Jeyamohan's Blog, page 766
June 9, 2022
யுவன் மலேசியாவில்
வணக்கம். வல்லினம் ஏற்பாட்டில் இரு நாட்கள் நவீன கவிதை குறித்த பட்டறை நடைப்பெறுகிறது. அதன் விபரங்கள்.
நாள் : 10-11 ஜூன் 2022 (வெள்ளி – சனி)
இடம் : கோலாலம்பூர்
40 பேருக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ள இந்த முகாமை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வழிநடத்துவார்.
மேலும் https://vallinam.com.my/version2/?p=8445
யுவன் சந்திரசேகர்- தமிழ் விக்கி பக்கம்June 8, 2022
வீரான்குட்டி கவிதைகள்
கடைசியில்
நதியைக் குற்றஞ்சாட்டும் எந்தப் பேச்சும்
எனக்குப் பிடிப்பதில்லை
மூழ்கி அமிழ வரும் ஒருவரை
அது முழுதும் ஏற்றுக்கொள்கிறவரையில்
பிளந்து கடக்க வருபவரை அனுமதிக்கிறவரையில்
காண வருபவருக்குக் கொடுப்பதற்காக
சிறுமீன்களின் கண்ணாடிக்குடுவையை
அது பாதுகாத்து வைத்திருக்கிறது.
முத்துகளில்லை
பவழங்களில்லை
அதீத உறுமல்களோ
அலையதிர்வுகளோ இல்லை
இப்படி விச்ராந்தியாகத் தொடங்கினால்
இந்த நதி ஒரு யோகியாகவே
மாறிவிடப் போகிறதென்று நினைத்தேன்.
ஆனால்
கழிமுகத்தை அடைந்ததும்
என்ன நடக்கிறதென்றுதான்
எனக்குப் புரியவில்லை
கடலோடு கூட்டு சேர்ந்ததும்
அது தன் சொந்தப் பெயரிழக்கிறது
நீண்ட பயணத்தின் ஞானமனைத்தையும்
மடிமைக்குச் சமர்ப்பிக்கிறது
பாய்ச்சலை,
பாறை மேல் குதித்தேறிய பின்பு வரும்
வெடிச்சிரிப்பை அக்கணமே மறந்துவிடுகிறது.
இந்தப் பயணம்
என்றென்றைக்குமாய்த் தேங்கிக் கிடக்கத்தானா
என்றெண்ணும்போது
கணவன் வீடு போகும்
புதுப்பெண்ணின் நினைவு வருகிறது.
ஆனால்
நதியிடம் இந்த விஷயத்தைச் சொல்லிப் பாருங்கள்
அதற்குப் புரியப் போவதில்லை
ஏனென்று கேட்காதீர்கள்
அது அப்படித்தான்.
***
குறைந்து குறைந்து
காணும் முன்பு
எத்தனை பெரியவராய் இருந்தோம்
பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறிதானோம்
பேசத் தொடங்கியபோது அற்பமானோம்
இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால்
குறைந்து குறைந்து
இருக்கிறோம் என்றே
சொல்ல முடியாத அளவுக்கு
முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ
நாம் ஒருவருக்கு ஒருவர்?
கடவுள் காணக் கிடைக்காதது
சாலவும் நன்றல்லவா?
***
தேடல்
நீ எங்கே என்று கேட்டதும்
நாலாதிசைகளிலும் விரல்நீட்டி
என்னைச் சுற்றலில் விட்டது
மரம்
உன்னைத் தேடுகிறேன் என்றறிந்ததும்
எப்போதும் முன்னால் நடக்கும் நட்சத்திரங்கள்
வெகுவாகப் பின்னால் போய்விட்டன
வழிகாட்ட வேண்டிய சுமை நீங்கி.
காற்று வளையமாய்ச் சுழற்றியது.
கடைசியில் கதறியபடி
கடற்கரை சென்றேன்
உதடு திறக்கும் முன்பே
நீ எங்கே என்று
ஆயிரம் நாக்குகள் ஒருசேர நீட்டி
திரும்பக் கேட்கிறது கடல்.
***
சொல்
சொல்
இரண்டுபேர் காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
சுற்றியுள்ள உலகம்
சட்டென்று எங்கே
போய்த் தொலைகிறது?
***
வேனில் மரங்கள்
மழைக்காலக் காடு
ஒரு பப்ளிக் ஸ்கூல் அசம்ப்ளியை
நினைவூட்டும்
அங்கு சீருடையணிந்த மரங்கள்
கீழ்படிதலுக்கு வெகுமதி பெறுகின்றன
வேனிற்காடு
கிராமத்து சாதா இஸ்கூல் போல
அங்கு மரங்கள்
சீருடை இல்லாததால்
பல மங்கிய நிறங்களில் தத்தம்
சொந்த உடையில்
பொடிமண்ணில் விளையாடி ஆர்ப்பரித்து
வரிசையாய் வந்து நின்று
கீழ்படியாமைக்கு அடி வாங்குகின்றன.
மழைக்கால மரத்திற்கு
சவால்கள் ஏதுமில்லை
வேனிலுக்கு அப்படியல்ல
அது எல்லாவற்றையும் முதலில் இருந்து
தொடங்க வேண்டும்.
நீருக்கு அலைய வேண்டும்
எரிந்துபோகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
ஒவ்வொரு வேளைக்கும்
அது பிழைத்திருக்க வேண்டும்.
மழைக்காலக்
காட்டினைவிட எனக்குப் பிடித்தது
உயர்த்திய முஷ்டியைப் போல் நிற்கும்
வீரதீர வேனில் மரங்களைத்தான்.
***
கேள்
கல்லிடம் கேள்
எவ்வளவு காத்திருந்து
ரத்தினமாகியதென்று
நீர்த்துளியிடம் விசாரி
எத்தனை காலக் காத்திருப்பு
முத்தாவதற்கென்று
உதடுகள் இருந்திருந்தால்
அவை சொல்லியிருக்கும்
‘அன்புடன் ஒரு கை தொடுவதற்கு
எடுத்துக்கொள்ளும் நேரம்’ என்று.
***
தமிழாக்கம் சுஜாபனைக் கனவு திருவிழா – 2022
அன்புள்ள அண்ணன்,
தமிழகத்தில் வீழ்ந்துகிடந்த பனை மரத்தை கைவிட்டுச் செல்லும் நிர்பந்தத்தில் பனையேறிகள் பலரும் வெளியேறிக்கொண்டிருக்கையில், பனை சார்ந்த செயல்பாடுகள் அங்காங்கே இருக்கும் ஒருசில பனையேறிகளாலும் தன்னார்வலர்களாலும் முன்னெடுக்கப்படுவதை அறிவீர்கள். பனை விதை நடவு, பனை சார்ந்த கைவினை பயிற்சிகள், பனை உணவுகள் மீட்டுருவாக்கம், பனை உணவுகளுக்கான சந்தையை மீட்டெடுத்தல் என இவைகள் தன்போக்கில் மக்களியக்கமாக எழுந்துவருகிறது.
இச்சூழலில், அரசு என்னதான் பனை சார்ந்த தொழில்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தாலும், உடனடியாக எதுவும் செய்ய இயலாத அளவிற்கு மிக நீண்ட இடைவெளி இத்துறையில் ஏற்பட்டிருக்கிறது. அரசு தரப்பிலிருந்து பனை சார்ந்து இயங்குபவர்களுக்கு நல்லவை நடக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் நரசிங்கனூர், என்ற பகுதியில் சுமார் 150 பனை சார்ந்த தொழிலாளர்கள் இன்றும் பனையுடன் நெருக்கமான உறவை பேணிவருகிறார்கள். எனது பயணத்திலேயே பனை மரங்கள் சார்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட ஒரு சில ஊர்களில் பூரிகுடிசை முதன்மையானது. அனைத்து வீடுகளுமே பனை ஓலைகளால் வேயப்பட்டது தான் அமைத்திருக்கிறது. இவ்வூரில் தான் பனை ஓலையில் செய்யப்படும் சம்பு என்று அழைக்கப்படும் மழையணியான கொங்காணி செய்யப்படுகிறது. தடுக்கு என்ற பனை ஓலைகளை கோர்த்து செய்யப்படும் ஒருவித தட்டிகளை உருவாக்கும் நுட்பத்தையும் இவ்வூரில் நாம் பார்க்கலாம்.
நரசிங்கனூரில் கடந்த 130 நாட்களாக அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளில் எங்குமே இவ்விதம் தொடர்ந்து கள் இறக்குவதற்கான முன்னெடுப்புகள் செய்யப்படவில்லை என்பது அடிக்குறிப்பு.
இப்பகுதியில் உள்ள பனையேறிகள் ஒன்றிணைந்து “பனங்காடு” என்ற அறக்கட்டளையின் வாயிலாக பனை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். தமிழகம் தழுவிய சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கோன்டு ஒரு சில மாவட்டங்களை கடந்திருந்த நிலையில், நோய் தொற்றினால் முடிக்க இயலாது போய்விட்டது.
பனை மரம் குறித்த ஒரு பிரம்மாண்ட விழிப்புணர்வை முன்னெடுக்கும் பொருட்டு, தற்பொழுது நரசிங்கனூர் பகுதியில் “பனை கனவு திருவிழா” ஒன்றை மைக்க திட்டமிட்டு பனை ஏறிகள், பனை சார்ந்த கைவினைக் கலைஞர்கள், பனை உணவு தயாரிப்பவர்கள், கொல்லர்கள், கலயம் செய்பவர்கள், பனை ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார்கள். பல்வேறு தரப்பினர் இதில் ஈடுபடுவதால், ஆன்மீக தலைவர்கள், பல்வேறு கட்சியின் பிரதினிதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் எங்கும் நிகழாத வகையில், 1000 நபர்கள் இணைந்து மாவொளி (கார்த்தி) சுற்றும் நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இளம் தலைமுறையினரையும் இடையறாது செயல்பட்டுவரும் மூத்த பனையேறிகளையும் பெண்களையும் ஊக்குவிக்கும் வண்ணமாக பல்வேறு போட்டிகள் மற்றும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படும். தமிழகம் முழுவதிலுமிருந்து வருகிறவர்களுக்கு இது ஒரு சிறப்பான அனுபவமாக அமையவேண்டி, பனங்காட்டிலேயே இதனை முன்னெடுக்கிறோம். நாவிற்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் இந்த நிகழ்சியைப்போல வருடம் தோறும் பனை சார்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் பனை கனவு திருவிழாவினை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். தமிழகத்தில் பனை மரத்க்டினை கட்டியணைத்து அதனையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்ற மக்கலைக் குறித்த ஒரு அறிமுகம் வேண்டுவோர், பனை சார்ந்து தற்போது ஏற்பட்டுவரும் எழுச்சியைக் கண விளைவோர், மரபு மற்றும் இயற்கை சார்ந்து புது வேலைவாய்ப்பை பெருக்க விரும்புவோர், அனைவருக்கும் இவ்விழா குறைவின்றி அள்ளிக்கொடுக்கும் கூறுகள் கொண்ட நிகழு பெருக்கான அமைத்திருக்கிறோம்.
இச்சுழலில், தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 10000 நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்பார்க்கிறோம். ஜூன் 18, 19 ஆகிய நாட்களில் நிகளும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் உங்கள் வாசகர்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இன்நிகழ்விற்காக சுமார் 6.31 லெட்சம் செல்வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்.
அன்புடன்
பனை திருப்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 30 ஆண்டுகளாக.
GPay
பாண்டியன் – 9500627289
Name: PANANGADU ARAKKATTALAI
BANK: IDBI BANK
A/C NO: 1053104000156004
Branch Name: VILLUPURAM IDBI BANK Branch
IFSC: IBKL0001053
***
அறம், ஆங்கிலத்தில்…
அறம் சிறுகதைகளில் பல கதைகள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராட்டி, வங்க மொழிகளில் வெளிவந்துள்ளன. முழுமையாக அனைத்துக் கதைகளும் பிரியம்வதா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக வரவுள்ளன.
Containing iconic stories like ‘Elephant Doctor’ and ‘A Hundred Armchairs’, this collection by the great Tamil writer Jeyamohan, brings together twelve inspiring and imaginative narratives, all based on the lives of real people.These stories explore the capacity of humans to hold on to their intrinsic goodness in the face of both the everyday and the extraordinary, and how their response in such moments of truth finds expression in multitudinous ways.Gripping, often raw and deeply moving, this striking collection, the first major translation of Jeyamohan’s work in English, will renew your faith in humanity.
Jeyamohan is one of the giants in modern Tamil literature. His prose squeezes the old life out of you, and you’re better for it because it gives back new breath and radical thought to fill the void. Happy to know that his stories are now available for english-speaking readers
Radhika Meganathanஆண்டி சுப்ரமணியம்
ஆண்டி சுப்ரமணியம் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல்லாண்டுக்கால உழைப்பால் A Theatre Encyclopedia என்னும் தலைப்பில் அவர் சேகரித்த கலைக்களஞ்சியம் 60,000 உட்தலைப்புகள் கொண்டது. கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதைத் தவறவிட்டது; பிரதி கிடைக்கவே இல்லை. அதன் பிறகும் ஆண்டி இன்னும் ஆண்டு முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம் என்றாராம். அப்போது அவருக்கு வயது 80.
இன்றுவரை அந்தப்பேரிழப்பை தமிழ்ச்சூழல் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு பொதுச்சூழலுக்கும் கல்வித்துறைக்கும் அறிவியக்கத்துக்குமான வேறுபாடென்ன என்பதைச் சுட்டும் நிகழ்வு இது. இன்று நம் தமிழ் விக்கி முயற்சிகளை எதிர்கொள்பவர்களின் மனநிலையும் இதுவே.
ஆண்டி சுப்ரமணியம் போன்ற ஒருவர் ஒரு நல்ல கலைக்களஞ்சியம் பதிவுசெய்யவில்லை என்றால் மறைந்தே போயிருப்பார். அவருடைய ஒரு புகைப்படம் கூட கிடைப்பதில்லை.
ஆண்டி சுப்ரமணியம்உயிர்வெள்ளம்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
கண் மருத்துவத்துக்கான விடுப்பு முடிந்த நாளில் இருந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் உத்ராகண்ட் சென்றேன். ரிஷிகேஷ் ஹரித்வார் என கங்கை கரை நெடுக விதவிதமான முகங்களை கண்டு திளைத்தேன். எத்தனை வண்ண பேதம் கொண்ட துறவியர் முகங்கள். விஷ்ணுபுற சோனா நதிக்கரையில் ஸ்ரீ பாத திருவிழா நாளொன்றில் நிற்கிறேன் எனும் உள மயக்கு.
வந்த பிறகும் வித விதமான திருவிழாகளை தேடி ஓடிக்கொண்டும் அது குறித்த காணொளிகளை தேடித் தேடி பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். அந்த வரிசையில் you tube இல் இந்த அர்த் கும்ப் எனும் காணொளி காணக் கிடைத்தது.
இயக்குனர் சனல்குமார் சசிதரன் 2019 இல் தான் சென்று வந்த கும்பமேளா குறித்து எடுத்து, தனது சானலில் இது ஆவணப்படம் அல்ல எனும் குறிப்புடன் அவர் வெளியிட்டிருக்கும் காணொளி.
தின்பண்டங்கள் விற்கும் வியாபாரி, கிளி ஜோசியம் பார்க்கும் எளியவர்கள், கயிற்றில் கழைக்கூத்து நடத்தும் மகளை கிழே நின்று பார்க்கும் தாய், சாலை அமைக்கும், பந்தல் வேயும் பணியாளர்கள், வந்து கொண்டே இருக்கும் கிராமத்து மனிதர்கள், பிரம்மாண்ட கூடாரங்கள், கூடாரம் நிறைந்து விரிக்கப்பட்டிருக்கும் படுக்கைகள், ஒலி பெருக்கி கூவல்கள், வண்ண தொலைக்காட்சிகளில் பிரதமரின் ஆதித்யநாத்தின் வித விதமான போஸ்கள், உபந்யாஸங்கள், குழந்தைகள், யாசகர்கள், வெளிநாட்டினர், மொபைல் பார்த்துக்கொண்டே உடற்பயிற்சி செய்யும் நிர்வாணி, ஆணுறுப்பில் பல கிலோ எடை கொண்ட எதையோ தொங்க விட்டபடி நிற்கும் நாகா பாபா, யாகத் தீ சுற்றி அமந்திருக்கும் நூற்றுக்கணக்கான கெளபீனதாரிகள், லட்சங்களில் வந்து கொண்டே இருக்கும் பக்தர்கள், என எத்தனை எத்தனை வித்யாசம் கூடிய முகங்கள். ஒவ்வொரு முகத்தையும் ஒரு துளி எனக் கொண்டால், அதன் கடலான கும்பமேளா குறித்து பரவசமூட்டும் இந்த காட்சித் தொகுப்பு, பாலத்தில் நடந்துபோகும் லட்சக் கணக்கான பக்தர்களின் தலைக்கு மேலே பறப்பது போலும் காட்சி மயக்கம் தந்து கடந்து போகும் தொடர்வண்டி காட்சியுடன் நிறைகிறது.
சனல் குமார் சசிதரன் படங்கள் ( ஒழிவு திவசத்தே களி, s. துர்கா போன்ற) சிலவற்றை பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான படங்கள் என்பதை தாண்டி அவற்றை கலை என்று கொண்டாடும் அளவு அவை முக்கியம் கொண்டவை இல்லை. குறிப்பாக கலை தனது இயல்பில் கொண்டிருக்கும் மீண்டும் மீண்டும் அதில் வந்து தோய வைக்கும் தன்மை அவரது படங்களில் கிடையாது. இவற்றில் இருந்து மாறாக இந்த அர்த் கும்ப் படம் அதன் காட்சி வெட்டுகள் இயக்குனரின் தலையீடு இன்றி நிகழும் அதில் உள்ள :நிகழ் உண்மை’ காரணமாக மிக எளிதாக கலைப் பெறுமதியை அடைந்து விடுகிறது.
நான் முன்னர் கண்டு இதே அளவு பரவசத்தை அளித்த படம் ஹெர்ஸாக் இயக்கிய காலச் சக்கரம் எனும் ஆவணம். உலக சமாதானத்தின் பொருட்டு வஜ்ராயன பௌத்த மண்டலம் வரைந்து சடங்குகள் நிகழ்த்தும் பூஜை செய்ய தலாய் லாமா பெரியதொரு மாநாடு ஒன்றை கயாவில் ஒருங்கமைவு செய்கிறார். அந்த விழா குறித்து ஹெர்ஸாக் எடுத்த ஆவணமே அப்படம். ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளனுக்கு பரவசத்தை அள்ளித்தரும் படம்.
இவ்விரு படங்களும் உங்கள் பார்வைக்காக.
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா
நண்பர்களுக்கு,
2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022-ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் பிறந்த நாள்.
இடம் :கவிக்கோ மன்றம் சி.ஐ.டி காலனி
நாள் : 11-6-2022
விழாவில் கவிஞர் போகன் சங்கர் , மலையாளக் கவிஞர் வீரான்குட்டி, எழுத்தாளர் பார்கவி மற்றும் ஜெயமோகன் கலந்துகொள்வார்கள்.
June 7, 2022
கழாக்கால்
என்னுடைய திருக்குறள் சொற்பொழிவின்போது ஒரு நண்பர் கேட்டார். “…அதான் ஏகப்பட்ட உரை இருக்கே. மறுபடியும் எதுக்கு திருக்குறளைப்போய் உரை செய்யணும்?”
முதல் யோசனைக்கு அது ஒரு நல்ல கேள்விதான். திருக்குறளுக்கு உரையெழுதாத தமிழாசிரியர்கள் குறைவு. ஏதாவது ஓர் உரைநூலை எடுத்து பார்த்து எழுதவேண்டியதுதான். இத்தனை உரை எதற்கு என்றால் ஒரே பதில்தான். ஒரே உரை விற்பனையாவதற்குப் பதில் பல உரைகள் விற்றால் நிதிப்பங்கீடு நடக்கிறதே.
நான் சொன்னேன். “திருக்குறள் ஒரு நீதி நூல் இல்லை. அது ஒரு கவிதை நூல். கவிதையோட வாசிப்பு காலத்துக்குக் காலம் மாறும். புதுப்புது அர்த்தம் உண்டாகும். அதனாலே புதிய உரை வேண்டியிருக்கு”
அவர் சமாதானம் ஆகவில்லை. “அதெப்டீங்க ஆளுக்காள் மாத்திச் சொல்றது?” என்றார்
“இல்லீங்க. அதை நீதிநூல்னு எடுத்துகிட்டாக்கூட அது ரொம்ப பழைய நூல். அதிலே இருக்கிற பல விஷயங்களுக்கு முன்னாடி நமக்கு அர்த்தம் தெரியாது. இப்ப சரித்திரம், சமூகவியல், மதம்னு வெவ்வேறு துறைகளிலே உள்ள ஆராய்ச்சிகள் வந்துகிட்டிருக்கு. அதையெல்லாம் வைச்சு திருக்குறளை மேலதிகமாப் புரிஞ்சுகிடலாமே ?”
அதுவும் அவருக்கு ஆறுதல் தரவில்லை. “அதெப்டி, அத்தனை அறிஞர்கள் வாசிச்சு சொல்லியும் முழுசா உரை கிடைக்காம இருக்குமா?” என்றார்.
நான் ஒரு குறளை எடுத்து விளக்கினேன்.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
என்ற குறளுக்கு பரிமேலழகர் “சான்றோர் அவையின்கண் பேதையாயினன் புகுதல் தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளியின்கண் வைத்தாற்போலும்” என உரை அளிக்கிறார்.
அதையொட்டி மு.வரதராசனார் முதல் மு.கருணாநிதி வரையிலான அனைத்து உரைகளுமே ‘கழுவாத காலை படுக்கையில் வைப்பதைப் போன்றது அறிவில்லாதவன் அறிஞர் அவையில் புகுந்து பேசமுற்படுவது’ என்றே பொருள் அளித்துள்ளனர்.
அதுவே அறிஞர் வழக்கம். ஒருவரை முன்னோடி அறிஞர் என ஏற்றுக்கொண்டார்களென்றால் அனைவரும் அவரையே திரும்பத்திரும்ப பின் தொடர்வார்கள். சான்றோர் அவையில் அறிவிலாதவன் பேசுவது அச்சான்றோரை அவமதிப்பது. அதற்கும் படுக்கையில் கழுவாத காலை வைப்பது எப்படி உவமையாகும்? சான்றோரை படுக்கை என்கிறாரா வள்ளுவர்? எந்த வகையில் பொருத்தமானது இந்த வாசிப்பு?
நான் நண்பரிடம் சொன்னேன். சமணர்களின் குகைப் பள்ளிகளில் நுழைவாயிலை ஒட்டி பல இடங்களில் கல்லால் ஆன குழிகள் இருக்கும். அங்கே நீர் வைக்கப்பட்டிருக்கும். கால்கழுவாமல் பள்ளிக்குள் புகுதல் விலக்கப்பட்டிருந்தது.
ஏனென்றால் சமண அறவோர் வெறுங்கற்தரையில் படுப்பவர்கள். கழுவாத காலுடன் நுழைதல் அவர்களின் மேனியை காலால் தொட்டு அழுக்கு படுத்துவதற்கு நிகர். பெரும்பழி சேர்ப்பது. சமணர்களின் காவல்தேவர்களால் அந்தக் குற்றம் தண்டிக்கப்படும்.
இந்த ஆசாரமே இஸ்லாமிய மரபிலும் ஒளு எனப்படும் கால்கை முகம் கழுவும் சடங்காக உள்ளது.கால்கழுவாமல் பள்ளியில் நுழைதல் என்பதை ஓர் இஸ்லாமியர் எப்படிப்பட்ட பழியாகக் கொள்வாரோ அப்படித்தான் சமணர்களும் எண்ணினர்.
பேதை அறிஞர் சபையில் நுழைவதென்பது அறிஞர்களை சிறுமைசெய்வது, தனக்கு பழியும் தண்டனையும் தேடிக்கொள்வது. வள்ளுவர் கூறுவது அதைத்தான்.
பரிமேலழகர் வைணவர். அவர் காலகட்டத்தில் சமணம் வழக்கொழிந்து விலகிவிட்டிருந்தது. சமண ஆசாரங்களை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் வந்தவர்கள் பரிமேலழகரை அவ்வண்ணமே பின்பற்றினர்.
ஏனென்றால் நம் பழந்தமிழ்ப்பாடல்களுக்கு உரையளித்தோரில் பெரும்பாலானவர்கள் தமிழறிஞர்கள். சொல்லும் இலக்கணமும் இலக்கியமரபும் அறிந்தவர்கள். ஆனால் சமூகவியலோ, வரலாறோ அறியாதவர்கள். தமிழ்ப்பண்பாட்டை ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடுடனும், வெவ்வேறு நாட்டார் மரபுகளுடனும் இணைத்துப் பார்க்க அவர்கள் அறிந்திருக்கவில்லை.
நான் பல உரைகளில் தேடிப் பார்த்ததுண்டு. கேரளத்தில் வேலன் வெறியாட்டு போல சங்ககாலத்துச் சடங்குகள் பல நடப்பதை, மேற்குமலைப் பழங்குடிகளிடம் சங்ககாலத்து வாழ்க்கைக்கூறுகளும் நம்பிக்கைகளும் நீடிப்பதை எவரேனும் அறிந்து இலக்கியத்தை அதனடிப்படையில் பொருள்கொண்டிருக்கிறார்களா என. அவர்களுக்கு சொற்களின் அகராதிப்பொருளே ஆதாரமாக இருப்பதையே கண்டேன்.
திருக்குறள் வெறும் ஒரு அறவுரைத் தொகுப்பு அல்ல. அது ஒரு பண்பாட்டு நூல். தமிழின் தொல்மரபின் இன்னும் அறியப்படாத பல நுண்செய்திகள் அதில் இருக்க வாய்ப்புண்டு. ஆகவே மானுட அறிவுத்துறைகள் வளருந்தோறும் குறள் மீள மீள பொருள்கொள்ளப்படும்.
அணில்
நான் நெல்லைக்கு ஒருமுறை சென்றபோது ஒரு சிறுவன் “அணில்ல்ல்ல் அணில்ல்ல்ல்” என விம்மி விம்மி அழுவதை கண்டேன். ஏதோ செல்ல அணிலை தொலைத்துவிட்டான் போல என எண்ணி நான் “அணில் எங்க போச்சு?” என்றேன்
“கடையிலே இருக்கு”
“கடையிலயா?”
“ஆமா… அம்மை பைசா தரமாட்டேங்குதா”
அவன் சுட்டிக்காட்டிய பிறகுதான் நான் அணில் இதழைப் பார்த்தேன். சிறுவர்களுக்கான மாயாஜாலப் பத்திரிகை. பையனுக்கு வாங்கிக்கொடுத்துவிட்டு நானும் ஒரு பிரதி வாங்கினேன். அட்டைக்கு அட்டை மாயம். விட்டாலாச்சாரியா ஒரு சிறுவர் இதழ் நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படி.
படித்து முடித்தபின் நெல்லையப்பர் சன்னிதி நோக்கி பறந்து சென்றேன்.
அணில்
அணில் – விக்கி
வில்லியம் மில்லர், அரவிந்தன் கண்ணையன் கடிதம்
வில்லியம் மில்லர்ந்
வில்லியம் மில்லர்
அன்புள்ள ஜெ,
நலமாக ஊர் திரும்பிவிட்டீர்கள் போலிருக்கிறது. உங்களையும் அருண்மொழியையும், நண்பர் பழனி ஜோதியையும் சந்திக்க முடிந்ததில் பெரு மகிழ்ச்சி. பழனியும் அவர் மனைவியும் அளித்த விருந்தோம்பல் அபாரம்.
நாம் சந்தித்த போது வில்லியம் மில்லர் குறித்தும் என் கட்டுரை குறித்தும் கொஞ்சம் பேசினோம். அது முதல் வில்லியம் மில்லர் பற்றிய விக்கி வெளியாகும் நாளை எதிர்ப்பார்த்தேன். தமிழில் இன்று வில்லியம் மில்லர் குறித்து ஒரு பொது வாசகனுக்கு இப்படி ஒரு சித்திரம் இது வரை கிடைத்ததில்லை. ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள்ளாக வெளிவந்திருக்கும் கட்டுரைகள் மிக சுவாரசியமானவை, தொகுப்பும் வேறு தளங்களை விட நேர்த்தியாக இருக்கிறது. உங்களுக்கும் விக்கி குழுவினருக்கும் வாழ்த்துகள்.
வில்லியம் மில்லர் குறித்து நான் ஏதோ மதக் காழ்ப்பில் எழுதிவிட்டதாக எண்ணிய வாசகருக்கு நல்லதொரு பதிலை அளித்திருக்கிறீர்கள். (வில்லியம் மில்லரும் அரவிந்தன் கண்ணையனும் )
ஒரேயொரு கமெண்ட். வாசகர் மதக் காழ்ப்பு பற்றி குறிப்பிட்டதால் என்னை நீங்கள் கிறிஸ்தவர் என்று சுட்டிக் காட்டியதோடு, “தீவிரமான சீர்திருத்தக் கிறிஸ்தவர்” என்று சொல்லி இருக்கிறீர்கள், எந்த அர்த்தத்தில் என்று புரியவில்லை. இவ்விடத்தில் பொது வாசகருக்கு பொது வெளியில் என் அடையாளம் கருதி நான் சொல்லிக் கொள்ளக் கூடியது என் பெற்றோர் இந்து-கிறிஸ்தவ குடும்பம் தான். அது என் தாத்தா-பாட்டிக்கும் கூட பொருந்தும். அரசு சான்றிதழில் கிறிஸ்தவர் என்று தந்தை வழியில் இருந்தாலும் எந்த ஒரு வழியிலும் தீர்க்கமாக செல்லவில்லை. கிறிஸ்தவனாக மட்டுமே அறியப்படுவது ஒரு வகையில் இன்னொரு மரபை நான் மறுதலிப்பதாகும். அப்படிச் செய்ய விரும்பவில்லை. இறை நம்பிக்கையோ, மத வழிபாடோ இன்று என் வாழ்வில் இல்லை என்றே சொல்லலாம். சீர்திருத்த கிறிஸ்தவர் என்று என்னை நான் நினைக்கவில்லை அதற்கான தகுதியுமில்லை. ஒரு வேளை நீங்கள் அதனை புரோட்டெஸ்டெண்ட் என்ற அர்த்தத்தில் சொல்லியிருந்தால் சரி.
இப்போது மில்லர் பற்றி. காலனி ஆட்சிக் காலம், சுதந்திர போராட்டக் காலம் பற்றிய வரலாறுகள் எனக்கு சாதி, மத பாகுபாடின்றி மிகுந்த ஆர்வமூட்டுபவை, அவைக் குறித்து வாசித்தும், விவாதித்தும், எழுதியும் இருக்கிறேன். கடந்த வருடம் ரூபா விஸ்வநாத்தின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது தலித் வரலாறு என்னை மிகவும் ஈர்த்தது. ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ. பாலசுரமணியன் எழுத்துகள் அதற்கு மேலும் உரமூட்டின. தலித் வரலாறு, காலனி ஆட்சிக் காலம் என்று பேசினால் கிறிஸ்தவ வரலாறு பேசாமல் இருக்க முடியாது. மத மாற்றங்கள் குறித்து இன்று இருக்கும் பல புரிதல்கள் பிழையானவை என்று வரலாற்றின் வாசிப்பின் மூலம் தான் தெளிந்தேன். இந்திய திருச்சபை என்பதே தலித் திருச்சபை என்று சொல்லலாம், அப்படியிருக்க அவ்விரண்டு வரலாறும் ஒன்றுடன் ஒன்று இயைந்து அநேக ஆச்சர்யங்கள் கொண்டது.
கிறிஸ்தவக் கல்வி நிலையங்களால் பெரிதும் பயனடைந்தது இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள். முன்பு தலித் இறையியல் பற்றி எழுதிய போது கிறிஸ்தவக் கல்லூரியில் பிராமணர்களுக்கு தனி தங்கும் விடுதி இருந்ததென குறிப்பிட்டிருந்தேன். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், அவர் கிறிஸ்தவர்,வரலாறு சார்ந்தும் எழுதுபவர், அதற்கு ஆதாரமில்லை என்றார். ஆதாரம் இருந்ததால் தான் எழுதினேன் ஆனால் அந்த எழுத்தாளர் போன்ற ஒருவராலேயே அதனை நம்ப முடியவில்லை. மத மாற்றம் குறித்து இருக்கும் மிகப் பெரிய பிழையானப் புரிதல் மிஷனரிகள் தலித்துகளை நாடினார்கள் என்பது. நடந்ததென்னவோ தலைகீழானது. இந்த சிக்கலான வரலாற்றில் கிறிஸ்தவக் கல்வி நிலையங்களுக்கு பெரும் பங்குண்டு. இதனாலெல்லாம் தான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாறு முக்கியமானதாகிறது. கிறிஸ்தவக் கல்லூரிக்கு போட்டியாக ஆரம்பித்த பச்சயப்பன் கல்லூரியிலும் தலித்துகள் ஒதுக்கப்பட்டனர். இவ்விரண்டு பிரதான கல்லூரிகளின் இச்செய்கை அப்போது கல்விப் பெற்று அரசு வேலைகளில் அமர்ந்த இந்தியர்களிடையே தலித்துகள் மிகச் சொற்பமாக இருக்கும் சூழலை உருவாக்கியது. அதன் தாக்கம் இன்றும் சரியாக கணிக்கப்படவில்லை.
வில்லியம் மில்லர் போன்ற ஒரு ஆளுமையின் மனச்சாய்வு ஒரு இனத்தையே பாதிக்கும் போது நாம் அதனை எப்படி கடந்து போக முடியும்? நான் எழுதிய எல்லாமே அடிப்படை ஆதாரங்களோடு தான். ஒவ்வொரு தரப்பையும் சரி பார்த்தே எழுதினேன். மேலும் தயாநந்தன் தன் கட்டுரையில் மில்லருக்கும் தலித்துகளுக்கும் இருந்த தொடர்பை தலித்தியப் பார்வையில் இருந்து தான் எழுதுகிறார். அத்துடந் நான் நிறுத்தியிருந்தால் மில்லரை என்னமோ தலித் விரோதி போல் கட்டமைத்திருக்கலாம். ஆனால் அதையும் தாண்டிச் சென்று ரவி வைத்தீஸ் நூலை வைத்து மில்லர் சைவ மரபுக்கு ஆற்றியப் பணியையும் சேர்த்தே எழுதினேன். அதற்கு காரணம், கிறிஸ்தவக் கல்லூரி அவர்களே சொல்லிக் கொண்டதைப் போலல்லாமல் இன்று பொதுவாக நாம் சொல்லும் இந்து மதத்தை நிந்தனை செய்வதை மட்டுமே செய்யவில்லை என்று எடுத்துக் காட்ட.
எழுதுவது உ.வே.சா.வோ, பாரதியோ, மில்லரோ நான் பொதுவாக கூடிய வரை பலத் தரப்பட்ட கோணங்களையும் தொகுத்து தரவுகள் எங்கு இட்டுச் செல்லுமோ அங்கு செல்வதே வழக்கம். மேலும் தரவுகளின் பட்டியலையும் வெளிப்படையாகவே சொல்லி விடுவேன். யார் வேண்டுமானாலும் சரி பார்த்து என் முடிவுகளை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். உங்கள் பதிலில் நீங்கள் மிகச் சரியாக, “அந்தக் கட்டுரையின் மூலநூல்களாக அரவிந்தன் கண்ணையன் குறிப்பிடும் நூல்களையே உங்கள் தரப்பினர் ஆதாரபூர்வமாக மறுக்கவேண்டும்” என்று சொல்லி இருக்கிறீர்கள்.
தலித் கல்வி, கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள் குறித்து எழும் விவாதங்களில் மில்லரின் விக்கி இனி இன்றியமையாத பேசுப் பொருளாக இருக்கும். என் கட்டுரையை இணைத்ததற்காக சொல்லவில்லை. அதனை இணைக்காமல் ரூபா, தயானந்தனை குறிப்பிட்டே எழுதியிருந்தாலும் பொருந்தும். ஆனால் அந்த சுட்டல்கள் இல்லாமல் இருந்திருந்தால் அந்த விக்கி முழுமைப் பெற்றிருக்காது, நிச்சயம் தலித் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கும்.
மிக்க நன்றி,
அரவிந்தன்
***
அன்புள்ள அரவிந்தன்
வந்து சேர்ந்துவிட்டேன். அற்புதமான ஒரு மாதம். நினைவில் என்றும் நீடிக்கும் அரிய நிகழ்வுகளுடன். உங்களை சந்தித்ததும் நிறைவூட்டியது.
சிலசமயம் நாம் நடுநிலைமையுடனும் புறவயத்தன்மையுடனும் இருந்தால் மட்டும் போதாது, அதை வெளிப்படுத்தவும் நிறுவவும் வேண்டும். தமிழ்ச்சூழலில் அனைவரும் மதம் சார்ந்து கொஞ்சம் உணர்வுமிகை நிலையிலேயே இருக்கிறார்கள்.
சரி, தீவிர என்னும் சொல்லை விலக்கிக் கொள்கிறேன். தமிழில் புரட்டஸ்டண்ட் என்பதற்கு புழக்கத்தில் உள்ள சொல் சீர்திருத்த கிறிஸ்தவம். அது நிலைபெற்று விட்ட சொல். சரியானதா என்பது இனி கேள்வியே அல்ல. கலைச்சொற்கள் அப்படித்தான் உருவாகின்றன.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

