Jeyamohan's Blog, page 769
June 3, 2022
ஐந்து பெயர்கள்- பிரபு மயிலாடுதுறை
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஊரின் பெயரை மயிலாடுதுறை என்றே கூறி வருகிறேன். எனினும் ஊருக்கு ஒரு கணக்கில் ஐந்து பெயர்கள் இருக்கின்றன. அவை ஐந்தும் ஊருடன் பலவிதத்திலும் இணைந்தவை. ஊரின் நடுவில் மிகப் பெரிய சிவாலயம் உள்ளது. சோழர் காலத்திய ஆலயம். நாயக்கர்களால் கட்டப்பட்ட கோபுரத்தை உடையது. அம்பிகை மயில் வடிவத்தில் சிவனை பூசனை செய்த தலம் என்பது ஊரின் தலபுராணம். அதனால் கௌரி மாயூரம் என்பது ஊரின் பெயர்.
ஐந்து பெயர்கள்பிராம்பிள்டன் நிகழ்வு, கடிதம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு
வணக்கம். ஒரு பெரும் கால இடைவெளிக்குப் பிறகு தமிழில் நான் எழுத எத்தனிக்கும் கடிதம். உங்கள் அறம் என்ற சிறுகதைத் தொகுப்பை என் தந்தை எனக்கு பல வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார். இலக்கிய வாசிப்பில் இருந்து வெகு தூரம் சென்று சராசரி மனிதனாக இருந்த என்னை அறம் உண்டி வில்லிலிருந்து புறப்பட்ட கல்லைப் போல மீண்டும் என்னை இலக்கிய வாசிப்புக்கு மீட்சி அடையச் செய்தது.
அறம் என்பது வெறும் சிறுகதைகளின் தொகுப்பு மட்டுமல்ல. காலத்தின் போக்கில் வாழ்க்கை என்னும் நீரோடையில் மிதக்கும் சருகாக இருந்த என்னை போன்ற பல ஆயிரக்கணக்கான மனிதர்களை நிறுத்தி சிந்தனை ஆக்கத்தையும், சுய பரிசோதனையும் மலரச் செய்த மாபெரும் விசை. அதை ஒரு சமகால தமிழ் இலக்கிய வாசிப்பின் மறுமலர்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. நூறு நாற்காலிகள் என்ற கதை மனித அகங்காரத்தை சுக்குநூறாக உடைத்து அவனை மீண்டும் செதுக்கிக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய கருவி. சமீபத்தில் படித்த கணக்கு சிறுகதை சமூகத்தை நோக்கி வீசிய சவுக்கடி. திருக்குறளும் ஆத்திசூடி படித்து மனனம் செய்தும் கருத்தை உட்கொள்ள முடியாத தமிழ் சமூகத்திற்கு உங்கள் சிறுகதைகள் ஓர் இரண்டாம் வாய்ப்பு.
நிற்க, என்றோ நான் செய்த பாக்கியம் எனக்கு எப்படியோ சௌந்தர் அறிமுகமாகி, என்னை இலக்கிய வாசனை உள்ளவனாக ஏற்று தமிழ் விக்கி துவக்க விழாவிற்கு பங்கெடுக்க அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் Brambelton அரங்கத்தில் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல நண்பர்கள் போல் உங்கள் அருகில் வந்து எளிமையாக அறிமுகப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் மனநிலை அன்று சற்றும் எனக்கு இல்லை. என் மன பிம்பத்தில் நூறு நாற்காலிகள் போன்ற கதையின் படைப்பாளி ஓர் அவதாரம். நீங்கள் பல தருணத்தில் சொல்வதுபோல் கதை எழுதும் ஜெயமோகன் வேறு நீங்கள் பார்க்கும் ஜெயமோகன் வேறு என்பதை என் ஆறாம் அறிவு அன்று புரிந்துகொள்ள போராடிக் கொண்டிருந்தது.
விழா முழுவதும் உங்களையும், தமிழ்த் தொண்டாற்றிய பேரறிஞர்களையும் என் புகைப்பட கண்ணாடி குவிப்பின் மூலம் அருகாமையில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். உங்கள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிப் பெருக்குகளையும், சில சமயங்களில் இறுக்கம் கலந்த மகிழ்ச்சி, நண்பர்களின் அருகாமை அந்த இறுக்கத்தைத் தளர்த்தியதையும், தெளிவாக என்னால் காண முடிந்தது. தமிழ் விக்கி துவக்க விழாவில் இருந்த சிக்கல்கள் எதையும் அறியாமல் ஒரு பார்வையாளனாக அதைப் புரிந்து கொள்ள முடியாமல் உங்களிடமிருந்து விலகியே நின்றேன். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. Thomas மற்றும் Brenda அவர்களின் வியப்புக்குரிய முயற்சிகளும் சாதனைகளும் என்னை பேராச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. அந்த விழாவில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு கூடுதல் பரவசம். கடந்த இரண்டு ஆண்டுகளில் புகைப்படக் கருவிகளை கையிலெடுக்கும் வாய்ப்பில்லாமல் அலைபேசி அந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த வருத்தத்தையும் உடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி.
விழாவின் முன்பும் பின்பும் அருண்மொழி அவர்களிடம் சில நிமிடங்கள் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் புன்னகை, தோழமை கலந்த பார்வை, எளிமையாக கலந்துரையாடலை ஆரம்பிக்கும் நட்பு என அனைத்தும் எனக்கு பள்ளிப்பருவத்தில் என் அம்மாவிடம் நான் உரையாடியதை நினைவூட்டியது. அன்று என் சிக்கலான விளக்க முடியாத மனநிலையை சமநிலை ஆக்கியது அவர்களுடன் கூடிய உரையாடல். விழாவுக்கு பின்பு உணவுக் கூடத்தில் உங்களிடம் வந்து அறிமுகம் செய்து கொண்ட பல நூறு பேர்களில் நானும் ஒருவன். பின்பு என் தயக்கத்தின் அடித்தளங்களை சுய பரிசோதனை செய்தபோது அதில் இரண்டு காரணங்களை என்னால் காண முடிந்தது. ஒன்று நான் என்கின்ற அகம் உறுதியாக அதில் ஒரு பகுதி கொண்டு இருந்தது. இன்னொன்று உங்களைப்பற்றி நான் வைத்திருந்த அவதார பிம்பம் உடைந்து விடுமோ என்ற பயம். உங்கள் நட்பு கலந்த சிரிப்பு, நண்பர்களின் எல்லா கேள்விகளுக்கும் சட்டென்று தெளிவான பதிலும் என்னைச் சுற்றி நான் கட்டியிருந்த பெரும் பனிப்பாறைகளை உடைக்க ஏதுவாக இருந்தது.
உங்களையும் தமிழ் விக்கியையும் காண வந்திருந்தாலும் இந்த சந்திப்பின் போது நான் பெற்ற புதிய நண்பர்கள் ஏராளம். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாழ்வின் மையப்பகுதிக்கு பின்பு கிடைப்பது அரிது. எனக்கு அந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ் விக்கிக்கும் நண்பர் சௌந்தர் அவர்களுக்கும் கோடி நன்றிகள்.
நண்பர் வேல்முருகன் அன்பின் அழைப்பின் பேரில் உங்களை மறுபடியும் அன்று இரவு உணவு வேளையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வழக்கம்போல் தாமதமாக வந்து கலந்துரையாடலின் பெரும்பகுதியை தவறவிட்ட எனக்கு உங்களிடம் கேட்க நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் இருந்தன. நீங்கள் உரைகளில் சொல்வதுபோல் புதிதாக கருத்தியலுக்கு அறிமுகமான பதின் பருவ இளைஞன் மன நிலையில் நான் அங்கு உட்கார்ந்து இருந்தேன். அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் இருந்து விடை பெற்று விடிந்தவுடன் உலகை திருத்தும் முயற்சியை செய்ய தயாராக இருந்த மனநிலை.
உரையாடலுக்கு சம்பந்தமில்லாத எனது கேள்விகளை பொறுமையாக கேட்டு பதில் அளித்தீர்கள். தர்க்கத்திற்கும் கலந்துரையாடலுக்கும் உள்ள வேறுபாட்டையும் அன்று என்னால் தெளிவாக உணர முடிந்தது. ஒரு முறையேனும் என் தலையின் மேலும் அவியல் கொட்டப்படவேண்டும் என்ற தாகத்துடன் அன்று இரவு தூங்க சென்றேன்.
இன்னும் பல நூற்றாண்டு உங்கள் தமிழ் பணியும் சமூகப்பணியும் சிறக்க எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன். தங்களின் அமெரிக்கப் பயணம் சிறப்பாக சென்று கொண்டிருப்பதை நண்பர்கள் மூலம் அறிகிறேன். இங்கேயே வாழ்ந்தாலும், ஒரு புதிய அமெரிக்காவை உங்கள் பார்வை வழியே நாங்கள் பார்க்கிறோம். அமெரிக்க இந்தியர்களின் இலக்கிய மற்றும் கலாசார கட்டமைப்பை மேம்படுத்த உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளோம்.
உங்கள் எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் மூலம் மேம்பட விரும்பும் ஆயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானும் ஒருவன்.
அன்புடன் ரஜினிகாந்த்
அன்புள்ள ரஜினிகாந்த்,
புகைப்படங்கள் அருமையாக இருந்தன. நன்றி. நான் கோட்டு போட்டுக்கொண்டு எடுத்த படங்கள் என்பதனால் இவை எதிர்காலத்தில் பரவலாக பயன்படும் என நினைக்கிறேன்.
உங்கள் உரைநடை நன்றாக உள்ளது. தொடர்ச்சியாக வாசிக்கிறீர்கள் என நினைக்கிறேன். வாசிப்பு ஒரு ஆதாரத் தொடர்ச்சியாக உடனிருக்கட்டும்.
நான் எப்போதுமே ஓர் உரையாடலில் இருந்துகொண்டிருப்பவன். அமெரிக்காவிலும் அதே உரையாடல் ஒருமாத காலம் எல்லா இடத்திலும் நீண்டது. உரையாடல் நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது. அது அறிவுரைத்தலோ வழிகாட்டலோ அல்ல. நாம் மேலும் உரையாடும் களங்கள் அமைக
ஜெ
சியமந்தகம், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சியமந்தகம் தளம் தொடர்ச்சியாக அருமையான கட்டுரைகளுடன் வந்து கொண்டிருக்கிறது. தேவதேவனின் கட்டுரையை வாசித்து அவருக்கும் உங்களுக்குமான உறவை அறிந்து மகிழ்ந்தால் உடனே அ.கா.பெருமாளின் கட்டுரை உங்கள் நாட்டாரியல் ஈடுபாடு பற்றிச் சொல்கிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் கட்டுரை அலசல்தன்மை கொண்டது என்றால் இங்கே நம் சூழலிலுள்ள அபத்தமான அரசியலைச் சுட்டிக்காட்டுகிறது அமிர்தம் சூரியாவின் நேர்மையான கட்டுரை. அமிர்தம் சூர்யா அத்தனைபேருக்கும் வேண்டியவராக ஏன் இருக்கிறார் என தெரிகிறது. அவருடைய நேர்மைதான் அவருடைய முதன்மைத் தகுதி. சிறப்பான கட்டுரைகள். ஓர் எழுத்தாளர் பற்றி இத்தனை அரிய கட்டுரைகள் வருவது மகிழ்ச்சியூட்டும் விஷயம்
என்.செந்தில்குமார்
அன்புள்ள ஜெ,
சியமந்தகத்தில் லக்ஷ்மி மணிவண்ணனின் கட்டுரையை வாசித்தேன். கறாரான பார்வை. ஆனால் உணர்ச்சிகரமானதும்கூட. ஒரு கவிஞனுக்குரிய கூரிய பார்வையுடன் தொடர்ச்சியாக உங்களை பார்த்து, உங்கள் மாற்றங்களை பதிவுசெய்திருக்கிறார். அந்தக்கூர்மைதான் அதன் அழகு என நினைக்கிறேன்.
மா.கணேசன்
அன்புள்ள ஜெமோ
சியமந்தகம் இதழில் குக்கூ சிவராஜ் எழுதிய கட்டுரை என் கண்களில் நீர் வரவழைத்தது. ஆத்மார்த்தமான கட்டுரை. அந்த வரிகள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் நெகிழ்ச்சி அற்புதமானது. ஓர் எழுத்தாளராக உங்கள் வெற்றி என்பது இத்தனைபேரை செயலுக்குத் தூண்டியிருக்கிறீர்கள் என்பதுதான்
ஜி.செல்வக்குமார்
June 2, 2022
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022 ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் நினைவுநாள்.
இடம் :கவிக்கோ மன்றம் சி.ஐ.டி காலனி
நாள் : 11-6-2022
விழாவில் கவிஞர் போகன் சங்கர் , மலையாளக் கவிஞர் வீரான்குட்டி, எழுத்தாளர் பார்கவி மற்றும் ஜெயமோகன் கலந்துகொள்வார்கள்.
இவ்வாண்டு விருதுவிழாவை ஒட்டி மூன்று அமர்வுகளையும் ஒருங்குசெய்துள்ளோம். கோவிட் தொற்று காரணமாக சென்ற ஆண்டுகளில் குமரகுருபரன் விருது பெற்ற வேணு வேட்ராயன், முகமது மதார் இருவருக்கும் விழா என ஏதும் நிகழவில்லை. ஆகவே அவர்கள் இருவருக்கும் இரண்டு அமர்வுகள் நடைபெறும். சிறப்பு விருந்தினராக வரும் மலையாளக் கவிஞர் வீரான் குட்டிக்கு ஓர் அமர்வு.
வேணு வேட்ராயன் அமர்வு
முத்துக்குமார் ,அகர முதல்வன்
மதார் அமர்வு
கவிதா ரவீந்திரன், சுரேஷ் பிரதீப்
வீரான் குட்டி சந்திப்பு
மொழியாக்கம் ஜெயமோகன்
நண்பர்கள் அனைவரும் காலைமுதல் அனைத்து அமர்வுகளிலும் பங்கெடுக்கவேண்டும் என கோருகிறேன்
ஜெ
காற்று வருடும் யானைச்செவிகள்
என் வீட்டுக்கு நேர்ப்பின்னால் உள்ள காலியிடத்தில் எப்போதும் சேறு இருக்கும், ஏனென்றால் அருகே கால்வாய் நீர் ஓடும் ஓடை உள்ளது. சேற்றுப்பரப்பு எங்கிருந்தாலும் குமரிமாவட்டத்தில் வளர்வது காட்டுசேம்பு என நாங்கள் அழைக்கும் ஒரு செடி. சேப்பங்கிழங்கு விளையும் செடியின் காட்டுவகை. நான் இளமையில் வாழ்ந்த திருவரம்பைச் சுற்றி எங்கும் இந்தச் செடிதான்.
நாட்டுசேம்புக்கும் காட்டுசேம்புக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நாட்டுசேம்பு பச்சைநிறமான, பளபளப்பான பெரிய இலை கொண்டது. தண்டு வழவழவென்றிருக்கும். வாழைத்தோட்டங்களில் ஊடுபயிராக வளர்ப்பார்கள். சேம்புக்கு வெயில் ஆகாது. எப்போதும் சில்லென்று குளிர்ந்திருக்கும். கண்ணை மூடிக்கொண்டு தொட்டால் பாம்பைத் தீண்டிய திகைப்பை அடைய முடியும்.
காட்டுசேம்பு அவ்வளவு உயரமாக வளராது. பச்சைப்பரப்பில் செம்புள்ளிகள் நிறைந்த இலை. யானைச்செவிபோலவே அமைப்பு, அதேபோல செம்புள்ளிகள். யானைமுகத்து செம்புள்ளிகளுக்கு ஆனைப்பூ என்று பெயருண்டு. பூத்த யானை! யானை மலர்வதுபோல காட்டில் மழைநனையும் பாறைகளும் மலர்கின்றன. அதேபோல செம்புள்ளிப்பரப்புகள் கொண்டு. பாறைப்பரப்பின் அந்த சிவப்பு மலர்வட்டங்கள் ஒவ்வொன்றும் நுண்தாவரங்களாலான ஒரு காடு என்கிறார் டேவிட் அட்டன்பரோ.
இளமையில் சேம்பிலை எங்களுக்கு குடை. ஓயாமல் மழைபெய்யும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும். ஆகஸ்டில் கொஞ்சம் மழை குறையும் செப்டெம்பரில் மீண்டும் மழை. அதன்பின் ஜனவரி வரை மழைதான். பிப்ரவரி, மார்ச்சில் கொஞ்சம் இடைவெளி. ஏப்ரலில் கோடை மழை. மழை எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி.
பெரியவர்களுக்கு கரிய துணியாலான சீலைக்குடை. வயல்வேலை செய்பவர்களுக்கு தலையில் தொப்பி போல சூடிக்கொள்ளும் ஓலைக்குடை. எங்களுக்கு இரண்டுமில்லை. பள்ளிக்குப் போகும் வழியில் வயல்களுண்டு. மழை தொடங்கியதும் ஓடிப்போய் ஆளுக்கொரு சேம்பிலையை காம்புடன் பிடுங்கிக்கொள்வோம். குடையளவுக்கே பெரியது அந்த இலை. மழைநீரை உடனடியாக வழியச் செய்துவிடும். மழைக்கேற்ப திருப்பித்திருப்பி பிடித்தால் ஒரு சொட்டு நனையாமல் சென்றுவிடமுடியும்.
சேம்பங்குடை என்று அந்த இலையைச் சொல்வோம். எங்கள் பள்ளிக்கூடங்களில் நீண்ட வராந்தாக்களில் மாணவர்கள் கொண்டுவந்த சேம்பக்குடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சேம்பக்குடையின் உடைந்த தண்டில் இருந்து சொட்டும் நீர் கொஞ்சம் அரிப்பை அளிக்கும். வகுப்பில் அமர்ந்து சொறிந்துகொள்வோம்.
காட்டுசேம்பின் இலைகளை எடுத்து காதுகள் போல கட்டிக்கொண்டு யானைகளாகி உறுமி விளையாடுவது எங்கள் இளமைப்பருவத்து வேடிக்கைகளில் ஒன்று. சேம்பிலையின் அசைவு யானைச்செவிபோலவே இருக்கும். அதனாலேயே அதற்கு ஆனைச்செவி என்றும் பெயருண்டு.
பின்பொருமுறை நண்பர்களுடன் காட்டில் சென்றபோது நாட்டுசேம்பின் அளவுக்கே பெரிய காட்டுசேம்பின் இலைகளை கண்டேன். நான்கடி அகலமானவை. செம்பூ படர்ந்தவை. காற்றில் அவை அசைவது யானைச்செவி என்றே தோன்றியது. காட்டுசேம்பின் கிழங்கை காட்டு பன்றி மட்டுமே உண்ணும் என்றான் என்னை காட்டுக்குள் அழைத்துச்சென்ற அடப்பன் நெல்சன்.
அன்று காட்டில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது சற்று அப்பால் சேம்பிலையின் அசைவை கவனித்தேன். சிறுநீர் கழித்து முடித்தபின்னரே அது காட்டுயானை என தெரிந்தது. உடல் விதிர்க்க ஓடிவந்து ’ஆனை, சேம்பிலை’ என குழறினேன்.
“சேம்பிலையை கண்டு பதறிபோயிட்டான்…” என்று அடப்பன் சொன்னான்.
“பயந்தவனுக்கு சேம்பிலை ஆனையில்லா?” என்றான் கொச்சன் ராஜு.
நான் அவர்களுக்கு பின்னால் சென்று அமர்ந்தேன். உண்மையிலேயே அது யானையா இல்லை யானைச்சேம்பா? யானை அப்படியே சென்றுவிட்டது. அல்லது மீண்டும் காட்டுசேம்பாக ஆகிவிட்டது.
அன்றிரவு மரத்தின்மேல் கட்டப்பட்ட ஏறுமாடத்தில் கமுகுப்பாளையாலான படுக்கையில் நான் படுத்திருந்தேன். காற்று குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி வீசுவதுபோல அடித்தது. ஏறுமாடத்தின் மூங்கில்கள் சேம்புத்தண்டுபோல அல்லது பாம்பின் உடல்போல குளிர்ந்திருந்தன. கீழிருந்த கணப்பில் இருந்து வந்த புகை என்னைச் சூழ்ந்திருந்தது. அந்த வெம்மை ஓர் அணைப்பு போலிருந்தது.
பேச்சிப்பாறைக் காட்டின் கடுங்குளிரில் யானைச்சேம்பின் இலைகள் அசைந்துகொண்டிருப்பதை நான் கனவில் என கண்டேன். அவற்றின் நடுவே யானை குளிருக்கு உடம்பை இறுக்கியபடி நின்றிருந்தது. காலமற்றது, கரும்பாறைகளைப்போல.
காந்தள் வேலி ஓங்குமலை நன்னாட்டுச்
செல்வல் என்பவோ கல்வரை மார்பர்?
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ
இத்தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே
(குறுந்தொகை 76. கிள்ளிமங்கலங் கிழார்)
காந்தள் மலர் விரிந்த வேலிகள்கொண்ட
ஓங்கு மலை நன்னாட்டுக்கு செல்வேன் என்கிறாரா
கல்லென்ற நெஞ்சம் கொண்டவர்?
மலைச்சேம்பின் அசையும் வளைந்த இலைகளை
பெருங்களிறின் செவி என மெல்லத்தழுவி
குளிர்ந்த வாடைக்காற்று அடிக்கும்
கடும்பனி நிறைந்த மலைப்பாதையில்
நடுங்கித் துயருற எண்ணுகிறாரா?
கிள்ளிமங்கலம் கேரளத்தில் பரவலாக இருக்கும் பெயர்களில் ஒன்று. திரிச்சூர் அருகே உள்ள கிள்ளிமங்கலம் புகழ்பெற்ற சைவத்தலம். கிள்ளிமங்கலத்து கிழார் ஒரு சேரநாட்டவர் என எண்ணிக்கொள்ள எனக்குப் பிடித்திருக்கிறது. காந்தள் மலர்ந்த வேலிகள் கொண்ட மலைநாட்டை அவர் பாடியதில் வியப்பில்லை.
ஓங்குமலைகளின் இடைவெளிகள் வழியாக பீரிடும் கடுங்குளிர் காற்று தடவிச்செல்லும் காட்டுசேம்பின் இலைகளை நினைத்துக் கொள்கிறேன். அந்தக் காற்று அத்தனை சேம்பிலைகளையும் மதவேழச் செவிகளாக்கும் பேராற்றல் கொண்டது.
உன்மத்தத்திற்கும் பேரரறிவுக்குமிடையே- அழகுநிலா
இளங்கோ கிருஷ்ணன்- தமிழ் விக்கி
“இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள
பறவை பூமியைக் கடந்து செல்கிறது
அதன் அலகை சங்கக் கவி எழுதினான்
வாலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்”
இளங்கோ வாலை எழுத வந்திருக்கிறாரென்பதை அவரது முதல் தொகுப்பின் தலைப்பே (காயசண்டிகை) தமிழ் இலக்கிய உலகிற்கு உரத்துச் சொன்னது. கடும்பசி எனும் பிணியால் பீடித்தவளின் பெயரைத் தலைப்பாக்கி அவர் எழுதி இருக்கும் கவிதையில் உன்மத்தம் முற்றிய ஒரு பௌர்ணமியில் பிச்சைப் பாத்திரம் அட்சயப் பாத்திரமாகிறது. ஆனால் வாழ்வில் அப்படியான அற்புதங்கள் ஏதும் நடக்காது என்பதை அவரது தர்க்க மனம் சுட்டிக்காட்ட தனது நான்காவது தொகுப்பில் (வியனுலகு வதியும் பெருமலர்) பசி சாஸ்வதமானது என்ற முடிவுக்கு வந்து சேர்கிறார்.
“எவ்வளவு இட்டாலும் நிறையவே நிறையாத என் வயிறோ இக்கடலிலும் பெரிது அதன் பொருட்டே கடலில் மிதக்கிறோம் நானும் என் கட்டுமரமும்” என்று தனது முதல் தொகுப்பில் தன்னிருப்பு சார்ந்து மட்டும் பேசியவர் “நூற்றி முப்பது கோடி வயிற்றில் நீ மட்டும் என்ன சிறப்பென” கேட்பதன் வழி வந்து அடைந்திருக்கும் புள்ளி முக்கியமானது. “பசியை எழுதுகிறவன் அபாயமானவன். பசி போல் அவனும் இவ்வுலகில் அழிவதில்லை” என்று சொல்வதன் மூலம் பசியோடு சேர்த்து தன்னையும் சாஸ்வதத்திற்குள் அமர்த்திக் கொள்கிறார்.
“சிறுவயதில் நல்ல பசியில் சுரக்காத அம்மையின் முலையைக் கடித்துத் தின்றேன்” என்று சொல்லுமிடத்தில் பசியின் தொடக்கப்புள்ளியே வன்முறையாய் இருக்கிறது. இந்த பசிக்கும் அடுத்த பசிக்கும் இடையிலுள்ள இந்த வன்முறை வாழ்வில் ஒரு மனிதனுக்குத்தான் எத்தனை துயர்கள்! அதுவும் அந்த மனிதன் உன்மத்தமும் பேரரறிவும் ஒருசேர அலைக்கழிக்கும் கவிஞனாக இருந்துவிட்டால் என்ன நடக்கும்? நான்கு கவிதைத் தொகுப்புகளாக மாறிப்போகும். இத்தனை அலைக்கழிப்புகளுடன் எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்குமென்று யோசித்தால் அதற்கும் தனது கவிதையில் “நான் நெஞ்சிலிருந்து ஓர் அன்பை எடுத்து வானில் எறிகிறேன். அது சொல்லாகிப் பறக்கிறது. எல்லா கவிதையிலும் படர்வது அதன் நிழலே” என விடை தருகிறார். பித்து நிலையில் கூறப்பட்ட இப்பதிலைக் கொண்டு தமிழ்ச்சமூகம் தன்னை ரொமான்டிசைஸ் செய்துவிடுமோ என்ற பதற்றத்தில் “போ போய் வேறு வேலையைப் பார் பொருளீட்டு புணர் சிரி மரி கவிதையாம் மயிராம்” என்றும் “மற்றபடி ஒரு வியாபாரியோ பைத்தியமோ கவிஞனோ எல்லாம் ஒரே இழவுதான்” என்றும் சொல்லிப் பெருமூச்சு விடுகிறார்.
இளங்கோவின் நான்கு தொகுப்புகளையும் ஒரு சேர வாசிக்கையில் என்னருகில் நின்று என்னை உற்றுநோக்கி கொண்டிருந்தது மரணம். டீசல் நிரப்பிக்கொண்டு என்னருகே நின்ற மரணத்தின் லாரியைக் கண்டு அச்சத்தில் உறைந்து போனேன். பிறந்த கணம் முதல் நம்மை விட்டு ஒருகணம் கூட அகலாது தொடரும் மரணத்தைப் பாடிய இளங்கோவிற்கு ‘மரண பயத்தைக் காட்டிய கவிஞன்’ என்று பட்டமே கொடுக்கலாம்.
“நாம் சொல்லலாம்
நான் இங்கு செல்கிறேன்
அங்கு செல்கிறேனென
நீ எங்கு சென்றாலும்
டிக் டிக் டிக்கென உடல்
குழி நோக்கி
சென்றுகொண்டே இருப்பதைப் பார்”
வயிற்றிலிருந்து வயிறு நோக்கிச் செல்லும் இந்தப் பயணம் குழி நோக்கித்தான் என்பதைச் சொல்லும் இளங்கோ பசி, மரணம் என்ற இரண்டு சாஸ்வதங்களுக்கிடையேயான வாழ்வில் உண்டாகும் மன சஞ்சலம், மன நெருக்கடி, சமூக ஊடாட்டம் ஆகியவற்றை கொந்தளிப்பாகவும் எள்ளலாகவும் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்.
“நம்பிக்கையின் தேவதை ஒரு கொடுங்கோலனின் இருதயத்தால் செய்யப்பட்டவள்” என்று அறிவின் துணை கொண்டு நம்பிக்கையின் மீதான அவநம்பிக்கையைப் பேசுபவர்தான் “ஒரு விடியல் போல் உங்களுக்கு நம்பிக்கை தரும் நண்பன் வேறு யாருமே இல்லை” என்று விடியலின் பூங்கொத்தைக் கையில் ஏந்திக்கொள்கிறார். “பொருளும் அதிகாரமுமற்ற சாமானியன் என்ன செய்யமுடியும் ஒரு கரப்பானையோ சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி” என்று யதார்த்தம் பேசும் சாமான்ய பஷீர்தான் “நான் கண்ட குரங்கும் கழுதையும் குட்டிச்சாத்தானும் பேயும் நீதானே” என்று பித்து மனநிலையில் தன் முன் தோன்றும் அல்லாவைக் கிண்டலடிக்கிறார்.
“உங்களின் நல்வரவின் பொருட்டு எதிர்பார்ப்பு வளர்த்துக் காத்திருக்கிறார்கள் உங்களின் முதிர்ந்த பெற்றோரும் மனைவியும் குழந்தைகளும்” என்று வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தையும் சட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவனின் அவலத்தையும் பேசுபவர்தான் “மேல் ஜோப்பில் பத்திரமாக வைத்திருந்த வீட்டைத் தொலைத்துவிட்டேன்” என்கிறார். “இந்த வாழ்வு குறித்துச் சொல்ல ஏதுமில்லை” என்று தர்க்க அறிவுடன் திட்டவட்டமாகச் சொல்பவர்தான் “எந்த நிலத்தில் விடியல் இல்லையோ அங்கிருந்து எனக்கு ஒரு சொல் வேண்டும். எவரின் ஆன்மா துயரில் இற்றதோ அங்கிருந்து எனக்கு ஒரு சொல் வேண்டும்” என்று அம்மையிடம் மந்திரம் போன்ற ஒரு சொல்லுக்காக உன்மத்தத்துடன் கோரிக்கை வைக்கிறார்.
“என் பயணம் இலக்குகளோடு தொடர்புடையதல்ல. உங்கள் பந்தய மைதானங்களில் முதலிடம் வருபவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் என் வாகனம் ஒரு மண்ணாங்கட்டியை நசுக்குவது போல் தூளாக்கும் அவர்களை” என்று ஆவேசமாக முழங்குபவர்தான் மெல்ல நிதானத்திற்குத் திரும்பி ‘இன்றின் வேங்கை மரத்தில் சீற்றம் அறவே இல்லை’ என்கிறார்.
பேரரறிவு கவிஞருக்குப் பல சமயங்களில் பெருஞ்சுமையாக இருக்கிறது. அது அனைத்தையும் அவருக்குப் பழசாகக் காட்டுகிறது. “பழைய பொருட்களை வாங்குபவன் சைக்கிளில் என் வீதிக்கு வர நான் இந்த பூமியை தூக்கித் தருகிறேன் பட்டாணி கூட பெறாது இந்த மசுரு எனக் கையில் திணித்துவிட்டு நகர்கிறான்” என்று அரத பழசான பூமியைக் காட்டுகிறார். தான் அறியாத புத்தம் புது பூமிக்காக ஏங்கி “என் குட்டிப் பூவே எனை எங்காவது அழைத்துச் செல்லேன் நிஜமாகவே ஏதும் பழசற்ற புதுசுக்கு” என்று கெஞ்சுகிறார். பேரரறிவால் தான் பார்க்க நேர்ந்த கசடையும் கீழ்மையையும் உதைக்க பூமிக்கு வந்த சின்னஞ்சிறு மனுஷியை “நீ எத்தி எத்தி உதைப்பது இந்தப் பழைய பூமியை இதன் கசடை கீழ்மையைத்தானே என் செல்லமே புதுப்பொன்னே!” என்று மகிழ்வோடு வரவேற்கிறார். பேரரறிவால் தான் அறிய நேர்ந்த நேற்றைய வரலாறுகளையும் நாளைய கணிப்புகளையும் துறந்து “இன்றே எங்கள் தியானம், இன்றே எங்கள் கடவுள், இன்றில் பூமி நிலைக்கட்டும்” என்று சொல்வதன் வழி இன்றில், இத்தருணத்தில் வாழ விரும்புகிறார்.
ஆனால் சாத்தானென அவர் குறிப்பிடும் அந்தப் பேரரறிவுதான் உன்மத்தம் கொண்டு பித்து மனநிலையில் எதையும் ரொமான்டிசைஸ் செய்துவிடக்கூடாது என்பதை அவருக்குத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் பொதுப்புத்தியில் ரொமாண்டிசைஸ் செய்யப்படும் அனைத்தையும் தனது கவிதைகளில் உடைக்கிறார். “ஒரு சின்னஞ்சிறு மலர் மனதுக்குள் கொண்டுவரும் சூரிய வெளிச்சத்தை பெரிய விஷயங்களின் கடவுளால் அருள முடிந்ததே இல்லை” என்று சொல்வதன் மூலம் பெரிது, பெரிது என நாம் பீற்றிக்கொள்ளும் அத்தனை பெரிய விஷயங்களையும் அடித்து நொறுக்குகிறார். “ஓர் இலை இவ்வளவு வரலாற்று உணர்வுடன் இருப்பது ஆபத்தானது நண்பா” என்று நம் வரலாற்றுப் பெருமித உணர்வைப் பொசுக்குகிறார். “ஒரு தேசத்தை உருவாக்குவது ஒரு கவிதையை உருவாக்குவதை விடவும் எளிது” என்று சொல்லி தேசம் என்று நாம் கொண்டுள்ள கற்பிதத்தைக் கேள்வி கேட்கிறார். “பாம்புகள் தேள்கள் மட்டும் அல்ல பூக்களும் விஷமாகும் வண்ணத்துப்பூச்சிகளும் விஷம்தான்” என்று சொல்லி பேரன்பின் வேட்டை நிலத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இவை எல்லாவற்றையும் விட என்னை வியப்புக்குள்ளாக்கியது காலங்காலமாய் கவிஞர்கள் வியந்தோதி உள்ள மழையைக் கூட இவர் விட்டுவைக்கவில்லை என்பதுதான்.
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று”
என்று பசி போக்கும் அமிழ்தமென மழையின் சிறப்பைச் சொல்லும் வள்ளுவனின் மரபில் வந்தாலும், தலை வள்ளுவன் தான் வாலென சொல்லிக்கொண்டாலும் இளங்கோ காட்டும் மழை முற்றிலும் வேறொன்றாய் இருக்கிறது.
“கொட்டும் மழையில் எங்கொதுங்கி தப்பிக்க எங்கொதுங்கி தப்பிக்க ஓடும் ஒரு லாரியின் சக்கரத்தினடியில்” என்று மழையையும் மரணத்தையும் அவர் இணைக்கையில் அத்தனை ஈரத்திலும் மனம் வெம்புகிறது. ‘மழை வாழ்த்து’ என்று தலைப்பிட்ட கவிதையில் “எம் மக்களை நாளையற்றவர்கள் ஆக்குகிறாய் இவ்வளவு பெரிய நகரத்தில் ஒரு பூச்சி போல் எங்களை உணரச்செய்கிறாய்” என்று வாழ்த்துவது போல் தூற்றுகிறார். “சோவென மழை பெய்த நாளில்தான் என் தாத்தா காலமானார் இந்த மனுஷனுக்கு வாழத்தான் தெரியலைன்னா சாகவும் தெரியலை” என்றும் “கொட்டும் மழையில் சவ ஊர்வலத்தில் செல்பவனே என்ன பீடை உற்றாய் இந்த இழிவு கொள்வதற்கு” என்றும் சொல்வதன் மூலம் மழையும் மரணமும் பீடையும் ஒன்றிணைகின்றன. இவரது கவிதைகளில் வரும் மழை சித்திரம், மரபான மனதை மீறி ஒரு நகரத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்ட நவீனக் கவிஞனாக அவர் வெளிப்படும் புள்ளியைக் காட்டுகிறது.
‘சிங்காதி சிங்கம்’ என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் தான் சிங்கம்தானா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. “நான் நிலைக்கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் எனை நோக்கும் ஒரு பெப்பரப்பே” என்று சொல்லி பெப்பரப்பே ஆகிறார். “உன் அழகான கழுதைக் குட்டி அதன் காதுகளில் அதை ஒரு குதிரை எனச் சொல்லியிருக்கக் கூடாது நீ” என்று சொல்வதன் மூலம் தான் ஒரு கழுதைக்குட்டிதான் என்பதை ஒப்புக்கொள்கிறார். இப்படியான சுய பகடிகள் மூலம் ஒரு சிறந்த நவீன கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார் இளங்கோ.
‘காயசண்டிகை’, ‘பட்சியன் சரிதம்’, ‘பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’, ‘வியனுலகு வதியும் பெருமலர்’ என்ற நான்கு தொகுப்புகளையும் ஒரு சேர வாசித்து முடித்த போது ஒரு வாசகியாக இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள பறவையின் வாலைப் பற்றிக்கொண்டு உன்மத்தத்திற்கும் பேரரறிவுக்குமிடையே அலைவுறும் பட்சியனாகத்தான் இளங்கோவைப் பார்த்தேன். இந்தப் பட்சியனின் வாலைப் பற்றிக்கொண்டு பறக்க அடுத்த தலைமுறை தமிழில் நிச்சயம் எழுந்து வரும். அதற்கான வலுவும் திராணியும் கொண்டது அவரது கவிதை உலகம் என்பதைத் துணிந்து சொல்வேன்.
வியனுலகு வதியும் இளங்கோ கிருஷ்ணன் என்ற பெருமலர் என்றென்றும் மணம் வீசட்டும்!
**********************************
எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு- மறைந்த முகம்
அன்புள்ள ஜெ,
ஆனந்தபோதினி கட்டுரையை வாசித்தேன். அதிலுள்ள சுட்டிகளைச் சொடுக்கிச் சொடுக்கிச் சென்றபோது ஒரு பெரிய வரலாறே கிடைத்தது. அதில் ஆச்சரியமூட்டும் ஆளுமை எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு. எவ்வளவு பெரிய ஆளுமை. ஆனால் முழுக்கவே மறக்கப்பட்டுவிட்டவர். அவரை மீண்டும் திரட்டி கொண்டு வந்து நிறுத்திய ஆ.இரா.வேங்கடாசலபதி நன்றிக்குரியவர். இத்தகைய எல்லா ஆளுமைகளையும் மீண்டும் நிறுவுவது நல்ல கலைக்களஞ்சியத்தின் பணி. ஆனால் இணையக் கலைக்களஞ்சியம் என்பது ஒரு இணைப்பு வலை. சுப்ரமணிய பாரதி பற்றிய கட்டுரையில் எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு பற்றிய குறிப்பு இருந்தால் கூடவே அவரும் அழியாமல் இருப்பார். அதுதான் தமிழ் விக்கியின் பெரும்பணி என நினைக்கிறேன்.
சங்கர் ராமானுஜம்
எஸ்.ஜி.ராமானுஜலு நாயிடுஇந்திய ஞானம்- மதிப்புரை
வேதங்கள், இதிகாசங்கள், திருக்குறள், மதச்சடங்குகள் உள்ளிட்ட அலகுகளில் மற்றும் கேள்வி-பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இம்மின்நூல்.
இவருக்கு மட்டும் எங்கிருந்துதான் இத்தனை சொற்கள் நினைத்த மாத்திரத்தில் கிடைத்துவிடுகின்றன என்றவாறு பெரும் வியப்பை ஏற்படுத்தும் சொற்களின் ஊற்று இக்கட்டுரைகளில் நிறைந்துள்ளன.
தலைப்பு சார்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளோ அல்லது கடுமையாக விமர்சிக்கப்படும் கேள்விகளுக்கான எதிர்வினைகளோ எதுவாயினும் ஆழ்ந்த சொற்களைக் கொண்டு உருக்கொள்ளும் ஜெயமோகனின் அல்புனைவு வடிவங்கள் வாசகனை மலைக்க வைப்பவை.
‘அனைத்து அறிவார்ந்த மரபுகளும் அறுபட்டு அரசியலும் பண்பாடும் சிதறிக் கஞ்சிக்குப் பறந்த ஒரு நீண்ட காலகட்டம் உண்டு. அன்று பட்டினியால் பரிதவித்தலைந்த மக்களுக்கு இந்திய ஞானமரபின் தத்துவ உச்சங்கள் எப்படிப் பொருள்பட்டிருக்கும்? வறட்டு வேதாந்தம் என்பதில் உள்ள கசப்பு அப்போது உருவானதாகவே இருக்க வேண்டும்’
ஜெமோவின் மேற்கண்ட வரிகள் ஞானம்,தத்துவம் உள்ளிட்ட வகைமைகளில் சாமானிய மக்களின் தொடர்புகள் அறுந்தமைக்கான புரிதலை ஏற்படுத்திவிடுகிறது.
ஊரைவிட்டு விலகுதலை அக்காலச் சமூகம் இழிவாக கருதி இருந்ததை அறிய முடிகிறது.
‘ஒருவனின் உண்மையான ஒழுக்கத்தை அவனே அறிவான். உலகின் கண்களில் இருந்து முழுமையாகவே தன் தீய ஒழுக்கத்தை ஒருவன் மறைத்துவிட முடியும். அந்நிலையில் தீய ஒழுக்கத்தின் சமூக விளைவையும் அறியாமல் அவனால் வாழ்ந்துவிட முடியும். அப்படியானால் அவன் தப்பிவிட முடியுமா? அவன் ஒழுக்கங்களை அறியக்கூடிய, அதன் இன்ப துன்பங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அவனுடன் உள்ளது. அவன் உடல். அது அறியும். அது அச்செயல்களின் எதிர்விளைவுகளை அனுபவிக்கும்’.
மணம் செய்த செயலுக்கு மெய் தண்டிக்கப்படுவதன் நிதர்சனத்தை உணர்த்திய வரிகள் மேற்கண்டவை.
திருக்குறளை முழுமையான நீதியாகவும், எக்காலத்துக்கும் உரிய நீதியென்றும், உலகப் பொதுமறை என்றும் குறிப்பிடுவதை மிகைக் கூற்றுகள் என்கிறார் ஜெமோ.
எல்லா நீதி நூல்களும் காலாவதியாகும் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.
‘இந்த மக்கள் நம்மை மதிக்கிறார்கள், நம்மைப் பிரியமாக வரவேற்கிறார்கள், நாம் சொல்வதை கவனமாகக் கேட்கிறார்கள். ஆனால் நம் கருத்தை மட்டும் ஏற்றுக் கொள்வதே இல்லை’
பெரும்பாலான மதப் பரப்புரையாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக ஒரு கட்டுரையில் இடம் பெறுகிறது. எல்லா காலங்களுக்குமான உண்மைகள் இவை.
பிற்கால பௌத்த சமய கூற்றாக இடம்பெறும் கீழ்க்கண்ட வரியும் சிந்திக்கத்தக்கது.
‘மனிதனின் அறிவு தன்னளவில் உண்மையை குறைபடுத்தி மட்டுமே அறியும் இயல்பு கொண்டது. ஆகவே அவன் தன் அறிவால் உணரக்கூடிய எல்லாமே அவனால் திரிக்கப்பட்ட உண்மையே’.
கேட்கப்படும் எந்த ஒரு கூற்றுக்கும் எப்போதும் இது போன்ற நிலைதான் நீடிக்கிறது.
நேர்மறையான அணுகுமுறைகளைக் காட்டிலும், வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைத்து விடுவதாகவும், அதுவே மிக முக்கியமான அரசியல் ஆயுதமாக நீடிப்பதாகவும் ஆதங்கப்படுகிறார் ஜெமோ.
தியானத்தின் வழிமுறைகளாக மனதைக் குவியச் செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரைய வைத்தல் என்று மூன்று படிகளில் எளிமையாக விளக்குகிறார்.
பல நேரங்களில் செழுயான இக்கட்டுரைகளின் பக்கங்கள் நகர மறுக்கின்றன. பெரும் மாயம்போன்று ஒரு வார்த்தை ஒரு நொடியை விடக் குறைவான கால அளவில் பிரக்ஞையை மீட்டெடுத்து மிக வேகமான வாசிப்பை முன்னெடுத்துச் செல்கிறது.
‘நமது கணித ஆசிரியரை நம்மிடமிருந்து மறைப்பது அவர் நமக்கு கற்பிக்கும் கணிதமே’
மீண்டும் மீண்டும் வாசித்து பெரிதும் மகிழ்ந்தேன் மேற்கண்ட வரியை.
அறிவியலில் மேம்பட்ட மெத்தப்படித்த நபர் ஒருவர், அறிவியல்-தத்துவம் குறித்த கேள்வி ஒன்றை வலுவாக எழுப்புகிறார். அதற்கான ஜெமோவின் நீண்ட எதிர்வினையும், தொடர்ச்சியான அவருடனான உரையாடல்களும் இந்நூலின் பிற சிறப்புகள்.
மிக வேகமாக, மிக அதிக பக்கங்கள் படைத்து விடும் திறமை மட்டும் பெற்றவர் அல்ல ஜெயமோகன், தனது எழுத்துக்களை, வாசிப்பவரின் சிந்தனைக்குள் மிக எளிதாக நுழைத்து, அறிந்தவற்றை நுட்பமாக கேள்விக்குள்ளாக்கி, நீண்ட விவாதங்களை தோற்றுவிக்கும் அசாத்தியமான ஆற்றலும் கைவரப் பெற்றிருக்கிறார்.
நல்லதொரு வாசிப்பனுபவத்தை அளித்துவிட்ட மற்றுமொரு நூல் இது.
சரவணன் சுப்ரமணியன்
யானை டாக்டர்- காணொளி
அன்புள்ள ஆசானுக்கு,
வணக்கம். நலமா ?
யானை டாக்டர் சிறுகதையில் இருந்து, போத்தல்களை காட்டில் எறிவதால், யானைக்கு ஏற்படும் தீங்கை பற்றி ஒரு வீடியோ செய்து யூட்யூபில் பதிவேற்றம் செய்துள்ளேன். தங்களின் பார்வைக்கு.
அன்புடன்,
பா . ராஜகுரு
June 1, 2022
அறிஞர்களின் தவறுகள்
அன்புள்ள ஜெ,
நலம் தானே
தமிழ் விக்கி என்ற தளத்தில் மிகவும் முனைப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறீர்கள், பாராட்டுகள் உங்கள் வலை தளத்தில் உள்ள புத்தக விமர்சனம் மேலும் உங்கள் பரிந்துரை புத்தகம் ஆகியவற்றை முடிந்த வரை படித்து வருகிறேன் .அப்பிடி சமீப காலத்தில் வாங்கிய புத்தகம் தன் இந்திய வரலாறு காந்திக்கு பிறகு.
ராமச்சந்திர குஹா அவர்கள் மிக நடுநிலையாகவும் நேர்த்தியாகவும் நம்முடைய அரசியல் வரலாறு மற்றும் கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் குறிப்பிட்டுள்ளார் என்று சொன்னீர்கள். உங்கள் பரிந்துரை வேறு அல்லவா, நான் மிகவும் நம்பித்தான் படித்தேன். ஆனால் புத்தகத்தின் இரண்டாம் நிலையில், பக்கம் 178 இல், மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார் என்று இருக்கிறது. அதை வாசித்த உடன் மீண்டும் ஒர் அரசியல் புத்தகத்தை உண்மைக்குப் புறம்பாக அடியொற்றி விட்டோமோ என்று சந்தேகம் இருக்கிறது. இதை ராமச்சந்திர குஹா தவறாக எழுதினாரா, இல்லை சாரதி அவர்கள் தவறாக குறிப்பிட்டரா என தெரியவில்லை.
எனக்கு என்ன சந்தேகம் என்றால் இதுபோன்று பல விசயங்கள் வரலாற்றில் இருந்து மறைத்து எழுதுவது தெரியவருகிறது. மீண்டும் மீண்டும் எதாவது ஒரு வகையில் இளைய தலைமுறைக்கு இந்த மாதிரியான பொய்ப் பிரச்சாரம் மட்டுமே போய்ச்சேருமா. அரசியல் கூட்டங்கள் அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள் எல்லா இடங்களிலும் இது நிறைத்து காணப்படுகிறது. இந்த சிக்கல்களை நாங்கள் எப்பிடி புரிந்து கொள்வது. எனக்கு தெரிந்த நான்கு பேருக்காவது நன் இன்றைய அரசியல் பொருளாதார உண்மைச் சிக்கல்களை எப்பிடி உண்மை எடுத்து கூறுவது.
இந்த புத்கத்தின் 178 பக்கத்தை படித்த பின் என் எண்ணம் முழுவதும் இதுவும் எதோ ஒரு சார்புடையது என்றுதான். நான் இதுவரை வாசித்த அனைத்தும் இதை போல் நான் அறிந்திராத விஷயங்கள் பற்றி பொய் சொல்வனவாக இருந்தால் எப்படி நான் உண்மையை அறிவது என்ற வினா எழுகிறது. மேற்கொண்டு இந்த புத்தகத்தை மேலும் படிக்கும் எண்ணமும் இல்லை. பெரும்பான்மையினர் உண்மைகளை ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாதா என வருந்தி இதை எழுதுகிறேன் .
ஜெகநாதன்
வேம்பார்
***
அன்புள்ள ஜெகநாதன்,
அறிஞர்களின் பிழைகளை நாம் குறிப்பிடத்தக்க நூல்களில் கூட பார்த்துக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, இந்தியாவைப்பற்றி காரல்மார்க்ஸ் அவருடைய கட்டுரைகளில் குறிப்பிடும் செய்திகளில் பெரும்பாலானவை காலனி ஆதிக்கவாதிகளால் எழுதப்பட்டவை. அவை பெரும்பாலும் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை, மேலோட்டமானவை. அதே போல ஆப்பிரிக்க சமூகத்தின் வளர்ச்சி மற்றும் பரிணாமம் பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய பெரும்பாலான கருத்துக்கள் காலனியாதிக்கவாதிகளின் பதிவுகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. அவை பிழையானவை என்று இன்று தொடர்ந்து நிறுவப்படுகிறது.
ஐரோப்பியர் பதினேழாம் நூற்றாண்டு முதல் உலகமெங்கும் பயணம் செய்தனர். அங்கே வணிக ஆதிக்கத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும் உருவாக்கினர். அதன்பொருட்டு அந்த பண்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து எழுதினர். பெரும்பாலான கீழைப் பண்பாடுகள், ஆப்ரிக்க பண்பாடுகள் தங்களைப்பற்றிய புறவயமான வரலாற்றை எழுதிக்கொள்ளாதவை. ஆகவே அவற்றின் வரலாறு ஐரோப்பியர் எழுதியவற்றை ஒட்டியே மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகள் பற்றி கிடைக்கும் எல்லா தரவுகளும் காலனியாதிக்கவாதிகள் எழுதியவையே.
விளைவாக ஐரோப்பா அல்லாத நாடுகளின் சமூகப்பரிணாமம், பொருளியல் உற்பத்தி, பொருளியல் விநியோகம் ஆகியவை சார்ந்த ஐரோப்பியர்களின் கருத்துக்கள் பெரும்பாலானவை காலனியாதிக்கவாதிகள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்களின் சூழலுக்கு ஏற்ப, தங்களுடைய முன்முடிவுகளுக்கு ஒப்ப, அரைகுறை தரவுகளிலிருந்து உருவாக்கிக்கொண்டவையாக உள்ளன.
காலனியாதிக்க உளநிலைக்குச் சிறந்த உதாரணம் கால்டுவெல். கால்டுவெல் இன்று தமிழகத்தின் வரலாற்றெழுத்து, பண்பாட்டு வரலாற்றெழுத்து ஆகியவற்றில் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.இந்திய மொழியியலில் கால்டுவெல்லின் கொடையை, தமிழகத்து எளிய மக்களுக்கு அவர் அளித்த கல்விச்சேவையை எவரும் மறுக்க முடியாது.
ஆனால் தமிழர்களைப்பற்றி அவர் சொன்ன கருத்துக்களை அப்படியே இன்று எடுத்து எழுதினால் இன்றைய தமிழர்கள் கொந்தளிப்படைவார்கள். தமிழர்களுக்கு பழங்குடிப் பாரம்பரியம் தவிர எந்தப்பண்பாட்டு வளர்ச்சியும் கிடையாது என்று அவர் குறிப்பிடுகிறார். பழங்குடிப்பாரம்பரியம் என அவர் சொல்வது காட்டுமிராண்டித்தனம் என்னும் பொருளில். பேய் வழிபாடு, குலக்குறி வழிபாடு ஆகியவையே இங்குள்ள மதம் என்றும், அதற்குமேல் எந்த தத்துவமும் மெய்யியலும் தமிழர்களுக்கு இல்லை என்றும் சொல்கிறார். இங்குள்ள நாகரீகம், தத்துவம் அனைத்தும் பிற அனைத்தும் ஆரிய பிரமாணர்களால் இங்கு கொண்டுவரப்பட்டவை என்றும் அவர் வாதிடுகிறார்.
கால்டுவெல் நாடார் சாதியைப்பற்றி எழுதிய நூல் ‘திருநெல்வேலி சாணார்கள்’ நாடார் குலத்து அறிஞர்களின் மிகக்கடுமையான எதிர்ப்பைப்பெற்றது. அந்நூலை வெளியிடுவதை அவரே பின்னர் நிறுத்திவைத்தார். ஆனால் இன்றும் ஐரோப்பிய இந்தியவியல் ஆய்வாளர்களில் பலர் அந்நூலிலிருந்து அடிப்படைத்தரவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக அண்மைக்காலத்தில் ஆய்வு செய்த அறிஞர்கள் கூட கால்டுவெல்லின் நூலிலிருந்து ஆழமான செல்வாக்கை அடைந்திருக்கிறார்கள்.
இது இந்தியர்களாகிய நாம் எதிர்கொள்ளவேண்டிய ஒரு சிக்கல். தரவுகளில் பிழைகளை நாம் சமநிலையுடன் அணுகவேண்டும். அப்பிழைகளை மூன்றாகப்பிரித்துக் கொள்ளலாம்
அ. முன்முடிவால் உருவாகும் பிழைகள்- கால்டுவெல் உருவாக்கியவை.
ஆ. மூலத்தரவுகள் சரியாக இல்லாமல் உருவாகும் பிழைகள். அவற்றின் அடிப்படையில் சில கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கும். அப்பிழைகளால் அந்த கொள்கைகளும் பிழையாக இருக்கும். உதாரணம், கார்ல் மார்க்ஸின் ஆசிய உற்பத்தி முறை பற்றிய கருத்துக்கள். அண்மைய உதாரணம், சி.ஜே.ஃபுல்லர் எழுதிய ‘தேவியின் திருப்பணியாளர்கள்’
இ. சாதாரணத் தரவுப்பிழைகள். அவற்றின் அடிப்படையில் அந்த ஆசிரியரின் கொள்கைகள் நிறுவப்பட்டிருக்காதென்றால் அவை அத்தனை பெரிய பிழைகள் அல்ல. நீங்கள் குறிப்பிடும் குகாவின் பிழை அத்தகையது.
உதாரணமாக அந்த தகவலை ஆதாரமாகக் காட்டி குகா எம்.ஜி.ஆருக்கு முன்பு தமிழகத்தில் அடிப்படைக் கல்வியே இல்லை என்றும், எம்.ஜி.ஆர் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்ததனால்தான் அடிப்படைக்கல்வி உருவானது என்றும் வாதிட்டிருந்தால் அது இரண்டாம் வகை பிழை. அந்த தரவு அவர் நூலில் எதையும் நிறுவும் மூல ஆதாரமாக இல்லை. ஆகவே அது மூன்றாம் வகை பிழை அது
இந்த வேறுபாடு நம் பார்வையில் இருக்கவேண்டும். நாம் அறிந்தோர் என நமக்கே காட்டிக்கொள்வதற்காக சிறு தரவுப்பிழைகளை தேடிக்கண்டடைவது, அதையொட்டி செயற்கையான சலிப்பு, எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துவது அறிவுச்சூழலில் எந்த ஊடாட்டமும் இல்லாதவர்கள் கொள்ளும் ஒரு பாவனை. அது நமக்கு வரக்கூடாது. பிழைகள் எவர் கண்ணுக்கும் படும். ஒரு பிழையை நாம் கண்டடைந்தமையால் நாம் எவ்வகையிலும் மேலானவர்கள் ஆவதில்லை.
*
ஆய்வின் சில சிக்கல்களை மேலே சொல்லவேண்டும்.
தரவுகள் எப்போதுமே ஒருபக்கச் சார்பானவைதான். முழுமையான சரியான தரவுகள் எந்த அறிஞருக்கும் கிடைப்பதில்லை. அவர் தன்னளவில் முன்முடிவுகள் கொண்டவராக இருந்தால் தனக்கு சாதகமான தரவுகளையே எடுத்துக்கொள்வார். ஆய்வுநெறி இல்லாமல் அரசியல் சார்ந்தோ அல்லது வேறுபார்வைகள் சார்ந்தோ முடிவுகளை உருவாக்கிக்கொண்டு ஆராய்ச்சி செய்பவராக இருந்தால் கிடைக்கும் ஒரு தரவைக்கொண்டே கோபுரம் கட்டி வைத்திருப்பார். அந்த தரவை இன்னொரு முறை உறுதிசெய்ய மெனக்கெட மாட்டார். ஆகவே பெரும்பிழைகள் உருவாகிவிடும்.
தரவுகள் ஆய்வாளர்களுக்கு அடிப்படையானவை.அறிஞர்களுக்கு அவை துணைப்பொருட்களே. ஆகவே ஆய்வாளர்களை நாம் ஆய்வுநோக்கில், அவர்களின் தரவுகளை இன்னொருமுறை பரிசீலனை செய்துவிட்டே ஏற்கவேண்டும். தரவுகளை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள், எதை எடுக்கிறார்கள் எதை மழுப்புகிறார்கள் என்று ஒவ்வொரு முறையும் பார்க்கவேண்டும்.
ஏனென்றால் அரசியல், பொருளியல், சமூகவியல் களங்களில் நேரடியாகவே அதிகாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே அதில் ஆய்வாளர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு கட்சி, அல்லது அதிகாரத்தரப்பின் குரல்களே.
நான் பொதுவாக ஆய்வாளர்களை என் சிந்தனைக்கான வழிகாட்டிகளாக கருதுவதில்லை. ஓர் ஆய்வாளரை பயில்கையில் அவருக்கு எதிரான இன்னொரு ஆய்வாளரையும் கருத்தில் கொள்வேன்.
நான் அசல் சிந்தனையாளர்களையே எனக்கான வழிகாட்டிகளாகக் கருத்தில்கொள்வேன். ஓர் அறிஞர் தரவுகளைக்கொண்டு மட்டும் தன் தரப்பை நிறுவுவார் என்றால் அவரை ஒருபடி குறைவானவர் என்றும், பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவர் என்றுமே எண்ணுவேன். அவருடைய ஆய்வுகளிலிருந்து உள்ளுணர்வு சார்ந்து என்ன வெளிப்படுகிறது என்பதே எனக்கு முக்கியம்.
உள்ளுணர்வு என்பது தரவுகளைவிட நம்பகத்தன்மை கொண்டது என்பது என்னுடைய எண்ணம். தரவுகளிலேயே விளையாடும் பல அறிஞர்களை எனக்குத்தெரியும் அவர்கள் தரவுகளை எடுத்துகொள்வதில்லை. தரவுகளிலிருந்து சில தரப்புகளைத்தான் எடுத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.
ஒரு நல்ல கட்டுரையின் சாராம்சமென்பது அதன் ஒட்டுமொத்தத்தில் இருக்கிறது. அதில் ஒரு செய்தி அல்லது ஒரு தரவு சரியாக இல்லை என்றால் கூட ஒட்டுமொத்தமாக அதனுடைய ‘தீஸிஸ்’ அதாவது கருத்துரைப்பு சரியா என்பது தான் நான் கவனித்துக்கொள்வது. அந்த சிந்தனையாளரின் ஒட்டுமொத்த தரிசனம் என்ன என்பதையே நான் முதன்மையாக கருத்தில் கொள்வேன்
என்னைப்பொறுத்தவை ராமச்சந்திர குஹாவோ இன்னொருவரோ என்னுடன் விவாதிக்கிறார்கள். எனக்கு முடிவுகளை அளிப்பதில்லை, நான் முடிவுக்குச் செல்ல உதவுகிறார்கள். நான் ஏற்கனவே சிந்தித்துக் கொண்டிருப்பவற்றிக்கு உரமளிக்கிறார்கள். அவற்றில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறார்கள். அவற்றிற்கு எதிர்நிலையாக அமைந்து அவற்றை உடைத்தோ மறுசீரமைக்கவோ உதவுகிறார்கள்.
அதில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை வைத்தே ஒரு சிந்தனையாளரை நான் மதிப்பிடுகிறேனே ஒழிய அவர் எத்தனை தரவுகளை எனக்களிக்கிறார் என்பதை வைத்து அல்ல. தரவுகளின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இல்லை.
இரவுபகலாகத் தரவுகளில் நீராடும் பல மலையாள இதழியல்- பொருளியல் நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்கள் எதை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை அணுக்கமாக பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அவர்கள் ஓர் அதிகாரத் தரப்பை ஏற்றதும் அவர்களின் தரவுகள் அப்படியே தலைகீழாக மாறிவிடுகின்றன. அவர்கள் தரவுகளை குறிப்பிட்ட வகையில் அடுக்கினால் அது உண்மை ஆகிவிடும் என்று நம்மை நம்பச்சொல்கிறார்கள். கண்கூடான அனுபவத்திற்கு அது எதிரானதாக இருக்கும்போது கூட தங்கள் வாதத்திறமையால் நிறுவிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
அவர்கள் எங்கு தோற்கிறார்கள் என்றால் அதே தரவுகளுடன் அதற்கிணையான தர்க்கத்திறமையுடன் இன்னொருவர் வந்து அதற்கு எதிர்மறையான ஒன்றை அதேபோல நிறுவிவிட முடியும் என்ற சாத்தியத்தில் இருந்துதான்.
ராமச்சந்திர குஹாவிடம் நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த தரவு பிழையானது. ஆனால் தவிர்க்கக்கூடிய சின்னப்பிழைதான். ஏனென்றால் அவருக்கு அளிக்கப்பட்ட தரவுகளில் இந்தப்பிழைகள் இருந்திருக்கலாம் .அது சரிப்பார்ப்பதில் நிகழ்ந்த பிழையே அன்றி உள்நோக்கம் கொண்ட பிழை அல்ல.
ஜெ
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


