பூன் முகாம், கடிதம்

வணக்கம் ஜெ,

இதுவரை ஒரு இலக்கிய முகாமிற்கு சென்றது இல்லை, ஒரு முழுநாளும் இலக்கியத்திற்கு என்று தனியாக ஒதுக்கியது கிடையாது, எந்தவித கவன சிதறல்களும் இல்லாமல் கவனித்தது  கிடையாது, திகட்ட திகட்ட இலக்கியம் பேசியதும் இல்லை ,திரும்பும் திசைகளிளெல்லாம் இலக்கியம் பேசுபரவர்களை மட்டுமே பார்த்ததும்  இல்லை, இதுபோல ஒரு நாள் அமையுமென்று கனவிலும் நினைக்கவில்லை . இதுவரை கிடைக்காத எல்லாவற்றையும் இனி எஞ்சிய வாழ்நாளில் கிடைக்கப் போகும் அத்தனையும் ஒரே சந்தர்ப்பத்தில்  கிடைத்தால் என்ன நடக்கும். தூக்கம் பொருட்டாகாது, துக்கம் பொருட்டாகாது என்பது நடக்கும், நடந்தது.

பூனில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று. வாழ்க்கையே தருணங்களை சேகரிப்பது என்று நீங்கள் சொன்னீர்கள். வாழ்வில் எனக்கு வாய்த்த சில தருணங்களை எண்ணி சந்தோசப் பட்டு இருக்கிறேன், அழுதிருக்கிறேன் , வெறுமனே சிரித்துக்  கடந்திருக்கிறேன் ஆனால் வாழ்விற்குமான வரம் என்று நினைத்ததில்லை. இது அதுபோல மகத்தான ஒன்று. எனது வாழ்க்கையைத்  திரும்பி மீள் பரிசீலனை செய்யும் பொழுது, உங்களை கண்டடைந்த நாளை அத்தருணங்களில் சேர்க்க விழைகிறேன்.யானை டாக்டர் கதையைப் பற்றி யாரோ வானொலியில் பேசிக்கொண்டிருக்க, இணையத்தில் தேடி உங்கள் தளத்தில் படித்தேன். அன்று 17 ஆகஸ்ட் 2012. அதுவரை ஒரு கதை என்ன செய்யும் என்பதை நான் அறியேன். தொடர்ந்து மூன்று நாட்கள் யானைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பிறகு மீண்டும் படிக்கத் தோன்றி எடுக்க அம்மாவின் நினைவு வர அக்கதையை உடனே தொலைபேசியில் எனது அம்மாவிடம் படித்து காட்டினேன், பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் எனது மனைவியிடம். இன்னும் யாருக்கெல்லாம் படித்து காட்ட வேண்டுமோ , அவர்களுக்கும் படித்துக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. அன்றிலிருந்து உங்களுடனான பயணம் இனிதே ஆரம்பித்தது.

யாராவது ஒரு கேள்வியை, அது இலக்கியம் சார்ந்ததோ, வாழ்க்கை சார்த்ததோ கேட்டால், ஜெ என்ன சொல்லியிருக்கிறார் என்று தான் முதலில் பார்ப்பேன். இரவு நாவலில் ஒரு இடத்தில “அதிகாலையிலே ஒரு சிறுத்தை… கொன்னைப் பூக்குவியலிலே செஞ்ச உடம்பு. அது அப்டி, மென்மையா, கைக்குழந்தை மாதிரி, காலெடுத்து வைச்சு வந்தது. கடவுள் பக்தன் மனசுக்குள்ளே அப்டித்தான் வருவார்னு நினைக்கிறேன்” சொல்லி இருப்பீங்க. அதுபோலவே என் மனசுக்குள்ளே குருவா வந்து இருக்குறீங்கன்னு நினைச்சுக்கிட்டேன். வாழ்வின் மகத்தான அனுபவங்களை, மனித மனதின் ஆழங்களை, கேள்விகளை சரியாக புரிந்து கொள்ள சரியான ஆசானாக எனக்கு நீங்கள் வாய்த்துவிட்டிர்கள் என்று ஒரு நாள் தோன்றியது, பூன் கேம்பில் அந்த எண்ணம் வலுத்தது . சிறுகதைகள், நாவல்கள், தத்துவங்கள் இப்படி பலவற்றை பற்றி பூணில் விவாதித்தோம். முடிந்தவுடன் நான் உணர்ந்தது, வாழ்க்கைக்கான பாடத்திட்டம் தயாராகிவிட்டது என்பதும், இலக்கியமும் வாழ்க்கையும் வேறுவேறல்ல என்பதுமே.

கவிதை பற்றிய விவாதத்தின் பொழுது “அபி” யின் கவிதைக்கு நீங்கள் தந்த விளக்கம் சிறப்பாக அமைந்தது. அந்தக் கவிதையில்  “முதன்முதலாம் கணவனைக் கண்டதும்
அவளது மூன்றாவது முலை மறைந்தது” என்ற வரிக்கு மீனாட்சியை குறிப்பதாக நீங்கள் கூறினீர்கள். இங்கு எனக்கு மீனாட்சியை பற்றி தெரியாது, நீங்கள் சொன்ன பிறகே எனக்கு  விளங்கியது. கவிதையில் படிமமே உன்னத நிலை என்று தேவ தேவன் “கவிதை பற்றி” புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அப்படியிருக்க, நீங்கள் அதற்கான விளக்கத்தை சொன்ன பிறகு, அதன் படிமங்கள் மறைந்து விட்டது போன்று எனக்கு தோன்றுகிறது. அது சரியா ? மீனாட்சி பற்றி  தெரியாவிட்டால் இன்னுமும் அதன் படிமங்களை நான் அனுபவிக்கலாம் அல்லவா? இந்தக் கவிதையில் ப்ரபஞ்சத் தன்மை இருக்கிறதா ?  

நன்றி,
சங்கர நாராயணன், டெட்ராய்ட், மிச்சிகன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.