Jeyamohan's Blog, page 772
May 28, 2022
அலைகளென்பவை….
1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக் கண்டிருக்கிறேன். அதில் ‘இங்குதான் குரு ஆத்மானந்தா தன் குருவைக் கண்டடைந்தார்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதில் அந்த வீட்டுக்காரர்கள் தினமும் விளக்கேற்றி வழிபடுவதுண்டு
கிட்டத்தட்ட நான்குவருடம் அனேகமாக தினமும் இருமுறை அந்த நினைவுச்சின்னத்தைப் பார்த்தபடி நான் கடந்துசென்றிருந்தேன். பலமுறை போகிறபோக்கில் அதைப்பற்றிச் சிந்தனை செய்ததுண்டு என்றாலும் ஆத்மானந்தா யாரென அறியமுற்பட்டதில்லை.அந்த வீட்டு உரிமையாளரின் ஏதோ மூதாதையாக இருக்கும் என்ற எண்ணம்தான் என்னிடம் இருந்தது. அது நம்மூரில் வழக்கம்தானே. நமது குடும்பங்களில் எல்லாம் யாரோ சிலர் சாமியாராகச் சென்றபடியேதான் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவு மெல்லமெல்ல ஒரு நினைவுச்சின்னமாக சுருங்கிவிடுகிறது. என் குடும்பத்தில் பல துறவிகள் உண்டு.
அதற்கு பன்னிரண்டு வருடம் முன்பு நான் என் வாழ்க்கையின் விதியை தீர்மானித்த அகத்திருப்புமுனையை அடைந்தேன். அப்போது கேரளத்தில் காசர்கோடு நகரில் தற்காலிகத் தொலைபேசி ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். பெற்றோரின் அவமரணம், ஆன்மீகமான நம்பிக்கை இழப்பு ஆகியவற்றுடன் நுண்மையான நரம்புச்சிக்கல்களும் சேர்ந்துகொள்ள நாட்கள் ஒவ்வொன்றும் லாரியில் அடிபட்டுச் சதைந்த பாம்புபோல இழுத்து இழுத்து நெளிந்து நகர, என் வாழ்க்கையின் துயரம் கப்பிய இருண்ட காலகட்டம் அது.
ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் காசர்கோட்டுக்கு அருகே உள்ள கும்பளா என்ற ஊருக்குச் சென்றேன். காலையின் முதல் ரயிலில் விழுவதற்காக ரயில்பாதையோரமாக சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தருணத்தை நான் என் உக்கிரமான இலக்கியப்படைப்பு ஒன்றிலேயே மீண்டும் சொல்லில் நிகழ்த்திக்காட்ட முடியும். விடிகாலையின் பேரழகில் தற்செயலாக , அல்லது மிக இயல்பாக ஈடுபட்டேன் என்று சொல்லவேண்டும். காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.
வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம். இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் உண்மையில் வாழ்ந்தேனா என்றறிய விடாது நாட்குறிப்புகள் எழுதி வருகிறேன். நான் சோர்ந்திருந்த நாட்கள் மிக அபூர்வம். நம்பிக்கையிழந்த கணங்களே இல்லை. துயரமடைந்த பொழுதுகள் மிகமிகச்சில. அவற்றை உடனே என் எழுத்தின் கலை மூலம் உவகையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இயற்கையுடனான உறவைக் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கணமும் என் உள்ளப்படியே வாழ்கிறேன்.
என் திருப்புமுனை நிகழ்ந்த சிலநாட்களில் எனக்கு ஒரு சோதனை நிகழ்ந்தது. என் வேலையை நான் இழக்க நேர்ந்தது. கையில் ஒரு பைசாகூட சேமிப்பு இல்லை. என் அண்ணாவும் வேலையில்லாமலிருந்தமையால் அவருக்கும் நான் பணம் அனுப்ப வேண்டிய நிலைமை. மோசமான அவமதிப்புகளையும் சந்தித்தேன். ‘இல்லை, துயரமில்லை’ என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் மனதின் ஒரு பகுதி அதை ஏற்காமல் தவித்தது. அப்போது மிக இயல்பாக ஒரு வரி நினைவில் எழுந்தது. ‘Waves are nothing but water, so is the sea’
சிலமாதங்கள் முன்பு ஒரு மலையாள வார இதழின் கட்டுரையில் கவனக்குறைவாக வாசித்த வரி அது. திடீரென அது எனக்குள் பேருருவம் கொண்டுவிட்டது. சில வரிகள் அப்படி நம்மை ஆக்ரமித்து பித்துப்பிடிக்க வைத்துவிடும். நாட்கணக்கில் அந்த வரியைச் சொல்லிக்கொண்டு அலைந்தேன். அது என் ஆன்மாவின் வரியாக ஆகியது. எனக்கான ஆப்த வாக்கியம் அதுவே ‘அலைகளென்பவை நீரன்றி வேறல்ல — கடலும்தான்’
பலவருடங்கள் கழித்து சுந்தர ராமசாமியிடம் அந்தவரியைச் சொன்னேன். சுந்தர ராமசாமி உற்சாகத்துடன் கிட்ட்டத்தட்ட குதித்தெழுந்து ‘என்னை சின்ன வயசில ரொம்ப கவர்ந்த வரி அது. கிருஷ்ணமேனன் சொன்னது… இங்கதான் திருவனந்தபுரத்தில் இருந்தார்… க.நா.சுவுக்கு அவர்தான் பிடித்தமான குரு. அவர்கிட்ட இருந்துதான் க.நா.சு அத்வைதத்தைக் கத்துக்கிட்டார்னு சொல்லணும். ‘பொய்த்தேவு’ ‘ஒருநாள்’ ‘வாழ்ந்தவர் கெட்டால்’ எல்லாத்திலயும் உள்ளோட்டமா இருக்கிற அத்வைதம்கிறது கிருஷ்ண மேனன் சொல்லிக்குடுத்ததுதான்’ என்றார். இந்திய-ஆங்கில எழுத்தாளரான ராஜாராவின் ‘கயிற்றரவு’ ‘காந்தபுரா’ இருநாவல்களும் கிருஷ்ணமேனனின் தத்துவத்தாக்கம் கொண்டவை.
கிருஷ்ண மேனனைப் பார்க்க வரும்போதுதான் க.நா.சு முதன்முறையாக நாகர்கோயிலுக்கு வந்து இளைஞர்களான சுந்தர ராமசாமியையும் கிருஷ்ணன் நம்பியையும் பார்த்திருக்கிறார். கிருஷ்ண மேனன் தன் வீட்டு திண்ணையில் தினமும் ஒருமணி நேரம் வேதாந்த வகுப்புகள் எடுப்பார். அதைக்கேட்க உலகின் பலநாடுகளில் இருந்து அறிஞர்கள் வருவார்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், பால் பிரண்டன், ஹென்ரிச் சிம்மர், ஏ.என்.வைட்ஹெட் என அவரது மாணவர்களில் பல ஐரோப்பிய அறிஞர்கள் உண்டு. அவரைக்காண சி.ஜி.யுங் திருவனந்தபுரம் வந்திருக்கிறார்.
கிருஷ்ண மேனனின் ‘சபையை’ காணச்சென்ற கிருஷ்ணன் நம்பி ‘ஐநா சபை மாதிரி இருக்கு’ என்றார் என்று சுந்தர ராமசாமி சொன்னார். கிருஷ்ண மேனனைப்பற்றிய நினைவுகளை நெடுநாட்கள் கழித்து மீட்டெடுத்து உவகையுடன் பேசிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி. அவரை நான் அப்படி பார்த்த நாட்கள் குறைவு. கிருஷ்ண மேனன் ஒரு துறவி அல்ல, இல்லறத்தில் இருந்தபடி இயல்பாக ஞானி என்ற இடத்தையும் வகித்தார் என்பது தன்னை எப்படி கவர்ந்தது என்று சொன்னார்.
கிருஷ்ணமேனனை பற்றி மேலும் அறிய நான் முயலவில்லை. ஒரு கட்டுரையை பவன்ஸ் ஜர்னலில் வாசித்தேன். அத்வைத சொல்லாடல்களை விட இலக்கியம் தலைக்கேறியிருந்த வருடங்கள். அந்த ஒரே ஒரு சொற்றொடர் வழியாக எனக்கான அனைத்தையும் அவர் அளித்துவிட்டதாக தோன்றியது.
க.நா.சு அக்காலத்தில் ஒரு கருத்தரங்குக்காக திருவனந்தபுரம் வந்தார். க.நா.சுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அப்போது ஆழமான மன வருத்தம் இருந்தது. திருவனந்தபுரத்தில் க.நா.சுவை சந்தித்த சுந்தர ராமசாமி ’கிருஷ்ணமேனனை பாக்க வருவீங்களே…’ என்று கேட்டதும் க.நா.சு மகிழ்ச்சியில் சுந்தர ராமசாமியின் கைகளைப் பற்றிக்கொண்டார் என்றார் சுந்தர ராமசாமி. ‘வீட்டுக்கு வாங்கோ’ என்று சுந்தர ராமசாமி அழைத்ததும் க.நா.சு கூடவே வந்து விட்டார். அவர் முன்பு தங்கிய அதே விடுதியில் தங்க விரும்பினார். அதை இடித்துவிட்டிருந்தார்கள். ஆகவே சுந்தர ராமசாமி வீட்டு மாடியிலேயே தங்கினார்
நான் காசர்கோட்டில் இருந்து தொலைபேசியில் அழைத்தேன். ’க.நா.சு கிட்ட பேசறீங்களா?’ என்றார் சுந்தர ராமசாமி. தொலைபேசியில் சரளமாகப் பேசமுடியவில்லை. க.நா.சுவுக்கு சரியாக காது கேட்கவில்லை. ’நலமா?’ என்றபின் முடித்துக்கொண்டேன். ‘கிருஷ்ண மேனனைப்பத்தித்தான் பேச்சு’ என்றார் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமியை அத்தனை உற்சாகமாக நான் அபூர்வமாகவே கண்டிருந்தேன். தனக்கும் க.நா.சுவுக்குமான மனக்கசப்புகளைப்பற்றி சுந்தர ராமசாமிக்கே ஆழமான கண்டனம் இருந்திருக்கலாம். ‘சிறுமை தீண்டாத மனிதர்’ என்றுதான் எப்போதும் க.நா.சு பற்றி சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்
சில மாதங்கள் கழித்து க.நா.சு மரணமடைந்தார். காலச்சுவடில் சுந்தர ராமசாமி உணர்ச்சிகரமான ஓர் அஞ்சலிக்கட்டுரை எழுதினார். ‘க.நா.சு நட்பும் மதிப்பும்’ என்ற அக்கட்டுரை தமிழின் அஞ்சலிக்கட்டுரைகளில் மிக முக்கியமானது. மிக வெளிப்படையாக, தெளிவான இலக்கிய மதிப்பீடுகளுடன் எழுதப்பட்ட அக்கட்டுரையை வியந்துபாராட்டி உணர்ச்சிகரமாக எஸ்.வி.ராஜதுரை ஒரு கடிதம் எழுதியிருந்ததை சுந்தர ராமசாமி காட்டினார்.
ஆனால் வழக்கம்போல அஞ்சலிக்கட்டுரை என்றால் பட்டையான புகழ்பாடலாக மட்டுமே இருக்கவேண்டும், விமரிசனம் இருக்கக்கூடாது என்ற நோக்கில் அக்கட்டுரை க.நா.சுவை அவதூறு செய்கிறது என்று தஞ்சை பிரகாஷ் போன்றவர்கள் வசைபாடினார்கள். எனக்கு அக்கட்டுரை ஒரு முக்கியமான முன்னுதாரணம். அக்கட்டுரையை போன்றே நான் சுந்தர ராமசாமிக்கான அஞ்சலி நூலை எழுதினேன். சுந்தர ராமசாமியின் கட்டுரை எப்படி க.நா.சுவை கண்ணெதிரே நிறுத்துகிறதோ அப்படியே சுந்தர ராமசாமியை கண்ணெதிரே நிறுத்தும் நூல் ’சுரா நினைவின் நதியில்’ அதற்கும் அதே போல விமரிசனங்கள் வந்தன.
சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையை நான் தட்டச்சுப்பிரதியில்தான் வாசித்தேன். என் கருத்துக்களைச் சொன்னேன். அச்சான பின் வாசிக்கவில்லை. மேலும் பத்து வருடங்கள் கழித்து சுந்தர ராமசாமி அந்தக்கட்டுரையை விரிவாக்கம் செய்து ‘நினைவோடை’ வரிசையில் ‘க.நா.சு’ என்ற நூலாக வெளியிட்டார். அந்நூலில் எனக்கு ஒரு ஆச்சரியம் இருந்தது. சுந்தர ராமசாமி கிருஷ்ண மேனனை பற்றிச் சொல்லும்போது அடைப்புகுறிக்குள் ஆத்மானந்தா என்று சொல்லியிருந்தார்.
அதே ஆத்மானந்தாவா? நான் உடனே பத்மநாபபுரம் சென்று விசாரித்தேன். ஆமாம், அவரேதான். அவர் பலவருடம் பத்மநாபபுரத்தில் பணியாற்றியிருக்கிறார். ஒருவகையில் அவர் என் மானசீக குரு. அவரது நினைவுச்சின்னம் வழியாகத்தான் அவரது ஆப்தவாக்கியத்தை மனதுக்குள் ஓடவிட்டபடி அவரை அறியாமல் நான்குவருடம் சென்றுகொண்டிருந்திருக்கிறேன்.
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2010
முத்துலட்சுமி ராகவன், மற்றும் பெண்கள்
நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பலர் முத்துலட்சுமி ராகவன் என்றால் எவரென்றே தெரியவில்லை என்றனர். ஆனால் நாம் அறியாத ஒரு தளத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் அவர். லட்சக்கணக்கான பெண்கள் இன்று ஒவ்வொரு நாளும் அவரை வாசிக்கிறார்கள்.
முத்துலட்சுமி ராகவன்
முத்துலட்சுமி ராகவன்
பற்றுக பற்று விடற்கு- கடிதம்
அஜிதன்அன்புள்ள ஜெ,
அஜிதன் எழுதிய பற்றுக பற்று விடற்கு என்னும் கட்டுரையை வாசித்தேன். தமிழில் உங்களைப் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. மட்டுமல்ல தமிழில் தத்துவம் சார்ந்து அழகியல் சார்ந்து எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்றும்கூட. நான் அறிந்தவரை அஜிதனின் முதல் கட்டுரை இது.
இப்படி முதல் கட்டுரை அமைவதென்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த மொழி அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது என்பது என்னைப்போல பல ஆண்டுகளாக எழுதுவதற்காக முட்டிமோதிக்கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். ஒன்று அன்றாட அரட்டை மொழி இருக்கும். இல்லாவிட்டால் சராசரி மொழி வந்துவிடும். அது பாடமொழியோ பத்திரிக்கை மொழியோ ஆக இருக்கும். சுயமான சிந்தனையை, அதுவும் சிக்கலான தத்துவசிந்தனையை துல்லியமான சொற்றொடர்களில் மிகுந்த ஓட்டத்துடன் எழுதுவதற்கு வாசித்து வாசித்து அகம் தெளிந்திருக்கவேண்டும். எழுதி எழுதி பழகியிருக்கவேண்டும். மனசுக்குள்ளாவது ஏராளமாக எழுதியிருக்கவேண்டும்.
ஒரு கட்டுரைக்குள் எவ்வளவு அடுக்குகள், நுட்பங்கள் என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. செய்நேர்த்தியை கடந்து கலை எப்படி உருவாகிறது என்று சொல்லும் பிள்ளையார் செய்த கதைப்பகுதி ஒரு அற்புதமான சிறுகதை. கிளாஸிக்குகளின் மூன்று வகை துயரங்கள் பற்றிய பகுதியும் சரி, வாழ்க்கையில் அறியுந்தோறும் வரும் பற்றின்மையை பற்றிய பகுதியும் சரி மிக அசலான சிந்தனைகள்.
உலக தத்துவஞானிகள் மேற்கோள்களாக இல்லாமல் இயல்பான தரப்புகளாக உள்ளே வந்துசெல்கிறார்கள். அற்புதமான குறள்வரியுடன் அவற்றை தொகுத்திருப்பதும் ஆச்சரியம். மேலைத் தத்துவம், இந்திய தத்துவம், நவீன இலக்கியம், பழந்தமிழிலக்கியம் எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாக தொட்டு பறக்கிறது கட்டுரை. அஜிதனுக்கு என் ஆசிகள்
ஆர்.பி.என்
பற்றுக பற்று விடற்குஅமெரிக்கா- கடிதம்
அன்புக்குரிய ஜெ,
“அமெரிக்காவில்” வாசித்தேன். தங்களை போன்றே நியூ யார்க் நகரமும், சுதந்திர தேவியும், பிராட்வே நாடகங்களும் எனக்கும் அணுக்கமானவையே. அந்தப் பெரும் மனிதத் திரளில், மானுடத்தில் திளைக்கும் க்ளிப்பைப் போல இன்ப அனுபவங்கள் எனக்கு மிகச் சிலவே.
இந்தக் கிளர்ச்சியை எல்லா பெருநகரங்களும் ஓரளவுக்கு அளிக்கின்றன. பதினேழு வருடங்கள் விருதுநகரில் வளர்ந்து விட்டு நாங்கள் சென்னைக்கு குடி பெயர்ந்த போது, என் அப்பா என் கையில் ஒரு வரைபடத்தையும், சில பேருந்து எண்களையும் கொடுத்து, கல்லூரிகளுக்குச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி வருவது, கடைகளுக்கு செல்வது போன்ற பணிகளுக்கு அனுப்பி வைப்பார். அந்த எண்ணற்ற மனிதத் திரளில் காலை முதல் மாலை வரை அலைந்து திரிவது அந்த வயதில் பேரானுபவமாக இருந்தது. எத்தனை விதமான மனிதர்கள், ஒலிகள், உணவுகள், காட்சிகள்! ஒரே வாரத்தில் நானும் ஜோதியில் ஐக்கியமாகி, 37G பஸ் ஏறி, “போரோஸ் ஒண்ணு!” என்று சத்தம் போட்டு டிக்கெட் காசை நடத்துனருக்கு கொடுத்தனுப்பி விட்டு, ஒரு முழு சென்னைவாசியாக உணர்ந்தேன். (போரோஸ் – Power House bus stop).
பத்து வருடங்கள் கழித்து, இதே போல் நியூ யார்க் நகரத்தில் திரிந்த போது, ஜனநாயகத்தின் ஊற்று முகத்தில் நின்று கொண்டு என்னை உலகக்குடிமகளாக உணர்தேன்.
ஸ்டீபன் சாண்ட்ஹைமின் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி பிராட்வே பித்து பிடித்து ஒரு ஐந்தாறு வருடங்கள் ஆகி இருக்கும். ஆனால் பிராட்வே செல்லும் வாய்ப்பு அமையவில்லை. ஒரு ஒரு வாரம் நியூ யார்க்கில் தங்கி தினத்துக்கு இரண்டு நாடகங்கள் என்று ஆசை தீர பார்த்து தீர்க்க வேண்டும் என்பது என் மகளுக்கும் எனக்கும் நீண்ட நாள் கனவு.
பதினொன்று வருடங்கள் அட்லாண்டா புறநகரில் வாழ்ந்து விட்டு, மூன்று வருடங்களுக்கு முன் கலிபோர்னியா குடி பெயர்ந்தோம். இப்போது, மானுடத்தின் இரத்தம் கசியும் விளிம்பில் நின்று கொண்டு, காலந்தோறும் நிலைத்து நிற்கும் விழுமியங்களை எதிர்த்து வினா எழுப்பும் இந்த சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி அணுக்கமாகிக்கொண்டிருக்கிறது. உலகின் அத்தனை மூலைகளில் இருந்தும் மக்கள் வந்து சேர்ந்தபடி இருக்கிறார்கள். என் மகளின் 25 குழந்தைகள் கொண்ட வகுப்பில், 13 நாடுகளில் பிறந்து வளர்ந்த பெற்றோர் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு செய்த பொது தெரிந்தது. எல்லோரும் கொண்டு வருவது ஒன்றை. ஏதோ ஒன்றைப் புதிதாக சமைத்துப் பார்த்து விட வேண்டும் என்கிற முனைப்பை. “சரி செய்து பார், உடைத்துப் போடு, பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்கிற சுதந்திரத்தை இவ்வூர் அளிக்கிறது (Knowledge for knowledge’s sake?). தன்பால் உறவில் என்ன தப்பிருக்கிறது, குடும்பம், திருமணம் என்கிற பத்தாம்பசலித்தனம் எல்லாம் எதற்கு, தெருவெங்கும் LSD வெள்ளமாக ஓடினால் என்னாகும், திருட்டு செய்பவர்களைப் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்பது நியாயம்தானா, போதை மருந்து உபயோகிப்பவர்களுக்கு டெண்டு போட்டுக் கொடுத்து, ஊசியும் இலவசமாகக் கொடுத்தால் என்ன, இணையத்திலேயே ஒரு புது நாடு உருவாக்க முடியுமா, என்று அன்றாடமும் பல பரிசோதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த வளமான மண்ணில் பிறந்ததுதான் உலகையே ஆட்டிப் படைக்கும் சக்திகளாக கணினித்துறையும் அது சார்ந்த நிறுவனங்களும் பூதாகரமாக வளர்ந்து நிற்கின்றன.
இங்கு சலனமின்றி நிற்கும் மலைகள் மீது ஓயாமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் பசிபிக் மாசமுத்திரத்தைப் போல மாற்றத்துக்கான ஒரு விசை சளைக்காமல் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. உலகை அழிக்காவிடில் அந்த விசைதான், மானுடத்தை முன்நகர்த்திக் செல்லப் போகிறது, ஆம், வீட்டு வாசலில் யாரவது போதை மயக்கத்தில் படுத்திருக்கிறார்களா என்று பாத்து விட்டு, சைக்கிளை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு சொல்கிறேன், இந்த ஊர் அணுக்கமாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது.
சாரதா
பூன் முகாம், கடிதம்
அன்புள்ள ஜெ,
வணக்கம், நலமறிய ஆவல்.
விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் நானெல்லாம் 2015-ல் அல்லது அதற்கு முன்பே ஊட்டி இலக்கிய முகாமில் கலந்து கொண்டுள்ளேன் என்று பெருமையாக சொல்லும் போதெல்லாம், இந்தியா செல்வதற்கே நாக்குத் தள்ளுகிற நிலையில், இதெல்லாம் நமக்கு அவ்வளவு எளிதாக அமைய வாய்ப்பில்லை என்ற ஏக்க மனநிலையில்தான் முன்னர் எப்போதும் இருந்திருக்கிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜெ, அக்காவுடன் அமெரிக்கா வருகை, இரண்டு முழு நாட்கள் நான் வசிக்கும் வட கரோலினா மாநிலத்தில், இரண்டு முழு நாட்கள் பூனில் முதன் முறையாக அமெரிக்காவில் இலக்கிய முகாம் என்ற தகவல் அறிந்தவுடன், “ஐயோ, சொக்கா. ஆயிரம் பொற்காசுகளும் எனக்கே” என்ற சந்தோசத்தில் மூழ்கி திளைக்கும் நிலையில் இருந்தேன். கண்டிப்பாக இதே மன நிலையில்தான் நண்பர்களும் இருந்திருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வட கரோலினா பூனில் இலக்கிய முகாம் என்பதால், விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் விவேக்கும், நானும் முகாம் ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டோம். இரண்டு, மூன்று வீடுகள் ராஜனும், விவேக்கும் பார்த்துக் கொண்டிருந்தாலும் 50 பேர் வரை தங்குவதற்கான எந்த பிரமாண்ட வீடும் அமையவில்லை. நான் இவர்களுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்து, அலுவலக வேலை முடித்து ஒரு நாள் மாலை வேளை, தேடத் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே அருமையான வீடாக 44-பேர் வரை தங்குவதற்கான வீடு கிடைத்தது. ஐம்பது வரை கூட அனுமதி. உடனே, வீட்டில் இருக்கும் வசதிகளையும், முன்பு தங்கி இருந்தவர்கள் பதிவிட்ட கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் பார்த்து நல்ல வீடுதான் என்று தெரிந்து கொண்டவுடன், விவேக்குக்கு இந்த வீட்டைப் பற்றி இணைய தள முகவரியை உடனே அனுப்பி வைத்தேன்.
விவேக்கிடம் இருந்து ராஜனுக்கு தகவல் பரிமாறப்பட்டு, நல்ல வசதியான வீடு என்று நாங்கள் மூவரும் உறுதி செய்து கொண்டவுடன், ராஜன் உடனே பதிவு செய்து விட்டார்.
அதற்கடுத்து உணவு மற்றும் பொருட்கள் வாங்கும் வேலைக்கான திட்டமிடலை, ஒரு மாதத்துக்கு முன்பே நானும், விவேக்கும் ஆரம்பித்தோம். தங்கும் இடத்திலிருந்து 30 நிமிட கார் பயணத்திலேயே நல்ல வட இந்திய உணவகம் அமைந்திருந்தது மிகவும் வசதியாக இருந்தது. வெள்ளி, சனி இரண்டு நாட்களும் முழு நாள் நிகழ்வுகளாக இருந்ததால், உணவகத்தில் இருந்தே முகாம் வீட்டுக்கு உணவு கொண்டு வர ஏற்பாடு செய்து இருந்தோம். வார இறுதி நாட்களில் இங்கு உணவகங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இரவு உணவு கொண்டு வந்து கொடுக்க முடியாது, வந்து வாங்கிக் கொள்ளவும் என்றார்கள் உணவகத்தில் இருந்து.
திரும்பத் திரும்ப உரிமையாளரிடம் பேசும் பணியை விவேக் பார்த்துக் கொண்டு எல்லா நேரமும் ஸ்நாக்ஸ், டீயும் சேர்த்து கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்து விட்டோம். என்ன மெனு, எவ்வளவு வேண்டும் என்ற திட்டமிடும் வேலையை நான் பார்த்துக் கொண்டேன். நாங்கள் கேட்டதை விட, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு உணவும், தேநீரும், சிற்றுண்டியும் கிடைத்தது.
உணவக நிறுவன உரிமையாளரிடம் பேசும் பணியை விவேக் பார்த்துக் கொண்டார். தங்கும் இடமும், உணவும்,தேநீரும், சிற்றுண்டியும் ஏற்பாடு செய்து விட்டதால், மூன்று நாட்களுக்கான காலை உணவுக்குத் தேவையான மற்ற பொருட்கள் வாங்குவதும், முதல் நாள் இரவு உணவும் முகாம் செல்லும் அன்று வாங்கிக் கொள்ள திட்டமிட்டோம். நிகழ்வு நடுவில் வெளியே யாரும் செல்லத் தேவையில்லாமல் உங்களிடமும், அக்காவிடமும் முழு நேரமும் உரையாட செலவிட வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டாகிவிட்டது.
நல்ல வசதிகளை கொண்ட பெரிய மாளிகை வீடு. பச்சை புல்வெளி சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருந்தது. மாடியில் கண்ணாடியில் இருந்து பார்க்கும்போது கரடிகள் மேய்ந்து கொண்டிருந்த மாதிரி இருந்தது. கண்ணைக் கசக்கி பார்த்தாலும் அப்படித்தான் தோன்றியது எனக்கு. கழுத்தில் மணிகள் கட்டிய கருப்பு நிற மாடுகள்தான். மறு நாள் நண்பர்களுடனான மாலை நடையில் உறுதி செய்து கொண்டேன்.
தூங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வீட்டில் இருந்தன. மாடியில் குளியல் அறை மட்டும் 10-12 பேருக்கு ஒரு குளியல் அறை இருந்தது. அதிகாலை 4:30 மணிக்கெல்லாம் கழிவறையை பயன்படுத்தும் சத்தம் கேட்டது.
மே 12 வியாழன் இரவு உணவை உண்டு கொண்டே உங்களையும், அக்காவையும் சுற்றியே மொத்த நண்பர்கள் குழு சுற்றி அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தோம். அன்றைய நாள் இரவில் எல்லோரும் அவர்களைப் பற்றிய அறிமுக நிகழ்வு இருந்தது. நெகிழ்ச்சியான, வேடிக்கையான பல நினைவுகள் பகிரப்பட்டன. சௌந்தர் அண்ணாவும், ராஜனும் நிகழ்வு விதிகளையும், இருப்பிட விதிகளையும் எடுத்துரைத்தனர். அறிமுகம் முடிந்ததும் எல்லோரும் ஒரு அலைவரிசையில் வந்து விட்டோம் என்று தோன்றியது.
முதல் நாள் நிகழ்வு
மறு நாள் மே 13 வெள்ளி காலையில் தேநீர் அருந்த நீங்கள் உணவு உண்ணும் அறைக்கு வந்தவுடன், பேச்சு மறுபடியும் தொடர்ந்து. வெடிச் சிரிப்பு, சிந்திக்க, அறிவுப் பகிர்வு என்று பல தளங்களில் உரையாடல்கள் இருந்தன.
அது வரை சலசலத்துக் கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம், காலை 9 மணிக்கு சரியாக முதல் நிகழ்வுக்காக தியான மண்டபதில் கூடுவது மாதிரி மொத்த அமைதி. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த முகாமில் கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது என்ற அக்கறையும், ஆர்வமும் நண்பர்கள் முகத்தில்.
நண்பர் பழனி ஜோதி பாடி முதல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடக்க உரையாக கவனச் சிதறல் இல்லாமல் எப்படி உரைகளை கவனிப்பது என்ற சிறு உரையுடன் ஆரம்பிக்கப் பட்டது.
சிறுகதைகள் பரிணாமம் பற்றி முதல் உரை அன்றைய தொடக்கமாக அமைந்தது. சிறுகதைகள் எப்படி தொடங்கப்பட்டது, சிறுகதைகளின் முன்னோடிகள் யார், ஒரு சிறு கதையின் தொடக்கம், மையம், முடிவு எப்படி இருக்க வேண்டும், முடிவில் சிறுகதை தொடங்குவதென்று பல புள்ளிகளைத் தொட்டு உங்கள் அறிமுக உரை இருந்தது.
உரை முடிந்தவுடன் நண்பர்களின் கேள்வி, பதில்கள் நிகழ்வு இருந்தது. எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது என்று சொல்லி ஒரு தடவைக்கு இரு தடவை சொல்லி பார்த்தாலும், சௌந்தர் அண்ணா கேள்வி நேரம் முடிந்து விட்டது என்று சொல்லி விட்டார். தேநீர் இடைவெளியில் உங்களிடம் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
இத்தனை எழுத்தாளர்கள் சிறுகதைகள் எழுதி குவித்தாலும், உடனே மனதில் பதியக் கூடிய சிறுகதைகளை சொல்லச் சொன்னால் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் மட்டும் 2000 சிறு, குறு கதைகள் எழுதப்பட்டன என்றீர்கள். அப்போ சிறுகதை எழுவது என்பது சவாலான எழுத்து வடிவம் தானா என்ற கேள்விக்கு, “ஆமாம் சவால் தான். ஒரு குயவனைப் பற்றி எழுத வேண்டும் என்றால், அவருடைய வாழ்க்கையை காட்ட வேண்டும்”, என்றீர்கள். சிறுகதையில் சொல்லக் கூடாது, காட்ட வேண்டும் என்று பல இடங்களில் நீங்கள் எழுதி, சொன்னதும் நினைவுக்கு வந்தது.
தேநீர் இடைவெளி முடிந்து, நண்பர்கள் ஜெகதீஷ் அசோகமித்திரனின் ‘பிரயாணம்’ , விஜய் சத்தியா ஜெயகாந்தனின் ‘சுய தரிசனம்’, மது திருச்செந்தாழையின் ‘ஆபரணம்’ சிறுகதை வாசிப்பு அனுபவ பகிர்வு நிகழ்வு இருந்தது. அவர்களின் வாசிப்பு அனுபவம் முடிந்தவுடன் நண்பர்களும் அவர்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பிரயாணம் சிறுகதை குறித்து உங்கள் விளக்கம் அந்த சிறுகதையை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க உதவியது. யோக நித்திரையில் புலன் ஒடுக்கதில் குரு இருத்தல் என்பது யோக மரபில் முக்கியமான மரபென்ற விளக்கம் கிடைத்தது.
எங்களுக்கு யோக நித்திரை, புலன் ஒடுக்கத்தில் குரு இருத்தல் என்பதெல்லாம் தெரியாது என்ற போதாமை இருக்கும் போது, இந்த மாதிரி சிறுகதைகளை புரிந்து கொள்வது சவால் தானே என்று தேநீர் இடைவெளியில் கேள்வி கேட்டேன்.” நான் உங்கள் எல்லோரையும் விட ஒரு பத்து வருடம் அதிகம் வாசிக்கிறேன், வாசிக்க வாசிக்க இந்த கதைகள் எல்லாம் புலபட்டு விடும்”, என்றீர்கள். நாங்கள் எல்லாம் அப்படி வாசித்து நிரப்ப கூடிய இடைவெளியா இது?
நிகழ்வுக்கு நடுவில் உணவு வரும்போது மட்டும் நானும் விவேக்கும், தாமுவும் 5 நிமிடம் வேறு வழியில்லாமல் செல்ல நேர்ந்தது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசுவும், விவேக்கும் அறிவியல் புனைவு கதைகள் பற்றி பேசினர். அறிவியல் கதைகள் என்பதாலா, இல்லை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நடந்த நிகழ்வு என்பதா தெரியவில்லை. நண்பர்களின் வாசிப்பு அனுபவ பகிர்வு கொஞ்சம் குறைவாகதான் இருந்தது. அறிவியல் கதைகள் பற்றிய உங்கள் விளக்கத்தோடு அந்த நிகழ்வு முடிந்தது.
நண்பர் பாலாஜி ராஜு, கவிஞர்கள் அபி, தேவதச்சன், மதார் கவிதைகள் பற்றி உரை ஆற்றினார். கவிதைகளின் தரிசனம், அழகியலை எப்படி உணர்ந்து கொள்வது என்ற உங்களின் நீண்ட விளக்கம் இந்த கவிதைகளை புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. அன்றைய இரவும் தூங்குவதற்கு முன் பாலாஜி ராஜு, நான், பழனி ஜோதி கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
தேநீர் இடைவெளிக்குப் பிறகு ராஜனின் வெவ்வேறு இசையை ரசிப்பது எப்படி, ரசிப்பு தன்மையை வளர்த்துக் கொள்வது எப்படி, நல்ல இசை எது என்பது பற்றிய விரிவான உரை இருந்தது. இது ஏற்கனவே விஷ்ணுபுர இலக்கிய வட்ட அமெரிக்க நண்பர்களுக்காக நடத்திய உரையின் மறு நிகழ்வு. ஒரு இசை அமைப்பாளரின் இசையே கேட்டு வளர்ந்த எனக்கு, மாற்று இசையை எப்படி கேட்டு ரசிப்பது என்ற கேள்விக்கு, பூவே உனக்காக படத்தில் வருவது போல ஒரு முறை தான் காதல் மலரும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது என்ற தத்துவ விளக்கம் எனக்கு கிடைத்தது. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் படியான எளிய பதிலிது.
அன்று இரவு உணவுக்குப் பிறகு வெண்முரசு ஆவணப் படம் முகாமில் கலந்து கொண்ட நண்பர்களுக்காக திரையிடப் பட்டது. ஒரு சில நண்பர்கள் முதல் முறையாக பார்த்து, மிக அருமையாக இருந்தது என்று சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
சென்ற ஆண்டு இதே மாதம் வட கரோலினாவில் உள்ள மோரிஸ்வில் திரையரங்கில் அமெரிக்காவில் முதன் முதலாக வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் 95 நண்பர்களை ஒருங்கிணைத்து நிகழ்வு நடந்தது. இந்த வருடம் அமெரிக்காவில் முதன் முறையாக பூனில் இலக்கிய முகாம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட எனக்கு கிடைத்த வாய்ப்பு நல்லூழ் என்று தான் சொல்வேன்.
இரண்டாம் நாள் நிகழ்வு
முதல் அறிமுக அமர்வு தத்துவம். ஷங்கரின் பாடலுடன் தொடக்கம். பழனி ஜோதி, ஷங்கர் பாடல் பாடும்போதும், ஸ்ரீகாந்த் குழல் இசைக்கும் போதும், ஸ்கந்தா, ராஜன் இசையமைக்கும் போது கண்களை மூடிக் கொண்டு தான் ஆழ்ந்து ரசித்து கேட்கிறீர்கள்.
எல்லாத் துறைகளிலும் தத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதும் நிர்வாகவியலில் விதிகளை செயல்படுத்தும் நிலையில் இருப்பவர்களுக்கு தத்துவ பார்வை தேவையில்லை. ஆனால் விதி முறைகளை உருவாக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு தத்துவ பார்வை மிக முக்கியம் என்பது நல்ல புரிதலாக அமைந்தது. மேலை நாட்டு தத்துவத்துக்கும், கீழை நாட்டு தத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன, தொடக்க நிலை தத்துவ நிலை புரிதலுக்கு வாசிக்க வேண்டிய நூல்கள் எவை என்று தத்துவம் பற்றிய அடிப்படை புரிதலுக்கு உங்கள் உரை மிக உதவியாக இருந்தது.
தேநீர் இடைவெளிக்குப் பிறகு ராஜனின் அமெரிக்கா கலாச்சாரத்தைப் புரிந்து கொள்தல் தலைப்பில் ஒரு புனைவு, ஒரு அபுனைவு நூலில் இருந்து பல உதாரணங்களை தொட்டு அமைந்தது அவர் உரை.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ரெமிதாவின் ஆங்கில கவிதைகள் பற்றி உணர்வுபூர்வமாக சிலாகித்து அவர் பேசியது, ஒரு நல்ல ஆங்கில பேராசிரியை அவர்களின் வகுப்பு மாதிரி இருந்தது.
மறுபடியும், தேநீர் இடைவெளிக்குப் பிறகு நண்பர்கள் விசு மற்றும் செந்தில் அவர்களின் வால்மீகி, கம்ப இராமாயண பாடல்கள், விளக்கத்துடன் உரை இருந்தது. கம்ப இராமாயண பாடல்களை பாடும் போது, குரலில் ஏற்ற, இறக்கத்தோடு ஒரே பாடலை திரும்பத் திரும்ப சொல்லும் போது அந்த பாடல் கொடுக்கும் ரசிப்புத்தன்மை, வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தம், விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என்று உங்கள் விளக்கம் உதவியாக இருந்தது.
தேநீர் இடைவெளிக்குப் பிறகு நாவல் நேரம். போரும் அமைதியும் பற்றி அருணா அக்காவின் உரை இருந்தது. தேர்வுக்கு தயாராவது போல, நிகழ்வுக்கு முந்திய இரண்டு, மூன்று நாட்களாக காரில் பயணம் செய்யும் போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரைக்குத் தயாராக வாசித்துக் கொண்டே வந்தார். இந்த நாவலைப் பற்றிய அக்காவின் பார்வையும், நாவலில் அவர் சிலாகித்து பேசிய இடங்களும் மிக அருமையாக இருந்தது.
தேநீர் இடைவெளியில் என்னிடம் இந்த உரை எப்படி இருந்தது என்று அக்கா கேட்டார். கொடுக்கப்பட்ட 15-20 நிமிடங்களில் இவ்வளவு பெரிய நாவலின் சாராம்சத்தை சுருக்கிச் சொல்வது சவால்தான், ஆனால் நாவல் பற்றிய உங்கள் பார்வையும், முக்கியமான இடத்தை தொட்டுச் சென்று பேசியதும் மிக அருமையாக இருந்தது என்றேன். நற்றுணை, ரஷ்ய கலாச்சார மைய 200 வது வருட நிறைவைக் கொண்டாடும் விதமாக, இரண்டு அமைப்பும் இணைந்து நடத்திய நிகழ்வில் கரம்சோவ் சகோதரர்கள் பற்றி அருணா அக்காவின் உரையும் இணைய வழிக் கூட்டத்தில் பங்கு கொண்டு கேட்டுள்ளேன்.
அதன் பிறகு, சௌந்தர் அண்ணாவின் பனி உருகுவதில்லை நூல் பற்றி கலந்துரையாடலை தொடங்கி வைத்தார். அருணா அக்கா தன் நல்ல தோழி என்று பேசினார். பனி உருகுவதில்லை நூலுக்கும், அருணா அக்காவுக்கும் நிறைய வாசக ரசிகர்கள். நூலையும், இந்த நூலில் இருந்து அக்காவின் நினைவுகளையும் சாரதா, மேனகா மற்ற நண்பர்களின் உரை மிக அருமையாக இருந்தது.
சிறு இடைவெளியில் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். மறுபடியும் சிறு தேநீர் இடைவெளி. கடைசி நிகழ்வாக பழனி ஜோதியின் கானல் நதி பற்றி வாசிப்பனுபவம் இருந்தது. அருமையான உரை. இந்த நாவலைப் பற்றி வேறு ஒரு நிகழ்வில் நாங்கள் பேசி விவாதித்து இருக்கிறோம். ஒவ்வொரு உரைக்குப் பின்பும் நண்பர்களின் வாசிப்பு அனுபவ பகிர்தலும், உங்கள் விளக்கமும் சேர்ந்து நாங்கள் இந்த இரண்டு நாள் முகாமில் நாங்கள் அனைவரும் பெற்றுக் கொண்டது, கலை, இலக்கியத்தில் நாங்கள் அடுத்த நிலைக்கு உயர மிகவும் உதவியாக இருந்தது. எங்கள் நல்லூழ்.
இரவு உணவுக்குப்பின், எங்களுக்காக சிறு வெளிச்ச பின்னணியில் நடந்த பேய்க் கதைகள் மறக்க முடியாத தனி அனுபவம்.
முகாமில் இருந்து எல்லோரும் கிளம்பும் முந்தைய நாள் இரவும், ஒரு மணி வரை உங்களுடன் கலந்துரையாடல் இருந்தது.
மே 15 ஞாயிறு அன்று காலை உணவு முடிந்தவுடன், சிற்றுண்டிக்கான உணவு மிஞ்சி இருந்தது. அடுத்த தடவை காலை சிற்றுண்டிக்கு உணவு திட்டமிடுவதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரில் கிளம்பிச் செல்லும் நண்பர்களுக்கு மிஞ்சியிருந்த உணவுப் பொருட்களை பிரித்துக் கொடுத்து விட்டோம்..
மூன்று நாட்களும் பழனி ஜோதி மனைவி மகேஸ்வரி, ராதா, சிஜோ, செந்தில், தாமு, பிரகாசம், வாஷிங்டன் டிசி நண்பர்கள் நிர்மல், ரவி, வேல்முருகன், ஸ்வர்ணா, விஜய் மற்றும் பல நண்பர்களின் உதவியால் உணவக அறையில் எளிதாக ஏற்பாடுகளை, சுத்தம் செய்யும் வேலைகளை சமாளிக்க முடிந்தது.
அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக எங்கள் அறிவுப் பசிக்கு சிறு தீனியாக உங்களுடன் இந்த இரண்டு நாள் சந்திப்பு எங்களுக்கு முழு மன நிறைவாக இருந்தது. நாங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நிறைவு கொள்கிறோம். இந்த இலக்கிய முகாம் வட கரோலினா மாநிலத்தில் பூனில் ஒவ்வொரு வருடமும் தொடரும் என்று நம்புகிறேன்.
என்றும் அன்புடன்
முத்து காளிமுத்து
May 27, 2022
அல்லல் அற்ற வாழ்க்கைகள்
Beata Belanszky Demkoஅன்புள்ள ஜெ,
உங்களுக்கு வரும் கடிதங்களில் சரிபாதியானவை இளவயது மற்றும் நடுவயது நண்பர்களின் கடிதங்களாகவே இருப்பதை கவனிக்க முடிகிறது. அதிலும் வெண்முரசுக்கு பிறகான உங்களுடனான உரையாடல்கள் பெரும்பாலும் கொந்தளிப்பும், பதற்றமும், தத்தளிப்பும் கொண்ட கடிதங்கள் தான் அதிகம். அவற்றிக்கு நீங்கள் ஆற்றும் எதிர்வினை மிகவும் ஆழம்கொண்ட முன்னோர் சொற்களென அவர்களுக்கு அமைவதை கவனித்து வந்திருக்கிறேன் .
இதற்கு மறுபுறம் என, சிலரின் வாழ்வு அமைந்து விடுகிறது, இனிமையும், மனநிறைவும், ஆசிகள் என ஒவ்வொரு நாளும் நிறைவாக தொடங்கி அவ்வண்ணமே முடிகிறது, உச்சியில் பறக்கும் பறவையின் நிழலென, மிகச்சிறிய நேரம் மட்டுமே பதட்டமோ, அசூயையோ ஏற்படுகிறது.
இவ்வளவு ஆசிபெற்ற வாழ்க்கையை ஒருவர் எப்படி கையாள்வது ?இதை ஒருமுறை என் குருநாதர் நிரஞ்சனிடம் கேட்டபோது “சமர்ப்பித் கரோ” {ஆசிகளையும் யாருக்கேனும் சமர்ப்பணம் செய்துவிடு , என்கிற அர்த்தத்தில்} என்று சொன்னார் .
ஒரு ஆசான் என உங்கள் சொல்லில் அதை கேட்க விரும்புகிறேன் .
சௌந்தர்.G
***
அன்புள்ள சௌந்தர்
அனைத்து உகந்த விஷயங்களும் அமைந்த பிழையற்ற வாழ்வு வாய்க்கப்பெற்ற இருவரை கடந்த பல ஆண்டுகளாக நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். நடராஜ குரு அவரது மாணவர் நித்ய சைதன்ய யதி. செல்வந்த குடியில் பிறந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தவை அனைத்துமே சிறந்தவை மட்டுமே. வரலாற்று நாயகர்கள் இளமைப்பருவத்திலேயே அவர்களுக்கு அறிமுகமாகிறார்கள். பேரிலக்கியங்களையும் தத்துவங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்கள் கிடைத்தனர். பெற்றோர் அறிஞர்களாகவும் முன்னுதாரணங்களாகவும் இருந்தனர்.
நடராஜகுரு கேரளத்தின் முதல் ஈழவ பட்டதாரியாகிய டாக்டர் பல்புவின் மகன். மைசூர் சமஸ்தானத்தில் திவான் பேஷ்கராக பணியாற்றியவர் டாக்டர் பல்பு. கேரள சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவர் SNDP அமைப்பின் நிறுவனர். நாராயண குருவுக்கு முதன்மை மாணவராக அமைந்து அவருடைய சமூக பணிகளை முன்னெடுத்தவர். பெரும் செல்வந்தர்கள் பயிலும் பள்ளியில் நடராஜ குரு பயின்றார். பாரிஸிலும் சுவிட்சர்லாந்திலும் உயர்கல்வி கற்றார். ஹென்றி பெர்க்ஸன் போன்ற தத்துவ மேதைகளிடம் மாணவராக அமர்ந்து ஆய்வு செய்தார். நாராயணகுருவை இளஞ்சிறுவனாகவே சந்திக்கவும், நாராயணகுருவுடன் அன்றிருந்த இதழாளர்களான பி.குஞ்ஞிராமன் சமூக சீர்திருத்தவாதியாகிய சகோதரர் ஐயப்பன் கவிஞர் குமாரனாசான் போன்றவர்களை அணுகியறியவும் வாய்ப்பைப்பெற்றார்.
நித்ய சைதன்ய யதி பந்தளம் பணிக்கர்கள் என்னும் புகழ்பெற்ற குடியில் பிறந்தார். தந்தை பந்தளம் ராகவ பணிக்கர் கேரளத்தின் அறியப்பட்ட கற்பனாவாதக் கவிஞர்களுள் ஒருவர். தாய்மாமன் மூலூர் பத்மநாபப் பணிக்கரும் கவிஞர். அவர் அன்னையும் அறிஞர், ஆன்மீக நாட்டம் கொண்டவர். வாழ்நாள் இறுதியில் மகனிடமிருந்தே துறவு பெற்றுக்கொண்டவர். நினைவறியா நாளிலேயே மகாத்மா காந்தியை சந்திக்க வாய்ப்பு அமைந்தது நித்யாவுக்கு. நாராயணகுருவை, ரமண மகரிஷியை அறிமுகம் செய்து கொண்டார். காந்தியின் ஆசிரமத்திலிருந்தார். நடராஜ குருவுடன் அணுகி அருகமர்ந்து வாழ்ந்தார்.
எது அவர்களின் வாழ்க்கையில் குறைவுபடுகிறது என்று பார்த்தால் எத்தனை துழாவினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. எதிர்மறை நிகழ்வுகள் என்ற எதுவுமே அவர் வாழ்க்கையில் உருவாகவில்லை. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து அவர்களை பிரபஞ்ச சக்தி வளர்த்தெடுக்கிறது. அத்தகையோர் தொடர்ந்து மண்ணில் பிறந்தபடி இருக்கிறார்கள். தாகூர் அத்தகையவர். கதே அத்தகையவர். அரவிந்தரும் காந்தியும் கூட ஒருவகையில் அத்தகையவர்களே. நேருவையும் அவ்வாறே கூறமுடியும்.
ஆசி பெற்றவர்கள் எனத்தக்க இவர்களின் வாழ்க்கையின் பொருளென்ன? ஒன்றுதான் அவர்கள் ஆசியளிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல பெரும் பொறுப்பும் அளிக்கப்பட்டவர்கள். உண்மையில் வறுமையில் துயர்களில் உழல்பவர்கள் பெருங்கலைஞர்கள் ஆவார்கள் என்ற ஒரு நம்பிக்கை நமக்கு உண்டு. குறிப்பாக நவீனத்துவ காலகட்டத்தில் அவ்வாறு ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டது. அதற்கு எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது என்றபோதிலும் கூட. அவ்வாறு உருவாக்கியவர்கள் பெரும்பாலும் வெறும் அறிஞர்கள். அவர்கள் அனுதாபத்துடன் குனிந்து நோக்கி கூர்ந்து கவனிக்கத்தக்க பிறழ்வு கொண்டவர்களாக எழுத்தாளர்களை உருவகித்துக் கொண்டார்கள். அல்லது பிறழ்வு கொண்டவர்களை முதன்மை படைப்பாளிகளாக முன்னிறுத்தினார்கள்.
மிகச்சிறந்த உதாரணம் ஜீன் பால் சார்த்தர், ழீன் ரெனே போன்ற ஒரு குற்றவாளிக்கலைஞன் மேல் அவர் கொண்ட ஆர்வம் என்பது கலை மேல் கொண்ட ஆர்வமல்ல. தன்னிலும் முற்றிலும் வேறுபட்ட ஒருவர் மேல் கொண்ட ஆர்வம் மட்டுமே. உண்மையில் பெருங்கலைஞர்களில் பலர் பிறப்பிலேயே வாழ்த்தப்பட்டவர்கள். மிகச்சிறந்த உதாரணம் என்று டால்ஸ்டாயைத்தான் சொல்வேன். அவர்கள் கலை என்பது அவர்கள் அடைந்த தனிப்பட்ட துயரத்திலிருந்து உருவாவதல்ல. மானுடத் துயரங்கள் அனைத்தையும் மலையுச்சியிலிருந்து பார்க்கும் உயரத்தை அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கிறது. ஆகவே அனைத்தையும் பார்த்து முழுமை நோக்கை உருவாக்க, சாராம்சத்தை கண்டடைய அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அமைகிறது.
வறுமையிலும் துயரத்திலும் வாழ்ந்த எழுத்தாளர்கள் பெரும்பாலும் வறுமையையும் துயரத்தையும்தான் எழுதியிருக்கிறார்கள். மிகக் குறைவாகவே அவர்கள் தாங்கள் அடைந்த அனுபவத்தின் எல்லைக்கு அப்பால் செல்ல அவர்களால் முடிந்திருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையையே முன்னுதாரணமாக, ஆய்படு பொருளாக முன்வைக்கும்போது அது ஒருநபரின் வாழ்க்கை மட்டுமே என்னும் எல்லை உருவாகிவிடுகிறது. அது எத்தனை தீவிரமாக இருந்தாலும் அது ஒரு மாதிரி மட்டுமே. அதற்கு கூர்மையும் பிரதிநித்துவமும் இருக்கும் ,அதே நேரம் முழுமையின்மை எனும் குறையும் உண்டு. சிறந்த உதாரணம் காஃப்கா. டால்ஸ்டாயை காஃப்காவுடன் ஒப்பிடும்போது நூறு காஃப்காக்களை உள்ளே வைக்க டால்ஸ்டாயில் இடமிருப்பதை நல்ல வாசகன் உணர முடியும்.
அன்றாட துயர்கள் மற்றும் போராட்டங்கள் ஊழின் அடிகள் அனைத்திலிருந்தும் இயற்கையின் கைகள் பொத்தி சிலரைப் பாதுகாப்பதென்பது மேலும் தீவிரமான முழுமை கூடிய பணிகளை அவர்கள் செய்ய வேண்டுமென்று அது எதிர்பார்ப்பதனால் தான் என்று எடுத்துக்கொள்கிறேன்.
தத்துவவாதிகள் அத்தகைய வாழ்த்தப்பட்ட வாழ்க்கை கொண்டிருப்பது ஒரு தேவை என்றுகூட சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் பிழைப்பு சார்ந்த எளியவற்றில் வீணடிக்கத்தக்க வாழ்க்கையை கொண்டிருந்தால் தத்துவவாதிக்கு அடித்தளமாக அமையவேண்டிய பெரும் கல்வி அவர்களுக்குக் கிடைத்திருக்காது. இருபதாண்டுகளேனும் முழுமையாகவே தன்னை கல்விக்கு அளித்துக்கொண்ட ஒருவராலேயே முதன்மைத் தத்துவவாதியாக ஆக முடியும். போராட்டங்களற்ற, அல்லல்களற்ற, தனிப்பட்ட துயர்களற்ற ஒரு வாழ்க்கையை அது நிபந்தனையாக்குகிறது. முழுமைப்பார்வை கொண்ட பெருங்கலைஞர்கள் தத்துவவாதிக்கு இணையானவர்கள். அவர்களுக்கும் அதுவே தேவை.
இந்திய மெய்ஞான மரபை எடுத்துக்கொண்டால் ஞானிகள் என்று எழுந்த பெரும்பாலானவர்கள் அரசர்களுக்கு நிகரான இளமைப்பருவம் கொண்டவர்கள் என்பது விந்தையல்ல. அவர்கள் போராடி அடைவதற்கும் ,வென்று கொள்வதற்கும் எதுவுமற்று இளமையை கழிக்கிறார்கள். இங்குள்ள அனைத்தும் அருகிருக்கையில் இவையனைத்துக்கும் அப்பாலுள்ளதென்ன என்னும் வினாவை சென்றடைகிறார்கள். தொட்டு எடுக்கும் தொலைவில் இப்புவியில் உள்ள அனைத்தும் இருக்கையில் அனைத்திற்கும் அப்பால் உள்ள மெய்மை ஒன்றை நோக்கி அவர்கள் உள்ளம் நீள்கிறது. இதை ஒவ்வொருவருக்கும் சற்றே நீட்டித்துக்கொள்ளலாம் என்று இன்று தோன்றுகிறது.
இருபதாம் நூற்றாண்டுக்குப்பிறகு உலகம் முதன்மையாக ஒரு மாறுதலை அடைந்தது. வரலாற்றில் என்றுமே அன்றாடத்தில் கடும் போராட்டத்தில் இருக்கும் ஏழைகளும், அவர்களுக்கு மேல் அனைத்தையும் அடைந்து வாழும் பிரபுக்களும் என உலகம் இரண்டாகப் பிரிந்திருந்தது. நடுத்தர வர்க்கம் என்று நாம் சொல்லும் ஒரு பெருந்திரள் தொழில்நுட்ப புரட்சிக்கு பிறகு உருவானது முதலாளித்துவப் பொருளியலின் உருவாக்கம் அவர்கள். இன்னும் கூர்மையாகச் சொல்லப்போனால் இயந்திரங்கள் உருவானபிறகு ,உபரி கூடுதலாக உற்பத்தியாக தொடங்கியபிறகு, பெருமுதலீட்டின் ஒரு பகுதியாக உருவானவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தவர்.
உயர் நடுத்தர வர்க்கம் என்பது ஒருவகையில் மிக மிக நல்வாய்ப்பு கொண்டது. அதற்கு கீழ் நடுத்தர வர்க்கத்தின், அல்லது உழைக்கும் பெருந்திரளின் அன்றாடக் கடும்போராட்டங்கள் ஏதுமில்லை. அதன் பொழுது முழுக்க அதனால் ஈட்டப்பட்டு கையில் உள்ளது. மறுபக்கம் உயர் குடியினரின் முடிவில்லாத சம்பிரதாயங்கள், பெரும் சாம்ராஜ்யங்களை நிர்வாகம் செய்யவேண்டிய சுமைகள், பெரும் செல்வம் மட்டுமே உருவாக்கும் உளத்திரிபுகள் மற்றும் நுகர்வின் வெறிகள் ஆகிய அனைத்திலிருந்தும் உயர் நடுத்தர வர்க்கம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
உயர் நடுத்தர வர்க்கம் இன்று ஒவ்வொரு நாளுமென பெருகிக்கொண்டிருக்கிறது. இப்படிச் சொல்கிறேனே, பிழைப்பின் பொருட்டு எந்தத் தொழிலையும் செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இல்லாதவர்கள், தங்களுக்கு உகந்ததை மட்டுமே செய்தாலும் உணவும் உடையும் உறையுளும் உறவுகளுமாக வாழும் வாய்ப்பு கொண்டவர்கள் உயர் நடுத்தர வர்க்கம் எனலாம்.
அது அல்லலற்ற வாழ்க்கைக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆம் நீங்கள் சொல்வது போல ஆசி அளிக்கப்பட்டது. அது ஒரு பெரும் வாய்ப்பு. ஆனால் அவர்கள் இன்று இரண்டு வகைகளில் தங்களை அழித்துக்கொள்கிறார்கள். ஒன்று தங்களை தங்களுக்கு மேலிருக்கும் உயர் குடிகளைப்போல கற்பனை செய்துகொள்கிறார்கள். அவ்வாறு ஆகிவிட முயல்கிறார்கள். ஆகிவிட்டதாக நடிக்கிறார்கள். அதன்பொருட்டு தங்கள் முழு வாழ்க்கையையுமே செலவிடுகிறார்கள். தங்கள் ஆளுமையை இழுத்து நீட்டி செயற்கையானதாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
சிலநாட்களுக்கு முன் நான் ஒரு திரைப்படத்துறை சார்ந்தவரிடம் சொன்னேன். ”நீங்கள் முயன்று உயர்குடி போல் ஆகவேண்டுமெனில் நீங்கள் உயர்குடியே அல்ல” அவர் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்பேசி வைத்திருந்தார். அந்த செல்பேசிக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் தவணை கட்டிக்கொண்டிருந்தார். நான் சொன்னேன் ”ஒரு கணத்தில் ஒரு சில்லறைத்தொகையை செலவழிப்பது போல பணத்தை வீசி இந்த செல்பேசியை வாங்கும் ஒருவருக்கு மட்டும்தான் இதை வைத்திருக்கும் இயல்பான உரிமை உள்ளது. உழைத்து சேமித்து ஈட்டி இதை வாங்குபவர் இதை வைத்திருக்கத் தகுதி கொண்டவரல்ல. வாள்பயிற்சி இல்லாதவன் வாளைக்கையில் ஏந்துவது போன்றது இது. ஒரு வகை அகங்கார நிறைவு. இதைக் கையில் வைத்திருக்கையில் நீங்கள் வெறுமே நடிக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் உயர்குடி அல்ல என்று. உங்களைப்பார்ப்பவர்களுக்கும் தெரியும், இது உயர் குடியாக நடிபதற்காக நீங்கள் வைத்திருக்கும் ஒரு கருவி மட்டும் தான் என்று. ஆகவே இதன் எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. எல்லாவகையிலும் இது பயனற்றது”.
இன்னொருவகையில் உயர்நடுத்தர வர்க்கம் அன்றாடச் சலிப்பில் தன்னை அழித்துக்கொள்கிறது. கீழ்நடுத்தர வர்க்கம் கடும் உழைப்பில், அன்றாடத்தின் தேடலில் தன்னுடைய பொழுதை முழுமையாக செலவிடும்போது; கையில் எஞ்சியிருக்கும் நீண்ட பொழுதில் என்ன செய்வதென்று தெரியாமல் கேளிக்கைக்கு கொண்டு செல்கிறார்கள் உயர்நடுத்தர குடியினர். கேளிக்கை ஒருவர் தன் அன்றாடத்தின் இடைவெளிகளில் மட்டுமே அனுபவிக்கத்தகுந்தது. கேளிக்கையின்போது உளச்சக்தியும் அறிவு சக்தியும் செலவிடப்படுவதில்லை. அவை ஓய்வில் இருக்கின்றன. மிதமிஞ்சின ஓய்வு மேலும் களைப்பைத்தருகிறது. கேளிக்கையில் ஒரு அளவுக்கு மேல் ஈடுபடுபவர் மிக எளிதில் கேளிக்கை அனைத்திலும் சலிப்படைகிறார். சலிப்படையா கேளிக்கை, ஆடும்தோறும் வேட்கை கூடும் கேளிக்கை என்பது சூதாட்டம் மட்டுமே .ஆகவே அத்திசை நோக்கி செல்கிறார்கள். அது அவரை நிறைவின்மை கொண்டவராக ,பதற்றம் மிக்கவராக ஆக்குகிறது. சூதாட்டம் என்பது ஒரு மாபெரும் வீணடிப்பு -பொழுதை, உள்ளத்தை, வாழ்க்கையை.
இந்த இரு வேறு திரிபு நிலைகளுக்கும் அப்பால் ஓர் உயர்நடுத்தர வர்க்கத்தினன் செய்ய வேண்டியது என்ன ?அவனுக்கு அளிக்கப்பட்ட பொழுது என்பது பொன் போன்றது .பொன் தனக்கென மதிப்பில்லாதது. அதை செலவிடுபவன் வழியாக தன் மதிப்பை ஈட்டிக்கொள்வது. பொன்னை பெரும் கொடையாளன் ஒருவன் பல்லாயிரம் வயிறுகளில் அன்னமாக நிரப்ப முடியும், கலைகளைப் புரக்க முடியும், ஆலயம் எழுப்ப முடியும். நடுத்தர வர்க்கத்தின் பொழுதும் அவ்வாறே. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இந்த பொழுதென்பது ஒரு கொடை என உணர்ந்தார்கள் என்றால் அதை தங்கள் அக ஆழம் எதை நோக்கிச் செலுத்துகிறதோ அதைச் செய்ய செலவிடலாம். கலை, அறிவுத்துறை, சேவை என இம்மானுடத்திற்கு அவர் அளிப்பதற்கு எவ்வளவோ உள்ளது.
மானுடத்திற்கு தன்னிலிருந்து ஒன்றை அளிப்பவன் மட்டுமே தன்னை எண்ணி நிறைவுற முடியும் அவனுக்குள் மட்டுமே புறவுலகு தொடாத ஒரு தன்னிலை இருக்க முடியும். அவன் மட்டுமே குறைவுபடாத வாழ்வொன்றை வாழ்ந்த நிறைவை தன் இறுதிக்காலத்தில் அடையமுடியும். அதன்பொருட்டு தன் வாழ்க்கையை செலவழிப்பவன் அச்செலவை விட பல மடங்கு வேறு ஒரு தளத்தில் ஈட்டிக்கொள்கிறான்.
மானுடத்திற்கு தன் முழுத் தனித்திறனையும் அளிக்கும் பொருட்டே தனக்கு அந்த அல்லல் அற்ற வாழ்க்கையும் சிதறடிக்காத பொழுதும் அளிக்கப்பட்டுள்ளதுன என்று அவன் உணர்வான் எனில் அது எத்தனை பெரிய விடுதலை என்று அவன் அறிவான். தன்னை சுற்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் அன்றாடத்தின் சிக்கல்கள் வாழ்க்கையை வீணடித்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் இருக்கையில் தனக்களிக்கப்பட்டுள்ள நல்வாய்ப்பு முழுமை நோக்கி நிறைவு நோக்கி செல்வதற்குரியது என்று உணர்ந்தான் எனில் அவன் விடுதலை கொள்கிறான்.
ஜெ
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
தமிழகம் இறைநேசச்செல்வர்களின் பெருநிலம். அவர்கள் இப்பண்பாட்டை உருவாக்கிய ஞானிகள். ஊருக்கு ஊர் அவர்களின் நினைவுதிகழுமிடங்கள் உள்ளன. அனைத்தையும் முறையாகப் பதிவுசெய்யவேண்டும் என்னும் கனவு தமிழ் விக்கிக்கு உள்ளது.
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா – தமிழ் விக்கி
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
பெரியசாமித் தூரன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நீங்கள் எழுதிய முன்சுவடுகள் மூலமாகதான் நான் முதல்முறையாக தூரனை கண்டடைந்தேன். இனி தமிழ் விக்கி மூலமாக ஆழம் காண்பேன். நன்றி. இப்பெருமுயற்சி சிறக்க வாழ்த்துக்கள்.
மணிமாறன்
அன்புள்ள ஜெ
பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ் விக்கி விருது அளிக்கும் செய்தி மனநிறைவை அளித்தது. நான் அவருடைய சாதனைகளை முன்னரே அறிந்தவன் அல்ல. ஆனால் இப்போது அறியும்போது அவர் மறக்கப்பட்டது பெரிய அநீதி என்று தோன்றுகிறது. கோவையிலும் ஈரோட்டிலும் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படவேண்டும். அதை அரசு செய்யவில்லை என்றால் மக்கள் செய்யவேண்டும்
செந்தில்வேல்
அன்புள்ள ஜெ
பெரியசாமித் தூரன் பெயரில் விருது வழங்கப்படுவது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இத்தனை பெரிய ஒரு நிகழ்வு பற்றி இருக்கும் ஆழமான அமைதி ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் விக்கி பற்றி குமுறி கொந்தளித்த ஒருவரிடம் இந்த விருது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். ‘நல்ல விஷயம்’ என்று சொல்லி அப்பால் சென்றுவிட்டார்.
இனி ஒவ்வொரு ஆண்டும் தூரன் நினைவுகூரப்ப்படுவார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதகாலம் அவர் இலக்கியச் சூழலில் பேசப்படுவார். கோவையில் நாங்கள் செய்திருக்கவேண்டிய முன்முயற்சி. நன்றி
ஆர்.கே.அருணாசலம்
பூன் முகாம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
“திருவிழாவில் இணைந்துகொள்வதற்கு மிக உகந்த வழி என்பது முதலில் திருவிழாவிற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் திரட்டிக்கொள்வதுதான்” – இது திரள் கட்டுரையில் திருவிழாக்களில் கரைந்து போவது பற்றி நீங்கள் கூறியது. உங்கள் அமெரிக்கப் பயணத்திட்டமும்,பூன் காவிய முகாமும் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருவிழா மனநிலையில் இருந்த எனக்கு, மேற்சொன்ன வாக்கியமே முகாமிற்கு தயார்படுத்திக் கொள்ள உதவியது.
கடந்த பன்னிரண்டு வருடங்களாக உங்களைத் தொடர்ந்து வாசித்து வந்த போதும், சில கடிதங்கள், ஜூம் உரையாடல்கள் தாண்டி, உங்களை நேரில் சந்தித்தது இல்லை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் சென்ற ஆண்டே இணைந்திருந்த போதும், கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் வசிக்கும் ஓரிருவரைத் தவிர, முகாமிற்கு வரும் வேறு எந்த நண்பர்களையும் நேரில் சந்தித்தது இல்லை. இந்தத் தயக்கங்களும், என் எளிய வாசிப்பு குறித்த சந்தேகங்களும் ஒரு புறம் இருந்தாலும், பெரும் ஆளுமைகளை நேரில் சென்று சந்திக்க நாம் எளிய மனிதர்களாய் இருப்பது தடையில்லை; ஆணவமின்றி நம்மை முன்வைத்தாலே போதும் என்ற உங்கள் அறிவுரையை நினைவில் கொண்டே, பூன் முகாமிற்கு விண்ணப்பித்தேன்.
அந்த ஓரிரு நாட்கள் தாமதத்திலேயே அனைத்து இடங்களும் பூர்த்தியாகி, காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்று விட்டேன். அடுத்த ஒரு வாரமும், தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவன் போல் தினமும் ஆஸ்டின் சௌந்தர் அவர்களின் அறிவிப்புக்கு காத்திருந்தேன். நல்லவேளையாகக் கூடுதலாக ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டமையால், எனக்கும் முகாமிற்கு வர அனுமதி கிடைத்தது. அடுத்த சில நாட்களிலேயே முகாமிற்கு வரும் முன்னர் படித்து விட்டு வரவேண்டிய நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் அடங்கிய “வீட்டுப் பாடங்கள்” பட்டியல், தலைமை ஆசிரியர் சௌந்தரின் கண்டிப்பான அறிவிப்புடன் வெளியானது :-).
அந்த விரிவான தயாரிப்பின் பயனை, பூனில் நடந்த ஒவ்வொரு அமர்விலும் உணர்ந்தேன்.
பூன் சந்திப்பின் திட்டமிட்ட அமர்வுகள் மே 13 & 14 – இரண்டு நாட்கள் தான் எனினும், முதல் நாள் இரவில் உங்களுடனும், அருண்மொழி நங்கை அவர்களுடனும் நடந்த அறிமுகப்படலத்தில் இருந்தே கவனிக்கவும் கற்று கொள்ளவும் தொடங்கி இருந்தேன். இதுவே நான் பங்கேற்கும் முதல் இலக்கியச் சந்திப்பு என்பதனாலும், என் தெளிவின்மையாலும் , பெரும்பாலும் அமைதியாகவே கவனித்து வந்தேன்.
அந்த நான்கு நாட்களில் எனக்கு கிடைத்தது என்ன என்று திட்டவட்டமாக வரையறுத்து கூறமுடியவில்லை. அதை எண்ணும் ஒவ்வொருமுறையும் முன்பு தோன்றாத ஒன்றை புதிதாய்க் கண்டடைகிறேன். கடைசி நாளன்று விமானநிலையத்திற்குச் செல்லும் வழியிலும், காத்திருக்கும்போதும் பாஸ்டன் பாலா அவர்கள் இந்த கேள்வியைக் கேட்கையில், இருமுறையும் வேறு வேறு பதில்களைக் கூறியதை நினைவுகூர்கிறேன். ஆகவே நான் இந்த சந்திப்பில் கற்றுக்கொண்ட, இனி தொடர்ந்து செய்ய விழையும் சில அடிப்படை விஷயங்களை மட்டும் இங்கு பட்டியலிடுகிறேன்.
வாசிப்பு, செயல் எதுவாயினும் தீவிரமான மனநிலை தேவை. ஒப்பேற்றுவதற்காக எதையும் செய்யக்கூடாது. தீவிரமான கவனிப்புக்குத் தடையாக இருப்பது மற்றும் தவிர்க்கப்பட வேண்டியது – Distrcaction Fallacy, Association Fallacy & Counter Fallacy.அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன.இலக்கியம் என்பதே மறதிக்கு எதிரான எதிர்ப்புச் செயல்பாடு தான்.பெற்றோராக நமது கடமை, நமது குழந்தைகளுக்கு ஆகச்சிறந்த தூண்டுகோலாக இருப்பதே. அதற்கு பொருளியல் சார்ந்த வெற்றி மட்டும் உதவாது.ஒரு தீவிர அறிவுச்செயல்பாட்டிற்கான கூடுகையில் ‘Party Talk’ எனப்படும் உலகியல் கவலைகள் தொடர்பான கேள்விகளை ஒரு போதும் கேட்கக்கூடாது. அது அங்கு இருக்கும் அனைவரது நேரத்தையும் வீணடிக்கும் செயல்.இரு நாட்கள் அமர்வுகளில் கற்றுக்கொண்டதற்கு இணையாகவே, உங்களது தனி உரையாடல்களிலும், நண்பர்களுடான தனி உரையாடல்களிலும், நடைப்பயணங்களிலும் ஏதாவது கிடைத்து கொண்டே இருந்தது. கடைசி நாளன்று இரவு நீங்கள் சொன்ன பேய்க்கதைகளும், ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் சாகசங்களும் நேரம் சென்றதையே மறக்கச்செய்தன. வைக்கம் முகமது பஷீரின் கதைகளில் இடம்பெற்ற அவரது நண்பர்களும் உறவினர்களும் வரலாற்றுக் கதாப்பாத்திரமாக ஆகி விட்டதைப்போல, திரு.கிருஷ்ணன் அவர்களும் உங்கள் எழுத்தின் மூலம் வரலாற்றில் நிலைபெற்று விட்டார்.
சார்லட் விமான நிலையத்தில் இருந்து வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும், புனிதர் சிஜோவின் காரில் நிகழ்ந்த உரையாடல்கள் என்றும் இனிய நினைவாக நீடித்து இருக்கும்.
சொல்வனம் குறித்த தனது அனுபவங்களை பாஸ்டன் பாலாவும், தான் மொழிபெயர்த்த நாவல் பற்றிய அனுபவங்களை ஹூஸ்டன் சிவாவும் அந்த பயணத்தின் போது பகிர்ந்துகொண்டனர்.
முகாம் அறிவிப்பில் தொடங்கி கடைசி நாளன்று அனைவரும் பத்திரமாக வீடு திரும்பியதை உறுதிப்படுத்தும் வாட்ஸப் செய்தி வரை ஒவ்வொன்றையும் கச்சிதமாகத் திட்டமிட்டு, வெற்றிகரமாக நடத்திக்காட்டிய சௌந்தர், ராஜன், விவேக், முத்து மற்றும் அனைத்து நண்பர்களின் உழைப்பும் அசாத்தியமானது. இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
வாழ்வில் ஒரு உச்ச கணத்தை உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும், நன்றியும்.
-சாரதி
எழுதுக.. விலையில்லா ஐந்நூறு பிரதிகள்.

இதில் ஒரு பிரதியை தன்னறத்திற்கு எழுதிப் பெற்றேன். இதற்குமுன் தன் மீட்சி பிரதியொன்றை விலையுடன் பெற்றேன். அழகான வடிவமைப்பு நூல்கள். நூல்களின் கட்டமைப்பும் வாசிக்கத் தூண்டும் என்பதை மெய்பிக்கும் பணி.. தன்னறம் அமைப்பினருக்கு என் மரியாதையும் அன்பும்..
தன்மீட்சியை ஒருமுறை வாசித்து, பிறகு மறுவாசிப்பை ரேண்டமாக செய்தேன். இந்நூல் கிடைக்கும் முன்னே இதன் பல பகுதிகளை ஜெமோ இணையத்தில் வாசித்திருந்தேன். இந்நூல் வாசிப்பு பகிர்தலில் என்னையும் தன்னறம் மதுரை நிகழ்விற்காகத் தேர்ந்தெடுத்திருந்தது.. கோவிட் அச்சம், உடல்நலம் கருதி வர இயலவில்லை.. ஜெமோ வின் அருகாமைக்கான ஒரு வாய்ப்பை இழந்தேன்..
எழுதுக வாசித்தேன்.. இதிலும் பல ஜெமோ இணையக் கொடையால் முன்பே வாசித்துவிட்டேன்.. வாசிக்காதப் பகுதிகளை தேர்ந்து ஒருமுறை வாசித்து விட்டேன்.
எழுதுதல், வாசித்தல் இவைகளில் எதிர்கொள்ளும் நுண்ணியத் தடைகளை அநாயசமாக உடைக்கிறது இந்நூல். ஒரு எளியப் பயிற்சி மூலம் வாழ்நாளெல்லாம் துன்புறும் பிரச்சனையிலிருந்து ஒருவர் வெளிவந்திடலாம் என்பார் பயிற்சித் தொடர்பான கட்டுரையொன்றில் ஜெமோ. அத்தகையப் பயிற்சி போன்ற ஒரு நல்வாய்ப்பு இந்த நூல்.. தன்மீட்சியும் அப்படியே.
எனது தோழமை வட்டத்தில் அனுபவக் குறிப்புகள் எழுதி அதை மின்னூலாக வெளியிட்டு, தற்போது சிறுகதை எழுதும் முயற்சியில் உள்ள ஒருவருக்கு எழுதுக நூலைப் பற்றி கூறியுள்ளேன்… வாசித்து விட்டு அவருக்கு வாசிக்க கொடுக்க உள்ளேன். இது தன்னறத்தின் சேவை நிறைக் கோரிக்கையும் கூட..
தன்மீட்சி நூல் வாசித்த போது, நம் அருகிலேயே வாசிப்பவர்களிலும் பலர் இந்நூல் வாசிக்காது உள்ளனரே என்றொரு ஆதங்கம் வந்தது.. எழுதுக வாசித்த போதும் அதே ஆதங்கம் எழுகிறது.. வாசிப்பு பற்றி பேசுவோர்களிடமெல்லாம் இந்நூல்கள் தொடர்பான செய்திகள் இடம் பெறுகின்றன என்பதை முழு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூல்களில் தன்னறம் தரும் முன்னுரைகள் சுவாரஸ்யமானவை. வார்த்தையைக் கோர்த்து அவர்கள் பயன்படுத்தும் லாவகம், அதே நேரம் சொல்ல வந்ததை அதிகபட்சமாக வாசிப்பவருக்கு கடத்துவது அருமை.
நூலிலிருந்து ஒரு செய்தி.. தாங்கள் எழுதுவது இலக்கிய நயம் இல்லாமல் ஆகிடுமோ என அஞ்சுவோர் உண்டு. எழுத்திற்கு முதன்மை தேவை உண்மையே.. சொல்ல வருவதை உண்மையோடு பாசாங்கின்றி சொல்லுவது முக்கியம் என எழுதுக கூறுகிறது.. இந்த வகையில் எழுதப்பட்ட நூல்கள் பல , இலக்கியக் குணம் கூடிய நூல்கள் போல காலம் கடந்து நிற்கின்றன என கூறுகிறது.. இப்படி நிறைய தெறிப்புகள்..
எழுத முனைவோர், ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் மேலும் வாசிப்பில் ஆர்வமும் அதே நேரம் தடுமாற்றமும் உள்ளவர்களுக்கு எழுதுக நூல் உற்றத் தோழன்
முத்தரசு
வேதாரண்யம்
நூல் : “எழுதுக”
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி
அலைபேசி : 9843870059
www. thannaram.in
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

