இர்வைன் சந்திப்பு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம்!

2004 இல் முதன் முறையாக உங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதே வேளையில், உங்களை சுற்றி பல சர்ச்சைகளும் இருந்தன. ஒரு படைப்பாளர் ஏன் இவ்வாறு ஈடுபட வேண்டும், எதற்காக விளக்கங்கள் தர வேண்டும் என்ற பல முரண்பாடுகளால், உங்கள் எழுத்துக்களை வாசிப்பதை தவிர்த்தேன். (என் இருபதுகளின் தொடக்க வயது அது). பிறகு பல வருடங்களாய், எதையும் வாசிக்க இயலாத சூழலில் தமிழ் இலக்கியத்தின் எந்த ஒரு நிகழ்வையும் அறியாமல் இருந்தேன்.  கோவிட் காலத்தில் ஒரு முறை கமல் அவர்களின் புத்தக பரிந்துரையில் ‘வெண்முரசு’ பற்றி கூறினார். அன்றே ‘முதற்கனல்’ வாசிக்க ஆரம்பித்தேன்.

“நான் என்னை உருவாக்கிக் கொள்ள எனக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. என் அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், நான் கற்ற நெறிகளும் இணைந்து என்னை வடிக்கின்றன. என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”

இவ்வரிகளில் சிலிர்த்த என் அகத்துக்கு  ‘இவ்வளவு வருடங்களாக எதை இழந்திருந்தேன்’ என சில வாரங்களிலேயே வெண்முரசு பற்றிய ஆவணப்படம் காணும் வாய்ப்பு கிடைத்தது.  பிறகு சில காரணங்களால் தொடர்ந்து வாசிக்க இயவில்லை. மேலும் ஒரு வருடம் கழித்து ஒரு நாள், மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணக்கடல் படித்துக் கொண்டிருந்த வேளையில், எனக்குள் பல சந்தேகங்கள் முளைத்தன. நான் இதை சரியாகப் புரிந்துள்ளேனா? எனக்குள் எழும் உணர்வுகளைச் சரியான முறையில் விளங்கியுள்ளேனா? யாரிடம் இதைப் பற்றி விவாதிப்பது? என்றெல்லாம் பல வினாக்கள். அப்போது தான் ஶ்ரீராம் அவர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு பற்றியச் செய்தி வந்தது. எனக்குள் பல தயக்கங்கள். இதில் கலந்து கொள்ளும் தகுதி எனக்கு உள்ளதா? நிறைய வாசிப்பவர்கள் வருவார்களே, இவர்களினிடையே நான் என்ன உரையாட இயலும்?  இருப்பினும், இந்த வாய்ப்பு மிகச்  சரியாக இந்த தருணத்தில் எப்படி எனக்கு கிடைத்தது? இதை எப்படி எத்தேச்சையான (coincidence) நிகழ்வு என்று நினைப்பது என்ற எண்ணங்களும் மாறி மாறி என்னை அலைகழித்து, இறுதியில், உங்களைச் சந்திக்க வேண்டும், என்ற உந்துதலில் வந்தே விட்டேன்.

முதலில் ஆன்மீகமும், சமுதாயமும் வரலாறுமென  சென்று கொண்டிருந்த உரையாடல்கள், இலக்கியத்தைப் பற்றியும், தமிழ் விக்கி பற்றியும் திரும்பிய தருணத்தில் இரண்டு மணி நேரம் முடிவடைந்து விட்டது. நான் கேட்க நினைத்த எதையுமே கேட்க இயலாமல் தவித்தேன். உங்களிடம் பலர் வந்து பேச, எனக்கென ஒரு சிறு இடைவெளியேனும் கிடைக்காதா என நான் காத்திருந்தேன்.  மேலும் சில உரையாடலுக்குப் பிறகு, அந்த தருணம் வந்தது. You looked very tired. எனினும் கையெழுத்து மட்டுமேனும் பெற்றுக் கொள்ளுவோம் என்று தான் நினைத்தேன். ஆனால், எங்கிருந்து அவ்வளவு சொற்கள் முளைத்தன? என்னை அறியாமலேயே என்னை பாதித்த, என்னுள் பதிந்த உங்கள் எழுத்துக்கள், உணர்வுகள்… தன்னாலே வெளிப்பட தொடங்கின. வால்- தலை பற்றிய என் புரிதல், துரியோதனனிடம் காற்றின் ஆடல் என என் கோணங்கள் அனைத்தும் சரியே என நீங்கள் ஆமோதித்த போது, என்னுள் எழுந்த பேருவகை, எனக்கு மிக புதியதோர் அனுபவம். இந்த உரையாடல் நீண்டு செல்லக் கூடாதா என்ற ஏக்கம், இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமே என்ற அயர்வு என பல்வேறு உணர்வுக் குவியலில் என் அகம் நெகிழ்ந்தும், விரிந்தும், துவண்டும் இன்னும் சொற்களில் சிக்காத எத்தனையோ உணர்வுகளோடும் அன்று நான் வீடு திரும்பினேன்.

இதை நான் நீண்டதொரு தயக்கத்தின் பின்பு உங்களுக்கு அனுப்புகிறேன்.

அன்புடனும், நன்றிகளுடனும்,

வாணி

***

அன்புள்ள வாணி,

பொதுவாக நாம் நமது வாசிப்பு குறித்து எப்போதும் ஐயம் கொண்டிருப்போம், அது நல்லது. ஏனென்றால் மேலும் ஏதோ உள்ளது என்னும் எண்ணமே படைப்புகளை நுணுகி வாசிக்கச் செய்கிறது. ஆனால் அந்த ஐயம் நம்மால் வாசிக்க இயலவில்லையோ என மாறுமென்றால் நாம் தன்னம்பிக்கை இழக்கிறோம். அது வாசிப்பையே குலைப்பதாக ஆகிவிடும்.

நீங்கள் பேச்சில் சொன்ன எல்லா வாசிப்புகளும் மிகச்சிறந்த நுண்பார்வையை காட்டுவனவாக இருந்தன. ஆனால் நீங்கள் ஐயமும் கொண்டிருந்தீர்கள். இலக்கிய வாசிப்புக்கு ஓரளவுக்கு இலக்கிய விவாதமும் இன்றியமையாதது. இணையுள்ளங்களுடனான உரையாடல். அது நம்மை நமக்கே தெளிவாக்கும். அது இல்லாமையின் விளைவே அந்த ஐயம்.

அமெரிக்காவில் ஒவ்வொரு இலக்கியவாசகரையும் சூழ்ந்துள்ள தனிமையை வெல்ல நல்ல இலக்கியக் கூடுகைகள் இன்றியமையாதவை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.