என் வாழ்க்கையில் எனக்கு என்னைப்பற்றி நிறைவளிக்கும் சில உண்டு, அவற்றில் முக்கியமானது என் இளமைப்பருவம் முதல் அத்தனை நண்பர்களுக்கும் இனியவனாக இருந்திருக்கிறேன் என்பது. ஆரம்பப் பள்ளி முதல் என்னுடன் படித்தவர்கள் இன்றும் நண்பர்கள். அவர்கள் அனைவர் இல்லத்திலும் ஜெய என தொடங்கும் ஒரு குழந்தை உண்டு. என் படம் இருக்கும். நான் பணியாற்றிய அலுவலகங்களின் தோழர்கள் நான் இடமாற்றம் பெற்று முப்பதாண்டுகளுக்குப் பின்னரும் எனக்கு அணுக்கமானவர்கள். அரசுப்பணி ஆற்றியவர்களுக்குத் தெரியும், அது மிகமிக அரிதானது என.ஏனென்றால் மாற்றலாகிச் சென்றுகொண்டே இருப்பார்கள், வந்துகொண்டே இருப்பார்கள். எவரும் எவரையும் ஆறுமாதத்துக்குமேல் நினைவுகூர்வதில்லை.
என் அறுபதாண்டு விழாவை காசர்கோட்டின் என் நண்பர்கள் ஒரு சிறு விழாவாக கொண்டாடுகிறார்கள். எழுத்தாளர் சி.வி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர். கொண்டாடும் கும்பலுக்கும் அறுபது என்பது இன்னொரு சிறப்பு. என் இனிய காசர்கோடு, காஞ்ஞாங்காடு நிலம். ஆனால் கூடவே ஆழ்ந்த துயரம். அப்துல் ரசாக் (ரசாக் குற்றிக்ககம்) இன்றில்லை. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. இது வாழ்க்கை.
Published on June 04, 2022 11:35