இலக்கியவாதியெனும் மனைவி

குமுதம் தீராந்திக்காக சிந்துகுமார் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்

அருண்மொழி நங்கை எழுத வேண்டும் எனக்கூறியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது..? ஒரு கணவனாக அவரது எழுத்துகள் பற்றி உங்கள் கருத்து. ஒரு  சாதாரண வாசகனாக அவரது எழுத்துகள் பற்றி உங்கள் கருத்துஅவர் எழுதியதிலேயே மிகவும் சிறப்பானதாக கருதுவது எந்த படைப்பை., காரணம்.?

என் பதில்

அருண்மொழியை நான் காதலித்த நாட்களில் அவள் எழுதிக்கொண்டிருந்தாள். ஒரு நோட்டு நிறைய சங்கப்பாடல்களின் அதே மொழியில், திணை துறை பகுப்புடன், அகப்பாடல்கள் எழுதி வைத்திருந்தாள். ரசனைக் கட்டுரைகள் சில எழுதியிருந்தாள். நான் அவளிடம் தொடர்ந்து எழுதும்படிச் சொன்னேன். (காளை மாட்டை அடக்கினால்தான் திருமணம் செய்து கொள்வேன் என கவிதை எழுதிவிட்டு பசுமாட்டை பிடித்து கட்டத்தெரியாதவனை ஏன் கட்டினாய் என்று கேலியும் செய்தேன்) .திருமணமான நாட்களில் அவள் கொஞ்சம் எழுதினாள். ஆனால் வாசிக்க வாசிக்க எழுத்து ஆர்வம் குறைந்தது. வாசிப்பின் வெறியே அவளை அந்நாட்களில் நிறைத்திருந்தது.

அருண்மொழி தொடக்க காலத்தில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறாள். நீல பத்மநாபனின் பள்ளிகொண்ட புரம், சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் போன்ற நாவல்களுக்கு அவள் எழுதிய விமர்சனங்கள் நேர்த்தியானவை. சுந்தர ராமசாமி குழந்தைகள் பெண்கள் ஆண்களுக்கு வந்ததிலேயே சிறந்த விமர்சனம் அவள் எழுதியதுதான் என கடிதம் எழுதியிருக்கிறார். ஐசக் டெனிசன் உட்பட முக்கியமான ஐரோப்பிய கதையாசிரியர்களின் படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறாள். ரிச்சர்ட் ரீஸ்டாக் முதலிய மூளைநரம்பியலாளர்களின்  கட்டுரைகளை மொழியாக்கம் செய்திருக்கிறாள்.

ஆனால் எங்கோ ஒரு ’படைப்பாணவம்’ இருந்திருக்கிறது. ‘எழுதினா தி.ஜானகிராமன் மாதிரி எழுதணும்’ என்னும் எண்ணம். அதுவே அவளை எழுத்திலிருந்து விலகச் செய்தது. அத்துடன் அவளுடைய வேலை. தபால்நிலையத்தில் பணியாற்றினாள். அது முழுநேரத்தையும் ஈர்க்கும் பணி. அத்துடன் அவள் எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்பவள். அவள் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் மிக விரும்பப்பட்ட தபால்நிலைய அதிகாரியாக இருந்தாள். இருபதாண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஊர்களில் இருந்து இன்றும் அவளை திருமணத்துக்கு அழைக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் அவளுடைய வேலைநெருக்கடி மிகுந்து வாசிக்கமுடியாதபடி ஆகியது. நான் வேலையை விடச்சொன்னேன். நான் சினிமாவில் காலூன்றிவிட்டிருந்ததும் காரணம். வேலையை விட்டபின் மீண்டும் வெறிகொண்ட வாசிப்பு. ஆயிரம் மணிநேர வாசிப்பு என ஒரு போட்டி இணையநண்பர்களுக்குள் நடந்தது. மூன்றுமாதங்களில் ஆயிரம் மணிநேரம் வாசித்து இரண்டாமிடத்திற்கு வந்தாள். எல்லாமே முக்கியமான படைப்புக்கள். அந்த வாசிப்பு அவளுக்குள் எழுத்தார்வத்தை உருவாக்கியிருக்கவேண்டும்

சென்ற ஏப்ரலில் அருண்மொழியின் தம்பி லெனின் கண்ணன் மறைந்தான். தம்பியை மகனைப்போல கொஞ்சி வளர்த்தவள். ஆகவே அவள் உளம் உடைந்தாள். அவளை தேற்ற சிறந்த வழி எழுதச்செய்வதுதான் என நான் எண்ணினேன். எழுதும்படிச் சொல்லிக்கொண்டே இருந்தேன். எழுத ஆரம்பித்ததும் அவளுக்கு எழுதமுடியும் என்பது தெரியவந்தது. சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்களான நண்பர்கள் அவள் எழுத்துக்குச் சான்று  அளித்தபோது நம்பிக்கை வந்தது. அனைத்தையும் விட எழுத்து வாழ்க்கையை விட மேலான ஒரு வாழ்க்கையை அளித்து முழுமையாக ஈடுபடுத்தி வைத்துக்கொள்கிறது என தெரிந்தது. எழுதிக்கொண்டே இருக்கிறாள்.

இப்போது இசையும் இலக்கியமுமாக இருக்கிறாள். முன்பு நான் டீ போட்டால் அடுப்பில் பாத்திரம் கருகும். இப்போது அவள் டீபோடும் பாத்திரங்கள் கருகுகின்றன (இரண்டையும் நான் தான் சுரண்டிக் கழுவவேண்டும்) படைப்பின் பரவசம் அவளை மிக உற்சாகமானவளாக ஆக்கியிருக்கிறது. நான் காதலிக்கும்போதிருந்த அருண்மொழி, இருபது வயதாகியும் பதின்பருவ மனநிலையில் இருந்தவள், திரும்பி வந்துவிட்டதுபோல தோன்றுகிறது.

அவள் எழுதிய ஒருநூல் வெளிவந்துள்ளது. ‘பனி உருகுவதில்லை’. மிகத்தேர்ந்த எழுத்தாளர்கள்தான் நிகழ்வுகளின் நாடகத்தன்மைக்குப் பதிலாக கவித்துவத்தை நம்பியே எழுதுவார்கள். அருண்மொழியின் பல கட்டுரைகள் அத்தகையவை. அரசி, ஊர் நடுவே ஓர் அரசமரம், இரண்டு அன்னப்பறவைகள், மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் போன்றவை உதாரணம். அவை எனக்கு மிகப்பிடித்தமானவை, மிகச்சிறந்த கலைப்படைப்புகள்

கணவனாக, சாதாரண வாசகனாக, சகப்படைப்பாளியாக, விமர்சகனாக எல்லாம் ஒரே எண்ணம்தான். நான் என்றுமே படைப்பூக்கம் கொண்டவர்களை விரும்புபவன். எல்லா நல்ல எழுத்தாளர்கள்மேலும் பிரியமும் மதிப்பும் கொண்டவன். அருண்மொழி மிகுந்த நுட்பமும் ரசனையும் கொண்டவள் என தெரியும். அவளுடைய படைப்பூக்கம் மேலும் பிரியத்தை உருவாக்குகிறது. ஓரு வயதுக்குமேல் கணவன் மனைவி உறவேகூட ஒருவருக்கொருவர் கொள்ளும் மரியாதையில் இருந்துதான் நிலைகொள்ளமுடியும். இன்று அவள் தமிழில் நான் மிக மதிப்பு கொண்டிருக்கும் இலக்கியவாதிகளில் ஒருவர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.