Jeyamohan's Blog, page 780
May 14, 2022
வை.மு.கோதைநாயகி அம்மாள்- எஞ்சும் பெயர்
வரலாற்றில் வாழ்வது, வரலாற்றில் எஞ்சுவது என இரண்டு உண்டு. புதுமைப்பித்தன் வாழ்பவர். வை.மு.கோதைநாயகி அம்மாள் எஞ்சுபவர். ஆனால் அவ்வாறு எஞ்சுவதேகூட எளிய விஷயம் அல்ல. காலம் எல்லா சிறு ஆளுமைகளையும் அடித்துச் சென்றுவிடுகிறது. பெயர் என நிலைகொள்வதற்கே வாழ்நாள் முழுக்க நீளும் பெரும்பணியைச் செய்யவேண்டியிருக்கிறது,
வை.மு.கோதைநாயகி அம்மாள் இன்று எவராலும் வாசிக்கப்படுபவர் அல்ல. ஆனால் அவர் இன்றைய புனைகதை மொழிக்கும் வடிவுக்கும் பங்களிப்பாற்றியவர். இன்று எழுதும் பெண்கள் அனைவருக்கும் அவர் தொடக்கப்புள்ளி. பெண்ணியத்தை அவரில் இருந்தே தொடங்க முடியும். நூறாண்டுகளுக்கு முன் வீட்டின் எல்லைகளைக் கடந்து எழுந்து இதழ் நடத்துவதும், எழுதுவதும், தன் கருத்துக்களை பொதுவெளியில் துணிந்து முன்வைத்து வாதிடுவதும் பெரும் சாகசங்கள்.
வை.மு.கோதைநாயகி அம்மாள் என்னும் ஒரு பெயரில் இருந்து தொட்டுத்தொட்டு பல பெயர்களுக்குச் செல்லமுடியும். நாம் இன்று மறந்துவிட்ட ஓர் அறிவியக்கத்தையே வாசித்தெடுக்க முடியும். அது இன்று நாம் நின்றிருக்கும் அறிவுத்தளத்தின் அடிப்படை. தமிழ் பெண்ணெழுத்தின் வரலாறு, தமிழ் பெண்ணியத்தின் தொடக்ககாலம்.
ஒரு கலைக்களஞ்சியம் ஏன் தேவையாகிறதென்றால் வரலாற்றின் இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்து கோலமென ஆக்கி காட்டுவதற்கே.
வை.மு.கோதைநாயகி அம்மாள் – தமிழ் விக்கி
வை.மு.கோதைநாயகி அம்மாள்- தமிழ் விக்கி
தமிழ் விக்கி- அடையாளம்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி முகமுத்திரையில் கோபுரம் இருப்பது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். அது தமிழ் விக்கி ஓர் இந்துத்துவ நிறுவனம் என்பதை காட்டுகிறது என்கிறார்கள்
எஸ்.ராஜேஷ்
***
அன்புள்ள ராஜேஷ்
இணையத்தில் எல்லாமே ஒருவாரச் சழக்கு. அடுத்தது வந்ததும் இந்தக்கூட்டம் தமிழ்விக்கியா, ஆமா எங்கியோ கேட்டதுபோல இருக்கே என்பார்கள்.
கோபுரம் என்பது தமிழ் அரசின் அடையாளம். தமிழகத்தைக் குறிக்க அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முத்திரை முழுக்க முழுக்க கலைஞனின் கற்பனை. நாங்கள் தலையிடுவதில்லை. அவர் அளித்த லோகோவில் இருந்த பூமி உருண்டை மட்டுமே எங்களால் வேண்டாம் எனப்பட்டது. ஏனென்றால் தமிழ் விக்கிப்பீடியாவை நினைவுறுத்தும் அந்த அடையாளத்தை ஏற்க விரும்பவில்லை
ஓவியக் கலைஞர் ஓர் அறிஞராக வள்ளுவரையும் கவிஞராக ஔவையாரையும் எடுத்துக்கொண்டார். ஓர் அறத்தார், மறுபக்கம் ஒரு நாடோடி. ஒருவர் அமைப்பை உருவாக்கியவர், ஒருவர் மீறிக்கொண்டே இருந்தவர்.
நடுவே தமிழ்நாடு இருக்கலாம் என்று சொன்னபோது தமிழக வரைபடம்தான் மனதில் வந்தது. ஆனால் தமிழக வரைபடம் தமிழ்நாடு அல்ல என்று உடனே மறுப்பு சொல்லப்பட்டது. மலேசியாவும் இலங்கையும் ஈழமும் எல்லாம் பண்பாட்டுத் தமிழகங்களே. ஆகவே தமிழக அரசின் குறியீடான கோபுரம், அவ்வண்ணமே இல்லாமல் சற்றே மாற்றப்பட்டு, எடுத்தாளப்பட்டது.
ஜெ
சியமந்தகம் ,கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் விழைகிறேன்.
சியமந்தகம் தளத்தில் வெளிவரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழிலக்கியத்தில் இயங்கும் பலதரப்பட்ட ஆளுமைகள் குறித்து, அவர்களுடைய படைப்புலகம் சார்ந்து விரிவாகவும், சலிக்காமலும் எழுதிக்கொண்டிருப்பவர் நீங்கள். ஆனால் வாசகனாக உங்களுடைய படைப்புகள் வழியாகவும், தளம் வழியாகவும் நானறிந்த ஜெ தவிர – ஒரு காதலனாக, நண்பனாக, எழுத்தாளனாக, ஆசிரியனாக உங்களுடைய மற்ற பக்கங்களையும் அறியும் வாய்ப்பை இந்தத் தளம் எனக்கு வழங்குகிறது. நான் உங்கள் வாசகனாக பெருமிதமும், நெகிழ்வும், மிகுந்த உணர்வெழுச்சியும் அடைந்த பல தருணங்கள் தளத்தின் பதிவுகளில் உள்ளன.
தனிப்பட்ட வாழ்வில் உங்களுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் கடந்து, படைப்புகள் சார்ந்தும் மிக விரிவான பதிவுகளை இதில் வாசிப்பது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம். எழுத்தாளர், விமர்சகர் ந. முருகேச பாண்டியன் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் குறித்த (இரண்டு) விரிவான மதிப்புரைகள் நான் இதுவரை வாசித்திராதது, எம்.ஏ. சுசீலா அவர்கள் எழுதிய உங்களுடைய குறுநாவல்கள் சார்ந்த குறிப்பும் அத்தகையதே. கவிஞர் இசையின் பதிவு அவருக்கே உரிய பாணியில் அமைந்த ஒன்று, ‘Tongue in Cheek’ என்று சொல்லலாம்.
ஆஸ்டின் சௌந்தர் அண்ணன் ‘இலக்கிய முன்னோடிகள்’ நூலை வாசித்துவிட்டு உங்கள் படைப்புலகம் குறித்து இத்தகைய விரிவான பதிவுகள் இல்லாமல் இருப்பது துரதிஷ்டம் என்று வருத்தப்பட்டார், ‘சியமந்தகம்’ தளம் அதற்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இந்தத் தளத்தில் உள்ள பல பதிவுகள் தரமான ஆவணங்களாக எனக்குத் தோற்றமளிக்கின்றன, நாளை இவை புத்தக வடிவிலும் வெளிவரவேண்டும் என்று விருப்பமுறுகிறேன்.
இந்தத் தளத்தை நிறுவி, தொடர்ந்து பராமரித்து வரும் நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
அன்பும் நன்றிகளும்,
பாலாஜி ராஜூ
***
அன்புள்ள ஜெ
சியமந்தகம் இணையப்பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு கோணத்தில் உங்களை அறிமுகம் செய்கின்றன. உங்கள் நூல்கள் மேல் வாசிப்புகள், உங்கள் ஆளுமை மீதான பார்வைகள் என்று விரிந்துகொண்டே இருக்கின்றன. தமிழில் ஓர் எழுத்தாளருக்கு இப்படி ஒரு முழுமையான பார்வைகளை முன்வைக்கும் இணையதளம் உருவானதில்லை. உங்களை தமிழ் அறிவுலகம் எப்படிப் பார்க்கிறது என்று காட்டும் தொகுப்பு அது
எஸ்.எம்.ராகவேந்தர்
***
கடல்- கடிதம்
அன்புள்ள ஜெ,
தங்களின் கதை, வசனம் மற்றும் திரைக்கதை பங்களிப்புடன் உருவான கடல் திரைப்படத்தை Hotstar-ல் பார்த்து முடித்தவுடன் எழுதுகிறேன். இப்படம் வெளிவந்த போது பார்க்கவில்லை, பார்த்திருந்தாலும் அப்போது எனக்கு புரிந்திருக்காது. இப்போது என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.
எனக்கு கதையின் பேச்சு மொழி அந்நியமானதாக இல்லை, உங்களின் படைப்புகளின் மூலம் மனதில் ஒலித்துக் கொண்டிருந்த மொழியை வெளியிலிருந்து கேட்பது இதுதான் முதல் முறை. சில உச்சரிப்புகளை சரி செய்து கொள்ளவும் முடிந்தது.
தாமஸ்- செட்டி உறவில் தொடங்கி தாமஸ்- சாமுவேல், தாமஸ் – பியா, பியா – பெர்க்மென்ஸ் என உறவுகள் எதுவுமே ஒற்றைப்படையாக இல்லை, ஆளுமை X உணர்வு இடையேயான முரணியக்கமாக தோன்றியது.
பெர்க்மென்ஸ் மற்றும் பாதர் ஸாம் வித்தியாசம் நன்மை X தீமை இல்லை, பாதர் ஸாமைவிட பைபிளை நன்கு அறிந்தவர் பெர்க்மென்ஸ், ஆனால் பைபிளுடன் பசியையும் அறிந்ததே அவரது ஆளுமை.
முழுக்க சாத்தனாக தன்னை உருவாக்கி கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறார், தனக்குள் ஆழத்தில் உணரும் சிறு துளி ஒளியை உணர்ந்து அதனோடான போராட்டமாகவே அவரது ஆளுமை உள்ளது.
பெர்க்மென்ஸ் சாத்தான் அல்ல, சாத்தனாக மாற தன் எல்லைகளை தாண்ட முயல்பவர் என்றே நினைக்கிறேன்.
பாதர் ஸாம் முழுமையாக ஒளியை கொண்டிருந்தாலும், அவர் தன் மக்களாலேயே குற்றம் சுமத்தபட்டு சிறைசெல்லும் போதும், சிறையில் பெர்க்மென்ஸ் உடனான சந்திப்பின் போதும், இறுதிக்காட்சியில் தாமஸ்காக உணர்ச்சிவசப்படும் போதும் தன் ஆழத்து இருளை அல்லது தன் ஒளியின் எல்லையை கண்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.
சிறுவயது முதல் பசியை, வலியை மட்டுமே கண்ட தாமஸை பெர்க்மென்ஸாக மாறாமல் தடுப்பது பாதர் ஸாம் மற்றும் பியாவின் உறவு.பாதர் ஸாம் தேவனின் மூலமாக செல்லும் தூரத்தை பியா என்ற தேவதையின் மூலம் எளிதாக கடந்து செல்கிறார் தாமஸ்.
பெர்க்மென்ஸுக்கும் பாதர் ஸாம் மற்றும் பியாவின் உறவைபோல வழிகாட்டுதலும், அன்பும் கிடைக்கிறது பைபிள் மற்றும் செலீனாவாக ஆனால் அவரால் அவற்றை பயன்படுத்திக்கொள்ள மட்டுமே முடிகிறது, இதுதான் பெர்க்மென்ஸ் X தாமஸ் ஆளுமைகளின் வித்தியாசம்.
சிறு கதாபாத்திரங்கள் கூட தனித்தனி ஆளுமைகளாக பார்க்க முடிகிறது, பாதர் ஸாம் மேல் அம்மக்களின் கோபம் common man’s grudge-ம் கூடத்தான் இல்லையா.
வரும் நாட்களில் இன்னும் இப்படம் என்னுள் வளரும் உங்களின் படைப்புகளை போலவே.
நன்றி ஜெ.
மணிகண்டன், கோவை
***
அன்புள்ள மணிகண்டன்
தமிழ் சினிமாவில் மீளமீள நிகழ்வதுதான். வேறுபட்ட படங்கள் தோல்வியடையும். ஆனால் அவற்றை திரும்பத் திரும்ப பார்ப்பார்கள். அவை வரலாற்றில் வாழும். கமல்ஹாசன் ஒருமுறை சொன்னார், ஹே ராம் தோல்வியடையும் என அவருக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்தது என
ஜெ
***
May 13, 2022
உள்ளூறுவது
சில தருணங்களில் இதெல்லாம் ஒன்றென யாக்கப்பட்ட ஒருகாப்பியமென திகழ்கின்றன என உணரும்படி அமைவதுண்டு. இது நடந்தது முப்பதாண்டுகளுக்கு முன்பு. நெல்லையிலுள்ள ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். சும்மா இன்னதென்று இலக்கில்லாமல் அலையும் காலம். இதைத்தான் என்றில்லாது வாசிக்கும் மனநிலை இருந்த வயது.
ஆலயத்தின் மண்டபத்தில் ஒருவர் மணைமீது வெள்ளைத்துணி விரித்து சப்பணம்போட்டு அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். நெற்றியிலும் தோளிலும் நெஞ்சிலுமெல்லாம் குழைத்துப் பூசிய நீறு. பொன்கட்டிய உருத்திராக்க மாலை. படிகமணிமாலைகள். இடக்கை கைவிரலில் ஒரு பெரிய நீலக்கல் மோதிரம். நல்ல கணீர்க்குரல். சிவந்த முட்டைக்கண்கள். கன்னங்கரிய நிறம். அறுபதையொட்டிய வயதிருக்கும். ஆனால் தலையில் நல்ல நெருக்கமான முடி, கொஞ்சம்நரை. இப்போதும் அவர் முகம் நினைவிருக்கக் காரணம் அவருடைய பெரிய மூக்கும் காதுகளில் அடர்ந்திருந்த கரிய முடியும்.
அவர்முன் ஏழெட்டுபேர் அமர்ந்திருந்தனர். அனைவருமே அவரைப்போல அறுபதை ஒட்டிய வயது கொண்டவர்கள். ஒவ்வொருவரும் அமர்ந்திருந்த விதத்திலேயே அவர்கள் அங்கே வாசிக்கப்படுவதில் எந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறார்கள், ஒவ்வொருவரின் இயல்பு என்ன என்று தெரியும்படி இருந்தது. அடுத்த கணமே எழுந்து பேசத்தொடங்கிவிடுவார் என்பதுபோல் ஒருவர். நன்றாகச் சுவரில் சாய்ந்து ஒருவர். சற்றே திரும்பி பிராகாரத்துக்குச் செல்பவர்களைப் பார்ப்பதுபோல இன்னொருவர். வேறெங்கோ பார்வை திருப்பி இன்னொருவர்.
படித்தவர் ஏதோ இரண்டு வரிகளை ஓங்கிச் சொன்னார். அதட்டுவதுபோல் இருந்ததனால் சிற்பத்தை பார்த்துக்கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன்.
அவர் நான் திரும்பிப் பார்ப்பதை கண்டார். உரக்க மீண்டும் வாசித்தார்
காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன் கழல் செலுமே.
கேட்டதுமே நான் அவ்வரிக்குள் ஆழமாகச் சென்று மெய்ப்பு கொண்டுவிட்டேன். ஏனென்றால் நான் பார்த்துக்கொண்டிருந்த சிலை எனக்களித்த அனுபவத்துடன் அது அத்தனை வலுவாக இணைந்துகொண்டது.
காணும் கண்ணுக்கு காட்சிகளைக் காட்டுவது உள்ளம்தான். துயருற்றவனுக்கு உலகப்பொருட்கள் எல்லாம் துயரின் அடையாளங்கள். மகிழ்வுகொண்டவனுக்கு இயற்கை இன்பவெளியென சூழ்ந்திருக்கிறது. கண்ணுக்கு உலகை காட்டும் உள்ளம் போல அந்த உள்ளத்தை காட்டும் புலமாக அமைபவன் அரன். அயரா அன்புகொண்ட அரனின் பாதங்களை பணிவேன்.
“என்னண்ணு சொல்லியிருக்கு?” என்று வழுக்கைத்தலையர் கேட்டார்.
”படிக்கேன்” என்றபின் உருத்திராக்கம் அணிந்தவர் உரக்கப் படித்தார். “சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பரமேசுரனது சீபாதங்களை யணையுமா றுணர்த்துதனுதலிற்று. என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துத னுதலிற்று. இதன் பொருள். அங்ஙனம் ஏகனாகி யிறைபணி நிற்பார்க்கு அறிவிச்சை செயல்கள் விடயித்தற்குரியதோரியைபு ஆண்டுப் பெறப்படாமையின் விடயமாவதொன்றில்லை போலும் என்னும் வாதிகளை நோக்கி விடயித்த லில்வழி ஆண்டுப் புத்தர்கூறு மாலய விஞ்ஞானம் போலச் சூனியமாமெனப்பட்டுக் குணஞ் சூனியமாகவே குணியுஞ் சூனியமாய் முடியுமாகலான் அஃதேலாமையின் ஆண்டவை யியைபு பற்றி விடயிக்குமா றுணர்த்து முகத்தானே பயனிரண்டனுள் முடிவா யெஞ்சிநின்ற சிவப்பேறு கூடுதலாய நிட்டையினியல்புணர்த்துதல் இப்பதினொராஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.”
அவர் வாசிக்க வாசிக்க நான் என்மேல் கற்கள் உருண்டு விழும் உணர்வை அடைந்தேன். மெய்யாகவே சொல்கிறாரா இல்லை ஏதேனும் விளையாட்டா என்று திகைத்தேன். ஆனால் மேலே வாசித்துக்கொண்டே சென்றார். “இருள் நீக்கமும் ஒளி விளக்கமும் உடனிகழ்ச்சியாயவாறுபோலப் பசுத்துவநீக்கமுஞ் சிவத்துவ விளக்கமும் இடையீடின்றி உடனிகழ்வன..”
வழுக்கையர் “நிப்பாட்டுங்க” என்றார். “என்னெண்ணு சொல்லியிருக்கு?” என்றார். மற்றவர்கள் அவரைப் பார்த்தனர்.
“வெளக்க ஏத்தினா ஒளிவர்ரதும் இருட்டு போறதும் ஒண்ணா நடக்குது. அதேமாதிரி நாம பாக்கிற இந்த உலகமாயைங்கிற பசுத்துவம் இல்லாம ஆகிறதும் சிவத்துவமாகிய மெய்நிலை தெளிவாகிறதும் ஒரே சமயத்திலே நடக்குதுங்கிறார்”
“அதெப்டி?” என்றார் உருத்திராக்க மணியாளர். “சிவத்துவம்தான் பசுத்துவத்தைக் காட்டுதுன்னுல்லா பாட்டு சொல்லுது? கண்ணுக்கு காட்சிகளை காட்டுறது கதிரொளி. அதைமாதிரி சிவம் காட்டுறதுதான் இந்த உலகம்னு மாதவ சிவஞான முனிவர் இந்த பாட்டுக்கு விளக்கம் சொல்றார்.”
“அது எங்கவே இந்தப் பாட்டில வருது? பசுத்துவம் ஒழியாம சிவத்துவம் எப்டி அமையும்? இருளும் ஒளியும் ஓரிடத்து அமையுமா?”
“அந்தப் பசுத்துவத்த காட்டுறதே சிவத்துவம்தானே? சிவனில்லாம ஏதுமுண்டா இங்க?”
அங்கிருந்து ஆளுக்காள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அடிதடிக்கலவரம் எல்லாம் இல்லை. ஆனால் கொஞ்சம் தள்ளி நின்றால் அப்படித் தோன்றும். நான் புன்னகையுடன் நகர்ந்துவிட்டேன்
ஒருவர் உரக்க மனப்பாடமாக “இவ்வுண்மைகளை இங்கு வைத்துணரக்
காட்டுமாற்றால் (உலகருடன் கலந்து நின்று) தானும் காண என்றதும்
உன்னுக. உயிர்களுக்கு நெறி காட்டித் தான் தொண்டரை விளக்கங்
கண்டான் என்பதும் கருத்து-ங்குதாரு” என்றார்
“அது எங்க இந்தப்பாட்டில இருக்கு? கண்டது கடியது எல்லாம் சொல்லப்பிடாது”
“காணாதத காணுகதுக்கான்வே பாட்டு. சும்மாவா சிவஞானபோதம் சொல்லிவச்சிருக்கு? உம்ம வீட்டு பஞ்சாங்கமா வே?”
பின்னால் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.
கோயிலில் வேறு ஆளே இல்லை. மிகப்பெரிய பிராகாரம் ஓய்ந்து கிடந்தது. காசிலிங்கம், அண்ணாமலை லிங்கம் என சிறு சிறு சன்னிதிகள். ஒவ்வொன்றிலும் சிறிய சுடர்மொட்டுகள்.
இன்னொரு பக்கம் சுற்றிக்கொண்டிருந்தேன். சுவரில் திருவாசகம் எழுதி வைக்கப்பட்டிருந்தது. பாடல்களை விழிகளால் வருடிக்கொண்டே சென்றவன் ஒருபாட்டில் நின்றேன்.
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே..
எனக்குப் பதில்போல் அமைந்த வரி. மாற்றங்களால் ஆன இந்த உலகின் வெவ்வேறு அறிவாக விரியும் வெளியில் மையக் கொள்கையென, தேற்றமென, அமைபவனே. தேற்றத்தை கற்று அடைந்த தெளிவே. அத்தெளிவின் விளைவென என் சிந்தனையின் உள்ளிருந்து அமுதூற்றென எழுந்து எழுந்து வருபவனே…
கற்றலென்பது விரிந்து விரிந்து சென்று மையம்காண்பது. கண்டு தெளிவது. தெளிந்தபின் எழும் ஊற்றின் தணியாப்பெருஞ்சுவை. மெய்மை என்பது கற்றநூலின் பொருள் நெஞ்சிலிருந்து நினைவுக்கு எழுவதற்கு நிகரானது. நம்முள் இருந்து எழுந்துகொண்டே இருக்கும் தீரா இனிப்பு. கலக்கிக்கொண்டே இருப்பவர்கள் ஒருபோதும் அறியமுடியாதது.
தமிழ்வாணன்
இக்கலைக்களஞ்சியம் சிற்றிதழ் சார்ந்த செய்திகளை வெளியிடுவதா என பல கடிதங்கள். அல்ல, இது தமிழ்ச் சிற்றிதழ் மரபு வழியாக உருவாகி வந்த நவீன இலக்கியத்தின் தரப்பு. ஆனால் தமிழிலக்கியம், பண்பாடு அனைத்தையும் தனக்கான அளவுகோல்களுடன் இது அணுகும். அத்தகவல்களை தொகுக்கும்.
தமிழ்வாணனைப் பற்றிய இந்தப் பதிவு இளமையில் கல்கண்டு வாசித்தவர்களுக்கு நினைவுகளை தூண்டுவதாக அமையலாம். புதியவர்களுக்கு சென்றகாலத்தின் ஒரு பண்பாட்டுக்களத்தை அறிமுகம் செய்யலாம்.
தமிழ்வாணன் – தமிழ் விக்கி
தமிழ்வாணன் – தமிழ்விக்கி
பிராம்டன் நிகழ்வு- கடிதம்
வணக்கம்.
வாஷிங்டன் டி.சி யில் tamil.wiki விழாவில் உங்களையும் அருண்மொழி அவர்களையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. It was definitely a fanboy moment for me. நீங்களே கூறியது போல் இந்த விக்கி தொகுப்பு வேலை உங்கள் சிருஷ்டிகர்த்த ஆக்கங்களைக் குறைத்து விடுமோ என்ற, சுயநலம் மிகுந்த, பயம் எனக்கும் உள்ளது. இது உங்கள் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் அரசியலில் நுழைந்தபோது இருந்த/ இருக்கும் அதே பயம். இது (தமிழ் விக்கி முயற்சி) ஒரு நவீன வியாசம் என்றாலும், உங்கள் படைப்பாக்க நேரத்தைக் குறைக்கிறதே எனும் ஏக்கம் எனக்கு இருக்கிறது, உங்கள் அறிஞர் குழுவினர், உங்கள் ஊக்கத்தையும் அடையாளத்தையும் அதிகமாகவும், நேரத்தைக் குறைவாகவும் பெற்று, இத்தளத்தை முன்னடத்திச் செல்வார்கள் என விழைகிறேன்.
On a lighter note, நான் ப்ராம்பிள்டன் பள்ளி உணவகத்தில் உங்களிடம் கூறியது போல், அருண்மொழி உரையாடுவதற்கு மிக அணுக்கமானவராக இருக்கிறார் :). அன்று நீங்கள் pre-occupied ஆக இருந்ததாகத் தோன்றியது (விழா விருந்தினர் பிரச்சனை பற்றி அன்று மாலை தான் அறிந்தேன்; அது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என் பின்னர் நினைத்தேன்). அருண்மொழியின் கண்களும் (எப்பொழுதுமே ஒரு சிறு வியப்பு ஒட்டியிருக்கும் விழிகள்), உங்கள் நடையும் (side profile-ல் பார்க்கும்போது பக்கா தென் கேரள நாயர் நடை :) நேர்ச்சந்திப்பில் மட்டுமே கிடைக்கும் பரிசுகள்.
என் ஆதர்ச எழுத்தாளரை நேரில் சந்திக்க முடிந்ததில் பெருமகிழ்ச்சி. மீண்டும் சந்திக்கும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். அருண்மொழி அவர்களுக்கு எனது வணக்கங்கள்.
நன்றி!
வினோத் ஜெகன்னாதன்
அன்புள்ள வினோத்
அன்று கவலையுடன் இல்லை. ஆனால் ஓர் உணர்ச்சிகர மனநிலையில் இருந்தேன்.
தமிழின் பெரும்பேராசிரியர்கள் பலர் அமெரிக்கப் பல்கலைகளில் பணியாற்றியதுண்டு. ஆய்வுகள் செய்ததுண்டு. அவ்வப்போது எழுத்தாளர்களும் இங்கே பல்கலைகளுக்கு வருவதுண்டு.
எவரும் புதுமைப்பித்தன் பெயரை, க.நா.சு பெயரை, சி.சு.செல்லப்பா பெயரைச் சொல்வதில்லை. பெரும்பாலும் அவர்கள் தங்களை ‘கலாச்சாரச் செயல்பாடே இல்லாத ஓர் இருண்ட சூழலில் இருந்து தன் தனித்திறனால் எழுந்துவந்த ஒளிவிளக்கு’ என்ற அளவிலேயே முன்வைப்பார்கள்.
இந்த வாஷிங்டன் மேடையில் தூரனை, வையாபுரிப்பிள்ளையை, க.நா.சுவை என் இலக்கிய முன்னோடிகளை பற்றிச் சொல்லவேண்டும் என்றே வந்தேன். அதை சொன்னது என் வாழ்வின் தருணம். இனி அத்தனை இலக்கிய உரையாடல்களிலும் அவர்கள் பேசப்படச்செய்ய தமிழ் விக்கியால் முடியும்.
அன்று மேடையில், என் வாழ்க்கையிலேயே முதல்முறையாக, சொற்பொழிவின்போது உணர்ச்சிவசப்பட்டேன். பேச்சை முழுமையாக நிகழ்த்தவில்லை. எனக்கு விருதுகள், பாராட்டுக்கள் வரும் மேடைகளில் எல்லாம் எந்த நெகிழ்வையும் நான் அடைந்ததில்லை. பிராம்டன் மேடையில் அந்த நிலையழிவு என் வாழ்வின் உச்சங்களில் ஒன்று
ஜெ
***
தமிழ் விக்கி -பங்கேற்பு
அன்பு ஜெ,
தமிழ் விக்கி இன்று இனிய உதயம். இதற்காக உழைத்த மற்றும் உழைத்துக் கொண்டு இருக்கின்ற அனைவருக்கும் நன்றி. துளியும் தயக்கம் இல்லாமல் கூறலாம், தமிழ் இணையத்தில் இது ஒரு முக்கிய முன்னெடுப்பு. இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் இந்த தளம் தமிழில் அறிவு சார்ந்த மற்றும் நேர்மறையான தேடலுக்கு முதல் தேர்வாக அமையும் என்பது என் எண்ணம். ஏனெனில் அடிப்படையில் இது ஒருவரை சார்ந்து இல்லாமல் ஒரு தன்னலம் அற்ற குழுவின் கீழ் செயல்படுகிறது. வாழ்த்துகள்
இப்பொழுது என்னால் தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அல்லது வார இறுதியில் சில மணி நேரங்கள் இத்தளத்திற்கு ஒதுக்க முடியும் என்றால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? எந்த மாதிரியான பங்களிப்பை செய்ய வேண்டும்?
நன்றி,
ச.விஜயகண்ணன்
***
அன்புள்ள விஜயகண்ணன்
நன்றி
தமிழ்விக்கி பங்கேற்புக்கு அதன் முதல் பக்கத்திலேயே இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை அமைப்பதற்குரிய விதிகள், இதன் அமைப்பு ஆகியவற்றை நீங்கள் இந்த கலைக்களஞ்சியத்தின் பதிவுகளை பார்த்தே புரிந்துகொள்ளலாம்.
பங்களிப்பாற்ற முன்வந்தமைக்கு நன்றி
ஜெ
தூரனும் வையாபுரிப்பிள்ளையும் – கடிதங்கள்
அன்பு ஜெயமோகன்,
நலமா?
தமிழ்.விக்கி-ஐ துவக்கியதும் அதனை ஒருங்கிணைத்ததும் ஒரு ஆகப்பெரிய மகத்தான செயல். அதற்கு நான் உங்களுக்கு என் வணக்கத்தையும், மனமார்ந்த நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.
எனது பல் மருத்துவர், திரு. செல்வமுத்து குமார் அவர்கள் பெரியசாமி தூரனின் பெரிய மகளின் மகனாவார். நான் அவரிடம் தமிழ்.விக்கி பற்றியும் தூரன் விருது பற்றியும் தொலைபேசியில் சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். அவருக்கு எந்த அளவுக்கு இலக்கியம் பரிச்சயம் என்பது எனக்கு தெரியாது. அவர் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என உங்கள் மின்னஞ்சல் முகவரியை வாங்கி கொண்டார். நீங்கள் அடுத்த முறை சென்னை வரும் போது, அவரை உங்களை பார்க்க அழைத்து வர பார்க்கிறேன்.
மீண்டும், உங்களுக்கும் இந்த தமிழ்.விக்கி சாதனையை சாத்தியமாக்கியவர்களுக்கும் என் அன்பும் வணக்கங்களும்.
நன்றி.
அன்புடன்,
தேவா
***
அன்புள்ள தேவா,
நன்றி
அவருக்கு மின்னஞ்சல் போடுகிறேன்
எதன்பொருட்டெல்லாமோ பெருமை கொள்கிறார்கள். திரு செல்வமுத்துக் குமாருக்கு இன்னும் பல தலைமுறைகளுக்கு பெருமைகொள்ள அடிப்படை இருக்கிறது.
ஜெ
***
அன்புள்ள ஜெ
கலைக்களஞ்சியத்தில் எஸ்.வையாபுரிப்பிள்ளை பற்றி வாசித்தேன். அறுபத்துச் சொச்சம் வயதுதான். ஆனால் எத்தனை பெரிய பணிகளைச் செய்திருக்கிறார். எவ்வளவு ஆய்வு. எவ்வளவு நூல்கள். ஒர் இயக்கமாகவே செயல்பட்டிருக்கிறார். இன்று ஏன் அத்தகைய பேரறிஞர்கள் இல்லை? இல்லை எனக்குத்தான் தெரியவில்லையா?
சரவணக்குமார் எம்
***
அன்புள்ள சரவணக்குமார்
எந்தச் சமூகத்திலும் ஒரு சில காலகட்டங்கள் பெரும் படைப்புக் கொந்தளிப்பு கொண்டவையாக இருக்கும். வையாபுரிப்பிள்ளை வாழ்ந்த காலம் அத்தகையது. தமிழ் வரலாறு எழுதப்பட்டது. தமிழ் மரபு மீட்டெடுக்கப்பட்டது. நவீன மரபுக்கு அடித்தளம் போடப்பட்டது. புனைவிலக்கியத்தில் புதுமை தொடங்கியது. அவர் அதன் நடுவே இருந்தார்.
ஜெ
***
May 12, 2022
அறியப்படாத ஆழம்
சென்ற சில நாட்களுக்கு முன் ஈரோடு கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்த கலைக்களஞ்சிய எழுத்துப் பணி அளிக்கும் புதிய அறிதல்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அதிலொன்று நவீனத் தமிழ்ப்பண்பாட்டின் உருவாக்கத்திற்கு தொடக்க கால கிறிஸ்தவப் பணியாளர்கள் அளித்த பெருங்கொடை.
ரா.பி.சேதுப்பிள்ளை ஒருவர்தான் அதைப் பற்றிய பிரக்ஞையுடன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். மற்றபடி பண்பாட்டின் மறுமலர்ச்சிக்கு பங்களிப்பாற்றியவர்கள் பற்றிய குறிப்புகளில் கிறிஸ்தவ அறிவியக்கம் எளிதாக கடந்து செல்லப்படும். நான் ஹென்ரிகோ ஹென்ரிக்கஸ், வீரமாமுனிவர், இரேனியஸ், கால்டுவெல் போல பெரிய ஆளுமைகளைப் பற்றிச் சொல்லவில்லை. நூற்றுக்கணக்கான சிறிய ஆளுமைகளை பற்றிச் சொல்கிறேன்.
இரண்டு முடிவுகளை எடுத்தோம். ஒன்று, முறையாக முழுமையாக அவர்களின் பங்களிப்பை பதிவுசெய்யவேண்டும். இரண்டு எந்த ஊரில் இலக்கிய உரையாற்றினாலும் அந்த ஊரில் பணியாற்றிய கிறிஸ்தவ அறிவியக்கவாதியின் பெயரைச் சொல்லவேண்டும்.
ஈரோடு பற்றி கிருஷ்ணனிடம் சொன்னேன். ”நவீன ஈரோடென்பதே ஏ.டபிள்யூ.பிரப் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஈரோட்டைச் சுற்றி கல்விநிலையங்களை உருவாக்கியவர். ஈரோட்டில் காலரா பரவியபோது களம்நின்றவர். ஈரோட்டில் அவர் பெயரில் ஒரு சாலை இருக்கிறது” அந்தப் பதிவை காட்டினேன்.
கிருஷ்ணன் திகைப்புடன் ”சார், அந்தச் சாலை வழியாத்தான் டெய்லி போய்ட்டிருக்கேன்… ஆனா பிரப் பத்தி ஒண்ணுமே தெரியாது” என்றார்.
அருகே இருந்த நண்பர் ஈரோடு சிவா சொன்னார் “அது போன வருசம் வரை… எடப்பாடி ஆட்சியில் பிரப் சாலை பேர மாத்தியாச்சு. உள்ளூர் ஆளு பேரு போட்டாச்சு.”
திகைப்பாக இருந்தது. அப்படியென்றால் இனி இத்தகைய கலைக்களஞ்சியங்களில்தான் பிரப் வாழ்வாரா என்ன?
பிரப் பற்றிய தமிழ் விக்கி பதிவு இது. இதன் இணைப்புச் சுட்டிகள் மிகக்கவனமாக போடப்பட்டவை. அவற்றை சொடுக்கிச் செல்லும் ஒருவர் ஒரு நாவல் அளவுக்கு விரியும் அறிவியக்க வரலாற்றை வாசிக்க முடியும்.
மிகக்குறைவாக கிடைக்கும் சி.எஸ்.ஐ மிஷன் செய்திமலர்களில் இருந்து உருவாக்கப்பட்டவை இப்பதிவுகள். அக்களம் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் மேலும் செய்திகளை அளிக்கலாம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் சமூகப்பணியும் கல்விப்பணியும் ஆற்றிய அனைத்து கிறிஸ்தவ மதப்பணியாளர்களையும் இணைக்கும் ஒரு பெரிய வலையாக இந்த வரலாற்றை எழுத திட்டமிட்டிருக்கிறோம்.
ஏ.டபிள்யூ.பிரப் – தமிழ் விக்கி
ஏ.டபிள்யூ.பிரப்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

