Jeyamohan's Blog, page 771
May 30, 2022
ஆர். சண்முகசுந்தரம்- அழியாக்குரல்
தமிழிலக்கியத்தில் சில படைப்பாளிகள் இயல்பாக வாசகர்களால் மறக்கப்படுவார்கள். ஆனால் தொடர்ந்து விமர்சகர்களால் அவர்கள் நினைவூட்டப்படுவார்கள். நிலைநிறுத்தப்படுவார்கள். ஆர்.சண்முகசுந்தரம் அவர்களில் ஒருவர். அவருடைய படைப்புகள் வாசகனை சீண்டுபவை அல்ல. சிந்திக்க வைப்பவையும் அல்ல. அவை எளிய யதார்த்தச் சித்திரங்கள், நேர்மையால் கலையாக ஆனவை. அவரை முன்வைத்தவர்களில் க.நா.சுப்ரமணியம், சிற்பி பாலசுப்ரமணியம், பெருமாள் முருகன் என மூன்று தலைமுறை விமர்சகர்கள் உண்டு.
சண்முகசுந்தரம், அவர் நாவல்கள் பற்றிய பதிவு
ஆர். சண்முகசுந்தரம் – தமிழ் விக்கி
ஆர்.சண்முகசுந்தரம்
அஜிதனின் கட்டுரை – கடிதம்
ஜெ
சியமந்தகம் இதழில் வந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அருமை. வெவ்வேறு கோணங்களில் உங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் உணர்ச்சிகரமானவை.இத்தனை உணர்சிகரமான ஈர்ப்பு உங்களுக்கு இருக்கிறது என்பது ஆச்சரியம். வழக்கமாக வாசகர்கள்தான் இப்படி கடிதங்கள் எழுதுவார்கள்.அப்போது சில அரசியல்காரர்கள் இதெல்லாம் பொய் என்பார்கள். இப்போது எழுத்தாளர்கள் அத்தனை உணர்ச்சிகரமாக எழுதுவதைப் பார்த்து என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு விஷயத்தைச் சொல்வதற்காகவே இதை எழுத ஆரம்பித்தேன். அஜிதன் எழுதிய கட்டுரை. மிக அபூர்வமான கட்டுரை அது. தந்தை, ஆசிரியர், எழுத்தாளர் என மூன்று நிலைகளில் உங்களை மதிப்பிட்டு வகுத்துச்சொல்கிறது அந்தக் கட்டுரை. உங்கள் எழுத்துக்களை அழகியல் சார்புடனும் தத்துவச் சார்புடனும் மதிப்பிட்டுச் சொல்கிறது. அதிலும் செவ்வியல் இலக்கியங்கள் மனிதனின் அடிப்படையான துக்கத்தை எப்படியெல்லாம் கையாள்கின்றன, அதிலுள்ள வகைமாதிரி என்ன என்று விவாதிக்கும் பகுதி அற்புதமானது. பற்றின்மையின் விளைவாக வரும் சமநிலைதான் இலக்கியம் அளிக்கும் விடுதலை என்பது மிக அசலான ஒரு தரிசனம்.
ஜெ, குட்டி பதினாறடி தாவிவிட்டது. இந்த அளவுக்கு அழகுணர்வும் தத்துவ ஆழமும் கொண்ட ஒரு கட்டுரையை நீங்கள் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். (தமிழில் நீங்கள்தான் இந்த தரத்திலான கட்டுரைகளை எழுதும் ஒரே எழுத்தாளர்) .உங்கள் முப்பது வயசுக்குள் நீங்கள் எழுதிய கட்டுரைகளுடன் ஒப்பிட்டால் இந்தக் கட்டுரை மிகமிக உயரத்தில் உள்ளது. ’சான்சே இல்லை’ என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். மிக நுட்பமான, ஆழமான விஷயங்கள். ஆனால் நல்ல ஓட்டமுள்ள மொழி. சிந்தனையில் தெளிவுடன் எழுதப்பட்ட கட்டுரை.
ஸ்ரீனிவாஸ்.எஸ்
பற்றுக பற்று விடற்கு – அஜிதன்அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,
உண்மை, என் முப்பது வயதில் அந்தக் கட்டுரைக்கு இணையான ஒன்றை எழுதியிருக்க முடியாது. இன்று எழுதும் மிகச்சிறந்த கட்டுரை மட்டுமே அஜிதனின் அக்கட்டுரையின் தரிசனம், தீவிரம் கூடவே தெளிவை அடைய முடியும்.
அதற்கு அவனுடைய தனித்தன்மை, உழைப்பு ஆகியவை காரணம். ஆனால் மேலும் சில சொல்லவேண்டும். என் இளமையில் நான் ஒரு நூலை கண்டு பிடிக்க ஏழுமணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஏராளமான குப்பைகளை வாசித்து நானே ஒரு நல்ல நூலை அடையாளம் காணவேண்டியிருந்தது. அத்தனைக்கும் மேலாக என் வாழ்க்கையில் பெரும்பகுதி பிழைப்புக்கான கல்வி, பிழைப்புக்கான வேலையிலும் செலவாகியது.
அஜிதனுக்கு, அவன் தலைமுறைக்கு தொழில்நுட்பம் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. வேண்டிய நூல் கைசொடுக்கும் நேரத்தில் கிடைக்கும். உரிய நூல்களை இணையவெளி சரியாக அறிமுகம் செய்கிறது. ஒரு நூலின் குறிப்பை, சுருக்கத்தை வாசித்துவிட்டு முழுமையாக வாசிக்கலாம். கையிலேயே ஒரு மாபெரும் நூலகத்தை வைத்திருக்கலாம்.
அந்த மாபெரும் வசதியை எவ்வகையிலும் பயன்படுத்தாமல் இணையவெளி அளிக்கும் அரட்டைகளுக்கான வாய்ப்பில் மூழ்கி தன்னை சிதறடிப்பவர்கள் தான் இங்கே மிகப்பெரும்பான்மையினர். காட்சியூடகங்களின் வெறும் பார்வையாளர்களாக அமர்ந்து பொழுதை அழிப்பவர்கள். எந்த தொழில்நுட்பம் கற்பதற்கு இவ்வளவு வாய்ப்பை அளிக்கிறதோ அதே தொழில்நுட்பமே ஒவ்வொரு தனிமனிதனைச் சுற்றியும் வெற்று அரட்டைகள் மற்றும் எளிய கேளிக்கைகளை கொண்டு குவித்து அவனை ஒருகணம்கூட சிந்திக்கவிடாமலும் ஆக்குகிறது.
அஜிதன் அதிலிருந்து முழுமையாகவே தப்பித்துக்கொண்ட இளைஞன். வாழ்க்கைக்காக கற்பது, வாழும்பொருட்டு வேலை செய்வது இரண்டையும் அஜிதன் செய்ய நேரவில்லை. அவன் விரும்பியதை மட்டுமே செய்யும் நிலையில் இருக்கிறான். ஆகவே முழுநேரமும் கற்பனவனாக வாழ முடிகிறது. இதுவும் இன்றைய சூழல் அளிக்கும் கொடைதான்.
ஜெ
டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்
அன்புள்ள ஜெ,
நலமா? உங்களையும் திருமதி. அருண்மொழி நங்கை அவர்களையும் டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸில் நடந்த வாசகர் சந்திப்பில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியையும், மன உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. பூன் முகாம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்போதிருந்த மனநிலையில் என்னால் அங்கு முழு ஈடுபாட்டுடன் செயல்படமுடியாமல் போகும் என்பதால் அப்போது பதிவு செய்யவில்லை. பூன் முகாமில் கலந்துகொண்ட நண்பர் திரு.ஜெகதீஷிடம் பேசியதிலிருந்தும், அது தொடர்பான கடிதங்களைப் பார்க்கும் போதும் அந்நிகழ்வு நான் எதிர்பார்த்தது போல மிகச் சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது மகிழ்ச்சி.
டல்லாஸில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து முதல் நாளே அங்கு வந்திருந்தேன். நிகழ்ச்சி நடக்கும் அன்று டல்லாஸிலிருந்த நூலகத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நானும் என் நண்பன் திரு.சிவா துரையும் வந்து காத்திருந்தோம். அன்று காலையிலிருந்தே ஏதோ ஒரு பதட்டம் இருந்தது. சொல்லுக்குண்டான அர்த்தம் தெரிந்தவுடன் மனம் அதனை விரித்துப்பார்ப்பதுபோல, அந்த பதட்டம் உங்களை நான் முதன் முதலில் பார்க்கப்போவதால் தான் என்று உணர்ந்த தருணம் மனம் அந்த பதட்டத்தை இரட்டிப்பாக்கியது. அது, என்னுடன் வந்த என் நண்பன் ஒரு வித தவிப்புடன் நின்றுகொண்டிருந்த என்னை உற்றுநோக்கி வித்தியாசமாகப் பார்க்க வைத்தது. என் அருகில் நின்றுகொண்டிருந்த சிறுமி பல வண்ணங்களில் ஒளிவிடும் மலர்க்கொத்தைக் கையில் ஏந்தி உங்களிடம் கொடுக்க நின்றுகொண்டிருந்தாள். என் நண்பன், “யாருக்கு? ஜெ சாருக்கா?” என்றான். அவள் புன்னகையுடன் “ஆம்” என்று தலையசைத்தாள். எழுத்தாளர்களைக் கொண்டாடும் ஊர் இது. என் நாற்பது வயதில் உங்களைப் பார்க்க எனக்கிருந்த அந்த ஆர்வம் எட்டு வயது கொண்ட அந்த சிறுமியிடமும் இருந்தது பொறாமையாகவே இருந்தது. என் நண்பன், “நாமும் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கலாம். இல்ல?” எனக் கேட்டான். ஏற்கனவே அந்த சிறுமியின் ஆர்வத்தைக் கண்டு திகைத்து நின்ற நான் ஒரு மலர்க்கொத்து கூட வாங்காமல் வந்த என்னை நொந்து கொண்டேன். அதனைச் சமாளிக்கும் விதமாக “அவர் வந்ததும் விஷ்ணுபுரம் நாவலிலிருந்து ஒரு சில வரிகளைச் சொல்லி வரவேற்கலாம்”. என்றேன். அவன் என்னை முறைத்தான் . அந்த நூலகமும் திறந்துவிட, என் நண்பன் “வா லைப்ரரி உள்ள போய் புத்தகங்களைப் பார்க்கலாம்” என்றான். நான், “வெயிட் பண்ணு இன்னும் கொஞ்சம் நேரத்தில் வெளியே ஒரு நூலகம் வரும் பார்க்கலாம்” என்றேன். அவன் பொறுமையிழந்து நின்றான்.
சிறிது நேரத்தில் நீங்களும் வர அந்த சிறுமியிடம் மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டு நின்ற உங்களிடம் வந்து கை கொடுத்தேன். அந்த சிறுமியிடம் காட்டிய அதே புன்னகையை என்னிடமும் செலுத்திவிட்டு ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு முன் நகர்ந்தீர்கள். நான் பதட்டத்தில் அனைத்தையும் மறந்து போய் பேச்சற்று நின்றுகொண்டிருந்தேன். தேர்வில் கேள்வித்தாள் வாங்கி பார்த்தவுடன் எல்லாம் தெரியும் என்று நினைத்து பேனாவைத் திறந்தவுடன் அனைத்தும் மறந்துபோய் எதிரில் இருக்கும் வெள்ளைக் காகிதம் நம்மை ஏளனமாய் பார்த்துச் சிரிக்குமே, அதுபோலவே என் நண்பன் நான் செயலற்று நிற்பதைப் பார்த்துச் சிரித்தான். இதனை எழுதும்போது தவறவிட்ட அந்த தருணத்திலிருந்த அந்த பதட்டத்தைப் பற்றி யோசித்துப்பார்க்கிறேன். அமெரிக்கக் குடியேற்றம் பெரும்பாலும் என் வயதொத்த இந்தியர்களுக்கு ஒரு தட்டையான வாழ்க்கையின் அனுபவத்தையே கொடுக்கிறது. பெரிய போராட்டமற்ற (அதிகபட்சமாக இந்திய மளிகைக் கடையில் தள்ளுமுள்ளு இருக்கும்) இந்த அமெரிக்க வாழ்க்கையில் இந்திய வாழ்வின் அனுபவத்தையும், பண்பாட்டையும் முற்றிலும் இழப்பது மிக எளிது. அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் முற்றிலும் பின்பற்றாமல் ஏதோ ஒன்றை ஒழுகி அடையாளமற்ற ஒரு கூட்டமாக வாழ்ந்து மடியாமல், என்னைப் போன்ற பல வாசகர்களுக்கு இலக்கிய புனைவுகளின் வழியே பலதரப்பட்ட அனுபவங்களைக் கைகொடுத்து வாழ்க்கையின் மகத்தான ஒரு பெரும் வெளியில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பல முறை தனிப்பட்ட முறையில் உணர்ந்தவன் நான். அதுவே சோர்ந்துபோகும் தருணங்களில் வாழ்க்கையின் சங்கிலியை கட்டறுத்து கொள்ளாமல் உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறது. இந்த மாபெரும் வாழ்வியல் மாற்றத்தைப் பலருக்கு இலக்கியத்தின் மூலம் ஏற்படுத்தும் உங்களைக் காணப்போகிறேன் என்ற எண்ணம் கொடுத்த உணர்வு தான் ஒரு பந்தென மேலெழும்பித் தளும்பி விளிம்பில் என்னை நிற்கவைத்திருக்கிறது அன்று.
பூன் முகாமில் நீண்ட உரையாடல்கள் கேள்வி பதில்கள் எனத் தொடர்ந்து இயங்கிருந்தாலும் டல்லாஸில் அதனுடைய அயர்ச்சி என எதுவும் இல்லாமல் இருந்தீர்கள். அன்றைய அந்நிகழ்வு திருமதி. விஷ்ணுபிரியா கிருஷ்ணகுமார் அவர்கள் திரு. ராஜன் சோமசுந்தரம் அவர்கள் இசையமைத்த வெண்முரசு பாடலிலிருந்து தொடங்கியது அருமை. உங்களுடனான கேள்வி பதில் உரையாடல் ஆரம்பிக்கும் முன்னரே, திரு. ராஜன் அவர்கள் “என் குழந்தை ஆக்ஸ்போர்டு போகுமா?” என்ற ஆருட கேள்விகளைத் தவிருங்கள் என்று சொல்லி நிம்மதியாக அமர்ந்த அடுத்த வினாடி, “தமிழ்நாட்டில் தமிழ் வாழுமா?” என்ற கேள்வி வந்ததும் சற்று ஆடிப்போய்விட்டார். ஆனால் நீங்கள் அளித்த பதில் அந்த கேள்வியையும் முக்கியமானதாக மாற்றிவிட்டது. தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகளையும், அதன் அவசியத்தையும் நீங்கள் தொடர்ந்து எழுதிவருவது மிகப்பெரிய புரிதலை இலக்கியத்திற்குள் வரும் புதியவர்களுக்கு உதவியாக இருக்கிறது, இது போல உங்களுக்கு முன்னால் இருந்த இலக்கிய எழுத்தாளர்கள் அவர்களின் இலக்கிய புனைவுகள் வழியாக மட்டுமே இதனைப் புரிய வைக்க முயற்ச்சித்தர்களா? என்ற கேள்விக்கு நீங்கள் உ.வே.சா மற்றும் தன் சொத்துக்களையே இதற்காக அர்ப்பணித்த கா.நா.சு அவர்கள் இலக்கியத்துக்காகச் செய்ததைவிட தாங்கள் குறைவாகவே செய்வதாகக் கூறினீர்கள். இலக்கியத்தின் அவசியத்தைத் தொடர்ந்து சொல்லாமல் விட்டால் நம் பண்பாட்டின் தொடர் அறுந்துவிடும் என்று சொல்லியது சிறப்பாக இருந்தது. மேலும், சமஸ்கிருதம் எப்படி ஒரு இணைப்பு மொழியாக இருந்தது என்பதை உதாரணத்துடன் விளக்கியது பயனாக இருந்தது. மேலும், பதிப்பகங்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு இன்றைய நிலையில் பதிப்பகங்கள் ஒரு குடிசை தொழிலென நடப்பது பற்றி விளக்கினீர்கள்.
நண்பர் திரு. பிரதீப் அவர்கள் உங்கள் புனைவுகளில் வரும் பலதரப்பட்ட காட்சிகளைப் பற்றிய கேள்வி எனக்குள்ளும் இருந்தது. நுண்ணிய விவரணைகள் அடங்கிய ஒரு காட்சியைப் புனைவில் படிக்கும் போது மிகுந்த உணவெர்வெழுச்சியுடன் இருக்கும். ஆனால் அதனைத் தொடர்ந்து வரும் மற்றொரு காட்சி முன்னிருந்ததை விட மேலெழுந்து மனதில் வியாபித்திருக்கும். இப்படிப் பல காட்சிகளைக் கடந்து வரும்போது எவை மனதில் தங்குகிறது, எப்படி இதனைத் தக்க வைத்துக்கொள்வது என்ற ஐயம் எனக்குள் இருந்தது. உங்களின் அழகான அந்த நீண்ட விளக்கத்தில் நான் உணர்ந்துகொண்டது காட்சிகளும் அதன் உள் விவரணைகளும் நம் ஆழ்மனதில் பதியக்கூடியவை. அவைகள் நீங்கள் எதிர்பாரா தருணங்களில் வெளிவந்து உங்களை இணைக்கும். வலுக்கட்டாயமாகக் காட்சிகளைத் திணித்துக்கொள்ளமுடியாது. ஆதலால் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆழ்ந்து அந்த காட்சிகளை உள்வாங்கிப் படிப்பது மட்டுமே என்ற விளக்கம் எனக்கு நான் உங்களைக் காண வருவதற்கு முந்தைய நாள் எங்கள் ஊரிலிருந்த ஓர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டிருந்த போது நடந்த ஒரு திறப்பை ஞாபகப்படுத்தியது. ஒரு பக்கம் அவிசுகளைத் தின்று பட படவெனக் கிளைவிட்டு எரியும் யாகங்களிலிருந்து வரும் அதன் மணம் எங்கும் நிறைந்தும், மறுபக்கம் பலதரப்பட்ட உணவுகளைச் சமைத்து அனைவருக்கும் கொடுக்க பெரிய பெரிய பாத்திரங்களில் எடுத்து வந்து கொட்டும் காட்சியும் மனதுக்குள் ஏதோ செய்துகொண்டிருந்தது. பின்பு, கலசத்தில் ஊற்றிய நீர் அந்த கோபுரத்திலிருந்த சிலைகளின் வழியே வழிந்து என் மேல் விழுந்த அடுத்த கணத்தில் சட்டென நான் விஷ்ணுபுரத்தில் இருந்தேன்.
மேலும், அமெரிக்காவில் இருக்கும் வாழ்க்கை முறையையே மையமாக வைத்து இலக்கியத் தரத்துடன் புனைவுகளை உருவாக்கவேண்டும் என்றும் அதற்கான களங்கள் இங்கு நிறைய இருக்கிறது என்று சொல்லி உங்கள் அமெரிக்கப் பயணத்தில் நீங்கள் பார்த்த ஒரு சம்பவத்தை (ஒரு சிறுமி அவளின் பெற்றோர்கள் துணையில்லாமல் அமெரிக்காவிற்கு அடிக்கடி தனியாக வந்துசெல்வதை) சொல்லி விளக்கியது எனக்குப் பெரிய திறப்பாக இருந்தது. ஒரு எழுத்தாளரிடம் கேள்விகளை எப்படிக் கேட்கவேண்டும் என்று ஒரு வகுப்பே எடுத்தீர்கள். அடுத்த வருடம் நீங்கள் அமெரிக்கா வரும்போது பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள் என்றே நினைக்கின்றேன்.
இரண்டு மணி நேர உரையாடலில் உங்களிடம் வந்த கேள்விகளுக்கு மிகச் சிறப்பான பதில்களை அளித்தீர்கள். பல கேள்விகள் உங்கள் தளத்திலேயே நீங்கள் விரிவாக எழுதியிருந்தாலும் மீண்டும் எடுத்துரைத்ததுக்கு நன்றிகள். இதுபோன்ற முகாம்களும், வாசகர் சந்திப்புகளும் என்னைப் போன்ற வாசகர்களுக்குப் பல திறப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உங்கள் தளத்தில் வரும் கடிதங்கள் நிரூபணம். இதனைச் சாத்தியமாக்கிய வட அமெரிக்கா விஷ்ணுபுரம் குழுவினருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.
வெங்கடேஷ்
பூன்முகாம், கவிதை -கடிதம்
அன்புள்ள ஜெ,
பூன் சந்திப்பு பற்றி நீங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு கண்டேன், கவிதை அமர்வு மற்றும் பல சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்ட கேள்விகளின் தரம் பற்றி கடுமையான கண்டிப்புகள் அறிவுரைகள் இருக்கும் என எதிர்பார்த்திருந்தேன். நான் கேட்ட கேள்விகள் முறைமை தவறியதோ என்ற பதைபதைப்பு இருந்து கொண்டே தான் இருந்தது, பதைபதைப்பு பின்னர் வந்தது, அமர்வில் கேள்விகளை கேட்கும் போது பெரும்பாலானவர்களை போலவே நானும் சன்னத நிலையில் தான் இருந்தேன்.
நீங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு யாருடைய உளமும் புண்படலாகாது என்ற எச்சரிக்கையுடன் எழுதப்பட்டது போல தோன்றியது, என்னால் இதை பற்றி மேலதிகமாக என்னால் எழுத முடியவில்லை, ஏதாவது பேசி மேலும் முறைமைகள் தவறுவதை தவிர்க்கவே விரும்புகிறேன்.
அனால் அமெரிக்காவில் இந்த சந்திப்புகள் மேலும் நிகழ வேண்டும், நீங்கள் வருடம் தோறும் இங்கு வந்து வகுப்புகள் நிகழ்த்த வேண்டும் என்பது எல்லோருடைய ஆவல், இங்கே seattle நகரில் வாசகர் வட்டத்துடன் தொடர்புகளை இப்போது தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன், வருங்காலத்தில் அமெரிக்காவின் மேற்கு கரையிலும் இத்தகைய நிகழ்வுகள் நிகழ வேண்டும் என்பது என் விருப்பம்.
இன்று வந்த “பொன்வெளியில் மேய்ந்தலைதல்”, அமர்வுக்கு அடுத்த நாளே வந்த “உள்ளூறுவது” ஆகிய கட்டுரைகள் கவிதை உலகுக்குள் நுழைய மிக உதவியாக உள்ளன.
கவிதை அமர்வுக்கு பின் எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன, வேறு சிலருக்கும் அப்படியே என்று தனி உரையாடல்களில் இருந்து தெரிந்து கொண்டேன்; இந்தக் கட்டுரைகள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிப்பதில்லை ஆனால் அதை விட சிறப்பான கற்பித்தலை உங்கள் கவிதை ரசனை முறை நோக்கி எங்களை நகர்த்துவதன் மூலம் நிகழ்த்துகிறது.
“கண்ணாடியின் சட்டத்துக்குள் வர அதைவிட்டு விலகிச் செல்ல வேண்டும், நாய் தான் கவ்விய பொருளை எடுத்துக் கொண்டு ஓடுவதுபோல கவிதையை வாசித்ததுமே அதில் இருந்து கிள்ம்பிவிடவேண்டும், விரிந்து விரிந்து சென்று மையம் காண்பது” இவையெல்லாம் மூடியிருக்கும் கதவை திறந்து தர வல்ல சாவிகளாக அமைகின்றன
அன்புடன்
ஷங்கர் பிரதாப்
May 29, 2022
வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை
உளுந்துஅருண்மொழிக்கு நான் எழுதிய பழைய கடிதமொன்றை எடுத்து வாசித்து வெடித்துச் சிரித்தது நினைவில் இருக்கிறது. நெருக்கி எழுதப்பட்ட நீண்ட கடிதம். மிகச்சரியாக அதன் உள்ளடக்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு பக்கம் அவளை நான் திருமணம் செய்துகொள்வது சம்பந்தமான ஏற்பாடுகள். வீடு வாடகைக்கு பார்க்கவேண்டும், அதற்கு பணம் வேண்டும், சீட்டு போட்டிருக்கிறேன், மேற்கொண்டு பணம் தேவை, ஏற்பாடு செய்துவிடலாம்… இன்னொரு பக்கம் நேரடியாகவே உச்சகட்ட கற்பனாவாத கவித்துவம். உணர்ச்சிப்பெருக்கு. சொற்புயல். மண்ணுடன் சம்பந்தமே இல்லை.
ஆனால் அதுதான் இயல்பானது என்று தோன்றியது. ஒரே கடிதத்தில் மாறிமாறி அவை இருப்பதுகூட இயல்பானதுதான். வான்நிறைந்த ஒளியில் நின்றிருத்தல். கீழிறங்கியதும் அன்றாடம். மீண்டும் எழுந்து வானம். அந்த அலைக்கழிவே காதலின் துன்பம்போன்ற இன்பம்.
அதைச் சொல்லாமலிருக்க மாட்டான் கபிலன் என்று தேடினேன். கண்டடைந்து அக்கவிதையை வாசித்தபோது உள்ளம் எழுந்து பறந்து சுழன்று முகிலை மரக்கிளை இலைப்புதர் எனச் சென்று அமர்ந்தது. நெடுநேரம் எழுந்தும் அமர்ந்தும் தவித்தபின் பெருமூச்சுடன் உரையை வாசித்தேன். அவ்வளவுதான், தரைக்கு வந்துவிட்டேன். மண்ணில் அறைபட்டு விழுந்தேன் என்று சொல்லவேண்டும்.
தமிழில் கவிதைக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரைகள் பெரும்பாலும் கவிதையே இல்லாத அன்றாட யதார்த்தப் புத்தியுடன், எழுதப்பட்டவை. பாவலர்களுக்கு கவிதை புரியக்கூடாதென்பது கலைமகளின் ஆணை. தேனைக் கொண்டுவந்து சேர்க்கும் தேனீக்களுக்கு தேனில் மூழ்கி தவம் செய்யும் உரிமை இல்லை. அவற்றுக்கு கூட்டுக்குள் வேறு தேனீக்கள் உண்டு. உரைகளை மண்ணுக்கு வந்து வாசித்தபின் மீண்டும் சிறகு விரித்து எழுந்தாகவேண்டும். சிறகு கிழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எழமுடியாதபடி எடைமிக்க எதையும் உகிர்களால் பற்றிக்கொண்டிருக்கவும் கூடாது.
கவிதையை ரசிக்க இயற்கைக்குச் செல்லவேண்டும் என்கிறார் எமர்சன். வெளியேயும் நம்முள்ளும் நிறைந்திருக்கும் இயற்கையே கவிதைகளுக்குப் பொருள் அளிக்கிறது. வெளியே நம்மை ஒவ்வொரு பார்வையிலும் திகைப்புறச் செய்யும் நுட்பங்களால் நிறைந்து பரவியிருக்கிறது இயற்கை. உள்ளே நாம் அறிந்த ஒவ்வொரு இயற்கைத் துளியையும் நாம் அர்த்தமேற்றம் செய்து படிமங்களாக்கி வைத்திருக்கும் பெருங்களஞ்சியம் நம்மை பிரமிக்கச் செய்கிறது. கவிதை விதையெனச் சென்று விழவேண்டியது அந்த வளமான நீர்நிலப் பரப்பில்தான். வரண்ட அறிவின் பாறையில் அல்ல.
இருபது வயதுவரை வேளாண்மை செய்துவந்தவன் நான். வயல்வெளிகளில். காடுகளில் அலைந்தவன். நான் வாசிக்கும் கவிதைகளை எல்லாம் குட்டிக்குரங்குக்கு அளித்தவற்றை முந்தி கைநீட்டி வாங்கிக்கொள்ளும் தாய்க்குரங்கு போல எனக்குள் உள்ள அந்த வேளாண்குடிமகன் வாங்கிக் கொள்கிறான். அவன் அளிக்கும் அர்த்தம் நூல்களில் இருப்பதில்லை. நூல்கள் மிகக்கீழே இருக்கின்றன.
குறிப்பாகச் சங்கப்பாடல்கள் இது அடிக்கடி நிகழ்கிறது. ஏனென்றால் சங்கக் கவிதைகளை எழுதியவர்கள் பண்டிதர்கள் அல்ல, என்னைப்போலவே மண்ணில் உழன்றவர்கள், காட்டில் திளைத்தவர்கள். மழையில் ஊறி வெயிலில் காய்ந்து வானத்தின் கீழ் உச்சிமலைப் பாறை போல் தவமியற்றியவர்கள்.
எள்நெய்யொடு மயங்கிய உழுந்து நூற்றன்ன
வயலை அஞ்சிலம்பின் தலையது
செயலை அம்பகைத்தழை வாடும் அன்னாய்.
(கபிலர் ஐங்குறுநூறு 211)
இக்கவிதைக்கு உரையெழுதியவர்கள் எப்போதோ ஒரு செயற்கையான விளக்கத்தை அளித்துவிட்டனர். மீண்டும் மீண்டும் அந்தப்பொருளையே எல்லா உரைகளும் அளிக்கின்றன. எவருமே இன்னொரு முறை யோசித்ததில்லை. கவிதையென வாசித்ததும் இல்லை.
வழக்கமாக அளிக்கப்படும் பொருள் இது. தலைவன் தலைவிக்கு தழையாடையை அளிக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும்படி அவள் தோழி சொல்கிறாள். ‘இந்த தழையாடை நெய்விட்டு பிசைந்த உளுந்துமாவைப்போலத் தோன்றும் வயலைக் கொடி படர்ந்த மலைச்சாரலில் தழைத்த அசோகமரத்தளிரால் ஆனது. இதை கொள்க, இல்லையேல் வாடிவிடும்’.
இதற்கு என்ன பொருள்? வயலைக்கொடிக்கும் நெய்விட்டு பிசைந்த உளுந்து மாவுக்கும் எந்த சம்பந்தம்? உளுந்துமாவு போல வெண்மை என்று வைத்துக்கொண்டால்கூட எதற்கு நெய்? எவராவது உளுந்துமாவில் நெய்விட்டு பிசைவதுண்டா என்ன? உளுந்து மாவே கொழகொழவென்றிருக்கும், அதில் நெய்யா? இது உரையெழுதிய பண்டிதர்கள் அடுக்களைப் பக்கமே போனதில்லை என்பதற்குச் சான்று. அவர்கள் நூல்நவிலும்போது மனைவியார் உளுந்து மாவில் நெய்விட்டு கொண்டுவந்தால் கொளக் பொளக் என்று விழுங்கி வைப்பார்கள் போல. பல்லாவது இருக்குமோ, என்ன கருமமோ.
பயலை என்பது பசலை, பசலிக்கீரை என நாம் சொல்வது. அதன் காட்டுவகை ஒன்றுண்டு. காட்டுப்பசலி என்பார்கள். காட்டில் சமைப்பதற்கு அதன் தளிர்களை மட்டும் கொய்து வருவார்கள். (தண்டு துவர்ப்புடன் இருந்தால் சாப்பிடக்கூடாது) அந்த காட்டுச்செடியின் தழைக்கும் மலருக்கும் ஒப்புமை விளக்கமாக கபிலர் இரண்டு ஊர்த்தாவரங்களை அளிக்கிறார். நெய் என்றால் எள். (எள்+நெய் என்பதே எண்ணை. பழைய ஆயுர்வேத நூல்களில் நெய் என்றால் பெரும்பாலும் நல்லெண்ணைதான்). எள்ளுச்செடியும் உளுந்துச் செடியும் கலந்தது போல தோன்றும் பசலி என்கிறார். இலைகளையும் மலர்களையும் ஒப்பிட்டு காட்டும் வரி இது.
பசலி
எள்ளுச் செடியுடன் கலந்த
உளுந்துச் செடியின் பின்னல்போல
மலைச்சாரலில் படர்ந்த
பசலைக்கொடியின் தழையையும்
அங்கே தலைஓங்கி நின்றிருக்கும்
அசோகமரத்தின் தளிர்களையும்
முரண்படத் தொடுத்த இந்த மாலையைக் கொள்க
இல்லையேல் வாடிவிடும் தோழி.
மலைச்சரிவில் படர்ந்த பசலியின் தழைமலர்களையும் அச்சரிவில் தலை ஓங்கி நின்றிருக்கும் அசோகத்தின் தளிர்மலர்களையும் ஒன்றுக்கொன்று வண்ணம் முரண்பட தொடுத்து உருவாக்கிய ஆடை அவன் அவளுக்கு அளித்த காதலின் குறியீடு. அதை வாடவிடாதே என்கிறாள் தோழி.
பகைத்தழை என்று தெளிவாகவே பாடல் சொல்கிறது. முரண்படும் தழைகளால் ஆனது. நூற்றன்ன என்பதை நூறு என பொருள்கொண்டு மாவு என விரித்துக்கொண்டிருக்கிறார்கள். அது பின்னல் அல்லது நெசவு என பொருள் அளிக்கும் நூற்பு எனும் சொல்.
பசலை காட்டின் தரையெங்கும் பரந்து, காடே என ஆகி கிடப்பது. அசோகம் காட்டில் மிக அரிதான மரம். செங்குத்தாக மண்ணை நிராகரித்து வான்நோக்கி எழுவது. பசலி அத்தனை காட்டுக்கும் அடியில் பரவியிருப்பது. அசோகம் அத்தனை மரங்களுக்கும் மீதாக காட்டின் மேலே விரிந்திருப்பது.
உச்சிமலரும் தரைமலரும் கலந்து பின்னிய இத்தழையாடையை வாடவிடாதே என்கிறாள் தோழி. வயலையும் செயலையும் மயங்கும் மலராடை அவன் காதல்.
அ.மாதவையா ஆளுமையின் சித்திரம்
அ.மாதவையா போன்ற ஒருவரை கலைக்களஞ்சியத்தில் பதிவுசெய்யும்போது உருவாகும் சிக்கல்களில் முதன்மையானது வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையாக அவரை விவரிப்பதை பதிவுசெய்வதுதான். அவருடைய பெயர் முதற்கொண்டு விவாதங்கள் உள்ளன. ஆகவே எல்லா விவாதங்களையும் பதிவுசெய்வதையே இப்போது கலைக்களஞ்சியங்கள் செய்ய முடியும். எதிர்காலத்தில் உறுதிப்பாடு உருவானால்கூட இவ்வாறு விவாதம் நிகழ்ந்தது என்பதே ஒரு பண்பாட்டுப் பதிவுதான்
அ.மாதவையாஆடல்வெளி
‘டிப் டிப் டிப்’ தொகுதியை வாசிக்கையில் மூன்று விதமான கவிதைகளை நம்மால் காணமுடிகிறது. முதல் வகைக் கவிதைகள் ஒரு நேர்க்காட்சி அனுபவத்தையொட்டி எழுதப்பட்டவை. அவற்றின் வழியாக அக்காட்சியில் இருக்கும் லீலையை விளையாட்டை குழ்ந்தைத்தனத்தை தொட்டுக் காட்டி தன் கவித்தருணத்தை நிகழ்த்துகிறது. என் வாசிப்பில் இதையே அவரது அடிப்படை கவிமனம் என்பேன்.
ஆடல்வெளி- பாலாஜி பிருத்விராஜ்———————– ——————————————————-
டாலஸ் சந்திப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தாங்கள் தளத்தில் அமெரிக்கா வருவதைப் பற்றி அறிவித்ததும், எட்டுத்திசைகளிலிருந்தும், உங்களை சந்திப்பதற்கு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கான மின்னஞ்சலுக்கு மேலும் விபரங்கள் கேட்டு கடிதங்கள் வந்தவண்ணமிருந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவில் ஆரம்பித்து அதிகாரப்பூர்வமாக மூன்று வருடங்கள் ஆகியிருந்தாலும், நாளொன்றுக்கு இருபது புது வாசகர்களின் மின்னஞ்சல்கள் வருவது வியப்பளித்தது. மறைந்திருக்கும் வாசகர்கள் எழுந்துவர அவர்களை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி. டாலஸில் இருந்து வந்த கடிதங்களின் அளவை பார்த்துவிட்டு, ஆனந்த் முத்தையாவின் உதவியுடன், காப்பெல் நூலகத்தில், தங்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தோம்.இரண்டு மணி நேரத்திற்கென ஏற்பாடு செய்யப்பட்ட உரையாடலுக்கு நாற்பது வாசகர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் zoom நிகழ்வில் பாடும் விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார் டாலஸில் வசிக்கிறார் என்பதால் இந்த நிகழ்விலும் அவரைப் பாடவைக்க வசதியாக அமைந்துவிட்டது. உங்கள் நீள் பயணத்தில் உடன் இருக்கும் எழுத்தாளர் அருண்மொழி நங்கை, ராஜன் சோமசுந்தரம், ஸ்ரீராம் காமேஸ்வரன், விஷ்வநாதன் மகாலிங்கம், ப்ரமோதினியும் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்கள். மிசௌரியிலிருந்து பயணம் செய்து வாசக நண்பர் வெங்கடேஷன் வந்திருந்தார். வெண்முரசு ஆவணப்படம், சிகாகோவில் வெளியிட்டபொழுதும் இப்படி நீண்ட பயணம் செய்தவர், வெங்கடேஷன்.ராஜன் சோமசுந்தரத்தின் முன்னுரையுடன் நிகழ்வு ஆரம்பித்தது. இந்த நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும் பதில்களையும் Tamilosaionair எனும் யூட்யூப் சேனல் நடத்தும் சிவா துரை அவர்கள் சுருக்கமாக தொகுத்து, படங்களை இணைத்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தங்களின் பார்வைக்கும், நண்பர்களின் பார்வைக்கும் அதை அனுப்புகிறேன்.https://www.youtube.com/watch?v=uABEPKznsH0அன்புடன்,ஆஸ்டின் சௌந்தர்ஒரு பதிவு
அன்பு ஆசான் அவர்களுக்கு ,
வணக்கம் ஆனந்தன். கடந்த 14 வருடங்களாக மந்திரம் போன்று உங்களை வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருகின்றேன். நான் எனது 21 வருட பள்ளி /கல்லூரி படித்ததை விட, உங்கள் தளம் மூலம் கற்றுக் கொண்டது மிக அதிகம். நவீன இலக்கிய பற்றிய தெளிவும், தேடலும் உங்களால் மட்டுமே கிடைத்தது. எத்துணை கதைகள். எத்துணை எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்கள். தமிழ் இலக்கியத்தை பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் ஒரு இலக்கிய பள்ளிக்கூடம் (Jemo academy என்றே சொல்வேன்). தமிழ் விக்கி பற்றிய செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. திக்கெட்டும் நல்ல தமிழ் இலக்கியத்தை பரப்ப எடுத்திருக்கும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
மிக நாட்களாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பல மின்னஞ்சல் draft ஆகவே உள்ளன.வெகு நாட்களாக யோசித்து இன்று சிறு கடிதமாவது எழுதியே தீர வேண்டும் என்று எழுதியது. மன்னிக்கவும்
நான் ஒரு சிறு வலைத்தளம் ஆரம்பித்து நான் படித்த புத்தகங்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகளை எழுதி வருகிறேன். சமீபத்தில் உங்கள் தளத்தில் பகிர்ந்திருந்த தெய்வீகனின் இருள்களி மிக முக்கியமான சிறுகதை. எந்த யுத்தமாயிருந்தாலும் அதில் மிகவும் பாதிக்கப்படுவது பெற்றோரே. அவர் மிக அருமையாக இலங்கை யுத்தத்தையும், ஆஸ்திரேலிய கலிப்போலி யுத்த பாதிப்பையும் மிக அருமையாக இணைக்கும் ஒரு இரவு.
அந்த புத்தகத்தை பற்றி எனது வாசிப்பனுபவத்தை வலைதளத்தில் எழுதியிருக்கிறேன்.
வாசித்தலும் யோசித்தலும்May 28, 2022
நற்றுணை சந்திப்பு
அரவிந்த் சுவாமிநாதன் தமிழ் விக்கி
‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் நாளை, மே 29 ஞாயிறு மாலை 5 மணிக்குத் துவங்கும்.
இதில், எழுத்தாளர் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் தொகுத்து யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ள ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்‘ தொகுப்பு குறித்து இரம்யா அவர்கள் உரையாடுவார். இது இணையவழி கலந்துரையாடலாக நிகழும்
புத்தகம் வாங்குவதற்கான இணைப்பு:-
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்
இந்த சந்திப்பிற்கு Zoom மூலமாக ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் இந்த புத்தகங்கள் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
அன்புடன்,
நற்றுணை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

