Jeyamohan's Blog, page 775
May 24, 2022
கலிஃபோர்னியா சந்திப்பு
கலிஃபோர்னியாவில் ஒரு தனிச் சந்திப்பு. இந்த பயணத்தில் எந்த நிரலையும் நான் பொதுவில் அறிவிக்கவில்லை. முழுக்கமுழுக்க இங்குள்ள நண்பர்களால் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. ஏனென்றால் குறைந்த அளவு பங்கேற்பாளர்களுக்கே இடம் இருந்தது, அந்த இடங்கள் முன்னரே நிரம்பிவிட்டன. கலிஃபோர்னியா நிகழ்ச்சி திடீரென முடிவெடுக்கப்பட்டது.
May 23, 2022
உச்சிமலை குருதிமலர்
என் பிரியத்துக்குரிய மலையாளக் கவிஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரும் அவர் மனைவியும் இன்றில்லை. அவரைப் பற்றிய ஒரு சித்திரத்தை ஆற்றூர் ரவிவர்மா ஒருமுறை சொன்னார். கவிஞருடைய மனைவி ஆற்றூர் ரவிவர்மாவின் மனைவியிடம் சொன்னது அது.
அது காதல் அல்ல, காதல் வெறி, காதல்பித்து, காதல் கிறுக்கு, காதல்யோகம்—என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். அவர் ஆசிரியராக இருந்தார். அவர் மனைவியும் ஆசிரியர். காதல் தோன்றி, திருமணம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கவிஞர் வேலைக்கே சென்றார். அதுவரை விடுப்புக் கடிதம்கூட கொடுக்காமல் பள்ளிக்கு மட்டம் போட்டார். பின்னர் வேலைக்குச் செல்ல முயன்றபோதுதான் ஏற்கனவே வேலைநீக்கம் செய்யப்பட்ட செய்தியே தெரியவந்தது. கவிஞருக்கு அதில் கவலை இல்லை, மகிழ்ச்சியும்கூட.
கவிஞரின் மனைவி கல்வித்துறைச் செயலரை நேரில் சென்று பார்த்து கண்ணீர் விட்டார். அவர் அமைச்சரிடம் சொல்லும்படி அனுப்பினார். அமைச்சர் அக்கவிஞரின் நல்ல வாசகர். கவிஞரும், அமைச்சரும் இடதுசாரிகள். ஆகவே வேலை திரும்பக் கிடைத்தது.
காதல் சில துர்தேவதைகள் உபாசகனை ஆட்கொள்வதுபோல கவிஞரைச் சூழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டது. இரவும் பகலும் காதலி நினைவு. ஒருநாளில் இரண்டு மணி நேரம்கூட தூக்கம் இல்லை. கண்கள் கிறுக்கனின் கண்கள் போல மிதந்து அலைந்துகொண்டிருக்கும். தொடர்ச்சியாக நாலைந்து வாய்கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் அப்படியே ஏதோ நினைவில் எழுந்து நடந்து சென்றுவிடுவார். மெலிந்து கன்னங்கள் ஒட்டி இன்னொருவர் போல ஆகிவிட்டார்.
ஆனால் அழுக்கு உடையோ, சவரம் செய்யா முகமோ கிடையாது. ஒருநாளுக்கு. நாலைந்து முறை குளியல். நாலைந்து உடை. இரண்டுமுறை சவரம் பூர்விகச் சொத்துக்கு முழுக்க ஆடைகள் வாங்கிக் குவித்தார். எந்நேரமும் புதிய ஆடைகள். திருமணமாகி நான்காண்டுகளில் ஆடையே வாங்கவேண்டியிருக்கவில்லை.
கவிஞரின் காதலி காலையில் வீட்டுச் சாளரத்தை திறந்தால் வீட்டு வாசலை பார்த்தபடி தெருவில் நின்றிருப்பார். எங்கே போனாலும் பின்னாலே வருவார். எப்போதும் அவர் பார்வை காதலிமேல் பதிந்திருக்கும். காதலியை நேராகப் பார்க்க முடியாவிட்டால் காதலி இருக்கும் வீடோ பள்ளிக்கூடமோ போதும், அதை பார்த்துக் கொண்டிருப்பார்.
அன்றெல்லாம் பெண்கள் அப்படி ஆண்களிடம் பேசமுடியாது. அந்த அம்மையார் பற்பல சூழ்ச்சிகள் செய்து கொஞ்சம் நேரத்தை திருடி பள்ளிக்கு அருகிலுள்ள கோயிலின் பின்பக்கமோ ஆற்றங்கரையிலோ அவரைச் சந்திப்பார். அப்போது அவர் கட்டற்றுக் கொந்தளிப்பார். காதலியை தாக்கிவிடுவார், கொன்றுவிடுவார் என்றே தோன்றும். பெரிய சண்டை போலிருக்கும்.
முதல் பாதிநேரம் அழுகைக்கு அருகே செல்லும் குமுறல். தன் அவஸ்தைகளைச் சொல்லி அவற்றை காதலி பொருட்படுத்துவதே இல்லை, தன்னை அவர் உண்மையாக விரும்பவில்லை என்று சொல்வார். அமர்ந்திருக்கவே முடியாதபடி எம்பி எம்பி எழுவார். சுற்றிச்சுற்றி வருவார். தரையில் கிடக்கும் கற்களை எடுத்து வீசுவார். நெஞ்சிலும் தலையிலும் ஓங்கி அறைந்துகொள்வார்.
அதன்பின் உருக்கம். கண்ணீர். இனிமை. காதலியின் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொள்வார். விரல்நுனிகளை முத்தமிடுவார். ஆடைமுனையை எடுத்து முத்தமிடுவார்.காதலியையே வெறித்துப் பார்த்துக்கொண்டு அசையாமல் அமர்ந்திருப்பார்.
அதன்பின் ஏக்கம். காதலி கிளம்ப ஆரம்பிக்கும்போது கைகளைப் பிடித்துக்கொண்டு போகாதே என்று கெஞ்சுவார். மன்றாடுவார். விட மறுப்பார். காதலி கிளம்பினால் பின்னாலேயே வருவார். இரவு வீட்டு வாசலை மூடும்போது பார்த்தால் தெருவில் நின்றிருப்பார். சிலசமயம் மறுநாள் காலை வரை அங்கிருப்பார்.
திருமணம் குடும்பத்தவராலேயே நிச்சயிக்கப்பட்டது. ஏனென்றால் கவிஞர் அப்போதே பெரிய ஆளுமை. நிறைய நகையெல்லாம் போட்டு அனுப்பினார்கள். திருமணமான பிறகு நிலைமை இன்னும் மோசம். வீட்டை விட்டு வெளியே கிளம்புவதே இல்லை. எந்நேரமும் மனைவியுடன் இருப்பார். காமமும் காதலும் பெருகி நுரைத்துக்கொண்டே இருக்கும். மிதமிஞ்சிய பாலுறவால் நாலைந்து முறை வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்க நேர்ந்திருக்கிறது.
வீட்டை விட்டு மனைவி வெளியே செல்ல ஒத்துக்கொள்ள மாட்டார். மனைவியைத் தேடி தோழிகள் கூட வரமுடியாது. மனைவியின் வீட்டார் வரவே கூடாது. சண்டை, கூச்சல், அழுகை. முதல் குழந்தை பிறந்த பின் மனைவி பள்ளிவேலைக்குச் செல்ல தொடங்கினார். இவரும் வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் எல்லா இடைவேளைகளிலும் சைக்கிளில் மனைவியின் பள்ளிக்கு வந்துவிடுவார்.
ஒருகட்டத்தில் மனைவியின் வீட்டாருக்கு கவிஞருக்கும் கடுமையான பூசல்கள் உருவாயின. அடுத்தடுத்த குழந்தைகள் பிறந்தபோது பூசல்கள் வலுத்து மனைவி கணவரிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டார். தன் வீட்டாரை அவரால் விடமுடியவில்லை. கவிஞர் மறு எல்லைக்குச் சென்று மனைவியை ஒதுக்கிவிட்டார். தனியாக வாழ ஆரம்பித்தார். மனைவியை சந்திப்பதே இல்லை. விவாகரத்து போன்ற வாழ்க்கை. ஆனால் அந்த மனைவிமேல் அதே பெரும்பித்துடன் இருந்தார். கடைசிவரை.
நான் அண்மையில் அந்த விசித்திரமான காதல் பற்றி நினைத்துக் கொண்டேன். சங்கப்பாடல்களில் இல்லாமலிருக்காதே என தேடினேன். நான் சங்கப்பாடல்கள் அனைத்தையுமே பலமுறை படித்தவன். ஆகவே எல்லாமே எங்கோ நினைவில் இருக்கும். என் நினைவின் சுவைநா துழாவிக்கொண்டே இருந்தது, கண்டுபிடித்துவிட்டேன்.
சிலம்பின்
மேய்ந்த
சிறுகோட்டுச்
சேதா
அலங்குகுலைக்
காந்தள்
தீண்டித்
தாது உக
கன்றுதாய்
மருளுங்
குன்ற
நாடன்
உடுக்குந்
தழை
தந்தனனே
அவை
யாம்
உடுப்பின்
யாய்
அஞ்சுதுமே
கொடுப்பின்
கேளுடைக்
கேடஞ்
சுதுமே
ஆயிடை
வாடல
கொல்லோ
தாமே
அவன்மலைப்
போருடை
வருடையும்
பாயாச்
சூருடை
அடுக்கத்த
கொயற்கு அருந்
தழையே.
(கபிலர். நற்றிணை. 259)
மலைச்சாரலில் மேய்ந்த
சிறிய கொம்புகள் கொண்ட
இளம் செந்நிறப்பசு
காற்றில் அலைவுற்றுக் குலையும்
காந்தள் மலர்ப்புதரின் அடியில் நிற்க
மலரும் பொடியும் பொழிந்து மூடி
செந்நிறமாகி
தன் கன்றே அடையாளம் காணாமல்
மருளும்படி ஆகியது.
அக்குன்றத்தைச் சேர்ந்தவன்
எனக்கு மலராடை தந்தான்.
அணிந்தால் தாயை அஞ்சவேண்டும்
மறுத்தால் அவன் நட்பை இழக்கவேண்டும்
வாடிவிடுமா தோழி?
போர்க்குணம் கொண்ட வரையாடுகள்
பாய்ந்து மண்டையை அறைந்து கொள்ளும்
அவன் மலையில்
சூர் கொண்ட தெய்வங்கள் வாழ்கின்றன.
இந்த ஆடையோ
கொய்வதற்கு அரிய மலர்களால் ஆனது
*
சுந்தர ராமசாமியிடம் இக்காதல் பற்றிச் சொன்னேன். “அது mad gene. எல்லா கிறுக்கையும் இயற்கை பேணி வளக்குது. அதனாலே அதுக்கு வீரியம் ஜாஸ்தி” என்றார்.
அல்லது பாலை நிலத்து மரங்கள் கிலோக்கணக்கில் மகரந்தத்தை காற்றில் இறைப்பது போலவா? பாலையில் அவற்றுக்கு இணைமரம் அமைவதில்லை. காற்று எங்கோ ஏதோ ஒரு மரத்தின் மலரின் சூலுக்கு ஒரு மகரந்தத்தையாவது கொண்டுசென்றுவிடும் என அவை வெடித்து சிதறிப் பரவுகின்றன.
எத்தகைய படிமங்கள்! மகரந்தத்தால் மூடி உறவுகளாலேயே அடையாளம் காணமுடியாதபடி பசுவை மாற்றிக் கொள்ளும் வீரியம் மிக்க மலர்ச்செடி. அந்த அணுகமுடியாத மலை வெறிகொண்டு மண்டையை முட்டிக்கொள்ளும் வரையாடுகள் உலவுதற்குரியது. வெறியாட்டெழுந்த காட்டுதெய்வங்கள் வாழ்வது. அங்கே எட்டா மலையுச்சியில் மலரும் பூக்களால் ஆனது அந்த மலராடை.
கவிஞர் மறைந்தபின், அந்த மனைவி சொன்னார். “நாற்பத்தைந்து ஆண்டுகாலம் ஒரு நிமிடம், ஒரு செகண்ட், வேறு எதையும் நினைக்கவே என்னை விடவில்லை. கடல்கரையிலே நிற்கும் பாறை போல் இருந்தேன். இப்படி ஒரு தவம் செய்யும் வாய்ப்பு எனக்கு இந்தப் பிறவியில் கிடைத்தது. ஒரு கணமும் வீணாகாமல் வாழ்ந்தேன். அது போதும்”
***
செய்யிது ஆசியா உம்மா- இணைப்பாதை
கலைக்களஞ்சியம் என்பது மறதியுடன் போராடுதல் என்னும் ஒரு கூற்று உண்டு. இலக்கியச் சூழலில் கூட அன்றாடம் மிகமிக வலிமை வாய்ந்தது. நிகழ்கால விவாதங்களை ஒட்டியே இலக்கியவாதிகள் நினைவில் நிலைகொள்கிறார்கள். ஆனால் பிரக்ஞைபூர்வமாக முழு வரலாற்றையும் பார்த்துத் திரட்டிக்கொள்ளும் அறிவே மெய்யான இலக்கிய விவாதத்தை உருவாக்க முடியும். கலைக்களஞ்சியங்களின் இடம் அங்குதான்.
தமிழில் அரபு எழுத்துக்களில் எழுதப்பட்ட இலக்கியம் அரபுத்தமிழ் எனப்படுகிறது. அதில் எழுதிய முதன்மையான படைப்புகளின் ஒரு நீண்ட நிரை உண்டு. தமிழ் விக்கி அதை முழுமையாக ஆவணப்படுத்த எண்ணம்கொண்டுள்ளது. புதிய பங்கெடுப்பாளர்கள் வழியாக அது வளரவேண்டும் என விரும்புகிறது.
செய்யிது ஆசியா உம்மாபூன் முகாம், கடிதம்
வணக்கம் ஜெ,
மே 13 மற்றும் 14 எனக்கு மறக்க முடியாத நாட்கள். நோர்த் கரோலினா, Boone என்ற அழகான மலை பிரதேசத்தில் நடந்த இரண்டு நாள் இலக்கிய சந்திப்பில் நான் கற்றவற்றை எல்லாம் எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. சில விஷயங்களை உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் புரிந்து கொள்ள இயலாது கவிதையை போல. Boone அனுபவமும் அப்படிதான்.
முதல் நாள் சிறுகதை பரிணாமம் பற்றி உங்கள் உரையுடன் தொடங்கினோம். சிறுகதையையும் ஜோக்கையும் இணைத்து நீங்கள் சிறுகதை உருவான விதம் சில குட்டி கதைகளை எடுத்துக்காட்டாக நீங்கள் கூறியது எல்லாம் மறக்க முடியாது. ஜே.கே அவர்கள் எழுதிய சுயதரிசனம் பற்றி திரு.விஜய் சத்யா அவர்களும், எழுத்தாளர் அசோகாமித்ரன் அவர்களின் பிரயாணம் என்ற சிறுகதை பற்றிய கருத்துக்களை திரு.ஜெகதீஷ் அவர்களும் பகிர்ந்தனர். நீங்கள் நான் முற்றிலும் அறியாத பல தகவல்களை அந்த சிறுகதை பற்றிய உரையாடல்களின் போது பகிர்ந்தீர்கள். நான் திரு.திருச்செந்தாழை அவர்கள் எழுதிய ஆபரணம் என்ற கதையின் வாசிப்பு அனுபவத்தை உங்கள் முன் பகிர்ந்த தருணத்தை மறக்க இயலாது. அது ஒரு பொக்கிஷ தருணமாக வைத்துக்கொள்வேன்.
அடுத்து அறிவியல் கதைகள் பற்றிய நிகழ்வில் திரு.விசு அவர்கள் Issac Asimov எழுதிய Nightfall என்ற சிறுகதை பற்றி பகிர்ந்தார். அறிவியல் அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்வது பற்றி சொன்னீர்கள். ஐந்தாவது மருந்து என்ற தங்களின் சிறுகதையை பற்றி பேசியபோது சித்தர்களின் ethics, தாங்கள் செய்யும் செயலின் பின் விளைவுகளுக்கு தாங்கள் பொறுப்பு எடுத்து கொள்வது பற்றியும் விரிவாக பேசினீர்கள்.
கவிதை session எனக்கு மிகவும் பிடித்த செஷன். திரு.பாலாஜி ராஜு, அபி அவர்களின் கவிதையை வாசித்தார்.கவிதைகளை புரிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை பற்றி கேட்ட போது நீங்கள் கவிதையில் உள்ள எல்லா வார்த்தைகளும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய கூடாது. சில முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை அதாவது அழுத்தம் கொடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும். நிறைய கவிதைகளை வாசிக்க வாசிக்க அந்த கவிதையின் பொருளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வரும் என்று நீங்கள் கூறியதோடு அபி அவர்களின் கவிதைக்கும் நீங்கள் அழகான காட்சியை எங்களுக்கு காட்டினீர்கள். உங்கள் கண்கள் வழியே நாங்களும் கண்டோம்.
இசை பற்றிய திரு.ராஜன் சோமசுந்தரம் அவர்கள் பல கருத்துக்களை பகிர்ந்தார். எனக்கு அது புது அனுபவமாக இருந்தது. அதை தொடர்ந்து வெண்முரசு ஆவணப்படம் நான் முதல் முறையாக பார்த்தேன். கண்ணானாய், காண்பதுமானாய்! என்ற பாடல் வரிகள் எப்பொழுது கேட்டாலும் கண்கள் பனிக்கிறது.
இரண்டாம் நாள் தங்களின் தத்துவ உரையோடு தொடங்கியது. நான் இதுவரை தத்துவ நூல்கள் வாசித்ததில்லை. நீங்கள் பரிந்துரை செய்த The Pleasure of Philosophy by Bertrand Russell படிக்க முடிவு செய்துள்ளேன். வாழ்க்கையில் நாம் பிரச்னையாக பார்ப்பது எல்லாம் பஞ்சு மிட்டாய் போல அந்த கணத்தில் பெரிதாக தெரியும் சில வருடங்களுக்கு பின் அது உருட்டிய பஞ்சு மிட்டாயைப் போல சிறிதாக தெரியும் என்று நீங்கள் தத்துவத்தின் தேவை, western philosophy மற்றும் eastern philosophy பற்றிய தகவல்கள், eastern philosophy is about liberation and ethics என்று தத்துவத்தை பற்றி ஒரு எளிய புரிதல் ஏற்பட ஒரு சின்ன உரை நிகழ்த்தி நான் தத்துவத்தை படிக்க தொடங்க ஒரு விதை விதைத்தீர்கள்.
திருமணத்திற்கு பிறகு தங்கள் வாழ்க்கையை தங்களுக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவும் பெற்றோருக்காகவும் வாழ்கிறேன் என்று வாழ்ந்துவிட்டு பின், நான் எனக்காக வாழவில்லை என்று வருத்தப்படுவதை விட்டுவிட்டு உங்களுக்குகாக வாழுங்கள், provide their needs and inspire your kids, அது செய்தாலே அவர்கள் அவர்களின் வாழ்க்கையை நன்றாக வாழ்வார்கள் என்று நீங்கள் சொன்னது ஒரு eye opener for young parents. கம்பராமாயண பாடல்கள் சிலவற்றை திரு.விசு அவர்களும் திரு.செந்தில் அவர்களும் வாசித்து அதன் பொருளையும் பகிர்ந்தார்கள். கம்பராமாயண பாடல்களை உணர்வோடு (with expression) வாசிப்பதில்தான் அதன் அழகு வெளிப்படும் என்று வாசித்தும் காட்டினீர்கள்.
அருண்மொழி mam, டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தை அழகாக மடை திறந்த வெள்ளம் போல இன்றும் அந்த நூலை பற்றி பேசும் போது excited ஆக பேசுவது அந்த நூலை இதுவரை படிக்காதவர்களை கண்டிப்பாக படிக்க தூண்டும். பனி உருகுவதில்லை புத்தகத்தை பற்றி பேசிய நிகழ்வும் சுவையாக இருந்தது. வீட்டிற்கு திரும்பும் போது தங்களின் பல கற்பித்தலுடன் உங்களுடைய கையெழுத்து மற்றும் நான் உங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பொக்கிஷமாக எடுத்து வந்தேன். எதிர்காலத்தில் இன்னும் பல இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும் முதல் சந்திப்பு என்பது எப்போதுமே மறக்க முடியாதுதான். இந்த நிகழ்வு சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். ஆஸ்டின் சௌந்தர் அண்ணாவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி!
மதுநிகா
கிறிஸ்தவம்,சூஃபி- கடிதம்
அன்புள்ள ஜெ,
தாங்கள் உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். கிருஸ்துவத்தில் சூஃபி மரபு பற்றி முருகானந்தம் கடிதம் தங்களது தளத்தில் படித்தேன். வாடிகனின் சீடர் தூய பிரன்ஸிஸ்கன் குறித்த ஆய்வாளர் ஷாஹ் கருத்துக்களை இங்கே நினைவூட்டலாம் என தோன்றியது. இதை பற்றி ரமீஸ் பிலாலி தமிழில் எழுதியுள்ளார்.
கிபி 13 ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் வாழ்ந்த நஜ்முத்தீன் குபுரா(மகா நட்சத்திரம் என்று பொருள்) மாபெரும் சூஃபி ஞானியாக திகழ்ந்தார்கள். இந்த காலம சூஃபித்துவத்தின் பொற்காலம் எனலாம்.இவர்களது சம காலத்தில் பரீதுதீன் அத்தார், ஷம்சுதீன் தப்ரேஸி, பஹாவுதீன் வலத்(ரூமியின் தந்தை), மெளலானா ரூமி போன்ற ஞானிகளும் வாழ்ந்து வந்தனர். சூஃபி கொள்கைகள் வேர் விட்டு கிளையோடிய காலம். குப்ரியா என்ற தரீக்கா பாசறைகளை உருவாக்கியவர் நஜ்முத்தீன் குபுரா.
சூஃபிக் கொள்கைகளின் தாக்கம் கிருத்துவ மடங்களில் அதிகரித்தது இக்காலம் எனலாம். சமகாலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் கிருத்துவ புனித சீடரான தூய பிரான்சிஸ்கன் அவர்களை வாடிகன் அழைத்து LESSER BRETHERN (இளைய சகோதரர்கள்) என்று அழைக்கப்படும் அமைப்பை ஆரம்பிக்க அனுமதி அளித்தது. ஏன் அப்படி ஒரு பெயரில் போப் இன்னோசன் பிரான்ஸிஸ் ஆரம்பிக்க அனுமதி அளித்தார்? அதன் பின்புலம் தான் நஜ்முதீன் குபுரா அவர்களின் குப்ரியா தரீக்கா பள்ளிகள். அத்தரீக்கா மடங்கள் மத்திய கிழக்கையும் தாண்டி ஐரோப்பாவிலும் கூட சக்கை போடு போட்டது அதுவும் GREATER BRETHERN (மூத்த சகோதரர்கள்) என்ற பெயரில். இஸ்லாமிய சூஃபி தர்வேஷ்களின் தாக்கத்தை குறைப்பதற்கு வாடிகனில் இருந்த அனுப்பப்பட்டபுனித சீடர் தூய பிரான்ஸிஸ்க்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது GREATER BRETHERN. பின்னாளில் அவருக்கு பரீதுதீன் அத்தாரும், ருஸ்பிஹானும், நஜ்முத்தீன் குபுராவும் மதிப்பு மிக்க தலைவர்களாக மாறிப்போனதில் பெரிய விந்தை இருந்தது.
தூய பிரான்ஸிஸ்கன் அவரது மடத்தில் இருந்த மாணவர்களுக்கு வகுத்து கொடுத்த சட்டங்களை நாம் பார்க்கவேண்டும்.
1. தூய பிரான்ஸிஸ்கன் முக்கியமான கவி ஒன்றை எழுதுகிறார் அது “சூரியனின் பாடல்” ஷம்சு தப்ரேஸ்- ரூமி காதலை கவிதையாக வடிக்கிறார்.
2. முஹம்மது நபியை பற்றி எந்த விமர்சனமும் மத பிராச்சாரத்தில் சேர்க்கக்கூடாது என தனது துறவிகளுக்கு உத்தரவிடுகிறார்.
3. மசூதிகளில் பாங்கு அழைப்பை ஏற்ப்படுத்தியது போல் தேவாலயங்கள் மீது ஏறி பிராச்சார உத்தியை உருவாக்கினார் .
4. இஸ்லாமியர்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமா) என்று கூறும் சுப செய்திபோல் தனது பிரசங்க ஆரம்பத்தில் ‘இறைவனின் அமைதி உங்கள் மீது நிலவட்டும்’ என்று கூற ஆரம்பித்தார்.
5. மவுலானா ரூமி அவர்களின் சுழலும் தர்வேஷ்(whirling dervesh) முறையை அவருடைய துறவிகளுக்கும் போதித்தார்.
6. தூய பிரான்சிஸ்கன் ஒரு பறவை சூழ் வாழ்பவர். அவருடைய படங்கள் பெரும்பாலும் அப்படியே வரையப்படுகின்றன. இந்தப் படிமம்
மன்திக்குத் தைர் – பறவைகளின் மாநாடு” என்னும் ஞான காவியம் தந்த ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களின் ஒப்புமையை எழுப்புகிறது
என்கிறார் ஆய்வாளர் இத்ரிஷ் ஷாஹ் . ஃபிரான்சிஸ்கன் ஆன்மிகப் பள்ளியின் சூழலும் அமைவும் வேறு எதனை விடவும் தர்வேஷ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கமானது. சூஃபி குருமார்களுடன் தூய ஃப்ரான்சிஸை ஒப்பிட்டுக் கூறப்படும் பிரபலமான கதைகளைத் தாண்டி, அனைத்துப் புள்ளிகளும் ஒத்திசைகின்றன” (The atmosphere and setting of the Franciscan Order is closer to a dervish organization than anything else. Apart from the tales about St.Francis which are held in common with Sufi teachers, all kinds of points coincide.) என்று இப்பொருண்மை நோக்கில் இத்ரீஸ் ஷாஹ் சொல்வது முத்தாய்ப்பான பார்வை.
ஃப்ரான்சிஸின் ஆளுமையின் மீதான இஸ்லாமியத் தாக்கம் என்பது பரவலானதொரு ஆய்வுக்களமாக உள்ளது.
அன்புடன்
கே. முகம்மது ரியாஸ்
பசுஞ்சோலை- கடிதம்
அன்புள்ள ஜெ,
கதையை முன்நகர்த்திச் செல்லும் வேலையை சிறப்பாகச் செய்கிறது பாடல். சிம்புவின் குரலும், ரக்ஷிதாவின் குரலும் இனிமையாய் ஒலிக்கிறது. என்ன, ‘வேணும்’ என்பதை ‘வேனும்’ என்று உச்சரிக்கிறார் சிம்பு. இதாவது ‘தேரிக்காட்டுக்காரனுக்கு இம்புட்டுதான்யா வரும்’, ‘அந்தக் கேரக்டருக்காக மாற்றிப்பாடினார்’ என்று சமாளித்துக்கொள்ளலாம். சென்னைத் தொலைக்காட்சியில் ஜெனி∴பர் சந்திரன் என்றொருவர் செய்தி வாசிக்கிறார். ‘ல’ வரவேண்டிய இடங்களில் ‘ள’ (சாளைப்பணி, சோளையாறு) ‘ன’ வரவேண்டிய இடங்களில் ‘ண'(பணிக்காலம் – வாணிலை அறிக்கை, மணநோய் மருத்துவர்) என்று தப்பாமல் தப்புவார். எதற்கு வம்பு? விஷயத்துக்கு வருகிறேன்.
இந்தப்பாடலைக் கேட்டபோது முதலில் நான் கவனித்தது அதன் ஒலியின் தரம். இசையின் பருவடிவைக் கண்டுவிடலாம் போல ஒரு துல்லியம். ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாளப் பட இசையமைப்பாளர். குறைந்த படங்களுக்கே இசையமைத்திருந்தாலும் பல படங்களுக்கு இசை நடத்துனராகப் பணி புரிந்தவர். இசை விமர்சகர் ஷாஜி ‘அந்த நாட்களிலேயே தரமான ஒலிப்பதிவுக் கருவிக்காக சிங்கப்பூர் வரை சென்றிருக்கிறார் ஆர்.கே.சேகர்’ என்று கூறுகிறார். இசை என்கிற ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலியின் தரம் குறித்த ஆர்வம், பார்வை ரகுமானுக்கு அவர் தந்தையிடமிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.
இளையராஜா இசையமைத்த ‘நண்டு’ படத்தில் இடம்பெற்ற ஒரு இந்திப்பாடல் ‘கைஸே கஹூன்’. தரமான ஒலியமைப்பு அமைந்திருந்தால் இந்தப்பாடல் அடைந்திருக்கவேண்டிய இடமே வேறு என்று இதைக் கேட்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். 1984 வரை இளையராஜா இசையமைத்த பெரும்பாலான படங்களுக்கு இதே போல தரக்குறைவான ஒலி அமைப்பே கிடைத்தது. இத்தனைக்கும் ‘ஸ்டீரியோபோனிக்’ இசையை ‘ப்ரியா’ படத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியதே இளையராஜாதான்.
https://www.youtube.com/watch?v=l2pnP8jSVRI
ஒப்பு நோக்க பழைய கறுப்புவெள்ளைப் படங்களின் பாடல்களின் ஒலித்தரம் ஆச்சரியப்படுத்துகிறது.
நெஞ்சில் ஓர் ஆலயம் – ‘எங்கிருந்தாலும் வாழ்க’
https://www.youtube.com/watch?v=HI0oQHsNy7k
இளையராஜாவின் சிறந்த இசையொலியின் காலகட்டம் என்பது அவருடன் ஒலிப்பொறியியலாளர் எம்மி பணியாற்றிய (1984-1988) காலகட்டம்தான் என்கிறார் ஷாஜி. ராஜாவின் தனித்துவமான பேஸ் கிட்டார் இசையின் அழகுகளை வெகுசிறப்பாக வெளிப்படுத்தியது எம்மியின் ஒலிப்பதிவு. இன்றைக்கும் இளையராஜாவை அடுத்த தலைமுறை நினைவுகூரும் பாடல்கள் எம்மியின் கைவண்ணமே. ஏ.ஆர்.ரகுமானின் முதல் ஒலிப்பதிவுக் கூடமான பஞ்சத்தன் ஸ்டூடியோவை வடிவமைத்தவர் எம்மியே. அதன்பின்னர் ஸ்ரீதருடன் பணியாற்றினார் ரகுமான்.
அதுவரை திரையிசை என்றாலே இளையராஜாதான் என்றிருந்ததை மாற்றிய அந்த ஒலித்தரம் என்றால் என்ன? ஷாஜியின் வார்த்தைகளில் “அதைக் காதுகளால் உணரத்தான் முடியும். வார்த்தைகளில் விளக்க முயன்றால் தோராயமாக இப்படிச் சொல்லலாம். இயற்கையில் உள்ளதுபோல் இயல்பானதாக இருக்கவேண்டும். அதீத வண்ணங்கள் எதுவும் சேரக்கூடாது. அது ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கவேண்டும். இசைப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் வேறு வேறாகப் பிரிந்து நம் காதுகளில் விழவேண்டும். ஒலியின் அலைவரிசைகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் பல அடுக்குகளில் பயணிக்கவேண்டும். துல்லியமான அவ்வொலியில் தெளிவு, துலக்கம், நுணுக்கம் ரசிக்கவைக்கும் தன்மை போன்றவை இருக்கவேண்டும்” இவையெல்லாமே இந்தப்பாடலில் உணரமுடிகின்றது.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்J
May 22, 2022
அஞ்சலி: தெணியான்
ஈழ எழுத்தாளர் தெணியான் மறைந்தார். முற்போக்கு இலக்கியத்தில் பங்களிப்பாற்றியவர். .
அஞ்சலி
பூன் சந்திப்பு
விஷ்ணுபுரம் அமைப்பு ஊட்டியில் தொடர்ந்து நடத்தி வரும் குரு நித்யா நினைவு சந்திப்பு இப்போது பதினாறு ஆண்டுகளாக தொடர்கிறது. விஷ்ணுபுரம் அமைப்புக்கு முன்னால் நிகழ்ந்த ஊட்டி சந்திப்புகளையும் சேர்த்தால் முப்பது அரங்குகளுக்கு மேல் நடந்திருக்கும். தமிழகத்தில் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து நிகழ்ந்த ஒரு இலக்கிய கூடுகை பிறிதில்லை. அதற்கு காரணமாக அமைவது இச்சந்திப்பு கற்றலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் களமாக அமைகிறது என்பதுதான். உவகையும் கொண்டாட்டமும் இன்றி ஒரு சந்திப்பையும் நிகழ்த்தக்கூடாது என்பது என்னுடைய நெறிகளில் ஒன்று.
எவரும் பொழுது வீணாகிறது என்று நினைக்கக்கூடாது என்பதனாலும், எவரும் தனிப்பட்ட முறையில் உளம் புண்பட்டுவிடக்கூடாது என்பதனாலும் நெறிகளும் முறைமைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆகவே பயனுள்ளதாகவும் மகிழ்வூட்டுவதாகவும் இந்த சந்திப்புகள் இதுவரை அமைந்துள்ளன. இதிலிருந்து இன்று ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து உருவாகி வந்திருக்கிறார்கள். அதைவிட கூர்மையான வாசகர்களின் ஒரு பெரிய நிரை உருவாகியிருக்கிறது. தமிழில் கலைத்தன்மையுடன் எழுதும் எவருக்கும் இன்று இந்த பெருநிரையே மெய்யான வாசகர்கள். இவ்வரங்குகளின் வழியாக தமிழில் நித்யாவின் பெயர் இன்று நிலைகொள்கிறது.
உலகம் முழுக்க இருந்து விஷ்ணுபுரம் குருநித்யா சந்திப்புக்கு வாசகர்கள் வருவதுண்டு. அவர்களில் பலருக்கு தங்கள் ஊரிலும் அவற்றை நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆகவே 2016-ல் சிங்கப்பூரில் குருநித்யா சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினோம். அன்று நான் சிங்கப்பூரில் நான் யாங் பல்கலையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அமெரிக்காவில் ஒரு சந்திப்பை நிகழ்த்தவேண்டும் என்று ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம், பழனி ஜோதி, விஜய் சத்யா ஆகியோர் முயன்றனர். நானும் அமெரிக்கா வருவதை ஒட்டி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மே 13,14 இரு நாள் சந்திப்பு.அமெரிக்காவில் பூன் என்னும் இடத்தில் இருந்த ஒரு பெரிய மாளிகை அதன் பொருட்டு அமர்த்தப்பட்டது. அங்கு ஐம்பது பேருக்கு மேல் தங்குவதற்கு அமெரிக்க தீயணைப்புச் சட்டம் அனுமதிப்பதில்லை. ஆகவே பங்கேற்பாளர் எண்ணிக்கை ஐம்பதுடன் நிறுத்தப்பட்டது. மேலும் பலர் வருவதற்கு ஆர்வம் கொண்டிருந்தாலும் கூட முன்னரே பதிவுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இலக்கிய வாசகர்கள் விஷ்ணுபுரம் செயல்பாடுகளை அறிந்தவர்கள் மட்டுமே இந்த சந்திப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அமெரிக்காவின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து கூடிய நண்பர்கள் பூன் மலை உச்சியிலிருந்த மாளிகைக்கு முந்தின நாள் மாலையே சென்று சேர்ந்தோம். மிக அழகிய மாளிகை. நான்குபக்கமும் துணைக்கட்டிடங்களுடன் அனைவருக்குமே தனி படுக்கையறை வசதியுடன், குளியலறைகளுடன் இருந்தது. மாடியில் கூடாரங்கள் போல உள்ளேயே கட்டியிருந்தனர். அங்கே ஒரு பத்துபேர் தங்க முடியும். விரிந்த புல்வெளி சூழ்ந்த சிறு குன்று அது. அதைச்சுற்றி மலையடுக்குகள். மலைச்சரிவின் விளிம்பில் இருந்து அலையலையாக எழுந்து வந்த புல்வெளி.. மலையின் அடிவாரங்களில் செறிந்த பைன் மரக்காடுகள். ஊடுகலந்த மேப்பிள் மரக்காடுகள். கழுத்து மணிகள் மெல்லிய ஒலி எழுப்பியபடி இருக்க கரிய மாடுகள் குனிந்த தலை நிமிராது மேய்ந்துகொண்டிருக்கும் வெளி ஒரு மாபெரும் இம்ப்ரஷனிஸ்ட் ஓவியம்போலிருந்தது.
போர்த்திக்கொள்ளும் அளவுக்கு குளிர். ஆனால் நடுக்கும் அளவுக்கு இல்லை. கணப்பும் தேவைப்படவில்லை. ஆனால் வெளியே சற்று உடல் உலுக்கும் அளவுக்கு காற்று வீசியது. அருகிலிருந்த குஜராத்தி உணவகத்திலிருந்து உணவு கொண்டுவர சொல்லியிருந்தோம். அவர்கள் மிக சுவையான இந்திய உணவுகளையும் அமெரிக்க உணவுகளையும் கொண்டு வந்தார்கள். பொதுவாகவே ஊட்டி விழாவுக்கும் இதற்குமான வேறுபாடாக நான் பார்த்தது மிதமிஞ்சிய உணவுதான். அது ஒரு அமெரிக்க பண்பாடு. கோக், பலவிதமான பழச்சாறுகள், கேக்குகள், அப்பங்கள் என்று கொண்டுவந்து குவித்துவிட்டார்கள். நிறைய உணவை பார்க்கும்போது ஒரே சமயம் மகிழ்ச்சியும் குற்ற உணர்வும் உருவாகிறது. இதுவரைக்கும் குருநித்யா ஆய்வரங்கு நடத்திய எந்த நிகழ்வுமே இத்தனை அழகிய மாளிகையில் நிகழ்ந்ததில்லை. இவ்வளவு உற்சாகமான ஒரு சூழலும் அமைந்ததில்லை.
ஒவ்வொருவராக வந்துகொண்டே இருந்தார்கள். இரவு எட்டு மணிக்குள் ஏறத்தாழ அனைவருமே வந்து சேர்ந்துவிட்டார்கள். அப்போதே சந்திப்பு தொடங்கிவிட்டது என்று சொல்லவேண்டும். சிரிப்புகளும் கேலிகளுமாக ஒரு மாபெரும் குடும்பக் கூடுகை போல் நிகழ்ந்தது. எங்களுடைய எல்லா சந்திப்புகளையும் போல ஒவ்வொரு அமர்வுக்கும் இசை. தொழில் முறைப் பாடகர்கள் அளவுக்குப்பாடக்கூடிய பாடகர்களாக பழனி ஜோதி ,சங்கர் கோவிந்தராஜன் ஆகியோர் பாடினார்கள். ஸ்ரீகாந்த் புல்லாங்குழல் இசைத்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைப்பாளரும் கூட. அதன்பின் வெவ்வேறு அரங்குகள் அவற்றின் மீதான விவாதங்கள்.
நான் சிறுகதை, தத்துவம் பற்றி இரண்டு அறிமுக உரைகள் ஆற்றினேன். அருண்மொழி டால்ஸ்டாயின் போரும் அமைதியும் பற்றி பேசினாள். ஜெகதீஷ், விஜய்சத்யா ஆகியோர் சிறுகதைகளைப் பற்றி பேசினர். விசு, விவேக் ஆகியோர் அறிவியல்புனைவு பற்றி பேசினர். விசு , செந்தில்வேல் ஆகியோர் கம்பராமாயண அரங்கு ஒன்றை நடத்தினர். ரமிதா கீட்ஸ் பற்றி ஓர் அரங்கை நடத்தினார். தமிழ்க்கவிதை அரங்கை பாலாஜி ராஜு நடத்தினார். ராஜன் சோமசுந்தரம் அமெரிக்க பண்பாட்டின் அடிப்படைகள் பற்றி ஓர் அரங்கை நடத்தினர். அருண்மொழியின் பனி உருகுவதில்லை பற்றி ஓர் அரங்கை சௌந்தர்ராஜன் ஒருங்கிணைத்தார்.
அமர்வுகள் எல்லாமே மிகச்சிறப்பாக அமைந்தன. அனைவருமே படித்துவிட்டு வந்து முழுமையாக தயாரித்துவிட்டு வந்து பேசினார்கள். எவருமே வகுக்கப்பட்ட நேரத்தை கடந்து செல்லவில்லை. எவருமே விவாதத்தை திசை திருப்பிக்கொண்டு செல்லவும் இல்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர் பயிற்சி வழியாக நாங்கள் விஷ்ணுபுரம் குருநித்யா ஆய்வரங்கில் கடைபிடித்து வரும் எல்லா நெறிகளையுமே தன்னியல்பாகவே அமெரிக்க நண்பர்கள் கடைபிடித்தது வியப்பூட்டுவதாக இருந்தது. அமெரிக்க வாழ்முறையும் அமெரிக்க கல்விமுறையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இயல்பாகவே ஒரு அடிப்படைப் பயிற்சியை இங்குள்ள அறிவுச்சூழல் அளித்துவிடுகிறது. இன்னொருவரின் பொழுதை திருடிவிடக்கூடாது என்று ஒரு தெளிவு அனைவருக்குமே இருக்கிறது.
(அனைவருக்கும் என்று சொல்லமுடியாது. அமெரிக்கத் தமிழ் சங்கங்கள் நிகழும் உரைகளை இந்தியாவில் நடக்கும் வன்கொடுமைகளைவிட ஒருபடி மேலான துயரநிகழ்வுகள் என்றே சொல்வேன். கேள்வி கேட்பவர் எழுந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசித்தள்ளுவதெல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் அவர்கள் தமிழை வளர்க்க எமி ஜாக்ஸனை அழைக்கும் கூர்மை கொண்டவர்கள் என்பதனால் பொதுவாக தீங்கு மிகக்குறைவு. அவற்றில் ஒவ்வாமை கொண்டு அந்தச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் ஒதுங்கி நிற்கும் நண்பர்களாலானது இந்த அரங்கு என்பதனால் இந்த ஒழுங்கு இயல்பாகவே நிகழ்ந்தது என்று தோன்றுகிறது).
இத்தகைய விவாதங்களில் என்ன நிகழ்ந்தது என்ன பேசப்பட்டது என்பதை பதிவு செய்வதோ அவற்றை பகிர்வதோ எளிதல்ல. ஏனெனில் ஏறத்தாழ மூன்று நாட்கள் நிகழ்ந்த மொத்த விவாதத்தையும் எழுத வேண்டுமென்றால் சில ஆயிரம் பக்கங்கள் தேவைப்படும். அந்த கற்றல் அனுபவம் இணையற்றது. அதற்கு நூல் வாசிப்பு நிகர் சொல்லக்கூடியதல்ல கற்றலில் கேட்டல் நன்று என்று வள்ளுவர் சொல்வது அதைத்தான் .பலர் இதை பதிவு செய்து அனுப்ப முடியுமா என்று கேட்டார்கள். பதிவு செய்து அனுப்புவதை கேட்பது என்பது ஒருவரை நேரில் பார்ப்பதற்கும் புகைப்படத்தில் பார்ப்பதற்குமான வேறுபாடு கொண்டது. என்ன நிகழ்ந்தது என்பதை நினைவுபடுத்திக்கொள்ள சில குறிப்புகளை எழுதிக்கொள்ளலாமே ஒழிய அக்குறிப்புகள் வழியாக எவரும் சந்திப்பில் நடந்த அனுபவத்தையோ பேசப்பட்ட உணர்வுகளையோ அடைய முடியாது. பத்து நூல்கள் படிப்பதற்கு சமம் ஒரு நல்ல சந்திப்பு .அதற்கு நேரில் சென்று தான் ஆகவேண்டும். ஆகவே தான் ஊட்டி நிகழ்வுகளை முழுமையாக ஆவணப்படுத்துவதில்லை. அவை முழுமையாகவே நினைவில் வளரட்டும் என்று விட்டுவிடுவோம். என்ன நிகழ்ந்தது என்பது மட்டுமே குறிப்பாக உணர்த்தப்படும்.
இந்நிகழ்வின் கொண்டாட்டம், நெகிழ்ச்சி ஆகியவற்றை கண்டபோது நான் உணர்ந்த ஒன்றுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் கோழிக்கோடு பல்கலையில் தாமஸ் ஐசக் இதைப்பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது. ஒரு சமூகம் தன்னுடைய மிகச்சிறந்த உள்ளங்களை முழுக்க கணிப்பொறித்துறை ஊழியர்களாக, பொறியாளர்களாக அனுப்பிக்கொண்டே இருந்தால் அது நாளடைவில் பிற துறைகள் அனைத்திலும் பெரும் சோர்வை உருவாக்குகிறது. இப்போதே தமிழகத்தில் தமிழாய்வு, வரலாற்றாய்வு போன்ற பல தளங்களில் மிகப்பெரிய வீழ்ச்சி உள்ளது. ஆங்கிலக்கல்வியில்கூட நம்பமுடியாத அளவுக்குச் சரிவு உள்ளது. நல்ல ஆங்கிலத்தில் எழுதவோ மொழியாக்கம் செய்யவோ தமிழகத்தில் ஆளில்லை என்பதே இன்றைய நிலை. எந்தக் கல்லூரியிலும் இன்று தங்கள் அறிவுத்திறனால் வாசகர்களிடமும் மாணவர்களிடமும் பெருமதிப்பை ஈட்டக்கூடிய தகைமை கொண்ட பேராசிரியர்கள் இல்லை
மறுபக்கம் , வெவ்வேறு நுண்ணுணர்வுகளும் அறிவுத்திறன்களும் கொண்ட அனைவருமே பொறியியல், கணிப்பொறியியல் என்று சென்று சிக்கிக்கொள்வதும் நிகழ்கிறது. உலகியல் வெற்றியை அவர்கள் அடைந்திருக்கலாம். ஆனால் செயலாற்றுவதனூடாக, தனிப்பட்ட சாதனைகள் வழியாக, அடையும் நிறைவு கிடைப்பதில்லை. அது நாற்பதை ஒட்டிய அகவையில் பெரிய சோர்வாக எஞ்சிவிடுகிறது. கேரளக் கல்விமுறை ‘அனைவரும் பொறியாளர்’ என்னும் நிலைநோக்கிச் செல்லக்கூடாது என்று தாமஸ் ஐசக் அன்று சொன்னார். மற்ற துறைகளில் திறனாளர்களுக்கு உயர்ஊதியம் அளிக்கப்படவேண்டும். அங்கே திறமை மட்டுமே செல்லுபடியாகும் சூழலும் அமையவேண்டும்.
நிகழ்ச்சியின் முடிவில் ராஜன் சோமசுந்தரம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, பங்களிப்பாற்றிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி கூறினார். அமெரிக்க மரபு, நல்லது. ஆனால் விஷ்ணுபுரம் விருது விழாவில் பல ஆண்டுகளாக மொத்த சாப்பாட்டு ஒருங்கிணைப்பையும், விழாமேடை ஒருங்கிணைப்பையும் செய்து வரும் விஜய் சூரியனுக்கு ஒரு நன்றியை இதுவரை நான் சொன்னதில்லை. அவர் வேலைசெய்து களைத்து பைத்தியக்காரக் களையுடன் வரும்போது நண்பர்கள் கூடி கேலிதான் செய்திருக்கிறோம்.
அமெரிக்காவில் இந்த சந்திப்பு நிகழ்வு ஓர் தொடர்நிகழ்வாக சில ஆண்டுகள் நடந்தால் அனைவருக்கும் உரிய ஒரு செயற்களம் அமையும் என்று நினைக்கிறேன்.
கோ.சாரங்கபாணி
மலேசியாவின் தமிழ் இலக்கிய- பண்பாட்டு வரலாற்றின் தொடக்கப்புள்ளி கோ.சாரங்கபாணி. எந்த ஒரு வரலாற்றுப் பதிவும் அவரில் இருந்து தொடங்க வேண்டும். கலைக்களஞ்சியம் வளரும்தோறும் அப்பதிவின் இணைப்புப்புள்ளிகள் பெருகிக்கொண்டே இருக்கவேண்டும்
கோ.சாரங்கபாணிஒரு கனவும் ஒரு தொடர்வும்
அன்புள்ள ஜெ,
நிர்மால்யா எழுதியிருந்த சியமந்தகம் கட்டுரை பெரியதொரு மன எழுச்சியை அளித்தது. நித்ய சைதன்ய யதி தமிழகத்தின் அறிவியக்கத்தில் ஒரு ஊடுருவலை உருவாக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார். அதற்காக பல இலக்கியவாதிகளை அழைத்து வந்து சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். அவற்றில் எல்லாம் நிர்மால்யா உடனிருந்திருக்கிறார். அம்முயற்சிகள் மேலே செல்லவில்லை.
அந்நிலையில் நிர்மால்யா தற்செயலாக உங்களை நித்யசைதன்ய யதியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். நீங்கள் அவரைப் பார்த்த கணமே ஆசிரியராக ஏற்றுக்கொண்டதாக எழுதியிருக்கிறீர்கள். அவரும் அக்கணமே உங்களை மாணவராக ஏற்றுக்கொண்டார். அவர் எண்ணியவற்றை நீங்கள் தமிழில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
நித்ய சைதன்ய யதியின் பங்களிப்பு மலையாளத்தை விட தமிழில் சற்று மிகுதி என நிர்மால்யா எழுதியிருந்தார். மலையாளத்தில் அவருக்கு பல மாணவர்கள். தமிழில் நீங்கள் ஒருவரே. ஆனால் இன்று வெவ்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் நித்ய சைதன்ய யதியை தங்கள் மேல் செல்வாக்கு செலுத்தியவராகச் சொல்கிறார்கள்.
உங்கள் சிந்தனைகளும் நித்ய சைதன்ய யதியின் சிந்தனைகளின் தொடர்ச்சி. அது உருவாக்கியிருக்கும் ஆழ்ந்த செல்வாக்கு என்ன என்பது தெரியாதவர்கள் இல்லை. ஒரு ஸ்கூல் ஆஃப் தாட் அது. இதை யோசிக்கையில் ஒரு ஃபெயரி டேல் போல உள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர் -விவேகானந்தர் கதையை வாசிப்பதுபோல உள்ளது. அவர் எண்ணியதை ஈடேற்றிவிட்டீர்கள். நீங்கள் நிறைவு என உத்தேசிப்பது அதைத்தான் என நினைக்கிறேன்.
அவர் உங்களையும் நீங்கள் அவரையும் கண்டுகொண்ட மேஜிக் மொமென்ட் என்பது புனிதமான ஒன்று என்று தோன்றுகிறது.
ஜே.ஆர்.லதா
அன்புள்ள லதா,
எனக்கு அவர் பெருஞ்செயலுக்கு வழிகாட்டினார், செயல்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை வழங்கினார். அவர் எண்ணியதை நிறைவேற்றினேனா என தெரியவில்லை. ஆனால் இக்கணம் வரை அணுவிடை தளரா ஊக்கமும் செயல்வேகமும் கொண்டிருக்கிறேன். அவருக்கு நான் செய்யக்கூடுவது அதுவே.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

