கிறிஸ்தவம்,சூஃபி- கடிதம்

கிறிஸ்தவத்தில் சூஃபி மரபு?

அன்புள்ள ஜெ,

தாங்கள் உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். கிருஸ்துவத்தில் சூஃபி  மரபு பற்றி முருகானந்தம் கடிதம் தங்களது தளத்தில் படித்தேன். வாடிகனின் சீடர் தூய பிரன்ஸிஸ்கன் குறித்த ஆய்வாளர் ஷாஹ் கருத்துக்களை இங்கே நினைவூட்டலாம் என தோன்றியது. இதை பற்றி ரமீஸ் பிலாலி தமிழில் எழுதியுள்ளார்.

கிபி 13 ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் வாழ்ந்த நஜ்முத்தீன் குபுரா(மகா நட்சத்திரம் என்று பொருள்) மாபெரும் சூஃபி ஞானியாக திகழ்ந்தார்கள். இந்த காலம சூஃபித்துவத்தின் பொற்காலம் எனலாம்.இவர்களது சம காலத்தில் பரீதுதீன் அத்தார், ஷம்சுதீன் தப்ரேஸி, பஹாவுதீன் வலத்(ரூமியின் தந்தை), மெளலானா ரூமி போன்ற ஞானிகளும் வாழ்ந்து வந்தனர். சூஃபி கொள்கைகள் வேர் விட்டு கிளையோடிய காலம்.  குப்ரியா என்ற தரீக்கா பாசறைகளை உருவாக்கியவர் நஜ்முத்தீன் குபுரா.

சூஃபிக் கொள்கைகளின் தாக்கம் கிருத்துவ மடங்களில் அதிகரித்தது இக்காலம் எனலாம். சமகாலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் கிருத்துவ புனித சீடரான தூய பிரான்சிஸ்கன் அவர்களை வாடிகன் அழைத்து LESSER BRETHERN (இளைய சகோதரர்கள்) என்று அழைக்கப்படும் அமைப்பை ஆரம்பிக்க அனுமதி அளித்தது. ஏன் அப்படி ஒரு பெயரில் போப் இன்னோசன் பிரான்ஸிஸ் ஆரம்பிக்க அனுமதி அளித்தார்? அதன் பின்புலம் தான் நஜ்முதீன் குபுரா அவர்களின் குப்ரியா தரீக்கா பள்ளிகள். அத்தரீக்கா மடங்கள் மத்திய கிழக்கையும் தாண்டி ஐரோப்பாவிலும் கூட சக்கை போடு போட்டது அதுவும் GREATER BRETHERN (மூத்த சகோதரர்கள்) என்ற பெயரில்.  இஸ்லாமிய சூஃபி தர்வேஷ்களின் தாக்கத்தை குறைப்பதற்கு வாடிகனில் இருந்த அனுப்பப்பட்டபுனித சீடர் தூய பிரான்ஸிஸ்க்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது GREATER BRETHERN. பின்னாளில் அவருக்கு பரீதுதீன் அத்தாரும், ருஸ்பிஹானும், நஜ்முத்தீன் குபுராவும் மதிப்பு மிக்க தலைவர்களாக மாறிப்போனதில் பெரிய விந்தை இருந்தது.

தூய பிரான்ஸிஸ்கன் அவரது மடத்தில் இருந்த மாணவர்களுக்கு வகுத்து கொடுத்த சட்டங்களை நாம் பார்க்கவேண்டும்.

1. தூய பிரான்ஸிஸ்கன்  முக்கியமான கவி ஒன்றை எழுதுகிறார் அது   “சூரியனின் பாடல்” ஷம்சு தப்ரேஸ்- ரூமி காதலை கவிதையாக வடிக்கிறார்.

2. முஹம்மது நபியை பற்றி எந்த விமர்சனமும் மத பிராச்சாரத்தில் சேர்க்கக்கூடாது என தனது துறவிகளுக்கு உத்தரவிடுகிறார்.

3. மசூதிகளில் பாங்கு அழைப்பை ஏற்ப்படுத்தியது போல் தேவாலயங்கள் மீது ஏறி பிராச்சார உத்தியை உருவாக்கினார் .

4. இஸ்லாமியர்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமா) என்று கூறும் சுப செய்திபோல் தனது பிரசங்க ஆரம்பத்தில் ‘இறைவனின் அமைதி உங்கள் மீது நிலவட்டும்’ என்று கூற ஆரம்பித்தார்.

5. மவுலானா ரூமி அவர்களின் சுழலும் தர்வேஷ்(whirling dervesh) முறையை அவருடைய துறவிகளுக்கும் போதித்தார்.

6. தூய பிரான்சிஸ்கன் ஒரு பறவை சூழ் வாழ்பவர். அவருடைய படங்கள் பெரும்பாலும் அப்படியே வரையப்படுகின்றன. இந்தப் படிமம்
மன்திக்குத் தைர் – பறவைகளின் மாநாடு” என்னும் ஞான காவியம் தந்த ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களின் ஒப்புமையை எழுப்புகிறது

என்கிறார் ஆய்வாளர் இத்ரிஷ் ஷாஹ் . ஃபிரான்சிஸ்கன் ஆன்மிகப் பள்ளியின் சூழலும் அமைவும் வேறு எதனை விடவும் தர்வேஷ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கமானது. சூஃபி குருமார்களுடன் தூய ஃப்ரான்சிஸை ஒப்பிட்டுக் கூறப்படும் பிரபலமான கதைகளைத் தாண்டி, அனைத்துப் புள்ளிகளும் ஒத்திசைகின்றன” (The atmosphere and setting of the Franciscan Order is closer to a dervish organization than anything else. Apart from the tales about St.Francis which are held in common with Sufi teachers, all kinds of points coincide.) என்று இப்பொருண்மை நோக்கில் இத்ரீஸ் ஷாஹ் சொல்வது முத்தாய்ப்பான பார்வை.

ஃப்ரான்சிஸின் ஆளுமையின் மீதான இஸ்லாமியத் தாக்கம் என்பது பரவலானதொரு ஆய்வுக்களமாக உள்ளது.

அன்புடன்
கே. முகம்மது ரியாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.