Jeyamohan's Blog, page 768
June 5, 2022
மைத்ரி
அஜிதன் எழுதிய முதல் நாவல் ‘மைத்ரி’. மைத்ரி என்பது ஒருங்கிணைவு அல்ல, ஒன்றாதல், ஒன்று மட்டுமே என ஆதல். இது இளமையின் உத்வேகம் நிறைந்த ஒரு காதலின் சித்திரம். நேரடியான எளிய கதையோட்டம் கொண்டது. புறவுலகை இளமைக்கே உரிய கூரிய புலனுணர்வுடன் ஆழ்ந்து உணரும் பரவசம் நிறைந்தது.
கைக்குழந்தைபோல வியப்பில் விரிந்த கண்களுடன், ஒவ்வொரு ஓசையையும் இசையையும் உள்வாங்கும் நுண்ணிய செவிகளுடன், எல்லா மணங்களுக்காகவும் தேடும் நாசியுடன், தென்றலையும் வெயிலையும் மட்டுமில்லாமல் நிழலையும் காற்றசைவையும் தொட்டறியும் உடலுடன் இமையமலை நிலவெளியில் பயணம் செய்கிறான் கதைசொல்லி. உடன் பயணம் செய்பவள் அவனை மேலும் மேலும் இமையத்தின் ஆழத்துக்குள், அதன் அசைவில்லாத காலத்துக்குள் கொண்டுசெல்பவள். அவன் ஒன்றென்றாகும் ஒரு பெருந்தருணத்தைச் சென்றடைகிறான்.
பாவனைகளேதுமற்ற இளமை வெளிப்படும் படைப்பு இது. கள்ளமின்மையின் அழகு கொண்டது. ஆனால் செறிவான படிமங்களின் வழியாக ஆழ்ந்த தத்துவதரிசனத்தையும் முன்வைக்கிறது. காஷ்மீரி சைவம் முதல் பௌத்த மெய்மை வரை அதன் தேடல் நீண்டு சென்று நிறைவை சந்திக்கிறது.
தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றை வெளியிடுவதில் விஷ்ணுபுரம் பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
(மைத்ரி 11- ஜூன் 2022 ல் சென்னையில் நிகழும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழாவில் கிடைக்கும்)
மைத்ரி கிண்டில் பதிப்பு வாங்கவிஷ்ணுபுரம் பதிப்பகம்
240 பக்கங்கள். கெட்டி அட்டை. சலுகை விலை ரூ 200
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
யசோதரை
இனிய ஜெயம்
ஒரு முறை கவிஞர் தேவதேவனை பேருந்து ஏற்றிவிட்ட தருணம் குறித்து அஜிதன் சொல்லிக்கொண்டு இருந்தான். பேருந்தில் எறிக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜனமும் கையில் துணிமணி பையோ, அலுவலக பணிப்பையோ வைத்திருக்க,அந்த கூட்டத்தில் முண்டியடித்து எறிக்கொண்டிருந்த தேவ தேவனின் ஜோல்னா பையில் இருந்து எட்டிப்பார்த்து எல்லாவற்றையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருந்தது ஒரு மஞ்சள் மலர். எங்கேயோ சாலையோரம் தனித்துக்கிடந்த அதன் துயர் தீர்க்க அதை தனது வீட்டுக்கு எடுத்துப் போய்க்கொண்டு இருக்கிறார் தேவதேவன்.
மற்றொரு வாசகர், ஊட்டி முகாம் விடுத்து தேவ தேவனுடன் திரும்புகிறார். பேருந்தில் கும்பல். பேருந்து ஆட்டத்தில் நின்றிருக்கும் தேவ தேவனின் ஜோல்னா பை அவர் அருகே அமர்ந்திருப்பவர் முகத்தை வந்து தொடும் தருணம் எல்லாம் சுருக்கென ஒரு கொடுக்கின் தீண்டல். ஒரு கட்டத்துக்கு மேலே பொறுக்க இயலா பயணி கவியின் பையை சோதனை விட்டிருக்கிறார். மஞ்சள் கொண்டை பூவுடன் பச்சை வண்ணப் பந்துக் கள்ளி. (கவி எப்படி அதை முள் படாமல் எடுத்ததுப் பைக்குள் போட்டிருப்பார் ?!!)
தேவதேவன் எழுதிய இந்தக் கதை தேவதேவன் எனும் கவி உள்ளத்தையும் அக் கவியின் கவிதைக்கு வாசகராக எவர் வருவாரோ அவர் உள்ளத்தையும் குறித்தது.
யசோதரை
ஒரு புத்தகத் திருவிழா. நாங்கள் இணைந்திருந்த ஒரு புத்தகக் கடை. உடல்நீர் கழிப்பதற்காய் வெளிப்புறம் சென்று திரும்பிக் கொண்டிருந்த நான், அப்போதுதான் வந்திருந்த நண்பர் கண்டு மலர்ந்தவனாய் நெருங்கி வந்து அவரிடம், இரகசியம் கொண்டு மூடியிருந்த வலது கையை மறைத்தபடி, பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் போல் மிகத்தேர்ந்த ஓர் உறுதியுடன், “வேணு உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லுங்கள், அதை நான் தருவேன்” என்றேன். சில நொடிகள் நன்றாய் மவுனித்துவிட்டு, “ஒரு பூ” என்று அவர் கேட்டவுடனேயே, ‘இதோ’ என்பது போன்ற அழுத்தமான ஒரு நிதானத்துடன் அவர் முன் நீண்டிருந்த என் உள்ளங்கையில் இருந்தது, ஒரு சிவந்த ரோஜா.
அதிர்ந்துவிட்டார் வேணு.
அக்கணம் அந்த அற்புத நிகழ்வைப் பக்கத்திலிருந்த அனைவரும் பார்த்திருந்தால் நன்றாயிருக்குமே என்ற நப்பாசையுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தவேளை புத்தகக் கடையிலிருந்த பிற அனைவரும் வேறு வேறு கவனத்தில் இருக்கும்படியாகி விட்டிருந்தது.
சரி, இது ஒரு அபூர்வமாக நிகழக்கூடிய தற்செயல் நிகழ்வாகவே இருக்கலாம். நான் வெறுங்கையை விரித்துக் காட்டினாலும், “என் செல்ல எழுத்தாளப் பெருமகனே, இந்த இன்மைதான் நான் உனக்குத் தரும் பரிசு! இன்மை! இன்மை!” என்று இன்மை குறித்த ஒரு தத்துவம் விரித்துவிடலாம். சரி, ஏதோ வேறொரு பொருள்தான் வைத்திருந்தால் – அட, அது எந்தப் பொருளானாலும் கூட – பேதா பேதமற்ற ஒரு தத்துவ அடிப்படையைப் பேசியே, நாம் அடைய வேண்டிய உன்னதத்தின் ஓர் ஆழக் குறியீடாக்கி விடலாம். எதையானாலும் நம் பாழாய்ப்போன அறிவு, பிரிவு, நம்பிக்கைகள் கொண்டே சமாளித்துவிடலாம் அல்லவா?
அமைதியாய்ச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன். நான் சென்று திரும்பிக்கொண்டிருந்த நீண்ட அழகிய விரிந்த அந்தப் பாதையில்
குனிந்து எடுத்து என் கைகளில் ஏந்திப் பார்த்துவிட்டு. அத்துணை நேரம் நான் என் கைகளில் வைத்திருந்தது அந்தத் திருவிழாக் கூட்டத்தில், புத்தகச் சந்தையின் உள் நுழைய வந்திருந்த ஒரு பெண்ணின் கூந்தலிலிருந்து உதிர்ந்த மலர்தானே! “நான் புத்தரின் யசோதரை தெரியுமா?” என்றாள்.
என் எதிரே வந்துநின்ற ஒரு பெண், “ஓ, நீதானா, சித்தார்த்த ராத்திரியை எழுதத் தூண்டியவள்?” என்றேன்.
வாசித்தேன். நன்றி என்பது போல் மறைந்துவிட்டாள் அவள். அவளைப் போன்ற ஓர் பேரழகியும் இருப்பார்களா இவ்வுலகில் என்றிருந்தது.
இந்த மாயக்கதையை இப்போதுதான் எழுதியிருக்கிறேன். யாருக்கும் இன்னும் வாசிக்கக் கொடுக்கவில்லை. ஆனால், முந்தைய அற்புத நிகழ்வைத்தான் கேட்ட என் முதல் வாசகி என் துணைவி சொல்கிறார், “நீங்கள் அந்த மலரைக் கையில் வைத்திருக்கும்போதே உங்கள் நண்பர் அதைக் கவனித்திருக் கிறார்…”
இல்லை, அதற்கு வாய்ப்பே இல்லை. அதன் காலமும் தூரமும் நான் அறிவேன். அப்படியானால் என்ன நிகழ்ந்திருக்கும்? சந்தை வாயிலுக்கு வெளியே அகன்ற நிலமும் பாதையும் ஒன்றாயிருந்த உள்நுழைவழியில் பேரொளிர்ந்து கிடந்த அந்த மலரை அவரும் பார்த்திருக்கலாம். ஏதோ ஒரு கூச்சம், தயக்கம் ஏதோ ஒன்றுதான் – அவரை அதனை எடுக்கவிடாது தடுத்திருக்கலாம். இன்னும் அவர் உள்ளில் கிடக்கும் அந்தப் பிழையின் வலிதான் அவருக்கு ஓர் அற்புதத்தைக் காட்டியிருக்கிறது. ஒரு மந்திரமுமில்லை, மாயமும் இல்லை, மயக்கங்களும் இல்லை.
தன்னறம் நூல்வெளி _ தேவதேவன் கவிதைகள்.
கடலூர் சீனு
தொடர்புக்கு: 9843870059, thannarame@gmail.com
விஷ்ணுபுரம் அமைப்பில் பங்கெடுத்தல் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எப்படித் தொடங்குவது இந்த கடிதத்தை எனப்புரியவில்லை. அதீத அபிமானமும், ஜெயமோகன் என்கிற பிரமிப்பும் மனதில் இருக்கும் சொற்களைத் தடுக்கிறது. தங்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டாலும் தங்களை கடிதம் மூலம் கூட வந்தடைய ஏனோ ஒரு தயக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. துரோணரிடம் ஏகலைவனுக்கும் இப்படியொரு தயக்கம் இருந்திருக்குமோ என்னவோ?
புதுமைப்பித்தனின் ‘கடிதம்’ சிறுகதையும், அதையொட்டிய தங்களின் கருத்துகளையும் வாசித்தபிறகு, எழுத்தாளருக்கு வாசகம் எழுதும் கடிதத்தில் இலக்கியத்தரமோ, எழுத்தின் முதிர்வோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஒரு வாசகம் தன்னை செழுமைப்படுத்தும் குருவுடன் மனதோடு மனதாக உறவாடும் ஒரு கருவிதான் வாசக கடிதம் என்று புரிந்தபின், இம்முறை துணிந்து எழுதிவிடலாம் என முடிவெடுத்து எழுதுகிறேன்.
அறுபது வயது பூர்த்தியடைந்ததற்கு தங்களை வாழ்த்த நினைக்கவில்லை, தங்களின் ஆசீர்வாதம் வேண்டுகிறேன். பெருவாழ்வு வாழும் தங்களையும் அருண்மொழி அவர்களையும் ஒரு நாள் நேரில் சந்தித்தால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிட ஆசை. அறுபது வயது பூர்த்தியான ஆசிர்வாதங்களோடு, தங்களின் தமிழ் விக்கி எனும் அசாத்திய பெருமுயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துகள். முடிந்தால் நானும் அதில் அணிலாக இருக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு நாள் தூங்கியெழும்போதெல்லாம் தங்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கண்டு பிரமிக்கிறேன். மனிதனால் இதெல்லாம் சாத்தியமா என்ன? தங்களின் பார்வையும், தங்கள் நாவால் எமது பெயரையும் உச்சரித்தால் போதும், பேருவகை கொள்வேன். தங்களுக்கு முகஸ்துதி பிடிக்காது என அறிவேன், மன்னிக்கவும். நீண்ட நாள் வாசகன் தன் மனதிலிருந்து உரையாடும் முதல் கடிதம் என்பதால் ஏற்படும் பதட்டம். ஒரு அரசு செய்ய வேண்டிய முயற்சிகளையும் ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டியதையும் ஜெயமோகன் எனும் தனிமனிதன், அதுவும் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில். இதற்காகவே மீண்டும் வணங்குகிறேன்.
ஆரம்பநிலை பொழுதுபோக்கு வாசகனாக இருந்த காலத்தில் ஜெயமோகன் என்பவர் கடினமான எழுத்துகளுக்கு சொந்தமான மற்றொரு இலக்கியவாதி என்றளவில்தான் எண்ணியிருந்தேன். ஜெமோ முதன்முதலில் அறிமுகமானது “விசும்பு” மூலமாகத்தான். ‘ஐந்தாவது மருந்து’ படித்து அசந்துவிட்டேன். இப்படியும் கூட தமிழில் விஞ்ஞானக் கதையை எழுத முடியுமா எனும் மிரட்சி அடுத்த சில இரவுகளின் தூக்கத்தை காணாமல்போக செய்தது. அதன் பின் சில சிறுகதைத் தொகுப்புகள், தங்களின் இணையதளம், கட்டுரைகள், நாவல்கள், தனிமையின் புனைவுக்களியாட்டு சிறுகதைகள் என மெல்ல மெல்ல, அதே சமயம் ஆழமாக தங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். விசும்பு, யட்சி, கந்தர்வன் போன்ற கதைகளில் இருக்கும் நாட்டாரியல் இந்த மண்ணின் மீதும் அதன் கலையிலக்கிய பண்பாட்டியல் மீதும் எழும் இலக்கியம் என்பது எத்தகைய அசுர சக்தியுடன் நம்மை ஆட்கொள்கின்றன என நினைக்கும்போது சிலிர்க்கிறது.
அ.முத்துலிங்கம் அவர்கள் ஒருமுறை தங்களைப்பற்றி இப்படி சொல்லியிருந்தார், ஒருவர் தன் வாழ்நாள் முழுதும் ஜெயமோகனை மட்டுமே வாசித்தால் போதும். வாழ்நாளின் பெரும் இலக்கியச் சுவையைப் பெற்றிட முடியும். அவர் சொன்னது மிகையல்ல, வாழ்நாள் முழுவதும் வாசிக்கும் அளவுக்கு தங்களின் படைப்புகள் அள்ள அள்ள வந்துகொண்டே இருக்கின்றன, அட்சய பாத்திரம் போல. அத்தனையும் உலகத்தரம் வாய்ந்தவை. இந்த உலகின் உச்சியில் இருந்து எல்லோருக்கும் கேட்கும்படி உரக்கச்சொல்ல வேண்டும், “பாருங்கள்! எங்களிடம் ஜெயமோகன் இருக்கிறார்” என்று.
ஆனால் மற்ற எழுத்துகளை வாசிப்பது போல தங்களின் புனைவை எடுத்தவுடனே வாசிப்பதில்லை. மிகுந்த நேரமெடுத்து, சிரத்தையுடன், புறத்திலும் அகத்திலும் எந்த சலனமும் இல்லாத பேரமைதிப் பொழுதாக பார்த்துதான் வாசிக்க விரும்புகிறேன். தங்களின் படைப்பை முழுவதுமாக உள்வாங்க, அதன் உலகத்துக்குள் மனதை முழுமையாக செலுத்த இந்த முறைதான் எனக்கு உதவுகிறது. வேலைப்பளு கூட காரணமாக இருக்கலாம். அதனாலேயே தங்களின் ஆகச்சிறந்த படைப்புகளுக்குள் பயணிக்க நான் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறேன். தெய்வ தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தனின் உணர்ச்சியுடனும் ஆவலுடனும்.
தங்களின் ஒன்றிரண்டு கருத்துகள் மீது வேறுபாடுகள் இருந்தாலும், தங்களைப் பற்றி நண்பர்களிடம் பேசாத நாள் இல்லை. சில சமயம் சலிப்புறும் நண்பர்கள், ‘அதெல்லாம் சரி, ஜெயமோகனை நேரில் சந்தித்தால் என்ன பேசுவாய்?’ என்று கேட்கும்போதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்வேன். ‘பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. அவரிடம் உரையாடும் அளவுக்கு அறிவுத்தகுதியும் வந்துவிட்டதாய் எண்ணவில்லை. வேண்டுமானால் அவர் காலில் விழுந்து வணங்கி, அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான்’ என்பேன்.
எனக்கு இரண்டு ஆசைகள். ஒன்று, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இயங்குவது எப்படி? விஷ்ணுபுரம் இலக்கியக் கூட்டங்கள் எங்கெங்கு நடைபெறுகின்றன என்கிற தகவல்களைப் பெறுவது எப்படி? பெரிதாக பங்காற்ற முடியுமா தெரியவில்லை (ஆனால் நிச்சயம் ஏதோவொரு வகையில் பங்காற்ற முடியும் என நம்புகிறேன்), ஆனால் ஒரு பார்வையாளனாக இருக்க விழைகிறேன். ஏதோவொரு வகையில் அது தமிழுடனும் நவீன இலக்கியத்துடனும் தங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் உணர்வை அளிக்கும் என்றும் நம்புகிறேன். இரண்டாவது ஆசை, தங்களை நேரில் சந்திப்பது. நான் சென்னையில் வசிக்கிறேன். நீங்கள் அனுமதி அளித்தால், விரைவில் நாகர்கோயில் வருகிறேன், தங்களை தரிசிக்க.
என்னைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேனே. கவிஞர் ‘இசை’ எழுதிய அறிமுகப்பதிவில், “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். “அரசு மருத்துவமனையொன்றில் பார்மசிஸ்டாக இருக்கேன்” என்று பதில் சொன்னேன். “கவிஞனா இருக்கேன். பார்மசிஸ்டா வேலை செய்யறேன்னு சொல்லுங்க..” என்று அதிரடியாகச் சொன்னார் ஜெயமோகன்” என்றார். எளிமையாக இருந்தாலும் இப்படிச்சொல்ல எப்பேர்ப்பட்ட மனநிலை வேண்டும்? எழுத்தாளன் எனும் செருக்கு உடையவனால் மட்டுமே எழுத முடியும். அவனால் மட்டுமே இப்படிச் சொல்லவும் முடியும். அன்று முடிவெடுத்தேன், என்னுடைய அறிமுகம் இனி இப்படித்தான் இருக்க வேண்டுமென. என் பெயர் கார்த்திக். (கார்த்திக் ஸ்ரீநிவாஸ் எனும் இரட்டை எழுத்தாளர்கள்) எழுத்தாளனாக இருக்கிறேன், ஐ.டி ஊழியனாக வேலை செய்கிறேன். கார்த்திக் ஸ்ரீநிவாஸில் இருக்கும் ஸ்ரீநிவாஸ் என்னுடைய நண்பன். இருவரும் சேர்ந்தேதான் எழுதுகிறோம், எழுத்தாளர் சுபா போல. ‘கார்த்திக் ஸ்ரீநிவாஸ்’ என்கிற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், மூன்று அபுனைவுகளும் எழுதியிருக்கிறோம். தவிர, சில இணைய இதழ்களில் அவ்வப்போது ஒருசில கதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. மேலே எங்கெல்லாம் ஒருமையில் எழுதியிருக்கிறேனோ, அங்கெல்லாம் நீங்கள் கார்த்திக்-ஸ்ரீநிவாஸ் எனும் இரண்டு நபர்களைப் பொருத்திக்கொள்ளலாம். இருவருமே எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள், நெருங்கிய நண்பர்கள். அதனாலேயே எழுத்திலும் இணைந்து பயணிக்கிறோம். இருவருமே ஜெயமோகனின் அதிதீவிர அபிமானிகள். அபுனைவு எழுதியிருந்தாலும் மனம் புனைவை நோக்கியே நகர்கிறது. ஒரு தரமான இலக்கியப்படைப்பைப் படைக்காத வரை எழுத்தாளன் என சொல்லிக்கொள்வதில் சிறு கூச்சம் கூட இருக்கிறது. புனைவில் சில திட்டங்களும் இருக்கின்றன, செயல் விரைவில்.
விரைவில் தங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம். கடிதத்தை எப்படித் தொடங்குவது எனத்தெரியாமல் தத்தளித்தது போல, எப்படி முடிப்பது என்றும் தெரியவில்லை, முடிக்க மனமில்லாததால் தானோ என்னவோ. கடிதத்தை மீண்டும் படிக்கவில்லை, திருத்தும் பார்க்கவும் இல்லை. மனதிலிருந்து எழும் சொற்களை திருத்தும்போது அதன் உண்மைத்தன்மையை இழந்துவிடும் அபாயம் இருக்கலாம் எனும் அச்சம். தவறிருந்தால் மன்னிக்கம்.
என்றும் அன்புடன்,
கார்த்திக் (எ) கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
***
அன்புள்ள கார்த்திக்,
உங்கள் கடிதம் நிறைவளித்தது. ஆமாம், நாம் வாழ்க்கைக்கு எது வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் அது நாம் என நாம் ஒப்புக்கொள்ளக்கூடாது. நாம் நம்மை வரையறை செய்யவேண்டுமே ஒழிய பிறர் அல்ல.
விஷ்ணுபுரம் அமைப்பு எல்லாருக்கும் திறந்திருப்பது. ஆனால் இது அமைப்பு அல்ல. இது ஒரு நண்பர்கூட்டமைப்பு. இதில் இணைய ஒரே வழி நண்பர் ஆவது. இதிலுள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்வது. பங்களிப்பாற்றுவது. எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வருக. எங்கள் நண்பர்களுன் தொடர்பு கொள்ளுங்கள்.
ஜெ
June 4, 2022
கேரளத்தில்
என் வாழ்க்கையில் எனக்கு என்னைப்பற்றி நிறைவளிக்கும் சில உண்டு, அவற்றில் முக்கியமானது என் இளமைப்பருவம் முதல் அத்தனை நண்பர்களுக்கும் இனியவனாக இருந்திருக்கிறேன் என்பது. ஆரம்பப் பள்ளி முதல் என்னுடன் படித்தவர்கள் இன்றும் நண்பர்கள். அவர்கள் அனைவர் இல்லத்திலும் ஜெய என தொடங்கும் ஒரு குழந்தை உண்டு. என் படம் இருக்கும். நான் பணியாற்றிய அலுவலகங்களின் தோழர்கள் நான் இடமாற்றம் பெற்று முப்பதாண்டுகளுக்குப் பின்னரும் எனக்கு அணுக்கமானவர்கள். அரசுப்பணி ஆற்றியவர்களுக்குத் தெரியும், அது மிகமிக அரிதானது என.ஏனென்றால் மாற்றலாகிச் சென்றுகொண்டே இருப்பார்கள், வந்துகொண்டே இருப்பார்கள். எவரும் எவரையும் ஆறுமாதத்துக்குமேல் நினைவுகூர்வதில்லை.
என் அறுபதாண்டு விழாவை காசர்கோட்டின் என் நண்பர்கள் ஒரு சிறு விழாவாக கொண்டாடுகிறார்கள். எழுத்தாளர் சி.வி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர். கொண்டாடும் கும்பலுக்கும் அறுபது என்பது இன்னொரு சிறப்பு. என் இனிய காசர்கோடு, காஞ்ஞாங்காடு நிலம். ஆனால் கூடவே ஆழ்ந்த துயரம். அப்துல் ரசாக் (ரசாக் குற்றிக்ககம்) இன்றில்லை. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. இது வாழ்க்கை.
வில்லியம் மில்லர் – முதல்பொறி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சி, நவீன இலக்கிய மறுமலர்ச்சி எனும் இரு கோடுகளும் வில்லியம் மில்லர் என்னும் ஆளுமையை நோக்கியே சென்று இணைகின்றன. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியை நிறுவியவர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேகஸீன் என்னும் இதழை நடத்தியவர். இலக்கிய சந்திப்புகள், தத்துவ விவாதங்களை முன்னெடுத்தவர். பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் ஆகியோரின் சிந்தனைகளின் முதல்புள்ளி அவர். பி.ஆர். ராஜம் ஐயர், கா.சி .வேங்கட ரமணி ஆகியோரின் தொடக்கமும் அவரே.
தமிழ் அறிவியக்க வரலாறு முறையாக பதிவுசெய்யப்படும்போது அதில் மில்லர் தவறாமல் இடம்பெறுவார். இது ஒரு தொடக்கமாக அமையட்டும்
வில்லியம் மில்லர்
வில்லியம் மில்லர்
உள்மெய்யின் ஒளியில்
முன்னர் ஒரு உரையாடலில் சமணத்தில் இடம்பெறும் வராகர் படிமை குறித்து பேசப்போக, இந்துத்துவர்கள் கொதித்து எழுந்தனர். வராகர் இந்து மதத்தின், வேதப் பண்பாட்டின் சொத்து. அதை எப்படி சமண மதத்துடன் இணைத்து பேசலாம் என்று கூச்சலும் ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தது.
உண்மையில் உலகில் எங்குமே எந்த பண்டைய மதத்துக்குமே இல்லாத வண்ணம், பாரதத்தில் மட்டும் துவங்கிய காலம் தொட்டு மூவாயிரம் வருடங்களாக இன்றுவரை அறுபடாமல் இந்துப் பண்பாடு தழைத்திருக்க முக்கிய காரணி வேதப்பண்பாடு. பிரம்மம் எனும் கருதுகோள் வேதப்பண்பாடு பாரத நிலத்துக்கும் உலகுக்கும் அளித்த பெரும் கொடை. அதே சமயம் இந்திய மதப்பண்பாட்டுக்கான தெய்வங்கள் தொன்மங்கள் புராணங்கள் உள்ளிட்ட கச்சாவான எல்லா அடிப்படைகளும் வேதப் பண்பாட்டுக்கு மட்டுமே சொந்தம், பௌத்தம் சமணம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மதங்கள் எல்லாம் இதிலிருந்தே பலவற்றையும் எடுத்துக்கொண்டது என்று சொல்வது அறியாமை. (வேதங்கள் சார்ந்த எல்லாமே மிகப் பின்னர் குப்தர் காலத்தில் உருவாகி நிலை பெற்ற ஒன்றுமட்டுமே என்று வாதிடும் வலுவான எதிர்தரப்பும் இங்கே உண்டு)
உதாரணத்துக்கு, 30, 000 வருடங்களுக்கு முன்பு மம்மோத் யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆளரி சிற்பம் ஒன்று ஜெர்மனி குகையில் கண்டுபிடிக்க பட்டது. அது குறித்து அதன் தொடர்ச்சி வழியே பண்பாட்டு ஆய்வாளர்கள் ஏதேனும் அறிய வேண்டும் எனில் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் பாரதம். இந்துப் பண்பாட்டில் நரசிம்ம மூர்த்தத்தில் அதன் தொடர்ச்சியைக் காணலாம்.
12 000 வருடத்துக்கு முன்பு எழுந்த பேராலயம் துருக்கியின் கொபக்லீ டேபே, அதன் 12 ஆவது தூணில் புடைப்பு சிற்பமாக வராகம். அதன் தலை மேலே துல்லிய வட்டக் குழி ( அதை விண் மீன் மண்டல தொகுதியுடன் இணைத்து கருதுகோளை உருவாக்க முயன்று வருகிறார்கள் மேலை சிந்தனையாளர்கள்) அதற்கு மேலே அன்னம் போல அல்லது வினோத மிருகம் போலும் ஐந்து (பஞ்ச பூதம்?). இத்தொன்மத்தின் தொடர்ச்சி தேவை எனில் மிக எளிதாக இங்கே பாரதத்தில் கஜுராஹோ விலும், பூவராஹர் படிமத்திலும் புராணத்திலும் அதை கண்டடையலாம். வேதப்பண்பாட்டின் விளை கனியான படிமைகளை 30 000 வருடம் முன்பு ஜெர்மனியிலும் 12000 வருடம் முன்பு துருக்கியிலும் உள்ள மதத்தினர் எடுத்து செல்லவும் இல்லை. அங்கே திகழ்ந்தவை (பூர்வ) வேதப்பண்பாடும் இல்லை.
உண்மையில் இவை யாவும் ஒற்றை மானுட ஆழுள்ளத்தத்தின் சொத்து.இவை வேதப் பண்பாட்டுக்கு மட்டுமே உரிய சொத்தும் அல்ல, இவை வேதப் பண்பாட்டின் வெளிப்பாடாக மட்டுமே அமைந்த சுயம்பு வும் அல்ல. இந்து மதத்துக்குள் தெய்வங்களும் புராணங்களும் பரஸ்பரம் வெவ்வேறு மார்க்கங்களின் உட்செறிக்கும் நடவடிக்கையின் பொருட்டு இடம் பெயர்வது சகஜமாக இருந்திருக்கிறது. ஜைனம் ராமாயணத்தை உட்செறிக்க முயன்றிருக்கிறது. வைணவம் புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் என்றாக்கி உட்செறிக்க முயன்றிருக்கிறது. இப்படிப் பற்பல உண்டு.
சொந்தப் பற்றுக்களை விடுத்து,அறிவார்த்தமாகஇந்த அடிப்படைப் புரிதலின் பின்புலத்தில் வைத்து அயோத்திதாச பண்டிதரின் பௌத்தம் குறித்த எழுத்துக்களை அணுகினால் ‘இன்றைய காலத்துக்கான’ பண்பாட்டு உரையாடலின் புதிய திசைவழிகளை திறப்பவையாக அவை அமைவதைக் காண முடியும். அயோத்திதாசர் அவர்களைப் பயிலுவதில் உள்ள இடர்களை அயோத்திதாசர் முதற் சிந்தனையாளர் நூலில் விரிவாகவே எழுதி இருக்கிறார் ஜெயமோகன். அத்தகு இடர்களைக் கடந்து அயோத்திதாசர் அவர்களின் சிந்தனை முறைமையைக் கொண்டு அதன் வழியே கிடைக்கும் பண்பாட்டுப் புரிதல்களை அறிவுத் தரப்பின் உரையாடலுக்கு கொண்டு வந்ததில் பேராசிரியர் தர்மராஜன் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. அவரது நீட்சியும் தொடர்ச்சியுமான ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் அயோத்திதாசர் நோக்கிலான பண்பாட்டு விவாத நூலே நீலம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் _ வைத்தியர் அயோத்திதாசர் _ எனும் நூல்.
பொது வாசகர்கள் அயோதிதாசர் சிந்தனைகளை அறிமுகம் கொள்வதற்கு முன்பு அவர்கள் முன் தடை என எழுவது அயோதிதாசரின் பூர்வ பௌத்தம் எனும் கருத்துருவாக்கம் அது வரலாற்றுப் பார்வை யில் முற்றிலும் பிழை என்ற எதிர் தரப்பாரின் வாதம். இந்த வாதத்தைக் கடந்து அயோதிதாசரை அணுக அவரது காலப் பின்புலத்தில் வைத்து இன்றைய எதிர் தரப்பின் வாதங்களை மதிப்பிட வேண்டும்.
அவரது காலத்தில் உலக அளவில் எல்லா நிலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இனி கண்டுபிடிக்க நிலங்கள் இல்லை எனும் நிலையில் திபெத்திய ஷம்பாலா போன்ற ‘மறை நிலங்கள்’ உருவாகத் துவங்கிவிட்ட காலம்.உலக அளவில் பண்பாட்டு மானுடவியல் எனும் துறையே அப்போதுதான் முளை விட்டு தன்னைத் திரட்டிக்கொள்ளத் துவங்கி இருந்த காலம். இந்தியாவில் தொடர் பஞ்சங்களால் அறிவுத்துறைப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்த காலம். ஆல்காட் போன்றவர்களால் பௌத்தம் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலம். 1870 களில் சான்றுகள் கிடைத்தும் தொடர் ஆய்வுகள் வழியாக 1915 இல் ராய்சூர் கல்வெட்டு வழியே அப்படி ஒரு பௌத்த மன்னன் அசோகன் எனும் பெயரில் இங்கே இருந்தான் என்று ஐயம் தீர்ந்து உறுதி பெற்ற காலம். (Hultzsch) ஹெல்ஸ்ச் எனும் வெளிநாட்டவர் (அசோகரை ‘கண்டுபிடித்த’ வரலாற்றில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு) வழியே 1908 இல் பெரிய கோயிலை காட்டியவர் ராஜராஜ சோழன் எனும் மன்னன் என்று முதன் முதலாக தமிழ் நிலம் ‘தெரிந்து’ கொண்ட காலம். இந்தப் பின்புலத்தில்தான் அயோத்திதாசரின் பௌத்தம் சார்ந்த மாற்று புராண மாற்று உரை செயல்பாடுகள் துவங்குகிறது. ஆகவே இந்த இடைவெளி அதற்கான பலவீனம் எல்லாம் அவரிடம் தொழிற்படுவது நியாயமே.
தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய கல் மேல் நடந்த காலம் எனும் நூலில், தஞ்சை பெரிய கோயிலின் பௌத்த சிற்பங்கள் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை உண்டு. மூன்று புடைப்பு சிற்ப வரிசை குறித்த கட்டுரை. முதல் சிற்பத்தில் பௌத்த சைன்யம் முன் புத்தர் நிற்கிறார். இரண்டாம் சிற்பத்தில் புத்தர் வணங்கி வழியனுப்பி வைக்க படுகிறார். மூன்றாம் சிற்பத்தில் புத்தர் போன இடத்தில் வானிலிருந்து தஞ்சை கோயில் விமானம் வந்து இறங்குகிறது. சிற்ப வரிசை சொல்லும் சேதி தெளிவாகவே இருக்கிறது. தமிழ் நூல்கள் எதிலும் இல்லாத இந்த சிற்ப வரிசை மீதான குறிப்பை 1975 இல் சுரேஷ் பிள்ளை என்பவர் எழுதிய நூல் ஒன்றில் கண்டடைந்து, சென்று அந்த சிற்பங்களை பாஸ்கரன் பார்த்ததின் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரை அது. இந்தப் பண்பாட்டு அசைவின் பின்புலம்தான் அயோத்திதாசர் தனது அத்தனை யத்தனங்கள் வழியாகவும் சுட்டிக்காட்டுவது.
மேற்கண்ட சிற்ப வரிசையில், இன்றைய தஞ்சைப் பெரிய கோயில் என்பதை புற மெய் என்று கொண்டால், அதன் பூர்வதில் உள்ள புத்தரை உள் மெய் என கண்டு கொள்ள முடியும். அயோதிதாசரின் இந்த சிந்தனை முறையின்படி சென்று, ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டும் இன்றைய புற மெய்யான தமிழ்ப் பண்பாட்டின் சில உள் மெய் நிலைகள் குறித்த நூலே _ வைத்தியர் அயோத்திதாசர் _ நூல்.
நூல் வழியே ஸ்டாலின் ராஜாங்கம் திறக்கும் உரையாடல் புள்ளிகளில் என்னை மிகவும் ஈர்த்தது அகத்தியர் தொன்மம் குறித்தது. அ.கா.பெருமாள் அவர்களின் _ பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ _ நூலில் உள்ள அகத்தியர் குறித்த கட்டுரை வழியே, அகத்திய முனி எனும் பெயர் முதலில் வருவது மணிமேகலையில், அவர் வாழ்வது பொதிகை மலையில், காவிரி தாமிரபரணி இரண்டு நதிகளையும் தமிழ் நிலத்துக்கு கொண்டு வந்தவர், வைத்தியம் அறிந்தவர், பாண்டிய அரசர்களுடனும், சைவத்துடனும் இணைத்து அறியப்படுபவர், அகத்தியர் எனும் பெயரில் பலர் உண்டு என அகத்தியர் தொன்மத்தை பொதுவாக வரையறை செய்து கொண்டு, ராஜாங்கம் அவர்களின் அகத்தியரை அணுகினால் அவர் சுட்டும் உள் மெய் சுவாரஸ்யம் கூடியது.
சங்க இலக்கிய வரிசையில் எங்குமே இல்லாத அகத்தியர் முதன் முதலில் வருவது மணிமேகலையில். மணிமேகலை ஒரு பௌத்த காப்பியம். வீர சோழியம் நூலில் அகத்தியர் எவர் வசம் தமிழ் பயின்றார் எனும் குறிப்பை கண்டால் அவர் அவலோகிதர். புத்தரின் தோற்றம். பொதிகை மலை மூலிகைகளுடன் தொடர்பு கொண்டது. அகத்தியர் வைத்தியர். மிகப்பின்னர் நிகழ்ந்த சைவ எழுச்சியில் பற்பல கதைகள் வழியே சைவத்துக்குள் உட்செறிக்கப்பட்ட அகத்தியர் பண்டைய தமிழ் நிலத்தின் பௌத்த தொன்மம் ஆக இருக்கவே வாய்ப்புகள் மிகுதி. இன்றும் அகத்தியர் பெயரில் நிலவும் வைத்திய ஜோதிட நிலையங்களைக் காணலாம்.
இங்கே சுவாரஸ்யமான மற்றொரு இடையீடு. சித்த வைத்தியத்தில் பல முறைகளில் ஒன்று நோயாளிகள் ஜாதகத்தைக் கணிப்பது. எந்த நோய் எனினும் அந்த நோய் வினைப்பயனால் வருவது. அந்த வினைப்பயனை மாற்றும் வைத்தியருக்கு அந்த வினைப் பயன் வந்து விடாதிருக்க சில பரிகாரங்களை குறிப்பிட்ட மந்திரம் ஓதி, நோயாளி ஜாதகரோ அவரது ரத்த உறவோ செய்ய வேண்டும் அதன் பிறகே வைத்தியம் துவங்கும். அயோத்திதாசரின் ஆசிரியர் (அவர் பெயரே அயோத்திதாசர் அவரது பெயரையே காத்தவராயன் ஆன தனக்கு சூட்டிக் கொண்டார்) இந்த முறைமை கொண்டவர் என்பதற்கு இந்த நூலில் குறிப்புகள் உள்ளது.
அதே போல தமிழ் என்பதும் இறையனார் முன்நின்ற தமிழ்ச் சங்கம் என்பதில் துவங்கி தமிழ் நிலத்தின் தமிழ் மொழி உருவாக்கத்தில் சமணத்தின் பங்கு முற்றிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு சைவத்தின் மேலாண்மைக்குள் தமிழ் மொழியின் தோற்றுவாய் சென்ற நிலையைப் பேசுகிறது நூல். இங்கே சுவாரஸ்யமான மற்றொரு இடையீடு தென்னாடுடைய ‘தமிழ்’ ச் சைவத்தின் சாத்திரங்கள் எதற்கும் மூல மொழி தமிழ் இல்லை. சமஸ்க்ருதம்.
ராகுல சாங்கிருத்யன் திபெத் உள்ளே நுழையும்போது புத்த பிக்குவான அவரை நோக்கி நோயாளிகள் திரண்டு வந்தது முதல் தமிழ் நிலத்தின் போதி தர்மர் சீனாவுக்கு மருந்து கொண்டு சென்றது வரை அன்று தொட்டு இன்று வரை வைத்தியம் பௌத்தர்கள் வசமிருந்ததை (குறிப்பாக நாவிதர்) அசோகர் நாற்திசையும் வைத்தியம் கிடைக்க செய்த கல்வெட்டு துவங்கி, புத்தரின் வினய பிடகத்தை தொகுத்த நாவிதர் வரை பல்வேறு தரவுகள் வழியே பேசுகிறது நூல். கோயில் பண்பாட்டில் ஸ்ரீ முஷ்ணம், பழனி, இவையெல்லாம் நேரடியாகவே சித்த மருத்துவதுடன் தொடர்பு கொண்டவை. வைத்தீஸ்வரன் கோயில் முன்னர் வள்ளுவ பிரிவின் மேலாண்மை கொண்டிருந்தது என்கிறார் நூலாசிரியர். இங்கேயும் ஜோதிடம் முக்கிய கூறு.அதிலும் ஜோதிடத்தில் ஒளஷத காண்டம் மட்டும் பார்க்க வருவோர் இன்றும் உண்டு. அந்த காண்டம் ஜாதகர் கொண்ட நோய்க்கான சித்த வைத்திய மருந்துகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டது.
தரும சேனரின் (சமணத்தால் முடியாத) சூலை நோயை இந்த தலத்தின் ‘சக்தி’ வாய்ந்த சிவனே தீர்த்தார். மாணிக்கவாசகரை தேடி ஒரு அரசன் சில பௌத்த பிக்குகளுடனும் தனது ஊமை மகளுடனும் வருகிறார். மாணிக்கவாசகர் ஊமையைப் பேச வைக்கிறார். தமிழ்ச் சமண பௌத்த வைத்தியத் திறன் இன்மை சிவனின் சக்தியால் மீறப்பட்டு, சைவத்தின் மேலாதிக்கம் எழுவதன் சித்திரத்தை இக்கதைகளின் வழியே சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
இந்த நூலை நோய்முடக்க சூழலில் எழுதியிருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். எத்தனையோ அலோபதி வாய்ப்புகள் இருக்க மக்கள் தன்னியல்பாக (அரசே அங்கீகரித்து விட்டது) கபசுர குடிநீர் போன்ற சித்த வைத்திய முறையை நோக்கி நகர அடியோட்டமாக இருப்பது எது எனும் வினா வழியே மீண்டும் ‘வைத்தியர்’ அயோதிதாசரை வந்தடைகிறார் ராஜாங்கம். நேரடியான பதில் இன்றைய மருத்துவ நிலை முற்றிலும் கைவிட்டு விட்ட நோயாளியின்பாலான அறம் மற்றும் கருணை என்பதே.
அயோத்திதாசர் இந்த இரண்டையும் சித்த வைத்தியத்தின் பின்புலத்தில் அதன் அடித்தளமான பௌத்தத்தின் பின்புலத்தில் இருந்து அறிந்தவர் கற்றவர். (அயோத்திதாசர் அவர் காலத்தில் முதல்தரமான வெற்றிகரமான வைத்தியர்) சித்த வைத்திய நூலைப் பயிலுவது ஒரு முறைமை. தவறான ஆட்கள் கையில் சேர்ந்துவிடாதிருக்க அவை பேசும் புற மெய் வேறு அந்த புற மெய்யின் இலக்கணத்துக்கு கீழே உள்ள உள் மெய் வேறு.அது வைத்திய மாணவருக்கு பிற வைத்தியர் மூலம் கையளிக்கப் படுவது. அப்படி வைத்தியம் கற்க, கொண்டு கூட்டியும் பிரித்தும் பொருள்கொள்ள அயோத்திதாசர் பயின்ற முறைமை கொண்டே திருக்குறள் போன்ற பலவற்றுக்கு அவர் உரை விளக்கம் செய்திருக்கிறார் என்கிறார் ராஜாங்கம். வைத்திய ஞானம் வழியாகவே நோயுற்ற உடல் முதல் நோயுற்ற சமூகம் வரை அனைத்தையும் (ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாக) புரிந்து கொண்டு நோய் தணிக்கும் செயல் நோக்கி வைத்தியராகவே சிந்தித்தவர் அயோத்திதாசர் என்கிறார் ராஜாங்கம்.
நூலின் பிற்சேர்க்கைகளில் இரண்டு பகுதிகள் மிக முக்கியமானவை. ஒன்று அயோத்திதாசர் அவர் காலத்தில் தமிழ் நிலம் முழுவதையும் சூறையாடிய காலரா அம்மை பிளேக் போன்ற நோய்களுக்கு அவர் என்னென்ன செய்தார் என்பது குறித்து தமிழன் பத்திரிக்கையில் இருந்து எடுத்து இணைக்கப்பட்டிருக்கும் பகுதிகள். இரண்டு ஆதி நாதர் எனும் சமண தொன்மத்துக்கும் தென்னாடுடைய சிவன் எனும் தொன்மத்துக்கும் அதன் கதைகளுக்கு இடையே உள்ள 18 ஒற்றுமைகள் குறித்த அட்டவணை.
தமிழ்ப்பண்பாட்டின் சுழிப்புகள் குறித்து காய்தல் உவத்தல் இன்றி அறிய விரும்பும் எவருக்குமான உரையாடல் புள்ளிகளை திறக்கும் மிகுந்த சுவாரஸ்யம் கூடிய நூல் இந்த _ வைத்தியர் அயோத்திதாசர் _ நூல்.
கடலூர் சீனு
மு.வ- ஒரு கடிதம்
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
என் பெயர் துரைசாமி. எனக்கு வயது எழுபத்தி நான்கு. பொறியியல் கல்வி கற்று சுயதொழில்கள் செய்தவன். இன்று நான் தொழில் முனைவர் அல்ல. ஓய்வில் உள்ளேன்.
தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை இரண்டாயிரத்தி நான்கு காலகட்டத்தில் வாசித்ததில் இருந்து தங்களை நான் அறிவேன்.
பின்னர் தங்களது எழுத்துக்களை நான் அண்மைக் காலம் வரையில் வாசிக்கவில்லை. காணொளிகள் சாதாரண மனிதர்கள் வாழ்வில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது என்பதால் சிறுவயதிலிருந்து தமிழ் நாவல்கள் காண்டேகர் நாவல்கள் சரத் சந்திரர் நாவல்கள் தாகூர் நாவல்கள் இன்னும் பல புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற நாவல்கள் சோவியத்தை நாவல்கள் என தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்த என் வாழ்விலும் ரவி காரணமாகவும் தொழில் நெருக்கடிகள் காரணமாகவும் படிப்புக்கான இடைவெளி இருந்தது.
ஆனால் முகநூலில் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் செயல்பட்டதில் தங்கள் பேரில் பலருக்கும் இருந்த வெறுப்பை கண்டு ஆச்சரியப்பட்டேன். அதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது இந்துத்துவ வெறி பிடித்தவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு சங்கி, தற்பெருமை பேசுபவர், பிற எழுத்தாளர்களின் எழுத்துக்களை மட்டும் தட்டுபவர் என்பவைதான்.
அப்படி தங்களுடைய எந்த எழுத்துக்களை வைத்துக்கொண்டு இவ்வளவு வெறுப்பு கொண்டுள்ளார்கள் என்பதற்காக தங்களுடைய இணையப் பக்கத்தில் உள்ள கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். நான் காந்தி மீது மிகப் பெருமளவில் பற்று வைத்துள்ளவன் என்றாலும் தாங்களே ஏற்றுக் கொள்ளாத வகையில் உள்ள அவருடைய கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டவன் என இல்லை.
தாங்கள் காந்தி பற்றிய விருப்பு வெறுப்பற்ற அறிவுபூர்வமான வகையில் எழுதிய பல கட்டுரைகளையும் அறவழி சார்ந்து தாங்கள் எழுதியவற்றையும் அதிகமாகப் படிக்க படிக்க தங்கள் நிலை மீது நியாயபூர்வமான பார்வை கொண்டுள்ளேன்.
இந்துமத தத்துவங்கள் மீது பிடிப்பு உள்ளவராக தங்களை காணும் அதேவேளையில் இந்துத்துவ வெறியராகவோ, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு நிலை கொண்டவராகவோ நான் எண்ணவில்லை. அறம்சார்ந்த மனிதராகவே நான் தங்களை மதிக்கிறேன்.
ஹிஜாப் பற்றிய தங்கள் கட்டுரை போன்றவை அந்த மதிப்பீட்டை உறுதி செய்கின்றன.
தங்கள் குறைகளை தாங்களே பட்டியலிட்டபடியும் அதற்கு மேலும் தற்பெருமை கொண்டவராகவும் அடுத்தவர் எழுத்துக்களை, தங்கள் பார்வையை சரி என கொண்டு, விமர்சனம் என்ற பெயரில் மட்டம் தட்டுபவராகவும் உள்ளவர் என்ற எண்ணம் நீடிக்கிறது என்பதை சற்று வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
நிற்க. முதன்முதலாக தங்களை தொடர்பு கொள்ள தூண்டியது மு.வ பற்றிய, அதிலும் முக்கியமாக அவரது நாவல்கள் இலக்கியத்தரம் கொண்டவை அல்ல என்ற விமர்சனம் பற்றிய கட்டுரைதான்.
இலக்கியம் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாசிப்பு மகிழ் அனுபவம், சூழல் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய நுணுக்கமான விவரணைகள் போன்றவைதான் இலக்கியத்தரத்துக்கு முக்கியம் என்பது போன்ற பலரது வரையறைகள் என் வரையில் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. தாங்கள் அதற்கும் மேலும் சென்று உள்ளீர்கள். அவை பரிசீலிக்க வேண்டியவையாக கூட இருக்கலாம், ஆனாலும் வரையறைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
படிக்கும் மக்களுள் எவ்வளவு தாக்கத்தை மட்டுமல்ல எந்த விதமான தாக்கத்தை அந்த நூல்கள் ஏற்படுத்துகின்றன என்பதுதான் மிக முக்கியம் என நான் எண்ணுகிறேன்.
லட்சியவாத ஒழுக்கவாத நூல்களாகத் தங்களைப் போன்றோர் மு.வ நாவல்களை வகைப்படுத்தலாம், அவை உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் அவரது நாவல்கள் படிப்பவரின் மனதில் எந்த விதமான எண்ணங்களை விதைத்து அவரை அந்த அறநெறிகள் பால் சார்ந்து வாழ வேண்டும் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அளித்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் அறியாதவர் என நான் நினைக்கவில்லை.
இந்த 74 வயதில் நான் ஓரளவாவது அறநெறி சார்ந்து இயங்குபவன் என சிலராவது கொள்வார்கள் என்றால் அதற்குப் பெரும் காரணமாக இருப்பது காந்தியடிகளின் சொல் மற்றும் செயற்பாடுகள், மு.வ, காண்டேகர், சரத் சந்திரர் மற்றும் எண்ணற்ற இலக்கியவாதிகளின் எழுத்துக்கள், ஹிந்து பத்திரிக்கை போன்றவை தான் காரணம் என தயக்கமின்றி கூறுவேன்.
இறுதியில் நான் கூற வருவது, தாங்கள் போன்றோர் இலக்கியத்தரம் என்பது இவைதான் என்ற வரையறையை தயவு செய்து வகுக்காதீர்கள், அந்தத்தர மதிப்பீடுகளை ஒரு நல்ல வாசகன் வாசிப்பின் மூலம் சென்றடையட்டும் என்பதுதான்.
என்ன காரணத்தினாலோ தங்களுடைய கட்டுரைகளை படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ள எனக்கு தங்களுடைய புனைவுகளை படிக்க ஆர்வம் ஏற்படவில்லை. தங்களுடையதை மட்டுமல்ல மற்றவர்கள் புனைவு எழுத்துக்களையும் சில காலமாகவே படிக்க மிகவும் தயங்குகிறேன்.
அண்மையில் நான் தங்களுடைய ‘தாயார் பாதம்’ என்ற நீண்ட சிறுகதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதாபாத்திரங்கள் வடிவமைத்தல் சூழல் நுண் விளக்கங்கள் போன்றவற்றாலும் கதையின் மையக் கருத்தாகும் பெரிதும் கவரப்பட்டேன்.
தமிழ் விக்கி முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
தங்களுக்கு என் நன்றி.
தங்களது ஓய்வறியா உழைப்புக்கு இடையில் என்னை தொடர்பு கொள்ள முடிந்தால் மகிழ்வேன்.
ப. துரைசாமி.
***
அன்புள்ள ப. துரைசாமி
நான் நவீன இலக்கியத்தின் இயக்கமுறை என கருதுவது வாசகனை குலைத்து அதன் பின் அவனே தன்னை அடுக்கிக்கொள்ள வைத்து அவனுக்குரிய தெளிவுகளை அவனே கண்டடையச் செய்தல். மு.வ பாணி எழுத்துக்கள் வாசகனுக்கு அறிவுரை சொல்லி, அவனிடம் விவாதித்து அவனை நிலைகொள்ளச் செய்பவை. அவற்றின் அமைப்பு செயல்முறையில் அழகியல் சார்ந்த விமர்சனம் எனக்கு உண்டு. ஆனால் அவற்றின் முக்கியத்துவம் பற்றியோ, அவற்றின் பங்களிப்பு பற்றியோ ஐயம் இல்லை. மு.வ என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர்
ஜெ
இரண்டின்மை, கடிதம்
அன்புள்ள ஜெ
மனிதர்கள் தேடுவது மகிழ்ச்சியை அல்ல, ஆணவ நிறைவை.
-ஜெ
நாம் இங்கிருந்து பெற்று கொள்வது ஏதுமில்லை. அளிப்பதற்காக செயலாற்றுகிறோம். அதனூடாக நிறைவடைகிறோம்.
-ஜெ
எத்தனை அகங்காரமான சொற்கள் இவை! பார்த்தீர்களா!
இரண்டு மேற்கோள்களும் உங்களிடமிருந்து பெற்றவையே. என்ன அதே சொற்களில் இல்லை. முன்பின் கொஞ்சம் நானாக போட்டுவிட்டேன். கொஞ்சம் நினைவு பிரச்சினை. மேலே உள்ள இரண்டையும் படிக்கையில் உங்களில் ஒரு புன்னகையை அதற்கடுத்த என் பின்னூட்டத்தை படிக்கையில் சின்னஞ்சிறு சீற்றம் ஒன்றையும் அடைந்திருப்பீர்கள் என்றால் அது என் வெற்றியாகும். வேறென்ன தந்தையரை ஆசிரியர்களை சீண்ட முயற்சி செய்யாத நல்ல மாணவர்கள் இந்த உலகில் உண்டா என்ன :)
பெரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு குணம் உண்டு. ஒரு சிந்தனையில் இருந்து அடுத்த சிந்தனைக்கு மலைகளுக்கிடையில் தாவி செல்வதை போன்று செல்வது. நடுப்பட்ட பள்ளத்தாக்குகளை மாணவர்கள் இட்டு நிரப்பி கொள்ள வேண்டும். தன் மாணவன் மேலான தன்னம்பிக்கையில் இருந்து எழுவது. அல்லது அப்படிப்பட்டவன் மட்டுமே தனக்கு மாணவனாக இருக்க முடியும் என்ற தன்னுணர்விலிருந்து எழுவது. இந்த அம்சத்திற்கு நீங்களும் விலக்கானவர் அல்ல.
இன்று காலையிலிருந்து சில சிந்தனைகள் மண்டையை நிரப்பி உள்ளன. அவற்றை உங்களுக்கு எழுதி வரையறுத்தும் முன்னோக்கி செல்லவுமே எழுதுகிறேன். இரண்டாவது மேற்கோளை எடுத்து கொள்ளலாம். இதை சமீபமாக தமிழ் விக்கி பணிகள் குறித்து பேசுகையில் அதிகமாக பயன்படுத்தியுள்ளீர்கள். ஒவ்வொரு முறையும் வாசிக்கையில் பெரும் மன எழுச்சியை தரக்கூடிய சொற்கள். அதிகம் தமிழ் விக்கிக்கு பங்களிப்பாற்றாத எனக்கும் அப்படி ஊக்கம் தருவது எதனால் என்று பார்த்தால் வேறொன்றும் அல்ல, ஆணவம் தான். ஒவ்வொருவனும் இந்த உலகில் தன்னை அளித்து செல்லும் உத்தமனாக கற்பனை செய்து கொள்வது இயல்பானதே. பொது திரளுக்கு இப்படி பிய்த்தெடுக்கப்பட்ட உங்கள் மேற்கோளுடன் சென்றால் அமோக வரவேற்பை பெறும்.
ஆனால் இது முழுமை கொள்வது நீங்கள் உருவாக்கும் ஒட்டுமொத்த சொற்களனுக்குள் நின்று பார்க்கையில் மட்டுமே. எப்போதும் இந்த இரண்டாவது மேற்கோள் வரிகளை சொல்லுவதற்கு முன்னர், செயலாற்றுவது நம்மை வெளிப்படுத்தி கொள்வதற்காக. எந்த செயலில் முழுமையாக வெளிப்படுகிறீர்களோ அதுவே உங்களுக்கானது, அதை ஆற்றுக. அதுவே மனிதனுக்கு கிடைக்கும் இன்பம். செயலாற்றுவதன் ஊடாக தன்னிலை கரைந்து தூய உணர்வாக எஞ்சும் நிலை. இந்த பொருளை குறிப்புணர்த்திய பிறகே ஒவ்வொருமுறையும் அந்த அளிப்பது குறித்த வரிகள் வரும்.
இரண்டிற்கும் நடுவில் உள்ள பள்ளத்தாக்கு வெளி ஒரு முரணாக முதல் பார்வைக்கு தோன்றுகிறது. ஆனால் அது அப்படியல்ல என்ற தெளிவை சென்றடைந்த விதத்தை கூறவே எழுதுவது. ஒவ்வொரு செயலிலும் தன்னை நிறுவி கொள்ளும் அகங்காரம் கலந்தே உள்ளது. அது ஓர் அடிப்படையான உயிர் இச்சை. அகங்காரம் புற உலகத்தை நோக்கி பாய்ந்து பெருகுவதை உலகியல் என்கிறோம். அங்கே ஒருவன் செய்வன எல்லாம் பிறிதை நோக்கி உன்னை காட்டிலும் மேன்மையானவன், உனக்கு சளைத்தவனல்ல என்று சொல்வது. அது வெற்றிகரமாக நிகழ்ந்தேறுவதை மகிழ்வு என்கிறான். உண்மையில் மகிழ்ச்சிக்கு அத்தனை சிரமப்பட வேண்டும் என்று தோன்றவில்லை. ஒரு பூ மலர்வதை கண்டும் நாளை நிறைவு கொள்ள வைக்க முடியும் என்பதே அனுபவமாக உள்ளது.
மறுபக்கம் கலைகளில் ஈடுபவர்களுக்கு அகங்காரமே இல்லையா என்றால், நுட்பமாக உள்ளது. எல்லா கலைகளும் பூரணமடைவது நுட்பங்களாய் நுண்மையாய் விரிந்து முழுமையை எட்டுவதிலேயே. எனவே கலைக்குள் வரும் அகம் நோக்கி குவியும் அகங்காரமும் நுட்பமானதாய் உருமாற்றமடைகிறது. அது ரகசியமாக கிசுகிசுத்து கொள்கிறது, பார்த்தீர்களா, உலகப் பதர்களே, நான் அடையும் இந்த நுண்ணிய இன்பத்தை அறிவிர்களா? கைக்கெட்டும் தூரத்தில் தேனை வைத்து கொண்டு அலையும் மூடர்களே என்று. உலகியலில் வெற்றிக்கு பின்னான வெறுமை குழியில் விழ எத்தனை வாய்ப்புள்ளதோ அதே அளவுக்கு மறைக்கப்பட்ட அந்தகாரத்திற்குள் விழ கலையிலும் வழி உள்ளது. உங்களுடைய இரண்டாவது மேற்கோள் வரிகளை மட்டும் எடுத்து கொள்பவன் இப்படியாவது உறுதி.
அப்படியெனில் கவனிக்கப்பட வேண்டியது அந்த வரிகளுக்கு முன்னர் சொல்லப்படும் செயல் குறித்தவையே. என்னளவில் ஆற்றி உணர்ந்த சிறு விஷயம், எதில் முழுமையாக வெளிப்படுகிறோமோ அச்செயலை ஆற்றும் ஒரு கணத்தில் நானும் செயலும் என்ற இருமை மறைந்து செயல் மட்டுமே எஞ்சும் நிலை நடக்கிறது. மிகச்சில வினாடிகள் எனினும் அதுவே பூரணம். அந்த பூரணத்தை மகிழ்வை நோக்கி செல்லுங்கள் என்பதே உங்கள் சொற்கள். அதை நான் கலை வழி அடைந்தேன், இங்கு முன்வைக்கிறேன் என்று சொல்கிறீர்கள்.
அதே சமயம் இந்த இரண்டாவது மேற்கோள் வரிகளை எதன் பொருட்டு சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட செயல்களை ஆற்றுகையில் நம்மை தடைப்படுத்தும் புற காரணிகளில் இருந்து தற்காத்து கொள்வதற்காக. ஏனெனில் நாம் அடையும் அந்த அரிதான கணங்கள் எப்போதும் நீடிப்பவை அல்ல. மேலும் அகங்காரத்தை தகுந்த முறையில் கருவியாக்கியே அதை சென்றடைகிறோம். அதே போல் அகங்காரத்தை கருவியாக்கி கொள்கையில் அதை போல பாதுகாப்பு தரக்கூடியது எதுவுமல்ல. ஓர் ஆழ்ந்த அர்த்தத்தில் அகங்காரம் என்பது இங்கு அனைத்தையும் ஆற்றும் இச்சையின் வடிவே. அதாவது தேவைப்படும் நேரங்களில் கவசமாக உலக தடைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள பயன்படுத்தி கொள்ளுங்கள். செயலாற்றுகையில் கவசத்தை கழற்றி வீசிவிட்டு தீவிரமாக ஈடுப்பட்டு இரண்டின்மையை அடைய முயலுங்கள் என்பதே உங்கள் செய்தி. அதாவது அத்வைதத்தை நவீன வாழ்க்கையில் செயல்படுத்தியும் சொல்லியும் வருகிறீர்கள். இதற்கு பின் நிகழ வேண்டிய செயலின்மை குறித்து எதையும் சொல்ல தகுதியில்லாதவன் நான். என் அனுபவத்தில் இல்லாமலாகும் சில கணங்களை செயலில் கண்டவன். செயலின்மை என்பதை உணர இன்னும் பயணம் உள்ளது. இப்போதைக்கு அது செயலாற்றி முடித்த பின் வரும் ஒரு அமைதி என்பதற்கப்பால் எதுவும் தெரியவில்லை.
அன்புடன்
சக்திவேல்
June 3, 2022
டைலர் ரிச்சர்ட் – ஓர் இனிய சந்திப்பு
இந்த அமெரிக்கப் பயணம் எல்லா வகையிலும் ஒரு வெற்றி என்றே சொல்லவேண்டும். திட்டமிட்டபடி தமிழ் விக்கி வெளியீட்டு விழா காழ்ப்பு கொண்ட சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தடைகளைக் கடந்து நினைத்ததை விடச் சிறப்பாக நடைபெற்றது.பெருமதிப்புக்குரிய நான்கு அறிஞர்கள் கலந்துகொண்டார்கள். தமிழ் விக்கி-விழா
அதன்பின் பூன் முகாம். ஐம்பது பங்கேற்பாளர்கள் அமெரிக்கா முழுதிலும் இருந்து வந்து கலந்துகொண்டு இரண்டுநாட்கள் இலக்கியம் பற்றி தீவிரமாக உரையாடி, நட்புகொண்டாடி பிரிந்தோம். அமெரிக்காவில் இது ஒரு புதிய தொடக்கம். பூன் சந்திப்பு
தொடர்ந்து அமெரிக்காவில் டாலஸ், ஃபால்ஸம், இர்வைன், வால்னட் கிரீக் ஆகிய இடங்களில் வாசகர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. ஏற்கனவே அமெரிக்க விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் அமைப்புடன் தொடர்புள்ள நண்பர்களை கொண்டு இச்சந்திப்புகளை நடத்த எண்ணியிருந்தோம். (விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அமெரிக்கா- தான் பதிவு செய்யப்பட்ட சட்டபூர்வ அமைப்பு)
ஆனால் அனைத்திலும் உச்சம் என நான் எண்ணுவது அமெரிக்காவிலிருந்து நான் கிளம்பும்போது, மே 31 அன்று நடந்த ஒரு சந்திப்பு. வாஷிங்டனில் தமிழ் விக்கி வெளியீட்டு விழாவுக்கு வருவதாக இருந்த நான்கு விருந்தினர்கள் ஒரேயடியாக வரமுடியாது என அறிவித்தனர். அது எங்கள் திட்டங்களை ஒரு நான்கு மணிநேரம் சற்று குழம்பச் செய்தது. முன்னிலும் சிறப்பாக விழாவை முடித்தோம்.
அவர்களில் இருவர் மதிப்பு மிக்க தமிழாய்வாளர்கள்.ஜோனதன் ரிப்ளி, டைலர் ரிச்சர்ட் ஆகியோர் அவ்வண்ணம் வரமறுத்தது உண்மையில் என்னை வருந்தச் செய்தது. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.இரு அமெரிக்கக் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்
அதில் நான் சுட்டிக்காட்டியிருந்தது முதன்மையாக ஒன்றுதான்.அமெரிக்கக் கல்விப்புலம் சார்ந்த ஓர் ஆய்வாளருக்கு ஒரு பண்பாட்டில் படைப்பிலக்கியவாதியின் இடம் என்ன என்று தெரிந்திருக்கும். அந்தப் புரிதல் பொதுவாக தமிழக் கல்விச்சூழலில் எதிர்பார்க்கக்கூடியது அல்ல. அக்காரணத்தால்தான் இங்கே தமிழ் விக்கி போன்ற முயற்சிகள் தேவையாகின்றன. அமெரிக்கக் கல்வியாளர்கள் என்னைப் பற்றி தெரிந்துகொண்டு அந்த முடிவை எடுத்திருக்கவேண்டும் என எழுதினேன்.
டைலர் ரிச்சர்ட் அக்கடிதம் கண்டதும் தொடர்பு கொண்டார். சில பிழையான புரிதல்களின் அடிப்படையில் வரமறுத்ததாக தெரிவித்தார். தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தைப் பார்த்ததாகவும், மிகமிகச் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் கூறினார். (ஏற்கனவே மார்த்தா செல்பி தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொல்லியிருந்தார்.) என்னை சந்திக்க விரும்பினார். அவரை நியூ ஜெர்ஸியில் பழனி ஜோதியின் இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தேன்.
டைலர் ரிச்சர்ட் ஹார்வார்டுக்கு அவருடைய பட்டமளிப்பு நிகழ்வுக்காகச் சென்றிருந்தார். நான் முந்தையநாள் சாயங்காலம்தான் சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் இருந்து வந்து இறங்கியிருந்தேன். நாங்கள் நியூஜெர்ஸியில் தங்கும் கடைசி நாள் அது என்பதனால் டைலர் ரிச்சர்ட் ஹார்வார்டில் இருந்து நேரடியாகவே விமானத்தில் வந்திறங்கினார். பழனி ஜோதி சென்று அவரை கூட்டிவந்தார்.
டைலர் ரிச்சர்ட் நான் எண்ணியதை விட இளமையான தோற்றத்துடன் இருந்தார். டாலஸ் பகுதியில் இளமையைக் கழித்தவர். ஹார்வார்டில் பட்டமேற்படிப்பு முடித்து கொலம்பியா பல்கலையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஹார்வார்டில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை சமர்ப்பித்திருக்கிறார். ( பாணபட்டர் எழுதிய காவியமான காதம்பரி பற்றி).
அவருடன் தமிழிலக்கியம், சம்ஸ்கிருத இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். டைலர் ரிச்சர்ட் கவிதைகள் எழுதுபவர். சம்ஸ்கிருதத்தின் புஷ்கல காலகட்டம் எனப்படும் காதம்பரியின் காலம் அணிகளால் ஆனது. இலைதெரியாமல் மலர்பூத்த செடிகளாக காவியங்கள் மாறிய காலம் அது. அங்கிருந்து நவீனக் கவிதைக்கு வருவதன் சிக்கல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து சங்க இலக்கியம், நவீன இலக்கியம் என நான்கு மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
டைலர் ரிச்சர்ட் என்னுடைய கதைகளை வாசித்திருந்தார். படுகை, பெரியம்மாவின் சொற்கள் கதைகளைப்பற்றிச் சொன்னார். அவற்றின் வழியாக என்னை அணுகியறிந்திருந்தார்.தமிழகத்தில் மிகமிகக்குறைவானவர்களே என் கதைகளை படிக்கிறார்கள், அதிகம்போனால் ஐம்பதாயிரம்பேர் கொண்ட ஒரு வட்டத்திற்குள்தான் நவீன இலக்கியம் எழுதி வாசிக்கப்படுகிறது என்று அவருக்கு விளக்கினேன். அதற்குவெளியே இருப்பவர்கள் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள் என்றேன்.
(உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியை பல்வேறு சூழ்ச்சிகள் வழியாக சிதைக்க முயன்றவர்கள், சிதைத்துவிட்டதாக இணையத்தில் கொண்டாடியவர்கள் எவர் மேலும் எந்த வருத்தமும் இல்லை. இன்று தமிழ்ச் சூழலில் இருக்கும் ஒரு நிலை இது. அவர்களுக்கு இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாதி என்றால் யார், அவன் பங்களிப்பு என்ன என்பது முற்றிலும் தெரியாது. எந்த நூல்களையும் வாசிப்பவர்களும் அல்ல. எந்த நூலைப்பற்றியும் எதையும் எழுதியவர்களோ பேசியவர்களோ அல்ல. அரசியல் சார்ந்த எளிய காழ்ப்புகளை கொண்டு இலக்கியவாதியை அணுகுகிறார்கள்.ஒரு முறை ஓர் இலக்கிய அனுபவத்தை அடைந்தாலே அகன்றுவிடும் ஒருவகை கண்மூடித்தனம்தான் அது. அவ்வண்ணம் மாறிவந்த பலர் இன்று என் வாசகர்கள்)
இச்சந்திப்பு எனக்கு உண்மையில் மிக ஆச்சரியமானது. முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்யும் ஒருவர் எத்தனை விரிவாக சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரு மொழிகளை ஆராய்ந்திருக்கிறார். இரண்டுமே அவருக்கு முற்றிலும் அன்னிய மொழிகள். சென்ற தலைமுறை அறிஞர்களுக்குப்பின் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய தொல்மொழிகளில் ஒன்றை கூடுதலாக அறிந்த தமிழகத்துத் தமிழறிஞர்கள் நானறிய எவருமே இல்லை.
இந்தியாவின் எந்தப் பகுதியைப் பற்றியும் முழுமையான பார்வையை அடைய பன்மொழி அறிவு மிகமிக இன்றியமையாதது. வட இந்தியாவின் அறிஞர்கள் தமிழ் உட்பட தென்னக மொழிகளைப் பற்றி எந்த அறிதலும் இல்லாமல், தென்னகமொழிகள் எல்லாமே சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என்றெல்லாம் கற்பனையில் வாழ்வதை கண்டிருக்கிறேன். ஒரு டெல்லி பேராசிரியர் மலையாளம் சம்ஸ்கிருதத்தின் அபப்பிரம்ஸம் என என்னிடம் வாதிட்டார், அவருக்கு மலையாளத்தில் பத்து வார்த்தைகூட தெரியாது.
பழனி ஜோதியின் மனைவி மகேஸ்வரி அற்புதமான தமிழுணவு சமைத்திருந்தார். டைலர் ரிச்சர்ட் தென்னிந்திய உணவின் ரசிகர். தென்னிந்திய உணவுக்காகவே இந்தியவியல் மேல் ஆர்வம் கொண்டதாகச் சொன்னார்.
நாங்கள் கிளம்பவேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அறம் தொகுதியை அவருக்குப் பரிசாக அளித்தேன். டைலர் ரிச்சர்டின் எதிர்கால ஆய்வுகளிலும் என் எதிர்கால பணிகளிலும் இணைந்துகொள்வோம் என்னும் உறுதியுடன் பிரிந்தோம்.
நாஞ்சில் பி.டி.சாமி
அந்தக்காலத்தில் நாங்கள் அவரை பிடிசாமி என்று சொல்வோம். ஏதோ ஐயப்பசாமியின் நாமங்களில் ஒன்று போல. முப்பது பைசாவுக்கு ஒரு நாவல் கிடைக்கும். அட்டை ‘டெர்ரர்’ ஆக இருக்கும். உள்ளே என்ன இருக்குமென்பது முன்னரே எங்களுக்குத் தெரியும்- கண்டிப்பாகச் சூனியக்கார கிழவியும் நடமாடும் எலும்புக்கூடும் உண்டு. ஆனால் பி.டி.சாமி புனித அந்தோனியார் என்னும் சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கிறார் என்னும் செய்தி புதியதுதான்
நாஞ்சில் பி.டி.சாமிJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

