Jeyamohan's Blog, page 770
June 1, 2022
இலக்குவனார்
இலக்குவனார் சிறிதுகாலம் நாகர்கோயில் இந்துக் கல்லூரியில் பணியாற்றினார். அன்று அவரிடம் தமிழ் பயின்றவர்கள் அவருடைய செந்தமிழ்ப்பித்து பற்றி பல வேடிக்கைகளைச் சொல்லியிருக்கிறார்கள். ‘உசாவி வருக’ என்று சொன்னதை சிரமேற்கொண்டு ஒரு மாணவன் உஷாதேவி என்னும் மாணவியை அழைத்து வந்தது ஓர் உதாரணம்.
ஆனால் வாழ்நாள் முழுக்க ஒரு போராளியாக திகழ்ந்தவர் இலக்குவனார். எல்லா ஆட்சிக்காலத்திலும் தமிழுரிமைக்காக போராடி தண்டனைகளை அடைந்தவர். ஊர் ஊராக வேலைமாற்றம் செய்யப்பட்டவர். மிகையூக்கமும் மிகைப்பற்றும் அறிஞர்களுக்குரிய பண்புகள். ஒரு பண்பாட்டின் அடித்தளத்தை நிலைநிறுத்துபவர்கள் இலக்குவனார் போன்ற அறிஞர்கள்.
இலக்குவனார்– தமிழ் விக்கி
இலக்குவனார் – தமிழ் விக்கி
படைப்பாளியின் தவமும் படைப்பின் உணர்வுத்தீவிரமும் – பி.கே.பாலகிருஷ்ணன்
ஜேன் ஆஸ்டன் -பி.கே.பாலகிருஷ்ணன்
அனுபவங்களை விலக்கும் கலை -பி. கே. பாலகிருஷ்ணன்
ஜேன் ஆஸ்டனின் நாவல்களின் பிறிதொன்றில்லாத சிறப்பம்சம் என்ன? இரக்கமற்ற சுயஎள்ளல் நிறைந்த ஜேன் ஆஸ்டன் வாசகர்களாகிய நம் சிந்தனையை, நம் உணர்வுநிலையை கைப்பற்றும் திறன் கொண்டவர். இந்த திறனை அவர் எப்படி அடைந்தார்? இந்த கேள்வி ஜேன் ஆஸ்டனின் நாவல்களை வாசித்து அந்த வாசிப்பனுபவத்தின் இனிமையில் திளைக்கும் சிந்திக்கும் பழக்கம் உள்ள இலக்கிய வாசகனை வியப்பில் ஆழ்த்தும் கேள்வி. ஜேன் ஆஸ்டனின் நாவல் ஒன்றை வாசிக்கும்போது அந்த நாவலின் தனித்தன்மையான அம்சங்கள் ஒவ்வொன்றும் நம் பிரக்ஞையில் துளித்துளியாக திரண்டுவரும் அனுபவத்தை நாம் அடைவதில்லை. ஜேன் ஆஸ்டனின் நாவல்கள் வாசகனில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதை தெளிவாக விளக்க நாம் இலக்கியம் தவிர்த்த வேறு விஷயங்களைத்தான் உதாரணமாக தேட வேண்டும். பொதுவாக, ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் இருப்பது போன்ற உணர்வுத்தீவிரத்தை பொதுவாக நாவல்களில் அவ்வளவு எளிதாக காணமுடியாது. நம் தர்க்கத்தை, நம் சிந்திக்கும் ஆற்றலை ஸ்தம்பித்து நிற்கவைத்து சங்கீதம்போல நேரடியாக நெஞ்சில் பதியும் உணர்வுத்தீவிரம் அது. (ஜேன் ஆஸ்டனின் ’ pride and prejudice’ நாவலை சிந்திக்கும் பழக்கம் உள்ள யாராலும் மொழிபெயர்க்கவே முடியாது என்பதையும் இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும்.) இயல்பாகவே, ஜேன் ஆஸ்டனின் இந்த தனித்தன்மையை ஆராய்ந்து பார்ப்பது சாத்தியமில்லை. நாவல்களின் உலகில் மிக விசித்திரமான இலக்கியமேதை ஒருவரின் முழுமுற்றான ஆன்மவெளிப்பாடுதான் இந்த படைப்புகள்; அதற்கு அப்பால் என்றோ, அதைவிட கொஞ்சம் தாழ்ந்தது என்றோ சொல்லமுடியாது. இந்த முழுமையான ஆன்மவெளிப்பாட்டிற்கு பின்னணியாக உள்ள ஒரு அம்சத்தைப்பற்றி இலக்கிய வாசகன் அறிந்திருக்க வேண்டும்.
ஜேன் ஆஸ்டனின் படைப்புகளில் மிக முக்கியமான சிறப்பம்சம் அவருக்கே உரிய நாசுக்கு என்று தான் சொல்லவேண்டும். இலக்கியமேதைகளைப் பற்றி பொதுவாக சொல்லத்தக்க உண்மை ஒன்றுண்டு. நல்ல நாவலாசிரியனின் மேதைமை என்பது அவன் பிரக்ஞைக்கு வெளியே செயல்படக்கூடிய வியப்பளிக்கும் செயல்முறை. அவன் தன் மேதைமையின் இயங்குமுறையை ஓரளவு உணரமுடியும். ஆனால், அது என்ன என்று நுட்பமாக அலசி ஆராய்ந்து பார்ப்பதும், தனக்கே உரிய கடிவாளங்களால் அதை முழுமையாக கட்டுப்படுத்தவும் அவனால் முடியாது. உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். போகங்களில் திளைப்பவனும், எதிர்மறையான வழிகளில் சாகசவுணர்வை அடைபவனுமான ‘வோட்ரின்’(Vautrin) என்ற கதாப்பாத்திரத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறார் பால்சாக்(Balzac). அதன்பிறகு, அந்த சாகசவுணர்வு கொண்ட கதாப்பாத்திரத்திற்கு பால்சாக்(Balzac) அடிமைதான். தனக்கு தோன்றிய விஷயங்களை மட்டும்செய்து, தனக்கு விருப்பமான களங்களில் எல்லாம் ‘வோட்ரின்’ நுழைகிறான்………. பாவம், பால்சாக்(Balzac) அந்த கதாப்பாத்திரத்தின் பின்னால் நடந்து அவன் செய்வது அத்தனையும் பதிவுசெய்யும் குமாஸ்தா மட்டும்தான். மகரந்தம் நிறைந்த மலர் போல மேதைமை நிறைந்த எந்த இலக்கியவாதியை எடுத்துக்கொண்டாலும் ஏறக்குறைய பால்சாக்கிற்கு நிகழ்ந்ததுபோலத்தான் நடக்கும். ஆனால், ஜேன் ஆஸ்டனின் மேதைமை இந்த பொதுவான வழிமுறையிலிருந்து வேறுபட்ட ஒன்று. ஜேன் ஆஸ்டனின் கலைமனதின் முக்கியமான அம்சம் அவரது அபாரமான தன்னுணர்வுதான். தான் யார், தன்னால் என்ன முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்த அறிதலால், அவரது கலைமனம் ஆன்மவெளிப்பாட்டிற்கான விதிகளை இயல்பாகவே அறிந்திருந்தது. அவரது படைப்புகள் அளவில் சிறியவைதான். ஆனால், ஜேன் ஆஸ்டன் படைப்பாக்கம் சார்ந்த விதிகளை ஒன்றுவிடாமல் கடைபிடித்து, தன் ஒவ்வொரு படைப்பையும் தவம் போல, நீண்ட காலம் எடுத்துக்கொண்டு மெறுகேற்றி உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் அவரது நாவல்கள் குன்றாத உணர்வுத்தீவிரத்தையும், கச்சிதமான வடிவத்தையும் அடைந்திருக்கின்றன.
பி.கெ பாலகிருஷ்ணன்ஜேன் ஆஸ்டன் தன் சுருங்கிய அனுபவப்பரப்பிலிருந்து புனைவில் எவற்றையெல்லாம் விலக்கினார், அதன் வழியாக அவரது படைப்பாக்கத்தில் சாராம்சமாக என்ன நிகழ்ந்தது என்பதை நாம் முந்தைய கட்டுரைகளில் விவாதித்துவிட்டோம். ஜேன் ஆஸ்டன் அனுபவங்களை தேர்ந்தெடுப்பது, விலக்குவது என்ற இந்த ஒழுங்கை பார்த்து ஒவ்வொருமுறையும் நாம் வியப்படைவோம். அப்படி வியப்படையாமல் அவரது புனைவுலகை நம்மால் ஆராய முடியாது. ஜேன் ஆஸ்டன் வாழ்ந்த காலம் உலக வரலாற்றின் வண்ணமயமான, நாடகீயமான காலகட்டம். பிரஞ்சு புரட்சி, நெப்போலியன், அமெரிக்க சுதந்திரப்போராட்டம், இங்கிலாந்து அரசு கிழக்கத்திய நாடுகளை ஆட்சிசெய்தல்…. இப்படி உலக வரலாற்றின் செறிவான சம்பவங்களுக்கெல்லாம் மையமான இங்கிலாந்தில் தான் ஜேன் ஆஸ்டன் வாழ்ந்தார். இந்த சம்பவங்களை அவர் அறியவேயில்லை என்று எண்ணுவது பிழையானது. ஜேன் ஆஸ்டனின் இரண்டு சகோதரர்களும் இங்கிலாந்து கடற்படையில் பணியாற்றியவர்கள். அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய சமயத்திலும், டிராஃபெல்கர் போரிலும் (Battle of Trafalgar) அவர்கள் கலந்துகொண்டிருந்திருக்கிறர்கள். மேலும், இந்தியாவில் செய்த மோசடிகளுக்காக இங்கிலாந்து பாராளுமற்றத்தால் impeachment செய்யப்பட்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) ஜேன் ஆஸ்டனின் உறவினர்தான். ஜேன் ஆஸ்டனின் தூரத்து உறவினரின் கணவர் பிரஞ்சுபுரட்சிக்கும் பின் உள்ள கொந்தளிப்பான காலகட்டத்தில் கில்லட்டினில் கழுத்தறுத்து கொல்லப்பட்டவர். ஜேன் ஆஸ்டனின் தனிவாழ்க்கையுடன் இம்மாதிரியான பெரிய சம்பவங்கள் சங்கிலித்தொடர் என நெருக்கமாக பிணைந்திருந்திருக்கிறது. ஆனால், உலகில் இம்மாதிரியான பெரிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கான சின்ன தடயம்கூட ஜேன் ஆஸ்டனின் படைப்புகளில் இல்லை. இதை ஜேன் ஆஸ்டனின் அபாரமான தேர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேர்ச்சியை சாதாரணமான நாசுக்கால் மட்டும் அடையமுடியாது. ஜேன் ஆஸ்டனின் சில நாவல்களிலாவது (குறிப்பாக ‘persuations’ நாவலில்) கடற்படையை சேர்ந்தவர்கள் கதாப்பாத்திரங்களாக ஆகியிருக்கிறார்கள். அந்த கதாப்பாத்திரங்கள் ராணுவ வாழ்க்கை முடிந்து கரையிறங்கி ஊருக்கு வருகிறார்கள். அந்த கதாப்பாத்திரங்கள் வாசகமனதில் நம்பகத்தன்மையை ஏற்படுவதற்காக போர், ராணுவம் சார்ந்த விஷயங்களை நாவலில் பேசியிருக்கலாம். இந்த விஷயங்களை பேசுவது நாவலின் நம்பகத்தன்மைக்கு எதிரானதும் அல்ல. ஆனால், அவ்வாறு பேசுவதற்கு அந்த கதாப்பாத்திரங்களுக்கு அனுமதி இல்லை. அந்த அளவுக்கு ஜேன் ஆஸ்டனின் நாவல்களின் வடிவம் தன்னிலேயே நிறைந்துவிடக்கூடிய உணர்வுத்தீவிரம் கொண்டது. நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக, அந்த கதாப்பாத்திரங்கள் பேச சாத்தியமான விஷயங்களைக்கூட பேசுவதில்லை. இந்த அம்சத்தை ஜேன் ஆஸ்டனின் படைப்புகளின் விசித்திரத்தன்மைக்கான உதாரணமாக சொல்லலாம்.
ஒரு நாவல் அதன் ஒவ்வொரு அணுவிலும் இயல்புத்தன்மையை வாசகனுக்கு உணர்த்த வேண்டும். இது அனைவரும் அறிந்த நாவல்களின் அடிப்படை விதிகளில் ஒன்று. கதாப்பாத்திரங்கள் உயிர்த்துடிப்பையும், நம்பகத்தன்மையையும் அடைய வேண்டுமென்றால் தன்னிச்சையாக செயல்படக்கூடிய, பேசக்கூடிய முழுமையான ஆளுமைகளாக அவர்கள் இருக்க வேண்டும். புகழ்பெற்ற கதாப்பாத்திரங்கள் அனைவரும் அம்மாதிரியானவர்கள்தான். நல்ல கதாப்பாத்திரங்கள் அதை உருவாக்கிய நாவலாசிரியரின் கற்பனைக்கு அப்பால் உண்மையாகவே வாழக்கூடிய அசலான மனிதர்கள் என்ற உணர்வை வாசகனில் ஏற்படுத்துகிறார்கள். கதைக்கட்டுமானத்திலும் இது ஒன்றுதான் விதி. ஒவ்வொரு சம்பவமும் பின்னால் வரக்கூடிய சம்பவத்தை தீர்மானிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி தனக்கேயான சலனத்தன்மையுடன் கதை இயல்பாக முடிவுநோக்கி நகரவேண்டும். அப்படி அல்லாமலானால் நாவல் தோல்வியடையும். கதாப்பாத்திரங்களுக்கான விதிகளும், கதைக்கட்டுமானத்திற்கான விதிகளும் ஒன்றை ஒன்று சார்ந்ததுதான். ஒரு நாவலின் வடிவ முழுமைக்கு இந்த விதிகள் கண்டிப்பாக தேவை. அதனால், நாவலில் உள்ள விவரணைகள், உரையாடல் போன்ற மற்ற எல்லா அம்சங்களும் வடிவ முழுமைக்காக இந்த விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் இயங்கமுடியும். இயல்புத்தன்மைக்கான விதிகளை சார்ந்து இயங்குவதால் நாவலின் வடிவத்திற்கு என்று சில எல்லைகளும் இருக்கிறது. இந்த பொதுவான இலக்கியவிதிகளுக்கு முற்றிலும் நேர்மாறானதுதான் ஜேன் ஆஸ்டனின் நாவல்களின் இயங்குமுறை. ஜேன் ஆஸ்டனின் படைப்புகளில் சில கதாப்பாத்திரங்களை தவிர பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் நாவலாசிரியரான அவரிடம் முன்பே அனுமதி வாங்காமல் ஒரு சொல்கூட சொல்ல உரிமை அற்றவர்கள். ‘pride and prejudice’ ஜேன் ஆஸ்டனின் புகழ்பெற்ற நாவல் இல்லையா? ஆனால், அந்த நாவலின் துணைகதாநாயகனான பிங்க்லியையும் (bingley), துணைக்கதாநாயகியான ஜேன் பென்னட்டையும் (jane bennet) ஆராய்ந்தால் அந்த கதாப்பாத்திரங்களுக்கு அசல்தன்மையே இல்லை என்பதை உணரமுடியும். அவர்களின் ஆளுமை சார்ந்த எந்த ஒரு அம்சமும் நாவலில் வெளிப்படுத்தப்படவில்லை. கதாப்பாத்திரங்களுக்கான பொது விதிகளின் அடிப்படையில் பார்த்தால் ‘pride and prejudice’ நாவலின் கதாநாயகி டார்ஸி(Darcy) கூட நாவலாசிரியர் அளித்த சான்றிதழ் என்பதற்கப்பால் ஆளுமையாக ஆகாத கதாப்பாத்திரம். கதாநாயகி டார்ஸி(Darcy) கதையின் போக்கிற்கு ஏற்ப தன் குணாதிசயத்தையே பலமுறை மீற வேண்டிய கட்டாயம் கொண்ட கதாப்பாத்திரம்.
ஜேன் ஆஸ்டனின் கதைக்கட்டுமானம் பல சிறப்பம்சங்கள் கொண்டது. ஆனால், pride and prejudice நாவலின் கதையை மட்டும் எடுத்து ஆராய்ந்தால் அதன் கதைப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்திலும் நாவலாசிரியர் ஊடுருவுவதைக் காணலாம். அதேபோல, அவரது கதைசொல்லும்முறை, புகழ்பெற்ற அவரது உரையாடல்கள் என ஒவ்வொரு கூறாக நுட்பமாக ஆராய்ந்தால் ஆசிரியர் உள்நுழைவது என்ற பிழையை உணரமுடியும். நான் இங்கு குறிப்பிடுவது அவரின் நாவல்களை வாசிக்கும்போது நாம் அடையும் ஒட்டுமொத்தமான உணர்வுபூர்வமான அனுபவத்திலிருந்து விலகி, இழை இழையாக பிரித்து ஆராயும்போது உணர்ந்த விஷயங்களைத்தான். நாவலாசிரியர் நேரடியாகவே கதைசொல்லும் நாவல்களில் கதைசொல்லிக்கு என உறுதியான நிலைப்பாடும், உணர்வுநிலையும் இருப்பதைக் காணலாம், அவ்வாறு இருக்கவும் வேண்டும். ஆனால், ஜேன் ஆஸ்டன் கதைசொல்லும்முறையில் ஒவ்வொரு பகுதியிலும் என்றில்லை, ஒவ்வொரு வரியிலும் அவரின் உணர்வுநிலையும், நிலைப்பாடும் மாறுவதை காண முடியும். மிகமிக கௌரவமான செயலை செய்வதுபோல நாவலுக்குள் சென்று கதாப்பாத்திரங்களை வசைபாடுவார். சிலசமயம் நேரடியாகவே நகைச்சுவைகளை சொல்வார். சிலசமயம் ஏதாவது கதாப்பாத்திரத்தின் மன ஓட்டத்தில் தவறிவிழுந்து சில விஷயங்களை சொல்ல ஆரம்பிப்பார். ஜேன் ஆஸ்டனின் படைப்பாக்கத்தில் மனிதசாத்தியமல்லாத அளவுக்கு அவ்வளவு கறாரான முறைமையை கடைபிடித்தவர். ஆனால், அவரின் கதைசொல்லும்முறை தனக்கேயான விதிகளை தவிர்த்த மற்ற எந்த முறைமைக்கும் பொருந்துவது அல்ல. உலக இலக்கியத்தில் யதார்த்தவாதத்தின் (realism) சிறந்த உதாரணம் என்று சொல்லக்கூடிய ஜேன் ஆஸ்டனின் உரையாடல்பகுதிகளை ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த உரையாடல்களை ’யதார்த்தமானது’ என்பதைத்தவிர வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஜேன் ஆஸ்டனின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் பெரிய பெரிய பத்திகளாக, நீளமான சொற்றொடர்களில் வளைந்துநெளிந்து முழுமையான சொற்றொடர்களாக பேசுகின்றன. இடையிடையே முறிந்த சொற்றொடர், ஒற்றை சொற்கள்…… இதற்கெல்லாம் நடுவே நாவலாசிரியரையும் காணமுடியும். பெரிய பெரிய பத்திகளாக, நீண்ட சொற்றொடர்களில் உள்ள ஜேன் ஆஸ்டனின் புனைவுகளில் உள்ள உரையாடலை யதார்த்தமான உரையாடல் என்று சொல்ல யாராலும் முடிவதில்லை.
நாம் இதுவரை ஆராய்ந்த விஷயங்கள்- எந்த நாவலாசிரியராக இருந்தாலும் நமது அவதானிப்புகளும், நாம் சுட்டிக்காட்டிய பிழைகளும் பொருந்தும். ஆனால் ஜேன் ஆஸ்டனை பொறுத்தவரை………….
இந்த ’ஆனால்’ தான் ஜேன் ஆஸ்டன். அவரது நாவலின் ஒவ்வொரு சொல்லும் முரண்நகை நிறைந்த, நுண்ணுணர்வுள்ள கலைமனதின் மிளிர்வு கொண்டது. அவரின் புனைவுலகிலுள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் சேர்ந்து ஒரே ஒரு கலைமனதை, எளிமையான ஒரே ஒரு ஆன்மாவைத்தான் வெளிப்படுத்துகின்றன. அந்த ஆன்மவெளிப்பாட்டின் முழுமையிலிருந்து திரண்டுவரும் பரிபூர்ணமான உணர்வுத்தீவிரம்தான் ஜேன் ஆஸ்டனின் கலை. அவரது புனைவின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக ஆராய்ந்தால் அந்த ஒவ்வொரு பகுதியின் போதாமைகளும் வெளிப்படையாகவே தெரியும். இவ்வாறான போதாமைகள் இருந்தும்கூட அவர் எழுதிய நாவல்கள் வடிவமுழுமை கொண்டதுதான். இப்படி கச்சிதமான வடிவத்தில் எழுத முடிந்தது அவரது இயல்பான மேதைமையால் மட்டும்தான் என்று யாரும் பிழையாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.
ஜேன் ஆஸ்டனின் ஒவ்வொரு நாவலும் தனக்கேயான வரலாறு கொண்டது. 1773-ல் பிறந்த ஜேன் ஆஸ்டன் (பிரசுரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றாலும்) தன் 14வது வயதில் நாவல் எழுதத்தொடங்குகினார். அவர் ஆரம்பத்தில் எழுதிய குட்டிக்கதைகளை ஆராய்ந்தால் அதன் சித்தரிப்பு, கதைசொல்லும்முறை, உணர்வுநிலை இப்படி ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய முரண்நகைதான் பிரதானமாக இருக்கிறது. 1796ல்தான் புகழ்பெற்ற மாஸ்டர்பீஸான pride and prejudice நாவலை first impresssions என்ற பெயரில் அவர் எழுதினார். அதிகம்போனால் 300 பக்கம் வரும் அந்த நாவலை இரண்டு வருடங்களில் எழுதி 1798-ல் ஒரு பதிப்பாளருக்கு அனுப்புகிறார். அந்த நாவலை பதிப்பிக்காமல் திருப்பி அனுப்புகிறார்கள். அதனால் அவருடைய தன்னம்பிக்கை குறையவில்லை, அகங்காரம் திரிபடையவில்லை. Pride and prejudice என்ற இன்றைய பெயரில் அது பதிப்பிக்கப்பட்டது 15 ஆண்டுகளுக்கு பிறகு 1813ல். தன் படைப்பை பிரசுரிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் மேஜையிலிருந்து எடுத்து தூசிதட்டி பெயரை மாற்றி அப்படியே பிரசுரிக்க கொடுத்த படைப்பு அல்ல 1813ல் வெளிவந்த ‘pride and prejudice’. பிரசுரிப்பதற்கான இந்த நீண்ட காலத்தில் இடையிடையே பலமுறை அந்த படைப்பை திருத்தி எழுதியிருக்கிறார். 300 பக்கம் கொண்ட படைப்பை 15 வருடம் நிரந்தரமாக உழைத்து திருத்தங்கள் செய்திருக்கிறார். இந்த அளவுக்கு மெனக்கெடலுடன் உருவாக்கப்பட்ட படைப்புகள் இலக்கிய வரலாற்றில் அவ்வளவாக இல்லை. தன் கைத்திறன் வழியாக, நீண்ட மெனக்கெடலுடன், நாவலின் ஒவ்வொரு இழையையும் தன் கலைமனதின் பூம்பொடிகளால் அலங்கரித்தவர் ஜேன் ஆஸ்டன். அவரின் மேதைமை என்பது எழுதியதை திருத்தி, மாற்றியெழுதி, ஒழுங்குபடுத்தி மெறுகேற்றும் கலைநேர்த்தியும்(craftsmanship), அசாதாரணமான பொறுமையும் மட்டும்தான் என்று சில விமர்சகர்கள் பகடியுடன் குறிப்பிடுகிறார்கள். ஒருவிதத்தில் விமர்சகர்களின் பரிகாசம் சரியானதுதான். எல்லையில்லாத பொறுமை, தன் கலைப்படைப்புகளுக்கு தேவையான கதைத்தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிதலும் அவரது மேதைமையின் ஒரு பகுதிதான். ஜேன் ஆஸ்டனின் கைத்திறனும், அவரது இயல்பான மேதைமையும் இணைந்துதான் செயல்படுகிறது.
தன் இயல்பான உணர்வுநிலையிலிருந்து, தன்னால் இயல்பாக கையாளமுடிந்த மொழிநடையில், தன் அன்றாட வாழ்க்கைப்பரப்பில் உள்ள விஷயங்களைப்பற்றிதான் ஜேன் ஆஸ்டன் எழுதியிருக்கிறார். அந்த நாவல்களின் சித்தரிப்பு, கதாப்பாத்திரங்கள் எதிலும் வகைபேதங்களே இல்லை. இதை நாம் முந்தைய கட்டுரைகளில் விவாதித்துவிட்டோம். மூன்று, நான்கு குடும்பங்கள்; பத்து, பன்னிரண்டு கதாப்பாத்திரங்கள்; ஒரு சில வாழ்க்கை சந்தர்ப்பங்கள். மனிதமனதின் உட்சிக்கல்கள் எதையும் அவர் கையாளவில்லை. ஜேன் ஆஸ்டனின் இந்த சுருங்கிய படைப்புலகின் பக்க அளவும் ஒப்புநோக்க சிறியதுதான். சிரமத்திற்குரிய எந்த ஒன்றும் இல்லாத இந்த சின்ன படைப்புகளின் உருவாக்கத்திற்காக இரண்டு, மூன்று வருடங்கள் சிலசமயம் அதற்கும் மேலான வருடங்களை அவர் செலவழித்திருக்கிறார். ஒவ்வொரு நாவலையும் கறாராக திருத்தி மீண்டும் எழுதி, நீண்ட காலம் மெறுகேற்றியிருக்கிறார். இந்த நீண்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் ஒரு படைப்பைக்கூட அவர் வெளியிடவில்லை (அவர் அற்ப ஆயுளில் இறந்ததால் persuations என்ற அவரது கடைசி நாவல் மட்டும் விதிவிலக்கு). 1797-ல் pride and prejudice நாவலின் முதல் வடிவத்தை எழுதியது முதல் 1818ல் இறக்கும் காலம்வரைக்குமான 21 வருடங்களில் ஆறு நாவல்கள், இரண்டு முழுமைபெறாத படைப்புகளை மட்டும்தான், வேறு எந்த அல்லலும் இல்லாத திருமணமாகாத ஜேன் ஆஸ்டன் எழுதியிருக்கிறார். எல்லாவற்றையும் சேர்த்துப்பார்த்தால் அவர்து படைப்புகள் கிட்டத்தட்ட 2000 பக்கம்தான் வரும்! உலகில் வேறு யாராலும் பின்பற்றப்பட முடியாதபடியான ஆளுமைகொண்ட நாவலாசிரியர்தான் ஜேன் ஆஸ்டன்.
இசையில் வெளிப்படுவது போல உணர்வுநிலை ஒருமுகப்படுத்தப்பட்ட தீவிரத்துடன் ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் மட்டும்தான் வெளிப்பட்டிருக்கிறது. நாவல் என்ற இலக்கிய வகைமையைப் பொறுத்தவரை இம்மாதிரியான வெளிப்பாடு கொண்ட வேறு நாவல்கள் இல்லை. அவரது படைப்புகளில் உணர்வுநிலையின் தீவிரம், ஒருமுகப்படுத்தல் இரண்டுமே நிகழ்ந்திருப்பது அசாதாரணமானது, பொறாமைப்பட வைப்பது. நாவல்களின் உலகில் ஒருபக்கம் முடிவிலிக்கு(infinity) உதாரணமானவை தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள். மறுபக்கம் அதே உலகில் ’finite’ என்பதற்கு உதாரணமானவை ஜேன் ஆஸ்டனின் படைப்புகள். உலகில் உள்ள கலைப்படைப்புகள் அனைத்தையும் ஒரு ஆலயம் என கற்பனை செய்யுங்கள். அந்த ஆலயத்தை சூழ்ந்த கடும்வனத்தில் பாறைகளுக்கு நடுவே குகையில் தவம்செய்து வாழும் பிரம்மராட்சசன் தான் தஸ்தாயெவ்ஸ்கி, அதே ஆலயத்தின் உருவாக்கப்பட்ட சின்ன மணல்முற்றத்தில் பிஞ்சுக்கால்களால் துள்ளியபடி, திக்கித்திக்கிப் பேசித் திரியும் செல்லக்குழந்தையைப் போன்றவை ஜேன் ஆஸ்டனின் படைப்புகள். ஜடாமுடியால் மூடப்பட்ட பிரம்மராட்சஸனின் சுருங்கிய முகத்தின் நீண்ட நெற்றிக்கு கீழே ஆழத்தில் கனலும் சிவந்த கண்களில் படைப்பிறைவனின் கம்பீரமான சான்னித்யம்/இருப்பு இருக்கிறது. அதேபோல, மணல்முற்றத்தில் விளையாடும் குழந்தையின் அர்த்தமில்லாத சிரிப்பும் அதே படைப்பிறைவனின் மங்கலமான இருப்புதான். அதனால்தான், இரு யுகங்களின் சுவை மாற்றங்களை, ரசனையின் வளர்ச்சியை கடந்து என்றென்றைக்குமாக ஜேன் ஆஸ்டனின் படைப்புகள் இன்றும் நிலைகொண்டிருக்கின்றன. அதனால்தான் அவரின் சாரமற்ற கதைகள் வேறு யாராலும் பின்பற்றமுடியாதவையாக எஞ்சுகின்றன.
தமிழாக்கம் அழகிய மணவாளன்
தமிழ் விக்கி விழா- கடிதம்
தமிழ் விக்கி இணையகலைக்களஞ்சியம்
அன்புள்ள ஜெ,
வணக்கம், நலமறிய ஆவல்.
சௌந்தர் அண்ணா தமிழ் விக்கி தொடக்க விழா மே 7 தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்னர், நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்று குறுஞ்செய்தி அனுப்பிய போது, தமிழ் விக்கியில் மிகச்சிறு பங்களிப்பு செய்து கொண்டு வருவதால், நடக்க இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, வட கரோலினாவில் இருந்து ஐந்து மணி நேர கார் பயணம் மட்டுமே என்பதால், கண்டிப்பாக கலந்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தமிழ் விக்கியில் பெரும் பங்கேற்றி வரும் நண்பர்கள், இந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாமல் எல்லாத் தடைகளையும் தாண்டி இந்த விழா நல்ல விதமாக நடக்க வேண்டுமென்ற அவர்களின் ஆர்வமும், அக்கறையும் கலந்த உணர்வுகளை நன்றாகவே அறிவேன்.
2019 -ல் சந்தித்தது, மூன்று வருடம் கழித்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு. இந்தத் தடவை அருணா அக்காவுடன். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வாஷிங்டன் டிசி நோக்கித் தனி கார் பயணம். அருணா அக்காவின் பனி உருகுவதில்லை ஆடியோ நூலை கேட்டுக்கொண்டு வந்தேன். பயணக் களைப்பேத் தெரியவில்லை. அக்கா இணையத்தில் எழுத எழுத வாசித்திருந்தாலும், மறு வாசிப்பு செய்யயுதவியது. அக்காவுக்கும், கதை ஓசை தீபிகா அருணுக்கும் நன்றி.
சரியாக 9:40 க்கெல்லாம் விழா நடக்கும் ஆஷ்பர்ன் நகர் பிராம்பிள்டன் நடுநிலை பள்ளிக்கு வந்து சேர்ந்தேன். காரிலிருந்து இறங்கிய உடன், பழனி ஜோதி நியூசெர்சி நண்பர்கள் அறிமுகம். பள்ளி, கட்டிடம், உள்ளே வசதிகள் எல்லாம் புதிதாக, நல்ல தரத்தோடு அமைந்திருந்தது விழாவுக்கு தனிக் களையைக் கொடுத்தது.
10 மணியில் இருந்து விருந்தினர் வருகை. கூடுகை அரங்கில் ராஜன், சௌந்தர், பழனி ஜோதி, சுவர்ணா, ரவி, விஜய் சத்தியா, வேல்முருகன், நிர்மல், ராஜி, ராதா, மகேஸ்வரி, ஜெயஸ்ரீ, அவர் கணவர், புளோரிடா அண்ணாதுரை, சார்லட் பிரகாசம் குடும்பத்தினர், ஆனந்த், மோகன் அனைவரையும் சந்திக்க முடிந்தது. விழா ஏற்பாடுகளுக்கு வாஷிங்டன் டிசி நண்பர்களோடு சேர்ந்து சிறுஉதவி செய்து கொண்டிருந்தேன். விழா நடக்கும் போது ஓரிரு தடவை வெளியில் சென்று கவனித்துக் கொள்ளுமாறு ராஜன் கேட்டுக் கொண்டார். சௌந்தர் அண்ணா, சுவர்ணா, விஜய் சத்தியா, ரவி நிகழ்ச்சி நிரலை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
சௌந்தர் அண்ணா மாற்று ஏற்பாடுகள், புது விருந்தினர்கள், அவர்களின் பெருமைகள் பற்றி என்னிடம் எடுத்துச் சொன்னார்.
சரியாக 10 மணிக்கு முன்னரே நீங்களும், அருணா அக்காவும் விழா அரங்கில் பெருமிதத்தோடு நுழைந்தனர். நண்பர்கள் அனைவரும் உங்கள் இருவரையும் நோக்கி வந்து அறிமுகம் செய்து கொண்டனர், நானும். நண்பர்களிடம் நீங்கள் உரையாடிக் கொண்டிருந்ததை சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அருணா அக்காவிடம் மகேஸ்வரி சுக்கிரி குழு கதை விவாதத்தில் முத்து கலந்து கொள்வார் என்று அறிமுகப் படுத்தினார். சுக்கிரி குழு நண்பர்கள் மது, கணேஷ், விஜய ராகவன் சார், ராஜேஷ், விக்னேஷ் மற்ற நண்பர்கள் அனைவரையும் நன்றாக இரண்டு வருடங்களாகத் தெரியும் என்றேன். அக்காவுக்கு அப்படியா என்று ஆச்சரியம்.
தமிழ் விக்கி தொடக்க விழாவில் இத்தனை பேரைச் சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது என்றும், கல்யாணத்துக்கு கூடுவது மாதிரி இருக்கிறது என்று சந்தோஷப்பட்டார். முதன் முறையாக கொஞ்சம் கூட அகத் தடையில்லாமல் அக்காவிடம் உரையாட முடிந்தது. அவர் சொன்ன மாதிரியே நண்பர்கள் குடும்பம் குடும்பமாக அரங்கு நிறைந்து அமர்ந்து இருந்தது நிறைவான தொடக்கமாக இருந்தது.
அடுத்து விருந்தினர்கள் பிரெண்டா பெக், தாமஸ் ஹிட்டொஷி புரூக்ஸ்மா, பேரா வெங்கட்ரமணன், நூலகர் சங் லியு அனைவரும் வர ஆரம்பித்தவுடன், மேடையில் அமர வைக்கப்பட்டனர். விருந்தினர்கள் முகத்தில் மகிழ்ச்சியும், பெருமிதமும் பார்க்க சந்தோசமாக இருந்தது.
ஒவ்வொரு விருந்தினர்களையும், பேச்சாளர்களையும் வரவேற்று பேசும் பணியை சுவர்ணா பார்த்துக் கொண்டார். கல்யாண மண்டபம் வரவேற்பறையில் இன்முகத்தோடு வரவேற்கும் தோரணையில் இருந்தது அவர் விருந்தினர்களை பேச வரவேற்ற விதம்.
முதலில் இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது.
விருந்தினர்களை வரவேற்று சௌந்தர் அண்ணா பேசினார்கள். இணைய வழி தகவல் கற்றல் எவ்வளவு முக்கியம், தமிழ் விக்கி உருவாக்குத்துக்கான தன்னார்வளர்களின் உழைப்பு, தமிழ் விக்கி பதிவுகளின் தரம், எல்லாத் தடைகளயும் தாண்டி இந்த விழாவை வெற்றிகரமாக, திட்டமிட்டபடி நிகழ்த்த முடிந்த சந்தோசம் அவர் உணர்ச்சிவசக் குரலில்.
ஒவ்வொரு விருந்தினர்களையும் பேச அழைக்கும்போது மேடையில் அவர்கள் அமர்ந்த முனையிலிருந்து பேசும் மேடைக்கு அழைத்துச் செல்ல, பேசி முடித்தவுடன் அவர்கள் இருக்கைக்கு உடன் செல்வது வரை கூடச் செல்வது என்று நண்பர்கள் ராதா, விஜய் சத்தியா, ராஜன் சோமசுந்தரம், பழனி ஜோதி, அருண்மொழி அக்கா முறை கடைபிடிக்க பார்க்க அழகாக இருந்தது.
முதன்மை விருந்தினர் பெக் தமிழ் விக்கி இணைய தளத்தை ஆரம்பித்து வைத்தார். தமிழ் நாட்டில் தங்கி தமிழ் கற்றுக் கொண்டதை அனுபவங்களை எடுத்துச் சொன்னார். ‘பச்சை மனசு’ சொல்லாட்சி குறித்து, நேரடியாக மொழிபெயர்த்தால் ‘Green Heart’ என்று வருகிறது, ஆனால் அதன் அர்த்தம் குறித்து வியந்து பேசினார். அதே மாதிரி ‘கார் மேகம்’ என்ற வார்த்தை கொடுக்கும் நேரடி அர்த்தம் ‘Black Cloud’, தமிழில் இந்த பெயர்க் காரணத்தை பற்றி அவர் ரசித்து சொன்ன விதம் அருமை. தமிழ் விக்கிக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்து திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தாமஸ் பேச்சுத் தமிழ் கற்றுக்கொண்ட அனுபவங்களை, தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி ஆத்மார்த்தமாக பேசினார். அயல் நாட்டவர் நல்ல உச்சரிப்பில் தமிழை பேசும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. விழாவுக்கு வேட்டிக் கட்டி வர விரும்பியவர்.
விழாவில் அ.முத்துலிங்கம், தமிழாய்வாளர் டேவிட் ஷூல்மான், ஹார்வார்ட் தென்கிழக்காசிய ஆய்வுமைய தலைவி மார்த்தா ஆன் செல்பி, கமல்ஹாசன் ஆகியோரின் வாழ்த்துரைகளை நண்பர்கள் வேல்முருகன், ரவிக்குமார், விஜய் சத்தியா வாசித்தனர்.
அ.முத்துலிங்கம் அய்யா வாழ்த்து செய்தியை நண்பர் வேல்முருகனே வாசிக்கட்டும் என்று முத்துலிங்கம் அய்யா சொன்னதாக சௌந்தர் அண்ணா சொன்னார்.
அடுத்து பேராசிரியர், ஒளியியல் அறிவியலாளர் வெங்கட்ரமணன் தன் துறை சார்ந்து சமூகத்துக்கு, கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் மக்களுக்கு தான் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பேசினார். வரும் காலத்தில் தமிழ் விக்கிக்கு பங்களிக்க விரும்பினார். அறிஞர்கள் பங்களிப்பால் தமிழ் விக்கி பல துறைத் தகவல்களோடு எதிர்காலத்தில் மிகச் சிறப்பான தளமாக நிச்சயமாக அமையும்.
அமெரிக்க நூலகத்தலைவர் சங் லியு தமிழ் பேச ஆசை, ஆனால் தெரியாது என்ற போதமையை எடுத்துச் சொல்லி நூலகம் எல்லோருக்குமானது, பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்த விழாவுக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நீங்கள் பேசும்போது விருந்தினர்களை வரவேற்று, பல அறிவியக்கங்கள் நிகழ்ந்த அமெரிக்க மண்ணில் தமிழ் விக்கி தொடக்க விழா நிகழ்வது குறித்து பெருமிதம் அடைந்தீர்கள். உங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் ஆசிகளை கோரி, இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்திய அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களையும் பெற்று நீங்கள் பேசிய உரை உணர்வுபூர்வமாக இருந்தது. தமிழ் விக்கி முதன்மை தளத்திலோ, வேறு எங்குமோ உங்களை முன்னிறுத்தி எனக்கு தெரிந்து எந்த பதிவுமில்லை.
பழனி ஜோதியின் நன்றியுரையுடன் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக, எளிமையாக நடந்தேறிய விழா. அவர் சொன்ன மாதிரி ஒரு பெரிய ஆல விருட்சமாக வளரப் போகும் தமிழ் விக்கிக்கான ஒரு விதை விதைக்கப்படும் நாளிது.
விழா சிறப்புற நடைபெற ஏற்பாடுகள் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன்
முத்து காளிமுத்து
உடையாள், கடிதம்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு ,
வணக்கம். தங்களின் உடையாள் நாவலை இணையம் வழியாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அறிவியல் புனைக்கதைகளின் மீது உள்ள விருப்பத்திற்கு காரணம் நாம் அறிந்த உண்மையை வைத்துக்கொண்டு கற்பனையைத் தூண்டுவனவாக அமைந்திருக்கும் கதைக்களங்கள் தான் ஐயா. அந்த வகையில் உடையாள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஐயா.
நாமியின் தனிமை முதலில் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.ஏனெனில் பள்ளி விடுமுறை காலம் என்பதால் என் நண்பர்களைப் பிரிந்திருந்ததனால் தனிமை என்னையும் சூழ்ந்திருந்தது.
மனிதர்களின் எதிர்கால தொழில் நுட்பங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. முக்கியமாக குரு என்ற மென்பொருள்; ஒட்டுமொத்த மனிதர்களின் மொத்த அறிவும் ஒரே ஒரு சிறிய கருவியில் அடங்கி விடும் என்ற தொழில்நுட்பம் இக்கால அலைபேசிகளின் எதிர்கால முகம் போல எனக்கு தோன்றியது.
உயிர் அணுக்கள் இணைந்து உயிராக மாறும் முறையினைச் சில மாதங்களுக்கு முன்புதான் அறிவியல் பாடத்தில் படித்திருந்தேன்.
அமீபாக்கள் இணைந்து மனித உடலின் உருவத்தை எடுத்ததும் நாமி மகிழ்வது , ஒரு குழந்தை தன்னைப் போலொரு தோற்றத்தைக் கண்டு ரசிக்கிறது என்பதை தாண்டி ,தனிமையிலிருந்து தப்ப அது தன்னைப்போலொரு உயிருள்ள துணையை எதிர்பார்க்கிறது என்பதாகவே என்னால் பார்க்க முடிந்தது.
நாமி தனக்கு காலிகை என்று பெயர் சூட்டிக்கொள்ளும் பொழுது ,நானும் என் வீட்டின் வெளியே எட்டிப்பார்த்தேன். அங்கிருந்த மரங்களில் கொஞ்சி விளையாடும் அணில்களிலும், குயில்களின் இசை கேட்டு அசையும் மர இலைகளிலும் நான் பார்க்காமல் இருக்க காலம் என்பது என்னால் கவனிக்க பட மாட்டாது. அதனால் நாம் ஒவ்வொருவருமே காலத்தை நிகழ்த்தி கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் உணர முடிந்தது.
‘பனிமனிதன்’ நாவலில் “நான்” என்ற சுயத்திற்கு மனிதன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறான் என்பதை விளக்கியிருந்தீர்கள்.இருப்பினும் “நான்” என்ற உணர்வினைச் சுற்றியே மனிதஅறிவு திரள்கிறது என்று உடையாள் மூலமாக என்னால் அறிய முடிந்தது.
நாமி தன்னால் உருவாக்கப்பட்ட தியோக்களுக்கு உணவு பற்றாக்குறை வந்து விடக்கூடாது என்று எண்ணுவதும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதும் உண்மையிலேயே தியோக்களுக்கு அவளை ஒரு அன்னையாக்குகிறது.
நீலப்பந்து கோளில் மனிதர்கள் அனைவரும் கூட்டறிவு கொண்டவர்கள் என்பது வியப்பில் ஆழ்த்தினாலும், அப்படியொரு உலக அமைதி நமது பூமியிலும் இருக்க வேண்டும் என்ற பேராசையை உண்டாக்குகிறது.மேலும்
நமது பூமி ஒரு பேரழிவை நோக்கியே சூழன்று கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தையும் விளக்குகிறது.
சாரா தன்னைப்போலவே முகம் கொண்ட பல லட்சம் சிறுமிகளைப் பார்க்கும் பொழுது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் என்னாலும் உணர முடிந்தது.
நாமியின் உயிருள்ள முகம் எனது ஆர்வத்தைத் தூண்டியது.என்னாலும் அப்படியொரு சிலையை உருவாக்க முடியுமென்றால் அது யாருடையதாக இருக்ககூடும் என்று என்னை சிந்திக்க வைப்பதாக அது அமைந்திருந்தது.
சில புத்தகங்களைப் படிக்கும் பொழுது நம்முள் ஒரு மாற்றம் ஏற்படும்.ஆனால் உடையாள் என்னுள் புதிய பரிமாணத்தையே தொடங்கி வைத்துள்ளது.அதன் மூலம் மேலும் பல தகவல்களை அறிந்து என்னை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன்.
தங்கத்துளியைப் பசுமைத்துளியாக மாற்றிய உடையாளை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
இப்படிக்கு,
மீ.அ.மகிழ்நிலா
ஒன்பதாம் வகுப்பு,
ஸ்ரீவிக்னேஷ் வித்தியாலயா,
கூத்தூர்,
திருச்சி-621216
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
May 31, 2022
மாயையும் மகிழ்ச்சியும்
Jessica Woulfe, ruins, Maya (civilization), Budha, Hinduism, HD wallpaper
மாயை
அன்புள்ள ஜெ,
இன்று தளத்தில் வெளியான ‘மாயை’ தொடர்பான ரம்யா அவர்களின் கேள்விக்கு உங்களின் பதிலின் முடிவில்
“ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை. உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.”
என்ற வரிகளை படிக்கும் போது “அந்த தெய்வம் தன்னறம் (ஸ்வதர்மம்)” என மனதில் உங்கள் குரல் கூறியது. அது சரிதானா?
ஒருவருக்கு வியாபாரம், தொழில்நுட்பம் என எதுவாகினும் அந்த தெய்வமாக இருக்க முடியுமா? அல்லது அறிவியக்கம், அறவியல், ஆன்மிகம் மட்டுமா?
மேலும் ”எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்” என்னும் உங்களின் சொகளைத்தான் என் தன்னறத்தை கண்டறிய விதியாக கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் ஒரு நண்பரிடம் தன்னறம் குறித்து பேசிக்கொண்டிருந்த போது ‘எனக்கு சும்மா ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பதுதான் பிடிச்சுருக்கு, அப்போ அது தான் என் சுதர்மமா?’ என்று கேட்டார்.
எனக்கு பதில் தெரியவில்லை. தயவு செய்து விளக்குங்கள்.
நன்றி ஜெ.
மணிகண்டன், கோவை.
***
அன்புள்ள மணிகண்டன்,
எனக்கு வரும் கடிதங்களில் மிக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ’எனக்கு பயணம், பொழுதுபோக்கு நூல்களைப்படிப்பது, சிறு சாகசங்களில் ஈடுபடுவது ஆகியவை மட்டுமே மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவற்றை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதுமா? மகிழ்ச்சியை அளிப்பது தான் தன்னறம் எனில் இந்த வகையான கேளிக்கைகள் ஒருவருடைய தன்னறம் ஆகுமா?’
இந்தகேள்வி ஒருவர் தன்னைக் கூர்ந்து கவனிக்காதபோது உருவாவது. உண்மையில் எவரும் கேளிக்கைகளில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியாது. கேளிக்கைகள் வாழ்வின் இடைவெளிகளே ஒழிய வாழ்க்கையின் மையப்போக்காக இருக்க முடியாது.
சென்ற காலங்களில் பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகள் முழுக்க முழுக்க கேளிக்கையாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மைனர் என்று அவர்களைக் கூறுவதுண்டு. மைனர் விளையாட்டு என்று அந்த வாழ்க்கையை நமது சொலவடைகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் எவரும் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அல்ல. அவர்கள் மகிழ்ச்சியைத்தேடி நிரந்தரமாக சென்று கொண்டே இருந்தார்கள். அதன் பிரச்னை என்ன என்பது இறுதி வரை அவர்களுக்குப் புரியவே இல்லை.
ஒருவர் தின்னலாம், குடிக்கலாம், காமத்தில் ஆடலாம், பொருட்களை வாங்கிக்குவிக்கலாம், பயணம் செய்யலாம், சில்லறைச் சாகசங்களில் ஈடுபடலாம். ஆனால் அவை எல்லாமே மிக விரைவில் சலித்துவிடும். ஒவ்வொரு முறையும் அவை முடிந்த பிறகு முழு நிறைவின்மையை உணரமுடியும் . ஆகவே இன்னும் இன்னும் என்று தேடிச் செல்கிறார்கள். மேலும் மேலும் கசப்படைகிறார்கள். நையாண்டியும் வசையுமாக வெளிப்படுகிறார்கள்.
ஒருகட்டத்தில் அந்த அதீதத்தன்மை அவர்களுடைய உடல்நிலையை அழிக்கிறது. உளநிலையை சீரழிக்கிறது. அவர்கள் மட்கி அழிகிறார்கள். மகிழ்ச்சியாக வாழ்ந்து நிறைந்த மைனர் எவருமே இல்லை. கேளிக்கை வாழ்வாகாது என்பது தான் அவர்களுடைய வாழ்வின் சிக்கல்.
இதே பிரச்சினையை இங்கே அமெரிக்காவில் பார்க்கிறேன். கேளிக்கைக்கு முடிவில்லா வாய்ப்புகள் கொண்ட நாடு இது. ஆனால் கேளிக்கையின் நிறைவின்மை இங்குள்ளவர்களை அலைக்கழிக்கிறது. மொத்த அமெரிக்காவே தின்னு, குடி, கொண்டாடு என கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது.
இங்கே பெரும்பான்மையினர் கேளிக்கையின் பொருட்டு பணம் சேர்க்க மிகக்கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு விடுமுறைக்காக ஆண்டு முழுக்க முழுநாளும் வியர்வை சிந்துகிறார்கள். உண்மையில் அந்த உழைப்பே அவர்களை ஒருங்கிணைவுடனும், நிலைத்தன்மையுடனும் வைத்திருக்கிறது. உழைப்பின் முள்ளில் சிக்கியிருப்பதனால் கேளிக்கையின் காற்றில் பறக்காத சருகுகள் அவர்கள். கேளிக்கை என்பது ஆண்டு முழுக்க நீடிக்கும் ஒருவகை இனிய கனவுதான். கேளிக்கையின்போது அவர்கள் குற்றவுணர்ச்சியால் அதில் திளைக்கவும் முடிவதில்லை.
ஓரளவு பணம் இருந்து, கேளிக்கையில் சிக்கிக்கொள்பவர்கள் இலக்கற்று காற்றில் அலைக்கழியும் சருகென வாழ்கிறார்கள். சாலைகளில் ஹார்லே டேவிட்சனில் சீறிப்பாயும் உடம்பெல்லாம் பச்சைகுத்தியவர்கள், கேளிக்கை மையங்களில் திரண்டு குடித்து கூச்சலிடுபவர்கள் எவரும் நிறைவடைந்த உடல்மொழி கொண்டவர்களாக தெரியவில்லை. அவர்கள் எதையோ நடிக்கிறார்கள்.
அவர்களில் பலர் மெல்லமெல்ல சூதாட்டம், போதைப்பொருள் பழக்கம் வரை சென்று அழிகிறார்கள். (அமெரிக்காவில் இருந்து போதைப்பொருளை ஒழிக்கவே முடியாது. அந்த நாகரீகம் உருவாக்கும் தனிப்பட்ட வெறுமை அத்தகையது.) மிகச்சிலர் இந்நாடு உருவாக்கும் கேளிக்கைவலையை உதறிவிட்டு சேவை, ஆராய்ச்சி என கண்காணா நாடுகளுக்குச் செல்கிறார்கள். இரண்டாம் பாதியினரே அமெரிக்காவின் உண்மையான செல்வம். அமெரிக்கா அவர்களால் உருவாக்கப்படுவது. இங்கே முதல் பாதியினரை இரண்டாம் பாதியினர் சுமக்கிறார்கள்.
மனிதர்கள் மண்ணுக்கு வந்தது மகிழ்வாக இருப்பதற்குத்தான். ஆனால் மகிழ்வு என்பது உண்மையாக இருப்பது இங்கிருக்கும் இயற்கையுடன் இணைந்திருப்பதிலும், இங்கிருக்கும் வாழ்விற்கு தன்னுடைய கொடையை அளிப்பதிலும்தான். தன்னுடைய உளஆற்றலையும் உடல் ஆற்றலையும் ஈட்டிக்கொள்ளும்போதும், அவற்றை செலவழிக்கும் போதும் தான் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
உண்ணும்போது மகிழ்ச்சி, உண்ட ஆற்றலை உழைப்பாகவோ விளையாட்டாகவோ செலவழிக்கும்போதும் மகிழ்ச்சி. கற்கும்போதும் மகிழ்ச்சி, கற்பிக்கும்போதும் மகிழ்ச்சி. இந்த சமூகத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்போது மகிழ்ச்சி, அவற்றை குறைவற திரும்ப செலுத்தும்போது மகிழ்ச்சி. இவற்றில் ஒன்றை மட்டும் செய்பவன் ஒருபக்கம் வீங்கியவன். அவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. கற்றுக்கொண்டே மட்டும் இருப்பவன் மகிழ்ச்சியாக இருப்பவன் அல்ல, கற்பிக்கும்போதுதான் ஆளுமை சமநிலைப்பட்டு உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது.
கேளிக்கை என்பது ஒருவகை சமநிலையின்மை மட்டும்தான். அங்கே மனிதன் ஒன்றை மட்டும் செய்துகொண்டிருக்கிறான். கடும் உழைப்புக்கு பிறகு கேளிக்கை என்பது நிறைவூட்டுவது, மேலும் உழைப்புக்கு கொண்டு செல்வது. உழைப்பற்ற கேளிக்கை ஆத்மாவை உடலை சீரழிப்பது. ஆகவே எவரும் வெறும் கேளிக்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அது ஒரு மாயை.
மெய்யான நிறைவென்பது நம்மை பயனுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதில் இருக்கிறது. இந்த சமூகத்தில் இருந்து நாம் எடுத்தவற்றை குறைவறத் திருப்பிக்கொடுப்பதில் உள்ளது. அதுவே தன்னறமாக முடியும். இங்கு எந்தப்பங்களிப்பை ஆற்றினால் உங்கள் முழு ஆற்றலும் வெளிவருகிறதோ அதுவே தன்னறம்.
இப்படிச் சொல்கிறேன் நீங்கள் ஒரு ராக்கெட் என்றால் முழு எரிபொருளும் எரிந்து பீறிட்டு வெளியேறி விசையாகி உங்களை வானுக்குத் தூக்குகிறது. ஒரு துளிகூட எஞ்சாமல் உங்கள் கற்பனையாற்றல் ,அறிவாற்றல், உடலாற்றல் ஆகியவை செலவழிக்கப்படும்போது மட்டுமே நீங்கள் நிறைவடைகிறீர்கள். கேளிக்கைகளில் அவ்வாறு ஆற்றல் செலவழிக்கப்படுவதில்லை. ஆகவே அது ஒருபோதும் ஒருவருடைய தன்னறமாக ஆக முடியாது. கேளிக்கையில் எவரும் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை, ஆகவே எவரும் அதில் தன்னை கண்டடைவதில்லை, ஆகவே அதில் எவரும் நிறைவுகொள்வதில்லை. கேளிக்கையில் ஈடுபடுவதை எவரும் தன் அடையாளம் என சொல்லிக்கொள்வதில்லை.
கேளிக்கைகளில் மட்டும் ஈடுபடுபவர்கள் ஒருவகை தன்னலமிகள். அவர்களுக்குக் கொடுத்தல் என்பதில் இருக்கும் இன்பம் தெரியாது. பெற்றுக்கொள்வதிலேயே இன்பம் இருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறார்கள். கூர்ந்து உங்கள் வாழ்க்கையை கவனித்தால் மகிழ்வுற்ற தருணங்கள் என்று நீங்கள் குறிப்பிடும் வாழ்க்கைப்புள்ளிகள் அத்தனையும் நீங்கள் கொடுத்த தருணங்களாகவே, இருக்கும். உங்கள் மைந்தருக்கு கொடுத்த தருணங்கள் பெற்றவர்களுக்கு கொடுத்த தருணங்கள். அதற்கிணையாகவே இச்சமூகத்திற்கு, அறிவியக்கத்திற்கு நீங்கள் கொடுப்பது பெருமகிழ்வளிக்கக் கூடியது. உங்களைப்பற்றிய ஆழ்ந்த தன்னம்பிக்கையை அளிக்கக்கூடியது நிறைவை நிமிர்வை அளிக்ககூடியது .அதுவே தன்னறமாக இருக்க முடியும்.
மிக எளிய ஒரு மனிதன் தன்னுடைய தன்னறம் என்று கண்டுகொள்வது தன் குடும்பத்துக்கோ குழந்தைகளுக்கோ தன்னை முற்றளிப்பதைத்தான். அதற்கு மேலதிகமாக அறிவாற்றலோ ஆன்மீக ஆற்றலோ உள்ள ஒருவர் இச்சமூகத்திற்கும் அறிவியக்கத்துக்கும் அளித்தாகவேண்டும். குடும்பத்துக்கு வெளியே ஆளுமை வளர்ந்த ஒருவர் குடும்பத்திற்குள் மட்டும் தன்னை அளித்தாரென்றால் நிறைவின்மையை அடைகிறார். குற்ற உணர்வை அடைகிறார். பல்லாயிரம் பேர் தங்கள் குடும்பத்துக்கு அப்பால் ஒரு துளிகூட வளராதவர்கள்.
தங்களை முழுக்க குடும்பத்துக்கு அளித்த எளிமையான மனிதர்கள் உணடு, அவர்கள் ஒருவகை நிறைவுடன் சாக முடியும். ஏனென்றால் அவர்களின் அக அளவு அவ்வளவுதான். ஆனால் கற்பனையாற்றலும் அறிவாற்றலும் ஆன்மிக ஆற்றலும் உள்ளவர்கள் அவ்வாறு எளிமையாகத் திகழ்ந்து மறைய முடியாது. அவர்களுக்கு மேலதிகமாகச் சில தேவைப்படுகின்றன. தன்னறம் என்று நான் திரும்ப திரும்ப சொல்வது இதையே.
எதை அளித்தால் எவ்வண்ணம் அளித்தால் நீங்கள் முற்றாக உங்கள் ஆற்றலை செலவிட்டிருப்பீர்கள் என்று நீங்களே கண்டுகொள்வதற்கு பெயர்தான் தன்னறம். அதற்கு பிறர் உதவ முடியாது நீங்களே கண்டுகொள்ள வேண்டியது தான்.
ஜெ
***
இலங்கையர்கோன், தொடராத தொடக்கம்
எம்.வேதசகாயகுமாருக்கு அவர் தமிழ்ச்சிறுகதைகள் பற்றி எழுதியதுபோலவே இலங்கை சிறுகதைகள் பற்றி கறாரான அழகியல் விமர்சனநூல் ஒன்றை எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. “இலங்கையின் இலக்கிய வரலாற்றை எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கலாம். இலக்கியக்கலையின் வரலாற்றை இலங்கையர்கோனில் இருந்து தொடங்கவேண்டும்” என்று அவர் சொல்வதுண்டு
இலங்கையர்கோன்
இலங்கையர்கோன்
தெணியான்- கடிதம்
இனிய ஜெயம்,
எங்கள் கூட்டுக்குடும்பம் மொத்தமும் கூடும் ஒரு இல்ல நிகழ்வு, தொடர்ந்து சுற்றுலா என கடந்து போயின ஒரு 10 நாட்கள். தளத்தில் விட்டுப்போனவை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்து வருகையில் எழுத்தாளர் தெணியான் இயற்கை எய்திய செய்தி கண்டேன்.
தெணியான் அவர்களை மிக முன்னர் டேனியல் ன் பஞ்சமர் நாவல் வாசிக்க கிடைக்கயில் அதனுடன் இணைந்து வாசிக்க கிடைத்த மற்றொரு நாவல் வழியே அறிந்தேன். இரண்டு நாவலுமே அன்று என்னைக் கவரவில்லை. மிகப் பின்னர் அலெக்ஸ் அண்ணன் அவரது எழுத்து பதிப்பகம் வழியே தெணியான் அவர்களின் வாழ்வனுபவங்களின் தொகுப்பான _ இன்னும் சொல்லாதவை _ நூலை வெளியிட்டிருந்தார்.
விழா ஒன்றில் அந்த நூலை கையில் எடுத்து என் பெயர் இட்டு கையெழுத்து போட்டு “வாசிச்சு பாருங்க ச்சீனு நல்லா இருக்கும்” என்று சொல்லி எனக்கு பரிசளித்தீர்கள். அ.முத்துலிங்கம் வழியே கொக்கு வில் கொக்கு வில் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே திரிந்ததைப் போல, இந்த இன்னும் சொல்லாதவை நூலுக்குப் பிறகு வடமராச்சி என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு திரிந்தேன். யாழ் நிலத்தின் வடமராச்சி கிராமத்தில் பிறந்து வேலையில் அமைவது வரையிலான காலத்தின் தெணியான் அவர்களின் வாழ்வனுபவங்களே இந்த நூல்.
மொத்த நூலிலும் என்னைக் கவர்ந்த சித்திரமாக இப்போதும் மனதில் இருக்கும் காட்சி, பாலகன் தெணியான் வீட்டின் தோட்ட வழி யில் ‘பெரியாச்சி’ வந்து நிற்கும் காட்சி. பெரியாச்சி உயர்ந்த சாதி என்பதால் இந்த வீட்டில் உள்ள யாரையும் அவள் தொட மாட்டாள். பெரியாச்சி வீட்டில் தலைச்சனை பெற்ற தாய் இறந்து அவள் குழந்தை பாலுக்கு தவித்து கொண்டு இருக்கிறது. தெணியானின் அம்மா இறுதி பெண் குழந்தைக்கு அப்போது பாலூட்டிக்கொண்டிருக்கும் பருவம். ஊரில் வேறு எங்கும் தாய்ப்பால் கிடைக்க வழி இல்லை. தீண்டாமை கொண்ட உயர்ந்த சாதி பெரியாச்சியின் பேரனுக்கு ஒரு சிரட்டையில் தனது தாய்ப்பாலை பிழிந்து கொடுத்து அனுப்புகிறார் தெணியானின் அம்மா. ஆச்சி அதை ஏந்தி செல்லும் அந்த சித்திரம்.
தெணியானின் அந்த உயர்ந்த சாதி சகோதரர் யாரோ, இன்னும் இருக்கிறாரோ, சகோதரர் தெணியான் இயற்கை எய்தியதை அவர் அறிவாரோ அறியேன்.
தெணியான் அவர்களுக்கு அஞ்சலி.
கடலூர் சீனு
பெருங்கனவின் தொடக்கம்
அன்புள்ள ஜெ
வெண்முரசிற்கு பின் அடுத்த செவ்வியல் ஆக்கமாக விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கியுள்ளேன். நேற்று கௌஸ்துபம் சென்று சேர்ந்தேன். ஞான அவை கூடுதல் தொடங்கியுள்ளது. விஷ்ணுபுரம் ஒருவகையில் உள்ளத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது. திருவடி, பிங்கலன், சங்கர்ஷணன், அனிருத்தன், ஸ்வேத தத்தன் என நீளும் நிரையில் ஒவ்வொருவரும் என்னில் ஒன்றை கொண்டுள்ளார்கள் என்பதால். அவர்கள் அனைவரிலும் வாழ்பவன் என்பதால். இன்னொரு பக்கம் விஷ்ணுபுரம் வாசிப்பிற்கு பெருந்தடையை அளிக்கிறது. வெளிவந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எழுதியும் பேசியும் மிக இயல்பாக அதை சென்றடைவதற்கான களத்தை உருவாக்கியுள்ளீர்கள்.
இன்றைக்கு நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகளின் விதையை விஷ்ணுபுரத்தில் காண்கிறேன். உதாரணமாக சிற்பி காசியபரிடம் தான் ஏன் சிற்ப கலையை புறக்கணித்தேன் என்று கூறுமிடம். சிற்பவியல் முழுமையுறுவது ஆலயத்தில். ஆனால் அந்த ஆலயம் சிற்பியின் கனவல்ல. ஒரு தத்துவ தரிசனத்தின் வெளிப்பாடு. சிற்பி தரிசனத்தை கல்லில் வடிக்கும் கருவி என்று பிரசேனர் கூறுமிடம். இந்த குறிப்பிட்ட விஷயத்தை பற்றி சென்ற ஆண்டு மிக விரிவாக ஆலயங்களை மாற்றி அமைத்தல் குறித்த விவாதத்தில் விளக்கம் கொடுத்தீர்கள். விஷ்ணுபுரம் என்பது ஒரு நோக்கில் நீங்களே தான். இருபத்தைந்தாண்டுகளில் அது ஆலமரமாக வளர்ந்துள்ளது. இன்று சில வருடங்கள் உங்களை வாசித்த பின் விஷ்ணுபுரத்திற்குள் நுழைவதன் சிரமம் குறைவாக உள்ளது.
எனினும் விஷ்ணுபுரத்தின் செறிவும் உணர்வு தீவிரமும் இப்போதும் வாசிப்பிற்கு பெருந்தடையை அளிக்கிறது. இந்த தடை உணர்ச்சி வெண்முரசின் கிராதத்தை நினைவுப்படுத்துகிறது. கிராதம் கொடுக்கும் ஈர்ப்பும் தடையுமான உணர்வு அதன் சைவம் சார்ந்த பின்புலத்தாலும் கனவுகளுக்குள் ஊடுருவி செல்லும் யோக முறையும் சேர்ந்ததன் விளைவு. மாற்றில்லாது விஷ்ணுபுரத்திலும் அதுவே நிகழ்கிறது. வித்தியாசம் என்னவெனில் அர்ஜுனன் வழி சென்றடைகையில் முதல் தளத்தில் பண்பாட்டின் ஆழத்தை வருடுகிறோம். பின்னர் அங்கே இருந்து நம்மில் நாம் சுமப்பவற்றை அறிந்து செல்கிறோம். அது ஓட்டுமொத்தத்தில் இந்திய பண்பாட்டின் வேரை அடி நிலமாக கொண்டுள்ளது. விஷ்ணுபுரம் நேரடியாக நமது கனவாழத்துடன் உரையாடுகிறது. இதன் வேர் நிலம் என்னுடைய கனவு தான். அங்கே பண்பாட்டு கூறுகள் சொந்த ஆணவத்துடன் இணைந்துள்ள விதம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே பறவையை நிலத்திலும் விமானத்திலும் பார்ப்பதற்கு நிகர்.
முன்னுரையில் சொல்லும் கனவுகளில் இனிமையானவை எவையுமில்லை என்ற வரி நினைவுக்கு வருகிறது. உண்மையில் கனவுகள் நமக்கு ஈர்ப்பை மட்டுமே அளிக்கின்றன. பொதுவில் கனவுகளுக்கு பயப்படுவதே நம் இயல்பாக உள்ளது. அவை எப்போதுமே நாம் முடிக்க மறைக்க விரும்பும் எதையோ ஏந்தி வருபவை. விஷ்ணுபுரத்தின் செல்வது ஒருவகையில் சொந்தமான ரண சிகிச்சை செய்து கொள்வதற்கு ஒப்பானது.
ஶ்ரீபாதம் வெவ்வேறு வாழ்க்கை களங்கள் சுழித்து மோதி செல்லும் களமாக உள்ளது. அங்கே நான் சென்றாக வேண்டிய பாதைகள் நிறைய உள்ளன. கௌஸ்துபம் ஞான விவாதம். மணிமுடி பிரளயம். எதுவுமின்மை, வெறுமை. இதுவே ஓர் தரிசனம். அவன் பாதங்களில் வாழ்க்கை சுழித்து ஓடுகிறது. உந்தியில் அதையாளும் ஞானம் திரண்டெழுகிறது. சிரசில் இவையனைத்தும் முடிவிலா வெறுமையில் கரைந்து மறைகிறது. ஆம் இப்படி சொல்லும் போதே உள்ளம் கூவுகிறது. அவ்வளவுதானா அவ்வளவுதானா என்று. பெரும்பாலானோர் இதனால் தான் ஞானத்தின் பக்கம் வராமல் போகிறார்கள் போலும். ஞானம் வெறுமையை நோக்கி இட்டு செல்கிறது. அதுகண்டு அஞ்சுபவன் மருந்தே நஞ்சாவது போல் ஞானத்தை ஆகங்காரமாக்கி கொள்கிறான்.
காசியபனிடம் பேசும் விஸ்வகரில் காண்பது அதை தானே. இந்த மனமயக்கத்திற்கான காரணமென்ன ? ஞானம் உலகியலை வெல்ல செய்யும் என நினைக்கிறோம். ஆனால் அது இயல்பில் எதிர்வினையாற்றுவது அல்ல. விடுவிப்பது மட்டுமே. எவற்றிலிருந்து என்றால் எல்லாவற்றிலிருந்தும். தன்னிலிருந்தும் கூட. அதை காண மறுப்பதே வித்யா கர்விகளின் இருள். சித்தன் அதை கண்டவன், கடந்து சென்றவன். அவன் எல்லாவற்றையும் தகர்ப்பவன். ஞானம் வெறும் கருவி மட்டுந்தான் என்கிறான். இதுவரை ஞானத்தை அடைவதே உன்னதம் என நினைத்து கொண்டிருந்த என் தலையில் இடி விழுந்தது. பலமுறை கேட்டது தான் எனினும் ஒவ்வொரு முறை மீள கேட்கையிலும் அந்த உண்மை அச்சுறுத்தச் செய்கிறது. ஆனால் இயற்கையின் கொடும் விதிகளில் ஒன்று, எதுவும் திரும்பி செல்ல இயலாது. ஞானத்தின் மேல் ஆர்வம் வந்த பின் மீண்டு வரவே இயலாமல் ஆகிறது. பிங்கலனை போல். ஞானத்தை நாடி வந்தவர்களில் எங்கோ ஒருகணம் பிங்கலனாக மாறதவர் இல்லை போலும். எங்கேனும் வாழ்க்கையின் கற்பாறைகளில் மோதி ஆணவமழியாத வரை திரும்பி வருதலோ முன்னகர்தலோ இல்லை என்றே நினைக்கிறேன்.
சித்தன் காசியபனை தேர்ந்தெடுக்கும் கணத்தை உள்ளத்தில் ஓட்டி கொண்டிருந்தேன். காசியபனில் இருந்த எது சித்தனை வரவழைத்தது ? விஸ்வகரின் ஆகங்காரத்திற்கு எதிர்வினையாற்றாது வாய் பிளந்து நிற்கும் ஆணவமின்மையே, கள்ளமின்மையே காரணம் என்று தோன்றுகிறது. இவனுக்கு அடுத்து இவன் சொன்னவற்றிலிருந்து மேல் சென்று சொல்லும் வித்யாபேக்ஷியை விஸ்வகர் ஏற்று கொள்வதை இனம் இனத்தோடு சேர்ந்ததது என்று பார்க்கிறேன்.
உடனடியாக இதை எண்ணுகையில் சிற்பியை ஆவேசம் கொண்டு அழைக்கும் முதிர்ந்த காசியபனில் காணும் விழைவு நெருடுகிறது. சித்தனின் முழு விடுதலை ஏன் காசியபனில் நிகழவில்லை ? அந்த முதல் சந்திப்பிலேயே அதற்கும் விடை இருக்கிறது. சித்தனின் தாடி உரசி குறுகுறுவென்று உணரும் சிறுவன் ஞானத்தை அல்ல, தந்தையை காண்கிறான். இப்போதைக்கு இப்படியொரு காரணம் தோன்றுகிறது. இந்நாவல் விரிந்து மடிந்து பரவ போகிறது என்னுள்.
அன்புடன்
சக்திவேல்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
இர்வைன் சந்திப்பு -காளிராஜ்
அன்புள்ள ஆசானுக்கு,
இந்த சந்திப்பு என் வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று. 2005- முதன்முதலில் பெரியார் பற்றிய ஒரு கட்டுரை உங்கள் தளத்திற்கு என்னை கொண்டுவந்தது. நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் உடைந்ததன் கோபத்தில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். உடனடியாக பதில் வந்தது. என் வயதை குறிப்பிட்டு நிதானமாக வாசித்து, அது குறித்து சிந்திக்கவும் கூறியிருந்தீர்கள்.
பதினெட்டு வருடங்கள் தொடர்ந்து உங்கள் தளத்தில் பெரும்பாலான கட்டுரைகளும் வாசித்திருக்கிறேன். உங்கள் தளத்தை வாசிப்பது என் அன்றாடத்தில் ஒன்றானது. ஒவ்வொரு முறை இந்தியா வரும்போது உங்களை பார்க்கவேண்டும் என்ற உணர்வும், தயக்கமும் மாறி மாறி வந்து தயக்கமே வென்று வந்தது. இர்வின் சந்திப்பு என்ற ஸ்ரீராமின் செய்தி பார்த்தவுடனே அவரை தொடர்பு கொண்டு வருவதாக சொல்லிவிட்டேன். வாசித்திருக்கிறீர்களா என்ற கேள்வியும் எவையெல்லாம் என்ற கேள்வியும் ஸ்ரீராமிடம் இருந்து வந்ததுமே இது ஒரு சாதாரண சந்திப்பாக இருக்காது என்று தோன்றியது. ஸ்ரீராமிடம் வாசித்த அனைத்தையும் கூறினேன். என்னை விட நிறைய வாசிப்பவர்கள் வருவார்களோ என்ற தயக்கம் மறுபடியும் சூழ்ந்தது. விடக்கூடாது என்று காணும் அனைவரிடமும் ஆசானை காண செல்வதாக கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும். அது என்னை சந்திப்புக்கு செல்ல அழுத்தம் கொடுக்கும் என்று நம்பினேன்.
அது உண்மையில் உதவியது. “எப்பொழுது பார்க்க போகிறீர்கள்?” என்று என் அலுவலகத்திலும் கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில் உங்களை பார்த்தே விட்டேன் ஆசானே. 18 வருடங்கள், எழுத்து மூலமாக மட்டுமே உணர்ந்த ஆளுமை. உங்கள் பேச்சை கவனித்து கொண்டே இருந்தேன். கண்களை ஒரு கணமும் உங்களை விட்டு விலக்கவில்லை. உண்மைதானா? என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். இரண்டு மணிநேரம் ஒரு நொடியும் கவனம் சிதறாமல் இருந்தது அநேகமாக என் வாழ்வில் முதல் முறை. நீங்களே கூறியது போல முதல் பாதி கிட்டத்தட்ட ஆன்மீக உரை போல மாறிவிட்டது. இலங்கை இலக்கிய/கவிதை தரவரிசை பற்றிய கேள்வி இலக்கியத்தை நோக்கி நோக்கி கவனத்தை செலுத்தியது.
கூட்டம் முடிந்ததும் நான் முதன் முதலில் வாங்கிய உங்கள் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு விடைபெறுவது தான் திட்டம். ஆனால் உங்கள் உரையாடலை பார்த்து கொண்டே இருந்தபோது இதற்கும் உங்களின் காணொளி பார்ப்பதற்கும் வித்யாசம் இல்லையோ என்று தோன்றிய கணம் உங்களிடம் கண்டிப்பாக பேசவேண்டும் என்று எனக்கும் முடிவு செய்ட்து கொண்டேன். குறிப்பாக ஸ்ரீராம் இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது என்றதும் மிக ஏமாற்றமாக உணர்ந்தேன். இவ்வளவுதானா?” என்று மனதினுள் அரற்ற ஆரம்பித்தேன். ஒரு உந்துதலில் உங்களிடம் வந்து பேசிவிட்டேன்.ஒரு ஆளுமையை, வாசித்து வாசித்து சிந்தனையை சிறக்க வைத்த ஒரு பேராளுமையை அருகில் நின்று பேசும் வரம்! வார்த்தை வரவே இல்லை இப்பொழுது யோசித்து பார்த்தால் “என்னை நிறைய பாதித்து இருக்கிறீர்கள்” என்ற ஒன்றை மட்டுமே வேறு வேறு வகையினில் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். அந்த நொடி நீளுமா…? முடிந்து விடுமா? அவ்வளவுதானா? என்ற மனம் கூப்பாடு போட்டு கொண்டு இருந்தது.
ஓர் அணைப்பு ஆசானே! என் அத்தனை தயக்கமும், வார்த்தையின்மையும்… உங்களுக்கு எப்படி தெரிந்ததோ?. என் ஆழ்மனம் கேட்டது அந்த ஒரு கணத்தைதான் போல ஆசானே. இது போதும். ஏமாற்றம் மாறி ஒரு முழு நிறைவு! வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது நான் எழுதிய ஒரு கடிதம் குறித்து அங்கேயே நண்பர்களுக்கு ஒரு அறிமுகமும் கொடுத்தீர்கள். அதன் பிறகு நண்பர்களிடமான தயக்கமும் ,மறைந்தது. நண்பர்களின் அறிமுகம் ஒரு சிறந்த விஷயம். கிரியை முதல் முறையாக பார்த்தேன். இரவு வீட்டிற்கு அழைத்து அதிகாலை வரை பேசிக்கொண்டு இருந்தோம். ஆசானின் வாசகர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பல அம்சங்களை கண்டு கொண்டோம். மறுநாள் காலையில் ஸ்ரீராம் வீட்டில் மஹேந்திரன், ஸ்ரீராமிடம் அதை உறுதி செய்து கொண்டோம். எல்லோரும் ஒரே வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தானே? :) கிரி விஷ்ணுபுரம் வாசித்ததாக (அதுவும் முதல் இலக்கிய நாவலே அவருக்கு அதுதான்) கூறி பொறாமை தீயை பற்றவைத்தார். மகேந்திரன் நீலத்தை இரண்டு முறை வாசித்து முடித்ததாக கூறி அந்த தீயை வளர்த்தார். விசு உங்களின் உரையாடலை அவரின் மனைவி குறிப்பெடுத்து அனுப்பியதை காட்டினார். சட்டென்று ஏலியன்கள் மத்தியில் மாட்டி கொண்டதாக ஒரு உணர்வு. ஆனால் அந்த ஏலியன்களில் ஒருவராக மாற எனக்குள் உறுதி செய்து கொண்டேன். நீண்ட காலம் தொடர போகும் நட்பு வட்டம் இது! ஸ்ரீராமுக்கும் அவர் மனைவிக்கும் மேலும் மேலும் நன்றி (குறிப்பாக அந்த வடைக்கு… :). ஸ்ரீராம் என்னிடம் இருந்து மேலும் தொல்லைகளை எதிர்பார்க்கலாம் (வாசிப்பு குறித்துதான்! வடை இரண்டாம் பட்சம்தான்! :).
அருண்மொழி அக்காவிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசினேன். “இந்த தோசை கல்லை புக்செல்ப் -ல் வைத்து யார்” கட்டுரையை பற்றி கேட்டு கொண்டிருந்தேன். ஒருசில கட்டுரைகளை குறிப்பிட்டு என்னை வாசிக்க சொன்னார்கள். கண்டிப்பாக வாசித்து விட்டு அக்காவிற்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது பொதுவாக உணர்ந்த விஷயம். உங்கள் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே வித்யாசம் இல்லாத உணர்வு. உங்கள் எழுத்தை படிக்கும் பொது நீங்க பின்னால் இருந்து பேசிக்கொண்டே இருப்பது போல் உணர்வது அதில் ஒரு பொது அம்சம். இனி எனக்கு பின்னால் அல்ல முன்னால் இருந்து பேசுவது போலவே கற்பனை செய்ய முடியும். சிக்கென பிடித்தேன் என்பது போல உணர்வு!
உங்கள் நேரத்திற்கும், அன்புக்கும் நன்றி ஆசானே! உங்கள் ஆசீர்வாதம் எப்பொழுதும் வேண்டும்.
காளிராஜ்
May 30, 2022
தமிழ்ச்சொற்கள், உச்சரிப்பு
வணக்கம்.
தமிழில் ஆங்கிலப் பெயர்கள் எழுதுவது எப்பொழுதுமே ஒரு சிக்கலான ஒன்று என எண்ணுகிறேன். தமிழ் விக்கியில் மாற்றுமொழி சொற்களின் உச்சரிப்பிற்கு ஒரு புதிய (அல்லது ஏற்கனவே நிறுவப்பட்ட) வழிமுறையை அறிமுகப் படுத்தும் எண்ணம் உள்ளதா? உதாரணத்திற்கு A.W.Brough பற்றிய உங்கள் கட்டுரையை முதலில் படித்தபோது நான் அந்தப் பெயரை (பிரப்) ‘Pirap’ or ‘Birab’ என்று வாசித்தேன். அதை நீங்கள் ப்ரஃப் என்று எழுதி இருந்தால் கூட ‘Prough’ என்று வாசிக்க வாய்ப்புள்ளது.
ஆகவே, ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள உச்சரிப்புக் கையேடு (https://en.wikipedia.org/iki/Help:IPA/English) போல தமிழ் விக்கியிலும் ஒரு உச்சரிப்புக் கையேடு உருவாக்கி, அதை பொதுமைப் படுத்தினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
(தமிழ் விக்கி பக்கத்தில் (https://tamil.wiki/wiki/pecial:Contact) தொடர்பு மின்னஞ்சல் கொடுக்கப்படவில்லை, அதனால் தங்களுக்கு எழுதுகிறேன்.)
நன்றி!
வினோத் ஜெகன்னாதன்
அன்புள்ள வினோத்
கலைச்சொற்களைப்பற்றியும் சொல்லாக்கங்களையும் பற்றியும் உச்சரிப்பு பற்றியும் ஒரு திறந்த பொது விவாதம் நம் சூழலில் நடந்தால் நல்லதுதான். ஆனால் அது அறிவியக்க ஆர்வலர்களால், ஏதேனும் மொழிப்பங்களிப்பு செய்தவர்களால் நிகழ்த்தப்படவேண்டும். இங்கே மொழிசார்ந்த எந்த விவாதத்திலும் மொழியறிவில்லா அரசியலாளர் ஊடுருவி வன்முறையை செலுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அரசியல் நேரடியாக அதிகாரத்துடன் இணைந்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் அதிகாரம் என்பது அடியில் சாதியதிகாரம் மட்டும்தான். ஆகவே கட்டக்கடைசியில் அது சாதி மோதலாக வந்து முடிகிறது. அதனால் தேர்ந்தெடுத்த சிறுவட்டத்துக்குள் அன்றி இவற்றைப்பேசுவது என்பது இன்றைய சூழலில் முற்றிலும் பொருளற்றது.
கலைச்சொற்களை தமிழாக்கம் செய்யும் பெரும்பணி பார்தியார் காலத்திலேயே தொடங்கிவிட்டது. தொடக்க காலத்தில் இதழ்களுக்காக நிறைய சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. அதன் பிறகு ஆட்சிமொழிச் சொற்கள், சிந்த்னைக்குரிய சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. மருத்துவ கலைச்சொற்கள் இலங்கையில் சாமுவேல் கிரீன் காலத்திலேயே தமிழாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் நீட்சி இந்தியாவில் பின்னர் நிகழ்ந்தது.
இது கடந்த இருநூறு ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்துவரும் ஒரு பெரும் செயல்பாடு. இத்தகைய கூட்டுச் செயல்பாடுகளுக்குரிய நெறிகள் தானாக உருவாகி வந்திருக்கும் .அவற்றை ஒரு அறிஞரோ ஒரு தரப்போ ஒரு அதிகார மையமோ கட்டுப்படுத்திவிட முடியாது. பல திசைகளில் பலவாறாக நிகழ்வதிலிருந்து எது தங்கி வாழ்கிறதோ, எது பொருந்துகிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். காப்பியை குளம்பி என்றூறு மொழியாக்கம் செய்தது நிலைக்கவில்லை.தாசில்தாரை வட்டாட்சியர் என்று மொழியாக்கம் செய்தது நீடித்தது. ஆகவே வட்டாட்சியர் என்பதை பயன்படுத்தலாம்.
ஈருருளி நிலைக்கவில்லை, பேருந்து நிலைத்தது. ஏன்? தமிழில் திசைச்சொல் என்னும் கருத்துரு உண்டு. பிறமொழிச் சொல் தமிழின் உச்சரிப்புக்குள் வருமென்றால் அதை பயன்படுத்தலாம் என இலக்கணம் சொல்கிறது, அதுவே திசைச்சொல். (இத்தகைய ஓர் இலக்கணம் தமிழில் இருப்பது மிக வியப்புக்குரியது. தொல்மொழிகளில் இப்படி ஒரு இலக்கண அனுமதி இல்லை. தமிழின் தனிச்சிறப்புகளிலொன்று இது) சைக்கிள் தமிழ்ச்சொல்லாகவே ஆகிவிட்டது. அந்த திசைச்சொல் இருப்பதனால் ஈருருளி தேவையில்லை. பஸ் தமிழ் உச்சரிப்புக்குள் வர முடியாது. ஆகவே அது அயல்சொல். ஆகவே பேருந்து நிலைத்தது
இதுதான் நடைமுறையிலுள்ள சாத்தியமான ஒரே வழி. நம் முன்னோர் வழிகாட்டியது இது. இதில் தூய்மை வாதத்தை ஏற்கலாமா? தூய்மைவாதம் ஒன்று இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற தரப்பைச் சேர்ந்தவன் நான்.. தூய்மைவாதம் வெறுத்து ஒதுக்கப்படும் என்றால் ,முற்றிலும் இல்லாமல் ஆகும் என்றால் ,ஒரு மொழின் அடித்தளம் சிதையும்.. அது காற்றில் பறந்தலையத்தொடங்கிவிடும். தூய்மைவாதத்திலேயே நின்றுவிட்டால் அது வளர்ச்சி அழிந்து கல்குண்டாக அமர்ந்திருக்கும். காலப்போக்கில் மறையும். ஓர் அடிப்படை விசையாக தூய்மைவாதம் இருந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே தூய்மைவாதத்தை கேலி செய்து நிராகரிப்பதெல்லாம் எனக்கு உடன்பாடல்ல. நான் எப்போதும் மொழித்தூய்மைவாதிகளை கவனிப்பவன். தூய்மைவாதிகளின் இருப்பை ஏற்பவன். ஆனால் தூய்மைவாதிகளை ஒட்டி யோசிப்பவன் .அல்ல. இந்த முரணியக்கமே என்னுடைய மொழிக்கொள்கை.
கலைக்களஞ்சியம் போன்ற ஒன்று அறிவைத் தொகுப்பதுதானே ஒழிய புதிய அறிவுநெறிகளை உருவாக்குவது அல்ல. ஏற்கனவே மிக விரிவான தளத்தில், பொதுவிவாதம் வழியாக நிறுவப்பட்டுவிட்ட சில அடிப்படைகளைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமே ஒழிய ஒரு சிறு குழு கூடி தனக்கான முடிவுகளை எடுத்துவிட முடியாது.
தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்தில் இலக்கிய மதிப்பீடு ஒன்று உள்ளது.. அது புதுமைப்பித்தனுக்கும் பூவை எஸ்.ஆறுமுகத்துக்கும் ஒரு வேறுபாடை முன்வைக்கத்தான் செய்யும். ஆனால் அந்த வேறுபாட்டை கலைக்களஞ்சியம் உருவாக்கவில்லை. ஏற்கனவே இலக்கிய விமர்சகர்களும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களும் உருவாக்கிய வேறுபாடைதான் அது பதிவு செய்கிறது. அந்த வேறுபாடை அது பதிவு செய்யவில்லையெனில் அது கலைக்களஞ்சியமே கிடையாது. அதனால் எந்தப்பயனும் கிடையாது. அது ஒரு ஆவணப்பதிவுத்தொகையாக மட்டும் எஞ்சும். கற்பவனுக்கு அதில் பயனும் வழிகாட்டுதலும் வேண்டும் என்றால் புதுமைப்பித்தன் ஏன் முக்கியமானவர் என்றும், பூவை எஸ்.ஆறுமுகம் ஏன் ஒரு படி கீழானவர் என்ன்றும் அறிவதற்கான விளக்கம் கலைக்களஞ்சியத்தில் இருந்தாகவேண்டும்.
ஆகவே கலைக்களஞ்சியம் சொற்களை உருவாக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். கலைக்களஞ்சியம் மொழிச்சூழலால் இயல்பாக உருவாக்கப்படும் சொற்களை அவற்றின் பயன்பாட்டுத் தளத்திலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். மொழிக்குறிப்புகளை பயன்படுத்துவது, அந்நியக் கலைச்சொற்களை உச்சரிப்புக்ளை பயன்படுத்துவது ஆகியவற்றில் மாறா முறைமை என்ற ஒன்றை கலைக்களஞ்சியம் கொள்ள முடியாது. மாறா முறைமை கலைக்களஞ்சியத்தை இரும்புக்கோட்டை போல ஆக்கிவிடும்.
பிரப் என்பது அவராலேயே அவர் பெயர் எழுதப்பட்ட விதம். அதை கலைக்களஞ்சியம் மாற்ற முடியாது. வேறு உச்சரிப்புகள் இருந்தால் அதையும் அளிக்கலாம். ஈரோட்டில் பிரப் என்று அவர் பெயரில்தான் அந்தச்சாலை அமைந்திருந்தது. அப்பெயரால் தான் அவர் கட்டிய தேவாலயங்கள் அமைந்திருக்கின்றன. அதைப் வேறு உச்சரிப்புகளில் ஒலிபெயர்ப்பதில் பொருளில்லை. பரோ என்று இன்னொரு புழக்க மொழி பெயர்ப்பு இருந்து அவை இரண்டுக்கும் நடுவே ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால் ஒரு கலைக்களஞ்சியம் அதை செய்யலாம். இதுதான் கலைக்களஞ்சியம் கைக்கொள்ளும் வழிமுறையாக இருக்கமுடியும்.
முற்றிலும் பொருளற்ற ஒரு உச்சரிப்பு முறை புழக்கத்திற்கு இருந்து அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் அதையும் கலைக்களஞ்சியம் ஏற்றுக்கொள்ளும். ஒருவேளை அடைப்புக்குறிக்குள் அக்கலைக்களஞ்சியம் அது முன்வைக்கும் ஓர் உச்சரிப்பு முறையைக் குறிப்பிடலாம் ஆனால் முதன்மையாகக் கொள்ளவேண்டியது எது புழக்கத்தில் இருக்கிறதோ அதைத்தான்.
அவ்வாறு தமிழ்ச்சூழலில் பல சொற்கள் அன்றாட புழக்கத்தில் வேரூன்றியிருக்கின்றன. சினிமா என்பது நம் மொழியில் உள்ள ஒரு திசைச்சொல். சரியான உச்சரிப்பு சினேமா என மொழியியலாளர் சொல்லலாம். அதன் மூலக்கலைச்சொல் கினெமா என்று வேறொரு அறிஞர் சொல்லலாம், வேண்டுமென்றால் அது ஒரு தரப்பு என்று உள்ளே பதிவு செய்யலாமே ஒழிய சினிமாவுக்கு பதிலாக சினேமா என்றோ கினெமா என்றோ மாற்றிவிட முடியாது. இலக்கணம் என்பதை இலக்கியம் கண்டதற்கு தான். அறிவுச்சூழலில் புழங்குவதற்குத்தான் கலைக்களஞ்சியம் அடிப்படை அமைக்கிறது.
ஜெ
சாமுவேல் கிரீன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

