச்சரடு  வாசிப்பு , கல்வி , புத்தகம் போன்ற சரஸ்வதி அம்சஙககள்தான்

காட்டு உயிரிகளை தம்முள் ஒருவராக தெய்வமாக  நினைக்கும் மலைவாசிகள்  பிற உயிர்கள் அனைத்தும் மனிதனுக்காக சாக வேண்டியவைதான் என கருதும் வெள்ளைக்காரர்களின் இந்த மனோபாவத்தால் மனசாட்சி உலுக்கப்படும்  ஒரு வெள்யைக்காரப் பெண் என்ற காட்சி அமைப்பு நுட்பமானது

அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பழங்குடியினருக்கு எதிரான கொடூரங்களை உலகின்முன் கொணர்ந்தவர்கள் இப்படி மனசாட்சி உலுக்கப்பட்ட வெள்ளையர்கள்தானே.

கல்வி மூலம் ஒரு கிராமத்தில் நிகழும் மாற்றத்துக்கான வேர் தேசம்  கடந்து இருந்தாலும்  எல்லைகளைக் கடந்து ஆட்சி புரியும்  சரஸ்வதியை கதாநாயகியாக பார்ப்பதில் எங்களுக்கு நிறைவு..

உங்களையும் எங்களையும் இணைப்பதும் அவளேயல்லவா

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஆசானே,

இருப்பதை இல்லாமலாக்கி ‌‌பித்தாக்கியது தங்கப் புத்தகம்

இல்லாததை இருத்தி  வைத்தியம் செய்கிறது  கதாநாயகி.   ‌‌

அன்புடன்,

செ.சரவண பெருமாள்.

 

அன்புள்ள ஜெ,

இந்நாவலை ஒரு பேய்க்கதையாக வாசிப்பதை விட சைக்காலஜிக்கல் திரில்லராக வாசிப்பதே சரியானது. எல்லாமே பேய் என்னும்போது பயம் வரவில்லை. ஏனென்றால் பேய் இல்லை என்று தெரியும். கடைசி அத்தியாயத்தில் எல்லாமே ஸ்கிஸோஃப்ரினியா என்ற விளக்கம் வந்தபோது திகிலாகிவிட்டது. ஏனென்றால் ஆரம்ப அடையாளங்கள் எல்லாமே எனக்கும் இருப்பதுபோலிருந்தது. அனேகமாக அத்தனைபேருக்குமே கொஞ்சம் இருக்கும். அத்தனைபேருமே அந்தப் பேய்களைச் சந்திக்க வாய்ப்புண்டு. அதுதான் சில்லிட வைத்துவிட்டது

ஜி.சரவணக்குமார்

 

அன்புள்ள ஜெ,

இந்நாவலில் ‘ஒரு புத்தகத்தில் இருந்து உயிர்த்தெழுந்து வருதல்’ என்பதுதான் கதைக்கரு. எழுத்துவடிவில் இருக்கிறது வரலாறு, கடந்தகாலம். தொட்டதுமே எழுந்து பூதபேய்களாகச் சூழ்ந்துகொள்கிறது. கதை அதை நேரடியாகவே சொல்லவும் செய்கிறது.

இன்னொரு உலகம் உள்ளது, காணிக்காரர்களுக்கு கல்வி கற்பிப்பது. அது சம்பந்தமில்லாமல் வந்துகொண்டிருந்தது. ஆனால் துப்பனைப் பற்றிச் சொல்லும்போது ஹேமச்சந்திரன் நாயர் “நீர் எழுப்பிவிட்டது ஒரு பூதத்தையாக்கும்” என்று சொல்லும்போதுதான் அதுவும் இதே கதைதான் என்பது சட்டென்று உறைத்தது.

இங்கே புத்தகங்களில் எழுத்துக்களில் இருந்து கடந்தகாலம் எழுகிறது. அங்கே எழுத்துக்கள் சென்று எதிர்காலத்தை உசுப்பி எழுப்பி விட்டிருக்கின்றன. அந்த இணைப்பு அற்புதமானது.

செல்வக்குமார்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.