Jeyamohan's Blog, page 767
June 7, 2022
வெள்ளையானையும் ஒடுக்குமுறையும்
அன்புள்ள ஜெ,
தங்களின் “வெள்ளை யானை” நாவலை வாசித்தேன்.
நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் மக்களின் முதல் உரிமை போராட்டமும், இந்தியாவில் நடந்த முதல் தொழில் வேலை நிறுத்தமும் சொல்லும் நாவல். 1870-களில் நடக்கும் சம்பவங்களாக நாவல் செல்கிறது. அப்பொழுது ஆங்கிலேயர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்துள்ளனர். அதன் பின்னணியில், இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களாக ஆயிரம் ஆண்டுகளாக இருந்தவர்களின் ஒரு உரிமைப்போராட்டத்தையும், ஏய்டன் என்னும் ஒரு ஐரிஷ் கேப்டனின் (சென்னை மாகாணத்தில் கடற்கரை பகுதிக்கு கேப்டன்) உளப் போராட்டத்தின் வழியாக ஆங்கிலேயர்களின் அறமீறல்களையும், இங்கு இருந்த மேல்சாதி மக்களின் கொடுமைகளையும் சொல்லும் நாவல்.
உலகத்தின் ஆண்டைக்கும், உள்ளூர் ஆண்டைக்கும் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதில் யார் மேலானவர்கள் என்னும் போட்டியே இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த சமூக மக்கள். இவற்றுக்கு எந்த ஒரு பொறுப்பும் ஏற்காமல் மாறாக இவர்களையே பயன்படுத்திக் கொண்டு உலகம் வியக்கும் பல்வேறு கட்டிடங்களையும் கட்டியுள்ளனர் ஆங்கிலேயர்கள்.
‘ஐஸ் ஹவுஸ்’ என்று சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் அமெரிக்காவில் இருந்து பனிமலைகள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு, அதை உடைத்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பனிக்கட்டிகளை பெரும்பாலும் வெள்ளையர்கள் மது குடிக்கும் போது பயன்படுத்துவர். அந்த தொழிற்சாலையில் கூலிகளாக தாழ்த்தப்பட்ட மக்களே உழைத்தனர். அவர்களை கொடுமைப்படுத்தி வேலை வாங்குவதற்காக மேல்சாதிகளை சேர்ந்த கங்காணிகள் இருந்தனர். ஏய்டன், ஒரு கங்காணி இருவரை சவுக்கால் அடிப்பதை பார்க்கிறான். தன் கால்கள் ஐஸ் ஹவுசில் வேலை செய்து செயலிழந்து விட்டதனை அவன் சொல்லியும், கீழே விழுந்த அவனை அந்த கங்காணி தூக்க மறுக்கிறான். அது ஏய்டனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. தான் என்ன தான் ஒரு கேப்டனாக இருந்தாலும், இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனை தொட வைக்க முடியாது. அதற்காக இவர்கள் செத்தாலும் கூட சாவார்கள் ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள்.
ஐஸ் ஹவுஸில் மக்கள் வெறும் கைகளால் வேலை செய்கிறரர்கள். அதனால் அவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. அவர்கள் ஒரு புழுக்களாகவே நடத்தப்படுகிறார்கள். நாட்டில் இருக்கும் பஞ்ச நிலையை பயன்படுத்திக் கொண்டு, முதலாளிகளும் மிகவும் குறைந்த கூலியியையே கொடுத்தனர். பனி மலை திடீர் என்று உருகி பக்கத்தில் உள்ள அனைவரையும் நசுக்கும். அதில் உயிர் பிழைத்தால் அதிர்ஷ்டம். அது எப்போது கால்கள் கொண்டு மக்களை கொல்லும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு வகையில் இது அந்த மக்களின் ஆண்டையின் மனநிலையும் கூட. ஒவ்வொரு பனி மலையும் ஒரு வெள்ளை யானை. அது உருகி கால்கள் கொண்டு, எதிரில் இருக்கும் அனைவரையும் நசுக்கிவிடும்.
சிப்பாய்க்கழகத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்ட பாடம், இந்தியாவின் சாதி மத அமைப்புகளில் கை வைக்க கூடாதென்று. ஏனெனில் அதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. மற்றும் இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தினாலும் அவர்களின் வழியாக இங்குள்ள மேல் சமூகத்தினர் தான் ஆட்சி செலுத்துகின்றனர். அவர்கள் வழியாகவே இங்கு ஆட்சி நடத்த முடியும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து உள்ளது. கேப்டன் ஏய்டனின் குதிரை வண்டியை ஒரு தீண்டத்தகாதவன் ஒட்டியதனால், அதனை அவன் வண்டி ஓட்டி (மேல் சமூகத்தினை சேர்ந்தவன்) முதலில் கழுவிவிட்டு ஓட்டுகிறான். ஏய்டன் அவன் ஹவில்தார் மற்றும் அவன் படைப்பிரிவில் உள்ள அனைவரும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
நாவலில் ஏய்டனுக்கும் காத்தவராயனுக்கும் நடக்கும் உரையாடல்கள் மிக முக்கியமானவை. காத்தவராயன் அடிமை சமூகத்தில் நன்கு படித்த ஒருவன். ‘வெள்ளையர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் கோடிக்கணக்கில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், அப்படி இருந்தும் ஏன் அவர்களை நீ நம்புகிறாய்?’ என்ற ஏய்டனின் கேள்விக்கு அவன் கூறும் பதில், இந்தியாவின் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டியது. ஒரு மனிதன் அடிமையாக பிறப்பதில்லை, அவன் நூற்றாண்டுகளாக அடிமையாக இருந்து, அவன் அடிமை என்பதற்கு மேல் வேறெதுவும் யோசிப்பதில்லை. அவன் அடிமை என்று அவனிடம் சொல்ல, ஒரு வெளியாள் அவனுக்கு தேவை படுகிறது. அது ஆங்கிலேயர்களின் மொழியும், கல்வியுமே.
வெள்ளையர்கள் இவர்களை மீட்க அவர்களை மதம் மாற்றுகின்றனர். மதம் மாறினாலும் அவர்களின் சாதி, அவர்களோடு தான் வந்துகொண்டிருக்கிறது. வெள்ளைய மதவாதிகள் இவர்களை சுயநலத்திற்காக மதம் மாற்றுகின்றனர். வெள்ளைய அரசியல்வாதிகள் இவர்களின் சோற்றில் கால் வைத்து பசியால் சாகவைக்கின்றனர். இந்திய மேல் சமூகத்தினர் இவர்களை புழுக்கள் போல நசுக்குகின்றனர்.
ஏய்டன் ஐயர்லாந்தை சேர்ந்தவன். அவன் இங்கிலாந்துக்காக, தன் நாட்டை விட்டு வேறு ஒரு வெப்பமண்டல நாட்டில் ஒரு கேப்டனாக பணியாற்றி வருகிறான். ஆங்கிலேய நிர்வாகத்தில் அவன் ஒரு கண்ணி மட்டுமே என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் வார்த்து எடுக்கப்பட்ட ஒரு நிர்வாகி. அதன் அனைத்து பலன்களும், பலவீனங்களும் அவனுக்கு தெரியும். ஒரு வேலை ஆங்கிலேயர் தங்களுடைய போதாமைகளை நன்கு தெரிந்து கொண்டு அதனை கையாள பழகிக்கொண்டதனால் தான் அவர்கள் கண்டங்களை ஆள முடிந்தது.
இங்கு நடக்கும் எந்த ஒரு கொடுமையையும் ஆங்கிலேயே அரசால் தர்க்கபூர்வமாக விளக்கவும், நியாயப்படுத்தவும் முடியும். இந்த கொடுமைகளின் மேல் தன் தர்க்கங்களை ஏற்றி, அதை உலகம் பார்த்து வியக்கும் பெரு கட்டிங்களாகவும், கால்வாய்களாகவும் மாற்ற முடியும். மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்க, தானியங்களை தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருப்பதை அவர்கள் நியாயப்படுத்தும் விதம் அபாரம். பஞ்ச காலத்தில் மக்கள் கூலிகளாக தங்களை விற்று கொண்டிருப்பதை பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தங்கள் சுயநல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். கோட்டைகள் கட்டுகிறார்கள், கால்வாய்கள் அமைக்கிறார்கள். அதில் குத்தகை தாரர்களாக மேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவே இருக்கிறார்கள். அதில் வரும் லஞ்சங்களை தங்கள் சுயநலத்துக்காகவும் , அரசியல் நோக்கங்களுக்ககவும் செயல்படுத்துகிறார்கள்.
ஐஸ் ஹவுஸில் வேலை செய்யும் இருவர் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார் என்று கேப்டன் ஏய்டனுக்கு நன்றாக தெரியும், ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏய்டன் பல்வேறு சமயங்களில் தன்னை அந்த அடிமை மக்களோடு ஒருவராக நினைத்துக் கொள்கிறான்.
அவ்விருவரின் உடல்கள் கரை ஒதுங்குகிறது. காத்தவராயன் ஏய்டனிடம் இந்த இருவரின் உடல்களையும் ஐஸ் ஹவுஸ் கொண்டு வர கேட்கிறான். இவர்களை காண்பித்து அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் தங்களின் உரிமை உணர்வை கொஞ்சமாவது வர வைக்க வேண்டும் என்று எண்ணி, அங்கு ஒரு தற்காலிக வேலை நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறான். அதனால், அவர்கள் தொழில்முறை கொஞ்சம் மேம்படும் என்றும், ஊதியம் கொஞ்சம் ஏறும் என்றும் எண்ணுகிறான். ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எப்படி படைகள், அந்த மக்களை நசுக்கியது என்றெண்ணவே கூசுகிறது. ஏய்டன், தான் ஆணையிடாமலேயே, அங்கிருந்த ஒவ்வொரு சிப்பாயும் அவனின் அந்த நெருக்கடி நேரத்தை பயன்படுத்தி, தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்கிறர்கள்.
இந்தியாவில் நடந்த முதல் வேலை நிறுத்தம் இப்படி நொறுக்கப்பட்டது. ஆனால் காத்தவராயன் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம், தாழ்த்தப்பட்டோரின் உரிமை உணர்வையும், சகமனித இருப்பையும் வெளிப்படுத்தி தங்கள் நலனுக்காக தாங்களே போராட முடியும் என்று காட்டியது.
காத்தவராயன் இறுதியில் தன் சமயம், மதத்தை துறக்கிறான். இந்த கொலைவெறி தாக்குதலை முரஹரி ஐயங்காரின் நெற்றியில் உள்ள விஷ்ணு, அவர்கள் கொல்லப்படுவதை பரவச நிலையில் பேரானந்தத்துடன் பார்க்கிறார். அதை அவனால் சகிக்க முடியவில்லை. அதனால் அவன் பௌத்தத்திற்கு மாறுகிறான்.
ஏய்டன் பஞ்சத்தினால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் குடியேறிய மக்களின் வாழ்விடங்களை பார்க்க கத்தவராயனால் கூட்டிச் செல்ல படுகிறான். அவன் அங்கு மக்கள் எலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சடலங்களாக. நோயிலும், வறுமையிலும், பயத்திலும் அவர்கள் ஆன்மா அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக அவன் உணர்கிறான். அவன் திரும்பிச் செல்லும் போது, அங்கிருந்த ஒரு மூதாட்டி, அவனிடம் ஒரு நுங்கினை கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அது எப்போதும் அவன் மனதில் ஒரு ஈட்டியாகக் குத்திக் கொண்டே இருந்தது. அந்த மூதாட்டி தானே வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் போது, அந்த நுங்கினை ஏன் அவனுக்கு கொடுத்தாள் என்று கேட்க, அது அவளுடைய “தர்மம்” என்றாள். மக்களின் தீரா சோகத்திலும், கொடும் பசியிலும் பீறிட்டு வரும் கருணையை சொற்களால் அள்ளிவிட முடியாது என்றே நினைக்கிறேன். அந்த ஊற்றின் அடியில் தான் மனித குளம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏய்டன் தன்னை மீட்க மரிசாவிடம் செல்கிறான். அவன் கவிதைகளை வாசிக்கும் ஒரே வாசகி அவள் தான். அவன் ஷெல்லியின் கவிதைகளில் வாழ்கிறான். ஷெல்லியின் எழுத்துகளில், அந்த விடுதலை உணர்வில் மிதக்கிறான். அவன் ஒரு கேப்டனாக இருந்த போதும், அவனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது அவன் ஒரு ‘அதிகார அடிமை’ மட்டுமே என்று. இங்கு இருக்கும் மக்களுக்கும் அவனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஏய்டன் குற்ற உணர்வால் தற்கொலை செய்ய முயல்கிறான்.
ஏய்டன் இந்த பஞ்சத்தினை ஆவணப்படுத்தி, எப்படியாவது ஏற்றுமதியாகும் தானியங்களை நிறுத்தி, பஞ்சத்தினை போக்க முடியும் என்று நினைக்கிறான். அவன் பஞ்சத்தின் கொடுமைகளை பார்க்க சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு குதிரை வண்டியில் செல்கிறான். அந்த பஞ்ச சித்தரிப்புளை கண்ணீர் வராமல் யாராலும் வாசித்து விட முடியாது. மனிதனுக்கு வரும் கொடுமைகளின் உச்சம் பசி. பசி சாகடிப்பது முதலில் ஆன்மாவைதான். அடுத்து அவனை ஒரு புள், பூண்டாக, சருகாக அலைய விட்டு கொள்கிறது. அவன் யாரென்று தெரியாமலே இறப்பான். பஞ்சத்தினையம், பசியையும் உணரவே முடியாது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் அனைவரும் ஒரேகூட்டமாக , ஒருவர் இருப்பினை இன்னொருவரால் உணர முடியாது. இதனை வாசித்து முடித்தபின், இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையிக்கு பின்னாலும் வரலாற்றில், ஆயிரமாயிரம் மக்கள் செத்தொழிந்துள்ளனர். இந்த பருக்கை , இதனை உருவாக்கிய கைகளுக்கும், வாய்க்காலுக்கும் சென்று சேரவே இல்லை.
அன்புடன்,
பிரவின்
வழக்குரைஞரின் பயணங்கள்
சட்டம் முடித்தவுடன் எனது பெரும்பாலான வருவாயையும், பொழுதையும் பயணத்திற்காக செலவிடுவது என முடிவுசெய்து விட்டேன். இதுவரை கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் ஆண்டுக்கு ஒன்று என்கிற கணக்கில் மாற்றிவிட்டேன். எனது வாழ்வின் முக்கிய அங்கம் என்பது பயணம் தான்.
June 6, 2022
இலக்கியவாதியெனும் மனைவி
குமுதம் தீராந்திக்காக சிந்துகுமார் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்
அருண்மொழி நங்கை எழுத வேண்டும் எனக்கூறியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது..? ஒரு கணவனாக அவரது எழுத்துகள் பற்றி உங்கள் கருத்து. ஒரு சாதாரண வாசகனாக அவரது எழுத்துகள் பற்றி உங்கள் கருத்து…அவர் எழுதியதிலேயே மிகவும் சிறப்பானதாக கருதுவது எந்த படைப்பை., காரணம்.?
என் பதில்
அருண்மொழியை நான் காதலித்த நாட்களில் அவள் எழுதிக்கொண்டிருந்தாள். ஒரு நோட்டு நிறைய சங்கப்பாடல்களின் அதே மொழியில், திணை துறை பகுப்புடன், அகப்பாடல்கள் எழுதி வைத்திருந்தாள். ரசனைக் கட்டுரைகள் சில எழுதியிருந்தாள். நான் அவளிடம் தொடர்ந்து எழுதும்படிச் சொன்னேன். (காளை மாட்டை அடக்கினால்தான் திருமணம் செய்து கொள்வேன் என கவிதை எழுதிவிட்டு பசுமாட்டை பிடித்து கட்டத்தெரியாதவனை ஏன் கட்டினாய் என்று கேலியும் செய்தேன்) .திருமணமான நாட்களில் அவள் கொஞ்சம் எழுதினாள். ஆனால் வாசிக்க வாசிக்க எழுத்து ஆர்வம் குறைந்தது. வாசிப்பின் வெறியே அவளை அந்நாட்களில் நிறைத்திருந்தது.
அருண்மொழி தொடக்க காலத்தில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறாள். நீல பத்மநாபனின் பள்ளிகொண்ட புரம், சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் போன்ற நாவல்களுக்கு அவள் எழுதிய விமர்சனங்கள் நேர்த்தியானவை. சுந்தர ராமசாமி குழந்தைகள் பெண்கள் ஆண்களுக்கு வந்ததிலேயே சிறந்த விமர்சனம் அவள் எழுதியதுதான் என கடிதம் எழுதியிருக்கிறார். ஐசக் டெனிசன் உட்பட முக்கியமான ஐரோப்பிய கதையாசிரியர்களின் படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறாள். ரிச்சர்ட் ரீஸ்டாக் முதலிய மூளைநரம்பியலாளர்களின் கட்டுரைகளை மொழியாக்கம் செய்திருக்கிறாள்.
ஆனால் எங்கோ ஒரு ’படைப்பாணவம்’ இருந்திருக்கிறது. ‘எழுதினா தி.ஜானகிராமன் மாதிரி எழுதணும்’ என்னும் எண்ணம். அதுவே அவளை எழுத்திலிருந்து விலகச் செய்தது. அத்துடன் அவளுடைய வேலை. தபால்நிலையத்தில் பணியாற்றினாள். அது முழுநேரத்தையும் ஈர்க்கும் பணி. அத்துடன் அவள் எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்பவள். அவள் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் மிக விரும்பப்பட்ட தபால்நிலைய அதிகாரியாக இருந்தாள். இருபதாண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஊர்களில் இருந்து இன்றும் அவளை திருமணத்துக்கு அழைக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் அவளுடைய வேலைநெருக்கடி மிகுந்து வாசிக்கமுடியாதபடி ஆகியது. நான் வேலையை விடச்சொன்னேன். நான் சினிமாவில் காலூன்றிவிட்டிருந்ததும் காரணம். வேலையை விட்டபின் மீண்டும் வெறிகொண்ட வாசிப்பு. ஆயிரம் மணிநேர வாசிப்பு என ஒரு போட்டி இணையநண்பர்களுக்குள் நடந்தது. மூன்றுமாதங்களில் ஆயிரம் மணிநேரம் வாசித்து இரண்டாமிடத்திற்கு வந்தாள். எல்லாமே முக்கியமான படைப்புக்கள். அந்த வாசிப்பு அவளுக்குள் எழுத்தார்வத்தை உருவாக்கியிருக்கவேண்டும்
சென்ற ஏப்ரலில் அருண்மொழியின் தம்பி லெனின் கண்ணன் மறைந்தான். தம்பியை மகனைப்போல கொஞ்சி வளர்த்தவள். ஆகவே அவள் உளம் உடைந்தாள். அவளை தேற்ற சிறந்த வழி எழுதச்செய்வதுதான் என நான் எண்ணினேன். எழுதும்படிச் சொல்லிக்கொண்டே இருந்தேன். எழுத ஆரம்பித்ததும் அவளுக்கு எழுதமுடியும் என்பது தெரியவந்தது. சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்களான நண்பர்கள் அவள் எழுத்துக்குச் சான்று அளித்தபோது நம்பிக்கை வந்தது. அனைத்தையும் விட எழுத்து வாழ்க்கையை விட மேலான ஒரு வாழ்க்கையை அளித்து முழுமையாக ஈடுபடுத்தி வைத்துக்கொள்கிறது என தெரிந்தது. எழுதிக்கொண்டே இருக்கிறாள்.
இப்போது இசையும் இலக்கியமுமாக இருக்கிறாள். முன்பு நான் டீ போட்டால் அடுப்பில் பாத்திரம் கருகும். இப்போது அவள் டீபோடும் பாத்திரங்கள் கருகுகின்றன (இரண்டையும் நான் தான் சுரண்டிக் கழுவவேண்டும்) படைப்பின் பரவசம் அவளை மிக உற்சாகமானவளாக ஆக்கியிருக்கிறது. நான் காதலிக்கும்போதிருந்த அருண்மொழி, இருபது வயதாகியும் பதின்பருவ மனநிலையில் இருந்தவள், திரும்பி வந்துவிட்டதுபோல தோன்றுகிறது.
அவள் எழுதிய ஒருநூல் வெளிவந்துள்ளது. ‘பனி உருகுவதில்லை’. மிகத்தேர்ந்த எழுத்தாளர்கள்தான் நிகழ்வுகளின் நாடகத்தன்மைக்குப் பதிலாக கவித்துவத்தை நம்பியே எழுதுவார்கள். அருண்மொழியின் பல கட்டுரைகள் அத்தகையவை. அரசி, ஊர் நடுவே ஓர் அரசமரம், இரண்டு அன்னப்பறவைகள், மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் போன்றவை உதாரணம். அவை எனக்கு மிகப்பிடித்தமானவை, மிகச்சிறந்த கலைப்படைப்புகள்
கணவனாக, சாதாரண வாசகனாக, சகப்படைப்பாளியாக, விமர்சகனாக எல்லாம் ஒரே எண்ணம்தான். நான் என்றுமே படைப்பூக்கம் கொண்டவர்களை விரும்புபவன். எல்லா நல்ல எழுத்தாளர்கள்மேலும் பிரியமும் மதிப்பும் கொண்டவன். அருண்மொழி மிகுந்த நுட்பமும் ரசனையும் கொண்டவள் என தெரியும். அவளுடைய படைப்பூக்கம் மேலும் பிரியத்தை உருவாக்குகிறது. ஓரு வயதுக்குமேல் கணவன் மனைவி உறவேகூட ஒருவருக்கொருவர் கொள்ளும் மரியாதையில் இருந்துதான் நிலைகொள்ளமுடியும். இன்று அவள் தமிழில் நான் மிக மதிப்பு கொண்டிருக்கும் இலக்கியவாதிகளில் ஒருவர்
கே.ராமானுஜம்
கே.ராமானுஜம் என்ற பெயர் தமிழ் அறிவுச்சூழலில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறிதொரு சூழலில் என்றால் இலக்கியவாதிகளால் பல கோணங்களில் நுணுகி ஆராய்ந்திருக்கப்படத் தக்க ஆளுமை அவர். ஓவியர், பிறழ்வுகொண்ட கலைஞர், தற்கொலை செய்துகொண்டவர் என பலவகையாக அவரை அணுகியிருக்க முடியும். தமிழகத்தின் வின்சென்ட் வான்காவாக அவர் புனைகில் விரிவடைந்திருக்க முடியும். இன்று சி.மோகனின் நாவல் ஒன்றே அவரைப் பற்றிய இலக்கியப் பதிவாக உள்ளது.
கே. ராமானுஜம்
கே. ராமானுஜம் – தமிழ் விக்கி
நீர்ச்சுடர் செம்பதிப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு,
எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்க பயணம் முடிந்து வந்தபிறகே அவரிடம் கையொப்பம் பெற வேண்டியிருந்ததால் நீர்ச்சுடர் முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் புத்தகம் அனுப்ப இயலவில்லை. அனைவருக்கும் இம்மாதம் 25ம் தேதி முதல் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
களிற்றியானை நிரை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் ஆகிய புத்தகங்களும் (செம்பதிப்பு) ஜூலை இறுதிக்குள் தயாராகிவிடும்.
வெண்முரசின் முதல் ஆறு பகுதிகளான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம் நூல்களின் சாதாரண பதிப்பும் தயாரிப்பில் உள்ளது. அவையும் ஜுலை மாத இறுதிக்குள் வெளிவரும்.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
இர்வைன் சந்திப்பு- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் ,
வணக்கம்!
2004 இல் முதன் முறையாக உங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதே வேளையில், உங்களை சுற்றி பல சர்ச்சைகளும் இருந்தன. ஒரு படைப்பாளர் ஏன் இவ்வாறு ஈடுபட வேண்டும், எதற்காக விளக்கங்கள் தர வேண்டும் என்ற பல முரண்பாடுகளால், உங்கள் எழுத்துக்களை வாசிப்பதை தவிர்த்தேன். (என் இருபதுகளின் தொடக்க வயது அது). பிறகு பல வருடங்களாய், எதையும் வாசிக்க இயலாத சூழலில் தமிழ் இலக்கியத்தின் எந்த ஒரு நிகழ்வையும் அறியாமல் இருந்தேன். கோவிட் காலத்தில் ஒரு முறை கமல் அவர்களின் புத்தக பரிந்துரையில் ‘வெண்முரசு’ பற்றி கூறினார். அன்றே ‘முதற்கனல்’ வாசிக்க ஆரம்பித்தேன்.
“நான் என்னை உருவாக்கிக் கொள்ள எனக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. என் அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், நான் கற்ற நெறிகளும் இணைந்து என்னை வடிக்கின்றன. என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”
இவ்வரிகளில் சிலிர்த்த என் அகத்துக்கு ‘இவ்வளவு வருடங்களாக எதை இழந்திருந்தேன்’ என சில வாரங்களிலேயே வெண்முரசு பற்றிய ஆவணப்படம் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு சில காரணங்களால் தொடர்ந்து வாசிக்க இயவில்லை. மேலும் ஒரு வருடம் கழித்து ஒரு நாள், மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணக்கடல் படித்துக் கொண்டிருந்த வேளையில், எனக்குள் பல சந்தேகங்கள் முளைத்தன. நான் இதை சரியாகப் புரிந்துள்ளேனா? எனக்குள் எழும் உணர்வுகளைச் சரியான முறையில் விளங்கியுள்ளேனா? யாரிடம் இதைப் பற்றி விவாதிப்பது? என்றெல்லாம் பல வினாக்கள். அப்போது தான் ஶ்ரீராம் அவர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு பற்றியச் செய்தி வந்தது. எனக்குள் பல தயக்கங்கள். இதில் கலந்து கொள்ளும் தகுதி எனக்கு உள்ளதா? நிறைய வாசிப்பவர்கள் வருவார்களே, இவர்களினிடையே நான் என்ன உரையாட இயலும்? இருப்பினும், இந்த வாய்ப்பு மிகச் சரியாக இந்த தருணத்தில் எப்படி எனக்கு கிடைத்தது? இதை எப்படி எத்தேச்சையான (coincidence) நிகழ்வு என்று நினைப்பது என்ற எண்ணங்களும் மாறி மாறி என்னை அலைகழித்து, இறுதியில், உங்களைச் சந்திக்க வேண்டும், என்ற உந்துதலில் வந்தே விட்டேன்.
முதலில் ஆன்மீகமும், சமுதாயமும் வரலாறுமென சென்று கொண்டிருந்த உரையாடல்கள், இலக்கியத்தைப் பற்றியும், தமிழ் விக்கி பற்றியும் திரும்பிய தருணத்தில் இரண்டு மணி நேரம் முடிவடைந்து விட்டது. நான் கேட்க நினைத்த எதையுமே கேட்க இயலாமல் தவித்தேன். உங்களிடம் பலர் வந்து பேச, எனக்கென ஒரு சிறு இடைவெளியேனும் கிடைக்காதா என நான் காத்திருந்தேன். மேலும் சில உரையாடலுக்குப் பிறகு, அந்த தருணம் வந்தது. You looked very tired. எனினும் கையெழுத்து மட்டுமேனும் பெற்றுக் கொள்ளுவோம் என்று தான் நினைத்தேன். ஆனால், எங்கிருந்து அவ்வளவு சொற்கள் முளைத்தன? என்னை அறியாமலேயே என்னை பாதித்த, என்னுள் பதிந்த உங்கள் எழுத்துக்கள், உணர்வுகள்… தன்னாலே வெளிப்பட தொடங்கின. வால்- தலை பற்றிய என் புரிதல், துரியோதனனிடம் காற்றின் ஆடல் என என் கோணங்கள் அனைத்தும் சரியே என நீங்கள் ஆமோதித்த போது, என்னுள் எழுந்த பேருவகை, எனக்கு மிக புதியதோர் அனுபவம். இந்த உரையாடல் நீண்டு செல்லக் கூடாதா என்ற ஏக்கம், இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமே என்ற அயர்வு என பல்வேறு உணர்வுக் குவியலில் என் அகம் நெகிழ்ந்தும், விரிந்தும், துவண்டும் இன்னும் சொற்களில் சிக்காத எத்தனையோ உணர்வுகளோடும் அன்று நான் வீடு திரும்பினேன்.
இதை நான் நீண்டதொரு தயக்கத்தின் பின்பு உங்களுக்கு அனுப்புகிறேன்.
அன்புடனும், நன்றிகளுடனும்,
வாணி
***
அன்புள்ள வாணி,
பொதுவாக நாம் நமது வாசிப்பு குறித்து எப்போதும் ஐயம் கொண்டிருப்போம், அது நல்லது. ஏனென்றால் மேலும் ஏதோ உள்ளது என்னும் எண்ணமே படைப்புகளை நுணுகி வாசிக்கச் செய்கிறது. ஆனால் அந்த ஐயம் நம்மால் வாசிக்க இயலவில்லையோ என மாறுமென்றால் நாம் தன்னம்பிக்கை இழக்கிறோம். அது வாசிப்பையே குலைப்பதாக ஆகிவிடும்.
நீங்கள் பேச்சில் சொன்ன எல்லா வாசிப்புகளும் மிகச்சிறந்த நுண்பார்வையை காட்டுவனவாக இருந்தன. ஆனால் நீங்கள் ஐயமும் கொண்டிருந்தீர்கள். இலக்கிய வாசிப்புக்கு ஓரளவுக்கு இலக்கிய விவாதமும் இன்றியமையாதது. இணையுள்ளங்களுடனான உரையாடல். அது நம்மை நமக்கே தெளிவாக்கும். அது இல்லாமையின் விளைவே அந்த ஐயம்.
அமெரிக்காவில் ஒவ்வொரு இலக்கியவாசகரையும் சூழ்ந்துள்ள தனிமையை வெல்ல நல்ல இலக்கியக் கூடுகைகள் இன்றியமையாதவை.
ஜெ
கூடுதல் என்பது களிப்பு
ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என் பெயரை பதிந்து கொள்ள சொன்னாள். மூன்று நாட்கள் இலக்கிய முகாமிற்கு போகிறேன் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன்.
வில்லியம் மில்லரும் அரவிந்தன் கண்ணையனும்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
உங்கள் இணைய இதழிலும் அதன் வழியாக நான் வாசிக்க நேர்ந்த தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்திலும் தமிழ்ச் சிந்தனையிலே ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவரான வில்லியம் மில்லர் அவர்களைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. வில்லியம் மில்லர் ஆழ்ந்த சிந்தனாவாதி. அவர் அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக இருந்தார். தமிழகத்திலே கல்வி வளரவேண்டும், சாதிவேறுபாடு ஒழியவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணம் செய்த மேதாவி அவர். அவரைப் பற்றி ஒரு நல்ல பதிவை தமிழ் கலைக்களஞ்சியத்திலே சேர்ந்தமைக்கு நன்றி.
ஆனால் அந்தக் கலைக்களஞ்சியப் பதிவிலே அவர் தமிழ்நாட்டிலே செய்த கல்விச்சேவைகளை கொச்சைப்படுத்தும் ஒரு பதிவு இருந்தது. அதை எழுதியவர் அரவிந்தன் கண்ணையன் என்பவர். மில்லர் அவர்கள் தலித் மக்களுக்கு எதிரானவராக இருந்தார் என அதிலே சொல்லப்பட்டிருந்தது. முழுக்கமுழுக்க மதக்காழ்ப்புடன் எழுதப்பட்ட ஒரு பதிவு அது. வில்லியம் மில்லர் பற்றிய அந்தப்பதிவிலே அந்தக்குறிப்பு தேவையற்றது என்பது என் எண்ணம். அது நல்ல நோக்கத்தைக் காட்டவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
ஞான. செல்வராஜ்
அன்புள்ள ஞான செல்வராஜ்
அந்தப்பதிவு வில்லியம் மில்லர் பற்றி இன்று கிடைக்கும் எல்லா தரவுகளையும் ஒட்டுமொத்தமாக திரட்டி அளிக்கிறது. வில்லியம் மில்லரை தமிழ் நவீனச்சிந்தனையின் முன்னோடியாகவே முன்வைக்கிறது. தமிழில் அவரைப்பற்றி எழுதப்பட்ட முதல் கலைக்களஞ்சியப் பதிவு அது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். அப்பதிவிலேயே வில்லியம் மில்லர் தலித் இயக்க முன்னோடிகளான எம்.சி.ராஜா, மதுரைப்பிள்ளை போன்றவர்களுக்கு முன்னுதாரணமான ஆசிரியராக அமைந்து ஊக்குவித்தார் என்றும் உள்ளது.
அரவிந்தன் கண்ணையன் எழுதிய பதிவு அவருடைய சொந்தக்கருத்து அல்ல. அவர் அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில நூல்களை ஆதாரமாகக் கொண்டு அதைச் சொல்கிறார். அந்தக் கட்டுரை வில்லியம் மில்லர் பற்றிய ஒரு விரிவான குற்றச்சாட்டை முன்வைக்கையில் அப்படி ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்ற அளவிலேயே அக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் மூலநூல்களாக அரவிந்தன் கண்ணையன் குறிப்பிடும் நூல்களையே உங்கள் தரப்பினர் ஆதாரபூர்வமாக மறுக்கவேண்டும். மறுத்து எழுதப்பட்டால் சுட்டி கொடுக்கிறோம்.
அரவிந்தன் கண்ணையன் இந்து அல்ல. அவர் வில்லியம் மில்லரின் அதே மதப்பிரிவைச் சேர்ந்தவர். தீவிரமான சீர்திருத்தக் கிறிஸ்தவர்.
ஜெ
June 5, 2022
பொன்னியின் செல்வன் பற்றி…
அமெரிக்காவில் பெரும்பாலும் எல்லா கூட்டங்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளில் பொன்னியின்செல்வன் திரைப்படம் சார்ந்தவை உண்டு. நான் திரைவிவாதம் புரிய விரும்ப மாட்டேன் என்பதனால் பலர் அமைதியாக இருந்து சந்திப்புக்கு பின் கேட்பார்கள்.
பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி, இது பொன்னியின் செல்வன் நேரடியாகவே அந்நாவலின் கதையும் களமும் கொண்டதா, அல்லது ராவணன் போல அக்கருவை மட்டும் எடுத்தாள்வதா?
அந்நாவலின் நேரடியான திரைவடிவம்தான். அதே சோழர்காலக் களம், அதே கதாபாத்திரங்கள், அதே கதையோட்டம். அதே நாவல்தான்.
பெரும்பாலானவர்களின் அடுத்த கேள்வி, படம் எப்படி வந்திருக்கிறது?
நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. நவீன திரைப்படமாக்கலை அறிந்தவர்களுக்கு அது ஏன் என தெரியும். இப்போது படம் பல துண்டுகளாக இருக்கிறது. ஒருபக்கம் வரைகலை வேலை செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் காட்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இப்போது சினிமா இயக்குநரின் கற்பனையிலேயே இருக்கிறது. அதை வேறு எவரும் இப்போது திரைப்படமாகப் பார்க்க முடியாது.
ஆனால் துளிக்காட்சிகளாக படத்தை பார்த்தவர்கள் ஒரு கலகலப்பான, பிரம்மாண்டமான காட்சிவெளிகொண்ட படமாக உள்ளது என்றார்கள்.
வழக்கமான வரலாற்றுப்படங்களில் இருக்கும் இரண்டு அம்சங்கள் பொன்னியின் செல்வனில் இல்லை. ஏனென்றால் மூலக்கதையிலேயே அவை இல்லை. ஆகவேதான் அந்நாவல் இன்றும் ஒரு ’பாப்புலர் கிளாஸிக்’ ஆக நீடிக்கிறது.
ஒன்று, அதில் எதிர்மறை பண்புகள் இல்லை. வரலாற்று நாவல்களிலும் சினிமாக்களிலும் வரும் பெரும் சதிகாரர்கள், கொலைகாரர்கள், தீயவர்கள் இல்லை. அதன் ’வில்லன்’ என்றால் பெரிய பழுவேட்டரையர். ஆனால் அவர் மிக நல்லவர். பாண்டிய ஆபத்துதவிகள் கூட கடமையுணர்வும் நாட்டுப்பற்றும் கொண்டவர்கள்தான்,
இரண்டு, அதில் போர்வெறியும் அதன் விளைவான உச்சகட்ட வன்முறையும் இல்லை. வீரம், தியாகம் என்னும் பெயர்களில் வரலாற்றுப்படங்கள் வன்முறையை காட்சி வடிவில் நிறைக்கின்றன. அந்த அம்சம் இப்படத்தில் இல்லை
ஆகவே குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருக்குமான படம் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்மீ.ப.சோமு- சங்கீதமும் சித்தரியலும்
மீ. ப. சோமு ராஜாஜி, டி.கெ.சிதம்பரநாத முதலியார், கல்கி குழுவைச் சேர்ந்த படைப்பாளி. இன்று அவரை எவரும் பெரிதாக நினைவுகூர்வதில்லை. ஆனால் அன்றைய கல்கி கோஷ்டியினரில் பெரும்பாலானவரைப் போல தமிழிசை, தமிழ்ச் சிற்பவியல் ஆகியவற்றில் ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவராக இருந்திருக்கிறார்.
நான் அறிந்திராத இரு செய்திகள் அவர் தமிழ்ச் சித்தரியலில் ஒரு பெரும் நிபுணர் என்பதும், பலருக்கு சைவ தீக்கை கொடுத்தவர் என்பதும்
மீ.ப.சோமுJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

