Jeyamohan's Blog, page 774
May 25, 2022
பூன் இலக்கிய முகாம், கடிதம்
பூன் இலக்கிய முகாம் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய முகாம். எனக்கு புதிய நல்ல அனுபவமாக இருந்தது.
எந்த செயலிலும் எப்படி கவனிப்பது, எப்படி தொகுத்துக் கொள்வது, அப்படி தொகுப்பதன் வழி அடையும் இடம் என்ன போன்ற கேள்விகளுக்கான முக்கிய அடிப்படை விதிகள் முதல் நாள் முகாமில் சொல்லி ஆரம்பிக்கப்பட்டது.
முகாமின் துவக்கத்தில் இருந்த சிறுகதை பற்றிய உங்கள் உரை, முகாமில் சிறுகதை வாசிப்பு நிகழ்வு நடந்த பொழுது அஸ்திவாரமாக இருந்தது.
முதல் நாள் நிகழ்வில் சிறுகதை, அறிவியல் புனைவு, கவிதை, இசையை ரசிப்பது ஆகிய இலக்கிய அனுபவங்கள் வேறு வேறு வாசிப்பு, கேள்வி பதில்கள் வழியாக முகாமில் முன் வைக்கப்பட்டது. முதன் முதலாக முறையான இலக்கிய முகாமை காணும் எனக்கு பல தரப்பட்ட வாசிப்புகள், கேள்வி பதில்கள், விளக்கங்கள் வழியாக முன்னகரும் இலக்கிய அணுகுமுறை வேறு உலகமாக இருந்தது. நல்ல இலக்கிய வாசிப்புள்ள நண்பர்கள், அவர்களது தயாரிப்பு, கேள்விகளை உருவாக்கும் முறை, பதில் சொல்லும் முறை ஆகியவை எனக்கு எவ்வளவு இன்னமும் வாசிக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக இருந்தது. நேரம் மட்டுறுத்தப்படும் விதம், நிகழ்வினை தொடங்கும் விதம் எல்லாம் சிறப்பாக இருந்தது.
நிகழ்வுக்கு வெளியே பல நண்பர்கள் அறிமுகம், இனிமையான பாடல்கள், புல்லாங்குழல் இசை, சுவையான உணவு, அருமையான மலை சாரல் இடம், உங்களிடம் கேள்வி கேட்க வாய்ப்பு என இரண்டு நாட்களும் உற்சாகமாக சென்றது.
நிகழ்வுக்கு வெளியே நடந்த உரையாடல்களின் போது நவீன உலகியல் குறித்த பேச்சுக்களின் போது இந்திய மரபின் கலைச்சொற்கள் வழியாக பதில் அளித்தீர்கள். சரளமான, சுவையான, செறிவான பதில்கள். இது பெரும் திறப்பினை கண் முன் நிறுத்தியது. முதலில் இந்திய மரபின் கலைச்சொற்கள் நேரடி பேச்சில் இவ்வளவு பயன்படுத்த முடியும் என்பதே அனுபவத்தில் இனிமையானதாக, புதுமையாக இருந்தது. இந்த உலகை காணும் கண்ணாடியாக சொற்களும், அதன் அர்த்தமும் இருக்கின்றது, அதுதான் அனுபவத்தினை உருவாக்குகின்றது. என்னை போன்றோர் சொற்களின் போதாமை காரணமாக மிக குறைவான சொற்களை கொண்டுதான் இந்த உலகியல் அனுபவத்தினை நோக்கி செல்ல முடிகின்றது. அதன் காரணமாக அனுபவங்களும் ஒரு கூண்டுக்குள்தான் இருக்கின்றன. மரபின் சொற்களை வாசித்தாலும் அதை அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் அளவுக்கு பக்குவமில்லை, தெளிவில்லை. உங்கள் பதில்களில் வந்த கலைச்சொற்கள் அந்த போதாமையின் மீது வெளிச்சம் கொண்டு வந்தது. மரபின் கலைச்சொற்கள் பொது மைய நீரோட்டத்துக்கு வருவது பரபரப்பினை தருகின்றது. இரண்டாம் நாள் நிகழ்வு உலக தத்துவம் பற்றிய உரையுடன் துவங்கியது. வாசிக்க வேண்டிய புத்தங்களையும் பரிந்துரைத்தீர்கள்.
அமெரிக்க பொருளாதார பின்னனி மீதான அபுனைவு, அமெரிக்க கலாச்சாரம் மீதான தன்வரலாற்று அபுனைவு, இந்திய காவிய மரபு, ஆங்கில கவிதை, நாவல்கள், கீழ்தஞ்சையில் வந்த தன்வரலாறு அபுனைவு என இரண்டாம் நாள் நிகழ்வு சென்றது. இந்திய காவிய மரபை வாசிக்கும்+அர்த்தப்படுத்தும் விதம், ஆங்கில கவிதையில் கற்பனாவாதத்தின் இடம், அது உருவாக்கிய உலகம், அமெரிக்க அபுனைவு நூல்களில் சுட்டப்படும் கலாச்சார விழுமியங்கள், அதன் பின்னனி, நாவல்கள் வாசிக்கப்படும் விதம், அதன் சுவையை அடையும் முறை, அதன் விடுப்பட்ட இடங்கள், கீழ்தஞ்சையின் பின்புலம், அதன் பின்னனியில் உருவான தன்வரலாற்று நூலின் மீதான ஆசிரியருடனான உரையாடல் என விரிவாக நிகழ்வுகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இரண்டாம் நிகழ்வு முடிந்த பின்னர் இரவு 1 மணி வரை நண்பர்களுடன் பேச்சு சென்றது. பல வரலாற்று தகவல்கள் பற்றி நண்பர்களும், நீங்களும் பேசியதை கேட்க முடிந்தது. அதன் பின்னர் நீங்கள் சொன்ன பேய்க் கதைகள் அபாரம். சொல்லப்படும் விதத்தில்தான் கதைக்குள் பயமும், திகிலும் இருந்தது. சிரிப்பும், கேலியும் கொண்ட இரவாக கழிந்தது.
வாழ்வில் முதல் முறையாக இத்தனை இலக்கிய பற்றும், அதில் திறனும் உடைய நண்பர்களுடன் முழு நாளை செலவிட வாய்ப்பு கிடைத்தது. மலைப்புடனும், இனிமையுடனும் சென்றது. உங்கள் வருகையால் மட்டுமே இது சாத்தியமானது.
ஆசிரியரின் “செயலே விடுதலை” என்னும் வரி எனக்கு ஒரு மந்திரம் போல கூட இருக்கின்றது. கஷ்ட நஷ்டம், அன்றாடத்தில் என கூட தக்க வைத்துக் கொள்ள முயன்று கொண்டுள்ளேன். எனக்கு இந்த இலக்கிய முகாம் இலக்கியத்தின் செயல், இலக்கியத்தில் வாசகன் விடுதலையாக செயல்படுபடுவது என்பது பற்றியெல்லாம் பல காட்சிகளை காண வாய்ப்பளித்தது , நல்லதொரு அனுபவம்.மிக்க நன்றி.
அன்புடன்
நிர்மல்
புதுவை வெண்முரசு கூடுகை
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 49 வது கூடுகை 28.05.2022 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது .
நிகழ்வின் பேசுபகுதிகள் குறித்து நண்பர் தாமரைக்கண்ணன் உரையாடுவார் . நிகழ்வில் பங்கு
கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்” .
பகுதி 1 : பொன்னொளிர் நாக்கு
1 முதல் 3 வரை
பகுதி 2 : ஆழ்கடல் பாவை
1 முதல் 3 வரை
பகுதி 3 : பிடியின் காலடிகள்
1 முதல் 4 வரை
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001.
தொடர்பிற்கு:-
9943951908 ; 9843010306
கோவை சொல்முகம் சந்திப்பு
சு.வேணுகோபால்நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 17-வது வெண்முரசு கூடுகை, வரும் 29-5-2022 ,ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஆறாவது படைப்பான “வெண்முகில் நகரம்” நாவலின், 13 முதல் 15 வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
பகடையின் எண்கள்நிழல் வண்ணங்கள்யானை அடிஇதைத் தொடர்ந்து, பிற நாவல் வரிசையில் திரு. சு. வேணுகோபால் அவர்களின் ‘நுண்வெளி கிரகணங்கள்’ நாவலின் மீது கலந்துரையாடல் நிகழும்.
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 29-05-22, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
முதற்கனல் வாசிப்பனுபவம்
நிருதன் நாவலில் மிகச்சிறிய பாத்திரம், ஆனால் அம்பையை கொற்றவை ஆகும் முன்பே தேவியாக கண்டவர், அம்பையிடன் உங்களுக்கு அநீதி இழைத்தவர் முன்பு சங்கறுத்து சாகுகிறேன் என்று சொன்னவர், அம்பையை காண பித்தனாக காத்திருந்தவர், அம்பை தீக்குள் இறங்கிய போது துக்கம் தாளாமல் மனம் உடைந்தவர். ஒரு கதையின் மைய இழைக்குள் வரவே வாய்ப்பில்லாத ஒரு படகோட்டி, தன் செயலால் மைய கதாபாத்திரங்களை விட உயர்ந்து நிற்கிறார்.
May 24, 2022
சமூக ஏற்பும் நானும்
ஜெ,
உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எந்த வாசகனும் படிக்காவிட்டாலும் நான் இப்படி தான் எழுதுவேன் என்றும் எழுத்து என்னுடைய வெளிப்பாடு மட்டுமே என்று நீங்கள் பர்வீன் பேட்டியில் சொன்னதை பார்த்தேன்.
இருந்தும் ஒரு பெரும் செயலை செய்தும் எந்த பெரிய அங்கீகாரம் இல்லாமல் இருக்க எப்படி முடிகிறது? தொடர்ந்து இயங்க அல்லது மகிழ்ச்சி கொடுக்க அங்கீகாரம் உதவாதா ?
வெண்முரசு போன்ற மாபெரும் ஆக்கத்திற்கு (அனைத்து பாகத்தையும் படித்தேன் என்ற முறையில்) இந்த சமகால சமூகம் சரியான அங்கீகாரம் அல்லது பாராட்டு தரவில்லை என்ற மனக்குறை இன்றும் எனக்கு உண்டு. இந்த அறிவு குருட்டு மக்களுக்காக எதற்கு எழுத வேண்டும் என்று ஒரு நாள் கூட தோன்றவில்லையா ஜெ ?
மோனியர் வில்லியம்ஸ் போல் நீங்கள் வாழ உறுதி கொண்டாலும், எதையும் காணா இந்த சமூகம் மேல் என்றும் உங்களுக்கு கோபம் வந்ததில்லையா ?
காலம் உங்களுக்கான மாபெரும்இடத்தை வழங்குவது உறுதி, இருந்தும் இந்த சமகால மௌனம் எங்களை போல் வாசகர்களை கோபம் கொள்ள செய்கிறது. நல்லதோர் வீணை செய்து நீங்கள் தந்தும் இந்த சமூகம் புழுதியில் போட்டு கொள்கிறதே என்று .
அன்பும் நன்றியுடன்
கோபிநாத்
சென்னை
***
அன்புள்ள கோபிநாத்,
செயல் எனக்கு என்னை நிறைவுபடுத்திக் கொள்ளும் ஒரு பயணம். தவம் என நான் சொல்லிக்கொள்வது வெறுமே அல்ல. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அதுதான். சற்றும் குறைந்தது அல்ல. நான் இதன் வழியாக என்னை கண்டடைகிறேன். என்னை ஆழமாக்கிக் கொள்கிறேன். மேலும் மேலும் தீவிரமாக, நுட்பமாக வாழ்கிறேன். அந்நிறைவே எழுதுவதன் மூலம் நான் அடையும் பயன். வேறு எதுவும் ஒரு பொருட்டு அல்ல. ஆகவே எந்த வகையிலும் எந்த ஏற்பும், எந்த பரிசும், எதுவும் பெரிதாகப் படவில்லை.
ஒருவேளை நான் ஏற்பின் வழியாக மயங்கி எழுதமுடியாதவன் ஆனால், ஏற்பின்மையால் உளம் வெறுத்து எழுதமுடியாதவன் ஆனால், என் வாழ்க்கை என்னவாக இருக்கும்? எவ்வளவு வெறுமையாக, எத்தனை அர்த்தமற்றதாக இருக்கும். எதன்பொருட்டும் என் எழுத்து மறைந்துவிடக்கூடாதென்பதை காட்டிலும் நான் கருதுவதொன்றும் இல்லை. ஆகவேதான் எழுதியதுமே எழுத்தில் இருந்து விலகிவிடுகிறேன். அடுத்ததுக்குச் சென்றுவிடுகிறேன். வெண்முரசு எழுதிவிட்டு எதிர்வினைகளை, விருதுகளை கருதிக்கொண்டிருந்தால் அடுத்தகட்டக் கதைகளுக்குச் சென்றிருக்க முடியாது. அவை அளித்த களியாட்டையும் நிறைவையும் அடைந்திருக்க முடியாது. அந்த நோய்க்காலத்தில் நானும் நோயுற்றுச் சுருண்டு அமர்ந்திருப்பேன்.
நான் செயல்புரியும் அனைவருக்கும் சொல்வது இதுவே. செயலின் பயன் என்பது அதைச்செய்யும் நிறைவுதான். அதன் வழியாகப் பொருள் கொள்ளும் வாழ்வுதான். அதை அளித்து பதிலுக்கு நாம் பெற்றுக்கொள்ளும் ஒன்றும் இல்லை. நாம் இங்கே எதன்பொருட்டும் செயலாற்றக்கூடாது. நம் இயல்பினால் செயலாற்றவேண்டும், எது நமக்கு நிறைவளிக்கிறதோ அதன்பொருட்டு.
இலக்கிய ஆக்கங்கள் அனைவருக்கும் உரியவை அல்ல. எந்த கிளாஸிக் ஆனாலும் வாசிக்கும் அனைவருக்கும் அது உகந்ததாக இருக்க வாய்ப்பில்லை. அதை வாசிப்பதற்கான பயிற்சியும் அதை உள்வாங்குவதற்கான உளநிலையும், அடிப்படை அறிவுத்திறனும் தேவை. தமிழ்ச்சூழலில் பெரிய, ஆழமான நூல்களை வாசிக்கும் பயிற்சியும், உளநிலையும், அறிவும் கொண்டவர்கள் மிகச்சிறுபான்மையினரே. அதை அறிந்து, அவர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன். எழுத வரும்போதே புரிந்துகொண்டதுதான் இது. பிறகென்ன?
இலக்கியவாசகர்களிலேயே கூட எல்லா படைப்புகளும் எல்லாருக்கும் சென்று சேர்வதில்லை. சிலருக்குச் சிலவகையான படைப்புகளை உள்வாங்க முடியாது. உதாரணமாக, இலக்கியம் என்பது அன்றாடவாழ்க்கையின் யதார்த்தச் சித்திரம் மட்டுமே என நம்பும் ஒருவரால் படிமங்கள் வழியாக பேசும் ஒரு படைப்பை உள்வாங்க முடியாது. தன் அரசியல்நிலைபாடே சரி, மற்ற எல்லாமே பிழை என ஆழமாக நம்பும் ஒருவரால் அவருடைய தரப்பைச் சேராதது என தோன்றும் படைப்பை ஏற்கவே முடியாது. அப்படி நூற்றுக்கணக்கான தடைகள்.
இவை அனைத்தையும் கடந்தே வாசகன் படைப்பை நோக்கி வருகிறான். அவர்கள் தமிழகத்தில் மிஞ்சிப்போனால் எத்தனைபேர் என அனைவருக்கும் தெரியும். ஆகவே எதையும் எதிர்பார்க்காமல் எழுதுவதே எழுத்தில் திளைக்க , எழுத்தினூடாக நிறைவடைய ஒரே வழி. சமூக ஏற்பை நான் எண்ணவேண்டும்? அதற்கு நான் எந்தவகையிலும் இணக்கமானவனாக இதுவரை இருந்ததில்லை. அது கேட்கும் எதையும் செய்ததில்லை. அது கூடி வசைபாடும் சொற்களையே கூறியிருக்கிறேன்.
எழுத்து என் வாழ்க்கையை இதுவரை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கியிருக்கிறது. சலிப்பே அற்ற நாட்களை அளித்திருக்கிறது. என் வாழ்க்கையை ஒருகணமேனும் நான் பொருளற்றதாக, இலக்கற்றதாக உணர்ந்ததில்லை. அதற்கப்பால் என்ன வேண்டும்?
இது எத்தனை முக்கியமென உணரவேண்டுமென்றால் உங்களுக்கு அறுபது வயது ஆகவேண்டும்
ஜெ
பொ.திரிகூடசுந்தரம், கலைக்களஞ்சியம்
தமிழின் முதல் முழுமையான கலைக்களஞ்சியம் பெரியசாமித் தூரன் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1968 ல் உருவான இக்கலைக்களஞ்சியம் அதற்குப்பின் புதுப்பிக்கப்படாமல் நீடிக்கிறது. வாழ்வியல் களஞ்சியம் என்னும் பெயரிலும் தமிழ்க்கலைக்களஞ்சியம் என்னும் பெயரிலும் வேறு முயற்சிகள் நடைபெற்றாலும் அவை நிறைவடையவில்லை. நீடிக்கவுமில்லை.
தமிழ் கலைக்களஞ்சியம் ,அதன் உருவாக்கம் பற்றி ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய முக்கியமான நூல் ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை ‘. அதில் பொ.திரிகூடசுந்தரம் பற்றி வரும் குறிப்பு ஆர்வமூட்டக்கூடியது. அன்று திரிகூடசுந்தரம் பேச்சாளராக புகழ்பெற்றிருந்தார். நிறைய பயன்தரு நூல்களையும் எழுதியிருந்தார். தூரனை விட அனுபவம் கொண்டவர். ஆகவே கலைக்களஞ்சியப் பணிக்கு தலைவராக தன்னை தவிர்த்து தூரனை நியமித்ததை அவர் கடுமையாக எதிர்த்தார். தொடர்ந்து தூரனுக்கு தொந்தரவளித்துக் கொண்டிருந்தார்.
பொ.திரிகூடசுந்தரம் எப்படிப்பட்ட பேச்சாளர்? விக்ரமன் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. பற்றி ஒரு கட்டுரையில் சொல்லும் அனுபவம் இது. எஸ்.ஏ.பி மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர். ஒரு மேடையில் அவருக்கு முன் திரிகூடசுந்தரம் பேசினார். அவருக்கு அளிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து,மேடையில் இருந்த அனைவர் நேரத்தையும் கடந்து, மேலும் பேசிக்கொண்டே இருந்தார். மேடையில் இருந்து தப்பி ஓடிய எஸ்.ஏ.பி அதன் பின் ஒருமுறைகூட மேடையில் பேசியதில்லை.
திரிகூடசுந்தரம் எழுதிய நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எல்லா தலைப்புகளிலும் சரமாரியாக எழுதியிருக்கிறார். பொது அறிவுத் தகவல்கள். ஆனால் அவரால் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியிருக்க முடியுமா? அவினாசிலிங்கம் செட்டியார் தகுதியையே முதன்மையாக பார்த்திருக்கிறார் என்பது தெளிவு
பொ.திரிகூடசுந்தரம்சென்னை,ஸ்ரீராம்- கடிதம்
அன்பு ஜெயன்
தங்களை ஆஸ்டினில் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் இங்குள்ள சில இடங்களுக்கு சென்று பார்த்திருக்கலாம். நேற்றொருநாள் போதுமா?
நாம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சென்னை வரலாறு, பாரம்பரிய கட்டடங்கள், தெருப்பெயர்கள் குறித்துப் பேசினோம். நாம் வரலாற்றின் நீட்சிகளைத் தொலைப்பது பற்றிய உங்கள் கவலைகளைப் பகிர்ந்தீர்கள்.
அச்சமயம் திரு. முத்தைய்யா அவர்களை நினைவுகூர்ந்தீர்கள். அச்சமயம், நான் திரு. ஶ்ரீராம் பற்றிச் சொன்னேன். அவர் முன்னெடுக்கும் முயற்சிகளை பற்றி எனக்குத் தெரிந்த அறிமுகமும் தந்தேன்.
ஶ்ரீராமின் வலைத்தளம் – https://sriramv.wordpress.com. இங்கு அவர் எழுதிய புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அன்புடன்
ராஜேஷ்
ஆசானோடு ஓர் அருமையான மாலை!
அன்புள்ள ராஜேஷ்
சந்திப்பு நிறைவாக இருந்தது. ஆனால் நடுவே பத்தாண்டு ஓடிவிட பல நண்பர்கள் சட்டென்று வயதானவர்கள் போல தோன்றுகிறார்களோ என ஒரு சிறு சங்கடம். நான் என்னை விட இளைமையானவர்கள் இளமையுடன் இருப்பதை விரும்புபவன். கொரோனா காலத்தில் விஷ்ணுபுரம் நண்பர்கள் எவரும் தாடி வைக்க அனுமதித்ததில்லை.ஒன்றுக்கு நூறு ஃபோன் போட்டு சவரம் செய்ய வைத்துவிட்டேன்.
ஸ்ரீராமின் தளம் பார்த்தேன். மிக முக்கியமான பணி. அவர் தொடர்ச்சியாக அதைச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். வரலாற்றுத் தடையங்கள் அரசாலேயே அழிக்கப்படும் நாட்டில் வாழ்கிறோம். இத்தகைய பணிகள் மிகப்பெரியவை.
இப்போது கொலராடோவில் பாலையில் பயணம். ஸ்ரீராமுக்கு எழுதுகிறேன்
ஜெ
பூன் முகாம்- கடிதம் பாலாஜி ராஜு
நீண்ட கடிதம் இது, மன்னிக்கவும்.
பிப்ரவரி 25ம் தேதி உங்கள் அமெரிக்க வருகைக்கான செய்தி விஷ்ணுபுரம் குழுவில் பகிரப்பட்டது, மே மாதம் 12 – 15 இலக்கிய முகாமுக்கான தேதிகளையொட்டி அலுவலக விடுப்புகளைத் திட்டமிட்டுக்கொண்டேன். டிசம்பர் மாதம் விஷ்ணுபுரம் விழாவில் நண்பர் சி.ஜோ. இந்த வருகைக்கான சாத்தியங்களைக் குறிப்புணர்த்தியிருந்தார்.
‘முகாமில் கவிதை விவாதத்தையொட்டி ஒரு உரையாற்ற உங்களுக்கு விருப்பமா’ என்று ஆஸ்டின் சௌந்தர் அண்ணனிடமிருந்து மார்ச் 9, இரவு 10.15க்கு செய்தி வந்தது. சற்று தயங்கி, கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று பதில் சொல்லிவிட்டு உறங்கச் சென்றேன், எனக்கான இலக்கிய முகாம் அன்றிரவே தொடங்கிவிட்டது. மார்ச் 12 காலை 9 மணிக்கு உரையாற்ற விருப்பம் என்று செய்தி அனுப்பிவிட்டு, என்ன பேசலாம் என்ற சிந்தனைகளில் மூழ்கத்தொடங்கினேன்.
மே 12, காலை 9.30 மணிக்கு Boone, North Carolina நோக்கி என் பயணம் தொடங்கியது, முகாமுக்கான விலாசத்தை விழுங்கிக்கொண்ட காரின் வழிகாட்டி 388 மைல்கள், 7 மணிநேரம் என்று அறிவித்தது. ஒரு மணிநேரம் கடந்ததும் பச்சை உடை தரித்த மலைகள், வெண்மேகங்களின் நிழல் கருமையை ஆங்காங்கே பூசிக்கொண்டு என்னைச் சூழ்ந்தன. இளவேனில் காலம், காணும் திசைகளெங்கும் மலைகள், பச்சைச் செழிப்பு, வெண்முகில்கள், நீண்ட சாலைகள், நெடும் பயணம், சிறு மழைத் தூறல், தனிமை இவையெல்லாம் கலந்து என்னில் ஒரு ஆழ்ந்த வெறுமையையும், அர்த்தமற்ற இனிமையையும் ஒருங்கே கிளர்த்தியது. மனிதப் பிறப்பெடுப்பதே சொற்களால் விளக்க இயலாத இந்த உணர்வை அடையத்தான், கடவுளே!!
மாலை 4.30 மணிக்கு வளைந்து மேலேறிய தார்ச் சாலையின் முடிவில் வீற்றிருந்த பங்களாவை அடைந்தேன், சுற்றிலும் பச்சைப் புல்வெளிச் சரிவு, எதிரில் புல்வெளிகளில் மேயும் கரு நிறப் பசுக்கள் புள்ளிகளாய்த் தெரிந்தன, அழகிய சூழல். எப்போதும் கேள்விக் கண்களுடன் அலையும் நண்பர் விவேக்கும், மேல் தளத்தில் சிறு துணிக் குடிலை என்னுடன் பகிர்ந்துகொண்ட அமைதியே உருவான நண்பர் முத்து காளிமுத்துவும் அறிமுகமானார்கள் (“முத்து, நான் குறட்டை விடுவேனே பரவால்லையா?” “நானுந்தான்”). இசைக் கலைஞர் ராஜனையும், சௌந்தர் அண்ணனையும் நேரில் அப்போதுதான் சந்திக்கிறேன். சௌந்தர் அண்ணன் திருமண மண்டபத்துக்குள் முதலில் நுழைந்து ஏற்பாடுகளை முன்னெடுக்கும் தந்தையைப்போல ஒரு முக பாவனையைக் கொண்டிருந்தார், அது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
எதிர்கொண்ட அருண்மொழி நங்கை பெயரை விசாரித்துவிட்டு, “எங்கிருந்து வறீங்க” என்றதும், சற்று திகைத்து, “இங்க கொலம்பஸ், ஊர்ல கரூர்” என்றேன். அறையிலிருந்து சிவப்பு டீ ஷர்டில் உற்சாகமாய் வெளிவந்த உங்களை வணங்கினேன். மேடைப்பேச்சுப் பகடிகள், கிண்டல் கலந்த உரையாடல்கள் என இரண்டு மணிநேரங்கள் கண்களில் நீர் வரச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தீர்கள், மூன்று நாட்களும் அது தொடர்ந்தது. அடுத்தடுத்து நண்பர்கள் வரத் தொடங்கினார்கள், முதலில் ஜெகதீஷ், மனைவி அனுஷாவுடன் வந்தார், அவருடன் நண்பர் விசு மற்றும் அவரது மனைவியும். இரவு உணவு முடிந்ததும், அடுத்த இரண்டு நாட்களுக்கான அமர்வுகளின் அட்டவணையை மீண்டும் கேட்டுவிட்டு அனைவரும் உறங்கச் சென்றோம்.
மே 12, காலை ஒன்பது மணிக்கு ‘சிறுகதைகளின் பரிணாமம்’ என்ற தலைப்பில் பேசி அமர்வுகளைத் தொடக்கிவைத்தீர்கள். சிறுகதை விவாதத்துக்குள் நுழையும் முன் எந்தச் செயலையும் தீவிரமான மனநிலையிலேயே அணுக வேண்டும் என்றும், தீவிரமற்ற ஒரு செயலின் பயனின்மை, அது எப்படி நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நுழைந்து நம்மைச் சாதாரணர்களாக மாற்றும் என்பதையும் உணர்த்தினீர்கள். ஒரு உரையைக் கேட்கும் முன் நம் மனம் எப்படி மூன்று ‘Fallacy’ களால் நிறைந்திருக்கும் என்பதையும் விவரித்தீர்கள் (Peripheral Association Fallacy, Distraction & Counter Fallacy).
‘ஜோக்’ என்ற வடிவம், பின்நாளில் சிறுகதையாக உருமாற்றம் அடைந்து, எட்கார் ஆலன் போ, ஓ ஹென்றி ஆகியவர்களால் பரவலாக கேளிக்கை உள்ளடக்கம் பெற்று, ஆன்டென் செகாவ், மாப்பசான் போன்றவர்களால் இலக்கிய ஆக்கமாக நகர்ந்ததை உணர்த்தியது உங்கள் உரை. சிறுகதை அதன் முடிவில் வாசகனின் மனதில் மீண்டும் துவங்கவேண்டும் என்று சொல்லி, செகாவின் ‘The Bet’ கதையின் உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டாக முன்வைத்தீர்கள்.
அடுத்த அமர்வில் மூன்று சிறுகதைகள் விவாதிக்கப்பட்டன, பிரயாணம் – அசோகமித்திரன், சுயதரிசனம் – ஜெயகாந்தன், ஆபரணம் – திருச்செந்தாழை. நண்பர்கள் ஜெகதீஷ்குமார், விஜய் சத்யா மற்றும் மதுநிகா தங்கள் பார்வையை விரிவாக முன்வைத்தார்கள். மதிய உணவுக்குப் பிறகு, அறிவியல் சிறுகதைகள் – Nightfall, Isaac Asimov, ஐந்தாவது மருந்து – ஜெயமோகன். நண்பர்கள் விசுவும், விவேக்கும் பேசினார்கள். இந்தச் சிறுகதைகள் குறித்த உங்கள் பார்வையைப் பகிர்ந்துகொண்டிருந்தீர்கள், Isaac Asimov வின் கதை ஏன் முழுமைபெறவில்லை என்பதையும், அதற்கான காரணங்களையும் விளக்கினீர்கள். Ursula K. Le Guin போன்றவர்கள் எழுதுவது ஒரு வகை ஃபான்டசி மட்டுமே என்றும் சொன்னீர்கள். ஐந்தாவது மருந்து குறித்து எழுப்பப்பட்ட இரண்டு கேள்விகள் உங்களைச் சற்று சீற்றம்கொள்ள வைத்தன, கண்களில் தெரிந்தது. நான் இந்தச் சிறுகதைகளை வாசித்து எழுதி வைத்துக்கொண்டிருந்த சிறு குறிப்புகளை, விவாதப் புள்ளிகளோடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
அடுத்த அமர்வு தமிழ்க் கவிதைகள், உலா – கவிஞர் அபி, தலையில்லாத – தேவதச்சன், மதாருடைய ஒரு கவிதை இவற்றை வாசித்து நான் அடைந்தவற்றைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கச் சொன்னீர்கள், நண்பர் சங்கர் பிரதாப் தேவதச்சனின் சிலை கவிதை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, கவிதைகளில் மையம் என்ற ஒன்றைக் கண்டடைந்து அதில் மட்டுமே வாசிப்பைக் குவிக்கவேண்டும் என்றும் விளக்கினீர்கள். அமெரிக்கா போன்ற நாடுகளிளேயே கவிதைகள் 400 பதிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன என்றும், கவிதைகள் எனும் வடிவம் இயல்பிலேயே ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்கு மட்டுமேயானது என்றும் விளக்கினீர்கள்.
மதாருடைய கவிதைகள் ஏன் பின்நவீனத்துவ காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதை தேவதச்சனின் ‘கடைசி டினோசர்’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து விளக்கவும் செய்தீர்கள். கவிஞர் இசையின் சில கவிதைகளையும் எடுத்துக்காட்டாகச் சொன்னீர்கள், இயல்பாகவே முகுந்த் நாகராஜனின் பெயர் இந்த உரையடலுக்குள் வந்தது. நான் உரையை சற்று தயக்கத்துடன் தொடங்கி, சில நிமிடங்களில் இயல்பானேன், நண்பர்கள் பலருக்கும் இந்த அமர்வு மிகவும் பிடித்திருந்தது.
மாலை 4.45 மணிக்கு ராஜன் ‘இசை ரசனை/விமர்சனம்’ குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்தார். நம்முடைய இசை ரசனைக்கான புள்ளிகள் சூழலையும், வளர்ப்பையும் சார்ந்த ஒன்று என்றும், குறிப்பிட்ட இசையைத் தொடர்ந்து கேட்பது மட்டுமே அதில் பரிச்சயம் அடைய வழி என்றும் சொல்லிச் சென்றார். கர்நாடக இசை ஏன் பரவலாக மக்களை அடையவில்லை என்பதை விளக்கினார். மேலை நாட்டு இசை எப்படி கட்டுக்கோப்பான ஒரு கட்டமைப்புக்குட்பட்டு உருவாகிறது என்று விளக்கினார். நீங்கள் உங்கள் பார்வையை முன் வைத்துவிட்டு, நிகழ்வை இலகுவாக்க இசைக்கச்சேரிகளில் பார்வையாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் பாவனைகளை சற்று பகடியாக்கி நடித்து எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தீர்கள்.
இரவு உணவுக்குப் பிறகு ‘வெண்முரசு’ ஆவணப்படம் திரையிடப்பட்டது, ராஜனின் கம்பீரமான இசையுடன் தொடங்கப்பட்ட படம் எல்லோரையும் கவர்ந்தது. நான் உங்கள் முக பாவனைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன், பெரும்பாலும் சலனமற்றிருந்தீர்கள். எழுத்திலும், நேரிலும் பரிச்சயமான முகங்களைப் பெரிய திரையில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. ஒன்றே கால் மணிநேரப் படத்துக்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் தன்னுடைய உரையை அனுப்பி, எதையும் வெட்டாமல் சேர்க்கும்படி ஈரோடைச் சார்ந்த ‘legend’ ஒருவர் ‘வாதிட்டதாக’ அறிந்தேன்.
மே 14, காலை ‘தத்துவம்’ குறித்த உங்கள் உரையுடன் தொடங்கியது. தத்துவத்தின் அடிப்படைகளையும், மேலை கீழைத் தத்துவங்களுகிடையிலான அடிப்படை வேறுபாடுகளையும், தத்துவங்களை முறையாக ஒரு குருவின் வழிநடத்தலுடன் கற்க வேண்டிய தேவையையும் விளக்கினீர்கள். தத்துவங்களை மேலும் விரிவாக அறிய புத்தகப் பெயர்களைப் பகிர்ந்துகொண்டு, கேள்விகளைத் தவிர்த்துவிட்டீர்கள். மூன்று நிமிடங்கள் பேசிவற்றை எங்களுக்குள் தொகுத்துக்கொள்ளச் சொன்னீர்கள். உங்கள் உரைகளைத் துல்லியமாகக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.
அடுத்த அமர்வு ‘Understanding American Culture’, ராஜனின் உரை. புள்ளிவிவரங்களை முன்வைத்து எப்படி தவறான ஒரு பொதுக் கண்ணோட்டம் மக்களின் எண்ணங்களில் விதைக்கப்படுகிறது என்பதை விளக்கினார். அடுத்து ‘English Poetry’ அமர்வில் ரெமிதா John Keats சின் ‘Ode to a Nightingale’ நீள் கவிதையின் சில பகுதிகளை மிகவும் உணர்வுப்பூர்வமாக வாசித்தார், Keats குறித்த சில தகவல்களையும் பகிர்ந்தார். நீங்கள் ‘William Wordsworth’ ‘Byron Long’ ஆகியவர்களுடன் ஒப்பிட்டு உங்கள் தரப்பை விளக்கினீர்கள். அருண்மொழி நங்கை மிகவும் ஆர்வமாக Wordsworth தின் ‘Composed Upon Westminster Bridge’ கவிதையை வாசித்துக் காட்டினார், இரண்டு அழகான கவிதைகள். நண்பர்கள் கீட்ஸின் கவிதை அபியின் ‘உலா’ கவிதையை ஒட்டியிருந்ததாகச் சொன்னார்கள். Keats குறித்து சுந்தர ராமசாமி ‘He is just an excited young man’ என்று சொன்னதையும் நீனைவுகூர்ந்தீர்கள்.
கம்பராமாயண அமர்வு சற்று தாமதமாகத் தொடங்கியது, நண்பர்கள் விசுவும், செந்தில்வேலுவும் சில பகுதிகளை வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்தார்கள். இரண்டாவது நாள் மதிய நேரத்துக்குப் பிறகு நண்பர்களிடம் சிறிது சோர்வு காணப்பட்டது. மாலை நேரம் நாவல்களுக்கானது, ‘போரும் அமைதியும்’ – அருண்மொழி நங்கை, ‘கானல் நதி’ – பழனி ஜோதி. அருண்மொழி நங்கை போரும் அமைதியும் நாவலை நினைவுகூர்ந்து உரையாடினார், இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாவலை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்துக்கொண்டதை வியந்தேன். நண்பர் பழனி ஜோதி ‘கானல் நதி’ நாவல் குறித்து தன் எண்ணங்களை மிகச் சரளமாக முன் வைத்தார். அருண்மொழி நங்கை எங்கள் அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விட்டார், அவருக்குள் எப்போதும் ஒளிந்துகொண்டிருக்கும் அந்தச் சிறுமி அற்புதமானவள்.
5.30 மணிக்கு ‘பனி உருகுவதில்லை’ கலந்துரையாடல். ஆஸ்டின் சௌந்தர் அண்ணன் தனக்கே உரிய பாணியில் சொந்த அனுபவங்களை முன் வைத்து பேசினார், அருண்மொழி நங்கை என்றொரு தோழியை அடைந்ததாகச் சொன்னார். பலரும் மிக ஆர்வமாக நூலின் பகுதிகளை முன்வைத்து எண்ணங்களைப் பகிர்ந்தார்கள். இந்த நூல் வாசகர்களைப் பரவலாக அடைந்திருப்பது ஒவ்வொருவருடைய பேச்சிலும் தெரிந்தது. அமர்வுகள் நிறைவுக்கு வந்தன, இரண்டு நாட்களும் அவசரமாகக் கடந்திருந்தது.
இரவு உணவுக்குப் பிறகு நண்பர்கள் மதன், சங்கர் பிரதாப்புடன் மாலை நடை சென்று வந்தேன், மெல்ல இரவு கூடிக்கொண்டிருந்தது, வானில் வட்ட நிலவு பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது, நிகழ்வுகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். புல்வெளி வேலிகளை ஒட்டி மேய்ந்துகொண்டிருந்த பசுமாடுகள் துணுக்குற்று எங்களை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.
நீங்கள் நண்பர்களுடனான உரையாடலைத் தொடங்கியிருந்தீர்கள், பலவகையான கேள்விகளுக்கும் பதிலளித்துக்கொண்டிருந்தீர்கள். பின்னர் உங்களை பேய்க் கதைகள் சொல்ல வைத்தோம், மலைகள் சூழ்ந்த பங்களா, இரவு, மங்கிய லைட் வெளிச்சம், ஐந்து மறக்கவே முடியாத பேய்க் கதைகள், ஒரு கதையில் எங்கள் அனைவரையும் அலற வைத்தீர்கள். சொந்த அனுபவத்தில் நீங்கள் எதிர்கொண்ட சில அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்தும் அறிந்துகொண்டோம். உலகின் மகத்தான கதை சொல்லி ஒருவரிடம் நேரடியாகக் கதை கேட்கும் அனுபவம் வாய்த்தது எங்கள் நல்லூழ்.
அமர்வுகளுக்கு வெளியில் எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம், பல வகையான கேள்விகள். ‘Psycadelics’ மனித மூளையில் ஏற்படுத்தும் விளைவுகள், ‘Near death experience’ என்பது என்ன, ஆன்மிக வாழ்வுக்கு குருவை எப்படி சரியாகக் கண்டடைவது போன்ற சுவாரசியமான கேள்விகள், உங்கள் வார்த்தைகளில் குரு நித்யா வந்துகொண்டே இருந்தார், பெரும்பாலும் வெடிச் சிரிப்புகள், மேலும் பல அறிதல்கள். சில சராசரியான கேள்விகளும் உங்களைத் தொடர்ந்துகொண்டிருந்தன, அவற்றுக்கும் இயல்பாக பதிலளித்துக்கொண்டிருந்தீர்கள், ‘Party talk’ என்று அவற்றை வகைப்படுத்தினீர்கள். ஒரு ஆசிரியரிடம், அறிவுஜூவியிடம், உலகின் தலை சிறந்த கலைஞனிடம் சராசரியான கேள்விகளை முன்வைப்பது ஒரு ‘வன்முறை’ என்பது என் எண்ணம். அடுத்த நிகழ்வுகளில் இவற்றைக் ‘குறைத்துக்கொள்வோம்’ என்றே எண்ணுகிறேன். சிலர் உங்களை ஒரு மனோதத்துவ நிபுணர் என்றெண்ணிவிட்டார்களோ என்றும் சந்தேகப்பட்டேன்.
இதுபோன்ற நிகழ்வுகளில் இடத்தைப் பகிர்ந்துகொள்தல் என்பது அழகான ஒரு அனுபவம், நான் மீண்டும் என்னுடைய கல்லூரி விடுதி நாட்களை நினைத்துக்கொண்டேன். ஐம்பது பேர் கொண்ட முகாமில் அனைவரையும் பரிச்சயப்படுத்திக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது, சிலர் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக, தனிமை விரும்பிகளாக இருந்தார்கள். சிலரிடம் பார்த்தவுடன் மனம் கொண்டுவிடும் தடைகள் மூலம் நெருங்காமல் இருந்தேன் (என்னுடைய தவறுதான்). சிலரிடம் தலையசைப்புகள் மற்றும் புன்னகைப் பரிமாற்றம், பல நண்பர்களிடம் விரிவாக உரையாடினேன், வரும் அமர்வுகளில் இன்னும் பல நண்பர்களைக் கண்டடைவேன்.
நண்பர் பழனி ஜோதி, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார், எப்போதும் ஒரு சிரிப்பு, கலகலப்பான பேச்சு, கிண்டல் என்று நேர்மறைத்தன்மையின் மொத்த உருவமாக ஒரு அற்புத மனிதர். அவர் ‘ஊரை விட்டுப் பிரியும்போது கண்கலங்குவோர் சங்கத்தில்’ நெடுநாள் உறுப்பினர் என்பதை அறிந்தேன், ‘எங்கள்’ சங்கம் என்றும் வாழும்.
ரம்மியமான ஒரு இடத்தைத் தேர்வு செய்து இந்த விழா நேர்த்தியாக நடந்தேறியதன் பின்புலத்தில் இருந்த ஆஸ்டின் சௌந்தர் அண்ணன், ராஜன், பழனி ஜோதி, சி.ஜோ., உணவுத் தேவைகளை கவனித்துக்கொண்ட அன்பு நண்பர்கள் விவேக், முத்து காளிமுத்து, அர்ப்பணிப்புணர்வோடு கிச்சனில் சுழன்றுகொண்டிருந்த என் அருமைச் சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். புகைப்பட வேலைகளைப் பகிர்ந்துகொண்ட சகோதரி அனுஷா, மற்றும் நண்பர் கோபிக்கு என் நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் ஃப்ளூட் வாசித்து மயக்கினார், சங்கர், பழனி ஜோதி மற்றும் ராஜன் பாடல்களால் மகிழ்வித்தார்கள், நண்பர் ஸ்கந்த நாராயணன் அழகாகத் தாளமிட்டார். பலருடைய பெயர்களையும் மெனக்கெடல்களையும் நான் அறியாமல் இருக்கலாம், அவர்களுக்கு என் வணக்கங்களும், பெயர் சொல்ல இயலாமையின் மன்னிப்புகளும்.
மே 15, ஊருக்குத் திரும்பும் நாள். உங்களிடம் விடைபெறும் முன் வெளியில் சென்று தொலைவில் தெரியும் மலைகளையும், புல்வெளிகளையும் பார்த்தவண்ணம் காலைச் சூரியனின் கதகதப்பில் திளைத்துக்கொண்டிருந்தேன், பிரிவாற்றாமையை சூழல் கூட்டிக்கொண்டிருந்தது. அறையின் முகப்பில் வைத்து என்னிடம் ‘உங்கள் கட்டுரையை வாசித்தேன்’ என்று சொன்னீர்கள், ‘சீக்கிரம் கவிதை எழுதுங்கள்’ என்றும் ஊக்கப்படுத்தினீர்கள், திகைப்பிலிருந்து வெளிவரும் முன், வணங்கிவிட்டு விடைபெற்றேன்.
மீண்டும் மலைகள் சூழ வடக்கு நோக்கிய பயணம், நான்கு நாட்களின் நினைவுகளும் கொப்பளித்துக்கொண்டிருந்தன, வெளிச் சூழலை மனதின் வார்த்தைகளால் கரைத்துக்கொண்டே ஒரு சமநிலையை எட்டினேன். மாலை 5.30 மணிக்கு வீட்டை அடைந்து உள்நுழைந்ததும், “எறும மாடே, சீப்ப மறந்துட்டு போய்ட்டியா” என்று அன்றாடம் என்னை அன்புடன் வரவேற்றது. நண்பர் முத்து காளிமுத்துவின் சீப்பை மூன்று நாட்களும் அவருக்குத் தெரியாமல் பயன்படுத்திய ரகசியத்தை அவரிடம் சொல்லிவிடாதீர்கள்.
உங்களுடைய சொற்களும், எங்களுடைய வெடிச் சிரிப்புகளும் அந்த மலைச் சரிவுகளில் என்றும் எதிரொலித்துக்கொண்டிருக்கும்!!
அன்பும் நன்றிகளும்,
பாலாஜி ராஜூ
லாபம், ஒரு கடிதம்
கவுண்டர்?
என் தலையில் அடித்தது போல் இருந்தது !
நோயில் இருந்தது மீள ஏதேனும் மார்க்கம் உண்டா? சமூகத்தை திருத்த கேட்கவில்லை என்னை மாற்றிக்கொள்ள கேட்கிறேன் .
ஐசக் ராஜ்
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சமூகசேவையாளரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். புகழ்பெற்றவர். செல்லும் வழியில் டீக்கடையில் அவர் வீட்டை விசாரித்தேன். அங்கே நின்ற அத்தனைபேரும் ஒரே குரலில் அவர் சமூக சேவை செய்து ஏகப்பட்ட பணம் சம்பாதித்துவிட்டதாகச் சொல்லி புழுங்கினார்கள். நுணுக்கமான உள்வட்ட தகவல்கள் வேறு.
ஆனால் அந்த சமூகசேவகர் நோயுற்று உடல்நலம் குன்றி மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் இருந்தார். நாங்கள் பணத்துடன் பார்க்கச் சென்றிருந்தோம்.
அந்த மனநிலையின் ஊற்றுமுகம் ஒன்றே. அந்த டீக்கடை ஆட்கள் வாழ்நாளில் எவருக்கும் எதுவும் செய்தவர்களோ, பிறர்நலமோ பொதுநலமோ நாடி ஒரு முறையேனும் சாதாரணமாக எண்ணிப்பார்த்தவர்களோ அல்ல என்பதுதான். உண்மையிலேயே அவர்களுக்கு சமூகசேவை என்றால் என்ன என்றே தெரியாது. ஒருவர் உழைக்கிறார், ஆனால் பணம் சம்பாதிக்கவில்லை என்பதை அவர்களால் கற்பனையில்கூட பார்க்க முடியவில்லை. அந்த டீக்கடைதான் நம் சமூக வலைத்தள அரட்டை.
அந்நோயை வெல்ல ஒரே வழிதான். நாமும் தனிப்பட்ட பயன்கருதாது, பொதுநலன் நாடி எதையாவது செய்ய ஆரம்பிப்பது. அதன் அகநிறைவை, விடுதலையை அறிவது.
ஜெ
ஃபால்ஸம் நூலகச்சந்திப்பு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers



