Jeyamohan's Blog, page 773
May 27, 2022
Meet the Author at Walnut Creek
Sunday, May 29, 5:00 PM PDT – 7:30 PM PDT
PFA the Walnut Creek event details:
RSVP link: https://tinyurl.com/jeyamo
Thanks,
Visu M
May 26, 2022
அ.முத்துலிங்கத்துக்கு கி.ரா.விருது
அ.முத்துலிங்கம்கோவையை மையமாக்கி கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் கி.ரா விருது 2022ல் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கி.ராஜநாராயணனின் கதைசொல்லி அம்சம் கொண்ட படைப்பாளி அ.முத்துலிங்கம். தமிழ் பெருமைகொள்ளும் இலக்கியச் சாதனையாளர்களில் ஒருவர். தமிழ் வாசகனுக்கு நிறைவூட்டும் தருணம் இது.
அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அ.முத்துலிங்கம்- தமிழ் விக்கி
பொன்வெளியில் மேய்ந்தலைதல்
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் ஆற்றங்கரையில் நின்றிருந்தேன். எதிரில் குளிப்பதற்கு போட்டிருந்த துவைகல் அருகே எனக்குத் தெரிந்த கல்யாணி அக்கா வந்து அமர்ந்தாள். ஒரு நிமிடம் நான் அவளை அடையாளம் காணவில்லை. இத்தனைக்கும் அவள் உடை, தோற்றம் எதுவும் மாறவில்லை. ஆனால் வேறொருத்தி என்று தோன்றினாள்.
அடையாளம் கண்டபின் பார்த்தேன், என்ன மாறியிருக்கிறது என? அவள் உடல் பொலிவுகொண்டிருந்தது. முகம் ஒளிவிட்டது. சட்டென்று வயலில் பொற்கதிர் எழுந்து பரவியது போல. என்ன நிகழ்ந்தது?
அவள் அப்பா விட்டுவிட்டு போய்விட்டார். அம்மா வீட்டுவேலை செய்து வாழ்பவர். அவள் வேலைக்குப் போகமுடியாது, உயர்குடி. ஆகவே கொடும்பட்டினி. வீட்டுக்குள் அரையிருளில் சிறையிருந்தும் ஆகவேண்டும். மெலிந்து வெளிறி, களிம்பு படர்ந்து தூசடைந்த வெண்கல விளக்கு போலத்தான் எப்போதும் இருப்பாள்.
நான் என் அம்மாவிடம் சொன்னேன். “கல்யாணி அக்கா வேற மாதிரி இருக்கா”
என் அம்மாவின் அருகே இருந்த சலவைக்கார பானுமதி உடனே சொன்னாள். “அவளுக்கு பொன்னுருக்கியிருக்கு”
அது பலபொருள் கொண்ட சொல். பொன்னுருக்குதல் என்றால் நேர்ப்பொருள் நகைசெய்வது. குறிப்புப் பொருள், திருமணமாகப்போகிறது. கூர்ப்பொருள், காதல் கொண்டிருக்கிறாள். அப்பாலுள்ள பொருள், அவள் உடலில் பொன்னிறம் பரவி எழில் கூடியிருக்கிறது.
சிலநாட்களிலேயே தெரிந்தது, அயலூரில் இருந்து அங்கே வந்து அச்சு கடையின் மாடியில் தங்கியிருக்கும் பள்ளி ஆசிரியர் அவள்மேல் காதல் கொண்டிருந்தார். அவள் அவரை மணந்துகொண்டார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என பெருகி பொலிந்தாள்.
பொன்னுருக்குதல் என்னும் சொல்லாட்சி என் செவியில் அவ்வப்போது கேட்கும். ஏராளமான நாட்டார்பாடல்களை அப்படிமம் இணைத்துச் செல்வதுண்டு. “பொன்னுண்டோ தட்டானே? பெண்ணுண்டு தட்டானே” என்றொரு பாட்டு. பொற்கொல்லரிடம் ஒரு பெண் கேட்பது. பொன்னுருக்கி தரமுடியுமா? அந்த விண்ணளந்து மண்வகுத்த பொற்கொல்லன் அவளுக்கும் கொஞ்சம் பொன் எடுத்து வைத்திருப்பான்.
இன்றைய மதுரம் தேடி கபிலனுக்கு வந்தேன். இவன் வேரும் இனிக்கும் பெருமரம். இங்கன்றி இடம் வேறில்லை.
”நாய் தான் கவ்விய பொருளை எடுத்துக் கொண்டு ஓடுவதுபோல கவிதையை வாசித்ததுமே அதில் இருந்து கிள்ம்பிவிடவேண்டும். நாய் தனக்கான இடத்தில் அமைதியாக படுத்துக்கொண்டு அதை மெல்ல தொடங்கும்” ஆற்றூர் ரவிவர்மா ஒருமுறை சொன்னார்.
நான் கவிதையை வாசிப்பது எப்போதுமே அப்படித்தான். பெரும்பாலும் அவற்றுக்கான பொழிப்புரை, பதவுரை, தெளிவுரை, விரித்துரை, ஆய்வுரை ஆகியவற்றுக்குள் செல்வதில்லை. சென்றால் என் வாய் கவிதையை வேறு பல விலங்குகள் கவ்விப்பிடுங்கி குதறி மென்று சக்கையே எனக்கு கிடைக்கும்.
பலசமயம் கொள்ளப்பட்ட பொருள் ‘சரியானது’ ஆகவும் இருக்கும். சட்டைப்பித்தான் எல்லாம் போட்டு, எண்ணை தேய்த்து படியச்சீவி, பணிவுடன் அமர்ந்திருக்கும் வகுப்பின் முதல்வரிசை மாணவன் எழுந்து சொல்வது போன்ற பொருள். ஆனால் எனக்கு ‘வழிதவறி’ சென்றால்தான் கவிதை கிடைக்கிறது. பெருவழியில் சென்றால் கிடைப்பது உலகியல் விவேகம்.
பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ
மானினப் பெருங்கிளை மேயக ஆரும்
கானகநாடன் வரவும் இவள்
மேனி பசப்பது எவன்கொல் அன்னாய்?
(கபிலர் ஐங்குறுநூறு 217)
பெருமலையில் வேங்கைமரத்தின்
பொன்னென தோன்றும் மலர்களை
மான்கூட்டம் உறவொடு சேர்ந்து மேயும்
காட்டைச் சேர்ந்தவன்
வருவது உறுதியானபின்னரும்
இவள் மேனி மெலிவது ஏன்?
உரையாசிரியர் சொல்வது. தலைவன் மணச்செய்தியுடன் வருகிறான், மான்கூட்டம் வேங்கை மலர்களை கூடி உண்பதுபோல செழுங்கிளை கூட திருமணம் நிகழவிருக்கிறது. ஆயினும் இவள் ஏன் எண்ணி ஏங்கவேண்டும்?
மான் இனப் பெருங்கிளை என்னும் சொல் அந்தப் பொருள்நோக்கிக் கொண்டுசெல்வது உண்மை. ஆனாலும் நான் கொள்ளும் பொருள் வேறு. மான்கள் கூட்டமென ஏன் வேங்கைமலரை மேயவேண்டும்? ஏன் புல்லை மேயலாமே? அதுதானே இயல்பு?
வேங்கைமலர்கள் பொன்னிறமானவை. உதிர்ந்தால் மண்ணையும் பொன்விரிப்பென மூடுபவை. மானும் பொன்னிறமே. வேங்கைமலர்க்குலை அசைவது அங்கே ஒரு மான் நின்றிருக்கிறது என்ற விழிமயக்கையே அளிக்கும். (வேங்கை நின்றிருப்பது என்றும் தோன்றும். ஆகவேதான் அதன் பெயர் வேங்கை. நான் எரிமருள் என ஒரு கதையே எழுதியிருக்கிறேன்)
விரிந்த பொன்வெளியில் பொன் என திரண்ட மான்கூட்டம் மேயும் காட்சியே என்னுள் எழுகிறது. பொன்னை மேயும் பொன். தன்னை தான் உண்பதா? தலைவியின் அகத்தே நடப்பது என்ன? பொன்னெனத் திரளும் அகம். பொன் என விரியும் வெளி. பொன்னெனப் பூப்பது எது?
ஆனந்தபோதினி
கலைக்களஞ்சியம் ஒன்றை முறையான இணைப்புகளுடன் அமைக்கையில் சில செய்திகள் வந்து மூளையைச் சொடுக்குகின்றன. பின்னாளில் தமிழின் பொதுவாசிப்புக் களத்தில் புகழ்பெற்றிருந்த பல படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளில் அவர்கள் ஆனந்தபோதினியில்தான் எழுதி தெளிந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் ஆனந்தபோதினி தமிழ் வாசிப்பை உருவாக்கிய பொதுஇதழாக பெரும் செல்வாக்குடன் திகழ்ந்திருக்கிறது. ஆனால் இலக்கிய இதழ்கள் விரிவாக ஆவணப்படுத்தப்பட்ட நிலையில் ஆனந்தபோதினி போன்ற பேரிதழ்கள் பதிவாகாமலேயே மறைந்துவிட்டன.
ஆனந்தபோதினி – தமிழ் விக்கி
ஆனந்தபோதினி
சியமந்தகம்- கடிதம்
சியமந்தகம் தளத்தை படித்தேன். படித்துக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லவேண்டும். எவ்வளவு கோணங்கள். என்னென்ன அணுகுமுறைகள். அத்துடன் அனைத்துக் கட்டுரைகளிலும் தெரியும் உங்கள் மீதான பெரும் பற்று. பல கட்டுரைகள் கண்கலங்கவும் நெகிழவும் வைத்தன.
இணையத்தில் உங்களைப் பற்றி வரும் வசைகள், உங்கள் மேல் தாக்குதல் நடந்தபோது சிலர் கொண்டாடியது ஆகியவற்றைப் பார்த்தவர்கள் தமிழ் இலக்கிய உலகத்தில் உங்கள் மேல் பெரும் கோபம் இருக்கிறது என்று எண்ணிவிடுவார்கள். எழுதப்பட்ட எல்லா வசைகளையும் தொகுத்து ஒரு புத்தகம்கூட வந்தது என நினைக்கிறேன்.
ஆனால் தமிழ் இலக்கிய உலகம் அலட்சியமான மௌனம் வழியாக அந்த வசைகளுக்கு எதிர்வினையாற்றியது என்றே இந்த தளத்தில் வரும் கட்டுரைகள் காட்டுகின்றன. நான் நாற்பதாண்டுகளாக தமிழ் நவீன இலக்கியத்தை கவனிப்பவன் (தமிழில் எழுதும் வழக்கம் விட்டுப்போய்விட்டது. பழைய கணையாழியில் சில கதைகள் எழுதியிருக்கிறேன்) இன்றுவரை தமிழில் எந்த எழுத்தாளருக்கும் இத்தகைய ஒட்டுமொத்தமான ஏற்பும் மதிப்பும் கிடைத்ததே இல்லை. ஜெயகாந்தன், கி.ராஜநாராராயணன், சுந்தர ராமசாமி ஆகியவர்களின் அறுபதுகள் எல்லாம் எப்படி கடந்து சென்றன என நான் கண்டிருக்கிறேன்.
இந்த ஏற்பு எனக்கு காட்டுவது என்னவென்றால் நேர்நிலையான செயல் ஒரு சின்ன வட்டத்தில் கசப்பையும் கோபத்தையும் உருவாக்குகிறது. ஆனால் அவர்கள் எந்த வகையிலும் முக்கியமானவர்கள் அல்ல. பெரும்பாலும் சல்லித்தனமானவர்கள். உண்மையாகவே இலக்கியத்திலும் அறிவுத்துறையிலும் செயல்படுபவர்களுக்கு படைப்பின் முக்கியத்துவம் என்ன என்று தெரியும். அவர்கள் சண்டைபோட வருவதில்லை. ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசுவார்கள்
சங்கர் நாராயணன்
அரசியலும் இலக்கியமும்- கடலூர் சீனு
கடலூர் சீனுஇனிய ஜெயம்
நேற்று இரவு உங்கள் நூல்கள் தேடி புதிய வாசகர் ஒருவர் அழைத்திருந்தார். நான் கடலூர் சீனு என்று தெரிந்ததும் மிகுந்த உற்சாகம் கொண்டு இலக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசத்துவங்கினார். கேள்விகளும் பதில்களுமாக தொடர்ந்த உரையாடல் தமிழ் இலக்கிய வாசகனின் அரசியல் ஈடுபாடு எனும் தலைப்பை நோக்கி நகர்ந்தது.
உரையாடலில் எனது தரப்பை நான் இவ்வாறு முன்வைத்தேன். தமிழ் இலக்கிய வாசகனை, தமிழலக்கிய அரசியலின் வரலாற்றின் பின்புலத்தில் பொருத்திப் பார்த்தால் அதன் முதல் காலம் தாகூர் பாரதியின் காலம். கோரா வழியாக தாகூர் எதை பேசினாரோ, பாஞ்சாலி சபதம் வழியே பாரதி எதைப் பேசினாரோ அதற்கான அன்றைய சமூக அரசியல் சூழல் பின்புலம் அல்ல, ஸ்ரீலால் சுக்லா தர்பாரி ராகம் எழுதிய, தமிழில் நவீனத்துவம் வீச்சுடன் எழுந்த சூழல், பின்னர் 90 களுக்கு பின்னர் எழுந்த பின்நவீனம் பெண்ணியம் தலித்திய இலக்கிய எழுச்சி நிகழ்ந்த அடுத்த அலை. அதன் பிறகு அறம் சிறுகதை தொகுதி எழுந்து வந்த ‘இன்றைய’ காலம்.
இந்த வரிசையில் அது பேசிய நேர்நிலை அம்சங்கள் அனைத்தையும் இழந்து எதிர்நிலை பண்புகள் மட்டுமே கோலோச்சிய காலம் என்று இந்த 90 களுக்கு பிறகான காலத்தை சொல்லலாம். வெகுஜன ஜனநாயக களத்தில் சாதி வெறி, மத வெறி, அரசியல் வெறி, அதிகார வெறி இந்த நான்கையும் ஒன்றாக பிணைத்து வைத்த காரியத்தை இந்த அலை நிகழ்த்தியது.
இன்றைய ‘அறத்தின்’ காலம் என்பது உலகம் முழுமையும் ஒரே ஒரு பொருளாதார கொள்கை அது தேர்வு செய்யும் அதன் படியிலான அரசுகள் ஆளும் காலம். தேர்தல் உட்பட அனைத்தும் முதலீட்டியத்தால் காசு கொடுத்து வாங்கப்படும் காலம்.
இன்று சாதி மத அரசியல் அதிகார வெறியை சமூக அரசியல் உரையாடல் எனும் முகமூடிக்குள் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களில் இலக்கிய வாசகர்களும் உண்டு. பெரு முதலீட்டில் விலைக்கு வாங்கப்படும் தேர்தல் எனும் இன்றைய வணிக விளையாட்டில் இவர்களின் கருத்து மோதல்களுக்கு எந்த ஒரு பயன் மதிப்பும் கிடையாது. உபரியாக தான் கொண்ட இலக்கிய ரசனை நுண்ணுணர்வை அதற்கு களப் பலி கொடுப்பது மட்டுமே மிச்சம்.
இன்றைய காலத்தில் கூறுணர்வு கொண்ட இலக்கிய வாசகன் அரசியல் களத்தில் ஒன்றை காணலாம். காரணம் எது எனினும் அன்று வெள்ளையர் காலத்தில் செத்த அதே விவசாயிகள், பசுமைப் புரட்சிக்கு பின்னும் செத்தார்கள், 90 களுக்கு பிறகும் செத்தார்கள், இன்றும் சாகிறார்கள். அவர்கள் தலைக்கு மேலே வித விதமான அரசியல் மாற்றம்.
ராக்கெட் தளம் அமைக்க தங்கள் நிலங்களை அரசு கையப்படுத்துவதை எதிர்த்து போராடியவர்களுக்கு தலைமை தாங்கிய சந்திரசேகர் பின்னர் பிரதமர் ஆனதும் செய்த முதல் வேலை அந்த நிலங்களை பறித்து ராக்கெட் தளம் அமைக்க கையகப் படுத்தியதே. வித்யாரண்யர் மடத்தில் இருந்து முளைத்த விதையே ஹரிஹர் புக்கர். அவர்கள் பெயரை சொல்லி பண்பாட்டு காவலர்கள் என பிரகடனம் செய்து ஆட்சிக்கு வந்த இந்த மத்திய அரசின் காலத்தில்தான் பூரி கோயிலை சுற்றி உள்ள கோயில் பண்பாட்டுடனும் வரலாற்றுடனும் ஐநூறு ஆண்டுகளுக்கு மேலும் தொடர்பு உள்ள அத்தனை மடங்களும் தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆட்சிகள் மாறும். காட்சிகள் மாறாது.
இத்தகு சூழலில் இன்று ஒரு இலக்கிய வாசகன் அரசியல் நிலைப்பாடு ஒன்றை கைகொள்ளுவான் எனில் அவன் இரண்டு இடங்களில் சென்று விழுவான். ஒன்று அவன் இலக்கியத்தை இழப்பான். இலக்கியம் அரசியல் இரண்டின் செயற்களமும் இரண்டு துருவங்கள். இலக்கியம் முற்றிலும் அகம் சார்ந்தது. அரசியல் முற்றிலும் புறம் சார்ந்தது. இலக்கியம் ஒவ்வொரு முறையும் அகத்தை கலைத்து அடுக்குவது. அரசியல் வெறி நம்பிக்கை இவற்றில் மட்டுமே ஒருமை கொண்டு இயங்குவது. இலக்கியம் நாம் என்பதில் திகழ்வது. அரசியல் நாமும் அவர்களும் என்ற இருமையில் மட்டுமே உயிர் வாழ்வது. இந்த சமன்பாட்டில் இலக்கிய வாசகன் அகத்தால் தனது தனித்தன்மை இலக்கியத்தை இழந்து புறத்தால் பொதுத்தன்மை கொண்ட அரசியல் நிலைப்பாட்டாளன் ஆக மட்டுமே எஞ்சுவான். இரண்டாவதாக கொண்ட அரசியல் நிலைப்பாட்டில் அவன் நிற்கும் கட்சி செய்த நேர்நிலை அம்சங்கள் அளவுக்கே, அவனது கட்சி செய்த எதிர்நிலை அம்சங்களுக்கும் அவன் பொறுப்பாளி ஆகிறான். பூரி மடங்கள் அழிவில் அந்த பாவத்தில் அக் கட்சி ஆதரவாளர் அனைவருக்கும் சம பங்கு உண்டு.
ஆக ‘இன்றைய இலக்கிய வாசகனின்’ சமூக அரசியல் கண்ணோட்டம் என்பது என்னவாக இருக்க வேண்டும் எனில், இனி வரும் காலத்திலேனும் லட்சியவாத கனவை கொண்ட சமூகம் ஒன்று உருவாக எவை எவை எல்லாம் ‘இன்று’ பணி செய்து கொண்டு இருக்கிறதோ ( தன்னறம் இயக்கம் போல) அவற்றைக் கண்டு, அவற்றுடன் நின்று, அவற்றை குறித்து பொது வெளியில் பேசி, அவற்றின் அராஜக இருப்பை இன்றய பொது மனதில் துலங்க வைப்பதாக இருக்க வேண்டும்.
அரசியல் பேச இங்கே பிரதமர் முதல் தெருக்கோடி பெட்டிக்கடை நாராயணன் வரை 100 கோடி பேர் உண்டு. அதேயே இன்றைய இலக்கிய வாசகனும் செய்ய தேவை இல்லை. இன்று இலக்கிய வாசகனாக இருப்பது என்பது ஒரு ‘சமூகப் பொறுப்பு’ அந்தப் பொறுப்பை இன்றைய அரசியல் மாயையில் தொலைக்காமல் என்றும் உள்ள கலை இலக்கியப் பண்பாட்டுக் களத்தை வளமாக்க பணி புரிவோம்.
கடலூர் சீனு
பூன் முகாம், கடிதம்
வணக்கம் ஜெ,
இதுவரை ஒரு இலக்கிய முகாமிற்கு சென்றது இல்லை, ஒரு முழுநாளும் இலக்கியத்திற்கு என்று தனியாக ஒதுக்கியது கிடையாது, எந்தவித கவன சிதறல்களும் இல்லாமல் கவனித்தது கிடையாது, திகட்ட திகட்ட இலக்கியம் பேசியதும் இல்லை ,திரும்பும் திசைகளிளெல்லாம் இலக்கியம் பேசுபரவர்களை மட்டுமே பார்த்ததும் இல்லை, இதுபோல ஒரு நாள் அமையுமென்று கனவிலும் நினைக்கவில்லை . இதுவரை கிடைக்காத எல்லாவற்றையும் இனி எஞ்சிய வாழ்நாளில் கிடைக்கப் போகும் அத்தனையும் ஒரே சந்தர்ப்பத்தில் கிடைத்தால் என்ன நடக்கும். தூக்கம் பொருட்டாகாது, துக்கம் பொருட்டாகாது என்பது நடக்கும், நடந்தது.
பூனில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று. வாழ்க்கையே தருணங்களை சேகரிப்பது என்று நீங்கள் சொன்னீர்கள். வாழ்வில் எனக்கு வாய்த்த சில தருணங்களை எண்ணி சந்தோசப் பட்டு இருக்கிறேன், அழுதிருக்கிறேன் , வெறுமனே சிரித்துக் கடந்திருக்கிறேன் ஆனால் வாழ்விற்குமான வரம் என்று நினைத்ததில்லை. இது அதுபோல மகத்தான ஒன்று. எனது வாழ்க்கையைத் திரும்பி மீள் பரிசீலனை செய்யும் பொழுது, உங்களை கண்டடைந்த நாளை அத்தருணங்களில் சேர்க்க விழைகிறேன்.யானை டாக்டர் கதையைப் பற்றி யாரோ வானொலியில் பேசிக்கொண்டிருக்க, இணையத்தில் தேடி உங்கள் தளத்தில் படித்தேன். அன்று 17 ஆகஸ்ட் 2012. அதுவரை ஒரு கதை என்ன செய்யும் என்பதை நான் அறியேன். தொடர்ந்து மூன்று நாட்கள் யானைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பிறகு மீண்டும் படிக்கத் தோன்றி எடுக்க அம்மாவின் நினைவு வர அக்கதையை உடனே தொலைபேசியில் எனது அம்மாவிடம் படித்து காட்டினேன், பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் எனது மனைவியிடம். இன்னும் யாருக்கெல்லாம் படித்து காட்ட வேண்டுமோ , அவர்களுக்கும் படித்துக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. அன்றிலிருந்து உங்களுடனான பயணம் இனிதே ஆரம்பித்தது.
யாராவது ஒரு கேள்வியை, அது இலக்கியம் சார்ந்ததோ, வாழ்க்கை சார்த்ததோ கேட்டால், ஜெ என்ன சொல்லியிருக்கிறார் என்று தான் முதலில் பார்ப்பேன். இரவு நாவலில் ஒரு இடத்தில “அதிகாலையிலே ஒரு சிறுத்தை… கொன்னைப் பூக்குவியலிலே செஞ்ச உடம்பு. அது அப்டி, மென்மையா, கைக்குழந்தை மாதிரி, காலெடுத்து வைச்சு வந்தது. கடவுள் பக்தன் மனசுக்குள்ளே அப்டித்தான் வருவார்னு நினைக்கிறேன்” சொல்லி இருப்பீங்க. அதுபோலவே என் மனசுக்குள்ளே குருவா வந்து இருக்குறீங்கன்னு நினைச்சுக்கிட்டேன். வாழ்வின் மகத்தான அனுபவங்களை, மனித மனதின் ஆழங்களை, கேள்விகளை சரியாக புரிந்து கொள்ள சரியான ஆசானாக எனக்கு நீங்கள் வாய்த்துவிட்டிர்கள் என்று ஒரு நாள் தோன்றியது, பூன் கேம்பில் அந்த எண்ணம் வலுத்தது . சிறுகதைகள், நாவல்கள், தத்துவங்கள் இப்படி பலவற்றை பற்றி பூணில் விவாதித்தோம். முடிந்தவுடன் நான் உணர்ந்தது, வாழ்க்கைக்கான பாடத்திட்டம் தயாராகிவிட்டது என்பதும், இலக்கியமும் வாழ்க்கையும் வேறுவேறல்ல என்பதுமே.
கவிதை பற்றிய விவாதத்தின் பொழுது “அபி” யின் கவிதைக்கு நீங்கள் தந்த விளக்கம் சிறப்பாக அமைந்தது. அந்தக் கவிதையில் “முதன்முதலாம் கணவனைக் கண்டதும்
அவளது மூன்றாவது முலை மறைந்தது” என்ற வரிக்கு மீனாட்சியை குறிப்பதாக நீங்கள் கூறினீர்கள். இங்கு எனக்கு மீனாட்சியை பற்றி தெரியாது, நீங்கள் சொன்ன பிறகே எனக்கு விளங்கியது. கவிதையில் படிமமே உன்னத நிலை என்று தேவ தேவன் “கவிதை பற்றி” புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அப்படியிருக்க, நீங்கள் அதற்கான விளக்கத்தை சொன்ன பிறகு, அதன் படிமங்கள் மறைந்து விட்டது போன்று எனக்கு தோன்றுகிறது. அது சரியா ? மீனாட்சி பற்றி தெரியாவிட்டால் இன்னுமும் அதன் படிமங்களை நான் அனுபவிக்கலாம் அல்லவா? இந்தக் கவிதையில் ப்ரபஞ்சத் தன்மை இருக்கிறதா ?
சங்கர நாராயணன், டெட்ராய்ட், மிச்சிகன்.
May 25, 2022
இங்கிருத்தலின் கணக்கு
அன்புள்ள ஜெ அண்ணா
வாழும் ஞானிகளிடம் இல்லாத உளத்தெளிவு வாழும் இலக்கியத்திற்கு உண்டென ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன்.முடிவற்ற ஒரு தேடலுக்கு நிறைவான ஒரு பதிலை ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு வாசிப்பில் என் வாழ்வு கண்டடைந்துவிடுகின்றது.
(யாரந்த ஞானி? என்கிற கேள்விக்கு அகத்தெளிவு வேண்டி நான் வாங்கி வாசிக்கும் ஆன்மீகப் புத்தகங்களே.அதையும் வாசிப்பின் மூலமேதான் “இல்லாதது“என்கிறேன்)
அங்கே எனக்கு ஒரு குழப்பமும் உண்டாவதில்லை.பிறகெந்தக் கேள்விக்கும் அவ்விடத்தில் அவசியமில்லாமல் போகிறது.ஓயாத ஒரு அழைப்பின் குரல் இளைப்பாறும்படியாக நானங்கே சென்றுசேர்ந்துவிடுகிறேன்.என்னிடமிருந்து ஆவேசமான ஒரு உதறல் நிகழ்ந்துவிடுகின்றது.முற்றும் காலியாகிவிட்ட என் நிலையை அத்தருணத்தில் இப்பிரபஞ்சத்திடம் உரக்கக் கத்திச் சொல்லி நிறைவடைகிறது மனம்.
உங்களுடைய சமீபத்திய பதிவில் ஒரு கேள்விக்கு நீங்கள் தந்த பதில் அதை ஊர்ஜிதப்படுத்தியது.கேள்வியைப் படித்தபோது நிதர்சனமான இத்தத்துவாதத்திற்குப் பதிலொன்றும் இல்லையென்றே தோன்றியது.ஆனால் அக்கேள்வியின் முடிச்சுக்களை சுலபமாக இன்னும் சொல்லப்போனால் மாயமாக நீங்கள் அவிழ்த்துப்போடுகிறதைக் கண்டு சிலிர்த்துப்போனேன்.இறுதியில் முற்றாகக் கரைந்தேபோனது அது.
சூழல் நம்மை நான்கு திசையிலும் இழுத்துச் சிதறடிக்கிறது. நாமே நம்மை எட்டுதிசைக்கும் வீசியடிக்கிறோம். அதிலிருந்து தப்ப சிறந்த வழி செயல். நம்மை நாமே குவித்துக்கொள்ளும் செயல்
இலக்கியம் தவிர வேறொன்றும் இதைச் சொல்லாது.சொல்லவும் முடியாது.பிரார்த்தனை, வேண்டுதல்,தவம்,தியானம் எதனொன்றிற்கும் இதனைச் சொல்லும் சாத்தியமில்லை.பிறகு ஏன் எல்லாம் நிகழ்கின்றனவோ புரியவில்லை.
என் கேள்வி இதுதான் ….
என்னால் பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை.அத்தியாவசியத் தேவையின் திண்டாட்டம் அலைக்கழிக்கிறது.எந்தப் பொருட்டுமின்றி தேமே என்று எதோ ஒரு புத்தகத்தில் மூழ்கிவிடுகிறேன்.எதாவது ஒன்றைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.வேலை நேரத்திலும் இதே போக்கு.வேலை பறிபோகிறது.இதுவொரு பக்கம்.
கடன் தொல்லை,வாடகைப் பாக்கி நிலுவை,மனைவியின் சின்னச்சின்ன ஆசையும் தேவையும்,குழந்தைகளின் பிறந்ததின கொண்டாட்டம் எல்லாம் அதனதன் நாள்களில் நிறைவுறாமல் என்னைக் கேலிசெய்தபடியே வெறுமையாய்க் கடந்துபோகின்றன.
மனமோ “புத்தகங்ளோடு வீசியெறியுங்கள் என்னை” என்று இரைஞ்சுகிறது.
புறமெங்கிலும் மேற்சொன்ன களேபரங்கள் நடக்கும்போது பொறுப்பற்றவனாய் ஓடி ஒளிந்துகொண்டு எதையோ வாசித்து எதிலோ நிறைவடைந்து சைக்கோவைப்போல (சுற்றம் சொல்வது) புன்னகைத்தபடியே களேபரத்தை நோக்கித் திரும்பி வருகிறேன்.மானுட மீட்பு இலக்கியத்திற்கு உண்டென்றே நம்பிக் கனவு காண்கிறேன்?
தீர்வென்ன வேறிதற்கு?
அன்புடன்
சுஜய் ரகு
***
அன்புள்ள சுஜய்
நான் ‘ஞானத்தை’ சொல்லவில்லை. நானே வாழ்ந்து அறிந்த சிலவற்றைச் சொல்கிறேன். அவை பிறருக்குப் பயன்படலாம். ஏனென்றால் அவை பயன்படுமென்பதற்கு நானே வாழும் உதாரணம். என் செயல்களின் வெற்றி மேல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு என் வழிமுறைகளை பரிசீலித்துப் பார்க்கும் ஆர்வம் உருவாகுமென நினைக்கிறேன்.
நான் கூறும் செயல்யோகம் என்பது நம் அகம் நிறையும் ஒன்றை முழுமையாகச் செய்வது. அதுவே முதன்மையானது என உணர்வது. அதை விட்டுவிட்டு திசைதிருப்பும் சூழல்களை தாக்குப்பிடித்து தன்னைக் குவித்துக் கொள்வது.
ஆனால் அதன்பொருட்டு உலகியலை நிராகரிக்க முடியாது. நிராகரித்தால் அந்த செயல்யோகத்தைச் செய்யமுடியாதபடி உலகியல் வந்து கவ்விக்கொள்ளலாம். ஏனென்றால் மானுடர் இங்கே உண்டு உடுத்து வாழவேண்டும். உலகியலின் அவசியக் கடமைகளைச் செய்தாகவேண்டும்.
ஆகவே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். உலகியலையும் அகவாழ்க்கையையும் பிரித்துக் கொண்டாகவேண்டும். அவற்றுக்கிடையே ஒரு சமநிலையை பேணியாகவேண்டும். உலகியலில் ஆற்றவேண்டிய குறைந்தபட்ச செயல்களை சரியாக ஆற்றியே ஆகவேண்டும். இல்லை என்றால் அகச்செயல்பாடுகளும் குலைந்து போகும்.
உலகியலில் தொடந்த உயர் இலக்குகள் இல்லாமலிருக்கலாம். உலகியலில் பிறர் நமக்களிக்கும் கட்டாயங்களை நாம் தவிர்க்கலாம். பிறருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நம்மை நாமே துரத்திக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால் உலகியலில் ஓர் அடிப்படையை உருவாக்கிக் கொண்டே ஆகவேண்டும். அது ஓர் விடுதலை. அந்த விடுதலையில் இருந்தே நாம் நம் அகவாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
நுண்னுணர்வுள்ளவன் அன்றாட வேலை செய்வது கடினம். சலிப்பூட்டுவது. அவன் உள்ளம் அவன் இடத்தையே நாடும். ஆனால் வேறுவழியில்லை. தசையில் ஒரு துண்டை வெட்டி வீசி துரத்தும் ஓநாய்களுக்கு அளித்து அவற்றிடமிருந்து உயிர்தப்பி ஓடுவது போன்றது அது.
நுண்ணுணர்வுள்ளவன் உலகியலில் ஈடுபட்டு பொருளீட்டவேண்டும். பணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம். சிலருக்கு அது ஆடம்பரம். சிலருக்கு அது சுகபோகம். சிலருக்கு அது ஆணவநிறைவு. நுண்ணுணர்வுள்ளவனுக்கு பணம் என்றால் விடுதலை, அவனுக்கான நேரம் என அர்த்தம்
ஜெ
திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
தமிழகத்தின் பண்பாட்டு மையங்கள் ஆலயங்கள். தமிழ் வரலாற்று புள்ளிகள் அவை. கலைச்செல்வங்களும்கூட. ஆனால் அவற்றைப்பற்றி அறிய நமக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஆலயங்களைப் பற்றி பக்தி சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள். சுற்றுலாக் குறிப்புகள். தொல்லியல் சார்ந்த குறிப்புகளை அவ்வப்போது நாம் தொல்லியல் துறை இணையப்பக்கங்களில் காணலாம், முழுமையாக அல்ல. அனைத்தையும் இணைத்து ஒரு முழுமையான சித்திரத்தை உருவாக்குவது தமிழ் விக்கியின் கனவு. தமிழகத்தின் அனைத்து ஆலயங்களையும் ஆவணப்படுத்துவது என தொடங்கியிருக்கிறோம். இப்போதுள்ள கட்டுரைகள் எவ்வாறு நம் பதிவுகள் அமையவேண்டும் என்பதற்கான சான்றுகள் மட்டுமே.
திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
கோதுமை ஏற்றுமதி- கடிதம்
அன்புள்ள ஜெ,
“கோதுமை ஏற்றுமதிக்குத் தடை” – இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “உழைப்பினால் கிடைக்கும் தானியங்களை, உலக தேவையைப் பயன்படுத்தி” நமக்கு ஏற்றபடி ஏன் விலை நிர்ணயம் செய்ய கூடாது என்ற கேள்வி எனக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது. இந்த கேள்வியை கடிதத்தின் இணைப்போடு எங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்து கொண்டேன். அப்பகிர்வு அதனடிப்பைடையலான விவாதம் ஒன்றை உருவாக்கி, ஒரு நல்ல புரிதலுக்கும் என்னை தொகுத்து கொள்ளவும் உதவியது. அவ்விவாதத்தின் சாரமாக நான் கருதுவதை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களும் இங்கே சிறு மற்றும் குறு விவசாயிகளாலேயே பெரும்பாலும் செய்யப்படுவது. அதன் உற்பத்தி தொழில்மயமாக்கப்படாதது. இதனால் அதன் உற்பத்தியையோ அல்லது வர்த்தகத்தையோ கட்டு படுத்துவது எளிதல்ல. அதாவது இன்று எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC ) உற்பத்தியை எளிதாக குறைக்கவோ கூட்டவோ முடியம். உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் மீதான இந்த கட்டுப்பாடே விலை நிர்ணயத்தின் ஆதாரம். ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களை விற்க தடை விதிப்பது எளிதல்ல – பல விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க கூடும். இதற்காக அரசே அத்தனை விளைபொருட்களையும் கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும். அம்மாதிரியான அமைப்பு இந்தியாவில் ஏற்கனேவே இருந்தாலும், அவை ஊழல் நிறைந்தவையாகவே செயல்படுகின்றன.
மேலும் விளைபொருள்களை சேமித்தலும் அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதும் மிகவும் செலவேறியது .
இதையனைத்தையும் செய்தாலும் எண்ணெய் வணிகம் போன்றோ, இயந்திரமாக்கப்பட்ட உற்பத்தி பொருட்களை போன்றோ அல்லது உயர் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை போலவோ விலை நிர்ணயம் செய்வது சாத்தியமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கோகோவை அதிக அளவில் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் கானா நாட்டின் விவசாயியால் அதிலிருந்து உருவாக்கப்படும் சாக்லட்டை வாங்க முடியாது. தான் வாங்க முடியாது என்பதால், அக்கம்பனிகளுக்கு தன் விளை பொருட்களை விற்க மாட்டேன் என்றும் சொல்ல முடியாது. சொன்னால் அவ்விவசாயி தன வாழ்வாதரத்தை இழக்க வேண்டும். இந்நிலைமை ஒன்றும் சர்வதேச சதியால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல, மாறாக பொருளாதாரத்தின் அடிப்படைகள் மட்டுமே இதனை தீர்மானிக்கிறது.
விவசாயத்தில் எண்ணெய் வணிகம் போன்று எளிதாக உற்பத்தியை கட்டுப்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது இயலாதது. விவசாயத்திற்கு இயந்திரமாக்கப்பட்ட உற்பத்திக்கு தேவையான பணித்திறன் தேவை இல்லை – அதனால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருளை , நாம் அதிக விலை நிர்ணயம் செய்யும் போது , மற்றொரு நாட்டில் உற்பத்தி செய்வது என்பது எளிதே. உயர் தொழில்நுட்பம் போன்று இதில் அறிவுசார் சொத்து (Intelectual property) என்பது, ஒரு சில புவிசார் குறியீடுகளை தாண்டி, ஒன்றும் இல்லை.
இதனாலேயே வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் விவசாய ஏற்றுமதியை பெரிதும் சார்ந்திருப்பதில்லை. ஒரு நாடு தேங்காயை ஏற்றுமதி செய்து உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பெட்டிகளையும் , கைப்பேசிகளை இறக்குமதி செய்வது வர்த்தக சமநிலையின்மையையே உருவாக்கும்.
இதனாலேயே ஸ்ரீதர் வேம்பு போன்ற வல்லுநர்கள் இந்திய பொருளாதாரம் தொழில் நுட்பம் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இன்றைய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதர சூழ்நிலையில் உயர் தொழில் நுட்பம் சார்ந்த சந்தையில் விலை நிர்ணயம் செய்வததே (price fixing) கடினம் என்பதே சீனாவின் 5ஜி அனுபவம்.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு என்பதை தாண்டி நாம் உணவு உற்பத்தி செய்ய வேண்டுமா? இந்திய பொருளாதாரம் விவசாயம் சார்ந்தே இருந்தால் நம் தேச மக்களின் வாழ்க்கை தரம் உயருமா என்பவை முக்கியமான கேள்விகள். இதற்கு பதில் அரசியல் சரி நிலைகளையும் நம் உணர்ச்சிகளின் எல்லைகளையும் தாண்டியதாகவே இருக்க வேண்டும்.
அன்புடன்
பாலாஜி என்.வி, பெங்களூர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

