Jeyamohan's Blog, page 777
May 20, 2022
ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி படித்துக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொருவரின் பதிவுகளும் சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள். “பிளாரென்ஸ் ஸ்வெயின்ஸ்” முதன் முதலில் காது கேளாதவர்களுக்கான பள்ளியை ஆரம்பித்தவர். என்னுடைய மாமியாரும் அவங்க தங்கையும் காது கேளாமலும் வாயும் பேச முடியாதவர்கள். இருவரையும் சென்னையில் இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் சேர்த்து 10வது வரை படிக்கச் செய்திருக்கிறார்கள். அதோடு கூடவே தையல் தொழிலும் கற்று இறக்கும் வரை அந்தத் தொழிலில் மேதைமையோடு இருந்தவர்கள். இன்னும் என் மாமியார் தைத்துக் கொடுத்த எம்பிராய்டரி வேலைப்பாடுள்ள ப்ளௌஸ் மற்றும் பிளைன் புடவையில் அவங்க வரைந்த பெயிண்டிங் இரண்டையும் பத்திரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்டு. வீட்டில் எல்லாரிடமும் பிளாரென்ஸ் ஸ்வெயின்ஸ் பற்றி சொன்னேன்.
“குரங்கு குசலா” ராணியில் வரும். நான் எழுத்துக்கூட்டி படிக்ககற்றுக் கொள்ளும்போது பழைய ராணி எல்லாம் எடுத்து குரங்கு குசலா பக்கமாய் மடித்து வைத்து மெல்ல மெல்லமாய் படித்து, சரியாய் படித்தால் வரும் அந்த மகிழ்ச்சி எல்லாம் இப்ப நடந்தது மாதிரி ஞாபகம் வந்தது. அதே போல் கல்கண்டும். எங்க அப்பா எதை மறந்தாலும் கல்கண்டு, முத்தாரம் வாங்க மறக்க மாட்டாங்க. அதில் ஒரு முறை விலங்குகளின் குட்டிகளின் பெயர்கள் தூய தமிழில் இருந்தது. அடுத்த நாள் பரிட்சையில் புலியின் குட்டியின் பெயர் என்ன என்று கேட்ட கேள்விக்கு நான் புலிப்பறழ் என்று எழுதி இருந்தேன். அந்தக் கல்கண்டு கொண்டு போய் காட்டியதும்தான் டீச்சர் அதற்கு மார்க் போட்டாங்க. அப்பா இறந்து அவங்க போட்டோ மந்திரிச்சி வைத்த அன்று நாங்க அது முன்னாடி எப்போதும் அப்பா தனியா விளையாடும் சீட்டுக்கட்டும் கல்கண்டும் படத்திற்கு முன்னால் வைத்தோம். எல்லாம் பழைய ஞாபகங்கள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது சார்.
டெய்ஸி.
ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்
ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்
கோதுமை ஏற்றுமதிக்குத் தடை- கடிதம்
அன்புள்ள ஜெ,
சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு சோதனைக்காக நின்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த புதிய இளைஞர் அடையாள அட்டையை சோதிக்கும் போது, ஏமனைச் சேர்ந்தவர்கள் உன்னுடன் வேலை செய்கிறார்களா என்று சிறிது ஆங்கிலத்திலும் நிறைய அரபியில் கேட்டார். ஆம் என்றேன்.
நல்ல “knowledge” உள்ளவர்களா, இது போன்ற எரிவாயு நிறுவனத்திலும் வேலை செய்கிறார்களா என்ற அவரது முகம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் பிரகாசமாக ஒளிர்ந்தது. வழக்கமாக அதிகார இறுக்கத்தில் கடந்து செல்லும் இடம் அது. முன்பு பாகிஸ்தானியர்கள் ஆளுகையில் இருந்த, சற்று பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதி.
இன்றைய சூழலில் கீழ்நிலை பாதுகாப்பு பணிகளுக்காக ஆப்பிரிக்க நாடுகளிலிலிருந்து குறைந்த சம்பளத்தில் ஏராளமானோர் சேர்கின்றனர். இதற்கு முன்பு அது நேபாளியர்களின், மலையாளிகளின் வசமிருந்தது. உடலுழைப்பை நம்பி இருக்கும் தொழில்களில் அதிகாரம் எளிதாக மாற்றிக் கொள்கிறது. குறைந்த ஊதியத்திற்கு உழைப்பவர்கள் உலகத்தின் ஏதாவது பகுதியிலிருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மாற்றங்களில் எந்தக் கருணையும் பணி உறுதியும் அவர்களுக்கு இல்லை.
இன்று அறிவு உழைப்பு தேவைப்படும் இடங்களில் இந்தியர்களின் தேவை இருக்கிறது. அத்தகைய இடங்களில் உயர் பதவிகள் தவிர்த்து, இடைநிலை, கீழ் நிலை அடுக்குகளில் இந்தியர்கள் ஏராளமானோர் கோலோச்சுகின்றனர். (அதிகாரம் நம்மவர்களிடம் இருக்கும் சில இடங்களில், அது கீழே பணியிலிருக்கும் இந்தியர்களின் மீது மட்டும் என்ற பொது விதி பயன்பாட்டில் செயல்படுகிறது). இந்நிலை இன்னும் குறைந்த ஊதியத்தில் வேறொருவர் வரும்வரை தொடரக்கூடும்.
***
சிலகாலமாக உக்ரைனில் நடக்கும் போர்ச் செய்திகளை அடுத்து இரண்டு செய்திகள் இங்கு அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துவிட்டார்கள். என்பதும் இந்தோனேசியா பனை எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்து விட்டார்கள் என்பதும்.
இங்குள்ள செய்தி நிறுவனங்களும், மேற்கத்திய செய்தி நிறுவனங்களும் அது சார்ந்தும், அந்த ஏற்றுமதித் தடையால் ஏற்பட்ட அதிகப்படியான உற்பத்தியால் மேற்கண்ட நாடுகளில் இருக்கும் விவசாயிகள் விலை குறைந்து வருமானம் குறைந்து விட்டதாகவும் பலப்பல பக்கங்களாகக் கண்ணீர் விட்டு எழுத ஆரம்பித்து விட்டன.
சில நாட்களாக, நம் ஊரிலும் செய்தி நிறுவனங்கள் குரல் எழும்ப ஆரம்பித்துவிட்டது. வெளிநாட்டு செய்திகளைப் பிரதியெடுத்து அவர்களின் ஆராய்ச்சி முடிவினை வெளியிட ஆரம்பிப்பார்கள். அவர்களின் நன்மதிப்பைப் பெற முந்தய உலகப் போர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தது போல், கப்பல் கப்பலாக அனுப்பிவைக்க அவர்கள் பரிந்துரைப்பார்கள்.
இன்றைய சூழல் போலவே இதற்கு முன்பு, உலகப் போர் நடந்த காலத்தில் இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக தானியங்கள் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் உள்நாட்டில் கோடி கோடியாக வங்கத்திலும் தென்னிந்தியாவிலும் மனிதர்கள் செத்து விழுந்திருக்கிறார்கள். அள்ளி அள்ளிப் பிணங்களைப் புதைத்திருக்கிறார்கள்.
அன்றும், இவர்கள் சொல்வது போல நல்ல விலை கொடுத்தே தானியங்களை வெளியே வாங்கிச் சென்றிருப்பார்கள். அன்றும் பசியால் செத்து விழுந்த ஏழைகள் போரினால் விலை கூடிய தானியத்தை வாங்க வழியில்லாதவர்களாக இருந்திருப்பார்கள்.
எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலில் இதற்கான குறிப்பு வருகிறது. நீங்கள் உங்களது பல உரைகளில் குரல் கம்ம குறிப்பிட்டிருக்கிறீர்கள். உப்புவேலி மற்றும் வெள்ளை யானை போன்ற இலக்கியங்களில் அது பதிவாகியுள்ளது.
இன்றைக்கும் இந்தியச் சூழலில் தானியத்தின் மீது அதிகரிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பல ஆயிரம் வயிறுகள் காலியாக சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
***
உலக அளவில் உணவுப் பொருள் உற்பத்தி குறைய ஆரம்பித்துவிட்டது. உணவு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாடு இன்று தன் தேவைக்கு அரிசி இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தானில் கோதுமை பற்றாக்குறை நிலவுகிறது. இதுபோலவே இலங்கை, மலேசியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு காரணங்களால் உணவுத் தட்டுப்பாட்டு சூழலில் நின்றுகொண்டிருக்கிறது.
மேலும் இன்றைய காலநிலை மாற்றத்தில், அரிசி இறக்குமதிக்காக அலையும் பிலிப்பைன்ஸ் நாட்டை போல இந்தியா ஆகாது என்ற உறுதியும் இல்லை. அப்படி இருக்கும் நேரத்தில் எந்த நாடும் விலை குறைத்து கொடுக்கப் போவதும் இல்லை.
இந்தச் சூழலில்தான் இந்திய ஏற்றுமதி தடைக்கு (உள் நாட்டிலும்) எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.
நண்பர்கள் பேசும்போது, தேவைக்கு அதிகமான பனை எண்ணையை குடிக்கவா செய்வீர்கள் என்று ஒரு இந்தோனேசியனைக் கேட்டார்கள். இதே கேள்வியை அவர்கள் கொள்ளை லாபத்தில் விற்கும் கச்சா எண்ணைக்கோ, கார்களுக்கோ ஆயுதங்களுக்கோ, நாகரிக அடையாளங்களுக்கோ சொல்ல முடியுமா.
இன்னும் எத்தனை காலம் இந்தப் பணக்கார நாடுகளின் அதிகார, அகங்கார, சந்தை மற்றும் ஆளுமை சண்டைகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் உணவின்றி பஞ்சத்தில் சாக வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் உணவுப் பொருளின் விலை குறைவாக இருப்பதற்கு காரணம், அங்குள்ள மக்களின் குறைந்த வாழ்க்கைத் தரத்தால், அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் குறைந்த உழைப்பூதியம் அன்றி கச்சா எண்ணெய் போன்று அபரிவிதமாக பூமியிலிருந்து தானாக வருவதனால் அல்ல.
இயற்கையில் கிடைக்கும் பொருளை, கச்சா எண்ணையை, சந்தை விலைக்கேற்ப கொள்ளை லாபத்தில் விற்கும்போது, உழைப்பினால் கிடைக்கும் தானியங்களை, உலக தேவையைப் பயன்படுத்தி கொள்ளை லாபத்தில் ஏன் விற்கக் கூடாது.
வளர்ந்த நாடுகள் கொண்ட உட்கட்டமைப்பும் அது சார்ந்து அவர்கள் கொண்டுள்ள கூட்டு அமைப்புகளும் அத்தகைய விலை நிர்ணய காரணம் என்றால், அதைப் போல இங்கும் செய்ய வேண்டும் அன்றி அவர்களின் அதிகார சண்டைக்கு குறைவான (இந்திய உற்பத்தி) விலைக்கு அனுப்பி வைக்கக் கூடாது.
இன்று கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு விற்பனைக்குக் குறைவான விலையே நிர்ணயிக்கின்றன அது போலவே உள்நாட்டில் குறைவான விலையும் ஏற்றுமதிக்கு வேறு விலையுமாக இருக்க வேண்டும். அதற்கான உறுதியான தலைமை கொண்ட அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதனினும் பெரிதாக உணவுப் பொருள் உற்பத்திநாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தி கச்சா எண்ணைக்கு இருப்பது போல ஒரு அமைப்பில் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
இன்று இந்தியாவில் இருக்கும் குறைந்த கட்டமைப்பும், அமைப்பு சார்ந்த கட்டுக்கோப்பும் ஓட்டையிட்டு, மண்ணில் ஒளிந்துகொள்ளும் உயிர் போன்ற சிலரால், அவர்களின் சொந்த சேமிப்பிற்காக சிதறியடிக்கப் படலாம். அதற்கான தொடக்க செயல்பாடுகள் தற்போதே ஆரம்பித்து விட்டது என்றே தெரிகிறது.
இந்த விலை உயர்வை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய விவசாயின் கட்டமைப்பை உயர்த்தி அவனுடைய சந்ததிக்கு நவீன கல்வியும், மேன்மையான வாழ்க்கைத்தர உறுதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றதாக இருக்கும் உறுதியான கருத்தியல் மற்றும் கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டும்.
இந்த உலக உணவுப் பொருள் தட்டுப்பாடு சூழலை எப்படி நமக்கு நன்மை தரும்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நமது ஒவ்வொரு செயல்பாடும் இருக்க வேண்டுமே அல்லாது மற்றுமொரு பஞ்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி விடக்கூடாது.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
தமிழ் விக்கி, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி அறிவிப்பு வந்தது முதல் நான் இணையத்தில் எழுந்த சழக்குகளை கவனித்துக்கொண்டிருக்கிறேன். என் பேராசிரியரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் சொன்னது இது. பெருஞ்செயல்கள் சாமானியர்களை மேலும் சிறியவர்கள் ஆக்குகின்றன. அவர்களால் அதை தாங்கமுடியாது. அப்பெருஞ்செயலை சிறிதாக்காமல் அவர்களால் ஓய முடியாது. ஆனால் தவளை கத்தி மலைகள் கரைவதில்லை. அதுவும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் சிறியவர்கள் என்பதனால் கத்தாமல் இருக்கவும் முடிவதில்லை.
நான் சொன்னேன். ஐயா பெருந்தன்மைகளும் உயரிய உணர்வுகளும் நமக்கு வர இன்னும் ஒருநூற்றாண்டு ஆகலாம். ஆனால் குறைந்தது சிறுமைகளை பொதுவெளியில் மறைத்துக்கொள்வதையாவது நம்மாட்கள் கற்றுக்கொள்ளலாம் என்று. பேராசிரியர் சிரித்தார். (அவருடைய வாழ்த்தை அனுப்பியிருக்கிறேன்)
இரா.அறிவுடைநம்பி
***
அன்புள்ள ஜெ,
தமிழ் விக்கி -அறிவிப்பு தளத்தில் வந்ததும் சிலிர்த்தது. தமிழ் இலக்கியத்திற்காக முன்னெடுக்கப்படும் மாபெரும் நிகழ்வு இது.
எப்போதும் ஆச்சர்யம் கொடுக்கும் ஒன்று, மிகப்பெரிய அமைப்பைக் கட்டமைக்கும் பெரும்பாலானோர், எந்த அமைப்பிற்கும் கொஞ்சம் வெளியே இருப்பவர்கள் என்பது. இன்றைய அரசியல்பட்ட தமிழ்ச் சூழலில் அரசு சார்ந்த ஒரு அமைப்பு இத்தகைய ஒன்றைத் தொடங்கி நடத்துவது கனவிலும் என்ன முடியாதது. ஏனென்றால் அது வரலாற்றையும், மொழியையும் அரசியல் சார்ந்தே புரிந்துகொள்கிறது.
“சேப்பியன்ஸ்” வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எல்லா விலங்கினங்களைப் போலவே ஆப்ரிக்காவில் தோன்றிய “சேப்பியன்ஸ் மனித இனம்”, 70,000 ஆண்டுகளுக்கு முன் கிளைவிரித்து உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது “அறிவுப் புரட்சியின்” காரணமாக என்று “யுவால் நோவா ஹராரி” கூறுகிறார்.
மற்ற விலங்கினங்களைப் போலல்லாமல் “சேப்பியன் மனித” மூளை, மொழியைப் பயன்படுத்தி எப்போதும் இருந்திராத வழிகளில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதே காரணம் என்கிறார்.
அதிலும் இங்கு இருந்துகொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றிய தகவல்களைவிட தங்கள் ஒருபோதும் பார்த்திராத, தொட்டிராத மற்றும் முகர்ந்திராத விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு சேம்பியன்களால் மட்டுமே முடிந்தது, அதுதான் இந்த மனித விலங்கை மற்றைய விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்தி இழுத்துவந்தது என்கிறார். அதன்படி கற்பனைப் புனைவுகளையும், யதார்த்தத்தில் இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுவது நாம் வெறுமனே கற்பனை செய்வதற்கு வழி வகுத்துள்ளதோடு நின்றுவிடாமல் நாம் எல்லோருமாகச் சேர்ந்து கூட்டாகச் செயல் படுத்துவதை உறுதி செய்துள்ளது என்கிறார்.
இந்தக் கருத்தின்படி கற்பனை நிறைந்த சமூகம் இயல்பாகவே மற்ற சமூகத்தைவிட தன் திறனால் கூட்டக செயல்புரிந்து மேலெழுகிறது.இந்த நோக்கில் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளுமே சமூகத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். அவர்களே இந்த மாபெரும் சமூகக் கட்டுமானத்தின் பொறியாளர்கள்.
கற்பனையை உருவாகும் ஒரு கவிஞரும், இலக்கியவாதியும் அது சார்ந்த ஒவ்வொருவரும், ஒவ்வொரு செயலும் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் இங்கு பொறியாளர்களே சுமப்பவர்களாக இருக்கிறார்கள். பிரார்த்தனைகளையும் சிறிய கூழாங்கற்களையும், தனிமனிதனாக இயலும், அதையே செய்கிறோம்.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
***
May 19, 2022
கிறிஸ்தவத்தில் சூஃபி மரபு?
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம்
இஸ்லாமிய மதம் இந்து மதத்தோடு இனணந்து சூபியிசம் தோன்றி சூபி ஞானிகள் உருவானது போல் கிருஸ்தவ மதம் இந்துமதத்தோடு உரையாடல் நிகழ்த்தவே இல்லையா?
சற்று விளக்கமாக பதிலளிக்கவும்
நன்றி.
பா.முருகானந்தம்
மதுரை
அன்புள்ள பா முருகானந்தம்
இஸ்லாம் மதத்திற்குள் சூஃபி மரபு முனரே இருந்தது. அதன் பிறப்பிடம் பாரசீகம் என்கிறார்கள். இந்தியாவுக்கு வந்து இந்து மதத்துடன் உரையாடி இங்குள்ள சூஃபி மரபு உருவானது. இது சற்று வேறுபட்டது.
கிறிஸ்தவம் இங்கே பரவலாக ஆகி சிலகாலமே ஆகிறது. ஒரு மதமரபு உருவாக சில நூற்றாண்டுகள் ஆகும். இன்று கத்தோலிக்க கிறிஸ்தவம் இந்து மதத்துடன் உரையாடலிலேயே உள்ளது. அதன் விழாக்கள், சடங்குகள் அனைத்திலும் இந்துமதச் செல்வாக்கு உண்டு. அதன் கொள்கைகளிலும் அச்செல்வாக்கு உள்ளது. குருகுலம் போன்ற அமைப்புகள் அதற்குள் உருவாகியிருக்கின்றன.
அண்மையில் நான் திருப்பத்தூர் உரையில் குறிப்பிட்ட ஏனஸ்ட் பாரஸ்டர் பேட்டன் (Ernest Forrester Paton) அமைத்த கிறிஸ்துகுருகுலம் அதற்கு ஒரு சான்று. அத்தகைய பலர் உள்ளனர். அவை திரண்டு ஒரு துணைமதம் போல ஆகலாம்.
ஜெ
அடிப்படைகளில் அலைதல்
Jean Cormierஇனிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நோயை குணப்படுத்த நோயைஆராய்வதை விட நோயின் ஊற்று முகப்பை ஆராய்ந்து அதை சரி செய்வதே சிறந்த. இதை உங்கள் கட்டுரை ஒன்றில் நான் வாசித்தது. இந்த கடிதம் என் மனதில் பல நாட்களாக இருந்து வரும் ஒரு கேள்வியை பற்றியது. அந்த கேள்வியை நான் பலவாறாக அணுகியது உண்டு, அதிலிருந்து பல்வேறு வழிகளில் விலகியதும் உண்டு. அந்த கேள்வியை இங்கு தொகுத்து கொள்ளவும் மேலும் அதை அணுகும் பொருட்டும் இந்த கடிதம் உங்களுக்கு எழுதுகிறேன்.
நான் யார்? இந்த வாழ்கையின் பொருள் என்ன? எஞ்சுவது என்ன?இந்த கேள்வி என்னை பல்வேறு கோணங்களில் கடல் அலைகளை போல என்னை அலைக்கழிக்கிறது, நிலை குலைய வைக்கிறது. என்னில் அந்த கேள்வி எப்போது எழத் தொடங்கியது?
சிறு வயதில் எனக்கு பேச்சு குறைபாடு இருந்த காரணத்தினால் அதை போக்க அம்மா எனக்கு கதைகள் சொல்வார். அவர்கள் கேட்கும் கதையை கேட்டு நானும் திருப்பி சொல்வேன். ராமாயணம் மஹாபாரதம் முழுவதும் நான் சொல்வேன். எனக்கு தோன்றும் கேள்விகளை கேட்பேன். ஒருநாள் நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது பெருமாளின் தசாவதார கதை கூறினார்கள். பெருமாள் பல்வேறு யுகங்களில் பல பிறப்பு எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று கூறினார்கள். ‘பெருமாள் பல ஜென்மம் எடுப்பது போல நாமளும் பல ஜென்மம் எடுக்க முடியாதா, நமக்கு எத்தன ஜென்மம்?’ என கேட்டேன். அம்மா மனிதருக்கு ‘ஒரு ஜென்மம் தான் மீண்டும் பிறக்க மாட்டான் அவன் நல்லது செய்தால் பெருமாள் அவரை வைகுண்டம் கூட்டிகொள்வார், இல்லை என்றால் நரகத்தில் தள்ளி விடுவார்’ என்று சொன்னார்கள். ஏன் என்று அறியாத ஒரு படபடப்பு என்னுடல் முழுவதும் பரவியது. வரமுடியாத இடம் எனக்கு பிரமிப்பாக இருந்தது.
அம்மாவின் அந்த விளக்கம் அப்போது எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் சில மாதம் கழித்து என் கொள்ளு பாட்டி இறந்து போனார்கள். அவர்களின் அந்திம சடங்கிற்காக நாங்கள் எங்கள் ஊரான தாரமங்கலதிற்கு சென்றிந்தோம் நடு ஹாலில் பாட்டியை படுக்க வைத்திருந்தார்கள். எப்போது நான் போனாலும் என்னை அழைத்து அவர்கள் அருகில் அமர்த்தி கொஞ்சுவார்கள். கருவேப்பிலை பிரியாணி கொண்டுவருவேன் என்று ஒருமுறை கூறியிருந்தேன். நான் வரும்போதெல்லாம் என்னை அழைத்து அதைகேட்பார்கள், நானும் கொண்டு வருவேன் என சொல்வேன். அன்று அவர்கள் நான் வந்தது கூட அறியாமல் கைகட்டி மாலை அணிந்து முகம் முழுதும் பூசி படுத்து இருந்தார். அவர்களை சுற்றி அனைவரும் அழுதுகொண்டு இருந்தனர்.
தாத்தா வெளியில் சோகமாக அமர்ந்து இருந்தார். என்னை அவர்களை கும்பிட சொன்னார்கள். பாட்டியெப்போதும் ஒரு ஆளை பிடித்து தன் நடப்பார்கள். அன்று அவர்களை பலர் சேர்ந்து வெளியே தூக்கி போனார்கள். நாங்கள் சிறுவர்கள் எதையும் கண்டுகொல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தோம். அவர்கள் திரும்ப வரும்போது பாட்டி அவர்களுடன் இல்லை. அப்பாவிடம் பாட்டி எங்கே என்று கேட்டேன், அப்பா பாட்டி சாமியிடம் சென்று விட்டதாக கூறினார். பாட்டி கட்டில் இருந்த இடத்தில் அவர்களின் புகைப்படத்திற்கு மாலைபோட்டு இருந்தனர்.
நாங்கள் அடுத்தநாள் சேலத்திற்கு கிளம்பினோம். பேருந்தில் ஏறியதும் பஸ் கிளம்பியது. எங்கள் ஊரின் எல்லைப்புறத்தில் இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. அவற்றை தாண்டி தான் சேலம் செல்லும்போதே உள்ளது. நான் ஜன்னல் ஓரத்தில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தேன். அப்பா அம்மாவிடம் எங்கோ சுட்டி காட்டினார். நான் என்ன வென்று கேட்டேன். அவர் ஏரியை ஒட்டிய சிறு காலி நிலத்தை காட்டினார், அங்கு பல மண் மேடுகள் இருந்தன. என்ன என்று மீண்டும் கேட்டேன். ஒரு மண் மேட்டை காட்டி அங்குதான் காட்டம்மாபாட்டியை புதைத்தார்கள் என்று சொன்னார். மீண்டும் உடல் முழுவதும் ஒரு நடுக்கம். பாட்டி சாமியிடம் போய்விட்டார்கள் என்றால் குழிக்குள் யார்? நான் பின்பு வேறு எதுவும் பேச வில்லை.
பின்னர் நான் வளர வளர விளங்க ஆரம்பித்தது. இந்த கேள்வியை பலரிடம் நான் கேட்டுள்ளேன் பலரும் பலவாறு பதில் அளித்து உள்ளனர். அறிவியல் ரீதியாக பல விளக்கங்களை பெற்றேன். ஆனால் எதுவும் என்னை நிறைத்தது இல்லை. ஒவ்வொரு மரண செய்தியும் என்னை நிலைகுலைய வைக்கும், ஏன்? எதனால்? என்ன பொருள்?
முடிந்தவரை அனைத்திலும் இருந்து நான் தள்ளிநிற்க ஆரம்பித்தேன். கார்ட்டூன்கள் பார்த்தேன், தேவை அற்ற பொய்கள் பல கூறினேன், ரகளைகள் செய்தேன், நண்பர்களை அடித்தேன். இத்தனையும் என் 4 ஆம் வகுப்புக்கு முன்பு. ஒரு restlessness என்னில் குடிகொண்டது. நான்காம் வகுப்பு நான் வேறு பள்ளியில் சேர்ந்தேன். அங்கும் நான் நான் சந்தித்தவை வேறுவகையான கேள்விகள். அங்கு என்னை என் உருவத்தை வைத்து கேலி செய்தனர், அதனால் சற்று உடைந்து போனேன். கேள்விகள் என் முன் அணிசெய்து நின்றது.
ஒரு வருடம் சென்றது. 5ஆம் வகுப்பு முதல் மாணவர்கள நூலகம் சென்று நூல்களை வாசித்தாக வேண்டும். அங்கு பெரிய நூலகம் உண்டு. நான் முதல் நாள் நூலகம் சென்றேன். நூலக ஆசிரியை நூல்களை எடுத்து அனைவருக்கும் தருவார். எனக்கு அமர் சித்ரா கதாவின் the Buddha, he lit the path, புத்தகம் கிடைத்தது. தற்செயலா அல்லது ஊழின் கணமா என்று அந்த நிகழ்வை சொல்ல முடியாது. புத்தனின்கதையை நான் அதுவரை படித்தது இல்லை கேட்டது இல்லை. மெதுவாக பக்கங்களை புரட்டினேன். தடிமனான காகிதத்தில் புத்தரின் வழக்கை வரலாறு வரையப் பட்டு இருந்தது.
புத்தரின் அம்மாவின் கனவு, அவரின் பிறப்பு, தந்தையின் சூளுரை போன்றவற்றை படித்துக்கொண்டிருந்தேன். சித்தார்த்தன் வீதியில் செல்லும் பிணத்தை பார்த்து கேட்கும் கேள்வியை படித்ததும் I was awestruck. ஏன் எனில் இது என்னுடைய கேள்வி என்னுள் சொல்லாக மாறாத கேள்வி. அதை ஒருவன் கேட்கிறான், அதற்காக தன் சுக போகங்களை துறந்து செல்கிறான். வேகமாக படித்தேன். சித்தார்த்தனின் பயணத்தில் நானும் பயணித்தேன். ஒரு கட்டத்தில் நானும் புத்தனும் ஒன்று என கண்டேன். அன்று ஒன்றை முடிவெடுத்தேன் என்னுடைய கேள்விகளை நான் நேர்நிலையில் விடை கண்டு பிடிக்க வேண்டும் என. அவனை போல வாழ வேண்டும் என. அவனாக மாறவேண்டும் என. நான் அவனே என. அப்பொழுது அது எனக்கு பெரும் விடுதலையாக இருந்தது. பல வருடங்கள் அவர் என்னை வழிநடத்தினார்.
நான் 10 ஆவது முடிகும்ன்வரை அந்த கேள்வி மீண்டும் எழ வில்லை.எழுந்தாலும் அது என்னை பாதிக்கவில்லை. 11, 12ஆம் வகுப்பில் என்னை மீண்டு உலுக்கிய இரு மரணங்கள், என் நண்பன் சக்தி மற்றும் என் தாத்தாவின் மரணம். சக்தி என் தோழன். நெருங்கிய நண்பன். இன்று வரை தினமும் அவனை நினைத்துகொள்வது அவன் பெற்றோரைத் தவிர நான்தான். அவன் physically challenged person. சற்று எம்பி எம்பி நடப்பான். அவனால் எடை தூக்க முடியாது. நான் அவன் பையை தூக்கி கொண்டு தினமும் செல்வேன். சற்றுப் பார்வை குறைபாடு இருந்தது. பள்ளி பஸ்ஸில் இருந்து அவனை இறக்கி, வகுப்பிற்கு சென்று, அவனுடன் அமர்ந்து, அவன் செல்லுமிடம் எல்லாம் அவன் கைகளைப் பிடித்து செல்லுவேன். மீண்டும் வீட்டுக்கு திரும்பும் பொழுது பஸ்ஸில் ஏற்றி விடுவேன். இரண்டு வருடங்கள் அவனுடன் இருந்தேன். அவன் வேறு பள்ளிக்கு சென்று விட்டான். பின்னர் அவனை பற்றி எதுவும் தெரியவில்லை.
அவன் அம்மா ஆசிரியை அவர்களும் அதே பள்ளியில் தான் வேலை செய்தார். அவன் வேறு பள்ளி சென்றதற்கு அதுவும் காரணம். ஒரு நான் இன்டர் school quiz competition கலந்து கொள்வதற்காக வேறு பள்ளிக்கு சென்றேன். அங்கு அவன் அம்மாவை பார்த்தேன், போய் அவர்களை அழைத்து சக்தி எப்படி இருக்கிறான் எங்கே அவன் இங்கு படிக்கிறானா என்று கேட்டேன். அவர்கள் என் கையை பிடித்து தேம்பி அழ ஆரம்பித்தார், எனக்கு ஒன்றும் புரியவில்லை, டேய் கண்ணா சக்தி நம்ம விட்டு போய்ட்டான் என்று சொன்னார்கள். உடைந்து விட்டேன்.
பின்னர் என் தந்தை வழி தாத்தாவின் மரணம். அவருடன் நான் இருந்தது. இரண்டு வருடங்கள் தான் ஆனால் அவரின் பாதிப்பு என்னில் அதிகமாக உண்டு. அவரின் மரணம் என்னை சற்று அதிரச் செய்தது. அவரின் அந்திம சடங்கின் ஒரு அங்கமாக மோட்ச சடங்கு நடந்தது, அதில் நமக்குத் தெரிந்தவர்களின் பெயரை சொல்லி பிரார்த்தனை செய்யும் ஒரு சடங்கு உண்டு. அதில் குறைந்த பட்சம் ஏழு தலைமுறை பெயர்களை சொல்ல வேண்டும். மூன்று தலைமுறைக்கு மேல் யாராலும் பெயர்களை சொல்ல முடியவில்லை. யாருக்கும் யாருடைய பெயரும் ஞாபகம் இல்லை. சிவன் என்றும் காவேரி என்று எள்ளு தண்ணீர் விட்டனர்.
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கரண்டி எள்ளு தண்ணீர், கடைசியில் மூன்று பிண்டம். ஓடி உழன்று செய்த அனைத்தும் இந்த ஒரு கரண்டி எள்ளிற்காகவா, அவளவு தானா? எள் என கூட எஞ்சாது கால நதியில் அடித்துச் செல்லப்படும் வாழ்க்கை. 12 அகவை வாழ்ந்தாலும் சரி 80 அகவை வரை வாழ்ந்தாலும் சரி ஒரு கை நீரோ அல்லது ஒரு கை எள். எதை செய்து என்ன பயன்? அன்று நான் புத்தனால் கைவிடபடவன் என்று உணர்ந்தேன். நாத்திக வாதம் என்று நம்பி புரிதல் இல்லாம பேச ஆரம்பித்தேன். எதை சொன்னாலும் மறுத்து கூறினேன். கசந்து நிறைத்து நின்றேன். ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுத்தேன், உடை முதல் உண்ணுவது வரை அனைத்தின் மீதும் ஒரு விருப்பமின்மை இருந்தது. நாட்கள் செல்ல அனைவர் மீதும் அதை திணித்தேன். அனைவரையும் அற்பர் என கண்டேன். இது என் இயல்பு வாழ்க்கையில் மகிழ்ச்சி முற்றும் இல்லாமல் ஆகியது. அமைதி இன்மை குடி ஏறியது.
இந்த நிலையில் நான் ஆங்கில இலக்கியம் சேர்த்தேன். கல்லூரி வாழ்க்கை என்னை மிகவும் மாற்றியது, பல்வேறு புத்தகங்களை படித்தேன், பல மனிதர்களிடம் பேசினேன், பழகினேன், காரணம் இல்லாமல் சந்தோஷமாக இருக முடியும் என்றும் அங்கு தான் கண்டுகொண்டேன். Liveliness, spiritedness போன்றவை என்ன என்று மீண்டும் அங்கு கண்டு கொண்டேன். அப்பொழுது தான் உங்களுடைய எழுத்து எனக்கு அறிமுகமாகியது. முதலில் உங்கள் பூர்ணம் கதை அதை தொடர்ந்து அறம் தொகுதி வாசித்தேன். தற்செயலாக அலைகளென்பவை பதிவை படித்தேன். ஜெ அது ஒரு மாபெரும் திறப்பு, பிறகு உங்கள் புறப்பாடு தன்மீட்சி. வரிசையாக உங்கள் படைப்புகள். இப்பொழுது வெண்முரசு.
உங்களைப் படிக்க ஆரம்பித்த பின்பு அந்த கேள்விகள் பலமுறை வந்துள்ளது. ஆனால் அவற்றை தங்கள் சொற்கள் மூலம் தெளிவுடன் கடந்து சென்றுள்ளேன். சொல்வளர் காடு, இமைக்கணம் கிராதம் மாமலர் நாவல்கள் பெரும் என்னை தெளிவுபடுத்தின. முக்கியமாக கர்ணன் மற்றும் நீலனுக்கு நடுவில் நடக்கும்னுறையாடல். கோவை புதிய வாசகர் சந்திப்பு என்னை புதிய பரிணாமத்தில் சிந்திக்க வைக்கிறது. ஆனால் மீண்டும் நான் அந்த சுழியின் ஆழத்திற்கு அடித்து செல்லப்பட்டு உள்ளேன். காரணம் வெண்முரசு. குறிப்பாக அந்த நீலன்.
இப்போது கார்கடல் வாசித்து கொண்டிருக்கிறேன். போர் சித்திரங்கள் உயிர் பலிகள் உச்சகட்ட உணர்வுகள் என் மனதை கிளறி விட்டன. இப்போது அதே கேள்விகள் மீண்டும் விசையுடன் முளைத்துள்ளன. முள் சாட்டையை போல என்னை கவ்வுகிறது. நான் இப்பொழுது மெய்யியல் சார்ந்த புத்தகங்களை படித்துப்கொண்டிருக்கிறேன் குறிப்பாக history of western philosophy – Bertrand Russell , தங்களின் இந்திய ஞானம் மற்றும் Sophie’s world புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை நான் வாசித்த அனைத்திலும் இருந்து ஒன்று தெரிகிறது. என் கேள்விகள் யாவும் புதியவை அல்ல, அவை வாழ்க்கையில் வராத ஒரு மனிதனும் இருக்க முடியாது.
அவரவர் தேர்ந்து எடுகும் பாதை வேறு. அவர கண்டடையும் மெய்மை வேறு. ஒவ்வொரு கண்டடைதலும் ஞானமே, ஒவ்வெறு ஞானமும் மெய்மையே. நான் தனியவன் அல்ல. எனக்கு முன்பும் இந்த கேள்விகள் இருந்தன இனியும் இருக்கும். அனைத்தும் செயலை முன்வைப்பன, ஆனால் இந்த கேள்வியை சந்திக்க நினைப்பவர்கள் பலர் செயல் இன்மையின் பிடியில் ஆட்டுவிக்கபடுகிறார்கள். பலர் இதில் இருந்து விலக, காமம் போன்ற அடிப்படை இசைகளுக்கு தங்களை ஆட்டுவிக்க விடுகின்றனர், பிறர் பொருளியல் இன்ப நிலைகளில் திளைக்கின்றனர், பலர் Fanatic ஆகா ஒன்ற பிடித்து தொங்குகின்றனர் குறிப்பாக மத அடையாளங்கள். காலப்போக்கில் அவர்கள் dogmatic person ஆகமாறுவதை காணமுடிகிறது. நான் அப்படி ஆகிவிடக்கூடாது என்ற பயமும் உறுதியும் எனக்குண்டு. சல்லியாக ஆகிவிடக்கூடாது என பெரும்பயம் எனக்குள் உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் ஆழத்திற்கு இழுக்கப்படுகிரேன். முழுதாக வெளிப்படாமல் போய்விடுவேனா என ஐயம் என்னை துரத்துகிறது. சிதறிக்கொண்டே இருக்கிறேன்.
கடிதம் மிகவும் நீண்டு விட்டது. மன்னிக்கவும். இதை எழுதுவதன் காரணம், இதை நான் யாரிடம் சொல்லுவது. யாரிடம் சொன்னாலும் அது அப்படிதான், உனக்கு இது கூட தெரியாதா?, வாழும் வரை இருந்து விட்டு போ போன்ற பல அறிவுரைகள் கூறுகின்றனர். சாமியாராக ஆக போகிறாயா என கிண்டல் செய்கின்றனர். இந்த கொந்தளிப்பை அறிந்தவருகே அதுந்தெரியும். இதே கேள்விகளுடன் தான் உங்கள் தேடல் தொடங்கியது. நீங்கள் நித்யாவை அடைந்தீர்கள், நான் எனது தேடலை அடைவேனா? ஒவ்வொரு முறையும் நான் அந்த கேள்விக்கு ஏன் வருகிறேன்?
திரு என் வாழ்நாள் முழுதும் நெஞ்சில் நிறைய வேண்டும், வண்ண மயமான வாழ்வை கொண்டாட வேண்டும் என் பேராசை உண்டு. கொண்டாட முயல்கிறேன், ஆனால் முழுதாக திளைக்க முடியவில்லை, ஒரு நெருடல் உருத்தி கொண்டே இருக்கிறது.
குந்தி கர்ணனிடம் சொல்வதை போல. “ஆனால் அது உண்மை அல்ல. உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல் சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு.” இருக்கலாம் நான் எதாவது ஒன்றை தவற விட்டு இருக்கலாம் அல்லது வெறும் ப்ச்ச்வனையா? என்று கேள்வி எழுகிறது. இன்று தெளிவாக தெரிகிறது buddhan என்னை கைவிடவில்லை. நான் அவனை முழுதாக கற்கவில்லை.
நான் ஒன்றை முடிவு செய்துள்ளேன், இனி அந்த கேள்விகளைப் பார்த்து ஓடுவது இல்லை. அதை நேர்பட அணுக வேண்டும், ஒரு துளி அஞ்சாது அதை நோக்க வேண்டும், இனி அந்த கேள்விகளால் அலைகழிக்கப்படக்கூடாது. இவை அனைத்தும் நானே கற்பனை செய்து கொள்வதாகக் கூட இருக்கலாம். எந்த வகையிலும் சென்ற காலத்தை போல என்ன அவை தளர செய்யகூடாது. இது என் அந்தரங்க தேடல் இதை எப்படி நான் அணுகுவது, எப்படி முறை செய்வது? தங்கள் எழுத்துகள் பெரும்பாலானவை இந்த கேள்விகளை பற்றியவை தான், இருந்தாலும் மேலும் நான் விசைபட முன் செல்ல இந்த கடிதத்தை எழுதுகிறேன். கீதா உபதேசம் கேட்ட பின்னரும் அர்ஜூனன் தயங்கினான், நான் கேட்பதில் தவறில்லை என தோன்றியது.
பின் குறிப்பு:
உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்து கொண்டதற்கும், வேறு ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். என் மனதிற்கு மிக அணுக்கமானவர் நீங்கள். எந்த ஒரு மறைவும் ஆணவமும் இல்லாமல் என்னையும் என் ஐயங்களையும் முழுதாக முன்வைக்க வேண்டும் என்று நினைத்தேன். முழுதாக முன் வைத்துள்ளேன்.
அன்புடன்
சோழ ராஜா.
***
அன்புள்ள சோழராஜா
நீண்ட உள அலைக்கழிவு கொண்ட கடிதம். கூடவே சில தெளிவுகளும் கொண்டது. நான் விரிவாக பிறகு எழுதுகிறேன்.
ஆனால் இது பொதுவெளிக்குரிய உரையாடல் என நினைக்கிறேன். நாம் நம்மை கூட்டாக புரிந்துகொள்ள உதவுவது. அனைவருக்கும் உரிய அடிப்படைச் சிக்கல்கள் சிலவற்றை விவாதிப்பது
ஜெ
தினத்தந்தி- நம் அன்றாட மர்மங்களில் ஒன்று
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் நம் கையை வந்தடையும் நாளிதழான தினத்தந்தியைப் பற்றி மிகக்குறைவான செய்திகளே நம்மிடம் உள்ளன. சி.பா.ஆதித்தனார் பற்றி எழுதப்பட்ட ஒரே ஒரு நூலை ஒட்டி எழுதப்பட்ட தமிழ் விக்கி பதிவுகள் தினத்தந்தியில் இருந்து ராணி வாராந்தரி, குரங்கு குசலா என நீள்கின்றன. தரவுகள் கிடைக்கக்கிடைக்க இதை விரிவாக்கிக்கொண்டே செல்லவேண்டும்.
தினத்தந்திஇஸ்லாமியரும் காங்கிரஸும்- கடிதம்
இஸ்லாமியரும் காங்கிரஸும்
அன்பின் ஜெ.
ஸ்ரீதர் பாலாவுக்கு தாங்கள் அளித்த பதிலான இஸ்லாமியரும் காங்கிரஸும்” படித்தேன். அக்கட்டுரையின் மையப் பேசுபொருள் “இந்துமதம் வெறுமொரு அரசியலியக்கமாக சிறுத்துவிடக்கூடாது” – இது மிக முக்கியமான செய்தி, மதம் வழியாக உருவான பாகிஸ்தான் இன்று அடைந்திருக்கும் நிலையும், இன்னுமொரு அண்டை நாடான இலங்கையில் பௌத்த மதமும், சிங்கள தேசிய பெரும்பான்மைவாதத்தை அரசியலில் கலக்கச் செய்து அங்குள்ள அரசியல்வாதிகள் அந்த நாட்டை கொண்டு சேர்த்திருக்கும் கதையும் நம் அனைவருக்குமான பாடம்.
அதேபோல “இஸ்லாமியர் காங்கிரஸ் நோக்கிச் செல்லவேண்டும்.” – “சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் இஸ்லாமியர்களை நோக்கி சென்றால் அது காங்கிரஸின் அழிவு. காங்கிரஸை நோக்கி இஸ்லாமியர் செல்லவேண்டும்” என்று தாங்கள் எழுதியிருந்தீர்கள்.
தமிழ்திசை இந்து நாளேட்டில் சில நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு கட்டுரையோடு இணைத்து அதை புரிந்துகொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் தளத்தில் சிவக்குமார் எழுதியிருந்த https://www.jeyamohan.in/110841/ கடிதமும் உடன் நினைவுக்கு வந்தது. இந்தப் பின்னணியில் India Today 02-05-22 Deepening divide (அகன்று விரியும் பிளவு) என்கிற அட்டைப்படக் கட்டுரைகளில் ஒன்று தாங்கள் கூறக்கூடிய “தேசிய முஸ்லீம்” என்கிற விஷயத்தை பேசுகிறது. இதில் தாங்கள் கூற வந்திருப்பது முஸ்லீம்களை உள்ளடக்கிய அம்சம். ஆனால் இந்துத்வா இந்துமதத்தையும், தேசியத்தையும் ஒரே தரப்பாக்கி பிற அனைத்தையும் எதிர்முனைக்கு துரத்திவிடுகிறது என்பதே. அது exclusive-வாக திரிக்கிறது. முஸ்லிம்கள் போன்ற மதச் சிறுபான்மை மட்டுமல்ல, மொழிவழி, நிலவழி, பொருளாதார வேறுபாடுகளைக் கணக்கிலெடுக்காத குறுகிய நோக்குடையுது.
இதே சிந்தனையில் இருந்தபோது சென்னையில் இருக்கும் சிந்தி மொழி இந்துக்களின் சிறியதொரு ஆன்மிக அமைப்பான சூஃபிதர் செயல்பாட்டின் பொருத்தப்பாடு குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மதக் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்புக்காக முழுமையாக ஒரு மாதம் அன்னதான ஏற்பாட்டை இவர்கள் பொறுப்பேற்பது அசாதாரணமாக எனக்குப்படுகிறது.
அதுவும் கணக்கொன்று போட்டு பணத்தை அறக்கொடை செய்துவிட்டு ஒதுங்கிச் செல்வது வழக்கமான நடைமுறையே. அதைவிட பெரிய கஷ்டம் அதை நேரிடையாக வினியோகிப்பது, அதற்காக நாள்தோன்றும் 75-100 பேர்கள் மாலை 5-7 மணியளவில் குழுமி உடலுழைப்பைத் தருவது முன்னுதாரணமற்ற பெருஞ்சேவையாகும். இந்த நூறு பேர்களின் பின்னணி வணிக சமூகத்திலிருந்து எழுவதையும் நினைவில் கொள்வது அவசியம். தொழில், குடும்பம் என்பதை ஒதுக்கி தணியாத ஈடுபாடு இருந்தால் மட்டுமே இது நாற்பதாண்டுகளாக இன்று வரை நீடித்திருக்க வாய்ப்புள்ளது.
இங்கு நோன்பு துறப்புக்காக என்னருகில் அமர்ந்திருந்தவரிடம் இதை எப்படி உணர்கிறீர்களென்று கேட்டேன். கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு, இஸ்லாமிய மரபில் மறுபிறப்பு ஏற்படும்போது அனைவரும் இறைவனின் சன்னிதானத்தில் இருப்பர், நல்லவர், கெட்டவர் என்கிற கணக்கெடுப்பு நடக்கும், அந்த நேரத்தை மாபெரும் இறுதித் தீர்ப்பு நாள் என்றழைப்பர், அப்பொழுது கடுங்கோடை நிலவும், அடங்காத தாகமெடுக்கும். அப்பொழுது நல்லவர்களுக்கு குளிர்ந்த நீர் கொடுக்கப்படும், அவ்வாறான ஒரு காட்சியை இந்த 14 மணிநேர உண்ணாநோன்புக்குப் பிறகு இந்த சிந்தி நண்பர்கள் அளித்திருக்கும் இந்த உணவும், குளிர்ந்த நீரும் என் தாகத்தை தணித்ததைப் போல, பசியாற்றியதைப் போல இவர்கள் நம்பும் புனர்ஜென்மத்தில் நல்லருள் கிடைக்கட்டும், இந்த வாழ்வில் இவர்களின் வணிகத்தில், தொழிலில், வேலையில் வளர்ச்சி உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தார்.
https://www.hindutamil.in/news/opinio...
ஏதோ நாளிதழ் ஒன்றில் வந்தது, Today’s newspaper tomorrow’s waste paper என்றாகிவிடாமல் தங்களின் தளம் முக்கியமான பண்பாட்டு ஆவணக்கிடங்கு போல பெருக்கெடுத்திருப்பதால் இங்கு பதிவாவது அவசியம் என்று கருதுகிறேன்.
காங்கிரஸ் – இஸ்லாமியர் விஷயத்தில் தாங்கள் சொன்னதைப் போல சிந்தி இன இந்துக்கள் முன்கையெடுத்துள்ளனர். அந்த அறக்கொடையை ஏற்று மனமகிழும் முஸ்லிம்களும் – சொல்லாமல் ஒரு செய்தியை மறைமுகமாக தருகின்றனர். அன்பு பெருகவும், வெறுப்பு மறையவும் இது அவசியம்.
நன்றி,
கொள்ளு நதீம், ஆம்பூர்.
அமெரிக்கா, கடிதம்
வணக்கத்திற்குரிய ஜெ,
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல ஆண்டுகளாக உங்களின் எழுத்தை புத்தகங்கள் வாயிலாகவும், உங்களின் வலைத்தளத்தின் மூலமாகவும் வாசித்துக்கொண்டிருந்தவன் என்ற முறையில், இந்த கடிதம் மிக நீண்ட காலம் பிறகு உங்களின் கதவை தட்டுகிறது.
உங்களின் அமெரிக்க பயணத்தில் இருந்து வெவ்வேறு பயன் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு உங்களின் பார்வையில் அமெரிக்காவை பார்க்க ஆவலாக இருந்தேன். அதன் ஒரு பங்காக நார்த் கரோலினா முகாமிற்கு கூட பதிந்து வைத்து காத்திருந்தேன். இத்தனை நாள் உள்புகாத வைரஸ் இப்போது புகுந்து அதை கெடுத்துவிட்டது.
உங்களின் அமெரிக்கா! அமெரிக்கா! பதிவில் ஐசக் பாஷவிஸ் சிங்கர் பற்றி சொல்லியிருந்தீர்கள். நீங்கள் அறிந்த அமெரிக்கா அவர் வழியே அறிந்தது என்றும் சொல்லியிருந்தீர்கள். என்னை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்த அமெரிக்காவில் புரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது என எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன். எங்கு சென்றாலும் நான் பார்க்கும் பார்வையில் சிறிது மாற்றம் இருந்தது. அமெரிக்க மண்ணில் செழித்து வாழ்ந்து பிறர்க்கு நிலத்தை பறிகொடுத்த பூர்வகுடிகள் என் மனதுக்கு மிக நெருக்கமானவர்கள். இப்போதைய அமெரிக்கர்கள் செய்த மிகப்பெரிய நல்ல காரியமாக நான் நினைப்பது, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அவர்களைப்பற்றி எடுத்துரைப்பது தான். அதன் படிநிலையில் இருக்கும் அரசியல் இன்னும் எனக்கு விளங்கியபாடு இல்லை. பூர்வகுடிகளும், அயல் நாட்டினரும் இந்த நாட்டிற்கு அளித்திருக்கும் கொடை இல்லாவிட்டால் எங்கே இருந்திருக்கும் இந்த நாடு என்ற கேள்வி எனக்கு எப்போதும் உண்டு.
சிங்கர் பற்றி கூறியவுடன் அவசர அவசரமாக அவரை தெரிந்துகொள்ள ஆவலானேன். மிக நெருக்கமாக உணர்ந்தேன். நியூயார்க் நகரம் செல்லும் போதெல்லாம் எல்லிஸ் ஐலண்ட் அருங்காட்சியகம் என் பார்க்கும் பட்டியலில் இடம் பெற்று விடும். மாபெரும் கடல் பயணத்தில் சுதந்திர கனவு பலிக்குமா பலிக்காதா என மருண்டு கொண்டிருந்த ஒவ்வொருவரின் காலும் பட்டிருந்த இடம் எல்லிஸ் ஐலண்ட். அவர்களுக்கு சுதந்திர தேவி கண்டிப்பாக ஒரு தெய்வ தரிசனம் தான். அந்த இடத்திலிருந்து தான் சிங்கரும் தரிசனத்தை கண்டிருப்பார். அவர் தொடர்பான டாகுமெண்டரியும், கதை () ஒன்றையும் படித்தேன். இன்னும் படிக்க வேண்டும் என்ற உத்வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உங்களின் இந்தப் பயணத்தில் மூலம் எனக்கு அமெரிக்க மேல் கொண்ட பார்வை இன்னுமின்னும் அடர்த்தியாகவும் விரிவாகவும் படரும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து வரப்போகும் அமெரிக்க கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கொண்டிருக்கிறேன்.
நன்றியுடன்,
லக்ஷ்மண்
அன்புள்ள லக்ஷ்மண்
வழக்கமாக அமெரிக்கா வந்தால் பயணக்கட்டுரை எழுதுவதில்லை. ஏனென்றால் அது இன்று தமிழர்களுக்கு அந்நிய நாடு அல்ல. அவர்களில் ஒரு பகுதியினர் வாழும் நாடு. ஆகவே அறிந்தவற்றை திரும்பச் சொல்வதாக ஆகுமோ என ஐயம்.
அவ்வப்போது என் உளப்பதிவுகளாக பண்பாட்டுச் செய்திகளை சொல்வதுண்டு.
ஜெ
May 18, 2022
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது
தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் உயரிய விருது இது.
ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுக்களம் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பண்பாட்டு மறுமலர்ச்சி சார்ந்தது. பழந்தமிழ் இலக்கியமரபு மீட்டு எடுக்கப்பட்ட காலம் அது. நவீனத் தமிழிலக்கியம் உருவாகி வந்த காலமும்கூட. ஆகவே இன்றைய தமிழிலக்கியத்தின் இவ்விரு அடித்தளங்களைப் பற்றியும் மிகமுக்கியமான ஆய்வுகளை ஆ.இரா.வேங்கடாசலபதி செய்திருக்கிறார். இன்றைய புரிதல்கள் பலவற்றை வேங்கடாசலபதி உருவாக்கியிருக்கிறார் எனில் அது மிகையல்ல. பாரதி ஆய்வாளர்களின் வரிசையிலும் வேங்கடாசலபதிக்கு முக்கியமான இடம் உண்டு.
வேங்கடாசலபதிக்கு இயல் விருது தமிழ் பெருமைகொள்ளும் தருணங்களில் ஒன்று.
புனைவிலக்கியத்திற்கான விருது பா.அ.ஜெயகரனுக்கும் ,கவிதைக்கான விருது ஆழியாளுக்கும் , கட்டுரைக்கான விருது நீதிபதி சந்துருவுக்கும் மொழியாக்கத்திற்கான விருது மார்த்தா ஆன் செல்பிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அளவில் சாதனையாளர்கள். ஆஸ்திரேலியா சென்றபோது ஆழியாளைச் சந்தித்து அவர் இல்லத்தில் நானும் அருண்மொழியும் தங்கியிருக்கிறோம். அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நடைபெறவிருக்கும் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராக தாமஸ் புரூய்க்ஸிமா கலந்துகொள்கிறார்
அமெரிக்காவில்
இந்த முறை அமெரிக்கா வரும்போது ஒரு சிறு பதற்றம் இருந்தது. அமெரிக்காவுக்கு வெறும் பயணியாகவே எல்லா முறையும் வந்திருக்கிறேன். முதன்முறை வரும்போது விசா வாங்கும்பொருட்டு அமெரிக்காவின் ஏதாவது ஒரு தமிழ்ச் சங்கம் எனக்கு அழைப்பு விடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்குள்ள அமைப்புகள் அதற்கு முற்றாக மறுத்துவிட்டன. நல்லவேளையாக இந்திய அமெரிக்க கான்சுலேட்டில் நண்பர் அன்புவின் அண்ணா தீனதயாளன், அவர்களின் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். ஜெயகாந்தனின் நண்பர், என்னுடைய சிறந்த வாசகர். அவர் எனக்கு அமெரிக்க துணைத்தூதரை அறிமுகம் செய்து வைத்தார். இருபது நிமிடத்தில் பத்தாண்டு விசா எனக்கு கிடைத்தது.
இங்கு வந்த பிறகு பாஸ்டனில் சிறில் அலெக்ஸ் வீட்டில் தங்கியிருந்தபோது நான் தங்கியிருக்கும் தகவலை என் தளத்தில் அறிவித்தேன். அங்கிருந்த ஒரு நண்பரின் இல்லத்தில் நண்பர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். நாற்பது நண்பர்கள் பார்க்க வந்தார்கள். அது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைய செல்லுமிடத்தில் எல்லாம் என் இணையதளத்தை நம்பியே வாசகர்களை வரவழைத்தேன். முழுமையாகவே ஒரு இலக்கிய சுற்றுப்பயணமாக அதை மாற்றிக்கொண்டேன்.
இரண்டாம் முறை வந்தபோது பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குறைவாகவே கூட்டங்களை ஒத்துக்கொண்டேன். மூன்றாம் முறை 2019-ல் வந்தபோது கூட்டங்கள் எதையுமே ஒத்துக்கொள்ள வேண்டாம் என்று முன்னாலேயே சொல்லியிருந்தேன். செப்டம்பரில் இங்கே இலையுதிர்காலத்தில் மரங்களும் வண்ணம் கொள்வதைப் பார்ப்பதற்காகவே வந்தேன். வைட் மௌண்டன்ஸ் வழியாக நிகழ்த்திய அந்தப்பயணம் ஒரு மாபெரும் வண்ணஓவியத்தினூடாக ஊர்ந்து செல்லும் கனவு அனுபவமாக இருந்தது.
அரிய அனுபவங்களின்போது அருண்மொழி கூட நிற்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. ஆகவே மறுமுறை அருண்மொழியுடன்தான் வருவேன் என்று அப்போது சொன்னேன். இம்முறை அருண்மொழி ஒரு எழுத்தாளருக்குரிய அடையாளத்துடன் வருகிறாள். எல்லா ஊரிலும் அவளுக்கான வாசகர்கள் இங்கு உருவாகியிருக்கின்றனர்.
இம்முறை தமிழ் விக்கி வெளியீட்டு விழா நிகழ்ச்சி வாஷிங்டனில் பிராம்டனில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. முதன்முறையாக அத்தனை பெரிய ஒரு விழாவை இங்கே ஒருங்கிணைக்கிறோம். அத்துடன் ஓர் உணர்ச்சிகர உளநிலை என்னில் இருந்தது. மைய அதிகாரத்தால் கல்வி அமைப்புகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் என் முன்னோடிகளை இங்கே முன்னிறுத்தப் போகிறேன் என்று எனக்குத் தெரிந்திருந்ததன் விளைவு அது.
இங்கு வந்த இரண்டாம் நாள் விழாவில் பங்கேற்கவிருந்த அத்தனை விருந்தினரும் ஒரே நாளில் விழாவுக்கு வரவில்லை என்று சொன்னார்கள் என்று தகவல் தெரிந்தது. அதை ஒரு கும்பல் இணையத்தில் தங்கள் வெற்றியாக கொண்டாடிக்கொண்டிருந்த செய்திகளும் வந்துகொண்டிருந்தன. ஆனால் ஒருமணிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். அதன்பின் பொறுமையாக காத்திருந்தோம். எதிர்ப்பாளர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
உண்மையிலேயே ப்ரண்டா பெக், தாமஸ் புருக்ஸ்ய்மா இருவரும் கலந்து கொண்டது நினைக்க நினைக்க நினைவூட்டுகிறது. ஒருவர் தமிழ் பண்பாட்டை நாட்டாரியலை வெளிக்கொண்டுவந்தவர். இன்னொருவர் செவ்வியலை வெளிக்கொண்டுவந்தவர். எங்கள் நோக்கமே அதுதான். கல்வியாளர்களையோ பேராசிரியர்களையோ அழைத்து வருவதல்ல. உண்மையில் கல்வியாளர்களுக்கு ஒருவாய்ப்பு கொடுத்தோம் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை.
பலர் எண்ணுவதுபோல எனக்கு எந்த அமைப்பு வல்லமையும் இல்லை. அமைப்புகள் எனக்கு ஒத்துவருவதில்லை என்பது ஒரு பக்கம். தமிழில் கல்வித்துறை மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சரி, தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சரி, படைப்பிலக்கியம் மீது எந்த மதிப்பும் இல்லாதவர்கள். படைப்பிலக்கிய வாசிப்பு மிகமிகக் குறைவாக உள்ளவர்கள். அவர்களுக்கு அதிகாரமும் ஊடகப்புகழும் மட்டுமே கண்களுக்கு தெரியும். அவர்களுக்கு முன் நான் ஒரு தருணத்திலும் சென்று நிற்கப்போவதில்லை.
என் அமைப்பு என்பது என் வாசகர்களின் வட்டம்தான். என் எழுத்துக்கள் வழியாக அறிமுகமாகி, என் மேல் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் இருப்பவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். தமிழிலக்கியத்தின் இதுநாளைய வரலாற்றில் எவருக்கும் இப்படி ஒரு வாசகர்ச் சூழல் அமைந்ததில்லை. அந்த வாசகர்ச்சூழலைக்கொண்டு இலக்கியத்திற்கு பணியாற்றுவதையே நான் செய்துவருகிறேன்.
நியூயார்க்கில் நண்பர் பழனி ஜோதி-மகேஸ்வரி இல்லத்தில் தங்கினேன். அங்கிருந்து நியூயார்க் நகர டைம் ஸ்கொயருக்குச் சென்றேன். ஒவ்வொரு முறை அமெரிக்கா வரும்போதும் டைம் ஸ்கொயருக்குச் சென்றிருக்கிறேன். அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடத்தின் (One World Trade Center) மேலிருந்து நியூயார்க் குடாக் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு தலைமுறையிலும் அங்கு வாழ்வு நோக்கி வந்த மக்களை எண்ணிக்கொண்டேன்.
எனக்கு மிகப்பிடித்தமான படம் 1900. அதில் அமெரிக்காவுக்குள் நுழையும் கப்பலில் பெரும்பதற்றத்துடன் நின்றிருக்கும் குடியேறிகளின் ஒவ்வொரு கண்ணிலும் சுதந்திரதேவியின் சிலை நுண்மையாக பிரதிபலித்து செல்வதைக் காட்டியிருப்பார்கள். அது நம்பிக்கையின் அடையாளம். உலகிற்கு அது ஒரு வாக்குறுதி. அமெரிக்காவின் அத்தனை பொருளியல் மீறல்களையும் பிழைகளையும் பொறுத்து அதை ஒரு கனவு தேசமென நிறுத்துவது அந்த மகத்தான லட்சியவாதம். இம்முறையும் சுதந்திர தேவியின் சிலையை கனவிலென பார்த்து நின்றிருந்தேன். சுற்றிலும் நியூயார்க் நகரம் ஒளிகொண்டு நின்றிருந்தது.
வசந்தத்தின் தொடக்கம். அத்தனை இலையுதிர்ந்த மரக்கிளைகளிலும் பச்சைத்தளிர்கள் கிளம்பியிருந்தன. எண்ணைத்திரியில் சுடர் மிக மெல்ல பற்றி எழத்தொடங்குவது போல. டைம் ஸ்கொயரில் முகங்களின் கொப்பளிப்பு. உலகில் எங்கேனும் ஒருபுள்ளியில் அமர்ந்திருக்கையில் மானுடம் மானுடம் என்று உள்ளம் கொந்தளிக்குமென்றால் இங்குதான். எத்தனை தாடைகள், எத்தனை வகையான மூக்குகள், எத்தனை வகையான கண்கள், எத்தனை எத்தனை வண்ணங்கள்! உடல்மொழிகளே வெவ்வேறானவை
மானுடத்தின் அனைத்து சரடுகளையும் இணைத்து ஒரு முடிச்சு போட்ட மையம். மானுடம் வென்று செல்லும் என்ற நம்பிக்கையை உருவாக்குவது அதுதான். என்றுமே புதுமையை நோக்கி வாழ்வை நோக்கி மானுடருக்குள் ஒரு நாட்டம் உள்ளது. எந்த தத்துவத்தையும் விட எந்த அவ்வுலக வாக்குறுதியையும் விட அவனை முன்கொண்டு செல்வது அதுதான். அந்த விழைவின் கண்கூடான காட்சி வடிவம்.
நியூயார்க்கின் டைம் ஸ்கொயர் சாலைகளில் இலக்கில்லாமல் இங்கே சுற்றி அலைவதைப்போல் கேளிக்கை ஒன்றில்லை. பார்ப்பதற்கு தனியாக ஒன்றிருக்கக் கூடாது. முதன்முறை வந்தபோது நியூயார்க்கின் ஏராளமான தெருச்சிடுக்குகளில் சுற்றிவந்தோம். நியூயார்க்கின் மகத்தான அருங்காட்சியகங்களை மும்முறை பார்த்திருக்கிறேன். இம்முறை வெறும் நியூயார்க்கே போதுமென்றிருந்தது.
இடிக்கப்பட்ட இரட்டைக்கோபுரங்களின் இடத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் பிரம்மாண்டமான பறவை ஒன்றின் உள்ளே சென்று மீள்வது போல. இறகுவிரித்த நாரை போல வெண்பறவை. அதன் சிறகடுக்கின் நேர்த்தி வெண்சிறகைப் பார்க்கையில் மகத்தான் சிற்பி ஒருவரின் கையைப்பார்க்க முடியும்.
நான் அமெரிக்காவை விரிவாக பார்த்திருக்கிறேன். நாள் எண்ணிக்கையில் மிக அதிகமாக பயணம்செய்த நாடு அமெரிக்காவே. நினைவுகளாக சேர்த்துக்கொண்டிருக்கிறேன். அனேகமாக எழுதியதே இல்லை. ஏனெனில் அமெரிக்கா இந்தியர்களுக்கு புதிய நிலம் அல்ல. கிட்டத்தட்ட தமிழர்களின் இரண்டாவது நிலம் என்கிற அளவுக்கு இங்கே வந்து நிறைந்துவிட்டிருக்கிறோம். ஆகவே பயணக்கட்டுரை தேவையில்லை என ஒரு நினைப்பு.
பிலடெல்பியாவில் இருக்கும் சுதந்திர மணியை (The Liberty Bell) பார்ப்பதற்காக சென்றிருந்தேன்.பென்சில்வேனியா அரசு கட்டிடத்தின் மணிக்கூண்டில் இருந்த மணி. அந்த கட்டிடம் இன்று Independence Hall என அழைக்கப்படுகிறது. 8 ஜூலை 1776ல் அமெரிக்கச் சுதந்திரப்பிரகடனம் வாசிக்கப்பட்டதை அறிவிக்க முழக்கப்பட்ட மணி இது. ஒரு கீறல் விழுந்திருக்கும் அந்த மணியை காட்சிப்பொருளாக வைத்திருக்கிறார்கள். உலகமெங்கும் ஜனநாயக உருவாக்கத்துக்கு அமெரிக்காவின் சுதந்திரப்பிரகடனம் அளித்த பங்களிப்பு என்ன என உணர்ந்தவர்களுக்கு அந்த மணி ஒரு மாபெரும் குறியீடு.
நியூயார்க்கில் ஒவ்வொரு முறையும் ஓர் இசைநாடகத்தை பார்க்கவேண்டும் என்பது என் விருப்பம். எல்லா முறையும் அது நடந்துள்ளது. இம்முறை The Phantom of the Opera என்னும் இசைநாடகத்தைப் பார்த்தேன். பிரெஞ்சு ஆசிரியர் கஸ்டன் லீரோ (Gaston Leroux) எழுதிய இந்நாவல் தமிழில் முகமூடியின் காதல் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. நியூயார்க் பிராட்வே நாடகங்கள் ஒரு கணமும் சலிக்காத கலையனுபவத்தை அளிப்பவை.
நியூஜெர்சி எனக்கு மிக அண்மையானது பழகிய நெருங்கிய நண்பர்கள் வாழும் நிலம் நண்பர் அரவிந்தன் கண்ணையன் உட்பட நண்பர்கள் ஒருநாளிரவு சந்தித்தோம் பன்னிரண்டு மணி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தபிறகு விடைபெற்றோம்.
வாஷிங்டனில் ஒருநாள் தங்கினோம். அமெரிக்காவின் லட்சியவாதமையங்கள் அனைத்திற்கும் செல்லவேண்டும் என்பது என் கனவு. அனேகமாக எல்லா இடத்திற்கும் சென்று விட்டிருக்கிறேன். முதல்முறை வந்தபோதே பாஸ்டனில் எமர்சனின் இல்லத்தை, வால்டன் குளத்தை, தோரொவின் குடிசையை பார்த்தேன். மார்டின் லூதர் கிங் பிறந்த இல்லம். மனித உரிமைக்கான அருங்காட்சியகம். தாமஸ் ஜெஃபர்சனின் இல்லம். ஒவ்வொரு இடத்திலும் ஒரு நம்பிக்கையை பெற்றுக்கொள்கிறேன்.
இம்முறை மௌண்ட் வெர்னான் குன்றின்மேலுள்ள ஜார்ஜ் வாஷிங்டனின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வாஷிங்டனில் பலமுறை வந்தும் கூட அங்கு சென்றதில்லை. பலமுறை விரிவாக்கப்பட்ட அரண்மனை. அவருடைய படுக்கையறை, அவரது துணைவியின் படுக்கையறை, மாடியில் குழந்தைகளின் அறைகள். அவர் வாசித்த நூலகம், அங்கே அவர் விண்மீன்களைப் பார்த்த தொலைநோக்கிகள். தொன்மையான வீட்டுக்கு நேர் எதிரே ஓடும் போடொமொக் ஆறு அதைப்பார்த்தபடி ஜெனரல் வாஷிங்டன் அமர்ந்திருக்கும் காட்சியை என்னால் உணர முடிந்தது. உலகத்தலைவர்களில் வென்ற அதிகாரத்தை விட்டு திரும்பிய தலைவர்களில் ஒருவர் அவர். காந்திக்கு முன்னரே.
அங்கிருந்து நண்பர் ராஜன் சோமசுந்தரத்தின் இல்லத்திற்கு ராலே நகரத்திற்கு வந்தோம். இரண்டு நாள் பயணம் அருகிருக்கும் ஏரிக்கரையில் ஒருநாள். கடற்கரையில் இன்னொருநாள். ராலேக்கு நான் வருவது இது இரண்டாவது முறை முதல் முறையே மிக விரிவாகச் சுற்றியிருந்ததனால் அணுக்கமான ஒரு நகரத்திற்கு மீண்டும் வருவது போல் தோன்றியது மீண்டும் மீண்டும் இங்கு வந்துகொண்டு தான் இருக்கப்போகிறேன் என்று எண்ணிக்கொண்டேன்.
ராஜன் சோமசுந்தரத்தின் இல்லத்திலும் இங்கிருக்கும் நண்பர்கள் வந்து சந்திப்பதற்கு ஓரிரவு ஒதுக்கப்பட்டிருந்தது அதுவும் ஒரு நல்ல இலக்கிய சந்திப்பாக அமைந்தது. மிக சம்பிரதாயமற்ற முறையில் நிகழ்ந்த சந்திப்புகளில் நடக்கும் உரையாடல்கள் உற்சாகமானவை. வேடிக்கையும் விளையாட்டும் தீவிரமும் கலந்தவை. அவற்றை இணையதளத்தில் அறிவித்து தெரியாதவர்களை வரவழைக்கவேண்டுமா என்பது ஒரு சின்ன சிக்கல் ஏற்கனவே இங்கு ராஜனுடனோ விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துடன் தொடர்புடையவர்களை மட்டுமே இந்த சந்திப்பிற்கு வரவேற்றோம். நிகழ்ச்சி மிக நிறைவூட்டும் படியாக இருந்தது.
ராலேயில் பார்த்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது வின்செண்ட் வான்காவின் ஓவியங்களுக்குள் புகுந்து செல்வதுபோன்ற காணொளி நிகழ்வு. Van Gogh: The Immersive Experience. கிளர்ச்சியூட்டும் அனுபவம் அது. ஓவியத்தையே சிற்பமாக்கியிருந்தனர். மாபெரும் கூடத்தில் நம்மை வான்கா ஓவியத்தை காணொளியாக ஆக்கி சூழ வைத்தனர். வான்காவின் ஓவியத்துக்குள் புகுந்து வாழ்ந்து மீண்டது போலிருந்தது.
ராலேயில் இருந்து பூன் எனும் இடத்தில் நிகழும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் காவிய முகாமுக்குச் சென்றேன். தமிழகத்திற்கு வெளியே நிகழும் இரண்டாவது காவிய முகாம். ஏற்கனவே சிங்கப்பூரில் ஒன்றை நிகழ்த்தியிருந்தோம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

